LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- அருணகிரிநாதர் நூல்கள்

திருப்புகழ்-பாடல்-[1151 -1200]

பாடல் 1151 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனத்த தானன தானான தந்தன
     தனத்த தானன தானான தந்தன
          தனத்த தானன தானான தந்தன ...... தந்ததான
கறுத்து நீவிடு கூர்வேலி னுங்கடை
     சிவத்து நீடிய வாய்மீன வொண்குழை
          கடக்க வோடிய ஆலால நஞ்சன ...... வஞ்சநீடு 
கயற்க ணார்கனி வாயூற லுண்டணி
     கழுத்து மாகமு மேகீப வங்கொடு
          கலக்க மார்பக பாடீர குங்கும ...... கொங்கைமீதே 
உறுத்து மாரமு மோகாவ டங்களு
     மருத்து நேரிய கூர்வாள்ந கம்பட
          உடுத்த ஆடையும் வேறாயு ழன்றுக ...... ழன்றுவீழ 
உருக்கு நாபியின் மூழ்காம ருங்கிடை
     செருக்கு மோகன வாராத ரங்களை
          யொழிக்க வோர்வகை காணேனு றுந்துணை ...... யொன்றுகாணேன்
நிறத்த நூபுர பாதார விந்தமு
     முடுத்த பீலியும் வாரார்த னங்களும்
          நிறத்தி லேபடு வேலான கண்களும் ...... வண்டுபாட 
நெறித்த வோதியு மாயான்ம னம்பர
     தவிக்க மால்தர லாமோக லந்திட
          நினைக்க லாமென வேல்வேடர் கொம்புட ...... னண்புகூர்வாய் 
மறித்த வாரிதி கோகோவெ னும்படி
     வெறுத்த ராவணன் வாணாளை யம்பினில்
          வதைத்த மாமனு மேவார்பு ரங்கனல் ...... மண்டமேரு 
வளைத்த தாதையு மாறான குன்றமு
     மனைத்து லோகமும் வேதாக மங்களும்
          மதித்த சேவக வானாளு மும்பர்கள் ...... தம்பிரானே.
கோபித்து நீ விடுகின்ற (ரத்த முனையை உடைய) கூரிய வேலாயுதத்தைக் காட்டிலும் அதிகமாக நுனிப்பாகம் செந்நிறம் உற்று, நீண்ட மகர மீன் உருவத்தில் உள்ள ஒளி வீசும் குண்டலங்களையும் தாண்டி ஓடியதாயுள்ள, ஆலகால விஷத்தைப் போன்றதாய், வஞ்சனை எண்ணங்கள் நீண்ட தூரம் அமைந்துள்ளதாய், கயல் மீன் போன்ற கண்களை உடைய விலைமாதர்களின், கொவ்வைப் பழம் போன்ற வாயிதழ் ஊறலை பருகி, ஆபரணங்கள் பூண்ட கழுத்தும் உடலும் ஒன்றுபடும் தன்மையில் கலக்க, மார்பினிடத்தே உள்ள சந்தனம் குங்குமம் அணிந்த மார்பகங்களின் மேல் அழுத்தும் முத்து மாலையும் காம மயக்கத்தைத் தரும் பிற மாலைகளும் அறுபட, ஒழுங்குள்ள கூரிய வாள் போன்ற நகமும் மேலே பட, அணிந்த ஆடையும் வேறாக அலைப்புண்டு நழுவி விழ, இப்படி மனத்தை உருக்கும் தொப்புளில் முழுகி, இடையின் கண் களிப்புறும் காம மயக்கம் மிகுந்த ஆசைகளை ஒழித்துத் தொலைக்க ஒரு வழியும் தெரியவில்லை. உற்ற ஒரு துணையும் கூட நான் காண்கின்றேன் இல்லை. (முருகன் வள்ளியிடம் பேசிய பேச்சு) ஒளி பொருந்திய, சிலம்பணிந்த திருவடித் தாமரைகளும், உடுத்துள்ள மயில் தோகையும்*, கச்சு அணிந்த மார்பகங்களும், என் மார்பிலே வந்து தாக்குகின்ற வேல் போன்ற கண்களும், வண்டுகள் பாடி ஒலிக்க சுருள் கொண்ட கூந்தலுமாய் என் முன் நின்று, நான் மனம் வேதனைப்படும்படியான மோகத்தை எனக்கு நீ தருதல் நன்றோ? என்னைத் தழுவ நீ நினைப்பாயாக என்று வேல் ஏந்திய வேடர் பெண்ணாகிய வள்ளியுடன் நட்பு மிக்குப் பேசினவனே, (இலங்கைக்குப் போகா வண்ணம்) தடுத்த கடல் கோ கோ என்று கதறும்படி (பாணத்தை விட்டவனும்), தன்னை வெறுத்த ராவணன் வாழ்நாட்களை அம்பு கொண்டு வதைத்த மாமனாகிய திருமாலும், பகைவர்களது திரிபுரத்தில் தீ நெருங்கி எழும்படி மேருமலையை வில்லாக வளைத்த தந்தையாகிய சிவபெருமானும், பகைமை பூண்டிருந்த கிரெளஞ்ச மலையும், எல்லா உலகங்களும், வேதங்களும், ஆகமங்களும் மதித்து நின்ற வலிமை உள்ளவனே, வானுலகை ஆட்சி செய்யும் தேவர்களின் தம்பிரானே. 
* வேட்டுவ மக்கள் மயில் பீலியை ஆடையாக உடுப்பர்.
பாடல் 1152 - பொதுப்பாடல்கள் 
ராகம் - .....; தாளம் -
தனத்ததன தனத்ததன தனத்ததன தனத்ததன
     தனத்ததன தனத்ததன ...... தனதான
குறிப்பரிய குழற்குமதி நுதற்புருவ விலுக்குமிரு
     குழைக்கும்வடு விழிக்குமெழு ...... குமிழாலுங் 
கொடிப்பவள இதழ்க்குமிகு சுடர்த்தரள நகைக்குமமு
     தினுக்குமிக வுறத்தழுவு ...... குறியாலும் 
அறப்பெரிய தனக்குமன நடைக்குமினி னிடைக்குமல
     ரடிக்குமிள நகைக்குமுள ...... மயராதே 
அகத்தியனொ டுரைத்தபொரு ளளித்தருளி அரிப்பிரமர்
     அளப்பரிய பதக்கமல ...... மருள்வாயே 
கறுத்தடரு மரக்கரணி கருக்குலைய நெருக்கியொரு
     கணத்திலவர் நிணத்தகுடல் ...... கதிர்வேலாற் 
கறுத்தருளி யலக்கணுறு சுரர்க்கவர்கள் பதிக்குரிமை
     யளித்திடரை யறுத்தருளு ...... மயில்வீரா 
செறுத்துவரு கரித்திரள்கள் திடுக்கிடவல் மருப்பையரி
     சினத்தினொடு பறித்தமர்செய் ...... பெருகானிற் 
செலக்கருதி யறக்கொடிய சிலைக்குறவர் கொடித்தனது
     சிமிழ்த்தனமு னுறத்தழுவு ...... பெருமாளே.
உவமைகள் சொல்ல முடியாத (விலைமாதர்களின்) கூந்தலுக்கும், பிறைச் சந்திரனைப் போன்ற நெற்றிக்கும், வில்லைப் போல் வளைந்த புருவத்துக்கும், இரண்டு செவிகளுக்கும், மாவடு போன்ற கண்களுக்கும், மேலெழுந்து விளங்கும் குமிழம்பூ போன்ற மூக்குக்கும், கொடிப் பவளம் போலச் சிவந்த வாயிதழுக்கும், மிக்க ஒளி வீசும் முத்துப் போன்ற பல்லுக்கும், அமுதினும் இனிக்கும் பேச்சுக்கும், நன்கு பொருந்தத் தழுவிச் சேரும் பெண்குறிக்கும், மிகப் பெரிதான மார்பகத்துக்கும், அன்னம் போன்ற நடைக்கும், மின்னல் போன்ற இடுப்புக்கும், பூப்போன்று மிருதுவான பாதத்திற்கும், புன் சிரிப்புக்கும் என் மனம் சோர்வு அடையாமல், அகத்திய முனிவருக்கு உபதேசித்த ஞானப் பொருளை எனக்கும் அளித்து அருளி, திருமாலும், பிரமனும் கண்டு அளத்தற்கு அரிதான உனது திருவடித் தாமரைகளைத் தந்து அருள் புரிவாயாக. கோபித்து எதிர்த்துத் தாக்கிய அசுரர்களுடைய சேனை அடியோடு நிலை குலைய அவர்களை நெருக்கி, ஒரு கணப் பொழுதில் அவர்களுடைய கொழுப்பு நிறைந்த குடலை ஒளி பொருந்திய வேலாயுதத்தால் சினந்து அழித்து, துக்கத்தில் ஆழ்ந்திருந்த தேவர்களுக்கு அவர்களுடைய பொன்னுலகத்தின் உரிமையைத் தந்து அவர்களுடைய வருத்தத்தை நீக்கி அருளிய மயில் வீரனே, கோபித்து வந்த யானைக் கூட்டங்கள் திடுக்கிடும்படி வலிய தந்தங்களை சிங்கங்கள் சினத்துடன் பறித்து போர் புரியும் பெருத்த காட்டில் போவதற்கு திட்டமிட்டு, மிகப் பொல்லாதவர்களான வில் ஏந்தும் குறவர்களின் கொடி போன்ற மகளாகிய வள்ளியின் சிமிழ் போன்ற மார்பினை அழுந்தத் தழுவும் பெருமாளே. 
பாடல் 1153 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனதனன தனதான தானான தானான
     தனதனன தனதான தானான தானான
          தனதனன தனதான தானான தானான ...... தனதான
குனகியொரு மயில்போல வாராம னோலீலை
     விளையவினை நினையாம லேயேகி மீளாத
          கொடியமன தநியாய மாபாத காபோதி ...... யெனஆசைக் 
கொளுவஅதில் மயலாகி வீறொடு போய்நீள
     மலரமளி தனிலேறி யாமாறு போமாறு
          குலவிநல மொழிகூறி வாரேறு பூணார ...... முலைமூழ்கி 
மனமுருக மதராஜ கோலாடு மாபூசல்
     விளையவிழி சுழலாடி மேலோதி போய்மீள
          மதிவதன மொளிவீச நீராள மாய்மேவி ...... யநுராக 
வகைவகையி லதிமோக வாராழி யூடான
     பொருளளவ தளவாக யாரோடு மாலான
          வனிதையர்கள் வசமாய நாயேனு மீடேற ...... அருள்வாயே 
எனதுமொழி வழுவாமல் நீயேகு கான்மீதி
     லெனவிரகு குலையாத மாதாவு நேரோத
          இசையுமொழி தவறாம லேயேகி மாமாது ...... மிளையோனும் 
இனிமையொடு வருமாய மா¡£ச மானாவி
     குலையவரு கரதூஷ ணாவீரர் போர்மாள
          இறுகிநெடு மரமேழு தூளாக வேவாலி ...... யுயிர்சீறி 
அநுமனொடு கவிகூட வாராக நீராழி
     யடைசெய்தணை தனிலேறி மாபாவி யூர்மேவி
          அவுணர்கிளை கெடநூறி யாலால மாகோப ...... நிருதேசன் 
அருணமணி திகழ்பார வீராக ராமோலி
     யொருபதுமொர் கணைவீழ வேமோது போராளி
          அடல்மருக குமரேச மேலாய வானோர்கள் ...... பெருமாளே.
கொஞ்சிக் குலவி ஒப்பற்ற மயில் போல் வந்து, மனத்தில் காம லீலைகள் தோன்ற (அதனால்) உண்டாகும் பயன்களை யோசியாமல், அந்தத் தீய வழியிலேயே சென்று (அவ் வழியினின்றும்) திரும்பி வராமல் (காலம் கழித்து) தீய மனதுடன், நியாயம் அற்ற பெரிய பாதக நெறியில் செல்லும் குருடன் இவன் என்று சொல்லும்படி, (மண், பெண், பொன் என்னும்) ஆசைகள் கொழுந்து விட்டு எரிய, அவற்றில் மயக்கம் கொண்டவனாய், தற்பெருமையுடன் நடந்தவனாய், நீண்ட காலம் மலர்ப் படுக்கையில் ஏறி, மேலான நிலைக்கு வரும் வழிகள் எல்லாம் கெட்டழியும்படி (வேசியர்களிடம்) கொஞ்சிப் பேசி இன்பமான பேச்சுக்களை மொழிந்து, கச்சு அணிந்துள்ளதும் முத்து மாலையைக் கொண்டதுமான மார்பகங்களில் முழுகி, மனம் உருக, மன்மதனுடைய பாணங்கள் இயற்றும் பெரிய காமப் போர் உண்டாக, கண்கள் சுழன்று, மேலே உள்ள கூந்தலை எட்டிப் பார்ப்பது போல அணுகி மீள, நிலவின் ஒளியைக் கொண்ட முகம் ஒளி வீச, வேர்வை நீர் மிகவும் பெருகி, காமப் பற்று ஊறி, விதம் விதமாக, மிக்க மோகம் என்னும் பெரிய கடலிடையே கிடைக்கும் (காமுகரால் கொடுக்கப்பட்ட) பொருளின் அளவுக்குத் தக்கபடி எல்லாரிடமும் காம இச்சையைக் காட்டும் விலைமாதர்களின் வசப்பட்டு நாயினும் கீழான அடியேனும் ஈடேறும் பொருட்டு அருள் புரிவாயாக. என்னுடைய பேச்சு தவறாமல் நீ காட்டுக்குப் போவாயாக என்று வஞ்சகம் குறைவு படாத மாதாவாகிய கைகேயியும் எடுத்துச் சொல்ல, சொன்ன சொல் தவறாமல் லக்ஷ்மி போன்ற சீதையும் தம்பி இலக்குமணனும் விருப்பமுடன் கூட வர காட்டுக்குப் போய், காட்டிடை வந்த மாய மானாகிய மா¡£சன் உயிர் துறக்க, போருக்கு வந்த கர, துஷணர்கள் முதலிய வீரர்கள் கொல்லப்பட, உறுதியாக இருந்த மராமரங்கள் ஏழும் ராமபாணத்தால் துளைபட, வாலியின் உயிர் மடிய, அனுமனோடு குரங்குகளும் கூடிவர கடலாகிய நீரை அணையிட்டு அடைத்து, அந்த அணை மீதில் ஏறிச் சென்று பெரிய பாதகனாகிய இராவணனுடைய ஊராகிய இலங்கைக்குப் போய் அரக்கர்களுடைய கூட்டம் எல்லாம் மாளப் பொடி செய்து, ஆலகால விஷம் போல பெரிய கோபத்துடன் வந்த அரக்கர் தலைவனான இராவணனுடைய சிவந்த இரத்தினங்கள் விளங்குவதும், கனத்ததுமான மகுடங்கள் ஒரு பத்தும் ஒரே அம்பால் அற்று விழும்படி தாக்கிய போர் வீரனான திருமாலின் வலிமை நிரம்பிய மருகனே, குமரேசனே, மேம்பட்ட தேவர்களின் பெருமாளே.
பாடல் 1154 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனதன தனனத் தனனத், தனதன தனனத் தனனத்
     தனதன தனனத் தனனத் ...... தனதான
கொலைவிழி சுழலச் சுழலச் சிலைநுதல் குவியக் குவியக்
     கொடியிடை துவளத் துவளத் ...... தனபாரக் 
குறியணி சிதறச் சிதறக் கரவளை கதறக் கதறக்
     குயில்மொழி பதறப் பதறப் ...... ப்ரியமோகக் 
கலவியி லொருமித் தொருமித் திலவிதழ் பருகிப் பருகிக்
     கரமொடு தழுவித் தழுவிச் ...... சிலநாளிற் 
கையிலுள பொருள்கெட் டருள்கெட் டனைவரும் விடுசிச் சியெனக்
     கடியொரு செயலுற் றுலகிற் ...... றிரிவேனோ 
சலநிதி சுவறச் சுவறத் திசைநிலை பெயரப் பெயரத்
     தடவரை பிதிரப் பிதிரத் ...... திடமேருத் 
தமனிய நெடுவெற் பதிரப் பணிமணி சிரம்விட் டகலச்
     சமனுடல் கிழியக் கிழியப் ...... பொருசூரன் 
பெலமது குறையக் குறையக் கருவிகள் பறையப் பறையப்
     பிறநரி தொடரத் தொடரத் ...... திரள்கூகை 
பெடையொடு குழறக் குழறச் சுரபதி பரவப் பரவப்
     ப்ரபையயில் தொடுநற் குமரப் ...... பெருமாளே.
கொலை செய்வது போன்ற கொடுமையைக் காட்டும் கண் மேலும் மேலும் சுழல, வில்லைப் போல் வளைந்த புருவம் மேலும் மேலும் குவிந்து நெருங்க, கொடி போன்ற இடுப்பு மேலும் மேலும் துவண்டு போக, மார்பக பாரங்களாகக் குறிக்கப்பட்ட இடத்தில் உள்ள ஆபரணங்கள் மேலும் மேலும் சிதற, கைகளில் அணிந்துள்ள வளையல்கள் மேலும் மேலும் ஒலிக்க, குயில் போன்ற பேச்சு மேலும் மேலும் கலக்கம் உற, ஆசை மோகத்தால் ஏற்பட்ட புணர்ச்சியில் மேலும் மேலும் ஒன்று பட்டு, இலவம் பூவைப் போல் சிவந்த வாயிதழ் ஊறல்களை மேலும் மேலும் பருகி, கைகளால் மேலும் மேலும் தழுவி அணைத்து, சில நாட்களில் கையில் உள்ள பொருள்கள் அழிந்து போய், நல்ல அருள் குணமும் கெட்டுப் போய், யாவரும் சீ சீ விலகு என்று அதட்டுகின்ற நிலைமையை அடைந்து இந்த உலகத்தில் திரிவேனோ? கடலடி மேலும் மேலும் வற்றிட, திக்குகளின் நிலையும் மேலும் மேலும் அலைய, பெரிய கிரெளஞ்ச மலை மேலும் மேலும் சிதறுண்டு விழ, வலிமை பொருந்திய மேரு என்னும் பொன் மலையாகிய நீண்ட மலை அதிர்ச்சி அடைய, பாம்பு (ஆதிசேஷனின்) சிரத்தில் உள்ள மணி அதனுடைய தலையை விட்டுச் சிதறி விழ, யமனுடைய உடல் (பல உயிர்களைக் கவர்வதால்) அலுப்புண்டு குலைய, சண்டை செய்யும் சூரனுடய உடல் வலிமை மேலும் மேலும் குறைய, (பகைவர்களின்) ஆயுதங்கள் மேலும் மேலும் அழிபட்டு ஒழிய, நரிகளும் கழுகுகள் முதலிய பிறவும் மேலும் மேலும் (பிணங்களைத் தின்னத்) தொடர்ந்து நெருங்க, கூட்டமான கோட்டான்கள் பெண் கோட்டான்களோடு மேலும் மேலும் கூவ, தேவேந்திரன் தொழுது கொண்டே இருக்க, ஒளி வீசும் வேலாயுதத்தைச் செலுத்திய நல்ல குமரப் பெருமாளே. 
பாடல் 1155 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தானனா தனன தத்த, தானனா தனன தத்த
     தானனா தனன தத்த ...... தனதான
கோழையா ணவமி குத்த வீரமே புகல்வர் அற்பர்
     கோதுசே ரிழிகு லத்தர் ...... குலமேன்மை 
கூறியே நடுவி ருப்பர் சோறிடார் தரும புத்ர
     கோவுநா னெனஇ சைப்பர் ...... மிடியூடே 
ஆழுவார் நிதியு டைக்கு பேரனா மெனஇ சைப்பர்
     ஆசுசேர் கலியு கத்தி ...... னெறியீதே 
ஆயுநூ லறிவு கெட்ட நானும்வே றலஅ தற்கு
     ளாகையா லவைய டக்க ...... வுரையீதே 
ஏழைவா னவர ழைக்க ஆனைவா சவனு ருத்ர
     ஈசன்மேல் வெயிலெ றிக்க ...... மதிவேணி 
ஈசனார் தமதி டுக்க மாறியே கயிலை வெற்பில்
     ஏறியே யினிதி ருக்க ...... வருவோனே 
வேழமீ துறையும் வஜ்ர தேவர்கோ சிறைவி டுத்து
     வேதனா ரையும் விடுத்து ...... முடிசூடி 
வீரசூ ரவன் முடிக்கு ளேறியே கழுகு கொத்த
     வீறுசேர் சிலை யெடுத்த ...... பெருமாளே.
பயந்தவராய் இருப்பினும் அகங்காரம் மிக்க வீரப் பேச்சைப் பேசுவார்கள் சிலர். கீழ் மக்களாகவும் குற்றம் உள்ள இழி குலத்தவராகவும் இருப்பினும், சிலர் தங்கள் குலத்தின் பெருமையே பேசி சபை நடுவே வீற்றிருப்பர். (பசித்தவருக்குச்) சோறு இடாத பேர்வழிகள் தரும புத்ர அரசனே நான்தான் என்று தம்மைப் புகழ்ந்து பேசுவர். தரித்திர நிலையில் ஆழ்ந்து கிடப்பவர் செல்வம் மிக்க குபேரன் நான் என்று தம்மைத் தாமே புகழ்வர். குற்றம் நிறைந்த கலி யுகத்தின் போக்கு இப்படித்தான் இருக்கிறது. ஆய வேண்டிய நூல் அறிவு இல்லாத நானும் இந்த வழிக்கு வேறுபட்டவன் அல்லன். அந்த வழியில் ஆதலால் வெறும் அவை அடக்கப் பேச்சுப்போல் நான் சொன்ன உரையாகும் இது. கஷ்ட நிலையில் இருந்த தேவர்கள் அழைக்க, ஐராவதம் என்னும் யானையை உடைய இந்திரன், ருத்ர தேவன் இவர்கள் மீது (சூரனுடைய) வெயில்போன்ற கொடுமை தாக்க, சந்திரன் அணிந்த சடையை உடைய சிவபெருமான் தங்களுடைய துன்பத்தை (உன் துணை கொண்டு) நீக்கிய பின், கயிலை மலையில் ஏறி இன்புற்றிருக்க வந்த பெருமானே, ஐராவதத்தின் மீது வீற்றிருக்கும் வஜ்ராயுதத்தை ஏந்திய தலைவனாகிய இந்திரனைச் சிறையினின்று விடுத்து, பிரமனையும் சிறையிலிருந்து விடுத்து, இந்திரனுக்கு வானுலக அரசாட்சியைத் தந்து, வீரமுள்ள சூரனின் தலையில் ஏறி கழுகுகள் கொத்தும்படியாக பெருமை வாய்ந்த வில்லை எடுத்த பெருமாளே. 
பாடல் 1156 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தந்தனந் தனந்த தந்த, தந்தனந் தனந்த தந்த
     தந்தனந் தனந்த தந்த ...... தனதான
சந்தனங் கலந்த குங்கு மம்புனைந் தணிந்த கொங்கை
     சந்திரந் ததும்ப சைந்து ...... தெருவூடே 
சங்கினங் குலுங்க செங்கை யெங்கிலும் பணிந்து டம்பு
     சந்தனந் துவண்ட சைந்து ...... வருமாபோல் 
கொந்தளங் குலுங்க வண்சி லம்புபொங் கஇன்சு கங்கள்
     கொஞ்சிபொன் தொடர்ந்தி டும்பொன் ...... மடவார்தோள் 
கொங்கைபைங் கரம்பு ணர்ந்த ழிந்துணங் கலுந்த விர்ந்து
     கொஞ்சுநின் சரண்க ளண்ட ...... அருள்தாராய் 
தந்தனந் தசெஞ்சி லம்பு கிண்கிணின் குலங்கள் கொஞ்ச
     தண்டையம் பதம்பு லம்ப ...... வருவோனே 
சந்தனம் புனைந்த கொங்கை கண்களுஞ் சிவந்து பொங்க
     சண்பகம் புனங்கு றம்பொன் ...... அணைமார்பா 
வந்தநஞ் சுகந்த மைந்த கந்தரன் புணர்ந்த வஞ்சி
     மந்தரம் பொதிந்த கொங்கை ...... யுமையீனும் 
மைந்தனென் றுகந்து விஞ்சு மன்பணிந் தசிந்தை யன்பர்
     மங்கலின் றுளம்பு குந்த ...... பெருமாளே.
சந்தனத்தையும் அதனுடன் கலந்த குங்குமத்தையும் பூசி அணிந்துள்ள மார்பகம் பொன் ஆபரணங்களின் ஒளி மிகுந்து வீச அசைந்து, தெருவிலே, சங்கினால் செய்த கை வளைகளின் கூட்டம் ஒலி செய்யும் சிவந்த கரங்களுடன், பணிவு காட்டும் உடல் தூதுக்கு* அமைந்த அன்னப் பட்சி துவட்சியுற்று அசைந்து வருவது போல் நடந்து வந்து, கூந்தலின் முடி அசைய, (காலில்) நல்ல சிலம்பின் ஒலி நிறைந்து எழ, இனிமையான சுகத்தைத் தரும் பேச்சுக்களைக் கொஞ்சிப் பேசி, (வாடிக்கையாளரிடம்) பொற்காசு பெறுவதற்கு வேண்டிய வழிகளைப் பின் பற்றி முயலுகின்ற அழகிய விலைமாதர்களின் தோள்களையும், மார்பையும், அழகிய கைகளையும் தழுவி உடல் நலம் அழிவதும், சிந்தை வாடி மெலிவதும் நீங்கி ஒழிந்து, கொஞ்சும் உனது திருவடிகளை நெருங்க அருள் புரிவாயாக. தந்தனந்த என்ற ஒலியுடன் செவ்விய சிலம்பும், கிண்கிணியின் கூட்டங்களும் கொஞ்சி ஒலிக்க, தண்டைகள் அழகிய திருவடியில் ஒலிக்க வருபவனே, சந்தனம் அணிந்துள்ள மார்பகங்களும் கண்களும் சிவந்து பொங்க, சண்பக மரங்கள் உள்ள மலைக் கொல்லையில் இருந்த அழகிய குறப்பெண்ணாகிய வள்ளியைத் தழுவும் மார்பை உடையவனே, (பாற்கடலில் தோன்றி) வந்த ஆலகால விஷத்தை மகிழ்ச்சியுடன் தங்க வைத்த கழுத்தை உடைய சிவபெருமான் கலந்த வஞ்சிக் கொடி போன்றவளும் மந்தர மலை போல நிறைந்த மார்பை உடையவளும் ஆகிய உமாதேவி பெற்ற மைந்தன் என்று மகிழ்ச்சியுடன் மேலான வகையில் நன்றாகத் தொழுகின்ற உள்ளத்தைக் கொண்டுள்ள அடியார்களின் ஒளி மழுங்குதல் இல்லாமல் விளக்கமாகப் புகுந்து விளங்கும் பெருமாளே. 
* தூதுக்கு உரிய பறவைகளுள் அன்னமும் ஒன்று.மற்றவை நாரை, வண்டு, கிளி, அன்றில், குயில், புறா.
பாடல் 1157 - பொதுப்பாடல்கள் 
ராகம் - குந்தலவராளி 
தாளம் - அங்கதாளம் - 7 1/2 
தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1, தகிட-1 1/2, தகதிமி-2
தனன தனதனன தான தானன
     தனதனன தான தானன
          தனன தனதனன தான தானன தந்ததான
சுருதி வெகுமுகபு ராண கோடிகள்
     சரியை கிரியைமக யோக மோகிகள்
          துரித பரசமய பேத வாதிகள் ...... என்றுமோடித் 
தொடர வுணரஅரி தாய தூரிய
     பொருளை யணுகியநு போக மானவை
          தொலைய இனியவொரு ஸ்வாமி யாகிய ...... நின்ப்ரகாசங் 
கருதி யுருகியவி ரோதி யாயருள்
     பெருகு பரமசுக மாம கோததி
          கருணை யடியரொடு கூடியாடிம ...... கிழ்ந்துநீபக் 
கனக மணிவயிர நூபு ராரிய
     கிரண சரண அபி ராம கோமள
          கமல யுகளமற வாது பாடநி ...... னைந்திடாதோ 
மருது நெறுநெறென மோதி வேரோடு
     கருது மலகைமுலை கோதி வீதியில்
          மதுகை யொடுதறுக ணானை வீரிட ...... வென்றுதாளால் 
வலிய சகடிடறி மாய மாய்மடி
     படிய நடைபழகி யாயர் பாடியில்
          வளரு முகில்மருக வேல்வி நோதசி ...... கண்டிவீரா 
விருதர் நிருதர்குல சேனை சாடிய
     விஜய கடதடக போல வாரண
          விபுதை புளகதன பார பூஷண ...... அங்கிராத 
விமலை நகிலருண வாகு பூதர
     விபுத கடககிரி மேரு பூதர
          விகட சமரசத கோடி வானவர் ...... தம்பிரானே.
வேதமும், பலவிதமான கோடிக் கணக்கான புராணங்களும், சரியை மார்க்கத்தில்* இருந்து கோவில்களுக்குத் தொண்டு செய்பவர்களும், கிரியை மார்க்கத்தில் நடந்து நியமமாய் மலர் தூவித் தொழுபவர்களும், மகாயோக மார்க்கத்தில் ஆசை பூண்டு யோக நிஷ்டையில் இருப்பவர்களும், கலக்கத்தைத் தரும் பர சமய பேதங்களை மேற்கொண்டு வாதிப்பவர்களும் என்றெல்லாம் ஓடி ஓடி ஆராய்ந்து, தொடர்ந்து பற்றுதற்கும், உணர்ந்து கொள்ளுவதற்கும் அரியதானதான சுத்த நிலைப் பரம் பொருளை அண்டி நெருங்கி, என் உலக அனுபவங்களும் ஆசைகளும் தொலைந்து ஒழிய, இன்பம் தரும் ஒரு ஸ்வாமியாகிய உன்னுடைய பேரொளியை தியானித்து மனம் உருகி, எல்லா உயிரும் எனதுயிரின் பகுதிகளே என்னும் பேதமற்ற மனம் உடையவனாக, அருள் நிறைந்த மேலான இன்பப் பெரிய கடலில் கருணைமிக்க உன் அடியார்களுடன் கூடி மகிழ்ந்து, கடப்ப மலரும், பொன், இரத்தினம், வைரம் இவை விளங்கும் சிலம்பு அணிந்ததும், மேலான ஒளி வீசுவதும், அடைக்கலம் தருவதும், அழகிய இளமை விளங்குவதுமான திருவடித் தாமரைகளை (நான்) மறக்காமல் பாட உனது திருவுள்ளம் நினைவு கொள்ளாதோ? மருத மரங்களை நெறுநெறு என்று ஒலிக்குமாறு வேருடன் முறியும்படி (இடுப்பில் கட்டிய உரலோடு) மோதியும், (தன்னை விஷப்பாலை ஊட்டுவித்துக் கொல்லும்) எண்ணத்துடன் வந்த அலகைப் பேய் பூதனையின் கொங்கையைக் குடைந்து தோண்டி அவள் உயிரைப் பருகியும், தெருவில் வலிமையுடன் வஞ்சகமாகக் கொல்ல வந்த (குவலயா பீடம் என்னும்) யானை அலறிக் கூச்சலிட அதை வென்றும், பாதத்தால் வலிமை வாய்ந்த வண்டிச் சக்கரத்தை (சகடாசுரனை) எற்றி உதைத்து, தந்திரமாய் அவன் இறக்கும்படிச் செய்தும், மீண்டும் சாதாரணக் குழந்தை போலத் தவழ்ந்தும், நடந்தும், இடைச் சேரியில் வளர்ந்த மேக வண்ணனாகிய திருமாலின் மருகனே, வேலாயுதத்தை ஏந்தும் அற்புத மூர்த்தியே, மயில் வீரனே, வீரர்களாகிய அசுரர்களின் குலச் சேனைகளைத் துகைத்தழித்த வெற்றியாளனே, விசாலமான தாடையை உடைய யானை (ஐராவதம்) வளர்த்த தேவயானையின் புளகம் கொண்ட மார்பகங்களை உன் மார்பில் அணிகளாகத் தரித்துள்ளவனே, அழகிய, வேடர் குலத்துத் தூயவளான வள்ளியின் மார்பினை அணைத்துக் கொள்ளும் சிவந்த தோள் மலையை உடையவனே, தேவர்கள் சேனைக்கு நாயகனே, மலைகளுள் மேருமலையுடன் மாறுபட்டு போர் செய்தவனே, நூறு கோடி தேவர்களுக்குத் தம்பிரானே. 
* 4 பக்தி மார்க்கங்கள் பின்வருமாறு:1. சரியை: திருக்கோயிலில் அலகு இடுதல், மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம் வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல், இறைவனை வாழ்த்துதல், திருவேடம் கண்டு பணிதல். இது 'தாத மார்க்கம் - சாலோகம்'.2. கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்தியக் காரியம் செய்தல். இது 'புத்ர மார்க்கம் - சாமீபம்'.3. யோகம்: புலன்களை அடக்கிப் பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி, முழு ஜோதியை நினைத்திருத்தல். இது 'சக மார்க்கம் (தோழ நெறி) - சாரூபம்'.4. ஞானம்: புறத் தொழில் அகத் தொழில் இன்றி, அறிவு மாத்திரத்தாலே செய்யும் வழிபாடு ஞானம். இது 'சன்மார்க்கம் - சாயுஜ்யம்'. சிவஞான சித்தியார் சூத்திரம்.
பாடல் 1158 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தத்தத் தனதன தத்தன தனதன
     தத்தத் தனதன தத்தன தனதன
          தத்தத் தனதன தத்தன தனதன ...... தனதானத்
சுற்றத் தவர்களு மக்களு மிதமுள
     சொற்குற் றரிவையும் விட்டது சலமிது
          சுத்தச் சலமினி சற்றிது கிடைபடு ...... மெனமாழ்கித் 
துக்கத் தொடுகொடி தொட்டியெ யழுதழல்
     சுட்டக் குடமொடு சுட்டெரி கனலொடு
          தொக்குத் தொகுதொகு தொக்கென இடுபறை ...... பிணமூடச் 
சற்றொப் புளதொரு சச்சையு மெழுமுடல்
     சட்டப் படவுயிர் சற்றுடன் விசியது
          தப்பிற் றவறுறு மத்திப நடையென ...... உரையாடிச் 
சத்திப் பொடுகரம் வைத்திடர் தலைமிசை
     தப்பிற் றிதுபிழை யெப்படி யெனுமொழி
          தத்தச் சடம்விடு மப்பொழு திருசர ...... ணருள்வாயே 
சிற்றிற் கிரிமகள் கொத்தலர் புரிகுழல்
     சித்ரப் ப்ரபைபுனை பொற்பின ளிளமயில்
          செற்கட் சிவகதி யுத்தமி களிதர ...... முதுபேய்கள் 
திக்குச் செககெண தித்தரி திகுதிகு
     செச்செச் செணக்ருத டொட்டரி செணக்ருத
          டெட்டெட் டுடுடுடு தத்தரி தரியென ...... நடமாடுங் 
கொற்றப் புலியதள் சுற்றிய அரனருள்
     குட்டிக் கரிமுக னிக்கவ லமுதுசெய்
          கொச்சைக் கணபதி முக்கண னிளையவ ...... களமீதே 
குப்புற் றுடனெழு சச்சரி முழவியல்
     கொட்டச் சுரர்பதி மெய்த்திட நிசிசரர்
          கொத்துக் கிளையுடல் பட்டுக அமர்செய்த ...... பெருமாளே.
உறவினர்களும், மக்களும், இன்பம் தருவதான சொல்லுக்கு உரிய மனைவியும், (நோயாளியின் அருகில் ஈரம் இருக்கக் கண்டு) அது நோயாளி விட்ட சிறுநீர், இது நல்ல நீர் (என்றெல்லாம் பேசி), கொஞ்ச நேரத்தில் இந்நோய் படுக்க வைக்கும் என்று மயங்கி மனம் வருந்தி, துயரத்துடனும், கஷ்டத்துடனும் அணுகியிருந்து அழுது, தீயால் சுட்டெரிக்க, நெருப்புச் சட்டியில் சுடுதற்கு வேண்டிய தீயுடன் (செல்ல) தொக்குத் தொகு தொகு தொக்கு என்று அடிபடும் பறை தொடங்கி ஒலி செய்ய, பிணத்தை துணியால் மூடுவதற்கு கொஞ்சம் ஏற்புடையதான நேரம் எது என்ற ஆராய்ச்சிப் பேச்சும் பிறக்கும். உடல் நன்றாகக் கெட்டுப் போக, உயிர் கொஞ்ச நேரத்துக்குள் (உயிருக்கும் உடலுக்கும் உள்ள) கட்டு தவறிப் போனால் பிழை உண்டாகும், இப்போது நாடி மட்டமான நிலையில் உள்ளது என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்க, கூச்சலிட்டு வருத்தத்துடன் தலையின் மேல் கையை வைத்து, (நாடி) தவறுகின்றது, இச்சமயம் இவ்வுயிர் பிழைத்தல் எப்படி முடியும் என்கின்ற பேச்சு பரவ, உடலை உயிர் விடும் போது, உனது இரண்டு திருவடிகளையும் தந்து அருளுக. சிறு வீடு கட்டி விளையாடும் மலை (இமவான்) மகள், கொத்தான மலர்கள் வைத்துள்ள சுருண்ட கூந்தலை உடையவள், விசித்திரமான ஒளி வாய்ந்த அழகை உடையவள், இள மயில் போன்றவள், மழை போலும் குளிர்ந்த கண்ணை உடையவள், முக்தியைத் தரும் உத்தமி ஆகிய பார்வதி கண்டு களிக்க, பழமையான பேய்க் கூட்டங்கள் திக்குச் செககெண தித்தரிதிகுதிகு செச்செச் செணக்ருத டொட்டரி செணக்ருத டெட்டெட் டுடுடுடு தத்தரி தரியென சூழ்ந்து நடனமாட, வீரமுள்ள புலியின் தோலை ஆடையாகச் சுற்றியுள்ள சிவபிரான் அருளிய குழந்தை யானை முகன், கரும்பு அவல் இவைகளை உண்ணும் எளிய தோற்றத்தை உடைய கணபதி, மூன்று கண்களை உடையவன் (ஆகிய விநாயகனுக்கு) தம்பியே, போர்க் களத்தில் மேற்கிளம்பி ஒலிக்கும் வாத்திய வகை, முரசு முதலியவை தகுதியுடன் முழங்க, தேவர்கள் அரசனான இந்திரன் நிலை பெற்று உண்மையாய் வாழ, அசுரர்கள் கூட்டமும் சுற்றமும் உடல் அழிபட்டுச் சிதற, சண்டை செய்த பெருமாளே. 
பாடல் 1159 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தந்த தத்தன தானாதன தந்த தத்தன தானாதன
     தந்த தத்தன தானாதன ...... தனதான
செங்க னற்புகை யோமாதிகள் குண்ட மிட்டெழு சோமாசிகள்
     தெண்டெ னத்துணை தாள்மேல்விழ ...... அமராடிச் 
சிந்த னைப்படி மோகாதியி லிந்த்ரி யத்தினி லோடாசில
     திண்டி றற்றவ வாள்வீரரொ ...... டிகலாநின் 
றங்கம் வெட்டிய கூர்வாள்விழி மங்கை யர்க்கற மாலாய்மன
     மந்தி பட்டிருள் மூடாவகை ...... யவிரோத 
அந்த நிற்குண ஞானோதய சுந்த ரச்சுட ராராயந
     லன்பு வைத்தரு ளாமோர்கழ ...... லருளாதோ 
கொங்க டுத்தகு ராமாலிகை தண்க டுக்கைது ழாய்தாதகி
     கும்பி டத்தகு பாகீரதி ...... மதிமீது 
கொண்ட சித்ரக லாசூடிகை யிண்டெ ருக்கணி காகோதர
     குண்ட லத்தர்பி னாகாயுத ...... ருடனேயச் 
சங்கு சக்ரக தாபாணியு மெங்க ளுக்கொரு வாழ்வேசுரர்
     தங்க ளைச்சிறை மீளாயென ...... அசுரேசன் 
தஞ்ச மற்றிட வேதாகர னஞ்ச வெற்புக வீராகர
     சண்ட விக்ரம வேலேவிய ...... பெருமாளே.
சிவந்த தீயில் புகை எழும்படியாக ஓம குண்டங்கள் அமைத்து யாகங்களைச் செய்த சோமயாஜிகளும்* கூட சரணாகதி என்று (தங்கள்) இரு திருவடிகளில் விழும்படி போர் செய்ய வல்லதும், மனதில் அழுந்திய மோகம், மதம், மாற்சரியம், இடும்பு, அசூயை, காமம், குரோதம், உலோபம் எனப்படும் எட்டு வகைப்பட்ட துர்க்குணங்களும் பொறிகளின் சபலங்களும் தாக்கித் தம்மை ஆட்டாத சில வலிய வன்மையை உடைய தவ ஒளியைக் கொண்ட வீரர்களுடன் மாறுபட்டு அவர்களை வென்று நின்று (அவர்களுடைய) உடலை வெட்டும்படியான கூரிய கண்களை உடைய (விலை) மாதர் மீது முற்றும் காம மயக்கம் கொண்டவனாய், மனம் அழிந்து போய் அஞ்ஞானம் என்ற இருள் வந்து மூடாத வகையில், பகையின்மை எனப்படும் அந்தக் குணம் கடந்த ஞானோதய அழகு ஒளியை நான் ஆராய்வதற்கு, நல்ல அன்பை என் மீது வைத்து திருவருளுக்கு இடமான ஒப்பற்ற உனது திருவடியை எனக்கு தந்தருளக் கூடாதோ? வாசனை கொண்ட குரா மலர் மாலை, குளிர்ந்த கொன்றை, துளசி, ஆத்தி வணங்கத் தகுந்த கங்கைநதி, சந்திரனிடத்தே கொண்டுள்ள அழகிய கலை, (இவைகள் விளங்கும்) ஜடாமுடியில் ஈகைக் கொடிப்பூ, எருக்க மலர் அணிந்துள்ளவர், பாம்பைக் குண்டலமாக அணிந்தவர், பினாகம் என்னும் வில்லை ஆயுதமாக ஏந்தியவர் (ஆகிய சிவபெருமானும்), நன்கு பொருந்திய சங்கு, சக்கரம், கதை இவைகளைக் கையில் ஏந்திய திருமாலும், எங்களுடைய செல்வமே, தேவர்களைச் சிறையினின்றும் மீட்டருள்க என்று வேண்ட அசுரர்கள் தலைவனான சூரன் பற்றுக் கோடின்றி வேதனைப்பட, வேதத்துக்கு இருப்பிடமான பிரமன் பயந்து நிற்க, கிரெளஞ்ச மலை பிளப்புண்டு சிதறி விழ, வீரத்துக்கு இருப்பிடமாய் வேகமும் வலிமையும் கொண்ட வேலாயுதத்தைச் செலுத்திய பெருமாளே. 
* சோம யாகம் = தேவர்கள் பொருட்டுச் சோமரசம் அளிக்கும் வேள்வி வகை.இதைச் செய்தவர்கள் சோமயாஜிகள். சோமயாஜிகளும், தவ வீரர்களும் கூடப் பெண்களால் மதி மயங்குவர் என்பது கருத்து.
பாடல் 1160 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தானதனத் தானதனத் தானதனத் தானதனத்
     தானதனத் தானதனத் ...... தனதான
சேலையடர்த் தாலமிகுத் தேயுழையைச் சீறுவிதித்
     தூறுசிவப் பேறுவிழிக் ...... கணையாலே 
தேனிரதத் தேமுழுகிப் பாகுநிகர்த் தாரமுதத்
     தேறலெனக் கூறுமொழிச் ...... செயலாலே 
ஆலிலையைப் போலும்வயிற் றாலளகத் தாலதரத்
     தாலுமிதத் தாலும்வளைப் ...... பிடுவோர்மேல் 
ஆசையினைத் தூரவிடுத் தேபுகழ்வுற் றேப்ரியநற்
     றாளிணையைச் சேரஎனக் ...... கருள்வாயே 
காலனைமெய்ப் பாதமெடுத் தேயுதையிட் டேமதனைக்
     காயஎரித் தேவிதியிற் ...... றலையூடே 
காசினியிற் காணஇரப் போர்மதியைச் சூடியெருத்
     தேறிவகித் தூருதிரைக் ...... கடல்மீதில் 
ஆலமிடற் றானையுரித் தோலையுடுத் தீமமதுற்
     றாடியிடத் தேயுமைபெற் ...... றருள்வாழ்வே 
ஆழியினைச் சூரனைவெற் பேழினையுற் றேயயில்விட்
     டாதுலருக் காறுமுகப் ...... பெருமாளே.
சேல் மீனை வெட்கப்படச் செய்து, விஷம் மிகக் கொண்டதாய், மானைக் கோபித்து அவமானப்படுத்தி, செந்நிறம் ஊறி மேற்காட்டும் கண் என்னும் அம்பு கொண்டும், தேன் சுவையில் தோய்ந்து, வெல்லப் பாகுக்கு ஒப்பாகி, நிறையமுத பானம் என்று சொல்லத் தக்கதான மொழிகளின் திறத்தாலும், ஆலிலை போன்ற வயிற்றாலும், கூந்தலாலும், வாயிதழாலும் இன்பம் தந்து (ஆண்களின் மனத்தை) வளைத்து இழுப்பவர்களான விலைமாதர் மீதுள்ள காமப் பற்றைத் தூர எறிந்து, புகழ் பெற்று அன்புக்கு இடமான (உனது) நல்ல திருவடியிணைகளைச் சேருவதற்கு எனக்கு அருள் செய்வாயாக. யமனை உண்மைக்கு இருப்பிடமான தனது திருவடியைத் தூக்கி உதைத்தும், மன்மதனைச் சுட்டு எரித்தும், பிரமனுடைய கபாலம் கொண்டு பூமியில் உள்ளோர் காணும்படி யாசித்தும், ஒப்பற்ற நிலவைச் சடையில் தரித்தும், ரிஷபத்தில் ஏறி அமர்ந்தும், அசைந்து வரும் அலை வீசும் கடல் மீது எழுந்த ஆலகால விஷத்தைக் கண்டத்தில் தரித்தும், (எதிர்த்து வந்த) யானையைக் கொன்று அதன் தோலை உரித்து உடுத்தும், சுடு காட்டை அடைந்து அங்கே நடனம் புரிபவருமான சிவபெருமானது இடப் பாகத்தில் உறையும் உமா தேவி பெற்றருளிய செல்வமே, கடலையும், சூரனையும், ஏழு மலைகளையும், இவைகளின் மீது பட்டு அவை அழிந்து போகும்படி வேலாயுதத்தைச் செலுத்திய, ஏழைகளுக்கு உகந்த, ஆறுமுகப் பெருமாளே. 
பாடல் 1161 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தத்தத்தத் தத்தத் தத்தன
     தத்தத்தத் தத்தத் தத்தன
          தத்தத்தத் தத்தத் தத்தன ...... தனதான
சொக்குப்பொட் டெத்திக் கைப்பொரு
     ளைக்கெத்திற் பற்றிச் சிக்கொடு
          சுற்றுப்பட் டெற்றித் தெட்டிகள் ...... முலைமீதே 
சுற்றுப்பொற் பட்டுக் கச்சினர்
     முற்றிக்குத் தத்தைக் கொப்பென
          சொற்பித்துக் கற்பிற் செப்பிய ...... துயராலே 
சிக்குப்பட் டுட்கிப் பற்கொடு
     வெற்றிக்கைக் குத்துப் பட்டிதழ்
          தித்திப்பிற் கொத்துப் பித்துயர் ...... கொடுநாயேன் 
திக்குக்கெட் டொட்டுச் சிட்டென
     பட்டத்துற் புத்திக் கட்டற
          செப்பத்துற் பற்றற் கற்புத ...... மருள்வாயே 
தக்குத்தக் குக்குக் குக்குட
     தட்டுட்டுட் டுட்டுட் டுட்டென
          தக்குத்திக் கெட்டுப் பொட்டெழ ...... விருதோதை 
தத்தித்தித் தித்தித் தித்தென
     தெற்றுத்துட் டக்கட் டர்ப்படை
          சத்திக்கொற் றத்திற் குத்திய ...... முருகோனே 
துக்கித்திட் டத்தித் துக்கக
     நெக்குப்பட் டெக்கித் துட்டறு
          சுத்தப்பொற் பத்தர்க் குப்பொரு ...... ளருள்வேலா 
துற்றப்பொற் பச்சைக் கட்கல
     பச்சித்ரப் பக்ஷிக் கொற்றவ
          சொக்கர்க்கர்த் தத்தைச் சுட்டிய ...... பெருமாளே.
சொக்குப் பொடி போட்டு ஏமாற்றி, கையில் உள்ள பொருளைத் தந்திர வழியில் கைப்பற்றி, உறுதியுடன் (வந்தவரைச்) சுற்றி வளைத்து பேச்சினால் தாக்கி, வஞ்சிக்கும் மார்பகங்கள் மேலே சுற்றப்பட்டுள்ள பட்டுக் கச்சைக் கொண்டவர்கள் ஆகிய விலைமாதர்களின் முதிர்ந்த கரும்பு, கிளி இவைகளுக்கு ஒப்பு என்று சொல்லும்படியான மொழி என்கின்ற மயக்கத்தைத் தரும் சொல்லால் ஏற்படும் துன்பத்தில், மாட்டிக் கொண்டு நாணமும் அச்சமும் அடைந்து பல கொடுமையான அடிகளையும் கைக் குத்துகளையும் வாங்கிக் கொண்டும், வாயிதழ் ஊறலின் இனிப்புக்கு மனம் ஒப்பி, அதில் ஏற்படும் பித்து மிகக் கொண்ட கொடிய நாயனைய நான் திசை தடுமாறி, கண்ணியில் அகப்பட்ட சிட்டுக் குருவி போல் அவஸ்தைப்பட்ட கெட்ட புத்தியின் சம்பந்தம் நீங்க, செம்மையாக உன்னைப் பற்றுவதற்கு அற்புத வரத்தை அருள் புரிவாயாக. தக்குத்தக் குக்குக் குக்குட தட்டுட்டுட் டுட்டுட் டுட்டென இவ்வாறு, நிலை பெற்றுள்ள எட்டுத் திசைகளும் பொடிபட, வெற்றிச் சின்னங்களின் ஒலி தத் தித்தித் தித்தித் தித்தென செறிவுற, துஷ்டர்களாய்க் கஷ்டப்படுவர்களின் சேனையை வேலாயுதத்தின் வெற்றி வீரத்தால் குத்திய முருகோனே, துக்கப்பட்ட கடல் போன்ற துன்ப வீடாகிய மனம் நெகிழ்ந்து மேலான நிலையை எட்டி, தீய குணங்கள் நீங்கப் பெற்ற பரிசுத்த நிலையரான தூய அடியார்களுக்கு உபதேசப் பொருளை அருள் பாலிக்கும் வேலனே, நெருங்கியுள்ள அழகிய பச்சை நிறமுள்ளதும், பீலிக் கண்களை உடையதுமான தோகையை உடைய விசித்திரமான மயில் பறவையை வாகனமாக உடைய அரசே, மதுரை சொக்க நாதராகிய சிவபெருமானுக்கு பிரணவப் பொருளைச் சுட்டிக் குறித்து அறிவுறுத்திய பெருமாளே. 
பாடல் 1162 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தானான தானன தானன தானன
     தானான தானன தானன தானன
          தானான தானன தானன தானன ...... தனதான
ஞானாவி பூஷணி காரணி காரணி
     காமாவி மோகினி வாகினி யாமளை
          மாமாயி பார்வதி தேவிகு ணாதரி ...... உமையாள்தன் 
நாதாக்ரு பாகர தேசிகர் தேசிக
     வேதாக மேயருள் தேவர்கள் தேவந
          லீசாச டாபர மேசர்சர் வேசுரி ...... முருகோனே 
தேனார்மொ ழீவளி நாயகி நாயக
     வானாடு ளோர்தொழு மாமயில் வாகன
          சேணாளு மானின்ம னோகர மாகிய ...... மணவாளா 
சீர்பாத சேகர னாகவு நாயினன்
     மோகாவி காரவி டாய்கெட ஓடவெ
          சீராக வேகலை யாலுனை ஓதவும் ...... அருள்வாயே 
பேணார்கள் நீறதி டாஅம ணோர்களை
     சூராடி யேகழு மீதினி லேறிட
          கூனான மீனனி டேறிட கூடலில் ...... வருவோனே 
பேராண்மை யாளனி சாசரர் கோனிரு
     கூறாக வாளிதொ டூரகு நாயகன்
          பூவாய னாரணன் மாயனி ராகவன் ...... மருகோனே 
வாணாள்ப டாவரு சூரர்கள் மாளவெ
     சேணாடு ளோரவர் வீடதி டேறிட
          கோனாக வேவரு நாதகு ரூபர ...... குமரேசா 
வாசாம கோசர மாகிய வாசக
     தேசாதி யோரவர் பாதம தேதொழ
          பாசாவி நாசக னாகவு மேவிய ...... பெருமாளே.
ஞானத்தை விசேஷமான அணிகலனாகக் கொண்டவள், கரிய நிறம் கொண்டு, எல்லாவற்றுக்கும் காரணமாக இருப்பவள், காமத்தை உயிர்களுக்கு ஊட்டும் சிறந்த மோகினி, பாதிரி மர நிழலில் சிவபெருமானைப் பூஜித்த உமை, மரகதப் பச்சை நிறத்தி, மாயையில் வல்லவள், பார்வதி தேவி, நற் குணங்களை உடையவள், (ஆகிய) உமா தேவியின் தலைவரும், அருளுக்கு இருப்பிடமானவரும் ஆன சிவபெருமானுக்கும் குருவே, (சிவனுக்கு) வேதாமங்களை அருளிய தேவதேவனே, நல்ல ஈசனே, சடையை உடைய பரமேசுரர், எல்லாவற்றுக்கும் தலைவியாகிய ஈசுவரி இருவருடைய குழந்தையே, தேன் போலும் இனிய மொழிகளைப் பேசும் வள்ளி நாயகிக்குக் கணவனே, விண்ணுலகத்தில் உள்ளோர்கள் வணங்கும் சிறந்த மயில் வீரனே, விண்ணுலகத்தை ஆளும் இந்திரனின் மகளான தேவயானையின் இனிமையான கணவனே, உனது திருவடியை என் தலை மேல் சூடியவனாகிய, நாயினும் இழிந்த, அடியேனுடைய காம விகார தாகம் கெட்டு ஓட்டம் பிடிக்க, நன்றாக கலை ஞானத்துடன் உன்னை நான் பாட அருள்வாயாக. (உன்னைப்) போற்றாதவர்களும், திரு நீற்றை அணியாதவர்களுமாகிய சமணர்களை அச்சத்துடன் சுழற்சி கொள்ளுமாறு (வாது செய்து) அலைத்து, கழுவில் ஏறும்படிச் செய்து, கூனனாயிருந்த, மீன் கொடியை உடைய, பாண்டியன் (கூன் நீங்கி) ஈடேறுமாறு மதுரைக்கு (ஞானசம்பந்தராகச்) சென்றவனே, மிக்க வீரம் கொண்டவனும், அரக்கர்கள் அரசனுமான இராவணன் இரண்டு பிளவாக அம்பைச் செலுத்திய ரகுராமன், தாமரை மலரிதழ் ஒத்த வாயை உடைய நாராயண மூர்த்தி, மாயவன் ஆகிய இராகவனுடைய மருகனே, வாழ் நாள் அழியும்படி வந்த சூரர்கள் இறக்க, விண்ணுலகத்தில் வாழும் தேவர்கள் வீடாகிய பொன்னுலகம் ஈடேறி வாழ, சேனைக்குத் தலைவனாக வந்த நாதனே, குருபரனே, குமரேசனே, வாக்குக்கு எட்டாத திருவாக்கை உடையவனே, நாடுகள் பலவற்றிலும் உள்ளவர்கள் உனது திருவடிகளைத் தொழுது நிற்க, பாசங்களை நீக்குபவனாக விளங்கி வீற்றிருக்கும் பெருமாளே. 
* திருப்பாதிரிப் புலியூர் என்னும் தலத்தில் பார்வதி சிவபெருமானது அருளைப் பெற பாதிரி மரத்தின் நிழலில் தவம் செய்தாள்.
பாடல் 1163 - பொதுப்பாடல்கள் 
ராகம் - அமிர்தவர்ஷணி 
தாளம் - சதுஸ்ர த்ருவம் - கண்டநடை - 35 
- எடுப்பு - /4/4/4 0 
நடை - தகதகிட
தனதனன தனதனன தந்தனந் தந்தனந்
     தனதனன தனதனன தந்தனந் தந்தனந்
          தனதனன தனதனன தந்தனந் தந்தனந் ...... தனதான
தரணிமிசை அனையினிட வுந்தியின் வந்துகுந்
     துளிபயறு கழலினிய அண்டமுங் கொண்டதின்
          தசையுதிர நிணநிறைய அங்கமுந் தங்கவொன் ...... பதுவாயுந் 
தருகரமொ டினியபத முங்கொடங் கொன்பதும்
     பெருகியொரு பதினவனி வந்துகண் டன்புடன்
          தநயனென நடைபழகி மங்கைதன் சிங்கியின் ...... வசமாகித் 
திரிகியுடல் வளையநடை தண்டுடன் சென்றுபின்
     கிடையெனவு மருவிமனை முந்திவந் தந்தகன்
          சிதறுவுயிர் பிணமெனவெ மைந்தரும் பந்துவும் ...... அயர்வாகிச் 
செடமிதனை யெடுமெடுமி னென்றுகொண் டன்புடன்
     சுடலைமிசை யெரியினிட வெந்துபின் சிந்திடுஞ்
          செனனமிது தவிரஇரு தண்டையுங் கொண்டபைங் ...... கழல்தாராய் 
செருவெதிரு மசுரர்கிளை மங்கஎங் கெங்கணுங்
     கழுகருட னயனமிது கண்டுகொண் டம்பரந்
          திரியமிகு அலகையுடன் வெங்கணந் தங்களின் ...... மகிழ்வாகிச் 
சினவசுர ருடலமது தின்றுதின் றின்புடன்
     டுமுடுமுட டுமுடுமுட டுண்டுடுண் டுண்டுடுண்
          டிமிலைபறை முழவுதுடி பம்பையுஞ் சங்கமுந் ...... தவமோதச் 
சரவரிசை விடுகுமர அண்டர்தம் பண்டுறுஞ்
     சிறையைவிட வருமுருக என்றுவந் திந்திரன்
          சதுமுகனு மடிபரவ மண்டுவெஞ் சம்பொருங் ...... கதிர்வேலா 
சகமுழுது மடையஅமு துண்டிடுங் கொண்டலுந்
     தெரிவரிய முடியினர வங்களுந் திங்களுஞ்
          சலமிதழி யணியுமொரு சங்கரன் தந்திடும் ...... பெருமாளே.
இந்தப் பூமியில் தாயின் வயிற்றில் (கர்ப்பப்பையில்) வந்து சேரும் ஒரு துளி பயறு அளவு விழுதலாகி, இன்பகரமான முட்டை வடிவாகி, அதில் சதை, இரத்தம், கொழுப்பு இவை நிறைவு பெற, (பின்னர்) அவயவங்களும் வந்து கூட, ஒன்பது துவாரங்களும், ஏற்பட்ட கைகளுடன், அழகிய கால்களும் கொண்டு, அங்கே (கண் - 2, காது - 2, மூக்குத் தொளை - 2, வாய் - 1, மல, ஜலத்துவாரம் - 2 ஆகிய) ஒன்பது துவாரங்களும் தெளிவாக வந்து சேர்ந்து, ஒரு பத்து மாதத்தில் பூமியில் வந்து பிறந்து, அக்குழந்தையைக் கண்டு பெற்றோர்கள் அன்பு பூண்டு தங்கள் மகன் என்று மகிழும்படி வளர்ந்து, நடக்கக் கற்று, (வாலிப வயதில்) மாதர்களின் விஷமச் செயல்களில் அகப்பட்டு, சலிப்பு அடைந்து, நிலை மாறி, நிமிர்ந்த உடல் குனிய, தடியுடன் நடந்து செல்வதாகி, பிறகு படுக்கையில் கிடக்கை உற்றுக் கிடக்க, வீட்டின் முன் வாயில் வழியே யமன் வந்து உயிரைச் சிதறும்படிச் செய்ய, பிணம் என்று முடிவு செய்து, மக்களும் சுற்றமும் சோர்வடைந்து, இந்தப் பிணத்தை எடுத்துச் செல்லவும் என்று பன்முறைகள் சொல்ல, எடுத்துக் கொண்டு போய், அன்புடன் சுடுகாட்டில் நெருப்பில் இட, வெந்து சாம்பலாகி நீரில் கலந்து அழிகின்ற இந்தப் பிறவி இனி வராதிருக்க, தண்டைகள் அணிந்த உனது இரு திருவடிகளையும் தந்து அருள்வாயாக. போரில் எதிர்த்து வந்த அசுரர்கள் கூட்டம் அழிய, எல்லா இடத்திலும் கழுகு, கருடன் இவைகளின் கண்கள் (பிணங்களைக்) கண்டு உணர்ந்து ஆகாயத்தில் சுற்றிவர, மிக்கு வரும் பேய்களின் கொடிய கூட்டங்கள் தங்களுக்குள் மகிழ்ச்சி பூண்டு, கோபத்துடன் இறந்து பட்ட அசுரர்களின் உடல்களைத் தின்று, மகிழ்ச்சியுடன் டுமுடுமுட டுமுடுமுட டுண்டுடுண் டுண்டுடுண்டு - இவ்வாறு சப்திக்கும் திமிலை, பறை, முழவு, துடி பம்பை முதலிய பறை வகைகளை மிக்க பேரொலிகளுடன் எழுப்ப, அம்புகளை வரிசை, வரிசையாக செலுத்திய குமரனே, தேவர்களை முன்பு அடைபட்டிருந்த சிறையினின்றும் விடுவித்த முருகனே என்று கூறி வந்து இந்திரன், நான்முகன் பிரமன் முதலியோர் உன் அடிகளைப் போற்ற, எதிரிகளை நெருக்கி கொடிய போரைச் செய்த ஒளி வீசும் வேலாயுதனே, உலகம் எல்லாவற்றையும் முழுதாக அமுதென உண்ட மேக வண்ணத் திருமாலும் காண முடியாத ஜடாமுடியில் பாம்புகளையும், சந்திரனையும், கங்கை, கொன்றை ஆகியவற்றையும் தரித்துள்ள ஒப்பற்ற சிவபெருமான் அருளிய பெருமாளே. 
பாடல் 1164 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனந்தத்தத் தனந்தத்தத் தனந்தத்தத் தனந்தத்தத்
     தனந்தத்தத் தனந்தத்தத் ...... தனதான
தனஞ்சற்றுக் குலுங்கப்பொற் கலன்கட்பட் டிலங்கப்பொற்
     சதங்கைக்கற் சிலம்பொத்திக் ...... கையில்வீணை 
ததும்பக்கைக் குழந்தைச்சொற் பரிந்தற்புக் கிதங்கப்பொற்
     சரஞ்சுற்றிட் டிணங்கக்கட் ...... சரவேலால் 
தினம்பித்திட் டிணங்கிச்சொற் கரங்கட்டிப் புணர்ந்திட்டுத்
     தினந்தெட்டிக் கடன்பற்றிக் ...... கொளுமாதர் 
சிலம்பத்திற் றிரிந்துற்றிட் டவம்புக்கக் குணஞ்செற்றுச்
     சிவம்பெற்றுத் தவம்பற்றக் ...... கழல்தாராய் 
தனந்தத்தத் தனந்தத்தத் தடுண்டுட்டுட் டிடிண்டிட்டிட்
     டடண்டட்டட் டிமிண்டுட்டுட் ...... டியல்தாளந் 
தகுந்தொத்தித் திமிந்தித்தித் தவண்டைக்குட் கயர்ந்துக்கத்
     தகண்டத்தர்க் குடன்பட்டுற் ...... றசுராரைச் 
சினந்தத்திக் கொளுந்தக்கைச் சரந்தொட்டுச் சதம்பொர்ப்பைச்
     சிரந்தத்தப் பிளந்துட்கக் ...... கிரிதூளாச் 
செகந்திக்குச் சுபம்பெற்றுத் துலங்கப்பொர்க் களம்புக்குச்
     செயம்பற்றிக் கொளுஞ்சொக்கப் ...... பெருமாளே.
மார்பகங்கள் கொஞ்சம் குலுங்க, பொன் ஆபரணங்களும் பட்டாடையும் இலங்க, அழகிய சலங்கையும், ரத்தினங்கள் இழைக்கப் பெற்ற சிலம்பும், கையில் வீணையும் சிறப்பாக விளங்க, கைக்குழந்தையின் மழலைச் சொல் போலச் சொற்களைப் பேசி, அன்புக்கு இதமான பொன்னாலாகிய மாலைகளைக் கழுத்தினில் சுற்றிக்கொண்டு, ஒருசேர இரு கண்களாகிய அம்பாலும் வேலாலும் நாள் தோறும் (காம மயக்கமாகிய) பித்தத்தைத் தந்து, மனம் ஒத்து, சொல்லுக்குக் கட்டுப்பட்டவர்களாகவும் கைகட்டி நடப்பவர்களாகவும் நடந்து கலவியில் கூடி, தினமும் வஞ்சிப்பவர்களாக தங்களுக்கு உரிய பணத்தை (வந்தவரிடம் இருந்து) அபகரிக்கும் விலைமாதர்களின் தந்திர உபாயங்களில் அகப்பட்டுத் திரிந்தவனாக பயனற்ற வழியில் புகுகின்ற எனது இழி குணத்தை ஒழித்து, மங்களகரமான உயர் நிலையைப் பெற்று தவ நிலையை நான் அடைய உனது திருவடிகளைத் தந்து அருள்க. தனந்தத்தத் தனந்தத்தத் தடுண்டுட்டுட் டிடிண்டிட்டிட் டடண்டட்டட் டிமிண்டுட்டுட் இவ்வாறான ஒலிகளுடன் சப்திக்கும் முரசுகளின் தாளங்களுக்கும், தகுந்தொத்தித் திமிந்தித்தித் என்று ஒலிக்கும் பேருடுக்கைகளுக்கும் பயந்து சோர்ந்து அசுரர்கள் சிதற, தக்கவர்களான தேவர்களின் வேண்டுகோளுக்கு இரங்கி, போருக்கு வந்த அசுரர்களை கோபம் மேலெழுந்து பொங்கி எரிக்க, கையில் இருந்த அம்புகளைத் தொடுத்ததால் நூற்றுக் கணக்கான மலைகளின் உச்சிகள் யாவும் நடுக்கம் கொள்ள, கிரெளஞ்ச மலை அஞ்ச அதைப் பிளந்து பொடியாக்கி, உலகத்தின் எல்லாத் திக்கில் உள்ளவர்களும் நன்மை பெற்று விளங்கச் செய்து, போர்க் களத்துக்குச் சென்று வெற்றியைக் கைப்பற்றிக் கொண்ட அழகிய பெருமாளே. 
பாடல் 1165 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனனதன தான தான தனனதன தான தான
     தனனதன தான தான ...... தனதான
நகரமிரு பாத மாகி மகரவயி றாகி மார்பு
     நடுசிகர மாகி வாய்வ ...... கரமாகி 
நதிமுடிய சார மாகி உதயதிரு மேனி யாகி
     நமசிவய மாமை யாகி ...... எழுதான 
அகரவுக ரேத ரோம சகர வுணர் வான சூரன்
     அறிவிலறி வான பூர ...... ணமுமாகும் 
அதனைஅடி யேனும் ஓதி இதயகம லாலை யாகி
     மருவுமவ தான போதம் ...... அருள்வாயே 
குகனுமரு ளாண்மை கூர மகரமெனு சாப தாரி
     குறையகல வேலை மீது ...... தனியூருங் 
குழவிவடி வாக வேநம் பரதர்தவ மாக மீறு
     குலவுதிரை சேரு மாது ...... தனைநாடி 
அகிலவுல கோர்கள் காண அதிசயம தாக மேவி
     அரியமண மேசெய் தேக ...... வலைதேடி 
அறுமுகவன் மீக ரான பிறவியம ராசை வீசும்
     அசபைசெகர் சோதி நாத ...... பெருமாளே.
('நமசிவய' என்னும் பஞ்சாக்ஷரத்தில்(*1)) 'ந' என்னும் எழுத்து (நடராஜ மூர்த்தியின்) இரண்டு பாதங்களாகும். 'ம' என்னும் எழுத்து அவருடைய திரு வயிறு ஆகும். நடுவில் உள்ள 'சி' என்னும் எழுத்து அவருடைய மார்பு ஆகும். 'வ' என்னும் எழுத்து அவருடைய வாய் ஆகும். கங்கையைத் தாங்கிய திருமுடி, 'ய' என்னும் எழுத்தின் சாரமாக விளங்கும். இங்ஙனம் தோன்றி இறைவனது திருமேனியாக விளங்கும் 'நமசிவாய' என்னும் பஞ்சாக்ஷரம் ஆகிய அழகுடன் கூடிய ஐந்து எழுத்துக்களும் அகரம், உகரம் என்னும் எழுத்துக்கள் மூல காரணமாக உள்ளவருடைய ஓம் (அ + உ+ ம்) என்று கூடிய அப்பிரணவத்தின் பொருள் உணர்ந்த சூரபத்மனுடைய(*2) அறிவின் அறிவொளி பரி பூரணப் பொருளாகும். அந்தப் பொருளை அடியேனும் உணர்ந்து, எனது உள்ளத் தாமரையை ஆலயமாகக் கொண்டு விளங்கும் அனுபவ ஞானத்தை அருள்வாயாக. (தன் தாய் பார்வதி தேவிக்கு உற்ற சாபத்தைப் பொறாத) முருகன்(*3) தன் அருளையும், ஆண்மையையும் நிரம்பக் காட்டுவதற்காக, சுறா மீனாகச் சாபம் பெற்ற (சிவ வாகனமாகிய) நந்தி தேவரின் குறை நீங்குமாறு, (பார்வதி தேவியும்) கடற்கரையில் தனியாகக் கிடந்த பெண்குழந்தை வடிவு கொண்டு, நமது வலைஞர் குலத்தவர் செய்த தவத்தின் பயனாக மிக்கு எழுகின்ற அலைகள் வீசும் கடற்கரையில் சேர்ந்த செம்படவப் பெண்ணாக வளர்ந்த பார்வதியைத் தேடி வந்து, எல்லா உலகங்களில் உள்ளவர்களும் பார்க்கும்படி அதிசயமான (வலைஞர்) உருவத்துடன் வந்து, அருமையான திருமணம் செய்து நீங்கிய அந்த 'வலை - தேடி' யாக வந்த சிவபெருமான்தான் ஆறு முகத்தராய் எனக்கு விளங்கி வன்மீக நாதர் என்னும் பெயருடன் (இந்தத் திருவாரூரில்) விளங்கி நிற்க, பிறப்பையும், யம ராஜனையும் (இறப்பையும்) ஒதுக்கித் தள்ள வல்ல அஜபா(*4) மந்திரப் பொருளாகி, உலக மக்கள் காண ஜோதி வடிவமாய் விளங்கும் பெருமாளே. 
என்று சூரனுக்கு முருகவேள் தரிசனம் அளித்தபோது போற்றி நின்றான் ( - கந்த புராணம் 4.13.430).அந்த ஞானத்தை எனக்கும் அருள் புரிக என்று அருணகிரியார் வேண்டுகிறார்.(*3) இது சிவபெருமான் வலை வீசிய திருவிளையாடலைக் குறிக்கும்.தாய்க்கு உற்ற சாபத்தைக் கேட்ட விநாயகரும், முருகனும் கோபித்து சிவபெருமானின் புத்தகங்களைக் கடலில் வீசி எறிந்தனர். முருகனை நீ வணிகர் குலத்தில் ருத்திர சன்மன் என்ற ஊமைப் பிள்ளையாகப் பிறக்கக் கடவாய் என்று சபித்தார். தந்தை முன் அஞ்சாது நின்றதால் முருக வேள் ஆண்மையாளர் எனப்பட்டார். செம்படவப் பெண்ணாக வந்த பார்வதியை சிவபெருமான் வலைஞராக வந்து மணந்தார்.(*4) இது அஜபா மந்திரம்.ஸோஹம் = ஸஹ + அஹம் = 'அவன் நான்' எனப்படும் ஸோஹம்.அதாவது 'ஜீவாத்மாவும், பரமாத்மாவும் ஒன்று' என்று பாவித்தல் வேண்டும் என்பது கருத்து.
பாடல் 1166 - பொதுப்பாடல்கள் 
ராகம் - நாதநாமக்ரியா 
தாளம் - அங்கதாளம் - 7 1/2 
- எடுப்பு - 1/2 அக்ஷரம் தள்ளி 
தகதிமி-2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2
தனதன தத்த தந்த தானத்த
     தனதன தத்த தந்த தானத்த
          தனதன தத்த தந்த தானத்த ...... தனதான
நரையொடு பற்க ழன்று தோல்வற்றி
     நடையற மெத்த நொந்து காலெய்த்து
          நயனமி ருட்டி நின்று கோலுற்று ...... நடைதோயா 
நழுவும்வி டக்கை யொன்று போல்வைத்து
     நமதென மெத்த வந்த வாழ்வுற்று
          நடலைப டுத்து மிந்த மாயத்தை ...... நகையாதே 
விரையொடு பற்றி வண்டு பாடுற்ற
     ம்ருகமத மப்பி வந்த வோதிக்கு
          மிளிருமை யைச்செ றிந்த வேல்கட்கும் ...... வினையோடு 
மிகுகவி னிட்டு நின்ற மாதர்க்கு
     மிடைபடு சித்த மொன்று வேனுற்றுன்
          விழுமிய பொற்ப தங்கள் பாடற்கு ...... வினவாதோ 
உரையொடு சொற்றெ ரிந்த மூவர்க்கு
     மொளிபெற நற்ப தங்கள் போதித்து
          மொருபுடை பச்சை நங்கை யோடுற்று ...... முலகூடே 
உறுபலி பிச்சை கொண்டு போயுற்று
     முவரிவி டத்தை யுண்டு சாதித்து
          முலவிய முப்பு ரங்கள் வேவித்து ...... முறநாகம் 
அரையொடு கட்டி யந்த மாய்வைத்து
     மவிர்சடை வைத்த கங்கை யோடொக்க
          அழகுதி ருத்தி யிந்து மேல்வைத்து ...... மரவோடே 
அறுகொடு நொச்சி தும்பை மேல்வைத்த
     அரியய னித்தம் வந்து பூசிக்கும்
          அரநிம லர்க்கு நன்றி போதித்த ...... பெருமாளே.
மயிர் நரைக்கவும், பற்கள் கழன்று விழவும், தோல் வற்றிப் போகவும், நடை அற்றுப் போகவும், மிகவும் நோவுற்று கால்கள் இளைத்துப் போகவும், கண்கள் இருளடைந்து பார்வையை இழந்து நின்று, தடியை ஊன்று கோலாகக் கொண்டு நடை பயின்று, நழுவி மறைந்து (இறந்து) போகும் இந்த மாமிச உடலை நிலைத்து நிற்கும் ஒரு பொருள் போல் நினைத்து, நம்முடையது என்று உடைமைகளைப் பாராட்டி, அப்படிச் சேகரித்து வந்த நல்வாழ்வை அடைந்து, (முடிவில்) துன்பப் படுத்தும் இந்த மாய வாழ்க்கையை நான் சிரித்து விலக்காமல், நறு மணத்தை நுகர்ந்து வண்டுகள் பாட கஸ்தூரியைத் தடவித் தோய்ந்துள்ள கூந்தலுக்கும், விளங்கும் மை தீட்டிய வேல் போன்ற கண்களுக்கும், தந்திர எண்ணத்துடன் மிக்க அழகைச் செய்துகொண்டு அலங்காரத்துடன் நின்ற விலைமாதர்களுக்கும் மத்தியில் அவதிப்படுகின்ற மனமோகம் உடையவனாகிய நான் அன்பு உற்று உனது சிறந்த அழகிய திருவடியைப் பாடிப் புகழ்தற்கு ஆராய்ந்து மேற் கொள்ளமாட்டேனோ? பொருளோடு, சொல்லும் தெரிந்த (அதாவது, சிவம், சக்தி இவைகளின் உண்மை தெரிந்த) சம்பந்தர், அப்பர், சுந்தரர் என்னும் சைவக்குரவர் மூவர்க்கும் அவர்கள் புகழ் ஒளி பெறுவதற்கு, சிறந்த எழுத்துக்களான (நமசிவாய என்ற) ஐந்தெழுத்தை உபதேசம் செய்தும், தமது ஒரு பக்கத்தில் பச்சை நிறப் பெருமாட்டியாகிய பார்வதியோடு அமைந்தும், உலகம் முழுவதும் கிடைக்கும் பிச்சையை ஏற்றுக் கொண்டும், பாற்கடலில் எழுந்த ஆலகால விஷத்தை உண்டு தமது பரத்தையும் அழியாமையையும் நிலை நிறுத்திக் காட்டியும், பறந்து உலவிச் செல்லவல்ல திரிபுரங்களையும் எரித்துச் சாம்பலாக்கியும், பொருந்தும்படி விஷப்பாம்பை இடுப்பில் கட்டி அழகாக அமைத்தும், விளங்கும் சடையில் தரித்துள்ள கங்கையுடன் ஒத்திருக்க, அழகாகச் சிங்காரித்து பிறைச் சந்திரனை மேலே வைத்தும், பாம்புடன் அறுகம் புல்லோடு நொச்சியையும், தும்பையையும் மேலே சூடியுள்ளவரும், திருமாலும், பிரமனும் நாள்தோறும் வந்து பூஜை செய்யும் சிவபெருமான் ஆகிய நிர்மல மூர்த்திக்கு நல்ல உபதேசப் பொருளைப் போதித்த பெருமாளே. 
பாடல் 1167 - பொதுப்பாடல்கள் 
ராகம் - காபி 
தாளம் - சதுஸ்ர ரூபகம் - 6
தனந்த தனனந் தனந்த தனந்த தனனந் தனந்த
     தனந்த தனனந் தனந்த ...... தனதான
நிமிர்ந்த முதுகுங் குனிந்து சிறந்த முகமுந் திரங்கி
