LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- அருணகிரிநாதர் நூல்கள்

திருப்புகழ்-பாடல்-[1-20]

பாடல் 1 - விநாயகர் துதி
ராகம் - நாட்டை; தாளம் - ஆதி
தந்தன தனதன தந்தன தனதன
     தந்தன தனதன ...... தனதான
கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
     கப்பிய கரிமுக ...... னடிபேணிக் 
கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
     கற்பக மெனவினை ...... கடிதேகும் 
மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
     மற்பொரு திரள்புய ...... மதயானை 
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
     மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே (தி 1) 
முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
     முற்பட எழுதிய ...... முதல்வோனே 
முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
     அச்சது பொடிசெய்த ...... அதிதீரா 
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
     அப்புன மதனிடை ...... இபமாகி 
அக்குற மகளுட னச்சிறு முருகனை
     அக்கண மணமருள் ...... பெருமாளே.
கரதலத்தில் நிறைந்துள்ள பழம், அப்பம், அவல், பொரி (இவைகளை) வாரி உண்ணும் யானை முகக் கடவுளின் திருவடிகளை விரும்பி, அறிவு நூல்களைக் கற்கும் அடியவர்களுடைய மனதில் நீங்காது வாழ்பவனே, நினைத்தவற்றை அளிக்கும் கற்பக விருட்சமே, என்று உன்னைத் துதி செய்தால் வினைகள் யாவும் விரைவில் ஓடிப் போய்விடும். ஊமத்த மலரும், (பிறைச்) சந்திரனும் சடையில் தரித்த சிவபெருமானுடைய மகனும், மற்போருக்குத் தக்க திரண்ட தோள்களையுடையவனும், மத யானையை ஒத்தவனும், மத்தளம் போன்ற பெருவயிறு உடையவனும், உத்தமியாகிய பார்வதியின் மகனும் ஆகிய கணபதியைத் தேன் துளிர்க்கும் புது மலர்களைக் கொண்டு நான் வணங்குவேன். இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ் நூல் முறைமையை, மலைகளுள் முற்பட்டதான மேரு மலையில் முதல் முதலில் எழுதிய முதன்மையானவனே, (அசுரர்களின்) திரி புரங்களையும் எரித்த அந்தச் சிவ பெருமான் எழுந்தருளிய ரதத்தின் சக்கர அச்சை ஒடித்துத் தூளாக்கிய மிகுந்த தீரனே*, (வள்ளி மீது கொண்ட காதலாகிய) அந்தத் துயரத்தோடு (உன் தம்பியாகிய) சுப்பிரமணியன் நடந்த அந்தத் தினைப் புனத்திடையில் யானையாகத் தோன்றி, அந்தக் குற மகளாகிய வள்ளியுடன் அந்தச் சிறிய முருக வேளை அத்தருணத்திலேயே மணம் புரியுமாறு திருவருள் பாலித்த பெருமாளே. 
* திரிபுரத்தின்மேல் படையெடுக்கத் தொடங்குகையில் சிவபெருமான் விநாயகரைப் பூஜிக்க மறந்தார். ஆதலால் சிவபெருமான் ஏறி வந்த தேரின் அச்சு முறியும்படி விநாயகர் செய்தார் என்பது சிவபுராணம்.
பாடல் 2 - விநாயகர் துதி
ராகம் - நாட்டை / மோகனம்; தாளம் - ஆதி
தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
     தத்ததன தத்ததன ...... தனதான
பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை
     பட்சியெனு முக்ரதுர ...... கமுநீபப் 
பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
     பட்டுருவ விட்டருள்கை ...... வடிவேலும் 
திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு
     சிற்றடியு முற்றியப ...... னிருதோளும் 
செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு
     செப்பெனஎ னக்கருள்கை ...... மறவேனே 
இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய்
     எட்பொரிய வற்றுவரை ...... இளநீர்வண் 
டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள
     ரிப்பழமி டிப்பல்வகை ...... தனிமூலம் 
மிக்கஅடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொரு
     விக்கிநச மர்த்தனெனும் ...... அருளாழி 
வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்
     வித்தகம ருப்புடைய ...... பெருமாளே.
அங்கவடி, பேரழகான மணி, பொன் நிறமான சேணம் இவைகளைப் பூண்டு கம்பீரமாக நடக்கும் பறவையாகிய, மிடுக்குள்ள (மயிலாகிய) குதிரையையும், கடம்ப மரத்தின் நன்கு பூத்த மலர்களால் தொடுக்கப்பட்ட மலர் மாலையையும், அந்தக் கிரெளஞ்ச மலை அழிந்து ஒழியும்படி அதன் மேல் பட்டு ஊடுருவிச் செல்லுமாறு விட்டருளிய திருக்கையில் உள்ள கூர்மையான வேலையும், திக்குகள் எட்டும் மதிக்கும்படி எழுந்துள்ள கொடியிலுள்ள சேவலையும், காத்தளிக்கும் சிறிய திருவடிகளையும், திரண்ட பன்னிரண்டு தோள்களையும், வயலூரையும் பாட்டிலே வைத்து உயர்ந்த திருப்புகழை விருப்பமோடு சொல்லுக* என்று எனக்கு அருள் செய்ததை மறக்க மாட்டேன். கரும்பு, அவரை, நல்ல பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இள நீர், தேன், பயறு, அப்ப வகைகள், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், பல வகையான மாவு வகைகள், ஒப்பற்ற கிழங்குகள், சிறந்த உணவு (வகைகள்), கடலை (இவைகளை) பட்சணமாகக் கொள்ளும் ஒப்பற்ற, வினைகளை நீக்க வல்லவர் என்று சொல்லப்படும் அருட் கடலே, கருணை மலையே, வளைந்த சடையையும், பினாகம் என்னும் வில்லையும் கொண்ட மேலான அப்பர் சிவபிரான் பெற்றருளிய திறலோனே, ஒற்றைக் கொம்பு** உடைய பெருமாளே. 
* திருவண்ணாமலையில் 'முத்தைத்தரு' என்ற முதல் பாட்டைப் பாடிய பின்னர் அருணகிரிநாதரை வயலூர் என்ற 'செய்ப்பதி'க்கு முருகன் வரப்பணித்தார். அங்கு தமது மயிலையும், கடப்ப மாலையையும், வேலையும், சேவலையும், பன்னிரு தோள்களையும், திருவடிகளையும், வயலூரையும் வைத்துப் பாடல் பாடக் கூறினார். அந்த அபூர்வமான பாடல்தான் இது.
** மேருமலையில் முன்னர் 'வியாசர்' விநாயகரிடம் தாம் பாரதத்தைச் சொல்லச் சொல்ல வேகமாக ஏட்டில் எழுதப் பணித்தார். எழுதுகோலாக தனது கொம்புகளின் ஒன்றை ஒடித்து விநாயகர் எழுதத் தொடங்கினார். எனவே அவருக்கு 'ஏகதந்தன்' (ஒற்றைக் கொம்பர்) என்ற பெயர் வந்தது.
பாடல் 3 - விநாயகர்
ராகம் - ஹம்ஸத்வனி / ஆனந்தபைரவி; தாளம் - அங்கதாளம் - 8 
தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தகதிமிதக-3
தந்ததனத் தானதனத் ...... தனதான
     தந்ததனத் தானதனத் ...... தனதான
உம்பர்தருத் தேநுமணிக் ...... கசிவாகி
     ஒண்கடலிற் றேனமுதத் ...... துணர்வூறி 
இன்பரசத் தேபருகிப் ...... பலகாலும்
     என்றனுயிர்க் காதரவுற் ...... றருள்வாயே 
தம்பிதனக் காகவனத் ...... தணைவோனே
     தந்தைவலத் தாலருள்கைக் ...... கனியோனே 
அன்பர்தமக் கானநிலைப் ...... பொருளோனே
     ஐந்துகரத் தானைமுகப் ...... பெருமாளே.
விண்ணவர் உலகிலுள்ள கற்பக மரம் காமதேனு, சிந்தாமணி (இவைகளைப் போல் ஈதற்கு) என் உள்ளம் நெகிழ்ந்து ஒளிவீசும் பாற்கடலில் தோன்றிய இனிய அமுதம்போன்ற உணர்ச்சி என் உள்ளத்தில் ஊறி இன்பச் சாற்றினை நான் உண்ணும்படி பலமுறை என்னுயிரின் மீது ஆதரவு வைத்து அருள்வாயாக தம்பியின் (முருகனின்) பொருட்டாக தினைப்புனத்திற்கு வந்தடைவோனே தந்தை சிவனை வலம் செய்ததால் கையிலே அருளப்பெற்ற பழத்தை உடையவனே அன்பர்களுக்கு வேண்டிய நிலைத்து நிற்கும் பொருளாக விளங்குபவனே ஐந்து கரங்களையும் யானைமுகத்தையும் உடைய பெருமானே. 
பாடல் 4 - விநாயகர்
ராகம் - ஹம்ஸத்வனி; தாளம் - அங்கதாளம் - 7 1/2 
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகஜனு-2
தனன தனதன தத்தன தத்தன
     தனன தனதன தத்தன தத்தன
          தனன தனதன தத்தன தத்தன ...... தனதான
நினது திருவடி சத்திம யிற்கொடி
     நினைவு கருதிடு புத்திகொ டுத்திட
          நிறைய அமுதுசெய் முப்பழ மப்பமு ...... நிகழ்பால்தேன் 
நெடிய வளைமுறி இக்கொடு லட்டுகம்
     நிறவில் அரிசிப ருப்பவல் எட்பொரி
          நிகரில் இனிகத லிக்கனி வர்க்கமும் ...... இளநீரும் 
மனது மகிழ்வொடு தொட்டக ரத்தொரு
     மகர சலநிதி வைத்தது திக்கர
          வளரு கரிமுக ஒற்றைம ருப்பனை ...... வலமாக 
மருவு மலர்புனை தொத்திர சொற்கொடு
     வளர்கை குழைபிடி தொப்பண குட்டொடு
          வனச பரிபுர பொற்பத அர்ச்சனை ...... மறவேனே 
தெனன தெனதென தெத்தென னப்பல
     சிறிய அறுபத மொய்த்துதி ரப்புனல்
          திரளும் உறுசதை பித்தநி ணக்குடல் ...... செறிமூளை 
செரும உதரநி ரப்புசெ ருக்குடல்
     நிரைய அரவநி றைத்தக ளத்திடை
          திமித திமிதிமி மத்தளி டக்கைகள் ...... செகசேசே 
எனவெ துகுதுகு துத்தென ஒத்துகள்
     துடிகள் இடிமிக ஒத்துமு ழக்கிட
          டிமுட டிமுடிமு டிட்டிமெ னத்தவில் ...... எழுமோசை 
இகலி அலகைகள் கைப்பறை கொட்டிட
     இரண பயிரவி சுற்றுந டித்திட
          எதிரு நிசிசர ரைப்பெலி யிட்டருள் ...... பெருமாளே.
(முருகா) உன்னுடைய திருவடி, வேல், மயில், சேவல் (இவைகளை) நினைவில் கருதும் அறிவை நான் பெறுவதற்கு, நிரம்பச் செய்யப்பட்ட அமுது, மூன்று வகையான பழங்கள், அப்பமும், புதிய பால், தேன், நீண்டு வளைந்த முறுக்கு, கரும்புடன், லட்டு, நிறமும் ஒளியும் உள்ள அரிசி, பருப்பு, எள், பொரி, ஒப்பில்லாத இனிய வாழைப்பழ வகைகளும், இள நீரும் (ஆகிய நிவேதனப் பொருட்களை), மன மகிழ்ச்சியுடன் தொடும் கைகளையும், ஒப்பற்ற மகர மீன்கள் உள்ள கடலில் வைத்த துதிக்கையையும்* உடைய வளரும் யானை முகத்து ஒற்றைக் கொம்பனாகிய கணபதியை வலம் வந்து, அவருக்கென்றே பொருந்திய மலர் கொண்டு (வழிபட்டும்), துதிப்பதற்கு உரிய சொற்களைக் கொண்டு (துதித்தும்), தூக்கிய கைகளால் காதைப் பிடித்தும், தோப்புக்கரணம் போட்டும், சிரசில் குட்டியும் **, (அந்த விநாயகருடைய) தாமரை போன்ற, சிலம்பு அணிந்த அழகிய பாதங்களில் அர்ச்சனை செய்வதை நான் ஒருபோதும் மறவேன். தெனன தெனதென தெத்தென இவ்வாறான ஒலி செய்யும் பல சிறிய ஈக்கள் மொய்க்கும் ரத்த நீர், திரண்டுள்ள சதைகள், பித்தம் நிறைந்த மாமிசக் குடல்கள், சிதறிய மூளைத் திசுக்கள், பிளந்த வயிற்றில் நிறைந்துள்ள ஈரல்கள், பெருங்குடல்கள், இவைகளோடு வரிசைகளாக ஒலிக்கும் ஒலிகள் நிறைந்த போர்க் களத்தில் திமித திமிதிமி என்று ஒலிக்கும் மத்தளம், இடக்கை என்னும் வாத்தியம் செகசே சே என ஒலிக்கவும், துகு துகு துத்தென்ற ஓசையுடன் ஊது குழலும் உடுக்கைப் பறைகளும் இடி என மிக ஒத்து முழங்க, டிமுட டிமு டிமு டிட்டிம் என மேள வகைகள் ஓசைகள் எழுப்ப, ஒன்றோடொன்று பகைத்த பேய்கள் கைப்பறைகளைக் கொட்ட, ரண பைரவி என்னும் தேவதைகள் சுற்றிக் கூத்தாட, எதிர்த்து வந்து அசுரர்களைப் பலி இட்டு அழித்த பெருமாளே. 
* திருப்பாற் கடலைக் கடைந்த பொழுது மத்தாகிய மந்தர மலை அழுந்த, திருமால் அதை ஆமை உருவெடுத்து முதுகில் தாங்கினார். அதனால் இறுமாப்பு உற்று அவர் கடலைக் கலக்க, சிவபெருமான் ஏவலால் விநாயகர் அந்த ஆமையை அடக்கி, தமது துதிக்கையால் பொங்கிய கடல் நீர் முழுவதையும் குடித்தார்.
** ஒருமுறை அகத்திய முநிவர் தவம் செய்த போது, விநாயகர் காக்கை உருவில் வந்து அவரது கமண்டலத்தை விளையாட்டாக கவிழ்த்துவிட, காவிரி நதி பிறந்தது. தவம் கலைந்த அகத்தியர் பார்க்க, விநாயகர் அந்தணச் சிறுவனாய் ஓடினார். கோபத்தில் அகத்தியர் விநாயகரின் காதைத் திருகி, தலையில் குட்ட முயன்றபோது, ஐங்கரனாய் உருமாறியதும், முநிவர் குட்ட ஓங்கிய கரங்களால் தம்மையே குட்டிக் கொள்ள, விநாயகர் தடுத்தார். தம் சன்னிதியில் தோப்புக்கரணம் செய்து சிரத்தில் குட்டிக் கொள்பவர்களின் அறிவு நலம் பெருக வரம் அளித்தார்.
பாடல் 5 - விநாயகர்
ராகம் - கெளளை; தாளம் - திஸ்ரத்ருபுடை - 7 / மிஸ்ரசாபு - 3 1/2
தனதனன தான தனதனன தான
     தனதனன தான ...... தனதான
விடமடைசு வேலை அமரர்படை சூலம்
     விசையன்விடு பாண ...... மெனவேதான் 
விழியுமதி பார விதமுமுடை மாதர்
     வினையின்விளை வேதும் ...... அறியாதே 
கடியுலவு பாயல் பகலிரவெ னாது
     கலவிதனில் மூழ்கி ...... வறிதாய 
கயவனறி வீனன் இவனுமுயர் நீடு
     கழலிணைகள் சேர ...... அருள்வாயே 
இடையர்சிறு பாலை திருடிகொடு போக
     இறைவன்மகள் வாய்மை ...... அறியாதே 
இதயமிக வாடி யுடையபிளை நாத
     கணபதியெ னாம ...... முறைகூற 
அடையலவர் ஆவி வெருவஅடி கூர
     அசலுமறி யாமல் ...... அவரோட 
அகல்வதென டாசொல் எனவுமுடி சாட
     அறிவருளும் ஆனை ...... முகவோனே.
நஞ்சு பொருந்திய கடலும், தேவர் படையும், சூலாயுதமும், அருச்சுனன் விடுகின்ற அம்பும் சமானம் என்று கூறும்படியான கண்களும், அதிபாரமான மார்பகங்களும் கொண்ட விலைமாதர்களின் சாகசத் தொழில்களினால் விளையும் துன்பங்கள் ஒன்றையும் அறிந்து கொள்ளாது, வாசனை மிக்க படுக்கையில், பகல் இரவு என்ற வேறுபாடு இல்லாமல் சுகபோகத்தில் மூழ்கி ஏழ்மை அடைந்த கீழ்மகனும், அறிவு குறைந்தவனும் ஆகிய அடியேனும் உனது உயர்ச்சி மிக்க திருவடி இணைகளைச் சேர அருள் புரிவாயாக. அரசன் உக்ரசேனனுடைய மகள் தேவகி நிகழ இருக்கும் உண்மையை அறிய மாட்டாதவளாக (அதாவது கண்ணனால் கம்சன் ஏவிவிட்ட அசுரர்கள் கொல்லப் படுவார்கள் என்ற உண்மை தெரியாது) மனம் வாட்டம் உற்று, என் மகனை ஆண்டருளும் பிள்ளைப் பெருமாளே, கணபதியே என்னும் நாமங்களை வரிசைப்படக் கூற (அவள் முறையீட்டுக்கு இரங்கி), (அன்வயப்படுத்தப்பட்ட வரி) இடையர்களுடைய கொஞ்சம் பாலைத் திருடிக் கொண்டு போக (அதாவது யாதவர்களின் தூய மனத்தைக் கண்ணன் தன்வசமாக்க), பகைவர்கள் உயிருக்கு அஞ்சும்படி நீ அடி எடுத்து வர, (நீ வரும் ஒலியைக் கேட்டு) அயலார் அறியாமல் அவர்கள் ஓட, போவது ஏனடா சொல் எனக் கூறி அவர்கள் தம் முடிகளைத் தாக்கும் அறிவை (கண்ணபிரானுக்கு) அருளிய யானைமுகத்துக் கணபதியே. 
பாடல் 6 - நூல்
ராகம் - கெளளை; தாளம் - திஸ்ரத்ருபுடை - 7 / மிஸ்ரசாபு - 3 1/2
தத்தத்தன தத்தத் தனதன
     தத்தத்தன தத்தத் தனதன
          தத்தத்தன தத்தத் தனதன ...... தனதான
முத்தைத்தரு பத்தித் திருநகை
     அத்திக்கிறை சத்திச் சரவண
          முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும் 
முக்கட்பர மற்குச் சுருதியின்
     முற்பட்டது கற்பித் திருவரும்
          முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப் 
பத்துத்தலை தத்தக் கணைதொடு
     ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
          பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப் 
பத்தற்கிர தத்தைக் கடவிய
     பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
          பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே 
தித்தித்தெய ஒத்தப் பரிபுர
     நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
          திக்கொட்கந டிக்கக் கழுகொடு ...... கழுதாடத் 
திக்குப்பரி அட்டப் பயிரவர்
     தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
          சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக் 
கொத்துப்பறை கொட்டக் களமிசை
     குக்குக்குகு குக்குக் குகுகுகு
          குத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை 
கொட்புற்றெழ நட்பற் றவுணரை
     வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
          குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே.
வெண்முத்தை நிகர்த்த, அழகான பல்வரிசையும் இளநகையும் அமைந்த தேவயானை* தேவியின் தலைவனே, சக்திவேல் ஆயுதத்தை ஏந்தும் சரவணபவக் கடவுளே, மோக்ஷ வீட்டுக்கு ஒப்பற்ற ஒரு விதையாக விளங்கும் ஞான குருவே, என்று துதிக்கும் முக்கண்ணர் பரமசிவனார்க்கு வேதங்களுக்கு முதன்மையான ஓம் என்னும் மந்திரத்தை உபதேசித்து, (மும்மூர்த்திகளில் எஞ்சியுள்ள) பிரம்மா, திருமால் ஆகிய இருவரும், முப்பத்து முக்கோடி தேவர்களும் அடி பணிய நின்றவனே, ராவணனுடைய பத்துத் தலைகளும் சிதறி விழுமாறு அம்பை விட்டு, ஒப்பற்ற மந்தர மலையான மத்தைக் கொண்டு பாற்கடலைக் கடைந்து, ஒரு பகற் பொழுதை வட்டமான சக்ராயுதத்தால் இரவு ஆக்கி, நண்பனாகிய அர்ச்சுனனுக்கு, தேர்ப்பாகனாக வந்து தேரினைச் செலுத்திய பசுமையான நீலமேகவண்ணன் திருமால் பாராட்டும் பரம்பொருளே, பரிவோடு என்னைக் காத்தருளும் நாள் ஒன்றும் உண்டோ? (இப்பாடலின் பிற்பகுதி முருகன் அசுரர்களுடன் செய்த போரினை விரிவாக வருணிக்கிறது). தித்தித்தெய என்ற தாளத்துக்கு ஒத்து, சிலம்புகள் அணிந்த நாட்டியப் பாதங்களை வைத்து காளிதேவி திசைகளில் எல்லாம் சுழன்று தாண்டவம் செய்யவும், கழுகுகளோடு பேய்கள் சேர்ந்து ஆடவும், எட்டுத் திக்குகளிலும் உலகங்களைத் தாங்குகின்ற அஷ்ட பைரவர்கள் ** இந்த அழகிய கூத்துக்கு ஏற்ப 'தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக' என்ற தாள ஓசையைக் கூறவும், கூட்டமாகப் பற்பல பறை வாத்தியங்களை அதே தாளத்தில் முழக்கவும், போர்க்களத்தில் கிழக் கோட்டான்கள் 'குக்குக்குகு குக்குக் குகுகுகு' என்ற ஓசையோடு 'குத்திப் புதை, புகுந்து பிடி' என்றெல்லாம் குழறி வட்டமாகச் சுழன்று மேலே எழவும், சினேக எண்ணம் தவிர்த்து விரோத மனப்பான்மையே கொண்ட அசுரர்களை கொன்று பலி கொடுத்து, அசுரர் குல மலை கிரெளஞ்சகிரி தூளாக, தர்ம மார்க்கத்துக்குப் பொருந்த, போர்செய்யவல்ல பெருமாளே. 
குறிப்பு: முருகன் அருணகிரிநாதருக்கு அடி எடுத்துக் கொடுக்கப் பாடிய பாட்டு இது.
* தேவயானை கிரியாசக்தி என்பதால், கர்மயோகத்தை முதலில் அனுஷ்டிக்க அவளைக் குறிப்பிட்டார்.
** அஷ்ட பைரவர்கள்: அசிதாங்கன், காபாலி, சண்டன், உருரு, குரோதன், சங்காரன், பீடணன், உன்மத்தன்.
பாடல் 7 - திருப்பரங்குன்றம்
ராகம் - .....; தாளம் - ........
தனத்த தந்தன தனதன தனதன
     தனத்த தந்தன தனதன தனதன
          தனத்த தந்தன தனதன தனதன ...... தனதான
அருக்கு மங்கையர் மலரடி வருடியெ
     கருத்த றிந்துபின் அரைதனில் உடைதனை
         அவிழ்த்தும் அங்குள அரசிலை தடவியும் ...... இருதோளுற் 
றணைத்தும் அங்கையின் அடிதொறும் நகமெழ
     உதட்டை மென்றுபல் இடுகுறி களுமிட
         அடிக்க ளந்தனில் மயில்குயில் புறவென ...... மிகவாய்விட் 
டுருக்கும் அங்கியின் மெழுகென உருகிய
     சிரத்தை மிஞ்சிடும் அநுபவம் உறுபலம்
         உறக்கை யின்கனி நிகரென இலகிய ...... முலைமேல்வீழ்ந் 
துருக்க லங்கிமெய் உருகிட அமுதுகு
     பெருத்த உந்தியின் முழுகிமெ யுணர்வற
         உழைத்தி டுங்கன கலவியை மகிழ்வது ...... தவிர்வேனோ 
இருக்கு மந்திரம் எழுவகை முநிபெற
     உரைத்த சம்ப்ரம சரவண பவகுக
         இதத்த இங்கிதம் இலகிய அறுமுக ...... எழில்வேளென் 
றிலக்க ணங்களும் இயலிசை களுமிக
     விரிக்கும் அம்பல மதுரித கவிதனை
         இயற்று செந்தமிழ் விதமொடு புயமிசை ...... புனைவோனே 
செருக்கும் அம்பல மிசைதனில் அசைவுற
     நடித்த சங்கரர் வழிவழி அடியவர்
         திருக்கு ருந்தடி அருள்பெற அருளிய ...... குருநாதர் 
திருக்கு ழந்தையு மெனஅவர் வழிபடு
     குருக்க ளின்திற மெனவரு பெரியவ
         திருப்ப ரங்கிரி தனிலுறை சரவண ...... பெருமாளே.
அருமை வாய்ந்த விலைமாதர்களின் மலர் போன்ற அடிகளைப் பிடித்தும், (அவர்களுடைய) எண்ணத்தை அறிந்த பின்பு இடுப்பில் கட்டிய ஆடையை அவிழ்த்தும், அங்குள்ள அரசிலை போன்ற உறுப்பைத் தடவியும், அவர்களுடைய இரண்டு தோள்களிலும் பொருந்தி அணைத்தும், அங்கையின் அடிப்பாகம் தோறும் நகக் குறிகள் இட்டும், இதழ்களை மென்று பற்களால் பல குறிகள் பதித்தும், அடி நெஞ்சில் மயில் குயில் புறா ஆகிய இப் பறவைகள் போன்று பெரிய ஒலி எழச் செய்தும், உருக்க வல்ல நெருப்பிலிட்ட மெழுகு போல உருகிய ஊக்கம் மிக்க அனுபவத்தால் வருகின்ற பயன்களைப் பெற, கையில் உள்ள பழம் போல் விளங்கிய தனங்களின் மீது விழுந்து உருவம் கலங்கி உடல் உருகி, அமுதம் பெருகும் பெருத்த உந்தித் தடத்தில் முழுகி, மெய் உணர்வு அற்றுப் போகும் வண்ணம் உழைக்கின்ற பெருத்த கலவி இன்பத்தில் மகிழ்ச்சி கொள்ளுவதை விட்டு ஒழியேனோ? ரிக் வேத மந்திரத்தை (வசிஷ்டர் முதலிய) ஏழு வகை ரிஷிகளும் அறியும்படி உரைத்த சிறப்பு வாய்ந்தவனே, சரவணபவனே, குகனே, இதம் தருவதும், இனிமை தருவதுமாய் விளங்கும் ஆறு முகங்கள் கொண்ட அழகிய வேளே என்று, இலக்கணங்கள் பொருந்த இயற்றமிழாலும் இசைத் தமிழாலும் விரித்துரைக்கும் அழகிய பல மதுரம் மிகுந்த கவிகளாக இயற்றப்பட்ட செந்தமிழை வகைவகையாக திருப்புயத்தில் பாமாலையாக அணிந்தவனே, களிப்புடன் பொன்னம்பலத்தின் மீது அசைந்து கூத்தாடும் சங்கரரும், (தமக்கு) வழிவழி அடியவரான மாணிக்க வாசகருக்கு (திருப் பெருந்துறையில். திருக்குருந்த மரத்தடியில் அருள் பெறும் வண்ணம் அருள் செய்த குரு நாதரகிய சிவபெருமானது திருக் குழுந்தை என்ற நிலையிலும் அந்த சிவபெருமானே வழிபட்டு நிற்கும் பெரு நிலையிலும் எழுந்தருளியுள்ள பெரியோனே, திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும் சரவண மூர்த்தியே, பெருமாளே. 
பாடல் 8 - திருப்பரங்குன்றம்
ராகம் - ஸாவேரி; தாளம் - ஆதி
தனத்த தந்தன தனதன தனதன
     தனத்த தந்தன தனதன தனதன
          தனத்த தந்தன தனதன தனதன ...... தனதான
உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை
     உரைத்தி லன்பல மலர்கொடுன் அடியிணை
          உறப்ப ணிந்திலன் ஒருதவ மிலனுன ...... தருள்மாறா 
உளத்து ளன்பினர் உறைவிடம் அறிகிலன்
     விருப்பொ டுன்சிக ரமும்வலம் வருகிலன்
          உவப்பொ டுன்புகழ் துதிசெய விழைகிலன் ...... மலைபோலே 
கனைத்தெ ழும்பக டதுபிடர் மிசைவரு
     கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர்
          கதித்த டர்ந்தெறி கயிறடு கதைகொடு ...... பொருபோதே 
கலக்கு றுஞ்செயல் ஒழிவற அழிவுறு
     கருத்து நைந்தல முறுபொழு தளவைகொள்
          கணத்தில் என்பய மறமயில் முதுகினில் ...... வருவாயே 
வினைத்த லந்தனில் அலகைகள் குதிகொள
     விழுக்கு டைந்துமெய் உகுதசை கழுகுண
          விரித்த குஞ்சியர் எனுமவு ணரைஅமர் ...... புரிவேலா 
மிகுத்த பண்பயில் குயில்மொழி அழகிய
     கொடிச்சி குங்கும முலைமுக டுழுநறை
          விரைத்த சந்தன ம்ருகமத புயவரை ...... உடையோனே 
தினத்தி னஞ்சதுர் மறைமுநி முறைகொடு
     புனற்சொ ரிந்தலர் பொதியவி ணவரொடு
          சினத்தை நிந்தனை செயுமுநி வரர்தொழ ...... மகிழ்வோனே 
தெனத்தெ னந்தன எனவரி யளிநறை
     தெவிட்ட அன்பொடு பருகுயர் பொழில்திகழ்
          திருப் பரங்கிரி தனிலுறை சரவண ...... பெருமாளே.
யான் உன்னைத் தினந்தோறும் தொழுவதும் இல்லை. உன் தன்மைகளை எடுத்து உரைப்பதுமில்லை. பல மலர்கள் கொண்டு உன் திருவடிகளை பொருந்தப் பணியவில்லை. ஒருவகையான தவமும் யான் செய்தவன் இல்லை. உன்னருள் நீங்காத உள்ளத்தை உடைய அன்பர் இருக்கும் இடம்கூட யான் அறிகின்றதும் இல்லை. ஆர்வத்தோடு உன் மலையை வலம்வருவதும் இல்லை. மகிழ்ச்சியோடு உன் புகழைத் துதிக்க விரும்புவதும் இல்லை. மலைபோல் உருவமுடன், கனைத்தவாறு வரும் எருமையின் கழுத்தின் மீது வருகின்ற, கரிய நிறமும் கடுங்கோபமும் உடைய யமனின் தூதர்கள் என்முன் தோன்றி நெருக்கி எறிகின்ற பாசக்கயிறு கொண்டும், துன்புறுத்தும் கதாயுதம் கொண்டும் என்னோடு போரிடும் போது, மனம் கலங்கும் செயலும், ஓய்வின்றி அழிவுறும் எண்ணமும் நைந்துபோய் யான் துன்புறும்போது ஒரு கண அளவில் என் பயம் நீங்கும்படியாக அஞ்சேல் என்று கூறி மயிலின் முதுகினில் நீ வருவாயாக. போர்க்களத்தில் பேய்கள் கூத்தாடுவதால் ஊன் உடைந்து உடல்களிலிருந்து சிதறின மாமிசத்தை கழுகுகள் உண்ணவும், விரித்த தலைமயிர் உடையவர்கள் என்னும் அசுரர்களோடு போர் புரிந்த வேலனே, நிறைய ராகங்களில் பாடவல்ல குயிலின் மொழி ஒத்த குரலாள், அழகான வள்ளிமலைக்காரி, (வள்ளியின்) குங்குமம் அணிந்த மார்பில் அழுந்தும் வாசமிகு சந்தனமும் கஸ்தூரியும் அணிந்த மலை போன்ற தோள்களை உடையவனே, தினந்தோறும், நால்வேதமும்வல்ல பிரம்மா விதிப்படி, நீரால் அபிஷேகம் செய்து, பூக்களை நிறைய அர்ச்சித்து, தேவர்களும் கோபத்தை நிந்தித்து விட்ட முனிவர்களும் தொழ, அந்த நித்ய பூஜையில் மனம் மகிழ்வோனே, தெனத்தெனந்தன என்ற சப்தத்துடன் இசைக்கும் வண்டுகள் தேனைத் தெவிட்டும் அளவுக்கு ஆசையுடன் குடிக்கும் உயர்ந்த சோலைகள் விளங்கும் திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும் சரவண மூர்த்தியே. 
பாடல் 9 - திருப்பரங்குன்றம்
ராகம் - ஹிந்தோளம் / வராளி; தாளம் - அங்கதாளம் - 7 - திஸ்ரத்ருபுடை 
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2, தகிட-1 1/2
தனனதந்த தத்தத்த தந்த
     தனனதந்த தத்தத்த தந்த
          தனனதந்த தத்தத்த தந்த ...... தனதான
கருவடைந்து பத்துற்ற திங்கள்
     வயிறிருந்து முற்றிப்ப யின்று
          கடையில்வந்து தித்துக்கு ழந்தை ...... வடிவாகிக் 
கழுவியங்கெ டுத்துச்சு ரந்த
     முலையருந்து விக்கக்கி டந்து
          கதறியங்கை கொட்டித்த வழ்ந்து ...... நடமாடி 
அரைவடங்கள் கட்டிச்ச தங்கை
     இடுகுதம்பை பொற்சுட்டி தண்டை
          அவையணிந்து முற்றிக்கி ளர்ந்து ...... வயதேறி 
அரியபெண்கள் நட்பைப்பு ணர்ந்து
     பிணியுழன்று சுற்றித்தி ரிந்த
          தமையுமுன்க்ரு பைச்சித்தம் என்று ...... பெறுவேனோ 
இரவிஇந்த்ரன் வெற்றிக்கு ரங்கி
     னரசரென்றும் ஒப்பற்ற உந்தி
          யிறைவன்எண்கி னக்கர்த்த னென்றும் ...... நெடுநீலன் 
எரியதென்றும் ருத்ரற்சி றந்த
     அநுமனென்றும் ஒப்பற்ற அண்டர்
          எவரும்இந்த வர்க்கத்தில் வந்து ...... புனமேவ 
அரியதன்ப டைக்கர்த்த ரென்று
     அசுரர்தங்கி ளைக்கட்டை வென்ற
          அரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின் ...... மருகோனே 
அயனையும்பு டைத்துச்சி னந்து
     உலகமும்ப டைத்துப்ப ரிந்து
          அருள்பரங்கி ரிக்குட்சி றந்த ...... பெருமாளே.
கருவிலே சேர்ந்து பத்து மாதங்கள் தாயின் வயிற்றில் இருந்து கரு முற்றிப் பக்குவம் அடைந்து கடைசியில் பூமியில் வந்து பிறந்து குழந்தையின் வடிவத்தில் தோன்றி குழந்தையை அங்கு கழுவியெடுத்து சுரக்கும் முலைப்பாலை ஊட்டுவிக்க தரையிலே கிடந்தும், அழுதும், உள்ளங்கையைக் கொட்டியும், தவழ்ந்தும், நடை பழகியும், அரைநாண் கட்டியும், காலில் சதங்கையும், காதில் இட்ட அணியும், பொன் கொலுசு, தண்டை அவைகளை அணிந்தும், முதிர்ந்து வளர்ந்து வயது ஏறி, அருமையான பெண்களின் நட்பைப் பூண்டு, நோய்வாய்ப்பட்டு அலைந்து திரிந்தது போதும். (இனிமேல்) உனது அருள் கடாட்சத்தை எப்போது பெறுவேனோ? சூரியன் (அவன் அம்சமாக சுக்ரிவன்), இந்திரன் (அவன் அம்சமாக வாலி) வெற்றி வானர அரசர்களாகவும், ஒப்பில்லா திருமால் வயிற்றிலே பிறந்த பிரமன் கர் இனத் தலைவன் (ஜாம்பவான்) ஆகவும், நெடிய நீலன் அக்கினியின் கூறாகவும், ருத்திர அம்சம் அநுமன் என்றும், ஒப்பில்லாத தேவர்கள் யாவரும் இன்னின்ன வகைகளிலே வந்து இப் பூமியில் சேர்ந்திட, (இவர்களே) தன் அரிய படைக்குத் தலைவர் எனத் தேர்ந்து, அசுரர்களின் சுற்றமென்னும் கூட்டத்தை வெற்றி கொண்ட ஹரிமுகுந்தனாம் ஸ்ரீராமன் புகழும் குணம் வாய்ந்த மருமகனே, பிரம்மாவையும் தண்டித்து, கோபித்து, (பிரம்மனைச் சிறையிட்ட பின்) உலகத்தையும் படைத்து, அன்புடன் அருள் பாலிக்கும் திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 10 - திருப்பரங்குன்றம்
ராகம் - ....; தாளம் - .......
தனத்த தந்தன தனதன தனதன
     தனத்த தந்தன தனதன தனதன
          தனத்த தந்தன தனதன தனதன ...... தனதான
கறுக்கும் அஞ்சன விழியிணை அயில்கொடு
     நெருக்கி நெஞ்சற எறிதரு பொழுதொரு
          கனிக்குள் இன்சுவை அமுதுகும் ஒருசிறு ...... நகையாலே 
களக்கொ ழுங்கலி வலைகொடு விசிறியெ
     மனைக்கெ ழுந்திரும் எனமனம் உருகஒர்
          கவற்சி கொண்டிட மனைதனில் அழகொடு ...... கொடுபோகி 
நறைத்த பஞ்சணை மிசையினில் மனமுற
     அணைத்த கந்தனில் இணைமுலை எதிர்பொர
          நகத்த ழுந்திட அமுதிதழ் பருகியு ...... மிடறூடே 
நடித்தெ ழுங்குரல் குமுகுமு குமுவென
     இசைத்து நன்கொடு மனமது மறுகிட
          நழுப்பு நஞ்சன சிறுமிகள் துயரற ...... அருள்வாயே 
நிறைத்த தெண்டிரை மொகுமொகு மொகுவென
     உரத்த கஞ்சுகி முடிநெறு நெறுவென
          நிறைத்த அண்டமு கடுகிடு கிடுவென ...... வரைபோலும் 
நிவத்த திண்கழல் நிசிசர ருரமொடு
     சிரக்கொ டுங்குவை மலைபுரை தரஇரு
          நிணக்கு ழம்பொடு குருதிகள் சொரிதர ...... அடுதீரா 
திறற்க ருங்குழல் உமையவள் அருளுறு
     புழைக்கை தண்கட கயமுக மிகவுள
          சிவக்கொ ழுந்தன கணபதி யுடன்வரும் ...... இளையோனே 
சினத்தொ டுஞ்சமன் உதைபட நிறுவிய
     பரற்கு ளன்புறு புதல்வநன் மணியுகு
          திருப்ப ரங்கிரி தனிலுறை சரவண ...... பெருமாளே.
