LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- அருணகிரிநாதர் நூல்கள்

திருப்புகழ்-பாடல்-[301 -350]

பாடல் 301 - திருத்தணிகை
ராகம் - .....; தாளம் -
தனத்தன தானம் தனத்தன தானம்
     தனத்தன தானம் ...... தனதான
வினைக்கின மாகுத் தனத்தினர் வேளம்
     பினுக்கெதி ராகும் ...... விழிமாதர் 
மிகப்பல மானந் தனிற்புகு தாவெஞ்
     சமத்திடை போய்வந் ...... துயர்மூழ்கிக் 
கனத்தவி சாரம் பிறப்படி தோயுங்
     கருக்குழி தோறுங் ...... கவிழாதே 
கலைப்புல வோர்பண் படைத்திட வோதுங்
     கழற்புக ழோதுங் ...... கலைதாராய் 
புனத்திடை போய்வெஞ் சிலைக்குற வோர்வஞ்
     சியைப்புணர் வாகம் ...... புயவேளே 
பொருப்பிரு கூறும் படக்கடல் தானும்
     பொருக்கெழ வானும் ...... புகைமூளச் 
சினத்தொடு சூரன் கனத்திணி மார்பந்
     திறக்கம ராடுந் ...... திறல்வேலா 
திருப்புக ழோதுங் கருத்தினர் சேருந்
     திருத்தணி மேவும் ...... பெருமாளே.
வினையைப் பெருக்குவதற்குக் காரணமான மார்பினை உடையவர்கள், மன்மதனுடைய அம்புக்கு ஒப்பாகும் கண்களை உடையவர்களாகிய விலைமாதர்கள் (மீது வைத்த ஆசையால்), மிகப் பலவான அவமானச் செயல்களில் நுழைந்து, விரும்பிய காமரசப் போர்களிலே ஈடுபட்டு, கொடிய துன்பங்களில் முழுகி அநுபவித்து, தாங்கமுடியாத கவலை அடைந்து, பிறவிக்கு வழி வகுக்கும் கருக்குழிக்குள் மீண்டும் நான் குப்புற விழுந்திடாதபடி, கலைவல்லமை வாய்ந்த புலவர்கள் இசையுடன் சீராக ஓதுகின்ற உனது திருவடிகளின் புகழை ஓதும்படியான கலை ஞானத்தைத் தந்தருள்க. தினைப் புனத்துக்குப் போய், கொடிய வில்லேந்திய குறவர்களின் கொடி போன்ற வள்ளியைச் சேர்ந்த அழகிய புயங்களை உடையவனே, கிரெளஞ்ச மலை இரண்டு கூறாகும்படியும், கடலும் வற்றி போய்க் காய்ந்திடவும், வானமும் புகை மூண்டிடவும், கோபத்துடன், சூரனுடைய கனத்த, திண்ணிய மார்பு பிளவுபடும்படியாகவும் போர் செய்த வீர வேலாயுதனே, திருப்புகழ் ஓதும்* கருத்துள்ள அடியார்கள் கூடுகின்ற திருத்தணிகையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* அருணகிரி நாதரின் இந்த வாக்கியம் பொய்யாகாதபடி, ஆண்டுதோறும் டிசம்பர் 31ம் தேதியில் அடியார்கள் திருத்தணிகையில் கூடித் திருப்புகழை ஓதுகின்றார்கள்.
பாடல் 302 - குன்றுதோறாடல்
ராகம் - ஹம்ஸத்வனி; தாளம் - கண்டத்ருவம் - 17 
- எடுப்பு - /5/5 0 /5
தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
     தத்ததன தத்த தனதான
வெற்றிசெய வுற்றகழை விற்குதைவ ளைத்துமதன்
     விட்டகணை பட்ட ...... விசையாலே 
வெட்டவெளி யிற்றெருவில் வட்டபணை யிற்கனல்வி
     ரித்தொளிப ரப்பு ...... மதியாலே 
பற்றிவசை கற்றபல தத்தையர்த மக்குமிசை
     பட்டதிகி ரிக்கு ...... மழியாதே 
பத்தியையெ னக்கருளி முத்தியைய ளித்துவளர்
     பச்சைமயி லுற்று ...... வரவேணும் 
நெற்றிவிழி பட்டெரிய நட்டமிடு முத்தமர்நி
     னைக்குமன மொத்த ...... கழல்வீரா 
நெய்கமல மொக்குமுலை மெய்க்குறவி யிச்சையுற
     நித்தமிறு கத்த ...... ழுவுமார்பா 
எற்றியதி ருச்சலதி சுற்றியதி ருத்தணியில்
     எப்பொழுது நிற்கு ...... முருகோனே 
எட்டசல மெட்டநில முட்டமுடி நெட்டசுரர்
     இட்டசிறை விட்ட ...... பெருமாளே.
ஜெயமே தரவல்ல கரும்பு வில்லின் முனையை வளைத்து மன்மதன் செலுத்திய மலர் அம்புகள் மேலே தைத்த வேகத்தாலும், வெட்டவெளியிலும், தெருக்களிலும், வட்டப் பறையென நின்று நெருப்பை அள்ளி வீசி ஒளி பரப்பும் நிலவினாலும், வசைமொழிகளை விடாது பிடித்துக்கொண்டு பயின்று, அவற்றையே பேசும் பல மாதர்களின் ஏச்சாலும், இசையை எழுப்பும் புல்லாங்குழலின் ஓசையாலும் நான் நலிவுறாமல், பக்தி நெறியை எனக்குத் தந்துதவி, முக்தியையும் அளிக்க உயர்ந்த பச்சை மயில் வாகனத்தில் ஏறி நீ வர வேண்டுகிறேன். நெற்றிக் கண்ணின் தீ பட்டு மன்மதன் எரிந்து போக, நடனம் செய்த பெரியோராம் சிவபிரான் உன்னைத் தியானிக்க, அவரது மனத்தில் பொருந்தி இருந்த திருவடிகளை உடைய வீரனே, தேன் ததும்பும் தாமரை போன்ற இள மார்பை உடைய, சத்தியவதியான குற வள்ளி அன்பு கொள்ளும்படியாக அவளை நாள்தோறும் கெட்டியாக அணைக்கும் மார்பனே, அலை வீசும் கடல்கள் சூழ்ந்த புவியில் திருத்தணியில் எப்பொழுதும் எழுந்தருளியிருக்கும் முருகனே, அஷ்ட குலகிரிகள் வரையிலும் எட்டிப் பரவ, உலகெல்லாம் தங்கள் ஆட்சியைச் செலுத்திய அசுரர்கள் தேவர்களை அடைத்த சிறையினின்றும் அவர்களை விடுவித்த பெருமாளே. 
இப்பாட்டு அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவிக்காக பாடியது.கடல், சந்திரன், மன்மதன், மலர்க் கணைகள், ஊரப் பெண்களின் ஏச்சு, குழலின் இசை, இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.
பாடல் 303 - குன்றுதோறாடல்
ராகம் - பூர்வி கல்யாணி ; தாளம் - அங்கதாளம் - 8 
தகதிமி-2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தனனந் தனன தந்த ...... தனதான
     தனனந் தனன தந்த ...... தனதான
அதிருங் கழல்ப ணிந்து ...... னடியேனுன்
     அபயம் புகுவ தென்று ...... நிலைகாண 
இதயந் தனிலி ருந்து ...... க்ருபையாகி
     இடர்சங் கைகள்க லங்க ...... அருள்வாயே 
எதிரங் கொருவ ரின்றி ...... நடமாடும்
     இறைவன் தனது பங்கி ...... லுமைபாலா 
பதியெங் கிலுமி ருந்து ...... விளையாடிப்
     பலகுன் றிலும மர்ந்த ...... பெருமாளே.
ஒலிக்கும் வீரக் கழல்களை அணிந்த உன் திருவடிகளை வணங்கும் நினது அடிமையாகிய யான் நீயே புகலிடம் என்று மெய்ந் நிலையை யான் காணுமாறு எனது உள்ளத்தில் வீற்றிருந்து கருணை புரிந்து துன்பங்களும் சந்தேகங்களும் கலங்கி ஒழிய அருள்வாயாக. தமக்கு சமானம் ஒருவருமில்லாமல் ஆனந்தத் தாண்டவம் செய்யும் சிவபெருமானுடைய இடது பாகத்தில் விளங்கும் உமாதேவியின் திருக்குமாரனே, திருத்தலங்கள் எங்கிலும் இருந்து திருவிளையாடல்கள் புரிந்து, பல மலைகளிலும் எழுந்தருளிய பெருமாளே. 
பாடல் 304 - குன்றுதோறாடல்
ராகம் - பேகடா ; தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2 
தகதிமி-2, தகிட-1 1/2
தனதன தனன தனதன தனன
     தனதன தனன ...... தனதான
எழுதிகழ் புவன நொடியள வதனி
     லியல்பெற மயிலில் ...... வருவோனே 
இமையவர் பரவி யடிதொழ அவுணர்
     மடிவுற விடுவ ...... தொருவேலா 
வழுதியர் தமிழி னொருபொரு ளதனை
     வழிபட மொழியு ...... முருகேசா 
மலரடி பணியு மடமகள் பசலை
     மயல்கொடு தளர்வ ...... தழகோதான் 
முழுகிய புனலி லினமணி தரள
     முறுகிடு பவள ...... மிகவாரி 
முறையொடு குறவர் மடமகள் சொரியு
     முதுமலை யழக ...... குருநாதா 
பழகிய வினைகள் பொடிபட அருளில்
     படிபவ ரிதய ...... முறுகோவே 
பருவரை துணிய வொருகணை தெரிவ
     பலமலை யுடைய ...... பெருமாளே.
ஏழு உலகங்கள் எனவிளங்கும் புவனத்தை ஒரு நொடிப் பொழுதினில் அழகு விளங்க மயிலில் வலம் வந்தவனே தேவர்கள் போற்றி உன் திருவடிகளைத் தொழ அசுரர்கள் மடியும்படியாக செலுத்திய ஒப்பற்ற வேலாயுதனே பாண்டிய மன்னர்களால் விருத்தி செய்யப்பட்ட தமிழில் ஒப்பற்ற அகப்பொருள் இலக்கணத்தை வணங்கி வேண்ட விளக்கிய (திருவிளையாடற் புராணத்தில் வரும் உருத்திரசன்மன் [முருக அம்சம்] - கதை) முருகேசனே உன் மலர்ப்பதங்களை வணங்கும் இந்த அறியாமகள் காமத்தால் வரும் பசலை நோய் கொண்டு மோகத்தால் தளர்ந்து போவது (இது தாய் மகளுக்காகச் சொல்வது) நியாயமாகுமா? நீரில் மூழ்கி அதனின்று பல மணிகளும் முத்துக்களும், பின்னிய பவளங்களும் நிரம்ப வாரி விற்கக் கூவும் குறப்பெண்கள் நிறைந்த முதுமலையின் (விருத்தாசலம்) அழகா, குருநாதனே என்னுடன் வந்து பழகிய வினைகள் பொடியாக நின்னருளில் தோய்பவர் இதயத்தில் வீற்றிருக்கும் அரசனே பெருத்த கிரெளஞ்சமலை பிளந்து போகும்படி ஒப்பற்ற ஆயுதத்தை தேர்ந்தெடுத்துச் செலுத்தியவனே பல மலைகளுக்கும் அதிபனான பெருமாளே. 
பாடல் 305 - குன்றுதோறாடல்
ராகம் - ஆரபி; தாளம் - அங்கதாளம் - 7 1/2 
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தனன தானன தானன தானன
     தனன தானன தானன தானன
          தனன தானன தானன தானன தந்ததான
தறையின் மானுட ராசையி னால்மட
     லெழுது மாலருள் மாதர்கள் தோதக
          சரசர் மாமல ரோதியி னாலிரு ...... கொங்கையாலுந் 
தளர்மி னேரிடை யாலுடை யால்நடை
     யழகி னால்மொழி யால்விழி யால்மருள்
          சவலை நாயடி யேன்மிக வாடிம ...... யங்கலாமோ 
பறவை யானமெய்ஞ் ஞானிகள் மோனிக
     ளணுகொ ணாவகை நீடுமி ராசிய
          பவன பூரக வேகிக மாகிய ...... விந்துநாதம் 
பகரொ ணாதது சேரவொ ணாதது
     நினையொ ணாதது வானத யாபர
          பதிய தானச மாதிம னோலயம் ...... வந்துதாராய் 
சிறைவி டாதநி சாசரர் சேனைகள்
     மடிய நீலக லாபம தேறிய
          திறல்வி நோதச மேளத யாபர ...... அம்புராசித் 
திரைகள் போலலை மோதிய சீதள
     குடக காவிரி நீளலை சூடிய
          திரிசி ராமலை மேலுறை வீரகு ...... றிஞ்சிவாழும் 
மறவர் நாயக ஆதிவி நாயக
     ரிளைய நாயக காவிரி நாயக
          வடிவி னாயக ஆனைத னாயக ......எங்கள்மானின் 
மகிழு நாயக தேவர்கள் நாயக
     கவுரி நாயக னார்குரு நாயக
          வடிவ தாமலை யாவையு மேவிய ...... தம்பிரானே.
இந்தப் பூமியில் மக்கள் காம ஆசையால் மடல்* எழுதக் கூடிய அளவுக்கு (அவர்களுக்கு) மயக்கத்தைத் தருகின்ற விலைமாதர்கள், வஞ்சனையுடன் காம லீலை செய்பவர்கள், நல்ல பூக்கள் கொண்டு விளங்கும் கூந்தலாலும், இரண்டு மார்புகளாலும், தளர்ச்சியைக் காட்டும், மின்னலுக்கு ஒப்பான, இடையாலும், உடுத்துள்ள ஆடையாலும், நடை அழகினாலும், பேசும் இனிய பேச்சினாலும், கண்களாலும், மயக்கம் கொள்ளும் சவலைப் பிள்ளையைப்போல, நாயினும் கீழான அடியேன், மிகவும் வாடி மயக்கம் கொள்ளலாமோ? (ஓரிடத்தில் தங்காது) பறவைபோல எங்கும் திரிந்து உலாவும் உண்மையான ஞானிகளும், மெளன நிலை கண்டவர்களும், அணுகுதற்குக் கூடாததாய் விலகி விளங்கும் இரகசியம், காற்றை (மூச்சை) பூரகமாக** அடக்குவதால் (பிராணாயாமத்தால்) ஒன்றுபடக் கூடிய சிவசக்தி தத்துவ ஒலியாய் விளங்குவதும், சொல்ல முடியாததும், அடைய முடியாததும், நினைக்கவும் முடியாததுமான கருணைப் பரம் பொருளாய், மூலப் பொருளான மனதை ஒடுக்கும் சமாதி நிலைப் பேற்றை நீ வந்து (எனக்குத்) தந்து அருள வேண்டும். (தேவர்களுடைய) சிறையை விடாத அசுரர்களின் படைகள் இறக்கும்படியாக, நீல நிறங் கொண்ட மயிலின் மேல் ஏறி வரும் வல்லமை கொண்ட விநோதனே, கருணை கலந்த மூர்த்தியே, கடலின் பெரிய அலைகளைப்போல் அலைமோதி வரும் குளிர்ந்த நீருடன், குடகு நாட்டிலிருந்து வரும் காவிரி ஆற்றின் பெரிய அலைகளைக் கொண்ட திரிசிரா மலையில் வீற்றிருக்கும் வீரனே, மலை நிலத்தில் வாழும் வேடர்களின் நாயகனே, ஆதி கணபதிக்குத் தம்பியாகிய நாயகனே, காவிரிக்கு நாயகனே, அழகுக்கு ஒரு நாயகனே, தேவயானைக்கு நாயகனே, எங்கள் மான் போன்ற வள்ளி நாயகியிடத்தே மகிழும் நாயகனே, அமரர்கள் நாயகனே, பார்வதியின் நாயகனான சிவபெருமானுக்கு குரு மூர்த்தியே, அழகிய மலைகள் எல்லாவற்றிலும் வீற்றிருந்து அருளும் தம்பிரானே. 
* மடல் எழுதுதல்: தலைவன் தலைவியின் அழகை வர்ணித்து ஓர் ஏட்டில் மடலாக எழுதி அவளது ஊருக்குச் சென்று நாற்சந்தியில் ஒன்றும் பேசாமல் ஒருவரது வசைக்கும் கூசாமல் படத்தில் எழுதிய உருவத்தைப் பார்த்தவாறு பகலும் இரவுமாக நிற்பான். அவனது உறுதிகண்டு தலைவியின் வீட்டார் தலைவனுக்கு அவளை மணம் செய்து வைப்பர். முருகன் வள்ளியை ஊரறிய மடல் எழுதி மணம் செய்துகொண்ட காட்சி கந்த புராணத்தில் வருகிறது.
** இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு:நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு 'ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள், சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி, ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை, சுழுமுனை முதலியன) உள்ளன.'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம்.'சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது.'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும் ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும்.
ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம்
பாடல் 306 - குன்றுதோறாடல்
ராகம் - தோடி; தாளம் - அங்கதாளம் - 5 - திஸ்ர ரூபகம் 
தகதிமி-2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தந்தன தான தான தந்தன தான தான
     தந்தன தான தான ...... தனதான
வஞ்சக லோப மூடர் தம்பொரு ளூர்கள் தேடி
     மஞ்சரி கோவை தூது ...... பலபாவின் 
வண்புகழ் பாரி காரி யென்றிசை வாது கூறி
     வந்தியர் போல வீணி ...... லழியாதே 
செஞ்சர ணாத கீத கிண்கிணி நீப மாலை
     திண்டிறல் வேல்ம யூர ...... முகமாறும் 
செந்தமிழ் நாளு மோதி உய்ந்திட ஞான மூறு
     செங்கனி வாயி லோர்சொ ...... லருள்வாயே 
பஞ்சவ னீடு கூனு மொன்றிடு தாப மோடு
     பஞ்சற வாது கூறு ...... சமண்மூகர் 
பண்பறு பீலி யோடு வெங்கழு வேற வோது
     பண்டித ஞான நீறு ...... தருவோனே 
குஞ்சரம் யாளி மேவு பைம்புன மீது லாவு
     குன்றவர் சாதி கூடி ...... வெறியாடிக் 
கும்பிட நாடி வாழ்வு தந்தவ ரோடு வீறு
     குன்றுதோ றாடல் மேவு ...... பெருமாளே.
வஞ்சகக் குணத்தையும், ஈயாத தன்மையையும் கொண்ட மூடர்களின் பொருளுக்காக அவர்களின் ஊர்களைத் தேடிச் சென்று மஞ்சரி, கோவை, தூது முதலிய தமிழ் இலக்கியத்தின் பல பாடல்களில் பெரும்புகழ் கொண்ட பாரியே, காரியே என அவர்களைப் புகழ்ந்து வாதித்துக் கூறி, வந்தித்துப் பாடுபவர்களைப் போல் வீணுக்கு அழிந்திடாமல், சிவந்த திருப்பாதங்களையும், இனிய ஓசையை உடைய கிண்கிணியையும், கடப்பமலர் மாலையையும், உறுதியான வலிய வேலினையும், மயிலையும், ஆறு திருமுகங்களையும், செழுமையான தமிழ்ப் பாட்டுக்களால் தினமும் பாடி வாழ்வுற ஞானம் சுரக்கும் சிவந்த கோவைக்கனி போன்ற திருவாயால் ஒரு திருமொழியை அருளிச்செய்வாயாக. பாண்டியனின் மிகுந்து வளைந்த கூனையும், நீங்காத காய்ச்சலையும் நீங்கச்செய்தும், கிளிப்பிள்ளை போல் கூறியதே கூறி வாதிடும் சமணர்களாகிய ஊமைகள் அழகற்ற மயிற்பீலியோடு கொடிய கழுவில் ஏறச் செய்தும், பதிகங்களைப் பாடி அருளிய பண்டிதனே, ஞானத் திருநீற்றை தந்தருளிய திருஞானசம்பந்தனே, யானைகளும், யாளிகளும் வசிக்கும் பசுமையான தினைப்புனக் கொல்லையிலே திரிகின்ற வேடர் கூட்டங்கள் ஒன்று கூடி வெறி ஆட்டம் ஆடி உன்னை வணங்க, அவர்கள் விரும்பும் உலக வாழ்வை நல்கி பெருமைமிக்குச் சிறந்து, மலைகளில் எல்லாம் திருவிளையாடல்கள் புரியும் பெருமாளே. 
பாடல் 307 - ஆறு திருப்பதி
ராகம் - .....; தாளம் - .....
தனதன தனதானன தனதன தனதானன
     தனதன தனதானன ...... தனதான
அலைகடல் நிகராகிய விழிகொடு வலைவீசிகள்
     அபகட மகபாவிகள் ...... விரகாலே 
அதிவித மதராயத நிதமொழி பலகூறிகள்
     அசடரொ டுறவாடிகள் ...... அநியாயக் 
கலைபகர் விலைமாதர்கள் இளைஞர்கள் குடிகேடிகள்
     கருதிடு கொடியாருட ...... னினிதாகக் 
கனதன முலைமேல்விழு கபடனை நிருமூடனை
     கழலிணை பெறவேயினி ...... யருள்வாயே 
அலைபுனல் தலைசூடிய பசுபதி மகனாகிய
     அறுமுக வடிவேஅருள் ...... குருநாதா 
அசுரர்கள் குடியேகெட அமரர்கள் பதியேபெற
     அதிரிடும் வடிவேல்விடு ...... மதிசூரா 
தலையய னறியாவொரு சிவகுரு பரனேயென
     தரணியி லடியார்கண ...... நினைவாகா 
சகலமு முதலாகிய அறுபதி நிலைமேவிய
     தடமயில் தனிலேறிய ...... பெருமாளே.
அலை கடலுக்கு ஒப்பாகிய கண்களைக் கொண்டு காம வலையை வீசுபவர்கள், வஞ்சக எண்ணமுடைய மகா பாபிகள், தமது தந்திரத்தாலே பலவிதமான செருக்குடன் தாழ்வான, அநியாயமான பேச்சு பல பேசுபவர்கள், அசட்டு மனிதரோடு உறவு செய்பவர்கள், அநியாயமான வழியில் உடலை விற்கின்ற வேசியர்கள், இளைஞர்களுடைய குடியைக் கெடுப்பவர்கள், (நான்) மனத்தில் விரும்பிய கொடி போன்ற பொதுமகளிருடன் இன்பகரமாகக் கூடி, அவர்களுடைய பாரமான மார்பகங்கள் மேல் விழும் வஞ்சகனும் முழு மூடனுமான என்னை, உனது திருவடியிணையைப் பெறுமாறு இனி அருள்வாயாக. அலை வீசும் கங்கை நீரைத் தலையில் தரித்துள்ள, உயிர்களுக்கு எல்லாம் தலைவனாகிய, சிவபெருமானது மகனான ஆறு முக உருவத்தனே, அருள் பாலிக்கும் குரு நாதனே, அசுரர்கள் குடி அழியும்படியாகவும், தேவர்கள் தமது பொன்னுலகுக்குச் செல்வதற்காகவும், முழங்கும் கூரிய வேலைச் செலுத்திய அதி சூரனே, சிறந்த பிரமன் அறிய மாட்டாத ஒப்பற்ற சிவனுக்குக் குருபரனே என்று பூமியில் அடியார்கள் கூட்டம் நினைக்கின்ற அழகனே, சகல தலங்களுக்கும் முதலாக விளங்கும் ஆறு திருப்பதியில்* வீற்றிருக்கும், பெரிய மயில் மேல் ஏறிய, பெருமாளே. 
* ஆறு திருப்பதி: திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருவாவினன்குடி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்ச்சோலை என்பன.இத்தலங்கள் திருமுருகாற்றுப்படையில் கூறப்பட்ட முருகவேளின் ஆறு படை வீடுகள். ஆற்றுப்படை வீடு என்பது ஆறுபடை வீடு என மருவி நின்றது.
பாடல் 308 - காஞ்சீபுரம்
ராகம் - நாட்டகுறிஞ்சி; தாளம் - அங்கதாளம் - 8 1/2 
தகதிமிதக-3, தகதகிட-2 1/2, தகதிமிதக-3
தானதனத் தனதனன ...... தனதான
     தானதனத் தனதனன ...... தனதான
ஈனமிகுத் துளபிறவி ...... யணுகாதே
     யானுமுனக் கடிமையென ...... வகையாக 
ஞானஅருட் டனையருளி ...... வினைதீர
     நாணமகற் றியகருணை ...... புரிவாயே 
தானதவத் தினின்மிகுதி ...... பெறுவோனே
     சாரதியுத் தமிதுணைவ ...... முருகோனே 
ஆனதிருப் பதிகமரு ...... ளிளையோனே
     ஆறுதிருப் பதியில்வளர் ...... பெருமாளே.
இழிவு மிகுந்துள்ள பிறப்பு மீண்டும் என்னை அணுகாதபடி, நானும் உனக்கு அடிமையாகும் பாக்கியத்தைப் பெற மெய்ஞ்ஞான அருளைப் புரிந்து, அடியேனது வினைகள் அறவே நீங்க, (வள்ளியிடம் வெட்கத்தை விட்டு வலியச் சென்று ஆட்கொண்டது போல) நாணத்தை நீக்கி நீயே வந்து கருணை புரிவாயாக. அடியார்களின் தானத்திலும் தவத்திலும் மேன்மையான பகுதியைப் பெறுபவனே, ஸரஸ்வதி தேவியாம் உத்தமியின் சகோதரனே*, முருகனே, திருஞானசம்பந்தராக வந்து பல தேவாரத் திருப்பதிகங்களை அருளிச் செய்த இளம்பூரணனே, ஆறு படை வீட்டுத்** திருத்தலங்களில் வளர்கின்ற பெருமாளே. 
* முருகனுக்கு பிரமன் மாமன் மகனாதலால் மைத்துனன் உறவு. எனவே ஸரஸ்வதி சகோதரி உறவு.
** ஆறு படை வீடுகள்: திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்), திருவாவினன்குடி (பழநி), திருவேரகம் (சுவாமிமலை), குன்றுதோறாடல் (பல மலைகள்), பழமுதிர்ச்சோலை.
பாடல் 309 - காஞ்சீபுரம்
ராகம் - ......; தாளம் - .........
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
     தனதனந் தத்தத் தத்தன தத்தம்
          தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான
அதிமதங் கக்கப் பக்கமு கக்குஞ்
     சரிதனந் தைக்கச் சிக்கென நெக்கங்
          கணைதருஞ் செச்சைப் பொற்புய னத்தன் ...... குறவாணார் 
அடவியந் தத்தைக் கெய்த்துரு கிச்சென்
     றடிபணிந் திட்டப் பட்டும யற்கொண்
          டயர்பவன் சத்திக் கைத்தல னித்தன் ...... குமரேசன் 
துதிசெயும் சுத்தப் பத்தியர் துக்கங்
     களைபவன் பச்சைப் பக்ஷிந டத்துந்
          துணைவனென் றர்ச்சித் திச்சைத ணித்துன் ...... புகழ்பாடிச் 
சுருதியின் கொத்துப் பத்தியு முற்றுந்
     துரியமுந் தப்பித் தத்வம னைத்துந்
          தொலையுமந் தத்துக் கப்புற நிற்கும் ...... படிபாராய் 
கதிபொருந் தக்கற் பித்துந டத்துங்
     கனல்தலம் புக்குச் சக்ரமெ டுக்குங்
          கடவுளும் பத்மத் தச்சனு முட்கும் ...... படிமோதிக் 
கதிரவன் பற்குற் றிக்குயி லைத்திண்
     சிறகரிந் தெட்டுத் திக்கர்வ குக்குங்
          கடகமுந் தட்டுப் பட்டொழி யக்கொன் ...... றபிராமி 
பதிவ்ரதம் பற்றப் பெற்றம கப்பெண்
     பரிவொழிந் தக்கிக் குட்படு தக்கன்
          பரிபவம் பட்டுக் கெட்டொழி யத்தன் ...... செவிபோயப் 
பணவிபங் கப்பட் டப்படி வெட்கும்
     படிமுனிந் தற்றைக் கொற்றம்வி ளைக்கும்
          பரமர்வந் திக்கக் கச்சியில் நிற்கும் ...... பெருமாளே.
அதிகமான மகிழ்ச்சி வெளிப்பட, அன்புமீறிக் களி கூறும் தேவயானையின் மார்பகம் அழுத்தமாக நெஞ்சிற் பதிய, இறுகப் பிணைத்ததால் நெகிழ்ந்து உடனே அணைப்பில் கசங்கிய வெட்சி மாலை அணிந்த அழகிய திருத்தோள்களை உடையவனாகிய பெரியோன், குறவர் வாழும் காட்டில் உள்ள அழகிய கிளி போன்ற வள்ளிக்கு இளைத்து, உருகிச் சென்று, அவளுடைய அடியை வணங்கி, ஆசை பூண்டு, மோகம் கொண்டு தளர்பவன், வேலாயுதத்தைத் திருக் கரத்தில் பூண்டவன், என்றும் உள்ளவன் ஆகிய குமரேசன், துதி செய்கின்ற பரிசுத்தமான பக்தி பூண்ட அன்பர்களுடைய துக்கத்தை நீக்குபவன், பச்சை நிறமான மயிலை வாகனமாகக் கொண்ட துணைவன் என்றெல்லாம் கூறி அர்ச்சித்து, என் ஆசையை நிறைவேற்றி, உன்னுடைய திருப்புகழைப் பாடி, வேதங்களின் கூட்ட வரிசையையும், பிற எல்லாவற்றையும், துரிய நிலையையும் (தன் மயமாய் நிற்கும் சுத்த உயர் நிலையையும்) கடந்து, தத்துவங்கள் யாவும் அழிந்து போகும் முடிவு நிலைக்கு அப்பாலே நிற்கும்படி கண்பார்த்து அருள்வாய். (வேள்வி இயற்ற வேண்டிய) நியதிக்குத் தக்க ஏற்பாடு செய்து (தக்ஷன்) வேள்வி நடத்திய அக்கினி குண்டங்கள் இருந்த யாக சாலையுள் நுழைந்து, சக்கரம் ஏந்தும் கடவுளாகிய திருமாலும், தாமரையில் வீற்றிருக்கும் படைத்தல் தொழில் புரியும் பிரமனும் அச்சம் உறும்படி தாக்கியும், சூரியனின் பற்களைக் குத்தியும், இந்திரனாம் குயிலின் திண்ணிய சிறகை வெட்டியும், அஷ்ட திக்குப் பாலகர்களான இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகியோர் அணி வகுத்த சேனைகளும் நிலை குலைந்து அழிந்து போகும்படிக் கொன்றும், பேரழகியும், பதிவிரதத் தன்மையைக் கைப்பிடிக்கப் பெற்ற இன்பப் பெண்ணும், ஆகிய தாக்ஷ¡யணியின் (தன்னையும் தன் கணவன் சிவனையும் தக்ஷன் புறக்கணித்தான் என்னும்) வருத்தம் தீரவும், நெருப்பில் விழப் பெற்ற தக்ஷன் அவமானப்பட்டு கெட்டு ஒழியவும், தனது அழகு போய் அந்தப் பார்ப்பனியாகிய ஸரஸ்வதி (மூக்கை இழந்து) பங்கம் அடைந்து வெட்கும்படியாகவும், கோபித்து அன்று இறுதியில் வெற்றி பெற்ற சிவ பெருமான் வணங்க, காஞ்சீபுரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
தக்ஷயாகத்தில் தண்டிக்கப்பட்ட தேவர்கள் அனைவரையும் பட்டியலிட்டுக் கூறுவது இப்பாடல்.
பாடல் 310 - காஞ்சீபுரம்
ராகம் - ...........; தாளம் - ........
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
     தனதனந் தத்தத் தத்தன தத்தம்
          தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான
கனகதம் பத்தைச் செச்சையை மெச்சுங்
     கடகசங் கத்துப் பொற்புய வெற்பன்
          கடலுள்வஞ் சித்துப் புக்கதொர் கொக்கும் ...... பொடியாகக் 
கறுவுசெஞ் சத்திப் பத்மக ரத்தன்
     குமரனென் றர்ச்சித் தப்படி செப்புங்
          கவிமொழிந் தத்தைக் கற்றற வுற்றும் ...... புவியோர்போய் 
குனகியுங் கைக்குக் கற்பக மொப்பென்
     றனகனென் றிச்சைப் பட்டத ளிக்குங்
          குமணனென் றொப்பிட் டித்தனை பட்டிங் ...... கிரவான 
குருடுகொண் டத்தச் சத்தம னைத்துந்
     திருடியுஞ் சொற்குத் தக்கதொ டுத்துங்
          குலவியுங் கத்தப் பட்டக லக்கந் ...... தெளியாதோ 
சனகனன் புற்றுப் பெற்றம டப்பெண்
     தனிப்பெருங் கற்புச் சக்ரந டத்துந்
          தகையிலங் கைச்சுற் றத்தைமு ழுத்துஞ் ...... சுடவேவெஞ் 
சமரசண் டக்கொற் றத்தவ ரக்கன்
     கதிர்விடும் பத்துக் கொத்துமு டிக்குந்
          தனியொரம் பைத்தொட் டுச்சுரர் விக்னங் ...... களைவோனும் 
தினகரன் சொர்க்கத் துக்கிறை சுக்ரன்
     சசிதரன் திக்குக் கத்தர கத்யன்
          திசைமுகன் செப்பப் பட்டவ சிட்டன் ...... திரள்வேதஞ் 
செகதலஞ் சுத்தப் பத்தியர் சித்தம்
     செயலொழிந் தற்றுப் பெற்றவர் மற்றும்
          சிவனும்வந் திக்கக் கச்சியில் நிற்கும் ...... பெருமாளே.
பொன்னாலாகிய தூண் போன்றவையும், வெட்சி மாலை அணிந்தவையும், மெச்சும்படியான வீரவாள் முதலிய கூட்டங்களை அணிந்தவையுமான அழகிய மலை போன்ற புயங்களை உடையவன், கடலிலே வஞ்சனை எண்ணத்துடன் புகுந்து நின்ற ஒப்பற்ற மாமரமாகிய சூரன் அழியும்படிக் கோபித்த சிவந்த சக்தி வேலை ஏந்திய தாமரைக் கரங்களை உடையவன், குமரன் என்று பூஜித்து, அத்தகைய பாடல்களைச் சொல்லும் கவிகளைப் பாடி, அவற்றை நன்றாகப் படித்து அப்பாடல்களில் முற்றும் ஈடுபட்டும், உலகோர் அறியாமையால் (செல்வந்தரிடம்) போய் கொஞ்சிப் பேசியும், உமது கைக்கு (கேட்டதைத் தரும்) கற்பகத் தரு தான் நிகரானது என்றும், நீர் யாதொரு பாவமும் இல்லாதவர் என்றும், யாசிப்போர் விரும்பியதை எல்லாம் கொடுக்கும் குமண* வள்ளலே என்றும் உவமைகள் கூறி, இப்படி எல்லாம் வேதனைப்பட்டு இங்கு யாசித்தல் என்கின்ற குருட்டுத் தன்மையைக் கொண்டு, பொருளும் ஒலியும் பிற எல்லாமும் (பழைய நூல்களிலிருந்து) திருடியும், தங்கள் சொல்லுக்குத் தகுந்தவாறு பாடல்களை அமைத்தும், (தங்கள் பெருமைக்கு) மகிழ்ந்து குலவியும், கத்திக் கூச்சலிடுகின்ற கலக்க அறிவு தெளிவு அடையாதோ? ஜனக மன்னன் அன்புடன் பெற்ற அழகிய (சீதையாகிய) பெண்ணுடைய ஒப்பற்ற பெரிய கற்பு என்னும் சக்கரம் (ஆக்ஞை) நடைபெற்ற பெருமை வாய்ந்த இலங்கையில் (அரக்கர் குலச்) சுற்றத்தார் யாவரும் சுடப்பட்டு அழியும்படி, கொடிய போர் வல்ல, கோபம் கொண்ட, வீரம் வாய்ந்த அரக்கனாகிய இராவணனுடைய ஒளி வீசும் பத்துக் கொத்தான முடிகளுக்கும் ஒப்பற்ற ஓர் அம்பைச் செலுத்தி தேவர்களின் இடர்களை நீக்கிய திருமாலும், சூரியனும், சொர்க்கத்துக்கு இறைவனாகிய இந்திரனும், சுக்கிரனும், பிறையைச் சூடிய ஈசான்யனும், (எட்டுத்) திக்கு பாலகர்களும், அகத்திய முனிவரும், பிரமனும், புகழ் பெற்ற வசிஷ்டரும், கூட்டமான வேதங்களும், லோகத்தினரும், அகத் தூய்மை, புறத் தூய்மை கொண்ட பக்தர்களும், மனமும் செயலும் ஒடுங்கி ஒழியப் பெற்ற ஞானிகளும், பின்னும் சிவ பெருமானும் வணங்கி நிற்க காஞ்சீபுரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* தமிழ் வள்ளல்கள் எழுவரில் ஒருவன் குமணன்.தமிழுக்காக உயிரையே கொடுக்கச் சித்தமானவன்.
பாடல் 311 - காஞ்சீபுரம்
ராகம் -.....; தாளம் - ......
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
     தனதனந் தத்தத் தத்தன தத்தம்
          தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான
செடியுடம் பத்தித் தெற்றியி ரத்தஞ்
     செறிநரம் பிட்டுக் கட்டிய சட்டஞ்
          சிறைதிரண் டொக்கத் தொக்கவி னைப்பந் ...... தவிகாரம் 
திமிரதுங் கத்தத் துத்திரை யெற்றுஞ்
     செனனபங் கத்துத் துக்கக டற்கண்
          திருகுரும் பைப்பட் டுச்சுழல் தெப்பங் ...... கரணாதி 
குடிபுகும் பொக்கப் புக்கிலி றப்பின்
     குடிகலம்வெந் தொக்குக் கொட்டில்ம லத்தின்
          குசைசுமந் தெட்டுத் திக்கிலு முற்றுந் ...... தடுமாறுங் 
குவலயங் கற்றுக் கத்தியி ளைக்குஞ்
     சமயசங் கத்தைத் தப்பியி ருக்குங்
          குணமடைந் துட்பட் டொக்கஇ ருக்கும் ...... படிபாராய் 
படிதருங் கற்புக் கற்பக முக்கண்
     கொடிபசுஞ் சித்ரக் குத்தர முத்தம்
          பணிநிதம் பத்துச் சத்தியு கக்குங் ...... குமரேசா 
பரவசங் கெட்டெட் டக்கர நித்தம்
     பரவுமன் பர்க்குச் சித்திய ளிக்கும்
          பரமர்வந் திக்கத் தக்கப தத்தன் ...... குருநாதா 
தொடியிடும் பத்மக் கைக்குமி டைக்குஞ்
     சுருள்படும் பத்திப் பட்டகு ழற்குந்
          துகிர்கடைந் தொப்பித் திட்டஇ தழ்க்குங் ...... குறமானின் 
சுடர்படுங் கச்சுக் கட்டுமு லைக்குந்
     துவளுநெஞ் சத்தச் சுத்தஇ ருக்கும்
          சுரரும்வந் திக்கக் கச்சியில் நிற்கும் ...... பெருமாளே.
பாவத்துக்கு இடமான உடம்பு எலும்பால் ஆகிய வீடு. ரத்தம், நெருங்கிய நரம்புகள் இவைகள் சேர்த்துக் கட்டிய ஒரு கட்டடம். சிறையிட்டது போலச் சூழ்ந்து திரண்டு ஒன்று கூடிச் சேர்ந்த வினை என்னும் பந்த பாசக் கலக்கம். இருண்டதும், உயர்ந்து எழுந்துள்ளதும், ததும்பி எழுவதுமான அலைகள் மோதும் பிறப்பு என்னும் துக்ககரமான கடலிடத்தே, பறிபட்டு விழுந்த தென்னங் குரும்பை போல அலைச்சல் உற்றுச் சுழன்று (அந்தப் பிறவிக் கடலில் மிதக்கும்) தெப்பம் போன்ற (மனம், புத்தி, அகங்காரம், சித்தம் ஆகி)ய முக்கரணங்கள் குடி புகுந்துள்ள பொய்யான இருப்பிடம். இறந்து போனால் (இந்த வஞ்சகக்) குடிசை வெந்து போகும் கொட்டகை. (ஆணவம், கன்மம், மாயை என்னும்) மும்மலங்களின் இருப்பிடம். (ஆகிய இந்த உடலைச் சுமந்து) எட்டுத் திசைகளிலும், எல்லா இடங்களிலும் தடுமாறுகின்ற, இவ்வுலக நூல்களைக் கற்றும், கத்தி இளைத்துப் போகும் சமய சார்பான சங்கங்களை விட்டு விலகி இருக்கும் (உத்தம) குணத்தை அடைந்தும், (சாந்த) குணத்திலேயே உட்பட்டு எப்போதும் நான் பொருந்தி இருக்கும்படி கண் பார்த்து அருளுக. முறைமையான கற்பு வாய்ந்த, கற்பகம் அனையவள். முக்கண் கொண்ட கொடி போன்றவள். பசுமையான அலங்காரத்துக்குத் தகுதியான முத்து மாலை அணிந்தவள். பாம்பு போன்ற ஜனன உறுப்பையும் கொண்ட தேவியாகிய உமை மகிழ்கின்ற குமரேசனே, மனத்தை நிலை நிறுத்தி, (ஓம் ஆம் ஒளம் சிவாய நம என்னும்) எட்டு எழுத்தையும், நாள் தோறும் போற்றித் துதிக்கும் அடியார்களுக்கு வீட்டின்பத்தைத் தரும் சிவபெருமான் வணங்கத் தக்க திருவடிகளை உடைய குரு நாதனே, கைவளை அணிந்துள்ள தாமரை போன்ற கைக்கும், இடைக்கும், சுருள் கொண்ட வரிசை அமைந்த கூந்தலுக்கும், பவளத்தைக் கடைந்து எடுத்து அலங்கரித்த வாயிதழுக்கும், குறப் பெண்ணாகிய வள்ளியின் ஒளி வீசும் கச்சு அணிந்த மார்பகத்துக்கும் நெகிழ்கின்ற மனதை உடையவனே, சுத்தமாகிய ரிக்கு வேதமும் தேவர்களும் வணங்க காஞ்சீபுரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 312 - காஞ்சீபுரம்
ராகம் - ....; தாளம் - ....
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
     தனதனந் தத்தத் தத்தன தத்தம்
          தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான
கனக்ரவுஞ் சத்திற் சத்தியை விட்டன்
     றசுரர்தண் டத்தைச் செற்றவி தழ்ப்பங்
          கயனைமுன் குட்டிக் கைத்தளை யிட்டும் ...... பரையாளுங் 
கடவுளன் புற்றுக் கற்றவர் சுற்றும்
     பெரியதும் பிக்கைக் கற்பக முற்றங்
          கரதலம் பற்றப் பெற்றவொ ருத்தன் ...... ஜகதாதை 
புனவிளந் தத்தைக் கிச்சையு ரைக்கும்
     புரவலன் பத்தர்க் குத்துணை நிற்கும்
          புதியவன் செச்சைப் புட்பம ணக்கும் ...... பலபாரப் 
புயனெனுஞ் சொற்கற் றுப்பிற கற்கும்
     பசையொழிந் தத்தத் திக்கென நிற்கும்
          பொருடொறும் பொத்தப் பட்டதொ ரத்தம் ...... பெறுவேனோ 
அனல்விடுஞ் செக்கட் டிக்கய மெட்டும்
     பொரவரிந் திட்டெட் டிற்பகு திக்கொம்
          பணிதருஞ் சித்ரத் தொற்றையு ரத்தன் ...... திடமாக 
அடியொடும் பற்றிப் பொற்கயி லைக்குன்
     றதுபிடுங் கப்புக் கப்பொழு தக்குன்
          றணிபுயம் பத்துப் பத்துநெ ரிப்புண் ...... டவனீடுந் 
தனதொரங் குட்டத் தெட்பல டுக்குஞ்
     சரியலன் கொற்றத் துக்ரவ ரக்கன்
          தசமுகன் கைக்குக் கட்கம ளிக்கும் ...... பெரியோனுந் 
தலைவியும் பக்கத் தொக்கவி ருக்குஞ்
     சயிலமுந் தெற்குச் சற்குரு வெற்புந்
          தணியலும் பெற்றுக் கச்சியில் நிற்கும் ...... பெருமாளே.
பருத்த கிரவுஞ்ச மலை மீது வேலாயுதத்தைச் செலுத்தி, அன்று அசுரர்களின் படையை அழித்து, அந்த இதழ்களை உடைய தாமரை மலரில் இருக்கும் பிரமனை முன்பு தலையில் குட்டி, கை விலங்கு இட்டு, தேவர்களைக் காத்து ஆண்ட தெய்வம் அவன். அன்பு கொண்டு கற்றறிந்த பெரியோர்கள் வலம் வரும் பெரிய துதிக்கையை உடைய கற்பக விநாயகர் முன்பு தனது கையைப் பற்றி அழைத்துச் செல்ல, நடை கற்ற ஒருவனாகிய (முருகன்) உலகுக்குத் தந்தை அவன். தினைப் புனத்தில் இருந்த இளமைப் பருவத்துக் கிளி போன்ற வள்ளிக்கு காதல் மொழிகளைச் சொன்ன காவலன் அவன். பக்தர்களுக்குத் துணையாக நிற்கும் புதியோன் அவன். வெட்சிப் பூ மணம் வீசும் பல கனத்த புயங்களை உடையவன் அவன் என்னும் வகையில் (முருகனைப் பற்றிய) சொற்களையே கற்று, பிறர் சம்பந்தமான சொற்களைக் கற்க வேண்டும் என்கின்ற பற்று ஒழிந்து, அர்த்தத்தில் கரும்பு போல் இனித்து நிற்கும் குணம் அமைய, செய்யுள் தோறும் பொதியப் படுவதாகிய ஒப்பற்ற செல்வத்தை நான் அடைவேனோ? நெருப்பை வீசும் சிவந்த கண்களை உடைய அஷ்ட திக்கஜங்களும் (எட்டுத் திக்கு யானைகளும்) தன்னோடு சண்டை செய்ய, (தன் மார்பில்) ஒடிந்து போன எட்டுக் கொம்புகளின் நுனித் துண்டுகளை அணிந்த அழகிய ஒப்பற்ற மார்பினனும், பலத்துடன், அடியோடு பற்றி பொன்னாலாகிய கயிலை மலையை பிடுங்கப் புகுந்த போது, அந்த மலை போன்ற புயங்கள் இருபதும் நெரிப்பு உண்டவனும், அப்படி நசுக்கும் தனது (சிவனது) ஒப்பற்ற பெரு விரலின் எள் நுனி அளவுக்கும் ஈடாகாதவனும், வீர உக்ரம் கொண்ட அரக்கனும், பத்து முகத்தினனும் ஆகிய இராவணனுடைய கைகளுக்கு வாள் ஒன்றைப் பரிசாக அளித்த பெரியவனுமாகிய சிவபெருமானும், தேவி பார்வதியும் இருவரும் பக்கத்தில் ஒன்றுபட்டுச் சேர்ந்து இருக்கும் (அர்த்தநா¡£சுரர் விளங்கும்) மலையாகிய திருச்செங்கோடும், தெற்கே உள்ள தலமாகிய சுவாமி மலையும், திருத்தணிகையும் நீ இருக்கும் தலங்களாகப் பெற்று, காஞ்சீபுரத்தில் நிற்கின்ற பெருமாளே. 
பாடல் 313 - காஞ்சீபுரம்
ராகம் - ....; தாளம் - ......
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
     தனதனந் தத்தத் தத்தன தத்தம்
          தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான
தெரியலஞ் செச்சைக் கொத்துமு டிக்கும்
     பரிதிகந் தத்தைச் சுற்றந டத்துஞ்
          சிறைவிடுஞ் சொர்க்கத் துச்சுர ரைக்கங் ...... கையில்வாழுஞ் 
சிறுவனென் றிச்சைப் பட்டுப ஜிக்கும்
     படிபெரும் பத்திச் சித்ரக வித்வஞ்
          சிறிதுமின் றிச்சித் தப்பரி சுத்தம் ...... பிறவாதே 
பரிகரஞ் சுத்தத் தக்கப்ர புத்வம்
     பதறியங் கட்டப் பட்டனர் தத்வம்
          பலவையுங் கற்றுத் தர்க்கம தத்வம் ...... பழியாதே 
பரபதம் பற்றப் பெற்றஎ வர்க்கும்
     பரவசம் பற்றிப் பற்றற நிற்கும்
          பரவ்ரதம் பற்றப் பெற்றிலன் மற்றென் ...... துயர்போமோ 
சரியுடன் துத்திப் பத்திமு டிச்செம்
     பணதரங் கைக்குக் கட்டிய நெட்டன்
          தனிசிவன் பக்கத் தற்புதை பற்பந் ...... திரிசூலந் 
தரிகரும் பொக்கத் தக்கமொ ழிச்சுந்
     தரியரும் பிக்கப் பித்தத னத்தந்
          தரிசுரும் பிக்குப் பத்ரையெ வர்க்குந் ...... தெரியாத 
பெரியபண் டத்தைச் சத்திய பித்தன்
     பிரிதியுண் கற்புப் பச்சையெ றிக்கும்
          ப்ரபையள்தண் டிற்கைப் பத்மம டப்பெண் ...... கொடிவாழ்வே 
பிரமரண் டத்தைத் தொட்டதொர் வெற்பும்
     பிளவிடுஞ் சத்திக் கைத்தல நித்தம்
          பெருமிதம் பெற்றுக் கச்சியில் நிற்கும் ...... பெருமாளே.
