LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- அருணகிரிநாதர் நூல்கள்

திருப்புகழ்-பாடல்-[401 -450]

பாடல் 401 - திருவருணை 
ராகம் - பூர்விகல்யாணி; தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2 
தகதிமி-2, தகிட-1 1/2
தனதன தந்த தனதன தந்த
     தனதன தந்த ...... தனதான
இருவினை யஞ்ச மலவகை மங்க
     இருள்பிணி மங்க ...... மயிலேறி 
இனவரு ளன்பு மொழியக டம்பு
     வினதக முங்கொ ...... டளிபாடக் 
கரிமுக னெம்பி முருகனெ னண்டர்
     களிமலர் சிந்த ...... அடியேன்முன் 
கருணைபொ ழிந்து முகமும லர்ந்து
     கடுகிந டங்கொ ...... டருள்வாயே 
திரிபுர மங்க மதனுடல் மங்க
     திகழ்நகை கொண்ட ...... விடையேறிச் 
சிவம்வெளி யங்க ணருள்குடி கொண்டு
     திகழந டஞ்செய் ...... தெமையீண 
அரசியி டங்கொள் மழுவுடை யெந்தை
     அமலன்ம கிழ்ந்த ...... குருநாதா 
அருணைவி லங்கல் மகிழ்குற மங்கை
     அமளிந லங்கொள் ...... பெருமாளே.
நல்வினை, தீவினை இரண்டுமே அஞ்சி ஒழிய, மலக் கூட்டங்கள் (மாசுகள்) மங்கி அழிய, அஞ்ஞானமும், நோய்களும் அகல, நீ மயில் வாகனத்தில் ஏறிவந்து, அருள் வாக்குகளும், அன்பான மொழிகளும் கூற, உன் கடப்பமலரின் உயிர்தரு மருந்தாம் தேனைச்சுற்றி வண்டுகள் ¡£ங்காரம் செய்து முரல, யானைமுகன் கணபதி என் தம்பியே, முருகா என்றழைக்க, தேவர்கள் மகிழ்ந்து மலர் மாரி பொழிய, என் முன்னே கருணை மிகக் காட்டி மலர்ந்த முகத்தோடு வேகமாக நடனம் செய்தவாறு வந்து அருள் புரியவேண்டும். திரிபுரம் அழியவும், மன்மதனின் உடல் எரியவும், விளங்கும் புன்சிரிப்பைச் சிரித்தே எரித்த ரிஷப வாகனம் ஏறும் சிவபெருமான் பரவெளியில் திருவருளோடு வீற்றிருந்து, விளங்க நடனம் செய்து, எம்மைப் பெற்ற தேவியை இடது பாகத்தில் ஏற்றுக்கொண்டு, மழு ஆயுதத்தை ஏந்திய எம் தந்தை மாசற்றவன் மகிழ்ச்சியடைந்த குருநாதனே, திருஅண்ணாமலைக் குன்றிலே மகிழும் குறமங்கையின் மலர்ப்படுக்கையிலே மனமகிழும் பெருமாளே. 
பாடல் 402 - திருவருணை 
ராகம் - ....; தாளம் -
தனதன தாந்த தந்த தனதன தாந்த தந்த
     தனதன தாந்த தந்த ...... தனதான
இருவினை யூண்ப சும்பை கருவிளை கூன்கு டம்பை
     யிடரடை பாழ்ம்பொ தும்ப ...... கிதவாரி 
இடைதிரி சோங்கு கந்த மதுவது தேங்கு கும்ப
     மிரவிடை தூங்கு கின்ற ...... பிணநோவுக் 
குருவியல் பாண்ட மஞ்சு மருவிய கூண்டு நெஞ்சொ
     டுயிர்குடி போங்கு ரம்பை ...... யழியாதென் 
றுலகுட னேன்று கொண்ட கருமபி ராந்தொ ழிந்து
     னுபயப தாம்பு யங்க ...... ளடைவேனோ 
அருணையி லோங்கு துங்க சிகரக ராம்பு யங்க
     ளமரர் குழாங்கு விந்து ...... தொழவாழும் 
அடியவர் பாங்க பண்டு புகலகி லாண்ட முண்ட
     அபிநவ சார்ங்க கண்டன் ...... மருகோனே 
கருணைம்ரு கேந்த்ர அன்ப ருடனுர கேந்த்ரர் கண்ட
     கடவுள்ந டேந்த்ரர் மைந்த ...... வரைசாடுங் 
கலபக கேந்த்ர தந்த்ர அரசநி சேந்த்ர கந்த
     கரகுலி சேந்த்ரர் தங்கள் ...... பெருமாளே.
இரண்டு வினைகளுக்கும் உணவிடமான புத்தம் புது தோல் பை, கரு வளருவதற்கு இடமான பாத்திரம் ஆகிய உடம்பு, துன்பங்களையே அடைத்து வைத்துள்ள, பாழடையப் போவதான குகை, துன்பமும் தீமையும் கொண்ட கடலின் நடுவில் திரிகின்ற மரக்கலம், மலச்சேறும் மூத்திர நீரும் நிரம்பிய இடம், இரவிலே தூங்குகின்ற பிணம் போன்ற, நோயினுக்கு உருவாய் அமைந்த பாத்திரம், ஐம்பூதங்களும் பொருந்தி உள்ள கூடு, என் மனத்துடன் உயிரும் (உடலை விட்டு) வெளியேறும் சிறு குடில் - ஆகிய இந்த உடம்பு அழியாமல் நிலைத்து நிற்கும் என்று, உலகத்தாரிடம் நான் கொண்டுள்ள, வினைப் பயனால் வரும், மயக்கம் நீங்கப் பெற்று, உனது இரண்டு தாமரைத் திருவடிகளை அடையும் பாக்கியத்தைப் பெறுவேனோ? திரு அண்ணாமலையில் உயர்ந்து ஓங்கிய பரிசுத்தமான கோபுர வாயிலில், தாமரை போன்ற கைகளைக் கூப்பி தேவர்கள் தொழ வாழ்கின்ற அடியார்களின் தோழனே, முன் ஒரு காலத்தில் சொல்லப்படுகின்ற எல்லா உலகங்களையும் உண்ட, புதுமை வாய்ந்த சாரங்கம் என்னும் வில்லை ஏந்திய வீரனாகிய திருமாலின் மருகோனே, கருணை நிறைந்த புலிக்கால் கொண்ட வியாக்ரபாதருடன், சர்ப்ப சிரேஷ்டரான பதஞ்சலி முநிவரும் தரிசித்த நடராஜரின்* மகனே, மலைகளைத் தூளாக்கும் தோகை உடைய மயில் வாகனனே, இலக்கிய நூல்களில் வல்லவனே, அரசனே, சத்திய சிரேஷ்டனாகிய கந்தனே, வஜ்ராயுதத்தைக் கையில் கொண்ட தேவேந்திரர்களுக்குப் பெருமாளே. 
* தில்லையில் நடராஜப் பெருமானது ஆடல் வியாக்ரபாதர், பதஞ்சலி என்ற இருவர் காணும் பொருட்டே ஆடப்பட்டது.
பாடல் 403 - திருவருணை 
ராகம் - .....; தாளம் -
தனதனன தனதனன தான தத்த தந்த
     தனதனன தனதனன தான தத்த தந்த
          தனதனன தனதனன தான தத்த தந்த ...... தனதான
இருளளக மவிழமதி போத முத்த ரும்ப
     இலகுகயல் புரளஇரு பார பொற்ற னங்கள்
          இளகஇடை துவளவளை பூச லிட்டி ரங்க ...... எவராலும் 
எழுதரிய கலைநெகிழ ஆசை மெத்த வுந்தி
     யினியசுழி மடுவினிடை மூழ்கி நட்பொ டந்த
          இதழமுது பருகியுயிர் தேக மொத்தி ருந்து ...... முனிவாறி 
முருகுகமழ் மலரமளி மீதி னிற்பு குந்து
     முகவனச மலர்குவிய மோக முற்ற ழிந்து
          மொழிபதற வசமழிய ஆசை யிற்க விழ்ந்து ...... விடுபோதும் 
முழுதுணர வுடையமுது மாத வத்து யர்ந்த
     பழுதில்மறை பயிலுவஎ னாத ரித்து நின்று
          முநிவர்சுரர் தொழுதுருகு பாத பத்ம மென்று ...... மறவேனே 
ஒருசிறுவன் மணமதுசெய் போதி லெய்த்து வந்து
     கிழவடிவு கொடுமுடுகி வாச லிற்பு குந்து
          உலகறிய இவனடிமை யாமெ னக்கொ ணர்ந்து ...... சபையூடே 
ஒருபழைய சருகுமடி ஆவ ணத்தை யன்று
     உரமொடவ னதுவலிய வேகி ழிக்க நின்று
          உதறிமுறை யிடுபழைய வேத வித்தர் தந்த ...... சிறியோனே 
அரியவுடு பதிகடவி யாட கச்சி லம்பொ
     டழகுவட மணிமுடிவி யாள மிட்ட ழுந்த
          அமரரொடு பலர்முடுகி ஆழி யைக்க டைந்து ...... அமுதாக 
அருளுமரி திருமருக வார ணத்தை யன்று
     அறிவினுட னொருகொடியி லேத ரித்து கந்த
          அருணகிரி நகரிலெழு கோபு ரத்த மர்ந்த ...... பெருமாளே.
கரிய கூந்தல் அவிழ, சந்திரனைப் போன்ற முகத்தில் உண்டான முத்துப் போன்ற வேர்வை வெளித்தோன்ற, விளங்கும் கயல் மீன் போன்ற கண்கள் புரள, இரண்டு கனத்த அழகிய மார்பகங்கள் நெகிழ்ச்சியுற, இடுப்பு துவள, கை வளையல்கள் ஒன்றோடொன்று மோதி ஒலிக்க, யாராலும் எழுதுதற்கு முடியாததான அழகிய ஆடை தளர்ச்சி உற, ஆசை அதிகரிக்க, தொப்புளாகிய இனிமை தரும் சுழி போன்ற மடுவில் (நீர் நிலையில்) முழுகி, நட்பு பூண்டு, அந்த வாயிதழ்களின் அமுதத்தை உண்டு, உயிரும் உடலும் ஒன்று போல ஒத்திருந்து, கோபம் வெறுப்பு எல்லாம் தணிந்து, நறு மணம் வீசுகின்ற மலர்ப் படுக்கையின் மீது படுத்து, முகமாகிய தாமரை கூம்ப, காம ஆசை கொண்டு அதில் அழிந்து, பேச்சு தடுமாற, தன் வசம் கெட்டழிய, அந்த ஆசையில் கவிழ்ந்து முழுகி விட்ட சமயத்திலும் கூட, எல்லாம் உணரும்படியான முற்றிய சிறந்த தவ நிலையில் உயர்ந்ததும் குற்றம் இல்லாததுமான வேதத்தில் நெருங்கி விளங்குபவன் என்று விரும்பிப் போற்றி செய்து நின்று முனிவர்களும் தேவர்களும் வணங்கி உருகும் உனது தாமரைத் திருவடிகளை என்றும் மறக்க மாட்டேன். ஒப்பற்ற சிறுவனான நம்பியூரன் என்னும் சுந்தர மூர்த்திக்குத் திருமணச் சடங்கு செய்யப்படும் சமயத்தில், களைத்து வந்து ஒரு கிழ உருவம் கொண்டு வேகமாக முன் வந்து, (மண) வாசலில் புகுந்து உலகோர் யாவரும் அறியும்படி இந்தச் சிறுவன் (எனக்கு) அடிமையாம் என்று (ஒரு ஓலையைக்) கொண்டு வந்துசபையோர்களின் மத்தியில் அறிவிக்க, ஒரு பழைய ஓலையில் எழுதப்பட்டு மடிந்து வைத்திருந்த பத்திரம் ஒன்றை வலிமையுடன் அந்தச் சிறுவன் வேணுமென்றே பற்றிக் கிழித்தெறிய, (அப்போது கை கால்களை) உதறிக் கொண்டு இது முறையோ என்று கூச்சலிட்ட பழையவரும், வேதத்தை நன்கறிந்த முதல்வருமான சிவபெருமான் பெற்றருளிய குழந்தையே, அருமையான சந்திரனை தூணாக இருக்கும்படிச் செலுத்தி வைத்து, பொன் மலையாகிய மேரு மலையை மத்தாக வைத்து, ரத்தின முடிகளை உடைய பாம்பாகிய வாசுகியை கயிறாகப் பூட்டி, அழுத்தமாக தேவர்களோடு பலரும் விரைவுடன் பாற்கடலைக் கடைந்து (இறுதியில்) அமுது வரச் செய்து, அதனை (தேவர்களுக்குப்) பகிர்ந்து அளித்த திருமாலின் மருகனே, சேவலை அன்று முன் யோசனையுடன் ஒரு கொடியில்* நிறுத்தி மகிழ்ந்து, திரு அண்ணாமலையில் கோபுர வாயிலில் எழுந்தருளியிருக்கும் பெருமாளே. 
* சூரனுடைய உடல் வேலால் பிளவுபட, ஒரு கூறு மயிலாகவும், மற்றொரு கூறு சேவலாகவும் முருக வேளை எதிர்த்து வர, அவர் அருள் கண்ணால், மயில் வாகனமாகவும், சேவல் கொடியாகவும் ஆயின.
பாடல் 404 - திருவருணை 
ராகம் - ....; தாளம் -
தனன தனதன தனன தனதன
     தனன தனதன ...... தனதான
இறுகு மணிமுலை மருவு தரளமு
     மெரியு முமிழ்மதி ...... நிலவாலே 
இரவி யெனதுயிர் கவர வருகுழ
     லிசையி லுறுகட ...... லலையாலே 
தறுகண் ரதிபதி மதனன் விடுகொடு
     சரமி லெளியெனு ...... மழியாதே 
தருண மணிபொழி லருணை நகருறை
     சயில மிசையினில் ...... வரவேணும் 
முறுகு திரிபுர மறுகு கனலெழ
     முறுவ லுடையவர் ...... குருநாதா 
முடிய கொடுமுடி யசுரர் பொடிபட
     முடுகு மரகத ...... மயில்வீரா 
குறவர் மடமக ளமுத கனதன
     குவடு படுமொரு ...... திருமார்பா 
கொடிய சுடரிலை தனையு மெழுகடல்
     குறுக விடவல ...... பெருமாளே.
நெருங்கி அழுத்தமாயுள்ள அழகிய மார்பின் மீதுள்ள முத்து மாலை கூட தீயை உமிழும்படி காய்கின்ற சந்திரனுடைய நிலா ஒளியாலும், என்னை வருத்தி அறுத்து எனது உயிரை அபகரிக்க எழுகின்ற புல்லாங்குழலின் இசையாலும், ஒலிக்கும் கடலின் அலையாலும், கொடியவனும், ரதியின் கணவனும் ஆகிய மன்மதன் செலுத்திய கொடிய பாணத்தாலும், எளியவளாகிய நான் அழிந்து போகாமல், தக்க சமயத்தில், அழகிய சோலைகளை உடைய திரு அண்ணாமலை நகரிலுள்ள மலை மீது வந்தருள வேண்டும். கடுமை வாய்ந்த திரிபுரங்களின் தெருக்களில் நெருப்பு எழும்படி புன் சிரிப்புச் சிரித்த சிவபெருமானுக்கு குரு நாதனே, எல்லா மலை உச்சிகளிலும் வாசம் செய்த அசுரர்கள் பொடிபட்டு அழியும்படி செலுத்திய பச்சை நிறம் கொண்ட மயில் வீரனே, வேடர்களின் கபடமற்ற மகளாகிய வள்ளியின் அமுதம் பொதிந்த மார்பகங்களாகிய மலைகள் தாக்கும் ஒப்பற்ற அழகிய மார்பனே, உக்கிரமான, ஒளி வாய்ந்த இலை ஒத்த வேலை ஏழு கடல்களும் வற்றும்படிச் செலுத்த வல்ல பெருமாளே. 
இப்பாடல் அகப் பொருள் துறையைச் சார்ந்தது. 'நாயக நாயகி' பாவத்தில் புலவர் தம்மையே நாயகியாக எண்ணிப் பாடியது.நிலவு, குழல் இசை, கடல் ஒலி, மன்மதன், அவனது பாணம் ஆகியவை விரக நோயை வளர்ப்பவை.
பாடல் 405 - திருவருணை 
ராகம் - ...; தாளம் -
தனதனன தத்த தனதனன தத்த
     தனதனன தத்த ...... தனதான
உலையிலன லொத்த வுடலினனல் பற்றி
     யுடுபதியை முட்டி ...... யமுதூற 
லுருகிவர விட்ட பரமசுக முற்று
     வுனதடியை நத்தி ...... நினையாமற் 
சிலைநுதலி லிட்ட திலதமவிர் பொட்டு
     திகழ்முகவர் முத்து ...... நகையாலே 
சிலுகுவலை யிட்ட மயல்கவலை பட்டுத்
     திருடனென வெட்கி ...... யலைவேனோ 
கலைகனக வட்ட திமிலைபறை கொட்ட
     கனகமயில் விட்ட ...... கதிர்வேலா 
கருதலரின் முட்டிக் கருகிவரு துட்ட
     கதவமண ருற்ற ...... குலகாலா 
அலைகடலு டுத்த தலமதனில் வெற்றி
     அருணைவளர் வெற்பி ...... லுறைவோனே 
அசுரர்களை வெட்டி யமரர்சிறை விட்டு
     அரசுநிலை யிட்ட ...... பெருமாளே.
கொல்லனது உலைக்களத்தில் உள்ள நெருப்புப் போல் உடலில் சிவாக்கினி பற்றி மேல் எழுந்து, சந்திர மண்டலத்தை முட்டி அங்கு அமுத ஊறல் ஊறி உருகி வர விடுகின்ற பரம சுகத்தை அடைந்து, உனது திருவடியை விரும்பி நினைக்காமல், வில்லைப் போன்ற நெற்றியில் இட்ட சிறந்த பொட்டு விளங்கும் முகத்தை உடைய மாதர்களின் முத்துப் போன்ற பல் அழகாலே துன்ப வலையில் அகப்பட்டு காமப் பித்தால் கவலை அடைந்து, திருடனைப் போல் வெட்கப்பட்டு அலைவேனோ? முறைப்படி வாசிக்கப்படுவதும், பொன் போல விளங்குவதும் ஆகிய திமிலை என்ற ஒருவகைத் தோல் கருவி பறை போல முழங்க, பொன்மயிலைச் செலுத்திய, ஒளி வீசும் வேலனே, பகைவர்கள் போல எதிர்த்துத் தாக்கி, நிறம் கறுத்து வந்த, கோபம் மிக்க சமணருடைய குலத்தை (திருஞானசம்பந்தராக வந்து) அழித்தவனே, அலை வீசும் கடலை ஆடையாகத் தரித்த பூமியில், (அரி, அயன் இருவருக்கும் அரியவராய் ஒளிப் பிழம்பாக சிவபெருமான் நின்று) வெற்றி கண்ட தலமாகிய திருவண்ணாமலையில் வீற்றிருப்பவனே, அசுரர்களை வெட்டி அழித்து தேவர்களைச் சிறையினின்று விடுவித்து, பொன்னுலக ஆட்சியை நிலை பெறச் செய்த பெருமாளே. 
பாடல் 406 - திருவருணை 
ராகம் - ஆரபி ; தாளம் - அங்கதாளம் - 10 
தகதிமிதக-3, தகிடதகதிமி-3 1/2, தகிடதகதிமி-3 1/2
தனதனன தனந்த தானன ...... தந்ததான
     தனதனன தனந்த தானன ...... தந்ததான
கடல்பரவு தரங்க மீதெழு ...... திங்களாலே
     கருதிமிக மடந்தை மார்சொல்வ ...... தந்தியாலே 
வடவனலை முனிந்து வீசிய ...... தென்றலாலே
     வயலருணையில் வஞ்சி போதந ...... லங்கலாமோ 
இடமுமையை மணந்த நாதரி ...... றைஞ்சும்வீரா
     எழுகிரிகள் பிளந்து வீழஎ ...... றிந்தவேலா 
அடலசுரர் கலங்கி யோடமு ...... னிந்தகோவே
     அரிபிரம புரந்த ராதியர் ...... தம்பிரானே.
கடலில் பரவிவரும் அலைகளின் மீது தோன்றி எழும் நிலாவாலும், நினைத்து நினைத்துப் பெண்கள் தமக்குள் பேசும் வதந்தியாலும், வடவாக்கினியைக் கோபித்து சூடாக வீசும் தென்றல் காற்றாலும், வயல் சூழ்ந்த இந்தத் திருவண்ணாமலையில் உள்ள வஞ்சிக் கொடி போன்ற பெண் (உன்னைப் பிரிந்ததால்) அறிவு மயங்கி, கலங்கி வருந்தலாமோ? இடது பாகத்தில் உமாதேவியைச் சேர்த்துள்ள சிவபிரான் வணங்கும் வீரனே, ஏழு மலைகளும் பிளந்து விழும்படியாக செலுத்திய வேலாயுதனே, வலிமை வாய்ந்த அசுரர்கள் கலங்கி ஓடக் கோபித்த தலைவனே, திருமால், பிரம்மா, இந்திராதி தேவர்கள் தம்பிரானே. 
இப்பாட்டு அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவிக்காக பாடியது.கடல், சந்திரன், மன்மதன், மலர்க் கணைகள், பெண்களின் வதந்திப் பேச்சு - இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.
பாடல் 407 - திருவருணை 
ராகம் - ....; தாளம் -
தனதனனத் தனதனனத் தனதனனத் தனதனனத்
     தனதனனத் தனதனனத் ...... தனதான
கமலமுகப் பிறைநுதல்பொற் சிலையெனவச் சிரகணைநற்
     கயலெனபொற் சுழலும்விழிக் ...... குழல்கார்போல் 
கதிர்தரளொப் பியதசனக் கமுகுகளப் புயகழைபொற்
     கரகமலத் துகிர்விரலிற் ...... கிளிசேருங் 
குமரிதனத் திதலைமலைக் கிசலியிணைக் கலசமெனக்
     குவிமுலைசற் றசையமணிக் ...... கலனாடக் 
கொடியிடைபட் டுடைநடைபொற் சரணமயிற் கெமனமெனக்
     குனகிபொருட் பறிபவருக் ...... குறவாமோ 
திமிலையுடுக் குடன்முரசுப் பறைதிமிதித் திமிதிமெனட்
     டிமிடிமிடிட் டிகுர்திமிதித் ...... தொலிதாளம் 
செககணசெக் கணகதறத் திடுதிடெனக் கொடுமுடியெட்
     டிகைசிலைபட் டுவரிபடச் ...... சிலைகோடித் 
துமிலவுடற் றசுரர்முடிப் பொடிபடரத் தமுள்பெருகத்
     தொகுதசைதொட் டலகையுணத் ...... தொடும்வேலா 
துவனிதினைப் புனமருவிக் குறமகளைக் களவுமயற்
     சுகமொடணைத் தருணகிரிப் ...... பெருமாளே.
தாமரை போன்ற முகமும், பிறைச் சந்திரனையும் அழகிய வில்லையும் போன்ற நெற்றியும் புருவமும், மிகவும் உறுதியான அம்பையும் நல்ல மீனைப் போன்றதும் ஆகிய அழகிய சுழலும் கண்களும், மேகம் போன்ற கூந்தலும், ஒளி பொருந்திய முத்தை ஒக்கும் பற்களும், கமுகின் கிளையை ஒத்த கழுத்தும், மூங்கிலை ஒத்த மென்மையான புயங்களும், தாமரையை ஒக்கும் கையில் கிளியின் (மூக்கை) ஒக்கும் விரலின் சிவந்த நகங்களும், பருவப் பெண்ணின் தேமல் படர்ந்த மார்பகம் மலையுடன் போட்டியிட்டு, இரண்டு குடங்கள் போல விளங்க, குவிந்துள்ள அந்த மார்பகம் சிறிது அசையவும், ரத்தின ஆபரணங்கள் ஆடவும், கொடி போன்ற இடையில் பட்டாடையுடன், அழகிய பாதங்களின் நடை மயில் செல்வது போல விளங்க, கொஞ்சிப் பேசிப் பொருளை அபகரிக்கும் பொது மகளிர்களின் கூட்டுறவு எனக்கு ஆகுமோ? திமிலை, உடுக்கை முதலிய பறை வகைகள் திமிதித் திமிதிம் என்றும் டிமி டிமி டிட் டிகுர் திமிதித் என்றும் பல விதமான தாளங்களில் ஒலிகளைச் செய்யவும், செககண செக்கண என்ற பெரும் ஒலியை எழுப்பவும், திடுதிடு என்று சிகரங்களை உடைய மலைகள் எட்டுத் திசைகளிலும் அழிபடவும், கடல் கலங்கவும், வில்லை வளைத்து, பெரிய ஆரவரத்துடன் போர் புரிந்த அசுரர்களின் தலைகள் பொடிபட, ரத்தம் போர்க்களத்தில் உள்ள இடம் எல்லாம் பெருக, விழுந்து கூடியுள்ள மாமிசங்களைக் கொத்தி பேய்கள் உண்ணும்படி வேலாயுதத்தைச் செலுத்திய வீரனே, (பட்சி வகைகளின்) ஒலி நிறைந்த தினைப் புனத்துக்குச் சென்று, குற மகள் வள்ளியை களவு வழியில் மோக இன்பத்துடன் தழுவியனே, திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 408 - திருவருணை 
ராகம் - .....; தாளம் -
தனன தத்தத் தத்த தத்தத் தனதன
     தனன தத்தத் தத்த தத்தத் தனதன
          தனன தத்தத் தத்த தத்தத் தனதன ...... தனதான
கமல மொட்டைக் கட்ட ழித்துக் குமிழியை
     நிலைகு லைத்துப் பொற்கு டத்தைத் தமனிய
          கலச வர்க்கத் தைத்த கர்த்துக் குலையற ...... இளநீரைக் 
கறுவி வட்டைப் பிற்று ரத்திப் பொருதப
     சயம்வி ளைத்துச் செப்ப டித்துக் குலவிய
          கரிம ருப்பைப் புக்கொ டித்துத் திறல்மத ...... னபிஷேகம் 
அமலர் நெற்றிக் கட்ட ழற்குட் பொடிசெய்து
     அதிக சக்ரப் புட்ப றக்கக் கொடுமையி
          னடல்ப டைத்தச் சப்ப டுத்திச் சபதமொ ...... டிருதாளம் 
அறைதல் கற்பித் துப்பொ ருப்பைப் பரவிய
     சிறக றுப்பித் துக்க திர்த்துப் புடைபடு
          மபிந வச்சித் ரத்த னத்துத் திருடிக ...... ளுறவாமோ 
தமர மிக்குத் திக்க திர்க்கப் பலபறை
     தொகுதொ குக்குத் தொத்தொ குக்குத் தொகுதொகு
          தரிகி டத்தத் தத்த ரிக்கத் தரிகிட ...... எனவோதிச் 
சவடு றப்பக் கப்ப ழொத்திப் புகையெழ
     விழிக ளுட்செக் கச்சி வத்துக் குறளிகள்
          தசைகள் பட்சித் துக்க ளித்துக் கழுதொடு ...... கழுகாட 
அமலை யுற்றுக் கொக்க ரித்துப் படுகள
     அசுர ரத்தத் திற்கு ளித்துத் திமியென
          அடிந டித்திட் டிட்டி டித்துப் பொருதிடு ...... மயிலோனே 
அழகு மிக்கச் சித்ர பச்சைப் புரவியி
     னுலவு மெய்ப்ரத் யக்ஷ நற்சற் குருபர
          அருணை யிற்சித் தித்தெ னக்குத் தெளிவருள் ...... பெருமாளே.
தாமரையின் மொட்டை அழகை இழக்கச் செய்து, நீர்க் குமிழியை நிலை குலைந்து உருவு இழக்கச் செய்து, தங்கக் குடத்தையும் பொன்னாலாகிய கலசக் கூட்டங்களையும் நொறுங்கச் செய்து, குலை குலையாயிருக்கும் அழகு ஒழியும்படி இளநீரைக் கோபித்து, சூதாடும் சொக்கட்டான் காய்களைப் பின்னாலே துரத்தி சண்டை செய்து தோல்வி உறச் செய்து, சிமிழை வேலைப்பாடு செய்பவர்கள் அடித்து உருவாக்கி, விளங்கிய யானையின் தந்தத்தைப் போய் ஒடித்து, சக்தி வாய்ந்த மன்மதனுடைய மகுடத்தை சிவபெருமானுடைய நெற்றிக் கண்ணின் நெருப்பில் பொடி செய்து, அதிக தூரத்தில் உள்ள சக்ரவாகப் பறவை பறந்து போகும்படி செய்து, கடுமையான வலிமை கொண்ட அதனைப் பயப்படும்படி செய்து, சப்தத்துடனே இரண்டு தாளங்கள் அறைந்து மோதிக்கொள்ளும்படிச் செய்து, மலைகளின் பரந்த இறகுகளை அறும்படிச் செய்து, வளர்ச்சி உற்ற பக்கத்து இடமெல்லாம் பரவி புதுமையும் அழகு உள்ளதுமான தனங்களை உடைய வஞ்சனை உடைய விலைமாதர்களின் உறவு நல்லதாகுமா? ஒலி மிகுத்த திசைகள் அதிரும்படி பல வகையான பறைகள் தொகுதொகுக் குத்தொத் தொகுக்குத் தொகுதொகு தரிகிடத் தத்தத் தரிக்கத் தரிகிட என்று ஒலி செய்ய, பக்கத்து விலா எலும்புகள் நெரிய முடக்கிய கைகளை தாக்கிக் கூத்தாடி, புகை எழும்படி கண்கள் உள்ளே மிகச் சிவந்து மாய வித்தைச் செய்யும் பேய் வகைகள் மாமிசத்தை உண்டு மகிழ்ச்சி அடைய, பேய்களும் கழுகுகளும் ஆட, ஆரவாரம் செய்து கொக்கரித்தும் போர்க் களத்தில் அசுரர்களின் ரத்தங்களில் குளித்தும் திமி என்ற ஒலியுடன் பாதங்களை வைத்து நடனம் செய்து இடித்துத் தகர்த்தும் சண்டையிடும் மயில் மீது அமர்ந்தவனே, மிக அழகு உடைய அலங்காரமான பச்சை நிறமான மயிலின் மீது உலவுகின்ற, சத்தியம் வெளிப்படையாக விளங்கும் நல்ல சற் குருநாதனே, திருவண்ணா மலையில் நான் நற் கதி கூடி அனுகூலம் அடையும்படி எனக்கு ஞானத்தை அருளிய பெருமாளே. 
இது தனங்களின் அழகை விவரிக்கும் பாடல். கமல மொட்டு, நீர்க்குமிழி, பொன் குடம், பொன் கலசம், இள நீர், வட்டு, செப்பு, யானைத் தந்தம், மன்மதன் மகுடம், சக்ரவாகப் பறவை, தாளம், மலை இவைகளை மார்பகங்கள் வெல்கின்றன என்பதை முதல் 12 அடிகள் விளக்குகின்றன.
பாடல் 409 - திருவருணை 
ராகம் - மத்யமாவதி ; தாளம் - கண்டசாபு - 2 1/2
தனதனத் தனதனத் தனதனத் தனதனத்
     தனதனத் தனதனத் ...... தனதான
கரிமுகக் கடகளிற் றதிககற் பகமதக்
     கஜமுகத் தவுணனைக் ...... கடியானை 
கடலையெட் பயறுநற் கதலியிற் கனிபலக்
     கனிவயிற் றினிலடக் ...... கியவேழம் 
அரிமுகத் தினனெதிர்த் திடுகளத் தினின்மிகுத்
     தமர்புரிக் கணபதிக் ...... கிளையோனே 
அயிலெடுத் தசுரர்வெற் பலைவுறப் பொருதுவெற்
     றியைமிகுத் தறுமுகக் ...... குமரேசா 
நரிமிகுக் கிளைகளைப் பரியெனக் கடிவளக்
     கையில்பிடித் தெதிர்நடத் ...... திடுமீசன் 
நடனமிப் படியிடத் தினுமிசைத் தரையினிற்
     கரியுரித் தணிபவற் ...... கொருசேயே 
துரிபெறச் சரிபொழிற் கனவயற் கழகுளத்
     துரியமெய்த் தரளமொய்த் ...... திடவீறிச் 
சுரர்துதித் திடமிகுத் தியல்தழைத் தருணையிற்
     சுடரயிற் சரவணப் ...... பெருமாளே.
யானை முகத்தையும் மதத்தையும் கொண்ட களிறு, சிறந்த கற்பக விநாயகர், மதங்கொண்ட யானைமுகத்து கஜமுகாசுரனை அடக்கிய யானை, கடலை, எள், பயறு, நல்ல கதலி வாழைப்பழம், பலாப் பழம் முதலியவற்றை வயிற்றினில் அடக்கிய யானை, அழகிய முகத்தை உடையவன், எதிர்த்துச் சண்டைசெய்யும் போர்க்களத்தில் பெரிய போரைச் செய்யும் கணபதிக்குத் தம்பியே, வேலை எடுத்து, அசுரர்களின் கிரெளஞ்ச மலையை அலைக்கழித்துச் சண்டை செய்து, மிக்க ஜயம் கொண்ட ஆறுமுகத்துக் குமரேசனே, நரியின் பெரிய கூட்டங்களை கடிவாளத்தைக் கையிலே பிடித்து பாண்டியனின் எதிரே நடத்திய சொக்கேசர் (சிவபிரான்) தமது திருவிளையாடலை இந்தப் பூமியிலே நடத்தியவர், புகழ் பெற்ற இவ்வுலகில் யானையை உரித்து, அதன் தோலை அணிந்தவரின் ஒப்பற்ற பிள்ளையே, காய்கனிகளின் சுமையால் சரிந்த மரங்கள் உள்ள சோலைகளிலும், பெருமை வாய்ந்த வயல்களிலும், அழகுள்ள தூய்மையான உருவைக்கொண்ட முத்துக்கள் நெருங்கிக் கிடக்க, மிக்கெழுந்து தேவர்கள் துதிசெய்ய, பிரபலமாக இருக்கும் தலமாம் திருவண்ணாமலையில் ஒளிவீசும் வேலுடன் விளங்கும் சரவணப் பெருமாளே. 
பாடல் 410 - திருவருணை 
ராகம் - ....; தாளம் -
தனன தந்தனம் தனதன தனதன
     தனன தந்தனம் தனதன தனதன
          தனன தந்தனம் தனதன தனதன ...... தனதான
கருநி றஞ்சிறந் தகல்வன புகல்வன
     மதன தந்திரங் கடியன கொடியன
          கனக குண்டலம் பொருவன வருவன ...... பரிதாவும் 
கடலு டன்படர்ந் தடர்வன தொடர்வன
     விளையு நஞ்சளைந் தொளிர்வன பிளிர்வன
          கணையை நின்றுநின் றெதிர்வன முதிர்வன ...... இளையோர்முன் 
செருவை முண்டகஞ் சிறுவன வுறுவன
     களவு வஞ்சகஞ் சுழல்வன வுழல்வன
          தெனன தெந்தனந் தெனதென தெனதென ...... எனநாதம் 
தெரிசு ரும்பைவென் றிடுவன அடுவன
     மருள்செய் கண்கள்கொண் டணைவர்த முயிரது
          திருகு கின்றமங் கையர்வச மழிதலை ...... யொழிவேனோ 
மருவு தண்டைகிண் கிணிபரி புரமிவை
     கலக லன்கலின் கலினென இருசரண்
          மலர்கள் நொந்துநொந் தடியிட வடிவமு ...... மிகவேறாய் 
வலிய சிங்கமுங் கரடியு முழுவையு
     முறைசெ ழும்புனந் தினைவிளை யிதண்மிசை
          மறவர் தங்கள்பெண் கொடிதனை யொருதிரு ...... வுளநாடி 
அருகு சென்றடைந் தவள்சிறு பதயுக
     சதத ளம்பணிந் ததிவித கலவியு
          ளறம ருண்டுநெஞ் சவளுடன் மகிழ்வுட ...... னணைவோனே 
அமரர் சங்கமுங் குடிபுக நொடியினில்
     நிருதர் சங்கமும் பொடிபட அமர்செய்து
          அருணை வந்துதென் திசைதனி லுறைதரு ...... பெருமாளே.
கரிய நிறத்தைக் கொண்டவனவாய், அகன்று உள்ளனவாய், பேசுவது போலப் பொலிவு உள்ளனவாய், காம நூல்ளில் கூறப்பட்ட கடுமையும் கொடுமையும் உடையனவாய், காதில் உள்ள பொன் குண்டலத்தோடு போரிட வருவது போலவனவாய், வடவா முகாக்கினி படர்ந்துள்ள கடல் போலப் பரந்து அடர்ந்து தொடர்வனவாய், அக்கடலில் தோன்றும் விஷம் கலந்து பிரகாசித்துக் கொப்புளிப்பனவாய், அம்பை நின்று நின்று எதிர்ப்பனவாய், முற்றின தொழிலை உடையனவாய், இளைஞர்கள் முன்னிலையில் போரிடும் எண்ணத்தை மேற்கொண்டு தமக்குள்ளே கோபிப்பனவாய், களவும் வஞ்சக எண்ணமும் கொண்டு சுழன்று திரிகின்றனவாய், தெனன தெந்தனந் தெனதென தெனதென என்ற ஒலியை எழுப்பும் வண்டை வெல்வனவாய், அதையும் தன் உறு ஒளியால் அடக்குவனவாய், மருட்சியை ஊட்டும் கண்களைக் கொண்டு தம்மை அணைபவர்களின் உயிரைத் திருகிப் பறிக்கின்ற விலைமாதர்களின் வசத்தே அழிந்து போவதை ஒழிக்க மாட்டேனோ? பொருந்திய தண்டைகளும், கிண்கிணியும், சிலம்பும் இவை யாவும் கல கலன் கலின் கலின் என்று ஒலிக்கும்படி இரண்டு திருவடி மலர்களும் நொந்து நொந்து நடந்து அலைய, உருவமும் மிக மாறி*, வலிமை உடைய சிங்கமும், கரடியும் புலியும் வாழும் செழிப்பான தினை விளையும் புனத்தில் பரண் மேல் இருந்த வேடர் குலப் பெண்ணான வள்ளியை ஒப்பற்ற திருவுள்ளத்தில் விரும்பி, அவள் அருகே சென்று சேர்ந்து அவளுடைய சிறிய இரண்டு பாத தாமரைகளைப் பணிந்து, பல விதமான ஆடல்களில் மிகவும் மருட்சி பூண்டு அவளை மன மகிழ்ச்சியுடன் அணைபவனே, தேவர்கள் கூட்டமும் விண்ணுலகில் குடி போகவும், நொடிப் பொழுதில் அசுரர்கள் கூட்டமும் பொடிபட்டுப் போகவும் போர் செய்து, திருவண்ணாமலையில் வந்து தெற்குத் திசையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
பாட்டின் முதல் பாதியில் விலைமாதர்களின் கண்கள் வர்ணனை கூறப்பட்டுள்ளது.
* முருகன் வள்ளியை நாடிச் சென்றபோது வேடன், வேங்கை மரம், விருத்தன் என்று பல வேஷங்கள் தரித்ததைக் குறிக்கிறது.
பாடல் 411 - திருவருணை 
ராகம் - மோஹனம்; தாளம் - அங்கதாளம் - 16 
தகதகிடதகிட-4, தகதகிடதகிட-4, தகதகிட-2 1/2 
தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2
தானான தான தானான தான
     தானான தான ...... தந்ததான
காணாத தூர நீணாத வாரி
     காதார வாரம ...... தன்பினாலே 
காலாளும் வேளும் ஆலால நாதர்
     காலால் நிலாவுமு ...... னிந்துபூமேல் 
நாணான தோகை நூலாடை சோர
     நாடோர்க ளேசஅ ...... ழிந்துதானே 
நானாப வாத மேலாக ஆக
     நாடோறும் வாடிம ...... யங்கலாமோ 
சோணாச லேச பூணார நீடு
     தோளாறு மாறும்வி ...... ளங்குநாதா 
தோலாத வீர வேலால டாத
     சூராளன் மாளவெ ...... குண்டகோவே 
சேணாடர் லோகம் வாழ்மாதி யானை
     தீராத காதல்சி ...... றந்தமார்பா 
தேவாதி கூடு மூவாதி மூவர்
     தேவாதி தேவர்கள் ...... தம்பிரானே.
கண்ணுக்கெட்டாத தூரம் பரந்து ஓயாத அலையோசை உள்ள கடலின் வதைக்கின்ற ஆரவாரமும், அதன் பின்பாக, தென்றற் காற்றை தேர்போல் கொண்ட மன்மதனும், கடலில் பிறந்த விஷத்தை உண்ட சிவன்காலால் தேய்த்த நிலவும்*, இவளைக் கோபிக்க, இந்தப் புவி மீது நாணம் கொண்ட மயில் போன்ற இப்பெண் நூல் புடைவை நெகிழ, நாட்டில் உள்ளோர் பழித்துரைக்க, அதனால் உள்ளம் அழிந்து அவளே பலவித அவதூறுகள் மேலெழுந்து வெளிப்பட, நாள்தோறும் வாட்டமடைந்து மயங்கலாமோ? சோணாசலம் என்ற திருவண்ணாமலை ஈசனே, அணிந்துள்ள கடம்பமாலை பன்னிரண்டு தோளிலும் விளங்குகின்ற நாதனே, தோல்வியே அறியாத வீரனே, உனது வேலைக் கொண்டு, தகாத செயல் செய்த சூரன் என்ற ஆண்மையாளன் மாளும்படியாக கோபித்துச் செலுத்திய தலைவனே, விண்ணுலகில் வாழ்ந்த மாது தேவயானையின் நீங்காத காதல் நிறைந்த மார்பை உடையவனே, தேவர்கள் முதலியோர் மூன்று எனக் கூடிய ஆதி மும்மூர்த்தியர், மற்றும் தேவர்களுக்கு அதிதேவர்களாய் உள்ள இந்திரர்களுக்குத் தலைவனே. 
* தக்கன் யாகத்தில் சிவனுடைய அம்சமான வீரபத்திரர் சந்திரனைக் காலால் துகைத்தார் - சிவபுராணம்.இப்பாட்டு அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவிக்காக பாடியது.கடல், சந்திரன், மன்மதன், மலர்க் கணைகள், ஊரார் ஏச்சு இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.
பாடல் 412 - திருவருணை 
ராகம் - ...; தாளம் -
தானா தத்தன தானா தத்தன
  தந்தன தந்தன தான தந்தன
    தானா தத்தன தானா தத்தன
      தந்தன தந்தன தான தந்தன
        தானா தத்தன தானா தத்தன
          தந்தன தந்தன தான தந்தன ...... தந்ததான
காரா டக்குழ லாலா லக்கணை
  கண்கள்சு ழன்றிட வேமு கங்களி
    னாலா பச்சிலை யாலே மெற்புசி
      மஞ்சள்க லந்தணி வாளி கொந்தள
        காதா டக்கலன் மேலா டக்குடி
          யின்பர சங்குட மார்ப ளிங்கொளி ...... கொங்கைமாதர் 
காசா சைச்செய லாலே சொக்கிடு
  விஞ்சையர் கொஞ்சிடு வாரி ளங்குயில்
    போலே நற்றெரு வூடா டித்துயல்
      தொங்கல்நெ கிழ்ந்திடை யேது வண்டிட
        கால்தா விச்சதி யோடே சித்திர