கரிய மையிட்ட இரண்டு கண்களாகிய வேல் கொண்டு நெருக்கி, மனம் அழியும்படி எறியும் பொழுது, ஒரு பழச் சுவையையும் அமுதத்தையும் உகுக்கின்ற ஒப்பற்ற புன்னகையாலே, கழுத்தில் நின்று எழும் வளமான ஒலி என்னும் வலையை வீசியே வீட்டுக்கு வாருங்கள் என்று கூறி மனம் உருகும்படியாகவும், ஒரு கவலை கொள்ளும்படியாகவும் வீட்டில் அழகாக அழைத்துக் கொண்டு போய், மணம் தோய்ந்த பஞ்சணையின் மேல் மனம் பொருந்த அணைத்த மார்பில் அவர்களது இரு மார்பகங்களை எதிர்பொர, நகக் குறி அழுந்த, இதழ் அமுதைப் பருகியும், கண்டத்தோடு நடித்து எழுகின்ற புட்குரல் குமு குமு என்று ஒலி செய்ய, நன்றாக மனம் கலங்கும்படி பசப்பி மயக்கும் விஷம் போன்ற விலைமாதர்களால் வரும் துன்பம் நீங்க நீ அருள் புரிவாயே. நிறை கடல் பொங்கி மொகு மொகு எனவும், வலிமையான ஆதிசேஷனது முடி நெறு நெறு எனவும், நிறைந்த அண்டங்களின் உச்சிகளும் கிடு கிடு எனவும், மலையை ஒத்து உயர்ந்த திண்ணிய கழல்களைக் கொண்ட அவுணர்கள் மார்பும் தலைகளின் கொடிய கூட்டமும் மலைக்கு ஒப்பாக பெரிய மாமிசக் குழம்புடன் ரத்தத்தைச் சொரிய வெட்டித் துணித்த தீரனே, ஒளியும் கருமையும் கொண்ட உமா தேவி பெற்றருளிய தொளைக் கையையும், குளிர்ந்த மதமும் உள்ள யானை முகத்தைக் கொண்ட சிவக் கொழுந்து போன்ற விநாயகருடன் வரும் தம்பியே, கோபத்துடன் யமனை உதைபட வைத்த சிவபெருமானது உள்ளம் அன்புறும் புதல்வனே, நல்ல மணிகளைச் சிதறும் திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும் சரவணனாகிய பெருமாளே. 
பாடல் 11 - திருப்பரங்குன்றம்
ராகம் - சங்கராபரணம் / நீலாம்பரி; தாளம் - திஸ்ரத்ருபுடை - 7
தனதந்தன தந்தன தந்தன
     தனதந்தன தந்தன தந்தன
          தனதந்தன தந்தன தந்தன ...... தனதான
கனகந்திரள் கின்றபெ ருங்கிரி
     தனில்வந்துத கன்தகன் என்றிடு
          கதிர்மிஞ்சிய செண்டைஎ றிந்திடு ...... கதியோனே 
கடமிஞ்சிஅ நந்தவி தம்புணர்
     கவளந்தனை உண்டுவ ளர்ந்திடு
          கரியின்றுணை என்றுபி றந்திடு ...... முருகோனே 
பனகந்துயில் கின்றதி றம்புனை
     கடல்முன்புக டைந்தப ரம்பரர்
          படரும்புயல் என்றவர் அன்புகொள் ...... மருகோனே 
பலதுன்பம்உழன்றுக லங்கிய
     சிறியன்புலை யன்கொலை யன்புரி
          பவமின்றுக ழிந்திட வந்தருள் ...... புரிவாயே 
அனகன்பெயர் நின்றுரு ளுந்திரி
     புரமுந்திரி வென்றிட இன்புடன்
          அழலுந்தந குந்திறல் கொண்டவர் ...... புதல்வோனே 
அடல்வந்துமு ழங்கியி டும்பறை
     டுடுடுண்டுடு டுண்டுடு டுண்டென
          அதிர்கின்றிட அண்டநெ ரிந்திட ...... வருசூரர் 
மனமுந்தழல் சென்றிட அன்றவர்
     உடலுங்குட லுங்கிழி கொண்டிட
          மயில்வென்றனில் வந்தரு ளுங்கன ...... பெரியோனே 
மதியுங்கதி ருந்தட வும்படி
     உயர்கின்றவ னங்கள்பொ ருந்திய
          வளமொன்றுப ரங்கிரி வந்தருள் ...... பெருமாளே.
தங்கம் திரண்டு சேர்கின்ற பெரிய மேரு மலையை அடைந்து அதன் மேல் தக தக என்று மின்னுகின்ற ஒளிவீசும் செண்டாயுதத்தை (பொற்பிரம்பை)* எறிந்திட்ட புகலிடமானவனே, மிக்க மதம் கொண்டு, பலவித பக்ஷணங்களைப் புசித்து, அனைத்தையும் கவள அளவாக உண்டு வளர்ந்த யானைமுகனுக்கு இளையவனாகப் பிறந்த முருகனே, ஆதிசேஷன் மீது அறிதுயில் கொள்ளும் வல்லமை உடையவரும், பாற்கடலை முன்பு (கூர்மாவதாரத்தில்) தாமே கடைந்த பெரும் பொருளும், வானில் படரும் கார்முகில் நிறத்தவருமான திருமாலின் அன்பார்ந்த மருமகனே, பல துன்பங்களால் மனம் சுழன்று கலக்கமுற்ற அற்பனும், புலால் உண்பவனும், கொலைகாரனுமான நான் செய்கின்ற பாவங்கள் எல்லாம் இன்றோடு அழிந்து போக நீ என் முன் தோன்றி திருவருள் புரியவேண்டும். பாவமில்லாதவன் என்ற பெயர் நிலைத்து நின்று, எப்போதும் சுழன்று திரியும் திரிபுரத்தையும் வெற்றி கொள்ள, அக்கினிதேவன் மகிழ்ச்சியோடு வந்து பற்றிக் கொள்ளும்படியாக சிரித்தே எரித்த திறமைகொண்ட சிவனாரின் திருக்குமரனே, வலிமையோடு வந்து முழங்கும் பறை வாத்தியங்கள் (அதே ஒலியோடு) உலகம் அதிர, அண்டங்கள் கூட்டமிகுதியால் நெரிய, போருக்கு வந்த சூரர்களின் மனத்தில் சென்று அக்கினி சுடும்படி, அந்த நாள் அவர்களின் உடல்களும் குடல்களும் கிழியும்படி, மயிலின் முதுகின் மேல் வந்தருளிய மதிப்பும் பெருமையும் உடையவனே, சந்திரனும் சூரியனும் தடவிச் செல்லும்படியான உயரமான மரங்கள் உள்ள சோலைகள் நிறைந்த வளமிக்க திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கும் பெருமாளே. 
* முருகனது அம்சமான உக்கிர பாண்டியன் ஆட்சியின் போது நாட்டில் வறுமை மிக, பாண்டியன் கனவில் சிவபெருமான் தோன்றி பொன்மலை மேருவைச் செண்டால் அடித்தால் பொன்னாகக் கொட்டும் என, பாண்டியன் மேருவைச் செண்டால் அடித்து பொன் பெற்ற திருவிளையாடல் இங்கு கூறப்படுகிறது.
பாடல் 12 - திருப்பரங்குன்றம்
ராகம் - ....; தாளம் - ......
தானன தந்தன தந்தனந் தந்தன
     தானன தந்தன தந்தனந் தந்தன
          தானன தந்தன தந்தனந் தந்தன ...... தனதான
காதட ருங்கயல் கொண்டிசைந் தைம்பொறி
     வாளிம யங்கம னம்பயந் தந்திருள்
          கால்தர விந்துவி சும்பிலங் கும்பொழு ...... தொருகோடி 
காய்கதி ரென்றொளிர் செஞ்சிலம் புங்கணை
     யாழியு டன்கட கந்துலங் கும்படி
          காமனெ டுஞ்சிலை கொண்டடர்ந் தும்பொரு ...... மயலாலே 
வாதுபு ரிந்தவர் செங்கைதந் திங்கித
     மாகந டந்தவர் பின்திரிந் துந்தன
          மார்பில ழுந்தஅ ணைந்திடுந் துன்பம ...... துழலாதே 
வாசமி குந்தக டம்பமென் கிண்கிணி
     மாலைக ரங்கொளும் அன்பர்வந் தன்பொடு
          வாழநி தம்புனை யும்பதந் தந்துன ...... தருள்தாராய் 
போதிலு றைந்தருள் கின்றவன் செஞ்சிர
     மீதுத டிந்துவி லங்கிடும் புங்கவ
          போதவ ளஞ்சிவ சங்கரன் கொண்டிட ...... மொழிவோனே 
பூகமு டன்திகழ் சங்கினங் கொண்டகி
     ¡£வம டந்தைபு ரந்தரன் தந்தருள்
          பூவைக ருங்குற மின்கலந் தங்குப ...... னிருதோளா 
தீதக மொன்றினர் வஞ்சகந் துஞ்சியி
     டாதவர் சங்கரர் தந்ததென் பும்பல
          சேர்நிரு தன்குலம் அஞ்சமுன் சென்றடு ...... திறலோனே 
சீதள முந்தும ணந்தயங் கும்பொழில்
     சூழ்தர விஞ்சைகள் வந்திறைஞ் சும்பதி
          தேவர்ப ணிந்தெழு தென்பரங் குன்றுறை ...... பெருமாளே.
காது அளவும் நெருக்கும் கயல் மீன் போன்ற கண்களை மனத்தில் கொண்டு, அப் பொது மகளிர்பால் மனம் ஒருப்பட்டு, ஐம்புலன்களும் மன்மதன் வீசும் அம்புகளால் மயங்க, மனம் அச்சம் கொண்டு, இருள் நீங்கும்படியான சந்திரன் விண்ணில் ஒளி தரும்பொழுது கோடிக் கணக்காக காய்கின்ற நட்சத்திரங்கள் போல் ஒளி வீசும் செவ்விய சிலம்பும், மோதிரமும், கடகமும் விளங்க, மன்மதன் தனது நீண்ட வில்லைக் கொண்டு நெருங்கி சண்டை செய்வதால் வரும் மயக்கத்தினால், பிணங்கியும் இணங்கியும் இனிமையுடன் நடப்பவரான விலைமாதர்களின் பின் திரிந்து அவர்களது மார்பில் அழுந்த அணையும் துன்பச் செயலில் நான் உழலாமல், வாசனை மிக்க கடம்ப மலரால் ஆன மெல்லிய கிண்கிணி மாலைகளை கைகளில் ஏந்திய அடியார்கள் வந்து அன்புடன் தாம் வாழ வேண்டி நாள் தோறும் (அம்மாலைகளைச்) சூட்டும் திருவடியைத் தந்து உனது திருவருளைத் தாராய். (தாமரை) மலரில் உறைந்தருளும் பிரமனது செவ்விய தலை மீது புடைக்கும்படி குட்டி, அவனை விலங்கிட்ட சிறப்பு உடையவனே, ஞான வளப்பத்தை (பிரணவப் பொருளை) சிவசங்கர மூர்த்தி பெறும்படி உரைத்தவனே, கமுக மரங்கள், விளங்கும் சங்குகள் இவைகளின் அழகைக் கொண்ட கழுத்தை உடைய பெண்ணும், இந்திரன் பெற்றருளியவளும் ஆகிய பூவை போன்ற தேவயானை, பெருமை வாய்ந்த குற மகளாகிய வள்ளிநாயகி ஆகியவர்களின் ஆபரணங்கள் தங்கும்படியான பன்னிரு தோள்களை உடையவனே, தீய உள்ளம் பொருந்தினவர்களும், வஞ்சகம் குறையாதவரும், சிவ பெருமான் (முன்பு வரமாகத்) தந்த செருக்குகள் பல கொண்டவர்களுமாகிய அசுரர் கூட்டம் பயப்படும்படி முன் சென்று அவர்களை அழித்த திறம் வாய்ந்தவனே, குளிர்ச்சி முற்பட்டு, மணம் விளங்கும் சோலைகள் சூழ்ந்ததும், கல்வியில் மிக்கோர் வந்து வணங்குவதுமான ஊர், தேவர்கள் வணங்கி எழுகின்ற அழகிய திருப்பரங் குன்றத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 13 - திருப்பரங்குன்றம்
ராகம் - ஹிந்தோளம் ; தாளம் - அங்கதாளம் - 7 1/2 
தகதகிட-2 1/2, தகதிமி-2, தகதிமிதக-3
தந்தனந் தத்தத் ...... தனதான
     தந்தனந் தத்தத் ...... தனதான
சந்ததம் பந்தத் ...... தொடராலே
     சஞ்சலந் துஞ்சித் ...... திரியாதே 
கந்தனென் றென்றுற் ...... றுனைநாளும்
     கண்டுகொண் டன்புற் ...... றிடுவேனோ 
தந்தியின் கொம்பைப் ...... புணர்வோனே
     சங்கரன் பங்கிற் ...... சிவைபாலா 
செந்திலங் கண்டிக் ...... கதிர்வேலா
     தென்பரங் குன்றிற் ...... பெருமாளே.
எப்பொழுதும் பாசம் என்ற தொடர்பினாலே துயரத்தால் சோர்ந்து திரியாமல், கந்தன் என அடிக்கடி மனதார உன்னை தினமும் உள்ளக் கண்களால் கண்டு தரிசித்து, யான்அன்பு கொள்வேனோ? (ஐராவதம் என்னும்) யானை வளர்த்த கொடி போன்ற தேவயானையை மணம் செய்துகொண்டு சேர்பவனே, சங்கரனின் பக்கத்தில் தங்கிய பார்வதியின் குழந்தாய், திருச்செந்தூரிலும், அழகிய கண்டியிலும் ஒளிவீசும் வேலோடு விளங்குபவனே, அழகிய திருப்பரங்குன்றில் அமர்ந்த பெருமாளே. 
பாடல் 14 - திருப்பரங்குன்றம்
ராகம் - .....; தாளம் - ....
தனதந்தன தந்தன தந்தன
     தனதந்தன தந்தன தந்தன
          தனதந்தன தந்தன தந்தன ...... தனதான
சருவும்படி வந்தனன் இங்கித
     மதனின்றிட அம்புலி யுஞ்சுடு
          தழல்கொண்டிட மங்கையர் கண்களின் ...... வசமாகிச் 
சயிலங்கொளு மன்றல்பொ ருந்திய
     பொழிலின்பயில் தென்றலும் ஒன்றிய
          தடவஞ்சுனை துன்றியெ ழுந்திட ...... திறமாவே 
இரவும்பகல் அந்தியு நின்றிடு
     குயில்வந்திசை தெந்தன என்றிட
          இருகண்கள்து யின்றிட லின்றியும் ...... அயர்வாகி 
இவணெஞ்சுப தன்பதன் என்றிட
     மயல்கொண்டுவ ருந்திய வஞ்சகன்
          இனியுன்றன்ம லர்ந்தில கும்பதம் ...... அடைவேனோ 
திருவொன்றிவி ளங்கிய அண்டர்கள்
     மனையின்தயிர் உண்டவன் எண்டிசை
          திகழும்புகழ் கொண்டவன் வண்டமிழ் ...... பயில்வோர்பின் 
திரிகின்றவன் மஞ்சுநி றம்புனை
     பவன்மிஞ்சுதி றங்கொள வென்றடல்
          செயதுங்கமு குந்தன்ம கிழ்ந்தருள் ...... மருகோனே 
மருவுங்கடல் துந்திமி யுங்குட
     முழவங்கள்கு மின்குமி னென்றிட
          வளமொன்றிய செந்திலில் வந்தருள் ...... முருகோனே 
மதியுங்கதி ரும்புய லுந்தின
     மறுகும்படி அண்டம்இ லங்கிட
          வளர்கின்றப ரங்கிரி வந்தருள் ...... பெருமாளே.
சண்டையிடும் கருத்துடன் வந்து மன்மதன் நிற்க, நிலவும் சுடுகின்ற தீயை தன்னுள் வைத்துக் கொள்ள, விலைமாதர்களின் கண்களில் வசப்பட்டு, மலைச் சாரலில் உள்ள மணம் பொருந்திய சோலைகளில் தவழ்ந்துவரும் தென்றல் காற்றும் அங்குள்ள அகன்ற அழகிய சுனைநீரில் படிந்து வலிவுடனே எழ, இரவும் பகலும் அந்திவேளையும் நின்று நிதானமாக குயில் வந்து இசையைத் தெந்தன என்று பாட, எனது இரண்டு கண்களும் தூக்கம் இல்லாமல் களைத்துப் போய், இங்கே என் மனம் பதை பதைக்க, காம மயக்கம் கொண்டு வருந்திய வஞ்சகனாகிய நான் இனிமேல் உன் மலர்ந்து விளங்கும் திருவடியை அடைவேனோ? செல்வம் பொருந்தி விளங்கிய இடையர்களின் வீடுகளிலிருந்த தயிரை (திருடி) உண்டவனும், எட்டு திசைகளிலும் புகழ் பெற்றவனும், வளமான தமிழைப் பயில்வோர்களுடைய பின்னே திரிகின்றவனும்*, மேக நிறம் கொண்டவனும், மிக்க திறல் கொண்டு (மற்போரில்) வெல்லும் வலிமை வாய்ந்தவனும், வெற்றியும் பரிசுத்தமும் கொண்ட முகுந்தனுமாகிய திருமால் மகிழும் மருகனே, பொருந்திய கடல் அலைகளைப் போல, துந்துமிப் பறையும், குடமுழவு வாத்தியமும் குமின் குமின் என்று ஒலி செய்ய, வளம் பொருந்திய திருச் செந்தூரில் வந்து எழுந்தருளி உள்ள முருகனே, திங்களும், சூரியனும், மேகமும் நாள்தோறும் வானில் செல்வதற்குத் தயங்கும்படி, இவ்வுலகம் விளங்கும்படியாக வானளாவி வளர்கின்ற திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளி அருளுகின்ற பெருமாளே. 
* தமிழ் பயில்வோர் பின் திருமால் சென்றது - திருமழிசை ஆழ்வாரின் சீடனாகிய கணிகண்ணனுக்காக காஞ்சீபுரத்து வரதராஜப் பெருமாள் ஊரை விட்டு ஆழ்வார் பின் சென்ற வரலாற்றைக் குறிக்கும்.
பாடல் 15 - திருப்பரங்குன்றம்
ராகம் - ஆனந்த பைரவி; தாளம் - ஸங்கீர்ண சாபு - 4 1/2 - எடுப்பு - அதீதம் 
தக-1, திமி-1, தகிட-1 1/2, தக-1
தனத்தத் தந்தனந் தனத்தத் தந்தனந்
     தனத்தத் தந்தனந் ......தனதான
தடக்கைப் பங்கயம் கொடைக்குக் கொண்டல்தண்
     டமிழ்க்குத் தஞ்சமென் ...... றுலகோரைத் 
தவித்துச் சென்றிரந் துளத்திற் புண்படுந்
     தளர்ச்சிப் பம்பரந் ...... தனையூசற் 
கடத்தைத் துன்பமண் சடத்தைத் துஞ்சிடுங்
     கலத்தைப் பஞ்சஇந் ...... த்ரியவாழ்வைக் 
கணத்திற் சென்றிடந் திருத்தித் தண்டையங்
     கழற்குத் தொண்டுகொண் ...... டருள்வாயே 
படைக்கப் பங்கயன் துடைக்கச் சங்கரன்
     புரக்கக் கஞ்சைமன் ...... பணியாகப் 
பணித்துத் தம்பயந் தணித்துச் சந்ததம்
     பரத்தைக் கொண்டிடுந் ...... தனிவேலா 
குடக்குத் தென்பரம் பொருப்பிற் றங்குமங்
     குலத்திற் கங்கைதன் ...... சிறியோனே 
குறப்பொற் கொம்பைமுன் புனத்திற் செங்கரங்
     குவித்துக் கும்பிடும் ...... பெருமாளே.
உன் அகன்ற கை தாமரை போன்றது, கொடை வன்மையில் நீ மேகம் போன்றவன், தமிழ்ப் புலவர்க்கு நீயே புகலிடம் என்று கூறி உலகத்தவரைத் தவிப்புடன் நாடி யாசித்து மனம் நொந்து புண்ணாகி தளர்வுற்றுப் பம்பரம் போன்று சுழல்வேனை, உள்ளிருக்கும் பண்டம் ஊசிப்போன மண் சட்டியை, துன்பம் நிறைந்த மண்ணாலான இந்த உடலை, அழிந்துபோகும் இந்தப் பாண்டத்தை, ஐம்பொறிகளால் ஆட்டிவைக்கப்படும் இந்த வாழ்வை, நொடியில் வந்து என் இதயமாம் இடத்தைத் திருத்தி, வீரக்கழல்கள் அணிந்த நின் அழகிய திருப்பாதங்களுக்கு தொண்டு செய்ய என்னை ஏற்றுக்கொண்டு அருள்வாயாக. படைக்கும் தொழிலைச் செய்வதற்குத் தாமரைமலர் மேவும் பிரமன், அழிக்கும் தொழிலைச் செய்வதற்குச் சங்கரன், காக்கும் தொழிலைச் செய்வதற்குத் தாமரையாள் மணாளன் திருமால் என்று தத்தம் தொழில்களை நியமித்து அளித்து, அவரவர் பயங்களைப் போக்கி, எப்போதும் பராகாசத்தில் மேலான நிலையிலே நிற்கும் ஒப்பற்ற வேலாயுதக் கடவுளே, மதுரைக்கு மேற்கே திருப்பரங்குன்றத்தில் தங்கும், உயர்குல நதியாம் கங்கையின் குழந்தாய், குறக்குலத்து அழகிய கொடியாம் வள்ளியை முன்பு தினைப்புனத்தில் நின் செவ்விய கரங்களைக் கூப்பிக் கும்பிட்ட பெருமாளே. 
பாடல் 16 - திருப்பரங்குன்றம்
ராகம் - ......; தாளம் - ........
தனத்ததந் தந்தத் தத்தன தத்தந்
     தனத்ததந் தந்தத் தத்தன தத்தந்
          தனத்ததந் தந்தத் தத்தன தத்தந் ...... தனதான
பதித்தசெஞ் சந்தப் பொற்குட நித்தம்
     பருந்துயர்ந் தண்டத் திற்றலை முட்டும்
          பருப்பதந் தந்தச் செப்பவை ஒக்குந் ...... தனபாரம் 
படப்புயங் கம்பற் கக்குக டுப்பண்
     செருக்குவண் டம்பப் பிற்கயல் ஒக்கும்
          பருத்தகண் கொண்டைக் கொக்குமி ருட்டென் ...... றிளைஞோர்கள் 