     நிறைந்த வயிறுஞ் சரிந்து ...... தடியூணி 
நெகிழ்ந்து சடலந் தளர்ந்து விளங்கு விழியங் கிருண்டு
     நினைந்த மதியுங் கலங்கி ...... மனையாள்கண் 
டுமிழ்ந்து பலருங் கடிந்து சிறந்த வியலும் பெயர்ந்து
     உறைந்த உயிருங் கழன்று ...... விடுநாள்முன் 
உகந்து மனமுங் குளிர்ந்து பயன்கொள் தருமம் புரிந்து
     ஒடுங்கி நினையும் பணிந்து ...... மகிழ்வேனோ 
திமிந்தி யெனவெங் கணங்கள் குணங்கர் பலவுங் குழும்பி
     திரண்ட சதியும் புரிந்து ...... முதுசூரன் 
சிரங்கை முழுதுங் குடைந்து நிணங்கொள் குடலுந் தொளைந்து
     சினங்க ழுகொடும் பெருங்கு ...... ருதிமூழ்க 
அமிழ்ந்தி மிகவும் பிணங்கள் அயின்று மகிழ்கொண்டு மண்ட
     அடர்ந்த அயில்முன் துரந்து ...... பொருவேளே 
அலங்க லெனவெண் கடம்பு புனைந்து புணருங் குறிஞ்சி
     அணங்கை மணமுன் புணர்ந்த ...... பெருமாளே.
நிமிர்ந்திருந்த முதுகும் கூன் விழுந்து, பரந்து விளங்கிய முகமும் சுருக்கம் கண்டு, நிறைந்து ஒழுங்காய் இருந்த வயிறும் சரிதலுற்று, தடியை ஊன்றும் நிலை ஏற்பட்டு, நெகிழ்வுற்று உடம்பு தளர்ச்சி அடைந்து, ஒளியுடன் இருந்த கண்கள் அங்கு இருள் அடைந்து, நினைவோடு இருந்த அறிவும் கலக்கம் அடைந்து, மனையவள் இந்த நிலையைக் கண்டு சீ என உமிழ்ந்து, பிறரும் வசைகள் பல பேசி, சிறப்பாக இருந்த குணத்தன்மையும் நீங்கி, உடலில் குடிகொண்டிருந்த உயிரும் பிரிந்து விடும் நாள் வருவதற்கு முன்பாக, மனமகிழ்ச்சியுடன் உள்ளக் குளிர்ச்சியுடன் நல்ல பயனைத் தரும் தர்மங்களைச் செய்து, என் ஆணவம் ஒடுங்கி, உன்னைப் பணிந்து மகிழ மாட்டேனோ? திமிந்தி என்ற ஒலியோடு பிசாசுக் கணங்கள் பல வகையானவை ஒன்று கூடி கூட்டமாக நின்று தாளத்துடன் கூத்தாடி, பழையவனான சூரனின் தலை, கை இவையாவற்றையும் நோவுபடச் செய்து, மாமிசம் நிறைந்த குடலைத் தொளை செய்து, கோபம் கொண்ட கழுகுகளுடன், அந்தச் சூரனின் மிகுத்துப் பெருகும் ரத்தத்தில் முழுகி, அமிழ்ந்தும், நிரம்பப் பிணங்களை உண்டும், மகிழ்ச்சி கொண்டு நெருங்கும்படியாக, தாக்கும் வேலாயுதத்தை முன்பு செலுத்திப் போர் செய்த செவ்வேளே. மாலையாக வெண்மையான கடப்பமலரை அணிந்து கொண்டு, உன்னுடன் சேர்ந்த மலைநாட்டுப் பெண்ணான வள்ளியை முன்பு திருமணம் செய்து கூடிய பெருமாளே. 
பாடல் 1168 - பொதுப்பாடல்கள் 
ராகம் - மத்யமாவதி 
தாளம் - அங்கதாளம் - 7 1/2 
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதமி-2
தனன தாத்தன தானா தானன
     தனன தாத்தன தானா தானன
          தனன தாத்தன தானா தானன ...... தனதான
நிருத ரார்க்கொரு காலா ஜேஜெய
     சுரர்க ளேத்திடு வேலா ஜேஜெய
          நிமல னார்க்கொரு பாலா ஜேஜெய ...... விறலான 
நெடிய வேற்படை யானே ஜேஜெய
     எனஇ ராப்பகல் தானே நான்மிக
          நினது தாட்டொழு மாறே தானினி ...... யுடனேதான் 
தரையி னாழ்த்திரை யேழே போலெழு
     பிறவி மாக்கட லூடே நானுறு
          சவலை தீர்த்துன தாளே சூடியு ...... னடியார்வாழ் 
சபையி னேற்றியின் ஞானா போதமு
     மருளி யாட்கொளு மாறே தானது
          தமிய னேற்குமு னேநீ மேவுவ ...... தொருநாளே 
தருவி னாட்டர சாள்வான் வேணுவி
     னுருவ மாய்ப்பல நாளே தானுறு
          தவசி னாற்சிவ னீபோய் வானவர் ...... சிறைதீரச் 
சகல லோக்கிய மேதா னாளுறு
     மசுர பார்த்திப னோடே சேயவர்
          தமரை வேற்கொடு நீறா யேபட ...... விழமோதென் 
றருள ஏற்றம ரோடே போயவ
     ருறையு மாக்கிரி யோடே தானையு
          மழிய வீழ்த்தெதிர் சூரோ டேயம ...... ரடலாகி 
அமரில் வீட்டியும் வானோர் தானுறு
     சிறையை மீட்டர னார்பால் மேவிய
          அதிப ராக்ரம வீரா வானவர் ...... பெருமாளே.
அசுரர்களுக்கு ஒரு யமனாக ஏற்பட்டவனே, வெல்க, வெல்க, தேவர்கள் போற்றித் துதிக்கும் வேலனே, வெல்க, வெல்க, பரிசுத்த மூர்த்தியாம் சிவனாருக்கு ஒப்பற்ற குமாரனே, வெல்க, வெல்க, மிக வலிமையான வேலினை ஆயுதமாய்க் கொண்டோனே, வெல்க, வெல்க, என்றெல்லாம் இரவும் பகலுமாக நான் நிரம்பவுமே உன்னுடைய திருவடியைப் பணிந்து போற்றும் படியாக இனியும் சிறிதும் தாமதம் செய்யாமலேதான், இந்தப் புவியில் ஆழமுள்ள ஏழு கடல்களைப் போல் எழுகின்ற பிறவி என்னும் பெருங்கடலில் நான் அனுபவிக்கும் மனக் குழப்பங்களைத் தீர்த்து, உன் பாதமே தலையில் சூடியவனாய், உன் அடியார்கள் வாழ்கின்ற கூட்டத்திலே கூட்டி வைத்து, இனிய ஞான உபதேசத்தையும் எனக்கு அருளி, என்னை ஆண்டுகொண்டு அருள்வதன் பொருட்டே தனியேனாக உள்ள என் முன் நீ தோன்றும் ஒருநாள் உண்டோ? கற்பகத் தருக்கள் நிறைந்த தேவநாட்டு அரசாட்சியைப் புரியும் இந்திரன்* மூங்கிலின் உருவம் எடுத்து, பல நாட்களாக தான் செய்த தவத்தின் பயனாக சிவபிரான் உன்னை அழைத்து நீ சென்று தேவர்களின் சிறையை நீக்க, எல்லாவிதமான உலகப்பற்றும் சுகபோகமும் ஆண்டு அனுபவிக்கும் அசுரர்களின் அரசன் சூரனையும், அவனது மக்கள், சுற்றத்தாரையும் வேல் கொண்டு அவர்கள் பொடியாக விழும்படி தாக்கு என்று திருவாய் மலர்ந்து ஆணையிட, அதனை ஏற்று போர்க்களத்துக்குச் சென்று அசுரர் தங்கிய பெரிய கிரெளஞ்சம், ஏழு மலைகளுடன், சேனையும் அழிந்து விழச்செய்து, எதிர்த்து வந்த சூரனுடன் பகை பூண்டு, போரிலே அவனை அழித்தும், அடைபட்டிருந்த சிறையினின்றும் தேவர்களை விடுவித்துக் காத்தும், சிவபிரானிடம் திரும்பி வந்து சேர்ந்த மகா பராக்ரம வீரனே, தேவர்கள் தொழும் பெருமாளே. 
* சூரனை அஞ்சி இந்திரன் சீகாழிப் பதியில் மூங்கில் உருவில் தவம் செய்துவந்த குறிப்பு கந்த புராணத்தில் உள்ளது.
பாடல் 1169 - பொதுப்பாடல்கள் 
ராகம் - கேதாரம் 
தாளம் - ஆதி - திஸ்ர நடை - 2 களை - 24
தான தான தான தந்த தான தான தான தந்த
     தான தான தான தந்த ...... தனதான
ஆர வார மாயி ருந்து ஏம தூத ரோடி வந்து
     ஆழி வேலை போன்மு ழங்கி ...... யடர்வார்கள் 
ஆக மீதி லேசி வந்து ஊசி தானு மேநு ழைந்து
     ஆலைமீதி லேக ரும்பு ...... எனவேதான் 
வீர மான சூரி கொண்டு நேரை நேரை யேபி ளந்து
     வீசு வார்கள் கூகு வென்று ...... அழுபோது 
வீடு வாச லான பெண்டிர் ஆசை யான மாதர் வந்து
     மேலை வீழ்வ ¡£து கண்டு ...... வருவாயே 
நாரி வீரி சூரி யம்பை வேத வேத மேபு கழ்ந்த
     நாதர் பாலி லேயி ருந்த ...... மகமாயி 
நாடி யோடி வாற அன்பர் காண வேண தேபு கழ்ந்து
     நாளு நாளு மேபு கன்ற ...... வரைமாது 
நீரின் மீதி லேயி ருந்த நீலி சூலி வாழ்வு மைந்த
     நீப மாலை யேபு னைந்த ...... குமரேசா 
நீல னாக வோடி வந்த சூரை வேறு வேறு கண்ட
     நீத னான தோர்கு ழந்தை ...... பெருமாளே.
ஆடம்பரமாக வாழ்க்கையை நடத்திவந்த நாளிலே, யமனுடைய தூதர்கள் ஓடிவந்து சமுத்திரத்தின் அலைகளைப் போலப் பேரொலியைச் செய்து என்னை நெருக்கி வருத்துவார்கள். என் உடலிலே கோபத்துடன் ஊசியைக் குத்தி நுழைப்பார்கள். ஆலையில் நசுக்கப்படும் கரும்பு என்று சொல்லும்படி என் உடலைக் கசக்கி, வீரம் பொருந்திய சூரிக்கத்தியைக் கொண்டுவந்து உடலை நேர் பாதியாகப் பிளந்து எறிவார்கள். (இந்த மரண வேதனையை நான் படுகையில்) வீட்டில் உள்ளோர் கூ கூ என அழுது கொண்டிருக்கும்போது வீடு வாசலில் உள்ள மாதர்களும், என்மீது அன்பு வைத்த மாதர்களும் வந்து என் உடல் மீது வீழ்வார்கள். இந்தக் கோலத்தைக் கண்டு நீ வந்து அருள் புரிவாயாக. தேவி, வீரமுள்ளவள், அச்சத்தைத் தருபவள், அம்பிகை, எல்லா வேதங்களும் புகழ்கின்ற தலைவராம் சிவனாரின் இடது பாகத்தில் இருக்கும் ஆதியாம் அன்னை, தன்னை விரும்பி ஓடிவருகின்ற அன்பர்கள் கண்டு நிரம்பவே புகழ்ந்து தினந்தோறும் துதித்த மலைமகள், பாற்கடலில் பள்ளி கொண்ட நீல நிறத்து திருமாலின் அம்சமான விஷ்ணுசக்தி, சூலம் ஏந்தியவள் - ஆகிய உமைக்குச் செல்வமாக அமைந்த மைந்தனே, கடப்பமலர் மாலையையே சூடியுள்ள குமரேசனே, நீல நிறத்துடன் (மாறுவேடம் புனைந்து) ஓடிவந்த சூரனை துண்டம் துண்டமாகப் பிளந்த, நியாய மூர்த்தியான ஒப்பற்ற பாலசுப்பிரமணியப் பெருமாளே. 
பாடல் 1170 - பொதுப்பாடல்கள் 
ராகம் - நவரஸ கண்டை 
தாளம் - ஆதி - திஸ்ர நடை - 12
தான தந்த தான தான தான தந்த தான தான
     தான தந்த தான தான ...... தனதான
நீரு மென்பு தோலி னாலு மாவ தென்கை கால்க ளோடு
     நீளு மங்க மாகி மாய ...... வுயிரூறி 
நேச மொன்று தாதை தாய ராசை கொண்ட போதில் மேவி
     நீதி யொன்று பால னாகி ...... யழிவாய்வந் 
தூரு மின்ப வாழ்வு மாகி யூன மொன்றி லாது மாத
     ரோடு சிந்தை வேடை கூர ...... உறவாகி 
ஊழி யைந்த கால மேதி யோனும் வந்து பாசம் வீச
     ஊனு டம்பு மாயு மாய ...... மொழியாதோ 
சூர னண்ட லோக மேன்மை சூறை கொண்டு போய் விடாது
     தோகை யின்கண் மேவி வேலை ...... விடும்வீரா 
தோளி லென்பு மாலை வேணி மீது கங்கை சூடி யாடு
     தோகை பங்க ரோடு சூது ...... மொழிவோனே 
பாரை யுண்ட மாயன் வேயை யூதி பண்டு பாவ லோர்கள்
     பாடல் கண்டு ஏகு மாலின் ...... மருகோனே 
பாத கங்கள் வேறி நூறி நீதி யின்சொல் வேத வாய்மை
     பாடு மன்பர் வாழ்வ தான ...... பெருமாளே.
நீர், எலும்பு, தோல் இவைகளால் ஆக்கப்பட்டதாகிய என்னுடைய கை, கால்கள் இவைகளோடு, நீண்ட அங்கங்களை உடையவதாகி, மாயமான உயிர் ஊறப் பெற்று, அன்பு பொருந்திய தந்தை தாய் ஆகிய இருவரும் காதல் கொண்ட சமயத்தில் கருவில் உற்று, ஒழுக்க நெறியில் நிற்கும் பிள்ளையாய்த் தோன்றி, அழிதற்கே உரிய வழியில் சென்று, அனுபவிக்கும் இன்ப வாழ்வை உடையவனாகி, குறை ஒன்றும் இல்லாமல், மாதர்களுடன் மன வேட்கை மிக்கு எழ, அவர்களுடன் சம்பந்தப்பட்டு, ஊழ் வினையின்படி ஏற்பட்ட முடிவு காலத்தில் எருமை வாகனனான யமனும் தவறாமல் வந்து பாசக் கயிற்றை வீச, (இந்த) மாமிச உடல் அழிந்து போகும் மாயம் முடிவு பெறாதோ? சூரன் அண்டங்களாம் லோகங்களின் மேலான தலைமையைக் கொள்ளை அடித்துப் போய் விடாமல், மயிலின் மேல் ஏறி வேலாயுதத்தைச் செலுத்திய வீரனே, தோள் மீது எலும்பு மாலையையும், சடையில் கங்கையையும் தரித்து நடனம் புரிபவரும், மயில் போன்ற பார்வதியின் பக்கத்தில் இருப்பவருமா¡ன சிவபெருமானுக்கு ரகசியப் பிரணவப் பொருளை உபதேசித்தவனே, இப்பூமியை உண்டவனான மாயவன், மூங்கில் புல்லாங் குழலை ஊதியவன், முன்பு, (திருமழிசை ஆழ்வார் ஆகிய) புலவர்களின் பாடலைக் கேட்டு மகிழ்ந்து (பின்னர் அவர்களின் வேண்டுகோளுக்கு இரங்கி) அவர்கள் பின்பு செல்பவனாகிய திருமாலின்* மருகனே, பாபங்களைக் குலைத்துப் பொடி செய்து, நீதிச் சொற்களைக் கொண்டு வேத உண்மைகளையே எடுத்துப் பாடுகின்ற அன்பர்களுக்குச் செல்வமாக விளங்கும் பெருமாளே. 
* காஞ்சியில் கணிகண்டன் என்ற சீடனைப் பெற்றிருந்த திருமழிசை ஆழ்வார், ஒருமுறை மன்னனால் கணிகண்டன் அநியாயமாக நாடுகடத்தப்பட்டபோது, தாமும் நாடு துறந்ததோடு, பெருமாளையும் காஞ்சியை விட்டு வரும்படியாகப் பாடினார். அவ்வாறே பெருமாளும் ஆழ்வாரின் பின்னே சென்றார்.
பாடல் 1171 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனதத்தத் தத்தத் தனதன
     தனதத்தத் தத்தத் தனதன
          தனதத்தத் தத்தத் தனதன ...... தனதான
பகல்மட்கச் செக்கர்ப் ப்ரபைவிடு
     நவரத்நப் பத்தித் தொடைநக
          நுதிபட்டிட் டற்றுச் சிதறிட ...... இதழூறல் 
பருகித்தித் திக்கப் படுமொழி
     பதறக்கைப் பத்மத் தொளிவளை
          வதறிச்சத் திக்கப் புளகித ...... தனபாரம் 
அகலத்திற் றைக்கப் பரிமள
     அமளிக்குட் கிக்கிச் சிறுகென
          இறுகக்கைப் பற்றித் தழுவிய ...... அநுராக 
அவசத்திற் சித்தத் தறிவையு
     மிகவைத்துப் பொற்றித் தெரிவையர்
          வசம்விட்டர்ச் சிக்கைக் கொருபொழு ...... துணர்வேனோ 
இகல்வெற்றிச் சத்திக் கிரணமு
     முரணிர்த்தப் பச்சைப் புரவியு
          மிரவிக்கைக் குக்டத் துவசமு ...... மறமாதும் 
இடைவைத்துச் சித்ரத் தமிழ்கொடு
     கவிமெத்தச் செப்பிப் பழுதற
          எழுதிக்கற் பித்துத் திரிபவர் ...... பெருவாழ்வே 
புகலிற்றர்க் கிட்டுப் ப்ரமையுறு
     கலகச்செற் றச்சட் சமயிகள்
          புகலற்குப் பற்றற் கரியதொ ...... ருபதேசப் 
பொருளைப்புட் பித்துக் குருபர
     னெனமுக்கட் செக்கர்ச் சடைமதி
          புனையப்பர்க் கொப்பித் தருளிய ...... பெருமாளே.
சூரியனுடைய ஒளியும் மழுங்கும்படி சிவந்த ஒளியை வீசுகின்ற நவ ரத்தினங்களால் ஆகிய ஒழுங்கு வரிசை கொண்ட மாலை, நகத்தின் நுனி பட்டதனால் அறுபட்டு சிதறுண்ண, வாயிதழ் ஊறலை உண்டு இனிமையாகப் பேசும் மொழிகள் பதைபதைப்புடன் வெளிவர, தாமரை போன்ற கையில் உள்ள பிரகாசமான வளைகள் கலகலத்து ஒலி செய்ய, புளகம் கொண்ட தன பாரம் மார்பில் அழுந்த, மணம் வீசும் படுக்கையில் அகப்பட்டு நிலை தாழுமாறு அழுத்தமாகக் கையால் அணைத்துத் தழுவிய காமப் பற்றால் வரும் மயக்கத்தில், விலைமாதர்களின் வசப்படுதலை விட்டுவிட்டு, உள்ளத்தில் உள்ள அறிவை மிகவும் வைத்துப் போற்றி உன்னை அர்ச்சனை செய்து வணங்க ஒரு பொழுதேனும் உணர மாட்டேனோ? வலிமையையும் வெற்றியையும் கொண்ட, ஒளி வீசும் வேலாயுதத்தையும், வலிமை உடையதும், ஆடல் செய்வதுமான பச்சை நிறம் கொண்ட குதிரையாகிய மயிலையும், சூரியனுடைய கிரணங்களைக் கூவி வரவழைக்கும் சேவல் கொடியையும், வேடர் மகளாகிய வள்ளியையும், பாட்டின் இடையே பொருந்த வைத்து அழகிய தமிழால் பாடல்களை நிறையப் பாடியும், குற்றம் இல்லாமல் எழுதியும் கற்பித்தும் திரியும் பாவலர்களின் பெரிய செல்வமே, விருப்பத்துடன் தர்க்கம் செய்து மயக்கம் கொண்டதும் கலகத்தை விளைவிப்பதும் பகைமை ஊட்டுவதுமான ஆறு சமயத்தினரும் சொல்லுதற்கும் அடைவதற்கும் முடியாததான ஒப்பற்ற உபதேசப் பொருளை திருவாய் மலர்ந்து குரு மூர்த்தி என விளங்கி, முன்று கண்களை உடையவரும், சிவந்த சடை மீது சந்திரனை அணிந்தவருமாகிய தந்தையான சிவபெருமானுக்கு எடுத்துரைத்து அருளிய பெருமாளே. 
பாடல் 1172 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தத்தத்தன தத்தத் தனதன
     தத்தத்தன தத்தத் தனதன
          தத்தத்தன தத்தத் தனதன ...... தனதான
பத்தித்தர ளக்கொத் தொளிர்வரி
     பட்டப்புள கச்செப் பிளமுலை
          பட்டிட்டெதிர் கட்டுப் பரதவ ...... ருயர்தாளப் 
பத்மத்திய ரற்புக் கடுகடு
     கட்சத்தியர் மெத்தத் திரவிய
          பட்சத்திய ரிக்குச் சிலையுரு ...... விலிசேருஞ் 
சித்தத்தரு ணர்க்குக் கனியத
     ரப்புத்தமு தத்தைத் தருமவர்
          சித்ரக்கிர ணப்பொட் டிடுபிறை ...... நுதலார்தந் 
தெட்டிற்படு கட்டக் கனவிய
     பட்சத்தரு ளற்றுற் றுனதடி
          சிக்கிட்டிடை புக்கிட் டலைவது ...... தவிராதோ 
மத்தப்பிர மத்தக் கயமுக
     னைக்குத்திமி தித்துக் கழுதுகள்
          மட்டிட்டஇ ரத்தக் குருதியில் ...... விளையாட 
மற்றைப்பதி னெட்டுக் கணவகை
     சத்திக்கந டிக்கப் பலபல
          வர்க்கத்தலை தத்தப் பொருபடை ...... யுடையோனே 
முத்திப்பர மத்தைக் கருதிய
     சித்தத்தினில் முற்றத் தவமுனி
          முற்பட்டுழை பெற்றுத் தருகுற ...... மகள்மேல்மால் 
முற்றித்திரி வெற்றிக் குருபர
     முற்பட்டமு ரட்டுப் புலவனை
          முட்டைப்பெயர் செப்பிக் கவிபெறு ...... பெருமாளே.
வரிசையாய் அமைந்த முத்துமாலைகளின் கூட்டம் ஒளி வீசுவதும், ரேகைகள் விளங்குவதும், புளகாங்கிதம் கொண்டதும், செப்புக் குடம் போன்றதுமான இளம் மார்பகங்களின் மீது பட்டு ஆடையை அணிந்து, முற்புறத்தில் கச்சை முடிந்து, பரத நாட்டியத்தில் வல்லவர்களுடைய சிறந்த தாளத்துக்கு இணையான தாமரை மொட்டுப் போன்ற மார்பை உடையவர்கள். (ஒரு சமயத்தில்) அன்பையும் (இன்னொரு சமயம்) சினக் குறிப்பையும் காட்டும் வேல் போன்ற கண்களை உடையவர்கள். மிகவும் பொருள் மீது ஆசை வைத்துள்ளவர்கள். கரும்பு வில்லை உடைய, உருவம் இல்லாத மன்மதனுடைய காம சேஷ்டைகள் சேர்ந்துள்ள உள்ளத்தை உடைய இளம் வாலிபர்களுக்கு கொவ்வைப் பழம் போன்ற வாயிதழ் அமுதத்தைத் தருபவர்கள். அவர்கள் அழகிய ஒளி வீசும் பொட்டை இட்டுள்ள பிறைச் சந்திரன் போன்ற நெற்றியை உடைய விலைமாதர்கள். அவர்களின் வஞ்சனை வலையில் படுகின்ற, கஷ்டமான, மிகுந்த ஆசை என்னும் மகிழ்ச்சி நீங்கி, உனது திருவடியில் சரணடைந்து மனதை நிறுத்தினால், உலகச் சிக்கலில் மாட்டிக் கொண்டு இடையிலே புகுந்து அலைச்சல் உறுவது தொலையாதோ? செருக்கையும் மதி மயக்கத்தையும் உடைய யானை முகம் கொண்ட தாரகாசுரனது உடலைக் குத்தியும், மிதித்தும், பேய்கள் அளவில்லாத ரத்தச் சிவப்பில் விளையாடவும், மற்றும் பதினெட்டு கண வகைகளும் ஒலி செய்து நடனமாட, பல வகையான ஜீவ ராசிகளின் தலைகள் சிதறுண்டு விழும்படியாக சண்டை செய்த வேலாயுதத்தை உடையவனே, முக்தி என்னும் மேலான பொருளைப் பெற நினைத்த உள்ளத்தோடு, முதிர்ந்த தவ நிலையில் இருந்த சிவ முனிவரின் (உருவில் வந்த திருமாலின்) முன்னிலையில் நின்று லக்ஷ்மியாகிய பெண் மான் பெற்றுத் தந்த குற மகளாகிய வள்ளியின்* மேல் ஆசை நிரம்பக் கொண்டு, (வள்ளி இருந்த தினைப் புனத்தில்) திரிந்த வெற்றி வீரனாகிய குரு மூர்த்தியே, எதிர்ப்பட்ட பிடிவாதம் பிடித்த பொய்யா மொழி** என்னும் புலவனை முட்டை என்ற பெயர் என்று சொல்லி, அந்தப் புலவனைத் தம் மீது பாடவைத்த பெருமாளே. 
* சிவ முனிவர் தவ நிலையில் இருக்க, திருமகள் மானுருவுடன் எதிரில் செல்ல, அந்த மான் ஒரு பெண் குழவியை ஈன்றது. இக்குழந்தை வேடர்களால் வளர்க்கப்பட்டு வள்ளிக் கிழங்கு தோண்டிய குழியில் இருந்ததால் வள்ளி எனப் பெயரிடப்பட்டது.** சிவனையே பாடும் பொய்யாமொழிப் புலவர் முருகனைப் பாடாது இருக்க, அவரது ஆணவத்தை அடக்க முருகன் வில்லைத் தோளில் தாங்கி வேடனாக வந்து கவி தனிவழி செல்கையில் கவிதையால் மடக்கி ஆட்கொண்டான்.
பாடல் 1173 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனதனன தந்ததன தானத் தாத்தன
     தனதனன தந்ததன தானத் தாத்தன
          தனதனன தந்ததன தானத் தாத்தன ...... தனதான
பரதவித புண்டரிக பாதத் தாட்டிகள்
     அமுதுபொழி யுங்குமுத கீதப் பாட்டிகள்
          பலர்பொருள்க வர்ந்திடைக லாமிட் டோட்டிகள் ...... கொடிதாய 
பழுதொழிய அன்புமுடை யாரைப் போற்சிறி
     தழுதழுது கண்பிசையு மாசைக் கூற்றிகள்
          பகழியென வந்துபடு பார்வைக் கூற்றினர் ...... ஒருகாம 
விரகம்விளை கின்றகழு நீரைச் சேர்த்தகில்
     ம்ருகமதமி குந்தபனி நீரைத் தேக்கியெ
          விபுதர்பதி யங்கதல மேவிச் சாற்றிய ...... தமிழ்நூலின் 
விததிகமழ் தென்றல்வர வீசிக் கோட்டிகள்
     முலைகளில்வி ழுந்துபரி தாபத் தாற்றினில்
          விடியளவு நைந்துருகு வேனைக் காப்பது ...... மொருநாளே 
உரகபணை பந்தியபி ஷேகத் தாற்றிய
     சகலவுல குந்தரும மோகப் பார்ப்பதி
          யுடனுருவு பங்குடைய நாகக் காப்பனும் ...... உறிதாவும் 
ஒருகளவு கண்டுதனி கோபத் தாய்க்குல
     மகளிர்சிறு தும்புகொடு மோதிச் சேர்த்திடும்
          உரலொடுத வழ்ந்தநவ நீதக் கூற்றனு ...... மதிகோபக் 
கரவிகட வெங்கடக போலப் போர்க்கிரி
     கடவியபு ரந்தரனும் வேளைப் போற்றுகை
          கருமமென வந்துதொழ வேதப் பாற்பதி ...... பிறியாத 
கடவுளைமு னிந்தமர ரூரைக் காத்துயர்
     கரவடக்ர வுஞ்சகிரி சாயத் தோற்றெழு
          கடலெனவு டைந்தவுண ரோடத் தாக்கிய ...... பெருமாளே.
பரத நாட்டிய வகைகளுக்கு ஏற்றதும், தாமரை மலர் போன்றதுமான பாதங்களைக் கொண்டு (நாட்டியம்) ஆடுபவர்கள். அமுதம் பொழிகின்ற குமுத மலர் போன்ற வாயினின்றும் கீதங்கள் நிறைந்த பாடல்களைப் பாடுபவர்கள். பல பேருடைய பொருள்களைக் கவர்ந்து, மத்தியில் சண்டை செய்து, (கவர்ந்த பின்பு) ஓட்டி விடுபவர்கள். பொல்லாத குற்றம் (தம்மேல்) சாராத வகைக்கு, அன்பு உள்ளவர்கள் போல சிறிதளவு அழுது கொண்டே கண்களைப் பிசைந்து ஆசை மொழிகளைப் பேசுபவர்கள். அம்பு என்று சொல்லும்படி வந்து பாய்கின்ற பார்வையை உடையவர்கள். ஒரு தலைக் காமமாகிய நோயை விளைவிக்கும் செங்கழு நீர்ப் பூவைச் சேர்த்து முடித்து, அகில், கஸ்தூரி, நிரம்ப பன்னீர் இவைகளை நிறைய அணிபவர்களாகிய விலைமாதர்கள். தேவர்களுக்குத் தலைவனான இந்திரனுடைய உடம்பில் உள்ள அடையாளக் குறியை* விரும்பிப் பாடிய தமிழ் நூல்களின் பரப்பின் இனிய நறு மணம் வீசும் தென்றல் காற்று வரும்படி வீசி, மக்கள் மனதை வளைப்பவர்கள் (ஆகிய இவர்களின்) மார்பகங்களில் விழுந்து பரிதாபமான வழியில் விடியும் வரை வருந்தி உருகுகின்ற என்னைக் காத்தருளும் நாள் ஒன்று உண்டோ? ஆதிசேஷனுடைய பெருமை வாய்ந்த படக் கூட்டமாகிய முடியின் மேல் தாங்கப்பட்ட எல்லா உலகங்களையும் ஈன்றருளிய மருள் இல்லாத பார்வதி தேவியை தனது உருவில் ஒரு பாகத்தில் உடையவனும், பாம்பைக் கங்கணமாக அணிந்துள்ளவனுமாகிய சிவபெருமானும், உறி மீது தாவிய ஒரு திருட்டுத் தனத்தைக் கண்டு மிகுந்த கோபம் கொண்டவர்களாகிய ஆயர் குலப் பெண்கள் சிறு கயிறு கொண்டு மோதிக் கட்டி வைத்த உரலோடு தவழ்ந்த வெண்ணெய் திருடியவன் என்று பேசப்படுபவனாகிய கண்ணனும், மிக்க கோபத்தைக் கொண்டதும், துதிக்கையை உடையதும், அழகானதும், கொடிய மதநீர் வழியும் கன்னத்தை உடையதும், போருக்கு அமைந்ததுமான மலை போன்ற ஐராவதம் என்னும் வெள்ளை யானையைச் செலுத்தும் இந்திரனும், (இந்த மூவரும்) உன்னைத் துதித்தல் தமது கடமைச் செயலாகும் என்று உணர்ந்து வந்து வணங்க, வேதப் பிரணவத்தில் பதிப் பொருள் விளங்கப் பெறாத தேவனாகிய பிரமனைக் கோபித்தும், தேவர்கள் ஊராகிய அமராவதியைக் காத்தும், உயரமுள்ளதும், வஞ்சகம் நிறைந்துள்ளதுமான கிரவுஞ்ச மலை மாண்டு அழிந்து தோல்வி அடைந்து, ஏழு கடல்களும் பெருக்கு எழுந்தது போல் சிதறுண்டு, அசுரர்கள் யாவரும் போர்க்களத்தை விட்டு ஓட்டம் பிடிக்கும்படி எதிர்த்து மோதிய பெருமாளே. 
* கெளதம முனிவரின் மனைவி அகலிகையைக் கூட எண்ணி அவர் இல்லாத சமயத்தில் இந்திரன் அவர் உருவத்தோடு அவளைச் சேர, முனிவர் சாபத்தால் இந்திரன் உடலில் ஆயிரம் பெண் குறிகள் உண்டாயின. அகலிகை கல்லாகுமாறும் சபிக்கப்பட்டாள். ராமனின் கால் அடி அந்தக் கல்லின் மேல் பட்டதும் அகலிகை மீண்டும் பெண்ணுருவம் பெற்றாள்.
பாடல் 1174 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனதன தானத் தனந்த தனதன தானத் தனந்த
     தனதன தானத் தனந்த ...... தனதான
பழுதற வோதிக் கடந்து பகைவினை தீரத் துறந்து
     பலபல யோகத் திருந்து ...... மதராசன் 
பரிமள பாணத் தயர்ந்து பனைமட லூர்தற் கிசைந்து
     பரிதவி யாமெத்த நொந்து ...... மயல்கூர 
அழுதழு தாசைப் படுங்க ணபிநய மாதர்க் கிரங்கி
     யவர்விழி பாணத்து நெஞ்ச ...... மறைபோய்நின் 
றழிவது யான்முற் பயந்த விதிவச மோமற்றையுன்ற
     னருள்வச மோஇப்ர மந்தெ ...... ரிகிலேனே 
எழுதரு வேதத்து மன்றி முழுதினு மாய்நிற்கு மெந்தை
     யெனவொரு ஞானக் குருந்த ...... ருளமேவும் 
இருவுரு வாகித் துலங்கி யொருகன தூணிற் பிறந்து
     இரணியன் மார்பைப் பிளந்த ...... தனியாண்மை 
பொழுதிசை யாவிக்ர மன்தன் மருகபு ராரிக்கு மைந்த
     புளகப டீரக் குரும்பை ...... யுடன்மேவும் 
புயல்கரி வாழச் சிலம்பின் வனசர மானுக் குகந்து
     புனமிசை யோடிப் புகுந்த ...... பெருமாளே.
குற்றம் இல்லாத நல்ல வகையில் கல்விகளை ஓதியும், உலக ஆசைகளைக் கடந்தும், உட்பகையாக வரும் இரண்டு வினைகளை முற்றும் உதறி விலக்கியும், பல வகையான யோக மார்க்கங்களை அநுஷ்டித்து இருந்தும், மன்மத ராஜனான காமனுடைய நறு மணம் வீசும் பாணங்களால் மனக் கவலையும் சோர்வும் கொண்டு, பனை மடலால் செய்த குதிரையில் ஏறுதற்கும் இணங்கி* பரிதவித்து, மிகவும் மனம் நொந்து, காம இச்சை மிகுதிப்பட, அன்பு போல் நடித்து மிகவும் அழுது, விரும்புவது போலக் கண்களால் அபிநயிக்கும் விலைமாதர்களின் மேல் ஆசை வைத்து, அவர்களுடைய கண்களாகிய அம்பினால் உள்ளம் குமைந்து நின்று அழிந்துபோவது, நான் முன்பு செய்த விதியின் விளைவோ? அல்லது உன்னுடைய திருவருளின் கூத்தோ? இந்த மயக்கத்தின் காரணம் எனக்கு விளங்கவில்லையே? யாராலும் எழுதுவதற்கு முடியாத வேதத்தில் மாத்திரம் அல்லாமல், மற்று எல்லாப் பொருள்களிலும் விளங்கி நிற்கும் எம்பெருமான் என்று கூறிய ஒப்பற்ற ஞானக் குழந்தையாகிய பிரகலாதருடைய உள்ளத்தில் வீற்றிருப்பவரும், மனிதன், சிங்கம் என இரண்டு உருவம் அமைந்த (நரசிம்ம) மூர்த்தியாய்த் துலங்கித் தோன்றி, ஒரு பெரிய தூணில் விளக்கம் உற்று எழுந்து, இரணியனின் மார்பைப் பிளந்த ஒப்பற்ற வீரத்தை, பிரகலாதன் வேண்டிய அந்தப் பொழுதிலேயே உடன்பட்டுக் காட்டிய வலிமைசாலியானவரும் ஆகிய திருமாலின் மருகனே, திரிபுரத்தை எரித்த சிவபெருமானுக்கு மைந்தனே, புளகாங்கிதம் கொண்டதும், சந்தனம் பூசியதும், தென்னங்குரும்பை போன்ற இள மார்பு விளங்கியவளும், மேகமும், யானையும் வாழ்கின்ற வள்ளி மலையின் வேடர் குலத்து மான் போன்றவளுமான வள்ளியின் மீது தீராக்காதல் பூண்டு, அவள் காத்துவந்த தினைப்புனத்தில் ஓடிப்புகுந்து நின்ற பெருமாளே. 
* மடல் எழுதுதல்:தலைவன் தலைவியின் அழகை வர்ணித்து ஓர் ஏட்டில் மடலாக எழுதி அவளது ஊருக்குச் சென்று நாற்சந்தியில் ஒன்றும் பேசாமல் ஒருவரது வசைக்கும் கூசாமல் படத்தில் எழுதிய உருவத்தைப் பார்த்தவாறு பகலும் இரவுமாக நிற்பான். அவனது உறுதிகண்டு தலைவியின் வீட்டார் தலைவனுக்கு அவளை மணம் செய்து வைப்பர்.முருகன் வள்ளியை ஊரறிய மடல் எழுதி மணம் செய்துகொண்ட காட்சி கந்த புராணத்தில் வருகிறது.
பாடல் 1175 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ஹரிகாம்போதி 
தாளம் - திஸ்ர த்ருபுடை - 7
தானத்தத் தனான தானன தானத்தத் தனான தானன
     தானத்தத் தனான தானன ...... தந்ததான
பாணிக்குட் படாது சாதகர் காணச்சற் றொணாது வாதிகள்
     பாஷிக்கத் தகாது பாதக ...... பஞ்சபூத 
பாசத்திற்படாது வேறொரு பாயத்திற் புகாது பாவனை
     பாவிக்கப் பெறாது வாதனை ...... நெஞ்சமான 
ஏணிக்கெட் டொணாது மீதுயர் சேணுக்குச் சமான நூல்வழி
     யேறிபபற் றொணாது நாடினர் ...... தங்களாலும் 
ஏதுச்செப் பொணாத தோர்பொருள் சேரத்துக் கமாம கோததி
     யேறச்செச் சைநாறு தாளைவ ...... ணங்குவேனோ 
ஆணிப்பொற் ப்ரதாப மேருவை வேலிட்டுக் கடாவி வாசவன்
     ஆபத்தைக் கெடாநி சாசரர் ...... தம்ப்ரகாசம் 
ஆழிச்சத் ரசாயை நீழலி லாதித்தப் ப்ரகாச நேர்தர
     ஆழிச்சக் ரவாள மாள்தரும் ...... எம்பிரானே 
மாணிக்க ப்ரவாள நீலம தாணிப்பொற் கிராதைநூபுர
     வாசப்பத் மபாத சேகர ...... சம்புவேதா 
வாசிக்கப் படாத வாசகம் ஈசர்க்குச் சுவாமி யாய்முதல்
     வாசிப்பித் ததேசி காசுரர் ...... தம்பிரானே.
கரங்களால் தொட்டுப் பிடிக்க முடியாதது, யோக வழியில் சாதகம் செய்பவர்களால் சிறிதும் காண முடியாதது, தர்க்க வாதிகளால் பேசி முடிவு காணமுடியாதது, பாவங்களுக்கு இடம் தரும் ஐந்து பூதங்களால் நிகழும் பாசங்களிலும் தளைகளிலும் அகப்படாதது, வேறு எந்தவிதமான உபாயத்திலும் மாட்டிக் கொள்ளாதது, எவ்வித தியான வகையாலும் தியானிக்கமுடியாதது, வருத்தங்களுக்கு இடமான மனம் என்கின்ற ஏணி கொண்டு எட்டமுடியாதது, மேலே உயரத்தில் இருக்கும் ஆகாயத்துக்கு ஒப்பான கருத்துள்ள கலை நூல்களின் வழியே ஆய்ந்து ஏறிக்கொண்டு பிடிக்கமுடியாதது, தேடி முயல்பவர்களாலும் அதன் காரண மூலம் இன்னதென்று சொல்லமுடியாதது, இத்தகைய ஒப்பற்ற பரம்பொருளை நான் அடைய, துக்கம் என்னும் பெரிய கடலினின்றும் நான் கரை ஏறுவதற்காக, வெட்சி மலரின் நறு மணம் கமழும் உனது திருவடிகளை வணங்க மாட்டேனோ? பத்தரை மாற்றுப் பொன் மயமானதும், புகழ் பெற்றதுமான மேரு மலையை வேலாயுதத்தை எடுத்துச் செலுத்தியும்,* இந்திரனுடைய ஆபத்தைக் கெடுமாறு செய்தும், அசுரர்களுடைய ஒளிமயமான சக்கரங்கள், ஆயுதங்கள் ஆகியவற்றின் சாயையின் நிழல் நீங்க சூரியனுடைய ஒளிக்கு நிகராக விளங்கும், வட்டமான சக்ரவாள கிரிவரையில் உள்ள உலகை ஆண்டருளும் எம்பெருமானே, மாணிக்கமணி, பவளம், நீலமணி (இவைகள் பதிக்கப் பெற்ற) பதக்கத்தை அணிந்த அழகிய வேடப் பெண் வள்ளியின் சிலம்பு அணிந்த தாமரைபோன்ற திருவடியின் நறுமணத்தைச் சூடியுள்ளவனே (அதாவது முருகனின் சிரம் வள்ளியின் பாதங்களில் விழுந்ததின் காரணமாக), பிரம்ம தேவர் படித்துக் கூறமுடியாத தனிமந்திரத்தின் உட்பொருளை, சிவ பெருமானுக்கு நல்லாசிரியனாக இருந்து முன்பு உபதேசித்த குரு நாதனே, தேவர்கள் போற்றும் தனிப்பெரும் தலைவனே. 
* முருகன் பாண்டியன் உக்கிரவழுதியாக மதுரையில் அவதரித்தபோது கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்போது மேருவிடமிருந்து பொற்குவியலைக் கேட்க, அது தராமையால் சினந்து செண்டால் மேருவின்மீது எறிந்து பொன் பெற்றார். அச்செயல் இங்கு குறிப்பிடப்படுகிறது.
பாடல் 1176 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தானன தனத்தத் தாத்த தானன தனத்தத் தாத்த
     தானன தனத்தத் தாத்த ...... தனதான
பால்மொழி படித்துக் காட்டி ஆடையை நெகிழ்த்துக் காட்டி
     பாயலி லிருத்திக் காட்டி ...... யநுராகம் 
பாகிதழ் கொடுத்துக் காட்டி நூல்களை விரித்துக் காட்டி
     பார்வைகள் புரட்டிக் காட்டி ...... யுறவாகி 
மேல்நக மழுத்திக் காட்டி தோதக விதத்தைக் காட்டி
     மேல்விழு நலத்தைக் காட்டு ...... மடவார்பால் 
மேவிடு மயக்கைத் தீர்த்து சீர்பத நினைப்பைக் கூட்டு
     மேன்மையை யெனக்குக் காட்டி ...... யருள்வாயே 
காலனை யுதைத்துக் காட்டி யாவியை வதைத்துக் காட்டி
     காரணம் விளைத்துக் காட்டி ...... யொருக்காலங் 
கானினில் நடித்துக் காட்டி யாலமு மிடற்றிற் காட்டி
     காமனை யெரித்துக் காட்டி ...... தருபாலா 
மாலுற நிறத்தைக் காட்டி வேடுவர் புனத்திற் காட்டில்
     வாலிப மிளைத்துக் காட்டி ...... அயர்வாகி 
மான்மகள் தனத்தைச் சூட்டி ஏனென அழைத்துக் கேட்டு
     வாழ்வுறு சமத்தைக் காட்டு ...... பெருமாளே.
பால் போன்ற இனிய பேச்சுக்களைப் பேசி, உடுத்துள்ள ஆடையைத் தளர்த்திக் காட்டி, படுக்கையில் உடன் அமர்த்திவைத்துக் காட்டி, வெல்லம் போன்ற இனிய வாயிதழ் ஊறலைத் தந்து, காம நூல்களை விவரமாக எடுத்துக் காட்டி, கண் பார்வையை சுழற்றிக் காட்டி நட்புப் பூண்டு, உடலின் மேல் நகத்தை அழுத்தி நகக்குறி இட்டு, வஞ்சகச் செயல்களைக் காட்டி, மேலே விழுந்து தழுவும் சுகங்களைக் காட்டும் விலைமாதர்களிடத்தே சென்று அடையும் காம மயக்கத்தை ஒழித்து, சீரான உனது திருவடி நினைப்பைக் கூட்டி வைக்கும் மேன்மையான எண்ணத்தை எனக்கு அருள் புரிவாயாக. யமனைக் காலால் உதைத்துக் காட்டியும், அவனுடைய உயிரை (திருக்கடையூரில்) வதம் செய்து காட்டியும், அவ்வாறு வதைத்ததன் காரணத்தை* விளக்கிக் காட்டியும், அந்திப் பொழுதில் சுடு காட்டில் நடனம் செய்து காட்டியும், ஆலகால விஷத்தை கண்டத்தில் நிறுத்திக் காட்டியும், மன்மதனை (நெற்றிக்) கண்ணால் எரித்துக் காட்டியும் செய்த சிவபெருமான் அருளிய மகனே, (வள்ளி) காதல் உறும்படி உனது திரு மேனியின் ஒளியைக் காட்டி, வேடர்கள் தினைப் புனக் காட்டில் காளைப் பருவத்தின் சோர்வைக் காட்டி தளர்ச்சியுற்று, மான் பெற்ற மகளாகிய வள்ளியின் மார்பினில் தலைவைத்துச் சாய்ந்து, அவளைத் தழுவி, (நீ) ஏன் (இச்சிறு குடிலில் இருக்க வேண்டுமென்று) கூறி, தன்னுடன் (திருத்தணிகைக்கு) வரும்படி அழைத்து (அவள் இணங்கியதைக்) கேட்டு, அவளோடு இனிய வாழ்வு பெற்று, தனது சாமர்த்தியத்தைக் காட்டிய பெருமாளே. 
* திருக்கடையூரில் சிவபூஜை செய்துகொண்டிருந்த மார்க்கண்டருடைய உயிரைப் பறிக்க யமன் பாசக்கயிறை வீசினான். அதனால் வெகுண்டு யமனைக் காலால் உதைத்து சிவபிரான் வதம் செய்தார் - மார்க்கண்ட புராணம்.
பாடல் 1177 - பொதுப்பாடல்கள் 
ராகம் - மலய மாருதம் 
தாளம் - அங்கதாளம் - 7 1/2 
- எடுப்பு - 1/2 அக்ஷரம் தள்ளி 
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தனன தானன தந்தன தந்தன
     தனன தானன தந்தன தந்தன
          தனன தானன தந்தன தந்தன ...... தனதான
புகரில் சேவல தந்துர சங்க்ரம
     நிருதர் கோபக்ர வுஞ்சநெ டுங்கிரி
          பொருத சேவக குன்றவர் பெண்கொடி ...... மணவாளா 
புனித பூசுர ருஞ்சுர ரும்பணி
     புயச பூதர என்றிரு கண்புனல்
          பொழிய மீமிசை யன்புது ளும்பிய ...... மனனாகி 
அகில பூதவு டம்புமு டம்பினில்
     மருவு மாருயி ருங்கர ணங்களு
          மவிழ யானுமி ழந்தஇ டந்தனி ...... லுணர்வாலே 
அகில வாதிக ளுஞ்சம யங்களும்
     அடைய ஆமென அன்றென நின்றதை
          யறிவி லேனறி யும்படி யின்றருள் ...... புரிவாயே 
மகர கேதன முந்திகழ் செந்தமிழ்
     மலய மாருத மும்பல வெம்பரி
          மளசி லீமுக மும்பல மஞ்சரி ...... வெறியாடும் 
மதுக ராரம்வி குஞ்சணி யுங்கர
     மதுர கார்முக மும்பொர வந்தெழு
          மதன ராஜனை வெந்துவி ழும்படி ...... முனிபால 
முகிழ்வி லோசன ரஞ்சிறு திங்களு
     முதுப கீரதி யும்புனை யுஞ்சடை
          முடியர் வேதமு நின்றும ணங்கமழ் ...... அபிராமி 
முகர நூபுர பங்கய சங்கரி
     கிரிகு மாரித்ரி யம்பகி தந்தருள்
          முருக னேசுர குஞ்சரி ரஞ்சித ...... பெருமாளே.
குற்றமற்ற சேவற்கொடியை உடையவனே, உயர்ந்த பற்களுடையவர்களும், போரை விரும்பும் தன்மையும் உடைய அசுரர்கள் மீது கோபிக்கின்றவனே, நீண்ட மலையாகிய கிரெளஞ்சமலையைப் பிளந்த வீர மூர்த்தியே, வேடர் குலக்கொழுந்தாகிய வள்ளியின் கணவனே, தூய்மையான அந்தணரும், தேவர்களும் வணங்கும், மலைபோன்ற தோள்களை உடையவனே எனத் துதித்து, இரு கண்களிலிருந்தும் ஆனந்தக் கண்ணீர் சொரியவும், மேன்மேலும் அன்பு பெருகிய மனத்தனாகி எல்லா பூதங்களும் சேர்ந்த உடம்பும், உடம்பில் பொருந்திய அரிய உயிரும், மனம், புத்தி முதலிய கரணங்களும் கட்டு நீங்கவும், யான் என்ற நினைப்பும் விலகியபோது சிவ போதம் என்ற ஓர் உணர்வினாலே மாறுபட்ட எல்லா வாதிகளும்*, சமயங்களும் ஒதுங்கிப் போய்விடவும், உள்ளது என்றும், இல்லது என்றும் நின்ற உண்மைப் பொருளை அறிவில்லாத சிறிய அடியேன் அறியும்படியாக இன்றைய தினம் உபதேசித்து அருள் புரிவாயாக. மகர மீனக் கொடியைக் கொண்டு விளங்குவதும், செம்மையான தமிழ் முழங்குவதுமான சந்தன மலையாம் பொதிகையில் பிறந்த தென்றல் காற்றும், நானாவிதமான ஆசையைத் தூண்டும் மணமுள்ள மலர் அம்புகளும், பலவிதமான மலர்க் கொத்துக்களில் உள்ள மணத்தில் விளையாடும் வண்டுகளின் வரிசையாகிய நாணுடன், மேலான மலர் அலங்காரமும், கரத்திலே ஏந்திய இனிய கரும்பு வில்லும் கொண்டு காதல் போர் செய்ய எழுந்து வந்த மன்மத ராஜனை வெந்து சாம்பலாகும்படியாகக் கோபித்த நெற்றியில் குவிந்த கண்ணை உடையவரும், அழகிய இளம்பிறைச் சந்திரனையும், பழமையான கங்கா நதியையும் தரித்த ஜடாமுடியை உடையவருமாகிய சிவபெருமானும், வேதமும் நின்று தொழும்படியாக விளங்கி ஞான மணம் திகழும் அபிராமி அம்மையும், சங்குகளால் செய்த கொலுசுகளை அணிந்த திருவடித் தாமரையை உடைய சங்கரியும், ஹிமவானின் புத்திரியும், மூன்று கண்களை உடையவளுமான பார்வதியும் பெற்றருளிய முருகனே, தேவயானை விரும்புகின்ற பெருமாளே. 
* வாதம் செய்கின்ற வாதிகள் பின்வருமாறு:தேக ஆத்மவாதி - உடம்புதான் ஆத்மா என வாதிப்பவன்,கரண ஆத்மவாதி - மனமும் புத்தியும்தான் ஆத்மா என வாதிப்பவன்,இந்திரிய ஆத்மவாதி - இந்திரியங்களே ஆத்மா என வாதிப்பவன்,ஏகாத்மவாதி - ஆத்மாவைத் தவிர வேறில்லை என வாதிப்பவன்,பிம்பப் ப்ரதிபிம்பவாதி - பிரமத்தின் நிழல்தான் உலகம் என வாதிப்பவன்,பரிணாமவாதி - பால் தயிராவது போல பிரமமே உலகானது என வாதிப்பவன்,விவர்த்தனவாதி - பிரமத்திலிருந்து தான் உலகம் வந்தது என வாதிப்பவன்,கணபங்கவாதி - கணந்தோறும் வேறுவேறு ஆத்மா உடம்பில் வருகிறது என வாதிப்பவன்.
பாடல் 1178 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனனத்த தனத்த தனத்தன
     தனனத்த தனத்த தனத்தன
          தனனத்த தனத்த தனத்தன ...... தனதான
புருவத்தை நெறித்து விழிக்கயல்
     பயிலிட்டு வெருட்டி மதித்திரு
          புதுவட்டை மினுக்கி யளிக்குல ...... மிசைபாடும் 
புயல்சற்று விரித்து நிரைத்தொளி
     வளையிட்ட கரத்தை யசைத்தகில்
          புனைமெத்தை படுத்த பளிக்கறை ...... தனிலேறிச் 
சரசத்தை விளைத்து முலைக்கிரி
     புளகிக்க அணைத்து நகக்குறி
          தனைவைத்து முகத்தை முகத்துட ...... னுறமேவித் 
தணிவித்தி ரதத்த தரத்துமி
     ழமுதத்தை யளித்து வுருக்கிகள்
          தருபித்தை யகற்றி யுனைத்தொழ ...... முயல்வேனோ 
பரதத்தை யடக்கி நடிப்பவர்
     த்ரிபுரத்தை யெரிக்க நகைப்பவர்
          பரவைக்குள் விடத்தை மிடற்றிடு ...... பவர்தேர்கப் 
பரையுற்ற கரத்தர் மிகப்பகி
     ரதியுற்ற சிரத்தர் நிறத்துயர்
          பரவத்தர் பொருப்பி லிருப்பவ ...... ருமையாளர் 
சுரர்சுத்தர் மனத்துறை வித்தகர்
     பணிபத்தர் பவத்தை யறுப்பவர்
          சுடலைப்பொ டியைப்ப ரிசிப்பவர் ...... விடையேறுந் 
துணையொத்த பதத்த ரெதிர்த்திடு
     மதனைக்க டிமுத்தர் கருத்தமர்
          தொலைவற்ற க்ருபைக்கு ளுதித்தருள் ...... பெருமாளே.
புருவத்தைச் சுருக்கி கயல் மீன் போன்ற கண்களால் அழைத்து விரட்டி, மதிக்கத்தக்க இரண்டு திரண்ட காதோலைகளை மினுக்கி, வண்டுகளின் கூட்டங்கள் இசை பாடுகின்ற மேகம் போன்ற கூந்தலைக் கொஞ்சம் விரித்து, வரிசையாக ஒளி வீசும் வளையல் இட்ட கைகளை ஆட்டி, அகிலின் நறு மணம் வீச அலங்கரிக்கப்பட்ட மெத்தைப் படுக்கை உள்ள பளிங்கு கற்களால் செய்யப்பட்ட அறையில் அமர்ந்து காம லீலைகளைச் செய்து, மலை போன்ற மார்பகங்கள் புளகாங்கிதம் கொள்ளும்படி அணைத்து, நகக்குறி இட்டு, முகத்தோடு முகம் வைத்து காம விரகத்தைத் தணித்து, சுவை நிரம்பிய வாயிதழ் ஊறலாகிய அமுதினை அளித்து மனதை உருக்கும் விலைமாதர்கள் தருகின்ற மதி மயக்கத்தை விட்டொழித்து உன்னைத் தொழ முயற்சி செய்ய மாட்டேனோ? தாம் ஆடுகின்ற கூத்தை அமைதியுடன் ஆடுபவர், மூன்று புரங்களையும் எரிந்து போகும்படி சிரித்தவர், கடலில் எழுந்த விஷத்தை தன் கழுத்தில் நிறுத்தியவர், (பலி பிச்சை) தேடும் கப்பரை (ஆகிய கபாலத்தை) ஏந்திய கையினர், சிறந்த கங்கை நதி தங்கும் சிரத்தை உடையவர், புகழ் மிக்கவர் எல்லாம் போற்றுகின்ற பெருமான், கயிலை மலையில் வீற்றிருப்பவர், உமையை ஒரு பாகத்தில் உடையவர், தேவர்கள் பரிசுத்தமானவர்கள் ஆகியோரின் மனத்தில் உறைகின்ற பேரறிவாளர், பணிகின்ற பக்தர்களுடைய பிறப்பை அறுப்பவர், சுடலை நீற்றைப் பூசியவர், (நந்தி என்னும்) ரிஷபத்தில் ஏறும், (அடியார்களுக்குத்) துணையாயிருக்கும் திருவடியை உடையவர், (பாணம் எய்த) மன்மதனைக் கடிந்தவர், இயன்பாகவே பாசங்களினின்று நீங்கியவர் (ஆகிய சிவபெருமானது) சித்தத்தில் அமர்ந்துள்ளவனே, அழிவில்லாத கருணையால தோன்றி அருளிய பெருமாளே. 
பாடலின் பின்பகுதி முழுதும் சிவபெருமானின் சிறப்பைக் கூறுவது.
பாடல் 1179 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ஷண்முகப்ரியா 
தாளம் - சருஸ்ர ரூபகம் - 6
தனத்தந் தான தனதன தனத்தந் தான தனதன
     தனத்தந் தான தனதன ...... தனதான
புவிக்குன் பாத மதைநினை பவர்க்குங் கால தரிசனை
     புலக்கண் கூடு மதுதனை ...... அறியாதே 
புரட்டும் பாத சமயிகள் நெறிக்கண் பூது படிறரை
     புழுக்கண் பாவ மதுகொளல் ...... பிழையாதே 
கவிக்கொண் டாடு புகழினை படிக்கும் பாடு திறமிலி
     களைக்கும் பாவ சுழல்படு ...... மடிநாயேன் 
கலக்குண் டாகு புவிதனி லெனக்குண் டாகு பணிவிடை
     கணக்குண் டாதல் திருவுள ...... மறியாதோ 
சிவத்தின் சாமி மயில்மிசை நடிக்குஞ் சாமி யெமதுளெ
     சிறக்குஞ் சாமி சொருபமி ...... தொளிகாணச் 
செழிக்குஞ் சாமி பிறவியை யொழிக்குஞ் சாமி பவமதை
     தெறிக்குஞ் சாமி முனிவர்க ...... ளிடமேவுந் 
தவத்தின் சாமி புரிபிழை பொறுக்குஞ் சாமி குடிநிலை
     தரிக்குஞ் சாமி யசுரர்கள் ...... பொடியாகச் 
சதைக்குஞ் சாமி யெமைபணி விதிக்குஞ் சாமி சரவண
     தகப்பன் சாமி யெனவரு ...... பெருமாளே.
இந்தப் பூமியில் உன் திருவடிகளை நினைத்துத் தியானிப்பவர்களுக்கும், இறப்பு, நிகழ்வு, எதிர் என்ற முக்கால நிகழ்ச்சிகள் அவர்களின் அறிவுக் கண்ணில் புலப்படும். இந்த உண்மையை அறியாமலே, புரட்டிப் பேசும் பாபநெறிச் சமயவாதிகளின் வழியிலே நடக்கின்ற வஞ்சகப் பொய்யர்களை பாவத்திற்கு என்று ஏற்பட்ட, புழுக்கள் நிறைந்த, நரகம் ஏற்றுக்கொள்ளுதல் ஒருநாளும் தவறாது. பெரியோர்களின் பாடல்களில் போற்றப் பெறும் உனது புகழினை படிக்கும் திறமும், பாடும் திறமும் இல்லாதவன், இளைப்பை உண்டாக்கும் பாவச் சுழற்சியில் சிக்குண்டு சுழலும் நாயினும் கீழ்மகனான எனக்கு, மனக் கலக்கத்தைத் தரும் இப்புவியில் உள்ள எனக்கு, யான் செய்யுமாறு விதிக்கப்பட்ட தொண்டு இவ்வளவு என்று உள்ளதான ஒரு கணக்கு இருப்பது உன் உள்ளத்திற்கு தெரியாமலா போகும்? சிவபிரானிடத்தில் தோன்றிய சுவாமி, மயிலின் மீது நடனம் செய்யும் சுவாமி, எம்முடைய உள்ளத்திலே சிறப்பாக விளங்கும் சுவாமி, தனது திருவுருவத்தின் பேரொளியை அடியார்கள் காணுமாறு விளக்கமாகத் தோன்றும் சுவாமி, பிறவியை அடியோடு தொலைத்தருளும் சுவாமி, பாவங்களைப் போக்கி ஒழிக்கும் சுவாமி, முநிவர்கள் செய்யும் தவப்பொருளாக விளங்கும் சுவாமி, அடியார்கள் செய்யும் பிழைகளை எல்லாம் பொறுத்தருளும் சுவாமி, தேவர்களை விண்ணில் குடிபுகச் செய்து அங்கு நிலைபெற வைத்த சுவாமி, அசுரர்களைப் பொடியாகும்படி நெரித்து அழித்த சுவாமி, யாம் செய்ய வேண்டிய தொண்டு இன்னதென்று நிர்ணயிக்கும் சுவாமி, சரவணபவனே, தந்தைக்கு குருஸ்வாமியாக வந்த பெருமாளே. 
பாடல் 118 0 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தானன தந்தன தந்த தந்தன
     தானன தந்தன தந்த தந்தன
          தானன தந்தன தந்த தந்தன ...... தனதான
பூசல்த ருங்கய லும்பொ ருந்திய
     வாசந றுங்குழ லுந்து லங்கிய
          பூரண கும்பமெ னுந்த னங்களு ...... மடமாதர் 
போகம டங்கலை யும்பு ணர்ந்தநு
     ராகம்வி ளைந்துவ ரும்பெ ரும்பிழை
          போயக லும்படி யொன்றை யன்புற ...... நினையாதே 
ஆசையெ னும்படி யுந்த னங்களு
     மோகைந டந்திட வுந்தி னங்களும்
          ஆருட னும்பகை கொண்டு நின்றுற ...... நடமாடி 
ஆடிய பம்பர முன்சு ழன்றெதி
     ரோடிவி ழும்படி கண்ட தொன்றுற
          ஆவிய கன்றுவி டும்ப யங்கெட ...... அருள்வாயே 
வாசவ னன்புவி ளங்க நின்றசு
     ரேசர்கு லங்கள டங்க லுங்கெட
          வானவர் நின்றுதி யங்கு கின்றதொர் ...... குறைதீர 
வாரிய திர்ந்துப யந்து நின்றிட
     மேருஅ டங்கஇ டிந்து சென்றிட
          வாகைபு னைந்தொரு வென்றி கொண்டரு ...... ளிளையோனே 
வீசிய தென்றலொ டந்தி யும்பகை
     யாகமு யங்கஅ நங்க னும்பொர
          வேடையெ னும்படி சிந்தை நொந்திட ...... அடைவாக 
வேடர்செ ழும்புன வஞ்சி யஞ்சன
     வேலினு ளங்கள்க லங்கி யின்புற
          வேளையெ னும்படி சென்றி றைஞ்சிய ...... பெருமாளே.
சண்டை செய்யும் கயல் மீன் போன்ற கண்களையும், பொருந்தியுள்ள நறு மணம் வீசும் கூந்தலையும், விளக்கமுறும் பூரண குடம் என்று சொல்லத்தக்க மார்பகங்களும் கொண்ட இளம் பெண்களின் காம சுகம் முழுமையும் அனுபவித்து ஆசைநிரம்பி வர, அதனால் ஏற்படும் பெரும் பிழைகள் நீங்கிப் போகுமாறு, அந்த ஒப்பற்ற பரம் பொருளை அன்புடன் நினைக்காமல், ஆசை எப்படி எப்படி போகின்றதோ அப்படி அப்படியே என்னுடைய செல்வமும் மகிழ்ச்சியும் செல்லவும், எல்லாருடனும் பகைமை பூண்டு நிற்கும்படி இவ்வுலகில் உலவி, சுற்றுகின்ற பம்பரம்போலச் சுழன்று, எதிரே ஓடி விழுதலைக் காண்பது போன்ற ஒரு நிகழ்ச்சி ஏற்பட, அதாவது உயிர் உடலை விட்டு நீங்கும் (இறப்பு என்னும்) பயம் ஒழிய அருள் புரிவாயாக. இந்திரனுடைய அன்பு விளக்கம் உற, இருந்த அசுரர் தலைவர்களுடைய கூட்டங்கள் எல்லாம் அழிபட, தேவர்கள் நின்று கலக்கம் கொண்டிருந்த அந்த ஒரு பெரிய குறை நீங்க, கடல் அதிர்ச்சியும் அச்சமும் உற்று நிற்க, மேரு மலை முழுவதும் இடிந்து போக, வெற்றி மாலையை அணிந்து ஒப்பற்ற வெற்றியைக் கொண்டருளிய இளையவனே, வீசிய தென்றலுடன் மாலைப் பொழுதும் பகைமை காட்டும்படியாக அமைய, மன்மதனும் சண்டை செய்ய, காம நோய் என்னும்படியாக மனம் நொந்து வருந்த, அதற்கு ஏற்ப, வேடர்களின் செழிப்பான தினைப் புனத்தில் இருந்த வஞ்சிக் கொடி போன்ற வள்ளியின் மை பூசப்பட்ட வேல் போன்ற கண்ணால் இருவர் மனங்களும் கலங்கி, இன்பம் பெற வேண்டி இதுதான் தக்க சமயம் என்ற குறிப்புடன் வள்ளியிடம் சென்று வணங்கிய பெருமாளே. 
பாடல் 1181 - பொதுப்பாடல்கள் 
ராகம் - 
தாளம் -
தான தந்தன தானா தானன
     தான தந்தன தானா தானன
          தான தந்தன தானா தானன ...... தனதான
பூசல் வந்திரு தோடார் காதொடு
     மோதி டுங்கயல் மானார் மானமில்
          போக மங்கையர் கோடா கோடிய ...... மனதானார் 
பூர குங்கும தூளா மோதப
     டீர சண்பக மாலா லாளித
          பூத ரங்களின் மீதே மூழ்கிய ...... அநுராக 
ஆசை யென்கிற பாரா வாரமு
     மேறு கின்றில னானா பேதஅ
          நேக தந்த்ரக்ரி யாவே தாகம ...... கலையாய 
ஆழி யுங்கரை காணே னூபுர
     பாத பங்கய மோதே னேசில
          னாயி னுங்குரு நாதா நீயருள் ...... புரிவாயே 
வாச வன்பதி பாழா காமல்நி
     சாச ரன்குலம் வாழா தேயடி
          மாள வன்கிரி கூறாய் நீறெழ ...... நெடுநேமி 
மாத வன்தரு வேதா வோடலை
     மோது தெண்கடல் கோகோ கோவென
          மாமு றிந்திட நீள்வே லேவிய ...... இளையோனே 
வீசு தென்றலும் வேள்பூ வாளியு
     மீறு கின்றமை யாமோ காமவி
          டாய்கெ டும்படி காவா யாவியை ...... யெனஏனல் 
மீது சென்றுற வாடா வேடுவர்
     பேதை கொங்கையின் மீதே மால்கொடு
          வேடை கொண்டபி ரானே வானவர் ...... பெருமாளே.
சண்டைக்கு எழுந்தது என்று சொல்லும்படி இரண்டு தோடுகள் அணிந்த காதுகளுடன் மோதுகின்ற கயல் மீன் போன்ற கண்களை உடைய மாதர்கள் மானமே இல்லாமல் (உடலால்) போகம் கொடுக்கும் வேசிகள். கோடிக் கணக்கான மனத்தைக் கொண்டவர்கள். பச்சைக் கற்பூரம், குங்குமம் இவைகளின் பொடி, மிக்க மகிழ்ச்சி தரும் சந்தனம், சண்பகம் இவைகள் கொண்டு மோகத்தால அழகு செய்யப்பட்ட மலை போன்ற மார்பகங்களின் மேலே முழுகிய காமப் பற்று என்னும் ஆசையாகிய கடலைத் தாண்டி கரை ஏறாதவன் நான். பலவிதப்பட்ட அனேகமான சாஸ்திர மந்திரங்களைக் கூறும் வேத ஆகம கலைகளாகிய கடலின் கரையையும் காணாதவன். உனது சிலம்பணிந்த தாமரைத் திருவடிகள் ஓதிப் போற்றுகின்றேன் இல்லை. அன்பு சிறிதும் இல்லாதவன். இருந்த போதிலும் குரு நாதனே, நீ அருள் புரிவாயாக. இந்திரனுடைய தலைநகர் (அமராவதி. பாழாகாதபடியும், அசுரர்கள் கூட்டம் வாழாமல் அடியோடு மாண்டு போகவும், வலிமை வாய்ந்த கிரவுஞ்ச மலை இரண்டாய் பிளவுபடவும், நீண்ட சக்ரவாள கிரி பொடிபடவும், திருமால் பெற்ற பிரமனும் அலைகள் வீசும் தெளிந்த கடலும் கோகோகோ என்று அஞ்சி அரற்றவும், (சூரனாகிய) மாமரம் முறிந்திடவும், நீண்ட வேலாயுதத்தைச் செலுத்திய இளையவனே, வீசுகின்ற தென்றல் காற்றும் மன்மத வேளின் மலர்ப் பாணங்களும் என் பொறுமைக்கு அப்பாற்பட்டு வாட்டுதல் நன்றோ? இந்தக் காம தாகம் ஒழியும்படி என்னுடைய ஆவியைக் காத்தருள்க என்று கூறிக்கொண்டு, தினைப் புனம் உள்ள அந்த இடத்துக்குச் சென்று (வள்ளியுடன்) உறவாடி, வேடர்கள் மகளாகிய அவளது மார்பின் மேல் மோகம் பூண்டு விருப்பம் கொண்டவனே, தேவர்களின் பெருமாளே. 
பாடல் 1182 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தந்தந் தனன தாத்தன தந்தந் தனன தாத்தன
     தந்தந் தனன தாத்தன ...... தனதான
பொங்குங் கொடிய கூற்றனு நஞ்சும் பொதுவில் நோக்கிய
     பொங்கும் புதிய நேத்திர ...... வலைவீசிப் 
பொன்கண் டிளகு கூத்திகள் புன்கண் கலவி வேட்டுயிர்
     புண்கொண் டுருகி யாட்படு ...... மயல்தீரக் 
கொங்கின் புசக கோத்திரி பங்கங் களையு மாய்க்குடி
     கொங்கின் குவளை பூக்கிற ...... கிரிசோண 
குன்றங் கதிரை பூப்பர முன்துன் றமரர் போற்றிய
     குன்றம் பிறவும் வாழ்த்துவ ...... தொருநாளே 
எங்கும் பகர மாய்க்கெடி விஞ்சும் பகழி வீக்கிய
     வெஞ்சண் டதனு வேட்டுவர் ...... சரணார 
விந்தம் பணிய வாய்த்தரு ளந்தண் புவன நோற்பவை
     மென்குங் குமகு யாத்திரி ...... பிரியாதே 
எங்குங் கலுழி யார்த்தெழ எங்குஞ் சுருதி கூப்பிட
     எங்குங் குருவி யோச்சிய ...... திருமானை 
என்றென் றவச மாய்த்தொழு தென்றும் புதிய கூட்டமொ
     டென்றும் பொழுது போக்கிய ...... பெருமாளே.
சீறி எழும் பொல்லாத யமனையும் விஷத்தையும் (தம் இரு கண்களிலும் கொண்டு) வித்தியாசம் இன்றி யாரிடத்தும் விருப்பத்துடன் பார்க்கும், ஆசை பொங்கும் புதுமை வாய்ந்த கண்ணாகிய வலையை எறிந்து, பொற்காசுகளைப் பார்த்து மன நெகிழ்ச்சி கொள்ளும் நடனமாடும் கணிகையரின் துன்பத்தைத் தரும் புணர்ச்சியை விரும்பி, உயிர் புண்பட்டு மனம் உருகி அந்த விலைமாதர்களுக்கு ஆளாகின்ற காம மயக்கம் ஒழிய, கொங்கு நாட்டில் உள்ள பாம்பு மலையாகிய திருச் செங்கோட்டையும், (தரிசித்தோர்களின்) பாவங்களைப் போக்கும் ஆய்க்குடி என்னும் தலத்தையும், வாசனையுடன் தினமும் நீலோற்பல மலர் பூக்கின்ற திருத்தணிகை மலையையும், சோணாசலம் என்ற திருவண்ணாமலையையும், கதிர்காமத்தையும், அழகிய பரம் என்னும் சொல் முன்னே வருகின்றதும், தேவர்கள் போற்றுவதுமான திருப்பரங்குன்றத்தையும், பிற தலங்களையும் போற்றி வாழ்த்தக்கூடிய ஒரு நாள் எனக்குக் கிடைக்குமோ? எவ்விடத்தும் ஒளிர்வதும், வல்லமை மேம்பட்டு விளங்கும் அம்புகளையும், கட்டப்பட்டுள்ள கொடிய வில்லையும் கொண்ட வேடர்கள் (உனது) திருவடிகளை வணங்க, உனது அருள் வாய்த்த காரணத்தால், அழகிய குளிர்ந்த இவ்வுலகு செய்த தவப் பயனாய் உதித்த மென்மையான குங்குமம் பூசிய மார்பகங்களாகிய மலைகளை உடையவளும், எல்லாவிடத்தும் கான்யாறு பாய்ந்து ஒலித்து எழவும், எங்கும் வேதங்களின் ஒலி பெருகவும் (விளங்கிய வள்ளிமலைத் தினைப் புனத்தில்) குருவிகளைக் கவண் கல்லைக் கட்டி ஓட்டிய அழகிய மான் போன்றவளுமான வள்ளியை, நீ திரு என்றும், மான் என்றும் தன் வசம் இழந்து வணங்க, நாள்தோறும் புதிதாகச் சந்திப்பது போன்ற மகிழ்ச்சியோடு தினமும் உல்லாசமாகக் காலம் கழித்த பெருமாளே. 
பாடல் 1183 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தனன தனதன தனத்தத் தாத்தன
     தனன தனதன தனத்தத் தாத்தன
          தனன தனதன தனத்தத் தாத்தன ...... தனதான
பொருத கயல்விழி புரட்டிக் காட்டுவர்
     புளக தனவட மசைத்துக் காட்டுவர்
          புயலி னளகமும் விரித்துக் காட்டுவர் ...... பொதுமாதர் 
புனித விதழ்மது நகைத்துக் காட்டுவர்
     பொலிவி னிடைதுகில் குலைத்துக் காட்டுவர்
          புதிய பரிபுர நடித்துக் காட்டுவ ...... ரிளைஞோரை 
உருக அணைதனி லணைத்துக் காட்டுவர்
     உடைமை யடையவெ பறித்துத் தாழ்க்கவெ
          உததி யமுதென நிகழ்த்திக் கேட்பவர் ...... பொடிமாயம் 
உதர மெரிதர மருத்திட் டாட்டிகள்
     உயிரி னிலைகளை விரித்துச் சேர்ப்பவர்
          உறவு கலவியை விடுத்திட் டாட்கொள ...... நினையாதோ 
மருது பொடிபட வுதைத்திட் டாய்ச்செரி
     மகளி ருறிகளை யுடைத்துப் போட்டவர்
          மறுக வொருகயி றடித்திட் டார்ப்புற ...... அழுதூறும் 
வளரு நெடுமுகி லெதிர்த்துக் காட்டென
     அசட னிரணிய னுரத்தைப் பேர்த்தவன்
          மழையி னிரைமலை யெடுத்துக் காத்தவன் ...... மருகோனே 
விருது பலபல பிடித்துச் சூர்க்கிளை
     விகட தடமுடி பறித்துத் தோட்களை
          விழவு முறியவு மடித்துத் தாக்கிய ...... அயில்வீரா 
வெகுதி சலதியை யெரித்துத் தூட்பட
     வினைசெ யசுரர்கள் பதிக்குட் பாய்ச்சிய
          விபுத மலரடி விரித்துப் போற்றினர் ...... பெருமாளே.
சண்டை செய்த கயல் மீன் போன்ற கண்களை புரட்டிக் காட்டுவர். புளகாங்கிதம் கொண்ட மார்பின் மீதுள்ள மாலையை அசைத்துக் காட்டுவர். மேகம் போன்ற கூந்தலையும் விரித்துக் காட்டுவர். இத்தகைய விலைமாதர்கள் தங்கள் தூய வாயிதழ் ஊறலாகிய தேனை சிரிப்புடன் காட்டுவர். பளபளப்பாயுள்ள இடுப்பில் ஆடையைக் கலைத்துக் காட்டுவர். புதிதாய் அணிந்துள்ள காலில் உள்ள சிலம்பை நடனம் செய்து காட்டுவர். வாலிபர்களை (அவர்கள்) மனம் உருகும்படி படுக்கையில் அணைத்துக் காட்டுவர். அவர்களுடைய சொத்து முழுமையாக அபகரித்து வறிஞராகத் தாழும்படிச் செய்ய, கடலினின்றும் தோன்றிய அமுதம் போல இனிமையுடன் பேசிப் பொருளைக் கேட்பார்கள். மாயப் பொடியை வயிற்றில் எரிச்சல் உண்டாகும்படி மருந்தை இட்டு ஆட்டி வைப்பார்கள். உயிர் நிலைகளை (தங்கள் கொடு மொழிகளால்) பிரித்தும் கூட்டியும் வைப்பார்கள். இத்தகைய விலைமாதர்களின் சேர்க்கையை நான் விட்டொழியச் செய்து, என்னை ஆண்டு கொண்டருள உன் திரு உள்ளம் நினைக்காதோ? மருத மரமாகிய சகடைப் பொடிபடுமாறு உதைத்தவர். ஆயர் சேரியில் இருந்த மகளிருடைய உறிகளை உடைத்துப் போட்டவர். கலங்கும்படி ஒரு கயிற்றினால் அடிபட்டு கட்டுண்டு அழுதவர். பெருகி (திரிவிக்ரமராய்) பேருருவம் எடுத்த நெடிய மேக நிறத்தினர். எதிரில் காட்டு பார்க்கலாம் என்று (பிரகலாதனைக்) கேட்ட முட்டாள் இரணியனுடைய மார்பைப் பிளந்தவர். மழை பொழிந்த போது பசுக் கூட்டங்களைக் காக்க கோவர்த்தன கிரியைக் குடையாக எடுத்துப் பிடித்து காத்தவராகிய திருமாலின் மருகனே, வீரச் சின்னங்கள் பல ஒலிக்க, சூரனுடைய கூட்டங்களின் பயங்கரமான தலைகளை பறித்தெறிந்து, அவர்களின் தோள்களை விழும்படி முறித்து அடித்துத் தாக்கிய வேல் வீரனே, பெரிய நெருப்பால் கடலை எரித்துத் தூளாக அழியும்படி தீவினைகளைச் செய்த அசுரர்கள் வாழ்ந்த மகேந்திர நகரில் (அக்கடல் நீரைப்) பாய்வித்து அழித்த தேவனே, மலர்களை உனது திருவடியில் விரியத் தூவிபோற்றிப் பரவும் அடியார்களின் பெருமாளே. 
