LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- அருணகிரிநாதர் நூல்கள்

திருப்புகழ்-பாடல்-[276 -300]

பாடல் 276 - திருத்தணிகை
ராகம் - .....; தாளம் -
தனத்த தத்தன தனதன தனதன
     தனத்த தத்தன தனதன தனதன
          தனத்த தத்தன தனதன தனதன ...... தனதான
தொடத்து ளக்கிகள் அபகட நினைவிகள்
     குருட்டு மட்டைகள் குமரிகள் கமரிகள்
          சுதைச்சி றுக்கிகள் குசலிக ளிசலிகள் ...... முழுமோசந் 
துறுத்த மட்டைகள் அசடிகள் கசடிகள்
     முழுப்பு ரட்டிகள் நழுவிகள் மழுவிகள்
          துமித்த மித்திரர் விலைமுலை யினவலை ...... புகுதாமல் 
அடைத்த வர்க்கியல் சரசிகள் விரசிகள்
     தரித்த வித்ரும நிறமென வரவுட
          னழைத்து சக்கிர கிரிவளை படிகொடு ...... விளையாடி 
அவத்தை தத்துவ மழிபட இருளறை
     விலக்கு வித்தொரு சுடரொளி பரவந
          லருட்பு கட்டியு னடியிணை யருளுவ ...... தொருநாளே 
படைத்த னைத்தையும் வினையுற நடனொடு
     துடைத்த பத்தினி மரகத சொருபியொர்
          பரத்தி னுச்சியி னடநவி லுமையரு ...... ளிளையோனே 
பகைத்த ரக்கர்கள் யமனுல குறஅமர்
     தொடுத்த சக்கிர வளைகர மழகியர்
          படிக்க டத்தையும் வயிறடை நெடியவர் ...... மருகோனே 
திடுக்கி டக்கட லசுரர்கள் முறிபட
     கொளுத்தி சைக்கிரி பொடிபட சுடரயில்
          திருத்தி விட்டொரு நொடியினில் வலம்வரு ...... மயில்வீரா 
தினைப்பு னத்திரு தனகிரி குமரிநல்
     குறத்தி முத்தொடு சசிமக ளொடுபுகழ்
          திருத்த ணிப்பதி மலைமிசை நிலைபெறு ...... பெருமாளே.
தொட்டால் கூச்சம் அடைபவர் போல அசைபவர்கள். அந்த வஞ்சக நினைவு கொண்டவர்கள். அறிவுக் கண் இல்லாத மூடர்கள். இள மகளிர். குற்றம் உள்ளவர்கள். நிலப் பிளப்பில் (பிறரை ஆழ்த்துபவர்கள்). இன்பச் சுவையைச் சிறுகச் செய்பவர்கள். தந்திரவாதிகள். எளிதில் பிணக்கம் கொள்பவர்கள். முழு மோசம் நிரம்பியுள்ள பயனிலிகள். மூடர்கள். துர்க்குணிகள். முழுதும் மாறுபட்ட பேச்சுக் காரிகள், பிடிபடாது நழுவுகிறவர்கள், தங்கள் சூது வெளியாகாமல் மழுப்புவோர்கள், (வருபவரின்) பொருளை நண்பர்கள் போல நடித்துப் பறிக்கின்றவர்கள், மார்பகத்தை விலைக்கு விற்பவர்கள் (ஆகிய பொது மகளிரின்) வலையில் நான் புகாமல், (நற்கதிக்குப் போகும் வழியைத்) தடுத்து அடைத்த விலைமாதர்களுக்குச் (சமமாக நடக்கும்), இன்பத்தைக் காட்டுபவர்களும் துன்பத்தை ஊட்டுபவர்களும் ஆகிய (சித்துக்களைக் காட்டி மோசம் செய்யும்) சிலரை, அணிந்துள்ள பவளம் போன்ற ஒளி போல மதித்து, அவர்களை உடன் வரும்படி அழைத்துச் சென்று, சக்கிவாள கிரியால் சூழப்பட்ட இப்பூமியில் அவர்களுடன் வீண் பொழுது போக்கி விளையாடும் என்னுடைய ஜாக்கிராதி* மல அவஸ்தைகளும், தத்துவ சேஷ்டைகளும் ஒடுங்க (எனது) அஞ்ஞானத்தை நீக்கி, என் உள்ளே ஞானப் பேரொளி பரவ, நல்ல (உனது) திருவருளை ஊட்டி, உன் திருவடிகளை அருளுகின்ற ஒரு நாளும் எனக்குக் கிட்டுமோ? படைத்து எல்லாவற்றையும் செயற்படச் செய்து காப்பாற்றி, நடராஜப் பெருமானோடு அழித்த கற்புடையாள், மரகத நிறத்தினள், ஒப்பற்ற பர வெளிக்கு மேலே நடனம் செய்கின்ற உமா தேவியார் ஈன்ற இளையோனே, பகைத்து வந்து அசுரர்கள் யம லோகத்தை அடையும்படி போர் செய்தவரும், சக்கரம், சங்கு ஏந்திய திருக்கரத்து அழகரும், பூமியாகிய பாண்டத்தை வயிற்றில் அடக்கியவருமாகிய நெடியோன் திருமாலின் மருகனே, கடல் திடுக்கிடவும், அசுரர்கள் முறிபட்டு ஓடவும், சேர்ந்துள்ள அஷ்ட திக்குகளில் உள்ள மலைகள் பொடியாகும்படியும் ஒளி வேலைச் சீராகச் செலுத்தி விட்டு, ஒரு நொடியில் மயில் மீதேறி உலகை வலம் வந்த வீரனே, தினைப் புனத்தில் இருந்த, இரண்டு மலை போன்ற மார்பகங்களைக் கொண்ட குமரி, நல்ல குறச் சாதியினள், முத்தாகிய வள்ளியுடனும், இந்திராணியின் மகளான தேவயானையுடனும், புகழ் கொண்ட திருத்தணிகை மலையில் நிலைத்து வீற்றிருக்கும் பெருமாளே. 
* அவஸ்தைகள் ஐந்து: ஜாக்கிரம் (நனவு), சொப்பனம் (கனவு), சுழுத்தி (உறக்கம்), துரியம் (பேருறக்கம்), துரியாதீதம் (உயிர்ப்படக்கம்).
பாடல் 277 - திருத்தணிகை
ராகம் - செஞ்சுருட்டி/ஸஹானா 
தாளம் - அங்கதாளம் - 6 1/2 
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தக-1, தகிட-1 1/2
தனதான தனத்தன தான தனதான தனத்தன தான
     தனதான தனத்தன தான ...... தனதான
நிலையாத சமுத்திர மான சமுசார துறைக்கணின் மூழ்கி
     நிசமான தெனப்பல பேசி ...... யதனூடே 
நெடுநாளு முழைப்புள தாகி பெரியோர்க ளிடைக்கர வாகி
     நினைவால்நி னடித்தொழில் பேணி ...... துதியாமல் 
தலையான வுடற்பிணி யூறி பவநோயி னலைப்பல வேகி
     சலமான பயித்திய மாகி ...... தடுமாறித் 
தவியாமல் பிறப்பையு நாடி யதுவேரை யறுத்துனை யோதி
     தலைமீதில் பிழைத்திட வேநி ...... னருள்தாராய் 
கலியாண சுபுத்திர னாக குறமாது தனக்குவி நோத
     கவினாரு புயத்திலு லாவி ...... விளையாடிக் 
களிகூரு முனைத்துணை தேடு மடியேனை சுகப்பட வேவை
     கடனாகு மிதுக்கன மாகு ...... முருகோனே 
பலகாலு முனைத்தொழு வோர்கள் மறவாமல் திருப்புகழ் கூறி
     படிமீது துதித்துடன் வாழ ...... அருள்வேளே 
பதியான திருத்தணி மேவு சிவலோக மெனப்பரி வேறு
     பவரோக வயித்திய நாத ...... பெருமாளே.
அகலம், ஆழம் இவ்வளவு என்று காணமுடியாத பெரும் சமுத்திரம் போன்ற சம்சாரம் ஆகிய நீர்த்துறையிலே மூழ்கி, மெய் போன்ற பல பொய்களைப் பேசி, அந்த சம்சாரக் கடலிலே, நீண்ட காலமாக உழைப்புள்ளவன் ஆகி, பெரியோர்களின் கூட்டத்தில் சேராமல் ஒளிந்து மறைந்து ஒதுங்கி, நல்ல நினைவோடு நின்னடிக்கான தொண்டுகளை விரும்பிப் போற்றாமல், உடலில் முதன்மையான நோய்கள் வந்து தாக்கவும், இந்த சம்சார சாகரத்தில் பிறவி நோய் என்னும் பல அலைகள் வீசவும், கோபம் கொண்ட பைத்தியக்காரனாக மாறி, யான் தடுமாறித் தவிக்காமல், பிறவியின் மூல காரணத்தை ஆராய்ந்து, அதன் ஆணிவேராகிய ஆசையை அறுத்து, உன் புகழ் ஓதி இவ்வுலகில் உய்யுமாறு உன் திருவருள் புரிந்து ஆட்கொள்வாயாக. மேன்மை தங்கிய கல்யாண மாப்பிள்ளையாகவே குறக் குல வள்ளி தேவியிடத்தில் என்றும் விளங்கி உல்லாசமாக, அழகு நிறைந்த அவளது திருப் புயத்தில் தழுவி உலாவி லீலைகள் புரிந்து மகிழும் உன்னை உற்றதுணையெனத் தேடுகின்ற என்னை இன்பம் அடையும்படியாகவே வைத்தருள்க. இது உனக்குக் கடமையாகும். அவ்வாறு என்னை அருளினால் அது உனக்குப் பெருமையும் ஆகும், முருகனே. பன்முறையும் உன்னை வணங்குபவர்கள், மறக்காமல் உன் திருப்புகழைப் பாடி இவ்வுலகிலே உன்னைத் துதிசெய்து உன்னுடனேயே எப்போதும் இருந்து வாழும்படியாக அருளும் செவ்வேளே, இதுவே பூலோகத்தில் உள்ள சிவலோகம் என்ற அன்பை உண்டாக்கத்தக்க திருத்தலமாகிய திருத்தணிகையில் வாழ்கின்ற, பிறவிப் பெரு நோயைத் தீர்க்கவல்ல, வைத்தியநாதப் பெருமாளே. 
பாடல் 278 - திருத்தணிகை
ராகம் - சிந்துபைரவி ; தாளம் - கண்டஜம்பை - 8
தனத்த தத்தனத் ...... தனதான
     தனத்த தத்தனத் ...... தனதான
நினைத்த தெத்தனையிற் ...... றவறாமல்
     நிலைத்த புத்திதனைப் ...... பிரியாமற் 
கனத்த தத்துவமுற் ...... றழியாமற்
     கதித்த நித்தியசித் ...... தருள்வாயே 
மனித்தர் பத்தர்தமக் ...... கெளியோனே
     மதித்த முத்தமிழிற் ...... பெரியோனே 
செனித்த புத்திரரிற் ...... சிறியோனே
     திருத்த ணிப்பதியிற் ...... பெருமாளே.
நினைத்தது எந்த அளவும் தவறாமல் கைகூடவும், நிலையான ஞானத்தை விட்டு யான் பிரியாமல் இருக்கவும், பெருமை வாய்ந்த தத்துவங்களைக்* கடந்து அப்பாலான நிலையை யான் அடைந்து அழியாமல் இருக்கவும், வெளிப்படுகின்ற நிரந்தரமான சித்தநிலையை நீ அருள்வாயாக. மனிதர்களுக்குள் அன்புடையார்க்கு மிக எளியவனே, மதிக்கப்படுகிற இயல், இசை, நாடகமாகும் முத்தமிழில் சிறந்தவனே, சிவ மூர்த்தியிடம் தோன்றிய குமாரர்களுள் இளையவனே**, திருத்தணிகைப் பதியில் எழுந்தருளியுள்ள பெருமாளே. 
* 96 தத்துவங்கள் பின்வருமாறு:36 பரதத்துவங்கள் (அகநிலை): ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து - 25 (புறநிலை): மண், தீ, நீர், காற்று, வெளி.ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை): வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4. 
** சிவ குமாரர்கள் நால்வர்: விநாயகர், வீரபத்திரர், பைரவர், முருகன் (அனைவருக்கும் இளையவர்).
பாடல் 279 - திருத்தணிகை
ராகம் - தந்யாசி; தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2 
தகிட-1 1/2, தகதிமி-2
தனன தானனம் தனன தானனம்
     தனன தானனம் ...... தனதான
பகலி ராவினுங் கருவி யாலனம்
     பருகி யாவிகொண் ...... டுடல்பேணிப் 
பழைய வேதமும் புதிய நூல்களும்
     பலபு ராணமுஞ் ...... சிலவோதி 
அகல நீளமென் றளவு கூறரும்
     பொருளி லேயமைந் ...... தடைவோரை 
அசடர் மூகரென் றவல மேமொழிந்
     தறிவி லேனழிந் ...... திடலாமோ 
சகல லோகமும் புகல நாடொறுஞ்
     சறுகி லாதசெங் ...... கழுநீருந் 
தளவு நீபமும் புனையு மார்பதென்
     தணிகை மேவுசெங் ...... கதிர்வேலா 
சிகர பூதரந் தகர நான்முகன்
     சிறுகு வாசவன் ...... சிறைமீளத் 
திமிர சாகரங் கதற மாமரஞ்
     சிதற வேல்விடும் ...... பெருமாளே.
பகலிலும் இரவிலும் இந்த உடம்பு என்ற கருவியால் சோறு உண்டு உயிரைப் பாதுகாத்து இவ்வுடம்பை விரும்பி வளர்த்த யான், பழமையான வேத நூல்களையும் புதுமையான நூல்களையும் பலவகையான புராணங்களையும் ஒரு சிலவற்றை ஓதி உணர்ந்து, இத்தனை அகலம் இத்தனை நீளம் என்று அளக்க முடியாத பேரின்பப் பொருளிலே மனத்தை வைத்து அமைதியுறும் ஆன்றோரை, மூடர், ஊமையர் என்றெல்லாம் வீண் வார்த்தைகளால் அவமதித்து அறிவிலியாகிய அடியேன் அழிந்து போகலாமா? எல்லா உலகங்களும் போற்றிப் புகழும்படி, தினந்தோறும் தவறாமல் மலர்கின்ற செங்கழுநீர் மலரும், முல்லையும், கடப்ப மலரும் தரிக்கின்ற மார்பனே, அழகிய திருத்தணிகையில் வாழ்கின்ற செவ்வொளி வீசும் வேலாயுதா, சிகரங்களைக் கொண்ட கிரெளஞ்ச மலை பொடிப்பொடியாக, பிரம்மாவும், மேல்நிலையிலிருந்து தாழ்ந்த இந்திரனும் சூரனது சிறைச்சாலையிலிருந்து மீட்சி பெற, இருண்ட கடல் கொந்தளித்து அலை ஓசை மிக, மாமரமாக மாய உருக்கொண்ட சூரனது உடல் பிளவுபட, வேலாயுதத்தைச் செலுத்திய பெருமாளே. 
பாடல் 280 - திருத்தணிகை
ராகம் - .....; தாளம் -
தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத்
     தனத்தனத் தனத்தனத் ...... தனதான
பருத்தபற் சிரத்தினைக் குருத்திறற் கரத்தினைப்
     பரித்தவப் பதத்தினைப் ...... பரிவோடே 
படைத்தபொய்க் குடத்தினைப் பழிப்பவத் திடத்தினைப்
     பசிக்குடற் கடத்தினைப் ...... பயமேவும் 
பெருத்தபித் துருத்தனைக் கிருத்திமத் துருத்தியைப்
     பிணித்தமுக் குறத்தொடைப் ...... புலனாலும் 
பிணித்தவிப் பிணிப்பையைப் பொறுத்தமிழ்ப் பிறப்பறக்
     குறிக்கருத் தெனக்களித் ...... தருள்வாயே 
கருத்திலுற் றுரைத்தபத் தரைத்தொறுத் திருக்கரைக்
     கழித்தமெய்ப் பதத்தில்வைத் ...... திடுவீரா 
கதித்தநற் றினைப்புனக் கதித்தநற் குறத்தியைக்
     கதித்தநற் றிருப்புயத் ...... தணைவோனே 
செருத்தெறுத் தெதிர்த்தமுப் புரத்துரத் தரக்கரைச்
     சிரித்தெரித் தநித்தர்பொற் ...... குமரேசா 
சிறப்புறப் பிரித்தறத் திறத்தமிழ்க் குயர்த்திசைச்
     சிறப்புடைத் திருத்தணிப் ...... பெருமாளே.
பருமனனான பல்லை உடைய தலையையும், வலிமை உடைய கைகளையும், தாங்குகின்ற அந்தக் கால்களையும், அன்புடனே செய்யப்பட்ட, பொய்யாலான இந்தப் பானை போன்ற உடலை, பழிக்கும் பாவத்துக்கும் இடமான இந்த உடலை, பசிக்கு இருப்பிடமான குடலோடு கூடிய இந்த உடலை, பயத்தோடும் கூடிய பெரிய பித்த சா£ரத்தை, தோலாலான உலை ஊதும் கருவியை, பொருத்தப்பட்டுள்ள (காமம், வெகுளி, மயக்கம் என்ற) மூன்று குற்றங்களோடும், (சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற) ஐந்து புலன்களோடும் கட்டுப்பட்ட இந்தத் நோய்ப் பையை (வாழும்போது) தாங்குவதும், (சாவில்) ஆழ்த்துவதுமான இந்தப் பிறப்பு ஒழிந்து போவதற்கான நோக்கத்தைக் கொண்ட கருத்தை எனக்குத் தந்து அருள்வாயாக. தமது கருத்தில் வைத்து உன்னைப் புகழ்ந்த அடியார்களை (வாழ்வித்து), மிகுந்த வஞ்சம் உடையவர்களை ஒதுக்கித்தள்ளி, (அடியார்களை மட்டும்) உன் மெய்ப்பதத்தில் சேர்த்துக்கொள்ளும் வீரனே, விளைந்த நல்ல தினைப்பயிர் மிகுந்த புனத்தில் விளங்கும் நல்ல குறத்தியாம் வள்ளியை உயர்ந்த உன் அழகிய தோள்களிலே அணைந்தவனே, போரில் நெருங்கிவந்து எதிர்த்த திரிபுரத்து வலிய அரக்கர்களை சிரித்தே எரித்து அழித்தவரும், அழிவில்லாதவருமான சிவபெருமானின் அழகிய குமரேசனே, சிறப்பாகத் தனிநின்று அறநெறி கூறும் தமிழ்நாட்டின் உயர்ந்த வட எல்லையில் இருக்கும் சிறப்பைப் பெற்றுள்ள திருத்தணித்தலத்துப் பெருமாளே. 
பாடல் 281 - திருத்தணிகை
ராகம் -.....; தாளம் - ......
தனன தத்தன தத்தன தத்தன
     தனன தத்தன தத்தன தத்தன
          தனன தத்தன தத்தன தத்தன ...... தனதான
பழமை செப்பிய ழைத்தித மித்துடன்
     முறைம சக்கிய ணைத்துந கக்குறி
          படஅ ழுத்திமு கத்தைமு கத்துற ...... வுறவாடிப் 
பதறி யெச்சிலை யிட்டும ருத்திடு
     விரவு குத்திர வித்தைவி ளைப்பவர்
          பலவி தத்திலு மற்பரெ னச்சொலு ...... மடமாதர் 
அழிதொ ழிற்குவி ருப்பொடு நத்திய
     அசட னைப்பழி யுற்றஅ வத்தனை
          அடைவு கெட்டபு ரட்டனை முட்டனை ...... அடியேனை 
அகில சத்தியு மெட்டுறு சித்தியு
     மெளிதெ னப்பெரு வெட்டவெ ளிப்படு
          மருண பொற்பத முற்றிட வைப்பது ...... மொருநாளே 
குழிவி ழிப்பெரு நெட்டல கைத்திரள்
     கரண மிட்டுந டித்தமி தப்படு
          குலிலி யிட்டக ளத்திலெ திர்த்திடு ...... மொருசூரன் 
குருதி கக்கிய திர்த்துவி ழப்பொரு
     நிசிச ரப்படை பொட்டெழ விக்ரம
          குலிச சத்தியை விட்டருள் கெர்ச்சித ...... மயில்வீரா 
தழையு டுத்தகு றத்திப தத்துணை
     வருடி வட்டமு கத்தில தக்குறி
          தடவி வெற்றிக தித்தமு லைக்குவ ...... டதன்மீதே 
தரள பொற்பணி கச்சுவி சித்திரு
     குழைதி ருத்திய ருத்திமி குத்திடு
          தணிம லைச்சிக ரத்திடை யுற்றருள் ...... பெருமாளே.
பழைய உறவை எடுத்துக் கூறி அழைத்து, இன்பமும் பொய்யும் கலந்து முறையே மயங்கச் செய்து அணைத்து, நகக்குறி உடலில் பட அழுத்தி, முகத்தை முகத்தோடு வைத்து உறவாடி, அவசரமாக எச்சில் கூடிய மருந்தை ஊட்டி, வஞ்சகம் கலந்த தந்திரச் செயல்களைச் செய்பவர்கள், பல வகைகளிலும் அற்பர் என்று சொல்லத் தக்க அறிவில்லாத விலைமாதர்களுடன் அழிந்து போகும் தொழில்களில் விருப்பத்துடன் ஆசைப்படும் முட்டாளை, பழிக்கு ஆளான வீணனை, தகுதி இல்லாத பொய்யனை, மூடனாகிய அடியேனை சகல சக்தியும், அஷ்டமா* சித்திகளும் எளிதில் கிட்டும்படி, பெரிய வெட்ட வெளியில் தோன்றும் உனது சிவந்த அழகிய திருவடிகளை நான் சேரும்படியாக வைக்கும் ஒரு நாள் எனக்குக் கிடைக்குமா? குழிந்த விழிகளைக் கொண்ட, பெரிது நீண்ட பேய்க் கூட்டங்கள் கூத்துடன் நடனமாடி, அளவில்லாத வீராவேச ஒலி செய்த போர்க்களத்தில், எதிர்த்து வந்த ஒப்பற்ற சூரன் ரத்தத்தைக் கக்கி அதிர்ச்சியுடன் விழும்படி போர் செய்தும், அசுரர் சேனைகள் பொடிபட்டு அழியவும், (இந்திரனது) வலிமை பொருந்திய வஜ்ராயுதம் போன்ற வேலாயுதத்தைச் செலுத்திய தீரனே, பேரொலி செய்யும் மயில் வீரனே, தழைகளை உடையாகக் கொண்ட குறவள்ளியின் திருவடிகள் இரண்டை வருடியும், வட்டமாக உள்ள முகத்தில் பொட்டு அடையாளத்தை வைத்தும், வெளித்தோன்றும் மலை போன்ற மார்பகங்களின் மேல், முத்தாலாகிய அழகிய ஆபரணங்களை, கச்சை அணிவித்தும், இரண்டு குண்டலங்களையும் செவிகளில் இடம் பெற வைத்தும், காதல் பெருகும் பெருமாளே, தணிகை மலை உச்சியில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* அஷ்டமாசித்திகள் பின்வருமாறு:அணிமா - அணுவிலும் சிறிய உருவினன் ஆதல்.மகிமா - மேருவினும் பெரிய உருவினன் ஆதல்.கரிமா - ஆயுதங்களுக்கும், ஆகாயத்துக்கும், காலத்துக்கும் அப்பால் ஆதல்.லகிமா - ஆகாயகமனம், அந்தரத்தில் இருத்தல்.பிராப்தி - பர காயங்களில் புகுதல் (கூடுவிட்டு கூடுபாய்தல்).பிராகாமியம் - எல்லாவற்றிலும் நிறைந்திருத்தல்.ஈசத்துவம் - எல்லாவற்றுக்கும் நாதனாக இருத்தல்.வசித்துவம் - எல்லா இடங்களிலும் இருந்து யாவற்றையும் வசப்படுத்தல்.
பாடல் 282 - திருத்தணிகை
ராகம் - .....; தாளம் - ......
தனதன தத்தத் தனதன தத்தத்
     தனதன தத்தத் ...... தனதான
புருவநெ றித்துக் குறுவெயர் வுற்றுப்
     புளகித வட்டத் ...... தனமானார் 
பொருவிழி யிற்பட் டவரொடு கட்டிப்
     புரளும சட்டுப் ...... புலையேனைக் 
கருவிழி யுற்றுக் குருமொழி யற்றுக்
     கதிதனை விட்டிட் ...... டிடுதீயக் 
கயவனை வெற்றிப் புகழ்திகழ் பத்மக்
     கழல்கள்து திக்கக் ...... கருதாதோ 
செருவசு ரப்பொய்க் குலமது கெட்டுத்
     திரைகட லுட்கப் ...... பொரும்வேலா 
தினைவன முற்றுக் குறவர் மடப்பைக்
     கொடிதன வெற்பைப் ...... புணர்மார்பா 
பெருகிய நித்தச் சிறுபறை கொட்டிப்
     பெரிகைமு ழக்கப் ...... புவிமீதே 
ப்ரபலமுள் சுத்தத் தணிமலை யுற்றுப்
     ப்ரியமிகு சொக்கப் ...... பெருமாளே.
புருவத்தை நெறித்து, சிறு வியர்வை உற்று, புளகிதம் கொண்ட வட்ட வடிவமான மார்பகத்தை உடைய (பொது) மாதர்களின் பூசலிடும் கண்களில் அகப்பட்டு அவர்களுடன் (படுக்கையில்) கட்டிப் புரளுகின்ற அசடனாகிய இழிந்த எனக்கு, கருவில் விழும் வழியிலே பொருந்தி, குருவின் வார்த்தைகளைக் கைவிட்டு, நற்கதி அடைதலை விட்டு விலகி, கொடிய கீழ் மகனான எனக்கு, (உனது) வெற்றியும், புகழும் விளங்குகின்ற திருவடித் தாமரைகளைத் துதிக்கும் எண்ணம் தோன்றக் கூடாதோ? போர் செய்யும் அசுரர்களுடய பொய்யான வாழ்க்கைக் குலம் அழியவும், அலை வீசும் கடல் அஞ்சவும் சண்டை செய்த வேலனே, வள்ளி மலையில் இருந்த தினைப் புனத்துக்குச் சென்று, குறவர் குலத்தில் தோன்றிய பைங்கொடியாகிய வள்ளியின் மார்பாகிய மலையைத் தழுவிய மார்பனே, பெருகி ஒலிக்கின்ற சிறிய பறை நாள் தோறும் கொட்டி முழக்க, பேரிகை முழக்க, பூமியில் புகழ் உடைய, பரிசுத்தமான திருத்தணிகை மலையில் வீற்றிருந்து, (அம்மலையின்) மீது விருப்பம் கொண்டு, அழகு வாய்ந்த பெருமாளே. 
பாடல் 283 - திருத்தணிகை
ராகம் - ....; தாளம் -
தானனத் தத்த தத்த தானனத் தத்த தத்த
     தானனத் தத்த தத்த ...... தனதான
பூசலிட் டுச்ச ரத்தை நேர்கழித் துப்பெ ருத்த
     போர்விடத் தைக்கெ டுத்து ...... வடிகூர்வாள் 
போலமுட் டிக்கு ழைக்கு ளோடிவெட் டித்தொ ளைத்து
     போகமிக் கப்ப ரிக்கும் ...... விழியார்மேல் 
ஆசைவைத் துக்க லக்க மோகமுற் றுத்து யர்க்கு
     ளாகிமெத் தக்க ளைத்து ...... ளழியாமே 
ஆரணத் துக்க ணத்து னாண்மலர்ப் பொற்ப தத்தை
     யான்வழுத் திச்சு கிக்க ...... அருள்வாயே 
வாசமுற் றுத்த ழைத்த தாளிணைப் பத்த ரத்த
     மாதர்கட் கட்சி றைக்கு ...... ளழியாமே 
வாழ்வுறப் புக்கி ரத்ன ரேகையொக் கச்சி றக்கு
     மாமயிற் பொற்க ழுத்தில் ...... வரும்வீரா 
வீசுமுத் துத்தெ றிக்க வோலைபுக் குற்றி ருக்கும்
     வீறுடைப் பொற்கு றத்தி ...... கணவோனே 
வேலெடுத் துக்க ரத்தி னீலவெற் பிற்ற ழைத்த
     வேளெனச் சொற்க ருத்தர் ...... பெருமாளே.
போர் புரிவது போல் அமைந்து, அம்பை (தனது கூர்மைக்கு) நேர் நிற்க முடியாமல் விரட்டித் தள்ளி, மிகுந்து நெருங்கி வந்த (ஆலகால) விஷத்தை வென்று அழித்து, மிகக் கூர்மை கொண்ட வாள் போலத் தாக்கி, காதிலுள்ள குண்டலங்கள் வரையிலும் ஓடிப் பாய்ந்து, கண்டவர் உயிரை வெட்டித் தொளைத்து, இன்பத்தைத் தன்னிடம் நிரம்பக் கொண்டுள்ள கண்களை உடைய பொது மகளிர் மேல் ஆசை வைத்து, கலக்கும் மோகத்தைக் கொண்டு, துயரத்துக்கு உள்ளாகி மிகவும் சோர்ந்து உள்ளம் குலைந்து போகாமல், வேதத்தின் கண் விரும்பிப் போற்றும் புது மலர் அணிந்துள்ள அழகிய திருவடியை நான் போற்றிச் சுகம் பெற அருள் புரிவாயாக. நறுமணம் கொண்டு விளங்கும் உனது திருவடியைப் பற்றிய பக்தர்கள், பொருளாசை கொண்ட விலைமாதர்களின் கண் என்னும் சிறைச் சாலையில் அடைபட்டு அழிந்து போகாமல் நல் வாழ்வை அடையும்படி புறப்பட்டு, ரத்ன வரிகள் போலப் பிரகாசிக்கும் நிறம் கொண்ட மேன்மையான மயிலின் அழகிய கழுத்தில் வருகின்ற வீரனே, ஒளி வீசும் முத்துக்கள் சிதறுண்ண, (தினைப்புனத்தில்) ஓலையால் ஆக்கப்பட்ட பரண் மீது புகுந்து நின்றிருக்கும் பெருமை வாய்ந்த அழகிய குறப் பெண்ணாகிய வள்ளியின் கணவனே, கையில் வேலாயுதத்துடன், நீலோற்பலம் (தினமும் சுனையில்) மலர்கின்ற திருத்தணிகை மலையில் மகிழ்ந்து வீற்றிருப்பவனே, செவ்வேளே எனக் கூறிப் புகழும் கருத்துள்ள அடியார்களின் பெருமாளே. 
பாடல் 284 - திருத்தணிகை
ராகம் - .....; தாளம் -
தனத்தன தானம் தனத்தன தானம்
     தனத்தன தானம் ...... தனதான
பெருக்கவு பாயங் கருத்துடை யோர்தம்
     ப்ரபுத்தன பாரங் ...... களிலேசம் 
ப்ரமத்துட னாளும் ப்ரமித்திருள் கூரும்
     ப்ரியக்கட லூடுந் ...... தணியாத 
கருக்கட லூடுங் கதற்றும நேகங்
     கலைக்கட லூடுஞ் ...... சுழலாதே 
கடப்பலர் சேர்கிண் கிணிப்ரபை வீசும்
     கழற்புணை நீதந் ...... தருள்வாயே 
தருக்கிய வேதன் சிறைப்பட நாளுஞ்
     சதுர்த்தச லோகங் ...... களும்வாழச் 
சமுத்திர மேழுங் குலக்கிரி யேழுஞ்
     சளப்பட மாவுந் ...... தனிவீழத் 
திருக்கையில் வேலொன் றெடுத்தம ராடுஞ்
     செருக்கு மயூரந் ...... தனில்வாழ்வே 
சிறப்பொடு ஞானந் தமிழ்த்ரய நீடுந்