துதித்துமுன் கும்பிட் டுற்றது ரைத்தன்
     புவக்கநெஞ் சஞ்சச் சிற்றிடை சுற்றுந்
          துகிற்களைந் தின்பத் துர்க்கம் அளிக்கும் ...... கொடியார்பால் 
துவக்குணும் பங்கப் பித்தன வத்தன்
     புவிக்குளென் சிந்தைப் புத்திம யக்கந்
          துறக்கநின் தண்டைப் பத்மமெ னக்கென் ...... றருள்வாயே 
குதித்துவெண் சங்கத் தைச்சுற வெற்றுங்
     கடற்கரந் தஞ்சிப் புக்கஅ ரக்கன்
          குடற்சரிந் தெஞ்சக் குத்திவி திர்க்குங் ...... கதிர்வேலா 
குலக்கரும் பின்சொற் றத்தையி பப்பெண்
     தனக்குவஞ் சஞ்சொற் பொச்சையி டைக்குங்
          குகுக்குகுங் குங்குக் குக்குகு குக்குங் ...... குகுகூகூ 
திதித்திதிந் தித்தித் தித்தியெ னக்கொம்
     பதிர்த்துவெண் சண்டக் கட்கம்வி திர்த்துந்
          திரட்குவிந் தங்கட் பொட்டெழ வெட்டுங் ...... கொலைவேடர் 
தினைப்புனஞ் சென்றிச் சித்தபெ ணைக்கண்
     டுருக்கரந் தங்குக் கிட்டிய ணைத்தொண்
          திருப்பரங் குன்றிற் புக்குளி ருக்கும் ...... பெருமாளே.
(மார்பில்) பதிந்துள்ள செவ்விய அழகிய பொற்குடம், நாள் தோறும் பருத்து, உயர்ந்து விண்ணில் தலையை முட்ட வல்ல மலை, (யானையின்) தந்தம், செப்பு ஆகியவைகளை நிகர்க்கும் தன பாரங்கள், படத்தை உடைய பாம்பின் பற்கள் கக்கும் விஷம், பண்களைக் களிப்பில் பாடும் வண்டு, அம்பு, நீரில் உள்ள கயல் மீனை ஒக்கும் பெரிய கண்கள், கூந்தலுக்கு ஒப்பான இருட்டு என்றெல்லாம் இளைஞர்கள் (விலைமாதர்களின்) அங்கங்களைத் துதித்து முன்னதாகக் கும்பிட்டு நடந்த நிகழ்ச்சிகளை உள்ளவாறு அவர்களிடம் சொல்லி, அன்புக் களிப்புடன் உள்ளம் அஞ்ச, சிற்றிடையைச் சுற்றியுள்ள ஆடையை விலக்கி இன்பக் கலக்கத்தைக் கொடுக்கும் கொடியவர்களாகிய வேசிகளிடத்து கட்டுப்பட்டிருக்கும் பாவியாகிய பித்தன், பொய்யன் நான். இப்பூமியில் என்னுடைய மனதிலும், புத்தியிலும் உள்ள மயக்கத்தை விட்டொழிக்க உனது தண்டை அணிந்த தாமரை போன்ற திருவடிகளை எனக்கு என்று தந்து அருள்வாயோ? குதித்து வெண்ணிறச் சங்குகளை சுறா மீன்கள் மோதி எறியும் கடலில் ஒளிந்து பயந்துப் புகுந்த அசுரன் சூரனின் குடல் சரிந்து விழும்படியாகக் குத்தி அசைக்கும் ஒளி வீசும் வேலனே, சிறந்த கரும்பு போன்ற மொழியை உடையவளும், கிளி போன்றவளுமாகிய, (ஐராவதம் என்ற) யானை மகளான தேவயானையிடம் மறைத்த சொல்லுடன் காட்டில், குங்குகுக் குகுங் குங்குக் குக்குகு குக்குங் குகுகூகூ திதித்திதித் திந்தித் தித்தெயென ஊதுக் கொம்புகள் அதிர்ந்து ஒலி செய்ய பளபளக்கும் வலிமை பொருந்திய வாளை வீசி, திரளாகக் குவியும்படி அந்த இடத்திலேயே (பகைவரை) அழிவுற வெட்டும் கொடிய வேடர்களுடைய தினைப் புனத்துக்குப் போய், விரும்பிய பெண்ணாகிய வள்ளியைப் பார்த்து, தன் உண்மையான உருவத்தை மறைத்து, அங்கு நெருங்கிச் சென்று அவளைத் தழுவி, பின்பு ஒளி வீசும் திருப்பரங்குன்றத்தைப் புக்கிடமாகக் கொண்டு அங்கு வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 17 - திருப்பரங்குன்றம்
ராகம் - ...... ; தாளம் -
தனத்தனந் தந்தன தனத்தனந் தந்தன
     தனத்தனந் தந்தன ...... தந்ததான
பொருப்புறுங் கொங்கையர் பொருட்கவர்ந் தொன்றிய
     பிணக்கிடுஞ் சண்டிகள் ...... வஞ்சமாதர் 
புயற்குழன் றங்கமழ் அறற்குலந் தங்கவிர்
     முருக்குவண் செந்துவர் ...... தந்துபோகம் 
அருத்திடுஞ் சிங்கியர் தருக்கிடுஞ் செங்கயல்
     அறச்சிவந் தங்கையில் ...... அன்புமேவும் 
அவர்க்குழன் றங்கமும் அறத்தளர்ந் தென்பயன்
     அருட்பதம் பங்கயம் ...... அன்புறாதோ 
மிருத்தணும் பங்கயன் அலர்க்கணன் சங்கரர்
     விதித்தெணுங் கும்பிடு ...... கந்தவேளே 
மிகுத்திடும் வன்சம ணரைப்பெருந் திண்கழு
     மிசைக்கிடுஞ் செந்தமிழ் ...... அங்கவாயா 
பெருக்குதண் சண்பக வனத்திடங் கொங்கொடு
     திறற்செழுஞ் சந்தகில் ...... துன்றிநீடு 
தினைப்புனம் பைங்கொடி தனத்துடன் சென்றணை
     திருப்பரங் குன்றுறை ...... தம்பிரானே.
மலை போன்ற மார்பினர், பொருளை அபகரித்து அதனால் உண்டாகும் (பண விஷயமாக) பிணக்கம் செய்யும் கொடியவர், வஞ்சகம் மிக்க விலைமாதர்கள், மேகம் போன்ற கூந்தல் சுருண்டுள்ளதாய், அழகியதாய், மணம் வீசுவதாய், கருமணற் கூட்டம் போல தங்கி விளங்கி, முருக்கிதழ் போன்று வளங் கொண்டு, செவ்விய பவளம் போன்ற இதழ்களால் போகத்தைத் தந்து, (கரண்டியால்) ஊட்டுகின்ற விஷம் போன்றவர்கள், வாது செய்து, செவ்விய கயல் மீன் போன்ற கண்கள் மிகச் சிவந்து, அழகிய கைப்பொருள் மீது ஆசை வைத்துள்ள அத்தகைய பொது மகளிர் பால் நான் உழன்று, உடலும் மிகத் தளர்வதால் என்ன பயன்? உனது திருவடித் தாமரை (என் மீது) அன்பு கொள்ளாதோ? இறத்தலோடு* கூடிய பிரமன், மலர்ந்த கண்களை உடைய திருமால், சிவ பெருமான் (இம்மூவரும்) முறைப்படி எப்போதும் வணங்கும் கந்தப் பெருமானே, மிக்கு வந்த, வலிய சமணர்களை பெரிய திண்ணிய கழுவின் மேல் ஏற வைத்த, செந்தமிழ் (ஓதிய) வேதாங்க வாயனாகிய (தேவாரம் பாடிய) திருஞானசம்பந்தனே, பெருகிக் குளிர்ந்துள்ள சண்பகக் காட்டில் வாசனையோடு கூடிய, திண்ணியதாயச் செழித்த சந்தனமும் அகிலும் நெருங்கி வளர்ந்துள்ள தினைப் புனத்தில் பசுங் கொடி போன்ற வள்ளியை மார்புறச் சென்று தழுவுகின்றவனே, திருப்பரங் குன்றத்தில் வீற்றிருக்கின்ற பெருமாளே. 
* இறத்தலோடு தொடர்வது பிறத்தல். பிறவிக்கு இறைவன் பிரமன். எனவே பிரமன் இறத்தலோடும் கூடியுள்ளான்.
பாடல் 18 - திருப்பரங்குன்றம்
ராகம் - ......; தாளம் - .......
தந்தனந் தந்ததன தந்தனந் தந்ததன
     தந்தனந் தந்ததன ...... தனதான
மன்றலங் கொந்துமிசை தெந்தனத் தெந்தனென
     வண்டினங் கண்டுதொடர் ...... குழல்மாதர் 
மண்டிடுந் தொண்டையமு துண்டுகொண் டன்புமிக
     வம்பிடுங் கும்பகன ...... தனமார்பில் 
ஒன்றஅம் பொன்றுவிழி கன்றஅங் கங்குழைய
     உந்தியென் கின்றமடு ...... விழுவேனை 
உன்சிலம் புங்கனக தண்டையுங் கிண்கிணியும்
     ஒண்கடம் பும்புனையும் ...... அடிசேராய் 
பன்றியங் கொம்புகம டம்புயங் கஞ்சுரர்கள்
     பண்டையென் பங்கமணி ...... பவர்சேயே 
பஞ்சரங் கொஞ்சுகிளி வந்துவந் தைந்துகர
     பண்டிதன் தம்பியெனும் ...... வயலூரா 
சென்றுமுன் குன்றவர்கள் தந்தபெண் கொண்டுவளர்
     செண்பகம் பைம்பொன்மலர் ...... செறிசோலை 
திங்களுஞ் செங்கதிரு மங்குலுந் தங்குமுயர்
     தென்பரங் குன்றிலுறை ...... பெருமாளே.
வாசனைபொருந்திய அழகிய பூங்கொத்துக்களின் மீது தெந்தனம் தெந்தனம் என்று ¡£ங்காரம் செய்து கொண்டு வண்டுக் கூட்டங்கள் தேனை உண்ணப்பார்த்து தொடரும்படியான கூந்தலையுடைய பெண்களது நெருக்கமாய் உள்ள கொவ்வைக்கனி போன்ற இதழ் அமிர்தத்தைப் பருகிக் கொண்டு, ஆசை மிகும்படி கச்சணிந்த பெருத்த மார்பில் பொருந்த, அம்பை நிகர்த்த விழிகள் சோர்ந்து போக, சா£ரம் மோகவசத்தால் குழைந்து போக, வயிறு என்னும் மடுவில் விழுகின்ற அடியேனை சிலம்பும், பொன்னால் ஆன தண்டையும், கிண்கிணியையும், அழகிய கடப்ப மலரையும் அணியும் உன் திருவடிகளில் சேர்ப்பாய். பன்றியின் அழகிய கொம்பையும்*, ஆமை ஓட்டையும்**, பாம்பையும், தேவர்களது பழைய எலும்புகளையும் தரிக்கும் *** சிவபிரானின் பாலனே, கூட்டில் இருந்துகொண்டு கொஞ்சுகின்ற கிளிப்பிள்ளைகள் கூட்டின் முகப்பில் மீண்டும் மீண்டும் வந்து ஐங்கரன் விநாயகனாம் ஞான பண்டிதனின் தம்பியே என்று கூறி அழைக்கின்ற, வயலூர் தலத்தில் வாசம் செய்யும் முருகனே, குன்றுகளில் வசிப்பவர்களாகிய வேடுவர்கள் முன்னாளில் கொடுத்த வள்ளிநாயகியாகிய பெண்ணை மணந்து கொண்டு வளர்ந்து ஓங்கிய செண்பக மரங்களின் பசும்பொன்னை ஒத்த மலர்கள் மிகுந்த சோலைகளால் சூழப்பெற்றதும், சந்திரனும், செஞ்சூரியனும், மேகமும் தங்கும்படி உயர்ந்ததும் ஆகிய அழகிய திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளியுள்ள பெருமாளே. 
* விஷ்ணு வராக அவதாரம் செய்து ஹிரண்யாக்ஷனைக் கொன்றபின் தருக்குற்றுத் திரியும்போது, முருகன் வராகத்தை அடக்கி கொம்பைப் பறித்து சிவனிடம் தர, அவர் அதனை மார்பில் அணிந்தார் - வராக புராணம்.
** கூர்மாவதாரம் செய்து மந்தரமலையைத் தாங்கி விஷ்ணு அமிர்தத்தை மோகினியாக வந்து தேவர்களுக்கு விநியோகித்த பின், ஹரிஹரபுத்திரன் ஐயப்பன் அவதரித்தார். பின்னர் கூர்மம் செருக்குற்று உலகத்தையே அழிக்கப் புக, சிவபிரானின் ஆணையால் ஐயப்பன் கூர்மத்தை அடக்கி அதன் ஓட்டைப் பெயர்த்து சிவனிடம் வைக்க அதனை தம் மார்பில் தரித்தார் - கூர்ம புராணம்.
*** பிரளய காலத்தில் சிவபிரான் ஸர்வ ஸம்ஹாரம் செய்தபின் தன் பக்தர்களாகிய பிரம்மாதி தேவர்களின் எலும்புகளையும் எலும்புக் கூட்டையும் 'கங்காளம்' மாலையாக அன்புடன் தரித்தார் - கந்த புராணம்.
பாடல் 19 - திருப்பரங்குன்றம்
ராகம் - ...........; தாளம் - ........
தனத்த தந்தன தனதன தனதன
     தனத்த தந்தன தனதன தனதன
          தனத்த தந்தன தனதன தனதன ...... தனதான
வடத்தை மிஞ்சிய புளகித வனமுலை
     தனைத்தி றந்தெதிர் வருமிளை ஞர்களுயிர்
          மயக்கி ஐங்கணை மதனனை ஒருஅரு ...... மையினாலே 
வருத்தி வஞ்சக நினைவொடு மெலமெல
     நகைத்து நண்பொடு வருமிரும் எனஉரை
          வழுத்தி அங்கவ ரொடுசரு வியுமுடல் ...... தொடுபோதே 
விடத்தை வென்றிடு படைவிழி கொடுமுள
     மருட்டி வண்பொருள் கவர்பொழு தினில்மயல்
          விருப்பெ னும்படி மடிமிசை யினில்விழு ...... தொழில்தானே 
விளைத்தி டும்பல கணிகையர் தமதுபொய்
     மனத்தை நம்பிய சிறியனை வெறியனை
          விரைப்ப தந்தனில் அருள்பெற நினைகுவ ...... துளதோதான் 
குடத்தை வென்றிரு கிரியென எழில்தள
     தளத்த கொங்கைகள் மணிவடம் அணிசிறு
          குறக்க ரும்பின்மெய் துவள்புயன் எனவரு ...... வடிவேலா 
குரைக்க ருங்கடல் திருவணை எனமுனம்
     அடைத்தி லங்கையின் அதிபதி நிசிசரர்
          குலத்தொ டும்பட ஒருகணை விடுமரி ...... மருகோனே 
திடத்தெ திர்ந்திடும் அசுரர்கள் பொடிபட
     அயிற்கொ டும்படை விடுசர வணபவ
          திறற்கு கன்குரு பரனென வருமொரு ...... முருகோனே 
செழித்த தண்டலை தொறுமில கியகுட
     வளைக்கு லந்தரு தரளமு மிகுமுயர்
          திருப்ப ரங்கிரி வளநகர் மருவிய ...... பெருமாளே.
அணிந்துள்ள மணி வடத்தைக் காட்டிலும் மேலோங்கி புளகிதம் கொண்ட அழகிய மார்பகத்தைக் காட்டி, எதிரில் வரும் இளைஞர்களின் உயிரை மயக்கி, ஐந்து மலர்ப் பாணங்களை உடைய மன்மதனை ஒப்பற்ற அருமையான வகையால் வருவித்து, வஞ்சகமான எண்ணத்தோடு மெல்ல மெல்ல சிரித்து, நண்பு காட்டி வாருங்கள், உட்காருங்கள் என்று உபசரித்து உரை பேசி அங்கு அவர்களுடன் கொஞ்சிக் குலாவி உடலைத் தொடும்போது, விஷத்தையும் வெல்லும் படை போன்ற கண்களைக் கொண்டு மனத்தை மயக்கி, வளப்பமான பொருளைக் கவரும் போது, உங்கள் மீது எனக்கு மோகம், விருப்பம் என்னும்படியான ஆசை மொழிகளைக் கூறி மடிமீது விழுகின்ற தொழில்களையே செய்கின்ற பல பொது மாதர்களின் பொய்யான மனத்தை நம்பிய சிறியவனை, பித்துப் பிடித்தவனை, நறுமணம் வீசும் திருவடியில் சேரும்படியான திருவருளைப் பெற நீ நினைக்கும்படியான நல்ல விதி எனக்கு உள்ளதோ, அறியேன். உருவத்தில் குடத்தையும் வென்று, இரண்டு மலைகளைப் போல தளதளக்கும் மார்பகங்கள் மணிவடங்களை அணிந்து, கரும்பு போல் இனிக்கும் இளம் குற மங்கையாகிய வள்ளியின் உடலில் துவளும் புயத்தை உடையவன் என்று வருகின்ற அழகிய வேலனே, ஒலிக்கின்ற கரிய கடலில் அழகிய அணை என்னும்படி முன்பு அதை அடைத்து, இலங்கைக்குத் தலைவனான ராவணன் அரக்கர் கூட்டத்துடன் அழியும்படி ஒப்பற்ற அம்பைச் செலுத்திய (ராமனாகிய) திருமாலின் மருகனே, மனத் திடத்துடன் எதிர்த்து வந்த அசுரர்கள் பொடியாக வேலாகிய உக்கிரமான படையை விட்ட சரவணபவனே, திறமை வாய்ந்த குருபரன் என்னும் பெயருடன் வந்துள்ள ஒப்பற்ற முருகனே, செழிப்புள்ள சோலைகள் தோறும் (கிடந்து) விளங்கும் வளைந்த சங்குகளின் கூட்டங்கள் ஈன்ற முத்துக்கள் மிக்குப் பொலியும் சிறந்த திருப்பரங்குன்றம் என்னும் வளப்பம் உள்ள நகரில் வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 20 - திருப்பரங்குன்றம்
ராகம் - ..... ; தாளம் -
தனத்தனந் தந்த தான
     தனத்தனந் தந்த தான
          தனத்தனந் தந்த தான ...... தனதான
வரைத்தடங் கொங்கை யாலும்
     வளைப்படுஞ் செங்கை யாலும்
          மதர்த்திடுங் கெண்டை யாலும் ...... அனைவோரும் 
வடுப்படுந் தொண்டை யாலும்
     விரைத்திடுங் கொண்டை யாலும்
          மருட்டிடுஞ் சிந்தை மாதர் ...... வசமாகி 
எரிப்படும் பஞ்சு போல
     மிகக்கெடுந் தொண்ட னேனும்
          இனற்படுந் தொந்த வாரி ...... கரையேற 
இசைத்திடுஞ் சந்த பேதம்
     ஒலித்திடுந் தண்டை சூழும்
          இணைப்பதம் புண்ட ¡£கம் ...... அருள்வாயே 
சுரர்க்குவஞ் சஞ்செய் சூரன்
     இளக்ரவுஞ் சந்த னோடு
          துளக்கெழுந் தண்ட கோளம் ...... அளவாகத் 
துரத்தியன் றிந்த்ர லோகம்
     அழித்தவன் பொன்று மாறு
          சுடப்பருஞ் சண்ட வேலை ...... விடுவோனே 
செருக்கெழுந் தும்பர் சேனை
     துளக்கவென் றண்ட மூடு
          தெழித்திடுஞ் சங்க பாணி ...... மருகோனே 
தினைப்புனஞ் சென்று லாவு
     குறத்தியின் பம்ப ராவு
          திருப்பரங் குன்ற மேவு ...... பெருமாளே.
மலை போலப் பரவி அகன்ற மார்பாலும், வளையல் ஒலிக்கும் சிவந்த கரத்தாலும், செழிப்புள்ள கெண்டை மீன் போன்ற கண்களாலும், பலராலும் வடுப்படுத்தப்படும் கொவ்வைக் கனி ஒத்த இதழாலும், மணம் வீசும் கூந்தலாலும் மயக்குகின்ற மனமுடைய விலைமாதர்களின் வசத்தில் பட்டு, தீயில் இடப்பட்ட பஞ்சு போல மிகவும் கெட்டுப் போகின்ற அடியனாகிய நானும் துன்பப்படும் வினைத் தொடர்புள்ள கடலிலிருந்து கரையேற, இசையுடன் கலந்த பல வகையான சந்த ஒலிகளை எழுப்பும் தண்டைகள் சூழ்ந்த உன் திருவடிகளாகிய தாமரைகளை அருள் புரிவாயாக. தேவர்களுக்கு வஞ்சனை செய்த சூரன், இளைய கிரவுஞ்சன் என்னும் அசுரனோடு கலங்கி எழுந்து ஓட, அண்ட கோளம் அளவும் அவர்களைத் துரத்தி, முன்பு இந்திர லோகத்தை அழித்தவனாகிய சூரன் அழிந்து போகும்படி, சுடுகின்றதும் மிகவும் உக்கிரமானதுமான வேலை விட்டவனே, வீம்புடன் போருக்கு எழுந்த தேவர்களின் சேனை கலங்கும்படி முழக்கம் செய்த சங்கேந்திய கையை* உடைய திருமாலின் மருகனே, தினைப் புனத்துக்குப் போய் உலவுகின்ற குறப் பெண் வள்ளியின் இன்பத்தை நாடிப் பின் அவளை வணங்கிய, திருப்பரங் குன்றத்தில் வீற்றிருக்கும், பெருமாளே. 
* தேவர்கள் சேனையை மயங்கச் செய்து சங்க நாதம் முழக்கி பாரிஜாத மரத்தைக் கண்ணன் பூமிக்குக் கொண்டு வந்த வரலாற்றைக் குறிக்கும்.