பாடல் 1184 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தந்தானந் தாத்தந் தனதன
     தந்தானந் தாத்தந் தனதன
          தந்தானந் தாத்தந் தனதன ...... தனதான
மங்காதிங் காக்குஞ் சிறுவரு
     முண்டேயிங் காற்றுந் துணைவியும்
          வம்பாருந் தேக்குண் டிடவறி ...... தெணும்வாதை 
வந்தேபொன் தேட்டங் கொடுமன
     நொந்தேயிங் காட்டம் பெரிதெழ
          வண்போதன் தீட்டுந் தொடரது ...... படியேமன் 
சங்காரம் போர்ச்சங் கையிலுடல்
     வெங்கானம் போய்த்தங் குயிர்கொள
          சந்தேகந் தீர்க்குந் தனுவுட ...... னணுகாமுன் 
சந்தாரஞ் சாத்தும் புயவியல்
     கந்தாஎன் றேத்தும் படியென
          சந்தாபந் தீர்த்தென் றடியிணை ...... தருவாயே 
கங்காளன் பார்த்தன் கையிலடி
     யுண்டேதிண் டாட்டங் கொளுநெடு
          கன்சாபஞ் சார்த்துங் கரதல ...... னெருதேறி 
கந்தாவஞ் சேர்த்தண் புதுமல
     ரம்பான்வெந் தார்ப்பொன் றிடவிழி
          கண்டான்வெங் காட்டங் கனலுற ...... நடமாடி 
அங்காலங் கோத்தெண் டிசைபுவி
     மங்காதுண் டாற்கொன் றதிபதி
          அந்தாபந் தீர்த்தம் பொருளினை ...... யருள்வோனே 
அன்பாலந் தாட்கும் பிடுமவர்
     தம்பாவந் தீர்த்தம் புவியிடை
          அஞ்சாநெஞ் சாக்கந் தரவல ...... பெருமாளே.
பெருமைகள் குறைவு படாமல் இவ்வுலகில் உதவும் மக்களும் அமைந்து, இவ்வாழ்வில் கூட இருந்து துணை புரியும் மனைவியும், புதிய உறவினரும் சேர்ந்து செல்வத்தை வைத்து உண்டு வாழ்ந்திருக்கும்போது, தரித்திரம் என்று எண்ணப்படுகின்ற துன்பம் வந்து சேர, பொன் சேர்த்து வைக்க வேண்டிய கவலையால் மனம் வருந்தி, இவ்வாழ்க்கையில் அலைச்சல் நிரம்ப உண்டாக, செழிப்புள்ள தாமரை மலரில் இருக்கும் பிரமன் எழுதி வைத்த எழுத்து வரிசையின்படி யமன் (என் உயிரை அழிப்பதற்குச்) செய்யும் போரின் அச்சத்துடன் உடல் சுடுகாட்டுக்குப் போய்ச் சேரும்படி உயிரைக் கவர, (இந்த உயிர் பிழக்குமோ, பிழைக்காதோ என்னும்) சந்தேகம் தீரும்படி வில் முதலான ஆயுதங்களுடன் என்னை அணுகுவதற்கு முன், சந்தனமும் கடப்ப மாலையும் அணிந்துள்ள திருப்புயங்களை உடையவனே, இயற்றமிழ் ஆகிய (முத்தமிழ் வல்ல) கந்தப் பெருமானே என்று நான் உன்னைப் போற்றும்படி, என்னுடைய மனத் துன்பத்தைத் தீர்த்து எப்பொழுது உன் திருவடி இணைகளைத் தந்து அருள்வாய்? எலும்பு மாலையை அணிந்தவன், அர்ச்சுனன்* கை வில்லால் அடியுண்டு திண்டாட்டம் கொண்டவன், பெரிய மேரு மலையாகிய வில்லைச் சார வைத்துள்ள திருக் கரத்தை உடையவன், (நந்தி என்னும்) ரிஷப வாகனன், பற்றுக் கோடாக வைத்துள்ள அம்புக் கூட்டில் குளிர்ந்த புதிய மலர்ப் பாணங்களை உடைய மன்மதன் வெந்து கூச்சலிடும்படி (நெற்றிக்)கண் கொண்டு பார்த்தவன், கொடிய சுடு காட்டில் நெருப்பை ஏந்தி நடனம் ஆடுபவன், அந்தப் பாற்கடலில் ஆலகால விஷத்தை ஒன்று சேர்த்து, எட்டுத் திசைகளைக் கொண்ட பூமியில் உள்ளவர்கள் அழிவுறாமல் இருக்க தானே உண்டவனாகிய சிவபெருமானுக்கு, பொருந்திய உபதேசத் தலைவனாய் (பிரணவ மந்திரத்தை அறிய வேண்டும் என்னும்) அந்த நல்ல தாகத்தைத் தீர்த்து அழகிய அந்த ஞானப் பொருளை உபதேசித்தவனே, அன்புடன் அழகிய உனது திருவடியை வணங்கும் அடியார்களுடைய பாவத்தைத் தீர்த்து, அழகிய இப்பூமியில் எதற்கும் பயப்படாத மனதையும் செல்வத்தையும் கொடுக்க வல்ல பெருமாளே. 
* அர்ச்சுனன் இமயமலையில் தவம் செய்திருந்த போது, துரியோதனன் ஏவ, மூகன் என்னும் அசுரன் பன்றி உருவம் கொண்டு அவனைக் கொல்ல வந்தான். அதை அறிந்த சிவபெருமான் வேட உருவம் கொண்டு அப்பன்றியின் பின் பாகத்தைப் பிளந்தார். இதை அறியாத அர்ச்சுனன் பன்றி வருவதைக் கண்டு அதன் முகத்தில் ஒரு அம்பைச் செலுத்தினான். முன்பு நீ எப்படி அம்பைத் தொடுத்தாய் என்று சிவனுக்கும், அர்ச்சுனனுக்கும் விற்போர் நடந்தது. நாண் அறுபட அர்ச்சுனன் சிவனை நாண் அறுந்த வில் தண்டால் அடித்தான்.
பாடல் 1185 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தனன தனதன தனத்தா தன
     தனன தனதன தனத்தா தன
          தனன தனதன தனத்தா தன ...... தனதான
மதன தனுநிக ரிடைக்கே மன
     முருக வருபிடி நடைக்கே யிரு
          வனச பரிபுர மலர்க்கே மது ...... கரம்வாழும் 
வகுள ம்ருகமத மழைக்கே மணி
     மகர மணிவன குழைக்கே மட
          மகளிர் முகுளித முலைக்கே கட ...... லமுதூறும் 
அதர மதுரித மொழிக்கே குழை
     யளவு மளவிய விழிக்கே தள
          வனைய தொருசிறு நகைக்கே பனி ...... மதிபோலும் 
அழகு திகழ்தரு நுதற்கே யந
     வரத மவயவ மனைத்தூ டினு
          மவச முறுமயல் தவிர்த்தாள் வது ...... மொருநாளே 
உததி புதைபட அடைத்தா தவன்
     நிகரி லிரதமும் விடுக்கா நகர்
          ஒருநொ டியில்வெயி லெழச்சா நகி ...... துயர்தீர 
உபய வொருபது வரைத்தோள் களு
     நிசிச ரர்கள்பதி தசக்¡£ வமு
          முருள ஒருகணை தெரித்தா னும ...... வுனஞான 
திதமி லவுணர்த மிருப்பா கிய
     புரமு மெரியெழ முதற்பூ தர
          திலத குலகிரி வளைத்தா னும ...... கிழவானோர் 
திருவ நகர்குடி புகச்சீ கர
     மகர சலமுறை யிடச்சூ ரொடு
          சிகர கிரிபொடி படச்சா டிய ...... பெருமாளே.
மன்மதனுடைய உடலுக்கு ஒப்பான (உருவம் இல்லாத) இடுப்பின் மீதும், மனம் உருகும்படியாக வருகின்ற பெண் யானையின் நடையின் மீதும், இரண்டு தாமரை மலர் போன்ற, சிலம்பு அணிந்த மலரடிகள் மீதும், வண்டுகள் வாழ்கின்றதும் மகிழம் பூவும் கஸ்தூரியும் அணிந்துள்ளதுமான, மேகம் போன்ற நீண்ட கூந்தலின் மீதும், ரத்தினங்கள் பதித்த மகர மீன் போன்ற குண்டல அணியின் மீதும், இள மகளிர்களின் மலர் மொட்டுப் போலக் குவிந்துள்ள மார்பகத்தின் மீதும், பாற்கடல் அமுது போல் இனித்து ஊறும் வாயிதழ் ஊறலின் மீதும், இனிய பேச்சின் மீதும், குண்டலங்கள் வரைக்கும் நீண்டுள்ள கண்களின் மீதும், முல்லை மலர் போன்ற ஒப்பற்ற புன்னகையின் மீதும், குளிர்ந்த பிறைச் சந்திரன் போன்று அழகு விளங்கும் நெற்றியின் மீதும், எப்போதும் இவ்வாறு எல்லா அவயவங்களின் மீதும் மயக்கம் கொள்ளும் காமப் பித்தை ஒழித்து, என்னை நீ ஆட்கொள்ளுவதும் ஆகிய ஒரு நாள் கிட்டுமோ? கடல் புதைபடும்படி அடைத்து, சூரியனுடைய ஒப்பற்ற தேரும் வரக் கூடாதென்று தடுக்கப்பட்டிருந்த நகரமாகிய இலங்கையில், ஒரு நொடிப் பொழுதில் சூரியன் ஒளி வரும்படிச் செய்து, சீதையின் துயரம் தீரும்படி, இருபது மலை போன்ற தோள்களும், அரக்கர்களுடைய தலைவனாகிய ராவணனுடைய பத்து கழுத்தும் உருண்டு மாண்டு விழ ஒப்பற்ற அம்பை விட்டவனாகிய (ராமனாகிய) திருமாலும், மவுன ஞான, நிலை இல்லாத அவுணர்களுடைய* இருப்பிடமாயிருந்த திரிபுரங்களும் எரிபட்டு அழியும்படி, மலைகளுள் முதன்மை வாய்ந்ததும், நெற்றித் திலகம் போல சிறப்பான மேரு மலையை (வில்லாக) வளைத்த சிவபெருமானும் மகிழ்ச்சி கொள்ளும்படியும், தேவர்கள் செல்வம் நிறைந்த பொன்னுலகுக்கு குடி போகும்படியும், அலைகளும், மகர மீன்களும் கொண்ட கடல் முறையிட்டு ஓலமிடும்படியும், சூரனுடன், உச்சிகளை உடைய எழு கிரிகளும் பொடிபட்டு அழிய வேல் கொண்டு மோதிய பெருமாளே. 
* திரிபுரத்தில் இருந்த அசுரர்கள் சிவ பூஜையை விட்டால் ஒழிய அவர்களை வெல்ல முடியாது என உணர்ந்த திருமால், புத்த ஆசாரியராகவும், நாரதர் அவர் மாணாக்கர் ஆகவும் போந்து, அசுரர்களை மயக்கிச் சிவபூஜையை கைவிடச் செய்தனர். ஆனால் மூன்று அசுரர்கள் மட்டும் சிவ நெறியிலேயே இருந்து ஒழுகி இறக்காமல் தப்பினர்.
பாடல் 1186 - பொதுப்பாடல்கள் 
ராகம் - தோடி 
தாளம் - திஸ்ர ஏகம் - 3
தனதானன தனதானன தனதானன தனதானன
     தனதானன தனதானன ...... தனதான
மதனேவிய கணையாலிரு வினையால்புவி கடல்சாரமும்
     வடிவாயுடல் நடமாடுக ...... முடியாதேன் 
மனமாயையொ டிருகாழ்வினை யறமூதுடை மலம்வேரற
     மகிழ்ஞானக அநுபூதியி ...... னருள்மேவிப் 
பதமேவுமு னடியாருடன் விளையாடுக அடியேன்முனெ
     பரிபூரண கிருபாகர ...... முடன்ஞான 
பரிமேலழ குடனேறிவி ணவர்பூமழை யடிமேல்விட
     பலகோடிவெண் மதிபோலவெ ...... வருவாயே 
சதகோடிவெண் மடவார்கட லெனசாமரை யசையாமுழு
     சசிசூரியர் சுடராமென ...... வொருகோடிச் 
சடைமாமுடி முநிவோர்சர ணெனவேதியர் மறையோதுக
     சதிநாடக மருள்வேணிய ...... னருள்பாலா 
விதியானவ னிளையாளென துளமேவிய வளிநாயகி
     வெகுமாலுற தனமேலணை ...... முருகோனே 
வெளியாசையொ டடைபூவணர் மருகாமணி முதிராடக
     வெயில்வீசிய அழகாதமிழ் ...... பெருமாளே.
மன்மதன் செலுத்திய மலர் அம்புகளால் பட்டும், நல்வினை தீவினை ஆகிய இரு வினைகளால் பட்டும், மண், நீர் முதலிய பஞ்ச பூதங்களின் இயக்கங்களில் பட்டும் வடிவமான இந்த உடலுடன், இந்த உலகில் நடமாட முடியாதவனாகிய நான் மனத்திலுள்ள மாயையும், நல்வினை தீவினை என்ற இரு முற்றிய வினைகளும் ஒழிய, பழமையாக வரும் ஆணவம் என்ற மலம் வேரோடு அற்று வீழ, மகிழத்தக்க, உள்ளத்தில் விளங்கும், அனுபவ ஞானம் ஆகிய அருளை அடைந்து, உன் திருவடியை அடைந்த அடியார்களுடன் நானும் சேர்ந்து விளையாட, அடியேன் எதிரில் நிறைந்த கருணையுடன் ஞானம் என்னும் குதிரையாகிய மயில் மீது அழகுடன் ஏறி, தேவர்கள் பூமாரியை உன் திருவடிகளின் மேல் பொழிய பல கோடிக்கணக்கான வெண்ணிலவின் ஒளி வீச நீ வருவாயாக. நூறு கோடி வெண்ணிற மாதர்கள் கடல் அலைகளைப் போல் சாமரங்கள் வீச, பூரண சந்திரனும், சூரியனும் தீப ஒளியாய்ச் சுடர் வீச, ஒரு கோடிக்கணக்கான, சடைமுடி தாங்கிய முநிவர்கள் சரணம் என்று வணங்க, வேதியர்கள் வேதங்களை ஓதிட, தாளத்துடன் கூடிய நடனத்தை ஆடிய ஜடாமுடி தாங்கும் (நடராஜராம்) சிவபெருமான் அருளிய குழந்தையே, உயிர்களுக்கு எல்லாம் ஆயுளை விதிக்கும் பிரமனின் தங்கை*, என் உள்ளத்தில் வீற்றிருக்கும் வள்ளிநாயகி மிக்க ஆசைப்படும்படி அவளின் மார்பினை அணைந்த முருகனே, ஆகாயம், திசைகள் எல்லாம் நிறைந்துள்ள, காயாம்பூ போன்ற நீலவண்ணத்து திருமாலின் மருகனே, ரத்தினம், செம்மை முதிர்ந்த பொன் ஆகியவற்றின் ஒளி கலந்து வீசுகின்ற அழகனே, தமிழர்களின் பெருமாளே. 
* பிரமன் திருமாலின் மைந்தன். வள்ளி திருமாலின் புத்திரியாகிய சுந்தரவல்லியின் மறு பிறப்பு. எனவே வள்ளி பிரமனின் தங்கை.
பாடல் 1187 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தானதனத் தத்த தத்த தத்தன
     தானதனத் தத்த தத்த தத்தன
          தானதனத் தத்த தத்த தத்தன ...... தனதான
மாடமதிட் சுற்று மொக்க வைத்திட
     வீடுகனக் கத்த னத்தி லச்சுறு
          மாலிபமொத் துப்ர புத்த னத்தினி ...... லடைவாக 
மாதர்பெருக் கத்த ருக்க மற்றவர்
     சூழவிருக் கத்த ரிக்க இப்படி
          வாழ்க்கையில்மத் தப்ர மத்த சித்திகொள் ...... கடைநாளிற் 
பாடையினிற் கட்டி விட்டு நட்டவர்
     கூடஅரற் றிப்பு டைத்து றுப்புள
          பாவையெடுத் துத்த ழற்கி ரைப்பட ...... விடலாய 
பாடுதொலைத் துக்க ழிக்க அக்ருபை
     தேடுமெனைத் தற்பு ரக்க வுற்றிரு
          பாதுகையைப் பற்றி நிற்க வைத்தெனை ...... யருளாதோ 
ஆடகவெற் பைப்பெ ருத்த மத்தென
     நாகவடத் தைப்பி ணித்து ரத்தம
          ரார்கள்பிடித் துத்தி ரித்தி டப்புகை ...... யனலாக 
ஆழிகொதித் துக்க தற்றி விட்டிமை
     யோர்களொளிக் கக்க ளித்த உக்கிர
          ஆலவிடத் தைத்த ரித்த அற்புதர் ...... குமரேசா 
வேடர்சிறுக் கிக்கி லச்சை யற்றெழு
     பாரும்வெறுத் துச்சி ரிப்ப நட்பொடு
          வேளையெனப் புக்கு நிற்கும் வித்தக ...... இளையோனே 
வேகமிகுத் துக்க திக்கும் விக்ரம
     சூரர்சிரத் தைத்து ணித்த டக்குதல்
          வீரமெனத் தத்து வத்து மெச்சிய ...... பெருமாளே.
வீட்டைச் சுற்றிலும் மதிள் ஒரு சேர வைத்துக் கட்டப்பட்ட அந்த வீடு நிறையும்படி பொருள் சேகரித்து, (அந்தப் பொருள் கொள்ளை போகாமல் இருக்க வேண்டுமென்று) பயம் கொள்பவனாய், மயக்கம் கொண்ட யானை போன்ற அதிகார நிலையில் தகுதியுடன் இருந்து, பெண்கள் கூட்டம் பெருத்திருக்க, தன்னோடு எதிர்த்துத் தர்க்கம் பேசாதவர்கள் சூழ்ந்திருந்து ஆதரிக்க, இங்ஙனம் வாழும் போது பெரு மயக்கம் என்னும் இறப்பு வந்து சேர, இறுதி நாளில் பாடையில் கட்டிவிட்டு நண்பானவர்கள் (பிண ஊர்வலத்துடன்) கூட அழுது அடித்துக் கொண்டு, அவயவங்கள் அத்தனையும் கூடிய பிண்டமாகிய உருவத்தை எடுத்து நெருப்புக்கு இரையாகும்படி விட்டு விடுவதான, வேதனையை ஒழித்து விடுவதான அந்த அருட் பேற்றினைத் தேடுகின்ற என்னை நான் காத்துக் கொள்ளும் வகைக்கு வைத்து, உனது இரண்டு பாதுகைகளைச் சிக்கெனப் பற்றி நிற்கும்படியாகச் செய்து எனக்கு அருள் பாலிக்க மாட்டாயோ? பொன் மலை மேருவை பெரிய மத்தாக அமைத்து (வாசுகியாகிய) பாம்பைக் கயிறாகக் கட்டி, பலமுடன் தேவர்கள் பிடித்து (பாற்கடலைக்) கடைய, புகையும் நெருப்புமாக கடல் கொதிப்புற்று யாவரையும் கதற வைத்து, தேவர்கள் ஓடி ஒளிய, மதர்ப்புடன் எழுந்த, கொடுமை கொண்ட, ஆலகால விஷத்தை (தம் கண்டத்தில்) தரித்து நிறுத்திய) அற்புதராகிய சிவபெருமானின் குமார ஈசனே, வேடர்கள் பெண்ணாகிய வள்ளியினிடத்தில் நாணம் இன்றி, ஏழு உலகில் உள்ளோரும் பரிகசித்துச் சிரிக்க, நட்புப் பாராட்டி இது நல்ல சமயம் என்று சென்று அவளருகில் நின்ற பேரறிவு கொண்ட இளையோனே, கோபம் மிக உண்டாகும் வலிமை கொண்ட சூரர்களுடைய தலைகளை அறுத்து அவர்களை அடக்குதல் வீரமாகும் என்ற அவ்வுண்மையைக் கொண்டாடி அனுஷ்டித்த பெருமாளே. 
பாடல் 1188 - பொதுப்பாடல்கள் 
ராகம் - சங்கராபரணம் 
தாளம் - அங்கதாளம் - 6 1/2 
தகதகிட-2 1/2, தகதிமி-2, தகதிமி-2
தாந்தான தந்தன தந்தன
     தாந்தான தந்தன தந்தன
          தாந்தான தந்தன தந்தன ...... தனதான
மாண்டாரெ லும்பணி யுஞ்சடை
     யாண்டாரி றைஞ்ச மொழிந்ததை
          வான்பூத லம்பவ னங்கனல் ...... புனலான 
வான்பூத முங்கர ணங்களு
     நான்போயொ டுங்கஅ டங்கலு
          மாய்ந்தால்வி ளங்கும தொன்றினை ...... யருளாயேல் 
வேண்டாமை யொன்றைய டைந்துள
     மீண்டாறி நின்சர ணங்களில்
          வீழந்தாவல் கொண்டுரு கன்பினை ...... யுடையேனாய் 
வேந்தாக டம்புபு னைந்தருள்
     சேந்தாச ரண்சர ணென்பது
          வீண்போம தொன்றல என்பதை ...... யுணராதோ 
ஆண்டார்த லங்கள ளந்திட
     நீண்டார்மு குந்தர்த டந்தனில்
          ஆண்டாவி துஞ்சிய தென்றுமு ...... தலைவாயுற் 
றாங்கோர்சி லம்புபு லம்பிட
     ஞான்றூது துங்கச லஞ்சலம்
          ஆம்பூமு ழங்கிய டங்கும ...... ளவில்நேசம் 
பூண்டாழி கொண்டுவ னங்களி
     லேய்ந்தாள வென்றுவெ றுந்தனி
          போந்தோல மென்றுத வும்புயல் ...... மருகோனே 
பூம்பாளை யெங்கும ணங்கமழ்
     தேங்காவில் நின்றதொர் குன்றவர்
          பூந்தோகை கொங்கைவி ரும்பிய ...... பெருமாளே.
(தக்ஷயாகத்துக்குப் பின்) இறந்து பட்ட திருமால், பிரமன் முதலோருடைய எலும்பை அணிந்தவரும், ஜடாமுடிகொண்ட தலைவரும் ஆகிய சிவபெருமான் உன்னை வணங்க, நீ உபதேசித்த பிரணவப் பொருளை, விண், பூமி, காற்று, நெருப்பு, நீர் ஆகிய பெரிய ஐம்பூதங்களும், (மனம், புத்தி, சித்தம், அகங்காரம்) எனப்படும் நான்கு கரணங்களும், நான், எனது - என்னும் அகங்கார மமகாரமும் நீங்கி ஒடுங்க, இங்ஙனம் எல்லாம் இறந்துபட்டால் விளங்குவதான அந்த ஒப்பற்ற ஒரு பொருளை நீ எனக்கு அருளாவிட்டால் (அதற்குப் பதிலாக) வேண்டாமை என்னும் ஆசை நீக்கமான மன நிலை ஒன்றை நான் அடைந்து, என் மனம் மீண்டும் பல திசைகளில் ஓடாது அமைதிபெற்று உனது திருவடிகளில் விழுந்து ஆசையுடனே உள்ளம் உருகும்படியான அன்பு நிலையை நான் உடையவனாகி, அரசே, கடப்ப மாலை அணிந்த காரணனே, உன் திருவடியே சரணம் என்னும் அந்த வழிபாடு வீணாகப் போகும்படியான ஒன்று அன்று என்பதை உணரமாட்டேனோ? உலகத்தை எல்லாம் ஆள்பவர், மூவுலகையும் தமது திருவடி இரண்டினால் அளக்கவேண்டி நீண்ட உருவம் (விஸ்வரூபம்) எடுத்தவர், முகுந்தர், மடுவில் அன்றொரு நாள் உயிரே போய்விட்டது என்று முதலையின் வாயில் அகப்பட்டு, அங்கே ஒரு மலைபோன்ற (கஜேந்திரன் என்னும்) யானை (ஆதிமூலமே என்று) கூச்சலிட, அப்பொழுது ஊதின பரிசுத்தமான பாஞ்ச ஜன்யம் என்னும் சங்கை, மலரை ஒத்த வாயில் முழக்கம் செய்து சங்கின் ஓசை அடங்குவதற்குள் அளவில்லாத அன்பு பூண்டு சுதர்ஸன சக்கரத்தை ஏந்தி (மடு இருந்த) வனத்தை அடைந்து (அந்த யானையை) ஆண்டருள தான் மாத்திரம் தனியே வந்து அபயம் தந்தோம் என்று உதவிய மேக நிறம் கொண்ட திருமாலின் மருகனே, அழகிய தென்னம்பாளை எங்கும் நறு மணம் வீசுகின்ற இனிய பூஞ்சோலையில் இருந்த ஒப்பற்ற (வள்ளி) மலை வேடர்களின் அழகிய மயில் போன்ற வள்ளியின் மார்பகங்களை விரும்பிய பெருமாளே. 
பாடல் 1189 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தானதன தான தத்த தானதன தான தத்த
     தானதன தான தத்த ...... தனதான
மாறுபொரு கால னொக்கும் வானிலெழு மாம திக்கும்
     வாரிதுயி லாவ தற்கும் ...... வசையேசொல் 
மாயமட வார்த மக்கும் ஆயர்குழ லூதி சைக்கும்
     வாயுமிள வாடை யிற்கு ...... மதனாலே 
வேறுபடு பாய லுக்கு மேயெனது பேதை யெய்த்து
     வேறுபடு மேனி சற்று ...... மழியாதே 
வேடர்குல மாதி னுக்கு வேடைகெட வேந டித்து
     மேவுமிரு பாத முற்று ...... வரவேணும் 
ஆறுமிடை வாள ரக்கர் நீறுபட வேலெ டுத்த
     ஆறுமுக னேகு றத்தி ...... மணவாளா 
ஆழியுல கேழ டக்கி வாசுகியை வாய டக்கி
     ஆலுமயி லேறி நிற்கு ...... மிளையோனே 
சீறுபட மேரு வெற்பை நீறுபட வேசி னத்த
     சேவலவ நீப மொய்த்த ...... திரள்தோளா 
சேருமட லால்மி குத்த சூரர்கொடு போய டைத்த
     தேவர்சிறை மீள விட்ட ...... பெருமாளே.
பகைமையுடன் சண்டை செய்யும் யமனை நிகர்த்து ஆகாயத்தில் எழுகின்ற அழகிய சந்திரனுக்கும், கடல் தூக்கம் கொள்ளாது (அலை ஒலித்துக் கொண்டே) இருக்கும் அந்த நிலைக்கும், வசை மொழிகளையே பேசிக் கொண்டிருக்கும் வஞ்சனை கொண்டுள்ள மாதர்களுக்கும், இடையர் குழல் ஊதும் இசைக்கும், வாய்ந்துள்ள இளம் வாடைக் காற்றுக்கும், அதனாலே படுக்கை வேறுபடுவதற்கும் (தனித்திருப்பதற்கும்), (இவைகள் காரணமாக) எனது பேதைப் பெண் இளைத்து நிறம் மாறி போன உடல் கொஞ்சமும் கெடாதவாறு, வேடப் பெண்ணாகிய வள்ளியின் பொருட்டு காம நோய் தீரும்படி திருவிளையாடல்களைச் செய்து விளங்கும் உன் இரண்டு திருவடிகளுடன் பொருந்தி (இப்பேதையிடமும்) நீ வர வேண்டும். ஆறு வகைக் கெட்ட குணங்கள்* நிறைந்தவர்களும், வாட்படை ஏந்தியவர்களும் ஆகிய அசுரர்கள் பொடிபட்டு அழிய வேலாயுதத்தைச் செலுத்திய ஆறுமுகப்பிரானே, குறப் பெண் வள்ளியின் கணவனே. கடலால் சூழப்பட்ட ஏழு உலகங்களையும் அடக்கி, வாசுகிப் பாம்பின் வாயை அடக்கிக் கூச்சலிடும் மயில் மீது ஏறி விளங்கும் இளையோனே, மிக்க சினத்துடன் மேருமலையை பொடியாகும்படி கோபித்த சேவற் கொடியோனே, கடப்பமாலையை நெருக்கமாய் அணிந்த திரண்ட தோளனே, கூடியுள்ள வலிமையால் வெற்றி மிக்குள்ள சூரர்கள் கொண்டு போய் அடைத்த தேவர்களின் சிறையை நீக்கிய பெருமாளே. 
* ஆறு கெட்ட குணங்கள்: காமம், குரோதம், மோகம், லோபம், மதம், மாற்சர்யம். இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் நாயகியின் நற்றாய் கூறுவதுபோல அமைந்தது.சந்திரன், கடல் ஓசை, வசை பேசும் மாதர், குழல் ஓசை, வாடைக் காற்று, தனிப் படுக்கை முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.
பாடல் 1190 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தன்னதன தத்த தத்த தன்னதன தத்த தத்த
     தன்னதன தத்த தத்த ...... தனதான
மின்னினில்ந டுக்க முற்ற நுண்ணியநு சுப்பில் முத்த
     வெண்ணகையில் வட்ட மொத்து ...... அழகார 
விம்மியிள கிக்க தித்த கொம்மைமுலை யிற்கு னித்த
     வின்னுதலி லிட்ட பொட்டில் ...... விலைமாதர் 
கன்னல்மொழி யிற்சி றக்கு மன்னநடை யிற்க றுத்த
     கண்ணினிணை யிற்சி வத்த ...... கனிவாயிற் 
கண்ணழிவு வைத்த புத்தி ஷண்முகநி னைக்க வைத்த
     கன்மவச மெப்ப டிக்கு ...... மறவேனே 
அன்னநடை யைப்ப ழித்த மஞ்ஞைமலை யிற்கு றத்தி
     யம்மையட விப்பு னத்தில் ...... விளையாடும் 
அன்னையிறு கப்பி ணித்த பன்னிருதி ருப்பு யத்தில்
     அன்னியஅ ரக்க ரத்த ...... னையுமாளப் 
பொன்னுலகி னைப்பு ரக்கு மன்னநல்வ்ர தத்தை விட்ட
     புன்மையர்பு ரத்ர யத்தர் ...... பொடியாகப் 
பொன்மலைவ ளைத்தெ ரித்த கண்ணுதலி டத்தி லுற்ற
     புண்ணியவொ ருத்தி பெற்ற ...... பெருமாளே.
மின்னலைப் போல் நடுங்குகின்ற மெலிந்த இடையிலும், முத்துப் போன்ற வெண்மை நிறம் கொண்ட பற்களிலும், வட்ட வடிவு கொண்டு அழகு நிரம்பி, பூரித்து, நெகிழ்ந்து, எழுந்து, திரண்ட மார்பகங்களிலும், வளைவு கொண்ட, வில்லைப் போன்ற நெற்றியில் அணிந்துள்ள பொட்டிலும், விலைமாதர்களுடைய கரும்பு போல் இனிக்கும் பேச்சிலும், சிறப்புற்ற அன்னத்தைப் போன்ற நடையிலும், கறுப்பு நிறம் கொண்ட இரு கண்களிலும், சிவந்த (கொவ்வைக்) கனி போன்ற வாயிலும், தனித்தனி தோய்ந்து வியப்புற்றுக் கிடந்த என் புத்தி மாறி, (உனது) ஆறு முகங்களையும் நினைக்குமாறு செய்த புண்ணியப் பயனை எந்தக் காரணத்தையும் கொண்டு மறக்க முடியுமா? அன்னத்தின் நடையைப் பழிக்க வல்ல மயிலைப் போன்றவள், மலையில் வளர்ந்த குறமங்கையாகிய தேவி, காட்டிலும் தினைப் புனத்திலும் விளையாடிய தாய் ஆகிய வள்ளி நாயகி, அழுத்தி அணைத்த பன்னிரண்டு திருப்புயங்களால் அயலாராய் மாறுபட்டிருந்த அசுரர்கள் அனைவர்களும் இறக்கும்படிச் செய்து, (தேவர்களின்) பொன்னுலகத்தைக் காத்தளித்த அரசே, நல்ல விரத அனுஷ்டானங்களைக் கைவிட்ட* இழி குணத்தோராய் முப்புரங்களில் வாழ்ந்திருந்த அசுரர்கள் பொடிபட்டு அழியும்படி மேருவை வில்லாக வளைத்து எரித்த நெற்றிக் கண்ணராகிய சிவபெருமானது இடது பாகத்தில் இருக்கும் ஒப்பற்ற புண்ணியவதியாகிய பார்வதி தேவி பெற்றெடுத்த பெருமாளே. 
* திரிபுரத்தில் இருந்த அசுரர்கள் சிவ பூஜையை விட்டால் ஒழிய அவர்களை வெல்ல முடியாதென உணர்ந்த திருமால், புத்த ஆசாரியராகவும், நாரதர் அவர் மாணாக்கராகவும் சென்று, பலவித அற்புதங்களைக் காட்டி அசுரர்களை மயக்கிச் சிவ பூஜையைக் கை விடச் செய்தனர் - சிவபுராணம்.
பாடல் 1191 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தத்தன தான தனத்தன தத்தன தான தனத்தன
     தத்தன தான தனத்தன ...... தனதான
முத்தமு லாவு தனத்தியர் சித்தச னாணை செலுத்திகள்
     முத்தமி டாம னுருக்கிக ...... ளிளைஞோர்பால் 
முட்டவு லாவி மருட்டிகள் நெட்டிலை வேலின் விழிச்சியர்
     முப்பது கோடி மனத்திய ...... ரநுராகத் 
தத்தைக ளாசை விதத்தியர் கற்புர தோளின் மினுக்கிகள்
     தப்புறு மாற கமெத்திக ...... ளளவேநான் 
தட்டழி யாது திருப்புகழ் கற்கவு மோத வுமுத்தமிழ்
     தத்துவ ஞான மெனக்கருள் ...... புரிவாயே 
மத்தக யானை யுரித்தவர் பெற்றகு மார இலட்சுமி
     மைத்துன னாகி யவிக்ரமன் ...... மருகோனே 
வற்றிட வாரி திமுற்றிய வெற்றிகொள் சூரர் பதைப்புற
     வற்புறு வேலை விடுத்தரு ...... ளிளையோனே 
சித்திர மான குறத்தியை யுற்றொரு போது புனத்திடை
     சிக்கென வேத ழுவிப்புணர் ...... மணவாளா 
செச்சையு லாவு பதத்தின மெய்த்தவர் வாழ்வு பெறத்தரு
     சித்தவி சாக வியற்சுரர் ...... பெருமாளே.
முத்து மாலை உலவுகின்ற மார்பினை உடையவர், மன்மதனின் கட்டளைகளை நடத்துபவர்கள், முத்தம் தந்து மனத்தை உருக்குபவர்கள், இளைஞோர்கள் இடத்தில் நன்றாகக் கலந்து (அவர்களை) மயங்கச் செய்பவர்கள், நீண்ட இலையை ஒத்த வேலை நிகர்க்கும் கண்களை உடையவர்கள், பல கோடிக் கணக்கான எண்ணங்களை உடையவர்கள், காமப் பற்றை விளைக்கும் கிளி போன்றவர்கள், ஆசைகளைக் காட்டுபவர்கள், பச்சைக் கற்பூரம் அளாவிய தோள்களோடு மினுக்குபவர்கள், தப்பான வழியில் செல்லும் மனத்துடன் வஞ்சிக்கும் வேசிகள் இடத்திலே நான் நிலை குலையாது, உனது திருப்புகழைக் கற்பதற்கும் எப்போதும் ஓதுவதற்கும் (இயல், இசை, நாடகம் ஆகிய) முத்தமிழ் தத்துவ ஞானத்தை எனக்கு அருள்வாயாக. கும்பத் தலத்தை உடைய (கயாசுரன் என்ற) யானையின் தோலை உரித்தவராகிய சிவபெருமான் அருளிய மகனே, லட்சுமிக்கு மைத்துன* முறையில் உள்ள வலிமையாளனான திருமாலுக்கு மருகனே, கடல் வற்றிப் போகவும், நிரம்ப வெற்றி மமதையுடன் விளங்கிய சூரர்கள் பதைக்கும்படியாகவும், வலிமை உடைய வேலாயுதத்தைச் செலுத்தி அருளிய இளையோனே, அழகிய குறப்பெண் வள்ளியை அடைந்து, ஒரு சமயத்தில் தினைப் புனத்தில் சிக்கெனத் தழுவிச் சேர்ந்த மணவாளனே, வெட்சி மலர் சூழும் பதத்தினனே, உண்மைத் தவசிகள் அழியாத இன்ப வாழ்க்கையைப் பெறுமாறு உதவுகின்ற சித்த மூர்த்தியே, விசாகனே, தகுதியுள்ள தேவர்களின் பெருமாளே. 
* ஒரு சமயம் திருமாலும், அவரது அம்சமான உபேந்திரரும், லக்ஷ்மியும் உரையாடிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த கண்வ முநிவரைக் கவனிக்காததால், முநிவர் கடுங்கோபம் அடைந்து அவர்களை முறையே சிவ முநிவராகவும், வேடர் மன்னனாகவும், மானாகவும் பிறக்க சபித்து விடுகிறார். அடுத்த பிறப்பில் சிவமுநிவரான திருமாலுக்கும், மானாகிய லக்ஷ்மிக்கும் பிறக்கும் வள்ளியை உபேந்திரனான வேடர் மன்னன் நம்பிராஜன் கண்டெடுத்து வளர்க்கிறான். வள்ளியின் வளர்ப்புத் தந்தை உபேந்திரன் திருமாலின் தம்பியானதால் லக்ஷ்மிக்கு மைத்துனன் முறை ஆகிறது. எனவே வள்ளியை மணந்த முருகன் லக்ஷ்மியின் மைத்துனனின் மருகன் என்று இங்கு குறிப்பிடுகிறார்.
பாடல் 1192 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தனன தானன தத்தான தானன
     தனன தானன தத்தான தானன
          தனன தானன தத்தான தானன ...... தனதான
முருகு லாவிய மைப்பாவு வார்குழல்
     முளரி வாய்நெகிழ் வித்தார வேல்விழி
          முடுகு வோர்குலை வித்தான கோடேனு ...... முலையாலே 
முறைமை சேர்கெட மைத்தார்வு வார்கடல்
     முடுகு வோரென எய்த்தோடி யாகமு
          மொழியும் வேறிடு பித்தேறி னாரெனு ...... முயல்வேகொண் 
டுருகு வார்சில சிற்றாம னோலய
     முயிரு மாகமு மொத்தாசை யோடுள
          முருகி தீமெழு கிட்டான தோவென ...... வுரையாநண் 
புலக வாவொழி வித்தார்ம னோலய
     முணர்வு நீடிய பொற்பாத சேவடி
          யுலவு நீயெனை வைத்தாள வேயருள் ...... தருவாயே 
குருகு லாவிய நற்றாழி சூழ்நகர்
     குமர னேமுனை வெற்பார்ப ராபரை
          குழக பூசுரர் மெய்க்காணும் வீரர்தம் ...... வடிவேலா 
குறவர் சீர்மக ளைத்தேடி வாடிய
     குழையு நீள்கர வைத்தோடி யேயவர்
          குடியி லேமயி லைக்கோடு சோதிய ...... வுரவோனே 
மருகு மாமது ரைக்கூடல் மால்வரை
     வளைவு ளாகிய நக்கீர ரோதிய
          வளகை சேர்தமி ழுக்காக நீடிய ...... கரவோனே 
மதிய மேவிய சுற்றாத வேணியர்
     மகிழ நீநொடி யற்றான போதினில்
          மயிலை நீடுல கைச்சூழ வேவிய ...... பெருமாளே.
நறுமணம் வீசி உலவும் மை தீட்டிய நீண்ட கூந்தலின் மீதும், தாமரை போன்ற வாயின் மீதும், அசைகின்ற விரிந்த வேல் போன்ற கண்ணின் மீதும், விரைந்து செல்வோர்களின் மனத்தைக் குலைப்பதற்கு அடிப்படைக் காரணமாக விளங்கும் மலை போன்ற மார்பகத்தின் மீதும், ஒழுக்கம் சிதறுண்டு கெட, கறுத்து (நீர்) நிறைந்துள்ள பெரிய கடலில் (பயணம்) விரைந்து செல்வார் போல் இளைப்புடன் ஓடி, உடலும் பேச்சும் மாறுதல் உறும்படி பித்து ஏறினார் என்று சொல்லும்படி முயற்சிகளை மேற்கொண்டு, அந்த உலக நெறியிலே சில அற்ப ஆன்மாக்கள் உள்ளம் உருகுபவர்கள். மன ஒடுக்கம் உற்று உயிரும் உடலும் ஒரு வழிப்பட்டு, பக்தியுடன் மனம் உருகி தீயில் இடப்பட்ட மெழுகோ என்று சொல்லும்படி அன்பு மொழிகளைக் கொண்டு உன்னைப் புகழ்ந்துரைத்து, இவ்வுலகத்தில் மண், பெண், பொன் என்ற மூவாசைகளையும் நீக்கினவர்களாய மனம் ஒடுங்கிய ஞான உணர்ச்சியில் உனது அழகிய பாதசேவை தருவதான திருவடிகளுடன் உலவுகின்ற நீ என்னை உன் மனத்தில் வைத்து அருள் புரிவாயாக. நீர்ப்பறவைகள் உலவுகின்ற அழகிய கடல் சூழ்ந்துள்ள திருச்செந்தூரில் விளங்கும் குமரனே, தலைமை பெற்ற மலையாகிய இமயத்தில் பிறந்த பரதேவதையான பார்வதியின் குழந்தையே, மறையோர்களுக்கு உரியவனே, மெய்ப்பொருளைக் காணும் வடிவேலனே, வேடர்களுடைய அழகிய மகளைத் தேடி வாடிக் குழைந்தவனே, பெரிய களவு எண்ணத்துடன் ஓடிச் சென்று வேடர்கள் இருப்பிடத்தில் இருந்த மயில் போன்ற வள்ளியைக் கொண்டு சென்ற ஜோதி சொரூபமான திண்ணியனே, வாழை, மாமரம் இவை நிரம்பிய கூடல் எனப்படும் மதுரைக்கு அருகில் உள்ள பெருமை வாய்ந்த திருப்பரங்குன்றம் என்னும் மலையில் வட்டமான குகையில் இருந்த நக்கீரர்* எனும் புலவர் பாடிய வளமை வாய்ந்த தமிழைக் (திருமுருகாற்றுப்படையைக்) கேட்கும் பொருட்டு நெடு நாள் மறைந்திருந்து காத்திருந்தவனே, சந்திரனைத் தரித்துள்ள சடையினர், விரிந்த சடையினர் ஆகிய சிவபெருமான் மகிழும்படி நீ ஒரு நொடிப் பொழுதுக்கும் குறைந்த நேரத்தில் உனது மயில் வாகனத்தை பெரிய உலகைச் சூழ்ந்து வரும்படி தூண்டிச் செலுத்திய பெருமாளே. 
* முருகனைப் பாடுவதில்லை என நக்கீரர் வைராக்கியம் கொண்டிருந்தார்.அவரைக் குகையில் சிறைப்படுத்தித் திருமுருகாற்றுப்படையைப் பாட வைத்தார் முருக வேள்.
பாடல் 1193 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தனனானத் தனந்த தந்தன
     தனனானத் தனந்த தந்தன
          தனனானத் தனந்த தந்தன ...... தனதான
முலைமேலிற் கலிங்க மொன்றிட
     முதல்வானிற் பிறந்த மின்பிறை
          நுதல்மேல்முத் தரும்ப புந்தியி ...... லிதமார 
முகநேசித் திலங்க வும்பல
     வினைமூசிப் புரண்ட வண்கடல்
          முரணோசைக் கமைந்த வன்சர ...... மெனமூவா 
மலர்போலச் சிவந்த செங்கணில்
     மருள்கூர்கைக் கிருண்ட அஞ்சனம்
          வழுவாமற் புனைந்து திண்கய ...... மெனநாடி 
வருமாதர்க் கிரங்கி நெஞ்சமு
     மயலாகிப் பரந்து நின்செயல்
          மருவாமற் கலங்கும் வஞ்சக ...... மொழியாதோ 
தொலையாநற் றவங்க ணின்றுனை
     நிலையாகப் புகழ்ந்து கொண்டுள
          அடியாருட் டுலங்கி நின்றருள் ...... துணைவேளே 
துடிநேரொத் திலங்கு மென்கொடி
     யிடைதோகைக் கிசைந்த வொண்டொடி
          சுரர்வாழப் பிறந்த சுந்தரி ...... மணவாளா 
மலைமாளப் பிளந்த செங்கையில்
     வடிவேலைக் கொடந்த வஞ்சக
          வடிவாகக் கரந்து வந்தமர் ...... பொருசூரன் 
வலிமாளத் துரந்த வன்திறல்
     முருகாமற் பொருந்து திண்புய
          வடிவாமற் றநந்த மிந்திரர் ...... பெருமாளே.
தனங்களின் மேல் ஆடை பொருந்த, வானில் அப்போது தோன்றிய ஒளி வீசும் பிறைச் சந்திரன் போன்ற நெற்றியின் மேல் முத்துப் போல வேர்வை அரும்ப, இதயமெல்லாம் இன்பம் நிரம்ப, முகத்தில் நேசத் தன்மை விளங்கவும், பல வஞ்சக எண்ணங்கள் நிறைந்தும், அலைகள் புரளும் வளப்பமுள்ள கடலின் வலிய ஓசைக்கு பொருந்தி (மன்மதன் வீசும்) வலிய பாணங்கள் என்று சொல்லும்படியும், வாடாத பூக்களைப் போலச் சிவந்தும் இருந்த செவ்விய கண்களில், மயக்கம் மிகக் கொள்ளுவதற்கு கரிய மையை தவறாமல் அணிந்து, திண்ணிய யானை போல மதத்துடன் தேடி வருகின்ற பெண்கள்பால் இரக்கம் வைத்து, மனமும் காம மயக்கம் பெருகி, உனக்குச் செய்ய வேண்டிய தொண்டுகளில் ஈடுபடாமல் கலங்குகின்ற மோக நிலை என்னை விட்டு அகலாதோ? கெடாத நல்ல தவ நிலைகளில் இருந்து உன்னை நிலைத்த புத்தியுடன் புகழ்ந்து கொண்டிருக்கும் அடியார்களின் உள்ளத்தே விளக்கத்துடன் இருந்து துணை புரிகின்ற செவ்வேளே, உடுக்கைக்கு நேர் ஒப்பாக நின்று நன்கு விளங்குவதும் மெல்லிய கொடி போன்றதுமான இடையை உடையவளும், மயில் போன்றவளும், ஒளி பொருந்திய கை வளையை அணிந்தவளும், தேவர்கள் வாழப் பிறந்தவளுமாகிய அழகி தேவயானையின் கணவனே, கிரவுஞ்ச மலை மாளும்படி அதைப் பிளந்து எறிந்த, செவ்விய கையில் உள்ள கூர்மையான வேலைக் கொண்டு, அந்த வஞ்சக வடிவுடன் ஒளித்து வந்து சண்டை செய்த சூரனுடைய வலிமை அழியும்படி நீக்கிய வன்மையைக் கொண்ட வீர முருகனே, மற் போருக்குத் தகுதியான வலிய திருப்புயங்களை உடையவனே, அழகனே, மேலும் அளவற்ற இந்திரர்களுக்குப் பெருமாளே. 
பாடல் 1194 - பொதுப்பாடல்கள் 
ராகம் - சங்கரானந்தப்ரியா 
தாளம் - அங்கதாளம் - 7 1/2 
- எடுப்பு - 1/2 அக்ஷரம் தள்ளி 
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தனன தந்தன தாத்தன தந்தன
     தனன தந்தன தாத்தன தந்தன
          தனன தந்தன தாத்தன தந்தன ...... தனதான
முனைய ழிந்தது மேட்டிகு லைந்தது
     வயது சென்றது வாய்ப்ப லுதிர்ந்தது
          முதுகு வெஞ்சிலை காட்டிவ ளைந்தது ...... ப்ரபையான 
முகமி ழிந்தது நோக்குமி ருண்டது
     இருமல் வந்தது தூக்கமொ ழிந்தது
          மொழித ளர்ந்தது நாக்குவி ழுந்தது ...... அறிவேபோய் 
நினைவ யர்ந்தது நீட்டல் முடங்கலு
     மவச மும்பல ஏக்கமு முந்தின
          நெறிம றந்தது மூப்பு முதிர்ந்தது ...... பலநோயும் 
நிலுவை கொண்டது பாய்க்கிடை கண்டது
     சலம லங்களி னாற்றமெ ழுந்தது
          நிமிஷ மிங்கினி யாச்சுதென் முன்பினி ...... தருள்வாயே 
இனைய இந்திர னேற்றமு மண்டர்கள்
     தலமு மங்கிட வோட்டியி ருஞ்சிறை
          யிடுமி டும்புள ராக்கதர் தங்களில் ...... வெகுகோடி 
எதிர்பொ ரும்படி போர்க்குளெ திர்ந்தவர்
     தசைசி ரங்களு நாற்றிசை சிந்திட
          இடிமு ழங்கிய வேற்படை யொன்றனை ...... யெறிவோனே 
தினைவ னங்கிளி காத்தச வுந்தரி
     அருகு சென்றடி போற்றிம ணஞ்செய்து
          செகம றிந்திட வாழ்க்கைபு ரிந்திடு ...... மிளையோனே 
திரிபு ரம்பொடி யாக்கிய சங்கரர்
     குமர கந்தப ராக்ரம செந்தமிழ்
          தெளிவு கொண்டடி யார்க்குவி ளம்பிய ...... பெருமாளே.
¨தரியம் அற்றுப் போக, நானெனும் ஆணவம் அகல, வயது மிகவும் ஏற, வாயிலுள்ள பற்கள் உதிர, முதுகு வளைந்த வில்லைப் போல் கூன் விழ, ஒளி வீசிய முகம் மங்கிப்போய் தொங்க, பார்வையும் இருளடைய, இருமல் வந்து, தூக்கம் இல்லாமல் போக, பேச்சு தளர, நாக்கு செயலற்று விழ, புத்தி கெட்டுப்போய் ஞாபக மறதி ஏற்பட, காலை நீட்டுவதும் மடக்குவதுமாக ஆகி, மயக்கமும், பல கவலைகளும் ஏற்பட்டு, ஒழுக்கவழி மறந்து, கிழத்தன்மை முற்றி, பலவித வியாதிகள் நிலையாகப் பீடிக்க, பாயில் நிரந்தரப் படுக்கையாகிவிட, மல மூத்திரங்களின் துர்நாற்றம் எழ, இன்னும் ஒரே நிமிஷத்தில் எல்லாம் ஆயிற்று (உயிர் போய் விடும்) என்று உலகத்தார் பேசுவதற்கு முன்பு, நல்லவிதமாக அருள்வாயாக. வருந்துகிற இந்திரனின் மேன்மையும், தேவர்கள் உலகமும் ஒளி மங்கிட அவர்களை ஓட்டி, கடும் சிறையிடும் கொடுமையான அரக்கரில் பலகோடி பேர் எதிரே சண்டையிட, போர்க்களத்தில் எதிர்த்தவர்களின் சதைகளும் தலைகளும் நாலா பக்கமும் சிதறிட இடி போல் ஒலித்த வேலாயுதத்தை வீசியவனே, தினைப்புனத்தில் கிளிகள் வாராமல் காத்த அழகி வள்ளியின் பக்கத்தில் சென்று அவளது திருவடியைப் போற்றி மணந்து உலகறிய வாழ்க்கை நடத்தும் இளையோனே, திரிபுரத்தை எரித்துச் சாம்பலாக்கிய சங்கரர் மகனே, கந்தா, பராக்கிரம மூர்த்தியே, செந்தமிழை தெளிவோடு அடியார்க்கு உபதேசித்த பெருமாளே. 
பாடல் 1195 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தத்தத்தத் தத்தத் தனதன
     தத்தத்தத் தத்தத் தனதன
          தத்தத்தத் தத்தத் தனதன ...... தனதான
மைக்குக்கைப் புக்கக் கயல்விழி
     யெற்றிக்கொட் டிட்டுச் சிலைமதன்
          வர்க்கத்தைக் கற்பித் திடுதிற ...... மொழியாலே 
மட்டிட்டுத் துட்டக் கெருவித
     மிட்டிட்டுச் சுற்றிப் பரிமள
          மச்சப்பொற் கட்டிற் செறிமல ...... ரணைமீதே 
புக்குக்கைக் கொக்கப் புகுமொரு
     அற்பச்சிற் றிற்பத் தெரிவையர்
          பொய்க்குற்றுச் சுற்றித் திரிகிற ...... புலையேனைப் 
பொற்பித்துக் கற்பித் துனதடி
     அர்ச்சிக்கச் சற்றுக் க்ருபைசெய
          புத்திக்குச் சித்தித் தருளுவ ...... தொருநாளே 
திக்குக்குத் திக்குத் திகுதிகு
     டுட்டுட்டுட் டுட்டுட் டுடுடுடு
          தித்தித்தித் தித்தித் திதியென ...... நடமாடுஞ் 
சித்தர்க்குச் சுத்தப் பரமநல்
     முத்தர்க்குச் சித்தக் க்ருபையுள
          சித்தர்க்குப் பத்தர்க் கருளிய ...... குருநாதா 
ஒக்கத்தக் கிட்டுத் திரியசுர்
     முட்டக்கொட் டற்றுத் திரிபுர
          மொக்கக்கெட் டிட்டுத் திகுதிகு ...... வெனவேக 
உற்பித்துக் கற்பித் தமரரை
     முற்பட்டக் கட்டச் சிறைவிடு
          மொட்குக்டக் கொற்றக் கொடியுள ...... பெருமாளே.
மையைக் கயல்மீன் போன்ற கண்களில் கொட்டிப் பரப்பி பூசிக்கொண்டு, கரும்புவில் ஏந்திய மன்மதனின் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட ஆண்களுக்கு காமபாடம் சொல்லிக் கொடுக்கும் சாமர்த்தியமான பேச்சாலே தேன் போல இனிக்கச் செய்து, துஷ்டத்தனமும், கர்வமும் கலந்த பேச்சுக்களை இடையிடையே பேசிப்பேசி, சுற்றி வளைத்துக் கட்டிக்கொண்டு, நறுமணம் மிக்க மஞ்சம் எனப்படும் அழகிய கட்டிலின் மேல் நிறைந்த மலர்ப் படுக்கையின் மீது, கையிலிருந்த பொருளுக்குத் தக்கபடி மனத்தைச் செலுத்தும், இழிவான சிற்றின்பப் போகத்தைத் தரும் விலைமாதர்களின் பொய்யில் அகப்பட்டு, சுற்றித் திரிகின்ற சண்டாளனாகிய என்னைப் பொலிவு உண்டாக்கி உபதேச மொழிகளைப் போதித்து, உனது திருவடியை அர்ச்சித்துப் பூஜிக்க, சற்று கிருபை செய்வதும், என் புத்தியில் அந்த உபதேசம் நன்றாகச் சித்தித்துப் பயன் தருவதான ஒரு பாக்கிய நாள் எனக்குக் கிடைக்குமோ? திக்குக்குத் திக்குத் திகுதிகு டுட்டுட்டுட் டுட்டுட் டுடுடுடு தித்தித்தித் தித்தித் திதியென்று நடனமாடுகின்ற சித்த மூர்த்தியாம் சிவபெருமானுக்கும், பரிசுத்தமுள்ள, மேலான, நல்ல ஜீவன் முக்தர்களுக்கும், உள்ளத்தில் கருணையுள்ள சித்த புருஷர்களுக்கும், பக்தர்களுக்கும் அருள் பாலித்த குருநாதனே, ஒருசேர நிலைபெற்றதாய் திரிந்து கொண்டிருந்த முப்புரத்து அசுரர்கள் எல்லாருடைய ஆர்ப்பாட்டமும் அடங்கி, திரிபுரங்கள் மூன்றும் ஒன்றாய் அழிந்து போய், திகுதிகு என்று வேகும்படிச் செய்தவராகிய சிவபிரானுக்கு (பிரணவ மந்திரத்தை) உபதேசம் செய்து, தேவர்களை முன்பு பட்ட கஷ்டங்கள் கொண்ட சிறையினின்றும் விடுவித்தவனே, ஒளி வீசும் கோழிக் கொடியாம் வெற்றிக் கொடியை உடைய பெருமாளே. 
பாடல் 1196 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ஹம்ஸத்வனி 
தாளம் - அங்கதாளம் - 7 1/2 
தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1, தகிட-1 1/2, தகதிமி-2
தான தனதனன தான தாத்தன
     தான தனதனன தான தாத்தன
          தான தனதனன தான தாத்தன ...... தனதான
மோது மறலியொரு கோடி வேற்படை
     கூடி முடுகியெம தாவி பாழ்த்திட
          மோக முடையவெகு மாதர் கூட்டமு ...... மயலாரும் 
மூளு மளவில்விசை மேல்வி ழாப்பரி
     தாப முடனும்விழி நீர்கொ ளாக்கொடு
          மோக வினையில்நெடு நாளின் மூத்தவ ...... ரிளையோர்கள் 
ஏது கருமமிவர் சாவெ னாச்சிலர்
     கூடி நடவுமிடு காடெ னாக்கடி
          தேழு நரகினிடை வீழ்மெ னாப்பொறி ...... யறுபாவி 
ஏழு புவனமிகு வான நாட்டவர்
     சூழ முநிவர்கிளை தாமு மேத்திட
          ஈச னருள்குமர வேத மார்த்தெழ ...... வருவாயே 
சூது பொருதரும னாடு தோற்றிரு
     வாறு வருஷம்வன வாச மேற்றியல்
          தோகை யுடனுமெவி ராட ராச்சிய ...... முறைநாளிற் 
சூறை நிரைகொடவ ரேக மீட்டெதி
     ராளு முரிமைதரு மாறு கேட்டொரு
          தூது செலஅடுவ லாண்மை தாக்குவ ...... னெனமீள 
வாது சமர்திருத ரான ராட்டிர
     ராஜ குமரர்துரி யோத னாற்பிறர்
          மாள நிருபரொடு சேனை தூட்பட ...... வரிசாப 
வாகை விஜயனடல் வாசி பூட்டிய
     தேரை முடுகுநெடு மால்ப ராக்ரம
          மாயன் மருகஅமர் நாடர் பார்த்திப ...... பெருமாளே.
தாக்குகின்ற யமன் தனது ஒப்பற்ற கூரிய வேற்படையுடன் வேகமாக வந்து எனது உயிரை (உடலினின்றும்) பிரிக்க, (என் மேல்) ஆசை கொண்டிருந்த பல மாதர்களின் கூட்டமும், பிறரும், துக்கம் மூண்டு மிகவும் வேகமாக மேலே விழுந்து, இரக்கத்துடனே கண்களில் நீர் கொண்டு நிற்க, கொடிய மோக மயக்கத்தில் நீண்ட நாட்கள் இருந்த மூத்தவர்களும், இளமையானவர்களும், இவர் இறந்ததற்கு என்ன காரணம் என்று விசாரிக்கவும், பிணத்துக்குப் பின் சிலர் கூடி சுடு காட்டுக்கு நடவுங்கள் என்று மற்றவர் கூறவும், (இவனை) விரைவாக ஏழு நரகினிடையே வீழ்த்துங்கள் என்று சிலர் கூறவும், இவன் புலன்களை நல்ல வழியில் செலுத்தாத பாவி எனச் சிலர் கூறவும் (இடம் கொடுக்காமல்), ஏழு உலகங்களில் உள்ளவர்களும், சிறந்த தேவ நாட்டவரும், சூழ்ந்துள்ள முனிவர் கூட்டங்களும் போற்றி நிற்க, சிவபெருமான் அருளிய குமரனே, வேதம் ஒலித்து எழ, நீ எழுந்தருள்வயாக. சூதுப்போர் செய்த தருமபுத்திரன் தன் நாட்டைச் சூதில் இழந்து, பன்னிரண்டு ஆண்டுகள் காட்டில் வாழும் வாழ்க்கையை பாண்டவர்கள் ஏற்றுக் கொண்டு வசித்தபின், கற்பியல் உடைய மயில் போன்ற மனைவி திரெளபதியுடன் விராட நாட்டில் (ஓர் ஆண்டு அஞ்ஞாத வாசம் செய்து) காலம் கழித்து வந்த நாளில், பசுக்களைக் கொள்ளை அடித்துக் கொண்டு விராட நாட்டிலிருந்து துரியோதனாதியர் செல்ல, அப்பசுக்களை எதிர்ச் சென்று மீட்டுவந்து, அரசாட்சி உரிமையைத் தரும்படி கேட்பதற்காக, ஒப்பற்ற தூதனாகக் கண்ணணை அனுப்ப, போருக்கு உரிய வலிய ஆண்மையோடு தாக்குவேன் (ஆனால் அரசுரிமையைத் தரமாட்டேன்) என்று துரியோதனன் கூற, தூதினின்றும் வெற்றியின்றி கண்ணன் மீண்டும் வரவும், வலிய வாது பேசிப் போருக்கு வந்த திருதராஷ்டிர ராஜனுடைய குமாரர்களும், துரியோதனன் காரணமாகப் போரிட்ட மற்றவர்களும் இறக்க, பிற அரசர்களோடும் சேனைகள் எல்லாம் தூள்பட்டு அழிய, வரிகள் பொருந்திய காண்டீபம் என்ற வில்லினால் வெற்றியைக் கொண்ட அர்ச்சுனனுடைய வலிய குதிரைகள் பூட்டிய ரதத்தை வேகமாகச் செலுத்திய பெரிய திருமால், வல்லமை பொருந்திய மாயோனின் மருகனே, விண்ணுலகத்தோருக்குச் சக்ரவர்த்தியாகிய பெருமாளே. 
பாடல் 1197 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தனனத்தன தானன தானன
     தனனத்தன தானன தானன
          தனனத்தன தானன தானன ...... தனதான
வடிகட்டிய தேனென வாயினி
     லுறுதுப்பன வூறலை யார்தர
          வரைவிற்றிக ழூடலி லேதரு ...... மடவார்பால் 
அடிபட்டலை பாவநிர் மூடனை
     முகடித்தொழி லாமுன நீயுன
          தடிமைத்தொழி லாகஎ நாளினி ...... லருள்வாயோ 
பொடிபட்டிட ராவணன் மாமுடி
     சிதறச்சிலை வாளிக ளேகொடு
          பொருகைக்கள மேவிய மாயவன் ...... மருகோனே 
கொடுமைத்தொழி லாகிய கானவர்
     மகிமைக்கொள வேயவர் வாழ்சிறு
          குடிலிற்குற மானொடு மேவிய ...... பெருமாளே.
வடிகட்டப்பட்ட தேன் என்று சொல்லும்படி வாயினில் நுகர் பொருளாகிய இதழ் ஊறலை அனுபவிக்க, ஓரளவு ஊடலை நிகழ்த்தி, பின்பு தருகின்ற மாதர்களிடத்தே அலைப்புண்டு அலைகின்ற பாவியும் முழு முட்டாளுமாகிய என்னை, கீழ்த்தரமான தொழிலையே மேற்கொண்டவனாய் இழிந்த நிலையை அடைவதற்கு முன்னம், உனக்கு அடிமைப் பணி செய்யும் (பாக்கியத்) தொழில் எனக்குக் கிடைக்கும்படி எந்த நாளில் அருள்வாயோ? பொடிபட்டுப் போய் ராவணனுடைய சிறந்த முடிகள் சிதறும்படி வில்லும் அம்புகளும் கொண்டு சண்டை செய்வதற்கு போர்க்களத்தை அடைந்த மாயவனாகிய ராமனின் மருகனே, கொடுந் தொழிலைச் செய்யும், காட்டில் வாழும் வேடர்கள் பெருமை அடையுமாறு, அவர்கள் வாழ்ந்திருந்த சின்னக் குடிசையில் மான் போன்ற குறப்பெண் வள்ளியோடு வீற்றிருந்த பெருமாளே. 
பாடல் 1198 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தத்த தனத்தத் தனத்த தத்தன
     தத்த தனத்தத் தனத்த தத்தன
          தத்த தனத்தத் தனத்த தத்தன ...... தனதான
வட்ட முலைக்கச் சவிழ்த்து வைத்துள
     முத்து வடத்தைக் கழுத்தி லிட்டிரு
          மைக்கு வளைக்கட் குறிப்ப ழுத்திய ...... பொதுமாதர் 
மட்ட மளிக்குட் டிருத்தி முத்தணி
     மெத்தை தனக்குட் செருக்கி வெற்றிலை
          வைத்த பழுப்பச் சிலைச்சு ருட்கடி ...... யிதழ்கோதிக் 
கட்டி யணைத்திட் டெடுத்து டுத்திடு
     பட்டை யவிழ்த்துக் கருத்தி தத்தொடு
          கற்ற கலைச்சொற் களிற்ப யிற்றுள ...... முயல்போதுங் 
கைக்கு ளிசைத்துப் பிடித்த கட்கமும்
     வெட்சி மலர்ப்பொற் பதத்தி ரட்சணை
          கட்டு மணிச்சித் திரத்தி றத்தையு ...... மறவேனே 
கொட்ட மிகுத்திட் டரக்கர் பட்டணம்
     இட்டு நெருப்புக் கொளுத்தி யத்தலை
          கொட்டை பரப்பச் செருக்க ளத்திடை ...... யசுரோரைக் 
குத்தி முறித்துக் குடிப்ப ரத்தமும்
     வெட்டி யழித்துக் கனக்க ளிப்பொடு
          கொக்க ரியிட்டுத் தெரித்த டுப்பன ...... வொருகோடிப் 
பட்ட பிணத்தைப் பிடித்தி ழுப்பன
     சச்ச ரிகொட்டிட் டடுக்கெ டுப்பன
          பற்கள் விரித்துச் சிரித்தி ருப்பன ...... வெகுபூதம் 
பட்சி பறக்கத் திசைக்குள் மத்தளம்
     வெற்றி முழக்கிக் கொடிப்பி டித்தயில்
          பட்ட றவிட்டுத் துரத்தி வெட்டிய ...... பெருமாளே.
வட்ட வடிவான மார்பகத்தில் அணிந்த கச்சை அவிழ்த்து வைத்திருக்கின்ற, முத்து மாலையை கழுத்தில் போட்டுக் கொண்டு மை பூசப்பட்ட இரண்டு குவளை மலர் போன்ற கண் கொண்டு தங்களது விருப்பத்தை நன்றாகத் தெரியப்படுத்துகின்ற விலைமாதர்கள். நறுமணப் படுக்கையில் அவர்களுடைய முத்தாலான அணிகலன்களை ஒழுங்கு படுத்தி, மெத்தையில் களிப்புடன் இருந்து, வெற்றிலையில் வைத்த பழுத்த பாக்குடன் கூடிய பசுமையான இலைச் சுருளைக் கடிக்கும் வாயிதழ் ஊறலைச் சிறிது சிறிதாகப் பருகி, கட்டி அணைத்திட்டு எடுத்து, அவர்கள் அணிந்துள்ள பட்டாடையை அவிழ்த்து, மனதில் இன்பத்தோடு நான் கற்ற சிற்றின்ப நூல்களில் உள்ள சொற்களின் பயிற்சியில் என் மனம் முயற்சி செய்த போதிலும், உனது திருக்கையில் பொருந்த வைத்துப் பிடித்துள்ள வாளையும், வெட்சி மலர் சூழ்ந்த அழகிய திருவடியாகிய காப்பையும் உடை மணி முதலிய கட்டியுள்ள அழகிய சாமர்த்தியத்தையும் மறக்கவே மாட்டேன். இறுமாப்பு மிகுந்திட்ட அசுரர்களுடைய பட்டணங்களை தீயிட்டுக் கொளுத்தி, அவ்விடத்தில் அசுரர்களை போர்க்களத்தில் சிதறுண்ண வைக்க, (அப்போது) குத்தி முறித்து ரத்தத்தைக் குடிக்க வெட்டி அழித்து, மிக்க மகிழ்ச்சியுடன் ஆரவாரத்துடன கர்ச்சனை செய்து வெளிப்பட்டுக் கூடிய, ஒரு கோடிக்கணக்கில் அழிந்த பிணங்களைப் பிடித்து இழுப்பனவும், வாத்தியதைக் கொட்டிக் கொண்டு அடுக்குப் பாத்திரம் போல் எடுத்து அடுக்குவனவும், பற்களை விரியக் காட்டி சிரித்துக் கொண்டிருப்பனவுமாகிய நிறைய பூதங்கள். கருடன் முதலிய பறவைகள் மேலே பறந்து, திசைகள் தோறும் மத்தளங்கள் ஜெய பேரிகை முழக்க, வெற்றிக் கொடியை ஏந்தி, வேலாயுதத்தை நன்றாகச் செலுத்தி அசுரர்களைத் துரத்தி வெட்டிய பெருமாளே. 
பாடல் 1100 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தனதன தாத்த தாத்த தனதன தாத்த தாத்த
     தனதன தாத்த தாத்த ...... தனதான
வளைகர மாட்டி வேட்டி னிடைதுயில் வாட்டி யீட்டி
     வரிவிழி தீட்டி யேட்டின் ...... மணம்வீசும் 
மழைகுழல் காட்டி வேட்கை வளர்முலை காட்டி நோக்கின்
     மயில்நடை காட்டி மூட்டி ...... மயலாகப் 
புளகித வார்த்தை யேற்றி வரிகலை வாழ்த்தி யீழ்த்து
     புணர்முலை சேர்த்து வீக்கி ...... விளையாடும் 
பொதுமட வார்க்கு ஏற்ற வழியுறு வாழ்க்கை வேட்கை
     புலைகுண மோட்டி மாற்றி ...... யருள்வாயே 
தொளையொழு கேற்ற நோக்கி பலவகை வாச்சி தூர்த்து
     சுடரடி நீத்த லேத்து ...... மடியார்கள் 
துணைவன்மை நோக்கி நோக்கி னிடைமுறை யாய்ச்சி மார்ச்சொல்
     சொலியமு தூட்டி யாட்டு ...... முருகோனே 
இளநகை யோட்டி மூட்டர் குலம்விழ வாட்டி யேட்டை
     யிமையவர் பாட்டை மீட்ட ...... குருநாதா 
இயல்புவி வாழ்த்தி யேத்த எனதிடர் நோக்கி நோக்க
     மிருவினை காட்டி மீட்ட ...... பெருமாளே.
வளையல்களைக் கையில் மாட்டிக் கொண்டு, காம வேட்கையின் இடையே தூக்கத்தைக் கெடுத்து, ஈட்டி போல் கூரியதும் ரேகைகளை உடையதும் ஆகிய கண்களுக்கு மையை இட்டு, மலர் இதழ்களின் நறு மணம் வீசுகின்ற, கருமேகம் போன்ற கூந்தலைக் காட்டி, காமத்தை வளர்க்கும் மார்பினைக் காட்டி, மயில் போன்ற தமது நடை அழகைக் காட்டி, காமப் பற்று உண்டாகும்படி செய்து புளகிதம் கொள்ளும்படியான வார்த்தைகளை (வந்தவர்களின்) காதில் ஏற வைத்து, கட்டியுள்ள ஆடையைப் புகழ்ந்து பேசிக்கொண்டே இழுத்து, நெருங்கிப் பொருந்திய மார்பில் அணைத்துக் கட்டி விளையாடுகின்ற விலைமாதர்களுக்கு உகந்ததான வழியில் செல்லும் வாழ்க்கையில் விருப்பம் கொள்ளும் இழிவான என் குணத்தை ஓட்டி நீக்கி, எனக்கு அருள் புரிவாயாக. (குழல் போன்ற) தொளைக் கருவிகளில் (பரந்து வரும் இசையின்) மேன்மையைக் கேட்டு, பல விதமான வாத்திய வகைகளை பெருக்க ஒலித்து, உனது ஒளி வீசும் திருவடிகளை தினந்தோறும் போற்றி வணங்கும் அடியவர்களின் துணைவனே, உனது வலிமையைக் கண்டு, தங்கள் விருப்பத்தினிடையே ஒருவர் பின் ஒருவராக முறைப்படி (கார்த்திகை மாதர்களாகிய) தாய்மார்கள் அன்பு வார்த்தைகளைக் கூறி, பாலை ஊட்டி, உன்னைத் தாலாட்டித் துங்கச் செய்த முருகனே, புன்சிரிப்பைச் சிரித்து*, மூடர்களாகிய அசுரர்களின் குலம் அழிய அவர்களை வாட்டி, சோர்வுற்றிருந்த தேவர்களின் துன்பத்தை நீக்கிய குரு நாதனே, தகுதியுள்ள உலகப் பெரியோர்கள் வாழ்த்திப் போற்ற, எனது வருத்தங்களைக் கண்டு, உனது அருட் பார்வையால், என் இரு வினைகளின் நிலையை எனக்குப் புலப்படுத்தி, என்னை இழிந்த குணத்தினின்றும் மீள்வித்த பெருமாளே. 
* சூரனுடைய சேனைகள் முருகனைச் சூழ்ந்த போது அந்தச் சேனைகளைப் புன்சிரிப்பால் முருக வேள் எரித்தார்.
பாடல் 1200 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தானன தனன தனத்தத்த
     தானன தனன தனத்தத்த
          தானன தனன தனத்தத்த ...... தனதான
வாடையில் மதனை யழைத்துற்று
     வாள்வளை கலக லெனக்கற்றை
          வார்குழல் சரிய முடித்திட்டு ...... துகிலாரும் 
மால்கொள நெகிழ வுடுத்திட்டு
     நூபுர மிணைய டியைப்பற்றி
          வாய்விட நுதல்மி சைபொட்டிட்டு ...... வருமாய 
நாடக மகளிர் நடிப்புற்ற
     தோதக வலையி லகப்பட்டு
          ஞாலமு முழுது மிகப்பித்த ...... னெனுமாறு 
நாணமு மரபு மொழுக்கற்று
     நீதியு மறிவு மறக்கெட்டு
          நாயடி மையும டிமைப்பட்டு ...... விடலாமோ 
ஆடிய மயிலி னையொப்புற்று
     பீலியு மிலையு முடுத்திட்டு
          ஆரினு மழகு மிகப்பெற்று ...... யவனாளும் 
ஆகிய விதண்மி சையுற்றிட்டு
     மானின மருள விழித்திட்டு
          ஆயுத கவணொ ருகைச்சுற்றி ...... விளையாடும் 
வேடுவர் சிறுமி யொருத்திக்கு
     யான்வழி யடிமை யெனச்செப்பி
          வீறுள அடியி ணையைப்பற்றி ...... பலகாலும் 
வேதமு மமர ருமெய்ச்சக்ர
     வாளமு மறிய விலைப்பட்டு
          மேருவில் மிகவு மெழுத்திட்ட ...... பெருமாளே.
தென்றலைத் தேராகக் கொண்டு வருகின்ற மன்மதனை வரவழைத்து, ஒளி வீசும் வளையல்கள் கல கல் என்று ஒலி செய்ய, கற்றையான நீண்ட கூந்தல் சரிந்து விழ அதை முடிந்து, ஆடையை எப்படிப்பட்டவரும் ஆசை கொள்ளும்படியான வகையில் வேண்டுமென்றே தளர்த்தி உடுத்தி, சிலம்பு இரண்டு பாதங்களிலும் பற்றிச் சூழ்ந்து ஒலி செய்ய, நெற்றியில் பொட்டு அணிந்து வருகின்ற, மாயமும் ஆடல்களும் வல்ல விலைமாதர்களின் பாசாங்குச் சூழ்ச்சி கொண்ட வஞ்சக வலையில் சிக்கிக்கொண்டு, உலகில் உள்ளோர் அனைவரும் இவன் பெரிய பித்தன் என்று கூறும்படி, என் மானமும் குடிப்பிறப்பும் ஒழுக்கமும் கெட்டு, நீதி, அறிவு இவை அடியோடு கெட்டு, நாய் அனைய அடிமையாக (அம்மாதர்களுக்கு) அடிமையாகி விடலாமோ? ஆடுகின்ற மயிலை நிகராகி, மயில் இறகையும் தழையிலைகளையும் உடம்பில் உடுத்திக் கொண்டு, யாருக்கும் இல்லாத அழகை நிரம்பப் பெற்று, இளமை உடையவளாய் (தினைப் புனத்தில் கட்டப்பட்டப்) பரண் மீது வீற்றிருந்து, மானின் கூட்டங்கள் மருண்டு அதிசயித்து விழிக்கும்படிச் செய்து, கவண் கல் என்னும் ஆயுதத்தை ஒரு கையில் சுற்றி (பறவைகளை விரட்டி) விளையாடிய வேடப் பெண்ணாகிய ஒப்பற்றவளாகிய வள்ளிக்கு நான் உனக்கு வழி அடிமை என்று கூறி, பெருமை பொருந்திய அவளுடைய இரண்டு திருவடிகளையும் பிடித்துக் கொண்டு, பல முறையும், வேதமும் தேவர்களும் நிலை பெற்ற சக்ரவாள கிரியும் அறியும்படி, அதையே கூறி, (அவளுக்கு) விலைப்பட்ட அடிமையாகி (அங்ஙனம் அடிமைப்பட்டுள்ளதை) மேரு மலையில் நன்றாக விளங்கும்படி (சிலா சாசனமாக) எழுதி வைத்துள்ள பெருமாளே.

