LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- அருணகிரிநாதர் நூல்கள்

திருப்புகழ்-பாடல்-[151-175]

பாடல் 151 - பழநி
ராகம் - ....; தாளம் -
தந்தத் தனதன தனனா தனனா
     தந்தத் தனதன தனனா தனனா
          தந்தத் தனதன தனனா தனனா ...... தனதான
கொந்துத் தருகுழ லிருளோ புயலோ
     விந்தைத் தருநுதல் சிலையோ பிறையோ
          கொஞ்சிப் பயில்மொழி அமுதோ கனியோ ...... விழிவேலோ 
கொங்கைக் குடமிரு கரியோ கிரியோ
     வஞ்சிக் கொடியிடை துடியோ பிடியோ
          கொங்குற் றுயரல்கு லரவோ ரதமோ ...... எனுமாதர் 
திந்தித் திமிதிமி திமிதா திமிதோ
     தந்தித் திரிகட கிடதா எனவே
          சிந்திப் படிபயில் நடமா டியபா ...... விகள்பாலே 
சிந்தைத் தயவுகள் புரிவே னுனையே
     வந்தித் தருள்தரு மிருசே வடியே
          சிந்தித் திடமிகு மறையா கியசீ ...... ரருள்வாயே 
வெந்திப் புடன்வரு மவுணே சனையே
     துண்டித் திடுமொரு கதிர்வே லுடையாய்
          வென்றிக் கொருமலை யெனவாழ் மலையே ...... தவவாழ்வே 
விஞ்சைக் குடையவர் தொழவே வருவாய்
     கஞ்சத் தயனுட னமரே சனுமே
          விந்தைப் பணிவிடை புரிபோ தவர்மே ...... லருள்கூர்வாய் 
தொந்திக் கணபதி மகிழ்சோ தரனே
     செங்கட் கருமுகில் மருகா குகனே
          சொந்தக் குறமகள் கணவா திறல்சேர் ...... கதிர்காமா 
சொம்பிற் பலவள முதிர்சோ லைகள்சூழ்
     இஞ்சித் திருமதிள் புடைசூ ழருள்சேர்
          துங்கப் பழநியில் முருகா இமையோர் ...... பெருமாளே.
பூங்கொத்துக்கள் உள்ள கூந்தல் இருட்டோ, மேகமோ? விசித்திரமான நெற்றி வில்லோ, பிறைச் சந்திரனோ? கொஞ்சிப் பேசும் பேச்சு அமுதமோ அல்லது பழமோ? கண் வேலாயுதமோ? மார்பகங்களாகிய குடங்கள் இரண்டு யானைகளோ, மலைகளோ? வஞ்சிக் கொடி போன்ற இடுப்பு உடுக்கையோ, ஒரு பிடியில் அடங்குவதோ? வாசனை கொண்டு உயர்ந்த பெண்குறி பாம்போ, ரதமோ என்று உவமை கூறத் தக்க விலைமாதர்கள். திந்தித் திமிதிமி திமிதா திமிதோ தந்தித் திரிகிட கிடதா என்ற ஒலியுடன் சிந்து எனப்படும் இசைப் பாடல்களை இவ்வண்ணம் பயின்று நடனம் செய்கின்ற பாவியர்களாகிய வேசியரிடத்தே மனம் அன்பு கூர்ந்த செயல்களைச் செய்பவனாகிய அடியேன் உன்னையே வணங்கி திருவருளைப் பாலிக்கும் உனது இரண்டு திருவடிகளை தியானிக்க சிறந்த ரகசியமாகிய உபதேசப் பொருளை அருள்வாயாக. உடை வாள், அம்பராத்தூணி முதலிய கட்டுக்களுடன் போருக்கு வந்த அசுரர் தலைவனாகிய சூரபத்மனை வெட்டிய ஒப்பற்ற ஒளி வீசும் வேலை உடையவனே, வெற்றிக்கு ஒரு மலை இவன் என்று சொல்லும்படி வாழ்கின்ற ஞானமலையே, தவ சீலர்களுக்கு வாழ்வே, ஞான வித்தைக்கு உரியவர்கள் தொழும்படி வருபவனே, தாமரை மலர் மீது உறையும் பிரம தேவரும் இந்திரனும் அழகிய திருத் தொண்டுகள் செய்யும்போது அவர்கள்பால் மிகுதியாக அருள் சுரப்பவனே, தொந்தியை உடைய கணபதி மகிழும் தம்பியே, சிவந்த கண்களை உடைய, மேகம் போன்ற கரிய, திருமாலின் மருகனே, உனக்குச் சொந்தமான குறப் பெண் வள்ளியின் கணவனே, திறமை வாய்ந்த கதிர் காமத்தில் உறைபவனே, அழகு வாய்ந்த பல வனங்கள் நிறைந்த, சோலைகள் சூழ்ந்துள்ள, கோட்டையும் அழகிய மதில்களும் அருகில் சுற்றியிருந்து அருள் பாலிப்பதும் பெருமை வாய்ந்ததுமான பழனி மலை மேல் வீற்றிருக்கும் முருகனே, தேவர்களின் பெருமாளே. 
பாடல் 152 - பழநி
ராகம் - ....; தாளம் -
தான தந்தன தத்தன தத்தம்
     தான தந்தன தத்தன தத்தம்
          தான தந்தன தத்தன தத்தம் ...... தனதான
கோல குங்கும கற்புர மெட்டொன்
     றான சந்தன வித்துரு மத்தின்
          கோவை செண்பக தட்பம கிழ்ச்செங் ...... கழுநீரின் 
கோதை சங்கிலி யுற்றக ழுத்தும்
     பூஷ ணம்பல வொப்பனை மெச்சுங்
          கூறு கொண்டப ணைத்தனம் விற்கும் ...... பொதுமாதர் 
பாலு டன்கனி சர்க்கரை சுத்தந்
     தேனெ னும்படி மெத்தரு சிக்கும்
          பாத கம்பகர் சொற்களி லிட்டம் ...... பயிலாமே 
பாத பங்கய முற்றிட வுட்கொண்
     டோது கின்றதி ருப்புகழ் நித்தம்
          பாடு மன்பது செய்ப்பதி யிற்றந் ...... தவனீயே 
தால முன்புப டைத்தப்ர புச்சந்
     தேக மின்றிம திக்கவ திர்க்குஞ்
          சாக ரஞ்சுவ றக்கிரி யெட்டுந் ...... தலைசாயச் 
சாடு குன்றது பொட்டெழ மற்றுஞ்
     சூர னும்பொடி பட்டிட யுத்தஞ்
          சாத கஞ்செய்தி ருக்கைவி திர்க்குந் ...... தனிவேலா 
ஆல முண்டக ழுத்தினி லக்குந்
     தேவ ரென்புநி ரைத்தெரி யிற்சென்
          றாடு கின்றத கப்பனு கக்குங் ...... குருநாதா 
ஆட கம்புனை பொற்குடம் வைக்குங்
     கோபு ரங்களி னுச்சியு டுத்தங்
          காவி னன்குடி வெற்பினி னிற்கும் ...... பெருமாளே.
அழகிய குங்குமம், பச்சைக் கற்பூரம், ஒன்பது மணிகள், தகுதியான சந்தனம், பவள மாலை, செண்பகப் பூ குளிர்ந்த மகிழம் பூ செங்கழு நீர்ப் பூ இவைகளால் ஆகிய பூமாலை, தங்கச் சங்கிலி இவைகள் விளங்கும் கழுத்தும், ஆபரணம், பல வித அலங்காரங்களையும், மெச்சும்படியாக அணிந்த, பருத்த மார்பகங்களை விற்கின்ற விலைமாதர்களின் பாலுடன் பழம், சர்க்கரை, சுத்தமான தேன் என்று சொல்லும்படியாக மிகவும் ருசிக்கின்றவையும், பாவமே தருகின்றவையுமான சொற்களில் ஆசை வைக்காமல், உனது திருவடித் தாமரைகளை அடைய உள்ளத்தில் எண்ணம் கொண்டு நான் கூறி வரும் திருப்புகழ்ப் பாடல்களை தினந்தோறும் பாட வேண்டும் என்ற அன்பை வயலூரில் (எனக்குத்) தந்தவன் நீ தான். உலகத்தை முன்பு படைத்த மேலான பிரம தேவன் ஐயம் தீர்ந்து (பிரணவப் பொருளை உம்மால் அறிந்தேன் என்று) மதிக்கவும், ஒலிக்கின்ற கடல் வற்றிப் போகவும், எண் திசைகளில் உள்ள மலைகளும் நிலை குலையவும், பலரையும் வஞ்சனையால் கொன்ற கிரெளஞ்ச மலை தூளாகி விழவும், மேலும் சூரனும் பொடிபடவும், போரில் பயிற்சி கொண்ட திருக்கரத்தை அசையச் செலுத்திய ஒப்பற்ற வேலை உடையவனே, ஆலகால விஷத்தை உண்ட கழுத்தில் ருத்திராட்ச மாலையும் தேவர்களுடைய எலும்பு மாலையும் வரிசையாகத் தரித்து, சுடுகாட்டு நெருப்பின் எதிரில் போய் ஆடுகின்ற தந்தையாகிய சிவபெருமானும் மகிழ்கின்ற குரு நாதனே, பொன்னால் அலங்கரிக்கப்பட்ட அழகிய கலசங்கள் வைத்துள்ள கோபுரங்களின் உச்சியில் நட்சத்திரங்கள் தங்குகின்ற திருவாவினன்குடி மலையில் நின்று விளங்கும் பெருமாளே. 
பாடல் 153 - பழநி
ராகம் - .....; தாளம் -
தான தனதனன தான தனதனன
     தான தனதனன தான தனதனன
          தான தனதனன தான தனதனன ...... தனதான
கோல மதிவதனம் வேர்வு தரஅளக
     பாரம் நெகிழவிழி வேல்கள் சுழலநுவல்
          கோவை யிதழ்வெளிற வாய்மை பதறியிள ...... முகையான 
கோக னகவுபய மேரு முலையசைய
     நூலி னிடைதுவள வீறு பறவைவகை
          கூற யினியகள மோல மிடவளைகள் ...... கரமீதே 
காலி னணிகனக நூபு ரமுமொலிக
     ளோல மிடஅதிக போக மதுமருவு
          காலை வெகுசரச லீலை யளவுசெயு ...... மடமானார் 
காதல் புரியுமநு போக நதியினிடை
     வீழு கினுமடிமை மோச மறவுனது
          காமர் கழலிணைக ளான தொருசிறிது ...... மறவேனே 
ஞால முழுதுமம ரோர்கள் புரியுமிக
     லாக வருமவுணர் சேர வுததியிடை
          நாச முறஅமர்செய் வீர தரகுமர ...... முருகோனே 
நாடி யொருகுறமின் மேவு தினைசெய்புன
     மீதி லியலகல்கல் நீழ லிடைநிலவி
          நாணம் வரவிரக மோது மொருசதுர ...... புரிவேலா 
மேலை யமரர்தொழு மானை முகரரனை
     யோடி வலம்வருமுன் மோது திரைமகர
          வேலை யுலகைவல மாக வருதுரக ...... மயில்வீரா 
வீறு கலிசைவரு சேவ கனதிதய
     மேவு முதல்வவயல் வாவி புடைமருவு
          வீரை வருபழநி ஞான மலையில்வளர் ...... பெருமாளே.
அழகிய சந்திரனை ஒத்த முகம் வேர்வை அடையவும், கூந்தலின் கட்டு அவிழவும், கண்களாகிய வேல்கள் சுழலவும், உவமை கூறப்படும் கொவ்வைக் கனி போன்ற இதழ் வெளுக்கவும், சொற்கள் பதறவும், இளமையான மொட்டு நிலையில் இருக்கும் தாமரை ஒத்த இரண்டு மேருமலை போன்று உயர்ந்த மார்பகங்கள் அசையவும், நூல் போன்ற இடை துவளவும், விளங்கும் கிளி, புறா முதலிய பறவைகள் வகைகளின் குரல் போல் இனிமை உடைய கண்டத்தின் இன்சொல் வெளிப்படவும், கைகளில் வளையல்கள் ஒலி செய்யவும், காலில் அணிந்துள்ள பொன்னாலாகிய சிலம்பின் ஒலிகள் சப்திக்கவும், அதிக போகத்தை அனுபவிக்கும் போது பலவித காம லீலைகளை (பெற்ற பொருளுக்குத்) தக்கவாறு அளந்து செய்யும் அழகிய பொது மகளிர் மீது காதல் புரிகின்ற அநுபோகம் என்னும் ஆற்று வெள்ளத்தின் இடையே விழுந்தாலும், அடிமையாகிய நான் சிறிதும் (அந்த வெள்ளத்திலே) அழிவின்றி உன்னுடைய அழகிய திருவடிகளை ஒரு சிறிதும் மறக்க மாட்டேன். உலக முழுவதும் தேவர்களுடன் போர் செய்யும்படி பகையாக வந்த அசுரர்கள் யாவரும் ஒருமிக்க கடலில் அழியும்படி போர் செய்த வீரத்தை உடையவனே, குமரனே, முருகோனே, தேடிச் சென்று ஒரு குறப் பெண் இருந்த தினை வளரும் புனம் மீது, ஒழுங்கு மிக்க மலைப் பாறையின் நிழலில இருந்துகொண்டு, (அந்த வள்ளிக்கு) வெட்கம் உண்டாக ஆசை மொழிகளைக் கூறி, ஒப்பற்ற சாமர்த்தியச் செயல்களை புரிந்த வேலாயுதனே, விண்ணுலகத்தில் தேவர்கள் தொழும் யானைமுகக் கடவுளாகிய விநாயகர் சிவபெருமானை ஓடி வலம் வரும் முன்பே, மோதுகின்ற அலைகளையும் மகர மீன்களையும் உடைய கடல் சூழ்ந்த உலகை வலம் வந்த குதிரை போன்ற மயிலை உடைய வீரனே, விளங்குகின்ற கலிசை என்னும் பதியில் வாழ்கின்ற சேவகனுடைய மனத்தில் வீற்றிருக்கும் முதல்வனே, வயல்களும் குளங்களும் பக்கங்களில் பொருந்தியுள்ள வீரை என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ளவனும், பழனியாகிய ஞான மலையில் வீற்றிருப்பவனுமான பெருமாளே. 
* மனிதர்களைப் புகழ்ந்து பாடாத அருணகிரிநாதர் அபூர்வமாகப் பாடிய சிலரில் கலிசைச் சேவகனார் ஒருவர். இவர் அருணகிரியாரின் நண்பர், முருக பக்தர், வீரைநகரில் பழநி ஆண்டவரை எழுந்தருளப் புரிந்தவர்.
பாடல் 154 - பழநி
ராகம் - ....; தாளம் -
தனனத்தத் தனனத் தத்தத்
     தனனத்தத் தனனத் தத்தத்
தனனத்தத் தனனத் தத்தத்
     தனனத்தத் தனனத் தத்தத்
தனனத்தத் தனனத் தத்தத்
     தனனத்தத் தனனத் தத்தத் ...... தனதான
சகடத்திற் குழையிட் டெற்றிக்
     குழலுக்குச் சரம்வைத் தெற்றிப்
புளகித்துக் குவளைக் கட்பொற்
     கணையொத்திட் டுழலச் சுத்தித்
தரளப்பற் பவளத் தொட்டக்
     களபப்பொட் டுதலிட் டத்திக் ...... குவடான 
தனதுத்திப் படிகப் பொற்பிட்
     டசையப்பெட் பசளைத் துப்புக்
கொடியொத்திட் டிடையிற் பட்டைத்
     தகையிற்றொட் டுகளப் பச்சைச்
சரணத்துக் கியலச் சுற்றிச்
     சுழலிட்டுக் கடனைப் பற்றிக் ...... கொளுமாதர் 
சுகமுற்றுக் கவலைப் பட்டுப்
     பொருள்கெட்டுக் கடைகெட் டுச்சொற்
குளறிட்டுத் தடிதொட் டெற்றிப்
     பிணியுற்றுக் கசதிப் பட்டுச்
சுகதுக்கத் திடர்கெட் டுற்றுத்
     தளர்பட்டுக் கிடைபட் டுப்பிக் ...... கிடைநாளிற் 
சுழலர்ச்சக் கிரியைச் சுற்றிட்
     டிறுகக்கட் டுயிரைப் பற்றிக்
கொளுகப்பற் பலரைக் கட்டிக்
     கரம்வைத்துத் தலையிற் குத்திச்
சுடுகட்டைச் சுடலைக் கட்டைக்
     கிரையிட்டுப் பொடிபட் டுட்கிச் ...... சடமாமோ 
திகுடத்திக் குகுடட் டுட்டுட்
     டமடட்டட் டமடட் டிக்குட்
டிமிடிட்டிட் டிமிடிட் டிக்குத்
     தொகுதொக்குத் தொகுதத் தொக்குச்
செகணக்கச் செகணச் செக்குத்
     தகுடத்தத் தகுடத் தட்டுட் ...... டிடிபேரி 
திமிலைக்கைத் துடிதட் டெக்கைப்
     பகடிட்டுப் பறையொத் தக்கட்
டிகையெட்டுக் கடல்வற் றித்தித்
     தரவுக்கக் கிரியெட் டுத்தைத்
தியருக்குச் சிரமிற் றுட்கச்
     சுரர்பொற்புச் சொரியக் கைத்தொட் ...... டிடும்வேலா 
பகலைப்பற் சொரியத் தக்கற்
     பதிபுக்கட் டழலிட் டுத்திட்
புரமட்கிக் கழைவிற் புட்பச்
     சரனைச்சுட் டயனைக் கொத்திப்
பவுரிக்கொட் பரமர்க் குச்சற்
     குருவொத்துப் பொருளைக் கற்பித் ...... தருள்வோனே 
பவளப்பொற் கிரிதுத் திப்பொற்
     றனகொச்சைக் கிளிசொற் பற்றிப்
பரிவுற்றுக் கமலப் புட்பத்
     திதழ்பற்றிப் புணர்ச்சித் ரப்பொற்
படிகத்துப் பவளப் பச்சைப்
     பதமுத்துப் பழநிச் சொக்கப் ...... பெருமாளே.
சக்கரம் போல வட்டமான தோடுகளைப் பூண்டு கண்டோர் மனதைத் தாக்கியும், கூந்தலில் பூமாலை வைத்துத் தாக்கியும், புளகாங்கிதம் கொண்டு குவளை மலர் போன்ற கண்கள் அழகிய அம்புக்கு நிகராகச் சுழல, தூய முத்துப் போன்ற பற்கள் பவளத்தை ஒத்த இதழுக்கு அருகிலே விளங்க, சந்தனக் கலவை அப்பப்பட்ட யானை போன்றது, மலை போன்றது, என்னும்படி மார்பகங்கள் தேமலுடன் படிகத்தின் அழகைப் பூண்டு அசைய, விரும்பத் தக்க பசளைக் கொடியையும் பவளக் கொடியையும் நிகர்க்கும் இடையில் பட்டாடையைத் தக்கபடி தொடும்படி இரண்டு பச்சை நிறமான பாதம் வரை தொங்குமாறு பொருந்தச் சுற்றி வளைய உடுத்தி, (தாங்கள் பெற வேண்டிய பொருளைக்) கைப்பற்றிக் கொள்ளும் விலைமாதர்களின் சுகத்தைப் பெற்று (பின்னர்) கவலைப் பட்டு பொருள் எல்லாம் அழிந்து, முழுவதும் கெட்டு, மொழியும் குளறி, ஊன்று கோல் பிடித்து நடக்க வேண்டி வந்து, நோய் உற்று வேதனைப் பட்டு சுக துக்கமாகிய சஞ்சலங்களை அடைந்துத் துன்புற்று சோர்வடைந்து, படுக்கையில் கிடந்து உடல் வீங்கிக் கிடக்கும் நாட்களில், சுழன்று வரும் யம தூதர்கள் பாசக் கயிற்றால் சுற்றிட்டு அழுத்தமாகக் கட்டி (என்) உயிரைப் பற்றிக் கொண்டு போகும் போது, பற்பல உற்றார் உறவினர் என் உடலைக் கட்டி, கைகளால் தலையில் அடித்துக் கொண்டு, சுடுதற்குரிய என் உடம்பாகிய கட்டையை மயானத்தில் உள்ள விறகுக் கட்டைகளுக்கு இரையாக ஆக்கி பொடி பட்டுச் சாம்பலாகி ஒழிந்து போகும் இந்த உடல் விரும்பத் தக்கது ஆகுமோ? திகுடத்திக் குகுடட் டுட்டுட் டமடட்டட் டமடட் டிக்குட் டிமிடிட்டிட் டிமிடிட் டிக்குத் தொகுதொக்குத் தொகுதத் தொக்குச் செகணக்கச் செகணச் செக்குத் தகுடத்தத் தகுடத் தட்டுட்டு என்று மிகுந்த சத்தத்துடன் இடி போல் முழங்கும் பேரிகை, திமிலை என்னும் ஒரு வகையான பேரிகை, சிறிய உடுக்கை, தட்டி எழுகின்ற ஒலி வன்மை கொண்ட பறை ஆகிய இவை எல்லாம் பேரொலி செய்து முழங்க, இடம் அகன்ற, எட்டு திசைகளிலும் உள்ள, கடல் வறண்டு தீயைக் கக்கவும், தளர்ந்து எண் கிரிகளும் நிலைகுலைய, அசுரர்கள் தலை முறிந்து ஒழியவும், தேவர்கள் பொன் மாரியைச் சொரிய திருக் கரத்தில் எடுத்த வேலாயுதனே, சூரியனின் பற்களைத் தகர்த்தும், தக்ஷன் தலை நகரில் சென்று அங்கே அவன் தலையில் நெருப்பு இட்டு கொன்றும், வலிய திரி புரங்களை அழித்தும், கரும்பு வில்லும் மலர்க் கணையும் உடைய மன்மதனைச் சுட்டு எரித்தும், பிரமனுடைய தலையை அரிந்தும் திருநடனம் புரிகின்ற பரமசிவனுக்கு சற்குருவாய் அமைந்து பிரணவப் பொருளை உபதேசித்து அருளியவனே, பவளப் பொன் மலை போல, தேமலுடன் கூடிய, அழகிய மார்பகத்தை உடையவளும், மழலையான கிளி போன்ற மொழியை உடையவளுமான வள்ளியின் சொற்களில் ஆசை வைத்து அன்பு பூண்டு, தாமரைப் பூ போன்ற இதழைப் பற்றி சேர்ந்து களித்தவனே, அழகிய பொன்னும், பளிங்கும், பவளமும் மரகதமும், இன்ப முத்தும் போல் மனம் இனிக்கும் பழநியில் வீற்றிருக்கும் சொக்கப் பெருமாளே. 
பாடல் 155 - பழநி
ராகம் - ....; தாளம் -
தந்தன தானன தத்தத் தந்தன
     தந்தன தானன தத்தத் தந்தன
          தந்தன தானன தத்தத் தந்தன ...... தனதான
சிந்துர கூரம ருப்புச் செஞ்சரி
     செங்கைகு லாவந டித்துத் தென்புற
          செண்பக மாலைமு டித்துப் பண்புள ...... தெருவூடே 
சிந்துகள் பாடிமு ழக்கிச் செங்கய
     லம்புகள் போலவி ழித்துச் சிங்கியில்
          செம்பவ ளாடைது லக்கிப் பொன்பறி ...... விலைமாதர் 
வந்தவ ராரென ழைத்துக் கொங்கையை
     யன்புற மூடிநெ கிழ்த்திக் கண்பட
          மஞ்சணி ராடிமி னுக்கிப் பஞ்சணை ...... தனிலேறி 
மந்திர மோகமெ ழுப்பிக் கெஞ்சிட
     முன்றலை வாயில டைத்துச் சிங்கிகொள்
          மங்கைய ராசைவி லக்கிப் பொன்பத ...... மருள்வாயே 
இந்திர நீலவ னத்திற் செம்புவி
     யண்டக டாகம ளித்திட் டண்டர்க
          ளெண்படு சூரைய ழித்துக் கொண்டரு ...... ளொருபேடி 
இன்கன தேரைந டத்திச் செங்குரு
     மண்டல நாடும ளித்துப் பஞ்சவ
          ரின்புறு தோழ்மையு டைக்கத் தன்திரு ...... மருகோனே 
சந்திர சூரியர் திக்கெட் டும்புக
     ழந்தமில் வாழ்வது பெற்றுத் தங்கிய
          சங்கர னார்செவி புக்கப் பண்பருள் ...... குருநாதா 
சம்ப்ரம மானகு றத்திக் கின்புறு
     கொங்கையின் மேவுச மர்த்தச் சுந்தர
          தண்டமிழ் சேர்பழ நிக்குட் டங்கிய ...... பெருமாளே.
யானையின் கூரிய தந்தம் போன்ற தனங்களும், செம்மையாக சரிந்துள்ள வளைகள் அணிந்துள்ள சிவந்த கரங்களும் குலுங்குமாறு நடனமாடி, உற்சாகத்துடன் செண்பகப் பூமாலை முடித்து, அழகிய தெரு வழியில் சிந்து என்னும் இசைப்பா வகையில் பாடல்களைப் பாடி முழக்கமிட்டு, செவ்விய கயல் மீன் போன்ற கண்களை விழித்து சிங்கத்தின் இடை போன்ற இடையில் சிவந்த பவளம் போன்ற ஆடையை உடுத்து, பொருளைப் பறிக்கின்ற பொது மகளிர். வந்தவர்கள் யார் என விசாரித்து தனங்களை அன்புடன் மூடியும், (கச்சுக் கட்டைத்) தளர்த்தியும், கண்ணில் தெரியும்படி மஞ்சள் நீராடி மினுக்கியும், பஞ்சணை மீதில் ஏறி மந்திர சக்தி போல் விரைவில் ஆசையை உண்டாக்கி (வந்தவரைக்) கெஞ்சும்படி வைத்து, முன் புறத்தில் உள்ள வாயிற் கதவை அடைத்து நாணம் இன்மையைக் கொண்ட மாதர்கள் மீது எனக்குள்ள ஆசையை விலக்கி, உனது அழகிய திருவடியைத் தந்து அருளுக. இந்திரனது காவலில் இருந்த இருண்ட காண்டவ வனத்தில் (இருந்த அரக்கர்களை எரி ஊட்டியும்), செவ்விய பூமி முதல் அண்ட கோளத்தில் இருந்தவர்களை (அவுணர்களின் துன்புறுத்தலிலிருந்தும்) காப்பாற்றியும், தேவர்களின் எண்ணத் தக்க துன்பத்தை நீக்கி, அவர்கள் நாட்டைத் திரும்பித் தந்து அருளியும், ஒப்பற்ற பேடியாகிய* அர்ச்சுனனுடைய அழகிய தேரை (சாரதியாய்) நடத்தியும், செம்மையான குரு மண்டல நாட்டைப் பாண்டவர்களுக்குத் தந்து அப்பாண்டவர் ஐவரின் இன்புறு நட்பைப் பூண்டிருந்த தலைவனான திருமாலின் அழகிய மருகனே, சந்திரனும் சூரியனும், திக்குகள் எட்டு இவை யாவும் புகழும் முடிவு இல்லா வாழ்வைப் பெற்று விளங்கும் சிவ பெருமானின் திருச்செவியில் புகும்படி பிரணவத்தை உபதேசித்தருளிய குரு மூர்த்தியே, சிறப்பு மிக்க குறத்தியாகிய வள்ளியின் இன்பம் பொலியும் மார்பகத்தை விரும்பி மேவும் சாமர்த்திய அழகனே, தண்ணிய தமிழ் வழங்கும் பழனி மலையில் தங்கி வீற்றிருக்கும் பெருமாளே. 
* பாண்டவரின் வனவாசத்தின் கடைசி ஆண்டில் அர்ச்சுனன் ஒரு பேடி உருவில் அஞ்ஞாதவாசம் புரிந்தான்.
பாடல் 156 - பழநி
ராகம் - ஜோன்புரி / சங்கராபரணம்; தாளம் - கண்டசாபு - 2 1/2 
தக-1, தகிட-1 1/2 - எடுப்பு 1/2 தள்ளி
தனனா தனந்ததன தனனா தனந்ததன
     தனனா தனந்ததன ...... தனதான
சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிரு
     செவிமீதி லும்பகர்செய் ...... குருநாதா 
சிவகாம சுந்தரிதன் வரபால கந்தநின
     செயலேவி ரும்பியுளம் ...... நினையாமல் 
அவமாயை கொண்டுலகில் விருதாவ லைந்துழலு
     மடியேனை அஞ்சலென ...... வரவேணும் 
அறிவாக மும்பெருக இடரான துந்தொலைய
     அருள்ஞான இன்பமது ...... புரிவாயே 
நவநீத முந்திருடி உரலோடெ யொன்றுமரி
     ரகுராமர் சிந்தைமகிழ் ...... மருகோனே 
நவலோக முங்கைதொழு நிசதேவ லங்கிருத
     நலமான விஞ்சைகரு ...... விளைகோவே 
தெவயானை யங்குறமின் மணவாள சம்ப்ரமுறு
     திறல்வீர மிஞ்சுகதிர் ...... வடிவேலா 
திருவாவி னன்குடியில் வருவேள்ச வுந்தரிக
     செகமேல்மெய் கண்டவிறல் ...... பெருமாளே.
சிவபிரானது மனம் குளிரும்படியாக ஓம் என்ற மந்திரத்தின் விளக்க உபதேசத்தை அவரது இரு செவிகளிலும் சொன்ன குருநாதனே, சிவகாம சுந்தரியாம் பார்வதியின் மேன்மையான மைந்தனே, கந்தனே, உனக்குச் செய்யும் தொண்டினையே விரும்பி உள்ளத்தில் நினைக்காமல், கேடு விளைவிக்கும் மாயையின் வசமாகி, உலகிலே வீணாக அலைந்து திரியும் அடியேனை அஞ்சாதே எனக் கூறி அருள்வதற்கு நீ வரவேண்டும். அறிவு மனத்திலே பெருகி வளரவும், துன்பங்களெல்லாம் தொலையவும், நின்னருளால் பெறக் கூடிய ஞான இன்பத்தை தந்தருள்வாயாக. வெண்ணெயையும் திருடி, உரலுடனும் கட்டுப்பட்ட ஹரி, ரகுராமனாம் திருமால் மனமகிழும் மருமகனே, நவகண்ட பூமியில் யாவரும் கைதொழுது வணங்கும் உண்மைத் தெய்வமே, அலங்காரமானவனே, நலம் தரும் மாயவித்தையால் பிறப்புத் தோற்றங்கள் பலவற்றை விளைவிக்கும் தலைவனே, தேவயானை, அழகிய குறப்பெண் வள்ளி இவ்விருவருக்கும் மணவாளனே, நிறைவான திறல் வாய்ந்த வீரனே, மிக்க ஒளி வீசும் கூரிய வேலாயுதனே, திருவாவினன்குடியில் எழுந்தருளிய மன்மதனே, அழகனே, உலகில் உண்மைப் பொருளைக் கண்டு தெரிவித்த திறம் வாய்ந்த பெருமாளே. 
பாடல் 157 - பழநி
ராகம் - ....; தாளம் -
தனதனன தனனதன தத்தத் தனத்ததன
     தனதனன தனனதன தத்தத் தனத்ததன
          தனதனன தனனதன தத்தத் தனத்ததன ...... தனதான
சிறுபறையு முரசுதுடி சத்தக் கணப்பறையு
     மொகுமொகென அதிரவுட னெட்டிப் பிடித்துமுடி
          சிறுகயிறு நெடிதுகொடு கட்டிட் டிழுக்கஇனி ...... யணுகாதே 
சிலதமர்க ளுறவுகிளை கத்திப் பிதற்றியெடு
     சுடலைதனி லிடுகனலை யிட்டுக் கொளுத்துபுனல்
          திரைகடலில் முழுகெனவு ரைக்கப் படிக்குடிலை ...... யொழியாதே 
மறைமுறையி னிறுதிநிலை முத்திக் கிசைத்தபடி
     உடலுயிர்கள் கரணவெளி பட்டுக் குணத்திரயம்
          வழிபடவும் நினதடிமை யிச்சைப் படுத்துவது ...... மொருநாளே 
வருதுரக மயில்மணிகள் சத்திக்க நிர்த்தமிட
     ஒருபதுட னிருபுயமு மட்டுத் தொடைக்கிசைய
          மனமகிழ இனியமொழி செப்பிச் சிவத்தபத ...... மருள்வாயே 
நறையிதழி யறுகுபல புட்பத் திரட்களொடு
     சிறுபிறையு மரவுமெழி லப்புத் திருத்தலையி
          னளினமுற அணிசடையர் மெச்சிப் ப்ரியப்படவு ...... மயிலேறி 
நவநதிகள் குமுகுமென வெற்புத் திரட்சுழல
     அகிலமுத லெழுபுவன மெத்தத் திடுக்கிடவும்
          நவமணிகள் உரகனுடல் கக்கத் துரத்திவரு ...... முருகோனே 
குறவர்முனை கெடமனது வெட்கப் படக்குடிலில்
     மலையிலெழு தினையிதணில் வைத்துச் சிறுக்கியிரு
          குவிமுலையு மணியிடையு மெச்சிப் புணர்ச்சிசெயு ...... மணவாளா 
குறுமுநிவ னிருபொழுதும் அர்ச்சித்து முத்திபெற
     அறிவுநெறி தவநிலைகள் செப்புத் தமிழ்க்கினிய
          குருகுமர பழநிவளர் வெற்புத் தனிற்றிகழு ...... பெருமாளே.
சிறிய பறையும், முரசும், உடுக்கையும், ஒலிக்கின்ற கூட்டமான பறைகளும், மொகு மொகு என்ற பெரும் சப்தத்துடன் முழங்க, உடனே யம தூதர்கள் எட்டிப் பிடித்து, (தலை) முடியைச் சிறிய பாசக் கயிற்றால் நெடு நேரம் கட்டி இழுக்கவும், இனி அவர் பிழைக்க மாட்டார் என்று கருதி தூரத்தில் இருந்தே சில உறவினர்கள், சுற்றம் மிகுந்த உடன்பிறந்தார்கள் கூச்சலிட்டு அலறி அழுது, (உடலை) எடுத்துக்கொண்டு போய் சுடுகாட்டில் (கிரமப்படி) வைக்க வேண்டிய தீயை வைத்துக் கொளுத்திய பின்னர், (நீங்கும் முன்பு) நீரில் அலை வீசும் கடலில் முழுகுங்கள் எனச் சொல்லும்படிக்குள்ள இந்த நிலையற்ற உடலை எடுக்கும் பிறப்பு என்பது ஒருநாளும் நீங்காதோ? வேத நூல்களில் முடிவாகச் சொல்லப்பட்ட நிலையாகிய முக்தி பெறுதற்குச் சொல்லிய வழிப்படி, உடலும் உயிர்களும் (மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற) அந்தக்கரணங்களும் பர வெளியில் சம்பந்தப்பட்டு, (அதனால் சத்வ, ராஜஸ, தாமஸமாகிய) முக்குணங்களும் வழிபட்டு ஒழுக, உன் அடிமையாகிய எனக்கு உன் மீது இச்சை வருமாறு என்னை ஆண்டருளும் ஒரு நாளும் கிடைக்குமோ? நீ ஏறி வரும் குதிரையாகிய மயிலின் மணிகள் சத்தம் செய்ய நடனம் ஆடும்படி, பன்னிரு புயங்களும் தேன் ஒழுகும் மாலைக்குப் பொருந்தி விளங்க, மனம் மகிழுமாறு இனிய உபதேச மொழியைக் கூறி, உனது சிவந்த திருவடியை அருள்வாயே. வாசனையுள்ள கொன்றை மலரையும், அறுகம் புல்லையும், பலவகையான மலர்க் குவியல்களையும், பிறைச் சந்திரனையும், பாம்பையும், அழகிய கங்கை நதியையும், சிறந்த சென்னி மீது இனிது விளங்க அணிந்துள்ள சடையராகிய சிவபெருமான் புகழ்ந்து விரும்பப்பட மயிலில் ஏறி, ஒன்பது நதிகளும்* குமுகுமு என்று கலங்கவும், மலைக் கூட்டங்கள் சுழற்சி உறவும், பூலோகம் முதலான ஏழு உலகங்களும் மிகவும் திடுக்கிடவும், பாம்பின் உடலினின்று ஒன்பது** மணிகள் வெளிப்படவும், அசுரர்களைத் துரத்தி வரும் முருகனே, குறவர்களுடைய வெறுப்பு அழியவும், மனது வெட்கப்படவும், குடிசையிலும், மலையின் கண் உள்ள தினைப் புனத்துப் பரணிலும் இருந்த சிறு பெண்ணாகிய வள்ளியின் இரண்டு குவிந்த மார்பகங்களையும், அழகிய இடையையும் பாராட்டி அவளை மணந்த கணவனே, குட்டை வடிவனராகிய அகத்திய முனிவர் காலை மாலை இரு போதிலும் அர்ச்சனை செய்து முக்தி அடையும்படி அவருக்கு ஞான மார்க்கத்தையும், தவ ஒழுக்கங்களையும் சொல்லிய, தமிழுக்கு இனிய குருவே, குமரனே, பழனியில் உள்ள அருள் வளர்கின்ற மலையில் விளங்கும் பெருமாளே. 
* ஒன்பது நதிகள்: கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, சிந்து, கோதாவரி, காவேரி, சோணை, துங்கபத்திரை.
** ஒன்பது மணிகள்: வைரம், வைடூர்யம், முத்து, பவளம், நீலம், மரகதம், கோமேதகம், புஷ்பராகம், மாணிக்கம்.
பாடல் 158 - பழநி
ராகம் - வலஜி; தாளம் - ஆதி - 4 களை - 32 
தகிட-1 1/2, தக-1, தகிட-1 1/2
தானதன தந்த தானதன தந்த
     தானதன தந்த தானதன தந்த
          தானதன தந்த தானதன தந்த தனதான
சீயுதிர மெங்கு மேய்புழுநி ரம்பு
     மாயமல பிண்ட நோயிடுகு ரம்பை
          தீநரிகள் கங்கு காகமிவை தின்ப ...... தொழியாதே 
தீதுளகு ணங்க ளேபெருகு தொந்த
     மாயையில்வ ளர்ந்த தோல்தசையெ லும்பு
          சேரிடுந ரம்பு தானிவைபொ திந்து ...... நிலைகாணா 
ஆயதுந மன்கை போகவுயி ரந்த
     நாழிகையில் விஞ்ச ஊசிடுமி டும்பை
          யாகியவு டம்பு பேணிநிலை யென்று ...... மடவார்பால் 
ஆசையைவி ரும்பி யேவிரக சிங்கி
     தானுமிக வந்து மேவிடம யங்கு
          மாழ்துயர்வி ழுந்து மாளுமெனை யன்பு ...... புரிவாயே 
மாயைவல கஞ்ச னால்விடவெ குண்டு
     பார்முழுது மண்ட கோளமுந டுங்க
          வாய்பிளறி நின்று மேகநிகர் தன்கை ...... யதனாலே 
வாரியுற அண்டி வீறொடுமு ழங்கு
     நீரைநுகர் கின்ற கோபமொடெ திர்ந்த
          வாரண இரண்டு கோடொடிய வென்ற ...... நெடியோனாம் 
வேயினிசை கொண்டு கோநிரைபு ரந்து
     மேயல்புரி செங்கண் மால்மருக துங்க
          வேலகிர வுஞ்ச மால்வரையி டிந்து ...... பொடியாக 
வேலைவிடு கந்த காவிரிவி ளங்கு
