LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- அருணகிரிநாதர் நூல்கள்

திருப்புகழ்-பாடல்-[226 -250]

பாடல் 226 - சுவாமி மலை
ராகம் - ....; தாளம் -
தனதன தானன, தனதன தானன
     தனதன தானன ...... தனதான
பரவரி தாகிய வரையென நீடிய
     பணைமுலை மீதினி ...... லுருவான 
பணிகளு லாவிட இழையிடை சாய்தரு
     பயிலிகள் வாள்விழி ...... அயிலாலே 
நிரவரி யோடியல் குழல்களி னாண்மலர்
     நிரைதரு மூரலி ...... னகைமீது 
நிலவியல் சேர்முக மதிலுயர் மாமயல்
     நிலையெழ வேயலை ...... வதுவாமோ 
அரவணை யார்குழை பரசிவ ஆரண
     அரனிட பாகம ...... துறைசோதி 
அமையுமை டாகினி திரிபுரை நாரணி
     அழகிய மாதருள் ...... புதல்வோனே 
குரவணி பூஷண சரவண தேசிக
     குககரு ணாநிதி ...... அமரேசா 
குறமக ளானைமின் மருவிய பூரண
     குருகிரி மேவிய ...... பெருமாளே.
வணங்கிப் போற்றுதற்கு அரியதான மலை என்னும்படி பரந்துள்ள பெரிய மார்பகங்களின் மேல் அலங்காரமான அணிகலன்கள் விளங்க, நூல் போன்ற இடை சாயும்படி நடை பழகுபவருடைய ஒளி விளங்கும் அம்பு போன்ற கண்கள் மீதும், விரைந்து வரும் வண்டுகளோடு கூடியுள்ள கூந்தல்களின் புது மலர் மீதும், வரிசையாய் விளங்கி புன்சிரிப்பைக் காட்டும் பற்கள் மீதும், சந்திரனைப் போன்ற முகத்தின் மீதும் எழுகின்ற அதிக மோகம், நிலை பெற்று என் மனத்தில் தோன்றுவதால் என் நெஞ்சம் அலைபாயலாமோ? பாம்பைப் பொருந்திய குண்டலமாக உடைய பரம சிவன், வேதம் போற்றும் அரன் (எனப்படும் பெருமானுடைய) இடப் பாகத்தில் உறைகின்ற ஜோதி, அம்மை, உமாவாகிய பார்வதி, தேவி, திரி புரத்தை எரித்தவள், துர்க்கை, அழகிய மாதாகிய பார்வதி அருளிய மகனே, குரா மலரை அணிகின்ற ஆபரணமாகக் கொண்டவனே, சரவணனே, குரு மூர்த்தியே, குகனே, கருணை நிதியே, தேவர்களுக்கு ஈசனே, குறப் பெண்ணாகிய வள்ளி, (ஐராவதம் என்ற) யானையால் வளர்க்கப்பட்ட மின்னல் போன்ற தேவயானை (ஆகிய இருவரும்) சேர்ந்துள்ள முழுப் பொருளே, சுவாமி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* டாகினி, காகினி, லாகினி, ஹாகினி, ராகினி, சாகினி என்பன தேவியைக் குறிப்பனவாகும்.
பாடல் 227 - சுவாமி மலை
ராகம் - ....; தாளம் -
தனதான தத்ததன தனதான தத்த
     தனதான தத்ததன ...... தனதான
பலகாதல் பெற்றிடவு மொருநாழி கைக்குளொரு
     பலனேபெ றப்பரவு ...... கயவாலே 
பலபேரை மெச்சிவரு தொழிலேசெ லுத்தியுடல்
     பதறாமல் வெட்கமறு ...... வகைகூறி 
விலகாத லச்சைதணி மலையாமு லைச்சியர்கள்
     வினையேமி குத்தவர்கள் ...... தொழிலாலே 
விடமேகொ டுத்துவெகு பொருளேப றித்தருளும்
     விலைமாதர் பொய்க்கலவி ...... யினிதாமோ 
மலையேயெ டுத்தருளு மொருவாள ரக்கனுடல்
     வடமேரெ னத்தரையில் ...... விழவேதான் 
வகையாவி டுத்தகணை யுடையான்ம கிழ்ச்சிபெறு
     மருகாக டப்பமல ...... ரணிமார்பா 
சிலகாவி யத்துறைக ளுணர்வோர்ப டித்ததமிழ்
     செவியார வைத்தருளு ...... முருகோனே 
சிவனார்த மக்குரிய வுபதேச வித்தையருள்
     திருவேர கத்தில்வரு ...... பெருமாளே.
பல பேர்களுடைய காதலைப் பெற்றிடவும் ஒரு நாழிகைப் பொழுதுக்குள் ஒரு பலனைப் பெற வேண்டியும் சூழ்ச்சி செய்யும் களவுச் செயலாலே, பல பேர்களை மெச்சி வருகின்ற தொழில்களையே நடத்தி உடல் பதறுதல் இல்லாமல் வெட்கம் அற்றவகையில் பேசி, இயற்கையில் நீங்காத நாணம் தணிந்த, மலை போன்ற மார்பகத்தைக் காட்டி பொது மகளிர் தங்கள் தொழிலில் மிகவும் சாமர்த்தியமாக ஈடுபடுபவர்கள். விஷத்தைக் (குடிக்கக்) கொடுத்து (காமுகரின்) எல்லாப் பொருளையும் அபகரிக்கும் விலை மகளிர்களின் பொய்யான கலவி இன்பம் இனிமை ஆகுமோ? (கயிலை) மலையை எடுத்தவனும், ஒப்பற்ற வாளை ஏந்திய அரக்கனும் ஆகிய ராவணனுடைய உடல் வடக்கே உள்ள மேருவே விழுந்தது என்னும்படி தரையில் விழவே, தக்க விதத்தில் செலுத்திய அம்பை உடையவனாகிய ராமனாகிய திருமால் மகிழும் மருகனே, கடப்ப மாலையை அணிந்த மார்பனே, சில காவிய நூல்களின் உண்மைப் பொருளை அறிந்த அறிஞர்கள் ஓதிய தமிழை செவிகுளிர ஏற்றருளும் முருகனே, சிவ பெருமானுக்கு உரிய உபதேச மூல மந்திரத்தை அருளி, சுவாமி மலையில் எழுந்தருளியிருக்கும் பெருமாளே.
பாடல் 228 - சுவாமி மலை
ராகம் - காபி, தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2 
தகிட-1 1/2, தகதிமி 2
தான தனதன தான தனதன
     தான தனதன ...... தனதான
பாதி மதிநதி போது மணிசடை
     நாத ரருளிய ...... குமரேசா 
பாகு கனிமொழி மாது குறமகள்
     பாதம் வருடிய ...... மணவாளா 
காது மொருவிழி காக முறஅருள்
     மாய னரிதிரு ...... மருகோனே 
கால னெனையணு காம லுனதிரு
     காலில் வழிபட ...... அருள்வாயே 
ஆதி யயனொடு தேவர் சுரருல
     காளும் வகையுறு ...... சிறைமீளா 
ஆடு மயிலினி லேறி யமரர்கள்
     சூழ வரவரு ...... மிளையோனே 
சூத மிகவளர் சோலை மருவுசு
     வாமி மலைதனி ...... லுறைவோனே 
சூர னுடலற வாரி சுவறிட
     வேலை விடவல ...... பெருமாளே.
பிறைச் சந்திரனையும், கங்கை நதியையும், கொன்றை மலரையும் அணிந்த சடைப் பெருமான் சிவபிரான் அருளிய குமரேசனே, சர்க்கரைப் பாகும், கனிகளும் போன்ற இனிய மொழியை உடைய மாதரசி, குறமகளாகிய வள்ளியின் பாதத்தைப் பிடித்துவிடும் மணவாளனே, பிரிக்கப்பட்ட ஒரு விழியை* காகாசுரன் என்னும் காகம் அடையும்படி அருளிய ஸ்ரீராமர் மாய ஹரிக்கும், லக்ஷ்மிக்கும் மருமகனே, யமன் என்னை அணுகாத வகைக்கு உன் இரு திருவடிகளில் வழிபடும் புத்தியை அருள்வாயாக. ஆதி பிரமனோடு அமரர்கள் அனைவரும் தேவலோகத்தை ஆளும்படி சிறையினின்று அவர்களை மீட்டவனே, நடனம் ஆடும் மயில் மீது ஏறி தேவர்கள் உன்னைச் சூழ்ந்துவர வருகின்ற இளையவனே, மாமரங்கள் மிகுந்து வளர்ந்த சோலைகள் நிறைந்த சுவாமிமலையில் வீற்றிருப்பவனே, சூரனின் உடல் வீழ, கடல் வற்றிப்போக, வேலினைச் செலுத்தவல்ல பெருமாளே. 
* சீதையின் மார்பை தன் அலகால் கொத்தின காகத்தின் மீது புல்லையே படையாக்கி ஸ்ரீராமர் செலுத்த, அப்படைக்கு அஞ்சி, காப்பவர் யாருமின்றி, ஸ்ரீ ராமரையே காகம் சரணடைய, அவர் அக்காகத்திற்கு அருளி, காகத்தின் ஒரு கண்மணியைப் பிரித்து, கண்களிரண்டிற்கும் ஒரு மணியேயென தண்டித்தார். காகாசுரனாக சாபத்தினால் வந்தது தேவேந்திரனது குமாரன் ஜயந்தன் ஆகும்.
பாடல் 229 - சுவாமி மலை
ராகம் - ....; தாளம் -
தனன தான தத்த தனன தான தத்த
     தனன தான தத்த ...... தனதான
மகர கேத னத்த னுருவி லானெ டுத்து
     மதுர நாணி யிட்டு ...... நெறிசேர்வார் 
மலைய வேவ ளைத்த சிலையி னூடொ ளித்த
     வலிய சாய கக்கண் ...... மடமாதர் 
இகழ வாச முற்ற தலையெ லாம்வெ ளுத்து
     இளமை போயொ ளித்து ...... விடுமாறு 
இடைவி டாதெ டுத்த பிறவி வேர றுத்து
     னினிய தாள ளிப்ப ...... தொருநாளே 
அகில மேழு மெட்டு வரையின் மீது முட்ட
     அதிர வேந டத்து ...... மயில்வீரா 
அசுரர் சேனை கெட்டு முறிய வான வர்க்கு
     அடைய வாழ்வ ளிக்கு ...... மிளையோனே 
மிகநி லாவெ றித்த அமுத வேணி நிற்க
     விழைசு வாமி வெற்பி ...... லுறைவோனே 
விரைய ஞான வித்தை யருள்செய் தாதை கற்க
     வினவ வோது வித்த ...... பெருமாளே.
மீன் கொடியை உடையவனும், உருவம் இல்லாதவனுமாகிய மன்மதன் கையில் எடுத்து, இனிமை தரும் (கரும்பு வில்லில்) நாணை இட்டு, நல்ல நெறியில் இருப்பவர்களும் மயங்கித் திகைக்கும்படி வளைத்த வில்லின் உள்ளே மறைத்து வைத்த வலிய அம்பாகிய கண்ணை உடைய அழகிய (விலை) மாதர்கள் இகழும்படி, (ஒரு காலத்தில்) மணம் இருந்த தலையின் கருமயிர் முழுமையும் வெளுத்து, இளமை என்பது கடந்துபோய் எங்கோ மறைந்து புதைந்துவிடும்படி, இடைவிடாமல் இதுவரை நான் எடுத்த பிறவி என்பதின் வேரை அறுத்து, உனது இனிமையான திருவடியை நீ தந்து அருளும் ஒரு நாள் கிட்டுமோ? ஏழு உலகங்கள் மீதும், அஷ்ட கிரிகளின் மீதும் முட்டும்படியாக அதிரவே செலுத்துகின்ற மயில் வீரனே, அசுரர்களின் சேனைகள் கெட்டு முறிய, தேவர்களுக்கு முழு வாழ்வை அளித்த இளையவனே, மிகவும் நிலவொளியை வீசுகின்ற அமுத சடையராகிய சிவபெருமான் உன்முன் நின்று கேட்க விரும்புகின்ற சுவாமி மலையில் (உபதேச கோலத்தில்) வீற்றிருப்பவனே, விரைவில் ஞான மூலப் பொருளை (அடியார்களுக்கு) அருள் செய்கின்ற தந்தையாகிய சிவபெருமான், தான் அதனை அறிய வேண்டிக் கற்க, அவர் கேட்க அப்பொருளை அவருக்கு உபதேசித்த பெருமாளே. 
பாடல் 230 - சுவாமி மலை
ராகம் - ....; தாளம் -
தனனா தனத்த தனனா தனத்த
     தனனா தனத்த ...... தனதான
மருவே செறித்த குழலார் மயக்கி
     மதனா கமத்தின் ...... விரகாலே 
மயலே யெழுப்பி யிதழே யருத்த
     மலைபோல் முலைக்கு ...... ளுறவாகிப் 
பெருகாத லுற்ற தமியேனை நித்தல்
     பிரியாது பட்ச ...... மறவாதே 
பிழையே பொறுத்து னிருதாளி லுற்ற
     பெருவாழ்வு பற்ற ...... அருள்வாயே 
குருவா யரற்கு முபதேசம் வைத்த
     குகனே குறத்தி ...... மணவாளா 
குளிர்கா மிகுத்த வளர்பூக மெத்து
     குடகா விரிக்கு ...... வடபாலார் 
திருவே ரகத்தி லுறைவா யுமைக்கோர்
     சிறுவா கரிக்கு ...... மிளையோனே 
திருமால் தனக்கு மருகா வரக்கர்
     சிரமே துணித்த ...... பெருமாளே.
மருக்கொழுந்து வாசனை மிகுந்த கூந்தலையுடைய பெண்கள் என்னை மயக்கி காம சாஸ்திரத்தின் தந்திர வகைகளாலே மோகத்தை மூட்டிவிட்டு, வாயிதழ் ஊறலை ஊட்டிவிட, மலைபோன்ற அவர்களின் மார்பகங்களில் விருப்பங்கொண்டு மிக்க ஆசை பூண்ட அடியேனை நித்தமும் பிரியாமலும், என்னிடம் அன்பு மாறாமலும், என் பிழைகளைப் பொறுத்து உன் இரண்டு திருவடிகளிலும் பொருந்தியுள்ள பேரின்பப் பெருவாழ்வை யான் பற்றும்படியாக அருள் புரிவாயாக. குருமூர்த்தியாக நின்று சிவபெருமானுக்கும் பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்த குகனே, குறத்தி வள்ளியின் மணவாளனே, குளிர்ந்த சோலைகளால் நிறைந்த, வளர்ந்தோங்கிய கமுக மரங்கள் சூழ்ந்த, மேற்கினின்று வரும் காவிரிக்கு வடபாலுள்ள திருவேரகமாம் சுவாமிமலையில் வாழ்பவனே, உமாதேவியின் ஒப்பற்ற மகனே, யானைமுகக் கணபதிக்குத் தம்பியே, திருமாலுக்கு மருமகனே, அரக்கரின் சிரங்களை வெட்டியெறிந்த பெருமாளே. 
பாடல் 23 1 - சுவாமி மலை
ராகம் - ....; தாளம் -
தனன தான தனன தந்த, தனன தான தனன தந்த
     தனன தான தனன தந்த ...... தனதான
முறுகு காள விடம யின்ற இருகண் வேலி னுளம யங்கி
     முளரி வேரி முகைய டர்ந்த ...... முலைமீதே 
முழுகு காதல் தனைம றந்து பரம ஞான வொளிசி றந்து
     முகமொ ராறு மிகவி ரும்பி ...... அயராதே 
அறுகு தாளி நறைய விழ்ந்த குவளை வாச மலர்க ரந்தை
     அடைய வாரி மிசைபொ ழிந்து ...... னடிபேணி 
அவச மாகி யுருகு தொண்ட ருடன தாகி விளையு மன்பி
     னடிமை யாகு முறைமை யொன்றை ...... அருள்வாயே 
தறுகண் வீரர் தலைய ரிந்து பொருத சூர னுடல்பி ளந்து
     தமர வேலை சுவற வென்ற ...... வடிவேலா 
தரள மூர லுமைம டந்தை முலையி லார அமுத முண்டு
     தரணி யேழும் வலம்வ ருந்திண் ...... மயில்வீரா 
மறுவி லாத தினைவி ளைந்த புனம்வி டாம லிதணி ருந்து
     வலிய காவல் புனைய ணங்கின் ...... மணவாளா 
மருவு ஞாழ லணிசெ ருந்தி யடவி சூத வனநெ ருங்கி
     வளர்சு வாமி மலைய மர்ந்த ...... பெருமாளே.
கடுமையாகப் பொங்கி எழுந்த ஆலகால விஷத்தை உண்ட இரண்டு கண்களாகிய வேலினால் (இப் பொது மகளிரிடம்) மனம் மயங்கி, தாமரையின் மணம் உள்ள மொட்டுப் போன்ற மார்பின் மேல் முழுகுகின்ற காதலை மறந்து, மேலான ஞான ஒளியைச் சிறந்து வீசும் உனது ஆறு முகங்களையும் மிகவும் விரும்பி, சோர்வில்லாமல், அறுகம் புல், ஊமத்தை, மணம் வீசும் குவளை, வாசம் மிக்க திரு நீற்றுப் பச்சை வில்வ இவைகளை எல்லாம் நிரம்ப உன் பாதங்களின் மேலே சொரிந்து உனது திருவடியை விரும்பி, தன் வசம் அழிந்து மனம் உருகுகின்ற அடியார்களுடன் கலந்து கூடி, அதனால் உண்டாகும் அன்பினால் அடிமை என்னும் ஒழுக்க முறைமை பெறக் கூடிய ஒரு பேற்றை அருள்வாயாக. அஞ்சாமை கொண்ட வீரர்களின் தலைகளை வெட்டிச் சண்டை செய்த சூரனுடைய உடலை இரு கூறாகப் பிளந்து, ஒலிக்கும் கடல் வற்றும்படி வென்ற கூரிய வேலனே, முத்துப் போன்ற பற்களை உடைய உமாதேவியின் மார்பகங்களில் நிரம்ப பால் அமுதம் உண்டு, ஏழு உலகங்களையும் வலம் வந்த வலிய மயில் வீரனே, குற்றம் இல்லாத தினை விளைந்த புனத்தை விட்டு நீங்காது, பரண் மீது இருந்து பலமாகக் காவல் புரிந்த அணங்காகிய வள்ளியின் கணவனே, பொருந்திய புலி நகக் கொன்றை, அழகிய செருந்தி இவையுள்ள நந்தவனமும், மாமரக் காடும் நெருங்கி வளரும் (சுவாமிமலையில்) திருவேரகத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 232 - சுவாமி மலை
ராகம் - ....; தாளம் -
தானதன தான தந்த தானதன தான தந்த
     தானதன தான தந்த ...... தனதான
வாதமொடு சூலை கண்ட மாலைகுலை நோவு சந்து
     மாவலிவி யாதி குன்ம ...... மொடுகாசம் 
வாயுவுட னேப ரந்த தாமரைகள் பீன சம்பின்
     மாதர்தரு பூஷ ணங்க ...... ளெனவாகும் 
பாதகவி யாதி புண்க ளானதுட னேதொ டர்ந்து
     பாயலைவி டாது மங்க ...... இவையால்நின் 
பாதமல ரான தின்க ணேயமற வேம றந்து
     பாவமது பான முண்டு ...... வெறிமூடி 
ஏதமுறு பாச பந்த மானவலை யோடு ழன்று
     ஈனமிகு சாதி யின்க ...... ணதிலேயான் 
ஈடழித லான தின்பின் மூடனென வோது முன்புன்
     ஈரஅருள் கூர வந்து ...... எனையாள்வாய் 
சூதமகிழ் பாலை கொன்றை தாதுவளர் சோலை துன்றி
     சூழமதில் தாவி மஞ்சி ...... னளவாகத் 
தோரணநன் மாட மெங்கு நீடுகொடி யேத ழைந்த
     சுவாமிமலை வாழ வந்த ...... பெருமாளே.
வாத நோய், வயிற்றுளைவு நோய், கழுத்தைச் சுற்றி வரும் புண் கட்டி, மார்பு எரிச்சல், எலும்புருக்கி நோய், பெரிய இழுப்பு நோய், மகோதரத்துடன், கோழை நோய், வாயுவினால் உண்டாகும் படர்தாமரை போன்ற சொறி, படை, மூக்கடைப்பு, பின்னும் ஒழுக்கம் கெட்ட விலைமாதர்களுடன் இணைவதால் கிடைக்கும் ஆபரணங்கள் என்று சொல்லத்தக்க புண் வகைகள், பாவ நோய்ப் புண்கள் ஆகிய இவை உடனே என்னைப் பீடிப்பதால், படுக்கையை விடாது கிடந்து, உடல் நலம் குறைந்து, இக்காரணத்தால் உனது திருவடி மலர்களில் அன்பு என்பதை முற்றும் மறந்து, பாவம் நிறைந்த கள்ளைக் குடித்து, அதனால் மயக்கம் மிகுந்து, குற்றம் தரும் பந்த பாசக் கட்டுகளான வலையில் அகப்பட்டு அலைந்து, இழிவான என் ஜாதித் தொழில்களிலே ஈடுபட்டு, நான் வலிமை அற்று அழிந்த பின், இவன் ஒரு முட்டாள் எனப் பிறர் கூறுவர். (அங்ஙனம் பிறர்) சொல்லுவதற்கு முன்பு உனது கருணை நிறைந்த திருவருள் மிக்கு வந்து என்னை ஆட் கொள்வாயாக. மாமரம், மகிழ மரம், பாலை மரம், கொன்றை மரம் (இவைகளின்) பூந்தாது நிறைந்துள்ள சோலைகள் நெருங்கியுள்ளதும், சூழ்ந்துள்ள மதில் உயர்ந்து மேகத்தை அளாவி நிற்பதும், தோரணங்கள், நல்ல வீடுகளில் எங்கும் உயர் கொடிகள் தழைந்துள்ளதுமான, சுவாமிமலையில் வாழ வந்த பெருமாளே. 
பாடல் 233 - சுவாமி மலை
ராகம் - ....; தாளம் -
தான தத்த தந்த தான தத்த தந்த
     தான தத்த தந்த ...... தனதான
வார முற்ற பண்பின் மாத முற்ற நண்பி
     னீடு மெய்த்து யர்ந்து ...... வயதாகி 
வாலை யிற்றி ரிந்து கோல மைக்கண் மங்கை
     மார்க ளுக்கி சைந்து ...... பொருள்தேடி 
ஆர மிக்க பொன்க ளால மைத்த மர்ந்த
     மாப ணிக்கள் விந்தை ...... யதுவான 
ஆட கொப்ப மைந்த வோலை முத்த முங்கொ
     டாவி மெத்த நொந்து ...... திரிவேனோ 
சூர னைத்து ரந்து வேர றப்பி ளந்து
     சூழ்சு ரர்க்க ணன்பு ...... செயும்வீரா 
சூக ரத்தொ டம்பு தானெ டுத்து வந்த
     சூத னுக்கி சைந்த ...... மருகோனே 
ஏரெ திர்த்து வந்து நீர்கள் கட்டி யன்று
     தானி றைக்க வந்த ...... தொருசாலி 
யேமி குத்து யர்ந்த மாவ யற்கள் மிஞ்சு
     மேர கத்த மர்ந்த ...... பெருமாளே.
