LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- அருணகிரிநாதர் நூல்கள்

திருப்புகழ்-பாடல்-[201 -225]

பாடல் 201 - சுவாமி மலை
ராகம் - ஜோன்புரி; தாளம் - அங்கதாளம் - 18 
தகிடதக-2 1/2, தகிடதக-2 1/2, தகிடதக-2 1/2 
தகிடதக-2 1/2, தகதிமி-2, தகதிமி-2, தக-1 
தகதிமிதக-3
தனாதன தனாதன தனாதன தனாதன
     தனாதனன தானந் ...... தனதானா
அவாமரு வினாவசு தைகாணும டவாரெனு
     மவார்கனலில் வாழ்வென் ...... றுணராதே 
அராநுக ரவாதையு றுதேரைக திநாடும
     றிவாகியுள மால்கொண் ...... டதனாலே 
சிவாயவெ னுநாமமொ ருகாலுநி னையாததி
     மிராகரனை வாவென் ...... றருள்வாயே 
திரோதம லமாறும டியார்கள ருமாதவர்
     தியானமுறு பாதந் ...... தருவாயே 
உவாவினி யகானுவி னிலாவும யில்வாகன
     முலாசமுட னேறுங் ...... கழலோனே 
உலாவுத யபாநுச தகோடியு ருவானவொ
     ளிவாகுமயில் வேலங் ...... கையிலோனே 
துவாதச புயாசல ஷடாநந வராசிவ
     சுதாஎயினர் மானன் ...... புடையோனே 
சுராதிப திமாலய னுமாலொடு சலாமிடு
     சுவாமிமலை வாழும் ...... பெருமாளே.
ஆசை ஏற்படுத்துகின்ற துன்பம் விளைவதற்கு மண்ணாசையும், விரும்பிப் பார்க்கின்ற இளம் மாதர்கள் என்ற பெண்ணாசையும் காரணமாம். அவர்களுடன் வாழ்க்கை நெருப்பின் மேல் வாழ்வு என்றுணராமல் பாம்பின் வாயில் அகப்பட்டு துன்பமுறு தவளையின் கதி அடைந்த அந்நிலையிலும் இன்பத்தை நாடும் அறிவுடையவனாகி உள்ளத்தில் மயக்கம் கொண்டு அதன் காரணமாக சிவாய என்ற திருமந்திரத்தை ஒருபோதும் நினைக்காத அஞ்ஞான இருளுக்கு இருப்பிடமாக உள்ள அடியேனை, உன் திருவடியில் சேர்ந்து இன்புற வருக என்றழைத்து அருள்வாயாக. உன்னை மறத்தல் என்ற குற்றம் இல்லாத மெய்யடியார்களாலும், அரிய பெரிய தவ முனிவர்களாலும் தியானம் செய்யப்படும் உன் திருவடிகளைத் தந்தருள்வாயாக. இளமைமிகுந்து, இனிய கானகத்தில் ஒளிவீசித் திரியும் மயிலை வாகனமாகக் கொண்டு, அதன்மீது குதூகலத்துடன் ஏறும் வீரக் கழலோனே, வானில் உலாவும் உதய சூரியர்கள் நூறு கோடி கூடினாற்போல ஒளிபடைத்த அழகிய கூர் வேல் திருக்கரத்துள்ளோனே, பன்னிரண்டு மலைபோன்ற புயங்களை உடையவனே, ஆறுமுகக் கடவுளே, சிறந்தவனே, சிவனின் சேயே, வேடர் குலத்து மான் போன்ற வள்ளியிடம் அன்புடையவனே, தேவேந்திரனும், திருமாலும், பிரம்மனும் அன்போடு வணக்கம் செய்கின்ற சுவாமிமலையில் வாழ்கின்ற பெருமாளே. 
* 'சலாம்' என்ற முகம்மதியர்களின் உருதுச் சொல்லை இங்கு சுவாமிகள் பயன்படுத்துகிறார்.
பாடல் 202 - சுவாமி மலை
ராகம் - ....; தாளம் -
தானதன தந்த தானன தானதன தந்த தானன
     தானதன தந்த தானன ...... தனதான
ஆனனமு கந்து தோளொடு தோளிணைக லந்து பாலன
     ஆரமுது கண்டு தேனென ...... இதழூறல் 
ஆதரவி னுண்டு வேல்விழி பூசலிட நன்று காணென
     ஆனையுர மெங்கு மோதிட ...... அபிராம 
மானனைய மங்கை மார்மடு நாபியில்வி ழுந்து கீடமில்
     மாயுமனு வின்ப வாசைய ...... தறவேயுன் 
வாரிஜப தங்கள் நாயடி யேன்முடிபு னைந்து போதக
     வாசகம்வ ழங்கி யாள்வது ...... மொருநாளே 
ஈனவதி பஞ்ச பாதக தானவர்ப்ர சண்ட சேனைகள்
     ஈடழிய வென்று வானவர் ...... குலசேனை 
ஏவல்கொளு மிந்த்ர லோகவ சீகரவ லங்க்ரு தாகர
     ராசதம றிந்த கோமள ...... வடிவோனே 
சோனைசொரி குன்ற வேடுவர் பேதைபயில் கின்ற ஆறிரு
     தோளுடைய கந்த னேவய ...... லியில்வாழ்வே 
சூளிகையு யர்ந்த கோபுர மாளிகைபொ னிஞ்சி சூழ்தரு
     ஸ்வாமிமலை நின்று லாவிய ...... பெருமாளே.
(விலைமாதர்களின்) முகத்தைக் கண்டு மகிழ்ந்து, தோளொடு தோள் சேரக் கலந்து, பால் போன்றதும், நிறை அமுதம், கல்கண்டு, தேன் என்னும்படியானதுமான வாய் இதழ் ஊறலை அன்புடன் அருந்தி, வேல் போன்ற கூரிய கண்கள் போர் புரிய, நன்றாகப் பார் என்னும்படியாக யானையைப் போன்ற மார்பகங்கள் நெஞ்சில் எங்கும் மோத, அழகிய மான் அனைய மாதர்களின் மடுப்போன்ற தொப்பூளில் விழுந்து புழு வண்டு போல இறந்துபடும் இம்மனித இன்ப ஆசையானது அற்று ஒழிய, உனது தாமரை போன்ற அடிகளை அடி நாயேனாகிய என் தலையில் சூட்டி, ஞானோபதேசம் செய்து ஆண்டருளும் ஒரு நாளும் உண்டோ? இழிவான மிக்க ஐந்து* மகா பாவங்களையும் செய்த அசுரர்களின் கொடிய சேனைகள் வலிமை அழிய வெற்றி கொண்டு, தேவர்களுடைய சிறந்த சேனையை ஆட்கொண்டு, இந்திர லோகத்தாரின் மனதைக் கவர்ந்த வசீகர சக்தி வாய்ந்தவனே, அழகு அலங்காரத்துக்கு இருப்பிடமானவனே, ராசத குணங்களின் தன்மையை உணர்ந்த அழகிய வடிவுள்ளவனே, விடாமழை பொழிகின்ற (வள்ளி) மலையில் வேடர் மகளாகிய வள்ளி அணைந்து விளையாடும் பன்னிரண்டு தோள்கள் உடைய கந்தப் பெருமானே, வயலூரில் வாழ்பவனே, நிலா முற்றங்களும், உயர்ந்த கோபுரங்களும், அழகிய மதில்களும் சூழ்ந்து விளங்கும் சுவாமி மலையில் எழுந்தருளி உலவும் பெருமாளே. 
* ஐவகை பாதகங்கள்: கொலை, களவு, சூது, கள்ளுண்ணல், குரு நிந்தை ஆகியவை.
பாடல் 202 - சுவாமி மலை
ராகம் - நாட்டகுறிஞ்சி ; தாளம் - அங்கதாளம் - 8 1/2 
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தக, தகிட-1 1/2, தகதிமி-2
தானான தனதனத் தான தனதன
     தானான தனதனத் தான தனதன
          தானான தனதனத் தான தனதன ...... தந்ததான
ஆனாத பிருதிவிப் பாச நிகளமும்
     மாமாய விருளுமற் றேகி பவமென
          வாகாச பரமசிற் சோதி பரையைய ...... டைந்துளாமே 
ஆறாறி னதிகமக் க்ராய மநுதினம்
     யோகீச ரெவருமெட் டாத பரதுரி
          யாதீத மகளமெப் போது முதயம ...... நந்தமோகம் 
வானாதி சகலவிஸ்த் தார விபவரம்
     லோகாதி முடிவுமெய்ப் போத மலரயன்
          மாலீச ரெனுமவற் கேது விபுலம ...... சங்கையால்நீள் 
மாளாத தனிசமுற் றாய தரியநி
     ராதார முலைவில்சற் சோதி நிருபமு
          மாறாத சுகவெளத் தாணு வுடனினி ...... தென்றுசேர்வேன் 
நானாவி தகருவிச் சேனை வகைவகை
     சூழ்போது பிரபலச் சூரர் கொடுநெடு
          நாவாய்செல் கடலடைத் தேறி நிலைமையி ...... லங்கைசாய 
நாலாறு மணிமுடிப் பாவி தனையடு
     சீராமன் மருகமைக் காவில் பரிமள
          நாவீசு வயலியக் கீசர் குமரக ...... டம்பவேலா 
கானாளு மெயினர்தற் சாதி வளர்குற
     மானொடு மகிழ்கருத் தாகி மருடரு
          காதாடு முனதுகட் பாண மெனதுடை ...... நெஞ்சுபாய்தல் 
காணாது மமதைவிட் டாவி யுயவருள்
     பாராயெ னுரைவெகுப் ப்¡£தி யிளையவ
          காவேரி வடகரைச் சாமி மலையுறை ...... தம்பிரானே.
நீங்குதற்கு அரிய மண்ணாசை என்ற விலங்கும், பெரும் மயக்கத்தைத் தரும் ஆணவம் என்ற இருளும் ஒழிந்து, ஒன்றுபட்ட தன்மை என்று கூறும்படியாக, வானம் போல் பரந்த பெரிய ஞான ஜோதியான பராசக்தியை அடைந்து நினைப்பு எதுவும் இன்றி, முப்பத்தாறு மேலான தத்துவங்களுக்கு* அப்பால் முதன்மையானதாய், என்றும் யோகீசர் எவர்க்கும் எட்டாததான பெரிய துரிய** நிலைக்கும் மேம்பட்டதாய், உருவம் இல்லாததாய், எப்போதும் தோன்றி நிற்பதாய், அளவற்ற வசீகரம் வாய்ந்ததாய், வான் முதலிய எல்லாமாய் விரிவான உயிர்ப்பொருளாய், உலகத்தின் முதலாகவும் முடிவாகவும் விளங்குவதாய், உண்மை அறிவாய், தாமரையான் பிரமன், திருமால், சிவபிரான் என்ற மும்மூர்த்திகளுக்கும் மூலகாரணமாக விளங்கும் பெருமை வாய்ந்ததாய், சந்தேகம் இன்றி நீடூழிகாலம் இறப்பின்றி தானே மெய்த்தன்மைத்தாக இருப்பதாய், அரியதாய், மற்ற ஒன்றையும் சாராததாய், அழிவின்றி சத்திய ஜோதியாகத் துலங்குவதாய், உருவம் ஏதும் இல்லாததாய், மாறுதல் இல்லாது விளங்கும் இன்ப வெள்ளமான சிவத்துடன் யான் இனிமையாக என்றைக்கு இணைவேன்? பல்விதமான ஆயுதங்கள் (கத்தி, வில், வாள் முதலியவை) தாங்கிய சேனைகள் விதவிதமாக சூழ்ந்து வர, பிரசித்தி பெற்ற வீரர்களுடன், பெரும் கப்பல்கள் செல்லும் சமுத்திரத்தை அணைகட்டிக் கடந்து, அக்கரை சென்று, நிலைத்திருந்த இலங்கையை வீழ்த்தி, பத்து மணிமுடிகளைத் தரித்த பாவியாகிய ராவணனை வதைத்த ஸ்ரீராமனின் மருகனே, இருண்ட சோலைகளில் நறுமணம் நன்றாக வீசும் வயலூரில் வீற்றுள்ள அக்னீஸ்வரருடைய*** குமாரனே, கடப்பமலர் அணிந்தவனே, வேலாயுதனே, காட்டை ஆளும் வேட்டுவர் குலத்திலே வளர்ந்த குறமானாகிய வள்ளியோடு மகிழ்வதற்கு எண்ணம் கொண்டு, மருட்சியைத் தருகின்றதும், காதுவரை நீண்டதுமான உனது கண்களிலிருந்து வரும் பாணமானது என்னுடைய நெஞ்சினில் பாய்வதை நீகாணாமல் இருக்கின்றாய், உன் செருக்கை விடுத்து என்னுயிர் உய்ய அருள்வாயாக என்றெல்லாம் வள்ளியிடம் உரைத்து மிக்க அன்புடன் சேர்ந்த இளையவனே, காவேரியின் வடகரையினுள்ள சுவாமிமலைத் தலத்தில் எழுந்தருளிய தனிப் பெரும் தலைவனே. 
* 96 தத்துவங்கள் பின்வருமாறு:36 பரதத்துவங்கள் (அகநிலை): ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து - 25 (புறநிலை): மண், தீ, நீர், காற்று, வெளி.ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை): வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4. 
** துரியம் என்பது ஜாக்கிரம், சுழுத்தி, சொப்பனம் ஆகிய மூன்று நிலைகட்கும் அப்பால் உள்ள நிலை.
*** வயலூரில் உள்ள சிவமூர்த்திக்குப் பெயர் அக்னீஸ்வரர்.
பாடல் 204 - சுவாமி மலை
ராகம் - ....; தாளம் -
தனாதனன தானம் தனாதனன தானம்
     தனாதனன தானம் ...... தனதான
இராவினிருள் போலும் பராவுகுழ லாலும்
     இராமசர மாகும் ...... விழியாலும் 
இராகமொழி யாலும் பொறாதமுலை யாலும்
     இராதஇடை யாலும் ...... இளைஞோர்நெஞ் 
சராவியிரு போதும் பராவிவிழ வேவந்
     தடாதவிலை கூறும் ...... மடவாரன் 
படாமலடி யேனுஞ் சுவாமியடி தேடும்
     அநாதிமொழி ஞானந் ...... தருவாயே 
குராவினிழல் மேவுங் குமாரனென நாளுங்
     குலாவியினி தோதன் ...... பினர்வாழ்வே 
குணாலமிடு சூரன் பணாமுடிக டோறுங்
     குடாவியிட வேலங் ...... கெறிவோனே 
துராலுமிகு தீமுன் பிராதவகை போலுந்
     தொடாமல்வினை யோடும் ...... படிநூறுஞ் 
சுபானமுறு ஞானந் தபோதனர்கள் சேருஞ்
     சுவாமிமலை வாழும் ...... பெருமாளே.
இரவின் இருட்டைப் போல் பரவி கருத்த கூந்தலினாலும், ராமனுடைய அம்பைப் போன்ற கூர்மையான கண்களாலும், இசை நிரம்பிய வார்த்தைகளாலும், பாரமான மார்பகங்களாலும், இடுப்பு இருக்கிறதோ இல்லையோ என்னும்படியான மெல்லிய இடையாலும், இளம் ஆண்களின் இதயத்தை ரம்பம் போல் அறுத்து, காலையும் மாலையும் அவர்கள் தங்களைத் துதிசெய்து வீழ்த்துமாறு வந்து, தகாதபடி அதிகமாக விலையைக் கூறி பேரம்செய்யும் விலைமகளிரின் ஆசையின் பிடியில் அகப்படாமல், அடியேனும் கடவுளாகிய உனது திருவடிகளைத் தேடும் ஆதியே இல்லாத ஞானமொழியை நீ எனக்குத் தந்தருள்வாயாக. (திருவிடைக்கழியிலுள்ள) குராமரத்தின் நிழலின்கீழ் அமர்ந்துள்ள குமாரக்கடவுளே என்று தினந்தோறும் அன்புற்று அன்போடு துதிக்கும் அடியார்களின் நிதியே, வீராவேசக் கூக்குரலிடும் சூரனின் பருத்த முடிகள் யாவும் குடைந்தெடுத்து வளைத்த வேலை அவ்விடத்தில் செலுத்தியவனே, காய்ந்த செத்தையும் மிகுத்து எரியும் நெருப்பின் முன்பு ஒன்றுமே இல்லாது வெந்து போகும் வகைபோல, தம்மை அணுகாது விலகிப்போகும்படி வினைகளைப் பொடிபடச் செய்யும் நல்வழிகளையே உட்கொள்ளும் ஞானத் தவசீலர்கள் சேர்ந்துள்ள சுவாமிமலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 205 - சுவாமி மலை
ராகம் - அடாணா; தாளம் - அங்கதாளம் - 5 1/2 
தகதிமி-2, தகதிமி-2, தகிட-1 1/2
தனதன தனந்த தான தனதன தனந்த தான
     தனதன தனந்த தான ...... தனதான
இருவினை புனைந்து ஞான விழிமுனை திறந்து நோயி
     னிருவினை யிடைந்து போக ...... மலமூட 
விருளற விளங்கி யாறு முகமொடு கலந்து பேத
     மிலையென இரண்டு பேரு ...... மழகான 
பரிமள சுகந்த வீத மயமென மகிழ்ந்து தேவர்
     பணியவிண் மடந்தை பாத ...... மலர்தூவப் 
பரிவுகொ டநந்த கோடி முநிவர்கள் புகழ்ந்து பாட
     பருமயி லுடன்கு லாவி ...... வரவேணும் 
அரியய னறிந்தி டாத அடியிணை சிவந்த பாதம்
     அடியென விளங்கி யாடு ...... நடராஜன் 
அழலுறு மிரும்பின் மேனி மகிழ்மர கதம்பெ ணாகம்
     அயலணி சிவன்பு ராரி ...... யருள்சேயே 
மருவலர் கள்திண்ப ணார முடியுடல் நடுங்க ஆவி
     மறலியுண வென்ற வேலை ...... யுடையோனே 
வளைகுல மலங்கு காவி ரியின்வட புறஞ்சு வாமி
     மலைமிசை விளங்கு தேவர் ...... பெருமாளே.
அடியேன் அரும் பெரும் செயலாகிய சிவ யோகத்தை மேற்கொண்டு, அறிவுக் கண்ணாகும் நெற்றியிலுள்ள சுழிமுனை திறக்கப் பெற்று, பிறவிப் பிணிக்குக் காரணமான நல்வினை, தீவினை இரண்டும் பிரிந்து ஓடிப்போகவும், ஆணவ மலமாகிய இருள் தேய்ந்து அதனால் மெய்ஞ்ஞான ஒளி வீசவும், உன் ஆறு திருமுகங்களின் அருட்பெருக்கில் கலப்புற்று, பரமாத்மாவாகிய நீயும் ஜீவாத்மாவாகிய நானும் இரண்டறக் கலந்து ஒன்றாகி, அழகிய வாசமிக்க மலரும் அதன் நறுமணமும் போல ஒன்றி பேரின்பமுற்று, தேவர்கள் வணங்கவும், தேவலோக மங்கையர் திருவடிகளில் மலர் தூவவும், மிக்க அன்போடு எண்ணிலாத பல்கோடி முநிவர்கள் புகழ்ந்து பாடவும், பெரிய மயில் வாகனத்தில் ஏறி உல்லாசமுடன் நீ வரவேண்டும். நாராயணனும் பிரமனும் தேடித் தேடிக் காண முடியாத திருவடிகளாம் செந்நிறம் பொருந்திய பாதங்களே உலகங்களுக்கு முதன்மையானவை என்று அருட்பெரும் ஜோதியாக ஆனந்தத் தாண்டவம் புரியும் நடராஜப் பெருமானும், நெருப்பில் இட்டு மிக ஒளிரும் இரும்பைப் போன்ற செம்மேனியைக் கண்டு மகிழ்ச்சி அடையும் மரகதமேனிப் பார்வதியை அருகில் அமர்த்திய சிவனுமாகிய திரிபுராந்தகன் பெற்றருளிய திருப் புதல்வனே, பகைவராகிய அசுரர்களின் வலிமையான, அலங்கார ஆரமணிந்த தலைகள், உடல்கள் அச்சத்தில் நடுங்க, அவர்களது உயிரை யமன் உண்ண, வெற்றி பெற்ற வேலை உடையவனே, சங்குக் கூட்டங்கள் ஒளி வீசும் காவிரி நதியின் வடபுறத்தில் சுவாமிமலை என்ற திருவேரகத்தில் விளங்கும், தேவர்களுக்கெல்லாம் பெருமாளே. 
பாடல் 205 - சுவாமி மலை
ராகம் - அடாணா; தாளம் - அங்கதாளம் - 5 1/2 
தகதிமி-2, தகதிமி-2, தகிட-1 1/2
தந்தத் தனதன தனதன தனதன
     தந்தத் தனதன தனதன தனதன
          தந்தத் தனதன தனதன தனதன ...... தனதான
எந்தத் திகையினு மலையினு முவரியி
     னெந்தப் படியினு முகடினு முளபல
          எந்தச் சடலமு முயிரியை பிறவியி ...... னுழலாதே 
இந்தச் சடமுட னுயிர்நிலை பெறநளி
     னம்பொற் கழலிணை களில்மரு மலர்கொடு
          என்சித் தமுமன முருகிநல் சுருதியின் ...... முறையோடே 
சந்தித் தரஹர சிவசிவ சரணென
     கும்பிட் டிணையடி யவையென தலைமிசை
          தங்கப் புளகித மெழஇரு விழிபுனல் ...... குதிபாயச் 
சம்பைக் கொடியிடை விபுதையி னழகுமு
     னந்தத் திருநட மிடுசர ணழகுற
          சந்தச் சபைதனி லெனதுள முருகவும் ...... வருவாயே 
தொந்தத் திகுகுட தகுகுட டிமிடிமி
     தந்தத் தனதன டுடுடுடு டமடம
          துங்கத் திசைமலை யுவரியு மறுகச ...... லரிபேரி 
துன்றச் சிலைமணி கலகல கலினென
     சிந்தச் சுரர்மல ரயன்மறை புகழ்தர
          துன்புற் றவுணர்கள் நமனுல குறவிடு ...... மயில்வேலா 
கந்தச் சடைமுடி கனல்வடி வடலணி
     யெந்தைக் குயிரெனு மலைமகள் மரகத
          கந்தப் பரிமள தனகிரி யுமையரு ...... ளிளையோனே 
கஞ்சப் பதமிவர் திருமகள் குலமகள்
     அம்பொற் கொடியிடை புணரரி மருகநல்
          கந்தப் பொழில்திகழ் குருமலை மருவிய ...... பெருமாளே.
எந்தத் திசையிலும், மலையிலும், கடலின் கரையில் உள்ள எந்தப் பூமியிலும், வீட்டுக் கூரையிலும், வசிக்கும் பலவகையான எந்த உயிரோடு சார்ந்த பிறப்புக்களிலும் நான் மீண்டும் உழன்று திரியாமல், இந்த உடலில் இருக்கும்பொழுதே என் உயிர் நிலைபெறுவதற்காக, தாமரை போன்ற அழகிய உனது திருவடிகளில் மணமுள்ள மலர் கொண்டு, என் சித்தமும், மனமும் உருகி சிறந்த வேதங்களில் சொல்லப்பட்ட முறைப்படி உன்னைச் சந்தித்து, ஹரஹர, சிவசிவ, சரணம் என்று நான் கும்பிட்டு, உன் இணை அடிகள் என் தலைமிசை பொருந்த, என் உடல் புளகாங்கிதம் அடைய, என் இரு கண்களிலும் ஆனந்தக் கண்ணீர் அருவி போல் குதித்துப் பாய, மின்னற் கொடி போன்ற இடையுடைய தேவதையாம் தேவயானையின் அழகு முன்னே விளங்க, திரு நடனம் இடும் உன் திருவடிகள் அழகுடன் பொலிய, இந்த அழகான சபையில் எனது உள்ளம் உருகுமாறு வந்தருள்வாயாக. தொந்தத் திகுகுட தகுகுட டிமிடிமி தந்தத் தனதன டுடுடுடு டமடம என்ற தாளத்துக்கு உயர்ந்த திசைகளும், மலைகளும், கடல்களும் கலங்கும்படியாக சல்லரியும் (ஜாலரா), பேரி என்ற கொட்டும் நெருங்கி ஒலிக்க, முழங்கும் மணி கலகல கலினென சப்திக்க, தேவர்கள் மலர் மாரி பொழிய, பிரமன் வேதம் ஓதிப் புகழ, அசுரர்கள் துன்பம் அடைந்து யமன் உலகை அடையுமாறு செலுத்திய கூரிய வேலாயுதனே, வாசமிக்க ஜடாமுடியையும், நெருப்புப் போன்ற நிறமுள்ள உருவத்தையும், வெற்றியையும் கொண்ட எம் தந்தையாம் சிவபிரானுக்கு உயிர் போன்ற மலைமகள், மரகதப் பச்சை வடிவழகி, சந்தன மணம் வீசு மார்பினை உடையவளாகிய உமாதேவி அருளிய இளையவனே, தாமரை மலர்ப் பீடத்தில் ஏறி அமர்ந்துள்ள திருமகள், குலமகள், அழகிய பொற்கொடி போன்ற இடையை உடைய லக்ஷ்மி தேவியை மணந்துள்ள திருமாலின் மருகனே, நறுமணம் வீசும் சோலைகள் விளங்கும் குருமலை என்ற சுவாமிமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
பாடல் 207 - சுவாமி மலை
ராகம் - சக்ரவாஹம்; தாளம் - அங்கதாளம் - 8 1/2 
தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகதிமி-2
தனதனன தனதனன தான தந்தனம்
     தனதனன தனதனன தான தந்தனம்
          தனதனன தனதனன தான தந்தனம் ...... தனதான
ஒருவரையு மொருவரறி யாம லுந்திரிந்
     திருவினையி னிடர்கலியொ டாடி நொந்துநொந்
          துலையிலிடு மெழுகதென வாடி முன்செய்வஞ் ...... சனையாலே 
ஒளிபெறவெ யெழுபுமர பாவை துன்றிடுங்
     கயிறுவித மெனமருவி யாடி விண்பறிந்
          தொளிருமின லுருவதென வோடி யங்கம்வெந் ...... திடுவேனைக் 
கருதியொரு பரமபொரு ளீது என்றுஎன்
     செவியிணையி னருளியுரு வாகி வந்தஎன்
          கருவினையொ டருமலமு நீறு கண்டுதண் ...... டருமாமென் 
கருணைபொழி கமலமுக மாறு மிந்துளந்
     தொடைமகுட முடியுமொளிர் நூபு ரஞ்சரண்
          கலகலென மயிலின்மிசை யேறி வந்துகந் ...... தெனையாள்வாய் 
திரிபுரமு மதனுடலு நீறு கண்டவன்
     தருணமழ விடையனட ராஜ னெங்கணுந்
          திகழருண கிரிசொருப னாதி யந்தமங் ...... கறியாத 
சிவயநம நமசிவய கார ணன்சுரந்
     தமுதமதை யருளியெமை யாளு மெந்தைதன்
          திருவுருவின் மகிழெனது தாய்ப யந்திடும் ...... புதல்வோனே 
குருகுகொடி யுடன்மயிலி லேறி மந்தரம்
     புவனகிரி சுழலமறை யாயி ரங்களுங்
          குமரகுரு வெனவலிய சேட னஞ்சவந் ...... திடுவோனே 
குறமகளி னிடைதுவள பாத செஞ்சிலம்
     பொலியவொரு சசிமகளொ டேக லந்துதிண்
          குருமலையின் மருவுகுரு நாத வும்பர்தம் ...... பெருமாளே.
