LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- அருணகிரிநாதர் நூல்கள்

திருப்புகழ்-பாடல்-[21-50]

பாடல் 21 - திருச்செந்தூர்
ராகம் - .........; தாளம் - .....
தந்த தந்தன தானா தானா
     தந்த தந்தன தானா தானா
          தந்த தந்தன தானா தானா ...... தனதான
அங்கை மென்குழ லாய்வார் போலே
     சந்தி நின்றய லோடே போவா
          ரன்பு கொண்டிட நீரோ போறீ ...... ரறியீரோ 
அன்று வந்தொரு நாள்நீர் போனீர்
     பின்பு கண்டறி யோநா மீதே
          அன்று மின்றுமொர் போதோ போகா ...... துயில்வாரா 
எங்க ளந்தரம் வேறா ரோர்வார்
     பண்டு தந்தது போதா தோமே
          லின்று தந்துற வோதா னீதே ...... னிதுபோதா 
திங்கு நின்றதென் வீடே வா¡£
     ரென்றி ணங்கிகள் மாயா லீலா
          இன்ப சிங்கியில் வீணே வீழா ...... தருள்வாயே 
மங்கு லின்புறு வானாய் வானூ
     டன்ற ரும்பிய காலாய் நீள்கால்
          மண்டு றும்பகை நீறா வீறா ...... எரிதீயாய் 
வந்தி ரைந்தெழு நீராய் நீர்சூழ்
     அம்ப ரம்புனை பாராய் பாரேழ்
          மண்ட லம்புகழ் நீயாய் நானாய் ...... மலரோனாய் 
உங்கள் சங்கரர் தாமாய் நாமார்
     அண்ட பந்திகள் தாமாய் வானாய்
          ஒன்றி னுங்கடை தோயா மாயோன் ...... மருகோனே 
ஒண்த டம்பொழில் நீடூர் கோடூர்
     செந்தி லம்பதி வாழ்வே வாழ்வோர்
          உண்ட நெஞ்சறி தேனே வானோர் ...... பெருமாளே.
தங்களது அழகிய கைகளால் மென்மையான கூந்தலை சிக்கு எடுப்பவர்களைப் போல பாவனை காட்டி, மாலைப் பொழுதினில் (மனையின் வெளிப் புறத்தில்) நின்று, வெளியில் போகும் ஆடவர்களை அன்பு கொள்ளுமாறு நீங்களா போகின்றீர், என்னைத் தெரியாதா உமக்கு, அன்று ஒரு நாள் நீர் இங்கு வந்து போனீர், அதன் பிறகு உம்மை நாம் பார்க்கவில்லை, இது ஒரு உண்மையே. அன்று முதல் இன்று வரை ஒரு நாள் கூட பொழுது போகவில்லை. தூக்கமும் வரவில்லை. எங்கள் உள்ளத்தை (உம்மைத் தவிர) வேறு யார் அறிவார்கள். (நீர்) முன்பு கொடுத்த பொருள் போதாதோ. மேலே இன்று இன்னும் வேறு தந்தால் தான் உறவோ? இது எதற்கு? இது வரை கொடுத்த பொருள் மாத்திரம் போதாதா? நான் நிற்கும் வீடு என்னுடையதுதான். உள்ளே வாரும் என்று மனப் பொருத்தம் பேசும் பொது மகளிரின் மாயை லீலைகள் ஆகிய இன்பமாகிய நஞ்சுக் குழியில் வீணாக விழாத வண்ணம் அருள் புரிய வேண்டும். மேகங்கள் இன்புற்று உலவும் வானாகவும், ஆகாயத்தில் அன்று தோன்றிய காற்றாகவும், பெருங் காற்றுடன் கூடி நெருங்கி வரும் பகைகளை நீறாக்கும் வன்மை கொண்டுள்ள எரிகின்ற நெருப்பாகவும், வந்து ஒலித்து எழுகின்ற நீராகவும், கடல் என்னும் நீர் சூழ்ந்த ஆடையை அணிந்த பூமியாகவும், ஏழு உலகங்களும் புகழ்கின்ற நீயாகவும், நானாகவும், தாமரை மலரில் வாழும் பிரமனாகவும், உங்கள் தந்தையாகிய சங்கரர் ஆகவும், அச்சம் தரும் அண்டக் கூட்டங்கள் ஆகவும், மூலப் பிரகிருதி ஆகவும், எதிலும் இறுதியில் தோயாது இருக்கின்ற மாயவனாகிய திருமாலின் மருகனே, தெளிந்த நீர்க் குளங்களும் சோலைகளும் நிறைந்த ஊரும் சங்குகள் விளங்கும் நகரும் ஆகிய திருச்செந்தூர்ப் பதியில் வாழ்பவனே, உன்னை நினைந்து வாழ்பவர்கள் அனுபவித்த மனம் அறியும் தேனே, தேவர்களின் பெருமாளே. 
பாடல் 22 - திருச்செந்தூர்
ராகம் - ஹிந்தோளம்; தாளம் - அங்கதாளம் - 7 - கண்ட ஜாதி ரூபகம் 
தக-1, தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1, தக திமி-2
தந்தன தனந்தனந் தனதனத்
     தந்தன தனந்தனந் தனதனத்
          தந்தன தனந்தனந் தனதனத் ...... தனதான
அந்தகன் வருந்தினம் பிறகிடச்
     சந்தத மும்வந்துகண் டரிவையர்க்
          கன்புரு குசங்கதந் தவிரமுக் ...... குணமாள 
அந்திப கலென்றிரண் டையுமொழித்
     திந்திரி யசஞ்சலங் களையறுத்
          தம்புய பதங்களின் பெருமையைக் ...... கவிபாடிச் 
செந்திலை யுணர்ந்துணர்ந் துணர்வுறக்
     கந்தனை யறிந்தறிந் தறிவினிற்
          சென்றுசெ ருகுந்தடந் தெளிதரத் ...... தணியாத 
சிந்தையு மவிழ்ந்தவிழ்ந் துரையொழித்
     தென்செய லழிந்தழிந் தழியமெய்ச்
          சிந்தைவ ரஎன்றுநின் தெரிசனைப் ...... படுவேனோ 
கொந்தவிழ் சரண்சரண் சரணெனக்
     கும்பிடு புரந்தரன் பதிபெறக்
          குஞ்சரி குயம்புயம் பெறஅரக் ...... கருமாளக் 
குன்றிடி யஅம்பொனின் திருவரைக்
     கிண்கிணி கிணின்கிணின் கிணினெனக்
          குண்டல மசைந்திளங் குழைகளிற் ...... ப்ரபைவீசத் 
தந்தன தனந்தனந் தனவெனச்
     செஞ்சிறு சதங்கைகொஞ் சிடமணித்
          தண்டைகள் கலின்கலின் கலினெனத் ...... திருவான 
சங்கரி மனங்குழைந் துருகமுத்
     தந்தர வருஞ்செழுந் தளர்நடைச்
          சந்ததி சகந்தொழுஞ் சரவணப் ...... பெருமாளே.
யமன் வருகின்ற தினமானது பின் தள்ளிப் போக, எப்போதும் வருவதும் போவதும் காண்பதுமாய், பெண்களிடம் அன்பு காட்டி உருகக்கூடிய தொடர்பு விட்டு நீங்க, சத்துவம், ராஜதம், தாமதம் என்ற மூன்று குணங்களும் அழித்து, இரவு (ஆன்மா செயலற்றுக் கிடக்கும் நிலை), பகல் (ஆன்மா உழலும் நிலை) என்னும் இரண்டு நிலைகளையும் ஒழித்து, ஐம்பொறிகளால் வரும் துன்பங்களை அறுத்து, தாமரை போன்ற உன் திருவடிகளின் பெருமையைக் கவிபாடி, திருச்செந்தூரைக் கருதி உணர்ந்து ஞானம் பிறக்க, கந்தக் கடவுளாம் உன்னைஅறிந்து அறிந்து அந்த அறிவின் வழியே சென்று நுழைந்து முடிகின்ற இடம் தெளிவு பெற, அடங்காத மனமும் நெகிழ்ந்து நெகிழ்ந்து, பேச்சும் நின்று, எனது செயலும் அடியோடு அற்றுப் போக, உண்மையான அறிவு வர, எப்பொழுது உன்னைக் காணும் பாக்கியத்தை யான் பெறுவேனோ? மலர்க் கொத்துக்கள் கிடக்கும் பாதங்களே சரணம் சரணம் என்று கும்பிட்ட இந்திரன் தனது ஊராகிய அமராவதியை மீண்டும் பெற, யானை வளர்த்த மகள் தேவயானையின் மார்பகம் உன் திருப்புயங்களைப் பெற, அரக்கர்கள் யாவரும் மாண்டழிய, கிரெளஞ்ச மலை பொடிபட்டு விழ, அழகிய பொன்னாலான அரைஞாண் கிண்கிணி கிணின் கிணின் கிணின் என்று ஒலிக்க, குண்டலங்கள் அசைந்து சிறிய காதணிகளில் ஒளிவீச, தந்தன தனந்தனந் தன என்ற ஓசையோடு செவ்விய சிறு சதங்கைகள் சிற்றொலி செய்திட, மணித் தண்டைகள் கலின்கலின் கலின் என்று சப்திக்க, அழகிய சங்கரி மனம் குழைந்து உருகி நிற்க, முத்தம் தர வரும் செழுவிய தளர்ந்த நடைப் பிள்ளையே, இந்த வையமெல்லாம் தொழும் சரவணப் பெருமாளே. 
பாடல் 23 - திருச்செந்தூர்
ராகம் - கல்யாணி; தாளம் - அங்கதாளம் - 9 - கண்ட ஜாதி த்ருபுடை 
தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தகதிமி-2, தகதிமி-2
தனதனன தனதனன தந்தத் தந்தத்
     தனதனன தனதனன தந்தத் தந்தத்
          தனதனன தனதனன தந்தத் தந்தத் ...... தனதான
அமுதுததி விடமுமிழு செங்கட் டிங்கட்
     பகவினொளிர் வெளிறெயிறு துஞ்சற் குஞ்சித்
          தலையுமுடை யவனரவ தண்டச் சண்டச் ...... சமனோலை 
அதுவருகு மளவிலுயி ரங்கிட் டிங்குப்
     பறைதிமிலை திமிர்தமிகு தம்பட் டம்பற்
          கரையவுற வினரலற உந்திச் சந்தித் ...... தெருவூடே 
எமதுபொரு ளெனுமருளை யின்றிக் குன்றிப்
     பிளவளவு தினையளவு பங்கிட் டுண்கைக்
          கிளையுமுது வசைதவிர இன்றைக் கன்றைக் ...... கெனநாடா 
திடுககடி தெனுமுணர்வு பொன்றிக் கொண்டிட்
     டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுட் டுண்டுட்
          டெனவகலு நெறிகருதி நெஞ்சத் தஞ்சிப் ...... பகிராதோ 
குமுதபதி வகிரமுது சிந்தச் சிந்தச்
     சரணபரி புரசுருதி கொஞ்சக் கொஞ்சக்
          குடிலசடை பவுரிகொடு தொங்கப் பங்கிற் ...... கொடியாடக் 
குலதடினி அசையஇசை பொங்கப் பொங்கக்
     கழலதிர டெகுடெகுட டெங்கட் டெங்கத்
          தொகுகுகுகு தொகுகுகுகு தொங்கத் தொங்கத் ...... தொகுதீதோ 
திமிதமென முழவொலிமு ழங்கச் செங்கைத்
     தமருகம ததிர்சதியொ டன்பர்க் கின்பத்
          திறமுதவு பரதகுரு வந்திக் குஞ்சற் ...... குருநாதா 
திரளுமணி தரளமுயர் தெங்கிற் றங்கிப்
     புரளஎறி திரைமகர சங்கத் துங்கத்
          திமிரசல நிதிதழுவு செந்திற் கந்தப் ...... பெருமாளே.
அமுதமாகிய திருப்பாற் கடலில் தோன்றிய நஞ்சைக் கக்கும் சிவந்த கண்களையும், சந்திரனுடைய பிளவு போல் ஒளி விடுகின்ற வெண்மையான பற்களையும், சுருளும் தன்மையுடைய மயிர்க் குடுமியோடு கூடிய தலையையும் கொண்டவன், பேரொலியும் தண்டாயுதமும் கொடுங் கோபமும் கொண்டவனுமான யமனுடைய ஓலையானது வரும்போது உயிர் யமனுலகிற்கும் பூவுலகிற்கும் இடையே ஊசலாட, பறையும், மற்ற முரசு வகைகளும், பேரொலி மிக்க தம்பட்டம் முதலிய பல வாத்தியங்களும் ஒலிக்கவும், சுற்றத்தார் கதறி அழ, கொண்டு போகும் சந்தித் தெரு வழியே எம்முடைய பொருள் என்னும் பற்று மயக்கம் இல்லாமல் குன்றி மணியில் பாதியாகிலும் தினை அளவு கூட பங்கிட்டுத் தந்து உண்ண வேண்டிய அற வழியில் நின்று இளைத்தும், லோபி என்ற பெரும் பழி நீங்க, இன்றைக்கு ஆகட்டும், நாளைக்கு ஆகட்டும் என்று எண்ணாமல், தர்மம் இப்போதே செய்வாயாக என்னும் உணர்வு அழிந்து போக (உடலை) எடுத்துக் கொண்டு டுடு டுடு டுடுடுடுடு டுண்டுட் டுண்டுட்டு என்ற கொட்டின் ஒலிக்கேற்பப் போகின்ற மார்க்கத்தை நினைத்து மனத்தில் பயம் கொண்டு ஏழைகளுக்கு என் வருவாயில் பங்கிட்டு தருமம் புரிய மாட்டேனோ? ஆம்பல் மலரின் நாயகனான சந்திரனின் பிறை அமிர்த கிரணங்களை மிகவும் சிந்தவும், திருவடிச் சிலம்பு வேத மொழிகளை மிக இனிமையாகக் கொஞ்சி ஒலிக்கவும், வளைவுடைய சடை நடனத்திற்கு ஏற்ப சுழன்று தொங்கவும், பக்கத்தில் உள்ள கொடி போன்ற பார்வதி தேவி ஆடவும், சிறந்த கங்கை ஆறு அசைந்தோடவும், இசை ஒலி மிகுதியாகப் பொங்கவும், பாதத்திலுள்ள வீர கண்டாமணிகள் அதிர்ந்து ஒலிக்கவும், டெகு டெகுட டெங்கட் டெங்க தொகுகுகுகு தொகுகுகுகு தொங்கத் தொங்க (இதே) தாள ஒலியில் மேள வாத்தியம் முழங்கவும், சிவந்த கையில் உள்ள உடுக்கையானது அதிரும் தாளத்துடன், அடியார்களுக்கு இன்ப நிலையை உதவுகின்ற பரத நாட்டியத்துக்கு ஆசிரியரான சிவபெருமான் வணங்கும் சற் குரு நாதனே. உருட்சியாகத் திரளும் மணியும் முத்தும் உயர்ந்த தென்னை மரங்களில் தங்கிப் புரளும்படி அவற்றை அள்ளி வீசுகின்ற அலைகளையும் மகர மீன்களையும் சங்குகளையும் உடைய பரிசுத்தமான கடல் நீர் அணைந்துள்ள கரையை உடைய திருச்செந்தூரில் வாழும் கந்தப் பெருமாளே. 
பாடல் 24 - திருச்செந்தூர்
ராகம் - .........; தாளம் - .....
தந்தத் தனனத் தந்தத் தனனத்
     தந்தத் தனனத் ...... தனதானா
அம்பொத் தவிழித் தந்தக் கலகத்
     தஞ்சிக் கமலக் ...... கணையாலே 
அன்றிற் குமனற் றென்றற் குமிளைத்
     தந்திப் பொழுதிற் ...... பிறையாலே 
எம்பொற் கொடிமற் றுன்பக் கலனற்
     றின்பக் கலவித் ...... துயரானாள் 
என்பெற் றுலகிற் பெண்பெற் றவருக்
     கின்பப் புலியுற் ...... றிடலாமோ 
கொம்புக் கரிபட் டஞ்சப் பதுமக்
     கொங்கைக் குறவிக் ...... கினியோனே 
கொன்றைச் சடையற் கொன்றைத் தெரியக்
     கொஞ்சித் தமிழைப் ...... பகர்வோனே 
செம்பொற் சிகரப் பைம்பொற் கிரியைச்
     சிந்தக் கறுவிப் ...... பொரும்வேலா 
செஞ்சொற் புலவர்க் கன்புற் றதிருச்
     செந்திற் குமரப் ...... பெருமாளே.
அம்பு போன்ற கண்களை உடைய பெண்கள் பேசும் அவதூறு மொழிக்கு அஞ்சியும், காமன் எய்த தாமரைப் பூ அம்பினாலும், அன்றில் என்னும் பறவைக்கும், தீயை வீசும் தென்றல் காற்றுக்கும் இளைத்து, மாலை நேரத்தில் வந்துள்ள பிறைச் சந்திரனாலே, எமது கொடி போன்ற மகள் அணிந்திருக்கும் துன்பத்தைச் செய்யும் ஆபரணங்களை அகற்றி, இன்பத்தைத் தரும் உன்னுடன் கலப்பதையே நினைவாகத் துயரம் கொண்டுள்ளாள். எதை வைத்துக்கொண்டு இப்பூமியில் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இன்பத்தை அடைந்து இருத்தல் வாய்க்குமோ? தந்தங்கள் உள்ள யானை (விநாயகர்) எதிரில் தோன்றினதால் அஞ்சிய, தாமரை அரும்பு போன்ற மார்பகத்தை உடைய, குறப் பெண்ணாகிய வள்ளிக்கு இனியோனே, கொன்றை மலர் அணிந்த சடையுடைய சிவபெருமானுக்கு ஒப்பற்ற அந்த பிரணவப் பொருளை விளக்கமாகத் தெரியும்படி கொஞ்சித் தமிழில் கூறியவனே, செம் பொன் சிகரங்களை உடைய, பசுமையும் அழகும் பெற்ற கிரெளஞ்ச மலை குலைந்து அழியும்படி, சினம் கொண்டு சண்டை செய்த வேலனே, செம்மையான சொல்லுடைய புலவர்கள் பால் அன்பு கொண்ட, திருச்செந்தூரில் வீற்றிருக்கும் பெருமாளே. 
இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் தலைவியின் நற்றாய் பாடுவதுபோல அமைந்தது.வசை பேசும் பெண்கள், மன்மதன், மலர் அம்புகள், அன்றில், தென்றல், சந்திரன் முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.
பாடல் 25 - திருச்செந்தூர்
ராகம் - புன்னாக வராளி; தாளம் - அங்கதாளம் - 24 
தகதகிட-2 1/2, தகிடதகதிமி-3 1/2, 
தகதகிட-2 1/2, தகிடதகதிமி-3 1/2, 
தகதகிட-2 1/2, தகிடதகதிமி-3 1/2, 
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3
தனதனன தான தானன தனதனன தான தானன
     தனதனன தான தானன
          தனதனன தான தானன தந்தத் தந்தத் ...... தனதான
அருணமணி மேவு பூஷித ம்ருகமதப டீர லேபன
     அபிநவவி சால பூரண
          அம்பொற் கும்பத் ...... தனமோதி 
அளிகுலவு மாதர் லீலையின் முழுகியபி ஷேக மீதென
     அறவுமுற வாடி நீடிய
          அங்கைக் கொங்கைக் ...... கிதமாகி 
இருணிறைய மோதி மாலிகை சருவியுற வான வேளையி
     லிழைகலைய மாத ரார்வழி
          யின்புற் றன்புற் ...... றழியாநீள் 
இரவுபகல் மோக னாகியெ படியில்மடி யாமல் யானுமுன்
     இணையடிகள் பாடி வாழஎ
          னெஞ்சிற் செஞ்சொற் ...... றருவாயே 
தருணமணி யாட ராவணி குடிலசடி லாதி யோதிய
     சதுர்மறையி னாதி யாகிய
          சங்கத் துங்கக் ...... குழையாளர் 
தருமுருக மேக சாயலர் தமரமக ராழி சூழ்புவி
     தனைமுழுதும் வாரி யேயமு
          துண்டிட் டண்டர்க் ...... கருள்கூரும் 
செருமுதலி மேவு மாவலி யதிமதக போல மாமலை
     தெளிவினுடன் மூல மேயென
          முந்தச் சிந்தித் ...... தருள்மாயன் 
திருமருக சூரன் மார்பொடு சிலையுருவ வேலை யேவிய
     ஜெயசரவ ணாம னோகர
          செந்திற் கந்தப் ...... பெருமாளே.
சிவந்த மணிகளால் அலங்கரிக்கப்பட்டதாய், கஸ்தூரி, சந்தனம் இவற்றின் கலவையைப் பூசியதாய், புதுமை வாய்ந்ததும், அகன்றதும், நிறைந்ததுமான அழகிய பொற்குடம் போன்ற மார்பில் பட்டு, ஆசை மொழி பேசிக் கொஞ்சும் மாதர்களின் சரசலீலைகளில் மூழ்கி, திருமஞ்சனம் இதுதான் என்று அவர்களோடு மிகவும் கலந்து பொழுதைக் கடத்தி, அவர்களின் கைகளிலும் மார்பிலும் இன்பம் பெறுபவனாய், கருமை நிறைந்த அழகிய கூந்தலில் உள்ள மாலையானது, தழுவி உறவு கொள்ளும் வேளையில், நகைகளோடு சேர்ந்து கலைய, அம் மாதர்களின் வசத்தே இன்பம் கொண்டும், அன்பு கொண்டும் அழிந்து, நெடும் போது இரவும் பகலும் மோகம் கொண்டவனாய், இப் பூமியில் இறவாமல், நானும் உன் இணையடிகளைப் பாடி வாழ்வுற, என் நெஞ்சிலே சிறந்த உபதேசச் சொற்களைப் பதித்து அருள்வாயாக. இளமையும், அழகும், ஆடலும் உடைய பாம்புகளை அணிந்த வளைந்த ஜடாமுடியை உடைய ஆதிப் பரம் பொருள் ஆனவரும், ஓதப்படும் வேதங்களின் ஆதிப்பொருளானவரும் ஆகிய, வெண்சங்கைக் குண்டலமாகத் தரித்த சிவனார் தந்தருளிய முருகனே, கார்மேக வண்ணத்தாரும், ஒலிக்கின்றதும் மகர மீன்கள் நிறைந்ததுமான சமுத்திரம் சூழ்ந்த இந்த உலகம் முழுமையும் வாரி அமுதென ஒரே வாயில் உண்டு தேவர்களுக்கு அருள் செய்தவரும், போர்க்களத்தில் முதன்மையாளராக இருப்பவரும், மிக்க வலிமையும், அதிக மதம் பெருகும் கன்னங்களும், கொண்ட பெரிய மலை போன்ற கஜேந்திரன் என்ற யானை தெளிந்த சிந்தையோடு ஆதிமூலமே என்று அழைத்துச் சரணடைய, முன்னதாக உதவும் சிந்தையோடு ஓடிவந்து அருளிய மாயனாம் திருமாலின் அழகிய மருகனே, சூரனது மார்புடன், கிரெளஞ்ச மலையையும் உருவிச் செல்லும்படி வேலாயுதத்தைச் செலுத்திய ஜெய சரவணனே, மனத்துக்கு இனியவனே, திருச்செந்தூரில் வீற்றிருக்கும் கந்தப்பெருமாளே. 
பாடல் 26 - திருச்செந்தூர்
ராகம் - கமாஸ்; தாளம் - சதுஸ்ர ரூபகம் - 6
தனதன தந்தாத் தந்தத்
     தனதன தந்தாத் தந்தத்
          தனதன தந்தாத் தந்தத் ...... தனதானா
அவனிபெ றுந்தோட் டம்பொற்
     குழையட ரம்பாற் புண்பட்
          டரிவையர் தம்பாற் கொங்கைக் ...... கிடையேசென் 
றணைதரு பண்டாட் டங்கற்
     றுருகிய கொண்டாட் டம்பெற்
          றழிதரு திண்டாட் டஞ்சற் ...... றொழியாதே 
பவமற நெஞ்சாற் சிந்தித்
     திலகுக டம்பார்த் தண்டைப்
          பதயுக ளம்போற் றுங்கொற் ...... றமுநாளும் 
பதறிய அங்காப் பும்பத்
     தியுமறி வும்போய்ச் சங்கைப்
          படுதுயர் கண்பார்த் தன்புற் ...... றருளாயோ 
தவநெறி குன்றாப் பண்பிற்
     றுறவின ருந்தோற் றஞ்சத்
          தனிமல ரஞ்சார்ப் புங்கத் ...... தமராடி 
தமிழினி தென்காற் கன்றிற்
     றிரிதரு கஞ்சாக் கன்றைத்
          தழலெழ வென்றார்க் கன்றற் ...... புதமாகச் 
சிவவடி வங்காட் டுஞ்சற்
     குருபர தென்பாற் சங்கத்
          திரள்மணி சிந்தாச் சிந்துக் ...... கரைமோதும் 
தினகர திண்டேர்ச் சண்டப்
     பரியிட றுங்கோட் டிஞ்சித்
          திருவளர் செந்தூர்க் கந்தப் ...... பெருமாளே.
இந்த பூமியின் விலைக்கு சமமான மதிப்புள்ள தோடு விளங்கும் மிக அழகிய காதை நெருங்கிவரும் கண் என்ற அம்பினால் மனம் புண்பட்டு, மாதர்களின் மார்பகங்களுக்கு இடையே சென்று அணைகின்ற பழைய விளையாட்டுக்களைக் கற்று, உருகிய பெரும் சந்தோஷத்தைப் பெற்று, பின்பு அழிவைத்தரும் திண்டாட்டம் கொஞ்சம் ஒழியக் கூடாதா? பிறவி நீங்க வேண்டி நெஞ்சால் சிந்தித்து, விளங்குகின்ற கடப்பமலர் நிறைந்த, தண்டை சூழ்ந்த உன் பாதங்கள் இரண்டையும் போற்றுகின்ற வீரமும், தினமும் உன்னை நாடிப் பதறுகின்ற ஆசைப்பாடும், பக்தியும், அறிவும் இல்லாது போய் அச்சமுறும் துயரில் நான் விழுவதை நீ கண்பார்த்து அன்பு கொண்டு அருளமாட்டாயோ? தவநெறி குறையாத குணத்துத் துறவிகளும் தோற்று அஞ்சும்படி, தனது ஒப்பற்ற மலர் அம்புகள் ஐந்தின் கொத்துக்களுடன் போர் செய்து, தமிழ்போல் இனிய இளம் தென்றல் காற்றில் உலாவும் மன்மதனாம் லக்ஷ்மி மகனை, நெருப்பை எழுப்பி வென்ற சிவபிரானுக்கு அன்று அற்புதமாக பேரின்ப உண்மையாம் மங்களப்பொருளைக் காட்டிய சற்குருபரனே, தெற்குத் திசையில் கடற்கரையிலே சங்கின் குவியல்கள் மணிகளைச் சிந்தி மோதுகின்றதும், சூரியனின் தேரில் பூட்டியுள்ள வலிய குதிரைகளுக்கு கால்கள் இடறும்படியாக உயர்ந்துள்ள சிகரங்களை உடைய மதில் சூழ்ந்துள்ளதுமான செல்வம் கொழிக்கும் திருச்செந்தூரில் உள்ள கந்தப் பெருமாளே. 
* 'கஞ்சா' என்பது தாமரையில் அமர்ந்த லக்ஷ்மியையும், 'கன்று' என்பது அவள் மகன் 'மன்மதனை'யும் குறிப்பன.
பாடல் 27 - திருச்செந்தூர்
தனன தானன தந்தன தந்தன 
தனன தானன தந்தன தந்தன 
தனன தானன தந்தன தந்தன ...... தனதான
தனன தானன தந்தன தந்தன
     தனன தானன தந்தன தந்தன
          தனன தானன தந்தன தந்தன ...... தனதான
அளக பாரம லைந்துகு லைந்திட
     வதனம் வேர்வுது லங்கிந லங்கிட
          அவச மோகம்வி ளைந்துத ளைந்திட ...... அணைமீதே 
அருண வாய்நகை சிந்திய சம்ப்ரம
     அடர்ந காநுதி பங்கவி தஞ்செய்து
          அதர பானம ருந்திம ருங்கிற ...... முலைமேல்வீழ்ந் 
துளமும் வேறுப டும்படி ஒன்றிடு
     மகளிர் தோதக இன்பின்மு யங்குதல்
          ஒழியு மாறுதெ ளிந்துளம் அன்பொடு ...... சிவயோகத் 
துருகு ஞானப ரம்பர தந்திர
     அறிவி னோர்கரு தங்கொள்சி லம்பணி
          உபய சீதள பங்கய மென்கழல் ...... தருவாயே 
இளகி டாவளர் சந்தன குங்கும
     களப பூரண கொங்கைந லம்புனை
          இரதி வேள்பணி தந்தையும் அந்தண ...... மறையோனும் 
இனது றாதெதிர் இந்திரன் அண்டரும்
     ஹரஹ ராசிவ சங்கர சங்கர
          எனமி காவரு நஞ்சினை யுண்டவர் ...... அருள்பாலா 
வளர்நி சாசரர் தங்கள்சி ரம்பொடி
     படவி ரோதமி டுங்குல சம்ப்ரமன்
          மகர வாரிக டைந்தநெ டும்புயல் ...... மருகோனே 
வளரும் வாழையு மஞ்சளும் இஞ்சியும்
     இடைவி டாதுநெ ருங்கிய மங்கல
          மகிமை மாநகர் செந்திலில் வந்துறை ...... பெருமாளே.