மாலையாக அழகிய வெட்சிப் பூங்கொத்துக்களை சூடிக் கொள்பவனும், குதிரையாகிய மயிலை திக்குகளின் கோடி வரையில் நடத்துபவனும், விண்ணுலகத்தில் இருக்கும் தேவர்களைச் சிறையிலிருந்து மீட்டவனும், கங்கையில் வளர்ந்த குழந்தை என்றும் ஆசை நிரம்பி பாடிப் போற்றும்படியான பெரிய பக்தியும், அழகிய கவி பாடும் திறனும் கொஞ்சமும் இல்லாமல், மனதில் பரிசுத்த நிலை தோன்றாமல் (இருக்கும் நான்), பரிவாரங்கள் தம்மைச் சூழ்ந்திருக்க, பெரிய நிலையை அடைந்து பரபரப்புடன் அவ்விடத்தில் பக்கத்தில் சூழ்ந்துள்ளவர் பேசும் உண்மை நீதிகள் பலவற்றையும் கற்று, தர்க்கம் பேசி, மதங்களின் வம்புப் பேச்சுக்களில் அழிந்து போகாமல், மேலான வீட்டின்ப நிலையை அடையப் பெற்ற எவரும் மிக்க மகிழ்ச்சியைக் கொள்ள, பற்று நீங்கி நிற்கும் மேலான தவ நிலை அடையப் பெற்றிலனே. அவ்வாறு இருக்கின்ற எனது துயர் போவதற்கு வழி உண்டோ? ஒழுங்காக பணாமுடி வரிசையை தலையில் கொண்டதும், செவ்விய படத்தைக் கொண்டதுமான பாம்பை கையில் கட்டியுள்ள பெருமையோன், ஒப்பற்ற சிவபெருமானின் இடப் பாகத்தில் உறையும் அற்புதத் தலைவி, திருநீறு, முத்தலைச் சூலம் இவைகளைத் தரித்துள்ளவள், கரும்புக்கு ஒப்பு என்று சொல்லத் தக்க சொற்களை உடைய சுந்தரி, தோன்றிப் பெருத்துள்ள மார்பகங்களை உடைய துர்க்கை, வண்டுகள் மொய்க்கும் கரும்பு ஏந்திய பத்ரகாளி, யாரும் அறிய ஒண்ணாத பெருமை மிக்க, பண் போன்ற மொழியை மிழற்றும் கிளி, உண்மையில் மிகுந்த பித்தனாகிய* சிவ பெருமானுடைய அன்பை உட்கொண்ட, கற்பு வாய்ந்த, பச்சை நிறக் கதிர் வீசும் பேரொளியாள், வீணை ஏந்திய கையினள், தாமரை மலரில் வீற்றிருக்கும் மட மங்கை, கொடி போன்ற பார்வதியின் செல்வமே, பிரமன் படைத்த உலகத்தைத் தொடும்படி வளர்ந்திருந்த ஒப்பற்ற கிரெளஞ்ச மலையைப் பிளந்து எறிந்த சக்தி வேலாயுதத்தைக் கொண்ட திருக் கரத்தனே, நாள் தோறும் மிஞ்சும் சிறப்புடன் காஞ்சீபுரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* சிவபிரானை சுந்தரர் பித்தா என்று அழைத்தார் - பெரிய புராணம்.
பாடல் 314 - காஞ்சீபுரம்
ராகம் - .....; தாளம் - ......
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
     தனதனந் தத்தத் தத்தன தத்தம்
          தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான
புனமடந் தைக்குத் தக்கபு யத்தன்
     குமரனென் றெத்திப் பத்தர்து திக்கும்
          பொருளைநெஞ் சத்துக் கற்பனை முற்றும் ...... பிறிதேதும் 
புகலுமெண் பத்தெட் டெட்டியல் தத்வம்
     சகலமும் பற்றிப் பற்றற நிற்கும்
          பொதுவையென் றொக்கத் தக்கதொ ரத்தந் ...... தனைநாளும் 
சினமுடன் தர்க்கித் துச்சிலு கிக்கொண்
     டறுவருங் கைக்குத் திட்டொரு வர்க்குந்
          தெரிவரும் சத்யத் தைத்தெரி சித்துன் ...... செயல்பாடித் 
திசைதொறுங் கற்பிக் கைக்கினி யற்பந்
     திருவுளம் பற்றிச் செச்சைம ணக்குஞ்
          சிறுசதங் கைப்பொற் பத்மமெ னக்கென் ...... றருள்வாயே 
கனபெருந் தொப்பைக் கெட்பொரி யப்பம்
     கனிகிழங் கிக்குச் சர்க்கரை முக்கண்
          கடலைகண் டப்பிப் பிட்டொடு மொக்கும் ...... திருவாயன் 
கவளதுங் கக்கைக் கற்பக முக்கண்
     திகழுநங் கொற்றத் தொற்றைம ருப்பன்
          கரிமுகன் சித்ரப் பொற்புகர் வெற்பன் ...... றனையீனும் 
பனவியொன் றெட்டுச் சக்ரத லப்பெண்
     கவுரிசெம் பொற்பட் டுத்தரி யப்பெண்
          பழயஅண் டத்தைப் பெற்றம டப்பெண் ...... பணிவாரைப் 
பவதரங் கத்தைத் தப்பநி றுத்தும்
     பவதிகம் பர்க்குப் புக்கவள் பக்கம்
          பயில்வரம் பெற்றுக் கச்சியில் நிற்கும் ...... பெருமாளே.
தினைப்புனத்து மடந்தையாகிய வள்ளிக்கு ஏற்றதான புயங்களை உடையவன், குமரன் என்று போற்றி பக்தர்கள் துதிக்கின்ற பொருளை, மனத்தில் கொண்ட கற்பனைகள் முழுமையும், பிறவான பலவற்றையும், புகழ்ந்து சொல்லப்படும் தொண்ணூற்றாறு* வகையான தத்துவ உண்மைகளும் ஆக எல்லாவற்றையும், பற்றியும், பற்று இல்லாமலும் நிற்கும் பொதுப் பொருளை, சூரியனுக்கு ஒப்பாகத் தக்க (பேரொளியைக் கொண்ட) ஒப்பற்றச் செல்வத்தை நாள் தோறும், கோபத்துடன் வாதாடிப் பேசி சண்டையிட்டுக் கொண்டு அறு வகைச் சமயத்தாரும் கைக்குத்துடன் வாதம் செய்து, ஒருவருக்கும் தெரிதற்கு அரிதான சத்தியப் பொருளை தரிசனம் செய்து, உன் திருவிளையாடல்களைப் பாடி, திக்குகள் தோறும் (உள்ள யாவருக்கும்) எடுத்து உபதேசிக்க, இனி மேல் நீ சற்று தயை கூர்ந்து, வெட்சி மாலை மணம் வீசும், சிறிய சதங்கை அணிந்துள்ள உன் அழகிய திருவடித் தாமரையை எனக்கு எப்போது தந்து அருள்வாய்? கனத்த பெரிய வயிற்றில் எள், பொரி, அப்பம், பழம், கிழங்கு, கரும்பு இவைகளையும், சர்க்கரை, தேங்காய், கடலை, கற்கண்டு இவைகளையும் வாரி உண்டு, பிட்டுடன் விழுங்கும் திரு வாயை உடையவர், சோற்றுத் திரளை உண்ணும் சிறந்த துதிக்கையை உடைய கற்பக விநாயகர் (கற்பகத்தரு போல கேட்டதைக் கொடுப்பவர்), முக்கண்ணர், விளங்கும் நமது வீரம் வாய்ந்த ஒற்றைக் கொம்பர், யானை முகத்தினர், அழகிய, பொலிவுள்ள (மத்தகத்தில்) புள்ளிகளை உடைய மலை போன்ற கணபதியைப் பெற்ற அந்தணி, (1+ 8) ஒன்பது கோணங்களை உடைய சக்ரத்தில் (நவாவரணத்தில்) வீற்றிருக்கும் பெண், கெளரி, செவ்விய அழகிய பட்டாலாகிய மேலாடை அணிந்துள்ள அந்தப் பெண், பழையவளும், அண்டங்களைப் பெற்றவளுமாகிய இளம் பெண், தன்னைப் பணிபவர்களுடைய பிறப்பு என்னும் அலை கடலை விலக்கி நிறுத்தும் பகவதி (பார்வதி), ஏகாம்பர நாதரைக் கணவராக அடைந்தவள் ஆகிய உமா தேவிக்குப் பக்கத்தில் அமர்ந்து, வரத்தைப் பெற்று**, காஞ்சீபுரத்தில் நின்றருளும் பெருமாளே. 
* 96 தத்துவங்கள் பின்வருமாறு:36 பரதத்துவங்கள் (அகநிலை): ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து - 25 (புறநிலை): மண், தீ, நீர், காற்று, வெளி.ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை): வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4. 
** தந்தை சொல்லி அனுப்பியும் பிரமனைச் சிறையினின்று விடாது, பின்னர் அவர் நேரில் வந்து சொல்லிய பின் பிரமனை முருகன் விடுத்தார். இந்த குற்றம் நீங்க, முருகவேள் காஞ்சீபுரத்தில் உள்ள குமரக் கோட்டத்தில் தவம் புரிந்து, தோஷம் நீங்கி வரம் பெற்றார்.
பாடல் 315 - காஞ்சீபுரம்
ராகம் - தோடி; தாளம் - ஆதி 
- எடுப்பு - 1/2 இடம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
     தனதனந் தத்தத் தத்தன தத்தம்
          தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான
கறையிலங் குக்ரச் சத்தித ரிக்குஞ்
     சரவணன் சித்தத் துக்குளொ ளிக்குங்
          கரவடன் கொற்றக் குக்குட வத்தன் ...... தனிவீரக் 
கழலிடும் பத்மக் கட்செவி வெற்பன்
     பழநிமன் கச்சிக் கொற்றவன் மற்றுங்
          கடகவஞ் சிக்குக் கர்த்தனெ னச்செந் ...... தமிழ்பாடிக் 
குறையிலன் புற்றுக் குற்றம றுக்கும்
     பொறைகள்நந் தற்பப் புத்தியை விட்டென்
          குணமடங் கக்கெட் டுக்குண மற்றொன் ...... றிலதான 
குணமடைந் தெப்பற் றுக்களு மற்றுங்
     குறியொடுஞ் சுத்தப் பத்தரி ருக்குங்
          குருபதஞ் சித்திக் கைக்கருள் சற்றுங் ...... கிடையாதோ 
பிறைகரந் தைக்கொத் துப்பணி மத்தந்
     தலையெலும் பப்புக் கொக்கிற கக்கம்
          பிரமனன் றெட்டற் கற்றதி ருக்கொன் ...... றையும்வேணிப் 
பிறவுநின் றொக்கத் தொக்கும ணக்குஞ்
     சரணியம் பத்மக் கைக்கொடி முக்கண்
          பெறுகரும் பத்தக் கத்தருள் நற்பங் ...... கயவாவி 
திறைகொளுஞ் சித்ரக் குத்துமு லைக்கொம்
     பறியுமந் தத்தைக் கைக்கக மொய்க்குந்
          த்ரிபுரைசெம் பட்டுக் கட்டுநு சுப்பின் ...... திருவான 
தெரிவையந் துர்க்கிச் சத்தியெ வர்க்குந்
     தெரிவருஞ் சுத்தப் பச்சைநி றப்பெண்
          சிறுவதொண் டர்க்குச் சித்திய ளிக்கும் ...... பெருமாளே.
(இரத்தக்) கறை விளங்கும் உக்கிரம் பொருந்திய வேற்படையை ஏந்தும் சரவண மூர்த்தி, மனத்தில் ஒளிந்து கொண்டிருக்கும் திருடன், வீரம் வாய்ந்த கோழிக் கொடியை ஏந்திய கையன், ஒப்பற்ற வீரக்கழலை அணிந்துள்ள தாமரை போன்ற திருவடியை உடையவன், பாம்பு மலையான் (திருச்செங்கோட்டு மலையான்), பழனி மலையான், காஞ்சீபுரத்து வீரன், பின்னும் கைவளை அணிந்த வள்ளிக் கொடி போன்ற வள்ளிக்குத் தலைவன் என்று செந்தமிழ்ப் பாக்களைப் பாடி, குறைவு படாத அன்பு பூண்டு, குற்றங்களை விலக்க வல்ல பொறுமைக் குணம் சிறந்து மேம்பட, அற்பமான புத்தியை ஒழித்து, என்னுடைய தீய குணங்கள் எல்லாம் கெட்டு, குணம் வேறு ஒன்று இல்லாததான ஒரே நிலையான சாத்துவிகக் குணம் ஒன்றையே அடைந்து, எல்லாவிதமான ஆசைகளையும் ஒழித்து, கடவுள் குறி ஒன்றையே கருதும் பரிசுத்தமான பக்தர்கள் இருக்கும் பெருமை பொருந்தும் ஞான நிலை எனக்குக் கை கூடுவதற்கு உனது திருவருள் சற்றேனும் கிடைக்காதோ? சந்திரன், திருநீற்றுப் பச்சைக் கொத்துக்கள், பாம்பு, ஊமத்தம் மலர், கபால எலும்பு, கங்கை நீர், கொக்கின் இறகு, ருத்ராக்ஷ மாலை பிரமன் முன்பு எட்டுதற்கு அரிதாக இருந்த அழகிய கொன்றை இவை எல்லாம் அணிந்த சடை மற்றவைகளும் விளங்கி ஒன்று சேர்ந்து கூடி (சிவபெருமான் வீழ்ந்து வணங்குவதால் அவர் தலையில் உள்ள பொருள்களின்) மணம் வீசும் திருவடி உடையவள், அழகிய தாமரை போன்ற திருக்கரத்தை உடைய கொடி போன்றவள், மூன்று கண்கள் கொண்ட கரும்பு போன்றவள், அந்தத் தக்கதான பொருளை (அடியேனுக்கு) அருள் செய்பவள், நல்ல திருக் குளத்துத் தாமரையையும் வென்று அடக்கும் அழகிய, திரண்டு குவிந்த மார்பைக் கொண்ட கொம்பு போன்றவள், ஞானமுள்ளவள், அழகிய கிளி கையில் பயின்று இருக்கும் திரிபுரை (சந்திர கண்டம், சூரிய கண்டம், அக்கினி கண்டம் என்னும் முப்பிரிவை உடைய சக்கரத்துக்குத் தலைவி), செம்பட்டு ஆடை கட்டியிருக்கும் இடையை உடைய, லக்ஷ்மிகரம் பொருந்திய நங்கை, அழகிய துர்க்கா தேவி, பராசக்தி, எல்லோருக்கும் தெரிவதற்கு அரிதான சுத்தமான பச்சை நிறம் கொண்ட பெண் ஆகிய பார்வதி தேவியின் பிள்ளையே, அடியார்களுக்கு வீடு பேற்றை அளிக்கும் பெருமாளே. 
பாடல் 316 - காஞ்சீபுரம்
ராகம் - ஷண்முகப்ரியா; தாளம் - ஆதி 
- எடுப்பு - 1/2 இடம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
     தனதனந் தத்தத் தத்தன தத்தம்
          தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான
செறிதரும் செப்பத் துற்பல வெற்பும்
     பிறிதுமங் கத்தைக் குற்றவி ருப்புஞ்
          சிகரிதுண் டிக்கக் கற்றத னிச்செஞ் ...... சுடர்வேலும் 
திரள்புயங் கொத்துப் பட்டவ னைத்துந்
     தெளியநெஞ் சத்துப் புற்றும யக்கம்
          திகழ்ப்ரபஞ் சத்தைப் புற்புத மொக்கும் ...... படிநாடும் 
அறிவறிந் தத்தற் கற்றது செப்புங்
     கடவுளன் பத்தர்க் கச்சம றுத்தன்
          பருள்பவன் பொற்புக் கச்சியுள் நிற்கும் ...... பெருமானென் 
றவிழுமன் புற்றுக் கற்றும னத்தின்
     செயலொழிந் தெட்டப் பட்டத னைச்சென்
          றடைதரும் பக்வத் தைத்தமி யெற்கென் ...... றருள்வாயே 
குறியவன் செப்பப் பட்டஎ வர்க்கும்
     பெரியவன் கற்பிக் கப்படு சுக்ரன்
          குலைகுலைந் துட்கக் சத்யமி ழற்றுஞ் ...... சிறுபாலன் 
குதலையின் சொற்குத் தர்க்கமு ரைக்குங்
     கனகனங் கத்திற் குத்திநி ணச்செங்
          குடர்பிடுங் கித்திக் குற்றமு கச்சிங் ...... கமுராரி 
பொறிவிடுந் துத்திக் கட்செவி யிற்கண்
     துயில்கொளுஞ் சக்ரக் கைக்கிரி சுத்தம்
          புயலெனும் பொற்புப் பெற்றநி றத்தன் ...... ஜகதாதை 
புனிதசங் கத்துக் கைத்தல நிர்த்தன்
     பழையசந் தத்தைப் பெற்றம டப்பெண்
          புகலுகொண் டற்குச் சித்திய ளிக்கும் ...... பெருமாளே.
நெருக்கமாக வளர்கிற செம்மையான செங்கழுநீர்மலர் (தினமும் மலரும் சுனையுடன்) இருக்கும் திருத்தணிகை மலையும், மற்றும் அத்தணிகைமலைக்குச் சமமான மற்றத் தலங்களும், கிரெளஞ்ச மலையைப் பிளக்கக் கற்றுக்கொண்ட ஒப்பற்ற செவ்வொளியுடன் கூடிய வேலும், திரண்ட பன்னிரு தோள்கள் கொத்தாக உள்ள எல்லாமும், தெளிவாக நெஞ்சத்திலே தரிசனம் செய்து அறிவு பெற்று, மயக்கம் நிறைந்துள்ள இந்த உலகை நீர்க்குமிழிக்கு சமமானது என்று ஆராய்ந்து உணரும் அறிவை அடைந்து, சிவபிரானுக்கு பற்றற்ற பிரணவப் பொருளை உபதேசித்த கடவுள் நீ என்றும், அடியார்க்கு அச்சத்தை அகற்றி அன்பை அருள்பவன் நீ என்றும், அழகிய கச்சியில் (காஞ்சீபுரத்தில்) நின்றருளும் பெருமான் நீ என்றும், நெகிழ்ந்து உருகும் அன்பின் வசமாகி, திருவருள் நெறியைப் பயின்று, மனத்தின் செயலெல்லாம் நீங்கப் பெற்று, அந்த நிலையில் எட்டப் படுவதான பொருளைச் சென்று அடைகின்ற மனப் பக்குவத்தை அடியேனுக்கு என்றைக்குத் தந்தருள்வாயோ? வாமன வடிவமாகிக் குறுகி, ஆனால் சொல்லப்படும் யாவரினும் பெரியவர் ஆனவரும், கல்வி கற்றுக் கொடுக்கவந்த சுக்கிராச்சாரியார் உள்ளம் நடுநடுங்கி அஞ்சும்படி, உண்மையையே உரைத்த சிறு குழந்தை பிரகலாதனின் மழலைச் சொல்லிற்கு எதிர்வாதம் பேசிய ஹிரண்யனுடைய உடலைக் குத்தி, மாமிசம் நிறைந்த சிவந்த குடலைப் பிடுங்கி, எட்டுத் திசைகளிலும் பிடறி மயிர் பறக்கும் சிங்க முகத்தை உடைய நரசிம்மரும், முரன் என்ற அரக்கனைக் கொன்ற முராரியும், ஒளிவீசும் படப் பொறிகளை உடைய பாம்பு ஆதிசேஷன் மீது துயில்பவரும், சக்ராயுதத்தைக் கையிலே தாங்கும் மலை போன்றவரும், தூய மேகம் போன்ற அழகிய நிறத்தை உடையவரும், உலகுக்கெல்லாம் தந்தையும், பாஞ்ச ஜன்யம் என்ற பரிசுத்தமான சங்கைக் கரத்திலே கொண்டவரும், (காளிங்கன் என்ற பாம்பின் தலையில்) நடனமாடியவரும், பழமையான (மோகினி) வடிவத்தைப் பெற்று இளம்பெண்ணாக வந்தவரும், புகழப் பெறும் நீல மேகம் போன்ற நிறத்தினருமாகிய திருமாலுக்கு வீடு பேற்றினைத்* தந்தருளிய பெருமாளே. 
* காஞ்சியில் 'திருமேற்றளி' என்ற இடத்தில் திருமால் சிவசாரூபம் பெற வேண்டி, நீண்ட தவம் செய்தார். திருஞானசம்பந்தர் உருவில் முருகன் அங்கு வந்து முகுந்தனை லிங்க வடிவமாக்கினார் - காஞ்சிப் புராணம்.
பாடல் 317 - காஞ்சீபுரம்
ராகம் - ....; தாளம் - .........
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
     தனதனந் தத்தத் தத்தன தத்தம்
          தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான
அரியயன் புட்பிக் கக்குழு மிக்கொண்
     டமரர்வந் திக்கத் தட்டுரு வச்சென்
          றவுணரங் கத்தைக் குத்திமு றித்தங் ...... கொருகோடி 
அலகைநின் றொத்தித் தித்திய றுத்தும்
     பலவியங் கொட்டச் சக்கடி கற்றந்
          தரியுடன் பற்றிக் குச்சரி மெச்சும் ...... படிபாடிப் 
பரிமுகங் கக்கச் செக்கண்வி ழித்தும்
     பவுரிகொண் டெட்டுத் திக்கையு டைத்தும்
          படுகளம் புக்குத் தொக்குந டிக்கும் ...... படிமோதிப் 
படைபொருஞ் சத்திப் பத்மநி னைத்துஞ்
     சரவணன் கச்சிப் பொற்பனெ னப்பின்
          பரவியுஞ் சித்தத் துக்குவ ரத்தொண் ...... டடைவேனோ 
பெரியதண் செச்சைக் கச்சணி வெற்பும்
     சிறியவஞ் சிக்கொத் தெய்த்தநு சுப்பும்
          ப்ரிதியொழிந் தொக்கக் கைக்கிளை துத்தங் ...... குரலாதி 
பிரிவில்கண் டிக்கப் பட்டவு ருட்டும்
     கமுகமுஞ் சிற்பச் சித்ரமு ருக்கும்
          பிரதியண் டத்தைப் பெற்றருள் சிற்றுந் ...... தியும்நீலக் 
கரியகொண் டற்கொப் பித்தக துப்புந்
     திலதமுஞ் செப்பொற் பட்டமு முத்தின்
          கனவடங் கட்டப் பட்டக ழுத்துந் ...... திருவான 
கருணையுஞ் சுத்தப் பச்சைவ னப்புங்
     கருதுமன் பர்க்குச் சித்திய ளிக்குங்
          கவுரியம் பைக்குப் புத்ரஎ வர்க்கும் ...... பெருமாளே.
திருமாலும் பிரமனும் தங்கள் மலர்வாய் திறந்து தமது குறைகளை எடுத்துக் கூற, ஒன்று சேர்ந்த தேவர்கள் வணங்கி நிற்க, ஊடுருவச் சென்று (உனது வேல்) அசுரர்களுடைய உடல்களைக் குத்தியும், முறித்தும், அப்போது அவ்விடத்தில் ஒரு கோடி பேய்கள் நின்று தாளம் போட்டு (தாம்) தித்தி என்ற தாள ஜதியைக் கூட்டியும், பல விதமான இசைக்கருவிகளை முழக்கி பரிகாசம் பேசியும், துர்க்கையுடன் சேர்ந்து குச்சரி என்னும் ஒரு பண்ணை (குர்ஜரி என்ற ராகத்தை) மெச்சி வியக்கும்படி பாடியும், வடவா முகாக்கினி போல் தீயை வெளிப்படுத்தி சிவந்த கண்களை விழித்தும், மண்டலமாய் ஆடும் கூத்து வகையை ஆடி எட்டு திசைகளையும் அதிர்ச்சியுறச் செய்தும், போர்க்களத்தில் நுழைந்து ஒன்று சேர்ந்து நடனம் செய்யவும், (அசுரர்களைத்) தாக்கி, எவ்விதமான படைகளையும் பொருது வெற்றி பெற வல்ல சக்தி வேலை ஏந்தும் தாமரை போன்ற திருக்கரங்களை தியானித்தும், சரவணன் என்றும் காஞ்சி நகரில் வாழும் அழகன் என்றும் பின்பு பலவாறு போற்றியும் (அத்தகைய பக்தி) என் மனதில் உதிக்கும்படி, தொண்டு செய்யும் பேற்றை நான் அடைவேனோ? பெரிய, குளிர்ந்த குங்குமக் குழம்பு கொண்ட கச்சை அணிந்த மலை போன்ற மார்பும், சிறிய வஞ்சிக் கொடி போன்று இளைத்த இடையும், விருப்பம் முழுதும் ஒழிந்து ஓர் இசையில் தான் அதிக விருப்பம் என்று இல்லாமல் எல்லா இசை வகைகளையும், கைக்கிளை, துத்தம்* முதலான இசைப் பிரிவுகளில் பகிர்க்கப்பட்ட, புரளும் குரலிசையும், ஸ்வர பேதமும், சிற்ப நூல்களில் சொல்லப்பட்ட அழகிய உருக்கமான நுண்கலையும், (இந்த ப்ரபஞ்சத்தின்) ஒவ்வொரு அண்டத்தையும் பெற்றருளியதுமான சிறிய வயிறும், இருண்ட கறுத்த மேகத்துக்கு நிகரான கூந்தலும், நெற்றிப் பொட்டும், செம் பொன் பட்டமும், முத்தின் சிறந்த மாலை கட்டப்பட்ட கழுத்தும், தெய்வத் தன்மை வாய்ந்த கருணையும், சுத்தமான பச்சை நிற அழகும் உள்ளவளும், தியானிக்கும் அடியார்களுக்கு வீடு பேற்றை அளிக்கும் அம்பிகையுமான கெளரி (பார்வதி) தேவிக்கு மகனே, எல்லார்க்கும் பெருமாளே. 
* தமிழின் ஏழிசைகள்:குரல் (ஷட்ஜம்), துத்தம் (ரிஷபம்), கைக்கிளை (காந்தாரம்), உழை (மத்திமம்), இளி (பஞ்சமம்), விளரி (தைவதம்), தாரம் (நிஷாதம்) என்பன.
பாடல் 318 - காஞ்சீபுரம்
ராகம் - ஆரபி ; தாளம் - ஆதி - எடுப்பு - 1/2 இடம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
     தனதனந் தத்தத் தத்தன தத்தம்
          தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான
கனிதருங் கொக்குக் கட்செவி வெற்பும்
     பழநியுந் தெற்குச் சற்குரு வெற்புங்
          கதிரையுஞ் சொற்குட் பட்டதி ருச்செந் ...... திலும்வேலும் 
கனவிலுஞ் செப்பத் தப்புமெ னைச்சங்
     கடவுடம் புக்குத் தக்கவ னைத்துங்
          களவுகொண் டிட்டுக் கற்பனை யிற்கண் ...... சுழல்வேனைப் 
புனிதனம் பைக்குக் கைத்தல ரத்நம்
     பழையகங் கைக்குற் றப்புது முத்தம்
          புவியிலன் றைக்கற் றெய்ப்பவர் வைப்பென் ...... றுருகாஎப் 
பொழுதும் வந்திக்கைக் கற்றஎ னைப்பின்
     பிழையுடன் பட்டுப் பத்தருள் வைக்கும்
          பொறையையென் செப்பிச் செப்புவ தொப்பொன் ...... றுளதோதான் 
அனனியம் பெற்றற் றற்றொரு பற்றுந்
     தெளிதருஞ் சித்தர்க் குத்தெளி சிற்கொந்
          தமலைதென் கச்சிப் பிச்சிம லர்க்கொந் ...... தளபாரை 
அறவிநுண் பச்சைப் பொற்கொடி கற்கண்
     டமுதினுந் தித்திக் கப்படு சொற்கொம்
          பகிலஅண் டத்துற் பத்திசெய் முத்தின் ...... பொலமேருத் 
தனிவடம் பொற்புப் பெற்றமு லைக்குன்
     றிணைசுமந் தெய்க்கப் பட்டநு சுப்பின்
          தருணிசங் குற்றுத் தத்துதி ரைக்கம் ...... பையினூடே 
தவமுயன் றப்பொற் றப்படி கைக்கொண்
     டறமிரண் டெட்டெட் டெட்டும் வளர்க்கும்
          தலைவிபங் கர்க்குச் சத்யமு ரைக்கும் ...... பெருமாளே.
பழங்களைத் தருகின்ற மாமரங்கள் நிறைந்த பாம்பு மலையாகிய திருச்செங்கோட்டையையும், பழனியையும், தெற்கில் உள்ள சுவாமி மலையையும், கதிர்காமத்தையும், புகழுக்கு இருப்பிடமான திருச்செந்தூரையும், வேலாயுதத்தையும், கனவில் கூடச் சொல்லி அறியாத என்னை, சங்கடம் தரும் உடலின் சுகத்துக்கு வேண்டிய சகல பொருள்களையும், திருட்டு வழியிலாவது அடைந்து (கபட) யோசனைகளிலேயே நோக்கம் கொண்டு சுழலும் என்னை, பரிசுத்தமானவனுடைய தேவி பார்வதியின் கையில் விளங்கும் இரத்தினம், பழைய கங்கா தேவிக்குக் கிடைத்த புதிய முத்து, பூமியில் அன்றாடம் என்று ஒன்றும் சேமித்து வைக்காமல் இறைவனிடம் யாவற்றையும் விட்டு இளைத்த பெரியோர்களின் காப்பு நிதி என்று கூறி உருகி, எல்லாப் பொழுதினிலும் வணங்குதலே இல்லாத என்னை, (என் குறைகளை அறிந்த) பின்னும் என் குற்றங்களைப் பொருட்படுத்தாது பொறுத்துச் சம்மதித்து உனது பக்தர்கள் கூட்டத்துள் ஒருவனாக வைத்துள்ள உனது கருணையை நான் என்ன சொல்லிப் புகழ்வது, (உன் கருணைக்கு) நிகர் ஒன்று உண்டோ? (நீ வேறு நான் வேறு இல்லை என்ற) அத்துவைத நிலையைப் பெற்று எவ்வித பற்றும் நன்றாக அற்றுப் போய், தெளிவு அடைந்த மனம் கொண்ட சித்தத்தவர்களின் தெளிந்து உணர்ந்த பூங்கொத்துக்கள் அணிந்த நிர்மலம் ஆனவள், அழகிய கச்சிப் பதியில் பிச்சி மலரை அணிந்துள்ள கூந்தலை உடைய பரா சக்தி, அறச் செல்வி, நுண்ணிய பச்சை நிறமுள்ள அழகிய கொடி போன்றவள், கற்கண்டு, அமுது இவை இரண்டைக் காட்டிலும் இனிக்கும் சொற்களை உடைய கொடியனையாள், எல்லா அண்டங்களையும் தோற்றுவிக்கும் முத்து, பொன்னாலான மேருமலை, ஒப்பற்ற மணி வடத்தின் அழகு பெற்ற இரண்டு மலை மார்புகளைச் சுமந்து அதனால் இளைத்து நிற்கும், இடையை உடைய இளமைப் பருவத்தினளான உமா தேவி, சங்குகள் பொருந்தித் ததும்பிப் பரவிச் செல்லும் அலைகளை உடைய கம்பை ஆற்றுக்கு அருகே, தவம் செய்து, அந்தச் சிறப்புள்ள இரு நாழி நெல்லைக் கையில் கொண்டு முப்பத்திரண்டு அறங்களையும்* வளர்த்த தலைவியாகிய காமாட்சி தேவியின் பங்காளராகிய சிவபெருமானுக்கு மெய்ப் பொருளாகிய பிரணவ மந்திரத்தை உபதேசித்த பெருமாளே. 
* பெரிய புராணத்தில் கூறிய முப்பத்திரண்டு அறங்கள் பின்வருமாறு:சாலை அமைத்தல், ஓதுவார்க்கு உணவு, அறுசமயத்தாருக்கும் உணவு, பசுவுக்குத் தீனி, சிறைச் சோறு, ஐயம், தின்பண்டம் நல்கல், அநாதைகளுக்கு உணவு, மகப்பெறுவித்தல், மகவு வளர்த்தல், சிசுக்களுக்குப் பால் நல்கல், அநாதைப் பிணம் சுடுதல், அநாதைகளுக்கு உடை, சுண்ணாம்பு பூசல், நோய்க்கு மருந்து, வண்ணார் தொழில், நாவிதத் தொழில், கண்ணாடி அணிவித்தல், காதோலை போடுதல், கண் மருந்து, தலைக்கு எண்ணெய், ஒத்தடம் தருதல், பிறர் துயர் காத்தல், தண்ணீர்ப் பந்தல், மடம் கட்டுதல், தடாகம் அமைத்தல், சோலை வளர்த்தல், தோல் பதனிடல், மிருகங்களுக்கு உணவு, ஏர் உழுதல், உயிர் காத்தல், கன்னிகாதானம்.
பாடல் 319 - காஞ்சீபுரம்
ராகம் - ....; தாளம் -
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
     தனதனந் தத்தத் தத்தன தத்தம்
          தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான
தசைதுறுந் தொக்குக் கட்டளை சட்டஞ்
     சரியவெண் கொக்குக் கொக்கந ரைத்தந்
          தலையுடம் பெய்த்தெற் புத்தளை நெக்கிந் ...... த்ரியமாறித் 
தடிகொடுந் திக்குத் தப்பந டக்கும்
     தளர்வுறுஞ் சுத்தப் பித்தவி ருத்தன்
          தகைபெறும் பற்கொத் துக்கள னைத்துங் ...... கழலாநின் 
றசலருஞ் செச்செச் செச்செயெ னச்சந்
     ததிகளும் சிச்சிச் சிச்சியெ னத்தங்
          கரிவையும் துத்துத் துத்துவெ னக்கண் ...... டுமியாமற் 
றவருநிந் திக்கத் தக்கபி றப்பிங்
     கலமலஞ் செச்சைச் சித்ரம ணித்தண்
          டையரவிந் தத்திற் புக்கடை தற்கென் ...... றருள்வாயே 
குசைமுடிந் தொக்கப் பக்கரை யிட்டெண்
     டிசையினுந் தத்தப் புத்தியை நத்துங்
          குரகதங் கட்டிக் கிட்டிந டத்துங் ...... கதிர்நேமிக் 
குலரதம் புக்கொற் றைக்கணை யிட்டெண்
     டிரிபுரஞ் சுட்டுக் கொட்டைப ரப்புங்
          குரிசில்வந் திக்கக் கச்சியில் நிற்குங் ...... கதிர்வேலா 
திசைமுகன் தட்டுப் பட்டெழ வற்குஞ்
     சிகரியுங் குத்துப் பட்டுவி ழத்தெண்
          டிரையலங் கத்துப் புக்குல விச்சென் ...... றெதிரேறிச் 
சிரமதுங் கப்பொற் கட்டிகை யிட்டன்
     றவுணர்நெஞ் சிற்குத் திக்கறை கட்கஞ்
          சிதறிநின் றெட்டிப் பொட்டெழ வெட்டும் ...... பெருமாளே.
மாமிசமும் நெருங்கிய தோலும் அளந்து வைக்கப்பட்ட உடல் தளர்ந்து போக, தலைமயிர் வெண்ணிறமுடைய கொக்கு போல நரைத்து, அழகிய தலை, உடம்பு எல்லாம் இளைத்து, எலும்புக் கட்டுகள் நெகிழ்ச்சி உற்று, ஐம்பொறிகளும் தொழில் மாற்றம் அடைந்து, தடி ஏந்தி திசை தடுமாறி நடக்கும்படியாக தளர்ச்சி அடையும் சுத்தப் பித்தம் கொண்ட கிழவனாய், அழகு பெற்றிருந்த பல் வரிசைகள் முழுமையும் கழன்று போய், அயலாரும் சே சே என்று இகழ, பிள்ளைகளும் சீ சீ என்று பரிகசிக்க, உடன் தங்கியிருந்த பெண்களும் தூ தூ என்று பார்த்தவுடன் அவமதித்துத் துப்ப, பிறர் யாவரும் இகழும்படியான இந்தப் பிறப்பு இங்கு போதும் போதும். வெட்சி மலர் அணிந்ததும், அழகிய ரத்தின மணிகள் அணிந்ததும், தாமரை போன்றதுமான உன் திருவடியைப் பற்றிச் சேர்வதற்கு எப்போது எனக்கு அருள்வாய்? கடிவாளம் இட்டு நன்றாக அங்கவடி சேர்த்து, எட்டுத் திக்குகளிலும் தாவிச் செல்லும், அந்த ஞானத்தை விரும்பும் (வேதங்களாகிய நான்கு) குதிரைகளைப் பூட்டி நெருங்கச் செலுத்தும் சூரிய சந்திரர்களாகிய சக்கரங்கள் அமைந்த சிறந்த தேரில் ஏறி, (திருமாலாகிய) ஒரே அம்பை எய்து, மதிக்கத்தக்கத் திரிபுரங்களை எரித்து தமது வெற்றியைப் பரப்பிய தலைவராகிய சிவபெருமான் வணங்க காஞ்சீபுரத்தில் நிற்கும் ஒளி வேலனே, பிரமன் தடைபட்டு நிற்கும்படியும், வலிமை வாய்ந்த கிரெளஞ்ச மலையும் வேலால் குத்துப்பட்டு விழுந்து அழியவும், தெள்ளிய அலைகள் வீசும் கடலையும் எல்லா மதில் சுவர்களையும் தாண்டி உலவிச் சென்று பகைவர்களை எதிர்த்து வென்று (அசுரர்களுடைய) தலைகளும் அமுங்கி நாசம் அடைய, அகன்ற கண்கள் திகைப்பு அடைய, அசுரர்களுடைய நெஞ்சில் வேலால் குத்தி, அவர்கள் கையிலிருந்த கறைபட்ட வாளாயுதங்கள் சிதறிச் சென்று தூரத்தில் போய் போர்க்களத்தில் பொடி பட்டு விழும்படி வெட்டி வீழ்த்திய பெருமாளே. 
பாடல் 320 - காஞ்சீபுரம்
ராகம் - ஹிந்தோளம்; தாளம் - ஆதி 
- எடுப்பு - 1/2 இடம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
     தனதனந் தத்தத் தத்தன தத்தம்
          தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான
புரைபடுஞ் செற்றக் குற்றம னத்தன்
     தவமிலன் சுத்தச் சத்யஅ சத்யன்
          புகலிலன் சுற்றச் செத்தையுள் நிற்குந் ...... துரிசாளன் 
பொறையிலன் கொத்துத் தத்வவி கற்பஞ்
     சகலமும் பற்றிப் பற்றற நிற்கும்
          பொருளுடன் பற்றுச் சற்றுமில் வெற்றன் ...... கொடியேனின் 
கரையறுஞ் சித்ரச் சொற்புகழ் கற்குங்
     கலையிலன் கட்டைப் புத்தியன் மட்டன்
          கதியிலன் செச்சைப் பொற்புய வெற்புங் ...... கதிர்வேலுங் 
கதிரையுஞ் சக்ரப் பொற்றையு மற்றும்
     பதிகளும் பொற்புக் கச்சியு முற்றுங்
          கனவிலுஞ் சித்தத் திற்கரு திக்கொண் ...... டடைவேனோ 
குரைதருஞ் சுற்றுச் சத்தச முத்ரங்
     கதறிவெந் துட்கக் கட்புர துட்டன்
          குலமடங் கக்கெட் டொட்டொழி யச்சென் ...... றொருநேமிக் 
குவடொதுங் கச்சொர்க் கத்தரி டுக்கங்
     கெடநடுங் கத்திக் கிற்கிரி வர்க்கங்
          குலிசதுங் கக்கைக் கொற்றவ னத்தங் ...... குடியேறத் 
தரைவிசும் பைச்சிட் டித்தஇ ருக்கன்
     சதுர்முகன் சிட்சைப் பட்டொழி யச்சந்
          ததமும்வந் திக்கப் பெற்றவர் தத்தம் ...... பகையோடத் 
தகையதண் டைப்பொற் சித்ரவி சித்ரந்
     தருசதங் கைக்கொத் தொத்துமு ழக்குஞ்
          சரணகஞ் சத்திற் பொற்கழல் கட்டும் ...... பெருமாளே.
தணியாத கோபம் முதலிய குற்றங்கள் யாவும் உள்ள கறை படிந்த மனத்தன், தவம் ஏதும் இல்லாதவன், கலப்பில்லாத பொய்யையே பேசுபவன், வேறு திக்கற்றவன், காற்றில் சுழலும் குப்பைக்குள்ளே நிற்கும் அழுக்கைப் போன்றவன், பொறுமையே இல்லாதவன், பலதரப்பட்ட உண்மைகளின் வேறுபாடுகள் யாவையும் பற்றியும், பற்று இன்றி நிற்கிற மெய்ப்பொருள் (கடவுள்) மேல் விருப்பம் சற்றும் இல்லாத பயனற்றவன், பொல்லாதவன், உன் எல்லையற்ற அழகிய புகழைக் கற்கும் கலை ஞானம் சிறிதும் இல்லாதவன், குறுகிய அறிவை உடையவன், மட்டமானவன், நற்கதி அடையும் பாக்கியம் இல்லாதவனாகிய அடியேன், வெட்சிமலர் அணிந்த அழகிய மலைபோன்ற தோள்களையும், ஒளி வீசுகின்ற வேலாயுதத்தையும், கதிர்காமத்தையும், வட்டமலையையும்*, மற்றைய திருத்தலங்களையும், அழகிய காஞ்சீபுரத்தையும், முழுக்க முழுக்க, கனவிலும் மனத்திலே வைத்துத் தியானித்துக் கொண்டு உன்னைச் சேரமாட்டேனோ? பூமியைச் சுற்றியும் ஒலிக்கின்ற ஏழு சமுத்திரங்களும் கதறி, வெந்து போய் வற்றிவிடவும், பெருமைமிக்க ஊரான வீரமகேந்திரபுரியை ஆண்ட துஷ்டனான சூரனும் அவனது குலம் முழுவதும் அழிந்து அனைவரும் ஒழியவும், ஒப்பற்ற சக்ரவாளக்கிரி தன் இடம் விட்டுப் போய் ஓரமாய் ஒதுங்கவும், தேவர்களின் துயரங்கள் யாவும் நீங்கவும், அஷ்ட திக்கிலும் உள்ள குலகிரிக் கூட்டங்கள் யாவும் நடுங்கவும், வஜ்ராயுதத்தைத் தன் தூய கரத்தில் வைத்துள்ள இந்திரன் தனது ஊராகிய அமராபுரியில் மீண்டும் குடியேறவும், பூமியையும் ஆகாயத்தையும் படைத்த, 'ரிக்கு' வேதத்தில் வல்லவனான நான்முகன் பிரமன் தண்டிக்கப்பட்டு (குட்டப்பட்டு) விலகவும், எப்போதும் வணங்குகின்ற அடியார்களின் பகைவர்கள் யாவரும் ஓட்டம் பிடிக்கவும், அழகிய தண்டையும், பொன்னாலான அழகிய விசித்ரமான வடிவமுள்ள சதங்கைக் கூட்டமும் தாள ஒற்றுமையுடன் ஒலி செய்யும் பாதத் தாமரைகளில் அழகிய வீரக் கழலைக் கட்டிய பெருமாளே. 
* வட்டமலை என்ற தலம் கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ளது.
பாடல் 321 - காஞ்சீபுரம்
ராகம் - ......; தாளம் -
தனதன தத்தத் தனந்த தந்தன
     தனதன தத்தத் தனந்த தந்தன
          தனதன தத்தத் தனந்த தந்தன ...... தனதான
சலமலம் விட்டத் தடம்பெ ருங்குடில்
     சகலவி னைக்கொத் திருந்தி டும்படி
          சதிரவு றுப்புச் சமைந்து வந்தொரு ...... தந்தைதாயும் 
தரவரு பொய்க்குட் கிடந்த கந்தலி
     லுறையுமு யிர்ப்பைச் சமன்து ரந்தொரு
          தனியிலி ழுக்கப் படுந்த ரங்கமும் ...... வந்திடாமுன் 
பலவுரு வத்தைப் பொருந்தி யன்றுயர்
     படியுநெ ளிக்கப் படர்ந்த வன்கண
          படமயில் புக்குத் துரந்து கொண்டிகல் ...... வென்றிவேலா 
பரிமள மிக்கச் சிவந்த நின்கழல்
     பழுதற நற்சொற் றெரிந்து அன்பொடு
          பகர்வதி னிச்சற் றுகந்து தந்திட ...... வந்திடாயோ 
சிலையுமெ னப்பொற் சிலம்பை முன்கொடு
     சிவமய மற்றுத் திடங்கு லைந்தவர்
          திரிபுர மத்தைச் சுடுந்தி னந்திரி ...... திண்கையாளி 
திருமகள் கச்சுப் பொருந்தி டுந்தன
     தெரிவையி ரக்கத் துடன்பி றந்தவள்
          திசைகளி லொக்கப் படர்ந்தி டம்பொரு ...... கின்றஞானக் 
கலைகள ணைக்கொத் தடர்ந்து வம்பலர்
     நதிகொள கத்திற் பயந்து கம்பர்மெய்
          கருகஇ டத்திற் கலந்தி ருந்தவள் ...... கஞ்சபாதங் 
கருணைமி குத்துக் கசிந்து ளங்கொடு
     கருதும வர்க்குப் பதங்கள் தந்தருள்
          கவுரிதி ருக்கொட் டமர்ந்த இநதிரர் ...... தம்பிரானே.
சலம், மலம் இவைகளை வெளியேற்றுகின்ற மிகப் பெரிய குடிசையில், எல்லா வினைகளும் ஒன்று சேர்ந்து அமையும்படி, அழகாகப் பொறுத்தப்பட்ட அவயவங்கள் சேர்ந்த மனக் களிப்புடன் தந்தையும் தாயும் கலந்து அளிக்க உண்டாகின்ற, பொய்யிலே கிடந்த கிழிபட்ட துணிபோல் அழிந்து போகும் உடலில், இருக்கும் உயிரை யமன் ஓட்டிச் செலுத்தி ஒரு தனியான வகையில் இழுக்கும் மனக் கலக்கமும் வந்து கூடுவதற்கு முன், பல வித நிறங்களைப் பொருந்தியதும், அன்று (போர்க் களத்தில்) சிறந்த பூமியும் நெளியும்படியாக நடந்து சென்றதுமான, வலிமை வாய்ந்த, பீலிக் கண்களை உடைய தோகையை உடைய மயிலில்* ஏறி, அதனைச் செலுத்திச் சென்று போரினை வென்ற வேலனே, நறு மணம் மிகுந்து, சிவந்த உனது திருவடியை, எவ்வகைக் குற்றமும் இல்லாத நல்ல சொற்கள் கொண்டு அறிந்து, அன்புடன் சொல்லும்படியான பாக்கியத்தை இனிச் சற்று நீ மகிழ்ந்து தந்துதவ வர மாட்டாயோ? வில் என்னும்படி பொன் மலையாகிய மேருவை (சிவபிரான்) முன் கையில் கொண்டு, சிவ வழிபாட்டைக் கைவிட்டவர்களும் தமது சக்தி குலைந்தவர்களுமாகிய அசுரர்களையும் திரி புரங்களையும் எரித்த தினத்தில் அந்த வில்லைத் தாங்கிய திண்ணிய திருக் கரத்தைக் கொண்டவள், அழகிய தேவி, கச்சு அணிந்த மார்பகங்களைக் கொண்ட மாது, கருணையுடன் தோன்றியவள், திசைகள் எல்லாவற்றிலும் வியாபித்து இடம் கொண்ட ஞான நூல்கள் உட்பட்ட திரண்ட கலை நூல்கள் அனைத்தையும் நிரம்பக் கற்றவள், புது மலர்களைத் தன்னுள்ளே கொண்ட கம்பை நதிக் கரையில் (காமாக்ஷி சிவனை வழிபடும்போது), (நதியின் வெள்ளத்தைக் கண்டு) பயந்து ஏகாம்பர நாதருடைய சிவந்த உடல் கரு நிறம் கொள்ளுமாறு அவருடைய இடப் பாகத்தில் கலந்திருந்தவள், தனது தாமரைத் திருவடியை அன்பு மேலிட்டு கனிந்த மனம் கொண்டு தியானிக்கும் அடியார்களுக்கு பதவிகளைத் தந்து அருளும் கெளரி அம்மையின் திருக்கோயிலில் (காஞ்சீபுரத்துக்) குமரக்கோட்டத்தில் அமர்ந்திருக்கும் இறைவா, தேவேந்திரனின் தலைவனே. 
* இங்கு மயில் என்பது மயிலான இந்திரனைக் குறிக்கும்.இந்த மயிலில் ஏறி சூரனுடன் முருக வேள் சண்டை செய்தார்.சூரன் மயில் வாகனமாவதற்கு முன்பு போர்க்களத்தில் இந்திரன் மயிலாக முருகவேளைத் தாங்கினான்.
பாடல் 322 - காஞ்சீபுரம்
ராகம் - சுத்த தன்யாஸி; தாளம் - ஆதி 
- எடுப்பு - 1/2 இடம்
தனதன தத்தத் தனந்த தந்தன
     தனதன தத்தத் தனந்த தந்தன
          தனதன தத்தத் தனந்த தந்தன ...... தனதான
தலைவலை யத்துத் தரம்பெ றும்பல
     புலவர் மதிக்கச் சிகண்டி குன்றெறி
          தருமயில் செச்சைப் புயங்க யங்குற ...... வஞ்சியோடு 
தமனிய முத்துச் சதங்கை கிண்கிணி
     தழுவிய செக்கச் சிவந்த பங்கய
          சரணமும் வைத்துப் பெரும்ப்ர பந்தம்வி ...... ளம்புகாளப் 
புலவனெ னத்தத் துவந்த ரந்தெரி
     தலைவனெ னத்தக் கறஞ்செ யுங்குண
          புருஷனெ னப்பொற் பதந்த ருஞ்சன ...... னம்பெறாதோ 
பொறையனெ னப்பொய்ப் ப்ரபஞ்ச மஞ்சிய
     துறவனெ னத்திக் கியம்பு கின்றது
          புதுமைய லச்சிற் பரம்பொ ருந்துகை ...... தந்திடாதோ 
குலசயி லத்துப் பிறந்த பெண்கொடி
     யுலகடை யப்பெற் றவுந்தி யந்தணி
          குறைவற முப்பத் திரண்ட றம்புரி ...... கின்றபேதை 
குணதரி சக்ரப் ப்ரசண்ட சங்கரி
     கணபண ரத்நப் புயங்க கங்கணி
          குவடுகு னித்துப் புரஞ்சு டுஞ்சின ...... வஞ்சிநீலி 
கலபவி சித்ரச் சிகண்டி சுந்தரி
     கடியவி டத்தைப் பொதிந்த கந்தரி
          கருணைவி ழிக்கற் பகந்தி கம்பரி ...... யெங்களாயி 
கருதிய பத்தர்க் கிரங்கு மம்பிகை
     சுருதிது திக்கப் படுந்த்ரி யம்பகி
          கவுரிதி ருக்கொட் டமர்ந்த இந்திரர் ...... தம்பிரானே.
முதல் வகுப்பில் வைக்கத்தக்க தகுதி பெற்ற பல புலவர்கள் போற்றித் துதிக்கும் உனது மயிலையும், கிரெளஞ்சமலையைப் பிளந்து எறிந்த உன் வேலையும், வெட்சி மாலையைப் புனைந்த உன் திருப்புயங்களையும், (கயவஞ்சி) தேவயானையையும், குறவஞ்சி வள்ளியையும், பொற்சங்கிலி, முத்துச் சலங்கை, கிண்கிணி ஆகியவை தழுவிய செக்கச் சிவந்த உனது சரணாம்புஜத்தையும் பாட்டுக்குப் பொருளாக வைத்து பெரிய பாமாலைகளைப் பாடவல்ல, கரிய மேகம் மழை பொழிவதுபோலப் பொழியும் புலவன் இவன் என்று சொல்லும்படியும், உண்மை ஞானம் உணர்ந்த தலைவன் இவன் எனக் கூறும்படியும், தக்க தர்மங்களைச் செய்யும் குணவானான சத்புருஷன் இவன் என்றும் உலகோர் கூறும்படியுமாக, மேலான பதவியைத் தரும் பிறப்பை என் ஆத்மா பெறாதோ? இவன் பொறுமைசாலி என்றும், இந்தப் பொய்யுலகைக் கண்டு அஞ்சும் துறவி என்றும், எல்லாத் திசைகளிலும் உள்ளோர் அடியேனைக் கூறுவது ஆச்சரியம் இல்லை. அறிவுக்கும் மேலான பதத்தில் சேரும் பேற்றை உன் திருவருள் தந்திடாதோ? சிறந்த மலையாகிய இமயமலைக்குப் பிறந்த கொடி போன்றவள், உலகம் முழுவதையும் ஈன்றெடுத்த திருவயிற்றை உடையவள், அழகிய தட்பத்தை (காருண்யத்தை) உடையவள், குறைவில்லாமல் முப்பத்திரண்டு அறங்களையும்* முறையே புரியும் பாலாம்பிகை, நற்குணங்களைத் தரித்தவள், மந்திர யந்திரத்தில் வீரத்துடன் வீற்றிருக்கும் சங்கரி, கூட்டமான படங்களையும், ரத்தினங்களையும் உள்ள சர்ப்பங்களைக் கைகளில் வளையல்களாகத் தரித்தவள், மேரு மலையை வில்லாக வளைத்து, திரிபுரத்தைச் சினத்துடன் எரித்த** வஞ்சிக் கொடி போன்றவள், நீல நிறத்தினள், தோகை மயிலின் அழகிய சாயலை உடையவள், பேரழகி, கொடிய விஷத்தைக் கழுத்திலே பொதிந்தவள்**, கருணை பொழியும் விழிகளை உடையவள், கேட்டவரம் நல்கும் கற்பகத் தரு, திசைகளையே ஆடைகளாய் உடைய எங்கள் தாய், அவளை நினைத்த பக்தர்களுக்கு கருணை புரியும் அம்பிகை, வேதங்களால் போற்றப்படும் முக்கண்களை (சூரியன், சந்திரன், அக்னி) உடையவள்**, (இத்தனை பெருமைகளை உடைய) கெளரியாகிய காமாக்ஷியின் கோயிலாகிய திருக்கோட்டத்தில் (காஞ்சீபுரத்தில்) வீற்றிருப்போனே, தேவர்களுக்கெல்லாம் தலைவர்களான இந்திரர்கள் வணங்கும் பெருமாளே. 