பாடல் 1 - விநாயகர் துதி
ராகம் - நாட்டை; தாளம் - ஆதி

தந்தன தனதன தந்தன தனதன     தந்தன தனதன ...... தனதான

கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி     கப்பிய கரிமுக ...... னடிபேணிக் 
கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ     கற்பக மெனவினை ...... கடிதேகும் 
மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்     மற்பொரு திரள்புய ...... மதயானை 
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை     மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே (தி 1) 
முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்     முற்பட எழுதிய ...... முதல்வோனே 
முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்     அச்சது பொடிசெய்த ...... அதிதீரா 
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்     அப்புன மதனிடை ...... இபமாகி 
அக்குற மகளுட னச்சிறு முருகனை     அக்கண மணமருள் ...... பெருமாளே.

கரதலத்தில் நிறைந்துள்ள பழம், அப்பம், அவல், பொரி (இவைகளை) வாரி உண்ணும் யானை முகக் கடவுளின் திருவடிகளை விரும்பி, அறிவு நூல்களைக் கற்கும் அடியவர்களுடைய மனதில் நீங்காது வாழ்பவனே, நினைத்தவற்றை அளிக்கும் கற்பக விருட்சமே, என்று உன்னைத் துதி செய்தால் வினைகள் யாவும் விரைவில் ஓடிப் போய்விடும். ஊமத்த மலரும், (பிறைச்) சந்திரனும் சடையில் தரித்த சிவபெருமானுடைய மகனும், மற்போருக்குத் தக்க திரண்ட தோள்களையுடையவனும், மத யானையை ஒத்தவனும், மத்தளம் போன்ற பெருவயிறு உடையவனும், உத்தமியாகிய பார்வதியின் மகனும் ஆகிய கணபதியைத் தேன் துளிர்க்கும் புது மலர்களைக் கொண்டு நான் வணங்குவேன். இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ் நூல் முறைமையை, மலைகளுள் முற்பட்டதான மேரு மலையில் முதல் முதலில் எழுதிய முதன்மையானவனே, (அசுரர்களின்) திரி புரங்களையும் எரித்த அந்தச் சிவ பெருமான் எழுந்தருளிய ரதத்தின் சக்கர அச்சை ஒடித்துத் தூளாக்கிய மிகுந்த தீரனே*, (வள்ளி மீது கொண்ட காதலாகிய) அந்தத் துயரத்தோடு (உன் தம்பியாகிய) சுப்பிரமணியன் நடந்த அந்தத் தினைப் புனத்திடையில் யானையாகத் தோன்றி, அந்தக் குற மகளாகிய வள்ளியுடன் அந்தச் சிறிய முருக வேளை அத்தருணத்திலேயே மணம் புரியுமாறு திருவருள் பாலித்த பெருமாளே. 
* திரிபுரத்தின்மேல் படையெடுக்கத் தொடங்குகையில் சிவபெருமான் விநாயகரைப் பூஜிக்க மறந்தார். ஆதலால் சிவபெருமான் ஏறி வந்த தேரின் அச்சு முறியும்படி விநாயகர் செய்தார் என்பது சிவபுராணம்.

பாடல் 2 - விநாயகர் துதி
ராகம் - நாட்டை / மோகனம்; தாளம் - ஆதி

தத்ததன தத்ததன தத்ததன தத்ததன     தத்ததன தத்ததன ...... தனதான

பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை     பட்சியெனு முக்ரதுர ...... கமுநீபப் 
பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய     பட்டுருவ விட்டருள்கை ...... வடிவேலும் 
திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு     சிற்றடியு முற்றியப ...... னிருதோளும் 
செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு     செப்பெனஎ னக்கருள்கை ...... மறவேனே 
இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய்     எட்பொரிய வற்றுவரை ...... இளநீர்வண் 
டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள     ரிப்பழமி டிப்பல்வகை ...... தனிமூலம் 
மிக்கஅடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொரு     விக்கிநச மர்த்தனெனும் ...... அருளாழி 
வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்     வித்தகம ருப்புடைய ...... பெருமாளே.

அங்கவடி, பேரழகான மணி, பொன் நிறமான சேணம் இவைகளைப் பூண்டு கம்பீரமாக நடக்கும் பறவையாகிய, மிடுக்குள்ள (மயிலாகிய) குதிரையையும், கடம்ப மரத்தின் நன்கு பூத்த மலர்களால் தொடுக்கப்பட்ட மலர் மாலையையும், அந்தக் கிரெளஞ்ச மலை அழிந்து ஒழியும்படி அதன் மேல் பட்டு ஊடுருவிச் செல்லுமாறு விட்டருளிய திருக்கையில் உள்ள கூர்மையான வேலையும், திக்குகள் எட்டும் மதிக்கும்படி எழுந்துள்ள கொடியிலுள்ள சேவலையும், காத்தளிக்கும் சிறிய திருவடிகளையும், திரண்ட பன்னிரண்டு தோள்களையும், வயலூரையும் பாட்டிலே வைத்து உயர்ந்த திருப்புகழை விருப்பமோடு சொல்லுக* என்று எனக்கு அருள் செய்ததை மறக்க மாட்டேன். கரும்பு, அவரை, நல்ல பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இள நீர், தேன், பயறு, அப்ப வகைகள், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், பல வகையான மாவு வகைகள், ஒப்பற்ற கிழங்குகள், சிறந்த உணவு (வகைகள்), கடலை (இவைகளை) பட்சணமாகக் கொள்ளும் ஒப்பற்ற, வினைகளை நீக்க வல்லவர் என்று சொல்லப்படும் அருட் கடலே, கருணை மலையே, வளைந்த சடையையும், பினாகம் என்னும் வில்லையும் கொண்ட மேலான அப்பர் சிவபிரான் பெற்றருளிய திறலோனே, ஒற்றைக் கொம்பு** உடைய பெருமாளே. 
* திருவண்ணாமலையில் 'முத்தைத்தரு' என்ற முதல் பாட்டைப் பாடிய பின்னர் அருணகிரிநாதரை வயலூர் என்ற 'செய்ப்பதி'க்கு முருகன் வரப்பணித்தார். அங்கு தமது மயிலையும், கடப்ப மாலையையும், வேலையும், சேவலையும், பன்னிரு தோள்களையும், திருவடிகளையும், வயலூரையும் வைத்துப் பாடல் பாடக் கூறினார். அந்த அபூர்வமான பாடல்தான் இது.
** மேருமலையில் முன்னர் 'வியாசர்' விநாயகரிடம் தாம் பாரதத்தைச் சொல்லச் சொல்ல வேகமாக ஏட்டில் எழுதப் பணித்தார். எழுதுகோலாக தனது கொம்புகளின் ஒன்றை ஒடித்து விநாயகர் எழுதத் தொடங்கினார். எனவே அவருக்கு 'ஏகதந்தன்' (ஒற்றைக் கொம்பர்) என்ற பெயர் வந்தது.

பாடல் 3 - விநாயகர்
ராகம் - ஹம்ஸத்வனி / ஆனந்தபைரவி; தாளம் - அங்கதாளம் - 8 தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தகதிமிதக-3

தந்ததனத் தானதனத் ...... தனதான     தந்ததனத் தானதனத் ...... தனதான

உம்பர்தருத் தேநுமணிக் ...... கசிவாகி     ஒண்கடலிற் றேனமுதத் ...... துணர்வூறி 
இன்பரசத் தேபருகிப் ...... பலகாலும்     என்றனுயிர்க் காதரவுற் ...... றருள்வாயே 
தம்பிதனக் காகவனத் ...... தணைவோனே     தந்தைவலத் தாலருள்கைக் ...... கனியோனே 
அன்பர்தமக் கானநிலைப் ...... பொருளோனே     ஐந்துகரத் தானைமுகப் ...... பெருமாளே.

விண்ணவர் உலகிலுள்ள கற்பக மரம் காமதேனு, சிந்தாமணி (இவைகளைப் போல் ஈதற்கு) என் உள்ளம் நெகிழ்ந்து ஒளிவீசும் பாற்கடலில் தோன்றிய இனிய அமுதம்போன்ற உணர்ச்சி என் உள்ளத்தில் ஊறி இன்பச் சாற்றினை நான் உண்ணும்படி பலமுறை என்னுயிரின் மீது ஆதரவு வைத்து அருள்வாயாக தம்பியின் (முருகனின்) பொருட்டாக தினைப்புனத்திற்கு வந்தடைவோனே தந்தை சிவனை வலம் செய்ததால் கையிலே அருளப்பெற்ற பழத்தை உடையவனே அன்பர்களுக்கு வேண்டிய நிலைத்து நிற்கும் பொருளாக விளங்குபவனே ஐந்து கரங்களையும் யானைமுகத்தையும் உடைய பெருமானே. 

பாடல் 4 - விநாயகர்
ராகம் - ஹம்ஸத்வனி; தாளம் - அங்கதாளம் - 7 1/2 தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகஜனு-2

தனன தனதன தத்தன தத்தன     தனன தனதன தத்தன தத்தன          தனன தனதன தத்தன தத்தன ...... தனதான

நினது திருவடி சத்திம யிற்கொடி     நினைவு கருதிடு புத்திகொ டுத்திட          நிறைய அமுதுசெய் முப்பழ மப்பமு ...... நிகழ்பால்தேன் 
நெடிய வளைமுறி இக்கொடு லட்டுகம்     நிறவில் அரிசிப ருப்பவல் எட்பொரி          நிகரில் இனிகத லிக்கனி வர்க்கமும் ...... இளநீரும் 
மனது மகிழ்வொடு தொட்டக ரத்தொரு     மகர சலநிதி வைத்தது திக்கர          வளரு கரிமுக ஒற்றைம ருப்பனை ...... வலமாக 
மருவு மலர்புனை தொத்திர சொற்கொடு     வளர்கை குழைபிடி தொப்பண குட்டொடு          வனச பரிபுர பொற்பத அர்ச்சனை ...... மறவேனே 
தெனன தெனதென தெத்தென னப்பல     சிறிய அறுபத மொய்த்துதி ரப்புனல்          திரளும் உறுசதை பித்தநி ணக்குடல் ...... செறிமூளை 
செரும உதரநி ரப்புசெ ருக்குடல்     நிரைய அரவநி றைத்தக ளத்திடை          திமித திமிதிமி மத்தளி டக்கைகள் ...... செகசேசே 
எனவெ துகுதுகு துத்தென ஒத்துகள்     துடிகள் இடிமிக ஒத்துமு ழக்கிட          டிமுட டிமுடிமு டிட்டிமெ னத்தவில் ...... எழுமோசை 
இகலி அலகைகள் கைப்பறை கொட்டிட     இரண பயிரவி சுற்றுந டித்திட          எதிரு நிசிசர ரைப்பெலி யிட்டருள் ...... பெருமாளே.

(முருகா) உன்னுடைய திருவடி, வேல், மயில், சேவல் (இவைகளை) நினைவில் கருதும் அறிவை நான் பெறுவதற்கு, நிரம்பச் செய்யப்பட்ட அமுது, மூன்று வகையான பழங்கள், அப்பமும், புதிய பால், தேன், நீண்டு வளைந்த முறுக்கு, கரும்புடன், லட்டு, நிறமும் ஒளியும் உள்ள அரிசி, பருப்பு, எள், பொரி, ஒப்பில்லாத இனிய வாழைப்பழ வகைகளும், இள நீரும் (ஆகிய நிவேதனப் பொருட்களை), மன மகிழ்ச்சியுடன் தொடும் கைகளையும், ஒப்பற்ற மகர மீன்கள் உள்ள கடலில் வைத்த துதிக்கையையும்* உடைய வளரும் யானை முகத்து ஒற்றைக் கொம்பனாகிய கணபதியை வலம் வந்து, அவருக்கென்றே பொருந்திய மலர் கொண்டு (வழிபட்டும்), துதிப்பதற்கு உரிய சொற்களைக் கொண்டு (துதித்தும்), தூக்கிய கைகளால் காதைப் பிடித்தும், தோப்புக்கரணம் போட்டும், சிரசில் குட்டியும் **, (அந்த விநாயகருடைய) தாமரை போன்ற, சிலம்பு அணிந்த அழகிய பாதங்களில் அர்ச்சனை செய்வதை நான் ஒருபோதும் மறவேன். தெனன தெனதென தெத்தென இவ்வாறான ஒலி செய்யும் பல சிறிய ஈக்கள் மொய்க்கும் ரத்த நீர், திரண்டுள்ள சதைகள், பித்தம் நிறைந்த மாமிசக் குடல்கள், சிதறிய மூளைத் திசுக்கள், பிளந்த வயிற்றில் நிறைந்துள்ள ஈரல்கள், பெருங்குடல்கள், இவைகளோடு வரிசைகளாக ஒலிக்கும் ஒலிகள் நிறைந்த போர்க் களத்தில் திமித திமிதிமி என்று ஒலிக்கும் மத்தளம், இடக்கை என்னும் வாத்தியம் செகசே சே என ஒலிக்கவும், துகு துகு துத்தென்ற ஓசையுடன் ஊது குழலும் உடுக்கைப் பறைகளும் இடி என மிக ஒத்து முழங்க, டிமுட டிமு டிமு டிட்டிம் என மேள வகைகள் ஓசைகள் எழுப்ப, ஒன்றோடொன்று பகைத்த பேய்கள் கைப்பறைகளைக் கொட்ட, ரண பைரவி என்னும் தேவதைகள் சுற்றிக் கூத்தாட, எதிர்த்து வந்து அசுரர்களைப் பலி இட்டு அழித்த பெருமாளே. 
* திருப்பாற் கடலைக் கடைந்த பொழுது மத்தாகிய மந்தர மலை அழுந்த, திருமால் அதை ஆமை உருவெடுத்து முதுகில் தாங்கினார். அதனால் இறுமாப்பு உற்று அவர் கடலைக் கலக்க, சிவபெருமான் ஏவலால் விநாயகர் அந்த ஆமையை அடக்கி, தமது துதிக்கையால் பொங்கிய கடல் நீர் முழுவதையும் குடித்தார்.
** ஒருமுறை அகத்திய முநிவர் தவம் செய்த போது, விநாயகர் காக்கை உருவில் வந்து அவரது கமண்டலத்தை விளையாட்டாக கவிழ்த்துவிட, காவிரி நதி பிறந்தது. தவம் கலைந்த அகத்தியர் பார்க்க, விநாயகர் அந்தணச் சிறுவனாய் ஓடினார். கோபத்தில் அகத்தியர் விநாயகரின் காதைத் திருகி, தலையில் குட்ட முயன்றபோது, ஐங்கரனாய் உருமாறியதும், முநிவர் குட்ட ஓங்கிய கரங்களால் தம்மையே குட்டிக் கொள்ள, விநாயகர் தடுத்தார். தம் சன்னிதியில் தோப்புக்கரணம் செய்து சிரத்தில் குட்டிக் கொள்பவர்களின் அறிவு நலம் பெருக வரம் அளித்தார்.

பாடல் 5 - விநாயகர்
ராகம் - கெளளை; தாளம் - திஸ்ரத்ருபுடை - 7 / மிஸ்ரசாபு - 3 1/2

தனதனன தான தனதனன தான     தனதனன தான ...... தனதான

விடமடைசு வேலை அமரர்படை சூலம்     விசையன்விடு பாண ...... மெனவேதான் 
விழியுமதி பார விதமுமுடை மாதர்     வினையின்விளை வேதும் ...... அறியாதே 
கடியுலவு பாயல் பகலிரவெ னாது     கலவிதனில் மூழ்கி ...... வறிதாய 
கயவனறி வீனன் இவனுமுயர் நீடு     கழலிணைகள் சேர ...... அருள்வாயே 
இடையர்சிறு பாலை திருடிகொடு போக     இறைவன்மகள் வாய்மை ...... அறியாதே 
இதயமிக வாடி யுடையபிளை நாத     கணபதியெ னாம ...... முறைகூற 
அடையலவர் ஆவி வெருவஅடி கூர     அசலுமறி யாமல் ...... அவரோட 
அகல்வதென டாசொல் எனவுமுடி சாட     அறிவருளும் ஆனை ...... முகவோனே.

நஞ்சு பொருந்திய கடலும், தேவர் படையும், சூலாயுதமும், அருச்சுனன் விடுகின்ற அம்பும் சமானம் என்று கூறும்படியான கண்களும், அதிபாரமான மார்பகங்களும் கொண்ட விலைமாதர்களின் சாகசத் தொழில்களினால் விளையும் துன்பங்கள் ஒன்றையும் அறிந்து கொள்ளாது, வாசனை மிக்க படுக்கையில், பகல் இரவு என்ற வேறுபாடு இல்லாமல் சுகபோகத்தில் மூழ்கி ஏழ்மை அடைந்த கீழ்மகனும், அறிவு குறைந்தவனும் ஆகிய அடியேனும் உனது உயர்ச்சி மிக்க திருவடி இணைகளைச் சேர அருள் புரிவாயாக. அரசன் உக்ரசேனனுடைய மகள் தேவகி நிகழ இருக்கும் உண்மையை அறிய மாட்டாதவளாக (அதாவது கண்ணனால் கம்சன் ஏவிவிட்ட அசுரர்கள் கொல்லப் படுவார்கள் என்ற உண்மை தெரியாது) மனம் வாட்டம் உற்று, என் மகனை ஆண்டருளும் பிள்ளைப் பெருமாளே, கணபதியே என்னும் நாமங்களை வரிசைப்படக் கூற (அவள் முறையீட்டுக்கு இரங்கி), (அன்வயப்படுத்தப்பட்ட வரி) இடையர்களுடைய கொஞ்சம் பாலைத் திருடிக் கொண்டு போக (அதாவது யாதவர்களின் தூய மனத்தைக் கண்ணன் தன்வசமாக்க), பகைவர்கள் உயிருக்கு அஞ்சும்படி நீ அடி எடுத்து வர, (நீ வரும் ஒலியைக் கேட்டு) அயலார் அறியாமல் அவர்கள் ஓட, போவது ஏனடா சொல் எனக் கூறி அவர்கள் தம் முடிகளைத் தாக்கும் அறிவை (கண்ணபிரானுக்கு) அருளிய யானைமுகத்துக் கணபதியே. 

பாடல் 6 - நூல்
ராகம் - கெளளை; தாளம் - திஸ்ரத்ருபுடை - 7 / மிஸ்ரசாபு - 3 1/2

தத்தத்தன தத்தத் தனதன     தத்தத்தன தத்தத் தனதன          தத்தத்தன தத்தத் தனதன ...... தனதான

முத்தைத்தரு பத்தித் திருநகை     அத்திக்கிறை சத்திச் சரவண          முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும் 
முக்கட்பர மற்குச் சுருதியின்     முற்பட்டது கற்பித் திருவரும்          முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப் 
பத்துத்தலை தத்தக் கணைதொடு     ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு          பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப் 
பத்தற்கிர தத்தைக் கடவிய     பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்          பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே 
தித்தித்தெய ஒத்தப் பரிபுர     நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி          திக்கொட்கந டிக்கக் கழுகொடு ...... கழுதாடத் 
திக்குப்பரி அட்டப் பயிரவர்     தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு          சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக் 
கொத்துப்பறை கொட்டக் களமிசை     குக்குக்குகு குக்குக் குகுகுகு          குத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை 
கொட்புற்றெழ நட்பற் றவுணரை     வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி          குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே.

