LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- நாமக்கல் கவிஞர் பாடல்கள்

திருநாள் மலர்

    154. புத்தாண்டு வணக்கம்

    சித்திரை மாதத்தில் புத்தாண்டு தமிழ்த்
    தெய்வம் திகழும் திருநாட்டில்,
    இத்தினம் அந்தத் திருநாள் ஆதலின்
    ஈசனைப் போற்றி வரம்கேட்போம்.

    கொல்லா நோன்புடன் பொய்யா விரதம்
    கொண்ட தமிழ்க்குணம் குன்றாமல்
    எல்லா மக்களும் இன்புறக் கோரிடும்
    எண்ணம் வளர்த்திடப் பண்ணிடுவோம்.

    வீரப் படைகளின் தோள்வலியும் முன்னே
    வெற்றிகள் கண்டிட்ட வாள்வலியும்
    போரில் பயன்பட மாட்டா என்கிற
    புத்தியை எங்கும் புகட்டிடுவோம்.

    கோபத்தை மூட்டிடும் பேச்சுகளும் வெறும்
    குற்றங்கள் சாட்டிடும் ஏச்சுகளும்
    தாபத்தை நீடிக்கச் செய்யுமல் லால்வேறு
    தந்திடும் நன்மைகள் ஒன்றுமில்லை.

    வள்ளல் மகாத்மா காந்தியின் வாழ்வே
    வள்ளுவன் தந்த திருக்குறளாம்.
    தெள்ளிய உண்மையைத் தேர்ந்து நடத்திடத்
    தெய்வத் திருவருள் நாடிடுவோம்.

    உலகத்தில் போர்ப்பயம் நீங்கிடவும் மக்கள்
    உள்ளத்தில் அன்பறம் ஓங்கிடவும்
    சுலபத்தில் கண்டு சுகம்பெறக் காந்தியைச்
    சுதினத்தில் வாழ்த்தித் தொழுதிடுவோம்.

    155. புத்தாண்டு சபதம்

    நாக ரீக மென்று சொல்லி
    எந்தி ரத்தை நம்பியே
    வேக மாக யுத்த மென்றே
    குழியில் வீழ்ந்து வெம்பினார்
    போக வாழ்வை எண்ணி எண்ணிப்
    போட்டி யிட்டு முண்டியே
    சோக முற்றே உலக மெங்கும்
    வறுமை மிஞ்சத் தண்டினோம்.

    உண்டு டுத்துக் குடிவெ றித்திங்
    குலகை ஆளும் ஆசையே
    கண்டு விட்ட இன்ப மாகக்
    கால முற்றும் பேசியே
    சண்டை யிட்டுக் கொன்று வீழ்த்தச்
    சக்தி தேடும் ஒன்றையே
    கொண்டு விட்ட கொள்கை யாக்கிக்
    கொடுமை சூழ நின்றுளோம்.

    ஒருவர் நாட்டை ஒருவர் பற்றி
    உரிமை பேசி ஆள்வதும்
    இருவர் மூவர் சேர்ந்து கொண்டும்
    இம்சை காட்டி வாழ்வதும்
    பெருமை என்று எண்ணி வந்த
    பித்துக் கொண்ட கொள்கையால்
    தரும மற்று மனித வர்க்கம்
    தலைகு னிந்து வெள்கினோம்.

    எந்த வேளை என்ன வென்று
    ஏது சண்டை கூடுமோ!
    எந்த நாட்டில் எந்தத் தேசம்
    எந்தக் குண்டைப் போடுமோ!
    வந்த தீமை தப்பி வாழ
    வழியைத் தேடி மாநிலம்
    சிந்தை நொந்து மனித வாழ்வு
    சீர்கு லைந்து போனதே.

    உலகில் உள்ள மக்கள் யாரும்
    ஒருகு டும்ப மாகவே
    கலக மற்று யுத்த மென்றே
    கவலை விட்டுப் போகவே
    குலவி வாழ இந்த நாட்டின்
    கொள்கை யாகும் சாந்தியே
    சுலப மான மார்க்க மென்று
    சுத்த மாக ஏந்துவோம்.

    உயிரி ருக்கும் உடல னைத்தும்
    ஈசன் வாழும் உறையுளாம்
    அயர்வி லாத ஞான மூட்டும்
    அருள றிந்த அறிவுளோம்
    பெயர்ப டைத்த நமது நாட்டின்
    பெருமை யாகும் மந்திரம்
    துயர றுக்கும் 'சாந்தி' சொல்லித்
    தொண்டு செய்ய முந்துவோம்.

    156. புத்தாண்டு வாழ்த்துகள்

    புகுந்தது நமது வாழ்வில்
    புதியதோர் ஆண்டிந் நாளே
    பூசனை புரிந்து போற்றி
    ஈசனை வணங்கி நிற்போம்.
    உகுந்திடும் தீமை யாவும்
    ஒழிந்திடும் துன்ப மெல்லாம்
    உயர்ந்திடும் நிலைமை; கீர்த்தி
    ஓங்கிடும்; காரி யத்தில்
    மிகுந்திடும் இன்பம்; நெஞ்சில்
    மிகுந்திடும் அன்பும் பண்பும் ;
    மேவிடும் தருமம் தானம் ;
    மேவிய சுற்றம் சூழ
    மகிழ்ந்திடும் உள்ளத்தோடு
    மனையறம் சிறக்க நீங்கள்
    மங்களம் பெருகி வாழ
    மனமார வாழ்த்து கின்றேன்.

    சத்தியமும் சாந்தமுமே துணைக ளாகச்
    சன்மார்க்க வழிநடக்கும் கொள்கை தந்த
    உத்தமனாம் காந்தியரை உள்ளத் தெண்ணி
    உலகாளும் பரம்பொருளை வணங்கி நின்று
    சித்திரையாம் புத்தாண்டுத் திருநாள் காணும்
    சீர்மிகுந்த தமிழ்த்தாயின் புகழைப் பாடி
    மெத்தநலம் பெருகிஉங்கள் குடும்ப வாழ்க்கை
    மேன்மேலும் சிறப்படைய வாழ்த்து கின்றோம்.