* பெரிய புராணத்தில் கூறிய முப்பத்திரண்டு அறங்கள் பின்வருமாறு:சாலை அமைத்தல், ஓதுவார்க்கு உணவு, அறுசமயத்தாருக்கும் உணவு, பசுவுக்குத் தீனி, சிறைச் சோறு, ஐயம், தின்பண்டம் நல்கல், அநாதைகளுக்கு உணவு, மகப்பெறுவித்தல், மகவு வளர்த்தல், சிசுக்களுக்குப் பால் நல்கல், அநாதைப் பிணம் சுடுதல், அநாதைகளுக்கு உடை, சுண்ணாம்பு பூசல், நோய்க்கு மருந்து, வண்ணார் தொழில், நாவிதத் தொழில், கண்ணாடி அணிவித்தல், காதோலை போடுதல், கண் மருந்து, தலைக்கு எண்ணெய், ஒத்தடம் தருதல், பிறர் துயர் காத்தல், தண்ணீர்ப் பந்தல், மடம் கட்டுதல், தடாகம் அமைத்தல், சோலை வளர்த்தல், தோல் பதனிடல், மிருகங்களுக்கு உணவு, ஏர் உழுதல், உயிர் காத்தல், கன்னிகாதானம்.
** சிவபிரானைக் குறிக்கும் செயல்களும் இயல்புகளும் இங்கு பார்வதி தேவிக்கும் பொருந்துவன. ஏனெனில் தேவி சிவனின் இடது பாகத்தில் இருப்பவள்.
பாடல் 323 - காஞ்சீபுரம்
ராகம் - .............; தாளம் -
தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத்
     தனத்தத்தத் தனத்தத்தத் ...... தனதான
இதத்துப்பற் றிதழ்த்துப்பற் றிருட்பொக்கக் கருத்திட்டத்
     தியக்கத்திற் றியக்குற்றுச் ...... சுழலாதே 
எலுப்புச்சுக் கிலக்கத்தத் தடித்தொக்குக் கடத்தைப்பெற்
     றெடுத்துப்பற் றடுத்தற்பத் ...... துழலாதே 
சுதத்தத்தச் சதத்தத்தப் பதத்தர்க்குற் றவற்றைச்சொற்
     றுவக்கிற்பட் டவத்தைப்பட் ...... டயராதே 
துணைச்செப்பத் தலர்கொத்துற் பலச்செச்சைத் தொடைப்பத்திக்
     கடப்பப்பொற் கழற்செப்பித் ...... தொழுவேனோ 
கொதித்துக்குத் திரக்கொக்கைச் சதித்துப்பற் றிகைக்குட்பொற்
     குலத்தைக்குத் திரத்தைக்குத் ...... தியவேலா 
குறத்தத்தைக் கறத்தத்திக் குமுத்தத்தத் தமொக்கிக்குக்
     குலத்துக்குக் குடக்கொற்றக் ...... கொடியோனே 
கதச்சுத்தச் சுதைச்சித்ரக் களிற்றுக்கொற் றவற்குக்கற்
     பகச்சொர்க்கப் புரப்பொற்பைப் ...... புரிவோனே 
கடுக்கைக்கட் செவிக்கற்றைச் சடைப்பக்கக் கொடிக்கற்புக்
     கடற்கச்சிப் பதிச்சொக்கப் ...... பெருமாளே.
இன்பத்துடன் பற்றுகின்ற வாயிதழின் நுகர்ச்சியை நீங்கி, துன்பம் தரும் வஞ்சகமான எண்ணங்களில் விருப்பம் வைத்ததனால் மயக்கம் அடைந்து நான் சுழற்சி உறாமல், எலும்பு, இந்திரியம், மலச்சேறு, தசை, தோல் இவை கூடிய பானையாகிய உடம்பை அடைந்து, பாசம் சேர்ந்துள்ள பாவ நிலையில் அலைச்சல் உறாமல், அந்த அந்தச் சத்தத்துக்கும் சுத்தமான அர்த்தத்தை விசாரிக்கும் பத ஆராய்ச்சி செய்வோருக்கு, (அந்தத் தொனியின்) உள்ளர்த்தத்தை எடுத்துச் சொல்லும் தொடர்பிலே சிக்குண்டு, வேதனைப்பட்டு (சொல் ஆராய்ச்சியால்) சோர்வு உறாமல், (இவற்றை எல்லாம் தவிர்த்து) செம்மையான தன்மை சேர்ந்த பூங்கொத்துக்களும், நீலோற்பல மலர், வெட்சிப் பூ இவைகளால் ஆகிய மாலைகளின் வரிசைகளும், கடம்ப மலரும் கொண்ட அழகிய உனது திருவடியைப் புகழ்ந்து தொழ மாட்டேனோ? கோபம் கொண்டு வஞ்சகம் உள்ள மாமரமாகி நின்ற சூரனை அழித்து தன் வசப்படுத்தி (அவனது இரு கூறுகளான மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் கொண்டு), பொன் மயமான குலகிரி கிரெளஞ்ச மலையையும், அதன் வஞ்சக நிலையையும் குத்தி அழித்த வேலனே, குறவர் குலக் கிளியாகிய வள்ளியினுடையவும், கற்பியல் அறநெறியில் நின்ற தேவயானையினுடையவும் முத்தாபரணம் அணிந்த தோள்களின் அழகுக்கு ஒப்பாகும், கரும்புக்கும் ஒத்த குலமாகிய, மூங்கில் காம்பையுடைய, கோழியின் வீரக் கொடியை உடையவனே, கோபத்தையும், சுத்தமான வெண்மை நிறத்தையும், அழகையும் கொண்ட ஐராவதம் என்னும் யானைக்குத் தலைவனான இந்திரனுக்கு, (கேட்டதைத் தரும்) கற்பக மரங்கள் உள்ள சொர்க்க லோகச் சிறப்பை மீட்டுத்தந்து உதவி புரிந்தவனே, கொன்றையும், பாம்பும் அணிந்த திரண்ட சடையை உடைய சிவபெருமானது பாகத்து அமர்ந்த கொடி அனையவளும், கற்புக் கடலானவளும் ஆகிய உமாதேவி வீற்றிருக்கும் காஞ்சித் திருநகரில் அமர்ந்த அழகிய பெருமாளே. 
பாடல் 324 - காஞ்சீபுரம்
ராகம் - கமாஸ்; தாளம் - ஆதி - மிஸ்ரநடை - 28 
நடை - தகிட தகதிமி
தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத்
     தனத்தத்தத் தனத்தத்தத் ...... தனதான
எனக்குச்சற் றுனக்குச்சற் றெனக்கத்தத் தவர்க்கிச்சைப்
     பொருட்பொற்றட் டிடிக்கைக்குக் ...... குடில்மாயம் 
எனக்கட்டைக் கிடைப்பட்டிட் டனற்சுட்டிட் டடக்கைக்குப்
     பிறக்கைக்குத் தலத்திற்புக் ...... கிடியாமுன் 
தினைக்குட்சித் திரக்கொச்சைக் குறத்தத்தைத் தனத்தைப்பொற்
     பெறச்செச்சைப் புயத்தொப்பித் ...... தணிவோனே 
செருக்கிச்சற் றுறுக்கிச்சொற் பிரட்டத்துட் டரைத்தப்பித்
     திரட்டப்பிக் கழற்செப்பத் ...... திறல்தாராய் 
பனைக்கைக்கொக் கனைத்தட்டுப் படக்குத்திப் படச்சற்பப்
     பணத்துட்கக் கடற்றுட்கப் ...... பொரும்வேலா 
பரப்பற்றுச் சுருக்கற்றுப் பதைப்பற்றுத் திகைப்பற்றுப்
     பலிப்பப்பத் தருக்கொப்பித் ...... தருள்வாழ்வே 
கனிக்குத்திக் கனைத்துச்சுற் றிடப்பச்சைக் கனப்பக்ஷிக்
     கிடைப்புக்குக் களிப்புக்குத் ...... திரிவோனே 
கலிக்கொப்பிற் சலிப்பற்றுக் கதிக்கொத்திட் டெழிற்சத்திக்
     கடற்கச்சிப் பதிச்சொக்கப் ...... பெருமாளே.
எனக்குக் கொஞ்சம், உனக்குக் கொஞ்சம் என்று கூச்சல் இடுகின்ற அந்த விலைமாதர்களுக்கு விரும்பும் பொருளைத் தங்கத் தட்டில் வைத்துத் தருகின்ற ஆபத்தைக் கொண்ட இந்த உடம்பு உயிர் மாயமாய் மறைந்ததும் விறகுக்கட்டைகளுக்கு இடையிலே வைக்கப்பட்டு நெருப்பால் சுடப்பட்டு மறைந்து போவதற்கும் மீண்டும் உயிர் பிறப்பதற்கும், இந்த உலகில் புகுந்து அழிந்து போவதற்கும் முன்னரே, - (* பின் தொடர்கிறது). தினைப்புனத்தில், அழகிய மழலைமொழி பேசும் குறப்பெண்ணாகிய கிளி போன்ற வள்ளியின் மார்பை அழகு பெற உன் வெட்சி மாலையணிந்த புயத்தில் ஏற்றுக் கொண்டு தழுவுவோனே, (* முன் தொடர்ச்சி) - அகந்தை கொண்டு, சற்றுக் கோபித்துப் பேசுபவர்களும், நன்னெறியிலிருந்து தவறியவர்களுமான துஷ்டர்களிடமிருந்து தப்பி, அந்தக் கூட்டத்தினின்று விலகி, உன் திருவடியைப் புகழும் ஆற்றலைத் தந்தருள்வாயாக. பனைமரம் போன்ற தும்பிக்கை உடையவனும், கொக்குப் போன்று காத்திருந்து தாக்கும் குணத்தை உடையவனுமான தாரகாசுரனை, தடைபட்டு அழியுமாறு வேலினால் குத்தி அவன் இறந்து படவும், ஆதிசேஷனின் ஆயிரம் பட முடிகள் அஞ்சிடவும், கடல் அஞ்சிடவும் போர் செய்த வேலனே, பேராசையின்றி, லோபத்தனம் இன்றி, நடுக்கம் இன்றி, மயக்கம் ஒழிந்து, இத்தகைய நலன்கள் உண்டாகும்படியாக அடியார்களுக்கு ஏற்படுத்தித் தந்து அருள் புரியும் செல்வமே, (சிவபெருமானிடமிருந்து) கனி பெறுவதற்காக திக்குக்கள் யாவும் படர்ந்த உலகத்தைச் சுற்ற, பச்சைநிறமுள்ள பெருமைவாய்ந்த பக்ஷியாகும் மயிலின் மீது ஏறி அமர்ந்து மகிழ்ச்சியுடன் வலம் வந்தவனே, இந்தக் கலியுகத்தில் நிகரில்லாத தெய்வமாய் நின்று, கொஞ்சமும் சலிக்காது மோக்ஷ இன்பத்தைத் தர ஒப்புக்கொண்டவனே, எழில்மிகு சக்தியாகிய காமாக்ஷிதேவி எழுந்தருளியுள்ள, கடல்போல் எப்போதும் ஓம் என்று ஒலிக்கும் கச்சிப்பதியாகிய காஞ்சீபுரத்தில் வாழும் அழகிய பெருமாளே. 
பாடல் 325 - காஞ்சீபுரம்
ராகம் - ......; தாளம் - .....
தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத்
     தனத்தத்தத் தனத்தத்தத் ...... தனதான
இறைச்சிப்பற் றிரத்தத்திட் டிசைக்கொக்கப் பரப்பப்பட்
     டெலுப்புக்கட் டளைச்சுற்றிச் ...... சுவர்கோலி 
எடுத்துச்செப் பெனக்கட்டிப் புதுக்குப்புத் தகத்திற்புக்
     கெனக்குச்சற் றுனக்குச்சற் ...... றெனுமாசைச் 
சிறைக்கொத்திப் பிறப்பிற்பட் டுறக்கச்சொப் பனத்துற்றுத்
     திகைக்கப்பட் டவத்தைப்பட் ...... டுழலாதுன் 
திருப்பத்மத் திறத்தைப்பற் றுகைக்குச்சித் திரத்தைச்சொற்
     றிதக்கொற்றப் புகழ்ச்செப்பித் ...... திரிவேனோ 
பிறைச்செக்கர்ப் புரைக்கொத்துச் சடைப்பச்சைக் கொடிக்கிச்சைப்
     பிறக்குற்றத் திருப்பக்கச் ...... சிவநாதர் 
பெருக்கப்புத் தடக்கைக்கற் பகத்தொப்பைக் கணத்துக்குப்
     பிரசித்தக் கொடிக்குக்டக் ...... கொடியோனே 
பறைக்கொட்டிக் களைச்சுற்றக் குறட்செக்கட் கணத்திற்குப்
     பலிக்குப்பச் சுடற்குத்திப் ...... பகிர்வேலா 
பணப்பத்திக் கணத்துத்திப் படுக்கைக்கச் சபத்திச்சைப்
     படுக்கச்சிப் பதிச்சொக்கப் ...... பெருமாளே.
மாமிசத்துடன், அதைப் பற்றியுள்ள ரத்தத்தைச் சேர்த்து, அந்த ரத்தம் பொருந்துவதற்குத் தக்கவாறு உடலிலே பரப்பி வைத்து, எலும்புச் சட்டத்தைச் சுற்றிலும் தோல் என்ற சுவரை வகுத்து, எடுத்து ஒரு பாத்திரமாக ஏற்படுத்தி அலங்கரித்த புதிய வீட்டில் புகுந்து (அதாவது உடலெடுத்துப் பிறந்து), எனக்குக் கொஞ்சம் வேண்டும், உனக்கும் சற்று வேண்டும் என்ற ஆசை எனப்படும் சிறைச் சாலையில் இருக்கச் சம்மதித்து, இந்தப் பிறப்பை அடைந்து, தூக்கம், கனவு இவைகளை அடைந்து, மயக்கம் உற்று, வேதனை அனுபவித்துத் திரியாமல், உனது தாமரைத் திருவடிகளின் சார்பைப் பற்றி உய்வதற்கு, உன் அழகை வெளிப்படுத்தும் சொற்களால் உனது நிலைத்த வீரத் திருப்புகழைச் சொல்லித் திரிய மாட்டேனோ? பெருமையும் செந்நிறமும் கொண்ட பிறைக்குத் தலையில் இடம் தந்தது போல, பின்னிய கூந்தலைக் கொண்ட, பச்சை நிறத்தாளான கொடி போன்ற பார்வதிக்கு ஆசை பிறப்பதற்குத் தக்க அழகிய இடப் பாகத்தைத் தந்துள்ள சிவபெருமானுடைய (சடையிலிருந்து) பெருகுகின்ற கங்கைக்கும், அந்தப் பெரும் துதிக்கையை உடைய விநாயகரைப் போல பெரிய வயிற்றை உடைய பூத கணங்களுக்கும் நன்கு தெரிந்தவனே, உயரமான கோழிக் கொடியை உடையவனே, பறை வாத்தியங்களை முழக்கிக் களைப்பு அடைந்துள்ள, சிவந்த கண்களை உடைய, குள்ள பூதக் கூட்டங்களின் உணவுக்கு, அசுரர்களின் பசிய உடலைக் குத்திப் பகிர்ந்தளித்த வேலனே, படங்களின் வரிசையையும், நெருங்கிய புள்ளிகளையும் உடைய ஆதி சேஷனை படுக்கையாகக் கொண்ட, ஆமை உரு எடுத்த, திருமால் ஆசைப்பட்ட இடமான* கச்சி நகரில் (காஞ்சீபுரத்தில்) உறையும் அழகிய பெருமாளே. 
* பாற்கடலைக் கடைந்த போது திருமால் கச்சபமாக (ஆமையாக) முதுகு கொடுத்துத் தாங்கிப் பின்னர் இறுமாப்பு அடைந்து கடலைக் கலக்கினார். அந்த ஆமையை விநாயகர் அடக்கி மடிவிக்க, அதன் ஓட்டைச் சிவ பெருமான் அணிந்தார்.பின்னர் திருமால் குற்றம் தீர்ந்து காஞ்சியில் ஜோதிலிங்கத்தைப் பூஜித்து அந்நகரில் விளங்கினார் - காஞ்சிப் புராணம்.
பாடல் 326 - காஞ்சீபுரம்
ராகம் - ......; தாளம் - .....
தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத்
     தனத்தத்தத் தனத்தத்தத் ...... தனதான
கடத்தைப்பற் றெனப்பற்றிக் கருத்துற்றுக் களித்திட்டுக்
     கயற்கட்பொற் பிணைச்சித்ரத் ...... தனமாதர் 
கலைக்குட்பட் டறக்கத்திச் சலித்துக்கட் டளைச்சொற்பொய்த்
     திரைக்குட்பட் டறச்செத்திட் ...... டுயிர்போனால் 
எடுத்துக்கொட் டிடக்கட்டைப் படத்தெட்டத் தணற்றட்டக்
     கொளுத்திச்சுற் றவர்ப்பற்றற் ...... றவர்போமுன் 
இணக்கிப்பத் திமைச்செச்சைப் பதத்தைப்பற் றுகைக்குச்சொற்
     றமிழ்க்கொற்றப் புகழ்செப்பித் ...... திரிவேனோ 
அடைத்திட்டுப் புடைத்துப்பொற் பதச்சொர்க்கத் தனைச்சுற்றிட்
     டலைப்புப்பற் றெனச்சொற்றிட் ...... டறுசூரை 
அடித்துச்செற் றிடித்துப்பொட் டெழப்பொர்ப்புப் படக்குத்திட்
     டலைத்துச்சுற் றலைத்தெற்றுக் ...... கடல்மாயப் 
புடைத்திட்டுப் படிக்குட்செற் றடப்புக்குக் கதத்துக்கக்
     கயிற்கொக்கைப் படக்குத்திப் ...... பொருவோனே 
புனத்திற்பொற் குறத்திக்குப் புணர்க்கொத்தப் பசப்பெத்திப்
     புணர்க்கச்சிப் பதிச்சொக்கப் ...... பெருமாளே.
குடம் போன்ற மார்பகத்தைப் பற்றுவது போலப் பற்றி, அதன் மீதே எண்ணத்தை வைத்து மகிழ்ச்சி உற்று, மீன் போன்ற கண்ணின் அழகையும், இணையாகிய அழகிய மார்பையும் உடைய விலைமாதர்களின் மதனக் கலைக்குள் ஆசைப்பட்டு காம சாத்திரங்களை நன்றாகக் கூவி ஓதி, பின்னர் சலித்துப் போய், கற்பனைப் பேச்சுகளுக்கும், மறைப்புத் திரைக்கும் உட்பட்டவனாகி, இறந்து உயிர் போனவுடன் (உடலை), (சுடுகாட்டில்) போட வேண்டி விறகுக் கட்டைகளிடையே படும்படி வைத்து, முற்றின நெருப்பை பற்றிக்கொள்ளும்படி கொளுத்தி, சுற்றத்தார் பந்தபாசம் இல்லாதவர்களாய் சுடுகாட்டிலிருந்து போவதற்கு முன், மனம் பொருந்தி பக்தியுடன் வெட்சி மலர் கொண்ட உன் திருவடியைப் பற்றி உய்வதற்கு, சொல்லத்தக்க தமிழ் மொழி கொண்டு உனது வீரத் திருப்புகழைச் சொல்லித் திரியும் பாக்கியம் எனக்கு அமையுமோ? தேவர்களைச் சிறையில் அடைத்தும், அவர்களை அடித்தும், அழகிய இடமான சொர்க்க பூமியை வளைத்துக் கொண்டும், நீங்கள் யாவரும் அலைச்சல் கொள்ளுங்கள் என்று கூறி நீங்கிய சூரனை, அடித்தும் கோபித்தும் இடித்தும், பொடிபடும்படியாக (அவனுக்குத் துணையாயிருந்த) ஏழு மலைகளையும் அழிவுறக் குத்தியும், அவனை வருத்தியும், வளைந்துள்ள அலைகள் நெருங்கியுள்ள கடலைக் கலக்கமுற்று ஒடுங்கச் செய்து அலைத்தும், பூமியில் கோபத்துடன் புயலாக அழிக்கப் புறப்பட்ட பின், கோபமும் வருத்தமும் நெஞ்சிலே கொண்டு (கடலில்) மாமரமாகி நின்ற சூரனை வேலால் அழிவு படக் குத்திச் சண்டை செய்பவனே, தினைப்புனத்தில் அழகிய குறமகள் வள்ளியைச் சேர்வதற்கு, அவளைத் தந்திர மொழிகளால் துதித்து, பின்பு அவளை மணந்தவனே, கச்சிப்பதியாகிய காஞ்சீபுரத்தில் வாழும் அழகிய பெருமாளே. 
பாடல் 327 - காஞ்சீபுரம்
ராகம் - ....; தாளம் - ......
தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத்
     தனத்தத்தத் தனத்தத்தத் ...... தனதான
கருப்பற்றிப் பருத்தொக்கத் தரைக்குற்றிட் டுருப்பெற்றுக்
     கருத்திற்கட் பொருட்பட்டுப் ...... பயில்காலங் 
கணக்கிட்டுப் பிணக்கிட்டுக் கதித்திட்டுக் கொதித்திட்டுக்
     கயிற்றிட்டுப் பிடித்திட்டுச் ...... சமனாவி 
பெருக்கப்புத் தியிற்பட்டுப் புடைத்துக்கக் கிளைப்பிற்பொய்ப்
     பிணத்தைச்சுட் டகத்திற்புக் ...... கனைவோரும் 
பிறத்தற்சுற் றமுற்றுற்றிட் டழைத்துத்தொக் கறக்கத்துப்
     பிறப்புப்பற் றறச்செச்சைக் ...... கழல்தாராய் 
பொருப்புக்கர்ப் புரக்கச்சுத் தனப்பொற்புத் தினைப்பச்சைப்
     புனக்கொச்சைக் குறத்தத்தைக் ...... கினியோனே 
புரத்தைச்சுட் டெரித்துப்பற் றலர்க்குப்பொற் பதத்துய்ப்பைப்
     புணர்த்தப்பித் தனைக்கற்பித் ...... தருள்வோனே 
செருக்கக்குக் கரைக்குத்திச் செருப்புக்குப் பிடித்தெற்றிச்
     சினத்திட்டுச் சிதைத்திட்டுப் ...... பொரும்வீரா 
திருத்தத்திற் புகற்சுத்தத் தமிழ்ச்செப்புத் த்ரயச்சித்ரத்
     திருக்கச்சிப் பதிச்சொக்கப் ...... பெருமாளே.
ஒரு தாயின் கருவாகச் சேர்ந்து உருவம் பெரிதாகி, (பத்து மாதம் என்னும் கணக்கு) ஒருமிக்க பூமியில் வந்து சேர்ந்து, (வளரும் பருவங்களுக்கு உரிய) உருவங்களை முறையே அடைந்து, எண்ணத்திலே, பொருள் சேர்ப்பதே குறிக்கோளாக வாழ்நாளை வீணாகச் செலுத்தும் காலத்தில், (ஆயுளின் காலத்தைக்) கணக்குப் பார்த்து, முடிவு காலம் வருவதை அறிந்து மாறுபாடு கொண்டு, விரைந்து வந்து மிக்க கோபத்தைக் காட்டி பாசக் கயிற்றை (கழுத்தைச் சுற்றி) வீசிப் பிடித்து யமன் என்னுடைய உயிரைப் பிரித்து எடுத்துக் கொண்டு போவதை நான் காண, உயிர் போய் விட்டது எனத் தெரிந்து கொண்ட, பக்கத்தில் இருந்த, துக்கப்படும் சுற்றத்தினர் (என்) பின்னாலேயே (சுடுகாடு வரை) சென்று, பிணத்தைச் சுட்டெரித்து விட்டு, வீட்டுக்கு வந்து எல்லோரும் அந்தப் பிறப்பில் சுற்றத்தாராக உள்ள யாவரையும் வரும்படி அழைத்து, உடல் சோர்வு அடைந்து ஓயும்படி அழுது கத்துகின்ற இந்தப் பிறப்பில் உள்ள ஆசை நீங்கும்படி உனது வெட்சி மாலை சூழ்ந்த திருவடியைத் தாராய். மலை போன்றதும், பச்சைக் கற்பூரம், ரவிக்கை (இவைகளை அணிந்ததுமான) மார்பக அழகைக் கொண்டவளும், தினை வளரும் பசுமை வாய்ந்த புனத்திலிருந்தவளும், மிழற்றும் பேச்சை உடையவளுமான குறப் பெண்கிளி வள்ளிக்கு இனியவனே, திரி புரங்களைச் சுட்டு எரித்து, திரிபுரங்களில் பற்று இல்லாமல் சிவ வழிபாட்டில் இருந்த மூவர்க்கு* மேலான பதவி நுகர்ச்சியை கூட்டி வைத்த (அந்தப்) பித்தனாகிய சிவபெருமானுக்கு (குருவாய் நின்று பிரணவப் பொருளை) ஓதுவித்து அருளியவனே, அகந்தை கொண்ட அந்த நாய் போன்று இழிந்தோர்களாகிய அசுரர்களைக் குத்தியும் போரில் புகுந்து பிடித்து மோதியும், கோபித்து அழியச் செய்தும் சண்டை செய்த வீரனே, பிழையில்லாமல் சொல்லப்படும் சுத்தமான இயல், இசை, நாடகம் என்று மூவகைகளால் ஓதப்படும் தமிழ் (விளங்கும்) சிறப்பு வாய்ந்த மேன்மையான கச்சி என்னும் ஊரில் வாழும் அழகிய பெருமாளே. 
* வித்யுன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் என்ற மூன்று அசுரர்கள் பொன், வெள்ளி, இரும்பு இவைகளால் ஆகிய திரிபுரங்கள் என்ற பறக்கும் பட்டணங்களைக் கொண்டு அனைவரின் மேலே விழுந்துத் துன்புறுத்தினர். ஆதலால் சிவபெருமான் அவர்களை எரித்தபோது, சிவ வழிபாட்டால் மாளாது பிழைத்த மூவரில், இருவர் கோயில் காவலாளர் ஆனார்கள். மற்றவர் முழவு முழக்கும் பேற்றினை அடைந்தார்.
பாடல் 328 - காஞ்சீபுரம்
ராகம் - .....; தாளம் - .....
தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத்
     தனத்தத்தத் தனத்தத்தத் ...... தனதான
கறுக்கப்பற் றுவர்ப்பிட்டுச் சிரித்துச்சற் றுறுக்கிக்கட்
     பிறக்கிட்டுப் படக்கற்பித் ...... திளைஞோர்தங் 
கழுத்தைச்சிக் கெனக்கட்டித் தனச்செப்புப் படக்குத்திட்
     டுருக்கிக்கற் பழிக்கப்பொற் ...... பெழுகாதல் 
புறப்பட்டுக் களிக்கக்கற் புரத்தைப்பிட் டரக்கிப்பொற்
     பணிக்கட்டிற் புறத்துற்றுப் ...... புணர்மாதர் 
பொருத்தத்தைத் தவிர்த்துச்சற் றிரக்ஷித்துப் புரப்பப்பொற்
     பதத்தைப்பெற் றிருக்கைக்குப் ...... பெருவேனோ 
திறற்கொக்கைப் படக்குத்திச் செருக்கிக்கொக் கரித்துச்சக்
     கரிக்குப்புத் திரற்குற்றுத் ...... தளைபூணச் 
சினத்துப்பொற் பொருப்பைப்பொட் டெழுத்தித்திக் கரித்துப்புத்
     திரத்தத்திற் சிரித்துற்றுப் ...... பலபேய்கள் 
பறிக்கப்பச் சிறைச்சிக்கட் கறிக்குப்பைச் சிரச்சிக்குப்
     பரப்பொய்க்கட் டறப்புக்குப் ...... பொருதோனே 
பணிச்செச்சைத் தொடைச்சித்ரப் புயத்துக்ரப் படைச்சத்திப்
     படைக்கச்சிப் பதிச்சொக்கப் ...... பெருமாளே.
பற்கள் கறை ஏறும்படி (பாக்கு வெற்றிலையின்) சிவப்பு நிறம் ஏறச் செய்தும், சிறிது நகைத்தும், கொஞ்சம் அதட்டியும், கண்களைப் பின் சுழல்வது போலச் செய்து முறைத்து விழித்தும், இளைஞர்களுடைய கழுத்தை அழுந்தக் கட்டிக் கொண்டு, சிமிழை ஒத்த மார்பகங்கள் படும்படி இறுக அணைத்து, (அதனால்) மனதை உருக்கி, கற்பு மனநிலை அழிபட, மிகுதியாக எழுகின்ற காம ஆசை தோன்றி இன்பத்தைத் தர, கற்பூரத்தைப் பொடி செய்து தேய்த்து அழகாக அலங்கரிக்கப்பட்ட கட்டிலின் மேல் சேர்ந்து கூடுகின்ற விலைமாதர்களின் இணக்கத்தை நீக்கி, சிறிதேனும் (அடியேனைக்) காப்பாற்ற, உனது அழகிய திருவடியை அடையக்கூடிய பாக்கியத்தைப் பெறுவேனோ? வலிமை வாய்ந்த மாமரமாகி நின்ற சூரனை அழிக்கும்படி குத்தியும், பெருமிதத்துடன் கர்ச்சித்து, சக்கரம் ஏந்திய திருமாலின் மகனாகிய பிரமனுக்குப் பொருந்த விலங்கை மாட்டிக் கோபித்தும், பொன் மலையாகிய கிரெளஞ்சத்தை பொடி எழும்படி நொறுக்கியும், அதை நிந்தித்தும், (போர்க்களத்தில்) புதிய ரத்தத்தில் சிரிப்புடன் அளைந்து பல பேய்கள் பச்சை மாமிசங்களில் கடித்துத் தின்பதற்குரிய குவியல்களைப் பிடுங்க, (உண்ணக் கிடைக்குமோ என்றிருந்த பேய்களுக்கு) மிகுந்த பசியும் ஆத்திரமும் வேகத்தில் அடியோடு நீங்க, யுத்த களத்திற்குப் புகுந்து சண்டை செய்தவனே, ஆபரணமாக வெட்சி மாலையை அணிந்த அழகிய புயத்தில் உக்ரமான ஆயுதமாகிய சக்தி வேற் படையைத் தாங்கி, காஞ்சீபுரத்தில் வீற்றிருக்கும் அழகிய பெருமாளே. 
பாடல் 329 - காஞ்சீபுரம்
ராகம் - பாகேஸ்ரீ; தாளம் - ஸங்கீர்ண சாபு - 4 1/2 
தக-1, திமி-1, தகதகிட-2 1/2
தத்தத் தனதான தத்தத் ...... தனதான
     தத்தத் தனதான தத்தத் ...... தனதான
அற்றைக் கிரைதேடி அத்தத் ...... திலுமாசை
     பற்றித் தவியாத பற்றைப் ...... பெறுவேனோ 
வெற்றிக் கதிர்வேலா வெற்பைத் ...... தொளைசீலா
     கற்றுற் றுணர்போதா கச்சிப் ...... பெருமாளே.
அன்றாடத்துக்கு வேண்டிய உணவைத் தேடி, பொருள் மீதும் ஆசையினை வைத்துக்கொண்டு தவிக்காத உறுதிப்பாடை யான் பெறுதற்கு இயலுமோ? வெற்றியே விளங்கும் ஜோதி வேலவனே, கிரெளஞ்சமலையைத் தொளைத்த பரிசுத்தனே, கற்றுத் தியானித்து உணரத்தக்க ஞானஸ்வரூபனே, காஞ்சிபுரத்தில் அமர்ந்த பெருமாளே. 
பாடல் 330 - காஞ்சீபுரம்
ராகம் - பெஹாக்; தாளம் - அங்கதாளம் - 6 
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3
தத்தத் தத்தத் ...... தனதான
     தத்தத் தத்தத் ...... தனதான
முட்டுப் பட்டுக் ...... கதிதோறும்
     முற்றச் சுற்றிப் ...... பலநாளும் 
தட்டுப் பட்டுச் ...... சுழல்வேனைச்
     சற்றுப் பற்றக் ...... கருதாதோ 
வட்டப் புட்பத் ...... தலமீதே
     வைக்கத் தக்கத் ...... திருபாதா 
கட்டத் தற்றத் ...... தருள்வோனே
     கச்சிச் சொக்கப் ...... பெருமாளே.
சங்கடப்பட்டு, தேவ, மனித, நரக, விலங்கு என்ற நால்வகை கதிகளிலும் முழுவதுமாக அலைந்து திரிந்து பல பிறவியிலும் தடுமாற்றம் அடைந்து சுழல்கின்ற என்னை சிறிதாவது கவனித்துக்கொள்ள நினைத்தலாகாதோ? வட்டமாகிய என் இதயகமல பீடத்தின் மேலே வைத்துப் பூஜிக்கத்தக்க திருவடிகளை உடையவனே, துன்பமுறும் சமயத்தில் வந்து அருள் புரிபவனே, காஞ்சீபுரத்தில் வீற்றிருக்கும் அழகிய பெருமாளே. 
பாடல் 331 - காஞ்சீபுரம்
ராகம் - .....; தாளம் - ..........
தத்தத் தத்தத் தத்தத் தத்தத்
     தத்தத் தத்தத் ...... தனதான
அற்றைக் கற்றைக் கொப்பித் தொப்பித்
     தத்தத் தத்தத் ...... தருவோர்தாள் 
அர்ச்சித் திச்சித் தக்கத் தக்கத்
     தொக்குத் திக்குக் ...... குடில்பேணிச் 
செற்றைப் புற்சொற் கற்றுக் கற்றுச்
     செத்துச் செத்துப் ...... பிறவாதே 
செப்பச் செப்பப் பச்சைப் பச்சைச்
     செச்சைச் செச்சைக் ...... கழல்தாராய் 
துற்றுப் பிற்புக் குற்றக் கொக்கைத்
     துட்கத் திட்கப் ...... பொரும்வேலா 
சுத்தப் பத்திச் சித்ரச் சொர்க்கச்
     சொர்க்கத் தத்தைக் ...... கினியோனே 
கற்றைப் பொற்றைப் பற்றக் குத்திக்
     கத்தக் கத்தக் ...... களைவோனே 
கற்புச் சத்திப் பொற்புச் சத்திக்
     கச்சிச் சொக்கப் ...... பெருமாளே.
அன்றைக்கு அன்றைக்கு (நாள் தோறும்) அலங்கரித்து, அலங்கரித்து, தாம் பெற்ற பொருளுக்குத் தக்க மறு உதவியைக் கொடுப்பவர்களாகிய விலை மகளிர்களுடைய பாதங்களைப் போற்றியும், விரும்பியும், கண்ணுக்குக் கண்ணாய் பாதுகாத்தும், இந்த உலகின் திக்குகள் தோறும் சென்று கூடி, என் உடலைப் போற்றி வளர்த்து, நிரம்ப இழிவான சொற்களை மேலும் மேலும் கற்று, இறந்துபட்டு இறந்துபட்டுப் பல பிறவிகளை அடையா வண்ணம் மேலும் மேலும் சொல்லித் துதிக்க, உனது மிகக் குளிர்ச்சி பொருந்திய சிவந்த வெட்சி மலரணிந்த திருவடியைத் தந்து அருளுக. நெருங்கிப் பின் தொடர்ந்து, கடலில் இருந்த மாமரமாகிய சூரனை பயப்பட்டு திடுக்கிடும்படி சண்டை செய்த வேலனே, பரிசுத்தமான, பேரன்புடைய, அழகிய மார்பினை உடைய விண்ணுலகக் கிளியான தேவயானைக்கு இனிமையானவனே, திரண்ட மலையாகிய கிரெளஞ்சத்தை தாக்கிக் குத்தி, (அம் மலை அரக்கன்) கூச்சலிட்டு அழ அழித்துத் தொலைத்தவனே, கற்புக்கு அணிகலமாம் தேவி பார்வதி அளித்த அழகிய சக்திவேலை ஏந்தும் பெருமாளே, காஞ்சீபுரத்தில் வீற்றிருக்கும் அழகிய பெருமாளே. 
பாடல் 332 - காஞ்சீபுரம் 
ராகம் - .....; தாளம் - ..........
தத்தத் தத்தத் தத்தத் தத்தத்
     தத்தத் தத்தத் ...... தனதான
சுத்தச் சித்தத் தொற்பத் தர்க்குச்
     சுத்தப் பட்டிட் ...... டமுறாதே 
தொக்கப் பொக்கச் சிற்கட் சிக்குட்
     சொற்குற் றத்துத் ...... துறைநாடி 
பித்தத் தைப்பற் றித்தைத் தற்றுற்
     றொத்துக் கித்திப் ...... பிணிமாதர் 
பெட்டிற் கட்டுத் தட்டுப் பட்டுப்
     பிற்பட் டிட்டுத் ...... தளர்வேனோ 
அத்தத் தத்திக் கத்தற் கெய்த்தத்
     தத்திக் கத்துப் ...... பலமீவாய் 
அர்ச்சித் துப்பொற் செக்கொச் சைத்தத்
     தைக்குச் செச்சைத் ...... தொடைசூழ்வாய் 
கத்தத் தித்தத் தத்திற் கொக்கைக்
     கைத்தச் சத்திப் ...... படையேவுங் 
கற்புச் சத்திப் பொற்புச் சத்திக்
     கச்சிச் சொக்கப் ...... பெருமாளே.
தூய்மையான உள்ளத்தை உடைய பழைய அடியார்களுக்கு சுத்த மனத்துடன் நட்பு வைக்காமல், மிகுந்த பொய்கள் கலந்த சில கட்சிகளைச் சேர்ந்து சொற் குற்றங்களுக்கு இடம் தரும் வழிகளை நாடியும், மயக்கத்தில் கட்டுண்டு, தை தை என்ற தாளக்கட்டுக்கு ஒத்ததான கித்தி என்ற ஒருவகை நடனத்தால் வசப்படுத்துகின்ற பொது மாதர்களுடைய பசப்பு வார்த்தையில் அகப்பட்டு தடுமாற்றம் அடைந்து, வாழ்வில் முன்னேற்றம் இல்லாமல் கீழ் நிலைக்கு ஆளாகி, தளர்ச்சி உறுவேனோ? அந்த மனக் கவலை கொண்டிருந்த, ஐராவதம் என்ற யானைக்குத் தலைவனாகிய இந்திரனுக்கும், (தவம் செய்து) இளைத்துப் போயிருந்த அந்த (திருமாலாகிய) யானைக்கும்* சித்திக்கும்படியான பலம் அளித்தவனே, வள்ளியைப் பூஜித்து**, அழகிய செம்மை வாய்ந்த திருந்தாப் பேச்சைப் பேசும் கிளிபோன்ற அந்த வள்ளிக்கு வெட்சி மாலையைச் சூட்டியவனே, ஒலிக்கின்ற கடலில் ஆபத்தான நிலையில் இருந்த மாமரமாகிய சூரன் மீது கையில் இருந்த சக்தி வேலைச் செலுத்தியும், கற்புக்கு அணிகலமாகிய பார்வதி அளித்த அழகிய சக்தி வேற்படையை ஏந்தியும், காஞ்சீபுரத்தில் வாழும் அழகிய பெருமாளே. 
* நீண்ட தவத்துக்குப் பின்பு, திருமாலை யானையாக்கி அதனை முருக வேள் ஊர்ந்தார். இதனால் முருகன் கயாரூட மூர்த்தி ஆனார் - திருமுருகாற்றுப்படை.
** வள்ளிக்கு அர்ச்சித்ததும், மாலை சூட்டியதும் வள்ளியிடம் முருகனுக்கு இருந்த பெருங் காதலை விளக்கும் - கந்த புராணம்.
பாடல் 333 - காஞ்சீபுரம் 
ராகம் - .....; தாளம் -
தத்தத் தத்தத் தனனத் தத்தத் தத்தத் தனனத்
     தத்தத் தத்தத் தனனத் ...... தனதான
கொக்குக் கொக்கத் தலையிற் பற்றுச் சிக்கத் தளகக்
     கொத்துற் றுக்குப் பிணியுற் ...... றவனாகிக் 
குக்கிக் கக்கிக் கடையிற் பற்றத் துற்றுக் கழலக்
     கொத்தைச் சொற்கற் றுலகிற் ...... பலபாஷை 
திக்கித் திக்கிக் குளறிச் செப்பித் தப்பிக் கெடுபொய்ச்
     செற்றைச் சட்டைக் குடிலைச் ...... சுமைபேணும் 
சிக்கற் றுட்குக் கருணைச் சுத்தச் சித்தித் தமிழைத்
     திட்டத் துக்குப் புகலப் ...... பெறுவேனோ 
அக்கிட் டிக்கிட் டமருக் கொட்டிக் கிட்டிட் டெதிரிட்
     டத்ரத் தெற்றிக் கடுகப் ...... பொருசூரன் 
அச்சுக் கெட்டுப் படைவிட் டச்சப் பட்டுக் கடலுட்
     புக்குப் பட்டுத் துருமத் ...... தடைவாகத் 
தக்குத் திக்குத் தறுகட் டொக்குத் தொக்குற் றதுகட்
     கைக்கொட் டிட்டிட் டுடல்சிற் ...... கணமாடிச் 
சத்திக் குத்தித் துடியிற் சத்திக் கக்கைச் சமர்செய்ச்
     சத்திக் கச்சிக் குமரப் ...... பெருமாளே.
கொக்கின் நிறம் போல தலையில் பற்றியுள்ள சிகையின் மயிர்த் தொகுதி வெண்மை நிறத்தை அடைந்து, மெலிந்து, நோயுற்றவனாகி, இருமி, வாந்தி செய்து, இறுதியில் பற்கள் எல்லாம் ஆட்டம் கண்டு விழுந்து ஒழிய, இழிவான சொற்களைக் கற்று உலகத்திலுள்ள பல மொழிகளை தடைபட்டுத் தடைபட்டுக் குழறிப் பேச, தவறுதலான வழியில் சென்று, குப்பை நிறைந்த சட்டை என்னும் இந்தக் குடிசையாகிய உடலின் சுமையை விரும்புகின்ற சிக்கல் நீங்கப் பெற்று, உள்ளத்தில் கருணை என்னும் எண்ணம் வாய்க்கப் பெற்று, தூய்மையானதும் நற் கதியைத் தர வல்லதுமான தமிழ்ப் பாக்களை நினைத்தபடி கோர்வையாகச் சொல்லும் பாக்கியத்தைப் பெறுவேனோ? அங்குமிங்குமாகப் பல இடங்களில் போர் செய்யத் துணிந்து, மிக அருகில் வந்து நெருக்கி எதிர்த்து, ஆயுதங்களைச் செலுத்தி விரைவாகச் சண்டை செய்த சூரன் உடம்பு கெட்டுப் போய், ஆயுதங்களைக் கைவிட்டு, பயந்து, கடலுக்குள்ளே புகுந்து, மாமர உருவத்தை அடைந்து நிற்க, அகங்காரத்துடன் இருந்த வீரம் எல்லாம் தக்குத் திக்கெனத் தடுமாற, கண்ணும், மற்ற உணர்ச்சிகளும் அழிந்துவிட, கைகளை மட்டும் மிகவும் கொட்டி ஆர்ப்பரித்து, உடலுடன் சில விநாடிகள் ஆட்டம் கண்டு, சக்தியாகிய வேற்படை குத்திய வலியால் (சூரன்) துடித்துக் கதறி ஒலி செய்ய, தர்மமான போரைச் செய்தவனே, சக்தியாகிய காமாட்சி தங்கும் காஞ்சீபுரத்தில் எழுந்தருளியுள்ள குமரப் பெருமாளே. 
வலிய சூர சம்ஹாரத்தை விவரிக்கும் இந்தப் பாடல் வல்லினங்கள் மிகுதியாக அமைந்த பாடல்.
பாடல் 334 - காஞ்சீபுரம் 
ராகம் - .....; தாளம் -
தத்தத் தத்தத் தத்தத் தத்தத்
     தத்தத் தத்தத் ...... தனதான
தத்தித் தத்திச் சட்டப் பட்டுச்
     சத்தப் படுமைக் ...... கடலாலே 
சர்ப்பத் தத்திற் பட்டுக் கெட்டுத்
     தட்டுப் படுமப் ...... பிறையாலே 
சித்தத் துக்குப் பித்துற் றுச்சச்
     சித்ரக் கொடியுற் ...... றழியாதே 
செப்பக் கொற்றச் சிற்பப் பத்திச்
     செச்சைத் தொடையைத் ...... தரவேணும் 
கொத்துத் திக்குப் பத்துட் புக்குக்
     குத்திக் கிரியைப் ...... பொரும்வேலா 
கொச்சைப் பொச்சைப் பொற்பிற் பச்சைக்
     கொச்சைக் குறவிக் ...... கினியோனே 
சுத்தப் பத்தத் தர்க்குச் சித்தத்
     துக்கத் தையொழித் ...... திடும்வீரா 
சொர்க்கத் துக்கொப் புற்றக் கச்சிச்
     சொக்கப் பதியிற் ...... பெருமாளே.
அலைகள் தாவித் தாவிச் சென்று ஓர் ஒழுங்கு முறையில் ஒலி செய்கின்ற கரிய நிறக் கடலாலும், (கிரகணத்தின் போது ராகு கேது எனப்படும்) பாம்பால் பிடி படுதல் என்னும் ஆபத்தில் அகப்பட்டு, கெடுதல் உற்று தடை படுகின்ற அந்தச் சந்திரனாலும், மனதில் மோக வெறி கொண்டு, அதன் அதிகமான நிலையை இந்த அழகிய கொடி போன்ற பெண் அடைந்து அழிந்து போகாமல், (உனது) செவ்வையானதும், வீரத்துக்கு அறிகுறியானதும், தொழில் திறம் காட்டுவதும், வரிசையாக அமைந்துள்ளதுமான வெட்சி மாலையைத் தந்தருள வேண்டும். நிறைந்துள்ள பத்துத் திக்குகளிலும் புகுந்து, வேலால் குத்தி, கிரெளஞ்ச மலையைப் போரில் வென்ற வேலனே, மிழற்றும் பேச்சைப் பேசுபவளும், காடு மலைகளில் இருப்பவளும், அழகிய பச்சை நிறம் கொண்டவளும் ஆகிய குறப் பெண் வள்ளிக்கு இனியவனே, பரிசுத்தமான, பக்தியில் உயர்ந்த அன்பர்களுக்கு மனதில் உள்ள துயரங்களை ஒழிக்கும் வீரனே, தேவ உலகுக்கு ஒப்பான கச்சி எனப்படும் அழகிய நகரில் வீற்றிருக்கும் பெருமாளே. 
இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் அமைந்தது.அலைகள், கடல், சந்திரன் முதலியவை தலைவனின் பிரிவுத் துயரால் ஏற்படும் விரக தாபத்தை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.
கடலாலேதட்டுப் படுமப் பிறையாலேசித்ரக் கொடியுற் றழியாதேசெச்சைத் தொடையைத் தரவேணும்குத்திக் கிரியைப் பொரும்வேலாகொச்சைக் குறவிக் கினியோனேதுக்கத் தையொழித் திடும்வீராசொக்கப் பதியிற் பெருமாளே.
பாடல் 335 - காஞ்சீபுரம் 
ராகம் - பஹு஥தாரி; தாளம் - திஸ்ர ரூபகம் - 5 
- எடுப்பு - /3 0
தத்தத்தத் தத்தத் தத்தத்தத் தத்தத்
     தத்தத்தத் தத்தத் ...... தனதான
பொக்குப்பைக் கத்தத் தொக்குப்பைக் குத்துப்
     பொய்த்தெத்துத் தத்துக் ...... குடில்பேணிப் 
பொச்சைப்பிச் சற்பக் கொச்சைச்சொற் கற்றுப்
     பொற்சித்ரக் கச்சுக் ...... கிரியார்தோய் 
துக்கத்துக் கத்திற் சிக்குப்பட் டிட்டுத்
     துக்கித்துக் கெய்த்துச் ...... சுழலாதே 
சுத்தச்சித் தத்துப் பத்திப்பத் தர்க்கொத்
     துச்சற்றர்ச் சிக்கப் ...... பெறுவேனோ 
திக்குத்திக் கற்றுப் பைத்தத்தத் திக்குச்
     செற்பத்ரக் கொக்கைப் ...... பொரும்வேலா 
செப்பச்சொர்க் கத்துச் செப்பொற்றத் தைக்குச்
     செச்சைக்கொத் தொப்பித் ...... தணிவோனே 
கக்கக்கைத் தக்கக் கக்கட்கக் கக்கிக்
     கட்கத்தத் தர்க்குப் ...... பெரியோனே 
கற்றைப்பொற் றெத்தப் பெற்றப்பொற் சிற்பக்
     கச்சிக்குட் சொக்கப் ...... பெருமாளே.
குற்றங்கள் நிறைந்த பை, மலம் மிகுந்த பை, சுடுசொல், பொய், வஞ்சகம், ஆபத்து இவைகள் எல்லாம் கலந்த குடிசையான இந்த உடலை விரும்பி, குற்றமானதும், பைத்தியம் கொண்டதும், அற்பமானதும், இழிவானதுமான சொற்களைக் கற்று, அழகிய விசித்திரமான கச்சணிந்த பெருமார்புப் பெண்டிரைச் சேர்வதால் வரும் கொடிய துக்கத்தில் மாட்டிக்கொண்டு வேதனையுற்று, இளைத்து, மனம் சுழன்று சஞ்சலப்படாமல், பரிசுத்த மனதுடன் பக்தி பூண்ட பக்தர்களுக்கு இணையாக சிறிதளவேனும் உன்னைப் பூஜிக்கும் பாக்கியத்தைப் பெறுவேனோ? எந்தத் திக்கிலும் உதவியின்றி, தனிப்பட்டு, கடைசியில் பச்சைநிற அலைகள் மோதும் கடலுக்குள்ளே போய்ச் சேர்ந்து, இலைகளோடு கூடிய மாமரமாக மாறிய சூரனுடன் போர் செய்த வேலனே, செம்மையான விண்ணுலகில் உள்ள செம்பொன் போன்ற கிளியாகிய தேவயானையை வெட்சி மலர்க் கொத்தால் அலங்கரித்து மாலை சூட்டுபவனே, (பிரமன் முதலியோர் சா£ரத்தினின்றும்) சுழன்ற எலும்பை தகுந்தபடி தமது அங்கங்களுக்கு ஆபரணமாக ஆக்கி, அக்கினியை கண்ணிலே வைத்த தலைவர் சிவபிரானுக்கு குருவான பெரியவனே, திரளான துதிப்பாடல்களால் ஏத்தப்பெற்ற, அழகிய சிற்ப வேலைப்பாடுகள் அமைந்த கச்சியாகிய காஞ்சீபுரத்தில் வீற்றிருக்கும் அழகிய பெருமாளே. 
பாடல் 336 - காஞ்சீபுரம் 
ராகம் - .....; தாளம் - ......
தனனத்தத் தனனத்தத் தனனத்தத் தனனத்தத்
     தனனத்தத் தனனத்தத் ...... தனதான
அயிலப்புக் கயலப்புத் தலைமெச்சுற் பலநச்சுக்
     கணுரத்தைக் கனவெற்புத் ...... தனமேகம் 
அளகக்கொத் தெனவொப்பிப் புளுகிச்சொற் பலகற்பித்
     திளகிக்கற் புளநெக்குத் ...... தடுமாறித் 
துயில்விட்டுச் செயல்விட்டுத் துயர்வுற்றுக் கயர்வுற்றுத்
     தொடியர்க்கிப் படியெய்த்துச் ...... சுழலாதே 
சுருதிப்பொற் பொருள்செக்கர்க் குரவிட்டுத் தமர்பற்றித்
     தொழுசெச்சைக் கழல்பற்றிப் ...... பணிவேனோ 
புயலத்தைக் குயில்தத்தைக் கிளைபுக்குத் தொளைபச்சைப்
     புனமுத்தைப் புணர்சித்ரப் ...... புயவீரா 
புரவிக்கொட் பிரதற்றத் திருள்திக்கிப் படிமட்கப்
     புகல்பொற்குக் குடவெற்றிக் ...... கொடியோனே 
கயிலச்சுத் தரதத்துச் சயிலத்துத் தரநிற்கக்
     கரணிச்சித் தருள்கச்சிப் ...... பதியோனே 
கடலிற்கொக் கடல்கெட்டுக் கரமுட்கத் தரமுட்கப்
     பொருசத்திக் கரசொக்கப் ...... பெருமாளே.
கண்கள் வேல், அம்பு, மீன், நீர்க்கிடமான கடல், வியக்கத் தக்க நீலோற்பல மலர், விஷம் போன்றவை என்றும், நெஞ்சில் உள்ள மார்பகமோ பருத்த மலை போன்றது, கூந்தல் கொத்து இருண்ட மேகம் தான் என்று உவமை கூறி, பொய் பேசி, பல சொற்களைக் கற்பனையாக அமைத்து, உருகி, வலிமை உள்ள மனம் நெகிழ்ந்து, நிலை தடுமாற்றம் அடைந்து, தூக்கம் ஒழிந்து, செய்ய வேண்டிய செயல்கள் ஒழிந்து, துக்கம் கொண்டு, தளர்ச்சி அடைந்து, கைவளையல்கள் அணிந்த மாதர்களுக்கு இந்தவாறு இளைத்துப் போய் அலையாமல், வேதத்தின் அழகிய பொருளைக் கூறியவனாகிய உனது சிவந்த திருவடிக்கு குரா மலரைத் இட்டுப் பூஜித்து, அன்பு வைத்த அடியார் பற்றித் தொழுது பூஜிக்கும் வெட்சி மலர் சூழ்ந்த உனது திருவடியை சிக்கெனப் பிடித்துப் பணிய மாட்டேனோ? புயலை* வாகனமாகக் கொண்ட தேவயானையையும், குயில் போன்ற பேச்சை உடையவளும், (நிறத்தால்) கிளி போன்றவளும், கிளிகள் புகுந்து மூக்கால் தொளைத்து உண்கின்ற பச்சைத் தினை விளைந்த புனத்தில் (காவல் இருந்த) முத்துப் போன்ற வள்ளி நாயகியையும் சேர்க்கின்ற அழகிய புயங்களை உடைய வீரனே, குதிரைகள் சுழன்று வரும் சூரியனுடைய தேர் இருளான சமயத்தில் உலகு தடுமாறி வலிமை குன்றிப் போக, (இருள் நீங்கும்படி) உரத்துக் கூவுகின்ற அழகிய சேவல் என்ற வெற்றிக் கொடியை உடையவனே, பூமியை சமநிலையில் வைத்துள்ள ஆதாரமானது சாய்ந்து பயத்தைத் தர, ஆபத்தான நிலையிலிருந்த இமய மலையில் வட திசை உயர்ந்துசமமான நிலையில் நிற்கச் செய்தவரான சித்தராகிய அகத்திய முனிவர்* தியானித்து வணங்கிய காஞ்சீபுரத்தில் வாழ்பவனே, (சூரனாகிய) மாமரம் வலிமை இழந்து தன்னுடைய தீமை போய் நடுங்குதல் உண்டாக, மேன்மை போய் அஞ்சுதல் உண்டாகும் படியாக சண்டை செய்த சக்தி வேலை ஏந்திய திருக்கரத்தனே, அழகிய பெருமாளே. 