கூந்தல் பாரம் அலைந்து குலைய, முகம் வியர்வை தோன்றி மாசு பெற, தன் வசமழியும்படி மோகம் உண்டாகிப் பிணிக்க, படுக்கையில், சிவந்த வாயினின்றும் சிரிப்பை வெளிப்படுத்தின களிப்புடன், நெருங்கிய நகங்களின் நுனி கொண்டு நகக் குறி பதியுமாறு செய்து, இதழ்களினின்றும் வரும் ஊறலை உண்டு, இடை அற்றுப் போகுமாறு மார்பின் மேல் வீழ்ந்து, உள்ளமும் மாறும்படி சேர்கின்ற விலைமாதர்களின் வஞ்சகம் நிறைந்த இன்பத்தில் முழுகுதல் ஒழியும் வண்ணம் மனம் தெளிந்து, உள்ளம் அன்புடன் சிவயோக நிலையில் உருகுகின்ற ஞானமும், மேலான ஆகம அறிவும் படைத்த ஞானிகள் தியானிக்கின்ற, அழகிய சிலம்பை அணிந்த, இரு குளிர்ந்த தாமரை போன்ற மென்மையான திருவடியைத் தந்து அருளுக. தளராது வளரும், சந்தனமும் குங்குமப் பூவின் கலவையும் நிறைந்த, மார்பின் அழகைக் கொண்ட ரதியின் கணவனான மன்மதன் தொழுகின்ற தந்தையாகிய திருமாலும், அந்தண பிரமனும் துன்புற, அங்கு இருந்த இந்திரனும் தேவர்களும் ஹர ஹரா சிவ சங்கரா சங்கரா என்று முறையிட, (பாற்கடலில்) பொங்கி எழுந்த (ஆலகால) விஷத்தை உண்டவராகிய சிவபெருமான் அருளிய குழந்தையே, வளர்ச்சியுற்ற அசுரர்களுடைய (கர்வம் கொண்ட) தலைகள் பொடிபடுமாறு பகைமை காட்டிய நற்சிறப்பு பெற்றவனும், சுறா மீன்கள் நிறைந்த கடலை (தான் ஒருவனாகக்) கடைந்தவனும், நெடிய மேகத்தின் நிறத்தைக் கொண்டவனுமான திருமாலின் மருமகனே, வளர்கின்ற வாழையும், மஞ்சளும் இஞ்சியும் எப்போதும் நெருங்கி விளங்குகின்ற மங்கலமும் மகிமையும் உள்ள சிறந்த நகரமாகிய திருச் செந்தூரில் வந்து வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 28 - திருச்செந்தூர்
ராகம் - காம்போதி ; தாளம் - கண்டசாபு - 2 1/2
தனதனன தனதனன தனதனன தனதனன
     தனதனன தனதனன ...... தனதானா
அறிவழிய மயல்பெருக வுரையுமற விழிசுழல
     அனலவிய மலமொழுக ...... அகலாதே 
அனையுமனை யருகிலுற வெருவியழ வுறவுமழ
     அழலினிகர் மறலியெனை ...... யழையாதே 
செறியுமிரு வினைகரண மருவுபுல னொழியவுயர்
     திருவடியி லணுகவர ...... மருள்வாயே 
சிவனைநிகர் பொதியவரை முநிவனக மகிழஇரு
     செவிகுளிர இனியதமிழ் ...... பகர்வோனே 
நெறிதவறி யலரிமதி நடுவன்மக பதிமுளரி
     நிருதிநிதி பதிகரிய ...... வனமாலி 
நிலவுமறை யவனிவர்க ளலையஅர சுரிமைபுரி
     நிருதனுர மறஅயிலை ...... விடுவோனே 
மறிபரசு கரமிலகு பரமனுமை யிருவிழியு
     மகிழமடி மிசைவளரு ...... மிளையோனே 
மதலைதவ ழுததியிடை வருதரள மணிபுளின
     மறையவுயர் கரையிலுறை ...... பெருமாளே.
அறிவு மங்கிப் போகவும், மயக்கம் பெருகவும், பேச்சும் அடங்கிப் போகவும், கண்கள் சுழலவும், உடம்பின் சூடு தணியவும், மலம் (தன்னிச்சையின்றி) ஒழுகவும், நீங்காமலே என் அன்னையும் மனைவியும் பக்கத்திலிருந்து பயந்து அழ, உறவினரும் அழ, நெருப்பை நிகர்த்த கொடிய யமன் என்னை அழைத்துச் செல்லாத படிக்கு, என்னை நெருங்கியுள்ள இருவினைகளும் (நல்வினை, தீவினை), என் மனமும், பொருந்தியுள்ள ஐம்புலன்களும் ஒழிந்து நீங்கும்படியாக, உன் உயர்ந்த திருவடிகளை அணுக எனக்கு வரம் தந்தருள்வாயாக சிவனுக்கு ஒப்பான பொதியமலையைச் சார்ந்த முனிவன் (அகத்தியன்) உள்ளம் மகிழ அவனது இரண்டு செவிகளும் குளிர, இனிய தமிழை ஓதியவனே தத்தமக்கு உண்டான வழி தவறி சூரியன், சந்திரன், யமன், இந்திரன், அக்கினி, நிருதி, குபேரன், கரிய நிறமானவனும், துளசி மாலை தரித்த திருமாலும், நிலைத்த பிரமன், ஆகியவர்கள் அலையும்படி (கொடிய) ஆட்சி புரிந்த அசுரனாம் சூரனின் மார்பு பிளவுபடும்படி வேலைச் செலுத்தியவனே மானும், மழுவும் கரங்களில் விளங்கும் பரமசிவனும், உமையும் தங்கள் இருவிழிகளும் உவகைகொள்ளும்படி அவர்தம் மடியின் மேல் வளரும் இளைய குமாரனே கப்பல்கள் தவழும் கடலிடையே வருகின்ற முத்து மணிகள் மணல்மேட்டில் மறையும்படி உயர்ந்த (திருச்செந்தூர்க்) கரையில் அமர்ந்த பெருமாளே. 
பாடல் 29 - திருச்செந்தூர்
ராகம் - காபி; தாளம் - அங்கதாளம் - 7 1/2 
தகிட-1 1/2, தகதிமி-2 1/2, தகதிமி-2 1/2, தகதிமி-2 1/2
தனத்தந் தானன தானன தானன
     தனத்தந் தானன தானன தானன
          தனத்தந் தானன தானன தானன ...... தனதான
அனிச்சங் கார்முகம் வீசிட மாசறு
     துவட்பஞ் சானத டாகம்வி டாமட
          அனத்தின் தூவிகு லாவிய சீறடி ...... மடமானார் 
அருக்கன் போலொளி வீசிய மாமர
     கதப்பைம் பூணணி வார்முலை மேல்முகம்
          அழுத்தும் பாவியை யாவியி டேறிட ...... நெறிபாரா 
வினைச்சண் டாளனை வீணணை நீணிதி
     தனைக்கண் டானவ மானநிர் மூடனை
          விடக்கன் பாய்நுகர் பாழனை யோர்மொழி ...... பகராதே 
விகற்பங் கூறிடு மோகவி காரனை
     அறத்தின் பாலொழு காதமு தேவியை
          விளித்துன் பாதுகை நீதர நானருள் ...... பெறுவேனோ 
முனைச்சங் கோலிடு நீலம கோததி
     அடைத்தஞ் சாதஇ ராவண னீள்பல
          முடிக்கன் றோர்கணை யேவுமி ராகவன் ...... மருகோனே 
முளைக்குஞ் சீதநி லாவொட ராவிரி
     திரைக்கங் காநதி தாதகி கூவிள
          முடிக்குஞ் சேகரர் பேரரு ளால்வரு ...... முருகோனே 
தினைச்செங் கானக வேடுவ ரானவர்
     திகைத்தந் தோவென வேகணி யாகிய
          திறற்கந் தாவளி நாயகி காமுறும் ...... எழில்வேலா 
சிறக்குந் தாமரை யோடையில் மேடையில்
     நிறக்குஞ் சூல்வளை பால்மணி வீசிய
          திருச்செந் தூர்வரு சேவக னேசுரர் ...... பெருமாளே.
அனிச்சம்* பூவைப்போல் மென்மை உடையதும், பஞ்சு அடிக்கும் வில்லால் அடிக்க மாசுகள் நீங்கிய துவளுகின்ற மென்பஞ்சைப் போன்றதும், நீர் நிலையை விடாது பற்றுவதுமான அழகிய அன்னப் பறவையின் மெல்லிய இறகு போன்றதுமான மிக மிருதுவான சிறிய பாதங்களும் உடைய இளம் மானொத்த விலைமாதர்களது சூரியனைப் போல ஒளி வீசுகின்ற உயர்ந்த மரகதத்தைக் கொண்ட அழகிய அணிகலன்களை அணிந்த கச்சுடைய மார்பகங்களின் மேல் முகத்தை அழுத்துகின்ற பாவம் செய்த என்னை, என் ஜன்மம் கடைத்தேறும் வழியை ஆராய்ந்து அறியாத பரம சண்டாளனை, வீணனை, பெரிய செல்வமுடைமையைக் கண்டு ஆணவம் கொண்ட முழு மூடனை, மாமிசத்தை ஆசையுடன் உண்கின்ற பாழானவனை, ஒப்பற்ற சடாக்ஷர (சரவணபவ) மந்திரத்தைச் சொல்லாமல், சாஸ்திரத்திலிருந்து மாறுபட்ட பேச்சுக்களையே பேசுகின்ற காம விகாரனை, தர்ம வழியில் ஒழுகாத மூதேவியாகிய (என் குற்றங்களை எல்லாம் பொறுத்து) என்னை அழைத்து உனது பாதுகையை நீ என் முடிமேல் சூட்ட நான் திருவருளைப் பெறுவேனோ? போர்முனைக்கு உரிய சங்குகள் ஒலிக்கின்ற நீல நிறம் கொண்ட பெரிய கடலை அடைத்து இலங்கைக்குப் பாலம் கட்டி, அஞ்சுதல் இல்லாத இராவணனுடைய நீண்ட பத்து முடிகளும் (வீழ), அன்று ஒப்பற்ற அம்பைச் செலுத்திய இராமனுடைய மருகனே, திருப்பாற்கடலில் தோன்றும் குளிர்ந்த பிறைச் சந்திரனோடு, பாம்பையும், விசாலமானதும் அலைகளை உடையதுமான கங்கை நதியையும், ஆத்திப் பூவையும், வில்வத்தையும் ஜடாமுடியில் தரிக்கும் சிவபெருமானின் பேரருளால் தோன்றிய முருகோனே. (வள்ளிமலையிலிருந்த) தினைப் புனத்தில் வாழ்ந்த செழிப்பான காட்டு வேடர்கள் திகைப்புற்று இதென்ன ஆச்சரியம் என்று கூறும்படியாக வேங்கை மரமாய் அவர்களின் முன் நின்ற திறமை வாய்ந்த கந்தனே, வள்ளி நாயகி கண்டு ஆசைப்படும் கட்டழகு உடைய வேலனே, சிறந்த தாமரை ஓடையிலும், உயர்ந்த உப்பரிகையிலும் நிறைந்த கர்ப்பம் கொண்ட சங்குகள் வெண்ணிறமுடைய முத்துக்களை அலைகள் அள்ளி வீசுகின்ற (கடற்கரை உள்ள) திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள பராக்கிரமசாலியே, தேவர்கள் பெருமாளே. 
* அனிச்ச மலர் முகர்ந்தாலே வாடிவிடும் மென்மை வாய்ந்தது.
பாடல் 30 - திருச்செந்தூர்
ராகம் - மோகனம்; தாளம் - அங்கதாளம் - 5 1/2 
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தனதன தனந்த தந்த தனதன தனந்த தந்த
     தனதன தனந்த தந்த ...... தனதான
அனைவரு மருண்ட ருண்டு கடிதென வெகுண்டி யம்ப
     அமரஅ டிபின்தொ டர்ந்து ...... பிணநாறும் 
அழுகுபிணி கொண்டு விண்டு புழுவுட னெலும்ப லம்பு
     மவலவுட லஞ்சு மந்து ...... தடுமாறி 
மனைதொறு மிதம்ப கர்ந்து வரவர விருந்த ருந்தி
     மனவழி திரிந்து மங்கும் ...... வசைதீர 
மறைசதுர் விதந்தெ ரிந்து வகைசிறு சதங்கை கொஞ்சு
     மலரடி வணங்க என்று ...... பெறுவேனோ 
தினைமிசை சுகங்க டிந்த புனமயி லிளங்கு ரும்பை
     திகழிரு தனம்பு ணர்ந்த ...... திருமார்பா 
ஜெகமுழு துமுன்பு தும்பி முகவனொ டுதந்தை முன்பு
     திகிரிவ லம்வந்த செம்பொன் ...... மயில்வீரா 
இனியக னிமந்தி சிந்து மலைகிழ வசெந்தில் வந்த
     இறைவகு ககந்த என்று ...... மிளையோனே 
எழுகட லுமெண்சி லம்பும் நிசிசர ருமஞ்ச அஞ்சு
     மிமையவ ரையஞ்ச லென்ற ...... பெருமாளே.
(எனக்குவந்த நோயைக் கண்டு) யாவரும் பயந்து மனம் குழம்பி, விரைவில் அகலுக என்று என்னை அருவருப்புடன் கோபித்துக் கூறி விரட்டியும், விடாது நெருங்கி அவர்களின் அடியின் பின்னே தொடர்ந்து, பிணம்போல் நாறும், அழுகிப் போன நிலையில் நோய் முற்றி, வெளிவரும் புழுக்களுடன் எலும்புகள் நிலைகுலையும் துன்பமிகு உடலைச் சுமந்து தடுமாற்றத்தை அடைந்தும், வீடுகள் தோறும் போய் இதமான மொழிகளைக் கூறி, நாட்கள் செல்லச் செல்ல, புதுப்புது இடங்களுக்குச் சென்று விருந்து உண்டு, மனம் போன போக்கில் திரிந்து அழிகின்ற பழிப்பு தீர்வதற்கு, நான்கு வேதங்களின் வகைகளை அறிந்து முறைப்படி, சிறிய சதங்கைகள் கொஞ்சும் மலர் போன்ற உன் பாதங்களை வணங்கும் பாக்கியத்தை நான் என்று பெறுவேனோ? தினை மீதிருந்த கிளிகளை ஓட்டிய மயில் போன்ற வள்ளியின் இளம் தென்னம் பிஞ்சுகள் போன்ற இரு மார்பையும் தழுவும் அழகிய மார்பனே, உலகம் முழுவதையும், முன்பு யானைமுகன் கணபதியோடு போட்டியிட்டு தந்தை சிவனாரின் முன்னிலையில், வட்டமாக வலம் வந்த செம்பொன் மயில் வீரனே, இனிய பழங்களைக் குரங்குகள் சிந்துகின்ற மலைகளுக்கு உரியவனே, திருச்செந்தூரில் அமர்ந்த இறைவனே, குகனே, கந்தனே, என்றும் இளமையோடு இருப்பவனே, ஏழு கடல்களும், அஷ்டகிரிகளும், அசுரர்களும் அஞ்சும்படி, பயம் கொண்டிருந்த தேவர்களை அஞ்சேல் என்று அருளிய பெருமாளே. 
பாடல் 31 - திருச்செந்தூர்
ராகம் - ஹூஸேனி; தாளம் - அங்கதாளம் - 9 
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமிதக-3
தனதனன தனன தந்தத் ...... தனதான
     தனதனன தனன தந்தத் ...... தனதான
இயலிசையி லுசித வஞ்சிக் ...... கயர்வாகி
     இரவுபகல் மனது சிந்தித் ...... துழலாதே 
உயர்கருணை புரியு மின்பக் ...... கடல்மூழ்கி
     உனையெனது ளறியு மன்பைத் ...... தருவாயே 
மயில்தகர்க லிடைய ரந்தத் ...... தினைகாவல்
     வனசகுற மகளை வந்தித் ...... தணைவோனே 
கயிலைமலை யனைய செந்திற் ...... பதிவாழ்வே
     கரிமுகவ னிளைய கந்தப் ...... பெருமாளே.
இலக்கியத் தமிழிலும், இசையிலும் சிறப்பான பெண்களிடம் ஈடுபட்டு, அதனால் தளர்வு அடைந்து, இரவும் பகலும் மனது அவர்களையே நினைத்து நான் அலையாமல் இருந்து, உனது உயர்ந்த கருணையால் வரும் பேரின்பக் கடலில் மூழ்கி உன்னை நான் எனது உள்ளத்திலே அறியக்கூடிய அன்பினைத் தந்தருள்வாயாக. மயிலும் ஆடுகளும் உள்ள மலையிடை வாழும் வேடர்களின் அழகிய தினைப்புனத்தைக் காவல் செய்த லக்ஷ்மி போன்று அழகிய குறத்தியாம் வள்ளியை வணங்கிப் பின் அணைந்து கொண்டவனே, திருக்கயிலை போன்ற புனிதமான செந்தில் திருத்தலத்தில் வாழ்பவனே, யானைமுகனாம் வினாயகனுக்கு தம்பியான கந்தப் பெருமாளே. 
பாடல் 32 - திருச்செந்தூர்
ராகம் - ....; தாளம் -
தனதன தனந்த தந்தன தனதன தனந்த தந்தன
     தனதன தனந்த தந்தன ...... தனதான
இருகுழை யெறிந்த கெண்டைகள் ஒருகுமி ழடர்ந்து வந்திட
     இணைசிலை நெரிந்தெ ழுந்திட ...... அணைமீதே 
இருளள கபந்தி வஞ்சியி லிருகலை யுடன்கு லைந்திட
     இதழமு தருந்த சிங்கியின் ...... மனமாய 
முருகொடு கலந்த சந்தனஅளருப டுகுங்கு மங்கமழ்
     முலைமுக டுகொண்டெ ழுந்தொறு ...... முருகார 
முழுமதி புரிந்த சிந்துர அரிவைய ருடன்க லந்திடு
     முகடியு நலம்பி றந்திட ...... அருள்வாயே 
எரிவிட நிமிர்ந்த குஞ்சியி னிலவொடு மெழுந்த கங்கையு
     மிதழியொ டணிந்த சங்கரர் ...... களிகூரும் 
இமவரை தருங்க ருங்குயில் மரகத நிறந்த ருங்கிளி
     யெனதுயி ரெனுந்த்ரி யம்பகி ...... பெருவாழ்வே 
அரைவட மலம்பு கிண்கிணி பரிபுர நெருங்கு தண்டைக
     ளணிமணி சதங்கை கொஞ்சிட ...... மயில்மேலே 
அகமகிழ் வுகொண்டு சந்ததம் வருகும ரமுன்றி லின்புறம்
     அலைபொரு தசெந்தில் தங்கிய ...... பெருமாளே.
காதுகளில் விளங்கும் இரண்டு குண்டலங்களையும் தாக்குகின்ற கெண்டை மீன் போன்ற கண்கள் ஒப்பற்ற குமிழம் மலர் போன்ற நாசியை நெருங்கி வந்திடவும், இரண்டு வில் போன்ற புருவங்களும் நெரிந்து மேல் எழுந்திடவும், படுக்கையின் மேல் இருண்ட கரிய கூந்தல் கற்றையும், கொடி போன்ற இடையைச் சுற்றிய பெரிய ஆடையும் குலைந்திடவும், இதழ் அமுதத்தை உண்ணும் நஞ்சில் என் மனம் அழிந்து அழியவும், நறு மணத்துடன் கலந்த சந்தனச் சேற்றுடன் குங்குமம் மணக்கும் மார்பின் உச்சி விம்மிப் பூரித்து எழுந்தோறும் அழகு நிரம்ப, முழு நிலாப் போன்ற திலகம் இட்டுக் கொண்டுள்ள விலைமாதர்களுடன் கலந்திடும் கசடனாகிய எனக்கும் நன்மை பிறக்க அருள்வாயாக. நெருப்பைப் போல் ஒளி விட்டு நிமிர்ந்த சடையில் சந்திரனுடன் எழுந்த கங்கை நதியும், கொன்றையுடன் தரித்த சிவபெருமான் மகிழ்ச்சி மிகக் கொள்ளும் இமய மலையரசன் பெற்ற கரிய குயில், பச்சை நிறம் கொண்ட கிளி, எனது உயிர் என்று நான் போற்றும் மூன்று கண்களை உடையவள் ஆகிய பார்வதி பெற்ற செல்வமே, அரையில் கட்டிய பொன்வடம், ஒலிக்கின்ற கிண்கிணி, சிலம்பு, நெருங்கியுள்ள தண்டைகள், அழகிய மணியாலாகிய சதங்கை இவை எல்லாம் கொஞ்ச, மயிலின் மேல் உள்ளம் பூரித்து எப்போதும் வருகின்ற குமரனே, முற்புறத்தில் அலைகள் வந்து மோதுகின்ற கரையுடைய திருச்செந்தூர் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 33 - திருச்செந்தூர்
ராகம் - ....; தாளம் - ........
தனதன தனன தனத்தத் தாத்தன
     தனதன தனன தனத்தத் தாத்தன
          தனதன தனன தனத்தத் தாத்தன ...... தந்ததான
இருள்விரி குழலை விரித்துத் தூற்றவு
     மிறுகிய துகிலை நெகிழ்த்துக் காட்டவு
          மிருகடை விழியு முறுக்கிப் பார்க்கவு ...... மைந்தரோடே 
இலைபிள வதனை நடித்துக் கேட்கவு
     மறுமொழி பலவு மிசைத்துச் சாற்றவு
          மிடையிடை சிறிது நகைத்துக் காட்டவு ...... மெங்கள்வீடே 
வருகென வொருசொ லுரைத்துப் பூட்டவும்
     விரிமல ரமளி யணைத்துச் சேர்க்கவும்
          வருபொரு ளளவி லுருக்கித் தேற்றவு ...... நிந்தையாலே 
வனைமனை புகுதி லடித்துப் போக்கவு
     மொருதலை மருவு புணர்ச்சித் தூர்த்தர்கள்
          வசைவிட நினது பதத்தைப் போற்றுவ ...... தெந்தநாளோ 
குருமணி வயிர மிழித்துக் கோட்டிய
     கழைமட வுருவு வெளுத்துத் தோற்றிய
          குளிறிசை யருவி கொழித்துத் தூற்றிய ...... மண்டுநீரூர் 
குழிபடு கலுழி வயிற்றைத் தூர்த்தெழு
     திடர்மண லிறுகு துருத்திக் காப்பொதி
          குளிர்நிழ லருவி கலக்கிப் பூப்புனை ...... வண்டலாடா 
முருகவிழ் துணர்க ளுகுத்துக் காய்த்தினை
     விளைநடு விதணி லிருப்பைக் காட்டிய
          முகிழ்முலை யிளைய குறத்திக் காட்படு ...... செந்தில்வாழ்வே 
முளையிள மதியை யெடுத்துச் சாத்திய
     சடைமுடி யிறைவர் தமக்குச் சாத்திர
          முறையருள் முருக தவத்தைக் காப்பவர் ...... தம்பிரானே.
கருமையாக இருண்டு விரிந்த கூந்தலை விரித்து ஆற்றவும், இறுக்கக் கட்டிய ஆடையை தளர்த்திக் காட்டவும், இரண்டு விழிக் கடைகளாலே செருக்குடன் பார்க்கவும், ஆண் மக்களோடு வெற்றிலையையும் வெட்டுப் பாக்கையும் நடிப்புடன் கேட்கவும், மறு மொழிகள் பலவற்றை இணக்கத்துடன் சொல்லியும், இடையிடையில் சற்று புன்னகை செய்து காட்டியும், (இது) எங்கள் வீடு தான் வருக என்று ஒரு சொல்லைச் சொல்லி வளைத்து மாட்டுவித்தும், விரிந்த மலர்ப் படுக்கையில் அணைத்துச் சேர்க்கவும், வந்த பொருளுக்குத் தக்க படி உருக்கம் காட்டி சரசமாடியும், நிந்தையாலே வனை மனை (பின்னர்) நிந்தை மொழி கூறி அலங்கரிக்கப்பட்ட வீட்டில் நுழைந்தால் அடித்து விரட்டவும், ஒரு தலைக் காமத்தினராகப் (தம் இச்சைப்படி) புணரும் கொடிய வேசியர்களின் பழிப்பு நீங்க உனது திருவடியைப் போற்றுவது எந்த நாளோ? நிறமுள்ள வைர மணிகளை அடித்துத் தள்ளி, வளைந்த இள மூங்கிலின் உருவம் வெளுத்துத் தோற்றுப் போம்படியான வெண்மையையும், ஒலிக்கின்ற இசையை உடைய சிற்றாறு ஒதுக்கி இறைக்க, பெருகிய நீர் பாய்கின்ற ஆழம் படுகின்ற காட்டாற்றின் மத்தியில் அடைபட்டு எழுந்த மேட்டு மணலால் இறுகி நிற்கும் திட்டினுள்ள சோலையின் அடர்ந்த குளிர்ந்த நிழலில் அருவியைக் கலக்கியும், பூப்புனைந்தும், மகளிர் விளையாடியும், மணம் வீசும் பூங்கொத்துக்களை விட்டு கதிர் விடும் தினை விளையும் புனத்தின் நடுவில் உள்ள பரணின் மீது தான் இருத்தலைக் காட்டிய அரும்பும் மார்பகங்களை உடைய இளைய குறப் பெண்ணாகிய வள்ளிக்கு ஆட்பட்ட திருச்செந்தூர்ப் பெருமாளே, முளைக்கின்ற இளம் பிறையை எடுத்துச் சூடிய சடாபாரம் தாங்கிய சிவபெருமானுக்கு சாத்திர முறையை ஓதி அருளிய முருகனே, தவ நிலையைக் காக்கும் முனிவர்களுடைய பெருமாளே. 
பாடல் 34 - திருச்செந்தூர்
ராகம் - கீரவாணி; தாளம் - அங்கதாளம் - 6 1/2 
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1
தனதனன தந்த தானதன
     தனதனன தந்த தானதன
          தனதனன தந்த தானதன ...... தந்ததான
உததியறல் மொண்டு சூல்கொள்கரு
     முகிலெனஇ ருண்ட நீலமிக
          வொளிதிகழு மன்றல் ஓதிநரை ...... பஞ்சுபோலாய் 
உதிரமெழு துங்க வேலவிழி
     மிடைகடையொ துங்கு பீளைகளு
          முடைதயிர்பி திர்ந்த தோஇதென ...... வெம்புலாலாய் 
மதகரட தந்தி வாயினிடை
     சொருகுபிறை தந்த சூதுகளின்
          வடிவுதரு கும்ப மோதிவளர் ...... கொங்கைதோலாய் 
வனமழியு மங்கை மாதர்களின்
     நிலைதனையு ணர்ந்து தாளிலுறு
          வழியடிமை யன்பு கூருமது ...... சிந்தியேனோ 
இதழ்பொதிய விழ்ந்த தாமரையின்
     மணவறைபு குந்த நான்முகனும்
          எறிதிரைய லம்பு பாலுததி ...... நஞ்சராமேல் 
இருவிழிது யின்ற நாரணனும்
     உமைமருவு சந்த்ர சேகரனும்
          இமையவர்வ ணங்கு வாசவனும் ...... நின்றுதாழும் 
முதல்வசுக மைந்த பீடிகையில்
     அகிலசக அண்ட நாயகிதன்
          மகிழ்முலைசு ரந்த பாலமுத ...... முண்டவேளே 
முளைமுருகு சங்கு வீசியலை
     முடுகிமைத வழ்ந்த வாய்பெருகி
          முதலிவரு செந்தில் வாழ்வுதரு ...... தம்பிரானே.
கடலின் நீரை மொண்டு குடித்துக் கருக் கொண்ட கரிய மேகம் போல இருண்ட நீல நிறம் மிகுத்த ஒளி வீசும், வாசனை நிறைந்த கூந்தல் நரைத்து பஞ்சு போல் வெளுத்ததாய், இரத்த ஓட்டம் நிறைந்து, பரிசுத்தமான வேல் போன்ற விழிக்கடைகளில் நெருங்கி, துர் நாற்றம் கொண்ட தயிர்த்துளிகள் சிதறினவோ என்று சொல்லும்படி கொடிய மாமிச நாற்றம் உடையதாய், மதநீர் பாயும் சுவடு கொண்ட யானையின் வாயில் சொருகியுள்ள பிறைச் சந்திரனைப் போன்ற வடிவம் உடைய தந்தங்களில் செய்யப்பட்ட சூதாடு பகடைகளின் வடிவு கொண்டனவாய் குடங்களைத் தகர்த்து வளர்ந்த மார்பகங்கள் வெறும் தோலாய், அழகு குலைந்து போன மங்கையர்களான (விலை) மாதர்களுடைய அழகின் (நிலையாமை) நிலையை உணர்ந்து, (உனது) திருவடியையே சிந்தனை செய்யும் வழி அடிமையாகிய நான்அன்பு வளரும் அந்த வழியையே நினைக்க மாட்டேனோ? இதழ்களின் கட்டுகள் விரிந்த தாமரை மலரின் நறு மணம் உள்ள வீட்டில் புகுந்து வீற்றிருக்கும் நான்முகன் பிரமனும், வீசுகின்ற அலைகள் மோதும் பாற்கடலில் விஷம் மிகுந்த பாம்பாம் ஆதிசேஷன் மேல் இரு கண்களும் துயில் கொள்ளும் திருமாலும், உமையம்மையை இடப்பாகத்தில் சேர்ந்துள்ள சந்திரசேகர தேவர்கள் வணங்குகின்ற இந்திரனும் சந்நிதியின் முன்பு நின்று வணங்கும் முழுமுதற் கடவுளே, சுகத்தைத் தரும் குமார மூர்த்தியே, சிறந்த இருக்கையில் (அமர்ந்திருந்த உன் தாயின் மடியில் கிடந்து), எல்லா உலகங்களுக்கும் தலைவியாகிய பார்வதிநாயகியின் குவிந்த திருமார்பில் சுரந்த பால் அமுதத்தைப் பருகிய தலைவனே, மிக்க இளமையான சங்குகளை வீசி அலைகள் கரையில் விரைந்து நெருங்கி, மேகநிறக் கடலால் இந்நகரின் வளம் பெருகி, ஞானம் முற்பட்டு உயர்ந்த திருச்செந்தூரில் அனைவருக்கும் வாழ்வைத் தருகின்ற தம்பிரானே. 
பாடல் 35 - திருச்செந்தூர்
ராகம் - ......; தாளம் - ........
தனத்தந் தானன தானன தானன
     தனத்தந் தானன தானன தானன
          தனத்தந் தானன தானன தானன ...... தனதான
உருக்கம் பேசிய நீலியர் காசுகள்
     பறிக்குந் தோஷிகள் மோகவி காரிகள்
          உருட்டும் பார்வையர் மாபழி காரிகள் ...... மதியாதே 
உரைக்கும் வீரிகள் கோளர வாமென
     வுடற்றுந் தாதியர் காசள வேமனம்
          உறைக்குந் தூரிகள் மீதினி லாசைகள் ...... புரிவேனோ 
