LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- அருணகிரிநாதர் நூல்கள்

திருப்புகழ்-பாடல்-[1201 -1250]

பாடல் 1201 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தனதனன தனதனன தனன தாத்ததன
     தனதனன தனதனன தனன தாத்ததன
          தனதனன தனதனன தனன தாத்ததன ...... தனதான
விரைசொரியு ம்ருகமதமு மலரும் வாய்த்திலகு
     விரிகுழலு மவிழநறு மெழுகு கோட்டுமுலை
          மிசையில்வரு பகலொளியை வெருவ வோட்டுமணி ...... வகையாரம் 
விடுதொடைகள் நகநுதியி லறவும் வாய்த்தொளிர
     விழிசெருக மொழிபதற அமுது தேக்கியகை
          விதறிவளை கலகலென அழகு மேற்பொழிய ...... அலர்மேவும் 
இருசரண பரிபுரசு ருதிக ளார்க்கவச
     மிலகுகடல் கரைபுரள இனிமை கூட்டியுள
          மிதம்விளைய இருவரெனு மளவு காட்டரிய ...... அநுராகத் 
திடைமுழுகி யெனதுமன தழியு நாட்களினு
     மிருசரண இயலும்வினை யெறியும் வேற்கரமு
          மெழுதரிய திருமுகமு மருளு மேத்தும்வகை ...... தரவேணும் 
அரிபிரம ரடிவருட வுததி கோத்தலற
     அடல்வடவை யனலுமிழ அலகை கூட்டமிட
          அணிநிணமு மலைபெருக அறையும் வாச்சியமு ...... மகலாது 
அடல்கழுகு கொடிகெருட னிடைவி டாக்கணமு
     மறுகுறளு மெறிகுருதி நதியின் மேற்பரவ
          அருணரண முகவயிர வர்களு மார்ப்பரவ ...... மிடநாளும் 
பரவுநிசி சரர்முடிகள் படியின் மேற்குவிய
     பவுரிகொடு திரியவரை பலவும் வேர்ப்பறிய
          பகர்வரிய ககனமுக டிடிய வேட்டைவரு ...... மயில்வீரா 
படருநெறி சடையுடைய இறைவர் கேட்குரிய
     பழயமறை தருமவுன வழியை யார்க்குமொரு
          பரமகுரு பரனெனவு மறிவு காட்டவல ...... பெருமாளே.
வாசனை வீசும் கஸ்தூரியும் மலரும் பொருந்தி விளங்கும் பரந்த கூந்தலும் அவிழ்ந்து விழ, வாசனைப் பண்டங்கள் மெழுகப்பட்ட மலை போன்ற மார்பகங்களின் மேல் விளங்குவதும், சூரியனுடைய ஒளியையும் அஞ்சும்படி விரட்ட வல்ல ரத்தின வகைகள், முத்து இவைகளால் ஆன மாலைகளும், நகத்தின் நுனியால் ஏற்பட்ட நகரேகைகளும் நன்கு பொருந்தி விளங்க, கண்கள் செருக, பேச்சு பதற, அமுது நிரம்ப உண்ட கைகள் நடுக்கம் உற்று அசைவதால் வளையல்கள் கலகலென ஒலிக்க, அழகு மேலே எங்கணும் நிறைந்து பரவி விளங்க, மலர் போன்ற இரண்டு பாதங்களிலும் உள்ள சிலம்புகள் இசை வகைகளை ஒலிக்க, பரவச மயக்கம் விளக்கம் உறும் கடல் கரை புரண்டு ஓட, இனிமை கூடி மனத்தில் இன்பம் பெருக; ஆண் பெண் இருவர் உள்ளோம் என்னும் பிரிவின் அளவே காணுதற்கரிய காமப் பற்றின் இடையே முழுகி என் உள்ளம் அழிந்து கெடும் நாட்களிலும், இரண்டு திருவடிகளின் மேன்மைத் தகுதியையும், வினைகளை அறுத்துத் தள்ள வல்ல வேல் ஏந்திய கரங்களையும், எழுதுதற்கு முடியாத அழகுள்ள திருமுகங்களையும், உன் திருவருளையும் போற்றும் வழி வகையை எனக்கு நீ தந்தருள வேண்டும். திருமாலும், பிரமனும் திருவடியை வருடவும், கடல் கவிழ்ந்து புரண்டு ஒலி செய்யவும், வலிய வடவாமுகாக்கினி நெருப்பை அள்ளி வீசவும், பேய்கள் கூட்டம் கூடவும், வரிசையாய்க் கிடந்த மாமிசமும் மலை போல் பெருகவும், பேரொலியோடு அடிக்கப்படும் வாத்தியங்களும் நீங்காது ஒலிக்கவும், வலிய கழுகு, காக்கை, கருடன் இவைகளின் இடைவிடாது கூடிய கூட்டமும் மற்றும் பூத கணங்களும் அலை வீசும் ரத்த ஆற்றின் மேல் வந்து பரந்து சேரவும், சிவந்த போர்க் களத்து வயிரவர் கணங்களும் பேரொலி செய்யவும், நாள் தோறும் எங்கும் பரவி இருந்த அசுரர்களின் தலைகள் பூமியின் மேல் நிரம்பக் குவியவும், சுழற்சியுடன் திரியும்படி பல மலைகளும் வேரோடு பறிக்கப்பட்டு விழவும், சொல்லுதற்கரிய ஆகாய உச்சிகள் இடிபட்டு அதிரவும், வேட்டை ஆடுவது போலச் சுற்றி வரும் மயில் வீரனே, பரந்து விரியும் வகையதான சடையை உடைய சிவபெருமான் கேட்பதற்குரிய பழைய வேதம் புலப்படுத்தும் மெளன வழியை யாவருக்கும் ஒப்பற்ற மேலான குருபரன் என்று போற்ற நின்று, ஞான அறிவை புலப்படுத்த வல்ல பெருமாளே. 
பாடல் 1202 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தானத்த தந்த தந்த தானத்த தந்த தந்த
     தானத்த தந்த தந்த ...... தனதான
வேலொத்து வென்றி யங்கை வேளுக்கு வெஞ்ச ரங்க
     ளாமிக்க கண்க ளென்று ...... மிருதோளை 
வேயொக்கு மென்று கொங்கை மேல்வெற்ப தென்று கொண்டை
     மேகத்தை வென்ற தென்று ...... மெழில்மாதர் 
கோலத்தை விஞ்ச வெஞ்சொல் கோடித்து வஞ்ச நெஞ்சர்
     கூடத்தில் நின்று நின்று ...... குறியாதே 
கோதற்ற நின்ப தங்கள் நேர்பற்றி யின்ப மன்பு
     கூர்கைக்கு வந்து சிந்தை ...... குறுகாதோ 
ஞாலத்தை யன்ற ளந்து வேலைக்கு ளுந்து யின்று
     நாடத்தி முன்பு வந்த ...... திருமாலும் 
நாடத்த டஞ்சி லம்பை மாவைப்பி ளந்த டர்ந்து
     நாகத்த லங்கு லுங்க ...... விடும்வேலா 
ஆலித்தெ ழுந்த டர்ந்த ஆலத்தை யுண்ட கண்ட
     ராகத்தில் மங்கை பங்கர் ...... நடமாடும் 
ஆதிக்கு மைந்த னென்று நீதிக்குள் நின்ற அன்பர்
     ஆபத்தி லஞ்ச லென்ற ...... பெருமாளே.
வெற்றி கொண்ட அழகிய கையில் உள்ள வேலாயுதத்தை நிகர்த்து, மன்மதனுடைய கொடிய மலர்ப் பாணங்களாக மேம்பட்டு விளங்கும் கண்கள் என்று உவமை கூறியும், இரண்டு தோள்களை மூங்கிலை நிகர்க்கும் என்றும், மார்பகங்கள் மேலான மலைக்கு ஒப்பானவை என்றும், கூந்தல் (கரு நிறத்தில்) மேகத்தையும் வென்றது என்று கூறியும், அழகிய (விலை) மாதர்களின் எழிலினை மேலான வகையில், விரும்பத் தக்க சொற்கள் கொண்டு அலங்கரித்துப் பேசி, வஞ்சக மனம் உடைய அப் பொது மகளிர்களின் வீட்டு முற்றத்தில் அடிக்கடி நின்று அவர்களைக் குறித்தே காலம் கழிக்காமல், குற்றம் இல்லாத உன் திருவடிகளை நேராகப் பற்றி, இன்பமும் அன்பும் மிகுந்து பெருகுதற்கு வேண்டிய மனத்தை அடைய மாட்டேனோ? பூமியை முன்பு ஓரடியால் (வாமனனாக வந்து) அளந்து, பாற்கடலினிடையே துயிலும் தன்னை நாடி ஓலமிட்ட (கஜேந்திரன்) என்னும் யானையின் முன்பு வந்து உதவிய திருமாலும், உனது உதவியை நாட, விசாலமான கிரவுஞ்ச மலையையும், மாமரமாக வடிவெடுத்த சூரனையும் பிளந்து நெருங்கி, மலைப் பிரதேசங்கள் எல்லாம் குலுங்கி அசையும்படி வேலைச் செலுத்திய வேலனே, ஒலித்து எழுந்து நெருங்கி வந்த ஆலகால விஷத்தைப் பருகி அடக்கிய கழுத்தை உடையவர், தமது உடலில் மங்கையாகிய பார்வதிக்கு இடது பாகம் தந்தவர், நடனம் ஆடுபவர் ஆகிய முதல்வராகிய சிவ பெருமானுக்குப் பிள்ளை என்று விளங்கி, நீதி நெறியில் நிற்கும் அன்பர்களுக்கு, அவர்களுக்கு ஆபத்து நேரிடும் போதில் அஞ்ச வேண்டாம் என்று அருளும் பெருமாளே. 
பாடல் 1203 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ஸாமா 
தாளம் - அங்கதாளம் - 5 1/2 
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தனதான தந்த தந்த தனதான தந்த தந்த
     தனதான தந்த தந்த ...... தனதான
அடியார்ம னஞ்சலிக்க எவராகி லும்ப ழிக்க
     அபராதம் வந்து கெட்ட ...... பிணிமூடி 
அனைவோரும் வந்து சிச்சி யெனநால்வ ருஞ்சி ரிக்க
     அனலோட ழன்று செத்து ...... விடுமாபோற் 
கடையேன்ம லங்கள் முற்று மிருநோயு டன்பி டித்த
     கலியோடி றந்து சுத்த ...... வெளியாகிக் 
களிகூர என்ற னுக்கு மயிலேறி வந்து முத்தி
     கதியேற அன்பு வைத்து ...... னருள்தாராய் 
சடைமீது கங்கை வைத்து விடையேறு மெந்தை சுத்த
     தழல்மேனி யன்சி ரித்தொர் ...... புரமூணும் 
தவிடாக வந்தெ திர்த்த மதனாக முஞ்சி தைத்த
     தழல்பார்வை யன்ற ளித்த ...... குருநாதா 
மிடிதீர அண்ட ருக்கு மயிலேறி வஞ்சர் கொட்டம்
     வெளியாக வந்து நிர்த்த ...... மருள்வோனே 
மினநூல்ம ருங்குல் பொற்பு முலைமாதி ளங்கு றத்தி
     மிகுமாலொ டன்பு வைத்த ...... பெருமாளே.
உன் அடியார்கள் மனம் துன்பப்படும்படி அவர்களை யாராலும் பழித்தால், அதனால் பிழை ஏற்பட்டு, கெட்ட நோய்கள் வந்து பழித்தவர்களைப் பீடித்து, எல்லோரும் வந்து சீ சீ என்று அருவருப்புடன் இகழ, நாலு பேர் பரிகசித்துச் சிரிக்க, கடைசியில் இறந்து நெருப்பிடை வீழ்ந்து வெந்துவிடுவது போல, இழிந்தவனாகிய என்னுடைய ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்கள் யாவும், நல்வினை, தீவினை என்ற இரு நோய்களுடனும், என்னைப் பிடித்துள்ள தரித்திரத்தோடும் யாவுமாக அழிபட்டு, ஞான பரிசுத்த பரவெளி எனக்குப் புலப்பட்டதாகி, மகிழ்ச்சி மிகுந்து ஏற்பட, நீ எனக்காக மயில் மீது ஏறி வந்து, முக்தி வீட்டை யான் அடையுமாறு என்மீது அன்பு வைத்து, உனது திருவருளைத் தந்தருள்க. சடையின் மீது கங்கை நதியைச் சூடி, நந்தி வாகனத்தின் மீதேறும் எங்கள் தந்தை, பரிசுத்தமான நெருப்பு மேனியன் ஆகிய சிவபிரான் சிரித்தே ஒப்பற்ற திரிபுரம் மூன்றையும் எரித்துத் தவிடு பொடியாகும்படியும், வந்து தன்னை எதிர்த்த மன்மதனின் உடலைச் சிதைத்து அழியுமாறு செய்த (நெற்றியிலுள்ள) நெருப்புக்கண்ணின் சுடரில் ஒருநாள் வெளிப்பட்ட குருநாதனே, தேவர்களுக்கு எற்பட்ட துன்பம் தீர, மயில் மீதேறி, வஞ்சக அரக்கர்களின் இறுமாப்பும், செயல்களும் ஒடுங்கும்படிச் செய்து வெளிவந்து வெற்றி நடனம் புரிந்தவனே, மின்னல் போன்றும், நூல் போன்றும் நுண்ணிய இடையையும், அழகிய மார்பையும் உடைய பெண்ணாம் இளங் குறத்தி வள்ளியின் மீது மிக்க ஆசையுடன் அன்பு வைத்த பெருமாளே. 
பாடல் 1204 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தனதன தாத்தன தனதன தாத்தன
     தனதன தாத்தன ...... தனதான
அடியில்வி டாப்பிண மடையவி டாச்சிறி
     தழியுமுன் வீட்டுமு ...... னுயர்பாடை 
அழகொடு கூட்டுமி னழையுமின் வார்ப்பறை
     யழுகையை மாற்றுமி ...... னொதியாமுன் 
எடுமினி யாக்கையை யெனஇடு காட்டெரி
     யிடைகொடு போய்த்தமர் ...... சுடுநாளில் 
எயினர்கு லோத்தமை யுடன்மயில் மேற்கடி
     தெனதுயிர் காத்திட ...... வரவேணும் 
மடுவிடை போய்ப்பரு முதலையின் வாய்ப்படு
     மதகரி கூப்பிட ...... வளையூதி 
மழைமுகில் போற்கக பதிமிசை தோற்றிய
     மகிபதி போற்றிடு ...... மருகோனே 
படர்சடை யாத்திகர் பரிவுற ராட்சதர்
     பரவையி லார்ப்பெழ ...... விடும்வேலாற் 
படமுனி யாப்பணி தமனிய நாட்டவர்
     பதிகுடி யேற்றிய ...... பெருமாளே.
வீட்டின் உள்ளே விடாது கிடந்திருக்கும் பிணத்தை அங்கேயே இருக்க விடாமல், கொஞ்சம் அழுகிப் போவதற்கு முன்னமேயே வீட்டுக்கு எதிரில் சிறப்புடன் பாடையை அழகாகக் கட்டுங்கள். நன்கு கட்டப்பட்ட பறை வாத்தியங்களை வரவழையுங்கள். அழுகையை நிறுத்துங்கள். பிணம் கெட்டு அழியும் முன்னர் உடலை எடுத்துச் செல்லுங்கள். - என்று கூறி சுடுகாட்டில் தீயின் இடையே கொண்டு போய்ச் சுற்றத்தார் சுட்டெரிக்கும் அந்த நாளில், வேடுவர் குலத்தைச் சேர்ந்த, உத்தம குணம் உடைய, வள்ளியோடு மயில் மேல் ஏறி விரைவாக என் உயிரைக் காப்பதற்கு வரவேண்டும். மடு இருந்த இடத்துக்குப் போய் பெரிய முதலையின் வாயில் அகப்பட்டிருந்த மதயானையாகிய கஜேந்திரன் கூப்பிட, சங்கை ஊதுபவனும், கரிய மேகம் போன்றவனும், பட்சிகளின் அரசனான கருடன் மேல் ஏறி வந்தவனும், இப்பூவுலகின் தலைவனுமாகிய திருமால் துதித்து ஏத்தும் மருகனே, பரந்த சடையை உடைய, கடவுள் உண்டென்று நம்புவோர்க்குப் பொருளாயுள்ள, சிவபெருமான் அன்பு கொள்ளும் வகையில், அரக்கர்கள் கடலில் கூச்சலிட்டு அலறும்படிச் செலுத்திய வேலால் அவர்கள் அழியும்படி கோபித்து, தன்னைப் பணிந்த, பொன்னுலகத்தில் வாழும் தேவர்களின் தலைவனான, இந்திரனை மீண்டும் குடி ஏற்றிய பெருமாளே. 
பாடல் 1205 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தத்தன தான தானன தத்தன தான தானன
     தத்தன தான தானன ...... தனதான
அப்படி யேழு மேழும்வ குத்துவ ழாது போதினி
     னக்ரம்வி யோம கோளகை ...... மிசைவாழும் 
அக்ஷர தேவி கோவின்வி திப்படி மாறி மாறிய
     னைத்துரு வாய காயம ...... தடைவேகொண் 
டிப்படி யோனி வாய்தொறு முற்பவி யாவி ழாவுல
     கிற்றடு மாறி யேதிரி ...... தருகாலம் 
எத்தனை யூழி காலமெ னத்தெரி யாது வாழியி
     னிப்பிற வாது நீயருள் ...... புரிவாயே 
கற்பக வேழ மேய்வன பச்சிள ஏனல் மீதுறை
     கற்புடை மாது தோய்தரு ...... மபிராம 
கற்புர தூளி லேபன மற்புய பாக சாதன
     கற்பக லோக தாரண ...... கிரிசால 
விப்ரச மூக வேதன பச்சிம பூமி காவல
     வெட்சியு நீப மாலையு ...... மணிவோனே 
மெத்திய ஆழி சேறெழ வெற்பொடு சூர னீறெழ
     விக்ரம வேலை யேவிய ...... பெருமாளே.
அவ்வாறாக பதினான்கு உலகங்களும்* தவறில்லாமல் படைத்து, தாமரை மலரில் அமர்ந்து முதன்மை ஸ்தானம் வகிப்பவரும், அண்ட கோளத்திலும் வாழ்கின்றவரும், சரஸ்வதி தேவியின் கணவனுமான பிரமதேவன் எழுதியுள்ள விதியின்படி, (பிறப்புக்கள்) மாறி மாறி, எல்லா உருவங்களையும் கொண்ட உடல்களை முறையே நான் எடுத்து, இவ்வாறாக (எண்பத்து நான்கு லக்ஷம்) கருக்குழி பேதங்களிலும் தோன்றிப் பிறந்தும், பின்னர் இறந்தும், இங்ஙனம் உலகில் தடுமாற்றம் அடைந்து அலைகின்ற காலம் எத்தனை ஊழி காலம் என்று எனக்குத் தெரியாது. (இறைவனே) நீ வாழ்வாயாக. நான் இனிப் பிறவாமல் நீ அருள் புரிவாயாக. தென்னை, கரும்பு இவைகளுக்கு ஒப்பாக (நீண்டு வளர்ந்துள்ள) பசுமையான இளந் தினைகள் உள்ள புனத்தில் வீற்றிருந்த கற்பு நிறைந்த வள்ளி தழுவும் அழகனே, பச்சைக் கற்பூரப் பொடி பூசிய, மல் யுத்தத்துக்கு ஏற்ற புயத்தை உடையவனே, இந்திரனுடைய (நினைத்ததைத் தரும்) கற்பக மரங்கள் உள்ள பொன்னுலகத்துக்கு நிலைத்த வாழ்வைத் தந்தவனே, மலைக் கூட்டத்தில் விளங்குபவனே, அந்தணர் கூட்டத்தில் இருப்பவனே, வேதத்தில் உள்ளவனே, மேற் புறத்தில் உள்ள விண்ணுலகின் காவலனே, வெட்சியும் கடப்ப மாலையையும் அணிபவனே, நிரம்பிய கடல் சேறுபட்டு எழவும், எழு கிரிகளும் சூரனும் பொடிபட்டு அழியவும், பராக்ரமம் பொருந்திய வேலைச் செலுத்திய பெருமாளே. 
* கீழ் உலகங்கள் ஏழு: அதலம், விதலம், சுதலம், தராதலம், மகாதலம், ரசாதலம், பாதாளம்.மேல் உலகங்கள் ஏழு: பூலோகம், புவலோகம், சுவலோகம், ஜனலோகம், தபோலோகம், மகாலோகம், சத்திய லோகம்.
பாடல் 1206 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தனன தானனம் தனன தானனம்
     தனன தானனம் ...... தனதான
அயில்வி லோசனங் குவிய வாசகம்
     பதற ஆனனங் ...... குறுவேர்வுற் 
றளக பாரமுங் குலைய மேல்விழுந்
     ததர பானமுண் ...... டியல்மாதர் 
சயில பாரகுங் குமப யோதரந்
     தழுவு மாதரந் ...... தமியேனால் 
தவிரொ ணாதுநின் கருணை கூர்தருந்
     தருண பாதமுந் ...... தரவேணும் 
கயிலை யாளியுங் குலிச பாணியுங்
     கமல யோனியும் ...... புயகேசன் 
கணப ணாமுகங் கிழிய மோதுவெங்
     கருட வாகனந் ...... தனிலேறும் 
புயலி லேகரும் பரவ வானிலும்
     புணரி மீதுனுங் ...... கிரிமீதும் 
பொருநி சாசரன் தனது மார்பினும்
     புதைய வேல்விடும் ...... பெருமாளே.
வேல் போன்ற கண்கள் குவியவும், பேச்சு பதறவும், முகத்தில் சிறு வேர்வை துளிர்க்கவும், இறுகக் கட்டியிருந்த கூந்தல் பாரம் கலையவும், மேல் விழுந்து வாயிதழ் ஊறலைப் பருகி, அழகிய வேசியர்களின் மலை போன்று கனத்த, குங்குமம் கொண்ட மார்பகங்களைத் தழுவ வேண்டும் என்கின்ற ஆசை அடியேனால் நீக்க முடியாததாய் இருக்கின்றது. (இவ்வாசையை நீக்க) உனது கருணை மிக்குள்ள இளமை பொலியும் திருவடிகளை எனக்குத் தந்தருள வேண்டும். கயிலைக்குத் தலைவனான சிவபெருமானும், வஜ்ராயுத கரத்தனான இந்திரனும், திருமாலின் உந்தித் தாமரையில் தோன்றிய பிரமனும், பாம்புகளுக்குத் தலைவனான ஆதிசேஷனுடைய கூட்டமான படங்களின் முகம் அறும்படி மோத வல்ல கொடிய கருட வாகனத்தின் மேல் ஏறும் மேக வண்ணனாம் திருமாலும், தேவர்களும் போற்ற, ஆகாயத்திலும், கடல் மீதும், மலை மீதும் இருந்து சண்டை செய்யும் அசுரனாகிய சூரன் மார்பிலே புதைந்து அழுந்தும்படி வேலைச் செலுத்திய பெருமாளே. 
பாடல் 1207 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தனத்த தத்தனா தனத்த தத்தனா
     தனத்த தத்தனா ...... தனதான
அருக்கி மெத்ததோள் திருத்தி யுற்றுமார்
     பசைத்து வக்குமா ...... லிளைஞோரை 
அழைத்து மிக்ககா சிழைத்து மெத்தைமீ
     தணைத்து மெத்தமா ...... லதுகூர 
உருக்கி யுட்கொள்மா தருக்கு ளெய்த்துநா
     வுலற்றி யுட்குநா ...... ணுடன்மேவி 
உழைக்கு மத்தைநீ யொழித்து முத்திபா
     லுறக்கு ணத்ததா ...... ளருள்வாயே 
சுருக்க முற்றமால் தனக்கு மெட்டிடா
     தொருத்தர் மிக்கமா ...... நடமாடுஞ் 
சுகத்தி லத்தர்தா மிகுத்த பத்திகூர்
     சுரக்க வித்தைதா ...... னருள்வோனே 
பெருக்க வெற்றிகூர் திருக்கை கொற்றவேல்
     பிடித்து குற்றமா ...... ரொருசூரன் 
பெலத்தை முட்டிமார் தொளைத்து நட்டுளோர்
     பிழைக்க விட்டவோர் ...... பெருமாளே.
அருமை பாராட்டி நன்றாகத் தோள்களை ஒழுங்கு படுத்தியும், மார்பை அசைத்தும், தம்மைக் கண்டு மகிழ்ந்து மோகம் கொண்ட இளைஞர்களை அழைத்து, நிரம்பப் பணத்தை அவர்கள் தரச்செய்து, மெத்தையின் மீது அணைத்து, நிரம்பக் காமம் மிகும்படி அவர்கள் மனதை உருக்கி தம் வசப்படுத்தும் விலைமாதர்களுக்கு நான் இளைப்புற்று, நா வறண்டு, அஞ்சி, நாணம் கொண்டவனாக இருந்து, காலம் தள்ளுவதை நீ ஒழித்து அருள, முக்தி வீட்டை நான் அடைய, அந்த மேன்மை தங்கிய திருவடியைத் தந்து அருள்வாயாக. குறள் வடிவத்தில் வாமனராக வந்த (பின் வானளவு உயர்ந்த) திருமாலாலும் அளவிட முடியாத ஒப்பற்ற பெருமான், மிகச் சிறந்த நடனம் ஆடும் இன்பம் கொண்ட சிவபெருமானுக்கு மிக்க பக்தி முதிர்ந்து பெருக ஞானத்தை (மூலப் பொருளை) உபதேசித்து அருளியவனே, நிரம்ப வெற்றியே மிக்க அழகிய கரத்தில் வீர வேல் கொண்டு, குற்றங்கள் நிறைந்த ஒப்பற்ற சூரனுடைய பலத்தைத் தாக்கி, அவனது மார்பைத் தொளைத்து, நட்புடைய தேவர்கள் பிழைக்க அந்த வேலைச் செலுத்திய ஒப்பற்ற பெருமாளே. 
பாடல் 1208 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தனந்த தாத்தனத் தனந்த தாத்தனத்
     தனந்த தாத்தனத் ...... தனதான
அரும்பி னாற்றனிக் கரும்பி னாற்றொடுத்
     தடர்ந்து மேற்றெறித் ...... தமராடும் 
அநங்க னார்க்கிளைத் தயர்ந்த ணாப்பியெத்
     தரம்பை மார்க்கடைக் ...... கலமாகிக் 
குரும்பை போற்பணைத் தரும்பு றாக்கொதித்
     தெழுந்து கூற்றெனக் ...... கொலைசூழுங் 
குயங்கள் வேட்டறத் தியங்கு தூர்த்தனைக்
     குணங்க ளாக்கிநற் ...... கழல்சேராய் 
பொருந்தி டார்ப்புரத் திலங்கை தீப்படக்
     குரங்கி னாற்படைத் ...... தொருதேரிற் 
புகுந்து நூற்றுவர்க் கொழிந்து பார்த்தனுக்
     கிரங்கி யாற்புறத் ...... தலைமேவிப் 
பெருங்கு றோட்டைவிட் டுறங்கு காற்றெனப்
     பிறங்க வேத்தியக் ...... குறுமாசூர் 
பிறங்க லார்ப்பெழச் சலங்கள் கூப்பிடப்
     பிளந்த வேற்கரப் ...... பெருமாளே.
அரும்பு கொண்ட மலர்ப் பாணங்களாலும், ஒப்பற்ற கரும்பு வில்லாலும் நெருங்கி மேலே படும்படிச் செலுத்திப் போர் செய்யும், மன்மதனுக்கு இளைப்புற்று, சோர்வு அடைந்து, ஏமாற்றி வஞ்சிக்கும் விலைமாதர்களுக்கு அடைக்கலப் பொருள் போல் அகப்பட்டு, (தென்னங்) குரும்பை போலப் பருத்து வெளித்தோன்றி கோபித்து எழுந்து, யமன் போலக் கொலைத் தொழிலை மேற்கொள்ளும் மார்பகங்களை விரும்பி மிகவும் சஞ்சலப்படும் காமுகனாகிய என்னை நற்குணங்களைக் கொண்டவனாகும்படிச் செய்து நல்ல திருவடியில் சேர்ப்பாயாக. பகைவர்களுடைய ஊராகிய இலங்கை தீப்பட்டு எரியும்படி குரங்கினால் (அநுமாரால்) செய்வித்து, ஒப்பற்ற தேரில் (கண்ணனாக) வீற்றிருந்து (துரியோதனனாதி) நூறு கெளரவர்களுக்கு விலகினவனாகி, அர்ச்சுனனிடம் இரக்கம் உற்றவனாகி, ஆலிலை மேல் கடலில் பள்ளி கொண்டு, (சூரன் ஒழிந்தான் என்ற நிம்மதியுடன்) பெரிய குறட்டை விட்டு, பெரு மூச்சுக் காற்றென (திருமால்) அறி துயிலில் விளங்கவே, கலக்கமுறும் மாமரமாகி நின்ற சூரனும், (அவனுக்கு அரணாயிருந்த) ஏழு மலைகளும் அஞ்சிக் கூச்சல் இட, கடல்கள் ஆரவாரிக்க, (அந்த மாமரத்தையும், மலைகளையும்) பிளந்தெறிந்த வேலாயுதத்தைக் கரத்தில் ஏந்திய பெருமாளே. 
பாடல் 1209 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தனதன தத்தனாத் தனதன தத்தனாத்
     தனதன தத்தனாத் ...... தனதான
அலமல மிப்புலாற் புலையுடல் கட்டனேற்
     கறுமுக நித்தர்போற் ...... றியநாதா 
அறிவிலி யிட்டுணாப் பொறியிலி சித்தமாய்த்
     தணிதரு முத்திவீட் ...... டணுகாதே 
பலபல புத்தியாய்க் கலவியி லெய்த்திடாப்
     பரிவொடு தத்தைமார்க் ...... கிதமாடும் 
பகடிது டுக்கன்வாய்க் கறையனெ னத்தராப்
     படியில்ம னித்தர்தூற் ...... றிடலாமோ 
குலகிரி பொற்றலாய்க் குரைகடல் வற்றலாய்க்
     கொடியஅ ரக்கரார்ப் ...... பெழவேதக் 
குயவனை நெற்றியேற் றவனெதிர் குட்டினாற்
     குடுமியை நெட்டைபோக் ...... கியவீரா 
கலைதலை கெட்டபாய்ச் சமணரை நட்டகூர்க்
     கழுநிரை முட்டஏற் ...... றியதாளக் 
கவிதையும் வெற்றிவேற் கரமுடன் வற்றிடாக்
     கருணையு மொப்பிலாப் ...... பெருமாளே.
துன்பப் படுவதற்கென்றே பிறந்தவனாகிய எனக்கு, போதும் போதும், இந்த மாமிசப் பிண்டமாகிய இழிவான உடல், ஓ ஆறுமுக நாதனே, ஜீவன் முக்தர்கள் போற்றும் தலைவனே, அறிவல்லாதவன் நான், ஒருவருக்கு இட்ட பின் சாப்பிட வேண்டும் என்ற அறிவு இல்லாதவன், மனதை ஒடுக்கி அழகு நிறைந்த முக்தி வீட்டைச் சேராமல், பலப்பல வகையில் புத்தியைச் செலுத்தி, சிற்றின்பத்தில் களைத்து, காதலுடன் கிளி போன்ற பெண்களுக்கு இனிமைப் பேச்சுகளைப் பேசும் வெளி வேஷக்காரன், துடுக்கானவன், வாய் மாசு படிந்தவன் என்று பூமியில் உள்ள மனிதர்கள் என்னைக் குறை கூறிப் பழிக்க இடம் தரலாமோ? குலகிரிகளான ஏழு மலைகளும் கிரெளஞ்சமும் பாழ் இடமாய் அழிபட்டு, ஒலிக்கும் கடல் வற்றிப்போய், கொடுமை வாய்ந்த அரக்கர்களின் ஆரவாரம் கிளம்ப, வேதம் படைத்த பிரமனை, நெற்றியில் படும்படி அவனைக் குட்டிய குட்டால், அவனுடைய குடுமியையும் ஆணவத்தையும் ஒருங்கே சிதற அடித்த வீரனே, கலை ஞானம் அடியோடு கெட்டுப் போன, கோரைப்பாய் உடை உடுத்தியவர்களான சமணர்களை, நடப்பட்டிருந்த கூர்மையான கழு மரங்களில் வரிசையாக, ஒருவர் மீதம் இல்லாமல், ஏற்றின (திருஞானசம்பந்தராக வந்த பெருமாளே), தாளத்துடன் பாடும் பாடல்களும், வெற்றி வேல் ஏந்தும் திருக்கரமும், வற்றாத கருணையும் உள்ள இணை இல்லாத பெருமாளே. 
பாடல் 1210 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தனன தான தந்த தந்த தனன தான தந்த தந்த
     தனன தான தந்த தந்த ...... தனதான
அளக பார முங்கு லைந்து அரிய பார்வை யுஞ்சி வந்து
     அணுகி யாக மும்மு யங்கி ...... யமுதூறல் 
அதர பான மும்நு கர்ந்து அறிவு சோர வும்மொ ழிந்து
     அவச மாக வும்பு ணர்ந்து ...... மடவாரைப் 
பளக னாவி யுந்த ளர்ந்து பதறு மாக மும்ப யந்து
     பகலி ராவை யும்ம றந்து ...... திரியாமற் 
பரம ஞான முந்தெ ளிந்து பரிவு நேச முங்கி ளர்ந்து
     பகரு மாறு செம்ப தங்கள் ...... தரவேணும் 
துளப மாய னுஞ்சி றந்த கமல வேத னும்பு கழ்ந்து
     தொழுது தேட ரும்ப்ர சண்ட ...... னருள்பாலா 
சுரர்கள் நாய கன்ப யந்த திருவை மாம ணம்பு ணர்ந்து
     சுடரு மோக னம்மி குந்த ...... மயில்பாகா 
களப மார்பு டன்த யங்கு குறவர் மாது டன்செ றிந்து
     கலவி நாட கம்பொ ருந்தி ...... மகிழ்வோனே 
கடிய பாத கந்த விர்ந்து கழலை நாடொ றுங்கி ளர்ந்து
     கருது வார்ம னம்பு குந்த ...... பெருமாளே.
கூந்தல் பாரமும் கலைந்து, அருமையான கண் பார்வையும் செந்நிறம் உற்று, நெருங்கிச் சென்று, அமுது போல் இனித்து ஊறும் வாயிதழ் ஊறலைப் பருகி அனுபவித்து, அறிவு தடுமாற்றத்துடன் பேசி, தன்வசமின்றி விலைமாதர்களைப் புணரும் குற்றமுள்ளவன் நான். ஆவியும் தளர்ந்து, கலக்கமுற்ற உடலும் பயந்து, இராப் பகல் பிரிவினையையும் மறந்து நான் அலைச்சல் அடையாமல், மேலான ஞானத்தைத் தெளிந்து உணர்ந்து, அன்பும் நட்பும் கலந்து மேலெழுந்து, உன்னைப் போற்றிப் புகழுமாறு, உனது செவ்விய திருவடிகளைத் தர வேண்டும். துளசி மாலை அணிந்த திருமாலும், சிறந்த தாமரை மேல் வீற்றிருக்கும் பிரமனும் புகழ்ந்து வணங்கித் தேடுதற்கு அரியரான பெரு வீரன் சிவபெருமான்அருளிய குழந்தையே, தேவர்களின் தலைவனான இந்திரன் பெற்ற அழகிய தேவயானையைச் சிறப்புடன் திருமணம் செய்து கூடியவனே, விளங்கும்படியான கவர்ச்சி மிகப் பெற்ற மயில் வாகனனே, கலவைச் சாந்து பூசின மார்புடன் விளங்கும், குறவர் பெண்ணாகிய வள்ளியுடன் நெருங்கிப் பழகிச் சேர்க்கை நாடகம் உடையவனாய் மகிழ்ந்தவனே, பொல்லாத பாபச் செயல்களை விட்டுவிட்டு, உன் திருவடியை நாள் தோறும் நிரம்பக் கருத்தில் தியானிக்கும் உன் அடியார்களது மனதில் புகுந்து விளங்கும் பெருமாளே. 
பாடல் 1211 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ஹம்ஸவிநோதினி 
தாளம் - அங்தாளம் - 6 
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகதிமி-2
தானான தான தனதன தானான தான தனதன
     தானான தான தனதன ...... தனதான
ஆசார வீன னறிவிலி கோபாப ராதி யவகுண
     னாகாத நீச னநுசிதன் ...... விபா£தன் 
ஆசாவி சார வெகுவித மோகாச ¡£த பரவச
     னாகாச நீர்ம ணனல்வளி ...... யுருமாறி 
மாசான நாலெண் வகைதனை நீநானெ னாத அறிவுளம்
     வாயாத பாவி யிவனென ...... நினையாமல் 
மாதாபி தாவி னருணல மாறாம காரி லெனையினி
     மாஞான போத மருள்செய ...... நினைவாயே 
வீசால வேலை சுவறிட மாசூரர் மார்பு தொளைபட
     வேதாள ராசி பசிகெட ...... அறைகூறி 
மேகார வார மெனஅதிர் போர்யாது தான ரெமபுர
     மீதேற வேல்கொ டமர்செயு ...... மிளையோனே 
கூசாது வேட னுமிழ்தரு நீராடி யூனு ணெனுமுரை
     கூறாம னீய அவனுகர் ...... தருசேடங் 
கோதாமெ னாம லமுதுசெய் வேதாக மாதி முதல்தரு
     கோலோக நாத குறமகள் ...... பெருமாளே.
ஒழுக்கக் குறைவு உடையவன், அறிவில்லாதவன், கோபம் காரணமாகக் குற்றங்கள் பல செய்பவன், கெட்ட குணத்தை உடையவன், யாருக்கும் பயனாகாத இழிந்த குணத்தவன், தகாத காரியங்களைச் செய்யும் அசுத்தன், மாறுபாடான புத்தியை உடையவன், (மண், பெண், பொன் என்ற) மூவாசைகளிலே எண்ணத்தை வைத்து, பலவிதமான ஆசைச் செயல்களைச் செய்து தன்வசம் இழந்தவன், ஆகாயம், நீர், மண், தீ, காற்று என்ற பஞ்சபூதச் சேர்க்கையால் வெவ்வேறு பிறவிகளில் பல உடல்களை எடுத்து, குற்றங்களுடன் கலந்த முப்பத்திரண்டு* தத்துவங்களைக் கொண்ட இந்த உடல்களை நீ என்பதும் நான் என்பதுமான பிரிவைக் காணாத, ஞான உள்ளம் வாய்க்கப் பெறாத பாவி, இத்தனையும் இவன் என்று நினைத்து என்னை நீ ஒதுக்கி விடாமல், தாய் தந்தையரின் அருள் நிறைந்த உபகாரச் செயல்கள் மாறாத குழந்தைகள் போல, உன் குழந்தையாகிய என்மீது இனிமேலாயினும் சிறந்த ஞானோபதேசத்தை அருள்வதற்கு உன் திருவுள்ளத்தில் நினைப்பாயாக. அகன்ற சமுத்திரமானது வற்றிப் போகவும், பெரிய சூரன் முதலியோரது மார்புகள் தொளைபடவும், வேதாள கணங்களின் பசி (சூர சம்ஹாரத்தால்) தீர்ந்திடவும், போருக்கு வாருங்கள் என்று அசுரர்களைக் கூவி அழைத்து, மேகங்களின் பெரும் ஆரவாரமான இடியோசை போல முழங்கும் போரில், அரக்கர்கள் யம பட்டணம் போய்ச் சேரும்படியாக, வேலைக் கொண்டு போர் செய்த இளையோனே, கொஞ்சமும் தயங்காது வேடன் கண்ணப்பன் வாயினின்று உமிழ்ந்த நீர் அபிஷேகத்தைப் பெற்றுக்கொண்டு, இந்த மாமிசம் சுவையானது, இதை உண்டருள்க என்று அவன் கூறிய சொல்லைக் கேட்டு, நிரம்பவும் அவன் தருவதை, அந்த வேடன் எச்சில் செய்து தந்த மீதம் குற்றமுள்ளது என்று பாவிக்காமல் அமுதாக எண்ணி உண்டு அருளியவரும், வேதங்களுக்கும் ஆகமங்களுங்கும் ஆதி முதல்வர் ஆனவருமான சிவபிரான் பெற்றெடுத்த அரசனே, இந்த உலகத்துக்கெல்லாம் நாதனே, குறமகள் வள்ளியின் பெருமாளே. 
* 32 தத்துவங்கள் பின்வருமாறு:ஆத்ம தத்துவம் 20, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5. 
** 'யாது தானர்' என்றால் திதியின் மக்கள் யாதுக்களும், தனுவின் மக்கள் தானவருமாகிய அரக்கர்கள்.இவர்களே அரக்கர்குல முன்னோடிகள் ஆவர்.
பாடல் 1212 - பொதுப்பாடல்கள் 
ராகம் - யமுனா கல்யாணி 
தாளம் - ஆதி
தானனா தத்த தானனா தத்த
     தானனா தத்த ...... தனதான
ஆசைகூர் பத்த னேன்மனோ பத்ம
     மானபூ வைத்து ...... நடுவேயன் 
பானநூ லிட்டு நாவிலே சித்ர
     மாகவே கட்டி ...... யொருஞான 
வாசம்வீ சிப்ர காசியா நிற்ப
     மாசிலோர் புத்தி ...... யளிபாட 
மாத்ருகா புஷ்ப மாலைகோ லப்ர
     வாளபா தத்தி ...... லணிவேனோ 
மூசுகா னத்து மீதுவாழ் முத்த
     மூரல்வே டிச்சி ...... தனபார 
மூழ்குநீ பப்ர தாபமார் பத்த
     மூரிவே ழத்தின் ...... மயில்வாழ்வே 
வீசுமீ னப்ப யோதிவாய் விட்டு
     வேகவே தித்து ...... வருமாசூர் 
வீழமோ திப்ப ராரைநா கத்து
     வீரவேல் தொட்ட ...... பெருமாளே.
உன் மீது ஆசை மிகுந்த பக்தியை உடைய நான் மனம் எனப்படும் தாமரை மலரை வைத்து, இடையில் அன்பு என்னும் நாரைக் கொண்டு, நாக்கு என்னும் இடத்திலே அழகான ஒரு மாலையைத் தொடுத்து, அந்த மாலையின் மீது ஒப்பற்ற ஞானம் என்னும் நறுமணத்தைத் தடவி, அந்த மாலை மிக்க ஒளியுடன் விளங்கவும், அதைச் சுற்றி குற்றமற்ற ஒரு அறிவு என்ற வண்டு மொய்த்துப் பாடவும், மாத்ருகா மந்திர* மாலையான இந்தப் பூமாலையை அழகிய பவளம் போல் சிவந்த திருவடிகளில் அணிவிக்கும் பாக்கியத்தைப் பெறுவேனோ? சிள்வண்டுகள் மொய்க்கும் காட்டிலே வாழ்கின்ற, முத்தை நிகர்த்த அழகிய பற்களை உடைய, வேடர் குலப்பெண் வள்ளியின் மார்பகத்தில் முழுகி அழுந்திக் கிடக்கும், கடப்ப மாலையைச் சிறப்பாக அணியும், மார்பை உடைய ஐயனே, வலிமையான ஐராவத யானை வளர்த்த மயிலின் சாயலுள்ள தேவயானையின் மணவாளனே, அலை வீசும், மீன்கள் மிகுந்த, கடல் பேரொலியோடு வெந்து வற்ற, தேவர்களை வருத்தித் துன்புறுத்தி வந்த பெரும் சூரன் அழிபட்டு விழ, தாக்குதல் செய்து, பருத்த அடிப்பாகத்தை உடைய கிரெளஞ்சமலை மீது வீரம் பொருந்திய வேலாயுதத்தைச் செலுத்திய பெருமாளே. 
* வடமொழியில் அ முதல் க்ஷ முடிய உள்ள 51 அக்ஷரங்களைக் கொண்ட மாத்ருகா புஷ்ப மாலை.சுப்ரமண்ய பராக்ரமம் என்ற நூலில் வரும் இந்த மந்திரம், முருகன் 51 அக்ஷர உருவில் இருப்பதை விளக்குகிறது.
பாடல் 1213 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தானத் தனத்ததன தானத் தனத்ததன
     தானத் தனத்ததன ...... தனதான
ஆசைக் கொளுத்திவெகு வாகப் பசப்பிவரு
     மாடைப் பணத்தையெடெ ...... னுறவாடி 
ஆரக் கழுத்துமுலை மார்பைக் குலுக்கிவிழி
     யாடக் குலத்துமயில் ...... கிளிபோலப் 
பேசிச் சிரித்துமயிர் கோதிக் குலைத்துமுடி
     பேதைப் படுத்திமய ...... லிடுமாதர் 
பீறற் சலத்துவழி நாறப் படுத்தியெனை
     பீடைப் படுத்துமய ...... லொழியாதோ 
தேசத் தடைத்துபிர காசித் தொலித்துவரி
     சேடற் பிடுத்துதறு ...... மயில்வீரா 
தேடித் துதித்தஅடி யார்சித் தமுற்றருளு
     சீர்பொற் பதத்தஅரி ...... மருகோனே 
நேசப் படுத்தியிமை யோரைக் கெடுத்தமுழு
     நீசற் கனத்தமுற ...... விடும்வேலா 
நேசக் குறத்திமய லோடுற் பவித்தபொனி
     நீர்பொற் புவிக்குள்மகிழ் ...... பெருமாளே.
காமத்தை மூட்டி, வெகு பக்குவமாக இனிமையாகப் பேசி, வரவேண்டிய பொற்காசை எடுத்துத்தா என்று உரிமையுடன் நட்புப் பேச்சுக்கள் பேசி, முத்து மாலை அணிந்த கழுத்தையும், மார்பகங்களையும் குலுக்கி, கண்கள் அசைய, சிறப்புள்ள மயில் போல உலவியும் கிளி போலப் பேசியும், சிரித்தும், தலை மயிரைக் கோதிவிட்டும், அவிழ்த்தும் (எனக்குப்) பேதைமையை ஊட்டி மயக்கத்தைத் தருகின்ற விலைமாதர்களின் கிழிபட்டதும், சிறு நீர் பிரியும் நாற்றமுடைய வழியையும் வெளிக்காட்டி என்னைத் துன்பத்துக்கு ஆளாக்கும் காம மயக்கம் என்னை விட்டு நீங்காதோ? ஒளிமிக்க மாணிக்கத்தைத் தன்னுள் கொண்டதும், பிரகாசம் உடையதும், சீறி ஒலிப்பதும், கோடுகளை உடையதுமான ஆதிசேஷனைப் பிடித்து உதறி எறியும் மயில் மேல் அமரும் வீரனே, நீ வீற்றிருக்கும் தலங்களைத் தேடி உன்னைப் போற்றும் அடியார்களுடைய உள்ளத்தில் நின்று அருள் புரியும், சிறப்பையும் அழகையும் கொண்ட திருவடியை உடையவனே, திருமாலின் மருகனே, அன்பே இல்லாமல் தேவர்களைக் கெடுத்த முற்றிலும் இழிவான அசுரர்களுக்கு கேடு உண்டாகும்படியாக செலுத்திய வேலாயுதனே, அன்பு நிறைந்த குறப் பெண்ணாகிய வள்ளி உன் மீது காதலுடன் பிறந்த இடமாகிய வள்ளி மலையில் மகிழ்ந்து வீற்றிருப்பவனே, பொன்னி (காவேரி) ஆறு பாயும் அழகிய புவிக்குள் (அதாவது, வயலூர், திரிசிராப்பள்ளி, சுவாமி மலை முதலிய தலங்களில்) மகிழ்ச்சி கொள்ளும் பெருமாளே. 
பாடல் 1214 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தான தான தனத்தன தான தான தனத்தன
     தான தான தனத்தன ...... தனதான
ஆசை நேச மயக்கிகள் காசு தேடு மனத்திகள்
     ஆவி சோர வுருக்கிகள் ...... தெருமீதே 
யாவ ரோடு நகைப்பவர் வேறு கூறு விளைப்பவர்
     ஆல கால விழிச்சிகள் ...... மலைபோலு 
மாசி லாத தனத்தியர் ஆடை சோர நடப்பவர்
     வாரி யோதி முடிப்பவர் ...... ஒழியாமல் 
வாயி லூற லளிப்பவர் நாளு நாளு மினுக்கிகள்
     வாசல் தேடி நடப்பது ...... தவிர்வேனோ 
ஓசை யான திரைக்கடல் ஏழு ஞால முமுற்றருள்
     ஈச ரோடு றவுற்றவள் ...... உமையாயி 
யோகி ஞானி பரப்ரமி நீலி நார ணியுத்தமி
     ஓல மான மறைச்சிசொல் ...... அபிராமி 
ஏசி லாத மலைக்கொடி தாய்ம னோம ணிசற்குணி
     ஈறி லாத மலைக்கொடி ...... அருள்பாலா 
ஏறு மேனி யொருத்தனும் வேத னான சமர்த்தனும்
     ஈச னோடு ப்ரியப்படு ...... பெருமாளே.
ஆசையும் அன்பும் காட்டி மயக்குபவர்கள், பொருள் தேடுவதிலேயே மனத்தைச் செலுத்துபவர்கள், உயிர் சோர்ந்து போகும்படி உள்ளத்தை உருக்குபவர்கள், தெருவில் போகும் எல்லோருடனும் சிரிப்பவர்கள், குணம் வேறுபடும் தன்மையை உண்டு பண்ணுபவர்கள், ஆலகால விஷத்தைப் போல கண்களை உடையவர்கள், மலையைப் போன்று பருத்த, மறு இல்லாததான மார்பை உடையவர்கள், ஆடை நெகிழும்படி நடப்பவர்கள், கூந்தலை வாரி முடிப்பவர்கள், இடைவிடாது, வாயில் அதர பானம் தருபவர்கள், நாள் தோறும் தங்களை அழகுபடுத்திக் கொள்ளுபவர்கள் (ஆகிய விலைமாதர்களின்) வீட்டு வாயிலைத் தேடி நடக்கும் வழக்கத்தை விடமாட்டேனோ? ஒலி செய்யும் அலை வீசும் ஏழு கடல்களிலும், பூமியிலும் ஒன்றி இருந்து அருள்செய்யும் சிவபெருமானுடன் இணைந்து இருப்பவள், உமை அம்மை, யோகத்திலிருப்பவள், ஞானி, முழுமுதல் தேவி, நீல நிறத்தி, துர்க்கை, உத்தமி, இசை ஒலியுடன் ஓதப்படுகின்ற வேதத்தினள், புகழ் கொண்ட அழகி, இகழ்ச்சி என்பதே இல்லாத தூயவள், கொடி போன்ற இடுப்பை உடையவள், தாய், மனத்தை ஞான நிலைக்கு எழுப்புபவள், நற் குணத்தை உடையவள், முடிவில்லாதவள், ஹிமவான் என்னும் மலையரசன் பெற்ற கொடியாகிய பார்வதி தேவி பெற்றருளிய பிள்ளையே, வராகத்தின் உருவை எடுத்த திருமாலும், வேதத்தில் வல்லவனான பிரமனும், சிவபெருமானும் மிக விரும்பும் பெருமாளே. 
பாடல் 1215 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தான தாத்த தனதன தான தாத்த தனதன
     தான தாத்த தனதன ...... தனதான
ஆல மேற்ற விழியினர் சால நீட்டி யழுதழு
     தாக மாய்க்க முறைமுறை ...... பறைமோதி 
ஆடல் பார்க்க நிலையெழு பாடை கூட்டி விரையம
     யான மேற்றி யுறவின ...... ரயலாகக் 
கால மாச்சு வருகென ஓலை காட்டி யமபடர்
     காவ லாக்கி யுயிரது ...... கொடுபோமுன் 
காம வாழ்க்கை பொடிபட ஞானம் வாய்த்த கழலிணை
     காத லாற்க ருதுமுணர் ...... தருவாயே 
வேல கீர்த்தி விதரண சீலர் வாழ்த்து சரவண
     வியாழ கோத்ர மருவிய ...... முருகோனே 
வேடர் நாட்டில் விளைபுன ஏனல் காத்த சிறுமியை
     வேட மாற்றி வழிபடு ...... மிளையோனே 
ஞால மேத்தி வழிபடு மாறு பேர்க்கு மகவென
     நாணல் பூத்த படுகையில் ...... வருவோனே 
நாத போற்றி யெனமுது தாதை கேட்க அநுபவ
     ஞான வார்த்தை யருளிய ...... பெருமாளே.
விஷம் கொண்ட கண்களை உடையவர் நிரம்ப வெகு நேரம் அடிக்கடி அழுது மனம் வருந்தி நைந்து அழிய, நியமப்படி பறை வாத்தியம் ஒலித்து, கூத்தாடுபவர்கள் மூலமாக யாவரும் (சாவு நேர்ந்த) செய்தியைத் தெரிந்து கொள்ள, உறுதியாகக் கட்டப்பட்ட பாடையை ஏற்பாடு செய்து வேகமாக சுடு காட்டுக்குக் கொண்டு போய் சுற்றத்தினர் யாவரும் விலகிச் செல்ல, உன் ஆயுள் காலம் முடிந்து விட்டது, புறப்படு என்று கூறி யம தூதர்கள் சீட்டோலையைக் காட்டி, காவல் வைத்து உயிரைக் கொண்டு போவதற்கு முன்பு, இந்தக் காம ஆசை பாழ்பட்டு ஒழிய, மெய்ஞ் ஞான நிலையதான உனது கழல் அணிந்த திருவடிகளை உண்மையான அன்புடன் தியானிக்கும் உணர்வைத் தந்து அருளுக. வேலாயுதனே, புகழ் பெற்ற கொடையாளனே, பரிசுத்த மனமுடையவர்கள் வாழ்த்திப் போற்றும் சரவணபவனே, குரு மலையாகிய சுவாமி மலையில் வீற்றிருக்கும் முருகனே, வேடர்கள் வாழும் வள்ளிமலையில் தினைக் கொல்லையைக் காவல் புரிந்த சிறுமியாகிய வள்ளியை, (உனது உண்மையான உருவைக் காட்டாது) பல* வேடங்களில் வந்து, வணங்கிய இளைஞனே, பூமியில் உள்ளோர் போற்றி வழிபடும் ஆறு கார்த்திகைப் பெண்களுக்கும் குழந்தை என்று சொல்லும்படி நாணல் புல் சூழ்ந்த மடுவில் (சரவணப் பொய்கையில்) தோன்றியவனே, தலைவா போற்றி என்று தந்தையாகிய மூத்த சிவபெருமான் கேட்க, பேரின்ப அனுபவத்தைத் தரும் ஞான மொழியாகிய பிரணவத்தை உபதேசித்த பெருமாளே. 
* வள்ளியைக் காண முருகன் பூண்ட வேடங்கள்: வேடன், வளையல் செட்டி, வேங்கை, கிழவன் முதலியன.
பாடல் 1216 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தானதன தானத்த தானதன தானத்த
     தானதன தானத்த ...... தனதான
ஆலுமயில் போலுற்ற தோகையர்க ளேமெத்த
     ஆரவட மேலிட்ட ...... முலைமீதே 
ஆனதுகி லேயிட்டு வீதிதனி லேநிற்க
     ஆமவரை யேசற்று ...... முரையாதே 
வேலுமழ கார்கொற்ற நீலமயில் மேலுற்று
     வீறுமுன தார்பத்ம ...... முகமாறு 
மேவியிரு பாகத்தும் வாழுமனை மார்தக்க
     மேதகவு நானித்த ...... முரையேனோ 
நாலுமுக வேதற்கு மாலிலையில் மாலுக்கு
     நாடவரி யார்பெற்ற ...... வொருபாலா 
நாணமுடை யாள்வெற்றி வேடர்குல மீதொக்க
     நாடுகுயில் பார்மிக்க ...... எழில்மாது 
வேலைவிழி வேடச்சி யார்கணவ னேமத்த
     வேழமுக வோனுக்கு ...... மிளையோனே 
வீரமுட னேயுற்ற சூரனணி மார்பத்து
     வேலைமிக வேவிட்ட ...... பெருமாளே.
ஆடும் மயில் போல் உள்ள மாதர்கள், முத்து மாலையை மேலே அணிந்த, நிரம்பிய மார்பின் மீது பொருத்தமான ஆடையை அணிந்து தெருவில் நிற்க ஆசைப்பட்ட விலைமாதர்கள் - இவர்களைப் பற்றியே சிறிதும் நான் பேசாமல், உனது வேலாயுதத்தையும், அழகு நிறைந்த, வீரம் மிக்க, நீலநிறம் கொண்ட மயில் மீது ஏறி விளங்குவதான உன் மலர்ந்த தாமரை போன்ற ஆறு முகங்களையும், பொருந்தி உனது இரு புறங்களிலும் வாழ்கின்ற அன்னைமார் (வள்ளி, தேவயானை என்ற இருவருடைய) சிறந்த பெருமையையும், நான் நாள்தோறும் புகழ மாட்டேனோ? நான்கு முகங்களைக் கொண்ட பிரமனாலும், ஆலிலை மேல் பள்ளி கொள்ளும் திருமாலாலும் தேடிக் காண முடியாத சிவபெருமான் ஈன்ற ஒப்பற்ற குழந்தையே, நாணம் உடையவளும், வெற்றி பெறும் வேடர் குலத்திலே யாவரும் விரும்பிப் போற்றும் குயில் போன்றவளும், உலகில் யாரினும் மேம்பட்ட அழகுள்ள பெண்ணும், கடல் போன்ற கண்களைக் கொண்ட வேடப்பெண் ஆகிய வள்ளியின் கணவனே, மதம் கொண்ட யானை முகம் உள்ள கணபதிக்குத் தம்பியே, வீரத்துடன் போருக்கு எழுந்த சூரனுடைய அழகிய மார்பிடத்தே வேலாயுதத்தை வேகமாகச் செலுத்திய பெருமாளே. 
பாடல் 1217 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தனனத்தன தனனத்தன தனனத்தன ...... தனதான
இடையித்தனை யுளதத்தைய ரிதழ்துய்த்தவ ...... ரநுபோகம் 
இளகிக்கரை புரளப்புள கிதகற்புர ...... தனபாரம் 
உடன்மற்கடை படுதுற்குண மறநிற்குண ...... வுணர்வாலே 
ஒருநிஷ்கள வடிவிற்புக வொருசற்றருள் ...... புரிவாயே 
திடமற்றொளிர் நளினப்ரம சிறைபுக்கன ...... னெனவேகுந் 
தெதிபட்சண க்ருதபட்சண செகபட்சண ...... னெனவோதும் 
விடபட்சணர் திருமைத்துனன் வெருவச்சுரர் ...... பகைமேல்வேல் 
விடுவிக்ரம கிரியெட்டையும் விழவெட்டிய ...... பெருமாளே.
ஒரு கைப்படி அளவே உள்ள இடையை உடைய கிளி போன்ற விலைமாதர்களின் வாயிதழ் பருகி, அவர்களுடைய இன்ப நுகர்ச்சியில் காமம் கட்டுக்கு அடங்காது ஓட, மிகப் புளகாங்கிதம் கொண்டதும், பச்சைக் கற்புரம் அணிந்துள்ளதுமான மார்பகங்களில் சேர்ந்தவனாகி, மல் யுத்தம் புரிந்தவன் போல் இழிந்த நிலையில் சேரும் எனது தீக்குணம் ஒழிய, குணம் கடந்த ஞான உணர்ச்சியால் உருவில்லாத ஒரு முக்தி நிலையில் நான் புகுமாறு ஒரு சிறிது நீ அருள் புரிவாயாக. அறிவின் திடம் இல்லாது விளங்கிய, தாமரையில் வாழும் பிரமன் சிறையில் அகப்பட்டுக் கொண்டான் என அறிந்து (சிவபெருமானிடம் முறையிடச்) சென்றவரும், தயிர் உண்டவர், நெய் உண்டவர், உலகை உண்டவர் என்று போற்றப்படுகின்றவரும், விஷத்தை உண்டவராகிய சிவபெருமானுக்கு அழகிய மைத்துனருமாகிய திருமால் சூரனுக்குப் பயந்து நிற்க, தேவர்களுக்குப் பகைவர்களாகிய அசுரர்களின் மேல் வேலாயுதத்தை விடுத்த வல்லமை படைத்தவனே, (குலகிரிகள் ஏழோடு கிரெளஞ்சத்தையும் சேர்த்து) எட்டு மலைகளையும் விழும்படி வெட்டிய பெருமாளே. 
பாடல் 1218 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தனதன தான தானன, தனதன தான தானன
     தனதன தான தானன ...... தனதான
இருகுழை மீது தாவடி யிடுவன வோதி நீழலி
     னிடமது லாவி மீள்வன ...... நுதல்தாவி 
இழிவன காம வேதமு மொழிவன தாரை வேலென
     எறிவன காள கூடமு ...... மமுதாகக் 
கருகிய நீல லோசன அபிநய மாத ரார்தரு
     கலவியில் மூழ்கி வாடிய ...... தமியேனுங் 
கதிபெற ஈட றாதன பதிபசு பாச மானவை
     கசடற வேறு வேறுசெய் ...... தருள்வாயே 
ஒருபது பார மோலியு மிருபது வாகு மேருவு
     முததியில் வீழ வானர ...... முடனேசென் 
றொருகணை யேவு ராகவன் மருகவி பூதி பூஷணர்
     உணருப தேச தேசிக ...... வரையேனற் 
பரவிய கான வேடுவர் தருமபி ராம நாயகி
     பரிபுர பாத சேகர ...... சுரராஜன் 
பதிகுடி யேற வேல்தொடு முருகம யூர வாகன
     பரவச ஞான யோகிகள் ...... பெருமாளே.
காதில் உள்ள இரண்டு குண்டலங்களின் மீதிலும் தாவிப் போர் புரிபவனவும், கூந்தலின் நிழலிடத்தில் உலாவி மீண்டு வருவனவும், நெற்றியின் மேலும் கீழுமாக ஏறியும் இறங்குபவனவாயும் உள்ள, காம சாஸ்திரத்தை எடுத்து உரைக்கும் கூர்மையான வேல் பாய்வது போலப் பாய்வனவும், ஆலகால விஷமும் (அவற்றோடு ஒப்பிடும்போது) அமுது என்று சொல்லும்படியான குணத்தை உடையவையும், கரிய நீல நிறமுள்ளவனவும் ஆகிய கண்களை உடைய அழகிய நாடகக் கணிகையர் தருகின்ற புணர்ச்சி இன்பத்தில் முழுகி வாடிக் கிடக்கும் திக்கற்றவனாகிய தனியேனாகிய நானும், நற்கதி பெறுவதற்காக, தன்னிகரற்ற கடவுள், உயிர், தளை (கட்டு) எனப்படும் இம் மூன்றின் இலக்கணங்களை ஐயம் இல்லாத வகையில் தனித்தனியாக விளக்கி எனக்கு அருள் செய்வாயாக. (ராவணனுடைய) ஒரு பத்து பாரமான மணி முடிகளும், இருபது மேருவைப் போன்ற தோள் மலைகளும் கடலில் விழவும், குரங்குப் படையுடன் போய் ஒப்பற்ற அம்பைச் செலுத்திய ராமனின் மருகனே, திருநீறு அணிந்த சிவபெருமான் உணர்ந்து கொள்ள உபதேசம் செய்த குரு மூர்த்தியே, வள்ளி மலையில் தினைப் புனத்தே, (உன்னைக்) குல தெய்வமாகப் போற்றித் துதித்த, காட்டில் உள்ள வேடர்கள் வளர்த்த, அழகிய வள்ளி நாயகியின் சிலம்பு அணிந்த திருவடிகளைத் தலையில் சூடினவனே, தேவர்களுக்கு அரசனான இந்திரன் பொன்னுலகில் குடி ஏறுவதற்காக வேலைச் செலுத்திய முருகனே, மயில் வாகனனே, ஆனந்த நிலையில் இருக்கும் ஞான யோகிகளின்* பெருமாளே. 
* துங்கபத்திரை நதிக்கு வட திசையில் உள்ள ஞானபுரத்தில் கெளசிக முனிவர் தத்துவ ஞானம் கைகூட வேண்டி சரவணபவ மந்திரத்தைத் தியானித்துக் குகப் பெருமானை நோக்கிக் கடுந் தவம் புரிந்தார். கந்தக் கடவுள் ஞானாசாரிய மூர்த்தியாகத் தோன்றிச் சிவஞானம் எனப்படும் பதி ஞானமே தெளிவை உண்டாக்கும் என்று உபதேசித்தார். அதனால் ஞான தேசிக மூர்த்தி எனப் பெயர் பெற்றார்.இந்தப் பதி ஞானம் தான் பரம ஞானம், சிவ ஞானம், குக ஞானம், தத்துவ ஞானம், திருவடி ஞானம், அருள் ஞானம், அத்துவித ஞானம், மெய்யுணர்ச்சி எனப் பலவாறு கூறப்படும்.
பாடல் 1219 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ஸிந்துபைரவி 
தாளம் - அங்கதாளம் - 5 
தக-1, தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1
தனனா தனத்ததன தனனா தனத்ததன
     தனனா தனத்ததன ...... தனதான
இருநோய்ம லத்தைசிவ வொளியால்மி ரட்டியெனை
     யினிதாவ ழைத்தெனது ...... முடிமேலே 
இணைதாள ளித்துனது மயில்மேலி ருத்தியொளி
     ரியல்வேல ளித்துமகி ...... ழிருவோரும் 
ஒருவாகெ னக்கயிலை யிறையோன ளித்தருளு
     மொளிர்வேத கற்பகந ...... லிளையோனே 
ஒளிர்மாம றைத்தொகுதி சுரர்பார்து தித்தருள
     உபதேசி கப்பதமு ...... மருள்வாயே 
கருநோய றுத்தெனது மிடிதூள்ப டுத்திவிடு
     கரிமாமு கக்கடவு ...... ளடியார்கள் 
கருதாவ கைக்குவர மருள்ஞான தொப்பைமகிழ்
     கருணாக டப்பமல ...... ரணிவோனே 
திருமால ளித்தருளு மொருஞான பத்தினியை
     திகழ்மார்பு றத்தழுவு ...... மயில்வேலா 
சிலைதூளெ ழுப்பிகவ டவுணோரை வெட்டிசுரர்
     சிறைமீள விட்டபுகழ் ...... பெருமாளே.
பிறப்பு, இறப்பு என்ற இரு பெரு நோயையும், ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலத்தையும், சிவ தேஜஸ் கொண்டு விரட்டி ஓட்டி, என்னை இனிமையாக அழைத்து என் சிரசின் மீது உன் இரு திருவடிகளைச் சூட்டி, உனது மயிலின் மீது என்னையும் இருக்கச் செய்து, ஒளி வீசி விளங்கும் வேலினை என் கையில் அளித்து நான் மகிழும்படியாக, நாம் இருவரும் (வேறாக இன்றி) ஒன்று படுவோமாக என்று, கயிலாச நாதன் சிவபிரான் பெற்று அருளிய விளங்கும் வேத நாயகன் கற்பக விநாயக மூர்த்திக்கு நல்ல தம்பியே, தேவர்களும் பூவுலகில் உள்ளவர்களும் போற்றும்படியாக, பிரகாசமான சிறந்த வேதப்பகுதிகளையும், உபதேச மொழிகளையும் எனக்குக் கற்பித்து அருள்வாயாக. மீண்டும் கருவிற் சேரும் பிறவி நோயை ஒழித்து, எனது தரித்திரத்தையும் தூளாக்கி அழித்துவிடக்கூடிய யானையின் சிறந்த முகத்தை உடைய கடவுள், அடியார்கள் நினைத்திராத வகைக்கு வரங்களை அள்ளித் தந்தருளும் ஞானமூர்த்தியாம் தொந்திக் கணபதி உன்னிடம் மகிழ்ச்சி அடைகின்ற கருணாமூர்த்தியே, கடப்பமலர் மாலையை அணிகின்றவனே, திருமால் பெற்றருளிய ஒப்பற்ற ஞான பத்தினியாகிய வள்ளியை, விளங்கும் மார்பில் பொருந்த அணைத்த கூர் வேலனே, கிரெளஞ்ச மலையைத் தூளாக்கி, கபட வஞ்சனை உள்ள அசுரர்களை வெட்டிச் சாய்த்து, தேவர்களைச் சிறைமீட்ட பெருமையுடைய பெருமாளே. 
பாடல் 1220 - பொதுப்பாடல்கள் 
ராகம் - பூபாளம் 
தாளம் - அங்கதாளம் - 5 
தக-1, தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1
தனதனன தந்தனம் தனதனன தந்தனம்
     தனதனன தந்தனம் ...... தந்ததான
இனமறைவி தங்கள்கொஞ் சியசிறுச தங்கைகிண்
     கிணியிலகு தண்டையம் ...... புண்டா£கம் 
எனதுமன பங்கயங் குவளைகுர வம்புனைந்
     திரவுபகல் சந்ததஞ் ...... சிந்தியாதோ 
உனதருளை யன்றியிங் கொருதுணையு மின்றிநின்
     றுளையுமொரு வஞ்சகன் ...... பஞ்சபூத 
உடலதுசு மந்தலைந் துலகுதொறும் வந்துவந்
     துழலுமது துன்புகண் ...... டன்புறாதோ 
கனநிவத தந்தசங் க்ரமகவள துங்கவெங்
     கடவிகட குஞ்சரந் ...... தங்கும்யானை 
கடகசயி லம்பெறும் படியவுணர் துஞ்சமுன்
     கனககிரி சம்பெழுந் ...... தம்புராசி 
அனலெழமு னிந்தசங் க்ரமமதலை கந்தனென்
     றரனுமுமை யும்புகழ்ந் ...... தன்புகூர 
அகிலபுவ னங்களுஞ் சுரரொடுதி ரண்டுநின்
     றரிபிரமர் கும்பிடுந் ...... தம்பிரானே.
வேதத் தொகுதியின் வகைகளை விதவிதமாக கொஞ்சிக் கொஞ்சி ஒலித்துக் காட்டுகின்ற சிறிய சதங்கை, கிண்கிணி, தண்டை விளங்கும் உன் அழகிய தாமரை போன்ற திருவடியை எனது மனம் என்னும் தாமரை, செங்கழுநீர், குராமலர் (இவைகளைக் கொண்டு) அலங்கரித்து இரவும், பகலும், எப்பொழுதும் தியானிக்காதோ? உனது திருவருளைத் தவிர இங்கு வேறொரு துணையும் இல்லாமல் நின்று, வேதனைப்படும் ஒரு வஞ்சகனாகிய நான் மண், நீர், தீ, காற்று, விண் ஆகிய ஐந்து பூதங்களால் ஆகிய உடலை சுமந்து, அலைந்து, உலகு ஒவ்வொன்றிலும் மீண்டும் மீண்டும் பிறந்து வந்து அலைச்சல் உறும் அந்தத் துன்பத்தைக் கண்டு (உனக்கு என் மீது) அன்பு பிறவாதோ? பெருமையுடன் உயர்ச்சியை உடைய தந்தங்களைக் கொண்டதும், உணவு உண்டைகளை உண்ணுவதும், பரிசுத்தமான, கொடிய மதம் கொண்ட, அழகுள்ள ஐராவதம் என்னும் யானை மீது வீற்றிருக்கும் தேவயானை (உனது) கங்கணம் அணிந்த மலை போன்ற திருப்புயத்தைப் பெறும்படியும், அசுரர்கள் மடியவும், முன்பு பொன்மலையாக இருந்த கிரெளஞ்சம் பாழ்பட்டு (அது இருந்த இடத்தில்) சம்புப் புல் எழவும், கடல் தீப்பற்றி வற்றும்படியாக கோபித்தவனும், போருக்கு உற்றவனுமாகிய பிள்ளை கந்தன் என்று சிவபெருமானும் பார்வதியும் (உன்னைப்) புகழ்ந்து அன்பு கூர்ந்திருக்க, சகல பூமியில் உள்ளவர்களும் தேவர்களுடன் கூட்டமாய்க் கூடி நின்று, திருமாலும், பிரமனும் வணங்கும் தலைவனே. 
பாடல் 1221 - பொதுப்பாடல்கள் 
ராகம் - சங்கராபரணம் 
தாளம் - ஆதி
தானா தனந்த தானா தனந்த
     தானா தனந்த ...... தனதான
ஊனே றெலும்பு சீசீ மலங்க
     ளோடே நரம்பு ...... கசுமாலம் 
ஊழ்நோ யடைந்து மாசான மண்டு
     மூனோ டுழன்ற ...... கடைநாயேன் 
நானா ரொடுங்க நானார் வணங்க
     நானார் மகிழ்ந்து ...... உனையோத 
நானா ரிரங்க நானா ருணங்க
     நானார் நடந்து ...... விழநானார் 
தானே புணர்ந்து தானே யறிந்து
     தானே மகிழ்ந்து ...... அருளூறித் 
தாய்போல் பரிந்த தேனோ டுகந்து
     தானே தழைந்து ...... சிவமாகித் 
தானே வளர்ந்து தானே யிருந்த
     தார்வேணி யெந்தை ...... யருள்பாலா 
சாலோக தொண்டர் சாமீப தொண்டர்
     சாரூப தொண்டர் ...... பெருமாளே.
சதையின் மேல் மூடியுள்ள எலும்பு, சீச்சீ என அருவருக்கத்தக்க அழுக்குகளுடன், நரம்புகள், பிற அசுத்தங்கள், ஊழ்வினை சம்பந்தமான நோய்கள், இவைகள் சேர்ந்து, குற்றங்களே நிறைந்த உடலோடு அலைந்து திரிந்த நாயினும் கீழான அடியேன் அடங்கி ஒடுங்குதல் என் வசத்தில் உள்ளதா? வணங்கிப் பணிதல் என் இச்சையில் உள்ளதா? மகிழ்ச்சியோடு உன்னைப் போற்றுதல் என் செயலில் உள்ளதா? உயிர்களிடத்தே இரக்கம் காட்டுதல் என் வசத்தில் உள்ளதா? சிந்தை நொந்து வாடுதல் என்னால் கூடுமோ? நடப்பதுதான் என் இச்சையா அல்லது விழுவதுதான் என் செயலா? சேரும் அனைத்தும் தானே ஆகி, அறியும் பொருளும் தானேஆகி, மகிழ்பவனும் தானே ஆகி, அருள் சுரந்து, தாய் போன்ற அன்பைக்காட்டும் தேன் போன்ற இனிய தேவியுடன் மகிழ்ந்து, தானே செழிப்பாய் வளர்ந்து சிவமாகித் திகழ்பவனும் வளர்பவனும் அழியாது இருப்பவனும் தானே ஆகி, இவ்வாறு தன்னந்தனியாய் நிற்கும் பெருமான், பூமாலை அணிந்த சடையினன் எம்பெருமான் சிவனார் அருளிய குழந்தையே, இவ்வுலகிலுள்ள அடியார்களுக்கும், உன்னருகே நெருங்கும் அடியார்களுக்கும், உன்னுருவத்தோடு ஒன்ற நினைக்கும் அடியார்களுக்கும் பெருமாளே*. 
* சாலோக, சாமீப, சாரூப, சாயுஜ்யம் என்ற நால்வகைத் தொண்டர்களில் மூவரைப் பற்றி மட்டும் கூறினார்.ஏனெனில் சாயுஜ்ய பதவியில் அவர்கள் முருகனோடு இரண்டறக் கலந்துவிடுகிறார்கள்.
பாடல் 1222 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ஹம்ஸாநந்தி 
தாளம் - அங்கதாளம் - 18 1/2 
தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2 