     திருத்தணி மேவும் ...... பெருமாளே.
விரிவான தந்திரமான எண்ணங்கள் உடைய விலைமாதர்களின் மேன்மை விளங்கும் மார்பகங்களில் சிறப்புடன் தினந்தோறும் மயங்கித் திளைத்து, அஞ்ஞானம் மிக்க ஆசைக் கடல் உள்ளும், ஓய்வு இல்லாத பிறவிக் கடல் உள்ளும், கத்திப் படிக்கும் நூற்கடல் உள்ளும் நான் சுழற்சி அடைந்து வேதனை அடையாமல், (இக் கடல்களைக் கடக்க) கடப்ப மலர் சேர்ந்துள்ள, கிண்கிணியின் ஒளி வீசும், திருவடியாகிய தெப்பத்தை நீ கொடுத்து அருள் புரிவாயாக. செருக்கு மிக்க, வேதம் வல்ல பிரமன் சிறையில் அடைபடவும், நாள்தோறும் பதினான்கு உலகங்களும் வாழும்படியும், ஏழு கடல்களும் சிறந்த ஏழு மலைகளும் துன்பப்படவும், மாமரமாகிய சூரனும் தனித்து விழவும், அழகிய கைகளில் ஒப்பற்ற வேலாயுதத்தை எடுத்து போர் செய்தவனே, களிப்புற்ற மயில் ஏறும் செல்வமே, சிறப்புற்ற ஞானமும், முத்தமிழும் விரிவாக விளங்கும் திருத்தணியில் வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 285 - திருத்தணிகை
ராகம் -....; தாளம் -
தனனத் தனனத் தனனத் தனனத்
     தனனத் தனனத் ...... தனதான
பொரியப் பொரியப் பொலிமுத் துவடத்
     துகளிற் புதையத் ...... தனமீதே 
புரளப் புரளக் கறுவித் தறுகட்
     பொருவிற் சுறவக் ...... கொடிவேள்தோள் 
தெரிவைக் கரிவைப் பரவைக் குருகிச்
     செயலற் றனள்கற் ...... பழியாதே 
செறிவுற் றணையிற் றுயிலுற் றருமைத்
     தெரிவைக் குணர்வைத் ...... தரவேணும் 
சொரிகற் பகநற் பதியைத் தொழுகைச்
     சுரருக் குரிமைப் ...... புரிவோனே 
சுடர்பொற் கயிலைக் கடவுட் கிசையச்
     சுருதிப் பொருளைப் ...... பகர்வோனே 
தரிகெட் டசுரப் படைகெட் டொழியத்
     தனிநெட் டயிலைத் ...... தொடும்வீரா 
தவளப் பணிலத் தரளப் பழனத்
     தணிகைக் குமரப் ...... பெருமாளே.
காமத்தீயால் மேலும் மேலும் பொரிக்கப்பட்டு விளங்கும் முத்து மாலை தூள்பட்டுப் புதைபடும் அந்த மார்பகங்களின் மேல், (இப்பெண் படுக்கையில்) புரண்டுப் புரண்டு வேதனைப்படுமாறு அவள் மீது கோபம் கொண்டு கொடுமையுடன் போர் செய்யும் (கரும்பு) வில்லையும், சுறா மீன் கொடியையும் உடைய மன்மதனின் கை தெரிந்து குறிபார்த்துச் செலுத்தும் கூர்மை கொண்ட பாணத்துக்கும், வம்பு பேசும் மகளிர்களுக்கும், ஒலிக்கும் கடலுக்கும் மனம் உருகினவளாய், செய்ய வேண்டிய செயல்கள் அற்றவளான இவளுடைய கற்பு அழியாதவாறு, நீ இவளுடன் நெருங்கி படுக்கையில் துயில் கொண்டு, இந்த அருமையான மாதுக்கு (மயக்கத்தை நீக்கி) நல்லுணர்வைத் தர வேண்டும். சொரியும் (மலர்களை உடைய) கற்பக மரங்கள் உள்ள அமராவதி நகரை, தொழுகின்ற கைகளுடன் நின்ற தேவர்களுக்கு உரிமையாகும்படி உதவியவனே, ஒளி வீசும் அழகிய கயிலை மலைக் கடவுளாகிய சிவ பெருமானுக்கு, உள்ளம் உவந்து பொருந்தும்படி வேதப் பொருளை உபதேசம் செய்தவனே, நிலை கெட்டு அசுரர்களுடைய சேனைகள் அழிந்து தொலையும்படி, ஒப்பற்ற நெடிய வேலைச் செலுத்திய வீரனே, வெண்மையான சங்குகளும் முத்துக்களும் கிடக்கும் வயல்கள் உள்ள திருத்தணிகையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
இப்பாடல் அகப் பொருள் துறையைச் சார்ந்தது. 'நாயக நாயகி' பாவத்தில் செவிலித்தாய் தலைவிக்காகப் பரிந்து சொல்வதுபோல் அமைந்தது.மன்மதனின் கரும்பு வில், மலர்ப் பாணங்கள், பெண்களின் தூற்று மொழிகள், ஒலிக்கும் கடல் முதலியன தலைவியின் பிரிவுத் துயரைக் கூட்டி, காமத்தை அதிகரிக்கச் செய்வன.
பாடல் 286 - திருத்தணிகை
ராகம் -....; தாளம் -
தனனத் தந்ததனத் தனனத் தந்ததனத்
     தனனத் தந்ததனத் ...... தனதான
பொருவிக் கந்தொடடர்ச் செருவிக் கன்றொடுமிப்
     புதுமைப் புண்டரிகக் ...... கணையாலே 
புளகக் கொங்கையிடத் திளகக் கொங்கையனற்
     பொழியத் தென்றல்துரக் ...... குதலாலே 
தெருவிற் பெண்கள்மிகக் கறுவிச் சண்டையிடத்
     திரியத் திங்களுதிப் ...... பதனாலே 
செயலற் றிங்கணையிற் றுயிலற் றஞ்சியயர்த்
     தெரிவைக் குன்குரவைத் ...... தரவேணும் 
அருவிக் குன்றடையப் பரவிச் செந்தினைவித்
     தருமைக் குன்றவருக் ...... கெளியோனே 
அசுரர்க் கங்கயல்பட் டமரர்க் கண்டமளித்
     தயில்கைக் கொண்டதிறற் ...... குமரேசா 
தருவைக் கும்பதியிற் றிருவைச் சென்றணுகித்
     தழுவிக் கொண்டபுயத் ...... திருமார்பா 
தரளச் சங்குவயற் றிரளிற் றங்குதிருத்
     தணிகைச் செங்கழநிப் ...... பெருமாளே.
போர் புரிவதற்கு உரிய மலர்ப் பாணங்களின் கொத்துடன் நெருங்கிச் சண்டை செய்ய வந்த, கரும்பு வில் ஏந்திய, மன்மதன் செலுத்தும் இந்தப் புதுமை வாய்ந்த தாமரை அம்புகளால், புளகாங்கிதம் கொண்ட மார்பகங்களில் நெகிழ்ச்சி ஏற்பட்ட பூந்தாதுகள் நெருப்பை வீச, தென்றல் காற்று சோர்வடையச் செய்ய, வீதியில் பெண்கள் மிகுதியாகப் பகை கொண்டு வசைமொழி பேசி சண்டையிடுவதற்காக அங்குமிங்கும் திரிய, நிலா உதித்து (எரிக்கும்) கிரணங்களை வீசுவதாலே, செயல் எதுவும் செய்ய முடியாமல், இங்கு படுக்கையில் தூக்கம் இல்லாமல் அச்சத்துடனும் சோர்வுடனும் கிடக்கும் இந்தப் பெண்ணுக்கு உன் குரா மாலையைத் தந்து அருள வேண்டும். நீரருவி விழும் வள்ளி மலை முழுவதும் (வள்ளி வாழ்ந்திருந்தமையால் புனித நிலமாகப்) போற்றித் திரிந்து செந்தினைப் பயிரை விதைத்திருந்த அருமையான வேடர்களுக்கு மிக எளிமையாக நின்றவனே, அசுரர்களுக்கு அங்குப் பகைவனாய் நின்று, தேவர்களுக்கு உரிய உலகை அவர்களுக்குக் கொடுத்து, வேலாயுதத்தைக் கையில் கொண்ட வலிமை வாய்ந்த குமரேசனே, (கற்பக) மரங்கள் வைத்துள்ள அமராவதி நகரில் லக்ஷ்மி போல் இருக்கும் தேவயானையை போய்ச் சேர்ந்து தழுவிக் கொண்ட புயங்களைக் கொண்ட அழகிய மார்பனே, முத்தும், சங்குகளும் வயல்களில் கூட்டமாகக் கிடக்கும் திருத்தணிகையில் வீற்றிருந்து செங்கழு நீர் மலரைப் புனையும் பெருமாளே. 
இப்பாட்டு அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவிக்காக பாடியது.மன்மதன், மலர்க் கணைகள், தென்றல் காற்று, வசை மொழி பேசும் பெண்கள், சந்திரன் - இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.
பாடல் 287 - திருத்தணிகை
ராகம் - ....; தாளம் - ....
தத்தன தத்தன தத்தன தத்தன
     தத்தன தத்தன ...... தானா
பொற்குட மொத்தகு யத்தைய சைப்பவர்
     கைப்பொருள் புக்கிட ...... வேதான் 
புட்குரல் விச்சைபி தற்றுமொ ழிச்சியர்
     பொட்டணி நெற்றிய ...... ரானோர் 
அற்பவி டைக்கலை சுற்றிநெ கிழ்ப்பவர்
     அற்பர மட்டைகள் ...... பால்சென் 
றக்கண்வ லைக்குள கப்படு புத்தியை
     அற்றிட வைத்தருள் ...... வாயே 
கொக்கரை சச்சரி மத்தளி யொத்துவி
     டக்கைமு ழக்கொலி ...... யாலக் 
கொக்கிற கக்கர மத்தம ணிக்கருள்
     குத்தத ணிக்கும ...... ரேசா 
சர்க்கரை முப்பழ மொத்தமொ ழிச்சிகு
     றத்தித னக்கிரி ...... மேலே 
தைக்கும னத்தச மர்த்தஅ ரக்கர்த
     லைக்குலை கொத்திய ...... வேளே.
பொன்னாலாகிய குடம் போன்ற மார்பை அசைப்பவர்கள், (வந்தவர்) கையில் உள்ள பொருள் தமக்குக் கிடைத்த பின்தான் பறவைகளின் குரலைக் காட்டி, மாய வித்தைகளை குழறிப் பேசும் பேச்சுக்களை உடையவர்கள், பொட்டு அணிந்த நெற்றியை உடையவர்கள், மெல்லிய இடையில் புடவையைச் சுற்றி அதை (காமம் மூட்டும்படி) நெகிழ்க்கவும் செய்பவர்கள், அற்பர்கள், அந்த பயனற்றவர்களாகிய பொது மகளிர் இடத்தே போய், அவர்களுடைய கண் வலைக்குள் அகப்படுகின்ற கெட்ட புத்தியை நீங்கச் செய்து அருள் புரிவாயாக. கொக்கரை, சச்சரி, மத்தளி, ஒத்து, இடக்கை ஆகிய மேளவாத்தியங்கள் முழங்கும் ஒலி ஒலிக்க, கொக்கின் இறகு, எலும்பு, பாம்பு, ஊமத்தம் பூ இவைகளை (சடையில்) அணிந்த சிவபெருமானுக்கு, ரகசிய உபதேசத்தை அருளிய திருத்தணிகை மலைக் குமரேசனே, சர்க்கரை, வாழை, மா, பலா ஆகிய முக்கனிகளுக்கு ஒப்பான பேச்சுக்களை உடைய குறப்பெண்ணாகிய வள்ளியின் மார்பகங்கள் மீது அதிகப் பற்றுள்ள சமர்த்தனே, அரக்கர்களின் தலைக் கொத்துக்களை வெட்டி அழித்த வேளே. 
பாடல் 288 - திருத்தணிகை
ராகம் - த்விஜாவந்தி / ரஞ்சனி 
தாளம் - ஆதி - திஸ்ர நடை - 12
தத்த தத்த தத்த தத்த தத்த தத்த தத்த தத்த
     தத்த தத்த தத்த தத்த ...... தனதான
பொற்ப தத்தி னைத்து தித்து நற்ப தத்தி லுற்ற பத்தர்
     பொற்பு ரைத்து நெக்கு ருக்க ...... அறியாதே 
புத்த கப்பி தற்றை விட்டு வித்த கத்து னைத்து திக்க
     புத்தி யிற்க லக்க மற்று ...... நினையாதே 
முற்ப டத்த லத்து தித்து பிற்ப டைத்த கிர்த்ய முற்றி
     முற்க டைத்த வித்து நித்த ...... முழல்வேனை 
முட்ட விக்க டைப்பி றப்பி னுட்கி டப்ப தைத்த விர்த்து
     முத்தி சற்றெ னக்க ளிப்ப ...... தொருநாளே 
வெற்ப ளித்த தற்ப ரைக்கி டப்பு றத்தை யுற்ற ளித்த
     வித்த கத்தர் பெற்ற கொற்ற ...... மயில்வீரா 
வித்தை தத்வ முத்த மிழ்ச்சொ லத்த சத்தம் வித்த ரிக்கு
     மெய்த்தி ருத்த ணிப்பொ ருப்பி ...... லுறைவோனே 
கற்ப கப்பு னக்கு றத்தி கச்ச டர்த்த சித்ர முற்ற
     கற்பு ரத்தி ருத்த னத்தி ...... லணைவோனே 
கைத்த ரக்கர் கொத்து கச்சி னத்து வஜ்ர னுக்க மைத்த
     கைத்தொ ழுத்த றித்து விட்ட ...... பெருமாளே.
உன் அழகிய பாதங்களைத் துதித்து உயர்ந்த பதவியை அடைந்த பக்தர்களுடைய சிறப்பினை எடுத்துரைத்து உள்ளம் நெகிழ்ந்துருகத் தெரியாமலும், புத்தகத்தைக் கற்று அவற்றைப் பிதற்றுவதை விட்டு, ஞானத்தால் உன்னைத் துதித்திட கலக்கமற்ற புத்தியுடன் உன்னை நினையாமலும், இந்தப் பூமியில் பிறத்தலில் நான் முற்பட்டவனாகி, பின்னர் இங்கு நான் செய்யும் அக்ரமமான செயல்கள் நிரம்பி, பிறருடைய வாசல்களின் முன் நின்று தவித்து தினமும் அலைகின்ற என்னை, அடியோடு இந்த இழிவான பிறப்பினுள் விழுந்து கிடப்பதிலிருந்தும் நீக்கி, மோக்ஷ இன்பத்தை சிறிது நீ எனக்கு அளித்தருளும் ஒரு பாக்கிய நாள் கிடைக்குமா? இமயமலை அரசன் போற்றி வளர்த்த பராசக்தியான பார்வதிக்கு தன் இடது பாகத்தை அன்புடன் அளித்த ஞான முதல்வரான சிவபிரான் பெற்ற வெற்றி மயில் வீரனே, கல்வி, உண்மை இவை இடம் பெற்ற முத்தமிழ் மொழியின் சொல்லும் பொருளோசையும் நீடித்திருக்கும் மெய்ம்மைத் திருத்தணி மலையில் வாழ்பவனே, கற்பக விருட்சங்கள் போன்ற மரங்கள் உள்ள வள்ளிமலைப் புனத்தில் வாழும் குறத்தி வள்ளியின் கச்சு நெருக்கும் அழகுள்ள பச்சைக் கற்பூர மணம் வீசும் திருமார்பை அணைபவனே, பகைத்த அரக்கர் கூட்டம் சிதறுண்டு அழியுமாறு கோபித்து, வஜ்ராயுதனாம் இந்திரனுக்கு சூரன் இட்ட கை விலங்கை முறித்தெறிந்து அருளிய பெருமாளே. 
பாடல் 289 - திருத்தணிகை
ராகம் - ....; தாளம் - .......
தனத்தன தானம் தனத்தன தானம்
     தனத்தன தானம் ...... தனதான
மருக்குல மேவுங் குழற்கனி வாய்வெண்
     மதிப்பிள வாகும் ...... நுதலார்தம் 
மயக்கினி லேநண் புறப்படு வேனுன்
     மலர்க்கழல் பாடுந் ...... திறநாடாத் 
தருக்கனு தாரந் துணுக்கிலி லோபன்
     சமத்தறி யாவன் ...... பிலிமூகன் 
தலத்தினி லேவந் துறப்பணி யாதன்
     தனக்கினி யார்தஞ் ...... சபைதாராய் 
குருக்குல ராஜன் தனக்கொரு தூதன்
     குறட்பெல மாயன் ...... நவநீதங் 
குறித்தயில் நேயன் திருப்பயில் மார்பன்
     குணத்ரய நாதன் ...... மருகோனே 
திருக்குள நாளும் பலத்திசை மூசும்
     சிறப்பது றாஎண் ...... டிசையோடும் 
திரைக்கடல் சூழும் புவிக்குயி ராகுந்
     திருத்தணி மேவும் ...... பெருமாளே.
வாசனை வகைகள் நிறைந்த கூந்தலையும், கொவ்வைக் கனி போன்ற சிவந்த வாயையும், வெண் பிறையின் பிளவு போன்ற நெற்றியையும் உடைய விலைமாதர்களின் மோக மயக்கத்தில் நட்புப் பூணும் நான் உன்னுடைய மலரடியைப் பாடும் வழி வகையை நாடாத ஆணவம் கொண்டவன், கொடைக் குணம் கொஞ்சமும் இல்லாதவன், (மாறாக) லோப குணம் உடையவன், திறமை இல்லாதவன், அன்பு அற்றவன், ஊமையன், (உனது திருத்தணிகைத்) தலத்துக்கு வந்து மனம் ஒன்றிப் பணியாதவன், இத்தகைய எனக்கு, இனியவரான உன் அடியார்கள் திருக் கூட்டத்தில் சேரும் பேற்றைத் தந்து அருள்வாய். குருகுல அரசனாகிய தருமருக்கு ஒரு தூதனாகச் சென்றவன், (மாவலி சக்கரவர்த்தி இடம்) வாமனனாய் குட்டை வடிவத்தில் சென்றவன், பலத்த மாயைகள் செய்ய வல்லவன், வெண்ணெய் (இருக்கும் இடத்தை) குறித்து அறிந்து உண்ணும் நேசன், லக்ஷ்மி தேவி வாசம் செய்யும் மார்பன், (சத்துவம், ராஜதம், தாமஸம் ஆகிய) முக்குணங்களுக்குத் தலைவனாகிய திருமாலின் மருகனே, குமார தீர்த்தம் என்னும் திருக் குளத்தில்* நாள் தோறும் பல திசைகளில் இருந்து வரும் அடியார்கள் நெருங்கிக் குளிக்கும் சிறப்பைப் பெற்றதும், எட்டுத் திக்குகளிலும் அலைகடல் சூழ்ந்த பூமிக்கு உயிர் நிலையான இடமுமாகிய திருத்தணிகையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* தணிகை மலை அடிவாரத்தில் சரவணப் பொய்கை உள்ளது. இது குமாரதீர்த்தம் எனவும் பெயர் பெறும்.
பாடல் 290 - திருத்தணிகை
ராகம் - ....; தாளம் -
தனன தத்தன தனன தத்தன
     தனன தத்தன ...... தனதான
மலைமு லைச்சியர் கயல்வி ழிச்சியர்
     மதிமு கத்திய ...... ரழகான 
மயில்ந டைச்சியர் குயில்மொ ழிச்சியர்
     மனது ருக்கிக ...... ளணைமீதே 
கலைநெ கிழ்த்தியே உறவ ணைத்திடு
     கலவி யிற்றுவள் ...... பிணிதீராக் 
கசட னைக்குண அசட னைப்புகல்
     கதியில் வைப்பது ...... மொருநாளே 
குலகி ரிக்குல முருவ விட்டமர்
     குலவு சித்திர ...... முனைவேலா 
குறவர் பெற்றிடு சிறுமி யைப்புணர்
     குமர சற்குண ...... மயில்வீரா 
தலம திற்புக லமர ருற்றிடர்
     தனைய கற்றிய ...... அருளாளா 
தருநி ரைத்தெழு பொழில்மி குத்திடு
     தணிம லைக்குயர் ...... பெருமாளே.
மலை போன்ற மார்பகங்களை உடையவர், கயல் மீன் போன்ற கண்களை உடையவர், சந்திரனைப் போன்ற முகம் உடையவர், அழகுள்ள மயில் போன்ற நடையை உடையவர், குயில் போன்ற பேச்சுக்களை உடையவர், மனத்தை உருக்குபவர், படுக்கையின் மீது ஆடையைத் தளர்த்தி உறவுடன் அணைகின்ற சேர்க்கை இன்பத்தில் வாடுதலுறும் குற்றம் உள்ளவனும், குணம் கெட்ட முட்டாளுமான என்னை, சொல்லப்படுகின்ற நற் கதியில் கூட்டி வைப்பதுமான ஒரு நாள் உண்டோ? சிறந்த கிரவுஞ்ச மலைக் கூட்டத்தில் ஊடுருவச் செலுத்திப் போர் புரிந்த அழகிய கூரிய வேலாயுதனே, குறவர்கள் பெற்ற சிறுமியாகிய வள்ளியைக் கூடிய குமரனே, உத்தம குணமுள்ள மயில் வீரனே, இப் பூமியில் உள்ளவர்களால் போற்றப்படும் தேவர்களுக்கு ஏற்பட்ட துன்பத்தைப் போக்கிய அருள் நிறைந்தவனே, மரங்கள் வரிசையாக வளர்ந்து ஓங்கும் சோலைகள் மிகுந்த திருத்தணிகை மலையில் மேம்பட்டு விளங்கும் பெருமாளே. 
பாடல் 291 - திருத்தணிகை
ராகம் - ....; தாளம் - .......
தனத்தன தத்தன தனதன தனதன
     தனத்தன தத்தன தனதன தனதன
          தனத்தன தத்தன தனதன தனதன ...... தனதான
முகத்தைமி னுக்கிக ளசடிகள் கபடிகள்
     விழித்தும ருட்டிகள் கெருவிகள் திருடிகள்
          மொழிக்குள்ம யக்கிகள் வகைதனில் நகைதனில் ...... விதமாக 
முழித்தும யற்கொளு மறிவிலி நெறியிலி
     புழுக்குட லைப்பொரு ளெனமிக எணியவர்
          முயக்கம டுத்துழி தருமடி யவனிடர் ...... ஒழிவாக 
மிகுத்தழ கைப்பெறு மறுமுக சரவண
     புயத்திள கிக்கமழ் நறைமலர் தொடைமிக
          விசைக்கொடு மைப்பெறு மரகத கலபியும் ...... வடிவேலும் 
வெளிப்படெ னக்கினி யிரவொடு பகலற
     திருப்பதி யப்புக ழமுதியல் கவிசொலி
          விதித்தனெ ழுத்தினை தரவரு மொருபொரு ...... ளருளாயோ 
புகைத்தழ லைக்கொடு திரிபுர மெரிபட
     நகைத்தவ ருக்கிட முறைபவள் வலைமகள்
          பொருப்பிலி மக்கிரி பதிபெறு மிமையவ ...... ளபிராமி 
பொதுற்றுதி மித்திமி நடமிடு பகிரதி
     எழுத்தறி ருத்திரி பகவதி கவுரிகை
          பொருட்பய னுக்குரை யடுகிய சமைபவள் ...... அமுதாகச் 
செகத்தைய கட்டிடு நெடியவர் கடையவள்
     அறத்தைவ ளர்த்திடு பரசிவை குலவதி
          திறத்தமி ழைத்தரு பழையவ ளருளிய ...... சிறியோனே 
செருக்கும ரக்கர்கள் பொடிபட வடிவுள
     கரத்தில யிற்கொடு பொருதிமை யவர்பணி
          திருத்தணி பொற்பதி தனில்மயில் நடவிய ...... பெருமாளே.
முகத்தை மினுக்குபவர்கள். முட்டாள்கள். வஞ்சகர்கள். கணகளால் விழித்துப் பார்த்து மருட்டுபவர்கள். கர்வம் கொண்டவர்கள். திருடிகள். பேச்சால் மயக்குபவர்கள். உபாயத்திலும் சிரிப்பிலும் ஒரு வகையாக செய்வதறியாமல் திகைத்து, மோகம் கொண்ட அறிவில்லாதவன் நான். ஒழுக்கம் இல்லாதவன். புழுக்கள் உள்ள குடலை (உடலை) ஒரு பொருட்டாக மிகவும் நினைத்து அந்தப் பொது மகளிரைத் தழுவுவதற்காக அடுத்து, திரிகின்ற அடியேனுடைய துன்பங்கள் நீங்க, மிகுந்த அழகைப் பெற்ற ஆறுமுகனே, சரவணனே, உனது திருப்புயங்களில் நெகிழ்வுற்று மணம் வீசும் தேன் நிறைந்த பூ மாலையும், மிக வேகமாகச் செல்லும் உக்ரமான பச்சை நிற மயிலும், கூரிய வேலும் வெளிப்பட்டு என் முன்னே தோன்ற, இரவு, பகல் என்னும் வேற்றுமை அற்று சுத்த அருள் நிலை உற, லக்ஷ்மிகரம் அழுத்தமாகப் பொருந்த, உனது திருப்புகழை அமுது பொருந்தும் பாடல்களாகப் பாடி, பிரமன் எழுதிய எழுத்து மெலிந்து அழிந்திட, மேம்பட்டு விளங்கும் ஒப்பற்ற பொருளை உபதேசித்து அருள்வாயாக. புகை தரும் நெருப்பினால் முப்புரங்கள் எரிபட்டு அழியும்படி சிரித்தவருடைய இடது பாகத்தில் வீற்றிருப்பவள், வலைஞர் மகளாக* (மீனவப் பெண்ணாகத்) தோன்றியவள், மலைகளுள் சிறந்த இமயமலை அரசன் பெற்ற இமயவல்லி, அபிராமி, அம்பலத்தில் திமித்திமி என நடனம் செய்யும் தேவி, இலக்கணங்கள் அறிந்துள்ள ருத்திரன் தேவி, பகவதி, கெளரி, ஒழுங்காக சொல்லும் பொருளும் போலச் சிவத்தோடு கலந்திட்டு நிற்பவள், அமுதுருண்டை போல பூமியை வயிற்றில் அடக்கிய நெடியோனாகிய திருமாலுக்குத் தங்கை, (காஞ்சியில் காமாட்சி தேவியாக முப்பத்திரண்டு)** அறங்களையும் வளர்த்த பர சிவை, குலச்சிறப்பமைந்தவள், (இயல், இசை, நாடகம் என்ற) முன்று வகையான தமிழைத் தந்த முன்னைப் பழம் பொருளான உமை அருளிய குழந்தையே, கர்வம் கொண்ட அசுரர்கள் பொடிபட்டு விழ, அழகிய கையில் வேல் கொண்டு சண்டை செய்து, தேவர்கள் பணிந்து போற்றும் திருத்தணிகையாகிய அழகிய தலத்தில் மயில் மீது நடனமிடும் பெருமாளே. 
* மறைப் பொருளைத் தேவிக்கு உபதேசித்த போது, தேவியார் கவனக் குறைவாக இருப்பதைக் கண்ட சிவபெருமான் நீ மீன் பிடிக்கும் வலைஞருக்கு மகளாகுக. அப்போது உன்னை மணப்பேன் எனச் சபித்தார். மீனவள் வலைஞரால் வளர்க்கப்பட்டு வந்தாள். சிவன் தேவிக்கு உபதேசித்த போது முருகனையும், கணபதியையும் உள்ளே விட்ட காரணத்தால் நந்தி தேவரும் சுறா மீனாக ஆகுமாறு சபிக்கப்பட்டார். இந்தச் சுறாமீன் வலையில் அகப்படாது பல இடர்களைச் செய்ததால் வலைஞர் அரசன் மீனைப் பிடிப்பவர்களுக்குத் தன் பெண்ணை மணம் செய்விப்பேன் என அறிவித்தான். சிவபெருமான் வலைஞன் போல வந்து மீனைப் பிடித்துத் தேவியை மணந்தார்.
** பெரிய புராணத்தில் கூறிய முப்பத்திரண்டு அறங்கள் பின்வருமாறு:சாலை அமைத்தல், ஓதுவார்க்கு உணவு, அறுசமயத்தாருக்கும் உணவு, பசுவுக்குத் தீனி, சிறைச் சோறு, ஐயம், தின்பண்டம் நல்கல், அநாதைகளுக்கு உணவு, மகப்பெறுவித்தல், மகவு வளர்த்தல், சிசுக்களுக்குப் பால் நல்கல், அநாதைப் பிணம் சுடுதல், அநாதைகளுக்கு உடை, சுண்ணாம்பு பூசல், நோய்க்கு மருந்து, வண்ணார் தொழில், நாவிதத் தொழில், கண்ணாடி அணிவித்தல், காதோலை போடுதல், கண் மருந்து, தலைக்கு எண்ணெய், ஒத்தடம் தருதல், பிறர் துயர் காத்தல், தண்ணீர்ப் பந்தல், மடம் கட்டுதல், தடாகம் அமைத்தல், சோலை வளர்த்தல், தோல் பதனிடல், மிருகங்களுக்கு உணவு, ஏர் உழுதல், உயிர் காத்தல், கன்னிகாதானம்.
பாடல் 292 - திருத்தணிகை
ராகம் - .....; தாளம் - ......
தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான
முகிலு மிரவியு முழுகதிர் தரளமு
     முடுகு சிலைகொடு கணைவிடு மதனனு
          முடிய வொருபொரு ளுதவிய புதல்வனு ...... மெனநாடி 
முதிய கனனென தெய்வதரு நிகரென
     முதலை மடுவினி லதவிய புயலென
          முகமு மறுமுக முடையவ னிவனென ...... வறியோரைச் 
சகல பதவியு முடையவ ரிவரென
     தனிய தநுவல விஜயவ னிவனென
          தபனன் வலம்வரு கிரிதனை நிகரென ...... இசைபாடிச் 
சயில பகலவ ரிடைதொறு நடைசெயு
     மிரவு தவிரவெ யிருபத மடையவெ
          சவித அடியவர் தவமதில் வரவருள் ...... புரிவாயே 
அகில புவனமு மடைவினி லுதவிய
     இமய கிரிமயில் குலவரை தநுவென
          அதிகை வருபுர நொடியினி லெரிசெய்த ...... அபிராமி 
அமரு மிடனன லெனுமொரு வடிவுடை
     யவனி லுரையவன் முதுதமி ழுடையவ
          னரியொ டயனுல கரியவ னடநவில் ...... சிவன்வாழ்வே 
திகிரி நிசிசரர் தடமுடி பொடிபட
     திரைக ளெறிகடல் சுவறிட களமிசை
          திரடு குறடுகள் புரள்வெகு குருதிகள் ...... பெருகாறாச் 
சிகர கிரிநெரி படபடை பொருதருள்
     திமிர தினகர குருபர இளமயில்
          சிவணி வருமொரு தணிகையில் நிலைதிகழ் ...... பெருமாளே.