          மென்பந டம்புரி வாரு டன்செயல் ...... மிஞ்சலாகிச் 
சீரா டிச்சில நாள்போய் மெய்த்திரை
  வந்துக லந்துயி ரோட வங்கமொ
    டூடா டிப்பல நோயோ டுத்தடி
      கொண்டுகு ரங்கென வேந டந்துசொல்
        சீயோ டிக்கிடை பாயோ டுக்கிய
          டங்கிய ழிந்துயி ரோடு ளைஞ்சொளி ...... யுங்கண்மாறிச் 
சேரா மற்பொறி கேளா மற்செவி
  துன்பமொ டின்பமு மேம றந்துபின்
    ஊரார் சுற்றமு மாதோர் மக்களு
      மண்டியு மண்டையு டேகு விந்திது
        சீசீ சிச்சிசி போகா நற்சனி
          யன்கட வென்றிட வேகி டந்துடல் ...... மங்குவேனோ 
மாரோன் முப்புர நீறா யுற்றிட
  அங்கியு மிழ்ந்திடு வோரி பம்புலி
    தோல்சீ யத்தொடெ யேகா சர்ச்சடை
      கங்கையி ளம்பிறை யார ணிந்தவர்
        மாடே றிக்கட லாலா லத்தையு
          முண்டவ ரெந்தைசி வாநு பங்குறை ...... யென்றன்மாதா 
மாலோ னுக்கிளை யாள்மா பத்தினி
  யம்பிகை சங்கரி மோக சுந்தரி
    வேதா மக்கலை ரூபாள் முக்கணி
      ரம்பிய கொங்கையி னாள்ப யந்தருள்
        மாஞா னக்கும ராதோ கைப்பரி
          யின்பத வண்குரு வேயெ னஞ்சுரர் ...... தொண்டுபாடச் 
சூரார் மக்கிட மாமே ருக்கிட
  அங்கட லெண்கிரி யோடி பங்கொடு
    தீபே ழற்றிட பாதா ளத்துறை
      நஞ்சர வின்பண மாயி ரங்கெட
        சூழ்வா ளக்கிரி தூளா கிப்பொடி
          விண்கணி றைந்திட வேந டம்புரி ...... கின்றவேலா 
சோர்வே தத்தலை மேலா டிச்சுக
  பங்கய செங்கர மோட கம்பெற
    வாகா னக்குற மாதோ டற்புத
      மங்குல ணங்குட னேம கிழ்ந்துநல்
        தூணோ டிச்சுட ராகா சத்தைய
          ணைந்துவி ளங்கரு ணாச லந்திகழ் ...... தம்பிரானே.
கருமேகம் போல விளங்கும் அந்தக் கூந்தல். பெரு விஷம் தோய்ந்த அம்பு போன்ற கண்கள் சுழல, முகங்களில் நாலாவிதமான பச்சிலைகளை மேலே பூசி மஞ்சளையும் கலந்து அணிந்துள்ளவர்கள். காதணியானது கூந்தலுக்கு அருகில் காதில் ஆட, ஆபரணங்கள் மேலே ஆட, இன்ப ரசம் குடி கொண்டிருக்கின்ற குடங்கள் போன்று, பளிங்கின் ஒளியைக் கொண்ட மார்பகங்களை உடைய விலைமாதர்கள். காசின் மேற்கொண்ட காமச் செயல்களால் மயக்கப் பொடி போடுகின்ற மாய வித்தை வல்லவர். கொஞ்சிப் பேசுபவர்கள். இளங் குயில் போல் நல்ல தெருக்களில் அங்கும் இங்கும் செல்பவராய், அசைகின்ற மேலாடை நெகிழவும், இடை துவளவும், கால்கள் தாவ, தாள ஒத்துடன் சித்திரப் பதுமை என்னும்படி நடனம் செய்கின்ற வேசியர்களுடன் இணக்கம் அதிகமாகி, சீராக கொஞ்ச காலம் கழித்து, உடலில் (தோல் சுருங்குதலால் உண்டாகும்) சுருக்கங்கள் வந்து ஏற்பட, உயிர் போகும்படி உடலோடு வேதனைப்பட்டு பல நோய்களுடன், தடியைப் பிடித்துக் கொண்டு குரங்கைப் போல நடந்து, இழிவாகச் சொல்கின்ற சீ என்னும் சொல் ஓடி எங்கும் பரவி, கிடக்கை படுக்கையாகி, மெலிந்து, ஒடுங்கி, அழிதலுற்று, உயிருடனே வேதனை உற்று, கண்களினின்றும் ஒளியும் விலகி, அறிவு ஒருவழிப்படாமல், காது கேட்காமல், இன்ப துன்பம் இரண்டையும் மறந்து, பிறகு, ஊராரும், சுற்றத்தாரும், பெண்டிரும், மற்று மக்களும் நெருங்கியும், பக்கத்தில் கும்பலாகக் கூடியும், இது இப்போது போகாது, சீ சீ சிச்சி சி, நல்ல சனியன், கிடக்கட்டும் என்று கூறிச் செல்ல இப்படியே கிடந்து உடல் அழிவேனோ? மன்மதனும், மூன்று புரங்களும் சாம்பலாகும்படி நெருப்பை (நெற்றிக் கண்ணிலிருந்து) வெளிச் செலுத்தினவர், யானை, புலி இவைகளின் தோலையும், சிங்கத்தின் தோலையும் போர்வையாக உடையவர், சடையில் கங்கை, இளம்பிறை, ஆத்தி மாலை சூடியுள்ளவர், ரிஷபத்தில் ஏறுபவர், கடலில் எழுந்த கொடிய (ஆலகால) விஷத்தை உண்டவர், எனது தந்தையாகிய சிவபெருமானோடு கூட அவர் திருமேனியில் பாதியாக உறையும் எனது தாய், திருமாலுக்குத் தங்கை, மகா பத்தினி, அம்பிகை, சங்கரி, அன்புக்கு உரிய சுந்தரி, வேதாகம நூல்களின் உருவம் வாய்ந்தவள், (சூரியன், சந்திரன், அக்கினி என்ற) மூன்று கண்களை உடையவள், பருத்த மார்பகங்களை உடையவள் ஆகிய பார்வதி பெற்றருளிய சிறந்த ஞானப் புதல்வனே, கலாபக் குதிரையாகிய மயில் மேல் திருவடியை வைத்துள்ளவனே, வளமை வாய்ந்த குரு மூர்த்தியே என்று தேவர்கள் அடிமை பூண்டு பாட, அசுரர்கள் அழிந்து போக, பெரிய மேரு மலை மெலிவு அடைய, அழகிய கடலும், அஷ்ட கிரிகளும்*, அஷ்ட கஜங்களோடு**, ஏழு தீவுகளும்*** வற்றிப் போக, பாதாளத்தில் உள்ள விஷப் பாம்பாகிய ஆதிசேஷனுடைய பணாமுடிகள் ஆயிரமும் கேடு உற, சூழ்ந்துள்ள சக்ரவாள கிரி தூள்பட்டு, அத்தூள் விண்ணில் உள்ள எல்லா இடங்களிலும் நிறையும் வண்ணம் நடனம் செய்கின்ற வேலனே, (நெறி பல கொண்டு) தளர்வு உறும் வேதத்தின் உச்சியின் மேல் விளங்குகின்றவனே, சுகத்துடன் உனது தாமரை போன்ற சிவந்த கரத்துடன் உனது உள்ளத்தையும் பெற்ற அந்த அழகிய குறப் பெண்ணான வள்ளியுடனும், அற்புதமான விண்ணுலகப் பெண்ணான தேவயானையுடனும் மகிழ்ச்சி உற்று, நல்ல அக்கினி ஸ்தம்பமாகிய சிவச்சுடர் உயர்ந்தோடி ஆகாசத்தை அளாவி விளங்கும் திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் தம்பிரானே. 
* எண் கிரி = இமயம், மந்தரம், கைலாசம், விந்தியம், நிடதம், ஏமகூடம், நீலம், கந்தமாதனம்.
** எண் திசை யானைகள் = ஐராவதம், புண்டா£கம், வாமனம், குமுதம், அஞ்சனம், புஷ்பதந்தம், சாருவபெளமம், சுப்ரதீபம்.
*** தீபு ஏழு = ஏழு தீவுகள். நாவல், இறலி, குசை, கிரவுஞ்சம், புட்கரம், தெங்கு, கமுகு இவைகள் அத்தீவின் முக்கிய பொருட்கள் அல்லது பறவைகள். அவற்றால் அப்பெயர் பெற்றன.
பாடல் 413 - திருவருணை 
ராகம் - ...; தாளம் -
தானதன தந்ததன தானதன தந்ததன
     தானதன தந்ததன ...... தந்த தனதான
காருமரு வும்பெருகு சோலைமரு வுங்கொடிய
     காகளம டங்கவுமு ...... ழங்கு மதனாலே 
காலடர வம்பமளி மேலடர வந்துபொரு
     காமன்விடு விஞ்சுகணை ...... அஞ்சு மலராலே 
ஊருமுல கும்பழைய பேருகம்வி ளைந்ததென
     ஓரிரவு வந்தெனது ...... சிந்தை யழியாதே 
ஊடியிரு கொங்கைமிசை கூடிவரி வண்டினமு
     லாவியக டம்பமலர் ...... தந்த ருளுவாயே 
ஆருமர வும்பிறையு நீருமணி யுஞ்சடைய
     ராதிபர வும்படிநி ...... னைந்த குருநாதா 
ஆறுமுக முங்குரவு மேறுமயி லுங்குறவி
     யாளுமுர முந்திருவும் ...... அன்பு முடையோனே 
மேருமலை யும்பெரிய சூருமலை யுங்கரிய
     வேலையலை யும்பகையும் ...... அஞ்ச விடும்வேலா 
மேதினியி றைஞ்சுமரு ணாபுரிவி ளங்குதிரு
     வீதியிலெ ழுந்தருளி ...... நின்ற பெருமாளே.
மேகமும், மருக்கொழுந்தின் வாசனையும் பெருகி எழும் சோலையில் உள்ள பொல்லாத குயிலாகிய எக்காளம் இடைவிடாமல் ஒலிக்கின்ற அந்தக் காரணத்தாலும், தென்றல் காற்று நெருங்கி வாசனை ஏற்றியுள்ள படுக்கையின் மேல் வேகமாக வீசுவதாலும், போருக்கு எழுந்த மன்மதன் செலுத்துவதால் மேலே படுகின்ற பாணங்களாகிய ஐந்து மலர்களாலும், ஊராரும் உலகத்தாரும் பழைய பெரிய யுகாந்த பிரளய காலம் வந்தது போல் (எனனைப் பற்றிய வசை) ஆரவாரம் செய்வதாலும், (நீ என் மீது மனம் இரங்கி) ஓர் இராப் பொழுதேனும் வந்து என் மனம் நைந்து அழியாதபடி, மாறி மாறிப் பிணங்கியும் எனது மார்பகங்களின் மீது கூடி இணங்கியும், இசைப் பாட்டுகளைப் பாடும் வண்டின் கூட்டங்கள் உலவுகின்ற கடப்ப மலர் மாலையைத் தந்து அருள்வாயாக. ஆத்தி மலரையும், பாம்பையும், பிறைச் சந்திரனையும், கங்கையையும் அணிந்துள்ள சடையராகிய ஆதி மூர்த்தியான சிவ பெருமான் தியானித்த குருநாதனே, ஆறு முகங்களும், குராமலரும், வாகனமாகிய மயிலும், குறத்தியாகிய வள்ளி அணைந்து ஆட்சி கொள்ளும் மார்பும், (ஞானச்) செல்வமும், அன்பும் உடையவனே, மேரு மலையும், பெரிய சூரனும், கிரெளஞ்ச மலையும், கரிய அலை கடலும், பகைவர்களும் பயப்படும்படி செலுத்திய வேலாயுதனே, உலகம் வணங்கும் திருவண்ணாமலையில் திகழ்கின்ற திரு வீதியில் எழுந்தருளியுள்ள பெருமாளே. 
இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் புலவர் தம்மையே நாயகியாக பாவித்தது போன்று அமைந்தது.குயிலின் எக்காளம், தென்றல், மன்மதன், மலர்க்கணைகள், ஊராரின் ஆரவாரம் முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.
பாடல் 414 - திருவருணை 
ராகம் - திலங் ; தாளம் - அங்கதாளம் - 8 
தகதிமி-2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3
தான தனான தத்த ...... தனதான
     தான தனான தத்த ...... தனதான
கீத விநோத மெச்சு ...... குரலாலே
     கீறு மையார் முடித்த ...... குழலாலே 
நீதி யிலாத ழித்து ...... முழலாதே
     நீமயி லேறி யுற்று ...... வரவேணும் 
சூதமர் சூர ருட்க ...... பொருசூரா
     சோண கி¡£யி லுற்ற ...... குமரேசா 
ஆதியர் காதொ ருச்சொ ...... லருள்வோனே
     ஆனை முகார்க னிட்ட ...... பெருமாளே.
(மாதரின்) ராக ஜாலங்கள் காட்டக்கூடிய மெச்சத்தக்க குரலின் இனிமையிலும், வகிடு எடுத்த, கரிய நிறமுள்ள, வாரி முடிக்கப்பட்ட கூந்தலினாலும், மயங்கி நீதியற்ற அக்ரமங்களைச் செய்து நான் திரியாதிருக்க, நீ மயில் மீது ஏறி மனது வைத்து வரவேண்டுகிறேன். சூதான எண்ணங்கள் நிறைந்த சூரர்கள் பயப்படும்படி போர் செய்த சூரனே, (சோணகிரி) திருவண்ணாமலையில் வாழும் குமரேசனே, ஆதிதேவர் சிவனது காதில் ஒப்பற்ற பிரணவச்சொல்லை ஓதியவனே, யானைமுகக் கணபதிக்கு கனிஷ்ட (தம்பியான) பெருமாளே. 
பாடல் 415 - திருவருணை 
ராகம் - ....; தாளம் -
தனதனன தனதனன தானத் தாத்தன
     தனதனன தனதனன தானத் தாத்தன
          தனதனன தனதனன தானத் தாத்தன ...... தனதான
குரவநறு மளககுழல் கோதிக் காட்டியெ
     குலவுமிரு கயல்கள்விழி மோதித் தாக்கியெ
          குமுதமல ரொளிபவள வாயைக் காட்டியெ ...... குழையாத 
குணமுறுக இனிதுபயில் கூறிக் காட்டியெ
     குலையஇரு கலைநெகிழ வீசிக் காட்டியெ
          குடவியிடு மரிவையர்க ளாசைப் பாட்டிலெ ...... கொடியேன்யான் 
பொருளிளமை கலைமனமு மேகப் போக்கிய
     புலையனிவ னெனவுலக மேசப் போக்கென
          பொறிவழியி லறிவழிய பூதச் சேட்டைகள் ...... பெருகாதே 
புதுமலர்கள் மருவுமிரு பாதத் தாற்றியெ
     பொதுவகையி லருணைநிலை நீள்கர்த் தாவென
          புகழடிமை தனையுனது பார்வைக் காத்திட ...... நினையாதோ 
அரவமுட னறுகுமதி யார்மத் தாக்கமு
     மணியுமொரு சடைமவுலி நாதர்க் கேற்கவெ
          அறிவரிய வொருபொருளை போதத் தேற்றிய ...... அறிவோனே 
அழகுசெறி குழலியர்கள் வானத் தாட்டியர்
     தருமமது சரவணையில் வாவித் தேக்கியெ
          அறுசிறுவ ரொருவுடல மாகித் தோற்றிய ...... இளையோனே 
சுரருலவ அசுரர்கள் மாளத் தூட்பட
     துயவுமுட லயிலைவிடு மாவுக் ராக்ரம
          சுவறியெழு கடலுமுறை யாகக் கூப்பிட ...... முனிவோனே 
துடிமுழவு மறவரிட சேவற் காட்டினில்
     துணைமலரி னணுகிதினை காவற் காத்தனை
          சுரியகுழல் குறமகளை வேளைக் காத்தணை ...... பெருமாளே.
குரா மலரின் நறு மணம் வீசும் மயிர்க் கற்றை உள்ள கூந்தலை வேண்டுமென்றே சிக்கெடுத்துக் காட்டியும், விளங்கும் இரண்டு கயல் மீன்கள் போன்ற கண்களைக் கொண்டு மோதித் தாக்கியும், குமுத மலர் போன்றதும், ஒளி பொருந்திய பவளம் போன்றதுமான வாயைக் காட்டியும், இளகாத காமம் முதிர்ச்சி உறும்படி, இனிமையாக நெருங்கிய ஞாபகத்தைக் காட்டும் பேச்சுக்களைப் பேசிக் காட்டியும், பெரிய ஆடை குலைவுற்று நெகிழ்ந்து தளரும்படி பக்கம் வீசிக் காட்டியும், ஆடவர்களை வளைத்துப் போடும் மாதர்களுடைய காம லீலைகளில் (ஈடுபட்ட) கொடியவனாகிய நான், என் பொருள், இளமை, கல்வி, மனம் இவை யாவும் போகும்படி தொலைத்த கீழ்மகன் இவன் என்று உலகத்தவர் இகழ்ந்து உரைக்க, ஐம்பொறிகள் இழுத்த இழுப்பின் வழியிலே சென்று என் அறிவு அழிய, ஐம்பூதங்களால் ஆகிய உடம்பின் குறும்புச் செயல்கள் என்னிடம் வளராதவாறு, புதிய மலர்கள் பொருந்திய உன் இரண்டு திருவடிகளால் அமைதியாகி, யாவரும் ஒப்புக்கொள்ளும் வகையில் திருவண்ணாமலையில் நிலைத்துள்ள பெரிய தலைவன் நீதான் என்று உன்னைப் புகழ்கின்ற இந்த அடிமையை, உன் திருக்கண் பார்வையால் காத்தளிக்க நினைக்க மாட்டாயோ? பாம்பும், அறுகும், சந்திரனும், ஆத்தியும், ஊமத்தை மலரும், ருத்ராட்சமும், மணியும் அணிந்துள்ள ஒப்பற்ற சடையை உடைய சிவபெருமான் உவந்து ஏற்றுக் கொள்ளும் வகையில், அறிதற்கு அரிதான மேலான பிரணவப் பொருளை உபதேசித்து ஊட்டிய அறிஞனே, அழகு நிறைந்த கூந்தலை உடையவர்களாக, வானிடத்திலே உள்ள ஆறு கார்த்திகைப் பெண்கள் தந்த பால் அமுதை சரவண மடுவில் நிரம்ப உண்டு, ஆறு சிறுவர்களாக இருந்தவர்கள் ஓர் உடலினராகி விளங்கிய இளைஞனே, தேவர்கள் (மகிழ்ந்து) உலவும்படியும், அசுரர்கள் இறக்கும்படியும், பொடியாக அறிவு கலங்கும்படி கோபித்த வேலாயுதத்தைச் செலுத்திய பெரிய மூர்த்தியே, நீதிமானே, வற்றிப்போன ஏழு கடல்களும் முறை செய்து ஒலி எழுப்பும்படியாகக் கோபித்தவனே, உடுக்கை, முரசு (இவைகளை உடைய) வேடர்களின் காவல் கொண்ட காட்டில், உனது இரண்டு (திருவடி) மலர்களால் நெருங்கி, தினைப் புனத்தைக் காவல் காத்திருந்த தாய், சுருண்ட கூந்தலைக் கொண்ட குற மகளாகிய வள்ளியை, தக்க சமயத்துக்காக காத்திருந்து, (அவளை) அணைந்த பெருமாளே. 
பாடல் 416 - திருவருணை 
ராகம் - ....; தாளம் -
தனதன தானான தானன தனதன தானான தானன
     தனதன தானான தானன ...... தனதான
குழவியு மாய்மோக மோகித குமரனு மாய்வீடு காதலி
     குலவனு மாய்நாடு காடொடு ...... தடுமாறிக் 
குனிகொடு கூனீடு மாகிடு கிழவனு மாயாவி போய்விட
     விறகுட னேதூளி யாவது ...... மறியாதாய்ப் 
பழயச டாதார மெனிகழ் கழியுடல் காணாநி ராதர
     பரிவிலி வானாலை நாடொறு ...... மடைமாறிப் 
பலபல வாம்யோக சாதக வுடல்கொடு மாயாத போதக
     பதியழி யாவீடு போயினி ...... யடைவேனோ 
எழுகடல் தீமூள மேருவு மிடிபட வேதாவும் வேதமு
     மிரவியும் வாய்பாறி யோடிட ...... முதுசேடன் 
இருளறு பாதாள லோகமு மிமையமு நீறாக வாள்கிரி
     யிருபிள வாய்வீழ மாதிர ...... மலைசாய 
அழகிய மாபாக சாதன னமரரு மூர்பூத மாறுசெய்
     அவுணர்த மாசேனை தூளெழ ...... விளையாடி 
அமரினை மேவாத சூரரை அமர்செயும் வேலாயு தாவுயர்
     அருணையில் வாழ்வாக மேவிய ...... பெருமாளே.
குழந்தையாகப் பிறந்து, மாயை, காம மயக்கம் இவை உடைய வாலிபனாக வளர்ந்து, வீடு, மனைவி இவைகளோடு கூடிய நல்ல குலத்தவனாய் வாழ்ந்து, பின்பு நாட்டிலும், காட்டிலும் உழன்று தடுமாற்றம் அடைந்து, உடல் வளைந்து, கூன் பெரியதாய் ஆன கிழவனுமாக ஆகி, உயிர் போன பிறகு (உடல்) விறகுடன் சாம்பற் பொடி ஆவதையும் அறிந்து, (அந்த எண்ணத்தை விட்டுத்) தாவி, (குண்டலினி சக்ரத்தின்) பழமையான ஆறு ஆதாரங்களின்* மேல் நிலையில் நிகழும் உடம்பு கழிபட்ட நிலையை அடைந்து, சார்பு அற்றதும், துன்பம் இல்லாததுமானஆகாயத்தில் நாள் தோறும் நாலு அங்குல** அளவு வாயுவைக் கழியாது திருப்பி, பல விதமான யோகப் பயிற்சிகள் செய்த உடலை வளர்த்து, (இத்தனையும் செய்தபின்) சாவில்லாததும், அறிவு மயமானதுமான அழியாத முத்தி வீட்டை நாடிச் சென்று இனியாவது யான் போய்ச் சேருவேனோ? ஏழு கடல்களும் நெருப்பு மூண்டு எரியவும் மேரு மலையும் பொடிபடவும், பிரமனும், நான்கு வேதங்களும், சூரியனும் திசைமாறித் தறிகெட்டு ஓடவும், பழைய ஆதிசேஷன் உள்ள இருட்டற்ற பாதாள லோகமும், இமயமலையும் பொடிப்பொடியாகவும், சக்ரவாளகிரி இரண்டு பிளவுபட்டு வீழவும், எட்டுத் திக்குகளில் உள்ள மலைகள் சாய்ந்து விழவும், அழகு வாய்ந்த, சிறந்த இந்திரனும், தேவர்களும் (தங்கள்) பொன்னுலகில் குடியேறவும் செய்வித்து, அசுரர்களுடைய பெரிய சேனையை விளையாட்டுப்போல தூள்தூளாகச் செய்து, அமரினை மேவாத சூரரை அமர் செயும் அமைதியைப் பொருந்தாத சூரர்களோடு சண்டை செய்த வேலாயுதனே, சிறப்பு வாய்ந்த திருவண்ணாமலையில் வாழ்வாக வீற்றிருக்கும் பெருமாளே. 
* ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம் ** யோகி சராசரியாக 12 அங்குல வாயுவை பூரகம் மூலம் உள்ளே இழுத்து, 8 அங்குல பிராண வாயுவை கும்பகம் மூலம் தன்னுள் வைத்துக் கொண்டு, 4 அங்குல வாயுவை வெளியில் ரேசகம் மூலம் விடுகிறான்.
பாடல் 417 - திருவருணை 
ராகம் - ....; தாளம் -
தானதன தானதத்த தானதன தானதத்த
     தானதன தானதத்த ...... தனதான
கேதகைய பூமுடித்த மாதர்தம யாலிலுற்று
     கேவலம தானஅற்ப ...... நினைவாலே 
கேள்வியதி லாதிருக்கு மூழ்வினையி னால்மிகுத்த
     கேடுறுக வேநினைக்கும் ...... வினையாலே 
வேதனையி லேமிகுத்த பாதகனு மாயவத்தில்
     மேதினியெ லாமுழற்று ...... மடியேனை 
வீடுதவி யாளவெற்றி வேல்கரம தேயெடுத்து
     வீறுமயில் மீதிலுற்று ...... வருவாயே 
நீதிநெறி யேயழித்த தாருகனை வேரறுத்து
     நீடுபுகழ் தேவரிற்கள் ...... குடியேற 
நீடருளி னால்விடுத்த பாலகும ராசெழித்த
     நீலநிற மால்தனக்கு ...... மருகோனே 
சோதியன லாவுதித்த சோணகிரி மாமலைக்குள்
     சோபைவட கோபுரத்தி ...... லுறைவோனே 
சோனைமழை போலெதிர்த்த தானவர்கள் மாளவெற்றி
     தோளின்மிசை வாளெடுத்த ...... பெருமாளே.
தாழம்பூவை அணிந்துள்ள பொது மகளிர்களுடைய மோகத்தில் ஈடுபட்டு, தாழ்மையான அற்ப நினைவுகளாலும், ஆராய்ச்சிக்கு இடம் தராது இருக்கும் ஊழ் வினையாலும், மிக்க அழிவு வருதற்கே நினைக்கின்ற செயல்களாலும், வேதனையில் பட்டு, மிக்க பாதகத்துக்கு இடம் தருபவனாக, வீணாக உலக முழுமையும் அலைச்சல் உற்றுத் திரியும் அடியேனுக்கு வீட்டின்பத்தைக் கொடுத்து உதவி, என்னை ஆட்கொள்ளும் பொருட்டு வெற்றி வேலைத் திருக் கரத்தே எடுத்து, விளங்குகின்ற மயிலின் மீது ஏறி வருவாயாக. நீதி நெறிகளை அழித்த தாரகாசுரனை வேரோடே அறுத்து, பெரும் புகழைக் கொண்ட தேவர்கள் தத்தம் வீடுகளில் குடிபுக, பெருங் கருணையால் உதவிய இளங் குமரனே, செழிப்புள்ள நீல நிறம் உள்ள திருமாலுக்கு மருகனே, ஜோதி நெருப்பாகத் தோன்றிய அருணாசலம் என்னும் சிறந்த மலைக்குள் அழகான வடக்குக் கோபுரத்தில் வீற்றிருப்பவனே, விடாது பெய்யும் பெரு மழையைப் போல எதிர்த்து வந்த அசுரர்கள் இறந்து போகும்படி, வெற்றி பொருந்திய தோளின் மீது வாளாயுதத்தை எடுத்த பெருமாளே. 
பாடல் 418 - திருவருணை 
ராகம் - ....; தாளம் -
தானான தனதான ...... தனதான
கோடான மடவார்கள் ...... முலைமீதே 
கூர்வேலை யிணையான ...... விழியூடே 
ஊடாடி யவரோடு ...... முழலாதே 
ஊராகத் திகழ்பாத ...... மருள்வாயே 
நீடாழி சுழல்தேசம் ...... வலமாக 
நீடோடி மயில்மீது ...... வருவோனே 
சூடான தொருசோதி ...... மலைமேவு 
சோணாடு புகழ்தேவர் ...... பெருமாளே.
விலைமாதர்களின் மலை போன்ற மார்பகங்களிலும், கூரிய வேலுக்குச் சமமான கண்களிலும், ஈடுபட்டுப் பழகினவனாக அவர்களுடன் திரியாமலே, (எனக்குச் சொந்த) ஊர் போல் இருப்பிடமாக விளங்கும் உன் திருவடியைத் தந்து அருள் புரிவாயாக. விரிந்த கடல் சூழ்ந்த உலகை வலமாக முழுதும் ஓடி, மயிலின் மேல் பறந்து வந்தவனே, நெருப்பான ஒரு ஜோதி மலையில், திருவண்ணாமலையில், வீற்றிருக்கும், சோழ நாட்டார் புகழும், தேவர்களின் பெருமாளே. 
பாடல் 419 - திருவருணை 
ராகம் - ...; தாளம் -
தானதன தத்த தத்த தானதன தத்த தத்த
     தானதன தத்த தத்த ...... தனதான
கோடுசெறி மத்த கத்தை வீசுபலை தத்த வொத்தி
     கூறுசெய்த ழித்து ரித்து ...... நடைமாணார் 
கோளுலவு முப்பு ரத்தை வாளெரிகொ ளுத்தி விட்ட
     கோபநுத லத்த ரத்தர் ...... குருநாதா 
நீடுகன கத்த லத்தை யூடுருவி மற்ற வெற்பு
     நீறெழமி தித்த நித்த ...... மனதாலே 
நீபமலர் பத்தி மெத்த வோதுமவர் சித்த மெத்த
     நீலமயில் தத்த விட்டு ...... வரவேணும் 
ஆடலணி பொற்சி லைக்கை வேடுவர்பு னக்கு றத்தி
     ஆரமது மெத்து சித்ர ...... முலைமீதே 
ஆதரவு பற்றி மெத்த மாமணிநி றைத்த வெற்றி
     ஆறிருதி ருப்பு யத்தில் ...... அணைவீரா 
தேடிமையொர் புத்தி மெத்தி நீடுறநி னைத்த பத்தி
     சீருறவு ளத்தெ ரித்த ...... சிவவேளே 
தேறருணை யிற்ற ரித்த சேண்முகடி டத்த டர்த்த
     தேவர்சிறை வெட்டி விட்ட ...... பெருமாளே.
தந்தங்கள் பொருந்திய யானையின் மத்தகத்தில் வெளித் தோன்றும் பற்களை வெளியில் விழும்படித் தாக்கிக் கிழித்துக் கூறு படுத்தி அழித்து (அதன் தோலை) உரித்தவரும், நன்னெறியைப் போற்றாது விட்ட (திரிபுரத்து) அசுரர்களுடைய மேக மண்டலத்தின் மீது பறந்து செல்லும் முப்புரங்களை ஒளி வீசும் நெருப்பால் எரித்து விட்டவரும், கோபம் கொண்ட நெற்றிக் கண்ணினர் என்ற அந்த மேன்மையைக் கொண்டவருமான சிவபெருமானுடைய குரு நாதனே, பெரிய கனக கிரெளஞ்ச மலையைத் துளைத்து, பின்னும் உள்ள (ஏழு) மலைகளைத் தூளாகுமாறு மிதித்து விளையாடிய நித்தனே, கடப்ப மலரைச் சூடிய உனது புய வரிசையின் சிறப்பை மனதார நிரம்ப ஓதுகின்ற அடியார்களின் சித்தத்தில் உறைபவனே, நீல மயிலை வேகமாகத் தாவி வரச் செலுத்தி வந்தருள வேண்டுகிறேன். போரை மேற் கொள்ளும் அழகிய வில்லை ஏந்திய கைகளை உடைய வேடர்களின் தினைப் புனத்தில் இருந்த குறத்தியாகிய வள்ளியின் முத்து மாலை நிரம்பிய அழகிய மார்பின் மேல் விருப்பம் வைத்து, மிகவும் சிறந்த மணிகள் நிறைந்துள்ளதும், வெற்றி பெற்றனவுமாகிய பன்னிரண்டு திருப்புயங்களிலும் அவளை அணைந்த வீரனே, தேடி வந்த தேவர்கள் அறிவு நிரம்பி நீண்ட காலம் வாழ வேண்டுமென்றும் அவர்களது பக்தி சிறக்கவேண்டுமென்றும் மனதில் நினைத்த சிவ குமாரனே, செழிப்புள்ள திருவண்ணாமலையில் உள்ள மலையின் உச்சியிடத்தில் அடைந்து கூடிய தேவர்களின் சிறையை வெட்டி விட்ட பெருமாளே. 
பாடல் 420 - திருவருணை 
ராகம் - ....; தாளம் -
தனதன தத்தத் தனந்த தந்தன
     தனதன தத்தத் தனந்த தந்தன
          தனதன தத்தத் தனந்த தந்தன ...... தனதான
சிலைநுதல் வைத்துச் சிறந்த குங்கும
     தலதமு மிட்டுக் குளிர்ந்த பங்கய
          திருமுக வட்டத் தமர்ந்த மென்குமிழ் ...... தனிலேறிச் 
செழுமணி ரத்நத் திலங்கு பைங்குழை
     தனைமுனி வுற்றுச் சிவந்து நஞ்சணி
          செயலினை யொத்துத் தயங்கு வஞ்சக ...... விழிசீறிப் 
புலவிமி குத்திட் டிருந்த வஞ்சியர்
     பதமல ருக்குட் பணிந்த ணிந்தணி
          புரிவளை கைக்குட் கலின்க லென்றிட ...... அநுராகம் 
புகழ்நல மெத்தப் புரிந்து கொங்கையி
     லுருகிய ணைத்துப் பெரும்ப்ரி யங்கொடு
          புணரினும் நிற்பொற் பதங்கள் நெஞ்சினுள் ...... மறவேனே 
கலைமதி வைத்துப் புனைந்து செஞ்சடை
     மலைமகள் பக்கத் தமர்ந்தி ருந்திட
          கணகண கட்கட் கணின்க ணென்றிட ...... நடமாடுங் 
கருணைய னுற்றத் த்ரியம்ப கன்தரு
     முருகபு னத்திற் றிரிந்த மென்கொடி
          கனதன வெற்பிற் கலந்த ணைந்தருள் ...... புயவீரா 
அலைகடல் புக்குப் பொரும்பெ ரும்படை
     யவுணரை வெட்டிக் களைந்து வென்றுயர்
          அமரர்தொ ழப்பொற் சதங்கை கொஞ்சிட ...... வருவோனே 
அடியவ ரச்சத் தழுங்கி டுந்துயர்
     தனையொழி வித்துப் ப்ரியங்கள் தந்திடும்
          அருணகி ரிக்குட் சிறந்த மர்ந்தருள் ...... பெருமாளே.
வில்லைப் போன்று வளைந்த நெற்றியில் நல்ல குங்குமப் பொட்டை இட்டு, குளிர்ந்த தாமரை போன்ற அழகிய முக வட்டத்தில் உள்ள மெல்லிய பூப் போன்ற மூக்கின் மேல் சார்ந்து செழுமையுள்ள ரத்ன மணி விளங்க, அழகிய குண்டலங்கள் உள்ள காதைக் கோபித்து, சிவந்து, விஷம் உண்ட தன் செயலுக்கு ஒப்ப வஞ்சகம் கொண்டு விளங்கும் கண்களால் சீறிக் கோபித்து, ஊடல் குணம் அதிகமாகி இருந்த விலைமாதர்களின் பாத மலரில் பணிந்து, அவர்கள் அணிந்துள்ள அணி கலன்களாய் விளங்கும் வளையல் கையில் கலின் கலென்று ஒலிக்க, காமப் பற்றான புகழ் நலச் செயல்களை அதிகமாகச் செய்து, அவர்களுடைய மார்பில் உருகித் தழுவி மிக்க ஆசையுடன் கலவி செய்தாலும், உனது அழகிய திருவடியை மனதில் மறக்க மாட்டேன். கலை கொண்ட பிறையை வைத்து அலங்கரித்த செந்நிறச் சடையுடன் ஹிமவான் மகளாகிய பார்வதி (இடது) பாகத்தில் அமர்ந்து விளங்க, கணகண கட்கட் கணின்கண் என்ற ஒலி செய்ய நடனம் செய்கின்ற கருணைப் பிரான், (சூரியன், சந்திரன், அக்கினி ஆகப்) பொருந்திய முக்கண்ணன் பெற்ற முருகனே, தினைப் புனத்தில் திரிந்த மெல்லிய கொடி போன்ற வள்ளியின் பருத்த மார்பாம் மலைகளில் சேர்ந்து அணைந்தருளிய புயங்கள் கொண்ட வீரனே, அலை கொண்ட கடலில் புகுந்து சண்டை செய்த பெரிய சேனையைக் கொண்ட அசுரர்களை வெட்டித் தொலைத்து வெற்றி கொண்டு, உயர்ந்த தேவர்கள் தொழும்படி அழகிய சதங்கை ஒலி செய்ய வருபவனே, அடியார்கள் பயத்தால் துன்புற்று ஒடுங்கும் வருத்தத்தை நீக்கி, அன்பு தரும் திருவண்ணாமலையில் சிறப்பாக வீற்றிருந்து அருளும் பெருமாளே. 
பாடல் 421 - திருவருணை 
ராகம் - ஆபோகி; தாளம் - ஆதி
தனனா தனனா தனனா தனனா
     தனனா தனனா ...... தனதான
சிவமா துடனே அநுபோ கமதாய்
     சிவஞா னமுதே ...... பசியாறித் 
திகழ்வோ டிருவோ ரொருரூ பமதாய்
     திசைலோ கமெலா ...... மநுபோகி 
இவனே யெனமா லயனோ டமரோ
     ரிளையோ னெனவே ...... மறையோத 
இறையோ னிடமாய் விளையா டுகவே
     யியல்வே லுடன்மா ...... அருள்வாயே 
தவலோ கமெலா முறையோ வெனவே
     தழல்வேல் கொடுபோ ...... யசுராரைத் 
தலைதூள் படஏழ் கடல்தூள் படமா
     தவம்வாழ் வுறவே ...... விடுவோனே 
கவர்பூ வடிவாள் குறமா துடன்மால்
     கடனா மெனவே ...... அணைமார்பா 
கடையேன் மிடிதூள் படநோய் விடவே
     கனல்மால் வரைசேர் ...... பெருமாளே.
சிவம் என்கின்ற தலைவியுடன் இன்ப நுகர்ச்சி கொண்டவனாக, சிவஞானம் என்ற அமுதத்தை உண்டு அதனால் அறிவுப் பசி தீர்ந்து, விளங்கும் 'தலைவன் - தலைவி' என்ற ஈருருவமும் ஒரே உருவமாய் எட்டுத் திசையிலுள்ளவர் சுகித்து உணர்பவன் இவன்தான் என்று திருமால், பிரமன், தேவர்கள் அனைவரும் கூறி, இவன் இளையவன் (முருகன்) என வியந்து கூற, வேதமும் அவ்வாறே என்று ஆமோதித்துக் கூற, சிவபிரானிடத்தில் வேண்டி, யான் (உன்னைப் போல்) விளையாடுவதற்காக அழகிய வேலும் மயிலும் தந்தருள்வாயாக. மிகவும் உலகங்கள் யாவும் இது முறையாகுமா என்று ஓலமிட, நெருப்பை வீசும் வேலுடன் சென்று அசுரர்களின் தலைகள் பொடிபடும்படி, ஏழு கடல்களும் தூள்படும்படி, சிறந்த தவத்தினர் வாழ்வுறுமாறு அந்த வேலைச் செலுத்தியவனே, மனம் கவரும் மலரின் அழகுடையவளும், குறப்பெண்ணும் ஆகிய வள்ளியிடம் ஆசை கொள்வது உன் கடமை என்று அவளை அணைந்த மார்பனே, கடைப்பட்டவனாகிய என் துன்பம் தூள்படவும், என் நோய் தொலையவும் (அருளி), அக்கினிப் பெருமலையாம் திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 422 - திருவருணை 
ராகம் - ....; தாளம் -
தனதனன தனதனன தந்தனந் தந்தனம்
     தனதனன தனதனன தந்தனந் தந்தனம்
          தனதனன தனதனன தந்தனந் தந்தனம் ...... தந்ததான
சினமுடுவல் நரிகழுகு டன்பருந் தின்கணங்
     கொடிகெருடன் அலகைபுழு வுண்டுகண் டின்புறுஞ்
          செடமளறு மலசலமொ டென்புதுன் றுங்கலந் ...... துன்பமேவு 
செனனவலை மரணவலை ரண்டுமுன் பின்தொடர்ந்
     தணுகுமுட லநெகவடி விங்கடைந் தம்பரஞ்
          சிறுமணலை யளவிடினு மங்குயர்ந் திங்குலந் ...... தொன்றுநாயேன் 
கனகபுவி நிழல்மருவி யன்புறுந் தொண்டர்பங்
     குறுகஇனி யருள்கிருபை வந்துதந் தென்றுமுன்
          கடனெனது உடலுயிரு முன்பரந் தொண்டுகொண் ...... டன்பரோடே 
கலவிநல மருவிவடி வஞ்சிறந் துன்பதம்
     புணர்கரண மயில்புறமொ டின்புகொண் டண்டருங்
          கனகமலர் பொழியஉன தன்புகந் தின்றுமுன் ...... சிந்தியாதோ 
தனனதன தனனதன தந்தனந் தந்தனந்
     தகுகுகுகு குகுகுகுகு டங்குடங் குந்தடந்
          தவில்முரசு பறைதிமிலை டிங்குடிங் குந்தடர்ந் ...... தண்டர்பேரி 
தடுடுடுடு டுடுடுடுடு டுண்டுடுண் டுண்டுடுண்
     டிமிடிமிட டகுர்திகுகு சங்குவெண் கொம்புதிண்
          கடையுகமொ டொலியகட லஞ்சவஞ் சன்குலஞ் ...... சிந்திமாளச் 
சினமுடுகி அயிலருளி யும்பரந் தம்பரந்
     திகையுரகர் புவியுளது மந்தரம் பங்கயன்
          செகமுழுது மகிழஅரி அம்புயன் தொண்டுகொண் ...... டஞ்சல்பாடத் 
திருமுறுவ லருளியென தெந்தையின் பங்குறுங்
     கவுரிமன முருகவொரு கங்கைகண் டன்புறுந்
          திருவருண கிரிமருவு சங்கரன் கும்பிடுந் ...... தம்பிரானே.
இந்த உடலானது கோபம் கொள்ளும் நாய், நரி, கழுகு இவைகளுடன் பருந்துகளின் கூட்டம், காக்கை, கருடன், பேய், புழுக்கள் இவை யாவற்றாலும் உண்ணப்படுவதற்கும், கண்டு களிக்கப்படுவதற்கும் அமைந்தது. இவ்வுடல் சேறு போன்ற மலம், நீருடன், எலும்பும் கூடியுள்ள பாத்திரம். துன்பத்துடன் கூடிய பிறப்பு வலை, இறப்பு வலை இரண்டும் முன் பின்னாகத் தொடர்ந்து நெருங்கி வரும் உடல் இது. பல உருவங்கள் இவ்வுலகில் அடைந்து, கடலின் சிறு மணலை அளவிட்டாலும் அங்கு அந்த அளவைக் காட்டிலும் மேற்பட்டு, இங்கு அழிவதற்காகவே பிறவியில் பொருந்தும் நாயினும் கீழான நான், பொன்னுலகின் நீழலில் இருந்து, (உன் மீது) அன்பு பூண்டுள்ள அடியார்களின் பக்கத்தில் இருந்து பொருந்த, இனி அருட் கிருபையை வந்து தர எப்போதும் உன்னுடைய கடமையாகும் என்னுடைய உடலும், உயிரும் உன்னுடைய ஆட்சிக்கு உட்பட்டதாகும். அடியேனுடைய தொண்டை ஏற்றுக் கொண்டு, அன்பர்களுடன் இணக்க இன்பம் பொருந்தி, என் அழகு சிறப்புற்று, உனது திருவடியில் என் மனமும் கரணங்களும் பொருந்த, உனது மயிலின் புறத்தே மகிழ்ச்சி கொண்டு தேவர்களும் பொன் மலர்களைப் பொழிய, உன்னுடைய அன்பு மகிழ்ச்சி கூடி இன்றே என்னை முன்னதாகக் கருதக் கூடாதோ? தனனதன தனனதன தந்தனந் தந்தனந் தகுகுகுகு குகுகுகுகு டங்குடங் குந் தடம் தனனதன தனனதன தந்தனந் தந்தனந் தகுகுகுகு குகுகுகுகு டங்குடங் குந்தடம் - என்று வளைந்த மேளம், முரசு, பறை, திமிலை (இவை எல்லாம் கூடி) டிங்கு டிங்குந்து என்று பேரொலி எழுப்ப, அண்டர் பேரி தடுடுடுடு டுடுடுடுடு டுண்டுடுண் தேவர்களின் பேரி வாத்தியம் தடுடுடுடு டுடுடுடுடு டுண்டுடுண் டுண்டுடுண் டிமிடிமிட டகுர திகுகு என்று ஒலிக்க, சங்கும், வெண்ணிறமுடைய ஊது கொம்பும் வலிமையாக ஊதி யுக முடிவு போல் ஒலி செய்ய, கடலும் அஞ்ச, வஞ்சகனாகிய சூரனுடைய குலம் சிதறுண்ட அழிய, கோபம் மிக உண்டாக வேலாயுதத்தைச் செலுத்தி, தேவர்கள், அந்தச் சமுத்திரம், திக்குகள், நாகர், பூமியில் உள்ள மந்தர மலையில் உள்ளோர், தாமரையில் இருக்கும் பிரமன் உலகங்கள் (இங்ஙனம்) யாவரும் மகிழ, திருமாலும், பிரமனும் அடிமை பூண்டு அபயம் தா என்று ஓலமிடும் பாடல்களைப் பாட, அழகிய புன்னகையைப் பூத்தருளி எனது தந்தையாகிய சிவபெருமானின் பக்கத்தில் உறையும் உமையவள் மனம் குழைய, ஒப்பற்ற கங்கை (உன் ஆடலைப்) பார்த்து அன்பு கொள்ளும் திரு அண்ணா மலையில் வீற்றிருக்கும் சங்கரன் வணங்கும் தலைவனே. 