வெண்முத்தை நிகர்த்த, அழகான பல்வரிசையும் இளநகையும் அமைந்த தேவயானை* தேவியின் தலைவனே, சக்திவேல் ஆயுதத்தை ஏந்தும் சரவணபவக் கடவுளே, மோக்ஷ வீட்டுக்கு ஒப்பற்ற ஒரு விதையாக விளங்கும் ஞான குருவே, என்று துதிக்கும் முக்கண்ணர் பரமசிவனார்க்கு வேதங்களுக்கு முதன்மையான ஓம் என்னும் மந்திரத்தை உபதேசித்து, (மும்மூர்த்திகளில் எஞ்சியுள்ள) பிரம்மா, திருமால் ஆகிய இருவரும், முப்பத்து முக்கோடி தேவர்களும் அடி பணிய நின்றவனே, ராவணனுடைய பத்துத் தலைகளும் சிதறி விழுமாறு அம்பை விட்டு, ஒப்பற்ற மந்தர மலையான மத்தைக் கொண்டு பாற்கடலைக் கடைந்து, ஒரு பகற் பொழுதை வட்டமான சக்ராயுதத்தால் இரவு ஆக்கி, நண்பனாகிய அர்ச்சுனனுக்கு, தேர்ப்பாகனாக வந்து தேரினைச் செலுத்திய பசுமையான நீலமேகவண்ணன் திருமால் பாராட்டும் பரம்பொருளே, பரிவோடு என்னைக் காத்தருளும் நாள் ஒன்றும் உண்டோ? (இப்பாடலின் பிற்பகுதி முருகன் அசுரர்களுடன் செய்த போரினை விரிவாக வருணிக்கிறது). தித்தித்தெய என்ற தாளத்துக்கு ஒத்து, சிலம்புகள் அணிந்த நாட்டியப் பாதங்களை வைத்து காளிதேவி திசைகளில் எல்லாம் சுழன்று தாண்டவம் செய்யவும், கழுகுகளோடு பேய்கள் சேர்ந்து ஆடவும், எட்டுத் திக்குகளிலும் உலகங்களைத் தாங்குகின்ற அஷ்ட பைரவர்கள் ** இந்த அழகிய கூத்துக்கு ஏற்ப 'தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக' என்ற தாள ஓசையைக் கூறவும், கூட்டமாகப் பற்பல பறை வாத்தியங்களை அதே தாளத்தில் முழக்கவும், போர்க்களத்தில் கிழக் கோட்டான்கள் 'குக்குக்குகு குக்குக் குகுகுகு' என்ற ஓசையோடு 'குத்திப் புதை, புகுந்து பிடி' என்றெல்லாம் குழறி வட்டமாகச் சுழன்று மேலே எழவும், சினேக எண்ணம் தவிர்த்து விரோத மனப்பான்மையே கொண்ட அசுரர்களை கொன்று பலி கொடுத்து, அசுரர் குல மலை கிரெளஞ்சகிரி தூளாக, தர்ம மார்க்கத்துக்குப் பொருந்த, போர்செய்யவல்ல பெருமாளே. 
குறிப்பு: முருகன் அருணகிரிநாதருக்கு அடி எடுத்துக் கொடுக்கப் பாடிய பாட்டு இது.
* தேவயானை கிரியாசக்தி என்பதால், கர்மயோகத்தை முதலில் அனுஷ்டிக்க அவளைக் குறிப்பிட்டார்.
** அஷ்ட பைரவர்கள்: அசிதாங்கன், காபாலி, சண்டன், உருரு, குரோதன், சங்காரன், பீடணன், உன்மத்தன்.

பாடல் 7 - திருப்பரங்குன்றம்
ராகம் - .....; தாளம் - ........

தனத்த தந்தன தனதன தனதன     தனத்த தந்தன தனதன தனதன          தனத்த தந்தன தனதன தனதன ...... தனதான

அருக்கு மங்கையர் மலரடி வருடியெ     கருத்த றிந்துபின் அரைதனில் உடைதனை         அவிழ்த்தும் அங்குள அரசிலை தடவியும் ...... இருதோளுற் 
றணைத்தும் அங்கையின் அடிதொறும் நகமெழ     உதட்டை மென்றுபல் இடுகுறி களுமிட         அடிக்க ளந்தனில் மயில்குயில் புறவென ...... மிகவாய்விட் 
டுருக்கும் அங்கியின் மெழுகென உருகிய     சிரத்தை மிஞ்சிடும் அநுபவம் உறுபலம்         உறக்கை யின்கனி நிகரென இலகிய ...... முலைமேல்வீழ்ந் 
துருக்க லங்கிமெய் உருகிட அமுதுகு     பெருத்த உந்தியின் முழுகிமெ யுணர்வற         உழைத்தி டுங்கன கலவியை மகிழ்வது ...... தவிர்வேனோ 
இருக்கு மந்திரம் எழுவகை முநிபெற     உரைத்த சம்ப்ரம சரவண பவகுக         இதத்த இங்கிதம் இலகிய அறுமுக ...... எழில்வேளென் 
றிலக்க ணங்களும் இயலிசை களுமிக     விரிக்கும் அம்பல மதுரித கவிதனை         இயற்று செந்தமிழ் விதமொடு புயமிசை ...... புனைவோனே 
செருக்கும் அம்பல மிசைதனில் அசைவுற     நடித்த சங்கரர் வழிவழி அடியவர்         திருக்கு ருந்தடி அருள்பெற அருளிய ...... குருநாதர் 
திருக்கு ழந்தையு மெனஅவர் வழிபடு     குருக்க ளின்திற மெனவரு பெரியவ         திருப்ப ரங்கிரி தனிலுறை சரவண ...... பெருமாளே.

அருமை வாய்ந்த விலைமாதர்களின் மலர் போன்ற அடிகளைப் பிடித்தும், (அவர்களுடைய) எண்ணத்தை அறிந்த பின்பு இடுப்பில் கட்டிய ஆடையை அவிழ்த்தும், அங்குள்ள அரசிலை போன்ற உறுப்பைத் தடவியும், அவர்களுடைய இரண்டு தோள்களிலும் பொருந்தி அணைத்தும், அங்கையின் அடிப்பாகம் தோறும் நகக் குறிகள் இட்டும், இதழ்களை மென்று பற்களால் பல குறிகள் பதித்தும், அடி நெஞ்சில் மயில் குயில் புறா ஆகிய இப் பறவைகள் போன்று பெரிய ஒலி எழச் செய்தும், உருக்க வல்ல நெருப்பிலிட்ட மெழுகு போல உருகிய ஊக்கம் மிக்க அனுபவத்தால் வருகின்ற பயன்களைப் பெற, கையில் உள்ள பழம் போல் விளங்கிய தனங்களின் மீது விழுந்து உருவம் கலங்கி உடல் உருகி, அமுதம் பெருகும் பெருத்த உந்தித் தடத்தில் முழுகி, மெய் உணர்வு அற்றுப் போகும் வண்ணம் உழைக்கின்ற பெருத்த கலவி இன்பத்தில் மகிழ்ச்சி கொள்ளுவதை விட்டு ஒழியேனோ? ரிக் வேத மந்திரத்தை (வசிஷ்டர் முதலிய) ஏழு வகை ரிஷிகளும் அறியும்படி உரைத்த சிறப்பு வாய்ந்தவனே, சரவணபவனே, குகனே, இதம் தருவதும், இனிமை தருவதுமாய் விளங்கும் ஆறு முகங்கள் கொண்ட அழகிய வேளே என்று, இலக்கணங்கள் பொருந்த இயற்றமிழாலும் இசைத் தமிழாலும் விரித்துரைக்கும் அழகிய பல மதுரம் மிகுந்த கவிகளாக இயற்றப்பட்ட செந்தமிழை வகைவகையாக திருப்புயத்தில் பாமாலையாக அணிந்தவனே, களிப்புடன் பொன்னம்பலத்தின் மீது அசைந்து கூத்தாடும் சங்கரரும், (தமக்கு) வழிவழி அடியவரான மாணிக்க வாசகருக்கு (திருப் பெருந்துறையில். திருக்குருந்த மரத்தடியில் அருள் பெறும் வண்ணம் அருள் செய்த குரு நாதரகிய சிவபெருமானது திருக் குழுந்தை என்ற நிலையிலும் அந்த சிவபெருமானே வழிபட்டு நிற்கும் பெரு நிலையிலும் எழுந்தருளியுள்ள பெரியோனே, திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும் சரவண மூர்த்தியே, பெருமாளே. 

பாடல் 8 - திருப்பரங்குன்றம்
ராகம் - ஸாவேரி; தாளம் - ஆதி

தனத்த தந்தன தனதன தனதன     தனத்த தந்தன தனதன தனதன          தனத்த தந்தன தனதன தனதன ...... தனதான

உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை     உரைத்தி லன்பல மலர்கொடுன் அடியிணை          உறப்ப ணிந்திலன் ஒருதவ மிலனுன ...... தருள்மாறா 
உளத்து ளன்பினர் உறைவிடம் அறிகிலன்     விருப்பொ டுன்சிக ரமும்வலம் வருகிலன்          உவப்பொ டுன்புகழ் துதிசெய விழைகிலன் ...... மலைபோலே 
கனைத்தெ ழும்பக டதுபிடர் மிசைவரு     கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர்          கதித்த டர்ந்தெறி கயிறடு கதைகொடு ...... பொருபோதே 
கலக்கு றுஞ்செயல் ஒழிவற அழிவுறு     கருத்து நைந்தல முறுபொழு தளவைகொள்          கணத்தில் என்பய மறமயில் முதுகினில் ...... வருவாயே 
வினைத்த லந்தனில் அலகைகள் குதிகொள     விழுக்கு டைந்துமெய் உகுதசை கழுகுண          விரித்த குஞ்சியர் எனுமவு ணரைஅமர் ...... புரிவேலா 
மிகுத்த பண்பயில் குயில்மொழி அழகிய     கொடிச்சி குங்கும முலைமுக டுழுநறை          விரைத்த சந்தன ம்ருகமத புயவரை ...... உடையோனே 
தினத்தி னஞ்சதுர் மறைமுநி முறைகொடு     புனற்சொ ரிந்தலர் பொதியவி ணவரொடு          சினத்தை நிந்தனை செயுமுநி வரர்தொழ ...... மகிழ்வோனே 
தெனத்தெ னந்தன எனவரி யளிநறை     தெவிட்ட அன்பொடு பருகுயர் பொழில்திகழ்          திருப் பரங்கிரி தனிலுறை சரவண ...... பெருமாளே.

யான் உன்னைத் தினந்தோறும் தொழுவதும் இல்லை. உன் தன்மைகளை எடுத்து உரைப்பதுமில்லை. பல மலர்கள் கொண்டு உன் திருவடிகளை பொருந்தப் பணியவில்லை. ஒருவகையான தவமும் யான் செய்தவன் இல்லை. உன்னருள் நீங்காத உள்ளத்தை உடைய அன்பர் இருக்கும் இடம்கூட யான் அறிகின்றதும் இல்லை. ஆர்வத்தோடு உன் மலையை வலம்வருவதும் இல்லை. மகிழ்ச்சியோடு உன் புகழைத் துதிக்க விரும்புவதும் இல்லை. மலைபோல் உருவமுடன், கனைத்தவாறு வரும் எருமையின் கழுத்தின் மீது வருகின்ற, கரிய நிறமும் கடுங்கோபமும் உடைய யமனின் தூதர்கள் என்முன் தோன்றி நெருக்கி எறிகின்ற பாசக்கயிறு கொண்டும், துன்புறுத்தும் கதாயுதம் கொண்டும் என்னோடு போரிடும் போது, மனம் கலங்கும் செயலும், ஓய்வின்றி அழிவுறும் எண்ணமும் நைந்துபோய் யான் துன்புறும்போது ஒரு கண அளவில் என் பயம் நீங்கும்படியாக அஞ்சேல் என்று கூறி மயிலின் முதுகினில் நீ வருவாயாக. போர்க்களத்தில் பேய்கள் கூத்தாடுவதால் ஊன் உடைந்து உடல்களிலிருந்து சிதறின மாமிசத்தை கழுகுகள் உண்ணவும், விரித்த தலைமயிர் உடையவர்கள் என்னும் அசுரர்களோடு போர் புரிந்த வேலனே, நிறைய ராகங்களில் பாடவல்ல குயிலின் மொழி ஒத்த குரலாள், அழகான வள்ளிமலைக்காரி, (வள்ளியின்) குங்குமம் அணிந்த மார்பில் அழுந்தும் வாசமிகு சந்தனமும் கஸ்தூரியும் அணிந்த மலை போன்ற தோள்களை உடையவனே, தினந்தோறும், நால்வேதமும்வல்ல பிரம்மா விதிப்படி, நீரால் அபிஷேகம் செய்து, பூக்களை நிறைய அர்ச்சித்து, தேவர்களும் கோபத்தை நிந்தித்து விட்ட முனிவர்களும் தொழ, அந்த நித்ய பூஜையில் மனம் மகிழ்வோனே, தெனத்தெனந்தன என்ற சப்தத்துடன் இசைக்கும் வண்டுகள் தேனைத் தெவிட்டும் அளவுக்கு ஆசையுடன் குடிக்கும் உயர்ந்த சோலைகள் விளங்கும் திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும் சரவண மூர்த்தியே. 

பாடல் 9 - திருப்பரங்குன்றம்
ராகம் - ஹிந்தோளம் / வராளி; தாளம் - அங்கதாளம் - 7 - திஸ்ரத்ருபுடை தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2, தகிட-1 1/2

தனனதந்த தத்தத்த தந்த     தனனதந்த தத்தத்த தந்த          தனனதந்த தத்தத்த தந்த ...... தனதான

கருவடைந்து பத்துற்ற திங்கள்     வயிறிருந்து முற்றிப்ப யின்று          கடையில்வந்து தித்துக்கு ழந்தை ...... வடிவாகிக் 
கழுவியங்கெ டுத்துச்சு ரந்த     முலையருந்து விக்கக்கி டந்து          கதறியங்கை கொட்டித்த வழ்ந்து ...... நடமாடி 
அரைவடங்கள் கட்டிச்ச தங்கை     இடுகுதம்பை பொற்சுட்டி தண்டை          அவையணிந்து முற்றிக்கி ளர்ந்து ...... வயதேறி 
அரியபெண்கள் நட்பைப்பு ணர்ந்து     பிணியுழன்று சுற்றித்தி ரிந்த          தமையுமுன்க்ரு பைச்சித்தம் என்று ...... பெறுவேனோ 
இரவிஇந்த்ரன் வெற்றிக்கு ரங்கி     னரசரென்றும் ஒப்பற்ற உந்தி          யிறைவன்எண்கி னக்கர்த்த னென்றும் ...... நெடுநீலன் 
எரியதென்றும் ருத்ரற்சி றந்த     அநுமனென்றும் ஒப்பற்ற அண்டர்          எவரும்இந்த வர்க்கத்தில் வந்து ...... புனமேவ 
அரியதன்ப டைக்கர்த்த ரென்று     அசுரர்தங்கி ளைக்கட்டை வென்ற          அரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின் ...... மருகோனே 
அயனையும்பு டைத்துச்சி னந்து     உலகமும்ப டைத்துப்ப ரிந்து          அருள்பரங்கி ரிக்குட்சி றந்த ...... பெருமாளே.

கருவிலே சேர்ந்து பத்து மாதங்கள் தாயின் வயிற்றில் இருந்து கரு முற்றிப் பக்குவம் அடைந்து கடைசியில் பூமியில் வந்து பிறந்து குழந்தையின் வடிவத்தில் தோன்றி குழந்தையை அங்கு கழுவியெடுத்து சுரக்கும் முலைப்பாலை ஊட்டுவிக்க தரையிலே கிடந்தும், அழுதும், உள்ளங்கையைக் கொட்டியும், தவழ்ந்தும், நடை பழகியும், அரைநாண் கட்டியும், காலில் சதங்கையும், காதில் இட்ட அணியும், பொன் கொலுசு, தண்டை அவைகளை அணிந்தும், முதிர்ந்து வளர்ந்து வயது ஏறி, அருமையான பெண்களின் நட்பைப் பூண்டு, நோய்வாய்ப்பட்டு அலைந்து திரிந்தது போதும். (இனிமேல்) உனது அருள் கடாட்சத்தை எப்போது பெறுவேனோ? சூரியன் (அவன் அம்சமாக சுக்ரிவன்), இந்திரன் (அவன் அம்சமாக வாலி) வெற்றி வானர அரசர்களாகவும், ஒப்பில்லா திருமால் வயிற்றிலே பிறந்த பிரமன் கர் இனத் தலைவன் (ஜாம்பவான்) ஆகவும், நெடிய நீலன் அக்கினியின் கூறாகவும், ருத்திர அம்சம் அநுமன் என்றும், ஒப்பில்லாத தேவர்கள் யாவரும் இன்னின்ன வகைகளிலே வந்து இப் பூமியில் சேர்ந்திட, (இவர்களே) தன் அரிய படைக்குத் தலைவர் எனத் தேர்ந்து, அசுரர்களின் சுற்றமென்னும் கூட்டத்தை வெற்றி கொண்ட ஹரிமுகுந்தனாம் ஸ்ரீராமன் புகழும் குணம் வாய்ந்த மருமகனே, பிரம்மாவையும் தண்டித்து, கோபித்து, (பிரம்மனைச் சிறையிட்ட பின்) உலகத்தையும் படைத்து, அன்புடன் அருள் பாலிக்கும் திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 10 - திருப்பரங்குன்றம்
ராகம் - ....; தாளம் - .......

தனத்த தந்தன தனதன தனதன     தனத்த தந்தன தனதன தனதன          தனத்த தந்தன தனதன தனதன ...... தனதான

கறுக்கும் அஞ்சன விழியிணை அயில்கொடு     நெருக்கி நெஞ்சற எறிதரு பொழுதொரு          கனிக்குள் இன்சுவை அமுதுகும் ஒருசிறு ...... நகையாலே 
களக்கொ ழுங்கலி வலைகொடு விசிறியெ     மனைக்கெ ழுந்திரும் எனமனம் உருகஒர்          கவற்சி கொண்டிட மனைதனில் அழகொடு ...... கொடுபோகி 
நறைத்த பஞ்சணை மிசையினில் மனமுற     அணைத்த கந்தனில் இணைமுலை எதிர்பொர          நகத்த ழுந்திட அமுதிதழ் பருகியு ...... மிடறூடே 
நடித்தெ ழுங்குரல் குமுகுமு குமுவென     இசைத்து நன்கொடு மனமது மறுகிட          நழுப்பு நஞ்சன சிறுமிகள் துயரற ...... அருள்வாயே 
நிறைத்த தெண்டிரை மொகுமொகு மொகுவென     உரத்த கஞ்சுகி முடிநெறு நெறுவென          நிறைத்த அண்டமு கடுகிடு கிடுவென ...... வரைபோலும் 
நிவத்த திண்கழல் நிசிசர ருரமொடு     சிரக்கொ டுங்குவை மலைபுரை தரஇரு          நிணக்கு ழம்பொடு குருதிகள் சொரிதர ...... அடுதீரா 
திறற்க ருங்குழல் உமையவள் அருளுறு     புழைக்கை தண்கட கயமுக மிகவுள          சிவக்கொ ழுந்தன கணபதி யுடன்வரும் ...... இளையோனே 
சினத்தொ டுஞ்சமன் உதைபட நிறுவிய     பரற்கு ளன்புறு புதல்வநன் மணியுகு          திருப்ப ரங்கிரி தனிலுறை சரவண ...... பெருமாளே.

கரிய மையிட்ட இரண்டு கண்களாகிய வேல் கொண்டு நெருக்கி, மனம் அழியும்படி எறியும் பொழுது, ஒரு பழச் சுவையையும் அமுதத்தையும் உகுக்கின்ற ஒப்பற்ற புன்னகையாலே, கழுத்தில் நின்று எழும் வளமான ஒலி என்னும் வலையை வீசியே வீட்டுக்கு வாருங்கள் என்று கூறி மனம் உருகும்படியாகவும், ஒரு கவலை கொள்ளும்படியாகவும் வீட்டில் அழகாக அழைத்துக் கொண்டு போய், மணம் தோய்ந்த பஞ்சணையின் மேல் மனம் பொருந்த அணைத்த மார்பில் அவர்களது இரு மார்பகங்களை எதிர்பொர, நகக் குறி அழுந்த, இதழ் அமுதைப் பருகியும், கண்டத்தோடு நடித்து எழுகின்ற புட்குரல் குமு குமு என்று ஒலி செய்ய, நன்றாக மனம் கலங்கும்படி பசப்பி மயக்கும் விஷம் போன்ற விலைமாதர்களால் வரும் துன்பம் நீங்க நீ அருள் புரிவாயே. நிறை கடல் பொங்கி மொகு மொகு எனவும், வலிமையான ஆதிசேஷனது முடி நெறு நெறு எனவும், நிறைந்த அண்டங்களின் உச்சிகளும் கிடு கிடு எனவும், மலையை ஒத்து உயர்ந்த திண்ணிய கழல்களைக் கொண்ட அவுணர்கள் மார்பும் தலைகளின் கொடிய கூட்டமும் மலைக்கு ஒப்பாக பெரிய மாமிசக் குழம்புடன் ரத்தத்தைச் சொரிய வெட்டித் துணித்த தீரனே, ஒளியும் கருமையும் கொண்ட உமா தேவி பெற்றருளிய தொளைக் கையையும், குளிர்ந்த மதமும் உள்ள யானை முகத்தைக் கொண்ட சிவக் கொழுந்து போன்ற விநாயகருடன் வரும் தம்பியே, கோபத்துடன் யமனை உதைபட வைத்த சிவபெருமானது உள்ளம் அன்புறும் புதல்வனே, நல்ல மணிகளைச் சிதறும் திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும் சரவணனாகிய பெருமாளே. 