(கணவனுக்கும் மனைவிக்கும்) அன்பு பூண்ட தன்மையில் (கருவுற்று), மாதங்கள் பல செல்ல (வளர்ந்து), அந்த அன்பினால் வளரும் உடலில் பிறந்து, வயது நிரம்பி, காளைப் பருவத்தில் திரிதலுற்று, அழகிய மை பூசிய கண்களை உடைய பெண்களிடத்தே நேசம் கொண்டு, (அவர்களுக்குக் கொடுக்கப்) பொருள் தேடி, மாலைகள், நல்ல பொன்னால் செய்யப்பட்டு விளங்கும் சிறந்த ஆபரணங்கள், விசித்திரமான பொன்னால் வேலைப்பாடு அமைந்த காதணியையும், முத்துக்களையும் கொடுத்து, என் உயிர் மிகவும் நொந்து திரிவேனோ? சூரனை விரட்டி ஓட்டி அடியோடு அவனைப் பிளந்து, சூழ்ந்துள்ள தேவர்களிடத்தே அன்பு காட்டிய வீரனே, பன்றியின் உருக்கொண்டு (வராக அவதாரத்தில்)* அழகிய பூமியை மேலே எடுத்து வந்த தந்திரம் வாய்ந்த திருமாலுக்கு உகந்த மருகனே, ஏர் எதிர்த்து வர நீரைப் பாய்ச்சிக் கட்டி, அப்போதைக்கப்போது உழவர்கள் இறைத்ததன் பயனால் விளைந்த ஒப்பற்ற செந்நெல் பயிர்களே பெருகி உயர்ந்து வளர்ந்த சிறந்த வயல்கள் நிறைந்துள்ள சுவாமி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* திருமால் வராகாவதாரம் எடுத்த வரலாறு:இரணியாக்ஷன் என்னும் அசுரன் பூமியைப் பாய் போல் சுருட்டி எடுத்துக் கொண்டு பாதாளத்தில் மறைந்து கொண்டான்.திருமால் பன்றி உருவம் கொண்டு, பாதாளத்திற்குச் சென்று, தன் கொம்பினால் அவனைக் கொன்று, பூமியைக் கொம்பினால் தாங்கி மேலே கொண்டு வந்தார்.
பாடல் 234 - சுவாமி மலை
ராகம் - ....; தாளம் -
தானன தத்தன தத்தன தத்தன
     தானன தத்தன தத்தன தத்தன
          தானன தத்தன தத்தன தத்தன ...... தந்ததான
வார்குழ லைச்சொரு கிக்கரு விற்குழை
     காதொடி ணைத்தசை யக்கதிர் பற்கொடு
          வாயிதழ் பொற்கம லர்க்குமி ழொத்துள ...... துண்டக்¡£வ 
வார்கமு கிற்புய நற்கழை பொற்குவ
     டாடிள நிர்ச்சுரர் பொற்குட மொத்திணை
          மார்பழ கிற்பொறி முத்தொளிர் சித்திர ...... ரம்பைமாதர் 
காருறும் வித்திடை யிற்கத லித்தொடை
     சேரல்குல் நற்பிர சத்தட முட்கொடு
          கால்மறை யத்துவ ளச்செறி பொற்கலை ...... யொண்குலாவக் 
கார்குயி லைக்குர லைக்கொடு நற்றெரு
     மீதில்நெ ளித்துந கைத்துந டிப்பவர்
          காமனு கப்பம ளிச்சுழல் குத்திரர் ...... சந்தமாமோ 
சூரர்ப தைக்கர வுட்கிநெ ளித்துய
     ராழியி ரைப்பநி ணக்குட லைக்கழு
          சூழந ரிக்கெரு டக்கொடி பற்பல ...... சங்கமாகச் 
சூழ்கிரி யைக்கைத டித்தும லைத்திகை
     யானையு ழற்றிந டுக்கிம தப்பொறி
          சோரந கைத்தயி லைக்கொடு விட்டருள் ...... செங்கைவேலா 
ஏரணி நற்குழ லைக்கக னச்சசி
     மோகினி யைப்புணர் சித்தொரு அற்புத
          வேடமு தச்சொரு பத்தகு றத்திம ...... ணங்கொள்வோனே 
ஏரக வெற்பெனு மற்புத மிக்கசு
     வாமிம லைப்பதி நிற்குமி லக்ஷண
          ராஜத லக்ஷண லக்ஷ¤மி பெற்றருள் ...... தம்பிரானே.
நீண்ட கூந்தலை சொருகி, பெரிய பிரகாசம் பொருந்திய குண்டலங்கள் அணிந்துள்ள காதுடன் பொருந்தி அசையும்படி விட்டும், ஒளி வீசும் பற்கள் கொண்டும், வாய் இதழ் அழகு செய்ய குமிழ மலர் போன்ற மூக்கைக் கொண்டும், கழுத்தாகிய நீண்ட கமுகு கொண்டும், புயங்களாகிய பசிய மூங்கில் கொண்டும், பொன் மலை போன்றும், ஆடும் இள நீர் போன்றும், தேவர்களின் (அமுதம் கொண்ட) அழகிய குடம் போன்றும் விளங்கும் இரண்டு மார்பகங்கள் கொண்டும், மார்பில் அழகான தேமலுடன், முத்து மாலை கொண்டும் ஒளி வீசும் அழகிய ரம்பை போன்ற விலைமாதர்கள். கார்மேகத்தில் காணப்படும் மின்னல் போன்ற இடையும், வாழைத் தண்டு போன்ற தொடையும், (அங்கு) சேர்ந்துள்ள பெண்குறியாகிய தேன் பொதிந்துள்ள இடமும் உள்ளிருக்க, உள்ளங்கால் அளவும் மறையும்படி தொங்கி நெருங்கும் அழகிய புடைவை நன்கு விளங்க, கரிய குயிலின் குரல் போன்ற குரலுடன், அழகிய தெருவீதியில் உடலை நெளித்தும், நகை புரிந்தும் நடிப்பவர்கள். மன்மதன் மகிழும்படி படுக்கையில் புரளுகின்ற வஞ்சகர்கள் ஆகிய பொது மாதர்களின் அழகில் ஈடுபடுதல் ஆகுமோ? அசுரர்கள் பதைக்கவும் ஆதிசேஷன் பயந்து நெளியவும், பெரிய கடல் ஓலமிட்டு ஒலிக்கவும், மாமிசக் குடலை கழுகுகள் சூழவும், நரிகளும், கருடன்களும், காக்கைகளும் பல கூட்டமாய் நெருங்கவும், (வஞ்சனை எண்ணம் கொண்ட) கிரவுஞ்ச மலையின் ஆற்றலை அழித்து, (எட்டுத் திக்கில் உள்ள) மலைகளையும் யானைகளையும் அலையுண்ணச் செய்து நடுங்க வைத்து, அவைகளின் மதம் பூண்ட அறிவு குலையும் வண்ணம் நகைத்து, வேலைக் கொண்டு செலுத்தி அருள் செய்த செங்கை வேலனே, அழகுள்ள சிறந்த கூந்தலை உடையவளும் விண்ணுலகத்தில் உள்ள இந்திராணி பெற்ற பேரழகியுமாகிய தேவயானையைச் சேர்ந்த சித்தனே*, ஒப்பற்ற அற்புதமான வேடர் குலத்தில் உதித்த அமுத சொரூபியான குறமகள் வள்ளியை மணம் கொண்டவனே, திருவேரக மலை என்னும் அற்புதம் மிகுந்த சுவாமி மலைப் பதியாகிய தலத்தில் நிற்கும் அழகனே, லக்ஷ்மி போன்ற ராஜத** குணம் படைத்த பார்வதி பெற்றருளிய தம்பிரானே. 
* சித்தன் முருகனுக்கு ஒரு பெயர் - மனத்தைக் கொள்ளை கொள்பவன்.** ஸத்வம், ராஜஸம், தாமசம் என்ற முக்குணங்களில் லக்ஷ்மிக்கு ராஜஸ குணம் ஏற்பிக்கப்படுகிறது. லக்ஷ்மி அருள் மழை பொழிந்து செல்வங்களை வலியக் கொடுக்கும் தெய்வம்.
பாடல் 235 - சுவாமி மலை
ராகம் - ....; தாளம் -
தானன தனத்தத் தாத்த தானன தனத்தத் தாத்த
     தானன தனத்தத் தாத்த ...... தனதான
வார்குழல் விரித்துத் தூக்கி வேல்விழி சுழற்றிப் பார்த்து
     வாவென நகைத்துத் தோட்டு ...... குழையாட 
வாசக முரைத்துச் சூத்ர பாவையெ னுறுப்பைக் காட்டி
     வாசனை முலைக்கச் சாட்டி ...... யழகாகச் 
சீர்கலை நெகிழ்த்துப் போர்த்து நூலிடை நெளித்துக் காட்டி
     தீதெய நடித்துப் பாட்டு ...... குயில்போலச் 
சேருற அழைத்துப் பார்த்து சார்வுற மருத்திட் டாட்டி
     சீர்பொருள் பறிப்பொய்க் கூத்த ...... ருறவாமோ 
சூரர்கள் பதைக்கத் தேர்க்க ளானைக ளழித்துத் தாக்கி
     சூர்கிரி கொளுத்திக் கூற்று ...... ரிடும்வேலா 
தூமொழி நகைத்துக் கூற்றை மாளிட வுதைத்துக் கோத்த
     தோலுடை யெனப்பர்க் கேற்றி ...... திரிவோனே 
ஏரணி சடைச்சிப் பாற்சொ லாரணி சிறக்கப் போற்று
     மேரெழி னிறத்துக் கூர்த்த ...... மகவோனே 
ஏடணி குழைச்சித் தூர்த்த வாடகி குறத்திக் கேற்ற
     ஏரக பொருப்பிற் பூத்த ...... பெருமாளே.
நீண்ட கூந்தலை விரித்தும், தூக்கி முடித்தும், வேல் போன்ற கண்களை சுழற்றிப் பார்த்தும், வா என்று அழைத்துச் சிரித்தும், தோடும் குண்டலமும் ஆட பேச்சுக்கள் பேசியும், இயந்திரப் பொம்மை என்று சொல்லும்படி பல அங்கங்களையும் காட்டியும், மணமுள்ள மார்பகங்களின் மேல் உள்ள கச்சை ஆட்டியும், அழகாக சீரான ஆடையை தளர்த்திப் போர்த்தும், நூல் போல் நுண்ணிய இடையை நெளித்துக் காட்டியும், தீ தெய்ய என்ற தாள வரிசைகளுடன் நடனம் செய்தும், பாடல்களைக் குயில் போல் பாடியும், தம்மைச் சேரும்படி அழைத்தும், தம்மையே சார்ந்திருக்கும்படி மருந்து வகைகளைத் தந்தும், தம் விருப்பப்படி ஆட்டி வைத்தும், சீரான பொருளைப் பறிக்கின்ற பொய்யான வேசையரது உறவு நல்லதாகுமோ? (ஆகாது என்றபடி), அசுரர்கள் பதைக்கவும், தேர்களையும் யானைகளையும் அழியும்படி தாக்கி, சூரனையும் அவனுடைய எழு கிரிகளையும் சுட்டெரித்து யம லோகத்துக்கு அனுப்பிய வேலனே, பரிசுத்தமான மொழியுடன் சிரித்து, (மார்க்கண்டருக்காக) யமனை இறக்கும்படி உதைத்து, உரித்து எடுத்த தோலை உடையாகக் கொண்ட என் தந்தையாகிய சிவபெருமானுக்கு (உபதேச மொழியை) இத்தலத்தில் உரைத்துப் போந்தவனே, அழகிய சடையை உடையவள், பால் போல் இனிய சொல்லை உடைய தேவி பார்வதி விசேஷமாகப் போற்றுகின்ற மிக்க அழகிய நிறம் விளங்குகின்ற குழந்தையே, பனை ஓலை இதழைக் குழையாகக் கொண்டவள், மண்ணால் மூடப்பட்ட பொன் போன்ற நிறத்தவள், (திருமாலின் மகள் சுந்தரவல்லியாகிய) குறப் பெண் வள்ளி நாயகிக்கு பொருத்தமானவனே, சுவாமி மலையில் விளங்கும் பெருமாளே. 
பாடல் 236 - சுவாமி மலை
ராகம் - ....; தாளம் -
தனதனன தான தனதன தந்தன
     தனதனன தான தனதன தந்தன
          தனதனன தான தனதன தந்தன ...... தனதான
விடமும்வடி வேலு மதனச ரங்களும்
     வடுவுநிக ரான மகரநெ டுங்குழை
          விரவியுடன் மீளும் விழிகளு மென்புழு ...... கதுதோயும் 
ம்ருகமதப டீர பரிமள குங்கும
     மணியுமிள நீரும் வடகுல குன்றமும்
          வெருவுவன பார புளகத னங்களும் ...... வெகுகாம 
நடனபத நூபு ரமுமுகில் கெஞ்சிட
     மலர்சொருகு கேச பரமுமி லங்கிய
          நளினமலர் சோதி மதிமுக விம்பமும் ...... அனநேராம் 
நடையுநளிர் மாதர் நிலவுதொ ழுந்தனு
     முழுதுமபி ராம அரிவய கிண்கிணெ
          னகையுமுள மாதர் கலவியி னைந்துரு ...... கிடலாமோ 
வடிவுடைய மானு மிகல்கர னுந்திக
     ழெழுவகைம ராம ரமுநிக ரொன்றுமில்
          வலியதிறல் வாலி யுரமுநெ டுங்கட ...... லவையேழும் 
மறநிருதர் சேனை முழுதுமி லங்கைமன்
     வகையிரவி போலு மணியும லங்க்ருத
          மணிமவுலி யான வொருபதும் விஞ்சிரு ...... பதுதோளும் 
அடைவலமு மாள விடுசர அம்புடை
     தசரதகு மார ரகுகுல புங்கவன்
          அருள்புனைமு ராரி மருகவி ளங்கிய ...... மயிலேறி 
அடையலர்கள் மாள வொருநிமி டந்தனி
     லுலகைவல மாக நொடியினில் வந்துயர்
          அழகியசு வாமி மலையில மர்ந்தருள் ...... பெருமாளே.
நஞ்சும் கூரிய வேலும் மன்மதனுடைய பாணங்களும் மாவடுவையும் ஒத்தனவாய், மகர மீன் போன்ற நீண்ட குண்டலங்களுடன் கலந்து, உடனே மீளும் கண்களும், மென்மை வாய்ந்த புனுகு சட்டம் கலந்த கஸ்தூரி, சந்தனம், மணமுள்ள செஞ்சாந்து அணிந்துள்ள, இள நீர் போன்றனவும், வடக்கே உள்ள சிறந்த மேரு மலை போன்றனவும், அச்சம் தரத் தக்கனவும், பாரமுள்ளனவும், புளகம் பூண்டுள்ளனவும் ஆகிய மார்பகங்களும், மிக்க காமத்தை எழுப்பும் நடனம் செய்கின்ற பாதங்களில் அணிந்துள்ள சிலம்பும், மேகமும் (இதன் கரு நிறத்துக்கு எந்த மூலை என்று) கெஞ்சும்படி கறுத்தும் மலர் சொருகப்பட்ட கூந்தல் பாரமும், விளங்கும் தாமரை மலர் போன்று நிலவொளி வீசும் முகச் சோதியும், அன்னப் பறவைக்கு ஒப்பான நடை அழகும், குளிர்ந்த அழகிய சந்திரனும் தொழுகின்ற உடல் முழுமையும் உள்ள அழகும், சிலம்பின் உட்பரலின் மணிகள் கிண் கிண் என ஒலிக்கும் சிரிப்பும் கொண்ட விலைமாதர்களுடைய சேர்க்கையில் நான் உள்ளம் வாடி உருகுதல் நன்றோ? அழகுடைய (மா¡£சன் என்னும்) பொன்மானும், பகைத்து வந்த கரன் என்னும் அரக்கனும், விளங்கிய ஏழு வகையான மரா மரங்களும், ஒப்பு ஒன்றுமே இல்லாத வலிமை வாய்ந்த வாலி என்னும் குரங்கு அரசனின் மார்பும், பெரிய ஏழு கடல்களும், வீரமுள்ள அசுரர்களின படைகள் முழுதும், இலங்கை அரசன் ராவணனுடைய சிறப்புற்ற சூரியன் போல் ஒளி வீசி அணிந்த அலங்காரமான ரத்ன கி¡£டம் விளங்கும் தலைகள் பத்தும், மேம்பட்டு விளங்கும் இருபது தோள்களும், அடைந்திருந்த வலிமையையும் (இவை எல்லாம்) மாண்டு ஒடுங்க, ஏவிய போர் அம்பைக் கொண்ட தசரத மன்னனுடைய மகனும் ரகு குலத்தைச் சேர்ந்த மேலானவனும், அருள் பாலிக்கும் (ராமனுமாகிய) திருமாலின் மருகனே, விளங்குகின்ற மயிலில் மீது ஏறி ஒரு நிமிட நேரத்தில் பகைவர்கள் இறக்கும்படி, உலகை வலமாக நொடிப் பொழுதில் வந்து, சிறந்த அழகிய சுவாமி மலையில் அமர்ந்து அருளிய பெருமாளே. 
பாடல் 237 - சுவாமி மலை
ராகம் - ....; தாளம் -
தனத்த தந்தன தனதன தனதன
     தனத்த தந்தன தனதன தனதன
          தனத்த தந்தன தனதன தனதன ...... தனதான
விரித்த பைங்குழ லொளிர்மல ரளிதன
     தனத்த னந்தன தனதன வெனவொலி
          விரிப்ப வண்கயல் விழியுறை குழையொடு ...... மலைபாய 
மிகுத்த வண்சிலை நுதல்மிசை திலதமொ
     டசைத்த பொன்குழை யழகெழ முகவொளி
          வெயிற்ப ரந்திட நகையிதழ் முருகலர் ...... வரிபோதத் 
தரித்த தந்திரி மறிபுய மிசைபல
     பணிக்கி லங்கிய பரிமள குவடிணை
          தனக்கொ ழுந்துகள் ததைபட கொடியிடை ...... படுசேலை 
தரித்து சுந்தர மெனஅடர் பரிபுர
     பதச்சி லம்பொடு நடமிடு கணிகையர்
          சழக்கர் விஞ்சையர் மயல்களின் முழுகுவ ...... தொழியாதோ 
உரித்த வெங்கய மறியொடு புலிகலை
     தரித்த சங்கரர் மதிநதி சடையினர்
          ஒருத்தி பங்கின ரவர்பணி குருபர ...... முருகோனே 
உவட்டி வந்திடு மவுணரொ டெழுகடல்
     குவட்டை யும்பொடி படசத முடிவுற
          வுழைத்த இந்திரர் பிரமனு மகிழ்வுற ...... விடும்வேலா 
வரித்த ரந்துள வணிதிரு மருவிய
     வுரத்த பங்கயர் மரகத மழகிய
          வணத்த ரம்பர முறவிடு கணையினர் ...... மருகோனே 
வனத்தில் வந்தொரு பழையவ னெனவொரு
     குறத்தி மென்புன மருவிய கிளிதனை
          மயக்கி மந்திர குருமலை தனிலமர் ...... பெருமாளே.
விரிந்த செழுமை வாய்ந்த கூந்தலில் விளங்கும் மலர்களில் உள்ள வண்டுகள் தன தனத்த னந்தன தனதன இவ்வாறான ஒலிகளை விரித்து எழுப்ப, வளமை வாய்ந்த கயல் மீன்கள் போன்ற கண்கள் காதில் பொருந்திய குண்டலங்களோடு மோதி அலைச்சல் உற, மேம்பட்டு விளங்கும் வலிமை பொருந்திய வில்லைப் போன்ற நெற்றியின் மேல் அமைந்த பொட்டும், அசைவுறும் பொன் குண்டலங்களும் அழகு வீச, முகத்து ஒளியின் ஜோதி பரந்து விளங்க, பற்களோடும் இதழோடும் கூடிய வாசனை உள்ள (செங்குமுத) மலரை ஒத்த (வாயினின்றும்) இசைப் பாட்டுக்கள் எழ, ஏந்தியுள்ள தந்திகளுடன் கூடிய வீணை சார்ந்துள்ள தோள்களின் மேல் பலவிதமான ஆபரணங்கள் விளங்க, மணமுள்ள, மலைக்கு நிகரான மார்பகங்களின் மீது செழுமையுள்ள (வாசனைப்) பொடிகள் நெருங்கி பூசப்பட்டிருக்க, (வஞ்சிக்) கொடி போன்ற இடையில் புடைவையை அணிந்து, அழகியது என்று சொல்லும்படி பொருத்தமாயுள்ள சிலம்பு அணிந்த பாதக் கிண்கிணியுடன் நடனம் செய்யும் விலைமாதராகிய தீயவர்களின், வித்தைக்காரர்களின், மோக மயக்கங்களில் நான் முழுகி இருக்கும் பழக்கம் என்னை விட்டு விலகாதோ? உரித்த கொடிய யானை, மான், புலி (இவைகளின்) தோலைத் தரித்த சங்கரர், சந்திரன் கங்கை ஆறு (இவைகளைத் தரித்த) சடையை உடையவரும், ஒப்பற்ற (பார்வதியை) ஒரு பாகத்தில் கொண்டவருமான சிவபெருமான் வணங்கும் குருபரனே, முருகனே, வெறுப்புற்று வந்த அசுரர்களும், ஏழு கடல்களும், கிரவுஞ்ச மலையும் பொடியாகும்படி, நூறு (அசுவமேத யாகம்) முடியும்படி உழைத்த இந்திரரும் பிரமனும் மகிழ்ச்சி அடையச் செலுத்திய வேலாயுதனே, வண்டுகள் வரிசையாக மொய்க்கும் துளசி மாலை அணிந்தவரும், லக்ஷ்மி பொருந்திய மார்பில் தாமரை மலரை உடையவரும், மரகதப் பச்சையின் அழகிய நிறத்தினரும், கடல் மீது செலுத்திய (கோதண்ட) பாணத்தை உடையவரும் ஆகிய திருமாலின் மருகனே, (வள்ளி மலைக்) காட்டில் வந்து, ஒரு கிழவன் என வேடம் பூண்டு, ஒப்பற்ற குறத்தியின் அழகிய (தினைப்) புனத்திலிருந்த கிளி போன்ற வள்ளியை மயக்கியவனே, மந்திர உபதேசத் தலமாகிய சுவாமி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 238 - சுவாமி மலை
ராகம் - ....; தாளம் -
தனதான தத்த தந்த தனதான தத்த தந்த
     தனதான தத்த தந்த ...... தனதான
விழியால்ம ருட்டி நின்று முலைதூச கற்றி மண்டு
     விரகான லத்த ழுந்த ...... நகையாடி 
விலையாக மிக்க செம்பொன் வரவேப ரப்பி வஞ்ச
     விளையாட லுக்கி சைந்து ...... சிலநாள்மேல் 
மொழியாத சொற்கள் வந்து சிலுகாகி விட்ட தொந்த
     முழுமாயை யிற்பி ணங்கள் ...... வசமாகி 
முடியாது பொற்ச தங்கை தருகீத வெட்சி துன்று
     முதிராத நற்ப தங்கள் ...... தருவாயே 
பொழிகார்மு கிற்கி ணைந்த யமராஜ னுட்க அன்று
     பொருதாளெ டுத்த தந்தை ...... மகிழ்வோனே 
புருகூத னுட்கு ளிர்ந்த கனகாபு ரிப்ர சண்ட
     புனிதாம்ரு கக்க ரும்பு ...... புணர்மார்பா 
செழுவாரி சத்தி லொன்று முதுவேதன் வெட்க அன்று
     திருவாய்மை செப்பி நின்ற ...... முருகோனே 