தகிட-1 1/2, தகதிமி-2
தனதனன தனதனன தனதனன தனதனன
     தத்தத்த தத்தான ...... தந்ததான
எதிரொருவ ரிலையுலகி லெனஅலகு சிலுகுவிரு
     திட்டுக்ரி யைக்கேயெ ...... ழுந்துபாரின் 
இடையுழல்வ சுழலுவன சமயவித சகலகலை
     யெட்டெட்டு மெட்டாத ...... மந்த்ரவாளால் 
விதிவழியி னுயிர்கவர வருகொடிய யமபடரை
     வெட்டித் துணித்தாண்மை ...... கொண்டுநீபம் 
விளவினிள இலைதளவு குவளைகமழ் பவளநிற
     வெட்சித் திருத்தாள்வ ...... ணங்குவேனோ 
திதிபுதல்வ ரொடுபொருது குருதிநதி முழுகியொளிர்
     செக்கச் செவத்தேறு ...... செங்கைவேலா 
சிகரகிரி தகரவிடு முருவமர கதகலப
     சித்ரக் ககத்தேறு ...... மெம்பிரானே 
முதியபதி னொருவிடையர் முடுகுவன பரிககன
     முட்டச் செலுத்தாறி ...... ரண்டுதேரர் 
மொழியுமிரு அசுவினிக ளிருசதுவி தவசுவெனு
     முப்பத்து முத்தேவர் ...... தம்பிரானே.
எமக்கு எதிரானவர் எவரும் இல்லை உலகத்திலேயே என்று கூர்மையான வாதப்போருக்கு கொடிகட்டி, அத்தகைய செய்கைக்கே துணிந்து எழுந்து, இப்பூமியின் இடையில் அலைந்து திரியும் எல்லாவிதமான சமயவாதிகளாலும், எல்லாவகையான அறுபத்து நான்கு கலைகளாலும் எட்ட முடியாத சாந்தியான தனி ஞான வாள் கொண்டு, பிரமன் விதித்த விதிப்படி உயிரைக் கவர்ந்து செல்ல வரும் கொடிய யமதூதர்களை வெட்டித் துணித்து, என் ஆண்மை வைராக்கியத்தை நிலை நிறுத்தி, கடப்பமலர், விளாவின் இளம் தளிர், முல்லை, கருங்குவளை இவற்றின் மணம் கமழும் பவள நிறமுள்ள, சிவந்த வெட்சியை அணிந்துள்ள திருவடிகளை வணங்குவேனோ? திதியின் புதல்வர்களாகிய அசுரர்களுடன் போர் செய்து, ரத்த ஆற்றில் மூழ்கி, ஒளிரும் செக்கச் செவேல் என்னும் மிகுந்த செந்நிறம் கூடிய வேலை உன் செங்கரத்தில் ஏந்தியவனே, சிகரங்களை உடைய கிரெளஞ்சகிரியைப் பொடிபடச் செய்த உருவத்தோனே, மரகதப் பச்சைநிறத் தோகையையும் அழகையும் உடைய பட்சியாம் மயில் மீது ஏறும் பெருமானே, பழைய பதினொரு ருத்திரர்களும், விரைவாக ஓடக்கூடிய குதிரைகளை ஆகாயத்தில் நன்கு செலுத்துகின்ற பன்னிரு தேர்களை உடைய பன்னிரண்டு சூரியர்களும், மருத்துவ நூல்களைச் சொல்லிய இரண்டு அசுவினி தேவர்களும், எட்டு வித வசுக்களும் ஆகிய முப்பத்து மூன்று (11+12+2+8= 33) தேவர்களின் தம்பிரானே. 
பாடல் 1223 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தனந்தனந் தத்தத் தனந்தனந் தத்தத்
     தனந்தனந் தத்தத் ...... தனதானம்
எழுந்திடுங் கப்புச் செழுங்குரும் பைக்கொத்
     திரண்டுகண் பட்டிட் ...... டிளையோர்நெஞ் 
சிசைந்திசைந் தெட்டிக் கசிந்தசைந் திட்டிட்
     டிணங்குபொன் செப்புத் ...... தனமாதர் 
அழுங்கலங் கத்துக் குழைந்துமன் பற்றுற்
     றணைந்துபின் பற்றற் ...... றகல்மாயத் 
தழுங்குநெஞ் சுற்றுப் புழுங்குபுண் பட்டிட்
     டலைந்தலைந் தெய்த்திட் ...... டுழல்வேனோ 
பழம்பெருந் தித்திப் புறுங்கரும் பப்பத்
     துடன்பெருங் கைக்குட் ...... படவாரிப் 
பரந்தெழுந் தொப்பைக் கருந்திமுன் பத்தர்க்
     கிதஞ்செய்தொன் றத்திக் ...... கிளையோனே 
தழைந்தெழுந் தொத்துத் தடங்கைகொண் டப்பிச்
     சலம்பிளந் தெற்றிப் ...... பொருசூரத் 
தடம்பெருங் கொக்கைத் தொடர்ந்திடம் புக்குத்
     தடிந்திடுஞ் சொக்கப் ...... பெருமாளே.
வெளித் தோன்றி எழுகின்றதும், கவர்ச்சி தருவதுமான, செழுமை வாய்ந்த, தென்னங் குரும்பைக்கு இணையாகி, இளைஞர்களின் இரண்டு கண்களும் படுவதாகி அந்த இளையோர்களின் மனம் அதன் மேல் வெகுவாக ஈடுபடச் செய்து, தாவி, உள்ளம் இளகி, சலனப்படுவதற்கு இடம் கொடுப்பதான அழகிய குடம் போன்ற மார்பகங்களை உடைய விலைமாதர்கள். உருவழியக் கூடிய அங்கங்களின் மேல் மனம் உருகுதல் உற்று, நிரம்ப காம ஆசை கொண்டவனாய் அவர்களை அணைந்து, பிறகு அந்த ஆசை அற்று நீங்குவதான மாய வாழ்க்கையில் வருந்துவதான நெஞ்சத்தைக் கொண்டு, கொதிப்புறும் மனப் புண்ணைக் கொண்டவனாய், மிகவும் அலைச்சல் உற்று இளைப்பு எய்தித் திரிவேனோ? பழ வகைகளையும், மிக்க இனிப்பைக் கொண்ட கரும்பு அப்பம் இவைகளையும் பெரிய தும்பிக்கையில் உட்கொள்ளும்படி வாரி, அகன்று வெளித் தோன்றும் தொப்பைக்குள் உண்டு, முன்னதாகவே அடியார்களுக்கு நன்மை பொருந்தி விளங்கும் யானை முக விநாயகருக்குத் தம்பியே, செழிப்புற்று வெளித் தோன்றி திரண்ட விசாலமான இடங்களைக் கவர்ந்து மூடி, கடல் நீரைக் கிழித்து மோதிச் சண்டைக்கு நின்ற சூரனாகிய அந்த மிகப் பெரிய மாமரத்தைப் பின் தொடர்ந்து, அது இருந்த இடத்தை அணுகிச் சென்று வெட்டி அழித்த அழகிய பெருமாளே. 
பாடல் 1224 - பொதுப்பாடல்கள் 
ராகம் - காவடிச் சிந்து 
தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2 
தகிட-1 1/2, தகதிமி-2
தாத்த தானன தாத்த தானன
     தாத்த தானன ...... தந்ததான
ஏட்டி லேவரை பாட்டி லேசில
     நீட்டி லேயினி ...... தென்றுதேடி 
ஈட்டு மாபொருள் பாத்து ணாதிக
     லேற்ற மானகு ...... லங்கள்பேசிக் 
காட்டி லேயியல் நாட்டி லேபயில்
     வீட்டி லேஉல ...... கங்களேசக் 
காக்கை நாய்நரி பேய்க்கு ழாமுண
     யாக்கை மாய்வதொ ...... ழிந்திடாதோ 
கோட்டு மாயிர நாட்ட னாடுறை
     கோட்டு வாலிப ...... மங்கைகோவே 
கோத்த வேலையி லார்த்த சூர்பொரு
     வேற்சி காவள ...... கொங்கில்வேளே 
பூட்டு வார்சிலை கோட்டு வேடுவர்
     பூட்கை சேர்குற ...... மங்கைபாகா 
பூத்த மாமலர் சாத்தி யேகழல்
     போற்று தேவர்கள் ...... தம்பிரானே.
ஏட்டில் எழுதப்படும், மனிதர்களைத் துதிக்கும் பாடல்களும், அவற்றுள் சிலவற்றை நீட்டி முழக்கிப் பாடுதலும் சம்பாதிக்க இனிய வழிகள் என்று பிரபுக்களை நாடி சேர்க்கும் பொருட்களை மற்றவர்களோடு பங்கிட்டு உண்ணாது, தகுதிக்கு ஏற்றாற்போல் குலப்பெருமையையே பேசிக்கொண்டு, காட்டிலும், பொருந்திய நாட்டிலும், பழகும் வீட்டிலும் உள்ள உலகத்தார் அனைவரும் பழிக்கும்படியாக வாழ்ந்து, (கடைசியில்) காக்கை, நாய், நரி, பேய்களின் கூட்டங்களுக்கு உணவாகும் இந்த உடம்பு இறந்து படுவது என்பது நீங்காதோ? விளங்கும் ஆயிரம் கண்களைக் கொண்ட இந்திரனது நாட்டில் வாழும் தந்தங்களை உடைய வெள்ளை யானை (ஐராவதம்) வளர்த்த தேவயானையின் மணவாளா, உலகு ஆடையாக உடுத்த கடலில் ஆர்ப்பரித்து நின்ற சூரனுடன் போரிட்ட வேலாயுதனே, மயில் வாகனனே, கொங்கு நாட்டுத் திருச்செங்கோடு, மருதமலை முதலிய தலங்களில் அமர்ந்த செவ்வேளே, நாண் ஏற்றப்பட்ட பெரிய வில்லை ஏந்திய மலை வேடர்களின் குலதர்மக் கொள்கைப்படி வளர்ந்த குறமாது வள்ளியின் பங்கனே, அன்றலர்ந்த நல்ல பூக்களைச் சாத்தியே உன் திருவடியைப் போற்றும் தேவர்கள் தம்பிரானே. 
பாடல் 1225 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தத்தத் தாத்த தத்தத் தாத்த
     தத்தத் தாத்த ...... தனதான
கச்சுப் பூட்டு கைச்சக் கோட்ட
     கத்திற் கோட்டு ...... கிரியாலங் 
கக்கித் தேக்கு செக்கர்ப் போர்க்க
     யற்கட் கூற்றில் ...... மயலாகி 
அச்சக் கூச்ச மற்றுக் கேட்ட
     வர்க்குத் தூர்த்த ...... னெனநாளும் 
அத்தப் பேற்றி லிச்சிப் பார்க்க
     றப்பித் தாய்த்தி ...... ரியலாமோ 
பச்சைக் கூத்தர் மெச்சிச் சேத்த
     பத்மக் கூட்டி ...... லுறைவோரி 
பத்திற் சேர்ப்பல் சக்கிற் கூட்டர்
     பத்தக் கூட்ட ...... ரியல்வானம் 
மெச்சிப் போற்ற வெற்புத் தோற்று
     வெட்கக் கோத்த ...... கடல்மீதே 
மெத்தக் காய்த்த கொக்குக் கோட்டை
     வெட்டிச் சாய்த்த ...... பெருமாளே.
(விலைமாதரின்) கச்சு இணைக்கப்பட்டதும், (ஆண்களின்) கண்கள் செல்லுகின்ற இடமாய் விளங்குவதுமான சிகரம் கொண்ட மலை போன்ற மார்பகங்களிலும், ஆலகால விஷத்தை வெளியிட்டு நிரம்பினதாய், சிவந்த நிறத்ததாய், போருக்கு உற்றதான கயல் மீன் போன்றதான கண்கள் மீதும், (இனிய) பேச்சிலும் காம மயக்கம் கொண்டு பயமும் நாணமும் இல்லாதவனாகி என்னைப் பற்றி விசாரிப்பவர்களுக்கு இவன் காம ஒழுக்கமுடையவன் என்று பலரும் கூற, தினமும் பொன் பொருள் பெறுவதிலேயே ஆசை கொள்ளும் விலைமாதர்க்கு மிகவும் காமம் கொண்டவனாய் உழன்றிடலாமோ? பச்சை நிறமுடையவரும், (காளிங்கன் என்னும் பாம்பின் மேல்) நடனம் புரிபவரும் ஆகிய திருமால் புகழ்ந்து போற்றும் சிவந்த தாமரை ஆசனத்தில் வீற்றிருக்கும் பிரமன், வெள்ளை யானையின் மீது ஏறுபவரும், பல (ஆயிரம்) கண்களோடு கூடியவருமான இந்திரன், அடியார் கூட்டங்கள், தகுதி வாய்ந்த வானவர் ஆகிய இவர்கள் புகழ்ந்து போற்றவும், கிரெளஞ்சமலை வெட்கித் தோற்றுப்போய் விழவும், உலகுக்கு ஆடையாகவுள்ள கடலினிடையே பெரிதாக வளர்ந்த மாமரத்தின் (சூரனின்) கொம்புகளை வெட்டி வீழ்த்திய பெருமாளே. 
பாடல் 1226 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தனதனந் தனதனன தனதனந் தனதனன
     தனதனந் தனதனன ...... தனதான
கடலினும் பெரியவிழி மலையினும் பெரியமுலை
     கவரினுந் துவரதர ...... மிருதோள்பைங் 
கழையினுங் குழையுமென மொழிபழங் கிளவிபல
     களவுகொண் டொருவர்மிசை ...... கவிபாடி 
அடலசஞ் சலனதுல னநுபமன் குணதரன்மெய்
     அருள்பரங் குரனபய ...... னெனஆசித் 
தலமரும் பிறவியினி யலமலம் பிறவியற
     அருணபங் கயசரண ...... மருள்வாயே 
வடநெடுங் குலரசத கிரியினின் றிருகலுழி
     மகிதலம் புகவழியு ...... மதுபோல 
மதசலஞ் சலசலென முதுசலஞ் சலதிநதி
     வழிவிடும் படிபெருகு ...... முதுபாகை 
உடையசங் க்ரமகவள தவளசிந் துரதிலக
     னுலகுமிந் திரனுநிலை ...... பெறவேல்கொண் 
டுததிவெந் தபயமிட மலையொடுங் கொலையவுண
     ருடனுடன் றமர்பொருத ...... பெருமாளே.
கடலைக் காட்டிலும் பெரிதான கண்கள், மலையைக் காட்டிலும் பெரிதான மார்பகம், பின்னும் நுகர்தலுக்குரிய பவளம் போன்ற உதடுகள், இரண்டு தோள்களும் பசுமை வாய்ந்த மூங்கிலைக் காட்டிலும் குழைந்து நிற்பவை என்று விலைமாதர்களைப் புகழ்வதற்கு (பணம் தேடுவதற்காக) பழைய நூல்களிலிருந்து திருடி (பொருட் செல்வம் உடைய) ஒருவர் மீது கவிகளைப் புனைந்து கவி பாடி, (நீ) வலிமை பொருந்தியவன், கவலை அற்றவன், நிகரில்லாதவன், உவமை கூற முடியாதவன், நற் குணங்கள் உடையவன், உண்மைப் பொருளை அருள வல்ல மேன்மையான தோற்றம் உடையவன், அடைக்கலம் தர வல்லவன் என்றெல்லாம் விரும்பிப் புகழ்ந்து பாடி, மனம் கலங்கி வருந்தும் இப்பிறப்பு இனிப் போதும் போதும். (ஆதலால்) பிறவி என்பது ஒழிவதற்காக, சிவந்த தாமரை போன்ற உன் பாதங்களை எனக்கு அருள் செய்வாயாக. வடக்கே உள்ள பெரிய சிறந்த வெள்ளி மலையிலிருந்து இரு காட்டாறுகள் பூமியில் புக வழிந்து வருவது போல, (இரு கண்களிலிருந்தும்) மத நீர் சல சல என்ற ஒலியுடன், பழமையான நீர் நிறைந்த கடலும் ஆறும் வழி விடும்படியாகப் பெருகுவதும், யானைப் பாகனாக இந்திரனை உடையதும், ஊண் உண்டைகள் உண்பதும், வெண்மை நிறமானதுமான யானை ஐராவதத்தைக் கொண்ட சிறந்தவனான இந்திரனுடைய பொன்னுலகமும், அந்த இந்திரனும் நிலை பெற்று உய்ய, வேலாயுதத்தால் கடல் வற்றி ஓலமிட, கிரெளஞ்ச மலையுடனும், கொலைத் தொழிலைப் பூண்ட அசுரர்களுடனும் மாறுபட்டுச் சண்டை செய்த பெருமாளே. 
பாடல் 1227 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தத்தத் தனத்ததன தத்தத் தனத்ததன
     தத்தத் தனத்த ...... தனதான
கட்டக் கணப்பறைகள் கொட்டக் குலத்திளைஞர்
     கட்டிப் புறத்தி ...... லணைமீதே 
கச்சுக் கிழித்ததுணி சுற்றிக் கிடத்தியெரி
     கத்திக் கொளுத்தி ...... யனைவோரும் 
சுட்டுக் குளித்துமனை புக்கிட் டிருப்பரிது
     சுத்தப் பொயொப்ப ...... துயிர்வாழ்வு 
துக்கப் பிறப்பகல மிக்கச் சிவத்ததொரு
     சொர்க்கப் பதத்தை ...... யருள்வாயே 
எட்டுக் குலச்சயில முட்டத் தொளைத்தமரர்
     எய்ப்புத் தணித்த ...... கதிர்வேலா 
எத்திக் குறத்தியிரு முத்தத் தனக்கிரியை
     யெற்பொற் புயத்தி ...... லணைவோனே 
வட்டக் கடப்பமலர் மட்டுற்ற செச்சைமலர்
     வைத்துப் பணைத்த ...... மணிமார்பா 
வட்டத் திரைக்கடலில் மட்டித் தெதிர்த்தவரை
     வெட்டித் துணித்த ...... பெருமாளே.
துயரத்தைக் குறிக்கும் தோல் பறை வகைகள் கொட்டப்பட்டு ஒலிக்க, (இறந்தவருடைய) சாதியைச் சேர்ந்த இளைஞர்கள் வாசலில் பாடையைக் கட்டி விறகுப் படுக்கையின் மேல் கிழிக்கப்பட்ட கந்தல் துணி கொண்டு சுற்றி, படுக்க வைத்து, நெருப்பு கொழுந்துவிட்டு எரியும்படி தீ இட்டு, சுடுகாட்டுக்கு வந்த அனைவரும் உடலைச் சுட்ட பிறகு நீராடி தத்தம் வீட்டுக்குப் போய் இருப்பார்கள். இவ்வாறு முற்றிலும் பொய்யான இந்த வாழ்க்கை நிலை இல்லாதது. துக்கத்துக்குக் காரணமான இந்தப் பிறவிச் சுழல் நீங்க, மிகவும் சிவந்ததானவையும் ஒப்பற்ற பேரின்பத்துக்கு இடமானவையுமான உனது திருவடிகளை எனக்குத் தந்தருள வேண்டும். எட்டுத் திக்குகளிலும் உள்ள மலைகளில் இருந்த அசுரர்களை அடியோடு கலக்கி, தேவர்களின் இளைப்பை நீக்கின ஒளி வீசும் வேலனே. ஏமாற்றி, குறமகள் வள்ளியின் முத்துமாலை அணிந்த இரண்டு மலை போன்ற மார்பகங்களை ஒளி பொருந்திய அழகிய திருப் புயங்களில் தழுவுபவனே, வட்டமான கடப்ப மலர் மாலையையும், தேன் சொரியும் வெட்சி மலர் மாலையையும் இணைத்து அணிந்து பெருமையுறும் அழகிய மார்பனே, வட்ட வடிவமானதும் அலைகளை வீசுவதுமான கடலில் எதிர்த்து வந்த அசுரர்களை முறியடித்து, (அவர்களை) வெட்டிப் பிளந்த பெருமாளே. 
பாடல் 1228 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தந்த தானன தந்த தானன
     தந்த தானன ...... தனதான
கண்டு போல்மொழி வண்டு சேர்குழல்
     கண்கள் சேல்மதி ...... முகம்வேய்தோள் 
கண்டு பாவனை கொண்டு தோள்களி
     லொண்டு காதலி ...... லிருகோடு 
மண்டி மார்பினில் விண்ட தாமென
     வந்த கூர்முலை ...... மடவார்தம் 
வஞ்ச மாலதில் நெஞ்சு போய்மடி
     கின்ற மாயம ...... தொழியாதோ 
கொண்ட லார்குழல் கெண்டை போல்விழி
     கொண்டு கோகில ...... மொழிகூறுங் 
கொங்கை யாள்குற மங்கை வாழ்தரு
     குன்றில் மால்கொடு ...... செலும்வேலா 
வெண்டி மாமன மண்டு சூர்கடல்
     வெம்ப மேதினி ...... தனில்மீளா 
வென்று யாவையு மன்றி வேளையும்
     வென்று மேவிய ...... பெருமாளே.
கற்கண்டைப் போன்ற இனிய பேச்சு, வண்டுகள் சேரும் கூந்தல், சந்திரனை ஒத்த முகம், மூங்கில் போன்ற மென்மையான தோள், உவமைகளை அவ்வாறே பாவித்து தோள்களில் சாரும்படி ஆசை ஏற்படுவதால், இரண்டு மலைகள் நெருங்கி மார்பில் வெளிப்பட்டுள்ளன என்று சொல்லும்படி சிறப்புற்ற மார்பகங்களை உடைய விலைமாதர்களின் வஞ்சகம் நிறைந்த மாயத்தில் மனம் போய் மாய்கின்ற மயக்க அறிவு நீங்காதோ? கரிய மேகம் போன்ற கூந்தல், கெண்டை மீன் போன்ற கண் இவைகளைக் கொண்டு, குயில் கூவுதல் போன்ற பேச்சுக்களைப் பேசும் அழகிய மார்பினளான குற மகள் வள்ளி வாழும் வள்ளி மலையில் காதலோடு சென்ற வேலனே, சிறந்த தன் மனம் களைத்துப்போய், நெருங்கி வந்த சூரன் வாடவும், கடல் கொதித்து வேகவும், உலகையே காக்க வந்து, எல்லாவற்றையும் வென்று, பின்னும் மன்மதனையும் உன் அழகால் வென்ற* பெருமாளே. 
* மன்மதனுக்கு 'மாரன்' என்று பெயர்.முருகனுக்கு 'குமாரன்' என்ற பெயரின் காரணம் 'கு + மாரன்' = மாரனை அழகிலே வென்றவன், என்பதால்.
பாடல் 1229 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தத்தன தத்தன தத்தன தத்தன
     தத்தன தத்தன ...... தனதான
கப்பரை கைக்கொள வைப்பவர் மைப்பயில்
     கட்பயி லிட்டிள ...... வளவோரைக் 
கைக்குள்வ சப்பட பற்கறை யிட்டுமு
     கத்தைமி னுக்கிவ ...... ருமுபாயப் 
பப்பர மட்டைகள் பொட்டிடு நெற்றியர்
     பற்றென வுற்றவொர் ...... தமியேனைப் 
பத்மப தத்தினில் வைத்தருள் துய்த்திரை
     பட்டதெ னக்கினி ...... யமையாதோ 
குப்பர வப்படு பட்சமி குத்துள
     முத்தரை யர்க்கொரு ...... மகவாகிக் 
குத்திர மற்றுரை பற்றுணர் வற்றவொர்
     குற்றம றுத்திடு ...... முதல்வோனே 
விப்ரமு னிக்குழை பெற்றகொ டிச்சிவி
     சித்ரத னக்கிரி ...... மிசைதோயும் 
விக்ரம மற்புய வெற்பினை யிட்டெழு
     வெற்பைநெ ருக்கிய ...... பெருமாளே.
(தம்மை நாடி வருபவர்) பிச்சை எடுக்கும் ஓட்டைக் கையில் ஏந்தும்படி வைப்பவர்கள். மை தீட்டிய கண் பார்வை கொண்டு இளமைப் பருவத்தினராக செல்வம் உள்ளவர்களை தமது கையில் வசப்படும்படி, வெற்றிலைக் கறை கொண்ட பல்லைக் காட்டி முகத்தை மினுக்கச் செய்து மயக்கும் தந்திரக் கூத்தாடிகள். பொட்டு வைத்த நெற்றியை உடையவர்கள் ஆகிய வேசியர்களே துணை எனக் கொண்ட ஒரு தன்னந்தனியனான கதி அற்ற என்னை, தாமரை போன்ற உன் திருவடிக் கீழ் வைத்து, திருவருளைத் தந்து, அருள் பிரசாதத்தைப் பெற்றேன் என்ற நிலை எனக்கு இனிமேல் கூடாதோ? உலகத்தாரால் புகழப்படும் அன்பு மிகவும் உள்ள, மூவுலகுக்கும் தலைவராகிய சிவபெருமானுக்கு ஒப்பற்ற குழந்தையாகி, வஞ்சகம் இல்லாமல் உன்னைப் புகழ்தல், உன்னிடம் ஆசை கொள்ளுதல், உன்னை அறிதல் இம்மூன்றும் இல்லாத ஒரு பிழையை நீக்கும் முன்னவனே, அந்தணராகிய சிவ முனிவர்க்கு மான் பெற்ற குறிஞ்சி நிலத்துப் பெண்ணாகிய வள்ளியின் அழகிய மார்பகங்களைத் தழுவும் பராக்கிரமசாலியே, பொருந்திய புய மலையைக் கொண்டு சூரனுடைய ஏழு குலமலைகளையும் தாக்கி அழித்த பெருமாளே. 
பாடல் 1230 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தனதாத்த தய்ய தனதாத்த தய்ய
     தனதாத்த தய்ய ...... தனதான
கலைகோட்டு வல்லி விலைகாட்டு வில்ல
     ரிவைமார்க்கு மெய்யி ...... லவநூலின் 
கலைகாட்டு பொய்ய மலைமாக்கள் சொல்ல
     கடுகாட்டி வெய்ய ...... அதிபாரக் 
கொலைகோட்டு கள்ளி டறிவோர்க்கு முள்ள
     முகையாக்கை நையு ...... முயிர்வாழக் 
கொடிகோட்டு மல்லி குரவார்க்கொள் தொல்லை
     மறைவாழ்த்து செய்ய ...... கழல்தாராய் 
சிலைகோட்டு மள்ளர் தினைகாத்த கிள்ளை
     முலைவேட்ட பிள்ளை ...... முருகோனே 
திணிகோட்டு வெள்ளி பவனாட்டி லுள்ள
     சிறைமீட்ட தில்ல ...... மயில்வீரா 
அலைகோட்டு வெள்ள மலைமாக்கள் விள்ள
     மலைவீழ்த்த வல்ல ...... அயில்மோகா 
அடிபோற்றி யல்லி முடிசூட்ட வல்ல
     அடியார்க்கு நல்ல ...... பெருமாளே.
வளைத்துக் கட்டிய புடவை சுற்றிய கொடி போன்ற தங்கள் இடுப்புக்கு விலை பேசுகின்ற அழகிய விலைமாதர்க்கு, உண்மையற்ற பயனற்ற காம நூல்களின் கலை நுணுக்கங்களை விளக்குபவர்களாய், பொய் நிறைந்த, மலைவாசிகளான வேடர்களின் பேச்சைப் போல் முரட்டுத் தனமானதும் கோபமானதுமான வார்த்தைகளைப் பேசுபவர்களாய், கொடுமையானதும், அதிக பாரமானதும், கொலை செய்ய வல்லதும், மலை போன்றதுமான மார்பகங்களை உடையவராய், மதுவை ஊட்டுகின்ற கேவலமான புத்தியை உடைய வேசிகளுக்கு, உள்ளமும், மொட்டுப் போன்ற உடலும் வேதனைப் படுகின்ற என்னுடைய உயிர் வாழும் பொருட்டு, கொடி மல்லிகை போன்றதும், குரா மலர், ஆத்தி மலர் இவைகளைக் கொண்டதும், பழைய வேதங்கள் வாழ்த்துவதுமான உன் சிவந்த திருவடிகளைத் தந்து அருளுக. வில்லை வளைக்கும் குறிஞ்சி நில மக்களாகிய வேடர்களின் தினைப் புனத்தைக் காத்த கிளி போன்ற வள்ளியின் மார்பகங்களை விரும்பிய பிள்ளையாகிய முருகனே, திண்ணிய தந்தங்களை உடைய வெண்ணிறமான ஐராவதம் என்ற யானையை உடைய இந்திரனின் பொன்னுலகில் உள்ள தேவர்களுக்கு (சூரனால்) ஏற்பட்ட சிறையை நீக்குவித்த, கானகத்தில் வாழும் மயில் வீரனே, கடலிடத்தும், மலை இடத்தும் இருந்த வெள்ளக் கணக்கான மலை போன்ற அசுரர்களை வெட்டி அழிக்கவும், கிரெளஞ்சம் எழுகிரி ஆகிய மலைகளை வீழ்த்தவும் வல்ல வேலாயுதப் பிரியனே, உனது திருவடியைப் போற்றி, தாமரை மாலையை திருமுடியில் சூட்டும் திறம் வாய்ந்த அடியார்களுக்கு நன்மை செய்யும் பெருமாளே. 
பாடல் 1231 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தனன தந்த தத்தான தனன தந்த தத்தான
     தனன தந்த தத்தான ...... தனதான
களவு கொண்டு கைக்காசி னளவ றிந்து கர்ப்பூர
     களப துங்க வித்தார ...... முலைமீதே 
கலவி யின்பம் விற்பார்க ளவய வங்க ளைப்பாடு
     கவிதெ ரிந்து கற்பார்கள் ...... சிலர்தாமே 
உளநெ கிழ்ந்த சத்தான வுரைம றந்து சத்தான
     உனையு ணர்ந்து கத்தூரி ...... மணநாறும் 
உபய பங்க யத்தாளி லபய மென்று னைப்பாடி
     யுருகி நெஞ்சு சற்றோதி ...... லிழிவாமோ 
அளவில் வன்க விச்சேனை பரவ வந்த சுக்¡£வ
     அரசு டன்க டற்றூளி ...... யெழவேபோய் 
அடலி லங்கை சுட்டாடி நிசிச ரன்த சக்¡£வ
     மறவொ ரம்பு தொட்டார்த ...... மருகோனே 
வளரு மந்த ரச்சோலை மிசைசெ றிந்த முற்பாலை
     வனசர் கொம்பி னைத்தேடி ...... யொருவேட 
வடிவு கொண்டு பித்தாகி யுருகி வெந்த றக்கானில்
     மறவர் குன்றி னிற்போன ...... பெருமாளே.
வஞ்சக எண்ணம் கொண்டு கையில் உள்ள பொருளின் அளவைத் தெரிந்து கொண்டு, பச்சைக் கற்பூரம் கலவைச் சாந்துடன் விளங்கும் உயர்ந்து பரந்த மார்பகத்தைக் காட்டி, புணர்ச்சி இன்பம் விற்பவர்களாகிய விலைமாதர்களின் அங்க உறுப்புக்களைப் பாடும் பாடல்களைத் தெரிந்து கற்பவர்களாகிய சில மக்கள் தம்முடைய மனம் நெகிழ்ச்சி உற்று பேசும் பயனற்ற பேச்சுக்களைப் பேசாமல், உண்மைப் பொருளான உன்னை அறிந்து கஸ்தூரியின் நறுமணம் வீசும் இரண்டு தாமரை போன்ற திருவடிகளில் அடைக்கலம் என்று உன்னைப் புகழ்ந்து பாடி மனம் உருகி, சிறிது நேரம் உன்னைத் துதித்தால் ஏதேனும் இழிவு ஏற்பட்டு விடுமோ? கணக்கிட முடியாத வன்மை வாய்ந்த குரங்குப் படைகள் பரந்து சூழ்ந்து வர சுக்¡£வன் என்னும் குரங்கு அரசனுடன் கடல் தூசி படும்படி சென்று, பகைக்கு இடமாயிருந்த இலங்கை நகரை சுட்டுப் போர் புரிந்து அரக்கனாகிய இராவணனுடைய பத்துக் கழுத்தும், (தலைகளும்) அற்று விழ ஓர் ஒப்பற்ற அம்பைச் செலுத்தியவரான ராமனின் (திருமாலின்) மருகனே, வளர்நதுள்ள மந்தாரம் போன்ற மரங்கள் சூழ்ந்த, பாலைக்கு முன் நின்ற முல்லையும் குறிஞ்சியும் (காடும், மலையும்) கொண்ட நிலத்தின் கண் வேடர்கள் பெண்ணான வள்ளியைத் தேடி, ஒப்பற்ற வேடர் வடிவத்தைப் பூண்டு, மோகப் பித்துடன் உள்ளம் உருகி, (வெய்யிலில்) மிகவும் வேடூதல் உற்று, வேடர்கள் வாழும் (வள்ளி)மலையிடத்தே சென்ற பெருமாளே. 
பாடல் 1232 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தய்யனா தத்ததன தய்யனா தத்ததன
     தய்யனா தத்ததன ...... தனதான
கள்ளமீ னச்சுறவு கொள்ளுமீ னற்பெரிய
     கல்விவீ றக்கரிய ...... மனமாகுங் 
கல்விடா துற்றதிசை சொல்விசா ரத்திசைய
     மெய்கள்தோ ணிப்பிறவி ...... யலைவேலை 
மெள்ளஏ றிக்குரவு வெள்ளிலார் வெட்சிதண
     முல்லைவே ருற்பலமு ...... ளரிநீபம் 
வில்லநீள் பொற்கனக வல்லிமே லிட்டுனது
     சொல்லையோ திப்பணிவ ...... தொருநாளே 
துள்ளுமா னித்தமுனி புள்ளிமான் வெற்புதவு
     வள்ளிமா னுக்குமயல் ...... மொழிவோனே 
தொல்வியா ளத்துவளர் செல்வர்யா கத்தரையன்
     எல்லைகா ணற்கரியர் ...... குருநாதா 
தெள்ளுநா தச்சுருதி வள்ளல்மோ லிப்புடைகொள்
     செல்வனே முத்தமிணர் ...... பெருவாழ்வே 
தெய்வயா னைக்கிளைய வெள்ளையா னைத்தலைவ
     தெய்வயா னைக்கினிய ...... பெருமாளே.
கள்ளத் தந்திரத்தை உடைய சுறாமீன் பல மீன்களை உண்ணும். (அதுபோல) பெரிய புலவர்களை வெல்லக் கூடிய நல்ல பெரிய கல்வி ஞானமானது எனக்கு மேம்பட்டு விளங்குவதற்காக, அஞ்ஞான மனமாகிய கல்லை அது போகும் வழியில் விடாது ஒரு நிலைப்படுத்தி, நாலு திசைகளிலும் பொருந்தி உள்ள பெரியோர்கள் சொல்லியுள்ள ஆராய்ச்சியின் பயனை அடையச் செய்ய, உண்மைப் பொருள்கள் தோன்றி விளங்க, பிறவியாகிய அலை கடலை மெதுவாகக் கடந்து செல்ல (என்ன செய்யவேண்டும் என்றால்), குராமலர், விளா இலை, ஆத்தி, வெட்சி, குளிர்ச்சி பொருந்திய முல்லை, குறு வேர், நீலோற்பல மலர், தாமரை, கடம்பு, வில்வம் முதலியவற்றை பெரியதும், அழகுள்ளதும், பொன் போல் ஒளி வீசுவதுமான, அல்லிமலர் போன்ற உனது திருவடியின் மீது இட்டு, உனது புகழை உரைத்து உன்னைப் பணிவதுமான ஒரு நாள் எனக்குக் கிடைக்குமா? வீறிட்டு எழும் ஆசைகளை ஒழித்த சிவ முனிவர் தமக்கும் புள்ளி மானுக்கும் வள்ளி மலையில் பிறந்த மான் போன்ற வள்ளி நாயகியிடம் காதல் மொழிகளைப் பேசியவனே, பழமையான பாம்பாகிய ஆதிசேஷன் மீது கண் வளரும் செல்வராகிய திருமாலும், வேள்வி நாயகனான மகபதி இந்திரனும் எல்லையே காண முடியாதவராகி நின்ற சிவபெருமானுக்கு குரு நாதனே, தெளிவான நாதத்துடன் வேதங்களை ஓதும் பிரமனுடைய தலையைக் குட்டிய செல்வனே, முத்தமிழும் வல்ல புலவர்களின் பெருவாழ்வே, தெய்வ யானையாகிய விநாயகப் பெருமானுக்கு இளையவனே, வெள்ளை யானையாகிய ஐராவதத்துக்குத் தலைவனே, தேவயானைக்கு இன்பம் தரும் பெருமாளே. 
பாடல் 1233 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தன்னன தனதன தன்னன தனதன
     தன்னன தனதன ...... தனதான
கன்னியர் கடுவிட மன்னிய கயலன
     கண்ணிலு மிருகன ...... தனமீதுங் 
கன்மைகள் மருவிய மன்மத னுருவிலி
     மென்மைகொ ளுருவிலு ...... மயலாகி 
இன்னல்செய் குடிலுட னின்னமு முலகினி
     லிந்நிலை பெறவிங ...... னுதியாதே 
யெண்ணுமு னடியவர் நண்ணிய பதமிசை
     யென்னையும் வழிபட ...... விடவேணும் 
பொன்னவ மணிபயில் மன்னவ புனமற
     மின்முலை தழுவிய ...... புயவீரா 
புண்ணிய முளபல விண்ணவர் தொழுமுதல்
     எண்மலை யொடுபொரு ...... கதிர்வேலா 
தன்னிறை சடையிறை யென்முனி பரவரு
     இன்னிசை யுறுதமிழ் ...... தெரிவோனே 
தண்ணளி தருமொரு பன்னிரு விழிபயில்
     சண்முக மழகிய ...... பெருமாளே.
பெண்களின் கடுமையான விஷம் பொருந்திய, கயல் மீன் போன்ற கண்களிலும், இரு மார்பகங்கள் மீதும், கல் போன்று உறுதியான வேலைத் திறம் பொருந்திய மன்மதன், உருவம் இல்லாதவன், (மலரம்பை எய்வதானால்) மென்மை சேர்ந்த அப்பெண்களின் உருவத்தின் மீதும் காம மயக்கம் கொண்டு, துன்பம் ஏற்படுகின்ற வீடாகிய இந்த உடலுடன் இன்னமும் இந்த உலகிடையே இதே அவல நிலையை அடையும்படி, இவ்வாறு நான் பிறவாமல், உன்னைத் தியானிக்கும் அடியார்கள் அடைந்துள்ள உனது திருவடியின் மீது வழிபாடு செய்யுமாறு என்னையும் அந்த நன்னெறியில் செலுத்த வேண்டுகிறேன். பொன்னாலாகிய நவ மணி* ஆபரணங்களை அணிந்துள்ள அரசே, தினைப் புனத்தில் உள்ள வேட்டுவக் குலத்து ஒளி தரும் (வள்ளியின்) மார்பைத் தழுவிய புயங்களைக் கொண்ட வீரனே, புண்ணியம் செய்து சுவர்க்கத்தில் வாழும் பல தேவர்கள் தொழுது நிற்கும் முதல்வனே, கிரவுஞ்ச கிரி, (அசுரருக்கு அரணான) எழு கிரி ஆக எட்டு மலைகளுடன் சண்டை செய்த, ஒளி வீசும் வேலை உடையவனே, தனக்குத் தானே தலைவனான, சடையை உடைய சிவபெருமான் என்று சொல்லப்படும் கடவுளைத் துதிப்பதற்கு அருமையான இனிய இசை அமைந்த தமிழ் மறையை (தேவாரத்தை, திருஞானசம்பந்தராக வந்து) உலகோர் தெரியச் சொன்னவனே, குளிர்ந்த கருணையைப் பாலிக்கின்ற ஒப்பற்ற பன்னிரண்டு கண்களைக் கொண்ட ஆறு திருமுகனே, அழகு வாய்ந்த பெருமாளே. 
* ஒன்பது மணிகள்:வைரம், வைடூர்யம், முத்து, பவளம், நீலம், மரகதம், கோமேதகம், புஷ்பராகம், மாணிக்கம்.
பாடல் 1234 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தந்ததன தத்த தத்த தந்ததன தத்த தத்த
     தந்ததன தத்த தத்த ...... தனதான
கிஞ்சுகமெ னச்சி வத்த தொண்டையள்மி கக்க றுத்த
     கெண்டையள்பு னக்கொ டிச்சி ...... யதிபாரக் 
கிம்புரிம ருப்பை யொத்த குங்குமமு லைக்கு றத்தி
     கிங்கரனெ னப்ப டைத்த ...... பெயர்பேசா 
நெஞ்சுருகி நெக்கு நெக்கு நின்றுதொழு நிர்க்கு ணத்தர்
     நிந்தனையில் பத்தர் வெட்சி ...... மலர்தூவும் 
நின்பதயு கப்ர சித்தி யென்பனவ குத்து ரைக்க
     நின்பணித மிழ்த்ர யத்தை ...... யருள்வாயே 
கஞ்சன்வர விட்ட துட்ட குஞ்சரம ருப்பொ சித்த
     கங்கனும தித்தி கைக்க ...... மதம்வீசுங் 
கந்தெறிக ளிற்று ரித்து வென்றுதிரு நட்ட மிட்ட
     கம்பனும திக்க வுக்ர ...... வடிவேல்கொண் 
டஞ்சியஜ கத்ர யத்தை யஞ்சலென விக்ர மித்து
     அன்பர்புக ழப்பொ ருப்பொ ...... டமராடி 
அன்றவுண ரைக்க ளத்தில் வென்றுததி யைக்க லக்கி
     அண்டர்சிறை வெட்டி விட்ட ...... பெருமாளே.
கிளி போலச் சிவந்த வாயிதழினள், மிகக் கரிய நிறம் கொண்ட கெண்டை மீன் போன்ற கண்களை உடையவள், தினைப் புனம் காத்த கொடி போன்ற பெண்ணான வள்ளி, பூண் அணிந்துள்ள யானையின் தந்தத்தை ஒத்ததும், குங்குமம் அணிந்ததுமான மார்பகத்தை உடைய குற மகளின், வேலைக்காரன் என்று (நீ) அடைந்த பெயரைப் புகழ்ந்து பேசி மனம் உருகி நெகிழ்ந்து நெகிழ்ந்து நின்று தொழுகின்ற, குணம் கடந்த பெரியோரும், பழிப்புக்கு இடம் தராத பக்தர்களும் வெட்சி மலரைத் தூவுகின்ற உனது திருவடியிணைகளின் பெரும் புகழை வகைப்படுத்தி எடுத்துரைக்க, உனக்குப் பணி செய்ய, முத்தமிழ் ஞானத்தை (எனக்கு) அருள் செய்ய வேண்டும். கம்சன் அனுப்பிய துஷ்டத்தனமான குவலயாபீடம் என்னும் யானையின் தந்தத்தை முறித்த (கண்ணனாய் வந்த) கருட வாகனனாகிய திருமாலும், புத்தியும் கலங்க மத நீரைப் பொழிவதும், கட்டியுள்ள தறியையும் ஒடித்து எறிய வல்லதுமான யானையின் தோலை உரித்து வென்று, அழகிய நடனத்தைச் செய்த ஏகாம்பர மூர்த்தியும், மதிப்புடன் நோக்க, உக்ரம் பொருந்திய கூரிய வேலாயுதத்தால் (சூரனுக்குப்) பயந்திருந்த மூவுலகையும் அஞ்சேல் என்று வலிமையைக் காட்டி, அடியவர்கள் புகழ்ந்து பாராட்டும்படி கிரெளஞ்ச மலையுடன் போர் புரிந்து, அந்நாள் அசுரர்களை போர்க்களத்தில் வென்று, கடலைக் கலங்கும்படி செய்து, தேவர்களின் சிறையை நீக்கி வெளிவிடுத்த பெருமாளே. 
பாடல் 1235 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தனதனன தாத்தன தனதனன தாத்தன
     தனதனன தாத்தன ...... தனதான
குடிமைமனை யாட்டியும் அடிமையொடு கூட்டமும்
     குலமுமிறு மாப்புமி ...... குதியான 
கொடியபெரு வாழ்க்கையி லினியபொரு ளீட்டியெ
     குருடுபடு மோட்டென ...... வுடல்வீழில் 
அடைவுடைவி டாச்சிறு பழையதுணி போர்த்தியெ
     அரிடசுடு காட்டிடை ...... யிடுகாயம் 
அழியுமள வாட்டிலுன் அமலமலர் மாப்பத
     அருணசர ணாஸ்பதம் ...... அருள்வாயே 
அடியினொடு மாத்தரு மொளமொளமொ ளாச்சென
     அலறிவிழ வேர்க்குல ...... மொடுசாய 
அவுணர்படை தோற்பெழ அருவரைக ளார்ப்பெழ
     அயிலலகு சேப்பெழ ...... மறைநாலும் 
உடையமுனி யாட்பட முடுகவுணர் கீழ்ப்பட
     உயரமரர் மேற்பட ...... வடியாத 
உததிகம ராப்பிள முதுகுலிச பார்த்திபன்
     உலகுகுடி யேற்றிய ...... பெருமாளே.
குடிப்பிறப்பின் ஒழுக்கத்துக்கு ஏற்ற மனைவியும், ஏவலாலர்களுடைய கூட்டமும், குலப் பெருமையும், ஆணவச் செருக்கும் மிகுந்து நிற்கும் பொல்லாத இப்பெரிய வாழ்க்கையில் இனிமை தரும் பொருளைச் சேகரித்து, கண் தெரியாத குருடுபோல் இங்கும் அங்கும் அலைந்த இந்த உடம்பு இறந்து வீழ்ந்தால், தகுந்த உடையைத் தவிர்த்து, (அதற்குப் பதிலாகச்) சிறிய பழைய துணி ஒன்றால் (பிணத்தைப்) போர்த்தி, துயரத்துக்கு இடமான சுடு காட்டில் போடப்பட்டு உடல் எரிந்து அழிந்து போகும் சமயத்தில், உனது குற்றமற்ற, மலர் போன்ற, சிறந்த நிலையாகிய சிவந்த திருவடி என்னும் பற்றுக் கோட்டை அருள்வாயாக. அடியோடு (சூரனாகிய) பெரிய மாமரம் மொள மொள மொள என்னும் ஒலியோடு அலறிக் கூச்சலிட்டு விழ, (தன்னுடைய) வேர் போன்ற எல்லா அசுரர் கூட்டத்துடன் சாய்ந்து அழிய, அசுரர்கள் சேனை தோல்வி அடைய, அருமையான கிரெளஞ்சம், ஏழு குலகிரிகள் முதலிய மலைகள் கூக்குரல் இட்டு இடிய, வேலாயுதம் (ரத்தத்தின்) செந்நிறம் காட்ட, நான்கு வேதங்களும் வல்ல முனியாகிய பிரமன் தனது ஆணவம் அடங்க, எதிர்த்து வந்த அசுரர்கள் கீழ்மை அடைய, சிறந்த தேவர்கள் மேம்பட்டு விளங்க, வற்றாத கடலும் பூமி பிளவு கொண்டது போலப் பிளவுபட, பழையவனும், வஜ்ராயுதம் ஏந்தியவனுமாகிய இந்திரனை பொன்னுலகில் மீண்டும் குடி ஏற்றி வைத்த பெருமாளே. 
பாடல் 1236 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தனன தந்த தத்த தனன தந்த தத்த
     தனன தந்த தத்த ...... தனதான
குறைவ தின்றி மிக்க சலமெ லும்பு துற்ற
     குடிலி லொன்றி நிற்கு ...... முயிர்மாயம் 
குலைகு லைந்து தெர்ப்பை யிடைநி னைந்து நிற்ப
     கொடிய கொண்ட லொத்த ...... வுருவாகி 
மறலி வந்து துட்ட வினைகள் கொண்ட லைத்து
     மரண மென்ற துக்க ...... மணுகாமுன் 
மனமி டைஞ்ச லற்று னடிநி னைந்து நிற்க
     மயிலில் வந்து முத்தி ...... தரவேணும் 
அறுகு மிந்து மத்த மலையெ றிந்த அப்பு
     மளிசி றந்த புட்ப ...... மதுசூடி 
அருந டஞ்செ யப்ப ரருளி ரங்கு கைக்கு
     அரிய இன்சொல் செப்பு ...... முருகோனே 
சிறுகு லந்த னக்கு ளறிவு வந்து தித்த
     சிறுமி தன்த னத்தை ...... யணைமார்பா 
திசைமு கன்தி கைக்க அசுர ரன்ற டைத்த
     சிறைதி றந்து விட்ட ...... பெருமாளே.
குறைவு இல்லா வகையில், நிறைய நீர், எலும்பு முதலியவை நெருங்கிய வீடாகிய உடலில் பொருந்தி இருக்கும் உயிர் என்கின்ற மாயப் பொருள், நிலை கெட்டு, தெர்ப்பைப் படுக்கையில் (சுடுகாட்டுக்கு அனுப்புவதற்காக) கிடத்த வேண்டும் என்று (உறவினர்கள்) நினைத்து நிற்கும் போது, பொல்லாதவனாய் கரு மேகம் நிகரான உருவத்துடன் யமன் வந்து கொடிய செயல்களைச் செய்து வருத்தி, இறப்பு என்ற துயரம் என்னைக் கூடுவதற்கு முன்பாக, நான் மன வேதனைகள் இல்லாமல் உனது திருவடியைத் தியானித்து நிற்க, மயிலின் மீது ஏறி வந்து வீட்டுப் பேற்றைத் தர வேண்டும். அறுகு, பிறைச் சந்திரன், ஊமத்த மலர், அலைகள் வீசும் கங்கை நீர், வண்டுகள் நிரம்பி மொய்க்கும் மலர்கள் இவைகளைச் சூடிக் கொண்டு, அருமையான ஊழிக் கூத்தாம் நடனத்தைச் செய்த தந்தையாகிய சிவ பெருமான் உபதேசப் பொருளை அருள்வாயாக என்று உன்னை வேண்டி இரங்கவும், (அதற்கு இசைந்து) அருமையான இனிய பிரணவ மந்திரத்தை அவருக்கு உபதேசித்த முருகனே, கீழான குறக் குலத்தில் ஞான நிலை கூடித் தோன்றிய சிறுமியாகிய குறப் பெண்ணின் மார்புகளை அணைந்த திருமார்பனே, பிரமதேவன் திகைக்குமாறு அசுரர்கள் அந்நாளில் தேவர்களை அடைத்துவைத்த சிறைகளைத் திறந்துவிட்டு, தேவர்களை விடுவித்த பெருமாளே. 