ஒருவர் போவது ஒருவருக்குத் தெரியாதவண்ணம் (பொது மகளிர் வீட்டைத் தேடித்) திரிந்து, நல்வினை தீவினை என்னும் இரு வினை காரணமாய்த் துன்பமும் கலக்கமும் அடைந்து, மனம் வேதனைப்பட்டு, தீ அடுப்பில் இட்ட மெழுகுபோல வாட்டமுற்று, முற்பிறப்பில் செய்த வஞ்சனைகளின் பயனாக, பெருமையுடன் விளங்கி எழுந்து (பொம்மலாட்டத்தில்) மரப் பாவையைக் கட்டியிருக்கும் கயிற்றின் இழுப்பிற்குத் தக்க பல ஆட்டங்களை ஆடி, வானத்தில் வெளிப்பட்டு ஒளி வீசும் மின்னலின் உருவுபோல வெட்டென ஓடி உடல் வெந்து போய் மறைகின்ற என்னையும், அடியாருள் ஒருவனாக எண்ணி, ஒப்பற்ற பரம் பொருள் இதுதான் என்று என்னுடைய இரண்டு காதுகளிலும் உபதேசித்து அருள் செய்து, இம்மனித உருவில் கொண்டுவந்துள்ள என் பிறப்பு வினையையும் அரிதான மும்மலங்களையும் பொடியாக்கி, குளிர்ச்சியைத் தருவதும், பெருமையும் மென்மையும் கொண்டு கருணையைப் பொழிகின்றதுமான தாமரை மலர் போன்ற ஆறு முகங்களும், கடப்ப மாலையும், இரத்தின மணி மகுடங்களும், ஒளி பொருந்திய பாதங்களில் அணிந்துள்ள சிலம்புகள் கலகல என்று ஒலிக்க, மயிலின் மேல் ஏறி வந்து, மகிழ்வுடன் என்னை ஆண்டருள்க. முப்புரங்களையும், மன்மதனுடைய உடலையும் எரித்துச் சாம்பலாக்கியவரும், மிகவும் இளமை வாய்ந்த ரிஷபத்தை வாகனமாகக் கொண்டவரும், (சிதம்பரத்தில் பொற்சபையில்) ஆனந்தத் தாண்டவம் புரிந்த நடராஜரும், அங்கிங்கு எனாதபடி எங்கும் விளங்கி, ஒளி வீசும் சிவந்த மலை உருவம் கொண்டவரும், முதலும் முடிவும் அந்த அருண கிரியில் மாலும் பிரமனும் அறிய முடியாத சிவாயநம என்னும் ஐந்தெழுத்தின் மூல காரணப் பொருளானவரும், (அந்த மந்திரத்தைச் சொன்னால்) ஊறும் ஞான அமுதத்தைத் தந்தருளி நம்மை ஆண்டவருமான எந்தை சிவபெருமானது திரு உருவின் இடது பாகத்தில் இருந்து மகிழும் என் தாயாகிய உமா தேவி அருளிய மகனே, சேவற் கொடியுடன் மயிலின் மீது ஏறி, மந்தர மலை முதலாக உலகின் எல்லா மலைகளும் சுழலவும், எண்ணிலா வேதங்களும் குமர குரு என்று ஒலிக்கவும், வலிமை பொருந்திய ஆதி சேஷன் பயப்படும்படியாகவும் வலம் வருபவனே, வள்ளிநாயகியின் இடை துவளவும், பாதங்களில் அணிந்த செம்மை வாய்ந்த சிலம்புகள் சப்தம் செய்ய, ஒப்பற்ற இந்திராணியின் மகளான தேவயானையோடு கலந்து, வலிமையுள்ள சுவாமிமலையில் வீற்றிருக்கும் குருநாதனே, தேவர்களின் பெருமாளே. 
பாடல் 208 - சுவாமி மலை
ராகம் - மோஹனம்; தாளம் - திஸ்ர்ருபகம் - 5
தனாதனன தானம் தனாதனன தானம்
     தனாதனன தானம் ...... தனதான
கடாவினிடை வீரங் கெடாமலினி தேறுங்
     கடாவினிக ராகுஞ் ...... சமனாருங் 
கடாவிவிடு தூதன் கெடாதவழி போலுங்
     கனாவில்விளை யாடுங் ...... கதைபோலும் 
இடாதுபல தேடுங் கிராதர்பொருள் போலிங்
     கிராமலுயிர் கோலிங் ...... கிதமாகும் 
இதாமெனிரு போதுஞ் சதாவின்மொழி யாலின்
     றியானுமுனை யோதும் ...... படிபாராய் 
விடாதுநட நாளும் பிடாரியுட னாடும்
     வியாகரண ஈசன் ...... பெருவாழ்வே 
விகாரமுறு சூரன் பகாரமுயிர் வாழ்வும்
     விநாசமுற வேலங் ...... கெறிவோனே 
தொடாதுநெடு தூரந் தடாதுமிக வோடுஞ்
     சுவாசமது தானைம் ...... புலனோடுஞ் 
சுபானமுறு ஞானந் தபோதனர்கள் சேருஞ்
     சுவாமிமலை வாழும் ...... பெருமாளே.
எருமைக்கடா வாகனத்தின் மேல் தனது வீரம் குன்றாமல் விரும்பி ஏறும், கடாவைப் போன்ற முரட்டு யமனும் கட்டளை இட்டு ஏவிவிட்ட யமதூதன் தவறாமல் சரியான வழியில் வந்து உயிரைப் பற்றுதல் போலும், கனவில் தோன்றிய விளையாட்டு விழித்தால் மறப்பது போலும், கொடுக்காமல் பலப்பல தேடும் கொடியவர் பொருள் போலும், இவ்வுலகில் நிலைத்து நிற்காதவண்ணம் உயிர் பறி போகிற சுகம்தான் இந்த வாழ்க்கையென்று உணர்ந்து, காலையும் மாலையும் மற்றும் எப்போதும் நல்வார்த்தைகளால் இன்று அடியேனும் உன்னைத் துதிக்க கண்பார்த்தருள்வாய். எந்நாளும் விடாமல் நடனத்தை காளியுடன் ஆடுகின்ற நாட்டிய இலக்கண நிபுணனாம் சிவபெருமான் பெற்ற பெரும் செல்வமே, மாறுபட்ட குணமுடைய சூரனின் பகட்டான வாழ்வும் உயிரும் அழியும்படியாக அவ்விடத்தில் வேலாயுதத்தை விடுத்தவனே, தொட முடியாத காற்றாகவும், நெடுந்தூரம் தடைபடாமல் விடாமல் ஓடுகின்றதுமான பிராணவாயுவையும், ஐந்து புலன்களையும் நன்றாக யோகமுறையால் உள்ளே அடக்கவல்ல ஞானத் தவசிகள் கூடுகின்ற சுவாமிமலையில் எழுந்தருளியுள்ள பெருமாளே. 
பாடல் 209 - சுவாமி மலை
ராகம் - கமாஸ், தாளம் - அங்கதாளம் - 5 1/2 
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தனனா தனத்த தந்த தனனா தனத்த தந்த
     தனனா தனத்த தந்த ...... தனதான
கடிமா மலர்க்கு ளின்ப முளவேரி கக்கு நண்பு
     தருமா கடப்ப மைந்த ...... தொடைமாலை 
கனமேரு வொத்தி டும்ப னிருமாபு யத்த ணிந்த
     கருணா கரப்ர சண்ட ...... கதிர்வேலா 
வடிவார் குறத்தி தன்பொ னடிமீது நித்த முந்தண்
     முடியான துற்று கந்து ...... பணிவோனே 
வளவாய்மை சொற்ப்ர பந்த முளகீர னுக்கு கந்து
     மலர்வாயி லக்க ணங்க ...... ளியல்போதி 
அடிமோனை சொற்கி ணங்க வுலகாமு வப்ப என்று
     னருளால ளிக்கு கந்த ...... பெரியோனே 
அடியேனு ரைத்த புன்சொ லதுமீது நித்த முந்த
     ணருளே தழைத்து கந்து ...... வரவேணும் 
செடிநேரு டற்கு டம்பை தனின்மேவி யுற்றி டிந்த
     படிதான லக்க ணிங்க ...... ணுறலாமோ 
திறமாத வர்க்க னிந்து னிருபாத பத்ம முய்ந்த
     திருவேர கத்த மர்ந்த ...... பெருமாளே.
வாசனை மிகுந்த மலருள் மிக இனிப்பான தேனைச் சொட்டுவதும், அன்பைப் பொழிவதுமான சிறப்பான கடப்ப மலரால் நெருக்கமாகத் தொடுக்கப்பட்ட பூமாலையை, பெருமைவாய்ந்த மேரு மலையைப் போன்ற பன்னிரு சிறந்த புயங்களின் மீது அணிந்துள்ள கருணாகரனே, கடுமையும் ஒளியும் கொண்ட வேலை உடையவனே, அழகு நிறைந்த குறத்தியாம் வள்ளியின் திருவடி மீது தினந்தோறும் உனது குளிர்ந்த முடியானது பொருந்தும்படியாகப் படிந்து மகிழ்பவனே, வளப்பமும் மெய்ம்மையும் வாய்ந்த தேர்ச்சியான சொற்களை வைத்து நூல்கள் இயற்றவல்ல நக்கீரனுக்கு விருப்பமுடன் உன் மலர் வாயால் இலக்கண நயங்களை எடுத்துரைத்து, அடி, மோனை சொல்லுக்குப் பொருந்த உலகம் உவப்ப* என்ற அடி எடுத்துக் கொடுத்து, உன் அருள் வாக்கால் மகிழ்ந்து கூறிய பெரியவனே, யான் சொல்லுகின்ற இந்தப் புல்லிய சொற்கள் மீதும் தினமும் குளிர்ந்த உன் திருவருளைப் பாலித்து நீ மகிழ்ச்சியுடன் வரவேண்டும். பாவம் நிறைந்த இந்த உடல் என்னும் கூட்டிலே பொருந்தி இருக்கும் இந்த வகையிலே துன்பங்களை யான் இவ்வுலகில் அனுபவித்தல் தகுமோ? திறம் வாய்ந்த மகா தவசிகள் மனம் கனிந்து உன்னிரு பாத கமலங்களால் ஈடேறப்பெற்ற திருவேரகமாம் சுவாமிமலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* நக்கீரருக்கு திருமுருகாற்றுப்படை நூலை இயற்றுமுன்பு, முருகன் 'உலகம் உவப்ப' என்ற முதலடியை எடுத்துக் கொடுத்தான். இங்கு சந்தத்துக்காக 'உலகாம்' என்ற வார்த்தையை உபயோகித்துள்ளார்.
பாடல் 210 - சுவாமி மலை
ராகம் - ....; தாளம் -
தனதனன தந்த தான தனதனன தந்த தான
     தனதனன தந்த தான ...... தனதான
கதிரவனெ ழுந்து லாவு திசையளவு கண்டு மோது
     கடலளவு கண்டு மாய ...... மருளாலே 
கணபணபு யங்க ராஜன் முடியளவு கண்டு தாள்கள்
     கவினறந டந்து தேயும் ...... வகையேபோய் 
இதமிதமி தென்று நாளு மருகருகி ருந்து கூடு
     மிடமிடமி தென்று சோர்வு ...... படையாதே 
இசையொடுபு கழந்த போது நழுவியப்ர சண்டர் வாச
     லிரவுபகல் சென்று வாடி ...... யுழல்வேனோ 
மதுகரமி டைந்து வேரி தருநறவ முண்டு பூக
     மலர்வளநி றைந்த பாளை ...... மலரூடே 
வகைவகையெ ழுந்த சாம வதிமறைவி யந்து பாட
     மதிநிழலி டுஞ்சு வாமி ...... மலைவாழ்வே 
அதிரவரு சண்ட வாயு வெனவருக ருங்க லாப
     அணிமயில்வி ரும்பி யேறு ...... மிளையோனே 
அடைவொடுல கங்கள் யாவு முதவிநிலை கண்ட பாவை
     அருள்புதல்வ அண்ட ராஜர் ...... பெருமாளே.
சூரியன் உதித்துச் செல்லும் எல்லை அளவைச் சென்று கண்டும், மோதும் அலைகளை உடைய கடலின் எல்லை அளவைப் போய்க் கண்டும், உலக மாயை என்னும் மயக்கத்தால், கூட்டமான படங்களை உடைய பாம்பு அரசனாகிய ஆதி சேஷனின் எல்லை அளவைப் போய்க் கண்டும், கால்கள் எங்கெங்கும் அலைந்து என் அழகு குலைய நடந்து தேயுமாறு அங்கங்கே சென்று, இது நல்ல இடம் என்று எண்ணி லோபிகளுடைய சமீபத்தில் அணுகிச் சேர்ந்து, இதுதான் சரியான இடம் என்று எண்ணி மனத் தளர்ச்சி கொள்ளாமல், இசைப் பாட்டுக்களாலும் உரையாலும் புகழ்ந்து நின்ற போது, அந்த இடத்தை விட்டு வெளியே நழுவும் பெரிய பிரமுகர்களின் வீட்டு வாசலில் இரவும் பகலும் சென்று நான் வாடித் திரியலாமோ? வண்டுகள் நிறைந்து வாசனை வீசும் தேனை உண்டு, கமுக மரத்தில் பூவின் வளப்பம் உள்ள பாளை மலர்களின் இடையே இனம் இனமாக எழுந்து சாமம் என்னும் சிறந்த வேதத்தை வியக்கத்தக்க முறையில் பாட, சந்திரனின் தண்மையைத் தரும் சுவாமிமலையாகிய திருவேரகத்தில் வாழும் செல்வமே, உலகம் எல்லாம் திர்ச்சி கொள்ள வீசுகின்ற பெருங்காற்று என்று சொல்லும்படியாக வருகின்ற, நீல நிறங்கொண்ட தோகையை உடைய, அழகான மயிலில் விரும்பி ஏறும் இளையவனே, முறையாக எல்லா உலகங்களையும் படைத்து, அவற்றை நிலைத்திருக்கச் செய்த பார்வதி தேவி அருளிய மகனே, தேவர்களின் பெருமாளே. 
பாடல் 211 - சுவாமி மலை
ராகம் - யமுனா கல்யாணி; தாளம் - அங்கதாளம் 
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகதிமி-2
தனதனன தந்த தானனத்
     தனதனன தந்த தானனத்
          தனதனன தந்த தானனத் தனதான
கறைபடுமு டம்பி ராதெனக்
     கருதுதலொ ழிந்து வாயுவைக்
          கருமவச னங்க ளால்மறித் ...... தனலூதிக் 
கவலைபடு கின்ற யோககற்
     பனைமருவு சிந்தை போய்விடக்
          கலகமிடு மஞ்சும் வேரறச் ...... செயல்மாளக் 
குறைவறநி றைந்த மோனநிர்க்
     குணமதுபொ ருந்தி வீடுறக்
          குருமலைவி ளங்கு ஞானசற் ...... குருநாதா 
குமரசர ணென்று கூதளப்
     புதுமலர்சொ ரிந்து கோமளப்
          பதயுகள புண்ட ¡£கமுற் ...... றுணர்வேனோ 
சிறைதளைவி ளங்கு பேர்முடிப்
     புயலுடன டங்க வேபிழைத்
          திமையவர்கள் தங்க ளூர்புகச் ...... சமராடித் 
திமிரமிகு சிந்து வாய்விடச்
     சிகரிகளும் வெந்து நீறெழத்
          திகிரிகொள நந்த சூடிகைத் ...... திருமாலும் 
பிறைமவுலி மைந்த கோவெனப்
     பிரமனைமு னிந்து காவலிட்
          டொருநொடியில் மண்டு சூரனைப் ...... பொருதேறிப் 
பெருகுமத கும்ப லாளிதக்
     கரியெனப்ர சண்ட வாரணப்
          பிடிதனைம ணந்த சேவகப் ...... பெருமாளே.
குற்றங்களுக்கு இடமான உடல் நிலைத்து நிற்காது என்று எண்ணுதலை விட்டு, (அவ்வுடல் நிலைத்து நிற்கச் செய்ய விரும்பி) உள் இழுக்கும் வாயுவை தொழில்* மந்திரங்களால் தடுத்து நிறுத்தி, மூலாக்கினியை எழுப்பி, கவலைக்கு இடம் தருகின்ற யோக மார்க்கப் பயிற்சிகளைப் பற்றி எண்ணும் சிந்தனைகள் தொலையவும், கலக்கத்தைத் தரும் ஐம்புலன்களும் ஒடுங்கி வேரற்றுப் போகவும், என் செயல்கள் எல்லாம் அழியவும், குறைவின்றி நிறைந்ததான மவுன நிலையை, குணங்கள் அற்ற நிலையை, நான் அடைந்து வீட்டின்பத்தைப் பெறவும், (அதற்காக) சுவாமி மலையில் விளங்கி வீற்றிருக்கும் ஞான சற் குரு நாதனே, குமரனே, சரணம் என்று கூதளச் செடியின் புது மலரைச் சொரிந்து, (உனது) அழகிய இரண்டு திருவடித் தாமரைகளைச் சிந்தித்து உன்னை உணர்வேனோ? சிறையும் விலங்குமாய்க் கிடந்து விளங்கியவர்களான தேவர்கள் இந்திரன் முதலான யாவரும் ஒருங்கே பிழைக்கவும், தேவர்கள் தங்கள் ஊராகிய (அமராவதி என்ற) பொன்னுலகில் குடி போகவும், போரைப் புரிந்து, இருள் மிகுந்த கடல் ஓலமிட, மலைகள் வெந்து பொடியாக, (சுதர்ஸன) சக்கரத்தை ஏந்தியவரும் பொன்முடியைத் தரித்தவரும் ஆகிய திருமாலும், பிறைச் சந்திரனை முடியில் சூடிய சிவபெருமானின் மைந்தனே, (சூரனை அழித்தருளுக என்று) இரங்கி வேண்ட, பிரமனைக் கோபித்துச் சிறையிட்டு, ஒரு நொடிப் பொழுதில் நெருங்கி எதிர்த்த சூரனுடன் சண்டை செய்து வென்று, பெருகி வருகின்ற மத நீருள்ள மத்தகத்தையும், அழகையும் கொண்ட யானை எனப்படும் வீரம் கொண்ட (ஐராவதம் என்னும்) வெள்ளை யானையால் வளர்க்கப்பட்ட தேவயானையை மணம் புரிந்த வலிமை வாய்ந்த பெருமாளே. 
* தொழில் மந்திரங்கள் ஆகர்ஷண, ஸ்தம்பநாதி மந்திரங்கள் ஆகும். இவற்றை கர்மயோகிகள் மேற்கொள்வர்.
பாடல் 212 - சுவாமி மலை
ராகம் - பீம்பளாஸ்; தாளம் - ஆதி
தானனத் தனந்த ...... தனதான
     தானனத் தனந்த ...... தனதான
காமியத் தழுந்தி ...... யிளையாதே
     காலர்கைப் படிந்து ...... மடியாதே 
ஓமெழுத்தி லன்பு ...... மிகவூறி
     ஓவியத்தி லந்த ...... மருள்வாயே 
தூமமேய்க் கணிந்த ...... சுகலீலா
     சூரனைக் கடிந்த ...... கதிர்வேலா 
ஏமவெற் புயர்ந்த ...... மயில்வீரா
     ஏரகத் தமர்ந்த ...... பெருமாளே.
ஆசைப்படும் பொருள்களில் அழுந்தி ஈடுபட்டு மெலிந்து போகாமல், யம தூதர்களின் கைகளிற் சிக்கி இறந்து போகாமல், ஓம் என்னும் பிரணவப் பொருளில் ஈடுபாடு மிகவும் ஏற்பட்டு, யான் சித்திரம் போன்ற மோன நிலை முடிவை (அடைய) அருள்வாயாக. வாசனைப் புகையை மேனியில் அணிந்துள்ள சுகமான லீலைகளைப் புரியும் பெருமானே, சூர சம்ஹாரம் செய்த ஒளி வேலனே, பொன்மலையைப் போலச் சிறந்த மயிலில் ஏறும் வீரனே, திருவேரகம் என்ற சுவாமிமலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 213 - சுவாமி மலை
ராகம் - ....; தாளம் -
தனதனன தனதனன தனனா தனத்ததன
     தனதனன தனதனன தனனா தனத்ததன
          தனதனன தனதனன தனனா தனத்ததன ...... தனதான
குமரகுரு பரமுருக குகனே குறச்சிறுமி
     கணவசர வணநிருதர் கலகா பிறைச்சடையர்
          குருவெனந லுரையுதவு மயிலா எனத்தினமு ...... முருகாதே 
குயில்மொழிநன் மடவியர்கள் விழியா லுருக்குபவர்
     தெருவிலந வரதமன மெனவே நடப்பர்நகை
          கொளுமவர்க ளுடைமைமன முடனே பறிப்பவர்க ...... ளனைவோரும் 
தமதுவச முறவசிய முகமே மினுக்கியர்கள்
     முலையிலுறு துகில்சரிய நடுவீ திநிற்பவர்கள்
          தனமிலியர் மனமுறிய நழுவா வுழப்பியர்கண் ...... வலையாலே 
சதிசெய்தவ ரவர்மகிழ அணைமீ துருக்கியர்கள்
     வசமொழுகி யவரடிமை யெனமா தரிட்டதொழில்
          தனிலுழலு மசடனையு னடியே வழுத்தஅருள் ...... தருவாயே 
சமரமொடு மசுரர்படை களமீ தெதிர்த்தபொழு
     தொருநொடியி லவர்கள்படை கெடவே லெடுத்தவனி
          தனில்நிருதர் சிரமுருள ரணதூள் படுத்திவிடு ...... செருமீதே 
தவனமொடு மலகைநட மிடவீ ரபத்திரர்க
     ளதிரநிண மொடுகுருதி குடிகா ளிகொக்கரிசெய்
          தசையுணவு தனின்மகிழ விடுபேய் நிரைத்திரள்கள் ...... பலகோடி 
திமிதமிட நரிகொடிகள் கழுகா டரத்தவெறி
     வயிரவர்கள் சுழலவொரு தனியா யுதத்தைவிடு
          திமிரதிந கரஅமரர் பதிவாழ் வுபெற்றுலவு ...... முருகோனே 
திருமருவு புயனயனொ டயிரா வதக்குரிசி
     லடிபரவு பழநிமலை கதிர்கா மமுற்றுவளர்
          சிவசமய அறுமுகவ திருவே ரகத்திலுறை ...... பெருமாளே.
குமரனே, குருவான மேலோனே, முருகனே, குகனே, குறப் பெண்ணாகிய வள்ளியின் கணவனே, சரவணனே, அசுரர்களைக் கலக்கியவனே, பிறைச் சந்திரனை அணிந்த சிவபெருமானுடைய குருவாக அமைந்து சிறந்த உபதேச மொழியைப் போதித்த மயில் வாகனனே, எனக் கூறி நாள் தோறும் நான் மனம் உருகாமல் குயிலைப் போன்ற பேச்சுக்களை உடைய அழகிய விலை மகளிர், கண் பார்வையால் மனதை உருக்குபவர்கள், தெருவில் எப்போதும் அன்னம் போல நடப்பவர்கள், (தம்மைப்) பார்த்து மகிழ்பவர்களுடைய பொருளையும் மனதையும் உடனே அபகரிப்பவர்கள், யாவரும் தமது வசத்தில் அகப்படும்படி வசீகரித்து முகத்தை மினுக்குபவர்கள், (வேண்டுமென்றே) மார்பகங்கள் மீதுள்ள துணியைச் சரிய விட்டு நடுத் தெருவில் நிற்பவர்கள், பொருள் இல்லாது தம்மிடம் வருபவர்களுடைய மனம் புண்படுமாறு நழுவியும் மழுப்பியும் செல்பவர்கள், கண் வலையால் (அவர்களுக்கு) வஞ்சனை செய்தும், அவரவர் கொடுத்த பொருளுக்குத் தக்கபடி மகிழ்ச்சியுற படுக்கையில் உருக்குபவர்கள், ஆகிய விலைமாதர்களின் வசத்தே ஒழுகி, அவர்களின் அடிமையைப் போல அந்த மாதர்கள் இட்ட தொழிலில் திரிந்து உழலும் முட்டாளாகிய என்னை உனது திருவடியைப் போற்றும்படியான திருவருளைத் தந்து அருளுக. போர் செய்யக் கருதி அசுரர்களின் சேனை போர்க்களத்தில் எதிர்த்து வந்து போது, ஒரு நொடிப் பொழுதில் அவர்களுடைய சேனை அழிய வேலாயுதத்தைச் செலுத்தி, பூமியில் அசுரர்களுடைய தலைகள் உருண்டு விழும்படி தூள்படுத்திவிட்ட போர்க்களத்தில் தாகத்துடன் பேய்கள் கூத்தாடவும், வீரபத்திரர்கள் (சிவ கணங்கள்) ஆரவாரம் செய்யவும், கொழுப்புடன் இரத்தத்தைக் குடிக்கின்ற காளி கொக்கரிக்கவும், சதைகளாகிய உணவில் மகிழ்ச்சி கொள்ளும்படி பேயின் வரிசைக் கூட்டங்கள் பல கோடிக்கணக்கில் பேரொலி எழுப்பவும், நரிகள், காகங்கள், கழுகுகள் இவை கூத்தாடவும், ரத்த வெறி கொண்ட பயிரவர்கள் சுழன்று திரியவும், ஒப்பற்ற வேலாயுதத்தை விட்ட, அஞ்ஞான இருளைப் போக்கும் சூரியனே, தேவர்கள் அரசனான இந்திரன் பொன்னுலகைப் பெற்று உலவ உதவிய முருகோனே. லக்ஷ்மி மருவுகின்ற தோள்களை உடைய திருமாலும், பிரமனும், ஐராவதத்தின் மீது ஏறும் இந்திரனும் வந்து வணங்குகின்ற பழனி மலையிலும், கதிர்காமத்திலும் மேவி விளங்கும் சைவ சமயத்தவனே, ஆறுமுகனே, சுவாமி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 214 - சுவாமி மலை
ராகம் - பிலஹரி; தாளம் - மிஸ்ரசாபு 
தகிட-1 1/2, தகதிமி-2
தனன தனதன தனன தனதன
     தனன தனதன ...... தனதான
குமர குருபர முருக சரவண
     குகசண் முககரி ...... பிறகான 
குழக சிவசுத சிவய நமவென
     குரவ னருள்குரு ...... மணியேயென் 
றமுத இமையவர் திமிர்த மிடுகட
     லதென அநுதின ...... முனையோதும் 
அமலை அடியவர் கொடிய வினைகொடு
     மபய மிடுகுர ...... லறியாயோ 
திமிர எழுகட லுலக முறிபட
     திசைகள் பொடிபட ...... வருசூரர் 
சிகர முடியுடல் புவியில் விழவுயிர்
     திறைகொ டமர்பொரு ...... மயில்வீரா 
நமனை யுயிர்கொளு மழலி னிணைகழல்
     நதிகொள் சடையினர் ...... குருநாதா 
நளின குருமலை மருவி யமர்தரு
     நவிலு மறைபுகழ் ...... பெருமாளே.
குமரா, குருபரா, முருகா, சரவணா, குகா, சண்முகா, யானைமுகக் கணபதிக்குப் பின்பிறந்த இளையோய், சிவ குமாரனே, சிவாயநம என்னும் பஞ்சாட்சரத்துக்குக் குருவான சிவன் அருளிய குருமணியே என்றெல்லாம், அமிர்தத்தை தேவர்கள் கடைந்திட்ட கடல் ஓசைபோல், நாள்தோறும் உன்னை வாயாரப் பாடி ஆரவாரத்துடன் துதிக்கும் அடியார்கள் தமது கொடிய வினைகள் நீங்குவதற்காக அபயம் என்று ஓலமிடும் குரலொலி உனக்குக் கேட்கவில்லையோ? இருண்ட ஏழு கடல்களும் உலகங்களும் அழிய, எட்டுத்திசைகளும் பொடிபட, போருக்கு வந்த சூரர்களின் குடுமியும் உடலும் விழ, அவர்களின் உயிரைக் கவர்ந்து போரிட்ட வேல் வீரா, யமனின் உயிரை எடுத்த நெருப்பை ஒத்த அடியும்*, கங்கைநதியைத் தாங்கிய சடையும் உடைய சிவனின் குருநாதா, தாமரை நிறைந்த சுவாமிமலையில் பொருந்தி அமர்ந்தோனே, ஓதும் வேதங்கள் புகழும் பெருமாளே. 
* மார்க்கண்டேயனுக்காக யமனது உயிரை சிவபெருமான் காலால் உதைத்து எடுத்த காலபைரவ மூர்த்திக் கோலத்தை திருக்கடையூரில் காணலாம்.
பாடல் 215 - சுவாமி மலை
ராகம் - ....; தாளம் -
தானன தத்தன தத்தன தத்தன
     தானன தத்தன தத்தன தத்தன
          தானன தத்தன தத்தன தத்தன ...... தனதான
கோமள வெற்பினை யொத்தத னத்தியர்
     காமனை யொப்பவர் சித்தமு ருக்கிகள்
          கோவையி தழ்க்கனி நித்தமும் விற்பவர் ...... மயில்காடை 
கோகில நற்புற வத்தொடு குக்குட
     ஆரணி யப்புள்வ கைக்குரல் கற்றிகல்
          கோலவி ழிக்கடை யிட்டும ருட்டிகள் ...... விரகாலே 
தூமம லர்ப்பளி மெத்தைப டுப்பவர்
     யாரையு மெத்திம னைக்குள ழைப்பவர்
          சோலைவ னக்கிளி யொத்தமொ ழிச்சியர் ...... நெறிகூடா 