கொடையில் மேகரூம், புகழில் சூரியனும், முக காந்தியில் பேரொளி வீசும் முத்தும், அழகில், கரும்பு வில்லை ஏந்தி விரைவில் பாணங்களை விடும் மன்மதனனும், ஈகையில், வேண்டுமளவும் கேட்ட ஒரு பொருளைத் தந்து உதவிய பிள்ளையும் இவன் என்று விரும்பிச் சென்று, பழைய கர்ணனே இவன் என்றும், தெய்வ விருட்சமாகிய கற்பகத்தை ஒப்பானவன் இவன் என்றும், முதலையை மடுவில் கொன்ற மேக நிறம் கொண்ட திருமாலே இவன் என்றும், முகமும் ஆறு முகக் கடவுள் போன்றவன் என்றும், தரித்திரம் கொண்டவரை சகல செல்வங்களும் உடையவர் இவர் என்றும், வில்வித்தையில் வல்லவனான அருச்சுனன் இவன் என்றும், சூரியன் வலம் வருகின்ற மேரு மலையை ஒப்பானவன் என்றும் இசைப் பாட்டுக்களைப் பாடி, கல் பிளவை ஒத்த இறுகிய மனம் வாய்ந்த லோபிகளின் இடங்கள் தோறும் நடந்து திரியும் யாசகத் தொழில் நீங்கவும், உனது இரண்டு பாதங்களை அடையவும், பல வகையான அடியார்களின் தவ நிலை எனக்கு வருமாறும் அருள் புரிவாயாக. எல்லா உலகங்களையும் முறைப்படி தந்தவளும், இமயமலை பெற்ற மயிலுமாகிய உமை, சிறந்த மலையாகிய மேருவை வில்லாகக் கொண்டு திருவதிகை என்னும் பதியில் திரிபுரத்தை ஒரு நொடிப் பொழுதில் எரித்த அபிராமி தனது இடது பாகத்தில் அமரும்படியாக வாய்த்தவனும், நெருப்பு என்னும் ஒப்பற்ற உருவத்தினன், உரைக்கு எட்டாதவன், பழைய தமிழுக்கு உரியவன், திருமாலும், பிரமனும், உலகோரும் அறிதற்கு அரியவன், நடனம் செய்பவன் ஆகிய சிவபெருமானின் செல்வனே, சக்ராயுதங்களுடன் அசுரர்களின் பெரிய முடிகள் பொடிபடவும், அலைகள் வீசும் கடல் வற்றிப் போகவும், போர்க் களத்தில் மேடான உயர் நிலங்களிலும் புரண்டெழுந்த மிகுதியான இரத்தம் பெருகி ஆறாக ஓடும்படியும், சிகரங்களை உடைய கிரவுஞ்சமலை நெரிபட்டு பொடியாய் விழவும், வேலால் சண்டை செய்து அருளிய, (அஞ்ஞான) இருளை நீக்கும் (ஞான) சூரியனே, குருபரனே, இளமை வாய்ந்த மயிலில் பவனி வரும், ஒப்பற்ற திருத்தணிகையில் நிலைத்து விளங்கும் பெருமாளே. 
பாடல் 293 - திருத்தணிகை
ராகம் -....; தாளம் -
தனத்த தனதன தனத்த தனதன
     தனத்த தனதன ...... தனதான
முடித்த குழலினர் வடித்த மொழியினர்
     முகத்தி லிலகிய ...... விழியாலும் 
முலைக்கி ரிகள்மிசை யசைத்த துகிலினும்
     இளைத்த இடையினு ...... மயலாகிப் 
படுத்த அணைதனி லணைத்த அவரொடு
     படிக்கு ளநுதின ...... முழலாதே 
பருத்த மயில்மிசை நினைத்த பொழுதுன
     பதத்து மலரிணை ...... யருள்வாயே 
துடித்து தசமுகன் முடித்த லைகள்விழ
     தொடுத்த சரம்விடு ...... ரகுராமன் 
துகைத்தி வுலகையொ ரடிக்கு ளளவிடு
     துலக்க அரிதிரு ...... மருகோனே 
தடத்து ளுறைகயல் வயற்கு ளெதிர்படு
     தழைத்த கதலிக ...... ளவைசாயத் 
தருக்கு மெழிலுறு திருத்த ணிகையினில்
     தழைத்த சரவண ...... பெருமாளே.
நன்றாக முடிந்த கூந்தலை உடையவர்கள், தேன் வடிகட்டினதென இனிக்கும் பேச்சுக்களை உடையவர்கள் ஆகிய விலைமாதர்கள் முகத்தில் விளங்கும் கண்ணாலும், மலை போன்ற மார்பகங்கள் மீது அசைகின்ற ஆடையாலும், மெல்லிய இடையாலும் காம மயக்கம் கொண்டவனாகி, படுத்த படுக்கையில் தழுவிய அந்த மாதர்களோடு இந்தப் பூமியில் நாள்தோறும் திரியாமல், பருமையான மயில் மேல் நினைத்த அந்தப் பொழுதிலேயே வந்து உனது பாத மலரடி இணைகளைத் தந்து அருள்வாயாக. துடிதுடித்து பத்துத்தலை ராவணனுடைய கி¡£டம் அணிந்த தலைகள் அறுபட்டு விழுமாறு பூட்டிய அம்பினைச் செலுத்திய ரகுராமனும், பாதத்தால் மிதித்து இந்த உலகை ஓரடியால் அளந்து விளங்கக் காட்டியவனுமான திருமாலின் அழகிய மருகனே, குளத்தில் வாழ்கின்ற கயல் மீன்கள் வயல்களில் காணும்படி நீந்திச் செல்ல, தழைத்த வாழை மரங்கள் சாய்கின்ற செழிப்பையும், அழகையும் கொண்ட திருத்தணிகையில் களிப்புடன் வீற்றிருக்கும் சரவணனே, பெருமாளே. 
பாடல் 294 - திருத்தணிகை
ராகம் - மோகனம்; தாளம் - கண்ட த்ருவம் - 17 
- எடுப்பு /5/5 0 /5
தத்தத் தனத்ததன தத்தத் தனத்ததன
     தத்தத் தனத்ததன ...... தனதான
முத்துத்தெ றிக்கவள ரிக்குச்சி லைக்கைமதன்
     முட்டத்தொ டுத்த ...... மலராலே 
முத்தத்தி ருச்சலதி முற்றத்து தித்தியென
     முற்பட்டெ றிக்கு ......நிலவாலே 
எத்தத்தை யர்க்குமித மிக்குப்பெ ருக்கமணி
     இப்பொற்கொ டிச்சி ...... தளராதே 
எத்திக்கு முற்றபுகழ் வெற்றித்தி ருத்தணியில்
     இற்றைத்தி னத்தில் ...... வரவேணும் 
மெத்தச்சி னத்துவட திக்குக்கு லச்சிகர
     வெற்பைத்தொ ளைத்த ...... கதிர்வேலா 
மெச்சிக்கு றத்திதன மிச்சித் தணைத்துருகி
     மிக்குப்ப ணைத்த ...... மணிமார்பா 
மத்தப்ர மத்தரணி மத்தச்ச டைப்பரமர்
     சித்தத்தில் வைத்த ...... கழலோனே 
வட்டத்தி ரைக்கடலில் மட்டித்தெ திர்த்தவரை
     வெட்டித்து ணித்த ...... பெருமாளே.
தன்னுள் இருக்கும் முத்து தெறிக்கும்படியாக முற்றி வளர்ந்த கரும்பை வில்லாகக் கையில் வைத்துள்ள மன்மதன் நன்றாகச் செலுத்திய மலர்க்கணையாலும், முத்துக்களை தன்னுள் கொண்டுள்ள அழகிய கடலின் மேற்பரப்பில் உதித்து, தீயைப் போல் சூடாக எதிர்ப்பட்டு வீசும் நிலா ஒளியாலும், கிளி போலப் பேசும் எந்தப் பெண்களும் இவளைப்பற்றி வசை பேசி அவர்கள் அதிக இன்பம் அடையும் துன்பத்தைத் தான் அணிகின்ற இந்த அழகிய கொடி போன்ற நாயகி தளர்ச்சி அடையாமல், எல்லாத் திசைகளிலும் புகழ் பரந்துள்ள வெற்றியுடன் விளங்கும் இந்தத் திருத்தணிகைப்பதியில் இன்றைய தினத்தில் நீ வந்தருள வேண்டும். மிகுந்த கோபத்துடன் வடதிசையில் இருந்த சிறந்த சிகரங்களைக் கொண்ட கிரெளஞ்சமலையை தொளைத்துப் பொடியாக்கிய ஒளிமிகுந்த வேலாயுதனே, புகழ்ச்சி கூறி, குறத்தி வள்ளியின் மார்பினை விருப்பத்துடன் தழுவி உள்ளம் உருகி, மிகவும் பெருமை அடைந்த மணி மார்பனே, மிகுந்த பித்தரானவரும், அழகிய ஊமத்தம் பூவைச் சடையில் சூடியவருமான சிவபெருமான் தம் மனத்திலே வைத்துப் போற்றும் திருவடிகளை உடையவனே, வட்ட வடிவான அலைகளை வீசும் கடலில் (அசுரர்களை) முறித்து அழித்து, எதிர்த்து வந்தவர்களை வெட்டி வீழ்த்திய பெருமாளே. 
இப்பாட்டு அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவிக்காக பாடியது.கடல், சந்திரன், மன்மதன், மலர்க் கணைகள், மாதர்களின் வசை முதலியவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.
பாடல் 295 - திருத்தணிகை
ராகம் - .....; தாளம் - .........
தனதனன தனதந்த தனதனன தனதந்த
     தனதனன தனதந்த ...... தனதான
முலைபுளக மெழஅங்கை மருவுசரி வளைகொஞ்ச
     முகிலளக மகில்பொங்க ...... அமுதான 
மொழிபதற வருமந்த விழிகுவிய மதிகொண்ட
     முகம்வெயர்வு பெறமன்ற ...... லணையூடே 
கலைநெகிழ வளர்வஞ்சி யிடைதுவள வுடலொன்று
     படவுருகி யிதயங்கள் ...... ப்ரியமேகூர் 
கலவிகரை யழியின்ப அலையிலலை படுகின்ற
     கவலைகெட நினதன்பு ...... பெறுவேனோ 
அலையெறியு மெழில்சண்ட உததிவயி றழல்மண்ட
     அதிரவெடி படஅண்ட ...... மிமையோர்கள் 
அபயமென நடுகின்ற அசுரர்பட அடியுண்டு
     அவர்கள்முனை கெடநின்று ...... பொரும்வேலா 
தலைமதிய நதிதும்பை யிளவறுகு கமழ்கொன்றை
     சடைமுடியி லணிகின்ற ...... பெருமானார் 
தருகுமர விடவைந்து தலையரவு தொழுகின்ற
     தணிமலையி லுறைகின்ற ...... பெருமாளே.
மார்பகங்கள் புளகம் கொள்ள, அழகிய கையில் அணிந்துள்ள சரியும் வளையல்களும் மெதுவாக ஒலிக்க, மேகம் போன்ற கரிய கூந்தல் அகில் மணம் வீச, அமுதம் போன்ற மொழிகள் நடுக்கமும் விரைவும் காட்ட, அருமை வாய்ந்த கண்கள் குவிய, நிலவு போன்ற முகத்தில் வியர்வை எழ, நறு மணம் உள்ள படுக்கையில் ஆடை தளர, செழுமை வாய்ந்த வஞ்சிக் கொடி போன்ற இடை துவட்சி உற, உடல்கள் ஒன்றோடு ஒன்று சேர உருகி, உள்ளம் அன்பு மிக்கு புணர்ச்சித் தொழில் அளவு கடந்த இன்ப அலையில் அலை படுகின்ற கவலை ஒழிய, உன்னுடைய அன்பை நான் அடையமாட்டேனோ? அலை வீசும் வலிமை வாய்ந்த கடலின் உட்புறத்தில் நெருப்பு நெருங்கிப் பற்றிக் கொள்ள, அண்டம் அதிர்ச்சியுடன் வெடிபட, தேவர்கள் அடைக்கலம் என்று முறையிட, இடை நிலத்தே நின்ற அசுரர்கள் அழிய, அடிபட்டு அவர்களின் சேனைகள் அழிய, நின்று சண்டை செய்த வேலனே, தலையில் நிலவு, கங்கை, தும்பை, இள அறுகம் புல், மணம் வீசும் கொன்றை மலர் இவைகளைச் சடை முடியில் அணிந்த சிவபெருமான் அருளிய குமரனே, விஷம் கொண்ட ஐந்து தலைகளை உடைய பாம்பு* பூஜித்து வணங்கும் திருத்தணிகை மலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* தணிகை மலையில் வாசுகியும், ஆதிசேஷனும் பூசித்ததாகத் தணிகைத் தல புராணங்கள் கூறுகின்றன.
பாடல் 296 - திருத்தணிகை
ராகம் - ..........; தாளம் - ..........
தனதனன தனதனன தத்தத்த தத்ததன
     தனதனன தனதனன தத்தத்த தத்ததன
          தனதனன தனதனன தத்தத்த தத்ததன ...... தனதான
மொகுமொகென நறைகொண்மலர் வற்கத்தி லற்புடைய
     முளரிமயி லனையவர்கள் நெய்த்துக்க றுத்துமழை
          முகிலனைய குழல்சரிய வொக்கக்க னத்துவள ...... ரதிபார 
முலைபுளக மெழவளைகள் சத்திக்க முத்தமணி
     முறுவலிள நிலவுதர மெத்தத்த வித்தசில
          மொழிபதற விடைதுவள வட்டச்சி லைப்புருவ ...... இணைகோட 
அகில்மிருக மதசலிலம் விட்டுப்ப ணித்தமல
     ரமளிபட வொளிவிரவு ரத்நப்ர பைக்குழையொ
          டமர்பொருத நெடியவிழி செக்கச்சி வக்கமர ...... மதநீதி 
அடல்வடிவு நலமிதனில் மட்கச்செ ருக்கியுள
     முருகநரை பெருகவுட லொக்கப்ப ழுத்துவிழு
          மளவிலொரு பரமவொளி யிற்புக்கி ருக்கவெனை ...... நினையாதோ
செகுதகெண கெணசெகுத செக்குச்செ குச்செகுத
     கிருதசெய செயகிருத தொக்குத்தொ குத்தொகுத
          டிமிடடிமி டிமிடிமிட டிட்டிட்டி டிட்டிமிட ...... டிடிதீதோ 
திரிகடக கடகதிரி தித்திக்ர தித்ரிகட
     திமிர்ததிமி திமிர்ததிமி தித்தித்தி தித்திதிதி
          செணுசெணுத தணசெணுத தத்தித்தி குத்ரிகுட ...... ததிதீதோ 
தகுடதிகு திகுடதிமி தத்தத்த தித்திகுட
     குகுகுகுகு குகுகுகுகு குக்குக்கு குக்குகுத
          தரரரர ரிரிரிரிரி றிற்றித்த றிற்றிரிரி ...... யெனவேநீள் 
சதிமுழவு பலவுமிரு பக்கத்தி சைப்பமுது
     சமையபயி ரவியிதய முட்கிப்ர மிக்கவுயர்
          தணிகைமலை தனின்மயிலி னிர்த்தத்தி னிற்கவல ...... பெருமாளே.
கம கம என்னும் வாசனை கொண்ட மலர்க் கூட்டத்தில் விருப்பம் கொண்ட, தாமரை மலரில் வீற்றிருக்கும் லக்ஷ்மி போன்ற மயிலை நிகர்த்த (பொது) மகளிருடைய நெய்ப்பும், கருமையும் கொண்ட, கருமேகம் போன்ற கூந்தல் சரிந்து விழ, ஒன்று சேர பருத்து வளர்ந்துள்ள, அதிகக் கனம் கொண்ட மார்பகங்கள் புளகம் கொள்ள, (கையில் அணிந்துள்ள) வளைகள் ஒலி செய்ய, முத்துக்கள் போன்ற பற்கள் இள நிலவின் ஒளியை வீச, மிகவும் தவிப்புடன் சில மொழிகள் அசைவுற்று வெளிப்பட, இடை நெளிவு உற, வட்டவடிவமான வில்லைப் போன்ற புருவங்கள் இரண்டும் வளைவு உற, அகில், கஸ்தூரி, பன்னீர் விட்டு அலங்கரிக்கப்பட்ட மலர்ப் படுக்கை கசங்கி கலைவு பட, ஒளி கலந்த ரத்தினங்களால் அமைக்கப்பட்டுப் பிரகாசிக்கும் குண்டலங்களுடன் போர் புரிவது போல் நீண்டுள்ள கண்கள் மிகவும் சிவக்க, (இவ்வாறு கலவி இன்பத்தில்) பொருந்துவதால் கொள்கை, அறிவு, நீதி, வலிமை, உருவம், குணம் இவை எல்லாம் மங்கும்படியாக அளவு கடந்து (அதனால்) உள்ளம் தளர்ச்சி அடைந்து உருக, நரை அதிகமாக, உடல் ஒரு சேர முதிர்ந்து கிழமாய் விழும் அந்தச் சமயத்தில், ஒப்பற்ற பரஞ் சோதியான பேரின்ப வீட்டில் நான் புகுந்து ஓய்வு பெற்று இருக்க என்னைக் குறித்து உனது திருவுள்ளம் நினையாதோ? செகுதகெண கெணசெகுத செக்குச்செ குச்செகுத கிருதசெய செயகிருத தொக்குத்தொ குத்தொகுத டிடிதீதோ திரிகடக கடகதிரி தித்திக்ர தித்ரிகட திமிர்ததிமி திமிர்ததிமி தித்தித்தி தித்திதித்தி ததிதீதோ தகுடதிகு திகுடதிமி தத்தத்த தித்திகுட குகுகுகுகு குகுகுகு குக்குக்கு குக்குகுத தரரரர ரிரிரிரிரி றிற்றித்த றிற்றிரிரி --- இவ்வாறான ஒலி பெருகி நீள தாள ஒத்துடன் முழவு வாத்தியங்கள் பலவும் இரண்டு பக்கங்களிலும் ஒலிக்கவும், பழைமை வாய்ந்த அன்னை பைரவி துர்க்கையும் உள்ளம் அஞ்சி திகைப்பு அடையவும், சிறப்பு வாய்ந்த திருத்தணிகை மலையில் மயில் மீது நிலைத்து நடனம் செய்யவல்ல பெருமாளே. 
பாடல் 297 - திருத்தணிகை
ராகம் - ..........; தாளம் - ........
தந்தந் தனதன தந்தந் தனதன
     தந்தந் தனதன ...... தனதான
வங்கம் பெறுகட லெங்கும் பொருதிரை
     வந்துந் தியதிரு ...... மதனாலே 
வஞ்சம் பெறுதிட நெஞ்சன் தழலுற
     வஞ்சம் பதும்விடு ...... மதனாலே 
பங்கம் படுமென தங்கந் தனிலுதி
     பண்பொன் றியவொரு ...... கொடியான 
பஞ்சொன் றியமயில் நெஞ்சொன் றியெயழல்
     பொன்றுந் தனிமையை ...... நினையாயோ 
தெங்கந் திரளுட னெங்குங் கதலிகள்
     சென்றொன் றியபொழி ...... லதனூடே 
தெந்தெந் தெனதென என்றண் டுறஅளி
     நின்றுந் திகழ்வொடு ...... மயிலாடப் 
பொங்குஞ் சுனைகளி லெங்குங் குவளைகள்
     என்றும் புகழ்பெற ...... மலா£னும் 
பொன்றென் றணிகையில் நின்றங் கெழுபுவி
     யென்றுஞ் செயவல ...... பெருமாளே.
கப்பல்கள் செல்லும் கடலில் எங்கும் மாறுபட்டு ஏறி இறங்கும் அலைகள் வந்து வீசி இரைச்சலிடும் காரணத்தாலும், வஞ்சகம் கொண்ட திடமான நெஞ்சனும், நெருப்புப் போன்று ஐந்து மலர்ப் பாணங்களையும் செலுத்துபவனுமான மன்மதனாலும், அவமானம் உறுகின்ற என்னுடைய உடலிலிருந்து பிறந்த நற்குணம் நிரம்பிய, ஒரு கொடி போன்ற இடையை உடைய, பஞ்சு போல் மெல்லியளான, மயிலின் சாயலை உடைய என் மகள் உள்ளத்தில் சேர்ந்த காமத் தீயால் சாகும் நிலையிலே தனிமையோடு தவிப்பதை நீ சற்றேனும் நினைத்துப் பார்த்து அருளக்கூடாதா? தென்னை மரங்களின் கூட்டத்துடன் எங்கும் வாழைகள் அமைந்து நிறைந்த சோலைக்குள்ளே, தெந்தெந் தெனதென என்று நெருங்கி வந்து நின்று வண்டுகள் பாடவும், அக்கீதத்துக்கு ஏற்ப விளக்கத்துடனே மயில்கள் ஆடவும், நீர் நிறைந்த சுனைகளில் எங்கும் குவளைகள் எக்காலத்திலும் புகழ்பெறும்படி மலர்களைத் தருகின்ற அழகிய தெற்கிலே உள்ள திருத்தணிகையில் நின்றருளி, ஏழு உலகங்களையும் என்றைக்கும் படைக்கவல்ல பெருமாளே. 
இப்பாட்டு அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவிக்காக அவளுடைய தாய் பாடியது.கடல், சந்திரன், மன்மதன், மலர்க் கணைகள் இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.
பாடல் 298 - திருத்தணிகை
ராகம் - ....; தாளம் -
தத்தனாத் தனன தத்தனாத் தனன
     தத்தனாத் தனன ...... தனதான
வட்டவாட் டனம னைச்சிபாற் குதலை
     மக்கள்தாய்க் கிழவி ...... பதிநாடு 
வைத்ததோட் டமனை யத்தமீட் டுபொருள்
     மற்றகூட் டமறி ...... வயலாக 
முட்டவோட் டிமிக வெட்டுமோட் டெருமை
     முட்டர்பூட் டியெனை ...... யழையாமுன் 
முத்திவீட் டணுக முத்தராக் கசுரு
     திக்குராக் கொளிரு ...... கழல்தாராய் 
பட்டநாற் பெரும ருப்பினாற் கரஇ
     பத்தின்வாட் பிடியின் ...... மணவாளா 
பச்சைவேய்ப் பணவை கொச்சைவேட் டுவர்ப
     திச்சிதோட் புணர்த ...... ணியில்வேளே 
எட்டுநாற் கரவொ ருத்தல்மாத் திகிரி
     யெட்டுமாக் குலைய ...... எறிவேலா 
எத்திடார்க் கரிய முத்தபாத் தமிழ்கொ
     டெத்தினார்க் கெளிய ...... பெருமாளே.
வட்ட வடிவும் ஒளியும் உள்ள மார்பினைக் கொண்ட மனைவியும், அவளிடம் நான் பெற்ற மழலைச் சொல் பேசும் குழந்தைகளும், வயது முதிர்ந்த அன்னை, எனது ஊர், என் நாடு, எனக்கு உள்ள தோட்டம், வீடு, செல்வம், சம்பாதித்த பொருள், மற்ற உறவினர் கூட்டம், என் அறிவு - இவை எல்லாம் என்னை விட்டு நீங்க, நன்றாக ஓட்டி, மிகவும் நெருங்கும் பெரிய எருமை வாகனத்தின் மேல் வரும் கால தூதராகிய மூடர்கள் (பாசக் கயிற்றால்) என்னைப் பூட்டி அழைப்பதற்கு முன், (நான்) முக்தி வீட்டை அணுகிச் சேரவும், ஞானியர்போல் என்னை ஆக்கவும், வேதத்தினுள்ளும், குரா மலர்களினுள்ளும் விளங்குகின்ற உன் இரண்டு திருவடிகளைத் தந்து அருளுக. நெற்றிப் பட்டமும், நான்கு* பெரிய தந்தங்களும், (தொங்கும்) துதிக்கையும் உடைய, (ஐராவதம் என்னும்) யானை வளர்த்த, ஒளி பொருந்திய பெண் யானை போன்ற நடையை உடைய (தேவயானையின்) மணவாளனே, பச்சை மூங்கிலால் ஆகிய பரண் மீது (தினைப் புனத்தைக் காப்பதற்காக) நின்ற, பாமர குலத்தவர்களான வேடர்களுடைய ஊரிலிருந்த, வள்ளியின் தோளை அணைந்த திருத்தணிகைத் தலைவனே, தொங்கும் துதிக்கையை உடைய யானைகளும், பெரிய எட்டு மலைகளும் (கிரெளஞ்ச மலையும் குலகிரிகள் ஏழும்), நடுங்கும்படி செலுத்திய வேலனே, உன்னைப் போற்றித் துதிக்காதவர்களுக்கு அரிதான முத்தனே (பாசங்களினின்று இயல்பாகவே நீங்கியவனே), தமிழ்ப் பாக்களால் போற்றுபவர்களுக்கு எளிதான பெருமாளே. 
* இந்திரனுடைய ஐராவதத்துக்கு நான்கு தந்தங்கள் உண்டு.
பாடல் 299 - திருத்தணிகை
ராகம் - காபி ; தாளம் - அங்கதாளம் - 5 1/2 
- எடுப்பு - அதீதம் 
தகதிமி-2, தகதிமி-2, தகிட-1 1/2
தனத்ததன தனதான தனத்ததன தனதான
     தனத்ததன தனதான ...... தனதான
வரிக்கலையி னிகரான விழிக்கடையி லிளைஞோரை
     மயக்கியிடு மடவார்கள் ...... மயலாலே 
மதிக்குளறி யுளகாசு மவர்க்குதவி மிடியாகி
     வயிற்றிலெரி மிகமூள ...... அதனாலே 
ஒருத்தருட னுறவாகி ஒருத்தரொடு பகையாகி
     ஒருத்தர்தமை மிகநாடி ...... யவரோடே 
உணக்கையிடு படுபாவி எனக்குனது கழல்பாட
     உயர்ச்சிபெறு குணசீல ...... மருள்வாயே 
விரித்தருண கிரிநாத னுரைத்ததமி ழெனுமாலை
     மிகுத்தபல முடனோத ...... மகிழ்வோனே 
வெடித்தமணர் கழுவேற ஒருத்திகண வனுமீள
     விளைத்ததொரு தமிழ்பாடு ...... புலவோனே 
செருக்கியிடு பொருசூரர் குலத்தையடி யறமோது
     திருக்கையினில் வடிவேலை ...... யுடையோனே 
திருக்குலவு மொருநீல மலர்ச்சுனையி லழகான
     திருத்தணிகை மலைமேவு ...... பெருமாளே.
வரிகளோடு கூடிய கலைமானுக்குச் சமமான கடைக்கண் பார்வையால் இளைஞர்களை மயக்கக்கூடிய பெண்களின் மையலாலே அறிவு தடுமாறி, கையிலுள்ள பொருள் அத்தனையும் அப்பெண்களுக்கே கொடுத்து வறுமையை அடைந்து வயிற்றில் தீ மிகவும் மூண்டு எரியவும், அதன் காரணமாக ஒருவருடன் நட்பாகியும், இன்னொருவருடன் பகையாகியும், வேறு ஒருவரை மிகவும் விரும்பியும் அவர்களோடு சேர்ந்து வாட்டத்தை அடையும் படுபாவியாகிய எனக்கு உன் திருவடிகளைப் பாட உயர்வு பெற்ற நற்குண நல்லொழுக்கத்தை தந்தருள்வாயாக. அருணகிரிநாதன் என்ற இந்த அன்பன் விரிவாக கூறிய தமிழினால் ஆன இந்தத் திருப்புகழ் மாலையை நிரம்பிய ஆற்றலுடன் பாட உள்ளம் மகிழ்பவனே, சமணர்கள் உடல் வெடித்துக் கழுமரத்தில் ஏறவும், ஒப்பற்ற மங்கையர்க்கரசியின் கணவனாகிய பாண்டியன் (சமணப் படுகுழியிலிருந்து) உயிர் மீளவும், அற்புதங்கள் விளைத்த தேவாரத் தமிழ் மறையைப் பாடிய ஞான பண்டிதனாக அவதரித்த திருஞானசம்பந்தனே, ஆணவத்தோடு போர் செய்ய வந்த சூராதி அசுரர்களின் குலத்தையே வேரோடு அழியுமாறு தாக்கிய கூர்வேலினை அழகிய கரத்தில் ஏந்தியவனே, அழகு குலவி விளங்குவதும், ஒப்பற்ற நீலோற்பல மலரை மலரும் சுனையை உடையதும் ஆன அழகிய திருத்தணிகை மலை மீதுள்ள பெருமாளே. 
பாடல் 300 - திருத்தணிகை
ராகம் - ....; தாளம் -
தானத்தன தானன தந்தன
     தானத்தன தானன தந்தன
          தானத்தன தானன தந்தன ...... தனதான
வாருற்றெழு பூண்முலை வஞ்சியர்
     காருற்றெழு நீள்குழல் மஞ்சியர்
          வாலக்குயில் போல்மொழி கொஞ்சியர் ...... தெருமீதே 
மாணுற்றெதிர் மோகன விஞ்சையர்
     சேலுற்றெழு நேர்விழி விஞ்சியர்
          வாகக்குழை யாமப ரஞ்சியர் ...... மயலாலே 
சீருற்றெழு ஞானமு டன்கல்வி
     நேரற்றவர் மால்கொடு மங்கியெ
          சேருற்றறி வானத ழிந்துயி ...... ரிழவாமுன் 
சேவற்கொடி யோடுசி கண்டியின்
     மீதுற்றறி ஞோர்புகழ் பொங்கிய
          தேசுக்கதிர் கோடியெ னும்பத ...... மருள்வாயே 
போருற்றிடு சூரர்சி ரங்களை
     வீரத்தொடு பாரில ரிந்தெழு
          பூதக்கொடி சோரிய ருந்திட ...... விடும்வேலா 
பூகக்குலை யேவிழ மென்கயல்
     தாவக்குலை வாழைக ளுஞ்செறி
          போகச்செநெ லேயுதி ருஞ்செய்க ...... ளவைகோடி 
சாரற்கிரி தோறுமெ ழும்பொழில்
     தூரத்தொழு வார்வினை சிந்திடு
          தாதுற்றெழு கோபுர மண்டப ...... மவைசூழுந் 
தார்மெத்திய தோரண மென்தெரு
     தேர்சுற்றிய வார்பதி அண்டர்கள்
          தாமெச்சிய நீள்தணி யம்பதி ...... பெருமாளே.
கச்சை மீறி எழுகின்ற, ஆபரணம் அணிந்த மார்பகத்தை உடைய, வஞ்சிக் கொடி போன்ற இடையை உடையவர்கள், மேகத்தின் கரு நிறத்தை ஒத்து எழுகின்ற நீண்ட கூந்தலின் அழகு உடையவர்கள், இளங் குயில் போல் இனிமையுள்ள பேச்சுக்களைப் பேசிக் கொஞ்சுபவர்கள், தெருவில் படாடோபத்துடன் எதிர்ப்படுகின்ற, காம மயக்கம் உண்டாக்க வல்ல, மாய வித்தைக்காரிகள், சேல் மீனுக்கு நிகராய் எழுகின்ற கண்களை உடையவர்கள், அழகுள்ள குண்டலம் அணிந்துள்ள, புடமிட்ட பொன் போன்ற நிறத்தவர்கள் (ஆகிய பொது மாதர்கள் மீதுள்ள) மோக மயக்கத்தால், சீரான ஞானமும் கல்வியும் ஒழுக்கமும் இல்லாத அந்த விலைமாதர்கள் மீதுள்ள ஆசை காரணமாக நான் ஒளி மழுங்கி, எனக்குள்ள அறிவும் கெட்டுப் போய் உயிரை இழப்பதற்கு முன்பாக, சேவற் கொடியோடு, மயிலின் மீது நீ ஆரோகணித்து, அறிஞர்கள் பாடிய உனது திருப்புகழ் நிறைந்துள்ள ஒளிச் சோதி கோடி என்னும்படி வீசுகின்ற திருவடியை அருள்வாயாக. போர்க் கோலம் பூண்டு வந்த அசுரர்களின் தலைகளை வீரத்துடன் இந்தப் பூமியில் வெட்டி வீழ்த்தி, எழுந்துள்ள பூத கணங்களும், காக்கைகளும் ரத்தத்தைக் குடிக்கும்படி வேலைச் செலுத்தியவனே, பாக்கு மரங்களின் குலைகள் சாய்ந்து விழும்படி மிருதுவான உடல் வாய்ந்த கயல் மீன்கள் தாவ, அந்தக் குலைகள் வீழ்வதால் (கீழுள்ள) வாழைக் குலைகளும் நெருங்கிச் செழிப்புடன் வளர்ந்த செந்நெற் கதிர்களும் உதிர்ந்து விழும் வயல்கள் பல கோடிக் கணக்காகவும், மலைச் சாரல் தோறும் எழுந்து வளர்ந்துள்ள சோலைகளும், தூரத்தே கண்டு தொழுபவர்களுடைய வினைகளைத் தொலைக்கும், பொன் மயமாக எழுந்துள்ள கோபுரங்களும், மண்டபங்களும் சூழ்ந்துள்ள, மாலைகளும், நிறைந்த தோரணங்களும், அமைதியான தெருக்களும் உள்ள, தேர் சுற்றி வருவதும் ஆகிய பெரிய ஊர், தேவர்கள் யாவரும் புகழும் திருத்தணிகையாகிய அழகிய ஊரில் வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 276 - திருத்தணிகை
ராகம் - .....; தாளம் -