பாடல் 1151 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனத்த தானன தானான தந்தன     தனத்த தானன தானான தந்தன          தனத்த தானன தானான தந்தன ...... தந்ததான

கறுத்து நீவிடு கூர்வேலி னுங்கடை     சிவத்து நீடிய வாய்மீன வொண்குழை          கடக்க வோடிய ஆலால நஞ்சன ...... வஞ்சநீடு 
கயற்க ணார்கனி வாயூற லுண்டணி     கழுத்து மாகமு மேகீப வங்கொடு          கலக்க மார்பக பாடீர குங்கும ...... கொங்கைமீதே 
உறுத்து மாரமு மோகாவ டங்களு     மருத்து நேரிய கூர்வாள்ந கம்பட          உடுத்த ஆடையும் வேறாயு ழன்றுக ...... ழன்றுவீழ 
உருக்கு நாபியின் மூழ்காம ருங்கிடை     செருக்கு மோகன வாராத ரங்களை          யொழிக்க வோர்வகை காணேனு றுந்துணை ...... யொன்றுகாணேன்
நிறத்த நூபுர பாதார விந்தமு     முடுத்த பீலியும் வாரார்த னங்களும்          நிறத்தி லேபடு வேலான கண்களும் ...... வண்டுபாட 
நெறித்த வோதியு மாயான்ம னம்பர     தவிக்க மால்தர லாமோக லந்திட          நினைக்க லாமென வேல்வேடர் கொம்புட ...... னண்புகூர்வாய் 
மறித்த வாரிதி கோகோவெ னும்படி     வெறுத்த ராவணன் வாணாளை யம்பினில்          வதைத்த மாமனு மேவார்பு ரங்கனல் ...... மண்டமேரு 
வளைத்த தாதையு மாறான குன்றமு     மனைத்து லோகமும் வேதாக மங்களும்          மதித்த சேவக வானாளு மும்பர்கள் ...... தம்பிரானே.