தூசுநெ கிழ்த்தரை சுற்றியு டுப்பவர்
     காசுப றிக்கம றித்துமு யக்கிகள்
          தோதக வித்தைப டித்துந டிப்பவ ...... ருறவாமோ 
மாமர மொத்துவ ரிக்குணெ ருக்கிய
     சூரனை வெட்டிநி ணக்குட லைக்கொடி
          வாரண மெச்சஅ ளித்தஅ யிற்குக ...... கதிர்காம 
மாமலை யிற்பழ நிப்பதி யிற்றனி
     மாகிரி யிற்றணி கைக்கிரி யிற்பர
          மாகிரி யிற்றிரை சுற்றிவ ளைத்திடும் ...... அலைவாயில் 
ஏமவெ யிற்பல வெற்பினி னற்பதி
     னாலுல கத்தினி லுற்றுறு பத்தர்கள்
          ஏதுநி னைத்தது மெத்தஅ ளித்தரு ...... ளிளையோனே 
ஏரக வெற்பெனு மற்புத மிக்கசு
     வாமிம லைப்பதி மெச்சிய சித்தஇ
          ராஜத லக்ஷண லக்ஷ¥மி பெற்றருள் ...... பெருமாளே.
அழகிய மலை போன்ற மார்பகங்களை உடையவர். காம இச்சை எழுப்புவதில் மன்மதனைப் போன்றவர். மனத்தை உருக்குபவர்கள். கொவ்வைப் பழம் போன்ற வாயிதழை தினந்தோறும் விற்பவர்கள். மயில், காடை என்னும் பறவை, குயில், அழகிய புறாவுடன், கோழி, காட்டுப் பறவைகளின் வகை வகையான குரல்களைக் கற்று அவ்வொலிகளை* வெளிப்படுத்தி, பகைமையைக் காட்டும் அழகிய விழி அம்பைச் செலுத்தி உள்ளத்தை மயக்குபவர்கள். தந்திரத்துடன் நறும் அகில் மணம் கொண்ட மலர்ப் படுக்கையில் மெத்தையில் படுப்பவர்கள். எவரையும் ஏமாற்றி வீட்டுக்குள் அழைப்பவர்கள். சோலையிலுள்ள அழகிய கிளி போன்ற பேச்சினை உடையவர்கள். நன்னெறி பொருந்தாத வகையில் (தமது) ஆடையைத் தளர்த்தி பிறகு இடுப்பில் சுற்றியும் உடுப்பவர். தம்மிடம் வருவோர் பொருளை அபகரிக்க (பல விதத்தில்) இடையிலே விழுந்து சேர்பவர்கள். வஞ்சக வித்தைகளைக் கற்று நடிப்பவர்களாகிய விலைமாதர்களின் உறவு நல்லதாகுமோ? மாமர வடிவைக் கொண்டு கடலுக்குள் நெருக்கி நின்ற சூரனை வெட்டி அழித்து அவனுடைய மாமிசக் குடலை தனது கொடியிலுள்ள அக்கினி** மகிழும்படி கொடுத்த வேலை ஏந்திய குகனே, கதிர்காமம் என்ற சிறந்த மலையிலும், பழனியிலும், தனிச்சயம் என்னும் தலத்திலும், திருத்தணி மலையிலும், திருப்பரங் குன்றம் என்னும் சிறந்த மலையிலும், அலைகள் சூழ்ந்து வளைந்துள்ள அலைவாய் என்கின்ற திருச் செந்தூரிலும், இன்பம் தரும் ஒளி வீசும் பல வேறு மலைகளிலும், நல்ல பதிநான்கு உலகங்களிலும் பொருந்தி இருக்கின்ற பக்தர்கள் எது நினைத்தாலும் அவற்றை நிரம்பக் கொடுத்து அருளும் இளையவனே, திருவேரகம் என்று சொல்லப்படும் அற்புதம் நிறைந்த சுவாமி மலை என்னும் ஊரில் விரும்பி இருக்கின்ற சித்த மூர்த்தியே, ராஜத குணம் நிறைந்தவளாகிய பார்வதி ஈன்றருளின பெருமாளே. 
* புட் குரல்கள் = காமக் கன்னியர் கண்டத்தில் உண்டாகும் எண் வகை ஒலிகள்.மயில், புறா, அன்னம், காடை, நாரை, குயில், கோழி, வண்டு என்பன.
** அக்கினி பகவான் முருகவேளின் தேர்க் கொடியாக அமைந்தான். ஆதலின், சூரன் ஒழிந்தான் என்று அவன் மெச்ச, சூரனின் நிணக் குடல் நெருப்புக்கு இரையாயிற்று எனப் பொருள்படும். சூரன் இறந்த பின்தான் அவனது உடல் மயிலாகவும், சேவலாகவும் பிரிந்து முருகன்வசம் அடைக்கலம் ஆனது. பின்பு முருகனது கொடியில் அக்கினிக்குப் பதிலாக சேவல் வீற்றிருந்தது.
பாடல் 216 - சுவாமி மலை
ராகம் - கல்யாணி; தாளம் - அங்கதாளம் - 5 1/2 
- எடுப்பு 1/2 தள்ளி 
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தனதனன தான தத்த தனதனன தான தத்த
     தனதனன தான தத்த ...... தனதான
சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில்
     தவமுறைதி யானம் வைக்க ...... அறியாத 
சடகசட மூட மட்டி பவவினையி லேச னித்த
     தமியன்மிடி யால்ம யக்க ...... முறுவேனோ 
கருணைபுரி யாதி ருப்ப தெனகுறையி வேளை செப்பு
     கயிலைமலை நாதர் பெற்ற ...... குமரோனே 
கடகபுய மீதி ரத்ந மணியணிபொன் மாலே செச்சை
     கமழுமண மார்க டப்ப ...... மணிவோனே 
தருணமிதை யாமி குத்த கனமதுறு நீள்ச வுக்ய
     சகலசெல்வ யோக மிக்க ...... பெருவாழ்வு 
தகைமைசிவ ஞான முத்தி பரகதியு நீகொ டுத்து
     தவிபுரிய வேணு நெய்த்த ...... வடிவேலா 
அருணதள பாத பத்ம மதுநிதமு மேது திக்க
     அரியதமிழ் தான ளித்த ...... மயில்வீரா 
அதிசயம நேக முற்ற பழநிமலை மீது தித்த
     அழகதிரு வேர கத்தின் ...... முருகோனே.
உனது தாமரை போன்ற திருவடிகளில் அரை நிமிஷ நேர அளவுக்காவது தவ நிலையில் தியானத்தில் வைத்திட அறியாத பொய்யும் குற்றமும் கொண்ட மூடனான மட்டி யான் பிறப்பதே தொழிலாகக் கொண்டு பிறந்துள்ள தன்னம் தனியனான யான் வறுமையால் மயக்கத்தை அடையலாமோ? கருணை காட்டாமல் இருப்பது என்ன குறையைக் கண்டு? இப்பொழுதே சொல்லி அருளவேண்டும் கயிலாயமலை நாதராம் சிவன் பெற்ற குமரனே வீரக் கடகம் அணிந்த புஜத்தின் மீது ரத்னாபரணம், தங்கமாலை, வெட்சிப் பூமாலை வாசனை நிறைந்த கடம்பமாலை இவைகளை அணிந்தவனே தக்க சமயம் இதுதான் ஐயா மிக்க பெருமையைத் தரும் நீடித்த சுகம் எல்லாவித செல்வம், அதிர்ஷ்டம், நிறைந்த பெருவாழ்வு நன்மதிப்பு, சிவஞானம், முக்தியாம் மேலான கதி இவையாவும் நீ கொடுத் (து) உதவி புரிய வேண்டுகின்றேன், பளபளப்பும் கூர்மையும் உடைய வேலனே சிவந்த தாமரையிதழ் போன்ற உன் பாதமதனை தினந்தோறும் நான் துதிப்பதற்கு அருமையான் தமிழ் ஞானத்தை தந்த மயில்வீரனே அதிசயக் கோலங்கள் பல நிறைந்த பழனிமலை மீது விளங்கித் தோன்றும் அழகனே திருவேரகத்து (சுவாமி மலையின்) முருகப்பெருமானே. 
பாடல் 217 - சுவாமி மலை
ராகம் - மாயா மாளவ கெளளை; தாளம் - சதுஸ்ர த்ருவம் 
கண்ட நடை - 35, எடுப்பு /4/4/4 0 
நடை தகிடதக
தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
     தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
          தத்ததன தத்ததன தத்ததன தத்ததன ...... தந்ததான
சுத்தியந ரப்புடனெ லுப்புறுத சைக்குடலொ
     டப்புடனி ணச்சளிவ லிப்புடனி ரத்தகுகை
          சுக்கிலம் விளைப்புழுவொ டக்கையும ழுக்குமயிர் ...... சங்குமூளை 
துக்கம்விளை வித்தபிணை யற்கறைமு னைப்பெருகு
     குட்டமொடு விப்புருதி புற்றெழுதல் முட்டுவலி
          துச்சிபிள வைப்பொருமல் பித்தமொடு றக்கமிக ...... வங்கமூடே 
எத்தனைநி னைப்பையும்வி ளைப்பையும யக்கமுற
     லெத்தனைச லிப்பொடுக லிப்பையுமி டற்பெருமை
          எத்தனைக சத்தையும லத்தையும டைத்தகுடில் ...... பஞ்சபூதம் 
எத்தனைகு லுக்கையுமி னுக்கையும னக்கவலை
     யெத்தனைக வட்டையுந டக்கையுமு யிர்க்குழுமல்
          எத்தனைபி றப்பையுமி றப்பையுமெ டுத்துலகில் ...... மங்குவேனோ 
தத்தனத னத்தனத னத்தனவெ னத்திமிலை
     யொத்தமுர சத்துடியி டக்கைமுழ வுப்பறைகள்
          சத்தமறை யத்தொகுதி யொத்தசெனி ரத்தவெள ...... மண்டியோடச் 
சக்கிரிநெ ளிப்பஅவு ணப்பிணமி தப்பமரர்
     கைத்தலம்வி ரித்தரஹ ரச்சிவபி ழைத்தொமென
          சக்கிரகி ரிச்சுவர்கள் அக்கணமே பக்குவிட ...... வென்றவேலா 
சித்தமதி லெத்தனைசெ கத்தலம்வி தித்துடன
     ழித்துகம லத்தனைம ணிக்குடுமி பற்றிமலர்
          சித்திரக ரத்தலம்வ லிப்பபல குட்டிநட ...... னங்கொள்வேளே 
செட்டிவடி வைக்கொடுதி னைப்புனம திற்சிறுகு
     றப்பெணம ளிக்குள்மகிழ் செட்டிகுரு வெற்பிலுறை
          சிற்பரம ருக்கொருகு ருக்களென முத்தர்புகழ் ...... தம்பிரானே.
சுற்றப்பட்டுள்ள நரம்புகளுடன் எலும்பு பொருந்திய மாமிசம், குடல் இவற்றுடன், நீர், கொழுப்பு, (மூக்குச்) சளி, இழுப்பு நோய், இருதயம், இந்திரியம், விளைகின்ற கிருமிகள், எலும்புகள், அழுக்குகள், ரோமம், சங்கு போல் வெளுத்த மூளை, துக்கத்தை விளைவிக்கின்ற சேர்க்கை நோய், மாதவிடாய் முதலிய மாசு, அவயவ நுனிகளில் விருத்தியாகும் குஷ்ட நோய், சிலந்தி, புண் புரை வைத்தல், முட்டு வலி, புசிக்கின்ற ராஜப் புண், வயிறு உப்பும் நோய், பித்தம், தூக்கம் மிகுந்து வர, உடலில் எத்தனை எண்ணங்கள், செய்கைகள், மயக்கங்கள், எத்தனை வெறுப்பும், பொலிவும், வலிமைப் பெருமையும், எத்தனை க்ஷய நோய், மலத்தையும் அடைத்துள்ள ஐந்து பூதத்தாலாகிய உடலிலே, எத்தனை குலுக்கு, எத்தனை மினுக்கு, மனக் கவலை, எத்தனை கபடம், நடவடிக்கை, உயிரின் சேர்க்கை, எத்தனை பிறவிகளையும், மரணங்களையும் எடுத்து (நான்) இவ்வுலகில் வாட்டமுற்று அழிவேனோ? தத்தனத னத்தனத னத்தன என்று பறைகள் ஒலிக்கவும், ஒரு வகைப் பறை, உடுக்கை, இடக் கையால் கொட்டும் தோல் கருவிகள் பேரொலி செய்யவும், கூட்டமாய் வருவதை ஒத்துத் தோன்றிய இரத்த வெள்ளம் நெருங்கி ஓடவும், ஆதிசேஷனாகிய பாம்பு நெளியவும், அசுர்களின் பிணங்கள் (ரத்த வெள்ளத்தில்) மிதக்கவும், தேவர்கள் கைகளைத் தூக்கி, அரஹர சிவ, பிழைத்தோம் என்று முழங்கவும், சக்ரவாளகிரியின் சுவர்கள் அந்தக் கணத்திலேயே பிளவுபடவும், வெற்றி கொண்ட வேலனே, உனது திருவுள்ளத்தில், எத்தனை உலகங்களைப் படைத்து, உடனே அழித்து, தாமரையில் வீற்றிருக்கும் பிரமனின் அழகிய குடுமியைப் பிடித்து (உனது) அழகிய திருக்கரம் வருந்த பல முறை அவனைக் குட்டி நடனம் கொண்ட தலைவனே, செட்டி வேடம் பூண்டு, தினைப்புனத்தில் (வாழும்) சிறிய குறப் பெண்ணாகிய வள்ளியின் படுக்கையில் மகிழும் செட்டியே, சுவாமி மலையில் வீற்றிருக்கும் ஞானமயமான சிவ பெருமானுக்கு ஒப்பற்ற குருமூர்த்தி என்று முக்தி நிலை பெற்ற பெரியோர் புகழ்கின்ற தம்பிரானே. 
பாடல் 218 - சுவாமி மலை
ராகம் - சுநாத விநோதினி, தாளம் - ஆதி - தேசாதி
தனதான தத்த தனதான தத்த
     தனதான தத்த ...... தனதான
செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
     திருமாது கெர்ப்ப ...... முடலூறித் 
தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
     திரமாய ளித்த ...... பொருளாகி 
மகவாவி னுச்சி விழியாந நத்தில்
     மலைநேர்பு யத்தி ...... லுறவாடி 
மடிமீத டுத்து விளையாடி நித்த
     மணிவாயின் முத்தி ...... தரவேணும் 
முகமாய மிட்ட குறமாதி னுக்கு
     முலைமேல ணைக்க ...... வருநீதா 
முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்
     மொழியேயு ரைத்த ...... குருநாதா 
தகையாதெ னக்கு னடிகாண வைத்த
     தனியேர கத்தின் ...... முருகோனே 
தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
     சமர்வேலெ டுத்த ...... பெருமாளே.
இந்த உலக மாயையில் சிக்குண்டு, எனது இல்லற வாழ்வில் எனக்குக் கிட்டிய அழகிய மனைவியின் கருவில் உருவாகி அவளது உடலில் ஊறி பத்து மாதம் கர்ப்பத்தில் வளர்ந்து, நல்ல வடிவோடு கூடி பூமியில் நன்கு தோன்றிய குழந்தைச் செல்வமாக நீ எங்களுக்குப் பிறந்து, குழந்தைப் பாசத்தினால் நான் உன்னை உச்சிமோந்து, விழியோடு விழிவைத்து, முகத்தோடு முகம் சேர்த்து, எனது மலை போன்ற தோள்களில் நீ தழுவி உறவாடி, என் மடித்தலத்தில் அமர்ந்து குழந்தையாக விளையாடி, நாள்தோறும் உன் மணி வாயினால் முத்தம் தந்தருள வேண்டும். முக வசீகரம் மிக்க குறப்பெண் வள்ளியின் மார்பினை அணைக்க வந்த நீதிபதியே*, பழம் பெரும் வேதத்தினுள் ஒப்பற்ற சிறந்த பொருளுக்குள்ளே பிரணவப் பொருளை சிவனாருக்கு உபதேசித்த குருநாதனே, தடையொன்றும் இல்லாது எனக்கு உனது திருவடிகளைத் தரிசனம் செய்வித்த ஒப்பற்ற திருவேரகத்தின் (சுவாமிமலையின்) முருகனே, மரங்கள் இருபுறமும் நிறைந்த காவிரி ஆற்றின் வடக்குப் பகுதியிலே போர் வேல் விளங்க நிற்கும் பெருமாளே. 
* யான், எனது என்ற அகங்கார மமகாரம் அற்ற வள்ளியை தானே வலிய வந்து அணைத்து மணத்தல் தனக்கு நீதி என்ற காரணத்தால், நீதிபதியே என்றார்.
பாடல் 219 - சுவாமி மலை
ராகம் - ...; தாளம் -
தானதன தந்த தத்த தானதன தந்த தத்த
     தானதன தந்த தத்த ...... தனதான
சேலுமயி லுந்த ரித்த வாளையட ருங்க டைக்கண்
     மாதரைவ சம்ப டைத்த ...... வசமாகிச் 
சீலமறை யும்ப ணத்தி லாசையிலை யென்ற வத்தை
     காலமுமு டன்கி டக்கு ...... மவர்போலே 
காலுமயி ரும்பி டித்து மேவுசிலு கும்பி ணக்கு
     நாளுமிக நின்ற லைத்த ...... விதமாய 
காமகல கம்பி ணித்த தோதகமெ னுந்து வக்கி
     லேயடிமை யுங்க லக்க ...... முறலாமோ 
ஏலமில வங்க வர்க்க நாகம்வகு ளம்ப டப்பை
     பூகமரு தந்த ழைத்த ...... கரவீரம் 
யாவுமலை கொண்டு கைத்த காவிரிபு றம்பு சுற்றும்
     ஏரகம மர்ந்த பச்சை ...... மயில்வீரா 
சோலைமடல் கொண்டு சக்ர மால்வரைய ரிந்த வஜ்ர
     பாணியர்தொ ழுந்தி ருக்கை ...... வடிவேலா 
சூர்முதிர்க்ர வுஞ்ச வெற்பும் வேலைநில மும்ப கைத்த
     சூரனுட லுந்து ணித்த ...... பெருமாளே.
சேல் மீன், வேல் இவை போன்றதும், வாளாயுதத்தைப்போல் தாக்கி வருத்த வல்லதுமான கடைக்கண்களை உடைய விலைமாதர்களுடைய வசத்தில்பட்ட ஆளாகி, நல்ல ஒழுக்கத்தை மறைக்கும் பொருளின்மேல் ஆசை இல்லை என்று சொல்லி, நித்திரை செய்யும்போதும் கூடப் படுத்துக் கிடக்கும் அன்புடையவர்போல் நடித்து, கால்களையும் (பின்னர்) மயிரையும் பிடித்து, சண்டையும் ஊடலும் நாளுக்கு நாள் அதிகமாக அலைப்பிக்கின்ற வகைக்குச் செய்கின்ற மாதர்களின் காமக் கலகத்தில் சிக்குதலால் ஏற்படும் வருத்தமாகிய தொடர்பில் அடிமையாகிய நானும் கலக்கம் அடையலாமோ? ஏலம், கிராம்பு வகை, சுரபுன்னை, மகிழ மரத் தோட்டங்கள், கமுகு, மருத மரம், செழிப்புள்ள தாமரை யாவையும் தனது அலையில் அடித்துத் தள்ளி வருகின்ற காவிரி ஆறு வெளிப் புறத்தில் சூழ்ந்து செல்லும் திருவேரகம் என்ற சுவாமிமலையில் வீற்றிருக்கும் பச்சை மயில் வீரனே, கற்பகச் சோலையில் உள்ள பூ இதழால் சக்ரவாள கிரி ஆகிய பெரிய மலைகளின் (சிறகுகளை)* வெட்டித்தள்ளிய வஜ்ராயுதம் கொண்ட கைகளை உடைய இந்திரன் வணங்கும் திருக்கை வடிவேலனே, அச்சத்தை நிரம்பத் தரும் கிரெளஞ்ச மலையையும், கடலிடத்தையும், பகைத்து வந்த சூரனுடைய உடலையும் அழித்த பெருமாளே. 
* முன்பு ஒரு காலத்தில் மலைகள் எல்லாம் பறவைகள்போல் இறகுகள் உடையவவைகளாக இருந்தனவாம்.எங்கும் பறந்து விழுந்து, உயிர்களுக்குத் தீங்கு செய்ததால், இந்திரன் கோபித்து அந்த மலைகளின் இறகுகளை அறுத்துத் தள்ளினான்.
பாடல் 220 - சுவாமி மலை
ராகம் - ....; தாளம் -
தனதனன தான தந்த தனதனன தான தந்த
     தனதனன தான தந்த ...... தனதான
தருவரிவ ராகு மென்று பொருணசையி னாடி வண்டு
     தனைவிடுசொல் தூது தண்ட ...... முதலான 
சரசகவி மாலை சிந்து கலிதுறைக ளேச லின்ப
     தருமுதல தான செஞ்சொல் ...... வகைபாடி 
மருவுகையு மோதி நொந்து அடிகள்முடி யேதெ ரிந்து
     வரினுமிவர் வீத மெங்க ...... ளிடமாக 
வருமதுவொ போது மென்று வொருபணமு தாசி னஞ்சொல்
     மடையரிட மேந டந்து ...... மனம்வேறாய் 
உருகிமிக வாக வெந்து கவிதைசொலி யேதி ரிந்து
     உழல்வதுவு மேத விர்ந்து ...... விடவேநல் 
உபயபத மால்வி ளங்கி யிகபரமு மேவ இன்ப
     முதவியெனை யாள அன்பு ...... தருவாயே 
குருகினொடு நாரை யன்றில் இரைகளது நாடி டங்கள்
     குதிகொளிள வாளை கண்டு ...... பயமாகக் 
குரைகடல்க ளேய திர்ந்து வருவதென வேவி ளங்கு
     குருமலையின் மேல மர்ந்த ...... பெருமாளே.
இவர் நிச்சயமாகக் கொடுப்பார் என்று பொருளின்மேல் உள்ள பேராசையால் பலரை விரும்பித் தேடிச் சென்று, வண்டு விடு தூது (*1), தண்டகம் (*2) முதலான, இனிமையான கவி மாலைகள், சிந்து (*3), கலித்துறைகள் (*4), ஏசல் (*5), இன்பமான தரு (*6) முதலிய செவ்விய பா வகைகளைப் பாடி, அடிக்கடி வந்து போவதையும் சொல்லித் தெரிவித்து, அவர்களுடைய அடி முதல் முடி வரையும் வாழ்க்கை வரலாற்றை அறிந்து வந்தாலும், (அவர்கள்) அமைதியாக எங்களிடத்தில் (நீங்கள்) வருவது போதும் என்று கூறி, ஒரு பணம் கூடத் தராமல் அலட்சிய வார்த்தை பேசுவார்கள். அத்தகைய முட்டாள்களிடத்தில் நான் நடந்து, மனம் உடைந்து வேறுபட்டு, உள்ளம் உருகி மிகவும் வெந்து, பாடல்களைச் சொல்லியே திரிந்து, அலைச்சல் உறுவது ஒழிவதற்காகவே, உனது நல்ல இரு திருவடிகளிலும் ஆசை மேலிட்டு விளங்கி, இம்மையிலும் மறுமையிலும் பொருந்தும்படியான இன்பத்தை நான் பெற உதவி, என்னை ஆட்கொள்ள அன்பு தருவாயாக. கொக்கினோடு நாரை, அன்றில் என்னும் நீர்ப் பறவைகள் இரையை விரும்பித் தேடி (காவிரியின் நீர் நிலையில்) குதிக்கின்றதை, இள வாளை மீன்கள் கண்டு பயம் கொள்ள, ஒலிக்கும் கடல்களே அதிர்ந்து வருவதுபோல காவிரி ஆறு வந்து விளங்கும் சுவாமி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
(* 1) வண்டைத் தூதாக அனுப்பித் தன் காதலைத் தெரிவிக்க, தலைவன் தலைவிக்கு செய்தி அனுப்பும் சிற்றிலக்கிய நூல் வகை. அன்னம், மயில், கிளி, மேகம், பூவை, தோழி, குயில், நெஞ்சு, தென்றல் ஆகியவையும் தூதுக்கு உரியவை.
(* 2) தண்டகம் - தோத்திரமான வடமொழிச் செய்யுள். (உதாரணம் - கவி காளிதாசர் இயற்றிய சியாமளா தண்டகம்).
(* 3) சிந்து - இசைப்பா வகை. (உதாரணம் - காவடிச் சிந்து, நொண்டிச் சிந்து).
(* 4) கலித்துறை - கவிதை வகைகளில் ஒன்று, வரிக்கு 16/17 எழுத்துக்கள் கொண்டது. (உதாரணம் - கட்டளைக் கலித்துறை).
(* 5) ஏசல் - நிந்தா ஸ்துதியில் சிலேடையோடு இருபொருள்படும்படி தலைவனை வஞ்சப் புகழ்ச்சியாகப் பாடும் கவிதை. (உதாரணத்துக்கு காளமேகப் புலவரின் பல பாடல்கள்).
(* 6) தரு - இசைப் பாட்டு வகை.
பாடல் 221 - சுவாமி மலை
ராகம் - ஆனந்த பைரவி; தாளம் - சதுஸ்ர த்ருவம் - 14 
எடுப்பு /40/4/4
தனதன தனனா தனனா
     தனந்த தத்தம் ...... தனதான
தெருவினில் நடவா மடவார்
     திரண்டொ றுக்கும் ...... வசையாலே 
தினகர னெனவே லையிலே
     சிவந்து திக்கும் ...... மதியாலே 
பொருசிலை வளையா இளையா
     மதன்தொ டுக்குங் ...... கணையாலே 
புளகித முலையா ளலையா
     மனஞ்ச லித்தும் ...... விடலாமோ 
ஒருமலை யிருகூ றெழவே
     யுரம்பு குத்தும் ...... வடிவேலா 
ஒளிவளர் திருவே ரகமே
     யுகந்து நிற்கும் ...... முருகோனே 
அருமறை தமிழ்நூ லடைவே
     தெரிந்து ரைக்கும் ...... புலவோனே 
அரியரி பிரமா தியர்கால்
     விலங்க விழ்க்கும் ...... பெருமாளே.
தெருக்களில் உல்லாசமாக நடக்கும் பெண்கள் ஒன்று சேர்ந்து வம்பு பேசும் வசை மொழிகளாலும், சூரியனுக்கு ஒப்பான ஒளியுடனும் வெப்பத்துடனும் கடலில் சிவந்த நிறத்துடன் உதிக்கும் சந்திரனாலும், காமப் போருக்குரிய கரும்பு வில்லை வளைத்து, சளைக்காமல் மன்மதன் எய்கின்ற மலர் அம்புகளினாலும், விரகதாபத்தால் விம்மும் மார்பினளாகிய என்னை அலையுமாறும் உள்ளம் உடைந்து கலங்குமாறும் நீ விடுதல் முறையாகுமோ? மாயையில் ஒப்பற்ற கிரெளஞ்சமலை இரண்டாகப் பிளவுபடும்படியும், தாரகாசுரன் மார்பில் புகும்படியும் செலுத்திய கூர் வேலை உடையவனே, பேரொளி பெற்று விளங்கும் சுவாமிமலை என்னும் திருத்தலத்தில் மகிழ்ச்சியோடு எழுந்தருளியிருக்கும் முருகனே, அருமையான வேதங்களையும் தமிழ் நூல்களையும் முழுமையாக கேட்பவரின் தரம் அறிந்து விரித்து உரைத்தருளும் ஞான பண்டிதா, இந்திரன், திருமால், பிரம்மா முதலிய தேவர்களின் காலில் பூட்டிய விலங்கினைத் தகர்த்தெறிந்த பெருமாளே. 
இப்பாட்டு அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவிக்காக பாடியது.கடல், சந்திரன், மன்மதன், மலர்க் கணைகள், ஊரப் பெண்களின் ஏச்சு இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.
பாடல் 222 - சுவாமி மலை
ராகம் - காபி; தாளம் - அங்கதாளம் - 13 1/2 
தகிடதக-2 1/2, தகிடதக-2 1/2, தகிடதக-2 1/2 
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3
தானனந் தனதனன தனதனா தத்த தந்த ...... தனதான