திரளாம ணிக்கு லங்கள் அருணோத யத்தை வென்ற
     திருவேர கத்த மர்ந்த ...... பெருமாளே.
கண்களால் மருட்டி நின்று, மார்பின் மேல் உள்ள மேலாடையை நீக்கி, மூண்டு எழும் காம அக்கினியில் தம்மைக் கண்டவர் அழுந்தும்படி நகை புரிந்து, விலையாக நிரம்பச் செம்பொற்காசுகள் வரவும், தமது சூழ்ச்சியைப் பரப்பி, வஞ்சகம் நிறைந்த காம லீலைகளுக்கு உடன்பட்டு, சில நாட்கள் போன பிறகு, சொல்லாத சொற்களைச் சொன்னதாகச் சொல்லி, சண்டையும் கூச்சலுமாகி ஏற்படும் பகைமை பூணுகின்ற முழு மாயக்காரிகளாகிய பிணங்கள் போன்ற பொது மகளிரின் வசத்தில் அகப்பட்டு என் வாழ்க்கை முடிவுறாமல், பொன் கிண்கிணிகள் செய்யும் இசையும், வெட்சி மலரும் சேர்ந்துள்ள, என்றும் இளமையான, நன்மை அளிக்கும் உன் திருவடிகளைத் தந்து அருள்வாயாக. பொழிகின்ற மழை மேகத்தை நிகர்க்கும் கருமையான யமராஜன் அஞ்சும்படி அன்று, போர் வல்ல திருத்தாளை நீட்டிய தந்தையாகிய சிவபெருமான் மகிழ்ச்சி கொள்ளும் முருகனே, இந்திரன் மனம் குளிரும்படியாக தேவருலகத்தைக் காத்தருளிய வல்லமை வாய்ந்தவனே, தூய்மையானவனே, மான் ஈன்ற கரும்பு போன்ற இனிய வள்ளியை அணைக்கும் மார்பனே, செழுமை வாய்ந்த தாமரையில் வீற்றிருக்கும் கிழப் பிரமன் நாணும்படி, அன்று நிறை செல்வப் பேருண்மையை (பிரணவப் பொருளை) சொல்லி அருளிய முருகனே, (நின் திருமார்பில் உள்ள) திரளான ரத்தினக் கூட்டங்கள் சூரிய உதய ஒளியை வென்ற சுவாமி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 239 - சுவாமி மலை
ராகம் - காபி; தாளம் - ஆதி - திஸ்ர நடை - 12
தனனத் தனனத் தனனத் தனனத்
     தனனத் தனனத் ...... தனதான
அமைவுற் றடையப் பசியுற் றவருக்
     கமுதைப் பகிர்தற் ...... கிசையாதே 
அடையப் பொருள்கைக் கிளமைக் கெனவைத்
     தருள்தப் பிமதத் ...... தயராதே 
தமர்சுற் றியழப் பறைகொட் டியிடச்
     சமனெட் டுயிரைக் ...... கொடுபோகுஞ் 
சரிரத் தினைநிற் குமெனக் கருதித்
     தளர்வுற் றொழியக் ...... கடவேனோ 
இமயத் துமயிற் கொருபக் கமளித்
     தவருக் கிசையப் ...... புகல்வோனே 
இரணத் தினிலெற் றுவரைக் கழுகுக்
     கிரையிட் டிடுவிக் ...... ரமவேலா 
சமயச் சிலுகிட் டவரைத் தவறித்
     தவமுற் றவருட் ...... புகநாடும் 
சடுபத் மமுகக் குகபுக் ககனத்
     தணியிற் குமரப் ...... பெருமாளே.
மிகுந்த பசி உற்றவர்களுக்கு, மன அமைதியுடன், அன்னத்தைப் பங்கிட்டுத் தருவதற்கு மனம் வராமல், வைத்துள்ள பொருள் அத்தனையும் எனது இளமைப்பருவத்துக்கு என்று கைவசமாக இறுகப் பிடித்து வைத்துக்கொண்டு, அருள் நெறியினின்றும் தவறிப் போய் அகங்காரத்தினால் தளர்ச்சி அடையாமல், சுற்றத்தார் சுற்றி நின்று அழவும், பறைகள் வாசிக்கவும், யமன் நெடுந்தூரத்திற்கு உயிரைக் கொண்டு போகும் இந்த உடம்பை நிலையாக நிற்கும் என்று கருதி இவ்வுடம்பிற்காகவே பாடுபட்டு நான் தளர்ந்து அழிவது முறையாகுமோ? இமவான் வளர்த்த மயில் போன்ற பார்வதிக்கு தன்னுடம்பின் ஒரு பாகத்தைத் தந்த சிவபெருமானுக்கு உள்ளம் இசையுமாறு உபதேசம் அருளியவனே, போர்க்களத்தில் தாக்கி எதிர்ப்பவர்களை கழுகுகட்கு இரையாக அளிக்கும் வீரமுள்ள வேலாயுதனே, சமயச் சண்டை இடுகின்ற சமயவாதிகளின் பக்கம் சாராமல் விலகி எனது தவம் நிறைவுறவும், உனது திருவருளில் புகவும், நான் விரும்பும் ஆறு தாமரையன்ன திரு முகங்களை உடைய குகனே, (வள்ளியை மணந்த பின்) நீ புகுந்த, பெருமை வாய்ந்த, திருத்தணிகைப் பதியில் வீற்றிருக்கும் குமரப் பெருமாளே. 
பாடல் 240 - திருத்தணிகை
ராகம் - நாதநாமக்ரியா/ஷண்முகப்ரியா; தாளம் - ஆதி
தனதன தனதன தனதன தனதன
     தனதன தனதன ...... தனதான
அரகர சிவனரி அயனிவர் பரவிமு
     னறுமுக சரவண ...... பவனேயென் 
றநுதின மொழிதர அசுரர்கள் கெடஅயில்
     அநலென எழவிடு ...... மதிவீரா 
பரிபுர கமலம தடியிணை யடியவர்
     உளமதி லுறவருள் ...... முருகேசா 
பகவதி வரைமகள் உமைதர வருகுக
     பரமன திருசெவி ...... களிகூர 
உரைசெயு மொருமொழி பிரணவ முடிவதை
     உரைதரு குருபர ...... வுயர்வாய 
உலகம னலகில வுயிர்களு மிமையவ
     ரவர்களு முறுவர ...... முநிவோரும் 
பரவிமு னநுதின மனமகிழ் வுறவணி
     பணிதிகழ் தணிகையி ...... லுறைவோனே 
பகர்தரு குறமகள் தருவமை வநிதையு
     மிருபுடை யுறவரு ...... பெருமாளே.
பாவங்களைப் போக்கவல்ல சிவனும், திருமாலும், பிரம்மாவும், ஆகிய இம்மூவரும் போற்றி நின்று உனது முன்னிலையில் ஆறுமுகனே, சரவணபவனே, என்று கூறி நாள்தோறும் துதிக்க, சூரன் முதலிய அசுரர்கள் அழியுமாறு அக்கினி போல எழும்பிய வேலினை விடுத்த வீர மூர்த்தியே, வீரச் சிலம்பு அணிந்த, தாமரை மலர் போன்ற உன் திருவடிகளை உன் அடியார்களின் உள்ளத்தில் பொருந்துமாறு அருள்செய்யும் முருகக் கடவுளே. மலையரசன் மகளாக வந்த பகவதியின் அருளினால் வந்த குகனே, சிவனின் இருசெவிகளும் மகிழும்படி யாவரும் புகழும் ஒப்பற்ற மொழியாகிய பிரணவ மந்திரத்தின் முடிவுப்பொருளை உபதேசித்த மேலான குருவே, உயர்ந்த இவ்வுலகில் வாழும் எண்ணற்ற உயிர்களும் தேவர்களும் பெருந்தவ சிரேஷ்டரான முனிவர்களும் உன் முன்னேவணங்கி துதி செய்து, நாள்தோறும் மனம் மகிழ்ச்சி அடையுமாறு அழகியதும், வாசுகி என்ற நாகம் வழிபட்டதுமாகிய* திருத்தணிகைத் தலத்தில் வாழ்பவனே, புகழ்வாய்ந்த குறப்பெண் வள்ளியும், கற்பகத்தருவின் கீழே வளர்ந்த தேவயானையும், இருபுறமும் பொருந்த வந்த பெருமாளே**. 
* பாற்கடல் கடைந்தபோது வாசுகி என்ற நாகம் கயிறாக உதவியது. அதனால் புண்பட்ட நோய் நீங்க, வாசுகி திருத்தணிகைக்கு வந்து முருகனைப் பூஜிக்க நோய் தணிந்த வரலாறு இங்கு கூறப்பட்டுள்ளது.
** வள்ளியும் தேவயானையும் வலமும் இடமுமாக விளங்க முருகன் திருத்தணியில் வீற்றிருக்கிறான். வள்ளி = இச்சாசக்தி, தேவயானை = ஞானசக்தி.இப்பாடல் துதிமயமானது. வேண்டுதல் ஒன்றும் இல்லாதது.
பாடல் 241 - திருத்தணிகை
ராகம் - ....; தாளம் -
தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத்
     தனத்தனத் தனத்தனத் ...... தனதான
அருக்கிமெத் தெனச்சிரித் துருக்கியிட் டுளக்கருத்
     தழித்தறக் கறுத்தகட் ...... பயிலாலே 
அழைத்தகப் படுத்தியொட் டறப்பொருட் பறிப்பவர்க்
     கடுத்தபத் தமுற்றுவித் ...... தகர்போலத் 
தரிக்கும்வித் தரிக்குமிக் கதத்துவப் ப்ரசித்தியெத்
     தலத்துமற் றிலைப்பிறர்க் ...... கெனஞானம் 
சமைத்துரைத் திமைப்பினிற் சடக்கெனப் படுத்தெழச்
     சறுக்குமிப் பிறப்புபெற் ...... றிடலாமோ 
பொருக்கெழக் கடற்பரப் பரக்கர்கொத் திறப்புறப்
     பொருப்பினிற் பெருக்கவுற் ...... றிடுமாயம் 
புடைத்திடித் தடற்கரத் துறப்பிடித் தகற்பகப்
     புரிக்கிரக் கம்வைத்தபொற் ...... கதிர்வேலா 
திருத்தமுத் தமிழ்க்கவிக் கொருத்தமைக் குறத்தியைத்
     தினைப்புனக் கிரித்தலத் ...... திடைதோயுஞ் 
சிவத்தகுக் குடக்கொடிச் செருக்கவுற் பலச்சுனைச்
     சிறப்புடைத் திருத்தணிப் ...... பெருமாளே.
சுருக்கமாகவும், அமைதியுடனும் சிரித்து, காண்பவர்களின் மனதை உருக்கி உள்ளக் கருத்தை அழித்து, மிகவும் கருநிறமுள்ள கண்களின் குறிப்புகளால், அழைத்து தம் வலைக்குள் அகப்பட வைத்து, ஒன்றையும் விடாமல் பொருளைப் பறிக்கும் வேசியர்களிடம் செல்கின்ற தவறைச் செய்தும், அறிவாளி போல் நடித்தும், விரிவாகப் பேசியும், மேலான உண்மைகளை எடுத்துப் பேசும் கீர்த்தி (தன்னைப் போல்) எந்த ஊரிலும் வேறு யார்க்கும் கிடையாது என்று சொல்லும்படி ஞானப் பேச்சுகளை புதிதாகப் படைத்துப் பேசியும், ஒரு இமைப் பொழுதில் வேகத்துடன் படுத்து எழுதல் போல நழுவி ஒழியும் இந்த நிலையாப் பிறவியைப் பெற்றிடல் நன்றோ? வறண்டு உலர்ந்த காட்சி எழும்படி கடல் வற்றவும், அசுரர்களின் கூட்டம் மடிந்து ஒழியவும், கிரெளஞ்ச மலையில் நிரம்ப இருந்த மாயம் உடைந்து அழியவும், வலிமையான திருக்கரத்தில் தங்கும்படி பிடித்த (வேலனே), கற்பக புரியாகிய தேவநாட்டின் மீது அருள் வைத்த அழகிய கதிர் வேலனே, செப்பிய முத்தமிழ்ப் பாடலுக்கு ஒப்பற்றவனாய் நிற்பவனே, மை தீட்டிய கண்களை உடைய வள்ளியை தினைப் புனம் உள்ள வள்ளிமலை நாட்டில் அணைந்தவனே, சிவப்பு நிறம் கொண்ட சேவற்கொடி பெருமிதம் அடைய, நீலோற்பலம் மலர்கின்ற சுனையை உடைய சிறப்புள்ள திருத்தணிகையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 242 - திருத்தணிகை
ராகம் - வஸந்தா; தாளம் - ஆதி - கண்ட நடை - 20 
- எடுப்பு - அதீதம்
தனத்தன தனத்தன தனத்தன தனத்தன
     தனத்தன தனத்தன ...... தனதான
இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர்
     இடுக்கினை யறுத்திடு ...... மெனவோதும் 
இசைத்தமிழ் நடத்தமி ழெனத்துறை விருப்புட
     னிலக்கண இலக்கிய ...... கவிநாலுந் 
தரிப்பவ ருரைப்பவர் நினைப்பவர் மிகச்சக
     தலத்தினில் நவிற்றுத ...... லறியாதே 
தனத்தினில் முகத்தினில் மனத்தினி லுருக்கிடு
     சமர்த்திகள் மயக்கினில் ...... விழலாமோ 
கருப்புவில் வளைத்தணி மலர்க்கணை தொடுத்தியல்
     களிப்புட னொளித்தெய்த ...... மதவேளைக் 
கருத்தினில் நினைத்தவ னெருப்பெழ நுதற்படு
     கனற்கணி லெரித்தவர் ...... கயிலாயப் 
பொருப்பினி லிருப்பவர் பருப்பத வுமைக்கொரு
     புறத்தினை யளித்தவர் ...... தருசேயே 
புயற்பொழில் வயற்பதி நயப்படு திருத்தணி
     பொருப்பினில் விருப்புறு ...... பெருமாளே.
உயிர் போகும் தொலையா வழிக்கு உற்ற துணையாய் இருக்கும் அவல் போன்ற திருப்புகழை ஆர்வத்தோடு படிப்பவர்களுடைய சங்கடங்களை அறுத்தெறியும் என்ற உண்மையை எடுத்துச் சொல்கின்ற, இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்றும், அகத்துறைப் பாக்கள், இலக்கணம், இலக்கியம் என்றும், நால்வகைக் கவிகளையும்* உள்ளத்தில் தரிப்பவர்கள், உரைப்பவர்கள், நினைப்பவர்கள் ஆகிய உன் அடியார்களை மிகவும் இவ்வுலகில் புகழாமல், தங்கள் மார்பாலும், முகத்தாலும், மனத்தை உருக்கச் செய்யும் சாமர்த்தியசாலிகளான பொதுமகளிரின் மோக மயக்கில் நான் விழலாமோ? (கூடாது என்றபடி), கரும்பு வில்லினை வளைத்து அதில் அழகிய மலர்ப் பாணங்களைத் தொடுத்து, மிகச் செருக்குடன் ஒளிந்திருந்து செலுத்திய மன்மதனை, தன் மனத்தில் நினைத்த மாத்திரத்திலேயே அந்த மன்மதன் எரிந்து சாம்பலாகும்படி தன் நெற்றிக் கண்ணால் எரித்தவரும், கயிலை மலையிலே வீற்றிருப்பவரும், பர்வத குமாரி உமாதேவிக்கு தன் இடது புறத்தைத் தந்தவருமான பரமசிவன் பெற்ற மகனே, மேகங்கள் தங்கும் சோலைகளும், வயல்களும் சூழ்ந்த ஊராகிய இனிமை வாய்ந்த திருத்தணி மலையில் விருப்பம் கொள்ளும் பெருமாளே. 
* தமிழ்க் கவிதைகள் நான்கு வகைப்படும்:ஆசு - எதுகை மோனையுடன் கூடியது,மதுரம் - இனிமை வாய்ந்தது,சித்திரம் - கற்பனையும் அழகும் மிக்கது,வித்தாரம் - வர்ணனை மிக்கது.
பாடல் 243 - திருத்தணிகை
ராகம் - அஸாவேரி; தாளம் - மிஸ்ரசாபு 
தகதிமி-2, தகிட-1 1/2
தனதன தான தனதன தான
     தனதன தான ...... தனதான
இருமலு ரோக முயலகன் வாத
     மெரிகுண நாசி ...... விடமேநீ 
ரிழிவுவி டாத தலைவலி சோகை
     யெழுகள மாலை ...... யிவையோடே 
பெருவயி றீளை யெரிகுலை சூலை
     பெருவலி வேறு ...... முளநோய்கள் 
பிறவிகள் தோறு மெனைநலி யாத
     படியுன தாள்கள் ...... அருள்வாயே 
வருமொரு கோடி யசுரர்ப தாதி
     மடியஅ நேக ...... இசைபாடி 
வருமொரு கால வயிரவ ராட
     வடிசுடர் வேலை ...... விடுவோனே 
தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி
     தருதிரு மாதின் ...... மணவாளா 
சலமிடை பூவி னடுவினில் வீறு
     தணிமலை மேவு ...... பெருமாளே.
இருமல் என்ற நோய், முயலகன் என்ற வலிப்பு நோய், வாத நோய், எரியும் குணமுள்ள மூக்கு நோய், விஷ நோய்கள், நீரிழிவு நோய், நீங்காத தலைவலி, ரத்த சோகை, கழுத்தைச் சுற்றி உண்டாகும் மாலை போன்ற புண் இவற்றுடன், மகோதர நோய், நுரையீரலில் கோழை நோய், நெஞ்சு எரியும் நோய், தீராத வயிற்று வலி, ஆகிய பெரு வலியுடன் கூடிய பிற நோய்கள் ஒவ்வொரு பிறவியிலும் என்னைப் பீடிக்காதபடி, உன்னுடைய திருவடிகளைத் தந்தருள்வாயாக. உன்னை எதிர்த்துவந்த கோடிக்கணக்கான அசுரர்களின் காலாட்படை இறந்துபடவும், அனேக வீரப் பாட்டுக்களைப் பாடிக்கொண்டு வந்த ஓர் காலபைரவர் (சிவ பெருமான்) போர்க்களத்தில் நடனமாடவும், கூரிய ஒளிவீசும் வேலைச் செலுத்தியவனே, கற்பக விருட்சங்களின் நிழலில் வசிக்கும் மேக வாகனன் இந்திரன் வளர்த்த அழகிய பெண் தேவயானையின் மணவாளனே, கடலால் சூழப்பட்ட இந்தப் புவியின் மத்தியில் சிறப்போடு விளங்கும் திருத்தணிகை மலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
இந்தப் பாடல் நோய் தீர்க்கும் திருமந்திரத் திருப்புகழ். பாராயணம் செய்வதற்கு உரியது.
பாடல் 244 - திருத்தணிகை
ராகம் - தோடி; தாளம் - அங்கதாளம் - 5 1/2 
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2
தனன தான தானான தனன தான தானான
     தனன தான தானான ...... தனதான
உடலி னூடு போய்மீளு முயிரி னூடு மாயாத
     உணர்வி னூடு வானூடு ...... முதுதீயூ 
டுலவை யூடு நீரூடு புவியி னூடு வாதாடு
     மொருவ ரோடு மேவாத ...... தனிஞானச் 
சுடரி னூடு நால்வேத முடியி னூடு மூடாடு
     துரிய வாகு லாதீத ...... சிவரூபம் 
தொலைவி லாத பேராசை துரிச றாத வோர்பேதை
     தொடுமு பாய மேதோசொ ...... லருள்வாயே 
மடல றாத வா¡£ச அடவி சாடி மாறான
     வரிவ ரால்கு வால்சாய ...... அமராடி 
மதகு தாவி மீதோடி யுழவ ரால டாதோடி
     மடையை மோதி யாறூடு ...... தடமாகக் 
கடல்பு காம காமீனை முடுகி வாளை தான்மேவு
     கமல வாவி மேல்வீழு ...... மலர்வாவிக் 
கடவுள் நீல மாறாத தணிகை காவ லாவீர
     கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.
உடலுக்கு உள்ளும், உடலில் சென்று மீளுகின்ற உயிருக்குள்ளும், அழியாத உணர்ச்சியுள்ளும், ஆகாயத்துள்ளும், முற்றிய தீக்குள்ளும், காற்றினுள்ளும், நீரின் உள்ளும், மண்ணினுள்ளும், சமயவாதம் புரிகின்ற எவரிடத்திலும் காணக்கிடைக்காத ஒப்பற்ற ஞான ஒளியினுக்குள்ளும், நான்கு வேத உச்சியிலும் ஊடாடுகின்றதும், துரிய* நிலையில் இருப்பதும், துன்பங்கள் கடந்த நிலையில் உள்ளதுமாகிய சிவ ரூபத்தை, முடிவற்ற பேராசையும் குற்றமும் நீங்காத ஓர் மூடனாகிய அடியேன் அடைவதற்கு உரிய வழி எதுவோ, அந்த உபதேச மொழியைச் சொல்லி வழிகாட்டி அருள்வாயாக. இதழ்கள் நீங்காத தாமரைப் பூவின்காட்டை அழித்து, தனக்குப் பகையான வரிபடர்ந்த வரால் மீன்கள் தோற்றுப்போய் பின்வாங்கும்படி போர் புரிந்து, செல்லும் வழியில் இருந்த நீர்பாயும் மதகைத் தாண்டி மேலே ஓடி, வயலில் உழும் உழவர்கள் தன்னை வருத்தாதபடி தப்பி ஓடி, வழியில் உள்ள நீர் மடைகளைத் தாக்கி, ஆற்றின் வழியிலே சென்று, கடலில் புகுந்து, அங்குள்ள பெரிய மீனை விரட்டித் தாக்கி, வாளை மீன் தான் இருந்த தாமரைக்குளத்தில் வந்து வீழும் (இத்தனை பெருமையை உடைய) மலர்ச் சுனையில்** தெய்வமணம் உள்ள நீலோத்பல மலர் மலர்வது என்றும் தவறாத திருத்தணிகைக்குக் காவலனே, வீரனே, கருணையில் மேரு மலை போன்றவனே, தேவர்களின் பெருமாளே. 
* துரியை என்பது ஜாக்ரம் (விழிப்பு), சொப்பனம் (கனவு), சுழுத்தி (உறக்கம்) என்ற மூன்று நிலைகளையும் கடந்த நிலையாகும்.
** திருத்தணியின் தாமரைக்குளத்தில் இருக்கும் வாளை மீனின் ஆற்றல், 'மடல் அறாத' முதல் 'மலர்வாவி' வரை உள்ள ஆறு அடிகளில், கூறப்படுகிறது. முருகனின் தம்பியும் தூதுவரும் ஆன வீரபாகுத் தேவர் தூதுசெல்லும் வழியில் அரக்கர்களைக் கொன்று, கடல்நடுவில் உள்ள வீரமஹேந்திரம் சென்று போர் புரிந்து வெற்றியுடன் மீண்டு வந்ததையும் இது குறிப்பால் காட்டுகின்றது. - கந்த புராணம்.
பாடல் 245 - திருத்தணிகை
ராகம் - நளினகாந்தி; தாளம் - ஆதி தேசாதி
