LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- அருணகிரிநாதர் நூல்கள்

திருப்புகழ்-பாடல்-[1001 -1050]

பாடல் 1001 - பொதுப்பாடல்கள்
ராகம் - .....; தாளம் - ..........
தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான
இலகி யிருகுழை கிழிகயல் விழியினு
     மிசையி னசைதரு மொழியினு மருவமர்
          இருள்செய் குழலினு மிடையினு நடையினு ...... மநுராக 
இனிமை தருமொரு இதழினு நகையினு
     மிளைய ம்ருகமத தனகுவ டழகினு
          மியலு மயல்கொடு துணிவது பணிவது ...... தணியாதே 
குலவி விரகெனு மளறிடை முழுகிய
     கொடிய நடலைய னடமிட வருபிணி
          குறுகி யிடஎம னிறுதியி லுயிரது ...... கொடுபோநாள் 
குனகி யழுபவர் அயர்பவர் முயல்பவர்
     குதறு முதுபிண மெடுமென வொருபறை
          குணலை யிடஅடு சுடலையில் நடவுத ...... லினிதோதான் 
மலையில் நிகரில தொருமலை தனையுடல்
     மறுகி யலமர அறவுர முடுகிய
          வலிய பெலமிக வுடையவ னடையவு ...... மதிகாய 
மவுலி யொருபது மிருபது கரமுடன்
     மடிய வொருசரம் விடுபவபன் மதகரி
          மடுவில் முறையிட வுதவிய க்ருபைமுகில் ...... மதியாதே 
அலகை யுயிர்முலை யமுதுசெய் தருளிய
     அதுல னிருபத மதுதனி லெழுபுவி
          யடைய அளவிட நெடுகிய அரிதிரு ...... மருகோனே 
அவுண ருடலம தலமர அலைகட
     லறவு மறுகிட வடகுவ டனகிரி
          யடைய இடிபொடி படஅயில் விடவல ...... பெருமாளே.
விளங்குகின்ற காதிலுள்ள குண்டலங்களை கிழித்துத் தாக்கும் கயல் மீன் போன்ற கண்ணிலும், இன்னிசை போல அசைந்து எழும் பேச்சிலும், வாசனை உள்ள இருண்ட கூந்தலிலும், இடுப்பிலும், நடையிலும், காம ஆசையைத் தரும் இன்பம் கொடுக்கும் வாயிதழிலும், சிரிப்பிலும், முதிராத, கஸ்தூரி அணிந்த, மலை போன்ற மார்பகத்தின் அழகிலும், ஏற்படும் மோகத்துடன் நான் துணிந்து ஈடுபட்டு இவ்வேசையருக்குப் பணிவது குறையாமல், பொழுது போக்கி, தந்திரச் செயல்களாகிய சேற்றில் மூழ்கிய பொல்லாத் துன்பத்துக்கு ஆளானவனாகிய என்னிடம், தாண்டவம் இட எழுகின்ற நோய்களெல்லாம் வந்து அணுக, முடிவில் யமன் என் உயிரைக் கொண்டு போகும் அந்த நாளில், அன்புச் சொற்களைச் சொல்லி அழுபவர்களும், சோர்வுற்று இருப்பவர்களும், ஈமச் சடங்குகளைச் செய்ய முயற்சி செய்பவர்களும், (நேரமாகி விட்டது) குலைந்து அழுகிப் போகும் பிணத்தை எடுங்கள் என்று கூற, அப்போது ஈமப் பறை ஒலிக்க, (உடலை எரித்து) அழிக்கின்ற சுடு காட்டில் ஏகுதல் நல்லதாகுமோ? மலைகளுக்குள் தனக்கு ஒப்பில்லாததான ஒரு மேரு மலையை உடல் கலங்கி வேதனைப்பட, மிக்க திடத்தைக் காட்டி எடுக்க முயன்றவனும், வன்மைப் பலத்தை நிரம்ப உடையவனுமான ராவணன் போரில் எதிர்த்து வரவும், அவனுடைய பெருத்ததான உடலும், முடிகள் ஒரு பத்தும் இருபது கைகளுடன் அற்று விழ ஒப்பற்ற அம்பைச் செலுத்தியவனாகிய ராமன், கஜேந்திரன் என்ற யானை மடுவில் (முதலை வாய்ப்பட்டு) அழைத்த போது உதவிய கருணை நிரம்பிய மேக வண்ணன், தன்னை மதிக்காமல் வந்த பெண் பேய் பூதனையின் உயிரை முலைப் பாலுடன் உண்டு போக்கி அருளிய ஒப்பில்லாதவன், தனது இரு திருவடிகளால் ஏழுலகங்கள் யாவையும் அளக்க ஓங்கி வளர்ந்தவனும் ஆகிய திருமாலின் அழகிய மருகனே, அசுரர்களுடைய உடல்கள் வேதனைப்படவும், அலை வீசும் கடல் மிகவும் கலங்கவும், வடக்கே உள்ள மேருமலை போன்ற கிரெளஞ்ச மலை முழுவதும் இடிபட்டுப் பொடியாகவும் வேலாயுதத்தைச் செலுத்திய பெருமாளே. 
பாடல் 1002 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான
கடலை பயறொடு துவரையெ ளவல்பொரி
     சுகியன் வடைகனல் கதலியி னமுதொடு
          கனியு முதுபல கனிவகை நலமிவை ...... யினிதாகக் 
கடல்கொள் புவிமுதல் துளிர்வொடு வளமுற
     அமுது துதிகையில் மனமது களிபெற
          கருணை யுடனளி திருவருள் மகிழ்வுற ...... நெடிதான 
குடகு வயிறினி லடைவிடு மதகரி
     பிறகு வருமொரு முருகசண் முகவென
          குவிய இருகர மலர்விழி புனலொடு ...... பணியாமற் 
கொடிய நெடியன அதிவினை துயர்கொடு
     வறுமை சிறுமையி னலைவுட னரிவையர்
          குழியில் முழுகியு மழுகியு முழல்வகை ...... யொழியாதோ 
நெடிய கடலினில் முடுகியெ வரமுறு
     மறலி வெருவுற ரவிமதி பயமுற
          நிலமு நெறுநெறு நெறுவென வருமொரு ...... கொடிதான 
நிசிசர் கொடுமுடி சடசட சடவென
     பகர கிரிமுடி கிடுகிடு கிடுவென
          நிகரி லயில்வெயி லெழுபசு மையநிற ...... முளதான 
நடன மிடுபரி துரகத மயிலது
     முடுகி கடுமையி லுலகதை வலம்வரு
          நளின பதவர நதிகுமு குமுவென ...... முநிவோரும் 
நறிய மலர்கொடு ஹரஹர ஹரவென
     அமரர் சிறைகெட நறைகமழ் மலர்மிசை
          நணியெ சரவண மதில்வள ரழகிய ...... பெருமாளே.
கடலை, பயறு இவைகளுடன், துவரை, எள், பொரி, சுகியன், வடை, கரும்பு, வாழை இனிய அமுது போன்ற சுவையுடன் பழுத்துள்ள முதிர்ந்த பலவிதமான பழ வகைகள் நல்லபடியாக இவைகளை இன்பத்துடன், கடலால் சூழப்பட்ட பூமியில் உள்ளவர்கள் முதல் யாவரும் தழைத்து வளப்பம் பெறுவதற்காக, அமுதாக தனது துதிக்கையில் மனம் மகிழ்ச்சி பெற கருணை மிகுந்து அள்ளி எடுத்து திருவருள் பாலிக்க, பெரிய குடம் போன்ற வயிற்றினில் அடைக்கின்ற மத யானை போன்ற கணபதியின் பின் தோன்றிய ஒப்பற்ற முருகனே, ஷண்முகனே என்று இரண்டு கைகளும் குவிய, மலர்ந்த கண்களிலிருந்து நீர் பெருக, உன்னைப் பணியாமல், கொடியதும் பெரிதானதுமான மிக்க வினையால் ஏற்படும் துயரத்துடன், வறுமையால் வரும் தாழ்வினால் மனம் அலைச்சல் அடைந்து, விலைமாதர்களின் வஞ்சகப் படுகுழியில் முழுகியும், பாழடைந்தும் திரிகின்ற தன்மை என்னைவிட்டு நீங்காதோ? பெரிய கடல் போல விரைந்து எழுந்து (உயிர்களைக் கவரும்) வரம் பெற்ற யமன் பயப்படவும், சூரியனும் சந்திரனும் பயப்படவும், பூமியும் நெறு நெறு என அதிரவும் போர்க்களத்துக்கு வந்த கொடியர்களான அசுரர்களின் கொடிய தலைகள் சட சட சட என்று அதிர்ந்து வீழவும், சொல்லப்படும் எட்டு மலைகளின் சிகரங்கள் கிடு கிடு என்று அதிர்ச்சி உறவும், உவமை இல்லாத வேலாயுதத்துடன், ஒளி வீசும் பச்சை நிறமுள்ளதும் நடனம் செய்யும் வாகனமான குதிரை போன்ற மயில் மீது ஏறி வேகமாக உக்கிரத்துடன் புவியை வலம் வந்த தாமரை போன்ற திருவடிகளை உடையவனே, ஜீவநதியாகிய கங்கை குமு குமு என்று கொந்தளிக்க, முனிவர்களும் வாசனை மிகுந்த மலர்களோடு ஹர ஹர என்று போற்ற, தேவர்கள் சிறை நீங்க, நறு மணம் வீசும் தாமரை மலர் மீது தங்கியிருந்து சரவணப் பொய்கையில் வளர்ந்த அழகிய பெருமாளே. 
பாடல் 1003 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான
கமல குமிளித முலைமிசை துகிலிடு
     விகட கெருவிக ளசடிகள் கபடிகள்
          கலக மிடுவிழி வலைகொடு தழுவிக ...... ளிளைஞோர்கள் 
கனலி லிடுமெழு கெனநகை யருளிகள்
     அநெக விதமொடு தனியென நடவிகள்
          கமரில் விழுகிடு கெடுவிகள் திருடிகள் ...... தமைநாடி 
அமுத மொழிகொடு தவநிலை யருளிய
     பெரிய குணதர ருரைசெய்த மொழிவகை
          அடைவு நடைபடி பயிலவு முயலவு ...... மறியாத 
அசட னறிவிலி யிழிகுல னிவனென
     இனமு மனிதரு ளனைவரு முரைசெய
          அடிய னிதுபட அரிதினி யொருபொரு ...... ளருள்வாயே 
திமித திமிதிமி டமடம டமவென
     சிகர கரதல டமருக மடிபட
          தெனன தெனதென தெனவென நடைபட ...... முநிவோர்கள் 
சிவமி லுருகியு மரகர வெனவதி
     பரத பரிபுர மலரடி தொழஅநு
          தினமு நடமிடு பவரிட முறைபவள் ...... தருசேயே 
குமர சரவண பவதிற லுதவிய
     தரும நிகரொடு புலமையு மழகிய
          குழக குருபர னெனவொரு மயில்மிசை ...... வருவோனே 
குறவ ரிடுதினை வனமிசை யிதணிடை
     மலையு மரையொடு பசலைகொள் வளர்முலை
          குலவு குறமக ளழகொடு தழுவிய ...... பெருமாளே.
தாமரையின் மொக்குப் போல புடைத்தெழுந்த மார்பின் மீது மேலாடையை எடுப்பாக அணியும் மிகுந்த கர்வம் பிடித்தவர்கள், மூடர்கள், வஞ்சகர்கள், கலகத்தை விளைவிக்கும் கண்ணாகிய வலையை வீசித் தழுவுபவர்கள், வாலிபர்களை நெருப்பில் இட்ட மெழுகைப் போல உருகச்செய்து சிரிப்பவர்கள், பலவிதமான வழிகளில், இணை இல்லாத வகையில் நடை நடப்பவர்கள், படுகுழிக்குள் விழும்படிச் செய்யும் கேடு விளைவிப்பவர்கள், திருட்டுக் குணம் உடையவர்கள் ஆகிய விலைமகளிரைத் தேடிச் சென்றவன் நான். அமுதம் போன்ற சொற்களால் (எனக்குத்) தவ நிலையைத் தந்து அருளிய பெரிய குணவானாகிய தவப்பெரியார்* உபதேசித்த மொழியின் படி தகுதியான நடை முறையை அனுஷ்டிக்கவும், முயற்சி செய்யவும் அறியாத முட்டாள், அறிவில்லாதவன், இழி குலத்தைச் சேர்ந்தவன் இவன் என்று சுற்றத்தார்களும், பிற மனிதர்கள் யாவரும் இழிவாய்ப் பேச, அடியேன் அத்தகைய பேச்சில் படுதல் முடியாது. இனிமேல் ஒப்பற்ற ஞானப் பொருளை நீ அருள் புரிவாயாக. திமித திமிதிமி டமடம டமவென்ற ஒலியுடன் உயரப் பிடித்த கையில் உள்ள உடுக்கை அடிபடவும், தெனன தெனதென என்று நிகழ்ச்சிகள் நிகழவும், முனிவர்கள் சிவத் தியானத்தில் உருகியும், ஹர ஹர என்று ஒலி எழுப்பியும், சிறப்பான பரத சாஸ்திர முறையில் சிலம்பணிந்த மலர் போன்ற திருவடிகளை வணங்கவும், நாள்தோறும் நடனம் செய்யும் சிவபெருமானின் இடது பாகத்தில் வீற்றிருக்கும் பார்வதி தேவி பெற்ற குழந்தையே, குமரனே, சரவணபவனே, ஞான வலிமையைத் தந்த தரும மூர்த்தியே, ஒளியும், புலமையும் அழகோடு விளங்கும் இளைஞனே, குருபரனே, என்று அனைவரும் போற்றும்படி ஒப்பற்ற மயில் மீது வருபவனே, குறவர்கள் பயிரிட்ட தினைப்புனத்தில் பரண்மீது நின்று, இடையோடு போர் செய்யும் பசலை** நிறம் கொண்டு எழுந்த மார்பகம் விளங்கும் குற மகளான வள்ளியை அழகு பெறத் தழுவிய பெருமாளே. 
* அருணகிரியாரின் தவவலிமையை உணர்ந்த அருணாசலேசுரர் தவப் பெரியார் போலத் தோன்றி, அறுமுகக் கடவுளைத் தியானிக்கவும் என்று உபதேசம் செய்தார். இதைப் பொருட்படுத்தாத அருணகிரியார் சில காலம் வீணாக்கினார். ஊரார் வசவுக்கும் உள்ளானார். பின்னர் வருந்தினார்.** தலைவர் பிரிவதால் ஏற்படும் விரக தாபத்தால் உண்டாகும் நிற வேறுபாடு.
பாடல் 1004 - பொதுப்பாடல்கள் 
ராகம் - பாகேஸ்ரீ 
தாளம் - அங்கதாளம் - 7 1/2 
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான
தசையு முதிரமு நிணமொடு செருமிய
     கரும கிருமிக ளொழுகிய பழகிய
          சடல வுடல்கடை சுடலையி லிடுசிறு ...... குடில்பேணுஞ் 
சகல கருமிகள் சருவிய சமயிகள்
     சரியை கிரியைகள் தவமெனு மவர்சிலர்
          சவலை யறிவினர் நெறியினை விடஇனி ...... யடியேனுக் 
கிசைய இதுபொரு ளெனஅறி வுறவொரு
     வசன முறஇரு வினையற மலமற
          இரவு பகலற எனதற நினதற ...... அநுபூதி 
இனிமை தருமொரு தனிமையை மறைகளின்
     இறுதி யறுதியி டவரிய பெறுதியை
          இருமை யொருமையில் பெருமையை வெளிபட ...... மொழிவாயே 
அசல குலபதி தருமொரு திருமகள்
     அமலை விமலைக ளெழுவரும் வழிபட
          அருளி அருணையி லுறைதரு மிறையவ ...... ளபிராமி 
அநகை அநுபவை அநுதயை அபிநவை
     அதல முதலெழு தலமிவை முறைமுறை
          அடைய அருளிய பழையவ ளருளிய ...... சிறியோனே 
வசுவ பசுபதி மகிழ்தர வொருமொழி
     மவுன மருளிய மகிமையு மிமையவர்
          மரபில் வனிதையும் வனசரர் புதல்வியும் ...... வடிவேலும் 
மயிலு மியலறி புலமையு முபநிட
     மதுர கவிதையும் விதரண கருணையும்
          வடிவு மிளமையும் வளமையு மழகிய ...... பெருமாளே.
சதை, இரத்தம், மாமிசம் ஆகியவை நெருங்கியுள்ள, செயல்கள் நிறைந்துள்ள புழுக்கள் இருந்து பழகும் அறிவில்லாத ஜடப்பொருளாகிய உடல், இறுதியில், சுடு காட்டில் இடப்படுகின்ற சிறிய வீடு, (இதைப்) போற்றி வளர்க்கும் (சாத்திர முறைப்படி) அனைத்துக் கிரியைகளையும் செய்பவர்கள், போராடுகின்ற சமய வாதிகள், சரியை, கிரியை, தவம் என்று சொல்லும் சிலர், மனக் குழப்பம் உள்ள அறிவில்லாதவர்கள் ஆகியோர் கொண்டுள்ள மார்க்கத்தை* நான் விட்டொழிக்க, இனிமேல் அடியவனாகிய எனக்கு இதுதான் ஞானப் பொருள் என்று என் மனதில் படும்படி, ஒப்பற்ற உபதேசத்தை நான் பெறவும், நல்வினை, தீவினை எனப்படும் இருமைகள் நீங்கவும், எனது (ஆணவம், கன்மம், மாயை என்ற) மும்மலங்களும் நீங்கவும், (ஆன்மாவின்) கேவல சகல நிலைகள் நீங்கவும், என்னுடைய மமகாரம் ஒழியவும், உன்னுடைய துவித நிலை (அதாவது நீ வேறு, நான் வேறு என்ற தன்மை) நீங்கவும், அனுபவ உண்மையை, இன்பத்தைத் தருகின்ற ஒப்பற்ற தனி நிலையை, வேதங்களின் முடிவான பொருள்களும் முடிவு செய்து கூறுதற்கு அரிதான பேற்றினை, சக்தி, சிவம் என்னும் இரண்டு பேதங்களின் ஒன்றான தன்மையின் பெருமை விளங்க அடியேனுக்கு வெளிப்படுத்தும்படி உபதேசித்து அருள்வாயாக. மலைகளுள் சிறந்த இமய மலை அரசன் ஈன்ற ஒப்பற்ற அழகிய பார்வதி, களங்கம் அற்றவள், தூய்மையான சப்த மாதர்கள்** ஏழு பேரும் (தன்னை) வணங்க அருள் செய்து திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் தேவி, அழகி, பாவம் அற்றவள், ஞான அனுபவம் உடையவள், காருண்யம் மிக்கவள், புதுமையானவள், அதலம் முதலான ஏழு உலகங்களுக்கும் முறைப்படி முற்றிலுமாக அருள் செய்த பழமை வாய்ந்தவள் ஆகிய உமாதேவி பெற்றருளிய குழந்தையே, அக்கினி சொரூபியாகிய சிவ பெருமான் மகிழும்படி ஒப்பற்ற உபதேச மொழியான மவுன உபதேசத்தை அவருக்கு அருளிய விசேஷப் பெருமையும், தேவர்கள் குலத்தில் வந்த மங்கை தேவயானையும், வேடர் குலப் பெண்ணாகிய வள்ளியும், கூர்மையான வேலும், மயிலும், இயற்றமிழில் வல்ல புலமையும், உபநிஷதக் கருத்துக்கள் அடங்கிய தேவாரமும், கொடைத் திறம் நிறைந்த உனது கருணையும், உனது வடிவமும், இளமையும், செழுமையும் சிறந்து விளங்கும் அழகுமிக்க பெருமாளே. 
* 4 பக்தி மார்க்கங்கள் பின்வருமாறு:1. சரியை: திருக்கோயிலில் அலகு இடுதல், மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம் வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல், இறைவனை வாழ்த்துதல், திருவேடம் கண்டு பணிதல். இது 'தாத மார்க்கம் - சாலோகம்'.2. கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்தியக் காரியம் செய்தல். இது 'புத்ர மார்க்கம் - சாமீபம்'.3. யோகம்: புலன்களை அடக்கிப் பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி, முழு ஜோதியை நினைத்திருத்தல். இது 'சக மார்க்கம் (தோழ நெறி) - சாரூபம்'.4. ஞானம்: புறத் தொழில் அகத் தொழில் இன்றி, அறிவு மாத்திரத்தாலே செய்யும் வழிபாடு ஞானம். இது 'சன்மார்க்கம் - சாயுஜ்யம்'. சிவஞான சித்தியார் சூத்திரம். ** சப்த மாதாக்கள்:அபிராமி, மகேசுவரி, கெளமாரி, நாராயணி, வாராகி, இந்திராணி, காளி.
பாடல் 1005 - பொதுப்பாடல்கள் 
ராகம் - காம்போதி 
தாளம் - அங்கதாளம் - 7 1/2 
- எடுப்பு - 1/2 அக்ஷரம் தள்ளி 
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான
நெடிய வடகுவ டிடியவு மெழுகிரி
     நெறுநெ றெனநெரி யவுமுது பணிபதி
          நிபிட முடிகிழி யவுநில மதிரவும் ...... விளையாடும் 
நிகரில் கலபியும் ரவியுமிழ் துவசமும்
     நினது கருணையு முறைதரு பெருமையும்
          நிறமு மிளமையும் வளமையு மிருசர ...... ணமும்நீப 
முடியு மபிநவ வனசரர் கொடியிடை
     தளர வளர்வன ம்ருகமத பரிமள
          முகுள புளகித தனகிரி தழுவிய ...... திரடோளும் 
மொகுமொ கெனமது கரமுரல் குரவணி
     முருக னறுமுக னெனவரு வனபெயர்
          முழுது மியல்கொடு பழுதற மொழிவது ...... மொருநாளே 
கொடிய படுகொலை நிசிசர ருரமொடு
     குமுகு மெனவிசை யுடனிசை பெறமிகு
          குருதி நதிவித சதியொடு குதிகொள ...... விதியோடக் 
குமுறு கடல்குடல் கிழிபட வடுமர
     மொளுமொ ளெனஅடி யொடலறி விழவுயர்
          குருகு பெயரிய வரைதொளை படவிடு ...... சுடர்வேலா 
இடியு முனைமலி குலிசமு மிலகிடு
     கவள தவளவி கடதட கனகட
          இபமு மிரணிய தரணியு முடையதொர் ...... தனியானைக் 
கிறைவ குருபர சரவண வெகுமுக
     ககன புனிதையும் வனிதைய ரறுவரும்
          எனது மகவென வுமைதரு மிமையவர் ...... பெருமாளே.
நீண்டதும், வடக்கே உள்ளதுமான மேரு மலை இடிபட்டுப் பொடிபடவும், (சூரனின் நாட்டைச் சுற்றியிருந்த) ஏழு மலைகளும் நெறு நெறு என்று நெரிவுறவும், முதுமை வாய்ந்ததும், பாம்புகளுக்குத் தலைவனும் ஆகிய ஆதிசேஷனது நெருங்கிய பணா முடிகள் கிழிபடவும், பூமி அதிரவும் விளையாடுகின்ற ஒப்பில்லாத மயிலும், சூரியனைத் தனது கூவலினால் (தினமும்) உமிழ்ந்தளிக்கும்* சேவல் அமைந்த கொடியும், உன்னுடைய கருணையும், உன்னிடம் நிலைத்து விளங்கும் பெருமையும், உன் செந்நிறமும், இளமையும், வளமையும், இரண்டு திருவடிகளும், கடம்பமாலை அணிந்த திருமுடிகளும், புதுமை நிறைந்த வேடர்களின் மகளாம் வள்ளியின் கொடி போன்ற இடையானது தளர்வுறும்படி வளர்கின்ற, கஸ்தூரி நறுமணம் கமழ்கின்ற, மொட்டுப் போல் குவிந்து பூரித்துள்ள மலை போன்ற மார்பகங்களைத் தழுவிய திரண்ட தோள்களும், மொகுமொகுவென்று வண்டுகள் ஒலிக்கின்ற குரா மலர் மாலையை அணியும் முருகன், ஆறுமுகன் என்று வரும் உன் திருநாமங்கள் யாவையும், இயல் தமிழில் அமைத்து, குற்றமறப் பாடி நான் ஓதும் ஒரு நாள் கிடைக்குமோ? கொடுமையான படுகொலைகளைச் செய்யும் அசுரர்களது மார்பில் குமுகும் என்னும் ஒலி எழும்படி வேகத்துடன் தாக்க, நிரம்ப இரத்தம் நதி வெள்ளம் போல் தாளத்தோடு குதித்துப் பாயவும், பிரமன் அஞ்சி ஓடவும், கலங்கி ஒலிக்கும் கடலின் நடுப்பாகங்கள் கிழிபடவும், பிஞ்சுகளுடன் கூடிய மாமரம் (சூரன்) மொளுமொளுவென்று அடிப்பாகத்திலிருந்து அலறி விழவும், உயர்ந்து வளர்ந்த பறவையின் பெயர் கொண்ட கிரெளஞ்ச மலை தொளைபட்டு அழியவும், ஒளிபடைத்த வேலைச் செலுத்தும் வேலனே. இடியும், கூர்மை மிக்க வஜ்ராயுதமும் (இவளுக்கு ஆயுதங்களாக) விளங்குபவை, கவளமாக ஊண் உண்பதும், வெண்ணிறமானதும், அழகுள்ளதும், பரந்ததும், மதச் சுவட்டினின்று மிகுந்த மதநீர் பொழியும் ஐராவதம் என்னும் வெள்ளை யானையும், பொன்னுலகமும் தனக்குச் சொந்தமாக உள்ள ஒப்பற்ற பெண்ணாம் தேவயானைக்குத் தலைவனே, குருபரனே, சரவணனே, பல முகங்களாய்ப் பரந்து வரும் ஆகாய கங்கையும், கார்த்திகைப் பெண்கள் அறுவரும், எங்கள் குழந்தை என்று உரிமை பாராட்டும்படி பார்வதி பெற்றெடுத்த தேவர்கள் பெருமாளே. 
* சேவல் வாய்விட்டுக் கூவுவவதால் சூரியன் உதிப்பது புலவர் கற்பனையில் சேவல் சூரியனை உமிழ்வதாக உள்ளது.
பாடல் 1006 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ஸஹானா 
தாளம் - அங்கதாளம் - 7 1/2 
- எடுப்பு - 1/2 தள்ளி 
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான
பகிர நினைவொரு தினையள விலுமிலி
     கருணை யிலியுன தருணையொ டுதணியல்
          பழநி மலைகுரு மலைபணி மலைபல ...... மலைபாடிப் 
பரவு மிடறிலி படிறுகொ டிடறுசொல்
     பழகி யழகிலி குலமிலி நலமிலி
          பதிமை யிலிபவு ஷதுமிலி மகிமையி ...... லிகுலாலன் 
திகிரி வருமொரு செலவினி லெழுபது
     செலவு வருமன பவுரிகொ டலமரு
          திருக னுருகுத லழுகுதல் தொழுகுதல் ...... நினையாத 
திமிர னியல்பிலி யருளிலி பொருளிலி
     திருடன் மதியிலி கதியிலி விதியிலி
          செயலி லுணர்விலி சிவபத மடைவது ...... மொருநாளே 
மகர சலநிதி முறையிட நிசிசரன்
     மகுட மொருபது மிருபது திரள்புய
          வரையு மறவொரு கணைதெரி புயல்குரு ...... ந்ருபதூதன் 
மடுவில் மதகரி முதலென வுதவிய
     வரத னிருதிறல் மருதொடு பொருதவன்
          மதலை குதலையின் மறைமொழி யிகழிர ...... ணியனாகம் 
உகிரி னுதிகொடு வகிருமொ ரடலரி
     திகிரி தரமர கதகிரி யெரியுமிழ்
          உரக சுடிகையில் நடநவி லரிதிரு ...... மருகோனே 
உருகு மடியவ ரிருவினை யிருள்பொரு
     முதய தினகர இமகரன் வலம்வரும்
          உலக முழுதொரு நொடியினில் வலம்வரு ...... பெருமாளே.
மற்றவரோடு பகிர்ந்து உண்ணும் நினைவு ஒரு தினையளவும் இல்லாதவன் யான், இரக்கமே இல்லாதவன் யான், உனது திருத்தலங்களாகிய திருவண்ணாமலை, திருத்தணிகை, பழநிமலை, சுவாமிமலை, திருச்செங்கோடு, மற்றும் பல மலைகளைப் பாடி போற்றுகின்ற திறம் இல்லாதவன் யான், வஞ்சனையும் மாறுபாடும் நிறைந்த பேச்சையே பேசப் பழகியவன் யான், அழகற்றவன் யான், நற்குலம் அற்றவன் யான், நற்குணம் அற்றவன் யான், பக்தி இல்லாதவன் யான், பெருந்தன்மை இல்லாதவன் யான், எவ்விதப் பெருமையும் இல்லாதவன் யான், குயவனுடைய சக்கரம் சுழலும் ஒரு சுழற்சி வேகத்திற்குள் எழுபது சுற்று வரும் மனச் சுழற்சி கொண்டு அலை பாய்ந்து வேதனைப்படும் கோணல் புத்தி உடையவன் யான், உள்ளம் உருகல், வாய்விட்டு அழுதல், உடல் வணங்குதல் இம்மூன்றின் நினைப்பு கிடையாத ஆணவத் திமிர் உள்ளவன் யான், நல்ல தன்மை அற்றவன் யான், அருளற்றவன் யான், பொருளற்றவன் யான், திருட்டுப்புத்தி உள்ளவன் யான், அறிவில்லாதவன் யான், நற்கதி இல்லாதவன் யான், தலை எழுத்தும் நன்றாக இல்லாதவன் யான், நற்செய்கைகள் செய்யும் உணர்ச்சி இல்லாதவன் யான், இத்தகைய யான் சிவபதம் அடையக் கூடிய ஒரு நாளும் உண்டோ? (இதன் பிறகு திருமாலைப் பற்றிய விவரமான வர்ணனை வருகிறது) மகர மீன்கள் உள்ள கடல் (அம்பின் வேகம் தாங்காமல்) ஓலமிட, அரக்கன் ராவணனின் பத்து கி¡£டங்களும் இருபது திண்ணிய புயமலைகளும் அற்றுப் போய் கீழே விழுமாறு ஒரு பாணத்தைத் தெரிந்து செலுத்திய மேகவண்ண ராமனும், குரு நாட்டைச் சேர்ந்த மன்னர்களாகிய பாண்டவர்க்குத் தூதனாகச் சென்ற கண்ணனும், தடாகத்தில் மதயானை கஜேந்திரன்ஆதிமூலமே என ஓலமிட வந்துதவிய வரதராஜனும், இரண்டு திண்மையான மருத மரங்களைச் சாடி முறித்த கண்ணனும், குழந்தை பிரகலாதனது குதலைச் சொற்களாக வந்த ஓம் நமோ நாராயணாய என்னும் வேதமொழியினை இகழ்ந்த இரணியனது உடலை நகத்தின் நுனி கொண்டு பிளந்த ஒப்பற்ற வலிமை வாய்ந்த நரசிம்ம மூர்த்தியும் சக்ராயுதத்தை ஏந்தியவனும், மரகதப் பச்சை மாமலைபோல் மேனியை உடையவனும், நெருப்பைக் கக்குகின்ற காளிங்கன் என்ற பாம்பின் தலையுச்சியில் நடனம் செய்த கண்ணனும் ஆகிய விஷ்ணு மூர்த்தி திருமாலின் அழகிய மருமகனே, உள்ளம் உருகும் அடியாரின் நல்வினை, தீவினை ஆகிய இருவினை இருளை விலக்க உதயமாகும் ஞான சூரியனே, பனிக்கிரணங்கள் உடைய சந்திரன் சுற்றி வருகின்ற இந்த உலகத்தை ஒரே நொடியில் சுற்றிவந்த பெருமாளே. 
பாடல் 1007 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான
முருகு செறிகுழ லவிழ்தர முகமதி
     முடிய வெயர்வர முதுதிரை யமுதன
          மொழிகள் பதறிட வளைகல கலவென ...... அணைபோக 
முலையின் மிசையிடு வடமுடி யறஇடை
     முறியு மெனஇரு பரிபுர மலறிட
          முகுள அலரிள நிலவெழ இலவிதழ் ...... பருகாநின் 
றுருகி யுளமுட லுடலொடு செருகிட
     வுயிரு மெனதுயி ரெனமிக வுறவுசெய்
          துதவு மடமக ளிர்களொடு மமளியி ...... லநுராக 
உததி யதனிடை விழுகினு மெழுகினும்
     உழலு கினுமுன தடியிணை எனதுயி
          ருதவி யெனவுனை நினைவது மொழிவது ...... மறவேனே 
எருவை யொடுகொடி கெருடனும் வெளிசிறி
     திடமு மிலையென வுலவிட அலகையின்
          இனமும் நிணமுண எழுகுறள் களுமிய ...... லிசைபாட 
இகலி முதுகள மினமிசை யொடுதனி
     யிரண பயிரவி பதயுக மிகுநட
          மிடவு மிகவெதி ரெதிரெதி ரொருதனு ...... விருகாலும் 
வரிசை யதனுடன் வளைதர வொருபது
     மகுட மிருபது புயமுடன் மடிபட
          வலியி னொருகணை விடுகர முதலரி ...... நெடுமாயன் 
மருக குருபர சரவண மதில்வரு
     மகிப சுரபதி பதிபெற அவுணர்கள்
          மடிய இயல்கொளு மயில்மிசை வரவல ...... பெருமாளே.
நறுமணம் நெருங்கிய கூந்தல் அவிழவும், சந்திரனை ஒத்த முகம் முழுவதும் வியர்வு எழவும், பழமையான (பாற்)கடலில் பிறந்த அமுதம் போன்ற பேச்சு குழற, (கையில் அணிந்த) வளையல்கள் கல் கல் என்று ஒலிக்க, போக இன்பத்துக்கு பாலமான மார்பகத்தின் மேல் அணிந்துள்ள மாலைகள் முடிச்சற்று விழவும், இடை முறிபடும் என்று சொல்லும்படி, (காலில் அணிந்த) இரண்டு சிலம்புகளும் ஓலமிட்டு அலறவும், மலரும் தன்மையுள்ள மலர்களின் இடையே இள நிலவின் ஒளியைப் பற்கள் வீச, இலவம் பூவைப்போல் சிவந்த வாயிதழ் ஊறலை உண்டு நின்று மனம் உருகி, உடலும் உடலும் ஒன்றோடுன்று பொருந்த, (அம்மாதர்களின்) உயிரும் என்னுயிர் போலவே மிகவும் உறவு கொண்டாடும்படி உதவி செய்கின்ற அழகிய பெண்களுடன் படுக்கையில் காம இச்சையாகிய கடலிடையே வீழ்ந்தாலும், மூழ்கி எழுந்தாலும், அதிலேயே சுழன்றாலும், உனது திருவடிகள் இரண்டும் என் உயிருக்கு உற்ற துணை எனக் கருதி (நான்) உன்னை நினைப்பதையும் போற்றுவதையும் மறக்கமாட்டேன். கழுகுடனே, காக்கையும் கருடனும் ஆகாயத்தில் வெற்றிடம் கொஞ்சமும் இல்லை என்னும்படி நெருங்கி உலவ, பேய்களின் கூட்டங்களும், மாமிசங்களை போர்க்களத்தில் உண்ண அங்கு வந்துள்ள குட்டி வேதாளங்களும் இயல் தமிழ், இசைத் தமிழ்ப் பாடல்களைப் பாட, மாறுபட்டு எதிர்க்கும் முற்றிய போர்க்களத்தில் சுற்றமாகிய கணங்களின் இசைப் பாட்டுடன், தனிச்சிறப்புள்ள ரண பயிரவியின் இரண்டு பாதங்களும் மிக்க நடனத்தைச் செய்யவும், மிகவும் எதிருக்கு எதிராக (ராவணனுக்கு) நேரே நின்று, ஒப்பற்ற வில்லின் இரண்டு முனைகளும் முறைப்படி (கோதண்டத்தை) வளைத்து, (ராவணனது) பத்துத் தலைகளும் இருபது புயங்களுடன் மடிந்து விழ வலிமை வாய்ந்த ஒப்பற்ற அம்பைச் செலுத்திய கைகளை உடைய முதல்வனாகிய திருமாலாம் நீண்ட மாயவனுடைய மருகனே, குருபரனே, சரவண மடுவில் தோன்றிய பெருமையாளனே, தேவர்களின் தலைவனாகிய இந்திரன் (அவனுடைய) பொன்னுலகைப் பெறவும், அசுரர்கள் இறக்கவும், தகுதி வாய்ந்த மயிலின் மேல் ஏற வரவல்ல பெருமாளே. 
பாடல் 1008 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனன தானன தனதன தனதன
     தனன தானன தனதன தனதன
          தனன தானன தனதன தனதன ...... தனதான
இலகு வேலெனு மிருவினை விழிகளும்
     எழுதொ ணாதெனு மிருதன கிரிகளும்
          இசையி னால்வசை பொசிதரு மொழிகளு ...... மெதிர்வேகொண் 
டெதிரி லாவதி பலமுடை யிளைஞரெ
     னினிய மாவினை யிருளெனும் வலைகொடு
          இடைவி டாதெறு நடுவனு மெனவளை ...... மடவார்தம் 
கலவி மால்கொடு கலைகளு மறிவொடு
     கருதொ ணாதென முனிவுற மருள்கொடு
          கரையி லாவிதி யெனுமொரு கடலிடை ...... கவிழாதே 
கருணை வானவர் தொழுதெழு மயிலுறை
     குமர கானவர் சிறுமியொ டுருகிய
          கமல தாளிணை கனவிலு நினைவுற ...... அருள்தாராய் 
பலகை யோடொரு பதுசிர மறஎறி
     பகழி யானர வணைமிசை துயில்தரு
          பரமன் மால்படி யளவிடு மரிதிரு ...... மருகோனே 
பழுதி லாமன முடையவர் மலர்கொடு
     பரவ மால்விடை மிசையுறை பவரொடு
          பரம ஞானமு மிதுவென வுரைசெய்த ...... பெரியோனே 
அலகை காளிகள் நடமிட அலைகட
     லதனில் நீள்குடல் நிணமலை பிணமலை
          அசுரர் மார்பக மளறது படவிடு ...... மயில்வேலா 
அரிய பாவல ருரைசெய அருள்புரி
     முருக ஆறிரு புயஇய லிசையுடன்
          அழகு மாண்மையு மிலகிய சரவண ...... பெருமாளே.
விளங்குகின்ற வேல் போன்றதும், பெரிய வினைகள் விளைவதற்குக் காரணமானதுமான கண்களும், படத்தில் எழுதிக்காட்ட முடியாது என்னும்படி உள்ள இரண்டு மலை போன்ற மார்பகங்களும், ஓசையுடனே பேசப்படுகின்ற பழிப்புச் சொற்கள் வெளி வரும் பேச்சுக்களும், இவைகளின் சந்திப்பால் இணையற்ற மிக்க ஆற்றல் உடைய இளைஞர்கள் என்கின்ற இன்பம் கொண்ட விலங்குகளை அவர்களுடைய அஞ்ஞானம் என்ற வலையில் மாட்டி ஓய்வில்லாமல் கொல்லுகின்ற யமன் என்று சொல்லும்படி வளையல்கள் அணிந்த விலைமாதர்களின் புணர்ச்சியில் ஆசை கொண்டு, கலை நூல்களை அறிவு கொண்டு நினைக்கவும் முடியாது என்னும்படியாக வெறுத்து விலக்க, மயக்க உணர்ச்சியால் கரை என்பதே இல்லாத விதி என்கின்ற ஒரு கடல் நடுவில் நான் கவிழ்ந்து போகாமல், கருணை மிகுந்த தேவர்கள் வணங்கி எழும் மயிலை வாகனமாகக் கொண்ட குமரனே, வேட்டுவச் சிறுமியாகிய வள்ளியின் பொருட்டு மனம் உருகி நடந்த பாத கமலத்தை உடையவனே, உனது திருவடி இணைகளை கனவிலும் நான் நினைக்கும்படி அருள் புரிவாயாக. (ராவணனின்) பல கைகளுடன் ஒப்பற்ற பத்துத் தலைகளும் அற்று விழும்படி செலுத்திய அம்பை உடையவன், (ஆதிசேஷனாம்) பாம்பணையின் மேல் துயிலும் மேலோனாகிய மாயோன், பூமியை அளந்த திருமாலின் மருகனே, குற்றமில்லாத மனத்தை உடைய அடியார்கள் மலர்களைக் கொண்டு போற்ற, பெருமை வாய்ந்த ரிஷப வாகனத்தின் மீது வீற்றிருக்கும் சிவபெருமானுக்கு மேலான ஞானப் பொருள் இதுதான் என்று உபதேசம் செய்த பெரியோனே, பேய்களும் காளிகளும் மகிழ்ந்து கூத்தாட, அலை வீசும் கடலில் நீண்ட குடல்களும், மாமிச மலைகளும், பிண மலைகளும், அசுரர்களின் மார்பிடங்களும் ரத்தச் சேறுபட்டு அழியும்படியாகச் செலுத்திய கூரிய வேலாயுதனே, அருமை வாய்ந்த புலவரான நக்கீரர் உன்னைப் பாடி (திருமுருகாற்றுப்படையால்) புகழ அருள் புரிந்த முருகனே, பன்னிரண்டு திருப்புயங்களை இயற்றமிழும், இசைத் தமிழும், அழகும், ஆண்மையும் அலங்கரிக்க விளங்குகின்றவனே, சரவண மடுவில் தோன்றிய பெருமாளே. 
பாடல் 1009 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனன தானன தனதன தனதன
     தனன தானன தனதன தனதன
          தனன தானன தனதன தனதன ...... தனதான
முருகு லாவிய குழலினு நிழலினும்
     அருவ மாகிய இடையினு நடையினு
          முளரி போலுநல் விழியினு மொழியினு ...... மடமாதர் 
முனிவி லாநகை வலையினு நிலையினும்
     இறுக வாரிடு மலையெனு முலையினு
          முடிவி லாததொர் கொடுவிட மடுவித ...... மயலாகி 
நரகி லேவிழு மவலனை யசடனை
     வழிப டாதவொர் திருடனை மருடனை
          நலமி லாவக கபடனை விகடனை ...... வினையேனை 
நடுவி லாதன படிறுகொ ளிடறுசொ
     லதனில் மூழ்கிய மறவனை யிறவனை
          நளின மார்பத மதுபெற ஒருவழி ...... யருள்வாயே 
வரிய ராவினின் முடிமிசை நடமிடு
     பரத மாயவ னெழுபுவி யளவிடு
          வரதன் மாதவ னிரணிய னுடலிரு ...... பிளவாக 
வகிரு மாலரி திகிரிய னலையெறி
     தமர வாரிதி முறையிட நிசிசரன்
          மகுட மானவை யொருபதும் விழவொரு ...... கணையேவுங் 
கரிய மேனியன் மருதொடு பொருதவன்
     இனிய பாவல னுரையினி லொழுகிய
          கடவுள் வேயிசை கொடுநிரை பரவிடு ...... மபிராமன் 
கருணை நாரண னரபதி சுரபதி
     மருக கானக மதனிடை யுறைதரு
          கரிய வேடுவர் சிறுமியொ டுருகிய ...... பெருமாளே.
நறு மணம் வீசும் கூந்தலிலும், அக் கூந்தலின் ஒளியிலும், கண்ணுக்குப் புலப்படாத அளவுக்குச் சிறுத்திருந்த இடையிலும், நடை அழகிலும், தாமரை போன்ற அழகிய கண்ணிலும், பேச்சிலும், இளம் பெண்களின் கோபக்குறி இல்லாத புன்னகையாகிய வலையிலும், அதன் (வசீகரத்) ஸை தன்மையிலும், அழுத்தமாக கச்சு அணிந்த மலை போன்ற மார்பிலும், முடிவே இல்லாததும், ஒப்பற்ற கொடிய விஷம் கொல்லுவது போன்ற தன்மையதான மோகத்தைக் கொண்டவனாகி, நரகத்தில் விழும் வீணனும் முட்டாளுமான என்னை, ஒரு நல்வழிக்கும் வராத ஓர் திருடனும், மயக்கத்தில் இருப்பவனுமான என்னை, நன்மை நினைவே இல்லாத உள்ளக் கபடனும், செருக்கு உள்ளவனும், தீ வினைக்கு ஈடானவனுமான என்னை, நடு நிலைமையே இல்லாது வஞ்சகமே பூண்டு, தடை வார்த்தைகளைப் பேசுவதிலேயே முழுகிய கொடியோனும், இறந்து ஒழிதற்கே பிறந்தவனுமான என்னை, தாமரை போன்ற உனது திருவடிகளை அடையச் செய்வதற்கு ஓர் உபதேசத்தை அருள்வாயாக. கோடுகளைக் கொண்ட (காளிங்கன் என்னும்) பாம்பின் முடி மீது நடனம் செய்யும் பரத நாட்டியத்தில் வல்ல மாயவன், ஏழு உலகங்களையும் பாதத்தால் அளந்தவன், வரமளிப்பவன், மாதவன், இரணியனுடைய உடலை இரண்டு பிளவாகும்படி நகத்தால் கீறிய திருமால், அரி, சக்கரம் ஏந்தியவன், அலை வீசுகின்றதும் ஒலிப்பதுமான கடல் முறையிடவும், அரக்கனாகிய இராவணனுடைய மகுடம் அணிந்த தலைகள் பத்தும் அறுபட்டு விழும்படி, ஒப்பற்ற அம்பைச் செலுத்திய கரிய உடல் கொண்டவன், மருத மரங்களைச் சாடித் தள்ளியவன், இனிமை வாய்ந்த புலவனாகிய (திருமழிசை ஆழ்வாரின்) சொல்லுக்கு இணங்கி அதன் படி நடந்த கடவுள்*, புல்லாங்குழலின் இன்னிசையால் பசுக் கூட்டத்தைப் பாதுகாத்த பேரழகன், கருணை நிறைந்த நாராயண மூர்த்தி, அருச்சுனனுக்குத் தலைவன், தேவர்களின் தலைவன் ஆகிய திருமாலுக்கு மருகனே, காட்டில் குடியிருந்த கருநிறங் கொண்ட வேடர்களின் சிறுமியாகிய வள்ளிக்காக மனம் உருகிய பெருமாளே. 
* திருமால் சென்றது: திருமழிசை ஆழ்வாரின் சீடனாகிய கணிகண்ணனுக்காக காஞ்சீபுரத்து வரதராஜப் பெருமாள் ஊரை விட்டு ஆழ்வார் பின் சென்ற வரலாற்றைக் குறிக்கும்.
பாடல் 1010 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனதன தனதன தந்த தானன
     தனதன தனதன தந்த தானன
          தனதன தனதன தந்த தானன ...... தனதான
அரிசன பரிசஅ லங்க்ரு தாம்ருத
     கலசமு மதனுய ரம்பொன் மாமுடி
          யதுமென இளைஞர்கள் நெஞ்சு மாவியு ...... மொருகோடி 
அடைபடு குடயுக ளங்க ளாமென
     ம்ருகமத களபம ணிந்த சீதள
          அபிநவ கனதன மங்கை மாருடன் ...... விளையாடி 
இரவொடு பகலொழி வின்றி மால்தரு
     மலைகட லளறுப டிந்து வாயமு
          தினிதென அருளஅ ருந்தி யார்வமொ ...... டிதமாகி 
இருவரு மருவிய ணைந்து பாழ்படு
     மருவினை யறவும றந்து னீள்தரு
          மிணைமல ரடிகள்நி னைந்து வாழ்வது ...... மொருநாளே 
சுரர்குல பதிவிதி விண்டு தோலுரி
     யுடைபுனை யிருடிக ளண்ட ரானவர்
          துதிசெய எதிர்பொர வந்த தானவ ...... ரடிமாள 
தொலைவறு மலகையி னங்க ளானவை
     நடமிட நிணமலை துன்ற வேயதில்
          துவரிது புளியிது தொய்ந்த தீதிது ...... இதுவீணால் 
பருகுத லரியது கந்த தீதிது
     உளதென குறளிகள் தின்று மெதகு
          பசிகெட வொருதனி வென்ற சேவக ...... மயில்வீரா 
பகிரதி சிறுவவி லங்க லூடுறு
     குறமகள் கொழுநப டர்ந்து மேலெழு
          பருவரை யுருவஎ றிந்த வேல்வல ...... பெருமாளே.
மஞ்சள் பூசியுள்ள, அலங்காரமான அமிர்த கலசம் என்றும், மன்மதனுடைய சிறந்த பொன் கி¡£டம் என்றும் சொல்லும்படியாய், இளைஞர்களுடைய மனமும் உயிரும் ஒரு கோடிக் கணக்கில் வந்து அடைபடுவதான குடங்கள் போன்ற இரண்டு என்று சொல்லும்படியாய், கஸ்தூரிக் கலவையை அணிந்துள்ள, குளிர்ச்சி உள்ள, புதுமை வாய்ந்த கனத்த மார்பகங்களை உடைய விலைமாதர்களுடன் லீலைகள் புரிந்து, இரவும் பகலும் ஓய்வே இல்லாமல் மோகத்தைத் தரும் காமக் கடலாகிய சேற்றில் படிந்து, வாயிதழ் ஊறல் இனிக்கும் என்று தர பருகி, அன்பும் இன்பமும் பூண்டு, இருவரும் பொருந்தி அணைந்து பாழாவதற்கு இடமாகும், வினைக்கு இடமான செயலை அடியோடு மறந்து, உனது ஒளி பொருந்திய இரண்டு திருவடிகளையும் நினைந்து வாழ்வதான ஒரு நாள் எனக்குக் கிடைக்குமோ? தேவர்கள் குலத்துக்குத் தலைவனான இந்திரன், பிரமன், திருமால், மற்றும் (மான்) தோல் உரியை ஆடையாக அணிந்த முனிவர்களும், தேவர்களும் தோத்திரம் செய்ய, எதிர்த்துப் போர் புரிய வந்த அசுரர்கள் அடியோடு இறந்து பட, சோர்வு இல்லாத பேய்க் கூட்டங்கள் கூத்தாடும்படியாக மாமிச மலை நிரம்ப அவைகளுக்குக் கிடைக்க, அங்ஙனம் கிடைத்த மாமிசத்தில் துவர்ப்புள்ள பாகம் இது, புளிப்பான பாகம் இது, கட்டியாய் உறைந்து போன பாகம் இது, இது கெட்டுப் போனது, உண்பதற்கு உபயோகம் அற்றது, உண்ணத் தகுந்தது இங்கே உள்ளது என்று கூறி பூத பிசாசுகள் உண்டு மிக்க பசி தீரும்படியாக, ஒப்பற்ற தனித்த நிலையில் வெற்றி கொண்ட பராக்ரம மயில் வீரனே, கங்கையின் புதல்வனே, மலையில் வாசம் செய்யும் குறப் பெண்ணாகிய வள்ளியின் கணவனே, அகன்று மேலே ஓங்கி வளர்ந்த பெரிய கிரவுஞ்ச மலையை ஊடுருவும்படி செலுத்திய வேலாயுதத்தை ஏந்த வல்ல பெருமாளே. 
பாடல் 1011 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனதன தனதன தந்த தானன
     தனதன தனதன தந்த தானன
          தனதன தனதன தந்த தானன ...... தந்ததான
உரைதரு பரசம யங்க ளோதுவ
     துருவென அருவென வொன்றி லாததொ
          ரொளியென வெளியென வும்ப ராமென ...... இம்பராநின் 
றுலகுகள் நிலைபெறு தம்ப மாமென
     வுரைசெய அதுபொருள் கண்டு மோனமொ
          டுணர்வுற வுணர்வொடி ருந்த நாளும ...... ழிந்திடாதே 
பரகதி பெறுவதொ ழிந்தி டார்வன
     பரிசன தெரிசன கந்த வோசைகள்
          பலநல விதமுள துன்ப மாகிம ...... யங்கிடாதே 
பரிபுர பதமுள வஞ்ச மாதர்கள்
     பலபல விதமுள துன்ப சாகர
          படுகுழி யிடைவிழு பஞ்ச பாதக ...... னென்றுதீர்வேன் 
அரகர சிவசுத கந்த னேநின
     தபயம பயமென நின்று வானவர்
          அலறிட வொழிகினி யஞ்சி டாதென ...... அஞ்சல்கூறி 
அடல்தரு நிருதர நந்த வாகினி
     யமபுர மடையஅ டர்ந்து போர்புரி
          அசுரன தகலமி டந்து போகவ ...... கிர்ந்தவேகம் 
விரிகடல் துகளெழ வென்ற வேலவ
     மரகத கலபசி கண்டி வாகன
          விரகுள சரவண முந்தை நான்மறை ...... யந்தமோதும் 
விரைதரு மலரிலி ருந்த வேதனும்
     விடவர வமளிது யின்ற மாயனும்
          விமலைகொள் சடையர னும்ப ராவிய ...... தம்பிரானே.
சொல்லப்படுகின்ற மேலான சமயங்களால் ஓதப்படுவதும், உருவம், உருவமின்மை என்று ஒன்றும் இல்லாததும், பேரொளி என்றும், வெட்ட வெளி என்றும், மேலே உளதென்றும், இங்கே உளதென்றும் நிற்பதாய், உலகங்கள் நிலை பெற்று நிற்க உதவும் பற்றுக் கோடு என்றும் சொல்லும்படியாய் உள்ள அந்தப் பரம் பொருளை உணர்ந்து அறிந்து, மெளன நிலையில் ஞான உணர்ச்சி உண்டாக, அந்த ஞான உணர்ச்சியோடு இருந்து, அத்தகைய நாட்கள் அழிந்து வீண் போகாமல், மேலான நற்கதியை பெறும்படியான பாக்கியம் என்னை விட்டு ஒழிந்து போகும்படி, ஆசைக்கிடம் தரும் ஸ்பரிசம், ரூபம், வாசனை, ருசி, ஓசை முதலான ஐம்புலன்களால் உண்டாகும் பலவிதமான சிற்றின்பங்களைக் கொண்டதான துன்பத்தில் பட்டு நான் மயங்காமல், சிலம்புகள் அணிந்த பாதங்களை உடைய வஞ்சகம் கொண்ட விலைமாதர்கள் பலபல வகையாக உள்ள துன்பக் கடலாகிய பெருங்குழியில் விழுகின்ற பஞ்ச* மகா பாதங்களைச் செய்யும் நான் என்றைக்கு உணர்ந்து கரை ஏறுவேன்? ஹரஹர சிவ குமாரனே, கந்தபிரானே, உனது அடைக்கலம், அடைக்கலம் என்று தேவர்கள் ஓலமிட, (உங்கள் பயம்) இனி ஒழிவதாக, பயப்பட வேண்டாம் என்று அருள் பாலித்து, வலிமை மிக்க அசுரர்கள், அளவற்ற சேனைகள் யமபுரம் சேரவும், நெருங்கிச் சண்டை செய்யும் அசுரன் சூரனுடைய மார்பு கிழிபட, பிளந்தெறிந்த வேகத்தில், பரந்த கடல் வற்றித் தூளெழும்படி வெற்றி கொண்ட வேலவனே, பச்சை நிறமான தோகையைக் கொண்ட மயில் வாகனனே, சாமர்த்தியம் உள்ள சரவணனே, பழைய நான்கு வேதங்களை முடிவு வரை ஓத வல்லவனும், மணம் கமழ் தாமரை மலரில் வீற்றிருந்த பிரமனும், விஷத்தை உடைய ஆதிசேஷனான பாம்புப் படுக்கையில் உறங்கும் மாயோனாகிய திருமாலும், பரிசுத்தமான கங்கையை உடைய சடையைக் கொண்ட சிவபெருமானும் போற்றும் தம்பிரானே. 
* ஐவகை பாதகங்கள்: கொலை, களவு, சூது, கள்ளுண்ணல், குரு நிந்தை ஆகியவை.
பாடல் 1012 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனதன தத்தத் தனந்த தந்தன
     தனதன தத்தத் தனந்த தந்தன
          தனதன தத்தத் தனந்த தந்தன ...... தந்ததான
இமகிரி மத்திற் புயங்க வெம்பணி
     கயிறது சுற்றித் தரங்க வொண்கடல்
          இமையவர் பற்றிக் கடைந்த அன்றெழு ...... நஞ்சுபோலே 
இருகுழை தத்திப் புரண்டு வந்தொரு
     குமிழையு மெற்றிக் கரும்பெ னுஞ்சிலை
          ரதிபதி வெற்றிச் சரங்க ளஞ்சையும் ...... விஞ்சிநீடு 
சமரமி குத்துப் பரந்த செங்கயல்
     விழியினில் மெத்தத் ததும்பி விஞ்சிய
          தமனிய வெற்புக் கிசைந்த வம்பணி ...... கொங்கைமீதே 
தனிமனம் வைத்துத் தளர்ந்து வண்டமர்
     குழலியர் பொய்க்குட் கலங்க லின்றியெ
          சததளம் வைத்துச் சிவந்த நின்கழல் ...... தந்திடாயோ 
அமரர்து திக்கப் புரந்த ரன்தொழ
     எழுபது வர்க்கக் குரங்கு கொண்டெறி
          யலையைய டைத்துக் கடந்து சென்றெதிர் ...... முந்துபோரில் 
அசுரர்மு தற்கொற் றவன்பெ ருந்திறல்
     இருபது கொற்றப் புயங்கள் சிந்திட
          அழகிய கொத்துச் சிரங்க ளொன்பது ...... மொன்றுமாளக் 
கமலம லர்க்கைச் சரந்து ரந்தவர்
     மருமக மட்டுக் ககொன்றை யந்தொடை
          கறையற வொப்பற் றதும்பை யம்புலி ...... கங்கைசூடுங் 
கடவுளர் பக்கத் தணங்கு தந்தருள்
     குமரகு றத்தத் தைபின்தி ரிந்தவள்
          கடினத னத்திற் கலந்தி லங்கிய ...... தம்பிரானே.
இமயமலையாகிய (மந்தரம்) என்னும் மத்தில் வாசுகி என்னும் கொடிய பாம்பை கயிறாகச் சுற்றி, அலை வீசும் ஒளி பொருந்திய கடலை தேவர்கள் பற்றிக் கடைந்த நாளில் எழுந்த ஆலகால விஷம் போல், இரண்டு காதின் குண்டலங்கள் மீது பாய்ந்து புரண்டு வந்தும், ஒரு குமிழம்பூப் போன்ற மூக்கைத் தாக்கியும், கரும்பாகிய வில்லை ஏந்திய, ரதியின் கணவனான மன்மதனின் வெற்றிப் பாணங்கள் ஐந்தின் வேகத்தையும் செயலாற்றும் திறமையையும் வென்று மேம்படுவதாய், போர் நிறைந்ததாய், அகன்றுள்ளதான செவ்விய கயல் மீன் போன்ற கண்களிலும், மிகவும் பூரித்து மேலெழுந்துள்ள, பொன்மலைக்குச் சமானமானதும், அதற்குத் தகுந்த கச்சு அணிந்ததுமான மார்பகங்களின் மேலும், தனியாக மனத்தை வைத்துச் சோர்வுற்று, வண்டுகள் விரும்பிச் சேரும் கூந்தலை உடைய மாதர்கள் தரும் பொய்யான இன்பத்துக்குக் கலக்கம் அடைதலை ஒழித்து, நூறு இதழ்கள் உள்ள தாமரை மலரை வைத்து நான் பூஜிக்க உனது சிவந்த திருவடிகளை அடியேனுக்குத் தந்தருள மாட்டாயோ? தேவர்கள் துதி செய்ய, இந்திரன் தொழுது வணங்க, எழுபது வகையான குரங்குப் படையைக் கொண்டு, அலை வீசும் கடலை அணையிட்டு, அதைத் தாண்டி இலங்கைக்குச் சென்று, எதிரில் முனைந்து வந்த போரில் அரக்கர்களின் அரசன் ராவணனுடைய மிக்க வல்லமை கொண்ட இருபது தோள்களும் அற்று விழவும், அழகாய் கொத்தாக இருந்த பத்துத் தலைகளும் மாண்டு விழவும், தாமரை மலர் போன்ற திருக்கரத்தால் அம்பைச் செலுத்திய ராமனின் மருகனே, தேன் சொட்டும் அழகிய கொன்றை மாலை, மாசு இல்லாத நிகரற்ற தும்பை மாலை, சந்திரன், கங்கை இவைகளைச் சடையில் சூடியுள்ள கடவுளாகிய சிவபெருமானது இடது பாகத்தில் உறையும் பார்வதி தேவி பெற்றெடுத்த குமரனே, குறக் கிளியாகிய வள்ளியின் பின்னே நாடித்திரிந்து, அவளுடைய வன்மை கொண்ட மார்பகங்களில் அணைந்து விளங்கிய பெருமாளே. 
பாடல் 1013 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனதன தத்தத் தனந்த தந்தன
     தனதன தத்தத் தனந்த தந்தன
          தனதன தத்தத் தனந்த தந்தன ...... தந்ததான
முகமுமி னுக்கிப் பெருங்க ருங்குழல்
     முகிலைய விழ்த்துச் செருந்தி சண்பக
          முடியநி றைத்துத் ததும்பி வந்தடி ...... முன்பினாக 
முலையைய சைத்துத் திருந்த முன்தரி
     கலையைநெ கிழ்த்துப் புனைந்து வஞ்சக
          முறுவல்வி ளைத்துத் துணிந்து தந்தெரு ...... முன்றிலூடே 
மகளிர்வ ரப்பிற் சிறந்த பந்தியின்
     மதனனு நிற்கக் கொளுந்து வெண்பிறை
          வடவையெ றிக்கத் திரண்டு பண்டனை ...... வண்டுபாட 
மலயநி லத்துப் பிறந்த தென்றலு
     நிலைகுலை யத்தொட் டுடம்பு புண்செய
          மயலைய ளிக்கக் குழைந்து சிந்தைம ...... லங்கலாமோ 
பகலவன் மட்கப் புகுந்து கந்தர
     ககனமு கட்டைப் பிளந்து மந்தர
          பருவரை யொக்கச் சுழன்று பின்புப ...... றந்துபோகப் 
பணமணி பட்சத் துரங்க முந்தனி
     முடுகின டத்திக் கிழிந்து விந்தெழு
          பரவைய ரற்றப் ப்ரபஞ்ச நின்றுப ...... யந்துவாடக் 
குகனென முக்கட் சயம்பு வும்ப்ரிய
     மிகவசு ரர்க்குக் குரம்பை வந்தரு
          குறவமர் குத்திப் பொருங்கொ டும்படை ...... வென்றவேளே 
குழைசயை யொப்பற் றிருந்த சங்கரி
     கவுரியெ டுத்துப் பரிந்து கொங்கையில்
          குணவமு துய்க்கத் தெளிந்து கொண்டருள் ...... தம்பிரானே.
முகத்தை அலங்கரித்து நீண்ட கரிய கூந்தலாகிய மேகத்தை அவிழ்த்து, செருந்திப் பூ, சண்பகப் பூ முதலியவைகளை நிரம்ப வைத்து முடித்து களிப்புடன் வந்து, முன்னும் பின்னும் (தெருவில்) அடியிட்டு உலவி, மார்பகங்களை அசைத்தும், சரிப் படுத்துவது போல முன்னே தரித்துள்ள ஆடையைத் தளர்த்தியும் அணிந்தும், வஞ்சகம் நிறைந்த புன்னகை புரிந்தும், துணிவுடன் தாம் வசிக்கும் தெருவின் முன் புறத்தில், பெண்களுடைய எல்லையில் அவர்களுடைய சிறப்புக் கூட்டத்தில் மன்மதனும் நின்று (அவன் பாணங்களை ஏவ), தீப் போல எரியும் வெண்ணிலாவும் வடமுகாக்கினி போல் நெருப்பைக் கக்க, கூட்டமாகக் கூடி ராகங்களை வண்டுகள் பாட, பொதிய மலையில் நின்று புறப்படும் தென்றல் காற்றும் என் மன உறுதி கெடும்படி என் மேல் வீசி உடம்பு எல்லாம் புண்ணாகும்படித் தாக்கி காம இச்சையை விளைவிக்க, மனம் உருகி என் சிந்தை கலக்கம் அடையலாமோ? சூரியனும் ஒளி குன்றி ஒடுங்கச் சென்று, மேகங்களைக் கொண்ட ஆகாய உச்சியில் கிழித்துச் சென்று, மந்தர மலை போன்ற பெரிய மலைகள் எல்லாம் ஒருங்கே சுழலும்படி (மயில் செல்லும் வேகத்தில்) அதன்பின் அவை பறந்து வரும்படியும், படத்தில் ரத்னங்களை கொண்ட பாம்பை கொத்தித் தின்னும் (மயிலாகிய) குதிரையை ஒப்பற்ற வகையில் வேகமாகச் செலுத்தி, அதனால் கிழிபட்டு நீர்த்துளிகள் எழுகின்ற கடல் ஓலமிடவும், ஐந்து பூதங்களால் ஆன உலகம் எல்லாம் நின்று பயப்பட்டு வாடவும், (இந்தக் காட்சியைக் கண்டு) குக மூர்த்தியே என்று முக்கண் சுயம்பு நாதராகிய சிவனும் உன் மீது அன்பு கொள்ள, அசுரர்களுடைய உடல்கள் நெருங்கி வர, போர்க் களத்தில் அவர்களை வேலால் குத்திச் சண்டை செய்து (அவர்களுடைய) கொடிய சேனையை வென்ற செவ்வேளே, குண்டலங்களை அணிந்துள்ள பார்வதி, ஒப்பில்லாது விளங்கிய சங்கரி, கெளரி (ஆகிய தேவி) உன்னை மடியில் எடுத்து அன்பு கூர்ந்து தமது திருமுலையில் உள்ள ஞானப் பாலை ஊட்ட, தெளிவுடன் அதை உட்கொண்டு (அனைவருக்கும்) அருள் பாலிக்கும் தம்பிரானே. 
பாடல் 1014 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனதன தனதன தனதன தனதன