* இந்திரனுக்கு மேகம் வாகனம். எனவே அது அவன் மகள் தேவயானைக்கும் வாகனம்.
** பார்வதியின் திருமணத்தின் போது இமய மலையில் கூடிய முனிவர் பெருங் கூட்டத்தால், வட திசை தாழ்ந்தது.சிவபெருமான் ஆணையின்படி அகத்தியர் தென் திசைக்குச் சென்று, பொதிய மலையை அடைந்து, பூமியை நிலை நிறுத்தினார்.
பாடல் 337 - காஞ்சீபுரம் 
ராகம் - .....; தாளம் - ........
தத்தத் தனதன தத்தத் தனதன
     தத்தத் தனதன ...... தனதான
கச்சிட் டணிமுலை தைச்சிட் டுருவிய
     மச்சக் கொடிமதன் ...... மலராலுங் 
கச்சைக் கலைமதி நச்சுக் கடலிடை
     அச்சப் படவெழு ...... மதனாலும் 
பிச்சுற் றிவளுள மெய்ச்சுத் தளர்வது
     சொச்சத் தரமல ...... இனிதான 
பிச்சிப் புதுமலர் வைச்சுச் சொருகிய
     செச்சைத் தொடையது ...... தரவேணும் 
பச்சைத் திருவுமை யிச்சித் தருளிய
     கச்சிப் பதிதனி ...... லுறைவோனே 
பற்றிப் பணிபவர் குற்றப் பகைகெட
     உற்றுப் பொரவல ...... கதிர்வேலா 
இச்சித் தழகிய கொச்சைக் குறமகள்
     மெச்சித் தழுவிய ...... திருமார்பா 
எட்டுக் குலகிரி முட்டப் பொடிபட
     வெட்டித் துணிசெய்த ...... பெருமாளே.
கச்சை அணிந்த அழகிய மார்பகத்தைத் தைத்துக் கொண்டு ஊடுருவிச் சென்ற, மீன் கொடியைக் கொண்ட மன்மதனுடைய பூக்கணைகளாலும், தழும்புகள் உடைய கலைகளுடன் கூடிய சந்திரன் ஆலகால விஷத்தை உடைய கடலினிடையே இவள் பயப்படும்படி எழுந்துள்ள அந்தச் செய்கையாலும், பைத்தியம் பிடித்து இத் தலைவி மனம் இளைத்துத் தளர்ச்சி அடைவது சாமானியமான அளவு இல்லை. (ஆதலால், முருகா,) இனிமை தரும் ஜாதி மல்லிகையின் புது மலர்கள் இடையிடையே வைத்துச் சொருகப்பட்ட வெட்சி மாலையை நீ இவளுக்குத் தந்தருள வேண்டும். பச்சை நிறமுள்ள உமா தேவி அன்புடன் (சிவ பிரானுக்கு) பூஜை செய்து அருளிய காஞ்சி மா நகரத்தில் உறைபவனே, அன்பு வைத்து உன்னைப் பணிபவர்களுக்கு குற்றம் செய்யும் பகைவர்கள் அழிந்து போக, வந்து போர் செய்து உதவிய கதிர் வேலனே, உன் மீது காதல் கொண்டு அழகு வாய்ந்தவளும், மழலைமொழி பேசும் குறத்தி ஆனவளுமான வள்ளி நாயகி மெச்சித் தழுவிய அழகிய மார்பனே, ஏழு குல மலைகளுடன் கிரெளஞ்சமலையும் சேர்த்து எட்டு மலைகளும் அடியோடு பொடியாகும்படி சண்டை செய்து, அசுரர்களை வெட்டித் துணித்த பெருமாளே. 
இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் தலைவியின் நற்றாய் பாடுவதுபோல அமைந்தது.மன்மதன், மலர் அம்புகள், சந்திரன், கடல் முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.
பாடல் 338 - காஞ்சீபுரம் 
ராகம் - .....; தாளம் - .......
தனதன தானாந்தன தனதன தானாந்தன
     தனதன தானாந்தன ...... தனதான
கமலரு சோகம்பர முடிநடு வேய்பூங்கணை
     கலகமர் வாய்தோய்ந்தம ...... ளியின்மீதே 
களையற மீதூர்ந்தெழ மதனவி டாய்போம்படி
     கனவிய வாரேந்தின ...... இளநீர்தோய்ந் 
தெமதுயிர் நீலாஞ்சன மதர்விழி யால்வாங்கிய
     இவளுடன் மால்கூர்ந்திடு ...... மநுபோகம் 
இனிவிட வேதாந்தப ரமசுக வீடாம்பொருள்
     இதவிய பாதாம்புய ...... மருள்வாயே 
அமகர ஆசாம்பர அதுகர ஏகாம்பர
     அதுலன நீலாம்பர ...... மறியாத 
அநகர நாளாங்கிதர் தமையுமை யாள்சேர்ந்தருள்
     அறமுறு சீகாஞ்சியி ...... லுறைவோனே 
விமலகி ராதாங்கனை தனகிரி தோய்காங்கெய
     வெடிபடு தேவேந்திர ...... னகர்வாழ 
விரிகடல் தீமூண்டிட நிசிசரர் வேர்மாண்டிட
     வினையற வேல்வாங்கிய ...... பெருமாளே.
(மன்மதனுடைய ஐந்து மலர்ப் பாணங்களில்* முதல் கணையாகிய) தாமரை மலர், அருமையான (இடைக் கணையாகிய) அசோக மலர், (கடைக் கணையாகிய) நீலோற்பல மலர், இவற்றிற்கு இடை இடையே உள்ள மாம்பூ, முல்லை (ஆகிய மலர்ப் பாணங்களின் தொழில் ஆற்றலால்) கலகப் போரில் ஈடுபட்டு, படுக்கையின் மேல் சோர்வு நீங்க என் மீது தாக்கி எழுகின்ற காம தாகம் நீங்கும்படி, கனத்ததும், கச்சு தாங்கியதும், இளநீர் போன்றதுமான மார்பகங்களைத் தழுவி என்னுடைய உயிரை கரிய மை தீட்டப்பட்ட, செழிப்புள்ள கண்ணால் கவர்ந்த இந்தப் பெண் மீது மோகம் மிக்கு எழும் இன்ப நுகர்ச்சியை இனி விட்டு ஒழிப்பதற்கு, வேத முடிவான, பரம சுகம் தருவதான, முக்திப் பொருளாகிய, இன்பம் தருவதான பாதத் தாமரைகளைத் தந்து அருளுக. அ, ம, கர, (ஓங்கார) என்னும் பிரணவாகரமானவரும், திகம்பரரும், அது என்று அ·றிணை நிலையிலும் போற்றப்படக் கூடியவரும், ஒருவராய் மாமரத்தின் கீழ் வீற்றிருப்பவரும், ஒப்பற்ற தன்மை உடையவரும், அன்ன ரூபம் கொண்ட பிரமன் நீல நிறமுள்ள ஆகாயத்தில் முடியைத் தேடி காண முடியாதவரும், பாபத்தை ஒழிப்பவரும், (தேவியின்) அழகிய மார்பின் காம்பின் தழும்பை உடையவரும் ஆகிய சிவபெருமானை, உமா தேவி தவம் செய்து பெற்றதும், முப்பத்திரண்டு அறங்கள்** நிகழ்வதுமான திருக் காஞ்சி நகரில் வாழ்பவனே, பரிசுத்தமானவனே, வேடப் பெண் வள்ளியின் தன மலைகளைத் தழுவுகின்ற கங்கையின் புத்திரனே, நறுமணம் கமழ்கின்ற பொன்னுலகத்தில் தேவர்கள் வாழும் பொருட்டு, பரந்த கடல் நெருப்புப் பற்றி எழவும், அசுரர்கள் வேரோடு மாளவும், தீவினைகள் நீங்கவும் வேலைச் செலுத்திய பெருமாளே. 
* மன்மதனுடைய ஐந்து பாணங்கள் வருமாறு. முதற் கணை =தாமரை. நடுக் கணை = அசோகம். கடைக் கணை = நீலோற்பலமலர். இடை இடையாகும் கணைகள் = மா, முல்லை.
** பெரிய புராணத்தில் கூறிய முப்பத்திரண்டு அறங்கள் பின்வருமாறு:சாலை அமைத்தல், ஓதுவார்க்கு உணவு, அறுசமயத்தாருக்கும் உணவு, பசுவுக்குத் தீனி, சிறைச் சோறு, ஐயம், தின்பண்டம் நல்கல், அநாதைகளுக்கு உணவு, மகப்பெறுவித்தல், மகவு வளர்த்தல், சிசுக்களுக்குப் பால் நல்கல், அநாதைப் பிணம் சுடுதல், அநாதைகளுக்கு உடை, சுண்ணாம்பு பூசல், நோய்க்கு மருந்து, வண்ணார் தொழில், நாவிதத் தொழில், கண்ணாடி அணிவித்தல், காதோலை போடுதல், கண் மருந்து, தலைக்கு எண்ணெய், ஒத்தடம் தருதல், பிறர் துயர் காத்தல், தண்ணீர்ப் பந்தல், மடம் கட்டுதல், தடாகம் அமைத்தல், சோலை வளர்த்தல், தோல் பதனிடல், மிருகங்களுக்கு உணவு, ஏர் உழுதல், உயிர் காத்தல், கன்னிகாதானம்.
பாடல் 339 - காஞ்சீபுரம் 
ராகம் - பெஹாக்; தாளம் - அங்கதாளம் - 15 1/2 
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2 
தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தனன தானன தத்தன தனதன
     தானா தத்தத் ...... தனதான
கரும மானபி றப்பற வொருகதி
     காணா தெய்த்துத் ...... தடுமாறுங் 
கலக காரண துற்குண சமயிகள்
     நானா வர்க்கக் ...... கலைநூலின் 
வரும நேகவி கற்பவி பரிதம
     னோபா வத்துக் ...... கரிதாய 
மவுன பூரித சத்திய வடிவினை
     மாயா மற்குப் ...... புகல்வாயே 
தரும வீம அருச்சுன நகுலச
     காதே வர்க்குப் ...... புகலாகிச் 
சமர பூமியில் விக்ரம வளைகொடு
     நாளோர் பத்தெட் ...... டினிலாளுங் 
குரும கீதல முட்பட வுளமது
     கோடா மற்க்ஷத் ...... ரியர்மாளக் 
குலவு தேர்கட வச்சுதன் மருககு
     மாரா கச்சிப் ...... பெருமாளே.
வினையின் காரணமாக நேர்ந்த இந்தப் பிறப்பு தொலைவதற்கு ஒரு வழியும் தெரியாமல் இளைத்துத் தடுமாறுபவரும், குழப்பத்தை விளைவிக்கும் பொல்லாத குணமுடையவருமான சமயவாதிகளின் பலவிதமான சாஸ்திர நூல்களில் சொல்லப்பட்ட அனேக மாறுபாடுகள் கொண்டதும், பொருந்தாததுமான மன உணர்ச்சிக்கு எட்டாததான, மெளனநிலை, நிறைவு இவற்றைக் கொண்டதான, உண்மை ஒளியை நான் இறப்பின்றி விளங்குவதற்காக உபதேசித்து அருள்வாயாக. தருமன், வீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகிய ஐவர்க்கும் பாதுகாப்பு அளிப்பவனாகி, போர்க்களத்தில் வெற்றிச் சங்கை (பாஞ்சஜன்யத்தை) ஊதி, நாள் ஒரு பதினெட்டில் நிகழும் போரில் குருக்ஷேத்திரம் பாழ்நிலமாக, தனது திருவுள்ளம் கோணாது நெறிமுறையில் நிற்கவும், கெளரவ அரசர்கள் யாவரும் இறந்து படவும், (அர்ச்சுனனின்) விளக்கமுற்ற தேரைச் செலுத்திய அச்சுதனின் (திருமாலின்) மருகனே, குமாரஸ்வாமியே, காஞ்சீபுரத்துப் பெருமாளே. 
பாடல் 340 - காஞ்சீபுரம் 
ராகம் - .....; தாளம் - .......
தனதன தத்தத் தாந்த தானன
     தனதன தத்தத் தாந்த தானன
          தனதன தத்தத் தாந்த தானன ...... தனதான
கலகலெ னப்பொற் சேந்த நூபுர
     பரிபுர மொத்தித் தாந்த னாமென
          கரமல ரச்சிற் றாந்தொ மாடிய ...... பொறியார்பைங் 
கடிதட முற்றுக் காந்த ளாமென
     இடைபிடி பட்டுச் சேர்ந்த ஆலிலை
          கனதன பொற்பிட் டோங்கு மார்பொடு ...... வடமாடச் 
சலசல சச்சச் சேங்கை பூண்வளை
     பரிமள பச்சைச் சேர்ந்து லாவிய
          சலசமு கத்துச் சார்ந்த வாள்விழி ...... சுழலாடத் 
தரளந கைப்பித் தாம்ப லாரிதழ்
     குலமுகி லொத்திட் டாய்ந்த வோதியர்
          சரசமு ரைத்துச் சேர்ந்த தூவைய ...... ருறவாமோ 
திலதமு கப்பொற் காந்தி மாதுமை
     யெனையருள் வைத்திட் டாண்ட நாயகி
          சிவனுரு வத்திற் சேர்ந்த பார்வதி ...... சிவகாமி 
திரிபுவ னத்தைக் காண்ட நாடகி
     குமரிசு கத்தைப் பூண்ட காரணி
          சிவைசுடர் சத்திச் சாம்ப வீஅமை ...... யருள்பாலா 
அலகையி ரத்தத் தோங்கி மூழ்கிட
     நரிகழு குப்பிச் சீர்ந்து வாயிட
          அசுரர்கு லத்தைக் காய்ந்த வேல்கர ...... முடையோனே 
அமரர்ம கட்குப் போந்த மால்கொளும்
     விபுதகு றத்திக் காண்ட வாதின
          மழகுசி றக்கக் காஞ்சி மேவிய ...... பெருமாளே.
கலகல என்று அழகிய சிவந்த பாத கிண்கிணியும், சிலம்பும் தாள ஒத்துப் போல தாம் தனாம் என்று ஒலிக்க, தாமரை மலர் போன்ற கைகள், அதற்குச் சரியாக அமைந்த தாந்தோம் என ஆடல் பயில்கின்ற தந்திரத்தினர், செழிப்பு வாய்ந்த தங்கள் பெண்குறி விரிவடைய, காந்தள் மலரை ஒத்த ஒரு பிடி அளவே உள்ள மெல்லிய இடையில் பட்டாடை பொருந்திய ஆலிலை போன்ற வயிற்றுடனும், கனத்த தனங்கள் அழகு தந்து விளங்கும் மார்புடனும் முத்து மாலை அசைய, சலசல சச்ச என்று ஒலிக்கும் சிவந்த கைகளில் அணிந்துள்ள வளையல்கள் ஒலிக்க, நறு மணம் கமழும் பச்சைப் பொட்டு பொருந்தி விளங்கும் தாமரை போன்ற முகத்தில் உள்ள வாள் போன்ற கண்கள் சுழன்று அசைய, முத்துப் போன்ற பற்கள் ஒளி வீச, செவ்வாம்பல் போன்ற வாயிதழைக் கொண்டவர்கள், சிறந்த மேகம் போன்ற, சீவப்பட்ட கூந்தலை உடைவர்கள் காம லீலைப் பேச்சுக்களைப் பேசி புணர்கின்ற, மாமிசம் உண்ணும் பொது மாதர்களுடைய சம்பந்தம் நல்லதாகுமோ? பொட்டு அணிந்த முகத்தின் அழகிய ஒளி வீசும் மாதாகிய உமா தேவி என் மீது திருவருள் வைத்து என்னை ஆண்டருளிய நாயகி, சிவ பெருமானது திருவுருவத்தில் இடது பாதியில் சேர்ந்துள்ள பார்வதி, சிவகாமி, மூன்று உலகங்களையும் படைத்த நாடகத்தினள், குமரி, சுகத்தையே அணிந்துள்ள காரண சக்தி, ஜோதி மயமான சிவனுடைய தேவி, பரா சக்தி சாம்பவி ஆகிய உமை அம்மை அருளிய பாலகனே, பேய்கள் இரத்தத்தில் நன்றாக முழுகியும், நரியும் கழுகும் (உண்டதால் உடல்) உப்பிப் பெருக்க (சமயம் வாய்த்ததென்று) வாயை வைத்து உண்ணவும் அசுரர்கள் குலத்தைச் சுட்டு அழித்த வேலாயுதத்தைக் கையில் ஏந்தியவனே, தேவர் மகளான தேவயானை மீது பாயும் ஆசை கொண்ட தேவனே, குற வள்ளியை ஆண்டவனே, நாள்தோறும் அழகு விளங்கி மேம்பட காஞ்சியில் வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 341 - காஞ்சீபுரம் 
ராகம் - .....; தாளம் - ....
தத்தா தத்தா தத்தா தத்தா
     தத்தா தத்தா ...... தனதான
கொத்தார் பற்கா லற்றே கப்பாழ்
     குப்பா யத்திற் ...... செயல்மாறிக் 
கொக்கா கிக்கூ னிக்கோல் தொட்டே
     கொட்டா விக்குப் ...... புறவாசித் 
தித்தா நிற்றார் செத்தார் கெட்டேன்
     அஆ உஉ...... எனவேகேள் 
செற்றே சுட்டே விட்டே றிப்போ
     மப்பே துத்துக் ...... கமறாதோ 
நித்தா வித்தா ரத்தோ கைக்கே
     நிற்பாய் கச்சிக் ...... குமரேசா 
நிட்டூ ரச்சூர் கெட்டோ டப்போர்
     நெட்டோ தத்திற் ...... பொருதோனே 
முத்தா ரத்தோ ளிற்கோ டற்பூ
     முட்டா திட்டத் ...... தணிவோனே 
முற்றா நித்தா அத்தா சுத்தா
     முத்தா முத்திப் ...... பெருமாளே.
வரிசையாக நிறைந்திருந்த பல் வேரற்று விழுந்து போக, பாழ்பட்ட சட்டையான இந்த உடலின் செயல்கள் தடுமாறி, மயிரெல்லாம் கொக்கின் நிறமாக வெளுத்து, உடல் கூன் அடைந்து, ஊன்றுகோல் பிடித்து, கொட்டாவி விட்ட தலை குனிதலை அடைந்து, இவ்வாறு நிலை வேறுபாடுகளை அனுபவித்து, நின்றார், பின்னர் இறந்தார், ஐயோ கெட்டேன் எனக் கூறிக் கதறி, அ ஆ உ உ என்னும் ஒலியுடன் உறவினர் அழ, சுடுகாட்டுக்குச் சென்று, அங்கு பிணத்தைச் சுட்டுவிட்டு, (நீரில் மூழ்கி) வெளியேறி வருகின்ற அந்தப் பேதைமை வாய்ந்த துக்கம் நீங்காதோ? என்றும் உள்ளவனே, விரிந்த தோகையை உடைய மயில் மீது விளங்கி நிற்பவனே, காஞ்சீபுரத்துக் குமரேசனே, கொடுமை வாய்ந்த சூரன் கேடு அடைந்து கடலிடையே ஓட, போரினை பெரிய கடலில் புரிந்தவனே, முத்து மாலை அணிந்த தோளில் வெண்காந்தள் மலரைத் தவறாது விருப்பத்துடன் அணிபவனே, முதுமையே வாராதவனே, என்றும் இளமையாய் இருப்பவனே, என் தந்தையே, பரிசுத்தனே, பாசங்களினின்று நீங்கியவனே, முக்தியைத் தரும் பெருமாளே. 
என்று தொடங்கும் பாடல்கள்.
பாடல் 342 - காஞ்சீபுரம் 
ராகம் - .....; தாளம் - .....
தானத் தத்தத் தத்தன தத்தத் ...... தனதான
கோவைச் சுத்தத் துப்பத ரத்துக் ...... கொடியார்தங் 
கோலக் கச்சுக் கட்டிய முத்தத் ...... தனமேவிப் 
பாவத் துக்குத் தக்கவை பற்றித் ...... திரியாதே 
பாடப் பத்திச் சித்த மெனக்குத் ...... தரவேணும் 
மாவைக் குத்திக் கைத்தற எற்றிப் ...... பொரும்வேலா 
மாணிக் கச்சொர்க் கத்தொரு தத்தைக் ...... கினியோனே 
சேவற் பொற்கைக் கொற்றவ கச்சிப் ...... பதியோனே 
தேவச் சொர்க்கச் சக்கிர வர்த்திப் ...... பெருமாளே.
கொவ்வைப் பழம் போலவும், சுத்தமான பவளம் போலவும் சிவந்த வாயிதழ்களை உடைய கொடி போன்ற விலைமாதர்களின் அழகிய கச்சு அணிந்துள்ளதும், முத்து மாலை அணிந்துள்ளதுமான மார்பகங்களை விரும்பி, பாவ காரியங்களுக்குத் தக்கவையான செயல்களையே பற்றிக்கொண்டுச் செய்து திரியாமல், உன்னைப் பாடிப் புகழப் பக்தி நிறைந்த உள்ளத்தை எனக்குத் தந்தருள வேண்டும். மாமரமாக வந்த சூரனைக் குத்தி, அவனை வெறுத்து அடியோடு கொன்று சண்டை செய்த வேலை ஏந்தியவனே, மாணிக்கம் முதலிய ரத்தினங்கள் நிறைந்த விண்ணுலகத்தில் இருந்த ஒப்பற்ற கிளியாகிய தேவயானைக்கு இனியவனே, சேவற் கொடியை அழகிய கையில் கொண்ட வீரனே, காஞ்சீபுரத்தில் வாழ்பவனே, தேவர்கள் வாழும் விண்ணுலகத்துக்குச் சக்கரவர்த்தியாகிய பெருமாளே. 
பாடல் 343 - காஞ்சீபுரம் 
ராகம் - தர்பர்; தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2 
தகிடதகதிமி-3 1/2
தான தத்தனத் தான தத்தனத்
     தான தத்தனத் தான தத்தனத்
          தான தத்தனத் தான தத்தனத் ...... தனதான
சீசி முப்புரக் காடு நீறெழச்
     சாடி நித்திரைக் கோசம் வேரறச்
          சீவன் முத்தியிற் கூட வேகளித் ...... தநுபூதி 
சேர அற்புதக் கோல மாமெனச்
     சூரி யப்புவிக் கேறி யாடுகச்
          சீலம் வைத்தருட் டேறி யேயிருக் ...... கறியாமற் 
பாசம் விட்டுவிட் டோடி போனதுப்
     போது மிப்படிக் காகி லேனினிப்
          பாழ்வ ழிக்கடைக் காம லேபிடித் ...... தடியேனைப் 
பார டைக்கலக் கோல மாமெனத்
     தாப ரித்துநித் தார மீதெனப்
          பாத பத்மநற் போதை யேதரித் ...... தருள்வாயே 
தேசில் துட்டநிட் டூர கோதுடைச்
     சூரை வெட்டியெட் டாசை யேழ்புவித்
          தேவர் முத்தர்கட் கேத மேதவிர்த் ...... தருள்வோனே 
சீர்ப டைத்தழற் சூல மான்மழுப்
     பாணி வித்துருப் பாத னோர்புறச்
          சீர்தி கழ்ப்புகழ்ப் பாவை யீனபொற் ...... குருநாதா 
காசி முத்தமிழ்க் கூட லேழ்மலைக்
     கோவ லத்தியிற் கான நான்மறைக்
          காடு பொற்கிரிக் காழி யாருர்பொற் ...... புலிவேளூர் 
காள அத்தியப் பால்சி ராமலைத்
     தேச முற்றுமுப் பூசை மேவிநற்
          காம கச்சியிற் சால மேவுபொற் ...... பெருமாளே.
சீச்சீ என்று வெறுக்கத்தக்க தீய திரிபுர மலைகள் போன்ற (ஆணவம், கன்மம், மாயை என்ற) மும்மலங்களாகிய காடு வெந்து சாம்பலாகும்படி, தூக்கமும், ஆன்மாவை முடிக்கொண்டுள்ள பஞ்ச கோசங்களும்* வேரோடு அற, ஆன்மா முக்தி நிலை அடைந்து விடுதலை பெற, யான் மகிழ்ந்து பேரின்ப அநுபவத்தைப் பெற, அற்புதத் தோற்றம் இது என்று கூறும்படியாக சூரிய மண்டலத்தில் யான் சென்று அங்கு நடனம் புரிய, ஒழுக்க வழியினில் சென்று திருவருளை உணர்ந்து நிலைபெற்றிருக்கத் தெரியாமல், பாசங்கள் என்னை விட்டு விலகி மீண்டும் ஓடிவந்து சேரும் நிலை போதும் போதும். இப்படிப் பாசத்தில் அகப்படும் நிலை எனக்கு வேண்டாம். இனியாகிலும் இந்தப் பாழும் நெறியில் என்னை அடைத்து வைக்காமல் என்னைப் பற்றிக்கொண்டு உலகில் எனக்குப் புகலிடமாக இருக்கும் தோற்றத்தைக் காண்பித்து, ஆதரவுடன் யான் நித்தியமான ஓர் ஆபரணத்தை அணிவதற்காக உன் திருவடியாகிய நற்கமல மலரை என் மீது தரிக்கச் செய்வாயாக. ஞானம் இல்லாத துஷ்டனும், கொடுமை வாய்ந்தவனும், குற்றங்கள் நிறைந்தவனுமான சூரனை வெட்டி, எட்டுத் திசைகளிலும் ஏழுலகிலும் இருக்கும் தேவர்கள், ஜீவன்முக்தரான அறிஞர்களின் துயரத்தை நீக்கி அருளியவனே, தன் திருக்கரங்களில் சிறப்பு வாய்ந்த நெருப்பு, சூலம், மான், மழு ஆகியவற்றை ஏந்தியவரும், பவளம் போன்ற சிவந்த பாதங்களை உடையவருமான சிவபெருமானின் ஒரு பாகத்தில் அமர்ந்த சிறப்புப் பொருந்திய புகழ்த் தேவி பார்வதி பெற்றெடுத்த அழகிய குருநாதனே, காசி, முத்தமிழ் விளங்கும் மதுரை, ஏழு மலைகளுடைய திருவேங்கடம், திருக்கோவலூர், திருவானைக்கா, நான்கு வேதங்களும் தங்கும் வேதாரணியம், கநகமலை, சீர்காழி, திருவாரூர், அழகிய சிதம்பரம், புள்ளிருக்கும் வேளூராகிய வைத்தீசுரன்கோயில், திருக்காளத்தி, அதன்பின் திரிசிராப்பள்ளி முதலிய தலங்களிலும் நாடு முழுவதும் மூன்று காலங்களிலும் வழிபாடு நடத்தப் பெற்று, நல்ல காமகோட்டம் என்ற கச்சியில் (காஞ்சீபுரத்தில்) மிகவும் விரும்பி வீற்றிருக்கும் அழகிய பெருமாளே. 
* பஞ்ச கோசங்கள் (ஐந்து உறைகள்): அன்னமய கோசம் - உணவும் உடலும் கூடியது, பிராணமய கோசம் - வாக்கு, பாணி, பாதம், மற்றும் கர்மேந்திரியங்கள் இவற்றுடன் உயிரும் கூடியது, மனோமய கோசம் - மனம் மட்டும், விஞ்ஞானமய கோசம் - ஐம்பொறிகளும், புத்தியும் கூடியது, ஆனந்தமய கோசம் - ஆன்மாவுக்கு மிக அருகில் போலி ஆனந்தத்தைத் தருவது, எனப்படும்.
பாடல் 344 - காஞ்சீபுரம் 
ராகம் - கானடா; தாளம் - ஆதி
தத்ததன தந்த தத்ததன தந்த
     தத்ததன தந்த ...... தனதான
நச்சரவ மென்று நச்சரவ மென்று
     நச்சுமிழ்க ளங்க ...... மதியாலும் 
நத்தொடுமு ழங்க னத்தொடுமு ழங்கு
     நத்திரைவ ழங்கு ...... கடலாலும் 
இச்சையுணர் வின்றி யிச்சையென வந்த
     இச்சிறுமி நொந்து ...... மெலியாதே 
எத்தனையி நெஞ்சில் எத்தனமு யங்கி
     இத்தனையி லஞ்ச ...... லெனவேணும் 
பச்சைமயில் கொண்டு பச்சைமற மங்கை
     பச்சைமலை யெங்கு ...... முறைவோனே 
பத்தியுட னின்று பத்திசெயு மன்பர்
     பத்திரம ணிந்த ...... கழலோனே 
கச்சிவர் குரும்பை கச்சவர்வி ரும்பு
     கச்சியில மர்ந்த ...... கதிர்வேலா 
கற்பக வனங்கொள் கற்பகவி சும்பர்
     கைத்தளைக ளைந்த ...... பெருமாளே.
விரும்பிப் பிடிக்கவந்த கேது என்ற விஷப்பாம்பு தன்னை மென்று வெளிவிட்ட காரணத்தால், தானும் ஒரு விஷப்பாம்பு போல என் மீது நஞ்சை உமிழ்கின்ற, கறை படிந்த நிலவாலும், சங்குகள் செய்யும் பேரொலியோடும், மேகங்கள் முழக்கும் இடியின் ஒலியினோடும், விசேஷமான அலைகளை வீசும் கடலாலும், பக்தியும் தெளிவும் இல்லாமல், ஆசையுடன் மட்டும் வந்திருக்கிறேன் எனச் சொல்லி வந்திருக்கிற இச் சிறு பெண்ணாகிய அடியாள் மனம் நொந்து உடல் மெலியாமல், எத்தனையோ எண்ணங்களை மனதிற் கொண்டு, முயற்சிகளை மேற்கொண்டு செய்பவளாகிய என்னை இந்த அளவிலேயே அஞ்சல் எனக்கூறி அருள வேண்டும். பச்சை மயிலை வாகனமாகக் கொண்டு, பச்சை நிறமான வேடப் பெண் வள்ளியுடன் பசுமை வாய்ந்த மலையிடங்களில் எல்லாம் வாழ்பவனே, பக்தியில் நிலைத்து முறை தவறாமல் வழிபடும் அன்பர்கள் பூஜிக்கிற இலை, பூக்களைஅணிந்த திருவடிகளை உடையோனே, ரவிக்கை அணிந்த, இளம் தென்னங் குரும்பு போன்ற மார்பினரைக் கைத்து வெறுத்தவர்களாகிய பெரியோர் விரும்பும் கச்சியாகிய காஞ்சீபுரத்தில் வீற்றிருக்கும் ஒளி வேலனே, கற்பகக் காட்டை உடையவர்களும், நீதி நெறியை மனத்தில் கொண்டவர்களுமாகிய தேவர்களின் கை விலங்குகளை அவிழ்த்தெறிந்த பெருமாளே. 
இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் இயற்றப்பட்டது. புலவர் தம்மை நாயகியாக வைத்துப் பாடுகிறார்.சந்திரன், கடல், முதலியன விரக வேதனையை அதிகரிக்கச் செய்வன.
பாடல் 345 - காஞ்சீபுரம் 
ராகம் - சாரங்கா; தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2 
தகிடதகதிமி- 3 1/2
தனன தத்தன தனன தத்தன
     தனன தத்தன ...... தனதான
படிறொ ழுக்கமு மடம னத்துள
     படிப ரித்துட ...... னொடிபேசும் 
பகடி கட்குள மகிழ மெய்ப்பொருள்
     பலகொ டுத்தற ...... உயிர்வாடா 
மிடியெ னப்பெரு வடவை சுட்டிட
     விதன முற்றிட ...... மிகவாழும் 
விரகு கெட்டரு நரகு விட்டிரு
     வினைய றப்பத ...... மருள்வாயே 
கொடியி டைக்குற வடிவி யைப்புணர்
     குமர கச்சியி ...... லமர்வோனே 
குரவு செச்சைவெண் முளரி புத்தலர்
     குவளை முற்றணி ...... திருமார்பா 
பொடிப டப்பட நெடிய விற்கொடு
     புரமெ ரித்தவர் ...... குருநாதா 
பொருதி ரைக்கடல் நிருத ரைப்படை
     பொருது ழக்கிய ...... பெருமாளே.
வஞ்சனையுடன் கூடிய நடையை மூட மனத்துள் உள்ளபடியே வைத்துக்கொண்டு, உடனுக்கு உடன் தந்திரமாகப் பேசும் பகட்டுப் பொது மகளிருக்கு, அவர்கள் மனம் மகிழ்வதற்காக, எனது உடம்பையும் பொருட்கள் பலவற்றையும் கொடுத்து, மிகவும் உயிர் வாடி நின்று, தரித்திரம் என்ற பெரிய வடவாக்கினி* என்னைச் சுட்டுப் பொசுக்க, பெருந்துன்பம் ஏற்பட்டு, அதனால் மிகத் துயரத்தோடு வாழும் அந்தக் கேவலமான வாழ்வு நீங்கி, அரிய நரகத்தில் நான் விழுவது விலகி, நல்வினை, தீவினை என்ற என் இருவினைகளும் ஒழிய, உனது திருவடிகளைத் தந்தருள்வாயாக. கொடி போன்ற இடையை உடைய குறமகள், அழகிய வள்ளியை மருவிக் கலந்த குமரனே, கச்சிப்பதியாகிய காஞ்சீபுரத்தில் வீற்றிருப்பவனே, குராமலர், வெட்சி மலர், வெண்தாமரை, புதிதாக மலர்ந்த குவளைப்பூ இவை எல்லாம் நிரம்ப அணிந்து கொள்ளும் அழகிய மார்பினனே, தூளாகி அழியும்படி, மேருமலையாகிய நீண்ட வில்லினைக் கொண்டு திரிபுரத்தை (சிரித்தே) எரித்தவரான சிவபிரானின் குருநாதனே, மாறுபட்டு எழுகின்ற அலைகளை உடைய கடலையும், அசுரர்களையும், அவர்களது சேனையையும் போர் செய்து கலக்கி அதிரவைத்த பெருமாளே. 
* வடவாக்கினி என்பது பிரளய காலத்தில் உலகை எரித்தே அழிப்பதற்காக வட திசையிலிருந்து வரும் ஒரு நெருப்புக் கோளம் என்று சொல்வர்.
பாடல் 346 - காஞ்சீபுரம் 
ராகம் - .....; தாளம் - .......
தனனத்தத் தானத் தானன
     தனனத்தத் தானத் தானன
          தனனத்தத் தானத் தானன ...... தந்ததான
மகுடக்கொப் பாடக் காதினில்
     நுதலிற்பொட் டூரக் கோதிய
          மயிரிற்சுற் றோலைப் பூவோடு ...... வண்டுபாட 
வகைமுத்துச் சோரச் சேர்நகை
     யிதழிற்சொற் சாதிப் பாரியல்
          மதனச்சொற் பாடுக் கோகில ...... ரம்பைமாதர் 
பகடிச்சொற் கூறிப் போர்மயல்
     முகவிச்சைப் பேசிச் சீரிடை
          பவளப்பட் டாடைத் தோளிரு ...... கொங்கைமேலாப் 
பணமெத்தப் பேசித் தூதிடு
     மிதயச்சுத் தீனச் சோலிகள்
          பலரெச்சிற் காசைக் காரிகள் ...... சந்தமாமோ 
தகுடத்தத் தானத் தானன
     திகுடத்தித் தீதித் தோதிமி
          தடுடுட்டுட் டாடப் பேரிகை ...... சங்குவீணை 
தடமிட்டுப் பாவக் கார்கிரி
     பொடிபட்டுப் போகச் சூரர்கள்
          தலையிற்றிட் டாடப் போர்புரி ...... கின்றவேலா 
திகிரிப்பொற் பாணிப் பாலனை
     மறைகற்புத் தேளப் பூமனை
          சினமுற்றுச் சேடிற் சாடிய ...... கந்தவேளே 
தினையுற்றுக் காவற் காரியை
     மணமுற்றுத் தேவப் பூவொடு
          திகழ்கச்சித் தேவக் கோன்மகிழ் ...... தம்பிரானே.
சல்லடைக் கொப்பு என்னும் காதணியும், கொப்பு எனப்படும் காதணியும் காதில் ஆட, நெற்றியில் திலகம் பரவி விளங்க, சிக்கெடுக்கப்பட்டு சீவி வாரப்பட்ட மயிரில் சுற்றி வைத்துள்ள தாழம்பூவில் வண்டு பாட, நல்ல தரமான முத்தும் இழிவு படும்படி விளங்கும் பற்களைக் காட்டி, வாயிதழ்களால் தாங்கள் பேசும் சொற்களையே சாதிப்பவர்கள். பொருந்திய காம லீலைப் பாடல்களைப் பாடுகின்ற குயில் போன்ற, ரம்பையை ஒத்த விலைமாதர்கள். பரிகாசப் பேச்சுக்களைப் பேசி காமப் போர் (மனதில் கிளம்பும்படி) முகத்தில் விருப்பத்தைக் காட்டிப் பேசி, அழகிய இடையில செந்நிறப் பட்டாடையை தோள் மீதும் இரு மார்பகங்களின் மீதும் இறுக்க அணிந்து, பணம் நிரம்பத் தரும்படி பேசி (அதன் பொருட்டு) தூது அனுப்புகின்ற மனத்தை உடைய மிக்க இழிவான தொழிலைப் பூண்டவர்கள். பல பேர்களின் எச்சிலுக்கும் ஆசைப்படும் இவ்வேசிகளின் தொடர்பு நல்லதாகுமா? தகுடத்தத் தானத் தானன திகுடத்தித் தீதித் தோதிமி தடுட்டுடுட் டாட இவ்வாறான ஒலிகளை எழுப்பி பேரிகை, சங்கு, வீணை (ஆகியவைகள்) ஒலித்து வழியைக் காட்டி, (வருபவர்களை உள்ளே மடக்கி) பாவங்களைச் செய்த (கிரவுஞ்சன்* என்னும் அசுரனாகிய) மலை தூளாகும்படிப் போக, சூரர்களுடைய தலைகள் அறுந்து வீழ்ந்து ஆடும்படி சண்டை செய்கின்ற வேலனே, சக்கரம் ஏந்திய அழகிய திருக்கரத்தை உடைய திருமாலின் பிள்ளையும், வேதங்களைக் கற்ற தேவனும், அழகிய தாமரையில் வீற்றிருப்பவனுமாகிய பிரமன் மீது கோபம் கொண்டு அவனது திரட்சியான தலையில் குட்டிய கந்தப் பெருமானே, தினைப் புனத்திலிருந்து காவல் புரிந்த வள்ளி நாயகியை திருமணம் செய்து கொண்டு, தேவருலகில் வாழ்ந்த பூ அனைய தேவயானையுடன் சேர்ந்து, விளங்கும் காஞ்சீபுரத்தில் வீற்றிருந்து, தேவர்கள் தலைவனான இந்திரன் மகிழும் தம்பிரானே. 
* தன்னிடத்தே வழி காட்டி உள்ளே வந்தவர்களை மாயையால் மடக்கி மாய்வித்த கிரவுஞ்சன் என்னும் அசுரன், அகத்திய முனிவர் அங்கு வர, அவரையும் வழி தடுமாறச் செய்தான். இதை அறிந்த முனிவர் நீ இந்த மலையாகவே இருக்கக் கடவாய். முருகன் கை வேலால் இறப்பாய் என்று சாபம் இட்டார்.
பாடல் 347 - காஞ்சீபுரம் 
ராகம் - லதாங்கி ; தாளம் - திஸ்ர த்ருபுடை - 7
தத்தத்தத் தானன தானன
     தத்தத்தத் தானன தானன
          தத்தத்தத் தானன தானன ...... தனதான
மக்கட்குக் கூறரி தானது
     கற்றெட்டத் தான்முடி யாதது
          மற்றொப்புக் கியாதுமொ வாதது ...... மனதாலே 
மட்டிட்டுத் தேடவோ ணாதது
     தத்வத்திற் கோவைப டாதது
          மத்தப்பொற் போதுப கீரதி ...... மதிசூடும் 
முக்கட்பொற் பாளரு சாவிய
     அர்த்தக்குப் போதக மானது
          முத்திக்குக் காரண மானது ...... பெறலாகா 
முட்டர்க்கெட் டாதது நான்மறை
     யெட்டிற்றெட் டாதென வேவரு
          முற்பட்டப் பாலையி லாவது ...... புரிவாயே 
செக்கட்சக் ராயுத மாதுலன்
     மெச்சப்புற் போதுப டாவிய
          திக்குப்பொற் பூதர மேமுதல் ...... வெகுரூபம் 
சிட்டித்துப் பூதப சாசுகள்
     கைக்கொட்டிட் டாடம கோததி
          செற்றுக்ரச் சூரனை மார்பக ...... முதுசோரி 
கக்கக்கைத் தாமரை வேல்விடு
     செச்சைக்கர்ப் பூரபு யாசல
          கச்சுற்றப் பாரப யோதர ...... முலையாள்முன் 
கற்புத்தப் பாதுல கேழையு
     மொக்கப்பெற் றாள்விளை யாடிய
          கச்சிக்கச் சாலையில் மேவிய ...... பெருமாளே.
மக்களுக்கு இது இத்தன்மையது என எடுத்துக்கூற அரிதானது, கற்ற கல்வியாலும் அதனை எட்ட முடியாதது, மற்றபடி அதற்கு உவமை ஏதும் ஒவ்வாதது, மனதினால் அதை அளவிட்டுத் தேடி அறியமுடியாதது, எத்தகைய ஆராய்ச்சியிலும் அதனை வரிசைப்படுத்த முடியாதது, ஊமத்தை மலரையும், தங்கநிறக் கொன்றை மலரையும், கங்கைநதியையும், பிறைச்சந்திரனையும் சடையிலே சூடும் முக்கண்ணராகிய அழகிய சிவபிரான் சொல்லுக என்று கேட்க சொல்லப்பட்ட பொருளுக்கு உபதேச வித்தாக இருப்பது, மோட்சத்துக்குக் காரணமாக இருப்பது, பெறுவதற்கு முடியாததாய், மூடர்களுக்கு எட்டாததாய் இருப்பது, நான்கு வேதங்களும் எட்டுவதற்கு முயன்றாலும், எட்ட முடியாமல் இருக்கும் பொருள் அது, முதன்மையான பொருளுக்கும் அப்பாற்பட்ட பொருள் எதுவோ, அதனை எனக்கு உபதேசித்து அருள்வாயாக. செங்கண்களையும், சக்ராயுதத்தையும் உடைய தாய்மாமன் திருமால் மெச்சிப் புகழும்படியாக, புல்லையும் மலரையும் பெரிதாகப் படரவிட்டு, திசைகளில் உள்ள பொன் மேரு மலை முதலாக பலப்பல உருவங்களைச் சிருஷ்டித்து, பூதங்களும் பேய்களும் கைகொட்டி ஆடும்படியாக, பெருங்கடலை வற்றடித்து, கடுமையான சூரனுடைய மார்பகத்திலிருந்து மிகுந்த இரத்தம் கக்கச்செய்யுமாறு, தாமரைமலர் போன்ற திருக்கரத்தினின்று வேலாயுதத்தை விட்ட செஞ்சந்தனமும் பச்சைக் கற்பூரமும் பூசிய புயமலையை உடையோனே, கச்சணிந்த கனமான பால் ஊறும் மார்பினாளும், முன்னர், கற்புநிலை தவறாமல் ஏழு உலகங்களையும் ஒருங்கே ஈன்றளித்தவளுமான காமாட்சித் தாயார் திருவிளையாடல்கள் பல புரிந்த காஞ்சிபுரத்தில் உள்ள கச்சபேசுரம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 348 - காஞ்சீபுரம் 
ராகம் - .....; தாளம் - ......
தனதான தந்த தனதான தந்த
     தனதான தந்த ...... தனதான
மயலோது மந்த நிலையாலும் வஞ்ச
     வசைபேசு கின்ற ...... மொழியாலும் 
மறிபோலு கின்ற விழிசேரு மந்தி
     மதிநேரு கின்ற ...... நுதலாலும் 
அயிலேநி கர்ந்த விழியாலும் அஞ்ச
     நடையாலும் அங்கை ...... வளையாலும் 
அறிவேய ழிந்து அயர்வாகி நைந்து
     அடியேன்ம யங்கி ...... விடலாமோ 
மயிலேறி யன்று நொடிபோதி லண்டம்
     வலமாக வந்த ...... குமரேசா 
மறிதாவு செங்கை அரனா ரிடங்கொள்
     மலைமாது தந்த ...... முருகேசா 
நயவானு யர்ந்த மணிமாட மும்பர்
     நடுவேநி றைந்த ...... மதிசூழ 
நறைவீசு கும்ப குடமேவு கம்பை
     நகர்மீத மர்ந்த ...... பெருமாளே.
காம ஆசையை அறிவிக்கும் (வேசையர்களின்) அந்த தோற்றத்தாலும், வஞ்சகம் கூடிய பழிப்புச் சொற்களைப் பேசுகின்ற பேச்சுக்களாலும், மான் பார்வை கொண்ட கண்களுக்கு அருகிலுள்ள, மாலைப் பிறையை நிகர்க்கின்ற, நெற்றியாலும், வேலை ஒத்த கண்களாலும், அன்னத்தை ஒத்த நடையாலும், அழகிய கையில் உள்ள வளையல்களாலும், என் அறிவு அழிபட்டு, சோர்வு அடைந்து, உள்ளம் ஒடுங்கி அடியேனாகிய நான் மயக்கம் கொள்ளலாமோ? மயிலின் மீது ஏறி முன்பு ஒரு நொடிப் பொழுதில் உலகைச் சுற்றி வந்த குமரேசனே, மான் தாவுகின்ற சிவந்த கையை உடைய சிவபெருமானின் இடது பாகத்தில் குடிகொண்டுள்ள பார்வதி தேவி பெற்ற முருகேசனே, மேம்பாட்டுடன், வான் அளவும் உயர்ந்த, அழகிய மாடங்களின் உச்சியிலும் நடுவிலும் நிறைந்த ஒளி வீசும் நிலவு சூழ்ந்து விளங்க, (வேள்வியின் பொருட்டு) நறுமணம் கமழும் கும்ப கலசங்களும், குடங்களும் பொருந்தி உள்ள, கம்பை ஆற்றங்கரை நகராகிய காஞ்சீபுரத்தின் மீது விருப்பம் வைத்து வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 349 - காஞ்சீபுரம் 
பாடல் 349 - காஞ்சீபுரம் 
ராகம் - .....; தாளம் - .....
தத்த தத்த தாத்த தத்த தத்த தாத்த
     தத்த தத்த தாத்த ...... தனதான
முத்து ரத்ந சூத்ர மொத்த சித்ர மார்க்கர்
     முற்செ மத்து மூர்க்கர் ...... வெகுபாவர் 
முத்து திர்த்த வார்த்தை யொத்த பத்ர வாட்கண்
     முச்சர் மெத்த சூட்சர் ...... நகையாலே 
எத்தர் குத்தி ரார்த்தர் துட்ட முட்ட காக்கர்
     இட்ட முற்ற கூட்டர் ...... விலைமாதர் 
எக்கர் துக்கர் வாழ்க்கை யுற்ற சித்த நோய்ப்புண்
     இப்ப டிக்கு மார்க்கம் ...... உழல்வேனோ 
தித்தி மித்தி மீத்த னத்த னத்த மூட்டு
     சிற்று டுக்கை சேட்டை ...... தவில்பேரி 
திக்கு மக்க ளாக்கை துக்க வெற்பு மீக்கொள்
     செக்க டற்கு ளாழ்த்து ...... விடும்வேலா 
கற்பு ரத்தை வீட்டி நட்ட மிட்ட நீற்றர்
     கத்தர் பித்தர் கூத்தர் ...... குருநாதா 
கற்கு றிச்சி வாழ்ப்பெ ணொக்க வெற்றி வேற்கொள்
     கச்சி நத்தி நாட்கொள் ...... பெருமாளே.
முத்து ரத்தினம் இவைகளால் அலங்கரிக்கப்பட்ட, ஒரு இயந்திரத்தை ஒத்த விசித்திரமான வழியைப் பின்பற்றுபவர்கள். முன் பிறவியிலேயே இழிந்தோர். மிக்க பாவம் செய்தவர்கள். முத்துக்களை உதிர்த்தது போல பேச்சுக்களைப் பேசுபவர்கள். அம்பு, வாள் இவைகளைப் போன்ற கண்களை உடைய அழிந்து போனவர்கள். மிக்க சூழ்ச்சியை உடையவர்கள். சிரிப்பினாலேயே ஏமாற்றுபவர்கள். வஞ்சனைப் பொருளுடன் பேசுபவர்கள். துஷ்டத்தனத்துடன் முழுமையான தப்பு வழியில் நடப்போர். தங்களுக்கு விருப்பமான கூட்டத்தில் சேரும் பொது மகளிர். இறுமாப்பு உடையவர்கள். துக்கத்தைத் தருபவர்கள் ஆகிய இம்மாதர்களின் வாழ்க்கையில் ஆசை வைத்து மன நோய் ஆகிய புண்ணைக் கொண்டு, இப்படிப்பட்ட வழியில் தடுமாற்றம் அடைவேனோ? தித்தி மித்தி மீத் தனத்த நத்தம் என்ற ஒலியை எழுப்பும் சின்ன உடுக்கை, இயக்கப்படும் தவில், முரசு இவைகளைக் கேட்டு எட்டுத் திக்குகளில் இருந்த மக்களின் உடலில் துக்கத்தை மலை போல் மேலிடுவதைக் கண்டு அதற்குக் காரணமாயிருந்த சூரனை சிவந்த (ரத்தக்) கடலுக்குள் ஆழ்த்திய வேலனே, கல் (மலை) போன்ற திரிபுரங்களை அழித்து நடனம் செய்த, திரு நீறு அணிந்த கடவுள், பித்தர், கூத்தப் பெருமான் (நடராஜனாகிய) சிவபெருமானுடைய குரு நாதனே, மலை நில ஊராகிய வள்ளி மலையில் வாழ்ந்த வள்ளியுடன், வெற்றி வேலை ஏந்தி, காஞ்சீபுரத்தை விரும்பி நாள் தோறும் வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 350 - காஞ்சீபுரம் 
ராகம் - ஆபோகி; தாளம் - ஆதி - 2 களை 
- எடுப்பு 1/4 இடம்
தந்த தாத்தன தன்ன தனந்தன
     தத்தத் தத்தத் ...... தனதானா
வம்ப றாச்சில கன்ன மிடுஞ்சம
     யத்துக் கத்துத் ...... திரையாளர் 
வன்க லாத்திரள் தன்னை யகன்றும
     னத்திற் பற்றற் ...... றருளாலே 
தம்ப ராக்கற நின்னை யுணர்ந்துரு
     கிப்பொற் பத்மக் ...... கழல்சேர்வார் 
தங்கு ழாத்தினி லென்னையு மன்பொடு
     வைக்கச் சற்றுக் ...... கருதாதோ 
வெம்ப ராக்ரம மின்னயில் கொண்டொரு
     வெற்புப் பொட்டுப் ...... படமாசூர் 
வென்ற பார்த்திப பன்னிரு திண்புய
     வெட்சிச் சித்ரத் ...... திருமார்பா 
கம்ப ராய்ப்பணி மன்னு புயம்பெறு
     கைக்குக் கற்புத் ...... தவறாதே 
கம்பை யாற்றினி லன்னை தவம்புரி
     கச்சிச் சொக்கப் ...... பெருமாளே.
வம்பு வார்த்தைகள் நீங்காததும், சில பழைய நூல்களிலிருந்து சொற்களைத் திருடியும், சமயவாதம் செய்து அலைகடல் போல கத்தி ஆரவாரிப்பவரின் வன்மையான கலைக்கூட்டத்தினின்று விலகி, மனத்தில் உள்ள பற்றுக்கள் அனைத்தும் அறப்பெற்று, தம்மைத் தாமே நோக்கியுள்ள அகம்பாவம் அற்றுப்போய், உன்னையே உணர்ந்து உள்ளம் உருகி, அழகிய தாமரை மலரன்ன அடிகளைச் சேர்பவர்களுடைய கூட்டத்தினில் அடியேனையும் அன்போடு கூட்டிவைக்க உன் திருவுள்ளத்தில் சற்று நினைக்கலாகாதோ? வெப்பமான ஆற்றலும், ஒளியும் மிக்க வேலாயுதத்தைக் கொண்டு ஒப்பற்ற கிரெளஞ்சமலை பொடிபடும்படிச் செய்து, மாமரமாய் நின்ற சூரனை வென்ற அரசே, வலிமை மிக்க பன்னிரண்டு தோள்களை உடையவனே, வெட்சிமாலையை அணிந்த அழகிய திருமார்பனே, ஏகாம்பரேஸ்வரராய் விளங்கும் சிவபிரானின் பாம்புகள் நிலைத்துள்ள தோள்களைத் தழுவும் பொருட்டு, கற்பு நிலை தவறாமல், கம்பா நதிக்கரையில் காமாக்ஷி அம்மை தவம் செய்திருந்த* கச்சி என்ற காஞ்சீபுரத்தில் அழகாக வீற்றிருக்கும் பெருமாளே. 
* காஞ்சீபுரத்தில் கம்பா நதிக்கரையில் காமாக்ஷி தேவி சிவபிரானின் இடது பாகத்தைப் பெறுவதற்காக கடுந்தவம் செய்தாள். தேவியின் திறத்தை உலகுக்குத் தெரிவிக்க எண்ணி சிவனார் கம்பா நதியில் பெரு வெள்ளத்தை ஏற்படுத்தினார். லிங்கம் வெள்ளத்தில் கரையுமே எனக்கருதி தேவி லிங்கத்தைத் தழுவ, லிங்கத்தில் தேவியின் வளைத் தழும்பும், மார்த் தழும்பும் தோன்றின. ஈசன் தேவிக்குத் தன் இடப்பாகத்தை ஈந்தான் - கச்சி புராணம்.