அருக்கன் போலொளி வீசிய மாமுடி
     யனைத்துந் தானழ காய்நல மேதர
          அருட்கண் பார்வையி னாலடி யார்தமை ...... மகிழ்வோடே 
அழைத்துஞ் சேதிகள் பேசிய காரண
     வடிப்பந் தானென வேயெனை நாடொறும்
          அதிக்கஞ் சேர்தர வேயரு ளாலுட ...... னினிதாள்வாய் 
இருக்குங் காரண மீறிய வேதமும்
     இசைக்குஞ் சாரமு மேதொழு தேவர்கள்
          இடுக்கண் தீர்கன னேயடி யார்தவ ...... முடன்மேவி 
இலக்கந் தானென வேதொழ வேமகிழ்
     விருப்பங் கூர்தரு மாதியு மாயுல
          கிறுக்குந் தாதகி சூடிய வேணிய ...... னருள்பாலா 
திருக்குந் தாபதர் வேதிய ராதியர்
     துதிக்குந் தாளுடை நாயக னாகிய
          செகச்செஞ் சோதியு மாகிய மாதவன் ...... மருகோனே 
செழிக்குஞ் சாலியு மேகம ளாவிய
     கருப்பஞ் சோலையும் வாழையு மேதிகழ்
          திருச்செந் தூர்தனில் மேவிய தேவர்கள் ...... பெருமாளே.
உருக்கமான மொழிகளைப் பேசும் தந்திரம் உள்ளவர், பிறரிடமிருந்துப் பொருள் கவரும் குற்றம் உள்ளவர், மோக விகாரம் கொண்டவர், உருட்டிப் பார்க்கும் பார்வையர், மிக்க பழிகாரிகள், மதிக்காமல் பேசும் அகங்காரம் உள்ளவர், கொல்ல வருகின்ற பாம்பு போல வருத்துகின்ற தாசிகள், கிடைத்த பொருளுக்குத் தக்கபடி மனத்தை அழுந்தச் செலுத்தும் துன்மார்க்கம் உள்ளவர்கள் (இத்தகையோர்) மேலே விருப்பம் வைப்பேனோ? சூரியனைப் போல் ஒளி வீசும் பெருமை மிக்க இரத்தின கி¡£டங்கள் யாவும் காண்பவர்களுக்கு அழகாக விளங்கும் நன்மையே வழங்க, அருள் கண் பார்வை கொண்டு அடியார்களை மகிழ்ச்சியுடன் அழைத்தும், அவர்களுடன் விஷயங்களைப் பேசியும் இருந்த மூலப் பொருளே, திருந்திய குணம் உள்ளவன் தான் இவன் என்று என்னை தினமும் மேன்மேலும் சிறப்புறும் வண்ணம் உனது திருவருளால் இப்பொழுதே இனிமையுடன் ஆண்டருள்வாயாக. ரிக்கு வேதமும், காரணங்களைக் கடந்து நிற்கும் தனிச் சிறப்புடைய (தமிழ்) வேதமும் (தேவாரமும்), அவற்றுள் மறைந்து கிடக்கும் உட்கருத்துக்களைக் கூறும் வேதசாரமாகிய ஆகமங்களும் தொழுகின்ற தேவர்களின் துன்பம் தீர்க்கின்ற பெருமை வாய்ந்தவனே, அடியார்கள் தவ நெறியில் நின்று இவரே நமது குறிப் பொருள் என்று தொழவே, மகிழ்ந்து விருப்பம் மிகக் கொள்ளும் முன்னைப் பழம் பொருளாய் நிற்பவனே, உலகங்களை எல்லம் சம்ஹாரம் செய்பவரும், ஆத்தி மலரைச் சூடிய சடையை உடையவருமாகிய சிவபெருமான் அருளிய குழந்தையே, முன்று காலங்களையும் காண வல்ல தவ சிரேஷ்டர்கள் வேதியர் முதலானோர் வணங்கும் திருவடிகளை உடைய பெருமானாகியவரும் உலகுக்குப் பேரொளியாய் விளங்குகின்றவரும் ஆகிய திருமாலின் மருகனே, செழிப்புள்ள நெற் பயிரும் மேகத்தை எட்டி வளர்ந்துள்ள கரும்புச் சோலையும் வாழை மரங்களும் பொலிகின்ற திருச்செந்தூரில் வீற்றிருக்கும், தேவர்களின் பெருமாளே. 
பாடல் 36 - திருச்செந்தூர்
ராகம் - வலஜி / பந்துவராளி; தாளம் - ஆதி 
- எடுப்பு - 3/4 இடம்
தானன தானன தானன தானன
     தானன தானன ...... தனதானா
ஏவினை நேர்விழி மாதரை மேவிய
     ஏதனை மூடனை ...... நெறிபேணா 
ஈனனை வீணனை ஏடெழு தாமுழு
     ஏழையை மோழையை ...... அகலாநீள் 
மாவினை மூடிய நோய்பிணி யாளனை
     வாய்மையி லாதனை ...... யிகழாதே 
மாமணி நூபுர சீதள தாள்தனி
     வாழ்வுற ஈவது ...... மொருநாளே 
நாவலர் பாடிய நூலிசை யால்வரு
     நாரத னார்புகல் ...... குறமாதை 
நாடியெ கானிடை கூடிய சேவக
     நாயக மாமயி ...... லுடையோனே 
தேவிம நோமணி ஆயிப ராபரை
     தேன்மொழி யாள்தரு ...... சிறியோனே 
சேணுயர் சோலையி னீழலி லேதிகழ்
     சீரலை வாய்வரு ...... பெருமாளே.
அம்பினை நிகர்க்கும் கண்களை உடைய மாதர்களை விரும்பும் கேடுகெட்டவனை, மூடனை, ஒழுக்கம் இல்லாத இழிந்தோனை, படிப்பே இல்லாத முழு ஏழையை, மடையனை, என்னைவிட்டு நீங்கா தீவினை மூடியுள்ள நோயும் பிணியும் கொண்டவனை, உண்மை இல்லாதவானை, இகழ்ந்து ஒதுக்காமல் சிறந்த மணிகளாலான சிலம்புள்ள உன் பாதங்களை, ஒப்பற்ற வாழ்வை (முக்தியை) யான் பெற தந்துதவும் ஒரு நாளும் எனக்கு உண்டோ? புலவர்கள் பாடிய நூல்களில் புகழப்பட்ட நாரத மாமுனிவர் முன்பு வருணித்த குறப்பெண் வள்ளியை விரும்பிச் சென்று காட்டிலே கூடிய வீரனே தலைவனே சிறந்த மயில் வாகனனே தேவி, மனோன்மணி, அன்னை, பராபரை, தேன் மொழியாள் உமையின் சிறுமகனே விண்வரை உயர்ந்த சோலைகளின் நிழலினிலே வளங்கும் திருச்செந்தூரில் அமர்ந்த பெருமாளே. 
பாடல் 37 - திருச்செந்தூர்
ராகம் - பிலஹரி; தாளம் - ஆதி - 2 களை
தானா தந்தத் தானா தந்தத்
     தானா தந்தத் ...... தனதானா
ஓரா தொன்றைப் பாரா தந்தத்
     தோடே வந்திட் ...... டுயிர்சோர 
ஊடா நன்றற் றார்போல் நின்றெட்
     டாமால் தந்திட் ...... டுழல்மாதர் 
கூரா வன்பிற் சோரா நின்றக்
     கோயா நின்றுட் ...... குலையாதே 
கோடார் செம்பொற் றோளா நின்சொற்
     கோடா தென்கைக் ...... கருள்தாராய் 
தோரா வென்றிப் போரா மன்றற்
     றோளா குன்றைத் ...... தொளையாடீ 
சூதா யெண்டிக் கேயா வஞ்சச்
     சூர்மா அஞ்சப் ...... பொரும்வேலா 
சீரார் கொன்றைத் தார்மார் பொன்றச்
     சேவே றெந்தைக் ...... கினியோனே 
தேனே யன்பர்க் கேயா மின்சொற்
     சேயே செந்திற் ...... பெருமாளே.
உண்மை என்ற ஒன்றை ஆராய்ந்து அறியாமலும், அந்த உண்மையைப் பார்க்காமலும், அலங்காரம் செய்துகொண்டு வந்து, ஆண்களின் உயிர் சோர்ந்து போகும்படி ஊடல் செய்து, தங்களுக்கு நல்லது ஏதும் இல்லாதவர்கள் போல நின்று, அளவற்ற காம மயக்கத்தைத் தந்து, திரிகின்ற பெண்களின் விருப்பமற்ற வெளிவேஷ அன்பில் சோர்வடைந்து, எலும்போடு கூடிய என் சா£ரம் ஓய்ந்துபோய் உள்ளம் குலைந்து போகாதபடியாக, மலைபோன்ற செவ்விய அழகிய தோளை உடையவனே, உனது திருப்புகழ் நேராக நின்று உதவும் என்று உலகத்தார் கூறும்வண்ணம் திருவருள் தந்தருள்க. தோல்வியே தெரியாத வெற்றிப் போர் வீரா, மணம் வீசும் (மாலைகள் அணிந்த) தோளை உடையவனே, கிரெளஞ்ச மலையைத் தொளைத்தவனே, சூழ்ச்சி செய்து எட்டுத் திக்கும் பொருந்தி நின்ற வஞ்சகச் சூரனாம் மாமரம் அஞ்சப் போரிட்ட வேலனே, சிறப்பு மிகுந்த கொன்றைமாலை மார்பில் திகழ ரிஷபத்தில் ஏறும் எம் தந்தை சிவனாருக்கு இனியவனே, தேன் போல் இனிப்பவனே, அன்பர்க்கென்றே இனிய சொற்கள் கொண்ட சேயே, திருச்செந்தூரில் மேவிய பெருமாளே. 
பாடல் 38 - திருச்செந்தூர்
ராகம் - மனோலயம் - மத்யமஸ்ருதி; தாளம் - சதுஸ்ர த்ருவம் - கண்ட நடை - 35 
/4/4/4 0 - நடை தக தகிட
தத்ததன தத்தத் தனந்தந் தனந்ததன
     தத்ததன தத்தத் தனந்தந் தனந்ததன
          தத்ததன தத்தத் தனந்தந் தனந்ததன ...... தனதான
கட்டழகு விட்டுத் தளர்ந்தங் கிருந்துமுனம்
     இட்டபொறி தப்பிப் பிணங்கொண் டதின்சிலர்கள்
          கட்டணமெ டுத்துச் சுமந்தும் பெரும்பறைகள் ...... முறையோடே 
வெட்டவிட வெட்டக் கிடஞ்சங் கிடஞ்சமென
     மக்களொரு மிக்கத் தொடர்ந்தும் புரண்டும்வழி
          விட்டுவரு மித்தைத் தவிர்ந்துன் பதங்களுற ...... வுணர்வேனோ 
பட்டுருவி நெட்டைக் க்ரவுஞ்சம் பிளந்துகடல்
     முற்றுமலை வற்றிக் குழம்புங் குழம்பமுனை
          பட்டஅயில் தொட்டுத் திடங்கொண் டெதிர்ந்தவுணர் ...... முடிசாயத் 
தட்டழிய வெட்டிக் கவந்தம் பெருங்கழுகு
     நிர்த்தமிட ரத்தக் குளங்கண் டுமிழ்ந்துமணி
          சற்சமய வித்தைப் பலன்கண் டுசெந்திலுறை ...... பெருமாளே.
இறுகிய கட்டுக்கோப்பாய் இருந்த அழகிய உடல் தளர்ந்துபோய், அவ்வுடலில் இருந்துகொண்டு முன்பு ஆட்டிவைத்த ஐந்து பொறிகளும் கலங்கிச் சிதறிப்போய், பிணம் என்ற நிலையை உடல் அடைந்ததும், சில பேர்கள் பிணத்தைக் கூலிக்கு எடுத்துச் சுமந்து போக, பெரிய பறைகள் முறைப்படியாக வெட்டவிட வெட்டக் கிடஞ்சங் கிடஞ்சம் என்ற ஓசையில் முழங்க, மக்கள் ஒன்றுகூடிப் பிணத்தைத் தொடர்ந்தும், சிலர் செல்லும் வழியிலே புரண்டும் சிலர் பிணம் செல்வதற்கு வழி விடுகின்றதுமான இந்தப் பொய்யான வாழ்வை விட்டு, உன் திருவடிகளை அடையும் வழியை நான் உணர மாட்டேனோ? பட்டு உருவிச் செல்லும்படி ஆணவம் கொண்ட உயரமான கிரெளஞ்சமலையை வேலாயுதம் பிளந்து எறிந்து, கடல் முழுதும் அலை வற்றிப்போய் குழம்பாகக் போகும்படி, கூர்மை கொண்ட வேலாயுதத்தைச் செலுத்தி, வலிமையோடு எதிர்த்த அசுரர்களின் முடி சாயும்படியாக, அடியோடு அழியும்படி வெட்டி, தலையற்ற உடல்களும், பெரிய கழுகுகளும் நடனமாடவும், ரத்தம் குளமாகப் பெருகச்செய்தும், அசுரர் கி¡£டங்களினின்று மணிகள் சிதறி விழ வைத்தும், தேவர்களுக்கு நல்ல காலம் வருவதற்கான விதையைப் பலன் கிடைக்குமாறு நீ நட்டுவைத்த திருச்செந்தூர் நகரில் வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 39 - திருச்செந்தூர்
ராகம் - காவடிச்சிந்து; தாளம் - அங்கதாளம் - 5 1/2 
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தந்ததன தந்த தந்த தந்ததன தந்த தந்த
     தந்ததன தந்த தந்த ...... தனதான
கண்டுமொழி கொம்பு கொங்கை வஞ்சியிடை யம்பு நஞ்சு
     கண்கள்குழல் கொண்டல் என்று ...... பலகாலும் 
கண்டுளம்வ ருந்தி நொந்து மங்கையர்வ சம்பு ரிந்து
     கங்குல்பகல் என்று நின்று ...... விதியாலே 
பண்டைவினை கொண்டு ழன்று வெந்துவிழு கின்றல் கண்டு
     பங்கயப தங்கள் தந்து ...... புகழோதும் 
பண்புடைய சிந்தை யன்பர் தங்களினு டன்க லந்து
     பண்புபெற அஞ்ச லஞ்ச ...... லெனவாராய் 
வண்டுபடு கின்ற தொங்கல் கொண்டறநெ ருங்கி யிண்டு
     வம்பினைய டைந்து சந்தின் ...... மிகமூழ்கி 
வஞ்சியைமு னிந்த கொங்கை மென்குறம டந்தை செங்கை
     வந்தழகு டன்க லந்த ...... மணிமார்பா 
திண்டிறல்பு னைந்த அண்டர் தங்களப யங்கள் கண்டு
     செஞ்சமர்பு னைந்து துங்க ...... மயில்மீதே 
சென்றசுரர் அஞ்ச வென்று குன்றிடைம ணம்பு ணர்ந்து
     செந்தில்நகர் வந்த மர்ந்த ...... பெருமாளே.
கற்கண்டுச் சொல், யானைத் தந்தம் போன்ற மார்பு, வஞ்சிக் கொடி போன்ற இடை, அம்பையும் நஞ்சையும் ஒத்த கண்கள், கூந்தல் மேகம் போன்றது என பலமுறையும் உவமை கண்டு, உள்ளம் வருந்தி, நொந்து போய், மாதர்களின் வசப்பட்டு, இரவும் பகலுமாக நின்று, விதியின் பயனாய் பழவினை தாக்க, அதனால் திரிந்து, என் மனம் வெந்து வீழ்வதைக் கண்டு, உன் தாமரைப் பதங்களைத் தந்தளித்து, உன் புகழை ஓதும் பண்பு கொண்ட மனத்து அன்பர்களுடன் கலந்து நான் நற்குணம் பெறுவதற்கு, நீ அஞ்சாதே அஞ்சாதே என்று கூறி வருவாயாக. வண்டுகள் மொய்க்கின்ற மலர்மாலையைப் பூண்டு, மிக நெருக்கமாக நெய்த அழுத்தமான ரவிக்கையை அணிந்து, சந்தனக்குழம்பில் மிகவும் முழுகி, வஞ்சிக் கொடி போன்ற இடையை வருத்துகின்ற மார்பினள், மென்மையான குறப்பெண் வள்ளியின் சிவந்த கைகளை அவளது இடத்துக்கு (வள்ளிமலைக்கு) ச் சென்று எழிலுடன் தொட்டுக் கலந்த திருமார்பனே. திண்ணிய வலிமை கொண்ட தேவர்கள் நின்னிடம் அபயம் அடைய வேண்டுவதைக் கண்டு, செவ்விய போர்க்கோலம் பூண்டு, தூய மயில்மீது ஏறிச்சென்று, போர்க்களத்தில் அசுரர்களை அஞ்சும்படி வெற்றி கொண்டு, (திருப்பரங்) குன்றத்தில் தேவயானையை மணம்புரிந்து, திருச்செந்தூர்ப்பதியில் வந்து வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 40 - திருச்செந்தூர்
ராகம் - ஆனந்த பைரவி - மத்யம ஸ்ருதி; தாளம் - அங்கதாளம் - 7 1/2 
தகிட-1 1/2, தாதக-2, தகதிமி-2, தகதிமி-2
தனன தானன தந்தன தந்தன
     தனன தானன தந்தன தந்தன
          தனன தானன தந்தன தந்தன ...... தனதான
கமல மாதுடன் இந்திரை யுஞ்சரி
     சொலவொ ணாதம டந்தையர் சந்தன
          களப சீதள கொங்கையில் அங்கையில் ...... இருபோதேய் 
களவு நூல்தெரி வஞ்சனை அஞ்சன
     விழியின் மோகித கந்தசு கந்தரு
          கரிய ஓதியில் இந்துமு கந்தனில் ...... மருளாதே 
அமல மாகிய சிந்தைய டைந்தகல்
     தொலைவி லாதஅ றம்பொருள் இன்பமும்
          அடைய ஓதியு ணர்ந்துத ணந்தபின் ...... அருள்தானே 
அறியு மாறுபெ றும்படி அன்பினின்
     இனிய நாதசி லம்புபு லம்பிடும்
          அருண ஆடக கிண்கிணி தங்கிய ...... அடிதாராய் 
குமரி காளிப யங்கரி சங்கரி
     கவுரி நீலிப ரம்பரை அம்பிகை
          குடிலை யோகினி சண்டினி குண்டலி ...... எமதாயி 
குறைவி லாள்உமை மந்தரி அந்தரி
     வெகுவி தாகம சுந்தரி தந்தருள்
          குமர மூஷிக முந்திய ஐங்கர ...... கணராயன் 
மமவி நாயகன் நஞ்சுமிழ் கஞ்சுகி
     அணிக ஜானன விம்பனொர் அம்புலி
          மவுலி யானுறு சிந்தையு கந்தருள் ...... இளையோனே 
வளரும் வாழையு மஞ்சளும் இஞ்சியும்
     இடைவி டாதுநெ ருங்கிய மங்கல
          மகிமை மாநகர் செந்திலில் வந்துறை ...... பெருமாளே.
தாமரையில் வீற்றிருக்கும் ஸரஸ்வதியும், லக்ஷ்மியும் இவர்களுக்கு ஒப்பு என்று சொல்ல ஒண்ணாத அழகான மாதர்களின் சந்தனக் கலவை பூசிக் குளிர்ந்த மார்பகங்களிலும், அழகிய கரங்களிலும், இரவு பகல் ஆகிய இரண்டு வேளைகளிலும் பொருந்தி, காமசாஸ்திரங்களைக் கற்றறிந்த, வஞ்சனை நிறைந்த மை தீட்டிய கண்களிலும், மோகத்தைத் தூண்டும் நறுமணச் சுகம் தரும் கரிய கூந்தலிலும், சந்திரனை ஒத்த முகத்திலும் மயக்கம் கொள்ளாமல், மாசு இல்லாத தூய சிந்தையை அடைந்து, பரந்துள்ளதும், அழிவற்றதும் ஆகிய அறம், பொருள், இன்பம் பற்றிய நூல்கள் முழுமையும் ஓதி உணர்ந்து, ஆசைகள் நீங்கி அடங்கியபின்னர், உன் திருவருளை தானாகவே அறியும் வழியை யான் அடையுமாறு, அன்புடனே, இனிமையான ஓசையுடன் சிலம்பு ஒலிப்பதும், செம்பொன்னால் ஆன சதங்கைகள் அணிந்துள்ளதுமான உன் திருவடிகளைத் தந்தருள்வாயாக. என்றும் அகலாத இளமையுடைய கன்னியும், கரிய நிறக் காளியும், அடியவர் பயத்தை நீக்குபவளும், ஆன்மாக்களுக்கு சுகத்தைத் தருபவளும், பொன்னிறத்தாளும், நீல நிறத்தாளும், பெரும் பொருளுக்கெல்லாம் பெரியவளும், உலக மாதாவும், சுத்த மாயையும், யோக சொரூபமாக இருப்பவளும், பாவிகளுக்குக் கொடியவளும், குண்டலினி சக்தியும், எங்கள் தாயும், குறைவில்லாதவளும், உமாதேவியும், சுவர்க்கம் தருபவளும், முடிவற்றவளும், பலவகைச் சிவாகமங்களால் துதிக்கப் பெறும் அழகியும் ஆகிய பார்வதி தேவி பெற்றருளிய குமரனே, மூஷிக வாகனத்தில் ஏறியவரும், ஐந்து கரத்தாரும், கணங்களுக்குத் தலைவரும், எங்கள் விநாயகரும், விஷத்தைக் கக்கும் சர்ப்பத்தை இடுப்பில் ஆபரணமாகத் தரித்த யானை முகத்தை உடையவரும், பிறைச் சந்திரனைத் தலைமுடியில் தரித்திருப்பவருமான விநாயக மூர்த்தி மிகவும் மனமகிழ்ந்து அருளத் தக்க இளைய பெருமானே, செழித்து வளர்ந்த வாழையும் மஞ்சளும் இஞ்சியும் இடைவெளி இல்லாமல் நெருங்கி உள்ளதும், மங்கலத்தை உடையதும், கீர்த்தி வாய்ந்ததுமான பெருநகர் திருச்செந்தூர்ப் பதியில் எழுந்தருளியுள்ள பெருமாளே.
பாடல் 41 - திருச்செந்தூர்
ராகம் - ....; தாளம் -
தனத்தந்தம் தனத்தந்தம்
     தனத்தந்தம் தனத்தந்தம்
          தனத்தந்தம் தனத்தந்தம் ...... தனதானா
கரிக்கொம்பந் தனித்தங்கங்
     குடத்தின்பந் தனத்தின்கண்
          கறுப்புந்தன் சிவப்புஞ்செம் ...... பொறிதோள்சேர் 
கணைக்கும்பண் டுழைக்கும்பங்
     களிக்கும்பண் பொழிக்குங்கண்
          கழுத்துஞ்சங் கொளிக்கும்பொன் ...... குழையாடச் 
சரக்குஞ்சம் புடைக்கும்பொன்
     றுகிற்றந்தந் தரிக்குந்தன்
          சடத்தும்பண் பிலுக்குஞ்சம் ...... பளமாதர் 
சலித்தும்பின் சிரித்துங்கொண்
     டழைத்துஞ்சண் பசப்பும்பெண்
          தனத்துன்பந் தவிப்புண்டிங் ...... குழல்வேனோ 
சுரர்ச்சங்கந் துதித்தந்தஞ்
     செழுத்தின்பங் களித்துண்பண்
          சுகத்துய்ந்தின் பலர்ச்சிந்தங் ...... கசுராரைத் 
துவைத்தும்பந் தடித்துஞ்சங்
     கொலித்துங்குன் றிடித்தும்பண்
          சுகித்துங்கண் களிப்புங்கொண் ...... டிடும்வேலா 
சிரப்பண்புங் கரப்பண்புங்
     கடப்பந்தொங் கலிற்பண்புஞ்
          சிவப்பண்புந் தவப்பண்புந் ...... தருவோனே 
தினைத்தொந்தங் குறப்பெண்பண்
     சசிப்பெண்கொங் கையிற்றுஞ்சுஞ்
          செழிக்குஞ்செந் திலிற்றங்கும் ...... பெருமாளே.
யானையின் கொம்பு போலவும், ஒப்பற்ற தங்கக் குடம் போலவும் தோன்றி, இன்பம் தரும் மார்பகத்தின் இடத்தே கரு நிறத்தையும் செந்நிறத்தையும், செவ்வரியையும் உடையதாய், தோளை எட்டும் அளவினதாக நீண்டதாய், அம்பும் முன்னதாக மானும் போன்றதாய், (பார்த்தவர்களின்) நற்குணத்தை அழிக்க வல்லதாகிய கண், சங்கு வெட்கி ஒளிந்து கொள்ளும்படியான கழுத்து, பொன்னாலாகிய காதணிகள் ஊசலாட, மாலைச் சரம் போலத் தொங்க விட்டுள்ள குஞ்சம் வெளிப்பட, பொன் ஆடையால் யானைத்தந்தம் (போன்ற மார்பை மூடும்படி) தரித்துள்ள தமது உடல் தகுதியான நகைகளைக் கொண்டு ஆடம்பரமாக அலங்கரித்துள்ள விலைமாதர்கள். முதலில் சலித்தும் பிறகு சிரித்தும், (வந்தவரை) அழைத்துச் சென்றும், சார்ந்து பசப்பியும், பொது மகளிரின் மார்பகத்தால் வரும் துன்பம் கொண்டு தவித்து இந்த உலகில் திரிவேனோ? தேவர்களின் கூட்டம் துதி செய்த அந்த ஐந்தெழுத்தால் (நமசிவாய மந்திரத்தால்) வரும் இன்பத்தில் மகிழ்ந்து, உண்ணுதல், இசை பாடுதல் ஆகிய சுகத்தில் திளைத்து வாழ்ந்த இன்ப வாழ்வை அழியும்படி செய்த காரணத்தால், அங்கு அசுரர்களை மிதித்துக் கசக்கி பந்தடிப்பது போல் அடித்தும், வெற்றிச் சங்கை ஒலித்தும், கிரெளஞ்ச மலையைப் பொடி செய்தும், இசையோடு மகிழ்ந்தும் கண் களிப்புக் கொண்ட வேலனே, உன்னை வணங்குவதால் தலை பயன் பெறுதலையும், உன்னைக் கைகூப்பித் தொழுதலால் கைகள் பயன் அடைவதையும், கடப்ப மாலை சூட்டுதலைக் கண்டு சிவமாகும் தன்மை பெறுதலையும், தவ நிலை அடைதலையும் கொடுப்பவனே, தினைப் புனத்துத் தொடர்புடைய குறப் பெண்ணாகிய வள்ளி, சீர் நிறைந்த இந்திராணியின் மகளான தேவயானை ஆகிய இருவர்களின் மார்பகங்களில் துயில் கொள்ளும் பெருமாளே, செழிப்பான திருச்செந்தூரில் உறையும் பெருமாளே. 
பாடல் 42 - திருச்செந்தூர்
ராகம் - ..........; தாளம் - ........
தனத்தந்தம் தனத்தந்தம்
     தனத்தந்தம் தனத்தந்தம்
          தனத்தந்தம் தனத்தந்தம் ...... தனதானா
கருப்பந்தங் கிரத்தம்பொங்
     கரைப்புண்கொண் டுருக்கும்பெண்
          களைக்கண்டங் கவர்ப்பின்சென் ...... றவரோடே 
கலப்புண்டுஞ் சிலுப்புண்டுந்
     துவக்குண்டும் பிணக்குண்டுங்
          கலிப்புண்டுஞ் சலிப்புண்டுந் ...... தடுமாறிச் 
செருத்தண்டந் தரித்தண்டம்
     புகத்தண்டந் தகற்கென்றுந்
          திகைத்தந்திண் செகத்தஞ்சுங் ...... கொடுமாயும் 
தியக்கங்கண் டுயக்கொண்டென்
     பிறப்பங்கஞ் சிறைப்பங்கஞ்
          சிதைத்துன்றன் பதத்தின்பந் ...... தருவாயே 
அருக்கன்சஞ் சரிக்குந்தெண்
     டிரைக்கண்சென் றரக்கன்பண்
          பனைத்தும்பொன் றிடக்கன்றுங் ...... கதிர்வேலா 
அணிச்சங்கங் கொழிக்குந்தண்
     டலைப்பண்பெண் டிசைக்குங்கொந்
          தளிக்குஞ்செந் திலிற்றங்குங் ...... குமரேசா 
புரக்குஞ்சங் கரிக்குஞ்சங்
     கரர்க்குஞ்சங் கரர்க்கின்பம்
          புதுக்குங்கங் கையட்குந்தஞ் ...... சுதனானாய் 
புனைக்குன்றந் திளைக்குஞ்செந்
     தினைப்பைம்பொன் குறக்கொம்பின்
          புறத்தண்கொங் கையிற்றுஞ்சும் ...... பெருமாளே.
கர்ப்பத்துக்கு இடமாய் ரத்தப் பெருக்குள்ள புண் போன்ற உறுப்பைக் கொண்டு உருக்கும் பெண்களைப் பார்த்து, அப்போதே அவர்கள் பின்னே போய், அவர்களுடன் கூடி மகிழ்ந்தும், ஊடல் கொண்டும், ஒற்றுமை கொண்டும், மனம் பிணங்கியும், இன்பம் கொண்டும், துன்பப்பட்டும், நிலை தடுமாறியவனாய், போருக்கு ஏற்ற தண்டாயுதத்தைக் கையில் ஏந்தி பூமியில் வந்து உயிர்களை வருத்தும் யமனுக்கு எப்போதும் அச்சம் உற்று, அழகிய திண்ணிய இப்பூமியில் ஐந்து புலன்களுடன் அழிந்து போகும் என் சோர்வினைக் கண்டு, உய்யும்படி என்னை ஆட்கொண்டு, எனது பிறப்பாகிய இடரையும், சிறையிட்டது போன்ற துன்பத்தையும் நீக்கி, உன்னுடைய திருவடிகளின் இன்பத்தைத் தருவாயாக. சூரியன் உலவுகின்ற அலைகள் வீசுகின்ற கடலிடத்தே போய் சூரனது பெருமையெல்லாம் அழியும்படி கோபித்த ஒளி வேலனே, அழகிய சங்குகளை ஒதுக்கி எறிந்து, எழுந்து வீசும் அலைகடலின் பெருமை எட்டுத் திசைகளிலும் மேம்பட்டு விளங்கும் திருச்செந்தூரில் வீற்றிருக்கும் குமரேசனே, உலகங்களை எல்லாம் காக்கும் உமா தேவிக்கும், சிவ பெருமானுக்கும், சிவனார்க்கு இன்பம் புதுப்பிக்கும் கங்கா தேவிக்கும் செல்லப் பிள்ளையாக ஆனவனே, வயல்கள் விளங்கும் வள்ளி மலையில் மகிழ்ச்சி அடைகின்ற, செந்தினையைக் காத்திருந்த பசும் பொன் போன்ற குற மகளாகிய வள்ளியின் குளிர்ந்த மார்பகத்தின் மீது துயில் கொள்ளும் பெருமாளே. 
பாடல் 43 - திருச்செந்தூர்
ராகம் - ......; தாளம் - ........
தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான
களபம் ஒழுகிய புளகித முலையினர்
     கடுவும் அமிர்தமும் விரவிய விழியினர்
          கழுவு சரிபுழு கொழுகிய குழலினர் ...... எவரோடுங் 
கலகம் இடுகயல் எறிகுழை விரகியர்
     பொருளில் இளைஞரை வழிகொடு மொழிகொடு
          தளர விடுபவர் தெருவினில் எவரையும் ...... நகையாடிப் 
பிளவு பெறிலதி லளவள வொழுகியர்
     நடையில் உடையினில் அழகொடு திரிபவர்
          பெருகு பொருள்பெறில் அமளியில் இதமொடு ...... குழைவோடே 
பிணமும் அணைபவர் வெறிதரு புனலுணும்
     அவச வனிதையர் முடுகொடும் அணைபவர்
          பெருமை யுடையவர் உறவினை விடஅருள் ...... புரிவாயே 
அளையில் உறைபுலி பெறுமக வயிறரு
     பசுவின் நிரைமுலை யமுதுண நிரைமகள்
          வசவ னொடுபுலி முலையுண மலையுடன் ...... உருகாநீள் 
அடவி தனிலுள உலவைகள் தளிர்விட
     மருள மதமொடு களிறுகள் பிடியுடன்
          அகல வெளியுயர் பறவைகள் நிலம்வர ...... விரல்சேரேழ் 
தொளைகள் விடுகழை விரல்முறை தடவிய
     இசைகள் பலபல தொனிதரு கருமுகில்
          சுருதி யுடையவன் நெடியவன் மனமகிழ் ...... மருகோனே 
துணைவ குணதர சரவண பவநம
     முருக குருபர வளரறு முககுக
          துறையில் அலையெறி திருநகர் உறைதரு ...... பெருமாளே.
சந்தனக் கலவை ஒழுகுகின்ற புளகம் கொண்ட மார்பகத்தை உடையவர், விஷமும் அமுதமும் கலந்த கண்களை உடையவர், கழுவி எடுத்து வாரிய, பொருத்தமான வாசனைத் தைலம் ஒழுகும், கூந்தலை உடையவர், கயல் மீன் போன்ற கண்கள் பரந்து மோதும் குண்டலங்களை அணிந்த, எல்லாரிடமும் கலகம் செய்கின்ற, தந்திரவாதிகள், பொருள் இல்லாத வாலிபர்களை தமது நடவடிக்கையாலும் பேச்சுக்களாலும் தளர்ச்சி அடையச் செய்பவர், தெருவில் யாரோடும் சிரித்துப் பேசி, பிரிவுக்குக் காரணம் ஏற்பட்டால் அதற்குத் தக்கபடி அளவோடு நடந்து கொள்பவர், நடையிலும், உடையிலும் அழகினோடு திரிபவர், மிக்க பொருள் கிடைத்தால், படுக்கையில் இன்பத்துடனும் உருக்கத்துடனும் பிணத்தையும் தழுவுவர், கலக்கத்தைத் தரும் கள்ளை உண்டு தம் வசம் இழக்கும் விலைமாதர் அந்தக் கள் நாற்றத்துடனேயே நெருங்கி அணைபவர், அகந்தை உடைய இத்தகைய வேசியரது உறவு நீங்கும்படி அருள் புரிவாயாக. குகையில் இருக்கும் புலி பெற்ற குட்டி குடிப்பதற்கு பசுக் கூட்டங்களின் முலைப் பால் அமுதை உண்ணவும், பசுவின் பெண் கன்று, ஆண் கன்றுடன் புலியின் முலைப் பாலைக் குடிக்கவும், மலை அப்படியே உருகவும், நீண்ட காட்டில் உள்ள பட்ட மரங்கள் தளிர் விடவும், மயல் கொண்ட மதத்துடன் ஆண் யானைகள் பெண் யானைகளோடு ஒரு புறம் செல்லவும், ஆகாயத்தில் உயரத்தில் உள்ள பறவைகள் நிலத்துக்கு வந்து சேரவும், தன் விரல்களைச் சேர்த்து, ஏழு தொளைகள் விட்டுள்ள மூங்கில் (புல்லாங்குழல்) மீது விரலை முறைப்படி தடவினதால் எழுகின்ற இசைகளால் பற்பல நாதங்களை எழுப்பும் கரிய மேகம் போன்ற கண்ணபிரான், வேதப் பொருளோன், நெடிய திருமால் மனமகிழும் மருகனே, துணை நிற்பவனே, குணவானே, சரவணபவனே, வணங்கத் தக்கவனே, முருகனே, குருபரனே, புகழ் வளரும் ஆறு முகனே, குகனே, கரையில் அலைகளை வீசும் அழகிய திருச்செந்தூர் நகரில் வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 44 - திருச்செந்தூர்
ராகம் - ....; தாளம் - .....
தனந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த
     தந்த தந்த தந்த தந்த ...... தனதான
கனங்கள் கொண்ட குந்த ளங்க ளுங்கு லைந்த லைந்து விஞ்சு
     கண்க ளுஞ்சி வந்த யர்ந்து ...... களிகூரக் 
கரங்க ளுங்கு விந்து நெஞ்ச கங்க ளுங்க சிந்தி டுங்க
     றங்கு பெண்க ளும்பி றந்து ...... விலைகூறிப் 
பொனின்கு டங்க ளஞ்சு மென்த னங்க ளும்பு யங்க ளும்பொ
     ருந்தி யன்பு நண்பு பண்பு ...... முடனாகப் 
புணர்ந்து டன்பு லர்ந்து பின்க லந்த கங்கு ழைந்த வம்பு
     ரிந்து சந்த தந்தி ரிந்து ...... படுவேனோ 
அனங்க னொந்து நைந்து வெந்து குந்து சிந்த அன்று கண்தி
     றந்தி ருண்ட கண்டர் தந்த ...... அயில்வேலா 
அடர்ந்த டர்ந்தெ திர்ந்து வந்த வஞ்ச ரஞ்ச வெஞ்ச மம்பு
     ரிந்த அன்ப ரின்ப நண்ப ...... உரவோனே 
சினங்கள் கொண்டி லங்கை மன்சி ரங்கள் சித்த வெஞ்ச ரந்தெ
     ரிந்த வன்ப ரிந்த இன்ப ...... மருகோனே 
சிவந்த செஞ்ச தங்கை யுஞ்சி லம்பு தண்டை யும்பு னைந்து
     செந்தில் வந்த கந்த எங்கள் ...... பெருமாளே.
மேகம் போன்ற கூந்தலும் குலைந்து அலைந்து, விளங்கும் கண்கள் சிவந்து சோர்வுற்று, மகிழ்ச்சி மிகுந்து கைகளும் கூப்பி நெஞ்சத்தினுள்ளே உணர்ச்சி பெருகித் திரிகின்ற பெண்கள் மீது மயல் உண்டாகி, (அவர்களுடன் கூட) விலை பேசி, பொன் குடங்களும் அஞ்சும் என்று கூறத் தக்க மார்பகங்களையும் தோள்களையும் தழுவி, அன்பும், நட்பும், குணமும் ஒன்றாகக் கூடி, உடனே ஊடியும், பின்பு கலந்தும், மனம் குழைந்தும், கேடு விளைவித்தும் எப்போதும் இவ்வாறே திரிந்து அழிவேனோ? மன்மதன் வாடி, நைந்து, வெந்து அழிந்து சிதறும்படி அன்று (நெற்றிக்) கண்ணைத் திறந்து விழித்தவரும், கரிய கழுத்தை உடையவருமான சிவபெருமான் பெற்றெடுத்த கூரிய வேலனே, கூட்டம் கூட்டமாய் நெருங்கி எதிர்த்து வந்த வஞ்சகர்களாகிய அசுரர்கள் பயப்படும்படி கொடிய போர் செய்தவனும், அன்பர்களுக்கு இன்பம் தருபவனும் ஆன நண்பனே, வீரனே, கோபம் கொண்டு, இலங்கை அரசனான ராவணனுடைய தலைகள் சிதற கொடிய அம்பை ஏவிய ராமன் (திருமால்) அன்பு கொள்ளும் இன்ப மருகனே, சிவந்த, அழகிய சதங்கையும் சிலம்பும் தண்டையும் அணிந்து, திருச்செந்தூரில் எழுந்தருளும் கந்தனே, எங்கள் பெருமாளே. 
பாடல் 45 - திருச்செந்தூர்
ராகம் - .....; தாளம் - .....
தந்ததன தான தந்ததன தான
     தந்ததன தான ...... தனதான
கன்றிலுறு மானை வென்றவிழி யாலே
     கஞ்சமுகை மேவு ...... முலையாலே 
கங்குல்செறி கேச மங்குல்குலை யாமை
     கந்தமலர் சூடு ...... மதனாலே 
நன்றுபொருள் தீர வென்றுவிலை பேசி
     நம்பவிடு மாத ...... ருடனாடி 
நஞ்சுபுசி தேரை யங்கமது வாக
     நைந்துவிடு வேனை ...... யருள்பாராய் 
குன்றிமணி போல்வ செங்கண்வரி போகி
     கொண்டபடம் வீசு ...... மணிகூர்வாய் 
கொண்டமயி லேறி அன்றசுரர் சேனை
     கொன்றகும ரேச ...... குருநாதா 
மன்றல்கமழ் பூக தெங்குதிரள் சோலை
     வண்டுபடு வாவி ...... புடைசூழ 
மந்திநட மாடு செந்தினகர் மேவு
     மைந்தஅம ரேசர் ...... பெருமாளே.
மான் கன்றை வெல்லும் கண்களாலும், தாமரை மொட்டுப் போன்ற மார்பகங்களாலும், கரு நிறம் அடர்ந்த மேகம் போன்ற கூந்தல் கலையாத வண்ணம் மணமுள்ள மலர் சூடும் அந்த வகையினாலும், நல்லபடியே கைப் பொருள் முழுதும் வரும்படி வெற்றியுடன் விலை கூறி (தம்மை) நம்பும்படி செய்கின்ற வேசியர்களோடு விளையாடி, விஷத்தை உடைய பாம்பு உண்ணும் தேரை (என்னும்படி) உடல் அத்தன்மையதாகி நைந்து போகின்ற என்னை அருட்கண் பார்த்தருள்க. குண்டு மணி போல சிவந்த கண்களையும் கோடுகளையும் உடைய பாம்பு படத்தை வீசும்படி, (தனது) அழகிய கூர்மையான வாயில் (அந்தப் பாம்பைக் கொத்திக்) கொண்ட மயிலின் மீது ஏறி, அசுரர் சேனையைக் கொன்ற குமரேசனே, குரு நாதனே, மணம் வீசும் கமுகு, தென்னை நெருங்கு சோலைகளும், வண்டுகள் ஒலிக்கும் குளங்களும் பக்கங்களில் சூழ, குரங்குகள் நடனம் செய்யும் திருச்செந்தூரில் வீற்றிருக்கும் வீரனே, தேவர்கள் பெருமாளே. 
* போகி = பாம்பு வேறொரு பழைய நூலிலிருந்த இதே பாடலின் சற்று மாறுபட்ட அமைப்பு. தந்ததன தான தந்ததன தான தனதான பாடல் கன்றிவரு நீல குங்குமப டீர முலைகாட்டி கங்குல்செறி கேச நின்றுகுலை யாமை விலைகாட்டி நன்றுபொரு டீது வென்றுவிலை பேசி ருடனாட்ட நஞ்சுபுரி தேரை யங்கமது வாக றருள்வாயே குன்றிமணி போலச் செங்கண்வரி நாகங் மணிகூர்வாய் கொண்டமயி லேறிக் குன்றிடிய மோதிச் கொடுபோர்செய் மன்றல்கமழ் பூகந் தெங்குதிரள் சோலை புடைசூழ மந்திநட மாடுஞ் செந்தில்நகர் மேவும் பெருமாளே. .. கன்றிப் போய் நீலம் பாய்ந்த, குங்குமமும் சந்தனமும் கலந்த, தாமரை மலரைப் போன்ற தங்கள் மார்பகத்தைக் காட்டி, கரு நிறம் அடர்ந்த மேகம் போன்ற கூந்தல் கலையாத வண்ணம் இறுக்கி முடித்து, கடைக்கண்களால் ஜாடை காட்டி, தங்களது விலையையும் குறிப்பாகக் காட்டி, வந்தவர் தரும் பொருள் ஏற்புடைத்து அல்லது ஏற்காது என்று பேரம் பேசி, (தம்மை) நம்பும்படி செய்கின்ற வேசியர்களோடு விளையாடி, பாம்பின் விஷம் பாய்ந்த தேரை (என்னும்படி) உடல் அத்தன்மையதாகி நைந்து போகின்ற எனக்கு ஒரு நல்வாக்கு அருள்வாயாக. குண்டு மணி போல சிவந்த கண்களையும் கோடுகளையும் உடைய பாம்பு படத்தை வீசும்படி, (தனது) அழகிய கூர்மையான வாயில் (அந்தப் பாம்பைக் கொத்திக்) கொண்ட மயிலின் மீது ஏறி, கிரெளஞ்ச மலை இடிந்து நொறுங்கும்படியாக மோதிய கூர்மையான வேலைக் கரத்தில் கொண்டு போர் செய்தவனே, மணம் வீசும் கமுகு, தென்னை நெருங்கு சோலைகளும், வண்டுகள் ஒலிக்கும் குளங்களும் பக்கங்களில் சூழ, குரங்குகள் நடனம் செய்யும் திருச்செந்தூரில் வீற்றிருக்கும் வீரனே, அந்த அசுரர் குலத்துக்கு யமனாக அமைந்த பெருமாளே. 
பாடல் 46 - திருச்செந்தூர்
ராகம் - ஸஹானா / திலங்; தாளம் - ஆதி கண்டநடை - 20
தானனா தந்தனம் தானனா தந்தனம்
     தானனா தந்தனம் ...... தனதான
காலனார் வெங்கொடுந் தூதர்பா சங்கொடென்
     காலினார் தந்துடன் ...... கொடுபோகக் 
காதலார் மைந்தருந் தாயரா ருஞ்சுடுங்
     கானமே பின்தொடர்ந் ...... தலறாமுன் 
சூலம்வாள் தண்டுசெஞ் சேவல்கோ தண்டமுஞ்
     சூடுதோ ளுந்தடந் ...... திருமார்பும் 
தூயதாள் தண்டையுங் காணஆர் வஞ்செயுந்
     தோகைமேல் கொண்டுமுன் ...... வரவேணும் 
ஆலகா லம்பரன் பாலதா கஞ்சிடுந்
     தேவர்வா ழன்றுகந் ...... தமுதீயும் 
ஆரவா ரஞ்செயும் வேலைமேல் கண்வளர்ந்
     தாதிமா யன்றனன் ...... மருகோனே 
சாலிசேர் சங்கினம் வாவிசூழ் பங்கயஞ்
     சாரலார் செந்திலம் ...... பதிவாழ்வே 
தாவுசூ ரஞ்சிமுன் சாயவே கம்பெறுந்
     தாரைவே லுந்திடும் ...... பெருமாளே.
யமனின் மிகக் கொடிய தூதர்கள் பாசக்கயிற்றால் என் மூச்சுக்காற்றுடன் சேர்த்துக் கட்டி எனது உயிரைத் தங்களுடன் கொண்டுபோக, அன்பு நிறைந்த பிள்ளைகளும், தாயார் முதலிய அனைவரும் சுடுகாடு வரை என்னுடலைப் பின்தொடர்ந்து வாய்விட்டுக் கதறி அழும் மரண அவஸ்தையை நான் அடையும் முன்பே, சூலாயுதம், வாளாயுதம், தண்டாயுதம், அழகிய சேவற்கொடி, வில் இவைகளை சூடியுள்ள புயங்களையும், அகன்ற திரு மார்பையும், புனிதமான பாதங்களையும், அவைகளில் அணிந்த தண்டையும் காண அன்புநிறை மயிலின் மீது ஏறி என்முன் வரவேண்டும். ஆலகால விஷமானது பரமசிவன்வசம் போய்ச் சேர்ந்தபின்பு, அவ்விஷத்தைக் கண்டு பயந்தோடிய தேவர்கள் உய்யும்படியாக அன்று மகிழ்ச்சியுடன் (மோகினி அவதாரம் செய்து) அமுதைத் தந்தவரும், பெரும் ஒலி உடையதான திருப்பாற்கடலில் யோக நித்திரை செய்பவருமான, ஆதி மூர்த்தியாகிய திருமாலின் சிறந்த மருமகனே, நெல்வயல்களில் சேர்ந்துள்ள சங்கினங்களும், தாமரைகள் சூழ்ந்து நிறைந்துள்ள தடாகங்களும் அருகே அமைந்த திருச்செந்தூர்ப் பதியில் வாழ்கின்றவனே, போர்க்களத்தில் தாவி வந்த சூரன் முன்னாளில் பயந்து வீழுமாறு வேகமாக கூரிய வேலைச் செலுத்திய பெருமாளே. 
பாடல் 47 - திருச்செந்தூர்
ராகம் - ....; தாளம் - ......
தனன தானனத் தனதன தனனாத்
     தந்தத் தந்தத் ...... தனதான
குகர மேவுமெய்த் துறவினின் மறவாக்
     கும்பிட் டுந்தித் ...... தடமூழ்கிக் 
குமுத வாயின்முற் றமுதினை நுகராக்
     கொண்டற் கொண்டைக் ...... குழலாரோ 
டகரு தூளிகர்ப் புரதன இருகோட்
     டன்புற் றின்பக் ...... கடலூடே 
அமிழு வேனைமெத் தெனவொரு கரைசேர்த்
     தம்பொற் றண்டைக் ...... கழல்தாராய் 
ககன கோளகைக் கணவிரு மளவாக்
     கங்கைத் துங்கப் ...... புனலாடும் 
கமல வாதனற் களவிட முடியாக்
     கம்பர்க் கொன்றைப் ...... புகல்வோனே 
சிகர கோபுரத் தினுமதி ளினுமேற்
     செம்பொற் கம்பத் ...... தளமீதும் 
தெருவி லேயுநித் திலமெறி யலைவாய்ச்
     செந்திற் கந்தப் ...... பெருமாளே.
மலைக் குகைளில் இருக்கும் உண்மைத் துறவிகள் போல மறவாத மனத்துடன் (வேசிகளின் அடிகளைக்) கும்பிட்டு, (மாதர்களின்) தொப்புள் குளத்தில் முழுகி, அவர்களது குமுத மலர் போன்ற மலர் வாயில் பெருகும் அமுதினைப் பருகி, மேகம் போன்ற கொண்டையிட்ட கூந்தலாருடைய அகிற் பொடி, கற்பூரம் அணிந்த மார்பகங்களாகிய இரு மலைகளின் மேல் அன்பு பூண்டு, இன்பக் கடலிடையே அமிழ்கின்ற என்னை பக்குவமாக ஒப்பற்ற முக்திக் கரையில் சேர்த்து, அழகிய பொன்னாலாகிய தண்டை சூழ்ந்த திருவடியைத் தந்து அருளுக. ஆகாய முகட்டில் அளவுக்கு அடங்காத வெள்ளத்துடன் கங்கையாகிய புனித நீர் அசைந்தாடும் தாமரைப் பீடத்தில் அமர்ந்துள்ள பிரமனால் அளவிட முடியாத (கச்சி ஏகம்பராகிய) சிவபெருமானுக்கு ஒப்பற்ற பிரணவப் பொருளைப் போதித்தவனே, சிகரங்களை உடைய கோபுரத்தின் மீதும், மதில் மீதும், செம்பொன்னாலாகிய கம்பங்களின் மேல் அமைந்த தளத்தின் மீதும், வீதியிலும் முத்துக்களை வீசி எறிகின்ற அலைகளின் கரையில் (உள்ள) திருச்செந்தூர் பதியில் வாழும் கந்தப் பெருமாளே. 
பாடல் 48 - திருச்செந்தூர்
ராகம் - குந்தல வராளி ; தாளம் - அங்கதாளம் - 14 1/2 
தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2, தகிட-1 1/2, 
தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2
தனதன தந்த தனதன தந்த
     தனதன தந்த ...... தானாந்தனனா
குடர்நிண மென்பு சலமல மண்டு
     குருதிந ரம்பு ...... சீயூன் பொதிதோல் 
குலவு குரம்பை முருடு சுமந்து
     குனகிம கிழ்ந்து ...... நாயேன் தளரா 
அடர்மத னம்பை யனையக ருங்க
     ணரிவையர் தங்கள் ...... தோடோய்ந் தயரா 
அறிவழி கின்ற குணமற வுன்றன்
     அடியிணை தந்து ...... நீயாண் டருள்வாய் 
தடவியல் செந்தில் இறையவ நண்பு
     தருகுற மங்கை ...... வாழ்வாம் புயனே 
சரவண கந்த முருகக டம்ப
     தனிமயில் கொண்டு ...... பார்சூழ்ந் தவனே 
சுடர்படர் குன்று தொளைபட அண்டர்
     தொழவொரு செங்கை ...... வேல்வாங் கியவா 
துரிதப தங்க இரதப்ர சண்ட
     சொரிகடல் நின்ற ...... சூராந் தகனே.
குடல், கொழுப்பு, எலும்பு, நீர், மலம், பெருகும் உதிரம், நரம்பு, சீழ், மாமிசம், இவையெல்லாம் மூடிய தோல், ஆகியவற்றால் ஆன சிறு குடிலாகிய இந்தக் கட்டையைச் சுமந்து, கொஞ்சிப் பேசியும், மகிழ்ந்தும், நாயினேன் தளர்ச்சியுற்றும், நெருங்கிவரும் மன்மதனின் அம்பை ஒத்த கரிய கண்களை உடைய பெண்களின் தோள்களில் மூழ்கி அயர்ந்தும், அறிவு அழிந்து போகும் தீய குணம் அற்றுப் போக உன்னிரு பதங்களைத் தந்து நீ ஆட்கொண்டு அருள்வாயாக. விசாலமான பெருமையை உடைய திருச்செந்தூரில் தங்கும் இறைவனே, அன்பைத்தரும் குறப்பெண் வள்ளிக்கு வாழ்வாகும் திருப்புயத்தோனே, சரவணபவனே, கந்தா, முருகா, கடப்பமாலை அணிந்தோனே, ஒப்பற்ற மயிலின் மீது ஏறி உலகை வலம்வந்தவனே, ஒளிபரந்த கிரெளஞ்ச மலை தொளைபடவும், தேவர்கள் வணங்கவும், ஒப்பற்ற சிவந்த கரத்தினின்று வேலைச் செலுத்தியவனே, வேகமாகச் செல்லும் பறவையாகிய மயிலை தேராகக் கொண்ட மாவீரனே, அலைவீசும் கடலின் நடுவே (மாமரமாய்) நின்ற சூரனுக்கு யமனாக வந்தவனே. 
பாடல் 49 - திருச்செந்தூர்
ராகம் - ....; தாளம் - .....
தனத்தந்தம் தனத்தந்தம்
     தனத்தந்தம் தனத்தந்தம்
          தனத்தந்தம் தனத்தந்தம் ...... தனதானா
குழைக்குஞ்சந் தனச்செங்குங்
     குமத்தின்சந் தநற்குன்றங்
          குலுக்கும்பைங் கொடிக்கென்றிங் ...... கியலாலே 
குழைக்குங்குண் குமிழ்க்குஞ்சென்
     றுரைக்குஞ்செங் கயற்கண்கொண்
          டழைக்கும்பண் தழைக்குஞ்சிங் ...... கியராலே 
உழைக்குஞ்சங் கடத்துன்பன்
     சுகப்பண்டஞ் சுகித்துண்டுண்
          டுடற்பிண்டம் பருத்தின்றிங் ...... குழலாதே 
உதிக்குஞ்செங் கதிர்ச்சிந்தும்
     ப்ரபைக்கொன்றுஞ் சிவக்குந்தண்
          டுயர்க்குங்கிண் கிணிச்செம்பஞ் ...... சடிசேராய் 
தழைக்குங்கொன் றையைச்செம்பொன்
     சடைக்கண்டங் கியைத்தங்குந்
          தரத்தஞ்செம் புயத்தொன்றும் ...... பெருமானார் 
தனிப்பங்கின் புறத்தின்செம்
     பரத்தின்பங் கயத்தின்சஞ்
          சரிக்குஞ்சங் கரிக்கென்றும் ...... பெருவாழ்வே 
கழைக்குங்குஞ் சரக்கொம்புங்
     கலைக்கொம்புங் கதித்தென்றுங்
          கயற்கண்பண் பளிக்குந்திண் ...... புயவேளே 
கறுக்குங்கொண் டலிற்பொங்குங்
     கடற்சங்கங் கொழிக்குஞ்செந்
          திலிற்கொண்டன் பினிற்றங்கும் ...... பெருமாளே.
குழைத்துக் கலவையான சந்தனம், சிகப்பு நிறமான குங்குமம் (இவைகள் பூசப்பட்ட) அழகிய உயர்ந்த மலை போன்ற மார்பகங்களைக் குலுக்கும் பசுங்கொடி போல் நின்று தோன்ற, இங்கு இயல்பாகவே குண்டலம் தரித்த காதினிடத்தும், நிறமுள்ள குமிழம்பூப் போன்ற மூக்கினிடத்தும் கண்கள் சென்று பேசுவது போல செவ்விய கயல் மீன் போன்ற கண்களைக் கொண்டு அழைக்கின்ற, இசைக் குரல் தழைத்துள்ள, நஞ்சு போன்ற விலைமாதர்களுக்கு உழைப்பதால் வரும் சங்கடங்களையும் துன்பங்களையும் கொண்டவனாகிய நான், சுகமான பண்டங்களை அனுபவித்து மிகுதியாக உண்டு, உடலாகிய பிண்டம் கனமானதாகி இந்த உலகில் அலையாமல், உதிக்கின்ற செஞ்சூரியன் வீசும் ஒளிக்கு ஒப்பானதான சிவந்த தண்டையிலும், மேலான கிண்கிணியிலும், சிவந்த பஞ்சு போல் மிருதுவான அடியிலும் என்னைச் சேர்த்து அருளுக. தழைத்துள்ள கொன்றை மலரை செம்பொன் போன்ற சடையில் சேர்த்தும், நெருப்பைத் தங்கும் படியாக அழகிய செவ்விய கையில் சேர்த்தும் உள்ள சிவபெருமானுடைய ஒப்பற்ற இடது பாகத்தின் புறத்திலும், சிறந்த பர மண்டலத்திலும், தாமரை இருப்பிலும் உலவி நிற்கும் பார்வதிக்கு எப்போதும் சிறந்த பிள்ளையே, அங்குசம் அடக்கும் வெள்ளை யானை வளர்த்த கொடிபோன்ற தேவயானையும், மான் வயிற்றில் பிறந்த வள்ளியும் மகிழ்வுற, எப்போதும் (அவர்களுடைய) கயல் மீன் போன்ற கண்களுக்கு இன்பம் தரும் திண்ணிய தோள்களை உடையவனே, கரிய மேகம் போலப் பொங்கி எழும் கடல் சங்குகளைக் கொண்டு கரையில் கொழிக்கின்ற திருச்செந்தூரை இருப்பிடமாகக் கொண்டு, அன்புடன் அத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 50 - திருச்செந்தூர்
ராகம் - .....; தாளம் -
தந்ததன தந்ததன தந்ததன தந்ததன
     தந்ததன தந்ததன ...... தந்ததான
கொங்கைகள்கு லுங்கவளை செங்கையில்வி ளங்கஇருள்
     கொண்டலைய டைந்தகுழல் ...... வண்டுபாடக் 
கொஞ்சியவ னங்குயில்கள் பஞ்சநல்வ னங்கிளிகள்
     கொஞ்சியதெ னுங்குரல்கள் ...... கெந்துபாயும் 
வெங்கயல்மி ரண்டவிழி அம்புலிய டைந்தநுதல்
     விஞ்சையர்கள் தங்கள்மயல் ...... கொண்டுமேலாய் 
வெம்பிணியு ழன்றபவ சிந்தனைநி னைந்துனது
     மின்சரண பைங்கழலொ ...... டண்டஆளாய் 
சங்கமுர சந்திமிலை துந்துமித தும்பவளை
     தந்தனத னந்தவென ...... வந்தசூரர் 
சங்கைகெட மண்டிதிகை யெங்கிலும டிந்துவிழ
     தண்கடல்கொ ளுந்தநகை ...... கொண்டவேலா 
சங்கரனு கந்தபரி வின்குருவெ னுஞ்சுருதி
     தங்களின்ம கிழ்ந்துருகு ...... மெங்கள்கோவே 
சந்திரமு கஞ்செயல்கொள் சுந்தரகு றம்பெணொடு
     சம்புபுகழ் செந்தில்மகிழ் ...... தம்பிரானே.
மார்பகங்கள் குலுங்க, சிவந்த கைகளில் உள்ள வளையல்கள் விளங்க, இருண்ட மேகம் போன்ற கூந்தலில் வண்டுகள் (மலர்களைச் சுற்றி) ¡£ங்காரம் செய்ய, கொஞ்சுகின்ற சோலையில் வசிக்கும் அழகிய குயில்களும், நல்ல பஞ்ச வர்ணக் கிளிகளும் கொஞ்சுகின்றனவோ என்னும்படியான இனிய குரல்களும், தத்தித் தத்திப் பாயும், விரும்பத் தக்க கயல் மீன் போல மிரளும் கண், பிறை போன்ற நெற்றி (இவைகளைக் கொண்ட) மாய வித்தை வல்லவரான பொது மகளிரின் மேல் மோகம் கொண்டு மேன்மேலும் பித்தாகி கொடிய நோயில் வேதனைப்பட்ட பிறவிக் கடலில் அலைபடுகின்ற என்னை நீ குறிக் கொண்டு உன்னுடைய ஒளி வீசும் பசுமையான திருவடியில் சேரும்படி ஆண்டருள்க. கூட்டமான முரசு வாத்தியம், திமிலை என்னும் பறை, பேரிகை முதலியவை ஒலிக்க, சங்குகள் தந்தன தனந்த என்று ஒலிக்க, வந்த சூரர்களின் தொகை அழியும்படி நெருங்கி எல்லா திசைகளிலும் இறந்து விழ, எப்போதும் குளிர்ந்திருக்கும் கடல் தீப்பிடிக்க கோப நகைப்பைக் கொண்ட வேலனே, சங்கரனார் மகிழ்ந்து அன்புடன் கொண்ட குரு மூர்த்தி (நீ) என்று உன்னைச் சொல்லும் வேதங்கள் தம்முள்ளே மகிழ்ந்து மனம் குழையும் எங்கள் தலைவனே, சந்திரன் போன்ற திரு முகத்தையும், பக்திச் செயலையும் கொண்ட அழகிய குறப் பெண்ணாகிய வள்ளியோடு, ஈசனும் புகழும்படியாக விளங்கும் திருச் செந்தூரில் வீற்றிருக்கும் தம்பிரானே.