     கார்கலிசை வந்த சேவகன்வ ணங்க
          வீரைநகர் வந்து வாழ்பழநி யண்டர் ...... பெருமாளே.
சீழும் இரத்தமும் எங்கும் பொருந்தி, புழுக்கள் நிறைந்த, நிலை இல்லாத மலங்கள் நிறைந்த, நோய்களுக்கு இருப்பிடமாகிய (இந்த) உடலை, நெருப்பும், நரிகளும், கழுகுகளும், காகங்களும் ஆகிய இவை உண்ணுவது நீங்காதோ? தீமையான குணங்களே வளர்கின்ற பந்தபாசம் மாயையில் வளர்ந்த தோல், சதை, எலும்பு சேர்ந்துள்ள நரம்பு ஆகிய இவைகளும் நிறைந்து நிலை காண முடியாத இப்படியான இந்த உடம்பு, யமன் கையில் உயிர் போனவுடன், அந்த நேரத்தில் மிகவும் கெட்டுப் போகும் துன்பம் நிறைந்த இவ்வுடலை விரும்பி, அது நிலையானது என்று கருதி மாதர்களிடத்தே காமப் பற்றை வைத்து, காம விஷம் மிகுதியாகச் சேர்வதால் மயக்கம் கொண்டு ஆழ்ந்த துன்பக் கடலில் விழுந்து மடிகின்ற என் மீது அன்பு புரிந்தருளுக. மாயையில் வல்லவனாகிய கம்சனால் விடப்பட்டு கோபத்துடன் வந்து, உலகம் முழுவதும், அண்ட கோளங்களும் நடுங்கும்படியாக வாய்விட்டு சத்தம் செய்துகொண்டு வந்து பயங்கரமாக நின்று, மேகம் போன்ற கருமையான தனது தும்பிக்கையால் எல்லாவற்றையும் வாரும்படியாக நெருங்கி கர்வத்துடன் முழக்கம் புரிந்து, நீரை உண்ணும் கோபத்தோடு எதிர்த்து வந்த (குவலயா பீடம் என்னும்) யானையின் இரண்டு கொம்புகளையும் ஒடித்து வென்ற நீண்ட வடிவை உடையவனும், புல்லாங்குழலின் இன்னிசையைக் கொண்டு பசுக் கூட்டங்களைக் காத்து மேயவிட்ட சிவந்த கண்களை உடையவனும் ஆகிய திருமாலின் மருகனே, பரிசுத்தமான வேலனே, கிரவுஞ்சம் என்ற பெரிய மலை இடிந்து பொடியாகும்படி, வேலைச் செலுத்திய கந்தவேளே, காவிரி ஆற்றின் செழிப்புள்ள நகரமான நீர் சூழ்ந்த கலிசை என்ற ஊரில் வாழ்கின்ற வீரன்* உன்னைத் துதிக்க வீரை நகரில் எழுந்தருளியுள்ள பழனிப் பெருமாளே, தேவர்கள் பெருமாளே. 
* மனிதர்களைப் புகழ்ந்து பாடாத அருணகிரிநாதர் அபூர்வமாகப் பாடிய சிலரில் கலிசைச் சேவகனார் ஒருவர்.இவர் அருணகிரியாரின் நண்பர், முருக பக்தர், வீரைநகரில் பழநி ஆண்டவரை எழுந்தருளப் புரிந்தவர்.
பாடல் 159 - பழநி
ராகம் - ஹம்ஸநாதம்; தாளம் - ஆதி
தான தனதனன தான தனதனன
     தான தனதனன ...... தனதான
சீற லசடன்வினை காரன் முறைமையிலி
     தீமை புரிகபடி ...... பவநோயே 
தேடு பரிசிகன நீதி நெறிமுறைமை
     சீர்மை சிறிதுமிலி ...... எவரோடுங் 
கூறு மொழியதுபொய் யான கொடுமையுள
     கோள னறிவிலியு ...... னடிபேணாக் 
கூள னெனினுமெனை நீயு னடியரொடு
     கூடும் வகைமையருள் ...... புரிவாயே 
மாறு படுமவுணர் மாள அமர்பொருது
     வாகை யுளமவுலி ...... புனைவோனே 
மாக முகடதிர வீ சு சிறைமயிலை
     வாசி யெனவுடைய ...... முருகோனே 
வீறு கலிசைவரு சேவ கனதிதய
     மேவு மொருபெருமை ...... யுடையோனே 
வீரை யுறைகுமர தீர தரபழநி
     வேல இமையவர்கள் ...... பெருமாளே.
சீறி விழும் சினத்தை உடைய கீழ்மகன், தீவினைகளைச் செய்கின்றவன், ஒழுக்கம் இல்லாதவன், பாவங்களைச் செய்கின்ற வஞ்சகன், பிறவிநோயையே தேடுகின்ற தன்மையுடையவன், பெருமை, நீதி, நெறி, நேர்மை, சிறப்பு என்ற நல்ல குணங்கள் ஒரு சிறிதும் இல்லாதவன், எல்லோருடனும் பொய்யையே பேசித் திரியும் கொடுமையே கொண்ட தீயவன், அறிவில்லாதவன், உனது திருவடிகளைப் பணியாத குப்பை போன்றவன், இப்படிப்பட்டவனாக இருப்பினும் என்னை நீ உன் அடியார்களுடைய திருக்கூட்டத்தில் கூட்டி வைக்கும்படியான வழியைத் தந்து அருள்வாயாக. நீதி நெறியினின்று மாறுபட்ட அசுரர்கள் மாண்டு போகப் போர் செய்து, வெற்றியோடு கூடிய மகுடத்தைத் தரித்தவனே, அண்டத்தின் உச்சி அதிரும்படியாக இறக்கைகளை வீசிப் பறக்கும் மயிலை குதிரையைப் போல வாகனமாக உடைய முருகப் பெருமானே, புகழ் பெற்ற கலிசை* என்ற ஊரில் வாழ்ந்த மன்னனது உள்ளத்தில் வீற்றிருக்கும் ஒப்பற்ற பெருமை உடையவனே, வீரை* என்ற திருத்தலத்தில் வாழ்கின்ற குமார ஸ்வாமியே, ¨தரியம் உடையவனே, பழனியில் எழுந்தருளிய வேலாயுதனே, தேவர்கள் வணங்கும் பெருமாளே. 
* மனிதர்களைப் புகழ்ந்து பாடாத அருணகிரிநாதர் அபூர்வமாகப் பாடிய சிலரில் கலிசைச் சேவகனார் ஒருவர்.இவர் அருணகிரியாரின் நண்பர், முருக பக்தர், வீரைத் தலத்தில் பழநி ஆண்டவரை எழுந்தருளப் புரிந்தவர்.
பாடல் 160 - பழநி
ராகம் - நாட்டகுறிஞ்சி; தாளம் - சதுஸ்ர த்ருவம் 
- எடுப்பு /4/4/40 , கண்டநடை - 35
தனதனன தானந்த தத்ததன தானதன
     தனதனன தானந்த தத்ததன தானதன
          தனதனன தானந்த தத்ததன தானதன ...... தனதான
சுருதிமுடி மோனஞ்சொல் சிற்பரம ஞானசிவ
     சமயவடி வாய்வந்த அத்துவித மானபர
          சுடரொளிய தாய்நின்ற நிட்களசொ ரூபமுத ...... லொருவாழ்வே 
துரியநிலை யேகண்ட முத்தரித யாகமல
     மதனில்விளை யாநின்ற அற்புதசு போதசுக
          சுயபடிக மாவின்ப பத்மபத மேஅடைய ...... உணராதே 
கருவிலுரு வேதங்கு சுக்கிலநி தானவளி
     பொருமஅதி லேகொண்ட முக்குணவி பாகநிலை
          கருதவரி யாவஞ்ச கக்கபட மூடியுடல் ...... வினைதானே 
கலகமிட வேபொங்கு குப்பைமல வாழ்வுநிஜ
     மெனவுழலு மாயஞ்செ னித்தகுகை யேஉறுதி
          கருதசுழ மாமிந்த மட்டைதனை யாளஉன ...... தருள்தாராய் 
ஒருநியம மேவிண்ட சட்சமய வேதஅடி
     முடிநடுவு மாயண்ட முட்டைவெளி யாகியுயி
          ருடலுணர்வ தாயெங்கு முற்பனம தாகஅம ...... ருளவோனே 
உததரிச மாமின்ப புத்தமிர்த போகசுக
     முதவுமம லாநந்த சத்திகர மேவுணர
          வுருபிரண வாமந்த்ர கர்த்தவிய மாகவரு ...... குருநாதா 
பருதிகதி ரேகொஞ்சு நற்சரண நூபுரம
     தசையநிறை பேரண்ட மொக்கநட மாடுகன
          பதகெருவி தாதுங்க வெற்றிமயி லேறுமொரு ...... திறலோனே 
பணியுமடி யார்சிந்தை மெய்ப்பொருள தாகநவில்
     சரவணப வாவொன்று வற்கரமு மாகிவளர்
          பழநிமலை மேனின்ற சுப்ரமணி யாவமரர் ...... பெருமாளே.
வேதங்களின் முடிவில் விளங்கும் மெளன நிலையை உபதேசித்து அருளும் முற்றறிவுடைய பெரிய பொருளே, அறிவுடன் கூடிய சைவ சமயத் திருமேனி தாங்கி எழுந்தருளி வந்த, இரண்டறக் கலந்திருக்கின்ற பரம் பொருளே, ஒளிக்குள் ஒளியாய் நிற்கின்ற உருவம் இல்லாதவனே, அருள் வடிவம் உடையவனே, முதற் பொருளே, ஒப்பற்ற சிவானந்தப் பெரு வாழ்வே, துரிய நிலையில் தன் மயமாய் நிற்கும் உண்மைப் பொருளைக் கண்ட ஜீவன்முக்தர்களுடைய இதயத் தாமரையில், விளைகின்றதும், ஆச்சரியத்தை விளைவிப்பதும், மேலான ஞானத்தைத் தருவதும், சுகத்தைத் தருவதும், சுயமான படிகம் போன்ற தூய இன்பத்தை உண்டாக்குவதும், தாமரைக்கு நிகரானதுமான உன் திருவடிகளை அடைந்துய்யும் நெறியை அடியேன் உணராமல், (தாயின்) கர்ப்பத்தில் உருவாகித் தங்கிய (தந்தையின்) சுக்கிலத்தோடு பிராண வாயு வந்து பூரிக்க, அவ்வுருவத்தில் பொருந்திய சத்துவ, இராஜச, தாமசம் என்னும் மூன்று குணங்களின் வேறு பாடுடைய அளவான நிலையை, நினைப்பதற்கு முடியாத வஞ்சனையுடன் கூடிய கபட குணத்தால் (அவ்வுருவம்) மூடப்பட்டு, உடலினால் வந்த தீ வினைகள் கலகங்களைச் செய்ய, மிகுந்த குப்பையான மும்மலத் தொடர்பால் வந்த (அநித்திய) வாழ்வையே நிலைத்தது என்று திரிபவனும், மாயா குணங்கட்குப் பிறப்பிடமான இவ்வுடலையே அழிவற்றது எனக் கருதும் நாய்க்குச் சமமானவனுமாகிய, மூடனாகிய இவ்வடியேனை ஆட்கொள்ள நீ அருள் புரிவாயாக. ஒரு விதியையே கூறுகின்ற ஆறு சமயங்களைத் தன்னகத்தே கொண்ட வேதத்தின் முதலும் முடிவும் நடுவுமாகி, உருண்டை வடிவமாக உள்ள அண்டங்களாகவும் அதற்கப்பாலுள்ள பெரு வெளியாகவுமாகி, ஆன்மாக்களின் உயிருக்கு உயிராகவும் உடலாகவும் அறிவுமாகி, யாண்டும் நீக்கமற நிறைந்து தோன்றுபவனுமாகி உள்ள நித்தியப் பொருளே, தண்ணீர் ஊற்றெடுப்பது போல மாறாத இன்பத்தை நல்கும் புதிய அமிர்தத்தை ஒத்த சிவலோகப் பேரின்ப நலத்தை வழங்குகின்ற மலமில்லாத இன்ப வடிவான எம் பெருமானே, சக்திவேற் படையைக் கையில் ஏந்தி இருப்பவனே, பொருந்திய அறிவுருவமாகிய அந்தப் பிரணவ மந்திரத்திற்கு முதன்மைப் பொருளாக எழுந்தருளி வருகின்ற குருநாதனே, சூரியப் பிரகாசத்தை இனிது வெளிப்படுத்தும், நன்மையைத் தரும் உனது திருவடிகளின் தண்டைகள் அசைந்து இனிது ஒலி செய்ய, நிறைந்த பெரிய அண்டங்களில் எல்லாம் ஒருங்கு அசைய நடனம் செய்கின்ற பெருமை பொருந்திய அடிகளை உடைமையால் செருக்குள்ளதும், பரிசுத்தமும் வெற்றியும் கொண்டுள்ளதுமான மயில்மீது ஏறும் ஒப்பற்ற ஆற்றல் உடையவனே, உன்னை வணங்கும் அடியவர்களுடைய உள்ளம் இதுவே உண்மைப் பொருள் என்று சொல்லுகின்ற சரவணபவா என்னும் ஆறெழுத்துக்கள் பொருந்திய (அஞ்ஞான இருளை நீக்கும்) வலியுடைய பேரொளியாகி வளர்கின்ற பழநி மலை மேல் வீற்றிருக்கின்ற சுப்பிரமணியனே, தேவர்கள் பெருமாளே. 
பாடல் 161 - பழநி
ராகம் - ....; தாளம் -
தனதனன தான தந்த தனதனன தான தந்த
     தனதனன தான தந்த ...... தனதான
சுருளளக பார கொங்கை மகளிர்வச மாயி சைந்து
     சுரதக்ரியை யால்வி ளங்கு ...... மதனூலே 
சுருதியென வேநி னைந்து அறிவிலிக ளோடி ணங்கு
     தொழிலுடைய யானு மிங்கு ...... னடியார்போல் 
அருமறைக ளேநி னைந்து மநுநெறியி லேந டந்து
     அறிவையறி வால றிந்து ...... நிறைவாகி 
அகிலபுவ னாதி யெங்கும் வெளியுறமெய்ஞ் ஞான இன்ப
     அமுதையொழி யாத ருந்த ...... அருள்வாயே 
பருதிமகன் வாசல் மந்த்ரி அநுமனொடு நேர்ப ணிந்து
     பரிதகழை யாமுன் வந்து ...... பரிவாலே 
பரவியவி பீஷ ணன்பொன் மகுடமுடி சூட நின்ற
     படைஞரொடி ராவ ணன்ற ...... னுறவோடே 
எரிபுகுத மாறி லண்டர் குடிபுகுத மாறு கொண்ட
     ரகுபதியி ராம சந்த்ரன் ...... மருகோனே 
இளையகுற மாது பங்க பழநிமலை நாத கந்த
     இமையவள்த னால்ம கிழ்ந்த ...... பெருமாளே.
சுருண்டுள்ள கூந்தல் கொண்டையையும், பெருத்த மார்பகங்களையும் உடைய விலைமாதர்களின் வசமாக மனம் ஈடுபட்டு, காம லீலைகளை எல்லாம் விளக்கும் மன்மத சாத்திரத்தையே வேதம் என்று எண்ணி, அறிவில்லாதவருடன் நட்புக் கொள்ளும் செய்கைகளை உடைய நானும், இங்கு உன்னுடைய அடியார்களைப் போல் அருமையான வேதங்களையே உண்மையான நூலாகக் கருதி, மநு தர்ம சாஸ்திர வழியிலே நடந்து, அறிவு இன்னது என்பதை உள் அறிவுகொண்டு அறிந்து, பூரண ஞானம் பெற்று, எல்லா உலகங்களிலும் உள்ள தலங்கள் யாவையும் சுத்த ஞான வெளியாகவே கண்டு, மெய்ஞ்ஞான இன்ப அமுதத்தை ஓய்வின்றிப் பருக அருள் செய்வாயாக. சூரியனுடைய மகனான சுக்¡£வனின் அரண்மனை வாயில் மந்திரியாகிய அனுமானுடைய உதவியுடன் நேராகப் பணிந்து (ஸ்ரீராமர்) தன்னை அன்புடனும் தகைவுடனும் அழைப்பதற்கு முன்னமேயே தானே பணிவுடன் சென்று, பக்தியுடன் சரணாகதி அடைந்த விபீஷணன் பொன் மகுடம் முடியில் சூட்டப்பட்டு நிற்க, இராவணன் தன் உறவினர்களுடனும் படைகளுடனும் இறந்து நெருப்பிற்கு இரையாகி மடிய, பக்தி மாறுதல் சிறிதும் இல்லாத தேவர்கள் இந்திர லோகத்தில் குடி புகுந்து மீண்டும் வாழவும், இராவணனிடம் பகை கொண்ட, ரகு குலத்தில் வந்த தலைவனான இராமச் சந்திர மூர்த்தியின் மருகனே, இளைய குறப் பெண்ணாகிய வள்ளியின் பங்கனே, பழநிமலை நாதனே, கந்தனே, இமவான் மகளான பார்வதி மகிழ்கின்ற பெருமாளே. 
பாடல் 162 - பழநி
ராகம் - பிலஹரி ; தாளம் - அங்கதாளம் - 5 1/2 
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தானந்த தனன தான தானந்த தனன தான
     தானந்த தனன தான ...... தனதான
ஞானங்கொள் பொறிகள் கூடி வானிந்து கதிரி லாத
     நாடண்டி நமசி வாய ...... வரையேறி 
நாவின்ப ரசம தான ஆநந்த அருவி பாய
     நாதங்க ளொடுகு லாவி ...... விளையாடி 
ஊனங்க ளுயிர்கள் மோக நானென்ப தறிவி லாம
     லோமங்கி யுருவ மாகி ...... யிருவோரும் 
ஓரந்த மருவி ஞான மாவிஞ்சை முதுகி னேறி
     லோகங்கள் வலம தாட ...... அருள்தாராய் 
தேனங்கொ ளிதழி தாகி தாரிந்து சலில வேணி
     சீரங்க னெனது தாதை ...... ஒருமாது 
சேர்பஞ்ச வடிவி மோகி யோகங்கொள் மவுன ஜோதி
     சேர்பங்கி னமல நாத ...... னருள்பாலா 
கானங்கள் வரைகள் தீவு ஓதங்கள் பொடிய நீல
     காடந்த மயிலி லேறு ...... முருகோனே 
காமன்கை மலர்கள் நாண வேடம்பெ ணமளி சேர்வை
     காணெங்கள் பழநி மேவு ...... பெருமாளே.
ஞான இந்திரியங்கள் யாவும் ஒருமுகமாகக் கூடி, வானில் சந்திரன் சூரியன் இன்றியே ஒளி வீசும் உலகத்தை அடைந்து, நமசிவாய என்ற பஞ்சாட்சர மலையின் மீது ஏறி, நாவுக்குப் பேரின்ப இனிமையைத் தரும் ஆனந்த அருவி பாய, அந்தச் சிவயோக சமாதியில் உள்ள நாதங்களோடு கலந்து விளையாடல் புரிந்து, ஊன் பொதிந்த உடம்புடன் கூடிய உயிர்களை மயங்கச் செய்யும் தன்மையும், நான் என்ற அறிவே அற்றுப் போய், ப்ரணவ ஜோதி வடிவமாகி, ஜீவாத்மாவாகிய யானும் பரமாத்மாவாகிய நீயும் ஒரே வடிவமாகி, மெய்ஞ்ஞான வித்தையாகிய குதிரையின் முதுகில் ஏறி, உலகம் முழுதும் வலமாக பவனி வரும் பெருவாழ்வை அருள்வாயாக. தேனை உடையதும் அழகியதும் ஆன கொன்றை மலரையும், ஆத்தி மலர் மாலையையும், நிலவையும், கங்கையையும் ஜடாமுடியில் அணிந்தவரும், சிறந்த திருமேனியை உடையவரும், எனது தந்தையாரும், ஒப்பற்ற பெண்ணரசி, பஞ்ச* சக்திகளின் கலவையான வடிவழகி, சிவத்தின் காதலி, சிவயோகத்தில் மேவிய மெளன நிலையுடையார் காணும் ஜோதி வடிவினாள் ஆகிய உமா தேவியார் சேர்ந்திருக்கிற இடது பாகத்தை உடையவருமான, தூய்மையே உருவான தனிப் பெரும் தலைவராம் சிவபெருமான் பெற்றருளிய திருக்குமாரனே, காடுகளும் மலைகளும் தீவுகளும் கடல்களும் பொடியாக காட்டில் நீல நிறத்தோடுள்ள அழகிய மயிலில் ஏறும் முருகனே, மன்மதனுடைய கரத்தில் உள்ள மலர்க் கணைகள் மயக்கும் ஆற்றலின்றி நாண, வேடர் குலப் பெண் வள்ளியுடன் மலர் மஞ்சத்தில் இணைந்திருக்கும் எமது பழநி மலையின் எழுந்தருளிய பெருமாளே. 
* இறைவி ஆதிசக்தி, பராசக்தி, இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என்ற ஐந்து சக்திகளாய் உள்ளாள்.
பாடல் 163 - பழநி
ராகம் - பூர்வி கல்யாணி; தாளம் - அங்கதாளம் - 7 1/2 
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான
தகர நறுமலர் பொதுளிய குழலியர்
     கலக கெருவித விழிவலை படவிதி
          தலையி லெழுதியு மனைவயி னுறவிடு ...... வதனாலே 
தனயர் அனைமதர் மனைவியர் சினெகிதர்
     சுரபி விரவிய வகையென நினைவுறு
          தவன சலதியின் முழுகியெ யிடர்படு ...... துயர்தீர 
அகர முதலுள பொருளினை யருளிட
     இருகை குவிசெய்து ளுருகிட வுருகியெ
          அரக ரெனவல னிடமுற எழிலுன ...... திருபாதம் 
அருள அருளுடன் மருளற இருளற
     கிரண அயில்கொடு குருகணி கொடியொடு
          அழகு பெறமர கதமயில் மிசைவர ...... இசைவாயே 
சிகர குடையினி னிரைவர இசைதெரி
     சதுரன் விதுரனில் வருபவ னளையது
          திருடி யடிபடு சிறியவ னெடியவன் ...... மதுசூதன் 
திகிரி வளைகதை வசிதநு வுடையவ
     னெழிலி வடிவின னரவுபொன் முடிமிசை
          திமித திமிதிமி யெனநட மிடுமரி ...... மருகோனே 
பகர புகர்முக மதகரி யுழைதரு
     வனிதை வெருவமுன் வரஅருள் புரிகுக
          பரம குருபர இமகிரி தருமயில் ...... புதல்வோனே 
பலவின் முதுபழம் விழைவுசெய் தொழுகிய
     நறவு நிறைவயல் கமுகடர் பொழில்திகழ்
          பழநி மலைவரு புரவல அமரர்கள் ...... பெருமாளே.
மயிர்ச் சாந்தும், மணமுள்ள மலர்களும் நிறைந்த கூந்தலுடைய (விலை) மகளிரின் குழப்பம் தரும் கர்வம் மிக்க கண் வலையில் படும்படியாக தலையில் விதியால் எழுதப்பட்டும், மனைவியோடு கூடிய இல்லற வாழ்க்கையில் இருக்க வேண்டி அமைந்தபடியால், மக்கள், தாய், சுற்றத்தார், மனைவியர், நண்பர்கள், பசு முதலிய பல வகையான சிந்தனை ஏற்பட, ஆசைக் கடலில் மூழ்கி துன்பம் உறுகின்ற துயரம் நீங்க, அகர எழுத்தை முதலாகக் கொண்ட (அ + உ+ ம் = ஓம் என்ற) பிரணவப் பொருளை (நீ) உபதேசிக்க, இரண்டு கைகளையும் குவித்து மனம் உருகி உருகி, ஹர ஹர எனக் கூறி உனது வலப் புறத்தும் இடப் புறத்தும் இருந்து, உன்னுடைய அழகிய இரண்டு திருவடிகளை நீ தந்து அருளவும், அங்ஙனம் பெற்ற அருள் ஆசியினால் என் மயக்கம் நீங்க, அஞ்ஞானமும் அகல, ஒளி வீசும் வேலும், கோழிக் கொடியும் விளங்க, அழகாக பச்சை நிற மயிலின் மீதில் வர நீ இசைந்தருளுக. கோவர்த்தன மலையாகிய குடையின் கீழே பசுக் கூட்டம் வந்து சேர குழல் இசையை வாசித்துக் காட்டிய சமர்த்தன், விதுரனுடைய வீட்டுக்கு விரும்பி (விருந்து செய்ய) வந்தவன்*, வெண்ணெயைத் திருடி அடிபட்ட சிறிய குழந்தை, (திரிவிக்ர ரூபம் கொண்ட) பெரியவன், மது என்ற அசுரனைக் கொன்றவன், சக்கரம், சங்கு, தண்டம், வாள், வில் (முதலிய ஐந்து ஆயுதங்களை) உடையவன், மேக நிறம் கொண்டவன், காளிங்கன் என்னும் பாம்பின் அழகிய பணாமுடியின் மேல் திமித திமி திமி என்ற பல ஒலிகளுடன் நடனம் செய்கின்ற திருமாலின் மருகனே, அழகிய, புள்ளியைக் கொண்ட முகத்தை உடைய, மதம் கொண்ட யானையாகிய கணபதியை, மான் பெற்ற மங்கையாகிய வள்ளி அஞ்சும்படி (யானை உருவில்) முன்னே வரச் செய்தருளிய குகனே, மேலானவனே, குருபரனே, இமவான் பயந்தருளிய மயில் போன்ற உமையின் மகனே, பலாவின் பழுத்த பழத்தினின்று கனிந்து ஒழுகிய தேன் நிறைந்த வயல்களும், கமுகு மரங்களும் அடர்ந்த சோலைகள் விளங்கும் பழனி மலையில் எழுந்தருளி உள்ள அரசே, தேவர்களின் பெருமாளே. 
பாடல் 164 - பழநி
ராகம் - ....; தாளம் -
தனனத் தனனத் தனனத் தனனத்
     தனனத் தனனத் ...... தனதான
தகைமைத் தனியிற் பகைகற் றுறுகைத்
     தநுமுட் டவளைப் ...... பவனாலே 
தரளத் திரளிற் புரளக் கரளத்
     தமரத் திமிரக் ...... கடலாலே 
உகைமுத் தமிகுத் ததெனப் பகல்புக்
     கொளிமட் குமிகைப் ...... பொழுதாலே 
உரையற் றுணர்வற் றுயிரெய்த் தகொடிக்
     குனநற் பிணையற் ...... றரவேணும் 
திகைபத் துமுகக் கமலத் தனைமுற்
     சிறையிட் டபகைத் ...... திறல்வீரா 
திகழ்கற் பகமிட் டவனக் கனகத்
     திருவுக் குருகிக் ...... குழைமார்பா 
பகலக் கிரணப் பரணச் சடிலப்
     பரமற் கொருசொற் ...... பகர்வோனே 
பவனப் புவனச் செறிவுற் றுயர்மெய்ப்
     பழநிக் குமரப் ...... பெருமாளே.
தக்க தருணமென்று பார்த்து தனி நிலையில் (அவள் மீது) பகை பூண்டு, தன் கையில் உள்ள வில்லை நன்றாக வளைக்கும் மன்மதனாலே, முத்துக் குவியல்கள் புரள்கின்றதும், நஞ்சின் பிறப்புக்கு இடமானதும், ஒலி செய்வதும், இருள் நிறைந்ததுமாகிய கடலாலும், நட்சத்திரங்கள் முத்துக்கள் நிறைந்தது போல் வானில் நிரம்பித் தோன்ற, பகல் பொழுது போய், ஒளி மங்கி, மிஞ்சி நிற்கும் (இரவுப்) பொழுதாலும், வாக்கு அற்றும், உணர்வு அற்றும், உயிர் இளைத்து நிற்கும் கொடி போன்ற (என்) மகளுக்கு உனது நல்ல மாலையை நீ தந்தருள வேண்டும். பத்துத் திசைகளில் உள்ளவர்களும் கலங்க, தாமரையில் உள்ள பிரமனை முன்பு சிறையில் அடைத்து பகைமைத் திறத்தைக் காட்டிய வீரனே, (வேண்டியதைத் தந்து) விளங்கும் கற்பக மரங்கள் நிறைந்த சோலைகளை உடைய பொன்னுலகத்து லக்ஷ்மி (தேவயானை) மீது மனம் உருகிக் குழைந்து அணைந்த மார்பனே, ஞாயிறு போல ஒளி கொண்ட, பாரமான சடையைக் கொண்ட பரமனாகிய சிவபெருமானுக்கு, ஒப்பற்ற பிரணவச் சொல்லை உபதேசித்தவனே, வாயு மண்டலம் வரையும் நிறைந்து உயர்ந்த மெய்ம்மை விளங்கும் பழநித் தலத்தில் நிற்கும் குமரப் பெருமாளே. 
இப்பாட்டு அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவிக்காக அவளது தாய் பாடியது.மன்மதன், அவனது வில், கடல், இரவு, இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.
பாடல் 165 - பழநி
ராகம் - ஹமீர் கல்யாணி; தாளம் - ஆதி - 12
தனன தனன தனன தனன
     தனன தனன ...... தனதான
தமரு மமரு மனையு மினிய
     தனமு மரசும் ...... அயலாகத் 
தறுகண் மறலி முறுகு கயிறு
     தலையை வளைய ...... எறியாதே 
கமல விமல மரக தமணி
     கனக மருவு ...... மிருபாதங் 
கருத அருளி யெனது தனிமை
     கழிய அறிவு ...... தரவேணும் 
குமர சமர முருக பரம
     குலவு பழநி ...... மலையோனே 
கொடிய பகடு முடிய முடுகு
     குறவர் சிறுமி ...... மணவாளா 
அமர ரிடரு மவுண ருடலு
     மழிய அமர்செய் ...... தருள்வோனே 
அறமு நிறமு மயிலு மயிலு
     மழகு முடைய ...... பெருமாளே.
சுற்றத்தாரும், அவர்கள் கூடி இருக்கும் இல்வாழ்க்கையும், இனிமையான செல்வமும், ஆட்சியும் என்னை விட்டு விலகிப் போகும்படியாக, கொடுமையான யமன் திண்ணிய பாசக்கயிற்றைக் கொண்டு தலையைச் சுற்றி வளைப்பதற்கு எறியாமல் இருக்க, தாமரை போன்றும், பரிசுத்தமான, மரகதமணி போலவும், தங்கத்தைப் போலவும் விளங்கும் உன்னிரு திருவடிகளை நான் நினைத்துக்கொண்டே இருக்குமாறு அருளி, என் திக்கற்ற தனிமை நீங்கும்படி அறிவைத் தந்தருள வேண்டும். குமரா, போர் வீரா, முருகா, பரமனே, விளங்கும் பழனிமலை வாசனே, மதம் பிடித்த யானையை (வள்ளியை பயமுறுத்தி உன்னை அணையவைக்கவேண்டும் என்ற) உன் கருத்து நிறைவேற எதிரே வரச் செய்தவனே, குறப்பெண் வள்ளியின் மணவாளனே, தேவர்களின் துன்பமும், அசுரர்களின் உடலும் ஒன்றாக அழியும்படி போர் செய்து அருளியவனே, தர்மமும், செந்நிறமும், வேலும், மயிலும், அழகும் உடைய பெருமாளே. 
பாடல் 166 - பழநி
ராகம் - செஞ்சுருட்டி ; தாளம் - சதுஸ்ர த்ருவம் 
எடுப்பு /4/4/40, கண்டநடை - 35
தனதன தந்தான தானான தானதன
     தனதன தந்தான தானான தானதன
          தனதன தந்தான தானான தானதன ...... தனதான
தலைவலி மருத்தீடு காமாலை சோகைசுரம்
     விழிவலி வறட்சூலை காயாசு வாசம்வெகு
          சலமிகு விஷப்பாக மாயாவி காரபிணி ...... யணுகாதே 
தலமிசை யதற்கான பேரோடு கூறியிது
     பரிகரி யெனக்காது கேளாது போலுமவர்
          சரியும்வ யதுக்கேது தா¡£ர்சொ லீரெனவும் ...... விதியாதே 
உலைவற விருப்பாக நீள்காவின் வாசமலர்
     வகைவகை யெடுத்தேதொ டாமாலி காபரண
          முனதடி யினிற்சூட வேநாடு மாதவர்க ...... ளிருபாதம் 
உளமது தரித்தேவி னாவோடு பாடியருள்
     வழிபட எனக்கேத யாவோடு தாளுதவ
          உரகம தெடுத்தாடு மேகார மீதின்மிசை ...... வரவேணும் 
அலைகட லடைத்தேம காகோர ராவணனை
     மணிமுடி துணித்தாவி யேயான ஜானகியை
          அடலுட னழைத்தேகொள் மாயோனை மாமனெனு ...... மருகோனே 
அறுகினை முடித்தோனை யாதார மானவனை
     மழுவுழை பிடித்தோனை மாகாளி நாணமுனம்
          அவைதனில் நடித்தோனை மாதாதை யேஎனவும் ...... வருவோனே 
பலகலை படித்தோது பாவாணர் நாவிலுறை
     யிருசர ணவித்தார வேலாயு தாவுயர்செய்
          பரண்மிசை குறப்பாவை தோள்மேவ மோகமுறு ...... மணவாளா 
பதுமவ யலிற்பூக மீதேவ ரால்கள் துயில்
     வருபுனல் பெருக்காறு காவேரி சூழவளர்
          பழநிவ ருகற்பூர கோலாக லாவமரர் ...... பெருமாளே.
தலைவலி, வசிய மருந்தால் வரும் நோய், மஞ்சட்காமாலை, ரத்தசோகை, ஜுரம், கண்வலி, வறள் என்ற வயிற்றுவலி, காசநோய், மூச்சுப்பிடிப்பு, நீரிழிவு, கொடிய விஷ நோய்கள், உலகமாயையால் வரும் விகாரமான பிணிகள் முதலியவை என்னை அணுகாதவண்ணம், பூமியில் அந்த நோய்கள் நீங்குவதற்காக சில வைத்தியர்களிடம் சொல்லி, இது நீங்குவதற்குப் பரிகாரம் யாதெனக் கேட்டால், காது கேளாததுபோலச் செல்பவர் சிலர், சாகப்போகும் வயதாகிவிட்டதே உமக்கு, எவ்வளவு பணம் தருவீரெனக் கேட்பவர் சிலர் என்று பிறர் கூறும்படியான விதியை என் தலையில் எழுதாமல், ஊக்கக்குறைவு இன்றி, விருப்பமுடன் பெரிய பூந்தோட்டத்தில் பூத்த மணமுள்ள மலர்களை, விதவிதமாகப் பறித்துத் தொடுத்து மாலை வகைகளில் ஆபரணங்கள் போல் அமைத்து உன்னடியில் சூட்டுதற்கு விரும்பும் சிறந்த தவசிரேஷ்டர்களின் இரு பாதங்களையும் மனத்தினில் தரித்தே, ஆய்ந்த அறிவுடன் பாடி, உன்னருளால் உன்னை வழிபடுவதற்கு, என்மீது அன்பு கூர்ந்து, உன் திருவடிகளைத் தந்துதவ பாம்பைத் தூக்கி எறிந்து ஆடும் மயிலின் மீது வந்தருள வேண்டும். அலைகடலை அணையிட்டு அடைத்து, மகா கோரமான ராவவணனுடைய மணிமுடிகளை அறுத்துத்தள்ளி, உயிருக்கு ஒப்பான சீதாதேவியை தன் தோள்வலியால் அழைத்துக்கொண்ட மாயவனான திருமாலை மாமன் என்று அழைக்கும் மருகனே, அறுகம்புல்லை சடையில் முடித்தவனும், உயிர்கட்கெல்லாம் ஆதாரமானவனும், மழு, மான் இவைகளை ஏந்தியவனும், மகா காளி வெட்கும்படியாக முன்னர் சபைதனிலே நடனம் ஆடியவனான சிவபிரானை, சிறந்த தந்தையே என்றழைக்கவும் வந்தவனே, பல கலைகளைப் படித்து ஓதும் கவிஞர்களின் நாவிலே வாசம் செய்கின்ற இரு திருவடிகளை உடைய வித்தகனே, வேலாயுதனே, உயரத்தில் கட்டப்பட்ட பரணின் மீது இருந்த குறப்பெண் வள்ளியின் தோள்களைத் தழுவ மிக்க ஆசை கொண்ட மணவாளனே, தாமரை மலர்கின்ற வயலிலும், பாக்கு மரங்களின் மீதும், வரால் மீன்கள் உறங்கும்படி வரும் நீர்ப்பெருக்கை உடைய ஆறாகிய காவேரி சூழ விளங்கும் பழநியில் எழுந்தருளிய, பச்சைக் கற்பூர மணம் கமழும் அலங்கார ஆடம்பரனே, தேவர்களின் பெருமாளே. 
பாடல் 167 - பழநி
ராகம் - பந்துவராளி; தாளம் - கண்டசாபு - 2 1/2
தனதனனத் தனதனனத் தனதனனத் ...... தனதான
     தனதனனத் தனதனனத் தனதனனத் ...... தனதான
திடமிலிசற் குணமிலிநற் றிறமிலியற் ...... புதமான
     செயலிலிமெய்த் தவமிலிநற் செபமிலிசொர்க் ...... கமுமீதே 
இடமிலிகைக் கொடையிலிசொற் கியல்பிலிநற் ...... றமிழ்பாட
     இருபதமுற் றிருவினையற் றியல்கதியைப் ...... பெறவேணும் 
கெடுமதியுற் றிடுமசுரக் கிளைமடியப் ...... பொரும்வேலா
     கிரணகுறைப் பிறையறுகக் கிதழ்மலர்கொக் ...... கிறகோடே 
படர்சடையிற் புனைநடனப் பரமர்தமக் ...... கொருபாலா
     பலவயலிற் றரளநிறைப் பழநிமலைப் ...... பெருமாளே.
உன் அருளில் ஈடுபடும் உறுதி இல்லாதவன் யான், நல்ல குணங்கள் ஏதும் இல்லாதவன் யான், தொண்டுகள் செய்வதற்கு ஆற்றல் இல்லாதவன் யான், வியக்கத்தக்க அரும் செயலைச் செய்யாதவன் யான், மெய்யறிவோடு கூடிய தவம் ஒன்றும் செய்யாதவன் யான், நன்மையை நல்கும் ஜபம் ஏதும் செய்யாதவன் யான், சொர்க்க உலகத்தில் இடம்பெறத் தகுதி இல்லாதவன் யான், கரங்களால் ஒரு தானமும் கொடுத்தறியாதவன் யான், உன்னை நல்ல தமிழ்ப்பாடலால் பாடுதற்கு ஏற்ற சொல்வன்மை இல்லாதவன் யான், (இத்தகைய குறைபாடுகள் உள்ள அடியேன்) உனது இரண்டு திருவடிகளையும் அடைந்து நல்வினை, தீவினை ஆகிய இருவினைகளும் தீர்ந்து உயர்ந்த முக்தி நிலையைப் பெற்று உய்ய வேண்டும். தீய புத்தியே உடையவர்களாகிய அசுரர்களது வம்சமே அழியுமாறு போர் புரிந்த வேலனே, ஒளிபடைத்த இளம்பிறைச் சந்திரன், அறுகம்புல், ருத்திராக்ஷம், வில்வ இதழ், கொன்றை மலர், கொக்கின் இறகு முதலியவற்றை விரிந்த சடைமுடியில் தரித்துக் கொண்டிருப்பவரும் ஆனந்தத் தாண்டவம் புரிபவருமான பரமசிவன் பெற்ற ஒப்பற்ற குமாரனே, குறையின்றிப் பயன் தரும் வயல்களில் முத்துக்கள் நிறைந்த பழநி மலையில் எழுந்தருளிய பெருமாளே. 
பாடல் 168 - பழநி
ராகம் - பைரவி; தாளம் - திஸ்ர ஏகம் - 3 - எடுப்பு - 1/2 இடம்