    157. தனிப்பெருந் திருநாள்

    தமிழ்த்திரு நாட்டின் தனிப்பெருந் திருநாள்
    'பொங்கல்' என்னுமிப் புனிதநன் னாள்முதல்
    வையகம் முழுவதும் மெய்யறம் ஓங்கி
    வறுமையும் பகைமையும் வஞ்சமும் நீங்கி
    உங்கள் குடித்தனச் சிறப்புகள் உயர்ந்து
    பண்டம் பலவும் பணமும் நிறைந்து
    மக்களும் மனைவியும் மற்றுள சுற்றமும்
    இன்பம் பெருகிட இல்லறம் நடத்திப்
    பல்லாண்டு வாழ்ந்திடப் பரமனார் அருளும்
    வாழிய உங்கள் வளமனைப் பொங்கல்.

    158. இன்பப் பொங்கல்

    பொங்கல் எனும்பொழுதில்--இன்பம்
    பொங்குது துன்பங்கள் மங்கி மறைந்திடும்
    மங்களச் சொல்அதிலோர்--தெய்வ
    மந்திரம் உண்டெனச் சிந்தை களித்திட
    எங்கள் தமிழ்நாட்டில்--மிக்க
    ஏழையும் செல்வரும் தோழமை எய்திடும்
    இங்கிதம் கண்டிடும்நாள்!--பலர்
    எங்கும் புகழ்ந்திட உங்கள் குடித்தனம்
    பொங்குக பொங்குக பால்!

    வெள்ளை அடித்திடுவோம்--எங்கள்
    வீடுகள் வாசலில் கூடிய மாசுகள்
    அள்ளி எறிந்துவிட்டு--மிக
    அற்புதச் சித்திரம் பற்பல வாணங்கள்
    புள்ளிகள் கோலமிட்டுத்--தெய்வ
    பூசனைத் தீபங்கள் வாசனைத் தூபங்கள்
    உள்ளத்தி லும்புகுந்தும்--அங்கே
    ஊறிய தீமைகள் மாறுதல் செய்திடும்
    சீருடைப் பொங்க லிதாம்!

    மாடுகள் நாய்குதிரை--ஆடும்
    மக்களைப் போலவே ஒக்கும் உயிரென்று
    நாடும் நினைவுவந்து--பொங்கல்
    நாளில் அவைகளின் தாளில் தளையின்றித்
    தேடும் உரிமைதந்து--முற்றும்
    தேய்த்துக் குளிப்பாட்டி நேர்த்தி யுறமலர்
    சூடின தாகச்செய்வோம்--அதில்
    தோன்றும் கருணையை ஊன்றி நினைத்திட
    ஏன்றது இந்தப் பொங்கல்!

    அஞ்சும் மனத்தவரும்--கொஞ்சம்
    ஆண்மை தருமனப் பான்மை யடைந்திட
    மஞ்சு விரட்டிடுவோம்--துஷ்ட
    மாட்டையும் அடக்கும் தாட்டிகம் காட்டுவம்
    வஞ்சனை மோசங்களும்--தங்கள்
    வாடிக்கை விட்டந்த வேடிக்கை பார்த்துடன்
    கொஞ்சி மகிழ்ந்திடும்நாள்!--மைந்தர்
    கூட்டமும் பந்தய ஓட்டமும் மங்களப்
    பாட்டும் மிகுந்த பொங்கல்!

    மங்கள வாழ்வுபெற்று--மக்கள்
    மாச்ச ரியம்தரும் ஏச்சுக ளைவிட்டு
    எங்கள் திருநாட்டில்--இனி
    ஏழ்மையும் யாருக்கும் தாழ்மையும் நீங்கிடச்
    செங்கை சிரங்கூப்பித்--தெய்வ
    சிந்தனை யிற்பல வந்தனை பாடிஇப்
    பொங்கலை வாழ்த்திடுவோம்--இந்தப்
    பூதலம் யுத்தத்தின் வேதனையாற் படும்
    தீதறப் பொங்குக பால்!


    159. சுதந்தரப் பொங்கல்

    அடிமை விலங்குகள் அகன்றன இனிமேல்
    கொடுமை பிறர்பால் கூறுதற் கில்லை
    திடமுடன் சத்தியத் தீயினை வீட்டி
    மடமை மதவெறி மமதையை எரித்துப்
    பொய்யும் மோசமும் புலையும் பொசுங்க
    வையம் முழுவதும் வாழ்ந்திடத் துணிந்திங்
    கன்பெனும் பாலை அடுப்பகத் தேற்றித்
    துன்பெனும் துர்நீர் சுண்டித் தொலைந்திடக்
    காய்ச்சித் திரட்டிய கருணைப் பொங்கல்
    பாய்ச்சும் சுதந்தரப் பரிமளம் கமழ
    அமிழ்தம் இதுவென அழியா வரந்தரும்
    தமிழன் தெய்விகத் தனிரசம் சேர்த்துப்
    புத்தம் புதியதோர் சுவைதரப் புசித்து
    நித்தமும் மகிழ்வுடன் நெடுநாள் வாழ்வீர்!

    160. பொங்குக புதுவளம்

    பொங்குக பொங்கல் பொங்குகவே
    பொங்குக புதுவளம் பொங்குகவே
    திங்களில் மும்முறை மழைபொழியத்
    தினம்இது முதல்நம் குறைஒழிய
    மங்குக போர்வெறி மாச்சரியம்
    மதவெறி நிறவெறி தீச்செயல்கள்
    தங்குக சத்திய சன்மார்க்கம்
    தரணியில் மாந்தர்கள் எல்லார்க்கும்.