     தத்தத் தத்தன தத்தத் தத்தன ...... தந்ததான
படிதனி லுறவெனு மனைவர்கள் பரிவொடு
     பக்கத் திற்பல கத்திட் டுத்துயர் ...... கொண்டுபாவப் 
பணைமர விறகிடை யழலிடை யுடலது
     பற்றக் கொட்டுகள் தட்டிச் சுட்டலை ...... யொன்றியேகக் 
கடிசம னுயிர்தனை யிருவிழி யனலது
     கக்கச் சிக்கென முட்டிக் கட்டியு ...... டன்றுபோமுன் 
கதிதரு முருகனு மெனநினை நினைபவர்
     கற்பிற் புக்கறி வொக்கக் கற்பது ...... தந்திடாயோ 
வடகிரி தொளைபட அலைகடல் சுவறிட
     மற்றுத் திக்கெனு மெட்டுத் திக்கிலும் ......வென்றிவாய 
வலியுட னெதிர்பொரு மசுரர்கள் பொடிபட
     மட்டித் திட்டுயர் கொக்கைக் குத்திம ...... லைந்தவீரா 
அடர்சடை மிசைமதி யலைஜல மதுபுனை
     அத்தர்க் குப்பொருள் கற்பித் துப்புகழ் ...... கொண்டவாழ்வே 
அடியுக முடியினும் வடிவுட னெழுமவு
     னத்திற் பற்றுறு நித்தச் சுத்தர்கள் ...... தம்பிரானே.
இப்பூமியில் சுற்றத்தார்களாக உள்ள எல்லாரும் அன்புடன் பக்கத்திலே நின்று அழுகைக் கூச்சலிட்டு துக்கம் கொண்டு சூழ்ந்து பரவி நிற்க, பெருத்த மரக் கட்டைகளில் உண்டாகும் நெருப்பிடையே உடல் தீப்பிடிக்க, பறைகள் கொட்டி, உடலைச் சுட்டு, அலைகள் உள்ள நீரில் படிந்து குளித்து, அவரவர் வீட்டுக்குச் செல்ல, அழித்தல் தொழிலை உடைய யமன் உயிரை (தனது) இரு கண்களும் நெருப்பு உமிழ அகப்படும்படித் தாக்கி, கட்டி, கோபத்துடன் கொண்டு போவதற்கு முன்பாக, நற்கதியை நமக்கு முருகன் ஒருவனே தருவான் என்று உன்னை நினைப்பவர்களுடைய கதியான நெறியில் (நானும்) புகுந்து, நல்லறிவு கூடும்படி உன்னை ஓதிப் பயிலும் கருத்தை எனக்குத் தந்திடாயோ? வடக்கே உள்ள கிரெளஞ்ச மலை தொளைபட்டு அழியவும், அலை வீசும் கடல் வற்றிப் போகவும், மற்றுத் திசைகளாகிய எட்டுத் திக்குகளிலும் வெற்றி கிடைக்கவும், வலிமையுடன் உன்னை எதிர்த்துச் சண்டை செய்த அசுரர்கள் பொடிபட்டு அழியவும், அவர்களை முறியடித்திட்டு, உயரமான மாமரமாக உருமாறிய சூரனை வேலால் குத்தி எதிர்த்த வீரனே, நெருங்கிய சடையின் மேல் நிலவையும், அலை கொண்ட கங்கை நீரையும் சூடியுள்ள தந்தையாகிய சிவ பெருமானுக்கு, பிரணவப் பொருளை உபதேசித்து தகப்பன் சாமி என்று புகழைக் கொண்ட செல்வனே, கடைசியான யுகாந்த காலத்தும் தங்கள் வடிவு குலையாமல் தோற்றம் தருபவர்களும், மெளன நிலையில் பற்று வைத்துள்ளவர்களும், நித்ய சூரிகளுமான பரிசுத்தர்கள் போற்றும் தம்பிரானே. 
பாடல் 1015 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனதன தனதன தனதன தனதன தனதன தனதன
     தத்தத் தத்தன தத்தத் தத்தன ...... தந்ததான
விடமென அயிலென அடுவன நடுவன மிளிர்வன சுழல்விழி
     வித்தைத் குப்பக ரொப்புச் சற்றிலை ...... யென்றுபேசும் 
விரகுடை வனிதைய ரணைமிசை யுருகிய வெகுமுக கலவியில்
     இச்சைப் பட்டுயிர் தட்டுப் பட்டுவு ...... ழன்றுவாடும் 
நடலையில் வழிமிக அழிபடு தமியனை நமன்விடு திரளது
     கட்டிச் சிக்கென வொத்திக் கைக்கொடு ...... கொண்டுபோயே 
நரகதில் விடுமெனு மளவினி லிலகிய நறைகமழ் திருவடி
     முத்திக் குட்படு நித்யத் தத்துவம் ...... வந்திடாதோ 
இடியென அதிர்குரல் நிசிசரர் குலபதி யிருபது திரள்புய
     மற்றுப் பொற்றலை தத்தக் கொத்தொடு ...... நஞ்சுவாளி 
எரியெழ முடுகிய சிலையின ரழகொழு கியல்சிறு வினைமகள்
     பச்சைப் பட்சித னைக்கைப் பற்றிடு ...... மிந்த்ரலோகா 
வடவரை யிடிபட அலைகடல் சுவறிட மகவரை பொடிபட
     மைக்கட் பெற்றிடு முக்ரக் கட்செவி ...... யஞ்சசூரன் 
மணிமுடி சிதறிட அலகைகள் பலவுடன் வயிரவர் நடமிட
     முட்டிப் பொட்டெழ வெட்டிக் குத்திய ...... தம்பிரானே.
நஞ்சு போலவும் அம்பு போலவும் கொல்லும் தன்மையை உடையனவாய், யமனுக்கு ஒப்பாக விளங்குவனவாய், சுழலுகின்ற கண்களின் (மயக்கும்) வித்தைக்கு சொல்லக் கூடிய உவமைப் பொருள் ஏதும் இல்லை என்று சொல்லத்தக்க தந்திரத்தைக் கொண்ட பெண்களின் படுக்கை மீதில் மனம் உருகிய பலவிதமான சிற்றின்ப லீலைகளில் ஆசைப்பட்டு, அதனால் உயிர் அலைச்சல் உற்று கலங்கி வாடுகின்ற, துன்பந் தரும் வழியில் மிகவும் அழிந்து போகின்ற தனியனாம் என்னை, யமன் அனுப்பும் தூதர் கூட்டம் கட்டி அகப்படும்படி, கைகளை இறுகப் பிணைத்து இழுத்துக் கொண்டு போய், இவனை நரகத்தில் தள்ளுங்கள் என்னும் காலம் வரும் போது, விளங்கும் நறு மணம் வீசும் நின் திருவடியாகிய முக்தி நிலையில் சேரும் அழியா இன்ப நிலை எனக்கு ஏற்படக் கூடாதோ? இடி போல் ஒலிக்கும் குரலை உடையவனும், அசுரர்களுடைய அரக்கர் குலத்துக்குத் தலைவனும் ஆகிய ராவணனுடைய இருபது திரண்ட புயங்கள் அறுந்து விழவும், அழகிய (பத்து) தலைகளும் கொத்தாகிச் சிதறி விழவும், விஷம் கொண்ட அம்பு தீயைக் கக்கும்படி செலுத்திய (கோதண்டம்) என்னும் வில்லை உடைய ராமனாகிய திருமாலின் அழகு ஒழுகும் தன்மை வாய்ந்தவளும், சிறிய தொழிலாகிய புனம் காத்தலைச் செய்தவளும் ஆகிய மகள், பச்சைக் கிளி போன்றவளுமாகிய வள்ளியை மணந்த விண்ணுலக சேனாதிபதியே, வடக்கே இருந்த (கிரவுஞ்ச மலை) இடிபட்டுப் பொடியாக, அலை வீசும் கடல் வற்றிப் போக, பெரிய மேரு மலையும் பொடி பட, கருங்கண்களை உடையதும் உக்கிரமானதுமான ஆதிசேஷன் என்னும் பாம்பு பயப்பட, சூரனுடைய ரத்ன கி¡£டம் அணிந்த தலை சிதறி விழ, பேய்கள் பல சூழ்ந்து, அவற்றுடன் (சிவகணங்களான) பைரவர்கள் (போர்க்களத்தில்) நடனம் இட, (பகைவர்களைத்) தாக்கிப் பொடியாகும்படி அவர்களை வாளால் வெட்டி, வேலால் குத்திய தம்பிரானே. 
பாடல் 1016 - பொதுப்பாடல்கள் 
ராகம் - பெஹாக் 
தாளம் - அங்கதாளம் 
- எடுப்பு 1 /2 அக்ஷரம் தள்ளி 
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தனதனன தான தந்த தந்த
     தனதனன தான தந்த தந்த
          தனதனன தான தந்த தந்த ...... தனதான
குகையில்நவ நாத ருஞ்சி றந்த
     முகைவனச சாத னுந்த யங்கு
          குணமுமசு ரேச ருந்த ரங்க ...... முரல்வேதக் 
குரகதபு ராரி யும்ப்ர சண்ட
     மரகதமு ராரி யுஞ்செ யங்கொள்
          குலிசகைவ லாரி யுங்கொ டுங்க ...... ணறநூலும் 
அகலியபு ராண மும்ப்ர பஞ்ச
     சகலகலை நூல்க ளும்ப ரந்த
          அருமறைய நேக முங்கு விந்தும் ...... அறியாத 
அறிவுமறி யாமை யுங்க டந்த
     அறிவுதிரு மேனி யென்று ணர்ந்துன்
          அருணசர ணார விந்த மென்று ...... அடைவேனோ 
பகைகொள்துரி யோத னன்பி றந்து
     படைபொருத பார தந்தெ ரிந்து
          பரியதொரு கோடு கொண்டு சண்ட ...... வரைமீதே 
பழுதறவி யாச னன்றி யம்ப
     எழுதியவி நாய கன்சி வந்த
          பவளமத யானை பின்பு வந்த ...... முருகோனே 
மிகுதமர சாக ரங்க லங்க
     எழுசிகர பூத ரங்கு லுங்க
          விபரிதநி சாச ரன்தி யங்க ...... அமராடி 
விபுதர்குல வேழ மங்கை துங்க
     பரிமளப டீர கும்ப விம்ப
          ம்ருகமதப யோத ரம்பு ணர்ந்த ...... பெருமாளே.
குகையில் தவம் புரியும் நவநாதராகிய* பெருஞ்சித்தர்களும், திருமாலின் தொப்புளாம் தாமரை மொட்டில் தோன்றிய பிரமனும், விளங்கும் (ஸத்வம், ரஜோ, தாமஸம் ஆகிய) முக்குணங்களும், அசுரரின் தலைவர்களும், அலைகடல் போல் ஒலிக்கும் வேதங்களை நான்கு குதிரைகளாகப் பூட்டி திரிபுரத்தை அழித்த சிவபிரானும், வீரம் மிகுந்த, மரகதப்பச்சை வண்ணனானவனும், முரன் என்ற அசுரனைக் கொன்ற முராரியாம் திருமாலும், வெற்றி பெற்ற வஜ்ராயுதத்தைக் கையில் ஏந்தி வலன் என்ற அசுரனைக் கொன்ற இந்திரனும், கடுமையான விதிகளை வகுக்கும் சாஸ்திர நூல்களும், விரிவான புராணங்களும், உலகிலுள்ள எல்லாக் கலை நூல்களும், விரிந்துள்ள வேதநூல்கள் பலவும், இவை யாவும் ஒன்று கூடிச் சேர்ந்து முயன்று தேடியும் அறிய முடியாத, அறிவு, அறியாமை ஆகிய இரண்டுக்கும் அப்பால் உள்ள அறிவொளி எதுவோ அதுவே உன் திருமேனி என நான் உணர்ந்து, உன் சிவந்த தாமரை மலரன்ன திருவடியை என்று சேர்வேனோ? பகைமையே உருவான துரியோதனன் தோன்றி படைகளோடு போர் செய்த மகாபாரத வரலாற்றை அறிந்து, பருத்த தனது ஒற்றைத் தந்தத்தால் பெருமலையாம் மேருமலை மீது, குற்றமற்ற வகையில் வியாச முநிவர் முன்பொருநாள் சொல்லிவர, அந்தப் பாரதத்தை எழுதிய விநாயக மூர்த்தி, சிவந்த பவள நிறத்தைக் கொண்ட மதயானை முகத்துக் கணபதியின் பின்பு, தம்பியாக வந்த முருகனே, மிகுந்த ஒலிசெய்யும் கடல் கலங்குமாறும், ஏழு சிகரங்களை உடைய மலைகள் யாவும் குலுங்குமாறும், மாறுபட்ட புத்தியைக் கொண்ட சூரன் திகைக்கும்படியாகவும் போர் செய்து, தேவர் குலத்தவளும், யானை (ஐராவதம்) வளர்த்தவளுமான தேவயானையின் பரிசுத்தமான சந்தன மணம் வீசும், கும்பம் போன்று ஒளிவிடும், கஸ்தூரி வாசம் மிக்க திருமார்பைத் தழுவிய பெருமாளே. 
* நவநாதராகிய பெருஞ் சித்தர் பின்வருமாறு:சத்தியநாதர், சதோகநாதர், ஆதிநாதர், அனாதிநாதர், வகுளநாதர், மதங்கநாதர், மச்சேந்திரநாதர், கடேந்திரநாதர், கோரக்கநாதர்.இவர்கள் சிவனைக் குறித்துத் தவம் செய்து சித்தராயினர்.
பாடல் 1017 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனதனன தான தந்த தந்த
     தனதனன தான தந்த தந்த
          தனதனன தான தந்த தந்த ...... தனதான
மழையளக பார முங்கு லைந்து
     வரிபரவு நீல முஞ்சி வந்து
          மதிமுகமும் வேர்வு வந்த ரும்ப ...... அணைமீதே 
மகுடதன பார முங்கு லுங்க
     மணிகலைக ளேற வுந்தி ரைந்து
          வசமழிய வேபு ணர்ந்த ணைந்து ...... மகிழ்வாகிக் 
குழையஇத ழூற லுண்ட ழுந்தி
     குருகுமொழி வாய்ம லர்ந்து கொஞ்ச
          குமுதபதி போக பொங்கு கங்கை ...... குதிபாயக் 
குழியிலிழி யாவி தங்க ளொங்கு
     மதனகலை யாக மங்கள் விஞ்சி
          குமரியர்க ளோடு ழன்று நைந்து ...... விடலாமோ 
எழுபடைகள் சூர வஞ்ச ரஞ்ச
     இரணகள மாக அன்று சென்று
          எழுசிகர மாநி லங்கு லுங்க ...... விசையூடே 
எழுகடலு மேரு வுங்க லங்க
     விழிபடர்வு தோகை கொண்ட துங்க
          இயல்மயிலின் மாறு கொண்ட மர்ந்த ...... வடிவேலா 
பொழுதளவு நீடு குன்று சென்று
     குறவர்மகள் காலி னும்ப ணிந்து
          புளிஞரறி யாம லுந்தி ரிந்து ...... புனமீதே 
புதியமட லேற வுந்து ணிந்த
     அரியபரி தாப முந்த ணிந்து
          புளகிதப யோத ரம்பு ணர்ந்த ...... பெருமாளே.
மழை போல நீண்ட கூந்தல் பாரம் அவிழ்ந்து குலைய, ரேகைகள் பரவியுள்ள நீலோற்பலம் போன்ற கண்களும் செந்நிறம் அடைய, சந்திரன் போன்ற முகமும் வேர்வைத் துளிகள் வந்து கூட, படுக்கையின் மேல் கி¡£டம் போன்ற மார்பகப் பாரமும் குலுங்க, ரத்ன மேகலை முதலிய இடை அணிகள் மிகவும் அலைப்புண்டு விலக, தன் வசம் இழக்கும்படி சேர்ந்து, அணைந்து மகிழ்ச்சி பூண்டு, மனம் குழைய வாயிதழ் ஊறலைப் பருக (காம மயக்கில்) அழுந்தி, புட் குரலுடன் வாய் திறந்து கொஞ்சிப் பேச, சந்திரன் வரக் கண்டு பொங்குகின்ற கங்கையைப் போல குதித்துப் பாய, பெண்குறியாம் குழியில் இழிந்து, பல விதங்களாக விளங்கும் மன்மதக் கலை நூல் விதிகளில் மிகவும் மேம்பட்டு, இளம் பெண்களோடு திளைந்து உடல் நொந்து விடுதல் நன்றோ? போருக்கு எழும் படைகளுடன் சூரர்களாகிய வஞ்சக அசுரர்கள் பயப்பட, போர்க் களம் ரண களமாக அன்று நீ போய் எழு கிரிகளும் பெரிய நிலப் பரப்பும் அசைவு கொள்ள, வேகத்துடன் ஏழு கடல்களும் மேரு மலையும் கலக்கம் கொள்ள, கண்கள் படர்ந்துள்ள பீலிகளைக் கொண்ட பரிசுத்தமான, தகுதியுள்ள மயிலின் மீது ஏறி கால்களை மாறாகப் போட்டுக்கொண்டு வீற்றிருந்த வடி வேலனே, பொழுது அஸ்தமிக்கும் வரையில் பெரிய (வள்ளி மலைக்) குன்றில் குறவர்களுடைய பெண்ணான வள்ளியைக் காலிலும் வணங்கி, வேடர்களுக்குத் தெரியாமல் திரிந்து, தினைப் புனத்தில் புதிதாக மடலேறுதற்கும்* துணிந்திருந்த அந்த பரிதாப நிலையும் குறைந்து, புளகிதம் கொண்டிருந்த வள்ளியின் மார்பினை அணைந்த பெருமாளே. 
* மடல் ஏறுதல் - தலைவன் தலைவியின் அழகை வர்ணித்து ஓர் ஏட்டில் மடலாக எழுதி அவளது ஊருக்குச் சென்று நாற்சந்தியில் ஒன்றும் பேசாமல் ஒருவரது வசைக்கும் கூசாமல் படத்தில் எழுதிய உருவத்தைப் பார்த்தவாறு பகலும் இரவுமாக நிற்பான். அவனது உறுதிகண்டு தலைவியின் வீட்டார் தலைவனுக்கு அவளை மணம் செய்து வைப்பர். முருகன் வள்ளியை ஊரறிய மடல் எழுதி மணம் செய்துகொண்ட காட்சி கந்த புராணத்தில் வருகிறது.
பாடல் 1018 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தத்தானத் தாத்தத் தனதன
     தத்தானத் தாத்தத் தனதன
          தத்தானத் தாத்தத் தனதன ...... தனதான
கற்பார்மெய்ப் பாட்டைத் தவறிய
     சொற்பாகைக் காட்டிப் புழுகொடு
          கஸ்தூரிச் சேற்றைத் தடவிய ...... இளநீரைக் 
கட்சேலைக் காட்டிக் குழலழ
     கைத்தோளைக் காட்டித் தரகொடு
          கைக்காசைக் கேட்டுத் தெருவினில் ...... மயில்போலே 
நிற்பாருக் காட்பட் டுயரிய
     வித்தாரப் பூக்கட் டிலின்மிசை
          நெட்டூரக் கூட்டத் தநவர ...... தமுமாயும் 
நெட்டாசைப் பாட்டைத் துரிசற
     விட்டேறிப் போய்ப்பத் தியருடன்
          நெக்கோதிப் போற்றிக் கழலிணை ...... பணிவேனோ 
வெற்பால்மத் தாக்கிக் கடல்கடை
     மைச்சாவிக் காக்கைக் கடவுளை
          விட்டார்முக் கோட்டைக் கொருகிரி ...... யிருகாலும் 
விற்போலக் கோட்டிப் பிறகொரு
     சற்றேபற் காட்டித் தழலெழு
          வித்தார்தத் வார்த்தக் குருபர ...... னெனவோதும் 
பொற்பாபற் றாக்கைப் புதுமலர்
     பெட்டேயப் பாற்பட் டுயரிய
          பொற்றோளிற் சேர்த்துக் கருணைசெ ...... யெனமாலாய்ப் 
புட்கானத் தோச்சிக் கிரிமிசை
     பச்சேனற் காத்துத் திரிதரு
          பொற்பூவைப் பேச்சுக் குருகிய ...... பெருமாளே.
கற்பு நிறைந்த மெய்யான நிலையினின்றும் தவறிய வழியில் செல்லும் சொற்களின் வெல்லப் பாகைப் போன்ற இனிப்பைக் காட்டி, புனுகு சட்டம், கஸ்தூரி இவைகளின் கலவை பூசப்பட்ட இள நீர் போன்ற மார்பகங்களையும், சேல் மீன் போன்ற கண்ணையும் காட்டி, கூந்தலின் அழகையும், தோள்களையும் காட்டி, மத்தியில் தரகர் வைத்துப் பேசி கையிலுள்ள பொருள் கேட்டு, தெருவில் மயில் நிற்பது போல் நிற்கும் வேசியர்களுக்கு நான் அடிமைப் பட்டு, உயர்ந்ததும் அழகு நிறைந்ததுமானக் கட்டிலின் மேல் நீண்ட நேரம் மேலே ஊர்ந்து அசைவுறும் அந்தப் புணர்ச்சியில் எப்போதும் அழிகின்ற நீண்ட ஆசை அனுபவத்தை, குற்றம் நீங்கும்படி விட்டு விலகிப் போய், உன்னிடம் பக்தி கொண்டுள்ள அடியார்களுடன் சேர்ந்து உன்னை நெகிழ்ந்து பாடிப் போற்ற உன் திருவடிகளைப் பணியும் பாக்கியம் எனக்குக் கிடைக்குமோ? மந்தர மலையையே மத்தாக அமைத்து திருப்பாற்கடலைக் கடைந்து, கறு நிறம் கொண்டு உயிர்களைக் காக்கின்ற கடவுள் திருமாலின்* திருவிளையாட்டால் தர்மவழியைப் பின்பற்றாது (சிவ பூஜையை) விடடவர்களாகிய திரிபுரத் தலைவர் மூவர்களின் மும்மதிலுக்கும் மேம்பட்ட ஒப்பற்ற மேரு மலையின் இரண்டு முனைப் பக்கங்களையும் வில்லை வளைப்பது போல வளைத்து, பின்பு ஒரு சிறிது புன்னகை செய்து நெருப்பு மூள வைத்த சிவ பெருமானுக்கு, உண்மைப் பொருளை உபதேசித்த குரு பர மூர்த்தி என்று சொல்லப்படுகின்ற அழகனே, அம்புத் திரள் கட்டும் கயிற்றினின்று (மன்மதன்) தன் மலர்ப் பாணங்களை விரைவாக எய்ய, (அந்த அம்புகளால் காம வசத்தில்) அகப்பட்டு, பெருமை பொருந்திய (உனது) அழகிய தோளில் (என்னை) அணைந்து அருள் புரிவாயாக என்று (வள்ளியிடம் கூறி) ஆசை பூண்டவனாய், பறவைகளை தினைப்புனத்தில் ஓட்டி, வள்ளிமலை மீது பசுமையான தினைப் பயிர்களைக் காத்துத் திரிந்த அழகிய பூப் போன்ற வள்ளியின் பேச்சுக்கு மனம் உருகிய பெருமாளே. * திரிபுராதிகள் சிவ பூஜையை விட்டால் ஒழிய அவர்களை வெல்ல முடியாதென உணர்ந்த திருமால் பல அற்புதங்களைக் காட்டி அசுரர்களை மயக்கிச் சிவ பூஜையைக் கைவிடச் செய்தார். அதன் பின்னரே திரிபுரம் எரிந்தது.
பாடல் 1019 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தத்தானத் தாத்தத் தனதன
     தத்தானத் தாத்தத் தனதன
          தத்தானத் தாத்தத் தனதன ...... தனதான
சிற்றாயக் கூட்டத் தெரிவையர்
     வித்தாரச் சூழ்ச்சிக் கயல்விழி
          சற்றேறப் பார்த்துச் சிலபணி ...... விடையேவிச் 
சிற்றாபத் தாக்கைப் பொருள்கொடு
     பித்தேறிக் கூப்பிட் டவர்பரி
          செட்டாமற் றூர்த்தத் தலைபடு ...... சிறுகாலை 
உற்றார்பெற் றார்க்குப் பெரிதொரு
     பற்றாயப் பூட்டுக் கயிறுகொ
          டுச்சாயத் தாக்கைத் தொழிலொடு ...... தடுமாறி 
உக்காரித் தேக்கற் றுயிர்நழு
     விக்காயத் தீப்பட் டெரியுட
          லுக்கேன்மெய்க் காட்டைத் தவிர்வது ...... மொருநாளே 
வற்றாமுற் றாப்பச் சிளமுலை
     யிற்பால்கைப் பார்த்துத் தருமொரு
          மைக்காமக் கோட்டக் குலமயில் ...... தருபாலா 
மத்தோசைப் போக்கிற் றயிருறி
     நெய்பாலுக் காய்ச்சிக் கிருபதம்
          வைத்தாடிக் காட்டிப் பருகரி ...... மருகோனே 
கற்றாவிற் காட்டிக் கரைதுறை
     நற்றாயிற் காட்டிப் புகழ்கலை
          கற்றார்சொற் கேட்கத் தனிவழி ...... வருவோனே 
கைச்சூலக் கூற்றைக் கணைமத
     னைத்தூள்பட் டார்ப்பக் கனல்பொழி
          கர்த்தாவுக் கேற்கப் பொருளருள் ...... பெருமாளே.
சிறிய கூட்டமாக தமது தோழியர் சூழ்ந்த (விலை) மாதர்கள் விரிவான தந்திரங்களைக் கொண்ட கயல் மீன் போன்ற கண்களைக் கொஞ்சம் தூக்கிப் பார்த்து, சில வேலைகளைக் கட்டளை இட்டு, அற்பமான காம தாகம் கொண்ட உடலை விற்றுப் பொருளைச் சம்பாதித்து, காமப் பித்தை வருவோருக்கு ஏற்றிக் கூப்பிடும் விலைமாதர்களுக்குக் கொடுக்க வேண்டிய கொடைப் பொருள் கிட்டாமையால், கெட்ட நெறியில் அலைச்சல் உறும் இளம் பருவத்தில், நெருங்கிய சுற்றத்தார், நண்பர்கள் ஆகியோருக்கும், தாய் தந்தையர்களுக்கும் மிகவும் அன்புக்கு இடமான பாசம் என்ற கயிற்றினால் கட்டுண்டும், உயர்ந்த நிலையில் இந்த உடல் கொண்டு செய்ய வேண்டிய தொழில்களில் ஈடுபட்டு அலைந்தும், சத்தமிட்டும், இளைத்து அவதிப்பட்டும், முடிவில் உயிர் நழுவிப் போய், காய்கின்ற அந்த (சுடு காட்டு) நெருப்பில் பட்டு எரிந்து போகின்ற இந்த உடலைத் தொலையும் வழியைத் தேடவில்லை. இந்த உடலுக்கு உள்ள ஆட்டங்களை ஒழிப்பதான ஒருநாள் எனக்குக் கிடைக்குமா? வற்றாததும், முதிராததும் ஆன, பசுமையும் இளமையும் வாய்ந்த மார்பில் பாலை இடம் பார்த்துத் தந்த ஒப்பற்றவளும், மை பூசிய கண்ணை உடையவளும், காம கோட்டம் என்னும் திருக் கோயிலில் வீற்றிருக்கும் சிறந்த மயிலை ஒத்தவளுமான காமாட்சி தந்த குழந்தையே, மத்தின் ஓசை செல்லும் போக்கை அறிந்து, உறியில் உள்ள தயிர், நெய், பால் ஆகியவற்றை அடைய வேண்டி, தாயாகிய யசோதைக்குத் தன் இரண்டு திருவடிகளைக் கொண்டு கூத்தாடி, தனது ஆடல்களைக் காட்டி, அந்தத் தயிர் முதலியவற்றை உண்ட கண்ணனாம் திருமாலின் மருகனே, மலையைப் போன்ற வலிமை கொண்ட வில்லைக் காட்டி, சிறந்த நற்றாயிரங்கல் என்னும் துறையில் பாடிக் காட்டிப் புகழ்ந்த கலைகள் கற்றறிந்த பொய்யாமொழிப் புலவரின் பாடலைக் கேட்க தனியாக (அவர் வந்து கொண்டிருந்த) காட்டு வழியில் வந்தவனே*, கையில் சூலாயுதம் ஏந்திய நமனும், மலர்ப் பாணங்களைக் கொண்டிருந்த மன்மதனும் முற்றும் அழிந்து ஓலம் இடும்படி, கோப நெருப்பைச் சொரிந்த தலைவரான சிவபெருமான் மகிழ்ந்து ஏற்கும்படி பிரணவப் பொருளை உபதேசித்து அருளிய பெருமாளே.
* சிவனையே பாடும் பொய்யாமொழிப் புலவர் முருகனைப் பாடாது இருக்க, அவரது ஆணவத்தை அடக்க முருகன் வேலைத் தோளில் தாங்கி வேடனாக வந்து காட்டில் புலவர் தனிவழி செல்கையில் மடக்கி ஆட்கொண்டார்.
பாடல் 1020 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனத்ததனத் தனத்ததனத்
     தனத்ததனத் தனத்ததனத்
          தனத்ததனத் தனத்ததனத் ...... தனதான
இருட்குழலைக் குலைத்துமுடித்
     தெழிற்கலையைத் திருத்தியுடுத்
          திணைக்கயலைப் புரட்டிவிழித் ...... ததிபார 
இழைக்களபப் பொருப்பணிகச்
     செடுத்துமறைத் தழைத்துவளைத்
          திருத்தியகப் படுத்திநகைத் ...... துறவாடி 
பொருட்குமிகத் துதித்திளகிப்
     புலப்படுசித் திரக்கரணப்
          புணர்ச்சிவிளைத் துருக்குபரத் ...... தையர்மோகப் 
புழுத்தொளையிற் றிளைத்ததனைப்
     பொறுத்தருளிச் சடக்கெனஅப்
          புறத்திலழைத் திருத்தியளித் ...... திடுவாயே 
உருத்திரரைப் பழித்துலகுக்
     குகக்கடையப் பெனக்ககனத்
          துடுத்தகரப் படுத்துகிரித் ...... தலமேழும் 
உடுத்தபொலப் பொருப்புவெடித்
     தொலிப்பமருத் திளைப்பநெருப்
          பொளிக்கஇருப் பிடத்தைவிடச் ...... சுரரோடித் 
திரைக்கடலுட் படச்சுழலச்
     செகத்ரையமிப் படிக்கலையச்
          சிரித்தெதிர்கொக் கரித்துமலைத் ...... திடுபாவி 
செருக்கழியத் தெழித்துதிரத்
     திரைக்கடலிற் சுழித்தலையிற்
          றிளைத்தஅயிற் கரக்குமரப் ...... பெருமாளே.
இருண்ட கூந்தலை கலைத்தும் முடித்தும், அழகிய ஆடையை திருத்தமாக அணிந்தும், இரண்டு கண்களையும் புரட்டி விழித்தும், அதிக கனமான ஆபரணங்களையும் கலவைச் சாந்தையும் கொண்ட மலை போன்ற மார்பின் மேல் அணிந்துள்ள கச்சை எடுத்தும் மறைத்தும், அழைப்பு விடுத்தும், வளையல்களைத் திருத்தமாக சரிப்படுத்தியும், சிரித்து உறவு முறைகளைச் சொல்லி உறவாடியும், பொருள் பெறுவதற்கு நிரம்பத் துதித்தும், (பொருளைக் கண்ட பின்) மனம் நெகிழ்ந்தும், தெரிந்த விசித்திரமான புணர்ச்சி வகைகளைக் காட்டி மனதை உருக்கும் பொது மகளிரின் காமத்துக்கு இடமான, புழுவுக்கு இருப்பிடமாகிய, பெண்குறி என்னும் குழியில் இடைவிடாது விளையாடின என் செயலை மன்னித்து வேகமாக அப்புறமான நன்னெறியில் அழைத்து பொருந்த வைத்துக் காப்பாற்றி அருள்வாயாக. ருத்திரர்களைப் பழித்தும், உலகத்தை அழிக்க வந்த யுக முடிவில் தோன்றும் பிரளய நீர் என்று பொங்கி எழுந்து, ஆகாயத்தில் உள்ள நட்சத்திரங்கள் சிதறும்படிச் செய்து, மலைகள் ஏழும் சூழ்ந்துள்ள பொன் மலையாகிய மேரு வெடிபட்டு ஒலி எழுப்பவும், காற்று சோர்வு அடையவும், நெருப்பு ஒளித்துக் கொள்ளவும், தத்தம் இருப்பிடத்தை விட்ட தேவர்கள் ஓடிப் போய் அலை வீசும் கடலுள் பட்டு அலைச்சல் உற, மூன்று உலகங்களும் இவ்வாறு வேதனைப்பட, (அதைக் கண்டு) சிரித்தும் எதிரே நின்று ஆரவாரித்தும் போர் புரிந்த பாவியாகிய (சூரனுடைய) ஆணவம் அழிபட அவனை அடக்கி அலை வீசும் ரத்தக் கடலின் சுழியிடத்தில் (முழுக்கி) மகிழ்ந்து விளையாடிய வேலாயுதத்தை ஏந்திய குமரப் பெருமாளே. 
பாடல் 1021 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனத்ததனத் தனத்ததனத்
     தனத்ததனத் தனத்ததனத்
          தனத்ததனத் தனத்ததனத் ...... தனதான
வினைத்திரளுக் கிருப்பெனவித்
     தகப்படவிற் சலப்பிலமிட்
          டிசைக்குமிடற் குடிற்கிடைபுக் ...... கிடுமாய 
விளைப்பகுதிப் பயப்பளவுற்
     றமைத்ததெனக் கருத்தமைவிற்
          சகப்பொருள்மெய்க் குறப்பருகக் ...... கருதாதே 
எனக்கெதிரொப் பிசைப்பவரெத்
     தலத்துளரெச் சமர்த்தரெனப்
          புறத்துரையிட் டிகழ்ச்சியினுற் ...... றிளையாதுன் 
எழிற்கமலத் திணைக்கழலைத்
     தமிழ்ச்சுவையிட் டிறப்பறஎய்த்
          திடக்கருணைத் திறத்தெனைவைத் ...... தருள்வாயே 
சினத்தைமிகுத் தனைத்துலகத்
     திசைக்கருதிக் கடற்பரவித்
          திடத்தொடதிர்த் தெதிர்த்திடலுற் ...... றிடுசூரன் 
சிரத்துடன்மற் புயத்தகலத்
     தினிற்குருதிக் கடற்பெருகச்
          சிறப்புமிகத் திறத்தொடுகைத் ...... திடும்வேலா 
கனத்தமருப் பினக்கரிநற்
     கலைத்திரள்கற் புடைக்கிளியுட்
          கருத்துருகத் தினைக்குளிசைத் ...... திசைபாடி 
கனிக்குதலைச் சிறுக்குயிலைக்
     கதித்தமறக் குலப்பதியிற்
          களிப்பொடுகைப் பிடித்தமணப் ...... பெருமாளே.
வினைக் கூட்டங்களுக்கு இருப்பிடமாகும் அதிசயமான ஓடத்தில் நீர் கொண்ட குகை வைத்துக் கட்டப்பட்டுள்ள, வலிமை மிக்க உடலினுள் புகுந்துள்ள இந்த மாயம், விளையும் (வாழ் நாள்) பாகம் பயப்படும் கணக்காக அமைக்கப்பட்டதென்ற கருத்தின் நினைவில் உலகத்தில் உள்ள பொருள்களின் மெய்ம்மைக்கு ஏற்ப அனுபவிப்பதற்கு எண்ணாமல், எனக்கு எதிராக நிகரென்று சொல்ல வல்லவர் எந்தப் பூமியில் இருக்கின்றார்கள், எந்தச் சாமர்த்தியசாலிகள் உள்ளார்கள் என்று வெளியே கர்வமாகப் பேசி, பிறரை இகழ்ச்சி கூறியே நான் இளைத்துப் போகாமல், உனது அழகிய தாமரை போன்ற இரண்டு திருவடிகளை தமிழ்ச் சுவை பொருந்தும்படி வாழ்த்தி, நான் சாகாத நிலையைப் பெற்றிட, உனது கருணை வழியில் என்னைச் சேர்ப்பித்து அருள் புரிவாயாக. கோபம் மிகுந்து, உலகின் எல்லாத் திசைகளையும் வெல்லக் கருதி, தன் அதிகாரத்தைக் கடல் அளவும் பரப்பி, வலிமையுடன் யாவரையும் நடுங்கச் செய்து எதிர்த்தவனாகிய சூரனுடைய தலையினின்றும், மல் யுத்தத்துக்கு ஏற்ற அகலமான மார்பிலிருந்தும், ரத்தம் கடல் போல் பெருகி ஓடும்படியாக, புகழ் மிகுந்த சாமர்த்தியத்துடன் வேலைச் செலுத்திய தலைவனே, கனமான தந்தங்களை உடைய யானைக் கூட்டமும், அழகிய மான் கூட்டமும், சொல்லுவதைக் கற்க வல்ல கிளிக் கூட்டமும் தத்தம் உள்ளம் உருக, தினைப்புனத்தில் பொருந்திய முறையில் பண் அமைத்து ராகங்களைப் பாடியவளாகிய, பழச் சுவையையும் மழலை மொழியையும் கொண்ட சிறிய குயில் போன்ற வள்ளியை, அங்கு இருந்த வேடர் கூட்டத்தினர்களின் ஊரில் மகிழ்ச்சியுடன் கரங்களைப் பற்றிய மணவாளப் பெருமாளே. 
பாடல் 1022 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தத்த தனதனன தானத் தான
     தத்த தனதனன தானத் தான
          தத்த தனதனன தானத் தானத் ...... தனதான
முத்து மணிபணிக ளாரத் தாலு
     மொய்த்த மலைமுலைகொ டேவித் தார
          முற்று மிளைஞருயிர் மோகித் தேகப் ...... பொருமாதர் 
முற்று மதிமுகமும் வானிற் காரு
     மொத்த குழல்விழியும் வேய்நற் றோளு
          முத்தி தகுமெனும்வி னாவிற் பாயற் ...... கிடைமூழ்கிப் 
புத்தி கரவடமு லாவிச் சால
     மெத்த மிகஅறிவி லாரைத் தேறி
          பொற்கை புகழ்பெரிய ராகப் பாடிப் ...... புவியூடே 
பொய்க்கு ளொழுகியய ராமற் போது
     மொய்த்த கமலஇரு தாளைப் பூண
          பொற்பு மியல்புதுமை யாகப் பாடப் ...... புகல்வாயே 
பத்து முடியுமத னோடத் தோளிர்
     பத்து மிறையவொரு வாளிக் கேசெய்
          பச்சை முகில்சதுர வேதத் தோடுற் ...... றயனாரும் 
பற்ற வரியநட மாடத் தாளில்
     பத்தி மிகவினிய ஞானப் பாடல்
          பற்று மரபுநிலை யாகப் பாடித் ...... திரிவோனே 
மெத்த அலைகடலும் வாய்விட் டோட
     வெற்றி மயில்மிசைகொ டேகிச் சூரர்
          மெய்க்கு ளுறஇலகு வேலைப் போகைக் ...... கெறிவோனே 
வெற்றி மிகுசிலையி னால்மிக் கோர்தம்
     வித்து விளைபுனமும் வேய்முத் தீனும்
          வெற்பு முறையுமயில் வேளைக் காரப் ...... பெருமாளே.
முத்து, ரத்தினம் இவைகளாலான ஆபரணங்களும் மாலைகளும் நெருங்கி உள்ளதும், மலை போன்றதுமான மார்பைக் கொண்டு, கல்வி நிரம்பிய இளைஞர்களின் உயிரைக் காம இச்சையில் செல்லும்படி தாக்கவல்ல விலைமாதர்களின் பூரண சந்திரன் போன்ற முகமும், ஆகாயத்தில் உள்ள கருமேகம் போன்ற கூந்தலும், கண்களும், மூங்கில் போன்ற அழகிய தோள்களும் முக்தி எனத் தகும் என்கின்ற ஆய்ந்த உணர்ச்சியுடன் படுக்கையில் முழுகி, புத்தியில் வஞ்சக எண்ணம் உலவி, மிக மிக அறிவு இல்லாதவர்களைத் தேர்ந்து எடுத்து, அவர்களுடைய கை, பொன் வீசும் கை என்றும், அவர்கள் புகழில் பெரியோர் என்றும் வரும்படி பாடல்களை அமைத்துப் பாடி, இப்பூமியில் இவ்வாறு பொய்யிலேயே பழகி நடந்து சோர்ந்து போகாமல், மலர்கள் நிறைந்த உனது தாமரைத் திருவடி இணைகளை நான் அடைய, பொலிவு பொருந்திய புதிய வகையில் (உன் புகழைப்) பாடும்படி நல்வார்த்தைகளைக் கூறி அருளுக. (ராவணனுடைய) பத்துத் தலைகளும், அவைகளுடன் அந்தத் தோள்கள் இருபதும் பாழ்படும்படி ஒப்பற்ற ஒரு பாணத்தினாலேயே வீழ்த்திய பச்சை நிறத்தன் திருமாலும், நான்கு வேதங்களுடன் திகழும் பிரம தேவனும் பற்றுதற்கு (கண்டு களிக்க) அரிதான, ஊர்த்துவ நடனமாடின அந்தச் சிவபிரானின் திருவடியில் பக்தி ரசம் இனிதாக விளங்கும் ஞானப் பாடல்களை, இப்பூமியில் உள்ளவர்களின் இயல்பான வழக்க முறையில் (தலங்கள் தோறும் சென்று) பாடித் திரிந்த திருஞான சம்பந்தனே, மிகவும் அலைகளை வீசும் கடலும் வாய்விட்டு ஓலமிட்டுப் புரள, வெற்றி மயிலின் மேல் ஏறி (போர்க்களத்துக்குச்) சென்று, சூரனின் உடலுக்குள் பாய, ஒளி வீசும் வேலாயுதத்தைப் புகும்படி செலுத்தியவனே, வெற்றி தரக் கூடிய சிறப்பினைக் கொண்ட விற்போரில் வல்லவர்களாகிய வேடர்களுடைய (தினை) விதைத்து விளையும் வயலிலும் மூங்கில்கள் முத்துக்களைத் தரும் வள்ளிமலையிலும் வாசம் செய்யும் மயிலைப் போன்ற வள்ளியிடம் காவல் காத்த பெருமாளே. 
பாடல் 1023 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தத்த தனதனன தானத் தான
     தத்த தனதனன தானத் தான
          தத்த தனதனன தானத் தானத் ...... தனதான
விட்ட புழுகுபனி நீர்கத் தூரி
     மொய்த்த பரிமளப டீரச் சேறு
          மிக்க முலையைவிலை கூறிக் காசுக் ...... களவேதான் 
மெத்த விரியுமலர் சேர்கற் பூர
     மெத்தை மிசைகலவி யாசைப் பாடு
          விற்கு மகளிர்சுரு ளோலைக் கோலக் ...... குழையோடே 
முட்டி யிலகுகுமிழ் தாவிக் காமன்
     விட்ட பகழிதனை யோடிச் சாடி
          மொய்க்கு மளியதனை வேலைச் சேலைக் ...... கயல்மீனை 
முக்கி யமனையட மீறிச் சீறு
     மைக்கண் விழிவலையி லேபட் டோடி
          முட்ட வினையன்மரு ளாகிப் போகக் ...... கடவேனோ 
செட்டி யெனுமொர்திரு நாமக் கார
     வெற்றி யயில்தொடுப்ர தாபக் கார
          திக்கை யுலகைவல மாகப் போகிக் ...... கணமீளுஞ் 
சித்ர குலகலப வாசிக் கார
     தத்து மகரசல கோபக் கார
          செச்சை புனையுமண வாளக் கோலத் ...... திருமார்பா 
துட்ட நிருதர்பதி சூறைக் கார
     செப்பு மமரர்பதி காவற் கார
          துப்பு முகபடக போலத் தானக் ...... களிறூரும் 
சொர்க்க கனதளவி நோதக் கார
     முத்தி விதரணவு தாரக் கார
          சுத்த மறவர்மகள் வேளைக் காரப் ...... பெருமாளே.
விட்டுக் கலந்த புனுகு சட்டம், பன்னீர், கஸ்தூரி இவைகள் சேர்ந்த நறு மணம் உள்ள சந்தனச் சேறு நிரம்ப அப்பியுள்ள மார்பகத்தை விலை பேசி விற்று, கிடைத்த பொருளுக்குத் தக்கவாறு, நன்றாக விரிக்கப்பட்ட மலர் தூவினதும், கற்பூர மணம் கொண்டதுமான மெத்தைப் படுக்கையின் மீது புணர்ச்சி ஆசை விருப்பத்தை விற்கின்ற பொது மகளிர் (அணிந்துள்ள) சுருண்ட காதோலையையும் அழகிய குண்டலங்களையும் தாக்கி, விளங்கும் குமிழம் பூ போன்ற மூக்கைத் தாண்டி மன்மதன் எய்த மலர்ப் பாணங்களை ஓடும்படி மோதி, நெருங்கி மொய்க்கும் வண்டையும், வேலாயுதத்தையும், சேல் மீனையும், கயல் மீனையும் (தனக்கு இணையாகாமையால்) கீழ்ப்படச் செய்து, யமனும் வருந்தும்படி (கொல்லும் திறத்தில்) மேம்பட்டுச் சீறி விளங்குவதும், மை பூசிய கண் பார்வை என்னும் வலையில் சிக்கி அந்தப் புன்னெறியில் ஓடி முட்டிக் கொள்ளும் தீவினைகளுக்கு ஈடான நான் மயக்க அறிவு கொண்டவனாய் அழியக் கடவேனோ? செட்டி என்கிற அழகிய பெயரைக் கொண்டவனே, வெற்றி வேலைச் செலுத்தும் புகழைக் கொண்டவனே, (எட்டுத்) திசையளவும் உலகத்தை வலம் வந்து ஒரு கணப் பொழுதில் மீண்டு வந்த, அழகிய கற்றையாகிய தோகை நிறைந்த, குதிரையாகிய மயிலை உடையவனே, அலை புரளுவதும் மகர மீன்களைக் கொண்டதுமான கடலைக் கோபித்தவனே, வெட்சி மாலையை அணிந்துள்ள மணவாளக் கோலத்தனாகிய திரு மார்பனே, துஷ்டனாகிய அசுரர்கள் தலைவனான சூரனைச் சூறை ஆடியவனே, (உன்னைப்) புகழ்ந்து நின்ற தேவேந்திரனுக்கு காவற்காரனாய் உதவியவனே, பொலிவு உள்ள முகத்தில் மேலணியும், அலங்காரத் துணியைக் கொண்டதும், கன்ன மதத்தைக் கொண்டதுமான (ஐராவதம்) என்னும் யானையின் மீது உலா வரும் இந்திரனுடைய விண்ணுலகில் உள்ள பெருத்த சேனைகள் வியக்கும் தேவ சேனாதிபதியே, முக்திப் பேற்றை அளிக்கும் கொடைத் திறம் கொண்டவனே, பரிசுத்தமான வேடர்களின் மகளாகிய வள்ளியின் காவற் பணியை தக்க வேளையில் பூண்ட பெருமாளே. 
பாடல் 1024 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தானதன தத்த தானதன தத்த
     தானதன தத்த ...... தனதான
ஏடுமல ருற்ற ஆடல்மத னுய்க்கு
     மேவதுப ழிக்கும் ...... விழியாலே 
ஏதையும ழிக்கு மாதர்தம யக்கி
     லேமருவி மெத்த ...... மருளாகி 
நாடுநகர் மிக்க வீடுதன மக்கள்
     நாரியர்கள் சுற்ற ...... மிவைபேணா 
ஞானவுணர் வற்று நானெழுபி றப்பும்
     நாடிநர கத்தில் ...... விழலாமோ 
ஆடுமர வத்தை யோடியுடல் கொத்தி
     யாடுமொரு பச்சை ...... மயில்வீரா 
ஆரணமு ரைக்கு மோனகவி டத்தில்
     ஆருமுய நிற்கு ...... முருகோனே 
வேடுவர்பு னத்தில் நீடுமித ணத்தில்
     மேவியகு றத்தி ...... மணவாளா 
மேலசுர ரிட்ட தேவர்சிறை வெட்டி
     மீளவிடு வித்த ...... பெருமாளே.
இதழ்களை உடைய மலர்ப் பாணங்களைக் கொண்டு போர் புரியும் மன்மதன் செலுத்தும் அம்பையும் தமது கொடுமைத்திறத்தால் வென்று பழிக்கவல்ல கண்களாலே, எல்லாப் பொருள்களையும் அழிக்கவல்ல மாதர்களின் மயக்கு என்பதிலே நான் சிக்கி, மிகவும் காம மயக்கம் பூண்டு, என் நாட்டையும், நகரையும், நிறைந்த வீடுகளையும், செல்வத்தையும், பெண்களையும், குழந்தைகளையும், சுற்றத்தாரையும் பேணி நின்று விரும்பி, ஞான உணர்ச்சியே இல்லாமல், ஏழுவகையான பிறப்புக்களையே* தேடி நின்று நரகத்தில் விழலாமோ? படம் எடுத்து ஆடும் பாம்பைக் கண்டதும் ஓடி, அதன் உடலைக் கொத்தி நடனம் புரிகின்ற ஒப்பற்ற பச்சை மயில் வீரனே, வேதங்கள் கூறும் மெளனத்தை உட்கொண்ட நிலையில் சகல உயிர்களும் வாழ நிற்கின்ற முருகனே, வேடர்களின் தினைப்புனத்தில் நீண்ட பரண்மீது வீற்றிருந்த குறத்தி வள்ளியின் மணவாளனே, முன்பு அசுரர்கள் காவலில் இட்ட தேவர்களின் சிறையை நீக்கி, அத்தேவர்களை மீள்வித்த பெருமாளே. 
* ஏழு வகையான பிறப்பு:தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர் வாழ்வன, தாவரம்.
பாடல் 1025 - பொதுப்பாடல்கள் 
ராகம் - பீம்பளாஸ் 
தாளம் - ஆதி
தானதன தத்த தானதன தத்த
     தானதன தத்த ...... தனதான
சீதமலம் வெப்பு வாதமிகு பித்த
     மானபிணி சுற்றி ...... யுடலூடே 
சேருமுயிர் தப்பி யேகும்வண மிக்க
     தீதுவிளை விக்க ...... வருபோதில் 
தாதையொடு மக்கள் நீதியொடு துக்க
     சாகரம தற்கு ...... ளழியாமுன் 
தாரணி தனக்கு ளாரண முரைத்த
     தாள்தர நினைத்து ...... வரவேணும் 
மாதர்மய லுற்று வாடவடி வுற்று
     மாமயிலில் நித்தம் ...... வருவோனே 
மாலுமய னொப்பி லாதபடி பற்றி
     மாலுழலு மற்ற ...... மறையோர்முன் 
வேதமொழி வித்தை யோதியறி வித்த
     நாதவிறல் மிக்க ...... இகல்வேலா 
மேலசுர ரிட்ட தேவர்சிறை வெட்டி
     மீளவிடு வித்த ...... பெருமாளே.
சீதபேதி, காய்ச்சல், வாதம், மிகுந்துவரும் பித்தம் என்ற நோய்களெல்லாம் சூழ்ந்துள்ள இந்த உடலினுள் இருக்கும் உயிர் பிரிந்து போகும்படி, மிகுந்த வலி ஏற்படும் சமயத்தில், என் தந்தையும், மக்களும் உலக நியதிப்படி துயரக்கடலுள் மூழ்கிப்போய் அழியுமுன்பு, இந்த உலகத்தில் வேதங்கள் போற்றுகின்ற உனது திருவடிகளைத் தந்தருள எண்ணி நீ என்முன் வந்தருள வேண்டும். (ஜீவாத்மாக்காளாகிய) பெண்களெல்லாம் (பரமாத்மாவாகிய) உன்னழகில் மயங்கி காதலுற்று வாடும்படி, அழகிய திருவுருவக் காட்சிதந்து சிறந்த மயில்மீது நாள்தோறும் வருபவனே, திருமாலுக்கும், பிரமனுக்கும், ஒப்பில்லாதபடி தவநிலையில் உன் மீது அன்பு வைத்து, அன்பில் மயங்கித் திரியும் மற்றைய வேத சிரேஷ்டர்களுக்கும் முன்னால் பிரணவ மந்திரத்தின் உண்மைப் பொருளை உபதேசித்துக் கற்பித்த குருநாதா, வீரமிக்க வலிமை வாய்ந்த வேலை உடையவனே, முன்னாள் அசுரர்கள் அடைத்துவைத்த தேவர்களின் சிறைகளை உடைத்தெறிந்து தேவர்கள் மீண்டும் அமரநாட்டுக்குச் செல்லும்படி விடுதலை செய்வித்த பெருமாளே. 
பாடல் 1026 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தானதன தத்த தானதன தத்த
     தானதன தத்த ...... தனதான
தோடுபொரு மைக்க ணாடவடி வுற்ற
     தோர்தனம சைத்து ...... இளைஞோர்தம் 
தோள்வலிம னத்து வாள்வலியு ழக்கு
     தோகையர்ம யக்கி ...... லுழலாதே 
பாடலிசை மிக்க ஆடல்கொடு பத்தி
     யோடுநினை பத்தர் ...... பெருவாழ்வே 
பாவவினை யற்று னாமநினை புத்தி
     பாரிலருள் கைக்கு ...... வரவேணும் 
ஆடலழ கொக்க ஆடுமயி லெற்றி
     ஆண்மையுட னிற்கு ...... முருகோனே 
ஆதியர னுக்கு வேதமொழி முற்றி
     யார்வம்விளை வித்த ...... அறிவோனே 
வேடைமய லுற்று வேடர்மக ளுக்கு
     வேளையென நிற்கும் ...... விறல்வீரா 
மேலசுர ரிட்ட தேவர்சிறை வெட்டி
     மீளவிடு வித்த ...... பெருமாளே.
காதில் அணியும் தோடுகளைத் தாக்கும், மை பூசிய, கண்கள் அசைய, அழகுள்ள, ஒப்பற்ற மார்பகங்களை அசைத்து இளைஞர்களுடைய தோள் வலிமையையும் மனத்தின் ஒளி வாய்ந்த வலிமையையும் கலக்குகின்ற மயில் போன்ற மாதர்களின் காம மயக்கத்தில் நான் அலைவுறாமல், பாடல், இசை, மிகுந்த ஆடல் இவைகளைக் கொண்டு பக்தியுடன் உன்னை நினைக்கின்ற பக்தர்களின் பெரிய செல்வமே, என் பாவ வினைகள் தொலைந்து போய், உனது திரு நாமங்களையே நினைக்கும்படியான புத்தியை இந்தப் பூமியில் எனக்குத் தந்தருள வரவேணும். ஆடலின் அழகான தாளத்துக்கு ஏற்ப நடனம் செய்யும் மயிலை வேகமாகச் செலுத்தி வீரத்துடன் நிற்கும் முருகனே, ஆதி மூர்த்தியாகிய சிவ பெருமானுக்கு வேதங்களை முழுவதுமாய் உபதேசித்து, மகிழ்ச்சியை ஊட்டிய அறிஞனே, காம நோய் மோகம் கொண்டு, வேடர்கள் பெண்ணாகிய வள்ளிக்கு காவல் வேலையாளாக நின்ற வெற்றி வீரனே, முன்பு அசுரர்கள் இட்ட தேவர்களின் சிறையை வெட்டி, அவர்கள் மீளும்படி விடுவித்த பெருமாளே. 
பாடல் 1027 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தானதன தத்த தானதன தத்த
     தானதன தத்த ...... தனதான
தோதகமி குத்த பூதமருள் பக்க
     சூலைவலி வெப்பு ...... மதநீர்தோய் 
சூழ்பெருவ யிற்று நோயிருமல் குற்று
     சோகைபல குட்ட ...... மவைதீரா 
வாதமொடு பித்த மூலமுடன் மற்று
     மாயபிணி சற்று ...... மணுகாதே 
வாடுமெனை முத்தி நீடியப தத்தில்
     வாழமிக வைத்து ...... அருள்வாயே 
காதல்மிக வுற்று மாதினைவி ளைத்த
     கானககு றத்தி ...... மணவாளா 
காசினிய னைத்து மோடியள விட்ட
     கால்நெடிய பச்சை ...... மயில்வீரா 
வேதமொழி மெத்த வோதிவரு பத்தர்
     வேதனைத விர்க்கு ...... முருகோனே 
மேலசுர ரிட்ட தேவர்சிறை வெட்டி
     மீளவிடு வித்த ...... பெருமாளே.
வஞ்சகம் மிக்குள்ள (மண், நீர், தீ, காற்று, விண் என்னும்) ஐந்து பூதங்களின் மயக்கத்தால் ஏற்படும் விலாப் பக்கத்தில் உண்டாகும் சூலை நோய், வலிப்பு முதலிய நோய்கள், சுரம், நீர் சம்பந்தமான நோய் சேர்ந்து, எங்கும் பரவும் பெரு வயிற்று நோய், இருமல், தலைக் குத்தல், இரத்தக் குறைவு, குஷ்ட நோய்கள், தீர்க்க முடியாத வாயு சம்பந்தமான நோய்கள், பித்த நோய், மூல நோய் பின்னும் பல வகையான நோய்கள் கொஞ்சமேனும் என்னை அணுகாமல், வருந்தி நிற்கும் என்னை முக்தி நீடித்து விளங்கும் உனது திருவடியில் நான் வாழும்படியாக நன்கு வைத்து அருள்புரிவாயாக. காதல் மிகக் கொண்டு நல்ல தினை விளைவித்த காட்டுக் குறத்தியாகிய வள்ளியின் மணவாளனே, உலகம் முழுமையும் ஓடி (அதன் சுற்றளவை) அளவிட்டு வந்த, நீண்ட கால்களை உடைய பச்சை மயில் வீரனே, வேத மொழிகளை எப்போதும் ஓதும் அடியார்களின் துயரங்களைத் தீர்க்கும் முருகனே, முன்னாள் அசுரர்கள் அடைத்துவைத்த தேவர்களின் சிறைகளை உடைத்தெறிந்து தேவர்கள் மீண்டும் அமரநாட்டுக்குச் செல்லும்படி விடுதலை செய்வித்த பெருமாளே. 
பாடல் 1028 - பொதுப்பாடல்கள் 
ராகம் - சங்கராபரணம் 
தாளம் - அங்கதாளம் - 10 1/2 
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2, தகதிமி-2, தகதிமிதக-3
தான தான தானான தானத் ...... தனதான
காதி மோதி வாதாடு நூல்கற் ...... றிடுவோருங் 
காசு தேடி யீயாமல் வாழப் ...... பெறுவோரும் 
மாதுபாகர் வாழ்வே யெனாநெக் ...... குருகாரும் 
மாறி லாத மாகால னூர்புக் ...... கலைவாரே 
நாத ரூப மாநாத ராகத் ...... துறைவோனே 
நாக லோக மீரேழு பாருக் ...... குரியோனே 
தீதி லாத வேல்வீர சேவற் ...... கொடியோனே 
தேவ தேவ தேவாதி தேவப் ...... பெருமாளே.
எதிர்த்துப் பேசியும், தாக்கியும், வாதம் செய்யவல்ல நூல்களைக் கற்றவர்களும், பொருளைத் தேடிவைத்து ஒருவருக்கும் கொடாது வாழ்க்கை நடத்துபவர்களும், பார்வதிபாகன் சிவபிரானது செல்வமே என்று உன்னை நினைந்து உள்ளம் உருகாதவர்களும், தர்மநெறி மாறாத பெரும் யமதர்மபுரிக்கு புகுந்து பிறந்து புகுந்து அலைச்சல் உறுவார்கள். இசை உருவத்தோனே, மகாதேவர் சிவனின் உள்ளத்தில் வீற்றிருப்போனே, சுவர்க்க லோகம் ஆகிய பதினான்கு உலகங்களுக்கும்* உரிமைக்காரனாக விளங்குவோனே, தீமையே செய்யாத வேல் ஏந்தும் வீரனே, சேவலைக் கொடியாக உயர்த்தியவனே, தேவ தேவனே, தேவாதி தேவர்களுக்கெல்லாம் பெருமாளே. 
* 14 உலகங்கள் பின்வருமாறு:பூலோகம், புவலோகம், சுவலோகம், ஜனலோகம், தபோலோகம், மகாலோகம், சத்தியலோகம் (7 மேலுலகங்கள்).அதலம், விதலம், சுதலம், தராதலம், மகாதலம், ரசாதலம், பாதாளம் (7 கீழுலகங்கள்).
பாடல் 1029 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தான தான தானான தானத் ...... தனதான
கூறு மார வேளார வாரக் ...... கடலாலே 
கோப மீது மாறாத கானக் ...... குயிலாலே 
மாறு போலு மாதாவின் வார்மைப் ...... பகையாலே 
மாது போத மாலாகி வாடத் ...... தகுமோதான் 
ஏறு தோகை மீதேறி யாலித் ...... திடும்வீரா 
ஏழு லோகம் வாழ்வான சேவற் ...... கொடியோனே 
சீறு சூரர் நீறாக மோதிப் ...... பொரும்வேலா 
தேவ தேவ தேவாதி தேவப் ...... பெருமாளே.
புகழ் பெற்ற மார வேளாகிய மன்மதனாலும், பேரொலி செய்யும் கடலாலும், என் மீது கோபம் நீங்காத, இசை பாடும், குயிலாலும், என் மீது விரோதம் பூண்டவள் போலுள்ள தாயின் நியாயமான பகையாலும், பெண்ணாகிய நான் அறிவு மயக்கம் கொண்டு வாடுதல் நியாயமாகுமோ? அழகிய தோகை மயிலின் மேல் ஏறி வீராவேசம் செய்யும் வீரனே, ஏழு உலகங்களும் வாழ்வதற்கு உதவும் சேவற் கொடியோனே, கோபித்து எழுந்த சூரர்கள் பொடியாகும்படி தாக்கி சண்டை செய்த வேலனே, தேவ தேவனே, தேவாதி தேவர்களுக்கும் பெருமாளே. 
இந்தப் பாடல் அகப் பொருள் துறையைச் சார்ந்தது.புலவர் தம்மையே நாயகியாக எண்ணிப் பாடியது.மாரன், கடல், குயில் கூவுதல், தாயின் வசை முதலியவை தலைவனின் பிரிவுத் துயரைக் கூட்டும் பொருள்கள்.
பாடல் 1030 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ஹிந்தோளம் 
தாளம் - அங்கதாளம் - 10 1/2 
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2, தகதிமி-2, தகதிமிதக-3
தான தான தானான தானத் ...... தனதான
பேர வாவ றாவாய்மை பேசற் ...... கறியாமே 
பேதை மாத ராரோடு கூடிப் ...... பிணிமேவா 
ஆர வார மாறாத நூல்கற் ...... றடிநாயேன் 
ஆவி சாவி யாகாமல் நீசற் ...... றருள்வாயே 
சூர சூர சூராதி சூரர்க் ...... கெளிவாயா 
தோகை யாகு மாரா கிராதக் ...... கொடிகேள்வா 
தீர தீர தீராதி தீரப் ...... பெரியோனே 
தேவ தேவ தேவாதி தேவப் ...... பெருமாளே.
பேராசை நீங்காத நிலையில் இருந்து, உண்மை பேசுதற்குத் தெரியாமல், அறிவீனர்களாகிய பெண்களுடன் நான் சேர்ந்து, நோய்களை அடைந்து, ஆடம்பரம் நீங்காத சமயக் கூச்சலுக்கு இடம்தரும் நூல்களைப் படித்து அடிமை நாயான எனது உயிர் வீண் படாமல் நீ சிறிது அருள் புரிவாயாக. சூரர்களுக்குச் சூரனான சூரபத்மன் முதலியோருக்கு எளிதாகக் காட்சி கொடுத்தவனே, மயில் வாகனனே, குமாரமூர்த்தியே, வேடர் குலக்கொடியாம் வள்ளியின் கணவனே, மகா தீரம் உடையோய், ¨தரியமாதி மேம்பட்ட குணங்களில் உறுதி வாய்ந்த பெரியோனே, தேவதேவனே, தேவாதிதேவர்களுக்கெல்லாம் பெருமாளாய் விளங்குபவனே. 
பாடல் 1031 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தான தான தனத்தம் தான தான தனத்தம்
     தான தான தனத்தம் ...... தனதான
காதி லோலை கிழிக்குங் காம பாண விழிக்குங்
     கான யாழின் மொழிக்கும் ...... பொதுமாதர் 
காணொ ணாத இடைக்கும் பூணு லாவு முலைக்குங்
     காதில் நீடு குழைக்கும் ...... புதிதாய 
கோதி லாத கருப்பஞ் சாறு போல ருசிக்குங்
     கோவை வாய முதுக்குந் ...... தணியாமல் 
கூரு வேனொ ருவர்க்குந் தேடொ ணாத தொரர்த்தங்
     கூடு மாறொ ருசற்றுங் ...... கருதாயோ 
பூதி பூஷ ணர்கற்பின் பேதை பாகர் துதிக்கும்
     போத தேசி கசக்ரந் ...... தவறாதே 
போக பூமி புரக்குந் த்யாக மோக குறப்பெண்
     போத ஆத ரவைக்கும் ...... புயவீரா 
சோதி வேலை யெடுத்தன் றோத வேலை யில்நிற்குஞ்
     சூத தாரு வும்வெற்பும் ...... பொருகோவே 
சூரர் சேனை யனைத்துந் தூளி யாக நடிக்குந்
     தோகை வாசி நடத்தும் ...... பெருமாளே.
விலை மகளிர் காதில் அணிந்துள்ள ஓலை வரைக்கும் பாய்ந்து கிழிக்கின்றனவும், மன்மதனின் அம்பை ஒத்தவையுமான கண்களுக்கும், இசையை எழுப்பும் யாழ் போன்ற பேச்சுக்கும், வேசிகளின் பார்க்க அரிதான நுண்ணிய இடுப்புக்கும், ஆபரணங்கள் அசைந்தாடும் மார்பகத்துக்கும், காதில் நீண்டு தொங்கும் குண்டலங்களுக்கும், அதிசயம் விளைவிக்கத் தக்க, (சக்கை, தோல் முதலிய) குற்றம் இல்லாத கரும்பின் சாறு போல இனிக்கும் கொவ்வைப் பழம் போன்ற சிவந்த வாயிடத்து ஊறும் ஊறலுக்கும் அடங்காமல், (காமம்) மிக்கெழுதலைக் கொண்டவனாகிய நான் யாராலும் தேடிக் காண முடியாததான ஒப்பற்ற (பேரின்பப்) பொருளைக் கண்டு அடையும்படி, ஒரு சிறிதளவாவது நீ மனதில் நினைக்க மாட்டாயோ? விபூதியை அலங்காரமாகக் கொள்ளுபவர், கற்பொழுக்கம் நிறைந்த பேதையாகிய பார்வதி தேவியைப் பாகத்தில் கொண்டவர் ஆகிய சிவபெருமான் போற்றும் ஞான தேசிகனே, விதித்த நீதியில் தவறாத வண்ணம் சுவர்க்க லோகத்தைக் காத்தருளும் தியாக சீலனே, உன் ஆசைக்கு உரிய குறப் பெண்ணாகிய வள்ளி நின்பால் வந்து அடைய அன்பு வைத்த புய வீரனே, பேரொளி வீசும் வேலாயுதத்தை எடுத்து, அன்று அலை வீசும் கடலில் (மறைந்து) நிற்கும் மாமரமாகிய சூரனுடனும், (அவனுக்கு அரணாயிருந்த) எழு கிரியுடனும் சண்டை செய்த தலைவனே, சூரர்களுடைய படை யாவும் பொடியாகும்படி நடனம் செய்யும் மயிலாகிய குதிரையை நடத்திச் சென்ற பெருமாளே. 