பாடல் 21 - திருச்செந்தூர்

ராகம் - .........; தாளம் - .....

தந்த தந்தன தானா தானா     தந்த தந்தன தானா தானா          தந்த தந்தன தானா தானா ...... தனதான

அங்கை மென்குழ லாய்வார் போலே     சந்தி நின்றய லோடே போவா          ரன்பு கொண்டிட நீரோ போறீ ...... ரறியீரோ 
அன்று வந்தொரு நாள்நீர் போனீர்     பின்பு கண்டறி யோநா மீதே          அன்று மின்றுமொர் போதோ போகா ...... துயில்வாரா 
எங்க ளந்தரம் வேறா ரோர்வார்     பண்டு தந்தது போதா தோமே          லின்று தந்துற வோதா னீதே ...... னிதுபோதா 
திங்கு நின்றதென் வீடே வா¡£     ரென்றி ணங்கிகள் மாயா லீலா          இன்ப சிங்கியில் வீணே வீழா ...... தருள்வாயே 
மங்கு லின்புறு வானாய் வானூ     டன்ற ரும்பிய காலாய் நீள்கால்          மண்டு றும்பகை நீறா வீறா ...... எரிதீயாய் 
வந்தி ரைந்தெழு நீராய் நீர்சூழ்     அம்ப ரம்புனை பாராய் பாரேழ்          மண்ட லம்புகழ் நீயாய் நானாய் ...... மலரோனாய் 
உங்கள் சங்கரர் தாமாய் நாமார்     அண்ட பந்திகள் தாமாய் வானாய்          ஒன்றி னுங்கடை தோயா மாயோன் ...... மருகோனே 
ஒண்த டம்பொழில் நீடூர் கோடூர்     செந்தி லம்பதி வாழ்வே வாழ்வோர்          உண்ட நெஞ்சறி தேனே வானோர் ...... பெருமாளே.

தங்களது அழகிய கைகளால் மென்மையான கூந்தலை சிக்கு எடுப்பவர்களைப் போல பாவனை காட்டி, மாலைப் பொழுதினில் (மனையின் வெளிப் புறத்தில்) நின்று, வெளியில் போகும் ஆடவர்களை அன்பு கொள்ளுமாறு நீங்களா போகின்றீர், என்னைத் தெரியாதா உமக்கு, அன்று ஒரு நாள் நீர் இங்கு வந்து போனீர், அதன் பிறகு உம்மை நாம் பார்க்கவில்லை, இது ஒரு உண்மையே. அன்று முதல் இன்று வரை ஒரு நாள் கூட பொழுது போகவில்லை. தூக்கமும் வரவில்லை. எங்கள் உள்ளத்தை (உம்மைத் தவிர) வேறு யார் அறிவார்கள். (நீர்) முன்பு கொடுத்த பொருள் போதாதோ. மேலே இன்று இன்னும் வேறு தந்தால் தான் உறவோ? இது எதற்கு? இது வரை கொடுத்த பொருள் மாத்திரம் போதாதா? நான் நிற்கும் வீடு என்னுடையதுதான். உள்ளே வாரும் என்று மனப் பொருத்தம் பேசும் பொது மகளிரின் மாயை லீலைகள் ஆகிய இன்பமாகிய நஞ்சுக் குழியில் வீணாக விழாத வண்ணம் அருள் புரிய வேண்டும். மேகங்கள் இன்புற்று உலவும் வானாகவும், ஆகாயத்தில் அன்று தோன்றிய காற்றாகவும், பெருங் காற்றுடன் கூடி நெருங்கி வரும் பகைகளை நீறாக்கும் வன்மை கொண்டுள்ள எரிகின்ற நெருப்பாகவும், வந்து ஒலித்து எழுகின்ற நீராகவும், கடல் என்னும் நீர் சூழ்ந்த ஆடையை அணிந்த பூமியாகவும், ஏழு உலகங்களும் புகழ்கின்ற நீயாகவும், நானாகவும், தாமரை மலரில் வாழும் பிரமனாகவும், உங்கள் தந்தையாகிய சங்கரர் ஆகவும், அச்சம் தரும் அண்டக் கூட்டங்கள் ஆகவும், மூலப் பிரகிருதி ஆகவும், எதிலும் இறுதியில் தோயாது இருக்கின்ற மாயவனாகிய திருமாலின் மருகனே, தெளிந்த நீர்க் குளங்களும் சோலைகளும் நிறைந்த ஊரும் சங்குகள் விளங்கும் நகரும் ஆகிய திருச்செந்தூர்ப் பதியில் வாழ்பவனே, உன்னை நினைந்து வாழ்பவர்கள் அனுபவித்த மனம் அறியும் தேனே, தேவர்களின் பெருமாளே. 

பாடல் 22 - திருச்செந்தூர்

ராகம் - ஹிந்தோளம்; தாளம் - அங்கதாளம் - 7 - கண்ட ஜாதி ரூபகம் 
தக-1, தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1, தக திமி-2

தந்தன தனந்தனந் தனதனத்     தந்தன தனந்தனந் தனதனத்          தந்தன தனந்தனந் தனதனத் ...... தனதான

அந்தகன் வருந்தினம் பிறகிடச்     சந்தத மும்வந்துகண் டரிவையர்க்          கன்புரு குசங்கதந் தவிரமுக் ...... குணமாள 
அந்திப கலென்றிரண் டையுமொழித்     திந்திரி யசஞ்சலங் களையறுத்          தம்புய பதங்களின் பெருமையைக் ...... கவிபாடிச் 
செந்திலை யுணர்ந்துணர்ந் துணர்வுறக்     கந்தனை யறிந்தறிந் தறிவினிற்          சென்றுசெ ருகுந்தடந் தெளிதரத் ...... தணியாத 
சிந்தையு மவிழ்ந்தவிழ்ந் துரையொழித்     தென்செய லழிந்தழிந் தழியமெய்ச்          சிந்தைவ ரஎன்றுநின் தெரிசனைப் ...... படுவேனோ 
கொந்தவிழ் சரண்சரண் சரணெனக்     கும்பிடு புரந்தரன் பதிபெறக்          குஞ்சரி குயம்புயம் பெறஅரக் ...... கருமாளக் 
குன்றிடி யஅம்பொனின் திருவரைக்     கிண்கிணி கிணின்கிணின் கிணினெனக்          குண்டல மசைந்திளங் குழைகளிற் ...... ப்ரபைவீசத் 
தந்தன தனந்தனந் தனவெனச்     செஞ்சிறு சதங்கைகொஞ் சிடமணித்          தண்டைகள் கலின்கலின் கலினெனத் ...... திருவான 
சங்கரி மனங்குழைந் துருகமுத்     தந்தர வருஞ்செழுந் தளர்நடைச்          சந்ததி சகந்தொழுஞ் சரவணப் ...... பெருமாளே.

யமன் வருகின்ற தினமானது பின் தள்ளிப் போக, எப்போதும் வருவதும் போவதும் காண்பதுமாய், பெண்களிடம் அன்பு காட்டி உருகக்கூடிய தொடர்பு விட்டு நீங்க, சத்துவம், ராஜதம், தாமதம் என்ற மூன்று குணங்களும் அழித்து, இரவு (ஆன்மா செயலற்றுக் கிடக்கும் நிலை), பகல் (ஆன்மா உழலும் நிலை) என்னும் இரண்டு நிலைகளையும் ஒழித்து, ஐம்பொறிகளால் வரும் துன்பங்களை அறுத்து, தாமரை போன்ற உன் திருவடிகளின் பெருமையைக் கவிபாடி, திருச்செந்தூரைக் கருதி உணர்ந்து ஞானம் பிறக்க, கந்தக் கடவுளாம் உன்னைஅறிந்து அறிந்து அந்த அறிவின் வழியே சென்று நுழைந்து முடிகின்ற இடம் தெளிவு பெற, அடங்காத மனமும் நெகிழ்ந்து நெகிழ்ந்து, பேச்சும் நின்று, எனது செயலும் அடியோடு அற்றுப் போக, உண்மையான அறிவு வர, எப்பொழுது உன்னைக் காணும் பாக்கியத்தை யான் பெறுவேனோ? மலர்க் கொத்துக்கள் கிடக்கும் பாதங்களே சரணம் சரணம் என்று கும்பிட்ட இந்திரன் தனது ஊராகிய அமராவதியை மீண்டும் பெற, யானை வளர்த்த மகள் தேவயானையின் மார்பகம் உன் திருப்புயங்களைப் பெற, அரக்கர்கள் யாவரும் மாண்டழிய, கிரெளஞ்ச மலை பொடிபட்டு விழ, அழகிய பொன்னாலான அரைஞாண் கிண்கிணி கிணின் கிணின் கிணின் என்று ஒலிக்க, குண்டலங்கள் அசைந்து சிறிய காதணிகளில் ஒளிவீச, தந்தன தனந்தனந் தன என்ற ஓசையோடு செவ்விய சிறு சதங்கைகள் சிற்றொலி செய்திட, மணித் தண்டைகள் கலின்கலின் கலின் என்று சப்திக்க, அழகிய சங்கரி மனம் குழைந்து உருகி நிற்க, முத்தம் தர வரும் செழுவிய தளர்ந்த நடைப் பிள்ளையே, இந்த வையமெல்லாம் தொழும் சரவணப் பெருமாளே. 

பாடல் 23 - திருச்செந்தூர்
ராகம் - கல்யாணி; தாளம் - அங்கதாளம் - 9 - கண்ட ஜாதி த்ருபுடை 
தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தகதிமி-2, தகதிமி-2

தனதனன தனதனன தந்தத் தந்தத்     தனதனன தனதனன தந்தத் தந்தத்          தனதனன தனதனன தந்தத் தந்தத் ...... தனதான

அமுதுததி விடமுமிழு செங்கட் டிங்கட்     பகவினொளிர் வெளிறெயிறு துஞ்சற் குஞ்சித்          தலையுமுடை யவனரவ தண்டச் சண்டச் ...... சமனோலை 
அதுவருகு மளவிலுயி ரங்கிட் டிங்குப்     பறைதிமிலை திமிர்தமிகு தம்பட் டம்பற்          கரையவுற வினரலற உந்திச் சந்தித் ...... தெருவூடே 
எமதுபொரு ளெனுமருளை யின்றிக் குன்றிப்     பிளவளவு தினையளவு பங்கிட் டுண்கைக்          கிளையுமுது வசைதவிர இன்றைக் கன்றைக் ...... கெனநாடா 
திடுககடி தெனுமுணர்வு பொன்றிக் கொண்டிட்     டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுட் டுண்டுட்          டெனவகலு நெறிகருதி நெஞ்சத் தஞ்சிப் ...... பகிராதோ 
குமுதபதி வகிரமுது சிந்தச் சிந்தச்     சரணபரி புரசுருதி கொஞ்சக் கொஞ்சக்          குடிலசடை பவுரிகொடு தொங்கப் பங்கிற் ...... கொடியாடக் 
குலதடினி அசையஇசை பொங்கப் பொங்கக்     கழலதிர டெகுடெகுட டெங்கட் டெங்கத்          தொகுகுகுகு தொகுகுகுகு தொங்கத் தொங்கத் ...... தொகுதீதோ 
திமிதமென முழவொலிமு ழங்கச் செங்கைத்     தமருகம ததிர்சதியொ டன்பர்க் கின்பத்          திறமுதவு பரதகுரு வந்திக் குஞ்சற் ...... குருநாதா 
திரளுமணி தரளமுயர் தெங்கிற் றங்கிப்     புரளஎறி திரைமகர சங்கத் துங்கத்          திமிரசல நிதிதழுவு செந்திற் கந்தப் ...... பெருமாளே.

அமுதமாகிய திருப்பாற் கடலில் தோன்றிய நஞ்சைக் கக்கும் சிவந்த கண்களையும், சந்திரனுடைய பிளவு போல் ஒளி விடுகின்ற வெண்மையான பற்களையும், சுருளும் தன்மையுடைய மயிர்க் குடுமியோடு கூடிய தலையையும் கொண்டவன், பேரொலியும் தண்டாயுதமும் கொடுங் கோபமும் கொண்டவனுமான யமனுடைய ஓலையானது வரும்போது உயிர் யமனுலகிற்கும் பூவுலகிற்கும் இடையே ஊசலாட, பறையும், மற்ற முரசு வகைகளும், பேரொலி மிக்க தம்பட்டம் முதலிய பல வாத்தியங்களும் ஒலிக்கவும், சுற்றத்தார் கதறி அழ, கொண்டு போகும் சந்தித் தெரு வழியே எம்முடைய பொருள் என்னும் பற்று மயக்கம் இல்லாமல் குன்றி மணியில் பாதியாகிலும் தினை அளவு கூட பங்கிட்டுத் தந்து உண்ண வேண்டிய அற வழியில் நின்று இளைத்தும், லோபி என்ற பெரும் பழி நீங்க, இன்றைக்கு ஆகட்டும், நாளைக்கு ஆகட்டும் என்று எண்ணாமல், தர்மம் இப்போதே செய்வாயாக என்னும் உணர்வு அழிந்து போக (உடலை) எடுத்துக் கொண்டு டுடு டுடு டுடுடுடுடு டுண்டுட் டுண்டுட்டு என்ற கொட்டின் ஒலிக்கேற்பப் போகின்ற மார்க்கத்தை நினைத்து மனத்தில் பயம் கொண்டு ஏழைகளுக்கு என் வருவாயில் பங்கிட்டு தருமம் புரிய மாட்டேனோ? ஆம்பல் மலரின் நாயகனான சந்திரனின் பிறை அமிர்த கிரணங்களை மிகவும் சிந்தவும், திருவடிச் சிலம்பு வேத மொழிகளை மிக இனிமையாகக் கொஞ்சி ஒலிக்கவும், வளைவுடைய சடை நடனத்திற்கு ஏற்ப சுழன்று தொங்கவும், பக்கத்தில் உள்ள கொடி போன்ற பார்வதி தேவி ஆடவும், சிறந்த கங்கை ஆறு அசைந்தோடவும், இசை ஒலி மிகுதியாகப் பொங்கவும், பாதத்திலுள்ள வீர கண்டாமணிகள் அதிர்ந்து ஒலிக்கவும், டெகு டெகுட டெங்கட் டெங்க தொகுகுகுகு தொகுகுகுகு தொங்கத் தொங்க (இதே) தாள ஒலியில் மேள வாத்தியம் முழங்கவும், சிவந்த கையில் உள்ள உடுக்கையானது அதிரும் தாளத்துடன், அடியார்களுக்கு இன்ப நிலையை உதவுகின்ற பரத நாட்டியத்துக்கு ஆசிரியரான சிவபெருமான் வணங்கும் சற் குரு நாதனே. உருட்சியாகத் திரளும் மணியும் முத்தும் உயர்ந்த தென்னை மரங்களில் தங்கிப் புரளும்படி அவற்றை அள்ளி வீசுகின்ற அலைகளையும் மகர மீன்களையும் சங்குகளையும் உடைய பரிசுத்தமான கடல் நீர் அணைந்துள்ள கரையை உடைய திருச்செந்தூரில் வாழும் கந்தப் பெருமாளே. 

பாடல் 24 - திருச்செந்தூர்
ராகம் - .........; தாளம் - .....

தந்தத் தனனத் தந்தத் தனனத்     தந்தத் தனனத் ...... தனதானா

அம்பொத் தவிழித் தந்தக் கலகத்     தஞ்சிக் கமலக் ...... கணையாலே 
அன்றிற் குமனற் றென்றற் குமிளைத்     தந்திப் பொழுதிற் ...... பிறையாலே 
எம்பொற் கொடிமற் றுன்பக் கலனற்     றின்பக் கலவித் ...... துயரானாள் 
என்பெற் றுலகிற் பெண்பெற் றவருக்     கின்பப் புலியுற் ...... றிடலாமோ 
கொம்புக் கரிபட் டஞ்சப் பதுமக்     கொங்கைக் குறவிக் ...... கினியோனே 
கொன்றைச் சடையற் கொன்றைத் தெரியக்     கொஞ்சித் தமிழைப் ...... பகர்வோனே 
செம்பொற் சிகரப் பைம்பொற் கிரியைச்     சிந்தக் கறுவிப் ...... பொரும்வேலா 
செஞ்சொற் புலவர்க் கன்புற் றதிருச்     செந்திற் குமரப் ...... பெருமாளே.

அம்பு போன்ற கண்களை உடைய பெண்கள் பேசும் அவதூறு மொழிக்கு அஞ்சியும், காமன் எய்த தாமரைப் பூ அம்பினாலும், அன்றில் என்னும் பறவைக்கும், தீயை வீசும் தென்றல் காற்றுக்கும் இளைத்து, மாலை நேரத்தில் வந்துள்ள பிறைச் சந்திரனாலே, எமது கொடி போன்ற மகள் அணிந்திருக்கும் துன்பத்தைச் செய்யும் ஆபரணங்களை அகற்றி, இன்பத்தைத் தரும் உன்னுடன் கலப்பதையே நினைவாகத் துயரம் கொண்டுள்ளாள். எதை வைத்துக்கொண்டு இப்பூமியில் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இன்பத்தை அடைந்து இருத்தல் வாய்க்குமோ? தந்தங்கள் உள்ள யானை (விநாயகர்) எதிரில் தோன்றினதால் அஞ்சிய, தாமரை அரும்பு போன்ற மார்பகத்தை உடைய, குறப் பெண்ணாகிய வள்ளிக்கு இனியோனே, கொன்றை மலர் அணிந்த சடையுடைய சிவபெருமானுக்கு ஒப்பற்ற அந்த பிரணவப் பொருளை விளக்கமாகத் தெரியும்படி கொஞ்சித் தமிழில் கூறியவனே, செம் பொன் சிகரங்களை உடைய, பசுமையும் அழகும் பெற்ற கிரெளஞ்ச மலை குலைந்து அழியும்படி, சினம் கொண்டு சண்டை செய்த வேலனே, செம்மையான சொல்லுடைய புலவர்கள் பால் அன்பு கொண்ட, திருச்செந்தூரில் வீற்றிருக்கும் பெருமாளே. 
இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் தலைவியின் நற்றாய் பாடுவதுபோல அமைந்தது.வசை பேசும் பெண்கள், மன்மதன், மலர் அம்புகள், அன்றில், தென்றல், சந்திரன் முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.

பாடல் 25 - திருச்செந்தூர்
ராகம் - புன்னாக வராளி; தாளம் - அங்கதாளம் - 24 
தகதகிட-2 1/2, தகிடதகதிமி-3 1/2, தகதகிட-2 1/2, தகிடதகதிமி-3 1/2, தகதகிட-2 1/2, தகிடதகதிமி-3 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3

தனதனன தான தானன தனதனன தான தானன     தனதனன தான தானன          தனதனன தான தானன தந்தத் தந்தத் ...... தனதான

அருணமணி மேவு பூஷித ம்ருகமதப டீர லேபன     அபிநவவி சால பூரண          அம்பொற் கும்பத் ...... தனமோதி 
அளிகுலவு மாதர் லீலையின் முழுகியபி ஷேக மீதென     அறவுமுற வாடி நீடிய          அங்கைக் கொங்கைக் ...... கிதமாகி 
இருணிறைய மோதி மாலிகை சருவியுற வான வேளையி     லிழைகலைய மாத ரார்வழி          யின்புற் றன்புற் ...... றழியாநீள் 
இரவுபகல் மோக னாகியெ படியில்மடி யாமல் யானுமுன்     இணையடிகள் பாடி வாழஎ          னெஞ்சிற் செஞ்சொற் ...... றருவாயே 
தருணமணி யாட ராவணி குடிலசடி லாதி யோதிய     சதுர்மறையி னாதி யாகிய          சங்கத் துங்கக் ...... குழையாளர் 
தருமுருக மேக சாயலர் தமரமக ராழி சூழ்புவி     தனைமுழுதும் வாரி யேயமு          துண்டிட் டண்டர்க் ...... கருள்கூரும் 
செருமுதலி மேவு மாவலி யதிமதக போல மாமலை     தெளிவினுடன் மூல மேயென          முந்தச் சிந்தித் ...... தருள்மாயன் 
திருமருக சூரன் மார்பொடு சிலையுருவ வேலை யேவிய     ஜெயசரவ ணாம னோகர          செந்திற் கந்தப் ...... பெருமாளே.

சிவந்த மணிகளால் அலங்கரிக்கப்பட்டதாய், கஸ்தூரி, சந்தனம் இவற்றின் கலவையைப் பூசியதாய், புதுமை வாய்ந்ததும், அகன்றதும், நிறைந்ததுமான அழகிய பொற்குடம் போன்ற மார்பில் பட்டு, ஆசை மொழி பேசிக் கொஞ்சும் மாதர்களின் சரசலீலைகளில் மூழ்கி, திருமஞ்சனம் இதுதான் என்று அவர்களோடு மிகவும் கலந்து பொழுதைக் கடத்தி, அவர்களின் கைகளிலும் மார்பிலும் இன்பம் பெறுபவனாய், கருமை நிறைந்த அழகிய கூந்தலில் உள்ள மாலையானது, தழுவி உறவு கொள்ளும் வேளையில், நகைகளோடு சேர்ந்து கலைய, அம் மாதர்களின் வசத்தே இன்பம் கொண்டும், அன்பு கொண்டும் அழிந்து, நெடும் போது இரவும் பகலும் மோகம் கொண்டவனாய், இப் பூமியில் இறவாமல், நானும் உன் இணையடிகளைப் பாடி வாழ்வுற, என் நெஞ்சிலே சிறந்த உபதேசச் சொற்களைப் பதித்து அருள்வாயாக. இளமையும், அழகும், ஆடலும் உடைய பாம்புகளை அணிந்த வளைந்த ஜடாமுடியை உடைய ஆதிப் பரம் பொருள் ஆனவரும், ஓதப்படும் வேதங்களின் ஆதிப்பொருளானவரும் ஆகிய, வெண்சங்கைக் குண்டலமாகத் தரித்த சிவனார் தந்தருளிய முருகனே, கார்மேக வண்ணத்தாரும், ஒலிக்கின்றதும் மகர மீன்கள் நிறைந்ததுமான சமுத்திரம் சூழ்ந்த இந்த உலகம் முழுமையும் வாரி அமுதென ஒரே வாயில் உண்டு தேவர்களுக்கு அருள் செய்தவரும், போர்க்களத்தில் முதன்மையாளராக இருப்பவரும், மிக்க வலிமையும், அதிக மதம் பெருகும் கன்னங்களும், கொண்ட பெரிய மலை போன்ற கஜேந்திரன் என்ற யானை தெளிந்த சிந்தையோடு ஆதிமூலமே என்று அழைத்துச் சரணடைய, முன்னதாக உதவும் சிந்தையோடு ஓடிவந்து அருளிய மாயனாம் திருமாலின் அழகிய மருகனே, சூரனது மார்புடன், கிரெளஞ்ச மலையையும் உருவிச் செல்லும்படி வேலாயுதத்தைச் செலுத்திய ஜெய சரவணனே, மனத்துக்கு இனியவனே, திருச்செந்தூரில் வீற்றிருக்கும் கந்தப்பெருமாளே. 

பாடல் 26 - திருச்செந்தூர்
ராகம் - கமாஸ்; தாளம் - சதுஸ்ர ரூபகம் - 6

தனதன தந்தாத் தந்தத்     தனதன தந்தாத் தந்தத்          தனதன தந்தாத் தந்தத் ...... தனதானா

அவனிபெ றுந்தோட் டம்பொற்     குழையட ரம்பாற் புண்பட்          டரிவையர் தம்பாற் கொங்கைக் ...... கிடையேசென் 
றணைதரு பண்டாட் டங்கற்     றுருகிய கொண்டாட் டம்பெற்          றழிதரு திண்டாட் டஞ்சற் ...... றொழியாதே 
பவமற நெஞ்சாற் சிந்தித்     திலகுக டம்பார்த் தண்டைப்          பதயுக ளம்போற் றுங்கொற் ...... றமுநாளும் 
பதறிய அங்காப் பும்பத்     தியுமறி வும்போய்ச் சங்கைப்          படுதுயர் கண்பார்த் தன்புற் ...... றருளாயோ 
தவநெறி குன்றாப் பண்பிற்     றுறவின ருந்தோற் றஞ்சத்          தனிமல ரஞ்சார்ப் புங்கத் ...... தமராடி 
தமிழினி தென்காற் கன்றிற்     றிரிதரு கஞ்சாக் கன்றைத்          தழலெழ வென்றார்க் கன்றற் ...... புதமாகச் 
சிவவடி வங்காட் டுஞ்சற்     குருபர தென்பாற் சங்கத்          திரள்மணி சிந்தாச் சிந்துக் ...... கரைமோதும் 
தினகர திண்டேர்ச் சண்டப்     பரியிட றுங்கோட் டிஞ்சித்          திருவளர் செந்தூர்க் கந்தப் ...... பெருமாளே.

இந்த பூமியின் விலைக்கு சமமான மதிப்புள்ள தோடு விளங்கும் மிக அழகிய காதை நெருங்கிவரும் கண் என்ற அம்பினால் மனம் புண்பட்டு, மாதர்களின் மார்பகங்களுக்கு இடையே சென்று அணைகின்ற பழைய விளையாட்டுக்களைக் கற்று, உருகிய பெரும் சந்தோஷத்தைப் பெற்று, பின்பு அழிவைத்தரும் திண்டாட்டம் கொஞ்சம் ஒழியக் கூடாதா? பிறவி நீங்க வேண்டி நெஞ்சால் சிந்தித்து, விளங்குகின்ற கடப்பமலர் நிறைந்த, தண்டை சூழ்ந்த உன் பாதங்கள் இரண்டையும் போற்றுகின்ற வீரமும், தினமும் உன்னை நாடிப் பதறுகின்ற ஆசைப்பாடும், பக்தியும், அறிவும் இல்லாது போய் அச்சமுறும் துயரில் நான் விழுவதை நீ கண்பார்த்து அன்பு கொண்டு அருளமாட்டாயோ? தவநெறி குறையாத குணத்துத் துறவிகளும் தோற்று அஞ்சும்படி, தனது ஒப்பற்ற மலர் அம்புகள் ஐந்தின் கொத்துக்களுடன் போர் செய்து, தமிழ்போல் இனிய இளம் தென்றல் காற்றில் உலாவும் மன்மதனாம் லக்ஷ்மி மகனை, நெருப்பை எழுப்பி வென்ற சிவபிரானுக்கு அன்று அற்புதமாக பேரின்ப உண்மையாம் மங்களப்பொருளைக் காட்டிய சற்குருபரனே, தெற்குத் திசையில் கடற்கரையிலே சங்கின் குவியல்கள் மணிகளைச் சிந்தி மோதுகின்றதும், சூரியனின் தேரில் பூட்டியுள்ள வலிய குதிரைகளுக்கு கால்கள் இடறும்படியாக உயர்ந்துள்ள சிகரங்களை உடைய மதில் சூழ்ந்துள்ளதுமான செல்வம் கொழிக்கும் திருச்செந்தூரில் உள்ள கந்தப் பெருமாளே. 
* 'கஞ்சா' என்பது தாமரையில் அமர்ந்த லக்ஷ்மியையும், 'கன்று' என்பது அவள் மகன் 'மன்மதனை'யும் குறிப்பன.

பாடல் 27 - திருச்செந்தூர்
தனன தானன தந்தன தந்தன தனன தானன தந்தன தந்தன தனன தானன தந்தன தந்தன ...... தனதான

தனன தானன தந்தன தந்தன     தனன தானன தந்தன தந்தன          தனன தானன தந்தன தந்தன ...... தனதான

அளக பாரம லைந்துகு லைந்திட     வதனம் வேர்வுது லங்கிந லங்கிட          அவச மோகம்வி ளைந்துத ளைந்திட ...... அணைமீதே 
அருண வாய்நகை சிந்திய சம்ப்ரம     அடர்ந காநுதி பங்கவி தஞ்செய்து          அதர பானம ருந்திம ருங்கிற ...... முலைமேல்வீழ்ந் 
துளமும் வேறுப டும்படி ஒன்றிடு     மகளிர் தோதக இன்பின்மு யங்குதல்          ஒழியு மாறுதெ ளிந்துளம் அன்பொடு ...... சிவயோகத் 
துருகு ஞானப ரம்பர தந்திர     அறிவி னோர்கரு தங்கொள்சி லம்பணி          உபய சீதள பங்கய மென்கழல் ...... தருவாயே 
இளகி டாவளர் சந்தன குங்கும     களப பூரண கொங்கைந லம்புனை          இரதி வேள்பணி தந்தையும் அந்தண ...... மறையோனும் 
இனது றாதெதிர் இந்திரன் அண்டரும்     ஹரஹ ராசிவ சங்கர சங்கர          எனமி காவரு நஞ்சினை யுண்டவர் ...... அருள்பாலா 
வளர்நி சாசரர் தங்கள்சி ரம்பொடி     படவி ரோதமி டுங்குல சம்ப்ரமன்          மகர வாரிக டைந்தநெ டும்புயல் ...... மருகோனே 
வளரும் வாழையு மஞ்சளும் இஞ்சியும்     இடைவி டாதுநெ ருங்கிய மங்கல          மகிமை மாநகர் செந்திலில் வந்துறை ...... பெருமாளே.