தனத்த தத்தன தனதன தனதன     தனத்த தத்தன தனதன தனதன          தனத்த தத்தன தனதன தனதன ...... தனதான

தொடத்து ளக்கிகள் அபகட நினைவிகள்     குருட்டு மட்டைகள் குமரிகள் கமரிகள்          சுதைச்சி றுக்கிகள் குசலிக ளிசலிகள் ...... முழுமோசந் 
துறுத்த மட்டைகள் அசடிகள் கசடிகள்     முழுப்பு ரட்டிகள் நழுவிகள் மழுவிகள்          துமித்த மித்திரர் விலைமுலை யினவலை ...... புகுதாமல் 
அடைத்த வர்க்கியல் சரசிகள் விரசிகள்     தரித்த வித்ரும நிறமென வரவுட          னழைத்து சக்கிர கிரிவளை படிகொடு ...... விளையாடி 
அவத்தை தத்துவ மழிபட இருளறை     விலக்கு வித்தொரு சுடரொளி பரவந          லருட்பு கட்டியு னடியிணை யருளுவ ...... தொருநாளே 
படைத்த னைத்தையும் வினையுற நடனொடு     துடைத்த பத்தினி மரகத சொருபியொர்          பரத்தி னுச்சியி னடநவி லுமையரு ...... ளிளையோனே 
பகைத்த ரக்கர்கள் யமனுல குறஅமர்     தொடுத்த சக்கிர வளைகர மழகியர்          படிக்க டத்தையும் வயிறடை நெடியவர் ...... மருகோனே 
திடுக்கி டக்கட லசுரர்கள் முறிபட     கொளுத்தி சைக்கிரி பொடிபட சுடரயில்          திருத்தி விட்டொரு நொடியினில் வலம்வரு ...... மயில்வீரா 
தினைப்பு னத்திரு தனகிரி குமரிநல்     குறத்தி முத்தொடு சசிமக ளொடுபுகழ்          திருத்த ணிப்பதி மலைமிசை நிலைபெறு ...... பெருமாளே.