பாடல் 1237 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தான தனன தத்த தான தனன தத்த
     தான தனன தத்த ...... தனதான
கோக னகமு கிழ்த்த போக புளகி தத்த
     கோடு தலைகு லைத்த ...... முலையாலே 
கூட வரவ ழைக்கு மாடு குழைய டர்த்த
     நீடி யகுவ ளைக்கண் ...... மடமானார் 
ஆக முறவ ணைத்து காசை யபக ரித்து
     மீள விதழ்க டிப்ப ...... தறியாதே 
ஆசை யதுகொ ளுத்து மால மதுகு டித்த
     சேலில் பரித விப்ப ...... தினியேனோ 
மாக நதிம திப்ர தாப மவுலி யர்க்கு
     சாவி யதுவோ ரர்த்த ...... மொழிவோனே 
வாகு வலைய சித்ர ஆறி ருபுய வெற்பில்
     வாழ்வு பெருகு றத்தி ...... மணவாளா 
வேக வுரக ரத்ந நாக சயன சக்ர
     மேவி மரக தத்தின் ...... மருகோனே 
வீசு திரைய லைத்த வேலை சுவற வெற்றி
     வேலை யுருவ விட்ட ...... பெருமாளே.
தாமரை மொட்டு மலர்ந்தது போன்றதாய், காம இன்பத்தினால் புளகாங்கிதம் கொண்டதாய், மலையின் சிகரத்தையும் வென்ற மார்பகத்தால், தங்களுடன் இணைவதற்கு அழைப்பு விடுப்பவை போன்றுள்ளவையும், பொன்னாலாகிய குண்டலத்தை மோதும்படி நெருங்கி நீண்டுள்ளவையும், குவளை மலர் போன்றவையுமான கண்களை உடைய இளம் பொது மகளிருடைய உடலை இறுக்கி அணைத்தும், பொருளை அபகரித்தும், மீண்டும் வாயிதழைக் கடிக்கும் வஞ்சக எண்ணத்தைத் தெரிந்து கொள்ளாமல், காம இச்சையை மிக்க எழுப்பும் ஆலகால விஷத்தை உண்ட சேல் மீன் போல வருந்துவது இன்னமும் வேண்டுமோ? (போதும் போதும் என்றபடி) ஆகாய நதியாகிய கங்கை, சந்திரன், (இவற்றை அணிந்துள்ள) புகழைக் கொண்ட சிவபெருமானுக்கு, அவர் கேட்டறிந்த ஒப்பற்ற ஒரு பொருளை (பிரணவ மந்திரத்தை) உபதேசித்தவனே, தோளணி பூண்டதும், அழகிய பன்னிரண்டு மலை போன்றதுமான உனது தோள்களில் வாழ்வின் இன்பத்தைப் பெற்ற குறப்பெண்ணாகிய வள்ளியின் கணவனே, விஷமுள்ள சர்ப்பமாகிய, ரத்தின மணி கொண்ட ஆதி சேஷன் மீது பள்ளி கொள்பவரும், சக்ராயுதம் ஏந்தியவரும் ஆன பச்சை நிறம் கொண்ட திருமாலின் மருகோனே, வீசுகின்ற அலைகள் அலைக்கும் கடல் வற்றும்படி வெற்றி வேலை ஊடுருவச் செல்ல விட்ட பெருமாளே. 
பாடல் 1238 - பொதுப்பாடல்கள் 
ராகம் - அமிர்த வர்ஷணி 
தாளம் - ஆதி
தந்தந் தனந்த தந்தந் தனந்த
     தந்தந் தனந்த ...... தனதான
சந்தம் புனைந்து சந்தஞ் சிறந்த
     தண்கொங் கைவஞ்சி ...... மனையாளுந் 
தஞ்சம் பயின்று கொஞ்சுஞ் சதங்கை
     தங்கும் பதங்க ...... ளிளைஞோரும் 
எந்தன் தனங்க ளென்றென்று நெஞ்சி
     லென்றும் புகழ்ந்து ...... மிகவாழும் 
இன்பங் களைந்து துன்பங்கள் மங்க
     இன்றுன் பதங்கள் ...... தரவேணும் 
கொந்தின் கடம்பு செந்தண் புயங்கள்
     கொண்டங் குறிஞ்சி ...... யுறைவோனே 
கொங்கின் புனஞ்செய் மின்கண்ட கந்த
     குன்றம் பிளந்த ...... கதிர்வேலா 
ஐந்திந் த்ரியங்கள் வென்றொன்று மன்பர்
     அங்கம் பொருந்து ...... மழகோனே 
அண்டந் தலங்க ளெங்குங் கலங்க
     அன்றஞ் சலென்ற ...... பெருமாளே.
சந்தனத்தைப் பூசிக்கொண்டு மிகவும் அழகு சிறந்த குளிர்ந்த மார்புடைய வஞ்சிக்கொடி போன்ற மனைவியும், என்னையே பற்றுக்கோடாகக் கொண்டு, கொஞ்சி ஒலிக்கும் கிண்கிணிகள் அணிந்த பாதங்களை உடைய குழந்தைகளும், ஆகியவர்களே என் செல்வங்கள் என்றென்று அடிக்கடி என் மனத்திலே எப்போதும் புகழ்ந்து மிக்க மகிழ்ச்சியுடன் வாழும் நிலையில்லா இன்பத்தை நீக்கி, எனது துயரங்கள் யாவும் அடங்கி ஒழிய, இன்று உனது திருவடிகளைத் தந்தருள வேண்டும். கொத்துக் கொத்தாக உள்ள கடப்ப மலர் மாலையை செவ்விய குளிர்ந்த புயங்களிலே அணிந்து கொண்டு அழகிய மலையிடங்களில் எல்லாம் வீற்றிருப்பவனே, வாசனை மிக்க தினைப்புன வயலிலே இருந்த மின்னல் போன்ற அழகி வள்ளியைக் கண்டு மகிழ்ந்த கந்தனே, கிரெளஞ்சமலையைப் பிளந்த ஒளி படைத்த வேலனே, மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து பொறிகளையும் அடக்கி வென்றிருக்கும் அன்பர்களுடைய அங்கங்களில் எல்லாம் பொருந்தி விளங்கும் அழகனே, அண்டங்களும் உலகங்களும் எங்கும் அன்று சூரனுக்கு அஞ்சிக் கலங்க, அந்த வேளையில் பயப்படாதீர்கள் என்று அருளிய பெருமாளே. 
பாடல் 1239 - பொதுப்பாடல்கள் 
ராகம் - குந்தலவராளி 
தாளம் - அங்கதாளம் - 5 1/2 
தகதிமிதகதிமி-4, தகிட-1 1/2
தனதன தனத்த தத்த தனதன தனத்த தத்த
     தனதன தனத்த தத்த ...... தனதான
சலமல மசுத்த மிக்க தசைகுரு தியத்தி மொய்த்த
     தடியுடல் தனக்கு ளுற்று ...... மிகுமாயம் 
சகலமு மியற்றி மத்த மிகுமிரு தடக்கை யத்தி
     தனிலுரு மிகுத்து மக்க ...... ளொடுதாரம் 
கலனணி துகிற்கள் கற்பி னொடுகுல மனைத்து முற்றி
     கருவழி யவத்தி லுற்று ...... மகிழ்வாகிக் 
கலைபல பிடித்து நித்த மலைபடு மநர்த்த முற்றி
     கடுவினை தனக்குள் நிற்ப ...... தொழியாதோ 
மலைமக ளிடத்து வைத்து மதிபுனல் சடைக்குள் வைத்து
     மழுவனல் கரத்துள் வைத்து ...... மருவார்கள் 
மடிவுற நினைத்து வெற்பை வரிசிலை யிடக்கை வைத்து
     மறைதொழ நகைத்த அத்தர் ...... பெருவாழ்வே 
பலதிசை நடுக்க முற்று நிலைகெட அடற்கை யுற்ற
     படையது பொருப்பில் விட்ட ...... முருகோனே 
பழுதறு தவத்தி லுற்று வழிமொழி யுரைத்த பத்தர்
     பலருய அருட்கண் வைத்த ...... பெருமாளே.
ஜலம், மலம், அழுக்குகள் நிறைந்த மாமிசம், ரத்தம், எலும்பு - இவைகள் நெருங்கிச் சூழ்ந்துள்ள தடித்த இந்த உடலில் வாசம் செய்து, மிக்க வஞ்சனையான செயல்கள் பலவற்றையும் செய்து, மதம் மிகுந்ததும், பெரும் துதிக்கையை உடையதுமான யானையைப் போல் உருவம் பெருத்து, குழந்தைகள், மனைவி, ஆபரணங்கள், அணிந்து கொள்ளும் துணிமணிகள், கல்வி இவைகளுடன் குலம் வரை முழுவதுமாக வளர்ச்சி பெற்று, பிறப்பு வழி என்ற பயனற்ற பாதையில் சென்று அதில் மகிழ்ச்சி அடைந்தவனாகி, பலவித சாத்திர நூல்களைக் கற்று, நாள்தோறும் அலைச்சல் உறும் வேதனையை அடைந்து, பொல்லாத வினைக்கு உள்ளாகி நிற்கும் இச்செயல் நீங்காதோ? மலைமகள் பார்வதியை இடது பாகத்தில் வைத்து, சந்திரனையும் கங்கையையும் ஜடைக்குள்ளே வைத்து, மழு என்ற கோடரியையும் நெருப்பையும் கையிலே வைத்து, பகைவர்களாகிய திரிபுரத்து அசுரர்கள் இறந்தொழிய நினைத்து, மேருமலையைக் கட்டப்பட்ட வில்லாக இடது கையிலே வைத்து, வேதங்கள் தொழுது நிற்க, சிரிப்பினாலேயே திரிபுரத்தை எரித்த பெருமானாம் சிவபிரானின் பெரும் செல்வக் குழந்தையே, பல திசைகளில் உள்ளவர்களும் நடுக்கம் அடைந்து நிலை தடுமாற, வலிமை பொருந்திய திருக்கையிலே இருந்த படையாகிய வேலாயுதத்தை கிரெளஞ்சகிரியின் மீது செலுத்திய முருகனே, குற்றமற்ற தவநிலையில் இருந்து துதி மொழிகளைச் சொல்கின்ற பக்தர்கள் பலரும் நற்கதி பெற, திருக்கண்களால் அருள் பாலித்த பெருமாளே. 
பாடல் 1240 - பொதுப்பாடல்கள் 
ராகம் - வாசஸ்பதி 
தாளம் - ஸங்கீர்ணசாபு - 4 1/2 
தகதிமி-2, தகிட-1 1/2, தக-1
தாந்தன தானதன தாந்தன தானதன
     தாந்தன தானதன ...... தனதான
சாங்கரி பாடியிட வோங்கிய ஞானசுக
     தாண்டவ மாடியவர் ...... வடிவான 
சாந்தம தீதமுணர் கூந்தம சாதியவர்
     தாங்களு ஞானமுற ...... வடியேனுந் 
தூங்கிய பார்வையொடு தாங்கிய வாயுவொடு
     தோன்றிய சோதியொடு ...... சிவயோகந் 
தூண்டிய சீவனொடு வேண்டிய காலமொடு
     சோம்பினில் வாழும்வகை ...... அருளாதோ 
வாங்குகை யானையென வீன்குலை வாழைவளர்
     வான்பொழில் சூழும்வய ...... லயலேறி 
மாங்கனி தேனொழுக வேங்கையில் மேலரிகள்
     மாந்திய வாரணிய ...... மலைமீதிற் 
பூங்கொடி போலுமிடை யேங்கிட வாரமணி
     பூண்பன பாரியன ...... தனபாரப் 
பூங்குற மாதினுட வாடியிருள்
     பூம்பொழில் மேவிவளர் ...... பெருமாளே.
சங்கரியாகிய பார்வதி தேவி பாடித் தாளம் இட, மேம்பட்ட ஞான ஆனந்தத் தாண்டவம் ஆடிய சிவபிரானின் வடிவை அடைந்தவர்களும், சாந்த குணத்தின் உச்சி நிலையில் இருந்து, உணர்ச்சி மிகுந்த சிவநேச இனத்தவர்களான பெரியோர்களும், (அந்தச் சிவ நடனத்தைப் பார்த்ததால்) ஞான நிலையை அடைய, அடியேனும் அறி துயில் கொண்ட ஞானக் கண்ணுடனும், வெளியில் விடாதபடி உள்ளேயே சுழுமுனையில் தாங்கிப் பிடித்த பிராணவாயுவுடனும்*, அந்நிலையில் காணப்படும் ஜோதி தரிசனத்துடனும், சிவயோக நிலையில் பரசிவத்துடன் கூடி நிலைத்த ஆன்மாவுடன், விரும்பிய கால அளவுக்கு சும்மா இருக்கும் மெளனஞான நிலையில் வாழும் பாக்கியத்தை உனது திருவருள் எனக்கு அருளாதோ? யானையின் தொங்கும் துதிக்கையைப் போல வாழைக் குலைகளைத் தள்ளுகின்ற வாழைமரங்கள் வளர்கின்ற, பெரிய சோலைகள் சூழ்ந்த வயல்களின் பக்கங்களில் ஏறி மாம்பழங்கள் தேன் ஒழுகும்படி வேங்கை மரத்தின் மேலிருந்து பாயும் குரங்குகள் தேனையும் பழத்தையும் அருந்திய காடுகளைக் கொண்ட வள்ளிமலையில், பூங்கொடி போன்றுள்ள நுண்ணிய இடுப்பு சோரும்படி அணிந்துள்ள முத்தாபரணங்களின் கனமும், மார்பின் பாரமும் உடைய அழகிய குறப்பெண் வள்ளியுடன் அங்கே நேசம் பூண்டு கலந்து விளையாடி, அடர்ந்து இருண்ட சோலையிலே விரும்பி அமர்ந்த பெருமாளே. 
* இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு:நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு 'ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள், சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி, ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை, சுழுமுனை முதலியன) உள்ளன.'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம்.'சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது.'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும் ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும்.
பாடல் 1241 - பொதுப்பாடல்கள் 
ராகம் - கல்யாணி 
தாளம் - கண்டசாபு - 2 1/2
தனதான தந்ததன தனதான தந்ததன
     தனதான தந்ததன ...... தனதான
சிவஞான புண்டரிக மலர்மாது டன்கலவி
     சிவபோக மன்பருக ...... அறியாமற் 
செகமீது ழன்றுமல வடிவாயி ருந்துபொது
     திகழ்மாதர் பின்செருமி ...... யழிவேனோ 
தவமாத வங்கள்பயில் அடியார்க ணங்களொடு
     தயவாய்ம கிழ்ந்துதினம் ...... விளையாடத் 
தமியேன்ம லங்களிரு வினைநோயி டிந்தலற
     ததிநாளும் வந்ததென்முன் ...... வரவேணும் 
உவகாரி யன்பர்பணி கலியாணி யெந்தையிட
     முறைநாய கங்கவுரி ...... சிவகாமி 
ஒளிரானை யின்கரமில் மகிழ்மாது ளங்கனியை
     யொருநாள்ப கிர்ந்தவுமை ...... யருள்பாலா 
அவமேபி றந்தஎனை யிறவாம லன்பர்புகு
     மமுதால யம்பதவி ...... யருள்வோனே 
அழகாந கம்பொலியு மயிலாகு றிஞ்சிமகிழ்
     அயிலாபு கழ்ந்தவர்கள் ...... பெருமாளே.
சிவஞானம் என்னும் தாமரை மலரில் வீற்றிருக்கும் சிவமாதுடனே இணையும் மங்களகரமான பேரின்பத்தை நன்றாக அனுபவிக்கத் தெரியாமல், இவ்வுலகில் அலைந்து திரிந்து, ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மல சொரூபமாகி, பொதுவாய்த் திகழும் விலைமாதரைப் பின்தொடர்ந்து அழிந்து போவேனோ? தவமும் நிஷ்டைகளும் செய்கின்ற உன் அடியார்களின் கூட்டங்களுடன் அன்போடு மகிழ்ந்து தினமும் விளையாடவும், அடியேனது மும்மலங்கள், பிறப்பு, இறப்பு, நல்வினை, தீவினை, நோய்கள் யாவும் அச்சமுற்று அலறி ஓடும்படியாகவும், தக்க சமயத்தில் தினமும் பிரத்யக்ஷமாக வந்தவனாக என்முன்னால் நீ வரவேண்டும். யாவர்க்கும் உதவி செய்பவளும், அன்பர்கள் பணிந்து போற்றும் கல்யாணியும், எந்தை சிவபிரானின் இடது பாகத்தில் நாயகியாக விளங்கும் கெளரியும், சிவகாம சுந்தரியும், விளங்கும் யானைமுக விநாயகனுக்குக் கரத்தில் மகிழும்படியாக மாதுளங்கனியை முன்பொருநாள் அளித்தவளும் ஆகிய உமாதேவி பார்வதி அருளிய பாலகனே, வீண் காலம் போக்கும் பிறவியை எடுத்த எனக்கு இறவாத வரத்தைத் தந்து அன்பர்கள் புகுகின்ற அமுதக்கோயிலாகிய உயர் நிலையை அருள்வோனே, அழகனே, மலைகளில் விளங்கி வாழ்பவனே, மயில் வாகனனே, குறிஞ்சி நிலத்தில் மகிழ்ச்சியோடு குடியிருக்கும் வேலவனே, புகழ்ந்து போற்றும் அடியவர்களின் பெருமாளே. 
பாடல் 1242 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தானத்த தான தந்த தானத்த தான தந்த
     தானத்த தான தந்த ...... தனதான
சீறிட்டு லாவு கண்கள் மாதர்க்கு நாள்ம ருண்டு
     சேவித்து மாசை கொண்டு ...... முழல்வேனைச் 
சீரிட்ட மாக நின்ற காசைக்கொ டாத பின்பு
     சீரற்று வாழு மின்பம் ...... நலியாதே 
ஆறெட்டு மாய்வி ரிந்து மாறெட்டு மாகி நின்று
     மாருக்கு மேவி ளம்ப ...... அறியாதே 
ஆகத்து ளேம கிழ்ந்த ஜோதிப்ர காச இன்பம்
     ஆவிக்கு ளேது லங்கி ...... அருளாதோ 
மாறிட்டு வான டுங்க மேலிட்டு மேல கண்டம்
     வாய்விட்டு மாதி ரங்கள் ...... பிளவாக 
வாள்தொட்டு நேர்ந டந்த சூர்வஜ்ர மார்பு நெஞ்சும்
     வான்முட்ட வீறு செம்பொன் ...... வரையோடு 
கூறிட்ட வேல பங்க வீரர்க்கு வீர கந்த
     கோதற்ற வேடர் தங்கள் ...... புனம்வாழுங் 
கோலப்பெண் வாகு கண்டு மாலுற்று வேளை கொண்டு
     கூடிக்கு லாவு மண்டர் ...... பெருமாளே.
கோபத்துடன் உலவுகின்ற கண்களை உடைய விலைமாதர்களுக்கு நாள்தோறும் மருட்சி உற்று, அவர்களை வணங்கியும், அவர்கள் மீது காம ஆசை கொண்டும் திரிகின்ற என்னை சீராகவும் மிக விருப்பத்துடனும் முதலில் கொடுத்த பொருளை மீண்டும் கொடுக்காத பின்னர், அந்தச் சீரும் சிறப்பும் அழிந்து வாழச் செய்யும் சிற்றின்பத்தில் நான் ஈடுபட்டு வறுமையில் வருந்தாமல், நாற்பத்து எட்டாக விரிந்து நாற்பத்து எட்டு கூடச் சேர்ந்து தொண்ணூற்றாறு* தத்துவங்களாக விளங்கி நின்று யாராலும் சொல்லுதற்கு முடியாத வகையில், உடலிடத்தே பூரித்த ஜோதி ஒளி இன்பம் என் ஆவிக்குள்ளே உயிருக்கு உயிராய் விளங்கி எனக்கு அருள் பாலிக்காதோ? பகைமை பூண்டு தேவர்கள் நடுங்கும்படி ஆகாயத்தில் கிளம்பி, மேலே உள்ள பொன்னுலகம் வாய்விட்டு ஓலமிட, திசைகள் பிளவுபடும்படி, வாள் ஏந்தி நேரே எதிர்த்துச் சென்ற சூரனுடைய வலிய மார்பும் நெஞ்சமும் வான் முகடு வரை சிதற, விளங்குகின்ற பொன் மலையான மேரு, கிரெளஞ்ச கிரியையும் கூறு செய்த வேலாயுதனே, குறைவு இல்லாதவனே, வீரர்களுக்கும் வீரனே, கந்தனே, குற்றமில்லாத வேடர்களின் தினைப் புனத்தில் வாழ்ந்திருந்த அழகிய வள்ளியின் அழகைப் பார்த்து ஆசை கொண்டு, தக்க சமயம் அறிந்து, அவளோடு கூடிக் குலாவிய, தேவர்களின் பெருமாளே. 
* 96 வகை தத்துவங்களில் சிவதத்துவங்கள் ஐந்து நீங்கிய மற்றவை 91. சிவதத்துவங்கள் இருந்தால் மனமும் புத்தியும் உழல்தல் இல்லை. 96 தத்துவங்கள் பின்வருமாறு:36 பரதத்துவங்கள் (அகநிலை): ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து - 25 (புறநிலை): மண், தீ, நீர், காற்று, வெளி.ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை): வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4.
பாடல் 1243 - பொதுப்பாடல்கள் 
ராகம் - வாசஸ்பதி 
தாளம் - கண்டசாபு - 2 1/2
தானதன தானதன தானதன தானதன
     தானதன தானதன ...... தனதான
சூதினுண வாசைதனி லேசுழலு மீனதென
     தூசுவழ கானவடி ...... வதனாலே 
சூதமுட னேருமென மாதர்நசை தேடுபொரு
     ளாசைதமி லேசுழல ...... வருகாலன் 
ஆதிவிதி யோடுபிற ழாதவகை தேடியென
     தாவிதனை யேகுறுகி ...... வருபோது 
ஆதிமுரு காதிமுரு காதிமுரு காஎனவு
     மாதிமுரு காநினைவு ...... தருவாயே 
ஓதமுகி லாடுகிரி யேறுபட வாழசுரர்
     ஓலமிட வேயயில்கொ ...... டமராடீ 
ஓநமசி வாயகுரு பாதமதி லேபணியும்
     யோகமயி லாஅமலை ...... மகிழ்பாலா 
நாதரகு ராமஅரி மாயன்மரு காபுவன
     நாடுமடி யார்கள்மன ...... துறைவோனே 
ஞானசுர வானைகண வாமுருக னேயமரர்
     நாடுபெற வாழவருள் ...... பெருமாளே.
வஞ்சனையாக வைக்கப்பட்ட தூண்டிலில் உள்ள உணவை உண்ணும் ஆசையிலே சுழன்று வரும் மீன்போல, ஆடையின் அழகுடன் கூடிய உருவத்தைக்கண்டு மாந்தளிரின் நிறத்துக்கு உடல் நிறம் சமமாகும் என்று நினைத்து பெண்கள் மீதுள்ள காம இச்சை காரணமாகத் தேடுகின்ற பொருளாசையால் மனம் அலைச்சல் அடையும்போது, வருகின்ற யமன் முதலில் பிரமனால் எழுதப்பட்ட விதிக்குத் தவறாத வகையில் என்னைத் தேடி என் உயிரைப் பற்ற அருகில் வரும்சமயம், ஆதிமுருகா, ஆதிமுருகா, ஆதிமுருகா, என்று நான் கூறுவதற்கு ஆதி முருகனே, நீ அந்த ஞாபகத்தைத் தர வேண்டுகிறேன். ஈரம் உள்ள மேகம் படியும் கிரெளஞ்சகிரி பொடியாகும்படி, அங்கு வாழ்ந்த அசுரர்கள் பயத்தினால் கூக்குரல் இடும்படி, வேல் கொண்டு போர் புரிந்தவனே, ஓம் நமசிவாய என்னும் பஞ்சாட்சரத்துக்கு ஏற்ற குருவாம் சிவபிரான் உனது பாதங்களிலே பணியும்படியான யோக மூர்த்தியான மயில்வாகனனே, குற்றமற்ற பார்வதி மகிழ்ந்து குலாவும் குழந்தையே, தலைவனே, ரகுராமனாம் திருமாலாகிய மாயனுடைய மருகனே, பூமியில் உன்னை விரும்பிப் போற்றும் அடியார்களின் உள்ளத்தில் உறைபவனே, ஞான ஸ்வரூபியான தேவயானையின் கணவனே, முருகனே, தேவர்கள் தமது பொன்னுலகை மீண்டும் பெற்று வாழும்படி அருள் புரிந்த பெருமாளே. 
பாடல் 1244 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தனந்தான தானான தனந்தான தானான
     தனந்தான தானான ...... தனதான
செழுந்தாது பார்மாது மரும்பாதி ரூபோடு
     சிறந்தியாதி லூமாசை ...... யொழியாத 
திறம்பூத வேதாள னரும்பாவ மேகோடி
     செயுங்காய நோயாள ...... னரகேழில் 
விழுந்தாழ வேமூழ்க இடுங்காலன் மேயாவி
     விடுங்கால மேநாயென் ...... வினைபாவம் 
விரைந்தேக வேவாசி துரந்தோடி யேஞான
     விளம்போசை யேபேசி ...... வரவேணும் 
அழுங்கோடி தேவார்க ளமர்ந்தார வானீடி
     அழன்றேகி மாசீத ...... நெடுவேலை 
அதிர்ந்தோட வேகாலன் விழுந்தோட வேகூர
     அலங்கார வேலேவு ...... முருகோனே 
கொழுங்கானி லேமாதர் செழுஞ்சேலை யேகோடு
     குருந்தேறு மால்மாயன் ...... மருகோனே 
குறம்பாடு வார்சேரி புகுந்தாசை மாதோடு
     குணங்கூடி யேவாழு ...... பெருமாளே.
செழுமையான பொன், மண், பெண் (என்னும் மூவாசைகளும்) முதலில் அரும்பு விட்டுப் பின்னர் வளருவது போன்ற உருவத்துடன், மேலும் மேலும் விளங்கி எதிலுமே ஆசை நீங்காத கோட்பாட்டினை உடைய பேய் பிசாசு (நான்). கொடிய பாவங்களைக் கோடிக் கணக்கில் செய்யும் உடலில் நோய் கொண்டவன். ஏழு நரகங்களிலும் விழுந்து ஆழ்ந்து முழுகும்படி தள்ளுகின்ற யமன் என்னை அணுக, நான் உயிர் விடும் காலத்தில் அடியேனுடைய வினை பாவம் ஆகியவை அதி வேகத்தில் என்னை விட்டு அகலும்படி, குதிரையாகிய மயிலை வேகமாகச் செலுத்தி, ஞான மொழிகளைச் சொல்லும் ஒலியே எனக்குக் கேட்கும்படியாக பேசி வந்தருள வேண்டும். அழுத கோடிக் கணக்கான தேவர்கள் விண்ணில் நீண்ட காலம் அமர்ந்து வாழ்ந்திருக்கும்படியாக, கொதிப்புடன் கோபித்துச்சென்று, மிகவும் குளிர்ச்சியான பெரிய கடல் அதிர்ச்சி அடையும்படி நீ வேகமாகப் பாய்ந்து செல்ல, யமன் (அசுரர்களின் உயிரைக் கவர) விழுந்து அடித்துக்கொண்டு (போர் முனைக்கு) ஓடவே, கூர்மையான, அலங்காரம் உள்ள வேலாயுதத்தைச் செலுத்திய முருகனே, செழிப்பான காட்டிலே பெண்களின் நல்ல ஆடைகளை எடுத்துக் கொண்டு குருந்த மரத்தில் ஏறி (ஆடைகளை மறைத்த) மாயக் கண்ணனாகிய திருமாலின் மருகோனே, குறம் என்னும் பாடல் வகையைப் பாடுபவர்களாகிய குறவர்களின் சேரியில் புகுந்து, உன் ஆசைக்கு உகந்த வள்ளியுடன், அவள் குணத்துக்கு மகிழ்ந்து, பிறகு அவளுடன் கூடியே வாழ்கின்ற பெருமாளே. 
பாடல் 1245 - பொதுப்பாடல்கள் 
ராகம் - சுத்த சாவேரி
தாளம் - ஆதி
தத்த தனதனன தத்த தனதனன
     தத்த தனதனன ...... தனதான
தத்த னமுமடிமை சுற்ற மொடுபுதல்வர்
     தக்க மனையினமு ...... மனைவாழ்வுந் 
தப்பு நிலைமையணு கைக்கு வரவிரகு
     தைக்கு மயல்நினைவு ...... குறுகாமுன் 
பத்தி யுடனுருகி நித்த முனதடிகள்
     பற்று மருள்நினைவு ...... தருவாயே 
பத்து முடியுருளு வித்த பகழியினர்
     பச்சை நிறமுகிலின் ...... மருகோனே 
அத்தி முகவனழ குற்ற பெழைவயிற
     னப்ப மவரைபொரி ...... அவல்தேனும் 
அப்பி யமுதுசெயு மொய்ப்ப னுதவஅட
     விக்குள் மறமகளை ...... யணைவோனே 
முத்தி தருமுதல்வர் முக்க ணிறைவரொடு
     முற்று மறைமொழியை ...... மொழிவோனே 
முட்ட வசுரர்கிளை கெட்டு முறியமுதல்
     வெட்டி யமர்பொருத ...... பெருமாளே.
அந்தப் பொருளும், ஏவலாளர்களும், சுற்றத்தினரும், புதல்வர்களும், தகுதியான மனைவியும், மனைவியைச் சார்ந்தவர்களும், இல்லற வாழ்வும் (ஆன இவைகளை) இழக்கும் படியான நிலைமை குறுகி வர, அறிவைச் சிதைக்கும் புத்தி மாறாட்டம் (என்னை) அணுகி வருவதற்கு முன், பக்தியுடனே மனம் உருகி தினமும் உன்னுடைய திருவடிகளை பற்றக்கூடிய திருவருள் நினைவைத் தந்தருள்க. (இராவணனுடைய) பத்து முடிகளையும் அறுத்துத் தள்ளிய அம்பைக் கொண்டவர், மேக நிறத்தினறான திருமாலின் மருகனே, யானை முகம் உடைய விநாயகன், அழகுள்ள பெட்டி போன்ற வயிற்றை உடையவன், அப்பம் அவரை பொரி முதலியவற்றோடு தேனையும் தொப்பையில் நிரப்பி உண்ணும் வலிமையை உடையவன் உதவி செய்ய, காட்டில் வேடப் பெண்ணாகிய வள்ளியை அணைபவனே, வீட்டுப் பேறு அளிக்கும் முதல்வரும், முக்கண்களை (சூரியன், சந்திரன், அக்கினி) உடைய இறைவருமாகிய சிவபெருமானுக்கு வேத மொழி முழுவதையும் உபதேசித்தவனே, அரக்கர் கூட்டம் முழுமையும் தோற்றுப் போய் அழிய முன்பு வெட்டி, போர் செய்த பெருமாளே. 
பாடல் 1246 - பொதுப்பாடல்கள் 
ராகம் - பிலஹரி
தாளம் - அங்கதாளம் - 5 
- எடுப்பு - 1/2 அக்ஷரம் தள்ளி 
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தக-1
தனதனன தானனம் தனதனன தானனம்
     தனதனன தானனம் ...... தனதான
தலைவலய போகமுஞ் சலனமிகு மோகமுந்
     தவறுதரு காமமுங் ...... கனல்போலுந் 
தணிவரிய கோபமுந் துணிவரிய லோபமுஞ்
     சமயவெகு ரூபமும் ...... பிறிதேதும் 
அலமலமெ னாஎழுந் தவர்களநு பூதிகொண்
     டறியுமொரு காரணந் ...... தனைநாடா 
ததிமதபு ராணமுஞ் சுருதிகளு மாகிநின்
     றபரிமித மாய்விளம் ...... புவதோதான் 
கலகஇரு பாணமுந் திலகவொரு சாபமுங்
     களபமொழி யாதகொங் ...... கையுமாகிக் 
கவருமவ தாரமுங் கொடியபரி தாபமுங்
     கருதியிது வேளையென் ...... றுகிராத 
குலதிலக மானுடன் கலவிபுரி வாய்பொருங்
     குலிசகர வாசவன் ...... திருநாடு 
குடிபுகநி சாசரன் பொடிபடம கீதரன்
     குலையநெடு வேல்விடும் ...... பெருமாளே.
மேலான எல்லையைக் கண்ட இன்ப சுகங்களும், மனச்சலனம் மிக்க ஆசைகளும், பிழையான நெறியில் செல்லும்படி தூண்டும் காம இச்சையும், தீப்போல அடங்குதற்கு அரிதான கோபமும், துணிந்து ஒரு நல்ல செய்கையைச் செய்ய விடாத ஈயாமைக்குணமும், சமயக் கோட்பாடுகளால் புனையும் பல வேஷங்களும், மற்ற எந்த வெளிப்பாடும், போதும் போதும் என்று தள்ளிய ஞான உணர்ச்சி உள்ளவர்கள் தங்கள் அநுபவம் கொண்டு அறிகின்ற ஒரு மூலப்பொருளை விரும்பி உணராமல், நிரம்ப மதக்கொள்கைகளையே கூறும் புராணங்களையும், வேத மொழிகளையும் எடுத்துக்கொண்டு அளவிலாத வகையில் வெறும் பேச்சு பேசுவதால் என்ன பயன்? காமப் போரை விளைக்கும் இரு அம்புகளான கண்களும், பொட்டு வைத்த, ஒப்பற்ற வில்லைப் போன்ற, அழகிய நெற்றியும், சந்தனக் கலவை நீங்காத மார்புமாகி, உள்ளத்தைக் கவருமாறு உலகில் அவதரித்த தோற்றத்தையும், (தினைப்புனம் காக்கும்) மிக்க பரிதாபமான தொழிலையும் கருத்திலே வைத்து, இந்த வள்ளியை ஆட்கொள்ளும் வேளை வந்ததென, வேடர் குலத்தின் சிறந்த மான் போன்ற வள்ளியுடன் கலந்தாய். போர் செய்ய வல்ல வஜ்ராயுதத்தைக் கரத்திலே கொண்ட இந்திரன் தன் பொன்னுலகமாம் தேவர் நாட்டுக்குக் குடியேற, அசுரன் சூரன் தூள்பட்டுப் போக, இந்தப் பூமியைத் தாங்கும் ஆதிசேஷன் நடுநடுங்க, நீண்ட வேலைச் செலுத்திய பெருமாளே. 
பாடல் 1247 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ஆபோகி 
தாளம் - சதுஸ்ர த்ருவம் - 14 
- எடுப்பு - /4/4 0/4
தனதன தனதன தனதன தனதன தனதன ...... தனதான
தவநெறி தவறிய குருடுகள் தலைபறி கதறிய ...... பரபாதத் 
தருமிகள் கருமிகள் வெகுவித சமயிக ளவரொடு ...... சருவாநின் 
றவனிவ னுவனுட னவளிவ ளுவளது இதுவுது ...... வெனுமாறற் 
றருவுரு வொழிதரு வுருவுடை யதுபதி தமியனு ...... முணர்வேனோ 
குவலய முழுவதும் மதிர்பட வடகுவ டிடிபட ...... வுரகேசன் 
கொடுமுடி பலநெரி தரநெடு முதுகுரை கடல்புனல் ...... வறிதாகத் 
துவல்கொடு முறையிடு சுரர்பதி துயரது கெடநிசி ...... சரர்சேனை 
துகளெழ நடநவில் மரகத துரகதம் வரவல ...... பெருமாளே.
தவவழியை விட்டு விலகின குருடர்கள், தலைமயிரைப் பறித்து, தமது கொள்கைகளை உரக்க வலியுறுத்தும் மற்றச் சமய (சமண) அறநெறியாளர்கள், தீய வினையாளர்கள், பலவிதமான சமய நெறிகளை அனுஷ்டிப்பவர்கள், ஆகிய இவர்களுடன் யான் பலகாலம் போராடி நின்றேன். அவன் - இவன் - உவன் என்றும், அவள் - இவள் - உவள் என்றும், அது - இது - உது என்றும் குறித்துக்காட்ட இல்லாத வகையில் இருக்கும், உருவம் இன்மை - உருவம் உடைமை இரண்டும் நீங்கிய தன்மையை உடைய பொருளே கடவுள் என்ற உண்மையை அடியேனும் உணர்ந்து கொள்வேனோ? உலகம் முழுவதும் அதிர்ச்சி கொள்ள, வடக்கில் உள்ள மேருமலை பொடிபட, சர்ப்பங்களின் தலைவன் ஆதிசேஷனின் வளைந்த பணாமுடிகளில் பலவும் நெரிபட, நீண்டதும், பழையதும், ஒலிப்பதுமான கடலில் நீர் வற்றிப் போக, அர்ச்சனைப் பூக்களுடன் பூஜித்து விண்ணப்பிக்கும் தேவர்களின் தலைவன் இந்திரனின் துயரங்கள் நீங்க, அசுரர்களின் சேனை அழிபட்டுப் பொடி எழ, நடனம் செய்யும் மரகதப் பச்சைக் குதிரையாம் மயில் மீது ஏறி (போர்க்களத்துக்கு) வரவல்ல பெருமாளே. 
பாடல் 1248 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தனதன தாத்தனத் தனதன தாத்தனத்
     தனதன தாத்தனத் ...... தனதான
திதலையு லாத்துபொற் களபம்வி டாப்புதுத்
     த்ரிவிதக டாக்களிற் ...... றுரகோடு 
சிகரம காப்ரபைக் குவடென வாய்த்துநற்
     சுரர்குடி யேற்றிவிட் ...... டிளநீரை 
மதனவி டாய்த்தனத் திளைஞரை வாட்டுசெப்
     பிணைமுலை மாத்தவக் ...... கொடிபோல்வார் 
வலையிலி ராப்பகற் பொழுதுகள் போக்குமற்
     றெனையுனை வாழ்த்தவைத் ...... தருள்வாயே 
சததள பார்த்திபற் கரிபுரு ஷோத்தமற்
     கெரிகன லேற்றவற் ...... குணராதோர் 
சகலச மார்த்தசத் தியவன சூக்ஷமுக்
     கியபர மார்த்தமுற் ...... புகல்வோனே 
கதிர்மணி நீர்க்கடற் சுழிபுகு ராக்ஷதக்
     கலகப ராக்ரமக் ...... கதிர்வேலா 
கருதிய பாட்டினிற் றலைதெரி மாக்ஷணக்
     கவிஞரு சாத்துணைப் ...... பெருமாளே.
தேமல் பரவி உள்ளதும், அழகிய கலவைச் சாந்தை விடாததாய், புதிதாய் (கன்னமதம், கைமதம், கோசமதம் என்னும்) மூன்று விதமான மத நீர்களைக் கொண்ட யானையின் பலமான தந்தம் என்றும், சிகரங்களைக் கொண்டு மிக்க பொலிவு உடைய மலையை ஒக்கும் என்று சொல்லும்படி அமைந்து, தேவர்கள் பருகுவதான அமுதத்தை நிரம்பக் கொண்டதாய், இள நீரைப் போன்றதாய், காம இச்சை என்னும் தாகத்துக்கு ஏற்றதாய், செல்வமுடைய இளைஞர்களை வாட்டும் தன்மை உடையதாய், செப்புக் குடம் போன்றதான இரு மார்பகங்களைக் கொண்டு சிறந்த தோற்றம் உடையவர்களாய், கொடி போன்ற சாயலை உடைய விலைமாதர்களின் வலையில் இரவிலும் பகலிலும் காலம் கழித்தலை நீக்கி, என்னை உன் புகழை வாழ்த்தும்படியாக செய்து அருள் புரிவாயாக. நூறு இதழ்களை உடைய தாமரையில் இருக்கும் அரசரான பிரமனுக்கும், திருமாலாகிய புருஷ உத்தமருக்கும், நெருப்பைக் கையில் ஏந்திய சிவபெருமானுக்கும் அறிய முடியாததான, ஒப்பற்றதும், எல்லாவிதமானதும், ஒத்த பொருளானதும், உண்மை நிறைந்ததும், அழகுள்ளதும், நுட்பமானதும், முக்கியமானதுமான மேலான உண்மைப் பொருளை முன்பு உபதேசித்தவனே, ஒளி பொருந்தியதும், முத்தும் பவளமும் உடையதுமான தன்மையை உடைய கடலின் நீர்ச் சுழியில் புகுந்திருந்த அரக்கர்களுடன் போர் புரிந்த வல்லமை உடைய கதிர் வேலனே, உன்னை நினைத்துப் பாடப்பட்ட பாடலிடத்து நீ அமர்ந்திருத்தலை தெரிந்துள்ளவர்களும், நொடியில் கவி பாட வல்லவர்களுமான பெரியோர்களின் ஆராய்ச்சிக்குத் துணை புரியும் பெருமாளே. 
பாடல் 1249 - பொதுப்பாடல்கள் 
ராகம் - நாட்டக்குறிஞ்சி 
தாளம் - கண்டசாபு - 2 1/2
தனதந்த தனதனன தனதந்த தனதனன
     தனதந்த தனதனன ...... தனதான
திரைவஞ்ச இருவினைகள் நரையங்க மலமழிய
     சிவகங்கை தனில்முழுகி ...... விளையாடிச் 
சிவம்வந்து குதிகொளக வடிவுன்றன் வடிவமென
     திகழண்டர் முநிவர்கண ...... மயன்மாலும் 
அரன்மைந்த னெனகளிறு முகனெம்பி யெனமகிழ
     அடியென்க ணளிபரவ ...... மயிலேறி 
அயில்கொண்டு திருநடன மெனதந்தை யுடன்மருவி
     அருமந்த பொருளையினி ...... யருள்வாயே 
பரியென்ப நரிகள்தமை நடனங்கொ டொருவழுதி
     பரிதுஞ்ச வருமதுரை ...... நடராஜன் 
பழியஞ்சி யெனதருகி லுறைபுண்ட ரிகவடிவ
     பவளஞ்சொ லுமைகொழுந ...... னருள்பாலா 
இருள்வஞ்ச கிரியவுண ருடனெங்க ளிருவினையு
     மெரியுண்டு பொடியஅயில் ...... விடுவோனே 
எனதன்பி லுறைசயில மகிழ்வஞ்சி குறமகளொ
     டெணுபஞ்ச ணையின்மருவு ...... பெருமாளே.
கடல் அலைபோல வருவதும், வஞ்சனைச் செயல்களால் வருவதுமான நல் வினை, தீ வினை எனப்படும் இரு வினைகளும், மயிர் நரைத்தலுக்கு இடம் கொடுக்கும் உடலும், மும்மலங்களும் அழியவும், சிவாமிர்தம் என்னும் கங்கை நீரில் மூழ்கி, திளைத்து விளையாடி, உள்ளத்தில் சிவமாகிய மங்கலப் பொருள் வந்து அழுந்தப் பதிய, என்னுடைய வடிவம் உன்னுடைய வடிவம் என்று சொல்லும்படி, விளங்கும் தேவர், முனிவர் கூட்டமும், பிரமனும், திருமாலும், (நான்) சிவ பெருமானது குமரனே என்று மகிழ, யானை முகத்தை உடைய கணபதி என் தம்பியே என்று (என்னிடம்) மகிழ்ச்சி கொள்ள, அடியேனிடத்தில் கருணையை மிகக் காட்ட (நீ) மயிலின் மேல் ஏறி, வேல் ஏந்தி, உன் தந்தையின் திரு நடனம் என்று சொல்லும்படி, உடன் இருந்து என்னுடன் பொருந்தி, அரிய மறைப் பொருளை இனி எனக்கும் அருள்வாயாக. குதிரை என்று நரிகளை மாற்றி ஒரு திருவிளையாடலாகக் காட்டி, ஒரு பாண்டிய மன்னனுக்கு இருந்த குதிரைகள் (ஓரிரவில்) இறந்துபடும்படியாக எழுந்தருளி வந்த மதுரை நடராஜப் பெருமான், பழிக்கு பயந்தவனாக என்னுடைய அருகில் இருப்பவன், செந்தாமரை போன்ற திரு உருவத்தினன், பவள நிறத்தினன் என்றும் சொல்லும்படியானவன், உமா தேவியின் கணவன் ஆகிய சிவ பெருமான் ஈன்ற மகனே, இருள் சூழ்ந்ததும், வஞ்சகச் செயல்கள் செய்வதுமான கிரெளஞ்ச மலையும், அதனிடம் இருந்த அசுரர்களும், எங்களுடைய (நல்வினை, தீவினை ஆகிய) இரண்டு வினைகளும், எரிபட்டுப் பொடியாகும்படியாக வேலைச் செலுத்தியவனே, என்னுடைய அன்பில் எப்போதும் உறைபவளும், வள்ளி மலைச் சாரலில் மகிழ்ந்த வஞ்சிக் கொடி போன்ற குறப் பெண்ணுமாகிய வள்ளியுடன் மதிக்கும்படியான பஞ்சு மெத்தையில் பள்ளி கொள்ளும் பெருமாளே. 
பாடல் 1250 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தானான தாத்த தானான தாத்த
     தானான தாத்த ...... தனதான
தீயூதை தாத்ரி பானீய மேற்ற
     வானீதி யாற்றி ...... கழுமாசைச் 
சேறூறு தோற்பை யானாக நோக்கு
     மாமாயை தீர்க்க ...... அறியாதே 
பேய்பூத மூத்த பாறோரி காக்கை
     பீறாஇ ழாத்தி ...... னுடல்பேணிப் 
பேயோன டாத்து கோமாளி வாழ்க்கை
     போமாறு பேர்த்து ...... னடிதாராய் 
வேயூறு சீர்க்கை வேல்வேடர் காட்டி
     லேய்வாளை வேட்க ...... வுருமாறி 
மீளாது வேட்கை மீதூர வாய்த்த
     வேலோடு வேய்த்த ...... இளையோனே 
மாயூர வேற்றின் மீதே புகாப்பொன்
     மாமேரு வேர்ப்ப ...... றியமோதி 
மாறான மாக்கள் நீறாக வோட்டி
     வானாடு காத்த ...... பெருமாளே.
நெருப்பு, காற்று, மண், நீர், உயர்ந்த விண் இந்த ஐம்பூதங்களால் விளங்குகின்றதும், ஆசை என்னும் சேறு ஊறியுள்ளதும், தோலால் ஆனதுமான பையாகிய இந்த உடம்பு, நானாக எண்ணுகின்ற பெரும் மாயையை ஒழிக்க அறியாமல், பேய்களும், பூதங்களும், வயதான பருந்துகளும், நரிகளும், காகங்களும் கிழித்து, இழுத்து உண்ணப் போகின்ற உடலை விரும்பிப் பாதுகாத்து, பேய் போன்ற நான் நடத்துகின்ற கோணங்கித்தனமான வாழ்க்கை தொலையும் வண்ணம் விலக்கவல்ல உனது திருவடிகளைத் தந்து அருள்வாயாக. புல்லாங் குழலில் வைத்துத் தடவும் சீரான கையில் வேல் ஏந்தும் வேடுவர்கள் (வாழும்) வள்ளிமலைக் காட்டில், பொருந்தி இருந்த வள்ளியை விரும்பித் திருமணம் செய்ய உருவத்தை மாற்றிக் கொண்டு, திரும்பாது காம ஆசை மேலெழ, பொருந்திய வேலுடனே, ஒற்றர் செய்தி அறியப் போவதுபோலச் சென்ற இளையவனே, ஒப்பற்ற மயிலின் மேல் ஏறி, பொன்னிறம் உடைய கிரெளஞ்ச மலையின் வேர் பறியும்படி அதனைத் தாக்கி, மாறுபட்டு எதிர்த்த அசுரர்கள் வெந்து சாம்பலாக ஓட்டி ஒழித்து, தேவர்களின் திருநாட்டைக் காப்பாற்றிய பெருமாளே.