பாடல் 301 - திருத்தணிகை
ராகம் - .....; தாளம் -

தனத்தன தானம் தனத்தன தானம்     தனத்தன தானம் ...... தனதான

வினைக்கின மாகுத் தனத்தினர் வேளம்     பினுக்கெதி ராகும் ...... விழிமாதர் 
மிகப்பல மானந் தனிற்புகு தாவெஞ்     சமத்திடை போய்வந் ...... துயர்மூழ்கிக் 
கனத்தவி சாரம் பிறப்படி தோயுங்     கருக்குழி தோறுங் ...... கவிழாதே 
கலைப்புல வோர்பண் படைத்திட வோதுங்     கழற்புக ழோதுங் ...... கலைதாராய் 
புனத்திடை போய்வெஞ் சிலைக்குற வோர்வஞ்     சியைப்புணர் வாகம் ...... புயவேளே 
பொருப்பிரு கூறும் படக்கடல் தானும்     பொருக்கெழ வானும் ...... புகைமூளச் 
சினத்தொடு சூரன் கனத்திணி மார்பந்     திறக்கம ராடுந் ...... திறல்வேலா 
திருப்புக ழோதுங் கருத்தினர் சேருந்     திருத்தணி மேவும் ...... பெருமாளே.

வினையைப் பெருக்குவதற்குக் காரணமான மார்பினை உடையவர்கள், மன்மதனுடைய அம்புக்கு ஒப்பாகும் கண்களை உடையவர்களாகிய விலைமாதர்கள் (மீது வைத்த ஆசையால்), மிகப் பலவான அவமானச் செயல்களில் நுழைந்து, விரும்பிய காமரசப் போர்களிலே ஈடுபட்டு, கொடிய துன்பங்களில் முழுகி அநுபவித்து, தாங்கமுடியாத கவலை அடைந்து, பிறவிக்கு வழி வகுக்கும் கருக்குழிக்குள் மீண்டும் நான் குப்புற விழுந்திடாதபடி, கலைவல்லமை வாய்ந்த புலவர்கள் இசையுடன் சீராக ஓதுகின்ற உனது திருவடிகளின் புகழை ஓதும்படியான கலை ஞானத்தைத் தந்தருள்க. தினைப் புனத்துக்குப் போய், கொடிய வில்லேந்திய குறவர்களின் கொடி போன்ற வள்ளியைச் சேர்ந்த அழகிய புயங்களை உடையவனே, கிரெளஞ்ச மலை இரண்டு கூறாகும்படியும், கடலும் வற்றி போய்க் காய்ந்திடவும், வானமும் புகை மூண்டிடவும், கோபத்துடன், சூரனுடைய கனத்த, திண்ணிய மார்பு பிளவுபடும்படியாகவும் போர் செய்த வீர வேலாயுதனே, திருப்புகழ் ஓதும்* கருத்துள்ள அடியார்கள் கூடுகின்ற திருத்தணிகையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* அருணகிரி நாதரின் இந்த வாக்கியம் பொய்யாகாதபடி, ஆண்டுதோறும் டிசம்பர் 31ம் தேதியில் அடியார்கள் திருத்தணிகையில் கூடித் திருப்புகழை ஓதுகின்றார்கள்.

பாடல் 302 - குன்றுதோறாடல்
ராகம் - ஹம்ஸத்வனி; தாளம் - கண்டத்ருவம் - 17 - எடுப்பு - /5/5 0 /5

தத்ததன தத்ததன தத்ததன தத்ததன     தத்ததன தத்த தனதான

வெற்றிசெய வுற்றகழை விற்குதைவ ளைத்துமதன்     விட்டகணை பட்ட ...... விசையாலே 
வெட்டவெளி யிற்றெருவில் வட்டபணை யிற்கனல்வி     ரித்தொளிப ரப்பு ...... மதியாலே 
பற்றிவசை கற்றபல தத்தையர்த மக்குமிசை     பட்டதிகி ரிக்கு ...... மழியாதே 
பத்தியையெ னக்கருளி முத்தியைய ளித்துவளர்     பச்சைமயி லுற்று ...... வரவேணும் 
நெற்றிவிழி பட்டெரிய நட்டமிடு முத்தமர்நி     னைக்குமன மொத்த ...... கழல்வீரா 
நெய்கமல மொக்குமுலை மெய்க்குறவி யிச்சையுற     நித்தமிறு கத்த ...... ழுவுமார்பா 
எற்றியதி ருச்சலதி சுற்றியதி ருத்தணியில்     எப்பொழுது நிற்கு ...... முருகோனே 
எட்டசல மெட்டநில முட்டமுடி நெட்டசுரர்     இட்டசிறை விட்ட ...... பெருமாளே.

ஜெயமே தரவல்ல கரும்பு வில்லின் முனையை வளைத்து மன்மதன் செலுத்திய மலர் அம்புகள் மேலே தைத்த வேகத்தாலும், வெட்டவெளியிலும், தெருக்களிலும், வட்டப் பறையென நின்று நெருப்பை அள்ளி வீசி ஒளி பரப்பும் நிலவினாலும், வசைமொழிகளை விடாது பிடித்துக்கொண்டு பயின்று, அவற்றையே பேசும் பல மாதர்களின் ஏச்சாலும், இசையை எழுப்பும் புல்லாங்குழலின் ஓசையாலும் நான் நலிவுறாமல், பக்தி நெறியை எனக்குத் தந்துதவி, முக்தியையும் அளிக்க உயர்ந்த பச்சை மயில் வாகனத்தில் ஏறி நீ வர வேண்டுகிறேன். நெற்றிக் கண்ணின் தீ பட்டு மன்மதன் எரிந்து போக, நடனம் செய்த பெரியோராம் சிவபிரான் உன்னைத் தியானிக்க, அவரது மனத்தில் பொருந்தி இருந்த திருவடிகளை உடைய வீரனே, தேன் ததும்பும் தாமரை போன்ற இள மார்பை உடைய, சத்தியவதியான குற வள்ளி அன்பு கொள்ளும்படியாக அவளை நாள்தோறும் கெட்டியாக அணைக்கும் மார்பனே, அலை வீசும் கடல்கள் சூழ்ந்த புவியில் திருத்தணியில் எப்பொழுதும் எழுந்தருளியிருக்கும் முருகனே, அஷ்ட குலகிரிகள் வரையிலும் எட்டிப் பரவ, உலகெல்லாம் தங்கள் ஆட்சியைச் செலுத்திய அசுரர்கள் தேவர்களை அடைத்த சிறையினின்றும் அவர்களை விடுவித்த பெருமாளே. 
இப்பாட்டு அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவிக்காக பாடியது.கடல், சந்திரன், மன்மதன், மலர்க் கணைகள், ஊரப் பெண்களின் ஏச்சு, குழலின் இசை, இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.

பாடல் 303 - குன்றுதோறாடல்
ராகம் - பூர்வி கல்யாணி ; தாளம் - அங்கதாளம் - 8 
தகதிமி-2, தகிட-1 1/2, தகிட-1 1/2

தனனந் தனன தந்த ...... தனதான     தனனந் தனன தந்த ...... தனதான

அதிருங் கழல்ப ணிந்து ...... னடியேனுன்     அபயம் புகுவ தென்று ...... நிலைகாண 
இதயந் தனிலி ருந்து ...... க்ருபையாகி     இடர்சங் கைகள்க லங்க ...... அருள்வாயே 
எதிரங் கொருவ ரின்றி ...... நடமாடும்     இறைவன் தனது பங்கி ...... லுமைபாலா 
பதியெங் கிலுமி ருந்து ...... விளையாடிப்     பலகுன் றிலும மர்ந்த ...... பெருமாளே.

ஒலிக்கும் வீரக் கழல்களை அணிந்த உன் திருவடிகளை வணங்கும் நினது அடிமையாகிய யான் நீயே புகலிடம் என்று மெய்ந் நிலையை யான் காணுமாறு எனது உள்ளத்தில் வீற்றிருந்து கருணை புரிந்து துன்பங்களும் சந்தேகங்களும் கலங்கி ஒழிய அருள்வாயாக. தமக்கு சமானம் ஒருவருமில்லாமல் ஆனந்தத் தாண்டவம் செய்யும் சிவபெருமானுடைய இடது பாகத்தில் விளங்கும் உமாதேவியின் திருக்குமாரனே, திருத்தலங்கள் எங்கிலும் இருந்து திருவிளையாடல்கள் புரிந்து, பல மலைகளிலும் எழுந்தருளிய பெருமாளே. 

பாடல் 304 - குன்றுதோறாடல்
ராகம் - பேகடா ; தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2 தகதிமி-2, தகிட-1 1/2

தனதன தனன தனதன தனன     தனதன தனன ...... தனதான

எழுதிகழ் புவன நொடியள வதனி     லியல்பெற மயிலில் ...... வருவோனே 
இமையவர் பரவி யடிதொழ அவுணர்     மடிவுற விடுவ ...... தொருவேலா 
வழுதியர் தமிழி னொருபொரு ளதனை     வழிபட மொழியு ...... முருகேசா 
மலரடி பணியு மடமகள் பசலை     மயல்கொடு தளர்வ ...... தழகோதான் 
முழுகிய புனலி லினமணி தரள     முறுகிடு பவள ...... மிகவாரி 
முறையொடு குறவர் மடமகள் சொரியு     முதுமலை யழக ...... குருநாதா 
பழகிய வினைகள் பொடிபட அருளில்     படிபவ ரிதய ...... முறுகோவே 
பருவரை துணிய வொருகணை தெரிவ     பலமலை யுடைய ...... பெருமாளே.

ஏழு உலகங்கள் எனவிளங்கும் புவனத்தை ஒரு நொடிப் பொழுதினில் அழகு விளங்க மயிலில் வலம் வந்தவனே தேவர்கள் போற்றி உன் திருவடிகளைத் தொழ அசுரர்கள் மடியும்படியாக செலுத்திய ஒப்பற்ற வேலாயுதனே பாண்டிய மன்னர்களால் விருத்தி செய்யப்பட்ட தமிழில் ஒப்பற்ற அகப்பொருள் இலக்கணத்தை வணங்கி வேண்ட விளக்கிய (திருவிளையாடற் புராணத்தில் வரும் உருத்திரசன்மன் [முருக அம்சம்] - கதை) முருகேசனே உன் மலர்ப்பதங்களை வணங்கும் இந்த அறியாமகள் காமத்தால் வரும் பசலை நோய் கொண்டு மோகத்தால் தளர்ந்து போவது (இது தாய் மகளுக்காகச் சொல்வது) நியாயமாகுமா? நீரில் மூழ்கி அதனின்று பல மணிகளும் முத்துக்களும், பின்னிய பவளங்களும் நிரம்ப வாரி விற்கக் கூவும் குறப்பெண்கள் நிறைந்த முதுமலையின் (விருத்தாசலம்) அழகா, குருநாதனே என்னுடன் வந்து பழகிய வினைகள் பொடியாக நின்னருளில் தோய்பவர் இதயத்தில் வீற்றிருக்கும் அரசனே பெருத்த கிரெளஞ்சமலை பிளந்து போகும்படி ஒப்பற்ற ஆயுதத்தை தேர்ந்தெடுத்துச் செலுத்தியவனே பல மலைகளுக்கும் அதிபனான பெருமாளே. 

பாடல் 305 - குன்றுதோறாடல்
ராகம் - ஆரபி; தாளம் - அங்கதாளம் - 7 1/2 
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2

தனன தானன தானன தானன     தனன தானன தானன தானன          தனன தானன தானன தானன தந்ததான

தறையின் மானுட ராசையி னால்மட     லெழுது மாலருள் மாதர்கள் தோதக          சரசர் மாமல ரோதியி னாலிரு ...... கொங்கையாலுந் 
தளர்மி னேரிடை யாலுடை யால்நடை     யழகி னால்மொழி யால்விழி யால்மருள்          சவலை நாயடி யேன்மிக வாடிம ...... யங்கலாமோ 
பறவை யானமெய்ஞ் ஞானிகள் மோனிக     ளணுகொ ணாவகை நீடுமி ராசிய          பவன பூரக வேகிக மாகிய ...... விந்துநாதம் 
பகரொ ணாதது சேரவொ ணாதது     நினையொ ணாதது வானத யாபர          பதிய தானச மாதிம னோலயம் ...... வந்துதாராய் 
சிறைவி டாதநி சாசரர் சேனைகள்     மடிய நீலக லாபம தேறிய          திறல்வி நோதச மேளத யாபர ...... அம்புராசித் 
திரைகள் போலலை மோதிய சீதள     குடக காவிரி நீளலை சூடிய          திரிசி ராமலை மேலுறை வீரகு ...... றிஞ்சிவாழும் 
மறவர் நாயக ஆதிவி நாயக     ரிளைய நாயக காவிரி நாயக          வடிவி னாயக ஆனைத னாயக ......எங்கள்மானின் 
மகிழு நாயக தேவர்கள் நாயக     கவுரி நாயக னார்குரு நாயக          வடிவ தாமலை யாவையு மேவிய ...... தம்பிரானே.

இந்தப் பூமியில் மக்கள் காம ஆசையால் மடல்* எழுதக் கூடிய அளவுக்கு (அவர்களுக்கு) மயக்கத்தைத் தருகின்ற விலைமாதர்கள், வஞ்சனையுடன் காம லீலை செய்பவர்கள், நல்ல பூக்கள் கொண்டு விளங்கும் கூந்தலாலும், இரண்டு மார்புகளாலும், தளர்ச்சியைக் காட்டும், மின்னலுக்கு ஒப்பான, இடையாலும், உடுத்துள்ள ஆடையாலும், நடை அழகினாலும், பேசும் இனிய பேச்சினாலும், கண்களாலும், மயக்கம் கொள்ளும் சவலைப் பிள்ளையைப்போல, நாயினும் கீழான அடியேன், மிகவும் வாடி மயக்கம் கொள்ளலாமோ? (ஓரிடத்தில் தங்காது) பறவைபோல எங்கும் திரிந்து உலாவும் உண்மையான ஞானிகளும், மெளன நிலை கண்டவர்களும், அணுகுதற்குக் கூடாததாய் விலகி விளங்கும் இரகசியம், காற்றை (மூச்சை) பூரகமாக** அடக்குவதால் (பிராணாயாமத்தால்) ஒன்றுபடக் கூடிய சிவசக்தி தத்துவ ஒலியாய் விளங்குவதும், சொல்ல முடியாததும், அடைய முடியாததும், நினைக்கவும் முடியாததுமான கருணைப் பரம் பொருளாய், மூலப் பொருளான மனதை ஒடுக்கும் சமாதி நிலைப் பேற்றை நீ வந்து (எனக்குத்) தந்து அருள வேண்டும். (தேவர்களுடைய) சிறையை விடாத அசுரர்களின் படைகள் இறக்கும்படியாக, நீல நிறங் கொண்ட மயிலின் மேல் ஏறி வரும் வல்லமை கொண்ட விநோதனே, கருணை கலந்த மூர்த்தியே, கடலின் பெரிய அலைகளைப்போல் அலைமோதி வரும் குளிர்ந்த நீருடன், குடகு நாட்டிலிருந்து வரும் காவிரி ஆற்றின் பெரிய அலைகளைக் கொண்ட திரிசிரா மலையில் வீற்றிருக்கும் வீரனே, மலை நிலத்தில் வாழும் வேடர்களின் நாயகனே, ஆதி கணபதிக்குத் தம்பியாகிய நாயகனே, காவிரிக்கு நாயகனே, அழகுக்கு ஒரு நாயகனே, தேவயானைக்கு நாயகனே, எங்கள் மான் போன்ற வள்ளி நாயகியிடத்தே மகிழும் நாயகனே, அமரர்கள் நாயகனே, பார்வதியின் நாயகனான சிவபெருமானுக்கு குரு மூர்த்தியே, அழகிய மலைகள் எல்லாவற்றிலும் வீற்றிருந்து அருளும் தம்பிரானே. 
* மடல் எழுதுதல்: தலைவன் தலைவியின் அழகை வர்ணித்து ஓர் ஏட்டில் மடலாக எழுதி அவளது ஊருக்குச் சென்று நாற்சந்தியில் ஒன்றும் பேசாமல் ஒருவரது வசைக்கும் கூசாமல் படத்தில் எழுதிய உருவத்தைப் பார்த்தவாறு பகலும் இரவுமாக நிற்பான். அவனது உறுதிகண்டு தலைவியின் வீட்டார் தலைவனுக்கு அவளை மணம் செய்து வைப்பர். முருகன் வள்ளியை ஊரறிய மடல் எழுதி மணம் செய்துகொண்ட காட்சி கந்த புராணத்தில் வருகிறது.
** இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு:நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு 'ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள், சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி, ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை, சுழுமுனை முதலியன) உள்ளன.'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம்.'சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது.'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும் ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும்.
ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம்

பாடல் 306 - குன்றுதோறாடல்
ராகம் - தோடி; தாளம் - அங்கதாளம் - 5 - திஸ்ர ரூபகம் 
தகதிமி-2, தகிட-1 1/2, தகிட-1 1/2

தந்தன தான தான தந்தன தான தான     தந்தன தான தான ...... தனதான

வஞ்சக லோப மூடர் தம்பொரு ளூர்கள் தேடி     மஞ்சரி கோவை தூது ...... பலபாவின் 
வண்புகழ் பாரி காரி யென்றிசை வாது கூறி     வந்தியர் போல வீணி ...... லழியாதே 
செஞ்சர ணாத கீத கிண்கிணி நீப மாலை     திண்டிறல் வேல்ம யூர ...... முகமாறும் 
செந்தமிழ் நாளு மோதி உய்ந்திட ஞான மூறு     செங்கனி வாயி லோர்சொ ...... லருள்வாயே 
பஞ்சவ னீடு கூனு மொன்றிடு தாப மோடு     பஞ்சற வாது கூறு ...... சமண்மூகர் 
பண்பறு பீலி யோடு வெங்கழு வேற வோது     பண்டித ஞான நீறு ...... தருவோனே 
குஞ்சரம் யாளி மேவு பைம்புன மீது லாவு     குன்றவர் சாதி கூடி ...... வெறியாடிக் 
கும்பிட நாடி வாழ்வு தந்தவ ரோடு வீறு     குன்றுதோ றாடல் மேவு ...... பெருமாளே.

வஞ்சகக் குணத்தையும், ஈயாத தன்மையையும் கொண்ட மூடர்களின் பொருளுக்காக அவர்களின் ஊர்களைத் தேடிச் சென்று மஞ்சரி, கோவை, தூது முதலிய தமிழ் இலக்கியத்தின் பல பாடல்களில் பெரும்புகழ் கொண்ட பாரியே, காரியே என அவர்களைப் புகழ்ந்து வாதித்துக் கூறி, வந்தித்துப் பாடுபவர்களைப் போல் வீணுக்கு அழிந்திடாமல், சிவந்த திருப்பாதங்களையும், இனிய ஓசையை உடைய கிண்கிணியையும், கடப்பமலர் மாலையையும், உறுதியான வலிய வேலினையும், மயிலையும், ஆறு திருமுகங்களையும், செழுமையான தமிழ்ப் பாட்டுக்களால் தினமும் பாடி வாழ்வுற ஞானம் சுரக்கும் சிவந்த கோவைக்கனி போன்ற திருவாயால் ஒரு திருமொழியை அருளிச்செய்வாயாக. பாண்டியனின் மிகுந்து வளைந்த கூனையும், நீங்காத காய்ச்சலையும் நீங்கச்செய்தும், கிளிப்பிள்ளை போல் கூறியதே கூறி வாதிடும் சமணர்களாகிய ஊமைகள் அழகற்ற மயிற்பீலியோடு கொடிய கழுவில் ஏறச் செய்தும், பதிகங்களைப் பாடி அருளிய பண்டிதனே, ஞானத் திருநீற்றை தந்தருளிய திருஞானசம்பந்தனே, யானைகளும், யாளிகளும் வசிக்கும் பசுமையான தினைப்புனக் கொல்லையிலே திரிகின்ற வேடர் கூட்டங்கள் ஒன்று கூடி வெறி ஆட்டம் ஆடி உன்னை வணங்க, அவர்கள் விரும்பும் உலக வாழ்வை நல்கி பெருமைமிக்குச் சிறந்து, மலைகளில் எல்லாம் திருவிளையாடல்கள் புரியும் பெருமாளே. 

பாடல் 307 - ஆறு திருப்பதி
ராகம் - .....; தாளம் - .....

தனதன தனதானன தனதன தனதானன     தனதன தனதானன ...... தனதான

அலைகடல் நிகராகிய விழிகொடு வலைவீசிகள்     அபகட மகபாவிகள் ...... விரகாலே 
அதிவித மதராயத நிதமொழி பலகூறிகள்     அசடரொ டுறவாடிகள் ...... அநியாயக் 
கலைபகர் விலைமாதர்கள் இளைஞர்கள் குடிகேடிகள்     கருதிடு கொடியாருட ...... னினிதாகக் 
கனதன முலைமேல்விழு கபடனை நிருமூடனை     கழலிணை பெறவேயினி ...... யருள்வாயே 
அலைபுனல் தலைசூடிய பசுபதி மகனாகிய     அறுமுக வடிவேஅருள் ...... குருநாதா 
அசுரர்கள் குடியேகெட அமரர்கள் பதியேபெற     அதிரிடும் வடிவேல்விடு ...... மதிசூரா 
தலையய னறியாவொரு சிவகுரு பரனேயென     தரணியி லடியார்கண ...... நினைவாகா 
சகலமு முதலாகிய அறுபதி நிலைமேவிய     தடமயில் தனிலேறிய ...... பெருமாளே.

அலை கடலுக்கு ஒப்பாகிய கண்களைக் கொண்டு காம வலையை வீசுபவர்கள், வஞ்சக எண்ணமுடைய மகா பாபிகள், தமது தந்திரத்தாலே பலவிதமான செருக்குடன் தாழ்வான, அநியாயமான பேச்சு பல பேசுபவர்கள், அசட்டு மனிதரோடு உறவு செய்பவர்கள், அநியாயமான வழியில் உடலை விற்கின்ற வேசியர்கள், இளைஞர்களுடைய குடியைக் கெடுப்பவர்கள், (நான்) மனத்தில் விரும்பிய கொடி போன்ற பொதுமகளிருடன் இன்பகரமாகக் கூடி, அவர்களுடைய பாரமான மார்பகங்கள் மேல் விழும் வஞ்சகனும் முழு மூடனுமான என்னை, உனது திருவடியிணையைப் பெறுமாறு இனி அருள்வாயாக. அலை வீசும் கங்கை நீரைத் தலையில் தரித்துள்ள, உயிர்களுக்கு எல்லாம் தலைவனாகிய, சிவபெருமானது மகனான ஆறு முக உருவத்தனே, அருள் பாலிக்கும் குரு நாதனே, அசுரர்கள் குடி அழியும்படியாகவும், தேவர்கள் தமது பொன்னுலகுக்குச் செல்வதற்காகவும், முழங்கும் கூரிய வேலைச் செலுத்திய அதி சூரனே, சிறந்த பிரமன் அறிய மாட்டாத ஒப்பற்ற சிவனுக்குக் குருபரனே என்று பூமியில் அடியார்கள் கூட்டம் நினைக்கின்ற அழகனே, சகல தலங்களுக்கும் முதலாக விளங்கும் ஆறு திருப்பதியில்* வீற்றிருக்கும், பெரிய மயில் மேல் ஏறிய, பெருமாளே. 
* ஆறு திருப்பதி: திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருவாவினன்குடி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்ச்சோலை என்பன.இத்தலங்கள் திருமுருகாற்றுப்படையில் கூறப்பட்ட முருகவேளின் ஆறு படை வீடுகள். ஆற்றுப்படை வீடு என்பது ஆறுபடை வீடு என மருவி நின்றது.

பாடல் 308 - காஞ்சீபுரம்
ராகம் - நாட்டகுறிஞ்சி; தாளம் - அங்கதாளம் - 8 1/2 
தகதிமிதக-3, தகதகிட-2 1/2, தகதிமிதக-3

தானதனத் தனதனன ...... தனதான     தானதனத் தனதனன ...... தனதான

ஈனமிகுத் துளபிறவி ...... யணுகாதே     யானுமுனக் கடிமையென ...... வகையாக 
ஞானஅருட் டனையருளி ...... வினைதீர     நாணமகற் றியகருணை ...... புரிவாயே 
தானதவத் தினின்மிகுதி ...... பெறுவோனே     சாரதியுத் தமிதுணைவ ...... முருகோனே 
ஆனதிருப் பதிகமரு ...... ளிளையோனே     ஆறுதிருப் பதியில்வளர் ...... பெருமாளே.

இழிவு மிகுந்துள்ள பிறப்பு மீண்டும் என்னை அணுகாதபடி, நானும் உனக்கு அடிமையாகும் பாக்கியத்தைப் பெற மெய்ஞ்ஞான அருளைப் புரிந்து, அடியேனது வினைகள் அறவே நீங்க, (வள்ளியிடம் வெட்கத்தை விட்டு வலியச் சென்று ஆட்கொண்டது போல) நாணத்தை நீக்கி நீயே வந்து கருணை புரிவாயாக. அடியார்களின் தானத்திலும் தவத்திலும் மேன்மையான பகுதியைப் பெறுபவனே, ஸரஸ்வதி தேவியாம் உத்தமியின் சகோதரனே*, முருகனே, திருஞானசம்பந்தராக வந்து பல தேவாரத் திருப்பதிகங்களை அருளிச் செய்த இளம்பூரணனே, ஆறு படை வீட்டுத்** திருத்தலங்களில் வளர்கின்ற பெருமாளே. 
* முருகனுக்கு பிரமன் மாமன் மகனாதலால் மைத்துனன் உறவு. எனவே ஸரஸ்வதி சகோதரி உறவு.
** ஆறு படை வீடுகள்: திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்), திருவாவினன்குடி (பழநி), திருவேரகம் (சுவாமிமலை), குன்றுதோறாடல் (பல மலைகள்), பழமுதிர்ச்சோலை.

பாடல் 309 - காஞ்சீபுரம்
ராகம் - ......; தாளம் - .........

தனதனந் தத்தத் தத்தன தத்தம்     தனதனந் தத்தத் தத்தன தத்தம்          தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான

அதிமதங் கக்கப் பக்கமு கக்குஞ்     சரிதனந் தைக்கச் சிக்கென நெக்கங்          கணைதருஞ் செச்சைப் பொற்புய னத்தன் ...... குறவாணார் 
அடவியந் தத்தைக் கெய்த்துரு கிச்சென்     றடிபணிந் திட்டப் பட்டும யற்கொண்          டயர்பவன் சத்திக் கைத்தல னித்தன் ...... குமரேசன் 
துதிசெயும் சுத்தப் பத்தியர் துக்கங்     களைபவன் பச்சைப் பக்ஷிந டத்துந்          துணைவனென் றர்ச்சித் திச்சைத ணித்துன் ...... புகழ்பாடிச் 
சுருதியின் கொத்துப் பத்தியு முற்றுந்     துரியமுந் தப்பித் தத்வம னைத்துந்          தொலையுமந் தத்துக் கப்புற நிற்கும் ...... படிபாராய் 
கதிபொருந் தக்கற் பித்துந டத்துங்     கனல்தலம் புக்குச் சக்ரமெ டுக்குங்          கடவுளும் பத்மத் தச்சனு முட்கும் ...... படிமோதிக் 
கதிரவன் பற்குற் றிக்குயி லைத்திண்     சிறகரிந் தெட்டுத் திக்கர்வ குக்குங்          கடகமுந் தட்டுப் பட்டொழி யக்கொன் ...... றபிராமி 
பதிவ்ரதம் பற்றப் பெற்றம கப்பெண்     பரிவொழிந் தக்கிக் குட்படு தக்கன்          பரிபவம் பட்டுக் கெட்டொழி யத்தன் ...... செவிபோயப் 
பணவிபங் கப்பட் டப்படி வெட்கும்     படிமுனிந் தற்றைக் கொற்றம்வி ளைக்கும்          பரமர்வந் திக்கக் கச்சியில் நிற்கும் ...... பெருமாளே.

அதிகமான மகிழ்ச்சி வெளிப்பட, அன்புமீறிக் களி கூறும் தேவயானையின் மார்பகம் அழுத்தமாக நெஞ்சிற் பதிய, இறுகப் பிணைத்ததால் நெகிழ்ந்து உடனே அணைப்பில் கசங்கிய வெட்சி மாலை அணிந்த அழகிய திருத்தோள்களை உடையவனாகிய பெரியோன், குறவர் வாழும் காட்டில் உள்ள அழகிய கிளி போன்ற வள்ளிக்கு இளைத்து, உருகிச் சென்று, அவளுடைய அடியை வணங்கி, ஆசை பூண்டு, மோகம் கொண்டு தளர்பவன், வேலாயுதத்தைத் திருக் கரத்தில் பூண்டவன், என்றும் உள்ளவன் ஆகிய குமரேசன், துதி செய்கின்ற பரிசுத்தமான பக்தி பூண்ட அன்பர்களுடைய துக்கத்தை நீக்குபவன், பச்சை நிறமான மயிலை வாகனமாகக் கொண்ட துணைவன் என்றெல்லாம் கூறி அர்ச்சித்து, என் ஆசையை நிறைவேற்றி, உன்னுடைய திருப்புகழைப் பாடி, வேதங்களின் கூட்ட வரிசையையும், பிற எல்லாவற்றையும், துரிய நிலையையும் (தன் மயமாய் நிற்கும் சுத்த உயர் நிலையையும்) கடந்து, தத்துவங்கள் யாவும் அழிந்து போகும் முடிவு நிலைக்கு அப்பாலே நிற்கும்படி கண்பார்த்து அருள்வாய். (வேள்வி இயற்ற வேண்டிய) நியதிக்குத் தக்க ஏற்பாடு செய்து (தக்ஷன்) வேள்வி நடத்திய அக்கினி குண்டங்கள் இருந்த யாக சாலையுள் நுழைந்து, சக்கரம் ஏந்தும் கடவுளாகிய திருமாலும், தாமரையில் வீற்றிருக்கும் படைத்தல் தொழில் புரியும் பிரமனும் அச்சம் உறும்படி தாக்கியும், சூரியனின் பற்களைக் குத்தியும், இந்திரனாம் குயிலின் திண்ணிய சிறகை வெட்டியும், அஷ்ட திக்குப் பாலகர்களான இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகியோர் அணி வகுத்த சேனைகளும் நிலை குலைந்து அழிந்து போகும்படிக் கொன்றும், பேரழகியும், பதிவிரதத் தன்மையைக் கைப்பிடிக்கப் பெற்ற இன்பப் பெண்ணும், ஆகிய தாக்ஷ¡யணியின் (தன்னையும் தன் கணவன் சிவனையும் தக்ஷன் புறக்கணித்தான் என்னும்) வருத்தம் தீரவும், நெருப்பில் விழப் பெற்ற தக்ஷன் அவமானப்பட்டு கெட்டு ஒழியவும், தனது அழகு போய் அந்தப் பார்ப்பனியாகிய ஸரஸ்வதி (மூக்கை இழந்து) பங்கம் அடைந்து வெட்கும்படியாகவும், கோபித்து அன்று இறுதியில் வெற்றி பெற்ற சிவ பெருமான் வணங்க, காஞ்சீபுரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
தக்ஷயாகத்தில் தண்டிக்கப்பட்ட தேவர்கள் அனைவரையும் பட்டியலிட்டுக் கூறுவது இப்பாடல்.

பாடல் 310 - காஞ்சீபுரம்
ராகம் - ...........; தாளம் - ........

தனதனந் தத்தத் தத்தன தத்தம்     தனதனந் தத்தத் தத்தன தத்தம்          தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான

கனகதம் பத்தைச் செச்சையை மெச்சுங்     கடகசங் கத்துப் பொற்புய வெற்பன்          கடலுள்வஞ் சித்துப் புக்கதொர் கொக்கும் ...... பொடியாகக் 
கறுவுசெஞ் சத்திப் பத்மக ரத்தன்     குமரனென் றர்ச்சித் தப்படி செப்புங்          கவிமொழிந் தத்தைக் கற்றற வுற்றும் ...... புவியோர்போய் 
குனகியுங் கைக்குக் கற்பக மொப்பென்     றனகனென் றிச்சைப் பட்டத ளிக்குங்          குமணனென் றொப்பிட் டித்தனை பட்டிங் ...... கிரவான 
குருடுகொண் டத்தச் சத்தம னைத்துந்     திருடியுஞ் சொற்குத் தக்கதொ டுத்துங்          குலவியுங் கத்தப் பட்டக லக்கந் ...... தெளியாதோ 
சனகனன் புற்றுப் பெற்றம டப்பெண்     தனிப்பெருங் கற்புச் சக்ரந டத்துந்          தகையிலங் கைச்சுற் றத்தைமு ழுத்துஞ் ...... சுடவேவெஞ் 
சமரசண் டக்கொற் றத்தவ ரக்கன்     கதிர்விடும் பத்துக் கொத்துமு டிக்குந்          தனியொரம் பைத்தொட் டுச்சுரர் விக்னங் ...... களைவோனும் 
தினகரன் சொர்க்கத் துக்கிறை சுக்ரன்     சசிதரன் திக்குக் கத்தர கத்யன்          திசைமுகன் செப்பப் பட்டவ சிட்டன் ...... திரள்வேதஞ் 
செகதலஞ் சுத்தப் பத்தியர் சித்தம்     செயலொழிந் தற்றுப் பெற்றவர் மற்றும்          சிவனும்வந் திக்கக் கச்சியில் நிற்கும் ...... பெருமாளே.

பொன்னாலாகிய தூண் போன்றவையும், வெட்சி மாலை அணிந்தவையும், மெச்சும்படியான வீரவாள் முதலிய கூட்டங்களை அணிந்தவையுமான அழகிய மலை போன்ற புயங்களை உடையவன், கடலிலே வஞ்சனை எண்ணத்துடன் புகுந்து நின்ற ஒப்பற்ற மாமரமாகிய சூரன் அழியும்படிக் கோபித்த சிவந்த சக்தி வேலை ஏந்திய தாமரைக் கரங்களை உடையவன், குமரன் என்று பூஜித்து, அத்தகைய பாடல்களைச் சொல்லும் கவிகளைப் பாடி, அவற்றை நன்றாகப் படித்து அப்பாடல்களில் முற்றும் ஈடுபட்டும், உலகோர் அறியாமையால் (செல்வந்தரிடம்) போய் கொஞ்சிப் பேசியும், உமது கைக்கு (கேட்டதைத் தரும்) கற்பகத் தரு தான் நிகரானது என்றும், நீர் யாதொரு பாவமும் இல்லாதவர் என்றும், யாசிப்போர் விரும்பியதை எல்லாம் கொடுக்கும் குமண* வள்ளலே என்றும் உவமைகள் கூறி, இப்படி எல்லாம் வேதனைப்பட்டு இங்கு யாசித்தல் என்கின்ற குருட்டுத் தன்மையைக் கொண்டு, பொருளும் ஒலியும் பிற எல்லாமும் (பழைய நூல்களிலிருந்து) திருடியும், தங்கள் சொல்லுக்குத் தகுந்தவாறு பாடல்களை அமைத்தும், (தங்கள் பெருமைக்கு) மகிழ்ந்து குலவியும், கத்திக் கூச்சலிடுகின்ற கலக்க அறிவு தெளிவு அடையாதோ? ஜனக மன்னன் அன்புடன் பெற்ற அழகிய (சீதையாகிய) பெண்ணுடைய ஒப்பற்ற பெரிய கற்பு என்னும் சக்கரம் (ஆக்ஞை) நடைபெற்ற பெருமை வாய்ந்த இலங்கையில் (அரக்கர் குலச்) சுற்றத்தார் யாவரும் சுடப்பட்டு அழியும்படி, கொடிய போர் வல்ல, கோபம் கொண்ட, வீரம் வாய்ந்த அரக்கனாகிய இராவணனுடைய ஒளி வீசும் பத்துக் கொத்தான முடிகளுக்கும் ஒப்பற்ற ஓர் அம்பைச் செலுத்தி தேவர்களின் இடர்களை நீக்கிய திருமாலும், சூரியனும், சொர்க்கத்துக்கு இறைவனாகிய இந்திரனும், சுக்கிரனும், பிறையைச் சூடிய ஈசான்யனும், (எட்டுத்) திக்கு பாலகர்களும், அகத்திய முனிவரும், பிரமனும், புகழ் பெற்ற வசிஷ்டரும், கூட்டமான வேதங்களும், லோகத்தினரும், அகத் தூய்மை, புறத் தூய்மை கொண்ட பக்தர்களும், மனமும் செயலும் ஒடுங்கி ஒழியப் பெற்ற ஞானிகளும், பின்னும் சிவ பெருமானும் வணங்கி நிற்க காஞ்சீபுரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* தமிழ் வள்ளல்கள் எழுவரில் ஒருவன் குமணன்.தமிழுக்காக உயிரையே கொடுக்கச் சித்தமானவன்.

பாடல் 311 - காஞ்சீபுரம்
ராகம் -.....; தாளம் - ......

தனதனந் தத்தத் தத்தன தத்தம்     தனதனந் தத்தத் தத்தன தத்தம்          தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான

செடியுடம் பத்தித் தெற்றியி ரத்தஞ்     செறிநரம் பிட்டுக் கட்டிய சட்டஞ்          சிறைதிரண் டொக்கத் தொக்கவி னைப்பந் ...... தவிகாரம் 
திமிரதுங் கத்தத் துத்திரை யெற்றுஞ்     செனனபங் கத்துத் துக்கக டற்கண்          திருகுரும் பைப்பட் டுச்சுழல் தெப்பங் ...... கரணாதி 
குடிபுகும் பொக்கப் புக்கிலி றப்பின்     குடிகலம்வெந் தொக்குக் கொட்டில்ம லத்தின்          குசைசுமந் தெட்டுத் திக்கிலு முற்றுந் ...... தடுமாறுங் 
குவலயங் கற்றுக் கத்தியி ளைக்குஞ்     சமயசங் கத்தைத் தப்பியி ருக்குங்          குணமடைந் துட்பட் டொக்கஇ ருக்கும் ...... படிபாராய் 
படிதருங் கற்புக் கற்பக முக்கண்     கொடிபசுஞ் சித்ரக் குத்தர முத்தம்          பணிநிதம் பத்துச் சத்தியு கக்குங் ...... குமரேசா 
பரவசங் கெட்டெட் டக்கர நித்தம்     பரவுமன் பர்க்குச் சித்திய ளிக்கும்          பரமர்வந் திக்கத் தக்கப தத்தன் ...... குருநாதா 
தொடியிடும் பத்மக் கைக்குமி டைக்குஞ்     சுருள்படும் பத்திப் பட்டகு ழற்குந்          துகிர்கடைந் தொப்பித் திட்டஇ தழ்க்குங் ...... குறமானின் 
சுடர்படுங் கச்சுக் கட்டுமு லைக்குந்     துவளுநெஞ் சத்தச் சுத்தஇ ருக்கும்          சுரரும்வந் திக்கக் கச்சியில் நிற்கும் ...... பெருமாளே.

பாவத்துக்கு இடமான உடம்பு எலும்பால் ஆகிய வீடு. ரத்தம், நெருங்கிய நரம்புகள் இவைகள் சேர்த்துக் கட்டிய ஒரு கட்டடம். சிறையிட்டது போலச் சூழ்ந்து திரண்டு ஒன்று கூடிச் சேர்ந்த வினை என்னும் பந்த பாசக் கலக்கம். இருண்டதும், உயர்ந்து எழுந்துள்ளதும், ததும்பி எழுவதுமான அலைகள் மோதும் பிறப்பு என்னும் துக்ககரமான கடலிடத்தே, பறிபட்டு விழுந்த தென்னங் குரும்பை போல அலைச்சல் உற்றுச் சுழன்று (அந்தப் பிறவிக் கடலில் மிதக்கும்) தெப்பம் போன்ற (மனம், புத்தி, அகங்காரம், சித்தம் ஆகி)ய முக்கரணங்கள் குடி புகுந்துள்ள பொய்யான இருப்பிடம். இறந்து போனால் (இந்த வஞ்சகக்) குடிசை வெந்து போகும் கொட்டகை. (ஆணவம், கன்மம், மாயை என்னும்) மும்மலங்களின் இருப்பிடம். (ஆகிய இந்த உடலைச் சுமந்து) எட்டுத் திசைகளிலும், எல்லா இடங்களிலும் தடுமாறுகின்ற, இவ்வுலக நூல்களைக் கற்றும், கத்தி இளைத்துப் போகும் சமய சார்பான சங்கங்களை விட்டு விலகி இருக்கும் (உத்தம) குணத்தை அடைந்தும், (சாந்த) குணத்திலேயே உட்பட்டு எப்போதும் நான் பொருந்தி இருக்கும்படி கண் பார்த்து அருளுக. முறைமையான கற்பு வாய்ந்த, கற்பகம் அனையவள். முக்கண் கொண்ட கொடி போன்றவள். பசுமையான அலங்காரத்துக்குத் தகுதியான முத்து மாலை அணிந்தவள். பாம்பு போன்ற ஜனன உறுப்பையும் கொண்ட தேவியாகிய உமை மகிழ்கின்ற குமரேசனே, மனத்தை நிலை நிறுத்தி, (ஓம் ஆம் ஒளம் சிவாய நம என்னும்) எட்டு எழுத்தையும், நாள் தோறும் போற்றித் துதிக்கும் அடியார்களுக்கு வீட்டின்பத்தைத் தரும் சிவபெருமான் வணங்கத் தக்க திருவடிகளை உடைய குரு நாதனே, கைவளை அணிந்துள்ள தாமரை போன்ற கைக்கும், இடைக்கும், சுருள் கொண்ட வரிசை அமைந்த கூந்தலுக்கும், பவளத்தைக் கடைந்து எடுத்து அலங்கரித்த வாயிதழுக்கும், குறப் பெண்ணாகிய வள்ளியின் ஒளி வீசும் கச்சு அணிந்த மார்பகத்துக்கும் நெகிழ்கின்ற மனதை உடையவனே, சுத்தமாகிய ரிக்கு வேதமும் தேவர்களும் வணங்க காஞ்சீபுரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 312 - காஞ்சீபுரம்
ராகம் - ....; தாளம் - ....

தனதனந் தத்தத் தத்தன தத்தம்     தனதனந் தத்தத் தத்தன தத்தம்          தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான

கனக்ரவுஞ் சத்திற் சத்தியை விட்டன்     றசுரர்தண் டத்தைச் செற்றவி தழ்ப்பங்          கயனைமுன் குட்டிக் கைத்தளை யிட்டும் ...... பரையாளுங் 
கடவுளன் புற்றுக் கற்றவர் சுற்றும்     பெரியதும் பிக்கைக் கற்பக முற்றங்          கரதலம் பற்றப் பெற்றவொ ருத்தன் ...... ஜகதாதை 
புனவிளந் தத்தைக் கிச்சையு ரைக்கும்     புரவலன் பத்தர்க் குத்துணை நிற்கும்          புதியவன் செச்சைப் புட்பம ணக்கும் ...... பலபாரப் 
புயனெனுஞ் சொற்கற் றுப்பிற கற்கும்     பசையொழிந் தத்தத் திக்கென நிற்கும்          பொருடொறும் பொத்தப் பட்டதொ ரத்தம் ...... பெறுவேனோ 
அனல்விடுஞ் செக்கட் டிக்கய மெட்டும்     பொரவரிந் திட்டெட் டிற்பகு திக்கொம்          பணிதருஞ் சித்ரத் தொற்றையு ரத்தன் ...... திடமாக 
அடியொடும் பற்றிப் பொற்கயி லைக்குன்     றதுபிடுங் கப்புக் கப்பொழு தக்குன்          றணிபுயம் பத்துப் பத்துநெ ரிப்புண் ...... டவனீடுந் 
தனதொரங் குட்டத் தெட்பல டுக்குஞ்     சரியலன் கொற்றத் துக்ரவ ரக்கன்          தசமுகன் கைக்குக் கட்கம ளிக்கும் ...... பெரியோனுந் 
தலைவியும் பக்கத் தொக்கவி ருக்குஞ்     சயிலமுந் தெற்குச் சற்குரு வெற்புந்          தணியலும் பெற்றுக் கச்சியில் நிற்கும் ...... பெருமாளே.

பருத்த கிரவுஞ்ச மலை மீது வேலாயுதத்தைச் செலுத்தி, அன்று அசுரர்களின் படையை அழித்து, அந்த இதழ்களை உடைய தாமரை மலரில் இருக்கும் பிரமனை முன்பு தலையில் குட்டி, கை விலங்கு இட்டு, தேவர்களைக் காத்து ஆண்ட தெய்வம் அவன். அன்பு கொண்டு கற்றறிந்த பெரியோர்கள் வலம் வரும் பெரிய துதிக்கையை உடைய கற்பக விநாயகர் முன்பு தனது கையைப் பற்றி அழைத்துச் செல்ல, நடை கற்ற ஒருவனாகிய (முருகன்) உலகுக்குத் தந்தை அவன். தினைப் புனத்தில் இருந்த இளமைப் பருவத்துக் கிளி போன்ற வள்ளிக்கு காதல் மொழிகளைச் சொன்ன காவலன் அவன். பக்தர்களுக்குத் துணையாக நிற்கும் புதியோன் அவன். வெட்சிப் பூ மணம் வீசும் பல கனத்த புயங்களை உடையவன் அவன் என்னும் வகையில் (முருகனைப் பற்றிய) சொற்களையே கற்று, பிறர் சம்பந்தமான சொற்களைக் கற்க வேண்டும் என்கின்ற பற்று ஒழிந்து, அர்த்தத்தில் கரும்பு போல் இனித்து நிற்கும் குணம் அமைய, செய்யுள் தோறும் பொதியப் படுவதாகிய ஒப்பற்ற செல்வத்தை நான் அடைவேனோ? நெருப்பை வீசும் சிவந்த கண்களை உடைய அஷ்ட திக்கஜங்களும் (எட்டுத் திக்கு யானைகளும்) தன்னோடு சண்டை செய்ய, (தன் மார்பில்) ஒடிந்து போன எட்டுக் கொம்புகளின் நுனித் துண்டுகளை அணிந்த அழகிய ஒப்பற்ற மார்பினனும், பலத்துடன், அடியோடு பற்றி பொன்னாலாகிய கயிலை மலையை பிடுங்கப் புகுந்த போது, அந்த மலை போன்ற புயங்கள் இருபதும் நெரிப்பு உண்டவனும், அப்படி நசுக்கும் தனது (சிவனது) ஒப்பற்ற பெரு விரலின் எள் நுனி அளவுக்கும் ஈடாகாதவனும், வீர உக்ரம் கொண்ட அரக்கனும், பத்து முகத்தினனும் ஆகிய இராவணனுடைய கைகளுக்கு வாள் ஒன்றைப் பரிசாக அளித்த பெரியவனுமாகிய சிவபெருமானும், தேவி பார்வதியும் இருவரும் பக்கத்தில் ஒன்றுபட்டுச் சேர்ந்து இருக்கும் (அர்த்தநா¡£சுரர் விளங்கும்) மலையாகிய திருச்செங்கோடும், தெற்கே உள்ள தலமாகிய சுவாமி மலையும், திருத்தணிகையும் நீ இருக்கும் தலங்களாகப் பெற்று, காஞ்சீபுரத்தில் நிற்கின்ற பெருமாளே. 

பாடல் 313 - காஞ்சீபுரம்
ராகம் - ....; தாளம் - ......

தனதனந் தத்தத் தத்தன தத்தம்     தனதனந் தத்தத் தத்தன தத்தம்          தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான

தெரியலஞ் செச்சைக் கொத்துமு டிக்கும்     பரிதிகந் தத்தைச் சுற்றந டத்துஞ்          சிறைவிடுஞ் சொர்க்கத் துச்சுர ரைக்கங் ...... கையில்வாழுஞ் 
சிறுவனென் றிச்சைப் பட்டுப ஜிக்கும்     படிபெரும் பத்திச் சித்ரக வித்வஞ்          சிறிதுமின் றிச்சித் தப்பரி சுத்தம் ...... பிறவாதே 
பரிகரஞ் சுத்தத் தக்கப்ர புத்வம்     பதறியங் கட்டப் பட்டனர் தத்வம்          பலவையுங் கற்றுத் தர்க்கம தத்வம் ...... பழியாதே 
பரபதம் பற்றப் பெற்றஎ வர்க்கும்     பரவசம் பற்றிப் பற்றற நிற்கும்          பரவ்ரதம் பற்றப் பெற்றிலன் மற்றென் ...... துயர்போமோ 
சரியுடன் துத்திப் பத்திமு டிச்செம்     பணதரங் கைக்குக் கட்டிய நெட்டன்          தனிசிவன் பக்கத் தற்புதை பற்பந் ...... திரிசூலந் 
தரிகரும் பொக்கத் தக்கமொ ழிச்சுந்     தரியரும் பிக்கப் பித்தத னத்தந்          தரிசுரும் பிக்குப் பத்ரையெ வர்க்குந் ...... தெரியாத 
பெரியபண் டத்தைச் சத்திய பித்தன்     பிரிதியுண் கற்புப் பச்சையெ றிக்கும்          ப்ரபையள்தண் டிற்கைப் பத்மம டப்பெண் ...... கொடிவாழ்வே 
பிரமரண் டத்தைத் தொட்டதொர் வெற்பும்     பிளவிடுஞ் சத்திக் கைத்தல நித்தம்          பெருமிதம் பெற்றுக் கச்சியில் நிற்கும் ...... பெருமாளே.

மாலையாக அழகிய வெட்சிப் பூங்கொத்துக்களை சூடிக் கொள்பவனும், குதிரையாகிய மயிலை திக்குகளின் கோடி வரையில் நடத்துபவனும், விண்ணுலகத்தில் இருக்கும் தேவர்களைச் சிறையிலிருந்து மீட்டவனும், கங்கையில் வளர்ந்த குழந்தை என்றும் ஆசை நிரம்பி பாடிப் போற்றும்படியான பெரிய பக்தியும், அழகிய கவி பாடும் திறனும் கொஞ்சமும் இல்லாமல், மனதில் பரிசுத்த நிலை தோன்றாமல் (இருக்கும் நான்), பரிவாரங்கள் தம்மைச் சூழ்ந்திருக்க, பெரிய நிலையை அடைந்து பரபரப்புடன் அவ்விடத்தில் பக்கத்தில் சூழ்ந்துள்ளவர் பேசும் உண்மை நீதிகள் பலவற்றையும் கற்று, தர்க்கம் பேசி, மதங்களின் வம்புப் பேச்சுக்களில் அழிந்து போகாமல், மேலான வீட்டின்ப நிலையை அடையப் பெற்ற எவரும் மிக்க மகிழ்ச்சியைக் கொள்ள, பற்று நீங்கி நிற்கும் மேலான தவ நிலை அடையப் பெற்றிலனே. அவ்வாறு இருக்கின்ற எனது துயர் போவதற்கு வழி உண்டோ? ஒழுங்காக பணாமுடி வரிசையை தலையில் கொண்டதும், செவ்விய படத்தைக் கொண்டதுமான பாம்பை கையில் கட்டியுள்ள பெருமையோன், ஒப்பற்ற சிவபெருமானின் இடப் பாகத்தில் உறையும் அற்புதத் தலைவி, திருநீறு, முத்தலைச் சூலம் இவைகளைத் தரித்துள்ளவள், கரும்புக்கு ஒப்பு என்று சொல்லத் தக்க சொற்களை உடைய சுந்தரி, தோன்றிப் பெருத்துள்ள மார்பகங்களை உடைய துர்க்கை, வண்டுகள் மொய்க்கும் கரும்பு ஏந்திய பத்ரகாளி, யாரும் அறிய ஒண்ணாத பெருமை மிக்க, பண் போன்ற மொழியை மிழற்றும் கிளி, உண்மையில் மிகுந்த பித்தனாகிய* சிவ பெருமானுடைய அன்பை உட்கொண்ட, கற்பு வாய்ந்த, பச்சை நிறக் கதிர் வீசும் பேரொளியாள், வீணை ஏந்திய கையினள், தாமரை மலரில் வீற்றிருக்கும் மட மங்கை, கொடி போன்ற பார்வதியின் செல்வமே, பிரமன் படைத்த உலகத்தைத் தொடும்படி வளர்ந்திருந்த ஒப்பற்ற கிரெளஞ்ச மலையைப் பிளந்து எறிந்த சக்தி வேலாயுதத்தைக் கொண்ட திருக் கரத்தனே, நாள் தோறும் மிஞ்சும் சிறப்புடன் காஞ்சீபுரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* சிவபிரானை சுந்தரர் பித்தா என்று அழைத்தார் - பெரிய புராணம்.

பாடல் 314 - காஞ்சீபுரம்
ராகம் - .....; தாளம் - ......