தனன தனன தனன தனன
     தனன தனன ...... தனதான
திமிர வுததி யனைய நரக
     செனன மதனில் ...... விடுவாயேல் 
செவிடு குருடு வடிவு குறைவு
     சிறிது மிடியு ...... மணுகாதே 
அமரர் வடிவு மதிக குலமு
     மறிவு நிறையும் ...... வரவேநின் 
அருள தருளி யெனையு மனதொ
     டடிமை கொளவும் ...... வரவேணும் 
சமர முகவெ லசுரர் தமது
     தலைக ளுருள ...... மிகவேநீள் 
சலதி யலற நெடிய பதலை
     தகர அயிலை ...... விடுவோனே 
வெமர வணையி லினிது துயிலும்
     விழிகள் நளினன் ...... மருகோனே 
மிடறு கரியர் குமர பழநி
     விரவு மமரர் ...... பெருமாளே.
இருண்ட கடல் போன்றதும், நரகத்திற்கு ஒப்பானதும் ஆன பிறப்பு என்பதில் நீ என்னை விழும்படியாகச் செய்தால், செவிடு, குருடு, அங்கஹீனம், சிறிதேனும் வறுமை என்பவை ஏதும் இல்லாது, தேவ லக்ஷணமும், உயர் குடிப்பிறப்பும், அறிவும், நீதி ஒழுக்கமும் எனக்கு வருமாறு உனது திருவருளைத் தந்தருளி, என்னையும் நீ மனம்வைத்து உன் அடிமையாக ஆட்கொள்ள வரவேண்டும். போர்க்களத்தில் வெல்லப்பட்ட அசுரர்களின் தலைகள் உருளும்படியாக, மிகப் பெரிய கடல் அலறும்படியாக, நீண்டுயர்ந்த கிரெளஞ்சமலை பொடியாக, வேலினைச் செலுத்தியவனே, பாம்புப் படுக்கையில் இனிதே துயிலும் தாமரைக்கண்ணன் திருமால் மருகனே, கண்டம் கறுத்த (நீலகண்ட) சிவனின் குமரனே, பழனியில் வந்து தொழும் தேவர்களின் பெருமாளே. 
பாடல் 169 - பழநி
ராகம் - ....; தாளம் -
தானதன தானதன தானான தானதன
     தானதன தானதன தானான தானதன
          தானதன தானதன தானான தானதன ...... தனதான
தோகைமயி லேகமல மானேயு லாசமிகு
     காமதுரை யானமத வேள்பூவை யேயினிமை
          தோயுமநு போகசுக லீலாவி நோதமுழு ...... துணர்தேனே 
சூதனைய சீதஇள நீரான பாரமுலை
     மீதணைய வாருமிதழ் தா¡£ரெ னாணைமொழி
          சோர்வதிலை யானடிமை யாவேனு மாணைமிக ...... மயலானேன் 
ஆகமுற வேநகம தாலேவி டாதஅடை
     யாளமிட வாருமென வேமாத ரார்களுட
          னாசைசொலி யேயுழலு மாபாத னீதியிலி ...... யுனையோதேன் 
ஆமுனது நேயஅடி யாரோடு கூடுகில
     னீறுநுதல் மீதிடலி லாமூட னேதுமிலி
          யாயினுமி யானடிமை யீடேற வேகழல்கள் ...... தருவாயே 
மாகமுக டோடகில பாதாள மேருவுட
     னேசுழல வாரியது வேதாழி யாவமரர்
          வாலிமுத லானவர்க ளேனோர்க ளாலமுது ...... கடைநாளில் 
வாருமென வேயொருவர் நோகாம லாலவிட
     மீசர்பெறு மாறுதவி யேதேவர் யாவர்களும்
          வாழஅமு தேபகிரு மாமாய னாரினிய ...... மருகோனே 
மேகநிக ரானகொடை மானாய காதிபதி
     வாரிகலி மாருதக ரோபாரி மாமதன
          வேள்கலிசை வாழவரு காவேரி சேவகன ...... துளமேவும் 
வீரஅதி சூரர்கிளை வேர்மாள வேபொருத
     தீரகும ராகுவளை சேரோடை சூழ்கழனி
          வீரைநகர் வாழ்பழநி வேலாயு தாவமரர் ...... பெருமாளே.
கலாப மயிலே, தாமரையில் உறையும் லக்ஷ்மியான மான் போன்றவளே, உல்லாசம் மிகுந்த காமத் தலைவனான மன்மதனுக்கு உகந்த நாகணவாய்ப் புள்ளைப் போன்ற பாவையே, இனிமை நிரம்பிய அநுபவங்களான காம லீலா விநோதங்கள் எல்லாவற்றையும் அறிந்துள்ள தேன் போல் இனிப்பவளே, சூதாடும் கருவி போன்ற அமைப்பில், குளிர்ந்த இள நீர் போன்ற பாரமான மார்பகங்களை (நான்) தழுவும்படி வருவாயாக. வாயிதழை உண்ணத் தருவாயாக. இது என் ஆணை மொழி ஆகும். சோர்வே இல்லாமல் நான் உனக்கு அடிமை ஆவேன். உன்மீது ஆணை. உன்னிடம் மிகவும் காம மயக்கம் கொண்டுள்ளேன். எனது உடலில் அழுந்திப் படியும்படியாக நகத்தால் என்றும் அழியாத அடையாளத்தை இட வருவாயாக எனறெல்லாம் விலைமாதர்களுடன் ஆசை மொழிகளைக் கூறித் திரிகின்ற பெரிய பாபம் செய்பவன், நீதி அற்றவன், உன்னை ஓதித் துதிக்காதவன் நான். உனக்கு உகந்த அன்பு பூண்ட அடியவர்களோடு சேர்வதில்லை. திருநீற்றை நெற்றியில் இடுதல் இல்லா முட்டாள். எவ்வித நற்குணமும் இல்லாதவன். அப்படி இருந்த போதிலும் நான் உன் அடிமை ஆவேன். ஆகையால் நான் நற்கதி அடைய உனது திருவடிகளைத் தருவாயாக. அண்ட உச்சி முதல் அகில பாதாளம் வரையும் அங்ஙனம் மேரு மலையும் சுழற்சி உற, பாற்கடலே கடையும் பானையாக அமைய, தேவர்கள், (குரங்கரசன்) வாலி முதலியவர்கள் மற்றவர்களுடன் அமுது கடைந்த நாளில், வாருங்கள் எனக் கூறி ஒருவரும் மனம் நோகாத வண்ணம், ஆலகால விஷத்தை சிவபெருமான் பெறும்படி தந்து, தேவர்கள் எல்லோரும் வாழும் பொருட்டு அமுதத்தை அந்தத் தேவர்களுக்குப் பகிர்ந்து அளித்த பெரிய மாயோனாகிய திருமாலுக்கு இனிய மருகனே, மேகத்தைப் போன்ற கொடைப் பெருமை வாய்ந்த நாயகத் தலைவனும், தன் செல்வக் கடலை வாயு வீசுவதைப் போல் விரைந்து அளிக்கும் கொடைத் திறம் கொண்ட கைகளை உடைய பாரி வள்ளல் போன்றவனும், சிறந்த மன்மதனைப் போன்ற அழகனுமாகிய, கலிசையில் வாழும் காவேரி சேவகனாருடைய* மனத்தில் வீற்றிருக்கும் வீரனே, பெரும் சூரர் சுற்றமெல்லாம் வேரோடு மடியும்படி சண்டை செய்த தீரனே, குமரனே, குவளை மலர்கள் நிறைந்த ஓடைகள் சூழ்ந்த வயல்களை உடைய வீரை நகரில் வாழும் பழனி வேலாயுதனே, தேவர்களின் பெருமாளே. 
* மனிதர்களைப் புகழ்ந்து பாடாத அருணகிரிநாதர் அபூர்வமாகப் பாடிய சிலரில் கலிசைச் சேவகனார் ஒருவர்.இவர் அருணகிரியாரின் நண்பர், முருக பக்தர், வீரைநகரில் பழநி ஆண்டவரை எழுந்தருளப் புரிந்தவர்.
பாடல் 170 - பழநி
ராகம் - ....; தாளம் -
தான தந்தன தானா தனாதன
     தான தந்தன தானா தனாதன
          தான தந்தன தானா தனாதன ...... தனதான
நாத விந்துக லாதீ நமோநம
     வேத மந்த்ரசொ ரூபா நமோநம
          ஞான பண்டித ஸாமீ நமோநம ...... வெகுகோடி 
நாம சம்புகு மாரா நமோநம
     போக அந்தரி பாலா நமோநம
          நாக பந்தம யூரா நமோநம ...... பரசூரர் 
சேத தண்டவி நோதா நமோநம
     கீத கிண்கிணி பாதா நமோநம
          தீர சம்ப்ரம வீரா நமோநம ...... கிரிராஜ 
தீப மங்கள ஜோதீ நமோநம
     தூய அம்பல லீலா நமோநம
          தேவ குஞ்சரி பாகா நமோநம ...... அருள்தாராய் 
ஈத லும்பல கோலா லபூஜையும்
     ஓத லுங்குண ஆசா ரநீதியும்
          ஈர முங்குரு சீர்பா தசேவையு ...... மறவாத 
ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை
     சோழ மண்டல மீதே மநோகர
          ராஜ கெம்பிர நாடா ளுநாயக ...... வயலூரா 
ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை
     சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்
          ஆடல் வெம்பரி மீதே றிமாகயி ...... லையிலேகி 
ஆதி யந்தவு லாவா சுபாடிய
     சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
          ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ...... பெருமாளே.
லிங்கம், பீடம் (சிவ சக்தி) ஆகிய தத்துவங்களுக்கு மூலப்பொருளே, போற்றி, போற்றி, வேதங்கள், மந்திரங்கள், இவற்றின் உருவமாக விளங்குபவனே, போற்றி, போற்றி, பேரறிவுக்குத் தலைவனான தெய்வமே, போற்றி, போற்றி, பல கோடிக் கணக்கான திருப்பெயர்களைக் கொண்ட சிவனின் புதல்வனே, போற்றி, போற்றி (அனைத்து உயிர்களுக்கெல்லாம்) இன்பங்களை அளிக்கும் பார்வதியின் குமாரனே, போற்றி, போற்றி தன் காலினால் பாம்பை அடக்கிக் கட்டியுள்ள மயிலை வாகனமாகக் கொண்டவனே, போற்றி, போற்றி, எதிரிகளான சூரர்களை தண்டித்து அழிக்கும் திருவிளையாடல் புரிந்தவனே, போற்றி, போற்றி, இசை ஒலி எழுப்பும் சதங்கைகளை உடைய திருப்பாதங்களைக் கொண்டவனே, போற்றி, போற்றி மிகவும் பராக்ரமசாலியான போர்வீரனே, போற்றி, போற்றி, மலைகளுக்கெல்லாம் அரசனே, திருவிளக்குகளின் மங்களகரமான ஒளியே, போற்றி, போற்றி, பரிசுத்தமான பரவெளியில் லீலைகள் புரிபவனே, போற்றி, போற்றி, தேவயானையை மணாட்டியாகப் பக்கத்தில் கொண்டவனே, போற்றி, போற்றி, உனது திருவருளைக் கொடுத்து அருள்வாயாக. தானம், பல சிறப்பான பூஜைகள் செய்தல், நல்ல நூல்களைப் படித்தல், சற்குணம், ஒழுக்கம், நியாயம், கருணை, குருவின் திருப்பாதங்களைச் சேவித்தல் ஆகியவற்றை மறவாமல் கடைப்பிடிக்கும் (சோழமண்டலத்தில்), ஏழு உலகங்களிலுள்ளோரும் மெச்சுகின்ற காவேரி நதியால் செழித்து வளமுறும் சோழ மண்டலத்தில், மனதுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் ராஜகெம்பீரம் என்னும் நாட்டை* ஆளுகின்ற அரசனே, வயலூருக்குத் தலைவா, தன்மீது அன்புவைத்த திருவாரூராரின் (சுந்தரமூர்த்திப் பெருமானது) நட்பை நாடியவராய், அவருடன் முன்பொருநாள், ஆடலில் சிறந்த, விரும்பத்தக்க குதிரை மீது ஏறி கயிலை மாமலைக்குப் போய் (அங்கே) ஆதி உலா எனப்படும் அழகிய (கயிலாய ஞானக்) கலிவெண்பாவை பாடலாகப் பாடிய சேரர் பெருமானாம் சேரமான் பெருமான்** நாயனாருக்கு உரித்தான கொங்கு மண்டலத்து வைகாவூர் என்னும் சிறந்த நாட்டுப் பகுதியில் இருக்கும் திரு ஆவினன்குடி (பழநிமலையின் அடிவாரம்) என்னும் தலத்தில் வாழ்வு கொண்டிருக்கும், தேவர்களின் பெருமாளே. 
* இது 'திருக்கற்குடி' அல்லது 'உய்யக்கொண்டான்' என்று வழங்கப்படும். திருச்சிக்கு அருகில் வயலூருக்குப் போகும் வழியில் உள்ளது.
** கொங்கு நாட்டின் மன்னனாக 1,150 ஆண்டுகளுக்கு முன்பு சேரமான் பெருமான் ஆண்டார். அவர் சைவக்குரவர் நால்வரில் ஒருவரான சுந்தரரின் நண்பர். சிவபிரான் சுந்தரரை கயிலைக்கு அழைத்தபோது, சுந்தரர் தமது நண்பரும் உடன்வர வேண்டுமென விரும்பினார். சேரமான் குதிரையில் ஏறி கயிலைக்கு விரைந்து சென்றார். சுந்தரர் இன்னும் வராததால் கயிலையின் கதவு அடைக்கப்பட்டிருந்தது. அப்போது சேரமான் 'ஆதி உலா' என்ற பாடலைப் பாட, கயிலையின் கதவுகள் திறந்தன. சுந்தரருடன் சேரமான் கயிலைப் பதம் சேர்ந்தார். - பெரிய புராணம்.
பாடல் 171 - பழநி
ராகம் - ....; தாளம் -
தனதனன தந்த தத்த தானன
     தனதனன தந்த தத்த தானன
          தனதனன தந்த தத்த தானன ...... தனதான
நிகமமெனி லொன்று மற்று நாடொறு
     நெருடுகவி கொண்டு வித்தை பேசிய
          நிழலர்சிறு புன்சொல் கற்று வீறுள ...... பெயர்கூறா 
நெளியமுது தண்டு சத்ர சாமர
     நிபிடமிட வந்து கைக்கு மோதிர
          நெடுகியதி குண்ட லப்ர தாபமு ...... முடையோராய் 
முகமுமொரு சம்பு மிக்க நூல்களு
     முதுமொழியும் வந்தி ருக்கு மோவெனில்
          முடிவிலவை யொன்று மற்று வேறொரு ...... நிறமாகி 
முறியுமவர் தங்கள் வித்தை தானிது
     முடியவுனை நின்று பத்தி யால்மிக
          மொழியும்வளர் செஞ்சொல் வர்க்க மேவர ...... அருள்வாயே 
திகுதிகென மண்ட விட்ட தீயொரு
     செழியனுடல் சென்று பற்றி யாருகர்
          திகையினமண் வந்து விட்ட போதினு ...... மமையாது 
சிறியகர பங்க யத்து நீறொரு
     தினையளவு சென்று பட்ட போதினில்
          தெளியஇனி வென்றி விட்ட மோழைகள் ...... கழுவேற 
மகிதலம ணைந்த அத்த யோனியை
     வரைவறம ணந்து நித்த நீடருள்
          வகைதனைய கன்றி ருக்கு மூடனை ...... மலரூபம் 
வரவரம னந்தி கைத்த பாவியை
     வழியடிமை கொண்டு மிக்க மாதவர்
          வளர்பழநி வந்த கொற்ற வேலவ ...... பெருமாளே.
வேதப் பொருள் என்றால் ஒரு சிறிதும் தெரியாமல், தினமும் (அங்குமிங்கும் கற்ற) மொழிகளைத் திரித்து இயற்றிய போலிக் கவிகள் சில அற்பச் சொற்களைக் கற்று, ஆடம்பரமான பட்டப் பெயர்களை வைத்துக்கொண்டு, (தூக்குவோர்களுடைய முதுகு) நெளியத் தக்கக் கனத்த பல்லக்கு, குடை, சாமரம் (இவைகள் பரிசாகப் பெற்று) நெருங்கும்படியாக (உலவிக் கொண்டு) வந்து, கையில் மோதிரமும், (காதில்) நீண்டு தொங்கும் ஒளி மிக்க குண்டலங்களைத் தாங்கிய சிறப்பும் உடையவர்களாய், அவர்களது முகமானது, ஒரு செய்யுளும் வசனமும் கலந்த நூல்களும், திருக்குறள் போன்ற பழைய நூல்களும் விளக்கக் கூடுமோ என்று கேட்டால், அவை ஒன்றும் தெரியாததால் வெட்கத்தால் (முகம்) வெளுத்து, இறுதியில் மனம் குலைந்து போனவர்களுடைய வித்தைதான் இக்கல்வி எல்லாம். (இத்தகைய கல்வி போதும்,) இது முடிவதாக (இனியேனும்) உன்னை மனம் ஒரு வழியில் நின்ற பக்தியுடன் நிரம்பத் துதிப்பதற்கு, மேலும் மேலும் எழுகின்ற செவ்விய சொற்களின் பெருக்கே எனக்கு வரும்படி அருள்வாயாக. திகுதிகு என்று கொழுந்து விட்டு எரியும் நெருப்பு அந்த நெடுஞ்செழியப் பாண்டியனுடைய உடலைச் சென்று (சுரப் பிணியாகப்) பற்றிட, பல திசைகளிலிருந்தும் சமணக் குருக்கள் வந்து முயன்ற போதிலும் சுரம் தணியாமல், (திருஞான சம்பந்தராக வந்த) உனது சிறிய தாமரைக் கரத்தினின்று, திருநீறு ஒரு தினை அளவு (பாண்டியன் மேல்) பட்டவுடனே சுரம் தணிய, பின்பு (வாதப் போரில்) வெற்றியை இழந்த அந்த அறிவிலிகள் கழுவில் ஏற, இச்சாதனைகளுக்காக இந்தப் பூமியில் அவதரித்த குருவே, பெண்களின் சிற்றின்பத்திலேயே கணக்கற்ற முறை ஈடுபட்டு, நாள்தோறும் (உனது) பேரருளின் திறங்களை உணராமல் விலகி நிற்கும் மூடனாகிய என்னை, ஆணவ மலம் நாளுக்கு நாள் மனத்தைக் கலக்கும் பாவியாகிய என்னை, வழி அடிமையாக ஆட்கொண்டு, சிறந்த மகா தவசிகள் வாழும் பழனியில் வந்து அமர்ந்த வெற்றி வேலவப் பெருமாளே. 
பாடல் 172 - பழநி
ராகம் - .....; தாளம் -
தத்தன தத்தன தனத்த தானன
     தத்தன தத்தன தனத்த தானன
          தத்தன தத்தன தனத்த தானன ...... தனதான
நெற்றிவெ யர்த்துளி துளிக்க வேயிரு
     குத்துமு லைக்குட மசைத்து வீதியி
          னிற்பவர் மைப்படர் விழிக்க லாபியர் ...... மொழியாலே 
நித்தம யக்கிகள் மணத்த பூமலர்
     மெத்தையில் வைத்ததி விதத்தி லேயுட
          னெட்டுவ ரத்தொழில் கொடுத்து மேவியு ...... முறவாடி 
உற்றவ கைப்படி பொருட்கள் யாவையு
     மெத்தவு நட்பொடு பறித்து நாடொறு
          முற்பன வித்தைகள் தொடுக்கு மாதர்க ...... ளுறவாமோ 
உச்சித மெய்ப்புற அனைத்த யாவுடன்
     மெய்ப்படு பத்தியி னிணக்க மேபெற
          வுட்குளிர் புத்தியை யெனக்கு நீதர ...... வருவாயே 
கற்றத மிழ்ப்புல வனுக்கு மேமகிழ்
     வுற்றொரு பொற்கொடி களிக்க வேபொரு
          கற்பனை நெற்பல அளித்த காரண ...... னருள்பாலா 
கற்பந கர்க்களி றளித்த மாதணை
     பொற்புய மைப்புயல் நிறத்த வானவர்
          கட்கிறை யுட்கிட அருட்க்ரு பாகர ...... எனநாளும் 
நற்றவ ரர்ச்சனை யிடத்த யாபர
     வஸ்துவெ னப்புவி யிடத்தி லேவளர்
          நத்தணி செக்கரன் மகிழ்ச்சி கூர்தரு ...... மருகோனே 
நட்டுவர் மத்தள முழக்க மாமென
     மைக்குல மெத்தவு முழக்க மேதரு
          நற்பழ நிப்பதி செழிக்க மேவிய ...... பெருமாளே.
நெற்றியில் வியர்வைத் துளிகள் அரும்பவே, இரண்டு குத்து முலைக் குடங்களையும் அசைத்து தெருவில் நிற்பவர்கள். மை தீட்டிய கண்களை உடைய மயில் போன்ற விலைமாதர்கள். இனிய பேச்சினால் நாள் தோறும் மயக்குபவர்கள். நறு மணம் வீசும் அழகிய மலர்கள் விரிக்கப்பட்ட மெத்தையில் சேர்ப்பித்து, பல வகையிலே உடலில் திமிர் ஏறும்படியான தொழில்களைக் காட்டிக் கொடுத்தும், நெருங்கியும் உறவாடி, தமக்கே உள்ள வழக்கமாக பொருள் முழுமையும் மிகுந்த நட்பினைக் காட்டிப் பறித்து தினமும் (பணம் பறிக்க) புதிதாகத் தோன்றும் வித்தைகளை உபயோகப் படுத்தும் விலைமாதர்களின் தொடர்பு நல்லதாகுமோ? மேலான உண்மை உடையதான மெய்யான பக்தியின் சேர்க்கையையே நான் பெறுமாறு, என் உள்ளம் குளிரும் புத்தியை எனக்கு, தாயின் அன்புடன், நீ தர வந்தருள வேண்டும். நன்கு கற்ற தமிழ்ப் புலவனாகிய சுந்தரர் மீது மகிழ்ச்சி பூண்டு ஒரு பொன் கொடி போன்ற அவர் மனைவி (பரவையார்) களிப்புற, தாம் இட்ட கட்டளைப்படி வந்து குவிந்த நெல் மலையை* அளித்த மூலப் பொருளான சிவ பெருமான் அருளிய குழந்தையே, கற்பக மரங்கள் நிறைந்த நகராகிய அமராவதியில் உள்ள (ஐராவதமாகிய) வெள்ளை யானை போற்றி வளர்த்த மாதாகிய தேவயானையைத் தழுவிய அழகிய திருப்புயங்களை உடையவனே, கரிய மேக நிறமுடைய தேவர்கள் தலைவனாகிய இந்திரன் (சூரனைக் கண்டு) பயப்பட்ட போது கருணைக்கு உறைவிடமே என்று நாள் தோறும் நல்ல தவசிகள் அர்ச்சனை செய்ய, கிருபாகர மூர்த்தி என்று, பூமியில் புகழ் வளர்ந்திருக்கின்ற சங்கு ஏந்திய சிவந்த கரங்களை உடைய திருமால் மகிழ்ச்சி மிகக் கொண்டு, போற்ற விளங்கும் மருகோனே, நட்டுவனார் மத்தளத்தின் முழக்கம் தானோ என்று ஐயுறும்படி, கரு மேகக் கூட்டங்கள் மிகவும் இடி ஒலியைப் பெருக்கும் சிறந்த பழனி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* சுந்தரர் பரவையாரோடு திருவாரூரில் வாழ்ந்த காலத்தில் குண்டையூர் கிழவர் என்பவர் சுந்தரருக்கு நெல் தவறாது அளித்து வந்தார். ஒரு பருவத்தில் மழை இல்லாமல் போகவே, நெல் கொடுக்க முடியாமல் கிழவர் வருந்தினார். அவர் வருத்தம் நீங்க சிவ பெருமான் நெல் மலையை அளித்தார்.
பாடல் 173 - பழநி
ராகம் - வஸந்தா; தாளம் - அங்கதாளம் - 6 1/2 
தகதிமிதக-3, தகிட-1 1/2, தகதிமி-2
தனனத்தன தான தந்தன தனனத்தன தான தந்தன
     தனனத்தன தான தந்தன ...... தனதான
பகர்தற்கரி தான செந்தமி ழிசையிற்சில பாட லன்பொடு
     பயிலப்பல காவி யங்களை ......யுணராதே 
பவளத்தினை வீழி யின்கனி யதனைப்பொரு வாய் மடந்தையர்
     பசலைத்தன மேபெ றும்படி ...... விரகாலே 
சகரக்கடல் சூழு மம்புவி மிசையிப்படி யேதி ரிந்துழல்
     சருகொத்துள மேய யர்ந்துடல் ...... மெலியாமுன் 
தகதித்திமி தாகி ணங்கிண எனவுற்றெழு தோகை யம்பரி
     தனிலற்புத மாக வந்தருள் ...... புரிவாயே 
நுகர்வித்தக மாகு மென்றுமை மொழியிற்பொழி பாலை யுண்டிடு
     நுவல்மெய்ப்புள பால னென்றிடு ...... மிளையோனே 
நுதிவைத்தக ராம லைந்திடு களிறுக்கரு ளேபு ரிந்திட
     நொடியிற்பரி வாக வந்தவன் ...... மருகோனே 
அகரப்பொரு ளாதி யொன்றிடு முதலக்கர மான தின்பொருள்
     அரனுக்கினி தாமொ ழிந்திடு ...... குருநாதா 
அமரர்க்கிறை யேவ ணங்கிய பழநித்திரு வாவி னன்குடி
     அதனிற்குடி யாயி ருந்தருள் ...... பெருமாளே.
இத்தன்மைத்து என்று சொல்ல அரியதான செந்தமிழ் இசையில் சில பாடல்களை மெய்யன்போடு கற்றுக்கொள்ள பற்பல தமிழ்க் காவியங்களைத் தெரிந்து கொள்ளாமல், பவளத்தையும் வீழிப்பழத்தையும் போன்று சிவந்த வாயை உடைய பெண்களின் (காமநோயால் ஏற்படும்) நிறமாற்றம் உண்டாக்கும் விரக வேதனையால், சகர மைந்தர்களால் தோண்டப்பட்ட கடலால் சூழப்பட்ட அழகிய பூமியிலே இவ்வண்ணமாகவே மோகவசப்பட்டு அலைந்து திரிந்து, சுழற்காற்றில் அகப்பட்ட சருகுபோல் மனம் மிகவும் சோர்ந்து, எனது உடல் மெலிந்து அழிவதற்கு முன்னாலே, 'தகதித்திமி தாகி ணங்கிண' என்ற தாளத்திற்கு ஏற்ப நடனமிட்டு எழுகின்ற தோகையுடைய அழகிய குதிரை போன்ற மயில்மீது அற்புதமாக வந்து திருவருள் புரிவாயாக. இந்த ஞானப்பாலை அருந்து, இதுதான் பேறறிவு தரும் என்று உமாதேவி சொல்லி அருளி சுரந்து ஈந்த ஞானப் பாலினை அருந்திய வேதங்களெல்லாம் போற்றுகின்ற புகழையுடைய திருக்குமாரன்* இவன்தான் என ஏத்தும் இளைய குமாரனே, நுனிப்பல் கூர்மையான முதலை வலியப் போராடிய கஜேந்திரன் என்ற யானைக்குத் திருவருள் செய்து காத்திட ஒரு நொடியில் கருணையோடு வந்த திருமாலின் மருமகனே, அகரம், உகரம், மகரம் ஆகிய எழுத்துக்கள் அடங்கியதும், எல்லா மந்திரங்களுக்கும் முதல் அக்ஷரமாக இருப்பதுமான ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் தத்துவத்தை சிவபெருமானுக்கு இனிமையாக உபதேசித்த குருநாதனே, தேவர்களுக்குத் தலைவனாகிய இந்திரன் வழிபட்டுப் போற்றிய பழநி மலைக்கடியில் உள்ள திருவாவினன்குடித் தலத்தில் நீங்காது வாசம் செய்து அடியார்களுக்கு அருளும் பெருமாளே. 
* உமாதேவியின் ஞானப்பாலாகிய சிவஞானத் திரு அமுதை உண்டதால் முருகனை ஞான பண்டிதன் என்பர்.
பாடல் 174 - பழநி
ராகம் - ஹு஥ஸேனி; தாளம் - அங்கதாளம் - 8 1/2 
தகிட-1 1/2, தகதிமி-2 
தகிட-1 1/2, தக-1, தகிட-1 1/2, தக-1
தந்த தானனந் தானதன தானதன
     தந்த தானனந் தானதன தானதன
          தந்த தானனந் தானதன தானதன ...... தனதான
பஞ்ச பாதகன் பாவிமுழு மூடன்வெகு
     வஞ்ச லோபியன் சூதுகொலை காரன்மதி
          பண்கொ ளாதவன் பாவகட லூடுநுழை ...... பவுஷாசை 
பங்கன் மோதியம் பாழ்நரகில் வீணின்விழ
     பெண்டிர் வீடுபொன் தேடிநொடி மீதில்மறை
          பஞ்ச மாமலம் பாசமொடு கூடிவெகு ...... சதிகாரர் 
அஞ்சு பூதமுண் டாகடிய காரரிவர்
     தங்கள் வாணிபங் காரியம லாமலரு
          ளன்பர் பாலுடன் கூடியறி யாதபுக ...... ழடியேனை 
அண்டர் மாலயன் தேடியறி யாதவொளி
     சந்த்ர சேகரன் பாவைவிளை யாடுபடி
          கந்த நாடுடன் கூடிவிளை யாடஅருள் ...... புரிவாயே 
வஞ்ச மாசுரன் சேனைகட லோடுகுவ
     டுங்க வேயினன் போலவொளிர் வேலைவிடு
          வண்கை யாகடம் பேடுதொடை யாடுமுடி ...... முருகோனே 
மங்கை மோகசிங் காரரகு ராமரிட
     தங்கை சூலியங் காளியெமை யீணபுகழ்
          மங்க ளாயிசந் தானசிவ காமியுமை ...... யருள்பாலா 
கொஞ்சு மாசுகம் போலமொழி நீலகடை
     பெண்கள் நாயகந் தோகைமயில் போலிரச
          கொங்கை மால்குறம் பாவையவல் தீரவர ...... அணைவோனே 
கொண்டல் சூழுமஞ் சோலைமலர் வாவிகயல்
     கந்து பாயநின் றாடுதுவர் பாகையுதிர்
          கந்தி யோடகஞ் சேர்பழநி வாழ்குமர ...... பெருமாளே.
ஐந்து பாதகங்களும்* செய்தவன், பாவம் செய்தவன், முற்றிய மூடன், மிக்க வஞ்சகத்தோடு கூடிய பேராசைக்காரன், சூது, கொலை இவை செய்யும் பேர்வழி, அறிவில் நல்ல பண்பே இல்லாதவன், பாவக்கடலில் நுழைகின்ற செருக்கு, ஆசை என்ற குற்றம் உடையவன் ஆகிய நான், தாக்குண்டு அந்தப் பாழ் நரகத்தில் வீணாக விழும்படியாக பெண்கள், வீடு, பொன் என்னும் மூவாசை கொண்டு தேடி அலைந்தும், ஒரு நொடியில், மறைந்து கிடக்கும் ஐவகை மலங்களுடனும்* பாசங்களுடனும் சேர்ந்து, மிக்க மோசக்காரராம் ஐந்து பூதங்களாகிய அந்தத் தீயவர் இவர்களின் வியாபார காரியங்களில் கலவாமல், அருள் பெற்ற அன்பர்களிடத்தே கூடியறியாத புகழையே கொண்டுள்ள நான், தேவர்களும், திருமாலும், பிரமனும் தேடியும் காணாத ஜோதியாம், சந்திரசேகரனாம் சிவபிரானும், பாவையாம் தேவி பார்வதியும் கூடி விளையாடுகின்ற ஸ்படிகம் போன்று தூய அழகுடன் உள்ள நாடாகிய சிவலோகத்தில் உள்ளவர்களோடு கூடி விளையாட அருள் புரிவாயாக. வஞ்சம் நிறைந்த கொடும் சூரனும், அவனது படையும், கடலும், கிரெளஞ்சமலையும் ஒடுங்கும்படியாக, சூரியனைப் போல ஒளிவீசும் வேலாயுதத்தைச் செலுத்திய, வழங்கும் தன்மையுடைய கையனே, கடப்பமலர் மாலை விளங்கும் திருமுடியை உடைய முருகனே, மங்கை, வசீகரமும் அழகும் கொண்ட ரகுராமனின் (திருமாலின்) தங்கை, சூலமேந்தியவள், அழகிய காளி, யாம் அனைவரையும் ஈன்ற புகழ் நிறைந்த மங்களகரமான தாய், சந்தான விருட்சம் போல் வேண்டிய வரங்களைத் தரும் சிவகாமி, அந்த உமாதேவி அருளிய பாலனே, கொஞ்சும் அழகிய கிளி போன்ற பேச்சும், கரிய கடைக் கண்களும், பெண்களுக்குள் தலைமையும், கலாப மயில் போன்ற சாயலும், இன்பம் தரும் மார்பகமும், பெருமையும் உடைய குறப் பெண் வள்ளியின் ஆவல் தீர வந்து அவளை அரவணைத்துக் கொண்டவனே, மேகங்கள் சூழ்ந்த அழகிய சோலைகளும், மலர்கள் நிறைந்த குளங்களும், கயல் மீன்கள் வேகமாகப் பாய்வதால் ஆட்டப்படும் துவர்த்த பாக்குக்கிளைகளில் இருந்து உதிர்கின்ற கமுகமரங்களும் தன்னகத்தே கொண்டுள்ள பழநி மலையில் வாழ்கின்ற குமரப் பெருமாளே.
* ஐவகை பாதகங்கள்: கொலை, களவு, சூது, கள்ளுண்ணல், குரு நிந்தை ஆகியவை.
** ஐவகை மலங்கள்: ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதனம் என்பவையாம்.
பாடல் 175 - பழநி
ராகம் - பாகேஸ்ரீ; தாளம் - அங்கதாளம் - 7 1/2 
தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1, 
தகிட-1 1/2, தகதிமி-2
தான தானதனத் தந்த தானன
     தான தானதனத் தந்த தானன
          தான தானதனத் தந்த தானன ...... தனதான
பாரி யானகொடைக் கொண்ட லேதிரு
     வாழ்வி சாலதொடைத் திண்பு யாஎழு
          பாரு மேறுபுகழ்க் கொண்ட நாயக ...... அபிராம 
பாவ லோர்கள்கிளைக் கென்றும் வாழ்வருள்
     சீல ஞாலவிளக் கின்ப சீவக
          பாக சாதனவுத் துங்க மானத ...... எனவோதிச் 
சீர தாகஎடுத் தொன்று மாகவி
     பாடி னாலுமிரக் கஞ்செ யாதுரை
          சீறு வார்கடையிற் சென்று தாமயர் ...... வுறவீணே 
சேய பாவகையைக் கொண்டு போயறி
     யாம லேகமரிற் சிந்து வார்சிலர்
          சேய னார்மனதிற் சிந்தி யாரரு ...... குறலாமோ 
ஆரு நீர்மைமடுக் கண்க ராநெடு
     வாயி னேர்படவுற் றன்று மூலமெ
          னார வாரமதத் தந்தி தானுய ...... அருள்மாயன் 
ஆதி நாராணனற் சங்க பாணிய
     னோது வார்களுளத் தன்பன் மாதவ
          னான நான்முகனற் றந்தை சீதரன் ...... மருகோனே 
வீர சேவகவுத் தண்ட தேவகு
     மார ஆறிருபொற் செங்கை நாயக
          வீசு தோகைமயிற் றுங்க வாகன ...... முடையோனே 
வீறு காவிரியுட் கொண்ட சேகர
     னான சேவகனற் சிந்தை மேவிய
          வீரை வாழ்பழநித் துங்க வானவர் ...... பெருமாளே.
பாரியைப் போன்ற கொடை மேகமே, லக்ஷ்மி வாசம்செய்யும் பெரிய மாலையை அணிந்த திண்ணிய தோளனே, ஏழு உலகிலும் மிக்க புகழ் கொண்ட நாயகனே, அழகனே, புலவர்கள் கூட்டத்திற்கு எப்போதும் வாழ்வை அருளும் நல்லொழுக்கம் வாய்ந்த விளக்கே, இன்பம் தரும் ஜீவகனே, இந்திரன் போன்று உயர்ந்த அரசனே - என்றெல்லாம் கூறி, சீராக எடுத்தமைந்த ஒரு சிறப்பான பாடலைப் பாடினாலும் இரக்கம் காட்டாது வார்த்தைகளைச் சீறிப் பேசுவோரது கடைவாயிலிற் சென்று தாம் சோர்வு அடையும்படி வீணாக, செம்மை வாய்ந்த பாமாலை வகைகளைக் கொண்டு போய் அறியாமலே சாக்கடையில் கொட்டுவது போலக் கொட்டிச் சிந்துவார்கள் சிலர். இரப்பவர்க்குத் தூரத்தில் நிற்பவர்கள், மனதில் சிறிதும் இரக்கத்தைச் சிந்தியாதவர்கள் ஆகியோரின் அருகே நிற்கலாமோ? நிறைந்த நீருள்ளதான கரிய சுனையின் மத்தியில் முதலையின் பெரும் வாயில் நேராக அகப்பட்டு, அன்று ஆதிமூலமே என்று பேரொலி செய்த மதயானையாகிய கஜேந்திரன் பிழைக்கும்வண்ணம் அருளிய மாயவன், ஆதிப் பரம்பொருளான நாராயணன், பாஞ்சஜன்யம் என்ற சங்கைக் கரத்தில் ஏந்தியவன், அவனைத் துதிப்போர்களின் உள்ளத்தில் இருக்கும் அன்பன், மகா தவனாகிய பிரமாவுக்கு நல்ல தந்தை, லக்ஷ்மியை மார்பில் தரித்த திருமாலின் மருமகனே, வீரமும், பராக்கிரமும், உக்கிரமும் உள்ள தெய்வக் குழந்தையே, பன்னிரு அழகிய செங்கை நாயகனே, வீசும் கலாப மயிலாம் பெருமை வாய்ந்த வாகனத்தை உடையவனே, விளங்கும் காவிரியைத் தன்னிடத்தே கொண்ட கலிசையூர்த் தலைவனான* பராக்ரமனின் நல்ல மனத்தில் வீற்றிருக்கும் தலைவா, வீரை நகரிலும் பழநியிலும் வீற்றிருக்கும் பெருமாளே, தூய்மையான தேவர்களின் பெருமாளே. 
* கலிசையூர்ச் சேவகன் பராக்ரமன் அருணகிரிநாதரின் நண்பன். அவனது ஊரான வீரை திருப்பெருந்துறைக்கு மேற்கே 10 மைலில் உள்ளது. பழநிமலை நாதரே வீரையிலும் இருப்பதாக ஐதீகம்.