பாடல் 423 - திருவருணை 
ராகம் -....., தாளம் -
தத்த தத்ததன தத்த தத்ததன
     தத்த தத்ததன தத்த தத்ததன
          தத்த தத்ததன தத்த தத்ததன ...... தந்ததான
சுக்கி லச்சுரொணி தத்தி லுற்றநளி
     னத்தி லப்புவென ரத்த முற்றிசுக
          சுக்கி லக்குளிகை யொத்து கெர்ப்பகுகை ...... வந்துகோலத் 
தொப்பை யிட்டவயி றிற்பெ ருத்துமிக
     வட்ட மிட்டுடல வெப்ப முற்றுமதி
          சொற்ற பத்தின்மறி யக்ஷ ரத்தினுடை ...... விஞ்சையாலே 
கக்க நற்புவியி லுற்ற ரற்றிமுலை
     யைக்கொ டுக்கவமுர் தைப்பு சித்துவளர்
          கைக்க சத்தியொடு ழைத்து தத்துநடை ...... அந்தமேவிக் 
கற்று வெற்றறிவு பெற்று தொக்கைமயி
     லொத்த மக்கள்மய லிற்கு ளித்துநெறி
          கட்டி யிப்படிபி றப்பி லுற்றுடல ...... மங்குவேனோ 
தெற்க ரக்கர்பவி ஷைக்கு லைத்துவிட
     ணற்கு நத்தரச ளித்து முத்திகொடு
          சித்தி ரத்திருவு ரத்த சக்கிரிதன் ...... மருகோனே 
செக்க ரத்தின்மலை முப்பு ரத்திலெரி
     யிட்ட சத்திசிவ னுற்று நத்தமிகு
          சித்த னைத்தையும்வி ழித்த சத்தியுமை ...... தந்தபாலா 
தர்க்க மிட்டசுர ரைக்கெ லித்துமலை
     யுக்கெ ழுக்கடல்கொ ளுத்தி அட்டதிசை
          தட்ட முட்டையடை யக்கொ டிப்புகையின் ...... மண்டும்வேலா 
தத்தை வித்ருமநி றத்தி முத்தணிகு
     றத்தி கற்பகவ னத்தி சித்தமவை
          தக்கு நத்தஅரு ணைக்கி ரிக்குள்மகிழ் ...... தம்பிரானே.
ஆணின் விந்துவும், பெண்ணின் ரத்தத்திலுள்ள இந்திரியமும் ஒன்றுபட்டு (சிசு உற்பத்தியாகி), தாமரை இலையில் நீர் போல ரத்தம் நிறைந்து, சுகத்தைத் தரும் சுக்கிலத்தாலாகிய ஒரு மந்திர சக்தி உள்ள மாத்திரை அளவைப் பூண்டு, கருப்பையில் தோன்றி, அழகிய தொப்பை இடுகின்ற வயிற்றில் வளர்ந்து, அந்த வயிற்றில் மிகவும் சுழன்று, உடலில் சூடு வரப் பெற்று, சொல்லப்பட்ட பத்தாவது மாதத்தில் கீழ் மேலாக விழச் செய்யவல்ல (பிரமனுடைய) எழுத்துக்களின் மந்திர சக்தியால், வெளியில் தள்ளிவிட, நல்ல இப் பூமியில் சேர்ந்து, குழந்தை அழுது (தாயின்) முலையைத் தர, முலைப்பால் அமுதை உண்டு, வளர்வதற்கு வலிமையின்மையால் முயன்று, தத்தித் தத்தி நடக்கும் நடையழகைப் பெற்று, நூல்களைப் படித்து பயனில்லாத அறிவைப் பெற்று, தோகை மயில் போன்ற பெண்களின் மோகத்தில் மூழ்கி, விதியினால் கட்டுண்டு இவ்வாறு பிறவியை அடைந்து, (இறுதியாக) உடல் அழிபட்டு இறந்து படுவேனோ? தெற்கில் இருந்த அரக்கர்களின் செருக்கை அழித்து, விபீஷணனுக்கு விரும்பத் தக்க (இலங்கை) அரசாட்சியைத் தந்து முக்தியைக் கொடுத்தவரும், மிக்க அழகிய லக்ஷ்மியை மார்பில் தரித்தவரும், சக்கரத்தை ஏந்தியவரும் ஆகிய திருமாலின் மருகனே, சம்மையான திருக்கரத்தில் மேரு மலையாகிய வில்லை ஏந்தி திரிபுரங்களில் தீ பற்றும்படிச் செய்த தேவி, சிவபெருமானின் அருகாமையில் இருந்து, மிகவும் விரும்பத்தக்க அஷ்ட சித்துக்கள்* முதலான யாவற்றையும் தரிசித்த (சித்துக்களுக்குப் பிறப்பிடமான) பார்வதி பெற்ற குழந்தையே, வாதிட்டு போருக்கு வந்த அசுரர்களை வென்று, மலைகளைப் பொடியாக்கி, ஏழு கடல்களையும் எரி இட்டு, எட்டுத் திசைகளும் தரைமட்டமாகி தவிடு பட, நெருப்பின் புகைக் கொடியுடன் விரைந்து உக்கிரத்துடன் நெருங்கும் வேலனே, கிளி போன்றவளும், பவள நிறம் உடையவளும், முத்து மாலை அணிந்தவளும் ஆகிய குறப் பெண் (வள்ளி), கற்பக மரக் காடு உள்ள பான்னுலகத்தவள் (தேவயானை) ஆகிய இருவர்களின் மனங்கள் பொருந்தி விரும்ப, திருவண்ணாமலைக்குள் மகிழும் தம்பிரானே. 
* அஷ்டமாசித்திகள் பின்வருமாறு:அணிமா - அணுவிலும் சிறிய உருவினன் ஆதல்.மகிமா - மேருவினும் பெரிய உருவினன் ஆதல்.கரிமா - ஆயுதங்களுக்கும், ஆகாயத்துக்கும், காலத்துக்கும் அப்பால் ஆதல்.லகிமா - ஆகாயகமனம், அந்தரத்தில் இருத்தல்.பிராப்தி - பர காயங்களில் புகுதல் (கூடுவிட்டு கூடுபாய்தல்).பிராகாமியம் - எல்லாவற்றிலும் நிறைந்திருத்தல்.ஈசத்துவம் - எல்லாவற்றுக்கும் நாதனாக இருத்தல்.வசித்துவம் - எல்லா இடங்களிலும் இருந்து யாவற்றையும் வசப்படுத்தல்.
பாடல் 424 - திருவருணை 
ராகம் -...; தாளம் -
தந்தத் தந்தத் தனதன தானன
     தந்தத் தந்தத் தனதன தானன
          தந்தத் தந்தத் தனதன தானன ...... தனதான
செஞ்சொற் பண்பெற் றிடுகுட மாமுலை
     கும்பத் தந்திக் குவடென வாலிய
          தெந்தப் பந்தித் தரளம தாமென ...... விடராவி 
சிந்திக் கந்தித் திடுகளை யாமுன
     தங்கத் தம்பொற் பெதுவென வோதுவ
          திண்டுப் புந்தித் திடுகனி தானுமு ...... னிதழாமோ 
மஞ்சொக் குங்கொத் தளகமெ னாமிடை
     கஞ்சத் தின்புற் றிடுதிரு வேயிள
          வஞ்சிக் கொம்பொப் பெனுமயி லேயென ...... முறையேய 
வந்தித் திந்தப் படிமட வாரொடு
     கொஞ்சிக் கெஞ்சித் தினமவர் தாடொழு
          மந்தப் புந்திக் கசடனெ நாளுன ...... தடிசேர்வேன் 
நஞ்சைக் கண்டத் திடுபவ ராரொடு
     திங்கட் பிஞ்சக் கரவணி வேணியர்
          நம்பர்ச் செம்பொற் பெயரசு ரேசனை ...... யுகிராலே 
நந்தக் கொந்திச் சொரிகுடல் சோர்வர
     நந்திக் கம்பத் தெழுநர கேசரி
          நஞ்சக் குண்டைக் கொருவழி யேதென ...... மிகநாடி 
வெஞ்சச் சிம்புட் சொருபம தானவர்
     பங்கிற் பெண்கற் புடையபெ ணாயகி
          விந்தைச் செங்கைப் பொலிசுத வேடுவர் ...... புனமீதே 
வெண்டித் தங்கித் திரிகிழ வாவதி
     துங்கத் துங்கக் கிரியரு ணாபுரி
          வெங்கட் சிங்கத் தடிமயி லேறிய ...... பெருமாளே.
(முதல் 11 வரிகள் வேசைகளை வர்ணிப்பது கூறப்படுகிறது). செம்மையான சொற்களின் தகுதியைப் பெற்றுள்ள குடம் போன்ற பருத்த மார்பகம் ஒப்பிடுங்கால் கும்ப கலசம், யானை, மலை என விளங்கியும், வெண்மை நிறம் கொண்ட பற்களின் வரிசை முத்துப் போல் விளங்கியும், துன்பத்தில் என் உயிரை எடுத்து, மணம் வீச வல்ல களை வாய்ந்தனவாய் உள்ள உன்னுடைய அங்கங்களின் அழகிய பொலிவுக்கு எதை நான் உவமையாகக் கூறுவது? திண்மையான பவளமும், தித்திப்பு உள்ள பழமும் உன் வாயிதழுக்கு நிகர் ஆகுமோ? மேகத்தை ஒக்கும் திரண்டு நிறைந்துள்ள கூந்தல் என்றெல்லாம் கூறி, நெருங்கிய தாமரையில் மகிழ்ந்து வீற்றிருக்கும் லக்ஷ்மியே, இளமை வாய்ந்த வஞ்சிக் கொடிக்கு ஒப்பான மயில் போன்றவளே, என்றெல்லாம் முறை பொருந்த வந்தனைப் பேச்சுக்கள் பேசி, இவ்வாறு விலைமாதர்களுடன் கொஞ்சியும், கெஞ்சிப் பேசியும், தினமும் அவர்களின் திருவடியைத் தொழுகின்ற மழுங்கின அறிவுடைய குற்றமுள்ளவனாகிய நான் உனது திருவடியை என்று சேர்வேன்? விஷத்தைக் கழுத்தில் தரிப்பவர், ஆத்தி மாலையோடு, இளம் பிறையையும், எலும்பையும், பாம்பையும் அணிந்துள்ள சடையினர் ஆகிய நம் சிவபெருமான், இரணியன் என்னும் பெயருள்ள அசுரனை நகத்தாலே அழிந்து போகும்படி குத்திக் கிழித்து, ரத்தம் சொரிந்து விழும் குடல் தளர்ச்சி உறும்படியாக தூணிலே தோன்றி வெளி வந்த நரசிம்ம மூர்த்தியின் வெறி நைந்து அடங்கிக் குறுகுவதற்கு வழி யாதென்று மிகவும் யோசித்து, கடுமை கொண்டவராய் சரபப் பட்சியின்* வடிவம் கொண்டவராகிய சிவபிரானின் இடப் பாகத்தில் இடம் கொண்டவளும், கற்பு நிறைந்த பெண்களின் நாயகியுமாகிய பார்வதியின் அழகிய செங்கையில் விளங்கும் குழந்தையே, வேடர்களின் தினைப் புனத்தில் களைப்பு உற்று தங்கித் திரிகின்ற கிழவனே, மிக உயர்ந்ததும், பரிசுத்தமானதுமான மலை உள்ள திருஅண்ணாமலை என்னும் ஊரில், விரும்பத்தக்க கண்களை உடைய சிங்காசனம் போன்ற மயிலின் மேல் ஏறிய பெருமாளே. 
* இரணியனை வதைத்த நரசிம்மம் (திருமால்) உக்கிரம் கொண்டு உலகங்களை வருத்தத் தொடங்கினார். தேவர்கள் முறையிட, சிவபெருமான் வீரபத்திரரை ஏவ, அவர் சரபப்பட்சியின் உருவம் எடுத்து அந்த நரசிங்கத்தைக் கீறி, அதன் தோலையும், முகத்தையும் சிவன் முன் வைத்தார். அதனால் சிவபெருமானுக்கு, சிங்க உரியும், நாரசிங்காம்பரன் என்ற பெயரும் உண்டாயின - சிவ புராணம்.
பாடல் 425 - திருவருணை 
ராகம் - தேஷ்; தாளம் - ஆதி - எடுப்பு - 1/2 இடம்
தனதன தனனாத் தனதன தனனத்
     தனதன தனனாத் தனதன தனனத்
          தனதன தனனாத் தனதன தனனத் ...... தனதான
செயசெய அருணாத் திரிசிவ யநமச்
     செயசெய அருணாத் திரிமசி வயநச்
          செயசெய அருணாத் திரிநம சிவயத் ...... திருமூலா 
செயசெய அருணாத் திரியந மசிவச்
     செயசெய அருணாத் திரிவய நமசிச்
          செயசெய அருணாத் திரிசிவ யநமஸ்த் ...... தெனமாறி 
செயசெய அருணாத் திரிதனின் விழிவைத்
     தரகர சரணாத் திரியென உருகிச்
          செயசெய குருபாக் கியமென மருவிச் ...... சுடர்தாளைச் 
சிவசிவ சரணாத் திரிசெய செயெனச்
     சரண்மிசை தொழுதேத் தியசுவை பெருகத்
          திருவடி சிவவாக் கியகட லமுதைக் ...... குடியேனோ 
செயசெய சரணாத் திரியென முநிவர்க்
     கணமிது வினைகாத் திடுமென மருவச்
          செடமுடி மலைபோற் றவுணர்க ளவியச் ...... சுடும்வேலா 
திருமுடி யடிபார்த் திடுமென இருவர்க்
     கடிதலை தெரியாப் படிநிண அருணச்
          சிவசுடர் சிகிநாட் டவனிரு செவியிற் ...... புகல்வோனே 
செயசெய சரணாத் திரியெனு மடியெற்
     கிருவினை பொடியாக் கியசுடர் வெளியிற்
          றிருநட மிதுபார்த் திடுமென மகிழ்பொற் ...... குருநாதா 
திகழ்கிளி மொழிபாற் சுவையித ழமுதக்
     குறமகள் முலைமேற் புதுமண மருவிச்
          சிவகிரி அருணாத் திரிதல மகிழ்பொற் ...... பெருமாளே.
அஜயஜெய அருணாசலா, சிவயநம,*1 அஜயஜெய அருணாசலா, மசிவயந,*2 அஜயஜெய அருணாசலா, நமசிவய*3, மூலப் பொருளே, அஜயஜெய அருணாசலா, யநமசிவ*4, அஜயஜெய அருணாசலா, வயநமசி*5, அஜயஜெய அருணாசலா, சிவயநமஸ்த்து என்று மாறி மாறிச் செபித்து, ஜெயஜெய என்று கூறி அருணாசலத்தில் கண்ணை வைத்து, ஹர ஹர திருவடி மலையே (சிவ மலையே) என்று கூறித் தியானித்து, ஜெய ஜெய என்னும் இந்த மந்திரம் எங்கள் குரு தந்த பாக்கியம் என்று என் உள்ளம் பொருந்தி, பேரொளியாக விளங்கும் திருவடியை சிவசிவ திருவடி மலையே ஜெயஜெய எனப் புகழ்ந்து, திருவடி (சிவமலை) யின் மீது வீழ்ந்து தொழுது போற்றிய இன்பம் பெருக அந்தத் திருவடியின் (ஆண்டவனது) சிவ மந்திரமாகிய பாற்கடலில் இருந்து கிடைத்த அமுதம்போன்ற இன்பரசத்தைப் பருகி மகிழேனோ? ஜெய ஜெய திருவடி மலையே என்று முனிவர்களின் கூட்டங்கள் இத் திருமலை வினையினின்றும் நம்மைக் காத்திடும் என்று கூடிப் பொருந்திட, தங்கள் உடலையும் முடியையும் கிரெளஞ்சம், ஏழு குலகிரிகள் என்னும் மலைகள் காப்பாற்றுவதாக நினைத்த அசுரர்கள் மடிந்து விழச்செய்து சுட்டெரித்த வேலாயுதனே, திருமுடியையும் திருவடியையும் கண்டு பிடியுங்கள் எனக் கூறி திருமால், பிரமன் ஆகிய இருவருக்கும் அடியும் முடியும் தெரியாதவண்ணம் நின்ற செந்நிறச் சிவ சுடராகிய நெருப்புக் கண்ணை உடைய சிவபெருமானுடைய இரண்டு காதுகளிலும் (பிரணவ மந்திரத்தை) உபதேசம் செய்தவனே, ஜெயஜெய திருவடி மலையே (சிவமலையே) எனத் துதிக்கின்ற அடியேனுக்கு, எனது (நல்வினை, தீவினை ஆகிய) இரு வினைகளையும் பொடியாக்கிய ஒளி வெளியில் திருநடனம் இதோ பார்ப்பாயாக எனக் கூறி மகிழ்ந்திடும் அழகிய குரு நாதனே, விளங்கும் கிளி மொழி போலவும், பாலின் சுவை போலவும், வாயிதழின் ஊறல் அமுதம் போலவும் அமைந்த குறப் பெண்ணாகிய வள்ளியின் மார்பின் மீது உள்ள புது மணத்தைச் சுகித்து, சிவ மலையாகிய அருணாசலத் தலத்தில் மகிழ்கின்ற அழகிய பெருமாளே. 
*1 'சிவயநம' என்பது வேதாகமப்படியான பஞ்சாட்சரம்.
*2 இந்த மந்திரத்தில், கடைசி அட்சரம் முதலாக வந்தால் வருவது 'மசிவயந'.
*3 இந்த மந்திரத்தில், கடைசி அட்சரம் முதலாக வந்தால் வருவது 'நமசிவய'.
*4 இந்த மந்திரத்தில், கடைசி அட்சரம் முதலாக வந்தால் வருவது 'யநமசிவ'.
*5 இந்த மந்திரத்தில், கடைசி அட்சரம் முதலாக வந்தால் வருவது 'வயநமசி'.மீண்டும் கடைசி அட்சரத்தை முதலாக வைத்தாம் 'சிவயநம' என்ற பஞ்சாட்சர சக்கரம் தொடர்ந்து மாறி மாறி வரும்.
பாடல் 426 - திருவருணை 
ராகம் - ஆனந்த பைரவி ; தாளம் - அங்கதாளம் - 9 
தகதிமி-2, தகதகிட-2 1/2 
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தனன தனந்தனந் தான தத்த தந்த
     தனன தனந்தனந் தான தத்த தந்த
          தனன தனந்தனந் தான தத்த தந்த
          ...... தனதனத் தனதான
தமர குரங்களுங் காரி ருட்பி ழம்பு
     மெழுகிய அங்கமும் பார்வை யிற்கொ ளுந்து
          தழலுமிழ் கண்களுங் காள மொத்த கொம்பு
          ...... முளகதக் கடமாமேல் 
தனிவரு மந்தகன் பாசம் விட்டெ றிந்து
     அடவரு மென்றுசிந் தாகு லத்தி ருந்து
          தமரழ மைந்தருஞ் சோக முற்றி ரங்க
          ...... மரணபக் குவமாநாள் 
கமல முகங்களுங் கோம ளத்தி லங்கு
     நகையு நெடுங்கணுங் காதி னிற்று லங்கு
          கனக குதம்பையுந் தோடும் வஜ்ர அங்க
          ...... தமுமடற் சுடர்வேலுங் 
கடிதுல கெங்கணுந் தாடி யிட்டு வந்த
     மயிலுமி லங்கலங் கார பொற்ச தங்கை
          கழலொலி தண்டையங் காலு மொக்க வந்து
          ...... வரமெனக் கருள்கூர்வாய் 
இமகிரி வந்தபொன் பாவை பச்சை வஞ்சி
     அகில தலம்பெறும் பூவை சத்தி யம்பை
          யிளமுலை யின்செழும் பால்கு டுத்தி லங்கு
          ...... மியல்நிமிர்த் திடுவோனே 
இறைவ ரிறைஞ்சநின் றாக மப்ர சங்க
     முரைசெய் திடும்ப்ரசண் டாவி சித்து நின்ற
          ரணமுக துங்கவெஞ் சூரு டற்பி ளந்த
          ...... அயிலுடைக் கதிர்வேலா 
அமண ரடங்கலுங் கூட லிற்றி ரண்டு
     கழுவி லுதைந்துதைந் தேற விட்டு நின்ற
          அபிநவ துங்ககங் காந திக்கு மைந்த
          ...... அடியவர்க் கெளியோனே 
அமரர் வணங்குகந் தாகு றத்தி கொங்கை
     தனில்முழு குங்கடம் பாமி குத்த செஞ்சொ
          லருணை நெடுந்தடங் கோபு ரத்த மர்ந்த
          ...... அறுமுகப் பெருமாளே.
ஒலி செய்கின்ற (கால்) குளம்புகளும், கரிய நிறமுடைய இருளின் திரட்சி பூசியது போன்ற உடலும், பார்க்கும் பார்வையில் எரிகின்ற நெருப்பைக் கக்கும் கண்களும், ஊது கொம்பு போன்ற நீண்ட கொம்புகளும் உள்ள, கோபத்தை உடைய மத யானையைப்போன்ற எருமையின் மீது, தனியனாக வரும் யமன் பாசக் கயிற்றை வீசி எறிந்து, கொல்ல வருவான் என்னும் மனக் கவலையில் இருந்து சுற்றத்தார்கள் அழவும், எனது மக்களும் கவலை உற்று வருந்தவும், மரணம் குறுகிக் கூடும் நாளில், தாமரை போன்ற திருமுகங்களும், அவற்றில் அழகுடன் விளங்குகின்ற புன்சிரிப்பும், நீண்ட கண்களும், காதில் விளங்கும் பொன்னாலான காதணியும், தோடும், வைர ரத்தினத்தால் ஆகிய தோள் அணியாகிய வாகுவலயமும், வெற்றி பொருந்திய ஒளி வீசும் வேலாயுதமும், விரைவாக உலக முழுதும் பயணம் சென்று வந்த மயிலும், விளங்கும் அலங்காரமாய் உள்ள பொன்னாலான சதங்கை, வீரக் கழல்கள், ஒலிக்கும் தண்டைகள் அணிந்த திருவடிகளும், இவை யாவும் ஒன்று படக் கூடி வர, நீ வரத்தை எனக்கு அருள் புரிவாயாக. இமகிரியின் அரசன் பெற்ற அழகிய பதுமையாகிய பார்வதி, பச்சை நிறம் கொண்ட இளங் கொடி, அண்டங்களை எல்லாம் பெற்ற பூவை, சக்தி அம்பை எனப்படும் உமா தேவியின் இளமையான மார்பிலிருந்து தேர்ந்த ஞானமாகிய பாலைக் குடித்து விளங்குகின்ற (சம்பந்தராக வந்து), (பாண்டியனுக்கு) இயற்கையாக அமைந்த கூனை நிமிர்த்தியவனே. சிவபெருமான் வணங்கிக் கேட்க, அவர் முன் நின்று ஆகம ஞான உபதேசம் செய்த வீரனே, பேரணிகளை இறுகக் கட்டி போர் முனைக்கு வந்து எதிர்த்த கொடிய சூரனுடைய உடலைப் பிளந்த வேலாயுதத்தை உடைய ஒளி வீசும் வேலனே, சமணர்கள் அனைவரும் மதுரையில் கூட்டமாக (வாதிட்டுத் தோற்றபின்) ஒவ்வொருவரும் கழுமுனையில் காலூன்றி உதைத்து ஏறி இறக்கும்படி விட்டு நின்ற புதுமைப் பிரானே, பரிசுத்தமான கங்கைநதிக்கு மகனே, அடியவர்களுக்கு எளிமையானவனே, தேவர்கள் தொழும் கந்தனே, குறப் பெண்ணாகிய வள்ளியின் மார்புகளில் முழுகிய, கடப்ப மாலை அணிந்தவனே, மிகவும் வல்ல புகழ் விளங்கும் திருவண்ணாமலையின் பெரிய கோபுரத்தில் வீற்றிருக்கும் ஆறுமுகப் பெருமாளே. 
பாடல் 427 - திருவருணை 
ராகம் -....; தாளம் -
தனனாதன தனனாதன தாந்தன தாந்தனதந்
     தனனாதன தனனாதன தாந்தன தாந்தனதந்
          தனனாதன தனனாதன தாந்தன தாந்தனதந் ...... தனதான
தமிழோதிய குயிலோமயி லாண்டலை யாம்புறவங்
     கிளிகாடையி னணிலேரளி யாங்குரல் வாய்ந்ததிசெந்
          தகுமாமிட றொலியாரித ழாஞ்சுளை தேன்கனியின் ...... சுவைசேருந்
தனபாரமு மலையாமென வோங்கிட மாம்பொறிசிந்
     திடவேல்விழி நுதலோசிலை வான்பிறை மாந்துளிரின்
          சரிரார்குழ லிருளாநகை யோங்கிய வான்கதிரின் ...... சுடர்பாயக் 
குமிழ்நாசியின் முகமோமதி யாங்குளிர் சேங்கமலஞ்
     சரிதோடிணை செவியாடுச லாங்கள பூங்கமுகங்
          கொடிநூலிடை யுடையாரன மாம்ப்ரியர் மாண்புரிமின் ...... கொடிமாதர் 
குணமோடம ளியினாடினு மோங்கிய பூங்கமலஞ்
     சரணூபுர குரலோசையு மேந்திடு மாண்டலையின்
          கொடியோடெழு தரிதாம்வடி வோங்கிய பாங்கையுமன் ...... தகையேனே 
திமிதோதிமி திமிதோதிமி தாங்கண தீங்கணதொந்
     தகுதோதகு தகுதோதகு டாங்குட தீங்கடதொந்
          திகுடோடிமி டிமிடோடிமி டாங்குட டீந்தகமென் ...... றியல்பேரி 
திசைமூடுக கடலேழ்பொடி யாம்படி யோங்கியவெங்
     கரிதேர்பரி யசுரார்கள மாண்டிட நீண்டரவின்
          சிரமீள்பட குவடோதுகள் வான்பெற வாங்கியவண் ...... கதிர்வேலா 
கமழ்மாவிதழ் சடையாரடி யேன்துயர் தீர்ந்திடவெண்
     தழல்மாபொடி யருள்வோரடல் மான்துடி தாங்கியவண்
          கரர்மாடரு ளுமையாளெமை யீன்றவ ளீன்றருள்மென் ...... குரவோனே 
கடையேனிரு வினைநோய்மல மாண்டிட தீண்டியவொண்
     சுகமோகினி வளிநாயகி பாங்கனெ னாம்பகர்மின்
          கலைநூலுடை முருகாவழ லோங்கிய வோங்கலின்வண் ...... பெருமாளே.
தமிழின் இனிமைக் குரலைக் காட்டும் குயிலோ, மயிலோ, கோழி தானோ, புறாவோ, கிளியோ, காடையோ, இனிமையான அன்றில் பறவையோ, அழகிய வண்டோ என்னும்படி குரலை உடைய, மிக்க செம்மையான, தக்கதான, சிறந்த கண்டத்து ஒலியை (புட்குரலை) உடைய விலைமாதர்களின் வாயிதழ் பலாச் சுளை, தேன், பழம் இவைகளின் சுவை சேர்ந்ததாகும். மார்பகப் பாரங்களும் மலை என்னும்படி பருத்து ஓங்க, அழகிய தேமல் அங்கும் இங்கும் சிதறிட, விழி வேல் தானோ, நெற்றி வில்லோ, சிறந்த பிறையோ, சா£ரம் மாந்துளிர் போன்றதோ, கூந்தல் இருளோ? பற்கள் விளங்கும் சிறந்த சூரியனின் பாயும் ஒளியோ? மூக்கு குமிழம்பூவோ? முகம் சந்திரனோ? குளிர்ந்த செந்தாமரையோ? பொருத்தமாக உள்ள தோடு விளங்கும் காதுகள் ஆடுகின்ற ஊஞ்சலோ? கழுத்து மென்மையான கமுகோ? இடுப்பு கொடியோ, நூலோ? எனக் கொண்டுள்ளவர்கள் அன்னம் போல்பவர். அன்பு காட்டுபவர்கள். பெருமை வாய்ந்த மின்னல் கொடி போன்றவர் (ஆகிய) பொது மகளிர். அவர்களது குணத்திலும் ஈடுபட்டு படுக்கையில் கலவி புரிந்தாலும், விளங்குகின்ற அழகிய தாமரை போன்ற உனது திருவடியில் உள்ள சிலம்பின ஒலியும், உன் கையில் ஏந்திய கோழிக் கொடியையும், எழுதுவதற்கு அரிதான ஒளி நிறைந்த அழகும் மிகுந்த அளவுக்கு என் நினைவில் வருவதை நான் சிறிதேனும் தடை செய்யேன். திமிதோதிமி திமிதோதிமி தாங்கண தீங்கணதொந் தகுதோதகு தகுதோதகு டாங்குட தீங்கடதொந் திகுடோடிமி டிமிடோடிமி டாங்குட டீந்தக இவ்வாறு ஒலிக்கும் பேரி முரசின் ஓசை திசைகள் எல்லாம் மூடும் படியும், ஏழு கடல்களும் பொடியாகும்படியும், பேரொலியுடன் வந்த கொடிய யானைகளும், தேர்களும், குதிரைகளும், அசுரர்களும் இறந்துபட, பெரிய ஆதிசேஷனாகிய பாம்பின் தலை பூ பாரத்திலிருந்து மீட்சி பெற, மலைகளின் பொடி ஆகாயத்தை அளாவும்படி செலுத்திய வளமும் ஒளியும் வாய்ந்த வேலாயுதனே, மணம் வீசும் அழகிய கொன்றையைச் சூடிய சடையை உடைய சிவபெருமான், அடியேனுடைய துயரங்கள் நீங்க வெண்ணிறமான நெருப்பால் தோன்றிய பெருமை வாய்ந்த பொடியாகிய திருநீற்றை அருளியவர், வலிமை பொருந்திய மான், உடுக்கை ஆகியவற்றைத் தாங்கிய வளப்பம் பொருந்திய கைகளை உடையவர் பக்கத்தில் இருந்து அருளும் உமா தேவி, எம்மைப் பெற்றவள் பெற்றருளிய அமைதி வாய்ந்த குருவே, கீழோனாகிய என்னுடைய (நல்வினை, தீவினை ஆகிய) இரு வினைகளும், நோயும், (ஆணவம், கன்மம், மாயை என்ற) மும்மலங்களும் அழிந்து போகும்படி தொட்டு தீ¨க்ஷ செய்தவனும், ஒள்ளிய சுக மோகினியாகிய வள்ளி நாயகிக்கு கணவன் என்று சொல்லப்படுகின்றவனும், விளங்கும் கலை நூல்களில் வல்லவனுமான முருகனே, நெருப்பு உருவான மலையாகிய திரு அண்ணாமலையில் வளப்பம் பொருந்தி வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 428 - திருவருணை 
ராகம் - ....; தாளம் -
தனன தனத்தத் தனந்த தனன தனத்தத் தனந்த
     தனன தனத்தத் தனந்த ...... தனதான
தலையை மழித்துச் சிவந்த துணியை யரைக்குப் புனைந்து
     சடையை வளர்த்துப் புரிந்து ...... புலியாடை 
சதிரொடு வப்பப் புனைந்து விரகொடு கற்கப் புகுந்து
     தவமொரு சத்தத் தறிந்து ...... திருநீறு 
கலையை மிகுத்திட் டணிந்து கரண வலைக்குட் புகுந்து
     கதறு நிலைக்கைக் கமர்ந்த ...... எழிலோடே 
கனக மியற்றித் திரிந்து துவளு மெனைச்சற் றறிந்து
     கவலை யொழித்தற் கிரங்கி ...... யருள்வாயே 
அலைகட லிற்கொக் கரிந்து மருவரை யைப்பொட் டெறிந்து
     மமரு லகத்திற் புகுந்து ...... முயரானை 
அருளொடு கைப்பற்றி வந்து மருண கிரிப்புக் கிருந்து
     மறிவு ளபத்தர்க் கிரங்கு ...... மிளையோனே 
மலையை வளைத்துப் பறந்து மருவு புரத்தைச் சிவந்து
     வறிது நகைத்திட் டிருந்த ...... சிவனார்தம் 
மதலை புனத்திற் புகுந்து நரவடி வுற்றுத் திரிந்து
     மறம யிலைச்சுற் றிவந்த ...... பெருமாளே.
தலையை மொட்டை அடித்தும், காவித் துணியை இடுப்பில் அணிந்தும், சடையை வளர்த்துக் கொண்டும், புலியின் தோல் ஆடையை பெருமையாக மகிழ்ச்சியோடு அணிந்தும், சாமர்த்தியமாக புதுப்புது கலைகளைக் கற்கத் தொடங்கியும், தவம் என்பதை அந்தச் சொல்லின் சப்தமளவே அறிந்தும் (சிறிதும் தவநிலை இல்லாமல்), விபூதியை உடல் முழுக்க மிகுத்துப் பூசியும், இந்திரியங்கள் விரித்த வலைக்குள் வேண்டுமென்றே அகப்பட்டும், கதறி வேதனைப்படும் நிலைக்கு உண்டான அழகுடனே (பொன் வேண்டி) இரச வாதத்தால் பொன்னை ஆக்கித் திரிந்து சோர்வடையும் என்னைக் கொஞ்சம் கவனித்து, என் கவலையை ஒழிக்க வேண்டி என் மேல் இரக்கம் கொண்டு அருள் புரிவாயாக. அலை வீசும் கடலில் மாமரமாகி நின்ற சூரனைப் பிளந்தும், அரிய கிரெளஞ்ச மலையைத் தூளாக்கியும், தேவர்கள் உலகத்தில் புகுந்தும், பெருமை வாய்ந்த தேவயானையை அருள் பாலித்து அவளைக் கைப்பற்றியும், திருவண்ணாமலையில் புகுந்து வீற்றிருந்தும், ஞானம் உள்ள பக்தர்களுக்கு இரங்கி அருள் செய்யும் இளையோனே, (மேரு) மலையை வில்லாக வளைத்து, பறக்கின்ற சக்தி வாய்ந்த திரிபுரங்களின் மீது கோபித்து, சற்றே சிரித்தவண்ணம் இருந்து (திரிபுரத்தை எரித்திட்ட) சிவபெருமானுடைய குழந்தையே, தினைப் புனத்தில் புகுந்து, அங்கே மனித உருவம் பெற்று, காதலனாகத் திரிந்து வேடர்கள் வளர்த்த மயில் போன்ற பெண்ணான வள்ளியை வளைத்து அபகரித்துக் கொண்டுவந்த பெருமாளே. 
பாடல் 429 - திருவருணை 
ராகம் - ....; தாளம் -
தனத்த தானன தத்தன தத்தன
     தனத்த தானன தத்தன தத்தன
          தனத்த தானன தத்தன தத்தன ...... தனதான
திருட்டு வாணிப விக்ரம துட்டிகள்
     மதத்த ரூபிகள் துர்ச்சன பொட்டிகள்
          செகத்து நீலிகள் கெட்டப ரத்தைகள் ...... மிகநாணார் 
சிலைக்கு நேர்புரு வப்பெரு நெற்றிக
     ளெடுப்பு மார்பிக ளெச்சிலு தட்டிகள்
          சிரித்து மாநுடர் சித்தமு ருக்கிகள் ...... விழியாலே 
வெருட்டி மேல்விழு பப்பர மட்டைகள்
     மிகுத்த பாவிகள் வட்டமு கத்தினை
          மினுக்கி யோலைகள் பித்தளை யிற்பணி ...... மிகநீறால் 
விளக்கி யேகுழை யிட்டபு ரட்டிகள்
     தமக்கு மால்கொடு நிற்கும ருட்டனை
          விடுத்து நானொரு மித்திரு பொற்கழல் ...... பணிவேனோ 
தரித்த தோகண தக்கண செக்கண
     குகுக்கு கூகுகு குக்குகு குக்குகு
          தகுத்த தீதிகு தக்குகு திக்குகு ...... எனதாளந் 
தடக்கை தாளமு மிட்டியல் மத்தள
     மிடக்கை தாளமு மொக்கந டித்தொளி
          தரித்த கூளிகள் தத்திமி தித்தென ...... கணபூதம் 
அருக்க னாரொளி யிற்ப்ரபை யுற்றிடு
     மிரத்ந மாமுடி யைக்கொடு கக்கழ
          லடக்கை யாடிநி ணத்தையெ டுத்துண ...... அறவேதான் 
அரக்கர் சேனைகள் பட்டுவி ழச்செறி
     திருக்கை வேல்தனை விட்டரு ளிப்பொரும்
          அருட்கு காவரு ணைப்பதி யுற்றருள் ...... பெருமாளே.
வியாபாரம் செய்வதில் சாமர்த்தியம் கொண்ட துஷ்டைகள். ஆணவ சொரூபம் உடையவர்கள். தீய தன்மை கொண்ட பொது மகளிர். இவ்வுலகில் மிக்க தந்திரவாதிகள். கெட்டுப் போன வேசியர்கள். மிகவும் நாணம் அற்றவர்கள். வில்லைப் போன்ற புருவத்தையும் சிறந்த நெற்றியையும் முன்னுக்கு விளங்கும் மார்பையும் உடையவர்கள். எச்சில் நிறைந்த உதட்டை உடையவர்கள். சிரிப்பினாலேயே மனிதர்களுடைய மனதை உருக்குபவர்கள். கண்களாலே விரட்டி, மேலே விழுகின்ற கூத்தாடும் பயனிலிகள். மிக்க பாபம் செய்தவர்கள். வட்டமான முகத்தை மினுக்கி காதோலைகளாயுள்ள பித்தளையில் செய்யப்பட்ட ஆபரணங்களை அதிகமான சாம்பலிட்டு விளக்கம் பெறச் செய்து குண்டலங்களை அணிந்தவர்கள். மாறுபட்ட பேச்சை உடையவர்கள். இத்தகையோர்கள் மீது காதல் கொண்டு நிற்கும் மயக்கத்தை விட்டு, நான் மனம் ஒருமைப்பட்டு உனது அழகிய திருவடிகளைப் பணிவேனோ? தரித்த தோகண தக்கண செக்கண குகுக்கு கூகுகு குக்குகு குக்குகு தகுத்த தீதிகு தக்குகு திக்குகு இந்த வகையான இசைத் தாளங்களில் பெரிய கைகளால் தாளமும் இட்டு, பொருந்திய மத்தளம், இடக்கை, தாளம் இவை எல்லாம் ஒருங்கே ஒலிக்க, அதற்குத் தகுந்தவாறு நடனம் செய்து ஒளி கொண்ட பேய்கள், தத்திமி தித்தெனக் கூட்டமான பூதங்கள் சூரியனுடைய ஒளி போல பிரகாசிக்கும் ரத்தினத்தால் ஆன கி¡£டங்களைக் கொண்டு (அவை சிந்தும்படியாக) கழற்சிக் காய்களாகக் கொண்டு விளையாடி மாமிசங்களை எடுத்து உண்ணும்படி, அடியோடு அற்றுப் போய் அரக்கருடைய சேனைகள் அழிந்து விழ திருக்கையில் கொண்டுள்ள வோலாயுதத்தைச் செலுத்தி அருளி, சண்டை செய்தருளிய குகனே, திருவண்ணாமலை நகரில் வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 430 - திருவருணை 
ராகம் - ..........; தாளம் -
தானன தான தத்த தானன தான தத்த
     தானன தான தத்த ...... தனதான
தேதென வாச முற்ற கீதவி நோத மெச்சு
     தேனளி சூழ மொய்த்த ...... மலராலே 
சீறும ராவெ யிற்றி லூறிய காளம் விட்ட
     சீதநி லாவெ றிக்கு ...... மனலாலே 
போதனை நீதி யற்ற வேதனை வாளி தொட்ட
     போர்மத ராஜ னுக்கு ...... மழியாதே 
போகமெ லாநி றைத்து மோகவி டாய்மி குத்த
     பூவையை நீய ணைக்க ...... வரவேணும் 
மாதினை வேணி வைத்த நாதனு மோது பச்சை
     மாயனு மாத ரிக்கு ...... மயில்வீரா 
வானவர் சேனை முற்றும் வாழம ராப திக்குள்
     வாரண மான தத்தை ...... மணவாளா 
மேதினி யோர்த ழைக்க வேயரு ணாச லத்து
     வீதியின் மேவி நிற்கு ...... முருகோனே 
மேருவை நீறெ ழுப்பி நான்முக னார்ப தத்தில்
     வேலடை யாள மிட்ட ...... பெருமாளே.
ஒளி உடையதாய், நறுமணம் கொண்டதாய், விநோதமான இசையை விரும்பும் தேனீக்கள் சூழ்ந்து மொய்ப்பதான பூக்களாலும், கோபித்து எழும் பாம்பின் பற்களில் ஊறிய விஷத்தைக் கக்குகின்ற குளிர்ந்த நிலா வீசும் கதிர்களின் நெருப்பாலும், தாமரைப்பூவில் வீற்றிருக்கும் நீதி* இல்லாத வேத நாயகனான பிரமனின் மீது தனது மலர் அம்புகளை ஏவிய, போரில் வல்ல மன்மத ராஜனாலும் அழிவுறாமல், பலவித இன்பங்களையும் நிறையத் தந்து, (உன் மீது) காதல் ஆசை மிக்குள்ள இந்தப் பெண்ணை நீ அணைக்க வர வேண்டும். கங்காதேவியை சடையில் தரித்த தலைவனான சிவபெருமானும், போற்றப்படுகின்ற மரகதப் பச்சை நிறம் கொண்ட திருமாலும் விரும்புகின்ற வேலாயுத வீரனே, தேவர்களுடைய சேனை எல்லாம் சூழ்கின்ற இந்திரனுடைய தலைநகர் அமராவதியில் (ஐராவதம் என்னும்) யானையால் வளர்க்கப்பட்ட கிளி போன்ற தேவயானைக்கு கணவனே, உலகத்தில் உள்ளவர்கள் செழிப்புற வாழ திருவண்ணாமலையின் தெருக்களில் விரும்பி வீற்றிருக்கும் முருகனே, மேரு மலையை பொடியாக்கி, பிரமனுடைய காலில் வேல் கொண்டு விலங்கிட்ட பெருமாளே. 