பாடல் 11 - திருப்பரங்குன்றம்
ராகம் - சங்கராபரணம் / நீலாம்பரி; தாளம் - திஸ்ரத்ருபுடை - 7

தனதந்தன தந்தன தந்தன     தனதந்தன தந்தன தந்தன          தனதந்தன தந்தன தந்தன ...... தனதான

கனகந்திரள் கின்றபெ ருங்கிரி     தனில்வந்துத கன்தகன் என்றிடு          கதிர்மிஞ்சிய செண்டைஎ றிந்திடு ...... கதியோனே 
கடமிஞ்சிஅ நந்தவி தம்புணர்     கவளந்தனை உண்டுவ ளர்ந்திடு          கரியின்றுணை என்றுபி றந்திடு ...... முருகோனே 
பனகந்துயில் கின்றதி றம்புனை     கடல்முன்புக டைந்தப ரம்பரர்          படரும்புயல் என்றவர் அன்புகொள் ...... மருகோனே 
பலதுன்பம்உழன்றுக லங்கிய     சிறியன்புலை யன்கொலை யன்புரி          பவமின்றுக ழிந்திட வந்தருள் ...... புரிவாயே 
அனகன்பெயர் நின்றுரு ளுந்திரி     புரமுந்திரி வென்றிட இன்புடன்          அழலுந்தந குந்திறல் கொண்டவர் ...... புதல்வோனே 
அடல்வந்துமு ழங்கியி டும்பறை     டுடுடுண்டுடு டுண்டுடு டுண்டென          அதிர்கின்றிட அண்டநெ ரிந்திட ...... வருசூரர் 
மனமுந்தழல் சென்றிட அன்றவர்     உடலுங்குட லுங்கிழி கொண்டிட          மயில்வென்றனில் வந்தரு ளுங்கன ...... பெரியோனே 
மதியுங்கதி ருந்தட வும்படி     உயர்கின்றவ னங்கள்பொ ருந்திய          வளமொன்றுப ரங்கிரி வந்தருள் ...... பெருமாளே.

தங்கம் திரண்டு சேர்கின்ற பெரிய மேரு மலையை அடைந்து அதன் மேல் தக தக என்று மின்னுகின்ற ஒளிவீசும் செண்டாயுதத்தை (பொற்பிரம்பை)* எறிந்திட்ட புகலிடமானவனே, மிக்க மதம் கொண்டு, பலவித பக்ஷணங்களைப் புசித்து, அனைத்தையும் கவள அளவாக உண்டு வளர்ந்த யானைமுகனுக்கு இளையவனாகப் பிறந்த முருகனே, ஆதிசேஷன் மீது அறிதுயில் கொள்ளும் வல்லமை உடையவரும், பாற்கடலை முன்பு (கூர்மாவதாரத்தில்) தாமே கடைந்த பெரும் பொருளும், வானில் படரும் கார்முகில் நிறத்தவருமான திருமாலின் அன்பார்ந்த மருமகனே, பல துன்பங்களால் மனம் சுழன்று கலக்கமுற்ற அற்பனும், புலால் உண்பவனும், கொலைகாரனுமான நான் செய்கின்ற பாவங்கள் எல்லாம் இன்றோடு அழிந்து போக நீ என் முன் தோன்றி திருவருள் புரியவேண்டும். பாவமில்லாதவன் என்ற பெயர் நிலைத்து நின்று, எப்போதும் சுழன்று திரியும் திரிபுரத்தையும் வெற்றி கொள்ள, அக்கினிதேவன் மகிழ்ச்சியோடு வந்து பற்றிக் கொள்ளும்படியாக சிரித்தே எரித்த திறமைகொண்ட சிவனாரின் திருக்குமரனே, வலிமையோடு வந்து முழங்கும் பறை வாத்தியங்கள் (அதே ஒலியோடு) உலகம் அதிர, அண்டங்கள் கூட்டமிகுதியால் நெரிய, போருக்கு வந்த சூரர்களின் மனத்தில் சென்று அக்கினி சுடும்படி, அந்த நாள் அவர்களின் உடல்களும் குடல்களும் கிழியும்படி, மயிலின் முதுகின் மேல் வந்தருளிய மதிப்பும் பெருமையும் உடையவனே, சந்திரனும் சூரியனும் தடவிச் செல்லும்படியான உயரமான மரங்கள் உள்ள சோலைகள் நிறைந்த வளமிக்க திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கும் பெருமாளே. 
* முருகனது அம்சமான உக்கிர பாண்டியன் ஆட்சியின் போது நாட்டில் வறுமை மிக, பாண்டியன் கனவில் சிவபெருமான் தோன்றி பொன்மலை மேருவைச் செண்டால் அடித்தால் பொன்னாகக் கொட்டும் என, பாண்டியன் மேருவைச் செண்டால் அடித்து பொன் பெற்ற திருவிளையாடல் இங்கு கூறப்படுகிறது.

பாடல் 12 - திருப்பரங்குன்றம்
ராகம் - ....; தாளம் - ......

தானன தந்தன தந்தனந் தந்தன     தானன தந்தன தந்தனந் தந்தன          தானன தந்தன தந்தனந் தந்தன ...... தனதான

காதட ருங்கயல் கொண்டிசைந் தைம்பொறி     வாளிம யங்கம னம்பயந் தந்திருள்          கால்தர விந்துவி சும்பிலங் கும்பொழு ...... தொருகோடி 
காய்கதி ரென்றொளிர் செஞ்சிலம் புங்கணை     யாழியு டன்கட கந்துலங் கும்படி          காமனெ டுஞ்சிலை கொண்டடர்ந் தும்பொரு ...... மயலாலே 
வாதுபு ரிந்தவர் செங்கைதந் திங்கித     மாகந டந்தவர் பின்திரிந் துந்தன          மார்பில ழுந்தஅ ணைந்திடுந் துன்பம ...... துழலாதே 
வாசமி குந்தக டம்பமென் கிண்கிணி     மாலைக ரங்கொளும் அன்பர்வந் தன்பொடு          வாழநி தம்புனை யும்பதந் தந்துன ...... தருள்தாராய் 
போதிலு றைந்தருள் கின்றவன் செஞ்சிர     மீதுத டிந்துவி லங்கிடும் புங்கவ          போதவ ளஞ்சிவ சங்கரன் கொண்டிட ...... மொழிவோனே 
பூகமு டன்திகழ் சங்கினங் கொண்டகி     ¡£வம டந்தைபு ரந்தரன் தந்தருள்          பூவைக ருங்குற மின்கலந் தங்குப ...... னிருதோளா 
தீதக மொன்றினர் வஞ்சகந் துஞ்சியி     டாதவர் சங்கரர் தந்ததென் பும்பல          சேர்நிரு தன்குலம் அஞ்சமுன் சென்றடு ...... திறலோனே 
சீதள முந்தும ணந்தயங் கும்பொழில்     சூழ்தர விஞ்சைகள் வந்திறைஞ் சும்பதி          தேவர்ப ணிந்தெழு தென்பரங் குன்றுறை ...... பெருமாளே.

காது அளவும் நெருக்கும் கயல் மீன் போன்ற கண்களை மனத்தில் கொண்டு, அப் பொது மகளிர்பால் மனம் ஒருப்பட்டு, ஐம்புலன்களும் மன்மதன் வீசும் அம்புகளால் மயங்க, மனம் அச்சம் கொண்டு, இருள் நீங்கும்படியான சந்திரன் விண்ணில் ஒளி தரும்பொழுது கோடிக் கணக்காக காய்கின்ற நட்சத்திரங்கள் போல் ஒளி வீசும் செவ்விய சிலம்பும், மோதிரமும், கடகமும் விளங்க, மன்மதன் தனது நீண்ட வில்லைக் கொண்டு நெருங்கி சண்டை செய்வதால் வரும் மயக்கத்தினால், பிணங்கியும் இணங்கியும் இனிமையுடன் நடப்பவரான விலைமாதர்களின் பின் திரிந்து அவர்களது மார்பில் அழுந்த அணையும் துன்பச் செயலில் நான் உழலாமல், வாசனை மிக்க கடம்ப மலரால் ஆன மெல்லிய கிண்கிணி மாலைகளை கைகளில் ஏந்திய அடியார்கள் வந்து அன்புடன் தாம் வாழ வேண்டி நாள் தோறும் (அம்மாலைகளைச்) சூட்டும் திருவடியைத் தந்து உனது திருவருளைத் தாராய். (தாமரை) மலரில் உறைந்தருளும் பிரமனது செவ்விய தலை மீது புடைக்கும்படி குட்டி, அவனை விலங்கிட்ட சிறப்பு உடையவனே, ஞான வளப்பத்தை (பிரணவப் பொருளை) சிவசங்கர மூர்த்தி பெறும்படி உரைத்தவனே, கமுக மரங்கள், விளங்கும் சங்குகள் இவைகளின் அழகைக் கொண்ட கழுத்தை உடைய பெண்ணும், இந்திரன் பெற்றருளியவளும் ஆகிய பூவை போன்ற தேவயானை, பெருமை வாய்ந்த குற மகளாகிய வள்ளிநாயகி ஆகியவர்களின் ஆபரணங்கள் தங்கும்படியான பன்னிரு தோள்களை உடையவனே, தீய உள்ளம் பொருந்தினவர்களும், வஞ்சகம் குறையாதவரும், சிவ பெருமான் (முன்பு வரமாகத்) தந்த செருக்குகள் பல கொண்டவர்களுமாகிய அசுரர் கூட்டம் பயப்படும்படி முன் சென்று அவர்களை அழித்த திறம் வாய்ந்தவனே, குளிர்ச்சி முற்பட்டு, மணம் விளங்கும் சோலைகள் சூழ்ந்ததும், கல்வியில் மிக்கோர் வந்து வணங்குவதுமான ஊர், தேவர்கள் வணங்கி எழுகின்ற அழகிய திருப்பரங் குன்றத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 13 - திருப்பரங்குன்றம்
ராகம் - ஹிந்தோளம் ; தாளம் - அங்கதாளம் - 7 1/2 தகதகிட-2 1/2, தகதிமி-2, தகதிமிதக-3

தந்தனந் தத்தத் ...... தனதான     தந்தனந் தத்தத் ...... தனதான

சந்ததம் பந்தத் ...... தொடராலே     சஞ்சலந் துஞ்சித் ...... திரியாதே 
கந்தனென் றென்றுற் ...... றுனைநாளும்     கண்டுகொண் டன்புற் ...... றிடுவேனோ 
தந்தியின் கொம்பைப் ...... புணர்வோனே     சங்கரன் பங்கிற் ...... சிவைபாலா 
செந்திலங் கண்டிக் ...... கதிர்வேலா     தென்பரங் குன்றிற் ...... பெருமாளே.

எப்பொழுதும் பாசம் என்ற தொடர்பினாலே துயரத்தால் சோர்ந்து திரியாமல், கந்தன் என அடிக்கடி மனதார உன்னை தினமும் உள்ளக் கண்களால் கண்டு தரிசித்து, யான்அன்பு கொள்வேனோ? (ஐராவதம் என்னும்) யானை வளர்த்த கொடி போன்ற தேவயானையை மணம் செய்துகொண்டு சேர்பவனே, சங்கரனின் பக்கத்தில் தங்கிய பார்வதியின் குழந்தாய், திருச்செந்தூரிலும், அழகிய கண்டியிலும் ஒளிவீசும் வேலோடு விளங்குபவனே, அழகிய திருப்பரங்குன்றில் அமர்ந்த பெருமாளே. 

பாடல் 14 - திருப்பரங்குன்றம்
ராகம் - .....; தாளம் - ....

தனதந்தன தந்தன தந்தன     தனதந்தன தந்தன தந்தன          தனதந்தன தந்தன தந்தன ...... தனதான

சருவும்படி வந்தனன் இங்கித     மதனின்றிட அம்புலி யுஞ்சுடு          தழல்கொண்டிட மங்கையர் கண்களின் ...... வசமாகிச் 
சயிலங்கொளு மன்றல்பொ ருந்திய     பொழிலின்பயில் தென்றலும் ஒன்றிய          தடவஞ்சுனை துன்றியெ ழுந்திட ...... திறமாவே 
இரவும்பகல் அந்தியு நின்றிடு     குயில்வந்திசை தெந்தன என்றிட          இருகண்கள்து யின்றிட லின்றியும் ...... அயர்வாகி 
இவணெஞ்சுப தன்பதன் என்றிட     மயல்கொண்டுவ ருந்திய வஞ்சகன்          இனியுன்றன்ம லர்ந்தில கும்பதம் ...... அடைவேனோ 
திருவொன்றிவி ளங்கிய அண்டர்கள்     மனையின்தயிர் உண்டவன் எண்டிசை          திகழும்புகழ் கொண்டவன் வண்டமிழ் ...... பயில்வோர்பின் 
திரிகின்றவன் மஞ்சுநி றம்புனை     பவன்மிஞ்சுதி றங்கொள வென்றடல்          செயதுங்கமு குந்தன்ம கிழ்ந்தருள் ...... மருகோனே 
மருவுங்கடல் துந்திமி யுங்குட     முழவங்கள்கு மின்குமி னென்றிட          வளமொன்றிய செந்திலில் வந்தருள் ...... முருகோனே 
மதியுங்கதி ரும்புய லுந்தின     மறுகும்படி அண்டம்இ லங்கிட          வளர்கின்றப ரங்கிரி வந்தருள் ...... பெருமாளே.

சண்டையிடும் கருத்துடன் வந்து மன்மதன் நிற்க, நிலவும் சுடுகின்ற தீயை தன்னுள் வைத்துக் கொள்ள, விலைமாதர்களின் கண்களில் வசப்பட்டு, மலைச் சாரலில் உள்ள மணம் பொருந்திய சோலைகளில் தவழ்ந்துவரும் தென்றல் காற்றும் அங்குள்ள அகன்ற அழகிய சுனைநீரில் படிந்து வலிவுடனே எழ, இரவும் பகலும் அந்திவேளையும் நின்று நிதானமாக குயில் வந்து இசையைத் தெந்தன என்று பாட, எனது இரண்டு கண்களும் தூக்கம் இல்லாமல் களைத்துப் போய், இங்கே என் மனம் பதை பதைக்க, காம மயக்கம் கொண்டு வருந்திய வஞ்சகனாகிய நான் இனிமேல் உன் மலர்ந்து விளங்கும் திருவடியை அடைவேனோ? செல்வம் பொருந்தி விளங்கிய இடையர்களின் வீடுகளிலிருந்த தயிரை (திருடி) உண்டவனும், எட்டு திசைகளிலும் புகழ் பெற்றவனும், வளமான தமிழைப் பயில்வோர்களுடைய பின்னே திரிகின்றவனும்*, மேக நிறம் கொண்டவனும், மிக்க திறல் கொண்டு (மற்போரில்) வெல்லும் வலிமை வாய்ந்தவனும், வெற்றியும் பரிசுத்தமும் கொண்ட முகுந்தனுமாகிய திருமால் மகிழும் மருகனே, பொருந்திய கடல் அலைகளைப் போல, துந்துமிப் பறையும், குடமுழவு வாத்தியமும் குமின் குமின் என்று ஒலி செய்ய, வளம் பொருந்திய திருச் செந்தூரில் வந்து எழுந்தருளி உள்ள முருகனே, திங்களும், சூரியனும், மேகமும் நாள்தோறும் வானில் செல்வதற்குத் தயங்கும்படி, இவ்வுலகம் விளங்கும்படியாக வானளாவி வளர்கின்ற திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளி அருளுகின்ற பெருமாளே. 
* தமிழ் பயில்வோர் பின் திருமால் சென்றது - திருமழிசை ஆழ்வாரின் சீடனாகிய கணிகண்ணனுக்காக காஞ்சீபுரத்து வரதராஜப் பெருமாள் ஊரை விட்டு ஆழ்வார் பின் சென்ற வரலாற்றைக் குறிக்கும்.

பாடல் 15 - திருப்பரங்குன்றம்
ராகம் - ஆனந்த பைரவி; தாளம் - ஸங்கீர்ண சாபு - 4 1/2 - எடுப்பு - அதீதம் தக-1, திமி-1, தகிட-1 1/2, தக-1

தனத்தத் தந்தனந் தனத்தத் தந்தனந்     தனத்தத் தந்தனந் ......தனதான

தடக்கைப் பங்கயம் கொடைக்குக் கொண்டல்தண்     டமிழ்க்குத் தஞ்சமென் ...... றுலகோரைத் 
தவித்துச் சென்றிரந் துளத்திற் புண்படுந்     தளர்ச்சிப் பம்பரந் ...... தனையூசற் 
கடத்தைத் துன்பமண் சடத்தைத் துஞ்சிடுங்     கலத்தைப் பஞ்சஇந் ...... த்ரியவாழ்வைக் 
கணத்திற் சென்றிடந் திருத்தித் தண்டையங்     கழற்குத் தொண்டுகொண் ...... டருள்வாயே 
படைக்கப் பங்கயன் துடைக்கச் சங்கரன்     புரக்கக் கஞ்சைமன் ...... பணியாகப் 
பணித்துத் தம்பயந் தணித்துச் சந்ததம்     பரத்தைக் கொண்டிடுந் ...... தனிவேலா 
குடக்குத் தென்பரம் பொருப்பிற் றங்குமங்     குலத்திற் கங்கைதன் ...... சிறியோனே 
குறப்பொற் கொம்பைமுன் புனத்திற் செங்கரங்     குவித்துக் கும்பிடும் ...... பெருமாளே.

உன் அகன்ற கை தாமரை போன்றது, கொடை வன்மையில் நீ மேகம் போன்றவன், தமிழ்ப் புலவர்க்கு நீயே புகலிடம் என்று கூறி உலகத்தவரைத் தவிப்புடன் நாடி யாசித்து மனம் நொந்து புண்ணாகி தளர்வுற்றுப் பம்பரம் போன்று சுழல்வேனை, உள்ளிருக்கும் பண்டம் ஊசிப்போன மண் சட்டியை, துன்பம் நிறைந்த மண்ணாலான இந்த உடலை, அழிந்துபோகும் இந்தப் பாண்டத்தை, ஐம்பொறிகளால் ஆட்டிவைக்கப்படும் இந்த வாழ்வை, நொடியில் வந்து என் இதயமாம் இடத்தைத் திருத்தி, வீரக்கழல்கள் அணிந்த நின் அழகிய திருப்பாதங்களுக்கு தொண்டு செய்ய என்னை ஏற்றுக்கொண்டு அருள்வாயாக. படைக்கும் தொழிலைச் செய்வதற்குத் தாமரைமலர் மேவும் பிரமன், அழிக்கும் தொழிலைச் செய்வதற்குச் சங்கரன், காக்கும் தொழிலைச் செய்வதற்குத் தாமரையாள் மணாளன் திருமால் என்று தத்தம் தொழில்களை நியமித்து அளித்து, அவரவர் பயங்களைப் போக்கி, எப்போதும் பராகாசத்தில் மேலான நிலையிலே நிற்கும் ஒப்பற்ற வேலாயுதக் கடவுளே, மதுரைக்கு மேற்கே திருப்பரங்குன்றத்தில் தங்கும், உயர்குல நதியாம் கங்கையின் குழந்தாய், குறக்குலத்து அழகிய கொடியாம் வள்ளியை முன்பு தினைப்புனத்தில் நின் செவ்விய கரங்களைக் கூப்பிக் கும்பிட்ட பெருமாளே. 

பாடல் 16 - திருப்பரங்குன்றம்
ராகம் - ......; தாளம் - ........

தனத்ததந் தந்தத் தத்தன தத்தந்     தனத்ததந் தந்தத் தத்தன தத்தந்          தனத்ததந் தந்தத் தத்தன தத்தந் ...... தனதான

பதித்தசெஞ் சந்தப் பொற்குட நித்தம்     பருந்துயர்ந் தண்டத் திற்றலை முட்டும்          பருப்பதந் தந்தச் செப்பவை ஒக்குந் ...... தனபாரம் 
படப்புயங் கம்பற் கக்குக டுப்பண்     செருக்குவண் டம்பப் பிற்கயல் ஒக்கும்          பருத்தகண் கொண்டைக் கொக்குமி ருட்டென் ...... றிளைஞோர்கள் 
துதித்துமுன் கும்பிட் டுற்றது ரைத்தன்     புவக்கநெஞ் சஞ்சச் சிற்றிடை சுற்றுந்          துகிற்களைந் தின்பத் துர்க்கம் அளிக்கும் ...... கொடியார்பால் 
துவக்குணும் பங்கப் பித்தன வத்தன்     புவிக்குளென் சிந்தைப் புத்திம யக்கந்          துறக்கநின் தண்டைப் பத்மமெ னக்கென் ...... றருள்வாயே 
குதித்துவெண் சங்கத் தைச்சுற வெற்றுங்     கடற்கரந் தஞ்சிப் புக்கஅ ரக்கன்          குடற்சரிந் தெஞ்சக் குத்திவி திர்க்குங் ...... கதிர்வேலா 
குலக்கரும் பின்சொற் றத்தையி பப்பெண்     தனக்குவஞ் சஞ்சொற் பொச்சையி டைக்குங்          குகுக்குகுங் குங்குக் குக்குகு குக்குங் ...... குகுகூகூ 
திதித்திதிந் தித்தித் தித்தியெ னக்கொம்     பதிர்த்துவெண் சண்டக் கட்கம்வி திர்த்துந்          திரட்குவிந் தங்கட் பொட்டெழ வெட்டுங் ...... கொலைவேடர் 
தினைப்புனஞ் சென்றிச் சித்தபெ ணைக்கண்     டுருக்கரந் தங்குக் கிட்டிய ணைத்தொண்          திருப்பரங் குன்றிற் புக்குளி ருக்கும் ...... பெருமாளே.