தனனதன தான தனனதன தான
     தனனதன தான ...... தனதான
உடையவர்க ளேவ ரெவர்களென நாடி
     யுளமகிழ ஆசு ...... கவிபாடி 
உமதுபுகழ் மேரு கிரியளவு மான
     தெனவுரமு மான ...... மொழிபேசி 
நடைபழகி மீள வறியவர்கள் நாளை
     நடவுமென வாடி ...... முகம்வேறாய் 
நலியுமுன மேயு னருணவொளி வீசு
     நளினஇரு பாத ...... மருள்வாயே 
விடைகொளுவு பாகர் விமலர்திரி சூலர்
     விகிர் தர்பர யோகர் ...... நிலவோடே 
விளவு சிறு பூளை நகுதலையொ டாறு
     விடவரவு சூடு ...... மதிபாரச் 
சடையிறைவர் காண உமைமகிழ ஞான
     தளர் நடையி டாமுன் ...... வருவோனே 
தவமலரு நீல மலர்சுனைய நாதி
     தணிமலையு லாவு ...... பெருமாளே.
செல்வம் படைத்தவர்கள் எவர்கள் எவர்கள் என்று தேடி, அவர்கள் மனம் மகிழ அவர்கள் மீது ஆசுகவிகளைப்* பாடி, உம் புகழ் மேருமலை அளவு உயர்ந்தது எனக் கூறியும், வலிமையானமுகஸ்துதி மொழிகளைப் பேசியும், நடந்து நடந்து பலநாள் போய்ப் பழகியும், தரித்திரர்களாகவேமீளும்படி, நாளைக்கு வா என்றே கூற, அதனால் அகம் வாடி முகம் களை மாற, வருந்தும் முன்னதாகவே, உனது சிவந்த ஒளி வீசுகின்ற தாமரை போன்ற இரு பாதங்களையும் தந்தருள்வாயாக. ரிஷபத்தை வாகனமாகச் செலுத்துபவரும், பரிசுத்தரும், திரிசூலத்தை ஏந்தியவரும், மிக்க உயர்ந்தவரும், மேலான யோகத்தவரும், பிறைச்சந்திரன், விளாமர (வில்வ) த் தளிர், சிறிய பூளைப் பூ, பற்களுடன் கூடிய மண்டையோடு, இவற்றோடு கங்கை ஆறு, விஷப்பாம்பு ஆகியவற்றைத் தரித்துள்ள மிகுந்த பாரமான ஜடாமுடியுடைய சிவபெருமான் கண்டு களிக்கவும், உமாதேவி பார்த்து மகிழவும், ஞானத் தளர் நடையிட்டு அவர்கள் முன்னே வருபவனே, மிகுத்து மலரும் நீலோத்பலப் பூக்கள் உள்ள சுனையுடையதும், ஆதியில்லாததுமான மிகப் பழைய திருத்தணிகை மலை மீது உலாவும் பெருமாளே. 
* தமிழ்க் கவிதைகள் நான்கு வகைப்படும்:ஆசு - எதுகை மோனையுடன் கூடியது,மதுரம் - இனிமை வாய்ந்தது,சித்திரம் - கற்பனையும் அழகும் மிக்கது,வித்தாரம் - வர்ணனை மிக்கது.
பாடல் 246 - திருத்தணிகை
ராகம் - லலிதா; தாளம் - கண்டசாபு - 2 1/2 
தகிட-1 1/2, தக-1
தய்யனா தத்ததன தய்யனா தத்ததன
     தய்யனா தத்ததன ...... தனதான
உய்யஞா னத்துநெறி கைவிடா தெப்பொழுது
     முள்ளவே தத்துறைகொ ...... டுணர்வோதி 
உள்ளமோ கத்திருளை விள்ளமோ கப்பொருளை
     யுள்ளமோ கத்தருளி ...... யுறவாகி 
வையமே ழுக்குநிலை செய்யுநீ திப்பழைய
     வல்லமீ துற்பலச ...... யிலமேவும் 
வள்ளியா நிற்புதிய வெள்ளில்தோய் முத்தமுறி
     கிள்ளிவீ சுற்றுமலர் ...... பணிவேனோ 
பையரா வைப்புனையு மையர்பா கத்தலைவி
     துய்யவே ணிப்பகிர ...... திகுமாரா 
பையமால் பற்றிவளர் சையமேல் வைக்குமுது
     நெய்யனே சுற்றியகு ...... றவர்கோவே 
செய்யுமால் வெற்புருவ வெய்யவேல் சுற்றிவிடு
     கையமால் வைத்ததிரு ...... மருகோனே 
தெய்வயா னைக்கிளைய வெள்ளையா னைத்தலைவ
     தெய்வயா னைக்கினிய ...... பெருமாளே.
நான் கடைத்தேறுவதற்கான ஞான மார்க்கத்தை எப்பொழுதும் கைவிடாமல் பற்றி, உள்ள வேத சாஸ்திரங்களைக் கொண்டு அறிவு தெளிவுற ஓதி, என்னிடம் உள்ள மயக்க இருளை நீக்க, ஆசை வைக்கவேண்டிய பொருளாகிய மோக்ஷ இன்பத்தை கருதும் ஆசை உன் அருளால் கிடைத்து உன்னுடன் உறவு நெருங்க வேண்டும். உலகம் ஏழினையும் நிலை நிறுத்திக் காக்கும் நீதி கொண்டவனே, பழமையான மலையாகிய திருவல்லத்திலும்*, நீலோத்பல கிரியான திருத்தணிகை மலையிலும் வாழும் வள்ளி நாயகனே, உன்னைப் புதிய வில்வ மரத்திலுள்ள இளம் கொழுந்து இலைகளை பறித்து வீசி அர்ச்சித்து உன் பாத மலர்களைப் பணிய மாட்டேனோ? படம் உள்ள நாக ஆபரணத்தை அணிந்த தலைவர் சிவனார், அவரின் இடப்பாகத்தில் உள்ள தலைவி பார்வதி, தூய ஜடாமுடியில் உள்ள பாகீரதியாகிய கங்கை - இம்மூவரின் குமாரனே, மெதுவாக மோகம் பற்றி (வள்ளி மனத்தில்) வளர்ந்த வள்ளிமலைமீது முதிர்ந்த நேயம் கொண்டவனே, சூழ்ந்துள்ள குறவர்களுக்குத் தலைவனாக ஆனவனே, மயக்கத்தைச் செய்யும் மாயமான கிரெளஞ்ச மலையை உருவும்படியாக வெப்பமான வேலைச் சுழற்றி விடுத்த கரத்தினனே, திருமால் அன்போடு மார்பில் வைத்த லக்ஷ்மியின் மருமகனே, தெய்வத்தன்மையுடைய யானைமுகன் விநாயகனுக்குத் தம்பியே, வெள்ளையானையாகிய ஐராவதத்துக்குத் தலைவனே, தேவயானைத் தேவிக்கு இனிய பெருமாளே. 
* திருவல்லம் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து கிழக்கே 8 மைலில் நீவா நதிக்கரையில் உள்ளது. திருத்தணிகையும், வள்ளிமலையும் அருகில் உள்ளன.
பாடல் 247 - திருத்தணிகை
ராகம் - கானடா; தாளம் - அங்கதாளம் - 5 1/2 
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தத்ததன தான தத்தம் தத்ததன தான தத்தம்
     தத்ததன தான தத்தம் ...... தனதான
எத்தனைக லாதி சித்தங் கெத்தனைவி யாதி பித்தங்
     கெத்தனைச ராச ரத்தின் ...... செடமான 
எத்தனைவி டாவெ ருட்டங் கெத்தனைவ லாண்மை பற்றங்
     கெத்தனைகொ லூனை நித்தம் ...... பசியாறல் 
பித்தனைய னான கட்டுண் டிப்படிகெ டாமல் முத்தம்
     பெற்றிடநி னாச னத்தின் ...... செயலான 
பெற்றியுமொ ராது நிற்குந் தத்தகுரு தார நிற்கும்
     பெத்தமுமொ ராது நிற்குங் ...... கழல்தாராய் 
தத்தனத னாத னத்தந் தத்தனத னாத னத்தந்
     தத்தனத னாத னத்தந் ...... தகுதீதோ 
தக்குகுகு டூடு டுட்டுண் டிக்குகுகு டீகு தத்தந்
     தத்தனத னான னுர்த்துஞ் ...... சதபேரி 
சித்தர்கள்நி டாதர் வெற்பின் கொற்றவர்சு வாமி பத்தர்
     திக்குகளொர் நாலி ரட்டின் ...... கிரிசூழச் 
செக்கணரி மாக னைக்குஞ் சித்தணிகை வாழ்சி வப்பின்
     செக்கர்நிற மாயி ருக்கும் ...... பெருமாளே.
எத்தனை கலகச் சண்டைகள், எத்தனை சித்து வேலைகள், அங்கு எத்தனை வியாதிகள், எத்தனை பைத்தியக்காரச் செயல்கள், அசையும் உயிராகவும், அசையாததாகவும் உலகில் எடுத்த உடல்கள் எத்தனை, நீங்காத அச்சம் தரும் செயல்கள் எத்தனை, அங்கே வலிமையுடைய ஆண்மைச் செயல்கள்தாம் எத்தனை, அங்கே ஆசைகள் எத்தனை விதமானவையோ, புலால் உண்டு தினந்தோறும் பசியாறக்கூடிய செயல்கள் எத்தனை, பித்துப்பிடித்தவன் போன்ற யான் வயிற்றில் உண்டு இவ்வாறு கெட்டுப் போகாமல் பிறவியினின்றும் விடுதலை பெற்றிட, உனது அடியார் கூட்டத்தின் செயல்களான தன்மையும், யாராலும் உணர்தற்கு அரியதாக நிற்பதும், பரவிப் பிரகாசிக்கின்ற ஒளிமயமான ப்ரணவ மந்திரப் பொருளாக நிற்பதும், பாச பந்தங்களால் அறிவதற்கு அரிதாக நிற்பதுமான உன் கழல்களைத் தந்தருள்க. தத்தனத னாத னத்தந் தத்தனத னாத னத்தந் தத்தனத னாத னத்தந் தகுதீதோ தக்குகுகு டூடு டுட்டுண் டிக்குகுகு டீகு தத்தந் தத்தனத னாத னத்தந் தத்தனத னாத னத்தந் தத்தனத னாத னத்தந் தகுதீதோ தக்குகுகு டூடு டுட்டுண் டிக்குகுகு டீகு தத்தந் தத்தனத னான - என்ற தாளத்தில் ஒலிக்கும் நூற்றுக்கணக்கான முரசுகளின் ஒலயுடன், சித்தர்களும், மலை வேடர்களும், அரசர்களும், இறைவனின் அடியார்களும், எட்டுத் திக்குகளிலும் மலையை வலம் வந்து பணிய, சிவந்த கண்களை உடைய சிங்கம் கர்ஜிக்கும் ஞானத் திருத்தணிகை மலையில் வாழ்பவனே, செக்கச் சிவந்த நிறத்திலே இருக்கும் பெருமாளே. 
பாடல் 248 - திருத்தணிகை
ராகம் - ஡ணதி கொளை; தாளம் - ஆதி - எடுப்பு 3/4 இடம்
தனத்த தானன தத்தன தத்தன
     தனத்த தானன தத்தன தத்தன
          தனத்த தானன தத்தன தத்தன ...... தனதான
எலுப்பு நாடிக ளப்பொடி ரத்தமொ
     டழுக்கு மூளைகள் மச்சொடு கொட்புழு
          விருக்கும் வீடதி லெத்தனை தத்துவ ...... சதிகாரர் 
இறப்பர் சூதக வர்ச்சுத ரப்பதி
     யுழப்பர் பூமித ரிப்பர்பி றப்புட
          னிருப்பர் வீடுகள் கட்டிய லட்டுறு ...... சமுசாரம் 
கெலிப்பர் மால்வலை பட்டுறு துட்டர்கள்
     அழிப்பர் மாதவ முற்றுநி னைக்கிலர்
          கெடுப்பர் யாரையு மித்திர குத்தரர் ...... கொலைகாரர் 
கிருத்தர் கோளகர் பெற்றுதி ரிக்கள
     வரிப்பர் சூடக ரெத்தனை வெப்பிணி
          கெலிக்கும் வீடதை நத்தியெ டுத்திவ ...... ணுழல்வேனோ 
ஒலிப்பல் பேரிகை யுக்ரவ மர்க்கள
     மெதிர்த்த சூரரை வெட்டியி ருட்கிரி
          யுடைத்து வானவர் சித்தர்து தித்திட ...... விடும்வேலா 
உலுத்த ராவண னைச்சிர மிற்றிட
     வதைத்து மாபலி யைச்சிறை வைத்தவன்
          உலக்கை ராவிந டுக்கடல் விட்டவன் ...... மருகோனே 
வலிக்க வேதனை குட்டிந டித்தொரு
     செகத்தை யீனவள் பச்சைநி றத்தியை
          மணத்த தாதைப ரப்ரம ருக்கருள் ...... குருநாதா 
வனத்தில் வாழும யிற்குல மொத்திடு
     குறத்தி யாரைம யக்கிய ணைத்துள
          மகிழ்ச்சி யோடுதி ருத்தணி பற்றிய ...... பெருமாளே.
எலும்பு, நாடிகள், நீருடனும், ரத்தத்துடனும், அழுக்குகள், மூளைகள், தகுதியின்றி உள்ளிருக்கும் புழுக்கள், இவையாவும் நிறைந்திருக்கும் வீடு இந்த உடல். அத்தகைய வீட்டில் எத்தனை குணத்து மோசக்காரர்கள், அக்கிரமக்காரர்கள், சூதான உள்ளத்து மக்கள், தம் வறட்டுப் பேச்சால் ஊரையே ஏமாற்றுபவர்கள், பூமியில் தோன்றி, பிறந்த பிறப்புடன் முன்னேற்றம் இன்றி இருப்பவர்கள், வீடுகள் பலவற்றைக் கட்டி மிகவும் அலட்டிக்கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெற்றதைப் பேசித் திரிபவர், மோகவலையில் விழுந்து கிடக்கும் துஷ்டர்கள், பெரிய தவநிலையைப்பற்றி சற்றேனும் நினைத்துப் பார்க்காமல் அழிப்பவர்கள், யாவரையும் கெடுப்பவர்கள், நண்பர்களுக்கும் வஞ்சனை செய்பவர்கள், கொலைகாரர்கள், செருக்கு மிகுந்தவர்கள், கோள் சொல்பவர்கள் முதலியோருடன் சேர்ந்து திரிந்து திருட்டுத்தொழிலில் ஈடுபடுபவர்கள், கோப நெஞ்சினர் ஆகியோரையும், எத்தனை வியாதிகள் உண்டோ அத்தனையையும், வெற்றி பெற உழலும் இத்தகைய உடலாகிய வீட்டை நான் ஆசைப்பட்டு எடுத்து இந்த உலகில் அலைந்து திரிவேனோ? ஒலிக்கின்ற பல முரசு வாத்தியங்கள் முழங்கும் கடுமையான போர்க்களத்தில் எதிர்த்துவந்த அசுர வீரர்களை வெட்டி அழித்து, மாயை சூழ்ந்த கிரெளஞ்சமலையைப் பிளந்து எறிந்து, தேவர்களும் சித்தர்களும் வணங்கும்படியாகச் செலுத்திய வேலை உடையவனே, காமாந்தகனான ராவணனைச் சிரம் அற்று விழ அவனை வதைத்தவனும், (தன் பாதத்தை அவன் தலைமேல் வைத்து) மகாபலியைப் பாதாளத்தில் தள்ளிச் சிறை வைத்தவனும், இரும்பு உலக்கையைப் பொடிப்பொடியாக்கி நடுக்கடலில் கரைத்தவனும்* ஆகிய திருமாலின் மருகனே, வலி உண்டாகும்படியாக வேதப் பிரமனை சிரங்களில் குட்டினவனே, நடனம் செய்து ஒப்பற்ற உலகத்தை ஈன்ற தாயான பச்சை நிறப் பார்வதியை மணந்த தந்தையாகிய பரப்பிரம்மப் பொருளான சிவபிரானுக்கு உபதேசித்து அருளிய குருநாதனே, காட்டிலே வாழும் மயிலினம் போன்ற அழகியான குறத்தியாகிய வள்ளிதேவியை மயக்கி அணைத்து, மனமகிழ்ச்சியுடன் திருத்தணித்தலத்தில் பற்றுடன் வீற்றிருக்கும் பெருமாளே. 
* யாதவர்கள் தங்களுள் சாம்பன் என்பவனுக்கு கர்ப்பிணி வேஷமிட்டு, துர்வாச முனிவரை இவளுக்குப் பிறப்பது ஆணோ பெண்ணோ எனக் கேட்க, கோபமடைந்த துர்வாசர் ஓர் இரும்பு உலக்கை பிறக்கும், அதுவே யாதவர் குலத்தை அழிக்கும் என்று சபித்தார். இதை அறிந்த கண்ணன், பிறந்த உலக்கையைப் பொடியாக்கி நடுக்கடலில் கரைக்கச் செய்தான். பின்னர் உலக்கைப் பொடி கரையிலே வந்து கோரைப்புல்லாக முளைக்க, யாதவர் தம்முள் கலகம் மூண்டதும் அப்புல்லைப் பிடுங்கி ஒருவரை மற்றவர் குத்தி இறந்தனர். இரும்புத் துண்டு ஒன்று மீனின் வயிற்றில் வளர, அம்மீனைப் பிடித்த ஒரு வேடன் வயிற்றிலிருந்த துண்டைத் தன் அம்புநுனியில் வைத்தான். கண்ணனின் இறுதி நாளன்று தூக்கி வைத்திருந்த கண்ணனின் பாதத்தைப் பறவையென எண்ணி வேடன் அந்த அம்பை எய்தான். யாதவகுலத்தில் கடைசியாக எஞ்சிய கண்ணனும் பரமபதம் அடைந்தான்.
பாடல் 249 - திருத்தணிகை
ராகம் - மாயாமாளவகெளளை; தாளம் - ஆதி
தனத்தன தானம் தனத்தன தானம்
     தனத்தன தானம் ...... தனதான
எனக்கென யாவும் படைத்திட நாளும்
     இளைப்பொடு காலந் ...... தனிலோயா 
எடுத்திடு காயந் தனைக்கொடு மாயும்
     இலச்சையி லாதென் ...... பவமாற 
உனைப்பல நாளுந் திருப்புக ழாலும்
     உரைத்திடு வார்தங் ...... குளிமேவி 
உணர்த்திய போதந் தனைப்பிரி யாதொண்
     பொலச்சர ணானுந் ...... தொழுவேனோ 
வினைத்திற மோடன் றெதிர்த்திடும் வீரன்
     விழக்கொடு வேள்கொன் ...... றவனீயே 
விளப்பென மேலென் றிடக்கய னாரும்
     விருப்புற வேதம் ...... புகல்வோனே 
சினத்தொடு சூரன் தனைக்கொடு வேலின்
     சிரத்தினை மாறும் ...... முருகோனே 
தினைப்புன மோவுங் குறக்கொடி யோடுந்
     திருத்தணி மேவும் ...... பெருமாளே.
எனக்கென்றே எல்லாம் சேகரிக்க வேண்டி தினந்தோறும் இளைப்பு உண்டாகும்படியாக பலகாலமாய் ஓய்ச்சல் இல்லாமல் எடுக்கின்ற தேகங்களுடன் பிறந்து (பின்னர் அவை) இறந்து போகும் வெட்கம் இல்லாத என் பிறப்பு ஓய்வு பெற, உன்னை பலகாலமும் திருப்புகழ் பாடிப் புகழ்கின்றவர்கள் அவர்களது இருப்பிடம் சென்றடைந்து விளக்கும் அறிவுரையை விட்டுவிலகாது ஒளி பொருந்திய உன் திருவடியை நான் தொழும் பாக்கியம் பெறுவேனோ? தன் தொழிலில் திறமையுடன் அன்றொருநாள் எதிர்த்துவந்து அம்பு எய்த வீரனாம் (மன்மதன்) வெந்து விழும்படி அந்த மன்மதனைக் கொன்றவனாகிய சிவன் நீயே (பிரணவப் பொருளை) இனி உரைப்பாயாக என்று கூறிட பிரமனும் விரும்பி மகிழ, வேதப் பொருளை உரைத்தவனே கோபத்துடன் சூரனைக் கடுமைகொண்ட வேலால் (அவனது) சிரத்தை அறுத்த முருகோனே தினைப்புனத்தில் வாசம் செய்த குறப்பெண் வள்ளியுடன் திருத்தணிகையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 250 - திருத்தணிகை
ராகம் - ஆனந்த பைரவி; தாளம் - திஸ்ரத்ருவம் 
- திஸ்ர நடை - 16 1/2, - எடுப்பு - /3/3/3 0
தனன தந்த தத்த தனன தந்த தத்த
     தனன தந்த தத்த ...... தனதான
எனைய டைந்த குட்டம் வினைமி குந்த பித்த
     மெரிவ ழங்கு வெப்பு ...... வலிபேசா 
இகலி நின்ற லைக்கு முயல கன்கு லைப்பொ
     டிரும லென்று ரைக்கு ...... மிவையோடே 
மனைகள் பெண்டிர் மக்கள் தமைநி னைந்து சுத்த
     மதிம யங்கி விட்டு ...... மடியாதே 
மருவி யின்றெ னக்கு மரக தஞ்சி றக்கு
     மயிலில் வந்து முத்தி ...... தரவேணும் 
நினைவ ணங்கு பத்த ரனைவ ருந்த ழைக்க
     நெறியில் நின்ற வெற்றி ...... முனைவேலா 
நிலைபெ றுந்தி ருத்த ணியில்வி ளங்கு சித்ர
     நெடிய குன்றில் நிற்கு ...... முருகோனே 
தினைவி ளங்க லுற்ற புனஇ ளங்கு றத்தி
     செயல றிந்த ணைக்கு ...... மணிமார்பா 
திசைமு கன்தி கைக்க அசுர ரன்ற டைத்த
     சிறைதி றந்து விட்ட ...... பெருமாளே.
எனக்கு வந்த குஷ்டநோய், வினைக்கு ஈடாக மிகுந்துவரும் பித்த நோய், கொதிப்பைத் தருகிற காய்ச்சல், சொல்ல முடியாத வலியோடு, மாறுபட்டுத் துயர்தந்து வருத்தும் முயலகன் என்ற வலிப்புநோய், நடுக்க நோயுடன், இருமல் எனச் சொல்லப்படும் இந்த நோய்களுடனே தவித்து, வீடுகள், பெண்டிர், மக்கள் என்ற இவர்களை நினைந்து வருந்தி, நல்லறிவு மயங்கிப்போய் அடியேன் இறக்காதவண்ணம், நீ இன்று என்முன் தோன்றி, மரகத ஒளிவீசும் பச்சைமயில் வாகனத்தில் வந்து எனக்கு பேரின்ப முக்தியை அருள்வாயாக. உன்னைத் தொழும் அடியார்கள் யாவரும் சுகத்துடன் இருக்கும்படி அதற்கான வழியில் அவர்களுடன் நின்று, கையில் வெற்றிபெறும் கூரிய வேலாயுதத்துடன் நிற்கும் வேலனே, அழியாத திருத்தணிகைப் பதியில் விளங்குகின்ற அழகிய நெடிய குன்றத்தில் எழுந்தருளியுள்ள முருகனே, தினைப்பயிர் செழிப்பாக வளர்ந்துள்ள புனத்தில் வாழும் இளம் குமரியான குற வள்ளியை, அவளுடைய அன்புச்செயலை அறிந்து அணைக்கின்ற அழகிய திருமார்பினனே, பிரமதேவன் திகைக்குமாறு அசுரர்கள் அந்நாளில் தேவர்களை அடைத்துவைத்த சிறைகளைத் திறந்து விட்டு தேவர்களை விடுவித்த பெருமாளே. 