* நீதியற்ற வேதன் - தான் படைத்த திலோத்தமை மீது காதல் கொண்டு, அவளைப் பார்க்க அந்தத் திசையின் பக்கம் தனக்கு ஒரு முகத்தைப் படைத்துக் கொண்டான். ஆதலால் பிரமன் நீதி அற்றவன் ஆனான்.இப்பாட்டு அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவிக்காக பாடியது.மலர்கள், மன்மதன், மலர்க் கணைகள், சந்திரன் - இவை தலைவியின் பிரிவுத் துயரைக் கூட்டுவன.
பாடல் 431 - திருவருணை 
ராகம் - ....; தாளம் -
தான தத்த தந்த தான தத்த தந்த
     தான தத்த தந்த ...... தனதான
தோத கப்பெ ரும்ப யோத ரத்தி யங்கு
     தோகை யர்க்கு நெஞ்ச ...... மழியாதே 
சூலை வெப்ப டர்ந்த வாத பித்த மென்று
     சூழ்பி ணிக்க ணங்க ...... ளணுகாதே 
பாத கச்ச மன்தன் மேதி யிற்பு குந்து
     பாசம் விட்டெ றிந்து ...... பிடியாதே 
பாவ லற்கி ரங்கி நாவ லர்க்கி சைந்த
     பாடல் மிக்க செஞ்சொல் ...... தரவேணும் 
வேத மிக்க விந்து நாத மெய்க்க டம்ப
     வீர பத்ர கந்த ...... முருகோனே 
மேரு வைப்பி ளந்து சூர னைக்க டிந்து
     வேலை யிற்றொ ளைந்த ...... கதிர்வேலா 
கோதை பொற்கு றிஞ்சி மாது கச்ச ணிந்த
     கோம ளக்கு ரும்பை ...... புணர்வோனே 
கோல முற்றி லங்கு சோண வெற்பு யர்ந்த
     கோபு ரத்த மர்ந்த ...... பெருமாளே.
மன நோயைத் தரும் பெரிய மார்பகங்களைக் கொண்டு நடமாடும் விலைமாதர்கள் பொருட்டு என் மனம் அழிவுறாமல், சூலை என்னும் கொடிய வயிற்று நோய், சுரம், மிக்க வாத நோய், பித்த நோய் என்னும் பெயருடன் சூழ்கின்ற நோய்க் கூட்டங்கள் என்னைப் பீடிக்காமல், பாதகனாகிய யமன் தன் எருமைக் கடா வாகனத்தின் மீது வந்து என்னைப் பாசக் கயிற்றை வீசி என்னுயிரைப் பிடியாமல், நக்கீரருக்கு* இரக்கம் காட்டிய தேவனே, புலவர்கள் பாராட்டும் நல்ல பாடல்களையும், செவ்விய சொற்களையும் எனக்குத் தந்து அருள வேண்டும். வேதங்களால் பாராட்டப்பட்ட விந்து, நாதம் (லிங்கம், சிவசக்திப் பீடம்) எனப்படும் மூலப் பொருளே, கடம்ப மாலை அணிந்தவனே, வீரனே, அழகனே, கந்தனே, முருகோனே, மேருவைப் போன்ற கிரெளஞ்சத்தைப்) பிளந்து, சூரனை அழித்து, கடலில் குளித்தெழுந்த ஒளி வீசும் வேலாயுதனே, அழகிய குறிஞ்சிநிலப் பெண்ணாகிய வள்ளியின் கச்சணிந்த இளம் குரும்பை போன்ற மார்பகங்களை அணைந்தவனே, அழகு நிறைந்து விளங்கும் சோணகிரி என்னும் திரு அண்ணாமலையில் உயர்ந்த கோபுரத்தின் மீது வீற்றிருக்கும் பெருமாளே. 
* நக்கீரர் சிறையிடப்பட்டு, பூதத்தால் துன்புறுத்தப்பட்டபோது, அவரது படைப்பாகிய திருமுருகாற்றுப்படையை (சங்க இலக்கியங்களுள் தலையானது) கேட்டு மகிழ்ந்து அவரை முருகன் சிறை விடுவித்தான்.
பாடல் 432 - திருவருணை 
ராகம் - ...; தாளம் -
தான தனதன தத்தம் ...... தனதான
பாண மலரது தைக்கும் ...... படியாலே 
பாவி யிளமதி கக்குங் ...... கனலாலே 
நாண மழிய வுரைக்குங் ...... குயிலாலே 
நானு மயலி லிளைக்குந் ...... தரமோதான் 
சேணி லரிவை யணைக்குந் ...... திருமார்பா 
தேவர் மகுட மணக்குங் ...... கழல்வீரா 
காண அருணையில் நிற்குங் ...... கதிர்வேலா 
காலன் முதுகை விரிக்கும் ...... பெருமாளே.
மன்மதனது மலர்ப் பாணங்கள் தைக்கும் காரணத்திலாலும், பாவி இளம் பிறை வீசுகின்ற நெருப்பாலும், (என்) மானத்தைக் கெடுக்கும் வகையில் கூவுகின்ற குயிலாலும், நானும் காம மயக்கத்தால் இளைத்துப் போதல் நியாயமோ தான்? விண்ணுலகத்தில் இருக்கும் பெண்ணைத் (தேவயானையை) அணைக்கும் அழகிய மார்பனே, தேவர்கள் அடிபணிவதால், அவர்களுடைய மகுடங்களின் நறுமணம் வீசும் திருக் கழலை உடைய வீரனே, யாவரும் காணும்படி திருவண்ணா மலையில் வீற்றிருக்கும் ஒளி வீசும் வேலனே, யமனுடைய முதுகு விரியும்படி அவனை விரட்டி விலக்கும் பெருமாளே. 
இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் அமைந்தது.நிலவு, மன்மதன், மலர் அம்பு, குயிலின் ஓசை முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.
பாடல் 433 - திருவருணை 
ராகம் - ...; தாளம் -
தானா தானா தானா தானா
     தானா தானத் ...... தனதான
பாலாய் நூலாய் தேனாய் நீளாய்
     பாகாய் வாய்சொற் ...... கொடியார்தாம் 
பாடா வாடா வேடா வாலே
     பாடா யீடற் ...... றிடைபீறுந் 
தோலா லேகா லாலே யூனா
     லேசூழ் பாசக் ...... குடில்மாசு 
தோயா மாயா வோயா நோயால்
     சோர்வாய் மாளக் ...... கடவேனோ 
ஞாலா மேலா வேதா போதா
     நாதா சோதிக் ...... கிரியோனே 
ஞானா சாரா வானாள் கோனே
     நானா வேதப் ...... பொருளோனே 
வேலா பாலா சீலா காரா
     வேளே வேடக் ...... கொடிகோவே 
வீரா தாரா ஆறா தாரா
     வீரா வீரப் ...... பெருமாளே.
பால் போன்றதும், (இனிய தமிழ்) நூல் போன்றதும், தேன் போன்றதும், நீண்டு கம்பிப் பதமா¡ய் வருகின்ற காய்ச்சின வெல்லம் போன்றதுமாய் இனிக்கும் வாய்ச் சொல்லை உடைய கொடி போன்ற விலைமாதர்கள் பாடியும், ஆடியும் விருப்பத்தைத் தெரிவிக்கும் வலிமையினாலே காமநோய் உற்றவனாய் என் தகுதி தொலைந்துபோய் நின்று, வாழ்க்கையின் இடையிலேயே கிழிபட்டுப் போகும் தோலாலும், காற்றினாலும், மாமிசத்தாலும் சூழப்பட்டுள்ளதும், பற்றுகளுக்கு இடமானதுமான குடிசையாகிய இந்த உடல் குற்றங்கள் தோய்ந்தும், ஒளி மழுங்கியும், முடிவில்லாத நோயினால் தளர்ச்சி உற்றும் இறந்துபடக் கடவேனோ? பூமியில் மேம்பட்டு நிற்பவனே, பிரமனுக்கு போதித்தவனே, நாதனே, ஜோதி மலையாகிய அருணாசலப் பிரானே, ஞான மார்க்கத்தில் முதல்வனே, வானுலகை ஆள்கின்ற தலைவனே, பல வகையான வேதங்களுக்கும் உட் பொருளானவனே, வேலனே, பரமசிவ பாலனே, பரிசுத்த வடிவனே, செவ்வேளே, கொடி போன்ற வேடப் பெண் வள்ளியின் மணவாளனே, வீரத்துக்கு ஆதாரமானவனே, மூலாதாரம் முதலிய ஆறு ஆதாரங்களுக்கும் உரியவனே, வீரனே, வீரமுள்ள பெருமாளே. 
* ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம்
பாடல் 434 - திருவருணை 
ராகம் - ....; தாளம் -
தனதன தனந்த தான தனதன தனந்த தான
     தனதன தனந்த தான ...... தனதான
புணர்முலை மடந்தை மாதர் வலையினி லுழன்ற நேக
     பொறியுட லிறந்து போன ...... தளவேதுன் 
புகழ்மறை யறிந்து கூறு மினியென தகம்பொ னாவி
     பொருளென நினைந்து நாயெ ...... னிடர்தீர 
மணமுணர் மடந்தை மாரொ டொளிர்திரு முகங்க ளாறு
     மணிகிரி யிடங்கொள் பாநு ...... வெயிலாசை 
வரிபர வநந்த கோடி முநிவர்கள் புகழ்ந்து போத
     மயில்மிசை மகிழ்ந்து நாடி ...... வரவேணும் 
பணைமுலை யரம்பை மார்கள் குயில்கிளி யினங்கள் போல
     பரிவுகொ டுகந்து வேத ...... மதுகூறப் 
பறைமுர சநந்த பேரி முறைமுறை ததும்ப நீசர்
     படைகட லிறந்து போக ...... விடும்வேலா 
அணிசுக நரம்பு வீணை குயில்புற வினங்கள் போல
     அமளியில் களங்க ளோசை ...... வளர்மாது 
அரிமகள் மணங்கொ டேகி யெனதிட ரெரிந்து போக
     அருணையின் விலங்கல் மேவு ...... பெருமாளே.
நெருங்கிச் சேர்ந்து அணையப்படும் மார்பகங்களை உடைய பெண்களின் வலையில் அலைபட்டு, மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து பொறிகளைக் கொண்ட உடல் மாய்ந்து போனவைகளுக்கு ஏதேனும் கணக்கு உண்டோ? உனது புகழைச் சொல்லும் வேதாகம நூல்களைக் கற்றறிந்து, இனிமேல் என்னுடைய உள்ளம், பொருள், உயிர் ஆகிய இம் மூன்றையும் ஒரு பொருட்டாகக் கருதும் அடியேனுடைய வருத்தங்கள் ஒழிய, உன்னைக் கூடுதலையே தமது உணர்ச்சியாகக் கொண்ட தேவயானை, வள்ளியுடன், விளங்குகின்ற ஆறு திரு முகங்களும், ரத்தின மணி கி¡£டங்களும் தம்முள் கொண்ட சூரிய ஒளி திக்குகளில் எல்லாம் கிரணங்களைப் பரவி வீச, கணக்கில்லாத கோடி முநிவர்கள் புகழ்ந்து வர மயிலின் மேல் மகிழ்ச்சியுடன் என்னை விரும்பி நீ வர வேண்டும். பருத்த மார்பகங்களை உடைய தேவ மாதர்கள் குயில், கிளி இவைகளின் கூட்டங்கள் போல அன்புடன் மகிழ்ந்து வேதங்களைக் கூறவும், பறையும், முரசும், கணக்கற்ற பேரிகை வகைகளும் முறைப்படி பேரொலி எழுப்பவும், இழிந்தவர்களாகிய அசுரர்களுடைய சேனைக்கடல் மடிந்து போகவும் செலுத்திய வேலாயுதனே, அழகிய கிளி, நரம்புள்ள வீணை, குயில், புறாக் கூட்டங்கள் போல படுக்கையில் கண்டத்து ஓசையை (புட்குரல் ஒலியை) எழுப்பும் மாது ஆகிய திருமாலின் மகளை (வள்ளியை) திருமணம் செய்து சென்று, என்னுடைய துன்பங்கள் எரிந்து அழிய திருஅருணை நகரில் உள்ள மலையில் (வள்ளியுடன்) வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 435 - திருவருணை 
ராகம் - ஸிந்து பைரவி ; தாளம் - அங்கதாளம் - 5 1/2 
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2
தனன தான தானான தனன தான தானான
     தனன தான தானான ...... தனதான
புலைய னான மாவீனன் வினையி லேகு மாபாதன்
     பொறையி லாத கோபீகன் ...... முழுமூடன் 
புகழி லாத தாமீகன் அறிவி லாத காபோதி
     பொறிக ளோடி போய்வீழு ...... மதிசூதன் 
நிலையி லாத கோமாளி கொடையி லாத ஊதாரி
     நெறியி லாத வேமாளி ...... குலபாதன் 
நினது தாளை நாடோறு மனதி லாசை வீடாமல்
     நினையு மாறு நீமேவி ...... யருள்வாயே 
சிலையில் வாளி தானேவி யெதிரி ராவ ணார்தோள்கள்
     சிதையு மாறு போராடி ...... யொருசீதை 
சிறையி லாம லேகூடி புவனி மீதி லேவீறு
     திறமி யான மாமாயன் ...... மருகோனே 
அலைய மேரு மாசூரர் பொடிய தாக வேலேவி
     அமர தாடி யேதோகை ...... மயிலேறி 
அதிக தேவ ரேசூழ உலக மீதி லேகூறும்
     அருணை மீதி லேமேவு ...... பெருமாளே.
கீழ்மகனாக மிகவும் இழிந்தவன், தீவினைச் செயல்களிலேயே செல்லுகின்ற மகா பாதகன், பொறுமை என்பதே சிறிதும் இல்லாத கோப குணத்தினன் முழு முட்டாள், புகழில்லாத வெறும் டாம்பீகன், அறிவு என்பதே அற்ற கண்ணில்லாக் கபோதி, ஐம்பொறிகள் இழுக்கும் வழியிலே வீழும் பெரிய சூதுடையவன், ஒரு நிலையில் நிற்காத கோணங்கி, ஈகை என்பதே இல்லாத வீண் செலவுக்காரன், நல்லொழுக்கம் இல்லாத பேதை, நான் பிறந்த குலத்தையே பாவத்துக்கு ஆளாக்குபவன், இத்தகைய நான் உன் திருவடிகளையே தினமும் மனதில் ஆசை அழியாமல் நினைக்கும்வண்ணம் நீ என் உள்ளத்திலிருந்து அருள் புரிவாயாக. வில்லினின்றும் அம்பைச் செலுத்தி பகைவன் ராவணனுடைய தோள்கள் அறுபடும்படிப் போரிட்டு, ஒப்பற்ற சீதையைச் சிறையிலிருந்து விடுவித்து இவ்வுலகிலேயே மிக்க சாமர்த்தியசாலியாக விளங்கிய ராமனாக வந்த மகா மாயன் திருமாலின் மருமகனே, மேரு மலை அலைச்சலுறவும், பெருஞ் சூரர் பொடிபடும்படியாகவும் வேலினைச் செலுத்தி போர் புரிந்து, கலாப மயில் மீதில் நிரம்ப தேவர்கள் புடை சூழ, உலகில் புகழ்ந்து பேசப்படும் திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 436 - திருவருணை 
ராகம் -...; தாளம் -
தானனத் தத்ததனத் தானனத் தத்ததனத்
     தானனத் தத்ததனத் ...... தத்த தனதான
போககற் பக்கடவுட் பூருகத் தைப்புயலைப்
     பாரியைப் பொற்குவையுச் ...... சிப்பொ ழுதிலீயும் 
போதுடைப் புத்திரரைப் போலவொப் பிட்டுலகத்
     தோரைமெச் சிப்பிரியப் ...... பட்டு மிடிபோகத் 
த்யாகமெத் தத்தருதற் காசுநற் சித்திரவித்
     தாரமுட் பட்டதிருட் ...... டுக்க விகள்பாடித் 
தேடியிட் டப்படுபொற் பாவையர்க் கிட்டவர்கட்
     சேல்வலைப் பட்டடிமைப் ...... பட்டு விடலாமோ 
ஆகமப் பத்தருமற் றாரணச் சுத்தருமுற்
     றாதரிக் கைக்கருணைத் ...... துப்பு மதில்சூழும் 
ஆடகச் சித்ரமணிக் கோபுரத் துத்தரதிக்
     காகவெற் றிக்கலபக் ...... கற்கி யமர்வோனே 
தோகையைப் பெற்றஇடப் பாகரொற் றைப்பகழித்
     தூணிமுட் டச்சுவறத் ...... திக்கி லெழுபாரச் 
சோதிவெற் பெட்டுமுதிர்த் தூளிதப் பட்டமிழச்
     சூரனைப் பட்டுருவத் ...... தொட்ட பெருமாளே.
விருப்பமான போகத்தை அளிக்கும் கற்பகமாகிய தெய்வ மரத்தையும், மேகத்தையும், பாரி வள்ளலையும், பொன் குவியலை உச்சி வேளையில் கொடுத்து வந்த தெய்வ மலரை வைத்திருந்த பிள்ளை (கர்ணனையும்) நிகர்ப்பாய் நீ என்று உவமை கூறி ஒப்பிட்டு, உலக மக்களை மெச்சி, அவர்கள் மீது அன்பைக் காட்டி, என் தரித்திரம் ஒழியும் பொருட்டு, கொடை பெரிதாக அவர்கள் தருவதற்காக, ஆசு கவிகள், நல்ல சித்திரக் கவிகள், வித்தாரக் கவிகள்* ஆகிய திருட்டுக் கவிதைகள் அவர்கள் மீது பாடி, அங்ஙனம் பொருள் தேடி, பிடித்தமான அழகிய மாதர்களுக்குத் தந்து, அவர்களுடைய சேல் மீன் போன்ற கண் வலையில் பட்டு நான் அடிமைப்பட்டு விடலாமோ? ஆகமங்களைக் கற்ற பக்தர்களும், வேதங்களைப் பயின்ற பரிசுத்தர்களும் ஒருங்கு கூடி விரும்பிப் பணி செய்ய, திருஅண்ணாமலையில் பொலிவுள்ள மதில்கள் சூழும் பொன் மயமான விசித்திரமான அழகிய கோபுரத்தின் வடக்குப் பக்கத்தில், வெற்றி விளங்கும் தோகைக் குதிரையாகிய மயில் மீது வீற்றிருப்பவனே, மயில் போன்ற பார்வதியை இடப் பாகத்தில் கொண்ட சிவ பெருமானுக்கு (திரிபுர சம்ஹாரத்தின் போது) ஒரு அம்பாயிருந்த திருமாலின் அம்பறாத்தூணியாகிய கடல் அடியோடு வற்றும்படியும், திசைகளில் எழுந்துள்ள கனமான, ஒளி வீசும் எட்டு மலைகளும் உதிர்ந்து தூளாகி அமிழும்படியும், சூரன் மீது பட்டு உருவும்படியும் வேலைச் செலுத்திய பெருமாளே. 
* தமிழ்க் கவிதைகள் நான்கு வகைப்படும்:ஆசு - எதுகை மோனையுடன் கூடியது,மதுரம் - இனிமை வாய்ந்தது,சித்திரம் - கற்பனையும் அழகும் மிக்கது,வித்தாரம் - வர்ணனை மிக்கது.
பாடல் 437 - திருவருணை 
ராகம் - ...; தாளம் -
தான தனத்தத் தனத்த தத்தன
     தான தனத்தத் தனத்த தத்தன
          தான தனத்தத் தனத்த தத்தன ...... தனதான
மானை விடத்தைத் தடத்தி னிற்கயல்
     மீனை நிரப்பிக் குனித்து விட்டணை
          வாளி யைவட்டச் சமுத்தி ரத்தினை ...... வடிவேலை 
வாளை வனத்துற் பலத்தி னைச்செல
     மீனை விழிக்கொப் பெனப்பி டித்தவர்
          மாய வலைப்பட் டிலைத்து டக்குழல் ...... மணநாறும் 
ஊன விடத்தைச் சடக்கெ னக்கொழு
     வூறு முபத்தக் கருத்த டத்தினை
          யூது பிணத்தைக் குணத்ர யத்தொடு ...... தடுமாறும் 
ஊச லைநித்தத் த்வமற்ற செத்தையு
     பாதி யையொப்பித் துனிப்ப வத்தற
          வோகை செலுத்திப் ப்ரமிக்கு மிப்ரமை ...... தெளியாதோ 
சான கிகற்புத் தனைச்சு டத்தன
     சோக வனத்திற் சிறைப்ப டுத்திய
          தானை யரக்கற் குலத்த ரத்தனை ...... வருமாளச் 
சாலை மரத்துப் புறத்தொ ளித்தடல்
     வாலி யுரத்திற் சரத்தை விட்டொரு
          தாரை தனைச்சுக் ரிவற்க ளித்தவன் ...... மருகோனே 
சோனை மிகுத்துத் திரட்பு னத்தினி
     லானை மதத்துக் கிடக்கு மற்புத
          சோண கிரிச்சுத் தர்பெற்ற கொற்றவ ...... மணிநீபத் 
தோள்கொ டுசக்ரப் பொருப்பி னைப்பொடி
     யாக நெருக்கிச் செருக்க ளத்தெதிர்
          சூர னைவெட்டித் துணித்த டக்கிய ...... பெருமாளே.
மானையும், விஷத்தையும், குளத்தினில் நிரப்பப்பட்ட கயல் மீனையும், (வில்லை) வளைத்துச் செலுத்தி அணையும்படி செய்கின்ற அம்பையும், வட்டமாக வளைந்துள்ள கடலையும், கூர்மையான வேலையும், வாளையும், நீரில் மலர்கின்ற செங்கழுநீரையும், சேல் மீனையும் நிகர் என்று (அவர்களின் கண்களுக்கு) உவமையாகச் சொல்லி, அந்த விலைமாதர்களின் மாய வலையில் வசப்பட்டு, அரசிலை போன்றதும், சூதகமாம் துர் நாற்றம் நாறும் ஈனமான இடத்தை, வேகமாகக் கொழுப்பு ஊறுகின்ற ஜன்மேந்திரியமான பெண் குறியாகிய கரு உண்டாகும் இடத்தினை ஆசைப்பட்டு, உடல் வீங்கிப் பிணமாவதை, (ஸத்வம், தாமசம், ராஜதம் என்ற) முக்குணங்களோடு தடுமாறுகின்ற, கெட்டழியும் பொருளாகிய உடலை, நிலை பேறு இல்லாத செத்தை போன்ற ஒரு வேதனையை அலங்கரித்து எப்போதும் காமத்தை நினைத்து, பிறப்பில் மிகவும் மகிழ்ச்சியைக் காட்டி மயங்குகின்ற இம்மயக்கம் தெளியாதோ? சீதையின் கற்பு தன்னைச் சுட, தனது அசோக வனத்தில் சிறையில் வைத்த சேனைகளைக் கொண்ட அரக்கனாகிய ராவணனுடைய குலத்தைச் சேர்ந்தவர்கள் அத்தனை பேரும் இறந்தொழியச் செய்தவனும், சாலையில் இருந்த மரங்களின் புறத்தில் ஒளிந்திருந்து, வன்மை வாய்ந்த வாலியினுடைய மார்பில் அம்பை எய்து, ஒப்பற்ற தாரையை சுக்கி¡£வனுக்குக் கொடுத்தவனுமான ராமபிரானின் மருகனே, விடா மழை அதிகமாகப் பொழிய, செழித்த வயல்களில் யானைகள் மயங்கிக் கிடக்கும் அற்புதமான திருவண்ணாமலையில் பரிசுத்த மூர்த்தியாக விளங்கும் அருணாசலேசுரர் அருளிய வீரனே, கடப்ப மாலை அணிந்த தோள் கொண்டு சக்ரவளாக கிரியைப் பொடியாக்கி, நெருங்கி போர்க் களத்தில் எதிர்த்து வந்த சூரனை வெட்டித் துண்டாக்கி அடக்கிய பெருமாளே. 
பாடல் 438 - திருவருணை 
ராகம் - ....; தாளம் -
தனத்த தத்தன தானா தனதன
     தனத்த தத்தன தானா தனதன
          தனத்த தத்தன தானா தனதன ...... தந்ததான
முகத்து லக்கிக ளாசா ரவினிகள்
     விலைச்சி றுக்கிகள் நேரா வசடிகள்
          முழுச்ச மர்த்திகள் காமா விரகிகள் ...... முந்துசூது 
மொழிப்ப ரத்தைகள் காசா சையில்முலை
     பலர்க்கும் விற்பவர் நானா வநுபவ
          முயற்று பொட்டிகள் மோகா வலமுறு ...... கின்றமூடர் 
செகத்தி லெத்திகள் சார்வாய் மயகிகள்
     திருட்டு மட்டைகள் மாயா சொருபிகள்
          சிரித்து ருக்கிகள் ஆகா வெனநகை ...... சிந்தைமாயத் 
திரட்பொ றிச்சிகள் மாபா விகளப
     கடத்த சட்டைகள் மூதே விகளொடு
          திளைத்த லற்றிரு சீர்பா தமுமினி ...... யென்றுசேர்வேன் 
தொகுத்தொ குத்தொகு தோதோ தொகுதொகு
     செகுச்செ குச்செகு சேசே செககண
          தொகுத்தொ குத்தொகு தோதோ தொகுதொகு ...... தொந்ததீதோ 
துடுட்டு டுட்டுடு டூடூ டுடுடுடு
     திகுத்தி குத்திகு தீதோ எனவொரு
          துவக்க நிர்த்தன மாடா வுறைபவர் ...... தொணடர்பேணும் 
அகத்தி யப்பனு மால்வே தனும்அறம்
     வளர்த்த கற்பக மாஞா லியுமகி
          ழவுற்ற நித்தபி ரானே அருணையில் ...... நின்றகோவே 
அமர்க்க ளத்தொரு சூரே சனைவிழ
     முறித்து ழக்கிய வானோர் குடிபுக
          அமர்த்தி விட்டசு வாமீ அடியவர் ...... தம்பிரானே.
முகத்தை மினுக்குபவர். ஆசாரத்தில் குறை உள்ளவர்கள். (உடல் நலத்தை) விலைக்கு விற்கும் சிறுக்கிகள். (அன்பு) பொருந்துதல் இல்லாத மூடர்கள். முழு சாமர்த்தியம் வாய்ந்தவர்கள். காம லீலை புரியும் தந்திரசாலிகள். சூதான எண்ணம் முற்பட்டு நிற்கும் சொற்களை உடைய பொது மகளிர். காசின் மேல் உள்ள ஆசையால் மார்பினைப் பலருக்கும் விற்பவர்கள். பலவிதமான அனுபோக நுகர்ச்சிகளில் ஊக்கம் கொண்டுள்ள வேசிகள். காம மயக்கத்தால் துன்பம் அடையும் முட்டாள்கள். இப்பூமியில் வஞ்சிப்பவர்கள். நம் பக்கம் சார்ந்த நட்பினர் போலிருந்து மயக்குபவர்கள். திருட்டுத்தனம் கொண்ட பயனிலிகள். மாயையே ஒரு வடிவம் எடுத்து வந்தது போல் இருப்பவர்கள். தங்கள் சிரிப்பினால் மனதை உருக்குபவர்கள். ஆகா என்று பெரிதாகச் சிரித்து உள்ளத்தை மாய்க்கும் முற்றிய தந்திர சாலிகள். பெரிய பாவிகள். வஞ்சகம் கொண்டு புறக்கணிப்பவர்கள். (இத்தகைய) மூதேவிகளுடன் நெருங்கிக் கலத்தலை நீக்கி (உனது) இரண்டு அழகிய திருவடிகளை இனி எப்போது அடைவேன்? தொகுத்தொ குத்தொகு தோதோ தொகுதொகு செகுச்செ குச்செகு சேசே செககண தொகுத்தொ குத்தொகு தோதோ தொகுதொகு தொந்ததீதோ துடுட்டு டுட்டுடு டூடூ டுடுடுடு திகுத்து குத்திகு தீதோ இவ்வாறான தாள ஒத்துக்களுடன் ஒப்பற்றதாய்த் தொடங்கும் ஆடலை ஆடி வீற்றிருப்பவர். அடியார்கள் விரும்பும் (அகத்தியரால் பூஜிக்கப்பட்ட) சிவபெருமானும், திருமாலும், பிரமனும், (காஞ்சியில்) அறங்களை வளர்த்த கற்பக விருட்சம் போன்றவளும் (ஆகிய காமாட்சியும்), பூமியில் சிறப்பாகப் பூஜிக்கப் பட்டவளும் (ஆகிய பார்வதியும்) மகிழும்படி இருக்கும் அழிவில்லாத பெருமாளே, திருவண்ணாமலையில் எழுந்தருளும் தலைவனே, போர்க் களத்தில ஒப்பற்ற சூரர் தலைவனாகிய சூரபத்மன் (மாமரமாக வந்தபோது) விழும்படி முறித்து, மிதித்துக் கொன்று, தேவர்கள் பொன்னுலகுக்குக் குடியேறும்படி வாழவிட்ட சுவாமியே, அடியவரின் தம்பிரானே. 
இப்பாடலின் முதல் 12 வரிகள் வேசையரின் இயல்பை வருணிக்கின்றன.
பாடல் 439 - திருவருணை 
ராகம் - ...; தாளம் -
தான தத்ததன தான தத்ததன
     தான தத்ததன தான தத்ததன
          தான தத்ததன தான தத்ததன ...... தனதான
மேக மொத்தகுழ லார்சி லைப்புருவ
     வாளி யொத்தவிழி யார்மு கக்கமல
          மீது பொட்டிடழ கார்க ளத்திலணி ...... வடமாட 
மேரு வொத்தமுலை யார்ப ளப்பளென
     மார்பு துத்திபுய வார்வ ளைக்கடகம்
          வீறி டத்துவளு நூலொ டொத்தஇடை ...... யுடைமாதர் 
தோகை பக்ஷிநடை யார்ப தத்திலிடு
     நூபு ரக்குரல்கள் பாட கத்துகில்கள்
          சோர நற்றெருவு டேந டித்துமுலை ...... விலைகூறிச் 
சூத கச்சரச மோடெ யெத்திவரு
     வோரை நத்திவிழி யால்ம ருட்டிமயல்
          தூள்ம ருத்திடுயி ரேப றிப்பவர்க ...... ளுறவாமோ 
சேக ணச்செகண தோதி மித்திகுட
     டாடு டுட்டமட டீகு தத்தொகுர்தி
          தீத கத்திமித தோவு டுக்கைமணி ...... முரசோதை 
தேச முட்கவர ஆயி ரச்சிரமு
     மூளி பட்டுமக மேரு வுக்கவுணர்
          தீவு கெட்டுமுறை யோவெ னக்கதற ...... விடும்வேலா 
ஆக மத்திபல கார ணத்தியெனை
     யீண சத்திஅரி ஆச னத்திசிவ
          னாக முற்றசிவ காமி பத்தினியின் ...... முருகோனே 
ஆர ணற்குமறை தேடி யிட்டதிரு
     மால்ம கட்சிறுமி மோக சித்ரவளி
          ஆசை பற்றிஅரு ணாச லத்தின்மகிழ் ...... பெருமாளே.
மேகம் போல் கரிய கூந்தல் உடையவர்கள். வில்லைப் போல வளைந்த புருவம் உடையவர்கள். அம்பு போன்ற கண்கள் உடையவர். தாமரை போன்ற முகத்தில் பொட்டு அணிந்த அழகை உடையவர். கழுத்தில் அணிகின்ற மாலை அசைந்தாட மேரு மலை போன்ற மார்பகத்தை உடையவர்கள். பளபள என்று ஒளி தரும் மார்பில் தேமலும், கையில் வரிசையாயுள்ள வளையல்களும் கங்கணமும் விளங்க, துவள்கின்ற நூல் போன்ற நுண்ணிய இடை உடைய மாதர்கள். கலாபப் பட்சியாகிய மயிலை ஒத்த நடையினர். கால்களில் அணிந்த சிலம்புகளின் ஓசைகள் ஒலிக்க, உடல் மீதுள்ள ஆடைகள் நெகிழ, நல்ல வீதியின் வழியே நடனமாடி வந்து, தம் மார்பகங்களை விலைக்கு விற்று, வஞ்சகத்தோடு காமச் சேட்டைகளைக் காட்டி (ஆடவரை) மோசம் செய்து, தேடி வருபவர்களை விரும்பி, கண்களால் மயக்கி காம மயக்கம் தரும் தூள் மருந்தை உண்ணச் செய்து உயிரைப் பறிப்பவர்களாகிய விலைமாதர்களின் உறவு எனக்கு நல்லதாகுமோ? சேகணச் செகண தோதிமித் திகுட டாடு டுட்டமட டீகு தத்தொகுர்தி தீத கத்திமித தோ இவ்வாறான ஒலிகளை எழுப்பும் உடுக்கை, மணி, முரசு இவைகளின் ஆரவாரம் ஓயாமல் ஒலிக்க, நாடெல்லாம் அஞ்ச ஆதிசேஷனுடைய ஆயிரம் தலைகளும் மூளியாகி, பெரிய மேரு மலையும் சிதறுண்டு, அசுரர்கள் வாழும் தீவுகள் அழிந்து (யாவரும்) முறையோ என்று கதறும்படி செலுத்திய வேலனே, வேத ஆகமங்களுக்கு உரியவள், பல காரணங்களுக்கு மூலப் பொருளானவள், என்னைப் பெற்றெடுத்த சக்தி, சிம்மாசனம் கொண்டவள், சிவபெருமானுடைய உடலில் இடம் கொண்டுள்ள சிவகாமி (என்னும்) பத்தினி பெற்ற முருகனே, பிரமனுக்கு வேதத்தைத் தேடித் தந்த திருமாலின்* மகளாகிய சிறுமி, (உன் மீது) மோகம் கொண்ட அழகிய வள்ளி நாயகியின் ஆசை பூண்டு திருவண்ணாமலையில் மகிழ்ந்து வீற்றிருக்கும் பெருமாளே. 
* சோமுகன் என்னும் அசுரன் பிரமனிடமிருந்து மறை நூல்களைப் பிடுங்கிக் கடலுள் மறைந்தான். திருமால் பெரிய சேல் மீனாகிக் கடலுள் புகுந்து சோமுகனைக் கொன்று நூல்களை மீட்டார்.
பாடல் 440 - திருவருணை 
ராகம் - ...:; தாளம் -
தனதன தந்ததத்த தனதன தந்ததத்த
     தனதன தந்ததத்த ...... தனதான
மொழியநி றங்கறுத்து மகரவி னங்கலக்கி
     முடியவ ளைந்தரற்று ...... கடலாலும் 
முதிரவி டம்பரப்பி வடவைமு கந்தழற்குள்
     முழுகியெ ழுந்திருக்கு ...... நிலவாலும் 
மழையள கந்தரித்த கொடியிடை வஞ்சியுற்ற
     மயல்தணி யும்படிக்கு ...... நினைவாயே 
மரகத துங்கவெற்றி விகடந டங்கொள்சித்ர
     மயிலினில் வந்துமுத்தி ...... தரவேணும் 
அழகிய மென்குறத்தி புளகித சந்தனத்தி
     னமுதத னம்படைத்த ...... திருமார்பா 
அமரர்பு ரந்தனக்கு மழகிய செந்திலுக்கு
     மருணைவ ளம்பதிக்கு ...... மிறையோனே 
எழுபுவ னம்பிழைக்க அசுரர்சி ரந்தெறிக்க
     எழுசயி லந்தொளைத்த ...... சுடர்வேலா 
இரவிக ளந்தரத்தர் அரியர பங்கயத்த
     ரிவர்கள்ப யந்தவிர்த்த ...... பெருமாளே.
யாவரும் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக நிறம் கருமையடைந்து, மகர மீன்களின் கூட்டத்தால் கலக்கப்பட்டு, கிடைக்கின்ற முழு இடத்தையும் வளைத்து ஆரவாரம் செய்யும் கடலாலும், (சந்திரனின் கலைகள்) வளர்ந்து, விஷத்தை எங்கும் பரப்பி, (யுக முடிவில் தீப் பிரளயமாக வரும்) வடவா முகாக்கினியை மொண்டு கொண்டும், நெருப்பில் மூழ்கியும் எழுந்துவரும் நிலவாலும், கார்மேகம் போன்ற கூந்தலைக் கொண்ட, வஞ்சிக்கொடி போன்ற இடையை உடைய என் மகள் அடைந்த விரக தாபம் தணியும்படிக்கு நீ நினைந்து, பச்சை நிறம், தூய்மை, வெற்றி இவைகளைக் கொண்டதாகவும், அழகுள்ள நடனம் கொண்டதாகவும் உள்ள அலங்கார மயில் மீது வந்து அவளுக்கு முக்தியைத் தரவேண்டும். அழகிய மென்மை வாய்ந்த குறத்தி வள்ளியின் புளகம் கொண்டதும், சந்தனமும் அமுதமும் பொதிந்ததுமான மார்பகத்தை அணைந்துள்ள திருமார்பனே, தேவர்களின் ஊராகிய அமராவதியிலும், அழகிய திருச்செந்தூரிலும், திருவருணை என்ற வளமான தலத்திலும் தங்கும் இறைவனே, ஏழு உலகங்களும் பிழைக்க, அசுரர்களின் தலைகள் தெறிக்கும்படியாக ஏழு மலைகளையும் தொளைத்த ஒளி வேலனே, ஆதித்தர்கள் (அதிதியின் புத்திரர்கள்), விண்ணுலகத்தவர், திருமால், ருத்திரன், தாமரை மீதமர்ந்த பிரமன் இவர்களது பயத்தை ஒழித்த பெருமாளே. 
இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் நாயகியின் நற்றாய் கூறுவதுபோல அமைந்தது.கடல், நிலவு முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.
பாடல் 441 - திருவருணை 
ராகம் - கெளரி மனோஹரி ; தாளம் - கண்டசாபு - 2 1/2
தனதான தத்ததன தனதான தத்ததன
     தனதான தத்ததன ...... தனதான
வலிவாத பித்தமொடு களமாலை விப்புருதி
     வறல்சூலை குட்டமொடு ...... குளிர்தாகம் 
மலிநீரி ழிச்சல்பெரு வயிறீளை கக்குகளை
     வருநீர டைப்பினுடன் ...... வெகுகோடி 
சிலைநோய டைத்தவுடல் புவிமீதெ டுத்துழல்கை
     தெளியாவெ னக்குமினி ...... முடியாதே 
சிவமார்தி ருப்புகழை எனுநாவி னிற்புகழ
     சிவஞான சித்திதனை ...... யருள்வாயே 
தொலையாத பத்தியுள திருமால்க ளிக்கவொரு
     சுடர்வீசு சக்ரமதை ...... யருள்ஞான 
துவர்வேணி யப்பன்மிகு சிவகாமி கர்த்தன்மிகு
     சுகவாரி சித்தனருள் ...... முருகோனே 
அலைசூரன் வெற்புமரி முகனானை வத்திரனொ
     டசுராரி றக்கவிடு ...... மழல்வேலா 
அமுதாச னத்திகுற மடவாள்க ரிப்பெணொடும்
     அருணா சலத்திலுறை ...... பெருமாளே.
வலிப்பு நோய், பித்த நோய், கண்டமாலை நோய், சிலந்திப்புண், உடல் இளைப்பு, வயிற்று உளைவு, குஷ்டம், குளிர், தாகம், மிக்க நீரிழிவு, மகோதரம், கபம் கட்டுதல், வாந்தி, அயர்ச்சிதரும் மூத்திரத்தடை நோய் இவைகளுடன் வெகு கோடிக்கணக்கான சீறி எழும் நோய்களை அடைத்துள்ள இந்த உடலை, பூமியின் மீது எடுத்துத் திரிதல் தெளிந்த அறிவு இல்லாத எனக்கும் இனிமேல் முடியாது. மங்கலம் நிறைந்த உனது திருப்புகழை என் நாவாறப் புகழ்வதற்கு சிவஞான சித்தியை தந்தருள்வாயாக. நீங்காத பக்தியைக் கொண்ட திருமால் மகிழ, ஒப்பற்றதாய் ஒளி வீசும் சுதர்ஸன சக்கரத்தை அவருக்கு அருளிய ஞானமயமான பவள நிறச் சடையப்பன், புகழ்மிக்க சிவகாமியின் தலைவன், மிக்க சுக சாகரம் போன்ற சித்த மூர்த்தி சிவபிரான் அருளிய முருகனே, கடல், சூரன், கிரெளஞ்சமலை, சிங்கமுகன், ஆனைமுகனான தாரகாசுரனுடன் அசுரர்கள் யாவரும் இறக்கும்படிச் செய்த நெருப்பு வேலனே, அமுதமயமான பீடத்தினள் குறமகள் ஆகிய வள்ளியுடனும், யானை ஐராவதம் வளர்த்த பெண் தேவயானையுடனும் திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 442 - திருவருணை 
ராகம் - ...; தாளம் -
தனதன தானாதன தனதன தானாதன
     தனதன தானாதன ...... தனதான
விடுமத வேள்வாளியின் விசைபெறு மாலாகல
     விழிகொடு வாபோவென ...... வுரையாடும் 
விரகுட னூறாயிர மனமுடை மாபாவிகள்
     ம்ருகமத கோலாகல ...... முலைதோய 
அடையவு மாசாபர வசமுறு கோமாளியை
     அவனியு மாகாசமும் ...... வசைபேசும் 
அசடஅ நாசாரனை அவலனை ஆபாசனை
     அடியவ ரோடாள்வது ...... மொருநாளே 
வடகுல கோபாலர்த மொருபதி னாறாயிரம்
     வனிதையர் தோள்தோய்தரு ...... மபிராம 
மரகத நாராயணன் மருமக சோணாசல
     மகிபச தாகாலமு ...... மிளையோனே 
உடுபதி சாயாபதி சுரபதி மாயாதுற
     உலகுய வாரார்கலி ...... வறிதாக 
உயரிய மாநாகமு நிருதரு நீறாய்விழ
     ஒருதனி வேலேவிய ...... பெருமாளே.
செருக்கு உள்ள மன்மதன் செலுத்தும் அம்பு போல வேகம் பெற்றுள்ள, ஆலகால விஷம் போன்ற கண்களைக் கொண்டு, வா என்றும் போ என்றும் பேசுகின்ற சாமர்த்தியத்துடன் நூறாயிரக் கணக்கான மனத்தை உடைய பெரிய பாவிகளான விலைமாதரின், கஸ்தூரி அணிந்துள்ள ஆடம்பரமான மார்பகங்களை அணைந்து சேர ஆசைப் பிரமை பூண்ட கோணங்கியை, மண்ணுள்ளோரும், விண்ணுள்ளோரும் பழிப்புரை பேசும் முட்டாளான துராசாரனை, பயனற்றவனை, அசுத்தனை, உனது அடியார்களோடு ஆண்டருளுவதும் ஒரு நாள் ஆகுமோ? வடக்கே கோபாலர் குலத்தவரான இடையர்களின் ஒரு பதினாயிரம் மாதர்களது தோள்களை அணைந்த அழகிய பச்சை நிற நாராயணனுக்கு மருகனே, திருவண்ணாமலைக்கு அரசே, என்றும் இளமையாக இருப்பவனே, நட்சத்திரங்களுக்குத் தலைவனான சந்திரனும், சாயா தேவிக்குக் கணவனாகிய சூரியனும், தேவர்கள் தலைவனான இந்திரனும் இறந்து படாமல் வாழ, உலகம் பிழைக்க, நீண்ட கடல் வற்றிப் போக, சிறந்த பெரிய கிரவுஞ்ச மலையும் அசுரர்களும் தூள்பட்டு விழ, ஒப்பற்ற வேலைச் செலுத்திய பெருமாளே. 