நாசர்தங் கடையதனில் விரவிநான் மெத்த நொந்து ...... தடுமாறி
     ஞானமுங் கெடஅடைய வழுவியா ழத்த ழுந்தி ...... மெலியாதே 
மாசகந் தொழுமுனது புகழினோர் சொற்ப கர்ந்து ...... சுகமேவி
     மாமணங் கமழுமிரு கமலபா தத்தை நின்று ...... பணிவேனோ 
வாசகம் புகலவொரு பரமர்தா மெச்சு கின்ற ...... குருநாதா
     வாசவன் தருதிருவை யொருதெய்வா னைக்கி ரங்கு ...... மணவாளா 
கீசகஞ் சுரர்தருவு மகிழுமா வத்தி சந்து ...... புடைசூழுங்
     கேசவன் பரவுகுரு மலையில்யோ கத்த மர்ந்த ...... பெருமாளே.
கேடு செய்யும் கீழ்மக்களின் இருப்பிடங்களுக்குச் சென்று அவர்களுடன் கலந்து அதனால் மிகவும் நொந்து போய், தடுமாற்றம் அடைந்து சுய அறிவும் கெட்டுப்போய், முழுவதுமாக தவறான வழியில் விழுந்து, ஆழமாகத் தீய நெறியில் அழுந்தி நான் மெலிவுறாமல், இந்தச் சிறந்த உலகமே போற்றும் உனது புகழின் ஒரு சொல்லளவு பகுதியாவது சொல்லி அதனால் சுகமடைந்து, நறுமணம் வீசும் உன் இரண்டு தாமரைப் பாதங்களை மனம் ஒருமுகப்பட்டு நின்று வணங்க மாட்டேனோ? உபதேச மொழியை நீ கூற, ஒப்பற்ற சிவபிரான் மெச்சிப் புகழ்ந்த குருநாதனே, இந்திரன் வளர்த்தளித்த லக்ஷ்மியின் அம்சமாகும் ஒப்பில்லா தேவயானைக்கு இரங்கி மணம்புரிந்தவனே, மூங்கில், கற்பக மரம், மகிழ மரம், மாமரம், அத்தி மரம், சந்தன மரம் இவையெல்லாம் சுற்றிலும் சூழ்ந்துள்ள, திருமாலே போற்றிப் புகழும் சுவாமி மலையில் உபதேச குருவாக யோகநிலையில் அமர்ந்த பெருமாளே. 
பாடல் 223 - சுவாமி மலை
ராகம் - யதுகுல காம்போதி; தாளம் - அங்கதாளம் - 5 1/2 
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தானான தான தத்த தானான தான தத்த
     தானான தான தத்த ...... தனதான
நாவேறு பாம ணத்த பாதார மேநி னைத்து
     நாலாறு நாலு பற்று ...... வகையான 
நாலாரு மாக மத்தி னூலாய ஞான முத்தி
     நாடோறு நானு ரைத்த ...... நெறியாக 
நீவேறெ னாதி ருக்க நான்வேறெ னாதி ருக்க
     நேராக வாழ்வ தற்கு ...... னருள்கூர 
நீடார்ஷ டாத ரத்தின் மீதேப ராப ரத்தை
     நீகாணெ னாவ னைச்சொ ...... லருள்வாயே 
சேவேறு மீசர் சுற்ற மாஞான போத புத்தி
     சீராக வேயு ரைத்த ...... குருநாதா 
தேரார்கள் நாடு சுட்ட சூரார்கள் மாள வெட்டு
     தீராகு காகு றத்தி ...... மணவாளா 
காவேரி நேர்வ டக்கி லேவாவி பூம ணத்த
     காவார்சு வாமி வெற்பின் ...... முருகோனே 
கார்போலு மேனி பெற்ற மாகாளி வாலை சத்தி
     காமாரி வாமி பெற்ற ...... பெருமாளே.
நாவினில் இருந்து வெளிப்படும் பாமலர்களின் நறுமணம் கமழும் பாதத் தாமரைகளையே நினைத்து, (4..ஐ 6..ஆல் பெருக்கி வந்த 24..ம் 4..ம் சேர்ந்த) 28* சிவ சம்பந்தத்தை உடையதும், சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு பாதங்கள்** பொருந்தினவாயும் உள்ள சிவாகம நூல்களில் கூறப்பட்டுள்ள ஞான முத்தி நெறியே நாள் தோறும் நான் அனுஷ்டிக்கும் நெறியாகவும், நீ வேறு என்றில்லாமல் நான் வேறு என்றில்லாமல், ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றுபட்ட நிலையில், நேர்பட்டு வாழ்வதற்கு உன் கிருபை பெருகி, பெருமை பொருந்திய ஆறு ஆதாரங்களையும் கடந்து ஸஹஸ்ராரத்தில்*** பெரிய பொருள்கட்கெல்லாம் பெரிய பொருளான சிவத்தை நீ காண்பாயாக என்று அந்த ஐக்கிய வசனத்தை உபதேசித்து அருள்வாயாக. நந்தியின் மீது ஏறுகின்ற ஈசராம் சிவனார் உன்னை வலம் வர, சிறந்த ஞான உபதேசத்தை செம்மையாகவே சொன்ன குருநாதனே, பகைவர்களாம் தேவர்களின் நாட்டைச் சுட்டழித்த அசுரர்கள் சாகும்படி வெட்டிய தீரனே, குகனே, குறத்தி வள்ளியின் மணவாளனே, காவேரி ஆற்றின் நேர் வடக்கில் தடாகங்களில் மலர்கள் மணக்கும் சோலைகள் சூழ்ந்த சுவாமிமலையில் எழுந்தருளிய முருகக் கடவுளே, கரு மேகத்து நிற மேனியுடைய மகா காளி, என்றும் இளையாள், சக்தி, காமனை எரித்தவரின் இடதுபக்கம் உள்ள பார்வதி பெற்ற பெருமாளே. 
* 28 சிவாகமங்கள் பின்வருமாறு: காமிகம், யோசகம், சிந்தியம், காரணம், அசிதம், தீப்தம், சூக்ஷ்மம், சகச்சிரம், அஞ்சுமான், சுப்ரபேதம், விஷயம், நிச்வாசம், ஸ்வயாம்புவம், ஆக்னேயம், வீரம், ரெளரவம், மகுடம், விமலம், சந்திரஞானம், முகவிம்பம், புரோற்கீதம், லலிதம், சித்தம், சந்தானம், சர்வோக்தம், பாரமேஸ்வரம், கிரணம், வாதூளம்
** 4 பக்தி மார்க்கங்கள் பின்வருமாறு:1. சரியை: திருக்கோயிலில் அலகு இடுதல், மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம் வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல், இறைவனை வாழ்த்துதல், திருவேடம் கண்டு பணிதல். இது 'தாத மார்க்கம் - சாலோகம்'.2. கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்தியக் காரியம் செய்தல். இது 'புத்ர மார்க்கம் - சாமீபம்'.3. யோகம்: புலன்களை அடக்கிப் பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி, முழு ஜோதியை நினைத்திருத்தல். இது 'சக மார்க்கம் (தோழ நெறி) - சாரூபம்'.4. ஞானம்: புறத் தொழில் அகத் தொழில் இன்றி, அறிவு மாத்திரத்தாலே செய்யும் வழிபாடு ஞானம். இது 'சன்மார்க்கம் - சாயுஜ்யம்'. சிவஞான சித்தியார் சூத்திரம். 
*** ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம்
பாடல் 224 - சுவாமி மலை
ராகம் - ....; தாளம் -
தனதன தான தந்த தனதன தான தந்த
     தனதன தான தந்த ...... தனதான
நிலவினி லேயி ருந்து வகைமல ரேதெ ரிந்து
     நிறைகுழல் மீத ணிந்து ...... குழைதாவும் 
நிகரறு வேலி னங்கள் வரிதர வாச கங்கள்
     நினைவற வேமொ ழிந்து ...... மதனூலின் 
கலபம னோக ரங்க ளளவற வேபு ரிந்து
     கனியித ழேய ருந்தி ...... யநுராகக் 
கலவியி லேமு யங்கி வனிதையர் பால்ம யங்கு
     கபடனை யாள வுன்ற ...... னருள்கூராய் 
உலகமொ ரேழு மண்ட ருலகமு மீசர் தங்கு
     முயர்கயி லாய மும்பொன் ...... வரைதானும் 
உயிரொடு பூத மைந்து மொருமுத லாகி நின்ற
     உமையரு ளால்வ ளர்ந்த ...... குமரேசா 
குலைபடு சூர னங்க மழிபட வேலெ றிந்த
     குமரக டோர வெங்கண் ...... மயில்வாழ்வே 
கொடுமுடி யாய்வ ளர்ந்து புயனிலை போலு யர்ந்த
     குருமலை மீத மர்ந்த ...... பெருமாளே.
நிலவில் இருந்து எடுத்தது போன்று வகைவகையான மலர்களைத் தெரிந்து எடுத்து நிறைந்துள்ள கூந்தலின் மேல் அணிந்து, காதின் குண்டலங்கள் அளவும் பாய்கின்ற, உவமை இல்லாத வேல்கள் போன்ற கண்களின் ரேகைகள் விளங்க, மொழிகள் இன்னது பேசுகின்றோம் என்ற நினைவே இல்லாமல் பேச, மன்மதனின் காம சாஸ்திரத்தில் கூறப்பட்ட கலகலப்பான லீலைகள் கணக்கில்லாமல் செய்து, கனி போன்ற வாயிதழ் ஊறலைப் பருகி, காமப் பற்று மிக்க புணர்ச்சியிலே ஈடுபட்டுப் பொருந்தி, விலைமாதர்களிடத்தே மயக்கம் உறும் கபடனாகிய என்னை ஆட்கொள்ள உனது திருவருளைத் தந்து அருளுக. ஏழு உலகமும், தேவர் உலகமும், சிவ பெருமான் தங்கும் உயர்ந்த கயிலாயமும், பொன் மலையாகிய மேருவும், உயிர்களும், ஐந்து பூதங்களும் ஆக எல்லாமாக ஒரு முதற் பொருளாகி நின்ற பார்வதியின் திருவருளால் வளர்ந்த குமரேசனே, பதறிய சூரனுடைய உடல் அழியும்படி வேலைச் செலுத்திய குமரனே, மிக்க கடிய பலம் வாய்ந்த மயில் மீது வாழ்பவனே, மலைச் சிகரமாய் விளங்கி மேகம் தங்கும் இடம் போல் உயர்ந்த சுவாமி மலையின் மீது அமர்ந்த பெருமாளே. 
பாடல் 225 - சுவாமி மலை
ராகம் - ஹம்ஸாநந்தி; தாளம் - ஆதி
தனதன தனதன ...... தனதான
     தனதன தனதன ...... தனதான
நிறைமதி முகமெனு ...... மொளியாலே
     நெறிவிழி கணையெனு ...... நிகராலே 
உறவுகொள் மடவர்க ...... ளுறவாமோ
     உனதிரு வடிவியினி ...... யருள்வாயே 
மறைபயி லரிதிரு ...... மருகோனே
     மருவல ரசுரர்கள் ...... குலகாலா 
குறமகள் தனைமண ...... மருள்வோனே
     குருமலை மருவிய ...... பெருமாளே.
பூரண சந்திரன் போன்ற முகத்தின் பிரகாசத்தாலும், வழிகாட்டியாக இருக்க வேண்டிய கண்கள் அம்பு போலச் செய்யும் போரினாலும், சொந்தம் கொண்டாடுகின்ற மாதர்களின் உறவு ஆகுமோ? (ஆகாது என்ற படிக்கு) உன்னிரு திருவடிகளை இனியாகிலும் தந்தருள்வாயாக. வேதங்களில் சொல்லப்படும் திருமால், இலக்குமியின் மருகோனே, பகைவர்களாம் அசுரர்களின் குலத்தை அழித்த காலனே, குறத்தி வள்ளியை திருமணம் செய்து அருளியவனே, குருமலை (திருவேரகம்) வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 201 - சுவாமி மலை
ராகம் - ஜோன்புரி; தாளம் - அங்கதாளம் - 18 
தகிடதக-2 1/2, தகிடதக-2 1/2, தகிடதக-2 1/2 தகிடதக-2 1/2, தகதிமி-2, தகதிமி-2, தக-1 தகதிமிதக-3