பாடல் 151 - பழநி
ராகம் - ....; தாளம் -

தந்தத் தனதன தனனா தனனா     தந்தத் தனதன தனனா தனனா          தந்தத் தனதன தனனா தனனா ...... தனதான

கொந்துத் தருகுழ லிருளோ புயலோ     விந்தைத் தருநுதல் சிலையோ பிறையோ          கொஞ்சிப் பயில்மொழி அமுதோ கனியோ ...... விழிவேலோ 
கொங்கைக் குடமிரு கரியோ கிரியோ     வஞ்சிக் கொடியிடை துடியோ பிடியோ          கொங்குற் றுயரல்கு லரவோ ரதமோ ...... எனுமாதர் 
திந்தித் திமிதிமி திமிதா திமிதோ     தந்தித் திரிகட கிடதா எனவே          சிந்திப் படிபயில் நடமா டியபா ...... விகள்பாலே 
சிந்தைத் தயவுகள் புரிவே னுனையே     வந்தித் தருள்தரு மிருசே வடியே          சிந்தித் திடமிகு மறையா கியசீ ...... ரருள்வாயே 
வெந்திப் புடன்வரு மவுணே சனையே     துண்டித் திடுமொரு கதிர்வே லுடையாய்          வென்றிக் கொருமலை யெனவாழ் மலையே ...... தவவாழ்வே 
விஞ்சைக் குடையவர் தொழவே வருவாய்     கஞ்சத் தயனுட னமரே சனுமே          விந்தைப் பணிவிடை புரிபோ தவர்மே ...... லருள்கூர்வாய் 
தொந்திக் கணபதி மகிழ்சோ தரனே     செங்கட் கருமுகில் மருகா குகனே          சொந்தக் குறமகள் கணவா திறல்சேர் ...... கதிர்காமா 
சொம்பிற் பலவள முதிர்சோ லைகள்சூழ்     இஞ்சித் திருமதிள் புடைசூ ழருள்சேர்          துங்கப் பழநியில் முருகா இமையோர் ...... பெருமாளே.

