LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF

திருக்குறளில் சைவ சமயம் - சோ.சண்முகம்

திருக்குறள் உலகப் பொதுமறை, தமிழர்களின் வேதம், பொய்யா மொழி, உத்தரவேதம், தமிழ் வேதம், எழுதுமறை என ஆன்றோர்களாலும், சான்றோர்களாலும் போற்றப்பட்டு உள்ளது. உலக மொழிகளில் எல்லாம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. திருக்குறளில் வைணவம், பௌத்தம், கிறித்துவம், சமணம், பார்சி போன்ற மதக்கருத்துகள் இடம்பெற்றுள்ளன. ஆயினும் சிறப்பாய்ச் சைவசமயக் கருத்துகள் இடம்பெற்றுள்ளதை இக்கட்டுரை ஆய்ந்துள்ளது.

 

திருவள்ளுவர் ஐம்பொறிகளின் வாயிலாய்ச் செல்லும் ஆசையை ஒழித்தல் வேண்டும் என்கின்றார். சமணமும், சாக்கியமும், ஐம்பொறிகளை வெல்ல வேண்டும் எனக் கூறும். இதனை வள்ளுவர்,

 

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

 

நெறிநின்றார் நீடுவாழ் வார்

 

எனக் குறிப்பிட்டுள்ளார். திருமூலர் ஐம்பொறிகளை அடக்குதல் பற்றி,

 

அஞ்சும் அடக்கடக் கென்பர் அறிவிலார்,

 

அஞ்சும் அடக்கும் அறிவறி வார்இல்லை,

 

அஞ்சும் அடக்கின் அசேதனமாம் என்றிட்(டு)

 

அஞ்சும் அடக்காத அறிவறிந்தேனே

 

எனக் குறிப்பிட்டுள்ளார். இதனை மூன்றாம் திருமுறை,

 

அஞ்சகம் அவித்த அமர்க்கமரன் ஆதிபெருமான்

 

என்றும், ஆறாம் திருமுறை,

 

பொல்லாப்புலன் ஐந்தும் போக்கினான்

 

என்றும் குறிப்பிட்டுள்ளதை அறியலாம்.

 

இவ்வுலகில் உயிர்கள் இடையறாது பிறந்தும், இறந்தும் உழல்வதற்குக் காரணம் அவை செய்த வினையே, பிறவி நீங்க வேண்டுமாயின் இருவினையினின்றும் நீங்குதல் வேண்டும். இதற்குரிய ஒரே வழி இறைவன் புகழை எப்போதும் சொல்ல வேண்டும் என்பதனை,

 

இருள்சேர் இருவினையும் சேரா, இறைவன்

 

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

 

என்பதனால் அறியலாம். ''பரவுவார் வினை தீர்க்க நின்றார்'' என்றும் ''பாடநீடு மனத்தார் வினை பற்றறுப்பார்களே அடி ஒத்தகவல்லார் வினை வீடுமே'' என்றும், நாதனை ஏத்துமின், ''நும்வினைளையவே பாட்டும் பாடிப் பரவித் திரிவார், ஈட்டும் வினைகள் தீர்ப்பார்'' எனத் திருமறைகள் வினைகள் தீர இறைவனை எந்நாளும் தொழுதேத்த வேண்டும் என வள்ளுர் வழி நின்று விரிவுபடப் பேசியுள்ளதைக் காணலாம்.

 

வள்ளுவப் பெருந்தகை பிறப்புக்குக் காரணம் துன்பமே என்பதனை, ''பிறவிப் பெருங்கடல்'' என்றே கூறுவர். இங்குப் பிறவியைக் கடலாக உருவகித்துள்ளதை நாமறிவோம். பிறிதொருக் குறளில்,

 

பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்

 

மருளானாம் மாணாப் பிறப்பு

 

எனக் குறிப்பிட்டுள்ளார். ''இங்கு மாணாப் பிறப்பு'' என்பதற்குப் பரிமேலழகர் இன்பமில்லாத பிறப்பு எனக் கூறியுள்ளார்.

 

துன்பமாகிய பிறப்பினைத் தொலைக்கப் பிறக்காமல் இருத்தல் வேண்டும். இதனை,

 

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை; மற்றது

 

வேண்டாமை வேண்ட வரும்

 

எனக் குறிப்பிட்டுள்ளார். அத்தகைய பிறவித் துன்பத்திற்குக் காரணமாகிய அவாவை நீக்குதல் வேண்டும். மீண்டும் மீண்டும் உயிர்கள் இம்மண்ணுலகில் பிறந்து அவாவால் அலைக்கழிக்கப்படாமல் இருக்க உயிர்கள் அவாவினை ஒழித்துப் பிறவித் துன்பத்தை நீக்கி இறைவனுடைய திருவடியில் சரண் புக வேண்டும். இதுவே சரணாகதித் தத்துவமாகும் என்பது சமயக் கருத்து. இதனை வள்ளுவம் தெளிவுபடப் பேசியுள்ளதை இங்கு அறியலாம்.