பாடல் 443 - திருவருணை 
ராகம் - ஆஹிரி ...; தாளம் - அங்கதாளம் - 14 1/2 
தகிடதகதிமி-3 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2 
தக-1, தகிடதகதிமி-3 1/2, தகிடதகதிமி-3 1/2
தனன தானன தனன தானனா
     தனன தானனம் ...... தனதான
விதிய தாகவெ பருவ மாதரார்
     விரகி லேமனந் ...... தடுமாறி 
விவர மானதொ ரறிவு மாறியே
     வினையி லேஅலைந் ...... திடுமூடன் 
முதிய மாதமி ழிசைய தாகவே
     மொழிசெய் தேநினைந் ...... திடுமாறு 
முறைமை யாகநி னடிகள் மேவவே
     முனிவு தீரவந் ...... தருள்வாயே 
சதிய தாகிய அசுரர் மாமுடீ
     தரணி மீதுகுஞ் ...... சமராடிச் 
சகல லோகமும் வலம தாகியே
     தழைய வேவருங் ...... குமரேசா 
அதிக வானவர் கவரி வீசவே
     அரிய கோபுரந் ...... தனில்மேவி 
அருணை மீதிலெ மயிலி லேறியே
     அழக தாய்வரும் ...... பெருமாளே.
விதி ஆட்டுவிப்பதால் இளமை வாய்ந்த பெண்களின் தந்திரச் செயல்களில் மனம் தடுமாற்றம் அடைந்து, தெளிவுள்ளதான ஓர் அறிவும் கெட்டுப்போய் வினை வசப்பட்டு அலைச்சலுறும் முட்டாள் ஆகிய நான், பழமையும் சிறப்பும் வாய்ந்த தமிழ்ப் பாக்களை இசையுடனே சாகித்யப்படுத்திப் பாட நினைந்திடும்படி, முறைமைப்படி உனது திருவடிகளை அடையுமாறு, உனது கோபம் தீர்ந்து வந்து அருள் புரிவாயாக. வஞ்சனை கூடிய அசுரர்களுடைய பெரிய முடிகள் பூமியில் சிந்தும்படி போர் செய்து, எல்லா உலகங்களும் (மயிலின் மீது) வலமாக, (அவ்வுலகங்கள்) நலமுறும்படியாக வரும் குமரேசனே, நிரம்ப தேவர்கள் வெண்சாமரம் வீச, அருமை வாய்ந்த கோபுரத்தில் வீற்றிருந்து, திருவண்ணாமலையில் மயில் மீது ஏறி அழகுடன் வரும் பெருமாளே. 
பாடல் 444 - திருவருணை 
ராகம் - ...; தாளம் -
தந்தத் தனதன தந்தத் தனதன
  தந்தத் தனதன தந்தத் தனதன
    தனத்த தனதன தனத்த தனதன
      தனத்த தனதன தனத்த தனதன
தந்தத் தனதன தந்தத் தனதன
  தந்தத் தனதன தந்தத் தனதன
    தனத்த தனதன தனத்த தனதன
      தனத்த தனதன தனத்த தனதன
தந்தத் தனதன தந்தத் தனதன
  தந்தத் தனதன தந்தத் தனதன
    தனத்த தனதன தனத்த தனதன
      தனத்த தனதன தனத்த தனதன ...... தனதான
விந்துப் புளகித இன்புற் றுருகிட
  சிந்திக் கருவினி லுண்பச் சிறுதுளி
    விரித்த கமலமெல் தரித்து ளொருசுழி
      யிரத்த குளிகையொ டுதித்து வளர்மதி 
விண்டுற் றருள்பதி கண்டுற் றருள்கொடு
  மிண்டிச் செயலினி ரம்பித் துருவொடு
    மெழுக்கி லுருவென வலித்து எழுமதி
      கழித்து வயிர்குட முகுப்ப வொருபதில் 
விஞ்சைச் செயல்கொடு கஞ்சச் சலவழி
  வந்துப் புவிமிசை பண்டைச் செயல்கொடு
    விழுப்பொ டுடல்தலை அழுக்கு மலமொடு
      கவிழ்த்து விழுதழு துகுப்ப அனைவரு ...... மருள்கூர 
மென்பற் றுருகிமு கந்திட் டனைமுலை
  யுண்டித் தரகொடு வுண்கிச் சொலிவளர்
    வளத்தொ டளைமல சலத்தொ டுழைகிடை
      துடித்து தவழ்நடை வளர்த்தி யெனதகு 
வெண்டைப் பரிபுர தண்டைச் சரவட
  முங்கட் டியல்முடி பண்பித் தியல்கொடு
    விதித்த முறைபடி படித்து மயல்கொள
      தெருக்க ளினில்வரு வியப்ப இளமுலை 
விந்தைக் கயல்விழி கொண்டற் குழல்மதி
  துண்டக் கரவளை கொஞ்சக் குயில்மொழி
    விடுப்ப துதைகலை நெகிழ்த்தி மயிலென
      நடித்த வர்கள்மயல் பிடித்தி டவர்வரு ...... வழியேபோய்ச் 
சந்தித் துறவொடு பஞ்சிட் டணைமிசை
  கொஞ்சிப் பலபல விஞ்சைச் சரசமொ
    டணைத்து மலரிதழ் கடித்து இருகர
      மடர்த்த குவிமுலை யழுத்தி யுரமிடர் 
சங்குத் தொனியொடு பொங்கக் குழல்மலர்
  சிந்தக் கொடியிடை தங்கிச் சுழலிட
    சரத்தொ டிகள்வெயி லெறிப்ப மதிநுதல்
      வியர்ப்ப பரிபுர மொலிப்ப எழுமத 
சம்பத் திதுசெய லின்பத் திருள்கொடு
  வம்பிற் பொருள்கள்வ ழங்கிற் றிதுபினை
    சலித்து வெகுதுய ரிளைப்பொ டுடல்பிணி
      பிடித்தி டனைவரும் நகைப்ப கருமயிர் ...... நரைமேவித் 
தன்கைத் தடிகொடு குந்திக் கவியென
  உந்திக் கசனம றந்திட் டுளமிக
    சலித்து வுடல்சல மிகுத்து மதிசெவி
      விழிப்பு மறைபட கிடத்தி மனையவள் 
சம்பத் துறைமுறை யண்டைக் கொளுகையில்
  சண்டக் கருநம னண்டிக் கொளுகயி
    றெடுத்து விசைகொடு பிடித்து வுயிர்தனை
      பதைப்ப தனிவழி யடித்து கொடுசெல 
சந்தித் தவரவர் பங்குக் கழுதுஇ
  ரங்கப் பிணமெடு மென்றிட் டறைபறை
    தடிப்ப சுடலையி லிறக்கி விறகொடு
      கொளுத்தி யொருபிடி பொடிக்கு மிலையெனு ...... முடலாமோ 
திந்தித் திமிதிமி திந்தித் திமிதிமி
  திந்தித் திமிதிமி திந்தித் திமிதிமி
    திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி
      திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி 
என்பத் துடிகள்த வுண்டைக் கிடுபிடி
  பம்பைச் சலிகைகள் சங்கப் பறைவளை
    திகுர்த்த திகுதிகு டுடுட்டு டுடுடுடு
      டிடிக்கு நிகரென வுடுக்கை முரசொடு 
செம்பொற் குடமுழ வுந்தப் புடன்மணி
  பொங்கச் சுரர்மலர் சிந்தப் பதமிசை
    செழித்த மறைசிலர் துதிப்ப முநிவர்கள்
      களித்து வகைமனி முழக்க அசுரர்கள் ...... களமீதே 
சிந்திக் குருதிக ளண்டச் சுவரகம்
  ரம்பக் கிரியொடு பொங்கிப் பெருகியெ
    சிவப்ப அதில்கரி மதர்த்த புரவிகள்
      சிரத்தொ டிரதமு மிதப்ப நிணமொடு 
செம்புட் கழுகுக ளுண்பத் தலைகள்த
  தும்பக் கருடன டங்கொட் டிடகொடி
    மறைப்ப நரிகண மிகுப்ப குறளிகள்
      நடிக்க இருள்மலை கொளுத்தி யலைகடல் 
செம்பொற் பவளமு டங்கிக் கமர்விட
  வெந்திட் டிகமலை விண்டுத் துகள்பட
    சிமக்கு முரகனு முழக்கி விடபட
      மடைத்த சதமுடி நடுக்கி யலைபட ...... விடும்வேலா 
தொந்தத் தொகுகுட என்பக் கழலொலி
  பொங்கப் பரிபுர செம்பொற் பதமணி
    சுழற்றி நடமிடு நிருத்த ரயன்முடி
      கரத்த ரரிகரி யுரித்த கடவுள்மெய் 
தொண்டர்க் கருள்பவர் வெந்தத் துகளணி
  கங்கைப் பணிமதி கொன்றைச் சடையினர்
    தொடுத்த மதனுரு பொடித்த விழியினர்
      மிகுத்த புரமதை யெரித்த நகையினர் 
தும்பைத் தொடையினர் கண்டக் கறையினர்
  தொந்திக் கடவுளை தந்திட் டவரிட
    சுகத்தி மழுவுழை கரத்தி மரகத
      நிறத்தி முயலக பதத்தி அருளிய ...... முருகோனே 
துண்டச் சசிநுதல் சம்பைக் கொடியிடை
  ரம்பைக் கரசியெ னும்பற் றருமகள்
    சுகிப்ப மணவறை களிக்க அணையறு
      முகத்தொ டுறமயல் செழித்த திருபுய 
செம்பொற் கரகம லம்பத் திருதல
  மம்பொற் சசியெழ சந்தப் பலபடை
    செறித்த கதிர்முடி கடப்ப மலர்தொடை
      சிறப்பொ டொருகுடில் மருத்து வனமகள் 
தொந்தப் புணர்செயல் கண்டுற் றடியெனி
  டைஞ்சற் பொடிபட முன்புற் றருளயில்
    தொடுத்து மிளநகை பரப்பி மயில்மிசை
      நடித்து அழல்கிரி பதிக்குள் மருவிய ...... பெருமாளே.
சுக்கிலம் புளகாங்கிதத்தால் இன்ப நிலை அடைந்து, வெளி வந்து ஒழுக, கருவில் உட்கொள்ளப்பட்ட (அதன்) சிறிய துளியானது விரிந்துள்ள தாமரை போன்ற கருப்பையில் தங்கி, அங்கு உள்ள ஒரு சுழற்சியில் மாத்திரை அளவான சுரோணிதத்தோடு கலத்தலால் கரு உதித்து, மாதங்கள் ஏற ஏற, (வயிறு பெருத்து) வெளிப்பட, தந்தை இதைக் கண்டு அன்பு பூண, வலி, ஆட்டம், அசைவு நிரம்ப ஏற்பட்டு குற்றங்களுக்கு ஆளாகி, மெழுக்கில் வளர்த்த உருவம் போல உருவம் நன்கு பொருந்தி, ஏழு மாதங்கள் முற்றிய பின் வயிறு குடம் போல் வெளிக்காட்ட, ஒரு பத்தாவது மாதத்தில் மாய வித்தை போன்ற செயலால், தாமரை உருவமுள்ள சலத் துவார வழியே (குழந்தையாக) வெளி வந்து, பூமியின் மேல் பழைய வினைச் செயல்கள் உடன் தொடருதலால் அசுத்த நிலையோடு, உடல், தலை, அழுக்கு, மலம் முதலியவை மூட, கவிழ்ந்து வெளியே தள்ளப்பட்டு அழ, எல்லோரும் அது கண்டு மகிழ, ஆசை மிகக் கொள்ள, மெதுவாக பாசத்தினால் உள்ளம் உருகி தாங்கி எடுத்து, தாய் முலைப்பாலைத் தர அதனை உட்கொண்டு, மேனி பளபளத்து வளர்ந்து, வளப்பத்தோடு துழாவுகின்ற மலத்திலும், சலத்திலும் அளைந்து கிடந்து துடித்தும், தவழ்கின்ற நடையுடன் தக்கபடி வளர்கின்றது என்று சொல்லும்படி, வெண்டையம் என்னும் காலணியும், சிலம்பும், கிண்கிணியும், மணி வடமாகிய கழுத்தணியும் அணிவித்து, தக்கபடி தலைமயிரை வாரி சீர்திருத்தி, ஒழுக்கத்துடன் விதித்துள்ள முறைப்படி நூல்களைக் கற்று, (வயது ஏறுவதால்) காம மயக்கம் உண்டாக, வீதிகளில் வரும் வியக்கத் தக்க இளங் கொங்கைகள், விசித்திரமான மீன் போன்ற கண்கள், கருமேகம் போன்ற கரிய கூந்தல், சந்திரன் போன்ற முகம், கைவளையல்கள் ஒலிக்க, குயில் போன்ற சொற்கள் வெளிவர, நெருங்கிய ஆடையைத் தளர்த்தி, மயில் போல நடித்த அந்தப் பொது மகளிர் மேல் ஆசை கொண்டு, அம்மகளிர் வரும் வழியில் போய் அவர்களை நட்போடு சந்தித்து, பஞ்சிட்ட படுக்கையின் மேல் கொஞ்சி, பல விசித்திரமான காம லீலைகளுடன் அணைத்து, மலர் போல மென்மையான வாயிதழைக் கடித்து, இரண்டு கைகளால் நெருங்கிய குவிந்த தனத்தை மார்போடு அழுத்தி, கண்டத்திலிருந்து சங்குத் தொனி போலப் புட்குரல் எழும்ப, கூந்தலிலிருந்த பூக்கள் சிந்த, (வஞ்சிக் கொடி) போன்ற இடை நிதானமான சுழற்சி உற, மணி வடமும் தோள் வளையும் ஒளி வீச, பிறை போன்ற நெற்றி வியர்வு தர, காலில் சிலம்பு ஒலிக்க, உண்டாகும் காம மயக்கம் என்னும் செல்வத்தின் இந்தச் செயலால் சிற்றின்பமாகிய இருளைக் கொண்டு வீணாக பொருள்களை வாரி வழங்கிச் செலவிட்டும், இங்ஙனம் செலவழித்த பின்னர், மனம் சலித்துப் போய் மிக்க துயரமும் சோர்வும் கொண்டு, உடலும் நோய் வாய்ப்பட, எல்லோரும் பரிகசித்துச் சிரிக்க, கரிய மயிரும் நரைத்து வெளுத்து, தன்னுடைய கைத்தடியோடு குரங்கு போல் குந்தி நடந்து, வயிற்றுக்கு உணவையும் மறந்து போய், மனம் மிகவும் அலுத்து, உடலில் நீர் அதிகமாகச் சேர்ந்து, அறிவும், காதும், கண் பார்வையும் குறைவு பட்டு, படுக்கையில் கிடத்தி, மனைவியும், செல்வம் நிறைந்த சுற்றத்தார்களும் பக்கத்தில் வந்து சேரும் போது, கோபம் கொண்ட கரிய யமன் நெருங்கிவந்து (தான்) கொண்டு வந்த பாசக் கயிற்றை எடுத்து வேகத்துடன் பிடித்து இழுத்து உயிரை அது பதைக்கும்படி (திரும்பி வாராத) தனி வழியில் அடித்து கொண்டு செல்ல, (துக்கம் விசாரிக்கச்) சந்திப்பவர்கள் அவரவர் பங்குக்கு அழுதும், இரக்கம் காட்டியும், பிணத்தை எடுங்கள் என்று கூறி, ஒலிக்கின்ற பறைகள் மிக்கெழ சுடுகாட்டுக்குக் கொண்டு போய் இறக்கி, விறகு இட்டுக் கொளுத்தி, ஒரு பிடி சாம்பல் பொடி கூட இல்லை என்று சொல்லத் தக்க இந்தப் பிறவி எடுத்தல் நன்றோ? மேற்கண்ட தாளத்திற்கு ஏற்ப, உடுக்கைகள், பேருடுக்கை, வட்ட வடிவமான கிடுபிடி என்ற ஓர் வகை வாத்தியம், (முல்லை நிலங்களுக்கு உரித்தான) பம்பை என்னும் பறை, சல்லிகை என்னும் உத்தமத் தோற் கருவி, கூட்டமான பறை, சங்கு ஆகிய வாத்தியங்கள், திகுர்த்த திகுதிகு டுடுட்டு டுடுடுடு என்று இடி இடிப்பதைப் போல் ஒலிக்கும் உடுக்கை, முரசு, சிவந்த அழகிய குடமுழவு, தப்பு என்று ஒலிக்கும் பறை இவைகளோடு மணி முதலிய வாத்தியக் கருவிகள் பேரொலி எழுப்ப, தேவர்கள் திருவடி மீது பூக்களைச் சொரிய, செழிப்புள்ள மறை மொழிகளை சிலர் சொல்லித் துதிக்க, முனிவர்கள் மகிழ்ந்து முறையுடன் பொருந்தி அம்மறைகளை முழங்க, அசுரர்கள் போர்க் களத்தில் சிதறி விழுந்து, அவர்களுடைய இரத்தம் அருகிலிருந்த சுவர் அளவும் நிரம்ப மலை போலப் பொங்கி எழுந்துப் பெருகிச் சிவப்ப, அந்த இரத்த வெள்ளத்தில் யானைகளும், கொழுப்புள்ள குதிரைகளும், அறுபட்ட தலைகளும், தேர்களும் மிதக்க, நிணமொடு செம் புள் கழுகுகள் உண்பத் தலைகள் ததும்பக் கருடன் நடம் கொட்டிட கொடி மாமிசத்தைத் தின்று சிவந்த பறவைக் கூட்டமாகிய கழுகுகள் உண்ண, (உண்ட மயக்கத்தால்) அவைகளுடைய தலைகள் அசைய, கருடன்கள் நடனத்துடன் வட்டமிட, காக்கைகள் மறைந்து போய் நரிக் கூட்டங்கள் மிகச் சேர, (மாய வித்தை செய்யும்) பேய்கள் கூத்தாட, இருண்ட கிரவுஞ்ச மலையைக் கொளுத்தி அலை வீசும் கடல் (தன்னகத்தில் உள்ள) பவளங்கள் சுருங்கி பிளவு பட, வெந்து போய் இங்குள்ள மலைகள் நொறுங்கித் தூளாக, (பூமியைத்) தாங்கும் ஆதிசேஷனும் கூச்சலிட்டு, விஷமுள்ள படங்களைக் கொண்டுள்ள நூற்றுக் கணக்கான தனது முடிகள் நடுக்கம் கொண்டு அலைபடும்படியாகச் செலுத்திய வேலனே, தொந்தத் தொகுகுட என்ற ஒலிகளைச் செய்யும் கழலின் ஒலி மிக்கெழ, சிலம்பு அணிந்துள்ள செவ்விய அழகிய பாதத்தை அழகாகச் சுழற்றி நடனம் செய்யும் கூத்தப் பிரான் ஆகிய சிவ பெருமான், பிரமனது முடியைக் கையில் கொண்டவர், சிங்கத்தையும் யானையையும் தோல் உரித்த கடவுள், உண்மையான அடியார்களுக்கு அருள் புரிபவர், வெந்த நீறு அணிபவர், கங்கை, பாம்பு, சந்திரன், கொன்றை இவைகளை அணிந்த சடையைக் கொண்டவர், (மலர்ப் பாணங்களைத்) தொடுத்த மன்மதனின் உருவை எரித்த நெற்றிக் கண்ணினர், ஆணவம் மிக்கிருந்த திரிபுரங்களை எரித்த புன்னகை உடையவர், தும்பை மலர் மாலையை உடையவர், கழுத்தில் கரிய (ஆலகால விஷத்தின்) அடையாளத்தை உடையவர், தொந்திக் கணபதியைப் பெற்றவர், அத்தகைய சிவபெருமானின் இடது பாகத்தில் உறையும் சுகத்தியாகிய பார்வதி, மழுவாயுதத்தையும், மானையும் கையில் ஏந்திய பச்சை வடிவம் உடையவள், அரக்கன் முயலகனை மிதித்த திருவடியினள் ஆகிய உமை பெற்றருளிய முருகனே, பிறைத் துண்டம் போன்ற நெற்றியையும், மின்னல் கொடி போன்ற இடையையும் உடையவள், ரம்பைக்கும் அரசி என்னும்படியான, (ஐராவதம்) என்னும் யானை வளர்த்த மகளாகிய தேவயானை சுகம் பெற அவளுடைய மண அறையில் இன்பமாக அவளை அணைந்தவனும், ஆறு திருமுகங்களுடன் சேர்ந்து காதல் மிகக் கொண்ட அழகிய புயங்களை உடையவனே, செவ்விய அழகிய தாமரை போன்ற திருக்கரங்கள் பன்னிரண்டும், அழகிய ஒளி வீசும் சந்திரனைப் போல ஒளியைப் பரப்பி, அழகிய பல படைகள் (ஆயுதங்கள்) கைகளில் விளங்க, ஒளி மணிகள் பதிக்கப்பட்ட கி¡£டம், கடப்ப மலர் மாலை முதலிய சிறப்புக்களுடன், (தினைப்புனத்தில் இருந்த) ஒப்பற்ற பரணிலிருந்து மூலிகைகள் மிகுந்த செழிப்பான காட்டில் வாழும் வள்ளியுடன் சம்பந்தப்பட்டு, அவளுடன் இணைந்த செயலைப் புரிந்துகொண்டு, அடியேனுடைய துன்பங்கள் பொடியாக என் முன்னே வந்து காட்சி அளித்து, கருணைமயமான வேலைச் செலுத்தியும், புன்னகை புரிந்தும், மயில் மீது நடனம் செய்தும், நெருப்பு மலையாகிய திருவண்ணாமலை ஊருக்குள் வீற்றிருக்கும் பெருமாளே. 
திருப்புகழ்ச் சந்த அமைப்பிலேயே அதிக எண்ணிக்கை கொண்ட பாடல் இதுவாகும்.
பாடல் 445 - திருவருணை 
ராகம் - ...; தாளம் -
தானதன தானதன தானதன தானதன
     தானதன தானதன ...... தனதான
வீறுபுழு கானபனி நீர்கள்மல தோயல்விடு
     மேருகிரி யானகொடு ...... தனபார 
மீதுபுர ளாபரண சோதிவித மானநகை
     மேகமனு காடுகட ...... லிருள்மேவி 
நாறுமலர் வாசமயிர் நூலிடைய தேதுவள
     நாணமழி வார்களுட ...... னுறவாடி 
நாடியது வேகதியெ னாசுழலு மோடனைநின்
     ஞானசிவ மானபத ...... மருள்வாயே 
கூறுமடி யார்கள்வினை நீறுபட வேஅரிய
     கோலமயி லானபத ...... மருள்வோனே 
கூடஅர னோடுநட மாடரிய காளியருள்
     கூருசிவ காமியுமை ...... யருள்பாலா 
ஆறுமுக மானநதி பாலகுற மாதுதன
     மாரவிளை யாடிமண ...... மருள்வோனே 
ஆதிரகு ராமஜய மாலின்மரு காபெரிய
     ஆதியரு ணாபுரியில் ...... பெருமாளே.
(மணம் வீசும்) புனுகு, பன்னீர் ஆகியவைகளை மலம் தோய்ந்துள்ள உடலின் மீது விட்டுப் பூசி, மேரு மலை போன்ற, தீமைக்கு இடமான, மார்பகப் பாரங்களின் மேல் புரள்கின்ற ஆபரணங்களின் ஒளியும், பல விதமான சிரிப்பும் கொண்டு, மேகம், பின்னும் காடு, கடல் ஆகியவைகளின் கறுப்பு நிறத்துடன் மணம் வீசும் மலர்களின் வாசனையைக் கொண்ட கூந்தலை விரித்து, நூல் போல் நுண்ணிய இடையை துவளச் செய்து, நாணம் என்பதே இல்லாது அழியும் விலைமாதர்களுடன் நட்பு பூண்டு, விரும்பி அந்த வேசையருடன் ஆடுவதே கதி என்று சுழல்கின்ற மூடனாகிய எனக்கு உனது சிவஞான மயமான திருவடியைத் தந்து அருள்வாயாக. உன்னைப் போற்றும் அடியார்களின் வினை தூளாகிப் போக, அருமையான அழகிய மயிலான பதவியை அருள்பவனே, சிவபெருமானோடு சேர்ந்து நடனம் ஆடும் அரிய காளியும் திருவருள் மிக்க சிவகாமியும் ஆன உமாதேவி அருளிய குழந்தையே, ஆறு முகங்கள் கொண்ட கங்கா நதியின் குழந்தையே, குறப் பெண் வள்ளியின் நெஞ்சம் குளிர விளையாடி அவளை மணம் புரிந்தவனே, ஆதி ரகுராமனும் வெற்றி பொருந்தியவனுமான திருமாலின் மருகனே, பெரிய திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
'கூறுமடியார்கள் வினை', 'ஆறுமுகமான', 'ஆதியருணாபுரியில்', என்ற சொற்றொடர்கள் 'ஏறுமயில் ஏறி' என்னும் பாடலை ஒத்திருப்பதைக் காணலாம்.
பாடல் 446 - திருக்காளத்தி 
ராகம் - கல்யாணி;தாளம் - அங்கதாளம் - 8 1/2 
தகிடதக-2 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தனத்தா தத்தத் தனனா தந்தத்
     தனத்தா தத்தத் தனனா தந்தத்
          தனத்தா தத்தத் தனனா தந்தத் ...... தனதான
சரக்கே றித்தப் பதிவாழ் தொந்தப்
     பரிக்கா யத்திற் பரிவோ டைந்துச்
          சதிக்கா ரர்ப்புக் குலைமே விந்தச் ...... செயல்மேவிச் 
சலித்தே மெத்தச் சமுசா ரம்பொற்
     சுகித்தே சுற்றத் தவரோ டின்பத்
          தழைத்தே மெச்சத் தயவோ டிந்தக் ...... குடிபேணிக் 
குரக்கோ ணத்திற் கழுநா யுண்பக்
     குழிக்கே வைத்துச் சவமாய் நந்திக்
          குடிற்கே நத்திப் பழுதாய் மங்கப் ...... படுவேனைக் 
குறித்தே முத்திக் குமறா வின்பத்
     தடத்தே பற்றிச் சகமா யம்பொய்க்
          குலக்கால் வற்றச் சிவஞா னம்பொற் ...... கழல்தாராய் 
புரக்கா டற்றுப் பொடியாய் மங்கக்
     கழைச்சா பத்தைச் சடலா னுங்கப்
          புகைத்தீ பற்றப் புகலோ ரன்புற் ...... றருள்வோனே 
புடைத்தே யெட்டுத் திசையோ ரஞ்சத்
     தனிக்கோ லத்துப் புகுசூர் மங்கப்
          புகழ்ப்போர் சத்திக் கிரையா நந்தத் ...... தருள்வோனே 
திருக்கா னத்திற் பரிவோ டந்தக்
     குறக்கோ லத்துச் செயலா ளஞ்சத்
          திகழ்ச்சீ ரத்திக் கழல்வா வென்பப் ...... புணர்வோனே 
சிவப்பே றுக்குக் கடையேன் வந்துட்
     புகச்சீர் வைத்துக் கொளுஞா னம்பொற்
          றிருக்கா ளத்திப் பதிவாழ் கந்தப் ...... பெருமாளே.
பொருள் மிகுந்த இந்தப் பூமியில் வாழ்கின்ற சம்பந்தத்தை வகிக்கின்ற இவ்வுடலில் அன்பு பூண்டவர் போன்று உள்ள ஐந்து (பொறிகளாகிய) மோசக்காரர்கள் புகுந்து, அழிவுக்குக் காரணமான இத்தகைய தொழில்களை விரும்பி மேற்கொண்டு, சஞ்சலப்பட்டு, மிகவும் குடும்பம், செல்வம் ஆகியவற்றைச் சுகத்துடன் அனுபவித்து, சுற்றத்தாருடன் மகிழ்ச்சி மிகுந்து புகழும்படி அன்புடனே இந்த வாழ்விடத்தை விரும்பி, (இறுதியில்) பிளவுபட்ட கூர்மையான மூக்கை உடைய கழுகும், நாயும் உண்ணும்படி குழியில் வைத்துப் பிணமாய்க் கெடுகின்ற இந்தக் குடிசையாகிய உடலையே விரும்பி, பயனற்று அழிதல் உறுகின்ற என்னை, குறிக் கொண்டு, முக்திக்கு மாறுதல் இல்லாத இன்ப வழியைக் கைப்பற்றி, உலக மாயை, பொய், குலம், குடி என்கின்ற பற்றுக் கோடுகள் வற்றிப்போக, சிவ ஞானமாகிய உனது அழகிய திருவடியைத் தந்து அருளுக. திரி புரம் என்னும் காடு அழிந்து பொடியாய் மறையவும், கரும்பு வில்லை ஏந்தியவனும் அழகிய உடலை உடையவனுமான மன்மதன் அழியவும், புகை கொண்ட தீயை (நெற்றிக் கண்ணால்) பற்றச் செய்த அந்த வெற்றியாளராகிய சிவபிரானால் அன்பு கொண்டு அருளப்பட்டவனே, அடித்து வீழ்த்தியே எட்டுத் திக்குகளிலும் உள்ளோர்களும் பயப்படும்படி, தனிப்பட்ட உருவத்துடன் புகுந்த சூரன் அழியும்படி அவனை போரில் புகழ் கொண்ட சக்தி வேலாயுதத்துக்கு உணவாக மகிழ்ச்சியுடன் அருளியவனே, அழகிய வள்ளி மலைக் காட்டில் நீஅன்பு பூண்டு செல்ல, அந்தக் குறக்கோலம் பூண்டிருந்த இலக்குமி போன்ற வள்ளி (யானையைக் கண்டு) பயப்பட்டதும் விளங்கும் சீர் பெற்ற (இந்த) யானைக்கு பயந்து அழ வேண்டாம், வா என்று சொல்லி, அவளை அணைந்தவனே, சிவகதி அடையும் பேற்றுக்கு, கடையவனாகிய நான் வந்து உட்சேருவதற்கு வேண்டிய சிறப்பினைத் தந்து என்னை ஏற்றுக் கொள்வாயாக. ஞானமும் பொலிவும் அழகும் நிறைந்த திருக் காளத்தி* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே. 
* திருக்காளத்தி என்னும் 'காளஹஸ்தி' ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில் ரேணுகுண்டாவுக்கு வடகிழக்கில் 15 மைலில் உள்ளது. பஞ்சபூதத் தலங்களுள் ஒன்று.
பாடல் 447 - திருக்காளத்தி 
ராகம் - கானடா; தாளம் - சதுஸ்ர ஜம்பை - 7 
- எடுப்பு - அதீதம், - விச்சில் 1/2 இடம்
தனத்தா தத்தத் ...... தனதான
     தனத்தா தத்தத் ...... தனதான
சிரத்தா னத்திற் ...... பணியாதே
     செகத்தோர் பற்றைக் ...... குறியாதே 
வருத்தா மற்றொப் ...... பிலதான
     மலர்த்தாள் வைத்தெத் ...... தனையாள்வாய் 
நிருத்தா கர்த்தத் ...... துவநேசா
     நினைத்தார் சித்தத் ...... துறைவோனே 
திருத்தாள் முத்தர்க் ...... கருள்வோனே
     திருக்கா ளத்திப் ...... பெருமாளே.
தலையைக் கொண்டு உன்னைப் பணியாமல் இருக்கும் யான் உலகத்தோர்தம் பாசங்களில் நோக்கம் செலுத்தாமல் இருக்கும்படியாக என்னை வருத்தி, தமக்கு வேறு நிகர் இல்லாத மலர் போன்ற உன் திருவடிகளில் சேர்த்து, ஏமாற்றுக்காரனாகிய என்னை ஆண்டருள்வாயாக. நடனம் ஆட வல்லவனே, தலைமை ஸ்தானம் வகிக்கும் நேசனே, உன்னை நினைப்பவர்களது சித்தத்தில் வீற்றிருப்பவனே, உன் திருவடிகளை ஜீவன் முக்தர்களுக்கு* தந்தருள்பவனே, திருக்காளத்தியில் உள்ள பெருமாளே. 
* ஜீவன் முக்தர்கள் நான்கு வகைப்படுவர்:பிரம்ம வித்துக்கள் - ஞானம் அடைந்து உலகத்திற்காக உழைப்பவர்கள்,பிரம்ம வரர் - சமாதிநிலையில் இருந்து தாமே உணரும் ஞானிகள்,பிரம்ம வரியர் - சமாதியில் இருந்து பிறர் கலைக்க எழும் ஞானிகள்,பிரம்ம வரிஷ்டர் - சமாதியில் இருந்து கலைக்கப்பட முடியாத ஞானிகள்.
பாடல் 448 - திருக்காளத்தி 
ராகம் - ...; தாளம் -
தந்தன தானத் தனந்த தானன
     தந்தன தானத் தனந்த தானன
          தந்தன தானத் தனந்த தானன தனதான
பங்கய னார்பெற் றிடுஞ்ச ராசர
     அண்டம தாயுற் றிருந்த பார்மிசை
          பஞ்சவர் கூடித் திரண்ட தோர்நர ...... உருவாயே 
பந்தம தாகப் பிணிந்த ஆசையில்
     இங்கித மாகத் திரிந்து மாதர்கள்
          பண்பொழி சூதைக் கடந்தி டாதுழல் ...... படிறாயே 
சங்கட னாகித் தளர்ந்து நோய்வினை
     வந்துடல் மூடக் கலங்கி டாமதி
          தந்தடி யேனைப் புரந்தி டாயுன ...... தருளாலே 
சங்கரர் வாமத் திருந்த நூபுர
     சுந்தரி யாதித் தருஞ்சு தாபத
          தண்டைய னேகுக் குடம்ப தாகையின் ...... முருகோனே 
திங்களு லாவப் பணிந்த வேணியர்
     பொங்கர வாடப் புனைந்த மார்பினர்
          திண்சிலை சூலத் தழுந்து பாணியர் ...... நெடிதாழ்வார் 
சிந்துவி லேயுற் றெழுந்த காளவி
     டங்கள மீதிற் சிறந்த சோதியர்
          திண்புய மீதிற் றவழ்ந்து வீறிய ...... குருநாதா 
சிங்கம தாகத் திரிந்த மால்கெரு
     வம்பொடி யாகப் பறந்து சீறிய
          சிம்புள தாகச் சிறந்த காவென ...... வருகோமுன் 
செங்கதி ரோனைக் கடிந்த தீவினை
     துஞ்சிட வேநற் றவஞ்செய் தேறிய
          தென்கயி லாயத் தமர்ந்து வாழ்வருள் ...... பெருமாளே.
தாமரை மலரில் உள்ள பிரமன் படைத்துள்ள அசைவன, அசையாதனவாய் உள்ள அண்டமாகிப் பொருந்தி இருக்கும் இந்தப் பூமி மேல் ஐம்பூதங்களும் கூடி ஒன்றாகி ஒரு மனித உருவம் அமைந்து, பாசத்தால் கட்டுண்ட ஆசையால் இன்பமுற்றுத் திரிந்து, விலைமாதரின் நற்குணம் இல்லாத வஞ்சகச் சூழ்ச்சிகளைக் கடந்திடாமல் திரிகின்ற, பொய் கலந்தவனாய் வேதனைப் படுபவனாகிச் சோர்வடைந்து, பிணியும் வினையும் வந்து உடலை மூடி, அதனால், கலக்கம் அடையாத அறிவைத் தந்து அடியேனை உன்னுடைய திருவருளைப் பாலித்துக் காப்பாற்றுவாயாக. சிவபெருமானுடைய இடது பாகத்தில் உறையும் சிலம்பணிந்த அழகி ஆதி தேவி பெற்ற குழந்தையே, தண்டைகள் அணிந்த பாதங்களை உடையவனே, கோழிக் கொடியைக் கொண்ட முருகனே, நிலவு (சடையில்) உலாவும்படியாக அருளிய சடையை உடையவர், மேலெழுந்து பாம்பு ஆடும்படி அணிந்துள்ள மார்பை உடையவர், வலிமை வாய்ந்த (பினாகம் என்னும்) வில்லும், சூலாயுதமும் பொருந்தி உள்ள திருக்கையை உடையவர், நிரம்ப ஆழமாகவும் நீண்டும் உள்ள பாற்கடலில் இருந்து தோன்றிய கரிய ஆலகால விஷத்தை தனது கண்டத்தில் விளங்கும்படி வைத்த பேரொளியினர் (நீலகண்டர்), (அத்தகைய சிவபெருமானுடைய) வலிய தோள்களில் தவழ்ந்து பொலிந்த குருநாதனே, நரசிங்கமாக திரிந்த திருமாலின் அகந்தை* பொடிபட்டு அழியும்படியாக, பறந்து கோபித்த சரபப் பட்சியாய் (உரு எடுத்து) விளங்கி ஆகா என்று சப்தித்து வந்த பெருமானாகிய வீரபத்திரர் முன்பு, சூரியனை (தக்ஷயாகத்தின்போது) தண்டித்த தீவினை தோஷம் நீங்க**, நல்ல தவத்தைச் செய்து சிறப்படைந்த தக்ஷிண கயிலாயமாகிய திருக்காளத்தியில் வீற்றிருந்து அடியார்களுக்கு அருளும் பெருமாளே. 
* இரணியன் இரத்தத்தை உறிஞ்சிய பின் வெறி ஏறி திருமால் உக்கிரம் கொண்டார். சிவபெருமான் வீரபத்திரரை ஏவ, அவர் சரபப் பட்சி உருவம் எடுத்து அந்த நரசிங்கத்தை அடக்கினார்.** வீரபத்திரர் தக்ஷயாகத்தின்போது சிவனின் அம்சமாகக் கருதப்படும் சூரியனைத் தண்டித்த தீவினை நீங்க திருக்காளத்தியில் தவம் செய்தார் - திருக்காளத்திப் புராணம்.
பாடல் 449 - சிதம்பரம் 
ராகம் - கரஹரப்ரியா ; தாளம் - ஆதி - எடுப்பு - 1/2 இடம்
தனதனன தான தனதனன தான
     தனதனன தானத் ...... தனதானா
கனகசபை மேவு மெனதுகுரு நாத
     கருணைமுரு கேசப் ...... பெருமாள்காண் 
கனகநிற வேத னபயமிட மோது
     கரகமல சோதிப் ...... பெருமாள்காண் 
வினவுமடி யாரை மருவிவிளை யாடு
     விரகுரச மோகப் ...... பெருமாள்காண் 
விதிமுநிவர் தேவ ரருணகிரி நாதர்
     விமலசர சோதிப் ...... பெருமாள்காண் 
சனகிமண வாளன் மருகனென வேத
     சதமகிழ்கு மாரப் ...... பெருமாள்காண் 
சரணசிவ காமி யிரணகுல காரி
     தருமுருக நாமப் ...... பெருமாள்காண் 
இனிதுவன மேவு மமிர்தகுற மாதொ
     டியல்பரவு காதற் ...... பெருமாள்காண் 
இணையிலிப தோகை மதியின்மக ளோடு
     மியல்புலியுர் வாழ்பொற் ...... பெருமாளே.
பொன்னம்பலமாகிய சிதம்பரத்தில் நடனம் செய்யும் எனது குருநாதராகிய கருணை நிறைந்த முருகேசப் பெருமாள் நீதான். பொன்னிறத்து பிரமன் அபயம் என்று உன்னைச் சரணடைய, தலையில் குட்டிய தாமரை போன்ற கையையுடைய ஜோதிப் பெருமாள் நீதான். உன்னை ஆய்ந்து துதிக்கும் அடியார்களிடம் இணைந்து விளையாடுகின்ற ஆர்வம், இன்பம், ஆசை அத்தனையும் உள்ள பெருமாள் நீதான். பிரமன், முனிவர்கள், தேவர்கள், அருணாசல ஈஸ்வரர், மற்றும் பரிசுத்தமான என் மூச்சுக்காற்றில் உள்ள ஜோதிப் பெருமாள் எல்லாமே நீதான். ஜானகியின் மணவாளன் ஸ்ரீராமனின் மருமகன் என்று நூற்றுக்கணக்கான வேதங்கள் சொல்லி மகிழும் குமாரப் பெருமாள் நீதான். அடைக்கலம் அளிக்கும் சிவகாமி, போர் செய்யும் அசுர குலத்தைச் சங்கரித்தவள், ஈன்றருளிய முருகன் என்னும் திருநாமம் உடைய பெருமாள் நீதான். இனிய வள்ளிமலைத் தினைப்புனத்தில் இருந்த அமுதை ஒத்த குறப்பெண் வள்ளியுடன் அன்பு விரிந்த காதல் கொண்ட பெருமாள் நீதான். ஒப்பற்ற யானை வளர்த்த மயில் போன்ற (தேவயானையாம்) அறிவு நிறைந்த பெண்ணுடன் தகுதிபெற்ற புலியூரில் (சிதம்பரத்தில்) வாழும் அழகிய பெருமாளே. 
பாடல் 450 - சிதம்பரம் 
ராகம் - ஜோன்புரி; தாளம் - ஆதி
தத்ததன தான தத்ததன தான
     தத்ததன தான ...... தனதான
கைத்தருண சோதி யத்திமுக வேத
     கற்பகச கோத்ரப் ...... பெருமாள்காண் 
கற்புசிவ காமி நித்யகலி யாணி
     கத்தர்குரு நாதப் ...... பெருமாள்காண் 
வித்துருப ராம ருக்குமரு கான
     வெற்றி யயில் பாணிப் ...... பெருமாள்காண் 
வெற்புளக டாக முட்குதிர வீசு
     வெற்றிமயில் வாகப் ...... பெருமாள்காண் 
சித்ரமுக மாறு முத்துமணி மார்பு
     திக்கினினி லாதப் ...... பெருமாள்காண் 
தித்திமிதி தீதெ னொத்திவிளை யாடு
     சித்திரகு மாரப் ...... பெருமாள்காண் 
சுத்தவிர சூரர் பட்டுவிழ வேலை
     தொட்டகவி ராஜப் ...... பெருமாள்காண் 
துப்புவளி யோடு மப்புலியுர் மேவு
     சுத்தசிவ ஞானப் ...... பெருமாளே.
துதிக்கை உடைய, இளமை வாய்ந்த, ஒளிமயமான, யானைமுகமுடைய, வேதப்பொருளான கற்பக* விநாயகனின் இளைய சகோதரப் பெருமான் நீதான். கற்பரசி சிவகாமசுந்தரியும், நித்திய கல்யாணியுமான பார்வதியின் தலைவரான சிவனாரின் குருநாதப் பெருமான் நீதான். மழைத்துளி பெய்யும் மேகத்து வண்ணனான இராமருக்கு மருமகனாகி வெற்றி வேலாயுதத்தைக் கரத்தில் ஏந்திய பெருமான் நீதான். மலைகள் உள்ள அண்டகோளங்கள் அஞ்சும்படி தோகையை வீசும் வெற்றி மயிலை வாகனமாகக் கொண்ட பெருமான் நீதான். அழகிய முகங்கள் ஆறும், முத்துமாலைகள் அணிந்த மார்பும், வேறு எந்தத் திசையிலும் காணமுடியாத பேரழகுப் பெருமான் நீதான். தித்திமிதி தீது என தாளமிட்டு விளையாடுகின்ற அழகிய குமாரப்பெருமான் நீதான். சுத்த வீரனே, சூரர்கள் அழியும்படி வேலைச் செலுத்தியவனும், சிறந்த கவியரசனாகியவனும் ஆன பெருமான் நீதான். தூயவளான வள்ளியுடன் அந்தப் புலியூர் (சிதம்பரம்) தலத்தில் மேவி, சுத்த சிவஞான உருவான பெருமாளே. 
* சிதம்பரத்தில் மேற்கு கோபுரத்தின் வாயிலில் வீற்றிருக்கும் கணபதிக்கு கற்பக விநாயகர் எனப் பெயர்.