    மாநில உயிர்கள் நலமுறவும்
    மக்கள் உடல்வளம் பலமுறவும்
    ஞானமும் கல்வியும் சிறந்திடவும்
    நல்லன உணர்ச்சிகள் நிறைந்திடவும்
    தானியக் கதிர்வளம் உயர்ந்திடவே
    தக்கன உழவுகள் முயன்றிடுவோம்
    போனதிங் குணவுப் பஞ்சமெனப்
    புதுவளம் எங்கணும் மிஞ்சிடவே. (பொங்)

    இயற்கையின் வளம்பல இருந்தாலும்
    இன்பம் யாவையும் பொருந்தாவாம்
    செயற்கைப் பொருள்கள் சேராமல்
    சிறப்புள வாழ்வெனும் பேராமோ?
    வியக்கும் பொருள்களைச் செய்திடுவோம்
    வேண்டிய திறமைகள் எய்திடுவோம்
    நயக்கும் தொழில்பல பெருகவென
    நமக்கதில் ஊக்கம் வருகவென. (பொங்)

    உழவும் தொழிலும் மலிந்துவிடில்
    ஊரில் செல்வம் பொலிந்துவிடும்
    விழவும் தினந்தினம் விருந்துகளும்
    வீட்டிலும் நாட்டிலும் இருந்துவரும்
    பழகும் அன்னிய நாடுகளும்
    பரிவுடன் எதையும் ஈடுதரும்
    செழுமை பெற்றிடும் வாணிபங்கள்
    சேமித் திடுவோம் நாணயங்கள். (பொங்)

    பொலிவுறச் செல்வம் சேர்ந்தஉடன்
    புதுப்புது உணர்ச்சிகள் ஊர்ந்துவரும்
    இலக்கிய வாழ்க்கையில் இச்சைதரும்
    இன்பச் செயல்களை மெச்சவரும்
    நலிதரும் ஆசையை ஓட்டுவதாய்
    நன்னெறி இன்பம் ஊட்டுவதாய்க்
    கலைகள் யாவையும் திகழ்ந்திடவும்
    கண்டவர் கேட்டவர் புகழ்ந்திடவும். (பொங்)

    கொள்ளை கொள்ளை தானியமும்
    கோரும் பலதொழில் மானியமும்
    வெள்ளிபொன் செல்வம் மிகுந்திடினும்
    வேண்டிய கலைத்திறம் திகழ்ந்திடினும்
    கள்ளமும் பொய்யும் அமிழ்ந்திடவும்
    கருணை நறுமணம் கமழ்ந்திடவும்
    உள்ளம் மலர்ந்திடல் இல்லாமல்
    உண்மை வளமெதும் நில்லாது. (பொங்)

    தனிநா யகன்ஒரு பரம்பொருளாம்
    தரணியை ஆள்வதும் அவன்அருளாம்
    மனநா யகம்இதில் மலர்ந்துவிடில்
    மற்றுள வேற்றுமை உலர்ந்துவிடும்
    ஜனநா யகமுறை ஓங்கிவிடும்
    சச்சர வென்பன நீங்கிவிடும்
    இனமாய் யாவரும் வாழ்ந்திடலாம்
    இன்பப் புதுவளம் சூழ்ந்திடவே! (பொங்)

    161. தமிழர் கண்ட பொங்கல்

    ஏர்தரும் விளைபொருள் யாவையும் நிறைந்தே
    ஏழைகள் படுந்துயர் எங்கணும் குறைந்து
    போர்வெறிக் கொடுமைகள் புரிவதை மறந்து
    பொய்ந்நெறி விடுத்தறம் மெய்ந்நெறி சிறந்து
    சீர்தரும் கல்வியும் கலைகளும் செழிக்கச்
    செம்மையும் இன்பமும் நாட்டினிற் கொழிக்கப்
    பார்புகழ் உழவினைப் பணிந்திட என்றே
    பண்டைய தமிழர்கள் கண்டதிப் பொங்கல்.

    (வேறு)

    பொங்குக பொங்கல் பொங்கிட இன்பம்
    ஏரைத் தொழுதால் சீரைப் பெறலாம்
    என்பதைப் புகட்டும் இங்கிதப் பொங்கல்
    நன்னாள் ஆகிய இந்நாள் தொடங்கிக்
    கோழை படாத மேழிச் செல்வம்
    வேண்டிய மட்டிலும் வீட்டில் நிறைந்தே
    இன்பம் குறையா இல்லறம் நடத்தி
    மனைவியும் மக்களும் மற்றுள சுற்றமும்
    குலவிட உங்கள் குடித்தனம் சிறந்து
    காந்தியை எண்ணிக் கடவுளை நம்பிச்
    சத்திய சாந்த சன்மார்க்க நெறியில்
    பல்லாண்டு வாழ்வீர் பரமன் அருளும்.

    (வேறு)

    பொங்கி வழிந்திடும் அன்போடு
    பொங்கல் திருநாள் கொண்டாடி
    திங்கள் மும்மாரி பொழிந்திடவும்
    தீமைகள் யாவும் ஒழிந்திடவும்
    எங்கும் மாந்தவர்கள் எல்லாரும்
    ஏதொரு குறையும் இல்லாமல்
    இங்கித முற்றிட வேண்டுமென
    ஈசன் மலரடி பூண்டிடுவோம்.

    ஏரைத் தொழுதால் சீராகும்
    என்கிற அறிவே நேராகும்
    பாரில் இதனை மறந்ததனால்
    பஞ்சம் என்பது நிறைந்ததுவே.
    ஊரும் நாடும் உயிர்வாழ்தல்
    உழவன் காக்கிற பயிர்வாழ்வால்
    தேரும் படிவரும் ஒருநாளே
    தெய்வீகப் பொங்கல் திருநாளாம்.

    வேலும் போரும் வெற்றிகளும்
    வேறுள எவ்வித பெற்றிகளும்
    சீலம் மிக்குள உழவேபோல்
    சேமம் தருகிற தொழிலாமோ?
    பாலும் நெய்யும் பசுவாலே
    பகடுகள் எருதின் இசைவாலே
    சாலும் உழவும் சரியானால்
    சங்கடப் பஞ்சம் வருமோதான்?