தொட்டால் கூச்சம் அடைபவர் போல அசைபவர்கள். அந்த வஞ்சக நினைவு கொண்டவர்கள். அறிவுக் கண் இல்லாத மூடர்கள். இள மகளிர். குற்றம் உள்ளவர்கள். நிலப் பிளப்பில் (பிறரை ஆழ்த்துபவர்கள்). இன்பச் சுவையைச் சிறுகச் செய்பவர்கள். தந்திரவாதிகள். எளிதில் பிணக்கம் கொள்பவர்கள். முழு மோசம் நிரம்பியுள்ள பயனிலிகள். மூடர்கள். துர்க்குணிகள். முழுதும் மாறுபட்ட பேச்சுக் காரிகள், பிடிபடாது நழுவுகிறவர்கள், தங்கள் சூது வெளியாகாமல் மழுப்புவோர்கள், (வருபவரின்) பொருளை நண்பர்கள் போல நடித்துப் பறிக்கின்றவர்கள், மார்பகத்தை விலைக்கு விற்பவர்கள் (ஆகிய பொது மகளிரின்) வலையில் நான் புகாமல், (நற்கதிக்குப் போகும் வழியைத்) தடுத்து அடைத்த விலைமாதர்களுக்குச் (சமமாக நடக்கும்), இன்பத்தைக் காட்டுபவர்களும் துன்பத்தை ஊட்டுபவர்களும் ஆகிய (சித்துக்களைக் காட்டி மோசம் செய்யும்) சிலரை, அணிந்துள்ள பவளம் போன்ற ஒளி போல மதித்து, அவர்களை உடன் வரும்படி அழைத்துச் சென்று, சக்கிவாள கிரியால் சூழப்பட்ட இப்பூமியில் அவர்களுடன் வீண் பொழுது போக்கி விளையாடும் என்னுடைய ஜாக்கிராதி* மல அவஸ்தைகளும், தத்துவ சேஷ்டைகளும் ஒடுங்க (எனது) அஞ்ஞானத்தை நீக்கி, என் உள்ளே ஞானப் பேரொளி பரவ, நல்ல (உனது) திருவருளை ஊட்டி, உன் திருவடிகளை அருளுகின்ற ஒரு நாளும் எனக்குக் கிட்டுமோ? படைத்து எல்லாவற்றையும் செயற்படச் செய்து காப்பாற்றி, நடராஜப் பெருமானோடு அழித்த கற்புடையாள், மரகத நிறத்தினள், ஒப்பற்ற பர வெளிக்கு மேலே நடனம் செய்கின்ற உமா தேவியார் ஈன்ற இளையோனே, பகைத்து வந்து அசுரர்கள் யம லோகத்தை அடையும்படி போர் செய்தவரும், சக்கரம், சங்கு ஏந்திய திருக்கரத்து அழகரும், பூமியாகிய பாண்டத்தை வயிற்றில் அடக்கியவருமாகிய நெடியோன் திருமாலின் மருகனே, கடல் திடுக்கிடவும், அசுரர்கள் முறிபட்டு ஓடவும், சேர்ந்துள்ள அஷ்ட திக்குகளில் உள்ள மலைகள் பொடியாகும்படியும் ஒளி வேலைச் சீராகச் செலுத்தி விட்டு, ஒரு நொடியில் மயில் மீதேறி உலகை வலம் வந்த வீரனே, தினைப் புனத்தில் இருந்த, இரண்டு மலை போன்ற மார்பகங்களைக் கொண்ட குமரி, நல்ல குறச் சாதியினள், முத்தாகிய வள்ளியுடனும், இந்திராணியின் மகளான தேவயானையுடனும், புகழ் கொண்ட திருத்தணிகை மலையில் நிலைத்து வீற்றிருக்கும் பெருமாளே. 
* அவஸ்தைகள் ஐந்து: ஜாக்கிரம் (நனவு), சொப்பனம் (கனவு), சுழுத்தி (உறக்கம்), துரியம் (பேருறக்கம்), துரியாதீதம் (உயிர்ப்படக்கம்).

பாடல் 277 - திருத்தணிகை
ராகம் - செஞ்சுருட்டி/ஸஹானா தாளம் - அங்கதாளம் - 6 1/2 தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தக-1, தகிட-1 1/2

தனதான தனத்தன தான தனதான தனத்தன தான     தனதான தனத்தன தான ...... தனதான

நிலையாத சமுத்திர மான சமுசார துறைக்கணின் மூழ்கி     நிசமான தெனப்பல பேசி ...... யதனூடே 
நெடுநாளு முழைப்புள தாகி பெரியோர்க ளிடைக்கர வாகி     நினைவால்நி னடித்தொழில் பேணி ...... துதியாமல் 
தலையான வுடற்பிணி யூறி பவநோயி னலைப்பல வேகி     சலமான பயித்திய மாகி ...... தடுமாறித் 
தவியாமல் பிறப்பையு நாடி யதுவேரை யறுத்துனை யோதி     தலைமீதில் பிழைத்திட வேநி ...... னருள்தாராய் 
கலியாண சுபுத்திர னாக குறமாது தனக்குவி நோத     கவினாரு புயத்திலு லாவி ...... விளையாடிக் 
களிகூரு முனைத்துணை தேடு மடியேனை சுகப்பட வேவை     கடனாகு மிதுக்கன மாகு ...... முருகோனே 
பலகாலு முனைத்தொழு வோர்கள் மறவாமல் திருப்புகழ் கூறி     படிமீது துதித்துடன் வாழ ...... அருள்வேளே 
பதியான திருத்தணி மேவு சிவலோக மெனப்பரி வேறு     பவரோக வயித்திய நாத ...... பெருமாளே.

அகலம், ஆழம் இவ்வளவு என்று காணமுடியாத பெரும் சமுத்திரம் போன்ற சம்சாரம் ஆகிய நீர்த்துறையிலே மூழ்கி, மெய் போன்ற பல பொய்களைப் பேசி, அந்த சம்சாரக் கடலிலே, நீண்ட காலமாக உழைப்புள்ளவன் ஆகி, பெரியோர்களின் கூட்டத்தில் சேராமல் ஒளிந்து மறைந்து ஒதுங்கி, நல்ல நினைவோடு நின்னடிக்கான தொண்டுகளை விரும்பிப் போற்றாமல், உடலில் முதன்மையான நோய்கள் வந்து தாக்கவும், இந்த சம்சார சாகரத்தில் பிறவி நோய் என்னும் பல அலைகள் வீசவும், கோபம் கொண்ட பைத்தியக்காரனாக மாறி, யான் தடுமாறித் தவிக்காமல், பிறவியின் மூல காரணத்தை ஆராய்ந்து, அதன் ஆணிவேராகிய ஆசையை அறுத்து, உன் புகழ் ஓதி இவ்வுலகில் உய்யுமாறு உன் திருவருள் புரிந்து ஆட்கொள்வாயாக. மேன்மை தங்கிய கல்யாண மாப்பிள்ளையாகவே குறக் குல வள்ளி தேவியிடத்தில் என்றும் விளங்கி உல்லாசமாக, அழகு நிறைந்த அவளது திருப் புயத்தில் தழுவி உலாவி லீலைகள் புரிந்து மகிழும் உன்னை உற்றதுணையெனத் தேடுகின்ற என்னை இன்பம் அடையும்படியாகவே வைத்தருள்க. இது உனக்குக் கடமையாகும். அவ்வாறு என்னை அருளினால் அது உனக்குப் பெருமையும் ஆகும், முருகனே. பன்முறையும் உன்னை வணங்குபவர்கள், மறக்காமல் உன் திருப்புகழைப் பாடி இவ்வுலகிலே உன்னைத் துதிசெய்து உன்னுடனேயே எப்போதும் இருந்து வாழும்படியாக அருளும் செவ்வேளே, இதுவே பூலோகத்தில் உள்ள சிவலோகம் என்ற அன்பை உண்டாக்கத்தக்க திருத்தலமாகிய திருத்தணிகையில் வாழ்கின்ற, பிறவிப் பெரு நோயைத் தீர்க்கவல்ல, வைத்தியநாதப் பெருமாளே. 

பாடல் 278 - திருத்தணிகை
ராகம் - சிந்துபைரவி ; தாளம் - கண்டஜம்பை - 8

தனத்த தத்தனத் ...... தனதான     தனத்த தத்தனத் ...... தனதான

நினைத்த தெத்தனையிற் ...... றவறாமல்     நிலைத்த புத்திதனைப் ...... பிரியாமற் 
கனத்த தத்துவமுற் ...... றழியாமற்     கதித்த நித்தியசித் ...... தருள்வாயே 
மனித்தர் பத்தர்தமக் ...... கெளியோனே     மதித்த முத்தமிழிற் ...... பெரியோனே 
செனித்த புத்திரரிற் ...... சிறியோனே     திருத்த ணிப்பதியிற் ...... பெருமாளே.

நினைத்தது எந்த அளவும் தவறாமல் கைகூடவும், நிலையான ஞானத்தை விட்டு யான் பிரியாமல் இருக்கவும், பெருமை வாய்ந்த தத்துவங்களைக்* கடந்து அப்பாலான நிலையை யான் அடைந்து அழியாமல் இருக்கவும், வெளிப்படுகின்ற நிரந்தரமான சித்தநிலையை நீ அருள்வாயாக. மனிதர்களுக்குள் அன்புடையார்க்கு மிக எளியவனே, மதிக்கப்படுகிற இயல், இசை, நாடகமாகும் முத்தமிழில் சிறந்தவனே, சிவ மூர்த்தியிடம் தோன்றிய குமாரர்களுள் இளையவனே**, திருத்தணிகைப் பதியில் எழுந்தருளியுள்ள பெருமாளே. 
* 96 தத்துவங்கள் பின்வருமாறு:36 பரதத்துவங்கள் (அகநிலை): ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து - 25 (புறநிலை): மண், தீ, நீர், காற்று, வெளி.ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை): வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4. 
** சிவ குமாரர்கள் நால்வர்: விநாயகர், வீரபத்திரர், பைரவர், முருகன் (அனைவருக்கும் இளையவர்).

பாடல் 279 - திருத்தணிகை
ராகம் - தந்யாசி; தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2 தகிட-1 1/2, தகதிமி-2

தனன தானனம் தனன தானனம்     தனன தானனம் ...... தனதான

பகலி ராவினுங் கருவி யாலனம்     பருகி யாவிகொண் ...... டுடல்பேணிப் 
பழைய வேதமும் புதிய நூல்களும்     பலபு ராணமுஞ் ...... சிலவோதி 
அகல நீளமென் றளவு கூறரும்     பொருளி லேயமைந் ...... தடைவோரை 
அசடர் மூகரென் றவல மேமொழிந்     தறிவி லேனழிந் ...... திடலாமோ 
சகல லோகமும் புகல நாடொறுஞ்     சறுகி லாதசெங் ...... கழுநீருந் 
தளவு நீபமும் புனையு மார்பதென்     தணிகை மேவுசெங் ...... கதிர்வேலா 
சிகர பூதரந் தகர நான்முகன்     சிறுகு வாசவன் ...... சிறைமீளத் 
திமிர சாகரங் கதற மாமரஞ்     சிதற வேல்விடும் ...... பெருமாளே.

பகலிலும் இரவிலும் இந்த உடம்பு என்ற கருவியால் சோறு உண்டு உயிரைப் பாதுகாத்து இவ்வுடம்பை விரும்பி வளர்த்த யான், பழமையான வேத நூல்களையும் புதுமையான நூல்களையும் பலவகையான புராணங்களையும் ஒரு சிலவற்றை ஓதி உணர்ந்து, இத்தனை அகலம் இத்தனை நீளம் என்று அளக்க முடியாத பேரின்பப் பொருளிலே மனத்தை வைத்து அமைதியுறும் ஆன்றோரை, மூடர், ஊமையர் என்றெல்லாம் வீண் வார்த்தைகளால் அவமதித்து அறிவிலியாகிய அடியேன் அழிந்து போகலாமா? எல்லா உலகங்களும் போற்றிப் புகழும்படி, தினந்தோறும் தவறாமல் மலர்கின்ற செங்கழுநீர் மலரும், முல்லையும், கடப்ப மலரும் தரிக்கின்ற மார்பனே, அழகிய திருத்தணிகையில் வாழ்கின்ற செவ்வொளி வீசும் வேலாயுதா, சிகரங்களைக் கொண்ட கிரெளஞ்ச மலை பொடிப்பொடியாக, பிரம்மாவும், மேல்நிலையிலிருந்து தாழ்ந்த இந்திரனும் சூரனது சிறைச்சாலையிலிருந்து மீட்சி பெற, இருண்ட கடல் கொந்தளித்து அலை ஓசை மிக, மாமரமாக மாய உருக்கொண்ட சூரனது உடல் பிளவுபட, வேலாயுதத்தைச் செலுத்திய பெருமாளே. 

பாடல் 280 - திருத்தணிகை
ராகம் - .....; தாளம் -

தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத்     தனத்தனத் தனத்தனத் ...... தனதான

பருத்தபற் சிரத்தினைக் குருத்திறற் கரத்தினைப்     பரித்தவப் பதத்தினைப் ...... பரிவோடே 
படைத்தபொய்க் குடத்தினைப் பழிப்பவத் திடத்தினைப்     பசிக்குடற் கடத்தினைப் ...... பயமேவும் 
பெருத்தபித் துருத்தனைக் கிருத்திமத் துருத்தியைப்     பிணித்தமுக் குறத்தொடைப் ...... புலனாலும் 
பிணித்தவிப் பிணிப்பையைப் பொறுத்தமிழ்ப் பிறப்பறக்     குறிக்கருத் தெனக்களித் ...... தருள்வாயே 
கருத்திலுற் றுரைத்தபத் தரைத்தொறுத் திருக்கரைக்     கழித்தமெய்ப் பதத்தில்வைத் ...... திடுவீரா 
கதித்தநற் றினைப்புனக் கதித்தநற் குறத்தியைக்     கதித்தநற் றிருப்புயத் ...... தணைவோனே 
செருத்தெறுத் தெதிர்த்தமுப் புரத்துரத் தரக்கரைச்     சிரித்தெரித் தநித்தர்பொற் ...... குமரேசா 
சிறப்புறப் பிரித்தறத் திறத்தமிழ்க் குயர்த்திசைச்     சிறப்புடைத் திருத்தணிப் ...... பெருமாளே.

பருமனனான பல்லை உடைய தலையையும், வலிமை உடைய கைகளையும், தாங்குகின்ற அந்தக் கால்களையும், அன்புடனே செய்யப்பட்ட, பொய்யாலான இந்தப் பானை போன்ற உடலை, பழிக்கும் பாவத்துக்கும் இடமான இந்த உடலை, பசிக்கு இருப்பிடமான குடலோடு கூடிய இந்த உடலை, பயத்தோடும் கூடிய பெரிய பித்த சா£ரத்தை, தோலாலான உலை ஊதும் கருவியை, பொருத்தப்பட்டுள்ள (காமம், வெகுளி, மயக்கம் என்ற) மூன்று குற்றங்களோடும், (சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற) ஐந்து புலன்களோடும் கட்டுப்பட்ட இந்தத் நோய்ப் பையை (வாழும்போது) தாங்குவதும், (சாவில்) ஆழ்த்துவதுமான இந்தப் பிறப்பு ஒழிந்து போவதற்கான நோக்கத்தைக் கொண்ட கருத்தை எனக்குத் தந்து அருள்வாயாக. தமது கருத்தில் வைத்து உன்னைப் புகழ்ந்த அடியார்களை (வாழ்வித்து), மிகுந்த வஞ்சம் உடையவர்களை ஒதுக்கித்தள்ளி, (அடியார்களை மட்டும்) உன் மெய்ப்பதத்தில் சேர்த்துக்கொள்ளும் வீரனே, விளைந்த நல்ல தினைப்பயிர் மிகுந்த புனத்தில் விளங்கும் நல்ல குறத்தியாம் வள்ளியை உயர்ந்த உன் அழகிய தோள்களிலே அணைந்தவனே, போரில் நெருங்கிவந்து எதிர்த்த திரிபுரத்து வலிய அரக்கர்களை சிரித்தே எரித்து அழித்தவரும், அழிவில்லாதவருமான சிவபெருமானின் அழகிய குமரேசனே, சிறப்பாகத் தனிநின்று அறநெறி கூறும் தமிழ்நாட்டின் உயர்ந்த வட எல்லையில் இருக்கும் சிறப்பைப் பெற்றுள்ள திருத்தணித்தலத்துப் பெருமாளே. 

பாடல் 281 - திருத்தணிகை
ராகம் -.....; தாளம் - ......

தனன தத்தன தத்தன தத்தன     தனன தத்தன தத்தன தத்தன          தனன தத்தன தத்தன தத்தன ...... தனதான

பழமை செப்பிய ழைத்தித மித்துடன்     முறைம சக்கிய ணைத்துந கக்குறி          படஅ ழுத்திமு கத்தைமு கத்துற ...... வுறவாடிப் 
பதறி யெச்சிலை யிட்டும ருத்திடு     விரவு குத்திர வித்தைவி ளைப்பவர்          பலவி தத்திலு மற்பரெ னச்சொலு ...... மடமாதர் 
அழிதொ ழிற்குவி ருப்பொடு நத்திய     அசட னைப்பழி யுற்றஅ வத்தனை          அடைவு கெட்டபு ரட்டனை முட்டனை ...... அடியேனை 
அகில சத்தியு மெட்டுறு சித்தியு     மெளிதெ னப்பெரு வெட்டவெ ளிப்படு          மருண பொற்பத முற்றிட வைப்பது ...... மொருநாளே 
குழிவி ழிப்பெரு நெட்டல கைத்திரள்     கரண மிட்டுந டித்தமி தப்படு          குலிலி யிட்டக ளத்திலெ திர்த்திடு ...... மொருசூரன் 
குருதி கக்கிய திர்த்துவி ழப்பொரு     நிசிச ரப்படை பொட்டெழ விக்ரம          குலிச சத்தியை விட்டருள் கெர்ச்சித ...... மயில்வீரா 
தழையு டுத்தகு றத்திப தத்துணை     வருடி வட்டமு கத்தில தக்குறி          தடவி வெற்றிக தித்தமு லைக்குவ ...... டதன்மீதே 
தரள பொற்பணி கச்சுவி சித்திரு     குழைதி ருத்திய ருத்திமி குத்திடு          தணிம லைச்சிக ரத்திடை யுற்றருள் ...... பெருமாளே.

பழைய உறவை எடுத்துக் கூறி அழைத்து, இன்பமும் பொய்யும் கலந்து முறையே மயங்கச் செய்து அணைத்து, நகக்குறி உடலில் பட அழுத்தி, முகத்தை முகத்தோடு வைத்து உறவாடி, அவசரமாக எச்சில் கூடிய மருந்தை ஊட்டி, வஞ்சகம் கலந்த தந்திரச் செயல்களைச் செய்பவர்கள், பல வகைகளிலும் அற்பர் என்று சொல்லத் தக்க அறிவில்லாத விலைமாதர்களுடன் அழிந்து போகும் தொழில்களில் விருப்பத்துடன் ஆசைப்படும் முட்டாளை, பழிக்கு ஆளான வீணனை, தகுதி இல்லாத பொய்யனை, மூடனாகிய அடியேனை சகல சக்தியும், அஷ்டமா* சித்திகளும் எளிதில் கிட்டும்படி, பெரிய வெட்ட வெளியில் தோன்றும் உனது சிவந்த அழகிய திருவடிகளை நான் சேரும்படியாக வைக்கும் ஒரு நாள் எனக்குக் கிடைக்குமா? குழிந்த விழிகளைக் கொண்ட, பெரிது நீண்ட பேய்க் கூட்டங்கள் கூத்துடன் நடனமாடி, அளவில்லாத வீராவேச ஒலி செய்த போர்க்களத்தில், எதிர்த்து வந்த ஒப்பற்ற சூரன் ரத்தத்தைக் கக்கி அதிர்ச்சியுடன் விழும்படி போர் செய்தும், அசுரர் சேனைகள் பொடிபட்டு அழியவும், (இந்திரனது) வலிமை பொருந்திய வஜ்ராயுதம் போன்ற வேலாயுதத்தைச் செலுத்திய தீரனே, பேரொலி செய்யும் மயில் வீரனே, தழைகளை உடையாகக் கொண்ட குறவள்ளியின் திருவடிகள் இரண்டை வருடியும், வட்டமாக உள்ள முகத்தில் பொட்டு அடையாளத்தை வைத்தும், வெளித்தோன்றும் மலை போன்ற மார்பகங்களின் மேல், முத்தாலாகிய அழகிய ஆபரணங்களை, கச்சை அணிவித்தும், இரண்டு குண்டலங்களையும் செவிகளில் இடம் பெற வைத்தும், காதல் பெருகும் பெருமாளே, தணிகை மலை உச்சியில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* அஷ்டமாசித்திகள் பின்வருமாறு:அணிமா - அணுவிலும் சிறிய உருவினன் ஆதல்.மகிமா - மேருவினும் பெரிய உருவினன் ஆதல்.கரிமா - ஆயுதங்களுக்கும், ஆகாயத்துக்கும், காலத்துக்கும் அப்பால் ஆதல்.லகிமா - ஆகாயகமனம், அந்தரத்தில் இருத்தல்.பிராப்தி - பர காயங்களில் புகுதல் (கூடுவிட்டு கூடுபாய்தல்).பிராகாமியம் - எல்லாவற்றிலும் நிறைந்திருத்தல்.ஈசத்துவம் - எல்லாவற்றுக்கும் நாதனாக இருத்தல்.வசித்துவம் - எல்லா இடங்களிலும் இருந்து யாவற்றையும் வசப்படுத்தல்.

பாடல் 282 - திருத்தணிகை
ராகம் - .....; தாளம் - ......