 

பிறந்த பிறப்பறுக்கும் எங்கள்

 

''கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்கவல்லானே''

 

''அல்லற் பிணி அறுப்பானே''

 

''எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொண்டு''

 

''பித்த உலகில் பிறப்போடிறப் பென்னும்

 

சித்த மிகாரக் கலக்கம் தெளிவித்த வித்தகத்தேவர்''

 

எனவரும் செய்யுட்கள்,

 

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

 

இறைவனடி சேரா தார்

 

வேண்டுதல் வேண்டாமை யிலானடி சேர்ந்தார்க்கு

 

யாண்டும் இடும்பை யில

 

என்னும் குறட்பாக்களின் கருத்திற்கேற்ப அமைந்துள்ளதைக் காணலாம். பிறப்பறுப்போர்க்கே இறைவன் திருவடிக்கிட்டும். இறைவன் திருவடி கிட்ட உயிர்களின் பிறவியை நீக்கி அருள்பவன் இறைவனே என்னும் கருத்தினை இங்கு அறியலாம்.

 

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்

 

செம்பொருள் காண்ப தறிவு

 

இங்குப் பிறப்பென்னும் பேதைமை நீங்க என்பதனால் பிறப்பறுத்த நிலையே வீடுபேறு அடைதற்குரியநிலை என்பதனை நன்கறியலாம்.

 

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும்,

 

பிறவிப் பெருங்கடல் நீந்துவர்

 

என்னும் குறட்பாக்கள் மேலே உள்ள கருத்துகளையே கூறும்,

 

யான்என தென்னும் செருக்கறுப்பான் வானோர்க்

 

குயர்ந்த உலகம் புகும்

 

என்னும் குறளால் ''வானுலகம்'' ஆகிய தேவர் உலகம் என்னும் வீட்டுலகம் எய்த, யான் - எனது என்னும் அகப்பற்று, புறப்பற்று ஆகிய பற்றுகளை நீக்க வேண்டும் என்பதனை அறியலாம்.

 

வள்ளுவப் பெருந்தகை அன்பின் மகத்துவத்தைக் கூறும் பொழுது,

 

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்

 

வற்றல் மரம்தளிர்த் தற்று

 

அன்பின் வழிய துயிர்நிலை; அஃதிலார்க்கு

 

என்புதோல் போர்த்த உடம்பு

 

என விளக்கியுள்ளார். சைவ சமயம் அன்பை முதன்மைபடுத்தியே பேசும். அது இறைவன் திருவருளை அவனிடத்தில் நாம் செய்யும் அன்பாலேயே பெறமுடியும் எனக் கூறியுள்ளது. அன்பின் வழித்தோன்றும் மெய்பாடுகளைப் பற்றித் திருவாசகம் கூறும்போது,

 

ஆடு கின்றிலைகூத்து; உடையான் சுழற்கு

 

அன்பிலை; என்புருகிப்

 

பாடுகின்றிலை; பதைப்பதும் செய்கிலை;

 

........ நெஞ்சே

 

தேடு கின்றிலை;

 

என்று சுட்டிச் செல்லும்.

 

மெய்கலந்த அன்பர் அன்

 

பெனக்குமாக வேண்டுமே,

 

வேண்டும்நின் கழற்கண் அன்பு

 

என மணிவாசகர் இறைவனிடம் வேண்டி நிற்பதைக் காணலாம்.

 

''பாசம் பரஞ்சோதிக் கென்பாய்''

 

தில்லைச் சிற்றம் பலத்தன்

 

ஈசனார்க் கன்பர் யாம் ஆரேலோரெம் பாவாய்

 

என அன்பின் நிலையைப் பேசும் திருவெம்பாவை.

 

வள்ளலார் இறைவனிடம் வேண்டும்பொழுது உலக உயிர்கள் அனைத்திடத்தும் அன்பு செய்தல் வேண்டும் என்பார். இதனை,

 

அப்பா நான் வேண்டுதல் கேட்டறிதல் வேண்டும்

 

ஆருயிர் கெல்லாம் அன்பு செய்தல் வேண்டும்

 

என்பதனால் அறியலாம். திருமந்திரம் ''அன்பே சிவம்'' எனக் கூறும். சைவக் குரவர் ''அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே'' என்பார். அன்பு செலுத்தினால் இறைவனை அடையலாம். தீவினைகளும் அஞ்சும் என்பதனை,

 

மன்னுயிர் ஓம்பி அருள்ஆள்வாற்கு இல்என்ப

 

தன்னுயிர் அஞ்சும் வினை

 

என்பதனால் அறியலாம்.