    ஏற்றத் தாழ்வுகள் எண்ணாமல்
    எவ்விதப் பிசகும் பண்ணாமல்
    போற்றும் அன்பே நெறியாகப்
    பொதுநல வாழ்வே குறியாகச்
    சாற்றும் படிவரும் பொன்னாளே
    சமரசப் பொங்கல் நன்னாளாம்
    ஆற்றல் பற்பல எய்திடினும்
    அறமே எதிலும் செய்திடுவோம்.

    மைந்தரும் உங்கள் மனைவியுடன்
    மற்றுள சுற்றம் அனைவருமே
    சுந்தரப் பொலிவுடன் களிகொண்டு
    சுவைமிகும் பொங்கல் தங்கிடவும்
    சிந்தையில் தெய்வம் தங்கிடவும்
    சிறப்புடன் மங்களம் பொங்கிடவும்
    வந்தனை பொங்கும் மனத்தோடு
    வணங்கி உங்களை வாழ்த்துகிறோம்.


    162. உழவுப் பொங்கல்

    பொங்குக பொங்கல் பொங்குகவே
    புதுவளம் நிறைந்தறம் தங்குகவே!
    எங்கணும் யாவரும் இன்பமுற
    ஏர்த்தொழில் ஒன்றே தென்புதரும்.

    உணவுப் பொருள்கள் இல்லாமல்
    உயிரோ டிருப்பது செல்லாது;
    பணமும் அதுதரும் நலனெல்லாம்
    பயிர்கள் விளைப்பதன் பலனேயாம்.

    உழவுத் தொழில்தான் உணவுதரும்
    உடையும் அதனால் அணியவரும்
    பழகும் மற்றுள தொழில் யாவும்
    பயிர்த்தொழில் இன்றேல் விழலாகும்.

    தங்கமும் வெள்ளியும் இருந்தாலும்
    தானியம் ஒன்றே விருந்தாகும்
    இங்கிதன் உண்மையை உணர்ந்திடுவோம்
    ஏர்த்தொழில் மிகுந்திடத் துணிந்திடுவோம்.

    உழவே செல்வம் உண்டுபண்ணும்
    உழைப்பே இன்பம் கொண்டுவரும்
    உழவைத் தொழுதிட வருநாளே
    உற்றஇப் பொங்கல் திருநாளாம்.

    ஏழையும் செல்வரும் இங்கிதமாய்
    இசைந்துளம் களித்திடும் பொங்கல்இது
    வாழிய பயிர்த்தொழில் வளம்பெருகி
    வையகம் முழுவதும் வாழியவே.

    163. சமரசப் பொங்கல்

    மனிதர் யாவரும் ஒருஜாதி
    மாநிலம் எங்கணும் ஒருநீதி
    இனிதிவ் வெண்ணம் செழித்திடவே
    இம்சையும் பொய்யும் ஒழித்திடவே
    தனிவழி அறமுறை தமிழேபோல்
    தளர்விலன் சத்திய அமுதூட்டும்
    புனிதன்அக் காந்தியின் பொய்யறியாப்
    பொக்கைச் சிரிப்புகள் பொங்குதல்போல்
    பொங்குக! பொங்கல்! பொங்குகவே!!
    புதிதொரு சுவைதரப் பொங்குகவே!


    164. பொங்கல் படைப்பு

    முத்தமிழ்ப் பண்பெனும் முதுபெருங் கற்கள்
    மூன்றையும் அடுப்பென முன்றிலில் கூட்டி
    அத்தமிழ் விளைத்துள அறம்பொருள் இன்பம்
    அடங்கிய பானையை அடுப்பினில் ஏற்றி
    மெய்த்தவ நெறியெனும் நெருப்பினைப் பொருத்தி
    மேவிய துயர்களை விறகென எரித்துச்
    சத்திய சாந்தநற் பொங்கலைச் சமைத்துச்
    சன்னதி ஆண்டவன் முன்அதைப் படைத்து,

    தீமைகள் யாவையும் தீர்ந்திட நாட்டில்
    திங்கள்மும் மாரிக்குத் திருவருள் கூட்ட
    வாய்மையும் தூய்மையும் வளர்ந்திடும் படிக்கோர்
    வரந்தர வேண்டுமென் றிறைஞ்சிடு வோமே ;
    நோய்மையும் பஞ்சமும் நொடியினில் விலகும்
    நுண்ணிய நலந்தரும் புண்ணியம் பெருகும்
    தாய்மையின் அன்புடன் தழைத்திடும் தருமம்
    தமிழ்ப்பெரும் பொங்கலில் தாரணி மகிழும்.

    165. பொங்கல் பிரார்த்தனை

    சக்திதரும் சூரியனைத் தொழுது நின்று
    சர்வேசன் திருவருளை மனத்தில் எண்ணிப்
    புத்தரிசிப் பொங்கலுண்ட பூரிப்போடும்
    புத்தாடை புனைந்தொளிரும் பொலிவி னோடும்
    எத்துணையும் எவர்க்கேனும் இடைஞ்ச லின்றி
    எவ்வெவரும் அவ்வவர்தம் மனம்போல் வாழ
    ஒத்துதவும் சமுதாயம் உலகில் ஓங்கும்
    ஒருவரத்தைத் திருவருள்பால் உவக்கக் கேட்போம்.

    பொங்கிவரும் விஞ்ஞானப் புதுமை கண்டு
    புத்திகெட்டு மெய்ஞ்ஞானம் போய்வி டாமல்
    எங்கள்திருத் தமிழ்நாட்டின் தெய்வ பக்தி
    என்றென்றும் குன்றாமல் இருக்கு மாறும்
    எங்குமிந்த உலகிலுள்ள மக்க ளெல்லாம்
    இன்பமுற அன்புடனே குலவு மாறும்
    பொங்கலென்று போற்றுமிந்தப் புனித நாளில்
    புண்ணியத்தை நாடுகின்ற எண்ணம் கொள்வோம்.