பாடல் 1032 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தான தான தனத்தம் தான தான தனத்தம்
     தான தான தனத்தம் ...... தனதான
காரு லாவு குழற்குங் கூரி தான விழிக்குங்
     காதல் பேணு நுதற்குங் ...... கதிர்போலுங் 
காவி சேர்ப வளத்தின் கோவை வாயி தழுக்குங்
     காசு பூணு முலைக்குங் ...... கதிசேரா 
நேரி தான இடைக்குஞ் சீத வார நகைக்கும்
     நேரி லாத தொடைக்குஞ் ...... சதிபாடும் 
நீத மான அடிக்கும் மாலு றாத படிக்குன்
     னேய மோடு துதிக்கும் ...... படிபாராய் 
பார மேரு வளைக்கும் பாணி யார்ச டையிற்செம்
     பாதி சோம னெருக்கும் ...... புனைவார்தம் 
பால காஎ னநித்தம் பாடு நாவ லர்துக்கம்
     பாவ நாச மறுத்தின் ...... பதமீவாய் 
சோரி வாரி யிடச்சென் றேறி யோடி யழற்கண்
     சூல காளி நடிக்கும் ...... படிவேலாற் 
சூரர் சேனை தனைக்கொன் றார வார மிகுத்தெண்
     தோகை வாசி நடத்தும் ...... பெருமாளே.
(வேசையர்களின்) மேகம் போன்ற கூந்தலுக்கும், கூர்மை வாய்ந்த கண்களுக்கும், ஆசை விருப்பத்தை எழச் செய்யும் நெற்றிக்கும், ஒளிக் கிரணம் போல் பிரகாசம் கொண்டதாய், செந்நிறம் கொண்ட பவளத்தை ஒப்பதாய், கொவ்வைப் பழம் போல் சிவப்பான வாயிதழுக்கும், தங்கக் காசுமாலை அணிந்துள்ள மார்புக்கும், உறுதித் தன்மை இல்லாது (ஒடிவது போல) நுண்ணியதான இடுப்புக்கும், குளிர்ச்சியையும் அன்பையும் காட்ட வல்ல புன்சிரிப்புக்கும், நிகரில்லாத தொடைக்கும், தாளக் கட்டுடன் ஜதிகளைக் காட்டும் தகுதியைக் கொண்டதான பாதத்துக்கும், நான் மோக மயக்கம் கொள்ளாதபடிக்கு, உன் மேல் அன்போடு துதிக்கும்படி என்னைக் கண் பார்த்து அருள்வாய். கனத்த மேரு மலையை வில்லாய் வளைத்த திருக்கைகளை உடையவரும், சடையிலே செம்மை வாய்ந்த பிறைச் சந்திரனையும், எருக்க மலரையும் அணிந்துள்ளவரும் ஆகிய சிவபெருமானுடைய மகனே என்று நாள் தோறும் துதித்துப் பாடும் புலவர்களின் துக்கத்தையும் பாபத்தையும் தொலைத்து, இனிமை தரும் திருவடிகளைத் தருவாயாக. ரத்தம் கடல் போல் பெருக, (போர்க்களத்தில்) போய்ச் சேர்ந்து ஓடி, நெருப்புப் போன்ற கண்களை உடைய, சூலம் ஏந்திய காளி தேவி நர்த்தனம் ஆடும்படியாக, வேலாயுதத்தால் அசுரர்களின் படைகளைக் கொன்று, போரொலி மிகவும் பெருக, மதிக்கத் தக்க மயிலாகிய குதிரையை நடத்தும் பெருமாளே. 
பாடல் 1033 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தானத்த தானத்த தானத்த தானத்த
     தானத்த தானத்த ...... தனதான
தோடுற்ற காதொக்க நீடுற்ற போருற்ற
     தோய்மைக்க ணால்மிக்க ...... நுதலாலே 
தோள்வெற்பி னால்விற்கை வேளுக்கு மேன்மக்கள்
     சோர்கைக்கு மால்விற்கு ...... மடவார்தம் 
ஊடற்கு ளேபுக்கு வாடிக்க லாமிக்க
     ஓசைக்கு நேசித்து ...... உழலாதே 
ஊர்பெற்ற தாய்சுற்ற மாயுற்ற தாள்பற்றி
     யோதற்கு நீசற்று ...... முணர்வாயே 
வேடர்க்கு நீள்சொர்க்கம் வாழ்விக்க வோர்வெற்பின்
     மீதுற்ற பேதைக்கொர் ...... மணவாளா 
வேழத்தி னாபத்தை மீள்வித்த மாலொக்க
     வேதத்தி லேநிற்கு ...... மயனாருந் 
தேடற்கொ ணாநிற்கும் வேடத்தர் தாம்வைத்த
     சேமத்தி னாமத்தை ...... மொழிவோனே 
தீதற்ற நீதிக்கு ளேய்பத்தி கூர்பத்தர்
     சேவிக்க வாழ்வித்த ...... பெருமாளே.
தோடு அணிந்துள்ள காது வரை நீண்டுள்ளதும், போர் செய்வதற்குச் சித்தமாய் உள்ளதுமான மை தீட்டிய கண்ணாலும், சிறந்த நெற்றியாலும், மலை போன்ற தோள்களாலும், (கரும்பு) வில்லை ஏந்திய மன்மதனுடைய பாணங்களாலும், மேலான குணங்களை உடைய மக்களும் மனம் சோர்ந்து போகும்படி காம ஆசையை விற்கின்ற விலைமாதர்களின், ஊடல் பிணக்கில் சிக்கி வாட்டமுற, சண்டைக் கோபத்தால் மிக்கெழுந்த கூச்சல் சப்தத்தை விரும்பி (நான்) அலையாமல், எனது ஊர், ஈன்றெடுத்த தாய், எனது உறவினர் இவை எல்லாமாய் உள்ள (உனது) திருவடியைக் கெட்டியாகப் பிடித்து, போற்றித் துதிக்க நீ சிறிது எனக்கு உணர்த்த மாட்டாயோ? வேடர்களையும் பெரிய சொர்க்கப் பூமியில் வாழ்விக்க விரும்பி சிறந்த வள்ளி மலையின் மேல் இருந்த பெண்ணாகிய வள்ளிக்கு ஒப்பற்ற மணவாளனே, யானையாகிய கஜேந்திரனை அதற்குற்ற ஆபத்திலிருந்து விடுவித்த திருமாலும், அவருடன் வேதத்தையே ஓதி நிற்கும் பிரமனும், (முடியையும் அடியையும்) தேடுதற்கு முடியாத எல்லையில் நிற்கும் அழல் உருவம் கொண்ட வேடத்தினராகிய சிவபெருமான் தாம் வைத்துள்ள சேமிப்புப் பொருளாகிய ஐந்தெழுத்து நாமத்தின் (நமசிவாய) பெயரையும், புகழையும் (சம்பந்தராக வந்து) எடுத்து மொழிந்தவனே, குற்றம் இல்லாத நீதி நெறியில் பொருந்திய பக்தி சிறந்த அடியார்கள் போற்றி வணங்க, அவர்களை வாழ்வித்த பெருமாளே. 
பாடல் 1034 - பொதுப்பாடல்கள் 
ராகம் - சுருட்டி 
தாளம் - சதுஸ்ர த்ருபுடை - கண்டநடை - 20 
நடை- தகதகிட
தானத்த தானத்த தானத்த தானத்த
     தானத்த தானத்த ...... தனதான
தோலத்தி யாலப்பி னாலொப்பி லாதுற்ற
     தோளுக்கை காலுற்ற ...... குடிலூடே 
சோர்வற்று வாழ்வுற்ற கால்பற்றி யேகைக்கு
     வேதித்த சூலத்த ...... னணுகாமுன் 
கோலத்தை வேலைக்கு ளேவிட்ட சூர்கொத்தொ
     டேபட்டு வீழ்வித்த ...... கொலைவேலா 
கோதற்ற பாதத்தி லேபத்தி கூர்புத்தி
     கூர்கைக்கு நீகொற்ற ...... அருள்தாராய் 
ஆலத்தை ஞாலத்து ளோர்திக்கு வானத்த
     ராவிக்கள் மாள்வித்து ...... மடியாதே 
ஆலித்து மூலத்தொ டேயுட்கொ ளாதிக்கு
     மாம்வித்தை யாமத்தை ...... யருள்வோனே 
சேலொத்த வேலொத்த நீலத்து மேலிட்ட
     தோதக்கண் மானுக்கு ...... மணவாளா 
தீதற்ற நீதிக்கு ளேய்பத்தி கூர்பத்தர்
     சேவிக்க வாழ்வித்த ...... பெருமாளே.
தோலாலும் எலும்பினாலும் நீராலும் ஒப்பில்லாத வகையில் அமைந்துள்ள தோள், கை, கால் இவை கூடிய குடிசையாகிய இந்த உடலில் தளர்ந்து போகாமல் நான் வாழ்ந்திருந்த காலத்தில் (உனது திருவடியைப்) பிடித்து நான் வாழ்நாளைச் செலுத்துதற்கு விடாமல் என் மேல் மாறு கொண்ட, திரிசூலத்தை ஏந்திய, யமன் என்னை நெருங்கிவரும் முன்பாக, தனது உருவை கடலுக்குள் (மாமரமாய்) மாற்றுவித்த சூரன் தன் குலத்தாருடன் அழிந்து விழச் செய்து கொன்ற வேலாயுதனே, குற்றமற்ற உனது திருவடியில் பக்தி மிகுந்த புத்தி நுண்மை அடைவதற்கு நீ வெற்றி தரும் திருவருளை எனக்குத் தந்தருள்க. ஆலகால விஷத்தை பூமியில் உள்ளவர்களும் பல திசைகளில் இருந்த விண்ணோர்களும் தத்தம் உயிர் மாண்டு இறந்து படாமல், களித்து நடனமாடி அடியோடு (முழு விஷத்தையும்) உட்கொண்ட ஆதி மூர்த்தியாகிய சிவபெருமானுக்கும் ஏற்றதான உண்மை ஞானமாகிய அந்த வேதப் பொருளை உபதேசித்தவனே, சேல் மீன் போன்றதும், வேலாயுதம் போன்றதும், நீலோற்பல மலரைவிடச் சிறந்ததுமான கண்களைக் கொண்டு உனக்கு விரக தாபம் தந்த மான் போன்ற வள்ளிக்கு மணவாளனே, குற்றம் இல்லாத நீதி வழியில் பொருந்திய பக்தி மிக்க அடியார்கள் உன்னைப் போற்ற, அவர்களை வாழ்வித்த பெருமாளே. 
பாடல் 1035 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ஸிந்துபைரவி 
தாளம் - ஆதி
தானந் தனதன தானந் தனதன
     தானந் தனதன ...... தனதான
ஊனுந் தசையுடல் தானொன் பதுவழி
     யூருங் கருவழி ...... யொருகோடி 
ஓதும் பலகலை கீதஞ் சகலமு
     மோரும் படியுன ...... தருள்பாடி 
நானுன் திருவடி பேணும் படியிரு
     போதுங் கருணையில் ...... மறவாதுன் 
நாமம் புகழ்பவர் பாதந் தொழஇனி
     நாடும் படியருள் ...... புரிவாயே 
கானுந் திகழ்கதி ரோனுஞ் சசியொடு
     காலங் களுநடை ...... யுடையோனுங் 
காருங் கடல்வரை நீருந் தருகயி
     லாயன் கழல்தொழு ...... மிமையோரும் 
வானிந் திரனெடு மாலும் பிரமனும்
     வாழும் படிவிடும் ...... வடிவேலா 
மாயம் பலபுரி சூரன் பொடிபட
     வாள்கொண் டமர்செய்த ...... பெருமாளே.
மாமிசமும் சதையும் கூடிய இந்த உடல் தன்னுடன் ஒன்பது துவாரங்கள்* சேர்ந்துவரும் கருவின் வழி ஒரு கோடிக் கணக்கானது. (அந்தப் பிறவித் துயரம் ஒழிய) நான் படிக்கின்ற சாத்திர நூல்களையும், இசை ஞானத்தையும் மற்ற எல்லா கற்கவேண்டியவையும் யான் உணரும்படியாக உன்னுடைய திருவருளைத் துதித்துப் பாடி, யான் உன்னுடைய திருவடிகளை விரும்பிப் போற்றும்படி காலை மாலை இரண்டு வேளைகளிலும் உன் கருணைத்திறத்தில் ஞாபகம் வைத்து, உன் திருநாமங்களைப் போற்றுவோரின் பாதங்களைத் தொழ இனியேனும் யான் விரும்பும்வண்ணம் நீ திருவருள் புரிவாயாக. காட்டிலும் கூட தன் கதிர்களை வீசும் சூரியனும், சந்திரனும், இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்ற முக்காலங்களும், காற்றும், மேகமும், கடலும், மலையும், நீரும் - இவைகளையெல்லாம் படைத்த கைலாயநாதனாகிய சிவபிரானின் பாதங்களைப் பணியும் தேவர்களும், தேவநாட்டு இந்திரன், தெடிய திருமால், பிரமன் ஆகியோரும் வாழும்படியாகச் செலுத்திய கூரிய வேலாயுதனே, பல மாயங்களைப் புரிந்த சூரன் தூள்பட்டு அழியும்படி வாள் கொண்டு போர்புரிந்த பெருமாளே. 
* ஒன்பது துவாரங்கள்: இரு செவிகள், இரு கண்கள், இரு நாசித் துவாரங்கள், ஒரு வாய், இரு கழிவுத் துவாரங்கள்.
பாடல் 1036 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தானந் தனதன தானந் தனதன
     தானந் தனதன ...... தனதான
தீயும் பவனமு நீருந் தரணியும்
     வானுஞ் செறிதரு ...... பசுபாசத் 
தேகந் தனைநிலை யேயொன் றிருவினை
     தீருந் திறல்வினை ...... யறியாதே 
ஓயும் படியறு நூறும் பதினுறழ்
     நூறும் பதினிரு ...... பதுநூறும் 
ஓடுஞ் சிறுவுயிர் மீளும் படிநல
     யோகம் புரிவது ...... கிடையாதோ 
வேயுங் கணியும்வி ளாவும் படுபுன
     மேவுஞ் சிறுமிதன் ...... மணவாளா 
மீனம் படுகட லேழுந் தழல்பட
     வேதங் கதறிய ...... வொருநாலு 
வாயுங் குலகிரி பாலுந் தளைபட
     மாகந் தரமதில் ...... மறைசூரன் 
மார்புந் துணையுறு தோளுந் துணிபட
     வாள்கொண் டமர்செய்த ...... பெருமாளே.
தீ, காற்று, நீர், மண், விண் ஆகிய இந்த ஐந்து பூதங்களும் நிறைந்துள்ள ஜீவாத்மாவும் கட்டுக்கள் ஆகிய ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களும் கூடியதான இவ்வுடலை நிலைத்திருக்கும்படிப் பொருந்த வைக்கத் தெரியாமல், (நல்வினை, தீவினை ஆகிய) இரண்டு வினைகளும் முடியும்படியான திறமை வாய்ந்த செயல் எதையும் அறிந்து கொள்ளாமல், பிறப்பு ஓயும்படியாக, அறு நூறும் (600), பதின் மடங்கு நூறும் (1,000), பதின் இருபது நூறும் (10 மடங்கு 2,000 = 20,000) மொத்தம் (600 + 1,000 + 20,000) 21,600 மூச்சுகள்* (ஒவ்வொரு நாளும்) ஓடுகின்ற இந்தச் சிற்றுயிர் விடுதலை அடையும்படி (அதாவது இனி பிறவி ஏற்படாதபடி), நல்ல சிவ யோகத்தைப் பயிலும் பாக்கியம் எனக்குக் கிடைக்காதோ? மூங்கிலும், வேங்கை மரமும், விளா மரமும் இருக்கின்ற வள்ளிமலைச் சார்பான தினைக்கொல்லையில் வாழும் சிறுமியாகிய வள்ளியின் கணவனே, மீன்கள் உலவுகின்ற ஏழு கடல்களும் தீப்பட்டு வறண்டு போகவும், வேதங்களை வாய் விட்டு உரைக்கும் ஒப்பற்ற நான்கு திருவாய்களை உடைய பிரமனும் மாய மலையான கிரெளஞ்சத்தால் (கந்தகிரியில் ஓரிடத்தே) சிறைபட்டுக் கிடக்கவும், பெரிய மேகத்தினிடையே மறைந்து போர் செய்த சூரனுடைய மார்பும், இரண்டு தோள்களும் அறுந்து விழவும், வாளாயுதம் கொண்டு சண்டை செய்த பெருமாளே. 
* நாழிகை ஒன்றுக்கு 360 சுவாசங்கள். ஒரு நாளில் உள்ள 60 நாழிக்கு (24 மணி நேரத்துக்கு), 21,600 சுவாசங்கள்.
பாடல் 1037 - பொதுப்பாடல்கள் 
ராகம் - பெஹாக் 
தாளம் - ஆதி
தானந் தனதன தானந் தனதன
     தானந் தனதன ...... தனதான
வாதந் தலைவலி சூலம் பெருவயி
     றாகும் பிணியிவை ...... யணுகாதே 
மாயம் பொதிதரு காயந் தனின்மிசை
     வாழுங் கருவழி ...... மருவாதே 
ஓதம் பெறுகடல் மோதுந் திரையது
     போலும் பிறவியி ...... லுழலாதே 
ஓதும் பலஅடி யாருங் கதிபெற
     யானுன் கழலிணை ...... பெறுவேனோ 
கீதம் புகழிசை நாதங் கனிவொடு
     வேதங் கிளர்தர ...... மொழிவார்தம் 
கேடின் பெருவலி மாளும் படியவ
     ரோடுங் கெழுமுத ...... லுடையோனே 
வேதந் தொழுதிரு மாலும் பிரமனு
     மேவும் பதமுடை ...... விறல்வீரா 
மேல்வந் தெதிர்பொரு சூரன் பொடிபட
     வேல்கொண் டமர்செய்த ...... பெருமாளே.
வாத சம்பந்தமான நோய்கள், தலைவலி, சூலை நோய், மகோதரம் என்ற வயிற்றில் நீர் தேக்கம், ஆகிய நோய்களாகிய இவை ஒன்றும் என்னை அணுகாமலும், மாயை நிரம்பி உள்ள உடல் கொண்டு வாழும்படி கருவின் வழியில் மீண்டும் என்னைச் சேர்க்காமலும், வெள்ளமாய் நிறைந்து நிற்கும் கடலில் மேலும் மேலும் வீசுகின்ற அலைகள் போல் பல பிறப்புக்களில் நான் அலைச்சல் உறாமல், உன் திருப்புகழை ஓதும் பல அடியார்களும் நற்கதி அடையவும், நான் உனது இரண்டு திருவடிகளையும் பெறுவேனோ? இசை இன்பமும், உன் புகழைச் சொல்லும் ஓசை இன்பமும், பக்தியோடு வேத வாக்கியங்களை நன்கு விளங்கும்படி ஓதுபவர்களுடைய கேட்டினை விளைவிக்கும் ஊழ்வினையின் திண்மை அவர்களைப் பீடிக்காது ஒழியும்படி அவர்களோடு எப்போதும் பொருந்தி உடனிருந்து காக்கும் திருவருளை உடையவனே, வேதங்கள் தொழுகின்ற திருமாலும், பிரமனும் விரும்பிப் போற்றும் திருவடிகளை உடைய வெற்றி வீரனே, மேலெழுந்து வந்து போர் செய்த சூரன் பொடியாகும்படி, வேலாயுதத்தைக் கொண்டு சண்டை செய்த பெருமாளே. 
பாடல் 1038 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தானா தானா தானா தானா
     தானா தானத் ...... தனதான
ஊனே தானா யோயா நோயா
     லூசா டூசற் ...... குடில்பேணா 
ஓதா மோதா வாதா காதே
     லோகா சாரத் ...... துளம்வேறாய் 
நானே நீயாய் நீயே நானாய்
     நானா வேதப் ...... பொருளாலும் 
நாடா வீடா யீடே றாதே
     நாயேன் மாயக் ...... கடவேனோ 
வானே காலே தீயே நீரே
     பாரே பாருக் ...... குரியோனே 
மாயா மானே கோனே மானார்
     வாழ்வே கோழிக் ...... கொடியோனே 
தேனே தேனீள் கானா றாய்வீழ்
     தேசார் சாரற் ...... கிரியோனே 
சேயே வேளே பூவே கோவே
     தேவே தேவப் ...... பெருமாளே.
ஊன் பொருந்திய இவ்வுடலே நான்தான் என்று நினைத்து, என்றும் முடிவில்லாத நோயாளனாய், அழிவுள்ளதும், ஊஞ்சலைப்போல் மாறி மாறி வருகின்றதுமான இத்தேகத்தை விரும்பி, நூல்களை ஓதியும், தாக்கிப் பேசியும், செய்கின்ற சமய வாதங்களில் ஈடுபடாமலும், உலக ஆசாரங்களில் கட்டுப்படாமல் உள்ளம் வேறுபட்டு, எனது ஜீவாத்மா பரமாத்மாவாகிய உன்னிடம் ஒன்றுபட்டுப் பொருந்தி, பலவகையான வேதப்பொருள் கொண்டு உன்னை நாடி விரும்பி வீடு பேற்றை அடைந்தவனாய், என் ஜன்மம் சாபல்யம் அடையாமல் நாயனைய அடியேன் இறந்துபோகக் கடவேனோ? விண், காற்று, தீ, நீர், பார் ஆகிய ஐந்து பூதங்களாக விளங்கி, இவ்வுலகிலுள்ள பெரியோருக்கு உரியவனாகத் திகழ்பவனே, என்றும் அழிவில்லாத பெரியோனே, அரசனே, மான்போன்ற அழகியர் வள்ளி, தேவயானைக்கு செல்வக் கணவனே, கோழிக் கொடியை உயர்த்தியவனே, தேன் போன்று இனிப்பவனே, தேனாறு என்னும் நீண்ட காட்டாறு பாய்கின்ற ஒளி பொருந்திய மலைப்பகுதியான (குன்றக்குடி* என்ற) தலத்தில் அமர்ந்தவனே, ஈசன் மகனே, செவ்வேள் முருகனே, அழகனே, தலைவனே, தேவனே, தேவர்களின் பெருமாளே. 
* தேனாறு பாயும் ஊர் குன்றக்குடியாதலால், இப்பாடல் அத்தலத்தைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.
பாடல் 1039 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தானா தானா தானா தானா
     தானா தானத் ...... தனதான
சாவா மூவா வேளே போல்வாய்
     தாளா வேனுக் ...... கருள்கூருந் 
தாதா வேஞா தாவே கோவே
     சார்பா னார்கட் ...... குயிர்போல்வாய் 
ஏவால் மாலே போல்வாய் காரே
     போல்வா யீதற் ...... கெனையாள்கொண் 
டேயா பாடா வாழ்வோர் பாலே
     யான்வீ ணேகத் ...... திடலாமோ 
பாவா நாவாய் வாணீ சார்வார்
     பாரா வாரத் ...... துரகேசப் 
பாய்மீ தேசாய் வார்கா ணாதே
     பாதா ளாழத் ...... துறுபாதச் 
சேவா மாவூர் கோமான் வாழ்வே
     சீமா னேசெச் ...... சையமார்பா 
சேயே வேளே பூவே கோவே
     தேவே தேவப் ...... பெருமாளே.
சாதல் இல்லாதவனும், மூத்தல் இல்லாதவனும், மன்மதனைப் போல் என்றும் இளையவனாகவும் விளங்குவாய், உனது காலின் கீழ்ப்பட்ட எனக்கு அருள் சுரக்கும் கொடையாளியே, அறிவு மிக்கவனே, தலைவனே, உன்னைச் சார்ந்து நிற்பவர்களுக்கு உயிர் போல் விளங்குபவனே, பாணத்தைச் செலுத்துவதில் திருமாலையே நீ நிகர்ப்பாய், என்னை ஆண்டு கொண்டு எனக்குக் கொடுக்கும் திறத்தில் மேகத்துக்கு ஒப்பாவாய் (எனக் கூறி) செல்வர்களைப் பொருந்தி அடைந்து, இத்தகைய பாடல்களைக் கேட்டு வாழ்தலே குறிக்கோளாக இருப்பவர்களிடம், நானும் வீணாகக் கூச்சலிடுதல் நன்றோ? பாடல்களாக நாவிடத்தே பொருந்தும் சரஸ்வதியைச் சார்ந்துள்ள பிரமனும், பாற்கடலில் நாகராஜனாகிய ஆதிசேஷன் என்ற படுக்கை மீது துயில் கொள்ளும் திருமாலும் தம்மைக் காண முடியாதபடி, பாதாள ஆழத்தில் உற்ற திருவடியை உடையவரும், ரிஷபமாகிய நந்தியை வாகனமாகக் கொண்டு செலுத்தும் அரசருமாகிய, சிவபிரான் பெற்ற செல்வமே, செல்வப் பிரபுவே, வெட்சி மாலை அணிந்த மார்பனே, சிவகுமாரனே, செவ்வேளே, அழகனே, தலைவனே, தேவர்களின் பெருமாளே. 
பாடல் 1040 - பொதுப்பாடல்கள் 
ராகம் - மலஹரி
தாளம் - ஆதி - 2 களை
தானா தானா தானா தானா
     தானா தானத் ...... தனதான
நாரா லேதோல் நீரா லேயாம்
     நானா வாசற் ...... குடிலூடே 
ஞாதா வாயே வாழ்கா லேகாய்
     நாய்பேய் சூழ்கைக் ...... கிடமாமுன் 
தாரா ரார்தோ ளீரா றானே
     சார்வா னோர்நற் ...... பெருவாழ்வே 
தாழா தேநா யேனா வாலே
     தாள்பா டாண்மைத் ...... திறல்தாராய் 
பாரே ழோர்தா ளாலே யாள்வோர்
     பாவார்வேதத் ...... தயனாரும் 
பாழூ டேவா னூடே பாரூ
     டேயூர் பாதத் ...... தினைநாடாச் 
சீரார் மாதோ டேவாழ் வார்நீள்
     சேவூர் வார்பொற் ...... சடையீசர் 
சேயே வேளே பூவே கோவே
     தேவே தேவப் ...... பெருமாளே.
நரம்புகளாலும், தோலாலும், நீராலும் ஆகியுள்ள பலவித வாயில்களை (நவத் துவாரங்களை*) உடைய குடிசையாகிய இந்த உடலினுள் அறிவு வாய்ந்தவானாக வாழ்கின்ற காலத்தில், உயிர் போதலுற்று இறந்து போகும் சமயம் நாயும் பேயும் என் உடலைச் சூழுதற்கான காலம் வருமுன்பாக, ஆத்திமாலைகள் நிறைந்த பன்னிரண்டு தோள்களை உடையவனே, உன்னைச் சார்ந்தவர்களுக்கு நல்ல பெரு வாழ்வே, சற்றும் தாமதியாமல் நாயனைய அடியேன் என் நாவைக்கொண்டு உன் திருவடிகளைப் பாடும் வலிமைத்திறலைத் தருவாயாக. ஏழுலகங்களையும் தன் ஒப்பற்ற முயற்சியால் காத்து ஆளுகின்ற திருமாலும், தூய்மையான பாடல்கள் உள்ள வேதத்தை ஓதும் பிரமனும், வெட்டவெளிப் பாழிலும், வானிலும், மண்ணிலும் பரவி நிற்கும் பாதத்தினை நாடமுடியாத சிறப்பினை உடையவரும், பார்வதி தேவியுடன் வாழ்பவரும், பெரிய ரிஷபத்தை வாகனமாக உடையவரும், பொன்னிறச் சடை உடையவருமான ஈசர் சிவபிரானுடைய குமாரனே, செவ்வேளே, அழகனே, தலைவனே, தெய்வமே, தேவர்களின் பெருமாளே. 
* ஒன்பது துவாரங்கள்: இரு செவிகள், இரு கண்கள், இரு நாசித் துவாரங்கள், ஒரு வாய், இரு கழிவுத் துவாரங்கள்.
பாடல் 1041 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தானா தானா தானா தானா
     தானா தானத் ...... தனதான
மாதா வோடே மாமா னானோர்
     மாதோ டேமைத் ...... துனமாரும் 
மாறா னார்போ னீள்தீ யூடே
     மாயா மோகக் ...... குடில்போடாப் 
போதா நீரூ டேபோய் மூழ்கா
     வீழ்கா வேதைக் ...... குயிர்போமுன் 
போதா காரா பாராய் சீரார்
     போதார் பாதத் ...... தருள்தாராய் 
வேதா வோடே மாலா னார்மேல்
     வானோர் மேனிப் ...... பயமீள 
வேதா னோர்மே லாகா தேயோர்
     வேலால் வேதித் ...... திடும்வீரா 
தீதார் தீயார் தீயு டேமூள்
     சேரா சேதித் ...... திடுவோர்தஞ் 
சேயே வேளே பூவே கோவே
     தேவே தேவப் ...... பெருமாளே.
தாயுடன் அம்மான்மாரும், மனைவியுடன் மைத்துனன்மாரும், என்னுடன் பகைமை பூண்டவர்கள் போல, பெரு நெருப்பின் இடையில், மாயைக்கும் ஆசைக்கும் இடம் தந்த இந்த உடலை இட்டு, நீரின் இடையே போய் முழுகி, பின்பு (மயானத்தை விட்டு) நீங்குதல் என்கிற துன்பத்துக்கு இடம் தந்து, உயிர் போவதற்கு முன்பாக, ஞான உருவத்தனே, கண் பார்த்து அருள்வாயாக. சிறப்பு நிறைந்த தாமரை மலர்போன்ற திருவடியின் அருளைத் தருவாயாக. பிரமனுடன் திருமால், மற்றும் விண்ணில் உள்ள தேவர்கள் இவர்களின் உடலில் கண்ட பயம் நீங்குவதற்கு, தானவர்களாகிய அசுரர்கள் மேம்படாதவாறு ஒப்பற்ற வேலாயுதத்தால் அவர்களை வதைத்திட்ட வீரனே, கொடியவர்களாகிய திரிபுராதி அசுரர்கள் தீயின் இடையே சேரும்படி அழித்தவராகிய சிவபெருமானின் குழந்தையே, செவ்வேள் முருகனே, அழகனே, தலைவனே, தேவனே, தேவர்களுக்கெல்லாம் பெருமாளே. 
பாடல் 1042 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தானா தானா தானா தானா
     தானா தானத் ...... தனதான
வாராய் பேதாய் கேளாய் நீதாய்
     மானார் மோகத் ...... துடனாசை 
மாசூ டாடா தூடே பாராய்
     மாறா ஞானச் ...... சுடர்தானின் 
றாரா யாதே யாராய் பேறாம்
     ஆனா வேதப் ...... பொருள்காணென் 
றாள்வாய் நீதா னாதா பார்மீ
     தார்வே றாள்கைக் ...... குரியார்தாம் 
தோரா வானோர் சேனா தாரா
     சூரா சாரற் ...... புனமாது 
தோள்தோய் தோளீ ராறா மாசூர்
     தூளாய் வீழச் ...... சிறுதாரைச் 
சீரா வாலே வாளா லேவே
     லாலே சேதித் ...... திடும்வீரா 
சேயே வேளே பூவே கோவே
     தேவே தேவப் ...... பெருமாளே.
ஏ பேதை மனமே, வருவாயாக, நான் சொல்லுவதைக் கேட்பாயாக. நீ தாவித் தாவி மாதர்கள் மீது கொண்டுள்ள மோகத்துடன், காம ஆசை என்னும் குற்றத்தினுள் வீழ்ந்து அலையாமல், உனக்குள்ளேயே ஆராய்ந்து பார்ப்பாயாக. மாறாத ஞான ஒளியில் மனம் நிலைத்து நின்று, மற்றப் பொருட்களை ஆராய்வதுபோல் ஆராயாமல், அறிவால் ஆராய்ந்து பார்ப்பாயாக. பெறத்தக்க அரும் பொருளாகியும், அழிவில்லாததுமான வேதப் பொருளைக் கண்டு கொள் என்று எனக்கு உணர்த்தி என்னை ஆள்வாயாக. நீ தான் என் தலைவனே, இந்தப் பூமியில் உன்னை அன்றி வேறு யார் தான் என்னை ஆளுதற்கு உளர்? தோல்வியே அறியாதவனும், தேவர் சேனைக்குப் பற்றுக் கோடானவனுமான சேனாதிபதியே, சூரனே, (வள்ளி) மலையில் தினைப் புனத்தில் இருந்த வள்ளியின் தோளை அணைந்த, பன்னிரு தோள்களை உடையவனே, பெரிய சூரன் பொடிபட்டு விழ, சிறியதும், கூர்மையானதுமான உடை வாளாலும், பெரிய வாளாயுதத்தாலும், வேலாயுதத்தாலும் அழித்த வீரனே, சிவபெருமானின் குழந்தையே, செவ்வேள் முருகனே, அழகனே, அரசனே, தேவனே, தேவர்களுக்கெல்லாம் பெருமாளே. 
பாடல் 1043 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனன தான தானான தனன தான தானான
     தனன தான தானான ...... தனதான
அகல நீளம் யாதாலு மொருவ ராலு மாராய
     அரிய மோன மேகோயி ...... லெனமேவி 
அசைய வேக்ரி யாபீட மிசைபு காம காஞான
     அறிவி னாத ராமோத ...... மலர்தூவிச் 
சகல வேத னாதீத சகல வாச காதீத
     சகல மாக்ரி யாதீத ...... சிவரூப 
சகல சாத காதீத சகல வாச னாதீத
     தனுவை நாடி மாபூசை ...... புரிவேனோ 
விகட தார சூதான நிகள பாத போதூள
     விரக ராக போதார ...... சுரர்கால 
விபுத மாலி காநீல முகப டாக மாயூர
     விமல வ்யாப காசீல ...... கவிநோத 
ககன கூட பாடீர தவள சோபி தாளான
     கவன பூத ராரூட ...... சதகோடி 
களப காம வீர்வீசு கரமு கார வேல்வீர
     கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.
இவ்வளவு அகலம், இவ்வளவு நீளம் என்ற அளவைகளாலும், எவராலும் ஆராய்வதற்கு முடியாத மெளன நிலையே திருக்கோயிலாக அடைந்து இருந்து விளக்கம் தருவதற்காகவே, கிரியை மார்க்கத்தை அனுஷ்டித்து, அதனைப் பூஜிக்கத் தகுந்த பீடத்தின் மேல் ஏற்றி, சிறந்த மெய்யுணர்வான ஞானத்துடன், அன்பு, மகிழ்ச்சி எனப்படும் மலர்களைத் தூவி, எவ்வகையானஅறிவுகளுக்கும் மேம்பட்டதான, எவ்விதமான சொற்களுக்கும் அப்பாற்பட்டதான, எவ்வகையான சிறந்த கிரியைகளுக்கும் மேம்பட்டதான, சிவ ரூபமான, எவ்விதமான அளவைகளுக்கும் மேம்பட்டதான, எவ்விதமான நறுமணத்துக்கும் மேம்பட்டதான புருவ நடுவில் உள்ள ஒரு குறியைக் குறித்து நின்று, சிறந்த பூஜையைச் செய்யும் பாக்கியம் எனக்குக் கிட்டுமோ? மாறுபாடுள்ள, வஞ்சகம் நிறைந்த பந்தத்தில் வீழ்வதனை அழியும்படித் தூள் படுத்துபவனே, காம நோயுடன் கூடிய மோகத்தை அனுபவிப்பதிலேயே பொழுது போக்குபவர்களாகிய அசுரர்களுக்கு நமனாய் நின்று அவர்களை அழித்தவனே, தேவதாரு மலரின் மாலையை அணிந்தவனே, நீல நிறப் போர்வை போன்ற உடலைக் கொண்டதான மயில் வாகனனே, பரிசுத்தமானவனே, எங்கும் நிறைந்திருப்பவனே, நற்குண உள்ளத்தவனே, அற்புத மூர்த்தியே, விண்ணுலகில் உள்ள, சந்தனம் அணிந்துள்ள, வெண்ணிற அழகை உடையதாய், (இந்திரனின்) ஏவலைப் புரிவதாய், வேகத்துடன் செல்லக் கூடிய, மலை போன்ற (ஐராவதம் என்ற) யானையின் மேல் எழுந்தருளி, வஜ்ராயுதத்தை ஏந்தும் இந்திரன் மனம் கலந்து விரும்பும் வீரனே, கதிரொளியை வீசுகின்ற திருமுகங்களை உடையவனே, கடப்ப மாலை அணிந்தவனே, வேல் வீரனே, மேரு மலையை ஒத்த கருணை உடையவனே, தேவர்களின் பெருமாளே. 
பாடல் 1044 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனன தான தானான தனன தான தானான
     தனன தான தானான ...... தனதான
அடைப டாது நாடோறும் இடைவிடாது போம்வாயு
     அடைய மீளில் வீடாகு ...... மெனநாடி 
அருள்பெ றாவ னாசார கரும யோகி யாகாமல்
     அவனி மீதி லோயாது ...... தடுமாறும் 
உடலம் வேறு யான்வேறு கரணம் வேறு வேறாக
     உதறி வாச காதீத ...... அடியூடே 
உருகி ஆரி யாசார பரம யோகி யாமாறுன்
     உபய பாத ராசீக ...... மருள்வாயே 
வடப ராரை மாமேரு கிரியெ டாந டாமோது
     மகர வாரி யோரேழு ...... மமுதாக 
மகுட வாள ராநோவ மதிய நோவ வா¡£ச
     வனிதை மேவு தோளாயி ...... ரமுநோவக் 
கடையு மாதி கோபாலன் மருக சூலி காபாலி
     புதல்வ கான வேல்வேடர் ...... கொடிகோவே 
கனக லோக பூபால சகல லோக ஆதார
     கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.
உள்ளே அடைபட்டுப் போகாமல் ஒவ்வொரு நாளும் இடை விடாமல் போகின்ற மூச்சுக் காற்று முழுமையும் வீணாகாது உடலில் மீண்டும் வந்து (கும்பக முறையில்*) அடங்குமாயின், முக்தி வீடு கிடைக்கும் என்ற உண்மையை ஆராய்ந்து விரும்பி உனது திருவருளைப் பெறாத, ஒழுக்கம் இல்லாத கரும யோகியாய் வாழ்வைக் கழிக்காமல், இப் பூமியில் எப்போதும் நான் கெட்டு அலையாமல், எனது உடல் வேறு, நான் வேறு, என் (மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற) கரணங்கள் வேறு - இவைகள் யாவும் வேறு வேறு என்று உதறித் தள்ளி, உரைகளுக்கு எட்டாத உன் திருவடிச் சரணங்களில் வீழ்ந்து, உள்ளம் உருகி, மேலான ஆசார ஒழுக்கம் வாய்ந்த சிறந்த சிவ யோகி ஆகும் பொருட்டு, உன் இரண்டு திருவடிகளாகிய ராஜபோகத்தை அருள்வாயாக. வடக்கே உள்ளதும், பருத்த அடிப்பாகம் உடையதுமாகிய மேரு மலையை எடுத்து (மத்தாக) நட்டு, அலைகள் மோதும் கடல்கள் ஓர் ஏழினின்றும் அமுது வரும்படி, ஒளி பொருந்திய மணி முடிகளை உடைய பாம்பாகிய வாசுகியின் உடல் (கயிறாக இழுத்ததால்) வலிக்கும்படியும், (தூணாகச் சாத்தப்பட்ட) சந்திரனின் உடல் நோவவும், தாமரை மலரில் வீற்றிருக்கும் லக்ஷ்மி தேவி விரும்பும் தனது ஆயிரம் தோள்களும்** நோவும்படியும், கடலைக் கடைந்த ஆதி மூர்த்தியாகிய கோபாலனின் மருகனே, சூலாயுதத்தையும், பிரம்ம கபாலத்தையும் ஏந்துகிற சிவபெருமானது மகனே, வேல் பிடித்த வேடர்களின் கொடிபோன்ற வள்ளியின் தலைவனே. பொன்னுலகமாகிய தேவர்கள் உலகைப் பரிபாலித்த அரசே, எல்லா உலகங்களுக்கும் ஆதாரமாக உள்ளவனே, உனது கருணை மேரு மலையைப் போன்று பெரியது, தேவர்களுக்குப் பெருமாளே. 
* இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு:நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு 'ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள், சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி, ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை, சுழுமுனை முதலியன) உள்ளன.'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம்.'சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது.'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும் ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும்.
** தேவர்களாலும் அசுரர்களாலும் பாற்கடலைக் கடைய இயலாதபோது, திருமால் தனது ஆயிரம் தோள்கள் கொண்டு கடலைக் கடைந்தார்.
பாடல் 1045 - பொதுப்பாடல்கள் 
ராகம் - யமுனா கல்யாணி 
தாளம் - அங்கதாளம் - 5 1/2 
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2
தனன தான தானான தனன தான தானான
     தனன தான தானான ...... தனதான
அமல வாயு வோடாத கமல நாபி மேல்மூல
     அமுத பான மேமூல ...... அனல்மூள 
அசைவு றாது பேராத விதமு மேவி யோவாது
     அரிச தான சோபான ...... மதனாலே 
எமனை மோதி யாகாச கமன மாம னோபாவ
     மெளிது சால மேலாக ...... வுரையாடும் 
எனதி யானும் வேறாகி எவரும் யாதும் யானாகும்
     இதய பாவ னாதீத ...... மருள்வாயே 
விமலை தோடி மீதோடு யமுனை போல வோரேழு
     விபுத மேக மேபோல ...... வுலகேழும் 
விரிவு காணு மாமாயன் முடிய நீளு மாபோல
     வெகுவி தாமு காகாய ...... பதமோடிக் 
கமல யோனி வீடான ககன கோள மீதோடு
     கலப நீல மாயூர ...... இளையோனே 
கருணை மேக மேதூய கருணை வாரி யேயீறில்
     கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.
பிராண வாயு மேற்கொண்டு செல்லாதபடி மூலாதார* கமலத்தின் மீது அங்ஙனம் செய்ததின் மூலம் அமுத பானம் பருகும்படி மூலாக்கினி சுடர் விட்டு எழ, மனம், வாக்கு, காயம் இவை மூன்றும் சலனமில்லாமல் நெகிழாதபடி ஒரு நிலையில் இருந்து சிறிதும் மாறாமல், மகிழ்ச்சி தருவதான படிப்படியாக மேலேறும் யோக முறையாலே, நமனையும் தாக்குவது போல் ஆகாயம் வரை பறந்து போகும் மனத்தின் தன்மை மிகவும் எளிதான வகையில் மேலெழுந்து ஆணவத்துடன் பேசுகின்ற எனது என்ற மமகாரமும், நான் என்ற அகங்காரமும் நீங்கி, பிற பொருள்கள் யாவும் நானே ஆகக்கூடிய மனோ பாவத்திற்கு எட்டாத பெரு நிலையைத் தந்து அருள்வாயாக. பரிசுத்தமான தேவியின் தொடி என்னும் கை வளையினின்றும் (மேலெழுந்து வந்த) யமுனை நதி போலவும்**, ஒப்பற்ற, எங்கும் வியாபித்திருக்கும் தன்மை வாய்ந்த, மேகத்தைப் போலவும், ஏழு உலகங்களின் பரப்பையும் காணவல்ல பெரிய திருமால் (அண்டங்களின்) முழுமையும் எட்டும்படி விசுவ ரூபம் எடுத்தது போலவும், பல திசைகளின் அளவுக்கும், ஆகாய அளவுக்கும் ஓடிச் சென்று, (திருமாலின் உந்தித்) தாமரையில் உதித்த பிரமனின் இருப்பிடமான விண்ணில் உள்ள பிரம்ம மண்டலத்தின் மீதும் ஓடுகின்ற நீலத் தோகை விளங்கும் மயில் வாகனனே, என்றும் இளையவனே, கருணை மேகமே, பரிசுத்தமான கருணைக் கடலே, முடிவில்லாத கருணையை உடைய மேரு மலையே, தேவர்கள் போற்றும் பெருமாளே. 
* ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம் ** முன்பு உமாதேவியின் திருக்கரங்களில் சிவபிரான் முகத்தைப் புதைக்க, தேவியின் பத்து விரல்களிலும் வியர்வை சிந்தி அவையே கங்கை, யமுனை முதலிய நதிகளாக ஆயின - சிவபுராணம்.
பாடல் 1046 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனன தான தானான தனன தான தானான
     தனன தான தானான ...... தனதான
அயிலின் வாளி வேல்வாளி அளவு கூரி தாயீச
     ரமுத ளாவு மாவேச ...... மதுபோல 
அறவு நீளி தாய்மீள அகலி தாய வார்காதி
     னளவு மோடி நீடோதி ...... நிழலாறித் 
துயில்கொ ளாத வானோரு மயல்கொ ளாத ஆவேத
     துறவ ரான பேர்யாரு ...... மடலேறத் 
துணியு மாறு லாநீல நயன மாத ராரோடு
     துவளு வேனை யீடேறு ...... நெறிபாராய் 
பயிலு மேக நீகார சயில ராசன் வாழ்வான
     பவதி யாம ளாவாமை ...... அபிராமி 
பரிபு ரார பாதார சரணி சாம ளாகார
     பரம யோகி னீமோகி ...... மகமாயி 
கயிலை யாள ரோர்பாதி கடவு ளாளி லோகாயி
     கனத னாச லாபார ...... அமுதூறல் 
கமழு மார ணாகீத கவிதை வாண வேல்வீர
     கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.
(முதல் ஏழு வரிகள் வேசையரின் கண்களை விவரிக்கின்றன). அம்பின் கூர்மை, வேலின் நுனி இவைகளின் அளவு போலக் கூர்மை கொண்டதாய், சிவபெருமான் அமுதாக உண்ட விஷத்தின் தன்மையைக் கொண்டுள்ளதாய், பொங்கி எழச்செய்யும் கள்ளைப் போன்றதாய், மிகவும் நீண்டதாய், பின்னும் அகன்றதாய், நெடிய காது இருக்கும் இடம் வரை ஓடி, கூந்தலின் நிழலில் இளைப்பாறி, தூக்கம் இல்லாத தேவர்களும், காம இச்சை கொள்ளாத வேடம் பூண்ட துறவிகள் யாவரும் மடல்* ஏறும் வகைக்கு, துணிச்சலுடன் உலவுகின்ற, நீலோற்பலம் போன்ற கண்களை உடைய விலைமாதர்களோடு இணக்கம் வைத்து வாடுகின்ற என்னை ஈடேறும்படியான வழியைக் காட்டி அருள்வாயாக. நெருங்கி எழும் மேகங்களின் கூட்டம் படிகின்ற இமயமலை அரசனான இமவானுடைய செல்வப் புதல்வியான பார்வதி தேவி, ஒரு வகைப் பச்சை நிறம் உடையவள், ஈசனின் இடது பக்கத்தில் உள்ளவள், பேரழகி, சிலம்பும், மலர் மாலைகளும் உள்ள பாதத் தாமரையாகிய திருவடிகள் உடையவள், மரகதப் பச்சை வண்ணத்தாள், பரதேவதை, அனைவருக்கும் அன்பு ஊட்டுபவள், பெரிய அம்பிகை, கயிலாசநாதரின் ஒரு பாகத்தில் உள்ளவள், எல்லாத் தேவர்களையும் ஆள்பவள், உலகம்மை ஆனவள், (அத்தகைய பார்வதி தேவியின்) பருத்த மார்பகங்களில் இருந்து ஊறின பாலமுதின் நறுமணம் வீசும் (வாயால்) வேதப் பாக்களாகிய தேவாரத்தை (திருஞான சம்பந்தராகத் தோன்றிப்) பாடிய கவிவாணனே, வேல் வீரனே, கருணை உருவான மேருமலையே, தேவர்கள் பெருமாளே. 
* மடல் ஏறுதல்: காமத்தால் வாடும் தலைவன் பனங்கருக்கால் குதிரை முதலிய வடிவங்கள் செய்து அவற்றின் மேலே ஏறி ஊரைச் சுற்றி, தலைவியிடம் உள்ள தன் காதலை ஊரிலுள்ள பிறருக்குத் தெரிவிப்பான்.
பாடல் 1047 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனன தான தானான தனன தான தானான
     தனன தான தானான ...... தனதான
இரத மான வாயூறல் பருகி டாவி டாய்போக
     இனிய போக வாராழி ...... யதில்மூழ்கி 
இதயம் வேறு போகாம லுருகி யேக மாய்நாளு
     மினிய மாதர் தோள்கூடி ...... விளையாடுஞ் 
சரச மோக மாவேத சரியை யோக்ரி யாஞான
     சமுக மோத ராபூத ...... முதலான 
சகள மோச டாதார முகுள மோநி ராதார
     தரணி யோநி ராகார ...... வடிவேயோ 
பரத நீல மாயூர வரத நாக கேயூர
     பரம யோகி மாதேசி ...... மிகுஞான 
பரமர் தேசி காவேட பதிவ்ரு தாசு சீபாத
     பதும சேக ராவேலை ...... மறவாத 
கரத லாவி சாகாச கலக லாத ராபோத
     கமுக மூஷி காரூட ...... மததாரைக் 
கடவுள் தாதை சூழ்போதில் உலக மேழு சூழ்போது
     கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.
சுவை மிகுந்த வாய் இதழ் ஊறலைப் பருகி காம தாகம் நீங்கி, இனிமை தரும் சிற்றின்பப் பெருங்கடலில் முழுகி, மனம் வேறிடத்திற் போகாமல் (காமத்திலேயே) மனம் உருகி, ஒன்றிய மனத்துடன் நாள் தோறும் இன்பம் தரும் விலைமாதர்களின் தோள்களைச் சேர்ந்து விளையாடுகின்ற லீலை ஆசையானது (பின்வருவனவற்றில் ஒன்றாகுமோ?) சிறந்த வேதத்தில் சொல்லப்பட்ட ஸாரியையோ, கிரியையோ, யோகமோ, ஞான மார்க்கமோ*, அல்லது இந்த மார்க்கங்களின் கூட்டமோ, மண் முதலான ஐந்து பூதங்களின் உருவத் திருமேனி விளக்கமோ, மூலாதாரம்** முதலான ஆறு ஆதாரங்களும் அரும்பு விட்ட தோற்றமோ, சார்பு வேண்டியில்லாத சூரிய ஒளியோ, உருவின்மையான ஒரு அழகு தானோ? (இவை ஒன்றுக்கும் ஈடாகாது என்ப). பரத நாட்டியம் ஆடவல்ல நீல மயில் வாகனனே, வரத மூர்த்தியே, பாம்பைத் தோளணி வகையாக அணிந்தவரும், பரம யோகியும், சிறந்த ஒளி வீசும் அழகு வாய்ந்தவரும், மிக்க ஞானம் நிறைந்த பரம மூர்த்தியுமான சிவபெருமானது குரு மூர்த்தியே, வேடர் குலத்தில் வளர்ந்த, கற்பு நிறைந்த, தூயவள் வள்ளியின் திருவடித் தாமரையை முடியில் சூடுபவனே, வேலாயுதத்தை மறவாத திருக்கரத்தை உடையவனே, விசாகனே, எல்லா கலைகளிலும் வல்லவனே, யானை முகத்தை உடையவரும், மூஞ்சூறின் மேல் ஏறி வருபவரும், நீரொழுக்குப் போல் மதநீர் ஒழுகுதல் உள்ளவரும் ஆகிய கணபதியின் தந்தையாகிய சிவபெருமானை வலம் வந்த நேரத்துக்குள் ஏழுலகையும் சுற்றி வந்த, மலர் போன்ற திருவடியை உடைய, கருணைப் பெரு மலையே, தேவர்களின் பெருமாளே. 
* 4 பக்தி மார்க்கங்கள் பின்வருமாறு:1. சரியை: திருக்கோயிலில் அலகு இடுதல், மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம் வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல், இறைவனை வாழ்த்துதல், திருவேடம் கண்டு பணிதல். இது 'தாத மார்க்கம் - சாலோகம்'.2. கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்தியக் காரியம் செய்தல். இது 'புத்ர மார்க்கம் - சாமீபம்'.3. யோகம்: புலன்களை அடக்கிப் பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி, முழு ஜோதியை நினைத்திருத்தல். இது 'சக மார்க்கம் (தோழ நெறி) - சாரூபம்'.4. ஞானம்: புறத் தொழில் அகத் தொழில் இன்றி, அறிவு மாத்திரத்தாலே செய்யும் வழிபாடு ஞானம். இது 'சன்மார்க்கம் - சாயுஜ்யம்'. சிவஞான சித்தியார் சூத்திரம். ** ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம்
பாடல் 1048 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனன தான தானான தனன தான தானான
     தனன தான தானான ...... தனதான
குருதி தோலி னால்மேவு குடிலி லேத மாமாவி
     குலைய ஏம னாலேவி ...... விடுகாலன் 
கொடிய பாச மோர்சூல படையி னோடு கூசாத
     கொடுமை நோய்கொ டேகோலி ...... யெதிராமுன் 
பருதி சோமன் வானாடர் படியு ளோர்கள் பாலாழி
     பயமு றாமல் வேலேவு ...... மிளையோனே 
பழுது றாத பாவாண ரெழுதொ ணாத தோள்வீர
     பரிவி னோடு தாள்பாட ...... அருள்தாராய் 
மருது நீற தாய்வீழ வலிசெய் மாயன் வேயூதி
     மடுவி லானை தான்மூல ...... மெனவோடி 
வருமு ராரி கோபாலர் மகளிர் கேள்வன் மாதாவின்
     வசன மோம றாகேசன் ...... மருகோனே 
கருதொ ணாத ஞானாதி எருதி லேறு காபாலி
     கடிய பேயி னோடாடி ...... கருதார்வெங் 
கனலில் மூழ்க வேநாடி புதல்வ கார ணாதீத
     கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.
ரத்தம், தோல் ஆகியவற்றால் ஆக்கப்பட்ட குடிசையாகிய இவ்வுடலில் கேடு அடைகின்ற இந்த உயிர் நிலை கெட்டு நீங்கும்படி, யம தர்மனால் அனுப்பப்பட்டு வருகின்ற காலன் என்ற தூதன் கொடுமை வாய்ந்த பாசக் கயிறு, ஒப்பற்ற சூலப் படை இவைகளோடு வந்து, கூச்சமில்லாமல், பொல்லாத துன்ப நோய்களைத் தந்து, வளைத்திருந்து என்னை எதிர்ப்பதன் முன்பு, சூரியன், சந்திரன், விண்ணுலகோர், மண்ணுலகத்தினர், திருப்பாற் கடலில் பள்ளி கொண்ட திருமால் (ஆகிய இவர்கள்) பயம் நீங்க வேண்டி வேலைச் செலுத்திய இளையவனே, குற்றம் சிறிதும் இல்லாத பாக்களைப் பாடும் திறமை வாய்ந்த கவி மணிகளாலும் எழுதுவதற்கு முடியாத (அழகை உடைய) தோள்களை உடைய வீரனே, அன்புடன் நான் உன் திருவடியைப் பாடும்படியான திருவருளைத் தந்தருள்க. மருத மரம் வேரற்றுச் சிதறி விழும்படி தன் வலிமையைக் காட்டிய மாயவன், புல்லாங் குழலை வாசிப்பவன், நீர் நிலையில் நின்ற (கஜேந்திரன் என்ற) யானையானது ஆதி மூலமே என்று ஓலமிட்டு அழைக்க, அதைக் காப்பாற்ற ஓடிவந்த முரன் என்ற அசுரனின் எதிரியாகிய முராரி, இடைக் குலத்து கோபிகை மகளிரின் கணவன், தாயாகிய கைகேயியின் சொல்லை மறுக்காமல் (காட்டுக்குச் சென்ற) கேசவனாகிய திருமாலின் மருமகனே, எண்ணுதற்கு அரிய ஞான மூர்த்தியும், ரிஷபத்தில் ஏறுபவரும், (பிரம்ம) கபாலத்தைக் கையில் ஏந்தியவரும், கடுமை வாய்ந்த பேய்களுடன் ஆடுபவரும், தன்னை மறந்து (சிவ பூசையைக் கைவிட்ட திரிபுரத்தில்) இருந்த அனைவரும் கொடிய நெருப்பில் முழுகும்படி நாடியவரும் ஆகிய சிவபெருமானுடைய மகனே, காரணங்களுக்கு அப்பாற்பட்டவனே, கருணைப் பெருமலையே, தேவர்களின் பெருமாளே. 
பாடல் 1049 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனன தான தானான தனன தான தானான
     தனன தான தானான ...... தனதான
சுருதி யூடு கேளாது சரியை யாளர் காணாது
     துரிய மீது சாராது ...... எவராலுந் 
தொடரொ ணாது மாமாயை யிடைபு காது ஆனாத
     சுகம கோத தீயாகி ...... யொழியாது 
பருதி காயில் வாடாது வடவை மூளில் வேகாது
     பவனம் வீசில் வீழாது ...... சலியாது 
பரவை சூழி லாழாது படைகள் மோதில் மாயாது
     பரம ஞான வீடேது ...... புகல்வாயே 
நிருதர் பூமி பாழாக மகர பூமி தீமூள
     நிபிட தாரு காபூமி ...... குடியேற 
நிகர பார நீகார சிகர மீது வேலேவு
     நிருப வேத ஆசாரி ...... யனுமாலும் 
கருது மாக மாசாரி கனக கார்மு காசாரி
     ககன சாரி பூசாரி ...... வெகுசாரி 
கயிலை நாட காசாரி சகல சாரி வாழ்வான
     கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.
வேத மொழிக்குள் கேட்கப்படாததும், சரியை* மார்க்கத்தில் உள்ளவர்களால் காணப்படாததும், யோகியர் தன்மயமாய் நிற்கும் யோக* நிலையிலும் கூட அருகே நெருங்க முடியாததும், யாராலும் தொடர்ந்து அணுக முடியாததும், பெரிய மாயைகள் கூட தன்னுள்ளே புக முடியாததும், அழிவில்லாத ஆனந்தப் பெருங் கடலாய் என்றும் அழியாதிருப்பதும், சூரியன் காய்ந்து எரித்தாலும் அழியாததும், வடவா முகாக்கினி (ஊழித் தீ) மூண்டாலும் வெந்து போகாததும், காற்று வேகமாக வீசினாலும் அதனால் தள்ளுண்டு வீழாததும், சோர்ந்து அசைவற்றுப் போகாததும், கடல் நீர் சூழினும் அமிழ்ந்து போகாததும், எவ்விதமான படைகள் வந்து மோதினாலும் அழிவு படாததும் - இத்தனை தன்மைகளும் உள்ள மேலான ஞான வீடு எது என்று சொல்லியருள்க. அசுரர்களின் இருப்பிடங்கள் பாழாகவும், மகரம் முதலிய மீன்கள் வாழும் கடல் தீப்பற்றவும், நெருக்கமான கற்பகச் சோலைகள் உள்ள பொன்னுலகத்தில் தேவர்கள் குடி புகவும், குவிந்து கிடப்பதும், மிக்க கனமுள்ளதும், பனி மூடியதுமான கிரெளஞ்ச மலையின்மீது வேலைச் செலுத்திய அரசே, வேத ஆசாரியனான பிரமனும், வேத முதல்வனான திருமாலும் தியானிக்கின்ற சிவாகமங்களைத் தந்த குரு மூர்த்தி, பொன் மலையான மேருவாகிய வில்லை ஏந்திய பெருமான், ஞானாகாசத்தில் உலவுகின்றவர், பூதலங்கள்தோறும் வீற்றிருப்பவர், பல விதமான நடையை உடையவர், கயிலையில் பல நடனங்களை ஆடவல்ல தலைவர், எல்லாவற்றிலும் வசிப்பவர் ஆகிய சிவபெருமானது செல்வமான கருணைப் பெரு மலையே, தேவர்கள் பெருமாளே. 
* 4 பக்தி மார்க்கங்கள் பின்வருமாறு:1. சரியை: திருக்கோயிலில் அலகு இடுதல், மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம் வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல், இறைவனை வாழ்த்துதல், திருவேடம் கண்டு பணிதல். இது 'தாத மார்க்கம் - சாலோகம்'.2. கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்தியக் காரியம் செய்தல். இது 'புத்ர மார்க்கம் - சாமீபம்'.3. யோகம்: புலன்களை அடக்கிப் பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி, முழு ஜோதியை நினைத்திருத்தல். இது 'சக மார்க்கம் (தோழ நெறி) - சாரூபம்'.4. ஞானம்: புறத் தொழில் அகத் தொழில் இன்றி, அறிவு மாத்திரத்தாலே செய்யும் வழிபாடு ஞானம். இது 'சன்மார்க்கம் - சாயுஜ்யம்'. சிவஞான சித்தியார் சூத்திரம்.
பாடல் 1050 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனன தான தானான தனன தான தானான
     தனன தான தானான ...... தனதான
தொடஅ டாது நேராக வடிவு காண வாராது
     சுருதி கூறு வாராலு ...... மெதிர்கூறத் 
துறையி லாத தோராசை யிறைவ னாகி யோரேக
     துரிய மாகி வேறாகி ...... யறிவாகி 
நெடிய கால்கை யோடாடு முடலின் மேவி நீநானு
     மெனவு நேர்மை நூல்கூறி ...... நிறைமாயம் 
நிகரில் கால னாரேவ முகரி யான தூதாளி
     நினைவொ டேகு மோர்நீதி ...... மொழியாதோ 
அடல்கெ டாத சூர்கோடி மடிய வாகை வேலேவி
     யமர்செய் வீர ஈராறு ...... புயவேளே 
அழகி னோடு மானீனு மரிவை காவ லாவேதன்
     அரியும் வாழ வானாளு ...... மதிரேகா 
கடுவி டாக ளாரூப நடவி நோத தாடாளர்
     கருதி டார்கள் தீமூள ...... முதல்நாடுங் 
கடவு ளேறு மீதேறி புதல்வ கார ணாவேத
     கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.
தொடுதற்கு முடியாததாய், நேராக அதன் உருவத்தைக் காணுதற்குக் கிட்டாததாய், வேதப் பொருளைக் கூற வல்லவர்களாலும் விளக்கமாகச் சொல்வதற்கு வழி இல்லாததாய், நமது விருப்பத்துக்கு உரிய கடவுளாய், ஒப்பற்று ஒரே பரம் பொருளாக நிற்பதாய், விழிப்பு - உறக்கம் - கனவு ஆகிய மூன்று நிலைகளுக்கும் அப்பால் இருப்பதுவாய், பிறிதாய், அறிவாய், நீண்ட கால், கை ஆகிய உறுப்புக்களுடன் நடமாடும் உடலில் இடம் கொண்டு, நீ என்றும், நான் என்றும் துவைதமாகக் கூறும் நிலைமையானது நூல்களால் கூறப்பட்டு, அதனால் நிரம்ப ஏற்படும் மாயமான உணர்ச்சி (யாது என்பதையும்), ஒப்பில்லாத யமனார் ஏவ, ஆரவாரத்துடன் வருகின்ற தூதர்கள் மறக்காமல் (உயிரைப் பிரிக்க) வருகின்ற ஒரு நியதி யாது என்பதையும் எனக்கு விளங்கச் சொல்லி அருள மாட்டாயோ? வலிமை கெடாத கோடிக் கணக்கான சூரர்கள் இறக்க, வெற்றி வலாயுதத்தைச் செலுத்திப் போர் செய்த வீரனே, பன்னிரண்டு புயங்களை உடைய தலைவனே, அழகு நிரம்பிய மான் பெற்ற பெண்ணாகிய வள்ளியின் கணவனே, பிரமனும் திருமாலும் (சூரனுக்கு அஞ்சாமல்) வாழும்படியாக வானுலகை ஆளும் மேம்பாடு உடையவனே, விஷம் நீங்காத கழுத்தை உடைய உருவத்தாரும், நடனங்களை அற்புத வகையில் செய்யும் மேன்மையாளரும், பகைவர்களாகிய திரிபுராதிகள் தீ மூண்டு அழியும்படியாக முன்பு அவர்களைத் தேடிச் சென்று சண்டையிட்ட கடவுளும், ரிஷப வாகனத்தின்மேல் ஏறுபவரும் ஆகிய சிவபெருமானின் மகனே, மூல காரணனே, வேதப் பொருளானவனே, கருணைப் பெருமலையே, தேவர்களின் பெருமாளே. 