தனதனந் தத்தத் தத்தன தத்தம்     தனதனந் தத்தத் தத்தன தத்தம்          தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான

புனமடந் தைக்குத் தக்கபு யத்தன்     குமரனென் றெத்திப் பத்தர்து திக்கும்          பொருளைநெஞ் சத்துக் கற்பனை முற்றும் ...... பிறிதேதும் 
புகலுமெண் பத்தெட் டெட்டியல் தத்வம்     சகலமும் பற்றிப் பற்றற நிற்கும்          பொதுவையென் றொக்கத் தக்கதொ ரத்தந் ...... தனைநாளும் 
சினமுடன் தர்க்கித் துச்சிலு கிக்கொண்     டறுவருங் கைக்குத் திட்டொரு வர்க்குந்          தெரிவரும் சத்யத் தைத்தெரி சித்துன் ...... செயல்பாடித் 
திசைதொறுங் கற்பிக் கைக்கினி யற்பந்     திருவுளம் பற்றிச் செச்சைம ணக்குஞ்          சிறுசதங் கைப்பொற் பத்மமெ னக்கென் ...... றருள்வாயே 
கனபெருந் தொப்பைக் கெட்பொரி யப்பம்     கனிகிழங் கிக்குச் சர்க்கரை முக்கண்          கடலைகண் டப்பிப் பிட்டொடு மொக்கும் ...... திருவாயன் 
கவளதுங் கக்கைக் கற்பக முக்கண்     திகழுநங் கொற்றத் தொற்றைம ருப்பன்          கரிமுகன் சித்ரப் பொற்புகர் வெற்பன் ...... றனையீனும் 
பனவியொன் றெட்டுச் சக்ரத லப்பெண்     கவுரிசெம் பொற்பட் டுத்தரி யப்பெண்          பழயஅண் டத்தைப் பெற்றம டப்பெண் ...... பணிவாரைப் 
பவதரங் கத்தைத் தப்பநி றுத்தும்     பவதிகம் பர்க்குப் புக்கவள் பக்கம்          பயில்வரம் பெற்றுக் கச்சியில் நிற்கும் ...... பெருமாளே.

தினைப்புனத்து மடந்தையாகிய வள்ளிக்கு ஏற்றதான புயங்களை உடையவன், குமரன் என்று போற்றி பக்தர்கள் துதிக்கின்ற பொருளை, மனத்தில் கொண்ட கற்பனைகள் முழுமையும், பிறவான பலவற்றையும், புகழ்ந்து சொல்லப்படும் தொண்ணூற்றாறு* வகையான தத்துவ உண்மைகளும் ஆக எல்லாவற்றையும், பற்றியும், பற்று இல்லாமலும் நிற்கும் பொதுப் பொருளை, சூரியனுக்கு ஒப்பாகத் தக்க (பேரொளியைக் கொண்ட) ஒப்பற்றச் செல்வத்தை நாள் தோறும், கோபத்துடன் வாதாடிப் பேசி சண்டையிட்டுக் கொண்டு அறு வகைச் சமயத்தாரும் கைக்குத்துடன் வாதம் செய்து, ஒருவருக்கும் தெரிதற்கு அரிதான சத்தியப் பொருளை தரிசனம் செய்து, உன் திருவிளையாடல்களைப் பாடி, திக்குகள் தோறும் (உள்ள யாவருக்கும்) எடுத்து உபதேசிக்க, இனி மேல் நீ சற்று தயை கூர்ந்து, வெட்சி மாலை மணம் வீசும், சிறிய சதங்கை அணிந்துள்ள உன் அழகிய திருவடித் தாமரையை எனக்கு எப்போது தந்து அருள்வாய்? கனத்த பெரிய வயிற்றில் எள், பொரி, அப்பம், பழம், கிழங்கு, கரும்பு இவைகளையும், சர்க்கரை, தேங்காய், கடலை, கற்கண்டு இவைகளையும் வாரி உண்டு, பிட்டுடன் விழுங்கும் திரு வாயை உடையவர், சோற்றுத் திரளை உண்ணும் சிறந்த துதிக்கையை உடைய கற்பக விநாயகர் (கற்பகத்தரு போல கேட்டதைக் கொடுப்பவர்), முக்கண்ணர், விளங்கும் நமது வீரம் வாய்ந்த ஒற்றைக் கொம்பர், யானை முகத்தினர், அழகிய, பொலிவுள்ள (மத்தகத்தில்) புள்ளிகளை உடைய மலை போன்ற கணபதியைப் பெற்ற அந்தணி, (1+ 8) ஒன்பது கோணங்களை உடைய சக்ரத்தில் (நவாவரணத்தில்) வீற்றிருக்கும் பெண், கெளரி, செவ்விய அழகிய பட்டாலாகிய மேலாடை அணிந்துள்ள அந்தப் பெண், பழையவளும், அண்டங்களைப் பெற்றவளுமாகிய இளம் பெண், தன்னைப் பணிபவர்களுடைய பிறப்பு என்னும் அலை கடலை விலக்கி நிறுத்தும் பகவதி (பார்வதி), ஏகாம்பர நாதரைக் கணவராக அடைந்தவள் ஆகிய உமா தேவிக்குப் பக்கத்தில் அமர்ந்து, வரத்தைப் பெற்று**, காஞ்சீபுரத்தில் நின்றருளும் பெருமாளே. 
* 96 தத்துவங்கள் பின்வருமாறு:36 பரதத்துவங்கள் (அகநிலை): ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து - 25 (புறநிலை): மண், தீ, நீர், காற்று, வெளி.ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை): வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4. 
** தந்தை சொல்லி அனுப்பியும் பிரமனைச் சிறையினின்று விடாது, பின்னர் அவர் நேரில் வந்து சொல்லிய பின் பிரமனை முருகன் விடுத்தார். இந்த குற்றம் நீங்க, முருகவேள் காஞ்சீபுரத்தில் உள்ள குமரக் கோட்டத்தில் தவம் புரிந்து, தோஷம் நீங்கி வரம் பெற்றார்.

பாடல் 315 - காஞ்சீபுரம்
ராகம் - தோடி; தாளம் - ஆதி - எடுப்பு - 1/2 இடம்

தனதனந் தத்தத் தத்தன தத்தம்     தனதனந் தத்தத் தத்தன தத்தம்          தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான

கறையிலங் குக்ரச் சத்தித ரிக்குஞ்     சரவணன் சித்தத் துக்குளொ ளிக்குங்          கரவடன் கொற்றக் குக்குட வத்தன் ...... தனிவீரக் 
கழலிடும் பத்மக் கட்செவி வெற்பன்     பழநிமன் கச்சிக் கொற்றவன் மற்றுங்          கடகவஞ் சிக்குக் கர்த்தனெ னச்செந் ...... தமிழ்பாடிக் 
குறையிலன் புற்றுக் குற்றம றுக்கும்     பொறைகள்நந் தற்பப் புத்தியை விட்டென்          குணமடங் கக்கெட் டுக்குண மற்றொன் ...... றிலதான 
குணமடைந் தெப்பற் றுக்களு மற்றுங்     குறியொடுஞ் சுத்தப் பத்தரி ருக்குங்          குருபதஞ் சித்திக் கைக்கருள் சற்றுங் ...... கிடையாதோ 
பிறைகரந் தைக்கொத் துப்பணி மத்தந்     தலையெலும் பப்புக் கொக்கிற கக்கம்          பிரமனன் றெட்டற் கற்றதி ருக்கொன் ...... றையும்வேணிப் 
பிறவுநின் றொக்கத் தொக்கும ணக்குஞ்     சரணியம் பத்மக் கைக்கொடி முக்கண்          பெறுகரும் பத்தக் கத்தருள் நற்பங் ...... கயவாவி 
திறைகொளுஞ் சித்ரக் குத்துமு லைக்கொம்     பறியுமந் தத்தைக் கைக்கக மொய்க்குந்          த்ரிபுரைசெம் பட்டுக் கட்டுநு சுப்பின் ...... திருவான 
தெரிவையந் துர்க்கிச் சத்தியெ வர்க்குந்     தெரிவருஞ் சுத்தப் பச்சைநி றப்பெண்          சிறுவதொண் டர்க்குச் சித்திய ளிக்கும் ...... பெருமாளே.

(இரத்தக்) கறை விளங்கும் உக்கிரம் பொருந்திய வேற்படையை ஏந்தும் சரவண மூர்த்தி, மனத்தில் ஒளிந்து கொண்டிருக்கும் திருடன், வீரம் வாய்ந்த கோழிக் கொடியை ஏந்திய கையன், ஒப்பற்ற வீரக்கழலை அணிந்துள்ள தாமரை போன்ற திருவடியை உடையவன், பாம்பு மலையான் (திருச்செங்கோட்டு மலையான்), பழனி மலையான், காஞ்சீபுரத்து வீரன், பின்னும் கைவளை அணிந்த வள்ளிக் கொடி போன்ற வள்ளிக்குத் தலைவன் என்று செந்தமிழ்ப் பாக்களைப் பாடி, குறைவு படாத அன்பு பூண்டு, குற்றங்களை விலக்க வல்ல பொறுமைக் குணம் சிறந்து மேம்பட, அற்பமான புத்தியை ஒழித்து, என்னுடைய தீய குணங்கள் எல்லாம் கெட்டு, குணம் வேறு ஒன்று இல்லாததான ஒரே நிலையான சாத்துவிகக் குணம் ஒன்றையே அடைந்து, எல்லாவிதமான ஆசைகளையும் ஒழித்து, கடவுள் குறி ஒன்றையே கருதும் பரிசுத்தமான பக்தர்கள் இருக்கும் பெருமை பொருந்தும் ஞான நிலை எனக்குக் கை கூடுவதற்கு உனது திருவருள் சற்றேனும் கிடைக்காதோ? சந்திரன், திருநீற்றுப் பச்சைக் கொத்துக்கள், பாம்பு, ஊமத்தம் மலர், கபால எலும்பு, கங்கை நீர், கொக்கின் இறகு, ருத்ராக்ஷ மாலை பிரமன் முன்பு எட்டுதற்கு அரிதாக இருந்த அழகிய கொன்றை இவை எல்லாம் அணிந்த சடை மற்றவைகளும் விளங்கி ஒன்று சேர்ந்து கூடி (சிவபெருமான் வீழ்ந்து வணங்குவதால் அவர் தலையில் உள்ள பொருள்களின்) மணம் வீசும் திருவடி உடையவள், அழகிய தாமரை போன்ற திருக்கரத்தை உடைய கொடி போன்றவள், மூன்று கண்கள் கொண்ட கரும்பு போன்றவள், அந்தத் தக்கதான பொருளை (அடியேனுக்கு) அருள் செய்பவள், நல்ல திருக் குளத்துத் தாமரையையும் வென்று அடக்கும் அழகிய, திரண்டு குவிந்த மார்பைக் கொண்ட கொம்பு போன்றவள், ஞானமுள்ளவள், அழகிய கிளி கையில் பயின்று இருக்கும் திரிபுரை (சந்திர கண்டம், சூரிய கண்டம், அக்கினி கண்டம் என்னும் முப்பிரிவை உடைய சக்கரத்துக்குத் தலைவி), செம்பட்டு ஆடை கட்டியிருக்கும் இடையை உடைய, லக்ஷ்மிகரம் பொருந்திய நங்கை, அழகிய துர்க்கா தேவி, பராசக்தி, எல்லோருக்கும் தெரிவதற்கு அரிதான சுத்தமான பச்சை நிறம் கொண்ட பெண் ஆகிய பார்வதி தேவியின் பிள்ளையே, அடியார்களுக்கு வீடு பேற்றை அளிக்கும் பெருமாளே. 

பாடல் 316 - காஞ்சீபுரம்
ராகம் - ஷண்முகப்ரியா; தாளம் - ஆதி - எடுப்பு - 1/2 இடம்

தனதனந் தத்தத் தத்தன தத்தம்     தனதனந் தத்தத் தத்தன தத்தம்          தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான

செறிதரும் செப்பத் துற்பல வெற்பும்     பிறிதுமங் கத்தைக் குற்றவி ருப்புஞ்          சிகரிதுண் டிக்கக் கற்றத னிச்செஞ் ...... சுடர்வேலும் 
திரள்புயங் கொத்துப் பட்டவ னைத்துந்     தெளியநெஞ் சத்துப் புற்றும யக்கம்          திகழ்ப்ரபஞ் சத்தைப் புற்புத மொக்கும் ...... படிநாடும் 
அறிவறிந் தத்தற் கற்றது செப்புங்     கடவுளன் பத்தர்க் கச்சம றுத்தன்          பருள்பவன் பொற்புக் கச்சியுள் நிற்கும் ...... பெருமானென் 
றவிழுமன் புற்றுக் கற்றும னத்தின்     செயலொழிந் தெட்டப் பட்டத னைச்சென்          றடைதரும் பக்வத் தைத்தமி யெற்கென் ...... றருள்வாயே 
குறியவன் செப்பப் பட்டஎ வர்க்கும்     பெரியவன் கற்பிக் கப்படு சுக்ரன்          குலைகுலைந் துட்கக் சத்யமி ழற்றுஞ் ...... சிறுபாலன் 
குதலையின் சொற்குத் தர்க்கமு ரைக்குங்     கனகனங் கத்திற் குத்திநி ணச்செங்          குடர்பிடுங் கித்திக் குற்றமு கச்சிங் ...... கமுராரி 
பொறிவிடுந் துத்திக் கட்செவி யிற்கண்     துயில்கொளுஞ் சக்ரக் கைக்கிரி சுத்தம்          புயலெனும் பொற்புப் பெற்றநி றத்தன் ...... ஜகதாதை 
புனிதசங் கத்துக் கைத்தல நிர்த்தன்     பழையசந் தத்தைப் பெற்றம டப்பெண்          புகலுகொண் டற்குச் சித்திய ளிக்கும் ...... பெருமாளே.

நெருக்கமாக வளர்கிற செம்மையான செங்கழுநீர்மலர் (தினமும் மலரும் சுனையுடன்) இருக்கும் திருத்தணிகை மலையும், மற்றும் அத்தணிகைமலைக்குச் சமமான மற்றத் தலங்களும், கிரெளஞ்ச மலையைப் பிளக்கக் கற்றுக்கொண்ட ஒப்பற்ற செவ்வொளியுடன் கூடிய வேலும், திரண்ட பன்னிரு தோள்கள் கொத்தாக உள்ள எல்லாமும், தெளிவாக நெஞ்சத்திலே தரிசனம் செய்து அறிவு பெற்று, மயக்கம் நிறைந்துள்ள இந்த உலகை நீர்க்குமிழிக்கு சமமானது என்று ஆராய்ந்து உணரும் அறிவை அடைந்து, சிவபிரானுக்கு பற்றற்ற பிரணவப் பொருளை உபதேசித்த கடவுள் நீ என்றும், அடியார்க்கு அச்சத்தை அகற்றி அன்பை அருள்பவன் நீ என்றும், அழகிய கச்சியில் (காஞ்சீபுரத்தில்) நின்றருளும் பெருமான் நீ என்றும், நெகிழ்ந்து உருகும் அன்பின் வசமாகி, திருவருள் நெறியைப் பயின்று, மனத்தின் செயலெல்லாம் நீங்கப் பெற்று, அந்த நிலையில் எட்டப் படுவதான பொருளைச் சென்று அடைகின்ற மனப் பக்குவத்தை அடியேனுக்கு என்றைக்குத் தந்தருள்வாயோ? வாமன வடிவமாகிக் குறுகி, ஆனால் சொல்லப்படும் யாவரினும் பெரியவர் ஆனவரும், கல்வி கற்றுக் கொடுக்கவந்த சுக்கிராச்சாரியார் உள்ளம் நடுநடுங்கி அஞ்சும்படி, உண்மையையே உரைத்த சிறு குழந்தை பிரகலாதனின் மழலைச் சொல்லிற்கு எதிர்வாதம் பேசிய ஹிரண்யனுடைய உடலைக் குத்தி, மாமிசம் நிறைந்த சிவந்த குடலைப் பிடுங்கி, எட்டுத் திசைகளிலும் பிடறி மயிர் பறக்கும் சிங்க முகத்தை உடைய நரசிம்மரும், முரன் என்ற அரக்கனைக் கொன்ற முராரியும், ஒளிவீசும் படப் பொறிகளை உடைய பாம்பு ஆதிசேஷன் மீது துயில்பவரும், சக்ராயுதத்தைக் கையிலே தாங்கும் மலை போன்றவரும், தூய மேகம் போன்ற அழகிய நிறத்தை உடையவரும், உலகுக்கெல்லாம் தந்தையும், பாஞ்ச ஜன்யம் என்ற பரிசுத்தமான சங்கைக் கரத்திலே கொண்டவரும், (காளிங்கன் என்ற பாம்பின் தலையில்) நடனமாடியவரும், பழமையான (மோகினி) வடிவத்தைப் பெற்று இளம்பெண்ணாக வந்தவரும், புகழப் பெறும் நீல மேகம் போன்ற நிறத்தினருமாகிய திருமாலுக்கு வீடு பேற்றினைத்* தந்தருளிய பெருமாளே. 
* காஞ்சியில் 'திருமேற்றளி' என்ற இடத்தில் திருமால் சிவசாரூபம் பெற வேண்டி, நீண்ட தவம் செய்தார். திருஞானசம்பந்தர் உருவில் முருகன் அங்கு வந்து முகுந்தனை லிங்க வடிவமாக்கினார் - காஞ்சிப் புராணம்.

பாடல் 317 - காஞ்சீபுரம்
ராகம் - ....; தாளம் - .........

தனதனந் தத்தத் தத்தன தத்தம்     தனதனந் தத்தத் தத்தன தத்தம்          தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான

அரியயன் புட்பிக் கக்குழு மிக்கொண்     டமரர்வந் திக்கத் தட்டுரு வச்சென்          றவுணரங் கத்தைக் குத்திமு றித்தங் ...... கொருகோடி 
அலகைநின் றொத்தித் தித்திய றுத்தும்     பலவியங் கொட்டச் சக்கடி கற்றந்          தரியுடன் பற்றிக் குச்சரி மெச்சும் ...... படிபாடிப் 
பரிமுகங் கக்கச் செக்கண்வி ழித்தும்     பவுரிகொண் டெட்டுத் திக்கையு டைத்தும்          படுகளம் புக்குத் தொக்குந டிக்கும் ...... படிமோதிப் 
படைபொருஞ் சத்திப் பத்மநி னைத்துஞ்     சரவணன் கச்சிப் பொற்பனெ னப்பின்          பரவியுஞ் சித்தத் துக்குவ ரத்தொண் ...... டடைவேனோ 
பெரியதண் செச்சைக் கச்சணி வெற்பும்     சிறியவஞ் சிக்கொத் தெய்த்தநு சுப்பும்          ப்ரிதியொழிந் தொக்கக் கைக்கிளை துத்தங் ...... குரலாதி 
பிரிவில்கண் டிக்கப் பட்டவு ருட்டும்     கமுகமுஞ் சிற்பச் சித்ரமு ருக்கும்          பிரதியண் டத்தைப் பெற்றருள் சிற்றுந் ...... தியும்நீலக் 
கரியகொண் டற்கொப் பித்தக துப்புந்     திலதமுஞ் செப்பொற் பட்டமு முத்தின்          கனவடங் கட்டப் பட்டக ழுத்துந் ...... திருவான 
கருணையுஞ் சுத்தப் பச்சைவ னப்புங்     கருதுமன் பர்க்குச் சித்திய ளிக்குங்          கவுரியம் பைக்குப் புத்ரஎ வர்க்கும் ...... பெருமாளே.

திருமாலும் பிரமனும் தங்கள் மலர்வாய் திறந்து தமது குறைகளை எடுத்துக் கூற, ஒன்று சேர்ந்த தேவர்கள் வணங்கி நிற்க, ஊடுருவச் சென்று (உனது வேல்) அசுரர்களுடைய உடல்களைக் குத்தியும், முறித்தும், அப்போது அவ்விடத்தில் ஒரு கோடி பேய்கள் நின்று தாளம் போட்டு (தாம்) தித்தி என்ற தாள ஜதியைக் கூட்டியும், பல விதமான இசைக்கருவிகளை முழக்கி பரிகாசம் பேசியும், துர்க்கையுடன் சேர்ந்து குச்சரி என்னும் ஒரு பண்ணை (குர்ஜரி என்ற ராகத்தை) மெச்சி வியக்கும்படி பாடியும், வடவா முகாக்கினி போல் தீயை வெளிப்படுத்தி சிவந்த கண்களை விழித்தும், மண்டலமாய் ஆடும் கூத்து வகையை ஆடி எட்டு திசைகளையும் அதிர்ச்சியுறச் செய்தும், போர்க்களத்தில் நுழைந்து ஒன்று சேர்ந்து நடனம் செய்யவும், (அசுரர்களைத்) தாக்கி, எவ்விதமான படைகளையும் பொருது வெற்றி பெற வல்ல சக்தி வேலை ஏந்தும் தாமரை போன்ற திருக்கரங்களை தியானித்தும், சரவணன் என்றும் காஞ்சி நகரில் வாழும் அழகன் என்றும் பின்பு பலவாறு போற்றியும் (அத்தகைய பக்தி) என் மனதில் உதிக்கும்படி, தொண்டு செய்யும் பேற்றை நான் அடைவேனோ? பெரிய, குளிர்ந்த குங்குமக் குழம்பு கொண்ட கச்சை அணிந்த மலை போன்ற மார்பும், சிறிய வஞ்சிக் கொடி போன்று இளைத்த இடையும், விருப்பம் முழுதும் ஒழிந்து ஓர் இசையில் தான் அதிக விருப்பம் என்று இல்லாமல் எல்லா இசை வகைகளையும், கைக்கிளை, துத்தம்* முதலான இசைப் பிரிவுகளில் பகிர்க்கப்பட்ட, புரளும் குரலிசையும், ஸ்வர பேதமும், சிற்ப நூல்களில் சொல்லப்பட்ட அழகிய உருக்கமான நுண்கலையும், (இந்த ப்ரபஞ்சத்தின்) ஒவ்வொரு அண்டத்தையும் பெற்றருளியதுமான சிறிய வயிறும், இருண்ட கறுத்த மேகத்துக்கு நிகரான கூந்தலும், நெற்றிப் பொட்டும், செம் பொன் பட்டமும், முத்தின் சிறந்த மாலை கட்டப்பட்ட கழுத்தும், தெய்வத் தன்மை வாய்ந்த கருணையும், சுத்தமான பச்சை நிற அழகும் உள்ளவளும், தியானிக்கும் அடியார்களுக்கு வீடு பேற்றை அளிக்கும் அம்பிகையுமான கெளரி (பார்வதி) தேவிக்கு மகனே, எல்லார்க்கும் பெருமாளே. 
* தமிழின் ஏழிசைகள்:குரல் (ஷட்ஜம்), துத்தம் (ரிஷபம்), கைக்கிளை (காந்தாரம்), உழை (மத்திமம்), இளி (பஞ்சமம்), விளரி (தைவதம்), தாரம் (நிஷாதம்) என்பன.

பாடல் 318 - காஞ்சீபுரம்
ராகம் - ஆரபி ; தாளம் - ஆதி - எடுப்பு - 1/2 இடம்

தனதனந் தத்தத் தத்தன தத்தம்     தனதனந் தத்தத் தத்தன தத்தம்          தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான

கனிதருங் கொக்குக் கட்செவி வெற்பும்     பழநியுந் தெற்குச் சற்குரு வெற்புங்          கதிரையுஞ் சொற்குட் பட்டதி ருச்செந் ...... திலும்வேலும் 
கனவிலுஞ் செப்பத் தப்புமெ னைச்சங்     கடவுடம் புக்குத் தக்கவ னைத்துங்          களவுகொண் டிட்டுக் கற்பனை யிற்கண் ...... சுழல்வேனைப் 
புனிதனம் பைக்குக் கைத்தல ரத்நம்     பழையகங் கைக்குற் றப்புது முத்தம்          புவியிலன் றைக்கற் றெய்ப்பவர் வைப்பென் ...... றுருகாஎப் 
பொழுதும் வந்திக்கைக் கற்றஎ னைப்பின்     பிழையுடன் பட்டுப் பத்தருள் வைக்கும்          பொறையையென் செப்பிச் செப்புவ தொப்பொன் ...... றுளதோதான் 
அனனியம் பெற்றற் றற்றொரு பற்றுந்     தெளிதருஞ் சித்தர்க் குத்தெளி சிற்கொந்          தமலைதென் கச்சிப் பிச்சிம லர்க்கொந் ...... தளபாரை 
அறவிநுண் பச்சைப் பொற்கொடி கற்கண்     டமுதினுந் தித்திக் கப்படு சொற்கொம்          பகிலஅண் டத்துற் பத்திசெய் முத்தின் ...... பொலமேருத் 
தனிவடம் பொற்புப் பெற்றமு லைக்குன்     றிணைசுமந் தெய்க்கப் பட்டநு சுப்பின்          தருணிசங் குற்றுத் தத்துதி ரைக்கம் ...... பையினூடே 
தவமுயன் றப்பொற் றப்படி கைக்கொண்     டறமிரண் டெட்டெட் டெட்டும் வளர்க்கும்          தலைவிபங் கர்க்குச் சத்யமு ரைக்கும் ...... பெருமாளே.

பழங்களைத் தருகின்ற மாமரங்கள் நிறைந்த பாம்பு மலையாகிய திருச்செங்கோட்டையையும், பழனியையும், தெற்கில் உள்ள சுவாமி மலையையும், கதிர்காமத்தையும், புகழுக்கு இருப்பிடமான திருச்செந்தூரையும், வேலாயுதத்தையும், கனவில் கூடச் சொல்லி அறியாத என்னை, சங்கடம் தரும் உடலின் சுகத்துக்கு வேண்டிய சகல பொருள்களையும், திருட்டு வழியிலாவது அடைந்து (கபட) யோசனைகளிலேயே நோக்கம் கொண்டு சுழலும் என்னை, பரிசுத்தமானவனுடைய தேவி பார்வதியின் கையில் விளங்கும் இரத்தினம், பழைய கங்கா தேவிக்குக் கிடைத்த புதிய முத்து, பூமியில் அன்றாடம் என்று ஒன்றும் சேமித்து வைக்காமல் இறைவனிடம் யாவற்றையும் விட்டு இளைத்த பெரியோர்களின் காப்பு நிதி என்று கூறி உருகி, எல்லாப் பொழுதினிலும் வணங்குதலே இல்லாத என்னை, (என் குறைகளை அறிந்த) பின்னும் என் குற்றங்களைப் பொருட்படுத்தாது பொறுத்துச் சம்மதித்து உனது பக்தர்கள் கூட்டத்துள் ஒருவனாக வைத்துள்ள உனது கருணையை நான் என்ன சொல்லிப் புகழ்வது, (உன் கருணைக்கு) நிகர் ஒன்று உண்டோ? (நீ வேறு நான் வேறு இல்லை என்ற) அத்துவைத நிலையைப் பெற்று எவ்வித பற்றும் நன்றாக அற்றுப் போய், தெளிவு அடைந்த மனம் கொண்ட சித்தத்தவர்களின் தெளிந்து உணர்ந்த பூங்கொத்துக்கள் அணிந்த நிர்மலம் ஆனவள், அழகிய கச்சிப் பதியில் பிச்சி மலரை அணிந்துள்ள கூந்தலை உடைய பரா சக்தி, அறச் செல்வி, நுண்ணிய பச்சை நிறமுள்ள அழகிய கொடி போன்றவள், கற்கண்டு, அமுது இவை இரண்டைக் காட்டிலும் இனிக்கும் சொற்களை உடைய கொடியனையாள், எல்லா அண்டங்களையும் தோற்றுவிக்கும் முத்து, பொன்னாலான மேருமலை, ஒப்பற்ற மணி வடத்தின் அழகு பெற்ற இரண்டு மலை மார்புகளைச் சுமந்து அதனால் இளைத்து நிற்கும், இடையை உடைய இளமைப் பருவத்தினளான உமா தேவி, சங்குகள் பொருந்தித் ததும்பிப் பரவிச் செல்லும் அலைகளை உடைய கம்பை ஆற்றுக்கு அருகே, தவம் செய்து, அந்தச் சிறப்புள்ள இரு நாழி நெல்லைக் கையில் கொண்டு முப்பத்திரண்டு அறங்களையும்* வளர்த்த தலைவியாகிய காமாட்சி தேவியின் பங்காளராகிய சிவபெருமானுக்கு மெய்ப் பொருளாகிய பிரணவ மந்திரத்தை உபதேசித்த பெருமாளே. 
* பெரிய புராணத்தில் கூறிய முப்பத்திரண்டு அறங்கள் பின்வருமாறு:சாலை அமைத்தல், ஓதுவார்க்கு உணவு, அறுசமயத்தாருக்கும் உணவு, பசுவுக்குத் தீனி, சிறைச் சோறு, ஐயம், தின்பண்டம் நல்கல், அநாதைகளுக்கு உணவு, மகப்பெறுவித்தல், மகவு வளர்த்தல், சிசுக்களுக்குப் பால் நல்கல், அநாதைப் பிணம் சுடுதல், அநாதைகளுக்கு உடை, சுண்ணாம்பு பூசல், நோய்க்கு மருந்து, வண்ணார் தொழில், நாவிதத் தொழில், கண்ணாடி அணிவித்தல், காதோலை போடுதல், கண் மருந்து, தலைக்கு எண்ணெய், ஒத்தடம் தருதல், பிறர் துயர் காத்தல், தண்ணீர்ப் பந்தல், மடம் கட்டுதல், தடாகம் அமைத்தல், சோலை வளர்த்தல், தோல் பதனிடல், மிருகங்களுக்கு உணவு, ஏர் உழுதல், உயிர் காத்தல், கன்னிகாதானம்.

பாடல் 319 - காஞ்சீபுரம்
ராகம் - ....; தாளம் -

தனதனந் தத்தத் தத்தன தத்தம்     தனதனந் தத்தத் தத்தன தத்தம்          தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான

தசைதுறுந் தொக்குக் கட்டளை சட்டஞ்     சரியவெண் கொக்குக் கொக்கந ரைத்தந்          தலையுடம் பெய்த்தெற் புத்தளை நெக்கிந் ...... த்ரியமாறித் 
தடிகொடுந் திக்குத் தப்பந டக்கும்     தளர்வுறுஞ் சுத்தப் பித்தவி ருத்தன்          தகைபெறும் பற்கொத் துக்கள னைத்துங் ...... கழலாநின் 
றசலருஞ் செச்செச் செச்செயெ னச்சந்     ததிகளும் சிச்சிச் சிச்சியெ னத்தங்          கரிவையும் துத்துத் துத்துவெ னக்கண் ...... டுமியாமற் 
றவருநிந் திக்கத் தக்கபி றப்பிங்     கலமலஞ் செச்சைச் சித்ரம ணித்தண்          டையரவிந் தத்திற் புக்கடை தற்கென் ...... றருள்வாயே 
குசைமுடிந் தொக்கப் பக்கரை யிட்டெண்     டிசையினுந் தத்தப் புத்தியை நத்துங்          குரகதங் கட்டிக் கிட்டிந டத்துங் ...... கதிர்நேமிக் 
குலரதம் புக்கொற் றைக்கணை யிட்டெண்     டிரிபுரஞ் சுட்டுக் கொட்டைப ரப்புங்          குரிசில்வந் திக்கக் கச்சியில் நிற்குங் ...... கதிர்வேலா 
திசைமுகன் தட்டுப் பட்டெழ வற்குஞ்     சிகரியுங் குத்துப் பட்டுவி ழத்தெண்          டிரையலங் கத்துப் புக்குல விச்சென் ...... றெதிரேறிச் 
சிரமதுங் கப்பொற் கட்டிகை யிட்டன்     றவுணர்நெஞ் சிற்குத் திக்கறை கட்கஞ்          சிதறிநின் றெட்டிப் பொட்டெழ வெட்டும் ...... பெருமாளே.

மாமிசமும் நெருங்கிய தோலும் அளந்து வைக்கப்பட்ட உடல் தளர்ந்து போக, தலைமயிர் வெண்ணிறமுடைய கொக்கு போல நரைத்து, அழகிய தலை, உடம்பு எல்லாம் இளைத்து, எலும்புக் கட்டுகள் நெகிழ்ச்சி உற்று, ஐம்பொறிகளும் தொழில் மாற்றம் அடைந்து, தடி ஏந்தி திசை தடுமாறி நடக்கும்படியாக தளர்ச்சி அடையும் சுத்தப் பித்தம் கொண்ட கிழவனாய், அழகு பெற்றிருந்த பல் வரிசைகள் முழுமையும் கழன்று போய், அயலாரும் சே சே என்று இகழ, பிள்ளைகளும் சீ சீ என்று பரிகசிக்க, உடன் தங்கியிருந்த பெண்களும் தூ தூ என்று பார்த்தவுடன் அவமதித்துத் துப்ப, பிறர் யாவரும் இகழும்படியான இந்தப் பிறப்பு இங்கு போதும் போதும். வெட்சி மலர் அணிந்ததும், அழகிய ரத்தின மணிகள் அணிந்ததும், தாமரை போன்றதுமான உன் திருவடியைப் பற்றிச் சேர்வதற்கு எப்போது எனக்கு அருள்வாய்? கடிவாளம் இட்டு நன்றாக அங்கவடி சேர்த்து, எட்டுத் திக்குகளிலும் தாவிச் செல்லும், அந்த ஞானத்தை விரும்பும் (வேதங்களாகிய நான்கு) குதிரைகளைப் பூட்டி நெருங்கச் செலுத்தும் சூரிய சந்திரர்களாகிய சக்கரங்கள் அமைந்த சிறந்த தேரில் ஏறி, (திருமாலாகிய) ஒரே அம்பை எய்து, மதிக்கத்தக்கத் திரிபுரங்களை எரித்து தமது வெற்றியைப் பரப்பிய தலைவராகிய சிவபெருமான் வணங்க காஞ்சீபுரத்தில் நிற்கும் ஒளி வேலனே, பிரமன் தடைபட்டு நிற்கும்படியும், வலிமை வாய்ந்த கிரெளஞ்ச மலையும் வேலால் குத்துப்பட்டு விழுந்து அழியவும், தெள்ளிய அலைகள் வீசும் கடலையும் எல்லா மதில் சுவர்களையும் தாண்டி உலவிச் சென்று பகைவர்களை எதிர்த்து வென்று (அசுரர்களுடைய) தலைகளும் அமுங்கி நாசம் அடைய, அகன்ற கண்கள் திகைப்பு அடைய, அசுரர்களுடைய நெஞ்சில் வேலால் குத்தி, அவர்கள் கையிலிருந்த கறைபட்ட வாளாயுதங்கள் சிதறிச் சென்று தூரத்தில் போய் போர்க்களத்தில் பொடி பட்டு விழும்படி வெட்டி வீழ்த்திய பெருமாளே. 

பாடல் 320 - காஞ்சீபுரம்
ராகம் - ஹிந்தோளம்; தாளம் - ஆதி - எடுப்பு - 1/2 இடம்

தனதனந் தத்தத் தத்தன தத்தம்     தனதனந் தத்தத் தத்தன தத்தம்          தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான

புரைபடுஞ் செற்றக் குற்றம னத்தன்     தவமிலன் சுத்தச் சத்யஅ சத்யன்          புகலிலன் சுற்றச் செத்தையுள் நிற்குந் ...... துரிசாளன் 
பொறையிலன் கொத்துத் தத்வவி கற்பஞ்     சகலமும் பற்றிப் பற்றற நிற்கும்          பொருளுடன் பற்றுச் சற்றுமில் வெற்றன் ...... கொடியேனின் 
கரையறுஞ் சித்ரச் சொற்புகழ் கற்குங்     கலையிலன் கட்டைப் புத்தியன் மட்டன்          கதியிலன் செச்சைப் பொற்புய வெற்புங் ...... கதிர்வேலுங் 
கதிரையுஞ் சக்ரப் பொற்றையு மற்றும்     பதிகளும் பொற்புக் கச்சியு முற்றுங்          கனவிலுஞ் சித்தத் திற்கரு திக்கொண் ...... டடைவேனோ 
குரைதருஞ் சுற்றுச் சத்தச முத்ரங்     கதறிவெந் துட்கக் கட்புர துட்டன்          குலமடங் கக்கெட் டொட்டொழி யச்சென் ...... றொருநேமிக் 
குவடொதுங் கச்சொர்க் கத்தரி டுக்கங்     கெடநடுங் கத்திக் கிற்கிரி வர்க்கங்          குலிசதுங் கக்கைக் கொற்றவ னத்தங் ...... குடியேறத் 
தரைவிசும் பைச்சிட் டித்தஇ ருக்கன்     சதுர்முகன் சிட்சைப் பட்டொழி யச்சந்          ததமும்வந் திக்கப் பெற்றவர் தத்தம் ...... பகையோடத் 
தகையதண் டைப்பொற் சித்ரவி சித்ரந்     தருசதங் கைக்கொத் தொத்துமு ழக்குஞ்          சரணகஞ் சத்திற் பொற்கழல் கட்டும் ...... பெருமாளே.

தணியாத கோபம் முதலிய குற்றங்கள் யாவும் உள்ள கறை படிந்த மனத்தன், தவம் ஏதும் இல்லாதவன், கலப்பில்லாத பொய்யையே பேசுபவன், வேறு திக்கற்றவன், காற்றில் சுழலும் குப்பைக்குள்ளே நிற்கும் அழுக்கைப் போன்றவன், பொறுமையே இல்லாதவன், பலதரப்பட்ட உண்மைகளின் வேறுபாடுகள் யாவையும் பற்றியும், பற்று இன்றி நிற்கிற மெய்ப்பொருள் (கடவுள்) மேல் விருப்பம் சற்றும் இல்லாத பயனற்றவன், பொல்லாதவன், உன் எல்லையற்ற அழகிய புகழைக் கற்கும் கலை ஞானம் சிறிதும் இல்லாதவன், குறுகிய அறிவை உடையவன், மட்டமானவன், நற்கதி அடையும் பாக்கியம் இல்லாதவனாகிய அடியேன், வெட்சிமலர் அணிந்த அழகிய மலைபோன்ற தோள்களையும், ஒளி வீசுகின்ற வேலாயுதத்தையும், கதிர்காமத்தையும், வட்டமலையையும்*, மற்றைய திருத்தலங்களையும், அழகிய காஞ்சீபுரத்தையும், முழுக்க முழுக்க, கனவிலும் மனத்திலே வைத்துத் தியானித்துக் கொண்டு உன்னைச் சேரமாட்டேனோ? பூமியைச் சுற்றியும் ஒலிக்கின்ற ஏழு சமுத்திரங்களும் கதறி, வெந்து போய் வற்றிவிடவும், பெருமைமிக்க ஊரான வீரமகேந்திரபுரியை ஆண்ட துஷ்டனான சூரனும் அவனது குலம் முழுவதும் அழிந்து அனைவரும் ஒழியவும், ஒப்பற்ற சக்ரவாளக்கிரி தன் இடம் விட்டுப் போய் ஓரமாய் ஒதுங்கவும், தேவர்களின் துயரங்கள் யாவும் நீங்கவும், அஷ்ட திக்கிலும் உள்ள குலகிரிக் கூட்டங்கள் யாவும் நடுங்கவும், வஜ்ராயுதத்தைத் தன் தூய கரத்தில் வைத்துள்ள இந்திரன் தனது ஊராகிய அமராபுரியில் மீண்டும் குடியேறவும், பூமியையும் ஆகாயத்தையும் படைத்த, 'ரிக்கு' வேதத்தில் வல்லவனான நான்முகன் பிரமன் தண்டிக்கப்பட்டு (குட்டப்பட்டு) விலகவும், எப்போதும் வணங்குகின்ற அடியார்களின் பகைவர்கள் யாவரும் ஓட்டம் பிடிக்கவும், அழகிய தண்டையும், பொன்னாலான அழகிய விசித்ரமான வடிவமுள்ள சதங்கைக் கூட்டமும் தாள ஒற்றுமையுடன் ஒலி செய்யும் பாதத் தாமரைகளில் அழகிய வீரக் கழலைக் கட்டிய பெருமாளே. 
* வட்டமலை என்ற தலம் கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ளது.

பாடல் 321 - காஞ்சீபுரம்
ராகம் - ......; தாளம் -

தனதன தத்தத் தனந்த தந்தன     தனதன தத்தத் தனந்த தந்தன          தனதன தத்தத் தனந்த தந்தன ...... தனதான

சலமலம் விட்டத் தடம்பெ ருங்குடில்     சகலவி னைக்கொத் திருந்தி டும்படி          சதிரவு றுப்புச் சமைந்து வந்தொரு ...... தந்தைதாயும் 
தரவரு பொய்க்குட் கிடந்த கந்தலி     லுறையுமு யிர்ப்பைச் சமன்து ரந்தொரு          தனியிலி ழுக்கப் படுந்த ரங்கமும் ...... வந்திடாமுன் 
பலவுரு வத்தைப் பொருந்தி யன்றுயர்     படியுநெ ளிக்கப் படர்ந்த வன்கண          படமயில் புக்குத் துரந்து கொண்டிகல் ...... வென்றிவேலா 
பரிமள மிக்கச் சிவந்த நின்கழல்     பழுதற நற்சொற் றெரிந்து அன்பொடு          பகர்வதி னிச்சற் றுகந்து தந்திட ...... வந்திடாயோ 
சிலையுமெ னப்பொற் சிலம்பை முன்கொடு     சிவமய மற்றுத் திடங்கு லைந்தவர்          திரிபுர மத்தைச் சுடுந்தி னந்திரி ...... திண்கையாளி 
திருமகள் கச்சுப் பொருந்தி டுந்தன     தெரிவையி ரக்கத் துடன்பி றந்தவள்          திசைகளி லொக்கப் படர்ந்தி டம்பொரு ...... கின்றஞானக் 
கலைகள ணைக்கொத் தடர்ந்து வம்பலர்     நதிகொள கத்திற் பயந்து கம்பர்மெய்          கருகஇ டத்திற் கலந்தி ருந்தவள் ...... கஞ்சபாதங் 
கருணைமி குத்துக் கசிந்து ளங்கொடு     கருதும வர்க்குப் பதங்கள் தந்தருள்          கவுரிதி ருக்கொட் டமர்ந்த இநதிரர் ...... தம்பிரானே.

சலம், மலம் இவைகளை வெளியேற்றுகின்ற மிகப் பெரிய குடிசையில், எல்லா வினைகளும் ஒன்று சேர்ந்து அமையும்படி, அழகாகப் பொறுத்தப்பட்ட அவயவங்கள் சேர்ந்த மனக் களிப்புடன் தந்தையும் தாயும் கலந்து அளிக்க உண்டாகின்ற, பொய்யிலே கிடந்த கிழிபட்ட துணிபோல் அழிந்து போகும் உடலில், இருக்கும் உயிரை யமன் ஓட்டிச் செலுத்தி ஒரு தனியான வகையில் இழுக்கும் மனக் கலக்கமும் வந்து கூடுவதற்கு முன், பல வித நிறங்களைப் பொருந்தியதும், அன்று (போர்க் களத்தில்) சிறந்த பூமியும் நெளியும்படியாக நடந்து சென்றதுமான, வலிமை வாய்ந்த, பீலிக் கண்களை உடைய தோகையை உடைய மயிலில்* ஏறி, அதனைச் செலுத்திச் சென்று போரினை வென்ற வேலனே, நறு மணம் மிகுந்து, சிவந்த உனது திருவடியை, எவ்வகைக் குற்றமும் இல்லாத நல்ல சொற்கள் கொண்டு அறிந்து, அன்புடன் சொல்லும்படியான பாக்கியத்தை இனிச் சற்று நீ மகிழ்ந்து தந்துதவ வர மாட்டாயோ? வில் என்னும்படி பொன் மலையாகிய மேருவை (சிவபிரான்) முன் கையில் கொண்டு, சிவ வழிபாட்டைக் கைவிட்டவர்களும் தமது சக்தி குலைந்தவர்களுமாகிய அசுரர்களையும் திரி புரங்களையும் எரித்த தினத்தில் அந்த வில்லைத் தாங்கிய திண்ணிய திருக் கரத்தைக் கொண்டவள், அழகிய தேவி, கச்சு அணிந்த மார்பகங்களைக் கொண்ட மாது, கருணையுடன் தோன்றியவள், திசைகள் எல்லாவற்றிலும் வியாபித்து இடம் கொண்ட ஞான நூல்கள் உட்பட்ட திரண்ட கலை நூல்கள் அனைத்தையும் நிரம்பக் கற்றவள், புது மலர்களைத் தன்னுள்ளே கொண்ட கம்பை நதிக் கரையில் (காமாக்ஷி சிவனை வழிபடும்போது), (நதியின் வெள்ளத்தைக் கண்டு) பயந்து ஏகாம்பர நாதருடைய சிவந்த உடல் கரு நிறம் கொள்ளுமாறு அவருடைய இடப் பாகத்தில் கலந்திருந்தவள், தனது தாமரைத் திருவடியை அன்பு மேலிட்டு கனிந்த மனம் கொண்டு தியானிக்கும் அடியார்களுக்கு பதவிகளைத் தந்து அருளும் கெளரி அம்மையின் திருக்கோயிலில் (காஞ்சீபுரத்துக்) குமரக்கோட்டத்தில் அமர்ந்திருக்கும் இறைவா, தேவேந்திரனின் தலைவனே. 
* இங்கு மயில் என்பது மயிலான இந்திரனைக் குறிக்கும்.இந்த மயிலில் ஏறி சூரனுடன் முருக வேள் சண்டை செய்தார்.சூரன் மயில் வாகனமாவதற்கு முன்பு போர்க்களத்தில் இந்திரன் மயிலாக முருகவேளைத் தாங்கினான்.

பாடல் 322 - காஞ்சீபுரம்
ராகம் - சுத்த தன்யாஸி; தாளம் - ஆதி - எடுப்பு - 1/2 இடம்

தனதன தத்தத் தனந்த தந்தன     தனதன தத்தத் தனந்த தந்தன          தனதன தத்தத் தனந்த தந்தன ...... தனதான

தலைவலை யத்துத் தரம்பெ றும்பல     புலவர் மதிக்கச் சிகண்டி குன்றெறி          தருமயில் செச்சைப் புயங்க யங்குற ...... வஞ்சியோடு 
தமனிய முத்துச் சதங்கை கிண்கிணி     தழுவிய செக்கச் சிவந்த பங்கய          சரணமும் வைத்துப் பெரும்ப்ர பந்தம்வி ...... ளம்புகாளப் 
புலவனெ னத்தத் துவந்த ரந்தெரி     தலைவனெ னத்தக் கறஞ்செ யுங்குண          புருஷனெ னப்பொற் பதந்த ருஞ்சன ...... னம்பெறாதோ 
பொறையனெ னப்பொய்ப் ப்ரபஞ்ச மஞ்சிய     துறவனெ னத்திக் கியம்பு கின்றது          புதுமைய லச்சிற் பரம்பொ ருந்துகை ...... தந்திடாதோ 
குலசயி லத்துப் பிறந்த பெண்கொடி     யுலகடை யப்பெற் றவுந்தி யந்தணி          குறைவற முப்பத் திரண்ட றம்புரி ...... கின்றபேதை 
குணதரி சக்ரப் ப்ரசண்ட சங்கரி     கணபண ரத்நப் புயங்க கங்கணி          குவடுகு னித்துப் புரஞ்சு டுஞ்சின ...... வஞ்சிநீலி 
கலபவி சித்ரச் சிகண்டி சுந்தரி     கடியவி டத்தைப் பொதிந்த கந்தரி          கருணைவி ழிக்கற் பகந்தி கம்பரி ...... யெங்களாயி 
கருதிய பத்தர்க் கிரங்கு மம்பிகை     சுருதிது திக்கப் படுந்த்ரி யம்பகி          கவுரிதி ருக்கொட் டமர்ந்த இந்திரர் ...... தம்பிரானே.

முதல் வகுப்பில் வைக்கத்தக்க தகுதி பெற்ற பல புலவர்கள் போற்றித் துதிக்கும் உனது மயிலையும், கிரெளஞ்சமலையைப் பிளந்து எறிந்த உன் வேலையும், வெட்சி மாலையைப் புனைந்த உன் திருப்புயங்களையும், (கயவஞ்சி) தேவயானையையும், குறவஞ்சி வள்ளியையும், பொற்சங்கிலி, முத்துச் சலங்கை, கிண்கிணி ஆகியவை தழுவிய செக்கச் சிவந்த உனது சரணாம்புஜத்தையும் பாட்டுக்குப் பொருளாக வைத்து பெரிய பாமாலைகளைப் பாடவல்ல, கரிய மேகம் மழை பொழிவதுபோலப் பொழியும் புலவன் இவன் என்று சொல்லும்படியும், உண்மை ஞானம் உணர்ந்த தலைவன் இவன் எனக் கூறும்படியும், தக்க தர்மங்களைச் செய்யும் குணவானான சத்புருஷன் இவன் என்றும் உலகோர் கூறும்படியுமாக, மேலான பதவியைத் தரும் பிறப்பை என் ஆத்மா பெறாதோ? இவன் பொறுமைசாலி என்றும், இந்தப் பொய்யுலகைக் கண்டு அஞ்சும் துறவி என்றும், எல்லாத் திசைகளிலும் உள்ளோர் அடியேனைக் கூறுவது ஆச்சரியம் இல்லை. அறிவுக்கும் மேலான பதத்தில் சேரும் பேற்றை உன் திருவருள் தந்திடாதோ? சிறந்த மலையாகிய இமயமலைக்குப் பிறந்த கொடி போன்றவள், உலகம் முழுவதையும் ஈன்றெடுத்த திருவயிற்றை உடையவள், அழகிய தட்பத்தை (காருண்யத்தை) உடையவள், குறைவில்லாமல் முப்பத்திரண்டு அறங்களையும்* முறையே புரியும் பாலாம்பிகை, நற்குணங்களைத் தரித்தவள், மந்திர யந்திரத்தில் வீரத்துடன் வீற்றிருக்கும் சங்கரி, கூட்டமான படங்களையும், ரத்தினங்களையும் உள்ள சர்ப்பங்களைக் கைகளில் வளையல்களாகத் தரித்தவள், மேரு மலையை வில்லாக வளைத்து, திரிபுரத்தைச் சினத்துடன் எரித்த** வஞ்சிக் கொடி போன்றவள், நீல நிறத்தினள், தோகை மயிலின் அழகிய சாயலை உடையவள், பேரழகி, கொடிய விஷத்தைக் கழுத்திலே பொதிந்தவள்**, கருணை பொழியும் விழிகளை உடையவள், கேட்டவரம் நல்கும் கற்பகத் தரு, திசைகளையே ஆடைகளாய் உடைய எங்கள் தாய், அவளை நினைத்த பக்தர்களுக்கு கருணை புரியும் அம்பிகை, வேதங்களால் போற்றப்படும் முக்கண்களை (சூரியன், சந்திரன், அக்னி) உடையவள்**, (இத்தனை பெருமைகளை உடைய) கெளரியாகிய காமாக்ஷியின் கோயிலாகிய திருக்கோட்டத்தில் (காஞ்சீபுரத்தில்) வீற்றிருப்போனே, தேவர்களுக்கெல்லாம் தலைவர்களான இந்திரர்கள் வணங்கும் பெருமாளே. 
* பெரிய புராணத்தில் கூறிய முப்பத்திரண்டு அறங்கள் பின்வருமாறு:சாலை அமைத்தல், ஓதுவார்க்கு உணவு, அறுசமயத்தாருக்கும் உணவு, பசுவுக்குத் தீனி, சிறைச் சோறு, ஐயம், தின்பண்டம் நல்கல், அநாதைகளுக்கு உணவு, மகப்பெறுவித்தல், மகவு வளர்த்தல், சிசுக்களுக்குப் பால் நல்கல், அநாதைப் பிணம் சுடுதல், அநாதைகளுக்கு உடை, சுண்ணாம்பு பூசல், நோய்க்கு மருந்து, வண்ணார் தொழில், நாவிதத் தொழில், கண்ணாடி அணிவித்தல், காதோலை போடுதல், கண் மருந்து, தலைக்கு எண்ணெய், ஒத்தடம் தருதல், பிறர் துயர் காத்தல், தண்ணீர்ப் பந்தல், மடம் கட்டுதல், தடாகம் அமைத்தல், சோலை வளர்த்தல், தோல் பதனிடல், மிருகங்களுக்கு உணவு, ஏர் உழுதல், உயிர் காத்தல், கன்னிகாதானம்.
** சிவபிரானைக் குறிக்கும் செயல்களும் இயல்புகளும் இங்கு பார்வதி தேவிக்கும் பொருந்துவன. ஏனெனில் தேவி சிவனின் இடது பாகத்தில் இருப்பவள்.