    மேதினியில் வேற்றுமைகள் இருந்தே தீரும்
    மெய்இதனை ஐயமறத் தெளியச் செய்து
    சாதிமத வேற்றுமையை மிகைப் படுத்திச்
    சண்டைகளை மூட்டுவதைத் தவிர்க்கு மாறும்
    ஓதிஉணர்ந் தறிவறிந்த முன்னோர் கண்ட
    ஒற்றுமையை வேற்றுமையில் உணரு மாறும்
    ஆதிபரம் பொருளிடத்தில் வரங்கள் கேட்போம்
    அதுவேநாம் பொங்கலிலே அடையும் நன்மை.

    166. வாழிய பொங்கல்

    பழையன கழியப் புதியன மலியத்
    தழைத்துப் பூத்துத் தருமம் கனிந்து
    விழவுகள் பாடி விருந்தொடும் உண்டு
    முழவொலி மனைதொறும் முழங்கிடும் பொங்கல்!

    சத்தியம் நிலவச் சாந்தமே குலவ
    உத்தம போதனை ஒப்பிலாச் சமரசம்
    இத்தரை முழுதும் எங்கணும் பரவப்
    பக்தியில் பரமனைத் தொழுதிடப் பொங்கல்!

    யுத்தமே என்னும் ஒருபெரும் பேச்சால்
    இத்தினம் எங்கும் யாவரும் ஏங்கிப்
    பித்தரே யாகிப் பேதுறும் நிலையைச்
    சற்றுநாம் மறக்கச் சாந்தியாம் பொங்கல்!

    நினைவுகள் சிறந்து நிதிபல நிறைந்து
    சினவகை சேர்ந்த சிறுமைகள் தீர்ந்து
    மனைதொறும் மனைதொறும் மங்களம் தங்க
    அனைவரும் இன்புறும் அன்பே பொங்கல்!

    ஏழையென் றெவரும் ஏங்குதல் நீங்கி
    மேழியின் சிறப்பில் செங்கோல் மின்னும்
    வாழ்வினைக் காட்ட வருவதே பொங்கல்
    வாழிய பொங்கல்! வாழிய உலகம்.

    167. கண்ணன் தந்த தீபாவளி

    தீபா வளிப்பெரிய திருநாள்--நாம்
    தெய்வப் பணிபுரிய வருநாள்
    பாபாதி தீவினைகள் ஒழியத்--திடம்
    பண்ணித் தொலைத்துதலை முழுகித்
    தூபாதி கற்பூரம் ஏற்றி--மலர்
    தூவித் தோத்திரங்கள் சாற்றி
    மாபாவி நரகனை வென்றோன்--கண்ணன்
    மலரடி யைத்தொழுது நின்றால்.

    கன்னங் கருநீலக் கண்ணன்--நம்
    காட்சிக் கழகுமிகும் வண்ணம்
    மின்னும் பலஅணிகள் பூண்டு--புவி
    மெச்சும் கட்டழகில் நீண்டு
    சின்னஞ் சிறியவர்கள் உள்ளம்--அந்தச்
    சிங்காரம் கண்டுகளி கொள்ள
    முன்னம் நம்மிடத்தில் வருவான்--குறை
    முற்றும் நீக்கிநலம் தருவான்.

    புத்தம் புதியஉடை தரித்தே--எழில்
    பொங்கும் மலர்மணங்கள் விரித்தே
    சித்தம் வியக்கஒளி வீசிப்--பல
    சின்னஞ் சிறுகதைகள் பேசி
    மெத்தப் படித்துவரும் கேட்டுப்--பயன்
    மேவும் மெய்யறிவு கூட்டும்
    தித்திக்கும் கீதங்கள் பாடி--வந்த
    தெய்வக் கண்ணனிடம் ஓடி,

    கண்ணன் அறிவுரைகள் கேட்போம்--ஒருக்
    காலும் சோர்ந்திருக்க மாட்டோம்
    பண்ணும் எந்தஒரு செயலும்--சுய
    பாசம் அற்றிருக்க முயலும்
    எண்ணம் மிகத்தெளிவு கொண்டோம்--அவன்
    என்றும் பணிபுரியக் கண்டோம்
    திண்ணம் கண்ணனுடை உறவால்--நாம்
    தீரச் சிறப்புகளைப் பெறுவோம்.

    168. தீபாவளி எனும் திருநாள்

    தீபாவளிஎனும் திருநாளே
    தெய்வம் அன்பென வருநாளாம்.
    கோபா வளிகளைக் கொளுத்திடும்நாள்.
    கொஞ்சிக் குலவிக் களித்திடும்நாள்.

    தனித்தனி வீட்டின் தரைமெழுகி
    தரித்திரப் பீடையைத் தலைமுழுகி,
    மனத்துயர் யாவையும் மறந்திடுவோம் ;
    மகிழ்வுடன் உள்ளதை விருந்திடுவோம்.

    உதவாப் பழசாம் வழக்கமெல்லாம்
    உதறித் தள்ளுதல் ஒழுக்கமெனப்
    புதிதாம் ஆடைகள் புனைந்திடுவோம்.
    புதுப்புது வழிகளில் நினைந்திடுவோம்.

    கட்சிச் சண்டைகள் பட்டாசைக்
    கட்டுக் கட்டாய்ச் சுட்டேபின்
    பட்சம் வந்த மனத்துடனே
    பழகுவம் எல்லாம் இனத்துடனும்.

    ஒவ்வொரு வீட்டிலும் பலகாரம் ;
    ஒருவருக் கொருவர் உபகாரம் ;
    இவ்வித வாழ்வே தினந்தோறும்
    இருந்திட வேண்டிநம் மனம்கோரும்.

    ஈயாப் பத்தரும் ஈந்திடும்நாள்
    ஏங்கிடும் அடிமையும் ஓய்ந்திடும்நாள்
    நோயால் நொந்தே இளைத்தவரும்
    நோன்பெனக் கொஞ்சம் செழித்திடுவார்.