தனதன தத்தத் தனதன தத்தத்     தனதன தத்தத் ...... தனதான

புருவநெ றித்துக் குறுவெயர் வுற்றுப்     புளகித வட்டத் ...... தனமானார் 
பொருவிழி யிற்பட் டவரொடு கட்டிப்     புரளும சட்டுப் ...... புலையேனைக் 
கருவிழி யுற்றுக் குருமொழி யற்றுக்     கதிதனை விட்டிட் ...... டிடுதீயக் 
கயவனை வெற்றிப் புகழ்திகழ் பத்மக்     கழல்கள்து திக்கக் ...... கருதாதோ 
செருவசு ரப்பொய்க் குலமது கெட்டுத்     திரைகட லுட்கப் ...... பொரும்வேலா 
தினைவன முற்றுக் குறவர் மடப்பைக்     கொடிதன வெற்பைப் ...... புணர்மார்பா 
பெருகிய நித்தச் சிறுபறை கொட்டிப்     பெரிகைமு ழக்கப் ...... புவிமீதே 
ப்ரபலமுள் சுத்தத் தணிமலை யுற்றுப்     ப்ரியமிகு சொக்கப் ...... பெருமாளே.

புருவத்தை நெறித்து, சிறு வியர்வை உற்று, புளகிதம் கொண்ட வட்ட வடிவமான மார்பகத்தை உடைய (பொது) மாதர்களின் பூசலிடும் கண்களில் அகப்பட்டு அவர்களுடன் (படுக்கையில்) கட்டிப் புரளுகின்ற அசடனாகிய இழிந்த எனக்கு, கருவில் விழும் வழியிலே பொருந்தி, குருவின் வார்த்தைகளைக் கைவிட்டு, நற்கதி அடைதலை விட்டு விலகி, கொடிய கீழ் மகனான எனக்கு, (உனது) வெற்றியும், புகழும் விளங்குகின்ற திருவடித் தாமரைகளைத் துதிக்கும் எண்ணம் தோன்றக் கூடாதோ? போர் செய்யும் அசுரர்களுடய பொய்யான வாழ்க்கைக் குலம் அழியவும், அலை வீசும் கடல் அஞ்சவும் சண்டை செய்த வேலனே, வள்ளி மலையில் இருந்த தினைப் புனத்துக்குச் சென்று, குறவர் குலத்தில் தோன்றிய பைங்கொடியாகிய வள்ளியின் மார்பாகிய மலையைத் தழுவிய மார்பனே, பெருகி ஒலிக்கின்ற சிறிய பறை நாள் தோறும் கொட்டி முழக்க, பேரிகை முழக்க, பூமியில் புகழ் உடைய, பரிசுத்தமான திருத்தணிகை மலையில் வீற்றிருந்து, (அம்மலையின்) மீது விருப்பம் கொண்டு, அழகு வாய்ந்த பெருமாளே. 

பாடல் 283 - திருத்தணிகை
ராகம் - ....; தாளம் -

தானனத் தத்த தத்த தானனத் தத்த தத்த     தானனத் தத்த தத்த ...... தனதான

பூசலிட் டுச்ச ரத்தை நேர்கழித் துப்பெ ருத்த     போர்விடத் தைக்கெ டுத்து ...... வடிகூர்வாள் 
போலமுட் டிக்கு ழைக்கு ளோடிவெட் டித்தொ ளைத்து     போகமிக் கப்ப ரிக்கும் ...... விழியார்மேல் 
ஆசைவைத் துக்க லக்க மோகமுற் றுத்து யர்க்கு     ளாகிமெத் தக்க ளைத்து ...... ளழியாமே 
ஆரணத் துக்க ணத்து னாண்மலர்ப் பொற்ப தத்தை     யான்வழுத் திச்சு கிக்க ...... அருள்வாயே 
வாசமுற் றுத்த ழைத்த தாளிணைப் பத்த ரத்த     மாதர்கட் கட்சி றைக்கு ...... ளழியாமே 
வாழ்வுறப் புக்கி ரத்ன ரேகையொக் கச்சி றக்கு     மாமயிற் பொற்க ழுத்தில் ...... வரும்வீரா 
வீசுமுத் துத்தெ றிக்க வோலைபுக் குற்றி ருக்கும்     வீறுடைப் பொற்கு றத்தி ...... கணவோனே 
வேலெடுத் துக்க ரத்தி னீலவெற் பிற்ற ழைத்த     வேளெனச் சொற்க ருத்தர் ...... பெருமாளே.

போர் புரிவது போல் அமைந்து, அம்பை (தனது கூர்மைக்கு) நேர் நிற்க முடியாமல் விரட்டித் தள்ளி, மிகுந்து நெருங்கி வந்த (ஆலகால) விஷத்தை வென்று அழித்து, மிகக் கூர்மை கொண்ட வாள் போலத் தாக்கி, காதிலுள்ள குண்டலங்கள் வரையிலும் ஓடிப் பாய்ந்து, கண்டவர் உயிரை வெட்டித் தொளைத்து, இன்பத்தைத் தன்னிடம் நிரம்பக் கொண்டுள்ள கண்களை உடைய பொது மகளிர் மேல் ஆசை வைத்து, கலக்கும் மோகத்தைக் கொண்டு, துயரத்துக்கு உள்ளாகி மிகவும் சோர்ந்து உள்ளம் குலைந்து போகாமல், வேதத்தின் கண் விரும்பிப் போற்றும் புது மலர் அணிந்துள்ள அழகிய திருவடியை நான் போற்றிச் சுகம் பெற அருள் புரிவாயாக. நறுமணம் கொண்டு விளங்கும் உனது திருவடியைப் பற்றிய பக்தர்கள், பொருளாசை கொண்ட விலைமாதர்களின் கண் என்னும் சிறைச் சாலையில் அடைபட்டு அழிந்து போகாமல் நல் வாழ்வை அடையும்படி புறப்பட்டு, ரத்ன வரிகள் போலப் பிரகாசிக்கும் நிறம் கொண்ட மேன்மையான மயிலின் அழகிய கழுத்தில் வருகின்ற வீரனே, ஒளி வீசும் முத்துக்கள் சிதறுண்ண, (தினைப்புனத்தில்) ஓலையால் ஆக்கப்பட்ட பரண் மீது புகுந்து நின்றிருக்கும் பெருமை வாய்ந்த அழகிய குறப் பெண்ணாகிய வள்ளியின் கணவனே, கையில் வேலாயுதத்துடன், நீலோற்பலம் (தினமும் சுனையில்) மலர்கின்ற திருத்தணிகை மலையில் மகிழ்ந்து வீற்றிருப்பவனே, செவ்வேளே எனக் கூறிப் புகழும் கருத்துள்ள அடியார்களின் பெருமாளே. 

பாடல் 284 - திருத்தணிகை
ராகம் - .....; தாளம் -

தனத்தன தானம் தனத்தன தானம்     தனத்தன தானம் ...... தனதான

பெருக்கவு பாயங் கருத்துடை யோர்தம்     ப்ரபுத்தன பாரங் ...... களிலேசம் 
ப்ரமத்துட னாளும் ப்ரமித்திருள் கூரும்     ப்ரியக்கட லூடுந் ...... தணியாத 
கருக்கட லூடுங் கதற்றும நேகங்     கலைக்கட லூடுஞ் ...... சுழலாதே 
கடப்பலர் சேர்கிண் கிணிப்ரபை வீசும்     கழற்புணை நீதந் ...... தருள்வாயே 
தருக்கிய வேதன் சிறைப்பட நாளுஞ்     சதுர்த்தச லோகங் ...... களும்வாழச் 
சமுத்திர மேழுங் குலக்கிரி யேழுஞ்     சளப்பட மாவுந் ...... தனிவீழத் 
திருக்கையில் வேலொன் றெடுத்தம ராடுஞ்     செருக்கு மயூரந் ...... தனில்வாழ்வே 
சிறப்பொடு ஞானந் தமிழ்த்ரய நீடுந்     திருத்தணி மேவும் ...... பெருமாளே.

விரிவான தந்திரமான எண்ணங்கள் உடைய விலைமாதர்களின் மேன்மை விளங்கும் மார்பகங்களில் சிறப்புடன் தினந்தோறும் மயங்கித் திளைத்து, அஞ்ஞானம் மிக்க ஆசைக் கடல் உள்ளும், ஓய்வு இல்லாத பிறவிக் கடல் உள்ளும், கத்திப் படிக்கும் நூற்கடல் உள்ளும் நான் சுழற்சி அடைந்து வேதனை அடையாமல், (இக் கடல்களைக் கடக்க) கடப்ப மலர் சேர்ந்துள்ள, கிண்கிணியின் ஒளி வீசும், திருவடியாகிய தெப்பத்தை நீ கொடுத்து அருள் புரிவாயாக. செருக்கு மிக்க, வேதம் வல்ல பிரமன் சிறையில் அடைபடவும், நாள்தோறும் பதினான்கு உலகங்களும் வாழும்படியும், ஏழு கடல்களும் சிறந்த ஏழு மலைகளும் துன்பப்படவும், மாமரமாகிய சூரனும் தனித்து விழவும், அழகிய கைகளில் ஒப்பற்ற வேலாயுதத்தை எடுத்து போர் செய்தவனே, களிப்புற்ற மயில் ஏறும் செல்வமே, சிறப்புற்ற ஞானமும், முத்தமிழும் விரிவாக விளங்கும் திருத்தணியில் வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 285 - திருத்தணிகை
ராகம் -....; தாளம் -

தனனத் தனனத் தனனத் தனனத்     தனனத் தனனத் ...... தனதான

பொரியப் பொரியப் பொலிமுத் துவடத்     துகளிற் புதையத் ...... தனமீதே 
புரளப் புரளக் கறுவித் தறுகட்     பொருவிற் சுறவக் ...... கொடிவேள்தோள் 
தெரிவைக் கரிவைப் பரவைக் குருகிச்     செயலற் றனள்கற் ...... பழியாதே 
செறிவுற் றணையிற் றுயிலுற் றருமைத்     தெரிவைக் குணர்வைத் ...... தரவேணும் 
சொரிகற் பகநற் பதியைத் தொழுகைச்     சுரருக் குரிமைப் ...... புரிவோனே 
சுடர்பொற் கயிலைக் கடவுட் கிசையச்     சுருதிப் பொருளைப் ...... பகர்வோனே 
தரிகெட் டசுரப் படைகெட் டொழியத்     தனிநெட் டயிலைத் ...... தொடும்வீரா 
தவளப் பணிலத் தரளப் பழனத்     தணிகைக் குமரப் ...... பெருமாளே.

காமத்தீயால் மேலும் மேலும் பொரிக்கப்பட்டு விளங்கும் முத்து மாலை தூள்பட்டுப் புதைபடும் அந்த மார்பகங்களின் மேல், (இப்பெண் படுக்கையில்) புரண்டுப் புரண்டு வேதனைப்படுமாறு அவள் மீது கோபம் கொண்டு கொடுமையுடன் போர் செய்யும் (கரும்பு) வில்லையும், சுறா மீன் கொடியையும் உடைய மன்மதனின் கை தெரிந்து குறிபார்த்துச் செலுத்தும் கூர்மை கொண்ட பாணத்துக்கும், வம்பு பேசும் மகளிர்களுக்கும், ஒலிக்கும் கடலுக்கும் மனம் உருகினவளாய், செய்ய வேண்டிய செயல்கள் அற்றவளான இவளுடைய கற்பு அழியாதவாறு, நீ இவளுடன் நெருங்கி படுக்கையில் துயில் கொண்டு, இந்த அருமையான மாதுக்கு (மயக்கத்தை நீக்கி) நல்லுணர்வைத் தர வேண்டும். சொரியும் (மலர்களை உடைய) கற்பக மரங்கள் உள்ள அமராவதி நகரை, தொழுகின்ற கைகளுடன் நின்ற தேவர்களுக்கு உரிமையாகும்படி உதவியவனே, ஒளி வீசும் அழகிய கயிலை மலைக் கடவுளாகிய சிவ பெருமானுக்கு, உள்ளம் உவந்து பொருந்தும்படி வேதப் பொருளை உபதேசம் செய்தவனே, நிலை கெட்டு அசுரர்களுடைய சேனைகள் அழிந்து தொலையும்படி, ஒப்பற்ற நெடிய வேலைச் செலுத்திய வீரனே, வெண்மையான சங்குகளும் முத்துக்களும் கிடக்கும் வயல்கள் உள்ள திருத்தணிகையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
இப்பாடல் அகப் பொருள் துறையைச் சார்ந்தது. 'நாயக நாயகி' பாவத்தில் செவிலித்தாய் தலைவிக்காகப் பரிந்து சொல்வதுபோல் அமைந்தது.மன்மதனின் கரும்பு வில், மலர்ப் பாணங்கள், பெண்களின் தூற்று மொழிகள், ஒலிக்கும் கடல் முதலியன தலைவியின் பிரிவுத் துயரைக் கூட்டி, காமத்தை அதிகரிக்கச் செய்வன.

பாடல் 286 - திருத்தணிகை
ராகம் -....; தாளம் -

தனனத் தந்ததனத் தனனத் தந்ததனத்     தனனத் தந்ததனத் ...... தனதான

பொருவிக் கந்தொடடர்ச் செருவிக் கன்றொடுமிப்     புதுமைப் புண்டரிகக் ...... கணையாலே 
புளகக் கொங்கையிடத் திளகக் கொங்கையனற்     பொழியத் தென்றல்துரக் ...... குதலாலே 
தெருவிற் பெண்கள்மிகக் கறுவிச் சண்டையிடத்     திரியத் திங்களுதிப் ...... பதனாலே 
செயலற் றிங்கணையிற் றுயிலற் றஞ்சியயர்த்     தெரிவைக் குன்குரவைத் ...... தரவேணும் 
அருவிக் குன்றடையப் பரவிச் செந்தினைவித்     தருமைக் குன்றவருக் ...... கெளியோனே 
அசுரர்க் கங்கயல்பட் டமரர்க் கண்டமளித்     தயில்கைக் கொண்டதிறற் ...... குமரேசா 
தருவைக் கும்பதியிற் றிருவைச் சென்றணுகித்     தழுவிக் கொண்டபுயத் ...... திருமார்பா 
தரளச் சங்குவயற் றிரளிற் றங்குதிருத்     தணிகைச் செங்கழநிப் ...... பெருமாளே.

போர் புரிவதற்கு உரிய மலர்ப் பாணங்களின் கொத்துடன் நெருங்கிச் சண்டை செய்ய வந்த, கரும்பு வில் ஏந்திய, மன்மதன் செலுத்தும் இந்தப் புதுமை வாய்ந்த தாமரை அம்புகளால், புளகாங்கிதம் கொண்ட மார்பகங்களில் நெகிழ்ச்சி ஏற்பட்ட பூந்தாதுகள் நெருப்பை வீச, தென்றல் காற்று சோர்வடையச் செய்ய, வீதியில் பெண்கள் மிகுதியாகப் பகை கொண்டு வசைமொழி பேசி சண்டையிடுவதற்காக அங்குமிங்கும் திரிய, நிலா உதித்து (எரிக்கும்) கிரணங்களை வீசுவதாலே, செயல் எதுவும் செய்ய முடியாமல், இங்கு படுக்கையில் தூக்கம் இல்லாமல் அச்சத்துடனும் சோர்வுடனும் கிடக்கும் இந்தப் பெண்ணுக்கு உன் குரா மாலையைத் தந்து அருள வேண்டும். நீரருவி விழும் வள்ளி மலை முழுவதும் (வள்ளி வாழ்ந்திருந்தமையால் புனித நிலமாகப்) போற்றித் திரிந்து செந்தினைப் பயிரை விதைத்திருந்த அருமையான வேடர்களுக்கு மிக எளிமையாக நின்றவனே, அசுரர்களுக்கு அங்குப் பகைவனாய் நின்று, தேவர்களுக்கு உரிய உலகை அவர்களுக்குக் கொடுத்து, வேலாயுதத்தைக் கையில் கொண்ட வலிமை வாய்ந்த குமரேசனே, (கற்பக) மரங்கள் வைத்துள்ள அமராவதி நகரில் லக்ஷ்மி போல் இருக்கும் தேவயானையை போய்ச் சேர்ந்து தழுவிக் கொண்ட புயங்களைக் கொண்ட அழகிய மார்பனே, முத்தும், சங்குகளும் வயல்களில் கூட்டமாகக் கிடக்கும் திருத்தணிகையில் வீற்றிருந்து செங்கழு நீர் மலரைப் புனையும் பெருமாளே. 
இப்பாட்டு அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவிக்காக பாடியது.மன்மதன், மலர்க் கணைகள், தென்றல் காற்று, வசை மொழி பேசும் பெண்கள், சந்திரன் - இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.

பாடல் 287 - திருத்தணிகை
ராகம் - ....; தாளம் - ....

தத்தன தத்தன தத்தன தத்தன     தத்தன தத்தன ...... தானா

பொற்குட மொத்தகு யத்தைய சைப்பவர்     கைப்பொருள் புக்கிட ...... வேதான் 
புட்குரல் விச்சைபி தற்றுமொ ழிச்சியர்     பொட்டணி நெற்றிய ...... ரானோர் 
அற்பவி டைக்கலை சுற்றிநெ கிழ்ப்பவர்     அற்பர மட்டைகள் ...... பால்சென் 
றக்கண்வ லைக்குள கப்படு புத்தியை     அற்றிட வைத்தருள் ...... வாயே 
கொக்கரை சச்சரி மத்தளி யொத்துவி     டக்கைமு ழக்கொலி ...... யாலக் 
கொக்கிற கக்கர மத்தம ணிக்கருள்     குத்தத ணிக்கும ...... ரேசா 
சர்க்கரை முப்பழ மொத்தமொ ழிச்சிகு     றத்தித னக்கிரி ...... மேலே 
தைக்கும னத்தச மர்த்தஅ ரக்கர்த     லைக்குலை கொத்திய ...... வேளே.

பொன்னாலாகிய குடம் போன்ற மார்பை அசைப்பவர்கள், (வந்தவர்) கையில் உள்ள பொருள் தமக்குக் கிடைத்த பின்தான் பறவைகளின் குரலைக் காட்டி, மாய வித்தைகளை குழறிப் பேசும் பேச்சுக்களை உடையவர்கள், பொட்டு அணிந்த நெற்றியை உடையவர்கள், மெல்லிய இடையில் புடவையைச் சுற்றி அதை (காமம் மூட்டும்படி) நெகிழ்க்கவும் செய்பவர்கள், அற்பர்கள், அந்த பயனற்றவர்களாகிய பொது மகளிர் இடத்தே போய், அவர்களுடைய கண் வலைக்குள் அகப்படுகின்ற கெட்ட புத்தியை நீங்கச் செய்து அருள் புரிவாயாக. கொக்கரை, சச்சரி, மத்தளி, ஒத்து, இடக்கை ஆகிய மேளவாத்தியங்கள் முழங்கும் ஒலி ஒலிக்க, கொக்கின் இறகு, எலும்பு, பாம்பு, ஊமத்தம் பூ இவைகளை (சடையில்) அணிந்த சிவபெருமானுக்கு, ரகசிய உபதேசத்தை அருளிய திருத்தணிகை மலைக் குமரேசனே, சர்க்கரை, வாழை, மா, பலா ஆகிய முக்கனிகளுக்கு ஒப்பான பேச்சுக்களை உடைய குறப்பெண்ணாகிய வள்ளியின் மார்பகங்கள் மீது அதிகப் பற்றுள்ள சமர்த்தனே, அரக்கர்களின் தலைக் கொத்துக்களை வெட்டி அழித்த வேளே. 

பாடல் 288 - திருத்தணிகை
ராகம் - த்விஜாவந்தி / ரஞ்சனி தாளம் - ஆதி - திஸ்ர நடை - 12

தத்த தத்த தத்த தத்த தத்த தத்த தத்த தத்த     தத்த தத்த தத்த தத்த ...... தனதான

பொற்ப தத்தி னைத்து தித்து நற்ப தத்தி லுற்ற பத்தர்     பொற்பு ரைத்து நெக்கு ருக்க ...... அறியாதே 
புத்த கப்பி தற்றை விட்டு வித்த கத்து னைத்து திக்க     புத்தி யிற்க லக்க மற்று ...... நினையாதே 
முற்ப டத்த லத்து தித்து பிற்ப டைத்த கிர்த்ய முற்றி     முற்க டைத்த வித்து நித்த ...... முழல்வேனை 
முட்ட விக்க டைப்பி றப்பி னுட்கி டப்ப தைத்த விர்த்து     முத்தி சற்றெ னக்க ளிப்ப ...... தொருநாளே 
வெற்ப ளித்த தற்ப ரைக்கி டப்பு றத்தை யுற்ற ளித்த     வித்த கத்தர் பெற்ற கொற்ற ...... மயில்வீரா 
வித்தை தத்வ முத்த மிழ்ச்சொ லத்த சத்தம் வித்த ரிக்கு     மெய்த்தி ருத்த ணிப்பொ ருப்பி ...... லுறைவோனே 
கற்ப கப்பு னக்கு றத்தி கச்ச டர்த்த சித்ர முற்ற     கற்பு ரத்தி ருத்த னத்தி ...... லணைவோனே 
கைத்த ரக்கர் கொத்து கச்சி னத்து வஜ்ர னுக்க மைத்த     கைத்தொ ழுத்த றித்து விட்ட ...... பெருமாளே.

உன் அழகிய பாதங்களைத் துதித்து உயர்ந்த பதவியை அடைந்த பக்தர்களுடைய சிறப்பினை எடுத்துரைத்து உள்ளம் நெகிழ்ந்துருகத் தெரியாமலும், புத்தகத்தைக் கற்று அவற்றைப் பிதற்றுவதை விட்டு, ஞானத்தால் உன்னைத் துதித்திட கலக்கமற்ற புத்தியுடன் உன்னை நினையாமலும், இந்தப் பூமியில் பிறத்தலில் நான் முற்பட்டவனாகி, பின்னர் இங்கு நான் செய்யும் அக்ரமமான செயல்கள் நிரம்பி, பிறருடைய வாசல்களின் முன் நின்று தவித்து தினமும் அலைகின்ற என்னை, அடியோடு இந்த இழிவான பிறப்பினுள் விழுந்து கிடப்பதிலிருந்தும் நீக்கி, மோக்ஷ இன்பத்தை சிறிது நீ எனக்கு அளித்தருளும் ஒரு பாக்கிய நாள் கிடைக்குமா? இமயமலை அரசன் போற்றி வளர்த்த பராசக்தியான பார்வதிக்கு தன் இடது பாகத்தை அன்புடன் அளித்த ஞான முதல்வரான சிவபிரான் பெற்ற வெற்றி மயில் வீரனே, கல்வி, உண்மை இவை இடம் பெற்ற முத்தமிழ் மொழியின் சொல்லும் பொருளோசையும் நீடித்திருக்கும் மெய்ம்மைத் திருத்தணி மலையில் வாழ்பவனே, கற்பக விருட்சங்கள் போன்ற மரங்கள் உள்ள வள்ளிமலைப் புனத்தில் வாழும் குறத்தி வள்ளியின் கச்சு நெருக்கும் அழகுள்ள பச்சைக் கற்பூர மணம் வீசும் திருமார்பை அணைபவனே, பகைத்த அரக்கர் கூட்டம் சிதறுண்டு அழியுமாறு கோபித்து, வஜ்ராயுதனாம் இந்திரனுக்கு சூரன் இட்ட கை விலங்கை முறித்தெறிந்து அருளிய பெருமாளே. 

பாடல் 289 - திருத்தணிகை
ராகம் - ....; தாளம் - .......