பாடல் 323 - காஞ்சீபுரம்
ராகம் - .............; தாளம் -

தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத்     தனத்தத்தத் தனத்தத்தத் ...... தனதான

இதத்துப்பற் றிதழ்த்துப்பற் றிருட்பொக்கக் கருத்திட்டத்     தியக்கத்திற் றியக்குற்றுச் ...... சுழலாதே 
எலுப்புச்சுக் கிலக்கத்தத் தடித்தொக்குக் கடத்தைப்பெற்     றெடுத்துப்பற் றடுத்தற்பத் ...... துழலாதே 
சுதத்தத்தச் சதத்தத்தப் பதத்தர்க்குற் றவற்றைச்சொற்     றுவக்கிற்பட் டவத்தைப்பட் ...... டயராதே 
துணைச்செப்பத் தலர்கொத்துற் பலச்செச்சைத் தொடைப்பத்திக்     கடப்பப்பொற் கழற்செப்பித் ...... தொழுவேனோ 
கொதித்துக்குத் திரக்கொக்கைச் சதித்துப்பற் றிகைக்குட்பொற்     குலத்தைக்குத் திரத்தைக்குத் ...... தியவேலா 
குறத்தத்தைக் கறத்தத்திக் குமுத்தத்தத் தமொக்கிக்குக்     குலத்துக்குக் குடக்கொற்றக் ...... கொடியோனே 
கதச்சுத்தச் சுதைச்சித்ரக் களிற்றுக்கொற் றவற்குக்கற்     பகச்சொர்க்கப் புரப்பொற்பைப் ...... புரிவோனே 
கடுக்கைக்கட் செவிக்கற்றைச் சடைப்பக்கக் கொடிக்கற்புக்     கடற்கச்சிப் பதிச்சொக்கப் ...... பெருமாளே.

இன்பத்துடன் பற்றுகின்ற வாயிதழின் நுகர்ச்சியை நீங்கி, துன்பம் தரும் வஞ்சகமான எண்ணங்களில் விருப்பம் வைத்ததனால் மயக்கம் அடைந்து நான் சுழற்சி உறாமல், எலும்பு, இந்திரியம், மலச்சேறு, தசை, தோல் இவை கூடிய பானையாகிய உடம்பை அடைந்து, பாசம் சேர்ந்துள்ள பாவ நிலையில் அலைச்சல் உறாமல், அந்த அந்தச் சத்தத்துக்கும் சுத்தமான அர்த்தத்தை விசாரிக்கும் பத ஆராய்ச்சி செய்வோருக்கு, (அந்தத் தொனியின்) உள்ளர்த்தத்தை எடுத்துச் சொல்லும் தொடர்பிலே சிக்குண்டு, வேதனைப்பட்டு (சொல் ஆராய்ச்சியால்) சோர்வு உறாமல், (இவற்றை எல்லாம் தவிர்த்து) செம்மையான தன்மை சேர்ந்த பூங்கொத்துக்களும், நீலோற்பல மலர், வெட்சிப் பூ இவைகளால் ஆகிய மாலைகளின் வரிசைகளும், கடம்ப மலரும் கொண்ட அழகிய உனது திருவடியைப் புகழ்ந்து தொழ மாட்டேனோ? கோபம் கொண்டு வஞ்சகம் உள்ள மாமரமாகி நின்ற சூரனை அழித்து தன் வசப்படுத்தி (அவனது இரு கூறுகளான மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் கொண்டு), பொன் மயமான குலகிரி கிரெளஞ்ச மலையையும், அதன் வஞ்சக நிலையையும் குத்தி அழித்த வேலனே, குறவர் குலக் கிளியாகிய வள்ளியினுடையவும், கற்பியல் அறநெறியில் நின்ற தேவயானையினுடையவும் முத்தாபரணம் அணிந்த தோள்களின் அழகுக்கு ஒப்பாகும், கரும்புக்கும் ஒத்த குலமாகிய, மூங்கில் காம்பையுடைய, கோழியின் வீரக் கொடியை உடையவனே, கோபத்தையும், சுத்தமான வெண்மை நிறத்தையும், அழகையும் கொண்ட ஐராவதம் என்னும் யானைக்குத் தலைவனான இந்திரனுக்கு, (கேட்டதைத் தரும்) கற்பக மரங்கள் உள்ள சொர்க்க லோகச் சிறப்பை மீட்டுத்தந்து உதவி புரிந்தவனே, கொன்றையும், பாம்பும் அணிந்த திரண்ட சடையை உடைய சிவபெருமானது பாகத்து அமர்ந்த கொடி அனையவளும், கற்புக் கடலானவளும் ஆகிய உமாதேவி வீற்றிருக்கும் காஞ்சித் திருநகரில் அமர்ந்த அழகிய பெருமாளே. 

பாடல் 324 - காஞ்சீபுரம்
ராகம் - கமாஸ்; தாளம் - ஆதி - மிஸ்ரநடை - 28 
நடை - தகிட தகதிமி

தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத்     தனத்தத்தத் தனத்தத்தத் ...... தனதான

எனக்குச்சற் றுனக்குச்சற் றெனக்கத்தத் தவர்க்கிச்சைப்     பொருட்பொற்றட் டிடிக்கைக்குக் ...... குடில்மாயம் 
எனக்கட்டைக் கிடைப்பட்டிட் டனற்சுட்டிட் டடக்கைக்குப்     பிறக்கைக்குத் தலத்திற்புக் ...... கிடியாமுன் 
தினைக்குட்சித் திரக்கொச்சைக் குறத்தத்தைத் தனத்தைப்பொற்     பெறச்செச்சைப் புயத்தொப்பித் ...... தணிவோனே 
செருக்கிச்சற் றுறுக்கிச்சொற் பிரட்டத்துட் டரைத்தப்பித்     திரட்டப்பிக் கழற்செப்பத் ...... திறல்தாராய் 
பனைக்கைக்கொக் கனைத்தட்டுப் படக்குத்திப் படச்சற்பப்     பணத்துட்கக் கடற்றுட்கப் ...... பொரும்வேலா 
பரப்பற்றுச் சுருக்கற்றுப் பதைப்பற்றுத் திகைப்பற்றுப்     பலிப்பப்பத் தருக்கொப்பித் ...... தருள்வாழ்வே 
கனிக்குத்திக் கனைத்துச்சுற் றிடப்பச்சைக் கனப்பக்ஷிக்     கிடைப்புக்குக் களிப்புக்குத் ...... திரிவோனே 
கலிக்கொப்பிற் சலிப்பற்றுக் கதிக்கொத்திட் டெழிற்சத்திக்     கடற்கச்சிப் பதிச்சொக்கப் ...... பெருமாளே.

எனக்குக் கொஞ்சம், உனக்குக் கொஞ்சம் என்று கூச்சல் இடுகின்ற அந்த விலைமாதர்களுக்கு விரும்பும் பொருளைத் தங்கத் தட்டில் வைத்துத் தருகின்ற ஆபத்தைக் கொண்ட இந்த உடம்பு உயிர் மாயமாய் மறைந்ததும் விறகுக்கட்டைகளுக்கு இடையிலே வைக்கப்பட்டு நெருப்பால் சுடப்பட்டு மறைந்து போவதற்கும் மீண்டும் உயிர் பிறப்பதற்கும், இந்த உலகில் புகுந்து அழிந்து போவதற்கும் முன்னரே, - (* பின் தொடர்கிறது). தினைப்புனத்தில், அழகிய மழலைமொழி பேசும் குறப்பெண்ணாகிய கிளி போன்ற வள்ளியின் மார்பை அழகு பெற உன் வெட்சி மாலையணிந்த புயத்தில் ஏற்றுக் கொண்டு தழுவுவோனே, (* முன் தொடர்ச்சி) - அகந்தை கொண்டு, சற்றுக் கோபித்துப் பேசுபவர்களும், நன்னெறியிலிருந்து தவறியவர்களுமான துஷ்டர்களிடமிருந்து தப்பி, அந்தக் கூட்டத்தினின்று விலகி, உன் திருவடியைப் புகழும் ஆற்றலைத் தந்தருள்வாயாக. பனைமரம் போன்ற தும்பிக்கை உடையவனும், கொக்குப் போன்று காத்திருந்து தாக்கும் குணத்தை உடையவனுமான தாரகாசுரனை, தடைபட்டு அழியுமாறு வேலினால் குத்தி அவன் இறந்து படவும், ஆதிசேஷனின் ஆயிரம் பட முடிகள் அஞ்சிடவும், கடல் அஞ்சிடவும் போர் செய்த வேலனே, பேராசையின்றி, லோபத்தனம் இன்றி, நடுக்கம் இன்றி, மயக்கம் ஒழிந்து, இத்தகைய நலன்கள் உண்டாகும்படியாக அடியார்களுக்கு ஏற்படுத்தித் தந்து அருள் புரியும் செல்வமே, (சிவபெருமானிடமிருந்து) கனி பெறுவதற்காக திக்குக்கள் யாவும் படர்ந்த உலகத்தைச் சுற்ற, பச்சைநிறமுள்ள பெருமைவாய்ந்த பக்ஷியாகும் மயிலின் மீது ஏறி அமர்ந்து மகிழ்ச்சியுடன் வலம் வந்தவனே, இந்தக் கலியுகத்தில் நிகரில்லாத தெய்வமாய் நின்று, கொஞ்சமும் சலிக்காது மோக்ஷ இன்பத்தைத் தர ஒப்புக்கொண்டவனே, எழில்மிகு சக்தியாகிய காமாக்ஷிதேவி எழுந்தருளியுள்ள, கடல்போல் எப்போதும் ஓம் என்று ஒலிக்கும் கச்சிப்பதியாகிய காஞ்சீபுரத்தில் வாழும் அழகிய பெருமாளே. 

பாடல் 325 - காஞ்சீபுரம்
ராகம் - ......; தாளம் - .....

தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத்     தனத்தத்தத் தனத்தத்தத் ...... தனதான

இறைச்சிப்பற் றிரத்தத்திட் டிசைக்கொக்கப் பரப்பப்பட்     டெலுப்புக்கட் டளைச்சுற்றிச் ...... சுவர்கோலி 
எடுத்துச்செப் பெனக்கட்டிப் புதுக்குப்புத் தகத்திற்புக்     கெனக்குச்சற் றுனக்குச்சற் ...... றெனுமாசைச் 
சிறைக்கொத்திப் பிறப்பிற்பட் டுறக்கச்சொப் பனத்துற்றுத்     திகைக்கப்பட் டவத்தைப்பட் ...... டுழலாதுன் 
திருப்பத்மத் திறத்தைப்பற் றுகைக்குச்சித் திரத்தைச்சொற்     றிதக்கொற்றப் புகழ்ச்செப்பித் ...... திரிவேனோ 
பிறைச்செக்கர்ப் புரைக்கொத்துச் சடைப்பச்சைக் கொடிக்கிச்சைப்     பிறக்குற்றத் திருப்பக்கச் ...... சிவநாதர் 
பெருக்கப்புத் தடக்கைக்கற் பகத்தொப்பைக் கணத்துக்குப்     பிரசித்தக் கொடிக்குக்டக் ...... கொடியோனே 
பறைக்கொட்டிக் களைச்சுற்றக் குறட்செக்கட் கணத்திற்குப்     பலிக்குப்பச் சுடற்குத்திப் ...... பகிர்வேலா 
பணப்பத்திக் கணத்துத்திப் படுக்கைக்கச் சபத்திச்சைப்     படுக்கச்சிப் பதிச்சொக்கப் ...... பெருமாளே.

மாமிசத்துடன், அதைப் பற்றியுள்ள ரத்தத்தைச் சேர்த்து, அந்த ரத்தம் பொருந்துவதற்குத் தக்கவாறு உடலிலே பரப்பி வைத்து, எலும்புச் சட்டத்தைச் சுற்றிலும் தோல் என்ற சுவரை வகுத்து, எடுத்து ஒரு பாத்திரமாக ஏற்படுத்தி அலங்கரித்த புதிய வீட்டில் புகுந்து (அதாவது உடலெடுத்துப் பிறந்து), எனக்குக் கொஞ்சம் வேண்டும், உனக்கும் சற்று வேண்டும் என்ற ஆசை எனப்படும் சிறைச் சாலையில் இருக்கச் சம்மதித்து, இந்தப் பிறப்பை அடைந்து, தூக்கம், கனவு இவைகளை அடைந்து, மயக்கம் உற்று, வேதனை அனுபவித்துத் திரியாமல், உனது தாமரைத் திருவடிகளின் சார்பைப் பற்றி உய்வதற்கு, உன் அழகை வெளிப்படுத்தும் சொற்களால் உனது நிலைத்த வீரத் திருப்புகழைச் சொல்லித் திரிய மாட்டேனோ? பெருமையும் செந்நிறமும் கொண்ட பிறைக்குத் தலையில் இடம் தந்தது போல, பின்னிய கூந்தலைக் கொண்ட, பச்சை நிறத்தாளான கொடி போன்ற பார்வதிக்கு ஆசை பிறப்பதற்குத் தக்க அழகிய இடப் பாகத்தைத் தந்துள்ள சிவபெருமானுடைய (சடையிலிருந்து) பெருகுகின்ற கங்கைக்கும், அந்தப் பெரும் துதிக்கையை உடைய விநாயகரைப் போல பெரிய வயிற்றை உடைய பூத கணங்களுக்கும் நன்கு தெரிந்தவனே, உயரமான கோழிக் கொடியை உடையவனே, பறை வாத்தியங்களை முழக்கிக் களைப்பு அடைந்துள்ள, சிவந்த கண்களை உடைய, குள்ள பூதக் கூட்டங்களின் உணவுக்கு, அசுரர்களின் பசிய உடலைக் குத்திப் பகிர்ந்தளித்த வேலனே, படங்களின் வரிசையையும், நெருங்கிய புள்ளிகளையும் உடைய ஆதி சேஷனை படுக்கையாகக் கொண்ட, ஆமை உரு எடுத்த, திருமால் ஆசைப்பட்ட இடமான* கச்சி நகரில் (காஞ்சீபுரத்தில்) உறையும் அழகிய பெருமாளே. 
* பாற்கடலைக் கடைந்த போது திருமால் கச்சபமாக (ஆமையாக) முதுகு கொடுத்துத் தாங்கிப் பின்னர் இறுமாப்பு அடைந்து கடலைக் கலக்கினார். அந்த ஆமையை விநாயகர் அடக்கி மடிவிக்க, அதன் ஓட்டைச் சிவ பெருமான் அணிந்தார்.பின்னர் திருமால் குற்றம் தீர்ந்து காஞ்சியில் ஜோதிலிங்கத்தைப் பூஜித்து அந்நகரில் விளங்கினார் - காஞ்சிப் புராணம்.

பாடல் 326 - காஞ்சீபுரம்
ராகம் - ......; தாளம் - .....

தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத்     தனத்தத்தத் தனத்தத்தத் ...... தனதான

கடத்தைப்பற் றெனப்பற்றிக் கருத்துற்றுக் களித்திட்டுக்     கயற்கட்பொற் பிணைச்சித்ரத் ...... தனமாதர் 
கலைக்குட்பட் டறக்கத்திச் சலித்துக்கட் டளைச்சொற்பொய்த்     திரைக்குட்பட் டறச்செத்திட் ...... டுயிர்போனால் 
எடுத்துக்கொட் டிடக்கட்டைப் படத்தெட்டத் தணற்றட்டக்     கொளுத்திச்சுற் றவர்ப்பற்றற் ...... றவர்போமுன் 
இணக்கிப்பத் திமைச்செச்சைப் பதத்தைப்பற் றுகைக்குச்சொற்     றமிழ்க்கொற்றப் புகழ்செப்பித் ...... திரிவேனோ 
அடைத்திட்டுப் புடைத்துப்பொற் பதச்சொர்க்கத் தனைச்சுற்றிட்     டலைப்புப்பற் றெனச்சொற்றிட் ...... டறுசூரை 
அடித்துச்செற் றிடித்துப்பொட் டெழப்பொர்ப்புப் படக்குத்திட்     டலைத்துச்சுற் றலைத்தெற்றுக் ...... கடல்மாயப் 
புடைத்திட்டுப் படிக்குட்செற் றடப்புக்குக் கதத்துக்கக்     கயிற்கொக்கைப் படக்குத்திப் ...... பொருவோனே 
புனத்திற்பொற் குறத்திக்குப் புணர்க்கொத்தப் பசப்பெத்திப்     புணர்க்கச்சிப் பதிச்சொக்கப் ...... பெருமாளே.

குடம் போன்ற மார்பகத்தைப் பற்றுவது போலப் பற்றி, அதன் மீதே எண்ணத்தை வைத்து மகிழ்ச்சி உற்று, மீன் போன்ற கண்ணின் அழகையும், இணையாகிய அழகிய மார்பையும் உடைய விலைமாதர்களின் மதனக் கலைக்குள் ஆசைப்பட்டு காம சாத்திரங்களை நன்றாகக் கூவி ஓதி, பின்னர் சலித்துப் போய், கற்பனைப் பேச்சுகளுக்கும், மறைப்புத் திரைக்கும் உட்பட்டவனாகி, இறந்து உயிர் போனவுடன் (உடலை), (சுடுகாட்டில்) போட வேண்டி விறகுக் கட்டைகளிடையே படும்படி வைத்து, முற்றின நெருப்பை பற்றிக்கொள்ளும்படி கொளுத்தி, சுற்றத்தார் பந்தபாசம் இல்லாதவர்களாய் சுடுகாட்டிலிருந்து போவதற்கு முன், மனம் பொருந்தி பக்தியுடன் வெட்சி மலர் கொண்ட உன் திருவடியைப் பற்றி உய்வதற்கு, சொல்லத்தக்க தமிழ் மொழி கொண்டு உனது வீரத் திருப்புகழைச் சொல்லித் திரியும் பாக்கியம் எனக்கு அமையுமோ? தேவர்களைச் சிறையில் அடைத்தும், அவர்களை அடித்தும், அழகிய இடமான சொர்க்க பூமியை வளைத்துக் கொண்டும், நீங்கள் யாவரும் அலைச்சல் கொள்ளுங்கள் என்று கூறி நீங்கிய சூரனை, அடித்தும் கோபித்தும் இடித்தும், பொடிபடும்படியாக (அவனுக்குத் துணையாயிருந்த) ஏழு மலைகளையும் அழிவுறக் குத்தியும், அவனை வருத்தியும், வளைந்துள்ள அலைகள் நெருங்கியுள்ள கடலைக் கலக்கமுற்று ஒடுங்கச் செய்து அலைத்தும், பூமியில் கோபத்துடன் புயலாக அழிக்கப் புறப்பட்ட பின், கோபமும் வருத்தமும் நெஞ்சிலே கொண்டு (கடலில்) மாமரமாகி நின்ற சூரனை வேலால் அழிவு படக் குத்திச் சண்டை செய்பவனே, தினைப்புனத்தில் அழகிய குறமகள் வள்ளியைச் சேர்வதற்கு, அவளைத் தந்திர மொழிகளால் துதித்து, பின்பு அவளை மணந்தவனே, கச்சிப்பதியாகிய காஞ்சீபுரத்தில் வாழும் அழகிய பெருமாளே. 

பாடல் 327 - காஞ்சீபுரம்
ராகம் - ....; தாளம் - ......

தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத்     தனத்தத்தத் தனத்தத்தத் ...... தனதான

கருப்பற்றிப் பருத்தொக்கத் தரைக்குற்றிட் டுருப்பெற்றுக்     கருத்திற்கட் பொருட்பட்டுப் ...... பயில்காலங் 
கணக்கிட்டுப் பிணக்கிட்டுக் கதித்திட்டுக் கொதித்திட்டுக்     கயிற்றிட்டுப் பிடித்திட்டுச் ...... சமனாவி 
பெருக்கப்புத் தியிற்பட்டுப் புடைத்துக்கக் கிளைப்பிற்பொய்ப்     பிணத்தைச்சுட் டகத்திற்புக் ...... கனைவோரும் 
பிறத்தற்சுற் றமுற்றுற்றிட் டழைத்துத்தொக் கறக்கத்துப்     பிறப்புப்பற் றறச்செச்சைக் ...... கழல்தாராய் 
பொருப்புக்கர்ப் புரக்கச்சுத் தனப்பொற்புத் தினைப்பச்சைப்     புனக்கொச்சைக் குறத்தத்தைக் ...... கினியோனே 
புரத்தைச்சுட் டெரித்துப்பற் றலர்க்குப்பொற் பதத்துய்ப்பைப்     புணர்த்தப்பித் தனைக்கற்பித் ...... தருள்வோனே 
செருக்கக்குக் கரைக்குத்திச் செருப்புக்குப் பிடித்தெற்றிச்     சினத்திட்டுச் சிதைத்திட்டுப் ...... பொரும்வீரா 
திருத்தத்திற் புகற்சுத்தத் தமிழ்ச்செப்புத் த்ரயச்சித்ரத்     திருக்கச்சிப் பதிச்சொக்கப் ...... பெருமாளே.

ஒரு தாயின் கருவாகச் சேர்ந்து உருவம் பெரிதாகி, (பத்து மாதம் என்னும் கணக்கு) ஒருமிக்க பூமியில் வந்து சேர்ந்து, (வளரும் பருவங்களுக்கு உரிய) உருவங்களை முறையே அடைந்து, எண்ணத்திலே, பொருள் சேர்ப்பதே குறிக்கோளாக வாழ்நாளை வீணாகச் செலுத்தும் காலத்தில், (ஆயுளின் காலத்தைக்) கணக்குப் பார்த்து, முடிவு காலம் வருவதை அறிந்து மாறுபாடு கொண்டு, விரைந்து வந்து மிக்க கோபத்தைக் காட்டி பாசக் கயிற்றை (கழுத்தைச் சுற்றி) வீசிப் பிடித்து யமன் என்னுடைய உயிரைப் பிரித்து எடுத்துக் கொண்டு போவதை நான் காண, உயிர் போய் விட்டது எனத் தெரிந்து கொண்ட, பக்கத்தில் இருந்த, துக்கப்படும் சுற்றத்தினர் (என்) பின்னாலேயே (சுடுகாடு வரை) சென்று, பிணத்தைச் சுட்டெரித்து விட்டு, வீட்டுக்கு வந்து எல்லோரும் அந்தப் பிறப்பில் சுற்றத்தாராக உள்ள யாவரையும் வரும்படி அழைத்து, உடல் சோர்வு அடைந்து ஓயும்படி அழுது கத்துகின்ற இந்தப் பிறப்பில் உள்ள ஆசை நீங்கும்படி உனது வெட்சி மாலை சூழ்ந்த திருவடியைத் தாராய். மலை போன்றதும், பச்சைக் கற்பூரம், ரவிக்கை (இவைகளை அணிந்ததுமான) மார்பக அழகைக் கொண்டவளும், தினை வளரும் பசுமை வாய்ந்த புனத்திலிருந்தவளும், மிழற்றும் பேச்சை உடையவளுமான குறப் பெண்கிளி வள்ளிக்கு இனியவனே, திரி புரங்களைச் சுட்டு எரித்து, திரிபுரங்களில் பற்று இல்லாமல் சிவ வழிபாட்டில் இருந்த மூவர்க்கு* மேலான பதவி நுகர்ச்சியை கூட்டி வைத்த (அந்தப்) பித்தனாகிய சிவபெருமானுக்கு (குருவாய் நின்று பிரணவப் பொருளை) ஓதுவித்து அருளியவனே, அகந்தை கொண்ட அந்த நாய் போன்று இழிந்தோர்களாகிய அசுரர்களைக் குத்தியும் போரில் புகுந்து பிடித்து மோதியும், கோபித்து அழியச் செய்தும் சண்டை செய்த வீரனே, பிழையில்லாமல் சொல்லப்படும் சுத்தமான இயல், இசை, நாடகம் என்று மூவகைகளால் ஓதப்படும் தமிழ் (விளங்கும்) சிறப்பு வாய்ந்த மேன்மையான கச்சி என்னும் ஊரில் வாழும் அழகிய பெருமாளே. 
* வித்யுன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் என்ற மூன்று அசுரர்கள் பொன், வெள்ளி, இரும்பு இவைகளால் ஆகிய திரிபுரங்கள் என்ற பறக்கும் பட்டணங்களைக் கொண்டு அனைவரின் மேலே விழுந்துத் துன்புறுத்தினர். ஆதலால் சிவபெருமான் அவர்களை எரித்தபோது, சிவ வழிபாட்டால் மாளாது பிழைத்த மூவரில், இருவர் கோயில் காவலாளர் ஆனார்கள். மற்றவர் முழவு முழக்கும் பேற்றினை அடைந்தார்.

பாடல் 328 - காஞ்சீபுரம்
ராகம் - .....; தாளம் - .....

தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத்     தனத்தத்தத் தனத்தத்தத் ...... தனதான

கறுக்கப்பற் றுவர்ப்பிட்டுச் சிரித்துச்சற் றுறுக்கிக்கட்     பிறக்கிட்டுப் படக்கற்பித் ...... திளைஞோர்தங் 
கழுத்தைச்சிக் கெனக்கட்டித் தனச்செப்புப் படக்குத்திட்     டுருக்கிக்கற் பழிக்கப்பொற் ...... பெழுகாதல் 
புறப்பட்டுக் களிக்கக்கற் புரத்தைப்பிட் டரக்கிப்பொற்     பணிக்கட்டிற் புறத்துற்றுப் ...... புணர்மாதர் 
பொருத்தத்தைத் தவிர்த்துச்சற் றிரக்ஷித்துப் புரப்பப்பொற்     பதத்தைப்பெற் றிருக்கைக்குப் ...... பெருவேனோ 
திறற்கொக்கைப் படக்குத்திச் செருக்கிக்கொக் கரித்துச்சக்     கரிக்குப்புத் திரற்குற்றுத் ...... தளைபூணச் 
சினத்துப்பொற் பொருப்பைப்பொட் டெழுத்தித்திக் கரித்துப்புத்     திரத்தத்திற் சிரித்துற்றுப் ...... பலபேய்கள் 
பறிக்கப்பச் சிறைச்சிக்கட் கறிக்குப்பைச் சிரச்சிக்குப்     பரப்பொய்க்கட் டறப்புக்குப் ...... பொருதோனே 
பணிச்செச்சைத் தொடைச்சித்ரப் புயத்துக்ரப் படைச்சத்திப்     படைக்கச்சிப் பதிச்சொக்கப் ...... பெருமாளே.

பற்கள் கறை ஏறும்படி (பாக்கு வெற்றிலையின்) சிவப்பு நிறம் ஏறச் செய்தும், சிறிது நகைத்தும், கொஞ்சம் அதட்டியும், கண்களைப் பின் சுழல்வது போலச் செய்து முறைத்து விழித்தும், இளைஞர்களுடைய கழுத்தை அழுந்தக் கட்டிக் கொண்டு, சிமிழை ஒத்த மார்பகங்கள் படும்படி இறுக அணைத்து, (அதனால்) மனதை உருக்கி, கற்பு மனநிலை அழிபட, மிகுதியாக எழுகின்ற காம ஆசை தோன்றி இன்பத்தைத் தர, கற்பூரத்தைப் பொடி செய்து தேய்த்து அழகாக அலங்கரிக்கப்பட்ட கட்டிலின் மேல் சேர்ந்து கூடுகின்ற விலைமாதர்களின் இணக்கத்தை நீக்கி, சிறிதேனும் (அடியேனைக்) காப்பாற்ற, உனது அழகிய திருவடியை அடையக்கூடிய பாக்கியத்தைப் பெறுவேனோ? வலிமை வாய்ந்த மாமரமாகி நின்ற சூரனை அழிக்கும்படி குத்தியும், பெருமிதத்துடன் கர்ச்சித்து, சக்கரம் ஏந்திய திருமாலின் மகனாகிய பிரமனுக்குப் பொருந்த விலங்கை மாட்டிக் கோபித்தும், பொன் மலையாகிய கிரெளஞ்சத்தை பொடி எழும்படி நொறுக்கியும், அதை நிந்தித்தும், (போர்க்களத்தில்) புதிய ரத்தத்தில் சிரிப்புடன் அளைந்து பல பேய்கள் பச்சை மாமிசங்களில் கடித்துத் தின்பதற்குரிய குவியல்களைப் பிடுங்க, (உண்ணக் கிடைக்குமோ என்றிருந்த பேய்களுக்கு) மிகுந்த பசியும் ஆத்திரமும் வேகத்தில் அடியோடு நீங்க, யுத்த களத்திற்குப் புகுந்து சண்டை செய்தவனே, ஆபரணமாக வெட்சி மாலையை அணிந்த அழகிய புயத்தில் உக்ரமான ஆயுதமாகிய சக்தி வேற் படையைத் தாங்கி, காஞ்சீபுரத்தில் வீற்றிருக்கும் அழகிய பெருமாளே. 

பாடல் 329 - காஞ்சீபுரம்
ராகம் - பாகேஸ்ரீ; தாளம் - ஸங்கீர்ண சாபு - 4 1/2 
தக-1, திமி-1, தகதகிட-2 1/2

தத்தத் தனதான தத்தத் ...... தனதான     தத்தத் தனதான தத்தத் ...... தனதான

அற்றைக் கிரைதேடி அத்தத் ...... திலுமாசை     பற்றித் தவியாத பற்றைப் ...... பெறுவேனோ 
வெற்றிக் கதிர்வேலா வெற்பைத் ...... தொளைசீலா     கற்றுற் றுணர்போதா கச்சிப் ...... பெருமாளே.

அன்றாடத்துக்கு வேண்டிய உணவைத் தேடி, பொருள் மீதும் ஆசையினை வைத்துக்கொண்டு தவிக்காத உறுதிப்பாடை யான் பெறுதற்கு இயலுமோ? வெற்றியே விளங்கும் ஜோதி வேலவனே, கிரெளஞ்சமலையைத் தொளைத்த பரிசுத்தனே, கற்றுத் தியானித்து உணரத்தக்க ஞானஸ்வரூபனே, காஞ்சிபுரத்தில் அமர்ந்த பெருமாளே. 

பாடல் 330 - காஞ்சீபுரம்
ராகம் - பெஹாக்; தாளம் - அங்கதாளம் - 6 
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3

தத்தத் தத்தத் ...... தனதான     தத்தத் தத்தத் ...... தனதான

முட்டுப் பட்டுக் ...... கதிதோறும்     முற்றச் சுற்றிப் ...... பலநாளும் 
தட்டுப் பட்டுச் ...... சுழல்வேனைச்     சற்றுப் பற்றக் ...... கருதாதோ 
வட்டப் புட்பத் ...... தலமீதே     வைக்கத் தக்கத் ...... திருபாதா 
கட்டத் தற்றத் ...... தருள்வோனே     கச்சிச் சொக்கப் ...... பெருமாளே.

சங்கடப்பட்டு, தேவ, மனித, நரக, விலங்கு என்ற நால்வகை கதிகளிலும் முழுவதுமாக அலைந்து திரிந்து பல பிறவியிலும் தடுமாற்றம் அடைந்து சுழல்கின்ற என்னை சிறிதாவது கவனித்துக்கொள்ள நினைத்தலாகாதோ? வட்டமாகிய என் இதயகமல பீடத்தின் மேலே வைத்துப் பூஜிக்கத்தக்க திருவடிகளை உடையவனே, துன்பமுறும் சமயத்தில் வந்து அருள் புரிபவனே, காஞ்சீபுரத்தில் வீற்றிருக்கும் அழகிய பெருமாளே. 

பாடல் 331 - காஞ்சீபுரம்
ராகம் - .....; தாளம் - ..........

தத்தத் தத்தத் தத்தத் தத்தத்     தத்தத் தத்தத் ...... தனதான

அற்றைக் கற்றைக் கொப்பித் தொப்பித்     தத்தத் தத்தத் ...... தருவோர்தாள் 
அர்ச்சித் திச்சித் தக்கத் தக்கத்     தொக்குத் திக்குக் ...... குடில்பேணிச் 
செற்றைப் புற்சொற் கற்றுக் கற்றுச்     செத்துச் செத்துப் ...... பிறவாதே 
செப்பச் செப்பப் பச்சைப் பச்சைச்     செச்சைச் செச்சைக் ...... கழல்தாராய் 
துற்றுப் பிற்புக் குற்றக் கொக்கைத்     துட்கத் திட்கப் ...... பொரும்வேலா 
சுத்தப் பத்திச் சித்ரச் சொர்க்கச்     சொர்க்கத் தத்தைக் ...... கினியோனே 
கற்றைப் பொற்றைப் பற்றக் குத்திக்     கத்தக் கத்தக் ...... களைவோனே 
கற்புச் சத்திப் பொற்புச் சத்திக்     கச்சிச் சொக்கப் ...... பெருமாளே.

அன்றைக்கு அன்றைக்கு (நாள் தோறும்) அலங்கரித்து, அலங்கரித்து, தாம் பெற்ற பொருளுக்குத் தக்க மறு உதவியைக் கொடுப்பவர்களாகிய விலை மகளிர்களுடைய பாதங்களைப் போற்றியும், விரும்பியும், கண்ணுக்குக் கண்ணாய் பாதுகாத்தும், இந்த உலகின் திக்குகள் தோறும் சென்று கூடி, என் உடலைப் போற்றி வளர்த்து, நிரம்ப இழிவான சொற்களை மேலும் மேலும் கற்று, இறந்துபட்டு இறந்துபட்டுப் பல பிறவிகளை அடையா வண்ணம் மேலும் மேலும் சொல்லித் துதிக்க, உனது மிகக் குளிர்ச்சி பொருந்திய சிவந்த வெட்சி மலரணிந்த திருவடியைத் தந்து அருளுக. நெருங்கிப் பின் தொடர்ந்து, கடலில் இருந்த மாமரமாகிய சூரனை பயப்பட்டு திடுக்கிடும்படி சண்டை செய்த வேலனே, பரிசுத்தமான, பேரன்புடைய, அழகிய மார்பினை உடைய விண்ணுலகக் கிளியான தேவயானைக்கு இனிமையானவனே, திரண்ட மலையாகிய கிரெளஞ்சத்தை தாக்கிக் குத்தி, (அம் மலை அரக்கன்) கூச்சலிட்டு அழ அழித்துத் தொலைத்தவனே, கற்புக்கு அணிகலமாம் தேவி பார்வதி அளித்த அழகிய சக்திவேலை ஏந்தும் பெருமாளே, காஞ்சீபுரத்தில் வீற்றிருக்கும் அழகிய பெருமாளே. 

பாடல் 332 - காஞ்சீபுரம் 
ராகம் - .....; தாளம் - ..........

தத்தத் தத்தத் தத்தத் தத்தத்     தத்தத் தத்தத் ...... தனதான

சுத்தச் சித்தத் தொற்பத் தர்க்குச்     சுத்தப் பட்டிட் ...... டமுறாதே 
தொக்கப் பொக்கச் சிற்கட் சிக்குட்     சொற்குற் றத்துத் ...... துறைநாடி 
பித்தத் தைப்பற் றித்தைத் தற்றுற்     றொத்துக் கித்திப் ...... பிணிமாதர் 
பெட்டிற் கட்டுத் தட்டுப் பட்டுப்     பிற்பட் டிட்டுத் ...... தளர்வேனோ 
அத்தத் தத்திக் கத்தற் கெய்த்தத்     தத்திக் கத்துப் ...... பலமீவாய் 
அர்ச்சித் துப்பொற் செக்கொச் சைத்தத்     தைக்குச் செச்சைத் ...... தொடைசூழ்வாய் 
கத்தத் தித்தத் தத்திற் கொக்கைக்     கைத்தச் சத்திப் ...... படையேவுங் 
கற்புச் சத்திப் பொற்புச் சத்திக்     கச்சிச் சொக்கப் ...... பெருமாளே.

தூய்மையான உள்ளத்தை உடைய பழைய அடியார்களுக்கு சுத்த மனத்துடன் நட்பு வைக்காமல், மிகுந்த பொய்கள் கலந்த சில கட்சிகளைச் சேர்ந்து சொற் குற்றங்களுக்கு இடம் தரும் வழிகளை நாடியும், மயக்கத்தில் கட்டுண்டு, தை தை என்ற தாளக்கட்டுக்கு ஒத்ததான கித்தி என்ற ஒருவகை நடனத்தால் வசப்படுத்துகின்ற பொது மாதர்களுடைய பசப்பு வார்த்தையில் அகப்பட்டு தடுமாற்றம் அடைந்து, வாழ்வில் முன்னேற்றம் இல்லாமல் கீழ் நிலைக்கு ஆளாகி, தளர்ச்சி உறுவேனோ? அந்த மனக் கவலை கொண்டிருந்த, ஐராவதம் என்ற யானைக்குத் தலைவனாகிய இந்திரனுக்கும், (தவம் செய்து) இளைத்துப் போயிருந்த அந்த (திருமாலாகிய) யானைக்கும்* சித்திக்கும்படியான பலம் அளித்தவனே, வள்ளியைப் பூஜித்து**, அழகிய செம்மை வாய்ந்த திருந்தாப் பேச்சைப் பேசும் கிளிபோன்ற அந்த வள்ளிக்கு வெட்சி மாலையைச் சூட்டியவனே, ஒலிக்கின்ற கடலில் ஆபத்தான நிலையில் இருந்த மாமரமாகிய சூரன் மீது கையில் இருந்த சக்தி வேலைச் செலுத்தியும், கற்புக்கு அணிகலமாகிய பார்வதி அளித்த அழகிய சக்தி வேற்படையை ஏந்தியும், காஞ்சீபுரத்தில் வாழும் அழகிய பெருமாளே. 
* நீண்ட தவத்துக்குப் பின்பு, திருமாலை யானையாக்கி அதனை முருக வேள் ஊர்ந்தார். இதனால் முருகன் கயாரூட மூர்த்தி ஆனார் - திருமுருகாற்றுப்படை.
** வள்ளிக்கு அர்ச்சித்ததும், மாலை சூட்டியதும் வள்ளியிடம் முருகனுக்கு இருந்த பெருங் காதலை விளக்கும் - கந்த புராணம்.

பாடல் 333 - காஞ்சீபுரம் 
ராகம் - .....; தாளம் -

தத்தத் தத்தத் தனனத் தத்தத் தத்தத் தனனத்     தத்தத் தத்தத் தனனத் ...... தனதான

கொக்குக் கொக்கத் தலையிற் பற்றுச் சிக்கத் தளகக்     கொத்துற் றுக்குப் பிணியுற் ...... றவனாகிக் 
குக்கிக் கக்கிக் கடையிற் பற்றத் துற்றுக் கழலக்     கொத்தைச் சொற்கற் றுலகிற் ...... பலபாஷை 
திக்கித் திக்கிக் குளறிச் செப்பித் தப்பிக் கெடுபொய்ச்     செற்றைச் சட்டைக் குடிலைச் ...... சுமைபேணும் 
சிக்கற் றுட்குக் கருணைச் சுத்தச் சித்தித் தமிழைத்     திட்டத் துக்குப் புகலப் ...... பெறுவேனோ 
அக்கிட் டிக்கிட் டமருக் கொட்டிக் கிட்டிட் டெதிரிட்     டத்ரத் தெற்றிக் கடுகப் ...... பொருசூரன் 
அச்சுக் கெட்டுப் படைவிட் டச்சப் பட்டுக் கடலுட்     புக்குப் பட்டுத் துருமத் ...... தடைவாகத் 
தக்குத் திக்குத் தறுகட் டொக்குத் தொக்குற் றதுகட்     கைக்கொட் டிட்டிட் டுடல்சிற் ...... கணமாடிச் 
சத்திக் குத்தித் துடியிற் சத்திக் கக்கைச் சமர்செய்ச்     சத்திக் கச்சிக் குமரப் ...... பெருமாளே.

கொக்கின் நிறம் போல தலையில் பற்றியுள்ள சிகையின் மயிர்த் தொகுதி வெண்மை நிறத்தை அடைந்து, மெலிந்து, நோயுற்றவனாகி, இருமி, வாந்தி செய்து, இறுதியில் பற்கள் எல்லாம் ஆட்டம் கண்டு விழுந்து ஒழிய, இழிவான சொற்களைக் கற்று உலகத்திலுள்ள பல மொழிகளை தடைபட்டுத் தடைபட்டுக் குழறிப் பேச, தவறுதலான வழியில் சென்று, குப்பை நிறைந்த சட்டை என்னும் இந்தக் குடிசையாகிய உடலின் சுமையை விரும்புகின்ற சிக்கல் நீங்கப் பெற்று, உள்ளத்தில் கருணை என்னும் எண்ணம் வாய்க்கப் பெற்று, தூய்மையானதும் நற் கதியைத் தர வல்லதுமான தமிழ்ப் பாக்களை நினைத்தபடி கோர்வையாகச் சொல்லும் பாக்கியத்தைப் பெறுவேனோ? அங்குமிங்குமாகப் பல இடங்களில் போர் செய்யத் துணிந்து, மிக அருகில் வந்து நெருக்கி எதிர்த்து, ஆயுதங்களைச் செலுத்தி விரைவாகச் சண்டை செய்த சூரன் உடம்பு கெட்டுப் போய், ஆயுதங்களைக் கைவிட்டு, பயந்து, கடலுக்குள்ளே புகுந்து, மாமர உருவத்தை அடைந்து நிற்க, அகங்காரத்துடன் இருந்த வீரம் எல்லாம் தக்குத் திக்கெனத் தடுமாற, கண்ணும், மற்ற உணர்ச்சிகளும் அழிந்துவிட, கைகளை மட்டும் மிகவும் கொட்டி ஆர்ப்பரித்து, உடலுடன் சில விநாடிகள் ஆட்டம் கண்டு, சக்தியாகிய வேற்படை குத்திய வலியால் (சூரன்) துடித்துக் கதறி ஒலி செய்ய, தர்மமான போரைச் செய்தவனே, சக்தியாகிய காமாட்சி தங்கும் காஞ்சீபுரத்தில் எழுந்தருளியுள்ள குமரப் பெருமாளே. 
வலிய சூர சம்ஹாரத்தை விவரிக்கும் இந்தப் பாடல் வல்லினங்கள் மிகுதியாக அமைந்த பாடல்.

பாடல் 334 - காஞ்சீபுரம் 
ராகம் - .....; தாளம் -

தத்தத் தத்தத் தத்தத் தத்தத்     தத்தத் தத்தத் ...... தனதான

தத்தித் தத்திச் சட்டப் பட்டுச்     சத்தப் படுமைக் ...... கடலாலே 
சர்ப்பத் தத்திற் பட்டுக் கெட்டுத்     தட்டுப் படுமப் ...... பிறையாலே 
சித்தத் துக்குப் பித்துற் றுச்சச்     சித்ரக் கொடியுற் ...... றழியாதே 
செப்பக் கொற்றச் சிற்பப் பத்திச்     செச்சைத் தொடையைத் ...... தரவேணும் 
கொத்துத் திக்குப் பத்துட் புக்குக்     குத்திக் கிரியைப் ...... பொரும்வேலா 
கொச்சைப் பொச்சைப் பொற்பிற் பச்சைக்     கொச்சைக் குறவிக் ...... கினியோனே 
சுத்தப் பத்தத் தர்க்குச் சித்தத்     துக்கத் தையொழித் ...... திடும்வீரா 
சொர்க்கத் துக்கொப் புற்றக் கச்சிச்     சொக்கப் பதியிற் ...... பெருமாளே.

அலைகள் தாவித் தாவிச் சென்று ஓர் ஒழுங்கு முறையில் ஒலி செய்கின்ற கரிய நிறக் கடலாலும், (கிரகணத்தின் போது ராகு கேது எனப்படும்) பாம்பால் பிடி படுதல் என்னும் ஆபத்தில் அகப்பட்டு, கெடுதல் உற்று தடை படுகின்ற அந்தச் சந்திரனாலும், மனதில் மோக வெறி கொண்டு, அதன் அதிகமான நிலையை இந்த அழகிய கொடி போன்ற பெண் அடைந்து அழிந்து போகாமல், (உனது) செவ்வையானதும், வீரத்துக்கு அறிகுறியானதும், தொழில் திறம் காட்டுவதும், வரிசையாக அமைந்துள்ளதுமான வெட்சி மாலையைத் தந்தருள வேண்டும். நிறைந்துள்ள பத்துத் திக்குகளிலும் புகுந்து, வேலால் குத்தி, கிரெளஞ்ச மலையைப் போரில் வென்ற வேலனே, மிழற்றும் பேச்சைப் பேசுபவளும், காடு மலைகளில் இருப்பவளும், அழகிய பச்சை நிறம் கொண்டவளும் ஆகிய குறப் பெண் வள்ளிக்கு இனியவனே, பரிசுத்தமான, பக்தியில் உயர்ந்த அன்பர்களுக்கு மனதில் உள்ள துயரங்களை ஒழிக்கும் வீரனே, தேவ உலகுக்கு ஒப்பான கச்சி எனப்படும் அழகிய நகரில் வீற்றிருக்கும் பெருமாளே. 
இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் அமைந்தது.அலைகள், கடல், சந்திரன் முதலியவை தலைவனின் பிரிவுத் துயரால் ஏற்படும் விரக தாபத்தை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.
கடலாலேதட்டுப் படுமப் பிறையாலேசித்ரக் கொடியுற் றழியாதேசெச்சைத் தொடையைத் தரவேணும்குத்திக் கிரியைப் பொரும்வேலாகொச்சைக் குறவிக் கினியோனேதுக்கத் தையொழித் திடும்வீராசொக்கப் பதியிற் பெருமாளே.

பாடல் 335 - காஞ்சீபுரம் 
ராகம் - பஹு஥தாரி; தாளம் - திஸ்ர ரூபகம் - 5 - எடுப்பு - /3 0

தத்தத்தத் தத்தத் தத்தத்தத் தத்தத்     தத்தத்தத் தத்தத் ...... தனதான

பொக்குப்பைக் கத்தத் தொக்குப்பைக் குத்துப்     பொய்த்தெத்துத் தத்துக் ...... குடில்பேணிப் 
பொச்சைப்பிச் சற்பக் கொச்சைச்சொற் கற்றுப்     பொற்சித்ரக் கச்சுக் ...... கிரியார்தோய் 
துக்கத்துக் கத்திற் சிக்குப்பட் டிட்டுத்     துக்கித்துக் கெய்த்துச் ...... சுழலாதே 
சுத்தச்சித் தத்துப் பத்திப்பத் தர்க்கொத்     துச்சற்றர்ச் சிக்கப் ...... பெறுவேனோ 
திக்குத்திக் கற்றுப் பைத்தத்தத் திக்குச்     செற்பத்ரக் கொக்கைப் ...... பொரும்வேலா 
செப்பச்சொர்க் கத்துச் செப்பொற்றத் தைக்குச்     செச்சைக்கொத் தொப்பித் ...... தணிவோனே 
கக்கக்கைத் தக்கக் கக்கட்கக் கக்கிக்     கட்கத்தத் தர்க்குப் ...... பெரியோனே 
கற்றைப்பொற் றெத்தப் பெற்றப்பொற் சிற்பக்     கச்சிக்குட் சொக்கப் ...... பெருமாளே.

குற்றங்கள் நிறைந்த பை, மலம் மிகுந்த பை, சுடுசொல், பொய், வஞ்சகம், ஆபத்து இவைகள் எல்லாம் கலந்த குடிசையான இந்த உடலை விரும்பி, குற்றமானதும், பைத்தியம் கொண்டதும், அற்பமானதும், இழிவானதுமான சொற்களைக் கற்று, அழகிய விசித்திரமான கச்சணிந்த பெருமார்புப் பெண்டிரைச் சேர்வதால் வரும் கொடிய துக்கத்தில் மாட்டிக்கொண்டு வேதனையுற்று, இளைத்து, மனம் சுழன்று சஞ்சலப்படாமல், பரிசுத்த மனதுடன் பக்தி பூண்ட பக்தர்களுக்கு இணையாக சிறிதளவேனும் உன்னைப் பூஜிக்கும் பாக்கியத்தைப் பெறுவேனோ? எந்தத் திக்கிலும் உதவியின்றி, தனிப்பட்டு, கடைசியில் பச்சைநிற அலைகள் மோதும் கடலுக்குள்ளே போய்ச் சேர்ந்து, இலைகளோடு கூடிய மாமரமாக மாறிய சூரனுடன் போர் செய்த வேலனே, செம்மையான விண்ணுலகில் உள்ள செம்பொன் போன்ற கிளியாகிய தேவயானையை வெட்சி மலர்க் கொத்தால் அலங்கரித்து மாலை சூட்டுபவனே, (பிரமன் முதலியோர் சா£ரத்தினின்றும்) சுழன்ற எலும்பை தகுந்தபடி தமது அங்கங்களுக்கு ஆபரணமாக ஆக்கி, அக்கினியை கண்ணிலே வைத்த தலைவர் சிவபிரானுக்கு குருவான பெரியவனே, திரளான துதிப்பாடல்களால் ஏத்தப்பெற்ற, அழகிய சிற்ப வேலைப்பாடுகள் அமைந்த கச்சியாகிய காஞ்சீபுரத்தில் வீற்றிருக்கும் அழகிய பெருமாளே. 

பாடல் 336 - காஞ்சீபுரம் 
ராகம் - .....; தாளம் - ......

தனனத்தத் தனனத்தத் தனனத்தத் தனனத்தத்     தனனத்தத் தனனத்தத் ...... தனதான

அயிலப்புக் கயலப்புத் தலைமெச்சுற் பலநச்சுக்     கணுரத்தைக் கனவெற்புத் ...... தனமேகம் 
அளகக்கொத் தெனவொப்பிப் புளுகிச்சொற் பலகற்பித்     திளகிக்கற் புளநெக்குத் ...... தடுமாறித் 
துயில்விட்டுச் செயல்விட்டுத் துயர்வுற்றுக் கயர்வுற்றுத்     தொடியர்க்கிப் படியெய்த்துச் ...... சுழலாதே 
சுருதிப்பொற் பொருள்செக்கர்க் குரவிட்டுத் தமர்பற்றித்     தொழுசெச்சைக் கழல்பற்றிப் ...... பணிவேனோ 
புயலத்தைக் குயில்தத்தைக் கிளைபுக்குத் தொளைபச்சைப்     புனமுத்தைப் புணர்சித்ரப் ...... புயவீரா 
புரவிக்கொட் பிரதற்றத் திருள்திக்கிப் படிமட்கப்     புகல்பொற்குக் குடவெற்றிக் ...... கொடியோனே 
கயிலச்சுத் தரதத்துச் சயிலத்துத் தரநிற்கக்     கரணிச்சித் தருள்கச்சிப் ...... பதியோனே 
கடலிற்கொக் கடல்கெட்டுக் கரமுட்கத் தரமுட்கப்     பொருசத்திக் கரசொக்கப் ...... பெருமாளே.

கண்கள் வேல், அம்பு, மீன், நீர்க்கிடமான கடல், வியக்கத் தக்க நீலோற்பல மலர், விஷம் போன்றவை என்றும், நெஞ்சில் உள்ள மார்பகமோ பருத்த மலை போன்றது, கூந்தல் கொத்து இருண்ட மேகம் தான் என்று உவமை கூறி, பொய் பேசி, பல சொற்களைக் கற்பனையாக அமைத்து, உருகி, வலிமை உள்ள மனம் நெகிழ்ந்து, நிலை தடுமாற்றம் அடைந்து, தூக்கம் ஒழிந்து, செய்ய வேண்டிய செயல்கள் ஒழிந்து, துக்கம் கொண்டு, தளர்ச்சி அடைந்து, கைவளையல்கள் அணிந்த மாதர்களுக்கு இந்தவாறு இளைத்துப் போய் அலையாமல், வேதத்தின் அழகிய பொருளைக் கூறியவனாகிய உனது சிவந்த திருவடிக்கு குரா மலரைத் இட்டுப் பூஜித்து, அன்பு வைத்த அடியார் பற்றித் தொழுது பூஜிக்கும் வெட்சி மலர் சூழ்ந்த உனது திருவடியை சிக்கெனப் பிடித்துப் பணிய மாட்டேனோ? புயலை* வாகனமாகக் கொண்ட தேவயானையையும், குயில் போன்ற பேச்சை உடையவளும், (நிறத்தால்) கிளி போன்றவளும், கிளிகள் புகுந்து மூக்கால் தொளைத்து உண்கின்ற பச்சைத் தினை விளைந்த புனத்தில் (காவல் இருந்த) முத்துப் போன்ற வள்ளி நாயகியையும் சேர்க்கின்ற அழகிய புயங்களை உடைய வீரனே, குதிரைகள் சுழன்று வரும் சூரியனுடைய தேர் இருளான சமயத்தில் உலகு தடுமாறி வலிமை குன்றிப் போக, (இருள் நீங்கும்படி) உரத்துக் கூவுகின்ற அழகிய சேவல் என்ற வெற்றிக் கொடியை உடையவனே, பூமியை சமநிலையில் வைத்துள்ள ஆதாரமானது சாய்ந்து பயத்தைத் தர, ஆபத்தான நிலையிலிருந்த இமய மலையில் வட திசை உயர்ந்துசமமான நிலையில் நிற்கச் செய்தவரான சித்தராகிய அகத்திய முனிவர்* தியானித்து வணங்கிய காஞ்சீபுரத்தில் வாழ்பவனே, (சூரனாகிய) மாமரம் வலிமை இழந்து தன்னுடைய தீமை போய் நடுங்குதல் உண்டாக, மேன்மை போய் அஞ்சுதல் உண்டாகும் படியாக சண்டை செய்த சக்தி வேலை ஏந்திய திருக்கரத்தனே, அழகிய பெருமாளே. 
* இந்திரனுக்கு மேகம் வாகனம். எனவே அது அவன் மகள் தேவயானைக்கும் வாகனம்.
** பார்வதியின் திருமணத்தின் போது இமய மலையில் கூடிய முனிவர் பெருங் கூட்டத்தால், வட திசை தாழ்ந்தது.சிவபெருமான் ஆணையின்படி அகத்தியர் தென் திசைக்குச் சென்று, பொதிய மலையை அடைந்து, பூமியை நிலை நிறுத்தினார்.