பாடல் 226 - சுவாமி மலை
ராகம் - ....; தாளம் -

தனதன தானன, தனதன தானன     தனதன தானன ...... தனதான

பரவரி தாகிய வரையென நீடிய     பணைமுலை மீதினி ...... லுருவான 
பணிகளு லாவிட இழையிடை சாய்தரு     பயிலிகள் வாள்விழி ...... அயிலாலே 
நிரவரி யோடியல் குழல்களி னாண்மலர்     நிரைதரு மூரலி ...... னகைமீது 
நிலவியல் சேர்முக மதிலுயர் மாமயல்     நிலையெழ வேயலை ...... வதுவாமோ 
அரவணை யார்குழை பரசிவ ஆரண     அரனிட பாகம ...... துறைசோதி 
அமையுமை டாகினி திரிபுரை நாரணி     அழகிய மாதருள் ...... புதல்வோனே 
குரவணி பூஷண சரவண தேசிக     குககரு ணாநிதி ...... அமரேசா 
குறமக ளானைமின் மருவிய பூரண     குருகிரி மேவிய ...... பெருமாளே.

வணங்கிப் போற்றுதற்கு அரியதான மலை என்னும்படி பரந்துள்ள பெரிய மார்பகங்களின் மேல் அலங்காரமான அணிகலன்கள் விளங்க, நூல் போன்ற இடை சாயும்படி நடை பழகுபவருடைய ஒளி விளங்கும் அம்பு போன்ற கண்கள் மீதும், விரைந்து வரும் வண்டுகளோடு கூடியுள்ள கூந்தல்களின் புது மலர் மீதும், வரிசையாய் விளங்கி புன்சிரிப்பைக் காட்டும் பற்கள் மீதும், சந்திரனைப் போன்ற முகத்தின் மீதும் எழுகின்ற அதிக மோகம், நிலை பெற்று என் மனத்தில் தோன்றுவதால் என் நெஞ்சம் அலைபாயலாமோ? பாம்பைப் பொருந்திய குண்டலமாக உடைய பரம சிவன், வேதம் போற்றும் அரன் (எனப்படும் பெருமானுடைய) இடப் பாகத்தில் உறைகின்ற ஜோதி, அம்மை, உமாவாகிய பார்வதி, தேவி, திரி புரத்தை எரித்தவள், துர்க்கை, அழகிய மாதாகிய பார்வதி அருளிய மகனே, குரா மலரை அணிகின்ற ஆபரணமாகக் கொண்டவனே, சரவணனே, குரு மூர்த்தியே, குகனே, கருணை நிதியே, தேவர்களுக்கு ஈசனே, குறப் பெண்ணாகிய வள்ளி, (ஐராவதம் என்ற) யானையால் வளர்க்கப்பட்ட மின்னல் போன்ற தேவயானை (ஆகிய இருவரும்) சேர்ந்துள்ள முழுப் பொருளே, சுவாமி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* டாகினி, காகினி, லாகினி, ஹாகினி, ராகினி, சாகினி என்பன தேவியைக் குறிப்பனவாகும்.

பாடல் 227 - சுவாமி மலை
ராகம் - ....; தாளம் -

தனதான தத்ததன தனதான தத்த     தனதான தத்ததன ...... தனதான

பலகாதல் பெற்றிடவு மொருநாழி கைக்குளொரு
     பலனேபெ றப்பரவு ...... கயவாலே 
பலபேரை மெச்சிவரு தொழிலேசெ லுத்தியுடல்     பதறாமல் வெட்கமறு ...... வகைகூறி 
விலகாத லச்சைதணி மலையாமு லைச்சியர்கள்     வினையேமி குத்தவர்கள் ...... தொழிலாலே 
விடமேகொ டுத்துவெகு பொருளேப றித்தருளும்     விலைமாதர் பொய்க்கலவி ...... யினிதாமோ 
மலையேயெ டுத்தருளு மொருவாள ரக்கனுடல்     வடமேரெ னத்தரையில் ...... விழவேதான் 
வகையாவி டுத்தகணை யுடையான்ம கிழ்ச்சிபெறு     மருகாக டப்பமல ...... ரணிமார்பா 
சிலகாவி யத்துறைக ளுணர்வோர்ப டித்ததமிழ்     செவியார வைத்தருளு ...... முருகோனே 
சிவனார்த மக்குரிய வுபதேச வித்தையருள்     திருவேர கத்தில்வரு ...... பெருமாளே.

பல பேர்களுடைய காதலைப் பெற்றிடவும் ஒரு நாழிகைப் பொழுதுக்குள் ஒரு பலனைப் பெற வேண்டியும் சூழ்ச்சி செய்யும் களவுச் செயலாலே, பல பேர்களை மெச்சி வருகின்ற தொழில்களையே நடத்தி உடல் பதறுதல் இல்லாமல் வெட்கம் அற்றவகையில் பேசி, இயற்கையில் நீங்காத நாணம் தணிந்த, மலை போன்ற மார்பகத்தைக் காட்டி பொது மகளிர் தங்கள் தொழிலில் மிகவும் சாமர்த்தியமாக ஈடுபடுபவர்கள். விஷத்தைக் (குடிக்கக்) கொடுத்து (காமுகரின்) எல்லாப் பொருளையும் அபகரிக்கும் விலை மகளிர்களின் பொய்யான கலவி இன்பம் இனிமை ஆகுமோ? (கயிலை) மலையை எடுத்தவனும், ஒப்பற்ற வாளை ஏந்திய அரக்கனும் ஆகிய ராவணனுடைய உடல் வடக்கே உள்ள மேருவே விழுந்தது என்னும்படி தரையில் விழவே, தக்க விதத்தில் செலுத்திய அம்பை உடையவனாகிய ராமனாகிய திருமால் மகிழும் மருகனே, கடப்ப மாலையை அணிந்த மார்பனே, சில காவிய நூல்களின் உண்மைப் பொருளை அறிந்த அறிஞர்கள் ஓதிய தமிழை செவிகுளிர ஏற்றருளும் முருகனே, சிவ பெருமானுக்கு உரிய உபதேச மூல மந்திரத்தை அருளி, சுவாமி மலையில் எழுந்தருளியிருக்கும் பெருமாளே.

பாடல் 228 - சுவாமி மலை
ராகம் - காபி, தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2 தகிட-1 1/2, தகதிமி 2

தான தனதன தான தனதன     தான தனதன ...... தனதான

பாதி மதிநதி போது மணிசடை     நாத ரருளிய ...... குமரேசா 
பாகு கனிமொழி மாது குறமகள்     பாதம் வருடிய ...... மணவாளா 
காது மொருவிழி காக முறஅருள்     மாய னரிதிரு ...... மருகோனே 
கால னெனையணு காம லுனதிரு     காலில் வழிபட ...... அருள்வாயே 
ஆதி யயனொடு தேவர் சுரருல     காளும் வகையுறு ...... சிறைமீளா 
ஆடு மயிலினி லேறி யமரர்கள்     சூழ வரவரு ...... மிளையோனே 
சூத மிகவளர் சோலை மருவுசு     வாமி மலைதனி ...... லுறைவோனே 
சூர னுடலற வாரி சுவறிட     வேலை விடவல ...... பெருமாளே.

பிறைச் சந்திரனையும், கங்கை நதியையும், கொன்றை மலரையும் அணிந்த சடைப் பெருமான் சிவபிரான் அருளிய குமரேசனே, சர்க்கரைப் பாகும், கனிகளும் போன்ற இனிய மொழியை உடைய மாதரசி, குறமகளாகிய வள்ளியின் பாதத்தைப் பிடித்துவிடும் மணவாளனே, பிரிக்கப்பட்ட ஒரு விழியை* காகாசுரன் என்னும் காகம் அடையும்படி அருளிய ஸ்ரீராமர் மாய ஹரிக்கும், லக்ஷ்மிக்கும் மருமகனே, யமன் என்னை அணுகாத வகைக்கு உன் இரு திருவடிகளில் வழிபடும் புத்தியை அருள்வாயாக. ஆதி பிரமனோடு அமரர்கள் அனைவரும் தேவலோகத்தை ஆளும்படி சிறையினின்று அவர்களை மீட்டவனே, நடனம் ஆடும் மயில் மீது ஏறி தேவர்கள் உன்னைச் சூழ்ந்துவர வருகின்ற இளையவனே, மாமரங்கள் மிகுந்து வளர்ந்த சோலைகள் நிறைந்த சுவாமிமலையில் வீற்றிருப்பவனே, சூரனின் உடல் வீழ, கடல் வற்றிப்போக, வேலினைச் செலுத்தவல்ல பெருமாளே. 
* சீதையின் மார்பை தன் அலகால் கொத்தின காகத்தின் மீது புல்லையே படையாக்கி ஸ்ரீராமர் செலுத்த, அப்படைக்கு அஞ்சி, காப்பவர் யாருமின்றி, ஸ்ரீ ராமரையே காகம் சரணடைய, அவர் அக்காகத்திற்கு அருளி, காகத்தின் ஒரு கண்மணியைப் பிரித்து, கண்களிரண்டிற்கும் ஒரு மணியேயென தண்டித்தார். காகாசுரனாக சாபத்தினால் வந்தது தேவேந்திரனது குமாரன் ஜயந்தன் ஆகும்.

பாடல் 229 - சுவாமி மலை
ராகம் - ....; தாளம் -

தனன தான தத்த தனன தான தத்த     தனன தான தத்த ...... தனதான

மகர கேத னத்த னுருவி லானெ டுத்து     மதுர நாணி யிட்டு ...... நெறிசேர்வார் 
மலைய வேவ ளைத்த சிலையி னூடொ ளித்த     வலிய சாய கக்கண் ...... மடமாதர் 
இகழ வாச முற்ற தலையெ லாம்வெ ளுத்து     இளமை போயொ ளித்து ...... விடுமாறு 
இடைவி டாதெ டுத்த பிறவி வேர றுத்து     னினிய தாள ளிப்ப ...... தொருநாளே 
அகில மேழு மெட்டு வரையின் மீது முட்ட     அதிர வேந டத்து ...... மயில்வீரா 
அசுரர் சேனை கெட்டு முறிய வான வர்க்கு     அடைய வாழ்வ ளிக்கு ...... மிளையோனே 
மிகநி லாவெ றித்த அமுத வேணி நிற்க     விழைசு வாமி வெற்பி ...... லுறைவோனே 
விரைய ஞான வித்தை யருள்செய் தாதை கற்க     வினவ வோது வித்த ...... பெருமாளே.

மீன் கொடியை உடையவனும், உருவம் இல்லாதவனுமாகிய மன்மதன் கையில் எடுத்து, இனிமை தரும் (கரும்பு வில்லில்) நாணை இட்டு, நல்ல நெறியில் இருப்பவர்களும் மயங்கித் திகைக்கும்படி வளைத்த வில்லின் உள்ளே மறைத்து வைத்த வலிய அம்பாகிய கண்ணை உடைய அழகிய (விலை) மாதர்கள் இகழும்படி, (ஒரு காலத்தில்) மணம் இருந்த தலையின் கருமயிர் முழுமையும் வெளுத்து, இளமை என்பது கடந்துபோய் எங்கோ மறைந்து புதைந்துவிடும்படி, இடைவிடாமல் இதுவரை நான் எடுத்த பிறவி என்பதின் வேரை அறுத்து, உனது இனிமையான திருவடியை நீ தந்து அருளும் ஒரு நாள் கிட்டுமோ? ஏழு உலகங்கள் மீதும், அஷ்ட கிரிகளின் மீதும் முட்டும்படியாக அதிரவே செலுத்துகின்ற மயில் வீரனே, அசுரர்களின் சேனைகள் கெட்டு முறிய, தேவர்களுக்கு முழு வாழ்வை அளித்த இளையவனே, மிகவும் நிலவொளியை வீசுகின்ற அமுத சடையராகிய சிவபெருமான் உன்முன் நின்று கேட்க விரும்புகின்ற சுவாமி மலையில் (உபதேச கோலத்தில்) வீற்றிருப்பவனே, விரைவில் ஞான மூலப் பொருளை (அடியார்களுக்கு) அருள் செய்கின்ற தந்தையாகிய சிவபெருமான், தான் அதனை அறிய வேண்டிக் கற்க, அவர் கேட்க அப்பொருளை அவருக்கு உபதேசித்த பெருமாளே. 

பாடல் 230 - சுவாமி மலை
ராகம் - ....; தாளம் -

தனனா தனத்த தனனா தனத்த     தனனா தனத்த ...... தனதான

மருவே செறித்த குழலார் மயக்கி     மதனா கமத்தின் ...... விரகாலே 
மயலே யெழுப்பி யிதழே யருத்த     மலைபோல் முலைக்கு ...... ளுறவாகிப் 
பெருகாத லுற்ற தமியேனை நித்தல்     பிரியாது பட்ச ...... மறவாதே 
பிழையே பொறுத்து னிருதாளி லுற்ற     பெருவாழ்வு பற்ற ...... அருள்வாயே 
குருவா யரற்கு முபதேசம் வைத்த     குகனே குறத்தி ...... மணவாளா 
குளிர்கா மிகுத்த வளர்பூக மெத்து     குடகா விரிக்கு ...... வடபாலார் 
திருவே ரகத்தி லுறைவா யுமைக்கோர்     சிறுவா கரிக்கு ...... மிளையோனே 
திருமால் தனக்கு மருகா வரக்கர்     சிரமே துணித்த ...... பெருமாளே.

மருக்கொழுந்து வாசனை மிகுந்த கூந்தலையுடைய பெண்கள் என்னை மயக்கி காம சாஸ்திரத்தின் தந்திர வகைகளாலே மோகத்தை மூட்டிவிட்டு, வாயிதழ் ஊறலை ஊட்டிவிட, மலைபோன்ற அவர்களின் மார்பகங்களில் விருப்பங்கொண்டு மிக்க ஆசை பூண்ட அடியேனை நித்தமும் பிரியாமலும், என்னிடம் அன்பு மாறாமலும், என் பிழைகளைப் பொறுத்து உன் இரண்டு திருவடிகளிலும் பொருந்தியுள்ள பேரின்பப் பெருவாழ்வை யான் பற்றும்படியாக அருள் புரிவாயாக. குருமூர்த்தியாக நின்று சிவபெருமானுக்கும் பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்த குகனே, குறத்தி வள்ளியின் மணவாளனே, குளிர்ந்த சோலைகளால் நிறைந்த, வளர்ந்தோங்கிய கமுக மரங்கள் சூழ்ந்த, மேற்கினின்று வரும் காவிரிக்கு வடபாலுள்ள திருவேரகமாம் சுவாமிமலையில் வாழ்பவனே, உமாதேவியின் ஒப்பற்ற மகனே, யானைமுகக் கணபதிக்குத் தம்பியே, திருமாலுக்கு மருமகனே, அரக்கரின் சிரங்களை வெட்டியெறிந்த பெருமாளே. 

பாடல் 23 1 - சுவாமி மலை
ராகம் - ....; தாளம் -

தனன தான தனன தந்த, தனன தான தனன தந்த     தனன தான தனன தந்த ...... தனதான

முறுகு காள விடம யின்ற இருகண் வேலி னுளம யங்கி     முளரி வேரி முகைய டர்ந்த ...... முலைமீதே 
முழுகு காதல் தனைம றந்து பரம ஞான வொளிசி றந்து     முகமொ ராறு மிகவி ரும்பி ...... அயராதே 
அறுகு தாளி நறைய விழ்ந்த குவளை வாச மலர்க ரந்தை     அடைய வாரி மிசைபொ ழிந்து ...... னடிபேணி 
அவச மாகி யுருகு தொண்ட ருடன தாகி விளையு மன்பி     னடிமை யாகு முறைமை யொன்றை ...... அருள்வாயே 
தறுகண் வீரர் தலைய ரிந்து பொருத சூர னுடல்பி ளந்து     தமர வேலை சுவற வென்ற ...... வடிவேலா 
தரள மூர லுமைம டந்தை முலையி லார அமுத முண்டு     தரணி யேழும் வலம்வ ருந்திண் ...... மயில்வீரா 
மறுவி லாத தினைவி ளைந்த புனம்வி டாம லிதணி ருந்து     வலிய காவல் புனைய ணங்கின் ...... மணவாளா 
மருவு ஞாழ லணிசெ ருந்தி யடவி சூத வனநெ ருங்கி     வளர்சு வாமி மலைய மர்ந்த ...... பெருமாளே.

கடுமையாகப் பொங்கி எழுந்த ஆலகால விஷத்தை உண்ட இரண்டு கண்களாகிய வேலினால் (இப் பொது மகளிரிடம்) மனம் மயங்கி, தாமரையின் மணம் உள்ள மொட்டுப் போன்ற மார்பின் மேல் முழுகுகின்ற காதலை மறந்து, மேலான ஞான ஒளியைச் சிறந்து வீசும் உனது ஆறு முகங்களையும் மிகவும் விரும்பி, சோர்வில்லாமல், அறுகம் புல், ஊமத்தை, மணம் வீசும் குவளை, வாசம் மிக்க திரு நீற்றுப் பச்சை வில்வ இவைகளை எல்லாம் நிரம்ப உன் பாதங்களின் மேலே சொரிந்து உனது திருவடியை விரும்பி, தன் வசம் அழிந்து மனம் உருகுகின்ற அடியார்களுடன் கலந்து கூடி, அதனால் உண்டாகும் அன்பினால் அடிமை என்னும் ஒழுக்க முறைமை பெறக் கூடிய ஒரு பேற்றை அருள்வாயாக. அஞ்சாமை கொண்ட வீரர்களின் தலைகளை வெட்டிச் சண்டை செய்த சூரனுடைய உடலை இரு கூறாகப் பிளந்து, ஒலிக்கும் கடல் வற்றும்படி வென்ற கூரிய வேலனே, முத்துப் போன்ற பற்களை உடைய உமாதேவியின் மார்பகங்களில் நிரம்ப பால் அமுதம் உண்டு, ஏழு உலகங்களையும் வலம் வந்த வலிய மயில் வீரனே, குற்றம் இல்லாத தினை விளைந்த புனத்தை விட்டு நீங்காது, பரண் மீது இருந்து பலமாகக் காவல் புரிந்த அணங்காகிய வள்ளியின் கணவனே, பொருந்திய புலி நகக் கொன்றை, அழகிய செருந்தி இவையுள்ள நந்தவனமும், மாமரக் காடும் நெருங்கி வளரும் (சுவாமிமலையில்) திருவேரகத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 232 - சுவாமி மலை
ராகம் - ....; தாளம் -

தானதன தான தந்த தானதன தான தந்த     தானதன தான தந்த ...... தனதான

வாதமொடு சூலை கண்ட மாலைகுலை நோவு சந்து     மாவலிவி யாதி குன்ம ...... மொடுகாசம் 
வாயுவுட னேப ரந்த தாமரைகள் பீன சம்பின்     மாதர்தரு பூஷ ணங்க ...... ளெனவாகும் 
பாதகவி யாதி புண்க ளானதுட னேதொ டர்ந்து     பாயலைவி டாது மங்க ...... இவையால்நின் 
பாதமல ரான தின்க ணேயமற வேம றந்து     பாவமது பான முண்டு ...... வெறிமூடி 
ஏதமுறு பாச பந்த மானவலை யோடு ழன்று     ஈனமிகு சாதி யின்க ...... ணதிலேயான் 
ஈடழித லான தின்பின் மூடனென வோது முன்புன்     ஈரஅருள் கூர வந்து ...... எனையாள்வாய் 
சூதமகிழ் பாலை கொன்றை தாதுவளர் சோலை துன்றி     சூழமதில் தாவி மஞ்சி ...... னளவாகத் 
தோரணநன் மாட மெங்கு நீடுகொடி யேத ழைந்த     சுவாமிமலை வாழ வந்த ...... பெருமாளே.

வாத நோய், வயிற்றுளைவு நோய், கழுத்தைச் சுற்றி வரும் புண் கட்டி, மார்பு எரிச்சல், எலும்புருக்கி நோய், பெரிய இழுப்பு நோய், மகோதரத்துடன், கோழை நோய், வாயுவினால் உண்டாகும் படர்தாமரை போன்ற சொறி, படை, மூக்கடைப்பு, பின்னும் ஒழுக்கம் கெட்ட விலைமாதர்களுடன் இணைவதால் கிடைக்கும் ஆபரணங்கள் என்று சொல்லத்தக்க புண் வகைகள், பாவ நோய்ப் புண்கள் ஆகிய இவை உடனே என்னைப் பீடிப்பதால், படுக்கையை விடாது கிடந்து, உடல் நலம் குறைந்து, இக்காரணத்தால் உனது திருவடி மலர்களில் அன்பு என்பதை முற்றும் மறந்து, பாவம் நிறைந்த கள்ளைக் குடித்து, அதனால் மயக்கம் மிகுந்து, குற்றம் தரும் பந்த பாசக் கட்டுகளான வலையில் அகப்பட்டு அலைந்து, இழிவான என் ஜாதித் தொழில்களிலே ஈடுபட்டு, நான் வலிமை அற்று அழிந்த பின், இவன் ஒரு முட்டாள் எனப் பிறர் கூறுவர். (அங்ஙனம் பிறர்) சொல்லுவதற்கு முன்பு உனது கருணை நிறைந்த திருவருள் மிக்கு வந்து என்னை ஆட் கொள்வாயாக. மாமரம், மகிழ மரம், பாலை மரம், கொன்றை மரம் (இவைகளின்) பூந்தாது நிறைந்துள்ள சோலைகள் நெருங்கியுள்ளதும், சூழ்ந்துள்ள மதில் உயர்ந்து மேகத்தை அளாவி நிற்பதும், தோரணங்கள், நல்ல வீடுகளில் எங்கும் உயர் கொடிகள் தழைந்துள்ளதுமான, சுவாமிமலையில் வாழ வந்த பெருமாளே. 

பாடல் 233 - சுவாமி மலை
ராகம் - ....; தாளம் -

தான தத்த தந்த தான தத்த தந்த     தான தத்த தந்த ...... தனதான

வார முற்ற பண்பின் மாத முற்ற நண்பி     னீடு மெய்த்து யர்ந்து ...... வயதாகி 
வாலை யிற்றி ரிந்து கோல மைக்கண் மங்கை     மார்க ளுக்கி சைந்து ...... பொருள்தேடி 
ஆர மிக்க பொன்க ளால மைத்த மர்ந்த     மாப ணிக்கள் விந்தை ...... யதுவான 
ஆட கொப்ப மைந்த வோலை முத்த முங்கொ     டாவி மெத்த நொந்து ...... திரிவேனோ 
சூர னைத்து ரந்து வேர றப்பி ளந்து     சூழ்சு ரர்க்க ணன்பு ...... செயும்வீரா 
சூக ரத்தொ டம்பு தானெ டுத்து வந்த     சூத னுக்கி சைந்த ...... மருகோனே 
ஏரெ திர்த்து வந்து நீர்கள் கட்டி யன்று     தானி றைக்க வந்த ...... தொருசாலி 
யேமி குத்து யர்ந்த மாவ யற்கள் மிஞ்சு     மேர கத்த மர்ந்த ...... பெருமாளே.