தனத்தன தானம் தனத்தன தானம்     தனத்தன தானம் ...... தனதான

மருக்குல மேவுங் குழற்கனி வாய்வெண்     மதிப்பிள வாகும் ...... நுதலார்தம் 
மயக்கினி லேநண் புறப்படு வேனுன்     மலர்க்கழல் பாடுந் ...... திறநாடாத் 
தருக்கனு தாரந் துணுக்கிலி லோபன்     சமத்தறி யாவன் ...... பிலிமூகன் 
தலத்தினி லேவந் துறப்பணி யாதன்     தனக்கினி யார்தஞ் ...... சபைதாராய் 
குருக்குல ராஜன் தனக்கொரு தூதன்     குறட்பெல மாயன் ...... நவநீதங் 
குறித்தயில் நேயன் திருப்பயில் மார்பன்     குணத்ரய நாதன் ...... மருகோனே 
திருக்குள நாளும் பலத்திசை மூசும்     சிறப்பது றாஎண் ...... டிசையோடும் 
திரைக்கடல் சூழும் புவிக்குயி ராகுந்     திருத்தணி மேவும் ...... பெருமாளே.

வாசனை வகைகள் நிறைந்த கூந்தலையும், கொவ்வைக் கனி போன்ற சிவந்த வாயையும், வெண் பிறையின் பிளவு போன்ற நெற்றியையும் உடைய விலைமாதர்களின் மோக மயக்கத்தில் நட்புப் பூணும் நான் உன்னுடைய மலரடியைப் பாடும் வழி வகையை நாடாத ஆணவம் கொண்டவன், கொடைக் குணம் கொஞ்சமும் இல்லாதவன், (மாறாக) லோப குணம் உடையவன், திறமை இல்லாதவன், அன்பு அற்றவன், ஊமையன், (உனது திருத்தணிகைத்) தலத்துக்கு வந்து மனம் ஒன்றிப் பணியாதவன், இத்தகைய எனக்கு, இனியவரான உன் அடியார்கள் திருக் கூட்டத்தில் சேரும் பேற்றைத் தந்து அருள்வாய். குருகுல அரசனாகிய தருமருக்கு ஒரு தூதனாகச் சென்றவன், (மாவலி சக்கரவர்த்தி இடம்) வாமனனாய் குட்டை வடிவத்தில் சென்றவன், பலத்த மாயைகள் செய்ய வல்லவன், வெண்ணெய் (இருக்கும் இடத்தை) குறித்து அறிந்து உண்ணும் நேசன், லக்ஷ்மி தேவி வாசம் செய்யும் மார்பன், (சத்துவம், ராஜதம், தாமஸம் ஆகிய) முக்குணங்களுக்குத் தலைவனாகிய திருமாலின் மருகனே, குமார தீர்த்தம் என்னும் திருக் குளத்தில்* நாள் தோறும் பல திசைகளில் இருந்து வரும் அடியார்கள் நெருங்கிக் குளிக்கும் சிறப்பைப் பெற்றதும், எட்டுத் திக்குகளிலும் அலைகடல் சூழ்ந்த பூமிக்கு உயிர் நிலையான இடமுமாகிய திருத்தணிகையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* தணிகை மலை அடிவாரத்தில் சரவணப் பொய்கை உள்ளது. இது குமாரதீர்த்தம் எனவும் பெயர் பெறும்.

பாடல் 290 - திருத்தணிகை
ராகம் - ....; தாளம் -

தனன தத்தன தனன தத்தன     தனன தத்தன ...... தனதான

மலைமு லைச்சியர் கயல்வி ழிச்சியர்     மதிமு கத்திய ...... ரழகான 
மயில்ந டைச்சியர் குயில்மொ ழிச்சியர்     மனது ருக்கிக ...... ளணைமீதே 
கலைநெ கிழ்த்தியே உறவ ணைத்திடு     கலவி யிற்றுவள் ...... பிணிதீராக் 
கசட னைக்குண அசட னைப்புகல்     கதியில் வைப்பது ...... மொருநாளே 
குலகி ரிக்குல முருவ விட்டமர்     குலவு சித்திர ...... முனைவேலா 
குறவர் பெற்றிடு சிறுமி யைப்புணர்     குமர சற்குண ...... மயில்வீரா 
தலம திற்புக லமர ருற்றிடர்     தனைய கற்றிய ...... அருளாளா 
தருநி ரைத்தெழு பொழில்மி குத்திடு     தணிம லைக்குயர் ...... பெருமாளே.

மலை போன்ற மார்பகங்களை உடையவர், கயல் மீன் போன்ற கண்களை உடையவர், சந்திரனைப் போன்ற முகம் உடையவர், அழகுள்ள மயில் போன்ற நடையை உடையவர், குயில் போன்ற பேச்சுக்களை உடையவர், மனத்தை உருக்குபவர், படுக்கையின் மீது ஆடையைத் தளர்த்தி உறவுடன் அணைகின்ற சேர்க்கை இன்பத்தில் வாடுதலுறும் குற்றம் உள்ளவனும், குணம் கெட்ட முட்டாளுமான என்னை, சொல்லப்படுகின்ற நற் கதியில் கூட்டி வைப்பதுமான ஒரு நாள் உண்டோ? சிறந்த கிரவுஞ்ச மலைக் கூட்டத்தில் ஊடுருவச் செலுத்திப் போர் புரிந்த அழகிய கூரிய வேலாயுதனே, குறவர்கள் பெற்ற சிறுமியாகிய வள்ளியைக் கூடிய குமரனே, உத்தம குணமுள்ள மயில் வீரனே, இப் பூமியில் உள்ளவர்களால் போற்றப்படும் தேவர்களுக்கு ஏற்பட்ட துன்பத்தைப் போக்கிய அருள் நிறைந்தவனே, மரங்கள் வரிசையாக வளர்ந்து ஓங்கும் சோலைகள் மிகுந்த திருத்தணிகை மலையில் மேம்பட்டு விளங்கும் பெருமாளே. 

பாடல் 291 - திருத்தணிகை
ராகம் - ....; தாளம் - .......

தனத்தன தத்தன தனதன தனதன     தனத்தன தத்தன தனதன தனதன          தனத்தன தத்தன தனதன தனதன ...... தனதான

முகத்தைமி னுக்கிக ளசடிகள் கபடிகள்     விழித்தும ருட்டிகள் கெருவிகள் திருடிகள்          மொழிக்குள்ம யக்கிகள் வகைதனில் நகைதனில் ...... விதமாக 
முழித்தும யற்கொளு மறிவிலி நெறியிலி     புழுக்குட லைப்பொரு ளெனமிக எணியவர்          முயக்கம டுத்துழி தருமடி யவனிடர் ...... ஒழிவாக 
மிகுத்தழ கைப்பெறு மறுமுக சரவண     புயத்திள கிக்கமழ் நறைமலர் தொடைமிக          விசைக்கொடு மைப்பெறு மரகத கலபியும் ...... வடிவேலும் 
வெளிப்படெ னக்கினி யிரவொடு பகலற     திருப்பதி யப்புக ழமுதியல் கவிசொலி          விதித்தனெ ழுத்தினை தரவரு மொருபொரு ...... ளருளாயோ 
புகைத்தழ லைக்கொடு திரிபுர மெரிபட     நகைத்தவ ருக்கிட முறைபவள் வலைமகள்          பொருப்பிலி மக்கிரி பதிபெறு மிமையவ ...... ளபிராமி 
பொதுற்றுதி மித்திமி நடமிடு பகிரதி     எழுத்தறி ருத்திரி பகவதி கவுரிகை          பொருட்பய னுக்குரை யடுகிய சமைபவள் ...... அமுதாகச் 
செகத்தைய கட்டிடு நெடியவர் கடையவள்     அறத்தைவ ளர்த்திடு பரசிவை குலவதி          திறத்தமி ழைத்தரு பழையவ ளருளிய ...... சிறியோனே 
செருக்கும ரக்கர்கள் பொடிபட வடிவுள     கரத்தில யிற்கொடு பொருதிமை யவர்பணி          திருத்தணி பொற்பதி தனில்மயில் நடவிய ...... பெருமாளே.

முகத்தை மினுக்குபவர்கள். முட்டாள்கள். வஞ்சகர்கள். கணகளால் விழித்துப் பார்த்து மருட்டுபவர்கள். கர்வம் கொண்டவர்கள். திருடிகள். பேச்சால் மயக்குபவர்கள். உபாயத்திலும் சிரிப்பிலும் ஒரு வகையாக செய்வதறியாமல் திகைத்து, மோகம் கொண்ட அறிவில்லாதவன் நான். ஒழுக்கம் இல்லாதவன். புழுக்கள் உள்ள குடலை (உடலை) ஒரு பொருட்டாக மிகவும் நினைத்து அந்தப் பொது மகளிரைத் தழுவுவதற்காக அடுத்து, திரிகின்ற அடியேனுடைய துன்பங்கள் நீங்க, மிகுந்த அழகைப் பெற்ற ஆறுமுகனே, சரவணனே, உனது திருப்புயங்களில் நெகிழ்வுற்று மணம் வீசும் தேன் நிறைந்த பூ மாலையும், மிக வேகமாகச் செல்லும் உக்ரமான பச்சை நிற மயிலும், கூரிய வேலும் வெளிப்பட்டு என் முன்னே தோன்ற, இரவு, பகல் என்னும் வேற்றுமை அற்று சுத்த அருள் நிலை உற, லக்ஷ்மிகரம் அழுத்தமாகப் பொருந்த, உனது திருப்புகழை அமுது பொருந்தும் பாடல்களாகப் பாடி, பிரமன் எழுதிய எழுத்து மெலிந்து அழிந்திட, மேம்பட்டு விளங்கும் ஒப்பற்ற பொருளை உபதேசித்து அருள்வாயாக. புகை தரும் நெருப்பினால் முப்புரங்கள் எரிபட்டு அழியும்படி சிரித்தவருடைய இடது பாகத்தில் வீற்றிருப்பவள், வலைஞர் மகளாக* (மீனவப் பெண்ணாகத்) தோன்றியவள், மலைகளுள் சிறந்த இமயமலை அரசன் பெற்ற இமயவல்லி, அபிராமி, அம்பலத்தில் திமித்திமி என நடனம் செய்யும் தேவி, இலக்கணங்கள் அறிந்துள்ள ருத்திரன் தேவி, பகவதி, கெளரி, ஒழுங்காக சொல்லும் பொருளும் போலச் சிவத்தோடு கலந்திட்டு நிற்பவள், அமுதுருண்டை போல பூமியை வயிற்றில் அடக்கிய நெடியோனாகிய திருமாலுக்குத் தங்கை, (காஞ்சியில் காமாட்சி தேவியாக முப்பத்திரண்டு)** அறங்களையும் வளர்த்த பர சிவை, குலச்சிறப்பமைந்தவள், (இயல், இசை, நாடகம் என்ற) முன்று வகையான தமிழைத் தந்த முன்னைப் பழம் பொருளான உமை அருளிய குழந்தையே, கர்வம் கொண்ட அசுரர்கள் பொடிபட்டு விழ, அழகிய கையில் வேல் கொண்டு சண்டை செய்து, தேவர்கள் பணிந்து போற்றும் திருத்தணிகையாகிய அழகிய தலத்தில் மயில் மீது நடனமிடும் பெருமாளே. 
* மறைப் பொருளைத் தேவிக்கு உபதேசித்த போது, தேவியார் கவனக் குறைவாக இருப்பதைக் கண்ட சிவபெருமான் நீ மீன் பிடிக்கும் வலைஞருக்கு மகளாகுக. அப்போது உன்னை மணப்பேன் எனச் சபித்தார். மீனவள் வலைஞரால் வளர்க்கப்பட்டு வந்தாள். சிவன் தேவிக்கு உபதேசித்த போது முருகனையும், கணபதியையும் உள்ளே விட்ட காரணத்தால் நந்தி தேவரும் சுறா மீனாக ஆகுமாறு சபிக்கப்பட்டார். இந்தச் சுறாமீன் வலையில் அகப்படாது பல இடர்களைச் செய்ததால் வலைஞர் அரசன் மீனைப் பிடிப்பவர்களுக்குத் தன் பெண்ணை மணம் செய்விப்பேன் என அறிவித்தான். சிவபெருமான் வலைஞன் போல வந்து மீனைப் பிடித்துத் தேவியை மணந்தார்.
** பெரிய புராணத்தில் கூறிய முப்பத்திரண்டு அறங்கள் பின்வருமாறு:சாலை அமைத்தல், ஓதுவார்க்கு உணவு, அறுசமயத்தாருக்கும் உணவு, பசுவுக்குத் தீனி, சிறைச் சோறு, ஐயம், தின்பண்டம் நல்கல், அநாதைகளுக்கு உணவு, மகப்பெறுவித்தல், மகவு வளர்த்தல், சிசுக்களுக்குப் பால் நல்கல், அநாதைப் பிணம் சுடுதல், அநாதைகளுக்கு உடை, சுண்ணாம்பு பூசல், நோய்க்கு மருந்து, வண்ணார் தொழில், நாவிதத் தொழில், கண்ணாடி அணிவித்தல், காதோலை போடுதல், கண் மருந்து, தலைக்கு எண்ணெய், ஒத்தடம் தருதல், பிறர் துயர் காத்தல், தண்ணீர்ப் பந்தல், மடம் கட்டுதல், தடாகம் அமைத்தல், சோலை வளர்த்தல், தோல் பதனிடல், மிருகங்களுக்கு உணவு, ஏர் உழுதல், உயிர் காத்தல், கன்னிகாதானம்.

பாடல் 292 - திருத்தணிகை
ராகம் - .....; தாளம் - ......

தனன தனதன தனதன தனதன     தனன தனதன தனதன தனதன          தனன தனதன தனதன தனதன ...... தனதான

முகிலு மிரவியு முழுகதிர் தரளமு     முடுகு சிலைகொடு கணைவிடு மதனனு          முடிய வொருபொரு ளுதவிய புதல்வனு ...... மெனநாடி 
முதிய கனனென தெய்வதரு நிகரென     முதலை மடுவினி லதவிய புயலென          முகமு மறுமுக முடையவ னிவனென ...... வறியோரைச் 
சகல பதவியு முடையவ ரிவரென     தனிய தநுவல விஜயவ னிவனென          தபனன் வலம்வரு கிரிதனை நிகரென ...... இசைபாடிச் 
சயில பகலவ ரிடைதொறு நடைசெயு     மிரவு தவிரவெ யிருபத மடையவெ          சவித அடியவர் தவமதில் வரவருள் ...... புரிவாயே 
அகில புவனமு மடைவினி லுதவிய     இமய கிரிமயில் குலவரை தநுவென          அதிகை வருபுர நொடியினி லெரிசெய்த ...... அபிராமி 
அமரு மிடனன லெனுமொரு வடிவுடை     யவனி லுரையவன் முதுதமி ழுடையவ          னரியொ டயனுல கரியவ னடநவில் ...... சிவன்வாழ்வே 
திகிரி நிசிசரர் தடமுடி பொடிபட     திரைக ளெறிகடல் சுவறிட களமிசை          திரடு குறடுகள் புரள்வெகு குருதிகள் ...... பெருகாறாச் 
சிகர கிரிநெரி படபடை பொருதருள்     திமிர தினகர குருபர இளமயில்          சிவணி வருமொரு தணிகையில் நிலைதிகழ் ...... பெருமாளே.

கொடையில் மேகரூம், புகழில் சூரியனும், முக காந்தியில் பேரொளி வீசும் முத்தும், அழகில், கரும்பு வில்லை ஏந்தி விரைவில் பாணங்களை விடும் மன்மதனனும், ஈகையில், வேண்டுமளவும் கேட்ட ஒரு பொருளைத் தந்து உதவிய பிள்ளையும் இவன் என்று விரும்பிச் சென்று, பழைய கர்ணனே இவன் என்றும், தெய்வ விருட்சமாகிய கற்பகத்தை ஒப்பானவன் இவன் என்றும், முதலையை மடுவில் கொன்ற மேக நிறம் கொண்ட திருமாலே இவன் என்றும், முகமும் ஆறு முகக் கடவுள் போன்றவன் என்றும், தரித்திரம் கொண்டவரை சகல செல்வங்களும் உடையவர் இவர் என்றும், வில்வித்தையில் வல்லவனான அருச்சுனன் இவன் என்றும், சூரியன் வலம் வருகின்ற மேரு மலையை ஒப்பானவன் என்றும் இசைப் பாட்டுக்களைப் பாடி, கல் பிளவை ஒத்த இறுகிய மனம் வாய்ந்த லோபிகளின் இடங்கள் தோறும் நடந்து திரியும் யாசகத் தொழில் நீங்கவும், உனது இரண்டு பாதங்களை அடையவும், பல வகையான அடியார்களின் தவ நிலை எனக்கு வருமாறும் அருள் புரிவாயாக. எல்லா உலகங்களையும் முறைப்படி தந்தவளும், இமயமலை பெற்ற மயிலுமாகிய உமை, சிறந்த மலையாகிய மேருவை வில்லாகக் கொண்டு திருவதிகை என்னும் பதியில் திரிபுரத்தை ஒரு நொடிப் பொழுதில் எரித்த அபிராமி தனது இடது பாகத்தில் அமரும்படியாக வாய்த்தவனும், நெருப்பு என்னும் ஒப்பற்ற உருவத்தினன், உரைக்கு எட்டாதவன், பழைய தமிழுக்கு உரியவன், திருமாலும், பிரமனும், உலகோரும் அறிதற்கு அரியவன், நடனம் செய்பவன் ஆகிய சிவபெருமானின் செல்வனே, சக்ராயுதங்களுடன் அசுரர்களின் பெரிய முடிகள் பொடிபடவும், அலைகள் வீசும் கடல் வற்றிப் போகவும், போர்க் களத்தில் மேடான உயர் நிலங்களிலும் புரண்டெழுந்த மிகுதியான இரத்தம் பெருகி ஆறாக ஓடும்படியும், சிகரங்களை உடைய கிரவுஞ்சமலை நெரிபட்டு பொடியாய் விழவும், வேலால் சண்டை செய்து அருளிய, (அஞ்ஞான) இருளை நீக்கும் (ஞான) சூரியனே, குருபரனே, இளமை வாய்ந்த மயிலில் பவனி வரும், ஒப்பற்ற திருத்தணிகையில் நிலைத்து விளங்கும் பெருமாளே. 

பாடல் 293 - திருத்தணிகை
ராகம் -....; தாளம் -

தனத்த தனதன தனத்த தனதன     தனத்த தனதன ...... தனதான

முடித்த குழலினர் வடித்த மொழியினர்     முகத்தி லிலகிய ...... விழியாலும் 
முலைக்கி ரிகள்மிசை யசைத்த துகிலினும்     இளைத்த இடையினு ...... மயலாகிப் 
படுத்த அணைதனி லணைத்த அவரொடு     படிக்கு ளநுதின ...... முழலாதே 
பருத்த மயில்மிசை நினைத்த பொழுதுன     பதத்து மலரிணை ...... யருள்வாயே 
துடித்து தசமுகன் முடித்த லைகள்விழ     தொடுத்த சரம்விடு ...... ரகுராமன் 
துகைத்தி வுலகையொ ரடிக்கு ளளவிடு     துலக்க அரிதிரு ...... மருகோனே 
தடத்து ளுறைகயல் வயற்கு ளெதிர்படு     தழைத்த கதலிக ...... ளவைசாயத் 
தருக்கு மெழிலுறு திருத்த ணிகையினில்     தழைத்த சரவண ...... பெருமாளே.

நன்றாக முடிந்த கூந்தலை உடையவர்கள், தேன் வடிகட்டினதென இனிக்கும் பேச்சுக்களை உடையவர்கள் ஆகிய விலைமாதர்கள் முகத்தில் விளங்கும் கண்ணாலும், மலை போன்ற மார்பகங்கள் மீது அசைகின்ற ஆடையாலும், மெல்லிய இடையாலும் காம மயக்கம் கொண்டவனாகி, படுத்த படுக்கையில் தழுவிய அந்த மாதர்களோடு இந்தப் பூமியில் நாள்தோறும் திரியாமல், பருமையான மயில் மேல் நினைத்த அந்தப் பொழுதிலேயே வந்து உனது பாத மலரடி இணைகளைத் தந்து அருள்வாயாக. துடிதுடித்து பத்துத்தலை ராவணனுடைய கி¡£டம் அணிந்த தலைகள் அறுபட்டு விழுமாறு பூட்டிய அம்பினைச் செலுத்திய ரகுராமனும், பாதத்தால் மிதித்து இந்த உலகை ஓரடியால் அளந்து விளங்கக் காட்டியவனுமான திருமாலின் அழகிய மருகனே, குளத்தில் வாழ்கின்ற கயல் மீன்கள் வயல்களில் காணும்படி நீந்திச் செல்ல, தழைத்த வாழை மரங்கள் சாய்கின்ற செழிப்பையும், அழகையும் கொண்ட திருத்தணிகையில் களிப்புடன் வீற்றிருக்கும் சரவணனே, பெருமாளே. 

பாடல் 294 - திருத்தணிகை
ராகம் - மோகனம்; தாளம் - கண்ட த்ருவம் - 17 - எடுப்பு /5/5 0 /5

தத்தத் தனத்ததன தத்தத் தனத்ததன     தத்தத் தனத்ததன ...... தனதான

முத்துத்தெ றிக்கவள ரிக்குச்சி லைக்கைமதன்     முட்டத்தொ டுத்த ...... மலராலே 
முத்தத்தி ருச்சலதி முற்றத்து தித்தியென     முற்பட்டெ றிக்கு ......நிலவாலே 
எத்தத்தை யர்க்குமித மிக்குப்பெ ருக்கமணி     இப்பொற்கொ டிச்சி ...... தளராதே 
எத்திக்கு முற்றபுகழ் வெற்றித்தி ருத்தணியில்     இற்றைத்தி னத்தில் ...... வரவேணும் 
மெத்தச்சி னத்துவட திக்குக்கு லச்சிகர     வெற்பைத்தொ ளைத்த ...... கதிர்வேலா 
மெச்சிக்கு றத்திதன மிச்சித் தணைத்துருகி     மிக்குப்ப ணைத்த ...... மணிமார்பா 
மத்தப்ர மத்தரணி மத்தச்ச டைப்பரமர்     சித்தத்தில் வைத்த ...... கழலோனே 
வட்டத்தி ரைக்கடலில் மட்டித்தெ திர்த்தவரை     வெட்டித்து ணித்த ...... பெருமாளே.

தன்னுள் இருக்கும் முத்து தெறிக்கும்படியாக முற்றி வளர்ந்த கரும்பை வில்லாகக் கையில் வைத்துள்ள மன்மதன் நன்றாகச் செலுத்திய மலர்க்கணையாலும், முத்துக்களை தன்னுள் கொண்டுள்ள அழகிய கடலின் மேற்பரப்பில் உதித்து, தீயைப் போல் சூடாக எதிர்ப்பட்டு வீசும் நிலா ஒளியாலும், கிளி போலப் பேசும் எந்தப் பெண்களும் இவளைப்பற்றி வசை பேசி அவர்கள் அதிக இன்பம் அடையும் துன்பத்தைத் தான் அணிகின்ற இந்த அழகிய கொடி போன்ற நாயகி தளர்ச்சி அடையாமல், எல்லாத் திசைகளிலும் புகழ் பரந்துள்ள வெற்றியுடன் விளங்கும் இந்தத் திருத்தணிகைப்பதியில் இன்றைய தினத்தில் நீ வந்தருள வேண்டும். மிகுந்த கோபத்துடன் வடதிசையில் இருந்த சிறந்த சிகரங்களைக் கொண்ட கிரெளஞ்சமலையை தொளைத்துப் பொடியாக்கிய ஒளிமிகுந்த வேலாயுதனே, புகழ்ச்சி கூறி, குறத்தி வள்ளியின் மார்பினை விருப்பத்துடன் தழுவி உள்ளம் உருகி, மிகவும் பெருமை அடைந்த மணி மார்பனே, மிகுந்த பித்தரானவரும், அழகிய ஊமத்தம் பூவைச் சடையில் சூடியவருமான சிவபெருமான் தம் மனத்திலே வைத்துப் போற்றும் திருவடிகளை உடையவனே, வட்ட வடிவான அலைகளை வீசும் கடலில் (அசுரர்களை) முறித்து அழித்து, எதிர்த்து வந்தவர்களை வெட்டி வீழ்த்திய பெருமாளே. 
இப்பாட்டு அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவிக்காக பாடியது.கடல், சந்திரன், மன்மதன், மலர்க் கணைகள், மாதர்களின் வசை முதலியவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.