பாடல் 1001 - பொதுப்பாடல்கள்
ராகம் - .....; தாளம் - ..........

தனன தனதன தனதன தனதன     தனன தனதன தனதன தனதன          தனன தனதன தனதன தனதன ...... தனதான

இலகி யிருகுழை கிழிகயல் விழியினு     மிசையி னசைதரு மொழியினு மருவமர்          இருள்செய் குழலினு மிடையினு நடையினு ...... மநுராக 
இனிமை தருமொரு இதழினு நகையினு     மிளைய ம்ருகமத தனகுவ டழகினு          மியலு மயல்கொடு துணிவது பணிவது ...... தணியாதே 
குலவி விரகெனு மளறிடை முழுகிய     கொடிய நடலைய னடமிட வருபிணி          குறுகி யிடஎம னிறுதியி லுயிரது ...... கொடுபோநாள் 
குனகி யழுபவர் அயர்பவர் முயல்பவர்     குதறு முதுபிண மெடுமென வொருபறை          குணலை யிடஅடு சுடலையில் நடவுத ...... லினிதோதான் 
மலையில் நிகரில தொருமலை தனையுடல்     மறுகி யலமர அறவுர முடுகிய          வலிய பெலமிக வுடையவ னடையவு ...... மதிகாய 
மவுலி யொருபது மிருபது கரமுடன்     மடிய வொருசரம் விடுபவபன் மதகரி          மடுவில் முறையிட வுதவிய க்ருபைமுகில் ...... மதியாதே 
அலகை யுயிர்முலை யமுதுசெய் தருளிய     அதுல னிருபத மதுதனி லெழுபுவி          யடைய அளவிட நெடுகிய அரிதிரு ...... மருகோனே 
அவுண ருடலம தலமர அலைகட     லறவு மறுகிட வடகுவ டனகிரி          யடைய இடிபொடி படஅயில் விடவல ...... பெருமாளே.