(கணவனுக்கும் மனைவிக்கும்) அன்பு பூண்ட தன்மையில் (கருவுற்று), மாதங்கள் பல செல்ல (வளர்ந்து), அந்த அன்பினால் வளரும் உடலில் பிறந்து, வயது நிரம்பி, காளைப் பருவத்தில் திரிதலுற்று, அழகிய மை பூசிய கண்களை உடைய பெண்களிடத்தே நேசம் கொண்டு, (அவர்களுக்குக் கொடுக்கப்) பொருள் தேடி, மாலைகள், நல்ல பொன்னால் செய்யப்பட்டு விளங்கும் சிறந்த ஆபரணங்கள், விசித்திரமான பொன்னால் வேலைப்பாடு அமைந்த காதணியையும், முத்துக்களையும் கொடுத்து, என் உயிர் மிகவும் நொந்து திரிவேனோ? சூரனை விரட்டி ஓட்டி அடியோடு அவனைப் பிளந்து, சூழ்ந்துள்ள தேவர்களிடத்தே அன்பு காட்டிய வீரனே, பன்றியின் உருக்கொண்டு (வராக அவதாரத்தில்)* அழகிய பூமியை மேலே எடுத்து வந்த தந்திரம் வாய்ந்த திருமாலுக்கு உகந்த மருகனே, ஏர் எதிர்த்து வர நீரைப் பாய்ச்சிக் கட்டி, அப்போதைக்கப்போது உழவர்கள் இறைத்ததன் பயனால் விளைந்த ஒப்பற்ற செந்நெல் பயிர்களே பெருகி உயர்ந்து வளர்ந்த சிறந்த வயல்கள் நிறைந்துள்ள சுவாமி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* திருமால் வராகாவதாரம் எடுத்த வரலாறு:இரணியாக்ஷன் என்னும் அசுரன் பூமியைப் பாய் போல் சுருட்டி எடுத்துக் கொண்டு பாதாளத்தில் மறைந்து கொண்டான்.திருமால் பன்றி உருவம் கொண்டு, பாதாளத்திற்குச் சென்று, தன் கொம்பினால் அவனைக் கொன்று, பூமியைக் கொம்பினால் தாங்கி மேலே கொண்டு வந்தார்.

பாடல் 234 - சுவாமி மலை
ராகம் - ....; தாளம் -

தானன தத்தன தத்தன தத்தன     தானன தத்தன தத்தன தத்தன          தானன தத்தன தத்தன தத்தன ...... தந்ததான

வார்குழ லைச்சொரு கிக்கரு விற்குழை     காதொடி ணைத்தசை யக்கதிர் பற்கொடு          வாயிதழ் பொற்கம லர்க்குமி ழொத்துள ...... துண்டக்¡£வ 
வார்கமு கிற்புய நற்கழை பொற்குவ     டாடிள நிர்ச்சுரர் பொற்குட மொத்திணை          மார்பழ கிற்பொறி முத்தொளிர் சித்திர ...... ரம்பைமாதர் 
காருறும் வித்திடை யிற்கத லித்தொடை     சேரல்குல் நற்பிர சத்தட முட்கொடு          கால்மறை யத்துவ ளச்செறி பொற்கலை ...... யொண்குலாவக் 
கார்குயி லைக்குர லைக்கொடு நற்றெரு     மீதில்நெ ளித்துந கைத்துந டிப்பவர்          காமனு கப்பம ளிச்சுழல் குத்திரர் ...... சந்தமாமோ 
சூரர்ப தைக்கர வுட்கிநெ ளித்துய     ராழியி ரைப்பநி ணக்குட லைக்கழு          சூழந ரிக்கெரு டக்கொடி பற்பல ...... சங்கமாகச் 
சூழ்கிரி யைக்கைத டித்தும லைத்திகை     யானையு ழற்றிந டுக்கிம தப்பொறி          சோரந கைத்தயி லைக்கொடு விட்டருள் ...... செங்கைவேலா 
ஏரணி நற்குழ லைக்கக னச்சசி     மோகினி யைப்புணர் சித்தொரு அற்புத          வேடமு தச்சொரு பத்தகு றத்திம ...... ணங்கொள்வோனே 
ஏரக வெற்பெனு மற்புத மிக்கசு     வாமிம லைப்பதி நிற்குமி லக்ஷண          ராஜத லக்ஷண லக்ஷ¤மி பெற்றருள் ...... தம்பிரானே.

நீண்ட கூந்தலை சொருகி, பெரிய பிரகாசம் பொருந்திய குண்டலங்கள் அணிந்துள்ள காதுடன் பொருந்தி அசையும்படி விட்டும், ஒளி வீசும் பற்கள் கொண்டும், வாய் இதழ் அழகு செய்ய குமிழ மலர் போன்ற மூக்கைக் கொண்டும், கழுத்தாகிய நீண்ட கமுகு கொண்டும், புயங்களாகிய பசிய மூங்கில் கொண்டும், பொன் மலை போன்றும், ஆடும் இள நீர் போன்றும், தேவர்களின் (அமுதம் கொண்ட) அழகிய குடம் போன்றும் விளங்கும் இரண்டு மார்பகங்கள் கொண்டும், மார்பில் அழகான தேமலுடன், முத்து மாலை கொண்டும் ஒளி வீசும் அழகிய ரம்பை போன்ற விலைமாதர்கள். கார்மேகத்தில் காணப்படும் மின்னல் போன்ற இடையும், வாழைத் தண்டு போன்ற தொடையும், (அங்கு) சேர்ந்துள்ள பெண்குறியாகிய தேன் பொதிந்துள்ள இடமும் உள்ளிருக்க, உள்ளங்கால் அளவும் மறையும்படி தொங்கி நெருங்கும் அழகிய புடைவை நன்கு விளங்க, கரிய குயிலின் குரல் போன்ற குரலுடன், அழகிய தெருவீதியில் உடலை நெளித்தும், நகை புரிந்தும் நடிப்பவர்கள். மன்மதன் மகிழும்படி படுக்கையில் புரளுகின்ற வஞ்சகர்கள் ஆகிய பொது மாதர்களின் அழகில் ஈடுபடுதல் ஆகுமோ? அசுரர்கள் பதைக்கவும் ஆதிசேஷன் பயந்து நெளியவும், பெரிய கடல் ஓலமிட்டு ஒலிக்கவும், மாமிசக் குடலை கழுகுகள் சூழவும், நரிகளும், கருடன்களும், காக்கைகளும் பல கூட்டமாய் நெருங்கவும், (வஞ்சனை எண்ணம் கொண்ட) கிரவுஞ்ச மலையின் ஆற்றலை அழித்து, (எட்டுத் திக்கில் உள்ள) மலைகளையும் யானைகளையும் அலையுண்ணச் செய்து நடுங்க வைத்து, அவைகளின் மதம் பூண்ட அறிவு குலையும் வண்ணம் நகைத்து, வேலைக் கொண்டு செலுத்தி அருள் செய்த செங்கை வேலனே, அழகுள்ள சிறந்த கூந்தலை உடையவளும் விண்ணுலகத்தில் உள்ள இந்திராணி பெற்ற பேரழகியுமாகிய தேவயானையைச் சேர்ந்த சித்தனே*, ஒப்பற்ற அற்புதமான வேடர் குலத்தில் உதித்த அமுத சொரூபியான குறமகள் வள்ளியை மணம் கொண்டவனே, திருவேரக மலை என்னும் அற்புதம் மிகுந்த சுவாமி மலைப் பதியாகிய தலத்தில் நிற்கும் அழகனே, லக்ஷ்மி போன்ற ராஜத** குணம் படைத்த பார்வதி பெற்றருளிய தம்பிரானே. 
* சித்தன் முருகனுக்கு ஒரு பெயர் - மனத்தைக் கொள்ளை கொள்பவன்.** ஸத்வம், ராஜஸம், தாமசம் என்ற முக்குணங்களில் லக்ஷ்மிக்கு ராஜஸ குணம் ஏற்பிக்கப்படுகிறது. லக்ஷ்மி அருள் மழை பொழிந்து செல்வங்களை வலியக் கொடுக்கும் தெய்வம்.

பாடல் 235 - சுவாமி மலை
ராகம் - ....; தாளம் -

தானன தனத்தத் தாத்த தானன தனத்தத் தாத்த     தானன தனத்தத் தாத்த ...... தனதான

வார்குழல் விரித்துத் தூக்கி வேல்விழி சுழற்றிப் பார்த்து     வாவென நகைத்துத் தோட்டு ...... குழையாட 
வாசக முரைத்துச் சூத்ர பாவையெ னுறுப்பைக் காட்டி     வாசனை முலைக்கச் சாட்டி ...... யழகாகச் 
சீர்கலை நெகிழ்த்துப் போர்த்து நூலிடை நெளித்துக் காட்டி     தீதெய நடித்துப் பாட்டு ...... குயில்போலச் 
சேருற அழைத்துப் பார்த்து சார்வுற மருத்திட் டாட்டி     சீர்பொருள் பறிப்பொய்க் கூத்த ...... ருறவாமோ 
சூரர்கள் பதைக்கத் தேர்க்க ளானைக ளழித்துத் தாக்கி     சூர்கிரி கொளுத்திக் கூற்று ...... ரிடும்வேலா 
தூமொழி நகைத்துக் கூற்றை மாளிட வுதைத்துக் கோத்த     தோலுடை யெனப்பர்க் கேற்றி ...... திரிவோனே 
ஏரணி சடைச்சிப் பாற்சொ லாரணி சிறக்கப் போற்று     மேரெழி னிறத்துக் கூர்த்த ...... மகவோனே 
ஏடணி குழைச்சித் தூர்த்த வாடகி குறத்திக் கேற்ற     ஏரக பொருப்பிற் பூத்த ...... பெருமாளே.

நீண்ட கூந்தலை விரித்தும், தூக்கி முடித்தும், வேல் போன்ற கண்களை சுழற்றிப் பார்த்தும், வா என்று அழைத்துச் சிரித்தும், தோடும் குண்டலமும் ஆட பேச்சுக்கள் பேசியும், இயந்திரப் பொம்மை என்று சொல்லும்படி பல அங்கங்களையும் காட்டியும், மணமுள்ள மார்பகங்களின் மேல் உள்ள கச்சை ஆட்டியும், அழகாக சீரான ஆடையை தளர்த்திப் போர்த்தும், நூல் போல் நுண்ணிய இடையை நெளித்துக் காட்டியும், தீ தெய்ய என்ற தாள வரிசைகளுடன் நடனம் செய்தும், பாடல்களைக் குயில் போல் பாடியும், தம்மைச் சேரும்படி அழைத்தும், தம்மையே சார்ந்திருக்கும்படி மருந்து வகைகளைத் தந்தும், தம் விருப்பப்படி ஆட்டி வைத்தும், சீரான பொருளைப் பறிக்கின்ற பொய்யான வேசையரது உறவு நல்லதாகுமோ? (ஆகாது என்றபடி), அசுரர்கள் பதைக்கவும், தேர்களையும் யானைகளையும் அழியும்படி தாக்கி, சூரனையும் அவனுடைய எழு கிரிகளையும் சுட்டெரித்து யம லோகத்துக்கு அனுப்பிய வேலனே, பரிசுத்தமான மொழியுடன் சிரித்து, (மார்க்கண்டருக்காக) யமனை இறக்கும்படி உதைத்து, உரித்து எடுத்த தோலை உடையாகக் கொண்ட என் தந்தையாகிய சிவபெருமானுக்கு (உபதேச மொழியை) இத்தலத்தில் உரைத்துப் போந்தவனே, அழகிய சடையை உடையவள், பால் போல் இனிய சொல்லை உடைய தேவி பார்வதி விசேஷமாகப் போற்றுகின்ற மிக்க அழகிய நிறம் விளங்குகின்ற குழந்தையே, பனை ஓலை இதழைக் குழையாகக் கொண்டவள், மண்ணால் மூடப்பட்ட பொன் போன்ற நிறத்தவள், (திருமாலின் மகள் சுந்தரவல்லியாகிய) குறப் பெண் வள்ளி நாயகிக்கு பொருத்தமானவனே, சுவாமி மலையில் விளங்கும் பெருமாளே. 

பாடல் 236 - சுவாமி மலை
ராகம் - ....; தாளம் -

தனதனன தான தனதன தந்தன     தனதனன தான தனதன தந்தன          தனதனன தான தனதன தந்தன ...... தனதான

விடமும்வடி வேலு மதனச ரங்களும்     வடுவுநிக ரான மகரநெ டுங்குழை          விரவியுடன் மீளும் விழிகளு மென்புழு ...... கதுதோயும் 
ம்ருகமதப டீர பரிமள குங்கும     மணியுமிள நீரும் வடகுல குன்றமும்          வெருவுவன பார புளகத னங்களும் ...... வெகுகாம 
நடனபத நூபு ரமுமுகில் கெஞ்சிட     மலர்சொருகு கேச பரமுமி லங்கிய          நளினமலர் சோதி மதிமுக விம்பமும் ...... அனநேராம் 
நடையுநளிர் மாதர் நிலவுதொ ழுந்தனு     முழுதுமபி ராம அரிவய கிண்கிணெ          னகையுமுள மாதர் கலவியி னைந்துரு ...... கிடலாமோ 
வடிவுடைய மானு மிகல்கர னுந்திக     ழெழுவகைம ராம ரமுநிக ரொன்றுமில்          வலியதிறல் வாலி யுரமுநெ டுங்கட ...... லவையேழும் 
மறநிருதர் சேனை முழுதுமி லங்கைமன்     வகையிரவி போலு மணியும லங்க்ருத          மணிமவுலி யான வொருபதும் விஞ்சிரு ...... பதுதோளும் 
அடைவலமு மாள விடுசர அம்புடை     தசரதகு மார ரகுகுல புங்கவன்          அருள்புனைமு ராரி மருகவி ளங்கிய ...... மயிலேறி 
அடையலர்கள் மாள வொருநிமி டந்தனி     லுலகைவல மாக நொடியினில் வந்துயர்          அழகியசு வாமி மலையில மர்ந்தருள் ...... பெருமாளே.

நஞ்சும் கூரிய வேலும் மன்மதனுடைய பாணங்களும் மாவடுவையும் ஒத்தனவாய், மகர மீன் போன்ற நீண்ட குண்டலங்களுடன் கலந்து, உடனே மீளும் கண்களும், மென்மை வாய்ந்த புனுகு சட்டம் கலந்த கஸ்தூரி, சந்தனம், மணமுள்ள செஞ்சாந்து அணிந்துள்ள, இள நீர் போன்றனவும், வடக்கே உள்ள சிறந்த மேரு மலை போன்றனவும், அச்சம் தரத் தக்கனவும், பாரமுள்ளனவும், புளகம் பூண்டுள்ளனவும் ஆகிய மார்பகங்களும், மிக்க காமத்தை எழுப்பும் நடனம் செய்கின்ற பாதங்களில் அணிந்துள்ள சிலம்பும், மேகமும் (இதன் கரு நிறத்துக்கு எந்த மூலை என்று) கெஞ்சும்படி கறுத்தும் மலர் சொருகப்பட்ட கூந்தல் பாரமும், விளங்கும் தாமரை மலர் போன்று நிலவொளி வீசும் முகச் சோதியும், அன்னப் பறவைக்கு ஒப்பான நடை அழகும், குளிர்ந்த அழகிய சந்திரனும் தொழுகின்ற உடல் முழுமையும் உள்ள அழகும், சிலம்பின் உட்பரலின் மணிகள் கிண் கிண் என ஒலிக்கும் சிரிப்பும் கொண்ட விலைமாதர்களுடைய சேர்க்கையில் நான் உள்ளம் வாடி உருகுதல் நன்றோ? அழகுடைய (மா¡£சன் என்னும்) பொன்மானும், பகைத்து வந்த கரன் என்னும் அரக்கனும், விளங்கிய ஏழு வகையான மரா மரங்களும், ஒப்பு ஒன்றுமே இல்லாத வலிமை வாய்ந்த வாலி என்னும் குரங்கு அரசனின் மார்பும், பெரிய ஏழு கடல்களும், வீரமுள்ள அசுரர்களின படைகள் முழுதும், இலங்கை அரசன் ராவணனுடைய சிறப்புற்ற சூரியன் போல் ஒளி வீசி அணிந்த அலங்காரமான ரத்ன கி¡£டம் விளங்கும் தலைகள் பத்தும், மேம்பட்டு விளங்கும் இருபது தோள்களும், அடைந்திருந்த வலிமையையும் (இவை எல்லாம்) மாண்டு ஒடுங்க, ஏவிய போர் அம்பைக் கொண்ட தசரத மன்னனுடைய மகனும் ரகு குலத்தைச் சேர்ந்த மேலானவனும், அருள் பாலிக்கும் (ராமனுமாகிய) திருமாலின் மருகனே, விளங்குகின்ற மயிலில் மீது ஏறி ஒரு நிமிட நேரத்தில் பகைவர்கள் இறக்கும்படி, உலகை வலமாக நொடிப் பொழுதில் வந்து, சிறந்த அழகிய சுவாமி மலையில் அமர்ந்து அருளிய பெருமாளே. 

பாடல் 237 - சுவாமி மலை
ராகம் - ....; தாளம் -

தனத்த தந்தன தனதன தனதன     தனத்த தந்தன தனதன தனதன          தனத்த தந்தன தனதன தனதன ...... தனதான

விரித்த பைங்குழ லொளிர்மல ரளிதன     தனத்த னந்தன தனதன வெனவொலி          விரிப்ப வண்கயல் விழியுறை குழையொடு ...... மலைபாய 
மிகுத்த வண்சிலை நுதல்மிசை திலதமொ     டசைத்த பொன்குழை யழகெழ முகவொளி          வெயிற்ப ரந்திட நகையிதழ் முருகலர் ...... வரிபோதத் 
தரித்த தந்திரி மறிபுய மிசைபல     பணிக்கி லங்கிய பரிமள குவடிணை          தனக்கொ ழுந்துகள் ததைபட கொடியிடை ...... படுசேலை 
தரித்து சுந்தர மெனஅடர் பரிபுர     பதச்சி லம்பொடு நடமிடு கணிகையர்          சழக்கர் விஞ்சையர் மயல்களின் முழுகுவ ...... தொழியாதோ 
உரித்த வெங்கய மறியொடு புலிகலை     தரித்த சங்கரர் மதிநதி சடையினர்          ஒருத்தி பங்கின ரவர்பணி குருபர ...... முருகோனே 
உவட்டி வந்திடு மவுணரொ டெழுகடல்     குவட்டை யும்பொடி படசத முடிவுற          வுழைத்த இந்திரர் பிரமனு மகிழ்வுற ...... விடும்வேலா 
வரித்த ரந்துள வணிதிரு மருவிய     வுரத்த பங்கயர் மரகத மழகிய          வணத்த ரம்பர முறவிடு கணையினர் ...... மருகோனே 
வனத்தில் வந்தொரு பழையவ னெனவொரு     குறத்தி மென்புன மருவிய கிளிதனை          மயக்கி மந்திர குருமலை தனிலமர் ...... பெருமாளே.

விரிந்த செழுமை வாய்ந்த கூந்தலில் விளங்கும் மலர்களில் உள்ள வண்டுகள் தன தனத்த னந்தன தனதன இவ்வாறான ஒலிகளை விரித்து எழுப்ப, வளமை வாய்ந்த கயல் மீன்கள் போன்ற கண்கள் காதில் பொருந்திய குண்டலங்களோடு மோதி அலைச்சல் உற, மேம்பட்டு விளங்கும் வலிமை பொருந்திய வில்லைப் போன்ற நெற்றியின் மேல் அமைந்த பொட்டும், அசைவுறும் பொன் குண்டலங்களும் அழகு வீச, முகத்து ஒளியின் ஜோதி பரந்து விளங்க, பற்களோடும் இதழோடும் கூடிய வாசனை உள்ள (செங்குமுத) மலரை ஒத்த (வாயினின்றும்) இசைப் பாட்டுக்கள் எழ, ஏந்தியுள்ள தந்திகளுடன் கூடிய வீணை சார்ந்துள்ள தோள்களின் மேல் பலவிதமான ஆபரணங்கள் விளங்க, மணமுள்ள, மலைக்கு நிகரான மார்பகங்களின் மீது செழுமையுள்ள (வாசனைப்) பொடிகள் நெருங்கி பூசப்பட்டிருக்க, (வஞ்சிக்) கொடி போன்ற இடையில் புடைவையை அணிந்து, அழகியது என்று சொல்லும்படி பொருத்தமாயுள்ள சிலம்பு அணிந்த பாதக் கிண்கிணியுடன் நடனம் செய்யும் விலைமாதராகிய தீயவர்களின், வித்தைக்காரர்களின், மோக மயக்கங்களில் நான் முழுகி இருக்கும் பழக்கம் என்னை விட்டு விலகாதோ? உரித்த கொடிய யானை, மான், புலி (இவைகளின்) தோலைத் தரித்த சங்கரர், சந்திரன் கங்கை ஆறு (இவைகளைத் தரித்த) சடையை உடையவரும், ஒப்பற்ற (பார்வதியை) ஒரு பாகத்தில் கொண்டவருமான சிவபெருமான் வணங்கும் குருபரனே, முருகனே, வெறுப்புற்று வந்த அசுரர்களும், ஏழு கடல்களும், கிரவுஞ்ச மலையும் பொடியாகும்படி, நூறு (அசுவமேத யாகம்) முடியும்படி உழைத்த இந்திரரும் பிரமனும் மகிழ்ச்சி அடையச் செலுத்திய வேலாயுதனே, வண்டுகள் வரிசையாக மொய்க்கும் துளசி மாலை அணிந்தவரும், லக்ஷ்மி பொருந்திய மார்பில் தாமரை மலரை உடையவரும், மரகதப் பச்சையின் அழகிய நிறத்தினரும், கடல் மீது செலுத்திய (கோதண்ட) பாணத்தை உடையவரும் ஆகிய திருமாலின் மருகனே, (வள்ளி மலைக்) காட்டில் வந்து, ஒரு கிழவன் என வேடம் பூண்டு, ஒப்பற்ற குறத்தியின் அழகிய (தினைப்) புனத்திலிருந்த கிளி போன்ற வள்ளியை மயக்கியவனே, மந்திர உபதேசத் தலமாகிய சுவாமி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 238 - சுவாமி மலை
ராகம் - ....; தாளம் -

தனதான தத்த தந்த தனதான தத்த தந்த     தனதான தத்த தந்த ...... தனதான

விழியால்ம ருட்டி நின்று முலைதூச கற்றி மண்டு     விரகான லத்த ழுந்த ...... நகையாடி 
விலையாக மிக்க செம்பொன் வரவேப ரப்பி வஞ்ச     விளையாட லுக்கி சைந்து ...... சிலநாள்மேல் 
மொழியாத சொற்கள் வந்து சிலுகாகி விட்ட தொந்த     முழுமாயை யிற்பி ணங்கள் ...... வசமாகி 
முடியாது பொற்ச தங்கை தருகீத வெட்சி துன்று     முதிராத நற்ப தங்கள் ...... தருவாயே 
பொழிகார்மு கிற்கி ணைந்த யமராஜ னுட்க அன்று     பொருதாளெ டுத்த தந்தை ...... மகிழ்வோனே 
புருகூத னுட்கு ளிர்ந்த கனகாபு ரிப்ர சண்ட     புனிதாம்ரு கக்க ரும்பு ...... புணர்மார்பா 
செழுவாரி சத்தி லொன்று முதுவேதன் வெட்க அன்று     திருவாய்மை செப்பி நின்ற ...... முருகோனே 
திரளாம ணிக்கு லங்கள் அருணோத யத்தை வென்ற     திருவேர கத்த மர்ந்த ...... பெருமாளே.