கோபித்து நீ விடுகின்ற (ரத்த முனையை உடைய) கூரிய வேலாயுதத்தைக் காட்டிலும் அதிகமாக நுனிப்பாகம் செந்நிறம் உற்று, நீண்ட மகர மீன் உருவத்தில் உள்ள ஒளி வீசும் குண்டலங்களையும் தாண்டி ஓடியதாயுள்ள, ஆலகால விஷத்தைப் போன்றதாய், வஞ்சனை எண்ணங்கள் நீண்ட தூரம் அமைந்துள்ளதாய், கயல் மீன் போன்ற கண்களை உடைய விலைமாதர்களின், கொவ்வைப் பழம் போன்ற வாயிதழ் ஊறலை பருகி, ஆபரணங்கள் பூண்ட கழுத்தும் உடலும் ஒன்றுபடும் தன்மையில் கலக்க, மார்பினிடத்தே உள்ள சந்தனம் குங்குமம் அணிந்த மார்பகங்களின் மேல் அழுத்தும் முத்து மாலையும் காம மயக்கத்தைத் தரும் பிற மாலைகளும் அறுபட, ஒழுங்குள்ள கூரிய வாள் போன்ற நகமும் மேலே பட, அணிந்த ஆடையும் வேறாக அலைப்புண்டு நழுவி விழ, இப்படி மனத்தை உருக்கும் தொப்புளில் முழுகி, இடையின் கண் களிப்புறும் காம மயக்கம் மிகுந்த ஆசைகளை ஒழித்துத் தொலைக்க ஒரு வழியும் தெரியவில்லை. உற்ற ஒரு துணையும் கூட நான் காண்கின்றேன் இல்லை. (முருகன் வள்ளியிடம் பேசிய பேச்சு) ஒளி பொருந்திய, சிலம்பணிந்த திருவடித் தாமரைகளும், உடுத்துள்ள மயில் தோகையும்*, கச்சு அணிந்த மார்பகங்களும், என் மார்பிலே வந்து தாக்குகின்ற வேல் போன்ற கண்களும், வண்டுகள் பாடி ஒலிக்க சுருள் கொண்ட கூந்தலுமாய் என் முன் நின்று, நான் மனம் வேதனைப்படும்படியான மோகத்தை எனக்கு நீ தருதல் நன்றோ? என்னைத் தழுவ நீ நினைப்பாயாக என்று வேல் ஏந்திய வேடர் பெண்ணாகிய வள்ளியுடன் நட்பு மிக்குப் பேசினவனே, (இலங்கைக்குப் போகா வண்ணம்) தடுத்த கடல் கோ கோ என்று கதறும்படி (பாணத்தை விட்டவனும்), தன்னை வெறுத்த ராவணன் வாழ்நாட்களை அம்பு கொண்டு வதைத்த மாமனாகிய திருமாலும், பகைவர்களது திரிபுரத்தில் தீ நெருங்கி எழும்படி மேருமலையை வில்லாக வளைத்த தந்தையாகிய சிவபெருமானும், பகைமை பூண்டிருந்த கிரெளஞ்ச மலையும், எல்லா உலகங்களும், வேதங்களும், ஆகமங்களும் மதித்து நின்ற வலிமை உள்ளவனே, வானுலகை ஆட்சி செய்யும் தேவர்களின் தம்பிரானே. 
* வேட்டுவ மக்கள் மயில் பீலியை ஆடையாக உடுப்பர்.

பாடல் 1152 - பொதுப்பாடல்கள் 
ராகம் - .....; தாளம் -

தனத்ததன தனத்ததன தனத்ததன தனத்ததன     தனத்ததன தனத்ததன ...... தனதான

குறிப்பரிய குழற்குமதி நுதற்புருவ விலுக்குமிரு     குழைக்கும்வடு விழிக்குமெழு ...... குமிழாலுங் 
கொடிப்பவள இதழ்க்குமிகு சுடர்த்தரள நகைக்குமமு     தினுக்குமிக வுறத்தழுவு ...... குறியாலும் 
அறப்பெரிய தனக்குமன நடைக்குமினி னிடைக்குமல     ரடிக்குமிள நகைக்குமுள ...... மயராதே 
அகத்தியனொ டுரைத்தபொரு ளளித்தருளி அரிப்பிரமர்     அளப்பரிய பதக்கமல ...... மருள்வாயே 
கறுத்தடரு மரக்கரணி கருக்குலைய நெருக்கியொரு     கணத்திலவர் நிணத்தகுடல் ...... கதிர்வேலாற் 
கறுத்தருளி யலக்கணுறு சுரர்க்கவர்கள் பதிக்குரிமை     யளித்திடரை யறுத்தருளு ...... மயில்வீரா 
செறுத்துவரு கரித்திரள்கள் திடுக்கிடவல் மருப்பையரி     சினத்தினொடு பறித்தமர்செய் ...... பெருகானிற் 
செலக்கருதி யறக்கொடிய சிலைக்குறவர் கொடித்தனது     சிமிழ்த்தனமு னுறத்தழுவு ...... பெருமாளே.

உவமைகள் சொல்ல முடியாத (விலைமாதர்களின்) கூந்தலுக்கும், பிறைச் சந்திரனைப் போன்ற நெற்றிக்கும், வில்லைப் போல் வளைந்த புருவத்துக்கும், இரண்டு செவிகளுக்கும், மாவடு போன்ற கண்களுக்கும், மேலெழுந்து விளங்கும் குமிழம்பூ போன்ற மூக்குக்கும், கொடிப் பவளம் போலச் சிவந்த வாயிதழுக்கும், மிக்க ஒளி வீசும் முத்துப் போன்ற பல்லுக்கும், அமுதினும் இனிக்கும் பேச்சுக்கும், நன்கு பொருந்தத் தழுவிச் சேரும் பெண்குறிக்கும், மிகப் பெரிதான மார்பகத்துக்கும், அன்னம் போன்ற நடைக்கும், மின்னல் போன்ற இடுப்புக்கும், பூப்போன்று மிருதுவான பாதத்திற்கும், புன் சிரிப்புக்கும் என் மனம் சோர்வு அடையாமல், அகத்திய முனிவருக்கு உபதேசித்த ஞானப் பொருளை எனக்கும் அளித்து அருளி, திருமாலும், பிரமனும் கண்டு அளத்தற்கு அரிதான உனது திருவடித் தாமரைகளைத் தந்து அருள் புரிவாயாக. கோபித்து எதிர்த்துத் தாக்கிய அசுரர்களுடைய சேனை அடியோடு நிலை குலைய அவர்களை நெருக்கி, ஒரு கணப் பொழுதில் அவர்களுடைய கொழுப்பு நிறைந்த குடலை ஒளி பொருந்திய வேலாயுதத்தால் சினந்து அழித்து, துக்கத்தில் ஆழ்ந்திருந்த தேவர்களுக்கு அவர்களுடைய பொன்னுலகத்தின் உரிமையைத் தந்து அவர்களுடைய வருத்தத்தை நீக்கி அருளிய மயில் வீரனே, கோபித்து வந்த யானைக் கூட்டங்கள் திடுக்கிடும்படி வலிய தந்தங்களை சிங்கங்கள் சினத்துடன் பறித்து போர் புரியும் பெருத்த காட்டில் போவதற்கு திட்டமிட்டு, மிகப் பொல்லாதவர்களான வில் ஏந்தும் குறவர்களின் கொடி போன்ற மகளாகிய வள்ளியின் சிமிழ் போன்ற மார்பினை அழுந்தத் தழுவும் பெருமாளே. 

பாடல் 1153 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனதனன தனதான தானான தானான     தனதனன தனதான தானான தானான          தனதனன தனதான தானான தானான ...... தனதான

குனகியொரு மயில்போல வாராம னோலீலை     விளையவினை நினையாம லேயேகி மீளாத          கொடியமன தநியாய மாபாத காபோதி ...... யெனஆசைக் 
கொளுவஅதில் மயலாகி வீறொடு போய்நீள     மலரமளி தனிலேறி யாமாறு போமாறு          குலவிநல மொழிகூறி வாரேறு பூணார ...... முலைமூழ்கி 
மனமுருக மதராஜ கோலாடு மாபூசல்     விளையவிழி சுழலாடி மேலோதி போய்மீள          மதிவதன மொளிவீச நீராள மாய்மேவி ...... யநுராக 
வகைவகையி லதிமோக வாராழி யூடான     பொருளளவ தளவாக யாரோடு மாலான          வனிதையர்கள் வசமாய நாயேனு மீடேற ...... அருள்வாயே 
எனதுமொழி வழுவாமல் நீயேகு கான்மீதி     லெனவிரகு குலையாத மாதாவு நேரோத          இசையுமொழி தவறாம லேயேகி மாமாது ...... மிளையோனும் 
இனிமையொடு வருமாய மா¡£ச மானாவி     குலையவரு கரதூஷ ணாவீரர் போர்மாள          இறுகிநெடு மரமேழு தூளாக வேவாலி ...... யுயிர்சீறி 
அநுமனொடு கவிகூட வாராக நீராழி     யடைசெய்தணை தனிலேறி மாபாவி யூர்மேவி          அவுணர்கிளை கெடநூறி யாலால மாகோப ...... நிருதேசன் 
அருணமணி திகழ்பார வீராக ராமோலி     யொருபதுமொர் கணைவீழ வேமோது போராளி          அடல்மருக குமரேச மேலாய வானோர்கள் ...... பெருமாளே.

கொஞ்சிக் குலவி ஒப்பற்ற மயில் போல் வந்து, மனத்தில் காம லீலைகள் தோன்ற (அதனால்) உண்டாகும் பயன்களை யோசியாமல், அந்தத் தீய வழியிலேயே சென்று (அவ் வழியினின்றும்) திரும்பி வராமல் (காலம் கழித்து) தீய மனதுடன், நியாயம் அற்ற பெரிய பாதக நெறியில் செல்லும் குருடன் இவன் என்று சொல்லும்படி, (மண், பெண், பொன் என்னும்) ஆசைகள் கொழுந்து விட்டு எரிய, அவற்றில் மயக்கம் கொண்டவனாய், தற்பெருமையுடன் நடந்தவனாய், நீண்ட காலம் மலர்ப் படுக்கையில் ஏறி, மேலான நிலைக்கு வரும் வழிகள் எல்லாம் கெட்டழியும்படி (வேசியர்களிடம்) கொஞ்சிப் பேசி இன்பமான பேச்சுக்களை மொழிந்து, கச்சு அணிந்துள்ளதும் முத்து மாலையைக் கொண்டதுமான மார்பகங்களில் முழுகி, மனம் உருக, மன்மதனுடைய பாணங்கள் இயற்றும் பெரிய காமப் போர் உண்டாக, கண்கள் சுழன்று, மேலே உள்ள கூந்தலை எட்டிப் பார்ப்பது போல அணுகி மீள, நிலவின் ஒளியைக் கொண்ட முகம் ஒளி வீச, வேர்வை நீர் மிகவும் பெருகி, காமப் பற்று ஊறி, விதம் விதமாக, மிக்க மோகம் என்னும் பெரிய கடலிடையே கிடைக்கும் (காமுகரால் கொடுக்கப்பட்ட) பொருளின் அளவுக்குத் தக்கபடி எல்லாரிடமும் காம இச்சையைக் காட்டும் விலைமாதர்களின் வசப்பட்டு நாயினும் கீழான அடியேனும் ஈடேறும் பொருட்டு அருள் புரிவாயாக. என்னுடைய பேச்சு தவறாமல் நீ காட்டுக்குப் போவாயாக என்று வஞ்சகம் குறைவு படாத மாதாவாகிய கைகேயியும் எடுத்துச் சொல்ல, சொன்ன சொல் தவறாமல் லக்ஷ்மி போன்ற சீதையும் தம்பி இலக்குமணனும் விருப்பமுடன் கூட வர காட்டுக்குப் போய், காட்டிடை வந்த மாய மானாகிய மா¡£சன் உயிர் துறக்க, போருக்கு வந்த கர, துஷணர்கள் முதலிய வீரர்கள் கொல்லப்பட, உறுதியாக இருந்த மராமரங்கள் ஏழும் ராமபாணத்தால் துளைபட, வாலியின் உயிர் மடிய, அனுமனோடு குரங்குகளும் கூடிவர கடலாகிய நீரை அணையிட்டு அடைத்து, அந்த அணை மீதில் ஏறிச் சென்று பெரிய பாதகனாகிய இராவணனுடைய ஊராகிய இலங்கைக்குப் போய் அரக்கர்களுடைய கூட்டம் எல்லாம் மாளப் பொடி செய்து, ஆலகால விஷம் போல பெரிய கோபத்துடன் வந்த அரக்கர் தலைவனான இராவணனுடைய சிவந்த இரத்தினங்கள் விளங்குவதும், கனத்ததுமான மகுடங்கள் ஒரு பத்தும் ஒரே அம்பால் அற்று விழும்படி தாக்கிய போர் வீரனான திருமாலின் வலிமை நிரம்பிய மருகனே, குமரேசனே, மேம்பட்ட தேவர்களின் பெருமாளே.

பாடல் 1154 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனதன தனனத் தனனத், தனதன தனனத் தனனத்     தனதன தனனத் தனனத் ...... தனதான

கொலைவிழி சுழலச் சுழலச் சிலைநுதல் குவியக் குவியக்     கொடியிடை துவளத் துவளத் ...... தனபாரக் 
குறியணி சிதறச் சிதறக் கரவளை கதறக் கதறக்     குயில்மொழி பதறப் பதறப் ...... ப்ரியமோகக் 
கலவியி லொருமித் தொருமித் திலவிதழ் பருகிப் பருகிக்     கரமொடு தழுவித் தழுவிச் ...... சிலநாளிற் 
கையிலுள பொருள்கெட் டருள்கெட் டனைவரும் விடுசிச் சியெனக்     கடியொரு செயலுற் றுலகிற் ...... றிரிவேனோ 
சலநிதி சுவறச் சுவறத் திசைநிலை பெயரப் பெயரத்     தடவரை பிதிரப் பிதிரத் ...... திடமேருத் 
தமனிய நெடுவெற் பதிரப் பணிமணி சிரம்விட் டகலச்     சமனுடல் கிழியக் கிழியப் ...... பொருசூரன் 
பெலமது குறையக் குறையக் கருவிகள் பறையப் பறையப்     பிறநரி தொடரத் தொடரத் ...... திரள்கூகை 
பெடையொடு குழறக் குழறச் சுரபதி பரவப் பரவப்     ப்ரபையயில் தொடுநற் குமரப் ...... பெருமாளே.

கொலை செய்வது போன்ற கொடுமையைக் காட்டும் கண் மேலும் மேலும் சுழல, வில்லைப் போல் வளைந்த புருவம் மேலும் மேலும் குவிந்து நெருங்க, கொடி போன்ற இடுப்பு மேலும் மேலும் துவண்டு போக, மார்பக பாரங்களாகக் குறிக்கப்பட்ட இடத்தில் உள்ள ஆபரணங்கள் மேலும் மேலும் சிதற, கைகளில் அணிந்துள்ள வளையல்கள் மேலும் மேலும் ஒலிக்க, குயில் போன்ற பேச்சு மேலும் மேலும் கலக்கம் உற, ஆசை மோகத்தால் ஏற்பட்ட புணர்ச்சியில் மேலும் மேலும் ஒன்று பட்டு, இலவம் பூவைப் போல் சிவந்த வாயிதழ் ஊறல்களை மேலும் மேலும் பருகி, கைகளால் மேலும் மேலும் தழுவி அணைத்து, சில நாட்களில் கையில் உள்ள பொருள்கள் அழிந்து போய், நல்ல அருள் குணமும் கெட்டுப் போய், யாவரும் சீ சீ விலகு என்று அதட்டுகின்ற நிலைமையை அடைந்து இந்த உலகத்தில் திரிவேனோ? கடலடி மேலும் மேலும் வற்றிட, திக்குகளின் நிலையும் மேலும் மேலும் அலைய, பெரிய கிரெளஞ்ச மலை மேலும் மேலும் சிதறுண்டு விழ, வலிமை பொருந்திய மேரு என்னும் பொன் மலையாகிய நீண்ட மலை அதிர்ச்சி அடைய, பாம்பு (ஆதிசேஷனின்) சிரத்தில் உள்ள மணி அதனுடைய தலையை விட்டுச் சிதறி விழ, யமனுடைய உடல் (பல உயிர்களைக் கவர்வதால்) அலுப்புண்டு குலைய, சண்டை செய்யும் சூரனுடய உடல் வலிமை மேலும் மேலும் குறைய, (பகைவர்களின்) ஆயுதங்கள் மேலும் மேலும் அழிபட்டு ஒழிய, நரிகளும் கழுகுகள் முதலிய பிறவும் மேலும் மேலும் (பிணங்களைத் தின்னத்) தொடர்ந்து நெருங்க, கூட்டமான கோட்டான்கள் பெண் கோட்டான்களோடு மேலும் மேலும் கூவ, தேவேந்திரன் தொழுது கொண்டே இருக்க, ஒளி வீசும் வேலாயுதத்தைச் செலுத்திய நல்ல குமரப் பெருமாளே. 

பாடல் 1155 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தானனா தனன தத்த, தானனா தனன தத்த     தானனா தனன தத்த ...... தனதான

கோழையா ணவமி குத்த வீரமே புகல்வர் அற்பர்     கோதுசே ரிழிகு லத்தர் ...... குலமேன்மை 
கூறியே நடுவி ருப்பர் சோறிடார் தரும புத்ர     கோவுநா னெனஇ சைப்பர் ...... மிடியூடே 
ஆழுவார் நிதியு டைக்கு பேரனா மெனஇ சைப்பர்     ஆசுசேர் கலியு கத்தி ...... னெறியீதே 
ஆயுநூ லறிவு கெட்ட நானும்வே றலஅ தற்கு     ளாகையா லவைய டக்க ...... வுரையீதே 
ஏழைவா னவர ழைக்க ஆனைவா சவனு ருத்ர     ஈசன்மேல் வெயிலெ றிக்க ...... மதிவேணி 
ஈசனார் தமதி டுக்க மாறியே கயிலை வெற்பில்     ஏறியே யினிதி ருக்க ...... வருவோனே 
வேழமீ துறையும் வஜ்ர தேவர்கோ சிறைவி டுத்து     வேதனா ரையும் விடுத்து ...... முடிசூடி 
வீரசூ ரவன் முடிக்கு ளேறியே கழுகு கொத்த     வீறுசேர் சிலை யெடுத்த ...... பெருமாளே.

பயந்தவராய் இருப்பினும் அகங்காரம் மிக்க வீரப் பேச்சைப் பேசுவார்கள் சிலர். கீழ் மக்களாகவும் குற்றம் உள்ள இழி குலத்தவராகவும் இருப்பினும், சிலர் தங்கள் குலத்தின் பெருமையே பேசி சபை நடுவே வீற்றிருப்பர். (பசித்தவருக்குச்) சோறு இடாத பேர்வழிகள் தரும புத்ர அரசனே நான்தான் என்று தம்மைப் புகழ்ந்து பேசுவர். தரித்திர நிலையில் ஆழ்ந்து கிடப்பவர் செல்வம் மிக்க குபேரன் நான் என்று தம்மைத் தாமே புகழ்வர். குற்றம் நிறைந்த கலி யுகத்தின் போக்கு இப்படித்தான் இருக்கிறது. ஆய வேண்டிய நூல் அறிவு இல்லாத நானும் இந்த வழிக்கு வேறுபட்டவன் அல்லன். அந்த வழியில் ஆதலால் வெறும் அவை அடக்கப் பேச்சுப்போல் நான் சொன்ன உரையாகும் இது. கஷ்ட நிலையில் இருந்த தேவர்கள் அழைக்க, ஐராவதம் என்னும் யானையை உடைய இந்திரன், ருத்ர தேவன் இவர்கள் மீது (சூரனுடைய) வெயில்போன்ற கொடுமை தாக்க, சந்திரன் அணிந்த சடையை உடைய சிவபெருமான் தங்களுடைய துன்பத்தை (உன் துணை கொண்டு) நீக்கிய பின், கயிலை மலையில் ஏறி இன்புற்றிருக்க வந்த பெருமானே, ஐராவதத்தின் மீது வீற்றிருக்கும் வஜ்ராயுதத்தை ஏந்திய தலைவனாகிய இந்திரனைச் சிறையினின்று விடுத்து, பிரமனையும் சிறையிலிருந்து விடுத்து, இந்திரனுக்கு வானுலக அரசாட்சியைத் தந்து, வீரமுள்ள சூரனின் தலையில் ஏறி கழுகுகள் கொத்தும்படியாக பெருமை வாய்ந்த வில்லை எடுத்த பெருமாளே. 

பாடல் 1156 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தந்தனந் தனந்த தந்த, தந்தனந் தனந்த தந்த     தந்தனந் தனந்த தந்த ...... தனதான

சந்தனங் கலந்த குங்கு மம்புனைந் தணிந்த கொங்கை     சந்திரந் ததும்ப சைந்து ...... தெருவூடே 
சங்கினங் குலுங்க செங்கை யெங்கிலும் பணிந்து டம்பு     சந்தனந் துவண்ட சைந்து ...... வருமாபோல் 
கொந்தளங் குலுங்க வண்சி லம்புபொங் கஇன்சு கங்கள்     கொஞ்சிபொன் தொடர்ந்தி டும்பொன் ...... மடவார்தோள் 
கொங்கைபைங் கரம்பு ணர்ந்த ழிந்துணங் கலுந்த விர்ந்து     கொஞ்சுநின் சரண்க ளண்ட ...... அருள்தாராய் 
தந்தனந் தசெஞ்சி லம்பு கிண்கிணின் குலங்கள் கொஞ்ச     தண்டையம் பதம்பு லம்ப ...... வருவோனே 
சந்தனம் புனைந்த கொங்கை கண்களுஞ் சிவந்து பொங்க     சண்பகம் புனங்கு றம்பொன் ...... அணைமார்பா 
வந்தநஞ் சுகந்த மைந்த கந்தரன் புணர்ந்த வஞ்சி     மந்தரம் பொதிந்த கொங்கை ...... யுமையீனும் 
மைந்தனென் றுகந்து விஞ்சு மன்பணிந் தசிந்தை யன்பர்     மங்கலின் றுளம்பு குந்த ...... பெருமாளே.

சந்தனத்தையும் அதனுடன் கலந்த குங்குமத்தையும் பூசி அணிந்துள்ள மார்பகம் பொன் ஆபரணங்களின் ஒளி மிகுந்து வீச அசைந்து, தெருவிலே, சங்கினால் செய்த கை வளைகளின் கூட்டம் ஒலி செய்யும் சிவந்த கரங்களுடன், பணிவு காட்டும் உடல் தூதுக்கு* அமைந்த அன்னப் பட்சி துவட்சியுற்று அசைந்து வருவது போல் நடந்து வந்து, கூந்தலின் முடி அசைய, (காலில்) நல்ல சிலம்பின் ஒலி நிறைந்து எழ, இனிமையான சுகத்தைத் தரும் பேச்சுக்களைக் கொஞ்சிப் பேசி, (வாடிக்கையாளரிடம்) பொற்காசு பெறுவதற்கு வேண்டிய வழிகளைப் பின் பற்றி முயலுகின்ற அழகிய விலைமாதர்களின் தோள்களையும், மார்பையும், அழகிய கைகளையும் தழுவி உடல் நலம் அழிவதும், சிந்தை வாடி மெலிவதும் நீங்கி ஒழிந்து, கொஞ்சும் உனது திருவடிகளை நெருங்க அருள் புரிவாயாக. தந்தனந்த என்ற ஒலியுடன் செவ்விய சிலம்பும், கிண்கிணியின் கூட்டங்களும் கொஞ்சி ஒலிக்க, தண்டைகள் அழகிய திருவடியில் ஒலிக்க வருபவனே, சந்தனம் அணிந்துள்ள மார்பகங்களும் கண்களும் சிவந்து பொங்க, சண்பக மரங்கள் உள்ள மலைக் கொல்லையில் இருந்த அழகிய குறப்பெண்ணாகிய வள்ளியைத் தழுவும் மார்பை உடையவனே, (பாற்கடலில் தோன்றி) வந்த ஆலகால விஷத்தை மகிழ்ச்சியுடன் தங்க வைத்த கழுத்தை உடைய சிவபெருமான் கலந்த வஞ்சிக் கொடி போன்றவளும் மந்தர மலை போல நிறைந்த மார்பை உடையவளும் ஆகிய உமாதேவி பெற்ற மைந்தன் என்று மகிழ்ச்சியுடன் மேலான வகையில் நன்றாகத் தொழுகின்ற உள்ளத்தைக் கொண்டுள்ள அடியார்களின் ஒளி மழுங்குதல் இல்லாமல் விளக்கமாகப் புகுந்து விளங்கும் பெருமாளே. 
* தூதுக்கு உரிய பறவைகளுள் அன்னமும் ஒன்று.மற்றவை நாரை, வண்டு, கிளி, அன்றில், குயில், புறா.

பாடல் 1157 - பொதுப்பாடல்கள் 

ராகம் - குந்தலவராளி தாளம் - அங்கதாளம் - 7 1/2 
தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1, தகிட-1 1/2, தகதிமி-2

தனன தனதனன தான தானன     தனதனன தான தானன          தனன தனதனன தான தானன தந்ததான

சுருதி வெகுமுகபு ராண கோடிகள்     சரியை கிரியைமக யோக மோகிகள்          துரித பரசமய பேத வாதிகள் ...... என்றுமோடித் 
தொடர வுணரஅரி தாய தூரிய     பொருளை யணுகியநு போக மானவை          தொலைய இனியவொரு ஸ்வாமி யாகிய ...... நின்ப்ரகாசங் 
கருதி யுருகியவி ரோதி யாயருள்     பெருகு பரமசுக மாம கோததி          கருணை யடியரொடு கூடியாடிம ...... கிழ்ந்துநீபக் 
கனக மணிவயிர நூபு ராரிய     கிரண சரண அபி ராம கோமள          கமல யுகளமற வாது பாடநி ...... னைந்திடாதோ 
மருது நெறுநெறென மோதி வேரோடு     கருது மலகைமுலை கோதி வீதியில்          மதுகை யொடுதறுக ணானை வீரிட ...... வென்றுதாளால் 
வலிய சகடிடறி மாய மாய்மடி     படிய நடைபழகி யாயர் பாடியில்          வளரு முகில்மருக வேல்வி நோதசி ...... கண்டிவீரா 
விருதர் நிருதர்குல சேனை சாடிய     விஜய கடதடக போல வாரண          விபுதை புளகதன பார பூஷண ...... அங்கிராத 
விமலை நகிலருண வாகு பூதர     விபுத கடககிரி மேரு பூதர          விகட சமரசத கோடி வானவர் ...... தம்பிரானே.

வேதமும், பலவிதமான கோடிக் கணக்கான புராணங்களும், சரியை மார்க்கத்தில்* இருந்து கோவில்களுக்குத் தொண்டு செய்பவர்களும், கிரியை மார்க்கத்தில் நடந்து நியமமாய் மலர் தூவித் தொழுபவர்களும், மகாயோக மார்க்கத்தில் ஆசை பூண்டு யோக நிஷ்டையில் இருப்பவர்களும், கலக்கத்தைத் தரும் பர சமய பேதங்களை மேற்கொண்டு வாதிப்பவர்களும் என்றெல்லாம் ஓடி ஓடி ஆராய்ந்து, தொடர்ந்து பற்றுதற்கும், உணர்ந்து கொள்ளுவதற்கும் அரியதானதான சுத்த நிலைப் பரம் பொருளை அண்டி நெருங்கி, என் உலக அனுபவங்களும் ஆசைகளும் தொலைந்து ஒழிய, இன்பம் தரும் ஒரு ஸ்வாமியாகிய உன்னுடைய பேரொளியை தியானித்து மனம் உருகி, எல்லா உயிரும் எனதுயிரின் பகுதிகளே என்னும் பேதமற்ற மனம் உடையவனாக, அருள் நிறைந்த மேலான இன்பப் பெரிய கடலில் கருணைமிக்க உன் அடியார்களுடன் கூடி மகிழ்ந்து, கடப்ப மலரும், பொன், இரத்தினம், வைரம் இவை விளங்கும் சிலம்பு அணிந்ததும், மேலான ஒளி வீசுவதும், அடைக்கலம் தருவதும், அழகிய இளமை விளங்குவதுமான திருவடித் தாமரைகளை (நான்) மறக்காமல் பாட உனது திருவுள்ளம் நினைவு கொள்ளாதோ? மருத மரங்களை நெறுநெறு என்று ஒலிக்குமாறு வேருடன் முறியும்படி (இடுப்பில் கட்டிய உரலோடு) மோதியும், (தன்னை விஷப்பாலை ஊட்டுவித்துக் கொல்லும்) எண்ணத்துடன் வந்த அலகைப் பேய் பூதனையின் கொங்கையைக் குடைந்து தோண்டி அவள் உயிரைப் பருகியும், தெருவில் வலிமையுடன் வஞ்சகமாகக் கொல்ல வந்த (குவலயா பீடம் என்னும்) யானை அலறிக் கூச்சலிட அதை வென்றும், பாதத்தால் வலிமை வாய்ந்த வண்டிச் சக்கரத்தை (சகடாசுரனை) எற்றி உதைத்து, தந்திரமாய் அவன் இறக்கும்படிச் செய்தும், மீண்டும் சாதாரணக் குழந்தை போலத் தவழ்ந்தும், நடந்தும், இடைச் சேரியில் வளர்ந்த மேக வண்ணனாகிய திருமாலின் மருகனே, வேலாயுதத்தை ஏந்தும் அற்புத மூர்த்தியே, மயில் வீரனே, வீரர்களாகிய அசுரர்களின் குலச் சேனைகளைத் துகைத்தழித்த வெற்றியாளனே, விசாலமான தாடையை உடைய யானை (ஐராவதம்) வளர்த்த தேவயானையின் புளகம் கொண்ட மார்பகங்களை உன் மார்பில் அணிகளாகத் தரித்துள்ளவனே, அழகிய, வேடர் குலத்துத் தூயவளான வள்ளியின் மார்பினை அணைத்துக் கொள்ளும் சிவந்த தோள் மலையை உடையவனே, தேவர்கள் சேனைக்கு நாயகனே, மலைகளுள் மேருமலையுடன் மாறுபட்டு போர் செய்தவனே, நூறு கோடி தேவர்களுக்குத் தம்பிரானே. 
* 4 பக்தி மார்க்கங்கள் பின்வருமாறு:1. சரியை: திருக்கோயிலில் அலகு இடுதல், மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம் வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல், இறைவனை வாழ்த்துதல், திருவேடம் கண்டு பணிதல். இது 'தாத மார்க்கம் - சாலோகம்'.2. கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்தியக் காரியம் செய்தல். இது 'புத்ர மார்க்கம் - சாமீபம்'.3. யோகம்: புலன்களை அடக்கிப் பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி, முழு ஜோதியை நினைத்திருத்தல். இது 'சக மார்க்கம் (தோழ நெறி) - சாரூபம்'.4. ஞானம்: புறத் தொழில் அகத் தொழில் இன்றி, அறிவு மாத்திரத்தாலே செய்யும் வழிபாடு ஞானம். இது 'சன்மார்க்கம் - சாயுஜ்யம்'. சிவஞான சித்தியார் சூத்திரம்.

பாடல் 1158 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தத்தத் தனதன தத்தன தனதன     தத்தத் தனதன தத்தன தனதன          தத்தத் தனதன தத்தன தனதன ...... தனதானத்

சுற்றத் தவர்களு மக்களு மிதமுள     சொற்குற் றரிவையும் விட்டது சலமிது          சுத்தச் சலமினி சற்றிது கிடைபடு ...... மெனமாழ்கித் 
துக்கத் தொடுகொடி தொட்டியெ யழுதழல்     சுட்டக் குடமொடு சுட்டெரி கனலொடு          தொக்குத் தொகுதொகு தொக்கென இடுபறை ...... பிணமூடச் 
சற்றொப் புளதொரு சச்சையு மெழுமுடல்     சட்டப் படவுயிர் சற்றுடன் விசியது          தப்பிற் றவறுறு மத்திப நடையென ...... உரையாடிச் 
சத்திப் பொடுகரம் வைத்திடர் தலைமிசை     தப்பிற் றிதுபிழை யெப்படி யெனுமொழி          தத்தச் சடம்விடு மப்பொழு திருசர ...... ணருள்வாயே 
சிற்றிற் கிரிமகள் கொத்தலர் புரிகுழல்     சித்ரப் ப்ரபைபுனை பொற்பின ளிளமயில்          செற்கட் சிவகதி யுத்தமி களிதர ...... முதுபேய்கள் 
திக்குச் செககெண தித்தரி திகுதிகு     செச்செச் செணக்ருத டொட்டரி செணக்ருத          டெட்டெட் டுடுடுடு தத்தரி தரியென ...... நடமாடுங் 
கொற்றப் புலியதள் சுற்றிய அரனருள்     குட்டிக் கரிமுக னிக்கவ லமுதுசெய்          கொச்சைக் கணபதி முக்கண னிளையவ ...... களமீதே 
குப்புற் றுடனெழு சச்சரி முழவியல்     கொட்டச் சுரர்பதி மெய்த்திட நிசிசரர்          கொத்துக் கிளையுடல் பட்டுக அமர்செய்த ...... பெருமாளே.

உறவினர்களும், மக்களும், இன்பம் தருவதான சொல்லுக்கு உரிய மனைவியும், (நோயாளியின் அருகில் ஈரம் இருக்கக் கண்டு) அது நோயாளி விட்ட சிறுநீர், இது நல்ல நீர் (என்றெல்லாம் பேசி), கொஞ்ச நேரத்தில் இந்நோய் படுக்க வைக்கும் என்று மயங்கி மனம் வருந்தி, துயரத்துடனும், கஷ்டத்துடனும் அணுகியிருந்து அழுது, தீயால் சுட்டெரிக்க, நெருப்புச் சட்டியில் சுடுதற்கு வேண்டிய தீயுடன் (செல்ல) தொக்குத் தொகு தொகு தொக்கு என்று அடிபடும் பறை தொடங்கி ஒலி செய்ய, பிணத்தை துணியால் மூடுவதற்கு கொஞ்சம் ஏற்புடையதான நேரம் எது என்ற ஆராய்ச்சிப் பேச்சும் பிறக்கும். உடல் நன்றாகக் கெட்டுப் போக, உயிர் கொஞ்ச நேரத்துக்குள் (உயிருக்கும் உடலுக்கும் உள்ள) கட்டு தவறிப் போனால் பிழை உண்டாகும், இப்போது நாடி மட்டமான நிலையில் உள்ளது என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்க, கூச்சலிட்டு வருத்தத்துடன் தலையின் மேல் கையை வைத்து, (நாடி) தவறுகின்றது, இச்சமயம் இவ்வுயிர் பிழைத்தல் எப்படி முடியும் என்கின்ற பேச்சு பரவ, உடலை உயிர் விடும் போது, உனது இரண்டு திருவடிகளையும் தந்து அருளுக. சிறு வீடு கட்டி விளையாடும் மலை (இமவான்) மகள், கொத்தான மலர்கள் வைத்துள்ள சுருண்ட கூந்தலை உடையவள், விசித்திரமான ஒளி வாய்ந்த அழகை உடையவள், இள மயில் போன்றவள், மழை போலும் குளிர்ந்த கண்ணை உடையவள், முக்தியைத் தரும் உத்தமி ஆகிய பார்வதி கண்டு களிக்க, பழமையான பேய்க் கூட்டங்கள் திக்குச் செககெண தித்தரிதிகுதிகு செச்செச் செணக்ருத டொட்டரி செணக்ருத டெட்டெட் டுடுடுடு தத்தரி தரியென சூழ்ந்து நடனமாட, வீரமுள்ள புலியின் தோலை ஆடையாகச் சுற்றியுள்ள சிவபிரான் அருளிய குழந்தை யானை முகன், கரும்பு அவல் இவைகளை உண்ணும் எளிய தோற்றத்தை உடைய கணபதி, மூன்று கண்களை உடையவன் (ஆகிய விநாயகனுக்கு) தம்பியே, போர்க் களத்தில் மேற்கிளம்பி ஒலிக்கும் வாத்திய வகை, முரசு முதலியவை தகுதியுடன் முழங்க, தேவர்கள் அரசனான இந்திரன் நிலை பெற்று உண்மையாய் வாழ, அசுரர்கள் கூட்டமும் சுற்றமும் உடல் அழிபட்டுச் சிதற, சண்டை செய்த பெருமாளே. 

பாடல் 1159 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தந்த தத்தன தானாதன தந்த தத்தன தானாதன     தந்த தத்தன தானாதன ...... தனதான

செங்க னற்புகை யோமாதிகள் குண்ட மிட்டெழு சோமாசிகள்     தெண்டெ னத்துணை தாள்மேல்விழ ...... அமராடிச் 
சிந்த னைப்படி மோகாதியி லிந்த்ரி யத்தினி லோடாசில     திண்டி றற்றவ வாள்வீரரொ ...... டிகலாநின் 
றங்கம் வெட்டிய கூர்வாள்விழி மங்கை யர்க்கற மாலாய்மன     மந்தி பட்டிருள் மூடாவகை ...... யவிரோத 
அந்த நிற்குண ஞானோதய சுந்த ரச்சுட ராராயந     லன்பு வைத்தரு ளாமோர்கழ ...... லருளாதோ 
கொங்க டுத்தகு ராமாலிகை தண்க டுக்கைது ழாய்தாதகி     கும்பி டத்தகு பாகீரதி ...... மதிமீது 
கொண்ட சித்ரக லாசூடிகை யிண்டெ ருக்கணி காகோதர     குண்ட லத்தர்பி னாகாயுத ...... ருடனேயச் 
சங்கு சக்ரக தாபாணியு மெங்க ளுக்கொரு வாழ்வேசுரர்     தங்க ளைச்சிறை மீளாயென ...... அசுரேசன் 
தஞ்ச மற்றிட வேதாகர னஞ்ச வெற்புக வீராகர     சண்ட விக்ரம வேலேவிய ...... பெருமாளே.

சிவந்த தீயில் புகை எழும்படியாக ஓம குண்டங்கள் அமைத்து யாகங்களைச் செய்த சோமயாஜிகளும்* கூட சரணாகதி என்று (தங்கள்) இரு திருவடிகளில் விழும்படி போர் செய்ய வல்லதும், மனதில் அழுந்திய மோகம், மதம், மாற்சரியம், இடும்பு, அசூயை, காமம், குரோதம், உலோபம் எனப்படும் எட்டு வகைப்பட்ட துர்க்குணங்களும் பொறிகளின் சபலங்களும் தாக்கித் தம்மை ஆட்டாத சில வலிய வன்மையை உடைய தவ ஒளியைக் கொண்ட வீரர்களுடன் மாறுபட்டு அவர்களை வென்று நின்று (அவர்களுடைய) உடலை வெட்டும்படியான கூரிய கண்களை உடைய (விலை) மாதர் மீது முற்றும் காம மயக்கம் கொண்டவனாய், மனம் அழிந்து போய் அஞ்ஞானம் என்ற இருள் வந்து மூடாத வகையில், பகையின்மை எனப்படும் அந்தக் குணம் கடந்த ஞானோதய அழகு ஒளியை நான் ஆராய்வதற்கு, நல்ல அன்பை என் மீது வைத்து திருவருளுக்கு இடமான ஒப்பற்ற உனது திருவடியை எனக்கு தந்தருளக் கூடாதோ? வாசனை கொண்ட குரா மலர் மாலை, குளிர்ந்த கொன்றை, துளசி, ஆத்தி வணங்கத் தகுந்த கங்கைநதி, சந்திரனிடத்தே கொண்டுள்ள அழகிய கலை, (இவைகள் விளங்கும்) ஜடாமுடியில் ஈகைக் கொடிப்பூ, எருக்க மலர் அணிந்துள்ளவர், பாம்பைக் குண்டலமாக அணிந்தவர், பினாகம் என்னும் வில்லை ஆயுதமாக ஏந்தியவர் (ஆகிய சிவபெருமானும்), நன்கு பொருந்திய சங்கு, சக்கரம், கதை இவைகளைக் கையில் ஏந்திய திருமாலும், எங்களுடைய செல்வமே, தேவர்களைச் சிறையினின்றும் மீட்டருள்க என்று வேண்ட அசுரர்கள் தலைவனான சூரன் பற்றுக் கோடின்றி வேதனைப்பட, வேதத்துக்கு இருப்பிடமான பிரமன் பயந்து நிற்க, கிரெளஞ்ச மலை பிளப்புண்டு சிதறி விழ, வீரத்துக்கு இருப்பிடமாய் வேகமும் வலிமையும் கொண்ட வேலாயுதத்தைச் செலுத்திய பெருமாளே. 
* சோம யாகம் = தேவர்கள் பொருட்டுச் சோமரசம் அளிக்கும் வேள்வி வகை.இதைச் செய்தவர்கள் சோமயாஜிகள். சோமயாஜிகளும், தவ வீரர்களும் கூடப் பெண்களால் மதி மயங்குவர் என்பது கருத்து.

பாடல் 1160 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தானதனத் தானதனத் தானதனத் தானதனத்     தானதனத் தானதனத் ...... தனதான

சேலையடர்த் தாலமிகுத் தேயுழையைச் சீறுவிதித்     தூறுசிவப் பேறுவிழிக் ...... கணையாலே 
தேனிரதத் தேமுழுகிப் பாகுநிகர்த் தாரமுதத்     தேறலெனக் கூறுமொழிச் ...... செயலாலே 
ஆலிலையைப் போலும்வயிற் றாலளகத் தாலதரத்     தாலுமிதத் தாலும்வளைப் ...... பிடுவோர்மேல் 
ஆசையினைத் தூரவிடுத் தேபுகழ்வுற் றேப்ரியநற்     றாளிணையைச் சேரஎனக் ...... கருள்வாயே 
காலனைமெய்ப் பாதமெடுத் தேயுதையிட் டேமதனைக்     காயஎரித் தேவிதியிற் ...... றலையூடே 
காசினியிற் காணஇரப் போர்மதியைச் சூடியெருத்     தேறிவகித் தூருதிரைக் ...... கடல்மீதில் 
ஆலமிடற் றானையுரித் தோலையுடுத் தீமமதுற்     றாடியிடத் தேயுமைபெற் ...... றருள்வாழ்வே 
ஆழியினைச் சூரனைவெற் பேழினையுற் றேயயில்விட்     டாதுலருக் காறுமுகப் ...... பெருமாளே.

சேல் மீனை வெட்கப்படச் செய்து, விஷம் மிகக் கொண்டதாய், மானைக் கோபித்து அவமானப்படுத்தி, செந்நிறம் ஊறி மேற்காட்டும் கண் என்னும் அம்பு கொண்டும், தேன் சுவையில் தோய்ந்து, வெல்லப் பாகுக்கு ஒப்பாகி, நிறையமுத பானம் என்று சொல்லத் தக்கதான மொழிகளின் திறத்தாலும், ஆலிலை போன்ற வயிற்றாலும், கூந்தலாலும், வாயிதழாலும் இன்பம் தந்து (ஆண்களின் மனத்தை) வளைத்து இழுப்பவர்களான விலைமாதர் மீதுள்ள காமப் பற்றைத் தூர எறிந்து, புகழ் பெற்று அன்புக்கு இடமான (உனது) நல்ல திருவடியிணைகளைச் சேருவதற்கு எனக்கு அருள் செய்வாயாக. யமனை உண்மைக்கு இருப்பிடமான தனது திருவடியைத் தூக்கி உதைத்தும், மன்மதனைச் சுட்டு எரித்தும், பிரமனுடைய கபாலம் கொண்டு பூமியில் உள்ளோர் காணும்படி யாசித்தும், ஒப்பற்ற நிலவைச் சடையில் தரித்தும், ரிஷபத்தில் ஏறி அமர்ந்தும், அசைந்து வரும் அலை வீசும் கடல் மீது எழுந்த ஆலகால விஷத்தைக் கண்டத்தில் தரித்தும், (எதிர்த்து வந்த) யானையைக் கொன்று அதன் தோலை உரித்து உடுத்தும், சுடு காட்டை அடைந்து அங்கே நடனம் புரிபவருமான சிவபெருமானது இடப் பாகத்தில் உறையும் உமா தேவி பெற்றருளிய செல்வமே, கடலையும், சூரனையும், ஏழு மலைகளையும், இவைகளின் மீது பட்டு அவை அழிந்து போகும்படி வேலாயுதத்தைச் செலுத்திய, ஏழைகளுக்கு உகந்த, ஆறுமுகப் பெருமாளே. 

பாடல் 1161 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தத்தத்தத் தத்தத் தத்தன     தத்தத்தத் தத்தத் தத்தன          தத்தத்தத் தத்தத் தத்தன ...... தனதான

சொக்குப்பொட் டெத்திக் கைப்பொரு     ளைக்கெத்திற் பற்றிச் சிக்கொடு          சுற்றுப்பட் டெற்றித் தெட்டிகள் ...... முலைமீதே 
சுற்றுப்பொற் பட்டுக் கச்சினர்     முற்றிக்குத் தத்தைக் கொப்பென          சொற்பித்துக் கற்பிற் செப்பிய ...... துயராலே 
சிக்குப்பட் டுட்கிப் பற்கொடு     வெற்றிக்கைக் குத்துப் பட்டிதழ்          தித்திப்பிற் கொத்துப் பித்துயர் ...... கொடுநாயேன் 
திக்குக்கெட் டொட்டுச் சிட்டென     பட்டத்துற் புத்திக் கட்டற          செப்பத்துற் பற்றற் கற்புத ...... மருள்வாயே 
தக்குத்தக் குக்குக் குக்குட     தட்டுட்டுட் டுட்டுட் டுட்டென          தக்குத்திக் கெட்டுப் பொட்டெழ ...... விருதோதை 
தத்தித்தித் தித்தித் தித்தென     தெற்றுத்துட் டக்கட் டர்ப்படை          சத்திக்கொற் றத்திற் குத்திய ...... முருகோனே 
துக்கித்திட் டத்தித் துக்கக     நெக்குப்பட் டெக்கித் துட்டறு          சுத்தப்பொற் பத்தர்க் குப்பொரு ...... ளருள்வேலா 
துற்றப்பொற் பச்சைக் கட்கல     பச்சித்ரப் பக்ஷிக் கொற்றவ          சொக்கர்க்கர்த் தத்தைச் சுட்டிய ...... பெருமாளே.

சொக்குப் பொடி போட்டு ஏமாற்றி, கையில் உள்ள பொருளைத் தந்திர வழியில் கைப்பற்றி, உறுதியுடன் (வந்தவரைச்) சுற்றி வளைத்து பேச்சினால் தாக்கி, வஞ்சிக்கும் மார்பகங்கள் மேலே சுற்றப்பட்டுள்ள பட்டுக் கச்சைக் கொண்டவர்கள் ஆகிய விலைமாதர்களின் முதிர்ந்த கரும்பு, கிளி இவைகளுக்கு ஒப்பு என்று சொல்லும்படியான மொழி என்கின்ற மயக்கத்தைத் தரும் சொல்லால் ஏற்படும் துன்பத்தில், மாட்டிக் கொண்டு நாணமும் அச்சமும் அடைந்து பல கொடுமையான அடிகளையும் கைக் குத்துகளையும் வாங்கிக் கொண்டும், வாயிதழ் ஊறலின் இனிப்புக்கு மனம் ஒப்பி, அதில் ஏற்படும் பித்து மிகக் கொண்ட கொடிய நாயனைய நான் திசை தடுமாறி, கண்ணியில் அகப்பட்ட சிட்டுக் குருவி போல் அவஸ்தைப்பட்ட கெட்ட புத்தியின் சம்பந்தம் நீங்க, செம்மையாக உன்னைப் பற்றுவதற்கு அற்புத வரத்தை அருள் புரிவாயாக. தக்குத்தக் குக்குக் குக்குட தட்டுட்டுட் டுட்டுட் டுட்டென இவ்வாறு, நிலை பெற்றுள்ள எட்டுத் திசைகளும் பொடிபட, வெற்றிச் சின்னங்களின் ஒலி தத் தித்தித் தித்தித் தித்தென செறிவுற, துஷ்டர்களாய்க் கஷ்டப்படுவர்களின் சேனையை வேலாயுதத்தின் வெற்றி வீரத்தால் குத்திய முருகோனே, துக்கப்பட்ட கடல் போன்ற துன்ப வீடாகிய மனம் நெகிழ்ந்து மேலான நிலையை எட்டி, தீய குணங்கள் நீங்கப் பெற்ற பரிசுத்த நிலையரான தூய அடியார்களுக்கு உபதேசப் பொருளை அருள் பாலிக்கும் வேலனே, நெருங்கியுள்ள அழகிய பச்சை நிறமுள்ளதும், பீலிக் கண்களை உடையதுமான தோகையை உடைய விசித்திரமான மயில் பறவையை வாகனமாக உடைய அரசே, மதுரை சொக்க நாதராகிய சிவபெருமானுக்கு பிரணவப் பொருளைச் சுட்டிக் குறித்து அறிவுறுத்திய பெருமாளே. 

பாடல் 1162 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தானான தானன தானன தானன     தானான தானன தானன தானன          தானான தானன தானன தானன ...... தனதான

ஞானாவி பூஷணி காரணி காரணி     காமாவி மோகினி வாகினி யாமளை          மாமாயி பார்வதி தேவிகு ணாதரி ...... உமையாள்தன் 
நாதாக்ரு பாகர தேசிகர் தேசிக     வேதாக மேயருள் தேவர்கள் தேவந          லீசாச டாபர மேசர்சர் வேசுரி ...... முருகோனே 
தேனார்மொ ழீவளி நாயகி நாயக     வானாடு ளோர்தொழு மாமயில் வாகன          சேணாளு மானின்ம னோகர மாகிய ...... மணவாளா 
சீர்பாத சேகர னாகவு நாயினன்     மோகாவி காரவி டாய்கெட ஓடவெ          சீராக வேகலை யாலுனை ஓதவும் ...... அருள்வாயே 
பேணார்கள் நீறதி டாஅம ணோர்களை     சூராடி யேகழு மீதினி லேறிட          கூனான மீனனி டேறிட கூடலில் ...... வருவோனே 
பேராண்மை யாளனி சாசரர் கோனிரு     கூறாக வாளிதொ டூரகு நாயகன்          பூவாய னாரணன் மாயனி ராகவன் ...... மருகோனே 
வாணாள்ப டாவரு சூரர்கள் மாளவெ     சேணாடு ளோரவர் வீடதி டேறிட          கோனாக வேவரு நாதகு ரூபர ...... குமரேசா 
வாசாம கோசர மாகிய வாசக     தேசாதி யோரவர் பாதம தேதொழ          பாசாவி நாசக னாகவு மேவிய ...... பெருமாளே.

ஞானத்தை விசேஷமான அணிகலனாகக் கொண்டவள், கரிய நிறம் கொண்டு, எல்லாவற்றுக்கும் காரணமாக இருப்பவள், காமத்தை உயிர்களுக்கு ஊட்டும் சிறந்த மோகினி, பாதிரி மர நிழலில் சிவபெருமானைப் பூஜித்த உமை, மரகதப் பச்சை நிறத்தி, மாயையில் வல்லவள், பார்வதி தேவி, நற் குணங்களை உடையவள், (ஆகிய) உமா தேவியின் தலைவரும், அருளுக்கு இருப்பிடமானவரும் ஆன சிவபெருமானுக்கும் குருவே, (சிவனுக்கு) வேதாமங்களை அருளிய தேவதேவனே, நல்ல ஈசனே, சடையை உடைய பரமேசுரர், எல்லாவற்றுக்கும் தலைவியாகிய ஈசுவரி இருவருடைய குழந்தையே, தேன் போலும் இனிய மொழிகளைப் பேசும் வள்ளி நாயகிக்குக் கணவனே, விண்ணுலகத்தில் உள்ளோர்கள் வணங்கும் சிறந்த மயில் வீரனே, விண்ணுலகத்தை ஆளும் இந்திரனின் மகளான தேவயானையின் இனிமையான கணவனே, உனது திருவடியை என் தலை மேல் சூடியவனாகிய, நாயினும் இழிந்த, அடியேனுடைய காம விகார தாகம் கெட்டு ஓட்டம் பிடிக்க, நன்றாக கலை ஞானத்துடன் உன்னை நான் பாட அருள்வாயாக. (உன்னைப்) போற்றாதவர்களும், திரு நீற்றை அணியாதவர்களுமாகிய சமணர்களை அச்சத்துடன் சுழற்சி கொள்ளுமாறு (வாது செய்து) அலைத்து, கழுவில் ஏறும்படிச் செய்து, கூனனாயிருந்த, மீன் கொடியை உடைய, பாண்டியன் (கூன் நீங்கி) ஈடேறுமாறு மதுரைக்கு (ஞானசம்பந்தராகச்) சென்றவனே, மிக்க வீரம் கொண்டவனும், அரக்கர்கள் அரசனுமான இராவணன் இரண்டு பிளவாக அம்பைச் செலுத்திய ரகுராமன், தாமரை மலரிதழ் ஒத்த வாயை உடைய நாராயண மூர்த்தி, மாயவன் ஆகிய இராகவனுடைய மருகனே, வாழ் நாள் அழியும்படி வந்த சூரர்கள் இறக்க, விண்ணுலகத்தில் வாழும் தேவர்கள் வீடாகிய பொன்னுலகம் ஈடேறி வாழ, சேனைக்குத் தலைவனாக வந்த நாதனே, குருபரனே, குமரேசனே, வாக்குக்கு எட்டாத திருவாக்கை உடையவனே, நாடுகள் பலவற்றிலும் உள்ளவர்கள் உனது திருவடிகளைத் தொழுது நிற்க, பாசங்களை நீக்குபவனாக விளங்கி வீற்றிருக்கும் பெருமாளே. 
* திருப்பாதிரிப் புலியூர் என்னும் தலத்தில் பார்வதி சிவபெருமானது அருளைப் பெற பாதிரி மரத்தின் நிழலில் தவம் செய்தாள்.

பாடல் 1163 - பொதுப்பாடல்கள் 

ராகம் - அமிர்தவர்ஷணி தாளம் - சதுஸ்ர த்ருவம் - கண்டநடை - 35 - எடுப்பு - /4/4/4 0 
நடை - தகதகிட

தனதனன தனதனன தந்தனந் தந்தனந்     தனதனன தனதனன தந்தனந் தந்தனந்          தனதனன தனதனன தந்தனந் தந்தனந் ...... தனதான

தரணிமிசை அனையினிட வுந்தியின் வந்துகுந்     துளிபயறு கழலினிய அண்டமுங் கொண்டதின்          தசையுதிர நிணநிறைய அங்கமுந் தங்கவொன் ...... பதுவாயுந் 
தருகரமொ டினியபத முங்கொடங் கொன்பதும்     பெருகியொரு பதினவனி வந்துகண் டன்புடன்          தநயனென நடைபழகி மங்கைதன் சிங்கியின் ...... வசமாகித் 
திரிகியுடல் வளையநடை தண்டுடன் சென்றுபின்     கிடையெனவு மருவிமனை முந்திவந் தந்தகன்          சிதறுவுயிர் பிணமெனவெ மைந்தரும் பந்துவும் ...... அயர்வாகிச் 
செடமிதனை யெடுமெடுமி னென்றுகொண் டன்புடன்     சுடலைமிசை யெரியினிட வெந்துபின் சிந்திடுஞ்          செனனமிது தவிரஇரு தண்டையுங் கொண்டபைங் ...... கழல்தாராய் 
செருவெதிரு மசுரர்கிளை மங்கஎங் கெங்கணுங்     கழுகருட னயனமிது கண்டுகொண் டம்பரந்          திரியமிகு அலகையுடன் வெங்கணந் தங்களின் ...... மகிழ்வாகிச் 
சினவசுர ருடலமது தின்றுதின் றின்புடன்     டுமுடுமுட டுமுடுமுட டுண்டுடுண் டுண்டுடுண்          டிமிலைபறை முழவுதுடி பம்பையுஞ் சங்கமுந் ...... தவமோதச் 
சரவரிசை விடுகுமர அண்டர்தம் பண்டுறுஞ்     சிறையைவிட வருமுருக என்றுவந் திந்திரன்          சதுமுகனு மடிபரவ மண்டுவெஞ் சம்பொருங் ...... கதிர்வேலா 
சகமுழுது மடையஅமு துண்டிடுங் கொண்டலுந்     தெரிவரிய முடியினர வங்களுந் திங்களுஞ்          சலமிதழி யணியுமொரு சங்கரன் தந்திடும் ...... பெருமாளே.