பாடல் 337 - காஞ்சீபுரம் 
ராகம் - .....; தாளம் - ........

தத்தத் தனதன தத்தத் தனதன     தத்தத் தனதன ...... தனதான

கச்சிட் டணிமுலை தைச்சிட் டுருவிய     மச்சக் கொடிமதன் ...... மலராலுங் 
கச்சைக் கலைமதி நச்சுக் கடலிடை     அச்சப் படவெழு ...... மதனாலும் 
பிச்சுற் றிவளுள மெய்ச்சுத் தளர்வது     சொச்சத் தரமல ...... இனிதான 
பிச்சிப் புதுமலர் வைச்சுச் சொருகிய     செச்சைத் தொடையது ...... தரவேணும் 
பச்சைத் திருவுமை யிச்சித் தருளிய     கச்சிப் பதிதனி ...... லுறைவோனே 
பற்றிப் பணிபவர் குற்றப் பகைகெட     உற்றுப் பொரவல ...... கதிர்வேலா 
இச்சித் தழகிய கொச்சைக் குறமகள்     மெச்சித் தழுவிய ...... திருமார்பா 
எட்டுக் குலகிரி முட்டப் பொடிபட     வெட்டித் துணிசெய்த ...... பெருமாளே.

கச்சை அணிந்த அழகிய மார்பகத்தைத் தைத்துக் கொண்டு ஊடுருவிச் சென்ற, மீன் கொடியைக் கொண்ட மன்மதனுடைய பூக்கணைகளாலும், தழும்புகள் உடைய கலைகளுடன் கூடிய சந்திரன் ஆலகால விஷத்தை உடைய கடலினிடையே இவள் பயப்படும்படி எழுந்துள்ள அந்தச் செய்கையாலும், பைத்தியம் பிடித்து இத் தலைவி மனம் இளைத்துத் தளர்ச்சி அடைவது சாமானியமான அளவு இல்லை. (ஆதலால், முருகா,) இனிமை தரும் ஜாதி மல்லிகையின் புது மலர்கள் இடையிடையே வைத்துச் சொருகப்பட்ட வெட்சி மாலையை நீ இவளுக்குத் தந்தருள வேண்டும். பச்சை நிறமுள்ள உமா தேவி அன்புடன் (சிவ பிரானுக்கு) பூஜை செய்து அருளிய காஞ்சி மா நகரத்தில் உறைபவனே, அன்பு வைத்து உன்னைப் பணிபவர்களுக்கு குற்றம் செய்யும் பகைவர்கள் அழிந்து போக, வந்து போர் செய்து உதவிய கதிர் வேலனே, உன் மீது காதல் கொண்டு அழகு வாய்ந்தவளும், மழலைமொழி பேசும் குறத்தி ஆனவளுமான வள்ளி நாயகி மெச்சித் தழுவிய அழகிய மார்பனே, ஏழு குல மலைகளுடன் கிரெளஞ்சமலையும் சேர்த்து எட்டு மலைகளும் அடியோடு பொடியாகும்படி சண்டை செய்து, அசுரர்களை வெட்டித் துணித்த பெருமாளே. 
இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் தலைவியின் நற்றாய் பாடுவதுபோல அமைந்தது.மன்மதன், மலர் அம்புகள், சந்திரன், கடல் முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.

பாடல் 338 - காஞ்சீபுரம் 
ராகம் - .....; தாளம் - .......

தனதன தானாந்தன தனதன தானாந்தன     தனதன தானாந்தன ...... தனதான

கமலரு சோகம்பர முடிநடு வேய்பூங்கணை     கலகமர் வாய்தோய்ந்தம ...... ளியின்மீதே 
களையற மீதூர்ந்தெழ மதனவி டாய்போம்படி     கனவிய வாரேந்தின ...... இளநீர்தோய்ந் 
தெமதுயிர் நீலாஞ்சன மதர்விழி யால்வாங்கிய     இவளுடன் மால்கூர்ந்திடு ...... மநுபோகம் 
இனிவிட வேதாந்தப ரமசுக வீடாம்பொருள்     இதவிய பாதாம்புய ...... மருள்வாயே 
அமகர ஆசாம்பர அதுகர ஏகாம்பர     அதுலன நீலாம்பர ...... மறியாத 
அநகர நாளாங்கிதர் தமையுமை யாள்சேர்ந்தருள்     அறமுறு சீகாஞ்சியி ...... லுறைவோனே 
விமலகி ராதாங்கனை தனகிரி தோய்காங்கெய     வெடிபடு தேவேந்திர ...... னகர்வாழ 
விரிகடல் தீமூண்டிட நிசிசரர் வேர்மாண்டிட     வினையற வேல்வாங்கிய ...... பெருமாளே.

(மன்மதனுடைய ஐந்து மலர்ப் பாணங்களில்* முதல் கணையாகிய) தாமரை மலர், அருமையான (இடைக் கணையாகிய) அசோக மலர், (கடைக் கணையாகிய) நீலோற்பல மலர், இவற்றிற்கு இடை இடையே உள்ள மாம்பூ, முல்லை (ஆகிய மலர்ப் பாணங்களின் தொழில் ஆற்றலால்) கலகப் போரில் ஈடுபட்டு, படுக்கையின் மேல் சோர்வு நீங்க என் மீது தாக்கி எழுகின்ற காம தாகம் நீங்கும்படி, கனத்ததும், கச்சு தாங்கியதும், இளநீர் போன்றதுமான மார்பகங்களைத் தழுவி என்னுடைய உயிரை கரிய மை தீட்டப்பட்ட, செழிப்புள்ள கண்ணால் கவர்ந்த இந்தப் பெண் மீது மோகம் மிக்கு எழும் இன்ப நுகர்ச்சியை இனி விட்டு ஒழிப்பதற்கு, வேத முடிவான, பரம சுகம் தருவதான, முக்திப் பொருளாகிய, இன்பம் தருவதான பாதத் தாமரைகளைத் தந்து அருளுக. அ, ம, கர, (ஓங்கார) என்னும் பிரணவாகரமானவரும், திகம்பரரும், அது என்று அ·றிணை நிலையிலும் போற்றப்படக் கூடியவரும், ஒருவராய் மாமரத்தின் கீழ் வீற்றிருப்பவரும், ஒப்பற்ற தன்மை உடையவரும், அன்ன ரூபம் கொண்ட பிரமன் நீல நிறமுள்ள ஆகாயத்தில் முடியைத் தேடி காண முடியாதவரும், பாபத்தை ஒழிப்பவரும், (தேவியின்) அழகிய மார்பின் காம்பின் தழும்பை உடையவரும் ஆகிய சிவபெருமானை, உமா தேவி தவம் செய்து பெற்றதும், முப்பத்திரண்டு அறங்கள்** நிகழ்வதுமான திருக் காஞ்சி நகரில் வாழ்பவனே, பரிசுத்தமானவனே, வேடப் பெண் வள்ளியின் தன மலைகளைத் தழுவுகின்ற கங்கையின் புத்திரனே, நறுமணம் கமழ்கின்ற பொன்னுலகத்தில் தேவர்கள் வாழும் பொருட்டு, பரந்த கடல் நெருப்புப் பற்றி எழவும், அசுரர்கள் வேரோடு மாளவும், தீவினைகள் நீங்கவும் வேலைச் செலுத்திய பெருமாளே. 
* மன்மதனுடைய ஐந்து பாணங்கள் வருமாறு. முதற் கணை =தாமரை. நடுக் கணை = அசோகம். கடைக் கணை = நீலோற்பலமலர். இடை இடையாகும் கணைகள் = மா, முல்லை.
** பெரிய புராணத்தில் கூறிய முப்பத்திரண்டு அறங்கள் பின்வருமாறு:சாலை அமைத்தல், ஓதுவார்க்கு உணவு, அறுசமயத்தாருக்கும் உணவு, பசுவுக்குத் தீனி, சிறைச் சோறு, ஐயம், தின்பண்டம் நல்கல், அநாதைகளுக்கு உணவு, மகப்பெறுவித்தல், மகவு வளர்த்தல், சிசுக்களுக்குப் பால் நல்கல், அநாதைப் பிணம் சுடுதல், அநாதைகளுக்கு உடை, சுண்ணாம்பு பூசல், நோய்க்கு மருந்து, வண்ணார் தொழில், நாவிதத் தொழில், கண்ணாடி அணிவித்தல், காதோலை போடுதல், கண் மருந்து, தலைக்கு எண்ணெய், ஒத்தடம் தருதல், பிறர் துயர் காத்தல், தண்ணீர்ப் பந்தல், மடம் கட்டுதல், தடாகம் அமைத்தல், சோலை வளர்த்தல், தோல் பதனிடல், மிருகங்களுக்கு உணவு, ஏர் உழுதல், உயிர் காத்தல், கன்னிகாதானம்.

பாடல் 339 - காஞ்சீபுரம் 
ராகம் - பெஹாக்; தாளம் - அங்கதாளம் - 15 1/2 
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2 தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2

தனன தானன தத்தன தனதன     தானா தத்தத் ...... தனதான

கரும மானபி றப்பற வொருகதி     காணா தெய்த்துத் ...... தடுமாறுங் 
கலக காரண துற்குண சமயிகள்     நானா வர்க்கக் ...... கலைநூலின் 
வரும நேகவி கற்பவி பரிதம     னோபா வத்துக் ...... கரிதாய 
மவுன பூரித சத்திய வடிவினை     மாயா மற்குப் ...... புகல்வாயே 
தரும வீம அருச்சுன நகுலச     காதே வர்க்குப் ...... புகலாகிச் 
சமர பூமியில் விக்ரம வளைகொடு     நாளோர் பத்தெட் ...... டினிலாளுங் 
குரும கீதல முட்பட வுளமது     கோடா மற்க்ஷத் ...... ரியர்மாளக் 
குலவு தேர்கட வச்சுதன் மருககு     மாரா கச்சிப் ...... பெருமாளே.

வினையின் காரணமாக நேர்ந்த இந்தப் பிறப்பு தொலைவதற்கு ஒரு வழியும் தெரியாமல் இளைத்துத் தடுமாறுபவரும், குழப்பத்தை விளைவிக்கும் பொல்லாத குணமுடையவருமான சமயவாதிகளின் பலவிதமான சாஸ்திர நூல்களில் சொல்லப்பட்ட அனேக மாறுபாடுகள் கொண்டதும், பொருந்தாததுமான மன உணர்ச்சிக்கு எட்டாததான, மெளனநிலை, நிறைவு இவற்றைக் கொண்டதான, உண்மை ஒளியை நான் இறப்பின்றி விளங்குவதற்காக உபதேசித்து அருள்வாயாக. தருமன், வீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகிய ஐவர்க்கும் பாதுகாப்பு அளிப்பவனாகி, போர்க்களத்தில் வெற்றிச் சங்கை (பாஞ்சஜன்யத்தை) ஊதி, நாள் ஒரு பதினெட்டில் நிகழும் போரில் குருக்ஷேத்திரம் பாழ்நிலமாக, தனது திருவுள்ளம் கோணாது நெறிமுறையில் நிற்கவும், கெளரவ அரசர்கள் யாவரும் இறந்து படவும், (அர்ச்சுனனின்) விளக்கமுற்ற தேரைச் செலுத்திய அச்சுதனின் (திருமாலின்) மருகனே, குமாரஸ்வாமியே, காஞ்சீபுரத்துப் பெருமாளே. 

பாடல் 340 - காஞ்சீபுரம் 
ராகம் - .....; தாளம் - .......

தனதன தத்தத் தாந்த தானன     தனதன தத்தத் தாந்த தானன          தனதன தத்தத் தாந்த தானன ...... தனதான

கலகலெ னப்பொற் சேந்த நூபுர     பரிபுர மொத்தித் தாந்த னாமென          கரமல ரச்சிற் றாந்தொ மாடிய ...... பொறியார்பைங் 
கடிதட முற்றுக் காந்த ளாமென     இடைபிடி பட்டுச் சேர்ந்த ஆலிலை          கனதன பொற்பிட் டோங்கு மார்பொடு ...... வடமாடச் 
சலசல சச்சச் சேங்கை பூண்வளை     பரிமள பச்சைச் சேர்ந்து லாவிய          சலசமு கத்துச் சார்ந்த வாள்விழி ...... சுழலாடத் 
தரளந கைப்பித் தாம்ப லாரிதழ்     குலமுகி லொத்திட் டாய்ந்த வோதியர்          சரசமு ரைத்துச் சேர்ந்த தூவைய ...... ருறவாமோ 
திலதமு கப்பொற் காந்தி மாதுமை     யெனையருள் வைத்திட் டாண்ட நாயகி          சிவனுரு வத்திற் சேர்ந்த பார்வதி ...... சிவகாமி 
திரிபுவ னத்தைக் காண்ட நாடகி     குமரிசு கத்தைப் பூண்ட காரணி          சிவைசுடர் சத்திச் சாம்ப வீஅமை ...... யருள்பாலா 
அலகையி ரத்தத் தோங்கி மூழ்கிட     நரிகழு குப்பிச் சீர்ந்து வாயிட          அசுரர்கு லத்தைக் காய்ந்த வேல்கர ...... முடையோனே 
அமரர்ம கட்குப் போந்த மால்கொளும்     விபுதகு றத்திக் காண்ட வாதின          மழகுசி றக்கக் காஞ்சி மேவிய ...... பெருமாளே.

கலகல என்று அழகிய சிவந்த பாத கிண்கிணியும், சிலம்பும் தாள ஒத்துப் போல தாம் தனாம் என்று ஒலிக்க, தாமரை மலர் போன்ற கைகள், அதற்குச் சரியாக அமைந்த தாந்தோம் என ஆடல் பயில்கின்ற தந்திரத்தினர், செழிப்பு வாய்ந்த தங்கள் பெண்குறி விரிவடைய, காந்தள் மலரை ஒத்த ஒரு பிடி அளவே உள்ள மெல்லிய இடையில் பட்டாடை பொருந்திய ஆலிலை போன்ற வயிற்றுடனும், கனத்த தனங்கள் அழகு தந்து விளங்கும் மார்புடனும் முத்து மாலை அசைய, சலசல சச்ச என்று ஒலிக்கும் சிவந்த கைகளில் அணிந்துள்ள வளையல்கள் ஒலிக்க, நறு மணம் கமழும் பச்சைப் பொட்டு பொருந்தி விளங்கும் தாமரை போன்ற முகத்தில் உள்ள வாள் போன்ற கண்கள் சுழன்று அசைய, முத்துப் போன்ற பற்கள் ஒளி வீச, செவ்வாம்பல் போன்ற வாயிதழைக் கொண்டவர்கள், சிறந்த மேகம் போன்ற, சீவப்பட்ட கூந்தலை உடைவர்கள் காம லீலைப் பேச்சுக்களைப் பேசி புணர்கின்ற, மாமிசம் உண்ணும் பொது மாதர்களுடைய சம்பந்தம் நல்லதாகுமோ? பொட்டு அணிந்த முகத்தின் அழகிய ஒளி வீசும் மாதாகிய உமா தேவி என் மீது திருவருள் வைத்து என்னை ஆண்டருளிய நாயகி, சிவ பெருமானது திருவுருவத்தில் இடது பாதியில் சேர்ந்துள்ள பார்வதி, சிவகாமி, மூன்று உலகங்களையும் படைத்த நாடகத்தினள், குமரி, சுகத்தையே அணிந்துள்ள காரண சக்தி, ஜோதி மயமான சிவனுடைய தேவி, பரா சக்தி சாம்பவி ஆகிய உமை அம்மை அருளிய பாலகனே, பேய்கள் இரத்தத்தில் நன்றாக முழுகியும், நரியும் கழுகும் (உண்டதால் உடல்) உப்பிப் பெருக்க (சமயம் வாய்த்ததென்று) வாயை வைத்து உண்ணவும் அசுரர்கள் குலத்தைச் சுட்டு அழித்த வேலாயுதத்தைக் கையில் ஏந்தியவனே, தேவர் மகளான தேவயானை மீது பாயும் ஆசை கொண்ட தேவனே, குற வள்ளியை ஆண்டவனே, நாள்தோறும் அழகு விளங்கி மேம்பட காஞ்சியில் வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 341 - காஞ்சீபுரம் 
ராகம் - .....; தாளம் - ....

தத்தா தத்தா தத்தா தத்தா     தத்தா தத்தா ...... தனதான

கொத்தார் பற்கா லற்றே கப்பாழ்     குப்பா யத்திற் ...... செயல்மாறிக் 
கொக்கா கிக்கூ னிக்கோல் தொட்டே     கொட்டா விக்குப் ...... புறவாசித் 
தித்தா நிற்றார் செத்தார் கெட்டேன்     அஆ உஉ...... எனவேகேள் 
செற்றே சுட்டே விட்டே றிப்போ     மப்பே துத்துக் ...... கமறாதோ 
நித்தா வித்தா ரத்தோ கைக்கே     நிற்பாய் கச்சிக் ...... குமரேசா 
நிட்டூ ரச்சூர் கெட்டோ டப்போர்     நெட்டோ தத்திற் ...... பொருதோனே 
முத்தா ரத்தோ ளிற்கோ டற்பூ     முட்டா திட்டத் ...... தணிவோனே 
முற்றா நித்தா அத்தா சுத்தா     முத்தா முத்திப் ...... பெருமாளே.

வரிசையாக நிறைந்திருந்த பல் வேரற்று விழுந்து போக, பாழ்பட்ட சட்டையான இந்த உடலின் செயல்கள் தடுமாறி, மயிரெல்லாம் கொக்கின் நிறமாக வெளுத்து, உடல் கூன் அடைந்து, ஊன்றுகோல் பிடித்து, கொட்டாவி விட்ட தலை குனிதலை அடைந்து, இவ்வாறு நிலை வேறுபாடுகளை அனுபவித்து, நின்றார், பின்னர் இறந்தார், ஐயோ கெட்டேன் எனக் கூறிக் கதறி, அ ஆ உ உ என்னும் ஒலியுடன் உறவினர் அழ, சுடுகாட்டுக்குச் சென்று, அங்கு பிணத்தைச் சுட்டுவிட்டு, (நீரில் மூழ்கி) வெளியேறி வருகின்ற அந்தப் பேதைமை வாய்ந்த துக்கம் நீங்காதோ? என்றும் உள்ளவனே, விரிந்த தோகையை உடைய மயில் மீது விளங்கி நிற்பவனே, காஞ்சீபுரத்துக் குமரேசனே, கொடுமை வாய்ந்த சூரன் கேடு அடைந்து கடலிடையே ஓட, போரினை பெரிய கடலில் புரிந்தவனே, முத்து மாலை அணிந்த தோளில் வெண்காந்தள் மலரைத் தவறாது விருப்பத்துடன் அணிபவனே, முதுமையே வாராதவனே, என்றும் இளமையாய் இருப்பவனே, என் தந்தையே, பரிசுத்தனே, பாசங்களினின்று நீங்கியவனே, முக்தியைத் தரும் பெருமாளே. 
என்று தொடங்கும் பாடல்கள்.

பாடல் 342 - காஞ்சீபுரம் 
ராகம் - .....; தாளம் - .....

தானத் தத்தத் தத்தன தத்தத் ...... தனதான

கோவைச் சுத்தத் துப்பத ரத்துக் ...... கொடியார்தங் 
கோலக் கச்சுக் கட்டிய முத்தத் ...... தனமேவிப் 
பாவத் துக்குத் தக்கவை பற்றித் ...... திரியாதே 
பாடப் பத்திச் சித்த மெனக்குத் ...... தரவேணும் 
மாவைக் குத்திக் கைத்தற எற்றிப் ...... பொரும்வேலா 
மாணிக் கச்சொர்க் கத்தொரு தத்தைக் ...... கினியோனே 
சேவற் பொற்கைக் கொற்றவ கச்சிப் ...... பதியோனே 
தேவச் சொர்க்கச் சக்கிர வர்த்திப் ...... பெருமாளே.

கொவ்வைப் பழம் போலவும், சுத்தமான பவளம் போலவும் சிவந்த வாயிதழ்களை உடைய கொடி போன்ற விலைமாதர்களின் அழகிய கச்சு அணிந்துள்ளதும், முத்து மாலை அணிந்துள்ளதுமான மார்பகங்களை விரும்பி, பாவ காரியங்களுக்குத் தக்கவையான செயல்களையே பற்றிக்கொண்டுச் செய்து திரியாமல், உன்னைப் பாடிப் புகழப் பக்தி நிறைந்த உள்ளத்தை எனக்குத் தந்தருள வேண்டும். மாமரமாக வந்த சூரனைக் குத்தி, அவனை வெறுத்து அடியோடு கொன்று சண்டை செய்த வேலை ஏந்தியவனே, மாணிக்கம் முதலிய ரத்தினங்கள் நிறைந்த விண்ணுலகத்தில் இருந்த ஒப்பற்ற கிளியாகிய தேவயானைக்கு இனியவனே, சேவற் கொடியை அழகிய கையில் கொண்ட வீரனே, காஞ்சீபுரத்தில் வாழ்பவனே, தேவர்கள் வாழும் விண்ணுலகத்துக்குச் சக்கரவர்த்தியாகிய பெருமாளே. 

பாடல் 343 - காஞ்சீபுரம் 
ராகம் - தர்பர்; தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2 
தகிடதகதிமி-3 1/2

தான தத்தனத் தான தத்தனத்     தான தத்தனத் தான தத்தனத்          தான தத்தனத் தான தத்தனத் ...... தனதான

சீசி முப்புரக் காடு நீறெழச்     சாடி நித்திரைக் கோசம் வேரறச்          சீவன் முத்தியிற் கூட வேகளித் ...... தநுபூதி 
சேர அற்புதக் கோல மாமெனச்     சூரி யப்புவிக் கேறி யாடுகச்          சீலம் வைத்தருட் டேறி யேயிருக் ...... கறியாமற் 
பாசம் விட்டுவிட் டோடி போனதுப்     போது மிப்படிக் காகி லேனினிப்          பாழ்வ ழிக்கடைக் காம லேபிடித் ...... தடியேனைப் 
பார டைக்கலக் கோல மாமெனத்     தாப ரித்துநித் தார மீதெனப்          பாத பத்மநற் போதை யேதரித் ...... தருள்வாயே 
தேசில் துட்டநிட் டூர கோதுடைச்     சூரை வெட்டியெட் டாசை யேழ்புவித்          தேவர் முத்தர்கட் கேத மேதவிர்த் ...... தருள்வோனே 
சீர்ப டைத்தழற் சூல மான்மழுப்     பாணி வித்துருப் பாத னோர்புறச்          சீர்தி கழ்ப்புகழ்ப் பாவை யீனபொற் ...... குருநாதா 
காசி முத்தமிழ்க் கூட லேழ்மலைக்     கோவ லத்தியிற் கான நான்மறைக்          காடு பொற்கிரிக் காழி யாருர்பொற் ...... புலிவேளூர் 
காள அத்தியப் பால்சி ராமலைத்     தேச முற்றுமுப் பூசை மேவிநற்          காம கச்சியிற் சால மேவுபொற் ...... பெருமாளே.

சீச்சீ என்று வெறுக்கத்தக்க தீய திரிபுர மலைகள் போன்ற (ஆணவம், கன்மம், மாயை என்ற) மும்மலங்களாகிய காடு வெந்து சாம்பலாகும்படி, தூக்கமும், ஆன்மாவை முடிக்கொண்டுள்ள பஞ்ச கோசங்களும்* வேரோடு அற, ஆன்மா முக்தி நிலை அடைந்து விடுதலை பெற, யான் மகிழ்ந்து பேரின்ப அநுபவத்தைப் பெற, அற்புதத் தோற்றம் இது என்று கூறும்படியாக சூரிய மண்டலத்தில் யான் சென்று அங்கு நடனம் புரிய, ஒழுக்க வழியினில் சென்று திருவருளை உணர்ந்து நிலைபெற்றிருக்கத் தெரியாமல், பாசங்கள் என்னை விட்டு விலகி மீண்டும் ஓடிவந்து சேரும் நிலை போதும் போதும். இப்படிப் பாசத்தில் அகப்படும் நிலை எனக்கு வேண்டாம். இனியாகிலும் இந்தப் பாழும் நெறியில் என்னை அடைத்து வைக்காமல் என்னைப் பற்றிக்கொண்டு உலகில் எனக்குப் புகலிடமாக இருக்கும் தோற்றத்தைக் காண்பித்து, ஆதரவுடன் யான் நித்தியமான ஓர் ஆபரணத்தை அணிவதற்காக உன் திருவடியாகிய நற்கமல மலரை என் மீது தரிக்கச் செய்வாயாக. ஞானம் இல்லாத துஷ்டனும், கொடுமை வாய்ந்தவனும், குற்றங்கள் நிறைந்தவனுமான சூரனை வெட்டி, எட்டுத் திசைகளிலும் ஏழுலகிலும் இருக்கும் தேவர்கள், ஜீவன்முக்தரான அறிஞர்களின் துயரத்தை நீக்கி அருளியவனே, தன் திருக்கரங்களில் சிறப்பு வாய்ந்த நெருப்பு, சூலம், மான், மழு ஆகியவற்றை ஏந்தியவரும், பவளம் போன்ற சிவந்த பாதங்களை உடையவருமான சிவபெருமானின் ஒரு பாகத்தில் அமர்ந்த சிறப்புப் பொருந்திய புகழ்த் தேவி பார்வதி பெற்றெடுத்த அழகிய குருநாதனே, காசி, முத்தமிழ் விளங்கும் மதுரை, ஏழு மலைகளுடைய திருவேங்கடம், திருக்கோவலூர், திருவானைக்கா, நான்கு வேதங்களும் தங்கும் வேதாரணியம், கநகமலை, சீர்காழி, திருவாரூர், அழகிய சிதம்பரம், புள்ளிருக்கும் வேளூராகிய வைத்தீசுரன்கோயில், திருக்காளத்தி, அதன்பின் திரிசிராப்பள்ளி முதலிய தலங்களிலும் நாடு முழுவதும் மூன்று காலங்களிலும் வழிபாடு நடத்தப் பெற்று, நல்ல காமகோட்டம் என்ற கச்சியில் (காஞ்சீபுரத்தில்) மிகவும் விரும்பி வீற்றிருக்கும் அழகிய பெருமாளே. 
* பஞ்ச கோசங்கள் (ஐந்து உறைகள்): அன்னமய கோசம் - உணவும் உடலும் கூடியது, பிராணமய கோசம் - வாக்கு, பாணி, பாதம், மற்றும் கர்மேந்திரியங்கள் இவற்றுடன் உயிரும் கூடியது, மனோமய கோசம் - மனம் மட்டும், விஞ்ஞானமய கோசம் - ஐம்பொறிகளும், புத்தியும் கூடியது, ஆனந்தமய கோசம் - ஆன்மாவுக்கு மிக அருகில் போலி ஆனந்தத்தைத் தருவது, எனப்படும்.

பாடல் 344 - காஞ்சீபுரம் 
ராகம் - கானடா; தாளம் - ஆதி

தத்ததன தந்த தத்ததன தந்த     தத்ததன தந்த ...... தனதான

நச்சரவ மென்று நச்சரவ மென்று     நச்சுமிழ்க ளங்க ...... மதியாலும் 
நத்தொடுமு ழங்க னத்தொடுமு ழங்கு     நத்திரைவ ழங்கு ...... கடலாலும் 
இச்சையுணர் வின்றி யிச்சையென வந்த     இச்சிறுமி நொந்து ...... மெலியாதே 
எத்தனையி நெஞ்சில் எத்தனமு யங்கி     இத்தனையி லஞ்ச ...... லெனவேணும் 
பச்சைமயில் கொண்டு பச்சைமற மங்கை     பச்சைமலை யெங்கு ...... முறைவோனே 
பத்தியுட னின்று பத்திசெயு மன்பர்     பத்திரம ணிந்த ...... கழலோனே 
கச்சிவர் குரும்பை கச்சவர்வி ரும்பு     கச்சியில மர்ந்த ...... கதிர்வேலா 
கற்பக வனங்கொள் கற்பகவி சும்பர்     கைத்தளைக ளைந்த ...... பெருமாளே.

விரும்பிப் பிடிக்கவந்த கேது என்ற விஷப்பாம்பு தன்னை மென்று வெளிவிட்ட காரணத்தால், தானும் ஒரு விஷப்பாம்பு போல என் மீது நஞ்சை உமிழ்கின்ற, கறை படிந்த நிலவாலும், சங்குகள் செய்யும் பேரொலியோடும், மேகங்கள் முழக்கும் இடியின் ஒலியினோடும், விசேஷமான அலைகளை வீசும் கடலாலும், பக்தியும் தெளிவும் இல்லாமல், ஆசையுடன் மட்டும் வந்திருக்கிறேன் எனச் சொல்லி வந்திருக்கிற இச் சிறு பெண்ணாகிய அடியாள் மனம் நொந்து உடல் மெலியாமல், எத்தனையோ எண்ணங்களை மனதிற் கொண்டு, முயற்சிகளை மேற்கொண்டு செய்பவளாகிய என்னை இந்த அளவிலேயே அஞ்சல் எனக்கூறி அருள வேண்டும். பச்சை மயிலை வாகனமாகக் கொண்டு, பச்சை நிறமான வேடப் பெண் வள்ளியுடன் பசுமை வாய்ந்த மலையிடங்களில் எல்லாம் வாழ்பவனே, பக்தியில் நிலைத்து முறை தவறாமல் வழிபடும் அன்பர்கள் பூஜிக்கிற இலை, பூக்களைஅணிந்த திருவடிகளை உடையோனே, ரவிக்கை அணிந்த, இளம் தென்னங் குரும்பு போன்ற மார்பினரைக் கைத்து வெறுத்தவர்களாகிய பெரியோர் விரும்பும் கச்சியாகிய காஞ்சீபுரத்தில் வீற்றிருக்கும் ஒளி வேலனே, கற்பகக் காட்டை உடையவர்களும், நீதி நெறியை மனத்தில் கொண்டவர்களுமாகிய தேவர்களின் கை விலங்குகளை அவிழ்த்தெறிந்த பெருமாளே. 
இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் இயற்றப்பட்டது. புலவர் தம்மை நாயகியாக வைத்துப் பாடுகிறார்.சந்திரன், கடல், முதலியன விரக வேதனையை அதிகரிக்கச் செய்வன.

பாடல் 345 - காஞ்சீபுரம் 
ராகம் - சாரங்கா; தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2 தகிடதகதிமி- 3 1/2

தனன தத்தன தனன தத்தன     தனன தத்தன ...... தனதான

படிறொ ழுக்கமு மடம னத்துள     படிப ரித்துட ...... னொடிபேசும் 
பகடி கட்குள மகிழ மெய்ப்பொருள்     பலகொ டுத்தற ...... உயிர்வாடா 
மிடியெ னப்பெரு வடவை சுட்டிட     விதன முற்றிட ...... மிகவாழும் 
விரகு கெட்டரு நரகு விட்டிரு     வினைய றப்பத ...... மருள்வாயே 
கொடியி டைக்குற வடிவி யைப்புணர்     குமர கச்சியி ...... லமர்வோனே 
குரவு செச்சைவெண் முளரி புத்தலர்     குவளை முற்றணி ...... திருமார்பா 
பொடிப டப்பட நெடிய விற்கொடு     புரமெ ரித்தவர் ...... குருநாதா 
பொருதி ரைக்கடல் நிருத ரைப்படை     பொருது ழக்கிய ...... பெருமாளே.

வஞ்சனையுடன் கூடிய நடையை மூட மனத்துள் உள்ளபடியே வைத்துக்கொண்டு, உடனுக்கு உடன் தந்திரமாகப் பேசும் பகட்டுப் பொது மகளிருக்கு, அவர்கள் மனம் மகிழ்வதற்காக, எனது உடம்பையும் பொருட்கள் பலவற்றையும் கொடுத்து, மிகவும் உயிர் வாடி நின்று, தரித்திரம் என்ற பெரிய வடவாக்கினி* என்னைச் சுட்டுப் பொசுக்க, பெருந்துன்பம் ஏற்பட்டு, அதனால் மிகத் துயரத்தோடு வாழும் அந்தக் கேவலமான வாழ்வு நீங்கி, அரிய நரகத்தில் நான் விழுவது விலகி, நல்வினை, தீவினை என்ற என் இருவினைகளும் ஒழிய, உனது திருவடிகளைத் தந்தருள்வாயாக. கொடி போன்ற இடையை உடைய குறமகள், அழகிய வள்ளியை மருவிக் கலந்த குமரனே, கச்சிப்பதியாகிய காஞ்சீபுரத்தில் வீற்றிருப்பவனே, குராமலர், வெட்சி மலர், வெண்தாமரை, புதிதாக மலர்ந்த குவளைப்பூ இவை எல்லாம் நிரம்ப அணிந்து கொள்ளும் அழகிய மார்பினனே, தூளாகி அழியும்படி, மேருமலையாகிய நீண்ட வில்லினைக் கொண்டு திரிபுரத்தை (சிரித்தே) எரித்தவரான சிவபிரானின் குருநாதனே, மாறுபட்டு எழுகின்ற அலைகளை உடைய கடலையும், அசுரர்களையும், அவர்களது சேனையையும் போர் செய்து கலக்கி அதிரவைத்த பெருமாளே. 
* வடவாக்கினி என்பது பிரளய காலத்தில் உலகை எரித்தே அழிப்பதற்காக வட திசையிலிருந்து வரும் ஒரு நெருப்புக் கோளம் என்று சொல்வர்.

பாடல் 346 - காஞ்சீபுரம் 
ராகம் - .....; தாளம் - .......

தனனத்தத் தானத் தானன     தனனத்தத் தானத் தானன          தனனத்தத் தானத் தானன ...... தந்ததான

மகுடக்கொப் பாடக் காதினில்     நுதலிற்பொட் டூரக் கோதிய          மயிரிற்சுற் றோலைப் பூவோடு ...... வண்டுபாட 
வகைமுத்துச் சோரச் சேர்நகை     யிதழிற்சொற் சாதிப் பாரியல்          மதனச்சொற் பாடுக் கோகில ...... ரம்பைமாதர் 
பகடிச்சொற் கூறிப் போர்மயல்     முகவிச்சைப் பேசிச் சீரிடை          பவளப்பட் டாடைத் தோளிரு ...... கொங்கைமேலாப் 
பணமெத்தப் பேசித் தூதிடு     மிதயச்சுத் தீனச் சோலிகள்          பலரெச்சிற் காசைக் காரிகள் ...... சந்தமாமோ 
தகுடத்தத் தானத் தானன     திகுடத்தித் தீதித் தோதிமி          தடுடுட்டுட் டாடப் பேரிகை ...... சங்குவீணை 
தடமிட்டுப் பாவக் கார்கிரி     பொடிபட்டுப் போகச் சூரர்கள்          தலையிற்றிட் டாடப் போர்புரி ...... கின்றவேலா 
திகிரிப்பொற் பாணிப் பாலனை     மறைகற்புத் தேளப் பூமனை          சினமுற்றுச் சேடிற் சாடிய ...... கந்தவேளே 
தினையுற்றுக் காவற் காரியை     மணமுற்றுத் தேவப் பூவொடு          திகழ்கச்சித் தேவக் கோன்மகிழ் ...... தம்பிரானே.

சல்லடைக் கொப்பு என்னும் காதணியும், கொப்பு எனப்படும் காதணியும் காதில் ஆட, நெற்றியில் திலகம் பரவி விளங்க, சிக்கெடுக்கப்பட்டு சீவி வாரப்பட்ட மயிரில் சுற்றி வைத்துள்ள தாழம்பூவில் வண்டு பாட, நல்ல தரமான முத்தும் இழிவு படும்படி விளங்கும் பற்களைக் காட்டி, வாயிதழ்களால் தாங்கள் பேசும் சொற்களையே சாதிப்பவர்கள். பொருந்திய காம லீலைப் பாடல்களைப் பாடுகின்ற குயில் போன்ற, ரம்பையை ஒத்த விலைமாதர்கள். பரிகாசப் பேச்சுக்களைப் பேசி காமப் போர் (மனதில் கிளம்பும்படி) முகத்தில் விருப்பத்தைக் காட்டிப் பேசி, அழகிய இடையில செந்நிறப் பட்டாடையை தோள் மீதும் இரு மார்பகங்களின் மீதும் இறுக்க அணிந்து, பணம் நிரம்பத் தரும்படி பேசி (அதன் பொருட்டு) தூது அனுப்புகின்ற மனத்தை உடைய மிக்க இழிவான தொழிலைப் பூண்டவர்கள். பல பேர்களின் எச்சிலுக்கும் ஆசைப்படும் இவ்வேசிகளின் தொடர்பு நல்லதாகுமா? தகுடத்தத் தானத் தானன திகுடத்தித் தீதித் தோதிமி தடுட்டுடுட் டாட இவ்வாறான ஒலிகளை எழுப்பி பேரிகை, சங்கு, வீணை (ஆகியவைகள்) ஒலித்து வழியைக் காட்டி, (வருபவர்களை உள்ளே மடக்கி) பாவங்களைச் செய்த (கிரவுஞ்சன்* என்னும் அசுரனாகிய) மலை தூளாகும்படிப் போக, சூரர்களுடைய தலைகள் அறுந்து வீழ்ந்து ஆடும்படி சண்டை செய்கின்ற வேலனே, சக்கரம் ஏந்திய அழகிய திருக்கரத்தை உடைய திருமாலின் பிள்ளையும், வேதங்களைக் கற்ற தேவனும், அழகிய தாமரையில் வீற்றிருப்பவனுமாகிய பிரமன் மீது கோபம் கொண்டு அவனது திரட்சியான தலையில் குட்டிய கந்தப் பெருமானே, தினைப் புனத்திலிருந்து காவல் புரிந்த வள்ளி நாயகியை திருமணம் செய்து கொண்டு, தேவருலகில் வாழ்ந்த பூ அனைய தேவயானையுடன் சேர்ந்து, விளங்கும் காஞ்சீபுரத்தில் வீற்றிருந்து, தேவர்கள் தலைவனான இந்திரன் மகிழும் தம்பிரானே. 
* தன்னிடத்தே வழி காட்டி உள்ளே வந்தவர்களை மாயையால் மடக்கி மாய்வித்த கிரவுஞ்சன் என்னும் அசுரன், அகத்திய முனிவர் அங்கு வர, அவரையும் வழி தடுமாறச் செய்தான். இதை அறிந்த முனிவர் நீ இந்த மலையாகவே இருக்கக் கடவாய். முருகன் கை வேலால் இறப்பாய் என்று சாபம் இட்டார்.

பாடல் 347 - காஞ்சீபுரம் 
ராகம் - லதாங்கி ; தாளம் - திஸ்ர த்ருபுடை - 7

தத்தத்தத் தானன தானன     தத்தத்தத் தானன தானன          தத்தத்தத் தானன தானன ...... தனதான

மக்கட்குக் கூறரி தானது     கற்றெட்டத் தான்முடி யாதது          மற்றொப்புக் கியாதுமொ வாதது ...... மனதாலே 
மட்டிட்டுத் தேடவோ ணாதது     தத்வத்திற் கோவைப டாதது          மத்தப்பொற் போதுப கீரதி ...... மதிசூடும் 
முக்கட்பொற் பாளரு சாவிய     அர்த்தக்குப் போதக மானது          முத்திக்குக் காரண மானது ...... பெறலாகா 
முட்டர்க்கெட் டாதது நான்மறை     யெட்டிற்றெட் டாதென வேவரு          முற்பட்டப் பாலையி லாவது ...... புரிவாயே 
செக்கட்சக் ராயுத மாதுலன்     மெச்சப்புற் போதுப டாவிய          திக்குப்பொற் பூதர மேமுதல் ...... வெகுரூபம் 
சிட்டித்துப் பூதப சாசுகள்     கைக்கொட்டிட் டாடம கோததி          செற்றுக்ரச் சூரனை மார்பக ...... முதுசோரி 
கக்கக்கைத் தாமரை வேல்விடு     செச்சைக்கர்ப் பூரபு யாசல          கச்சுற்றப் பாரப யோதர ...... முலையாள்முன் 
கற்புத்தப் பாதுல கேழையு     மொக்கப்பெற் றாள்விளை யாடிய          கச்சிக்கச் சாலையில் மேவிய ...... பெருமாளே.

மக்களுக்கு இது இத்தன்மையது என எடுத்துக்கூற அரிதானது, கற்ற கல்வியாலும் அதனை எட்ட முடியாதது, மற்றபடி அதற்கு உவமை ஏதும் ஒவ்வாதது, மனதினால் அதை அளவிட்டுத் தேடி அறியமுடியாதது, எத்தகைய ஆராய்ச்சியிலும் அதனை வரிசைப்படுத்த முடியாதது, ஊமத்தை மலரையும், தங்கநிறக் கொன்றை மலரையும், கங்கைநதியையும், பிறைச்சந்திரனையும் சடையிலே சூடும் முக்கண்ணராகிய அழகிய சிவபிரான் சொல்லுக என்று கேட்க சொல்லப்பட்ட பொருளுக்கு உபதேச வித்தாக இருப்பது, மோட்சத்துக்குக் காரணமாக இருப்பது, பெறுவதற்கு முடியாததாய், மூடர்களுக்கு எட்டாததாய் இருப்பது, நான்கு வேதங்களும் எட்டுவதற்கு முயன்றாலும், எட்ட முடியாமல் இருக்கும் பொருள் அது, முதன்மையான பொருளுக்கும் அப்பாற்பட்ட பொருள் எதுவோ, அதனை எனக்கு உபதேசித்து அருள்வாயாக. செங்கண்களையும், சக்ராயுதத்தையும் உடைய தாய்மாமன் திருமால் மெச்சிப் புகழும்படியாக, புல்லையும் மலரையும் பெரிதாகப் படரவிட்டு, திசைகளில் உள்ள பொன் மேரு மலை முதலாக பலப்பல உருவங்களைச் சிருஷ்டித்து, பூதங்களும் பேய்களும் கைகொட்டி ஆடும்படியாக, பெருங்கடலை வற்றடித்து, கடுமையான சூரனுடைய மார்பகத்திலிருந்து மிகுந்த இரத்தம் கக்கச்செய்யுமாறு, தாமரைமலர் போன்ற திருக்கரத்தினின்று வேலாயுதத்தை விட்ட செஞ்சந்தனமும் பச்சைக் கற்பூரமும் பூசிய புயமலையை உடையோனே, கச்சணிந்த கனமான பால் ஊறும் மார்பினாளும், முன்னர், கற்புநிலை தவறாமல் ஏழு உலகங்களையும் ஒருங்கே ஈன்றளித்தவளுமான காமாட்சித் தாயார் திருவிளையாடல்கள் பல புரிந்த காஞ்சிபுரத்தில் உள்ள கச்சபேசுரம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 348 - காஞ்சீபுரம் 
ராகம் - .....; தாளம் - ......

தனதான தந்த தனதான தந்த     தனதான தந்த ...... தனதான

மயலோது மந்த நிலையாலும் வஞ்ச     வசைபேசு கின்ற ...... மொழியாலும் 
மறிபோலு கின்ற விழிசேரு மந்தி     மதிநேரு கின்ற ...... நுதலாலும் 
அயிலேநி கர்ந்த விழியாலும் அஞ்ச     நடையாலும் அங்கை ...... வளையாலும் 
அறிவேய ழிந்து அயர்வாகி நைந்து     அடியேன்ம யங்கி ...... விடலாமோ 
மயிலேறி யன்று நொடிபோதி லண்டம்     வலமாக வந்த ...... குமரேசா 
மறிதாவு செங்கை அரனா ரிடங்கொள்     மலைமாது தந்த ...... முருகேசா 
நயவானு யர்ந்த மணிமாட மும்பர்     நடுவேநி றைந்த ...... மதிசூழ 
நறைவீசு கும்ப குடமேவு கம்பை     நகர்மீத மர்ந்த ...... பெருமாளே.

காம ஆசையை அறிவிக்கும் (வேசையர்களின்) அந்த தோற்றத்தாலும், வஞ்சகம் கூடிய பழிப்புச் சொற்களைப் பேசுகின்ற பேச்சுக்களாலும், மான் பார்வை கொண்ட கண்களுக்கு அருகிலுள்ள, மாலைப் பிறையை நிகர்க்கின்ற, நெற்றியாலும், வேலை ஒத்த கண்களாலும், அன்னத்தை ஒத்த நடையாலும், அழகிய கையில் உள்ள வளையல்களாலும், என் அறிவு அழிபட்டு, சோர்வு அடைந்து, உள்ளம் ஒடுங்கி அடியேனாகிய நான் மயக்கம் கொள்ளலாமோ? மயிலின் மீது ஏறி முன்பு ஒரு நொடிப் பொழுதில் உலகைச் சுற்றி வந்த குமரேசனே, மான் தாவுகின்ற சிவந்த கையை உடைய சிவபெருமானின் இடது பாகத்தில் குடிகொண்டுள்ள பார்வதி தேவி பெற்ற முருகேசனே, மேம்பாட்டுடன், வான் அளவும் உயர்ந்த, அழகிய மாடங்களின் உச்சியிலும் நடுவிலும் நிறைந்த ஒளி வீசும் நிலவு சூழ்ந்து விளங்க, (வேள்வியின் பொருட்டு) நறுமணம் கமழும் கும்ப கலசங்களும், குடங்களும் பொருந்தி உள்ள, கம்பை ஆற்றங்கரை நகராகிய காஞ்சீபுரத்தின் மீது விருப்பம் வைத்து வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 349 - காஞ்சீபுரம் 
பாடல் 349 - காஞ்சீபுரம் 
ராகம் - .....; தாளம் - .....

தத்த தத்த தாத்த தத்த தத்த தாத்த     தத்த தத்த தாத்த ...... தனதான

முத்து ரத்ந சூத்ர மொத்த சித்ர மார்க்கர்     முற்செ மத்து மூர்க்கர் ...... வெகுபாவர் 
முத்து திர்த்த வார்த்தை யொத்த பத்ர வாட்கண்     முச்சர் மெத்த சூட்சர் ...... நகையாலே 
எத்தர் குத்தி ரார்த்தர் துட்ட முட்ட காக்கர்     இட்ட முற்ற கூட்டர் ...... விலைமாதர் 
எக்கர் துக்கர் வாழ்க்கை யுற்ற சித்த நோய்ப்புண்     இப்ப டிக்கு மார்க்கம் ...... உழல்வேனோ 
தித்தி மித்தி மீத்த னத்த னத்த மூட்டு     சிற்று டுக்கை சேட்டை ...... தவில்பேரி 
திக்கு மக்க ளாக்கை துக்க வெற்பு மீக்கொள்     செக்க டற்கு ளாழ்த்து ...... விடும்வேலா 
கற்பு ரத்தை வீட்டி நட்ட மிட்ட நீற்றர்     கத்தர் பித்தர் கூத்தர் ...... குருநாதா 
கற்கு றிச்சி வாழ்ப்பெ ணொக்க வெற்றி வேற்கொள்     கச்சி நத்தி நாட்கொள் ...... பெருமாளே.

முத்து ரத்தினம் இவைகளால் அலங்கரிக்கப்பட்ட, ஒரு இயந்திரத்தை ஒத்த விசித்திரமான வழியைப் பின்பற்றுபவர்கள். முன் பிறவியிலேயே இழிந்தோர். மிக்க பாவம் செய்தவர்கள். முத்துக்களை உதிர்த்தது போல பேச்சுக்களைப் பேசுபவர்கள். அம்பு, வாள் இவைகளைப் போன்ற கண்களை உடைய அழிந்து போனவர்கள். மிக்க சூழ்ச்சியை உடையவர்கள். சிரிப்பினாலேயே ஏமாற்றுபவர்கள். வஞ்சனைப் பொருளுடன் பேசுபவர்கள். துஷ்டத்தனத்துடன் முழுமையான தப்பு வழியில் நடப்போர். தங்களுக்கு விருப்பமான கூட்டத்தில் சேரும் பொது மகளிர். இறுமாப்பு உடையவர்கள். துக்கத்தைத் தருபவர்கள் ஆகிய இம்மாதர்களின் வாழ்க்கையில் ஆசை வைத்து மன நோய் ஆகிய புண்ணைக் கொண்டு, இப்படிப்பட்ட வழியில் தடுமாற்றம் அடைவேனோ? தித்தி மித்தி மீத் தனத்த நத்தம் என்ற ஒலியை எழுப்பும் சின்ன உடுக்கை, இயக்கப்படும் தவில், முரசு இவைகளைக் கேட்டு எட்டுத் திக்குகளில் இருந்த மக்களின் உடலில் துக்கத்தை மலை போல் மேலிடுவதைக் கண்டு அதற்குக் காரணமாயிருந்த சூரனை சிவந்த (ரத்தக்) கடலுக்குள் ஆழ்த்திய வேலனே, கல் (மலை) போன்ற திரிபுரங்களை அழித்து நடனம் செய்த, திரு நீறு அணிந்த கடவுள், பித்தர், கூத்தப் பெருமான் (நடராஜனாகிய) சிவபெருமானுடைய குரு நாதனே, மலை நில ஊராகிய வள்ளி மலையில் வாழ்ந்த வள்ளியுடன், வெற்றி வேலை ஏந்தி, காஞ்சீபுரத்தை விரும்பி நாள் தோறும் வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 350 - காஞ்சீபுரம் 
ராகம் - ஆபோகி; தாளம் - ஆதி - 2 களை - எடுப்பு 1/4 இடம்

தந்த தாத்தன தன்ன தனந்தன     தத்தத் தத்தத் ...... தனதானா

வம்ப றாச்சில கன்ன மிடுஞ்சம     யத்துக் கத்துத் ...... திரையாளர் 
வன்க லாத்திரள் தன்னை யகன்றும     னத்திற் பற்றற் ...... றருளாலே 
தம்ப ராக்கற நின்னை யுணர்ந்துரு     கிப்பொற் பத்மக் ...... கழல்சேர்வார் 
தங்கு ழாத்தினி லென்னையு மன்பொடு     வைக்கச் சற்றுக் ...... கருதாதோ 
வெம்ப ராக்ரம மின்னயில் கொண்டொரு     வெற்புப் பொட்டுப் ...... படமாசூர் 
வென்ற பார்த்திப பன்னிரு திண்புய     வெட்சிச் சித்ரத் ...... திருமார்பா 
கம்ப ராய்ப்பணி மன்னு புயம்பெறு     கைக்குக் கற்புத் ...... தவறாதே 
கம்பை யாற்றினி லன்னை தவம்புரி     கச்சிச் சொக்கப் ...... பெருமாளே.

வம்பு வார்த்தைகள் நீங்காததும், சில பழைய நூல்களிலிருந்து சொற்களைத் திருடியும், சமயவாதம் செய்து அலைகடல் போல கத்தி ஆரவாரிப்பவரின் வன்மையான கலைக்கூட்டத்தினின்று விலகி, மனத்தில் உள்ள பற்றுக்கள் அனைத்தும் அறப்பெற்று, தம்மைத் தாமே நோக்கியுள்ள அகம்பாவம் அற்றுப்போய், உன்னையே உணர்ந்து உள்ளம் உருகி, அழகிய தாமரை மலரன்ன அடிகளைச் சேர்பவர்களுடைய கூட்டத்தினில் அடியேனையும் அன்போடு கூட்டிவைக்க உன் திருவுள்ளத்தில் சற்று நினைக்கலாகாதோ? வெப்பமான ஆற்றலும், ஒளியும் மிக்க வேலாயுதத்தைக் கொண்டு ஒப்பற்ற கிரெளஞ்சமலை பொடிபடும்படிச் செய்து, மாமரமாய் நின்ற சூரனை வென்ற அரசே, வலிமை மிக்க பன்னிரண்டு தோள்களை உடையவனே, வெட்சிமாலையை அணிந்த அழகிய திருமார்பனே, ஏகாம்பரேஸ்வரராய் விளங்கும் சிவபிரானின் பாம்புகள் நிலைத்துள்ள தோள்களைத் தழுவும் பொருட்டு, கற்பு நிலை தவறாமல், கம்பா நதிக்கரையில் காமாக்ஷி அம்மை தவம் செய்திருந்த* கச்சி என்ற காஞ்சீபுரத்தில் அழகாக வீற்றிருக்கும் பெருமாளே. 
* காஞ்சீபுரத்தில் கம்பா நதிக்கரையில் காமாக்ஷி தேவி சிவபிரானின் இடது பாகத்தைப் பெறுவதற்காக கடுந்தவம் செய்தாள். தேவியின் திறத்தை உலகுக்குத் தெரிவிக்க எண்ணி சிவனார் கம்பா நதியில் பெரு வெள்ளத்தை ஏற்படுத்தினார். லிங்கம் வெள்ளத்தில் கரையுமே எனக்கருதி தேவி லிங்கத்தைத் தழுவ, லிங்கத்தில் தேவியின் வளைத் தழும்பும், மார்த் தழும்பும் தோன்றின. ஈசன் தேவிக்குத் தன் இடப்பாகத்தை ஈந்தான் - கச்சி புராணம்.

by Swathi   on 28 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.