பூங்கொத்துக்கள் உள்ள கூந்தல் இருட்டோ, மேகமோ? விசித்திரமான நெற்றி வில்லோ, பிறைச் சந்திரனோ? கொஞ்சிப் பேசும் பேச்சு அமுதமோ அல்லது பழமோ? கண் வேலாயுதமோ? மார்பகங்களாகிய குடங்கள் இரண்டு யானைகளோ, மலைகளோ? வஞ்சிக் கொடி போன்ற இடுப்பு உடுக்கையோ, ஒரு பிடியில் அடங்குவதோ? வாசனை கொண்டு உயர்ந்த பெண்குறி பாம்போ, ரதமோ என்று உவமை கூறத் தக்க விலைமாதர்கள். திந்தித் திமிதிமி திமிதா திமிதோ தந்தித் திரிகிட கிடதா என்ற ஒலியுடன் சிந்து எனப்படும் இசைப் பாடல்களை இவ்வண்ணம் பயின்று நடனம் செய்கின்ற பாவியர்களாகிய வேசியரிடத்தே மனம் அன்பு கூர்ந்த செயல்களைச் செய்பவனாகிய அடியேன் உன்னையே வணங்கி திருவருளைப் பாலிக்கும் உனது இரண்டு திருவடிகளை தியானிக்க சிறந்த ரகசியமாகிய உபதேசப் பொருளை அருள்வாயாக. உடை வாள், அம்பராத்தூணி முதலிய கட்டுக்களுடன் போருக்கு வந்த அசுரர் தலைவனாகிய சூரபத்மனை வெட்டிய ஒப்பற்ற ஒளி வீசும் வேலை உடையவனே, வெற்றிக்கு ஒரு மலை இவன் என்று சொல்லும்படி வாழ்கின்ற ஞானமலையே, தவ சீலர்களுக்கு வாழ்வே, ஞான வித்தைக்கு உரியவர்கள் தொழும்படி வருபவனே, தாமரை மலர் மீது உறையும் பிரம தேவரும் இந்திரனும் அழகிய திருத் தொண்டுகள் செய்யும்போது அவர்கள்பால் மிகுதியாக அருள் சுரப்பவனே, தொந்தியை உடைய கணபதி மகிழும் தம்பியே, சிவந்த கண்களை உடைய, மேகம் போன்ற கரிய, திருமாலின் மருகனே, உனக்குச் சொந்தமான குறப் பெண் வள்ளியின் கணவனே, திறமை வாய்ந்த கதிர் காமத்தில் உறைபவனே, அழகு வாய்ந்த பல வனங்கள் நிறைந்த, சோலைகள் சூழ்ந்துள்ள, கோட்டையும் அழகிய மதில்களும் அருகில் சுற்றியிருந்து அருள் பாலிப்பதும் பெருமை வாய்ந்ததுமான பழனி மலை மேல் வீற்றிருக்கும் முருகனே, தேவர்களின் பெருமாளே. 

பாடல் 152 - பழநி
ராகம் - ....; தாளம் -

தான தந்தன தத்தன தத்தம்     தான தந்தன தத்தன தத்தம்          தான தந்தன தத்தன தத்தம் ...... தனதான

கோல குங்கும கற்புர மெட்டொன்     றான சந்தன வித்துரு மத்தின்          கோவை செண்பக தட்பம கிழ்ச்செங் ...... கழுநீரின் 
கோதை சங்கிலி யுற்றக ழுத்தும்     பூஷ ணம்பல வொப்பனை மெச்சுங்          கூறு கொண்டப ணைத்தனம் விற்கும் ...... பொதுமாதர் 
பாலு டன்கனி சர்க்கரை சுத்தந்     தேனெ னும்படி மெத்தரு சிக்கும்          பாத கம்பகர் சொற்களி லிட்டம் ...... பயிலாமே 
பாத பங்கய முற்றிட வுட்கொண்     டோது கின்றதி ருப்புகழ் நித்தம்          பாடு மன்பது செய்ப்பதி யிற்றந் ...... தவனீயே 
தால முன்புப டைத்தப்ர புச்சந்     தேக மின்றிம திக்கவ திர்க்குஞ்          சாக ரஞ்சுவ றக்கிரி யெட்டுந் ...... தலைசாயச் 
சாடு குன்றது பொட்டெழ மற்றுஞ்     சூர னும்பொடி பட்டிட யுத்தஞ்          சாத கஞ்செய்தி ருக்கைவி திர்க்குந் ...... தனிவேலா 
ஆல முண்டக ழுத்தினி லக்குந்     தேவ ரென்புநி ரைத்தெரி யிற்சென்          றாடு கின்றத கப்பனு கக்குங் ...... குருநாதா 
ஆட கம்புனை பொற்குடம் வைக்குங்     கோபு ரங்களி னுச்சியு டுத்தங்          காவி னன்குடி வெற்பினி னிற்கும் ...... பெருமாளே.

அழகிய குங்குமம், பச்சைக் கற்பூரம், ஒன்பது மணிகள், தகுதியான சந்தனம், பவள மாலை, செண்பகப் பூ குளிர்ந்த மகிழம் பூ செங்கழு நீர்ப் பூ இவைகளால் ஆகிய பூமாலை, தங்கச் சங்கிலி இவைகள் விளங்கும் கழுத்தும், ஆபரணம், பல வித அலங்காரங்களையும், மெச்சும்படியாக அணிந்த, பருத்த மார்பகங்களை விற்கின்ற விலைமாதர்களின் பாலுடன் பழம், சர்க்கரை, சுத்தமான தேன் என்று சொல்லும்படியாக மிகவும் ருசிக்கின்றவையும், பாவமே தருகின்றவையுமான சொற்களில் ஆசை வைக்காமல், உனது திருவடித் தாமரைகளை அடைய உள்ளத்தில் எண்ணம் கொண்டு நான் கூறி வரும் திருப்புகழ்ப் பாடல்களை தினந்தோறும் பாட வேண்டும் என்ற அன்பை வயலூரில் (எனக்குத்) தந்தவன் நீ தான். உலகத்தை முன்பு படைத்த மேலான பிரம தேவன் ஐயம் தீர்ந்து (பிரணவப் பொருளை உம்மால் அறிந்தேன் என்று) மதிக்கவும், ஒலிக்கின்ற கடல் வற்றிப் போகவும், எண் திசைகளில் உள்ள மலைகளும் நிலை குலையவும், பலரையும் வஞ்சனையால் கொன்ற கிரெளஞ்ச மலை தூளாகி விழவும், மேலும் சூரனும் பொடிபடவும், போரில் பயிற்சி கொண்ட திருக்கரத்தை அசையச் செலுத்திய ஒப்பற்ற வேலை உடையவனே, ஆலகால விஷத்தை உண்ட கழுத்தில் ருத்திராட்ச மாலையும் தேவர்களுடைய எலும்பு மாலையும் வரிசையாகத் தரித்து, சுடுகாட்டு நெருப்பின் எதிரில் போய் ஆடுகின்ற தந்தையாகிய சிவபெருமானும் மகிழ்கின்ற குரு நாதனே, பொன்னால் அலங்கரிக்கப்பட்ட அழகிய கலசங்கள் வைத்துள்ள கோபுரங்களின் உச்சியில் நட்சத்திரங்கள் தங்குகின்ற திருவாவினன்குடி மலையில் நின்று விளங்கும் பெருமாளே. 

பாடல் 153 - பழநி
ராகம் - .....; தாளம் -

தான தனதனன தான தனதனன     தான தனதனன தான தனதனன          தான தனதனன தான தனதனன ...... தனதான

கோல மதிவதனம் வேர்வு தரஅளக     பாரம் நெகிழவிழி வேல்கள் சுழலநுவல்          கோவை யிதழ்வெளிற வாய்மை பதறியிள ...... முகையான 
கோக னகவுபய மேரு முலையசைய     நூலி னிடைதுவள வீறு பறவைவகை          கூற யினியகள மோல மிடவளைகள் ...... கரமீதே 
காலி னணிகனக நூபு ரமுமொலிக     ளோல மிடஅதிக போக மதுமருவு          காலை வெகுசரச லீலை யளவுசெயு ...... மடமானார் 
காதல் புரியுமநு போக நதியினிடை     வீழு கினுமடிமை மோச மறவுனது          காமர் கழலிணைக ளான தொருசிறிது ...... மறவேனே 
ஞால முழுதுமம ரோர்கள் புரியுமிக     லாக வருமவுணர் சேர வுததியிடை          நாச முறஅமர்செய் வீர தரகுமர ...... முருகோனே 
நாடி யொருகுறமின் மேவு தினைசெய்புன     மீதி லியலகல்கல் நீழ லிடைநிலவி          நாணம் வரவிரக மோது மொருசதுர ...... புரிவேலா 
மேலை யமரர்தொழு மானை முகரரனை     யோடி வலம்வருமுன் மோது திரைமகர          வேலை யுலகைவல மாக வருதுரக ...... மயில்வீரா 
வீறு கலிசைவரு சேவ கனதிதய     மேவு முதல்வவயல் வாவி புடைமருவு          வீரை வருபழநி ஞான மலையில்வளர் ...... பெருமாளே.

அழகிய சந்திரனை ஒத்த முகம் வேர்வை அடையவும், கூந்தலின் கட்டு அவிழவும், கண்களாகிய வேல்கள் சுழலவும், உவமை கூறப்படும் கொவ்வைக் கனி போன்ற இதழ் வெளுக்கவும், சொற்கள் பதறவும், இளமையான மொட்டு நிலையில் இருக்கும் தாமரை ஒத்த இரண்டு மேருமலை போன்று உயர்ந்த மார்பகங்கள் அசையவும், நூல் போன்ற இடை துவளவும், விளங்கும் கிளி, புறா முதலிய பறவைகள் வகைகளின் குரல் போல் இனிமை உடைய கண்டத்தின் இன்சொல் வெளிப்படவும், கைகளில் வளையல்கள் ஒலி செய்யவும், காலில் அணிந்துள்ள பொன்னாலாகிய சிலம்பின் ஒலிகள் சப்திக்கவும், அதிக போகத்தை அனுபவிக்கும் போது பலவித காம லீலைகளை (பெற்ற பொருளுக்குத்) தக்கவாறு அளந்து செய்யும் அழகிய பொது மகளிர் மீது காதல் புரிகின்ற அநுபோகம் என்னும் ஆற்று வெள்ளத்தின் இடையே விழுந்தாலும், அடிமையாகிய நான் சிறிதும் (அந்த வெள்ளத்திலே) அழிவின்றி உன்னுடைய அழகிய திருவடிகளை ஒரு சிறிதும் மறக்க மாட்டேன். உலக முழுவதும் தேவர்களுடன் போர் செய்யும்படி பகையாக வந்த அசுரர்கள் யாவரும் ஒருமிக்க கடலில் அழியும்படி போர் செய்த வீரத்தை உடையவனே, குமரனே, முருகோனே, தேடிச் சென்று ஒரு குறப் பெண் இருந்த தினை வளரும் புனம் மீது, ஒழுங்கு மிக்க மலைப் பாறையின் நிழலில இருந்துகொண்டு, (அந்த வள்ளிக்கு) வெட்கம் உண்டாக ஆசை மொழிகளைக் கூறி, ஒப்பற்ற சாமர்த்தியச் செயல்களை புரிந்த வேலாயுதனே, விண்ணுலகத்தில் தேவர்கள் தொழும் யானைமுகக் கடவுளாகிய விநாயகர் சிவபெருமானை ஓடி வலம் வரும் முன்பே, மோதுகின்ற அலைகளையும் மகர மீன்களையும் உடைய கடல் சூழ்ந்த உலகை வலம் வந்த குதிரை போன்ற மயிலை உடைய வீரனே, விளங்குகின்ற கலிசை என்னும் பதியில் வாழ்கின்ற சேவகனுடைய மனத்தில் வீற்றிருக்கும் முதல்வனே, வயல்களும் குளங்களும் பக்கங்களில் பொருந்தியுள்ள வீரை என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ளவனும், பழனியாகிய ஞான மலையில் வீற்றிருப்பவனுமான பெருமாளே. 
* மனிதர்களைப் புகழ்ந்து பாடாத அருணகிரிநாதர் அபூர்வமாகப் பாடிய சிலரில் கலிசைச் சேவகனார் ஒருவர். இவர் அருணகிரியாரின் நண்பர், முருக பக்தர், வீரைநகரில் பழநி ஆண்டவரை எழுந்தருளப் புரிந்தவர்.

பாடல் 154 - பழநி
ராகம் - ....; தாளம் -

தனனத்தத் தனனத் தத்தத்     தனனத்தத் தனனத் தத்தத்தனனத்தத் தனனத் தத்தத்     தனனத்தத் தனனத் தத்தத்தனனத்தத் தனனத் தத்தத்     தனனத்தத் தனனத் தத்தத் ...... தனதான

சகடத்திற் குழையிட் டெற்றிக்     குழலுக்குச் சரம்வைத் தெற்றிப்புளகித்துக் குவளைக் கட்பொற்     கணையொத்திட் டுழலச் சுத்தித்தரளப்பற் பவளத் தொட்டக்     களபப்பொட் டுதலிட் டத்திக் ...... குவடான 
தனதுத்திப் படிகப் பொற்பிட்     டசையப்பெட் பசளைத் துப்புக்கொடியொத்திட் டிடையிற் பட்டைத்     தகையிற்றொட் டுகளப் பச்சைச்சரணத்துக் கியலச் சுற்றிச்     சுழலிட்டுக் கடனைப் பற்றிக் ...... கொளுமாதர் 
சுகமுற்றுக் கவலைப் பட்டுப்     பொருள்கெட்டுக் கடைகெட் டுச்சொற்குளறிட்டுத் தடிதொட் டெற்றிப்     பிணியுற்றுக் கசதிப் பட்டுச்சுகதுக்கத் திடர்கெட் டுற்றுத்     தளர்பட்டுக் கிடைபட் டுப்பிக் ...... கிடைநாளிற் 
சுழலர்ச்சக் கிரியைச் சுற்றிட்     டிறுகக்கட் டுயிரைப் பற்றிக்கொளுகப்பற் பலரைக் கட்டிக்     கரம்வைத்துத் தலையிற் குத்திச்சுடுகட்டைச் சுடலைக் கட்டைக்     கிரையிட்டுப் பொடிபட் டுட்கிச் ...... சடமாமோ 
திகுடத்திக் குகுடட் டுட்டுட்     டமடட்டட் டமடட் டிக்குட்டிமிடிட்டிட் டிமிடிட் டிக்குத்     தொகுதொக்குத் தொகுதத் தொக்குச்செகணக்கச் செகணச் செக்குத்     தகுடத்தத் தகுடத் தட்டுட் ...... டிடிபேரி 
திமிலைக்கைத் துடிதட் டெக்கைப்     பகடிட்டுப் பறையொத் தக்கட்டிகையெட்டுக் கடல்வற் றித்தித்     தரவுக்கக் கிரியெட் டுத்தைத்தியருக்குச் சிரமிற் றுட்கச்     சுரர்பொற்புச் சொரியக் கைத்தொட் ...... டிடும்வேலா 
பகலைப்பற் சொரியத் தக்கற்     பதிபுக்கட் டழலிட் டுத்திட்புரமட்கிக் கழைவிற் புட்பச்     சரனைச்சுட் டயனைக் கொத்திப்பவுரிக்கொட் பரமர்க் குச்சற்     குருவொத்துப் பொருளைக் கற்பித் ...... தருள்வோனே 
பவளப்பொற் கிரிதுத் திப்பொற்     றனகொச்சைக் கிளிசொற் பற்றிப்பரிவுற்றுக் கமலப் புட்பத்     திதழ்பற்றிப் புணர்ச்சித் ரப்பொற்படிகத்துப் பவளப் பச்சைப்     பதமுத்துப் பழநிச் சொக்கப் ...... பெருமாளே.

சக்கரம் போல வட்டமான தோடுகளைப் பூண்டு கண்டோர் மனதைத் தாக்கியும், கூந்தலில் பூமாலை வைத்துத் தாக்கியும், புளகாங்கிதம் கொண்டு குவளை மலர் போன்ற கண்கள் அழகிய அம்புக்கு நிகராகச் சுழல, தூய முத்துப் போன்ற பற்கள் பவளத்தை ஒத்த இதழுக்கு அருகிலே விளங்க, சந்தனக் கலவை அப்பப்பட்ட யானை போன்றது, மலை போன்றது, என்னும்படி மார்பகங்கள் தேமலுடன் படிகத்தின் அழகைப் பூண்டு அசைய, விரும்பத் தக்க பசளைக் கொடியையும் பவளக் கொடியையும் நிகர்க்கும் இடையில் பட்டாடையைத் தக்கபடி தொடும்படி இரண்டு பச்சை நிறமான பாதம் வரை தொங்குமாறு பொருந்தச் சுற்றி வளைய உடுத்தி, (தாங்கள் பெற வேண்டிய பொருளைக்) கைப்பற்றிக் கொள்ளும் விலைமாதர்களின் சுகத்தைப் பெற்று (பின்னர்) கவலைப் பட்டு பொருள் எல்லாம் அழிந்து, முழுவதும் கெட்டு, மொழியும் குளறி, ஊன்று கோல் பிடித்து நடக்க வேண்டி வந்து, நோய் உற்று வேதனைப் பட்டு சுக துக்கமாகிய சஞ்சலங்களை அடைந்துத் துன்புற்று சோர்வடைந்து, படுக்கையில் கிடந்து உடல் வீங்கிக் கிடக்கும் நாட்களில், சுழன்று வரும் யம தூதர்கள் பாசக் கயிற்றால் சுற்றிட்டு அழுத்தமாகக் கட்டி (என்) உயிரைப் பற்றிக் கொண்டு போகும் போது, பற்பல உற்றார் உறவினர் என் உடலைக் கட்டி, கைகளால் தலையில் அடித்துக் கொண்டு, சுடுதற்குரிய என் உடம்பாகிய கட்டையை மயானத்தில் உள்ள விறகுக் கட்டைகளுக்கு இரையாக ஆக்கி பொடி பட்டுச் சாம்பலாகி ஒழிந்து போகும் இந்த உடல் விரும்பத் தக்கது ஆகுமோ? திகுடத்திக் குகுடட் டுட்டுட் டமடட்டட் டமடட் டிக்குட் டிமிடிட்டிட் டிமிடிட் டிக்குத் தொகுதொக்குத் தொகுதத் தொக்குச் செகணக்கச் செகணச் செக்குத் தகுடத்தத் தகுடத் தட்டுட்டு என்று மிகுந்த சத்தத்துடன் இடி போல் முழங்கும் பேரிகை, திமிலை என்னும் ஒரு வகையான பேரிகை, சிறிய உடுக்கை, தட்டி எழுகின்ற ஒலி வன்மை கொண்ட பறை ஆகிய இவை எல்லாம் பேரொலி செய்து முழங்க, இடம் அகன்ற, எட்டு திசைகளிலும் உள்ள, கடல் வறண்டு தீயைக் கக்கவும், தளர்ந்து எண் கிரிகளும் நிலைகுலைய, அசுரர்கள் தலை முறிந்து ஒழியவும், தேவர்கள் பொன் மாரியைச் சொரிய திருக் கரத்தில் எடுத்த வேலாயுதனே, சூரியனின் பற்களைத் தகர்த்தும், தக்ஷன் தலை நகரில் சென்று அங்கே அவன் தலையில் நெருப்பு இட்டு கொன்றும், வலிய திரி புரங்களை அழித்தும், கரும்பு வில்லும் மலர்க் கணையும் உடைய மன்மதனைச் சுட்டு எரித்தும், பிரமனுடைய தலையை அரிந்தும் திருநடனம் புரிகின்ற பரமசிவனுக்கு சற்குருவாய் அமைந்து பிரணவப் பொருளை உபதேசித்து அருளியவனே, பவளப் பொன் மலை போல, தேமலுடன் கூடிய, அழகிய மார்பகத்தை உடையவளும், மழலையான கிளி போன்ற மொழியை உடையவளுமான வள்ளியின் சொற்களில் ஆசை வைத்து அன்பு பூண்டு, தாமரைப் பூ போன்ற இதழைப் பற்றி சேர்ந்து களித்தவனே, அழகிய பொன்னும், பளிங்கும், பவளமும் மரகதமும், இன்ப முத்தும் போல் மனம் இனிக்கும் பழநியில் வீற்றிருக்கும் சொக்கப் பெருமாளே. 

பாடல் 155 - பழநி
ராகம் - ....; தாளம் -

தந்தன தானன தத்தத் தந்தன     தந்தன தானன தத்தத் தந்தன          தந்தன தானன தத்தத் தந்தன ...... தனதான

சிந்துர கூரம ருப்புச் செஞ்சரி     செங்கைகு லாவந டித்துத் தென்புற          செண்பக மாலைமு டித்துப் பண்புள ...... தெருவூடே 
சிந்துகள் பாடிமு ழக்கிச் செங்கய     லம்புகள் போலவி ழித்துச் சிங்கியில்          செம்பவ ளாடைது லக்கிப் பொன்பறி ...... விலைமாதர் 
வந்தவ ராரென ழைத்துக் கொங்கையை     யன்புற மூடிநெ கிழ்த்திக் கண்பட          மஞ்சணி ராடிமி னுக்கிப் பஞ்சணை ...... தனிலேறி 
மந்திர மோகமெ ழுப்பிக் கெஞ்சிட     முன்றலை வாயில டைத்துச் சிங்கிகொள்          மங்கைய ராசைவி லக்கிப் பொன்பத ...... மருள்வாயே 
இந்திர நீலவ னத்திற் செம்புவி     யண்டக டாகம ளித்திட் டண்டர்க          ளெண்படு சூரைய ழித்துக் கொண்டரு ...... ளொருபேடி 
இன்கன தேரைந டத்திச் செங்குரு     மண்டல நாடும ளித்துப் பஞ்சவ          ரின்புறு தோழ்மையு டைக்கத் தன்திரு ...... மருகோனே 
சந்திர சூரியர் திக்கெட் டும்புக     ழந்தமில் வாழ்வது பெற்றுத் தங்கிய          சங்கர னார்செவி புக்கப் பண்பருள் ...... குருநாதா 
சம்ப்ரம மானகு றத்திக் கின்புறு     கொங்கையின் மேவுச மர்த்தச் சுந்தர          தண்டமிழ் சேர்பழ நிக்குட் டங்கிய ...... பெருமாளே.

யானையின் கூரிய தந்தம் போன்ற தனங்களும், செம்மையாக சரிந்துள்ள வளைகள் அணிந்துள்ள சிவந்த கரங்களும் குலுங்குமாறு நடனமாடி, உற்சாகத்துடன் செண்பகப் பூமாலை முடித்து, அழகிய தெரு வழியில் சிந்து என்னும் இசைப்பா வகையில் பாடல்களைப் பாடி முழக்கமிட்டு, செவ்விய கயல் மீன் போன்ற கண்களை விழித்து சிங்கத்தின் இடை போன்ற இடையில் சிவந்த பவளம் போன்ற ஆடையை உடுத்து, பொருளைப் பறிக்கின்ற பொது மகளிர். வந்தவர்கள் யார் என விசாரித்து தனங்களை அன்புடன் மூடியும், (கச்சுக் கட்டைத்) தளர்த்தியும், கண்ணில் தெரியும்படி மஞ்சள் நீராடி மினுக்கியும், பஞ்சணை மீதில் ஏறி மந்திர சக்தி போல் விரைவில் ஆசையை உண்டாக்கி (வந்தவரைக்) கெஞ்சும்படி வைத்து, முன் புறத்தில் உள்ள வாயிற் கதவை அடைத்து நாணம் இன்மையைக் கொண்ட மாதர்கள் மீது எனக்குள்ள ஆசையை விலக்கி, உனது அழகிய திருவடியைத் தந்து அருளுக. இந்திரனது காவலில் இருந்த இருண்ட காண்டவ வனத்தில் (இருந்த அரக்கர்களை எரி ஊட்டியும்), செவ்விய பூமி முதல் அண்ட கோளத்தில் இருந்தவர்களை (அவுணர்களின் துன்புறுத்தலிலிருந்தும்) காப்பாற்றியும், தேவர்களின் எண்ணத் தக்க துன்பத்தை நீக்கி, அவர்கள் நாட்டைத் திரும்பித் தந்து அருளியும், ஒப்பற்ற பேடியாகிய* அர்ச்சுனனுடைய அழகிய தேரை (சாரதியாய்) நடத்தியும், செம்மையான குரு மண்டல நாட்டைப் பாண்டவர்களுக்குத் தந்து அப்பாண்டவர் ஐவரின் இன்புறு நட்பைப் பூண்டிருந்த தலைவனான திருமாலின் அழகிய மருகனே, சந்திரனும் சூரியனும், திக்குகள் எட்டு இவை யாவும் புகழும் முடிவு இல்லா வாழ்வைப் பெற்று விளங்கும் சிவ பெருமானின் திருச்செவியில் புகும்படி பிரணவத்தை உபதேசித்தருளிய குரு மூர்த்தியே, சிறப்பு மிக்க குறத்தியாகிய வள்ளியின் இன்பம் பொலியும் மார்பகத்தை விரும்பி மேவும் சாமர்த்திய அழகனே, தண்ணிய தமிழ் வழங்கும் பழனி மலையில் தங்கி வீற்றிருக்கும் பெருமாளே. 
* பாண்டவரின் வனவாசத்தின் கடைசி ஆண்டில் அர்ச்சுனன் ஒரு பேடி உருவில் அஞ்ஞாதவாசம் புரிந்தான்.

பாடல் 156 - பழநி
ராகம் - ஜோன்புரி / சங்கராபரணம்; தாளம் - கண்டசாபு - 2 1/2 தக-1, தகிட-1 1/2 - எடுப்பு 1/2 தள்ளி

தனனா தனந்ததன தனனா தனந்ததன     தனனா தனந்ததன ...... தனதான

சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிரு     செவிமீதி லும்பகர்செய் ...... குருநாதா 
சிவகாம சுந்தரிதன் வரபால கந்தநின     செயலேவி ரும்பியுளம் ...... நினையாமல் 
அவமாயை கொண்டுலகில் விருதாவ லைந்துழலு     மடியேனை அஞ்சலென ...... வரவேணும் 
அறிவாக மும்பெருக இடரான துந்தொலைய     அருள்ஞான இன்பமது ...... புரிவாயே 
நவநீத முந்திருடி உரலோடெ யொன்றுமரி     ரகுராமர் சிந்தைமகிழ் ...... மருகோனே 
நவலோக முங்கைதொழு நிசதேவ லங்கிருத     நலமான விஞ்சைகரு ...... விளைகோவே 
தெவயானை யங்குறமின் மணவாள சம்ப்ரமுறு     திறல்வீர மிஞ்சுகதிர் ...... வடிவேலா 
திருவாவி னன்குடியில் வருவேள்ச வுந்தரிக     செகமேல்மெய் கண்டவிறல் ...... பெருமாளே.