இந்தப் பூமியில் தாயின் வயிற்றில் (கர்ப்பப்பையில்) வந்து சேரும் ஒரு துளி பயறு அளவு விழுதலாகி, இன்பகரமான முட்டை வடிவாகி, அதில் சதை, இரத்தம், கொழுப்பு இவை நிறைவு பெற, (பின்னர்) அவயவங்களும் வந்து கூட, ஒன்பது துவாரங்களும், ஏற்பட்ட கைகளுடன், அழகிய கால்களும் கொண்டு, அங்கே (கண் - 2, காது - 2, மூக்குத் தொளை - 2, வாய் - 1, மல, ஜலத்துவாரம் - 2 ஆகிய) ஒன்பது துவாரங்களும் தெளிவாக வந்து சேர்ந்து, ஒரு பத்து மாதத்தில் பூமியில் வந்து பிறந்து, அக்குழந்தையைக் கண்டு பெற்றோர்கள் அன்பு பூண்டு தங்கள் மகன் என்று மகிழும்படி வளர்ந்து, நடக்கக் கற்று, (வாலிப வயதில்) மாதர்களின் விஷமச் செயல்களில் அகப்பட்டு, சலிப்பு அடைந்து, நிலை மாறி, நிமிர்ந்த உடல் குனிய, தடியுடன் நடந்து செல்வதாகி, பிறகு படுக்கையில் கிடக்கை உற்றுக் கிடக்க, வீட்டின் முன் வாயில் வழியே யமன் வந்து உயிரைச் சிதறும்படிச் செய்ய, பிணம் என்று முடிவு செய்து, மக்களும் சுற்றமும் சோர்வடைந்து, இந்தப் பிணத்தை எடுத்துச் செல்லவும் என்று பன்முறைகள் சொல்ல, எடுத்துக் கொண்டு போய், அன்புடன் சுடுகாட்டில் நெருப்பில் இட, வெந்து சாம்பலாகி நீரில் கலந்து அழிகின்ற இந்தப் பிறவி இனி வராதிருக்க, தண்டைகள் அணிந்த உனது இரு திருவடிகளையும் தந்து அருள்வாயாக. போரில் எதிர்த்து வந்த அசுரர்கள் கூட்டம் அழிய, எல்லா இடத்திலும் கழுகு, கருடன் இவைகளின் கண்கள் (பிணங்களைக்) கண்டு உணர்ந்து ஆகாயத்தில் சுற்றிவர, மிக்கு வரும் பேய்களின் கொடிய கூட்டங்கள் தங்களுக்குள் மகிழ்ச்சி பூண்டு, கோபத்துடன் இறந்து பட்ட அசுரர்களின் உடல்களைத் தின்று, மகிழ்ச்சியுடன் டுமுடுமுட டுமுடுமுட டுண்டுடுண் டுண்டுடுண்டு - இவ்வாறு சப்திக்கும் திமிலை, பறை, முழவு, துடி பம்பை முதலிய பறை வகைகளை மிக்க பேரொலிகளுடன் எழுப்ப, அம்புகளை வரிசை, வரிசையாக செலுத்திய குமரனே, தேவர்களை முன்பு அடைபட்டிருந்த சிறையினின்றும் விடுவித்த முருகனே என்று கூறி வந்து இந்திரன், நான்முகன் பிரமன் முதலியோர் உன் அடிகளைப் போற்ற, எதிரிகளை நெருக்கி கொடிய போரைச் செய்த ஒளி வீசும் வேலாயுதனே, உலகம் எல்லாவற்றையும் முழுதாக அமுதென உண்ட மேக வண்ணத் திருமாலும் காண முடியாத ஜடாமுடியில் பாம்புகளையும், சந்திரனையும், கங்கை, கொன்றை ஆகியவற்றையும் தரித்துள்ள ஒப்பற்ற சிவபெருமான் அருளிய பெருமாளே. 

பாடல் 1164 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனந்தத்தத் தனந்தத்தத் தனந்தத்தத் தனந்தத்தத்     தனந்தத்தத் தனந்தத்தத் ...... தனதான

தனஞ்சற்றுக் குலுங்கப்பொற் கலன்கட்பட் டிலங்கப்பொற்     சதங்கைக்கற் சிலம்பொத்திக் ...... கையில்வீணை 
ததும்பக்கைக் குழந்தைச்சொற் பரிந்தற்புக் கிதங்கப்பொற்     சரஞ்சுற்றிட் டிணங்கக்கட் ...... சரவேலால் 
தினம்பித்திட் டிணங்கிச்சொற் கரங்கட்டிப் புணர்ந்திட்டுத்     தினந்தெட்டிக் கடன்பற்றிக் ...... கொளுமாதர் 
சிலம்பத்திற் றிரிந்துற்றிட் டவம்புக்கக் குணஞ்செற்றுச்     சிவம்பெற்றுத் தவம்பற்றக் ...... கழல்தாராய் 
தனந்தத்தத் தனந்தத்தத் தடுண்டுட்டுட் டிடிண்டிட்டிட்     டடண்டட்டட் டிமிண்டுட்டுட் ...... டியல்தாளந் 
தகுந்தொத்தித் திமிந்தித்தித் தவண்டைக்குட் கயர்ந்துக்கத்     தகண்டத்தர்க் குடன்பட்டுற் ...... றசுராரைச் 
சினந்தத்திக் கொளுந்தக்கைச் சரந்தொட்டுச் சதம்பொர்ப்பைச்     சிரந்தத்தப் பிளந்துட்கக் ...... கிரிதூளாச் 
செகந்திக்குச் சுபம்பெற்றுத் துலங்கப்பொர்க் களம்புக்குச்     செயம்பற்றிக் கொளுஞ்சொக்கப் ...... பெருமாளே.

மார்பகங்கள் கொஞ்சம் குலுங்க, பொன் ஆபரணங்களும் பட்டாடையும் இலங்க, அழகிய சலங்கையும், ரத்தினங்கள் இழைக்கப் பெற்ற சிலம்பும், கையில் வீணையும் சிறப்பாக விளங்க, கைக்குழந்தையின் மழலைச் சொல் போலச் சொற்களைப் பேசி, அன்புக்கு இதமான பொன்னாலாகிய மாலைகளைக் கழுத்தினில் சுற்றிக்கொண்டு, ஒருசேர இரு கண்களாகிய அம்பாலும் வேலாலும் நாள் தோறும் (காம மயக்கமாகிய) பித்தத்தைத் தந்து, மனம் ஒத்து, சொல்லுக்குக் கட்டுப்பட்டவர்களாகவும் கைகட்டி நடப்பவர்களாகவும் நடந்து கலவியில் கூடி, தினமும் வஞ்சிப்பவர்களாக தங்களுக்கு உரிய பணத்தை (வந்தவரிடம் இருந்து) அபகரிக்கும் விலைமாதர்களின் தந்திர உபாயங்களில் அகப்பட்டுத் திரிந்தவனாக பயனற்ற வழியில் புகுகின்ற எனது இழி குணத்தை ஒழித்து, மங்களகரமான உயர் நிலையைப் பெற்று தவ நிலையை நான் அடைய உனது திருவடிகளைத் தந்து அருள்க. தனந்தத்தத் தனந்தத்தத் தடுண்டுட்டுட் டிடிண்டிட்டிட் டடண்டட்டட் டிமிண்டுட்டுட் இவ்வாறான ஒலிகளுடன் சப்திக்கும் முரசுகளின் தாளங்களுக்கும், தகுந்தொத்தித் திமிந்தித்தித் என்று ஒலிக்கும் பேருடுக்கைகளுக்கும் பயந்து சோர்ந்து அசுரர்கள் சிதற, தக்கவர்களான தேவர்களின் வேண்டுகோளுக்கு இரங்கி, போருக்கு வந்த அசுரர்களை கோபம் மேலெழுந்து பொங்கி எரிக்க, கையில் இருந்த அம்புகளைத் தொடுத்ததால் நூற்றுக் கணக்கான மலைகளின் உச்சிகள் யாவும் நடுக்கம் கொள்ள, கிரெளஞ்ச மலை அஞ்ச அதைப் பிளந்து பொடியாக்கி, உலகத்தின் எல்லாத் திக்கில் உள்ளவர்களும் நன்மை பெற்று விளங்கச் செய்து, போர்க் களத்துக்குச் சென்று வெற்றியைக் கைப்பற்றிக் கொண்ட அழகிய பெருமாளே. 

பாடல் 1165 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனனதன தான தான தனனதன தான தான     தனனதன தான தான ...... தனதான

நகரமிரு பாத மாகி மகரவயி றாகி மார்பு     நடுசிகர மாகி வாய்வ ...... கரமாகி 
நதிமுடிய சார மாகி உதயதிரு மேனி யாகி     நமசிவய மாமை யாகி ...... எழுதான 
அகரவுக ரேத ரோம சகர வுணர் வான சூரன்     அறிவிலறி வான பூர ...... ணமுமாகும் 
அதனைஅடி யேனும் ஓதி இதயகம லாலை யாகி     மருவுமவ தான போதம் ...... அருள்வாயே 
குகனுமரு ளாண்மை கூர மகரமெனு சாப தாரி     குறையகல வேலை மீது ...... தனியூருங் 
குழவிவடி வாக வேநம் பரதர்தவ மாக மீறு     குலவுதிரை சேரு மாது ...... தனைநாடி 
அகிலவுல கோர்கள் காண அதிசயம தாக மேவி     அரியமண மேசெய் தேக ...... வலைதேடி 
அறுமுகவன் மீக ரான பிறவியம ராசை வீசும்     அசபைசெகர் சோதி நாத ...... பெருமாளே.

('நமசிவய' என்னும் பஞ்சாக்ஷரத்தில்(*1)) 'ந' என்னும் எழுத்து (நடராஜ மூர்த்தியின்) இரண்டு பாதங்களாகும். 'ம' என்னும் எழுத்து அவருடைய திரு வயிறு ஆகும். நடுவில் உள்ள 'சி' என்னும் எழுத்து அவருடைய மார்பு ஆகும். 'வ' என்னும் எழுத்து அவருடைய வாய் ஆகும். கங்கையைத் தாங்கிய திருமுடி, 'ய' என்னும் எழுத்தின் சாரமாக விளங்கும். இங்ஙனம் தோன்றி இறைவனது திருமேனியாக விளங்கும் 'நமசிவாய' என்னும் பஞ்சாக்ஷரம் ஆகிய அழகுடன் கூடிய ஐந்து எழுத்துக்களும் அகரம், உகரம் என்னும் எழுத்துக்கள் மூல காரணமாக உள்ளவருடைய ஓம் (அ + உ+ ம்) என்று கூடிய அப்பிரணவத்தின் பொருள் உணர்ந்த சூரபத்மனுடைய(*2) அறிவின் அறிவொளி பரி பூரணப் பொருளாகும். அந்தப் பொருளை அடியேனும் உணர்ந்து, எனது உள்ளத் தாமரையை ஆலயமாகக் கொண்டு விளங்கும் அனுபவ ஞானத்தை அருள்வாயாக. (தன் தாய் பார்வதி தேவிக்கு உற்ற சாபத்தைப் பொறாத) முருகன்(*3) தன் அருளையும், ஆண்மையையும் நிரம்பக் காட்டுவதற்காக, சுறா மீனாகச் சாபம் பெற்ற (சிவ வாகனமாகிய) நந்தி தேவரின் குறை நீங்குமாறு, (பார்வதி தேவியும்) கடற்கரையில் தனியாகக் கிடந்த பெண்குழந்தை வடிவு கொண்டு, நமது வலைஞர் குலத்தவர் செய்த தவத்தின் பயனாக மிக்கு எழுகின்ற அலைகள் வீசும் கடற்கரையில் சேர்ந்த செம்படவப் பெண்ணாக வளர்ந்த பார்வதியைத் தேடி வந்து, எல்லா உலகங்களில் உள்ளவர்களும் பார்க்கும்படி அதிசயமான (வலைஞர்) உருவத்துடன் வந்து, அருமையான திருமணம் செய்து நீங்கிய அந்த 'வலை - தேடி' யாக வந்த சிவபெருமான்தான் ஆறு முகத்தராய் எனக்கு விளங்கி வன்மீக நாதர் என்னும் பெயருடன் (இந்தத் திருவாரூரில்) விளங்கி நிற்க, பிறப்பையும், யம ராஜனையும் (இறப்பையும்) ஒதுக்கித் தள்ள வல்ல அஜபா(*4) மந்திரப் பொருளாகி, உலக மக்கள் காண ஜோதி வடிவமாய் விளங்கும் பெருமாளே. 
என்று சூரனுக்கு முருகவேள் தரிசனம் அளித்தபோது போற்றி நின்றான் ( - கந்த புராணம் 4.13.430).அந்த ஞானத்தை எனக்கும் அருள் புரிக என்று அருணகிரியார் வேண்டுகிறார்.(*3) இது சிவபெருமான் வலை வீசிய திருவிளையாடலைக் குறிக்கும்.தாய்க்கு உற்ற சாபத்தைக் கேட்ட விநாயகரும், முருகனும் கோபித்து சிவபெருமானின் புத்தகங்களைக் கடலில் வீசி எறிந்தனர். முருகனை நீ வணிகர் குலத்தில் ருத்திர சன்மன் என்ற ஊமைப் பிள்ளையாகப் பிறக்கக் கடவாய் என்று சபித்தார். தந்தை முன் அஞ்சாது நின்றதால் முருக வேள் ஆண்மையாளர் எனப்பட்டார். செம்படவப் பெண்ணாக வந்த பார்வதியை சிவபெருமான் வலைஞராக வந்து மணந்தார்.(*4) இது அஜபா மந்திரம்.ஸோஹம் = ஸஹ + அஹம் = 'அவன் நான்' எனப்படும் ஸோஹம்.அதாவது 'ஜீவாத்மாவும், பரமாத்மாவும் ஒன்று' என்று பாவித்தல் வேண்டும் என்பது கருத்து.

பாடல் 1166 - பொதுப்பாடல்கள் 
ராகம் - நாதநாமக்ரியா தாளம் - அங்கதாளம் - 7 1/2 - எடுப்பு - 1/2 அக்ஷரம் தள்ளி 
தகதிமி-2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2

தனதன தத்த தந்த தானத்த     தனதன தத்த தந்த தானத்த          தனதன தத்த தந்த தானத்த ...... தனதான

நரையொடு பற்க ழன்று தோல்வற்றி     நடையற மெத்த நொந்து காலெய்த்து          நயனமி ருட்டி நின்று கோலுற்று ...... நடைதோயா 
நழுவும்வி டக்கை யொன்று போல்வைத்து     நமதென மெத்த வந்த வாழ்வுற்று          நடலைப டுத்து மிந்த மாயத்தை ...... நகையாதே 
விரையொடு பற்றி வண்டு பாடுற்ற     ம்ருகமத மப்பி வந்த வோதிக்கு          மிளிருமை யைச்செ றிந்த வேல்கட்கும் ...... வினையோடு 
மிகுகவி னிட்டு நின்ற மாதர்க்கு     மிடைபடு சித்த மொன்று வேனுற்றுன்          விழுமிய பொற்ப தங்கள் பாடற்கு ...... வினவாதோ 
உரையொடு சொற்றெ ரிந்த மூவர்க்கு     மொளிபெற நற்ப தங்கள் போதித்து          மொருபுடை பச்சை நங்கை யோடுற்று ...... முலகூடே 
உறுபலி பிச்சை கொண்டு போயுற்று     முவரிவி டத்தை யுண்டு சாதித்து          முலவிய முப்பு ரங்கள் வேவித்து ...... முறநாகம் 
அரையொடு கட்டி யந்த மாய்வைத்து     மவிர்சடை வைத்த கங்கை யோடொக்க          அழகுதி ருத்தி யிந்து மேல்வைத்து ...... மரவோடே 
அறுகொடு நொச்சி தும்பை மேல்வைத்த     அரியய னித்தம் வந்து பூசிக்கும்          அரநிம லர்க்கு நன்றி போதித்த ...... பெருமாளே.

மயிர் நரைக்கவும், பற்கள் கழன்று விழவும், தோல் வற்றிப் போகவும், நடை அற்றுப் போகவும், மிகவும் நோவுற்று கால்கள் இளைத்துப் போகவும், கண்கள் இருளடைந்து பார்வையை இழந்து நின்று, தடியை ஊன்று கோலாகக் கொண்டு நடை பயின்று, நழுவி மறைந்து (இறந்து) போகும் இந்த மாமிச உடலை நிலைத்து நிற்கும் ஒரு பொருள் போல் நினைத்து, நம்முடையது என்று உடைமைகளைப் பாராட்டி, அப்படிச் சேகரித்து வந்த நல்வாழ்வை அடைந்து, (முடிவில்) துன்பப் படுத்தும் இந்த மாய வாழ்க்கையை நான் சிரித்து விலக்காமல், நறு மணத்தை நுகர்ந்து வண்டுகள் பாட கஸ்தூரியைத் தடவித் தோய்ந்துள்ள கூந்தலுக்கும், விளங்கும் மை தீட்டிய வேல் போன்ற கண்களுக்கும், தந்திர எண்ணத்துடன் மிக்க அழகைச் செய்துகொண்டு அலங்காரத்துடன் நின்ற விலைமாதர்களுக்கும் மத்தியில் அவதிப்படுகின்ற மனமோகம் உடையவனாகிய நான் அன்பு உற்று உனது சிறந்த அழகிய திருவடியைப் பாடிப் புகழ்தற்கு ஆராய்ந்து மேற் கொள்ளமாட்டேனோ? பொருளோடு, சொல்லும் தெரிந்த (அதாவது, சிவம், சக்தி இவைகளின் உண்மை தெரிந்த) சம்பந்தர், அப்பர், சுந்தரர் என்னும் சைவக்குரவர் மூவர்க்கும் அவர்கள் புகழ் ஒளி பெறுவதற்கு, சிறந்த எழுத்துக்களான (நமசிவாய என்ற) ஐந்தெழுத்தை உபதேசம் செய்தும், தமது ஒரு பக்கத்தில் பச்சை நிறப் பெருமாட்டியாகிய பார்வதியோடு அமைந்தும், உலகம் முழுவதும் கிடைக்கும் பிச்சையை ஏற்றுக் கொண்டும், பாற்கடலில் எழுந்த ஆலகால விஷத்தை உண்டு தமது பரத்தையும் அழியாமையையும் நிலை நிறுத்திக் காட்டியும், பறந்து உலவிச் செல்லவல்ல திரிபுரங்களையும் எரித்துச் சாம்பலாக்கியும், பொருந்தும்படி விஷப்பாம்பை இடுப்பில் கட்டி அழகாக அமைத்தும், விளங்கும் சடையில் தரித்துள்ள கங்கையுடன் ஒத்திருக்க, அழகாகச் சிங்காரித்து பிறைச் சந்திரனை மேலே வைத்தும், பாம்புடன் அறுகம் புல்லோடு நொச்சியையும், தும்பையையும் மேலே சூடியுள்ளவரும், திருமாலும், பிரமனும் நாள்தோறும் வந்து பூஜை செய்யும் சிவபெருமான் ஆகிய நிர்மல மூர்த்திக்கு நல்ல உபதேசப் பொருளைப் போதித்த பெருமாளே. 

பாடல் 1167 - பொதுப்பாடல்கள் 
ராகம் - காபி தாளம் - சதுஸ்ர ரூபகம் - 6

தனந்த தனனந் தனந்த தனந்த தனனந் தனந்த     தனந்த தனனந் தனந்த ...... தனதான

நிமிர்ந்த முதுகுங் குனிந்து சிறந்த முகமுந் திரங்கி     நிறைந்த வயிறுஞ் சரிந்து ...... தடியூணி 
நெகிழ்ந்து சடலந் தளர்ந்து விளங்கு விழியங் கிருண்டு     நினைந்த மதியுங் கலங்கி ...... மனையாள்கண் 
டுமிழ்ந்து பலருங் கடிந்து சிறந்த வியலும் பெயர்ந்து     உறைந்த உயிருங் கழன்று ...... விடுநாள்முன் 
உகந்து மனமுங் குளிர்ந்து பயன்கொள் தருமம் புரிந்து     ஒடுங்கி நினையும் பணிந்து ...... மகிழ்வேனோ 
திமிந்தி யெனவெங் கணங்கள் குணங்கர் பலவுங் குழும்பி     திரண்ட சதியும் புரிந்து ...... முதுசூரன் 
சிரங்கை முழுதுங் குடைந்து நிணங்கொள் குடலுந் தொளைந்து     சினங்க ழுகொடும் பெருங்கு ...... ருதிமூழ்க 
அமிழ்ந்தி மிகவும் பிணங்கள் அயின்று மகிழ்கொண்டு மண்ட     அடர்ந்த அயில்முன் துரந்து ...... பொருவேளே 
அலங்க லெனவெண் கடம்பு புனைந்து புணருங் குறிஞ்சி     அணங்கை மணமுன் புணர்ந்த ...... பெருமாளே.

நிமிர்ந்திருந்த முதுகும் கூன் விழுந்து, பரந்து விளங்கிய முகமும் சுருக்கம் கண்டு, நிறைந்து ஒழுங்காய் இருந்த வயிறும் சரிதலுற்று, தடியை ஊன்றும் நிலை ஏற்பட்டு, நெகிழ்வுற்று உடம்பு தளர்ச்சி அடைந்து, ஒளியுடன் இருந்த கண்கள் அங்கு இருள் அடைந்து, நினைவோடு இருந்த அறிவும் கலக்கம் அடைந்து, மனையவள் இந்த நிலையைக் கண்டு சீ என உமிழ்ந்து, பிறரும் வசைகள் பல பேசி, சிறப்பாக இருந்த குணத்தன்மையும் நீங்கி, உடலில் குடிகொண்டிருந்த உயிரும் பிரிந்து விடும் நாள் வருவதற்கு முன்பாக, மனமகிழ்ச்சியுடன் உள்ளக் குளிர்ச்சியுடன் நல்ல பயனைத் தரும் தர்மங்களைச் செய்து, என் ஆணவம் ஒடுங்கி, உன்னைப் பணிந்து மகிழ மாட்டேனோ? திமிந்தி என்ற ஒலியோடு பிசாசுக் கணங்கள் பல வகையானவை ஒன்று கூடி கூட்டமாக நின்று தாளத்துடன் கூத்தாடி, பழையவனான சூரனின் தலை, கை இவையாவற்றையும் நோவுபடச் செய்து, மாமிசம் நிறைந்த குடலைத் தொளை செய்து, கோபம் கொண்ட கழுகுகளுடன், அந்தச் சூரனின் மிகுத்துப் பெருகும் ரத்தத்தில் முழுகி, அமிழ்ந்தும், நிரம்பப் பிணங்களை உண்டும், மகிழ்ச்சி கொண்டு நெருங்கும்படியாக, தாக்கும் வேலாயுதத்தை முன்பு செலுத்திப் போர் செய்த செவ்வேளே. மாலையாக வெண்மையான கடப்பமலரை அணிந்து கொண்டு, உன்னுடன் சேர்ந்த மலைநாட்டுப் பெண்ணான வள்ளியை முன்பு திருமணம் செய்து கூடிய பெருமாளே. 

பாடல் 1168 - பொதுப்பாடல்கள் 
ராகம் - மத்யமாவதி தாளம் - அங்கதாளம் - 7 1/2 
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதமி-2

தனன தாத்தன தானா தானன     தனன தாத்தன தானா தானன          தனன தாத்தன தானா தானன ...... தனதான

நிருத ரார்க்கொரு காலா ஜேஜெய     சுரர்க ளேத்திடு வேலா ஜேஜெய          நிமல னார்க்கொரு பாலா ஜேஜெய ...... விறலான 
நெடிய வேற்படை யானே ஜேஜெய     எனஇ ராப்பகல் தானே நான்மிக          நினது தாட்டொழு மாறே தானினி ...... யுடனேதான் 
தரையி னாழ்த்திரை யேழே போலெழு     பிறவி மாக்கட லூடே நானுறு          சவலை தீர்த்துன தாளே சூடியு ...... னடியார்வாழ் 
சபையி னேற்றியின் ஞானா போதமு     மருளி யாட்கொளு மாறே தானது          தமிய னேற்குமு னேநீ மேவுவ ...... தொருநாளே 
தருவி னாட்டர சாள்வான் வேணுவி     னுருவ மாய்ப்பல நாளே தானுறு          தவசி னாற்சிவ னீபோய் வானவர் ...... சிறைதீரச் 
சகல லோக்கிய மேதா னாளுறு     மசுர பார்த்திப னோடே சேயவர்          தமரை வேற்கொடு நீறா யேபட ...... விழமோதென் 
றருள ஏற்றம ரோடே போயவ     ருறையு மாக்கிரி யோடே தானையு          மழிய வீழ்த்தெதிர் சூரோ டேயம ...... ரடலாகி 
அமரில் வீட்டியும் வானோர் தானுறு     சிறையை மீட்டர னார்பால் மேவிய          அதிப ராக்ரம வீரா வானவர் ...... பெருமாளே.

அசுரர்களுக்கு ஒரு யமனாக ஏற்பட்டவனே, வெல்க, வெல்க, தேவர்கள் போற்றித் துதிக்கும் வேலனே, வெல்க, வெல்க, பரிசுத்த மூர்த்தியாம் சிவனாருக்கு ஒப்பற்ற குமாரனே, வெல்க, வெல்க, மிக வலிமையான வேலினை ஆயுதமாய்க் கொண்டோனே, வெல்க, வெல்க, என்றெல்லாம் இரவும் பகலுமாக நான் நிரம்பவுமே உன்னுடைய திருவடியைப் பணிந்து போற்றும் படியாக இனியும் சிறிதும் தாமதம் செய்யாமலேதான், இந்தப் புவியில் ஆழமுள்ள ஏழு கடல்களைப் போல் எழுகின்ற பிறவி என்னும் பெருங்கடலில் நான் அனுபவிக்கும் மனக் குழப்பங்களைத் தீர்த்து, உன் பாதமே தலையில் சூடியவனாய், உன் அடியார்கள் வாழ்கின்ற கூட்டத்திலே கூட்டி வைத்து, இனிய ஞான உபதேசத்தையும் எனக்கு அருளி, என்னை ஆண்டுகொண்டு அருள்வதன் பொருட்டே தனியேனாக உள்ள என் முன் நீ தோன்றும் ஒருநாள் உண்டோ? கற்பகத் தருக்கள் நிறைந்த தேவநாட்டு அரசாட்சியைப் புரியும் இந்திரன்* மூங்கிலின் உருவம் எடுத்து, பல நாட்களாக தான் செய்த தவத்தின் பயனாக சிவபிரான் உன்னை அழைத்து நீ சென்று தேவர்களின் சிறையை நீக்க, எல்லாவிதமான உலகப்பற்றும் சுகபோகமும் ஆண்டு அனுபவிக்கும் அசுரர்களின் அரசன் சூரனையும், அவனது மக்கள், சுற்றத்தாரையும் வேல் கொண்டு அவர்கள் பொடியாக விழும்படி தாக்கு என்று திருவாய் மலர்ந்து ஆணையிட, அதனை ஏற்று போர்க்களத்துக்குச் சென்று அசுரர் தங்கிய பெரிய கிரெளஞ்சம், ஏழு மலைகளுடன், சேனையும் அழிந்து விழச்செய்து, எதிர்த்து வந்த சூரனுடன் பகை பூண்டு, போரிலே அவனை அழித்தும், அடைபட்டிருந்த சிறையினின்றும் தேவர்களை விடுவித்துக் காத்தும், சிவபிரானிடம் திரும்பி வந்து சேர்ந்த மகா பராக்ரம வீரனே, தேவர்கள் தொழும் பெருமாளே. 
* சூரனை அஞ்சி இந்திரன் சீகாழிப் பதியில் மூங்கில் உருவில் தவம் செய்துவந்த குறிப்பு கந்த புராணத்தில் உள்ளது.

பாடல் 1169 - பொதுப்பாடல்கள் 
ராகம் - கேதாரம் தாளம் - ஆதி - திஸ்ர நடை - 2 களை - 24

தான தான தான தந்த தான தான தான தந்த     தான தான தான தந்த ...... தனதான

ஆர வார மாயி ருந்து ஏம தூத ரோடி வந்து     ஆழி வேலை போன்மு ழங்கி ...... யடர்வார்கள் 
ஆக மீதி லேசி வந்து ஊசி தானு மேநு ழைந்து     ஆலைமீதி லேக ரும்பு ...... எனவேதான் 
வீர மான சூரி கொண்டு நேரை நேரை யேபி ளந்து     வீசு வார்கள் கூகு வென்று ...... அழுபோது 
வீடு வாச லான பெண்டிர் ஆசை யான மாதர் வந்து     மேலை வீழ்வ ¡£து கண்டு ...... வருவாயே 
நாரி வீரி சூரி யம்பை வேத வேத மேபு கழ்ந்த     நாதர் பாலி லேயி ருந்த ...... மகமாயி 
நாடி யோடி வாற அன்பர் காண வேண தேபு கழ்ந்து     நாளு நாளு மேபு கன்ற ...... வரைமாது 
நீரின் மீதி லேயி ருந்த நீலி சூலி வாழ்வு மைந்த     நீப மாலை யேபு னைந்த ...... குமரேசா 
நீல னாக வோடி வந்த சூரை வேறு வேறு கண்ட     நீத னான தோர்கு ழந்தை ...... பெருமாளே.

ஆடம்பரமாக வாழ்க்கையை நடத்திவந்த நாளிலே, யமனுடைய தூதர்கள் ஓடிவந்து சமுத்திரத்தின் அலைகளைப் போலப் பேரொலியைச் செய்து என்னை நெருக்கி வருத்துவார்கள். என் உடலிலே கோபத்துடன் ஊசியைக் குத்தி நுழைப்பார்கள். ஆலையில் நசுக்கப்படும் கரும்பு என்று சொல்லும்படி என் உடலைக் கசக்கி, வீரம் பொருந்திய சூரிக்கத்தியைக் கொண்டுவந்து உடலை நேர் பாதியாகப் பிளந்து எறிவார்கள். (இந்த மரண வேதனையை நான் படுகையில்) வீட்டில் உள்ளோர் கூ கூ என அழுது கொண்டிருக்கும்போது வீடு வாசலில் உள்ள மாதர்களும், என்மீது அன்பு வைத்த மாதர்களும் வந்து என் உடல் மீது வீழ்வார்கள். இந்தக் கோலத்தைக் கண்டு நீ வந்து அருள் புரிவாயாக. தேவி, வீரமுள்ளவள், அச்சத்தைத் தருபவள், அம்பிகை, எல்லா வேதங்களும் புகழ்கின்ற தலைவராம் சிவனாரின் இடது பாகத்தில் இருக்கும் ஆதியாம் அன்னை, தன்னை விரும்பி ஓடிவருகின்ற அன்பர்கள் கண்டு நிரம்பவே புகழ்ந்து தினந்தோறும் துதித்த மலைமகள், பாற்கடலில் பள்ளி கொண்ட நீல நிறத்து திருமாலின் அம்சமான விஷ்ணுசக்தி, சூலம் ஏந்தியவள் - ஆகிய உமைக்குச் செல்வமாக அமைந்த மைந்தனே, கடப்பமலர் மாலையையே சூடியுள்ள குமரேசனே, நீல நிறத்துடன் (மாறுவேடம் புனைந்து) ஓடிவந்த சூரனை துண்டம் துண்டமாகப் பிளந்த, நியாய மூர்த்தியான ஒப்பற்ற பாலசுப்பிரமணியப் பெருமாளே. 

பாடல் 1170 - பொதுப்பாடல்கள் 
ராகம் - நவரஸ கண்டை தாளம் - ஆதி - திஸ்ர நடை - 12

தான தந்த தான தான தான தந்த தான தான     தான தந்த தான தான ...... தனதான

நீரு மென்பு தோலி னாலு மாவ தென்கை கால்க ளோடு     நீளு மங்க மாகி மாய ...... வுயிரூறி 
நேச மொன்று தாதை தாய ராசை கொண்ட போதில் மேவி     நீதி யொன்று பால னாகி ...... யழிவாய்வந் 
தூரு மின்ப வாழ்வு மாகி யூன மொன்றி லாது மாத     ரோடு சிந்தை வேடை கூர ...... உறவாகி 
ஊழி யைந்த கால மேதி யோனும் வந்து பாசம் வீச     ஊனு டம்பு மாயு மாய ...... மொழியாதோ 
சூர னண்ட லோக மேன்மை சூறை கொண்டு போய் விடாது     தோகை யின்கண் மேவி வேலை ...... விடும்வீரா 
தோளி லென்பு மாலை வேணி மீது கங்கை சூடி யாடு     தோகை பங்க ரோடு சூது ...... மொழிவோனே 
பாரை யுண்ட மாயன் வேயை யூதி பண்டு பாவ லோர்கள்     பாடல் கண்டு ஏகு மாலின் ...... மருகோனே 
பாத கங்கள் வேறி நூறி நீதி யின்சொல் வேத வாய்மை     பாடு மன்பர் வாழ்வ தான ...... பெருமாளே.

நீர், எலும்பு, தோல் இவைகளால் ஆக்கப்பட்டதாகிய என்னுடைய கை, கால்கள் இவைகளோடு, நீண்ட அங்கங்களை உடையவதாகி, மாயமான உயிர் ஊறப் பெற்று, அன்பு பொருந்திய தந்தை தாய் ஆகிய இருவரும் காதல் கொண்ட சமயத்தில் கருவில் உற்று, ஒழுக்க நெறியில் நிற்கும் பிள்ளையாய்த் தோன்றி, அழிதற்கே உரிய வழியில் சென்று, அனுபவிக்கும் இன்ப வாழ்வை உடையவனாகி, குறை ஒன்றும் இல்லாமல், மாதர்களுடன் மன வேட்கை மிக்கு எழ, அவர்களுடன் சம்பந்தப்பட்டு, ஊழ் வினையின்படி ஏற்பட்ட முடிவு காலத்தில் எருமை வாகனனான யமனும் தவறாமல் வந்து பாசக் கயிற்றை வீச, (இந்த) மாமிச உடல் அழிந்து போகும் மாயம் முடிவு பெறாதோ? சூரன் அண்டங்களாம் லோகங்களின் மேலான தலைமையைக் கொள்ளை அடித்துப் போய் விடாமல், மயிலின் மேல் ஏறி வேலாயுதத்தைச் செலுத்திய வீரனே, தோள் மீது எலும்பு மாலையையும், சடையில் கங்கையையும் தரித்து நடனம் புரிபவரும், மயில் போன்ற பார்வதியின் பக்கத்தில் இருப்பவருமா¡ன சிவபெருமானுக்கு ரகசியப் பிரணவப் பொருளை உபதேசித்தவனே, இப்பூமியை உண்டவனான மாயவன், மூங்கில் புல்லாங் குழலை ஊதியவன், முன்பு, (திருமழிசை ஆழ்வார் ஆகிய) புலவர்களின் பாடலைக் கேட்டு மகிழ்ந்து (பின்னர் அவர்களின் வேண்டுகோளுக்கு இரங்கி) அவர்கள் பின்பு செல்பவனாகிய திருமாலின்* மருகனே, பாபங்களைக் குலைத்துப் பொடி செய்து, நீதிச் சொற்களைக் கொண்டு வேத உண்மைகளையே எடுத்துப் பாடுகின்ற அன்பர்களுக்குச் செல்வமாக விளங்கும் பெருமாளே. 
* காஞ்சியில் கணிகண்டன் என்ற சீடனைப் பெற்றிருந்த திருமழிசை ஆழ்வார், ஒருமுறை மன்னனால் கணிகண்டன் அநியாயமாக நாடுகடத்தப்பட்டபோது, தாமும் நாடு துறந்ததோடு, பெருமாளையும் காஞ்சியை விட்டு வரும்படியாகப் பாடினார். அவ்வாறே பெருமாளும் ஆழ்வாரின் பின்னே சென்றார்.

பாடல் 1171 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனதத்தத் தத்தத் தனதன     தனதத்தத் தத்தத் தனதன          தனதத்தத் தத்தத் தனதன ...... தனதான

பகல்மட்கச் செக்கர்ப் ப்ரபைவிடு     நவரத்நப் பத்தித் தொடைநக          நுதிபட்டிட் டற்றுச் சிதறிட ...... இதழூறல் 
பருகித்தித் திக்கப் படுமொழி     பதறக்கைப் பத்மத் தொளிவளை          வதறிச்சத் திக்கப் புளகித ...... தனபாரம் 
அகலத்திற் றைக்கப் பரிமள     அமளிக்குட் கிக்கிச் சிறுகென          இறுகக்கைப் பற்றித் தழுவிய ...... அநுராக 
அவசத்திற் சித்தத் தறிவையு     மிகவைத்துப் பொற்றித் தெரிவையர்          வசம்விட்டர்ச் சிக்கைக் கொருபொழு ...... துணர்வேனோ 
இகல்வெற்றிச் சத்திக் கிரணமு     முரணிர்த்தப் பச்சைப் புரவியு          மிரவிக்கைக் குக்டத் துவசமு ...... மறமாதும் 
இடைவைத்துச் சித்ரத் தமிழ்கொடு     கவிமெத்தச் செப்பிப் பழுதற          எழுதிக்கற் பித்துத் திரிபவர் ...... பெருவாழ்வே 
புகலிற்றர்க் கிட்டுப் ப்ரமையுறு     கலகச்செற் றச்சட் சமயிகள்          புகலற்குப் பற்றற் கரியதொ ...... ருபதேசப் 
பொருளைப்புட் பித்துக் குருபர     னெனமுக்கட் செக்கர்ச் சடைமதி          புனையப்பர்க் கொப்பித் தருளிய ...... பெருமாளே.

சூரியனுடைய ஒளியும் மழுங்கும்படி சிவந்த ஒளியை வீசுகின்ற நவ ரத்தினங்களால் ஆகிய ஒழுங்கு வரிசை கொண்ட மாலை, நகத்தின் நுனி பட்டதனால் அறுபட்டு சிதறுண்ண, வாயிதழ் ஊறலை உண்டு இனிமையாகப் பேசும் மொழிகள் பதைபதைப்புடன் வெளிவர, தாமரை போன்ற கையில் உள்ள பிரகாசமான வளைகள் கலகலத்து ஒலி செய்ய, புளகம் கொண்ட தன பாரம் மார்பில் அழுந்த, மணம் வீசும் படுக்கையில் அகப்பட்டு நிலை தாழுமாறு அழுத்தமாகக் கையால் அணைத்துத் தழுவிய காமப் பற்றால் வரும் மயக்கத்தில், விலைமாதர்களின் வசப்படுதலை விட்டுவிட்டு, உள்ளத்தில் உள்ள அறிவை மிகவும் வைத்துப் போற்றி உன்னை அர்ச்சனை செய்து வணங்க ஒரு பொழுதேனும் உணர மாட்டேனோ? வலிமையையும் வெற்றியையும் கொண்ட, ஒளி வீசும் வேலாயுதத்தையும், வலிமை உடையதும், ஆடல் செய்வதுமான பச்சை நிறம் கொண்ட குதிரையாகிய மயிலையும், சூரியனுடைய கிரணங்களைக் கூவி வரவழைக்கும் சேவல் கொடியையும், வேடர் மகளாகிய வள்ளியையும், பாட்டின் இடையே பொருந்த வைத்து அழகிய தமிழால் பாடல்களை நிறையப் பாடியும், குற்றம் இல்லாமல் எழுதியும் கற்பித்தும் திரியும் பாவலர்களின் பெரிய செல்வமே, விருப்பத்துடன் தர்க்கம் செய்து மயக்கம் கொண்டதும் கலகத்தை விளைவிப்பதும் பகைமை ஊட்டுவதுமான ஆறு சமயத்தினரும் சொல்லுதற்கும் அடைவதற்கும் முடியாததான ஒப்பற்ற உபதேசப் பொருளை திருவாய் மலர்ந்து குரு மூர்த்தி என விளங்கி, முன்று கண்களை உடையவரும், சிவந்த சடை மீது சந்திரனை அணிந்தவருமாகிய தந்தையான சிவபெருமானுக்கு எடுத்துரைத்து அருளிய பெருமாளே. 

பாடல் 1172 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தத்தத்தன தத்தத் தனதன     தத்தத்தன தத்தத் தனதன          தத்தத்தன தத்தத் தனதன ...... தனதான

பத்தித்தர ளக்கொத் தொளிர்வரி     பட்டப்புள கச்செப் பிளமுலை          பட்டிட்டெதிர் கட்டுப் பரதவ ...... ருயர்தாளப் 
பத்மத்திய ரற்புக் கடுகடு     கட்சத்தியர் மெத்தத் திரவிய          பட்சத்திய ரிக்குச் சிலையுரு ...... விலிசேருஞ் 
சித்தத்தரு ணர்க்குக் கனியத     ரப்புத்தமு தத்தைத் தருமவர்          சித்ரக்கிர ணப்பொட் டிடுபிறை ...... நுதலார்தந் 
தெட்டிற்படு கட்டக் கனவிய     பட்சத்தரு ளற்றுற் றுனதடி          சிக்கிட்டிடை புக்கிட் டலைவது ...... தவிராதோ 
மத்தப்பிர மத்தக் கயமுக     னைக்குத்திமி தித்துக் கழுதுகள்          மட்டிட்டஇ ரத்தக் குருதியில் ...... விளையாட 
மற்றைப்பதி னெட்டுக் கணவகை     சத்திக்கந டிக்கப் பலபல          வர்க்கத்தலை தத்தப் பொருபடை ...... யுடையோனே 
முத்திப்பர மத்தைக் கருதிய     சித்தத்தினில் முற்றத் தவமுனி          முற்பட்டுழை பெற்றுத் தருகுற ...... மகள்மேல்மால் 
முற்றித்திரி வெற்றிக் குருபர     முற்பட்டமு ரட்டுப் புலவனை          முட்டைப்பெயர் செப்பிக் கவிபெறு ...... பெருமாளே.

வரிசையாய் அமைந்த முத்துமாலைகளின் கூட்டம் ஒளி வீசுவதும், ரேகைகள் விளங்குவதும், புளகாங்கிதம் கொண்டதும், செப்புக் குடம் போன்றதுமான இளம் மார்பகங்களின் மீது பட்டு ஆடையை அணிந்து, முற்புறத்தில் கச்சை முடிந்து, பரத நாட்டியத்தில் வல்லவர்களுடைய சிறந்த தாளத்துக்கு இணையான தாமரை மொட்டுப் போன்ற மார்பை உடையவர்கள். (ஒரு சமயத்தில்) அன்பையும் (இன்னொரு சமயம்) சினக் குறிப்பையும் காட்டும் வேல் போன்ற கண்களை உடையவர்கள். மிகவும் பொருள் மீது ஆசை வைத்துள்ளவர்கள். கரும்பு வில்லை உடைய, உருவம் இல்லாத மன்மதனுடைய காம சேஷ்டைகள் சேர்ந்துள்ள உள்ளத்தை உடைய இளம் வாலிபர்களுக்கு கொவ்வைப் பழம் போன்ற வாயிதழ் அமுதத்தைத் தருபவர்கள். அவர்கள் அழகிய ஒளி வீசும் பொட்டை இட்டுள்ள பிறைச் சந்திரன் போன்ற நெற்றியை உடைய விலைமாதர்கள். அவர்களின் வஞ்சனை வலையில் படுகின்ற, கஷ்டமான, மிகுந்த ஆசை என்னும் மகிழ்ச்சி நீங்கி, உனது திருவடியில் சரணடைந்து மனதை நிறுத்தினால், உலகச் சிக்கலில் மாட்டிக் கொண்டு இடையிலே புகுந்து அலைச்சல் உறுவது தொலையாதோ? செருக்கையும் மதி மயக்கத்தையும் உடைய யானை முகம் கொண்ட தாரகாசுரனது உடலைக் குத்தியும், மிதித்தும், பேய்கள் அளவில்லாத ரத்தச் சிவப்பில் விளையாடவும், மற்றும் பதினெட்டு கண வகைகளும் ஒலி செய்து நடனமாட, பல வகையான ஜீவ ராசிகளின் தலைகள் சிதறுண்டு விழும்படியாக சண்டை செய்த வேலாயுதத்தை உடையவனே, முக்தி என்னும் மேலான பொருளைப் பெற நினைத்த உள்ளத்தோடு, முதிர்ந்த தவ நிலையில் இருந்த சிவ முனிவரின் (உருவில் வந்த திருமாலின்) முன்னிலையில் நின்று லக்ஷ்மியாகிய பெண் மான் பெற்றுத் தந்த குற மகளாகிய வள்ளியின்* மேல் ஆசை நிரம்பக் கொண்டு, (வள்ளி இருந்த தினைப் புனத்தில்) திரிந்த வெற்றி வீரனாகிய குரு மூர்த்தியே, எதிர்ப்பட்ட பிடிவாதம் பிடித்த பொய்யா மொழி** என்னும் புலவனை முட்டை என்ற பெயர் என்று சொல்லி, அந்தப் புலவனைத் தம் மீது பாடவைத்த பெருமாளே. 
* சிவ முனிவர் தவ நிலையில் இருக்க, திருமகள் மானுருவுடன் எதிரில் செல்ல, அந்த மான் ஒரு பெண் குழவியை ஈன்றது. இக்குழந்தை வேடர்களால் வளர்க்கப்பட்டு வள்ளிக் கிழங்கு தோண்டிய குழியில் இருந்ததால் வள்ளி எனப் பெயரிடப்பட்டது.** சிவனையே பாடும் பொய்யாமொழிப் புலவர் முருகனைப் பாடாது இருக்க, அவரது ஆணவத்தை அடக்க முருகன் வில்லைத் தோளில் தாங்கி வேடனாக வந்து கவி தனிவழி செல்கையில் கவிதையால் மடக்கி ஆட்கொண்டான்.

பாடல் 1173 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனதனன தந்ததன தானத் தாத்தன     தனதனன தந்ததன தானத் தாத்தன          தனதனன தந்ததன தானத் தாத்தன ...... தனதான

பரதவித புண்டரிக பாதத் தாட்டிகள்     அமுதுபொழி யுங்குமுத கீதப் பாட்டிகள்          பலர்பொருள்க வர்ந்திடைக லாமிட் டோட்டிகள் ...... கொடிதாய 
பழுதொழிய அன்புமுடை யாரைப் போற்சிறி     தழுதழுது கண்பிசையு மாசைக் கூற்றிகள்          பகழியென வந்துபடு பார்வைக் கூற்றினர் ...... ஒருகாம 
விரகம்விளை கின்றகழு நீரைச் சேர்த்தகில்     ம்ருகமதமி குந்தபனி நீரைத் தேக்கியெ          விபுதர்பதி யங்கதல மேவிச் சாற்றிய ...... தமிழ்நூலின் 
விததிகமழ் தென்றல்வர வீசிக் கோட்டிகள்     முலைகளில்வி ழுந்துபரி தாபத் தாற்றினில்          விடியளவு நைந்துருகு வேனைக் காப்பது ...... மொருநாளே 
உரகபணை பந்தியபி ஷேகத் தாற்றிய     சகலவுல குந்தரும மோகப் பார்ப்பதி          யுடனுருவு பங்குடைய நாகக் காப்பனும் ...... உறிதாவும் 
ஒருகளவு கண்டுதனி கோபத் தாய்க்குல     மகளிர்சிறு தும்புகொடு மோதிச் சேர்த்திடும்          உரலொடுத வழ்ந்தநவ நீதக் கூற்றனு ...... மதிகோபக் 
கரவிகட வெங்கடக போலப் போர்க்கிரி     கடவியபு ரந்தரனும் வேளைப் போற்றுகை          கருமமென வந்துதொழ வேதப் பாற்பதி ...... பிறியாத 
கடவுளைமு னிந்தமர ரூரைக் காத்துயர்     கரவடக்ர வுஞ்சகிரி சாயத் தோற்றெழு          கடலெனவு டைந்தவுண ரோடத் தாக்கிய ...... பெருமாளே.

பரத நாட்டிய வகைகளுக்கு ஏற்றதும், தாமரை மலர் போன்றதுமான பாதங்களைக் கொண்டு (நாட்டியம்) ஆடுபவர்கள். அமுதம் பொழிகின்ற குமுத மலர் போன்ற வாயினின்றும் கீதங்கள் நிறைந்த பாடல்களைப் பாடுபவர்கள். பல பேருடைய பொருள்களைக் கவர்ந்து, மத்தியில் சண்டை செய்து, (கவர்ந்த பின்பு) ஓட்டி விடுபவர்கள். பொல்லாத குற்றம் (தம்மேல்) சாராத வகைக்கு, அன்பு உள்ளவர்கள் போல சிறிதளவு அழுது கொண்டே கண்களைப் பிசைந்து ஆசை மொழிகளைப் பேசுபவர்கள். அம்பு என்று சொல்லும்படி வந்து பாய்கின்ற பார்வையை உடையவர்கள். ஒரு தலைக் காமமாகிய நோயை விளைவிக்கும் செங்கழு நீர்ப் பூவைச் சேர்த்து முடித்து, அகில், கஸ்தூரி, நிரம்ப பன்னீர் இவைகளை நிறைய அணிபவர்களாகிய விலைமாதர்கள். தேவர்களுக்குத் தலைவனான இந்திரனுடைய உடம்பில் உள்ள அடையாளக் குறியை* விரும்பிப் பாடிய தமிழ் நூல்களின் பரப்பின் இனிய நறு மணம் வீசும் தென்றல் காற்று வரும்படி வீசி, மக்கள் மனதை வளைப்பவர்கள் (ஆகிய இவர்களின்) மார்பகங்களில் விழுந்து பரிதாபமான வழியில் விடியும் வரை வருந்தி உருகுகின்ற என்னைக் காத்தருளும் நாள் ஒன்று உண்டோ? ஆதிசேஷனுடைய பெருமை வாய்ந்த படக் கூட்டமாகிய முடியின் மேல் தாங்கப்பட்ட எல்லா உலகங்களையும் ஈன்றருளிய மருள் இல்லாத பார்வதி தேவியை தனது உருவில் ஒரு பாகத்தில் உடையவனும், பாம்பைக் கங்கணமாக அணிந்துள்ளவனுமாகிய சிவபெருமானும், உறி மீது தாவிய ஒரு திருட்டுத் தனத்தைக் கண்டு மிகுந்த கோபம் கொண்டவர்களாகிய ஆயர் குலப் பெண்கள் சிறு கயிறு கொண்டு மோதிக் கட்டி வைத்த உரலோடு தவழ்ந்த வெண்ணெய் திருடியவன் என்று பேசப்படுபவனாகிய கண்ணனும், மிக்க கோபத்தைக் கொண்டதும், துதிக்கையை உடையதும், அழகானதும், கொடிய மதநீர் வழியும் கன்னத்தை உடையதும், போருக்கு அமைந்ததுமான மலை போன்ற ஐராவதம் என்னும் வெள்ளை யானையைச் செலுத்தும் இந்திரனும், (இந்த மூவரும்) உன்னைத் துதித்தல் தமது கடமைச் செயலாகும் என்று உணர்ந்து வந்து வணங்க, வேதப் பிரணவத்தில் பதிப் பொருள் விளங்கப் பெறாத தேவனாகிய பிரமனைக் கோபித்தும், தேவர்கள் ஊராகிய அமராவதியைக் காத்தும், உயரமுள்ளதும், வஞ்சகம் நிறைந்துள்ளதுமான கிரவுஞ்ச மலை மாண்டு அழிந்து தோல்வி அடைந்து, ஏழு கடல்களும் பெருக்கு எழுந்தது போல் சிதறுண்டு, அசுரர்கள் யாவரும் போர்க்களத்தை விட்டு ஓட்டம் பிடிக்கும்படி எதிர்த்து மோதிய பெருமாளே. 
* கெளதம முனிவரின் மனைவி அகலிகையைக் கூட எண்ணி அவர் இல்லாத சமயத்தில் இந்திரன் அவர் உருவத்தோடு அவளைச் சேர, முனிவர் சாபத்தால் இந்திரன் உடலில் ஆயிரம் பெண் குறிகள் உண்டாயின. அகலிகை கல்லாகுமாறும் சபிக்கப்பட்டாள். ராமனின் கால் அடி அந்தக் கல்லின் மேல் பட்டதும் அகலிகை மீண்டும் பெண்ணுருவம் பெற்றாள்.

பாடல் 1174 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனதன தானத் தனந்த தனதன தானத் தனந்த     தனதன தானத் தனந்த ...... தனதான

பழுதற வோதிக் கடந்து பகைவினை தீரத் துறந்து     பலபல யோகத் திருந்து ...... மதராசன் 
பரிமள பாணத் தயர்ந்து பனைமட லூர்தற் கிசைந்து     பரிதவி யாமெத்த நொந்து ...... மயல்கூர 
அழுதழு தாசைப் படுங்க ணபிநய மாதர்க் கிரங்கி     யவர்விழி பாணத்து நெஞ்ச ...... மறைபோய்நின் 
றழிவது யான்முற் பயந்த விதிவச மோமற்றையுன்ற     னருள்வச மோஇப்ர மந்தெ ...... ரிகிலேனே 
எழுதரு வேதத்து மன்றி முழுதினு மாய்நிற்கு மெந்தை     யெனவொரு ஞானக் குருந்த ...... ருளமேவும் 
இருவுரு வாகித் துலங்கி யொருகன தூணிற் பிறந்து     இரணியன் மார்பைப் பிளந்த ...... தனியாண்மை 
பொழுதிசை யாவிக்ர மன்தன் மருகபு ராரிக்கு மைந்த     புளகப டீரக் குரும்பை ...... யுடன்மேவும் 
புயல்கரி வாழச் சிலம்பின் வனசர மானுக் குகந்து     புனமிசை யோடிப் புகுந்த ...... பெருமாளே.

குற்றம் இல்லாத நல்ல வகையில் கல்விகளை ஓதியும், உலக ஆசைகளைக் கடந்தும், உட்பகையாக வரும் இரண்டு வினைகளை முற்றும் உதறி விலக்கியும், பல வகையான யோக மார்க்கங்களை அநுஷ்டித்து இருந்தும், மன்மத ராஜனான காமனுடைய நறு மணம் வீசும் பாணங்களால் மனக் கவலையும் சோர்வும் கொண்டு, பனை மடலால் செய்த குதிரையில் ஏறுதற்கும் இணங்கி* பரிதவித்து, மிகவும் மனம் நொந்து, காம இச்சை மிகுதிப்பட, அன்பு போல் நடித்து மிகவும் அழுது, விரும்புவது போலக் கண்களால் அபிநயிக்கும் விலைமாதர்களின் மேல் ஆசை வைத்து, அவர்களுடைய கண்களாகிய அம்பினால் உள்ளம் குமைந்து நின்று அழிந்துபோவது, நான் முன்பு செய்த விதியின் விளைவோ? அல்லது உன்னுடைய திருவருளின் கூத்தோ? இந்த மயக்கத்தின் காரணம் எனக்கு விளங்கவில்லையே? யாராலும் எழுதுவதற்கு முடியாத வேதத்தில் மாத்திரம் அல்லாமல், மற்று எல்லாப் பொருள்களிலும் விளங்கி நிற்கும் எம்பெருமான் என்று கூறிய ஒப்பற்ற ஞானக் குழந்தையாகிய பிரகலாதருடைய உள்ளத்தில் வீற்றிருப்பவரும், மனிதன், சிங்கம் என இரண்டு உருவம் அமைந்த (நரசிம்ம) மூர்த்தியாய்த் துலங்கித் தோன்றி, ஒரு பெரிய தூணில் விளக்கம் உற்று எழுந்து, இரணியனின் மார்பைப் பிளந்த ஒப்பற்ற வீரத்தை, பிரகலாதன் வேண்டிய அந்தப் பொழுதிலேயே உடன்பட்டுக் காட்டிய வலிமைசாலியானவரும் ஆகிய திருமாலின் மருகனே, திரிபுரத்தை எரித்த சிவபெருமானுக்கு மைந்தனே, புளகாங்கிதம் கொண்டதும், சந்தனம் பூசியதும், தென்னங்குரும்பை போன்ற இள மார்பு விளங்கியவளும், மேகமும், யானையும் வாழ்கின்ற வள்ளி மலையின் வேடர் குலத்து மான் போன்றவளுமான வள்ளியின் மீது தீராக்காதல் பூண்டு, அவள் காத்துவந்த தினைப்புனத்தில் ஓடிப்புகுந்து நின்ற பெருமாளே. 
* மடல் எழுதுதல்:தலைவன் தலைவியின் அழகை வர்ணித்து ஓர் ஏட்டில் மடலாக எழுதி அவளது ஊருக்குச் சென்று நாற்சந்தியில் ஒன்றும் பேசாமல் ஒருவரது வசைக்கும் கூசாமல் படத்தில் எழுதிய உருவத்தைப் பார்த்தவாறு பகலும் இரவுமாக நிற்பான். அவனது உறுதிகண்டு தலைவியின் வீட்டார் தலைவனுக்கு அவளை மணம் செய்து வைப்பர்.முருகன் வள்ளியை ஊரறிய மடல் எழுதி மணம் செய்துகொண்ட காட்சி கந்த புராணத்தில் வருகிறது.