கூந்தல் பாரம் அலைந்து குலைய, முகம் வியர்வை தோன்றி மாசு பெற, தன் வசமழியும்படி மோகம் உண்டாகிப் பிணிக்க, படுக்கையில், சிவந்த வாயினின்றும் சிரிப்பை வெளிப்படுத்தின களிப்புடன், நெருங்கிய நகங்களின் நுனி கொண்டு நகக் குறி பதியுமாறு செய்து, இதழ்களினின்றும் வரும் ஊறலை உண்டு, இடை அற்றுப் போகுமாறு மார்பின் மேல் வீழ்ந்து, உள்ளமும் மாறும்படி சேர்கின்ற விலைமாதர்களின் வஞ்சகம் நிறைந்த இன்பத்தில் முழுகுதல் ஒழியும் வண்ணம் மனம் தெளிந்து, உள்ளம் அன்புடன் சிவயோக நிலையில் உருகுகின்ற ஞானமும், மேலான ஆகம அறிவும் படைத்த ஞானிகள் தியானிக்கின்ற, அழகிய சிலம்பை அணிந்த, இரு குளிர்ந்த தாமரை போன்ற மென்மையான திருவடியைத் தந்து அருளுக. தளராது வளரும், சந்தனமும் குங்குமப் பூவின் கலவையும் நிறைந்த, மார்பின் அழகைக் கொண்ட ரதியின் கணவனான மன்மதன் தொழுகின்ற தந்தையாகிய திருமாலும், அந்தண பிரமனும் துன்புற, அங்கு இருந்த இந்திரனும் தேவர்களும் ஹர ஹரா சிவ சங்கரா சங்கரா என்று முறையிட, (பாற்கடலில்) பொங்கி எழுந்த (ஆலகால) விஷத்தை உண்டவராகிய சிவபெருமான் அருளிய குழந்தையே, வளர்ச்சியுற்ற அசுரர்களுடைய (கர்வம் கொண்ட) தலைகள் பொடிபடுமாறு பகைமை காட்டிய நற்சிறப்பு பெற்றவனும், சுறா மீன்கள் நிறைந்த கடலை (தான் ஒருவனாகக்) கடைந்தவனும், நெடிய மேகத்தின் நிறத்தைக் கொண்டவனுமான திருமாலின் மருமகனே, வளர்கின்ற வாழையும், மஞ்சளும் இஞ்சியும் எப்போதும் நெருங்கி விளங்குகின்ற மங்கலமும் மகிமையும் உள்ள சிறந்த நகரமாகிய திருச் செந்தூரில் வந்து வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 28 - திருச்செந்தூர்
ராகம் - காம்போதி ; தாளம் - கண்டசாபு - 2 1/2

தனதனன தனதனன தனதனன தனதனன     தனதனன தனதனன ...... தனதானா

அறிவழிய மயல்பெருக வுரையுமற விழிசுழல     அனலவிய மலமொழுக ...... அகலாதே 
அனையுமனை யருகிலுற வெருவியழ வுறவுமழ     அழலினிகர் மறலியெனை ...... யழையாதே 
செறியுமிரு வினைகரண மருவுபுல னொழியவுயர்     திருவடியி லணுகவர ...... மருள்வாயே 
சிவனைநிகர் பொதியவரை முநிவனக மகிழஇரு     செவிகுளிர இனியதமிழ் ...... பகர்வோனே 
நெறிதவறி யலரிமதி நடுவன்மக பதிமுளரி     நிருதிநிதி பதிகரிய ...... வனமாலி 
நிலவுமறை யவனிவர்க ளலையஅர சுரிமைபுரி     நிருதனுர மறஅயிலை ...... விடுவோனே 
மறிபரசு கரமிலகு பரமனுமை யிருவிழியு     மகிழமடி மிசைவளரு ...... மிளையோனே 
மதலைதவ ழுததியிடை வருதரள மணிபுளின     மறையவுயர் கரையிலுறை ...... பெருமாளே.

அறிவு மங்கிப் போகவும், மயக்கம் பெருகவும், பேச்சும் அடங்கிப் போகவும், கண்கள் சுழலவும், உடம்பின் சூடு தணியவும், மலம் (தன்னிச்சையின்றி) ஒழுகவும், நீங்காமலே என் அன்னையும் மனைவியும் பக்கத்திலிருந்து பயந்து அழ, உறவினரும் அழ, நெருப்பை நிகர்த்த கொடிய யமன் என்னை அழைத்துச் செல்லாத படிக்கு, என்னை நெருங்கியுள்ள இருவினைகளும் (நல்வினை, தீவினை), என் மனமும், பொருந்தியுள்ள ஐம்புலன்களும் ஒழிந்து நீங்கும்படியாக, உன் உயர்ந்த திருவடிகளை அணுக எனக்கு வரம் தந்தருள்வாயாக சிவனுக்கு ஒப்பான பொதியமலையைச் சார்ந்த முனிவன் (அகத்தியன்) உள்ளம் மகிழ அவனது இரண்டு செவிகளும் குளிர, இனிய தமிழை ஓதியவனே தத்தமக்கு உண்டான வழி தவறி சூரியன், சந்திரன், யமன், இந்திரன், அக்கினி, நிருதி, குபேரன், கரிய நிறமானவனும், துளசி மாலை தரித்த திருமாலும், நிலைத்த பிரமன், ஆகியவர்கள் அலையும்படி (கொடிய) ஆட்சி புரிந்த அசுரனாம் சூரனின் மார்பு பிளவுபடும்படி வேலைச் செலுத்தியவனே மானும், மழுவும் கரங்களில் விளங்கும் பரமசிவனும், உமையும் தங்கள் இருவிழிகளும் உவகைகொள்ளும்படி அவர்தம் மடியின் மேல் வளரும் இளைய குமாரனே கப்பல்கள் தவழும் கடலிடையே வருகின்ற முத்து மணிகள் மணல்மேட்டில் மறையும்படி உயர்ந்த (திருச்செந்தூர்க்) கரையில் அமர்ந்த பெருமாளே. 

பாடல் 29 - திருச்செந்தூர்
ராகம் - காபி; தாளம் - அங்கதாளம் - 7 1/2 
தகிட-1 1/2, தகதிமி-2 1/2, தகதிமி-2 1/2, தகதிமி-2 1/2

தனத்தந் தானன தானன தானன     தனத்தந் தானன தானன தானன          தனத்தந் தானன தானன தானன ...... தனதான

அனிச்சங் கார்முகம் வீசிட மாசறு     துவட்பஞ் சானத டாகம்வி டாமட          அனத்தின் தூவிகு லாவிய சீறடி ...... மடமானார் 
அருக்கன் போலொளி வீசிய மாமர     கதப்பைம் பூணணி வார்முலை மேல்முகம்          அழுத்தும் பாவியை யாவியி டேறிட ...... நெறிபாரா 
வினைச்சண் டாளனை வீணணை நீணிதி     தனைக்கண் டானவ மானநிர் மூடனை          விடக்கன் பாய்நுகர் பாழனை யோர்மொழி ...... பகராதே 
விகற்பங் கூறிடு மோகவி காரனை     அறத்தின் பாலொழு காதமு தேவியை          விளித்துன் பாதுகை நீதர நானருள் ...... பெறுவேனோ 
முனைச்சங் கோலிடு நீலம கோததி     அடைத்தஞ் சாதஇ ராவண னீள்பல          முடிக்கன் றோர்கணை யேவுமி ராகவன் ...... மருகோனே 
முளைக்குஞ் சீதநி லாவொட ராவிரி     திரைக்கங் காநதி தாதகி கூவிள          முடிக்குஞ் சேகரர் பேரரு ளால்வரு ...... முருகோனே 
தினைச்செங் கானக வேடுவ ரானவர்     திகைத்தந் தோவென வேகணி யாகிய          திறற்கந் தாவளி நாயகி காமுறும் ...... எழில்வேலா 
சிறக்குந் தாமரை யோடையில் மேடையில்     நிறக்குஞ் சூல்வளை பால்மணி வீசிய          திருச்செந் தூர்வரு சேவக னேசுரர் ...... பெருமாளே.

அனிச்சம்* பூவைப்போல் மென்மை உடையதும், பஞ்சு அடிக்கும் வில்லால் அடிக்க மாசுகள் நீங்கிய துவளுகின்ற மென்பஞ்சைப் போன்றதும், நீர் நிலையை விடாது பற்றுவதுமான அழகிய அன்னப் பறவையின் மெல்லிய இறகு போன்றதுமான மிக மிருதுவான சிறிய பாதங்களும் உடைய இளம் மானொத்த விலைமாதர்களது சூரியனைப் போல ஒளி வீசுகின்ற உயர்ந்த மரகதத்தைக் கொண்ட அழகிய அணிகலன்களை அணிந்த கச்சுடைய மார்பகங்களின் மேல் முகத்தை அழுத்துகின்ற பாவம் செய்த என்னை, என் ஜன்மம் கடைத்தேறும் வழியை ஆராய்ந்து அறியாத பரம சண்டாளனை, வீணனை, பெரிய செல்வமுடைமையைக் கண்டு ஆணவம் கொண்ட முழு மூடனை, மாமிசத்தை ஆசையுடன் உண்கின்ற பாழானவனை, ஒப்பற்ற சடாக்ஷர (சரவணபவ) மந்திரத்தைச் சொல்லாமல், சாஸ்திரத்திலிருந்து மாறுபட்ட பேச்சுக்களையே பேசுகின்ற காம விகாரனை, தர்ம வழியில் ஒழுகாத மூதேவியாகிய (என் குற்றங்களை எல்லாம் பொறுத்து) என்னை அழைத்து உனது பாதுகையை நீ என் முடிமேல் சூட்ட நான் திருவருளைப் பெறுவேனோ? போர்முனைக்கு உரிய சங்குகள் ஒலிக்கின்ற நீல நிறம் கொண்ட பெரிய கடலை அடைத்து இலங்கைக்குப் பாலம் கட்டி, அஞ்சுதல் இல்லாத இராவணனுடைய நீண்ட பத்து முடிகளும் (வீழ), அன்று ஒப்பற்ற அம்பைச் செலுத்திய இராமனுடைய மருகனே, திருப்பாற்கடலில் தோன்றும் குளிர்ந்த பிறைச் சந்திரனோடு, பாம்பையும், விசாலமானதும் அலைகளை உடையதுமான கங்கை நதியையும், ஆத்திப் பூவையும், வில்வத்தையும் ஜடாமுடியில் தரிக்கும் சிவபெருமானின் பேரருளால் தோன்றிய முருகோனே. (வள்ளிமலையிலிருந்த) தினைப் புனத்தில் வாழ்ந்த செழிப்பான காட்டு வேடர்கள் திகைப்புற்று இதென்ன ஆச்சரியம் என்று கூறும்படியாக வேங்கை மரமாய் அவர்களின் முன் நின்ற திறமை வாய்ந்த கந்தனே, வள்ளி நாயகி கண்டு ஆசைப்படும் கட்டழகு உடைய வேலனே, சிறந்த தாமரை ஓடையிலும், உயர்ந்த உப்பரிகையிலும் நிறைந்த கர்ப்பம் கொண்ட சங்குகள் வெண்ணிறமுடைய முத்துக்களை அலைகள் அள்ளி வீசுகின்ற (கடற்கரை உள்ள) திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள பராக்கிரமசாலியே, தேவர்கள் பெருமாளே. 
* அனிச்ச மலர் முகர்ந்தாலே வாடிவிடும் மென்மை வாய்ந்தது.

பாடல் 30 - திருச்செந்தூர்
ராகம் - மோகனம்; தாளம் - அங்கதாளம் - 5 1/2 தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2

தனதன தனந்த தந்த தனதன தனந்த தந்த     தனதன தனந்த தந்த ...... தனதான

அனைவரு மருண்ட ருண்டு கடிதென வெகுண்டி யம்ப     அமரஅ டிபின்தொ டர்ந்து ...... பிணநாறும் 
அழுகுபிணி கொண்டு விண்டு புழுவுட னெலும்ப லம்பு     மவலவுட லஞ்சு மந்து ...... தடுமாறி 
மனைதொறு மிதம்ப கர்ந்து வரவர விருந்த ருந்தி     மனவழி திரிந்து மங்கும் ...... வசைதீர 
மறைசதுர் விதந்தெ ரிந்து வகைசிறு சதங்கை கொஞ்சு     மலரடி வணங்க என்று ...... பெறுவேனோ 
தினைமிசை சுகங்க டிந்த புனமயி லிளங்கு ரும்பை     திகழிரு தனம்பு ணர்ந்த ...... திருமார்பா 
ஜெகமுழு துமுன்பு தும்பி முகவனொ டுதந்தை முன்பு     திகிரிவ லம்வந்த செம்பொன் ...... மயில்வீரா 
இனியக னிமந்தி சிந்து மலைகிழ வசெந்தில் வந்த     இறைவகு ககந்த என்று ...... மிளையோனே 
எழுகட லுமெண்சி லம்பும் நிசிசர ருமஞ்ச அஞ்சு     மிமையவ ரையஞ்ச லென்ற ...... பெருமாளே.

(எனக்குவந்த நோயைக் கண்டு) யாவரும் பயந்து மனம் குழம்பி, விரைவில் அகலுக என்று என்னை அருவருப்புடன் கோபித்துக் கூறி விரட்டியும், விடாது நெருங்கி அவர்களின் அடியின் பின்னே தொடர்ந்து, பிணம்போல் நாறும், அழுகிப் போன நிலையில் நோய் முற்றி, வெளிவரும் புழுக்களுடன் எலும்புகள் நிலைகுலையும் துன்பமிகு உடலைச் சுமந்து தடுமாற்றத்தை அடைந்தும், வீடுகள் தோறும் போய் இதமான மொழிகளைக் கூறி, நாட்கள் செல்லச் செல்ல, புதுப்புது இடங்களுக்குச் சென்று விருந்து உண்டு, மனம் போன போக்கில் திரிந்து அழிகின்ற பழிப்பு தீர்வதற்கு, நான்கு வேதங்களின் வகைகளை அறிந்து முறைப்படி, சிறிய சதங்கைகள் கொஞ்சும் மலர் போன்ற உன் பாதங்களை வணங்கும் பாக்கியத்தை நான் என்று பெறுவேனோ? தினை மீதிருந்த கிளிகளை ஓட்டிய மயில் போன்ற வள்ளியின் இளம் தென்னம் பிஞ்சுகள் போன்ற இரு மார்பையும் தழுவும் அழகிய மார்பனே, உலகம் முழுவதையும், முன்பு யானைமுகன் கணபதியோடு போட்டியிட்டு தந்தை சிவனாரின் முன்னிலையில், வட்டமாக வலம் வந்த செம்பொன் மயில் வீரனே, இனிய பழங்களைக் குரங்குகள் சிந்துகின்ற மலைகளுக்கு உரியவனே, திருச்செந்தூரில் அமர்ந்த இறைவனே, குகனே, கந்தனே, என்றும் இளமையோடு இருப்பவனே, ஏழு கடல்களும், அஷ்டகிரிகளும், அசுரர்களும் அஞ்சும்படி, பயம் கொண்டிருந்த தேவர்களை அஞ்சேல் என்று அருளிய பெருமாளே. 

பாடல் 31 - திருச்செந்தூர்
ராகம் - ஹூஸேனி; தாளம் - அங்கதாளம் - 9 தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமிதக-3

தனதனன தனன தந்தத் ...... தனதான     தனதனன தனன தந்தத் ...... தனதான

இயலிசையி லுசித வஞ்சிக் ...... கயர்வாகி     இரவுபகல் மனது சிந்தித் ...... துழலாதே 
உயர்கருணை புரியு மின்பக் ...... கடல்மூழ்கி     உனையெனது ளறியு மன்பைத் ...... தருவாயே 
மயில்தகர்க லிடைய ரந்தத் ...... தினைகாவல்     வனசகுற மகளை வந்தித் ...... தணைவோனே 
கயிலைமலை யனைய செந்திற் ...... பதிவாழ்வே     கரிமுகவ னிளைய கந்தப் ...... பெருமாளே.

இலக்கியத் தமிழிலும், இசையிலும் சிறப்பான பெண்களிடம் ஈடுபட்டு, அதனால் தளர்வு அடைந்து, இரவும் பகலும் மனது அவர்களையே நினைத்து நான் அலையாமல் இருந்து, உனது உயர்ந்த கருணையால் வரும் பேரின்பக் கடலில் மூழ்கி உன்னை நான் எனது உள்ளத்திலே அறியக்கூடிய அன்பினைத் தந்தருள்வாயாக. மயிலும் ஆடுகளும் உள்ள மலையிடை வாழும் வேடர்களின் அழகிய தினைப்புனத்தைக் காவல் செய்த லக்ஷ்மி போன்று அழகிய குறத்தியாம் வள்ளியை வணங்கிப் பின் அணைந்து கொண்டவனே, திருக்கயிலை போன்ற புனிதமான செந்தில் திருத்தலத்தில் வாழ்பவனே, யானைமுகனாம் வினாயகனுக்கு தம்பியான கந்தப் பெருமாளே. 

பாடல் 32 - திருச்செந்தூர்
ராகம் - ....; தாளம் -

தனதன தனந்த தந்தன தனதன தனந்த தந்தன     தனதன தனந்த தந்தன ...... தனதான

இருகுழை யெறிந்த கெண்டைகள் ஒருகுமி ழடர்ந்து வந்திட     இணைசிலை நெரிந்தெ ழுந்திட ...... அணைமீதே 
இருளள கபந்தி வஞ்சியி லிருகலை யுடன்கு லைந்திட     இதழமு தருந்த சிங்கியின் ...... மனமாய 
முருகொடு கலந்த சந்தனஅளருப டுகுங்கு மங்கமழ்     முலைமுக டுகொண்டெ ழுந்தொறு ...... முருகார 
முழுமதி புரிந்த சிந்துர அரிவைய ருடன்க லந்திடு     முகடியு நலம்பி றந்திட ...... அருள்வாயே 
எரிவிட நிமிர்ந்த குஞ்சியி னிலவொடு மெழுந்த கங்கையு     மிதழியொ டணிந்த சங்கரர் ...... களிகூரும் 
இமவரை தருங்க ருங்குயில் மரகத நிறந்த ருங்கிளி     யெனதுயி ரெனுந்த்ரி யம்பகி ...... பெருவாழ்வே 
அரைவட மலம்பு கிண்கிணி பரிபுர நெருங்கு தண்டைக     ளணிமணி சதங்கை கொஞ்சிட ...... மயில்மேலே 
அகமகிழ் வுகொண்டு சந்ததம் வருகும ரமுன்றி லின்புறம்     அலைபொரு தசெந்தில் தங்கிய ...... பெருமாளே.

காதுகளில் விளங்கும் இரண்டு குண்டலங்களையும் தாக்குகின்ற கெண்டை மீன் போன்ற கண்கள் ஒப்பற்ற குமிழம் மலர் போன்ற நாசியை நெருங்கி வந்திடவும், இரண்டு வில் போன்ற புருவங்களும் நெரிந்து மேல் எழுந்திடவும், படுக்கையின் மேல் இருண்ட கரிய கூந்தல் கற்றையும், கொடி போன்ற இடையைச் சுற்றிய பெரிய ஆடையும் குலைந்திடவும், இதழ் அமுதத்தை உண்ணும் நஞ்சில் என் மனம் அழிந்து அழியவும், நறு மணத்துடன் கலந்த சந்தனச் சேற்றுடன் குங்குமம் மணக்கும் மார்பின் உச்சி விம்மிப் பூரித்து எழுந்தோறும் அழகு நிரம்ப, முழு நிலாப் போன்ற திலகம் இட்டுக் கொண்டுள்ள விலைமாதர்களுடன் கலந்திடும் கசடனாகிய எனக்கும் நன்மை பிறக்க அருள்வாயாக. நெருப்பைப் போல் ஒளி விட்டு நிமிர்ந்த சடையில் சந்திரனுடன் எழுந்த கங்கை நதியும், கொன்றையுடன் தரித்த சிவபெருமான் மகிழ்ச்சி மிகக் கொள்ளும் இமய மலையரசன் பெற்ற கரிய குயில், பச்சை நிறம் கொண்ட கிளி, எனது உயிர் என்று நான் போற்றும் மூன்று கண்களை உடையவள் ஆகிய பார்வதி பெற்ற செல்வமே, அரையில் கட்டிய பொன்வடம், ஒலிக்கின்ற கிண்கிணி, சிலம்பு, நெருங்கியுள்ள தண்டைகள், அழகிய மணியாலாகிய சதங்கை இவை எல்லாம் கொஞ்ச, மயிலின் மேல் உள்ளம் பூரித்து எப்போதும் வருகின்ற குமரனே, முற்புறத்தில் அலைகள் வந்து மோதுகின்ற கரையுடைய திருச்செந்தூர் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 33 - திருச்செந்தூர்
ராகம் - ....; தாளம் - ........

தனதன தனன தனத்தத் தாத்தன     தனதன தனன தனத்தத் தாத்தன          தனதன தனன தனத்தத் தாத்தன ...... தந்ததான

இருள்விரி குழலை விரித்துத் தூற்றவு     மிறுகிய துகிலை நெகிழ்த்துக் காட்டவு          மிருகடை விழியு முறுக்கிப் பார்க்கவு ...... மைந்தரோடே 
இலைபிள வதனை நடித்துக் கேட்கவு     மறுமொழி பலவு மிசைத்துச் சாற்றவு          மிடையிடை சிறிது நகைத்துக் காட்டவு ...... மெங்கள்வீடே 
வருகென வொருசொ லுரைத்துப் பூட்டவும்     விரிமல ரமளி யணைத்துச் சேர்க்கவும்          வருபொரு ளளவி லுருக்கித் தேற்றவு ...... நிந்தையாலே 
வனைமனை புகுதி லடித்துப் போக்கவு     மொருதலை மருவு புணர்ச்சித் தூர்த்தர்கள்          வசைவிட நினது பதத்தைப் போற்றுவ ...... தெந்தநாளோ 
குருமணி வயிர மிழித்துக் கோட்டிய     கழைமட வுருவு வெளுத்துத் தோற்றிய          குளிறிசை யருவி கொழித்துத் தூற்றிய ...... மண்டுநீரூர் 
குழிபடு கலுழி வயிற்றைத் தூர்த்தெழு     திடர்மண லிறுகு துருத்திக் காப்பொதி          குளிர்நிழ லருவி கலக்கிப் பூப்புனை ...... வண்டலாடா 
முருகவிழ் துணர்க ளுகுத்துக் காய்த்தினை     விளைநடு விதணி லிருப்பைக் காட்டிய          முகிழ்முலை யிளைய குறத்திக் காட்படு ...... செந்தில்வாழ்வே 
முளையிள மதியை யெடுத்துச் சாத்திய     சடைமுடி யிறைவர் தமக்குச் சாத்திர          முறையருள் முருக தவத்தைக் காப்பவர் ...... தம்பிரானே.

கருமையாக இருண்டு விரிந்த கூந்தலை விரித்து ஆற்றவும், இறுக்கக் கட்டிய ஆடையை தளர்த்திக் காட்டவும், இரண்டு விழிக் கடைகளாலே செருக்குடன் பார்க்கவும், ஆண் மக்களோடு வெற்றிலையையும் வெட்டுப் பாக்கையும் நடிப்புடன் கேட்கவும், மறு மொழிகள் பலவற்றை இணக்கத்துடன் சொல்லியும், இடையிடையில் சற்று புன்னகை செய்து காட்டியும், (இது) எங்கள் வீடு தான் வருக என்று ஒரு சொல்லைச் சொல்லி வளைத்து மாட்டுவித்தும், விரிந்த மலர்ப் படுக்கையில் அணைத்துச் சேர்க்கவும், வந்த பொருளுக்குத் தக்க படி உருக்கம் காட்டி சரசமாடியும், நிந்தையாலே வனை மனை (பின்னர்) நிந்தை மொழி கூறி அலங்கரிக்கப்பட்ட வீட்டில் நுழைந்தால் அடித்து விரட்டவும், ஒரு தலைக் காமத்தினராகப் (தம் இச்சைப்படி) புணரும் கொடிய வேசியர்களின் பழிப்பு நீங்க உனது திருவடியைப் போற்றுவது எந்த நாளோ? நிறமுள்ள வைர மணிகளை அடித்துத் தள்ளி, வளைந்த இள மூங்கிலின் உருவம் வெளுத்துத் தோற்றுப் போம்படியான வெண்மையையும், ஒலிக்கின்ற இசையை உடைய சிற்றாறு ஒதுக்கி இறைக்க, பெருகிய நீர் பாய்கின்ற ஆழம் படுகின்ற காட்டாற்றின் மத்தியில் அடைபட்டு எழுந்த மேட்டு மணலால் இறுகி நிற்கும் திட்டினுள்ள சோலையின் அடர்ந்த குளிர்ந்த நிழலில் அருவியைக் கலக்கியும், பூப்புனைந்தும், மகளிர் விளையாடியும், மணம் வீசும் பூங்கொத்துக்களை விட்டு கதிர் விடும் தினை விளையும் புனத்தின் நடுவில் உள்ள பரணின் மீது தான் இருத்தலைக் காட்டிய அரும்பும் மார்பகங்களை உடைய இளைய குறப் பெண்ணாகிய வள்ளிக்கு ஆட்பட்ட திருச்செந்தூர்ப் பெருமாளே, முளைக்கின்ற இளம் பிறையை எடுத்துச் சூடிய சடாபாரம் தாங்கிய சிவபெருமானுக்கு சாத்திர முறையை ஓதி அருளிய முருகனே, தவ நிலையைக் காக்கும் முனிவர்களுடைய பெருமாளே. 

பாடல் 34 - திருச்செந்தூர்
ராகம் - கீரவாணி; தாளம் - அங்கதாளம் - 6 1/2 தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1

தனதனன தந்த தானதன     தனதனன தந்த தானதன          தனதனன தந்த தானதன ...... தந்ததான

உததியறல் மொண்டு சூல்கொள்கரு     முகிலெனஇ ருண்ட நீலமிக          வொளிதிகழு மன்றல் ஓதிநரை ...... பஞ்சுபோலாய் 
உதிரமெழு துங்க வேலவிழி     மிடைகடையொ துங்கு பீளைகளு          முடைதயிர்பி திர்ந்த தோஇதென ...... வெம்புலாலாய் 
மதகரட தந்தி வாயினிடை     சொருகுபிறை தந்த சூதுகளின்          வடிவுதரு கும்ப மோதிவளர் ...... கொங்கைதோலாய் 
வனமழியு மங்கை மாதர்களின்     நிலைதனையு ணர்ந்து தாளிலுறு          வழியடிமை யன்பு கூருமது ...... சிந்தியேனோ 
இதழ்பொதிய விழ்ந்த தாமரையின்     மணவறைபு குந்த நான்முகனும்          எறிதிரைய லம்பு பாலுததி ...... நஞ்சராமேல் 
இருவிழிது யின்ற நாரணனும்     உமைமருவு சந்த்ர சேகரனும்          இமையவர்வ ணங்கு வாசவனும் ...... நின்றுதாழும் 
முதல்வசுக மைந்த பீடிகையில்     அகிலசக அண்ட நாயகிதன்          மகிழ்முலைசு ரந்த பாலமுத ...... முண்டவேளே 
முளைமுருகு சங்கு வீசியலை     முடுகிமைத வழ்ந்த வாய்பெருகி          முதலிவரு செந்தில் வாழ்வுதரு ...... தம்பிரானே.

கடலின் நீரை மொண்டு குடித்துக் கருக் கொண்ட கரிய மேகம் போல இருண்ட நீல நிறம் மிகுத்த ஒளி வீசும், வாசனை நிறைந்த கூந்தல் நரைத்து பஞ்சு போல் வெளுத்ததாய், இரத்த ஓட்டம் நிறைந்து, பரிசுத்தமான வேல் போன்ற விழிக்கடைகளில் நெருங்கி, துர் நாற்றம் கொண்ட தயிர்த்துளிகள் சிதறினவோ என்று சொல்லும்படி கொடிய மாமிச நாற்றம் உடையதாய், மதநீர் பாயும் சுவடு கொண்ட யானையின் வாயில் சொருகியுள்ள பிறைச் சந்திரனைப் போன்ற வடிவம் உடைய தந்தங்களில் செய்யப்பட்ட சூதாடு பகடைகளின் வடிவு கொண்டனவாய் குடங்களைத் தகர்த்து வளர்ந்த மார்பகங்கள் வெறும் தோலாய், அழகு குலைந்து போன மங்கையர்களான (விலை) மாதர்களுடைய அழகின் (நிலையாமை) நிலையை உணர்ந்து, (உனது) திருவடியையே சிந்தனை செய்யும் வழி அடிமையாகிய நான்அன்பு வளரும் அந்த வழியையே நினைக்க மாட்டேனோ? இதழ்களின் கட்டுகள் விரிந்த தாமரை மலரின் நறு மணம் உள்ள வீட்டில் புகுந்து வீற்றிருக்கும் நான்முகன் பிரமனும், வீசுகின்ற அலைகள் மோதும் பாற்கடலில் விஷம் மிகுந்த பாம்பாம் ஆதிசேஷன் மேல் இரு கண்களும் துயில் கொள்ளும் திருமாலும், உமையம்மையை இடப்பாகத்தில் சேர்ந்துள்ள சந்திரசேகர தேவர்கள் வணங்குகின்ற இந்திரனும் சந்நிதியின் முன்பு நின்று வணங்கும் முழுமுதற் கடவுளே, சுகத்தைத் தரும் குமார மூர்த்தியே, சிறந்த இருக்கையில் (அமர்ந்திருந்த உன் தாயின் மடியில் கிடந்து), எல்லா உலகங்களுக்கும் தலைவியாகிய பார்வதிநாயகியின் குவிந்த திருமார்பில் சுரந்த பால் அமுதத்தைப் பருகிய தலைவனே, மிக்க இளமையான சங்குகளை வீசி அலைகள் கரையில் விரைந்து நெருங்கி, மேகநிறக் கடலால் இந்நகரின் வளம் பெருகி, ஞானம் முற்பட்டு உயர்ந்த திருச்செந்தூரில் அனைவருக்கும் வாழ்வைத் தருகின்ற தம்பிரானே. 

பாடல் 35 - திருச்செந்தூர்
ராகம் - ......; தாளம் - ........

தனத்தந் தானன தானன தானன     தனத்தந் தானன தானன தானன          தனத்தந் தானன தானன தானன ...... தனதான

உருக்கம் பேசிய நீலியர் காசுகள்     பறிக்குந் தோஷிகள் மோகவி காரிகள்          உருட்டும் பார்வையர் மாபழி காரிகள் ...... மதியாதே 
உரைக்கும் வீரிகள் கோளர வாமென     வுடற்றுந் தாதியர் காசள வேமனம்          உறைக்குந் தூரிகள் மீதினி லாசைகள் ...... புரிவேனோ 
அருக்கன் போலொளி வீசிய மாமுடி     யனைத்துந் தானழ காய்நல மேதர          அருட்கண் பார்வையி னாலடி யார்தமை ...... மகிழ்வோடே 
அழைத்துஞ் சேதிகள் பேசிய காரண     வடிப்பந் தானென வேயெனை நாடொறும்          அதிக்கஞ் சேர்தர வேயரு ளாலுட ...... னினிதாள்வாய் 
இருக்குங் காரண மீறிய வேதமும்     இசைக்குஞ் சாரமு மேதொழு தேவர்கள்          இடுக்கண் தீர்கன னேயடி யார்தவ ...... முடன்மேவி 
இலக்கந் தானென வேதொழ வேமகிழ்     விருப்பங் கூர்தரு மாதியு மாயுல          கிறுக்குந் தாதகி சூடிய வேணிய ...... னருள்பாலா 
திருக்குந் தாபதர் வேதிய ராதியர்     துதிக்குந் தாளுடை நாயக னாகிய          செகச்செஞ் சோதியு மாகிய மாதவன் ...... மருகோனே 
செழிக்குஞ் சாலியு மேகம ளாவிய     கருப்பஞ் சோலையும் வாழையு மேதிகழ்          திருச்செந் தூர்தனில் மேவிய தேவர்கள் ...... பெருமாளே.