விளங்குகின்ற காதிலுள்ள குண்டலங்களை கிழித்துத் தாக்கும் கயல் மீன் போன்ற கண்ணிலும், இன்னிசை போல அசைந்து எழும் பேச்சிலும், வாசனை உள்ள இருண்ட கூந்தலிலும், இடுப்பிலும், நடையிலும், காம ஆசையைத் தரும் இன்பம் கொடுக்கும் வாயிதழிலும், சிரிப்பிலும், முதிராத, கஸ்தூரி அணிந்த, மலை போன்ற மார்பகத்தின் அழகிலும், ஏற்படும் மோகத்துடன் நான் துணிந்து ஈடுபட்டு இவ்வேசையருக்குப் பணிவது குறையாமல், பொழுது போக்கி, தந்திரச் செயல்களாகிய சேற்றில் மூழ்கிய பொல்லாத் துன்பத்துக்கு ஆளானவனாகிய என்னிடம், தாண்டவம் இட எழுகின்ற நோய்களெல்லாம் வந்து அணுக, முடிவில் யமன் என் உயிரைக் கொண்டு போகும் அந்த நாளில், அன்புச் சொற்களைச் சொல்லி அழுபவர்களும், சோர்வுற்று இருப்பவர்களும், ஈமச் சடங்குகளைச் செய்ய முயற்சி செய்பவர்களும், (நேரமாகி விட்டது) குலைந்து அழுகிப் போகும் பிணத்தை எடுங்கள் என்று கூற, அப்போது ஈமப் பறை ஒலிக்க, (உடலை எரித்து) அழிக்கின்ற சுடு காட்டில் ஏகுதல் நல்லதாகுமோ? மலைகளுக்குள் தனக்கு ஒப்பில்லாததான ஒரு மேரு மலையை உடல் கலங்கி வேதனைப்பட, மிக்க திடத்தைக் காட்டி எடுக்க முயன்றவனும், வன்மைப் பலத்தை நிரம்ப உடையவனுமான ராவணன் போரில் எதிர்த்து வரவும், அவனுடைய பெருத்ததான உடலும், முடிகள் ஒரு பத்தும் இருபது கைகளுடன் அற்று விழ ஒப்பற்ற அம்பைச் செலுத்தியவனாகிய ராமன், கஜேந்திரன் என்ற யானை மடுவில் (முதலை வாய்ப்பட்டு) அழைத்த போது உதவிய கருணை நிரம்பிய மேக வண்ணன், தன்னை மதிக்காமல் வந்த பெண் பேய் பூதனையின் உயிரை முலைப் பாலுடன் உண்டு போக்கி அருளிய ஒப்பில்லாதவன், தனது இரு திருவடிகளால் ஏழுலகங்கள் யாவையும் அளக்க ஓங்கி வளர்ந்தவனும் ஆகிய திருமாலின் அழகிய மருகனே, அசுரர்களுடைய உடல்கள் வேதனைப்படவும், அலை வீசும் கடல் மிகவும் கலங்கவும், வடக்கே உள்ள மேருமலை போன்ற கிரெளஞ்ச மலை முழுவதும் இடிபட்டுப் பொடியாகவும் வேலாயுதத்தைச் செலுத்திய பெருமாளே. 

பாடல் 1002 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனன தனதன தனதன தனதன     தனன தனதன தனதன தனதன          தனன தனதன தனதன தனதன ...... தனதான

கடலை பயறொடு துவரையெ ளவல்பொரி     சுகியன் வடைகனல் கதலியி னமுதொடு          கனியு முதுபல கனிவகை நலமிவை ...... யினிதாகக் 
கடல்கொள் புவிமுதல் துளிர்வொடு வளமுற     அமுது துதிகையில் மனமது களிபெற          கருணை யுடனளி திருவருள் மகிழ்வுற ...... நெடிதான 
குடகு வயிறினி லடைவிடு மதகரி     பிறகு வருமொரு முருகசண் முகவென          குவிய இருகர மலர்விழி புனலொடு ...... பணியாமற் 
கொடிய நெடியன அதிவினை துயர்கொடு     வறுமை சிறுமையி னலைவுட னரிவையர்          குழியில் முழுகியு மழுகியு முழல்வகை ...... யொழியாதோ 
நெடிய கடலினில் முடுகியெ வரமுறு     மறலி வெருவுற ரவிமதி பயமுற          நிலமு நெறுநெறு நெறுவென வருமொரு ...... கொடிதான 
நிசிசர் கொடுமுடி சடசட சடவென     பகர கிரிமுடி கிடுகிடு கிடுவென          நிகரி லயில்வெயி லெழுபசு மையநிற ...... முளதான 
நடன மிடுபரி துரகத மயிலது     முடுகி கடுமையி லுலகதை வலம்வரு          நளின பதவர நதிகுமு குமுவென ...... முநிவோரும் 
நறிய மலர்கொடு ஹரஹர ஹரவென     அமரர் சிறைகெட நறைகமழ் மலர்மிசை          நணியெ சரவண மதில்வள ரழகிய ...... பெருமாளே.

கடலை, பயறு இவைகளுடன், துவரை, எள், பொரி, சுகியன், வடை, கரும்பு, வாழை இனிய அமுது போன்ற சுவையுடன் பழுத்துள்ள முதிர்ந்த பலவிதமான பழ வகைகள் நல்லபடியாக இவைகளை இன்பத்துடன், கடலால் சூழப்பட்ட பூமியில் உள்ளவர்கள் முதல் யாவரும் தழைத்து வளப்பம் பெறுவதற்காக, அமுதாக தனது துதிக்கையில் மனம் மகிழ்ச்சி பெற கருணை மிகுந்து அள்ளி எடுத்து திருவருள் பாலிக்க, பெரிய குடம் போன்ற வயிற்றினில் அடைக்கின்ற மத யானை போன்ற கணபதியின் பின் தோன்றிய ஒப்பற்ற முருகனே, ஷண்முகனே என்று இரண்டு கைகளும் குவிய, மலர்ந்த கண்களிலிருந்து நீர் பெருக, உன்னைப் பணியாமல், கொடியதும் பெரிதானதுமான மிக்க வினையால் ஏற்படும் துயரத்துடன், வறுமையால் வரும் தாழ்வினால் மனம் அலைச்சல் அடைந்து, விலைமாதர்களின் வஞ்சகப் படுகுழியில் முழுகியும், பாழடைந்தும் திரிகின்ற தன்மை என்னைவிட்டு நீங்காதோ? பெரிய கடல் போல விரைந்து எழுந்து (உயிர்களைக் கவரும்) வரம் பெற்ற யமன் பயப்படவும், சூரியனும் சந்திரனும் பயப்படவும், பூமியும் நெறு நெறு என அதிரவும் போர்க்களத்துக்கு வந்த கொடியர்களான அசுரர்களின் கொடிய தலைகள் சட சட சட என்று அதிர்ந்து வீழவும், சொல்லப்படும் எட்டு மலைகளின் சிகரங்கள் கிடு கிடு என்று அதிர்ச்சி உறவும், உவமை இல்லாத வேலாயுதத்துடன், ஒளி வீசும் பச்சை நிறமுள்ளதும் நடனம் செய்யும் வாகனமான குதிரை போன்ற மயில் மீது ஏறி வேகமாக உக்கிரத்துடன் புவியை வலம் வந்த தாமரை போன்ற திருவடிகளை உடையவனே, ஜீவநதியாகிய கங்கை குமு குமு என்று கொந்தளிக்க, முனிவர்களும் வாசனை மிகுந்த மலர்களோடு ஹர ஹர என்று போற்ற, தேவர்கள் சிறை நீங்க, நறு மணம் வீசும் தாமரை மலர் மீது தங்கியிருந்து சரவணப் பொய்கையில் வளர்ந்த அழகிய பெருமாளே. 

பாடல் 1003 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனன தனதன தனதன தனதன     தனன தனதன தனதன தனதன          தனன தனதன தனதன தனதன ...... தனதான

கமல குமிளித முலைமிசை துகிலிடு     விகட கெருவிக ளசடிகள் கபடிகள்          கலக மிடுவிழி வலைகொடு தழுவிக ...... ளிளைஞோர்கள் 
கனலி லிடுமெழு கெனநகை யருளிகள்     அநெக விதமொடு தனியென நடவிகள்          கமரில் விழுகிடு கெடுவிகள் திருடிகள் ...... தமைநாடி 
அமுத மொழிகொடு தவநிலை யருளிய     பெரிய குணதர ருரைசெய்த மொழிவகை          அடைவு நடைபடி பயிலவு முயலவு ...... மறியாத 
அசட னறிவிலி யிழிகுல னிவனென     இனமு மனிதரு ளனைவரு முரைசெய          அடிய னிதுபட அரிதினி யொருபொரு ...... ளருள்வாயே 
திமித திமிதிமி டமடம டமவென     சிகர கரதல டமருக மடிபட          தெனன தெனதென தெனவென நடைபட ...... முநிவோர்கள் 
சிவமி லுருகியு மரகர வெனவதி     பரத பரிபுர மலரடி தொழஅநு          தினமு நடமிடு பவரிட முறைபவள் ...... தருசேயே 
குமர சரவண பவதிற லுதவிய     தரும நிகரொடு புலமையு மழகிய          குழக குருபர னெனவொரு மயில்மிசை ...... வருவோனே 
குறவ ரிடுதினை வனமிசை யிதணிடை     மலையு மரையொடு பசலைகொள் வளர்முலை          குலவு குறமக ளழகொடு தழுவிய ...... பெருமாளே.

தாமரையின் மொக்குப் போல புடைத்தெழுந்த மார்பின் மீது மேலாடையை எடுப்பாக அணியும் மிகுந்த கர்வம் பிடித்தவர்கள், மூடர்கள், வஞ்சகர்கள், கலகத்தை விளைவிக்கும் கண்ணாகிய வலையை வீசித் தழுவுபவர்கள், வாலிபர்களை நெருப்பில் இட்ட மெழுகைப் போல உருகச்செய்து சிரிப்பவர்கள், பலவிதமான வழிகளில், இணை இல்லாத வகையில் நடை நடப்பவர்கள், படுகுழிக்குள் விழும்படிச் செய்யும் கேடு விளைவிப்பவர்கள், திருட்டுக் குணம் உடையவர்கள் ஆகிய விலைமகளிரைத் தேடிச் சென்றவன் நான். அமுதம் போன்ற சொற்களால் (எனக்குத்) தவ நிலையைத் தந்து அருளிய பெரிய குணவானாகிய தவப்பெரியார்* உபதேசித்த மொழியின் படி தகுதியான நடை முறையை அனுஷ்டிக்கவும், முயற்சி செய்யவும் அறியாத முட்டாள், அறிவில்லாதவன், இழி குலத்தைச் சேர்ந்தவன் இவன் என்று சுற்றத்தார்களும், பிற மனிதர்கள் யாவரும் இழிவாய்ப் பேச, அடியேன் அத்தகைய பேச்சில் படுதல் முடியாது. இனிமேல் ஒப்பற்ற ஞானப் பொருளை நீ அருள் புரிவாயாக. திமித திமிதிமி டமடம டமவென்ற ஒலியுடன் உயரப் பிடித்த கையில் உள்ள உடுக்கை அடிபடவும், தெனன தெனதென என்று நிகழ்ச்சிகள் நிகழவும், முனிவர்கள் சிவத் தியானத்தில் உருகியும், ஹர ஹர என்று ஒலி எழுப்பியும், சிறப்பான பரத சாஸ்திர முறையில் சிலம்பணிந்த மலர் போன்ற திருவடிகளை வணங்கவும், நாள்தோறும் நடனம் செய்யும் சிவபெருமானின் இடது பாகத்தில் வீற்றிருக்கும் பார்வதி தேவி பெற்ற குழந்தையே, குமரனே, சரவணபவனே, ஞான வலிமையைத் தந்த தரும மூர்த்தியே, ஒளியும், புலமையும் அழகோடு விளங்கும் இளைஞனே, குருபரனே, என்று அனைவரும் போற்றும்படி ஒப்பற்ற மயில் மீது வருபவனே, குறவர்கள் பயிரிட்ட தினைப்புனத்தில் பரண்மீது நின்று, இடையோடு போர் செய்யும் பசலை** நிறம் கொண்டு எழுந்த மார்பகம் விளங்கும் குற மகளான வள்ளியை அழகு பெறத் தழுவிய பெருமாளே. 
* அருணகிரியாரின் தவவலிமையை உணர்ந்த அருணாசலேசுரர் தவப் பெரியார் போலத் தோன்றி, அறுமுகக் கடவுளைத் தியானிக்கவும் என்று உபதேசம் செய்தார். இதைப் பொருட்படுத்தாத அருணகிரியார் சில காலம் வீணாக்கினார். ஊரார் வசவுக்கும் உள்ளானார். பின்னர் வருந்தினார்.** தலைவர் பிரிவதால் ஏற்படும் விரக தாபத்தால் உண்டாகும் நிற வேறுபாடு.

பாடல் 1004 - பொதுப்பாடல்கள் 
ராகம் - பாகேஸ்ரீ தாளம் - அங்கதாளம் - 7 1/2 
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2

தனன தனதன தனதன தனதன     தனன தனதன தனதன தனதன          தனன தனதன தனதன தனதன ...... தனதான

தசையு முதிரமு நிணமொடு செருமிய     கரும கிருமிக ளொழுகிய பழகிய          சடல வுடல்கடை சுடலையி லிடுசிறு ...... குடில்பேணுஞ் 
சகல கருமிகள் சருவிய சமயிகள்     சரியை கிரியைகள் தவமெனு மவர்சிலர்          சவலை யறிவினர் நெறியினை விடஇனி ...... யடியேனுக் 
கிசைய இதுபொரு ளெனஅறி வுறவொரு     வசன முறஇரு வினையற மலமற          இரவு பகலற எனதற நினதற ...... அநுபூதி 
இனிமை தருமொரு தனிமையை மறைகளின்     இறுதி யறுதியி டவரிய பெறுதியை          இருமை யொருமையில் பெருமையை வெளிபட ...... மொழிவாயே 
அசல குலபதி தருமொரு திருமகள்     அமலை விமலைக ளெழுவரும் வழிபட          அருளி அருணையி லுறைதரு மிறையவ ...... ளபிராமி 
அநகை அநுபவை அநுதயை அபிநவை     அதல முதலெழு தலமிவை முறைமுறை          அடைய அருளிய பழையவ ளருளிய ...... சிறியோனே 
வசுவ பசுபதி மகிழ்தர வொருமொழி     மவுன மருளிய மகிமையு மிமையவர்          மரபில் வனிதையும் வனசரர் புதல்வியும் ...... வடிவேலும் 
மயிலு மியலறி புலமையு முபநிட     மதுர கவிதையும் விதரண கருணையும்          வடிவு மிளமையும் வளமையு மழகிய ...... பெருமாளே.

சதை, இரத்தம், மாமிசம் ஆகியவை நெருங்கியுள்ள, செயல்கள் நிறைந்துள்ள புழுக்கள் இருந்து பழகும் அறிவில்லாத ஜடப்பொருளாகிய உடல், இறுதியில், சுடு காட்டில் இடப்படுகின்ற சிறிய வீடு, (இதைப்) போற்றி வளர்க்கும் (சாத்திர முறைப்படி) அனைத்துக் கிரியைகளையும் செய்பவர்கள், போராடுகின்ற சமய வாதிகள், சரியை, கிரியை, தவம் என்று சொல்லும் சிலர், மனக் குழப்பம் உள்ள அறிவில்லாதவர்கள் ஆகியோர் கொண்டுள்ள மார்க்கத்தை* நான் விட்டொழிக்க, இனிமேல் அடியவனாகிய எனக்கு இதுதான் ஞானப் பொருள் என்று என் மனதில் படும்படி, ஒப்பற்ற உபதேசத்தை நான் பெறவும், நல்வினை, தீவினை எனப்படும் இருமைகள் நீங்கவும், எனது (ஆணவம், கன்மம், மாயை என்ற) மும்மலங்களும் நீங்கவும், (ஆன்மாவின்) கேவல சகல நிலைகள் நீங்கவும், என்னுடைய மமகாரம் ஒழியவும், உன்னுடைய துவித நிலை (அதாவது நீ வேறு, நான் வேறு என்ற தன்மை) நீங்கவும், அனுபவ உண்மையை, இன்பத்தைத் தருகின்ற ஒப்பற்ற தனி நிலையை, வேதங்களின் முடிவான பொருள்களும் முடிவு செய்து கூறுதற்கு அரிதான பேற்றினை, சக்தி, சிவம் என்னும் இரண்டு பேதங்களின் ஒன்றான தன்மையின் பெருமை விளங்க அடியேனுக்கு வெளிப்படுத்தும்படி உபதேசித்து அருள்வாயாக. மலைகளுள் சிறந்த இமய மலை அரசன் ஈன்ற ஒப்பற்ற அழகிய பார்வதி, களங்கம் அற்றவள், தூய்மையான சப்த மாதர்கள்** ஏழு பேரும் (தன்னை) வணங்க அருள் செய்து திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் தேவி, அழகி, பாவம் அற்றவள், ஞான அனுபவம் உடையவள், காருண்யம் மிக்கவள், புதுமையானவள், அதலம் முதலான ஏழு உலகங்களுக்கும் முறைப்படி முற்றிலுமாக அருள் செய்த பழமை வாய்ந்தவள் ஆகிய உமாதேவி பெற்றருளிய குழந்தையே, அக்கினி சொரூபியாகிய சிவ பெருமான் மகிழும்படி ஒப்பற்ற உபதேச மொழியான மவுன உபதேசத்தை அவருக்கு அருளிய விசேஷப் பெருமையும், தேவர்கள் குலத்தில் வந்த மங்கை தேவயானையும், வேடர் குலப் பெண்ணாகிய வள்ளியும், கூர்மையான வேலும், மயிலும், இயற்றமிழில் வல்ல புலமையும், உபநிஷதக் கருத்துக்கள் அடங்கிய தேவாரமும், கொடைத் திறம் நிறைந்த உனது கருணையும், உனது வடிவமும், இளமையும், செழுமையும் சிறந்து விளங்கும் அழகுமிக்க பெருமாளே. 
* 4 பக்தி மார்க்கங்கள் பின்வருமாறு:1. சரியை: திருக்கோயிலில் அலகு இடுதல், மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம் வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல், இறைவனை வாழ்த்துதல், திருவேடம் கண்டு பணிதல். இது 'தாத மார்க்கம் - சாலோகம்'.2. கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்தியக் காரியம் செய்தல். இது 'புத்ர மார்க்கம் - சாமீபம்'.3. யோகம்: புலன்களை அடக்கிப் பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி, முழு ஜோதியை நினைத்திருத்தல். இது 'சக மார்க்கம் (தோழ நெறி) - சாரூபம்'.4. ஞானம்: புறத் தொழில் அகத் தொழில் இன்றி, அறிவு மாத்திரத்தாலே செய்யும் வழிபாடு ஞானம். இது 'சன்மார்க்கம் - சாயுஜ்யம்'. சிவஞான சித்தியார் சூத்திரம். ** சப்த மாதாக்கள்:அபிராமி, மகேசுவரி, கெளமாரி, நாராயணி, வாராகி, இந்திராணி, காளி.

பாடல் 1005 - பொதுப்பாடல்கள் 
ராகம் - காம்போதி தாளம் - அங்கதாளம் - 7 1/2 - எடுப்பு - 1/2 அக்ஷரம் தள்ளி 
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2

தனன தனதன தனதன தனதன     தனன தனதன தனதன தனதன          தனன தனதன தனதன தனதன ...... தனதான

நெடிய வடகுவ டிடியவு மெழுகிரி     நெறுநெ றெனநெரி யவுமுது பணிபதி          நிபிட முடிகிழி யவுநில மதிரவும் ...... விளையாடும் 
நிகரில் கலபியும் ரவியுமிழ் துவசமும்     நினது கருணையு முறைதரு பெருமையும்          நிறமு மிளமையும் வளமையு மிருசர ...... ணமும்நீப 
முடியு மபிநவ வனசரர் கொடியிடை     தளர வளர்வன ம்ருகமத பரிமள          முகுள புளகித தனகிரி தழுவிய ...... திரடோளும் 
மொகுமொ கெனமது கரமுரல் குரவணி     முருக னறுமுக னெனவரு வனபெயர்          முழுது மியல்கொடு பழுதற மொழிவது ...... மொருநாளே 
கொடிய படுகொலை நிசிசர ருரமொடு     குமுகு மெனவிசை யுடனிசை பெறமிகு          குருதி நதிவித சதியொடு குதிகொள ...... விதியோடக் 
குமுறு கடல்குடல் கிழிபட வடுமர     மொளுமொ ளெனஅடி யொடலறி விழவுயர்          குருகு பெயரிய வரைதொளை படவிடு ...... சுடர்வேலா 
இடியு முனைமலி குலிசமு மிலகிடு     கவள தவளவி கடதட கனகட          இபமு மிரணிய தரணியு முடையதொர் ...... தனியானைக் 
கிறைவ குருபர சரவண வெகுமுக     ககன புனிதையும் வனிதைய ரறுவரும்          எனது மகவென வுமைதரு மிமையவர் ...... பெருமாளே.

நீண்டதும், வடக்கே உள்ளதுமான மேரு மலை இடிபட்டுப் பொடிபடவும், (சூரனின் நாட்டைச் சுற்றியிருந்த) ஏழு மலைகளும் நெறு நெறு என்று நெரிவுறவும், முதுமை வாய்ந்ததும், பாம்புகளுக்குத் தலைவனும் ஆகிய ஆதிசேஷனது நெருங்கிய பணா முடிகள் கிழிபடவும், பூமி அதிரவும் விளையாடுகின்ற ஒப்பில்லாத மயிலும், சூரியனைத் தனது கூவலினால் (தினமும்) உமிழ்ந்தளிக்கும்* சேவல் அமைந்த கொடியும், உன்னுடைய கருணையும், உன்னிடம் நிலைத்து விளங்கும் பெருமையும், உன் செந்நிறமும், இளமையும், வளமையும், இரண்டு திருவடிகளும், கடம்பமாலை அணிந்த திருமுடிகளும், புதுமை நிறைந்த வேடர்களின் மகளாம் வள்ளியின் கொடி போன்ற இடையானது தளர்வுறும்படி வளர்கின்ற, கஸ்தூரி நறுமணம் கமழ்கின்ற, மொட்டுப் போல் குவிந்து பூரித்துள்ள மலை போன்ற மார்பகங்களைத் தழுவிய திரண்ட தோள்களும், மொகுமொகுவென்று வண்டுகள் ஒலிக்கின்ற குரா மலர் மாலையை அணியும் முருகன், ஆறுமுகன் என்று வரும் உன் திருநாமங்கள் யாவையும், இயல் தமிழில் அமைத்து, குற்றமறப் பாடி நான் ஓதும் ஒரு நாள் கிடைக்குமோ? கொடுமையான படுகொலைகளைச் செய்யும் அசுரர்களது மார்பில் குமுகும் என்னும் ஒலி எழும்படி வேகத்துடன் தாக்க, நிரம்ப இரத்தம் நதி வெள்ளம் போல் தாளத்தோடு குதித்துப் பாயவும், பிரமன் அஞ்சி ஓடவும், கலங்கி ஒலிக்கும் கடலின் நடுப்பாகங்கள் கிழிபடவும், பிஞ்சுகளுடன் கூடிய மாமரம் (சூரன்) மொளுமொளுவென்று அடிப்பாகத்திலிருந்து அலறி விழவும், உயர்ந்து வளர்ந்த பறவையின் பெயர் கொண்ட கிரெளஞ்ச மலை தொளைபட்டு அழியவும், ஒளிபடைத்த வேலைச் செலுத்தும் வேலனே. இடியும், கூர்மை மிக்க வஜ்ராயுதமும் (இவளுக்கு ஆயுதங்களாக) விளங்குபவை, கவளமாக ஊண் உண்பதும், வெண்ணிறமானதும், அழகுள்ளதும், பரந்ததும், மதச் சுவட்டினின்று மிகுந்த மதநீர் பொழியும் ஐராவதம் என்னும் வெள்ளை யானையும், பொன்னுலகமும் தனக்குச் சொந்தமாக உள்ள ஒப்பற்ற பெண்ணாம் தேவயானைக்குத் தலைவனே, குருபரனே, சரவணனே, பல முகங்களாய்ப் பரந்து வரும் ஆகாய கங்கையும், கார்த்திகைப் பெண்கள் அறுவரும், எங்கள் குழந்தை என்று உரிமை பாராட்டும்படி பார்வதி பெற்றெடுத்த தேவர்கள் பெருமாளே. 
* சேவல் வாய்விட்டுக் கூவுவவதால் சூரியன் உதிப்பது புலவர் கற்பனையில் சேவல் சூரியனை உமிழ்வதாக உள்ளது.

பாடல் 1006 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ஸஹானா தாளம் - அங்கதாளம் - 7 1/2 - எடுப்பு - 1/2 தள்ளி 
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2

தனன தனதன தனதன தனதன     தனன தனதன தனதன தனதன          தனன தனதன தனதன தனதன ...... தனதான

பகிர நினைவொரு தினையள விலுமிலி     கருணை யிலியுன தருணையொ டுதணியல்          பழநி மலைகுரு மலைபணி மலைபல ...... மலைபாடிப் 
பரவு மிடறிலி படிறுகொ டிடறுசொல்     பழகி யழகிலி குலமிலி நலமிலி          பதிமை யிலிபவு ஷதுமிலி மகிமையி ...... லிகுலாலன் 
திகிரி வருமொரு செலவினி லெழுபது     செலவு வருமன பவுரிகொ டலமரு          திருக னுருகுத லழுகுதல் தொழுகுதல் ...... நினையாத 
திமிர னியல்பிலி யருளிலி பொருளிலி     திருடன் மதியிலி கதியிலி விதியிலி          செயலி லுணர்விலி சிவபத மடைவது ...... மொருநாளே 
மகர சலநிதி முறையிட நிசிசரன்     மகுட மொருபது மிருபது திரள்புய          வரையு மறவொரு கணைதெரி புயல்குரு ...... ந்ருபதூதன் 
மடுவில் மதகரி முதலென வுதவிய     வரத னிருதிறல் மருதொடு பொருதவன்          மதலை குதலையின் மறைமொழி யிகழிர ...... ணியனாகம் 
உகிரி னுதிகொடு வகிருமொ ரடலரி     திகிரி தரமர கதகிரி யெரியுமிழ்          உரக சுடிகையில் நடநவி லரிதிரு ...... மருகோனே 
உருகு மடியவ ரிருவினை யிருள்பொரு     முதய தினகர இமகரன் வலம்வரும்          உலக முழுதொரு நொடியினில் வலம்வரு ...... பெருமாளே.

மற்றவரோடு பகிர்ந்து உண்ணும் நினைவு ஒரு தினையளவும் இல்லாதவன் யான், இரக்கமே இல்லாதவன் யான், உனது திருத்தலங்களாகிய திருவண்ணாமலை, திருத்தணிகை, பழநிமலை, சுவாமிமலை, திருச்செங்கோடு, மற்றும் பல மலைகளைப் பாடி போற்றுகின்ற திறம் இல்லாதவன் யான், வஞ்சனையும் மாறுபாடும் நிறைந்த பேச்சையே பேசப் பழகியவன் யான், அழகற்றவன் யான், நற்குலம் அற்றவன் யான், நற்குணம் அற்றவன் யான், பக்தி இல்லாதவன் யான், பெருந்தன்மை இல்லாதவன் யான், எவ்விதப் பெருமையும் இல்லாதவன் யான், குயவனுடைய சக்கரம் சுழலும் ஒரு சுழற்சி வேகத்திற்குள் எழுபது சுற்று வரும் மனச் சுழற்சி கொண்டு அலை பாய்ந்து வேதனைப்படும் கோணல் புத்தி உடையவன் யான், உள்ளம் உருகல், வாய்விட்டு அழுதல், உடல் வணங்குதல் இம்மூன்றின் நினைப்பு கிடையாத ஆணவத் திமிர் உள்ளவன் யான், நல்ல தன்மை அற்றவன் யான், அருளற்றவன் யான், பொருளற்றவன் யான், திருட்டுப்புத்தி உள்ளவன் யான், அறிவில்லாதவன் யான், நற்கதி இல்லாதவன் யான், தலை எழுத்தும் நன்றாக இல்லாதவன் யான், நற்செய்கைகள் செய்யும் உணர்ச்சி இல்லாதவன் யான், இத்தகைய யான் சிவபதம் அடையக் கூடிய ஒரு நாளும் உண்டோ? (இதன் பிறகு திருமாலைப் பற்றிய விவரமான வர்ணனை வருகிறது) மகர மீன்கள் உள்ள கடல் (அம்பின் வேகம் தாங்காமல்) ஓலமிட, அரக்கன் ராவணனின் பத்து கி¡£டங்களும் இருபது திண்ணிய புயமலைகளும் அற்றுப் போய் கீழே விழுமாறு ஒரு பாணத்தைத் தெரிந்து செலுத்திய மேகவண்ண ராமனும், குரு நாட்டைச் சேர்ந்த மன்னர்களாகிய பாண்டவர்க்குத் தூதனாகச் சென்ற கண்ணனும், தடாகத்தில் மதயானை கஜேந்திரன்ஆதிமூலமே என ஓலமிட வந்துதவிய வரதராஜனும், இரண்டு திண்மையான மருத மரங்களைச் சாடி முறித்த கண்ணனும், குழந்தை பிரகலாதனது குதலைச் சொற்களாக வந்த ஓம் நமோ நாராயணாய என்னும் வேதமொழியினை இகழ்ந்த இரணியனது உடலை நகத்தின் நுனி கொண்டு பிளந்த ஒப்பற்ற வலிமை வாய்ந்த நரசிம்ம மூர்த்தியும் சக்ராயுதத்தை ஏந்தியவனும், மரகதப் பச்சை மாமலைபோல் மேனியை உடையவனும், நெருப்பைக் கக்குகின்ற காளிங்கன் என்ற பாம்பின் தலையுச்சியில் நடனம் செய்த கண்ணனும் ஆகிய விஷ்ணு மூர்த்தி திருமாலின் அழகிய மருமகனே, உள்ளம் உருகும் அடியாரின் நல்வினை, தீவினை ஆகிய இருவினை இருளை விலக்க உதயமாகும் ஞான சூரியனே, பனிக்கிரணங்கள் உடைய சந்திரன் சுற்றி வருகின்ற இந்த உலகத்தை ஒரே நொடியில் சுற்றிவந்த பெருமாளே. 

பாடல் 1007 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனன தனதன தனதன தனதன     தனன தனதன தனதன தனதன          தனன தனதன தனதன தனதன ...... தனதான

முருகு செறிகுழ லவிழ்தர முகமதி     முடிய வெயர்வர முதுதிரை யமுதன          மொழிகள் பதறிட வளைகல கலவென ...... அணைபோக 
முலையின் மிசையிடு வடமுடி யறஇடை     முறியு மெனஇரு பரிபுர மலறிட          முகுள அலரிள நிலவெழ இலவிதழ் ...... பருகாநின் 
றுருகி யுளமுட லுடலொடு செருகிட     வுயிரு மெனதுயி ரெனமிக வுறவுசெய்          துதவு மடமக ளிர்களொடு மமளியி ...... லநுராக 
உததி யதனிடை விழுகினு மெழுகினும்     உழலு கினுமுன தடியிணை எனதுயி          ருதவி யெனவுனை நினைவது மொழிவது ...... மறவேனே 
எருவை யொடுகொடி கெருடனும் வெளிசிறி     திடமு மிலையென வுலவிட அலகையின்          இனமும் நிணமுண எழுகுறள் களுமிய ...... லிசைபாட 
இகலி முதுகள மினமிசை யொடுதனி     யிரண பயிரவி பதயுக மிகுநட          மிடவு மிகவெதி ரெதிரெதி ரொருதனு ...... விருகாலும் 
வரிசை யதனுடன் வளைதர வொருபது     மகுட மிருபது புயமுடன் மடிபட          வலியி னொருகணை விடுகர முதலரி ...... நெடுமாயன் 
மருக குருபர சரவண மதில்வரு     மகிப சுரபதி பதிபெற அவுணர்கள்          மடிய இயல்கொளு மயில்மிசை வரவல ...... பெருமாளே.

நறுமணம் நெருங்கிய கூந்தல் அவிழவும், சந்திரனை ஒத்த முகம் முழுவதும் வியர்வு எழவும், பழமையான (பாற்)கடலில் பிறந்த அமுதம் போன்ற பேச்சு குழற, (கையில் அணிந்த) வளையல்கள் கல் கல் என்று ஒலிக்க, போக இன்பத்துக்கு பாலமான மார்பகத்தின் மேல் அணிந்துள்ள மாலைகள் முடிச்சற்று விழவும், இடை முறிபடும் என்று சொல்லும்படி, (காலில் அணிந்த) இரண்டு சிலம்புகளும் ஓலமிட்டு அலறவும், மலரும் தன்மையுள்ள மலர்களின் இடையே இள நிலவின் ஒளியைப் பற்கள் வீச, இலவம் பூவைப்போல் சிவந்த வாயிதழ் ஊறலை உண்டு நின்று மனம் உருகி, உடலும் உடலும் ஒன்றோடுன்று பொருந்த, (அம்மாதர்களின்) உயிரும் என்னுயிர் போலவே மிகவும் உறவு கொண்டாடும்படி உதவி செய்கின்ற அழகிய பெண்களுடன் படுக்கையில் காம இச்சையாகிய கடலிடையே வீழ்ந்தாலும், மூழ்கி எழுந்தாலும், அதிலேயே சுழன்றாலும், உனது திருவடிகள் இரண்டும் என் உயிருக்கு உற்ற துணை எனக் கருதி (நான்) உன்னை நினைப்பதையும் போற்றுவதையும் மறக்கமாட்டேன். கழுகுடனே, காக்கையும் கருடனும் ஆகாயத்தில் வெற்றிடம் கொஞ்சமும் இல்லை என்னும்படி நெருங்கி உலவ, பேய்களின் கூட்டங்களும், மாமிசங்களை போர்க்களத்தில் உண்ண அங்கு வந்துள்ள குட்டி வேதாளங்களும் இயல் தமிழ், இசைத் தமிழ்ப் பாடல்களைப் பாட, மாறுபட்டு எதிர்க்கும் முற்றிய போர்க்களத்தில் சுற்றமாகிய கணங்களின் இசைப் பாட்டுடன், தனிச்சிறப்புள்ள ரண பயிரவியின் இரண்டு பாதங்களும் மிக்க நடனத்தைச் செய்யவும், மிகவும் எதிருக்கு எதிராக (ராவணனுக்கு) நேரே நின்று, ஒப்பற்ற வில்லின் இரண்டு முனைகளும் முறைப்படி (கோதண்டத்தை) வளைத்து, (ராவணனது) பத்துத் தலைகளும் இருபது புயங்களுடன் மடிந்து விழ வலிமை வாய்ந்த ஒப்பற்ற அம்பைச் செலுத்திய கைகளை உடைய முதல்வனாகிய திருமாலாம் நீண்ட மாயவனுடைய மருகனே, குருபரனே, சரவண மடுவில் தோன்றிய பெருமையாளனே, தேவர்களின் தலைவனாகிய இந்திரன் (அவனுடைய) பொன்னுலகைப் பெறவும், அசுரர்கள் இறக்கவும், தகுதி வாய்ந்த மயிலின் மேல் ஏற வரவல்ல பெருமாளே. 

பாடல் 1008 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனன தானன தனதன தனதன     தனன தானன தனதன தனதன          தனன தானன தனதன தனதன ...... தனதான

இலகு வேலெனு மிருவினை விழிகளும்     எழுதொ ணாதெனு மிருதன கிரிகளும்          இசையி னால்வசை பொசிதரு மொழிகளு ...... மெதிர்வேகொண் 
டெதிரி லாவதி பலமுடை யிளைஞரெ     னினிய மாவினை யிருளெனும் வலைகொடு          இடைவி டாதெறு நடுவனு மெனவளை ...... மடவார்தம் 
கலவி மால்கொடு கலைகளு மறிவொடு     கருதொ ணாதென முனிவுற மருள்கொடு          கரையி லாவிதி யெனுமொரு கடலிடை ...... கவிழாதே 
கருணை வானவர் தொழுதெழு மயிலுறை     குமர கானவர் சிறுமியொ டுருகிய          கமல தாளிணை கனவிலு நினைவுற ...... அருள்தாராய் 
பலகை யோடொரு பதுசிர மறஎறி     பகழி யானர வணைமிசை துயில்தரு          பரமன் மால்படி யளவிடு மரிதிரு ...... மருகோனே 
பழுதி லாமன முடையவர் மலர்கொடு     பரவ மால்விடை மிசையுறை பவரொடு          பரம ஞானமு மிதுவென வுரைசெய்த ...... பெரியோனே 
அலகை காளிகள் நடமிட அலைகட     லதனில் நீள்குடல் நிணமலை பிணமலை          அசுரர் மார்பக மளறது படவிடு ...... மயில்வேலா 
அரிய பாவல ருரைசெய அருள்புரி     முருக ஆறிரு புயஇய லிசையுடன்          அழகு மாண்மையு மிலகிய சரவண ...... பெருமாளே.

விளங்குகின்ற வேல் போன்றதும், பெரிய வினைகள் விளைவதற்குக் காரணமானதுமான கண்களும், படத்தில் எழுதிக்காட்ட முடியாது என்னும்படி உள்ள இரண்டு மலை போன்ற மார்பகங்களும், ஓசையுடனே பேசப்படுகின்ற பழிப்புச் சொற்கள் வெளி வரும் பேச்சுக்களும், இவைகளின் சந்திப்பால் இணையற்ற மிக்க ஆற்றல் உடைய இளைஞர்கள் என்கின்ற இன்பம் கொண்ட விலங்குகளை அவர்களுடைய அஞ்ஞானம் என்ற வலையில் மாட்டி ஓய்வில்லாமல் கொல்லுகின்ற யமன் என்று சொல்லும்படி வளையல்கள் அணிந்த விலைமாதர்களின் புணர்ச்சியில் ஆசை கொண்டு, கலை நூல்களை அறிவு கொண்டு நினைக்கவும் முடியாது என்னும்படியாக வெறுத்து விலக்க, மயக்க உணர்ச்சியால் கரை என்பதே இல்லாத விதி என்கின்ற ஒரு கடல் நடுவில் நான் கவிழ்ந்து போகாமல், கருணை மிகுந்த தேவர்கள் வணங்கி எழும் மயிலை வாகனமாகக் கொண்ட குமரனே, வேட்டுவச் சிறுமியாகிய வள்ளியின் பொருட்டு மனம் உருகி நடந்த பாத கமலத்தை உடையவனே, உனது திருவடி இணைகளை கனவிலும் நான் நினைக்கும்படி அருள் புரிவாயாக. (ராவணனின்) பல கைகளுடன் ஒப்பற்ற பத்துத் தலைகளும் அற்று விழும்படி செலுத்திய அம்பை உடையவன், (ஆதிசேஷனாம்) பாம்பணையின் மேல் துயிலும் மேலோனாகிய மாயோன், பூமியை அளந்த திருமாலின் மருகனே, குற்றமில்லாத மனத்தை உடைய அடியார்கள் மலர்களைக் கொண்டு போற்ற, பெருமை வாய்ந்த ரிஷப வாகனத்தின் மீது வீற்றிருக்கும் சிவபெருமானுக்கு மேலான ஞானப் பொருள் இதுதான் என்று உபதேசம் செய்த பெரியோனே, பேய்களும் காளிகளும் மகிழ்ந்து கூத்தாட, அலை வீசும் கடலில் நீண்ட குடல்களும், மாமிச மலைகளும், பிண மலைகளும், அசுரர்களின் மார்பிடங்களும் ரத்தச் சேறுபட்டு அழியும்படியாகச் செலுத்திய கூரிய வேலாயுதனே, அருமை வாய்ந்த புலவரான நக்கீரர் உன்னைப் பாடி (திருமுருகாற்றுப்படையால்) புகழ அருள் புரிந்த முருகனே, பன்னிரண்டு திருப்புயங்களை இயற்றமிழும், இசைத் தமிழும், அழகும், ஆண்மையும் அலங்கரிக்க விளங்குகின்றவனே, சரவண மடுவில் தோன்றிய பெருமாளே. 

பாடல் 1009 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனன தானன தனதன தனதன     தனன தானன தனதன தனதன          தனன தானன தனதன தனதன ...... தனதான

முருகு லாவிய குழலினு நிழலினும்     அருவ மாகிய இடையினு நடையினு          முளரி போலுநல் விழியினு மொழியினு ...... மடமாதர் 
முனிவி லாநகை வலையினு நிலையினும்     இறுக வாரிடு மலையெனு முலையினு          முடிவி லாததொர் கொடுவிட மடுவித ...... மயலாகி 
நரகி லேவிழு மவலனை யசடனை     வழிப டாதவொர் திருடனை மருடனை          நலமி லாவக கபடனை விகடனை ...... வினையேனை 
நடுவி லாதன படிறுகொ ளிடறுசொ     லதனில் மூழ்கிய மறவனை யிறவனை          நளின மார்பத மதுபெற ஒருவழி ...... யருள்வாயே 
வரிய ராவினின் முடிமிசை நடமிடு     பரத மாயவ னெழுபுவி யளவிடு          வரதன் மாதவ னிரணிய னுடலிரு ...... பிளவாக 
வகிரு மாலரி திகிரிய னலையெறி     தமர வாரிதி முறையிட நிசிசரன்          மகுட மானவை யொருபதும் விழவொரு ...... கணையேவுங் 
கரிய மேனியன் மருதொடு பொருதவன்     இனிய பாவல னுரையினி லொழுகிய          கடவுள் வேயிசை கொடுநிரை பரவிடு ...... மபிராமன் 
கருணை நாரண னரபதி சுரபதி     மருக கானக மதனிடை யுறைதரு          கரிய வேடுவர் சிறுமியொ டுருகிய ...... பெருமாளே.

நறு மணம் வீசும் கூந்தலிலும், அக் கூந்தலின் ஒளியிலும், கண்ணுக்குப் புலப்படாத அளவுக்குச் சிறுத்திருந்த இடையிலும், நடை அழகிலும், தாமரை போன்ற அழகிய கண்ணிலும், பேச்சிலும், இளம் பெண்களின் கோபக்குறி இல்லாத புன்னகையாகிய வலையிலும், அதன் (வசீகரத்) ஸை தன்மையிலும், அழுத்தமாக கச்சு அணிந்த மலை போன்ற மார்பிலும், முடிவே இல்லாததும், ஒப்பற்ற கொடிய விஷம் கொல்லுவது போன்ற தன்மையதான மோகத்தைக் கொண்டவனாகி, நரகத்தில் விழும் வீணனும் முட்டாளுமான என்னை, ஒரு நல்வழிக்கும் வராத ஓர் திருடனும், மயக்கத்தில் இருப்பவனுமான என்னை, நன்மை நினைவே இல்லாத உள்ளக் கபடனும், செருக்கு உள்ளவனும், தீ வினைக்கு ஈடானவனுமான என்னை, நடு நிலைமையே இல்லாது வஞ்சகமே பூண்டு, தடை வார்த்தைகளைப் பேசுவதிலேயே முழுகிய கொடியோனும், இறந்து ஒழிதற்கே பிறந்தவனுமான என்னை, தாமரை போன்ற உனது திருவடிகளை அடையச் செய்வதற்கு ஓர் உபதேசத்தை அருள்வாயாக. கோடுகளைக் கொண்ட (காளிங்கன் என்னும்) பாம்பின் முடி மீது நடனம் செய்யும் பரத நாட்டியத்தில் வல்ல மாயவன், ஏழு உலகங்களையும் பாதத்தால் அளந்தவன், வரமளிப்பவன், மாதவன், இரணியனுடைய உடலை இரண்டு பிளவாகும்படி நகத்தால் கீறிய திருமால், அரி, சக்கரம் ஏந்தியவன், அலை வீசுகின்றதும் ஒலிப்பதுமான கடல் முறையிடவும், அரக்கனாகிய இராவணனுடைய மகுடம் அணிந்த தலைகள் பத்தும் அறுபட்டு விழும்படி, ஒப்பற்ற அம்பைச் செலுத்திய கரிய உடல் கொண்டவன், மருத மரங்களைச் சாடித் தள்ளியவன், இனிமை வாய்ந்த புலவனாகிய (திருமழிசை ஆழ்வாரின்) சொல்லுக்கு இணங்கி அதன் படி நடந்த கடவுள்*, புல்லாங்குழலின் இன்னிசையால் பசுக் கூட்டத்தைப் பாதுகாத்த பேரழகன், கருணை நிறைந்த நாராயண மூர்த்தி, அருச்சுனனுக்குத் தலைவன், தேவர்களின் தலைவன் ஆகிய திருமாலுக்கு மருகனே, காட்டில் குடியிருந்த கருநிறங் கொண்ட வேடர்களின் சிறுமியாகிய வள்ளிக்காக மனம் உருகிய பெருமாளே. 
* திருமால் சென்றது: திருமழிசை ஆழ்வாரின் சீடனாகிய கணிகண்ணனுக்காக காஞ்சீபுரத்து வரதராஜப் பெருமாள் ஊரை விட்டு ஆழ்வார் பின் சென்ற வரலாற்றைக் குறிக்கும்.

பாடல் 1010 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனதன தனதன தந்த தானன     தனதன தனதன தந்த தானன          தனதன தனதன தந்த தானன ...... தனதான

அரிசன பரிசஅ லங்க்ரு தாம்ருத     கலசமு மதனுய ரம்பொன் மாமுடி          யதுமென இளைஞர்கள் நெஞ்சு மாவியு ...... மொருகோடி 
அடைபடு குடயுக ளங்க ளாமென     ம்ருகமத களபம ணிந்த சீதள          அபிநவ கனதன மங்கை மாருடன் ...... விளையாடி 
இரவொடு பகலொழி வின்றி மால்தரு     மலைகட லளறுப டிந்து வாயமு          தினிதென அருளஅ ருந்தி யார்வமொ ...... டிதமாகி 
இருவரு மருவிய ணைந்து பாழ்படு     மருவினை யறவும றந்து னீள்தரு          மிணைமல ரடிகள்நி னைந்து வாழ்வது ...... மொருநாளே 
சுரர்குல பதிவிதி விண்டு தோலுரி     யுடைபுனை யிருடிக ளண்ட ரானவர்          துதிசெய எதிர்பொர வந்த தானவ ...... ரடிமாள 
தொலைவறு மலகையி னங்க ளானவை     நடமிட நிணமலை துன்ற வேயதில்          துவரிது புளியிது தொய்ந்த தீதிது ...... இதுவீணால் 
பருகுத லரியது கந்த தீதிது     உளதென குறளிகள் தின்று மெதகு          பசிகெட வொருதனி வென்ற சேவக ...... மயில்வீரா 
பகிரதி சிறுவவி லங்க லூடுறு     குறமகள் கொழுநப டர்ந்து மேலெழு          பருவரை யுருவஎ றிந்த வேல்வல ...... பெருமாளே.