பாடல் 1175 - பொதுப்பாடல்கள் 

ராகம் - ஹரிகாம்போதி தாளம் - திஸ்ர த்ருபுடை - 7

தானத்தத் தனான தானன தானத்தத் தனான தானன     தானத்தத் தனான தானன ...... தந்ததான

பாணிக்குட் படாது சாதகர் காணச்சற் றொணாது வாதிகள்     பாஷிக்கத் தகாது பாதக ...... பஞ்சபூத 
பாசத்திற்படாது வேறொரு பாயத்திற் புகாது பாவனை     பாவிக்கப் பெறாது வாதனை ...... நெஞ்சமான 
ஏணிக்கெட் டொணாது மீதுயர் சேணுக்குச் சமான நூல்வழி     யேறிபபற் றொணாது நாடினர் ...... தங்களாலும் 
ஏதுச்செப் பொணாத தோர்பொருள் சேரத்துக் கமாம கோததி     யேறச்செச் சைநாறு தாளைவ ...... ணங்குவேனோ 
ஆணிப்பொற் ப்ரதாப மேருவை வேலிட்டுக் கடாவி வாசவன்     ஆபத்தைக் கெடாநி சாசரர் ...... தம்ப்ரகாசம் 
ஆழிச்சத் ரசாயை நீழலி லாதித்தப் ப்ரகாச நேர்தர     ஆழிச்சக் ரவாள மாள்தரும் ...... எம்பிரானே 
மாணிக்க ப்ரவாள நீலம தாணிப்பொற் கிராதைநூபுர     வாசப்பத் மபாத சேகர ...... சம்புவேதா 
வாசிக்கப் படாத வாசகம் ஈசர்க்குச் சுவாமி யாய்முதல்     வாசிப்பித் ததேசி காசுரர் ...... தம்பிரானே.

கரங்களால் தொட்டுப் பிடிக்க முடியாதது, யோக வழியில் சாதகம் செய்பவர்களால் சிறிதும் காண முடியாதது, தர்க்க வாதிகளால் பேசி முடிவு காணமுடியாதது, பாவங்களுக்கு இடம் தரும் ஐந்து பூதங்களால் நிகழும் பாசங்களிலும் தளைகளிலும் அகப்படாதது, வேறு எந்தவிதமான உபாயத்திலும் மாட்டிக் கொள்ளாதது, எவ்வித தியான வகையாலும் தியானிக்கமுடியாதது, வருத்தங்களுக்கு இடமான மனம் என்கின்ற ஏணி கொண்டு எட்டமுடியாதது, மேலே உயரத்தில் இருக்கும் ஆகாயத்துக்கு ஒப்பான கருத்துள்ள கலை நூல்களின் வழியே ஆய்ந்து ஏறிக்கொண்டு பிடிக்கமுடியாதது, தேடி முயல்பவர்களாலும் அதன் காரண மூலம் இன்னதென்று சொல்லமுடியாதது, இத்தகைய ஒப்பற்ற பரம்பொருளை நான் அடைய, துக்கம் என்னும் பெரிய கடலினின்றும் நான் கரை ஏறுவதற்காக, வெட்சி மலரின் நறு மணம் கமழும் உனது திருவடிகளை வணங்க மாட்டேனோ? பத்தரை மாற்றுப் பொன் மயமானதும், புகழ் பெற்றதுமான மேரு மலையை வேலாயுதத்தை எடுத்துச் செலுத்தியும்,* இந்திரனுடைய ஆபத்தைக் கெடுமாறு செய்தும், அசுரர்களுடைய ஒளிமயமான சக்கரங்கள், ஆயுதங்கள் ஆகியவற்றின் சாயையின் நிழல் நீங்க சூரியனுடைய ஒளிக்கு நிகராக விளங்கும், வட்டமான சக்ரவாள கிரிவரையில் உள்ள உலகை ஆண்டருளும் எம்பெருமானே, மாணிக்கமணி, பவளம், நீலமணி (இவைகள் பதிக்கப் பெற்ற) பதக்கத்தை அணிந்த அழகிய வேடப் பெண் வள்ளியின் சிலம்பு அணிந்த தாமரைபோன்ற திருவடியின் நறுமணத்தைச் சூடியுள்ளவனே (அதாவது முருகனின் சிரம் வள்ளியின் பாதங்களில் விழுந்ததின் காரணமாக), பிரம்ம தேவர் படித்துக் கூறமுடியாத தனிமந்திரத்தின் உட்பொருளை, சிவ பெருமானுக்கு நல்லாசிரியனாக இருந்து முன்பு உபதேசித்த குரு நாதனே, தேவர்கள் போற்றும் தனிப்பெரும் தலைவனே. 
* முருகன் பாண்டியன் உக்கிரவழுதியாக மதுரையில் அவதரித்தபோது கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்போது மேருவிடமிருந்து பொற்குவியலைக் கேட்க, அது தராமையால் சினந்து செண்டால் மேருவின்மீது எறிந்து பொன் பெற்றார். அச்செயல் இங்கு குறிப்பிடப்படுகிறது.

பாடல் 1176 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தானன தனத்தத் தாத்த தானன தனத்தத் தாத்த     தானன தனத்தத் தாத்த ...... தனதான

பால்மொழி படித்துக் காட்டி ஆடையை நெகிழ்த்துக் காட்டி     பாயலி லிருத்திக் காட்டி ...... யநுராகம் 
பாகிதழ் கொடுத்துக் காட்டி நூல்களை விரித்துக் காட்டி     பார்வைகள் புரட்டிக் காட்டி ...... யுறவாகி 
மேல்நக மழுத்திக் காட்டி தோதக விதத்தைக் காட்டி     மேல்விழு நலத்தைக் காட்டு ...... மடவார்பால் 
மேவிடு மயக்கைத் தீர்த்து சீர்பத நினைப்பைக் கூட்டு     மேன்மையை யெனக்குக் காட்டி ...... யருள்வாயே 
காலனை யுதைத்துக் காட்டி யாவியை வதைத்துக் காட்டி     காரணம் விளைத்துக் காட்டி ...... யொருக்காலங் 
கானினில் நடித்துக் காட்டி யாலமு மிடற்றிற் காட்டி     காமனை யெரித்துக் காட்டி ...... தருபாலா 
மாலுற நிறத்தைக் காட்டி வேடுவர் புனத்திற் காட்டில்     வாலிப மிளைத்துக் காட்டி ...... அயர்வாகி 
மான்மகள் தனத்தைச் சூட்டி ஏனென அழைத்துக் கேட்டு     வாழ்வுறு சமத்தைக் காட்டு ...... பெருமாளே.

பால் போன்ற இனிய பேச்சுக்களைப் பேசி, உடுத்துள்ள ஆடையைத் தளர்த்திக் காட்டி, படுக்கையில் உடன் அமர்த்திவைத்துக் காட்டி, வெல்லம் போன்ற இனிய வாயிதழ் ஊறலைத் தந்து, காம நூல்களை விவரமாக எடுத்துக் காட்டி, கண் பார்வையை சுழற்றிக் காட்டி நட்புப் பூண்டு, உடலின் மேல் நகத்தை அழுத்தி நகக்குறி இட்டு, வஞ்சகச் செயல்களைக் காட்டி, மேலே விழுந்து தழுவும் சுகங்களைக் காட்டும் விலைமாதர்களிடத்தே சென்று அடையும் காம மயக்கத்தை ஒழித்து, சீரான உனது திருவடி நினைப்பைக் கூட்டி வைக்கும் மேன்மையான எண்ணத்தை எனக்கு அருள் புரிவாயாக. யமனைக் காலால் உதைத்துக் காட்டியும், அவனுடைய உயிரை (திருக்கடையூரில்) வதம் செய்து காட்டியும், அவ்வாறு வதைத்ததன் காரணத்தை* விளக்கிக் காட்டியும், அந்திப் பொழுதில் சுடு காட்டில் நடனம் செய்து காட்டியும், ஆலகால விஷத்தை கண்டத்தில் நிறுத்திக் காட்டியும், மன்மதனை (நெற்றிக்) கண்ணால் எரித்துக் காட்டியும் செய்த சிவபெருமான் அருளிய மகனே, (வள்ளி) காதல் உறும்படி உனது திரு மேனியின் ஒளியைக் காட்டி, வேடர்கள் தினைப் புனக் காட்டில் காளைப் பருவத்தின் சோர்வைக் காட்டி தளர்ச்சியுற்று, மான் பெற்ற மகளாகிய வள்ளியின் மார்பினில் தலைவைத்துச் சாய்ந்து, அவளைத் தழுவி, (நீ) ஏன் (இச்சிறு குடிலில் இருக்க வேண்டுமென்று) கூறி, தன்னுடன் (திருத்தணிகைக்கு) வரும்படி அழைத்து (அவள் இணங்கியதைக்) கேட்டு, அவளோடு இனிய வாழ்வு பெற்று, தனது சாமர்த்தியத்தைக் காட்டிய பெருமாளே. 
* திருக்கடையூரில் சிவபூஜை செய்துகொண்டிருந்த மார்க்கண்டருடைய உயிரைப் பறிக்க யமன் பாசக்கயிறை வீசினான். அதனால் வெகுண்டு யமனைக் காலால் உதைத்து சிவபிரான் வதம் செய்தார் - மார்க்கண்ட புராணம்.

பாடல் 1177 - பொதுப்பாடல்கள் 

ராகம் - மலய மாருதம் தாளம் - அங்கதாளம் - 7 1/2 - எடுப்பு - 1/2 அக்ஷரம் தள்ளி 
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2

தனன தானன தந்தன தந்தன     தனன தானன தந்தன தந்தன          தனன தானன தந்தன தந்தன ...... தனதான

புகரில் சேவல தந்துர சங்க்ரம     நிருதர் கோபக்ர வுஞ்சநெ டுங்கிரி          பொருத சேவக குன்றவர் பெண்கொடி ...... மணவாளா 
புனித பூசுர ருஞ்சுர ரும்பணி     புயச பூதர என்றிரு கண்புனல்          பொழிய மீமிசை யன்புது ளும்பிய ...... மனனாகி 
அகில பூதவு டம்புமு டம்பினில்     மருவு மாருயி ருங்கர ணங்களு          மவிழ யானுமி ழந்தஇ டந்தனி ...... லுணர்வாலே 
அகில வாதிக ளுஞ்சம யங்களும்     அடைய ஆமென அன்றென நின்றதை          யறிவி லேனறி யும்படி யின்றருள் ...... புரிவாயே 
மகர கேதன முந்திகழ் செந்தமிழ்     மலய மாருத மும்பல வெம்பரி          மளசி லீமுக மும்பல மஞ்சரி ...... வெறியாடும் 
மதுக ராரம்வி குஞ்சணி யுங்கர     மதுர கார்முக மும்பொர வந்தெழு          மதன ராஜனை வெந்துவி ழும்படி ...... முனிபால 
முகிழ்வி லோசன ரஞ்சிறு திங்களு     முதுப கீரதி யும்புனை யுஞ்சடை          முடியர் வேதமு நின்றும ணங்கமழ் ...... அபிராமி 
முகர நூபுர பங்கய சங்கரி     கிரிகு மாரித்ரி யம்பகி தந்தருள்          முருக னேசுர குஞ்சரி ரஞ்சித ...... பெருமாளே.

குற்றமற்ற சேவற்கொடியை உடையவனே, உயர்ந்த பற்களுடையவர்களும், போரை விரும்பும் தன்மையும் உடைய அசுரர்கள் மீது கோபிக்கின்றவனே, நீண்ட மலையாகிய கிரெளஞ்சமலையைப் பிளந்த வீர மூர்த்தியே, வேடர் குலக்கொழுந்தாகிய வள்ளியின் கணவனே, தூய்மையான அந்தணரும், தேவர்களும் வணங்கும், மலைபோன்ற தோள்களை உடையவனே எனத் துதித்து, இரு கண்களிலிருந்தும் ஆனந்தக் கண்ணீர் சொரியவும், மேன்மேலும் அன்பு பெருகிய மனத்தனாகி எல்லா பூதங்களும் சேர்ந்த உடம்பும், உடம்பில் பொருந்திய அரிய உயிரும், மனம், புத்தி முதலிய கரணங்களும் கட்டு நீங்கவும், யான் என்ற நினைப்பும் விலகியபோது சிவ போதம் என்ற ஓர் உணர்வினாலே மாறுபட்ட எல்லா வாதிகளும்*, சமயங்களும் ஒதுங்கிப் போய்விடவும், உள்ளது என்றும், இல்லது என்றும் நின்ற உண்மைப் பொருளை அறிவில்லாத சிறிய அடியேன் அறியும்படியாக இன்றைய தினம் உபதேசித்து அருள் புரிவாயாக. மகர மீனக் கொடியைக் கொண்டு விளங்குவதும், செம்மையான தமிழ் முழங்குவதுமான சந்தன மலையாம் பொதிகையில் பிறந்த தென்றல் காற்றும், நானாவிதமான ஆசையைத் தூண்டும் மணமுள்ள மலர் அம்புகளும், பலவிதமான மலர்க் கொத்துக்களில் உள்ள மணத்தில் விளையாடும் வண்டுகளின் வரிசையாகிய நாணுடன், மேலான மலர் அலங்காரமும், கரத்திலே ஏந்திய இனிய கரும்பு வில்லும் கொண்டு காதல் போர் செய்ய எழுந்து வந்த மன்மத ராஜனை வெந்து சாம்பலாகும்படியாகக் கோபித்த நெற்றியில் குவிந்த கண்ணை உடையவரும், அழகிய இளம்பிறைச் சந்திரனையும், பழமையான கங்கா நதியையும் தரித்த ஜடாமுடியை உடையவருமாகிய சிவபெருமானும், வேதமும் நின்று தொழும்படியாக விளங்கி ஞான மணம் திகழும் அபிராமி அம்மையும், சங்குகளால் செய்த கொலுசுகளை அணிந்த திருவடித் தாமரையை உடைய சங்கரியும், ஹிமவானின் புத்திரியும், மூன்று கண்களை உடையவளுமான பார்வதியும் பெற்றருளிய முருகனே, தேவயானை விரும்புகின்ற பெருமாளே. 
* வாதம் செய்கின்ற வாதிகள் பின்வருமாறு:தேக ஆத்மவாதி - உடம்புதான் ஆத்மா என வாதிப்பவன்,கரண ஆத்மவாதி - மனமும் புத்தியும்தான் ஆத்மா என வாதிப்பவன்,இந்திரிய ஆத்மவாதி - இந்திரியங்களே ஆத்மா என வாதிப்பவன்,ஏகாத்மவாதி - ஆத்மாவைத் தவிர வேறில்லை என வாதிப்பவன்,பிம்பப் ப்ரதிபிம்பவாதி - பிரமத்தின் நிழல்தான் உலகம் என வாதிப்பவன்,பரிணாமவாதி - பால் தயிராவது போல பிரமமே உலகானது என வாதிப்பவன்,விவர்த்தனவாதி - பிரமத்திலிருந்து தான் உலகம் வந்தது என வாதிப்பவன்,கணபங்கவாதி - கணந்தோறும் வேறுவேறு ஆத்மா உடம்பில் வருகிறது என வாதிப்பவன்.

பாடல் 1178 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனனத்த தனத்த தனத்தன     தனனத்த தனத்த தனத்தன          தனனத்த தனத்த தனத்தன ...... தனதான

புருவத்தை நெறித்து விழிக்கயல்     பயிலிட்டு வெருட்டி மதித்திரு          புதுவட்டை மினுக்கி யளிக்குல ...... மிசைபாடும் 
புயல்சற்று விரித்து நிரைத்தொளி     வளையிட்ட கரத்தை யசைத்தகில்          புனைமெத்தை படுத்த பளிக்கறை ...... தனிலேறிச் 
சரசத்தை விளைத்து முலைக்கிரி     புளகிக்க அணைத்து நகக்குறி          தனைவைத்து முகத்தை முகத்துட ...... னுறமேவித் 
தணிவித்தி ரதத்த தரத்துமி     ழமுதத்தை யளித்து வுருக்கிகள்          தருபித்தை யகற்றி யுனைத்தொழ ...... முயல்வேனோ 
பரதத்தை யடக்கி நடிப்பவர்     த்ரிபுரத்தை யெரிக்க நகைப்பவர்          பரவைக்குள் விடத்தை மிடற்றிடு ...... பவர்தேர்கப் 
பரையுற்ற கரத்தர் மிகப்பகி     ரதியுற்ற சிரத்தர் நிறத்துயர்          பரவத்தர் பொருப்பி லிருப்பவ ...... ருமையாளர் 
சுரர்சுத்தர் மனத்துறை வித்தகர்     பணிபத்தர் பவத்தை யறுப்பவர்          சுடலைப்பொ டியைப்ப ரிசிப்பவர் ...... விடையேறுந் 
துணையொத்த பதத்த ரெதிர்த்திடு     மதனைக்க டிமுத்தர் கருத்தமர்          தொலைவற்ற க்ருபைக்கு ளுதித்தருள் ...... பெருமாளே.

புருவத்தைச் சுருக்கி கயல் மீன் போன்ற கண்களால் அழைத்து விரட்டி, மதிக்கத்தக்க இரண்டு திரண்ட காதோலைகளை மினுக்கி, வண்டுகளின் கூட்டங்கள் இசை பாடுகின்ற மேகம் போன்ற கூந்தலைக் கொஞ்சம் விரித்து, வரிசையாக ஒளி வீசும் வளையல் இட்ட கைகளை ஆட்டி, அகிலின் நறு மணம் வீச அலங்கரிக்கப்பட்ட மெத்தைப் படுக்கை உள்ள பளிங்கு கற்களால் செய்யப்பட்ட அறையில் அமர்ந்து காம லீலைகளைச் செய்து, மலை போன்ற மார்பகங்கள் புளகாங்கிதம் கொள்ளும்படி அணைத்து, நகக்குறி இட்டு, முகத்தோடு முகம் வைத்து காம விரகத்தைத் தணித்து, சுவை நிரம்பிய வாயிதழ் ஊறலாகிய அமுதினை அளித்து மனதை உருக்கும் விலைமாதர்கள் தருகின்ற மதி மயக்கத்தை விட்டொழித்து உன்னைத் தொழ முயற்சி செய்ய மாட்டேனோ? தாம் ஆடுகின்ற கூத்தை அமைதியுடன் ஆடுபவர், மூன்று புரங்களையும் எரிந்து போகும்படி சிரித்தவர், கடலில் எழுந்த விஷத்தை தன் கழுத்தில் நிறுத்தியவர், (பலி பிச்சை) தேடும் கப்பரை (ஆகிய கபாலத்தை) ஏந்திய கையினர், சிறந்த கங்கை நதி தங்கும் சிரத்தை உடையவர், புகழ் மிக்கவர் எல்லாம் போற்றுகின்ற பெருமான், கயிலை மலையில் வீற்றிருப்பவர், உமையை ஒரு பாகத்தில் உடையவர், தேவர்கள் பரிசுத்தமானவர்கள் ஆகியோரின் மனத்தில் உறைகின்ற பேரறிவாளர், பணிகின்ற பக்தர்களுடைய பிறப்பை அறுப்பவர், சுடலை நீற்றைப் பூசியவர், (நந்தி என்னும்) ரிஷபத்தில் ஏறும், (அடியார்களுக்குத்) துணையாயிருக்கும் திருவடியை உடையவர், (பாணம் எய்த) மன்மதனைக் கடிந்தவர், இயன்பாகவே பாசங்களினின்று நீங்கியவர் (ஆகிய சிவபெருமானது) சித்தத்தில் அமர்ந்துள்ளவனே, அழிவில்லாத கருணையால தோன்றி அருளிய பெருமாளே. 
பாடலின் பின்பகுதி முழுதும் சிவபெருமானின் சிறப்பைக் கூறுவது.

பாடல் 1179 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ஷண்முகப்ரியா தாளம் - சருஸ்ர ரூபகம் - 6

தனத்தந் தான தனதன தனத்தந் தான தனதன     தனத்தந் தான தனதன ...... தனதான

புவிக்குன் பாத மதைநினை பவர்க்குங் கால தரிசனை     புலக்கண் கூடு மதுதனை ...... அறியாதே 
புரட்டும் பாத சமயிகள் நெறிக்கண் பூது படிறரை     புழுக்கண் பாவ மதுகொளல் ...... பிழையாதே 
கவிக்கொண் டாடு புகழினை படிக்கும் பாடு திறமிலி     களைக்கும் பாவ சுழல்படு ...... மடிநாயேன் 
கலக்குண் டாகு புவிதனி லெனக்குண் டாகு பணிவிடை     கணக்குண் டாதல் திருவுள ...... மறியாதோ 
சிவத்தின் சாமி மயில்மிசை நடிக்குஞ் சாமி யெமதுளெ     சிறக்குஞ் சாமி சொருபமி ...... தொளிகாணச் 
செழிக்குஞ் சாமி பிறவியை யொழிக்குஞ் சாமி பவமதை     தெறிக்குஞ் சாமி முனிவர்க ...... ளிடமேவுந் 
தவத்தின் சாமி புரிபிழை பொறுக்குஞ் சாமி குடிநிலை     தரிக்குஞ் சாமி யசுரர்கள் ...... பொடியாகச் 
சதைக்குஞ் சாமி யெமைபணி விதிக்குஞ் சாமி சரவண     தகப்பன் சாமி யெனவரு ...... பெருமாளே.

இந்தப் பூமியில் உன் திருவடிகளை நினைத்துத் தியானிப்பவர்களுக்கும், இறப்பு, நிகழ்வு, எதிர் என்ற முக்கால நிகழ்ச்சிகள் அவர்களின் அறிவுக் கண்ணில் புலப்படும். இந்த உண்மையை அறியாமலே, புரட்டிப் பேசும் பாபநெறிச் சமயவாதிகளின் வழியிலே நடக்கின்ற வஞ்சகப் பொய்யர்களை பாவத்திற்கு என்று ஏற்பட்ட, புழுக்கள் நிறைந்த, நரகம் ஏற்றுக்கொள்ளுதல் ஒருநாளும் தவறாது. பெரியோர்களின் பாடல்களில் போற்றப் பெறும் உனது புகழினை படிக்கும் திறமும், பாடும் திறமும் இல்லாதவன், இளைப்பை உண்டாக்கும் பாவச் சுழற்சியில் சிக்குண்டு சுழலும் நாயினும் கீழ்மகனான எனக்கு, மனக் கலக்கத்தைத் தரும் இப்புவியில் உள்ள எனக்கு, யான் செய்யுமாறு விதிக்கப்பட்ட தொண்டு இவ்வளவு என்று உள்ளதான ஒரு கணக்கு இருப்பது உன் உள்ளத்திற்கு தெரியாமலா போகும்? சிவபிரானிடத்தில் தோன்றிய சுவாமி, மயிலின் மீது நடனம் செய்யும் சுவாமி, எம்முடைய உள்ளத்திலே சிறப்பாக விளங்கும் சுவாமி, தனது திருவுருவத்தின் பேரொளியை அடியார்கள் காணுமாறு விளக்கமாகத் தோன்றும் சுவாமி, பிறவியை அடியோடு தொலைத்தருளும் சுவாமி, பாவங்களைப் போக்கி ஒழிக்கும் சுவாமி, முநிவர்கள் செய்யும் தவப்பொருளாக விளங்கும் சுவாமி, அடியார்கள் செய்யும் பிழைகளை எல்லாம் பொறுத்தருளும் சுவாமி, தேவர்களை விண்ணில் குடிபுகச் செய்து அங்கு நிலைபெற வைத்த சுவாமி, அசுரர்களைப் பொடியாகும்படி நெரித்து அழித்த சுவாமி, யாம் செய்ய வேண்டிய தொண்டு இன்னதென்று நிர்ணயிக்கும் சுவாமி, சரவணபவனே, தந்தைக்கு குருஸ்வாமியாக வந்த பெருமாளே. 

பாடல் 118 0 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தானன தந்தன தந்த தந்தன     தானன தந்தன தந்த தந்தன          தானன தந்தன தந்த தந்தன ...... தனதான

பூசல்த ருங்கய லும்பொ ருந்திய     வாசந றுங்குழ லுந்து லங்கிய          பூரண கும்பமெ னுந்த னங்களு ...... மடமாதர் 
போகம டங்கலை யும்பு ணர்ந்தநு     ராகம்வி ளைந்துவ ரும்பெ ரும்பிழை          போயக லும்படி யொன்றை யன்புற ...... நினையாதே 
ஆசையெ னும்படி யுந்த னங்களு     மோகைந டந்திட வுந்தி னங்களும்          ஆருட னும்பகை கொண்டு நின்றுற ...... நடமாடி 
ஆடிய பம்பர முன்சு ழன்றெதி     ரோடிவி ழும்படி கண்ட தொன்றுற          ஆவிய கன்றுவி டும்ப யங்கெட ...... அருள்வாயே 
வாசவ னன்புவி ளங்க நின்றசு     ரேசர்கு லங்கள டங்க லுங்கெட          வானவர் நின்றுதி யங்கு கின்றதொர் ...... குறைதீர 
வாரிய திர்ந்துப யந்து நின்றிட     மேருஅ டங்கஇ டிந்து சென்றிட          வாகைபு னைந்தொரு வென்றி கொண்டரு ...... ளிளையோனே 
வீசிய தென்றலொ டந்தி யும்பகை     யாகமு யங்கஅ நங்க னும்பொர          வேடையெ னும்படி சிந்தை நொந்திட ...... அடைவாக 
வேடர்செ ழும்புன வஞ்சி யஞ்சன     வேலினு ளங்கள்க லங்கி யின்புற          வேளையெ னும்படி சென்றி றைஞ்சிய ...... பெருமாளே.

சண்டை செய்யும் கயல் மீன் போன்ற கண்களையும், பொருந்தியுள்ள நறு மணம் வீசும் கூந்தலையும், விளக்கமுறும் பூரண குடம் என்று சொல்லத்தக்க மார்பகங்களும் கொண்ட இளம் பெண்களின் காம சுகம் முழுமையும் அனுபவித்து ஆசைநிரம்பி வர, அதனால் ஏற்படும் பெரும் பிழைகள் நீங்கிப் போகுமாறு, அந்த ஒப்பற்ற பரம் பொருளை அன்புடன் நினைக்காமல், ஆசை எப்படி எப்படி போகின்றதோ அப்படி அப்படியே என்னுடைய செல்வமும் மகிழ்ச்சியும் செல்லவும், எல்லாருடனும் பகைமை பூண்டு நிற்கும்படி இவ்வுலகில் உலவி, சுற்றுகின்ற பம்பரம்போலச் சுழன்று, எதிரே ஓடி விழுதலைக் காண்பது போன்ற ஒரு நிகழ்ச்சி ஏற்பட, அதாவது உயிர் உடலை விட்டு நீங்கும் (இறப்பு என்னும்) பயம் ஒழிய அருள் புரிவாயாக. இந்திரனுடைய அன்பு விளக்கம் உற, இருந்த அசுரர் தலைவர்களுடைய கூட்டங்கள் எல்லாம் அழிபட, தேவர்கள் நின்று கலக்கம் கொண்டிருந்த அந்த ஒரு பெரிய குறை நீங்க, கடல் அதிர்ச்சியும் அச்சமும் உற்று நிற்க, மேரு மலை முழுவதும் இடிந்து போக, வெற்றி மாலையை அணிந்து ஒப்பற்ற வெற்றியைக் கொண்டருளிய இளையவனே, வீசிய தென்றலுடன் மாலைப் பொழுதும் பகைமை காட்டும்படியாக அமைய, மன்மதனும் சண்டை செய்ய, காம நோய் என்னும்படியாக மனம் நொந்து வருந்த, அதற்கு ஏற்ப, வேடர்களின் செழிப்பான தினைப் புனத்தில் இருந்த வஞ்சிக் கொடி போன்ற வள்ளியின் மை பூசப்பட்ட வேல் போன்ற கண்ணால் இருவர் மனங்களும் கலங்கி, இன்பம் பெற வேண்டி இதுதான் தக்க சமயம் என்ற குறிப்புடன் வள்ளியிடம் சென்று வணங்கிய பெருமாளே. 

பாடல் 1181 - பொதுப்பாடல்கள் 
ராகம் - தாளம் -

தான தந்தன தானா தானன     தான தந்தன தானா தானன          தான தந்தன தானா தானன ...... தனதான

பூசல் வந்திரு தோடார் காதொடு     மோதி டுங்கயல் மானார் மானமில்          போக மங்கையர் கோடா கோடிய ...... மனதானார் 
பூர குங்கும தூளா மோதப     டீர சண்பக மாலா லாளித          பூத ரங்களின் மீதே மூழ்கிய ...... அநுராக 
ஆசை யென்கிற பாரா வாரமு     மேறு கின்றில னானா பேதஅ          நேக தந்த்ரக்ரி யாவே தாகம ...... கலையாய 
ஆழி யுங்கரை காணே னூபுர     பாத பங்கய மோதே னேசில          னாயி னுங்குரு நாதா நீயருள் ...... புரிவாயே 
வாச வன்பதி பாழா காமல்நி     சாச ரன்குலம் வாழா தேயடி          மாள வன்கிரி கூறாய் நீறெழ ...... நெடுநேமி 
மாத வன்தரு வேதா வோடலை     மோது தெண்கடல் கோகோ கோவென          மாமு றிந்திட நீள்வே லேவிய ...... இளையோனே 
வீசு தென்றலும் வேள்பூ வாளியு     மீறு கின்றமை யாமோ காமவி          டாய்கெ டும்படி காவா யாவியை ...... யெனஏனல் 
மீது சென்றுற வாடா வேடுவர்     பேதை கொங்கையின் மீதே மால்கொடு          வேடை கொண்டபி ரானே வானவர் ...... பெருமாளே.

சண்டைக்கு எழுந்தது என்று சொல்லும்படி இரண்டு தோடுகள் அணிந்த காதுகளுடன் மோதுகின்ற கயல் மீன் போன்ற கண்களை உடைய மாதர்கள் மானமே இல்லாமல் (உடலால்) போகம் கொடுக்கும் வேசிகள். கோடிக் கணக்கான மனத்தைக் கொண்டவர்கள். பச்சைக் கற்பூரம், குங்குமம் இவைகளின் பொடி, மிக்க மகிழ்ச்சி தரும் சந்தனம், சண்பகம் இவைகள் கொண்டு மோகத்தால அழகு செய்யப்பட்ட மலை போன்ற மார்பகங்களின் மேலே முழுகிய காமப் பற்று என்னும் ஆசையாகிய கடலைத் தாண்டி கரை ஏறாதவன் நான். பலவிதப்பட்ட அனேகமான சாஸ்திர மந்திரங்களைக் கூறும் வேத ஆகம கலைகளாகிய கடலின் கரையையும் காணாதவன். உனது சிலம்பணிந்த தாமரைத் திருவடிகள் ஓதிப் போற்றுகின்றேன் இல்லை. அன்பு சிறிதும் இல்லாதவன். இருந்த போதிலும் குரு நாதனே, நீ அருள் புரிவாயாக. இந்திரனுடைய தலைநகர் (அமராவதி. பாழாகாதபடியும், அசுரர்கள் கூட்டம் வாழாமல் அடியோடு மாண்டு போகவும், வலிமை வாய்ந்த கிரவுஞ்ச மலை இரண்டாய் பிளவுபடவும், நீண்ட சக்ரவாள கிரி பொடிபடவும், திருமால் பெற்ற பிரமனும் அலைகள் வீசும் தெளிந்த கடலும் கோகோகோ என்று அஞ்சி அரற்றவும், (சூரனாகிய) மாமரம் முறிந்திடவும், நீண்ட வேலாயுதத்தைச் செலுத்திய இளையவனே, வீசுகின்ற தென்றல் காற்றும் மன்மத வேளின் மலர்ப் பாணங்களும் என் பொறுமைக்கு அப்பாற்பட்டு வாட்டுதல் நன்றோ? இந்தக் காம தாகம் ஒழியும்படி என்னுடைய ஆவியைக் காத்தருள்க என்று கூறிக்கொண்டு, தினைப் புனம் உள்ள அந்த இடத்துக்குச் சென்று (வள்ளியுடன்) உறவாடி, வேடர்கள் மகளாகிய அவளது மார்பின் மேல் மோகம் பூண்டு விருப்பம் கொண்டவனே, தேவர்களின் பெருமாளே. 

பாடல் 1182 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தந்தந் தனன தாத்தன தந்தந் தனன தாத்தன     தந்தந் தனன தாத்தன ...... தனதான

பொங்குங் கொடிய கூற்றனு நஞ்சும் பொதுவில் நோக்கிய     பொங்கும் புதிய நேத்திர ...... வலைவீசிப் 
பொன்கண் டிளகு கூத்திகள் புன்கண் கலவி வேட்டுயிர்     புண்கொண் டுருகி யாட்படு ...... மயல்தீரக் 
கொங்கின் புசக கோத்திரி பங்கங் களையு மாய்க்குடி     கொங்கின் குவளை பூக்கிற ...... கிரிசோண 
குன்றங் கதிரை பூப்பர முன்துன் றமரர் போற்றிய     குன்றம் பிறவும் வாழ்த்துவ ...... தொருநாளே 
எங்கும் பகர மாய்க்கெடி விஞ்சும் பகழி வீக்கிய     வெஞ்சண் டதனு வேட்டுவர் ...... சரணார 
விந்தம் பணிய வாய்த்தரு ளந்தண் புவன நோற்பவை     மென்குங் குமகு யாத்திரி ...... பிரியாதே 
எங்குங் கலுழி யார்த்தெழ எங்குஞ் சுருதி கூப்பிட     எங்குங் குருவி யோச்சிய ...... திருமானை 
என்றென் றவச மாய்த்தொழு தென்றும் புதிய கூட்டமொ     டென்றும் பொழுது போக்கிய ...... பெருமாளே.

சீறி எழும் பொல்லாத யமனையும் விஷத்தையும் (தம் இரு கண்களிலும் கொண்டு) வித்தியாசம் இன்றி யாரிடத்தும் விருப்பத்துடன் பார்க்கும், ஆசை பொங்கும் புதுமை வாய்ந்த கண்ணாகிய வலையை எறிந்து, பொற்காசுகளைப் பார்த்து மன நெகிழ்ச்சி கொள்ளும் நடனமாடும் கணிகையரின் துன்பத்தைத் தரும் புணர்ச்சியை விரும்பி, உயிர் புண்பட்டு மனம் உருகி அந்த விலைமாதர்களுக்கு ஆளாகின்ற காம மயக்கம் ஒழிய, கொங்கு நாட்டில் உள்ள பாம்பு மலையாகிய திருச் செங்கோட்டையும், (தரிசித்தோர்களின்) பாவங்களைப் போக்கும் ஆய்க்குடி என்னும் தலத்தையும், வாசனையுடன் தினமும் நீலோற்பல மலர் பூக்கின்ற திருத்தணிகை மலையையும், சோணாசலம் என்ற திருவண்ணாமலையையும், கதிர்காமத்தையும், அழகிய பரம் என்னும் சொல் முன்னே வருகின்றதும், தேவர்கள் போற்றுவதுமான திருப்பரங்குன்றத்தையும், பிற தலங்களையும் போற்றி வாழ்த்தக்கூடிய ஒரு நாள் எனக்குக் கிடைக்குமோ? எவ்விடத்தும் ஒளிர்வதும், வல்லமை மேம்பட்டு விளங்கும் அம்புகளையும், கட்டப்பட்டுள்ள கொடிய வில்லையும் கொண்ட வேடர்கள் (உனது) திருவடிகளை வணங்க, உனது அருள் வாய்த்த காரணத்தால், அழகிய குளிர்ந்த இவ்வுலகு செய்த தவப் பயனாய் உதித்த மென்மையான குங்குமம் பூசிய மார்பகங்களாகிய மலைகளை உடையவளும், எல்லாவிடத்தும் கான்யாறு பாய்ந்து ஒலித்து எழவும், எங்கும் வேதங்களின் ஒலி பெருகவும் (விளங்கிய வள்ளிமலைத் தினைப் புனத்தில்) குருவிகளைக் கவண் கல்லைக் கட்டி ஓட்டிய அழகிய மான் போன்றவளுமான வள்ளியை, நீ திரு என்றும், மான் என்றும் தன் வசம் இழந்து வணங்க, நாள்தோறும் புதிதாகச் சந்திப்பது போன்ற மகிழ்ச்சியோடு தினமும் உல்லாசமாகக் காலம் கழித்த பெருமாளே. 

பாடல் 1183 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தனன தனதன தனத்தத் தாத்தன     தனன தனதன தனத்தத் தாத்தன          தனன தனதன தனத்தத் தாத்தன ...... தனதான

பொருத கயல்விழி புரட்டிக் காட்டுவர்     புளக தனவட மசைத்துக் காட்டுவர்          புயலி னளகமும் விரித்துக் காட்டுவர் ...... பொதுமாதர் 
புனித விதழ்மது நகைத்துக் காட்டுவர்     பொலிவி னிடைதுகில் குலைத்துக் காட்டுவர்          புதிய பரிபுர நடித்துக் காட்டுவ ...... ரிளைஞோரை 
உருக அணைதனி லணைத்துக் காட்டுவர்     உடைமை யடையவெ பறித்துத் தாழ்க்கவெ          உததி யமுதென நிகழ்த்திக் கேட்பவர் ...... பொடிமாயம் 
உதர மெரிதர மருத்திட் டாட்டிகள்     உயிரி னிலைகளை விரித்துச் சேர்ப்பவர்          உறவு கலவியை விடுத்திட் டாட்கொள ...... நினையாதோ 
மருது பொடிபட வுதைத்திட் டாய்ச்செரி     மகளி ருறிகளை யுடைத்துப் போட்டவர்          மறுக வொருகயி றடித்திட் டார்ப்புற ...... அழுதூறும் 
வளரு நெடுமுகி லெதிர்த்துக் காட்டென     அசட னிரணிய னுரத்தைப் பேர்த்தவன்          மழையி னிரைமலை யெடுத்துக் காத்தவன் ...... மருகோனே 
விருது பலபல பிடித்துச் சூர்க்கிளை     விகட தடமுடி பறித்துத் தோட்களை          விழவு முறியவு மடித்துத் தாக்கிய ...... அயில்வீரா 
வெகுதி சலதியை யெரித்துத் தூட்பட     வினைசெ யசுரர்கள் பதிக்குட் பாய்ச்சிய          விபுத மலரடி விரித்துப் போற்றினர் ...... பெருமாளே.

சண்டை செய்த கயல் மீன் போன்ற கண்களை புரட்டிக் காட்டுவர். புளகாங்கிதம் கொண்ட மார்பின் மீதுள்ள மாலையை அசைத்துக் காட்டுவர். மேகம் போன்ற கூந்தலையும் விரித்துக் காட்டுவர். இத்தகைய விலைமாதர்கள் தங்கள் தூய வாயிதழ் ஊறலாகிய தேனை சிரிப்புடன் காட்டுவர். பளபளப்பாயுள்ள இடுப்பில் ஆடையைக் கலைத்துக் காட்டுவர். புதிதாய் அணிந்துள்ள காலில் உள்ள சிலம்பை நடனம் செய்து காட்டுவர். வாலிபர்களை (அவர்கள்) மனம் உருகும்படி படுக்கையில் அணைத்துக் காட்டுவர். அவர்களுடைய சொத்து முழுமையாக அபகரித்து வறிஞராகத் தாழும்படிச் செய்ய, கடலினின்றும் தோன்றிய அமுதம் போல இனிமையுடன் பேசிப் பொருளைக் கேட்பார்கள். மாயப் பொடியை வயிற்றில் எரிச்சல் உண்டாகும்படி மருந்தை இட்டு ஆட்டி வைப்பார்கள். உயிர் நிலைகளை (தங்கள் கொடு மொழிகளால்) பிரித்தும் கூட்டியும் வைப்பார்கள். இத்தகைய விலைமாதர்களின் சேர்க்கையை நான் விட்டொழியச் செய்து, என்னை ஆண்டு கொண்டருள உன் திரு உள்ளம் நினைக்காதோ? மருத மரமாகிய சகடைப் பொடிபடுமாறு உதைத்தவர். ஆயர் சேரியில் இருந்த மகளிருடைய உறிகளை உடைத்துப் போட்டவர். கலங்கும்படி ஒரு கயிற்றினால் அடிபட்டு கட்டுண்டு அழுதவர். பெருகி (திரிவிக்ரமராய்) பேருருவம் எடுத்த நெடிய மேக நிறத்தினர். எதிரில் காட்டு பார்க்கலாம் என்று (பிரகலாதனைக்) கேட்ட முட்டாள் இரணியனுடைய மார்பைப் பிளந்தவர். மழை பொழிந்த போது பசுக் கூட்டங்களைக் காக்க கோவர்த்தன கிரியைக் குடையாக எடுத்துப் பிடித்து காத்தவராகிய திருமாலின் மருகனே, வீரச் சின்னங்கள் பல ஒலிக்க, சூரனுடைய கூட்டங்களின் பயங்கரமான தலைகளை பறித்தெறிந்து, அவர்களின் தோள்களை விழும்படி முறித்து அடித்துத் தாக்கிய வேல் வீரனே, பெரிய நெருப்பால் கடலை எரித்துத் தூளாக அழியும்படி தீவினைகளைச் செய்த அசுரர்கள் வாழ்ந்த மகேந்திர நகரில் (அக்கடல் நீரைப்) பாய்வித்து அழித்த தேவனே, மலர்களை உனது திருவடியில் விரியத் தூவிபோற்றிப் பரவும் அடியார்களின் பெருமாளே. 

பாடல் 1184 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தந்தானந் தாத்தந் தனதன     தந்தானந் தாத்தந் தனதன          தந்தானந் தாத்தந் தனதன ...... தனதான

மங்காதிங் காக்குஞ் சிறுவரு     முண்டேயிங் காற்றுந் துணைவியும்          வம்பாருந் தேக்குண் டிடவறி ...... தெணும்வாதை 
வந்தேபொன் தேட்டங் கொடுமன     நொந்தேயிங் காட்டம் பெரிதெழ          வண்போதன் தீட்டுந் தொடரது ...... படியேமன் 
சங்காரம் போர்ச்சங் கையிலுடல்     வெங்கானம் போய்த்தங் குயிர்கொள          சந்தேகந் தீர்க்குந் தனுவுட ...... னணுகாமுன் 
சந்தாரஞ் சாத்தும் புயவியல்     கந்தாஎன் றேத்தும் படியென          சந்தாபந் தீர்த்தென் றடியிணை ...... தருவாயே 
கங்காளன் பார்த்தன் கையிலடி     யுண்டேதிண் டாட்டங் கொளுநெடு          கன்சாபஞ் சார்த்துங் கரதல ...... னெருதேறி 
கந்தாவஞ் சேர்த்தண் புதுமல     ரம்பான்வெந் தார்ப்பொன் றிடவிழி          கண்டான்வெங் காட்டங் கனலுற ...... நடமாடி 
அங்காலங் கோத்தெண் டிசைபுவி     மங்காதுண் டாற்கொன் றதிபதி          அந்தாபந் தீர்த்தம் பொருளினை ...... யருள்வோனே 
அன்பாலந் தாட்கும் பிடுமவர்     தம்பாவந் தீர்த்தம் புவியிடை          அஞ்சாநெஞ் சாக்கந் தரவல ...... பெருமாளே.

பெருமைகள் குறைவு படாமல் இவ்வுலகில் உதவும் மக்களும் அமைந்து, இவ்வாழ்வில் கூட இருந்து துணை புரியும் மனைவியும், புதிய உறவினரும் சேர்ந்து செல்வத்தை வைத்து உண்டு வாழ்ந்திருக்கும்போது, தரித்திரம் என்று எண்ணப்படுகின்ற துன்பம் வந்து சேர, பொன் சேர்த்து வைக்க வேண்டிய கவலையால் மனம் வருந்தி, இவ்வாழ்க்கையில் அலைச்சல் நிரம்ப உண்டாக, செழிப்புள்ள தாமரை மலரில் இருக்கும் பிரமன் எழுதி வைத்த எழுத்து வரிசையின்படி யமன் (என் உயிரை அழிப்பதற்குச்) செய்யும் போரின் அச்சத்துடன் உடல் சுடுகாட்டுக்குப் போய்ச் சேரும்படி உயிரைக் கவர, (இந்த உயிர் பிழக்குமோ, பிழைக்காதோ என்னும்) சந்தேகம் தீரும்படி வில் முதலான ஆயுதங்களுடன் என்னை அணுகுவதற்கு முன், சந்தனமும் கடப்ப மாலையும் அணிந்துள்ள திருப்புயங்களை உடையவனே, இயற்றமிழ் ஆகிய (முத்தமிழ் வல்ல) கந்தப் பெருமானே என்று நான் உன்னைப் போற்றும்படி, என்னுடைய மனத் துன்பத்தைத் தீர்த்து எப்பொழுது உன் திருவடி இணைகளைத் தந்து அருள்வாய்? எலும்பு மாலையை அணிந்தவன், அர்ச்சுனன்* கை வில்லால் அடியுண்டு திண்டாட்டம் கொண்டவன், பெரிய மேரு மலையாகிய வில்லைச் சார வைத்துள்ள திருக் கரத்தை உடையவன், (நந்தி என்னும்) ரிஷப வாகனன், பற்றுக் கோடாக வைத்துள்ள அம்புக் கூட்டில் குளிர்ந்த புதிய மலர்ப் பாணங்களை உடைய மன்மதன் வெந்து கூச்சலிடும்படி (நெற்றிக்)கண் கொண்டு பார்த்தவன், கொடிய சுடு காட்டில் நெருப்பை ஏந்தி நடனம் ஆடுபவன், அந்தப் பாற்கடலில் ஆலகால விஷத்தை ஒன்று சேர்த்து, எட்டுத் திசைகளைக் கொண்ட பூமியில் உள்ளவர்கள் அழிவுறாமல் இருக்க தானே உண்டவனாகிய சிவபெருமானுக்கு, பொருந்திய உபதேசத் தலைவனாய் (பிரணவ மந்திரத்தை அறிய வேண்டும் என்னும்) அந்த நல்ல தாகத்தைத் தீர்த்து அழகிய அந்த ஞானப் பொருளை உபதேசித்தவனே, அன்புடன் அழகிய உனது திருவடியை வணங்கும் அடியார்களுடைய பாவத்தைத் தீர்த்து, அழகிய இப்பூமியில் எதற்கும் பயப்படாத மனதையும் செல்வத்தையும் கொடுக்க வல்ல பெருமாளே. 
* அர்ச்சுனன் இமயமலையில் தவம் செய்திருந்த போது, துரியோதனன் ஏவ, மூகன் என்னும் அசுரன் பன்றி உருவம் கொண்டு அவனைக் கொல்ல வந்தான். அதை அறிந்த சிவபெருமான் வேட உருவம் கொண்டு அப்பன்றியின் பின் பாகத்தைப் பிளந்தார். இதை அறியாத அர்ச்சுனன் பன்றி வருவதைக் கண்டு அதன் முகத்தில் ஒரு அம்பைச் செலுத்தினான். முன்பு நீ எப்படி அம்பைத் தொடுத்தாய் என்று சிவனுக்கும், அர்ச்சுனனுக்கும் விற்போர் நடந்தது. நாண் அறுபட அர்ச்சுனன் சிவனை நாண் அறுந்த வில் தண்டால் அடித்தான்.

பாடல் 1185 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தனன தனதன தனத்தா தன     தனன தனதன தனத்தா தன          தனன தனதன தனத்தா தன ...... தனதான

மதன தனுநிக ரிடைக்கே மன     முருக வருபிடி நடைக்கே யிரு          வனச பரிபுர மலர்க்கே மது ...... கரம்வாழும் 
வகுள ம்ருகமத மழைக்கே மணி     மகர மணிவன குழைக்கே மட          மகளிர் முகுளித முலைக்கே கட ...... லமுதூறும் 
அதர மதுரித மொழிக்கே குழை     யளவு மளவிய விழிக்கே தள          வனைய தொருசிறு நகைக்கே பனி ...... மதிபோலும் 
அழகு திகழ்தரு நுதற்கே யந     வரத மவயவ மனைத்தூ டினு          மவச முறுமயல் தவிர்த்தாள் வது ...... மொருநாளே 
உததி புதைபட அடைத்தா தவன்     நிகரி லிரதமும் விடுக்கா நகர்          ஒருநொ டியில்வெயி லெழச்சா நகி ...... துயர்தீர 
உபய வொருபது வரைத்தோள் களு     நிசிச ரர்கள்பதி தசக்¡£ வமு          முருள ஒருகணை தெரித்தா னும ...... வுனஞான 
திதமி லவுணர்த மிருப்பா கிய     புரமு மெரியெழ முதற்பூ தர          திலத குலகிரி வளைத்தா னும ...... கிழவானோர் 
திருவ நகர்குடி புகச்சீ கர     மகர சலமுறை யிடச்சூ ரொடு          சிகர கிரிபொடி படச்சா டிய ...... பெருமாளே.

மன்மதனுடைய உடலுக்கு ஒப்பான (உருவம் இல்லாத) இடுப்பின் மீதும், மனம் உருகும்படியாக வருகின்ற பெண் யானையின் நடையின் மீதும், இரண்டு தாமரை மலர் போன்ற, சிலம்பு அணிந்த மலரடிகள் மீதும், வண்டுகள் வாழ்கின்றதும் மகிழம் பூவும் கஸ்தூரியும் அணிந்துள்ளதுமான, மேகம் போன்ற நீண்ட கூந்தலின் மீதும், ரத்தினங்கள் பதித்த மகர மீன் போன்ற குண்டல அணியின் மீதும், இள மகளிர்களின் மலர் மொட்டுப் போலக் குவிந்துள்ள மார்பகத்தின் மீதும், பாற்கடல் அமுது போல் இனித்து ஊறும் வாயிதழ் ஊறலின் மீதும், இனிய பேச்சின் மீதும், குண்டலங்கள் வரைக்கும் நீண்டுள்ள கண்களின் மீதும், முல்லை மலர் போன்ற ஒப்பற்ற புன்னகையின் மீதும், குளிர்ந்த பிறைச் சந்திரன் போன்று அழகு விளங்கும் நெற்றியின் மீதும், எப்போதும் இவ்வாறு எல்லா அவயவங்களின் மீதும் மயக்கம் கொள்ளும் காமப் பித்தை ஒழித்து, என்னை நீ ஆட்கொள்ளுவதும் ஆகிய ஒரு நாள் கிட்டுமோ? கடல் புதைபடும்படி அடைத்து, சூரியனுடைய ஒப்பற்ற தேரும் வரக் கூடாதென்று தடுக்கப்பட்டிருந்த நகரமாகிய இலங்கையில், ஒரு நொடிப் பொழுதில் சூரியன் ஒளி வரும்படிச் செய்து, சீதையின் துயரம் தீரும்படி, இருபது மலை போன்ற தோள்களும், அரக்கர்களுடைய தலைவனாகிய ராவணனுடைய பத்து கழுத்தும் உருண்டு மாண்டு விழ ஒப்பற்ற அம்பை விட்டவனாகிய (ராமனாகிய) திருமாலும், மவுன ஞான, நிலை இல்லாத அவுணர்களுடைய* இருப்பிடமாயிருந்த திரிபுரங்களும் எரிபட்டு அழியும்படி, மலைகளுள் முதன்மை வாய்ந்ததும், நெற்றித் திலகம் போல சிறப்பான மேரு மலையை (வில்லாக) வளைத்த சிவபெருமானும் மகிழ்ச்சி கொள்ளும்படியும், தேவர்கள் செல்வம் நிறைந்த பொன்னுலகுக்கு குடி போகும்படியும், அலைகளும், மகர மீன்களும் கொண்ட கடல் முறையிட்டு ஓலமிடும்படியும், சூரனுடன், உச்சிகளை உடைய எழு கிரிகளும் பொடிபட்டு அழிய வேல் கொண்டு மோதிய பெருமாளே. 
* திரிபுரத்தில் இருந்த அசுரர்கள் சிவ பூஜையை விட்டால் ஒழிய அவர்களை வெல்ல முடியாது என உணர்ந்த திருமால், புத்த ஆசாரியராகவும், நாரதர் அவர் மாணாக்கர் ஆகவும் போந்து, அசுரர்களை மயக்கிச் சிவபூஜையை கைவிடச் செய்தனர். ஆனால் மூன்று அசுரர்கள் மட்டும் சிவ நெறியிலேயே இருந்து ஒழுகி இறக்காமல் தப்பினர்.

பாடல் 1186 - பொதுப்பாடல்கள் 
ராகம் - தோடி தாளம் - திஸ்ர ஏகம் - 3

தனதானன தனதானன தனதானன தனதானன     தனதானன தனதானன ...... தனதான

மதனேவிய கணையாலிரு வினையால்புவி கடல்சாரமும்     வடிவாயுடல் நடமாடுக ...... முடியாதேன் 
மனமாயையொ டிருகாழ்வினை யறமூதுடை மலம்வேரற     மகிழ்ஞானக அநுபூதியி ...... னருள்மேவிப் 
பதமேவுமு னடியாருடன் விளையாடுக அடியேன்முனெ     பரிபூரண கிருபாகர ...... முடன்ஞான 
பரிமேலழ குடனேறிவி ணவர்பூமழை யடிமேல்விட     பலகோடிவெண் மதிபோலவெ ...... வருவாயே 
சதகோடிவெண் மடவார்கட லெனசாமரை யசையாமுழு     சசிசூரியர் சுடராமென ...... வொருகோடிச் 
சடைமாமுடி முநிவோர்சர ணெனவேதியர் மறையோதுக     சதிநாடக மருள்வேணிய ...... னருள்பாலா 
விதியானவ னிளையாளென துளமேவிய வளிநாயகி     வெகுமாலுற தனமேலணை ...... முருகோனே 
வெளியாசையொ டடைபூவணர் மருகாமணி முதிராடக     வெயில்வீசிய அழகாதமிழ் ...... பெருமாளே.

மன்மதன் செலுத்திய மலர் அம்புகளால் பட்டும், நல்வினை தீவினை ஆகிய இரு வினைகளால் பட்டும், மண், நீர் முதலிய பஞ்ச பூதங்களின் இயக்கங்களில் பட்டும் வடிவமான இந்த உடலுடன், இந்த உலகில் நடமாட முடியாதவனாகிய நான் மனத்திலுள்ள மாயையும், நல்வினை தீவினை என்ற இரு முற்றிய வினைகளும் ஒழிய, பழமையாக வரும் ஆணவம் என்ற மலம் வேரோடு அற்று வீழ, மகிழத்தக்க, உள்ளத்தில் விளங்கும், அனுபவ ஞானம் ஆகிய அருளை அடைந்து, உன் திருவடியை அடைந்த அடியார்களுடன் நானும் சேர்ந்து விளையாட, அடியேன் எதிரில் நிறைந்த கருணையுடன் ஞானம் என்னும் குதிரையாகிய மயில் மீது அழகுடன் ஏறி, தேவர்கள் பூமாரியை உன் திருவடிகளின் மேல் பொழிய பல கோடிக்கணக்கான வெண்ணிலவின் ஒளி வீச நீ வருவாயாக. நூறு கோடி வெண்ணிற மாதர்கள் கடல் அலைகளைப் போல் சாமரங்கள் வீச, பூரண சந்திரனும், சூரியனும் தீப ஒளியாய்ச் சுடர் வீச, ஒரு கோடிக்கணக்கான, சடைமுடி தாங்கிய முநிவர்கள் சரணம் என்று வணங்க, வேதியர்கள் வேதங்களை ஓதிட, தாளத்துடன் கூடிய நடனத்தை ஆடிய ஜடாமுடி தாங்கும் (நடராஜராம்) சிவபெருமான் அருளிய குழந்தையே, உயிர்களுக்கு எல்லாம் ஆயுளை விதிக்கும் பிரமனின் தங்கை*, என் உள்ளத்தில் வீற்றிருக்கும் வள்ளிநாயகி மிக்க ஆசைப்படும்படி அவளின் மார்பினை அணைந்த முருகனே, ஆகாயம், திசைகள் எல்லாம் நிறைந்துள்ள, காயாம்பூ போன்ற நீலவண்ணத்து திருமாலின் மருகனே, ரத்தினம், செம்மை முதிர்ந்த பொன் ஆகியவற்றின் ஒளி கலந்து வீசுகின்ற அழகனே, தமிழர்களின் பெருமாளே. 
* பிரமன் திருமாலின் மைந்தன். வள்ளி திருமாலின் புத்திரியாகிய சுந்தரவல்லியின் மறு பிறப்பு. எனவே வள்ளி பிரமனின் தங்கை.

பாடல் 1187 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தானதனத் தத்த தத்த தத்தன     தானதனத் தத்த தத்த தத்தன          தானதனத் தத்த தத்த தத்தன ...... தனதான

மாடமதிட் சுற்று மொக்க வைத்திட     வீடுகனக் கத்த னத்தி லச்சுறு          மாலிபமொத் துப்ர புத்த னத்தினி ...... லடைவாக 
மாதர்பெருக் கத்த ருக்க மற்றவர்     சூழவிருக் கத்த ரிக்க இப்படி          வாழ்க்கையில்மத் தப்ர மத்த சித்திகொள் ...... கடைநாளிற் 
பாடையினிற் கட்டி விட்டு நட்டவர்     கூடஅரற் றிப்பு டைத்து றுப்புள          பாவையெடுத் துத்த ழற்கி ரைப்பட ...... விடலாய 
பாடுதொலைத் துக்க ழிக்க அக்ருபை     தேடுமெனைத் தற்பு ரக்க வுற்றிரு          பாதுகையைப் பற்றி நிற்க வைத்தெனை ...... யருளாதோ 
ஆடகவெற் பைப்பெ ருத்த மத்தென     நாகவடத் தைப்பி ணித்து ரத்தம          ரார்கள்பிடித் துத்தி ரித்தி டப்புகை ...... யனலாக 
ஆழிகொதித் துக்க தற்றி விட்டிமை     யோர்களொளிக் கக்க ளித்த உக்கிர          ஆலவிடத் தைத்த ரித்த அற்புதர் ...... குமரேசா 
வேடர்சிறுக் கிக்கி லச்சை யற்றெழு     பாரும்வெறுத் துச்சி ரிப்ப நட்பொடு          வேளையெனப் புக்கு நிற்கும் வித்தக ...... இளையோனே 
வேகமிகுத் துக்க திக்கும் விக்ரம     சூரர்சிரத் தைத்து ணித்த டக்குதல்          வீரமெனத் தத்து வத்து மெச்சிய ...... பெருமாளே.