பாடல் 1201 - பொதுப்பாடல்கள் 

ராகம் - ...; தாளம் -

தனதனன தனதனன தனன தாத்ததன     தனதனன தனதனன தனன தாத்ததன          தனதனன தனதனன தனன தாத்ததன ...... தனதான

விரைசொரியு ம்ருகமதமு மலரும் வாய்த்திலகு     விரிகுழலு மவிழநறு மெழுகு கோட்டுமுலை          மிசையில்வரு பகலொளியை வெருவ வோட்டுமணி ...... வகையாரம் 
விடுதொடைகள் நகநுதியி லறவும் வாய்த்தொளிர     விழிசெருக மொழிபதற அமுது தேக்கியகை          விதறிவளை கலகலென அழகு மேற்பொழிய ...... அலர்மேவும் 
இருசரண பரிபுரசு ருதிக ளார்க்கவச     மிலகுகடல் கரைபுரள இனிமை கூட்டியுள          மிதம்விளைய இருவரெனு மளவு காட்டரிய ...... அநுராகத் 
திடைமுழுகி யெனதுமன தழியு நாட்களினு     மிருசரண இயலும்வினை யெறியும் வேற்கரமு          மெழுதரிய திருமுகமு மருளு மேத்தும்வகை ...... தரவேணும் 
அரிபிரம ரடிவருட வுததி கோத்தலற     அடல்வடவை யனலுமிழ அலகை கூட்டமிட          அணிநிணமு மலைபெருக அறையும் வாச்சியமு ...... மகலாது 
அடல்கழுகு கொடிகெருட னிடைவி டாக்கணமு     மறுகுறளு மெறிகுருதி நதியின் மேற்பரவ          அருணரண முகவயிர வர்களு மார்ப்பரவ ...... மிடநாளும் 
பரவுநிசி சரர்முடிகள் படியின் மேற்குவிய     பவுரிகொடு திரியவரை பலவும் வேர்ப்பறிய          பகர்வரிய ககனமுக டிடிய வேட்டைவரு ...... மயில்வீரா 
படருநெறி சடையுடைய இறைவர் கேட்குரிய     பழயமறை தருமவுன வழியை யார்க்குமொரு          பரமகுரு பரனெனவு மறிவு காட்டவல ...... பெருமாளே.