மஞ்சள் பூசியுள்ள, அலங்காரமான அமிர்த கலசம் என்றும், மன்மதனுடைய சிறந்த பொன் கி¡£டம் என்றும் சொல்லும்படியாய், இளைஞர்களுடைய மனமும் உயிரும் ஒரு கோடிக் கணக்கில் வந்து அடைபடுவதான குடங்கள் போன்ற இரண்டு என்று சொல்லும்படியாய், கஸ்தூரிக் கலவையை அணிந்துள்ள, குளிர்ச்சி உள்ள, புதுமை வாய்ந்த கனத்த மார்பகங்களை உடைய விலைமாதர்களுடன் லீலைகள் புரிந்து, இரவும் பகலும் ஓய்வே இல்லாமல் மோகத்தைத் தரும் காமக் கடலாகிய சேற்றில் படிந்து, வாயிதழ் ஊறல் இனிக்கும் என்று தர பருகி, அன்பும் இன்பமும் பூண்டு, இருவரும் பொருந்தி அணைந்து பாழாவதற்கு இடமாகும், வினைக்கு இடமான செயலை அடியோடு மறந்து, உனது ஒளி பொருந்திய இரண்டு திருவடிகளையும் நினைந்து வாழ்வதான ஒரு நாள் எனக்குக் கிடைக்குமோ? தேவர்கள் குலத்துக்குத் தலைவனான இந்திரன், பிரமன், திருமால், மற்றும் (மான்) தோல் உரியை ஆடையாக அணிந்த முனிவர்களும், தேவர்களும் தோத்திரம் செய்ய, எதிர்த்துப் போர் புரிய வந்த அசுரர்கள் அடியோடு இறந்து பட, சோர்வு இல்லாத பேய்க் கூட்டங்கள் கூத்தாடும்படியாக மாமிச மலை நிரம்ப அவைகளுக்குக் கிடைக்க, அங்ஙனம் கிடைத்த மாமிசத்தில் துவர்ப்புள்ள பாகம் இது, புளிப்பான பாகம் இது, கட்டியாய் உறைந்து போன பாகம் இது, இது கெட்டுப் போனது, உண்பதற்கு உபயோகம் அற்றது, உண்ணத் தகுந்தது இங்கே உள்ளது என்று கூறி பூத பிசாசுகள் உண்டு மிக்க பசி தீரும்படியாக, ஒப்பற்ற தனித்த நிலையில் வெற்றி கொண்ட பராக்ரம மயில் வீரனே, கங்கையின் புதல்வனே, மலையில் வாசம் செய்யும் குறப் பெண்ணாகிய வள்ளியின் கணவனே, அகன்று மேலே ஓங்கி வளர்ந்த பெரிய கிரவுஞ்ச மலையை ஊடுருவும்படி செலுத்திய வேலாயுதத்தை ஏந்த வல்ல பெருமாளே. 

பாடல் 1011 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனதன தனதன தந்த தானன     தனதன தனதன தந்த தானன          தனதன தனதன தந்த தானன ...... தந்ததான

உரைதரு பரசம யங்க ளோதுவ     துருவென அருவென வொன்றி லாததொ          ரொளியென வெளியென வும்ப ராமென ...... இம்பராநின் 
றுலகுகள் நிலைபெறு தம்ப மாமென     வுரைசெய அதுபொருள் கண்டு மோனமொ          டுணர்வுற வுணர்வொடி ருந்த நாளும ...... ழிந்திடாதே 
பரகதி பெறுவதொ ழிந்தி டார்வன     பரிசன தெரிசன கந்த வோசைகள்          பலநல விதமுள துன்ப மாகிம ...... யங்கிடாதே 
பரிபுர பதமுள வஞ்ச மாதர்கள்     பலபல விதமுள துன்ப சாகர          படுகுழி யிடைவிழு பஞ்ச பாதக ...... னென்றுதீர்வேன் 
அரகர சிவசுத கந்த னேநின     தபயம பயமென நின்று வானவர்          அலறிட வொழிகினி யஞ்சி டாதென ...... அஞ்சல்கூறி 
அடல்தரு நிருதர நந்த வாகினி     யமபுர மடையஅ டர்ந்து போர்புரி          அசுரன தகலமி டந்து போகவ ...... கிர்ந்தவேகம் 
விரிகடல் துகளெழ வென்ற வேலவ     மரகத கலபசி கண்டி வாகன          விரகுள சரவண முந்தை நான்மறை ...... யந்தமோதும் 
விரைதரு மலரிலி ருந்த வேதனும்     விடவர வமளிது யின்ற மாயனும்          விமலைகொள் சடையர னும்ப ராவிய ...... தம்பிரானே.

சொல்லப்படுகின்ற மேலான சமயங்களால் ஓதப்படுவதும், உருவம், உருவமின்மை என்று ஒன்றும் இல்லாததும், பேரொளி என்றும், வெட்ட வெளி என்றும், மேலே உளதென்றும், இங்கே உளதென்றும் நிற்பதாய், உலகங்கள் நிலை பெற்று நிற்க உதவும் பற்றுக் கோடு என்றும் சொல்லும்படியாய் உள்ள அந்தப் பரம் பொருளை உணர்ந்து அறிந்து, மெளன நிலையில் ஞான உணர்ச்சி உண்டாக, அந்த ஞான உணர்ச்சியோடு இருந்து, அத்தகைய நாட்கள் அழிந்து வீண் போகாமல், மேலான நற்கதியை பெறும்படியான பாக்கியம் என்னை விட்டு ஒழிந்து போகும்படி, ஆசைக்கிடம் தரும் ஸ்பரிசம், ரூபம், வாசனை, ருசி, ஓசை முதலான ஐம்புலன்களால் உண்டாகும் பலவிதமான சிற்றின்பங்களைக் கொண்டதான துன்பத்தில் பட்டு நான் மயங்காமல், சிலம்புகள் அணிந்த பாதங்களை உடைய வஞ்சகம் கொண்ட விலைமாதர்கள் பலபல வகையாக உள்ள துன்பக் கடலாகிய பெருங்குழியில் விழுகின்ற பஞ்ச* மகா பாதங்களைச் செய்யும் நான் என்றைக்கு உணர்ந்து கரை ஏறுவேன்? ஹரஹர சிவ குமாரனே, கந்தபிரானே, உனது அடைக்கலம், அடைக்கலம் என்று தேவர்கள் ஓலமிட, (உங்கள் பயம்) இனி ஒழிவதாக, பயப்பட வேண்டாம் என்று அருள் பாலித்து, வலிமை மிக்க அசுரர்கள், அளவற்ற சேனைகள் யமபுரம் சேரவும், நெருங்கிச் சண்டை செய்யும் அசுரன் சூரனுடைய மார்பு கிழிபட, பிளந்தெறிந்த வேகத்தில், பரந்த கடல் வற்றித் தூளெழும்படி வெற்றி கொண்ட வேலவனே, பச்சை நிறமான தோகையைக் கொண்ட மயில் வாகனனே, சாமர்த்தியம் உள்ள சரவணனே, பழைய நான்கு வேதங்களை முடிவு வரை ஓத வல்லவனும், மணம் கமழ் தாமரை மலரில் வீற்றிருந்த பிரமனும், விஷத்தை உடைய ஆதிசேஷனான பாம்புப் படுக்கையில் உறங்கும் மாயோனாகிய திருமாலும், பரிசுத்தமான கங்கையை உடைய சடையைக் கொண்ட சிவபெருமானும் போற்றும் தம்பிரானே. 
* ஐவகை பாதகங்கள்: கொலை, களவு, சூது, கள்ளுண்ணல், குரு நிந்தை ஆகியவை.

பாடல் 1012 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனதன தத்தத் தனந்த தந்தன     தனதன தத்தத் தனந்த தந்தன          தனதன தத்தத் தனந்த தந்தன ...... தந்ததான

இமகிரி மத்திற் புயங்க வெம்பணி     கயிறது சுற்றித் தரங்க வொண்கடல்          இமையவர் பற்றிக் கடைந்த அன்றெழு ...... நஞ்சுபோலே 
இருகுழை தத்திப் புரண்டு வந்தொரு     குமிழையு மெற்றிக் கரும்பெ னுஞ்சிலை          ரதிபதி வெற்றிச் சரங்க ளஞ்சையும் ...... விஞ்சிநீடு 
சமரமி குத்துப் பரந்த செங்கயல்     விழியினில் மெத்தத் ததும்பி விஞ்சிய          தமனிய வெற்புக் கிசைந்த வம்பணி ...... கொங்கைமீதே 
தனிமனம் வைத்துத் தளர்ந்து வண்டமர்     குழலியர் பொய்க்குட் கலங்க லின்றியெ          சததளம் வைத்துச் சிவந்த நின்கழல் ...... தந்திடாயோ 
அமரர்து திக்கப் புரந்த ரன்தொழ     எழுபது வர்க்கக் குரங்கு கொண்டெறி          யலையைய டைத்துக் கடந்து சென்றெதிர் ...... முந்துபோரில் 
அசுரர்மு தற்கொற் றவன்பெ ருந்திறல்     இருபது கொற்றப் புயங்கள் சிந்திட          அழகிய கொத்துச் சிரங்க ளொன்பது ...... மொன்றுமாளக் 
கமலம லர்க்கைச் சரந்து ரந்தவர்     மருமக மட்டுக் ககொன்றை யந்தொடை          கறையற வொப்பற் றதும்பை யம்புலி ...... கங்கைசூடுங் 
கடவுளர் பக்கத் தணங்கு தந்தருள்     குமரகு றத்தத் தைபின்தி ரிந்தவள்          கடினத னத்திற் கலந்தி லங்கிய ...... தம்பிரானே.

இமயமலையாகிய (மந்தரம்) என்னும் மத்தில் வாசுகி என்னும் கொடிய பாம்பை கயிறாகச் சுற்றி, அலை வீசும் ஒளி பொருந்திய கடலை தேவர்கள் பற்றிக் கடைந்த நாளில் எழுந்த ஆலகால விஷம் போல், இரண்டு காதின் குண்டலங்கள் மீது பாய்ந்து புரண்டு வந்தும், ஒரு குமிழம்பூப் போன்ற மூக்கைத் தாக்கியும், கரும்பாகிய வில்லை ஏந்திய, ரதியின் கணவனான மன்மதனின் வெற்றிப் பாணங்கள் ஐந்தின் வேகத்தையும் செயலாற்றும் திறமையையும் வென்று மேம்படுவதாய், போர் நிறைந்ததாய், அகன்றுள்ளதான செவ்விய கயல் மீன் போன்ற கண்களிலும், மிகவும் பூரித்து மேலெழுந்துள்ள, பொன்மலைக்குச் சமானமானதும், அதற்குத் தகுந்த கச்சு அணிந்ததுமான மார்பகங்களின் மேலும், தனியாக மனத்தை வைத்துச் சோர்வுற்று, வண்டுகள் விரும்பிச் சேரும் கூந்தலை உடைய மாதர்கள் தரும் பொய்யான இன்பத்துக்குக் கலக்கம் அடைதலை ஒழித்து, நூறு இதழ்கள் உள்ள தாமரை மலரை வைத்து நான் பூஜிக்க உனது சிவந்த திருவடிகளை அடியேனுக்குத் தந்தருள மாட்டாயோ? தேவர்கள் துதி செய்ய, இந்திரன் தொழுது வணங்க, எழுபது வகையான குரங்குப் படையைக் கொண்டு, அலை வீசும் கடலை அணையிட்டு, அதைத் தாண்டி இலங்கைக்குச் சென்று, எதிரில் முனைந்து வந்த போரில் அரக்கர்களின் அரசன் ராவணனுடைய மிக்க வல்லமை கொண்ட இருபது தோள்களும் அற்று விழவும், அழகாய் கொத்தாக இருந்த பத்துத் தலைகளும் மாண்டு விழவும், தாமரை மலர் போன்ற திருக்கரத்தால் அம்பைச் செலுத்திய ராமனின் மருகனே, தேன் சொட்டும் அழகிய கொன்றை மாலை, மாசு இல்லாத நிகரற்ற தும்பை மாலை, சந்திரன், கங்கை இவைகளைச் சடையில் சூடியுள்ள கடவுளாகிய சிவபெருமானது இடது பாகத்தில் உறையும் பார்வதி தேவி பெற்றெடுத்த குமரனே, குறக் கிளியாகிய வள்ளியின் பின்னே நாடித்திரிந்து, அவளுடைய வன்மை கொண்ட மார்பகங்களில் அணைந்து விளங்கிய பெருமாளே. 

பாடல் 1013 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனதன தத்தத் தனந்த தந்தன     தனதன தத்தத் தனந்த தந்தன          தனதன தத்தத் தனந்த தந்தன ...... தந்ததான

முகமுமி னுக்கிப் பெருங்க ருங்குழல்     முகிலைய விழ்த்துச் செருந்தி சண்பக          முடியநி றைத்துத் ததும்பி வந்தடி ...... முன்பினாக 
முலையைய சைத்துத் திருந்த முன்தரி     கலையைநெ கிழ்த்துப் புனைந்து வஞ்சக          முறுவல்வி ளைத்துத் துணிந்து தந்தெரு ...... முன்றிலூடே 
மகளிர்வ ரப்பிற் சிறந்த பந்தியின்     மதனனு நிற்கக் கொளுந்து வெண்பிறை          வடவையெ றிக்கத் திரண்டு பண்டனை ...... வண்டுபாட 
மலயநி லத்துப் பிறந்த தென்றலு     நிலைகுலை யத்தொட் டுடம்பு புண்செய          மயலைய ளிக்கக் குழைந்து சிந்தைம ...... லங்கலாமோ 
பகலவன் மட்கப் புகுந்து கந்தர     ககனமு கட்டைப் பிளந்து மந்தர          பருவரை யொக்கச் சுழன்று பின்புப ...... றந்துபோகப் 
பணமணி பட்சத் துரங்க முந்தனி     முடுகின டத்திக் கிழிந்து விந்தெழு          பரவைய ரற்றப் ப்ரபஞ்ச நின்றுப ...... யந்துவாடக் 
குகனென முக்கட் சயம்பு வும்ப்ரிய     மிகவசு ரர்க்குக் குரம்பை வந்தரு          குறவமர் குத்திப் பொருங்கொ டும்படை ...... வென்றவேளே 
குழைசயை யொப்பற் றிருந்த சங்கரி     கவுரியெ டுத்துப் பரிந்து கொங்கையில்          குணவமு துய்க்கத் தெளிந்து கொண்டருள் ...... தம்பிரானே.

முகத்தை அலங்கரித்து நீண்ட கரிய கூந்தலாகிய மேகத்தை அவிழ்த்து, செருந்திப் பூ, சண்பகப் பூ முதலியவைகளை நிரம்ப வைத்து முடித்து களிப்புடன் வந்து, முன்னும் பின்னும் (தெருவில்) அடியிட்டு உலவி, மார்பகங்களை அசைத்தும், சரிப் படுத்துவது போல முன்னே தரித்துள்ள ஆடையைத் தளர்த்தியும் அணிந்தும், வஞ்சகம் நிறைந்த புன்னகை புரிந்தும், துணிவுடன் தாம் வசிக்கும் தெருவின் முன் புறத்தில், பெண்களுடைய எல்லையில் அவர்களுடைய சிறப்புக் கூட்டத்தில் மன்மதனும் நின்று (அவன் பாணங்களை ஏவ), தீப் போல எரியும் வெண்ணிலாவும் வடமுகாக்கினி போல் நெருப்பைக் கக்க, கூட்டமாகக் கூடி ராகங்களை வண்டுகள் பாட, பொதிய மலையில் நின்று புறப்படும் தென்றல் காற்றும் என் மன உறுதி கெடும்படி என் மேல் வீசி உடம்பு எல்லாம் புண்ணாகும்படித் தாக்கி காம இச்சையை விளைவிக்க, மனம் உருகி என் சிந்தை கலக்கம் அடையலாமோ? சூரியனும் ஒளி குன்றி ஒடுங்கச் சென்று, மேகங்களைக் கொண்ட ஆகாய உச்சியில் கிழித்துச் சென்று, மந்தர மலை போன்ற பெரிய மலைகள் எல்லாம் ஒருங்கே சுழலும்படி (மயில் செல்லும் வேகத்தில்) அதன்பின் அவை பறந்து வரும்படியும், படத்தில் ரத்னங்களை கொண்ட பாம்பை கொத்தித் தின்னும் (மயிலாகிய) குதிரையை ஒப்பற்ற வகையில் வேகமாகச் செலுத்தி, அதனால் கிழிபட்டு நீர்த்துளிகள் எழுகின்ற கடல் ஓலமிடவும், ஐந்து பூதங்களால் ஆன உலகம் எல்லாம் நின்று பயப்பட்டு வாடவும், (இந்தக் காட்சியைக் கண்டு) குக மூர்த்தியே என்று முக்கண் சுயம்பு நாதராகிய சிவனும் உன் மீது அன்பு கொள்ள, அசுரர்களுடைய உடல்கள் நெருங்கி வர, போர்க் களத்தில் அவர்களை வேலால் குத்திச் சண்டை செய்து (அவர்களுடைய) கொடிய சேனையை வென்ற செவ்வேளே, குண்டலங்களை அணிந்துள்ள பார்வதி, ஒப்பில்லாது விளங்கிய சங்கரி, கெளரி (ஆகிய தேவி) உன்னை மடியில் எடுத்து அன்பு கூர்ந்து தமது திருமுலையில் உள்ள ஞானப் பாலை ஊட்ட, தெளிவுடன் அதை உட்கொண்டு (அனைவருக்கும்) அருள் பாலிக்கும் தம்பிரானே. 

பாடல் 1014 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனதன தனதன தனதன தனதன     தத்தத் தத்தன தத்தத் தத்தன ...... தந்ததான

படிதனி லுறவெனு மனைவர்கள் பரிவொடு     பக்கத் திற்பல கத்திட் டுத்துயர் ...... கொண்டுபாவப் 
பணைமர விறகிடை யழலிடை யுடலது     பற்றக் கொட்டுகள் தட்டிச் சுட்டலை ...... யொன்றியேகக் 
கடிசம னுயிர்தனை யிருவிழி யனலது     கக்கச் சிக்கென முட்டிக் கட்டியு ...... டன்றுபோமுன் 
கதிதரு முருகனு மெனநினை நினைபவர்     கற்பிற் புக்கறி வொக்கக் கற்பது ...... தந்திடாயோ 
வடகிரி தொளைபட அலைகடல் சுவறிட     மற்றுத் திக்கெனு மெட்டுத் திக்கிலும் ......வென்றிவாய 
வலியுட னெதிர்பொரு மசுரர்கள் பொடிபட     மட்டித் திட்டுயர் கொக்கைக் குத்திம ...... லைந்தவீரா 
அடர்சடை மிசைமதி யலைஜல மதுபுனை     அத்தர்க் குப்பொருள் கற்பித் துப்புகழ் ...... கொண்டவாழ்வே 
அடியுக முடியினும் வடிவுட னெழுமவு     னத்திற் பற்றுறு நித்தச் சுத்தர்கள் ...... தம்பிரானே.

இப்பூமியில் சுற்றத்தார்களாக உள்ள எல்லாரும் அன்புடன் பக்கத்திலே நின்று அழுகைக் கூச்சலிட்டு துக்கம் கொண்டு சூழ்ந்து பரவி நிற்க, பெருத்த மரக் கட்டைகளில் உண்டாகும் நெருப்பிடையே உடல் தீப்பிடிக்க, பறைகள் கொட்டி, உடலைச் சுட்டு, அலைகள் உள்ள நீரில் படிந்து குளித்து, அவரவர் வீட்டுக்குச் செல்ல, அழித்தல் தொழிலை உடைய யமன் உயிரை (தனது) இரு கண்களும் நெருப்பு உமிழ அகப்படும்படித் தாக்கி, கட்டி, கோபத்துடன் கொண்டு போவதற்கு முன்பாக, நற்கதியை நமக்கு முருகன் ஒருவனே தருவான் என்று உன்னை நினைப்பவர்களுடைய கதியான நெறியில் (நானும்) புகுந்து, நல்லறிவு கூடும்படி உன்னை ஓதிப் பயிலும் கருத்தை எனக்குத் தந்திடாயோ? வடக்கே உள்ள கிரெளஞ்ச மலை தொளைபட்டு அழியவும், அலை வீசும் கடல் வற்றிப் போகவும், மற்றுத் திசைகளாகிய எட்டுத் திக்குகளிலும் வெற்றி கிடைக்கவும், வலிமையுடன் உன்னை எதிர்த்துச் சண்டை செய்த அசுரர்கள் பொடிபட்டு அழியவும், அவர்களை முறியடித்திட்டு, உயரமான மாமரமாக உருமாறிய சூரனை வேலால் குத்தி எதிர்த்த வீரனே, நெருங்கிய சடையின் மேல் நிலவையும், அலை கொண்ட கங்கை நீரையும் சூடியுள்ள தந்தையாகிய சிவ பெருமானுக்கு, பிரணவப் பொருளை உபதேசித்து தகப்பன் சாமி என்று புகழைக் கொண்ட செல்வனே, கடைசியான யுகாந்த காலத்தும் தங்கள் வடிவு குலையாமல் தோற்றம் தருபவர்களும், மெளன நிலையில் பற்று வைத்துள்ளவர்களும், நித்ய சூரிகளுமான பரிசுத்தர்கள் போற்றும் தம்பிரானே. 

பாடல் 1015 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனதன தனதன தனதன தனதன தனதன தனதன     தத்தத் தத்தன தத்தத் தத்தன ...... தந்ததான

விடமென அயிலென அடுவன நடுவன மிளிர்வன சுழல்விழி     வித்தைத் குப்பக ரொப்புச் சற்றிலை ...... யென்றுபேசும் 
விரகுடை வனிதைய ரணைமிசை யுருகிய வெகுமுக கலவியில்     இச்சைப் பட்டுயிர் தட்டுப் பட்டுவு ...... ழன்றுவாடும் 
நடலையில் வழிமிக அழிபடு தமியனை நமன்விடு திரளது     கட்டிச் சிக்கென வொத்திக் கைக்கொடு ...... கொண்டுபோயே 
நரகதில் விடுமெனு மளவினி லிலகிய நறைகமழ் திருவடி     முத்திக் குட்படு நித்யத் தத்துவம் ...... வந்திடாதோ 
இடியென அதிர்குரல் நிசிசரர் குலபதி யிருபது திரள்புய     மற்றுப் பொற்றலை தத்தக் கொத்தொடு ...... நஞ்சுவாளி 
எரியெழ முடுகிய சிலையின ரழகொழு கியல்சிறு வினைமகள்     பச்சைப் பட்சித னைக்கைப் பற்றிடு ...... மிந்த்ரலோகா 
வடவரை யிடிபட அலைகடல் சுவறிட மகவரை பொடிபட     மைக்கட் பெற்றிடு முக்ரக் கட்செவி ...... யஞ்சசூரன் 
மணிமுடி சிதறிட அலகைகள் பலவுடன் வயிரவர் நடமிட     முட்டிப் பொட்டெழ வெட்டிக் குத்திய ...... தம்பிரானே.

நஞ்சு போலவும் அம்பு போலவும் கொல்லும் தன்மையை உடையனவாய், யமனுக்கு ஒப்பாக விளங்குவனவாய், சுழலுகின்ற கண்களின் (மயக்கும்) வித்தைக்கு சொல்லக் கூடிய உவமைப் பொருள் ஏதும் இல்லை என்று சொல்லத்தக்க தந்திரத்தைக் கொண்ட பெண்களின் படுக்கை மீதில் மனம் உருகிய பலவிதமான சிற்றின்ப லீலைகளில் ஆசைப்பட்டு, அதனால் உயிர் அலைச்சல் உற்று கலங்கி வாடுகின்ற, துன்பந் தரும் வழியில் மிகவும் அழிந்து போகின்ற தனியனாம் என்னை, யமன் அனுப்பும் தூதர் கூட்டம் கட்டி அகப்படும்படி, கைகளை இறுகப் பிணைத்து இழுத்துக் கொண்டு போய், இவனை நரகத்தில் தள்ளுங்கள் என்னும் காலம் வரும் போது, விளங்கும் நறு மணம் வீசும் நின் திருவடியாகிய முக்தி நிலையில் சேரும் அழியா இன்ப நிலை எனக்கு ஏற்படக் கூடாதோ? இடி போல் ஒலிக்கும் குரலை உடையவனும், அசுரர்களுடைய அரக்கர் குலத்துக்குத் தலைவனும் ஆகிய ராவணனுடைய இருபது திரண்ட புயங்கள் அறுந்து விழவும், அழகிய (பத்து) தலைகளும் கொத்தாகிச் சிதறி விழவும், விஷம் கொண்ட அம்பு தீயைக் கக்கும்படி செலுத்திய (கோதண்டம்) என்னும் வில்லை உடைய ராமனாகிய திருமாலின் அழகு ஒழுகும் தன்மை வாய்ந்தவளும், சிறிய தொழிலாகிய புனம் காத்தலைச் செய்தவளும் ஆகிய மகள், பச்சைக் கிளி போன்றவளுமாகிய வள்ளியை மணந்த விண்ணுலக சேனாதிபதியே, வடக்கே இருந்த (கிரவுஞ்ச மலை) இடிபட்டுப் பொடியாக, அலை வீசும் கடல் வற்றிப் போக, பெரிய மேரு மலையும் பொடி பட, கருங்கண்களை உடையதும் உக்கிரமானதுமான ஆதிசேஷன் என்னும் பாம்பு பயப்பட, சூரனுடைய ரத்ன கி¡£டம் அணிந்த தலை சிதறி விழ, பேய்கள் பல சூழ்ந்து, அவற்றுடன் (சிவகணங்களான) பைரவர்கள் (போர்க்களத்தில்) நடனம் இட, (பகைவர்களைத்) தாக்கிப் பொடியாகும்படி அவர்களை வாளால் வெட்டி, வேலால் குத்திய தம்பிரானே. 

பாடல் 1016 - பொதுப்பாடல்கள் 
ராகம் - பெஹாக் தாளம் - அங்கதாளம் - எடுப்பு 1 /2 அக்ஷரம் தள்ளி 
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2

தனதனன தான தந்த தந்த     தனதனன தான தந்த தந்த          தனதனன தான தந்த தந்த ...... தனதான

குகையில்நவ நாத ருஞ்சி றந்த     முகைவனச சாத னுந்த யங்கு          குணமுமசு ரேச ருந்த ரங்க ...... முரல்வேதக் 
குரகதபு ராரி யும்ப்ர சண்ட     மரகதமு ராரி யுஞ்செ யங்கொள்          குலிசகைவ லாரி யுங்கொ டுங்க ...... ணறநூலும் 
அகலியபு ராண மும்ப்ர பஞ்ச     சகலகலை நூல்க ளும்ப ரந்த          அருமறைய நேக முங்கு விந்தும் ...... அறியாத 
அறிவுமறி யாமை யுங்க டந்த     அறிவுதிரு மேனி யென்று ணர்ந்துன்          அருணசர ணார விந்த மென்று ...... அடைவேனோ 
பகைகொள்துரி யோத னன்பி றந்து     படைபொருத பார தந்தெ ரிந்து          பரியதொரு கோடு கொண்டு சண்ட ...... வரைமீதே 
பழுதறவி யாச னன்றி யம்ப     எழுதியவி நாய கன்சி வந்த          பவளமத யானை பின்பு வந்த ...... முருகோனே 
மிகுதமர சாக ரங்க லங்க     எழுசிகர பூத ரங்கு லுங்க          விபரிதநி சாச ரன்தி யங்க ...... அமராடி 
விபுதர்குல வேழ மங்கை துங்க     பரிமளப டீர கும்ப விம்ப          ம்ருகமதப யோத ரம்பு ணர்ந்த ...... பெருமாளே.

குகையில் தவம் புரியும் நவநாதராகிய* பெருஞ்சித்தர்களும், திருமாலின் தொப்புளாம் தாமரை மொட்டில் தோன்றிய பிரமனும், விளங்கும் (ஸத்வம், ரஜோ, தாமஸம் ஆகிய) முக்குணங்களும், அசுரரின் தலைவர்களும், அலைகடல் போல் ஒலிக்கும் வேதங்களை நான்கு குதிரைகளாகப் பூட்டி திரிபுரத்தை அழித்த சிவபிரானும், வீரம் மிகுந்த, மரகதப்பச்சை வண்ணனானவனும், முரன் என்ற அசுரனைக் கொன்ற முராரியாம் திருமாலும், வெற்றி பெற்ற வஜ்ராயுதத்தைக் கையில் ஏந்தி வலன் என்ற அசுரனைக் கொன்ற இந்திரனும், கடுமையான விதிகளை வகுக்கும் சாஸ்திர நூல்களும், விரிவான புராணங்களும், உலகிலுள்ள எல்லாக் கலை நூல்களும், விரிந்துள்ள வேதநூல்கள் பலவும், இவை யாவும் ஒன்று கூடிச் சேர்ந்து முயன்று தேடியும் அறிய முடியாத, அறிவு, அறியாமை ஆகிய இரண்டுக்கும் அப்பால் உள்ள அறிவொளி எதுவோ அதுவே உன் திருமேனி என நான் உணர்ந்து, உன் சிவந்த தாமரை மலரன்ன திருவடியை என்று சேர்வேனோ? பகைமையே உருவான துரியோதனன் தோன்றி படைகளோடு போர் செய்த மகாபாரத வரலாற்றை அறிந்து, பருத்த தனது ஒற்றைத் தந்தத்தால் பெருமலையாம் மேருமலை மீது, குற்றமற்ற வகையில் வியாச முநிவர் முன்பொருநாள் சொல்லிவர, அந்தப் பாரதத்தை எழுதிய விநாயக மூர்த்தி, சிவந்த பவள நிறத்தைக் கொண்ட மதயானை முகத்துக் கணபதியின் பின்பு, தம்பியாக வந்த முருகனே, மிகுந்த ஒலிசெய்யும் கடல் கலங்குமாறும், ஏழு சிகரங்களை உடைய மலைகள் யாவும் குலுங்குமாறும், மாறுபட்ட புத்தியைக் கொண்ட சூரன் திகைக்கும்படியாகவும் போர் செய்து, தேவர் குலத்தவளும், யானை (ஐராவதம்) வளர்த்தவளுமான தேவயானையின் பரிசுத்தமான சந்தன மணம் வீசும், கும்பம் போன்று ஒளிவிடும், கஸ்தூரி வாசம் மிக்க திருமார்பைத் தழுவிய பெருமாளே. 
* நவநாதராகிய பெருஞ் சித்தர் பின்வருமாறு:சத்தியநாதர், சதோகநாதர், ஆதிநாதர், அனாதிநாதர், வகுளநாதர், மதங்கநாதர், மச்சேந்திரநாதர், கடேந்திரநாதர், கோரக்கநாதர்.இவர்கள் சிவனைக் குறித்துத் தவம் செய்து சித்தராயினர்.

பாடல் 1017 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனதனன தான தந்த தந்த     தனதனன தான தந்த தந்த          தனதனன தான தந்த தந்த ...... தனதான

மழையளக பார முங்கு லைந்து     வரிபரவு நீல முஞ்சி வந்து          மதிமுகமும் வேர்வு வந்த ரும்ப ...... அணைமீதே 
மகுடதன பார முங்கு லுங்க     மணிகலைக ளேற வுந்தி ரைந்து          வசமழிய வேபு ணர்ந்த ணைந்து ...... மகிழ்வாகிக் 
குழையஇத ழூற லுண்ட ழுந்தி     குருகுமொழி வாய்ம லர்ந்து கொஞ்ச          குமுதபதி போக பொங்கு கங்கை ...... குதிபாயக் 
குழியிலிழி யாவி தங்க ளொங்கு     மதனகலை யாக மங்கள் விஞ்சி          குமரியர்க ளோடு ழன்று நைந்து ...... விடலாமோ 
எழுபடைகள் சூர வஞ்ச ரஞ்ச     இரணகள மாக அன்று சென்று          எழுசிகர மாநி லங்கு லுங்க ...... விசையூடே 
எழுகடலு மேரு வுங்க லங்க     விழிபடர்வு தோகை கொண்ட துங்க          இயல்மயிலின் மாறு கொண்ட மர்ந்த ...... வடிவேலா 
பொழுதளவு நீடு குன்று சென்று     குறவர்மகள் காலி னும்ப ணிந்து          புளிஞரறி யாம லுந்தி ரிந்து ...... புனமீதே 
புதியமட லேற வுந்து ணிந்த     அரியபரி தாப முந்த ணிந்து          புளகிதப யோத ரம்பு ணர்ந்த ...... பெருமாளே.

மழை போல நீண்ட கூந்தல் பாரம் அவிழ்ந்து குலைய, ரேகைகள் பரவியுள்ள நீலோற்பலம் போன்ற கண்களும் செந்நிறம் அடைய, சந்திரன் போன்ற முகமும் வேர்வைத் துளிகள் வந்து கூட, படுக்கையின் மேல் கி¡£டம் போன்ற மார்பகப் பாரமும் குலுங்க, ரத்ன மேகலை முதலிய இடை அணிகள் மிகவும் அலைப்புண்டு விலக, தன் வசம் இழக்கும்படி சேர்ந்து, அணைந்து மகிழ்ச்சி பூண்டு, மனம் குழைய வாயிதழ் ஊறலைப் பருக (காம மயக்கில்) அழுந்தி, புட் குரலுடன் வாய் திறந்து கொஞ்சிப் பேச, சந்திரன் வரக் கண்டு பொங்குகின்ற கங்கையைப் போல குதித்துப் பாய, பெண்குறியாம் குழியில் இழிந்து, பல விதங்களாக விளங்கும் மன்மதக் கலை நூல் விதிகளில் மிகவும் மேம்பட்டு, இளம் பெண்களோடு திளைந்து உடல் நொந்து விடுதல் நன்றோ? போருக்கு எழும் படைகளுடன் சூரர்களாகிய வஞ்சக அசுரர்கள் பயப்பட, போர்க் களம் ரண களமாக அன்று நீ போய் எழு கிரிகளும் பெரிய நிலப் பரப்பும் அசைவு கொள்ள, வேகத்துடன் ஏழு கடல்களும் மேரு மலையும் கலக்கம் கொள்ள, கண்கள் படர்ந்துள்ள பீலிகளைக் கொண்ட பரிசுத்தமான, தகுதியுள்ள மயிலின் மீது ஏறி கால்களை மாறாகப் போட்டுக்கொண்டு வீற்றிருந்த வடி வேலனே, பொழுது அஸ்தமிக்கும் வரையில் பெரிய (வள்ளி மலைக்) குன்றில் குறவர்களுடைய பெண்ணான வள்ளியைக் காலிலும் வணங்கி, வேடர்களுக்குத் தெரியாமல் திரிந்து, தினைப் புனத்தில் புதிதாக மடலேறுதற்கும்* துணிந்திருந்த அந்த பரிதாப நிலையும் குறைந்து, புளகிதம் கொண்டிருந்த வள்ளியின் மார்பினை அணைந்த பெருமாளே. 
* மடல் ஏறுதல் - தலைவன் தலைவியின் அழகை வர்ணித்து ஓர் ஏட்டில் மடலாக எழுதி அவளது ஊருக்குச் சென்று நாற்சந்தியில் ஒன்றும் பேசாமல் ஒருவரது வசைக்கும் கூசாமல் படத்தில் எழுதிய உருவத்தைப் பார்த்தவாறு பகலும் இரவுமாக நிற்பான். அவனது உறுதிகண்டு தலைவியின் வீட்டார் தலைவனுக்கு அவளை மணம் செய்து வைப்பர். முருகன் வள்ளியை ஊரறிய மடல் எழுதி மணம் செய்துகொண்ட காட்சி கந்த புராணத்தில் வருகிறது.

பாடல் 1018 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தத்தானத் தாத்தத் தனதன     தத்தானத் தாத்தத் தனதன          தத்தானத் தாத்தத் தனதன ...... தனதான

கற்பார்மெய்ப் பாட்டைத் தவறிய     சொற்பாகைக் காட்டிப் புழுகொடு          கஸ்தூரிச் சேற்றைத் தடவிய ...... இளநீரைக் 
கட்சேலைக் காட்டிக் குழலழ     கைத்தோளைக் காட்டித் தரகொடு          கைக்காசைக் கேட்டுத் தெருவினில் ...... மயில்போலே 
நிற்பாருக் காட்பட் டுயரிய     வித்தாரப் பூக்கட் டிலின்மிசை          நெட்டூரக் கூட்டத் தநவர ...... தமுமாயும் 
நெட்டாசைப் பாட்டைத் துரிசற     விட்டேறிப் போய்ப்பத் தியருடன்          நெக்கோதிப் போற்றிக் கழலிணை ...... பணிவேனோ 
வெற்பால்மத் தாக்கிக் கடல்கடை     மைச்சாவிக் காக்கைக் கடவுளை          விட்டார்முக் கோட்டைக் கொருகிரி ...... யிருகாலும் 
விற்போலக் கோட்டிப் பிறகொரு     சற்றேபற் காட்டித் தழலெழு          வித்தார்தத் வார்த்தக் குருபர ...... னெனவோதும் 
பொற்பாபற் றாக்கைப் புதுமலர்     பெட்டேயப் பாற்பட் டுயரிய          பொற்றோளிற் சேர்த்துக் கருணைசெ ...... யெனமாலாய்ப் 
புட்கானத் தோச்சிக் கிரிமிசை     பச்சேனற் காத்துத் திரிதரு          பொற்பூவைப் பேச்சுக் குருகிய ...... பெருமாளே.

கற்பு நிறைந்த மெய்யான நிலையினின்றும் தவறிய வழியில் செல்லும் சொற்களின் வெல்லப் பாகைப் போன்ற இனிப்பைக் காட்டி, புனுகு சட்டம், கஸ்தூரி இவைகளின் கலவை பூசப்பட்ட இள நீர் போன்ற மார்பகங்களையும், சேல் மீன் போன்ற கண்ணையும் காட்டி, கூந்தலின் அழகையும், தோள்களையும் காட்டி, மத்தியில் தரகர் வைத்துப் பேசி கையிலுள்ள பொருள் கேட்டு, தெருவில் மயில் நிற்பது போல் நிற்கும் வேசியர்களுக்கு நான் அடிமைப் பட்டு, உயர்ந்ததும் அழகு நிறைந்ததுமானக் கட்டிலின் மேல் நீண்ட நேரம் மேலே ஊர்ந்து அசைவுறும் அந்தப் புணர்ச்சியில் எப்போதும் அழிகின்ற நீண்ட ஆசை அனுபவத்தை, குற்றம் நீங்கும்படி விட்டு விலகிப் போய், உன்னிடம் பக்தி கொண்டுள்ள அடியார்களுடன் சேர்ந்து உன்னை நெகிழ்ந்து பாடிப் போற்ற உன் திருவடிகளைப் பணியும் பாக்கியம் எனக்குக் கிடைக்குமோ? மந்தர மலையையே மத்தாக அமைத்து திருப்பாற்கடலைக் கடைந்து, கறு நிறம் கொண்டு உயிர்களைக் காக்கின்ற கடவுள் திருமாலின்* திருவிளையாட்டால் தர்மவழியைப் பின்பற்றாது (சிவ பூஜையை) விடடவர்களாகிய திரிபுரத் தலைவர் மூவர்களின் மும்மதிலுக்கும் மேம்பட்ட ஒப்பற்ற மேரு மலையின் இரண்டு முனைப் பக்கங்களையும் வில்லை வளைப்பது போல வளைத்து, பின்பு ஒரு சிறிது புன்னகை செய்து நெருப்பு மூள வைத்த சிவ பெருமானுக்கு, உண்மைப் பொருளை உபதேசித்த குரு பர மூர்த்தி என்று சொல்லப்படுகின்ற அழகனே, அம்புத் திரள் கட்டும் கயிற்றினின்று (மன்மதன்) தன் மலர்ப் பாணங்களை விரைவாக எய்ய, (அந்த அம்புகளால் காம வசத்தில்) அகப்பட்டு, பெருமை பொருந்திய (உனது) அழகிய தோளில் (என்னை) அணைந்து அருள் புரிவாயாக என்று (வள்ளியிடம் கூறி) ஆசை பூண்டவனாய், பறவைகளை தினைப்புனத்தில் ஓட்டி, வள்ளிமலை மீது பசுமையான தினைப் பயிர்களைக் காத்துத் திரிந்த அழகிய பூப் போன்ற வள்ளியின் பேச்சுக்கு மனம் உருகிய பெருமாளே. * திரிபுராதிகள் சிவ பூஜையை விட்டால் ஒழிய அவர்களை வெல்ல முடியாதென உணர்ந்த திருமால் பல அற்புதங்களைக் காட்டி அசுரர்களை மயக்கிச் சிவ பூஜையைக் கைவிடச் செய்தார். அதன் பின்னரே திரிபுரம் எரிந்தது.

பாடல் 1019 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தத்தானத் தாத்தத் தனதன     தத்தானத் தாத்தத் தனதன          தத்தானத் தாத்தத் தனதன ...... தனதான

சிற்றாயக் கூட்டத் தெரிவையர்     வித்தாரச் சூழ்ச்சிக் கயல்விழி          சற்றேறப் பார்த்துச் சிலபணி ...... விடையேவிச் 
சிற்றாபத் தாக்கைப் பொருள்கொடு     பித்தேறிக் கூப்பிட் டவர்பரி          செட்டாமற் றூர்த்தத் தலைபடு ...... சிறுகாலை 
உற்றார்பெற் றார்க்குப் பெரிதொரு     பற்றாயப் பூட்டுக் கயிறுகொ          டுச்சாயத் தாக்கைத் தொழிலொடு ...... தடுமாறி 
உக்காரித் தேக்கற் றுயிர்நழு     விக்காயத் தீப்பட் டெரியுட          லுக்கேன்மெய்க் காட்டைத் தவிர்வது ...... மொருநாளே 
வற்றாமுற் றாப்பச் சிளமுலை     யிற்பால்கைப் பார்த்துத் தருமொரு          மைக்காமக் கோட்டக் குலமயில் ...... தருபாலா 
மத்தோசைப் போக்கிற் றயிருறி     நெய்பாலுக் காய்ச்சிக் கிருபதம்          வைத்தாடிக் காட்டிப் பருகரி ...... மருகோனே 
கற்றாவிற் காட்டிக் கரைதுறை     நற்றாயிற் காட்டிப் புகழ்கலை          கற்றார்சொற் கேட்கத் தனிவழி ...... வருவோனே 
கைச்சூலக் கூற்றைக் கணைமத     னைத்தூள்பட் டார்ப்பக் கனல்பொழி          கர்த்தாவுக் கேற்கப் பொருளருள் ...... பெருமாளே.

சிறிய கூட்டமாக தமது தோழியர் சூழ்ந்த (விலை) மாதர்கள் விரிவான தந்திரங்களைக் கொண்ட கயல் மீன் போன்ற கண்களைக் கொஞ்சம் தூக்கிப் பார்த்து, சில வேலைகளைக் கட்டளை இட்டு, அற்பமான காம தாகம் கொண்ட உடலை விற்றுப் பொருளைச் சம்பாதித்து, காமப் பித்தை வருவோருக்கு ஏற்றிக் கூப்பிடும் விலைமாதர்களுக்குக் கொடுக்க வேண்டிய கொடைப் பொருள் கிட்டாமையால், கெட்ட நெறியில் அலைச்சல் உறும் இளம் பருவத்தில், நெருங்கிய சுற்றத்தார், நண்பர்கள் ஆகியோருக்கும், தாய் தந்தையர்களுக்கும் மிகவும் அன்புக்கு இடமான பாசம் என்ற கயிற்றினால் கட்டுண்டும், உயர்ந்த நிலையில் இந்த உடல் கொண்டு செய்ய வேண்டிய தொழில்களில் ஈடுபட்டு அலைந்தும், சத்தமிட்டும், இளைத்து அவதிப்பட்டும், முடிவில் உயிர் நழுவிப் போய், காய்கின்ற அந்த (சுடு காட்டு) நெருப்பில் பட்டு எரிந்து போகின்ற இந்த உடலைத் தொலையும் வழியைத் தேடவில்லை. இந்த உடலுக்கு உள்ள ஆட்டங்களை ஒழிப்பதான ஒருநாள் எனக்குக் கிடைக்குமா? வற்றாததும், முதிராததும் ஆன, பசுமையும் இளமையும் வாய்ந்த மார்பில் பாலை இடம் பார்த்துத் தந்த ஒப்பற்றவளும், மை பூசிய கண்ணை உடையவளும், காம கோட்டம் என்னும் திருக் கோயிலில் வீற்றிருக்கும் சிறந்த மயிலை ஒத்தவளுமான காமாட்சி தந்த குழந்தையே, மத்தின் ஓசை செல்லும் போக்கை அறிந்து, உறியில் உள்ள தயிர், நெய், பால் ஆகியவற்றை அடைய வேண்டி, தாயாகிய யசோதைக்குத் தன் இரண்டு திருவடிகளைக் கொண்டு கூத்தாடி, தனது ஆடல்களைக் காட்டி, அந்தத் தயிர் முதலியவற்றை உண்ட கண்ணனாம் திருமாலின் மருகனே, மலையைப் போன்ற வலிமை கொண்ட வில்லைக் காட்டி, சிறந்த நற்றாயிரங்கல் என்னும் துறையில் பாடிக் காட்டிப் புகழ்ந்த கலைகள் கற்றறிந்த பொய்யாமொழிப் புலவரின் பாடலைக் கேட்க தனியாக (அவர் வந்து கொண்டிருந்த) காட்டு வழியில் வந்தவனே*, கையில் சூலாயுதம் ஏந்திய நமனும், மலர்ப் பாணங்களைக் கொண்டிருந்த மன்மதனும் முற்றும் அழிந்து ஓலம் இடும்படி, கோப நெருப்பைச் சொரிந்த தலைவரான சிவபெருமான் மகிழ்ந்து ஏற்கும்படி பிரணவப் பொருளை உபதேசித்து அருளிய பெருமாளே.
* சிவனையே பாடும் பொய்யாமொழிப் புலவர் முருகனைப் பாடாது இருக்க, அவரது ஆணவத்தை அடக்க முருகன் வேலைத் தோளில் தாங்கி வேடனாக வந்து காட்டில் புலவர் தனிவழி செல்கையில் மடக்கி ஆட்கொண்டார்.

பாடல் 1020 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனத்ததனத் தனத்ததனத்     தனத்ததனத் தனத்ததனத்          தனத்ததனத் தனத்ததனத் ...... தனதான

இருட்குழலைக் குலைத்துமுடித்     தெழிற்கலையைத் திருத்தியுடுத்          திணைக்கயலைப் புரட்டிவிழித் ...... ததிபார 
இழைக்களபப் பொருப்பணிகச்     செடுத்துமறைத் தழைத்துவளைத்          திருத்தியகப் படுத்திநகைத் ...... துறவாடி 
பொருட்குமிகத் துதித்திளகிப்     புலப்படுசித் திரக்கரணப்          புணர்ச்சிவிளைத் துருக்குபரத் ...... தையர்மோகப் 
புழுத்தொளையிற் றிளைத்ததனைப்     பொறுத்தருளிச் சடக்கெனஅப்          புறத்திலழைத் திருத்தியளித் ...... திடுவாயே 
உருத்திரரைப் பழித்துலகுக்     குகக்கடையப் பெனக்ககனத்          துடுத்தகரப் படுத்துகிரித் ...... தலமேழும் 
உடுத்தபொலப் பொருப்புவெடித்     தொலிப்பமருத் திளைப்பநெருப்          பொளிக்கஇருப் பிடத்தைவிடச் ...... சுரரோடித் 
திரைக்கடலுட் படச்சுழலச்     செகத்ரையமிப் படிக்கலையச்          சிரித்தெதிர்கொக் கரித்துமலைத் ...... திடுபாவி 
செருக்கழியத் தெழித்துதிரத்     திரைக்கடலிற் சுழித்தலையிற்          றிளைத்தஅயிற் கரக்குமரப் ...... பெருமாளே.

இருண்ட கூந்தலை கலைத்தும் முடித்தும், அழகிய ஆடையை திருத்தமாக அணிந்தும், இரண்டு கண்களையும் புரட்டி விழித்தும், அதிக கனமான ஆபரணங்களையும் கலவைச் சாந்தையும் கொண்ட மலை போன்ற மார்பின் மேல் அணிந்துள்ள கச்சை எடுத்தும் மறைத்தும், அழைப்பு விடுத்தும், வளையல்களைத் திருத்தமாக சரிப்படுத்தியும், சிரித்து உறவு முறைகளைச் சொல்லி உறவாடியும், பொருள் பெறுவதற்கு நிரம்பத் துதித்தும், (பொருளைக் கண்ட பின்) மனம் நெகிழ்ந்தும், தெரிந்த விசித்திரமான புணர்ச்சி வகைகளைக் காட்டி மனதை உருக்கும் பொது மகளிரின் காமத்துக்கு இடமான, புழுவுக்கு இருப்பிடமாகிய, பெண்குறி என்னும் குழியில் இடைவிடாது விளையாடின என் செயலை மன்னித்து வேகமாக அப்புறமான நன்னெறியில் அழைத்து பொருந்த வைத்துக் காப்பாற்றி அருள்வாயாக. ருத்திரர்களைப் பழித்தும், உலகத்தை அழிக்க வந்த யுக முடிவில் தோன்றும் பிரளய நீர் என்று பொங்கி எழுந்து, ஆகாயத்தில் உள்ள நட்சத்திரங்கள் சிதறும்படிச் செய்து, மலைகள் ஏழும் சூழ்ந்துள்ள பொன் மலையாகிய மேரு வெடிபட்டு ஒலி எழுப்பவும், காற்று சோர்வு அடையவும், நெருப்பு ஒளித்துக் கொள்ளவும், தத்தம் இருப்பிடத்தை விட்ட தேவர்கள் ஓடிப் போய் அலை வீசும் கடலுள் பட்டு அலைச்சல் உற, மூன்று உலகங்களும் இவ்வாறு வேதனைப்பட, (அதைக் கண்டு) சிரித்தும் எதிரே நின்று ஆரவாரித்தும் போர் புரிந்த பாவியாகிய (சூரனுடைய) ஆணவம் அழிபட அவனை அடக்கி அலை வீசும் ரத்தக் கடலின் சுழியிடத்தில் (முழுக்கி) மகிழ்ந்து விளையாடிய வேலாயுதத்தை ஏந்திய குமரப் பெருமாளே. 