கண்களால் மருட்டி நின்று, மார்பின் மேல் உள்ள மேலாடையை நீக்கி, மூண்டு எழும் காம அக்கினியில் தம்மைக் கண்டவர் அழுந்தும்படி நகை புரிந்து, விலையாக நிரம்பச் செம்பொற்காசுகள் வரவும், தமது சூழ்ச்சியைப் பரப்பி, வஞ்சகம் நிறைந்த காம லீலைகளுக்கு உடன்பட்டு, சில நாட்கள் போன பிறகு, சொல்லாத சொற்களைச் சொன்னதாகச் சொல்லி, சண்டையும் கூச்சலுமாகி ஏற்படும் பகைமை பூணுகின்ற முழு மாயக்காரிகளாகிய பிணங்கள் போன்ற பொது மகளிரின் வசத்தில் அகப்பட்டு என் வாழ்க்கை முடிவுறாமல், பொன் கிண்கிணிகள் செய்யும் இசையும், வெட்சி மலரும் சேர்ந்துள்ள, என்றும் இளமையான, நன்மை அளிக்கும் உன் திருவடிகளைத் தந்து அருள்வாயாக. பொழிகின்ற மழை மேகத்தை நிகர்க்கும் கருமையான யமராஜன் அஞ்சும்படி அன்று, போர் வல்ல திருத்தாளை நீட்டிய தந்தையாகிய சிவபெருமான் மகிழ்ச்சி கொள்ளும் முருகனே, இந்திரன் மனம் குளிரும்படியாக தேவருலகத்தைக் காத்தருளிய வல்லமை வாய்ந்தவனே, தூய்மையானவனே, மான் ஈன்ற கரும்பு போன்ற இனிய வள்ளியை அணைக்கும் மார்பனே, செழுமை வாய்ந்த தாமரையில் வீற்றிருக்கும் கிழப் பிரமன் நாணும்படி, அன்று நிறை செல்வப் பேருண்மையை (பிரணவப் பொருளை) சொல்லி அருளிய முருகனே, (நின் திருமார்பில் உள்ள) திரளான ரத்தினக் கூட்டங்கள் சூரிய உதய ஒளியை வென்ற சுவாமி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 239 - சுவாமி மலை
ராகம் - காபி; தாளம் - ஆதி - திஸ்ர நடை - 12

தனனத் தனனத் தனனத் தனனத்     தனனத் தனனத் ...... தனதான

அமைவுற் றடையப் பசியுற் றவருக்     கமுதைப் பகிர்தற் ...... கிசையாதே 
அடையப் பொருள்கைக் கிளமைக் கெனவைத்     தருள்தப் பிமதத் ...... தயராதே 
தமர்சுற் றியழப் பறைகொட் டியிடச்     சமனெட் டுயிரைக் ...... கொடுபோகுஞ் 
சரிரத் தினைநிற் குமெனக் கருதித்     தளர்வுற் றொழியக் ...... கடவேனோ 
இமயத் துமயிற் கொருபக் கமளித்     தவருக் கிசையப் ...... புகல்வோனே 
இரணத் தினிலெற் றுவரைக் கழுகுக்     கிரையிட் டிடுவிக் ...... ரமவேலா 
சமயச் சிலுகிட் டவரைத் தவறித்     தவமுற் றவருட் ...... புகநாடும் 
சடுபத் மமுகக் குகபுக் ககனத்     தணியிற் குமரப் ...... பெருமாளே.

மிகுந்த பசி உற்றவர்களுக்கு, மன அமைதியுடன், அன்னத்தைப் பங்கிட்டுத் தருவதற்கு மனம் வராமல், வைத்துள்ள பொருள் அத்தனையும் எனது இளமைப்பருவத்துக்கு என்று கைவசமாக இறுகப் பிடித்து வைத்துக்கொண்டு, அருள் நெறியினின்றும் தவறிப் போய் அகங்காரத்தினால் தளர்ச்சி அடையாமல், சுற்றத்தார் சுற்றி நின்று அழவும், பறைகள் வாசிக்கவும், யமன் நெடுந்தூரத்திற்கு உயிரைக் கொண்டு போகும் இந்த உடம்பை நிலையாக நிற்கும் என்று கருதி இவ்வுடம்பிற்காகவே பாடுபட்டு நான் தளர்ந்து அழிவது முறையாகுமோ? இமவான் வளர்த்த மயில் போன்ற பார்வதிக்கு தன்னுடம்பின் ஒரு பாகத்தைத் தந்த சிவபெருமானுக்கு உள்ளம் இசையுமாறு உபதேசம் அருளியவனே, போர்க்களத்தில் தாக்கி எதிர்ப்பவர்களை கழுகுகட்கு இரையாக அளிக்கும் வீரமுள்ள வேலாயுதனே, சமயச் சண்டை இடுகின்ற சமயவாதிகளின் பக்கம் சாராமல் விலகி எனது தவம் நிறைவுறவும், உனது திருவருளில் புகவும், நான் விரும்பும் ஆறு தாமரையன்ன திரு முகங்களை உடைய குகனே, (வள்ளியை மணந்த பின்) நீ புகுந்த, பெருமை வாய்ந்த, திருத்தணிகைப் பதியில் வீற்றிருக்கும் குமரப் பெருமாளே. 

பாடல் 240 - திருத்தணிகை
ராகம் - நாதநாமக்ரியா/ஷண்முகப்ரியா; தாளம் - ஆதி

தனதன தனதன தனதன தனதன     தனதன தனதன ...... தனதான

அரகர சிவனரி அயனிவர் பரவிமு     னறுமுக சரவண ...... பவனேயென் 
றநுதின மொழிதர அசுரர்கள் கெடஅயில்     அநலென எழவிடு ...... மதிவீரா 
பரிபுர கமலம தடியிணை யடியவர்     உளமதி லுறவருள் ...... முருகேசா 
பகவதி வரைமகள் உமைதர வருகுக     பரமன திருசெவி ...... களிகூர 
உரைசெயு மொருமொழி பிரணவ முடிவதை     உரைதரு குருபர ...... வுயர்வாய 
உலகம னலகில வுயிர்களு மிமையவ     ரவர்களு முறுவர ...... முநிவோரும் 
பரவிமு னநுதின மனமகிழ் வுறவணி     பணிதிகழ் தணிகையி ...... லுறைவோனே 
பகர்தரு குறமகள் தருவமை வநிதையு     மிருபுடை யுறவரு ...... பெருமாளே.

பாவங்களைப் போக்கவல்ல சிவனும், திருமாலும், பிரம்மாவும், ஆகிய இம்மூவரும் போற்றி நின்று உனது முன்னிலையில் ஆறுமுகனே, சரவணபவனே, என்று கூறி நாள்தோறும் துதிக்க, சூரன் முதலிய அசுரர்கள் அழியுமாறு அக்கினி போல எழும்பிய வேலினை விடுத்த வீர மூர்த்தியே, வீரச் சிலம்பு அணிந்த, தாமரை மலர் போன்ற உன் திருவடிகளை உன் அடியார்களின் உள்ளத்தில் பொருந்துமாறு அருள்செய்யும் முருகக் கடவுளே. மலையரசன் மகளாக வந்த பகவதியின் அருளினால் வந்த குகனே, சிவனின் இருசெவிகளும் மகிழும்படி யாவரும் புகழும் ஒப்பற்ற மொழியாகிய பிரணவ மந்திரத்தின் முடிவுப்பொருளை உபதேசித்த மேலான குருவே, உயர்ந்த இவ்வுலகில் வாழும் எண்ணற்ற உயிர்களும் தேவர்களும் பெருந்தவ சிரேஷ்டரான முனிவர்களும் உன் முன்னேவணங்கி துதி செய்து, நாள்தோறும் மனம் மகிழ்ச்சி அடையுமாறு அழகியதும், வாசுகி என்ற நாகம் வழிபட்டதுமாகிய* திருத்தணிகைத் தலத்தில் வாழ்பவனே, புகழ்வாய்ந்த குறப்பெண் வள்ளியும், கற்பகத்தருவின் கீழே வளர்ந்த தேவயானையும், இருபுறமும் பொருந்த வந்த பெருமாளே**. 
* பாற்கடல் கடைந்தபோது வாசுகி என்ற நாகம் கயிறாக உதவியது. அதனால் புண்பட்ட நோய் நீங்க, வாசுகி திருத்தணிகைக்கு வந்து முருகனைப் பூஜிக்க நோய் தணிந்த வரலாறு இங்கு கூறப்பட்டுள்ளது.
** வள்ளியும் தேவயானையும் வலமும் இடமுமாக விளங்க முருகன் திருத்தணியில் வீற்றிருக்கிறான். வள்ளி = இச்சாசக்தி, தேவயானை = ஞானசக்தி.இப்பாடல் துதிமயமானது. வேண்டுதல் ஒன்றும் இல்லாதது.

பாடல் 241 - திருத்தணிகை
ராகம் - ....; தாளம் -

தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத்     தனத்தனத் தனத்தனத் ...... தனதான

அருக்கிமெத் தெனச்சிரித் துருக்கியிட் டுளக்கருத்     தழித்தறக் கறுத்தகட் ...... பயிலாலே 
அழைத்தகப் படுத்தியொட் டறப்பொருட் பறிப்பவர்க்     கடுத்தபத் தமுற்றுவித் ...... தகர்போலத் 
தரிக்கும்வித் தரிக்குமிக் கதத்துவப் ப்ரசித்தியெத்     தலத்துமற் றிலைப்பிறர்க் ...... கெனஞானம் 
சமைத்துரைத் திமைப்பினிற் சடக்கெனப் படுத்தெழச்     சறுக்குமிப் பிறப்புபெற் ...... றிடலாமோ 
பொருக்கெழக் கடற்பரப் பரக்கர்கொத் திறப்புறப்     பொருப்பினிற் பெருக்கவுற் ...... றிடுமாயம் 
புடைத்திடித் தடற்கரத் துறப்பிடித் தகற்பகப்     புரிக்கிரக் கம்வைத்தபொற் ...... கதிர்வேலா 
திருத்தமுத் தமிழ்க்கவிக் கொருத்தமைக் குறத்தியைத்     தினைப்புனக் கிரித்தலத் ...... திடைதோயுஞ் 
சிவத்தகுக் குடக்கொடிச் செருக்கவுற் பலச்சுனைச்     சிறப்புடைத் திருத்தணிப் ...... பெருமாளே.

சுருக்கமாகவும், அமைதியுடனும் சிரித்து, காண்பவர்களின் மனதை உருக்கி உள்ளக் கருத்தை அழித்து, மிகவும் கருநிறமுள்ள கண்களின் குறிப்புகளால், அழைத்து தம் வலைக்குள் அகப்பட வைத்து, ஒன்றையும் விடாமல் பொருளைப் பறிக்கும் வேசியர்களிடம் செல்கின்ற தவறைச் செய்தும், அறிவாளி போல் நடித்தும், விரிவாகப் பேசியும், மேலான உண்மைகளை எடுத்துப் பேசும் கீர்த்தி (தன்னைப் போல்) எந்த ஊரிலும் வேறு யார்க்கும் கிடையாது என்று சொல்லும்படி ஞானப் பேச்சுகளை புதிதாகப் படைத்துப் பேசியும், ஒரு இமைப் பொழுதில் வேகத்துடன் படுத்து எழுதல் போல நழுவி ஒழியும் இந்த நிலையாப் பிறவியைப் பெற்றிடல் நன்றோ? வறண்டு உலர்ந்த காட்சி எழும்படி கடல் வற்றவும், அசுரர்களின் கூட்டம் மடிந்து ஒழியவும், கிரெளஞ்ச மலையில் நிரம்ப இருந்த மாயம் உடைந்து அழியவும், வலிமையான திருக்கரத்தில் தங்கும்படி பிடித்த (வேலனே), கற்பக புரியாகிய தேவநாட்டின் மீது அருள் வைத்த அழகிய கதிர் வேலனே, செப்பிய முத்தமிழ்ப் பாடலுக்கு ஒப்பற்றவனாய் நிற்பவனே, மை தீட்டிய கண்களை உடைய வள்ளியை தினைப் புனம் உள்ள வள்ளிமலை நாட்டில் அணைந்தவனே, சிவப்பு நிறம் கொண்ட சேவற்கொடி பெருமிதம் அடைய, நீலோற்பலம் மலர்கின்ற சுனையை உடைய சிறப்புள்ள திருத்தணிகையில் வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 242 - திருத்தணிகை
ராகம் - வஸந்தா; தாளம் - ஆதி - கண்ட நடை - 20 - எடுப்பு - அதீதம்

தனத்தன தனத்தன தனத்தன தனத்தன     தனத்தன தனத்தன ...... தனதான

இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர்     இடுக்கினை யறுத்திடு ...... மெனவோதும் 
இசைத்தமிழ் நடத்தமி ழெனத்துறை விருப்புட     னிலக்கண இலக்கிய ...... கவிநாலுந் 
தரிப்பவ ருரைப்பவர் நினைப்பவர் மிகச்சக     தலத்தினில் நவிற்றுத ...... லறியாதே 
தனத்தினில் முகத்தினில் மனத்தினி லுருக்கிடு     சமர்த்திகள் மயக்கினில் ...... விழலாமோ 
கருப்புவில் வளைத்தணி மலர்க்கணை தொடுத்தியல்     களிப்புட னொளித்தெய்த ...... மதவேளைக் 
கருத்தினில் நினைத்தவ னெருப்பெழ நுதற்படு     கனற்கணி லெரித்தவர் ...... கயிலாயப் 
பொருப்பினி லிருப்பவர் பருப்பத வுமைக்கொரு     புறத்தினை யளித்தவர் ...... தருசேயே 
புயற்பொழில் வயற்பதி நயப்படு திருத்தணி     பொருப்பினில் விருப்புறு ...... பெருமாளே.

உயிர் போகும் தொலையா வழிக்கு உற்ற துணையாய் இருக்கும் அவல் போன்ற திருப்புகழை ஆர்வத்தோடு படிப்பவர்களுடைய சங்கடங்களை அறுத்தெறியும் என்ற உண்மையை எடுத்துச் சொல்கின்ற, இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்றும், அகத்துறைப் பாக்கள், இலக்கணம், இலக்கியம் என்றும், நால்வகைக் கவிகளையும்* உள்ளத்தில் தரிப்பவர்கள், உரைப்பவர்கள், நினைப்பவர்கள் ஆகிய உன் அடியார்களை மிகவும் இவ்வுலகில் புகழாமல், தங்கள் மார்பாலும், முகத்தாலும், மனத்தை உருக்கச் செய்யும் சாமர்த்தியசாலிகளான பொதுமகளிரின் மோக மயக்கில் நான் விழலாமோ? (கூடாது என்றபடி), கரும்பு வில்லினை வளைத்து அதில் அழகிய மலர்ப் பாணங்களைத் தொடுத்து, மிகச் செருக்குடன் ஒளிந்திருந்து செலுத்திய மன்மதனை, தன் மனத்தில் நினைத்த மாத்திரத்திலேயே அந்த மன்மதன் எரிந்து சாம்பலாகும்படி தன் நெற்றிக் கண்ணால் எரித்தவரும், கயிலை மலையிலே வீற்றிருப்பவரும், பர்வத குமாரி உமாதேவிக்கு தன் இடது புறத்தைத் தந்தவருமான பரமசிவன் பெற்ற மகனே, மேகங்கள் தங்கும் சோலைகளும், வயல்களும் சூழ்ந்த ஊராகிய இனிமை வாய்ந்த திருத்தணி மலையில் விருப்பம் கொள்ளும் பெருமாளே. 
* தமிழ்க் கவிதைகள் நான்கு வகைப்படும்:ஆசு - எதுகை மோனையுடன் கூடியது,மதுரம் - இனிமை வாய்ந்தது,சித்திரம் - கற்பனையும் அழகும் மிக்கது,வித்தாரம் - வர்ணனை மிக்கது.

பாடல் 243 - திருத்தணிகை
ராகம் - அஸாவேரி; தாளம் - மிஸ்ரசாபு தகதிமி-2, தகிட-1 1/2

தனதன தான தனதன தான     தனதன தான ...... தனதான

இருமலு ரோக முயலகன் வாத     மெரிகுண நாசி ...... விடமேநீ 
ரிழிவுவி டாத தலைவலி சோகை     யெழுகள மாலை ...... யிவையோடே 
பெருவயி றீளை யெரிகுலை சூலை     பெருவலி வேறு ...... முளநோய்கள் 
பிறவிகள் தோறு மெனைநலி யாத     படியுன தாள்கள் ...... அருள்வாயே 
வருமொரு கோடி யசுரர்ப தாதி     மடியஅ நேக ...... இசைபாடி 
வருமொரு கால வயிரவ ராட     வடிசுடர் வேலை ...... விடுவோனே 
தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி     தருதிரு மாதின் ...... மணவாளா 
சலமிடை பூவி னடுவினில் வீறு     தணிமலை மேவு ...... பெருமாளே.

இருமல் என்ற நோய், முயலகன் என்ற வலிப்பு நோய், வாத நோய், எரியும் குணமுள்ள மூக்கு நோய், விஷ நோய்கள், நீரிழிவு நோய், நீங்காத தலைவலி, ரத்த சோகை, கழுத்தைச் சுற்றி உண்டாகும் மாலை போன்ற புண் இவற்றுடன், மகோதர நோய், நுரையீரலில் கோழை நோய், நெஞ்சு எரியும் நோய், தீராத வயிற்று வலி, ஆகிய பெரு வலியுடன் கூடிய பிற நோய்கள் ஒவ்வொரு பிறவியிலும் என்னைப் பீடிக்காதபடி, உன்னுடைய திருவடிகளைத் தந்தருள்வாயாக. உன்னை எதிர்த்துவந்த கோடிக்கணக்கான அசுரர்களின் காலாட்படை இறந்துபடவும், அனேக வீரப் பாட்டுக்களைப் பாடிக்கொண்டு வந்த ஓர் காலபைரவர் (சிவ பெருமான்) போர்க்களத்தில் நடனமாடவும், கூரிய ஒளிவீசும் வேலைச் செலுத்தியவனே, கற்பக விருட்சங்களின் நிழலில் வசிக்கும் மேக வாகனன் இந்திரன் வளர்த்த அழகிய பெண் தேவயானையின் மணவாளனே, கடலால் சூழப்பட்ட இந்தப் புவியின் மத்தியில் சிறப்போடு விளங்கும் திருத்தணிகை மலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
இந்தப் பாடல் நோய் தீர்க்கும் திருமந்திரத் திருப்புகழ். பாராயணம் செய்வதற்கு உரியது.

பாடல் 244 - திருத்தணிகை
ராகம் - தோடி; தாளம் - அங்கதாளம் - 5 1/2 தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2

தனன தான தானான தனன தான தானான     தனன தான தானான ...... தனதான

உடலி னூடு போய்மீளு முயிரி னூடு மாயாத     உணர்வி னூடு வானூடு ...... முதுதீயூ 
டுலவை யூடு நீரூடு புவியி னூடு வாதாடு     மொருவ ரோடு மேவாத ...... தனிஞானச் 
சுடரி னூடு நால்வேத முடியி னூடு மூடாடு     துரிய வாகு லாதீத ...... சிவரூபம் 
தொலைவி லாத பேராசை துரிச றாத வோர்பேதை     தொடுமு பாய மேதோசொ ...... லருள்வாயே 
மடல றாத வா¡£ச அடவி சாடி மாறான     வரிவ ரால்கு வால்சாய ...... அமராடி 
மதகு தாவி மீதோடி யுழவ ரால டாதோடி     மடையை மோதி யாறூடு ...... தடமாகக் 
கடல்பு காம காமீனை முடுகி வாளை தான்மேவு     கமல வாவி மேல்வீழு ...... மலர்வாவிக் 
கடவுள் நீல மாறாத தணிகை காவ லாவீர     கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.

உடலுக்கு உள்ளும், உடலில் சென்று மீளுகின்ற உயிருக்குள்ளும், அழியாத உணர்ச்சியுள்ளும், ஆகாயத்துள்ளும், முற்றிய தீக்குள்ளும், காற்றினுள்ளும், நீரின் உள்ளும், மண்ணினுள்ளும், சமயவாதம் புரிகின்ற எவரிடத்திலும் காணக்கிடைக்காத ஒப்பற்ற ஞான ஒளியினுக்குள்ளும், நான்கு வேத உச்சியிலும் ஊடாடுகின்றதும், துரிய* நிலையில் இருப்பதும், துன்பங்கள் கடந்த நிலையில் உள்ளதுமாகிய சிவ ரூபத்தை, முடிவற்ற பேராசையும் குற்றமும் நீங்காத ஓர் மூடனாகிய அடியேன் அடைவதற்கு உரிய வழி எதுவோ, அந்த உபதேச மொழியைச் சொல்லி வழிகாட்டி அருள்வாயாக. இதழ்கள் நீங்காத தாமரைப் பூவின்காட்டை அழித்து, தனக்குப் பகையான வரிபடர்ந்த வரால் மீன்கள் தோற்றுப்போய் பின்வாங்கும்படி போர் புரிந்து, செல்லும் வழியில் இருந்த நீர்பாயும் மதகைத் தாண்டி மேலே ஓடி, வயலில் உழும் உழவர்கள் தன்னை வருத்தாதபடி தப்பி ஓடி, வழியில் உள்ள நீர் மடைகளைத் தாக்கி, ஆற்றின் வழியிலே சென்று, கடலில் புகுந்து, அங்குள்ள பெரிய மீனை விரட்டித் தாக்கி, வாளை மீன் தான் இருந்த தாமரைக்குளத்தில் வந்து வீழும் (இத்தனை பெருமையை உடைய) மலர்ச் சுனையில்** தெய்வமணம் உள்ள நீலோத்பல மலர் மலர்வது என்றும் தவறாத திருத்தணிகைக்குக் காவலனே, வீரனே, கருணையில் மேரு மலை போன்றவனே, தேவர்களின் பெருமாளே. 
* துரியை என்பது ஜாக்ரம் (விழிப்பு), சொப்பனம் (கனவு), சுழுத்தி (உறக்கம்) என்ற மூன்று நிலைகளையும் கடந்த நிலையாகும்.
** திருத்தணியின் தாமரைக்குளத்தில் இருக்கும் வாளை மீனின் ஆற்றல், 'மடல் அறாத' முதல் 'மலர்வாவி' வரை உள்ள ஆறு அடிகளில், கூறப்படுகிறது. முருகனின் தம்பியும் தூதுவரும் ஆன வீரபாகுத் தேவர் தூதுசெல்லும் வழியில் அரக்கர்களைக் கொன்று, கடல்நடுவில் உள்ள வீரமஹேந்திரம் சென்று போர் புரிந்து வெற்றியுடன் மீண்டு வந்ததையும் இது குறிப்பால் காட்டுகின்றது. - கந்த புராணம்.