    'ஐயா பசி'யென் பாரில்லை
    'அப்புறம் வா'யென் பாரில்லை.
    மெய்யே அன்பு மிகுந்திடும்நாள்
    வேற்றுமை விட்டு மகிழ்ந்திடும்நாள்.

    மாச்சரி யங்களும் மறைந்திடும்நாள்
    மனிதன் இயல்பு சிறந்திடும்நாள்
    ஆச்சரி யம்போல் எல்லோரும்
    ஆடலும் பாடலும் சல்லாபம்.

    169. சுதந்தரத் திருநாள்

    இந்திய நாட்டின் சுதந்தரத் திருநாள்
    இன்பம் யாவையும் இனிமேல் தருநாள் ;
    செந்தமிழ்த் தாயின் திருப்புகழ் பாடித்
    தெய்வம் தொழுவோம் யாவரும் கூடி.

    அன்னிய ஆசைகள் அனைத்தையும் ஒழித்தோம் ;
    'அடிமை' என்னும் சொல்லையும் அழித்தோம் ;
    பொன்னையும் சுகத்தையும் செலவழித் தேனும்
    பூரண சுதந்தரம் அடைந்திட வேணும்.

    அன்பின் ஆண்மையும் ஆற்றலும் வளரும் ;
    அன்னை பாரதத் தாய்மனம் குளிரும் ;
    துன்பம் யாவையும் தொலைத்திட முடியும் ;
    சோற்றுத் தரித்திர மாவது விடியும்.

    முச்சுடர் ஒளிதரும் நம்கொடி நிழலில்
    முற்றிலும் சத்திய சாந்தநல் வழியில்
    மெச்சிடும் நன்மைகள் மிகமிகக் கொடுப்போம் ;
    மேதினி எங்கணும் கொடுங்கோல் தடுப்போம்.

    எல்லாத் தேசமும் எமக்கினி உறவாம் ;
    எவரும் செய்திடும் நன்றியை மறவோம் ;
    நல்லோர் யாரையும் நலமுறக் காப்போம் ;
    நலிப்பவர் எவரும் நடுங்கிடப் பார்ப்போம்.

    சுதந்தரம் சுதந்தரம் சுதந்தரம் ஒன்றே
    சுகந்தரும் சுகந்தரும் சுகந்தரும் என்றும் ;
    பதந்தரும் பலந்தரும் ; பரமனைக் காணும்
    பக்தியென் பவருக்கும் சுதந்தரம் வேணும்.

    170. குடியரசு தினப் பிரார்த்தனை

    இந்தியத்தாய் குடியரசுத் திருநாள் இந்நாள்
    இந்நாட்டின் அயலுறவு சிறப்புற் றோங்கி
    வந்திடுமோ எனநடுங்கும் அணுகுண் டுப்போர்
    வாராமல் தடுத்துலகை வாழ வைக்கும்
    மந்திரமாம் காந்திமகான் மார்க்கம் தன்னை
    மற்றெல்லா நாடுகளும் மதிக்கச் செய்யத்
    துணைபுரியத் திருவருளைத் தொழுவோம் வாரீர்.

    அமிழ்தமெனும் தமிழ்வளர்த்த அறிவிற் கேற்ப
    அன்புமுறை தவறாத ஆற்றல் கூட்டித்
    தமிழரெனும் தனிப்பெருமை தாங்கி நின்று
    தனிமுறையில் செயல்புரியத் தலைப்பட் டாலும்
    இமயமுதல் குமரிமுனை இறுதி யாகும்
    இந்தியத்தாய் சொந்தமதை இகழ்ந்தி டாமல்
    அமைதியுடன் ஒற்றுமையை உறுதி யாக்கும்
    அதுதான்நம் குடியரசின் ஆக்கம் காக்கும்.

    சாதிமத பேதமெல்லாம் மறந்து விட்டுச்
    சமமாகப் பலதுன்பம் சகித்துக் கொண்ட
    சாதனையின் பயனன்றோ இன்று நம்மைச்
    சார்ந்திருக்கும் சுதந்தரத்தின் சக்தி யெல்லாம்?
    ஆதலினால் வேற்றுமையை வளர்த்தி டாமல்
    அன்புருவாம் காந்திஅண்ணல் நமக்குத் தந்த
    போதனையைத் தொடர்ந்துசெயல் புரிவோ மானால்
    புகழோடு குடியரசில் இன்பம் பொங்கும்.

    ஆண்டானுக் கடிமையெனும் அவலம் நீக்கி
    அரசாட்சி நமதுடைமை ஆக்கிக் கொண்டோம் ;
    பூண்டோடு வறுமையறப் பொருளா தாரப்
    புதுமுறைகள் திட்டமிட்டுப் பூர்த்தி செய்வோம் ;
    தீண்டாமை ஒன்றைமட்டும் ஒழித்து விட்டால்
    சாதிமதக் கொடுமையெல்லாம் தீர்த்த தாகும் ;
    தூண்டாத மணிவிளக்காய் நமது நாட்டின்
    குடியரசில் காந்திஒளி துலங்க வாழ்வோம்!

    எந்திரத்தால் சந்திரன்போல் பொம்மை செய்தே
    எட்டாத பெருவெளியில் சுற்றச் செய்தே
    வித்தைமிகும் விஞ்ஞான வித்தை தன்னை
    விதவிதமாய்ப் பாராட்டி வியந்திட் டாலும்
    சிந்தனையில் தெய்வபயம் இருக்க வேண்டும்
    செய்வதெல்லாம் கருணையுடன் செய்ய வேண்டும்
    மந்திரமாம் காந்திமகான் உபதே சத்தை
    மறவாமல் குடியரசில் வளர்க்க வேண்டும்.