பாடல் 401 - திருவருணை 
ராகம் - பூர்விகல்யாணி; தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2 தகதிமி-2, தகிட-1 1/2

தனதன தந்த தனதன தந்த     தனதன தந்த ...... தனதான

இருவினை யஞ்ச மலவகை மங்க     இருள்பிணி மங்க ...... மயிலேறி 
இனவரு ளன்பு மொழியக டம்பு     வினதக முங்கொ ...... டளிபாடக் 
கரிமுக னெம்பி முருகனெ னண்டர்     களிமலர் சிந்த ...... அடியேன்முன் 
கருணைபொ ழிந்து முகமும லர்ந்து     கடுகிந டங்கொ ...... டருள்வாயே 
திரிபுர மங்க மதனுடல் மங்க     திகழ்நகை கொண்ட ...... விடையேறிச் 
சிவம்வெளி யங்க ணருள்குடி கொண்டு     திகழந டஞ்செய் ...... தெமையீண 
அரசியி டங்கொள் மழுவுடை யெந்தை     அமலன்ம கிழ்ந்த ...... குருநாதா 
அருணைவி லங்கல் மகிழ்குற மங்கை     அமளிந லங்கொள் ...... பெருமாளே.

நல்வினை, தீவினை இரண்டுமே அஞ்சி ஒழிய, மலக் கூட்டங்கள் (மாசுகள்) மங்கி அழிய, அஞ்ஞானமும், நோய்களும் அகல, நீ மயில் வாகனத்தில் ஏறிவந்து, அருள் வாக்குகளும், அன்பான மொழிகளும் கூற, உன் கடப்பமலரின் உயிர்தரு மருந்தாம் தேனைச்சுற்றி வண்டுகள் ¡£ங்காரம் செய்து முரல, யானைமுகன் கணபதி என் தம்பியே, முருகா என்றழைக்க, தேவர்கள் மகிழ்ந்து மலர் மாரி பொழிய, என் முன்னே கருணை மிகக் காட்டி மலர்ந்த முகத்தோடு வேகமாக நடனம் செய்தவாறு வந்து அருள் புரியவேண்டும். திரிபுரம் அழியவும், மன்மதனின் உடல் எரியவும், விளங்கும் புன்சிரிப்பைச் சிரித்தே எரித்த ரிஷப வாகனம் ஏறும் சிவபெருமான் பரவெளியில் திருவருளோடு வீற்றிருந்து, விளங்க நடனம் செய்து, எம்மைப் பெற்ற தேவியை இடது பாகத்தில் ஏற்றுக்கொண்டு, மழு ஆயுதத்தை ஏந்திய எம் தந்தை மாசற்றவன் மகிழ்ச்சியடைந்த குருநாதனே, திருஅண்ணாமலைக் குன்றிலே மகிழும் குறமங்கையின் மலர்ப்படுக்கையிலே மனமகிழும் பெருமாளே. 

பாடல் 402 - திருவருணை 
ராகம் - ....; தாளம் -

தனதன தாந்த தந்த தனதன தாந்த தந்த     தனதன தாந்த தந்த ...... தனதான

இருவினை யூண்ப சும்பை கருவிளை கூன்கு டம்பை     யிடரடை பாழ்ம்பொ தும்ப ...... கிதவாரி 
இடைதிரி சோங்கு கந்த மதுவது தேங்கு கும்ப     மிரவிடை தூங்கு கின்ற ...... பிணநோவுக் 
குருவியல் பாண்ட மஞ்சு மருவிய கூண்டு நெஞ்சொ     டுயிர்குடி போங்கு ரம்பை ...... யழியாதென் 
றுலகுட னேன்று கொண்ட கருமபி ராந்தொ ழிந்து     னுபயப தாம்பு யங்க ...... ளடைவேனோ 
அருணையி லோங்கு துங்க சிகரக ராம்பு யங்க     ளமரர் குழாங்கு விந்து ...... தொழவாழும் 
அடியவர் பாங்க பண்டு புகலகி லாண்ட முண்ட     அபிநவ சார்ங்க கண்டன் ...... மருகோனே 
கருணைம்ரு கேந்த்ர அன்ப ருடனுர கேந்த்ரர் கண்ட     கடவுள்ந டேந்த்ரர் மைந்த ...... வரைசாடுங் 
கலபக கேந்த்ர தந்த்ர அரசநி சேந்த்ர கந்த     கரகுலி சேந்த்ரர் தங்கள் ...... பெருமாளே.

இரண்டு வினைகளுக்கும் உணவிடமான புத்தம் புது தோல் பை, கரு வளருவதற்கு இடமான பாத்திரம் ஆகிய உடம்பு, துன்பங்களையே அடைத்து வைத்துள்ள, பாழடையப் போவதான குகை, துன்பமும் தீமையும் கொண்ட கடலின் நடுவில் திரிகின்ற மரக்கலம், மலச்சேறும் மூத்திர நீரும் நிரம்பிய இடம், இரவிலே தூங்குகின்ற பிணம் போன்ற, நோயினுக்கு உருவாய் அமைந்த பாத்திரம், ஐம்பூதங்களும் பொருந்தி உள்ள கூடு, என் மனத்துடன் உயிரும் (உடலை விட்டு) வெளியேறும் சிறு குடில் - ஆகிய இந்த உடம்பு அழியாமல் நிலைத்து நிற்கும் என்று, உலகத்தாரிடம் நான் கொண்டுள்ள, வினைப் பயனால் வரும், மயக்கம் நீங்கப் பெற்று, உனது இரண்டு தாமரைத் திருவடிகளை அடையும் பாக்கியத்தைப் பெறுவேனோ? திரு அண்ணாமலையில் உயர்ந்து ஓங்கிய பரிசுத்தமான கோபுர வாயிலில், தாமரை போன்ற கைகளைக் கூப்பி தேவர்கள் தொழ வாழ்கின்ற அடியார்களின் தோழனே, முன் ஒரு காலத்தில் சொல்லப்படுகின்ற எல்லா உலகங்களையும் உண்ட, புதுமை வாய்ந்த சாரங்கம் என்னும் வில்லை ஏந்திய வீரனாகிய திருமாலின் மருகோனே, கருணை நிறைந்த புலிக்கால் கொண்ட வியாக்ரபாதருடன், சர்ப்ப சிரேஷ்டரான பதஞ்சலி முநிவரும் தரிசித்த நடராஜரின்* மகனே, மலைகளைத் தூளாக்கும் தோகை உடைய மயில் வாகனனே, இலக்கிய நூல்களில் வல்லவனே, அரசனே, சத்திய சிரேஷ்டனாகிய கந்தனே, வஜ்ராயுதத்தைக் கையில் கொண்ட தேவேந்திரர்களுக்குப் பெருமாளே. 
* தில்லையில் நடராஜப் பெருமானது ஆடல் வியாக்ரபாதர், பதஞ்சலி என்ற இருவர் காணும் பொருட்டே ஆடப்பட்டது.

பாடல் 403 - திருவருணை 
ராகம் - .....; தாளம் -

தனதனன தனதனன தான தத்த தந்த     தனதனன தனதனன தான தத்த தந்த          தனதனன தனதனன தான தத்த தந்த ...... தனதான

இருளளக மவிழமதி போத முத்த ரும்ப     இலகுகயல் புரளஇரு பார பொற்ற னங்கள்          இளகஇடை துவளவளை பூச லிட்டி ரங்க ...... எவராலும் 
எழுதரிய கலைநெகிழ ஆசை மெத்த வுந்தி     யினியசுழி மடுவினிடை மூழ்கி நட்பொ டந்த          இதழமுது பருகியுயிர் தேக மொத்தி ருந்து ...... முனிவாறி 
முருகுகமழ் மலரமளி மீதி னிற்பு குந்து     முகவனச மலர்குவிய மோக முற்ற ழிந்து          மொழிபதற வசமழிய ஆசை யிற்க விழ்ந்து ...... விடுபோதும் 
முழுதுணர வுடையமுது மாத வத்து யர்ந்த     பழுதில்மறை பயிலுவஎ னாத ரித்து நின்று          முநிவர்சுரர் தொழுதுருகு பாத பத்ம மென்று ...... மறவேனே 
ஒருசிறுவன் மணமதுசெய் போதி லெய்த்து வந்து     கிழவடிவு கொடுமுடுகி வாச லிற்பு குந்து          உலகறிய இவனடிமை யாமெ னக்கொ ணர்ந்து ...... சபையூடே 
ஒருபழைய சருகுமடி ஆவ ணத்தை யன்று     உரமொடவ னதுவலிய வேகி ழிக்க நின்று          உதறிமுறை யிடுபழைய வேத வித்தர் தந்த ...... சிறியோனே 
அரியவுடு பதிகடவி யாட கச்சி லம்பொ     டழகுவட மணிமுடிவி யாள மிட்ட ழுந்த          அமரரொடு பலர்முடுகி ஆழி யைக்க டைந்து ...... அமுதாக 
அருளுமரி திருமருக வார ணத்தை யன்று     அறிவினுட னொருகொடியி லேத ரித்து கந்த          அருணகிரி நகரிலெழு கோபு ரத்த மர்ந்த ...... பெருமாளே.

கரிய கூந்தல் அவிழ, சந்திரனைப் போன்ற முகத்தில் உண்டான முத்துப் போன்ற வேர்வை வெளித்தோன்ற, விளங்கும் கயல் மீன் போன்ற கண்கள் புரள, இரண்டு கனத்த அழகிய மார்பகங்கள் நெகிழ்ச்சியுற, இடுப்பு துவள, கை வளையல்கள் ஒன்றோடொன்று மோதி ஒலிக்க, யாராலும் எழுதுதற்கு முடியாததான அழகிய ஆடை தளர்ச்சி உற, ஆசை அதிகரிக்க, தொப்புளாகிய இனிமை தரும் சுழி போன்ற மடுவில் (நீர் நிலையில்) முழுகி, நட்பு பூண்டு, அந்த வாயிதழ்களின் அமுதத்தை உண்டு, உயிரும் உடலும் ஒன்று போல ஒத்திருந்து, கோபம் வெறுப்பு எல்லாம் தணிந்து, நறு மணம் வீசுகின்ற மலர்ப் படுக்கையின் மீது படுத்து, முகமாகிய தாமரை கூம்ப, காம ஆசை கொண்டு அதில் அழிந்து, பேச்சு தடுமாற, தன் வசம் கெட்டழிய, அந்த ஆசையில் கவிழ்ந்து முழுகி விட்ட சமயத்திலும் கூட, எல்லாம் உணரும்படியான முற்றிய சிறந்த தவ நிலையில் உயர்ந்ததும் குற்றம் இல்லாததுமான வேதத்தில் நெருங்கி விளங்குபவன் என்று விரும்பிப் போற்றி செய்து நின்று முனிவர்களும் தேவர்களும் வணங்கி உருகும் உனது தாமரைத் திருவடிகளை என்றும் மறக்க மாட்டேன். ஒப்பற்ற சிறுவனான நம்பியூரன் என்னும் சுந்தர மூர்த்திக்குத் திருமணச் சடங்கு செய்யப்படும் சமயத்தில், களைத்து வந்து ஒரு கிழ உருவம் கொண்டு வேகமாக முன் வந்து, (மண) வாசலில் புகுந்து உலகோர் யாவரும் அறியும்படி இந்தச் சிறுவன் (எனக்கு) அடிமையாம் என்று (ஒரு ஓலையைக்) கொண்டு வந்துசபையோர்களின் மத்தியில் அறிவிக்க, ஒரு பழைய ஓலையில் எழுதப்பட்டு மடிந்து வைத்திருந்த பத்திரம் ஒன்றை வலிமையுடன் அந்தச் சிறுவன் வேணுமென்றே பற்றிக் கிழித்தெறிய, (அப்போது கை கால்களை) உதறிக் கொண்டு இது முறையோ என்று கூச்சலிட்ட பழையவரும், வேதத்தை நன்கறிந்த முதல்வருமான சிவபெருமான் பெற்றருளிய குழந்தையே, அருமையான சந்திரனை தூணாக இருக்கும்படிச் செலுத்தி வைத்து, பொன் மலையாகிய மேரு மலையை மத்தாக வைத்து, ரத்தின முடிகளை உடைய பாம்பாகிய வாசுகியை கயிறாகப் பூட்டி, அழுத்தமாக தேவர்களோடு பலரும் விரைவுடன் பாற்கடலைக் கடைந்து (இறுதியில்) அமுது வரச் செய்து, அதனை (தேவர்களுக்குப்) பகிர்ந்து அளித்த திருமாலின் மருகனே, சேவலை அன்று முன் யோசனையுடன் ஒரு கொடியில்* நிறுத்தி மகிழ்ந்து, திரு அண்ணாமலையில் கோபுர வாயிலில் எழுந்தருளியிருக்கும் பெருமாளே. 
* சூரனுடைய உடல் வேலால் பிளவுபட, ஒரு கூறு மயிலாகவும், மற்றொரு கூறு சேவலாகவும் முருக வேளை எதிர்த்து வர, அவர் அருள் கண்ணால், மயில் வாகனமாகவும், சேவல் கொடியாகவும் ஆயின.

பாடல் 404 - திருவருணை 
ராகம் - ....; தாளம் -

தனன தனதன தனன தனதன     தனன தனதன ...... தனதான

இறுகு மணிமுலை மருவு தரளமு     மெரியு முமிழ்மதி ...... நிலவாலே 
இரவி யெனதுயிர் கவர வருகுழ     லிசையி லுறுகட ...... லலையாலே 
தறுகண் ரதிபதி மதனன் விடுகொடு     சரமி லெளியெனு ...... மழியாதே 
தருண மணிபொழி லருணை நகருறை     சயில மிசையினில் ...... வரவேணும் 
முறுகு திரிபுர மறுகு கனலெழ     முறுவ லுடையவர் ...... குருநாதா 
முடிய கொடுமுடி யசுரர் பொடிபட     முடுகு மரகத ...... மயில்வீரா 
குறவர் மடமக ளமுத கனதன     குவடு படுமொரு ...... திருமார்பா 
கொடிய சுடரிலை தனையு மெழுகடல்     குறுக விடவல ...... பெருமாளே.

நெருங்கி அழுத்தமாயுள்ள அழகிய மார்பின் மீதுள்ள முத்து மாலை கூட தீயை உமிழும்படி காய்கின்ற சந்திரனுடைய நிலா ஒளியாலும், என்னை வருத்தி அறுத்து எனது உயிரை அபகரிக்க எழுகின்ற புல்லாங்குழலின் இசையாலும், ஒலிக்கும் கடலின் அலையாலும், கொடியவனும், ரதியின் கணவனும் ஆகிய மன்மதன் செலுத்திய கொடிய பாணத்தாலும், எளியவளாகிய நான் அழிந்து போகாமல், தக்க சமயத்தில், அழகிய சோலைகளை உடைய திரு அண்ணாமலை நகரிலுள்ள மலை மீது வந்தருள வேண்டும். கடுமை வாய்ந்த திரிபுரங்களின் தெருக்களில் நெருப்பு எழும்படி புன் சிரிப்புச் சிரித்த சிவபெருமானுக்கு குரு நாதனே, எல்லா மலை உச்சிகளிலும் வாசம் செய்த அசுரர்கள் பொடிபட்டு அழியும்படி செலுத்திய பச்சை நிறம் கொண்ட மயில் வீரனே, வேடர்களின் கபடமற்ற மகளாகிய வள்ளியின் அமுதம் பொதிந்த மார்பகங்களாகிய மலைகள் தாக்கும் ஒப்பற்ற அழகிய மார்பனே, உக்கிரமான, ஒளி வாய்ந்த இலை ஒத்த வேலை ஏழு கடல்களும் வற்றும்படிச் செலுத்த வல்ல பெருமாளே. 
இப்பாடல் அகப் பொருள் துறையைச் சார்ந்தது. 'நாயக நாயகி' பாவத்தில் புலவர் தம்மையே நாயகியாக எண்ணிப் பாடியது.நிலவு, குழல் இசை, கடல் ஒலி, மன்மதன், அவனது பாணம் ஆகியவை விரக நோயை வளர்ப்பவை.

பாடல் 405 - திருவருணை 
ராகம் - ...; தாளம் -

தனதனன தத்த தனதனன தத்த     தனதனன தத்த ...... தனதான

உலையிலன லொத்த வுடலினனல் பற்றி     யுடுபதியை முட்டி ...... யமுதூற 
லுருகிவர விட்ட பரமசுக முற்று     வுனதடியை நத்தி ...... நினையாமற் 
சிலைநுதலி லிட்ட திலதமவிர் பொட்டு     திகழ்முகவர் முத்து ...... நகையாலே 
சிலுகுவலை யிட்ட மயல்கவலை பட்டுத்     திருடனென வெட்கி ...... யலைவேனோ 
கலைகனக வட்ட திமிலைபறை கொட்ட     கனகமயில் விட்ட ...... கதிர்வேலா 
கருதலரின் முட்டிக் கருகிவரு துட்ட     கதவமண ருற்ற ...... குலகாலா 
அலைகடலு டுத்த தலமதனில் வெற்றி     அருணைவளர் வெற்பி ...... லுறைவோனே 
அசுரர்களை வெட்டி யமரர்சிறை விட்டு     அரசுநிலை யிட்ட ...... பெருமாளே.

கொல்லனது உலைக்களத்தில் உள்ள நெருப்புப் போல் உடலில் சிவாக்கினி பற்றி மேல் எழுந்து, சந்திர மண்டலத்தை முட்டி அங்கு அமுத ஊறல் ஊறி உருகி வர விடுகின்ற பரம சுகத்தை அடைந்து, உனது திருவடியை விரும்பி நினைக்காமல், வில்லைப் போன்ற நெற்றியில் இட்ட சிறந்த பொட்டு விளங்கும் முகத்தை உடைய மாதர்களின் முத்துப் போன்ற பல் அழகாலே துன்ப வலையில் அகப்பட்டு காமப் பித்தால் கவலை அடைந்து, திருடனைப் போல் வெட்கப்பட்டு அலைவேனோ? முறைப்படி வாசிக்கப்படுவதும், பொன் போல விளங்குவதும் ஆகிய திமிலை என்ற ஒருவகைத் தோல் கருவி பறை போல முழங்க, பொன்மயிலைச் செலுத்திய, ஒளி வீசும் வேலனே, பகைவர்கள் போல எதிர்த்துத் தாக்கி, நிறம் கறுத்து வந்த, கோபம் மிக்க சமணருடைய குலத்தை (திருஞானசம்பந்தராக வந்து) அழித்தவனே, அலை வீசும் கடலை ஆடையாகத் தரித்த பூமியில், (அரி, அயன் இருவருக்கும் அரியவராய் ஒளிப் பிழம்பாக சிவபெருமான் நின்று) வெற்றி கண்ட தலமாகிய திருவண்ணாமலையில் வீற்றிருப்பவனே, அசுரர்களை வெட்டி அழித்து தேவர்களைச் சிறையினின்று விடுவித்து, பொன்னுலக ஆட்சியை நிலை பெறச் செய்த பெருமாளே. 

பாடல் 406 - திருவருணை 
ராகம் - ஆரபி ; தாளம் - அங்கதாளம் - 10 தகதிமிதக-3, தகிடதகதிமி-3 1/2, தகிடதகதிமி-3 1/2

தனதனன தனந்த தானன ...... தந்ததான     தனதனன தனந்த தானன ...... தந்ததான

கடல்பரவு தரங்க மீதெழு ...... திங்களாலே     கருதிமிக மடந்தை மார்சொல்வ ...... தந்தியாலே 
வடவனலை முனிந்து வீசிய ...... தென்றலாலே     வயலருணையில் வஞ்சி போதந ...... லங்கலாமோ 
இடமுமையை மணந்த நாதரி ...... றைஞ்சும்வீரா     எழுகிரிகள் பிளந்து வீழஎ ...... றிந்தவேலா 
அடலசுரர் கலங்கி யோடமு ...... னிந்தகோவே     அரிபிரம புரந்த ராதியர் ...... தம்பிரானே.

கடலில் பரவிவரும் அலைகளின் மீது தோன்றி எழும் நிலாவாலும், நினைத்து நினைத்துப் பெண்கள் தமக்குள் பேசும் வதந்தியாலும், வடவாக்கினியைக் கோபித்து சூடாக வீசும் தென்றல் காற்றாலும், வயல் சூழ்ந்த இந்தத் திருவண்ணாமலையில் உள்ள வஞ்சிக் கொடி போன்ற பெண் (உன்னைப் பிரிந்ததால்) அறிவு மயங்கி, கலங்கி வருந்தலாமோ? இடது பாகத்தில் உமாதேவியைச் சேர்த்துள்ள சிவபிரான் வணங்கும் வீரனே, ஏழு மலைகளும் பிளந்து விழும்படியாக செலுத்திய வேலாயுதனே, வலிமை வாய்ந்த அசுரர்கள் கலங்கி ஓடக் கோபித்த தலைவனே, திருமால், பிரம்மா, இந்திராதி தேவர்கள் தம்பிரானே. 
இப்பாட்டு அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவிக்காக பாடியது.கடல், சந்திரன், மன்மதன், மலர்க் கணைகள், பெண்களின் வதந்திப் பேச்சு - இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.

பாடல் 407 - திருவருணை 
ராகம் - ....; தாளம் -

தனதனனத் தனதனனத் தனதனனத் தனதனனத்     தனதனனத் தனதனனத் ...... தனதான

கமலமுகப் பிறைநுதல்பொற் சிலையெனவச் சிரகணைநற்     கயலெனபொற் சுழலும்விழிக் ...... குழல்கார்போல் 
கதிர்தரளொப் பியதசனக் கமுகுகளப் புயகழைபொற்     கரகமலத் துகிர்விரலிற் ...... கிளிசேருங் 
குமரிதனத் திதலைமலைக் கிசலியிணைக் கலசமெனக்     குவிமுலைசற் றசையமணிக் ...... கலனாடக் 
கொடியிடைபட் டுடைநடைபொற் சரணமயிற் கெமனமெனக்     குனகிபொருட் பறிபவருக் ...... குறவாமோ 
திமிலையுடுக் குடன்முரசுப் பறைதிமிதித் திமிதிமெனட்     டிமிடிமிடிட் டிகுர்திமிதித் ...... தொலிதாளம் 
செககணசெக் கணகதறத் திடுதிடெனக் கொடுமுடியெட்     டிகைசிலைபட் டுவரிபடச் ...... சிலைகோடித் 
துமிலவுடற் றசுரர்முடிப் பொடிபடரத் தமுள்பெருகத்     தொகுதசைதொட் டலகையுணத் ...... தொடும்வேலா 
துவனிதினைப் புனமருவிக் குறமகளைக் களவுமயற்     சுகமொடணைத் தருணகிரிப் ...... பெருமாளே.

தாமரை போன்ற முகமும், பிறைச் சந்திரனையும் அழகிய வில்லையும் போன்ற நெற்றியும் புருவமும், மிகவும் உறுதியான அம்பையும் நல்ல மீனைப் போன்றதும் ஆகிய அழகிய சுழலும் கண்களும், மேகம் போன்ற கூந்தலும், ஒளி பொருந்திய முத்தை ஒக்கும் பற்களும், கமுகின் கிளையை ஒத்த கழுத்தும், மூங்கிலை ஒத்த மென்மையான புயங்களும், தாமரையை ஒக்கும் கையில் கிளியின் (மூக்கை) ஒக்கும் விரலின் சிவந்த நகங்களும், பருவப் பெண்ணின் தேமல் படர்ந்த மார்பகம் மலையுடன் போட்டியிட்டு, இரண்டு குடங்கள் போல விளங்க, குவிந்துள்ள அந்த மார்பகம் சிறிது அசையவும், ரத்தின ஆபரணங்கள் ஆடவும், கொடி போன்ற இடையில் பட்டாடையுடன், அழகிய பாதங்களின் நடை மயில் செல்வது போல விளங்க, கொஞ்சிப் பேசிப் பொருளை அபகரிக்கும் பொது மகளிர்களின் கூட்டுறவு எனக்கு ஆகுமோ? திமிலை, உடுக்கை முதலிய பறை வகைகள் திமிதித் திமிதிம் என்றும் டிமி டிமி டிட் டிகுர் திமிதித் என்றும் பல விதமான தாளங்களில் ஒலிகளைச் செய்யவும், செககண செக்கண என்ற பெரும் ஒலியை எழுப்பவும், திடுதிடு என்று சிகரங்களை உடைய மலைகள் எட்டுத் திசைகளிலும் அழிபடவும், கடல் கலங்கவும், வில்லை வளைத்து, பெரிய ஆரவரத்துடன் போர் புரிந்த அசுரர்களின் தலைகள் பொடிபட, ரத்தம் போர்க்களத்தில் உள்ள இடம் எல்லாம் பெருக, விழுந்து கூடியுள்ள மாமிசங்களைக் கொத்தி பேய்கள் உண்ணும்படி வேலாயுதத்தைச் செலுத்திய வீரனே, (பட்சி வகைகளின்) ஒலி நிறைந்த தினைப் புனத்துக்குச் சென்று, குற மகள் வள்ளியை களவு வழியில் மோக இன்பத்துடன் தழுவியனே, திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 408 - திருவருணை 
ராகம் - .....; தாளம் -

தனன தத்தத் தத்த தத்தத் தனதன     தனன தத்தத் தத்த தத்தத் தனதன          தனன தத்தத் தத்த தத்தத் தனதன ...... தனதான

கமல மொட்டைக் கட்ட ழித்துக் குமிழியை     நிலைகு லைத்துப் பொற்கு டத்தைத் தமனிய          கலச வர்க்கத் தைத்த கர்த்துக் குலையற ...... இளநீரைக் 
கறுவி வட்டைப் பிற்று ரத்திப் பொருதப     சயம்வி ளைத்துச் செப்ப டித்துக் குலவிய          கரிம ருப்பைப் புக்கொ டித்துத் திறல்மத ...... னபிஷேகம் 
அமலர் நெற்றிக் கட்ட ழற்குட் பொடிசெய்து     அதிக சக்ரப் புட்ப றக்கக் கொடுமையி          னடல்ப டைத்தச் சப்ப டுத்திச் சபதமொ ...... டிருதாளம் 
அறைதல் கற்பித் துப்பொ ருப்பைப் பரவிய     சிறக றுப்பித் துக்க திர்த்துப் புடைபடு          மபிந வச்சித் ரத்த னத்துத் திருடிக ...... ளுறவாமோ 
தமர மிக்குத் திக்க திர்க்கப் பலபறை     தொகுதொ குக்குத் தொத்தொ குக்குத் தொகுதொகு          தரிகி டத்தத் தத்த ரிக்கத் தரிகிட ...... எனவோதிச் 
சவடு றப்பக் கப்ப ழொத்திப் புகையெழ     விழிக ளுட்செக் கச்சி வத்துக் குறளிகள்          தசைகள் பட்சித் துக்க ளித்துக் கழுதொடு ...... கழுகாட 
அமலை யுற்றுக் கொக்க ரித்துப் படுகள     அசுர ரத்தத் திற்கு ளித்துத் திமியென          அடிந டித்திட் டிட்டி டித்துப் பொருதிடு ...... மயிலோனே 
அழகு மிக்கச் சித்ர பச்சைப் புரவியி     னுலவு மெய்ப்ரத் யக்ஷ நற்சற் குருபர          அருணை யிற்சித் தித்தெ னக்குத் தெளிவருள் ...... பெருமாளே.

தாமரையின் மொட்டை அழகை இழக்கச் செய்து, நீர்க் குமிழியை நிலை குலைந்து உருவு இழக்கச் செய்து, தங்கக் குடத்தையும் பொன்னாலாகிய கலசக் கூட்டங்களையும் நொறுங்கச் செய்து, குலை குலையாயிருக்கும் அழகு ஒழியும்படி இளநீரைக் கோபித்து, சூதாடும் சொக்கட்டான் காய்களைப் பின்னாலே துரத்தி சண்டை செய்து தோல்வி உறச் செய்து, சிமிழை வேலைப்பாடு செய்பவர்கள் அடித்து உருவாக்கி, விளங்கிய யானையின் தந்தத்தைப் போய் ஒடித்து, சக்தி வாய்ந்த மன்மதனுடைய மகுடத்தை சிவபெருமானுடைய நெற்றிக் கண்ணின் நெருப்பில் பொடி செய்து, அதிக தூரத்தில் உள்ள சக்ரவாகப் பறவை பறந்து போகும்படி செய்து, கடுமையான வலிமை கொண்ட அதனைப் பயப்படும்படி செய்து, சப்தத்துடனே இரண்டு தாளங்கள் அறைந்து மோதிக்கொள்ளும்படிச் செய்து, மலைகளின் பரந்த இறகுகளை அறும்படிச் செய்து, வளர்ச்சி உற்ற பக்கத்து இடமெல்லாம் பரவி புதுமையும் அழகு உள்ளதுமான தனங்களை உடைய வஞ்சனை உடைய விலைமாதர்களின் உறவு நல்லதாகுமா? ஒலி மிகுத்த திசைகள் அதிரும்படி பல வகையான பறைகள் தொகுதொகுக் குத்தொத் தொகுக்குத் தொகுதொகு தரிகிடத் தத்தத் தரிக்கத் தரிகிட என்று ஒலி செய்ய, பக்கத்து விலா எலும்புகள் நெரிய முடக்கிய கைகளை தாக்கிக் கூத்தாடி, புகை எழும்படி கண்கள் உள்ளே மிகச் சிவந்து மாய வித்தைச் செய்யும் பேய் வகைகள் மாமிசத்தை உண்டு மகிழ்ச்சி அடைய, பேய்களும் கழுகுகளும் ஆட, ஆரவாரம் செய்து கொக்கரித்தும் போர்க் களத்தில் அசுரர்களின் ரத்தங்களில் குளித்தும் திமி என்ற ஒலியுடன் பாதங்களை வைத்து நடனம் செய்து இடித்துத் தகர்த்தும் சண்டையிடும் மயில் மீது அமர்ந்தவனே, மிக அழகு உடைய அலங்காரமான பச்சை நிறமான மயிலின் மீது உலவுகின்ற, சத்தியம் வெளிப்படையாக விளங்கும் நல்ல சற் குருநாதனே, திருவண்ணா மலையில் நான் நற் கதி கூடி அனுகூலம் அடையும்படி எனக்கு ஞானத்தை அருளிய பெருமாளே. 
இது தனங்களின் அழகை விவரிக்கும் பாடல். கமல மொட்டு, நீர்க்குமிழி, பொன் குடம், பொன் கலசம், இள நீர், வட்டு, செப்பு, யானைத் தந்தம், மன்மதன் மகுடம், சக்ரவாகப் பறவை, தாளம், மலை இவைகளை மார்பகங்கள் வெல்கின்றன என்பதை முதல் 12 அடிகள் விளக்குகின்றன.

பாடல் 409 - திருவருணை 
ராகம் - மத்யமாவதி ; தாளம் - கண்டசாபு - 2 1/2

தனதனத் தனதனத் தனதனத் தனதனத்     தனதனத் தனதனத் ...... தனதான

கரிமுகக் கடகளிற் றதிககற் பகமதக்     கஜமுகத் தவுணனைக் ...... கடியானை 
கடலையெட் பயறுநற் கதலியிற் கனிபலக்     கனிவயிற் றினிலடக் ...... கியவேழம் 
அரிமுகத் தினனெதிர்த் திடுகளத் தினின்மிகுத்     தமர்புரிக் கணபதிக் ...... கிளையோனே 
அயிலெடுத் தசுரர்வெற் பலைவுறப் பொருதுவெற்     றியைமிகுத் தறுமுகக் ...... குமரேசா 
நரிமிகுக் கிளைகளைப் பரியெனக் கடிவளக்     கையில்பிடித் தெதிர்நடத் ...... திடுமீசன் 
நடனமிப் படியிடத் தினுமிசைத் தரையினிற்     கரியுரித் தணிபவற் ...... கொருசேயே 
துரிபெறச் சரிபொழிற் கனவயற் கழகுளத்     துரியமெய்த் தரளமொய்த் ...... திடவீறிச் 
சுரர்துதித் திடமிகுத் தியல்தழைத் தருணையிற்     சுடரயிற் சரவணப் ...... பெருமாளே.

யானை முகத்தையும் மதத்தையும் கொண்ட களிறு, சிறந்த கற்பக விநாயகர், மதங்கொண்ட யானைமுகத்து கஜமுகாசுரனை அடக்கிய யானை, கடலை, எள், பயறு, நல்ல கதலி வாழைப்பழம், பலாப் பழம் முதலியவற்றை வயிற்றினில் அடக்கிய யானை, அழகிய முகத்தை உடையவன், எதிர்த்துச் சண்டைசெய்யும் போர்க்களத்தில் பெரிய போரைச் செய்யும் கணபதிக்குத் தம்பியே, வேலை எடுத்து, அசுரர்களின் கிரெளஞ்ச மலையை அலைக்கழித்துச் சண்டை செய்து, மிக்க ஜயம் கொண்ட ஆறுமுகத்துக் குமரேசனே, நரியின் பெரிய கூட்டங்களை கடிவாளத்தைக் கையிலே பிடித்து பாண்டியனின் எதிரே நடத்திய சொக்கேசர் (சிவபிரான்) தமது திருவிளையாடலை இந்தப் பூமியிலே நடத்தியவர், புகழ் பெற்ற இவ்வுலகில் யானையை உரித்து, அதன் தோலை அணிந்தவரின் ஒப்பற்ற பிள்ளையே, காய்கனிகளின் சுமையால் சரிந்த மரங்கள் உள்ள சோலைகளிலும், பெருமை வாய்ந்த வயல்களிலும், அழகுள்ள தூய்மையான உருவைக்கொண்ட முத்துக்கள் நெருங்கிக் கிடக்க, மிக்கெழுந்து தேவர்கள் துதிசெய்ய, பிரபலமாக இருக்கும் தலமாம் திருவண்ணாமலையில் ஒளிவீசும் வேலுடன் விளங்கும் சரவணப் பெருமாளே. 

பாடல் 410 - திருவருணை 
ராகம் - ....; தாளம் -

தனன தந்தனம் தனதன தனதன     தனன தந்தனம் தனதன தனதன          தனன தந்தனம் தனதன தனதன ...... தனதான

கருநி றஞ்சிறந் தகல்வன புகல்வன     மதன தந்திரங் கடியன கொடியன          கனக குண்டலம் பொருவன வருவன ...... பரிதாவும் 
கடலு டன்படர்ந் தடர்வன தொடர்வன     விளையு நஞ்சளைந் தொளிர்வன பிளிர்வன          கணையை நின்றுநின் றெதிர்வன முதிர்வன ...... இளையோர்முன் 
செருவை முண்டகஞ் சிறுவன வுறுவன     களவு வஞ்சகஞ் சுழல்வன வுழல்வன          தெனன தெந்தனந் தெனதென தெனதென ...... எனநாதம் 
தெரிசு ரும்பைவென் றிடுவன அடுவன     மருள்செய் கண்கள்கொண் டணைவர்த முயிரது          திருகு கின்றமங் கையர்வச மழிதலை ...... யொழிவேனோ 
மருவு தண்டைகிண் கிணிபரி புரமிவை     கலக லன்கலின் கலினென இருசரண்          மலர்கள் நொந்துநொந் தடியிட வடிவமு ...... மிகவேறாய் 
வலிய சிங்கமுங் கரடியு முழுவையு     முறைசெ ழும்புனந் தினைவிளை யிதண்மிசை          மறவர் தங்கள்பெண் கொடிதனை யொருதிரு ...... வுளநாடி 
அருகு சென்றடைந் தவள்சிறு பதயுக     சதத ளம்பணிந் ததிவித கலவியு          ளறம ருண்டுநெஞ் சவளுடன் மகிழ்வுட ...... னணைவோனே 
அமரர் சங்கமுங் குடிபுக நொடியினில்     நிருதர் சங்கமும் பொடிபட அமர்செய்து          அருணை வந்துதென் திசைதனி லுறைதரு ...... பெருமாளே.

கரிய நிறத்தைக் கொண்டவனவாய், அகன்று உள்ளனவாய், பேசுவது போலப் பொலிவு உள்ளனவாய், காம நூல்ளில் கூறப்பட்ட கடுமையும் கொடுமையும் உடையனவாய், காதில் உள்ள பொன் குண்டலத்தோடு போரிட வருவது போலவனவாய், வடவா முகாக்கினி படர்ந்துள்ள கடல் போலப் பரந்து அடர்ந்து தொடர்வனவாய், அக்கடலில் தோன்றும் விஷம் கலந்து பிரகாசித்துக் கொப்புளிப்பனவாய், அம்பை நின்று நின்று எதிர்ப்பனவாய், முற்றின தொழிலை உடையனவாய், இளைஞர்கள் முன்னிலையில் போரிடும் எண்ணத்தை மேற்கொண்டு தமக்குள்ளே கோபிப்பனவாய், களவும் வஞ்சக எண்ணமும் கொண்டு சுழன்று திரிகின்றனவாய், தெனன தெந்தனந் தெனதென தெனதென என்ற ஒலியை எழுப்பும் வண்டை வெல்வனவாய், அதையும் தன் உறு ஒளியால் அடக்குவனவாய், மருட்சியை ஊட்டும் கண்களைக் கொண்டு தம்மை அணைபவர்களின் உயிரைத் திருகிப் பறிக்கின்ற விலைமாதர்களின் வசத்தே அழிந்து போவதை ஒழிக்க மாட்டேனோ? பொருந்திய தண்டைகளும், கிண்கிணியும், சிலம்பும் இவை யாவும் கல கலன் கலின் கலின் என்று ஒலிக்கும்படி இரண்டு திருவடி மலர்களும் நொந்து நொந்து நடந்து அலைய, உருவமும் மிக மாறி*, வலிமை உடைய சிங்கமும், கரடியும் புலியும் வாழும் செழிப்பான தினை விளையும் புனத்தில் பரண் மேல் இருந்த வேடர் குலப் பெண்ணான வள்ளியை ஒப்பற்ற திருவுள்ளத்தில் விரும்பி, அவள் அருகே சென்று சேர்ந்து அவளுடைய சிறிய இரண்டு பாத தாமரைகளைப் பணிந்து, பல விதமான ஆடல்களில் மிகவும் மருட்சி பூண்டு அவளை மன மகிழ்ச்சியுடன் அணைபவனே, தேவர்கள் கூட்டமும் விண்ணுலகில் குடி போகவும், நொடிப் பொழுதில் அசுரர்கள் கூட்டமும் பொடிபட்டுப் போகவும் போர் செய்து, திருவண்ணாமலையில் வந்து தெற்குத் திசையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
பாட்டின் முதல் பாதியில் விலைமாதர்களின் கண்கள் வர்ணனை கூறப்பட்டுள்ளது.
* முருகன் வள்ளியை நாடிச் சென்றபோது வேடன், வேங்கை மரம், விருத்தன் என்று பல வேஷங்கள் தரித்ததைக் குறிக்கிறது.

பாடல் 411 - திருவருணை 
ராகம் - மோஹனம்; தாளம் - அங்கதாளம் - 16 தகதகிடதகிட-4, தகதகிடதகிட-4, தகதகிட-2 1/2 தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2

தானான தான தானான தான     தானான தான ...... தந்ததான

காணாத தூர நீணாத வாரி     காதார வாரம ...... தன்பினாலே 
காலாளும் வேளும் ஆலால நாதர்     காலால் நிலாவுமு ...... னிந்துபூமேல் 
நாணான தோகை நூலாடை சோர     நாடோர்க ளேசஅ ...... ழிந்துதானே 
நானாப வாத மேலாக ஆக     நாடோறும் வாடிம ...... யங்கலாமோ 
சோணாச லேச பூணார நீடு     தோளாறு மாறும்வி ...... ளங்குநாதா 
தோலாத வீர வேலால டாத     சூராளன் மாளவெ ...... குண்டகோவே 
சேணாடர் லோகம் வாழ்மாதி யானை     தீராத காதல்சி ...... றந்தமார்பா 
தேவாதி கூடு மூவாதி மூவர்     தேவாதி தேவர்கள் ...... தம்பிரானே.