 

அவா இல்லார்க்(கு) இல்லாகும் துன்பம்; அஃதுண்டேல்

 

தவாஅது மேன்மேல் வரும்

 

என்றும் குறட்பா கூறுகின்றது. இதனைப் ''பிறவியால் வருவனகேடு பந்தம் நீங்காதவர்க் குய்ந்துபோக் கில்லென'' என்று இரண்டாம் திருமுறை கூறும்.

 

தனக்குவமை யில்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

 

மனக்கவலை மாற்றல் அரிது

 

என்பார் வள்ளுவர்.

 

இறைவனடியைச் சேராதவர்க்கு இம்மையில் கவலையும், மறுமையில் பிறவி நீக்கமும் இல்லாது போய்விடும். இறைவனடியைச் சேர உணவைக் குறைத்தல், பட்டினியிருத்தல், காட்டில் இருத்தல், அறம் கேட்டல், தலயாத்திரை செய்தல் தேவையில்லை. இறைவன் திருவடியில் சிந்தை வைத்தால் பயன்விளையும் இதனை,

 

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்

 

எண்ணின் தவத்தால் வரும்

 

வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்

 

ஈண்டு முயலப் படும்

 

எனக் கூறியுள்ளார் வள்ளுவப் பெருந்தகை.

 

இக்கருத்தை அடியொற்றி,

 

மற்றுஒற்றவம் செய்து வருந்தில் என்

 

பொற்றை யுற்றெடுத் தான்உடல் புக்கிறக்

 

குற்ற நற்குரையார் கழற் சேவடி

 

பற்றிலாத வர்க்குப் பயன் இல்லையே

 

எனத் திருமுறை கூறியுள்ளதால் அறியலாம்.

 

உயிர்களின் பிறப்பை நீக்குவது இறைவன் திருவடி என என்னும்போது திருவாசகமும் உயிர்கட்குப் பிறவியை அழிப்பவன் இறைவனே என்கிறது.

 

''பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள்''

 

''மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடி''

 

''எல்லாப்பிறப்பும் பிறந்திளைத்தேன்''

 

''மெய்யே உன் பொன்னடிகள்''

 

என வருவதால் அறியலாம்.

 

திருவள்ளுவர் வீடுபேற்றை ''மற்றீண்டு வாரா நெறி'' என்றும் ''பேரா இயற்கை'' என்றும் குறிப்பிட்டுள்ளதை,

 

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்

 

மற்றீண்டு வாரா நெறி

 

ஆரா இயற்கை அவா நீப்பின் அந்நிலையே

 

பேரா இயற்கை தரும்

 

என்னும் குறட்பாக்கள் வாயிலாக அறியலாம். திருவாசகம் ''மீண்டு வாரா வழி அருள் புரிபவன்'' இறைவன் என்னும். ''பேரா உலகம்'' என்பதனைத் திருச்சதகம்,

 

பேரா உலகம் புக்கார் அடியார்

 

புறமே போந் தேன் யான்

 

என்றும் குறிப்பிடும். திருவெம்பாவை ''வாரா வழியருளி வந்தென் உளம் புகுந்த'' என்று குறிப்பிட்டுள்ளது. சைவ சமயம் வாரா உலக நெறி என்று வீடுபேற்றைக் குறிப்பிட்டுள்ளது.

 

திருவள்ளுவர் நாம் வாழும் மண்ணுலகமே யன்றி மேல் உலகமும் உளது என்றும் அதில் வாழ்வோர் ''வானோர்'' என்றும் ''விண்ணோர்'' என்றும் தேவர், கடவுளர் என்றும் வழங்குகின்றார். இதனைப் ''புத்தேள் உலகத்தும்'' ''புத்தேள் உலகு'' ''புத்தேளிர்வாழும் உலகு'', ''புத்தேள் நாடுண்டோ'' என்றும் திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். திருவாசகம்

 

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்

 

என எழு பிறப்பும் பிறந்து இளைத்ததைக் கூறும். ''புத்தேளிர் கோமான்'' எனத் திருச்சதகம் கூறும். வீட்டுலகத்திற்கு மேல் செல்லுதலைப் ''பரகதி'' எனத் திருவாசகம் குறிப்பிடும். இதனைப் ''பரகதி பாண்டியற்கருளினை'' என்பதால் அறியலாம்.