தனாதன தனாதன தனாதன தனாதன     தனாதனன தானந் ...... தனதானா

அவாமரு வினாவசு தைகாணும டவாரெனு     மவார்கனலில் வாழ்வென் ...... றுணராதே 
அராநுக ரவாதையு றுதேரைக திநாடும     றிவாகியுள மால்கொண் ...... டதனாலே 
சிவாயவெ னுநாமமொ ருகாலுநி னையாததி     மிராகரனை வாவென் ...... றருள்வாயே 
திரோதம லமாறும டியார்கள ருமாதவர்     தியானமுறு பாதந் ...... தருவாயே 
உவாவினி யகானுவி னிலாவும யில்வாகன     முலாசமுட னேறுங் ...... கழலோனே 
உலாவுத யபாநுச தகோடியு ருவானவொ     ளிவாகுமயில் வேலங் ...... கையிலோனே 
துவாதச புயாசல ஷடாநந வராசிவ     சுதாஎயினர் மானன் ...... புடையோனே 
சுராதிப திமாலய னுமாலொடு சலாமிடு     சுவாமிமலை வாழும் ...... பெருமாளே.

ஆசை ஏற்படுத்துகின்ற துன்பம் விளைவதற்கு மண்ணாசையும், விரும்பிப் பார்க்கின்ற இளம் மாதர்கள் என்ற பெண்ணாசையும் காரணமாம். அவர்களுடன் வாழ்க்கை நெருப்பின் மேல் வாழ்வு என்றுணராமல் பாம்பின் வாயில் அகப்பட்டு துன்பமுறு தவளையின் கதி அடைந்த அந்நிலையிலும் இன்பத்தை நாடும் அறிவுடையவனாகி உள்ளத்தில் மயக்கம் கொண்டு அதன் காரணமாக சிவாய என்ற திருமந்திரத்தை ஒருபோதும் நினைக்காத அஞ்ஞான இருளுக்கு இருப்பிடமாக உள்ள அடியேனை, உன் திருவடியில் சேர்ந்து இன்புற வருக என்றழைத்து அருள்வாயாக. உன்னை மறத்தல் என்ற குற்றம் இல்லாத மெய்யடியார்களாலும், அரிய பெரிய தவ முனிவர்களாலும் தியானம் செய்யப்படும் உன் திருவடிகளைத் தந்தருள்வாயாக. இளமைமிகுந்து, இனிய கானகத்தில் ஒளிவீசித் திரியும் மயிலை வாகனமாகக் கொண்டு, அதன்மீது குதூகலத்துடன் ஏறும் வீரக் கழலோனே, வானில் உலாவும் உதய சூரியர்கள் நூறு கோடி கூடினாற்போல ஒளிபடைத்த அழகிய கூர் வேல் திருக்கரத்துள்ளோனே, பன்னிரண்டு மலைபோன்ற புயங்களை உடையவனே, ஆறுமுகக் கடவுளே, சிறந்தவனே, சிவனின் சேயே, வேடர் குலத்து மான் போன்ற வள்ளியிடம் அன்புடையவனே, தேவேந்திரனும், திருமாலும், பிரம்மனும் அன்போடு வணக்கம் செய்கின்ற சுவாமிமலையில் வாழ்கின்ற பெருமாளே. 
* 'சலாம்' என்ற முகம்மதியர்களின் உருதுச் சொல்லை இங்கு சுவாமிகள் பயன்படுத்துகிறார்.

பாடல் 202 - சுவாமி மலை
ராகம் - ....; தாளம் -

தானதன தந்த தானன தானதன தந்த தானன     தானதன தந்த தானன ...... தனதான

ஆனனமு கந்து தோளொடு தோளிணைக லந்து பாலன     ஆரமுது கண்டு தேனென ...... இதழூறல் 
ஆதரவி னுண்டு வேல்விழி பூசலிட நன்று காணென     ஆனையுர மெங்கு மோதிட ...... அபிராம 
மானனைய மங்கை மார்மடு நாபியில்வி ழுந்து கீடமில்     மாயுமனு வின்ப வாசைய ...... தறவேயுன் 
வாரிஜப தங்கள் நாயடி யேன்முடிபு னைந்து போதக     வாசகம்வ ழங்கி யாள்வது ...... மொருநாளே 
ஈனவதி பஞ்ச பாதக தானவர்ப்ர சண்ட சேனைகள்     ஈடழிய வென்று வானவர் ...... குலசேனை 
ஏவல்கொளு மிந்த்ர லோகவ சீகரவ லங்க்ரு தாகர     ராசதம றிந்த கோமள ...... வடிவோனே 
சோனைசொரி குன்ற வேடுவர் பேதைபயில் கின்ற ஆறிரு     தோளுடைய கந்த னேவய ...... லியில்வாழ்வே 
சூளிகையு யர்ந்த கோபுர மாளிகைபொ னிஞ்சி சூழ்தரு     ஸ்வாமிமலை நின்று லாவிய ...... பெருமாளே.

(விலைமாதர்களின்) முகத்தைக் கண்டு மகிழ்ந்து, தோளொடு தோள் சேரக் கலந்து, பால் போன்றதும், நிறை அமுதம், கல்கண்டு, தேன் என்னும்படியானதுமான வாய் இதழ் ஊறலை அன்புடன் அருந்தி, வேல் போன்ற கூரிய கண்கள் போர் புரிய, நன்றாகப் பார் என்னும்படியாக யானையைப் போன்ற மார்பகங்கள் நெஞ்சில் எங்கும் மோத, அழகிய மான் அனைய மாதர்களின் மடுப்போன்ற தொப்பூளில் விழுந்து புழு வண்டு போல இறந்துபடும் இம்மனித இன்ப ஆசையானது அற்று ஒழிய, உனது தாமரை போன்ற அடிகளை அடி நாயேனாகிய என் தலையில் சூட்டி, ஞானோபதேசம் செய்து ஆண்டருளும் ஒரு நாளும் உண்டோ? இழிவான மிக்க ஐந்து* மகா பாவங்களையும் செய்த அசுரர்களின் கொடிய சேனைகள் வலிமை அழிய வெற்றி கொண்டு, தேவர்களுடைய சிறந்த சேனையை ஆட்கொண்டு, இந்திர லோகத்தாரின் மனதைக் கவர்ந்த வசீகர சக்தி வாய்ந்தவனே, அழகு அலங்காரத்துக்கு இருப்பிடமானவனே, ராசத குணங்களின் தன்மையை உணர்ந்த அழகிய வடிவுள்ளவனே, விடாமழை பொழிகின்ற (வள்ளி) மலையில் வேடர் மகளாகிய வள்ளி அணைந்து விளையாடும் பன்னிரண்டு தோள்கள் உடைய கந்தப் பெருமானே, வயலூரில் வாழ்பவனே, நிலா முற்றங்களும், உயர்ந்த கோபுரங்களும், அழகிய மதில்களும் சூழ்ந்து விளங்கும் சுவாமி மலையில் எழுந்தருளி உலவும் பெருமாளே. 
* ஐவகை பாதகங்கள்: கொலை, களவு, சூது, கள்ளுண்ணல், குரு நிந்தை ஆகியவை.

பாடல் 202 - சுவாமி மலை
ராகம் - நாட்டகுறிஞ்சி ; தாளம் - அங்கதாளம் - 8 1/2 தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தக, தகிட-1 1/2, தகதிமி-2

தானான தனதனத் தான தனதன     தானான தனதனத் தான தனதன          தானான தனதனத் தான தனதன ...... தந்ததான

ஆனாத பிருதிவிப் பாச நிகளமும்     மாமாய விருளுமற் றேகி பவமென          வாகாச பரமசிற் சோதி பரையைய ...... டைந்துளாமே 
ஆறாறி னதிகமக் க்ராய மநுதினம்     யோகீச ரெவருமெட் டாத பரதுரி          யாதீத மகளமெப் போது முதயம ...... நந்தமோகம் 
வானாதி சகலவிஸ்த் தார விபவரம்     லோகாதி முடிவுமெய்ப் போத மலரயன்          மாலீச ரெனுமவற் கேது விபுலம ...... சங்கையால்நீள் 
மாளாத தனிசமுற் றாய தரியநி     ராதார முலைவில்சற் சோதி நிருபமு          மாறாத சுகவெளத் தாணு வுடனினி ...... தென்றுசேர்வேன் 
நானாவி தகருவிச் சேனை வகைவகை     சூழ்போது பிரபலச் சூரர் கொடுநெடு          நாவாய்செல் கடலடைத் தேறி நிலைமையி ...... லங்கைசாய 
நாலாறு மணிமுடிப் பாவி தனையடு     சீராமன் மருகமைக் காவில் பரிமள          நாவீசு வயலியக் கீசர் குமரக ...... டம்பவேலா 
கானாளு மெயினர்தற் சாதி வளர்குற     மானொடு மகிழ்கருத் தாகி மருடரு          காதாடு முனதுகட் பாண மெனதுடை ...... நெஞ்சுபாய்தல் 
காணாது மமதைவிட் டாவி யுயவருள்     பாராயெ னுரைவெகுப் ப்¡£தி யிளையவ          காவேரி வடகரைச் சாமி மலையுறை ...... தம்பிரானே.

நீங்குதற்கு அரிய மண்ணாசை என்ற விலங்கும், பெரும் மயக்கத்தைத் தரும் ஆணவம் என்ற இருளும் ஒழிந்து, ஒன்றுபட்ட தன்மை என்று கூறும்படியாக, வானம் போல் பரந்த பெரிய ஞான ஜோதியான பராசக்தியை அடைந்து நினைப்பு எதுவும் இன்றி, முப்பத்தாறு மேலான தத்துவங்களுக்கு* அப்பால் முதன்மையானதாய், என்றும் யோகீசர் எவர்க்கும் எட்டாததான பெரிய துரிய** நிலைக்கும் மேம்பட்டதாய், உருவம் இல்லாததாய், எப்போதும் தோன்றி நிற்பதாய், அளவற்ற வசீகரம் வாய்ந்ததாய், வான் முதலிய எல்லாமாய் விரிவான உயிர்ப்பொருளாய், உலகத்தின் முதலாகவும் முடிவாகவும் விளங்குவதாய், உண்மை அறிவாய், தாமரையான் பிரமன், திருமால், சிவபிரான் என்ற மும்மூர்த்திகளுக்கும் மூலகாரணமாக விளங்கும் பெருமை வாய்ந்ததாய், சந்தேகம் இன்றி நீடூழிகாலம் இறப்பின்றி தானே மெய்த்தன்மைத்தாக இருப்பதாய், அரியதாய், மற்ற ஒன்றையும் சாராததாய், அழிவின்றி சத்திய ஜோதியாகத் துலங்குவதாய், உருவம் ஏதும் இல்லாததாய், மாறுதல் இல்லாது விளங்கும் இன்ப வெள்ளமான சிவத்துடன் யான் இனிமையாக என்றைக்கு இணைவேன்? பல்விதமான ஆயுதங்கள் (கத்தி, வில், வாள் முதலியவை) தாங்கிய சேனைகள் விதவிதமாக சூழ்ந்து வர, பிரசித்தி பெற்ற வீரர்களுடன், பெரும் கப்பல்கள் செல்லும் சமுத்திரத்தை அணைகட்டிக் கடந்து, அக்கரை சென்று, நிலைத்திருந்த இலங்கையை வீழ்த்தி, பத்து மணிமுடிகளைத் தரித்த பாவியாகிய ராவணனை வதைத்த ஸ்ரீராமனின் மருகனே, இருண்ட சோலைகளில் நறுமணம் நன்றாக வீசும் வயலூரில் வீற்றுள்ள அக்னீஸ்வரருடைய*** குமாரனே, கடப்பமலர் அணிந்தவனே, வேலாயுதனே, காட்டை ஆளும் வேட்டுவர் குலத்திலே வளர்ந்த குறமானாகிய வள்ளியோடு மகிழ்வதற்கு எண்ணம் கொண்டு, மருட்சியைத் தருகின்றதும், காதுவரை நீண்டதுமான உனது கண்களிலிருந்து வரும் பாணமானது என்னுடைய நெஞ்சினில் பாய்வதை நீகாணாமல் இருக்கின்றாய், உன் செருக்கை விடுத்து என்னுயிர் உய்ய அருள்வாயாக என்றெல்லாம் வள்ளியிடம் உரைத்து மிக்க அன்புடன் சேர்ந்த இளையவனே, காவேரியின் வடகரையினுள்ள சுவாமிமலைத் தலத்தில் எழுந்தருளிய தனிப் பெரும் தலைவனே. 
* 96 தத்துவங்கள் பின்வருமாறு:36 பரதத்துவங்கள் (அகநிலை): ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து - 25 (புறநிலை): மண், தீ, நீர், காற்று, வெளி.ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை): வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4. 
** துரியம் என்பது ஜாக்கிரம், சுழுத்தி, சொப்பனம் ஆகிய மூன்று நிலைகட்கும் அப்பால் உள்ள நிலை.
*** வயலூரில் உள்ள சிவமூர்த்திக்குப் பெயர் அக்னீஸ்வரர்.

பாடல் 204 - சுவாமி மலை
ராகம் - ....; தாளம் -

தனாதனன தானம் தனாதனன தானம்     தனாதனன தானம் ...... தனதான

இராவினிருள் போலும் பராவுகுழ லாலும்     இராமசர மாகும் ...... விழியாலும் 
இராகமொழி யாலும் பொறாதமுலை யாலும்     இராதஇடை யாலும் ...... இளைஞோர்நெஞ் 
சராவியிரு போதும் பராவிவிழ வேவந்     தடாதவிலை கூறும் ...... மடவாரன் 
படாமலடி யேனுஞ் சுவாமியடி தேடும்     அநாதிமொழி ஞானந் ...... தருவாயே 
குராவினிழல் மேவுங் குமாரனென நாளுங்     குலாவியினி தோதன் ...... பினர்வாழ்வே 
குணாலமிடு சூரன் பணாமுடிக டோறுங்     குடாவியிட வேலங் ...... கெறிவோனே 
துராலுமிகு தீமுன் பிராதவகை போலுந்     தொடாமல்வினை யோடும் ...... படிநூறுஞ் 
சுபானமுறு ஞானந் தபோதனர்கள் சேருஞ்     சுவாமிமலை வாழும் ...... பெருமாளே.

இரவின் இருட்டைப் போல் பரவி கருத்த கூந்தலினாலும், ராமனுடைய அம்பைப் போன்ற கூர்மையான கண்களாலும், இசை நிரம்பிய வார்த்தைகளாலும், பாரமான மார்பகங்களாலும், இடுப்பு இருக்கிறதோ இல்லையோ என்னும்படியான மெல்லிய இடையாலும், இளம் ஆண்களின் இதயத்தை ரம்பம் போல் அறுத்து, காலையும் மாலையும் அவர்கள் தங்களைத் துதிசெய்து வீழ்த்துமாறு வந்து, தகாதபடி அதிகமாக விலையைக் கூறி பேரம்செய்யும் விலைமகளிரின் ஆசையின் பிடியில் அகப்படாமல், அடியேனும் கடவுளாகிய உனது திருவடிகளைத் தேடும் ஆதியே இல்லாத ஞானமொழியை நீ எனக்குத் தந்தருள்வாயாக. (திருவிடைக்கழியிலுள்ள) குராமரத்தின் நிழலின்கீழ் அமர்ந்துள்ள குமாரக்கடவுளே என்று தினந்தோறும் அன்புற்று அன்போடு துதிக்கும் அடியார்களின் நிதியே, வீராவேசக் கூக்குரலிடும் சூரனின் பருத்த முடிகள் யாவும் குடைந்தெடுத்து வளைத்த வேலை அவ்விடத்தில் செலுத்தியவனே, காய்ந்த செத்தையும் மிகுத்து எரியும் நெருப்பின் முன்பு ஒன்றுமே இல்லாது வெந்து போகும் வகைபோல, தம்மை அணுகாது விலகிப்போகும்படி வினைகளைப் பொடிபடச் செய்யும் நல்வழிகளையே உட்கொள்ளும் ஞானத் தவசீலர்கள் சேர்ந்துள்ள சுவாமிமலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 205 - சுவாமி மலை
ராகம் - அடாணா; தாளம் - அங்கதாளம் - 5 1/2 தகதிமி-2, தகதிமி-2, தகிட-1 1/2

தனதன தனந்த தான தனதன தனந்த தான     தனதன தனந்த தான ...... தனதான

இருவினை புனைந்து ஞான விழிமுனை திறந்து நோயி     னிருவினை யிடைந்து போக ...... மலமூட 
விருளற விளங்கி யாறு முகமொடு கலந்து பேத     மிலையென இரண்டு பேரு ...... மழகான 
பரிமள சுகந்த வீத மயமென மகிழ்ந்து தேவர்     பணியவிண் மடந்தை பாத ...... மலர்தூவப் 
பரிவுகொ டநந்த கோடி முநிவர்கள் புகழ்ந்து பாட     பருமயி லுடன்கு லாவி ...... வரவேணும் 
அரியய னறிந்தி டாத அடியிணை சிவந்த பாதம்     அடியென விளங்கி யாடு ...... நடராஜன் 
அழலுறு மிரும்பின் மேனி மகிழ்மர கதம்பெ ணாகம்     அயலணி சிவன்பு ராரி ...... யருள்சேயே 
மருவலர் கள்திண்ப ணார முடியுடல் நடுங்க ஆவி     மறலியுண வென்ற வேலை ...... யுடையோனே 
வளைகுல மலங்கு காவி ரியின்வட புறஞ்சு வாமி     மலைமிசை விளங்கு தேவர் ...... பெருமாளே.

அடியேன் அரும் பெரும் செயலாகிய சிவ யோகத்தை மேற்கொண்டு, அறிவுக் கண்ணாகும் நெற்றியிலுள்ள சுழிமுனை திறக்கப் பெற்று, பிறவிப் பிணிக்குக் காரணமான நல்வினை, தீவினை இரண்டும் பிரிந்து ஓடிப்போகவும், ஆணவ மலமாகிய இருள் தேய்ந்து அதனால் மெய்ஞ்ஞான ஒளி வீசவும், உன் ஆறு திருமுகங்களின் அருட்பெருக்கில் கலப்புற்று, பரமாத்மாவாகிய நீயும் ஜீவாத்மாவாகிய நானும் இரண்டறக் கலந்து ஒன்றாகி, அழகிய வாசமிக்க மலரும் அதன் நறுமணமும் போல ஒன்றி பேரின்பமுற்று, தேவர்கள் வணங்கவும், தேவலோக மங்கையர் திருவடிகளில் மலர் தூவவும், மிக்க அன்போடு எண்ணிலாத பல்கோடி முநிவர்கள் புகழ்ந்து பாடவும், பெரிய மயில் வாகனத்தில் ஏறி உல்லாசமுடன் நீ வரவேண்டும். நாராயணனும் பிரமனும் தேடித் தேடிக் காண முடியாத திருவடிகளாம் செந்நிறம் பொருந்திய பாதங்களே உலகங்களுக்கு முதன்மையானவை என்று அருட்பெரும் ஜோதியாக ஆனந்தத் தாண்டவம் புரியும் நடராஜப் பெருமானும், நெருப்பில் இட்டு மிக ஒளிரும் இரும்பைப் போன்ற செம்மேனியைக் கண்டு மகிழ்ச்சி அடையும் மரகதமேனிப் பார்வதியை அருகில் அமர்த்திய சிவனுமாகிய திரிபுராந்தகன் பெற்றருளிய திருப் புதல்வனே, பகைவராகிய அசுரர்களின் வலிமையான, அலங்கார ஆரமணிந்த தலைகள், உடல்கள் அச்சத்தில் நடுங்க, அவர்களது உயிரை யமன் உண்ண, வெற்றி பெற்ற வேலை உடையவனே, சங்குக் கூட்டங்கள் ஒளி வீசும் காவிரி நதியின் வடபுறத்தில் சுவாமிமலை என்ற திருவேரகத்தில் விளங்கும், தேவர்களுக்கெல்லாம் பெருமாளே. 

பாடல் 205 - சுவாமி மலை
ராகம் - அடாணா; தாளம் - அங்கதாளம் - 5 1/2 தகதிமி-2, தகதிமி-2, தகிட-1 1/2

தந்தத் தனதன தனதன தனதன     தந்தத் தனதன தனதன தனதன          தந்தத் தனதன தனதன தனதன ...... தனதான

எந்தத் திகையினு மலையினு முவரியி     னெந்தப் படியினு முகடினு முளபல          எந்தச் சடலமு முயிரியை பிறவியி ...... னுழலாதே 
இந்தச் சடமுட னுயிர்நிலை பெறநளி     னம்பொற் கழலிணை களில்மரு மலர்கொடு          என்சித் தமுமன முருகிநல் சுருதியின் ...... முறையோடே 
சந்தித் தரஹர சிவசிவ சரணென     கும்பிட் டிணையடி யவையென தலைமிசை          தங்கப் புளகித மெழஇரு விழிபுனல் ...... குதிபாயச் 
சம்பைக் கொடியிடை விபுதையி னழகுமு     னந்தத் திருநட மிடுசர ணழகுற          சந்தச் சபைதனி லெனதுள முருகவும் ...... வருவாயே 
தொந்தத் திகுகுட தகுகுட டிமிடிமி     தந்தத் தனதன டுடுடுடு டமடம          துங்கத் திசைமலை யுவரியு மறுகச ...... லரிபேரி 
துன்றச் சிலைமணி கலகல கலினென     சிந்தச் சுரர்மல ரயன்மறை புகழ்தர          துன்புற் றவுணர்கள் நமனுல குறவிடு ...... மயில்வேலா 
கந்தச் சடைமுடி கனல்வடி வடலணி     யெந்தைக் குயிரெனு மலைமகள் மரகத          கந்தப் பரிமள தனகிரி யுமையரு ...... ளிளையோனே 
கஞ்சப் பதமிவர் திருமகள் குலமகள்     அம்பொற் கொடியிடை புணரரி மருகநல்          கந்தப் பொழில்திகழ் குருமலை மருவிய ...... பெருமாளே.

எந்தத் திசையிலும், மலையிலும், கடலின் கரையில் உள்ள எந்தப் பூமியிலும், வீட்டுக் கூரையிலும், வசிக்கும் பலவகையான எந்த உயிரோடு சார்ந்த பிறப்புக்களிலும் நான் மீண்டும் உழன்று திரியாமல், இந்த உடலில் இருக்கும்பொழுதே என் உயிர் நிலைபெறுவதற்காக, தாமரை போன்ற அழகிய உனது திருவடிகளில் மணமுள்ள மலர் கொண்டு, என் சித்தமும், மனமும் உருகி சிறந்த வேதங்களில் சொல்லப்பட்ட முறைப்படி உன்னைச் சந்தித்து, ஹரஹர, சிவசிவ, சரணம் என்று நான் கும்பிட்டு, உன் இணை அடிகள் என் தலைமிசை பொருந்த, என் உடல் புளகாங்கிதம் அடைய, என் இரு கண்களிலும் ஆனந்தக் கண்ணீர் அருவி போல் குதித்துப் பாய, மின்னற் கொடி போன்ற இடையுடைய தேவதையாம் தேவயானையின் அழகு முன்னே விளங்க, திரு நடனம் இடும் உன் திருவடிகள் அழகுடன் பொலிய, இந்த அழகான சபையில் எனது உள்ளம் உருகுமாறு வந்தருள்வாயாக. தொந்தத் திகுகுட தகுகுட டிமிடிமி தந்தத் தனதன டுடுடுடு டமடம என்ற தாளத்துக்கு உயர்ந்த திசைகளும், மலைகளும், கடல்களும் கலங்கும்படியாக சல்லரியும் (ஜாலரா), பேரி என்ற கொட்டும் நெருங்கி ஒலிக்க, முழங்கும் மணி கலகல கலினென சப்திக்க, தேவர்கள் மலர் மாரி பொழிய, பிரமன் வேதம் ஓதிப் புகழ, அசுரர்கள் துன்பம் அடைந்து யமன் உலகை அடையுமாறு செலுத்திய கூரிய வேலாயுதனே, வாசமிக்க ஜடாமுடியையும், நெருப்புப் போன்ற நிறமுள்ள உருவத்தையும், வெற்றியையும் கொண்ட எம் தந்தையாம் சிவபிரானுக்கு உயிர் போன்ற மலைமகள், மரகதப் பச்சை வடிவழகி, சந்தன மணம் வீசு மார்பினை உடையவளாகிய உமாதேவி அருளிய இளையவனே, தாமரை மலர்ப் பீடத்தில் ஏறி அமர்ந்துள்ள திருமகள், குலமகள், அழகிய பொற்கொடி போன்ற இடையை உடைய லக்ஷ்மி தேவியை மணந்துள்ள திருமாலின் மருகனே, நறுமணம் வீசும் சோலைகள் விளங்கும் குருமலை என்ற சுவாமிமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.