உருக்கமான மொழிகளைப் பேசும் தந்திரம் உள்ளவர், பிறரிடமிருந்துப் பொருள் கவரும் குற்றம் உள்ளவர், மோக விகாரம் கொண்டவர், உருட்டிப் பார்க்கும் பார்வையர், மிக்க பழிகாரிகள், மதிக்காமல் பேசும் அகங்காரம் உள்ளவர், கொல்ல வருகின்ற பாம்பு போல வருத்துகின்ற தாசிகள், கிடைத்த பொருளுக்குத் தக்கபடி மனத்தை அழுந்தச் செலுத்தும் துன்மார்க்கம் உள்ளவர்கள் (இத்தகையோர்) மேலே விருப்பம் வைப்பேனோ? சூரியனைப் போல் ஒளி வீசும் பெருமை மிக்க இரத்தின கி¡£டங்கள் யாவும் காண்பவர்களுக்கு அழகாக விளங்கும் நன்மையே வழங்க, அருள் கண் பார்வை கொண்டு அடியார்களை மகிழ்ச்சியுடன் அழைத்தும், அவர்களுடன் விஷயங்களைப் பேசியும் இருந்த மூலப் பொருளே, திருந்திய குணம் உள்ளவன் தான் இவன் என்று என்னை தினமும் மேன்மேலும் சிறப்புறும் வண்ணம் உனது திருவருளால் இப்பொழுதே இனிமையுடன் ஆண்டருள்வாயாக. ரிக்கு வேதமும், காரணங்களைக் கடந்து நிற்கும் தனிச் சிறப்புடைய (தமிழ்) வேதமும் (தேவாரமும்), அவற்றுள் மறைந்து கிடக்கும் உட்கருத்துக்களைக் கூறும் வேதசாரமாகிய ஆகமங்களும் தொழுகின்ற தேவர்களின் துன்பம் தீர்க்கின்ற பெருமை வாய்ந்தவனே, அடியார்கள் தவ நெறியில் நின்று இவரே நமது குறிப் பொருள் என்று தொழவே, மகிழ்ந்து விருப்பம் மிகக் கொள்ளும் முன்னைப் பழம் பொருளாய் நிற்பவனே, உலகங்களை எல்லம் சம்ஹாரம் செய்பவரும், ஆத்தி மலரைச் சூடிய சடையை உடையவருமாகிய சிவபெருமான் அருளிய குழந்தையே, முன்று காலங்களையும் காண வல்ல தவ சிரேஷ்டர்கள் வேதியர் முதலானோர் வணங்கும் திருவடிகளை உடைய பெருமானாகியவரும் உலகுக்குப் பேரொளியாய் விளங்குகின்றவரும் ஆகிய திருமாலின் மருகனே, செழிப்புள்ள நெற் பயிரும் மேகத்தை எட்டி வளர்ந்துள்ள கரும்புச் சோலையும் வாழை மரங்களும் பொலிகின்ற திருச்செந்தூரில் வீற்றிருக்கும், தேவர்களின் பெருமாளே. 

பாடல் 36 - திருச்செந்தூர்
ராகம் - வலஜி / பந்துவராளி; தாளம் - ஆதி - எடுப்பு - 3/4 இடம்

தானன தானன தானன தானன     தானன தானன ...... தனதானா

ஏவினை நேர்விழி மாதரை மேவிய     ஏதனை மூடனை ...... நெறிபேணா 
ஈனனை வீணனை ஏடெழு தாமுழு     ஏழையை மோழையை ...... அகலாநீள் 
மாவினை மூடிய நோய்பிணி யாளனை     வாய்மையி லாதனை ...... யிகழாதே 
மாமணி நூபுர சீதள தாள்தனி     வாழ்வுற ஈவது ...... மொருநாளே 
நாவலர் பாடிய நூலிசை யால்வரு     நாரத னார்புகல் ...... குறமாதை 
நாடியெ கானிடை கூடிய சேவக     நாயக மாமயி ...... லுடையோனே 
தேவிம நோமணி ஆயிப ராபரை     தேன்மொழி யாள்தரு ...... சிறியோனே 
சேணுயர் சோலையி னீழலி லேதிகழ்     சீரலை வாய்வரு ...... பெருமாளே.

அம்பினை நிகர்க்கும் கண்களை உடைய மாதர்களை விரும்பும் கேடுகெட்டவனை, மூடனை, ஒழுக்கம் இல்லாத இழிந்தோனை, படிப்பே இல்லாத முழு ஏழையை, மடையனை, என்னைவிட்டு நீங்கா தீவினை மூடியுள்ள நோயும் பிணியும் கொண்டவனை, உண்மை இல்லாதவானை, இகழ்ந்து ஒதுக்காமல் சிறந்த மணிகளாலான சிலம்புள்ள உன் பாதங்களை, ஒப்பற்ற வாழ்வை (முக்தியை) யான் பெற தந்துதவும் ஒரு நாளும் எனக்கு உண்டோ? புலவர்கள் பாடிய நூல்களில் புகழப்பட்ட நாரத மாமுனிவர் முன்பு வருணித்த குறப்பெண் வள்ளியை விரும்பிச் சென்று காட்டிலே கூடிய வீரனே தலைவனே சிறந்த மயில் வாகனனே தேவி, மனோன்மணி, அன்னை, பராபரை, தேன் மொழியாள் உமையின் சிறுமகனே விண்வரை உயர்ந்த சோலைகளின் நிழலினிலே வளங்கும் திருச்செந்தூரில் அமர்ந்த பெருமாளே. 

பாடல் 37 - திருச்செந்தூர்
ராகம் - பிலஹரி; தாளம் - ஆதி - 2 களை

தானா தந்தத் தானா தந்தத்     தானா தந்தத் ...... தனதானா

ஓரா தொன்றைப் பாரா தந்தத்     தோடே வந்திட் ...... டுயிர்சோர 
ஊடா நன்றற் றார்போல் நின்றெட்     டாமால் தந்திட் ...... டுழல்மாதர் 
கூரா வன்பிற் சோரா நின்றக்     கோயா நின்றுட் ...... குலையாதே 
கோடார் செம்பொற் றோளா நின்சொற்     கோடா தென்கைக் ...... கருள்தாராய் 
தோரா வென்றிப் போரா மன்றற்     றோளா குன்றைத் ...... தொளையாடீ 
சூதா யெண்டிக் கேயா வஞ்சச்     சூர்மா அஞ்சப் ...... பொரும்வேலா 
சீரார் கொன்றைத் தார்மார் பொன்றச்     சேவே றெந்தைக் ...... கினியோனே 
தேனே யன்பர்க் கேயா மின்சொற்     சேயே செந்திற் ...... பெருமாளே.

உண்மை என்ற ஒன்றை ஆராய்ந்து அறியாமலும், அந்த உண்மையைப் பார்க்காமலும், அலங்காரம் செய்துகொண்டு வந்து, ஆண்களின் உயிர் சோர்ந்து போகும்படி ஊடல் செய்து, தங்களுக்கு நல்லது ஏதும் இல்லாதவர்கள் போல நின்று, அளவற்ற காம மயக்கத்தைத் தந்து, திரிகின்ற பெண்களின் விருப்பமற்ற வெளிவேஷ அன்பில் சோர்வடைந்து, எலும்போடு கூடிய என் சா£ரம் ஓய்ந்துபோய் உள்ளம் குலைந்து போகாதபடியாக, மலைபோன்ற செவ்விய அழகிய தோளை உடையவனே, உனது திருப்புகழ் நேராக நின்று உதவும் என்று உலகத்தார் கூறும்வண்ணம் திருவருள் தந்தருள்க. தோல்வியே தெரியாத வெற்றிப் போர் வீரா, மணம் வீசும் (மாலைகள் அணிந்த) தோளை உடையவனே, கிரெளஞ்ச மலையைத் தொளைத்தவனே, சூழ்ச்சி செய்து எட்டுத் திக்கும் பொருந்தி நின்ற வஞ்சகச் சூரனாம் மாமரம் அஞ்சப் போரிட்ட வேலனே, சிறப்பு மிகுந்த கொன்றைமாலை மார்பில் திகழ ரிஷபத்தில் ஏறும் எம் தந்தை சிவனாருக்கு இனியவனே, தேன் போல் இனிப்பவனே, அன்பர்க்கென்றே இனிய சொற்கள் கொண்ட சேயே, திருச்செந்தூரில் மேவிய பெருமாளே. 

பாடல் 38 - திருச்செந்தூர்
ராகம் - மனோலயம் - மத்யமஸ்ருதி; தாளம் - சதுஸ்ர த்ருவம் - கண்ட நடை - 35 /4/4/4 0 - நடை தக தகிட

தத்ததன தத்தத் தனந்தந் தனந்ததன     தத்ததன தத்தத் தனந்தந் தனந்ததன          தத்ததன தத்தத் தனந்தந் தனந்ததன ...... தனதான

கட்டழகு விட்டுத் தளர்ந்தங் கிருந்துமுனம்     இட்டபொறி தப்பிப் பிணங்கொண் டதின்சிலர்கள்          கட்டணமெ டுத்துச் சுமந்தும் பெரும்பறைகள் ...... முறையோடே 
வெட்டவிட வெட்டக் கிடஞ்சங் கிடஞ்சமென     மக்களொரு மிக்கத் தொடர்ந்தும் புரண்டும்வழி          விட்டுவரு மித்தைத் தவிர்ந்துன் பதங்களுற ...... வுணர்வேனோ 
பட்டுருவி நெட்டைக் க்ரவுஞ்சம் பிளந்துகடல்     முற்றுமலை வற்றிக் குழம்புங் குழம்பமுனை          பட்டஅயில் தொட்டுத் திடங்கொண் டெதிர்ந்தவுணர் ...... முடிசாயத் 
தட்டழிய வெட்டிக் கவந்தம் பெருங்கழுகு     நிர்த்தமிட ரத்தக் குளங்கண் டுமிழ்ந்துமணி          சற்சமய வித்தைப் பலன்கண் டுசெந்திலுறை ...... பெருமாளே.

இறுகிய கட்டுக்கோப்பாய் இருந்த அழகிய உடல் தளர்ந்துபோய், அவ்வுடலில் இருந்துகொண்டு முன்பு ஆட்டிவைத்த ஐந்து பொறிகளும் கலங்கிச் சிதறிப்போய், பிணம் என்ற நிலையை உடல் அடைந்ததும், சில பேர்கள் பிணத்தைக் கூலிக்கு எடுத்துச் சுமந்து போக, பெரிய பறைகள் முறைப்படியாக வெட்டவிட வெட்டக் கிடஞ்சங் கிடஞ்சம் என்ற ஓசையில் முழங்க, மக்கள் ஒன்றுகூடிப் பிணத்தைத் தொடர்ந்தும், சிலர் செல்லும் வழியிலே புரண்டும் சிலர் பிணம் செல்வதற்கு வழி விடுகின்றதுமான இந்தப் பொய்யான வாழ்வை விட்டு, உன் திருவடிகளை அடையும் வழியை நான் உணர மாட்டேனோ? பட்டு உருவிச் செல்லும்படி ஆணவம் கொண்ட உயரமான கிரெளஞ்சமலையை வேலாயுதம் பிளந்து எறிந்து, கடல் முழுதும் அலை வற்றிப்போய் குழம்பாகக் போகும்படி, கூர்மை கொண்ட வேலாயுதத்தைச் செலுத்தி, வலிமையோடு எதிர்த்த அசுரர்களின் முடி சாயும்படியாக, அடியோடு அழியும்படி வெட்டி, தலையற்ற உடல்களும், பெரிய கழுகுகளும் நடனமாடவும், ரத்தம் குளமாகப் பெருகச்செய்தும், அசுரர் கி¡£டங்களினின்று மணிகள் சிதறி விழ வைத்தும், தேவர்களுக்கு நல்ல காலம் வருவதற்கான விதையைப் பலன் கிடைக்குமாறு நீ நட்டுவைத்த திருச்செந்தூர் நகரில் வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 39 - திருச்செந்தூர்
ராகம் - காவடிச்சிந்து; தாளம் - அங்கதாளம் - 5 1/2 தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2

தந்ததன தந்த தந்த தந்ததன தந்த தந்த     தந்ததன தந்த தந்த ...... தனதான

கண்டுமொழி கொம்பு கொங்கை வஞ்சியிடை யம்பு நஞ்சு     கண்கள்குழல் கொண்டல் என்று ...... பலகாலும் 
கண்டுளம்வ ருந்தி நொந்து மங்கையர்வ சம்பு ரிந்து     கங்குல்பகல் என்று நின்று ...... விதியாலே 
பண்டைவினை கொண்டு ழன்று வெந்துவிழு கின்றல் கண்டு     பங்கயப தங்கள் தந்து ...... புகழோதும் 
பண்புடைய சிந்தை யன்பர் தங்களினு டன்க லந்து     பண்புபெற அஞ்ச லஞ்ச ...... லெனவாராய் 
வண்டுபடு கின்ற தொங்கல் கொண்டறநெ ருங்கி யிண்டு     வம்பினைய டைந்து சந்தின் ...... மிகமூழ்கி 
வஞ்சியைமு னிந்த கொங்கை மென்குறம டந்தை செங்கை     வந்தழகு டன்க லந்த ...... மணிமார்பா 
திண்டிறல்பு னைந்த அண்டர் தங்களப யங்கள் கண்டு     செஞ்சமர்பு னைந்து துங்க ...... மயில்மீதே 
சென்றசுரர் அஞ்ச வென்று குன்றிடைம ணம்பு ணர்ந்து     செந்தில்நகர் வந்த மர்ந்த ...... பெருமாளே.

கற்கண்டுச் சொல், யானைத் தந்தம் போன்ற மார்பு, வஞ்சிக் கொடி போன்ற இடை, அம்பையும் நஞ்சையும் ஒத்த கண்கள், கூந்தல் மேகம் போன்றது என பலமுறையும் உவமை கண்டு, உள்ளம் வருந்தி, நொந்து போய், மாதர்களின் வசப்பட்டு, இரவும் பகலுமாக நின்று, விதியின் பயனாய் பழவினை தாக்க, அதனால் திரிந்து, என் மனம் வெந்து வீழ்வதைக் கண்டு, உன் தாமரைப் பதங்களைத் தந்தளித்து, உன் புகழை ஓதும் பண்பு கொண்ட மனத்து அன்பர்களுடன் கலந்து நான் நற்குணம் பெறுவதற்கு, நீ அஞ்சாதே அஞ்சாதே என்று கூறி வருவாயாக. வண்டுகள் மொய்க்கின்ற மலர்மாலையைப் பூண்டு, மிக நெருக்கமாக நெய்த அழுத்தமான ரவிக்கையை அணிந்து, சந்தனக்குழம்பில் மிகவும் முழுகி, வஞ்சிக் கொடி போன்ற இடையை வருத்துகின்ற மார்பினள், மென்மையான குறப்பெண் வள்ளியின் சிவந்த கைகளை அவளது இடத்துக்கு (வள்ளிமலைக்கு) ச் சென்று எழிலுடன் தொட்டுக் கலந்த திருமார்பனே. திண்ணிய வலிமை கொண்ட தேவர்கள் நின்னிடம் அபயம் அடைய வேண்டுவதைக் கண்டு, செவ்விய போர்க்கோலம் பூண்டு, தூய மயில்மீது ஏறிச்சென்று, போர்க்களத்தில் அசுரர்களை அஞ்சும்படி வெற்றி கொண்டு, (திருப்பரங்) குன்றத்தில் தேவயானையை மணம்புரிந்து, திருச்செந்தூர்ப்பதியில் வந்து வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 40 - திருச்செந்தூர்
ராகம் - ஆனந்த பைரவி - மத்யம ஸ்ருதி; தாளம் - அங்கதாளம் - 7 1/2 தகிட-1 1/2, தாதக-2, தகதிமி-2, தகதிமி-2

தனன தானன தந்தன தந்தன     தனன தானன தந்தன தந்தன          தனன தானன தந்தன தந்தன ...... தனதான

கமல மாதுடன் இந்திரை யுஞ்சரி     சொலவொ ணாதம டந்தையர் சந்தன          களப சீதள கொங்கையில் அங்கையில் ...... இருபோதேய் 
களவு நூல்தெரி வஞ்சனை அஞ்சன     விழியின் மோகித கந்தசு கந்தரு          கரிய ஓதியில் இந்துமு கந்தனில் ...... மருளாதே 
அமல மாகிய சிந்தைய டைந்தகல்     தொலைவி லாதஅ றம்பொருள் இன்பமும்          அடைய ஓதியு ணர்ந்துத ணந்தபின் ...... அருள்தானே 
அறியு மாறுபெ றும்படி அன்பினின்     இனிய நாதசி லம்புபு லம்பிடும்          அருண ஆடக கிண்கிணி தங்கிய ...... அடிதாராய் 
குமரி காளிப யங்கரி சங்கரி     கவுரி நீலிப ரம்பரை அம்பிகை          குடிலை யோகினி சண்டினி குண்டலி ...... எமதாயி 
குறைவி லாள்உமை மந்தரி அந்தரி     வெகுவி தாகம சுந்தரி தந்தருள்          குமர மூஷிக முந்திய ஐங்கர ...... கணராயன் 
மமவி நாயகன் நஞ்சுமிழ் கஞ்சுகி     அணிக ஜானன விம்பனொர் அம்புலி          மவுலி யானுறு சிந்தையு கந்தருள் ...... இளையோனே 
வளரும் வாழையு மஞ்சளும் இஞ்சியும்     இடைவி டாதுநெ ருங்கிய மங்கல          மகிமை மாநகர் செந்திலில் வந்துறை ...... பெருமாளே.

தாமரையில் வீற்றிருக்கும் ஸரஸ்வதியும், லக்ஷ்மியும் இவர்களுக்கு ஒப்பு என்று சொல்ல ஒண்ணாத அழகான மாதர்களின் சந்தனக் கலவை பூசிக் குளிர்ந்த மார்பகங்களிலும், அழகிய கரங்களிலும், இரவு பகல் ஆகிய இரண்டு வேளைகளிலும் பொருந்தி, காமசாஸ்திரங்களைக் கற்றறிந்த, வஞ்சனை நிறைந்த மை தீட்டிய கண்களிலும், மோகத்தைத் தூண்டும் நறுமணச் சுகம் தரும் கரிய கூந்தலிலும், சந்திரனை ஒத்த முகத்திலும் மயக்கம் கொள்ளாமல், மாசு இல்லாத தூய சிந்தையை அடைந்து, பரந்துள்ளதும், அழிவற்றதும் ஆகிய அறம், பொருள், இன்பம் பற்றிய நூல்கள் முழுமையும் ஓதி உணர்ந்து, ஆசைகள் நீங்கி அடங்கியபின்னர், உன் திருவருளை தானாகவே அறியும் வழியை யான் அடையுமாறு, அன்புடனே, இனிமையான ஓசையுடன் சிலம்பு ஒலிப்பதும், செம்பொன்னால் ஆன சதங்கைகள் அணிந்துள்ளதுமான உன் திருவடிகளைத் தந்தருள்வாயாக. என்றும் அகலாத இளமையுடைய கன்னியும், கரிய நிறக் காளியும், அடியவர் பயத்தை நீக்குபவளும், ஆன்மாக்களுக்கு சுகத்தைத் தருபவளும், பொன்னிறத்தாளும், நீல நிறத்தாளும், பெரும் பொருளுக்கெல்லாம் பெரியவளும், உலக மாதாவும், சுத்த மாயையும், யோக சொரூபமாக இருப்பவளும், பாவிகளுக்குக் கொடியவளும், குண்டலினி சக்தியும், எங்கள் தாயும், குறைவில்லாதவளும், உமாதேவியும், சுவர்க்கம் தருபவளும், முடிவற்றவளும், பலவகைச் சிவாகமங்களால் துதிக்கப் பெறும் அழகியும் ஆகிய பார்வதி தேவி பெற்றருளிய குமரனே, மூஷிக வாகனத்தில் ஏறியவரும், ஐந்து கரத்தாரும், கணங்களுக்குத் தலைவரும், எங்கள் விநாயகரும், விஷத்தைக் கக்கும் சர்ப்பத்தை இடுப்பில் ஆபரணமாகத் தரித்த யானை முகத்தை உடையவரும், பிறைச் சந்திரனைத் தலைமுடியில் தரித்திருப்பவருமான விநாயக மூர்த்தி மிகவும் மனமகிழ்ந்து அருளத் தக்க இளைய பெருமானே, செழித்து வளர்ந்த வாழையும் மஞ்சளும் இஞ்சியும் இடைவெளி இல்லாமல் நெருங்கி உள்ளதும், மங்கலத்தை உடையதும், கீர்த்தி வாய்ந்ததுமான பெருநகர் திருச்செந்தூர்ப் பதியில் எழுந்தருளியுள்ள பெருமாளே.

பாடல் 41 - திருச்செந்தூர்
ராகம் - ....; தாளம் -

தனத்தந்தம் தனத்தந்தம்     தனத்தந்தம் தனத்தந்தம்          தனத்தந்தம் தனத்தந்தம் ...... தனதானா

கரிக்கொம்பந் தனித்தங்கங்     குடத்தின்பந் தனத்தின்கண்          கறுப்புந்தன் சிவப்புஞ்செம் ...... பொறிதோள்சேர் 
கணைக்கும்பண் டுழைக்கும்பங்     களிக்கும்பண் பொழிக்குங்கண்          கழுத்துஞ்சங் கொளிக்கும்பொன் ...... குழையாடச் 
சரக்குஞ்சம் புடைக்கும்பொன்     றுகிற்றந்தந் தரிக்குந்தன்          சடத்தும்பண் பிலுக்குஞ்சம் ...... பளமாதர் 
சலித்தும்பின் சிரித்துங்கொண்     டழைத்துஞ்சண் பசப்பும்பெண்          தனத்துன்பந் தவிப்புண்டிங் ...... குழல்வேனோ 
சுரர்ச்சங்கந் துதித்தந்தஞ்     செழுத்தின்பங் களித்துண்பண்          சுகத்துய்ந்தின் பலர்ச்சிந்தங் ...... கசுராரைத் 
துவைத்தும்பந் தடித்துஞ்சங்     கொலித்துங்குன் றிடித்தும்பண்          சுகித்துங்கண் களிப்புங்கொண் ...... டிடும்வேலா 
சிரப்பண்புங் கரப்பண்புங்     கடப்பந்தொங் கலிற்பண்புஞ்          சிவப்பண்புந் தவப்பண்புந் ...... தருவோனே 
தினைத்தொந்தங் குறப்பெண்பண்     சசிப்பெண்கொங் கையிற்றுஞ்சுஞ்          செழிக்குஞ்செந் திலிற்றங்கும் ...... பெருமாளே.

யானையின் கொம்பு போலவும், ஒப்பற்ற தங்கக் குடம் போலவும் தோன்றி, இன்பம் தரும் மார்பகத்தின் இடத்தே கரு நிறத்தையும் செந்நிறத்தையும், செவ்வரியையும் உடையதாய், தோளை எட்டும் அளவினதாக நீண்டதாய், அம்பும் முன்னதாக மானும் போன்றதாய், (பார்த்தவர்களின்) நற்குணத்தை அழிக்க வல்லதாகிய கண், சங்கு வெட்கி ஒளிந்து கொள்ளும்படியான கழுத்து, பொன்னாலாகிய காதணிகள் ஊசலாட, மாலைச் சரம் போலத் தொங்க விட்டுள்ள குஞ்சம் வெளிப்பட, பொன் ஆடையால் யானைத்தந்தம் (போன்ற மார்பை மூடும்படி) தரித்துள்ள தமது உடல் தகுதியான நகைகளைக் கொண்டு ஆடம்பரமாக அலங்கரித்துள்ள விலைமாதர்கள். முதலில் சலித்தும் பிறகு சிரித்தும், (வந்தவரை) அழைத்துச் சென்றும், சார்ந்து பசப்பியும், பொது மகளிரின் மார்பகத்தால் வரும் துன்பம் கொண்டு தவித்து இந்த உலகில் திரிவேனோ? தேவர்களின் கூட்டம் துதி செய்த அந்த ஐந்தெழுத்தால் (நமசிவாய மந்திரத்தால்) வரும் இன்பத்தில் மகிழ்ந்து, உண்ணுதல், இசை பாடுதல் ஆகிய சுகத்தில் திளைத்து வாழ்ந்த இன்ப வாழ்வை அழியும்படி செய்த காரணத்தால், அங்கு அசுரர்களை மிதித்துக் கசக்கி பந்தடிப்பது போல் அடித்தும், வெற்றிச் சங்கை ஒலித்தும், கிரெளஞ்ச மலையைப் பொடி செய்தும், இசையோடு மகிழ்ந்தும் கண் களிப்புக் கொண்ட வேலனே, உன்னை வணங்குவதால் தலை பயன் பெறுதலையும், உன்னைக் கைகூப்பித் தொழுதலால் கைகள் பயன் அடைவதையும், கடப்ப மாலை சூட்டுதலைக் கண்டு சிவமாகும் தன்மை பெறுதலையும், தவ நிலை அடைதலையும் கொடுப்பவனே, தினைப் புனத்துத் தொடர்புடைய குறப் பெண்ணாகிய வள்ளி, சீர் நிறைந்த இந்திராணியின் மகளான தேவயானை ஆகிய இருவர்களின் மார்பகங்களில் துயில் கொள்ளும் பெருமாளே, செழிப்பான திருச்செந்தூரில் உறையும் பெருமாளே. 

பாடல் 42 - திருச்செந்தூர்
ராகம் - ..........; தாளம் - ........

தனத்தந்தம் தனத்தந்தம்     தனத்தந்தம் தனத்தந்தம்          தனத்தந்தம் தனத்தந்தம் ...... தனதானா

கருப்பந்தங் கிரத்தம்பொங்     கரைப்புண்கொண் டுருக்கும்பெண்          களைக்கண்டங் கவர்ப்பின்சென் ...... றவரோடே 
கலப்புண்டுஞ் சிலுப்புண்டுந்     துவக்குண்டும் பிணக்குண்டுங்          கலிப்புண்டுஞ் சலிப்புண்டுந் ...... தடுமாறிச் 
செருத்தண்டந் தரித்தண்டம்     புகத்தண்டந் தகற்கென்றுந்          திகைத்தந்திண் செகத்தஞ்சுங் ...... கொடுமாயும் 
தியக்கங்கண் டுயக்கொண்டென்     பிறப்பங்கஞ் சிறைப்பங்கஞ்          சிதைத்துன்றன் பதத்தின்பந் ...... தருவாயே 
அருக்கன்சஞ் சரிக்குந்தெண்     டிரைக்கண்சென் றரக்கன்பண்          பனைத்தும்பொன் றிடக்கன்றுங் ...... கதிர்வேலா 
அணிச்சங்கங் கொழிக்குந்தண்     டலைப்பண்பெண் டிசைக்குங்கொந்          தளிக்குஞ்செந் திலிற்றங்குங் ...... குமரேசா 
புரக்குஞ்சங் கரிக்குஞ்சங்     கரர்க்குஞ்சங் கரர்க்கின்பம்          புதுக்குங்கங் கையட்குந்தஞ் ...... சுதனானாய் 
புனைக்குன்றந் திளைக்குஞ்செந்     தினைப்பைம்பொன் குறக்கொம்பின்          புறத்தண்கொங் கையிற்றுஞ்சும் ...... பெருமாளே.

கர்ப்பத்துக்கு இடமாய் ரத்தப் பெருக்குள்ள புண் போன்ற உறுப்பைக் கொண்டு உருக்கும் பெண்களைப் பார்த்து, அப்போதே அவர்கள் பின்னே போய், அவர்களுடன் கூடி மகிழ்ந்தும், ஊடல் கொண்டும், ஒற்றுமை கொண்டும், மனம் பிணங்கியும், இன்பம் கொண்டும், துன்பப்பட்டும், நிலை தடுமாறியவனாய், போருக்கு ஏற்ற தண்டாயுதத்தைக் கையில் ஏந்தி பூமியில் வந்து உயிர்களை வருத்தும் யமனுக்கு எப்போதும் அச்சம் உற்று, அழகிய திண்ணிய இப்பூமியில் ஐந்து புலன்களுடன் அழிந்து போகும் என் சோர்வினைக் கண்டு, உய்யும்படி என்னை ஆட்கொண்டு, எனது பிறப்பாகிய இடரையும், சிறையிட்டது போன்ற துன்பத்தையும் நீக்கி, உன்னுடைய திருவடிகளின் இன்பத்தைத் தருவாயாக. சூரியன் உலவுகின்ற அலைகள் வீசுகின்ற கடலிடத்தே போய் சூரனது பெருமையெல்லாம் அழியும்படி கோபித்த ஒளி வேலனே, அழகிய சங்குகளை ஒதுக்கி எறிந்து, எழுந்து வீசும் அலைகடலின் பெருமை எட்டுத் திசைகளிலும் மேம்பட்டு விளங்கும் திருச்செந்தூரில் வீற்றிருக்கும் குமரேசனே, உலகங்களை எல்லாம் காக்கும் உமா தேவிக்கும், சிவ பெருமானுக்கும், சிவனார்க்கு இன்பம் புதுப்பிக்கும் கங்கா தேவிக்கும் செல்லப் பிள்ளையாக ஆனவனே, வயல்கள் விளங்கும் வள்ளி மலையில் மகிழ்ச்சி அடைகின்ற, செந்தினையைக் காத்திருந்த பசும் பொன் போன்ற குற மகளாகிய வள்ளியின் குளிர்ந்த மார்பகத்தின் மீது துயில் கொள்ளும் பெருமாளே. 

பாடல் 43 - திருச்செந்தூர்
ராகம் - ......; தாளம் - ........