பாடல் 295 - திருத்தணிகை
ராகம் - .....; தாளம் - .........

தனதனன தனதந்த தனதனன தனதந்த     தனதனன தனதந்த ...... தனதான

முலைபுளக மெழஅங்கை மருவுசரி வளைகொஞ்ச     முகிலளக மகில்பொங்க ...... அமுதான 
மொழிபதற வருமந்த விழிகுவிய மதிகொண்ட     முகம்வெயர்வு பெறமன்ற ...... லணையூடே 
கலைநெகிழ வளர்வஞ்சி யிடைதுவள வுடலொன்று     படவுருகி யிதயங்கள் ...... ப்ரியமேகூர் 
கலவிகரை யழியின்ப அலையிலலை படுகின்ற     கவலைகெட நினதன்பு ...... பெறுவேனோ 
அலையெறியு மெழில்சண்ட உததிவயி றழல்மண்ட     அதிரவெடி படஅண்ட ...... மிமையோர்கள் 
அபயமென நடுகின்ற அசுரர்பட அடியுண்டு     அவர்கள்முனை கெடநின்று ...... பொரும்வேலா 
தலைமதிய நதிதும்பை யிளவறுகு கமழ்கொன்றை     சடைமுடியி லணிகின்ற ...... பெருமானார் 
தருகுமர விடவைந்து தலையரவு தொழுகின்ற     தணிமலையி லுறைகின்ற ...... பெருமாளே.

மார்பகங்கள் புளகம் கொள்ள, அழகிய கையில் அணிந்துள்ள சரியும் வளையல்களும் மெதுவாக ஒலிக்க, மேகம் போன்ற கரிய கூந்தல் அகில் மணம் வீச, அமுதம் போன்ற மொழிகள் நடுக்கமும் விரைவும் காட்ட, அருமை வாய்ந்த கண்கள் குவிய, நிலவு போன்ற முகத்தில் வியர்வை எழ, நறு மணம் உள்ள படுக்கையில் ஆடை தளர, செழுமை வாய்ந்த வஞ்சிக் கொடி போன்ற இடை துவட்சி உற, உடல்கள் ஒன்றோடு ஒன்று சேர உருகி, உள்ளம் அன்பு மிக்கு புணர்ச்சித் தொழில் அளவு கடந்த இன்ப அலையில் அலை படுகின்ற கவலை ஒழிய, உன்னுடைய அன்பை நான் அடையமாட்டேனோ? அலை வீசும் வலிமை வாய்ந்த கடலின் உட்புறத்தில் நெருப்பு நெருங்கிப் பற்றிக் கொள்ள, அண்டம் அதிர்ச்சியுடன் வெடிபட, தேவர்கள் அடைக்கலம் என்று முறையிட, இடை நிலத்தே நின்ற அசுரர்கள் அழிய, அடிபட்டு அவர்களின் சேனைகள் அழிய, நின்று சண்டை செய்த வேலனே, தலையில் நிலவு, கங்கை, தும்பை, இள அறுகம் புல், மணம் வீசும் கொன்றை மலர் இவைகளைச் சடை முடியில் அணிந்த சிவபெருமான் அருளிய குமரனே, விஷம் கொண்ட ஐந்து தலைகளை உடைய பாம்பு* பூஜித்து வணங்கும் திருத்தணிகை மலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* தணிகை மலையில் வாசுகியும், ஆதிசேஷனும் பூசித்ததாகத் தணிகைத் தல புராணங்கள் கூறுகின்றன.

பாடல் 296 - திருத்தணிகை
ராகம் - ..........; தாளம் - ..........

தனதனன தனதனன தத்தத்த தத்ததன     தனதனன தனதனன தத்தத்த தத்ததன          தனதனன தனதனன தத்தத்த தத்ததன ...... தனதான

மொகுமொகென நறைகொண்மலர் வற்கத்தி லற்புடைய     முளரிமயி லனையவர்கள் நெய்த்துக்க றுத்துமழை          முகிலனைய குழல்சரிய வொக்கக்க னத்துவள ...... ரதிபார 
முலைபுளக மெழவளைகள் சத்திக்க முத்தமணி     முறுவலிள நிலவுதர மெத்தத்த வித்தசில          மொழிபதற விடைதுவள வட்டச்சி லைப்புருவ ...... இணைகோட 
அகில்மிருக மதசலிலம் விட்டுப்ப ணித்தமல     ரமளிபட வொளிவிரவு ரத்நப்ர பைக்குழையொ          டமர்பொருத நெடியவிழி செக்கச்சி வக்கமர ...... மதநீதி 
அடல்வடிவு நலமிதனில் மட்கச்செ ருக்கியுள     முருகநரை பெருகவுட லொக்கப்ப ழுத்துவிழு          மளவிலொரு பரமவொளி யிற்புக்கி ருக்கவெனை ...... நினையாதோ
செகுதகெண கெணசெகுத செக்குச்செ குச்செகுத     கிருதசெய செயகிருத தொக்குத்தொ குத்தொகுத          டிமிடடிமி டிமிடிமிட டிட்டிட்டி டிட்டிமிட ...... டிடிதீதோ 
திரிகடக கடகதிரி தித்திக்ர தித்ரிகட     திமிர்ததிமி திமிர்ததிமி தித்தித்தி தித்திதிதி          செணுசெணுத தணசெணுத தத்தித்தி குத்ரிகுட ...... ததிதீதோ 
தகுடதிகு திகுடதிமி தத்தத்த தித்திகுட     குகுகுகுகு குகுகுகுகு குக்குக்கு குக்குகுத          தரரரர ரிரிரிரிரி றிற்றித்த றிற்றிரிரி ...... யெனவேநீள் 
சதிமுழவு பலவுமிரு பக்கத்தி சைப்பமுது     சமையபயி ரவியிதய முட்கிப்ர மிக்கவுயர்          தணிகைமலை தனின்மயிலி னிர்த்தத்தி னிற்கவல ...... பெருமாளே.

கம கம என்னும் வாசனை கொண்ட மலர்க் கூட்டத்தில் விருப்பம் கொண்ட, தாமரை மலரில் வீற்றிருக்கும் லக்ஷ்மி போன்ற மயிலை நிகர்த்த (பொது) மகளிருடைய நெய்ப்பும், கருமையும் கொண்ட, கருமேகம் போன்ற கூந்தல் சரிந்து விழ, ஒன்று சேர பருத்து வளர்ந்துள்ள, அதிகக் கனம் கொண்ட மார்பகங்கள் புளகம் கொள்ள, (கையில் அணிந்துள்ள) வளைகள் ஒலி செய்ய, முத்துக்கள் போன்ற பற்கள் இள நிலவின் ஒளியை வீச, மிகவும் தவிப்புடன் சில மொழிகள் அசைவுற்று வெளிப்பட, இடை நெளிவு உற, வட்டவடிவமான வில்லைப் போன்ற புருவங்கள் இரண்டும் வளைவு உற, அகில், கஸ்தூரி, பன்னீர் விட்டு அலங்கரிக்கப்பட்ட மலர்ப் படுக்கை கசங்கி கலைவு பட, ஒளி கலந்த ரத்தினங்களால் அமைக்கப்பட்டுப் பிரகாசிக்கும் குண்டலங்களுடன் போர் புரிவது போல் நீண்டுள்ள கண்கள் மிகவும் சிவக்க, (இவ்வாறு கலவி இன்பத்தில்) பொருந்துவதால் கொள்கை, அறிவு, நீதி, வலிமை, உருவம், குணம் இவை எல்லாம் மங்கும்படியாக அளவு கடந்து (அதனால்) உள்ளம் தளர்ச்சி அடைந்து உருக, நரை அதிகமாக, உடல் ஒரு சேர முதிர்ந்து கிழமாய் விழும் அந்தச் சமயத்தில், ஒப்பற்ற பரஞ் சோதியான பேரின்ப வீட்டில் நான் புகுந்து ஓய்வு பெற்று இருக்க என்னைக் குறித்து உனது திருவுள்ளம் நினையாதோ? செகுதகெண கெணசெகுத செக்குச்செ குச்செகுத கிருதசெய செயகிருத தொக்குத்தொ குத்தொகுத டிடிதீதோ திரிகடக கடகதிரி தித்திக்ர தித்ரிகட திமிர்ததிமி திமிர்ததிமி தித்தித்தி தித்திதித்தி ததிதீதோ தகுடதிகு திகுடதிமி தத்தத்த தித்திகுட குகுகுகுகு குகுகுகு குக்குக்கு குக்குகுத தரரரர ரிரிரிரிரி றிற்றித்த றிற்றிரிரி --- இவ்வாறான ஒலி பெருகி நீள தாள ஒத்துடன் முழவு வாத்தியங்கள் பலவும் இரண்டு பக்கங்களிலும் ஒலிக்கவும், பழைமை வாய்ந்த அன்னை பைரவி துர்க்கையும் உள்ளம் அஞ்சி திகைப்பு அடையவும், சிறப்பு வாய்ந்த திருத்தணிகை மலையில் மயில் மீது நிலைத்து நடனம் செய்யவல்ல பெருமாளே. 

பாடல் 297 - திருத்தணிகை
ராகம் - ..........; தாளம் - ........

தந்தந் தனதன தந்தந் தனதன     தந்தந் தனதன ...... தனதான

வங்கம் பெறுகட லெங்கும் பொருதிரை     வந்துந் தியதிரு ...... மதனாலே 
வஞ்சம் பெறுதிட நெஞ்சன் தழலுற     வஞ்சம் பதும்விடு ...... மதனாலே 
பங்கம் படுமென தங்கந் தனிலுதி     பண்பொன் றியவொரு ...... கொடியான 
பஞ்சொன் றியமயில் நெஞ்சொன் றியெயழல்     பொன்றுந் தனிமையை ...... நினையாயோ 
தெங்கந் திரளுட னெங்குங் கதலிகள்     சென்றொன் றியபொழி ...... லதனூடே 
தெந்தெந் தெனதென என்றண் டுறஅளி     நின்றுந் திகழ்வொடு ...... மயிலாடப் 
பொங்குஞ் சுனைகளி லெங்குங் குவளைகள்     என்றும் புகழ்பெற ...... மலா£னும் 
பொன்றென் றணிகையில் நின்றங் கெழுபுவி     யென்றுஞ் செயவல ...... பெருமாளே.

கப்பல்கள் செல்லும் கடலில் எங்கும் மாறுபட்டு ஏறி இறங்கும் அலைகள் வந்து வீசி இரைச்சலிடும் காரணத்தாலும், வஞ்சகம் கொண்ட திடமான நெஞ்சனும், நெருப்புப் போன்று ஐந்து மலர்ப் பாணங்களையும் செலுத்துபவனுமான மன்மதனாலும், அவமானம் உறுகின்ற என்னுடைய உடலிலிருந்து பிறந்த நற்குணம் நிரம்பிய, ஒரு கொடி போன்ற இடையை உடைய, பஞ்சு போல் மெல்லியளான, மயிலின் சாயலை உடைய என் மகள் உள்ளத்தில் சேர்ந்த காமத் தீயால் சாகும் நிலையிலே தனிமையோடு தவிப்பதை நீ சற்றேனும் நினைத்துப் பார்த்து அருளக்கூடாதா? தென்னை மரங்களின் கூட்டத்துடன் எங்கும் வாழைகள் அமைந்து நிறைந்த சோலைக்குள்ளே, தெந்தெந் தெனதென என்று நெருங்கி வந்து நின்று வண்டுகள் பாடவும், அக்கீதத்துக்கு ஏற்ப விளக்கத்துடனே மயில்கள் ஆடவும், நீர் நிறைந்த சுனைகளில் எங்கும் குவளைகள் எக்காலத்திலும் புகழ்பெறும்படி மலர்களைத் தருகின்ற அழகிய தெற்கிலே உள்ள திருத்தணிகையில் நின்றருளி, ஏழு உலகங்களையும் என்றைக்கும் படைக்கவல்ல பெருமாளே. 
இப்பாட்டு அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவிக்காக அவளுடைய தாய் பாடியது.கடல், சந்திரன், மன்மதன், மலர்க் கணைகள் இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.

பாடல் 298 - திருத்தணிகை
ராகம் - ....; தாளம் -

தத்தனாத் தனன தத்தனாத் தனன     தத்தனாத் தனன ...... தனதான

வட்டவாட் டனம னைச்சிபாற் குதலை     மக்கள்தாய்க் கிழவி ...... பதிநாடு 
வைத்ததோட் டமனை யத்தமீட் டுபொருள்     மற்றகூட் டமறி ...... வயலாக 
முட்டவோட் டிமிக வெட்டுமோட் டெருமை     முட்டர்பூட் டியெனை ...... யழையாமுன் 
முத்திவீட் டணுக முத்தராக் கசுரு     திக்குராக் கொளிரு ...... கழல்தாராய் 
பட்டநாற் பெரும ருப்பினாற் கரஇ     பத்தின்வாட் பிடியின் ...... மணவாளா 
பச்சைவேய்ப் பணவை கொச்சைவேட் டுவர்ப     திச்சிதோட் புணர்த ...... ணியில்வேளே 
எட்டுநாற் கரவொ ருத்தல்மாத் திகிரி     யெட்டுமாக் குலைய ...... எறிவேலா 
எத்திடார்க் கரிய முத்தபாத் தமிழ்கொ     டெத்தினார்க் கெளிய ...... பெருமாளே.

வட்ட வடிவும் ஒளியும் உள்ள மார்பினைக் கொண்ட மனைவியும், அவளிடம் நான் பெற்ற மழலைச் சொல் பேசும் குழந்தைகளும், வயது முதிர்ந்த அன்னை, எனது ஊர், என் நாடு, எனக்கு உள்ள தோட்டம், வீடு, செல்வம், சம்பாதித்த பொருள், மற்ற உறவினர் கூட்டம், என் அறிவு - இவை எல்லாம் என்னை விட்டு நீங்க, நன்றாக ஓட்டி, மிகவும் நெருங்கும் பெரிய எருமை வாகனத்தின் மேல் வரும் கால தூதராகிய மூடர்கள் (பாசக் கயிற்றால்) என்னைப் பூட்டி அழைப்பதற்கு முன், (நான்) முக்தி வீட்டை அணுகிச் சேரவும், ஞானியர்போல் என்னை ஆக்கவும், வேதத்தினுள்ளும், குரா மலர்களினுள்ளும் விளங்குகின்ற உன் இரண்டு திருவடிகளைத் தந்து அருளுக. நெற்றிப் பட்டமும், நான்கு* பெரிய தந்தங்களும், (தொங்கும்) துதிக்கையும் உடைய, (ஐராவதம் என்னும்) யானை வளர்த்த, ஒளி பொருந்திய பெண் யானை போன்ற நடையை உடைய (தேவயானையின்) மணவாளனே, பச்சை மூங்கிலால் ஆகிய பரண் மீது (தினைப் புனத்தைக் காப்பதற்காக) நின்ற, பாமர குலத்தவர்களான வேடர்களுடைய ஊரிலிருந்த, வள்ளியின் தோளை அணைந்த திருத்தணிகைத் தலைவனே, தொங்கும் துதிக்கையை உடைய யானைகளும், பெரிய எட்டு மலைகளும் (கிரெளஞ்ச மலையும் குலகிரிகள் ஏழும்), நடுங்கும்படி செலுத்திய வேலனே, உன்னைப் போற்றித் துதிக்காதவர்களுக்கு அரிதான முத்தனே (பாசங்களினின்று இயல்பாகவே நீங்கியவனே), தமிழ்ப் பாக்களால் போற்றுபவர்களுக்கு எளிதான பெருமாளே. 
* இந்திரனுடைய ஐராவதத்துக்கு நான்கு தந்தங்கள் உண்டு.

பாடல் 299 - திருத்தணிகை
ராகம் - காபி ; தாளம் - அங்கதாளம் - 5 1/2 - எடுப்பு - அதீதம் 
தகதிமி-2, தகதிமி-2, தகிட-1 1/2

தனத்ததன தனதான தனத்ததன தனதான     தனத்ததன தனதான ...... தனதான

வரிக்கலையி னிகரான விழிக்கடையி லிளைஞோரை     மயக்கியிடு மடவார்கள் ...... மயலாலே 
மதிக்குளறி யுளகாசு மவர்க்குதவி மிடியாகி     வயிற்றிலெரி மிகமூள ...... அதனாலே 
ஒருத்தருட னுறவாகி ஒருத்தரொடு பகையாகி     ஒருத்தர்தமை மிகநாடி ...... யவரோடே 
உணக்கையிடு படுபாவி எனக்குனது கழல்பாட     உயர்ச்சிபெறு குணசீல ...... மருள்வாயே 
விரித்தருண கிரிநாத னுரைத்ததமி ழெனுமாலை     மிகுத்தபல முடனோத ...... மகிழ்வோனே 
வெடித்தமணர் கழுவேற ஒருத்திகண வனுமீள     விளைத்ததொரு தமிழ்பாடு ...... புலவோனே 
செருக்கியிடு பொருசூரர் குலத்தையடி யறமோது     திருக்கையினில் வடிவேலை ...... யுடையோனே 
திருக்குலவு மொருநீல மலர்ச்சுனையி லழகான     திருத்தணிகை மலைமேவு ...... பெருமாளே.

வரிகளோடு கூடிய கலைமானுக்குச் சமமான கடைக்கண் பார்வையால் இளைஞர்களை மயக்கக்கூடிய பெண்களின் மையலாலே அறிவு தடுமாறி, கையிலுள்ள பொருள் அத்தனையும் அப்பெண்களுக்கே கொடுத்து வறுமையை அடைந்து வயிற்றில் தீ மிகவும் மூண்டு எரியவும், அதன் காரணமாக ஒருவருடன் நட்பாகியும், இன்னொருவருடன் பகையாகியும், வேறு ஒருவரை மிகவும் விரும்பியும் அவர்களோடு சேர்ந்து வாட்டத்தை அடையும் படுபாவியாகிய எனக்கு உன் திருவடிகளைப் பாட உயர்வு பெற்ற நற்குண நல்லொழுக்கத்தை தந்தருள்வாயாக. அருணகிரிநாதன் என்ற இந்த அன்பன் விரிவாக கூறிய தமிழினால் ஆன இந்தத் திருப்புகழ் மாலையை நிரம்பிய ஆற்றலுடன் பாட உள்ளம் மகிழ்பவனே, சமணர்கள் உடல் வெடித்துக் கழுமரத்தில் ஏறவும், ஒப்பற்ற மங்கையர்க்கரசியின் கணவனாகிய பாண்டியன் (சமணப் படுகுழியிலிருந்து) உயிர் மீளவும், அற்புதங்கள் விளைத்த தேவாரத் தமிழ் மறையைப் பாடிய ஞான பண்டிதனாக அவதரித்த திருஞானசம்பந்தனே, ஆணவத்தோடு போர் செய்ய வந்த சூராதி அசுரர்களின் குலத்தையே வேரோடு அழியுமாறு தாக்கிய கூர்வேலினை அழகிய கரத்தில் ஏந்தியவனே, அழகு குலவி விளங்குவதும், ஒப்பற்ற நீலோற்பல மலரை மலரும் சுனையை உடையதும் ஆன அழகிய திருத்தணிகை மலை மீதுள்ள பெருமாளே. 

பாடல் 300 - திருத்தணிகை
ராகம் - ....; தாளம் -

தானத்தன தானன தந்தன     தானத்தன தானன தந்தன          தானத்தன தானன தந்தன ...... தனதானவாருற்றெழு பூண்முலை வஞ்சியர்     காருற்றெழு நீள்குழல் மஞ்சியர்          வாலக்குயில் போல்மொழி கொஞ்சியர் ...... தெருமீதே 
மாணுற்றெதிர் மோகன விஞ்சையர்     சேலுற்றெழு நேர்விழி விஞ்சியர்          வாகக்குழை யாமப ரஞ்சியர் ...... மயலாலே 
சீருற்றெழு ஞானமு டன்கல்வி     நேரற்றவர் மால்கொடு மங்கியெ          சேருற்றறி வானத ழிந்துயி ...... ரிழவாமுன் 
சேவற்கொடி யோடுசி கண்டியின்     மீதுற்றறி ஞோர்புகழ் பொங்கிய          தேசுக்கதிர் கோடியெ னும்பத ...... மருள்வாயே 
போருற்றிடு சூரர்சி ரங்களை     வீரத்தொடு பாரில ரிந்தெழு          பூதக்கொடி சோரிய ருந்திட ...... விடும்வேலா 
பூகக்குலை யேவிழ மென்கயல்     தாவக்குலை வாழைக ளுஞ்செறி          போகச்செநெ லேயுதி ருஞ்செய்க ...... ளவைகோடி 
சாரற்கிரி தோறுமெ ழும்பொழில்     தூரத்தொழு வார்வினை சிந்திடு          தாதுற்றெழு கோபுர மண்டப ...... மவைசூழுந் 
தார்மெத்திய தோரண மென்தெரு     தேர்சுற்றிய வார்பதி அண்டர்கள்          தாமெச்சிய நீள்தணி யம்பதி ...... பெருமாளே.

கச்சை மீறி எழுகின்ற, ஆபரணம் அணிந்த மார்பகத்தை உடைய, வஞ்சிக் கொடி போன்ற இடையை உடையவர்கள், மேகத்தின் கரு நிறத்தை ஒத்து எழுகின்ற நீண்ட கூந்தலின் அழகு உடையவர்கள், இளங் குயில் போல் இனிமையுள்ள பேச்சுக்களைப் பேசிக் கொஞ்சுபவர்கள், தெருவில் படாடோபத்துடன் எதிர்ப்படுகின்ற, காம மயக்கம் உண்டாக்க வல்ல, மாய வித்தைக்காரிகள், சேல் மீனுக்கு நிகராய் எழுகின்ற கண்களை உடையவர்கள், அழகுள்ள குண்டலம் அணிந்துள்ள, புடமிட்ட பொன் போன்ற நிறத்தவர்கள் (ஆகிய பொது மாதர்கள் மீதுள்ள) மோக மயக்கத்தால், சீரான ஞானமும் கல்வியும் ஒழுக்கமும் இல்லாத அந்த விலைமாதர்கள் மீதுள்ள ஆசை காரணமாக நான் ஒளி மழுங்கி, எனக்குள்ள அறிவும் கெட்டுப் போய் உயிரை இழப்பதற்கு முன்பாக, சேவற் கொடியோடு, மயிலின் மீது நீ ஆரோகணித்து, அறிஞர்கள் பாடிய உனது திருப்புகழ் நிறைந்துள்ள ஒளிச் சோதி கோடி என்னும்படி வீசுகின்ற திருவடியை அருள்வாயாக. போர்க் கோலம் பூண்டு வந்த அசுரர்களின் தலைகளை வீரத்துடன் இந்தப் பூமியில் வெட்டி வீழ்த்தி, எழுந்துள்ள பூத கணங்களும், காக்கைகளும் ரத்தத்தைக் குடிக்கும்படி வேலைச் செலுத்தியவனே, பாக்கு மரங்களின் குலைகள் சாய்ந்து விழும்படி மிருதுவான உடல் வாய்ந்த கயல் மீன்கள் தாவ, அந்தக் குலைகள் வீழ்வதால் (கீழுள்ள) வாழைக் குலைகளும் நெருங்கிச் செழிப்புடன் வளர்ந்த செந்நெற் கதிர்களும் உதிர்ந்து விழும் வயல்கள் பல கோடிக் கணக்காகவும், மலைச் சாரல் தோறும் எழுந்து வளர்ந்துள்ள சோலைகளும், தூரத்தே கண்டு தொழுபவர்களுடைய வினைகளைத் தொலைக்கும், பொன் மயமாக எழுந்துள்ள கோபுரங்களும், மண்டபங்களும் சூழ்ந்துள்ள, மாலைகளும், நிறைந்த தோரணங்களும், அமைதியான தெருக்களும் உள்ள, தேர் சுற்றி வருவதும் ஆகிய பெரிய ஊர், தேவர்கள் யாவரும் புகழும் திருத்தணிகையாகிய அழகிய ஊரில் வீற்றிருக்கும் பெருமாளே. 

by Swathi   on 28 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.