வாசனை வீசும் கஸ்தூரியும் மலரும் பொருந்தி விளங்கும் பரந்த கூந்தலும் அவிழ்ந்து விழ, வாசனைப் பண்டங்கள் மெழுகப்பட்ட மலை போன்ற மார்பகங்களின் மேல் விளங்குவதும், சூரியனுடைய ஒளியையும் அஞ்சும்படி விரட்ட வல்ல ரத்தின வகைகள், முத்து இவைகளால் ஆன மாலைகளும், நகத்தின் நுனியால் ஏற்பட்ட நகரேகைகளும் நன்கு பொருந்தி விளங்க, கண்கள் செருக, பேச்சு பதற, அமுது நிரம்ப உண்ட கைகள் நடுக்கம் உற்று அசைவதால் வளையல்கள் கலகலென ஒலிக்க, அழகு மேலே எங்கணும் நிறைந்து பரவி விளங்க, மலர் போன்ற இரண்டு பாதங்களிலும் உள்ள சிலம்புகள் இசை வகைகளை ஒலிக்க, பரவச மயக்கம் விளக்கம் உறும் கடல் கரை புரண்டு ஓட, இனிமை கூடி மனத்தில் இன்பம் பெருக; ஆண் பெண் இருவர் உள்ளோம் என்னும் பிரிவின் அளவே காணுதற்கரிய காமப் பற்றின் இடையே முழுகி என் உள்ளம் அழிந்து கெடும் நாட்களிலும், இரண்டு திருவடிகளின் மேன்மைத் தகுதியையும், வினைகளை அறுத்துத் தள்ள வல்ல வேல் ஏந்திய கரங்களையும், எழுதுதற்கு முடியாத அழகுள்ள திருமுகங்களையும், உன் திருவருளையும் போற்றும் வழி வகையை எனக்கு நீ தந்தருள வேண்டும். திருமாலும், பிரமனும் திருவடியை வருடவும், கடல் கவிழ்ந்து புரண்டு ஒலி செய்யவும், வலிய வடவாமுகாக்கினி நெருப்பை அள்ளி வீசவும், பேய்கள் கூட்டம் கூடவும், வரிசையாய்க் கிடந்த மாமிசமும் மலை போல் பெருகவும், பேரொலியோடு அடிக்கப்படும் வாத்தியங்களும் நீங்காது ஒலிக்கவும், வலிய கழுகு, காக்கை, கருடன் இவைகளின் இடைவிடாது கூடிய கூட்டமும் மற்றும் பூத கணங்களும் அலை வீசும் ரத்த ஆற்றின் மேல் வந்து பரந்து சேரவும், சிவந்த போர்க் களத்து வயிரவர் கணங்களும் பேரொலி செய்யவும், நாள் தோறும் எங்கும் பரவி இருந்த அசுரர்களின் தலைகள் பூமியின் மேல் நிரம்பக் குவியவும், சுழற்சியுடன் திரியும்படி பல மலைகளும் வேரோடு பறிக்கப்பட்டு விழவும், சொல்லுதற்கரிய ஆகாய உச்சிகள் இடிபட்டு அதிரவும், வேட்டை ஆடுவது போலச் சுற்றி வரும் மயில் வீரனே, பரந்து விரியும் வகையதான சடையை உடைய சிவபெருமான் கேட்பதற்குரிய பழைய வேதம் புலப்படுத்தும் மெளன வழியை யாவருக்கும் ஒப்பற்ற மேலான குருபரன் என்று போற்ற நின்று, ஞான அறிவை புலப்படுத்த வல்ல பெருமாளே. 

பாடல் 1202 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தானத்த தந்த தந்த தானத்த தந்த தந்த     தானத்த தந்த தந்த ...... தனதான

வேலொத்து வென்றி யங்கை வேளுக்கு வெஞ்ச ரங்க     ளாமிக்க கண்க ளென்று ...... மிருதோளை 
வேயொக்கு மென்று கொங்கை மேல்வெற்ப தென்று கொண்டை     மேகத்தை வென்ற தென்று ...... மெழில்மாதர் 
கோலத்தை விஞ்ச வெஞ்சொல் கோடித்து வஞ்ச நெஞ்சர்     கூடத்தில் நின்று நின்று ...... குறியாதே 
கோதற்ற நின்ப தங்கள் நேர்பற்றி யின்ப மன்பு     கூர்கைக்கு வந்து சிந்தை ...... குறுகாதோ 
ஞாலத்தை யன்ற ளந்து வேலைக்கு ளுந்து யின்று     நாடத்தி முன்பு வந்த ...... திருமாலும் 
நாடத்த டஞ்சி லம்பை மாவைப்பி ளந்த டர்ந்து     நாகத்த லங்கு லுங்க ...... விடும்வேலா 
ஆலித்தெ ழுந்த டர்ந்த ஆலத்தை யுண்ட கண்ட     ராகத்தில் மங்கை பங்கர் ...... நடமாடும் 
ஆதிக்கு மைந்த னென்று நீதிக்குள் நின்ற அன்பர்     ஆபத்தி லஞ்ச லென்ற ...... பெருமாளே.

வெற்றி கொண்ட அழகிய கையில் உள்ள வேலாயுதத்தை நிகர்த்து, மன்மதனுடைய கொடிய மலர்ப் பாணங்களாக மேம்பட்டு விளங்கும் கண்கள் என்று உவமை கூறியும், இரண்டு தோள்களை மூங்கிலை நிகர்க்கும் என்றும், மார்பகங்கள் மேலான மலைக்கு ஒப்பானவை என்றும், கூந்தல் (கரு நிறத்தில்) மேகத்தையும் வென்றது என்று கூறியும், அழகிய (விலை) மாதர்களின் எழிலினை மேலான வகையில், விரும்பத் தக்க சொற்கள் கொண்டு அலங்கரித்துப் பேசி, வஞ்சக மனம் உடைய அப் பொது மகளிர்களின் வீட்டு முற்றத்தில் அடிக்கடி நின்று அவர்களைக் குறித்தே காலம் கழிக்காமல், குற்றம் இல்லாத உன் திருவடிகளை நேராகப் பற்றி, இன்பமும் அன்பும் மிகுந்து பெருகுதற்கு வேண்டிய மனத்தை அடைய மாட்டேனோ? பூமியை முன்பு ஓரடியால் (வாமனனாக வந்து) அளந்து, பாற்கடலினிடையே துயிலும் தன்னை நாடி ஓலமிட்ட (கஜேந்திரன்) என்னும் யானையின் முன்பு வந்து உதவிய திருமாலும், உனது உதவியை நாட, விசாலமான கிரவுஞ்ச மலையையும், மாமரமாக வடிவெடுத்த சூரனையும் பிளந்து நெருங்கி, மலைப் பிரதேசங்கள் எல்லாம் குலுங்கி அசையும்படி வேலைச் செலுத்திய வேலனே, ஒலித்து எழுந்து நெருங்கி வந்த ஆலகால விஷத்தைப் பருகி அடக்கிய கழுத்தை உடையவர், தமது உடலில் மங்கையாகிய பார்வதிக்கு இடது பாகம் தந்தவர், நடனம் ஆடுபவர் ஆகிய முதல்வராகிய சிவ பெருமானுக்குப் பிள்ளை என்று விளங்கி, நீதி நெறியில் நிற்கும் அன்பர்களுக்கு, அவர்களுக்கு ஆபத்து நேரிடும் போதில் அஞ்ச வேண்டாம் என்று அருளும் பெருமாளே. 

பாடல் 1203 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ஸாமா தாளம் - அங்கதாளம் - 5 1/2 
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2

தனதான தந்த தந்த தனதான தந்த தந்த     தனதான தந்த தந்த ...... தனதான

அடியார்ம னஞ்சலிக்க எவராகி லும்ப ழிக்க     அபராதம் வந்து கெட்ட ...... பிணிமூடி 
அனைவோரும் வந்து சிச்சி யெனநால்வ ருஞ்சி ரிக்க     அனலோட ழன்று செத்து ...... விடுமாபோற் 
கடையேன்ம லங்கள் முற்று மிருநோயு டன்பி டித்த     கலியோடி றந்து சுத்த ...... வெளியாகிக் 
களிகூர என்ற னுக்கு மயிலேறி வந்து முத்தி     கதியேற அன்பு வைத்து ...... னருள்தாராய் 
சடைமீது கங்கை வைத்து விடையேறு மெந்தை சுத்த     தழல்மேனி யன்சி ரித்தொர் ...... புரமூணும் 
தவிடாக வந்தெ திர்த்த மதனாக முஞ்சி தைத்த     தழல்பார்வை யன்ற ளித்த ...... குருநாதா 
மிடிதீர அண்ட ருக்கு மயிலேறி வஞ்சர் கொட்டம்     வெளியாக வந்து நிர்த்த ...... மருள்வோனே 
மினநூல்ம ருங்குல் பொற்பு முலைமாதி ளங்கு றத்தி     மிகுமாலொ டன்பு வைத்த ...... பெருமாளே.

உன் அடியார்கள் மனம் துன்பப்படும்படி அவர்களை யாராலும் பழித்தால், அதனால் பிழை ஏற்பட்டு, கெட்ட நோய்கள் வந்து பழித்தவர்களைப் பீடித்து, எல்லோரும் வந்து சீ சீ என்று அருவருப்புடன் இகழ, நாலு பேர் பரிகசித்துச் சிரிக்க, கடைசியில் இறந்து நெருப்பிடை வீழ்ந்து வெந்துவிடுவது போல, இழிந்தவனாகிய என்னுடைய ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்கள் யாவும், நல்வினை, தீவினை என்ற இரு நோய்களுடனும், என்னைப் பிடித்துள்ள தரித்திரத்தோடும் யாவுமாக அழிபட்டு, ஞான பரிசுத்த பரவெளி எனக்குப் புலப்பட்டதாகி, மகிழ்ச்சி மிகுந்து ஏற்பட, நீ எனக்காக மயில் மீது ஏறி வந்து, முக்தி வீட்டை யான் அடையுமாறு என்மீது அன்பு வைத்து, உனது திருவருளைத் தந்தருள்க. சடையின் மீது கங்கை நதியைச் சூடி, நந்தி வாகனத்தின் மீதேறும் எங்கள் தந்தை, பரிசுத்தமான நெருப்பு மேனியன் ஆகிய சிவபிரான் சிரித்தே ஒப்பற்ற திரிபுரம் மூன்றையும் எரித்துத் தவிடு பொடியாகும்படியும், வந்து தன்னை எதிர்த்த மன்மதனின் உடலைச் சிதைத்து அழியுமாறு செய்த (நெற்றியிலுள்ள) நெருப்புக்கண்ணின் சுடரில் ஒருநாள் வெளிப்பட்ட குருநாதனே, தேவர்களுக்கு எற்பட்ட துன்பம் தீர, மயில் மீதேறி, வஞ்சக அரக்கர்களின் இறுமாப்பும், செயல்களும் ஒடுங்கும்படிச் செய்து வெளிவந்து வெற்றி நடனம் புரிந்தவனே, மின்னல் போன்றும், நூல் போன்றும் நுண்ணிய இடையையும், அழகிய மார்பையும் உடைய பெண்ணாம் இளங் குறத்தி வள்ளியின் மீது மிக்க ஆசையுடன் அன்பு வைத்த பெருமாளே. 

பாடல் 1204 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தனதன தாத்தன தனதன தாத்தன     தனதன தாத்தன ...... தனதான

அடியில்வி டாப்பிண மடையவி டாச்சிறி     தழியுமுன் வீட்டுமு ...... னுயர்பாடை 
அழகொடு கூட்டுமி னழையுமின் வார்ப்பறை     யழுகையை மாற்றுமி ...... னொதியாமுன் 
எடுமினி யாக்கையை யெனஇடு காட்டெரி     யிடைகொடு போய்த்தமர் ...... சுடுநாளில் 
எயினர்கு லோத்தமை யுடன்மயில் மேற்கடி     தெனதுயிர் காத்திட ...... வரவேணும் 
மடுவிடை போய்ப்பரு முதலையின் வாய்ப்படு     மதகரி கூப்பிட ...... வளையூதி 
மழைமுகில் போற்கக பதிமிசை தோற்றிய     மகிபதி போற்றிடு ...... மருகோனே 
படர்சடை யாத்திகர் பரிவுற ராட்சதர்     பரவையி லார்ப்பெழ ...... விடும்வேலாற் 
படமுனி யாப்பணி தமனிய நாட்டவர்     பதிகுடி யேற்றிய ...... பெருமாளே.

வீட்டின் உள்ளே விடாது கிடந்திருக்கும் பிணத்தை அங்கேயே இருக்க விடாமல், கொஞ்சம் அழுகிப் போவதற்கு முன்னமேயே வீட்டுக்கு எதிரில் சிறப்புடன் பாடையை அழகாகக் கட்டுங்கள். நன்கு கட்டப்பட்ட பறை வாத்தியங்களை வரவழையுங்கள். அழுகையை நிறுத்துங்கள். பிணம் கெட்டு அழியும் முன்னர் உடலை எடுத்துச் செல்லுங்கள். - என்று கூறி சுடுகாட்டில் தீயின் இடையே கொண்டு போய்ச் சுற்றத்தார் சுட்டெரிக்கும் அந்த நாளில், வேடுவர் குலத்தைச் சேர்ந்த, உத்தம குணம் உடைய, வள்ளியோடு மயில் மேல் ஏறி விரைவாக என் உயிரைக் காப்பதற்கு வரவேண்டும். மடு இருந்த இடத்துக்குப் போய் பெரிய முதலையின் வாயில் அகப்பட்டிருந்த மதயானையாகிய கஜேந்திரன் கூப்பிட, சங்கை ஊதுபவனும், கரிய மேகம் போன்றவனும், பட்சிகளின் அரசனான கருடன் மேல் ஏறி வந்தவனும், இப்பூவுலகின் தலைவனுமாகிய திருமால் துதித்து ஏத்தும் மருகனே, பரந்த சடையை உடைய, கடவுள் உண்டென்று நம்புவோர்க்குப் பொருளாயுள்ள, சிவபெருமான் அன்பு கொள்ளும் வகையில், அரக்கர்கள் கடலில் கூச்சலிட்டு அலறும்படிச் செலுத்திய வேலால் அவர்கள் அழியும்படி கோபித்து, தன்னைப் பணிந்த, பொன்னுலகத்தில் வாழும் தேவர்களின் தலைவனான, இந்திரனை மீண்டும் குடி ஏற்றிய பெருமாளே. 

பாடல் 1205 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தத்தன தான தானன தத்தன தான தானன     தத்தன தான தானன ...... தனதான

அப்படி யேழு மேழும்வ குத்துவ ழாது போதினி     னக்ரம்வி யோம கோளகை ...... மிசைவாழும் 
அக்ஷர தேவி கோவின்வி திப்படி மாறி மாறிய     னைத்துரு வாய காயம ...... தடைவேகொண் 
டிப்படி யோனி வாய்தொறு முற்பவி யாவி ழாவுல     கிற்றடு மாறி யேதிரி ...... தருகாலம் 
எத்தனை யூழி காலமெ னத்தெரி யாது வாழியி     னிப்பிற வாது நீயருள் ...... புரிவாயே 
கற்பக வேழ மேய்வன பச்சிள ஏனல் மீதுறை     கற்புடை மாது தோய்தரு ...... மபிராம 
கற்புர தூளி லேபன மற்புய பாக சாதன     கற்பக லோக தாரண ...... கிரிசால 
விப்ரச மூக வேதன பச்சிம பூமி காவல     வெட்சியு நீப மாலையு ...... மணிவோனே 
மெத்திய ஆழி சேறெழ வெற்பொடு சூர னீறெழ     விக்ரம வேலை யேவிய ...... பெருமாளே.

அவ்வாறாக பதினான்கு உலகங்களும்* தவறில்லாமல் படைத்து, தாமரை மலரில் அமர்ந்து முதன்மை ஸ்தானம் வகிப்பவரும், அண்ட கோளத்திலும் வாழ்கின்றவரும், சரஸ்வதி தேவியின் கணவனுமான பிரமதேவன் எழுதியுள்ள விதியின்படி, (பிறப்புக்கள்) மாறி மாறி, எல்லா உருவங்களையும் கொண்ட உடல்களை முறையே நான் எடுத்து, இவ்வாறாக (எண்பத்து நான்கு லக்ஷம்) கருக்குழி பேதங்களிலும் தோன்றிப் பிறந்தும், பின்னர் இறந்தும், இங்ஙனம் உலகில் தடுமாற்றம் அடைந்து அலைகின்ற காலம் எத்தனை ஊழி காலம் என்று எனக்குத் தெரியாது. (இறைவனே) நீ வாழ்வாயாக. நான் இனிப் பிறவாமல் நீ அருள் புரிவாயாக. தென்னை, கரும்பு இவைகளுக்கு ஒப்பாக (நீண்டு வளர்ந்துள்ள) பசுமையான இளந் தினைகள் உள்ள புனத்தில் வீற்றிருந்த கற்பு நிறைந்த வள்ளி தழுவும் அழகனே, பச்சைக் கற்பூரப் பொடி பூசிய, மல் யுத்தத்துக்கு ஏற்ற புயத்தை உடையவனே, இந்திரனுடைய (நினைத்ததைத் தரும்) கற்பக மரங்கள் உள்ள பொன்னுலகத்துக்கு நிலைத்த வாழ்வைத் தந்தவனே, மலைக் கூட்டத்தில் விளங்குபவனே, அந்தணர் கூட்டத்தில் இருப்பவனே, வேதத்தில் உள்ளவனே, மேற் புறத்தில் உள்ள விண்ணுலகின் காவலனே, வெட்சியும் கடப்ப மாலையையும் அணிபவனே, நிரம்பிய கடல் சேறுபட்டு எழவும், எழு கிரிகளும் சூரனும் பொடிபட்டு அழியவும், பராக்ரமம் பொருந்திய வேலைச் செலுத்திய பெருமாளே. 
* கீழ் உலகங்கள் ஏழு: அதலம், விதலம், சுதலம், தராதலம், மகாதலம், ரசாதலம், பாதாளம்.மேல் உலகங்கள் ஏழு: பூலோகம், புவலோகம், சுவலோகம், ஜனலோகம், தபோலோகம், மகாலோகம், சத்திய லோகம்.

பாடல் 1206 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தனன தானனம் தனன தானனம்     தனன தானனம் ...... தனதான

அயில்வி லோசனங் குவிய வாசகம்     பதற ஆனனங் ...... குறுவேர்வுற் 
றளக பாரமுங் குலைய மேல்விழுந்     ததர பானமுண் ...... டியல்மாதர் 
சயில பாரகுங் குமப யோதரந்     தழுவு மாதரந் ...... தமியேனால் 
தவிரொ ணாதுநின் கருணை கூர்தருந்     தருண பாதமுந் ...... தரவேணும் 
கயிலை யாளியுங் குலிச பாணியுங்     கமல யோனியும் ...... புயகேசன் 
கணப ணாமுகங் கிழிய மோதுவெங்     கருட வாகனந் ...... தனிலேறும் 
புயலி லேகரும் பரவ வானிலும்     புணரி மீதுனுங் ...... கிரிமீதும் 
பொருநி சாசரன் தனது மார்பினும்     புதைய வேல்விடும் ...... பெருமாளே.

வேல் போன்ற கண்கள் குவியவும், பேச்சு பதறவும், முகத்தில் சிறு வேர்வை துளிர்க்கவும், இறுகக் கட்டியிருந்த கூந்தல் பாரம் கலையவும், மேல் விழுந்து வாயிதழ் ஊறலைப் பருகி, அழகிய வேசியர்களின் மலை போன்று கனத்த, குங்குமம் கொண்ட மார்பகங்களைத் தழுவ வேண்டும் என்கின்ற ஆசை அடியேனால் நீக்க முடியாததாய் இருக்கின்றது. (இவ்வாசையை நீக்க) உனது கருணை மிக்குள்ள இளமை பொலியும் திருவடிகளை எனக்குத் தந்தருள வேண்டும். கயிலைக்குத் தலைவனான சிவபெருமானும், வஜ்ராயுத கரத்தனான இந்திரனும், திருமாலின் உந்தித் தாமரையில் தோன்றிய பிரமனும், பாம்புகளுக்குத் தலைவனான ஆதிசேஷனுடைய கூட்டமான படங்களின் முகம் அறும்படி மோத வல்ல கொடிய கருட வாகனத்தின் மேல் ஏறும் மேக வண்ணனாம் திருமாலும், தேவர்களும் போற்ற, ஆகாயத்திலும், கடல் மீதும், மலை மீதும் இருந்து சண்டை செய்யும் அசுரனாகிய சூரன் மார்பிலே புதைந்து அழுந்தும்படி வேலைச் செலுத்திய பெருமாளே. 

பாடல் 1207 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தனத்த தத்தனா தனத்த தத்தனா     தனத்த தத்தனா ...... தனதான

அருக்கி மெத்ததோள் திருத்தி யுற்றுமார்     பசைத்து வக்குமா ...... லிளைஞோரை 
அழைத்து மிக்ககா சிழைத்து மெத்தைமீ     தணைத்து மெத்தமா ...... லதுகூர 
உருக்கி யுட்கொள்மா தருக்கு ளெய்த்துநா     வுலற்றி யுட்குநா ...... ணுடன்மேவி 
உழைக்கு மத்தைநீ யொழித்து முத்திபா     லுறக்கு ணத்ததா ...... ளருள்வாயே 
சுருக்க முற்றமால் தனக்கு மெட்டிடா     தொருத்தர் மிக்கமா ...... நடமாடுஞ் 
சுகத்தி லத்தர்தா மிகுத்த பத்திகூர்     சுரக்க வித்தைதா ...... னருள்வோனே 
பெருக்க வெற்றிகூர் திருக்கை கொற்றவேல்     பிடித்து குற்றமா ...... ரொருசூரன் 
பெலத்தை முட்டிமார் தொளைத்து நட்டுளோர்     பிழைக்க விட்டவோர் ...... பெருமாளே.

அருமை பாராட்டி நன்றாகத் தோள்களை ஒழுங்கு படுத்தியும், மார்பை அசைத்தும், தம்மைக் கண்டு மகிழ்ந்து மோகம் கொண்ட இளைஞர்களை அழைத்து, நிரம்பப் பணத்தை அவர்கள் தரச்செய்து, மெத்தையின் மீது அணைத்து, நிரம்பக் காமம் மிகும்படி அவர்கள் மனதை உருக்கி தம் வசப்படுத்தும் விலைமாதர்களுக்கு நான் இளைப்புற்று, நா வறண்டு, அஞ்சி, நாணம் கொண்டவனாக இருந்து, காலம் தள்ளுவதை நீ ஒழித்து அருள, முக்தி வீட்டை நான் அடைய, அந்த மேன்மை தங்கிய திருவடியைத் தந்து அருள்வாயாக. குறள் வடிவத்தில் வாமனராக வந்த (பின் வானளவு உயர்ந்த) திருமாலாலும் அளவிட முடியாத ஒப்பற்ற பெருமான், மிகச் சிறந்த நடனம் ஆடும் இன்பம் கொண்ட சிவபெருமானுக்கு மிக்க பக்தி முதிர்ந்து பெருக ஞானத்தை (மூலப் பொருளை) உபதேசித்து அருளியவனே, நிரம்ப வெற்றியே மிக்க அழகிய கரத்தில் வீர வேல் கொண்டு, குற்றங்கள் நிறைந்த ஒப்பற்ற சூரனுடைய பலத்தைத் தாக்கி, அவனது மார்பைத் தொளைத்து, நட்புடைய தேவர்கள் பிழைக்க அந்த வேலைச் செலுத்திய ஒப்பற்ற பெருமாளே. 

பாடல் 1208 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தனந்த தாத்தனத் தனந்த தாத்தனத்     தனந்த தாத்தனத் ...... தனதான

அரும்பி னாற்றனிக் கரும்பி னாற்றொடுத்     தடர்ந்து மேற்றெறித் ...... தமராடும் 
அநங்க னார்க்கிளைத் தயர்ந்த ணாப்பியெத்     தரம்பை மார்க்கடைக் ...... கலமாகிக் 
குரும்பை போற்பணைத் தரும்பு றாக்கொதித்     தெழுந்து கூற்றெனக் ...... கொலைசூழுங் 
குயங்கள் வேட்டறத் தியங்கு தூர்த்தனைக்     குணங்க ளாக்கிநற் ...... கழல்சேராய் 
பொருந்தி டார்ப்புரத் திலங்கை தீப்படக்     குரங்கி னாற்படைத் ...... தொருதேரிற் 
புகுந்து நூற்றுவர்க் கொழிந்து பார்த்தனுக்     கிரங்கி யாற்புறத் ...... தலைமேவிப் 
பெருங்கு றோட்டைவிட் டுறங்கு காற்றெனப்     பிறங்க வேத்தியக் ...... குறுமாசூர் 
பிறங்க லார்ப்பெழச் சலங்கள் கூப்பிடப்     பிளந்த வேற்கரப் ...... பெருமாளே.

அரும்பு கொண்ட மலர்ப் பாணங்களாலும், ஒப்பற்ற கரும்பு வில்லாலும் நெருங்கி மேலே படும்படிச் செலுத்திப் போர் செய்யும், மன்மதனுக்கு இளைப்புற்று, சோர்வு அடைந்து, ஏமாற்றி வஞ்சிக்கும் விலைமாதர்களுக்கு அடைக்கலப் பொருள் போல் அகப்பட்டு, (தென்னங்) குரும்பை போலப் பருத்து வெளித்தோன்றி கோபித்து எழுந்து, யமன் போலக் கொலைத் தொழிலை மேற்கொள்ளும் மார்பகங்களை விரும்பி மிகவும் சஞ்சலப்படும் காமுகனாகிய என்னை நற்குணங்களைக் கொண்டவனாகும்படிச் செய்து நல்ல திருவடியில் சேர்ப்பாயாக. பகைவர்களுடைய ஊராகிய இலங்கை தீப்பட்டு எரியும்படி குரங்கினால் (அநுமாரால்) செய்வித்து, ஒப்பற்ற தேரில் (கண்ணனாக) வீற்றிருந்து (துரியோதனனாதி) நூறு கெளரவர்களுக்கு விலகினவனாகி, அர்ச்சுனனிடம் இரக்கம் உற்றவனாகி, ஆலிலை மேல் கடலில் பள்ளி கொண்டு, (சூரன் ஒழிந்தான் என்ற நிம்மதியுடன்) பெரிய குறட்டை விட்டு, பெரு மூச்சுக் காற்றென (திருமால்) அறி துயிலில் விளங்கவே, கலக்கமுறும் மாமரமாகி நின்ற சூரனும், (அவனுக்கு அரணாயிருந்த) ஏழு மலைகளும் அஞ்சிக் கூச்சல் இட, கடல்கள் ஆரவாரிக்க, (அந்த மாமரத்தையும், மலைகளையும்) பிளந்தெறிந்த வேலாயுதத்தைக் கரத்தில் ஏந்திய பெருமாளே. 

பாடல் 1209 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தனதன தத்தனாத் தனதன தத்தனாத்     தனதன தத்தனாத் ...... தனதான

அலமல மிப்புலாற் புலையுடல் கட்டனேற்     கறுமுக நித்தர்போற் ...... றியநாதா 
அறிவிலி யிட்டுணாப் பொறியிலி சித்தமாய்த்     தணிதரு முத்திவீட் ...... டணுகாதே 
பலபல புத்தியாய்க் கலவியி லெய்த்திடாப்     பரிவொடு தத்தைமார்க் ...... கிதமாடும் 
பகடிது டுக்கன்வாய்க் கறையனெ னத்தராப்     படியில்ம னித்தர்தூற் ...... றிடலாமோ 
குலகிரி பொற்றலாய்க் குரைகடல் வற்றலாய்க்     கொடியஅ ரக்கரார்ப் ...... பெழவேதக் 
குயவனை நெற்றியேற் றவனெதிர் குட்டினாற்     குடுமியை நெட்டைபோக் ...... கியவீரா 
கலைதலை கெட்டபாய்ச் சமணரை நட்டகூர்க்     கழுநிரை முட்டஏற் ...... றியதாளக் 
கவிதையும் வெற்றிவேற் கரமுடன் வற்றிடாக்     கருணையு மொப்பிலாப் ...... பெருமாளே.

துன்பப் படுவதற்கென்றே பிறந்தவனாகிய எனக்கு, போதும் போதும், இந்த மாமிசப் பிண்டமாகிய இழிவான உடல், ஓ ஆறுமுக நாதனே, ஜீவன் முக்தர்கள் போற்றும் தலைவனே, அறிவல்லாதவன் நான், ஒருவருக்கு இட்ட பின் சாப்பிட வேண்டும் என்ற அறிவு இல்லாதவன், மனதை ஒடுக்கி அழகு நிறைந்த முக்தி வீட்டைச் சேராமல், பலப்பல வகையில் புத்தியைச் செலுத்தி, சிற்றின்பத்தில் களைத்து, காதலுடன் கிளி போன்ற பெண்களுக்கு இனிமைப் பேச்சுகளைப் பேசும் வெளி வேஷக்காரன், துடுக்கானவன், வாய் மாசு படிந்தவன் என்று பூமியில் உள்ள மனிதர்கள் என்னைக் குறை கூறிப் பழிக்க இடம் தரலாமோ? குலகிரிகளான ஏழு மலைகளும் கிரெளஞ்சமும் பாழ் இடமாய் அழிபட்டு, ஒலிக்கும் கடல் வற்றிப்போய், கொடுமை வாய்ந்த அரக்கர்களின் ஆரவாரம் கிளம்ப, வேதம் படைத்த பிரமனை, நெற்றியில் படும்படி அவனைக் குட்டிய குட்டால், அவனுடைய குடுமியையும் ஆணவத்தையும் ஒருங்கே சிதற அடித்த வீரனே, கலை ஞானம் அடியோடு கெட்டுப் போன, கோரைப்பாய் உடை உடுத்தியவர்களான சமணர்களை, நடப்பட்டிருந்த கூர்மையான கழு மரங்களில் வரிசையாக, ஒருவர் மீதம் இல்லாமல், ஏற்றின (திருஞானசம்பந்தராக வந்த பெருமாளே), தாளத்துடன் பாடும் பாடல்களும், வெற்றி வேல் ஏந்தும் திருக்கரமும், வற்றாத கருணையும் உள்ள இணை இல்லாத பெருமாளே. 

பாடல் 1210 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தனன தான தந்த தந்த தனன தான தந்த தந்த     தனன தான தந்த தந்த ...... தனதான

அளக பார முங்கு லைந்து அரிய பார்வை யுஞ்சி வந்து     அணுகி யாக மும்மு யங்கி ...... யமுதூறல் 
அதர பான மும்நு கர்ந்து அறிவு சோர வும்மொ ழிந்து     அவச மாக வும்பு ணர்ந்து ...... மடவாரைப் 
பளக னாவி யுந்த ளர்ந்து பதறு மாக மும்ப யந்து     பகலி ராவை யும்ம றந்து ...... திரியாமற் 
பரம ஞான முந்தெ ளிந்து பரிவு நேச முங்கி ளர்ந்து     பகரு மாறு செம்ப தங்கள் ...... தரவேணும் 
துளப மாய னுஞ்சி றந்த கமல வேத னும்பு கழ்ந்து     தொழுது தேட ரும்ப்ர சண்ட ...... னருள்பாலா 
சுரர்கள் நாய கன்ப யந்த திருவை மாம ணம்பு ணர்ந்து     சுடரு மோக னம்மி குந்த ...... மயில்பாகா 
களப மார்பு டன்த யங்கு குறவர் மாது டன்செ றிந்து     கலவி நாட கம்பொ ருந்தி ...... மகிழ்வோனே 
கடிய பாத கந்த விர்ந்து கழலை நாடொ றுங்கி ளர்ந்து     கருது வார்ம னம்பு குந்த ...... பெருமாளே.

கூந்தல் பாரமும் கலைந்து, அருமையான கண் பார்வையும் செந்நிறம் உற்று, நெருங்கிச் சென்று, அமுது போல் இனித்து ஊறும் வாயிதழ் ஊறலைப் பருகி அனுபவித்து, அறிவு தடுமாற்றத்துடன் பேசி, தன்வசமின்றி விலைமாதர்களைப் புணரும் குற்றமுள்ளவன் நான். ஆவியும் தளர்ந்து, கலக்கமுற்ற உடலும் பயந்து, இராப் பகல் பிரிவினையையும் மறந்து நான் அலைச்சல் அடையாமல், மேலான ஞானத்தைத் தெளிந்து உணர்ந்து, அன்பும் நட்பும் கலந்து மேலெழுந்து, உன்னைப் போற்றிப் புகழுமாறு, உனது செவ்விய திருவடிகளைத் தர வேண்டும். துளசி மாலை அணிந்த திருமாலும், சிறந்த தாமரை மேல் வீற்றிருக்கும் பிரமனும் புகழ்ந்து வணங்கித் தேடுதற்கு அரியரான பெரு வீரன் சிவபெருமான்அருளிய குழந்தையே, தேவர்களின் தலைவனான இந்திரன் பெற்ற அழகிய தேவயானையைச் சிறப்புடன் திருமணம் செய்து கூடியவனே, விளங்கும்படியான கவர்ச்சி மிகப் பெற்ற மயில் வாகனனே, கலவைச் சாந்து பூசின மார்புடன் விளங்கும், குறவர் பெண்ணாகிய வள்ளியுடன் நெருங்கிப் பழகிச் சேர்க்கை நாடகம் உடையவனாய் மகிழ்ந்தவனே, பொல்லாத பாபச் செயல்களை விட்டுவிட்டு, உன் திருவடியை நாள் தோறும் நிரம்பக் கருத்தில் தியானிக்கும் உன் அடியார்களது மனதில் புகுந்து விளங்கும் பெருமாளே. 

பாடல் 1211 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ஹம்ஸவிநோதினி தாளம் - அங்தாளம் - 6 
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகதிமி-2

தானான தான தனதன தானான தான தனதன     தானான தான தனதன ...... தனதான

ஆசார வீன னறிவிலி கோபாப ராதி யவகுண     னாகாத நீச னநுசிதன் ...... விபா£தன் 
ஆசாவி சார வெகுவித மோகாச ¡£த பரவச     னாகாச நீர்ம ணனல்வளி ...... யுருமாறி 
மாசான நாலெண் வகைதனை நீநானெ னாத அறிவுளம்     வாயாத பாவி யிவனென ...... நினையாமல் 
மாதாபி தாவி னருணல மாறாம காரி லெனையினி     மாஞான போத மருள்செய ...... நினைவாயே 
வீசால வேலை சுவறிட மாசூரர் மார்பு தொளைபட     வேதாள ராசி பசிகெட ...... அறைகூறி 
மேகார வார மெனஅதிர் போர்யாது தான ரெமபுர     மீதேற வேல்கொ டமர்செயு ...... மிளையோனே 
கூசாது வேட னுமிழ்தரு நீராடி யூனு ணெனுமுரை     கூறாம னீய அவனுகர் ...... தருசேடங் 
கோதாமெ னாம லமுதுசெய் வேதாக மாதி முதல்தரு     கோலோக நாத குறமகள் ...... பெருமாளே.

ஒழுக்கக் குறைவு உடையவன், அறிவில்லாதவன், கோபம் காரணமாகக் குற்றங்கள் பல செய்பவன், கெட்ட குணத்தை உடையவன், யாருக்கும் பயனாகாத இழிந்த குணத்தவன், தகாத காரியங்களைச் செய்யும் அசுத்தன், மாறுபாடான புத்தியை உடையவன், (மண், பெண், பொன் என்ற) மூவாசைகளிலே எண்ணத்தை வைத்து, பலவிதமான ஆசைச் செயல்களைச் செய்து தன்வசம் இழந்தவன், ஆகாயம், நீர், மண், தீ, காற்று என்ற பஞ்சபூதச் சேர்க்கையால் வெவ்வேறு பிறவிகளில் பல உடல்களை எடுத்து, குற்றங்களுடன் கலந்த முப்பத்திரண்டு* தத்துவங்களைக் கொண்ட இந்த உடல்களை நீ என்பதும் நான் என்பதுமான பிரிவைக் காணாத, ஞான உள்ளம் வாய்க்கப் பெறாத பாவி, இத்தனையும் இவன் என்று நினைத்து என்னை நீ ஒதுக்கி விடாமல், தாய் தந்தையரின் அருள் நிறைந்த உபகாரச் செயல்கள் மாறாத குழந்தைகள் போல, உன் குழந்தையாகிய என்மீது இனிமேலாயினும் சிறந்த ஞானோபதேசத்தை அருள்வதற்கு உன் திருவுள்ளத்தில் நினைப்பாயாக. அகன்ற சமுத்திரமானது வற்றிப் போகவும், பெரிய சூரன் முதலியோரது மார்புகள் தொளைபடவும், வேதாள கணங்களின் பசி (சூர சம்ஹாரத்தால்) தீர்ந்திடவும், போருக்கு வாருங்கள் என்று அசுரர்களைக் கூவி அழைத்து, மேகங்களின் பெரும் ஆரவாரமான இடியோசை போல முழங்கும் போரில், அரக்கர்கள் யம பட்டணம் போய்ச் சேரும்படியாக, வேலைக் கொண்டு போர் செய்த இளையோனே, கொஞ்சமும் தயங்காது வேடன் கண்ணப்பன் வாயினின்று உமிழ்ந்த நீர் அபிஷேகத்தைப் பெற்றுக்கொண்டு, இந்த மாமிசம் சுவையானது, இதை உண்டருள்க என்று அவன் கூறிய சொல்லைக் கேட்டு, நிரம்பவும் அவன் தருவதை, அந்த வேடன் எச்சில் செய்து தந்த மீதம் குற்றமுள்ளது என்று பாவிக்காமல் அமுதாக எண்ணி உண்டு அருளியவரும், வேதங்களுக்கும் ஆகமங்களுங்கும் ஆதி முதல்வர் ஆனவருமான சிவபிரான் பெற்றெடுத்த அரசனே, இந்த உலகத்துக்கெல்லாம் நாதனே, குறமகள் வள்ளியின் பெருமாளே. 
* 32 தத்துவங்கள் பின்வருமாறு:ஆத்ம தத்துவம் 20, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5. 
** 'யாது தானர்' என்றால் திதியின் மக்கள் யாதுக்களும், தனுவின் மக்கள் தானவருமாகிய அரக்கர்கள்.இவர்களே அரக்கர்குல முன்னோடிகள் ஆவர்.

பாடல் 1212 - பொதுப்பாடல்கள் 
ராகம் - யமுனா கல்யாணி தாளம் - ஆதி

தானனா தத்த தானனா தத்த     தானனா தத்த ...... தனதான

ஆசைகூர் பத்த னேன்மனோ பத்ம     மானபூ வைத்து ...... நடுவேயன் 
பானநூ லிட்டு நாவிலே சித்ர     மாகவே கட்டி ...... யொருஞான 
வாசம்வீ சிப்ர காசியா நிற்ப     மாசிலோர் புத்தி ...... யளிபாட 
மாத்ருகா புஷ்ப மாலைகோ லப்ர     வாளபா தத்தி ...... லணிவேனோ 
மூசுகா னத்து மீதுவாழ் முத்த     மூரல்வே டிச்சி ...... தனபார 
மூழ்குநீ பப்ர தாபமார் பத்த     மூரிவே ழத்தின் ...... மயில்வாழ்வே 
வீசுமீ னப்ப யோதிவாய் விட்டு     வேகவே தித்து ...... வருமாசூர் 
வீழமோ திப்ப ராரைநா கத்து     வீரவேல் தொட்ட ...... பெருமாளே.

உன் மீது ஆசை மிகுந்த பக்தியை உடைய நான் மனம் எனப்படும் தாமரை மலரை வைத்து, இடையில் அன்பு என்னும் நாரைக் கொண்டு, நாக்கு என்னும் இடத்திலே அழகான ஒரு மாலையைத் தொடுத்து, அந்த மாலையின் மீது ஒப்பற்ற ஞானம் என்னும் நறுமணத்தைத் தடவி, அந்த மாலை மிக்க ஒளியுடன் விளங்கவும், அதைச் சுற்றி குற்றமற்ற ஒரு அறிவு என்ற வண்டு மொய்த்துப் பாடவும், மாத்ருகா மந்திர* மாலையான இந்தப் பூமாலையை அழகிய பவளம் போல் சிவந்த திருவடிகளில் அணிவிக்கும் பாக்கியத்தைப் பெறுவேனோ? சிள்வண்டுகள் மொய்க்கும் காட்டிலே வாழ்கின்ற, முத்தை நிகர்த்த அழகிய பற்களை உடைய, வேடர் குலப்பெண் வள்ளியின் மார்பகத்தில் முழுகி அழுந்திக் கிடக்கும், கடப்ப மாலையைச் சிறப்பாக அணியும், மார்பை உடைய ஐயனே, வலிமையான ஐராவத யானை வளர்த்த மயிலின் சாயலுள்ள தேவயானையின் மணவாளனே, அலை வீசும், மீன்கள் மிகுந்த, கடல் பேரொலியோடு வெந்து வற்ற, தேவர்களை வருத்தித் துன்புறுத்தி வந்த பெரும் சூரன் அழிபட்டு விழ, தாக்குதல் செய்து, பருத்த அடிப்பாகத்தை உடைய கிரெளஞ்சமலை மீது வீரம் பொருந்திய வேலாயுதத்தைச் செலுத்திய பெருமாளே. 
* வடமொழியில் அ முதல் க்ஷ முடிய உள்ள 51 அக்ஷரங்களைக் கொண்ட மாத்ருகா புஷ்ப மாலை.சுப்ரமண்ய பராக்ரமம் என்ற நூலில் வரும் இந்த மந்திரம், முருகன் 51 அக்ஷர உருவில் இருப்பதை விளக்குகிறது.