பாடல் 207 - சுவாமி மலை
ராகம் - சக்ரவாஹம்; தாளம் - அங்கதாளம் - 8 1/2 தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகதிமி-2

தனதனன தனதனன தான தந்தனம்     தனதனன தனதனன தான தந்தனம்          தனதனன தனதனன தான தந்தனம் ...... தனதான

ஒருவரையு மொருவரறி யாம லுந்திரிந்     திருவினையி னிடர்கலியொ டாடி நொந்துநொந்          துலையிலிடு மெழுகதென வாடி முன்செய்வஞ் ...... சனையாலே 
ஒளிபெறவெ யெழுபுமர பாவை துன்றிடுங்     கயிறுவித மெனமருவி யாடி விண்பறிந்          தொளிருமின லுருவதென வோடி யங்கம்வெந் ...... திடுவேனைக் 
கருதியொரு பரமபொரு ளீது என்றுஎன்     செவியிணையி னருளியுரு வாகி வந்தஎன்          கருவினையொ டருமலமு நீறு கண்டுதண் ...... டருமாமென் 
கருணைபொழி கமலமுக மாறு மிந்துளந்     தொடைமகுட முடியுமொளிர் நூபு ரஞ்சரண்          கலகலென மயிலின்மிசை யேறி வந்துகந் ...... தெனையாள்வாய் 
திரிபுரமு மதனுடலு நீறு கண்டவன்     தருணமழ விடையனட ராஜ னெங்கணுந்          திகழருண கிரிசொருப னாதி யந்தமங் ...... கறியாத 
சிவயநம நமசிவய கார ணன்சுரந்     தமுதமதை யருளியெமை யாளு மெந்தைதன்          திருவுருவின் மகிழெனது தாய்ப யந்திடும் ...... புதல்வோனே 
குருகுகொடி யுடன்மயிலி லேறி மந்தரம்     புவனகிரி சுழலமறை யாயி ரங்களுங்          குமரகுரு வெனவலிய சேட னஞ்சவந் ...... திடுவோனே 
குறமகளி னிடைதுவள பாத செஞ்சிலம்     பொலியவொரு சசிமகளொ டேக லந்துதிண்          குருமலையின் மருவுகுரு நாத வும்பர்தம் ...... பெருமாளே.

ஒருவர் போவது ஒருவருக்குத் தெரியாதவண்ணம் (பொது மகளிர் வீட்டைத் தேடித்) திரிந்து, நல்வினை தீவினை என்னும் இரு வினை காரணமாய்த் துன்பமும் கலக்கமும் அடைந்து, மனம் வேதனைப்பட்டு, தீ அடுப்பில் இட்ட மெழுகுபோல வாட்டமுற்று, முற்பிறப்பில் செய்த வஞ்சனைகளின் பயனாக, பெருமையுடன் விளங்கி எழுந்து (பொம்மலாட்டத்தில்) மரப் பாவையைக் கட்டியிருக்கும் கயிற்றின் இழுப்பிற்குத் தக்க பல ஆட்டங்களை ஆடி, வானத்தில் வெளிப்பட்டு ஒளி வீசும் மின்னலின் உருவுபோல வெட்டென ஓடி உடல் வெந்து போய் மறைகின்ற என்னையும், அடியாருள் ஒருவனாக எண்ணி, ஒப்பற்ற பரம் பொருள் இதுதான் என்று என்னுடைய இரண்டு காதுகளிலும் உபதேசித்து அருள் செய்து, இம்மனித உருவில் கொண்டுவந்துள்ள என் பிறப்பு வினையையும் அரிதான மும்மலங்களையும் பொடியாக்கி, குளிர்ச்சியைத் தருவதும், பெருமையும் மென்மையும் கொண்டு கருணையைப் பொழிகின்றதுமான தாமரை மலர் போன்ற ஆறு முகங்களும், கடப்ப மாலையும், இரத்தின மணி மகுடங்களும், ஒளி பொருந்திய பாதங்களில் அணிந்துள்ள சிலம்புகள் கலகல என்று ஒலிக்க, மயிலின் மேல் ஏறி வந்து, மகிழ்வுடன் என்னை ஆண்டருள்க. முப்புரங்களையும், மன்மதனுடைய உடலையும் எரித்துச் சாம்பலாக்கியவரும், மிகவும் இளமை வாய்ந்த ரிஷபத்தை வாகனமாகக் கொண்டவரும், (சிதம்பரத்தில் பொற்சபையில்) ஆனந்தத் தாண்டவம் புரிந்த நடராஜரும், அங்கிங்கு எனாதபடி எங்கும் விளங்கி, ஒளி வீசும் சிவந்த மலை உருவம் கொண்டவரும், முதலும் முடிவும் அந்த அருண கிரியில் மாலும் பிரமனும் அறிய முடியாத சிவாயநம என்னும் ஐந்தெழுத்தின் மூல காரணப் பொருளானவரும், (அந்த மந்திரத்தைச் சொன்னால்) ஊறும் ஞான அமுதத்தைத் தந்தருளி நம்மை ஆண்டவருமான எந்தை சிவபெருமானது திரு உருவின் இடது பாகத்தில் இருந்து மகிழும் என் தாயாகிய உமா தேவி அருளிய மகனே, சேவற் கொடியுடன் மயிலின் மீது ஏறி, மந்தர மலை முதலாக உலகின் எல்லா மலைகளும் சுழலவும், எண்ணிலா வேதங்களும் குமர குரு என்று ஒலிக்கவும், வலிமை பொருந்திய ஆதி சேஷன் பயப்படும்படியாகவும் வலம் வருபவனே, வள்ளிநாயகியின் இடை துவளவும், பாதங்களில் அணிந்த செம்மை வாய்ந்த சிலம்புகள் சப்தம் செய்ய, ஒப்பற்ற இந்திராணியின் மகளான தேவயானையோடு கலந்து, வலிமையுள்ள சுவாமிமலையில் வீற்றிருக்கும் குருநாதனே, தேவர்களின் பெருமாளே. 

பாடல் 208 - சுவாமி மலை
ராகம் - மோஹனம்; தாளம் - திஸ்ர்ருபகம் - 5

தனாதனன தானம் தனாதனன தானம்     தனாதனன தானம் ...... தனதான

கடாவினிடை வீரங் கெடாமலினி தேறுங்     கடாவினிக ராகுஞ் ...... சமனாருங் 
கடாவிவிடு தூதன் கெடாதவழி போலுங்     கனாவில்விளை யாடுங் ...... கதைபோலும் 
இடாதுபல தேடுங் கிராதர்பொருள் போலிங்     கிராமலுயிர் கோலிங் ...... கிதமாகும் 
இதாமெனிரு போதுஞ் சதாவின்மொழி யாலின்     றியானுமுனை யோதும் ...... படிபாராய் 
விடாதுநட நாளும் பிடாரியுட னாடும்     வியாகரண ஈசன் ...... பெருவாழ்வே 
விகாரமுறு சூரன் பகாரமுயிர் வாழ்வும்     விநாசமுற வேலங் ...... கெறிவோனே 
தொடாதுநெடு தூரந் தடாதுமிக வோடுஞ்     சுவாசமது தானைம் ...... புலனோடுஞ் 
சுபானமுறு ஞானந் தபோதனர்கள் சேருஞ்     சுவாமிமலை வாழும் ...... பெருமாளே.

எருமைக்கடா வாகனத்தின் மேல் தனது வீரம் குன்றாமல் விரும்பி ஏறும், கடாவைப் போன்ற முரட்டு யமனும் கட்டளை இட்டு ஏவிவிட்ட யமதூதன் தவறாமல் சரியான வழியில் வந்து உயிரைப் பற்றுதல் போலும், கனவில் தோன்றிய விளையாட்டு விழித்தால் மறப்பது போலும், கொடுக்காமல் பலப்பல தேடும் கொடியவர் பொருள் போலும், இவ்வுலகில் நிலைத்து நிற்காதவண்ணம் உயிர் பறி போகிற சுகம்தான் இந்த வாழ்க்கையென்று உணர்ந்து, காலையும் மாலையும் மற்றும் எப்போதும் நல்வார்த்தைகளால் இன்று அடியேனும் உன்னைத் துதிக்க கண்பார்த்தருள்வாய். எந்நாளும் விடாமல் நடனத்தை காளியுடன் ஆடுகின்ற நாட்டிய இலக்கண நிபுணனாம் சிவபெருமான் பெற்ற பெரும் செல்வமே, மாறுபட்ட குணமுடைய சூரனின் பகட்டான வாழ்வும் உயிரும் அழியும்படியாக அவ்விடத்தில் வேலாயுதத்தை விடுத்தவனே, தொட முடியாத காற்றாகவும், நெடுந்தூரம் தடைபடாமல் விடாமல் ஓடுகின்றதுமான பிராணவாயுவையும், ஐந்து புலன்களையும் நன்றாக யோகமுறையால் உள்ளே அடக்கவல்ல ஞானத் தவசிகள் கூடுகின்ற சுவாமிமலையில் எழுந்தருளியுள்ள பெருமாளே. 

பாடல் 209 - சுவாமி மலை
ராகம் - கமாஸ், தாளம் - அங்கதாளம் - 5 1/2 
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2

தனனா தனத்த தந்த தனனா தனத்த தந்த     தனனா தனத்த தந்த ...... தனதான

கடிமா மலர்க்கு ளின்ப முளவேரி கக்கு நண்பு     தருமா கடப்ப மைந்த ...... தொடைமாலை 
கனமேரு வொத்தி டும்ப னிருமாபு யத்த ணிந்த     கருணா கரப்ர சண்ட ...... கதிர்வேலா 
வடிவார் குறத்தி தன்பொ னடிமீது நித்த முந்தண்     முடியான துற்று கந்து ...... பணிவோனே 
வளவாய்மை சொற்ப்ர பந்த முளகீர னுக்கு கந்து     மலர்வாயி லக்க ணங்க ...... ளியல்போதி 
அடிமோனை சொற்கி ணங்க வுலகாமு வப்ப என்று     னருளால ளிக்கு கந்த ...... பெரியோனே 
அடியேனு ரைத்த புன்சொ லதுமீது நித்த முந்த     ணருளே தழைத்து கந்து ...... வரவேணும் 
செடிநேரு டற்கு டம்பை தனின்மேவி யுற்றி டிந்த     படிதான லக்க ணிங்க ...... ணுறலாமோ 
திறமாத வர்க்க னிந்து னிருபாத பத்ம முய்ந்த     திருவேர கத்த மர்ந்த ...... பெருமாளே.

வாசனை மிகுந்த மலருள் மிக இனிப்பான தேனைச் சொட்டுவதும், அன்பைப் பொழிவதுமான சிறப்பான கடப்ப மலரால் நெருக்கமாகத் தொடுக்கப்பட்ட பூமாலையை, பெருமைவாய்ந்த மேரு மலையைப் போன்ற பன்னிரு சிறந்த புயங்களின் மீது அணிந்துள்ள கருணாகரனே, கடுமையும் ஒளியும் கொண்ட வேலை உடையவனே, அழகு நிறைந்த குறத்தியாம் வள்ளியின் திருவடி மீது தினந்தோறும் உனது குளிர்ந்த முடியானது பொருந்தும்படியாகப் படிந்து மகிழ்பவனே, வளப்பமும் மெய்ம்மையும் வாய்ந்த தேர்ச்சியான சொற்களை வைத்து நூல்கள் இயற்றவல்ல நக்கீரனுக்கு விருப்பமுடன் உன் மலர் வாயால் இலக்கண நயங்களை எடுத்துரைத்து, அடி, மோனை சொல்லுக்குப் பொருந்த உலகம் உவப்ப* என்ற அடி எடுத்துக் கொடுத்து, உன் அருள் வாக்கால் மகிழ்ந்து கூறிய பெரியவனே, யான் சொல்லுகின்ற இந்தப் புல்லிய சொற்கள் மீதும் தினமும் குளிர்ந்த உன் திருவருளைப் பாலித்து நீ மகிழ்ச்சியுடன் வரவேண்டும். பாவம் நிறைந்த இந்த உடல் என்னும் கூட்டிலே பொருந்தி இருக்கும் இந்த வகையிலே துன்பங்களை யான் இவ்வுலகில் அனுபவித்தல் தகுமோ? திறம் வாய்ந்த மகா தவசிகள் மனம் கனிந்து உன்னிரு பாத கமலங்களால் ஈடேறப்பெற்ற திருவேரகமாம் சுவாமிமலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* நக்கீரருக்கு திருமுருகாற்றுப்படை நூலை இயற்றுமுன்பு, முருகன் 'உலகம் உவப்ப' என்ற முதலடியை எடுத்துக் கொடுத்தான். இங்கு சந்தத்துக்காக 'உலகாம்' என்ற வார்த்தையை உபயோகித்துள்ளார்.

பாடல் 210 - சுவாமி மலை
ராகம் - ....; தாளம் -

தனதனன தந்த தான தனதனன தந்த தான     தனதனன தந்த தான ...... தனதான

கதிரவனெ ழுந்து லாவு திசையளவு கண்டு மோது     கடலளவு கண்டு மாய ...... மருளாலே 
கணபணபு யங்க ராஜன் முடியளவு கண்டு தாள்கள்     கவினறந டந்து தேயும் ...... வகையேபோய் 
இதமிதமி தென்று நாளு மருகருகி ருந்து கூடு     மிடமிடமி தென்று சோர்வு ...... படையாதே 
இசையொடுபு கழந்த போது நழுவியப்ர சண்டர் வாச     லிரவுபகல் சென்று வாடி ...... யுழல்வேனோ 
மதுகரமி டைந்து வேரி தருநறவ முண்டு பூக     மலர்வளநி றைந்த பாளை ...... மலரூடே 
வகைவகையெ ழுந்த சாம வதிமறைவி யந்து பாட     மதிநிழலி டுஞ்சு வாமி ...... மலைவாழ்வே 
அதிரவரு சண்ட வாயு வெனவருக ருங்க லாப     அணிமயில்வி ரும்பி யேறு ...... மிளையோனே 
அடைவொடுல கங்கள் யாவு முதவிநிலை கண்ட பாவை     அருள்புதல்வ அண்ட ராஜர் ...... பெருமாளே.

சூரியன் உதித்துச் செல்லும் எல்லை அளவைச் சென்று கண்டும், மோதும் அலைகளை உடைய கடலின் எல்லை அளவைப் போய்க் கண்டும், உலக மாயை என்னும் மயக்கத்தால், கூட்டமான படங்களை உடைய பாம்பு அரசனாகிய ஆதி சேஷனின் எல்லை அளவைப் போய்க் கண்டும், கால்கள் எங்கெங்கும் அலைந்து என் அழகு குலைய நடந்து தேயுமாறு அங்கங்கே சென்று, இது நல்ல இடம் என்று எண்ணி லோபிகளுடைய சமீபத்தில் அணுகிச் சேர்ந்து, இதுதான் சரியான இடம் என்று எண்ணி மனத் தளர்ச்சி கொள்ளாமல், இசைப் பாட்டுக்களாலும் உரையாலும் புகழ்ந்து நின்ற போது, அந்த இடத்தை விட்டு வெளியே நழுவும் பெரிய பிரமுகர்களின் வீட்டு வாசலில் இரவும் பகலும் சென்று நான் வாடித் திரியலாமோ? வண்டுகள் நிறைந்து வாசனை வீசும் தேனை உண்டு, கமுக மரத்தில் பூவின் வளப்பம் உள்ள பாளை மலர்களின் இடையே இனம் இனமாக எழுந்து சாமம் என்னும் சிறந்த வேதத்தை வியக்கத்தக்க முறையில் பாட, சந்திரனின் தண்மையைத் தரும் சுவாமிமலையாகிய திருவேரகத்தில் வாழும் செல்வமே, உலகம் எல்லாம் திர்ச்சி கொள்ள வீசுகின்ற பெருங்காற்று என்று சொல்லும்படியாக வருகின்ற, நீல நிறங்கொண்ட தோகையை உடைய, அழகான மயிலில் விரும்பி ஏறும் இளையவனே, முறையாக எல்லா உலகங்களையும் படைத்து, அவற்றை நிலைத்திருக்கச் செய்த பார்வதி தேவி அருளிய மகனே, தேவர்களின் பெருமாளே. 

பாடல் 211 - சுவாமி மலை
ராகம் - யமுனா கல்யாணி; தாளம் - அங்கதாளம் தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகதிமி-2

தனதனன தந்த தானனத்     தனதனன தந்த தானனத்          தனதனன தந்த தானனத் தனதான

கறைபடுமு டம்பி ராதெனக்     கருதுதலொ ழிந்து வாயுவைக்          கருமவச னங்க ளால்மறித் ...... தனலூதிக் 
கவலைபடு கின்ற யோககற்     பனைமருவு சிந்தை போய்விடக்          கலகமிடு மஞ்சும் வேரறச் ...... செயல்மாளக் 
குறைவறநி றைந்த மோனநிர்க்     குணமதுபொ ருந்தி வீடுறக்          குருமலைவி ளங்கு ஞானசற் ...... குருநாதா 
குமரசர ணென்று கூதளப்     புதுமலர்சொ ரிந்து கோமளப்          பதயுகள புண்ட ¡£கமுற் ...... றுணர்வேனோ 
சிறைதளைவி ளங்கு பேர்முடிப்     புயலுடன டங்க வேபிழைத்          திமையவர்கள் தங்க ளூர்புகச் ...... சமராடித் 
திமிரமிகு சிந்து வாய்விடச்     சிகரிகளும் வெந்து நீறெழத்          திகிரிகொள நந்த சூடிகைத் ...... திருமாலும் 
பிறைமவுலி மைந்த கோவெனப்     பிரமனைமு னிந்து காவலிட்          டொருநொடியில் மண்டு சூரனைப் ...... பொருதேறிப் 
பெருகுமத கும்ப லாளிதக்     கரியெனப்ர சண்ட வாரணப்          பிடிதனைம ணந்த சேவகப் ...... பெருமாளே.

குற்றங்களுக்கு இடமான உடல் நிலைத்து நிற்காது என்று எண்ணுதலை விட்டு, (அவ்வுடல் நிலைத்து நிற்கச் செய்ய விரும்பி) உள் இழுக்கும் வாயுவை தொழில்* மந்திரங்களால் தடுத்து நிறுத்தி, மூலாக்கினியை எழுப்பி, கவலைக்கு இடம் தருகின்ற யோக மார்க்கப் பயிற்சிகளைப் பற்றி எண்ணும் சிந்தனைகள் தொலையவும், கலக்கத்தைத் தரும் ஐம்புலன்களும் ஒடுங்கி வேரற்றுப் போகவும், என் செயல்கள் எல்லாம் அழியவும், குறைவின்றி நிறைந்ததான மவுன நிலையை, குணங்கள் அற்ற நிலையை, நான் அடைந்து வீட்டின்பத்தைப் பெறவும், (அதற்காக) சுவாமி மலையில் விளங்கி வீற்றிருக்கும் ஞான சற் குரு நாதனே, குமரனே, சரணம் என்று கூதளச் செடியின் புது மலரைச் சொரிந்து, (உனது) அழகிய இரண்டு திருவடித் தாமரைகளைச் சிந்தித்து உன்னை உணர்வேனோ? சிறையும் விலங்குமாய்க் கிடந்து விளங்கியவர்களான தேவர்கள் இந்திரன் முதலான யாவரும் ஒருங்கே பிழைக்கவும், தேவர்கள் தங்கள் ஊராகிய (அமராவதி என்ற) பொன்னுலகில் குடி போகவும், போரைப் புரிந்து, இருள் மிகுந்த கடல் ஓலமிட, மலைகள் வெந்து பொடியாக, (சுதர்ஸன) சக்கரத்தை ஏந்தியவரும் பொன்முடியைத் தரித்தவரும் ஆகிய திருமாலும், பிறைச் சந்திரனை முடியில் சூடிய சிவபெருமானின் மைந்தனே, (சூரனை அழித்தருளுக என்று) இரங்கி வேண்ட, பிரமனைக் கோபித்துச் சிறையிட்டு, ஒரு நொடிப் பொழுதில் நெருங்கி எதிர்த்த சூரனுடன் சண்டை செய்து வென்று, பெருகி வருகின்ற மத நீருள்ள மத்தகத்தையும், அழகையும் கொண்ட யானை எனப்படும் வீரம் கொண்ட (ஐராவதம் என்னும்) வெள்ளை யானையால் வளர்க்கப்பட்ட தேவயானையை மணம் புரிந்த வலிமை வாய்ந்த பெருமாளே. 
* தொழில் மந்திரங்கள் ஆகர்ஷண, ஸ்தம்பநாதி மந்திரங்கள் ஆகும். இவற்றை கர்மயோகிகள் மேற்கொள்வர்.

பாடல் 212 - சுவாமி மலை
ராகம் - பீம்பளாஸ்; தாளம் - ஆதி

தானனத் தனந்த ...... தனதான     தானனத் தனந்த ...... தனதான

காமியத் தழுந்தி ...... யிளையாதே     காலர்கைப் படிந்து ...... மடியாதே 
ஓமெழுத்தி லன்பு ...... மிகவூறி     ஓவியத்தி லந்த ...... மருள்வாயே 
தூமமேய்க் கணிந்த ...... சுகலீலா     சூரனைக் கடிந்த ...... கதிர்வேலா 
ஏமவெற் புயர்ந்த ...... மயில்வீரா     ஏரகத் தமர்ந்த ...... பெருமாளே.

ஆசைப்படும் பொருள்களில் அழுந்தி ஈடுபட்டு மெலிந்து போகாமல், யம தூதர்களின் கைகளிற் சிக்கி இறந்து போகாமல், ஓம் என்னும் பிரணவப் பொருளில் ஈடுபாடு மிகவும் ஏற்பட்டு, யான் சித்திரம் போன்ற மோன நிலை முடிவை (அடைய) அருள்வாயாக. வாசனைப் புகையை மேனியில் அணிந்துள்ள சுகமான லீலைகளைப் புரியும் பெருமானே, சூர சம்ஹாரம் செய்த ஒளி வேலனே, பொன்மலையைப் போலச் சிறந்த மயிலில் ஏறும் வீரனே, திருவேரகம் என்ற சுவாமிமலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 213 - சுவாமி மலை
ராகம் - ....; தாளம் -

தனதனன தனதனன தனனா தனத்ததன     தனதனன தனதனன தனனா தனத்ததன          தனதனன தனதனன தனனா தனத்ததன ...... தனதான

குமரகுரு பரமுருக குகனே குறச்சிறுமி     கணவசர வணநிருதர் கலகா பிறைச்சடையர்          குருவெனந லுரையுதவு மயிலா எனத்தினமு ...... முருகாதே 
குயில்மொழிநன் மடவியர்கள் விழியா லுருக்குபவர்     தெருவிலந வரதமன மெனவே நடப்பர்நகை          கொளுமவர்க ளுடைமைமன முடனே பறிப்பவர்க ...... ளனைவோரும் 
தமதுவச முறவசிய முகமே மினுக்கியர்கள்     முலையிலுறு துகில்சரிய நடுவீ திநிற்பவர்கள்          தனமிலியர் மனமுறிய நழுவா வுழப்பியர்கண் ...... வலையாலே 
சதிசெய்தவ ரவர்மகிழ அணைமீ துருக்கியர்கள்     வசமொழுகி யவரடிமை யெனமா தரிட்டதொழில்          தனிலுழலு மசடனையு னடியே வழுத்தஅருள் ...... தருவாயே 
சமரமொடு மசுரர்படை களமீ தெதிர்த்தபொழு     தொருநொடியி லவர்கள்படை கெடவே லெடுத்தவனி          தனில்நிருதர் சிரமுருள ரணதூள் படுத்திவிடு ...... செருமீதே 
தவனமொடு மலகைநட மிடவீ ரபத்திரர்க     ளதிரநிண மொடுகுருதி குடிகா ளிகொக்கரிசெய்          தசையுணவு தனின்மகிழ விடுபேய் நிரைத்திரள்கள் ...... பலகோடி 
திமிதமிட நரிகொடிகள் கழுகா டரத்தவெறி     வயிரவர்கள் சுழலவொரு தனியா யுதத்தைவிடு          திமிரதிந கரஅமரர் பதிவாழ் வுபெற்றுலவு ...... முருகோனே 
திருமருவு புயனயனொ டயிரா வதக்குரிசி     லடிபரவு பழநிமலை கதிர்கா மமுற்றுவளர்          சிவசமய அறுமுகவ திருவே ரகத்திலுறை ...... பெருமாளே.