(மார்பில்) பதிந்துள்ள செவ்விய அழகிய பொற்குடம், நாள் தோறும் பருத்து, உயர்ந்து விண்ணில் தலையை முட்ட வல்ல மலை, (யானையின்) தந்தம், செப்பு ஆகியவைகளை நிகர்க்கும் தன பாரங்கள், படத்தை உடைய பாம்பின் பற்கள் கக்கும் விஷம், பண்களைக் களிப்பில் பாடும் வண்டு, அம்பு, நீரில் உள்ள கயல் மீனை ஒக்கும் பெரிய கண்கள், கூந்தலுக்கு ஒப்பான இருட்டு என்றெல்லாம் இளைஞர்கள் (விலைமாதர்களின்) அங்கங்களைத் துதித்து முன்னதாகக் கும்பிட்டு நடந்த நிகழ்ச்சிகளை உள்ளவாறு அவர்களிடம் சொல்லி, அன்புக் களிப்புடன் உள்ளம் அஞ்ச, சிற்றிடையைச் சுற்றியுள்ள ஆடையை விலக்கி இன்பக் கலக்கத்தைக் கொடுக்கும் கொடியவர்களாகிய வேசிகளிடத்து கட்டுப்பட்டிருக்கும் பாவியாகிய பித்தன், பொய்யன் நான். இப்பூமியில் என்னுடைய மனதிலும், புத்தியிலும் உள்ள மயக்கத்தை விட்டொழிக்க உனது தண்டை அணிந்த தாமரை போன்ற திருவடிகளை எனக்கு என்று தந்து அருள்வாயோ? குதித்து வெண்ணிறச் சங்குகளை சுறா மீன்கள் மோதி எறியும் கடலில் ஒளிந்து பயந்துப் புகுந்த அசுரன் சூரனின் குடல் சரிந்து விழும்படியாகக் குத்தி அசைக்கும் ஒளி வீசும் வேலனே, சிறந்த கரும்பு போன்ற மொழியை உடையவளும், கிளி போன்றவளுமாகிய, (ஐராவதம் என்ற) யானை மகளான தேவயானையிடம் மறைத்த சொல்லுடன் காட்டில், குங்குகுக் குகுங் குங்குக் குக்குகு குக்குங் குகுகூகூ திதித்திதித் திந்தித் தித்தெயென ஊதுக் கொம்புகள் அதிர்ந்து ஒலி செய்ய பளபளக்கும் வலிமை பொருந்திய வாளை வீசி, திரளாகக் குவியும்படி அந்த இடத்திலேயே (பகைவரை) அழிவுற வெட்டும் கொடிய வேடர்களுடைய தினைப் புனத்துக்குப் போய், விரும்பிய பெண்ணாகிய வள்ளியைப் பார்த்து, தன் உண்மையான உருவத்தை மறைத்து, அங்கு நெருங்கிச் சென்று அவளைத் தழுவி, பின்பு ஒளி வீசும் திருப்பரங்குன்றத்தைப் புக்கிடமாகக் கொண்டு அங்கு வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 17 - திருப்பரங்குன்றம்
ராகம் - ...... ; தாளம் -

தனத்தனந் தந்தன தனத்தனந் தந்தன     தனத்தனந் தந்தன ...... தந்ததான

பொருப்புறுங் கொங்கையர் பொருட்கவர்ந் தொன்றிய     பிணக்கிடுஞ் சண்டிகள் ...... வஞ்சமாதர் 
புயற்குழன் றங்கமழ் அறற்குலந் தங்கவிர்     முருக்குவண் செந்துவர் ...... தந்துபோகம் 
அருத்திடுஞ் சிங்கியர் தருக்கிடுஞ் செங்கயல்     அறச்சிவந் தங்கையில் ...... அன்புமேவும் 
அவர்க்குழன் றங்கமும் அறத்தளர்ந் தென்பயன்     அருட்பதம் பங்கயம் ...... அன்புறாதோ 
மிருத்தணும் பங்கயன் அலர்க்கணன் சங்கரர்     விதித்தெணுங் கும்பிடு ...... கந்தவேளே 
மிகுத்திடும் வன்சம ணரைப்பெருந் திண்கழு     மிசைக்கிடுஞ் செந்தமிழ் ...... அங்கவாயா 
பெருக்குதண் சண்பக வனத்திடங் கொங்கொடு     திறற்செழுஞ் சந்தகில் ...... துன்றிநீடு 
தினைப்புனம் பைங்கொடி தனத்துடன் சென்றணை     திருப்பரங் குன்றுறை ...... தம்பிரானே.

மலை போன்ற மார்பினர், பொருளை அபகரித்து அதனால் உண்டாகும் (பண விஷயமாக) பிணக்கம் செய்யும் கொடியவர், வஞ்சகம் மிக்க விலைமாதர்கள், மேகம் போன்ற கூந்தல் சுருண்டுள்ளதாய், அழகியதாய், மணம் வீசுவதாய், கருமணற் கூட்டம் போல தங்கி விளங்கி, முருக்கிதழ் போன்று வளங் கொண்டு, செவ்விய பவளம் போன்ற இதழ்களால் போகத்தைத் தந்து, (கரண்டியால்) ஊட்டுகின்ற விஷம் போன்றவர்கள், வாது செய்து, செவ்விய கயல் மீன் போன்ற கண்கள் மிகச் சிவந்து, அழகிய கைப்பொருள் மீது ஆசை வைத்துள்ள அத்தகைய பொது மகளிர் பால் நான் உழன்று, உடலும் மிகத் தளர்வதால் என்ன பயன்? உனது திருவடித் தாமரை (என் மீது) அன்பு கொள்ளாதோ? இறத்தலோடு* கூடிய பிரமன், மலர்ந்த கண்களை உடைய திருமால், சிவ பெருமான் (இம்மூவரும்) முறைப்படி எப்போதும் வணங்கும் கந்தப் பெருமானே, மிக்கு வந்த, வலிய சமணர்களை பெரிய திண்ணிய கழுவின் மேல் ஏற வைத்த, செந்தமிழ் (ஓதிய) வேதாங்க வாயனாகிய (தேவாரம் பாடிய) திருஞானசம்பந்தனே, பெருகிக் குளிர்ந்துள்ள சண்பகக் காட்டில் வாசனையோடு கூடிய, திண்ணியதாயச் செழித்த சந்தனமும் அகிலும் நெருங்கி வளர்ந்துள்ள தினைப் புனத்தில் பசுங் கொடி போன்ற வள்ளியை மார்புறச் சென்று தழுவுகின்றவனே, திருப்பரங் குன்றத்தில் வீற்றிருக்கின்ற பெருமாளே. 
* இறத்தலோடு தொடர்வது பிறத்தல். பிறவிக்கு இறைவன் பிரமன். எனவே பிரமன் இறத்தலோடும் கூடியுள்ளான்.

பாடல் 18 - திருப்பரங்குன்றம்
ராகம் - ......; தாளம் - .......

தந்தனந் தந்ததன தந்தனந் தந்ததன     தந்தனந் தந்ததன ...... தனதான

மன்றலங் கொந்துமிசை தெந்தனத் தெந்தனென     வண்டினங் கண்டுதொடர் ...... குழல்மாதர் 
மண்டிடுந் தொண்டையமு துண்டுகொண் டன்புமிக     வம்பிடுங் கும்பகன ...... தனமார்பில் 
ஒன்றஅம் பொன்றுவிழி கன்றஅங் கங்குழைய     உந்தியென் கின்றமடு ...... விழுவேனை 
உன்சிலம் புங்கனக தண்டையுங் கிண்கிணியும்     ஒண்கடம் பும்புனையும் ...... அடிசேராய் 
பன்றியங் கொம்புகம டம்புயங் கஞ்சுரர்கள்     பண்டையென் பங்கமணி ...... பவர்சேயே 
பஞ்சரங் கொஞ்சுகிளி வந்துவந் தைந்துகர     பண்டிதன் தம்பியெனும் ...... வயலூரா 
சென்றுமுன் குன்றவர்கள் தந்தபெண் கொண்டுவளர்     செண்பகம் பைம்பொன்மலர் ...... செறிசோலை 
திங்களுஞ் செங்கதிரு மங்குலுந் தங்குமுயர்     தென்பரங் குன்றிலுறை ...... பெருமாளே.

வாசனைபொருந்திய அழகிய பூங்கொத்துக்களின் மீது தெந்தனம் தெந்தனம் என்று ¡£ங்காரம் செய்து கொண்டு வண்டுக் கூட்டங்கள் தேனை உண்ணப்பார்த்து தொடரும்படியான கூந்தலையுடைய பெண்களது நெருக்கமாய் உள்ள கொவ்வைக்கனி போன்ற இதழ் அமிர்தத்தைப் பருகிக் கொண்டு, ஆசை மிகும்படி கச்சணிந்த பெருத்த மார்பில் பொருந்த, அம்பை நிகர்த்த விழிகள் சோர்ந்து போக, சா£ரம் மோகவசத்தால் குழைந்து போக, வயிறு என்னும் மடுவில் விழுகின்ற அடியேனை சிலம்பும், பொன்னால் ஆன தண்டையும், கிண்கிணியையும், அழகிய கடப்ப மலரையும் அணியும் உன் திருவடிகளில் சேர்ப்பாய். பன்றியின் அழகிய கொம்பையும்*, ஆமை ஓட்டையும்**, பாம்பையும், தேவர்களது பழைய எலும்புகளையும் தரிக்கும் *** சிவபிரானின் பாலனே, கூட்டில் இருந்துகொண்டு கொஞ்சுகின்ற கிளிப்பிள்ளைகள் கூட்டின் முகப்பில் மீண்டும் மீண்டும் வந்து ஐங்கரன் விநாயகனாம் ஞான பண்டிதனின் தம்பியே என்று கூறி அழைக்கின்ற, வயலூர் தலத்தில் வாசம் செய்யும் முருகனே, குன்றுகளில் வசிப்பவர்களாகிய வேடுவர்கள் முன்னாளில் கொடுத்த வள்ளிநாயகியாகிய பெண்ணை மணந்து கொண்டு வளர்ந்து ஓங்கிய செண்பக மரங்களின் பசும்பொன்னை ஒத்த மலர்கள் மிகுந்த சோலைகளால் சூழப்பெற்றதும், சந்திரனும், செஞ்சூரியனும், மேகமும் தங்கும்படி உயர்ந்ததும் ஆகிய அழகிய திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளியுள்ள பெருமாளே. 
* விஷ்ணு வராக அவதாரம் செய்து ஹிரண்யாக்ஷனைக் கொன்றபின் தருக்குற்றுத் திரியும்போது, முருகன் வராகத்தை அடக்கி கொம்பைப் பறித்து சிவனிடம் தர, அவர் அதனை மார்பில் அணிந்தார் - வராக புராணம்.
** கூர்மாவதாரம் செய்து மந்தரமலையைத் தாங்கி விஷ்ணு அமிர்தத்தை மோகினியாக வந்து தேவர்களுக்கு விநியோகித்த பின், ஹரிஹரபுத்திரன் ஐயப்பன் அவதரித்தார். பின்னர் கூர்மம் செருக்குற்று உலகத்தையே அழிக்கப் புக, சிவபிரானின் ஆணையால் ஐயப்பன் கூர்மத்தை அடக்கி அதன் ஓட்டைப் பெயர்த்து சிவனிடம் வைக்க அதனை தம் மார்பில் தரித்தார் - கூர்ம புராணம்.
*** பிரளய காலத்தில் சிவபிரான் ஸர்வ ஸம்ஹாரம் செய்தபின் தன் பக்தர்களாகிய பிரம்மாதி தேவர்களின் எலும்புகளையும் எலும்புக் கூட்டையும் 'கங்காளம்' மாலையாக அன்புடன் தரித்தார் - கந்த புராணம்.

பாடல் 19 - திருப்பரங்குன்றம்
ராகம் - ...........; தாளம் - ........

தனத்த தந்தன தனதன தனதன     தனத்த தந்தன தனதன தனதன          தனத்த தந்தன தனதன தனதன ...... தனதான

வடத்தை மிஞ்சிய புளகித வனமுலை     தனைத்தி றந்தெதிர் வருமிளை ஞர்களுயிர்          மயக்கி ஐங்கணை மதனனை ஒருஅரு ...... மையினாலே 
வருத்தி வஞ்சக நினைவொடு மெலமெல     நகைத்து நண்பொடு வருமிரும் எனஉரை          வழுத்தி அங்கவ ரொடுசரு வியுமுடல் ...... தொடுபோதே 
விடத்தை வென்றிடு படைவிழி கொடுமுள     மருட்டி வண்பொருள் கவர்பொழு தினில்மயல்          விருப்பெ னும்படி மடிமிசை யினில்விழு ...... தொழில்தானே 
விளைத்தி டும்பல கணிகையர் தமதுபொய்     மனத்தை நம்பிய சிறியனை வெறியனை          விரைப்ப தந்தனில் அருள்பெற நினைகுவ ...... துளதோதான் 
குடத்தை வென்றிரு கிரியென எழில்தள     தளத்த கொங்கைகள் மணிவடம் அணிசிறு          குறக்க ரும்பின்மெய் துவள்புயன் எனவரு ...... வடிவேலா 
குரைக்க ருங்கடல் திருவணை எனமுனம்     அடைத்தி லங்கையின் அதிபதி நிசிசரர்          குலத்தொ டும்பட ஒருகணை விடுமரி ...... மருகோனே 
திடத்தெ திர்ந்திடும் அசுரர்கள் பொடிபட     அயிற்கொ டும்படை விடுசர வணபவ          திறற்கு கன்குரு பரனென வருமொரு ...... முருகோனே 
செழித்த தண்டலை தொறுமில கியகுட     வளைக்கு லந்தரு தரளமு மிகுமுயர்          திருப்ப ரங்கிரி வளநகர் மருவிய ...... பெருமாளே.

அணிந்துள்ள மணி வடத்தைக் காட்டிலும் மேலோங்கி புளகிதம் கொண்ட அழகிய மார்பகத்தைக் காட்டி, எதிரில் வரும் இளைஞர்களின் உயிரை மயக்கி, ஐந்து மலர்ப் பாணங்களை உடைய மன்மதனை ஒப்பற்ற அருமையான வகையால் வருவித்து, வஞ்சகமான எண்ணத்தோடு மெல்ல மெல்ல சிரித்து, நண்பு காட்டி வாருங்கள், உட்காருங்கள் என்று உபசரித்து உரை பேசி அங்கு அவர்களுடன் கொஞ்சிக் குலாவி உடலைத் தொடும்போது, விஷத்தையும் வெல்லும் படை போன்ற கண்களைக் கொண்டு மனத்தை மயக்கி, வளப்பமான பொருளைக் கவரும் போது, உங்கள் மீது எனக்கு மோகம், விருப்பம் என்னும்படியான ஆசை மொழிகளைக் கூறி மடிமீது விழுகின்ற தொழில்களையே செய்கின்ற பல பொது மாதர்களின் பொய்யான மனத்தை நம்பிய சிறியவனை, பித்துப் பிடித்தவனை, நறுமணம் வீசும் திருவடியில் சேரும்படியான திருவருளைப் பெற நீ நினைக்கும்படியான நல்ல விதி எனக்கு உள்ளதோ, அறியேன். உருவத்தில் குடத்தையும் வென்று, இரண்டு மலைகளைப் போல தளதளக்கும் மார்பகங்கள் மணிவடங்களை அணிந்து, கரும்பு போல் இனிக்கும் இளம் குற மங்கையாகிய வள்ளியின் உடலில் துவளும் புயத்தை உடையவன் என்று வருகின்ற அழகிய வேலனே, ஒலிக்கின்ற கரிய கடலில் அழகிய அணை என்னும்படி முன்பு அதை அடைத்து, இலங்கைக்குத் தலைவனான ராவணன் அரக்கர் கூட்டத்துடன் அழியும்படி ஒப்பற்ற அம்பைச் செலுத்திய (ராமனாகிய) திருமாலின் மருகனே, மனத் திடத்துடன் எதிர்த்து வந்த அசுரர்கள் பொடியாக வேலாகிய உக்கிரமான படையை விட்ட சரவணபவனே, திறமை வாய்ந்த குருபரன் என்னும் பெயருடன் வந்துள்ள ஒப்பற்ற முருகனே, செழிப்புள்ள சோலைகள் தோறும் (கிடந்து) விளங்கும் வளைந்த சங்குகளின் கூட்டங்கள் ஈன்ற முத்துக்கள் மிக்குப் பொலியும் சிறந்த திருப்பரங்குன்றம் என்னும் வளப்பம் உள்ள நகரில் வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 20 - திருப்பரங்குன்றம்
ராகம் - ..... ; தாளம் -

தனத்தனந் தந்த தான     தனத்தனந் தந்த தான          தனத்தனந் தந்த தான ...... தனதான

வரைத்தடங் கொங்கை யாலும்     வளைப்படுஞ் செங்கை யாலும்          மதர்த்திடுங் கெண்டை யாலும் ...... அனைவோரும் 
வடுப்படுந் தொண்டை யாலும்     விரைத்திடுங் கொண்டை யாலும்          மருட்டிடுஞ் சிந்தை மாதர் ...... வசமாகி 
எரிப்படும் பஞ்சு போல     மிகக்கெடுந் தொண்ட னேனும்          இனற்படுந் தொந்த வாரி ...... கரையேற 
இசைத்திடுஞ் சந்த பேதம்     ஒலித்திடுந் தண்டை சூழும்          இணைப்பதம் புண்ட ¡£கம் ...... அருள்வாயே 
சுரர்க்குவஞ் சஞ்செய் சூரன்     இளக்ரவுஞ் சந்த னோடு          துளக்கெழுந் தண்ட கோளம் ...... அளவாகத் 
துரத்தியன் றிந்த்ர லோகம்     அழித்தவன் பொன்று மாறு          சுடப்பருஞ் சண்ட வேலை ...... விடுவோனே 
செருக்கெழுந் தும்பர் சேனை     துளக்கவென் றண்ட மூடு          தெழித்திடுஞ் சங்க பாணி ...... மருகோனே 
தினைப்புனஞ் சென்று லாவு     குறத்தியின் பம்ப ராவு          திருப்பரங் குன்ற மேவு ...... பெருமாளே.

மலை போலப் பரவி அகன்ற மார்பாலும், வளையல் ஒலிக்கும் சிவந்த கரத்தாலும், செழிப்புள்ள கெண்டை மீன் போன்ற கண்களாலும், பலராலும் வடுப்படுத்தப்படும் கொவ்வைக் கனி ஒத்த இதழாலும், மணம் வீசும் கூந்தலாலும் மயக்குகின்ற மனமுடைய விலைமாதர்களின் வசத்தில் பட்டு, தீயில் இடப்பட்ட பஞ்சு போல மிகவும் கெட்டுப் போகின்ற அடியனாகிய நானும் துன்பப்படும் வினைத் தொடர்புள்ள கடலிலிருந்து கரையேற, இசையுடன் கலந்த பல வகையான சந்த ஒலிகளை எழுப்பும் தண்டைகள் சூழ்ந்த உன் திருவடிகளாகிய தாமரைகளை அருள் புரிவாயாக. தேவர்களுக்கு வஞ்சனை செய்த சூரன், இளைய கிரவுஞ்சன் என்னும் அசுரனோடு கலங்கி எழுந்து ஓட, அண்ட கோளம் அளவும் அவர்களைத் துரத்தி, முன்பு இந்திர லோகத்தை அழித்தவனாகிய சூரன் அழிந்து போகும்படி, சுடுகின்றதும் மிகவும் உக்கிரமானதுமான வேலை விட்டவனே, வீம்புடன் போருக்கு எழுந்த தேவர்களின் சேனை கலங்கும்படி முழக்கம் செய்த சங்கேந்திய கையை* உடைய திருமாலின் மருகனே, தினைப் புனத்துக்குப் போய் உலவுகின்ற குறப் பெண் வள்ளியின் இன்பத்தை நாடிப் பின் அவளை வணங்கிய, திருப்பரங் குன்றத்தில் வீற்றிருக்கும், பெருமாளே. 
* தேவர்கள் சேனையை மயங்கச் செய்து சங்க நாதம் முழக்கி பாரிஜாத மரத்தைக் கண்ணன் பூமிக்குக் கொண்டு வந்த வரலாற்றைக் குறிக்கும்.

by Swathi   on 28 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.