பாடல் 1213 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தானத் தனத்ததன தானத் தனத்ததன     தானத் தனத்ததன ...... தனதான

ஆசைக் கொளுத்திவெகு வாகப் பசப்பிவரு     மாடைப் பணத்தையெடெ ...... னுறவாடி 
ஆரக் கழுத்துமுலை மார்பைக் குலுக்கிவிழி     யாடக் குலத்துமயில் ...... கிளிபோலப் 
பேசிச் சிரித்துமயிர் கோதிக் குலைத்துமுடி     பேதைப் படுத்திமய ...... லிடுமாதர் 
பீறற் சலத்துவழி நாறப் படுத்தியெனை     பீடைப் படுத்துமய ...... லொழியாதோ 
தேசத் தடைத்துபிர காசித் தொலித்துவரி     சேடற் பிடுத்துதறு ...... மயில்வீரா 
தேடித் துதித்தஅடி யார்சித் தமுற்றருளு     சீர்பொற் பதத்தஅரி ...... மருகோனே 
நேசப் படுத்தியிமை யோரைக் கெடுத்தமுழு     நீசற் கனத்தமுற ...... விடும்வேலா 
நேசக் குறத்திமய லோடுற் பவித்தபொனி     நீர்பொற் புவிக்குள்மகிழ் ...... பெருமாளே.

காமத்தை மூட்டி, வெகு பக்குவமாக இனிமையாகப் பேசி, வரவேண்டிய பொற்காசை எடுத்துத்தா என்று உரிமையுடன் நட்புப் பேச்சுக்கள் பேசி, முத்து மாலை அணிந்த கழுத்தையும், மார்பகங்களையும் குலுக்கி, கண்கள் அசைய, சிறப்புள்ள மயில் போல உலவியும் கிளி போலப் பேசியும், சிரித்தும், தலை மயிரைக் கோதிவிட்டும், அவிழ்த்தும் (எனக்குப்) பேதைமையை ஊட்டி மயக்கத்தைத் தருகின்ற விலைமாதர்களின் கிழிபட்டதும், சிறு நீர் பிரியும் நாற்றமுடைய வழியையும் வெளிக்காட்டி என்னைத் துன்பத்துக்கு ஆளாக்கும் காம மயக்கம் என்னை விட்டு நீங்காதோ? ஒளிமிக்க மாணிக்கத்தைத் தன்னுள் கொண்டதும், பிரகாசம் உடையதும், சீறி ஒலிப்பதும், கோடுகளை உடையதுமான ஆதிசேஷனைப் பிடித்து உதறி எறியும் மயில் மேல் அமரும் வீரனே, நீ வீற்றிருக்கும் தலங்களைத் தேடி உன்னைப் போற்றும் அடியார்களுடைய உள்ளத்தில் நின்று அருள் புரியும், சிறப்பையும் அழகையும் கொண்ட திருவடியை உடையவனே, திருமாலின் மருகனே, அன்பே இல்லாமல் தேவர்களைக் கெடுத்த முற்றிலும் இழிவான அசுரர்களுக்கு கேடு உண்டாகும்படியாக செலுத்திய வேலாயுதனே, அன்பு நிறைந்த குறப் பெண்ணாகிய வள்ளி உன் மீது காதலுடன் பிறந்த இடமாகிய வள்ளி மலையில் மகிழ்ந்து வீற்றிருப்பவனே, பொன்னி (காவேரி) ஆறு பாயும் அழகிய புவிக்குள் (அதாவது, வயலூர், திரிசிராப்பள்ளி, சுவாமி மலை முதலிய தலங்களில்) மகிழ்ச்சி கொள்ளும் பெருமாளே. 

பாடல் 1214 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தான தான தனத்தன தான தான தனத்தன     தான தான தனத்தன ...... தனதான

ஆசை நேச மயக்கிகள் காசு தேடு மனத்திகள்     ஆவி சோர வுருக்கிகள் ...... தெருமீதே 
யாவ ரோடு நகைப்பவர் வேறு கூறு விளைப்பவர்     ஆல கால விழிச்சிகள் ...... மலைபோலு 
மாசி லாத தனத்தியர் ஆடை சோர நடப்பவர்     வாரி யோதி முடிப்பவர் ...... ஒழியாமல் 
வாயி லூற லளிப்பவர் நாளு நாளு மினுக்கிகள்     வாசல் தேடி நடப்பது ...... தவிர்வேனோ 
ஓசை யான திரைக்கடல் ஏழு ஞால முமுற்றருள்     ஈச ரோடு றவுற்றவள் ...... உமையாயி 
யோகி ஞானி பரப்ரமி நீலி நார ணியுத்தமி     ஓல மான மறைச்சிசொல் ...... அபிராமி 
ஏசி லாத மலைக்கொடி தாய்ம னோம ணிசற்குணி     ஈறி லாத மலைக்கொடி ...... அருள்பாலா 
ஏறு மேனி யொருத்தனும் வேத னான சமர்த்தனும்     ஈச னோடு ப்ரியப்படு ...... பெருமாளே.

ஆசையும் அன்பும் காட்டி மயக்குபவர்கள், பொருள் தேடுவதிலேயே மனத்தைச் செலுத்துபவர்கள், உயிர் சோர்ந்து போகும்படி உள்ளத்தை உருக்குபவர்கள், தெருவில் போகும் எல்லோருடனும் சிரிப்பவர்கள், குணம் வேறுபடும் தன்மையை உண்டு பண்ணுபவர்கள், ஆலகால விஷத்தைப் போல கண்களை உடையவர்கள், மலையைப் போன்று பருத்த, மறு இல்லாததான மார்பை உடையவர்கள், ஆடை நெகிழும்படி நடப்பவர்கள், கூந்தலை வாரி முடிப்பவர்கள், இடைவிடாது, வாயில் அதர பானம் தருபவர்கள், நாள் தோறும் தங்களை அழகுபடுத்திக் கொள்ளுபவர்கள் (ஆகிய விலைமாதர்களின்) வீட்டு வாயிலைத் தேடி நடக்கும் வழக்கத்தை விடமாட்டேனோ? ஒலி செய்யும் அலை வீசும் ஏழு கடல்களிலும், பூமியிலும் ஒன்றி இருந்து அருள்செய்யும் சிவபெருமானுடன் இணைந்து இருப்பவள், உமை அம்மை, யோகத்திலிருப்பவள், ஞானி, முழுமுதல் தேவி, நீல நிறத்தி, துர்க்கை, உத்தமி, இசை ஒலியுடன் ஓதப்படுகின்ற வேதத்தினள், புகழ் கொண்ட அழகி, இகழ்ச்சி என்பதே இல்லாத தூயவள், கொடி போன்ற இடுப்பை உடையவள், தாய், மனத்தை ஞான நிலைக்கு எழுப்புபவள், நற் குணத்தை உடையவள், முடிவில்லாதவள், ஹிமவான் என்னும் மலையரசன் பெற்ற கொடியாகிய பார்வதி தேவி பெற்றருளிய பிள்ளையே, வராகத்தின் உருவை எடுத்த திருமாலும், வேதத்தில் வல்லவனான பிரமனும், சிவபெருமானும் மிக விரும்பும் பெருமாளே. 

பாடல் 1215 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தான தாத்த தனதன தான தாத்த தனதன     தான தாத்த தனதன ...... தனதான

ஆல மேற்ற விழியினர் சால நீட்டி யழுதழு     தாக மாய்க்க முறைமுறை ...... பறைமோதி 
ஆடல் பார்க்க நிலையெழு பாடை கூட்டி விரையம     யான மேற்றி யுறவின ...... ரயலாகக் 
கால மாச்சு வருகென ஓலை காட்டி யமபடர்     காவ லாக்கி யுயிரது ...... கொடுபோமுன் 
காம வாழ்க்கை பொடிபட ஞானம் வாய்த்த கழலிணை     காத லாற்க ருதுமுணர் ...... தருவாயே 
வேல கீர்த்தி விதரண சீலர் வாழ்த்து சரவண     வியாழ கோத்ர மருவிய ...... முருகோனே 
வேடர் நாட்டில் விளைபுன ஏனல் காத்த சிறுமியை     வேட மாற்றி வழிபடு ...... மிளையோனே 
ஞால மேத்தி வழிபடு மாறு பேர்க்கு மகவென     நாணல் பூத்த படுகையில் ...... வருவோனே 
நாத போற்றி யெனமுது தாதை கேட்க அநுபவ     ஞான வார்த்தை யருளிய ...... பெருமாளே.

விஷம் கொண்ட கண்களை உடையவர் நிரம்ப வெகு நேரம் அடிக்கடி அழுது மனம் வருந்தி நைந்து அழிய, நியமப்படி பறை வாத்தியம் ஒலித்து, கூத்தாடுபவர்கள் மூலமாக யாவரும் (சாவு நேர்ந்த) செய்தியைத் தெரிந்து கொள்ள, உறுதியாகக் கட்டப்பட்ட பாடையை ஏற்பாடு செய்து வேகமாக சுடு காட்டுக்குக் கொண்டு போய் சுற்றத்தினர் யாவரும் விலகிச் செல்ல, உன் ஆயுள் காலம் முடிந்து விட்டது, புறப்படு என்று கூறி யம தூதர்கள் சீட்டோலையைக் காட்டி, காவல் வைத்து உயிரைக் கொண்டு போவதற்கு முன்பு, இந்தக் காம ஆசை பாழ்பட்டு ஒழிய, மெய்ஞ் ஞான நிலையதான உனது கழல் அணிந்த திருவடிகளை உண்மையான அன்புடன் தியானிக்கும் உணர்வைத் தந்து அருளுக. வேலாயுதனே, புகழ் பெற்ற கொடையாளனே, பரிசுத்த மனமுடையவர்கள் வாழ்த்திப் போற்றும் சரவணபவனே, குரு மலையாகிய சுவாமி மலையில் வீற்றிருக்கும் முருகனே, வேடர்கள் வாழும் வள்ளிமலையில் தினைக் கொல்லையைக் காவல் புரிந்த சிறுமியாகிய வள்ளியை, (உனது உண்மையான உருவைக் காட்டாது) பல* வேடங்களில் வந்து, வணங்கிய இளைஞனே, பூமியில் உள்ளோர் போற்றி வழிபடும் ஆறு கார்த்திகைப் பெண்களுக்கும் குழந்தை என்று சொல்லும்படி நாணல் புல் சூழ்ந்த மடுவில் (சரவணப் பொய்கையில்) தோன்றியவனே, தலைவா போற்றி என்று தந்தையாகிய மூத்த சிவபெருமான் கேட்க, பேரின்ப அனுபவத்தைத் தரும் ஞான மொழியாகிய பிரணவத்தை உபதேசித்த பெருமாளே. 
* வள்ளியைக் காண முருகன் பூண்ட வேடங்கள்: வேடன், வளையல் செட்டி, வேங்கை, கிழவன் முதலியன.

பாடல் 1216 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தானதன தானத்த தானதன தானத்த     தானதன தானத்த ...... தனதான

ஆலுமயில் போலுற்ற தோகையர்க ளேமெத்த     ஆரவட மேலிட்ட ...... முலைமீதே 
ஆனதுகி லேயிட்டு வீதிதனி லேநிற்க     ஆமவரை யேசற்று ...... முரையாதே 
வேலுமழ கார்கொற்ற நீலமயில் மேலுற்று     வீறுமுன தார்பத்ம ...... முகமாறு 
மேவியிரு பாகத்தும் வாழுமனை மார்தக்க     மேதகவு நானித்த ...... முரையேனோ 
நாலுமுக வேதற்கு மாலிலையில் மாலுக்கு     நாடவரி யார்பெற்ற ...... வொருபாலா 
நாணமுடை யாள்வெற்றி வேடர்குல மீதொக்க     நாடுகுயில் பார்மிக்க ...... எழில்மாது 
வேலைவிழி வேடச்சி யார்கணவ னேமத்த     வேழமுக வோனுக்கு ...... மிளையோனே 
வீரமுட னேயுற்ற சூரனணி மார்பத்து     வேலைமிக வேவிட்ட ...... பெருமாளே.

ஆடும் மயில் போல் உள்ள மாதர்கள், முத்து மாலையை மேலே அணிந்த, நிரம்பிய மார்பின் மீது பொருத்தமான ஆடையை அணிந்து தெருவில் நிற்க ஆசைப்பட்ட விலைமாதர்கள் - இவர்களைப் பற்றியே சிறிதும் நான் பேசாமல், உனது வேலாயுதத்தையும், அழகு நிறைந்த, வீரம் மிக்க, நீலநிறம் கொண்ட மயில் மீது ஏறி விளங்குவதான உன் மலர்ந்த தாமரை போன்ற ஆறு முகங்களையும், பொருந்தி உனது இரு புறங்களிலும் வாழ்கின்ற அன்னைமார் (வள்ளி, தேவயானை என்ற இருவருடைய) சிறந்த பெருமையையும், நான் நாள்தோறும் புகழ மாட்டேனோ? நான்கு முகங்களைக் கொண்ட பிரமனாலும், ஆலிலை மேல் பள்ளி கொள்ளும் திருமாலாலும் தேடிக் காண முடியாத சிவபெருமான் ஈன்ற ஒப்பற்ற குழந்தையே, நாணம் உடையவளும், வெற்றி பெறும் வேடர் குலத்திலே யாவரும் விரும்பிப் போற்றும் குயில் போன்றவளும், உலகில் யாரினும் மேம்பட்ட அழகுள்ள பெண்ணும், கடல் போன்ற கண்களைக் கொண்ட வேடப்பெண் ஆகிய வள்ளியின் கணவனே, மதம் கொண்ட யானை முகம் உள்ள கணபதிக்குத் தம்பியே, வீரத்துடன் போருக்கு எழுந்த சூரனுடைய அழகிய மார்பிடத்தே வேலாயுதத்தை வேகமாகச் செலுத்திய பெருமாளே. 

பாடல் 1217 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தனனத்தன தனனத்தன தனனத்தன ...... தனதான

இடையித்தனை யுளதத்தைய ரிதழ்துய்த்தவ ...... ரநுபோகம் 
இளகிக்கரை புரளப்புள கிதகற்புர ...... தனபாரம் 
உடன்மற்கடை படுதுற்குண மறநிற்குண ...... வுணர்வாலே 
ஒருநிஷ்கள வடிவிற்புக வொருசற்றருள் ...... புரிவாயே 
திடமற்றொளிர் நளினப்ரம சிறைபுக்கன ...... னெனவேகுந் 
தெதிபட்சண க்ருதபட்சண செகபட்சண ...... னெனவோதும் 
விடபட்சணர் திருமைத்துனன் வெருவச்சுரர் ...... பகைமேல்வேல் 
விடுவிக்ரம கிரியெட்டையும் விழவெட்டிய ...... பெருமாளே.

ஒரு கைப்படி அளவே உள்ள இடையை உடைய கிளி போன்ற விலைமாதர்களின் வாயிதழ் பருகி, அவர்களுடைய இன்ப நுகர்ச்சியில் காமம் கட்டுக்கு அடங்காது ஓட, மிகப் புளகாங்கிதம் கொண்டதும், பச்சைக் கற்புரம் அணிந்துள்ளதுமான மார்பகங்களில் சேர்ந்தவனாகி, மல் யுத்தம் புரிந்தவன் போல் இழிந்த நிலையில் சேரும் எனது தீக்குணம் ஒழிய, குணம் கடந்த ஞான உணர்ச்சியால் உருவில்லாத ஒரு முக்தி நிலையில் நான் புகுமாறு ஒரு சிறிது நீ அருள் புரிவாயாக. அறிவின் திடம் இல்லாது விளங்கிய, தாமரையில் வாழும் பிரமன் சிறையில் அகப்பட்டுக் கொண்டான் என அறிந்து (சிவபெருமானிடம் முறையிடச்) சென்றவரும், தயிர் உண்டவர், நெய் உண்டவர், உலகை உண்டவர் என்று போற்றப்படுகின்றவரும், விஷத்தை உண்டவராகிய சிவபெருமானுக்கு அழகிய மைத்துனருமாகிய திருமால் சூரனுக்குப் பயந்து நிற்க, தேவர்களுக்குப் பகைவர்களாகிய அசுரர்களின் மேல் வேலாயுதத்தை விடுத்த வல்லமை படைத்தவனே, (குலகிரிகள் ஏழோடு கிரெளஞ்சத்தையும் சேர்த்து) எட்டு மலைகளையும் விழும்படி வெட்டிய பெருமாளே. 

பாடல் 1218 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தனதன தான தானன, தனதன தான தானன     தனதன தான தானன ...... தனதான

இருகுழை மீது தாவடி யிடுவன வோதி நீழலி     னிடமது லாவி மீள்வன ...... நுதல்தாவி 
இழிவன காம வேதமு மொழிவன தாரை வேலென     எறிவன காள கூடமு ...... மமுதாகக் 
கருகிய நீல லோசன அபிநய மாத ரார்தரு     கலவியில் மூழ்கி வாடிய ...... தமியேனுங் 
கதிபெற ஈட றாதன பதிபசு பாச மானவை     கசடற வேறு வேறுசெய் ...... தருள்வாயே 
ஒருபது பார மோலியு மிருபது வாகு மேருவு     முததியில் வீழ வானர ...... முடனேசென் 
றொருகணை யேவு ராகவன் மருகவி பூதி பூஷணர்     உணருப தேச தேசிக ...... வரையேனற் 
பரவிய கான வேடுவர் தருமபி ராம நாயகி     பரிபுர பாத சேகர ...... சுரராஜன் 
பதிகுடி யேற வேல்தொடு முருகம யூர வாகன     பரவச ஞான யோகிகள் ...... பெருமாளே.

காதில் உள்ள இரண்டு குண்டலங்களின் மீதிலும் தாவிப் போர் புரிபவனவும், கூந்தலின் நிழலிடத்தில் உலாவி மீண்டு வருவனவும், நெற்றியின் மேலும் கீழுமாக ஏறியும் இறங்குபவனவாயும் உள்ள, காம சாஸ்திரத்தை எடுத்து உரைக்கும் கூர்மையான வேல் பாய்வது போலப் பாய்வனவும், ஆலகால விஷமும் (அவற்றோடு ஒப்பிடும்போது) அமுது என்று சொல்லும்படியான குணத்தை உடையவையும், கரிய நீல நிறமுள்ளவனவும் ஆகிய கண்களை உடைய அழகிய நாடகக் கணிகையர் தருகின்ற புணர்ச்சி இன்பத்தில் முழுகி வாடிக் கிடக்கும் திக்கற்றவனாகிய தனியேனாகிய நானும், நற்கதி பெறுவதற்காக, தன்னிகரற்ற கடவுள், உயிர், தளை (கட்டு) எனப்படும் இம் மூன்றின் இலக்கணங்களை ஐயம் இல்லாத வகையில் தனித்தனியாக விளக்கி எனக்கு அருள் செய்வாயாக. (ராவணனுடைய) ஒரு பத்து பாரமான மணி முடிகளும், இருபது மேருவைப் போன்ற தோள் மலைகளும் கடலில் விழவும், குரங்குப் படையுடன் போய் ஒப்பற்ற அம்பைச் செலுத்திய ராமனின் மருகனே, திருநீறு அணிந்த சிவபெருமான் உணர்ந்து கொள்ள உபதேசம் செய்த குரு மூர்த்தியே, வள்ளி மலையில் தினைப் புனத்தே, (உன்னைக்) குல தெய்வமாகப் போற்றித் துதித்த, காட்டில் உள்ள வேடர்கள் வளர்த்த, அழகிய வள்ளி நாயகியின் சிலம்பு அணிந்த திருவடிகளைத் தலையில் சூடினவனே, தேவர்களுக்கு அரசனான இந்திரன் பொன்னுலகில் குடி ஏறுவதற்காக வேலைச் செலுத்திய முருகனே, மயில் வாகனனே, ஆனந்த நிலையில் இருக்கும் ஞான யோகிகளின்* பெருமாளே. 
* துங்கபத்திரை நதிக்கு வட திசையில் உள்ள ஞானபுரத்தில் கெளசிக முனிவர் தத்துவ ஞானம் கைகூட வேண்டி சரவணபவ மந்திரத்தைத் தியானித்துக் குகப் பெருமானை நோக்கிக் கடுந் தவம் புரிந்தார். கந்தக் கடவுள் ஞானாசாரிய மூர்த்தியாகத் தோன்றிச் சிவஞானம் எனப்படும் பதி ஞானமே தெளிவை உண்டாக்கும் என்று உபதேசித்தார். அதனால் ஞான தேசிக மூர்த்தி எனப் பெயர் பெற்றார்.இந்தப் பதி ஞானம் தான் பரம ஞானம், சிவ ஞானம், குக ஞானம், தத்துவ ஞானம், திருவடி ஞானம், அருள் ஞானம், அத்துவித ஞானம், மெய்யுணர்ச்சி எனப் பலவாறு கூறப்படும்.

பாடல் 1219 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ஸிந்துபைரவி தாளம் - அங்கதாளம் - 5 
தக-1, தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1

தனனா தனத்ததன தனனா தனத்ததன     தனனா தனத்ததன ...... தனதான

இருநோய்ம லத்தைசிவ வொளியால்மி ரட்டியெனை     யினிதாவ ழைத்தெனது ...... முடிமேலே 
இணைதாள ளித்துனது மயில்மேலி ருத்தியொளி     ரியல்வேல ளித்துமகி ...... ழிருவோரும் 
ஒருவாகெ னக்கயிலை யிறையோன ளித்தருளு     மொளிர்வேத கற்பகந ...... லிளையோனே 
ஒளிர்மாம றைத்தொகுதி சுரர்பார்து தித்தருள     உபதேசி கப்பதமு ...... மருள்வாயே 
கருநோய றுத்தெனது மிடிதூள்ப டுத்திவிடு     கரிமாமு கக்கடவு ...... ளடியார்கள் 
கருதாவ கைக்குவர மருள்ஞான தொப்பைமகிழ்     கருணாக டப்பமல ...... ரணிவோனே 
திருமால ளித்தருளு மொருஞான பத்தினியை     திகழ்மார்பு றத்தழுவு ...... மயில்வேலா 
சிலைதூளெ ழுப்பிகவ டவுணோரை வெட்டிசுரர்     சிறைமீள விட்டபுகழ் ...... பெருமாளே.

பிறப்பு, இறப்பு என்ற இரு பெரு நோயையும், ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலத்தையும், சிவ தேஜஸ் கொண்டு விரட்டி ஓட்டி, என்னை இனிமையாக அழைத்து என் சிரசின் மீது உன் இரு திருவடிகளைச் சூட்டி, உனது மயிலின் மீது என்னையும் இருக்கச் செய்து, ஒளி வீசி விளங்கும் வேலினை என் கையில் அளித்து நான் மகிழும்படியாக, நாம் இருவரும் (வேறாக இன்றி) ஒன்று படுவோமாக என்று, கயிலாச நாதன் சிவபிரான் பெற்று அருளிய விளங்கும் வேத நாயகன் கற்பக விநாயக மூர்த்திக்கு நல்ல தம்பியே, தேவர்களும் பூவுலகில் உள்ளவர்களும் போற்றும்படியாக, பிரகாசமான சிறந்த வேதப்பகுதிகளையும், உபதேச மொழிகளையும் எனக்குக் கற்பித்து அருள்வாயாக. மீண்டும் கருவிற் சேரும் பிறவி நோயை ஒழித்து, எனது தரித்திரத்தையும் தூளாக்கி அழித்துவிடக்கூடிய யானையின் சிறந்த முகத்தை உடைய கடவுள், அடியார்கள் நினைத்திராத வகைக்கு வரங்களை அள்ளித் தந்தருளும் ஞானமூர்த்தியாம் தொந்திக் கணபதி உன்னிடம் மகிழ்ச்சி அடைகின்ற கருணாமூர்த்தியே, கடப்பமலர் மாலையை அணிகின்றவனே, திருமால் பெற்றருளிய ஒப்பற்ற ஞான பத்தினியாகிய வள்ளியை, விளங்கும் மார்பில் பொருந்த அணைத்த கூர் வேலனே, கிரெளஞ்ச மலையைத் தூளாக்கி, கபட வஞ்சனை உள்ள அசுரர்களை வெட்டிச் சாய்த்து, தேவர்களைச் சிறைமீட்ட பெருமையுடைய பெருமாளே. 

பாடல் 1220 - பொதுப்பாடல்கள் 
ராகம் - பூபாளம் தாளம் - அங்கதாளம் - 5 
தக-1, தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1

தனதனன தந்தனம் தனதனன தந்தனம்     தனதனன தந்தனம் ...... தந்ததான

இனமறைவி தங்கள்கொஞ் சியசிறுச தங்கைகிண்     கிணியிலகு தண்டையம் ...... புண்டா£கம் 
எனதுமன பங்கயங் குவளைகுர வம்புனைந்     திரவுபகல் சந்ததஞ் ...... சிந்தியாதோ 
உனதருளை யன்றியிங் கொருதுணையு மின்றிநின்     றுளையுமொரு வஞ்சகன் ...... பஞ்சபூத 
உடலதுசு மந்தலைந் துலகுதொறும் வந்துவந்     துழலுமது துன்புகண் ...... டன்புறாதோ 
கனநிவத தந்தசங் க்ரமகவள துங்கவெங்     கடவிகட குஞ்சரந் ...... தங்கும்யானை 
கடகசயி லம்பெறும் படியவுணர் துஞ்சமுன்     கனககிரி சம்பெழுந் ...... தம்புராசி 
அனலெழமு னிந்தசங் க்ரமமதலை கந்தனென்     றரனுமுமை யும்புகழ்ந் ...... தன்புகூர 
அகிலபுவ னங்களுஞ் சுரரொடுதி ரண்டுநின்     றரிபிரமர் கும்பிடுந் ...... தம்பிரானே.

வேதத் தொகுதியின் வகைகளை விதவிதமாக கொஞ்சிக் கொஞ்சி ஒலித்துக் காட்டுகின்ற சிறிய சதங்கை, கிண்கிணி, தண்டை விளங்கும் உன் அழகிய தாமரை போன்ற திருவடியை எனது மனம் என்னும் தாமரை, செங்கழுநீர், குராமலர் (இவைகளைக் கொண்டு) அலங்கரித்து இரவும், பகலும், எப்பொழுதும் தியானிக்காதோ? உனது திருவருளைத் தவிர இங்கு வேறொரு துணையும் இல்லாமல் நின்று, வேதனைப்படும் ஒரு வஞ்சகனாகிய நான் மண், நீர், தீ, காற்று, விண் ஆகிய ஐந்து பூதங்களால் ஆகிய உடலை சுமந்து, அலைந்து, உலகு ஒவ்வொன்றிலும் மீண்டும் மீண்டும் பிறந்து வந்து அலைச்சல் உறும் அந்தத் துன்பத்தைக் கண்டு (உனக்கு என் மீது) அன்பு பிறவாதோ? பெருமையுடன் உயர்ச்சியை உடைய தந்தங்களைக் கொண்டதும், உணவு உண்டைகளை உண்ணுவதும், பரிசுத்தமான, கொடிய மதம் கொண்ட, அழகுள்ள ஐராவதம் என்னும் யானை மீது வீற்றிருக்கும் தேவயானை (உனது) கங்கணம் அணிந்த மலை போன்ற திருப்புயத்தைப் பெறும்படியும், அசுரர்கள் மடியவும், முன்பு பொன்மலையாக இருந்த கிரெளஞ்சம் பாழ்பட்டு (அது இருந்த இடத்தில்) சம்புப் புல் எழவும், கடல் தீப்பற்றி வற்றும்படியாக கோபித்தவனும், போருக்கு உற்றவனுமாகிய பிள்ளை கந்தன் என்று சிவபெருமானும் பார்வதியும் (உன்னைப்) புகழ்ந்து அன்பு கூர்ந்திருக்க, சகல பூமியில் உள்ளவர்களும் தேவர்களுடன் கூட்டமாய்க் கூடி நின்று, திருமாலும், பிரமனும் வணங்கும் தலைவனே. 

பாடல் 1221 - பொதுப்பாடல்கள் 
ராகம் - சங்கராபரணம் தாளம் - ஆதி

தானா தனந்த தானா தனந்த     தானா தனந்த ...... தனதான

ஊனே றெலும்பு சீசீ மலங்க     ளோடே நரம்பு ...... கசுமாலம் 
ஊழ்நோ யடைந்து மாசான மண்டு     மூனோ டுழன்ற ...... கடைநாயேன் 
நானா ரொடுங்க நானார் வணங்க     நானார் மகிழ்ந்து ...... உனையோத 
நானா ரிரங்க நானா ருணங்க     நானார் நடந்து ...... விழநானார் 
தானே புணர்ந்து தானே யறிந்து     தானே மகிழ்ந்து ...... அருளூறித் 
தாய்போல் பரிந்த தேனோ டுகந்து     தானே தழைந்து ...... சிவமாகித் 
தானே வளர்ந்து தானே யிருந்த     தார்வேணி யெந்தை ...... யருள்பாலா 
சாலோக தொண்டர் சாமீப தொண்டர்     சாரூப தொண்டர் ...... பெருமாளே.

சதையின் மேல் மூடியுள்ள எலும்பு, சீச்சீ என அருவருக்கத்தக்க அழுக்குகளுடன், நரம்புகள், பிற அசுத்தங்கள், ஊழ்வினை சம்பந்தமான நோய்கள், இவைகள் சேர்ந்து, குற்றங்களே நிறைந்த உடலோடு அலைந்து திரிந்த நாயினும் கீழான அடியேன் அடங்கி ஒடுங்குதல் என் வசத்தில் உள்ளதா? வணங்கிப் பணிதல் என் இச்சையில் உள்ளதா? மகிழ்ச்சியோடு உன்னைப் போற்றுதல் என் செயலில் உள்ளதா? உயிர்களிடத்தே இரக்கம் காட்டுதல் என் வசத்தில் உள்ளதா? சிந்தை நொந்து வாடுதல் என்னால் கூடுமோ? நடப்பதுதான் என் இச்சையா அல்லது விழுவதுதான் என் செயலா? சேரும் அனைத்தும் தானே ஆகி, அறியும் பொருளும் தானேஆகி, மகிழ்பவனும் தானே ஆகி, அருள் சுரந்து, தாய் போன்ற அன்பைக்காட்டும் தேன் போன்ற இனிய தேவியுடன் மகிழ்ந்து, தானே செழிப்பாய் வளர்ந்து சிவமாகித் திகழ்பவனும் வளர்பவனும் அழியாது இருப்பவனும் தானே ஆகி, இவ்வாறு தன்னந்தனியாய் நிற்கும் பெருமான், பூமாலை அணிந்த சடையினன் எம்பெருமான் சிவனார் அருளிய குழந்தையே, இவ்வுலகிலுள்ள அடியார்களுக்கும், உன்னருகே நெருங்கும் அடியார்களுக்கும், உன்னுருவத்தோடு ஒன்ற நினைக்கும் அடியார்களுக்கும் பெருமாளே*. 
* சாலோக, சாமீப, சாரூப, சாயுஜ்யம் என்ற நால்வகைத் தொண்டர்களில் மூவரைப் பற்றி மட்டும் கூறினார்.ஏனெனில் சாயுஜ்ய பதவியில் அவர்கள் முருகனோடு இரண்டறக் கலந்துவிடுகிறார்கள்.

பாடல் 1222 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ஹம்ஸாநந்தி தாளம் - அங்கதாளம் - 18 1/2 
தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2 தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2 தகிட-1 1/2, தகதிமி-2

தனதனன தனதனன தனதனன தனதனன     தத்தத்த தத்தான ...... தந்ததான

எதிரொருவ ரிலையுலகி லெனஅலகு சிலுகுவிரு     திட்டுக்ரி யைக்கேயெ ...... ழுந்துபாரின் 
இடையுழல்வ சுழலுவன சமயவித சகலகலை     யெட்டெட்டு மெட்டாத ...... மந்த்ரவாளால் 
விதிவழியி னுயிர்கவர வருகொடிய யமபடரை     வெட்டித் துணித்தாண்மை ...... கொண்டுநீபம் 
விளவினிள இலைதளவு குவளைகமழ் பவளநிற     வெட்சித் திருத்தாள்வ ...... ணங்குவேனோ 
திதிபுதல்வ ரொடுபொருது குருதிநதி முழுகியொளிர்     செக்கச் செவத்தேறு ...... செங்கைவேலா 
சிகரகிரி தகரவிடு முருவமர கதகலப     சித்ரக் ககத்தேறு ...... மெம்பிரானே 
முதியபதி னொருவிடையர் முடுகுவன பரிககன     முட்டச் செலுத்தாறி ...... ரண்டுதேரர் 
மொழியுமிரு அசுவினிக ளிருசதுவி தவசுவெனு     முப்பத்து முத்தேவர் ...... தம்பிரானே.

எமக்கு எதிரானவர் எவரும் இல்லை உலகத்திலேயே என்று கூர்மையான வாதப்போருக்கு கொடிகட்டி, அத்தகைய செய்கைக்கே துணிந்து எழுந்து, இப்பூமியின் இடையில் அலைந்து திரியும் எல்லாவிதமான சமயவாதிகளாலும், எல்லாவகையான அறுபத்து நான்கு கலைகளாலும் எட்ட முடியாத சாந்தியான தனி ஞான வாள் கொண்டு, பிரமன் விதித்த விதிப்படி உயிரைக் கவர்ந்து செல்ல வரும் கொடிய யமதூதர்களை வெட்டித் துணித்து, என் ஆண்மை வைராக்கியத்தை நிலை நிறுத்தி, கடப்பமலர், விளாவின் இளம் தளிர், முல்லை, கருங்குவளை இவற்றின் மணம் கமழும் பவள நிறமுள்ள, சிவந்த வெட்சியை அணிந்துள்ள திருவடிகளை வணங்குவேனோ? திதியின் புதல்வர்களாகிய அசுரர்களுடன் போர் செய்து, ரத்த ஆற்றில் மூழ்கி, ஒளிரும் செக்கச் செவேல் என்னும் மிகுந்த செந்நிறம் கூடிய வேலை உன் செங்கரத்தில் ஏந்தியவனே, சிகரங்களை உடைய கிரெளஞ்சகிரியைப் பொடிபடச் செய்த உருவத்தோனே, மரகதப் பச்சைநிறத் தோகையையும் அழகையும் உடைய பட்சியாம் மயில் மீது ஏறும் பெருமானே, பழைய பதினொரு ருத்திரர்களும், விரைவாக ஓடக்கூடிய குதிரைகளை ஆகாயத்தில் நன்கு செலுத்துகின்ற பன்னிரு தேர்களை உடைய பன்னிரண்டு சூரியர்களும், மருத்துவ நூல்களைச் சொல்லிய இரண்டு அசுவினி தேவர்களும், எட்டு வித வசுக்களும் ஆகிய முப்பத்து மூன்று (11+12+2+8= 33) தேவர்களின் தம்பிரானே. 

பாடல் 1223 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தனந்தனந் தத்தத் தனந்தனந் தத்தத்     தனந்தனந் தத்தத் ...... தனதானம்

எழுந்திடுங் கப்புச் செழுங்குரும் பைக்கொத்     திரண்டுகண் பட்டிட் ...... டிளையோர்நெஞ் 
சிசைந்திசைந் தெட்டிக் கசிந்தசைந் திட்டிட்     டிணங்குபொன் செப்புத் ...... தனமாதர் 
அழுங்கலங் கத்துக் குழைந்துமன் பற்றுற்     றணைந்துபின் பற்றற் ...... றகல்மாயத் 
தழுங்குநெஞ் சுற்றுப் புழுங்குபுண் பட்டிட்     டலைந்தலைந் தெய்த்திட் ...... டுழல்வேனோ 
பழம்பெருந் தித்திப் புறுங்கரும் பப்பத்     துடன்பெருங் கைக்குட் ...... படவாரிப் 
பரந்தெழுந் தொப்பைக் கருந்திமுன் பத்தர்க்     கிதஞ்செய்தொன் றத்திக் ...... கிளையோனே 
தழைந்தெழுந் தொத்துத் தடங்கைகொண் டப்பிச்     சலம்பிளந் தெற்றிப் ...... பொருசூரத் 
தடம்பெருங் கொக்கைத் தொடர்ந்திடம் புக்குத்     தடிந்திடுஞ் சொக்கப் ...... பெருமாளே.

வெளித் தோன்றி எழுகின்றதும், கவர்ச்சி தருவதுமான, செழுமை வாய்ந்த, தென்னங் குரும்பைக்கு இணையாகி, இளைஞர்களின் இரண்டு கண்களும் படுவதாகி அந்த இளையோர்களின் மனம் அதன் மேல் வெகுவாக ஈடுபடச் செய்து, தாவி, உள்ளம் இளகி, சலனப்படுவதற்கு இடம் கொடுப்பதான அழகிய குடம் போன்ற மார்பகங்களை உடைய விலைமாதர்கள். உருவழியக் கூடிய அங்கங்களின் மேல் மனம் உருகுதல் உற்று, நிரம்ப காம ஆசை கொண்டவனாய் அவர்களை அணைந்து, பிறகு அந்த ஆசை அற்று நீங்குவதான மாய வாழ்க்கையில் வருந்துவதான நெஞ்சத்தைக் கொண்டு, கொதிப்புறும் மனப் புண்ணைக் கொண்டவனாய், மிகவும் அலைச்சல் உற்று இளைப்பு எய்தித் திரிவேனோ? பழ வகைகளையும், மிக்க இனிப்பைக் கொண்ட கரும்பு அப்பம் இவைகளையும் பெரிய தும்பிக்கையில் உட்கொள்ளும்படி வாரி, அகன்று வெளித் தோன்றும் தொப்பைக்குள் உண்டு, முன்னதாகவே அடியார்களுக்கு நன்மை பொருந்தி விளங்கும் யானை முக விநாயகருக்குத் தம்பியே, செழிப்புற்று வெளித் தோன்றி திரண்ட விசாலமான இடங்களைக் கவர்ந்து மூடி, கடல் நீரைக் கிழித்து மோதிச் சண்டைக்கு நின்ற சூரனாகிய அந்த மிகப் பெரிய மாமரத்தைப் பின் தொடர்ந்து, அது இருந்த இடத்தை அணுகிச் சென்று வெட்டி அழித்த அழகிய பெருமாளே. 

பாடல் 1224 - பொதுப்பாடல்கள் 
ராகம் - காவடிச் சிந்து தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2 
தகிட-1 1/2, தகதிமி-2

தாத்த தானன தாத்த தானன     தாத்த தானன ...... தந்ததான

ஏட்டி லேவரை பாட்டி லேசில     நீட்டி லேயினி ...... தென்றுதேடி 
ஈட்டு மாபொருள் பாத்து ணாதிக     லேற்ற மானகு ...... லங்கள்பேசிக் 
காட்டி லேயியல் நாட்டி லேபயில்     வீட்டி லேஉல ...... கங்களேசக் 
காக்கை நாய்நரி பேய்க்கு ழாமுண     யாக்கை மாய்வதொ ...... ழிந்திடாதோ 
கோட்டு மாயிர நாட்ட னாடுறை     கோட்டு வாலிப ...... மங்கைகோவே 
கோத்த வேலையி லார்த்த சூர்பொரு     வேற்சி காவள ...... கொங்கில்வேளே 
பூட்டு வார்சிலை கோட்டு வேடுவர்     பூட்கை சேர்குற ...... மங்கைபாகா 
பூத்த மாமலர் சாத்தி யேகழல்     போற்று தேவர்கள் ...... தம்பிரானே.

ஏட்டில் எழுதப்படும், மனிதர்களைத் துதிக்கும் பாடல்களும், அவற்றுள் சிலவற்றை நீட்டி முழக்கிப் பாடுதலும் சம்பாதிக்க இனிய வழிகள் என்று பிரபுக்களை நாடி சேர்க்கும் பொருட்களை மற்றவர்களோடு பங்கிட்டு உண்ணாது, தகுதிக்கு ஏற்றாற்போல் குலப்பெருமையையே பேசிக்கொண்டு, காட்டிலும், பொருந்திய நாட்டிலும், பழகும் வீட்டிலும் உள்ள உலகத்தார் அனைவரும் பழிக்கும்படியாக வாழ்ந்து, (கடைசியில்) காக்கை, நாய், நரி, பேய்களின் கூட்டங்களுக்கு உணவாகும் இந்த உடம்பு இறந்து படுவது என்பது நீங்காதோ? விளங்கும் ஆயிரம் கண்களைக் கொண்ட இந்திரனது நாட்டில் வாழும் தந்தங்களை உடைய வெள்ளை யானை (ஐராவதம்) வளர்த்த தேவயானையின் மணவாளா, உலகு ஆடையாக உடுத்த கடலில் ஆர்ப்பரித்து நின்ற சூரனுடன் போரிட்ட வேலாயுதனே, மயில் வாகனனே, கொங்கு நாட்டுத் திருச்செங்கோடு, மருதமலை முதலிய தலங்களில் அமர்ந்த செவ்வேளே, நாண் ஏற்றப்பட்ட பெரிய வில்லை ஏந்திய மலை வேடர்களின் குலதர்மக் கொள்கைப்படி வளர்ந்த குறமாது வள்ளியின் பங்கனே, அன்றலர்ந்த நல்ல பூக்களைச் சாத்தியே உன் திருவடியைப் போற்றும் தேவர்கள் தம்பிரானே. 

பாடல் 1225 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தத்தத் தாத்த தத்தத் தாத்த     தத்தத் தாத்த ...... தனதான

கச்சுப் பூட்டு கைச்சக் கோட்ட     கத்திற் கோட்டு ...... கிரியாலங் 
கக்கித் தேக்கு செக்கர்ப் போர்க்க     யற்கட் கூற்றில் ...... மயலாகி 
அச்சக் கூச்ச மற்றுக் கேட்ட     வர்க்குத் தூர்த்த ...... னெனநாளும் 
அத்தப் பேற்றி லிச்சிப் பார்க்க     றப்பித் தாய்த்தி ...... ரியலாமோ 
பச்சைக் கூத்தர் மெச்சிச் சேத்த     பத்மக் கூட்டி ...... லுறைவோரி 
பத்திற் சேர்ப்பல் சக்கிற் கூட்டர்     பத்தக் கூட்ட ...... ரியல்வானம் 
மெச்சிப் போற்ற வெற்புத் தோற்று     வெட்கக் கோத்த ...... கடல்மீதே 
மெத்தக் காய்த்த கொக்குக் கோட்டை     வெட்டிச் சாய்த்த ...... பெருமாளே.