குமரனே, குருவான மேலோனே, முருகனே, குகனே, குறப் பெண்ணாகிய வள்ளியின் கணவனே, சரவணனே, அசுரர்களைக் கலக்கியவனே, பிறைச் சந்திரனை அணிந்த சிவபெருமானுடைய குருவாக அமைந்து சிறந்த உபதேச மொழியைப் போதித்த மயில் வாகனனே, எனக் கூறி நாள் தோறும் நான் மனம் உருகாமல் குயிலைப் போன்ற பேச்சுக்களை உடைய அழகிய விலை மகளிர், கண் பார்வையால் மனதை உருக்குபவர்கள், தெருவில் எப்போதும் அன்னம் போல நடப்பவர்கள், (தம்மைப்) பார்த்து மகிழ்பவர்களுடைய பொருளையும் மனதையும் உடனே அபகரிப்பவர்கள், யாவரும் தமது வசத்தில் அகப்படும்படி வசீகரித்து முகத்தை மினுக்குபவர்கள், (வேண்டுமென்றே) மார்பகங்கள் மீதுள்ள துணியைச் சரிய விட்டு நடுத் தெருவில் நிற்பவர்கள், பொருள் இல்லாது தம்மிடம் வருபவர்களுடைய மனம் புண்படுமாறு நழுவியும் மழுப்பியும் செல்பவர்கள், கண் வலையால் (அவர்களுக்கு) வஞ்சனை செய்தும், அவரவர் கொடுத்த பொருளுக்குத் தக்கபடி மகிழ்ச்சியுற படுக்கையில் உருக்குபவர்கள், ஆகிய விலைமாதர்களின் வசத்தே ஒழுகி, அவர்களின் அடிமையைப் போல அந்த மாதர்கள் இட்ட தொழிலில் திரிந்து உழலும் முட்டாளாகிய என்னை உனது திருவடியைப் போற்றும்படியான திருவருளைத் தந்து அருளுக. போர் செய்யக் கருதி அசுரர்களின் சேனை போர்க்களத்தில் எதிர்த்து வந்து போது, ஒரு நொடிப் பொழுதில் அவர்களுடைய சேனை அழிய வேலாயுதத்தைச் செலுத்தி, பூமியில் அசுரர்களுடைய தலைகள் உருண்டு விழும்படி தூள்படுத்திவிட்ட போர்க்களத்தில் தாகத்துடன் பேய்கள் கூத்தாடவும், வீரபத்திரர்கள் (சிவ கணங்கள்) ஆரவாரம் செய்யவும், கொழுப்புடன் இரத்தத்தைக் குடிக்கின்ற காளி கொக்கரிக்கவும், சதைகளாகிய உணவில் மகிழ்ச்சி கொள்ளும்படி பேயின் வரிசைக் கூட்டங்கள் பல கோடிக்கணக்கில் பேரொலி எழுப்பவும், நரிகள், காகங்கள், கழுகுகள் இவை கூத்தாடவும், ரத்த வெறி கொண்ட பயிரவர்கள் சுழன்று திரியவும், ஒப்பற்ற வேலாயுதத்தை விட்ட, அஞ்ஞான இருளைப் போக்கும் சூரியனே, தேவர்கள் அரசனான இந்திரன் பொன்னுலகைப் பெற்று உலவ உதவிய முருகோனே. லக்ஷ்மி மருவுகின்ற தோள்களை உடைய திருமாலும், பிரமனும், ஐராவதத்தின் மீது ஏறும் இந்திரனும் வந்து வணங்குகின்ற பழனி மலையிலும், கதிர்காமத்திலும் மேவி விளங்கும் சைவ சமயத்தவனே, ஆறுமுகனே, சுவாமி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 214 - சுவாமி மலை
ராகம் - பிலஹரி; தாளம் - மிஸ்ரசாபு தகிட-1 1/2, தகதிமி-2

தனன தனதன தனன தனதன     தனன தனதன ...... தனதான

குமர குருபர முருக சரவண     குகசண் முககரி ...... பிறகான 
குழக சிவசுத சிவய நமவென     குரவ னருள்குரு ...... மணியேயென் 
றமுத இமையவர் திமிர்த மிடுகட     லதென அநுதின ...... முனையோதும் 
அமலை அடியவர் கொடிய வினைகொடு     மபய மிடுகுர ...... லறியாயோ 
திமிர எழுகட லுலக முறிபட     திசைகள் பொடிபட ...... வருசூரர் 
சிகர முடியுடல் புவியில் விழவுயிர்     திறைகொ டமர்பொரு ...... மயில்வீரா 
நமனை யுயிர்கொளு மழலி னிணைகழல்     நதிகொள் சடையினர் ...... குருநாதா 
நளின குருமலை மருவி யமர்தரு     நவிலு மறைபுகழ் ...... பெருமாளே.

குமரா, குருபரா, முருகா, சரவணா, குகா, சண்முகா, யானைமுகக் கணபதிக்குப் பின்பிறந்த இளையோய், சிவ குமாரனே, சிவாயநம என்னும் பஞ்சாட்சரத்துக்குக் குருவான சிவன் அருளிய குருமணியே என்றெல்லாம், அமிர்தத்தை தேவர்கள் கடைந்திட்ட கடல் ஓசைபோல், நாள்தோறும் உன்னை வாயாரப் பாடி ஆரவாரத்துடன் துதிக்கும் அடியார்கள் தமது கொடிய வினைகள் நீங்குவதற்காக அபயம் என்று ஓலமிடும் குரலொலி உனக்குக் கேட்கவில்லையோ? இருண்ட ஏழு கடல்களும் உலகங்களும் அழிய, எட்டுத்திசைகளும் பொடிபட, போருக்கு வந்த சூரர்களின் குடுமியும் உடலும் விழ, அவர்களின் உயிரைக் கவர்ந்து போரிட்ட வேல் வீரா, யமனின் உயிரை எடுத்த நெருப்பை ஒத்த அடியும்*, கங்கைநதியைத் தாங்கிய சடையும் உடைய சிவனின் குருநாதா, தாமரை நிறைந்த சுவாமிமலையில் பொருந்தி அமர்ந்தோனே, ஓதும் வேதங்கள் புகழும் பெருமாளே. 
* மார்க்கண்டேயனுக்காக யமனது உயிரை சிவபெருமான் காலால் உதைத்து எடுத்த காலபைரவ மூர்த்திக் கோலத்தை திருக்கடையூரில் காணலாம்.

பாடல் 215 - சுவாமி மலை
ராகம் - ....; தாளம் -

தானன தத்தன தத்தன தத்தன     தானன தத்தன தத்தன தத்தன          தானன தத்தன தத்தன தத்தன ...... தனதான

கோமள வெற்பினை யொத்தத னத்தியர்     காமனை யொப்பவர் சித்தமு ருக்கிகள்          கோவையி தழ்க்கனி நித்தமும் விற்பவர் ...... மயில்காடை 
கோகில நற்புற வத்தொடு குக்குட     ஆரணி யப்புள்வ கைக்குரல் கற்றிகல்          கோலவி ழிக்கடை யிட்டும ருட்டிகள் ...... விரகாலே 
தூமம லர்ப்பளி மெத்தைப டுப்பவர்     யாரையு மெத்திம னைக்குள ழைப்பவர்          சோலைவ னக்கிளி யொத்தமொ ழிச்சியர் ...... நெறிகூடா 
தூசுநெ கிழ்த்தரை சுற்றியு டுப்பவர்     காசுப றிக்கம றித்துமு யக்கிகள்          தோதக வித்தைப டித்துந டிப்பவ ...... ருறவாமோ 
மாமர மொத்துவ ரிக்குணெ ருக்கிய     சூரனை வெட்டிநி ணக்குட லைக்கொடி          வாரண மெச்சஅ ளித்தஅ யிற்குக ...... கதிர்காம 
மாமலை யிற்பழ நிப்பதி யிற்றனி     மாகிரி யிற்றணி கைக்கிரி யிற்பர          மாகிரி யிற்றிரை சுற்றிவ ளைத்திடும் ...... அலைவாயில் 
ஏமவெ யிற்பல வெற்பினி னற்பதி     னாலுல கத்தினி லுற்றுறு பத்தர்கள்          ஏதுநி னைத்தது மெத்தஅ ளித்தரு ...... ளிளையோனே 
ஏரக வெற்பெனு மற்புத மிக்கசு     வாமிம லைப்பதி மெச்சிய சித்தஇ          ராஜத லக்ஷண லக்ஷ¥மி பெற்றருள் ...... பெருமாளே.

அழகிய மலை போன்ற மார்பகங்களை உடையவர். காம இச்சை எழுப்புவதில் மன்மதனைப் போன்றவர். மனத்தை உருக்குபவர்கள். கொவ்வைப் பழம் போன்ற வாயிதழை தினந்தோறும் விற்பவர்கள். மயில், காடை என்னும் பறவை, குயில், அழகிய புறாவுடன், கோழி, காட்டுப் பறவைகளின் வகை வகையான குரல்களைக் கற்று அவ்வொலிகளை* வெளிப்படுத்தி, பகைமையைக் காட்டும் அழகிய விழி அம்பைச் செலுத்தி உள்ளத்தை மயக்குபவர்கள். தந்திரத்துடன் நறும் அகில் மணம் கொண்ட மலர்ப் படுக்கையில் மெத்தையில் படுப்பவர்கள். எவரையும் ஏமாற்றி வீட்டுக்குள் அழைப்பவர்கள். சோலையிலுள்ள அழகிய கிளி போன்ற பேச்சினை உடையவர்கள். நன்னெறி பொருந்தாத வகையில் (தமது) ஆடையைத் தளர்த்தி பிறகு இடுப்பில் சுற்றியும் உடுப்பவர். தம்மிடம் வருவோர் பொருளை அபகரிக்க (பல விதத்தில்) இடையிலே விழுந்து சேர்பவர்கள். வஞ்சக வித்தைகளைக் கற்று நடிப்பவர்களாகிய விலைமாதர்களின் உறவு நல்லதாகுமோ? மாமர வடிவைக் கொண்டு கடலுக்குள் நெருக்கி நின்ற சூரனை வெட்டி அழித்து அவனுடைய மாமிசக் குடலை தனது கொடியிலுள்ள அக்கினி** மகிழும்படி கொடுத்த வேலை ஏந்திய குகனே, கதிர்காமம் என்ற சிறந்த மலையிலும், பழனியிலும், தனிச்சயம் என்னும் தலத்திலும், திருத்தணி மலையிலும், திருப்பரங் குன்றம் என்னும் சிறந்த மலையிலும், அலைகள் சூழ்ந்து வளைந்துள்ள அலைவாய் என்கின்ற திருச் செந்தூரிலும், இன்பம் தரும் ஒளி வீசும் பல வேறு மலைகளிலும், நல்ல பதிநான்கு உலகங்களிலும் பொருந்தி இருக்கின்ற பக்தர்கள் எது நினைத்தாலும் அவற்றை நிரம்பக் கொடுத்து அருளும் இளையவனே, திருவேரகம் என்று சொல்லப்படும் அற்புதம் நிறைந்த சுவாமி மலை என்னும் ஊரில் விரும்பி இருக்கின்ற சித்த மூர்த்தியே, ராஜத குணம் நிறைந்தவளாகிய பார்வதி ஈன்றருளின பெருமாளே. 
* புட் குரல்கள் = காமக் கன்னியர் கண்டத்தில் உண்டாகும் எண் வகை ஒலிகள்.மயில், புறா, அன்னம், காடை, நாரை, குயில், கோழி, வண்டு என்பன.
** அக்கினி பகவான் முருகவேளின் தேர்க் கொடியாக அமைந்தான். ஆதலின், சூரன் ஒழிந்தான் என்று அவன் மெச்ச, சூரனின் நிணக் குடல் நெருப்புக்கு இரையாயிற்று எனப் பொருள்படும். சூரன் இறந்த பின்தான் அவனது உடல் மயிலாகவும், சேவலாகவும் பிரிந்து முருகன்வசம் அடைக்கலம் ஆனது. பின்பு முருகனது கொடியில் அக்கினிக்குப் பதிலாக சேவல் வீற்றிருந்தது.

பாடல் 216 - சுவாமி மலை
ராகம் - கல்யாணி; தாளம் - அங்கதாளம் - 5 1/2 - எடுப்பு 1/2 தள்ளி தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2

தனதனன தான தத்த தனதனன தான தத்த     தனதனன தான தத்த ...... தனதான

சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில்     தவமுறைதி யானம் வைக்க ...... அறியாத 
சடகசட மூட மட்டி பவவினையி லேச னித்த     தமியன்மிடி யால்ம யக்க ...... முறுவேனோ 
கருணைபுரி யாதி ருப்ப தெனகுறையி வேளை செப்பு     கயிலைமலை நாதர் பெற்ற ...... குமரோனே 
கடகபுய மீதி ரத்ந மணியணிபொன் மாலே செச்சை     கமழுமண மார்க டப்ப ...... மணிவோனே 
தருணமிதை யாமி குத்த கனமதுறு நீள்ச வுக்ய     சகலசெல்வ யோக மிக்க ...... பெருவாழ்வு 
தகைமைசிவ ஞான முத்தி பரகதியு நீகொ டுத்து     தவிபுரிய வேணு நெய்த்த ...... வடிவேலா 
அருணதள பாத பத்ம மதுநிதமு மேது திக்க     அரியதமிழ் தான ளித்த ...... மயில்வீரா 
அதிசயம நேக முற்ற பழநிமலை மீது தித்த     அழகதிரு வேர கத்தின் ...... முருகோனே.

உனது தாமரை போன்ற திருவடிகளில் அரை நிமிஷ நேர அளவுக்காவது தவ நிலையில் தியானத்தில் வைத்திட அறியாத பொய்யும் குற்றமும் கொண்ட மூடனான மட்டி யான் பிறப்பதே தொழிலாகக் கொண்டு பிறந்துள்ள தன்னம் தனியனான யான் வறுமையால் மயக்கத்தை அடையலாமோ? கருணை காட்டாமல் இருப்பது என்ன குறையைக் கண்டு? இப்பொழுதே சொல்லி அருளவேண்டும் கயிலாயமலை நாதராம் சிவன் பெற்ற குமரனே வீரக் கடகம் அணிந்த புஜத்தின் மீது ரத்னாபரணம், தங்கமாலை, வெட்சிப் பூமாலை வாசனை நிறைந்த கடம்பமாலை இவைகளை அணிந்தவனே தக்க சமயம் இதுதான் ஐயா மிக்க பெருமையைத் தரும் நீடித்த சுகம் எல்லாவித செல்வம், அதிர்ஷ்டம், நிறைந்த பெருவாழ்வு நன்மதிப்பு, சிவஞானம், முக்தியாம் மேலான கதி இவையாவும் நீ கொடுத் (து) உதவி புரிய வேண்டுகின்றேன், பளபளப்பும் கூர்மையும் உடைய வேலனே சிவந்த தாமரையிதழ் போன்ற உன் பாதமதனை தினந்தோறும் நான் துதிப்பதற்கு அருமையான் தமிழ் ஞானத்தை தந்த மயில்வீரனே அதிசயக் கோலங்கள் பல நிறைந்த பழனிமலை மீது விளங்கித் தோன்றும் அழகனே திருவேரகத்து (சுவாமி மலையின்) முருகப்பெருமானே. 

பாடல் 217 - சுவாமி மலை
ராகம் - மாயா மாளவ கெளளை; தாளம் - சதுஸ்ர த்ருவம் கண்ட நடை - 35, எடுப்பு /4/4/4 0 நடை தகிடதக

தத்ததன தத்ததன தத்ததன தத்ததன     தத்ததன தத்ததன தத்ததன தத்ததன          தத்ததன தத்ததன தத்ததன தத்ததன ...... தந்ததான

சுத்தியந ரப்புடனெ லுப்புறுத சைக்குடலொ     டப்புடனி ணச்சளிவ லிப்புடனி ரத்தகுகை          சுக்கிலம் விளைப்புழுவொ டக்கையும ழுக்குமயிர் ...... சங்குமூளை 
துக்கம்விளை வித்தபிணை யற்கறைமு னைப்பெருகு     குட்டமொடு விப்புருதி புற்றெழுதல் முட்டுவலி          துச்சிபிள வைப்பொருமல் பித்தமொடு றக்கமிக ...... வங்கமூடே 
எத்தனைநி னைப்பையும்வி ளைப்பையும யக்கமுற     லெத்தனைச லிப்பொடுக லிப்பையுமி டற்பெருமை          எத்தனைக சத்தையும லத்தையும டைத்தகுடில் ...... பஞ்சபூதம் 
எத்தனைகு லுக்கையுமி னுக்கையும னக்கவலை     யெத்தனைக வட்டையுந டக்கையுமு யிர்க்குழுமல்          எத்தனைபி றப்பையுமி றப்பையுமெ டுத்துலகில் ...... மங்குவேனோ 
தத்தனத னத்தனத னத்தனவெ னத்திமிலை     யொத்தமுர சத்துடியி டக்கைமுழ வுப்பறைகள்          சத்தமறை யத்தொகுதி யொத்தசெனி ரத்தவெள ...... மண்டியோடச் 
சக்கிரிநெ ளிப்பஅவு ணப்பிணமி தப்பமரர்     கைத்தலம்வி ரித்தரஹ ரச்சிவபி ழைத்தொமென          சக்கிரகி ரிச்சுவர்கள் அக்கணமே பக்குவிட ...... வென்றவேலா 
சித்தமதி லெத்தனைசெ கத்தலம்வி தித்துடன     ழித்துகம லத்தனைம ணிக்குடுமி பற்றிமலர்          சித்திரக ரத்தலம்வ லிப்பபல குட்டிநட ...... னங்கொள்வேளே 
செட்டிவடி வைக்கொடுதி னைப்புனம திற்சிறுகு     றப்பெணம ளிக்குள்மகிழ் செட்டிகுரு வெற்பிலுறை          சிற்பரம ருக்கொருகு ருக்களென முத்தர்புகழ் ...... தம்பிரானே.

சுற்றப்பட்டுள்ள நரம்புகளுடன் எலும்பு பொருந்திய மாமிசம், குடல் இவற்றுடன், நீர், கொழுப்பு, (மூக்குச்) சளி, இழுப்பு நோய், இருதயம், இந்திரியம், விளைகின்ற கிருமிகள், எலும்புகள், அழுக்குகள், ரோமம், சங்கு போல் வெளுத்த மூளை, துக்கத்தை விளைவிக்கின்ற சேர்க்கை நோய், மாதவிடாய் முதலிய மாசு, அவயவ நுனிகளில் விருத்தியாகும் குஷ்ட நோய், சிலந்தி, புண் புரை வைத்தல், முட்டு வலி, புசிக்கின்ற ராஜப் புண், வயிறு உப்பும் நோய், பித்தம், தூக்கம் மிகுந்து வர, உடலில் எத்தனை எண்ணங்கள், செய்கைகள், மயக்கங்கள், எத்தனை வெறுப்பும், பொலிவும், வலிமைப் பெருமையும், எத்தனை க்ஷய நோய், மலத்தையும் அடைத்துள்ள ஐந்து பூதத்தாலாகிய உடலிலே, எத்தனை குலுக்கு, எத்தனை மினுக்கு, மனக் கவலை, எத்தனை கபடம், நடவடிக்கை, உயிரின் சேர்க்கை, எத்தனை பிறவிகளையும், மரணங்களையும் எடுத்து (நான்) இவ்வுலகில் வாட்டமுற்று அழிவேனோ? தத்தனத னத்தனத னத்தன என்று பறைகள் ஒலிக்கவும், ஒரு வகைப் பறை, உடுக்கை, இடக் கையால் கொட்டும் தோல் கருவிகள் பேரொலி செய்யவும், கூட்டமாய் வருவதை ஒத்துத் தோன்றிய இரத்த வெள்ளம் நெருங்கி ஓடவும், ஆதிசேஷனாகிய பாம்பு நெளியவும், அசுர்களின் பிணங்கள் (ரத்த வெள்ளத்தில்) மிதக்கவும், தேவர்கள் கைகளைத் தூக்கி, அரஹர சிவ, பிழைத்தோம் என்று முழங்கவும், சக்ரவாளகிரியின் சுவர்கள் அந்தக் கணத்திலேயே பிளவுபடவும், வெற்றி கொண்ட வேலனே, உனது திருவுள்ளத்தில், எத்தனை உலகங்களைப் படைத்து, உடனே அழித்து, தாமரையில் வீற்றிருக்கும் பிரமனின் அழகிய குடுமியைப் பிடித்து (உனது) அழகிய திருக்கரம் வருந்த பல முறை அவனைக் குட்டி நடனம் கொண்ட தலைவனே, செட்டி வேடம் பூண்டு, தினைப்புனத்தில் (வாழும்) சிறிய குறப் பெண்ணாகிய வள்ளியின் படுக்கையில் மகிழும் செட்டியே, சுவாமி மலையில் வீற்றிருக்கும் ஞானமயமான சிவ பெருமானுக்கு ஒப்பற்ற குருமூர்த்தி என்று முக்தி நிலை பெற்ற பெரியோர் புகழ்கின்ற தம்பிரானே. 

பாடல் 218 - சுவாமி மலை
ராகம் - சுநாத விநோதினி, தாளம் - ஆதி - தேசாதி

தனதான தத்த தனதான தத்த     தனதான தத்த ...... தனதான

செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த     திருமாது கெர்ப்ப ...... முடலூறித் 
தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்     திரமாய ளித்த ...... பொருளாகி 
மகவாவி னுச்சி விழியாந நத்தில்     மலைநேர்பு யத்தி ...... லுறவாடி 
மடிமீத டுத்து விளையாடி நித்த     மணிவாயின் முத்தி ...... தரவேணும் 
முகமாய மிட்ட குறமாதி னுக்கு     முலைமேல ணைக்க ...... வருநீதா 
முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்     மொழியேயு ரைத்த ...... குருநாதா 
தகையாதெ னக்கு னடிகாண வைத்த     தனியேர கத்தின் ...... முருகோனே 
தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்     சமர்வேலெ டுத்த ...... பெருமாளே.

இந்த உலக மாயையில் சிக்குண்டு, எனது இல்லற வாழ்வில் எனக்குக் கிட்டிய அழகிய மனைவியின் கருவில் உருவாகி அவளது உடலில் ஊறி பத்து மாதம் கர்ப்பத்தில் வளர்ந்து, நல்ல வடிவோடு கூடி பூமியில் நன்கு தோன்றிய குழந்தைச் செல்வமாக நீ எங்களுக்குப் பிறந்து, குழந்தைப் பாசத்தினால் நான் உன்னை உச்சிமோந்து, விழியோடு விழிவைத்து, முகத்தோடு முகம் சேர்த்து, எனது மலை போன்ற தோள்களில் நீ தழுவி உறவாடி, என் மடித்தலத்தில் அமர்ந்து குழந்தையாக விளையாடி, நாள்தோறும் உன் மணி வாயினால் முத்தம் தந்தருள வேண்டும். முக வசீகரம் மிக்க குறப்பெண் வள்ளியின் மார்பினை அணைக்க வந்த நீதிபதியே*, பழம் பெரும் வேதத்தினுள் ஒப்பற்ற சிறந்த பொருளுக்குள்ளே பிரணவப் பொருளை சிவனாருக்கு உபதேசித்த குருநாதனே, தடையொன்றும் இல்லாது எனக்கு உனது திருவடிகளைத் தரிசனம் செய்வித்த ஒப்பற்ற திருவேரகத்தின் (சுவாமிமலையின்) முருகனே, மரங்கள் இருபுறமும் நிறைந்த காவிரி ஆற்றின் வடக்குப் பகுதியிலே போர் வேல் விளங்க நிற்கும் பெருமாளே. 
* யான், எனது என்ற அகங்கார மமகாரம் அற்ற வள்ளியை தானே வலிய வந்து அணைத்து மணத்தல் தனக்கு நீதி என்ற காரணத்தால், நீதிபதியே என்றார்.