தனன தனதன தனதன தனதன     தனன தனதன தனதன தனதன          தனன தனதன தனதன தனதன ...... தனதான

களபம் ஒழுகிய புளகித முலையினர்     கடுவும் அமிர்தமும் விரவிய விழியினர்          கழுவு சரிபுழு கொழுகிய குழலினர் ...... எவரோடுங் 
கலகம் இடுகயல் எறிகுழை விரகியர்     பொருளில் இளைஞரை வழிகொடு மொழிகொடு          தளர விடுபவர் தெருவினில் எவரையும் ...... நகையாடிப் 
பிளவு பெறிலதி லளவள வொழுகியர்     நடையில் உடையினில் அழகொடு திரிபவர்          பெருகு பொருள்பெறில் அமளியில் இதமொடு ...... குழைவோடே 
பிணமும் அணைபவர் வெறிதரு புனலுணும்     அவச வனிதையர் முடுகொடும் அணைபவர்          பெருமை யுடையவர் உறவினை விடஅருள் ...... புரிவாயே 
அளையில் உறைபுலி பெறுமக வயிறரு     பசுவின் நிரைமுலை யமுதுண நிரைமகள்          வசவ னொடுபுலி முலையுண மலையுடன் ...... உருகாநீள் 
அடவி தனிலுள உலவைகள் தளிர்விட     மருள மதமொடு களிறுகள் பிடியுடன்          அகல வெளியுயர் பறவைகள் நிலம்வர ...... விரல்சேரேழ் 
தொளைகள் விடுகழை விரல்முறை தடவிய     இசைகள் பலபல தொனிதரு கருமுகில்          சுருதி யுடையவன் நெடியவன் மனமகிழ் ...... மருகோனே 
துணைவ குணதர சரவண பவநம     முருக குருபர வளரறு முககுக          துறையில் அலையெறி திருநகர் உறைதரு ...... பெருமாளே.

சந்தனக் கலவை ஒழுகுகின்ற புளகம் கொண்ட மார்பகத்தை உடையவர், விஷமும் அமுதமும் கலந்த கண்களை உடையவர், கழுவி எடுத்து வாரிய, பொருத்தமான வாசனைத் தைலம் ஒழுகும், கூந்தலை உடையவர், கயல் மீன் போன்ற கண்கள் பரந்து மோதும் குண்டலங்களை அணிந்த, எல்லாரிடமும் கலகம் செய்கின்ற, தந்திரவாதிகள், பொருள் இல்லாத வாலிபர்களை தமது நடவடிக்கையாலும் பேச்சுக்களாலும் தளர்ச்சி அடையச் செய்பவர், தெருவில் யாரோடும் சிரித்துப் பேசி, பிரிவுக்குக் காரணம் ஏற்பட்டால் அதற்குத் தக்கபடி அளவோடு நடந்து கொள்பவர், நடையிலும், உடையிலும் அழகினோடு திரிபவர், மிக்க பொருள் கிடைத்தால், படுக்கையில் இன்பத்துடனும் உருக்கத்துடனும் பிணத்தையும் தழுவுவர், கலக்கத்தைத் தரும் கள்ளை உண்டு தம் வசம் இழக்கும் விலைமாதர் அந்தக் கள் நாற்றத்துடனேயே நெருங்கி அணைபவர், அகந்தை உடைய இத்தகைய வேசியரது உறவு நீங்கும்படி அருள் புரிவாயாக. குகையில் இருக்கும் புலி பெற்ற குட்டி குடிப்பதற்கு பசுக் கூட்டங்களின் முலைப் பால் அமுதை உண்ணவும், பசுவின் பெண் கன்று, ஆண் கன்றுடன் புலியின் முலைப் பாலைக் குடிக்கவும், மலை அப்படியே உருகவும், நீண்ட காட்டில் உள்ள பட்ட மரங்கள் தளிர் விடவும், மயல் கொண்ட மதத்துடன் ஆண் யானைகள் பெண் யானைகளோடு ஒரு புறம் செல்லவும், ஆகாயத்தில் உயரத்தில் உள்ள பறவைகள் நிலத்துக்கு வந்து சேரவும், தன் விரல்களைச் சேர்த்து, ஏழு தொளைகள் விட்டுள்ள மூங்கில் (புல்லாங்குழல்) மீது விரலை முறைப்படி தடவினதால் எழுகின்ற இசைகளால் பற்பல நாதங்களை எழுப்பும் கரிய மேகம் போன்ற கண்ணபிரான், வேதப் பொருளோன், நெடிய திருமால் மனமகிழும் மருகனே, துணை நிற்பவனே, குணவானே, சரவணபவனே, வணங்கத் தக்கவனே, முருகனே, குருபரனே, புகழ் வளரும் ஆறு முகனே, குகனே, கரையில் அலைகளை வீசும் அழகிய திருச்செந்தூர் நகரில் வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 44 - திருச்செந்தூர்
ராகம் - ....; தாளம் - .....

தனந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த     தந்த தந்த தந்த தந்த ...... தனதான

கனங்கள் கொண்ட குந்த ளங்க ளுங்கு லைந்த லைந்து விஞ்சு     கண்க ளுஞ்சி வந்த யர்ந்து ...... களிகூரக் 
கரங்க ளுங்கு விந்து நெஞ்ச கங்க ளுங்க சிந்தி டுங்க     றங்கு பெண்க ளும்பி றந்து ...... விலைகூறிப் 
பொனின்கு டங்க ளஞ்சு மென்த னங்க ளும்பு யங்க ளும்பொ     ருந்தி யன்பு நண்பு பண்பு ...... முடனாகப் 
புணர்ந்து டன்பு லர்ந்து பின்க லந்த கங்கு ழைந்த வம்பு     ரிந்து சந்த தந்தி ரிந்து ...... படுவேனோ 
அனங்க னொந்து நைந்து வெந்து குந்து சிந்த அன்று கண்தி     றந்தி ருண்ட கண்டர் தந்த ...... அயில்வேலா 
அடர்ந்த டர்ந்தெ திர்ந்து வந்த வஞ்ச ரஞ்ச வெஞ்ச மம்பு     ரிந்த அன்ப ரின்ப நண்ப ...... உரவோனே 
சினங்கள் கொண்டி லங்கை மன்சி ரங்கள் சித்த வெஞ்ச ரந்தெ     ரிந்த வன்ப ரிந்த இன்ப ...... மருகோனே 
சிவந்த செஞ்ச தங்கை யுஞ்சி லம்பு தண்டை யும்பு னைந்து     செந்தில் வந்த கந்த எங்கள் ...... பெருமாளே.

மேகம் போன்ற கூந்தலும் குலைந்து அலைந்து, விளங்கும் கண்கள் சிவந்து சோர்வுற்று, மகிழ்ச்சி மிகுந்து கைகளும் கூப்பி நெஞ்சத்தினுள்ளே உணர்ச்சி பெருகித் திரிகின்ற பெண்கள் மீது மயல் உண்டாகி, (அவர்களுடன் கூட) விலை பேசி, பொன் குடங்களும் அஞ்சும் என்று கூறத் தக்க மார்பகங்களையும் தோள்களையும் தழுவி, அன்பும், நட்பும், குணமும் ஒன்றாகக் கூடி, உடனே ஊடியும், பின்பு கலந்தும், மனம் குழைந்தும், கேடு விளைவித்தும் எப்போதும் இவ்வாறே திரிந்து அழிவேனோ? மன்மதன் வாடி, நைந்து, வெந்து அழிந்து சிதறும்படி அன்று (நெற்றிக்) கண்ணைத் திறந்து விழித்தவரும், கரிய கழுத்தை உடையவருமான சிவபெருமான் பெற்றெடுத்த கூரிய வேலனே, கூட்டம் கூட்டமாய் நெருங்கி எதிர்த்து வந்த வஞ்சகர்களாகிய அசுரர்கள் பயப்படும்படி கொடிய போர் செய்தவனும், அன்பர்களுக்கு இன்பம் தருபவனும் ஆன நண்பனே, வீரனே, கோபம் கொண்டு, இலங்கை அரசனான ராவணனுடைய தலைகள் சிதற கொடிய அம்பை ஏவிய ராமன் (திருமால்) அன்பு கொள்ளும் இன்ப மருகனே, சிவந்த, அழகிய சதங்கையும் சிலம்பும் தண்டையும் அணிந்து, திருச்செந்தூரில் எழுந்தருளும் கந்தனே, எங்கள் பெருமாளே. 

பாடல் 45 - திருச்செந்தூர்
ராகம் - .....; தாளம் - .....

தந்ததன தான தந்ததன தான     தந்ததன தான ...... தனதான

கன்றிலுறு மானை வென்றவிழி யாலே     கஞ்சமுகை மேவு ...... முலையாலே 
கங்குல்செறி கேச மங்குல்குலை யாமை     கந்தமலர் சூடு ...... மதனாலே 
நன்றுபொருள் தீர வென்றுவிலை பேசி     நம்பவிடு மாத ...... ருடனாடி 
நஞ்சுபுசி தேரை யங்கமது வாக     நைந்துவிடு வேனை ...... யருள்பாராய் 
குன்றிமணி போல்வ செங்கண்வரி போகி     கொண்டபடம் வீசு ...... மணிகூர்வாய் 
கொண்டமயி லேறி அன்றசுரர் சேனை     கொன்றகும ரேச ...... குருநாதா 
மன்றல்கமழ் பூக தெங்குதிரள் சோலை     வண்டுபடு வாவி ...... புடைசூழ 
மந்திநட மாடு செந்தினகர் மேவு     மைந்தஅம ரேசர் ...... பெருமாளே.

மான் கன்றை வெல்லும் கண்களாலும், தாமரை மொட்டுப் போன்ற மார்பகங்களாலும், கரு நிறம் அடர்ந்த மேகம் போன்ற கூந்தல் கலையாத வண்ணம் மணமுள்ள மலர் சூடும் அந்த வகையினாலும், நல்லபடியே கைப் பொருள் முழுதும் வரும்படி வெற்றியுடன் விலை கூறி (தம்மை) நம்பும்படி செய்கின்ற வேசியர்களோடு விளையாடி, விஷத்தை உடைய பாம்பு உண்ணும் தேரை (என்னும்படி) உடல் அத்தன்மையதாகி நைந்து போகின்ற என்னை அருட்கண் பார்த்தருள்க. குண்டு மணி போல சிவந்த கண்களையும் கோடுகளையும் உடைய பாம்பு படத்தை வீசும்படி, (தனது) அழகிய கூர்மையான வாயில் (அந்தப் பாம்பைக் கொத்திக்) கொண்ட மயிலின் மீது ஏறி, அசுரர் சேனையைக் கொன்ற குமரேசனே, குரு நாதனே, மணம் வீசும் கமுகு, தென்னை நெருங்கு சோலைகளும், வண்டுகள் ஒலிக்கும் குளங்களும் பக்கங்களில் சூழ, குரங்குகள் நடனம் செய்யும் திருச்செந்தூரில் வீற்றிருக்கும் வீரனே, தேவர்கள் பெருமாளே. 
* போகி = பாம்பு வேறொரு பழைய நூலிலிருந்த இதே பாடலின் சற்று மாறுபட்ட அமைப்பு. தந்ததன தான தந்ததன தான தனதான பாடல் கன்றிவரு நீல குங்குமப டீர முலைகாட்டி கங்குல்செறி கேச நின்றுகுலை யாமை விலைகாட்டி நன்றுபொரு டீது வென்றுவிலை பேசி ருடனாட்ட நஞ்சுபுரி தேரை யங்கமது வாக றருள்வாயே குன்றிமணி போலச் செங்கண்வரி நாகங் மணிகூர்வாய் கொண்டமயி லேறிக் குன்றிடிய மோதிச் கொடுபோர்செய் மன்றல்கமழ் பூகந் தெங்குதிரள் சோலை புடைசூழ மந்திநட மாடுஞ் செந்தில்நகர் மேவும் பெருமாளே. .. கன்றிப் போய் நீலம் பாய்ந்த, குங்குமமும் சந்தனமும் கலந்த, தாமரை மலரைப் போன்ற தங்கள் மார்பகத்தைக் காட்டி, கரு நிறம் அடர்ந்த மேகம் போன்ற கூந்தல் கலையாத வண்ணம் இறுக்கி முடித்து, கடைக்கண்களால் ஜாடை காட்டி, தங்களது விலையையும் குறிப்பாகக் காட்டி, வந்தவர் தரும் பொருள் ஏற்புடைத்து அல்லது ஏற்காது என்று பேரம் பேசி, (தம்மை) நம்பும்படி செய்கின்ற வேசியர்களோடு விளையாடி, பாம்பின் விஷம் பாய்ந்த தேரை (என்னும்படி) உடல் அத்தன்மையதாகி நைந்து போகின்ற எனக்கு ஒரு நல்வாக்கு அருள்வாயாக. குண்டு மணி போல சிவந்த கண்களையும் கோடுகளையும் உடைய பாம்பு படத்தை வீசும்படி, (தனது) அழகிய கூர்மையான வாயில் (அந்தப் பாம்பைக் கொத்திக்) கொண்ட மயிலின் மீது ஏறி, கிரெளஞ்ச மலை இடிந்து நொறுங்கும்படியாக மோதிய கூர்மையான வேலைக் கரத்தில் கொண்டு போர் செய்தவனே, மணம் வீசும் கமுகு, தென்னை நெருங்கு சோலைகளும், வண்டுகள் ஒலிக்கும் குளங்களும் பக்கங்களில் சூழ, குரங்குகள் நடனம் செய்யும் திருச்செந்தூரில் வீற்றிருக்கும் வீரனே, அந்த அசுரர் குலத்துக்கு யமனாக அமைந்த பெருமாளே. 

பாடல் 46 - திருச்செந்தூர்
ராகம் - ஸஹானா / திலங்; தாளம் - ஆதி கண்டநடை - 20

தானனா தந்தனம் தானனா தந்தனம்     தானனா தந்தனம் ...... தனதான

காலனார் வெங்கொடுந் தூதர்பா சங்கொடென்     காலினார் தந்துடன் ...... கொடுபோகக் 
காதலார் மைந்தருந் தாயரா ருஞ்சுடுங்     கானமே பின்தொடர்ந் ...... தலறாமுன் 
சூலம்வாள் தண்டுசெஞ் சேவல்கோ தண்டமுஞ்     சூடுதோ ளுந்தடந் ...... திருமார்பும் 
தூயதாள் தண்டையுங் காணஆர் வஞ்செயுந்     தோகைமேல் கொண்டுமுன் ...... வரவேணும் 
ஆலகா லம்பரன் பாலதா கஞ்சிடுந்     தேவர்வா ழன்றுகந் ...... தமுதீயும் 
ஆரவா ரஞ்செயும் வேலைமேல் கண்வளர்ந்     தாதிமா யன்றனன் ...... மருகோனே 
சாலிசேர் சங்கினம் வாவிசூழ் பங்கயஞ்     சாரலார் செந்திலம் ...... பதிவாழ்வே 
தாவுசூ ரஞ்சிமுன் சாயவே கம்பெறுந்     தாரைவே லுந்திடும் ...... பெருமாளே.

யமனின் மிகக் கொடிய தூதர்கள் பாசக்கயிற்றால் என் மூச்சுக்காற்றுடன் சேர்த்துக் கட்டி எனது உயிரைத் தங்களுடன் கொண்டுபோக, அன்பு நிறைந்த பிள்ளைகளும், தாயார் முதலிய அனைவரும் சுடுகாடு வரை என்னுடலைப் பின்தொடர்ந்து வாய்விட்டுக் கதறி அழும் மரண அவஸ்தையை நான் அடையும் முன்பே, சூலாயுதம், வாளாயுதம், தண்டாயுதம், அழகிய சேவற்கொடி, வில் இவைகளை சூடியுள்ள புயங்களையும், அகன்ற திரு மார்பையும், புனிதமான பாதங்களையும், அவைகளில் அணிந்த தண்டையும் காண அன்புநிறை மயிலின் மீது ஏறி என்முன் வரவேண்டும். ஆலகால விஷமானது பரமசிவன்வசம் போய்ச் சேர்ந்தபின்பு, அவ்விஷத்தைக் கண்டு பயந்தோடிய தேவர்கள் உய்யும்படியாக அன்று மகிழ்ச்சியுடன் (மோகினி அவதாரம் செய்து) அமுதைத் தந்தவரும், பெரும் ஒலி உடையதான திருப்பாற்கடலில் யோக நித்திரை செய்பவருமான, ஆதி மூர்த்தியாகிய திருமாலின் சிறந்த மருமகனே, நெல்வயல்களில் சேர்ந்துள்ள சங்கினங்களும், தாமரைகள் சூழ்ந்து நிறைந்துள்ள தடாகங்களும் அருகே அமைந்த திருச்செந்தூர்ப் பதியில் வாழ்கின்றவனே, போர்க்களத்தில் தாவி வந்த சூரன் முன்னாளில் பயந்து வீழுமாறு வேகமாக கூரிய வேலைச் செலுத்திய பெருமாளே. 

பாடல் 47 - திருச்செந்தூர்
ராகம் - ....; தாளம் - ......

தனன தானனத் தனதன தனனாத்     தந்தத் தந்தத் ...... தனதான

குகர மேவுமெய்த் துறவினின் மறவாக்     கும்பிட் டுந்தித் ...... தடமூழ்கிக் 
குமுத வாயின்முற் றமுதினை நுகராக்     கொண்டற் கொண்டைக் ...... குழலாரோ 
டகரு தூளிகர்ப் புரதன இருகோட்     டன்புற் றின்பக் ...... கடலூடே 
அமிழு வேனைமெத் தெனவொரு கரைசேர்த்     தம்பொற் றண்டைக் ...... கழல்தாராய் 
ககன கோளகைக் கணவிரு மளவாக்     கங்கைத் துங்கப் ...... புனலாடும் 
கமல வாதனற் களவிட முடியாக்     கம்பர்க் கொன்றைப் ...... புகல்வோனே 
சிகர கோபுரத் தினுமதி ளினுமேற்     செம்பொற் கம்பத் ...... தளமீதும் 
தெருவி லேயுநித் திலமெறி யலைவாய்ச்     செந்திற் கந்தப் ...... பெருமாளே.

மலைக் குகைளில் இருக்கும் உண்மைத் துறவிகள் போல மறவாத மனத்துடன் (வேசிகளின் அடிகளைக்) கும்பிட்டு, (மாதர்களின்) தொப்புள் குளத்தில் முழுகி, அவர்களது குமுத மலர் போன்ற மலர் வாயில் பெருகும் அமுதினைப் பருகி, மேகம் போன்ற கொண்டையிட்ட கூந்தலாருடைய அகிற் பொடி, கற்பூரம் அணிந்த மார்பகங்களாகிய இரு மலைகளின் மேல் அன்பு பூண்டு, இன்பக் கடலிடையே அமிழ்கின்ற என்னை பக்குவமாக ஒப்பற்ற முக்திக் கரையில் சேர்த்து, அழகிய பொன்னாலாகிய தண்டை சூழ்ந்த திருவடியைத் தந்து அருளுக. ஆகாய முகட்டில் அளவுக்கு அடங்காத வெள்ளத்துடன் கங்கையாகிய புனித நீர் அசைந்தாடும் தாமரைப் பீடத்தில் அமர்ந்துள்ள பிரமனால் அளவிட முடியாத (கச்சி ஏகம்பராகிய) சிவபெருமானுக்கு ஒப்பற்ற பிரணவப் பொருளைப் போதித்தவனே, சிகரங்களை உடைய கோபுரத்தின் மீதும், மதில் மீதும், செம்பொன்னாலாகிய கம்பங்களின் மேல் அமைந்த தளத்தின் மீதும், வீதியிலும் முத்துக்களை வீசி எறிகின்ற அலைகளின் கரையில் (உள்ள) திருச்செந்தூர் பதியில் வாழும் கந்தப் பெருமாளே. 

பாடல் 48 - திருச்செந்தூர்
ராகம் - குந்தல வராளி ; தாளம் - அங்கதாளம் - 14 1/2 தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2

தனதன தந்த தனதன தந்த     தனதன தந்த ...... தானாந்தனனா

குடர்நிண மென்பு சலமல மண்டு     குருதிந ரம்பு ...... சீயூன் பொதிதோல் 
குலவு குரம்பை முருடு சுமந்து     குனகிம கிழ்ந்து ...... நாயேன் தளரா 
அடர்மத னம்பை யனையக ருங்க     ணரிவையர் தங்கள் ...... தோடோய்ந் தயரா 
அறிவழி கின்ற குணமற வுன்றன்     அடியிணை தந்து ...... நீயாண் டருள்வாய் 
தடவியல் செந்தில் இறையவ நண்பு     தருகுற மங்கை ...... வாழ்வாம் புயனே 
சரவண கந்த முருகக டம்ப     தனிமயில் கொண்டு ...... பார்சூழ்ந் தவனே 
சுடர்படர் குன்று தொளைபட அண்டர்     தொழவொரு செங்கை ...... வேல்வாங் கியவா 
துரிதப தங்க இரதப்ர சண்ட     சொரிகடல் நின்ற ...... சூராந் தகனே.

குடல், கொழுப்பு, எலும்பு, நீர், மலம், பெருகும் உதிரம், நரம்பு, சீழ், மாமிசம், இவையெல்லாம் மூடிய தோல், ஆகியவற்றால் ஆன சிறு குடிலாகிய இந்தக் கட்டையைச் சுமந்து, கொஞ்சிப் பேசியும், மகிழ்ந்தும், நாயினேன் தளர்ச்சியுற்றும், நெருங்கிவரும் மன்மதனின் அம்பை ஒத்த கரிய கண்களை உடைய பெண்களின் தோள்களில் மூழ்கி அயர்ந்தும், அறிவு அழிந்து போகும் தீய குணம் அற்றுப் போக உன்னிரு பதங்களைத் தந்து நீ ஆட்கொண்டு அருள்வாயாக. விசாலமான பெருமையை உடைய திருச்செந்தூரில் தங்கும் இறைவனே, அன்பைத்தரும் குறப்பெண் வள்ளிக்கு வாழ்வாகும் திருப்புயத்தோனே, சரவணபவனே, கந்தா, முருகா, கடப்பமாலை அணிந்தோனே, ஒப்பற்ற மயிலின் மீது ஏறி உலகை வலம்வந்தவனே, ஒளிபரந்த கிரெளஞ்ச மலை தொளைபடவும், தேவர்கள் வணங்கவும், ஒப்பற்ற சிவந்த கரத்தினின்று வேலைச் செலுத்தியவனே, வேகமாகச் செல்லும் பறவையாகிய மயிலை தேராகக் கொண்ட மாவீரனே, அலைவீசும் கடலின் நடுவே (மாமரமாய்) நின்ற சூரனுக்கு யமனாக வந்தவனே. 

பாடல் 49 - திருச்செந்தூர்
ராகம் - ....; தாளம் - .....

தனத்தந்தம் தனத்தந்தம்     தனத்தந்தம் தனத்தந்தம்          தனத்தந்தம் தனத்தந்தம் ...... தனதானா

குழைக்குஞ்சந் தனச்செங்குங்     குமத்தின்சந் தநற்குன்றங்          குலுக்கும்பைங் கொடிக்கென்றிங் ...... கியலாலே 
குழைக்குங்குண் குமிழ்க்குஞ்சென்     றுரைக்குஞ்செங் கயற்கண்கொண்          டழைக்கும்பண் தழைக்குஞ்சிங் ...... கியராலே 
உழைக்குஞ்சங் கடத்துன்பன்     சுகப்பண்டஞ் சுகித்துண்டுண்          டுடற்பிண்டம் பருத்தின்றிங் ...... குழலாதே 
உதிக்குஞ்செங் கதிர்ச்சிந்தும்     ப்ரபைக்கொன்றுஞ் சிவக்குந்தண்          டுயர்க்குங்கிண் கிணிச்செம்பஞ் ...... சடிசேராய் 
தழைக்குங்கொன் றையைச்செம்பொன்     சடைக்கண்டங் கியைத்தங்குந்          தரத்தஞ்செம் புயத்தொன்றும் ...... பெருமானார் 
தனிப்பங்கின் புறத்தின்செம்     பரத்தின்பங் கயத்தின்சஞ்          சரிக்குஞ்சங் கரிக்கென்றும் ...... பெருவாழ்வே 
கழைக்குங்குஞ் சரக்கொம்புங்     கலைக்கொம்புங் கதித்தென்றுங்          கயற்கண்பண் பளிக்குந்திண் ...... புயவேளே 
கறுக்குங்கொண் டலிற்பொங்குங்     கடற்சங்கங் கொழிக்குஞ்செந்          திலிற்கொண்டன் பினிற்றங்கும் ...... பெருமாளே.

குழைத்துக் கலவையான சந்தனம், சிகப்பு நிறமான குங்குமம் (இவைகள் பூசப்பட்ட) அழகிய உயர்ந்த மலை போன்ற மார்பகங்களைக் குலுக்கும் பசுங்கொடி போல் நின்று தோன்ற, இங்கு இயல்பாகவே குண்டலம் தரித்த காதினிடத்தும், நிறமுள்ள குமிழம்பூப் போன்ற மூக்கினிடத்தும் கண்கள் சென்று பேசுவது போல செவ்விய கயல் மீன் போன்ற கண்களைக் கொண்டு அழைக்கின்ற, இசைக் குரல் தழைத்துள்ள, நஞ்சு போன்ற விலைமாதர்களுக்கு உழைப்பதால் வரும் சங்கடங்களையும் துன்பங்களையும் கொண்டவனாகிய நான், சுகமான பண்டங்களை அனுபவித்து மிகுதியாக உண்டு, உடலாகிய பிண்டம் கனமானதாகி இந்த உலகில் அலையாமல், உதிக்கின்ற செஞ்சூரியன் வீசும் ஒளிக்கு ஒப்பானதான சிவந்த தண்டையிலும், மேலான கிண்கிணியிலும், சிவந்த பஞ்சு போல் மிருதுவான அடியிலும் என்னைச் சேர்த்து அருளுக. தழைத்துள்ள கொன்றை மலரை செம்பொன் போன்ற சடையில் சேர்த்தும், நெருப்பைத் தங்கும் படியாக அழகிய செவ்விய கையில் சேர்த்தும் உள்ள சிவபெருமானுடைய ஒப்பற்ற இடது பாகத்தின் புறத்திலும், சிறந்த பர மண்டலத்திலும், தாமரை இருப்பிலும் உலவி நிற்கும் பார்வதிக்கு எப்போதும் சிறந்த பிள்ளையே, அங்குசம் அடக்கும் வெள்ளை யானை வளர்த்த கொடிபோன்ற தேவயானையும், மான் வயிற்றில் பிறந்த வள்ளியும் மகிழ்வுற, எப்போதும் (அவர்களுடைய) கயல் மீன் போன்ற கண்களுக்கு இன்பம் தரும் திண்ணிய தோள்களை உடையவனே, கரிய மேகம் போலப் பொங்கி எழும் கடல் சங்குகளைக் கொண்டு கரையில் கொழிக்கின்ற திருச்செந்தூரை இருப்பிடமாகக் கொண்டு, அன்புடன் அத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 50 - திருச்செந்தூர்
ராகம் - .....; தாளம் -

தந்ததன தந்ததன தந்ததன தந்ததன     தந்ததன தந்ததன ...... தந்ததான

கொங்கைகள்கு லுங்கவளை செங்கையில்வி ளங்கஇருள்     கொண்டலைய டைந்தகுழல் ...... வண்டுபாடக் 
கொஞ்சியவ னங்குயில்கள் பஞ்சநல்வ னங்கிளிகள்     கொஞ்சியதெ னுங்குரல்கள் ...... கெந்துபாயும் 
வெங்கயல்மி ரண்டவிழி அம்புலிய டைந்தநுதல்     விஞ்சையர்கள் தங்கள்மயல் ...... கொண்டுமேலாய் 
வெம்பிணியு ழன்றபவ சிந்தனைநி னைந்துனது     மின்சரண பைங்கழலொ ...... டண்டஆளாய் 
சங்கமுர சந்திமிலை துந்துமித தும்பவளை     தந்தனத னந்தவென ...... வந்தசூரர் 
சங்கைகெட மண்டிதிகை யெங்கிலும டிந்துவிழ     தண்கடல்கொ ளுந்தநகை ...... கொண்டவேலா 
சங்கரனு கந்தபரி வின்குருவெ னுஞ்சுருதி     தங்களின்ம கிழ்ந்துருகு ...... மெங்கள்கோவே 
சந்திரமு கஞ்செயல்கொள் சுந்தரகு றம்பெணொடு     சம்புபுகழ் செந்தில்மகிழ் ...... தம்பிரானே.

மார்பகங்கள் குலுங்க, சிவந்த கைகளில் உள்ள வளையல்கள் விளங்க, இருண்ட மேகம் போன்ற கூந்தலில் வண்டுகள் (மலர்களைச் சுற்றி) ¡£ங்காரம் செய்ய, கொஞ்சுகின்ற சோலையில் வசிக்கும் அழகிய குயில்களும், நல்ல பஞ்ச வர்ணக் கிளிகளும் கொஞ்சுகின்றனவோ என்னும்படியான இனிய குரல்களும், தத்தித் தத்திப் பாயும், விரும்பத் தக்க கயல் மீன் போல மிரளும் கண், பிறை போன்ற நெற்றி (இவைகளைக் கொண்ட) மாய வித்தை வல்லவரான பொது மகளிரின் மேல் மோகம் கொண்டு மேன்மேலும் பித்தாகி கொடிய நோயில் வேதனைப்பட்ட பிறவிக் கடலில் அலைபடுகின்ற என்னை நீ குறிக் கொண்டு உன்னுடைய ஒளி வீசும் பசுமையான திருவடியில் சேரும்படி ஆண்டருள்க. கூட்டமான முரசு வாத்தியம், திமிலை என்னும் பறை, பேரிகை முதலியவை ஒலிக்க, சங்குகள் தந்தன தனந்த என்று ஒலிக்க, வந்த சூரர்களின் தொகை அழியும்படி நெருங்கி எல்லா திசைகளிலும் இறந்து விழ, எப்போதும் குளிர்ந்திருக்கும் கடல் தீப்பிடிக்க கோப நகைப்பைக் கொண்ட வேலனே, சங்கரனார் மகிழ்ந்து அன்புடன் கொண்ட குரு மூர்த்தி (நீ) என்று உன்னைச் சொல்லும் வேதங்கள் தம்முள்ளே மகிழ்ந்து மனம் குழையும் எங்கள் தலைவனே, சந்திரன் போன்ற திரு முகத்தையும், பக்திச் செயலையும் கொண்ட அழகிய குறப் பெண்ணாகிய வள்ளியோடு, ஈசனும் புகழும்படியாக விளங்கும் திருச் செந்தூரில் வீற்றிருக்கும் தம்பிரானே.

by Swathi   on 28 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.