    171. காந்தி பிறந்த நாள்

    கத்திய வார்தன்னில்--காந்தி
    கதைதரும் போர்பந்தர்
    புத்திலி பாய்அன்னை--செய்த
    புண்ணிய மேஎன்ன
    உத்தமன் பிறந்ததினம்--அறிஞர்
    உவந்திடும் சிறந்ததினம்
    இத்தினம் மகிழ்வோடு--காந்தி
    எம்மான் புகழ்பாடு.

    ஆர்வம் குன்றாமல்--காந்திய
    அறவழி நின்றோமேல்
    போர்ப்பயம் மறைந்துவிடும்--உலகில்
    புலைகொலை குறைந்துவிடும்
    பார்தனில் எல்லோரும்--மனிதப்
    பண்புள நல்லோராய்ச்
    சீர்பெற வாழ்ந்திடலாம்--தெய்வச்
    சிறப்புகள் சூழ்ந்திடலாம்.

    (வேறு)

    காந்தி மகானைப் பணிந்திடுவோம்
    காட்டிய அஹிம்சை அணிந்துடுவோம்
    சாந்தியின் இன்பம் நிறைந்திடுவோம்
    சண்டைகள் மிகவும் குறைந்திருப்போம்
    மாந்தர் பிறப்பின் சிறப்படைவோம்
    மதவெறி இனவெறி அறப்பெறுவோம்
    தாழ்ந்தவர் யாரையும் தாங்கிடுவோம்
    தன்னலக் கொடுமைகள் நீங்கிடுவோம்.

    தன்னுயிர் இழந்திட நேர்ந்திடினும்
    தான்பிற உடலோடு சேர்ந்திருக்கும்
    இன்னுயிர் நீக்கும் வினைபுரியா
    திருப்பவ ரேதாம் மிகப்பெரியார்
    பொன்னுரை இதன்படி வாழ்ந்தவனாம்
    புண்ணிய மூர்த்திநம் காந்திமகான்
    அன்னவன் புகழே பாடிடுவோம்
    அஹிம்சா வழியே நாடிடுவோம்.

    ஒன்றாய் நல்லது கொல்லாமை
    ஒத்தது பொய்யுரை சொல்லாமை
    என்றான் வள்ளுவன் திருக்குறளில்
    எம்மான் காந்திதன் உருக்குறளில்
    நின்றான் அம்மொழி நிலைநாட்ட
    நீங்காப் பெரும்புகழ் மலைகாட்டி
    நன்றாய் நாமிதை உணர்ந்துவிடின்
    நானிலம் போர்வெறி தணிந்துவிடும்.

    172. கம்பன் திருநாள்

    கம்பன் திருநாள் கொண்டாடிக்
    கவிதா தேவியின் அருள்கூடி
    அன்பின் வாழ்க்கையைக் கடைப்பிடிப்போம்
    அனைவரும் இன்புறும் படிநடப்போம்.

    கற்றவர்க் கெல்லாம் பொதுவாகும்
    கம்பன் திருநாள் இதுவாகும்
    மற்றுள பற்பல நாட்டாரும்
    மதித்துளம் மகிழ்ந்திடும் பாட்டாகும்.

    தமிழ்மொழி தனக்கொரு தவச்சிறப்பைத்
    தந்தது கம்பனின் கவிச்சிறப்பே.
    'அமிழ்தம் தமிழ்மொழி' என்பதுவும்
    அழியா திருப்பதும் கம்பனதாம்.

    கம்பனை மறந்தால் தமிழ்ஏது?
    கவிதை என்பதும் கமழாது!
    அம்புவிக் கவிஞருள் அரசாகும்
    அவனே தமிழ்மொழிப் பரிசாகும்.

    கற்பனை சிறந்தது கம்பன்சொல்
    கலைத்திறம் நிறைந்தது கம்பன்சொல்
    அற்புதச் சித்திரம் அவன்பாட்டு
    அறிவுக் கினிப்பதிங் கவன்பாட்டு.

    சத்தியம் மிளிர்வது கம்பன்சொல்
    சாந்தியைத் தருவது கம்பன்சொல்
    நித்தியம் பெற்றதும் அவன்வாக்கு
    நிந்தனை அற்றதும் அவன்வாக்கு.

    இயல்பாம் வழிகளில் கதைபேசி
    இசைமிகும் மொழிகளில் கவிவீசி
    நயமிகும் நாடகம் நடப்பதுபோல்
    நாவலர் வியந்திடத் தொடுப்பவனாம்.

    கலைமொழி நயங்களைக் காட்டிடவும்
    கல்வியின் தெளிவினை ஊட்டிடவும்
    நிலைதரும் ஊற்றெனத் தமிழ்நாட்டில்
    நின்றிடும் கம்பன் அரும்பாட்டு.

    கன்னித் தமிழெனும் பெருமையெலாம்
    கம்பன் கவிதையின் அருமையினால்
    இன்னொரு கம்பனும் வருவானோ?
    இப்படி யும்கவி தருவானோ!

    துயரம் நேர்ந்திடில் துணையாகும்
    துன்பம் நீந்திடப் புணையாகும்
    அயர்வுறும் வேளையில் அலுப்பகற்றும்
    அச்சம் நீங்கிட வலுப்படுத்தும்.

    குணங்களில் உயர்ந்திட நலங்கொடுக்கும்
    கொடுமையை எதிர்த்திடப் பலங்கொடுக்கும்
    வணங்கிய வாயுரை மொழிகூட்டும்
    வாழ்க்கையின் பயன்பெற வழிகாட்டும்.

    சாதியை மதங்களை மறந்திடவும்
    சமரச உணர்ச்சிகள் நிறைந்திடவும்
    நீதியை அறங்கள் நினைப்பூட்ட
    நிரந்தரக் களஞ்சியம் அவன்பாட்டு.

    பண்டிதர் புகழ்ந்திடல் போதாது
    பாமரர் மகிழ்ந்திடத் தோதாகப்
    பெண்டிரும் பிள்ளையும் அதைப்பிடித்துப்
    பெருமைக ளடைந்திடும்விதம்கொடுப்போம்.