பாடல் 1021 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனத்ததனத் தனத்ததனத்     தனத்ததனத் தனத்ததனத்          தனத்ததனத் தனத்ததனத் ...... தனதான

வினைத்திரளுக் கிருப்பெனவித்     தகப்படவிற் சலப்பிலமிட்          டிசைக்குமிடற் குடிற்கிடைபுக் ...... கிடுமாய 
விளைப்பகுதிப் பயப்பளவுற்     றமைத்ததெனக் கருத்தமைவிற்          சகப்பொருள்மெய்க் குறப்பருகக் ...... கருதாதே 
எனக்கெதிரொப் பிசைப்பவரெத்     தலத்துளரெச் சமர்த்தரெனப்          புறத்துரையிட் டிகழ்ச்சியினுற் ...... றிளையாதுன் 
எழிற்கமலத் திணைக்கழலைத்     தமிழ்ச்சுவையிட் டிறப்பறஎய்த்          திடக்கருணைத் திறத்தெனைவைத் ...... தருள்வாயே 
சினத்தைமிகுத் தனைத்துலகத்     திசைக்கருதிக் கடற்பரவித்          திடத்தொடதிர்த் தெதிர்த்திடலுற் ...... றிடுசூரன் 
சிரத்துடன்மற் புயத்தகலத்     தினிற்குருதிக் கடற்பெருகச்          சிறப்புமிகத் திறத்தொடுகைத் ...... திடும்வேலா 
கனத்தமருப் பினக்கரிநற்     கலைத்திரள்கற் புடைக்கிளியுட்          கருத்துருகத் தினைக்குளிசைத் ...... திசைபாடி 
கனிக்குதலைச் சிறுக்குயிலைக்     கதித்தமறக் குலப்பதியிற்          களிப்பொடுகைப் பிடித்தமணப் ...... பெருமாளே.

வினைக் கூட்டங்களுக்கு இருப்பிடமாகும் அதிசயமான ஓடத்தில் நீர் கொண்ட குகை வைத்துக் கட்டப்பட்டுள்ள, வலிமை மிக்க உடலினுள் புகுந்துள்ள இந்த மாயம், விளையும் (வாழ் நாள்) பாகம் பயப்படும் கணக்காக அமைக்கப்பட்டதென்ற கருத்தின் நினைவில் உலகத்தில் உள்ள பொருள்களின் மெய்ம்மைக்கு ஏற்ப அனுபவிப்பதற்கு எண்ணாமல், எனக்கு எதிராக நிகரென்று சொல்ல வல்லவர் எந்தப் பூமியில் இருக்கின்றார்கள், எந்தச் சாமர்த்தியசாலிகள் உள்ளார்கள் என்று வெளியே கர்வமாகப் பேசி, பிறரை இகழ்ச்சி கூறியே நான் இளைத்துப் போகாமல், உனது அழகிய தாமரை போன்ற இரண்டு திருவடிகளை தமிழ்ச் சுவை பொருந்தும்படி வாழ்த்தி, நான் சாகாத நிலையைப் பெற்றிட, உனது கருணை வழியில் என்னைச் சேர்ப்பித்து அருள் புரிவாயாக. கோபம் மிகுந்து, உலகின் எல்லாத் திசைகளையும் வெல்லக் கருதி, தன் அதிகாரத்தைக் கடல் அளவும் பரப்பி, வலிமையுடன் யாவரையும் நடுங்கச் செய்து எதிர்த்தவனாகிய சூரனுடைய தலையினின்றும், மல் யுத்தத்துக்கு ஏற்ற அகலமான மார்பிலிருந்தும், ரத்தம் கடல் போல் பெருகி ஓடும்படியாக, புகழ் மிகுந்த சாமர்த்தியத்துடன் வேலைச் செலுத்திய தலைவனே, கனமான தந்தங்களை உடைய யானைக் கூட்டமும், அழகிய மான் கூட்டமும், சொல்லுவதைக் கற்க வல்ல கிளிக் கூட்டமும் தத்தம் உள்ளம் உருக, தினைப்புனத்தில் பொருந்திய முறையில் பண் அமைத்து ராகங்களைப் பாடியவளாகிய, பழச் சுவையையும் மழலை மொழியையும் கொண்ட சிறிய குயில் போன்ற வள்ளியை, அங்கு இருந்த வேடர் கூட்டத்தினர்களின் ஊரில் மகிழ்ச்சியுடன் கரங்களைப் பற்றிய மணவாளப் பெருமாளே. 

பாடல் 1022 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தத்த தனதனன தானத் தான     தத்த தனதனன தானத் தான          தத்த தனதனன தானத் தானத் ...... தனதான

முத்து மணிபணிக ளாரத் தாலு     மொய்த்த மலைமுலைகொ டேவித் தார          முற்று மிளைஞருயிர் மோகித் தேகப் ...... பொருமாதர் 
முற்று மதிமுகமும் வானிற் காரு     மொத்த குழல்விழியும் வேய்நற் றோளு          முத்தி தகுமெனும்வி னாவிற் பாயற் ...... கிடைமூழ்கிப் 
புத்தி கரவடமு லாவிச் சால     மெத்த மிகஅறிவி லாரைத் தேறி          பொற்கை புகழ்பெரிய ராகப் பாடிப் ...... புவியூடே 
பொய்க்கு ளொழுகியய ராமற் போது     மொய்த்த கமலஇரு தாளைப் பூண          பொற்பு மியல்புதுமை யாகப் பாடப் ...... புகல்வாயே 
பத்து முடியுமத னோடத் தோளிர்     பத்து மிறையவொரு வாளிக் கேசெய்          பச்சை முகில்சதுர வேதத் தோடுற் ...... றயனாரும் 
பற்ற வரியநட மாடத் தாளில்     பத்தி மிகவினிய ஞானப் பாடல்          பற்று மரபுநிலை யாகப் பாடித் ...... திரிவோனே 
மெத்த அலைகடலும் வாய்விட் டோட     வெற்றி மயில்மிசைகொ டேகிச் சூரர்          மெய்க்கு ளுறஇலகு வேலைப் போகைக் ...... கெறிவோனே 
வெற்றி மிகுசிலையி னால்மிக் கோர்தம்     வித்து விளைபுனமும் வேய்முத் தீனும்          வெற்பு முறையுமயில் வேளைக் காரப் ...... பெருமாளே.

முத்து, ரத்தினம் இவைகளாலான ஆபரணங்களும் மாலைகளும் நெருங்கி உள்ளதும், மலை போன்றதுமான மார்பைக் கொண்டு, கல்வி நிரம்பிய இளைஞர்களின் உயிரைக் காம இச்சையில் செல்லும்படி தாக்கவல்ல விலைமாதர்களின் பூரண சந்திரன் போன்ற முகமும், ஆகாயத்தில் உள்ள கருமேகம் போன்ற கூந்தலும், கண்களும், மூங்கில் போன்ற அழகிய தோள்களும் முக்தி எனத் தகும் என்கின்ற ஆய்ந்த உணர்ச்சியுடன் படுக்கையில் முழுகி, புத்தியில் வஞ்சக எண்ணம் உலவி, மிக மிக அறிவு இல்லாதவர்களைத் தேர்ந்து எடுத்து, அவர்களுடைய கை, பொன் வீசும் கை என்றும், அவர்கள் புகழில் பெரியோர் என்றும் வரும்படி பாடல்களை அமைத்துப் பாடி, இப்பூமியில் இவ்வாறு பொய்யிலேயே பழகி நடந்து சோர்ந்து போகாமல், மலர்கள் நிறைந்த உனது தாமரைத் திருவடி இணைகளை நான் அடைய, பொலிவு பொருந்திய புதிய வகையில் (உன் புகழைப்) பாடும்படி நல்வார்த்தைகளைக் கூறி அருளுக. (ராவணனுடைய) பத்துத் தலைகளும், அவைகளுடன் அந்தத் தோள்கள் இருபதும் பாழ்படும்படி ஒப்பற்ற ஒரு பாணத்தினாலேயே வீழ்த்திய பச்சை நிறத்தன் திருமாலும், நான்கு வேதங்களுடன் திகழும் பிரம தேவனும் பற்றுதற்கு (கண்டு களிக்க) அரிதான, ஊர்த்துவ நடனமாடின அந்தச் சிவபிரானின் திருவடியில் பக்தி ரசம் இனிதாக விளங்கும் ஞானப் பாடல்களை, இப்பூமியில் உள்ளவர்களின் இயல்பான வழக்க முறையில் (தலங்கள் தோறும் சென்று) பாடித் திரிந்த திருஞான சம்பந்தனே, மிகவும் அலைகளை வீசும் கடலும் வாய்விட்டு ஓலமிட்டுப் புரள, வெற்றி மயிலின் மேல் ஏறி (போர்க்களத்துக்குச்) சென்று, சூரனின் உடலுக்குள் பாய, ஒளி வீசும் வேலாயுதத்தைப் புகும்படி செலுத்தியவனே, வெற்றி தரக் கூடிய சிறப்பினைக் கொண்ட விற்போரில் வல்லவர்களாகிய வேடர்களுடைய (தினை) விதைத்து விளையும் வயலிலும் மூங்கில்கள் முத்துக்களைத் தரும் வள்ளிமலையிலும் வாசம் செய்யும் மயிலைப் போன்ற வள்ளியிடம் காவல் காத்த பெருமாளே. 

பாடல் 1023 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தத்த தனதனன தானத் தான     தத்த தனதனன தானத் தான          தத்த தனதனன தானத் தானத் ...... தனதான

விட்ட புழுகுபனி நீர்கத் தூரி     மொய்த்த பரிமளப டீரச் சேறு          மிக்க முலையைவிலை கூறிக் காசுக் ...... களவேதான் 
மெத்த விரியுமலர் சேர்கற் பூர     மெத்தை மிசைகலவி யாசைப் பாடு          விற்கு மகளிர்சுரு ளோலைக் கோலக் ...... குழையோடே 
முட்டி யிலகுகுமிழ் தாவிக் காமன்     விட்ட பகழிதனை யோடிச் சாடி          மொய்க்கு மளியதனை வேலைச் சேலைக் ...... கயல்மீனை 
முக்கி யமனையட மீறிச் சீறு     மைக்கண் விழிவலையி லேபட் டோடி          முட்ட வினையன்மரு ளாகிப் போகக் ...... கடவேனோ 
செட்டி யெனுமொர்திரு நாமக் கார     வெற்றி யயில்தொடுப்ர தாபக் கார          திக்கை யுலகைவல மாகப் போகிக் ...... கணமீளுஞ் 
சித்ர குலகலப வாசிக் கார     தத்து மகரசல கோபக் கார          செச்சை புனையுமண வாளக் கோலத் ...... திருமார்பா 
துட்ட நிருதர்பதி சூறைக் கார     செப்பு மமரர்பதி காவற் கார          துப்பு முகபடக போலத் தானக் ...... களிறூரும் 
சொர்க்க கனதளவி நோதக் கார     முத்தி விதரணவு தாரக் கார          சுத்த மறவர்மகள் வேளைக் காரப் ...... பெருமாளே.

விட்டுக் கலந்த புனுகு சட்டம், பன்னீர், கஸ்தூரி இவைகள் சேர்ந்த நறு மணம் உள்ள சந்தனச் சேறு நிரம்ப அப்பியுள்ள மார்பகத்தை விலை பேசி விற்று, கிடைத்த பொருளுக்குத் தக்கவாறு, நன்றாக விரிக்கப்பட்ட மலர் தூவினதும், கற்பூர மணம் கொண்டதுமான மெத்தைப் படுக்கையின் மீது புணர்ச்சி ஆசை விருப்பத்தை விற்கின்ற பொது மகளிர் (அணிந்துள்ள) சுருண்ட காதோலையையும் அழகிய குண்டலங்களையும் தாக்கி, விளங்கும் குமிழம் பூ போன்ற மூக்கைத் தாண்டி மன்மதன் எய்த மலர்ப் பாணங்களை ஓடும்படி மோதி, நெருங்கி மொய்க்கும் வண்டையும், வேலாயுதத்தையும், சேல் மீனையும், கயல் மீனையும் (தனக்கு இணையாகாமையால்) கீழ்ப்படச் செய்து, யமனும் வருந்தும்படி (கொல்லும் திறத்தில்) மேம்பட்டுச் சீறி விளங்குவதும், மை பூசிய கண் பார்வை என்னும் வலையில் சிக்கி அந்தப் புன்னெறியில் ஓடி முட்டிக் கொள்ளும் தீவினைகளுக்கு ஈடான நான் மயக்க அறிவு கொண்டவனாய் அழியக் கடவேனோ? செட்டி என்கிற அழகிய பெயரைக் கொண்டவனே, வெற்றி வேலைச் செலுத்தும் புகழைக் கொண்டவனே, (எட்டுத்) திசையளவும் உலகத்தை வலம் வந்து ஒரு கணப் பொழுதில் மீண்டு வந்த, அழகிய கற்றையாகிய தோகை நிறைந்த, குதிரையாகிய மயிலை உடையவனே, அலை புரளுவதும் மகர மீன்களைக் கொண்டதுமான கடலைக் கோபித்தவனே, வெட்சி மாலையை அணிந்துள்ள மணவாளக் கோலத்தனாகிய திரு மார்பனே, துஷ்டனாகிய அசுரர்கள் தலைவனான சூரனைச் சூறை ஆடியவனே, (உன்னைப்) புகழ்ந்து நின்ற தேவேந்திரனுக்கு காவற்காரனாய் உதவியவனே, பொலிவு உள்ள முகத்தில் மேலணியும், அலங்காரத் துணியைக் கொண்டதும், கன்ன மதத்தைக் கொண்டதுமான (ஐராவதம்) என்னும் யானையின் மீது உலா வரும் இந்திரனுடைய விண்ணுலகில் உள்ள பெருத்த சேனைகள் வியக்கும் தேவ சேனாதிபதியே, முக்திப் பேற்றை அளிக்கும் கொடைத் திறம் கொண்டவனே, பரிசுத்தமான வேடர்களின் மகளாகிய வள்ளியின் காவற் பணியை தக்க வேளையில் பூண்ட பெருமாளே. 

பாடல் 1024 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தானதன தத்த தானதன தத்த     தானதன தத்த ...... தனதான

ஏடுமல ருற்ற ஆடல்மத னுய்க்கு     மேவதுப ழிக்கும் ...... விழியாலே 
ஏதையும ழிக்கு மாதர்தம யக்கி     லேமருவி மெத்த ...... மருளாகி 
நாடுநகர் மிக்க வீடுதன மக்கள்     நாரியர்கள் சுற்ற ...... மிவைபேணா 
ஞானவுணர் வற்று நானெழுபி றப்பும்     நாடிநர கத்தில் ...... விழலாமோ 
ஆடுமர வத்தை யோடியுடல் கொத்தி     யாடுமொரு பச்சை ...... மயில்வீரா 
ஆரணமு ரைக்கு மோனகவி டத்தில்     ஆருமுய நிற்கு ...... முருகோனே 
வேடுவர்பு னத்தில் நீடுமித ணத்தில்     மேவியகு றத்தி ...... மணவாளா 
மேலசுர ரிட்ட தேவர்சிறை வெட்டி     மீளவிடு வித்த ...... பெருமாளே.

இதழ்களை உடைய மலர்ப் பாணங்களைக் கொண்டு போர் புரியும் மன்மதன் செலுத்தும் அம்பையும் தமது கொடுமைத்திறத்தால் வென்று பழிக்கவல்ல கண்களாலே, எல்லாப் பொருள்களையும் அழிக்கவல்ல மாதர்களின் மயக்கு என்பதிலே நான் சிக்கி, மிகவும் காம மயக்கம் பூண்டு, என் நாட்டையும், நகரையும், நிறைந்த வீடுகளையும், செல்வத்தையும், பெண்களையும், குழந்தைகளையும், சுற்றத்தாரையும் பேணி நின்று விரும்பி, ஞான உணர்ச்சியே இல்லாமல், ஏழுவகையான பிறப்புக்களையே* தேடி நின்று நரகத்தில் விழலாமோ? படம் எடுத்து ஆடும் பாம்பைக் கண்டதும் ஓடி, அதன் உடலைக் கொத்தி நடனம் புரிகின்ற ஒப்பற்ற பச்சை மயில் வீரனே, வேதங்கள் கூறும் மெளனத்தை உட்கொண்ட நிலையில் சகல உயிர்களும் வாழ நிற்கின்ற முருகனே, வேடர்களின் தினைப்புனத்தில் நீண்ட பரண்மீது வீற்றிருந்த குறத்தி வள்ளியின் மணவாளனே, முன்பு அசுரர்கள் காவலில் இட்ட தேவர்களின் சிறையை நீக்கி, அத்தேவர்களை மீள்வித்த பெருமாளே. 
* ஏழு வகையான பிறப்பு:தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர் வாழ்வன, தாவரம்.

பாடல் 1025 - பொதுப்பாடல்கள் 
ராகம் - பீம்பளாஸ் தாளம் - ஆதி

தானதன தத்த தானதன தத்த     தானதன தத்த ...... தனதான

சீதமலம் வெப்பு வாதமிகு பித்த     மானபிணி சுற்றி ...... யுடலூடே 
சேருமுயிர் தப்பி யேகும்வண மிக்க     தீதுவிளை விக்க ...... வருபோதில் 
தாதையொடு மக்கள் நீதியொடு துக்க     சாகரம தற்கு ...... ளழியாமுன் 
தாரணி தனக்கு ளாரண முரைத்த     தாள்தர நினைத்து ...... வரவேணும் 
மாதர்மய லுற்று வாடவடி வுற்று     மாமயிலில் நித்தம் ...... வருவோனே 
மாலுமய னொப்பி லாதபடி பற்றி     மாலுழலு மற்ற ...... மறையோர்முன் 
வேதமொழி வித்தை யோதியறி வித்த     நாதவிறல் மிக்க ...... இகல்வேலா 
மேலசுர ரிட்ட தேவர்சிறை வெட்டி     மீளவிடு வித்த ...... பெருமாளே.

சீதபேதி, காய்ச்சல், வாதம், மிகுந்துவரும் பித்தம் என்ற நோய்களெல்லாம் சூழ்ந்துள்ள இந்த உடலினுள் இருக்கும் உயிர் பிரிந்து போகும்படி, மிகுந்த வலி ஏற்படும் சமயத்தில், என் தந்தையும், மக்களும் உலக நியதிப்படி துயரக்கடலுள் மூழ்கிப்போய் அழியுமுன்பு, இந்த உலகத்தில் வேதங்கள் போற்றுகின்ற உனது திருவடிகளைத் தந்தருள எண்ணி நீ என்முன் வந்தருள வேண்டும். (ஜீவாத்மாக்காளாகிய) பெண்களெல்லாம் (பரமாத்மாவாகிய) உன்னழகில் மயங்கி காதலுற்று வாடும்படி, அழகிய திருவுருவக் காட்சிதந்து சிறந்த மயில்மீது நாள்தோறும் வருபவனே, திருமாலுக்கும், பிரமனுக்கும், ஒப்பில்லாதபடி தவநிலையில் உன் மீது அன்பு வைத்து, அன்பில் மயங்கித் திரியும் மற்றைய வேத சிரேஷ்டர்களுக்கும் முன்னால் பிரணவ மந்திரத்தின் உண்மைப் பொருளை உபதேசித்துக் கற்பித்த குருநாதா, வீரமிக்க வலிமை வாய்ந்த வேலை உடையவனே, முன்னாள் அசுரர்கள் அடைத்துவைத்த தேவர்களின் சிறைகளை உடைத்தெறிந்து தேவர்கள் மீண்டும் அமரநாட்டுக்குச் செல்லும்படி விடுதலை செய்வித்த பெருமாளே. 

பாடல் 1026 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தானதன தத்த தானதன தத்த     தானதன தத்த ...... தனதான

தோடுபொரு மைக்க ணாடவடி வுற்ற     தோர்தனம சைத்து ...... இளைஞோர்தம் 
தோள்வலிம னத்து வாள்வலியு ழக்கு     தோகையர்ம யக்கி ...... லுழலாதே 
பாடலிசை மிக்க ஆடல்கொடு பத்தி     யோடுநினை பத்தர் ...... பெருவாழ்வே 
பாவவினை யற்று னாமநினை புத்தி     பாரிலருள் கைக்கு ...... வரவேணும் 
ஆடலழ கொக்க ஆடுமயி லெற்றி     ஆண்மையுட னிற்கு ...... முருகோனே 
ஆதியர னுக்கு வேதமொழி முற்றி     யார்வம்விளை வித்த ...... அறிவோனே 
வேடைமய லுற்று வேடர்மக ளுக்கு     வேளையென நிற்கும் ...... விறல்வீரா 
மேலசுர ரிட்ட தேவர்சிறை வெட்டி     மீளவிடு வித்த ...... பெருமாளே.

காதில் அணியும் தோடுகளைத் தாக்கும், மை பூசிய, கண்கள் அசைய, அழகுள்ள, ஒப்பற்ற மார்பகங்களை அசைத்து இளைஞர்களுடைய தோள் வலிமையையும் மனத்தின் ஒளி வாய்ந்த வலிமையையும் கலக்குகின்ற மயில் போன்ற மாதர்களின் காம மயக்கத்தில் நான் அலைவுறாமல், பாடல், இசை, மிகுந்த ஆடல் இவைகளைக் கொண்டு பக்தியுடன் உன்னை நினைக்கின்ற பக்தர்களின் பெரிய செல்வமே, என் பாவ வினைகள் தொலைந்து போய், உனது திரு நாமங்களையே நினைக்கும்படியான புத்தியை இந்தப் பூமியில் எனக்குத் தந்தருள வரவேணும். ஆடலின் அழகான தாளத்துக்கு ஏற்ப நடனம் செய்யும் மயிலை வேகமாகச் செலுத்தி வீரத்துடன் நிற்கும் முருகனே, ஆதி மூர்த்தியாகிய சிவ பெருமானுக்கு வேதங்களை முழுவதுமாய் உபதேசித்து, மகிழ்ச்சியை ஊட்டிய அறிஞனே, காம நோய் மோகம் கொண்டு, வேடர்கள் பெண்ணாகிய வள்ளிக்கு காவல் வேலையாளாக நின்ற வெற்றி வீரனே, முன்பு அசுரர்கள் இட்ட தேவர்களின் சிறையை வெட்டி, அவர்கள் மீளும்படி விடுவித்த பெருமாளே. 

பாடல் 1027 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தானதன தத்த தானதன தத்த     தானதன தத்த ...... தனதான

தோதகமி குத்த பூதமருள் பக்க     சூலைவலி வெப்பு ...... மதநீர்தோய் 
சூழ்பெருவ யிற்று நோயிருமல் குற்று     சோகைபல குட்ட ...... மவைதீரா 
வாதமொடு பித்த மூலமுடன் மற்று     மாயபிணி சற்று ...... மணுகாதே 
வாடுமெனை முத்தி நீடியப தத்தில்     வாழமிக வைத்து ...... அருள்வாயே 
காதல்மிக வுற்று மாதினைவி ளைத்த     கானககு றத்தி ...... மணவாளா 
காசினிய னைத்து மோடியள விட்ட     கால்நெடிய பச்சை ...... மயில்வீரா 
வேதமொழி மெத்த வோதிவரு பத்தர்     வேதனைத விர்க்கு ...... முருகோனே 
மேலசுர ரிட்ட தேவர்சிறை வெட்டி     மீளவிடு வித்த ...... பெருமாளே.

வஞ்சகம் மிக்குள்ள (மண், நீர், தீ, காற்று, விண் என்னும்) ஐந்து பூதங்களின் மயக்கத்தால் ஏற்படும் விலாப் பக்கத்தில் உண்டாகும் சூலை நோய், வலிப்பு முதலிய நோய்கள், சுரம், நீர் சம்பந்தமான நோய் சேர்ந்து, எங்கும் பரவும் பெரு வயிற்று நோய், இருமல், தலைக் குத்தல், இரத்தக் குறைவு, குஷ்ட நோய்கள், தீர்க்க முடியாத வாயு சம்பந்தமான நோய்கள், பித்த நோய், மூல நோய் பின்னும் பல வகையான நோய்கள் கொஞ்சமேனும் என்னை அணுகாமல், வருந்தி நிற்கும் என்னை முக்தி நீடித்து விளங்கும் உனது திருவடியில் நான் வாழும்படியாக நன்கு வைத்து அருள்புரிவாயாக. காதல் மிகக் கொண்டு நல்ல தினை விளைவித்த காட்டுக் குறத்தியாகிய வள்ளியின் மணவாளனே, உலகம் முழுமையும் ஓடி (அதன் சுற்றளவை) அளவிட்டு வந்த, நீண்ட கால்களை உடைய பச்சை மயில் வீரனே, வேத மொழிகளை எப்போதும் ஓதும் அடியார்களின் துயரங்களைத் தீர்க்கும் முருகனே, முன்னாள் அசுரர்கள் அடைத்துவைத்த தேவர்களின் சிறைகளை உடைத்தெறிந்து தேவர்கள் மீண்டும் அமரநாட்டுக்குச் செல்லும்படி விடுதலை செய்வித்த பெருமாளே. 

பாடல் 1028 - பொதுப்பாடல்கள் 
ராகம் - சங்கராபரணம் தாளம் - அங்கதாளம் - 10 1/2 
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2, தகதிமி-2, தகதிமிதக-3

தான தான தானான தானத் ...... தனதான

காதி மோதி வாதாடு நூல்கற் ...... றிடுவோருங் 
காசு தேடி யீயாமல் வாழப் ...... பெறுவோரும் 
மாதுபாகர் வாழ்வே யெனாநெக் ...... குருகாரும் 
மாறி லாத மாகால னூர்புக் ...... கலைவாரே 
நாத ரூப மாநாத ராகத் ...... துறைவோனே 
நாக லோக மீரேழு பாருக் ...... குரியோனே 
தீதி லாத வேல்வீர சேவற் ...... கொடியோனே 
தேவ தேவ தேவாதி தேவப் ...... பெருமாளே.

எதிர்த்துப் பேசியும், தாக்கியும், வாதம் செய்யவல்ல நூல்களைக் கற்றவர்களும், பொருளைத் தேடிவைத்து ஒருவருக்கும் கொடாது வாழ்க்கை நடத்துபவர்களும், பார்வதிபாகன் சிவபிரானது செல்வமே என்று உன்னை நினைந்து உள்ளம் உருகாதவர்களும், தர்மநெறி மாறாத பெரும் யமதர்மபுரிக்கு புகுந்து பிறந்து புகுந்து அலைச்சல் உறுவார்கள். இசை உருவத்தோனே, மகாதேவர் சிவனின் உள்ளத்தில் வீற்றிருப்போனே, சுவர்க்க லோகம் ஆகிய பதினான்கு உலகங்களுக்கும்* உரிமைக்காரனாக விளங்குவோனே, தீமையே செய்யாத வேல் ஏந்தும் வீரனே, சேவலைக் கொடியாக உயர்த்தியவனே, தேவ தேவனே, தேவாதி தேவர்களுக்கெல்லாம் பெருமாளே. 
* 14 உலகங்கள் பின்வருமாறு:பூலோகம், புவலோகம், சுவலோகம், ஜனலோகம், தபோலோகம், மகாலோகம், சத்தியலோகம் (7 மேலுலகங்கள்).அதலம், விதலம், சுதலம், தராதலம், மகாதலம், ரசாதலம், பாதாளம் (7 கீழுலகங்கள்).

பாடல் 1029 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தான தான தானான தானத் ...... தனதான

கூறு மார வேளார வாரக் ...... கடலாலே 
கோப மீது மாறாத கானக் ...... குயிலாலே 
மாறு போலு மாதாவின் வார்மைப் ...... பகையாலே 
மாது போத மாலாகி வாடத் ...... தகுமோதான் 
ஏறு தோகை மீதேறி யாலித் ...... திடும்வீரா 
ஏழு லோகம் வாழ்வான சேவற் ...... கொடியோனே 
சீறு சூரர் நீறாக மோதிப் ...... பொரும்வேலா 
தேவ தேவ தேவாதி தேவப் ...... பெருமாளே.

புகழ் பெற்ற மார வேளாகிய மன்மதனாலும், பேரொலி செய்யும் கடலாலும், என் மீது கோபம் நீங்காத, இசை பாடும், குயிலாலும், என் மீது விரோதம் பூண்டவள் போலுள்ள தாயின் நியாயமான பகையாலும், பெண்ணாகிய நான் அறிவு மயக்கம் கொண்டு வாடுதல் நியாயமாகுமோ? அழகிய தோகை மயிலின் மேல் ஏறி வீராவேசம் செய்யும் வீரனே, ஏழு உலகங்களும் வாழ்வதற்கு உதவும் சேவற் கொடியோனே, கோபித்து எழுந்த சூரர்கள் பொடியாகும்படி தாக்கி சண்டை செய்த வேலனே, தேவ தேவனே, தேவாதி தேவர்களுக்கும் பெருமாளே. 
இந்தப் பாடல் அகப் பொருள் துறையைச் சார்ந்தது.புலவர் தம்மையே நாயகியாக எண்ணிப் பாடியது.மாரன், கடல், குயில் கூவுதல், தாயின் வசை முதலியவை தலைவனின் பிரிவுத் துயரைக் கூட்டும் பொருள்கள்.

பாடல் 1030 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ஹிந்தோளம் தாளம் - அங்கதாளம் - 10 1/2 
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2, தகதிமி-2, தகதிமிதக-3

தான தான தானான தானத் ...... தனதான

பேர வாவ றாவாய்மை பேசற் ...... கறியாமே 
பேதை மாத ராரோடு கூடிப் ...... பிணிமேவா 
ஆர வார மாறாத நூல்கற் ...... றடிநாயேன் 
ஆவி சாவி யாகாமல் நீசற் ...... றருள்வாயே 
சூர சூர சூராதி சூரர்க் ...... கெளிவாயா 
தோகை யாகு மாரா கிராதக் ...... கொடிகேள்வா 
தீர தீர தீராதி தீரப் ...... பெரியோனே 
தேவ தேவ தேவாதி தேவப் ...... பெருமாளே.

பேராசை நீங்காத நிலையில் இருந்து, உண்மை பேசுதற்குத் தெரியாமல், அறிவீனர்களாகிய பெண்களுடன் நான் சேர்ந்து, நோய்களை அடைந்து, ஆடம்பரம் நீங்காத சமயக் கூச்சலுக்கு இடம்தரும் நூல்களைப் படித்து அடிமை நாயான எனது உயிர் வீண் படாமல் நீ சிறிது அருள் புரிவாயாக. சூரர்களுக்குச் சூரனான சூரபத்மன் முதலியோருக்கு எளிதாகக் காட்சி கொடுத்தவனே, மயில் வாகனனே, குமாரமூர்த்தியே, வேடர் குலக்கொடியாம் வள்ளியின் கணவனே, மகா தீரம் உடையோய், ¨தரியமாதி மேம்பட்ட குணங்களில் உறுதி வாய்ந்த பெரியோனே, தேவதேவனே, தேவாதிதேவர்களுக்கெல்லாம் பெருமாளாய் விளங்குபவனே. 

பாடல் 1031 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தான தான தனத்தம் தான தான தனத்தம்     தான தான தனத்தம் ...... தனதான

காதி லோலை கிழிக்குங் காம பாண விழிக்குங்     கான யாழின் மொழிக்கும் ...... பொதுமாதர் 
காணொ ணாத இடைக்கும் பூணு லாவு முலைக்குங்     காதில் நீடு குழைக்கும் ...... புதிதாய 
கோதி லாத கருப்பஞ் சாறு போல ருசிக்குங்     கோவை வாய முதுக்குந் ...... தணியாமல் 
கூரு வேனொ ருவர்க்குந் தேடொ ணாத தொரர்த்தங்     கூடு மாறொ ருசற்றுங் ...... கருதாயோ 
பூதி பூஷ ணர்கற்பின் பேதை பாகர் துதிக்கும்     போத தேசி கசக்ரந் ...... தவறாதே 
போக பூமி புரக்குந் த்யாக மோக குறப்பெண்     போத ஆத ரவைக்கும் ...... புயவீரா 
சோதி வேலை யெடுத்தன் றோத வேலை யில்நிற்குஞ்     சூத தாரு வும்வெற்பும் ...... பொருகோவே 
சூரர் சேனை யனைத்துந் தூளி யாக நடிக்குந்     தோகை வாசி நடத்தும் ...... பெருமாளே.

விலை மகளிர் காதில் அணிந்துள்ள ஓலை வரைக்கும் பாய்ந்து கிழிக்கின்றனவும், மன்மதனின் அம்பை ஒத்தவையுமான கண்களுக்கும், இசையை எழுப்பும் யாழ் போன்ற பேச்சுக்கும், வேசிகளின் பார்க்க அரிதான நுண்ணிய இடுப்புக்கும், ஆபரணங்கள் அசைந்தாடும் மார்பகத்துக்கும், காதில் நீண்டு தொங்கும் குண்டலங்களுக்கும், அதிசயம் விளைவிக்கத் தக்க, (சக்கை, தோல் முதலிய) குற்றம் இல்லாத கரும்பின் சாறு போல இனிக்கும் கொவ்வைப் பழம் போன்ற சிவந்த வாயிடத்து ஊறும் ஊறலுக்கும் அடங்காமல், (காமம்) மிக்கெழுதலைக் கொண்டவனாகிய நான் யாராலும் தேடிக் காண முடியாததான ஒப்பற்ற (பேரின்பப்) பொருளைக் கண்டு அடையும்படி, ஒரு சிறிதளவாவது நீ மனதில் நினைக்க மாட்டாயோ? விபூதியை அலங்காரமாகக் கொள்ளுபவர், கற்பொழுக்கம் நிறைந்த பேதையாகிய பார்வதி தேவியைப் பாகத்தில் கொண்டவர் ஆகிய சிவபெருமான் போற்றும் ஞான தேசிகனே, விதித்த நீதியில் தவறாத வண்ணம் சுவர்க்க லோகத்தைக் காத்தருளும் தியாக சீலனே, உன் ஆசைக்கு உரிய குறப் பெண்ணாகிய வள்ளி நின்பால் வந்து அடைய அன்பு வைத்த புய வீரனே, பேரொளி வீசும் வேலாயுதத்தை எடுத்து, அன்று அலை வீசும் கடலில் (மறைந்து) நிற்கும் மாமரமாகிய சூரனுடனும், (அவனுக்கு அரணாயிருந்த) எழு கிரியுடனும் சண்டை செய்த தலைவனே, சூரர்களுடைய படை யாவும் பொடியாகும்படி நடனம் செய்யும் மயிலாகிய குதிரையை நடத்திச் சென்ற பெருமாளே. 

பாடல் 1032 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தான தான தனத்தம் தான தான தனத்தம்     தான தான தனத்தம் ...... தனதான

காரு லாவு குழற்குங் கூரி தான விழிக்குங்     காதல் பேணு நுதற்குங் ...... கதிர்போலுங் 
காவி சேர்ப வளத்தின் கோவை வாயி தழுக்குங்     காசு பூணு முலைக்குங் ...... கதிசேரா 
நேரி தான இடைக்குஞ் சீத வார நகைக்கும்     நேரி லாத தொடைக்குஞ் ...... சதிபாடும் 
நீத மான அடிக்கும் மாலு றாத படிக்குன்     னேய மோடு துதிக்கும் ...... படிபாராய் 
பார மேரு வளைக்கும் பாணி யார்ச டையிற்செம்     பாதி சோம னெருக்கும் ...... புனைவார்தம் 
பால காஎ னநித்தம் பாடு நாவ லர்துக்கம்     பாவ நாச மறுத்தின் ...... பதமீவாய் 
சோரி வாரி யிடச்சென் றேறி யோடி யழற்கண்     சூல காளி நடிக்கும் ...... படிவேலாற் 
சூரர் சேனை தனைக்கொன் றார வார மிகுத்தெண்     தோகை வாசி நடத்தும் ...... பெருமாளே.

(வேசையர்களின்) மேகம் போன்ற கூந்தலுக்கும், கூர்மை வாய்ந்த கண்களுக்கும், ஆசை விருப்பத்தை எழச் செய்யும் நெற்றிக்கும், ஒளிக் கிரணம் போல் பிரகாசம் கொண்டதாய், செந்நிறம் கொண்ட பவளத்தை ஒப்பதாய், கொவ்வைப் பழம் போல் சிவப்பான வாயிதழுக்கும், தங்கக் காசுமாலை அணிந்துள்ள மார்புக்கும், உறுதித் தன்மை இல்லாது (ஒடிவது போல) நுண்ணியதான இடுப்புக்கும், குளிர்ச்சியையும் அன்பையும் காட்ட வல்ல புன்சிரிப்புக்கும், நிகரில்லாத தொடைக்கும், தாளக் கட்டுடன் ஜதிகளைக் காட்டும் தகுதியைக் கொண்டதான பாதத்துக்கும், நான் மோக மயக்கம் கொள்ளாதபடிக்கு, உன் மேல் அன்போடு துதிக்கும்படி என்னைக் கண் பார்த்து அருள்வாய். கனத்த மேரு மலையை வில்லாய் வளைத்த திருக்கைகளை உடையவரும், சடையிலே செம்மை வாய்ந்த பிறைச் சந்திரனையும், எருக்க மலரையும் அணிந்துள்ளவரும் ஆகிய சிவபெருமானுடைய மகனே என்று நாள் தோறும் துதித்துப் பாடும் புலவர்களின் துக்கத்தையும் பாபத்தையும் தொலைத்து, இனிமை தரும் திருவடிகளைத் தருவாயாக. ரத்தம் கடல் போல் பெருக, (போர்க்களத்தில்) போய்ச் சேர்ந்து ஓடி, நெருப்புப் போன்ற கண்களை உடைய, சூலம் ஏந்திய காளி தேவி நர்த்தனம் ஆடும்படியாக, வேலாயுதத்தால் அசுரர்களின் படைகளைக் கொன்று, போரொலி மிகவும் பெருக, மதிக்கத் தக்க மயிலாகிய குதிரையை நடத்தும் பெருமாளே. 

பாடல் 1033 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தானத்த தானத்த தானத்த தானத்த     தானத்த தானத்த ...... தனதான

தோடுற்ற காதொக்க நீடுற்ற போருற்ற     தோய்மைக்க ணால்மிக்க ...... நுதலாலே 
தோள்வெற்பி னால்விற்கை வேளுக்கு மேன்மக்கள்     சோர்கைக்கு மால்விற்கு ...... மடவார்தம் 
ஊடற்கு ளேபுக்கு வாடிக்க லாமிக்க     ஓசைக்கு நேசித்து ...... உழலாதே 
ஊர்பெற்ற தாய்சுற்ற மாயுற்ற தாள்பற்றி     யோதற்கு நீசற்று ...... முணர்வாயே 
வேடர்க்கு நீள்சொர்க்கம் வாழ்விக்க வோர்வெற்பின்     மீதுற்ற பேதைக்கொர் ...... மணவாளா 
வேழத்தி னாபத்தை மீள்வித்த மாலொக்க     வேதத்தி லேநிற்கு ...... மயனாருந் 
தேடற்கொ ணாநிற்கும் வேடத்தர் தாம்வைத்த     சேமத்தி னாமத்தை ...... மொழிவோனே 
தீதற்ற நீதிக்கு ளேய்பத்தி கூர்பத்தர்     சேவிக்க வாழ்வித்த ...... பெருமாளே.

தோடு அணிந்துள்ள காது வரை நீண்டுள்ளதும், போர் செய்வதற்குச் சித்தமாய் உள்ளதுமான மை தீட்டிய கண்ணாலும், சிறந்த நெற்றியாலும், மலை போன்ற தோள்களாலும், (கரும்பு) வில்லை ஏந்திய மன்மதனுடைய பாணங்களாலும், மேலான குணங்களை உடைய மக்களும் மனம் சோர்ந்து போகும்படி காம ஆசையை விற்கின்ற விலைமாதர்களின், ஊடல் பிணக்கில் சிக்கி வாட்டமுற, சண்டைக் கோபத்தால் மிக்கெழுந்த கூச்சல் சப்தத்தை விரும்பி (நான்) அலையாமல், எனது ஊர், ஈன்றெடுத்த தாய், எனது உறவினர் இவை எல்லாமாய் உள்ள (உனது) திருவடியைக் கெட்டியாகப் பிடித்து, போற்றித் துதிக்க நீ சிறிது எனக்கு உணர்த்த மாட்டாயோ? வேடர்களையும் பெரிய சொர்க்கப் பூமியில் வாழ்விக்க விரும்பி சிறந்த வள்ளி மலையின் மேல் இருந்த பெண்ணாகிய வள்ளிக்கு ஒப்பற்ற மணவாளனே, யானையாகிய கஜேந்திரனை அதற்குற்ற ஆபத்திலிருந்து விடுவித்த திருமாலும், அவருடன் வேதத்தையே ஓதி நிற்கும் பிரமனும், (முடியையும் அடியையும்) தேடுதற்கு முடியாத எல்லையில் நிற்கும் அழல் உருவம் கொண்ட வேடத்தினராகிய சிவபெருமான் தாம் வைத்துள்ள சேமிப்புப் பொருளாகிய ஐந்தெழுத்து நாமத்தின் (நமசிவாய) பெயரையும், புகழையும் (சம்பந்தராக வந்து) எடுத்து மொழிந்தவனே, குற்றம் இல்லாத நீதி நெறியில் பொருந்திய பக்தி சிறந்த அடியார்கள் போற்றி வணங்க, அவர்களை வாழ்வித்த பெருமாளே. 

பாடல் 1034 - பொதுப்பாடல்கள் 
ராகம் - சுருட்டி தாளம் - சதுஸ்ர த்ருபுடை - கண்டநடை - 20 
நடை- தகதகிட

தானத்த தானத்த தானத்த தானத்த     தானத்த தானத்த ...... தனதான

தோலத்தி யாலப்பி னாலொப்பி லாதுற்ற     தோளுக்கை காலுற்ற ...... குடிலூடே 
சோர்வற்று வாழ்வுற்ற கால்பற்றி யேகைக்கு     வேதித்த சூலத்த ...... னணுகாமுன் 
கோலத்தை வேலைக்கு ளேவிட்ட சூர்கொத்தொ     டேபட்டு வீழ்வித்த ...... கொலைவேலா 
கோதற்ற பாதத்தி லேபத்தி கூர்புத்தி     கூர்கைக்கு நீகொற்ற ...... அருள்தாராய் 
ஆலத்தை ஞாலத்து ளோர்திக்கு வானத்த     ராவிக்கள் மாள்வித்து ...... மடியாதே 
ஆலித்து மூலத்தொ டேயுட்கொ ளாதிக்கு     மாம்வித்தை யாமத்தை ...... யருள்வோனே 
சேலொத்த வேலொத்த நீலத்து மேலிட்ட     தோதக்கண் மானுக்கு ...... மணவாளா 
தீதற்ற நீதிக்கு ளேய்பத்தி கூர்பத்தர்     சேவிக்க வாழ்வித்த ...... பெருமாளே.

தோலாலும் எலும்பினாலும் நீராலும் ஒப்பில்லாத வகையில் அமைந்துள்ள தோள், கை, கால் இவை கூடிய குடிசையாகிய இந்த உடலில் தளர்ந்து போகாமல் நான் வாழ்ந்திருந்த காலத்தில் (உனது திருவடியைப்) பிடித்து நான் வாழ்நாளைச் செலுத்துதற்கு விடாமல் என் மேல் மாறு கொண்ட, திரிசூலத்தை ஏந்திய, யமன் என்னை நெருங்கிவரும் முன்பாக, தனது உருவை கடலுக்குள் (மாமரமாய்) மாற்றுவித்த சூரன் தன் குலத்தாருடன் அழிந்து விழச் செய்து கொன்ற வேலாயுதனே, குற்றமற்ற உனது திருவடியில் பக்தி மிகுந்த புத்தி நுண்மை அடைவதற்கு நீ வெற்றி தரும் திருவருளை எனக்குத் தந்தருள்க. ஆலகால விஷத்தை பூமியில் உள்ளவர்களும் பல திசைகளில் இருந்த விண்ணோர்களும் தத்தம் உயிர் மாண்டு இறந்து படாமல், களித்து நடனமாடி அடியோடு (முழு விஷத்தையும்) உட்கொண்ட ஆதி மூர்த்தியாகிய சிவபெருமானுக்கும் ஏற்றதான உண்மை ஞானமாகிய அந்த வேதப் பொருளை உபதேசித்தவனே, சேல் மீன் போன்றதும், வேலாயுதம் போன்றதும், நீலோற்பல மலரைவிடச் சிறந்ததுமான கண்களைக் கொண்டு உனக்கு விரக தாபம் தந்த மான் போன்ற வள்ளிக்கு மணவாளனே, குற்றம் இல்லாத நீதி வழியில் பொருந்திய பக்தி மிக்க அடியார்கள் உன்னைப் போற்ற, அவர்களை வாழ்வித்த பெருமாளே. 

பாடல் 1035 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ஸிந்துபைரவி தாளம் - ஆதி

தானந் தனதன தானந் தனதன     தானந் தனதன ...... தனதான

ஊனுந் தசையுடல் தானொன் பதுவழி     யூருங் கருவழி ...... யொருகோடி 
ஓதும் பலகலை கீதஞ் சகலமு     மோரும் படியுன ...... தருள்பாடி 
நானுன் திருவடி பேணும் படியிரு     போதுங் கருணையில் ...... மறவாதுன் 
நாமம் புகழ்பவர் பாதந் தொழஇனி     நாடும் படியருள் ...... புரிவாயே 
கானுந் திகழ்கதி ரோனுஞ் சசியொடு     காலங் களுநடை ...... யுடையோனுங் 
காருங் கடல்வரை நீருந் தருகயி     லாயன் கழல்தொழு ...... மிமையோரும் 
வானிந் திரனெடு மாலும் பிரமனும்     வாழும் படிவிடும் ...... வடிவேலா 
மாயம் பலபுரி சூரன் பொடிபட     வாள்கொண் டமர்செய்த ...... பெருமாளே.

மாமிசமும் சதையும் கூடிய இந்த உடல் தன்னுடன் ஒன்பது துவாரங்கள்* சேர்ந்துவரும் கருவின் வழி ஒரு கோடிக் கணக்கானது. (அந்தப் பிறவித் துயரம் ஒழிய) நான் படிக்கின்ற சாத்திர நூல்களையும், இசை ஞானத்தையும் மற்ற எல்லா கற்கவேண்டியவையும் யான் உணரும்படியாக உன்னுடைய திருவருளைத் துதித்துப் பாடி, யான் உன்னுடைய திருவடிகளை விரும்பிப் போற்றும்படி காலை மாலை இரண்டு வேளைகளிலும் உன் கருணைத்திறத்தில் ஞாபகம் வைத்து, உன் திருநாமங்களைப் போற்றுவோரின் பாதங்களைத் தொழ இனியேனும் யான் விரும்பும்வண்ணம் நீ திருவருள் புரிவாயாக. காட்டிலும் கூட தன் கதிர்களை வீசும் சூரியனும், சந்திரனும், இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்ற முக்காலங்களும், காற்றும், மேகமும், கடலும், மலையும், நீரும் - இவைகளையெல்லாம் படைத்த கைலாயநாதனாகிய சிவபிரானின் பாதங்களைப் பணியும் தேவர்களும், தேவநாட்டு இந்திரன், தெடிய திருமால், பிரமன் ஆகியோரும் வாழும்படியாகச் செலுத்திய கூரிய வேலாயுதனே, பல மாயங்களைப் புரிந்த சூரன் தூள்பட்டு அழியும்படி வாள் கொண்டு போர்புரிந்த பெருமாளே. 
* ஒன்பது துவாரங்கள்: இரு செவிகள், இரு கண்கள், இரு நாசித் துவாரங்கள், ஒரு வாய், இரு கழிவுத் துவாரங்கள்.

பாடல் 1036 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தானந் தனதன தானந் தனதன     தானந் தனதன ...... தனதான

தீயும் பவனமு நீருந் தரணியும்     வானுஞ் செறிதரு ...... பசுபாசத் 
தேகந் தனைநிலை யேயொன் றிருவினை     தீருந் திறல்வினை ...... யறியாதே 
ஓயும் படியறு நூறும் பதினுறழ்     நூறும் பதினிரு ...... பதுநூறும் 
ஓடுஞ் சிறுவுயிர் மீளும் படிநல     யோகம் புரிவது ...... கிடையாதோ 
வேயுங் கணியும்வி ளாவும் படுபுன     மேவுஞ் சிறுமிதன் ...... மணவாளா 
மீனம் படுகட லேழுந் தழல்பட     வேதங் கதறிய ...... வொருநாலு 
வாயுங் குலகிரி பாலுந் தளைபட     மாகந் தரமதில் ...... மறைசூரன் 
மார்புந் துணையுறு தோளுந் துணிபட     வாள்கொண் டமர்செய்த ...... பெருமாளே.