கண்ணுக்கெட்டாத தூரம் பரந்து ஓயாத அலையோசை உள்ள கடலின் வதைக்கின்ற ஆரவாரமும், அதன் பின்பாக, தென்றற் காற்றை தேர்போல் கொண்ட மன்மதனும், கடலில் பிறந்த விஷத்தை உண்ட சிவன்காலால் தேய்த்த நிலவும்*, இவளைக் கோபிக்க, இந்தப் புவி மீது நாணம் கொண்ட மயில் போன்ற இப்பெண் நூல் புடைவை நெகிழ, நாட்டில் உள்ளோர் பழித்துரைக்க, அதனால் உள்ளம் அழிந்து அவளே பலவித அவதூறுகள் மேலெழுந்து வெளிப்பட, நாள்தோறும் வாட்டமடைந்து மயங்கலாமோ? சோணாசலம் என்ற திருவண்ணாமலை ஈசனே, அணிந்துள்ள கடம்பமாலை பன்னிரண்டு தோளிலும் விளங்குகின்ற நாதனே, தோல்வியே அறியாத வீரனே, உனது வேலைக் கொண்டு, தகாத செயல் செய்த சூரன் என்ற ஆண்மையாளன் மாளும்படியாக கோபித்துச் செலுத்திய தலைவனே, விண்ணுலகில் வாழ்ந்த மாது தேவயானையின் நீங்காத காதல் நிறைந்த மார்பை உடையவனே, தேவர்கள் முதலியோர் மூன்று எனக் கூடிய ஆதி மும்மூர்த்தியர், மற்றும் தேவர்களுக்கு அதிதேவர்களாய் உள்ள இந்திரர்களுக்குத் தலைவனே. 
* தக்கன் யாகத்தில் சிவனுடைய அம்சமான வீரபத்திரர் சந்திரனைக் காலால் துகைத்தார் - சிவபுராணம்.இப்பாட்டு அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவிக்காக பாடியது.கடல், சந்திரன், மன்மதன், மலர்க் கணைகள், ஊரார் ஏச்சு இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.

பாடல் 412 - திருவருணை 
ராகம் - ...; தாளம் -

தானா தத்தன தானா தத்தன  தந்தன தந்தன தான தந்தன    தானா தத்தன தானா தத்தன      தந்தன தந்தன தான தந்தன        தானா தத்தன தானா தத்தன          தந்தன தந்தன தான தந்தன ...... தந்ததான

காரா டக்குழ லாலா லக்கணை  கண்கள்சு ழன்றிட வேமு கங்களி    னாலா பச்சிலை யாலே மெற்புசி      மஞ்சள்க லந்தணி வாளி கொந்தள        காதா டக்கலன் மேலா டக்குடி          யின்பர சங்குட மார்ப ளிங்கொளி ...... கொங்கைமாதர் 
காசா சைச்செய லாலே சொக்கிடு  விஞ்சையர் கொஞ்சிடு வாரி ளங்குயில்    போலே நற்றெரு வூடா டித்துயல்      தொங்கல்நெ கிழ்ந்திடை யேது வண்டிட        கால்தா விச்சதி யோடே சித்திர          மென்பந டம்புரி வாரு டன்செயல் ...... மிஞ்சலாகிச் 
சீரா டிச்சில நாள்போய் மெய்த்திரை  வந்துக லந்துயி ரோட வங்கமொ    டூடா டிப்பல நோயோ டுத்தடி      கொண்டுகு ரங்கென வேந டந்துசொல்        சீயோ டிக்கிடை பாயோ டுக்கிய          டங்கிய ழிந்துயி ரோடு ளைஞ்சொளி ...... யுங்கண்மாறிச் 
சேரா மற்பொறி கேளா மற்செவி  துன்பமொ டின்பமு மேம றந்துபின்    ஊரார் சுற்றமு மாதோர் மக்களு      மண்டியு மண்டையு டேகு விந்திது        சீசீ சிச்சிசி போகா நற்சனி          யன்கட வென்றிட வேகி டந்துடல் ...... மங்குவேனோ 
மாரோன் முப்புர நீறா யுற்றிட  அங்கியு மிழ்ந்திடு வோரி பம்புலி    தோல்சீ யத்தொடெ யேகா சர்ச்சடை      கங்கையி ளம்பிறை யார ணிந்தவர்        மாடே றிக்கட லாலா லத்தையு          முண்டவ ரெந்தைசி வாநு பங்குறை ...... யென்றன்மாதா 
மாலோ னுக்கிளை யாள்மா பத்தினி  யம்பிகை சங்கரி மோக சுந்தரி    வேதா மக்கலை ரூபாள் முக்கணி      ரம்பிய கொங்கையி னாள்ப யந்தருள்        மாஞா னக்கும ராதோ கைப்பரி          யின்பத வண்குரு வேயெ னஞ்சுரர் ...... தொண்டுபாடச் 
சூரார் மக்கிட மாமே ருக்கிட  அங்கட லெண்கிரி யோடி பங்கொடு    தீபே ழற்றிட பாதா ளத்துறை      நஞ்சர வின்பண மாயி ரங்கெட        சூழ்வா ளக்கிரி தூளா கிப்பொடி          விண்கணி றைந்திட வேந டம்புரி ...... கின்றவேலா 
சோர்வே தத்தலை மேலா டிச்சுக  பங்கய செங்கர மோட கம்பெற    வாகா னக்குற மாதோ டற்புத      மங்குல ணங்குட னேம கிழ்ந்துநல்        தூணோ டிச்சுட ராகா சத்தைய          ணைந்துவி ளங்கரு ணாச லந்திகழ் ...... தம்பிரானே.

கருமேகம் போல விளங்கும் அந்தக் கூந்தல். பெரு விஷம் தோய்ந்த அம்பு போன்ற கண்கள் சுழல, முகங்களில் நாலாவிதமான பச்சிலைகளை மேலே பூசி மஞ்சளையும் கலந்து அணிந்துள்ளவர்கள். காதணியானது கூந்தலுக்கு அருகில் காதில் ஆட, ஆபரணங்கள் மேலே ஆட, இன்ப ரசம் குடி கொண்டிருக்கின்ற குடங்கள் போன்று, பளிங்கின் ஒளியைக் கொண்ட மார்பகங்களை உடைய விலைமாதர்கள். காசின் மேற்கொண்ட காமச் செயல்களால் மயக்கப் பொடி போடுகின்ற மாய வித்தை வல்லவர். கொஞ்சிப் பேசுபவர்கள். இளங் குயில் போல் நல்ல தெருக்களில் அங்கும் இங்கும் செல்பவராய், அசைகின்ற மேலாடை நெகிழவும், இடை துவளவும், கால்கள் தாவ, தாள ஒத்துடன் சித்திரப் பதுமை என்னும்படி நடனம் செய்கின்ற வேசியர்களுடன் இணக்கம் அதிகமாகி, சீராக கொஞ்ச காலம் கழித்து, உடலில் (தோல் சுருங்குதலால் உண்டாகும்) சுருக்கங்கள் வந்து ஏற்பட, உயிர் போகும்படி உடலோடு வேதனைப்பட்டு பல நோய்களுடன், தடியைப் பிடித்துக் கொண்டு குரங்கைப் போல நடந்து, இழிவாகச் சொல்கின்ற சீ என்னும் சொல் ஓடி எங்கும் பரவி, கிடக்கை படுக்கையாகி, மெலிந்து, ஒடுங்கி, அழிதலுற்று, உயிருடனே வேதனை உற்று, கண்களினின்றும் ஒளியும் விலகி, அறிவு ஒருவழிப்படாமல், காது கேட்காமல், இன்ப துன்பம் இரண்டையும் மறந்து, பிறகு, ஊராரும், சுற்றத்தாரும், பெண்டிரும், மற்று மக்களும் நெருங்கியும், பக்கத்தில் கும்பலாகக் கூடியும், இது இப்போது போகாது, சீ சீ சிச்சி சி, நல்ல சனியன், கிடக்கட்டும் என்று கூறிச் செல்ல இப்படியே கிடந்து உடல் அழிவேனோ? மன்மதனும், மூன்று புரங்களும் சாம்பலாகும்படி நெருப்பை (நெற்றிக் கண்ணிலிருந்து) வெளிச் செலுத்தினவர், யானை, புலி இவைகளின் தோலையும், சிங்கத்தின் தோலையும் போர்வையாக உடையவர், சடையில் கங்கை, இளம்பிறை, ஆத்தி மாலை சூடியுள்ளவர், ரிஷபத்தில் ஏறுபவர், கடலில் எழுந்த கொடிய (ஆலகால) விஷத்தை உண்டவர், எனது தந்தையாகிய சிவபெருமானோடு கூட அவர் திருமேனியில் பாதியாக உறையும் எனது தாய், திருமாலுக்குத் தங்கை, மகா பத்தினி, அம்பிகை, சங்கரி, அன்புக்கு உரிய சுந்தரி, வேதாகம நூல்களின் உருவம் வாய்ந்தவள், (சூரியன், சந்திரன், அக்கினி என்ற) மூன்று கண்களை உடையவள், பருத்த மார்பகங்களை உடையவள் ஆகிய பார்வதி பெற்றருளிய சிறந்த ஞானப் புதல்வனே, கலாபக் குதிரையாகிய மயில் மேல் திருவடியை வைத்துள்ளவனே, வளமை வாய்ந்த குரு மூர்த்தியே என்று தேவர்கள் அடிமை பூண்டு பாட, அசுரர்கள் அழிந்து போக, பெரிய மேரு மலை மெலிவு அடைய, அழகிய கடலும், அஷ்ட கிரிகளும்*, அஷ்ட கஜங்களோடு**, ஏழு தீவுகளும்*** வற்றிப் போக, பாதாளத்தில் உள்ள விஷப் பாம்பாகிய ஆதிசேஷனுடைய பணாமுடிகள் ஆயிரமும் கேடு உற, சூழ்ந்துள்ள சக்ரவாள கிரி தூள்பட்டு, அத்தூள் விண்ணில் உள்ள எல்லா இடங்களிலும் நிறையும் வண்ணம் நடனம் செய்கின்ற வேலனே, (நெறி பல கொண்டு) தளர்வு உறும் வேதத்தின் உச்சியின் மேல் விளங்குகின்றவனே, சுகத்துடன் உனது தாமரை போன்ற சிவந்த கரத்துடன் உனது உள்ளத்தையும் பெற்ற அந்த அழகிய குறப் பெண்ணான வள்ளியுடனும், அற்புதமான விண்ணுலகப் பெண்ணான தேவயானையுடனும் மகிழ்ச்சி உற்று, நல்ல அக்கினி ஸ்தம்பமாகிய சிவச்சுடர் உயர்ந்தோடி ஆகாசத்தை அளாவி விளங்கும் திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் தம்பிரானே. 
* எண் கிரி = இமயம், மந்தரம், கைலாசம், விந்தியம், நிடதம், ஏமகூடம், நீலம், கந்தமாதனம்.
** எண் திசை யானைகள் = ஐராவதம், புண்டா£கம், வாமனம், குமுதம், அஞ்சனம், புஷ்பதந்தம், சாருவபெளமம், சுப்ரதீபம்.
*** தீபு ஏழு = ஏழு தீவுகள். நாவல், இறலி, குசை, கிரவுஞ்சம், புட்கரம், தெங்கு, கமுகு இவைகள் அத்தீவின் முக்கிய பொருட்கள் அல்லது பறவைகள். அவற்றால் அப்பெயர் பெற்றன.

பாடல் 413 - திருவருணை 
ராகம் - ...; தாளம் -

தானதன தந்ததன தானதன தந்ததன     தானதன தந்ததன ...... தந்த தனதான

காருமரு வும்பெருகு சோலைமரு வுங்கொடிய     காகளம டங்கவுமு ...... ழங்கு மதனாலே 
காலடர வம்பமளி மேலடர வந்துபொரு     காமன்விடு விஞ்சுகணை ...... அஞ்சு மலராலே 
ஊருமுல கும்பழைய பேருகம்வி ளைந்ததென     ஓரிரவு வந்தெனது ...... சிந்தை யழியாதே 
ஊடியிரு கொங்கைமிசை கூடிவரி வண்டினமு     லாவியக டம்பமலர் ...... தந்த ருளுவாயே 
ஆருமர வும்பிறையு நீருமணி யுஞ்சடைய     ராதிபர வும்படிநி ...... னைந்த குருநாதா 
ஆறுமுக முங்குரவு மேறுமயி லுங்குறவி     யாளுமுர முந்திருவும் ...... அன்பு முடையோனே 
மேருமலை யும்பெரிய சூருமலை யுங்கரிய     வேலையலை யும்பகையும் ...... அஞ்ச விடும்வேலா 
மேதினியி றைஞ்சுமரு ணாபுரிவி ளங்குதிரு     வீதியிலெ ழுந்தருளி ...... நின்ற பெருமாளே.

மேகமும், மருக்கொழுந்தின் வாசனையும் பெருகி எழும் சோலையில் உள்ள பொல்லாத குயிலாகிய எக்காளம் இடைவிடாமல் ஒலிக்கின்ற அந்தக் காரணத்தாலும், தென்றல் காற்று நெருங்கி வாசனை ஏற்றியுள்ள படுக்கையின் மேல் வேகமாக வீசுவதாலும், போருக்கு எழுந்த மன்மதன் செலுத்துவதால் மேலே படுகின்ற பாணங்களாகிய ஐந்து மலர்களாலும், ஊராரும் உலகத்தாரும் பழைய பெரிய யுகாந்த பிரளய காலம் வந்தது போல் (எனனைப் பற்றிய வசை) ஆரவாரம் செய்வதாலும், (நீ என் மீது மனம் இரங்கி) ஓர் இராப் பொழுதேனும் வந்து என் மனம் நைந்து அழியாதபடி, மாறி மாறிப் பிணங்கியும் எனது மார்பகங்களின் மீது கூடி இணங்கியும், இசைப் பாட்டுகளைப் பாடும் வண்டின் கூட்டங்கள் உலவுகின்ற கடப்ப மலர் மாலையைத் தந்து அருள்வாயாக. ஆத்தி மலரையும், பாம்பையும், பிறைச் சந்திரனையும், கங்கையையும் அணிந்துள்ள சடையராகிய ஆதி மூர்த்தியான சிவ பெருமான் தியானித்த குருநாதனே, ஆறு முகங்களும், குராமலரும், வாகனமாகிய மயிலும், குறத்தியாகிய வள்ளி அணைந்து ஆட்சி கொள்ளும் மார்பும், (ஞானச்) செல்வமும், அன்பும் உடையவனே, மேரு மலையும், பெரிய சூரனும், கிரெளஞ்ச மலையும், கரிய அலை கடலும், பகைவர்களும் பயப்படும்படி செலுத்திய வேலாயுதனே, உலகம் வணங்கும் திருவண்ணாமலையில் திகழ்கின்ற திரு வீதியில் எழுந்தருளியுள்ள பெருமாளே. 
இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் புலவர் தம்மையே நாயகியாக பாவித்தது போன்று அமைந்தது.குயிலின் எக்காளம், தென்றல், மன்மதன், மலர்க்கணைகள், ஊராரின் ஆரவாரம் முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.

பாடல் 414 - திருவருணை 
ராகம் - திலங் ; தாளம் - அங்கதாளம் - 8 
தகதிமி-2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3

தான தனான தத்த ...... தனதான     தான தனான தத்த ...... தனதான

கீத விநோத மெச்சு ...... குரலாலே     கீறு மையார் முடித்த ...... குழலாலே 
நீதி யிலாத ழித்து ...... முழலாதே     நீமயி லேறி யுற்று ...... வரவேணும் 
சூதமர் சூர ருட்க ...... பொருசூரா     சோண கி¡£யி லுற்ற ...... குமரேசா 
ஆதியர் காதொ ருச்சொ ...... லருள்வோனே     ஆனை முகார்க னிட்ட ...... பெருமாளே.

(மாதரின்) ராக ஜாலங்கள் காட்டக்கூடிய மெச்சத்தக்க குரலின் இனிமையிலும், வகிடு எடுத்த, கரிய நிறமுள்ள, வாரி முடிக்கப்பட்ட கூந்தலினாலும், மயங்கி நீதியற்ற அக்ரமங்களைச் செய்து நான் திரியாதிருக்க, நீ மயில் மீது ஏறி மனது வைத்து வரவேண்டுகிறேன். சூதான எண்ணங்கள் நிறைந்த சூரர்கள் பயப்படும்படி போர் செய்த சூரனே, (சோணகிரி) திருவண்ணாமலையில் வாழும் குமரேசனே, ஆதிதேவர் சிவனது காதில் ஒப்பற்ற பிரணவச்சொல்லை ஓதியவனே, யானைமுகக் கணபதிக்கு கனிஷ்ட (தம்பியான) பெருமாளே. 

பாடல் 415 - திருவருணை 
ராகம் - ....; தாளம் -

தனதனன தனதனன தானத் தாத்தன     தனதனன தனதனன தானத் தாத்தன          தனதனன தனதனன தானத் தாத்தன ...... தனதான

குரவநறு மளககுழல் கோதிக் காட்டியெ     குலவுமிரு கயல்கள்விழி மோதித் தாக்கியெ          குமுதமல ரொளிபவள வாயைக் காட்டியெ ...... குழையாத 
குணமுறுக இனிதுபயில் கூறிக் காட்டியெ     குலையஇரு கலைநெகிழ வீசிக் காட்டியெ          குடவியிடு மரிவையர்க ளாசைப் பாட்டிலெ ...... கொடியேன்யான் 
பொருளிளமை கலைமனமு மேகப் போக்கிய     புலையனிவ னெனவுலக மேசப் போக்கென          பொறிவழியி லறிவழிய பூதச் சேட்டைகள் ...... பெருகாதே 
புதுமலர்கள் மருவுமிரு பாதத் தாற்றியெ     பொதுவகையி லருணைநிலை நீள்கர்த் தாவென          புகழடிமை தனையுனது பார்வைக் காத்திட ...... நினையாதோ 
அரவமுட னறுகுமதி யார்மத் தாக்கமு     மணியுமொரு சடைமவுலி நாதர்க் கேற்கவெ          அறிவரிய வொருபொருளை போதத் தேற்றிய ...... அறிவோனே 
அழகுசெறி குழலியர்கள் வானத் தாட்டியர்     தருமமது சரவணையில் வாவித் தேக்கியெ          அறுசிறுவ ரொருவுடல மாகித் தோற்றிய ...... இளையோனே 
சுரருலவ அசுரர்கள் மாளத் தூட்பட     துயவுமுட லயிலைவிடு மாவுக் ராக்ரம          சுவறியெழு கடலுமுறை யாகக் கூப்பிட ...... முனிவோனே 
துடிமுழவு மறவரிட சேவற் காட்டினில்     துணைமலரி னணுகிதினை காவற் காத்தனை          சுரியகுழல் குறமகளை வேளைக் காத்தணை ...... பெருமாளே.

குரா மலரின் நறு மணம் வீசும் மயிர்க் கற்றை உள்ள கூந்தலை வேண்டுமென்றே சிக்கெடுத்துக் காட்டியும், விளங்கும் இரண்டு கயல் மீன்கள் போன்ற கண்களைக் கொண்டு மோதித் தாக்கியும், குமுத மலர் போன்றதும், ஒளி பொருந்திய பவளம் போன்றதுமான வாயைக் காட்டியும், இளகாத காமம் முதிர்ச்சி உறும்படி, இனிமையாக நெருங்கிய ஞாபகத்தைக் காட்டும் பேச்சுக்களைப் பேசிக் காட்டியும், பெரிய ஆடை குலைவுற்று நெகிழ்ந்து தளரும்படி பக்கம் வீசிக் காட்டியும், ஆடவர்களை வளைத்துப் போடும் மாதர்களுடைய காம லீலைகளில் (ஈடுபட்ட) கொடியவனாகிய நான், என் பொருள், இளமை, கல்வி, மனம் இவை யாவும் போகும்படி தொலைத்த கீழ்மகன் இவன் என்று உலகத்தவர் இகழ்ந்து உரைக்க, ஐம்பொறிகள் இழுத்த இழுப்பின் வழியிலே சென்று என் அறிவு அழிய, ஐம்பூதங்களால் ஆகிய உடம்பின் குறும்புச் செயல்கள் என்னிடம் வளராதவாறு, புதிய மலர்கள் பொருந்திய உன் இரண்டு திருவடிகளால் அமைதியாகி, யாவரும் ஒப்புக்கொள்ளும் வகையில் திருவண்ணாமலையில் நிலைத்துள்ள பெரிய தலைவன் நீதான் என்று உன்னைப் புகழ்கின்ற இந்த அடிமையை, உன் திருக்கண் பார்வையால் காத்தளிக்க நினைக்க மாட்டாயோ? பாம்பும், அறுகும், சந்திரனும், ஆத்தியும், ஊமத்தை மலரும், ருத்ராட்சமும், மணியும் அணிந்துள்ள ஒப்பற்ற சடையை உடைய சிவபெருமான் உவந்து ஏற்றுக் கொள்ளும் வகையில், அறிதற்கு அரிதான மேலான பிரணவப் பொருளை உபதேசித்து ஊட்டிய அறிஞனே, அழகு நிறைந்த கூந்தலை உடையவர்களாக, வானிடத்திலே உள்ள ஆறு கார்த்திகைப் பெண்கள் தந்த பால் அமுதை சரவண மடுவில் நிரம்ப உண்டு, ஆறு சிறுவர்களாக இருந்தவர்கள் ஓர் உடலினராகி விளங்கிய இளைஞனே, தேவர்கள் (மகிழ்ந்து) உலவும்படியும், அசுரர்கள் இறக்கும்படியும், பொடியாக அறிவு கலங்கும்படி கோபித்த வேலாயுதத்தைச் செலுத்திய பெரிய மூர்த்தியே, நீதிமானே, வற்றிப்போன ஏழு கடல்களும் முறை செய்து ஒலி எழுப்பும்படியாகக் கோபித்தவனே, உடுக்கை, முரசு (இவைகளை உடைய) வேடர்களின் காவல் கொண்ட காட்டில், உனது இரண்டு (திருவடி) மலர்களால் நெருங்கி, தினைப் புனத்தைக் காவல் காத்திருந்த தாய், சுருண்ட கூந்தலைக் கொண்ட குற மகளாகிய வள்ளியை, தக்க சமயத்துக்காக காத்திருந்து, (அவளை) அணைந்த பெருமாளே. 

பாடல் 416 - திருவருணை 
ராகம் - ....; தாளம் -

தனதன தானான தானன தனதன தானான தானன     தனதன தானான தானன ...... தனதான

குழவியு மாய்மோக மோகித குமரனு மாய்வீடு காதலி     குலவனு மாய்நாடு காடொடு ...... தடுமாறிக் 
குனிகொடு கூனீடு மாகிடு கிழவனு மாயாவி போய்விட     விறகுட னேதூளி யாவது ...... மறியாதாய்ப் 
பழயச டாதார மெனிகழ் கழியுடல் காணாநி ராதர     பரிவிலி வானாலை நாடொறு ...... மடைமாறிப் 
பலபல வாம்யோக சாதக வுடல்கொடு மாயாத போதக     பதியழி யாவீடு போயினி ...... யடைவேனோ 
எழுகடல் தீமூள மேருவு மிடிபட வேதாவும் வேதமு     மிரவியும் வாய்பாறி யோடிட ...... முதுசேடன் 
இருளறு பாதாள லோகமு மிமையமு நீறாக வாள்கிரி     யிருபிள வாய்வீழ மாதிர ...... மலைசாய 
அழகிய மாபாக சாதன னமரரு மூர்பூத மாறுசெய்     அவுணர்த மாசேனை தூளெழ ...... விளையாடி 
அமரினை மேவாத சூரரை அமர்செயும் வேலாயு தாவுயர்     அருணையில் வாழ்வாக மேவிய ...... பெருமாளே.

குழந்தையாகப் பிறந்து, மாயை, காம மயக்கம் இவை உடைய வாலிபனாக வளர்ந்து, வீடு, மனைவி இவைகளோடு கூடிய நல்ல குலத்தவனாய் வாழ்ந்து, பின்பு நாட்டிலும், காட்டிலும் உழன்று தடுமாற்றம் அடைந்து, உடல் வளைந்து, கூன் பெரியதாய் ஆன கிழவனுமாக ஆகி, உயிர் போன பிறகு (உடல்) விறகுடன் சாம்பற் பொடி ஆவதையும் அறிந்து, (அந்த எண்ணத்தை விட்டுத்) தாவி, (குண்டலினி சக்ரத்தின்) பழமையான ஆறு ஆதாரங்களின்* மேல் நிலையில் நிகழும் உடம்பு கழிபட்ட நிலையை அடைந்து, சார்பு அற்றதும், துன்பம் இல்லாததுமானஆகாயத்தில் நாள் தோறும் நாலு அங்குல** அளவு வாயுவைக் கழியாது திருப்பி, பல விதமான யோகப் பயிற்சிகள் செய்த உடலை வளர்த்து, (இத்தனையும் செய்தபின்) சாவில்லாததும், அறிவு மயமானதுமான அழியாத முத்தி வீட்டை நாடிச் சென்று இனியாவது யான் போய்ச் சேருவேனோ? ஏழு கடல்களும் நெருப்பு மூண்டு எரியவும் மேரு மலையும் பொடிபடவும், பிரமனும், நான்கு வேதங்களும், சூரியனும் திசைமாறித் தறிகெட்டு ஓடவும், பழைய ஆதிசேஷன் உள்ள இருட்டற்ற பாதாள லோகமும், இமயமலையும் பொடிப்பொடியாகவும், சக்ரவாளகிரி இரண்டு பிளவுபட்டு வீழவும், எட்டுத் திக்குகளில் உள்ள மலைகள் சாய்ந்து விழவும், அழகு வாய்ந்த, சிறந்த இந்திரனும், தேவர்களும் (தங்கள்) பொன்னுலகில் குடியேறவும் செய்வித்து, அசுரர்களுடைய பெரிய சேனையை விளையாட்டுப்போல தூள்தூளாகச் செய்து, அமரினை மேவாத சூரரை அமர் செயும் அமைதியைப் பொருந்தாத சூரர்களோடு சண்டை செய்த வேலாயுதனே, சிறப்பு வாய்ந்த திருவண்ணாமலையில் வாழ்வாக வீற்றிருக்கும் பெருமாளே. 
* ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம் ** யோகி சராசரியாக 12 அங்குல வாயுவை பூரகம் மூலம் உள்ளே இழுத்து, 8 அங்குல பிராண வாயுவை கும்பகம் மூலம் தன்னுள் வைத்துக் கொண்டு, 4 அங்குல வாயுவை வெளியில் ரேசகம் மூலம் விடுகிறான்.

பாடல் 417 - திருவருணை 
ராகம் - ....; தாளம் -

தானதன தானதத்த தானதன தானதத்த     தானதன தானதத்த ...... தனதான

கேதகைய பூமுடித்த மாதர்தம யாலிலுற்று     கேவலம தானஅற்ப ...... நினைவாலே 
கேள்வியதி லாதிருக்கு மூழ்வினையி னால்மிகுத்த     கேடுறுக வேநினைக்கும் ...... வினையாலே 
வேதனையி லேமிகுத்த பாதகனு மாயவத்தில்     மேதினியெ லாமுழற்று ...... மடியேனை 
வீடுதவி யாளவெற்றி வேல்கரம தேயெடுத்து     வீறுமயில் மீதிலுற்று ...... வருவாயே 
நீதிநெறி யேயழித்த தாருகனை வேரறுத்து     நீடுபுகழ் தேவரிற்கள் ...... குடியேற 
நீடருளி னால்விடுத்த பாலகும ராசெழித்த     நீலநிற மால்தனக்கு ...... மருகோனே 
சோதியன லாவுதித்த சோணகிரி மாமலைக்குள்     சோபைவட கோபுரத்தி ...... லுறைவோனே 
சோனைமழை போலெதிர்த்த தானவர்கள் மாளவெற்றி     தோளின்மிசை வாளெடுத்த ...... பெருமாளே.

தாழம்பூவை அணிந்துள்ள பொது மகளிர்களுடைய மோகத்தில் ஈடுபட்டு, தாழ்மையான அற்ப நினைவுகளாலும், ஆராய்ச்சிக்கு இடம் தராது இருக்கும் ஊழ் வினையாலும், மிக்க அழிவு வருதற்கே நினைக்கின்ற செயல்களாலும், வேதனையில் பட்டு, மிக்க பாதகத்துக்கு இடம் தருபவனாக, வீணாக உலக முழுமையும் அலைச்சல் உற்றுத் திரியும் அடியேனுக்கு வீட்டின்பத்தைக் கொடுத்து உதவி, என்னை ஆட்கொள்ளும் பொருட்டு வெற்றி வேலைத் திருக் கரத்தே எடுத்து, விளங்குகின்ற மயிலின் மீது ஏறி வருவாயாக. நீதி நெறிகளை அழித்த தாரகாசுரனை வேரோடே அறுத்து, பெரும் புகழைக் கொண்ட தேவர்கள் தத்தம் வீடுகளில் குடிபுக, பெருங் கருணையால் உதவிய இளங் குமரனே, செழிப்புள்ள நீல நிறம் உள்ள திருமாலுக்கு மருகனே, ஜோதி நெருப்பாகத் தோன்றிய அருணாசலம் என்னும் சிறந்த மலைக்குள் அழகான வடக்குக் கோபுரத்தில் வீற்றிருப்பவனே, விடாது பெய்யும் பெரு மழையைப் போல எதிர்த்து வந்த அசுரர்கள் இறந்து போகும்படி, வெற்றி பொருந்திய தோளின் மீது வாளாயுதத்தை எடுத்த பெருமாளே. 

பாடல் 418 - திருவருணை 
ராகம் - ....; தாளம் -

தானான தனதான ...... தனதான

கோடான மடவார்கள் ...... முலைமீதே 
கூர்வேலை யிணையான ...... விழியூடே 
ஊடாடி யவரோடு ...... முழலாதே 
ஊராகத் திகழ்பாத ...... மருள்வாயே 
நீடாழி சுழல்தேசம் ...... வலமாக 
நீடோடி மயில்மீது ...... வருவோனே 
சூடான தொருசோதி ...... மலைமேவு 
சோணாடு புகழ்தேவர் ...... பெருமாளே.

விலைமாதர்களின் மலை போன்ற மார்பகங்களிலும், கூரிய வேலுக்குச் சமமான கண்களிலும், ஈடுபட்டுப் பழகினவனாக அவர்களுடன் திரியாமலே, (எனக்குச் சொந்த) ஊர் போல் இருப்பிடமாக விளங்கும் உன் திருவடியைத் தந்து அருள் புரிவாயாக. விரிந்த கடல் சூழ்ந்த உலகை வலமாக முழுதும் ஓடி, மயிலின் மேல் பறந்து வந்தவனே, நெருப்பான ஒரு ஜோதி மலையில், திருவண்ணாமலையில், வீற்றிருக்கும், சோழ நாட்டார் புகழும், தேவர்களின் பெருமாளே. 

பாடல் 419 - திருவருணை 
ராகம் - ...; தாளம் -

தானதன தத்த தத்த தானதன தத்த தத்த     தானதன தத்த தத்த ...... தனதான

கோடுசெறி மத்த கத்தை வீசுபலை தத்த வொத்தி     கூறுசெய்த ழித்து ரித்து ...... நடைமாணார் 
கோளுலவு முப்பு ரத்தை வாளெரிகொ ளுத்தி விட்ட     கோபநுத லத்த ரத்தர் ...... குருநாதா 
நீடுகன கத்த லத்தை யூடுருவி மற்ற வெற்பு     நீறெழமி தித்த நித்த ...... மனதாலே 
நீபமலர் பத்தி மெத்த வோதுமவர் சித்த மெத்த     நீலமயில் தத்த விட்டு ...... வரவேணும் 
ஆடலணி பொற்சி லைக்கை வேடுவர்பு னக்கு றத்தி     ஆரமது மெத்து சித்ர ...... முலைமீதே 
ஆதரவு பற்றி மெத்த மாமணிநி றைத்த வெற்றி     ஆறிருதி ருப்பு யத்தில் ...... அணைவீரா 
தேடிமையொர் புத்தி மெத்தி நீடுறநி னைத்த பத்தி     சீருறவு ளத்தெ ரித்த ...... சிவவேளே 
தேறருணை யிற்ற ரித்த சேண்முகடி டத்த டர்த்த     தேவர்சிறை வெட்டி விட்ட ...... பெருமாளே.

தந்தங்கள் பொருந்திய யானையின் மத்தகத்தில் வெளித் தோன்றும் பற்களை வெளியில் விழும்படித் தாக்கிக் கிழித்துக் கூறு படுத்தி அழித்து (அதன் தோலை) உரித்தவரும், நன்னெறியைப் போற்றாது விட்ட (திரிபுரத்து) அசுரர்களுடைய மேக மண்டலத்தின் மீது பறந்து செல்லும் முப்புரங்களை ஒளி வீசும் நெருப்பால் எரித்து விட்டவரும், கோபம் கொண்ட நெற்றிக் கண்ணினர் என்ற அந்த மேன்மையைக் கொண்டவருமான சிவபெருமானுடைய குரு நாதனே, பெரிய கனக கிரெளஞ்ச மலையைத் துளைத்து, பின்னும் உள்ள (ஏழு) மலைகளைத் தூளாகுமாறு மிதித்து விளையாடிய நித்தனே, கடப்ப மலரைச் சூடிய உனது புய வரிசையின் சிறப்பை மனதார நிரம்ப ஓதுகின்ற அடியார்களின் சித்தத்தில் உறைபவனே, நீல மயிலை வேகமாகத் தாவி வரச் செலுத்தி வந்தருள வேண்டுகிறேன். போரை மேற் கொள்ளும் அழகிய வில்லை ஏந்திய கைகளை உடைய வேடர்களின் தினைப் புனத்தில் இருந்த குறத்தியாகிய வள்ளியின் முத்து மாலை நிரம்பிய அழகிய மார்பின் மேல் விருப்பம் வைத்து, மிகவும் சிறந்த மணிகள் நிறைந்துள்ளதும், வெற்றி பெற்றனவுமாகிய பன்னிரண்டு திருப்புயங்களிலும் அவளை அணைந்த வீரனே, தேடி வந்த தேவர்கள் அறிவு நிரம்பி நீண்ட காலம் வாழ வேண்டுமென்றும் அவர்களது பக்தி சிறக்கவேண்டுமென்றும் மனதில் நினைத்த சிவ குமாரனே, செழிப்புள்ள திருவண்ணாமலையில் உள்ள மலையின் உச்சியிடத்தில் அடைந்து கூடிய தேவர்களின் சிறையை வெட்டி விட்ட பெருமாளே. 

பாடல் 420 - திருவருணை 
ராகம் - ....; தாளம் -

தனதன தத்தத் தனந்த தந்தன     தனதன தத்தத் தனந்த தந்தன          தனதன தத்தத் தனந்த தந்தன ...... தனதான

சிலைநுதல் வைத்துச் சிறந்த குங்கும     தலதமு மிட்டுக் குளிர்ந்த பங்கய          திருமுக வட்டத் தமர்ந்த மென்குமிழ் ...... தனிலேறிச் 
செழுமணி ரத்நத் திலங்கு பைங்குழை     தனைமுனி வுற்றுச் சிவந்து நஞ்சணி          செயலினை யொத்துத் தயங்கு வஞ்சக ...... விழிசீறிப் 
புலவிமி குத்திட் டிருந்த வஞ்சியர்     பதமல ருக்குட் பணிந்த ணிந்தணி          புரிவளை கைக்குட் கலின்க லென்றிட ...... அநுராகம் 
புகழ்நல மெத்தப் புரிந்து கொங்கையி     லுருகிய ணைத்துப் பெரும்ப்ரி யங்கொடு          புணரினும் நிற்பொற் பதங்கள் நெஞ்சினுள் ...... மறவேனே 
கலைமதி வைத்துப் புனைந்து செஞ்சடை     மலைமகள் பக்கத் தமர்ந்தி ருந்திட          கணகண கட்கட் கணின்க ணென்றிட ...... நடமாடுங் 
கருணைய னுற்றத் த்ரியம்ப கன்தரு     முருகபு னத்திற் றிரிந்த மென்கொடி          கனதன வெற்பிற் கலந்த ணைந்தருள் ...... புயவீரா 
அலைகடல் புக்குப் பொரும்பெ ரும்படை     யவுணரை வெட்டிக் களைந்து வென்றுயர்          அமரர்தொ ழப்பொற் சதங்கை கொஞ்சிட ...... வருவோனே 
அடியவ ரச்சத் தழுங்கி டுந்துயர்     தனையொழி வித்துப் ப்ரியங்கள் தந்திடும்          அருணகி ரிக்குட் சிறந்த மர்ந்தருள் ...... பெருமாளே.

வில்லைப் போன்று வளைந்த நெற்றியில் நல்ல குங்குமப் பொட்டை இட்டு, குளிர்ந்த தாமரை போன்ற அழகிய முக வட்டத்தில் உள்ள மெல்லிய பூப் போன்ற மூக்கின் மேல் சார்ந்து செழுமையுள்ள ரத்ன மணி விளங்க, அழகிய குண்டலங்கள் உள்ள காதைக் கோபித்து, சிவந்து, விஷம் உண்ட தன் செயலுக்கு ஒப்ப வஞ்சகம் கொண்டு விளங்கும் கண்களால் சீறிக் கோபித்து, ஊடல் குணம் அதிகமாகி இருந்த விலைமாதர்களின் பாத மலரில் பணிந்து, அவர்கள் அணிந்துள்ள அணி கலன்களாய் விளங்கும் வளையல் கையில் கலின் கலென்று ஒலிக்க, காமப் பற்றான புகழ் நலச் செயல்களை அதிகமாகச் செய்து, அவர்களுடைய மார்பில் உருகித் தழுவி மிக்க ஆசையுடன் கலவி செய்தாலும், உனது அழகிய திருவடியை மனதில் மறக்க மாட்டேன். கலை கொண்ட பிறையை வைத்து அலங்கரித்த செந்நிறச் சடையுடன் ஹிமவான் மகளாகிய பார்வதி (இடது) பாகத்தில் அமர்ந்து விளங்க, கணகண கட்கட் கணின்கண் என்ற ஒலி செய்ய நடனம் செய்கின்ற கருணைப் பிரான், (சூரியன், சந்திரன், அக்கினி ஆகப்) பொருந்திய முக்கண்ணன் பெற்ற முருகனே, தினைப் புனத்தில் திரிந்த மெல்லிய கொடி போன்ற வள்ளியின் பருத்த மார்பாம் மலைகளில் சேர்ந்து அணைந்தருளிய புயங்கள் கொண்ட வீரனே, அலை கொண்ட கடலில் புகுந்து சண்டை செய்த பெரிய சேனையைக் கொண்ட அசுரர்களை வெட்டித் தொலைத்து வெற்றி கொண்டு, உயர்ந்த தேவர்கள் தொழும்படி அழகிய சதங்கை ஒலி செய்ய வருபவனே, அடியார்கள் பயத்தால் துன்புற்று ஒடுங்கும் வருத்தத்தை நீக்கி, அன்பு தரும் திருவண்ணாமலையில் சிறப்பாக வீற்றிருந்து அருளும் பெருமாளே. 

பாடல் 421 - திருவருணை 
ராகம் - ஆபோகி; தாளம் - ஆதி

தனனா தனனா தனனா தனனா     தனனா தனனா ...... தனதான

சிவமா துடனே அநுபோ கமதாய்     சிவஞா னமுதே ...... பசியாறித் 
திகழ்வோ டிருவோ ரொருரூ பமதாய்     திசைலோ கமெலா ...... மநுபோகி 
இவனே யெனமா லயனோ டமரோ     ரிளையோ னெனவே ...... மறையோத 
இறையோ னிடமாய் விளையா டுகவே     யியல்வே லுடன்மா ...... அருள்வாயே 
தவலோ கமெலா முறையோ வெனவே     தழல்வேல் கொடுபோ ...... யசுராரைத் 
தலைதூள் படஏழ் கடல்தூள் படமா     தவம்வாழ் வுறவே ...... விடுவோனே 
கவர்பூ வடிவாள் குறமா துடன்மால்     கடனா மெனவே ...... அணைமார்பா 
கடையேன் மிடிதூள் படநோய் விடவே     கனல்மால் வரைசேர் ...... பெருமாளே.

சிவம் என்கின்ற தலைவியுடன் இன்ப நுகர்ச்சி கொண்டவனாக, சிவஞானம் என்ற அமுதத்தை உண்டு அதனால் அறிவுப் பசி தீர்ந்து, விளங்கும் 'தலைவன் - தலைவி' என்ற ஈருருவமும் ஒரே உருவமாய் எட்டுத் திசையிலுள்ளவர் சுகித்து உணர்பவன் இவன்தான் என்று திருமால், பிரமன், தேவர்கள் அனைவரும் கூறி, இவன் இளையவன் (முருகன்) என வியந்து கூற, வேதமும் அவ்வாறே என்று ஆமோதித்துக் கூற, சிவபிரானிடத்தில் வேண்டி, யான் (உன்னைப் போல்) விளையாடுவதற்காக அழகிய வேலும் மயிலும் தந்தருள்வாயாக. மிகவும் உலகங்கள் யாவும் இது முறையாகுமா என்று ஓலமிட, நெருப்பை வீசும் வேலுடன் சென்று அசுரர்களின் தலைகள் பொடிபடும்படி, ஏழு கடல்களும் தூள்படும்படி, சிறந்த தவத்தினர் வாழ்வுறுமாறு அந்த வேலைச் செலுத்தியவனே, மனம் கவரும் மலரின் அழகுடையவளும், குறப்பெண்ணும் ஆகிய வள்ளியிடம் ஆசை கொள்வது உன் கடமை என்று அவளை அணைந்த மார்பனே, கடைப்பட்டவனாகிய என் துன்பம் தூள்படவும், என் நோய் தொலையவும் (அருளி), அக்கினிப் பெருமலையாம் திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 422 - திருவருணை 
ராகம் - ....; தாளம் -

தனதனன தனதனன தந்தனந் தந்தனம்     தனதனன தனதனன தந்தனந் தந்தனம்          தனதனன தனதனன தந்தனந் தந்தனம் ...... தந்ததான

சினமுடுவல் நரிகழுகு டன்பருந் தின்கணங்     கொடிகெருடன் அலகைபுழு வுண்டுகண் டின்புறுஞ்          செடமளறு மலசலமொ டென்புதுன் றுங்கலந் ...... துன்பமேவு 
செனனவலை மரணவலை ரண்டுமுன் பின்தொடர்ந்     தணுகுமுட லநெகவடி விங்கடைந் தம்பரஞ்          சிறுமணலை யளவிடினு மங்குயர்ந் திங்குலந் ...... தொன்றுநாயேன் 
கனகபுவி நிழல்மருவி யன்புறுந் தொண்டர்பங்     குறுகஇனி யருள்கிருபை வந்துதந் தென்றுமுன்          கடனெனது உடலுயிரு முன்பரந் தொண்டுகொண் ...... டன்பரோடே 
கலவிநல மருவிவடி வஞ்சிறந் துன்பதம்     புணர்கரண மயில்புறமொ டின்புகொண் டண்டருங்          கனகமலர் பொழியஉன தன்புகந் தின்றுமுன் ...... சிந்தியாதோ 
தனனதன தனனதன தந்தனந் தந்தனந்     தகுகுகுகு குகுகுகுகு டங்குடங் குந்தடந்          தவில்முரசு பறைதிமிலை டிங்குடிங் குந்தடர்ந் ...... தண்டர்பேரி 
தடுடுடுடு டுடுடுடுடு டுண்டுடுண் டுண்டுடுண்     டிமிடிமிட டகுர்திகுகு சங்குவெண் கொம்புதிண்          கடையுகமொ டொலியகட லஞ்சவஞ் சன்குலஞ் ...... சிந்திமாளச் 
சினமுடுகி அயிலருளி யும்பரந் தம்பரந்     திகையுரகர் புவியுளது மந்தரம் பங்கயன்          செகமுழுது மகிழஅரி அம்புயன் தொண்டுகொண் ...... டஞ்சல்பாடத் 
திருமுறுவ லருளியென தெந்தையின் பங்குறுங்     கவுரிமன முருகவொரு கங்கைகண் டன்புறுந்          திருவருண கிரிமருவு சங்கரன் கும்பிடுந் ...... தம்பிரானே.