பாடல் 245 - திருத்தணிகை
ராகம் - நளினகாந்தி; தாளம் - ஆதி தேசாதி

தனனதன தான தனனதன தான     தனனதன தான ...... தனதான

உடையவர்க ளேவ ரெவர்களென நாடி     யுளமகிழ ஆசு ...... கவிபாடி 
உமதுபுகழ் மேரு கிரியளவு மான     தெனவுரமு மான ...... மொழிபேசி 
நடைபழகி மீள வறியவர்கள் நாளை     நடவுமென வாடி ...... முகம்வேறாய் 
நலியுமுன மேயு னருணவொளி வீசு     நளினஇரு பாத ...... மருள்வாயே 
விடைகொளுவு பாகர் விமலர்திரி சூலர்     விகிர் தர்பர யோகர் ...... நிலவோடே 
விளவு சிறு பூளை நகுதலையொ டாறு     விடவரவு சூடு ...... மதிபாரச் 
சடையிறைவர் காண உமைமகிழ ஞான     தளர் நடையி டாமுன் ...... வருவோனே 
தவமலரு நீல மலர்சுனைய நாதி     தணிமலையு லாவு ...... பெருமாளே.

செல்வம் படைத்தவர்கள் எவர்கள் எவர்கள் என்று தேடி, அவர்கள் மனம் மகிழ அவர்கள் மீது ஆசுகவிகளைப்* பாடி, உம் புகழ் மேருமலை அளவு உயர்ந்தது எனக் கூறியும், வலிமையானமுகஸ்துதி மொழிகளைப் பேசியும், நடந்து நடந்து பலநாள் போய்ப் பழகியும், தரித்திரர்களாகவேமீளும்படி, நாளைக்கு வா என்றே கூற, அதனால் அகம் வாடி முகம் களை மாற, வருந்தும் முன்னதாகவே, உனது சிவந்த ஒளி வீசுகின்ற தாமரை போன்ற இரு பாதங்களையும் தந்தருள்வாயாக. ரிஷபத்தை வாகனமாகச் செலுத்துபவரும், பரிசுத்தரும், திரிசூலத்தை ஏந்தியவரும், மிக்க உயர்ந்தவரும், மேலான யோகத்தவரும், பிறைச்சந்திரன், விளாமர (வில்வ) த் தளிர், சிறிய பூளைப் பூ, பற்களுடன் கூடிய மண்டையோடு, இவற்றோடு கங்கை ஆறு, விஷப்பாம்பு ஆகியவற்றைத் தரித்துள்ள மிகுந்த பாரமான ஜடாமுடியுடைய சிவபெருமான் கண்டு களிக்கவும், உமாதேவி பார்த்து மகிழவும், ஞானத் தளர் நடையிட்டு அவர்கள் முன்னே வருபவனே, மிகுத்து மலரும் நீலோத்பலப் பூக்கள் உள்ள சுனையுடையதும், ஆதியில்லாததுமான மிகப் பழைய திருத்தணிகை மலை மீது உலாவும் பெருமாளே. 
* தமிழ்க் கவிதைகள் நான்கு வகைப்படும்:ஆசு - எதுகை மோனையுடன் கூடியது,மதுரம் - இனிமை வாய்ந்தது,சித்திரம் - கற்பனையும் அழகும் மிக்கது,வித்தாரம் - வர்ணனை மிக்கது.

பாடல் 246 - திருத்தணிகை
ராகம் - லலிதா; தாளம் - கண்டசாபு - 2 1/2 தகிட-1 1/2, தக-1

தய்யனா தத்ததன தய்யனா தத்ததன     தய்யனா தத்ததன ...... தனதான

உய்யஞா னத்துநெறி கைவிடா தெப்பொழுது     முள்ளவே தத்துறைகொ ...... டுணர்வோதி 
உள்ளமோ கத்திருளை விள்ளமோ கப்பொருளை     யுள்ளமோ கத்தருளி ...... யுறவாகி 
வையமே ழுக்குநிலை செய்யுநீ திப்பழைய     வல்லமீ துற்பலச ...... யிலமேவும் 
வள்ளியா நிற்புதிய வெள்ளில்தோய் முத்தமுறி     கிள்ளிவீ சுற்றுமலர் ...... பணிவேனோ 
பையரா வைப்புனையு மையர்பா கத்தலைவி     துய்யவே ணிப்பகிர ...... திகுமாரா 
பையமால் பற்றிவளர் சையமேல் வைக்குமுது     நெய்யனே சுற்றியகு ...... றவர்கோவே 
செய்யுமால் வெற்புருவ வெய்யவேல் சுற்றிவிடு     கையமால் வைத்ததிரு ...... மருகோனே 
தெய்வயா னைக்கிளைய வெள்ளையா னைத்தலைவ     தெய்வயா னைக்கினிய ...... பெருமாளே.

நான் கடைத்தேறுவதற்கான ஞான மார்க்கத்தை எப்பொழுதும் கைவிடாமல் பற்றி, உள்ள வேத சாஸ்திரங்களைக் கொண்டு அறிவு தெளிவுற ஓதி, என்னிடம் உள்ள மயக்க இருளை நீக்க, ஆசை வைக்கவேண்டிய பொருளாகிய மோக்ஷ இன்பத்தை கருதும் ஆசை உன் அருளால் கிடைத்து உன்னுடன் உறவு நெருங்க வேண்டும். உலகம் ஏழினையும் நிலை நிறுத்திக் காக்கும் நீதி கொண்டவனே, பழமையான மலையாகிய திருவல்லத்திலும்*, நீலோத்பல கிரியான திருத்தணிகை மலையிலும் வாழும் வள்ளி நாயகனே, உன்னைப் புதிய வில்வ மரத்திலுள்ள இளம் கொழுந்து இலைகளை பறித்து வீசி அர்ச்சித்து உன் பாத மலர்களைப் பணிய மாட்டேனோ? படம் உள்ள நாக ஆபரணத்தை அணிந்த தலைவர் சிவனார், அவரின் இடப்பாகத்தில் உள்ள தலைவி பார்வதி, தூய ஜடாமுடியில் உள்ள பாகீரதியாகிய கங்கை - இம்மூவரின் குமாரனே, மெதுவாக மோகம் பற்றி (வள்ளி மனத்தில்) வளர்ந்த வள்ளிமலைமீது முதிர்ந்த நேயம் கொண்டவனே, சூழ்ந்துள்ள குறவர்களுக்குத் தலைவனாக ஆனவனே, மயக்கத்தைச் செய்யும் மாயமான கிரெளஞ்ச மலையை உருவும்படியாக வெப்பமான வேலைச் சுழற்றி விடுத்த கரத்தினனே, திருமால் அன்போடு மார்பில் வைத்த லக்ஷ்மியின் மருமகனே, தெய்வத்தன்மையுடைய யானைமுகன் விநாயகனுக்குத் தம்பியே, வெள்ளையானையாகிய ஐராவதத்துக்குத் தலைவனே, தேவயானைத் தேவிக்கு இனிய பெருமாளே. 
* திருவல்லம் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து கிழக்கே 8 மைலில் நீவா நதிக்கரையில் உள்ளது. திருத்தணிகையும், வள்ளிமலையும் அருகில் உள்ளன.

பாடல் 247 - திருத்தணிகை
ராகம் - கானடா; தாளம் - அங்கதாளம் - 5 1/2 தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2

தத்ததன தான தத்தம் தத்ததன தான தத்தம்     தத்ததன தான தத்தம் ...... தனதான

எத்தனைக லாதி சித்தங் கெத்தனைவி யாதி பித்தங்     கெத்தனைச ராச ரத்தின் ...... செடமான 
எத்தனைவி டாவெ ருட்டங் கெத்தனைவ லாண்மை பற்றங்     கெத்தனைகொ லூனை நித்தம் ...... பசியாறல் 
பித்தனைய னான கட்டுண் டிப்படிகெ டாமல் முத்தம்     பெற்றிடநி னாச னத்தின் ...... செயலான 
பெற்றியுமொ ராது நிற்குந் தத்தகுரு தார நிற்கும்     பெத்தமுமொ ராது நிற்குங் ...... கழல்தாராய் 
தத்தனத னாத னத்தந் தத்தனத னாத னத்தந்     தத்தனத னாத னத்தந் ...... தகுதீதோ 
தக்குகுகு டூடு டுட்டுண் டிக்குகுகு டீகு தத்தந்     தத்தனத னான னுர்த்துஞ் ...... சதபேரி 
சித்தர்கள்நி டாதர் வெற்பின் கொற்றவர்சு வாமி பத்தர்     திக்குகளொர் நாலி ரட்டின் ...... கிரிசூழச் 
செக்கணரி மாக னைக்குஞ் சித்தணிகை வாழ்சி வப்பின்     செக்கர்நிற மாயி ருக்கும் ...... பெருமாளே.

எத்தனை கலகச் சண்டைகள், எத்தனை சித்து வேலைகள், அங்கு எத்தனை வியாதிகள், எத்தனை பைத்தியக்காரச் செயல்கள், அசையும் உயிராகவும், அசையாததாகவும் உலகில் எடுத்த உடல்கள் எத்தனை, நீங்காத அச்சம் தரும் செயல்கள் எத்தனை, அங்கே வலிமையுடைய ஆண்மைச் செயல்கள்தாம் எத்தனை, அங்கே ஆசைகள் எத்தனை விதமானவையோ, புலால் உண்டு தினந்தோறும் பசியாறக்கூடிய செயல்கள் எத்தனை, பித்துப்பிடித்தவன் போன்ற யான் வயிற்றில் உண்டு இவ்வாறு கெட்டுப் போகாமல் பிறவியினின்றும் விடுதலை பெற்றிட, உனது அடியார் கூட்டத்தின் செயல்களான தன்மையும், யாராலும் உணர்தற்கு அரியதாக நிற்பதும், பரவிப் பிரகாசிக்கின்ற ஒளிமயமான ப்ரணவ மந்திரப் பொருளாக நிற்பதும், பாச பந்தங்களால் அறிவதற்கு அரிதாக நிற்பதுமான உன் கழல்களைத் தந்தருள்க. தத்தனத னாத னத்தந் தத்தனத னாத னத்தந் தத்தனத னாத னத்தந் தகுதீதோ தக்குகுகு டூடு டுட்டுண் டிக்குகுகு டீகு தத்தந் தத்தனத னாத னத்தந் தத்தனத னாத னத்தந் தத்தனத னாத னத்தந் தகுதீதோ தக்குகுகு டூடு டுட்டுண் டிக்குகுகு டீகு தத்தந் தத்தனத னான - என்ற தாளத்தில் ஒலிக்கும் நூற்றுக்கணக்கான முரசுகளின் ஒலயுடன், சித்தர்களும், மலை வேடர்களும், அரசர்களும், இறைவனின் அடியார்களும், எட்டுத் திக்குகளிலும் மலையை வலம் வந்து பணிய, சிவந்த கண்களை உடைய சிங்கம் கர்ஜிக்கும் ஞானத் திருத்தணிகை மலையில் வாழ்பவனே, செக்கச் சிவந்த நிறத்திலே இருக்கும் பெருமாளே. 

பாடல் 248 - திருத்தணிகை
ராகம் - ஡ணதி கொளை; தாளம் - ஆதி - எடுப்பு 3/4 இடம்

தனத்த தானன தத்தன தத்தன     தனத்த தானன தத்தன தத்தன          தனத்த தானன தத்தன தத்தன ...... தனதான

எலுப்பு நாடிக ளப்பொடி ரத்தமொ     டழுக்கு மூளைகள் மச்சொடு கொட்புழு          விருக்கும் வீடதி லெத்தனை தத்துவ ...... சதிகாரர் 
இறப்பர் சூதக வர்ச்சுத ரப்பதி     யுழப்பர் பூமித ரிப்பர்பி றப்புட          னிருப்பர் வீடுகள் கட்டிய லட்டுறு ...... சமுசாரம் 
கெலிப்பர் மால்வலை பட்டுறு துட்டர்கள்     அழிப்பர் மாதவ முற்றுநி னைக்கிலர்          கெடுப்பர் யாரையு மித்திர குத்தரர் ...... கொலைகாரர் 
கிருத்தர் கோளகர் பெற்றுதி ரிக்கள     வரிப்பர் சூடக ரெத்தனை வெப்பிணி          கெலிக்கும் வீடதை நத்தியெ டுத்திவ ...... ணுழல்வேனோ 
ஒலிப்பல் பேரிகை யுக்ரவ மர்க்கள     மெதிர்த்த சூரரை வெட்டியி ருட்கிரி          யுடைத்து வானவர் சித்தர்து தித்திட ...... விடும்வேலா 
உலுத்த ராவண னைச்சிர மிற்றிட     வதைத்து மாபலி யைச்சிறை வைத்தவன்          உலக்கை ராவிந டுக்கடல் விட்டவன் ...... மருகோனே 
வலிக்க வேதனை குட்டிந டித்தொரு     செகத்தை யீனவள் பச்சைநி றத்தியை          மணத்த தாதைப ரப்ரம ருக்கருள் ...... குருநாதா 
வனத்தில் வாழும யிற்குல மொத்திடு     குறத்தி யாரைம யக்கிய ணைத்துள          மகிழ்ச்சி யோடுதி ருத்தணி பற்றிய ...... பெருமாளே.

எலும்பு, நாடிகள், நீருடனும், ரத்தத்துடனும், அழுக்குகள், மூளைகள், தகுதியின்றி உள்ளிருக்கும் புழுக்கள், இவையாவும் நிறைந்திருக்கும் வீடு இந்த உடல். அத்தகைய வீட்டில் எத்தனை குணத்து மோசக்காரர்கள், அக்கிரமக்காரர்கள், சூதான உள்ளத்து மக்கள், தம் வறட்டுப் பேச்சால் ஊரையே ஏமாற்றுபவர்கள், பூமியில் தோன்றி, பிறந்த பிறப்புடன் முன்னேற்றம் இன்றி இருப்பவர்கள், வீடுகள் பலவற்றைக் கட்டி மிகவும் அலட்டிக்கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெற்றதைப் பேசித் திரிபவர், மோகவலையில் விழுந்து கிடக்கும் துஷ்டர்கள், பெரிய தவநிலையைப்பற்றி சற்றேனும் நினைத்துப் பார்க்காமல் அழிப்பவர்கள், யாவரையும் கெடுப்பவர்கள், நண்பர்களுக்கும் வஞ்சனை செய்பவர்கள், கொலைகாரர்கள், செருக்கு மிகுந்தவர்கள், கோள் சொல்பவர்கள் முதலியோருடன் சேர்ந்து திரிந்து திருட்டுத்தொழிலில் ஈடுபடுபவர்கள், கோப நெஞ்சினர் ஆகியோரையும், எத்தனை வியாதிகள் உண்டோ அத்தனையையும், வெற்றி பெற உழலும் இத்தகைய உடலாகிய வீட்டை நான் ஆசைப்பட்டு எடுத்து இந்த உலகில் அலைந்து திரிவேனோ? ஒலிக்கின்ற பல முரசு வாத்தியங்கள் முழங்கும் கடுமையான போர்க்களத்தில் எதிர்த்துவந்த அசுர வீரர்களை வெட்டி அழித்து, மாயை சூழ்ந்த கிரெளஞ்சமலையைப் பிளந்து எறிந்து, தேவர்களும் சித்தர்களும் வணங்கும்படியாகச் செலுத்திய வேலை உடையவனே, காமாந்தகனான ராவணனைச் சிரம் அற்று விழ அவனை வதைத்தவனும், (தன் பாதத்தை அவன் தலைமேல் வைத்து) மகாபலியைப் பாதாளத்தில் தள்ளிச் சிறை வைத்தவனும், இரும்பு உலக்கையைப் பொடிப்பொடியாக்கி நடுக்கடலில் கரைத்தவனும்* ஆகிய திருமாலின் மருகனே, வலி உண்டாகும்படியாக வேதப் பிரமனை சிரங்களில் குட்டினவனே, நடனம் செய்து ஒப்பற்ற உலகத்தை ஈன்ற தாயான பச்சை நிறப் பார்வதியை மணந்த தந்தையாகிய பரப்பிரம்மப் பொருளான சிவபிரானுக்கு உபதேசித்து அருளிய குருநாதனே, காட்டிலே வாழும் மயிலினம் போன்ற அழகியான குறத்தியாகிய வள்ளிதேவியை மயக்கி அணைத்து, மனமகிழ்ச்சியுடன் திருத்தணித்தலத்தில் பற்றுடன் வீற்றிருக்கும் பெருமாளே. 
* யாதவர்கள் தங்களுள் சாம்பன் என்பவனுக்கு கர்ப்பிணி வேஷமிட்டு, துர்வாச முனிவரை இவளுக்குப் பிறப்பது ஆணோ பெண்ணோ எனக் கேட்க, கோபமடைந்த துர்வாசர் ஓர் இரும்பு உலக்கை பிறக்கும், அதுவே யாதவர் குலத்தை அழிக்கும் என்று சபித்தார். இதை அறிந்த கண்ணன், பிறந்த உலக்கையைப் பொடியாக்கி நடுக்கடலில் கரைக்கச் செய்தான். பின்னர் உலக்கைப் பொடி கரையிலே வந்து கோரைப்புல்லாக முளைக்க, யாதவர் தம்முள் கலகம் மூண்டதும் அப்புல்லைப் பிடுங்கி ஒருவரை மற்றவர் குத்தி இறந்தனர். இரும்புத் துண்டு ஒன்று மீனின் வயிற்றில் வளர, அம்மீனைப் பிடித்த ஒரு வேடன் வயிற்றிலிருந்த துண்டைத் தன் அம்புநுனியில் வைத்தான். கண்ணனின் இறுதி நாளன்று தூக்கி வைத்திருந்த கண்ணனின் பாதத்தைப் பறவையென எண்ணி வேடன் அந்த அம்பை எய்தான். யாதவகுலத்தில் கடைசியாக எஞ்சிய கண்ணனும் பரமபதம் அடைந்தான்.

பாடல் 249 - திருத்தணிகை
ராகம் - மாயாமாளவகெளளை; தாளம் - ஆதி

தனத்தன தானம் தனத்தன தானம்     தனத்தன தானம் ...... தனதான

எனக்கென யாவும் படைத்திட நாளும்     இளைப்பொடு காலந் ...... தனிலோயா 
எடுத்திடு காயந் தனைக்கொடு மாயும்     இலச்சையி லாதென் ...... பவமாற 
உனைப்பல நாளுந் திருப்புக ழாலும்     உரைத்திடு வார்தங் ...... குளிமேவி 
உணர்த்திய போதந் தனைப்பிரி யாதொண்     பொலச்சர ணானுந் ...... தொழுவேனோ 
வினைத்திற மோடன் றெதிர்த்திடும் வீரன்     விழக்கொடு வேள்கொன் ...... றவனீயே 
விளப்பென மேலென் றிடக்கய னாரும்     விருப்புற வேதம் ...... புகல்வோனே 
சினத்தொடு சூரன் தனைக்கொடு வேலின்     சிரத்தினை மாறும் ...... முருகோனே 
தினைப்புன மோவுங் குறக்கொடி யோடுந்     திருத்தணி மேவும் ...... பெருமாளே.

எனக்கென்றே எல்லாம் சேகரிக்க வேண்டி தினந்தோறும் இளைப்பு உண்டாகும்படியாக பலகாலமாய் ஓய்ச்சல் இல்லாமல் எடுக்கின்ற தேகங்களுடன் பிறந்து (பின்னர் அவை) இறந்து போகும் வெட்கம் இல்லாத என் பிறப்பு ஓய்வு பெற, உன்னை பலகாலமும் திருப்புகழ் பாடிப் புகழ்கின்றவர்கள் அவர்களது இருப்பிடம் சென்றடைந்து விளக்கும் அறிவுரையை விட்டுவிலகாது ஒளி பொருந்திய உன் திருவடியை நான் தொழும் பாக்கியம் பெறுவேனோ? தன் தொழிலில் திறமையுடன் அன்றொருநாள் எதிர்த்துவந்து அம்பு எய்த வீரனாம் (மன்மதன்) வெந்து விழும்படி அந்த மன்மதனைக் கொன்றவனாகிய சிவன் நீயே (பிரணவப் பொருளை) இனி உரைப்பாயாக என்று கூறிட பிரமனும் விரும்பி மகிழ, வேதப் பொருளை உரைத்தவனே கோபத்துடன் சூரனைக் கடுமைகொண்ட வேலால் (அவனது) சிரத்தை அறுத்த முருகோனே தினைப்புனத்தில் வாசம் செய்த குறப்பெண் வள்ளியுடன் திருத்தணிகையில் வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 250 - திருத்தணிகை
ராகம் - ஆனந்த பைரவி; தாளம் - திஸ்ரத்ருவம் - திஸ்ர நடை - 16 1/2, - எடுப்பு - /3/3/3 0

தனன தந்த தத்த தனன தந்த தத்த     தனன தந்த தத்த ...... தனதான

எனைய டைந்த குட்டம் வினைமி குந்த பித்த     மெரிவ ழங்கு வெப்பு ...... வலிபேசா 
இகலி நின்ற லைக்கு முயல கன்கு லைப்பொ     டிரும லென்று ரைக்கு ...... மிவையோடே 
மனைகள் பெண்டிர் மக்கள் தமைநி னைந்து சுத்த     மதிம யங்கி விட்டு ...... மடியாதே 
மருவி யின்றெ னக்கு மரக தஞ்சி றக்கு     மயிலில் வந்து முத்தி ...... தரவேணும் 
நினைவ ணங்கு பத்த ரனைவ ருந்த ழைக்க     நெறியில் நின்ற வெற்றி ...... முனைவேலா 
நிலைபெ றுந்தி ருத்த ணியில்வி ளங்கு சித்ர     நெடிய குன்றில் நிற்கு ...... முருகோனே 
தினைவி ளங்க லுற்ற புனஇ ளங்கு றத்தி     செயல றிந்த ணைக்கு ...... மணிமார்பா 
திசைமு கன்தி கைக்க அசுர ரன்ற டைத்த     சிறைதி றந்து விட்ட ...... பெருமாளே.

எனக்கு வந்த குஷ்டநோய், வினைக்கு ஈடாக மிகுந்துவரும் பித்த நோய், கொதிப்பைத் தருகிற காய்ச்சல், சொல்ல முடியாத வலியோடு, மாறுபட்டுத் துயர்தந்து வருத்தும் முயலகன் என்ற வலிப்புநோய், நடுக்க நோயுடன், இருமல் எனச் சொல்லப்படும் இந்த நோய்களுடனே தவித்து, வீடுகள், பெண்டிர், மக்கள் என்ற இவர்களை நினைந்து வருந்தி, நல்லறிவு மயங்கிப்போய் அடியேன் இறக்காதவண்ணம், நீ இன்று என்முன் தோன்றி, மரகத ஒளிவீசும் பச்சைமயில் வாகனத்தில் வந்து எனக்கு பேரின்ப முக்தியை அருள்வாயாக. உன்னைத் தொழும் அடியார்கள் யாவரும் சுகத்துடன் இருக்கும்படி அதற்கான வழியில் அவர்களுடன் நின்று, கையில் வெற்றிபெறும் கூரிய வேலாயுதத்துடன் நிற்கும் வேலனே, அழியாத திருத்தணிகைப் பதியில் விளங்குகின்ற அழகிய நெடிய குன்றத்தில் எழுந்தருளியுள்ள முருகனே, தினைப்பயிர் செழிப்பாக வளர்ந்துள்ள புனத்தில் வாழும் இளம் குமரியான குற வள்ளியை, அவளுடைய அன்புச்செயலை அறிந்து அணைக்கின்ற அழகிய திருமார்பினனே, பிரமதேவன் திகைக்குமாறு அசுரர்கள் அந்நாளில் தேவர்களை அடைத்துவைத்த சிறைகளைத் திறந்து விட்டு தேவர்களை விடுவித்த பெருமாளே. 

by Swathi   on 28 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.