 

உலகங்கள் பல தோன்றி அழிந்ததைச் சமயங்கள் குறிப்பிட்டுள்ளன. திருவள்ளுவர்,

 

ஊழிபெயரினும் தாம்பெயரார், சான்றாண்மைக்கு

 

ஆழி எனப்படு வார்

 

இங்கு வழி அழிவைக் கூறியுள்ளார். இறைவனை, ஊழி முதல்வன் எனப் போற்றித் திருவகவல் கூறியுள்ளது. ''ஊழி முதல்வனாய் நின்ற, ஒருவனை'' என்று திருவெம்பாவை கூறும். திருத்தோணோக்கம் ''ஊழிமுதற் சிந்தாத நன்மணிவந்தேன் பிறவித், தாழைப் பிறத்தவாதோணோக்க மாடாமோ'' எனக் குறிப்பிட்டுள்ளதால் அறியலாம்.

 

இவ்வாறு சைவ சமயக் கருத்துகளை உள்ளடக்கியே திருக்குறள் உள்ளதைத் தெளிவாக இக்கட்டுரை நிறுவுவதை அறியலாம்.

 

ஆய்வு முடிவுகள்

 

* ஐம்பொறிகளை அடக்குதல் வேண்டும். ஐம்பொறிகளில் உண்டாகும் ஆசையை அறுப்பவன் இறைவனே. இருளினை அகல இறைவன் புகழ்பாட வேண்டும்.

 

* பிறவிக்குக் காரணம் துன்பம். எனவே பிறவியை அகற்ற வேண்டும். அதற்கு இறைவனிடம் சரண்புக வேண்டும். இதுவே சரணாகதித் தத்துவம் எனலாம்.

 

* துறவே இவ்வுலகில் நிலையிலாப் பேரின்பம் நல்கும்.

 

* பிறப்பறுத்த நிலையே வீடுபேறு. இதற்கு அக, புறப்பற்றுகளை விட்டொழிக்க வேண்டும்.

 

* உலக உயிர்களிடத்துக் காட்டும் அன்பே இறைவனுக்குப் போய்ச் சேருகிறது. இதனையே அருளாளர்கள் பேசியுள்ளனர்.

 

* பிறவிப் பந்தத்தை நீக்க வேண்டும். இதற்கு இறைவனிடம் சிந்தை வைத்துத் தவம் செய்தல் வேண்டும்.

 

* வீடுபேற்றை மீண்டும் ''வாரா நெறி'', ''பேரா இயற்கை'', ''வாரா வழி'', என வள்ளுவரும் பிற அருளாளர்களும் குறிப்பிட்டுள்ளனர்.

 

* திருவள்ளுவர் ''ஏழ் பிறப்பு'', மேல் உலகம் பற்றிக் கூறியுள்ளார். சைவ சமயக் கருத்துகள் வள்ளுவர் வெண்பாக்களில் நிரம்ப உள்ளன.

by Swathi   on 11 Apr 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மலேசியாவில் வெளியிடப்படும்  Thirukkural Translations in World Languages மலேசியாவில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
பாரெங்கும் திருக்குறள் - முனைவர் மெய் சித்ரா பாரெங்கும் திருக்குறள் - முனைவர் மெய் சித்ரா
சிங்கப்பூரில் (Thirukkural Translations in World Languages) நூல் வெளியீட்டு விழா. சிங்கப்பூரில் (Thirukkural Translations in World Languages) நூல் வெளியீட்டு விழா.
Thirukkural Translations in World Languages - மாவட்ட அறிமுகக்கூட்டம் - வெளியீட்டுவிழா Thirukkural Translations in World Languages - மாவட்ட அறிமுகக்கூட்டம் - வெளியீட்டுவிழா
சிகாகோவில் நடைபெற்ற ஐந்தாம் திருக்குறள் மாநாட்டில் Thirukkural Translations in World Languages சிகாகோவில் நடைபெற்ற ஐந்தாம் திருக்குறள் மாநாட்டில் Thirukkural Translations in World Languages
திருவண்ணாமலையில் 1,330 திருக்குறள்களை ஓதி மலைவலம் திருவண்ணாமலையில் 1,330 திருக்குறள்களை ஓதி மலைவலம்
அரியலூர், திண்டுக்கல் மாவட்டங்களின் திருக்குறள் முற்றோதல் பயிற்சியாளர்களுக்கு வரவேற்பு. அரியலூர், திண்டுக்கல் மாவட்டங்களின் திருக்குறள் முற்றோதல் பயிற்சியாளர்களுக்கு வரவேற்பு.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.