சிவபிரானது மனம் குளிரும்படியாக ஓம் என்ற மந்திரத்தின் விளக்க உபதேசத்தை அவரது இரு செவிகளிலும் சொன்ன குருநாதனே, சிவகாம சுந்தரியாம் பார்வதியின் மேன்மையான மைந்தனே, கந்தனே, உனக்குச் செய்யும் தொண்டினையே விரும்பி உள்ளத்தில் நினைக்காமல், கேடு விளைவிக்கும் மாயையின் வசமாகி, உலகிலே வீணாக அலைந்து திரியும் அடியேனை அஞ்சாதே எனக் கூறி அருள்வதற்கு நீ வரவேண்டும். அறிவு மனத்திலே பெருகி வளரவும், துன்பங்களெல்லாம் தொலையவும், நின்னருளால் பெறக் கூடிய ஞான இன்பத்தை தந்தருள்வாயாக. வெண்ணெயையும் திருடி, உரலுடனும் கட்டுப்பட்ட ஹரி, ரகுராமனாம் திருமால் மனமகிழும் மருமகனே, நவகண்ட பூமியில் யாவரும் கைதொழுது வணங்கும் உண்மைத் தெய்வமே, அலங்காரமானவனே, நலம் தரும் மாயவித்தையால் பிறப்புத் தோற்றங்கள் பலவற்றை விளைவிக்கும் தலைவனே, தேவயானை, அழகிய குறப்பெண் வள்ளி இவ்விருவருக்கும் மணவாளனே, நிறைவான திறல் வாய்ந்த வீரனே, மிக்க ஒளி வீசும் கூரிய வேலாயுதனே, திருவாவினன்குடியில் எழுந்தருளிய மன்மதனே, அழகனே, உலகில் உண்மைப் பொருளைக் கண்டு தெரிவித்த திறம் வாய்ந்த பெருமாளே. 

பாடல் 157 - பழநி
ராகம் - ....; தாளம் -

தனதனன தனனதன தத்தத் தனத்ததன     தனதனன தனனதன தத்தத் தனத்ததன          தனதனன தனனதன தத்தத் தனத்ததன ...... தனதான

சிறுபறையு முரசுதுடி சத்தக் கணப்பறையு     மொகுமொகென அதிரவுட னெட்டிப் பிடித்துமுடி          சிறுகயிறு நெடிதுகொடு கட்டிட் டிழுக்கஇனி ...... யணுகாதே 
சிலதமர்க ளுறவுகிளை கத்திப் பிதற்றியெடு     சுடலைதனி லிடுகனலை யிட்டுக் கொளுத்துபுனல்          திரைகடலில் முழுகெனவு ரைக்கப் படிக்குடிலை ...... யொழியாதே 
மறைமுறையி னிறுதிநிலை முத்திக் கிசைத்தபடி     உடலுயிர்கள் கரணவெளி பட்டுக் குணத்திரயம்          வழிபடவும் நினதடிமை யிச்சைப் படுத்துவது ...... மொருநாளே 
வருதுரக மயில்மணிகள் சத்திக்க நிர்த்தமிட     ஒருபதுட னிருபுயமு மட்டுத் தொடைக்கிசைய          மனமகிழ இனியமொழி செப்பிச் சிவத்தபத ...... மருள்வாயே 
நறையிதழி யறுகுபல புட்பத் திரட்களொடு     சிறுபிறையு மரவுமெழி லப்புத் திருத்தலையி          னளினமுற அணிசடையர் மெச்சிப் ப்ரியப்படவு ...... மயிலேறி 
நவநதிகள் குமுகுமென வெற்புத் திரட்சுழல     அகிலமுத லெழுபுவன மெத்தத் திடுக்கிடவும்          நவமணிகள் உரகனுடல் கக்கத் துரத்திவரு ...... முருகோனே 
குறவர்முனை கெடமனது வெட்கப் படக்குடிலில்     மலையிலெழு தினையிதணில் வைத்துச் சிறுக்கியிரு          குவிமுலையு மணியிடையு மெச்சிப் புணர்ச்சிசெயு ...... மணவாளா 
குறுமுநிவ னிருபொழுதும் அர்ச்சித்து முத்திபெற     அறிவுநெறி தவநிலைகள் செப்புத் தமிழ்க்கினிய          குருகுமர பழநிவளர் வெற்புத் தனிற்றிகழு ...... பெருமாளே.

சிறிய பறையும், முரசும், உடுக்கையும், ஒலிக்கின்ற கூட்டமான பறைகளும், மொகு மொகு என்ற பெரும் சப்தத்துடன் முழங்க, உடனே யம தூதர்கள் எட்டிப் பிடித்து, (தலை) முடியைச் சிறிய பாசக் கயிற்றால் நெடு நேரம் கட்டி இழுக்கவும், இனி அவர் பிழைக்க மாட்டார் என்று கருதி தூரத்தில் இருந்தே சில உறவினர்கள், சுற்றம் மிகுந்த உடன்பிறந்தார்கள் கூச்சலிட்டு அலறி அழுது, (உடலை) எடுத்துக்கொண்டு போய் சுடுகாட்டில் (கிரமப்படி) வைக்க வேண்டிய தீயை வைத்துக் கொளுத்திய பின்னர், (நீங்கும் முன்பு) நீரில் அலை வீசும் கடலில் முழுகுங்கள் எனச் சொல்லும்படிக்குள்ள இந்த நிலையற்ற உடலை எடுக்கும் பிறப்பு என்பது ஒருநாளும் நீங்காதோ? வேத நூல்களில் முடிவாகச் சொல்லப்பட்ட நிலையாகிய முக்தி பெறுதற்குச் சொல்லிய வழிப்படி, உடலும் உயிர்களும் (மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற) அந்தக்கரணங்களும் பர வெளியில் சம்பந்தப்பட்டு, (அதனால் சத்வ, ராஜஸ, தாமஸமாகிய) முக்குணங்களும் வழிபட்டு ஒழுக, உன் அடிமையாகிய எனக்கு உன் மீது இச்சை வருமாறு என்னை ஆண்டருளும் ஒரு நாளும் கிடைக்குமோ? நீ ஏறி வரும் குதிரையாகிய மயிலின் மணிகள் சத்தம் செய்ய நடனம் ஆடும்படி, பன்னிரு புயங்களும் தேன் ஒழுகும் மாலைக்குப் பொருந்தி விளங்க, மனம் மகிழுமாறு இனிய உபதேச மொழியைக் கூறி, உனது சிவந்த திருவடியை அருள்வாயே. வாசனையுள்ள கொன்றை மலரையும், அறுகம் புல்லையும், பலவகையான மலர்க் குவியல்களையும், பிறைச் சந்திரனையும், பாம்பையும், அழகிய கங்கை நதியையும், சிறந்த சென்னி மீது இனிது விளங்க அணிந்துள்ள சடையராகிய சிவபெருமான் புகழ்ந்து விரும்பப்பட மயிலில் ஏறி, ஒன்பது நதிகளும்* குமுகுமு என்று கலங்கவும், மலைக் கூட்டங்கள் சுழற்சி உறவும், பூலோகம் முதலான ஏழு உலகங்களும் மிகவும் திடுக்கிடவும், பாம்பின் உடலினின்று ஒன்பது** மணிகள் வெளிப்படவும், அசுரர்களைத் துரத்தி வரும் முருகனே, குறவர்களுடைய வெறுப்பு அழியவும், மனது வெட்கப்படவும், குடிசையிலும், மலையின் கண் உள்ள தினைப் புனத்துப் பரணிலும் இருந்த சிறு பெண்ணாகிய வள்ளியின் இரண்டு குவிந்த மார்பகங்களையும், அழகிய இடையையும் பாராட்டி அவளை மணந்த கணவனே, குட்டை வடிவனராகிய அகத்திய முனிவர் காலை மாலை இரு போதிலும் அர்ச்சனை செய்து முக்தி அடையும்படி அவருக்கு ஞான மார்க்கத்தையும், தவ ஒழுக்கங்களையும் சொல்லிய, தமிழுக்கு இனிய குருவே, குமரனே, பழனியில் உள்ள அருள் வளர்கின்ற மலையில் விளங்கும் பெருமாளே. 
* ஒன்பது நதிகள்: கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, சிந்து, கோதாவரி, காவேரி, சோணை, துங்கபத்திரை.
** ஒன்பது மணிகள்: வைரம், வைடூர்யம், முத்து, பவளம், நீலம், மரகதம், கோமேதகம், புஷ்பராகம், மாணிக்கம்.

பாடல் 158 - பழநி
ராகம் - வலஜி; தாளம் - ஆதி - 4 களை - 32 தகிட-1 1/2, தக-1, தகிட-1 1/2

தானதன தந்த தானதன தந்த     தானதன தந்த தானதன தந்த          தானதன தந்த தானதன தந்த தனதான

சீயுதிர மெங்கு மேய்புழுநி ரம்பு     மாயமல பிண்ட நோயிடுகு ரம்பை          தீநரிகள் கங்கு காகமிவை தின்ப ...... தொழியாதே 
தீதுளகு ணங்க ளேபெருகு தொந்த     மாயையில்வ ளர்ந்த தோல்தசையெ லும்பு          சேரிடுந ரம்பு தானிவைபொ திந்து ...... நிலைகாணா 
ஆயதுந மன்கை போகவுயி ரந்த     நாழிகையில் விஞ்ச ஊசிடுமி டும்பை          யாகியவு டம்பு பேணிநிலை யென்று ...... மடவார்பால் 
ஆசையைவி ரும்பி யேவிரக சிங்கி     தானுமிக வந்து மேவிடம யங்கு          மாழ்துயர்வி ழுந்து மாளுமெனை யன்பு ...... புரிவாயே 
மாயைவல கஞ்ச னால்விடவெ குண்டு     பார்முழுது மண்ட கோளமுந டுங்க          வாய்பிளறி நின்று மேகநிகர் தன்கை ...... யதனாலே 
வாரியுற அண்டி வீறொடுமு ழங்கு     நீரைநுகர் கின்ற கோபமொடெ திர்ந்த          வாரண இரண்டு கோடொடிய வென்ற ...... நெடியோனாம் 
வேயினிசை கொண்டு கோநிரைபு ரந்து     மேயல்புரி செங்கண் மால்மருக துங்க          வேலகிர வுஞ்ச மால்வரையி டிந்து ...... பொடியாக 
வேலைவிடு கந்த காவிரிவி ளங்கு     கார்கலிசை வந்த சேவகன்வ ணங்க          வீரைநகர் வந்து வாழ்பழநி யண்டர் ...... பெருமாளே.

சீழும் இரத்தமும் எங்கும் பொருந்தி, புழுக்கள் நிறைந்த, நிலை இல்லாத மலங்கள் நிறைந்த, நோய்களுக்கு இருப்பிடமாகிய (இந்த) உடலை, நெருப்பும், நரிகளும், கழுகுகளும், காகங்களும் ஆகிய இவை உண்ணுவது நீங்காதோ? தீமையான குணங்களே வளர்கின்ற பந்தபாசம் மாயையில் வளர்ந்த தோல், சதை, எலும்பு சேர்ந்துள்ள நரம்பு ஆகிய இவைகளும் நிறைந்து நிலை காண முடியாத இப்படியான இந்த உடம்பு, யமன் கையில் உயிர் போனவுடன், அந்த நேரத்தில் மிகவும் கெட்டுப் போகும் துன்பம் நிறைந்த இவ்வுடலை விரும்பி, அது நிலையானது என்று கருதி மாதர்களிடத்தே காமப் பற்றை வைத்து, காம விஷம் மிகுதியாகச் சேர்வதால் மயக்கம் கொண்டு ஆழ்ந்த துன்பக் கடலில் விழுந்து மடிகின்ற என் மீது அன்பு புரிந்தருளுக. மாயையில் வல்லவனாகிய கம்சனால் விடப்பட்டு கோபத்துடன் வந்து, உலகம் முழுவதும், அண்ட கோளங்களும் நடுங்கும்படியாக வாய்விட்டு சத்தம் செய்துகொண்டு வந்து பயங்கரமாக நின்று, மேகம் போன்ற கருமையான தனது தும்பிக்கையால் எல்லாவற்றையும் வாரும்படியாக நெருங்கி கர்வத்துடன் முழக்கம் புரிந்து, நீரை உண்ணும் கோபத்தோடு எதிர்த்து வந்த (குவலயா பீடம் என்னும்) யானையின் இரண்டு கொம்புகளையும் ஒடித்து வென்ற நீண்ட வடிவை உடையவனும், புல்லாங்குழலின் இன்னிசையைக் கொண்டு பசுக் கூட்டங்களைக் காத்து மேயவிட்ட சிவந்த கண்களை உடையவனும் ஆகிய திருமாலின் மருகனே, பரிசுத்தமான வேலனே, கிரவுஞ்சம் என்ற பெரிய மலை இடிந்து பொடியாகும்படி, வேலைச் செலுத்திய கந்தவேளே, காவிரி ஆற்றின் செழிப்புள்ள நகரமான நீர் சூழ்ந்த கலிசை என்ற ஊரில் வாழ்கின்ற வீரன்* உன்னைத் துதிக்க வீரை நகரில் எழுந்தருளியுள்ள பழனிப் பெருமாளே, தேவர்கள் பெருமாளே. 
* மனிதர்களைப் புகழ்ந்து பாடாத அருணகிரிநாதர் அபூர்வமாகப் பாடிய சிலரில் கலிசைச் சேவகனார் ஒருவர்.இவர் அருணகிரியாரின் நண்பர், முருக பக்தர், வீரைநகரில் பழநி ஆண்டவரை எழுந்தருளப் புரிந்தவர்.

பாடல் 159 - பழநி
ராகம் - ஹம்ஸநாதம்; தாளம் - ஆதி

தான தனதனன தான தனதனன     தான தனதனன ...... தனதான

சீற லசடன்வினை காரன் முறைமையிலி     தீமை புரிகபடி ...... பவநோயே 
தேடு பரிசிகன நீதி நெறிமுறைமை     சீர்மை சிறிதுமிலி ...... எவரோடுங் 
கூறு மொழியதுபொய் யான கொடுமையுள     கோள னறிவிலியு ...... னடிபேணாக் 
கூள னெனினுமெனை நீயு னடியரொடு     கூடும் வகைமையருள் ...... புரிவாயே 
மாறு படுமவுணர் மாள அமர்பொருது     வாகை யுளமவுலி ...... புனைவோனே 
மாக முகடதிர வீ சு சிறைமயிலை     வாசி யெனவுடைய ...... முருகோனே 
வீறு கலிசைவரு சேவ கனதிதய     மேவு மொருபெருமை ...... யுடையோனே 
வீரை யுறைகுமர தீர தரபழநி     வேல இமையவர்கள் ...... பெருமாளே.

சீறி விழும் சினத்தை உடைய கீழ்மகன், தீவினைகளைச் செய்கின்றவன், ஒழுக்கம் இல்லாதவன், பாவங்களைச் செய்கின்ற வஞ்சகன், பிறவிநோயையே தேடுகின்ற தன்மையுடையவன், பெருமை, நீதி, நெறி, நேர்மை, சிறப்பு என்ற நல்ல குணங்கள் ஒரு சிறிதும் இல்லாதவன், எல்லோருடனும் பொய்யையே பேசித் திரியும் கொடுமையே கொண்ட தீயவன், அறிவில்லாதவன், உனது திருவடிகளைப் பணியாத குப்பை போன்றவன், இப்படிப்பட்டவனாக இருப்பினும் என்னை நீ உன் அடியார்களுடைய திருக்கூட்டத்தில் கூட்டி வைக்கும்படியான வழியைத் தந்து அருள்வாயாக. நீதி நெறியினின்று மாறுபட்ட அசுரர்கள் மாண்டு போகப் போர் செய்து, வெற்றியோடு கூடிய மகுடத்தைத் தரித்தவனே, அண்டத்தின் உச்சி அதிரும்படியாக இறக்கைகளை வீசிப் பறக்கும் மயிலை குதிரையைப் போல வாகனமாக உடைய முருகப் பெருமானே, புகழ் பெற்ற கலிசை* என்ற ஊரில் வாழ்ந்த மன்னனது உள்ளத்தில் வீற்றிருக்கும் ஒப்பற்ற பெருமை உடையவனே, வீரை* என்ற திருத்தலத்தில் வாழ்கின்ற குமார ஸ்வாமியே, ¨தரியம் உடையவனே, பழனியில் எழுந்தருளிய வேலாயுதனே, தேவர்கள் வணங்கும் பெருமாளே. 
* மனிதர்களைப் புகழ்ந்து பாடாத அருணகிரிநாதர் அபூர்வமாகப் பாடிய சிலரில் கலிசைச் சேவகனார் ஒருவர்.இவர் அருணகிரியாரின் நண்பர், முருக பக்தர், வீரைத் தலத்தில் பழநி ஆண்டவரை எழுந்தருளப் புரிந்தவர்.

பாடல் 160 - பழநி
ராகம் - நாட்டகுறிஞ்சி; தாளம் - சதுஸ்ர த்ருவம் - எடுப்பு /4/4/40 , கண்டநடை - 35

தனதனன தானந்த தத்ததன தானதன     தனதனன தானந்த தத்ததன தானதன          தனதனன தானந்த தத்ததன தானதன ...... தனதான

சுருதிமுடி மோனஞ்சொல் சிற்பரம ஞானசிவ     சமயவடி வாய்வந்த அத்துவித மானபர          சுடரொளிய தாய்நின்ற நிட்களசொ ரூபமுத ...... லொருவாழ்வே 
துரியநிலை யேகண்ட முத்தரித யாகமல     மதனில்விளை யாநின்ற அற்புதசு போதசுக          சுயபடிக மாவின்ப பத்மபத மேஅடைய ...... உணராதே 
கருவிலுரு வேதங்கு சுக்கிலநி தானவளி     பொருமஅதி லேகொண்ட முக்குணவி பாகநிலை          கருதவரி யாவஞ்ச கக்கபட மூடியுடல் ...... வினைதானே 
கலகமிட வேபொங்கு குப்பைமல வாழ்வுநிஜ     மெனவுழலு மாயஞ்செ னித்தகுகை யேஉறுதி          கருதசுழ மாமிந்த மட்டைதனை யாளஉன ...... தருள்தாராய் 
ஒருநியம மேவிண்ட சட்சமய வேதஅடி     முடிநடுவு மாயண்ட முட்டைவெளி யாகியுயி          ருடலுணர்வ தாயெங்கு முற்பனம தாகஅம ...... ருளவோனே 
உததரிச மாமின்ப புத்தமிர்த போகசுக     முதவுமம லாநந்த சத்திகர மேவுணர          வுருபிரண வாமந்த்ர கர்த்தவிய மாகவரு ...... குருநாதா 
பருதிகதி ரேகொஞ்சு நற்சரண நூபுரம     தசையநிறை பேரண்ட மொக்கநட மாடுகன          பதகெருவி தாதுங்க வெற்றிமயி லேறுமொரு ...... திறலோனே 
பணியுமடி யார்சிந்தை மெய்ப்பொருள தாகநவில்     சரவணப வாவொன்று வற்கரமு மாகிவளர்          பழநிமலை மேனின்ற சுப்ரமணி யாவமரர் ...... பெருமாளே.

வேதங்களின் முடிவில் விளங்கும் மெளன நிலையை உபதேசித்து அருளும் முற்றறிவுடைய பெரிய பொருளே, அறிவுடன் கூடிய சைவ சமயத் திருமேனி தாங்கி எழுந்தருளி வந்த, இரண்டறக் கலந்திருக்கின்ற பரம் பொருளே, ஒளிக்குள் ஒளியாய் நிற்கின்ற உருவம் இல்லாதவனே, அருள் வடிவம் உடையவனே, முதற் பொருளே, ஒப்பற்ற சிவானந்தப் பெரு வாழ்வே, துரிய நிலையில் தன் மயமாய் நிற்கும் உண்மைப் பொருளைக் கண்ட ஜீவன்முக்தர்களுடைய இதயத் தாமரையில், விளைகின்றதும், ஆச்சரியத்தை விளைவிப்பதும், மேலான ஞானத்தைத் தருவதும், சுகத்தைத் தருவதும், சுயமான படிகம் போன்ற தூய இன்பத்தை உண்டாக்குவதும், தாமரைக்கு நிகரானதுமான உன் திருவடிகளை அடைந்துய்யும் நெறியை அடியேன் உணராமல், (தாயின்) கர்ப்பத்தில் உருவாகித் தங்கிய (தந்தையின்) சுக்கிலத்தோடு பிராண வாயு வந்து பூரிக்க, அவ்வுருவத்தில் பொருந்திய சத்துவ, இராஜச, தாமசம் என்னும் மூன்று குணங்களின் வேறு பாடுடைய அளவான நிலையை, நினைப்பதற்கு முடியாத வஞ்சனையுடன் கூடிய கபட குணத்தால் (அவ்வுருவம்) மூடப்பட்டு, உடலினால் வந்த தீ வினைகள் கலகங்களைச் செய்ய, மிகுந்த குப்பையான மும்மலத் தொடர்பால் வந்த (அநித்திய) வாழ்வையே நிலைத்தது என்று திரிபவனும், மாயா குணங்கட்குப் பிறப்பிடமான இவ்வுடலையே அழிவற்றது எனக் கருதும் நாய்க்குச் சமமானவனுமாகிய, மூடனாகிய இவ்வடியேனை ஆட்கொள்ள நீ அருள் புரிவாயாக. ஒரு விதியையே கூறுகின்ற ஆறு சமயங்களைத் தன்னகத்தே கொண்ட வேதத்தின் முதலும் முடிவும் நடுவுமாகி, உருண்டை வடிவமாக உள்ள அண்டங்களாகவும் அதற்கப்பாலுள்ள பெரு வெளியாகவுமாகி, ஆன்மாக்களின் உயிருக்கு உயிராகவும் உடலாகவும் அறிவுமாகி, யாண்டும் நீக்கமற நிறைந்து தோன்றுபவனுமாகி உள்ள நித்தியப் பொருளே, தண்ணீர் ஊற்றெடுப்பது போல மாறாத இன்பத்தை நல்கும் புதிய அமிர்தத்தை ஒத்த சிவலோகப் பேரின்ப நலத்தை வழங்குகின்ற மலமில்லாத இன்ப வடிவான எம் பெருமானே, சக்திவேற் படையைக் கையில் ஏந்தி இருப்பவனே, பொருந்திய அறிவுருவமாகிய அந்தப் பிரணவ மந்திரத்திற்கு முதன்மைப் பொருளாக எழுந்தருளி வருகின்ற குருநாதனே, சூரியப் பிரகாசத்தை இனிது வெளிப்படுத்தும், நன்மையைத் தரும் உனது திருவடிகளின் தண்டைகள் அசைந்து இனிது ஒலி செய்ய, நிறைந்த பெரிய அண்டங்களில் எல்லாம் ஒருங்கு அசைய நடனம் செய்கின்ற பெருமை பொருந்திய அடிகளை உடைமையால் செருக்குள்ளதும், பரிசுத்தமும் வெற்றியும் கொண்டுள்ளதுமான மயில்மீது ஏறும் ஒப்பற்ற ஆற்றல் உடையவனே, உன்னை வணங்கும் அடியவர்களுடைய உள்ளம் இதுவே உண்மைப் பொருள் என்று சொல்லுகின்ற சரவணபவா என்னும் ஆறெழுத்துக்கள் பொருந்திய (அஞ்ஞான இருளை நீக்கும்) வலியுடைய பேரொளியாகி வளர்கின்ற பழநி மலை மேல் வீற்றிருக்கின்ற சுப்பிரமணியனே, தேவர்கள் பெருமாளே. 

பாடல் 161 - பழநி
ராகம் - ....; தாளம் -

தனதனன தான தந்த தனதனன தான தந்த     தனதனன தான தந்த ...... தனதான

சுருளளக பார கொங்கை மகளிர்வச மாயி சைந்து     சுரதக்ரியை யால்வி ளங்கு ...... மதனூலே 
சுருதியென வேநி னைந்து அறிவிலிக ளோடி ணங்கு     தொழிலுடைய யானு மிங்கு ...... னடியார்போல் 
அருமறைக ளேநி னைந்து மநுநெறியி லேந டந்து     அறிவையறி வால றிந்து ...... நிறைவாகி 
அகிலபுவ னாதி யெங்கும் வெளியுறமெய்ஞ் ஞான இன்ப     அமுதையொழி யாத ருந்த ...... அருள்வாயே 
பருதிமகன் வாசல் மந்த்ரி அநுமனொடு நேர்ப ணிந்து     பரிதகழை யாமுன் வந்து ...... பரிவாலே 
பரவியவி பீஷ ணன்பொன் மகுடமுடி சூட நின்ற     படைஞரொடி ராவ ணன்ற ...... னுறவோடே 
எரிபுகுத மாறி லண்டர் குடிபுகுத மாறு கொண்ட     ரகுபதியி ராம சந்த்ரன் ...... மருகோனே 
இளையகுற மாது பங்க பழநிமலை நாத கந்த     இமையவள்த னால்ம கிழ்ந்த ...... பெருமாளே.

சுருண்டுள்ள கூந்தல் கொண்டையையும், பெருத்த மார்பகங்களையும் உடைய விலைமாதர்களின் வசமாக மனம் ஈடுபட்டு, காம லீலைகளை எல்லாம் விளக்கும் மன்மத சாத்திரத்தையே வேதம் என்று எண்ணி, அறிவில்லாதவருடன் நட்புக் கொள்ளும் செய்கைகளை உடைய நானும், இங்கு உன்னுடைய அடியார்களைப் போல் அருமையான வேதங்களையே உண்மையான நூலாகக் கருதி, மநு தர்ம சாஸ்திர வழியிலே நடந்து, அறிவு இன்னது என்பதை உள் அறிவுகொண்டு அறிந்து, பூரண ஞானம் பெற்று, எல்லா உலகங்களிலும் உள்ள தலங்கள் யாவையும் சுத்த ஞான வெளியாகவே கண்டு, மெய்ஞ்ஞான இன்ப அமுதத்தை ஓய்வின்றிப் பருக அருள் செய்வாயாக. சூரியனுடைய மகனான சுக்¡£வனின் அரண்மனை வாயில் மந்திரியாகிய அனுமானுடைய உதவியுடன் நேராகப் பணிந்து (ஸ்ரீராமர்) தன்னை அன்புடனும் தகைவுடனும் அழைப்பதற்கு முன்னமேயே தானே பணிவுடன் சென்று, பக்தியுடன் சரணாகதி அடைந்த விபீஷணன் பொன் மகுடம் முடியில் சூட்டப்பட்டு நிற்க, இராவணன் தன் உறவினர்களுடனும் படைகளுடனும் இறந்து நெருப்பிற்கு இரையாகி மடிய, பக்தி மாறுதல் சிறிதும் இல்லாத தேவர்கள் இந்திர லோகத்தில் குடி புகுந்து மீண்டும் வாழவும், இராவணனிடம் பகை கொண்ட, ரகு குலத்தில் வந்த தலைவனான இராமச் சந்திர மூர்த்தியின் மருகனே, இளைய குறப் பெண்ணாகிய வள்ளியின் பங்கனே, பழநிமலை நாதனே, கந்தனே, இமவான் மகளான பார்வதி மகிழ்கின்ற பெருமாளே. 

பாடல் 162 - பழநி
ராகம் - பிலஹரி ; தாளம் - அங்கதாளம் - 5 1/2 தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2

தானந்த தனன தான தானந்த தனன தான     தானந்த தனன தான ...... தனதான

ஞானங்கொள் பொறிகள் கூடி வானிந்து கதிரி லாத     நாடண்டி நமசி வாய ...... வரையேறி 
நாவின்ப ரசம தான ஆநந்த அருவி பாய     நாதங்க ளொடுகு லாவி ...... விளையாடி 
ஊனங்க ளுயிர்கள் மோக நானென்ப தறிவி லாம     லோமங்கி யுருவ மாகி ...... யிருவோரும் 
ஓரந்த மருவி ஞான மாவிஞ்சை முதுகி னேறி     லோகங்கள் வலம தாட ...... அருள்தாராய் 
தேனங்கொ ளிதழி தாகி தாரிந்து சலில வேணி     சீரங்க னெனது தாதை ...... ஒருமாது 
சேர்பஞ்ச வடிவி மோகி யோகங்கொள் மவுன ஜோதி     சேர்பங்கி னமல நாத ...... னருள்பாலா 
கானங்கள் வரைகள் தீவு ஓதங்கள் பொடிய நீல     காடந்த மயிலி லேறு ...... முருகோனே 
காமன்கை மலர்கள் நாண வேடம்பெ ணமளி சேர்வை     காணெங்கள் பழநி மேவு ...... பெருமாளே.