தீ, காற்று, நீர், மண், விண் ஆகிய இந்த ஐந்து பூதங்களும் நிறைந்துள்ள ஜீவாத்மாவும் கட்டுக்கள் ஆகிய ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களும் கூடியதான இவ்வுடலை நிலைத்திருக்கும்படிப் பொருந்த வைக்கத் தெரியாமல், (நல்வினை, தீவினை ஆகிய) இரண்டு வினைகளும் முடியும்படியான திறமை வாய்ந்த செயல் எதையும் அறிந்து கொள்ளாமல், பிறப்பு ஓயும்படியாக, அறு நூறும் (600), பதின் மடங்கு நூறும் (1,000), பதின் இருபது நூறும் (10 மடங்கு 2,000 = 20,000) மொத்தம் (600 + 1,000 + 20,000) 21,600 மூச்சுகள்* (ஒவ்வொரு நாளும்) ஓடுகின்ற இந்தச் சிற்றுயிர் விடுதலை அடையும்படி (அதாவது இனி பிறவி ஏற்படாதபடி), நல்ல சிவ யோகத்தைப் பயிலும் பாக்கியம் எனக்குக் கிடைக்காதோ? மூங்கிலும், வேங்கை மரமும், விளா மரமும் இருக்கின்ற வள்ளிமலைச் சார்பான தினைக்கொல்லையில் வாழும் சிறுமியாகிய வள்ளியின் கணவனே, மீன்கள் உலவுகின்ற ஏழு கடல்களும் தீப்பட்டு வறண்டு போகவும், வேதங்களை வாய் விட்டு உரைக்கும் ஒப்பற்ற நான்கு திருவாய்களை உடைய பிரமனும் மாய மலையான கிரெளஞ்சத்தால் (கந்தகிரியில் ஓரிடத்தே) சிறைபட்டுக் கிடக்கவும், பெரிய மேகத்தினிடையே மறைந்து போர் செய்த சூரனுடைய மார்பும், இரண்டு தோள்களும் அறுந்து விழவும், வாளாயுதம் கொண்டு சண்டை செய்த பெருமாளே. 
* நாழிகை ஒன்றுக்கு 360 சுவாசங்கள். ஒரு நாளில் உள்ள 60 நாழிக்கு (24 மணி நேரத்துக்கு), 21,600 சுவாசங்கள்.

பாடல் 1037 - பொதுப்பாடல்கள் 
ராகம் - பெஹாக் தாளம் - ஆதி

தானந் தனதன தானந் தனதன     தானந் தனதன ...... தனதான

வாதந் தலைவலி சூலம் பெருவயி     றாகும் பிணியிவை ...... யணுகாதே 
மாயம் பொதிதரு காயந் தனின்மிசை     வாழுங் கருவழி ...... மருவாதே 
ஓதம் பெறுகடல் மோதுந் திரையது     போலும் பிறவியி ...... லுழலாதே 
ஓதும் பலஅடி யாருங் கதிபெற     யானுன் கழலிணை ...... பெறுவேனோ 
கீதம் புகழிசை நாதங் கனிவொடு     வேதங் கிளர்தர ...... மொழிவார்தம் 
கேடின் பெருவலி மாளும் படியவ     ரோடுங் கெழுமுத ...... லுடையோனே 
வேதந் தொழுதிரு மாலும் பிரமனு     மேவும் பதமுடை ...... விறல்வீரா 
மேல்வந் தெதிர்பொரு சூரன் பொடிபட     வேல்கொண் டமர்செய்த ...... பெருமாளே.

வாத சம்பந்தமான நோய்கள், தலைவலி, சூலை நோய், மகோதரம் என்ற வயிற்றில் நீர் தேக்கம், ஆகிய நோய்களாகிய இவை ஒன்றும் என்னை அணுகாமலும், மாயை நிரம்பி உள்ள உடல் கொண்டு வாழும்படி கருவின் வழியில் மீண்டும் என்னைச் சேர்க்காமலும், வெள்ளமாய் நிறைந்து நிற்கும் கடலில் மேலும் மேலும் வீசுகின்ற அலைகள் போல் பல பிறப்புக்களில் நான் அலைச்சல் உறாமல், உன் திருப்புகழை ஓதும் பல அடியார்களும் நற்கதி அடையவும், நான் உனது இரண்டு திருவடிகளையும் பெறுவேனோ? இசை இன்பமும், உன் புகழைச் சொல்லும் ஓசை இன்பமும், பக்தியோடு வேத வாக்கியங்களை நன்கு விளங்கும்படி ஓதுபவர்களுடைய கேட்டினை விளைவிக்கும் ஊழ்வினையின் திண்மை அவர்களைப் பீடிக்காது ஒழியும்படி அவர்களோடு எப்போதும் பொருந்தி உடனிருந்து காக்கும் திருவருளை உடையவனே, வேதங்கள் தொழுகின்ற திருமாலும், பிரமனும் விரும்பிப் போற்றும் திருவடிகளை உடைய வெற்றி வீரனே, மேலெழுந்து வந்து போர் செய்த சூரன் பொடியாகும்படி, வேலாயுதத்தைக் கொண்டு சண்டை செய்த பெருமாளே. 

பாடல் 1038 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தானா தானா தானா தானா     தானா தானத் ...... தனதான

ஊனே தானா யோயா நோயா     லூசா டூசற் ...... குடில்பேணா 
ஓதா மோதா வாதா காதே     லோகா சாரத் ...... துளம்வேறாய் 
நானே நீயாய் நீயே நானாய்     நானா வேதப் ...... பொருளாலும் 
நாடா வீடா யீடே றாதே     நாயேன் மாயக் ...... கடவேனோ 
வானே காலே தீயே நீரே     பாரே பாருக் ...... குரியோனே 
மாயா மானே கோனே மானார்     வாழ்வே கோழிக் ...... கொடியோனே 
தேனே தேனீள் கானா றாய்வீழ்     தேசார் சாரற் ...... கிரியோனே 
சேயே வேளே பூவே கோவே     தேவே தேவப் ...... பெருமாளே.

ஊன் பொருந்திய இவ்வுடலே நான்தான் என்று நினைத்து, என்றும் முடிவில்லாத நோயாளனாய், அழிவுள்ளதும், ஊஞ்சலைப்போல் மாறி மாறி வருகின்றதுமான இத்தேகத்தை விரும்பி, நூல்களை ஓதியும், தாக்கிப் பேசியும், செய்கின்ற சமய வாதங்களில் ஈடுபடாமலும், உலக ஆசாரங்களில் கட்டுப்படாமல் உள்ளம் வேறுபட்டு, எனது ஜீவாத்மா பரமாத்மாவாகிய உன்னிடம் ஒன்றுபட்டுப் பொருந்தி, பலவகையான வேதப்பொருள் கொண்டு உன்னை நாடி விரும்பி வீடு பேற்றை அடைந்தவனாய், என் ஜன்மம் சாபல்யம் அடையாமல் நாயனைய அடியேன் இறந்துபோகக் கடவேனோ? விண், காற்று, தீ, நீர், பார் ஆகிய ஐந்து பூதங்களாக விளங்கி, இவ்வுலகிலுள்ள பெரியோருக்கு உரியவனாகத் திகழ்பவனே, என்றும் அழிவில்லாத பெரியோனே, அரசனே, மான்போன்ற அழகியர் வள்ளி, தேவயானைக்கு செல்வக் கணவனே, கோழிக் கொடியை உயர்த்தியவனே, தேன் போன்று இனிப்பவனே, தேனாறு என்னும் நீண்ட காட்டாறு பாய்கின்ற ஒளி பொருந்திய மலைப்பகுதியான (குன்றக்குடி* என்ற) தலத்தில் அமர்ந்தவனே, ஈசன் மகனே, செவ்வேள் முருகனே, அழகனே, தலைவனே, தேவனே, தேவர்களின் பெருமாளே. 
* தேனாறு பாயும் ஊர் குன்றக்குடியாதலால், இப்பாடல் அத்தலத்தைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.

பாடல் 1039 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தானா தானா தானா தானா     தானா தானத் ...... தனதான

சாவா மூவா வேளே போல்வாய்     தாளா வேனுக் ...... கருள்கூருந் 
தாதா வேஞா தாவே கோவே     சார்பா னார்கட் ...... குயிர்போல்வாய் 
ஏவால் மாலே போல்வாய் காரே     போல்வா யீதற் ...... கெனையாள்கொண் 
டேயா பாடா வாழ்வோர் பாலே     யான்வீ ணேகத் ...... திடலாமோ 
பாவா நாவாய் வாணீ சார்வார்     பாரா வாரத் ...... துரகேசப் 
பாய்மீ தேசாய் வார்கா ணாதே     பாதா ளாழத் ...... துறுபாதச் 
சேவா மாவூர் கோமான் வாழ்வே     சீமா னேசெச் ...... சையமார்பா 
சேயே வேளே பூவே கோவே     தேவே தேவப் ...... பெருமாளே.

சாதல் இல்லாதவனும், மூத்தல் இல்லாதவனும், மன்மதனைப் போல் என்றும் இளையவனாகவும் விளங்குவாய், உனது காலின் கீழ்ப்பட்ட எனக்கு அருள் சுரக்கும் கொடையாளியே, அறிவு மிக்கவனே, தலைவனே, உன்னைச் சார்ந்து நிற்பவர்களுக்கு உயிர் போல் விளங்குபவனே, பாணத்தைச் செலுத்துவதில் திருமாலையே நீ நிகர்ப்பாய், என்னை ஆண்டு கொண்டு எனக்குக் கொடுக்கும் திறத்தில் மேகத்துக்கு ஒப்பாவாய் (எனக் கூறி) செல்வர்களைப் பொருந்தி அடைந்து, இத்தகைய பாடல்களைக் கேட்டு வாழ்தலே குறிக்கோளாக இருப்பவர்களிடம், நானும் வீணாகக் கூச்சலிடுதல் நன்றோ? பாடல்களாக நாவிடத்தே பொருந்தும் சரஸ்வதியைச் சார்ந்துள்ள பிரமனும், பாற்கடலில் நாகராஜனாகிய ஆதிசேஷன் என்ற படுக்கை மீது துயில் கொள்ளும் திருமாலும் தம்மைக் காண முடியாதபடி, பாதாள ஆழத்தில் உற்ற திருவடியை உடையவரும், ரிஷபமாகிய நந்தியை வாகனமாகக் கொண்டு செலுத்தும் அரசருமாகிய, சிவபிரான் பெற்ற செல்வமே, செல்வப் பிரபுவே, வெட்சி மாலை அணிந்த மார்பனே, சிவகுமாரனே, செவ்வேளே, அழகனே, தலைவனே, தேவர்களின் பெருமாளே. 

பாடல் 1040 - பொதுப்பாடல்கள் 
ராகம் - மலஹரிதாளம் - ஆதி - 2 களை

தானா தானா தானா தானா     தானா தானத் ...... தனதான

நாரா லேதோல் நீரா லேயாம்     நானா வாசற் ...... குடிலூடே 
ஞாதா வாயே வாழ்கா லேகாய்     நாய்பேய் சூழ்கைக் ...... கிடமாமுன் 
தாரா ரார்தோ ளீரா றானே     சார்வா னோர்நற் ...... பெருவாழ்வே 
தாழா தேநா யேனா வாலே     தாள்பா டாண்மைத் ...... திறல்தாராய் 
பாரே ழோர்தா ளாலே யாள்வோர்     பாவார்வேதத் ...... தயனாரும் 
பாழூ டேவா னூடே பாரூ     டேயூர் பாதத் ...... தினைநாடாச் 
சீரார் மாதோ டேவாழ் வார்நீள்     சேவூர் வார்பொற் ...... சடையீசர் 
சேயே வேளே பூவே கோவே     தேவே தேவப் ...... பெருமாளே.

நரம்புகளாலும், தோலாலும், நீராலும் ஆகியுள்ள பலவித வாயில்களை (நவத் துவாரங்களை*) உடைய குடிசையாகிய இந்த உடலினுள் அறிவு வாய்ந்தவானாக வாழ்கின்ற காலத்தில், உயிர் போதலுற்று இறந்து போகும் சமயம் நாயும் பேயும் என் உடலைச் சூழுதற்கான காலம் வருமுன்பாக, ஆத்திமாலைகள் நிறைந்த பன்னிரண்டு தோள்களை உடையவனே, உன்னைச் சார்ந்தவர்களுக்கு நல்ல பெரு வாழ்வே, சற்றும் தாமதியாமல் நாயனைய அடியேன் என் நாவைக்கொண்டு உன் திருவடிகளைப் பாடும் வலிமைத்திறலைத் தருவாயாக. ஏழுலகங்களையும் தன் ஒப்பற்ற முயற்சியால் காத்து ஆளுகின்ற திருமாலும், தூய்மையான பாடல்கள் உள்ள வேதத்தை ஓதும் பிரமனும், வெட்டவெளிப் பாழிலும், வானிலும், மண்ணிலும் பரவி நிற்கும் பாதத்தினை நாடமுடியாத சிறப்பினை உடையவரும், பார்வதி தேவியுடன் வாழ்பவரும், பெரிய ரிஷபத்தை வாகனமாக உடையவரும், பொன்னிறச் சடை உடையவருமான ஈசர் சிவபிரானுடைய குமாரனே, செவ்வேளே, அழகனே, தலைவனே, தெய்வமே, தேவர்களின் பெருமாளே. 
* ஒன்பது துவாரங்கள்: இரு செவிகள், இரு கண்கள், இரு நாசித் துவாரங்கள், ஒரு வாய், இரு கழிவுத் துவாரங்கள்.

பாடல் 1041 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தானா தானா தானா தானா     தானா தானத் ...... தனதான

மாதா வோடே மாமா னானோர்     மாதோ டேமைத் ...... துனமாரும் 
மாறா னார்போ னீள்தீ யூடே     மாயா மோகக் ...... குடில்போடாப் 
போதா நீரூ டேபோய் மூழ்கா     வீழ்கா வேதைக் ...... குயிர்போமுன் 
போதா காரா பாராய் சீரார்     போதார் பாதத் ...... தருள்தாராய் 
வேதா வோடே மாலா னார்மேல்     வானோர் மேனிப் ...... பயமீள 
வேதா னோர்மே லாகா தேயோர்     வேலால் வேதித் ...... திடும்வீரா 
தீதார் தீயார் தீயு டேமூள்     சேரா சேதித் ...... திடுவோர்தஞ் 
சேயே வேளே பூவே கோவே     தேவே தேவப் ...... பெருமாளே.

தாயுடன் அம்மான்மாரும், மனைவியுடன் மைத்துனன்மாரும், என்னுடன் பகைமை பூண்டவர்கள் போல, பெரு நெருப்பின் இடையில், மாயைக்கும் ஆசைக்கும் இடம் தந்த இந்த உடலை இட்டு, நீரின் இடையே போய் முழுகி, பின்பு (மயானத்தை விட்டு) நீங்குதல் என்கிற துன்பத்துக்கு இடம் தந்து, உயிர் போவதற்கு முன்பாக, ஞான உருவத்தனே, கண் பார்த்து அருள்வாயாக. சிறப்பு நிறைந்த தாமரை மலர்போன்ற திருவடியின் அருளைத் தருவாயாக. பிரமனுடன் திருமால், மற்றும் விண்ணில் உள்ள தேவர்கள் இவர்களின் உடலில் கண்ட பயம் நீங்குவதற்கு, தானவர்களாகிய அசுரர்கள் மேம்படாதவாறு ஒப்பற்ற வேலாயுதத்தால் அவர்களை வதைத்திட்ட வீரனே, கொடியவர்களாகிய திரிபுராதி அசுரர்கள் தீயின் இடையே சேரும்படி அழித்தவராகிய சிவபெருமானின் குழந்தையே, செவ்வேள் முருகனே, அழகனே, தலைவனே, தேவனே, தேவர்களுக்கெல்லாம் பெருமாளே. 

பாடல் 1042 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தானா தானா தானா தானா     தானா தானத் ...... தனதான

வாராய் பேதாய் கேளாய் நீதாய்     மானார் மோகத் ...... துடனாசை 
மாசூ டாடா தூடே பாராய்     மாறா ஞானச் ...... சுடர்தானின் 
றாரா யாதே யாராய் பேறாம்     ஆனா வேதப் ...... பொருள்காணென் 
றாள்வாய் நீதா னாதா பார்மீ     தார்வே றாள்கைக் ...... குரியார்தாம் 
தோரா வானோர் சேனா தாரா     சூரா சாரற் ...... புனமாது 
தோள்தோய் தோளீ ராறா மாசூர்     தூளாய் வீழச் ...... சிறுதாரைச் 
சீரா வாலே வாளா லேவே     லாலே சேதித் ...... திடும்வீரா 
சேயே வேளே பூவே கோவே     தேவே தேவப் ...... பெருமாளே.

ஏ பேதை மனமே, வருவாயாக, நான் சொல்லுவதைக் கேட்பாயாக. நீ தாவித் தாவி மாதர்கள் மீது கொண்டுள்ள மோகத்துடன், காம ஆசை என்னும் குற்றத்தினுள் வீழ்ந்து அலையாமல், உனக்குள்ளேயே ஆராய்ந்து பார்ப்பாயாக. மாறாத ஞான ஒளியில் மனம் நிலைத்து நின்று, மற்றப் பொருட்களை ஆராய்வதுபோல் ஆராயாமல், அறிவால் ஆராய்ந்து பார்ப்பாயாக. பெறத்தக்க அரும் பொருளாகியும், அழிவில்லாததுமான வேதப் பொருளைக் கண்டு கொள் என்று எனக்கு உணர்த்தி என்னை ஆள்வாயாக. நீ தான் என் தலைவனே, இந்தப் பூமியில் உன்னை அன்றி வேறு யார் தான் என்னை ஆளுதற்கு உளர்? தோல்வியே அறியாதவனும், தேவர் சேனைக்குப் பற்றுக் கோடானவனுமான சேனாதிபதியே, சூரனே, (வள்ளி) மலையில் தினைப் புனத்தில் இருந்த வள்ளியின் தோளை அணைந்த, பன்னிரு தோள்களை உடையவனே, பெரிய சூரன் பொடிபட்டு விழ, சிறியதும், கூர்மையானதுமான உடை வாளாலும், பெரிய வாளாயுதத்தாலும், வேலாயுதத்தாலும் அழித்த வீரனே, சிவபெருமானின் குழந்தையே, செவ்வேள் முருகனே, அழகனே, அரசனே, தேவனே, தேவர்களுக்கெல்லாம் பெருமாளே. 

பாடல் 1043 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனன தான தானான தனன தான தானான     தனன தான தானான ...... தனதான

அகல நீளம் யாதாலு மொருவ ராலு மாராய     அரிய மோன மேகோயி ...... லெனமேவி 
அசைய வேக்ரி யாபீட மிசைபு காம காஞான     அறிவி னாத ராமோத ...... மலர்தூவிச் 
சகல வேத னாதீத சகல வாச காதீத     சகல மாக்ரி யாதீத ...... சிவரூப 
சகல சாத காதீத சகல வாச னாதீத     தனுவை நாடி மாபூசை ...... புரிவேனோ 
விகட தார சூதான நிகள பாத போதூள     விரக ராக போதார ...... சுரர்கால 
விபுத மாலி காநீல முகப டாக மாயூர     விமல வ்யாப காசீல ...... கவிநோத 
ககன கூட பாடீர தவள சோபி தாளான     கவன பூத ராரூட ...... சதகோடி 
களப காம வீர்வீசு கரமு கார வேல்வீர     கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.

இவ்வளவு அகலம், இவ்வளவு நீளம் என்ற அளவைகளாலும், எவராலும் ஆராய்வதற்கு முடியாத மெளன நிலையே திருக்கோயிலாக அடைந்து இருந்து விளக்கம் தருவதற்காகவே, கிரியை மார்க்கத்தை அனுஷ்டித்து, அதனைப் பூஜிக்கத் தகுந்த பீடத்தின் மேல் ஏற்றி, சிறந்த மெய்யுணர்வான ஞானத்துடன், அன்பு, மகிழ்ச்சி எனப்படும் மலர்களைத் தூவி, எவ்வகையானஅறிவுகளுக்கும் மேம்பட்டதான, எவ்விதமான சொற்களுக்கும் அப்பாற்பட்டதான, எவ்வகையான சிறந்த கிரியைகளுக்கும் மேம்பட்டதான, சிவ ரூபமான, எவ்விதமான அளவைகளுக்கும் மேம்பட்டதான, எவ்விதமான நறுமணத்துக்கும் மேம்பட்டதான புருவ நடுவில் உள்ள ஒரு குறியைக் குறித்து நின்று, சிறந்த பூஜையைச் செய்யும் பாக்கியம் எனக்குக் கிட்டுமோ? மாறுபாடுள்ள, வஞ்சகம் நிறைந்த பந்தத்தில் வீழ்வதனை அழியும்படித் தூள் படுத்துபவனே, காம நோயுடன் கூடிய மோகத்தை அனுபவிப்பதிலேயே பொழுது போக்குபவர்களாகிய அசுரர்களுக்கு நமனாய் நின்று அவர்களை அழித்தவனே, தேவதாரு மலரின் மாலையை அணிந்தவனே, நீல நிறப் போர்வை போன்ற உடலைக் கொண்டதான மயில் வாகனனே, பரிசுத்தமானவனே, எங்கும் நிறைந்திருப்பவனே, நற்குண உள்ளத்தவனே, அற்புத மூர்த்தியே, விண்ணுலகில் உள்ள, சந்தனம் அணிந்துள்ள, வெண்ணிற அழகை உடையதாய், (இந்திரனின்) ஏவலைப் புரிவதாய், வேகத்துடன் செல்லக் கூடிய, மலை போன்ற (ஐராவதம் என்ற) யானையின் மேல் எழுந்தருளி, வஜ்ராயுதத்தை ஏந்தும் இந்திரன் மனம் கலந்து விரும்பும் வீரனே, கதிரொளியை வீசுகின்ற திருமுகங்களை உடையவனே, கடப்ப மாலை அணிந்தவனே, வேல் வீரனே, மேரு மலையை ஒத்த கருணை உடையவனே, தேவர்களின் பெருமாளே. 

பாடல் 1044 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனன தான தானான தனன தான தானான     தனன தான தானான ...... தனதான

அடைப டாது நாடோறும் இடைவிடாது போம்வாயு     அடைய மீளில் வீடாகு ...... மெனநாடி 
அருள்பெ றாவ னாசார கரும யோகி யாகாமல்     அவனி மீதி லோயாது ...... தடுமாறும் 
உடலம் வேறு யான்வேறு கரணம் வேறு வேறாக     உதறி வாச காதீத ...... அடியூடே 
உருகி ஆரி யாசார பரம யோகி யாமாறுன்     உபய பாத ராசீக ...... மருள்வாயே 
வடப ராரை மாமேரு கிரியெ டாந டாமோது     மகர வாரி யோரேழு ...... மமுதாக 
மகுட வாள ராநோவ மதிய நோவ வா¡£ச     வனிதை மேவு தோளாயி ...... ரமுநோவக் 
கடையு மாதி கோபாலன் மருக சூலி காபாலி     புதல்வ கான வேல்வேடர் ...... கொடிகோவே 
கனக லோக பூபால சகல லோக ஆதார     கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.

உள்ளே அடைபட்டுப் போகாமல் ஒவ்வொரு நாளும் இடை விடாமல் போகின்ற மூச்சுக் காற்று முழுமையும் வீணாகாது உடலில் மீண்டும் வந்து (கும்பக முறையில்*) அடங்குமாயின், முக்தி வீடு கிடைக்கும் என்ற உண்மையை ஆராய்ந்து விரும்பி உனது திருவருளைப் பெறாத, ஒழுக்கம் இல்லாத கரும யோகியாய் வாழ்வைக் கழிக்காமல், இப் பூமியில் எப்போதும் நான் கெட்டு அலையாமல், எனது உடல் வேறு, நான் வேறு, என் (மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற) கரணங்கள் வேறு - இவைகள் யாவும் வேறு வேறு என்று உதறித் தள்ளி, உரைகளுக்கு எட்டாத உன் திருவடிச் சரணங்களில் வீழ்ந்து, உள்ளம் உருகி, மேலான ஆசார ஒழுக்கம் வாய்ந்த சிறந்த சிவ யோகி ஆகும் பொருட்டு, உன் இரண்டு திருவடிகளாகிய ராஜபோகத்தை அருள்வாயாக. வடக்கே உள்ளதும், பருத்த அடிப்பாகம் உடையதுமாகிய மேரு மலையை எடுத்து (மத்தாக) நட்டு, அலைகள் மோதும் கடல்கள் ஓர் ஏழினின்றும் அமுது வரும்படி, ஒளி பொருந்திய மணி முடிகளை உடைய பாம்பாகிய வாசுகியின் உடல் (கயிறாக இழுத்ததால்) வலிக்கும்படியும், (தூணாகச் சாத்தப்பட்ட) சந்திரனின் உடல் நோவவும், தாமரை மலரில் வீற்றிருக்கும் லக்ஷ்மி தேவி விரும்பும் தனது ஆயிரம் தோள்களும்** நோவும்படியும், கடலைக் கடைந்த ஆதி மூர்த்தியாகிய கோபாலனின் மருகனே, சூலாயுதத்தையும், பிரம்ம கபாலத்தையும் ஏந்துகிற சிவபெருமானது மகனே, வேல் பிடித்த வேடர்களின் கொடிபோன்ற வள்ளியின் தலைவனே. பொன்னுலகமாகிய தேவர்கள் உலகைப் பரிபாலித்த அரசே, எல்லா உலகங்களுக்கும் ஆதாரமாக உள்ளவனே, உனது கருணை மேரு மலையைப் போன்று பெரியது, தேவர்களுக்குப் பெருமாளே. 
* இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு:நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு 'ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள், சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி, ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை, சுழுமுனை முதலியன) உள்ளன.'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம்.'சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது.'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும் ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும்.
** தேவர்களாலும் அசுரர்களாலும் பாற்கடலைக் கடைய இயலாதபோது, திருமால் தனது ஆயிரம் தோள்கள் கொண்டு கடலைக் கடைந்தார்.

பாடல் 1045 - பொதுப்பாடல்கள் 
ராகம் - யமுனா கல்யாணி தாளம் - அங்கதாளம் - 5 1/2 
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2

தனன தான தானான தனன தான தானான     தனன தான தானான ...... தனதான

அமல வாயு வோடாத கமல நாபி மேல்மூல     அமுத பான மேமூல ...... அனல்மூள 
அசைவு றாது பேராத விதமு மேவி யோவாது     அரிச தான சோபான ...... மதனாலே 
எமனை மோதி யாகாச கமன மாம னோபாவ     மெளிது சால மேலாக ...... வுரையாடும் 
எனதி யானும் வேறாகி எவரும் யாதும் யானாகும்     இதய பாவ னாதீத ...... மருள்வாயே 
விமலை தோடி மீதோடு யமுனை போல வோரேழு     விபுத மேக மேபோல ...... வுலகேழும் 
விரிவு காணு மாமாயன் முடிய நீளு மாபோல     வெகுவி தாமு காகாய ...... பதமோடிக் 
கமல யோனி வீடான ககன கோள மீதோடு     கலப நீல மாயூர ...... இளையோனே 
கருணை மேக மேதூய கருணை வாரி யேயீறில்     கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.

பிராண வாயு மேற்கொண்டு செல்லாதபடி மூலாதார* கமலத்தின் மீது அங்ஙனம் செய்ததின் மூலம் அமுத பானம் பருகும்படி மூலாக்கினி சுடர் விட்டு எழ, மனம், வாக்கு, காயம் இவை மூன்றும் சலனமில்லாமல் நெகிழாதபடி ஒரு நிலையில் இருந்து சிறிதும் மாறாமல், மகிழ்ச்சி தருவதான படிப்படியாக மேலேறும் யோக முறையாலே, நமனையும் தாக்குவது போல் ஆகாயம் வரை பறந்து போகும் மனத்தின் தன்மை மிகவும் எளிதான வகையில் மேலெழுந்து ஆணவத்துடன் பேசுகின்ற எனது என்ற மமகாரமும், நான் என்ற அகங்காரமும் நீங்கி, பிற பொருள்கள் யாவும் நானே ஆகக்கூடிய மனோ பாவத்திற்கு எட்டாத பெரு நிலையைத் தந்து அருள்வாயாக. பரிசுத்தமான தேவியின் தொடி என்னும் கை வளையினின்றும் (மேலெழுந்து வந்த) யமுனை நதி போலவும்**, ஒப்பற்ற, எங்கும் வியாபித்திருக்கும் தன்மை வாய்ந்த, மேகத்தைப் போலவும், ஏழு உலகங்களின் பரப்பையும் காணவல்ல பெரிய திருமால் (அண்டங்களின்) முழுமையும் எட்டும்படி விசுவ ரூபம் எடுத்தது போலவும், பல திசைகளின் அளவுக்கும், ஆகாய அளவுக்கும் ஓடிச் சென்று, (திருமாலின் உந்தித்) தாமரையில் உதித்த பிரமனின் இருப்பிடமான விண்ணில் உள்ள பிரம்ம மண்டலத்தின் மீதும் ஓடுகின்ற நீலத் தோகை விளங்கும் மயில் வாகனனே, என்றும் இளையவனே, கருணை மேகமே, பரிசுத்தமான கருணைக் கடலே, முடிவில்லாத கருணையை உடைய மேரு மலையே, தேவர்கள் போற்றும் பெருமாளே. 
* ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம் ** முன்பு உமாதேவியின் திருக்கரங்களில் சிவபிரான் முகத்தைப் புதைக்க, தேவியின் பத்து விரல்களிலும் வியர்வை சிந்தி அவையே கங்கை, யமுனை முதலிய நதிகளாக ஆயின - சிவபுராணம்.

பாடல் 1046 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனன தான தானான தனன தான தானான     தனன தான தானான ...... தனதான

அயிலின் வாளி வேல்வாளி அளவு கூரி தாயீச     ரமுத ளாவு மாவேச ...... மதுபோல 
அறவு நீளி தாய்மீள அகலி தாய வார்காதி     னளவு மோடி நீடோதி ...... நிழலாறித் 
துயில்கொ ளாத வானோரு மயல்கொ ளாத ஆவேத     துறவ ரான பேர்யாரு ...... மடலேறத் 
துணியு மாறு லாநீல நயன மாத ராரோடு     துவளு வேனை யீடேறு ...... நெறிபாராய் 
பயிலு மேக நீகார சயில ராசன் வாழ்வான     பவதி யாம ளாவாமை ...... அபிராமி 
பரிபு ரார பாதார சரணி சாம ளாகார     பரம யோகி னீமோகி ...... மகமாயி 
கயிலை யாள ரோர்பாதி கடவு ளாளி லோகாயி     கனத னாச லாபார ...... அமுதூறல் 
கமழு மார ணாகீத கவிதை வாண வேல்வீர     கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.

(முதல் ஏழு வரிகள் வேசையரின் கண்களை விவரிக்கின்றன). அம்பின் கூர்மை, வேலின் நுனி இவைகளின் அளவு போலக் கூர்மை கொண்டதாய், சிவபெருமான் அமுதாக உண்ட விஷத்தின் தன்மையைக் கொண்டுள்ளதாய், பொங்கி எழச்செய்யும் கள்ளைப் போன்றதாய், மிகவும் நீண்டதாய், பின்னும் அகன்றதாய், நெடிய காது இருக்கும் இடம் வரை ஓடி, கூந்தலின் நிழலில் இளைப்பாறி, தூக்கம் இல்லாத தேவர்களும், காம இச்சை கொள்ளாத வேடம் பூண்ட துறவிகள் யாவரும் மடல்* ஏறும் வகைக்கு, துணிச்சலுடன் உலவுகின்ற, நீலோற்பலம் போன்ற கண்களை உடைய விலைமாதர்களோடு இணக்கம் வைத்து வாடுகின்ற என்னை ஈடேறும்படியான வழியைக் காட்டி அருள்வாயாக. நெருங்கி எழும் மேகங்களின் கூட்டம் படிகின்ற இமயமலை அரசனான இமவானுடைய செல்வப் புதல்வியான பார்வதி தேவி, ஒரு வகைப் பச்சை நிறம் உடையவள், ஈசனின் இடது பக்கத்தில் உள்ளவள், பேரழகி, சிலம்பும், மலர் மாலைகளும் உள்ள பாதத் தாமரையாகிய திருவடிகள் உடையவள், மரகதப் பச்சை வண்ணத்தாள், பரதேவதை, அனைவருக்கும் அன்பு ஊட்டுபவள், பெரிய அம்பிகை, கயிலாசநாதரின் ஒரு பாகத்தில் உள்ளவள், எல்லாத் தேவர்களையும் ஆள்பவள், உலகம்மை ஆனவள், (அத்தகைய பார்வதி தேவியின்) பருத்த மார்பகங்களில் இருந்து ஊறின பாலமுதின் நறுமணம் வீசும் (வாயால்) வேதப் பாக்களாகிய தேவாரத்தை (திருஞான சம்பந்தராகத் தோன்றிப்) பாடிய கவிவாணனே, வேல் வீரனே, கருணை உருவான மேருமலையே, தேவர்கள் பெருமாளே. 
* மடல் ஏறுதல்: காமத்தால் வாடும் தலைவன் பனங்கருக்கால் குதிரை முதலிய வடிவங்கள் செய்து அவற்றின் மேலே ஏறி ஊரைச் சுற்றி, தலைவியிடம் உள்ள தன் காதலை ஊரிலுள்ள பிறருக்குத் தெரிவிப்பான்.

பாடல் 1047 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனன தான தானான தனன தான தானான     தனன தான தானான ...... தனதான

இரத மான வாயூறல் பருகி டாவி டாய்போக     இனிய போக வாராழி ...... யதில்மூழ்கி 
இதயம் வேறு போகாம லுருகி யேக மாய்நாளு     மினிய மாதர் தோள்கூடி ...... விளையாடுஞ் 
சரச மோக மாவேத சரியை யோக்ரி யாஞான     சமுக மோத ராபூத ...... முதலான 
சகள மோச டாதார முகுள மோநி ராதார     தரணி யோநி ராகார ...... வடிவேயோ 
பரத நீல மாயூர வரத நாக கேயூர     பரம யோகி மாதேசி ...... மிகுஞான 
பரமர் தேசி காவேட பதிவ்ரு தாசு சீபாத     பதும சேக ராவேலை ...... மறவாத 
கரத லாவி சாகாச கலக லாத ராபோத     கமுக மூஷி காரூட ...... மததாரைக் 
கடவுள் தாதை சூழ்போதில் உலக மேழு சூழ்போது     கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.

சுவை மிகுந்த வாய் இதழ் ஊறலைப் பருகி காம தாகம் நீங்கி, இனிமை தரும் சிற்றின்பப் பெருங்கடலில் முழுகி, மனம் வேறிடத்திற் போகாமல் (காமத்திலேயே) மனம் உருகி, ஒன்றிய மனத்துடன் நாள் தோறும் இன்பம் தரும் விலைமாதர்களின் தோள்களைச் சேர்ந்து விளையாடுகின்ற லீலை ஆசையானது (பின்வருவனவற்றில் ஒன்றாகுமோ?) சிறந்த வேதத்தில் சொல்லப்பட்ட ஸாரியையோ, கிரியையோ, யோகமோ, ஞான மார்க்கமோ*, அல்லது இந்த மார்க்கங்களின் கூட்டமோ, மண் முதலான ஐந்து பூதங்களின் உருவத் திருமேனி விளக்கமோ, மூலாதாரம்** முதலான ஆறு ஆதாரங்களும் அரும்பு விட்ட தோற்றமோ, சார்பு வேண்டியில்லாத சூரிய ஒளியோ, உருவின்மையான ஒரு அழகு தானோ? (இவை ஒன்றுக்கும் ஈடாகாது என்ப). பரத நாட்டியம் ஆடவல்ல நீல மயில் வாகனனே, வரத மூர்த்தியே, பாம்பைத் தோளணி வகையாக அணிந்தவரும், பரம யோகியும், சிறந்த ஒளி வீசும் அழகு வாய்ந்தவரும், மிக்க ஞானம் நிறைந்த பரம மூர்த்தியுமான சிவபெருமானது குரு மூர்த்தியே, வேடர் குலத்தில் வளர்ந்த, கற்பு நிறைந்த, தூயவள் வள்ளியின் திருவடித் தாமரையை முடியில் சூடுபவனே, வேலாயுதத்தை மறவாத திருக்கரத்தை உடையவனே, விசாகனே, எல்லா கலைகளிலும் வல்லவனே, யானை முகத்தை உடையவரும், மூஞ்சூறின் மேல் ஏறி வருபவரும், நீரொழுக்குப் போல் மதநீர் ஒழுகுதல் உள்ளவரும் ஆகிய கணபதியின் தந்தையாகிய சிவபெருமானை வலம் வந்த நேரத்துக்குள் ஏழுலகையும் சுற்றி வந்த, மலர் போன்ற திருவடியை உடைய, கருணைப் பெரு மலையே, தேவர்களின் பெருமாளே. 
* 4 பக்தி மார்க்கங்கள் பின்வருமாறு:1. சரியை: திருக்கோயிலில் அலகு இடுதல், மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம் வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல், இறைவனை வாழ்த்துதல், திருவேடம் கண்டு பணிதல். இது 'தாத மார்க்கம் - சாலோகம்'.2. கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்தியக் காரியம் செய்தல். இது 'புத்ர மார்க்கம் - சாமீபம்'.3. யோகம்: புலன்களை அடக்கிப் பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி, முழு ஜோதியை நினைத்திருத்தல். இது 'சக மார்க்கம் (தோழ நெறி) - சாரூபம்'.4. ஞானம்: புறத் தொழில் அகத் தொழில் இன்றி, அறிவு மாத்திரத்தாலே செய்யும் வழிபாடு ஞானம். இது 'சன்மார்க்கம் - சாயுஜ்யம்'. சிவஞான சித்தியார் சூத்திரம். ** ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம்

பாடல் 1048 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனன தான தானான தனன தான தானான     தனன தான தானான ...... தனதான

குருதி தோலி னால்மேவு குடிலி லேத மாமாவி     குலைய ஏம னாலேவி ...... விடுகாலன் 
கொடிய பாச மோர்சூல படையி னோடு கூசாத     கொடுமை நோய்கொ டேகோலி ...... யெதிராமுன் 
பருதி சோமன் வானாடர் படியு ளோர்கள் பாலாழி     பயமு றாமல் வேலேவு ...... மிளையோனே 
பழுது றாத பாவாண ரெழுதொ ணாத தோள்வீர     பரிவி னோடு தாள்பாட ...... அருள்தாராய் 
மருது நீற தாய்வீழ வலிசெய் மாயன் வேயூதி     மடுவி லானை தான்மூல ...... மெனவோடி 
வருமு ராரி கோபாலர் மகளிர் கேள்வன் மாதாவின்     வசன மோம றாகேசன் ...... மருகோனே 
கருதொ ணாத ஞானாதி எருதி லேறு காபாலி     கடிய பேயி னோடாடி ...... கருதார்வெங் 
கனலில் மூழ்க வேநாடி புதல்வ கார ணாதீத     கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.

ரத்தம், தோல் ஆகியவற்றால் ஆக்கப்பட்ட குடிசையாகிய இவ்வுடலில் கேடு அடைகின்ற இந்த உயிர் நிலை கெட்டு நீங்கும்படி, யம தர்மனால் அனுப்பப்பட்டு வருகின்ற காலன் என்ற தூதன் கொடுமை வாய்ந்த பாசக் கயிறு, ஒப்பற்ற சூலப் படை இவைகளோடு வந்து, கூச்சமில்லாமல், பொல்லாத துன்ப நோய்களைத் தந்து, வளைத்திருந்து என்னை எதிர்ப்பதன் முன்பு, சூரியன், சந்திரன், விண்ணுலகோர், மண்ணுலகத்தினர், திருப்பாற் கடலில் பள்ளி கொண்ட திருமால் (ஆகிய இவர்கள்) பயம் நீங்க வேண்டி வேலைச் செலுத்திய இளையவனே, குற்றம் சிறிதும் இல்லாத பாக்களைப் பாடும் திறமை வாய்ந்த கவி மணிகளாலும் எழுதுவதற்கு முடியாத (அழகை உடைய) தோள்களை உடைய வீரனே, அன்புடன் நான் உன் திருவடியைப் பாடும்படியான திருவருளைத் தந்தருள்க. மருத மரம் வேரற்றுச் சிதறி விழும்படி தன் வலிமையைக் காட்டிய மாயவன், புல்லாங் குழலை வாசிப்பவன், நீர் நிலையில் நின்ற (கஜேந்திரன் என்ற) யானையானது ஆதி மூலமே என்று ஓலமிட்டு அழைக்க, அதைக் காப்பாற்ற ஓடிவந்த முரன் என்ற அசுரனின் எதிரியாகிய முராரி, இடைக் குலத்து கோபிகை மகளிரின் கணவன், தாயாகிய கைகேயியின் சொல்லை மறுக்காமல் (காட்டுக்குச் சென்ற) கேசவனாகிய திருமாலின் மருமகனே, எண்ணுதற்கு அரிய ஞான மூர்த்தியும், ரிஷபத்தில் ஏறுபவரும், (பிரம்ம) கபாலத்தைக் கையில் ஏந்தியவரும், கடுமை வாய்ந்த பேய்களுடன் ஆடுபவரும், தன்னை மறந்து (சிவ பூசையைக் கைவிட்ட திரிபுரத்தில்) இருந்த அனைவரும் கொடிய நெருப்பில் முழுகும்படி நாடியவரும் ஆகிய சிவபெருமானுடைய மகனே, காரணங்களுக்கு அப்பாற்பட்டவனே, கருணைப் பெருமலையே, தேவர்களின் பெருமாளே. 

பாடல் 1049 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனன தான தானான தனன தான தானான     தனன தான தானான ...... தனதான

சுருதி யூடு கேளாது சரியை யாளர் காணாது     துரிய மீது சாராது ...... எவராலுந் 
தொடரொ ணாது மாமாயை யிடைபு காது ஆனாத     சுகம கோத தீயாகி ...... யொழியாது 
பருதி காயில் வாடாது வடவை மூளில் வேகாது     பவனம் வீசில் வீழாது ...... சலியாது 
பரவை சூழி லாழாது படைகள் மோதில் மாயாது     பரம ஞான வீடேது ...... புகல்வாயே 
நிருதர் பூமி பாழாக மகர பூமி தீமூள     நிபிட தாரு காபூமி ...... குடியேற 
நிகர பார நீகார சிகர மீது வேலேவு     நிருப வேத ஆசாரி ...... யனுமாலும் 
கருது மாக மாசாரி கனக கார்மு காசாரி     ககன சாரி பூசாரி ...... வெகுசாரி 
கயிலை நாட காசாரி சகல சாரி வாழ்வான     கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.

வேத மொழிக்குள் கேட்கப்படாததும், சரியை* மார்க்கத்தில் உள்ளவர்களால் காணப்படாததும், யோகியர் தன்மயமாய் நிற்கும் யோக* நிலையிலும் கூட அருகே நெருங்க முடியாததும், யாராலும் தொடர்ந்து அணுக முடியாததும், பெரிய மாயைகள் கூட தன்னுள்ளே புக முடியாததும், அழிவில்லாத ஆனந்தப் பெருங் கடலாய் என்றும் அழியாதிருப்பதும், சூரியன் காய்ந்து எரித்தாலும் அழியாததும், வடவா முகாக்கினி (ஊழித் தீ) மூண்டாலும் வெந்து போகாததும், காற்று வேகமாக வீசினாலும் அதனால் தள்ளுண்டு வீழாததும், சோர்ந்து அசைவற்றுப் போகாததும், கடல் நீர் சூழினும் அமிழ்ந்து போகாததும், எவ்விதமான படைகள் வந்து மோதினாலும் அழிவு படாததும் - இத்தனை தன்மைகளும் உள்ள மேலான ஞான வீடு எது என்று சொல்லியருள்க. அசுரர்களின் இருப்பிடங்கள் பாழாகவும், மகரம் முதலிய மீன்கள் வாழும் கடல் தீப்பற்றவும், நெருக்கமான கற்பகச் சோலைகள் உள்ள பொன்னுலகத்தில் தேவர்கள் குடி புகவும், குவிந்து கிடப்பதும், மிக்க கனமுள்ளதும், பனி மூடியதுமான கிரெளஞ்ச மலையின்மீது வேலைச் செலுத்திய அரசே, வேத ஆசாரியனான பிரமனும், வேத முதல்வனான திருமாலும் தியானிக்கின்ற சிவாகமங்களைத் தந்த குரு மூர்த்தி, பொன் மலையான மேருவாகிய வில்லை ஏந்திய பெருமான், ஞானாகாசத்தில் உலவுகின்றவர், பூதலங்கள்தோறும் வீற்றிருப்பவர், பல விதமான நடையை உடையவர், கயிலையில் பல நடனங்களை ஆடவல்ல தலைவர், எல்லாவற்றிலும் வசிப்பவர் ஆகிய சிவபெருமானது செல்வமான கருணைப் பெரு மலையே, தேவர்கள் பெருமாளே. 
* 4 பக்தி மார்க்கங்கள் பின்வருமாறு:1. சரியை: திருக்கோயிலில் அலகு இடுதல், மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம் வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல், இறைவனை வாழ்த்துதல், திருவேடம் கண்டு பணிதல். இது 'தாத மார்க்கம் - சாலோகம்'.2. கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்தியக் காரியம் செய்தல். இது 'புத்ர மார்க்கம் - சாமீபம்'.3. யோகம்: புலன்களை அடக்கிப் பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி, முழு ஜோதியை நினைத்திருத்தல். இது 'சக மார்க்கம் (தோழ நெறி) - சாரூபம்'.4. ஞானம்: புறத் தொழில் அகத் தொழில் இன்றி, அறிவு மாத்திரத்தாலே செய்யும் வழிபாடு ஞானம். இது 'சன்மார்க்கம் - சாயுஜ்யம்'. சிவஞான சித்தியார் சூத்திரம்.

பாடல் 1050 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனன தான தானான தனன தான தானான     தனன தான தானான ...... தனதான

தொடஅ டாது நேராக வடிவு காண வாராது     சுருதி கூறு வாராலு ...... மெதிர்கூறத் 
துறையி லாத தோராசை யிறைவ னாகி யோரேக     துரிய மாகி வேறாகி ...... யறிவாகி 
நெடிய கால்கை யோடாடு முடலின் மேவி நீநானு     மெனவு நேர்மை நூல்கூறி ...... நிறைமாயம் 
நிகரில் கால னாரேவ முகரி யான தூதாளி     நினைவொ டேகு மோர்நீதி ...... மொழியாதோ 
அடல்கெ டாத சூர்கோடி மடிய வாகை வேலேவி     யமர்செய் வீர ஈராறு ...... புயவேளே 
அழகி னோடு மானீனு மரிவை காவ லாவேதன்     அரியும் வாழ வானாளு ...... மதிரேகா 
கடுவி டாக ளாரூப நடவி நோத தாடாளர்     கருதி டார்கள் தீமூள ...... முதல்நாடுங் 
கடவு ளேறு மீதேறி புதல்வ கார ணாவேத     கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.

தொடுதற்கு முடியாததாய், நேராக அதன் உருவத்தைக் காணுதற்குக் கிட்டாததாய், வேதப் பொருளைக் கூற வல்லவர்களாலும் விளக்கமாகச் சொல்வதற்கு வழி இல்லாததாய், நமது விருப்பத்துக்கு உரிய கடவுளாய், ஒப்பற்று ஒரே பரம் பொருளாக நிற்பதாய், விழிப்பு - உறக்கம் - கனவு ஆகிய மூன்று நிலைகளுக்கும் அப்பால் இருப்பதுவாய், பிறிதாய், அறிவாய், நீண்ட கால், கை ஆகிய உறுப்புக்களுடன் நடமாடும் உடலில் இடம் கொண்டு, நீ என்றும், நான் என்றும் துவைதமாகக் கூறும் நிலைமையானது நூல்களால் கூறப்பட்டு, அதனால் நிரம்ப ஏற்படும் மாயமான உணர்ச்சி (யாது என்பதையும்), ஒப்பில்லாத யமனார் ஏவ, ஆரவாரத்துடன் வருகின்ற தூதர்கள் மறக்காமல் (உயிரைப் பிரிக்க) வருகின்ற ஒரு நியதி யாது என்பதையும் எனக்கு விளங்கச் சொல்லி அருள மாட்டாயோ? வலிமை கெடாத கோடிக் கணக்கான சூரர்கள் இறக்க, வெற்றி வலாயுதத்தைச் செலுத்திப் போர் செய்த வீரனே, பன்னிரண்டு புயங்களை உடைய தலைவனே, அழகு நிரம்பிய மான் பெற்ற பெண்ணாகிய வள்ளியின் கணவனே, பிரமனும் திருமாலும் (சூரனுக்கு அஞ்சாமல்) வாழும்படியாக வானுலகை ஆளும் மேம்பாடு உடையவனே, விஷம் நீங்காத கழுத்தை உடைய உருவத்தாரும், நடனங்களை அற்புத வகையில் செய்யும் மேன்மையாளரும், பகைவர்களாகிய திரிபுராதிகள் தீ மூண்டு அழியும்படியாக முன்பு அவர்களைத் தேடிச் சென்று சண்டையிட்ட கடவுளும், ரிஷப வாகனத்தின்மேல் ஏறுபவரும் ஆகிய சிவபெருமானின் மகனே, மூல காரணனே, வேதப் பொருளானவனே, கருணைப் பெருமலையே, தேவர்களின் பெருமாளே. 

by Swathi   on 28 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.