(விலைமாதரின்) கச்சு இணைக்கப்பட்டதும், (ஆண்களின்) கண்கள் செல்லுகின்ற இடமாய் விளங்குவதுமான சிகரம் கொண்ட மலை போன்ற மார்பகங்களிலும், ஆலகால விஷத்தை வெளியிட்டு நிரம்பினதாய், சிவந்த நிறத்ததாய், போருக்கு உற்றதான கயல் மீன் போன்றதான கண்கள் மீதும், (இனிய) பேச்சிலும் காம மயக்கம் கொண்டு பயமும் நாணமும் இல்லாதவனாகி என்னைப் பற்றி விசாரிப்பவர்களுக்கு இவன் காம ஒழுக்கமுடையவன் என்று பலரும் கூற, தினமும் பொன் பொருள் பெறுவதிலேயே ஆசை கொள்ளும் விலைமாதர்க்கு மிகவும் காமம் கொண்டவனாய் உழன்றிடலாமோ? பச்சை நிறமுடையவரும், (காளிங்கன் என்னும் பாம்பின் மேல்) நடனம் புரிபவரும் ஆகிய திருமால் புகழ்ந்து போற்றும் சிவந்த தாமரை ஆசனத்தில் வீற்றிருக்கும் பிரமன், வெள்ளை யானையின் மீது ஏறுபவரும், பல (ஆயிரம்) கண்களோடு கூடியவருமான இந்திரன், அடியார் கூட்டங்கள், தகுதி வாய்ந்த வானவர் ஆகிய இவர்கள் புகழ்ந்து போற்றவும், கிரெளஞ்சமலை வெட்கித் தோற்றுப்போய் விழவும், உலகுக்கு ஆடையாகவுள்ள கடலினிடையே பெரிதாக வளர்ந்த மாமரத்தின் (சூரனின்) கொம்புகளை வெட்டி வீழ்த்திய பெருமாளே. 

பாடல் 1226 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தனதனந் தனதனன தனதனந் தனதனன     தனதனந் தனதனன ...... தனதான

கடலினும் பெரியவிழி மலையினும் பெரியமுலை     கவரினுந் துவரதர ...... மிருதோள்பைங் 
கழையினுங் குழையுமென மொழிபழங் கிளவிபல     களவுகொண் டொருவர்மிசை ...... கவிபாடி 
அடலசஞ் சலனதுல னநுபமன் குணதரன்மெய்     அருள்பரங் குரனபய ...... னெனஆசித் 
தலமரும் பிறவியினி யலமலம் பிறவியற     அருணபங் கயசரண ...... மருள்வாயே 
வடநெடுங் குலரசத கிரியினின் றிருகலுழி     மகிதலம் புகவழியு ...... மதுபோல 
மதசலஞ் சலசலென முதுசலஞ் சலதிநதி     வழிவிடும் படிபெருகு ...... முதுபாகை 
உடையசங் க்ரமகவள தவளசிந் துரதிலக     னுலகுமிந் திரனுநிலை ...... பெறவேல்கொண் 
டுததிவெந் தபயமிட மலையொடுங் கொலையவுண     ருடனுடன் றமர்பொருத ...... பெருமாளே.

கடலைக் காட்டிலும் பெரிதான கண்கள், மலையைக் காட்டிலும் பெரிதான மார்பகம், பின்னும் நுகர்தலுக்குரிய பவளம் போன்ற உதடுகள், இரண்டு தோள்களும் பசுமை வாய்ந்த மூங்கிலைக் காட்டிலும் குழைந்து நிற்பவை என்று விலைமாதர்களைப் புகழ்வதற்கு (பணம் தேடுவதற்காக) பழைய நூல்களிலிருந்து திருடி (பொருட் செல்வம் உடைய) ஒருவர் மீது கவிகளைப் புனைந்து கவி பாடி, (நீ) வலிமை பொருந்தியவன், கவலை அற்றவன், நிகரில்லாதவன், உவமை கூற முடியாதவன், நற் குணங்கள் உடையவன், உண்மைப் பொருளை அருள வல்ல மேன்மையான தோற்றம் உடையவன், அடைக்கலம் தர வல்லவன் என்றெல்லாம் விரும்பிப் புகழ்ந்து பாடி, மனம் கலங்கி வருந்தும் இப்பிறப்பு இனிப் போதும் போதும். (ஆதலால்) பிறவி என்பது ஒழிவதற்காக, சிவந்த தாமரை போன்ற உன் பாதங்களை எனக்கு அருள் செய்வாயாக. வடக்கே உள்ள பெரிய சிறந்த வெள்ளி மலையிலிருந்து இரு காட்டாறுகள் பூமியில் புக வழிந்து வருவது போல, (இரு கண்களிலிருந்தும்) மத நீர் சல சல என்ற ஒலியுடன், பழமையான நீர் நிறைந்த கடலும் ஆறும் வழி விடும்படியாகப் பெருகுவதும், யானைப் பாகனாக இந்திரனை உடையதும், ஊண் உண்டைகள் உண்பதும், வெண்மை நிறமானதுமான யானை ஐராவதத்தைக் கொண்ட சிறந்தவனான இந்திரனுடைய பொன்னுலகமும், அந்த இந்திரனும் நிலை பெற்று உய்ய, வேலாயுதத்தால் கடல் வற்றி ஓலமிட, கிரெளஞ்ச மலையுடனும், கொலைத் தொழிலைப் பூண்ட அசுரர்களுடனும் மாறுபட்டுச் சண்டை செய்த பெருமாளே. 

பாடல் 1227 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தத்தத் தனத்ததன தத்தத் தனத்ததன     தத்தத் தனத்த ...... தனதான

கட்டக் கணப்பறைகள் கொட்டக் குலத்திளைஞர்     கட்டிப் புறத்தி ...... லணைமீதே 
கச்சுக் கிழித்ததுணி சுற்றிக் கிடத்தியெரி     கத்திக் கொளுத்தி ...... யனைவோரும் 
சுட்டுக் குளித்துமனை புக்கிட் டிருப்பரிது     சுத்தப் பொயொப்ப ...... துயிர்வாழ்வு 
துக்கப் பிறப்பகல மிக்கச் சிவத்ததொரு     சொர்க்கப் பதத்தை ...... யருள்வாயே 
எட்டுக் குலச்சயில முட்டத் தொளைத்தமரர்     எய்ப்புத் தணித்த ...... கதிர்வேலா 
எத்திக் குறத்தியிரு முத்தத் தனக்கிரியை     யெற்பொற் புயத்தி ...... லணைவோனே 
வட்டக் கடப்பமலர் மட்டுற்ற செச்சைமலர்     வைத்துப் பணைத்த ...... மணிமார்பா 
வட்டத் திரைக்கடலில் மட்டித் தெதிர்த்தவரை     வெட்டித் துணித்த ...... பெருமாளே.

துயரத்தைக் குறிக்கும் தோல் பறை வகைகள் கொட்டப்பட்டு ஒலிக்க, (இறந்தவருடைய) சாதியைச் சேர்ந்த இளைஞர்கள் வாசலில் பாடையைக் கட்டி விறகுப் படுக்கையின் மேல் கிழிக்கப்பட்ட கந்தல் துணி கொண்டு சுற்றி, படுக்க வைத்து, நெருப்பு கொழுந்துவிட்டு எரியும்படி தீ இட்டு, சுடுகாட்டுக்கு வந்த அனைவரும் உடலைச் சுட்ட பிறகு நீராடி தத்தம் வீட்டுக்குப் போய் இருப்பார்கள். இவ்வாறு முற்றிலும் பொய்யான இந்த வாழ்க்கை நிலை இல்லாதது. துக்கத்துக்குக் காரணமான இந்தப் பிறவிச் சுழல் நீங்க, மிகவும் சிவந்ததானவையும் ஒப்பற்ற பேரின்பத்துக்கு இடமானவையுமான உனது திருவடிகளை எனக்குத் தந்தருள வேண்டும். எட்டுத் திக்குகளிலும் உள்ள மலைகளில் இருந்த அசுரர்களை அடியோடு கலக்கி, தேவர்களின் இளைப்பை நீக்கின ஒளி வீசும் வேலனே. ஏமாற்றி, குறமகள் வள்ளியின் முத்துமாலை அணிந்த இரண்டு மலை போன்ற மார்பகங்களை ஒளி பொருந்திய அழகிய திருப் புயங்களில் தழுவுபவனே, வட்டமான கடப்ப மலர் மாலையையும், தேன் சொரியும் வெட்சி மலர் மாலையையும் இணைத்து அணிந்து பெருமையுறும் அழகிய மார்பனே, வட்ட வடிவமானதும் அலைகளை வீசுவதுமான கடலில் எதிர்த்து வந்த அசுரர்களை முறியடித்து, (அவர்களை) வெட்டிப் பிளந்த பெருமாளே. 

பாடல் 1228 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தந்த தானன தந்த தானன     தந்த தானன ...... தனதான

கண்டு போல்மொழி வண்டு சேர்குழல்     கண்கள் சேல்மதி ...... முகம்வேய்தோள் 
கண்டு பாவனை கொண்டு தோள்களி     லொண்டு காதலி ...... லிருகோடு 
மண்டி மார்பினில் விண்ட தாமென     வந்த கூர்முலை ...... மடவார்தம் 
வஞ்ச மாலதில் நெஞ்சு போய்மடி     கின்ற மாயம ...... தொழியாதோ 
கொண்ட லார்குழல் கெண்டை போல்விழி     கொண்டு கோகில ...... மொழிகூறுங் 
கொங்கை யாள்குற மங்கை வாழ்தரு     குன்றில் மால்கொடு ...... செலும்வேலா 
வெண்டி மாமன மண்டு சூர்கடல்     வெம்ப மேதினி ...... தனில்மீளா 
வென்று யாவையு மன்றி வேளையும்     வென்று மேவிய ...... பெருமாளே.

கற்கண்டைப் போன்ற இனிய பேச்சு, வண்டுகள் சேரும் கூந்தல், சந்திரனை ஒத்த முகம், மூங்கில் போன்ற மென்மையான தோள், உவமைகளை அவ்வாறே பாவித்து தோள்களில் சாரும்படி ஆசை ஏற்படுவதால், இரண்டு மலைகள் நெருங்கி மார்பில் வெளிப்பட்டுள்ளன என்று சொல்லும்படி சிறப்புற்ற மார்பகங்களை உடைய விலைமாதர்களின் வஞ்சகம் நிறைந்த மாயத்தில் மனம் போய் மாய்கின்ற மயக்க அறிவு நீங்காதோ? கரிய மேகம் போன்ற கூந்தல், கெண்டை மீன் போன்ற கண் இவைகளைக் கொண்டு, குயில் கூவுதல் போன்ற பேச்சுக்களைப் பேசும் அழகிய மார்பினளான குற மகள் வள்ளி வாழும் வள்ளி மலையில் காதலோடு சென்ற வேலனே, சிறந்த தன் மனம் களைத்துப்போய், நெருங்கி வந்த சூரன் வாடவும், கடல் கொதித்து வேகவும், உலகையே காக்க வந்து, எல்லாவற்றையும் வென்று, பின்னும் மன்மதனையும் உன் அழகால் வென்ற* பெருமாளே. 
* மன்மதனுக்கு 'மாரன்' என்று பெயர்.முருகனுக்கு 'குமாரன்' என்ற பெயரின் காரணம் 'கு + மாரன்' = மாரனை அழகிலே வென்றவன், என்பதால்.

பாடல் 1229 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தத்தன தத்தன தத்தன தத்தன     தத்தன தத்தன ...... தனதான

கப்பரை கைக்கொள வைப்பவர் மைப்பயில்     கட்பயி லிட்டிள ...... வளவோரைக் 
கைக்குள்வ சப்பட பற்கறை யிட்டுமு     கத்தைமி னுக்கிவ ...... ருமுபாயப் 
பப்பர மட்டைகள் பொட்டிடு நெற்றியர்     பற்றென வுற்றவொர் ...... தமியேனைப் 
பத்மப தத்தினில் வைத்தருள் துய்த்திரை     பட்டதெ னக்கினி ...... யமையாதோ 
குப்பர வப்படு பட்சமி குத்துள     முத்தரை யர்க்கொரு ...... மகவாகிக் 
குத்திர மற்றுரை பற்றுணர் வற்றவொர்     குற்றம றுத்திடு ...... முதல்வோனே 
விப்ரமு னிக்குழை பெற்றகொ டிச்சிவி     சித்ரத னக்கிரி ...... மிசைதோயும் 
விக்ரம மற்புய வெற்பினை யிட்டெழு     வெற்பைநெ ருக்கிய ...... பெருமாளே.

(தம்மை நாடி வருபவர்) பிச்சை எடுக்கும் ஓட்டைக் கையில் ஏந்தும்படி வைப்பவர்கள். மை தீட்டிய கண் பார்வை கொண்டு இளமைப் பருவத்தினராக செல்வம் உள்ளவர்களை தமது கையில் வசப்படும்படி, வெற்றிலைக் கறை கொண்ட பல்லைக் காட்டி முகத்தை மினுக்கச் செய்து மயக்கும் தந்திரக் கூத்தாடிகள். பொட்டு வைத்த நெற்றியை உடையவர்கள் ஆகிய வேசியர்களே துணை எனக் கொண்ட ஒரு தன்னந்தனியனான கதி அற்ற என்னை, தாமரை போன்ற உன் திருவடிக் கீழ் வைத்து, திருவருளைத் தந்து, அருள் பிரசாதத்தைப் பெற்றேன் என்ற நிலை எனக்கு இனிமேல் கூடாதோ? உலகத்தாரால் புகழப்படும் அன்பு மிகவும் உள்ள, மூவுலகுக்கும் தலைவராகிய சிவபெருமானுக்கு ஒப்பற்ற குழந்தையாகி, வஞ்சகம் இல்லாமல் உன்னைப் புகழ்தல், உன்னிடம் ஆசை கொள்ளுதல், உன்னை அறிதல் இம்மூன்றும் இல்லாத ஒரு பிழையை நீக்கும் முன்னவனே, அந்தணராகிய சிவ முனிவர்க்கு மான் பெற்ற குறிஞ்சி நிலத்துப் பெண்ணாகிய வள்ளியின் அழகிய மார்பகங்களைத் தழுவும் பராக்கிரமசாலியே, பொருந்திய புய மலையைக் கொண்டு சூரனுடைய ஏழு குலமலைகளையும் தாக்கி அழித்த பெருமாளே. 

பாடல் 1230 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தனதாத்த தய்ய தனதாத்த தய்ய     தனதாத்த தய்ய ...... தனதான

கலைகோட்டு வல்லி விலைகாட்டு வில்ல     ரிவைமார்க்கு மெய்யி ...... லவநூலின் 
கலைகாட்டு பொய்ய மலைமாக்கள் சொல்ல     கடுகாட்டி வெய்ய ...... அதிபாரக் 
கொலைகோட்டு கள்ளி டறிவோர்க்கு முள்ள     முகையாக்கை நையு ...... முயிர்வாழக் 
கொடிகோட்டு மல்லி குரவார்க்கொள் தொல்லை     மறைவாழ்த்து செய்ய ...... கழல்தாராய் 
சிலைகோட்டு மள்ளர் தினைகாத்த கிள்ளை     முலைவேட்ட பிள்ளை ...... முருகோனே 
திணிகோட்டு வெள்ளி பவனாட்டி லுள்ள     சிறைமீட்ட தில்ல ...... மயில்வீரா 
அலைகோட்டு வெள்ள மலைமாக்கள் விள்ள     மலைவீழ்த்த வல்ல ...... அயில்மோகா 
அடிபோற்றி யல்லி முடிசூட்ட வல்ல     அடியார்க்கு நல்ல ...... பெருமாளே.

வளைத்துக் கட்டிய புடவை சுற்றிய கொடி போன்ற தங்கள் இடுப்புக்கு விலை பேசுகின்ற அழகிய விலைமாதர்க்கு, உண்மையற்ற பயனற்ற காம நூல்களின் கலை நுணுக்கங்களை விளக்குபவர்களாய், பொய் நிறைந்த, மலைவாசிகளான வேடர்களின் பேச்சைப் போல் முரட்டுத் தனமானதும் கோபமானதுமான வார்த்தைகளைப் பேசுபவர்களாய், கொடுமையானதும், அதிக பாரமானதும், கொலை செய்ய வல்லதும், மலை போன்றதுமான மார்பகங்களை உடையவராய், மதுவை ஊட்டுகின்ற கேவலமான புத்தியை உடைய வேசிகளுக்கு, உள்ளமும், மொட்டுப் போன்ற உடலும் வேதனைப் படுகின்ற என்னுடைய உயிர் வாழும் பொருட்டு, கொடி மல்லிகை போன்றதும், குரா மலர், ஆத்தி மலர் இவைகளைக் கொண்டதும், பழைய வேதங்கள் வாழ்த்துவதுமான உன் சிவந்த திருவடிகளைத் தந்து அருளுக. வில்லை வளைக்கும் குறிஞ்சி நில மக்களாகிய வேடர்களின் தினைப் புனத்தைக் காத்த கிளி போன்ற வள்ளியின் மார்பகங்களை விரும்பிய பிள்ளையாகிய முருகனே, திண்ணிய தந்தங்களை உடைய வெண்ணிறமான ஐராவதம் என்ற யானையை உடைய இந்திரனின் பொன்னுலகில் உள்ள தேவர்களுக்கு (சூரனால்) ஏற்பட்ட சிறையை நீக்குவித்த, கானகத்தில் வாழும் மயில் வீரனே, கடலிடத்தும், மலை இடத்தும் இருந்த வெள்ளக் கணக்கான மலை போன்ற அசுரர்களை வெட்டி அழிக்கவும், கிரெளஞ்சம் எழுகிரி ஆகிய மலைகளை வீழ்த்தவும் வல்ல வேலாயுதப் பிரியனே, உனது திருவடியைப் போற்றி, தாமரை மாலையை திருமுடியில் சூட்டும் திறம் வாய்ந்த அடியார்களுக்கு நன்மை செய்யும் பெருமாளே. 

பாடல் 1231 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தனன தந்த தத்தான தனன தந்த தத்தான     தனன தந்த தத்தான ...... தனதான

களவு கொண்டு கைக்காசி னளவ றிந்து கர்ப்பூர     களப துங்க வித்தார ...... முலைமீதே 
கலவி யின்பம் விற்பார்க ளவய வங்க ளைப்பாடு     கவிதெ ரிந்து கற்பார்கள் ...... சிலர்தாமே 
உளநெ கிழ்ந்த சத்தான வுரைம றந்து சத்தான     உனையு ணர்ந்து கத்தூரி ...... மணநாறும் 
உபய பங்க யத்தாளி லபய மென்று னைப்பாடி     யுருகி நெஞ்சு சற்றோதி ...... லிழிவாமோ 
அளவில் வன்க விச்சேனை பரவ வந்த சுக்¡£வ     அரசு டன்க டற்றூளி ...... யெழவேபோய் 
அடலி லங்கை சுட்டாடி நிசிச ரன்த சக்¡£வ     மறவொ ரம்பு தொட்டார்த ...... மருகோனே 
வளரு மந்த ரச்சோலை மிசைசெ றிந்த முற்பாலை     வனசர் கொம்பி னைத்தேடி ...... யொருவேட 
வடிவு கொண்டு பித்தாகி யுருகி வெந்த றக்கானில்     மறவர் குன்றி னிற்போன ...... பெருமாளே.

வஞ்சக எண்ணம் கொண்டு கையில் உள்ள பொருளின் அளவைத் தெரிந்து கொண்டு, பச்சைக் கற்பூரம் கலவைச் சாந்துடன் விளங்கும் உயர்ந்து பரந்த மார்பகத்தைக் காட்டி, புணர்ச்சி இன்பம் விற்பவர்களாகிய விலைமாதர்களின் அங்க உறுப்புக்களைப் பாடும் பாடல்களைத் தெரிந்து கற்பவர்களாகிய சில மக்கள் தம்முடைய மனம் நெகிழ்ச்சி உற்று பேசும் பயனற்ற பேச்சுக்களைப் பேசாமல், உண்மைப் பொருளான உன்னை அறிந்து கஸ்தூரியின் நறுமணம் வீசும் இரண்டு தாமரை போன்ற திருவடிகளில் அடைக்கலம் என்று உன்னைப் புகழ்ந்து பாடி மனம் உருகி, சிறிது நேரம் உன்னைத் துதித்தால் ஏதேனும் இழிவு ஏற்பட்டு விடுமோ? கணக்கிட முடியாத வன்மை வாய்ந்த குரங்குப் படைகள் பரந்து சூழ்ந்து வர சுக்¡£வன் என்னும் குரங்கு அரசனுடன் கடல் தூசி படும்படி சென்று, பகைக்கு இடமாயிருந்த இலங்கை நகரை சுட்டுப் போர் புரிந்து அரக்கனாகிய இராவணனுடைய பத்துக் கழுத்தும், (தலைகளும்) அற்று விழ ஓர் ஒப்பற்ற அம்பைச் செலுத்தியவரான ராமனின் (திருமாலின்) மருகனே, வளர்நதுள்ள மந்தாரம் போன்ற மரங்கள் சூழ்ந்த, பாலைக்கு முன் நின்ற முல்லையும் குறிஞ்சியும் (காடும், மலையும்) கொண்ட நிலத்தின் கண் வேடர்கள் பெண்ணான வள்ளியைத் தேடி, ஒப்பற்ற வேடர் வடிவத்தைப் பூண்டு, மோகப் பித்துடன் உள்ளம் உருகி, (வெய்யிலில்) மிகவும் வேடூதல் உற்று, வேடர்கள் வாழும் (வள்ளி)மலையிடத்தே சென்ற பெருமாளே. 

பாடல் 1232 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தய்யனா தத்ததன தய்யனா தத்ததன     தய்யனா தத்ததன ...... தனதான

கள்ளமீ னச்சுறவு கொள்ளுமீ னற்பெரிய     கல்விவீ றக்கரிய ...... மனமாகுங் 
கல்விடா துற்றதிசை சொல்விசா ரத்திசைய     மெய்கள்தோ ணிப்பிறவி ...... யலைவேலை 
மெள்ளஏ றிக்குரவு வெள்ளிலார் வெட்சிதண     முல்லைவே ருற்பலமு ...... ளரிநீபம் 
வில்லநீள் பொற்கனக வல்லிமே லிட்டுனது     சொல்லையோ திப்பணிவ ...... தொருநாளே 
துள்ளுமா னித்தமுனி புள்ளிமான் வெற்புதவு     வள்ளிமா னுக்குமயல் ...... மொழிவோனே 
தொல்வியா ளத்துவளர் செல்வர்யா கத்தரையன்     எல்லைகா ணற்கரியர் ...... குருநாதா 
தெள்ளுநா தச்சுருதி வள்ளல்மோ லிப்புடைகொள்     செல்வனே முத்தமிணர் ...... பெருவாழ்வே 
தெய்வயா னைக்கிளைய வெள்ளையா னைத்தலைவ     தெய்வயா னைக்கினிய ...... பெருமாளே.

கள்ளத் தந்திரத்தை உடைய சுறாமீன் பல மீன்களை உண்ணும். (அதுபோல) பெரிய புலவர்களை வெல்லக் கூடிய நல்ல பெரிய கல்வி ஞானமானது எனக்கு மேம்பட்டு விளங்குவதற்காக, அஞ்ஞான மனமாகிய கல்லை அது போகும் வழியில் விடாது ஒரு நிலைப்படுத்தி, நாலு திசைகளிலும் பொருந்தி உள்ள பெரியோர்கள் சொல்லியுள்ள ஆராய்ச்சியின் பயனை அடையச் செய்ய, உண்மைப் பொருள்கள் தோன்றி விளங்க, பிறவியாகிய அலை கடலை மெதுவாகக் கடந்து செல்ல (என்ன செய்யவேண்டும் என்றால்), குராமலர், விளா இலை, ஆத்தி, வெட்சி, குளிர்ச்சி பொருந்திய முல்லை, குறு வேர், நீலோற்பல மலர், தாமரை, கடம்பு, வில்வம் முதலியவற்றை பெரியதும், அழகுள்ளதும், பொன் போல் ஒளி வீசுவதுமான, அல்லிமலர் போன்ற உனது திருவடியின் மீது இட்டு, உனது புகழை உரைத்து உன்னைப் பணிவதுமான ஒரு நாள் எனக்குக் கிடைக்குமா? வீறிட்டு எழும் ஆசைகளை ஒழித்த சிவ முனிவர் தமக்கும் புள்ளி மானுக்கும் வள்ளி மலையில் பிறந்த மான் போன்ற வள்ளி நாயகியிடம் காதல் மொழிகளைப் பேசியவனே, பழமையான பாம்பாகிய ஆதிசேஷன் மீது கண் வளரும் செல்வராகிய திருமாலும், வேள்வி நாயகனான மகபதி இந்திரனும் எல்லையே காண முடியாதவராகி நின்ற சிவபெருமானுக்கு குரு நாதனே, தெளிவான நாதத்துடன் வேதங்களை ஓதும் பிரமனுடைய தலையைக் குட்டிய செல்வனே, முத்தமிழும் வல்ல புலவர்களின் பெருவாழ்வே, தெய்வ யானையாகிய விநாயகப் பெருமானுக்கு இளையவனே, வெள்ளை யானையாகிய ஐராவதத்துக்குத் தலைவனே, தேவயானைக்கு இன்பம் தரும் பெருமாளே. 

பாடல் 1233 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தன்னன தனதன தன்னன தனதன     தன்னன தனதன ...... தனதான

கன்னியர் கடுவிட மன்னிய கயலன     கண்ணிலு மிருகன ...... தனமீதுங் 
கன்மைகள் மருவிய மன்மத னுருவிலி     மென்மைகொ ளுருவிலு ...... மயலாகி 
இன்னல்செய் குடிலுட னின்னமு முலகினி     லிந்நிலை பெறவிங ...... னுதியாதே 
யெண்ணுமு னடியவர் நண்ணிய பதமிசை     யென்னையும் வழிபட ...... விடவேணும் 
பொன்னவ மணிபயில் மன்னவ புனமற     மின்முலை தழுவிய ...... புயவீரா 
புண்ணிய முளபல விண்ணவர் தொழுமுதல்     எண்மலை யொடுபொரு ...... கதிர்வேலா 
தன்னிறை சடையிறை யென்முனி பரவரு     இன்னிசை யுறுதமிழ் ...... தெரிவோனே 
தண்ணளி தருமொரு பன்னிரு விழிபயில்     சண்முக மழகிய ...... பெருமாளே.

பெண்களின் கடுமையான விஷம் பொருந்திய, கயல் மீன் போன்ற கண்களிலும், இரு மார்பகங்கள் மீதும், கல் போன்று உறுதியான வேலைத் திறம் பொருந்திய மன்மதன், உருவம் இல்லாதவன், (மலரம்பை எய்வதானால்) மென்மை சேர்ந்த அப்பெண்களின் உருவத்தின் மீதும் காம மயக்கம் கொண்டு, துன்பம் ஏற்படுகின்ற வீடாகிய இந்த உடலுடன் இன்னமும் இந்த உலகிடையே இதே அவல நிலையை அடையும்படி, இவ்வாறு நான் பிறவாமல், உன்னைத் தியானிக்கும் அடியார்கள் அடைந்துள்ள உனது திருவடியின் மீது வழிபாடு செய்யுமாறு என்னையும் அந்த நன்னெறியில் செலுத்த வேண்டுகிறேன். பொன்னாலாகிய நவ மணி* ஆபரணங்களை அணிந்துள்ள அரசே, தினைப் புனத்தில் உள்ள வேட்டுவக் குலத்து ஒளி தரும் (வள்ளியின்) மார்பைத் தழுவிய புயங்களைக் கொண்ட வீரனே, புண்ணியம் செய்து சுவர்க்கத்தில் வாழும் பல தேவர்கள் தொழுது நிற்கும் முதல்வனே, கிரவுஞ்ச கிரி, (அசுரருக்கு அரணான) எழு கிரி ஆக எட்டு மலைகளுடன் சண்டை செய்த, ஒளி வீசும் வேலை உடையவனே, தனக்குத் தானே தலைவனான, சடையை உடைய சிவபெருமான் என்று சொல்லப்படும் கடவுளைத் துதிப்பதற்கு அருமையான இனிய இசை அமைந்த தமிழ் மறையை (தேவாரத்தை, திருஞானசம்பந்தராக வந்து) உலகோர் தெரியச் சொன்னவனே, குளிர்ந்த கருணையைப் பாலிக்கின்ற ஒப்பற்ற பன்னிரண்டு கண்களைக் கொண்ட ஆறு திருமுகனே, அழகு வாய்ந்த பெருமாளே. 
* ஒன்பது மணிகள்:வைரம், வைடூர்யம், முத்து, பவளம், நீலம், மரகதம், கோமேதகம், புஷ்பராகம், மாணிக்கம்.

பாடல் 1234 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தந்ததன தத்த தத்த தந்ததன தத்த தத்த     தந்ததன தத்த தத்த ...... தனதான

கிஞ்சுகமெ னச்சி வத்த தொண்டையள்மி கக்க றுத்த     கெண்டையள்பு னக்கொ டிச்சி ...... யதிபாரக் 
கிம்புரிம ருப்பை யொத்த குங்குமமு லைக்கு றத்தி     கிங்கரனெ னப்ப டைத்த ...... பெயர்பேசா 
நெஞ்சுருகி நெக்கு நெக்கு நின்றுதொழு நிர்க்கு ணத்தர்     நிந்தனையில் பத்தர் வெட்சி ...... மலர்தூவும் 
நின்பதயு கப்ர சித்தி யென்பனவ குத்து ரைக்க     நின்பணித மிழ்த்ர யத்தை ...... யருள்வாயே 
கஞ்சன்வர விட்ட துட்ட குஞ்சரம ருப்பொ சித்த     கங்கனும தித்தி கைக்க ...... மதம்வீசுங் 
கந்தெறிக ளிற்று ரித்து வென்றுதிரு நட்ட மிட்ட     கம்பனும திக்க வுக்ர ...... வடிவேல்கொண் 
டஞ்சியஜ கத்ர யத்தை யஞ்சலென விக்ர மித்து     அன்பர்புக ழப்பொ ருப்பொ ...... டமராடி 
அன்றவுண ரைக்க ளத்தில் வென்றுததி யைக்க லக்கி     அண்டர்சிறை வெட்டி விட்ட ...... பெருமாளே.

கிளி போலச் சிவந்த வாயிதழினள், மிகக் கரிய நிறம் கொண்ட கெண்டை மீன் போன்ற கண்களை உடையவள், தினைப் புனம் காத்த கொடி போன்ற பெண்ணான வள்ளி, பூண் அணிந்துள்ள யானையின் தந்தத்தை ஒத்ததும், குங்குமம் அணிந்ததுமான மார்பகத்தை உடைய குற மகளின், வேலைக்காரன் என்று (நீ) அடைந்த பெயரைப் புகழ்ந்து பேசி மனம் உருகி நெகிழ்ந்து நெகிழ்ந்து நின்று தொழுகின்ற, குணம் கடந்த பெரியோரும், பழிப்புக்கு இடம் தராத பக்தர்களும் வெட்சி மலரைத் தூவுகின்ற உனது திருவடியிணைகளின் பெரும் புகழை வகைப்படுத்தி எடுத்துரைக்க, உனக்குப் பணி செய்ய, முத்தமிழ் ஞானத்தை (எனக்கு) அருள் செய்ய வேண்டும். கம்சன் அனுப்பிய துஷ்டத்தனமான குவலயாபீடம் என்னும் யானையின் தந்தத்தை முறித்த (கண்ணனாய் வந்த) கருட வாகனனாகிய திருமாலும், புத்தியும் கலங்க மத நீரைப் பொழிவதும், கட்டியுள்ள தறியையும் ஒடித்து எறிய வல்லதுமான யானையின் தோலை உரித்து வென்று, அழகிய நடனத்தைச் செய்த ஏகாம்பர மூர்த்தியும், மதிப்புடன் நோக்க, உக்ரம் பொருந்திய கூரிய வேலாயுதத்தால் (சூரனுக்குப்) பயந்திருந்த மூவுலகையும் அஞ்சேல் என்று வலிமையைக் காட்டி, அடியவர்கள் புகழ்ந்து பாராட்டும்படி கிரெளஞ்ச மலையுடன் போர் புரிந்து, அந்நாள் அசுரர்களை போர்க்களத்தில் வென்று, கடலைக் கலங்கும்படி செய்து, தேவர்களின் சிறையை நீக்கி வெளிவிடுத்த பெருமாளே. 

பாடல் 1235 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தனதனன தாத்தன தனதனன தாத்தன     தனதனன தாத்தன ...... தனதான

குடிமைமனை யாட்டியும் அடிமையொடு கூட்டமும்     குலமுமிறு மாப்புமி ...... குதியான 
கொடியபெரு வாழ்க்கையி லினியபொரு ளீட்டியெ     குருடுபடு மோட்டென ...... வுடல்வீழில் 
அடைவுடைவி டாச்சிறு பழையதுணி போர்த்தியெ     அரிடசுடு காட்டிடை ...... யிடுகாயம் 
அழியுமள வாட்டிலுன் அமலமலர் மாப்பத     அருணசர ணாஸ்பதம் ...... அருள்வாயே 
அடியினொடு மாத்தரு மொளமொளமொ ளாச்சென     அலறிவிழ வேர்க்குல ...... மொடுசாய 
அவுணர்படை தோற்பெழ அருவரைக ளார்ப்பெழ     அயிலலகு சேப்பெழ ...... மறைநாலும் 
உடையமுனி யாட்பட முடுகவுணர் கீழ்ப்பட     உயரமரர் மேற்பட ...... வடியாத 
உததிகம ராப்பிள முதுகுலிச பார்த்திபன்     உலகுகுடி யேற்றிய ...... பெருமாளே.

குடிப்பிறப்பின் ஒழுக்கத்துக்கு ஏற்ற மனைவியும், ஏவலாலர்களுடைய கூட்டமும், குலப் பெருமையும், ஆணவச் செருக்கும் மிகுந்து நிற்கும் பொல்லாத இப்பெரிய வாழ்க்கையில் இனிமை தரும் பொருளைச் சேகரித்து, கண் தெரியாத குருடுபோல் இங்கும் அங்கும் அலைந்த இந்த உடம்பு இறந்து வீழ்ந்தால், தகுந்த உடையைத் தவிர்த்து, (அதற்குப் பதிலாகச்) சிறிய பழைய துணி ஒன்றால் (பிணத்தைப்) போர்த்தி, துயரத்துக்கு இடமான சுடு காட்டில் போடப்பட்டு உடல் எரிந்து அழிந்து போகும் சமயத்தில், உனது குற்றமற்ற, மலர் போன்ற, சிறந்த நிலையாகிய சிவந்த திருவடி என்னும் பற்றுக் கோட்டை அருள்வாயாக. அடியோடு (சூரனாகிய) பெரிய மாமரம் மொள மொள மொள என்னும் ஒலியோடு அலறிக் கூச்சலிட்டு விழ, (தன்னுடைய) வேர் போன்ற எல்லா அசுரர் கூட்டத்துடன் சாய்ந்து அழிய, அசுரர்கள் சேனை தோல்வி அடைய, அருமையான கிரெளஞ்சம், ஏழு குலகிரிகள் முதலிய மலைகள் கூக்குரல் இட்டு இடிய, வேலாயுதம் (ரத்தத்தின்) செந்நிறம் காட்ட, நான்கு வேதங்களும் வல்ல முனியாகிய பிரமன் தனது ஆணவம் அடங்க, எதிர்த்து வந்த அசுரர்கள் கீழ்மை அடைய, சிறந்த தேவர்கள் மேம்பட்டு விளங்க, வற்றாத கடலும் பூமி பிளவு கொண்டது போலப் பிளவுபட, பழையவனும், வஜ்ராயுதம் ஏந்தியவனுமாகிய இந்திரனை பொன்னுலகில் மீண்டும் குடி ஏற்றி வைத்த பெருமாளே. 

பாடல் 1236 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தனன தந்த தத்த தனன தந்த தத்த     தனன தந்த தத்த ...... தனதான

குறைவ தின்றி மிக்க சலமெ லும்பு துற்ற     குடிலி லொன்றி நிற்கு ...... முயிர்மாயம் 
குலைகு லைந்து தெர்ப்பை யிடைநி னைந்து நிற்ப     கொடிய கொண்ட லொத்த ...... வுருவாகி 
மறலி வந்து துட்ட வினைகள் கொண்ட லைத்து     மரண மென்ற துக்க ...... மணுகாமுன் 
மனமி டைஞ்ச லற்று னடிநி னைந்து நிற்க     மயிலில் வந்து முத்தி ...... தரவேணும் 
அறுகு மிந்து மத்த மலையெ றிந்த அப்பு     மளிசி றந்த புட்ப ...... மதுசூடி 
அருந டஞ்செ யப்ப ரருளி ரங்கு கைக்கு     அரிய இன்சொல் செப்பு ...... முருகோனே 
சிறுகு லந்த னக்கு ளறிவு வந்து தித்த     சிறுமி தன்த னத்தை ...... யணைமார்பா 
திசைமு கன்தி கைக்க அசுர ரன்ற டைத்த     சிறைதி றந்து விட்ட ...... பெருமாளே.

குறைவு இல்லா வகையில், நிறைய நீர், எலும்பு முதலியவை நெருங்கிய வீடாகிய உடலில் பொருந்தி இருக்கும் உயிர் என்கின்ற மாயப் பொருள், நிலை கெட்டு, தெர்ப்பைப் படுக்கையில் (சுடுகாட்டுக்கு அனுப்புவதற்காக) கிடத்த வேண்டும் என்று (உறவினர்கள்) நினைத்து நிற்கும் போது, பொல்லாதவனாய் கரு மேகம் நிகரான உருவத்துடன் யமன் வந்து கொடிய செயல்களைச் செய்து வருத்தி, இறப்பு என்ற துயரம் என்னைக் கூடுவதற்கு முன்பாக, நான் மன வேதனைகள் இல்லாமல் உனது திருவடியைத் தியானித்து நிற்க, மயிலின் மீது ஏறி வந்து வீட்டுப் பேற்றைத் தர வேண்டும். அறுகு, பிறைச் சந்திரன், ஊமத்த மலர், அலைகள் வீசும் கங்கை நீர், வண்டுகள் நிரம்பி மொய்க்கும் மலர்கள் இவைகளைச் சூடிக் கொண்டு, அருமையான ஊழிக் கூத்தாம் நடனத்தைச் செய்த தந்தையாகிய சிவ பெருமான் உபதேசப் பொருளை அருள்வாயாக என்று உன்னை வேண்டி இரங்கவும், (அதற்கு இசைந்து) அருமையான இனிய பிரணவ மந்திரத்தை அவருக்கு உபதேசித்த முருகனே, கீழான குறக் குலத்தில் ஞான நிலை கூடித் தோன்றிய சிறுமியாகிய குறப் பெண்ணின் மார்புகளை அணைந்த திருமார்பனே, பிரமதேவன் திகைக்குமாறு அசுரர்கள் அந்நாளில் தேவர்களை அடைத்துவைத்த சிறைகளைத் திறந்துவிட்டு, தேவர்களை விடுவித்த பெருமாளே. 

பாடல் 1237 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தான தனன தத்த தான தனன தத்த     தான தனன தத்த ...... தனதான

கோக னகமு கிழ்த்த போக புளகி தத்த     கோடு தலைகு லைத்த ...... முலையாலே 
கூட வரவ ழைக்கு மாடு குழைய டர்த்த     நீடி யகுவ ளைக்கண் ...... மடமானார் 
ஆக முறவ ணைத்து காசை யபக ரித்து     மீள விதழ்க டிப்ப ...... தறியாதே 
ஆசை யதுகொ ளுத்து மால மதுகு டித்த     சேலில் பரித விப்ப ...... தினியேனோ 
மாக நதிம திப்ர தாப மவுலி யர்க்கு     சாவி யதுவோ ரர்த்த ...... மொழிவோனே 
வாகு வலைய சித்ர ஆறி ருபுய வெற்பில்     வாழ்வு பெருகு றத்தி ...... மணவாளா 
வேக வுரக ரத்ந நாக சயன சக்ர     மேவி மரக தத்தின் ...... மருகோனே 
வீசு திரைய லைத்த வேலை சுவற வெற்றி     வேலை யுருவ விட்ட ...... பெருமாளே.

தாமரை மொட்டு மலர்ந்தது போன்றதாய், காம இன்பத்தினால் புளகாங்கிதம் கொண்டதாய், மலையின் சிகரத்தையும் வென்ற மார்பகத்தால், தங்களுடன் இணைவதற்கு அழைப்பு விடுப்பவை போன்றுள்ளவையும், பொன்னாலாகிய குண்டலத்தை மோதும்படி நெருங்கி நீண்டுள்ளவையும், குவளை மலர் போன்றவையுமான கண்களை உடைய இளம் பொது மகளிருடைய உடலை இறுக்கி அணைத்தும், பொருளை அபகரித்தும், மீண்டும் வாயிதழைக் கடிக்கும் வஞ்சக எண்ணத்தைத் தெரிந்து கொள்ளாமல், காம இச்சையை மிக்க எழுப்பும் ஆலகால விஷத்தை உண்ட சேல் மீன் போல வருந்துவது இன்னமும் வேண்டுமோ? (போதும் போதும் என்றபடி) ஆகாய நதியாகிய கங்கை, சந்திரன், (இவற்றை அணிந்துள்ள) புகழைக் கொண்ட சிவபெருமானுக்கு, அவர் கேட்டறிந்த ஒப்பற்ற ஒரு பொருளை (பிரணவ மந்திரத்தை) உபதேசித்தவனே, தோளணி பூண்டதும், அழகிய பன்னிரண்டு மலை போன்றதுமான உனது தோள்களில் வாழ்வின் இன்பத்தைப் பெற்ற குறப்பெண்ணாகிய வள்ளியின் கணவனே, விஷமுள்ள சர்ப்பமாகிய, ரத்தின மணி கொண்ட ஆதி சேஷன் மீது பள்ளி கொள்பவரும், சக்ராயுதம் ஏந்தியவரும் ஆன பச்சை நிறம் கொண்ட திருமாலின் மருகோனே, வீசுகின்ற அலைகள் அலைக்கும் கடல் வற்றும்படி வெற்றி வேலை ஊடுருவச் செல்ல விட்ட பெருமாளே. 

பாடல் 1238 - பொதுப்பாடல்கள் 
ராகம் - அமிர்த வர்ஷணி தாளம் - ஆதி

தந்தந் தனந்த தந்தந் தனந்த     தந்தந் தனந்த ...... தனதான

சந்தம் புனைந்து சந்தஞ் சிறந்த     தண்கொங் கைவஞ்சி ...... மனையாளுந் 
தஞ்சம் பயின்று கொஞ்சுஞ் சதங்கை     தங்கும் பதங்க ...... ளிளைஞோரும் 
எந்தன் தனங்க ளென்றென்று நெஞ்சி     லென்றும் புகழ்ந்து ...... மிகவாழும் 
இன்பங் களைந்து துன்பங்கள் மங்க     இன்றுன் பதங்கள் ...... தரவேணும் 
கொந்தின் கடம்பு செந்தண் புயங்கள்     கொண்டங் குறிஞ்சி ...... யுறைவோனே 
கொங்கின் புனஞ்செய் மின்கண்ட கந்த     குன்றம் பிளந்த ...... கதிர்வேலா 
ஐந்திந் த்ரியங்கள் வென்றொன்று மன்பர்     அங்கம் பொருந்து ...... மழகோனே 
அண்டந் தலங்க ளெங்குங் கலங்க     அன்றஞ் சலென்ற ...... பெருமாளே.