ஞான இந்திரியங்கள் யாவும் ஒருமுகமாகக் கூடி, வானில் சந்திரன் சூரியன் இன்றியே ஒளி வீசும் உலகத்தை அடைந்து, நமசிவாய என்ற பஞ்சாட்சர மலையின் மீது ஏறி, நாவுக்குப் பேரின்ப இனிமையைத் தரும் ஆனந்த அருவி பாய, அந்தச் சிவயோக சமாதியில் உள்ள நாதங்களோடு கலந்து விளையாடல் புரிந்து, ஊன் பொதிந்த உடம்புடன் கூடிய உயிர்களை மயங்கச் செய்யும் தன்மையும், நான் என்ற அறிவே அற்றுப் போய், ப்ரணவ ஜோதி வடிவமாகி, ஜீவாத்மாவாகிய யானும் பரமாத்மாவாகிய நீயும் ஒரே வடிவமாகி, மெய்ஞ்ஞான வித்தையாகிய குதிரையின் முதுகில் ஏறி, உலகம் முழுதும் வலமாக பவனி வரும் பெருவாழ்வை அருள்வாயாக. தேனை உடையதும் அழகியதும் ஆன கொன்றை மலரையும், ஆத்தி மலர் மாலையையும், நிலவையும், கங்கையையும் ஜடாமுடியில் அணிந்தவரும், சிறந்த திருமேனியை உடையவரும், எனது தந்தையாரும், ஒப்பற்ற பெண்ணரசி, பஞ்ச* சக்திகளின் கலவையான வடிவழகி, சிவத்தின் காதலி, சிவயோகத்தில் மேவிய மெளன நிலையுடையார் காணும் ஜோதி வடிவினாள் ஆகிய உமா தேவியார் சேர்ந்திருக்கிற இடது பாகத்தை உடையவருமான, தூய்மையே உருவான தனிப் பெரும் தலைவராம் சிவபெருமான் பெற்றருளிய திருக்குமாரனே, காடுகளும் மலைகளும் தீவுகளும் கடல்களும் பொடியாக காட்டில் நீல நிறத்தோடுள்ள அழகிய மயிலில் ஏறும் முருகனே, மன்மதனுடைய கரத்தில் உள்ள மலர்க் கணைகள் மயக்கும் ஆற்றலின்றி நாண, வேடர் குலப் பெண் வள்ளியுடன் மலர் மஞ்சத்தில் இணைந்திருக்கும் எமது பழநி மலையின் எழுந்தருளிய பெருமாளே. 
* இறைவி ஆதிசக்தி, பராசக்தி, இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என்ற ஐந்து சக்திகளாய் உள்ளாள்.

பாடல் 163 - பழநி
ராகம் - பூர்வி கல்யாணி; தாளம் - அங்கதாளம் - 7 1/2 தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2

தனன தனதன தனதன தனதன     தனன தனதன தனதன தனதன          தனன தனதன தனதன தனதன ...... தனதான

தகர நறுமலர் பொதுளிய குழலியர்     கலக கெருவித விழிவலை படவிதி          தலையி லெழுதியு மனைவயி னுறவிடு ...... வதனாலே 
தனயர் அனைமதர் மனைவியர் சினெகிதர்     சுரபி விரவிய வகையென நினைவுறு          தவன சலதியின் முழுகியெ யிடர்படு ...... துயர்தீர 
அகர முதலுள பொருளினை யருளிட     இருகை குவிசெய்து ளுருகிட வுருகியெ          அரக ரெனவல னிடமுற எழிலுன ...... திருபாதம் 
அருள அருளுடன் மருளற இருளற     கிரண அயில்கொடு குருகணி கொடியொடு          அழகு பெறமர கதமயில் மிசைவர ...... இசைவாயே 
சிகர குடையினி னிரைவர இசைதெரி     சதுரன் விதுரனில் வருபவ னளையது          திருடி யடிபடு சிறியவ னெடியவன் ...... மதுசூதன் 
திகிரி வளைகதை வசிதநு வுடையவ     னெழிலி வடிவின னரவுபொன் முடிமிசை          திமித திமிதிமி யெனநட மிடுமரி ...... மருகோனே 
பகர புகர்முக மதகரி யுழைதரு     வனிதை வெருவமுன் வரஅருள் புரிகுக          பரம குருபர இமகிரி தருமயில் ...... புதல்வோனே 
பலவின் முதுபழம் விழைவுசெய் தொழுகிய     நறவு நிறைவயல் கமுகடர் பொழில்திகழ்          பழநி மலைவரு புரவல அமரர்கள் ...... பெருமாளே.

மயிர்ச் சாந்தும், மணமுள்ள மலர்களும் நிறைந்த கூந்தலுடைய (விலை) மகளிரின் குழப்பம் தரும் கர்வம் மிக்க கண் வலையில் படும்படியாக தலையில் விதியால் எழுதப்பட்டும், மனைவியோடு கூடிய இல்லற வாழ்க்கையில் இருக்க வேண்டி அமைந்தபடியால், மக்கள், தாய், சுற்றத்தார், மனைவியர், நண்பர்கள், பசு முதலிய பல வகையான சிந்தனை ஏற்பட, ஆசைக் கடலில் மூழ்கி துன்பம் உறுகின்ற துயரம் நீங்க, அகர எழுத்தை முதலாகக் கொண்ட (அ + உ+ ம் = ஓம் என்ற) பிரணவப் பொருளை (நீ) உபதேசிக்க, இரண்டு கைகளையும் குவித்து மனம் உருகி உருகி, ஹர ஹர எனக் கூறி உனது வலப் புறத்தும் இடப் புறத்தும் இருந்து, உன்னுடைய அழகிய இரண்டு திருவடிகளை நீ தந்து அருளவும், அங்ஙனம் பெற்ற அருள் ஆசியினால் என் மயக்கம் நீங்க, அஞ்ஞானமும் அகல, ஒளி வீசும் வேலும், கோழிக் கொடியும் விளங்க, அழகாக பச்சை நிற மயிலின் மீதில் வர நீ இசைந்தருளுக. கோவர்த்தன மலையாகிய குடையின் கீழே பசுக் கூட்டம் வந்து சேர குழல் இசையை வாசித்துக் காட்டிய சமர்த்தன், விதுரனுடைய வீட்டுக்கு விரும்பி (விருந்து செய்ய) வந்தவன்*, வெண்ணெயைத் திருடி அடிபட்ட சிறிய குழந்தை, (திரிவிக்ர ரூபம் கொண்ட) பெரியவன், மது என்ற அசுரனைக் கொன்றவன், சக்கரம், சங்கு, தண்டம், வாள், வில் (முதலிய ஐந்து ஆயுதங்களை) உடையவன், மேக நிறம் கொண்டவன், காளிங்கன் என்னும் பாம்பின் அழகிய பணாமுடியின் மேல் திமித திமி திமி என்ற பல ஒலிகளுடன் நடனம் செய்கின்ற திருமாலின் மருகனே, அழகிய, புள்ளியைக் கொண்ட முகத்தை உடைய, மதம் கொண்ட யானையாகிய கணபதியை, மான் பெற்ற மங்கையாகிய வள்ளி அஞ்சும்படி (யானை உருவில்) முன்னே வரச் செய்தருளிய குகனே, மேலானவனே, குருபரனே, இமவான் பயந்தருளிய மயில் போன்ற உமையின் மகனே, பலாவின் பழுத்த பழத்தினின்று கனிந்து ஒழுகிய தேன் நிறைந்த வயல்களும், கமுகு மரங்களும் அடர்ந்த சோலைகள் விளங்கும் பழனி மலையில் எழுந்தருளி உள்ள அரசே, தேவர்களின் பெருமாளே. 

பாடல் 164 - பழநி
ராகம் - ....; தாளம் -

தனனத் தனனத் தனனத் தனனத்     தனனத் தனனத் ...... தனதான

தகைமைத் தனியிற் பகைகற் றுறுகைத்     தநுமுட் டவளைப் ...... பவனாலே 
தரளத் திரளிற் புரளக் கரளத்     தமரத் திமிரக் ...... கடலாலே 
உகைமுத் தமிகுத் ததெனப் பகல்புக்     கொளிமட் குமிகைப் ...... பொழுதாலே 
உரையற் றுணர்வற் றுயிரெய்த் தகொடிக்     குனநற் பிணையற் ...... றரவேணும் 
திகைபத் துமுகக் கமலத் தனைமுற்     சிறையிட் டபகைத் ...... திறல்வீரா 
திகழ்கற் பகமிட் டவனக் கனகத்     திருவுக் குருகிக் ...... குழைமார்பா 
பகலக் கிரணப் பரணச் சடிலப்     பரமற் கொருசொற் ...... பகர்வோனே 
பவனப் புவனச் செறிவுற் றுயர்மெய்ப்     பழநிக் குமரப் ...... பெருமாளே.

தக்க தருணமென்று பார்த்து தனி நிலையில் (அவள் மீது) பகை பூண்டு, தன் கையில் உள்ள வில்லை நன்றாக வளைக்கும் மன்மதனாலே, முத்துக் குவியல்கள் புரள்கின்றதும், நஞ்சின் பிறப்புக்கு இடமானதும், ஒலி செய்வதும், இருள் நிறைந்ததுமாகிய கடலாலும், நட்சத்திரங்கள் முத்துக்கள் நிறைந்தது போல் வானில் நிரம்பித் தோன்ற, பகல் பொழுது போய், ஒளி மங்கி, மிஞ்சி நிற்கும் (இரவுப்) பொழுதாலும், வாக்கு அற்றும், உணர்வு அற்றும், உயிர் இளைத்து நிற்கும் கொடி போன்ற (என்) மகளுக்கு உனது நல்ல மாலையை நீ தந்தருள வேண்டும். பத்துத் திசைகளில் உள்ளவர்களும் கலங்க, தாமரையில் உள்ள பிரமனை முன்பு சிறையில் அடைத்து பகைமைத் திறத்தைக் காட்டிய வீரனே, (வேண்டியதைத் தந்து) விளங்கும் கற்பக மரங்கள் நிறைந்த சோலைகளை உடைய பொன்னுலகத்து லக்ஷ்மி (தேவயானை) மீது மனம் உருகிக் குழைந்து அணைந்த மார்பனே, ஞாயிறு போல ஒளி கொண்ட, பாரமான சடையைக் கொண்ட பரமனாகிய சிவபெருமானுக்கு, ஒப்பற்ற பிரணவச் சொல்லை உபதேசித்தவனே, வாயு மண்டலம் வரையும் நிறைந்து உயர்ந்த மெய்ம்மை விளங்கும் பழநித் தலத்தில் நிற்கும் குமரப் பெருமாளே. 
இப்பாட்டு அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவிக்காக அவளது தாய் பாடியது.மன்மதன், அவனது வில், கடல், இரவு, இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.

பாடல் 165 - பழநி
ராகம் - ஹமீர் கல்யாணி; தாளம் - ஆதி - 12

தனன தனன தனன தனன     தனன தனன ...... தனதான

தமரு மமரு மனையு மினிய     தனமு மரசும் ...... அயலாகத் 
தறுகண் மறலி முறுகு கயிறு     தலையை வளைய ...... எறியாதே 
கமல விமல மரக தமணி     கனக மருவு ...... மிருபாதங் 
கருத அருளி யெனது தனிமை     கழிய அறிவு ...... தரவேணும் 
குமர சமர முருக பரம     குலவு பழநி ...... மலையோனே 
கொடிய பகடு முடிய முடுகு     குறவர் சிறுமி ...... மணவாளா 
அமர ரிடரு மவுண ருடலு     மழிய அமர்செய் ...... தருள்வோனே 
அறமு நிறமு மயிலு மயிலு     மழகு முடைய ...... பெருமாளே.

சுற்றத்தாரும், அவர்கள் கூடி இருக்கும் இல்வாழ்க்கையும், இனிமையான செல்வமும், ஆட்சியும் என்னை விட்டு விலகிப் போகும்படியாக, கொடுமையான யமன் திண்ணிய பாசக்கயிற்றைக் கொண்டு தலையைச் சுற்றி வளைப்பதற்கு எறியாமல் இருக்க, தாமரை போன்றும், பரிசுத்தமான, மரகதமணி போலவும், தங்கத்தைப் போலவும் விளங்கும் உன்னிரு திருவடிகளை நான் நினைத்துக்கொண்டே இருக்குமாறு அருளி, என் திக்கற்ற தனிமை நீங்கும்படி அறிவைத் தந்தருள வேண்டும். குமரா, போர் வீரா, முருகா, பரமனே, விளங்கும் பழனிமலை வாசனே, மதம் பிடித்த யானையை (வள்ளியை பயமுறுத்தி உன்னை அணையவைக்கவேண்டும் என்ற) உன் கருத்து நிறைவேற எதிரே வரச் செய்தவனே, குறப்பெண் வள்ளியின் மணவாளனே, தேவர்களின் துன்பமும், அசுரர்களின் உடலும் ஒன்றாக அழியும்படி போர் செய்து அருளியவனே, தர்மமும், செந்நிறமும், வேலும், மயிலும், அழகும் உடைய பெருமாளே. 

பாடல் 166 - பழநி
ராகம் - செஞ்சுருட்டி ; தாளம் - சதுஸ்ர த்ருவம் எடுப்பு /4/4/40, கண்டநடை - 35

தனதன தந்தான தானான தானதன     தனதன தந்தான தானான தானதன          தனதன தந்தான தானான தானதன ...... தனதான

தலைவலி மருத்தீடு காமாலை சோகைசுரம்     விழிவலி வறட்சூலை காயாசு வாசம்வெகு          சலமிகு விஷப்பாக மாயாவி காரபிணி ...... யணுகாதே 
தலமிசை யதற்கான பேரோடு கூறியிது     பரிகரி யெனக்காது கேளாது போலுமவர்          சரியும்வ யதுக்கேது தா¡£ர்சொ லீரெனவும் ...... விதியாதே 
உலைவற விருப்பாக நீள்காவின் வாசமலர்     வகைவகை யெடுத்தேதொ டாமாலி காபரண          முனதடி யினிற்சூட வேநாடு மாதவர்க ...... ளிருபாதம் 
உளமது தரித்தேவி னாவோடு பாடியருள்     வழிபட எனக்கேத யாவோடு தாளுதவ          உரகம தெடுத்தாடு மேகார மீதின்மிசை ...... வரவேணும் 
அலைகட லடைத்தேம காகோர ராவணனை     மணிமுடி துணித்தாவி யேயான ஜானகியை          அடலுட னழைத்தேகொள் மாயோனை மாமனெனு ...... மருகோனே 
அறுகினை முடித்தோனை யாதார மானவனை     மழுவுழை பிடித்தோனை மாகாளி நாணமுனம்          அவைதனில் நடித்தோனை மாதாதை யேஎனவும் ...... வருவோனே 
பலகலை படித்தோது பாவாணர் நாவிலுறை     யிருசர ணவித்தார வேலாயு தாவுயர்செய்          பரண்மிசை குறப்பாவை தோள்மேவ மோகமுறு ...... மணவாளா 
பதுமவ யலிற்பூக மீதேவ ரால்கள் துயில்     வருபுனல் பெருக்காறு காவேரி சூழவளர்          பழநிவ ருகற்பூர கோலாக லாவமரர் ...... பெருமாளே.

தலைவலி, வசிய மருந்தால் வரும் நோய், மஞ்சட்காமாலை, ரத்தசோகை, ஜுரம், கண்வலி, வறள் என்ற வயிற்றுவலி, காசநோய், மூச்சுப்பிடிப்பு, நீரிழிவு, கொடிய விஷ நோய்கள், உலகமாயையால் வரும் விகாரமான பிணிகள் முதலியவை என்னை அணுகாதவண்ணம், பூமியில் அந்த நோய்கள் நீங்குவதற்காக சில வைத்தியர்களிடம் சொல்லி, இது நீங்குவதற்குப் பரிகாரம் யாதெனக் கேட்டால், காது கேளாததுபோலச் செல்பவர் சிலர், சாகப்போகும் வயதாகிவிட்டதே உமக்கு, எவ்வளவு பணம் தருவீரெனக் கேட்பவர் சிலர் என்று பிறர் கூறும்படியான விதியை என் தலையில் எழுதாமல், ஊக்கக்குறைவு இன்றி, விருப்பமுடன் பெரிய பூந்தோட்டத்தில் பூத்த மணமுள்ள மலர்களை, விதவிதமாகப் பறித்துத் தொடுத்து மாலை வகைகளில் ஆபரணங்கள் போல் அமைத்து உன்னடியில் சூட்டுதற்கு விரும்பும் சிறந்த தவசிரேஷ்டர்களின் இரு பாதங்களையும் மனத்தினில் தரித்தே, ஆய்ந்த அறிவுடன் பாடி, உன்னருளால் உன்னை வழிபடுவதற்கு, என்மீது அன்பு கூர்ந்து, உன் திருவடிகளைத் தந்துதவ பாம்பைத் தூக்கி எறிந்து ஆடும் மயிலின் மீது வந்தருள வேண்டும். அலைகடலை அணையிட்டு அடைத்து, மகா கோரமான ராவவணனுடைய மணிமுடிகளை அறுத்துத்தள்ளி, உயிருக்கு ஒப்பான சீதாதேவியை தன் தோள்வலியால் அழைத்துக்கொண்ட மாயவனான திருமாலை மாமன் என்று அழைக்கும் மருகனே, அறுகம்புல்லை சடையில் முடித்தவனும், உயிர்கட்கெல்லாம் ஆதாரமானவனும், மழு, மான் இவைகளை ஏந்தியவனும், மகா காளி வெட்கும்படியாக முன்னர் சபைதனிலே நடனம் ஆடியவனான சிவபிரானை, சிறந்த தந்தையே என்றழைக்கவும் வந்தவனே, பல கலைகளைப் படித்து ஓதும் கவிஞர்களின் நாவிலே வாசம் செய்கின்ற இரு திருவடிகளை உடைய வித்தகனே, வேலாயுதனே, உயரத்தில் கட்டப்பட்ட பரணின் மீது இருந்த குறப்பெண் வள்ளியின் தோள்களைத் தழுவ மிக்க ஆசை கொண்ட மணவாளனே, தாமரை மலர்கின்ற வயலிலும், பாக்கு மரங்களின் மீதும், வரால் மீன்கள் உறங்கும்படி வரும் நீர்ப்பெருக்கை உடைய ஆறாகிய காவேரி சூழ விளங்கும் பழநியில் எழுந்தருளிய, பச்சைக் கற்பூர மணம் கமழும் அலங்கார ஆடம்பரனே, தேவர்களின் பெருமாளே. 

பாடல் 167 - பழநி
ராகம் - பந்துவராளி; தாளம் - கண்டசாபு - 2 1/2

தனதனனத் தனதனனத் தனதனனத் ...... தனதான     தனதனனத் தனதனனத் தனதனனத் ...... தனதான

திடமிலிசற் குணமிலிநற் றிறமிலியற் ...... புதமான     செயலிலிமெய்த் தவமிலிநற் செபமிலிசொர்க் ...... கமுமீதே 
இடமிலிகைக் கொடையிலிசொற் கியல்பிலிநற் ...... றமிழ்பாட     இருபதமுற் றிருவினையற் றியல்கதியைப் ...... பெறவேணும் 
கெடுமதியுற் றிடுமசுரக் கிளைமடியப் ...... பொரும்வேலா     கிரணகுறைப் பிறையறுகக் கிதழ்மலர்கொக் ...... கிறகோடே 
படர்சடையிற் புனைநடனப் பரமர்தமக் ...... கொருபாலா     பலவயலிற் றரளநிறைப் பழநிமலைப் ...... பெருமாளே.

உன் அருளில் ஈடுபடும் உறுதி இல்லாதவன் யான், நல்ல குணங்கள் ஏதும் இல்லாதவன் யான், தொண்டுகள் செய்வதற்கு ஆற்றல் இல்லாதவன் யான், வியக்கத்தக்க அரும் செயலைச் செய்யாதவன் யான், மெய்யறிவோடு கூடிய தவம் ஒன்றும் செய்யாதவன் யான், நன்மையை நல்கும் ஜபம் ஏதும் செய்யாதவன் யான், சொர்க்க உலகத்தில் இடம்பெறத் தகுதி இல்லாதவன் யான், கரங்களால் ஒரு தானமும் கொடுத்தறியாதவன் யான், உன்னை நல்ல தமிழ்ப்பாடலால் பாடுதற்கு ஏற்ற சொல்வன்மை இல்லாதவன் யான், (இத்தகைய குறைபாடுகள் உள்ள அடியேன்) உனது இரண்டு திருவடிகளையும் அடைந்து நல்வினை, தீவினை ஆகிய இருவினைகளும் தீர்ந்து உயர்ந்த முக்தி நிலையைப் பெற்று உய்ய வேண்டும். தீய புத்தியே உடையவர்களாகிய அசுரர்களது வம்சமே அழியுமாறு போர் புரிந்த வேலனே, ஒளிபடைத்த இளம்பிறைச் சந்திரன், அறுகம்புல், ருத்திராக்ஷம், வில்வ இதழ், கொன்றை மலர், கொக்கின் இறகு முதலியவற்றை விரிந்த சடைமுடியில் தரித்துக் கொண்டிருப்பவரும் ஆனந்தத் தாண்டவம் புரிபவருமான பரமசிவன் பெற்ற ஒப்பற்ற குமாரனே, குறையின்றிப் பயன் தரும் வயல்களில் முத்துக்கள் நிறைந்த பழநி மலையில் எழுந்தருளிய பெருமாளே. 

பாடல் 168 - பழநி
ராகம் - பைரவி; தாளம் - திஸ்ர ஏகம் - 3 - எடுப்பு - 1/2 இடம்

தனன தனன தனன தனன     தனன தனன ...... தனதான

திமிர வுததி யனைய நரக     செனன மதனில் ...... விடுவாயேல் 
செவிடு குருடு வடிவு குறைவு     சிறிது மிடியு ...... மணுகாதே 
அமரர் வடிவு மதிக குலமு     மறிவு நிறையும் ...... வரவேநின் 
அருள தருளி யெனையு மனதொ     டடிமை கொளவும் ...... வரவேணும் 
சமர முகவெ லசுரர் தமது     தலைக ளுருள ...... மிகவேநீள் 
சலதி யலற நெடிய பதலை     தகர அயிலை ...... விடுவோனே 
வெமர வணையி லினிது துயிலும்     விழிகள் நளினன் ...... மருகோனே 
மிடறு கரியர் குமர பழநி     விரவு மமரர் ...... பெருமாளே.

இருண்ட கடல் போன்றதும், நரகத்திற்கு ஒப்பானதும் ஆன பிறப்பு என்பதில் நீ என்னை விழும்படியாகச் செய்தால், செவிடு, குருடு, அங்கஹீனம், சிறிதேனும் வறுமை என்பவை ஏதும் இல்லாது, தேவ லக்ஷணமும், உயர் குடிப்பிறப்பும், அறிவும், நீதி ஒழுக்கமும் எனக்கு வருமாறு உனது திருவருளைத் தந்தருளி, என்னையும் நீ மனம்வைத்து உன் அடிமையாக ஆட்கொள்ள வரவேண்டும். போர்க்களத்தில் வெல்லப்பட்ட அசுரர்களின் தலைகள் உருளும்படியாக, மிகப் பெரிய கடல் அலறும்படியாக, நீண்டுயர்ந்த கிரெளஞ்சமலை பொடியாக, வேலினைச் செலுத்தியவனே, பாம்புப் படுக்கையில் இனிதே துயிலும் தாமரைக்கண்ணன் திருமால் மருகனே, கண்டம் கறுத்த (நீலகண்ட) சிவனின் குமரனே, பழனியில் வந்து தொழும் தேவர்களின் பெருமாளே. 

பாடல் 169 - பழநி
ராகம் - ....; தாளம் -

தானதன தானதன தானான தானதன     தானதன தானதன தானான தானதன          தானதன தானதன தானான தானதன ...... தனதான

தோகைமயி லேகமல மானேயு லாசமிகு     காமதுரை யானமத வேள்பூவை யேயினிமை          தோயுமநு போகசுக லீலாவி நோதமுழு ...... துணர்தேனே 
சூதனைய சீதஇள நீரான பாரமுலை     மீதணைய வாருமிதழ் தா¡£ரெ னாணைமொழி          சோர்வதிலை யானடிமை யாவேனு மாணைமிக ...... மயலானேன் 
ஆகமுற வேநகம தாலேவி டாதஅடை     யாளமிட வாருமென வேமாத ரார்களுட          னாசைசொலி யேயுழலு மாபாத னீதியிலி ...... யுனையோதேன் 
ஆமுனது நேயஅடி யாரோடு கூடுகில     னீறுநுதல் மீதிடலி லாமூட னேதுமிலி          யாயினுமி யானடிமை யீடேற வேகழல்கள் ...... தருவாயே 
மாகமுக டோடகில பாதாள மேருவுட     னேசுழல வாரியது வேதாழி யாவமரர்          வாலிமுத லானவர்க ளேனோர்க ளாலமுது ...... கடைநாளில் 
வாருமென வேயொருவர் நோகாம லாலவிட     மீசர்பெறு மாறுதவி யேதேவர் யாவர்களும்          வாழஅமு தேபகிரு மாமாய னாரினிய ...... மருகோனே 
மேகநிக ரானகொடை மானாய காதிபதி     வாரிகலி மாருதக ரோபாரி மாமதன          வேள்கலிசை வாழவரு காவேரி சேவகன ...... துளமேவும் 
வீரஅதி சூரர்கிளை வேர்மாள வேபொருத     தீரகும ராகுவளை சேரோடை சூழ்கழனி          வீரைநகர் வாழ்பழநி வேலாயு தாவமரர் ...... பெருமாளே.

கலாப மயிலே, தாமரையில் உறையும் லக்ஷ்மியான மான் போன்றவளே, உல்லாசம் மிகுந்த காமத் தலைவனான மன்மதனுக்கு உகந்த நாகணவாய்ப் புள்ளைப் போன்ற பாவையே, இனிமை நிரம்பிய அநுபவங்களான காம லீலா விநோதங்கள் எல்லாவற்றையும் அறிந்துள்ள தேன் போல் இனிப்பவளே, சூதாடும் கருவி போன்ற அமைப்பில், குளிர்ந்த இள நீர் போன்ற பாரமான மார்பகங்களை (நான்) தழுவும்படி வருவாயாக. வாயிதழை உண்ணத் தருவாயாக. இது என் ஆணை மொழி ஆகும். சோர்வே இல்லாமல் நான் உனக்கு அடிமை ஆவேன். உன்மீது ஆணை. உன்னிடம் மிகவும் காம மயக்கம் கொண்டுள்ளேன். எனது உடலில் அழுந்திப் படியும்படியாக நகத்தால் என்றும் அழியாத அடையாளத்தை இட வருவாயாக எனறெல்லாம் விலைமாதர்களுடன் ஆசை மொழிகளைக் கூறித் திரிகின்ற பெரிய பாபம் செய்பவன், நீதி அற்றவன், உன்னை ஓதித் துதிக்காதவன் நான். உனக்கு உகந்த அன்பு பூண்ட அடியவர்களோடு சேர்வதில்லை. திருநீற்றை நெற்றியில் இடுதல் இல்லா முட்டாள். எவ்வித நற்குணமும் இல்லாதவன். அப்படி இருந்த போதிலும் நான் உன் அடிமை ஆவேன். ஆகையால் நான் நற்கதி அடைய உனது திருவடிகளைத் தருவாயாக. அண்ட உச்சி முதல் அகில பாதாளம் வரையும் அங்ஙனம் மேரு மலையும் சுழற்சி உற, பாற்கடலே கடையும் பானையாக அமைய, தேவர்கள், (குரங்கரசன்) வாலி முதலியவர்கள் மற்றவர்களுடன் அமுது கடைந்த நாளில், வாருங்கள் எனக் கூறி ஒருவரும் மனம் நோகாத வண்ணம், ஆலகால விஷத்தை சிவபெருமான் பெறும்படி தந்து, தேவர்கள் எல்லோரும் வாழும் பொருட்டு அமுதத்தை அந்தத் தேவர்களுக்குப் பகிர்ந்து அளித்த பெரிய மாயோனாகிய திருமாலுக்கு இனிய மருகனே, மேகத்தைப் போன்ற கொடைப் பெருமை வாய்ந்த நாயகத் தலைவனும், தன் செல்வக் கடலை வாயு வீசுவதைப் போல் விரைந்து அளிக்கும் கொடைத் திறம் கொண்ட கைகளை உடைய பாரி வள்ளல் போன்றவனும், சிறந்த மன்மதனைப் போன்ற அழகனுமாகிய, கலிசையில் வாழும் காவேரி சேவகனாருடைய* மனத்தில் வீற்றிருக்கும் வீரனே, பெரும் சூரர் சுற்றமெல்லாம் வேரோடு மடியும்படி சண்டை செய்த தீரனே, குமரனே, குவளை மலர்கள் நிறைந்த ஓடைகள் சூழ்ந்த வயல்களை உடைய வீரை நகரில் வாழும் பழனி வேலாயுதனே, தேவர்களின் பெருமாளே. 
* மனிதர்களைப் புகழ்ந்து பாடாத அருணகிரிநாதர் அபூர்வமாகப் பாடிய சிலரில் கலிசைச் சேவகனார் ஒருவர்.இவர் அருணகிரியாரின் நண்பர், முருக பக்தர், வீரைநகரில் பழநி ஆண்டவரை எழுந்தருளப் புரிந்தவர்.

பாடல் 170 - பழநி
ராகம் - ....; தாளம் -

தான தந்தன தானா தனாதன     தான தந்தன தானா தனாதன          தான தந்தன தானா தனாதன ...... தனதான

நாத விந்துக லாதீ நமோநம     வேத மந்த்ரசொ ரூபா நமோநம          ஞான பண்டித ஸாமீ நமோநம ...... வெகுகோடி 
நாம சம்புகு மாரா நமோநம     போக அந்தரி பாலா நமோநம          நாக பந்தம யூரா நமோநம ...... பரசூரர் 
சேத தண்டவி நோதா நமோநம     கீத கிண்கிணி பாதா நமோநம          தீர சம்ப்ரம வீரா நமோநம ...... கிரிராஜ 
தீப மங்கள ஜோதீ நமோநம     தூய அம்பல லீலா நமோநம          தேவ குஞ்சரி பாகா நமோநம ...... அருள்தாராய் 
ஈத லும்பல கோலா லபூஜையும்     ஓத லுங்குண ஆசா ரநீதியும்          ஈர முங்குரு சீர்பா தசேவையு ...... மறவாத 
ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை     சோழ மண்டல மீதே மநோகர          ராஜ கெம்பிர நாடா ளுநாயக ...... வயலூரா 
ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை     சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்          ஆடல் வெம்பரி மீதே றிமாகயி ...... லையிலேகி 
ஆதி யந்தவு லாவா சுபாடிய     சேரர் கொங்குவை காவூர் நனாடதில்          ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ...... பெருமாளே.