பாடல் 219 - சுவாமி மலை
ராகம் - ...; தாளம் -

தானதன தந்த தத்த தானதன தந்த தத்த     தானதன தந்த தத்த ...... தனதான

சேலுமயி லுந்த ரித்த வாளையட ருங்க டைக்கண்     மாதரைவ சம்ப டைத்த ...... வசமாகிச் 
சீலமறை யும்ப ணத்தி லாசையிலை யென்ற வத்தை     காலமுமு டன்கி டக்கு ...... மவர்போலே 
காலுமயி ரும்பி டித்து மேவுசிலு கும்பி ணக்கு     நாளுமிக நின்ற லைத்த ...... விதமாய 
காமகல கம்பி ணித்த தோதகமெ னுந்து வக்கி     லேயடிமை யுங்க லக்க ...... முறலாமோ 
ஏலமில வங்க வர்க்க நாகம்வகு ளம்ப டப்பை     பூகமரு தந்த ழைத்த ...... கரவீரம் 
யாவுமலை கொண்டு கைத்த காவிரிபு றம்பு சுற்றும்     ஏரகம மர்ந்த பச்சை ...... மயில்வீரா 
சோலைமடல் கொண்டு சக்ர மால்வரைய ரிந்த வஜ்ர     பாணியர்தொ ழுந்தி ருக்கை ...... வடிவேலா 
சூர்முதிர்க்ர வுஞ்ச வெற்பும் வேலைநில மும்ப கைத்த     சூரனுட லுந்து ணித்த ...... பெருமாளே.

சேல் மீன், வேல் இவை போன்றதும், வாளாயுதத்தைப்போல் தாக்கி வருத்த வல்லதுமான கடைக்கண்களை உடைய விலைமாதர்களுடைய வசத்தில்பட்ட ஆளாகி, நல்ல ஒழுக்கத்தை மறைக்கும் பொருளின்மேல் ஆசை இல்லை என்று சொல்லி, நித்திரை செய்யும்போதும் கூடப் படுத்துக் கிடக்கும் அன்புடையவர்போல் நடித்து, கால்களையும் (பின்னர்) மயிரையும் பிடித்து, சண்டையும் ஊடலும் நாளுக்கு நாள் அதிகமாக அலைப்பிக்கின்ற வகைக்குச் செய்கின்ற மாதர்களின் காமக் கலகத்தில் சிக்குதலால் ஏற்படும் வருத்தமாகிய தொடர்பில் அடிமையாகிய நானும் கலக்கம் அடையலாமோ? ஏலம், கிராம்பு வகை, சுரபுன்னை, மகிழ மரத் தோட்டங்கள், கமுகு, மருத மரம், செழிப்புள்ள தாமரை யாவையும் தனது அலையில் அடித்துத் தள்ளி வருகின்ற காவிரி ஆறு வெளிப் புறத்தில் சூழ்ந்து செல்லும் திருவேரகம் என்ற சுவாமிமலையில் வீற்றிருக்கும் பச்சை மயில் வீரனே, கற்பகச் சோலையில் உள்ள பூ இதழால் சக்ரவாள கிரி ஆகிய பெரிய மலைகளின் (சிறகுகளை)* வெட்டித்தள்ளிய வஜ்ராயுதம் கொண்ட கைகளை உடைய இந்திரன் வணங்கும் திருக்கை வடிவேலனே, அச்சத்தை நிரம்பத் தரும் கிரெளஞ்ச மலையையும், கடலிடத்தையும், பகைத்து வந்த சூரனுடைய உடலையும் அழித்த பெருமாளே. 
* முன்பு ஒரு காலத்தில் மலைகள் எல்லாம் பறவைகள்போல் இறகுகள் உடையவவைகளாக இருந்தனவாம்.எங்கும் பறந்து விழுந்து, உயிர்களுக்குத் தீங்கு செய்ததால், இந்திரன் கோபித்து அந்த மலைகளின் இறகுகளை அறுத்துத் தள்ளினான்.

பாடல் 220 - சுவாமி மலை
ராகம் - ....; தாளம் -

தனதனன தான தந்த தனதனன தான தந்த     தனதனன தான தந்த ...... தனதான

தருவரிவ ராகு மென்று பொருணசையி னாடி வண்டு     தனைவிடுசொல் தூது தண்ட ...... முதலான 
சரசகவி மாலை சிந்து கலிதுறைக ளேச லின்ப     தருமுதல தான செஞ்சொல் ...... வகைபாடி 
மருவுகையு மோதி நொந்து அடிகள்முடி யேதெ ரிந்து     வரினுமிவர் வீத மெங்க ...... ளிடமாக 
வருமதுவொ போது மென்று வொருபணமு தாசி னஞ்சொல்     மடையரிட மேந டந்து ...... மனம்வேறாய் 
உருகிமிக வாக வெந்து கவிதைசொலி யேதி ரிந்து     உழல்வதுவு மேத விர்ந்து ...... விடவேநல் 
உபயபத மால்வி ளங்கி யிகபரமு மேவ இன்ப     முதவியெனை யாள அன்பு ...... தருவாயே 
குருகினொடு நாரை யன்றில் இரைகளது நாடி டங்கள்     குதிகொளிள வாளை கண்டு ...... பயமாகக் 
குரைகடல்க ளேய திர்ந்து வருவதென வேவி ளங்கு     குருமலையின் மேல மர்ந்த ...... பெருமாளே.

இவர் நிச்சயமாகக் கொடுப்பார் என்று பொருளின்மேல் உள்ள பேராசையால் பலரை விரும்பித் தேடிச் சென்று, வண்டு விடு தூது (*1), தண்டகம் (*2) முதலான, இனிமையான கவி மாலைகள், சிந்து (*3), கலித்துறைகள் (*4), ஏசல் (*5), இன்பமான தரு (*6) முதலிய செவ்விய பா வகைகளைப் பாடி, அடிக்கடி வந்து போவதையும் சொல்லித் தெரிவித்து, அவர்களுடைய அடி முதல் முடி வரையும் வாழ்க்கை வரலாற்றை அறிந்து வந்தாலும், (அவர்கள்) அமைதியாக எங்களிடத்தில் (நீங்கள்) வருவது போதும் என்று கூறி, ஒரு பணம் கூடத் தராமல் அலட்சிய வார்த்தை பேசுவார்கள். அத்தகைய முட்டாள்களிடத்தில் நான் நடந்து, மனம் உடைந்து வேறுபட்டு, உள்ளம் உருகி மிகவும் வெந்து, பாடல்களைச் சொல்லியே திரிந்து, அலைச்சல் உறுவது ஒழிவதற்காகவே, உனது நல்ல இரு திருவடிகளிலும் ஆசை மேலிட்டு விளங்கி, இம்மையிலும் மறுமையிலும் பொருந்தும்படியான இன்பத்தை நான் பெற உதவி, என்னை ஆட்கொள்ள அன்பு தருவாயாக. கொக்கினோடு நாரை, அன்றில் என்னும் நீர்ப் பறவைகள் இரையை விரும்பித் தேடி (காவிரியின் நீர் நிலையில்) குதிக்கின்றதை, இள வாளை மீன்கள் கண்டு பயம் கொள்ள, ஒலிக்கும் கடல்களே அதிர்ந்து வருவதுபோல காவிரி ஆறு வந்து விளங்கும் சுவாமி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
(* 1) வண்டைத் தூதாக அனுப்பித் தன் காதலைத் தெரிவிக்க, தலைவன் தலைவிக்கு செய்தி அனுப்பும் சிற்றிலக்கிய நூல் வகை. அன்னம், மயில், கிளி, மேகம், பூவை, தோழி, குயில், நெஞ்சு, தென்றல் ஆகியவையும் தூதுக்கு உரியவை.
(* 2) தண்டகம் - தோத்திரமான வடமொழிச் செய்யுள். (உதாரணம் - கவி காளிதாசர் இயற்றிய சியாமளா தண்டகம்).
(* 3) சிந்து - இசைப்பா வகை. (உதாரணம் - காவடிச் சிந்து, நொண்டிச் சிந்து).
(* 4) கலித்துறை - கவிதை வகைகளில் ஒன்று, வரிக்கு 16/17 எழுத்துக்கள் கொண்டது. (உதாரணம் - கட்டளைக் கலித்துறை).
(* 5) ஏசல் - நிந்தா ஸ்துதியில் சிலேடையோடு இருபொருள்படும்படி தலைவனை வஞ்சப் புகழ்ச்சியாகப் பாடும் கவிதை. (உதாரணத்துக்கு காளமேகப் புலவரின் பல பாடல்கள்).
(* 6) தரு - இசைப் பாட்டு வகை.

பாடல் 221 - சுவாமி மலை
ராகம் - ஆனந்த பைரவி; தாளம் - சதுஸ்ர த்ருவம் - 14 எடுப்பு /40/4/4

தனதன தனனா தனனா     தனந்த தத்தம் ...... தனதான

தெருவினில் நடவா மடவார்     திரண்டொ றுக்கும் ...... வசையாலே 
தினகர னெனவே லையிலே     சிவந்து திக்கும் ...... மதியாலே 
பொருசிலை வளையா இளையா     மதன்தொ டுக்குங் ...... கணையாலே 
புளகித முலையா ளலையா     மனஞ்ச லித்தும் ...... விடலாமோ 
ஒருமலை யிருகூ றெழவே     யுரம்பு குத்தும் ...... வடிவேலா 
ஒளிவளர் திருவே ரகமே     யுகந்து நிற்கும் ...... முருகோனே 
அருமறை தமிழ்நூ லடைவே     தெரிந்து ரைக்கும் ...... புலவோனே 
அரியரி பிரமா தியர்கால்     விலங்க விழ்க்கும் ...... பெருமாளே.

தெருக்களில் உல்லாசமாக நடக்கும் பெண்கள் ஒன்று சேர்ந்து வம்பு பேசும் வசை மொழிகளாலும், சூரியனுக்கு ஒப்பான ஒளியுடனும் வெப்பத்துடனும் கடலில் சிவந்த நிறத்துடன் உதிக்கும் சந்திரனாலும், காமப் போருக்குரிய கரும்பு வில்லை வளைத்து, சளைக்காமல் மன்மதன் எய்கின்ற மலர் அம்புகளினாலும், விரகதாபத்தால் விம்மும் மார்பினளாகிய என்னை அலையுமாறும் உள்ளம் உடைந்து கலங்குமாறும் நீ விடுதல் முறையாகுமோ? மாயையில் ஒப்பற்ற கிரெளஞ்சமலை இரண்டாகப் பிளவுபடும்படியும், தாரகாசுரன் மார்பில் புகும்படியும் செலுத்திய கூர் வேலை உடையவனே, பேரொளி பெற்று விளங்கும் சுவாமிமலை என்னும் திருத்தலத்தில் மகிழ்ச்சியோடு எழுந்தருளியிருக்கும் முருகனே, அருமையான வேதங்களையும் தமிழ் நூல்களையும் முழுமையாக கேட்பவரின் தரம் அறிந்து விரித்து உரைத்தருளும் ஞான பண்டிதா, இந்திரன், திருமால், பிரம்மா முதலிய தேவர்களின் காலில் பூட்டிய விலங்கினைத் தகர்த்தெறிந்த பெருமாளே. 
இப்பாட்டு அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவிக்காக பாடியது.கடல், சந்திரன், மன்மதன், மலர்க் கணைகள், ஊரப் பெண்களின் ஏச்சு இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.

பாடல் 222 - சுவாமி மலை
ராகம் - காபி; தாளம் - அங்கதாளம் - 13 1/2 தகிடதக-2 1/2, தகிடதக-2 1/2, தகிடதக-2 1/2 தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3

தானனந் தனதனன தனதனா தத்த தந்த ...... தனதான     தானனந் தனதனன தனதனா தத்த தந்த ...... தனதான

நாசர்தங் கடையதனில் விரவிநான் மெத்த நொந்து ...... தடுமாறி     ஞானமுங் கெடஅடைய வழுவியா ழத்த ழுந்தி ...... மெலியாதே 
மாசகந் தொழுமுனது புகழினோர் சொற்ப கர்ந்து ...... சுகமேவி     மாமணங் கமழுமிரு கமலபா தத்தை நின்று ...... பணிவேனோ 
வாசகம் புகலவொரு பரமர்தா மெச்சு கின்ற ...... குருநாதா     வாசவன் தருதிருவை யொருதெய்வா னைக்கி ரங்கு ...... மணவாளா 
கீசகஞ் சுரர்தருவு மகிழுமா வத்தி சந்து ...... புடைசூழுங்     கேசவன் பரவுகுரு மலையில்யோ கத்த மர்ந்த ...... பெருமாளே.

கேடு செய்யும் கீழ்மக்களின் இருப்பிடங்களுக்குச் சென்று அவர்களுடன் கலந்து அதனால் மிகவும் நொந்து போய், தடுமாற்றம் அடைந்து சுய அறிவும் கெட்டுப்போய், முழுவதுமாக தவறான வழியில் விழுந்து, ஆழமாகத் தீய நெறியில் அழுந்தி நான் மெலிவுறாமல், இந்தச் சிறந்த உலகமே போற்றும் உனது புகழின் ஒரு சொல்லளவு பகுதியாவது சொல்லி அதனால் சுகமடைந்து, நறுமணம் வீசும் உன் இரண்டு தாமரைப் பாதங்களை மனம் ஒருமுகப்பட்டு நின்று வணங்க மாட்டேனோ? உபதேச மொழியை நீ கூற, ஒப்பற்ற சிவபிரான் மெச்சிப் புகழ்ந்த குருநாதனே, இந்திரன் வளர்த்தளித்த லக்ஷ்மியின் அம்சமாகும் ஒப்பில்லா தேவயானைக்கு இரங்கி மணம்புரிந்தவனே, மூங்கில், கற்பக மரம், மகிழ மரம், மாமரம், அத்தி மரம், சந்தன மரம் இவையெல்லாம் சுற்றிலும் சூழ்ந்துள்ள, திருமாலே போற்றிப் புகழும் சுவாமி மலையில் உபதேச குருவாக யோகநிலையில் அமர்ந்த பெருமாளே. 

பாடல் 223 - சுவாமி மலை
ராகம் - யதுகுல காம்போதி; தாளம் - அங்கதாளம் - 5 1/2 தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2

தானான தான தத்த தானான தான தத்த     தானான தான தத்த ...... தனதான

நாவேறு பாம ணத்த பாதார மேநி னைத்து     நாலாறு நாலு பற்று ...... வகையான 
நாலாரு மாக மத்தி னூலாய ஞான முத்தி     நாடோறு நானு ரைத்த ...... நெறியாக 
நீவேறெ னாதி ருக்க நான்வேறெ னாதி ருக்க     நேராக வாழ்வ தற்கு ...... னருள்கூர 
நீடார்ஷ டாத ரத்தின் மீதேப ராப ரத்தை     நீகாணெ னாவ னைச்சொ ...... லருள்வாயே 
சேவேறு மீசர் சுற்ற மாஞான போத புத்தி     சீராக வேயு ரைத்த ...... குருநாதா 
தேரார்கள் நாடு சுட்ட சூரார்கள் மாள வெட்டு     தீராகு காகு றத்தி ...... மணவாளா 
காவேரி நேர்வ டக்கி லேவாவி பூம ணத்த     காவார்சு வாமி வெற்பின் ...... முருகோனே 
கார்போலு மேனி பெற்ற மாகாளி வாலை சத்தி     காமாரி வாமி பெற்ற ...... பெருமாளே.

நாவினில் இருந்து வெளிப்படும் பாமலர்களின் நறுமணம் கமழும் பாதத் தாமரைகளையே நினைத்து, (4..ஐ 6..ஆல் பெருக்கி வந்த 24..ம் 4..ம் சேர்ந்த) 28* சிவ சம்பந்தத்தை உடையதும், சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு பாதங்கள்** பொருந்தினவாயும் உள்ள சிவாகம நூல்களில் கூறப்பட்டுள்ள ஞான முத்தி நெறியே நாள் தோறும் நான் அனுஷ்டிக்கும் நெறியாகவும், நீ வேறு என்றில்லாமல் நான் வேறு என்றில்லாமல், ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றுபட்ட நிலையில், நேர்பட்டு வாழ்வதற்கு உன் கிருபை பெருகி, பெருமை பொருந்திய ஆறு ஆதாரங்களையும் கடந்து ஸஹஸ்ராரத்தில்*** பெரிய பொருள்கட்கெல்லாம் பெரிய பொருளான சிவத்தை நீ காண்பாயாக என்று அந்த ஐக்கிய வசனத்தை உபதேசித்து அருள்வாயாக. நந்தியின் மீது ஏறுகின்ற ஈசராம் சிவனார் உன்னை வலம் வர, சிறந்த ஞான உபதேசத்தை செம்மையாகவே சொன்ன குருநாதனே, பகைவர்களாம் தேவர்களின் நாட்டைச் சுட்டழித்த அசுரர்கள் சாகும்படி வெட்டிய தீரனே, குகனே, குறத்தி வள்ளியின் மணவாளனே, காவேரி ஆற்றின் நேர் வடக்கில் தடாகங்களில் மலர்கள் மணக்கும் சோலைகள் சூழ்ந்த சுவாமிமலையில் எழுந்தருளிய முருகக் கடவுளே, கரு மேகத்து நிற மேனியுடைய மகா காளி, என்றும் இளையாள், சக்தி, காமனை எரித்தவரின் இடதுபக்கம் உள்ள பார்வதி பெற்ற பெருமாளே. 
* 28 சிவாகமங்கள் பின்வருமாறு: காமிகம், யோசகம், சிந்தியம், காரணம், அசிதம், தீப்தம், சூக்ஷ்மம், சகச்சிரம், அஞ்சுமான், சுப்ரபேதம், விஷயம், நிச்வாசம், ஸ்வயாம்புவம், ஆக்னேயம், வீரம், ரெளரவம், மகுடம், விமலம், சந்திரஞானம், முகவிம்பம், புரோற்கீதம், லலிதம், சித்தம், சந்தானம், சர்வோக்தம், பாரமேஸ்வரம், கிரணம், வாதூளம்
** 4 பக்தி மார்க்கங்கள் பின்வருமாறு:1. சரியை: திருக்கோயிலில் அலகு இடுதல், மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம் வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல், இறைவனை வாழ்த்துதல், திருவேடம் கண்டு பணிதல். இது 'தாத மார்க்கம் - சாலோகம்'.2. கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்தியக் காரியம் செய்தல். இது 'புத்ர மார்க்கம் - சாமீபம்'.3. யோகம்: புலன்களை அடக்கிப் பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி, முழு ஜோதியை நினைத்திருத்தல். இது 'சக மார்க்கம் (தோழ நெறி) - சாரூபம்'.4. ஞானம்: புறத் தொழில் அகத் தொழில் இன்றி, அறிவு மாத்திரத்தாலே செய்யும் வழிபாடு ஞானம். இது 'சன்மார்க்கம் - சாயுஜ்யம்'. சிவஞான சித்தியார் சூத்திரம். 
*** ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம்

பாடல் 224 - சுவாமி மலை
ராகம் - ....; தாளம் -

தனதன தான தந்த தனதன தான தந்த     தனதன தான தந்த ...... தனதான

நிலவினி லேயி ருந்து வகைமல ரேதெ ரிந்து     நிறைகுழல் மீத ணிந்து ...... குழைதாவும் 
நிகரறு வேலி னங்கள் வரிதர வாச கங்கள்     நினைவற வேமொ ழிந்து ...... மதனூலின் 
கலபம னோக ரங்க ளளவற வேபு ரிந்து     கனியித ழேய ருந்தி ...... யநுராகக் 
கலவியி லேமு யங்கி வனிதையர் பால்ம யங்கு     கபடனை யாள வுன்ற ...... னருள்கூராய் 
உலகமொ ரேழு மண்ட ருலகமு மீசர் தங்கு     முயர்கயி லாய மும்பொன் ...... வரைதானும் 
உயிரொடு பூத மைந்து மொருமுத லாகி நின்ற     உமையரு ளால்வ ளர்ந்த ...... குமரேசா 
குலைபடு சூர னங்க மழிபட வேலெ றிந்த     குமரக டோர வெங்கண் ...... மயில்வாழ்வே 
கொடுமுடி யாய்வ ளர்ந்து புயனிலை போலு யர்ந்த     குருமலை மீத மர்ந்த ...... பெருமாளே.

நிலவில் இருந்து எடுத்தது போன்று வகைவகையான மலர்களைத் தெரிந்து எடுத்து நிறைந்துள்ள கூந்தலின் மேல் அணிந்து, காதின் குண்டலங்கள் அளவும் பாய்கின்ற, உவமை இல்லாத வேல்கள் போன்ற கண்களின் ரேகைகள் விளங்க, மொழிகள் இன்னது பேசுகின்றோம் என்ற நினைவே இல்லாமல் பேச, மன்மதனின் காம சாஸ்திரத்தில் கூறப்பட்ட கலகலப்பான லீலைகள் கணக்கில்லாமல் செய்து, கனி போன்ற வாயிதழ் ஊறலைப் பருகி, காமப் பற்று மிக்க புணர்ச்சியிலே ஈடுபட்டுப் பொருந்தி, விலைமாதர்களிடத்தே மயக்கம் உறும் கபடனாகிய என்னை ஆட்கொள்ள உனது திருவருளைத் தந்து அருளுக. ஏழு உலகமும், தேவர் உலகமும், சிவ பெருமான் தங்கும் உயர்ந்த கயிலாயமும், பொன் மலையாகிய மேருவும், உயிர்களும், ஐந்து பூதங்களும் ஆக எல்லாமாக ஒரு முதற் பொருளாகி நின்ற பார்வதியின் திருவருளால் வளர்ந்த குமரேசனே, பதறிய சூரனுடைய உடல் அழியும்படி வேலைச் செலுத்திய குமரனே, மிக்க கடிய பலம் வாய்ந்த மயில் மீது வாழ்பவனே, மலைச் சிகரமாய் விளங்கி மேகம் தங்கும் இடம் போல் உயர்ந்த சுவாமி மலையின் மீது அமர்ந்த பெருமாளே. 

பாடல் 225 - சுவாமி மலை
ராகம் - ஹம்ஸாநந்தி; தாளம் - ஆதி

தனதன தனதன ...... தனதான     தனதன தனதன ...... தனதான

நிறைமதி முகமெனு ...... மொளியாலே     நெறிவிழி கணையெனு ...... நிகராலே 
உறவுகொள் மடவர்க ...... ளுறவாமோ     உனதிரு வடிவியினி ...... யருள்வாயே 
மறைபயி லரிதிரு ...... மருகோனே     மருவல ரசுரர்கள் ...... குலகாலா 
குறமகள் தனைமண ...... மருள்வோனே     குருமலை மருவிய ...... பெருமாளே.

பூரண சந்திரன் போன்ற முகத்தின் பிரகாசத்தாலும், வழிகாட்டியாக இருக்க வேண்டிய கண்கள் அம்பு போலச் செய்யும் போரினாலும், சொந்தம் கொண்டாடுகின்ற மாதர்களின் உறவு ஆகுமோ? (ஆகாது என்ற படிக்கு) உன்னிரு திருவடிகளை இனியாகிலும் தந்தருள்வாயாக. வேதங்களில் சொல்லப்படும் திருமால், இலக்குமியின் மருகோனே, பகைவர்களாம் அசுரர்களின் குலத்தை அழித்த காலனே, குறத்தி வள்ளியை திருமணம் செய்து அருளியவனே, குருமலை (திருவேரகம்) வீற்றிருக்கும் பெருமாளே. 

by Swathi   on 28 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.