சந்தனத்தைப் பூசிக்கொண்டு மிகவும் அழகு சிறந்த குளிர்ந்த மார்புடைய வஞ்சிக்கொடி போன்ற மனைவியும், என்னையே பற்றுக்கோடாகக் கொண்டு, கொஞ்சி ஒலிக்கும் கிண்கிணிகள் அணிந்த பாதங்களை உடைய குழந்தைகளும், ஆகியவர்களே என் செல்வங்கள் என்றென்று அடிக்கடி என் மனத்திலே எப்போதும் புகழ்ந்து மிக்க மகிழ்ச்சியுடன் வாழும் நிலையில்லா இன்பத்தை நீக்கி, எனது துயரங்கள் யாவும் அடங்கி ஒழிய, இன்று உனது திருவடிகளைத் தந்தருள வேண்டும். கொத்துக் கொத்தாக உள்ள கடப்ப மலர் மாலையை செவ்விய குளிர்ந்த புயங்களிலே அணிந்து கொண்டு அழகிய மலையிடங்களில் எல்லாம் வீற்றிருப்பவனே, வாசனை மிக்க தினைப்புன வயலிலே இருந்த மின்னல் போன்ற அழகி வள்ளியைக் கண்டு மகிழ்ந்த கந்தனே, கிரெளஞ்சமலையைப் பிளந்த ஒளி படைத்த வேலனே, மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து பொறிகளையும் அடக்கி வென்றிருக்கும் அன்பர்களுடைய அங்கங்களில் எல்லாம் பொருந்தி விளங்கும் அழகனே, அண்டங்களும் உலகங்களும் எங்கும் அன்று சூரனுக்கு அஞ்சிக் கலங்க, அந்த வேளையில் பயப்படாதீர்கள் என்று அருளிய பெருமாளே. 

பாடல் 1239 - பொதுப்பாடல்கள் 
ராகம் - குந்தலவராளி தாளம் - அங்கதாளம் - 5 1/2 
தகதிமிதகதிமி-4, தகிட-1 1/2

தனதன தனத்த தத்த தனதன தனத்த தத்த     தனதன தனத்த தத்த ...... தனதான

சலமல மசுத்த மிக்க தசைகுரு தியத்தி மொய்த்த     தடியுடல் தனக்கு ளுற்று ...... மிகுமாயம் 
சகலமு மியற்றி மத்த மிகுமிரு தடக்கை யத்தி     தனிலுரு மிகுத்து மக்க ...... ளொடுதாரம் 
கலனணி துகிற்கள் கற்பி னொடுகுல மனைத்து முற்றி     கருவழி யவத்தி லுற்று ...... மகிழ்வாகிக் 
கலைபல பிடித்து நித்த மலைபடு மநர்த்த முற்றி     கடுவினை தனக்குள் நிற்ப ...... தொழியாதோ 
மலைமக ளிடத்து வைத்து மதிபுனல் சடைக்குள் வைத்து     மழுவனல் கரத்துள் வைத்து ...... மருவார்கள் 
மடிவுற நினைத்து வெற்பை வரிசிலை யிடக்கை வைத்து     மறைதொழ நகைத்த அத்தர் ...... பெருவாழ்வே 
பலதிசை நடுக்க முற்று நிலைகெட அடற்கை யுற்ற     படையது பொருப்பில் விட்ட ...... முருகோனே 
பழுதறு தவத்தி லுற்று வழிமொழி யுரைத்த பத்தர்     பலருய அருட்கண் வைத்த ...... பெருமாளே.

ஜலம், மலம், அழுக்குகள் நிறைந்த மாமிசம், ரத்தம், எலும்பு - இவைகள் நெருங்கிச் சூழ்ந்துள்ள தடித்த இந்த உடலில் வாசம் செய்து, மிக்க வஞ்சனையான செயல்கள் பலவற்றையும் செய்து, மதம் மிகுந்ததும், பெரும் துதிக்கையை உடையதுமான யானையைப் போல் உருவம் பெருத்து, குழந்தைகள், மனைவி, ஆபரணங்கள், அணிந்து கொள்ளும் துணிமணிகள், கல்வி இவைகளுடன் குலம் வரை முழுவதுமாக வளர்ச்சி பெற்று, பிறப்பு வழி என்ற பயனற்ற பாதையில் சென்று அதில் மகிழ்ச்சி அடைந்தவனாகி, பலவித சாத்திர நூல்களைக் கற்று, நாள்தோறும் அலைச்சல் உறும் வேதனையை அடைந்து, பொல்லாத வினைக்கு உள்ளாகி நிற்கும் இச்செயல் நீங்காதோ? மலைமகள் பார்வதியை இடது பாகத்தில் வைத்து, சந்திரனையும் கங்கையையும் ஜடைக்குள்ளே வைத்து, மழு என்ற கோடரியையும் நெருப்பையும் கையிலே வைத்து, பகைவர்களாகிய திரிபுரத்து அசுரர்கள் இறந்தொழிய நினைத்து, மேருமலையைக் கட்டப்பட்ட வில்லாக இடது கையிலே வைத்து, வேதங்கள் தொழுது நிற்க, சிரிப்பினாலேயே திரிபுரத்தை எரித்த பெருமானாம் சிவபிரானின் பெரும் செல்வக் குழந்தையே, பல திசைகளில் உள்ளவர்களும் நடுக்கம் அடைந்து நிலை தடுமாற, வலிமை பொருந்திய திருக்கையிலே இருந்த படையாகிய வேலாயுதத்தை கிரெளஞ்சகிரியின் மீது செலுத்திய முருகனே, குற்றமற்ற தவநிலையில் இருந்து துதி மொழிகளைச் சொல்கின்ற பக்தர்கள் பலரும் நற்கதி பெற, திருக்கண்களால் அருள் பாலித்த பெருமாளே. 

பாடல் 1240 - பொதுப்பாடல்கள் 
ராகம் - வாசஸ்பதி தாளம் - ஸங்கீர்ணசாபு - 4 1/2 
தகதிமி-2, தகிட-1 1/2, தக-1

தாந்தன தானதன தாந்தன தானதன     தாந்தன தானதன ...... தனதான

சாங்கரி பாடியிட வோங்கிய ஞானசுக     தாண்டவ மாடியவர் ...... வடிவான 
சாந்தம தீதமுணர் கூந்தம சாதியவர்     தாங்களு ஞானமுற ...... வடியேனுந் 
தூங்கிய பார்வையொடு தாங்கிய வாயுவொடு     தோன்றிய சோதியொடு ...... சிவயோகந் 
தூண்டிய சீவனொடு வேண்டிய காலமொடு     சோம்பினில் வாழும்வகை ...... அருளாதோ 
வாங்குகை யானையென வீன்குலை வாழைவளர்     வான்பொழில் சூழும்வய ...... லயலேறி 
மாங்கனி தேனொழுக வேங்கையில் மேலரிகள்     மாந்திய வாரணிய ...... மலைமீதிற் 
பூங்கொடி போலுமிடை யேங்கிட வாரமணி     பூண்பன பாரியன ...... தனபாரப் 
பூங்குற மாதினுட வாடியிருள்     பூம்பொழில் மேவிவளர் ...... பெருமாளே.

சங்கரியாகிய பார்வதி தேவி பாடித் தாளம் இட, மேம்பட்ட ஞான ஆனந்தத் தாண்டவம் ஆடிய சிவபிரானின் வடிவை அடைந்தவர்களும், சாந்த குணத்தின் உச்சி நிலையில் இருந்து, உணர்ச்சி மிகுந்த சிவநேச இனத்தவர்களான பெரியோர்களும், (அந்தச் சிவ நடனத்தைப் பார்த்ததால்) ஞான நிலையை அடைய, அடியேனும் அறி துயில் கொண்ட ஞானக் கண்ணுடனும், வெளியில் விடாதபடி உள்ளேயே சுழுமுனையில் தாங்கிப் பிடித்த பிராணவாயுவுடனும்*, அந்நிலையில் காணப்படும் ஜோதி தரிசனத்துடனும், சிவயோக நிலையில் பரசிவத்துடன் கூடி நிலைத்த ஆன்மாவுடன், விரும்பிய கால அளவுக்கு சும்மா இருக்கும் மெளனஞான நிலையில் வாழும் பாக்கியத்தை உனது திருவருள் எனக்கு அருளாதோ? யானையின் தொங்கும் துதிக்கையைப் போல வாழைக் குலைகளைத் தள்ளுகின்ற வாழைமரங்கள் வளர்கின்ற, பெரிய சோலைகள் சூழ்ந்த வயல்களின் பக்கங்களில் ஏறி மாம்பழங்கள் தேன் ஒழுகும்படி வேங்கை மரத்தின் மேலிருந்து பாயும் குரங்குகள் தேனையும் பழத்தையும் அருந்திய காடுகளைக் கொண்ட வள்ளிமலையில், பூங்கொடி போன்றுள்ள நுண்ணிய இடுப்பு சோரும்படி அணிந்துள்ள முத்தாபரணங்களின் கனமும், மார்பின் பாரமும் உடைய அழகிய குறப்பெண் வள்ளியுடன் அங்கே நேசம் பூண்டு கலந்து விளையாடி, அடர்ந்து இருண்ட சோலையிலே விரும்பி அமர்ந்த பெருமாளே. 
* இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு:நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு 'ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள், சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி, ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை, சுழுமுனை முதலியன) உள்ளன.'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம்.'சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது.'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும் ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும்.

பாடல் 1241 - பொதுப்பாடல்கள் 
ராகம் - கல்யாணி தாளம் - கண்டசாபு - 2 1/2

தனதான தந்ததன தனதான தந்ததன     தனதான தந்ததன ...... தனதான

சிவஞான புண்டரிக மலர்மாது டன்கலவி     சிவபோக மன்பருக ...... அறியாமற் 
செகமீது ழன்றுமல வடிவாயி ருந்துபொது     திகழ்மாதர் பின்செருமி ...... யழிவேனோ 
தவமாத வங்கள்பயில் அடியார்க ணங்களொடு     தயவாய்ம கிழ்ந்துதினம் ...... விளையாடத் 
தமியேன்ம லங்களிரு வினைநோயி டிந்தலற     ததிநாளும் வந்ததென்முன் ...... வரவேணும் 
உவகாரி யன்பர்பணி கலியாணி யெந்தையிட     முறைநாய கங்கவுரி ...... சிவகாமி 
ஒளிரானை யின்கரமில் மகிழ்மாது ளங்கனியை     யொருநாள்ப கிர்ந்தவுமை ...... யருள்பாலா 
அவமேபி றந்தஎனை யிறவாம லன்பர்புகு     மமுதால யம்பதவி ...... யருள்வோனே 
அழகாந கம்பொலியு மயிலாகு றிஞ்சிமகிழ்     அயிலாபு கழ்ந்தவர்கள் ...... பெருமாளே.

சிவஞானம் என்னும் தாமரை மலரில் வீற்றிருக்கும் சிவமாதுடனே இணையும் மங்களகரமான பேரின்பத்தை நன்றாக அனுபவிக்கத் தெரியாமல், இவ்வுலகில் அலைந்து திரிந்து, ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மல சொரூபமாகி, பொதுவாய்த் திகழும் விலைமாதரைப் பின்தொடர்ந்து அழிந்து போவேனோ? தவமும் நிஷ்டைகளும் செய்கின்ற உன் அடியார்களின் கூட்டங்களுடன் அன்போடு மகிழ்ந்து தினமும் விளையாடவும், அடியேனது மும்மலங்கள், பிறப்பு, இறப்பு, நல்வினை, தீவினை, நோய்கள் யாவும் அச்சமுற்று அலறி ஓடும்படியாகவும், தக்க சமயத்தில் தினமும் பிரத்யக்ஷமாக வந்தவனாக என்முன்னால் நீ வரவேண்டும். யாவர்க்கும் உதவி செய்பவளும், அன்பர்கள் பணிந்து போற்றும் கல்யாணியும், எந்தை சிவபிரானின் இடது பாகத்தில் நாயகியாக விளங்கும் கெளரியும், சிவகாம சுந்தரியும், விளங்கும் யானைமுக விநாயகனுக்குக் கரத்தில் மகிழும்படியாக மாதுளங்கனியை முன்பொருநாள் அளித்தவளும் ஆகிய உமாதேவி பார்வதி அருளிய பாலகனே, வீண் காலம் போக்கும் பிறவியை எடுத்த எனக்கு இறவாத வரத்தைத் தந்து அன்பர்கள் புகுகின்ற அமுதக்கோயிலாகிய உயர் நிலையை அருள்வோனே, அழகனே, மலைகளில் விளங்கி வாழ்பவனே, மயில் வாகனனே, குறிஞ்சி நிலத்தில் மகிழ்ச்சியோடு குடியிருக்கும் வேலவனே, புகழ்ந்து போற்றும் அடியவர்களின் பெருமாளே. 

பாடல் 1242 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தானத்த தான தந்த தானத்த தான தந்த     தானத்த தான தந்த ...... தனதான

சீறிட்டு லாவு கண்கள் மாதர்க்கு நாள்ம ருண்டு     சேவித்து மாசை கொண்டு ...... முழல்வேனைச் 
சீரிட்ட மாக நின்ற காசைக்கொ டாத பின்பு     சீரற்று வாழு மின்பம் ...... நலியாதே 
ஆறெட்டு மாய்வி ரிந்து மாறெட்டு மாகி நின்று     மாருக்கு மேவி ளம்ப ...... அறியாதே 
ஆகத்து ளேம கிழ்ந்த ஜோதிப்ர காச இன்பம்     ஆவிக்கு ளேது லங்கி ...... அருளாதோ 
மாறிட்டு வான டுங்க மேலிட்டு மேல கண்டம்     வாய்விட்டு மாதி ரங்கள் ...... பிளவாக 
வாள்தொட்டு நேர்ந டந்த சூர்வஜ்ர மார்பு நெஞ்சும்     வான்முட்ட வீறு செம்பொன் ...... வரையோடு 
கூறிட்ட வேல பங்க வீரர்க்கு வீர கந்த     கோதற்ற வேடர் தங்கள் ...... புனம்வாழுங் 
கோலப்பெண் வாகு கண்டு மாலுற்று வேளை கொண்டு     கூடிக்கு லாவு மண்டர் ...... பெருமாளே.

கோபத்துடன் உலவுகின்ற கண்களை உடைய விலைமாதர்களுக்கு நாள்தோறும் மருட்சி உற்று, அவர்களை வணங்கியும், அவர்கள் மீது காம ஆசை கொண்டும் திரிகின்ற என்னை சீராகவும் மிக விருப்பத்துடனும் முதலில் கொடுத்த பொருளை மீண்டும் கொடுக்காத பின்னர், அந்தச் சீரும் சிறப்பும் அழிந்து வாழச் செய்யும் சிற்றின்பத்தில் நான் ஈடுபட்டு வறுமையில் வருந்தாமல், நாற்பத்து எட்டாக விரிந்து நாற்பத்து எட்டு கூடச் சேர்ந்து தொண்ணூற்றாறு* தத்துவங்களாக விளங்கி நின்று யாராலும் சொல்லுதற்கு முடியாத வகையில், உடலிடத்தே பூரித்த ஜோதி ஒளி இன்பம் என் ஆவிக்குள்ளே உயிருக்கு உயிராய் விளங்கி எனக்கு அருள் பாலிக்காதோ? பகைமை பூண்டு தேவர்கள் நடுங்கும்படி ஆகாயத்தில் கிளம்பி, மேலே உள்ள பொன்னுலகம் வாய்விட்டு ஓலமிட, திசைகள் பிளவுபடும்படி, வாள் ஏந்தி நேரே எதிர்த்துச் சென்ற சூரனுடைய வலிய மார்பும் நெஞ்சமும் வான் முகடு வரை சிதற, விளங்குகின்ற பொன் மலையான மேரு, கிரெளஞ்ச கிரியையும் கூறு செய்த வேலாயுதனே, குறைவு இல்லாதவனே, வீரர்களுக்கும் வீரனே, கந்தனே, குற்றமில்லாத வேடர்களின் தினைப் புனத்தில் வாழ்ந்திருந்த அழகிய வள்ளியின் அழகைப் பார்த்து ஆசை கொண்டு, தக்க சமயம் அறிந்து, அவளோடு கூடிக் குலாவிய, தேவர்களின் பெருமாளே. 
* 96 வகை தத்துவங்களில் சிவதத்துவங்கள் ஐந்து நீங்கிய மற்றவை 91. சிவதத்துவங்கள் இருந்தால் மனமும் புத்தியும் உழல்தல் இல்லை. 96 தத்துவங்கள் பின்வருமாறு:36 பரதத்துவங்கள் (அகநிலை): ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து - 25 (புறநிலை): மண், தீ, நீர், காற்று, வெளி.ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை): வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4.

பாடல் 1243 - பொதுப்பாடல்கள் 
ராகம் - வாசஸ்பதி தாளம் - கண்டசாபு - 2 1/2

தானதன தானதன தானதன தானதன     தானதன தானதன ...... தனதான

சூதினுண வாசைதனி லேசுழலு மீனதென     தூசுவழ கானவடி ...... வதனாலே 
சூதமுட னேருமென மாதர்நசை தேடுபொரு     ளாசைதமி லேசுழல ...... வருகாலன் 
ஆதிவிதி யோடுபிற ழாதவகை தேடியென     தாவிதனை யேகுறுகி ...... வருபோது 
ஆதிமுரு காதிமுரு காதிமுரு காஎனவு     மாதிமுரு காநினைவு ...... தருவாயே 
ஓதமுகி லாடுகிரி யேறுபட வாழசுரர்     ஓலமிட வேயயில்கொ ...... டமராடீ 
ஓநமசி வாயகுரு பாதமதி லேபணியும்     யோகமயி லாஅமலை ...... மகிழ்பாலா 
நாதரகு ராமஅரி மாயன்மரு காபுவன     நாடுமடி யார்கள்மன ...... துறைவோனே 
ஞானசுர வானைகண வாமுருக னேயமரர்     நாடுபெற வாழவருள் ...... பெருமாளே.

வஞ்சனையாக வைக்கப்பட்ட தூண்டிலில் உள்ள உணவை உண்ணும் ஆசையிலே சுழன்று வரும் மீன்போல, ஆடையின் அழகுடன் கூடிய உருவத்தைக்கண்டு மாந்தளிரின் நிறத்துக்கு உடல் நிறம் சமமாகும் என்று நினைத்து பெண்கள் மீதுள்ள காம இச்சை காரணமாகத் தேடுகின்ற பொருளாசையால் மனம் அலைச்சல் அடையும்போது, வருகின்ற யமன் முதலில் பிரமனால் எழுதப்பட்ட விதிக்குத் தவறாத வகையில் என்னைத் தேடி என் உயிரைப் பற்ற அருகில் வரும்சமயம், ஆதிமுருகா, ஆதிமுருகா, ஆதிமுருகா, என்று நான் கூறுவதற்கு ஆதி முருகனே, நீ அந்த ஞாபகத்தைத் தர வேண்டுகிறேன். ஈரம் உள்ள மேகம் படியும் கிரெளஞ்சகிரி பொடியாகும்படி, அங்கு வாழ்ந்த அசுரர்கள் பயத்தினால் கூக்குரல் இடும்படி, வேல் கொண்டு போர் புரிந்தவனே, ஓம் நமசிவாய என்னும் பஞ்சாட்சரத்துக்கு ஏற்ற குருவாம் சிவபிரான் உனது பாதங்களிலே பணியும்படியான யோக மூர்த்தியான மயில்வாகனனே, குற்றமற்ற பார்வதி மகிழ்ந்து குலாவும் குழந்தையே, தலைவனே, ரகுராமனாம் திருமாலாகிய மாயனுடைய மருகனே, பூமியில் உன்னை விரும்பிப் போற்றும் அடியார்களின் உள்ளத்தில் உறைபவனே, ஞான ஸ்வரூபியான தேவயானையின் கணவனே, முருகனே, தேவர்கள் தமது பொன்னுலகை மீண்டும் பெற்று வாழும்படி அருள் புரிந்த பெருமாளே. 

பாடல் 1244 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தனந்தான தானான தனந்தான தானான     தனந்தான தானான ...... தனதான

செழுந்தாது பார்மாது மரும்பாதி ரூபோடு     சிறந்தியாதி லூமாசை ...... யொழியாத 
திறம்பூத வேதாள னரும்பாவ மேகோடி     செயுங்காய நோயாள ...... னரகேழில் 
விழுந்தாழ வேமூழ்க இடுங்காலன் மேயாவி     விடுங்கால மேநாயென் ...... வினைபாவம் 
விரைந்தேக வேவாசி துரந்தோடி யேஞான     விளம்போசை யேபேசி ...... வரவேணும் 
அழுங்கோடி தேவார்க ளமர்ந்தார வானீடி     அழன்றேகி மாசீத ...... நெடுவேலை 
அதிர்ந்தோட வேகாலன் விழுந்தோட வேகூர     அலங்கார வேலேவு ...... முருகோனே 
கொழுங்கானி லேமாதர் செழுஞ்சேலை யேகோடு     குருந்தேறு மால்மாயன் ...... மருகோனே 
குறம்பாடு வார்சேரி புகுந்தாசை மாதோடு     குணங்கூடி யேவாழு ...... பெருமாளே.

செழுமையான பொன், மண், பெண் (என்னும் மூவாசைகளும்) முதலில் அரும்பு விட்டுப் பின்னர் வளருவது போன்ற உருவத்துடன், மேலும் மேலும் விளங்கி எதிலுமே ஆசை நீங்காத கோட்பாட்டினை உடைய பேய் பிசாசு (நான்). கொடிய பாவங்களைக் கோடிக் கணக்கில் செய்யும் உடலில் நோய் கொண்டவன். ஏழு நரகங்களிலும் விழுந்து ஆழ்ந்து முழுகும்படி தள்ளுகின்ற யமன் என்னை அணுக, நான் உயிர் விடும் காலத்தில் அடியேனுடைய வினை பாவம் ஆகியவை அதி வேகத்தில் என்னை விட்டு அகலும்படி, குதிரையாகிய மயிலை வேகமாகச் செலுத்தி, ஞான மொழிகளைச் சொல்லும் ஒலியே எனக்குக் கேட்கும்படியாக பேசி வந்தருள வேண்டும். அழுத கோடிக் கணக்கான தேவர்கள் விண்ணில் நீண்ட காலம் அமர்ந்து வாழ்ந்திருக்கும்படியாக, கொதிப்புடன் கோபித்துச்சென்று, மிகவும் குளிர்ச்சியான பெரிய கடல் அதிர்ச்சி அடையும்படி நீ வேகமாகப் பாய்ந்து செல்ல, யமன் (அசுரர்களின் உயிரைக் கவர) விழுந்து அடித்துக்கொண்டு (போர் முனைக்கு) ஓடவே, கூர்மையான, அலங்காரம் உள்ள வேலாயுதத்தைச் செலுத்திய முருகனே, செழிப்பான காட்டிலே பெண்களின் நல்ல ஆடைகளை எடுத்துக் கொண்டு குருந்த மரத்தில் ஏறி (ஆடைகளை மறைத்த) மாயக் கண்ணனாகிய திருமாலின் மருகோனே, குறம் என்னும் பாடல் வகையைப் பாடுபவர்களாகிய குறவர்களின் சேரியில் புகுந்து, உன் ஆசைக்கு உகந்த வள்ளியுடன், அவள் குணத்துக்கு மகிழ்ந்து, பிறகு அவளுடன் கூடியே வாழ்கின்ற பெருமாளே. 

பாடல் 1245 - பொதுப்பாடல்கள் 
ராகம் - சுத்த சாவேரிதாளம் - ஆதி

தத்த தனதனன தத்த தனதனன     தத்த தனதனன ...... தனதான

தத்த னமுமடிமை சுற்ற மொடுபுதல்வர்     தக்க மனையினமு ...... மனைவாழ்வுந் 
தப்பு நிலைமையணு கைக்கு வரவிரகு     தைக்கு மயல்நினைவு ...... குறுகாமுன் 
பத்தி யுடனுருகி நித்த முனதடிகள்     பற்று மருள்நினைவு ...... தருவாயே 
பத்து முடியுருளு வித்த பகழியினர்     பச்சை நிறமுகிலின் ...... மருகோனே 
அத்தி முகவனழ குற்ற பெழைவயிற     னப்ப மவரைபொரி ...... அவல்தேனும் 
அப்பி யமுதுசெயு மொய்ப்ப னுதவஅட     விக்குள் மறமகளை ...... யணைவோனே 
முத்தி தருமுதல்வர் முக்க ணிறைவரொடு     முற்று மறைமொழியை ...... மொழிவோனே 
முட்ட வசுரர்கிளை கெட்டு முறியமுதல்     வெட்டி யமர்பொருத ...... பெருமாளே.

அந்தப் பொருளும், ஏவலாளர்களும், சுற்றத்தினரும், புதல்வர்களும், தகுதியான மனைவியும், மனைவியைச் சார்ந்தவர்களும், இல்லற வாழ்வும் (ஆன இவைகளை) இழக்கும் படியான நிலைமை குறுகி வர, அறிவைச் சிதைக்கும் புத்தி மாறாட்டம் (என்னை) அணுகி வருவதற்கு முன், பக்தியுடனே மனம் உருகி தினமும் உன்னுடைய திருவடிகளை பற்றக்கூடிய திருவருள் நினைவைத் தந்தருள்க. (இராவணனுடைய) பத்து முடிகளையும் அறுத்துத் தள்ளிய அம்பைக் கொண்டவர், மேக நிறத்தினறான திருமாலின் மருகனே, யானை முகம் உடைய விநாயகன், அழகுள்ள பெட்டி போன்ற வயிற்றை உடையவன், அப்பம் அவரை பொரி முதலியவற்றோடு தேனையும் தொப்பையில் நிரப்பி உண்ணும் வலிமையை உடையவன் உதவி செய்ய, காட்டில் வேடப் பெண்ணாகிய வள்ளியை அணைபவனே, வீட்டுப் பேறு அளிக்கும் முதல்வரும், முக்கண்களை (சூரியன், சந்திரன், அக்கினி) உடைய இறைவருமாகிய சிவபெருமானுக்கு வேத மொழி முழுவதையும் உபதேசித்தவனே, அரக்கர் கூட்டம் முழுமையும் தோற்றுப் போய் அழிய முன்பு வெட்டி, போர் செய்த பெருமாளே. 

பாடல் 1246 - பொதுப்பாடல்கள் 
ராகம் - பிலஹரிதாளம் - அங்கதாளம் - 5 - எடுப்பு - 1/2 அக்ஷரம் தள்ளி 
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தக-1

தனதனன தானனம் தனதனன தானனம்     தனதனன தானனம் ...... தனதான

தலைவலய போகமுஞ் சலனமிகு மோகமுந்     தவறுதரு காமமுங் ...... கனல்போலுந் 
தணிவரிய கோபமுந் துணிவரிய லோபமுஞ்     சமயவெகு ரூபமும் ...... பிறிதேதும் 
அலமலமெ னாஎழுந் தவர்களநு பூதிகொண்     டறியுமொரு காரணந் ...... தனைநாடா 
ததிமதபு ராணமுஞ் சுருதிகளு மாகிநின்     றபரிமித மாய்விளம் ...... புவதோதான் 
கலகஇரு பாணமுந் திலகவொரு சாபமுங்     களபமொழி யாதகொங் ...... கையுமாகிக் 
கவருமவ தாரமுங் கொடியபரி தாபமுங்     கருதியிது வேளையென் ...... றுகிராத 
குலதிலக மானுடன் கலவிபுரி வாய்பொருங்     குலிசகர வாசவன் ...... திருநாடு 
குடிபுகநி சாசரன் பொடிபடம கீதரன்     குலையநெடு வேல்விடும் ...... பெருமாளே.

மேலான எல்லையைக் கண்ட இன்ப சுகங்களும், மனச்சலனம் மிக்க ஆசைகளும், பிழையான நெறியில் செல்லும்படி தூண்டும் காம இச்சையும், தீப்போல அடங்குதற்கு அரிதான கோபமும், துணிந்து ஒரு நல்ல செய்கையைச் செய்ய விடாத ஈயாமைக்குணமும், சமயக் கோட்பாடுகளால் புனையும் பல வேஷங்களும், மற்ற எந்த வெளிப்பாடும், போதும் போதும் என்று தள்ளிய ஞான உணர்ச்சி உள்ளவர்கள் தங்கள் அநுபவம் கொண்டு அறிகின்ற ஒரு மூலப்பொருளை விரும்பி உணராமல், நிரம்ப மதக்கொள்கைகளையே கூறும் புராணங்களையும், வேத மொழிகளையும் எடுத்துக்கொண்டு அளவிலாத வகையில் வெறும் பேச்சு பேசுவதால் என்ன பயன்? காமப் போரை விளைக்கும் இரு அம்புகளான கண்களும், பொட்டு வைத்த, ஒப்பற்ற வில்லைப் போன்ற, அழகிய நெற்றியும், சந்தனக் கலவை நீங்காத மார்புமாகி, உள்ளத்தைக் கவருமாறு உலகில் அவதரித்த தோற்றத்தையும், (தினைப்புனம் காக்கும்) மிக்க பரிதாபமான தொழிலையும் கருத்திலே வைத்து, இந்த வள்ளியை ஆட்கொள்ளும் வேளை வந்ததென, வேடர் குலத்தின் சிறந்த மான் போன்ற வள்ளியுடன் கலந்தாய். போர் செய்ய வல்ல வஜ்ராயுதத்தைக் கரத்திலே கொண்ட இந்திரன் தன் பொன்னுலகமாம் தேவர் நாட்டுக்குக் குடியேற, அசுரன் சூரன் தூள்பட்டுப் போக, இந்தப் பூமியைத் தாங்கும் ஆதிசேஷன் நடுநடுங்க, நீண்ட வேலைச் செலுத்திய பெருமாளே. 

பாடல் 1247 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ஆபோகி தாளம் - சதுஸ்ர த்ருவம் - 14 - எடுப்பு - /4/4 0/4

தனதன தனதன தனதன தனதன தனதன ...... தனதான

தவநெறி தவறிய குருடுகள் தலைபறி கதறிய ...... பரபாதத் 
தருமிகள் கருமிகள் வெகுவித சமயிக ளவரொடு ...... சருவாநின் 
றவனிவ னுவனுட னவளிவ ளுவளது இதுவுது ...... வெனுமாறற் 
றருவுரு வொழிதரு வுருவுடை யதுபதி தமியனு ...... முணர்வேனோ 
குவலய முழுவதும் மதிர்பட வடகுவ டிடிபட ...... வுரகேசன் 
கொடுமுடி பலநெரி தரநெடு முதுகுரை கடல்புனல் ...... வறிதாகத் 
துவல்கொடு முறையிடு சுரர்பதி துயரது கெடநிசி ...... சரர்சேனை 
துகளெழ நடநவில் மரகத துரகதம் வரவல ...... பெருமாளே.

தவவழியை விட்டு விலகின குருடர்கள், தலைமயிரைப் பறித்து, தமது கொள்கைகளை உரக்க வலியுறுத்தும் மற்றச் சமய (சமண) அறநெறியாளர்கள், தீய வினையாளர்கள், பலவிதமான சமய நெறிகளை அனுஷ்டிப்பவர்கள், ஆகிய இவர்களுடன் யான் பலகாலம் போராடி நின்றேன். அவன் - இவன் - உவன் என்றும், அவள் - இவள் - உவள் என்றும், அது - இது - உது என்றும் குறித்துக்காட்ட இல்லாத வகையில் இருக்கும், உருவம் இன்மை - உருவம் உடைமை இரண்டும் நீங்கிய தன்மையை உடைய பொருளே கடவுள் என்ற உண்மையை அடியேனும் உணர்ந்து கொள்வேனோ? உலகம் முழுவதும் அதிர்ச்சி கொள்ள, வடக்கில் உள்ள மேருமலை பொடிபட, சர்ப்பங்களின் தலைவன் ஆதிசேஷனின் வளைந்த பணாமுடிகளில் பலவும் நெரிபட, நீண்டதும், பழையதும், ஒலிப்பதுமான கடலில் நீர் வற்றிப் போக, அர்ச்சனைப் பூக்களுடன் பூஜித்து விண்ணப்பிக்கும் தேவர்களின் தலைவன் இந்திரனின் துயரங்கள் நீங்க, அசுரர்களின் சேனை அழிபட்டுப் பொடி எழ, நடனம் செய்யும் மரகதப் பச்சைக் குதிரையாம் மயில் மீது ஏறி (போர்க்களத்துக்கு) வரவல்ல பெருமாளே. 

பாடல் 1248 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தனதன தாத்தனத் தனதன தாத்தனத்     தனதன தாத்தனத் ...... தனதான

திதலையு லாத்துபொற் களபம்வி டாப்புதுத்     த்ரிவிதக டாக்களிற் ...... றுரகோடு 
சிகரம காப்ரபைக் குவடென வாய்த்துநற்     சுரர்குடி யேற்றிவிட் ...... டிளநீரை 
மதனவி டாய்த்தனத் திளைஞரை வாட்டுசெப்     பிணைமுலை மாத்தவக் ...... கொடிபோல்வார் 
வலையிலி ராப்பகற் பொழுதுகள் போக்குமற்     றெனையுனை வாழ்த்தவைத் ...... தருள்வாயே 
சததள பார்த்திபற் கரிபுரு ஷோத்தமற்     கெரிகன லேற்றவற் ...... குணராதோர் 
சகலச மார்த்தசத் தியவன சூக்ஷமுக்     கியபர மார்த்தமுற் ...... புகல்வோனே 
கதிர்மணி நீர்க்கடற் சுழிபுகு ராக்ஷதக்     கலகப ராக்ரமக் ...... கதிர்வேலா 
கருதிய பாட்டினிற் றலைதெரி மாக்ஷணக்     கவிஞரு சாத்துணைப் ...... பெருமாளே.

தேமல் பரவி உள்ளதும், அழகிய கலவைச் சாந்தை விடாததாய், புதிதாய் (கன்னமதம், கைமதம், கோசமதம் என்னும்) மூன்று விதமான மத நீர்களைக் கொண்ட யானையின் பலமான தந்தம் என்றும், சிகரங்களைக் கொண்டு மிக்க பொலிவு உடைய மலையை ஒக்கும் என்று சொல்லும்படி அமைந்து, தேவர்கள் பருகுவதான அமுதத்தை நிரம்பக் கொண்டதாய், இள நீரைப் போன்றதாய், காம இச்சை என்னும் தாகத்துக்கு ஏற்றதாய், செல்வமுடைய இளைஞர்களை வாட்டும் தன்மை உடையதாய், செப்புக் குடம் போன்றதான இரு மார்பகங்களைக் கொண்டு சிறந்த தோற்றம் உடையவர்களாய், கொடி போன்ற சாயலை உடைய விலைமாதர்களின் வலையில் இரவிலும் பகலிலும் காலம் கழித்தலை நீக்கி, என்னை உன் புகழை வாழ்த்தும்படியாக செய்து அருள் புரிவாயாக. நூறு இதழ்களை உடைய தாமரையில் இருக்கும் அரசரான பிரமனுக்கும், திருமாலாகிய புருஷ உத்தமருக்கும், நெருப்பைக் கையில் ஏந்திய சிவபெருமானுக்கும் அறிய முடியாததான, ஒப்பற்றதும், எல்லாவிதமானதும், ஒத்த பொருளானதும், உண்மை நிறைந்ததும், அழகுள்ளதும், நுட்பமானதும், முக்கியமானதுமான மேலான உண்மைப் பொருளை முன்பு உபதேசித்தவனே, ஒளி பொருந்தியதும், முத்தும் பவளமும் உடையதுமான தன்மையை உடைய கடலின் நீர்ச் சுழியில் புகுந்திருந்த அரக்கர்களுடன் போர் புரிந்த வல்லமை உடைய கதிர் வேலனே, உன்னை நினைத்துப் பாடப்பட்ட பாடலிடத்து நீ அமர்ந்திருத்தலை தெரிந்துள்ளவர்களும், நொடியில் கவி பாட வல்லவர்களுமான பெரியோர்களின் ஆராய்ச்சிக்குத் துணை புரியும் பெருமாளே. 

பாடல் 1249 - பொதுப்பாடல்கள் 
ராகம் - நாட்டக்குறிஞ்சி தாளம் - கண்டசாபு - 2 1/2

தனதந்த தனதனன தனதந்த தனதனன     தனதந்த தனதனன ...... தனதான

திரைவஞ்ச இருவினைகள் நரையங்க மலமழிய     சிவகங்கை தனில்முழுகி ...... விளையாடிச் 
சிவம்வந்து குதிகொளக வடிவுன்றன் வடிவமென     திகழண்டர் முநிவர்கண ...... மயன்மாலும் 
அரன்மைந்த னெனகளிறு முகனெம்பி யெனமகிழ     அடியென்க ணளிபரவ ...... மயிலேறி 
அயில்கொண்டு திருநடன மெனதந்தை யுடன்மருவி     அருமந்த பொருளையினி ...... யருள்வாயே 
பரியென்ப நரிகள்தமை நடனங்கொ டொருவழுதி     பரிதுஞ்ச வருமதுரை ...... நடராஜன் 
பழியஞ்சி யெனதருகி லுறைபுண்ட ரிகவடிவ     பவளஞ்சொ லுமைகொழுந ...... னருள்பாலா 
இருள்வஞ்ச கிரியவுண ருடனெங்க ளிருவினையு     மெரியுண்டு பொடியஅயில் ...... விடுவோனே 
எனதன்பி லுறைசயில மகிழ்வஞ்சி குறமகளொ     டெணுபஞ்ச ணையின்மருவு ...... பெருமாளே.

கடல் அலைபோல வருவதும், வஞ்சனைச் செயல்களால் வருவதுமான நல் வினை, தீ வினை எனப்படும் இரு வினைகளும், மயிர் நரைத்தலுக்கு இடம் கொடுக்கும் உடலும், மும்மலங்களும் அழியவும், சிவாமிர்தம் என்னும் கங்கை நீரில் மூழ்கி, திளைத்து விளையாடி, உள்ளத்தில் சிவமாகிய மங்கலப் பொருள் வந்து அழுந்தப் பதிய, என்னுடைய வடிவம் உன்னுடைய வடிவம் என்று சொல்லும்படி, விளங்கும் தேவர், முனிவர் கூட்டமும், பிரமனும், திருமாலும், (நான்) சிவ பெருமானது குமரனே என்று மகிழ, யானை முகத்தை உடைய கணபதி என் தம்பியே என்று (என்னிடம்) மகிழ்ச்சி கொள்ள, அடியேனிடத்தில் கருணையை மிகக் காட்ட (நீ) மயிலின் மேல் ஏறி, வேல் ஏந்தி, உன் தந்தையின் திரு நடனம் என்று சொல்லும்படி, உடன் இருந்து என்னுடன் பொருந்தி, அரிய மறைப் பொருளை இனி எனக்கும் அருள்வாயாக. குதிரை என்று நரிகளை மாற்றி ஒரு திருவிளையாடலாகக் காட்டி, ஒரு பாண்டிய மன்னனுக்கு இருந்த குதிரைகள் (ஓரிரவில்) இறந்துபடும்படியாக எழுந்தருளி வந்த மதுரை நடராஜப் பெருமான், பழிக்கு பயந்தவனாக என்னுடைய அருகில் இருப்பவன், செந்தாமரை போன்ற திரு உருவத்தினன், பவள நிறத்தினன் என்றும் சொல்லும்படியானவன், உமா தேவியின் கணவன் ஆகிய சிவ பெருமான் ஈன்ற மகனே, இருள் சூழ்ந்ததும், வஞ்சகச் செயல்கள் செய்வதுமான கிரெளஞ்ச மலையும், அதனிடம் இருந்த அசுரர்களும், எங்களுடைய (நல்வினை, தீவினை ஆகிய) இரண்டு வினைகளும், எரிபட்டுப் பொடியாகும்படியாக வேலைச் செலுத்தியவனே, என்னுடைய அன்பில் எப்போதும் உறைபவளும், வள்ளி மலைச் சாரலில் மகிழ்ந்த வஞ்சிக் கொடி போன்ற குறப் பெண்ணுமாகிய வள்ளியுடன் மதிக்கும்படியான பஞ்சு மெத்தையில் பள்ளி கொள்ளும் பெருமாளே. 

பாடல் 1250 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தானான தாத்த தானான தாத்த     தானான தாத்த ...... தனதான

தீயூதை தாத்ரி பானீய மேற்ற     வானீதி யாற்றி ...... கழுமாசைச் 
சேறூறு தோற்பை யானாக நோக்கு     மாமாயை தீர்க்க ...... அறியாதே 
பேய்பூத மூத்த பாறோரி காக்கை     பீறாஇ ழாத்தி ...... னுடல்பேணிப் 
பேயோன டாத்து கோமாளி வாழ்க்கை     போமாறு பேர்த்து ...... னடிதாராய் 
வேயூறு சீர்க்கை வேல்வேடர் காட்டி     லேய்வாளை வேட்க ...... வுருமாறி 
மீளாது வேட்கை மீதூர வாய்த்த     வேலோடு வேய்த்த ...... இளையோனே 
மாயூர வேற்றின் மீதே புகாப்பொன்     மாமேரு வேர்ப்ப ...... றியமோதி 
மாறான மாக்கள் நீறாக வோட்டி     வானாடு காத்த ...... பெருமாளே.

நெருப்பு, காற்று, மண், நீர், உயர்ந்த விண் இந்த ஐம்பூதங்களால் விளங்குகின்றதும், ஆசை என்னும் சேறு ஊறியுள்ளதும், தோலால் ஆனதுமான பையாகிய இந்த உடம்பு, நானாக எண்ணுகின்ற பெரும் மாயையை ஒழிக்க அறியாமல், பேய்களும், பூதங்களும், வயதான பருந்துகளும், நரிகளும், காகங்களும் கிழித்து, இழுத்து உண்ணப் போகின்ற உடலை விரும்பிப் பாதுகாத்து, பேய் போன்ற நான் நடத்துகின்ற கோணங்கித்தனமான வாழ்க்கை தொலையும் வண்ணம் விலக்கவல்ல உனது திருவடிகளைத் தந்து அருள்வாயாக. புல்லாங் குழலில் வைத்துத் தடவும் சீரான கையில் வேல் ஏந்தும் வேடுவர்கள் (வாழும்) வள்ளிமலைக் காட்டில், பொருந்தி இருந்த வள்ளியை விரும்பித் திருமணம் செய்ய உருவத்தை மாற்றிக் கொண்டு, திரும்பாது காம ஆசை மேலெழ, பொருந்திய வேலுடனே, ஒற்றர் செய்தி அறியப் போவதுபோலச் சென்ற இளையவனே, ஒப்பற்ற மயிலின் மேல் ஏறி, பொன்னிறம் உடைய கிரெளஞ்ச மலையின் வேர் பறியும்படி அதனைத் தாக்கி, மாறுபட்டு எதிர்த்த அசுரர்கள் வெந்து சாம்பலாக ஓட்டி ஒழித்து, தேவர்களின் திருநாட்டைக் காப்பாற்றிய பெருமாளே.

by Swathi   on 28 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.