லிங்கம், பீடம் (சிவ சக்தி) ஆகிய தத்துவங்களுக்கு மூலப்பொருளே, போற்றி, போற்றி, வேதங்கள், மந்திரங்கள், இவற்றின் உருவமாக விளங்குபவனே, போற்றி, போற்றி, பேரறிவுக்குத் தலைவனான தெய்வமே, போற்றி, போற்றி, பல கோடிக் கணக்கான திருப்பெயர்களைக் கொண்ட சிவனின் புதல்வனே, போற்றி, போற்றி (அனைத்து உயிர்களுக்கெல்லாம்) இன்பங்களை அளிக்கும் பார்வதியின் குமாரனே, போற்றி, போற்றி தன் காலினால் பாம்பை அடக்கிக் கட்டியுள்ள மயிலை வாகனமாகக் கொண்டவனே, போற்றி, போற்றி, எதிரிகளான சூரர்களை தண்டித்து அழிக்கும் திருவிளையாடல் புரிந்தவனே, போற்றி, போற்றி, இசை ஒலி எழுப்பும் சதங்கைகளை உடைய திருப்பாதங்களைக் கொண்டவனே, போற்றி, போற்றி மிகவும் பராக்ரமசாலியான போர்வீரனே, போற்றி, போற்றி, மலைகளுக்கெல்லாம் அரசனே, திருவிளக்குகளின் மங்களகரமான ஒளியே, போற்றி, போற்றி, பரிசுத்தமான பரவெளியில் லீலைகள் புரிபவனே, போற்றி, போற்றி, தேவயானையை மணாட்டியாகப் பக்கத்தில் கொண்டவனே, போற்றி, போற்றி, உனது திருவருளைக் கொடுத்து அருள்வாயாக. தானம், பல சிறப்பான பூஜைகள் செய்தல், நல்ல நூல்களைப் படித்தல், சற்குணம், ஒழுக்கம், நியாயம், கருணை, குருவின் திருப்பாதங்களைச் சேவித்தல் ஆகியவற்றை மறவாமல் கடைப்பிடிக்கும் (சோழமண்டலத்தில்), ஏழு உலகங்களிலுள்ளோரும் மெச்சுகின்ற காவேரி நதியால் செழித்து வளமுறும் சோழ மண்டலத்தில், மனதுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் ராஜகெம்பீரம் என்னும் நாட்டை* ஆளுகின்ற அரசனே, வயலூருக்குத் தலைவா, தன்மீது அன்புவைத்த திருவாரூராரின் (சுந்தரமூர்த்திப் பெருமானது) நட்பை நாடியவராய், அவருடன் முன்பொருநாள், ஆடலில் சிறந்த, விரும்பத்தக்க குதிரை மீது ஏறி கயிலை மாமலைக்குப் போய் (அங்கே) ஆதி உலா எனப்படும் அழகிய (கயிலாய ஞானக்) கலிவெண்பாவை பாடலாகப் பாடிய சேரர் பெருமானாம் சேரமான் பெருமான்** நாயனாருக்கு உரித்தான கொங்கு மண்டலத்து வைகாவூர் என்னும் சிறந்த நாட்டுப் பகுதியில் இருக்கும் திரு ஆவினன்குடி (பழநிமலையின் அடிவாரம்) என்னும் தலத்தில் வாழ்வு கொண்டிருக்கும், தேவர்களின் பெருமாளே. 
* இது 'திருக்கற்குடி' அல்லது 'உய்யக்கொண்டான்' என்று வழங்கப்படும். திருச்சிக்கு அருகில் வயலூருக்குப் போகும் வழியில் உள்ளது.
** கொங்கு நாட்டின் மன்னனாக 1,150 ஆண்டுகளுக்கு முன்பு சேரமான் பெருமான் ஆண்டார். அவர் சைவக்குரவர் நால்வரில் ஒருவரான சுந்தரரின் நண்பர். சிவபிரான் சுந்தரரை கயிலைக்கு அழைத்தபோது, சுந்தரர் தமது நண்பரும் உடன்வர வேண்டுமென விரும்பினார். சேரமான் குதிரையில் ஏறி கயிலைக்கு விரைந்து சென்றார். சுந்தரர் இன்னும் வராததால் கயிலையின் கதவு அடைக்கப்பட்டிருந்தது. அப்போது சேரமான் 'ஆதி உலா' என்ற பாடலைப் பாட, கயிலையின் கதவுகள் திறந்தன. சுந்தரருடன் சேரமான் கயிலைப் பதம் சேர்ந்தார். - பெரிய புராணம்.

பாடல் 171 - பழநி
ராகம் - ....; தாளம் -

தனதனன தந்த தத்த தானன     தனதனன தந்த தத்த தானன          தனதனன தந்த தத்த தானன ...... தனதான

நிகமமெனி லொன்று மற்று நாடொறு     நெருடுகவி கொண்டு வித்தை பேசிய          நிழலர்சிறு புன்சொல் கற்று வீறுள ...... பெயர்கூறா 
நெளியமுது தண்டு சத்ர சாமர     நிபிடமிட வந்து கைக்கு மோதிர          நெடுகியதி குண்ட லப்ர தாபமு ...... முடையோராய் 
முகமுமொரு சம்பு மிக்க நூல்களு     முதுமொழியும் வந்தி ருக்கு மோவெனில்          முடிவிலவை யொன்று மற்று வேறொரு ...... நிறமாகி 
முறியுமவர் தங்கள் வித்தை தானிது     முடியவுனை நின்று பத்தி யால்மிக          மொழியும்வளர் செஞ்சொல் வர்க்க மேவர ...... அருள்வாயே 
திகுதிகென மண்ட விட்ட தீயொரு     செழியனுடல் சென்று பற்றி யாருகர்          திகையினமண் வந்து விட்ட போதினு ...... மமையாது 
சிறியகர பங்க யத்து நீறொரு     தினையளவு சென்று பட்ட போதினில்          தெளியஇனி வென்றி விட்ட மோழைகள் ...... கழுவேற 
மகிதலம ணைந்த அத்த யோனியை     வரைவறம ணந்து நித்த நீடருள்          வகைதனைய கன்றி ருக்கு மூடனை ...... மலரூபம் 
வரவரம னந்தி கைத்த பாவியை     வழியடிமை கொண்டு மிக்க மாதவர்          வளர்பழநி வந்த கொற்ற வேலவ ...... பெருமாளே.

வேதப் பொருள் என்றால் ஒரு சிறிதும் தெரியாமல், தினமும் (அங்குமிங்கும் கற்ற) மொழிகளைத் திரித்து இயற்றிய போலிக் கவிகள் சில அற்பச் சொற்களைக் கற்று, ஆடம்பரமான பட்டப் பெயர்களை வைத்துக்கொண்டு, (தூக்குவோர்களுடைய முதுகு) நெளியத் தக்கக் கனத்த பல்லக்கு, குடை, சாமரம் (இவைகள் பரிசாகப் பெற்று) நெருங்கும்படியாக (உலவிக் கொண்டு) வந்து, கையில் மோதிரமும், (காதில்) நீண்டு தொங்கும் ஒளி மிக்க குண்டலங்களைத் தாங்கிய சிறப்பும் உடையவர்களாய், அவர்களது முகமானது, ஒரு செய்யுளும் வசனமும் கலந்த நூல்களும், திருக்குறள் போன்ற பழைய நூல்களும் விளக்கக் கூடுமோ என்று கேட்டால், அவை ஒன்றும் தெரியாததால் வெட்கத்தால் (முகம்) வெளுத்து, இறுதியில் மனம் குலைந்து போனவர்களுடைய வித்தைதான் இக்கல்வி எல்லாம். (இத்தகைய கல்வி போதும்,) இது முடிவதாக (இனியேனும்) உன்னை மனம் ஒரு வழியில் நின்ற பக்தியுடன் நிரம்பத் துதிப்பதற்கு, மேலும் மேலும் எழுகின்ற செவ்விய சொற்களின் பெருக்கே எனக்கு வரும்படி அருள்வாயாக. திகுதிகு என்று கொழுந்து விட்டு எரியும் நெருப்பு அந்த நெடுஞ்செழியப் பாண்டியனுடைய உடலைச் சென்று (சுரப் பிணியாகப்) பற்றிட, பல திசைகளிலிருந்தும் சமணக் குருக்கள் வந்து முயன்ற போதிலும் சுரம் தணியாமல், (திருஞான சம்பந்தராக வந்த) உனது சிறிய தாமரைக் கரத்தினின்று, திருநீறு ஒரு தினை அளவு (பாண்டியன் மேல்) பட்டவுடனே சுரம் தணிய, பின்பு (வாதப் போரில்) வெற்றியை இழந்த அந்த அறிவிலிகள் கழுவில் ஏற, இச்சாதனைகளுக்காக இந்தப் பூமியில் அவதரித்த குருவே, பெண்களின் சிற்றின்பத்திலேயே கணக்கற்ற முறை ஈடுபட்டு, நாள்தோறும் (உனது) பேரருளின் திறங்களை உணராமல் விலகி நிற்கும் மூடனாகிய என்னை, ஆணவ மலம் நாளுக்கு நாள் மனத்தைக் கலக்கும் பாவியாகிய என்னை, வழி அடிமையாக ஆட்கொண்டு, சிறந்த மகா தவசிகள் வாழும் பழனியில் வந்து அமர்ந்த வெற்றி வேலவப் பெருமாளே. 

பாடல் 172 - பழநி
ராகம் - .....; தாளம் -

தத்தன தத்தன தனத்த தானன     தத்தன தத்தன தனத்த தானன          தத்தன தத்தன தனத்த தானன ...... தனதான

நெற்றிவெ யர்த்துளி துளிக்க வேயிரு     குத்துமு லைக்குட மசைத்து வீதியி          னிற்பவர் மைப்படர் விழிக்க லாபியர் ...... மொழியாலே 
நித்தம யக்கிகள் மணத்த பூமலர்     மெத்தையில் வைத்ததி விதத்தி லேயுட          னெட்டுவ ரத்தொழில் கொடுத்து மேவியு ...... முறவாடி 
உற்றவ கைப்படி பொருட்கள் யாவையு     மெத்தவு நட்பொடு பறித்து நாடொறு          முற்பன வித்தைகள் தொடுக்கு மாதர்க ...... ளுறவாமோ 
உச்சித மெய்ப்புற அனைத்த யாவுடன்     மெய்ப்படு பத்தியி னிணக்க மேபெற          வுட்குளிர் புத்தியை யெனக்கு நீதர ...... வருவாயே 
கற்றத மிழ்ப்புல வனுக்கு மேமகிழ்     வுற்றொரு பொற்கொடி களிக்க வேபொரு          கற்பனை நெற்பல அளித்த காரண ...... னருள்பாலா 
கற்பந கர்க்களி றளித்த மாதணை     பொற்புய மைப்புயல் நிறத்த வானவர்          கட்கிறை யுட்கிட அருட்க்ரு பாகர ...... எனநாளும் 
நற்றவ ரர்ச்சனை யிடத்த யாபர     வஸ்துவெ னப்புவி யிடத்தி லேவளர்          நத்தணி செக்கரன் மகிழ்ச்சி கூர்தரு ...... மருகோனே 
நட்டுவர் மத்தள முழக்க மாமென     மைக்குல மெத்தவு முழக்க மேதரு          நற்பழ நிப்பதி செழிக்க மேவிய ...... பெருமாளே.

நெற்றியில் வியர்வைத் துளிகள் அரும்பவே, இரண்டு குத்து முலைக் குடங்களையும் அசைத்து தெருவில் நிற்பவர்கள். மை தீட்டிய கண்களை உடைய மயில் போன்ற விலைமாதர்கள். இனிய பேச்சினால் நாள் தோறும் மயக்குபவர்கள். நறு மணம் வீசும் அழகிய மலர்கள் விரிக்கப்பட்ட மெத்தையில் சேர்ப்பித்து, பல வகையிலே உடலில் திமிர் ஏறும்படியான தொழில்களைக் காட்டிக் கொடுத்தும், நெருங்கியும் உறவாடி, தமக்கே உள்ள வழக்கமாக பொருள் முழுமையும் மிகுந்த நட்பினைக் காட்டிப் பறித்து தினமும் (பணம் பறிக்க) புதிதாகத் தோன்றும் வித்தைகளை உபயோகப் படுத்தும் விலைமாதர்களின் தொடர்பு நல்லதாகுமோ? மேலான உண்மை உடையதான மெய்யான பக்தியின் சேர்க்கையையே நான் பெறுமாறு, என் உள்ளம் குளிரும் புத்தியை எனக்கு, தாயின் அன்புடன், நீ தர வந்தருள வேண்டும். நன்கு கற்ற தமிழ்ப் புலவனாகிய சுந்தரர் மீது மகிழ்ச்சி பூண்டு ஒரு பொன் கொடி போன்ற அவர் மனைவி (பரவையார்) களிப்புற, தாம் இட்ட கட்டளைப்படி வந்து குவிந்த நெல் மலையை* அளித்த மூலப் பொருளான சிவ பெருமான் அருளிய குழந்தையே, கற்பக மரங்கள் நிறைந்த நகராகிய அமராவதியில் உள்ள (ஐராவதமாகிய) வெள்ளை யானை போற்றி வளர்த்த மாதாகிய தேவயானையைத் தழுவிய அழகிய திருப்புயங்களை உடையவனே, கரிய மேக நிறமுடைய தேவர்கள் தலைவனாகிய இந்திரன் (சூரனைக் கண்டு) பயப்பட்ட போது கருணைக்கு உறைவிடமே என்று நாள் தோறும் நல்ல தவசிகள் அர்ச்சனை செய்ய, கிருபாகர மூர்த்தி என்று, பூமியில் புகழ் வளர்ந்திருக்கின்ற சங்கு ஏந்திய சிவந்த கரங்களை உடைய திருமால் மகிழ்ச்சி மிகக் கொண்டு, போற்ற விளங்கும் மருகோனே, நட்டுவனார் மத்தளத்தின் முழக்கம் தானோ என்று ஐயுறும்படி, கரு மேகக் கூட்டங்கள் மிகவும் இடி ஒலியைப் பெருக்கும் சிறந்த பழனி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* சுந்தரர் பரவையாரோடு திருவாரூரில் வாழ்ந்த காலத்தில் குண்டையூர் கிழவர் என்பவர் சுந்தரருக்கு நெல் தவறாது அளித்து வந்தார். ஒரு பருவத்தில் மழை இல்லாமல் போகவே, நெல் கொடுக்க முடியாமல் கிழவர் வருந்தினார். அவர் வருத்தம் நீங்க சிவ பெருமான் நெல் மலையை அளித்தார்.

பாடல் 173 - பழநி
ராகம் - வஸந்தா; தாளம் - அங்கதாளம் - 6 1/2 தகதிமிதக-3, தகிட-1 1/2, தகதிமி-2

தனனத்தன தான தந்தன தனனத்தன தான தந்தன     தனனத்தன தான தந்தன ...... தனதான

பகர்தற்கரி தான செந்தமி ழிசையிற்சில பாட லன்பொடு     பயிலப்பல காவி யங்களை ......யுணராதே 
பவளத்தினை வீழி யின்கனி யதனைப்பொரு வாய் மடந்தையர்     பசலைத்தன மேபெ றும்படி ...... விரகாலே 
சகரக்கடல் சூழு மம்புவி மிசையிப்படி யேதி ரிந்துழல்     சருகொத்துள மேய யர்ந்துடல் ...... மெலியாமுன் 
தகதித்திமி தாகி ணங்கிண எனவுற்றெழு தோகை யம்பரி     தனிலற்புத மாக வந்தருள் ...... புரிவாயே 
நுகர்வித்தக மாகு மென்றுமை மொழியிற்பொழி பாலை யுண்டிடு     நுவல்மெய்ப்புள பால னென்றிடு ...... மிளையோனே 
நுதிவைத்தக ராம லைந்திடு களிறுக்கரு ளேபு ரிந்திட     நொடியிற்பரி வாக வந்தவன் ...... மருகோனே 
அகரப்பொரு ளாதி யொன்றிடு முதலக்கர மான தின்பொருள்     அரனுக்கினி தாமொ ழிந்திடு ...... குருநாதா 
அமரர்க்கிறை யேவ ணங்கிய பழநித்திரு வாவி னன்குடி     அதனிற்குடி யாயி ருந்தருள் ...... பெருமாளே.

இத்தன்மைத்து என்று சொல்ல அரியதான செந்தமிழ் இசையில் சில பாடல்களை மெய்யன்போடு கற்றுக்கொள்ள பற்பல தமிழ்க் காவியங்களைத் தெரிந்து கொள்ளாமல், பவளத்தையும் வீழிப்பழத்தையும் போன்று சிவந்த வாயை உடைய பெண்களின் (காமநோயால் ஏற்படும்) நிறமாற்றம் உண்டாக்கும் விரக வேதனையால், சகர மைந்தர்களால் தோண்டப்பட்ட கடலால் சூழப்பட்ட அழகிய பூமியிலே இவ்வண்ணமாகவே மோகவசப்பட்டு அலைந்து திரிந்து, சுழற்காற்றில் அகப்பட்ட சருகுபோல் மனம் மிகவும் சோர்ந்து, எனது உடல் மெலிந்து அழிவதற்கு முன்னாலே, 'தகதித்திமி தாகி ணங்கிண' என்ற தாளத்திற்கு ஏற்ப நடனமிட்டு எழுகின்ற தோகையுடைய அழகிய குதிரை போன்ற மயில்மீது அற்புதமாக வந்து திருவருள் புரிவாயாக. இந்த ஞானப்பாலை அருந்து, இதுதான் பேறறிவு தரும் என்று உமாதேவி சொல்லி அருளி சுரந்து ஈந்த ஞானப் பாலினை அருந்திய வேதங்களெல்லாம் போற்றுகின்ற புகழையுடைய திருக்குமாரன்* இவன்தான் என ஏத்தும் இளைய குமாரனே, நுனிப்பல் கூர்மையான முதலை வலியப் போராடிய கஜேந்திரன் என்ற யானைக்குத் திருவருள் செய்து காத்திட ஒரு நொடியில் கருணையோடு வந்த திருமாலின் மருமகனே, அகரம், உகரம், மகரம் ஆகிய எழுத்துக்கள் அடங்கியதும், எல்லா மந்திரங்களுக்கும் முதல் அக்ஷரமாக இருப்பதுமான ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் தத்துவத்தை சிவபெருமானுக்கு இனிமையாக உபதேசித்த குருநாதனே, தேவர்களுக்குத் தலைவனாகிய இந்திரன் வழிபட்டுப் போற்றிய பழநி மலைக்கடியில் உள்ள திருவாவினன்குடித் தலத்தில் நீங்காது வாசம் செய்து அடியார்களுக்கு அருளும் பெருமாளே. 
* உமாதேவியின் ஞானப்பாலாகிய சிவஞானத் திரு அமுதை உண்டதால் முருகனை ஞான பண்டிதன் என்பர்.

பாடல் 174 - பழநி
ராகம் - ஹு஥ஸேனி; தாளம் - அங்கதாளம் - 8 1/2 தகிட-1 1/2, தகதிமி-2 தகிட-1 1/2, தக-1, தகிட-1 1/2, தக-1

தந்த தானனந் தானதன தானதன     தந்த தானனந் தானதன தானதன          தந்த தானனந் தானதன தானதன ...... தனதான

பஞ்ச பாதகன் பாவிமுழு மூடன்வெகு     வஞ்ச லோபியன் சூதுகொலை காரன்மதி          பண்கொ ளாதவன் பாவகட லூடுநுழை ...... பவுஷாசை 
பங்கன் மோதியம் பாழ்நரகில் வீணின்விழ     பெண்டிர் வீடுபொன் தேடிநொடி மீதில்மறை          பஞ்ச மாமலம் பாசமொடு கூடிவெகு ...... சதிகாரர் 
அஞ்சு பூதமுண் டாகடிய காரரிவர்     தங்கள் வாணிபங் காரியம லாமலரு          ளன்பர் பாலுடன் கூடியறி யாதபுக ...... ழடியேனை 
அண்டர் மாலயன் தேடியறி யாதவொளி     சந்த்ர சேகரன் பாவைவிளை யாடுபடி          கந்த நாடுடன் கூடிவிளை யாடஅருள் ...... புரிவாயே 
வஞ்ச மாசுரன் சேனைகட லோடுகுவ     டுங்க வேயினன் போலவொளிர் வேலைவிடு          வண்கை யாகடம் பேடுதொடை யாடுமுடி ...... முருகோனே 
மங்கை மோகசிங் காரரகு ராமரிட     தங்கை சூலியங் காளியெமை யீணபுகழ்          மங்க ளாயிசந் தானசிவ காமியுமை ...... யருள்பாலா 
கொஞ்சு மாசுகம் போலமொழி நீலகடை     பெண்கள் நாயகந் தோகைமயில் போலிரச          கொங்கை மால்குறம் பாவையவல் தீரவர ...... அணைவோனே 
கொண்டல் சூழுமஞ் சோலைமலர் வாவிகயல்     கந்து பாயநின் றாடுதுவர் பாகையுதிர்          கந்தி யோடகஞ் சேர்பழநி வாழ்குமர ...... பெருமாளே.

ஐந்து பாதகங்களும்* செய்தவன், பாவம் செய்தவன், முற்றிய மூடன், மிக்க வஞ்சகத்தோடு கூடிய பேராசைக்காரன், சூது, கொலை இவை செய்யும் பேர்வழி, அறிவில் நல்ல பண்பே இல்லாதவன், பாவக்கடலில் நுழைகின்ற செருக்கு, ஆசை என்ற குற்றம் உடையவன் ஆகிய நான், தாக்குண்டு அந்தப் பாழ் நரகத்தில் வீணாக விழும்படியாக பெண்கள், வீடு, பொன் என்னும் மூவாசை கொண்டு தேடி அலைந்தும், ஒரு நொடியில், மறைந்து கிடக்கும் ஐவகை மலங்களுடனும்* பாசங்களுடனும் சேர்ந்து, மிக்க மோசக்காரராம் ஐந்து பூதங்களாகிய அந்தத் தீயவர் இவர்களின் வியாபார காரியங்களில் கலவாமல், அருள் பெற்ற அன்பர்களிடத்தே கூடியறியாத புகழையே கொண்டுள்ள நான், தேவர்களும், திருமாலும், பிரமனும் தேடியும் காணாத ஜோதியாம், சந்திரசேகரனாம் சிவபிரானும், பாவையாம் தேவி பார்வதியும் கூடி விளையாடுகின்ற ஸ்படிகம் போன்று தூய அழகுடன் உள்ள நாடாகிய சிவலோகத்தில் உள்ளவர்களோடு கூடி விளையாட அருள் புரிவாயாக. வஞ்சம் நிறைந்த கொடும் சூரனும், அவனது படையும், கடலும், கிரெளஞ்சமலையும் ஒடுங்கும்படியாக, சூரியனைப் போல ஒளிவீசும் வேலாயுதத்தைச் செலுத்திய, வழங்கும் தன்மையுடைய கையனே, கடப்பமலர் மாலை விளங்கும் திருமுடியை உடைய முருகனே, மங்கை, வசீகரமும் அழகும் கொண்ட ரகுராமனின் (திருமாலின்) தங்கை, சூலமேந்தியவள், அழகிய காளி, யாம் அனைவரையும் ஈன்ற புகழ் நிறைந்த மங்களகரமான தாய், சந்தான விருட்சம் போல் வேண்டிய வரங்களைத் தரும் சிவகாமி, அந்த உமாதேவி அருளிய பாலனே, கொஞ்சும் அழகிய கிளி போன்ற பேச்சும், கரிய கடைக் கண்களும், பெண்களுக்குள் தலைமையும், கலாப மயில் போன்ற சாயலும், இன்பம் தரும் மார்பகமும், பெருமையும் உடைய குறப் பெண் வள்ளியின் ஆவல் தீர வந்து அவளை அரவணைத்துக் கொண்டவனே, மேகங்கள் சூழ்ந்த அழகிய சோலைகளும், மலர்கள் நிறைந்த குளங்களும், கயல் மீன்கள் வேகமாகப் பாய்வதால் ஆட்டப்படும் துவர்த்த பாக்குக்கிளைகளில் இருந்து உதிர்கின்ற கமுகமரங்களும் தன்னகத்தே கொண்டுள்ள பழநி மலையில் வாழ்கின்ற குமரப் பெருமாளே.
* ஐவகை பாதகங்கள்: கொலை, களவு, சூது, கள்ளுண்ணல், குரு நிந்தை ஆகியவை.
** ஐவகை மலங்கள்: ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதனம் என்பவையாம்.

பாடல் 175 - பழநி
ராகம் - பாகேஸ்ரீ; தாளம் - அங்கதாளம் - 7 1/2 தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1, தகிட-1 1/2, தகதிமி-2

தான தானதனத் தந்த தானன     தான தானதனத் தந்த தானன          தான தானதனத் தந்த தானன ...... தனதான

பாரி யானகொடைக் கொண்ட லேதிரு     வாழ்வி சாலதொடைத் திண்பு யாஎழு          பாரு மேறுபுகழ்க் கொண்ட நாயக ...... அபிராம 
பாவ லோர்கள்கிளைக் கென்றும் வாழ்வருள்     சீல ஞாலவிளக் கின்ப சீவக          பாக சாதனவுத் துங்க மானத ...... எனவோதிச் 
சீர தாகஎடுத் தொன்று மாகவி     பாடி னாலுமிரக் கஞ்செ யாதுரை          சீறு வார்கடையிற் சென்று தாமயர் ...... வுறவீணே 
சேய பாவகையைக் கொண்டு போயறி     யாம லேகமரிற் சிந்து வார்சிலர்          சேய னார்மனதிற் சிந்தி யாரரு ...... குறலாமோ 
ஆரு நீர்மைமடுக் கண்க ராநெடு     வாயி னேர்படவுற் றன்று மூலமெ          னார வாரமதத் தந்தி தானுய ...... அருள்மாயன் 
ஆதி நாராணனற் சங்க பாணிய     னோது வார்களுளத் தன்பன் மாதவ          னான நான்முகனற் றந்தை சீதரன் ...... மருகோனே 
வீர சேவகவுத் தண்ட தேவகு     மார ஆறிருபொற் செங்கை நாயக          வீசு தோகைமயிற் றுங்க வாகன ...... முடையோனே 
வீறு காவிரியுட் கொண்ட சேகர     னான சேவகனற் சிந்தை மேவிய          வீரை வாழ்பழநித் துங்க வானவர் ...... பெருமாளே.

பாரியைப் போன்ற கொடை மேகமே, லக்ஷ்மி வாசம்செய்யும் பெரிய மாலையை அணிந்த திண்ணிய தோளனே, ஏழு உலகிலும் மிக்க புகழ் கொண்ட நாயகனே, அழகனே, புலவர்கள் கூட்டத்திற்கு எப்போதும் வாழ்வை அருளும் நல்லொழுக்கம் வாய்ந்த விளக்கே, இன்பம் தரும் ஜீவகனே, இந்திரன் போன்று உயர்ந்த அரசனே - என்றெல்லாம் கூறி, சீராக எடுத்தமைந்த ஒரு சிறப்பான பாடலைப் பாடினாலும் இரக்கம் காட்டாது வார்த்தைகளைச் சீறிப் பேசுவோரது கடைவாயிலிற் சென்று தாம் சோர்வு அடையும்படி வீணாக, செம்மை வாய்ந்த பாமாலை வகைகளைக் கொண்டு போய் அறியாமலே சாக்கடையில் கொட்டுவது போலக் கொட்டிச் சிந்துவார்கள் சிலர். இரப்பவர்க்குத் தூரத்தில் நிற்பவர்கள், மனதில் சிறிதும் இரக்கத்தைச் சிந்தியாதவர்கள் ஆகியோரின் அருகே நிற்கலாமோ? நிறைந்த நீருள்ளதான கரிய சுனையின் மத்தியில் முதலையின் பெரும் வாயில் நேராக அகப்பட்டு, அன்று ஆதிமூலமே என்று பேரொலி செய்த மதயானையாகிய கஜேந்திரன் பிழைக்கும்வண்ணம் அருளிய மாயவன், ஆதிப் பரம்பொருளான நாராயணன், பாஞ்சஜன்யம் என்ற சங்கைக் கரத்தில் ஏந்தியவன், அவனைத் துதிப்போர்களின் உள்ளத்தில் இருக்கும் அன்பன், மகா தவனாகிய பிரமாவுக்கு நல்ல தந்தை, லக்ஷ்மியை மார்பில் தரித்த திருமாலின் மருமகனே, வீரமும், பராக்கிரமும், உக்கிரமும் உள்ள தெய்வக் குழந்தையே, பன்னிரு அழகிய செங்கை நாயகனே, வீசும் கலாப மயிலாம் பெருமை வாய்ந்த வாகனத்தை உடையவனே, விளங்கும் காவிரியைத் தன்னிடத்தே கொண்ட கலிசையூர்த் தலைவனான* பராக்ரமனின் நல்ல மனத்தில் வீற்றிருக்கும் தலைவா, வீரை நகரிலும் பழநியிலும் வீற்றிருக்கும் பெருமாளே, தூய்மையான தேவர்களின் பெருமாளே. 
* கலிசையூர்ச் சேவகன் பராக்ரமன் அருணகிரிநாதரின் நண்பன். அவனது ஊரான வீரை திருப்பெருந்துறைக்கு மேற்கே 10 மைலில் உள்ளது. பழநிமலை நாதரே வீரையிலும் இருப்பதாக ஐதீகம்.

by Swathi   on 28 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.