    ஆராய்ச் சிகளால் மயங்காமல்
    அவைதரும் சண்டையில் தயங்காமல்
    நேராய் கம்பனைப் படிப்பவரே
    நிச்சயம் கவிரசம் குடிப்பவராம்.

    திருநாள் நட்புடன் நில்லாமல்
    தினந்தினம் படித்திட எல்லோரும்
    வருநாள் கண்டு களித்திடவே
    வாழிய தமிழுக் குழைத்திடுவோம்.

    173. கம்பன் விழா

    செம்பொருளும் சொற்பெருக்கும் தெளிந்த ஞானம்
    தேடுகின்ற இலக்கியமும் செறிந்த தாகும்
    நம்பெரிய தமிழ்மொழிக்குப் பெருமை நாட்டி
    நானிலத்தில் கவிஞருக்குள் தலைவன் என்றே
    அப்புவியின் பலமொழிகள் படித்தா ராய்ந்த
    அறிஞர்களில் பெரும்பாலார் ஆமோ திக்கும்
    கம்பனுடைத் திருநாளில் கலந்தோர்க் கெல்லாம்
    கைகூப்பி வரவேற்போம் ; கடவுள் காக்கும்!

    அன்னியர்கள் தமிழ்மொழியை அறிந்தோர் பார்த்தே
    அதிசயித்திங் காசைகொள்ளும் கவியாம் கம்பன்
    தன்னையிந்தத் தமிழுலகம் மறக்க லாமோ?
    சரியாகப் போற்றாத தவறே போலும்!
    என்னவிதம் எங்கிருந்தான் என்றும் கூட
    ஏற்பதற்காம் சரித்திரங்கள் ஏனோ காணோம்!
    இன்னமும்நாம் இப்படியே இருக்க லாமோ?
    இழிவன்றோ தமிழரேனும் இனத்துக் கெல்லாம்?

    நிதிபடைத்தோர் கலைவளர்க்கும் நெறியைக் காட்டி
    நீங்காத புகழினுக்கோர் நிலைய மாகி
    மதிபடைத்த புலமையுள்ளோர் எவரும் வாழ்த்த
    மங்காத பெருவாழ்வு தமிழுக் கீந்து
    துதிபடைத்த ராமகதை தோன்றச் செய்த
    சோழவள வெண்ணெய்நல்லூர் சடையன் சேரும்
    கதிபடைத்த சொல்வலவன் கம்பன் பேரும்
    கடல்கடந்த நாடெல்லாம் பரவக் காண்போம்.

    174. வன மகோத்ஸவம்

    வனம கோத்ஸவ வைப வத்தினை
    வான்ம கிழ்ந்திட வாழ்த்துவோம்
    ஜனம கோத்ஸவ மாக வேயிதைத்
    தமிழ கத்தினில் எங்கணும்
    மனம கோத்ஸவ மங்க ளத்துடன்
    மக்கள் யாவரும் செய்திடில்
    தினம ஹோத்ஸவ இன்ப மெய்திடத்
    திங்கள் மும்மழை பெய்திடும்.

    மரம டர்ந்துள வனமி ருப்பதன்
    மகிமை சொல்லவும் கூடுமோ?
    வரம டைந்தென வளமை யாவையும்
    வலிய நம்மிடை நாடுமே
    திறம றிந்திதன் தெய்வ சக்தியைத்
    தேசம் முற்றிலும் ஓதினால்
    உரம்மி குந்திடும் பயிர்செ ழித்திடும்
    உணவி லாக்குறை ஏதினி?

    கடவுள் ஆணையைமீறு கின்றநம்
    கபட நாடக வாழ்வினால்
    அடவி தந்திடும் பசுமை முற்றிலும்
    அழிவு செய்துள தாழ்வினால்
    கடுமை யாகிய பஞ்சம் மிஞ்சிடக்
    காலம் மாறின பருவமும்
    மடமை விட்டிடக் கடமை கண்டினி
    மரம் வளர்ப்பது கருதுவோம்.

    நிழல்கொ டுத்திடும் மரம னைத்தையும்
    விறகெ ரித்துள நிந்தையால்
    தழல்பு குந்துநம் சமையல் செய்திடச்
    சாண முற்றிலும் வெந்ததால்
    தழையி லாமலும் எருவி லாமலும்
    தகுதி யற்றுள மண்ணிலே
    விழல்மு ளைக்கவும் சார மில்லைபின்
    விளைவு எப்படி எண்ணலாம்?

    வனமி ருந்திடில் மழைபொ ழிந்திடும்
    வான நீதியின் சத்தியம்
    வனம ழிந்தது மழைகு றைந்தது
    வாய்மை கண்டனம் இத்தினம்
    மனமு வந்தினி நாட்டி லெங்கணும்
    மரம டர்ந்திடச் செய்குவோம்.
    தினமி ருந்திடும் தானி யக்குறை
    தீர்ந்தி டும்படி உய்குவோம்.

    பசும ரங்களில் தெய்வ முண்டெனப்
    பழைய முன்னவர் போற்றினார்
    இசைமி குந்திட ஆயுள் நீண்டிட
    இன்ப இல்லறம் ஆற்றினார்
    வசைய ழிந்திட நாமும் அப்படி
    வனம ரங்களை எண்ணுவோம்
    திசைய னைத்திலும் புகழ்சி றந்திடத்
    தீர வாழ்க்கையும் பண்ணுவோம்.

    வாழ்க இத்திரு வாரம் முழுவதும்
    மரம்வ ளர்ந்திட நட்டவர்
    வாழ்க அம்மரம் வேர்வ லுக்கிற
    வரையில் நீர்தினம் விட்டவர்
    வாழ்க நம்முடை நாட்டி லெங்கணும்
    வான ளாவிடும் சோலைகள்
    வாழ்க சத்திய சாந்த நல்வழி
    வந்த இந்தச் சுதந்தரம்.

by Swathi   on 26 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.