வீட்டைச் சுற்றிலும் மதிள் ஒரு சேர வைத்துக் கட்டப்பட்ட அந்த வீடு நிறையும்படி பொருள் சேகரித்து, (அந்தப் பொருள் கொள்ளை போகாமல் இருக்க வேண்டுமென்று) பயம் கொள்பவனாய், மயக்கம் கொண்ட யானை போன்ற அதிகார நிலையில் தகுதியுடன் இருந்து, பெண்கள் கூட்டம் பெருத்திருக்க, தன்னோடு எதிர்த்துத் தர்க்கம் பேசாதவர்கள் சூழ்ந்திருந்து ஆதரிக்க, இங்ஙனம் வாழும் போது பெரு மயக்கம் என்னும் இறப்பு வந்து சேர, இறுதி நாளில் பாடையில் கட்டிவிட்டு நண்பானவர்கள் (பிண ஊர்வலத்துடன்) கூட அழுது அடித்துக் கொண்டு, அவயவங்கள் அத்தனையும் கூடிய பிண்டமாகிய உருவத்தை எடுத்து நெருப்புக்கு இரையாகும்படி விட்டு விடுவதான, வேதனையை ஒழித்து விடுவதான அந்த அருட் பேற்றினைத் தேடுகின்ற என்னை நான் காத்துக் கொள்ளும் வகைக்கு வைத்து, உனது இரண்டு பாதுகைகளைச் சிக்கெனப் பற்றி நிற்கும்படியாகச் செய்து எனக்கு அருள் பாலிக்க மாட்டாயோ? பொன் மலை மேருவை பெரிய மத்தாக அமைத்து (வாசுகியாகிய) பாம்பைக் கயிறாகக் கட்டி, பலமுடன் தேவர்கள் பிடித்து (பாற்கடலைக்) கடைய, புகையும் நெருப்புமாக கடல் கொதிப்புற்று யாவரையும் கதற வைத்து, தேவர்கள் ஓடி ஒளிய, மதர்ப்புடன் எழுந்த, கொடுமை கொண்ட, ஆலகால விஷத்தை (தம் கண்டத்தில்) தரித்து நிறுத்திய) அற்புதராகிய சிவபெருமானின் குமார ஈசனே, வேடர்கள் பெண்ணாகிய வள்ளியினிடத்தில் நாணம் இன்றி, ஏழு உலகில் உள்ளோரும் பரிகசித்துச் சிரிக்க, நட்புப் பாராட்டி இது நல்ல சமயம் என்று சென்று அவளருகில் நின்ற பேரறிவு கொண்ட இளையோனே, கோபம் மிக உண்டாகும் வலிமை கொண்ட சூரர்களுடைய தலைகளை அறுத்து அவர்களை அடக்குதல் வீரமாகும் என்ற அவ்வுண்மையைக் கொண்டாடி அனுஷ்டித்த பெருமாளே. 

பாடல் 1188 - பொதுப்பாடல்கள் 
ராகம் - சங்கராபரணம் தாளம் - அங்கதாளம் - 6 1/2 
தகதகிட-2 1/2, தகதிமி-2, தகதிமி-2

தாந்தான தந்தன தந்தன     தாந்தான தந்தன தந்தன          தாந்தான தந்தன தந்தன ...... தனதான

மாண்டாரெ லும்பணி யுஞ்சடை     யாண்டாரி றைஞ்ச மொழிந்ததை          வான்பூத லம்பவ னங்கனல் ...... புனலான 
வான்பூத முங்கர ணங்களு     நான்போயொ டுங்கஅ டங்கலு          மாய்ந்தால்வி ளங்கும தொன்றினை ...... யருளாயேல் 
வேண்டாமை யொன்றைய டைந்துள     மீண்டாறி நின்சர ணங்களில்          வீழந்தாவல் கொண்டுரு கன்பினை ...... யுடையேனாய் 
வேந்தாக டம்புபு னைந்தருள்     சேந்தாச ரண்சர ணென்பது          வீண்போம தொன்றல என்பதை ...... யுணராதோ 
ஆண்டார்த லங்கள ளந்திட     நீண்டார்மு குந்தர்த டந்தனில்          ஆண்டாவி துஞ்சிய தென்றுமு ...... தலைவாயுற் 
றாங்கோர்சி லம்புபு லம்பிட     ஞான்றூது துங்கச லஞ்சலம்          ஆம்பூமு ழங்கிய டங்கும ...... ளவில்நேசம் 
பூண்டாழி கொண்டுவ னங்களி     லேய்ந்தாள வென்றுவெ றுந்தனி          போந்தோல மென்றுத வும்புயல் ...... மருகோனே 
பூம்பாளை யெங்கும ணங்கமழ்     தேங்காவில் நின்றதொர் குன்றவர்          பூந்தோகை கொங்கைவி ரும்பிய ...... பெருமாளே.

(தக்ஷயாகத்துக்குப் பின்) இறந்து பட்ட திருமால், பிரமன் முதலோருடைய எலும்பை அணிந்தவரும், ஜடாமுடிகொண்ட தலைவரும் ஆகிய சிவபெருமான் உன்னை வணங்க, நீ உபதேசித்த பிரணவப் பொருளை, விண், பூமி, காற்று, நெருப்பு, நீர் ஆகிய பெரிய ஐம்பூதங்களும், (மனம், புத்தி, சித்தம், அகங்காரம்) எனப்படும் நான்கு கரணங்களும், நான், எனது - என்னும் அகங்கார மமகாரமும் நீங்கி ஒடுங்க, இங்ஙனம் எல்லாம் இறந்துபட்டால் விளங்குவதான அந்த ஒப்பற்ற ஒரு பொருளை நீ எனக்கு அருளாவிட்டால் (அதற்குப் பதிலாக) வேண்டாமை என்னும் ஆசை நீக்கமான மன நிலை ஒன்றை நான் அடைந்து, என் மனம் மீண்டும் பல திசைகளில் ஓடாது அமைதிபெற்று உனது திருவடிகளில் விழுந்து ஆசையுடனே உள்ளம் உருகும்படியான அன்பு நிலையை நான் உடையவனாகி, அரசே, கடப்ப மாலை அணிந்த காரணனே, உன் திருவடியே சரணம் என்னும் அந்த வழிபாடு வீணாகப் போகும்படியான ஒன்று அன்று என்பதை உணரமாட்டேனோ? உலகத்தை எல்லாம் ஆள்பவர், மூவுலகையும் தமது திருவடி இரண்டினால் அளக்கவேண்டி நீண்ட உருவம் (விஸ்வரூபம்) எடுத்தவர், முகுந்தர், மடுவில் அன்றொரு நாள் உயிரே போய்விட்டது என்று முதலையின் வாயில் அகப்பட்டு, அங்கே ஒரு மலைபோன்ற (கஜேந்திரன் என்னும்) யானை (ஆதிமூலமே என்று) கூச்சலிட, அப்பொழுது ஊதின பரிசுத்தமான பாஞ்ச ஜன்யம் என்னும் சங்கை, மலரை ஒத்த வாயில் முழக்கம் செய்து சங்கின் ஓசை அடங்குவதற்குள் அளவில்லாத அன்பு பூண்டு சுதர்ஸன சக்கரத்தை ஏந்தி (மடு இருந்த) வனத்தை அடைந்து (அந்த யானையை) ஆண்டருள தான் மாத்திரம் தனியே வந்து அபயம் தந்தோம் என்று உதவிய மேக நிறம் கொண்ட திருமாலின் மருகனே, அழகிய தென்னம்பாளை எங்கும் நறு மணம் வீசுகின்ற இனிய பூஞ்சோலையில் இருந்த ஒப்பற்ற (வள்ளி) மலை வேடர்களின் அழகிய மயில் போன்ற வள்ளியின் மார்பகங்களை விரும்பிய பெருமாளே. 

பாடல் 1189 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தானதன தான தத்த தானதன தான தத்த     தானதன தான தத்த ...... தனதான

மாறுபொரு கால னொக்கும் வானிலெழு மாம திக்கும்     வாரிதுயி லாவ தற்கும் ...... வசையேசொல் 
மாயமட வார்த மக்கும் ஆயர்குழ லூதி சைக்கும்     வாயுமிள வாடை யிற்கு ...... மதனாலே 
வேறுபடு பாய லுக்கு மேயெனது பேதை யெய்த்து     வேறுபடு மேனி சற்று ...... மழியாதே 
வேடர்குல மாதி னுக்கு வேடைகெட வேந டித்து     மேவுமிரு பாத முற்று ...... வரவேணும் 
ஆறுமிடை வாள ரக்கர் நீறுபட வேலெ டுத்த     ஆறுமுக னேகு றத்தி ...... மணவாளா 
ஆழியுல கேழ டக்கி வாசுகியை வாய டக்கி     ஆலுமயி லேறி நிற்கு ...... மிளையோனே 
சீறுபட மேரு வெற்பை நீறுபட வேசி னத்த     சேவலவ நீப மொய்த்த ...... திரள்தோளா 
சேருமட லால்மி குத்த சூரர்கொடு போய டைத்த     தேவர்சிறை மீள விட்ட ...... பெருமாளே.

பகைமையுடன் சண்டை செய்யும் யமனை நிகர்த்து ஆகாயத்தில் எழுகின்ற அழகிய சந்திரனுக்கும், கடல் தூக்கம் கொள்ளாது (அலை ஒலித்துக் கொண்டே) இருக்கும் அந்த நிலைக்கும், வசை மொழிகளையே பேசிக் கொண்டிருக்கும் வஞ்சனை கொண்டுள்ள மாதர்களுக்கும், இடையர் குழல் ஊதும் இசைக்கும், வாய்ந்துள்ள இளம் வாடைக் காற்றுக்கும், அதனாலே படுக்கை வேறுபடுவதற்கும் (தனித்திருப்பதற்கும்), (இவைகள் காரணமாக) எனது பேதைப் பெண் இளைத்து நிறம் மாறி போன உடல் கொஞ்சமும் கெடாதவாறு, வேடப் பெண்ணாகிய வள்ளியின் பொருட்டு காம நோய் தீரும்படி திருவிளையாடல்களைச் செய்து விளங்கும் உன் இரண்டு திருவடிகளுடன் பொருந்தி (இப்பேதையிடமும்) நீ வர வேண்டும். ஆறு வகைக் கெட்ட குணங்கள்* நிறைந்தவர்களும், வாட்படை ஏந்தியவர்களும் ஆகிய அசுரர்கள் பொடிபட்டு அழிய வேலாயுதத்தைச் செலுத்திய ஆறுமுகப்பிரானே, குறப் பெண் வள்ளியின் கணவனே. கடலால் சூழப்பட்ட ஏழு உலகங்களையும் அடக்கி, வாசுகிப் பாம்பின் வாயை அடக்கிக் கூச்சலிடும் மயில் மீது ஏறி விளங்கும் இளையோனே, மிக்க சினத்துடன் மேருமலையை பொடியாகும்படி கோபித்த சேவற் கொடியோனே, கடப்பமாலையை நெருக்கமாய் அணிந்த திரண்ட தோளனே, கூடியுள்ள வலிமையால் வெற்றி மிக்குள்ள சூரர்கள் கொண்டு போய் அடைத்த தேவர்களின் சிறையை நீக்கிய பெருமாளே. 
* ஆறு கெட்ட குணங்கள்: காமம், குரோதம், மோகம், லோபம், மதம், மாற்சர்யம். இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் நாயகியின் நற்றாய் கூறுவதுபோல அமைந்தது.சந்திரன், கடல் ஓசை, வசை பேசும் மாதர், குழல் ஓசை, வாடைக் காற்று, தனிப் படுக்கை முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.

பாடல் 1190 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தன்னதன தத்த தத்த தன்னதன தத்த தத்த     தன்னதன தத்த தத்த ...... தனதான

மின்னினில்ந டுக்க முற்ற நுண்ணியநு சுப்பில் முத்த     வெண்ணகையில் வட்ட மொத்து ...... அழகார 
விம்மியிள கிக்க தித்த கொம்மைமுலை யிற்கு னித்த     வின்னுதலி லிட்ட பொட்டில் ...... விலைமாதர் 
கன்னல்மொழி யிற்சி றக்கு மன்னநடை யிற்க றுத்த     கண்ணினிணை யிற்சி வத்த ...... கனிவாயிற் 
கண்ணழிவு வைத்த புத்தி ஷண்முகநி னைக்க வைத்த     கன்மவச மெப்ப டிக்கு ...... மறவேனே 
அன்னநடை யைப்ப ழித்த மஞ்ஞைமலை யிற்கு றத்தி     யம்மையட விப்பு னத்தில் ...... விளையாடும் 
அன்னையிறு கப்பி ணித்த பன்னிருதி ருப்பு யத்தில்     அன்னியஅ ரக்க ரத்த ...... னையுமாளப் 
பொன்னுலகி னைப்பு ரக்கு மன்னநல்வ்ர தத்தை விட்ட     புன்மையர்பு ரத்ர யத்தர் ...... பொடியாகப் 
பொன்மலைவ ளைத்தெ ரித்த கண்ணுதலி டத்தி லுற்ற     புண்ணியவொ ருத்தி பெற்ற ...... பெருமாளே.

மின்னலைப் போல் நடுங்குகின்ற மெலிந்த இடையிலும், முத்துப் போன்ற வெண்மை நிறம் கொண்ட பற்களிலும், வட்ட வடிவு கொண்டு அழகு நிரம்பி, பூரித்து, நெகிழ்ந்து, எழுந்து, திரண்ட மார்பகங்களிலும், வளைவு கொண்ட, வில்லைப் போன்ற நெற்றியில் அணிந்துள்ள பொட்டிலும், விலைமாதர்களுடைய கரும்பு போல் இனிக்கும் பேச்சிலும், சிறப்புற்ற அன்னத்தைப் போன்ற நடையிலும், கறுப்பு நிறம் கொண்ட இரு கண்களிலும், சிவந்த (கொவ்வைக்) கனி போன்ற வாயிலும், தனித்தனி தோய்ந்து வியப்புற்றுக் கிடந்த என் புத்தி மாறி, (உனது) ஆறு முகங்களையும் நினைக்குமாறு செய்த புண்ணியப் பயனை எந்தக் காரணத்தையும் கொண்டு மறக்க முடியுமா? அன்னத்தின் நடையைப் பழிக்க வல்ல மயிலைப் போன்றவள், மலையில் வளர்ந்த குறமங்கையாகிய தேவி, காட்டிலும் தினைப் புனத்திலும் விளையாடிய தாய் ஆகிய வள்ளி நாயகி, அழுத்தி அணைத்த பன்னிரண்டு திருப்புயங்களால் அயலாராய் மாறுபட்டிருந்த அசுரர்கள் அனைவர்களும் இறக்கும்படிச் செய்து, (தேவர்களின்) பொன்னுலகத்தைக் காத்தளித்த அரசே, நல்ல விரத அனுஷ்டானங்களைக் கைவிட்ட* இழி குணத்தோராய் முப்புரங்களில் வாழ்ந்திருந்த அசுரர்கள் பொடிபட்டு அழியும்படி மேருவை வில்லாக வளைத்து எரித்த நெற்றிக் கண்ணராகிய சிவபெருமானது இடது பாகத்தில் இருக்கும் ஒப்பற்ற புண்ணியவதியாகிய பார்வதி தேவி பெற்றெடுத்த பெருமாளே. 
* திரிபுரத்தில் இருந்த அசுரர்கள் சிவ பூஜையை விட்டால் ஒழிய அவர்களை வெல்ல முடியாதென உணர்ந்த திருமால், புத்த ஆசாரியராகவும், நாரதர் அவர் மாணாக்கராகவும் சென்று, பலவித அற்புதங்களைக் காட்டி அசுரர்களை மயக்கிச் சிவ பூஜையைக் கை விடச் செய்தனர் - சிவபுராணம்.

பாடல் 1191 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தத்தன தான தனத்தன தத்தன தான தனத்தன     தத்தன தான தனத்தன ...... தனதான

முத்தமு லாவு தனத்தியர் சித்தச னாணை செலுத்திகள்     முத்தமி டாம னுருக்கிக ...... ளிளைஞோர்பால் 
முட்டவு லாவி மருட்டிகள் நெட்டிலை வேலின் விழிச்சியர்     முப்பது கோடி மனத்திய ...... ரநுராகத் 
தத்தைக ளாசை விதத்தியர் கற்புர தோளின் மினுக்கிகள்     தப்புறு மாற கமெத்திக ...... ளளவேநான் 
தட்டழி யாது திருப்புகழ் கற்கவு மோத வுமுத்தமிழ்     தத்துவ ஞான மெனக்கருள் ...... புரிவாயே 
மத்தக யானை யுரித்தவர் பெற்றகு மார இலட்சுமி     மைத்துன னாகி யவிக்ரமன் ...... மருகோனே 
வற்றிட வாரி திமுற்றிய வெற்றிகொள் சூரர் பதைப்புற     வற்புறு வேலை விடுத்தரு ...... ளிளையோனே 
சித்திர மான குறத்தியை யுற்றொரு போது புனத்திடை     சிக்கென வேத ழுவிப்புணர் ...... மணவாளா 
செச்சையு லாவு பதத்தின மெய்த்தவர் வாழ்வு பெறத்தரு     சித்தவி சாக வியற்சுரர் ...... பெருமாளே.

முத்து மாலை உலவுகின்ற மார்பினை உடையவர், மன்மதனின் கட்டளைகளை நடத்துபவர்கள், முத்தம் தந்து மனத்தை உருக்குபவர்கள், இளைஞோர்கள் இடத்தில் நன்றாகக் கலந்து (அவர்களை) மயங்கச் செய்பவர்கள், நீண்ட இலையை ஒத்த வேலை நிகர்க்கும் கண்களை உடையவர்கள், பல கோடிக் கணக்கான எண்ணங்களை உடையவர்கள், காமப் பற்றை விளைக்கும் கிளி போன்றவர்கள், ஆசைகளைக் காட்டுபவர்கள், பச்சைக் கற்பூரம் அளாவிய தோள்களோடு மினுக்குபவர்கள், தப்பான வழியில் செல்லும் மனத்துடன் வஞ்சிக்கும் வேசிகள் இடத்திலே நான் நிலை குலையாது, உனது திருப்புகழைக் கற்பதற்கும் எப்போதும் ஓதுவதற்கும் (இயல், இசை, நாடகம் ஆகிய) முத்தமிழ் தத்துவ ஞானத்தை எனக்கு அருள்வாயாக. கும்பத் தலத்தை உடைய (கயாசுரன் என்ற) யானையின் தோலை உரித்தவராகிய சிவபெருமான் அருளிய மகனே, லட்சுமிக்கு மைத்துன* முறையில் உள்ள வலிமையாளனான திருமாலுக்கு மருகனே, கடல் வற்றிப் போகவும், நிரம்ப வெற்றி மமதையுடன் விளங்கிய சூரர்கள் பதைக்கும்படியாகவும், வலிமை உடைய வேலாயுதத்தைச் செலுத்தி அருளிய இளையோனே, அழகிய குறப்பெண் வள்ளியை அடைந்து, ஒரு சமயத்தில் தினைப் புனத்தில் சிக்கெனத் தழுவிச் சேர்ந்த மணவாளனே, வெட்சி மலர் சூழும் பதத்தினனே, உண்மைத் தவசிகள் அழியாத இன்ப வாழ்க்கையைப் பெறுமாறு உதவுகின்ற சித்த மூர்த்தியே, விசாகனே, தகுதியுள்ள தேவர்களின் பெருமாளே. 
* ஒரு சமயம் திருமாலும், அவரது அம்சமான உபேந்திரரும், லக்ஷ்மியும் உரையாடிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த கண்வ முநிவரைக் கவனிக்காததால், முநிவர் கடுங்கோபம் அடைந்து அவர்களை முறையே சிவ முநிவராகவும், வேடர் மன்னனாகவும், மானாகவும் பிறக்க சபித்து விடுகிறார். அடுத்த பிறப்பில் சிவமுநிவரான திருமாலுக்கும், மானாகிய லக்ஷ்மிக்கும் பிறக்கும் வள்ளியை உபேந்திரனான வேடர் மன்னன் நம்பிராஜன் கண்டெடுத்து வளர்க்கிறான். வள்ளியின் வளர்ப்புத் தந்தை உபேந்திரன் திருமாலின் தம்பியானதால் லக்ஷ்மிக்கு மைத்துனன் முறை ஆகிறது. எனவே வள்ளியை மணந்த முருகன் லக்ஷ்மியின் மைத்துனனின் மருகன் என்று இங்கு குறிப்பிடுகிறார்.

பாடல் 1192 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தனன தானன தத்தான தானன     தனன தானன தத்தான தானன          தனன தானன தத்தான தானன ...... தனதான

முருகு லாவிய மைப்பாவு வார்குழல்     முளரி வாய்நெகிழ் வித்தார வேல்விழி          முடுகு வோர்குலை வித்தான கோடேனு ...... முலையாலே 
முறைமை சேர்கெட மைத்தார்வு வார்கடல்     முடுகு வோரென எய்த்தோடி யாகமு          மொழியும் வேறிடு பித்தேறி னாரெனு ...... முயல்வேகொண் 
டுருகு வார்சில சிற்றாம னோலய     முயிரு மாகமு மொத்தாசை யோடுள          முருகி தீமெழு கிட்டான தோவென ...... வுரையாநண் 
புலக வாவொழி வித்தார்ம னோலய     முணர்வு நீடிய பொற்பாத சேவடி          யுலவு நீயெனை வைத்தாள வேயருள் ...... தருவாயே 
குருகு லாவிய நற்றாழி சூழ்நகர்     குமர னேமுனை வெற்பார்ப ராபரை          குழக பூசுரர் மெய்க்காணும் வீரர்தம் ...... வடிவேலா 
குறவர் சீர்மக ளைத்தேடி வாடிய     குழையு நீள்கர வைத்தோடி யேயவர்          குடியி லேமயி லைக்கோடு சோதிய ...... வுரவோனே 
மருகு மாமது ரைக்கூடல் மால்வரை     வளைவு ளாகிய நக்கீர ரோதிய          வளகை சேர்தமி ழுக்காக நீடிய ...... கரவோனே 
மதிய மேவிய சுற்றாத வேணியர்     மகிழ நீநொடி யற்றான போதினில்          மயிலை நீடுல கைச்சூழ வேவிய ...... பெருமாளே.

நறுமணம் வீசி உலவும் மை தீட்டிய நீண்ட கூந்தலின் மீதும், தாமரை போன்ற வாயின் மீதும், அசைகின்ற விரிந்த வேல் போன்ற கண்ணின் மீதும், விரைந்து செல்வோர்களின் மனத்தைக் குலைப்பதற்கு அடிப்படைக் காரணமாக விளங்கும் மலை போன்ற மார்பகத்தின் மீதும், ஒழுக்கம் சிதறுண்டு கெட, கறுத்து (நீர்) நிறைந்துள்ள பெரிய கடலில் (பயணம்) விரைந்து செல்வார் போல் இளைப்புடன் ஓடி, உடலும் பேச்சும் மாறுதல் உறும்படி பித்து ஏறினார் என்று சொல்லும்படி முயற்சிகளை மேற்கொண்டு, அந்த உலக நெறியிலே சில அற்ப ஆன்மாக்கள் உள்ளம் உருகுபவர்கள். மன ஒடுக்கம் உற்று உயிரும் உடலும் ஒரு வழிப்பட்டு, பக்தியுடன் மனம் உருகி தீயில் இடப்பட்ட மெழுகோ என்று சொல்லும்படி அன்பு மொழிகளைக் கொண்டு உன்னைப் புகழ்ந்துரைத்து, இவ்வுலகத்தில் மண், பெண், பொன் என்ற மூவாசைகளையும் நீக்கினவர்களாய மனம் ஒடுங்கிய ஞான உணர்ச்சியில் உனது அழகிய பாதசேவை தருவதான திருவடிகளுடன் உலவுகின்ற நீ என்னை உன் மனத்தில் வைத்து அருள் புரிவாயாக. நீர்ப்பறவைகள் உலவுகின்ற அழகிய கடல் சூழ்ந்துள்ள திருச்செந்தூரில் விளங்கும் குமரனே, தலைமை பெற்ற மலையாகிய இமயத்தில் பிறந்த பரதேவதையான பார்வதியின் குழந்தையே, மறையோர்களுக்கு உரியவனே, மெய்ப்பொருளைக் காணும் வடிவேலனே, வேடர்களுடைய அழகிய மகளைத் தேடி வாடிக் குழைந்தவனே, பெரிய களவு எண்ணத்துடன் ஓடிச் சென்று வேடர்கள் இருப்பிடத்தில் இருந்த மயில் போன்ற வள்ளியைக் கொண்டு சென்ற ஜோதி சொரூபமான திண்ணியனே, வாழை, மாமரம் இவை நிரம்பிய கூடல் எனப்படும் மதுரைக்கு அருகில் உள்ள பெருமை வாய்ந்த திருப்பரங்குன்றம் என்னும் மலையில் வட்டமான குகையில் இருந்த நக்கீரர்* எனும் புலவர் பாடிய வளமை வாய்ந்த தமிழைக் (திருமுருகாற்றுப்படையைக்) கேட்கும் பொருட்டு நெடு நாள் மறைந்திருந்து காத்திருந்தவனே, சந்திரனைத் தரித்துள்ள சடையினர், விரிந்த சடையினர் ஆகிய சிவபெருமான் மகிழும்படி நீ ஒரு நொடிப் பொழுதுக்கும் குறைந்த நேரத்தில் உனது மயில் வாகனத்தை பெரிய உலகைச் சூழ்ந்து வரும்படி தூண்டிச் செலுத்திய பெருமாளே. 
* முருகனைப் பாடுவதில்லை என நக்கீரர் வைராக்கியம் கொண்டிருந்தார்.அவரைக் குகையில் சிறைப்படுத்தித் திருமுருகாற்றுப்படையைப் பாட வைத்தார் முருக வேள்.

பாடல் 1193 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தனனானத் தனந்த தந்தன     தனனானத் தனந்த தந்தன          தனனானத் தனந்த தந்தன ...... தனதான

முலைமேலிற் கலிங்க மொன்றிட     முதல்வானிற் பிறந்த மின்பிறை          நுதல்மேல்முத் தரும்ப புந்தியி ...... லிதமார 
முகநேசித் திலங்க வும்பல     வினைமூசிப் புரண்ட வண்கடல்          முரணோசைக் கமைந்த வன்சர ...... மெனமூவா 
மலர்போலச் சிவந்த செங்கணில்     மருள்கூர்கைக் கிருண்ட அஞ்சனம்          வழுவாமற் புனைந்து திண்கய ...... மெனநாடி 
வருமாதர்க் கிரங்கி நெஞ்சமு     மயலாகிப் பரந்து நின்செயல்          மருவாமற் கலங்கும் வஞ்சக ...... மொழியாதோ 
தொலையாநற் றவங்க ணின்றுனை     நிலையாகப் புகழ்ந்து கொண்டுள          அடியாருட் டுலங்கி நின்றருள் ...... துணைவேளே 
துடிநேரொத் திலங்கு மென்கொடி     யிடைதோகைக் கிசைந்த வொண்டொடி          சுரர்வாழப் பிறந்த சுந்தரி ...... மணவாளா 
மலைமாளப் பிளந்த செங்கையில்     வடிவேலைக் கொடந்த வஞ்சக          வடிவாகக் கரந்து வந்தமர் ...... பொருசூரன் 
வலிமாளத் துரந்த வன்திறல்     முருகாமற் பொருந்து திண்புய          வடிவாமற் றநந்த மிந்திரர் ...... பெருமாளே.

தனங்களின் மேல் ஆடை பொருந்த, வானில் அப்போது தோன்றிய ஒளி வீசும் பிறைச் சந்திரன் போன்ற நெற்றியின் மேல் முத்துப் போல வேர்வை அரும்ப, இதயமெல்லாம் இன்பம் நிரம்ப, முகத்தில் நேசத் தன்மை விளங்கவும், பல வஞ்சக எண்ணங்கள் நிறைந்தும், அலைகள் புரளும் வளப்பமுள்ள கடலின் வலிய ஓசைக்கு பொருந்தி (மன்மதன் வீசும்) வலிய பாணங்கள் என்று சொல்லும்படியும், வாடாத பூக்களைப் போலச் சிவந்தும் இருந்த செவ்விய கண்களில், மயக்கம் மிகக் கொள்ளுவதற்கு கரிய மையை தவறாமல் அணிந்து, திண்ணிய யானை போல மதத்துடன் தேடி வருகின்ற பெண்கள்பால் இரக்கம் வைத்து, மனமும் காம மயக்கம் பெருகி, உனக்குச் செய்ய வேண்டிய தொண்டுகளில் ஈடுபடாமல் கலங்குகின்ற மோக நிலை என்னை விட்டு அகலாதோ? கெடாத நல்ல தவ நிலைகளில் இருந்து உன்னை நிலைத்த புத்தியுடன் புகழ்ந்து கொண்டிருக்கும் அடியார்களின் உள்ளத்தே விளக்கத்துடன் இருந்து துணை புரிகின்ற செவ்வேளே, உடுக்கைக்கு நேர் ஒப்பாக நின்று நன்கு விளங்குவதும் மெல்லிய கொடி போன்றதுமான இடையை உடையவளும், மயில் போன்றவளும், ஒளி பொருந்திய கை வளையை அணிந்தவளும், தேவர்கள் வாழப் பிறந்தவளுமாகிய அழகி தேவயானையின் கணவனே, கிரவுஞ்ச மலை மாளும்படி அதைப் பிளந்து எறிந்த, செவ்விய கையில் உள்ள கூர்மையான வேலைக் கொண்டு, அந்த வஞ்சக வடிவுடன் ஒளித்து வந்து சண்டை செய்த சூரனுடைய வலிமை அழியும்படி நீக்கிய வன்மையைக் கொண்ட வீர முருகனே, மற் போருக்குத் தகுதியான வலிய திருப்புயங்களை உடையவனே, அழகனே, மேலும் அளவற்ற இந்திரர்களுக்குப் பெருமாளே. 

பாடல் 1194 - பொதுப்பாடல்கள் 
ராகம் - சங்கரானந்தப்ரியா தாளம் - அங்கதாளம் - 7 1/2 - எடுப்பு - 1/2 அக்ஷரம் தள்ளி 
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2

தனன தந்தன தாத்தன தந்தன     தனன தந்தன தாத்தன தந்தன          தனன தந்தன தாத்தன தந்தன ...... தனதான

முனைய ழிந்தது மேட்டிகு லைந்தது     வயது சென்றது வாய்ப்ப லுதிர்ந்தது          முதுகு வெஞ்சிலை காட்டிவ ளைந்தது ...... ப்ரபையான 
முகமி ழிந்தது நோக்குமி ருண்டது     இருமல் வந்தது தூக்கமொ ழிந்தது          மொழித ளர்ந்தது நாக்குவி ழுந்தது ...... அறிவேபோய் 
நினைவ யர்ந்தது நீட்டல் முடங்கலு     மவச மும்பல ஏக்கமு முந்தின          நெறிம றந்தது மூப்பு முதிர்ந்தது ...... பலநோயும் 
நிலுவை கொண்டது பாய்க்கிடை கண்டது     சலம லங்களி னாற்றமெ ழுந்தது          நிமிஷ மிங்கினி யாச்சுதென் முன்பினி ...... தருள்வாயே 
இனைய இந்திர னேற்றமு மண்டர்கள்     தலமு மங்கிட வோட்டியி ருஞ்சிறை          யிடுமி டும்புள ராக்கதர் தங்களில் ...... வெகுகோடி 
எதிர்பொ ரும்படி போர்க்குளெ திர்ந்தவர்     தசைசி ரங்களு நாற்றிசை சிந்திட          இடிமு ழங்கிய வேற்படை யொன்றனை ...... யெறிவோனே 
தினைவ னங்கிளி காத்தச வுந்தரி     அருகு சென்றடி போற்றிம ணஞ்செய்து          செகம றிந்திட வாழ்க்கைபு ரிந்திடு ...... மிளையோனே 
திரிபு ரம்பொடி யாக்கிய சங்கரர்     குமர கந்தப ராக்ரம செந்தமிழ்          தெளிவு கொண்டடி யார்க்குவி ளம்பிய ...... பெருமாளே.

¨தரியம் அற்றுப் போக, நானெனும் ஆணவம் அகல, வயது மிகவும் ஏற, வாயிலுள்ள பற்கள் உதிர, முதுகு வளைந்த வில்லைப் போல் கூன் விழ, ஒளி வீசிய முகம் மங்கிப்போய் தொங்க, பார்வையும் இருளடைய, இருமல் வந்து, தூக்கம் இல்லாமல் போக, பேச்சு தளர, நாக்கு செயலற்று விழ, புத்தி கெட்டுப்போய் ஞாபக மறதி ஏற்பட, காலை நீட்டுவதும் மடக்குவதுமாக ஆகி, மயக்கமும், பல கவலைகளும் ஏற்பட்டு, ஒழுக்கவழி மறந்து, கிழத்தன்மை முற்றி, பலவித வியாதிகள் நிலையாகப் பீடிக்க, பாயில் நிரந்தரப் படுக்கையாகிவிட, மல மூத்திரங்களின் துர்நாற்றம் எழ, இன்னும் ஒரே நிமிஷத்தில் எல்லாம் ஆயிற்று (உயிர் போய் விடும்) என்று உலகத்தார் பேசுவதற்கு முன்பு, நல்லவிதமாக அருள்வாயாக. வருந்துகிற இந்திரனின் மேன்மையும், தேவர்கள் உலகமும் ஒளி மங்கிட அவர்களை ஓட்டி, கடும் சிறையிடும் கொடுமையான அரக்கரில் பலகோடி பேர் எதிரே சண்டையிட, போர்க்களத்தில் எதிர்த்தவர்களின் சதைகளும் தலைகளும் நாலா பக்கமும் சிதறிட இடி போல் ஒலித்த வேலாயுதத்தை வீசியவனே, தினைப்புனத்தில் கிளிகள் வாராமல் காத்த அழகி வள்ளியின் பக்கத்தில் சென்று அவளது திருவடியைப் போற்றி மணந்து உலகறிய வாழ்க்கை நடத்தும் இளையோனே, திரிபுரத்தை எரித்துச் சாம்பலாக்கிய சங்கரர் மகனே, கந்தா, பராக்கிரம மூர்த்தியே, செந்தமிழை தெளிவோடு அடியார்க்கு உபதேசித்த பெருமாளே. 

பாடல் 1195 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தத்தத்தத் தத்தத் தனதன     தத்தத்தத் தத்தத் தனதன          தத்தத்தத் தத்தத் தனதன ...... தனதான

மைக்குக்கைப் புக்கக் கயல்விழி     யெற்றிக்கொட் டிட்டுச் சிலைமதன்          வர்க்கத்தைக் கற்பித் திடுதிற ...... மொழியாலே 
மட்டிட்டுத் துட்டக் கெருவித     மிட்டிட்டுச் சுற்றிப் பரிமள          மச்சப்பொற் கட்டிற் செறிமல ...... ரணைமீதே 
புக்குக்கைக் கொக்கப் புகுமொரு     அற்பச்சிற் றிற்பத் தெரிவையர்          பொய்க்குற்றுச் சுற்றித் திரிகிற ...... புலையேனைப் 
பொற்பித்துக் கற்பித் துனதடி     அர்ச்சிக்கச் சற்றுக் க்ருபைசெய          புத்திக்குச் சித்தித் தருளுவ ...... தொருநாளே 
திக்குக்குத் திக்குத் திகுதிகு     டுட்டுட்டுட் டுட்டுட் டுடுடுடு          தித்தித்தித் தித்தித் திதியென ...... நடமாடுஞ் 
சித்தர்க்குச் சுத்தப் பரமநல்     முத்தர்க்குச் சித்தக் க்ருபையுள          சித்தர்க்குப் பத்தர்க் கருளிய ...... குருநாதா 
ஒக்கத்தக் கிட்டுத் திரியசுர்     முட்டக்கொட் டற்றுத் திரிபுர          மொக்கக்கெட் டிட்டுத் திகுதிகு ...... வெனவேக 
உற்பித்துக் கற்பித் தமரரை     முற்பட்டக் கட்டச் சிறைவிடு          மொட்குக்டக் கொற்றக் கொடியுள ...... பெருமாளே.

மையைக் கயல்மீன் போன்ற கண்களில் கொட்டிப் பரப்பி பூசிக்கொண்டு, கரும்புவில் ஏந்திய மன்மதனின் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட ஆண்களுக்கு காமபாடம் சொல்லிக் கொடுக்கும் சாமர்த்தியமான பேச்சாலே தேன் போல இனிக்கச் செய்து, துஷ்டத்தனமும், கர்வமும் கலந்த பேச்சுக்களை இடையிடையே பேசிப்பேசி, சுற்றி வளைத்துக் கட்டிக்கொண்டு, நறுமணம் மிக்க மஞ்சம் எனப்படும் அழகிய கட்டிலின் மேல் நிறைந்த மலர்ப் படுக்கையின் மீது, கையிலிருந்த பொருளுக்குத் தக்கபடி மனத்தைச் செலுத்தும், இழிவான சிற்றின்பப் போகத்தைத் தரும் விலைமாதர்களின் பொய்யில் அகப்பட்டு, சுற்றித் திரிகின்ற சண்டாளனாகிய என்னைப் பொலிவு உண்டாக்கி உபதேச மொழிகளைப் போதித்து, உனது திருவடியை அர்ச்சித்துப் பூஜிக்க, சற்று கிருபை செய்வதும், என் புத்தியில் அந்த உபதேசம் நன்றாகச் சித்தித்துப் பயன் தருவதான ஒரு பாக்கிய நாள் எனக்குக் கிடைக்குமோ? திக்குக்குத் திக்குத் திகுதிகு டுட்டுட்டுட் டுட்டுட் டுடுடுடு தித்தித்தித் தித்தித் திதியென்று நடனமாடுகின்ற சித்த மூர்த்தியாம் சிவபெருமானுக்கும், பரிசுத்தமுள்ள, மேலான, நல்ல ஜீவன் முக்தர்களுக்கும், உள்ளத்தில் கருணையுள்ள சித்த புருஷர்களுக்கும், பக்தர்களுக்கும் அருள் பாலித்த குருநாதனே, ஒருசேர நிலைபெற்றதாய் திரிந்து கொண்டிருந்த முப்புரத்து அசுரர்கள் எல்லாருடைய ஆர்ப்பாட்டமும் அடங்கி, திரிபுரங்கள் மூன்றும் ஒன்றாய் அழிந்து போய், திகுதிகு என்று வேகும்படிச் செய்தவராகிய சிவபிரானுக்கு (பிரணவ மந்திரத்தை) உபதேசம் செய்து, தேவர்களை முன்பு பட்ட கஷ்டங்கள் கொண்ட சிறையினின்றும் விடுவித்தவனே, ஒளி வீசும் கோழிக் கொடியாம் வெற்றிக் கொடியை உடைய பெருமாளே. 

பாடல் 1196 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ஹம்ஸத்வனி தாளம் - அங்கதாளம் - 7 1/2 
தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1, தகிட-1 1/2, தகதிமி-2

தான தனதனன தான தாத்தன     தான தனதனன தான தாத்தன          தான தனதனன தான தாத்தன ...... தனதான

மோது மறலியொரு கோடி வேற்படை     கூடி முடுகியெம தாவி பாழ்த்திட          மோக முடையவெகு மாதர் கூட்டமு ...... மயலாரும் 
மூளு மளவில்விசை மேல்வி ழாப்பரி     தாப முடனும்விழி நீர்கொ ளாக்கொடு          மோக வினையில்நெடு நாளின் மூத்தவ ...... ரிளையோர்கள் 
ஏது கருமமிவர் சாவெ னாச்சிலர்     கூடி நடவுமிடு காடெ னாக்கடி          தேழு நரகினிடை வீழ்மெ னாப்பொறி ...... யறுபாவி 
ஏழு புவனமிகு வான நாட்டவர்     சூழ முநிவர்கிளை தாமு மேத்திட          ஈச னருள்குமர வேத மார்த்தெழ ...... வருவாயே 
சூது பொருதரும னாடு தோற்றிரு     வாறு வருஷம்வன வாச மேற்றியல்          தோகை யுடனுமெவி ராட ராச்சிய ...... முறைநாளிற் 
சூறை நிரைகொடவ ரேக மீட்டெதி     ராளு முரிமைதரு மாறு கேட்டொரு          தூது செலஅடுவ லாண்மை தாக்குவ ...... னெனமீள 
வாது சமர்திருத ரான ராட்டிர     ராஜ குமரர்துரி யோத னாற்பிறர்          மாள நிருபரொடு சேனை தூட்பட ...... வரிசாப 
வாகை விஜயனடல் வாசி பூட்டிய     தேரை முடுகுநெடு மால்ப ராக்ரம          மாயன் மருகஅமர் நாடர் பார்த்திப ...... பெருமாளே.

தாக்குகின்ற யமன் தனது ஒப்பற்ற கூரிய வேற்படையுடன் வேகமாக வந்து எனது உயிரை (உடலினின்றும்) பிரிக்க, (என் மேல்) ஆசை கொண்டிருந்த பல மாதர்களின் கூட்டமும், பிறரும், துக்கம் மூண்டு மிகவும் வேகமாக மேலே விழுந்து, இரக்கத்துடனே கண்களில் நீர் கொண்டு நிற்க, கொடிய மோக மயக்கத்தில் நீண்ட நாட்கள் இருந்த மூத்தவர்களும், இளமையானவர்களும், இவர் இறந்ததற்கு என்ன காரணம் என்று விசாரிக்கவும், பிணத்துக்குப் பின் சிலர் கூடி சுடு காட்டுக்கு நடவுங்கள் என்று மற்றவர் கூறவும், (இவனை) விரைவாக ஏழு நரகினிடையே வீழ்த்துங்கள் என்று சிலர் கூறவும், இவன் புலன்களை நல்ல வழியில் செலுத்தாத பாவி எனச் சிலர் கூறவும் (இடம் கொடுக்காமல்), ஏழு உலகங்களில் உள்ளவர்களும், சிறந்த தேவ நாட்டவரும், சூழ்ந்துள்ள முனிவர் கூட்டங்களும் போற்றி நிற்க, சிவபெருமான் அருளிய குமரனே, வேதம் ஒலித்து எழ, நீ எழுந்தருள்வயாக. சூதுப்போர் செய்த தருமபுத்திரன் தன் நாட்டைச் சூதில் இழந்து, பன்னிரண்டு ஆண்டுகள் காட்டில் வாழும் வாழ்க்கையை பாண்டவர்கள் ஏற்றுக் கொண்டு வசித்தபின், கற்பியல் உடைய மயில் போன்ற மனைவி திரெளபதியுடன் விராட நாட்டில் (ஓர் ஆண்டு அஞ்ஞாத வாசம் செய்து) காலம் கழித்து வந்த நாளில், பசுக்களைக் கொள்ளை அடித்துக் கொண்டு விராட நாட்டிலிருந்து துரியோதனாதியர் செல்ல, அப்பசுக்களை எதிர்ச் சென்று மீட்டுவந்து, அரசாட்சி உரிமையைத் தரும்படி கேட்பதற்காக, ஒப்பற்ற தூதனாகக் கண்ணணை அனுப்ப, போருக்கு உரிய வலிய ஆண்மையோடு தாக்குவேன் (ஆனால் அரசுரிமையைத் தரமாட்டேன்) என்று துரியோதனன் கூற, தூதினின்றும் வெற்றியின்றி கண்ணன் மீண்டும் வரவும், வலிய வாது பேசிப் போருக்கு வந்த திருதராஷ்டிர ராஜனுடைய குமாரர்களும், துரியோதனன் காரணமாகப் போரிட்ட மற்றவர்களும் இறக்க, பிற அரசர்களோடும் சேனைகள் எல்லாம் தூள்பட்டு அழிய, வரிகள் பொருந்திய காண்டீபம் என்ற வில்லினால் வெற்றியைக் கொண்ட அர்ச்சுனனுடைய வலிய குதிரைகள் பூட்டிய ரதத்தை வேகமாகச் செலுத்திய பெரிய திருமால், வல்லமை பொருந்திய மாயோனின் மருகனே, விண்ணுலகத்தோருக்குச் சக்ரவர்த்தியாகிய பெருமாளே. 

பாடல் 1197 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தனனத்தன தானன தானன     தனனத்தன தானன தானன          தனனத்தன தானன தானன ...... தனதான

வடிகட்டிய தேனென வாயினி     லுறுதுப்பன வூறலை யார்தர          வரைவிற்றிக ழூடலி லேதரு ...... மடவார்பால் 
அடிபட்டலை பாவநிர் மூடனை     முகடித்தொழி லாமுன நீயுன          தடிமைத்தொழி லாகஎ நாளினி ...... லருள்வாயோ 
பொடிபட்டிட ராவணன் மாமுடி     சிதறச்சிலை வாளிக ளேகொடு          பொருகைக்கள மேவிய மாயவன் ...... மருகோனே 
கொடுமைத்தொழி லாகிய கானவர்     மகிமைக்கொள வேயவர் வாழ்சிறு          குடிலிற்குற மானொடு மேவிய ...... பெருமாளே.

வடிகட்டப்பட்ட தேன் என்று சொல்லும்படி வாயினில் நுகர் பொருளாகிய இதழ் ஊறலை அனுபவிக்க, ஓரளவு ஊடலை நிகழ்த்தி, பின்பு தருகின்ற மாதர்களிடத்தே அலைப்புண்டு அலைகின்ற பாவியும் முழு முட்டாளுமாகிய என்னை, கீழ்த்தரமான தொழிலையே மேற்கொண்டவனாய் இழிந்த நிலையை அடைவதற்கு முன்னம், உனக்கு அடிமைப் பணி செய்யும் (பாக்கியத்) தொழில் எனக்குக் கிடைக்கும்படி எந்த நாளில் அருள்வாயோ? பொடிபட்டுப் போய் ராவணனுடைய சிறந்த முடிகள் சிதறும்படி வில்லும் அம்புகளும் கொண்டு சண்டை செய்வதற்கு போர்க்களத்தை அடைந்த மாயவனாகிய ராமனின் மருகனே, கொடுந் தொழிலைச் செய்யும், காட்டில் வாழும் வேடர்கள் பெருமை அடையுமாறு, அவர்கள் வாழ்ந்திருந்த சின்னக் குடிசையில் மான் போன்ற குறப்பெண் வள்ளியோடு வீற்றிருந்த பெருமாளே. 

பாடல் 1198 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தத்த தனத்தத் தனத்த தத்தன     தத்த தனத்தத் தனத்த தத்தன          தத்த தனத்தத் தனத்த தத்தன ...... தனதான

வட்ட முலைக்கச் சவிழ்த்து வைத்துள     முத்து வடத்தைக் கழுத்தி லிட்டிரு          மைக்கு வளைக்கட் குறிப்ப ழுத்திய ...... பொதுமாதர் 
மட்ட மளிக்குட் டிருத்தி முத்தணி     மெத்தை தனக்குட் செருக்கி வெற்றிலை          வைத்த பழுப்பச் சிலைச்சு ருட்கடி ...... யிதழ்கோதிக் 
கட்டி யணைத்திட் டெடுத்து டுத்திடு     பட்டை யவிழ்த்துக் கருத்தி தத்தொடு          கற்ற கலைச்சொற் களிற்ப யிற்றுள ...... முயல்போதுங் 
கைக்கு ளிசைத்துப் பிடித்த கட்கமும்     வெட்சி மலர்ப்பொற் பதத்தி ரட்சணை          கட்டு மணிச்சித் திரத்தி றத்தையு ...... மறவேனே 
கொட்ட மிகுத்திட் டரக்கர் பட்டணம்     இட்டு நெருப்புக் கொளுத்தி யத்தலை          கொட்டை பரப்பச் செருக்க ளத்திடை ...... யசுரோரைக் 
குத்தி முறித்துக் குடிப்ப ரத்தமும்     வெட்டி யழித்துக் கனக்க ளிப்பொடு          கொக்க ரியிட்டுத் தெரித்த டுப்பன ...... வொருகோடிப் 
பட்ட பிணத்தைப் பிடித்தி ழுப்பன     சச்ச ரிகொட்டிட் டடுக்கெ டுப்பன          பற்கள் விரித்துச் சிரித்தி ருப்பன ...... வெகுபூதம் 
பட்சி பறக்கத் திசைக்குள் மத்தளம்     வெற்றி முழக்கிக் கொடிப்பி டித்தயில்          பட்ட றவிட்டுத் துரத்தி வெட்டிய ...... பெருமாளே.

வட்ட வடிவான மார்பகத்தில் அணிந்த கச்சை அவிழ்த்து வைத்திருக்கின்ற, முத்து மாலையை கழுத்தில் போட்டுக் கொண்டு மை பூசப்பட்ட இரண்டு குவளை மலர் போன்ற கண் கொண்டு தங்களது விருப்பத்தை நன்றாகத் தெரியப்படுத்துகின்ற விலைமாதர்கள். நறுமணப் படுக்கையில் அவர்களுடைய முத்தாலான அணிகலன்களை ஒழுங்கு படுத்தி, மெத்தையில் களிப்புடன் இருந்து, வெற்றிலையில் வைத்த பழுத்த பாக்குடன் கூடிய பசுமையான இலைச் சுருளைக் கடிக்கும் வாயிதழ் ஊறலைச் சிறிது சிறிதாகப் பருகி, கட்டி அணைத்திட்டு எடுத்து, அவர்கள் அணிந்துள்ள பட்டாடையை அவிழ்த்து, மனதில் இன்பத்தோடு நான் கற்ற சிற்றின்ப நூல்களில் உள்ள சொற்களின் பயிற்சியில் என் மனம் முயற்சி செய்த போதிலும், உனது திருக்கையில் பொருந்த வைத்துப் பிடித்துள்ள வாளையும், வெட்சி மலர் சூழ்ந்த அழகிய திருவடியாகிய காப்பையும் உடை மணி முதலிய கட்டியுள்ள அழகிய சாமர்த்தியத்தையும் மறக்கவே மாட்டேன். இறுமாப்பு மிகுந்திட்ட அசுரர்களுடைய பட்டணங்களை தீயிட்டுக் கொளுத்தி, அவ்விடத்தில் அசுரர்களை போர்க்களத்தில் சிதறுண்ண வைக்க, (அப்போது) குத்தி முறித்து ரத்தத்தைக் குடிக்க வெட்டி அழித்து, மிக்க மகிழ்ச்சியுடன் ஆரவாரத்துடன கர்ச்சனை செய்து வெளிப்பட்டுக் கூடிய, ஒரு கோடிக்கணக்கில் அழிந்த பிணங்களைப் பிடித்து இழுப்பனவும், வாத்தியதைக் கொட்டிக் கொண்டு அடுக்குப் பாத்திரம் போல் எடுத்து அடுக்குவனவும், பற்களை விரியக் காட்டி சிரித்துக் கொண்டிருப்பனவுமாகிய நிறைய பூதங்கள். கருடன் முதலிய பறவைகள் மேலே பறந்து, திசைகள் தோறும் மத்தளங்கள் ஜெய பேரிகை முழக்க, வெற்றிக் கொடியை ஏந்தி, வேலாயுதத்தை நன்றாகச் செலுத்தி அசுரர்களைத் துரத்தி வெட்டிய பெருமாளே. 

பாடல் 1100 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தனதன தாத்த தாத்த தனதன தாத்த தாத்த     தனதன தாத்த தாத்த ...... தனதான

வளைகர மாட்டி வேட்டி னிடைதுயில் வாட்டி யீட்டி     வரிவிழி தீட்டி யேட்டின் ...... மணம்வீசும் 
மழைகுழல் காட்டி வேட்கை வளர்முலை காட்டி நோக்கின்     மயில்நடை காட்டி மூட்டி ...... மயலாகப் 
புளகித வார்த்தை யேற்றி வரிகலை வாழ்த்தி யீழ்த்து     புணர்முலை சேர்த்து வீக்கி ...... விளையாடும் 
பொதுமட வார்க்கு ஏற்ற வழியுறு வாழ்க்கை வேட்கை     புலைகுண மோட்டி மாற்றி ...... யருள்வாயே 
தொளையொழு கேற்ற நோக்கி பலவகை வாச்சி தூர்த்து     சுடரடி நீத்த லேத்து ...... மடியார்கள் 
துணைவன்மை நோக்கி நோக்கி னிடைமுறை யாய்ச்சி மார்ச்சொல்     சொலியமு தூட்டி யாட்டு ...... முருகோனே 
இளநகை யோட்டி மூட்டர் குலம்விழ வாட்டி யேட்டை     யிமையவர் பாட்டை மீட்ட ...... குருநாதா 
இயல்புவி வாழ்த்தி யேத்த எனதிடர் நோக்கி நோக்க     மிருவினை காட்டி மீட்ட ...... பெருமாளே.

வளையல்களைக் கையில் மாட்டிக் கொண்டு, காம வேட்கையின் இடையே தூக்கத்தைக் கெடுத்து, ஈட்டி போல் கூரியதும் ரேகைகளை உடையதும் ஆகிய கண்களுக்கு மையை இட்டு, மலர் இதழ்களின் நறு மணம் வீசுகின்ற, கருமேகம் போன்ற கூந்தலைக் காட்டி, காமத்தை வளர்க்கும் மார்பினைக் காட்டி, மயில் போன்ற தமது நடை அழகைக் காட்டி, காமப் பற்று உண்டாகும்படி செய்து புளகிதம் கொள்ளும்படியான வார்த்தைகளை (வந்தவர்களின்) காதில் ஏற வைத்து, கட்டியுள்ள ஆடையைப் புகழ்ந்து பேசிக்கொண்டே இழுத்து, நெருங்கிப் பொருந்திய மார்பில் அணைத்துக் கட்டி விளையாடுகின்ற விலைமாதர்களுக்கு உகந்ததான வழியில் செல்லும் வாழ்க்கையில் விருப்பம் கொள்ளும் இழிவான என் குணத்தை ஓட்டி நீக்கி, எனக்கு அருள் புரிவாயாக. (குழல் போன்ற) தொளைக் கருவிகளில் (பரந்து வரும் இசையின்) மேன்மையைக் கேட்டு, பல விதமான வாத்திய வகைகளை பெருக்க ஒலித்து, உனது ஒளி வீசும் திருவடிகளை தினந்தோறும் போற்றி வணங்கும் அடியவர்களின் துணைவனே, உனது வலிமையைக் கண்டு, தங்கள் விருப்பத்தினிடையே ஒருவர் பின் ஒருவராக முறைப்படி (கார்த்திகை மாதர்களாகிய) தாய்மார்கள் அன்பு வார்த்தைகளைக் கூறி, பாலை ஊட்டி, உன்னைத் தாலாட்டித் துங்கச் செய்த முருகனே, புன்சிரிப்பைச் சிரித்து*, மூடர்களாகிய அசுரர்களின் குலம் அழிய அவர்களை வாட்டி, சோர்வுற்றிருந்த தேவர்களின் துன்பத்தை நீக்கிய குரு நாதனே, தகுதியுள்ள உலகப் பெரியோர்கள் வாழ்த்திப் போற்ற, எனது வருத்தங்களைக் கண்டு, உனது அருட் பார்வையால், என் இரு வினைகளின் நிலையை எனக்குப் புலப்படுத்தி, என்னை இழிந்த குணத்தினின்றும் மீள்வித்த பெருமாளே. 
* சூரனுடைய சேனைகள் முருகனைச் சூழ்ந்த போது அந்தச் சேனைகளைப் புன்சிரிப்பால் முருக வேள் எரித்தார்.

பாடல் 1200 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தானன தனன தனத்தத்த     தானன தனன தனத்தத்த          தானன தனன தனத்தத்த ...... தனதான

வாடையில் மதனை யழைத்துற்று     வாள்வளை கலக லெனக்கற்றை          வார்குழல் சரிய முடித்திட்டு ...... துகிலாரும் 
மால்கொள நெகிழ வுடுத்திட்டு     நூபுர மிணைய டியைப்பற்றி          வாய்விட நுதல்மி சைபொட்டிட்டு ...... வருமாய 
நாடக மகளிர் நடிப்புற்ற     தோதக வலையி லகப்பட்டு          ஞாலமு முழுது மிகப்பித்த ...... னெனுமாறு 
நாணமு மரபு மொழுக்கற்று     நீதியு மறிவு மறக்கெட்டு          நாயடி மையும டிமைப்பட்டு ...... விடலாமோ 
ஆடிய மயிலி னையொப்புற்று     பீலியு மிலையு முடுத்திட்டு          ஆரினு மழகு மிகப்பெற்று ...... யவனாளும் 
ஆகிய விதண்மி சையுற்றிட்டு     மானின மருள விழித்திட்டு          ஆயுத கவணொ ருகைச்சுற்றி ...... விளையாடும் 
வேடுவர் சிறுமி யொருத்திக்கு     யான்வழி யடிமை யெனச்செப்பி          வீறுள அடியி ணையைப்பற்றி ...... பலகாலும் 
வேதமு மமர ருமெய்ச்சக்ர     வாளமு மறிய விலைப்பட்டு          மேருவில் மிகவு மெழுத்திட்ட ...... பெருமாளே.

தென்றலைத் தேராகக் கொண்டு வருகின்ற மன்மதனை வரவழைத்து, ஒளி வீசும் வளையல்கள் கல கல் என்று ஒலி செய்ய, கற்றையான நீண்ட கூந்தல் சரிந்து விழ அதை முடிந்து, ஆடையை எப்படிப்பட்டவரும் ஆசை கொள்ளும்படியான வகையில் வேண்டுமென்றே தளர்த்தி உடுத்தி, சிலம்பு இரண்டு பாதங்களிலும் பற்றிச் சூழ்ந்து ஒலி செய்ய, நெற்றியில் பொட்டு அணிந்து வருகின்ற, மாயமும் ஆடல்களும் வல்ல விலைமாதர்களின் பாசாங்குச் சூழ்ச்சி கொண்ட வஞ்சக வலையில் சிக்கிக்கொண்டு, உலகில் உள்ளோர் அனைவரும் இவன் பெரிய பித்தன் என்று கூறும்படி, என் மானமும் குடிப்பிறப்பும் ஒழுக்கமும் கெட்டு, நீதி, அறிவு இவை அடியோடு கெட்டு, நாய் அனைய அடிமையாக (அம்மாதர்களுக்கு) அடிமையாகி விடலாமோ? ஆடுகின்ற மயிலை நிகராகி, மயில் இறகையும் தழையிலைகளையும் உடம்பில் உடுத்திக் கொண்டு, யாருக்கும் இல்லாத அழகை நிரம்பப் பெற்று, இளமை உடையவளாய் (தினைப் புனத்தில் கட்டப்பட்டப்) பரண் மீது வீற்றிருந்து, மானின் கூட்டங்கள் மருண்டு அதிசயித்து விழிக்கும்படிச் செய்து, கவண் கல் என்னும் ஆயுதத்தை ஒரு கையில் சுற்றி (பறவைகளை விரட்டி) விளையாடிய வேடப் பெண்ணாகிய ஒப்பற்றவளாகிய வள்ளிக்கு நான் உனக்கு வழி அடிமை என்று கூறி, பெருமை பொருந்திய அவளுடைய இரண்டு திருவடிகளையும் பிடித்துக் கொண்டு, பல முறையும், வேதமும் தேவர்களும் நிலை பெற்ற சக்ரவாள கிரியும் அறியும்படி, அதையே கூறி, (அவளுக்கு) விலைப்பட்ட அடிமையாகி (அங்ஙனம் அடிமைப்பட்டுள்ளதை) மேரு மலையில் நன்றாக விளங்கும்படி (சிலா சாசனமாக) எழுதி வைத்துள்ள பெருமாளே.

by Swathi   on 28 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.