இந்த உடலானது கோபம் கொள்ளும் நாய், நரி, கழுகு இவைகளுடன் பருந்துகளின் கூட்டம், காக்கை, கருடன், பேய், புழுக்கள் இவை யாவற்றாலும் உண்ணப்படுவதற்கும், கண்டு களிக்கப்படுவதற்கும் அமைந்தது. இவ்வுடல் சேறு போன்ற மலம், நீருடன், எலும்பும் கூடியுள்ள பாத்திரம். துன்பத்துடன் கூடிய பிறப்பு வலை, இறப்பு வலை இரண்டும் முன் பின்னாகத் தொடர்ந்து நெருங்கி வரும் உடல் இது. பல உருவங்கள் இவ்வுலகில் அடைந்து, கடலின் சிறு மணலை அளவிட்டாலும் அங்கு அந்த அளவைக் காட்டிலும் மேற்பட்டு, இங்கு அழிவதற்காகவே பிறவியில் பொருந்தும் நாயினும் கீழான நான், பொன்னுலகின் நீழலில் இருந்து, (உன் மீது) அன்பு பூண்டுள்ள அடியார்களின் பக்கத்தில் இருந்து பொருந்த, இனி அருட் கிருபையை வந்து தர எப்போதும் உன்னுடைய கடமையாகும் என்னுடைய உடலும், உயிரும் உன்னுடைய ஆட்சிக்கு உட்பட்டதாகும். அடியேனுடைய தொண்டை ஏற்றுக் கொண்டு, அன்பர்களுடன் இணக்க இன்பம் பொருந்தி, என் அழகு சிறப்புற்று, உனது திருவடியில் என் மனமும் கரணங்களும் பொருந்த, உனது மயிலின் புறத்தே மகிழ்ச்சி கொண்டு தேவர்களும் பொன் மலர்களைப் பொழிய, உன்னுடைய அன்பு மகிழ்ச்சி கூடி இன்றே என்னை முன்னதாகக் கருதக் கூடாதோ? தனனதன தனனதன தந்தனந் தந்தனந் தகுகுகுகு குகுகுகுகு டங்குடங் குந் தடம் தனனதன தனனதன தந்தனந் தந்தனந் தகுகுகுகு குகுகுகுகு டங்குடங் குந்தடம் - என்று வளைந்த மேளம், முரசு, பறை, திமிலை (இவை எல்லாம் கூடி) டிங்கு டிங்குந்து என்று பேரொலி எழுப்ப, அண்டர் பேரி தடுடுடுடு டுடுடுடுடு டுண்டுடுண் தேவர்களின் பேரி வாத்தியம் தடுடுடுடு டுடுடுடுடு டுண்டுடுண் டுண்டுடுண் டிமிடிமிட டகுர திகுகு என்று ஒலிக்க, சங்கும், வெண்ணிறமுடைய ஊது கொம்பும் வலிமையாக ஊதி யுக முடிவு போல் ஒலி செய்ய, கடலும் அஞ்ச, வஞ்சகனாகிய சூரனுடைய குலம் சிதறுண்ட அழிய, கோபம் மிக உண்டாக வேலாயுதத்தைச் செலுத்தி, தேவர்கள், அந்தச் சமுத்திரம், திக்குகள், நாகர், பூமியில் உள்ள மந்தர மலையில் உள்ளோர், தாமரையில் இருக்கும் பிரமன் உலகங்கள் (இங்ஙனம்) யாவரும் மகிழ, திருமாலும், பிரமனும் அடிமை பூண்டு அபயம் தா என்று ஓலமிடும் பாடல்களைப் பாட, அழகிய புன்னகையைப் பூத்தருளி எனது தந்தையாகிய சிவபெருமானின் பக்கத்தில் உறையும் உமையவள் மனம் குழைய, ஒப்பற்ற கங்கை (உன் ஆடலைப்) பார்த்து அன்பு கொள்ளும் திரு அண்ணா மலையில் வீற்றிருக்கும் சங்கரன் வணங்கும் தலைவனே. 

பாடல் 423 - திருவருணை 
ராகம் -....., தாளம் -

தத்த தத்ததன தத்த தத்ததன     தத்த தத்ததன தத்த தத்ததன          தத்த தத்ததன தத்த தத்ததன ...... தந்ததான

சுக்கி லச்சுரொணி தத்தி லுற்றநளி     னத்தி லப்புவென ரத்த முற்றிசுக          சுக்கி லக்குளிகை யொத்து கெர்ப்பகுகை ...... வந்துகோலத் 
தொப்பை யிட்டவயி றிற்பெ ருத்துமிக     வட்ட மிட்டுடல வெப்ப முற்றுமதி          சொற்ற பத்தின்மறி யக்ஷ ரத்தினுடை ...... விஞ்சையாலே 
கக்க நற்புவியி லுற்ற ரற்றிமுலை     யைக்கொ டுக்கவமுர் தைப்பு சித்துவளர்          கைக்க சத்தியொடு ழைத்து தத்துநடை ...... அந்தமேவிக் 
கற்று வெற்றறிவு பெற்று தொக்கைமயி     லொத்த மக்கள்மய லிற்கு ளித்துநெறி          கட்டி யிப்படிபி றப்பி லுற்றுடல ...... மங்குவேனோ 
தெற்க ரக்கர்பவி ஷைக்கு லைத்துவிட     ணற்கு நத்தரச ளித்து முத்திகொடு          சித்தி ரத்திருவு ரத்த சக்கிரிதன் ...... மருகோனே 
செக்க ரத்தின்மலை முப்பு ரத்திலெரி     யிட்ட சத்திசிவ னுற்று நத்தமிகு          சித்த னைத்தையும்வி ழித்த சத்தியுமை ...... தந்தபாலா 
தர்க்க மிட்டசுர ரைக்கெ லித்துமலை     யுக்கெ ழுக்கடல்கொ ளுத்தி அட்டதிசை          தட்ட முட்டையடை யக்கொ டிப்புகையின் ...... மண்டும்வேலா 
தத்தை வித்ருமநி றத்தி முத்தணிகு     றத்தி கற்பகவ னத்தி சித்தமவை          தக்கு நத்தஅரு ணைக்கி ரிக்குள்மகிழ் ...... தம்பிரானே.

ஆணின் விந்துவும், பெண்ணின் ரத்தத்திலுள்ள இந்திரியமும் ஒன்றுபட்டு (சிசு உற்பத்தியாகி), தாமரை இலையில் நீர் போல ரத்தம் நிறைந்து, சுகத்தைத் தரும் சுக்கிலத்தாலாகிய ஒரு மந்திர சக்தி உள்ள மாத்திரை அளவைப் பூண்டு, கருப்பையில் தோன்றி, அழகிய தொப்பை இடுகின்ற வயிற்றில் வளர்ந்து, அந்த வயிற்றில் மிகவும் சுழன்று, உடலில் சூடு வரப் பெற்று, சொல்லப்பட்ட பத்தாவது மாதத்தில் கீழ் மேலாக விழச் செய்யவல்ல (பிரமனுடைய) எழுத்துக்களின் மந்திர சக்தியால், வெளியில் தள்ளிவிட, நல்ல இப் பூமியில் சேர்ந்து, குழந்தை அழுது (தாயின்) முலையைத் தர, முலைப்பால் அமுதை உண்டு, வளர்வதற்கு வலிமையின்மையால் முயன்று, தத்தித் தத்தி நடக்கும் நடையழகைப் பெற்று, நூல்களைப் படித்து பயனில்லாத அறிவைப் பெற்று, தோகை மயில் போன்ற பெண்களின் மோகத்தில் மூழ்கி, விதியினால் கட்டுண்டு இவ்வாறு பிறவியை அடைந்து, (இறுதியாக) உடல் அழிபட்டு இறந்து படுவேனோ? தெற்கில் இருந்த அரக்கர்களின் செருக்கை அழித்து, விபீஷணனுக்கு விரும்பத் தக்க (இலங்கை) அரசாட்சியைத் தந்து முக்தியைக் கொடுத்தவரும், மிக்க அழகிய லக்ஷ்மியை மார்பில் தரித்தவரும், சக்கரத்தை ஏந்தியவரும் ஆகிய திருமாலின் மருகனே, சம்மையான திருக்கரத்தில் மேரு மலையாகிய வில்லை ஏந்தி திரிபுரங்களில் தீ பற்றும்படிச் செய்த தேவி, சிவபெருமானின் அருகாமையில் இருந்து, மிகவும் விரும்பத்தக்க அஷ்ட சித்துக்கள்* முதலான யாவற்றையும் தரிசித்த (சித்துக்களுக்குப் பிறப்பிடமான) பார்வதி பெற்ற குழந்தையே, வாதிட்டு போருக்கு வந்த அசுரர்களை வென்று, மலைகளைப் பொடியாக்கி, ஏழு கடல்களையும் எரி இட்டு, எட்டுத் திசைகளும் தரைமட்டமாகி தவிடு பட, நெருப்பின் புகைக் கொடியுடன் விரைந்து உக்கிரத்துடன் நெருங்கும் வேலனே, கிளி போன்றவளும், பவள நிறம் உடையவளும், முத்து மாலை அணிந்தவளும் ஆகிய குறப் பெண் (வள்ளி), கற்பக மரக் காடு உள்ள பான்னுலகத்தவள் (தேவயானை) ஆகிய இருவர்களின் மனங்கள் பொருந்தி விரும்ப, திருவண்ணாமலைக்குள் மகிழும் தம்பிரானே. 
* அஷ்டமாசித்திகள் பின்வருமாறு:அணிமா - அணுவிலும் சிறிய உருவினன் ஆதல்.மகிமா - மேருவினும் பெரிய உருவினன் ஆதல்.கரிமா - ஆயுதங்களுக்கும், ஆகாயத்துக்கும், காலத்துக்கும் அப்பால் ஆதல்.லகிமா - ஆகாயகமனம், அந்தரத்தில் இருத்தல்.பிராப்தி - பர காயங்களில் புகுதல் (கூடுவிட்டு கூடுபாய்தல்).பிராகாமியம் - எல்லாவற்றிலும் நிறைந்திருத்தல்.ஈசத்துவம் - எல்லாவற்றுக்கும் நாதனாக இருத்தல்.வசித்துவம் - எல்லா இடங்களிலும் இருந்து யாவற்றையும் வசப்படுத்தல்.

பாடல் 424 - திருவருணை 
ராகம் -...; தாளம் -

தந்தத் தந்தத் தனதன தானன     தந்தத் தந்தத் தனதன தானன          தந்தத் தந்தத் தனதன தானன ...... தனதான

செஞ்சொற் பண்பெற் றிடுகுட மாமுலை     கும்பத் தந்திக் குவடென வாலிய          தெந்தப் பந்தித் தரளம தாமென ...... விடராவி 
சிந்திக் கந்தித் திடுகளை யாமுன     தங்கத் தம்பொற் பெதுவென வோதுவ          திண்டுப் புந்தித் திடுகனி தானுமு ...... னிதழாமோ 
மஞ்சொக் குங்கொத் தளகமெ னாமிடை     கஞ்சத் தின்புற் றிடுதிரு வேயிள          வஞ்சிக் கொம்பொப் பெனுமயி லேயென ...... முறையேய 
வந்தித் திந்தப் படிமட வாரொடு     கொஞ்சிக் கெஞ்சித் தினமவர் தாடொழு          மந்தப் புந்திக் கசடனெ நாளுன ...... தடிசேர்வேன் 
நஞ்சைக் கண்டத் திடுபவ ராரொடு     திங்கட் பிஞ்சக் கரவணி வேணியர்          நம்பர்ச் செம்பொற் பெயரசு ரேசனை ...... யுகிராலே 
நந்தக் கொந்திச் சொரிகுடல் சோர்வர     நந்திக் கம்பத் தெழுநர கேசரி          நஞ்சக் குண்டைக் கொருவழி யேதென ...... மிகநாடி 
வெஞ்சச் சிம்புட் சொருபம தானவர்     பங்கிற் பெண்கற் புடையபெ ணாயகி          விந்தைச் செங்கைப் பொலிசுத வேடுவர் ...... புனமீதே 
வெண்டித் தங்கித் திரிகிழ வாவதி     துங்கத் துங்கக் கிரியரு ணாபுரி          வெங்கட் சிங்கத் தடிமயி லேறிய ...... பெருமாளே.

(முதல் 11 வரிகள் வேசைகளை வர்ணிப்பது கூறப்படுகிறது). செம்மையான சொற்களின் தகுதியைப் பெற்றுள்ள குடம் போன்ற பருத்த மார்பகம் ஒப்பிடுங்கால் கும்ப கலசம், யானை, மலை என விளங்கியும், வெண்மை நிறம் கொண்ட பற்களின் வரிசை முத்துப் போல் விளங்கியும், துன்பத்தில் என் உயிரை எடுத்து, மணம் வீச வல்ல களை வாய்ந்தனவாய் உள்ள உன்னுடைய அங்கங்களின் அழகிய பொலிவுக்கு எதை நான் உவமையாகக் கூறுவது? திண்மையான பவளமும், தித்திப்பு உள்ள பழமும் உன் வாயிதழுக்கு நிகர் ஆகுமோ? மேகத்தை ஒக்கும் திரண்டு நிறைந்துள்ள கூந்தல் என்றெல்லாம் கூறி, நெருங்கிய தாமரையில் மகிழ்ந்து வீற்றிருக்கும் லக்ஷ்மியே, இளமை வாய்ந்த வஞ்சிக் கொடிக்கு ஒப்பான மயில் போன்றவளே, என்றெல்லாம் முறை பொருந்த வந்தனைப் பேச்சுக்கள் பேசி, இவ்வாறு விலைமாதர்களுடன் கொஞ்சியும், கெஞ்சிப் பேசியும், தினமும் அவர்களின் திருவடியைத் தொழுகின்ற மழுங்கின அறிவுடைய குற்றமுள்ளவனாகிய நான் உனது திருவடியை என்று சேர்வேன்? விஷத்தைக் கழுத்தில் தரிப்பவர், ஆத்தி மாலையோடு, இளம் பிறையையும், எலும்பையும், பாம்பையும் அணிந்துள்ள சடையினர் ஆகிய நம் சிவபெருமான், இரணியன் என்னும் பெயருள்ள அசுரனை நகத்தாலே அழிந்து போகும்படி குத்திக் கிழித்து, ரத்தம் சொரிந்து விழும் குடல் தளர்ச்சி உறும்படியாக தூணிலே தோன்றி வெளி வந்த நரசிம்ம மூர்த்தியின் வெறி நைந்து அடங்கிக் குறுகுவதற்கு வழி யாதென்று மிகவும் யோசித்து, கடுமை கொண்டவராய் சரபப் பட்சியின்* வடிவம் கொண்டவராகிய சிவபிரானின் இடப் பாகத்தில் இடம் கொண்டவளும், கற்பு நிறைந்த பெண்களின் நாயகியுமாகிய பார்வதியின் அழகிய செங்கையில் விளங்கும் குழந்தையே, வேடர்களின் தினைப் புனத்தில் களைப்பு உற்று தங்கித் திரிகின்ற கிழவனே, மிக உயர்ந்ததும், பரிசுத்தமானதுமான மலை உள்ள திருஅண்ணாமலை என்னும் ஊரில், விரும்பத்தக்க கண்களை உடைய சிங்காசனம் போன்ற மயிலின் மேல் ஏறிய பெருமாளே. 
* இரணியனை வதைத்த நரசிம்மம் (திருமால்) உக்கிரம் கொண்டு உலகங்களை வருத்தத் தொடங்கினார். தேவர்கள் முறையிட, சிவபெருமான் வீரபத்திரரை ஏவ, அவர் சரபப்பட்சியின் உருவம் எடுத்து அந்த நரசிங்கத்தைக் கீறி, அதன் தோலையும், முகத்தையும் சிவன் முன் வைத்தார். அதனால் சிவபெருமானுக்கு, சிங்க உரியும், நாரசிங்காம்பரன் என்ற பெயரும் உண்டாயின - சிவ புராணம்.

பாடல் 425 - திருவருணை 
ராகம் - தேஷ்; தாளம் - ஆதி - எடுப்பு - 1/2 இடம்

தனதன தனனாத் தனதன தனனத்     தனதன தனனாத் தனதன தனனத்          தனதன தனனாத் தனதன தனனத் ...... தனதான

செயசெய அருணாத் திரிசிவ யநமச்     செயசெய அருணாத் திரிமசி வயநச்          செயசெய அருணாத் திரிநம சிவயத் ...... திருமூலா 
செயசெய அருணாத் திரியந மசிவச்     செயசெய அருணாத் திரிவய நமசிச்          செயசெய அருணாத் திரிசிவ யநமஸ்த் ...... தெனமாறி 
செயசெய அருணாத் திரிதனின் விழிவைத்     தரகர சரணாத் திரியென உருகிச்          செயசெய குருபாக் கியமென மருவிச் ...... சுடர்தாளைச் 
சிவசிவ சரணாத் திரிசெய செயெனச்     சரண்மிசை தொழுதேத் தியசுவை பெருகத்          திருவடி சிவவாக் கியகட லமுதைக் ...... குடியேனோ 
செயசெய சரணாத் திரியென முநிவர்க்     கணமிது வினைகாத் திடுமென மருவச்          செடமுடி மலைபோற் றவுணர்க ளவியச் ...... சுடும்வேலா 
திருமுடி யடிபார்த் திடுமென இருவர்க்     கடிதலை தெரியாப் படிநிண அருணச்          சிவசுடர் சிகிநாட் டவனிரு செவியிற் ...... புகல்வோனே 
செயசெய சரணாத் திரியெனு மடியெற்     கிருவினை பொடியாக் கியசுடர் வெளியிற்          றிருநட மிதுபார்த் திடுமென மகிழ்பொற் ...... குருநாதா 
திகழ்கிளி மொழிபாற் சுவையித ழமுதக்     குறமகள் முலைமேற் புதுமண மருவிச்          சிவகிரி அருணாத் திரிதல மகிழ்பொற் ...... பெருமாளே.

அஜயஜெய அருணாசலா, சிவயநம,*1 அஜயஜெய அருணாசலா, மசிவயந,*2 அஜயஜெய அருணாசலா, நமசிவய*3, மூலப் பொருளே, அஜயஜெய அருணாசலா, யநமசிவ*4, அஜயஜெய அருணாசலா, வயநமசி*5, அஜயஜெய அருணாசலா, சிவயநமஸ்த்து என்று மாறி மாறிச் செபித்து, ஜெயஜெய என்று கூறி அருணாசலத்தில் கண்ணை வைத்து, ஹர ஹர திருவடி மலையே (சிவ மலையே) என்று கூறித் தியானித்து, ஜெய ஜெய என்னும் இந்த மந்திரம் எங்கள் குரு தந்த பாக்கியம் என்று என் உள்ளம் பொருந்தி, பேரொளியாக விளங்கும் திருவடியை சிவசிவ திருவடி மலையே ஜெயஜெய எனப் புகழ்ந்து, திருவடி (சிவமலை) யின் மீது வீழ்ந்து தொழுது போற்றிய இன்பம் பெருக அந்தத் திருவடியின் (ஆண்டவனது) சிவ மந்திரமாகிய பாற்கடலில் இருந்து கிடைத்த அமுதம்போன்ற இன்பரசத்தைப் பருகி மகிழேனோ? ஜெய ஜெய திருவடி மலையே என்று முனிவர்களின் கூட்டங்கள் இத் திருமலை வினையினின்றும் நம்மைக் காத்திடும் என்று கூடிப் பொருந்திட, தங்கள் உடலையும் முடியையும் கிரெளஞ்சம், ஏழு குலகிரிகள் என்னும் மலைகள் காப்பாற்றுவதாக நினைத்த அசுரர்கள் மடிந்து விழச்செய்து சுட்டெரித்த வேலாயுதனே, திருமுடியையும் திருவடியையும் கண்டு பிடியுங்கள் எனக் கூறி திருமால், பிரமன் ஆகிய இருவருக்கும் அடியும் முடியும் தெரியாதவண்ணம் நின்ற செந்நிறச் சிவ சுடராகிய நெருப்புக் கண்ணை உடைய சிவபெருமானுடைய இரண்டு காதுகளிலும் (பிரணவ மந்திரத்தை) உபதேசம் செய்தவனே, ஜெயஜெய திருவடி மலையே (சிவமலையே) எனத் துதிக்கின்ற அடியேனுக்கு, எனது (நல்வினை, தீவினை ஆகிய) இரு வினைகளையும் பொடியாக்கிய ஒளி வெளியில் திருநடனம் இதோ பார்ப்பாயாக எனக் கூறி மகிழ்ந்திடும் அழகிய குரு நாதனே, விளங்கும் கிளி மொழி போலவும், பாலின் சுவை போலவும், வாயிதழின் ஊறல் அமுதம் போலவும் அமைந்த குறப் பெண்ணாகிய வள்ளியின் மார்பின் மீது உள்ள புது மணத்தைச் சுகித்து, சிவ மலையாகிய அருணாசலத் தலத்தில் மகிழ்கின்ற அழகிய பெருமாளே. 
*1 'சிவயநம' என்பது வேதாகமப்படியான பஞ்சாட்சரம்.
*2 இந்த மந்திரத்தில், கடைசி அட்சரம் முதலாக வந்தால் வருவது 'மசிவயந'.
*3 இந்த மந்திரத்தில், கடைசி அட்சரம் முதலாக வந்தால் வருவது 'நமசிவய'.
*4 இந்த மந்திரத்தில், கடைசி அட்சரம் முதலாக வந்தால் வருவது 'யநமசிவ'.
*5 இந்த மந்திரத்தில், கடைசி அட்சரம் முதலாக வந்தால் வருவது 'வயநமசி'.மீண்டும் கடைசி அட்சரத்தை முதலாக வைத்தாம் 'சிவயநம' என்ற பஞ்சாட்சர சக்கரம் தொடர்ந்து மாறி மாறி வரும்.

பாடல் 426 - திருவருணை 
ராகம் - ஆனந்த பைரவி ; தாளம் - அங்கதாளம் - 9 தகதிமி-2, தகதகிட-2 1/2 தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2

தனன தனந்தனந் தான தத்த தந்த     தனன தனந்தனந் தான தத்த தந்த          தனன தனந்தனந் தான தத்த தந்த          ...... தனதனத் தனதான

தமர குரங்களுங் காரி ருட்பி ழம்பு     மெழுகிய அங்கமும் பார்வை யிற்கொ ளுந்து          தழலுமிழ் கண்களுங் காள மொத்த கொம்பு          ...... முளகதக் கடமாமேல் 
தனிவரு மந்தகன் பாசம் விட்டெ றிந்து     அடவரு மென்றுசிந் தாகு லத்தி ருந்து          தமரழ மைந்தருஞ் சோக முற்றி ரங்க          ...... மரணபக் குவமாநாள் 
கமல முகங்களுங் கோம ளத்தி லங்கு     நகையு நெடுங்கணுங் காதி னிற்று லங்கு          கனக குதம்பையுந் தோடும் வஜ்ர அங்க          ...... தமுமடற் சுடர்வேலுங் 
கடிதுல கெங்கணுந் தாடி யிட்டு வந்த     மயிலுமி லங்கலங் கார பொற்ச தங்கை          கழலொலி தண்டையங் காலு மொக்க வந்து          ...... வரமெனக் கருள்கூர்வாய் 
இமகிரி வந்தபொன் பாவை பச்சை வஞ்சி     அகில தலம்பெறும் பூவை சத்தி யம்பை          யிளமுலை யின்செழும் பால்கு டுத்தி லங்கு          ...... மியல்நிமிர்த் திடுவோனே 
இறைவ ரிறைஞ்சநின் றாக மப்ர சங்க     முரைசெய் திடும்ப்ரசண் டாவி சித்து நின்ற          ரணமுக துங்கவெஞ் சூரு டற்பி ளந்த          ...... அயிலுடைக் கதிர்வேலா 
அமண ரடங்கலுங் கூட லிற்றி ரண்டு     கழுவி லுதைந்துதைந் தேற விட்டு நின்ற          அபிநவ துங்ககங் காந திக்கு மைந்த          ...... அடியவர்க் கெளியோனே 
அமரர் வணங்குகந் தாகு றத்தி கொங்கை     தனில்முழு குங்கடம் பாமி குத்த செஞ்சொ          லருணை நெடுந்தடங் கோபு ரத்த மர்ந்த          ...... அறுமுகப் பெருமாளே.

ஒலி செய்கின்ற (கால்) குளம்புகளும், கரிய நிறமுடைய இருளின் திரட்சி பூசியது போன்ற உடலும், பார்க்கும் பார்வையில் எரிகின்ற நெருப்பைக் கக்கும் கண்களும், ஊது கொம்பு போன்ற நீண்ட கொம்புகளும் உள்ள, கோபத்தை உடைய மத யானையைப்போன்ற எருமையின் மீது, தனியனாக வரும் யமன் பாசக் கயிற்றை வீசி எறிந்து, கொல்ல வருவான் என்னும் மனக் கவலையில் இருந்து சுற்றத்தார்கள் அழவும், எனது மக்களும் கவலை உற்று வருந்தவும், மரணம் குறுகிக் கூடும் நாளில், தாமரை போன்ற திருமுகங்களும், அவற்றில் அழகுடன் விளங்குகின்ற புன்சிரிப்பும், நீண்ட கண்களும், காதில் விளங்கும் பொன்னாலான காதணியும், தோடும், வைர ரத்தினத்தால் ஆகிய தோள் அணியாகிய வாகுவலயமும், வெற்றி பொருந்திய ஒளி வீசும் வேலாயுதமும், விரைவாக உலக முழுதும் பயணம் சென்று வந்த மயிலும், விளங்கும் அலங்காரமாய் உள்ள பொன்னாலான சதங்கை, வீரக் கழல்கள், ஒலிக்கும் தண்டைகள் அணிந்த திருவடிகளும், இவை யாவும் ஒன்று படக் கூடி வர, நீ வரத்தை எனக்கு அருள் புரிவாயாக. இமகிரியின் அரசன் பெற்ற அழகிய பதுமையாகிய பார்வதி, பச்சை நிறம் கொண்ட இளங் கொடி, அண்டங்களை எல்லாம் பெற்ற பூவை, சக்தி அம்பை எனப்படும் உமா தேவியின் இளமையான மார்பிலிருந்து தேர்ந்த ஞானமாகிய பாலைக் குடித்து விளங்குகின்ற (சம்பந்தராக வந்து), (பாண்டியனுக்கு) இயற்கையாக அமைந்த கூனை நிமிர்த்தியவனே. சிவபெருமான் வணங்கிக் கேட்க, அவர் முன் நின்று ஆகம ஞான உபதேசம் செய்த வீரனே, பேரணிகளை இறுகக் கட்டி போர் முனைக்கு வந்து எதிர்த்த கொடிய சூரனுடைய உடலைப் பிளந்த வேலாயுதத்தை உடைய ஒளி வீசும் வேலனே, சமணர்கள் அனைவரும் மதுரையில் கூட்டமாக (வாதிட்டுத் தோற்றபின்) ஒவ்வொருவரும் கழுமுனையில் காலூன்றி உதைத்து ஏறி இறக்கும்படி விட்டு நின்ற புதுமைப் பிரானே, பரிசுத்தமான கங்கைநதிக்கு மகனே, அடியவர்களுக்கு எளிமையானவனே, தேவர்கள் தொழும் கந்தனே, குறப் பெண்ணாகிய வள்ளியின் மார்புகளில் முழுகிய, கடப்ப மாலை அணிந்தவனே, மிகவும் வல்ல புகழ் விளங்கும் திருவண்ணாமலையின் பெரிய கோபுரத்தில் வீற்றிருக்கும் ஆறுமுகப் பெருமாளே. 

பாடல் 427 - திருவருணை 
ராகம் -....; தாளம் -

தனனாதன தனனாதன தாந்தன தாந்தனதந்     தனனாதன தனனாதன தாந்தன தாந்தனதந்          தனனாதன தனனாதன தாந்தன தாந்தனதந் ...... தனதான

தமிழோதிய குயிலோமயி லாண்டலை யாம்புறவங்     கிளிகாடையி னணிலேரளி யாங்குரல் வாய்ந்ததிசெந்          தகுமாமிட றொலியாரித ழாஞ்சுளை தேன்கனியின் ...... சுவைசேருந்
தனபாரமு மலையாமென வோங்கிட மாம்பொறிசிந்     திடவேல்விழி நுதலோசிலை வான்பிறை மாந்துளிரின்          சரிரார்குழ லிருளாநகை யோங்கிய வான்கதிரின் ...... சுடர்பாயக் 
குமிழ்நாசியின் முகமோமதி யாங்குளிர் சேங்கமலஞ்     சரிதோடிணை செவியாடுச லாங்கள பூங்கமுகங்          கொடிநூலிடை யுடையாரன மாம்ப்ரியர் மாண்புரிமின் ...... கொடிமாதர் 
குணமோடம ளியினாடினு மோங்கிய பூங்கமலஞ்     சரணூபுர குரலோசையு மேந்திடு மாண்டலையின்          கொடியோடெழு தரிதாம்வடி வோங்கிய பாங்கையுமன் ...... தகையேனே 
திமிதோதிமி திமிதோதிமி தாங்கண தீங்கணதொந்     தகுதோதகு தகுதோதகு டாங்குட தீங்கடதொந்          திகுடோடிமி டிமிடோடிமி டாங்குட டீந்தகமென் ...... றியல்பேரி 
திசைமூடுக கடலேழ்பொடி யாம்படி யோங்கியவெங்     கரிதேர்பரி யசுரார்கள மாண்டிட நீண்டரவின்          சிரமீள்பட குவடோதுகள் வான்பெற வாங்கியவண் ...... கதிர்வேலா 
கமழ்மாவிதழ் சடையாரடி யேன்துயர் தீர்ந்திடவெண்     தழல்மாபொடி யருள்வோரடல் மான்துடி தாங்கியவண்          கரர்மாடரு ளுமையாளெமை யீன்றவ ளீன்றருள்மென் ...... குரவோனே 
கடையேனிரு வினைநோய்மல மாண்டிட தீண்டியவொண்     சுகமோகினி வளிநாயகி பாங்கனெ னாம்பகர்மின்          கலைநூலுடை முருகாவழ லோங்கிய வோங்கலின்வண் ...... பெருமாளே.

தமிழின் இனிமைக் குரலைக் காட்டும் குயிலோ, மயிலோ, கோழி தானோ, புறாவோ, கிளியோ, காடையோ, இனிமையான அன்றில் பறவையோ, அழகிய வண்டோ என்னும்படி குரலை உடைய, மிக்க செம்மையான, தக்கதான, சிறந்த கண்டத்து ஒலியை (புட்குரலை) உடைய விலைமாதர்களின் வாயிதழ் பலாச் சுளை, தேன், பழம் இவைகளின் சுவை சேர்ந்ததாகும். மார்பகப் பாரங்களும் மலை என்னும்படி பருத்து ஓங்க, அழகிய தேமல் அங்கும் இங்கும் சிதறிட, விழி வேல் தானோ, நெற்றி வில்லோ, சிறந்த பிறையோ, சா£ரம் மாந்துளிர் போன்றதோ, கூந்தல் இருளோ? பற்கள் விளங்கும் சிறந்த சூரியனின் பாயும் ஒளியோ? மூக்கு குமிழம்பூவோ? முகம் சந்திரனோ? குளிர்ந்த செந்தாமரையோ? பொருத்தமாக உள்ள தோடு விளங்கும் காதுகள் ஆடுகின்ற ஊஞ்சலோ? கழுத்து மென்மையான கமுகோ? இடுப்பு கொடியோ, நூலோ? எனக் கொண்டுள்ளவர்கள் அன்னம் போல்பவர். அன்பு காட்டுபவர்கள். பெருமை வாய்ந்த மின்னல் கொடி போன்றவர் (ஆகிய) பொது மகளிர். அவர்களது குணத்திலும் ஈடுபட்டு படுக்கையில் கலவி புரிந்தாலும், விளங்குகின்ற அழகிய தாமரை போன்ற உனது திருவடியில் உள்ள சிலம்பின ஒலியும், உன் கையில் ஏந்திய கோழிக் கொடியையும், எழுதுவதற்கு அரிதான ஒளி நிறைந்த அழகும் மிகுந்த அளவுக்கு என் நினைவில் வருவதை நான் சிறிதேனும் தடை செய்யேன். திமிதோதிமி திமிதோதிமி தாங்கண தீங்கணதொந் தகுதோதகு தகுதோதகு டாங்குட தீங்கடதொந் திகுடோடிமி டிமிடோடிமி டாங்குட டீந்தக இவ்வாறு ஒலிக்கும் பேரி முரசின் ஓசை திசைகள் எல்லாம் மூடும் படியும், ஏழு கடல்களும் பொடியாகும்படியும், பேரொலியுடன் வந்த கொடிய யானைகளும், தேர்களும், குதிரைகளும், அசுரர்களும் இறந்துபட, பெரிய ஆதிசேஷனாகிய பாம்பின் தலை பூ பாரத்திலிருந்து மீட்சி பெற, மலைகளின் பொடி ஆகாயத்தை அளாவும்படி செலுத்திய வளமும் ஒளியும் வாய்ந்த வேலாயுதனே, மணம் வீசும் அழகிய கொன்றையைச் சூடிய சடையை உடைய சிவபெருமான், அடியேனுடைய துயரங்கள் நீங்க வெண்ணிறமான நெருப்பால் தோன்றிய பெருமை வாய்ந்த பொடியாகிய திருநீற்றை அருளியவர், வலிமை பொருந்திய மான், உடுக்கை ஆகியவற்றைத் தாங்கிய வளப்பம் பொருந்திய கைகளை உடையவர் பக்கத்தில் இருந்து அருளும் உமா தேவி, எம்மைப் பெற்றவள் பெற்றருளிய அமைதி வாய்ந்த குருவே, கீழோனாகிய என்னுடைய (நல்வினை, தீவினை ஆகிய) இரு வினைகளும், நோயும், (ஆணவம், கன்மம், மாயை என்ற) மும்மலங்களும் அழிந்து போகும்படி தொட்டு தீ¨க்ஷ செய்தவனும், ஒள்ளிய சுக மோகினியாகிய வள்ளி நாயகிக்கு கணவன் என்று சொல்லப்படுகின்றவனும், விளங்கும் கலை நூல்களில் வல்லவனுமான முருகனே, நெருப்பு உருவான மலையாகிய திரு அண்ணாமலையில் வளப்பம் பொருந்தி வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 428 - திருவருணை 
ராகம் - ....; தாளம் -

தனன தனத்தத் தனந்த தனன தனத்தத் தனந்த     தனன தனத்தத் தனந்த ...... தனதான

தலையை மழித்துச் சிவந்த துணியை யரைக்குப் புனைந்து     சடையை வளர்த்துப் புரிந்து ...... புலியாடை 
சதிரொடு வப்பப் புனைந்து விரகொடு கற்கப் புகுந்து     தவமொரு சத்தத் தறிந்து ...... திருநீறு 
கலையை மிகுத்திட் டணிந்து கரண வலைக்குட் புகுந்து     கதறு நிலைக்கைக் கமர்ந்த ...... எழிலோடே 
கனக மியற்றித் திரிந்து துவளு மெனைச்சற் றறிந்து     கவலை யொழித்தற் கிரங்கி ...... யருள்வாயே 
அலைகட லிற்கொக் கரிந்து மருவரை யைப்பொட் டெறிந்து     மமரு லகத்திற் புகுந்து ...... முயரானை 
அருளொடு கைப்பற்றி வந்து மருண கிரிப்புக் கிருந்து     மறிவு ளபத்தர்க் கிரங்கு ...... மிளையோனே 
மலையை வளைத்துப் பறந்து மருவு புரத்தைச் சிவந்து     வறிது நகைத்திட் டிருந்த ...... சிவனார்தம் 
மதலை புனத்திற் புகுந்து நரவடி வுற்றுத் திரிந்து     மறம யிலைச்சுற் றிவந்த ...... பெருமாளே.

தலையை மொட்டை அடித்தும், காவித் துணியை இடுப்பில் அணிந்தும், சடையை வளர்த்துக் கொண்டும், புலியின் தோல் ஆடையை பெருமையாக மகிழ்ச்சியோடு அணிந்தும், சாமர்த்தியமாக புதுப்புது கலைகளைக் கற்கத் தொடங்கியும், தவம் என்பதை அந்தச் சொல்லின் சப்தமளவே அறிந்தும் (சிறிதும் தவநிலை இல்லாமல்), விபூதியை உடல் முழுக்க மிகுத்துப் பூசியும், இந்திரியங்கள் விரித்த வலைக்குள் வேண்டுமென்றே அகப்பட்டும், கதறி வேதனைப்படும் நிலைக்கு உண்டான அழகுடனே (பொன் வேண்டி) இரச வாதத்தால் பொன்னை ஆக்கித் திரிந்து சோர்வடையும் என்னைக் கொஞ்சம் கவனித்து, என் கவலையை ஒழிக்க வேண்டி என் மேல் இரக்கம் கொண்டு அருள் புரிவாயாக. அலை வீசும் கடலில் மாமரமாகி நின்ற சூரனைப் பிளந்தும், அரிய கிரெளஞ்ச மலையைத் தூளாக்கியும், தேவர்கள் உலகத்தில் புகுந்தும், பெருமை வாய்ந்த தேவயானையை அருள் பாலித்து அவளைக் கைப்பற்றியும், திருவண்ணாமலையில் புகுந்து வீற்றிருந்தும், ஞானம் உள்ள பக்தர்களுக்கு இரங்கி அருள் செய்யும் இளையோனே, (மேரு) மலையை வில்லாக வளைத்து, பறக்கின்ற சக்தி வாய்ந்த திரிபுரங்களின் மீது கோபித்து, சற்றே சிரித்தவண்ணம் இருந்து (திரிபுரத்தை எரித்திட்ட) சிவபெருமானுடைய குழந்தையே, தினைப் புனத்தில் புகுந்து, அங்கே மனித உருவம் பெற்று, காதலனாகத் திரிந்து வேடர்கள் வளர்த்த மயில் போன்ற பெண்ணான வள்ளியை வளைத்து அபகரித்துக் கொண்டுவந்த பெருமாளே. 

பாடல் 429 - திருவருணை 
ராகம் - ....; தாளம் -

தனத்த தானன தத்தன தத்தன     தனத்த தானன தத்தன தத்தன          தனத்த தானன தத்தன தத்தன ...... தனதான

திருட்டு வாணிப விக்ரம துட்டிகள்     மதத்த ரூபிகள் துர்ச்சன பொட்டிகள்          செகத்து நீலிகள் கெட்டப ரத்தைகள் ...... மிகநாணார் 
சிலைக்கு நேர்புரு வப்பெரு நெற்றிக     ளெடுப்பு மார்பிக ளெச்சிலு தட்டிகள்          சிரித்து மாநுடர் சித்தமு ருக்கிகள் ...... விழியாலே 
வெருட்டி மேல்விழு பப்பர மட்டைகள்     மிகுத்த பாவிகள் வட்டமு கத்தினை          மினுக்கி யோலைகள் பித்தளை யிற்பணி ...... மிகநீறால் 
விளக்கி யேகுழை யிட்டபு ரட்டிகள்     தமக்கு மால்கொடு நிற்கும ருட்டனை          விடுத்து நானொரு மித்திரு பொற்கழல் ...... பணிவேனோ 
தரித்த தோகண தக்கண செக்கண     குகுக்கு கூகுகு குக்குகு குக்குகு          தகுத்த தீதிகு தக்குகு திக்குகு ...... எனதாளந் 
தடக்கை தாளமு மிட்டியல் மத்தள     மிடக்கை தாளமு மொக்கந டித்தொளி          தரித்த கூளிகள் தத்திமி தித்தென ...... கணபூதம் 
அருக்க னாரொளி யிற்ப்ரபை யுற்றிடு     மிரத்ந மாமுடி யைக்கொடு கக்கழ          லடக்கை யாடிநி ணத்தையெ டுத்துண ...... அறவேதான் 
அரக்கர் சேனைகள் பட்டுவி ழச்செறி     திருக்கை வேல்தனை விட்டரு ளிப்பொரும்          அருட்கு காவரு ணைப்பதி யுற்றருள் ...... பெருமாளே.

வியாபாரம் செய்வதில் சாமர்த்தியம் கொண்ட துஷ்டைகள். ஆணவ சொரூபம் உடையவர்கள். தீய தன்மை கொண்ட பொது மகளிர். இவ்வுலகில் மிக்க தந்திரவாதிகள். கெட்டுப் போன வேசியர்கள். மிகவும் நாணம் அற்றவர்கள். வில்லைப் போன்ற புருவத்தையும் சிறந்த நெற்றியையும் முன்னுக்கு விளங்கும் மார்பையும் உடையவர்கள். எச்சில் நிறைந்த உதட்டை உடையவர்கள். சிரிப்பினாலேயே மனிதர்களுடைய மனதை உருக்குபவர்கள். கண்களாலே விரட்டி, மேலே விழுகின்ற கூத்தாடும் பயனிலிகள். மிக்க பாபம் செய்தவர்கள். வட்டமான முகத்தை மினுக்கி காதோலைகளாயுள்ள பித்தளையில் செய்யப்பட்ட ஆபரணங்களை அதிகமான சாம்பலிட்டு விளக்கம் பெறச் செய்து குண்டலங்களை அணிந்தவர்கள். மாறுபட்ட பேச்சை உடையவர்கள். இத்தகையோர்கள் மீது காதல் கொண்டு நிற்கும் மயக்கத்தை விட்டு, நான் மனம் ஒருமைப்பட்டு உனது அழகிய திருவடிகளைப் பணிவேனோ? தரித்த தோகண தக்கண செக்கண குகுக்கு கூகுகு குக்குகு குக்குகு தகுத்த தீதிகு தக்குகு திக்குகு இந்த வகையான இசைத் தாளங்களில் பெரிய கைகளால் தாளமும் இட்டு, பொருந்திய மத்தளம், இடக்கை, தாளம் இவை எல்லாம் ஒருங்கே ஒலிக்க, அதற்குத் தகுந்தவாறு நடனம் செய்து ஒளி கொண்ட பேய்கள், தத்திமி தித்தெனக் கூட்டமான பூதங்கள் சூரியனுடைய ஒளி போல பிரகாசிக்கும் ரத்தினத்தால் ஆன கி¡£டங்களைக் கொண்டு (அவை சிந்தும்படியாக) கழற்சிக் காய்களாகக் கொண்டு விளையாடி மாமிசங்களை எடுத்து உண்ணும்படி, அடியோடு அற்றுப் போய் அரக்கருடைய சேனைகள் அழிந்து விழ திருக்கையில் கொண்டுள்ள வோலாயுதத்தைச் செலுத்தி அருளி, சண்டை செய்தருளிய குகனே, திருவண்ணாமலை நகரில் வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 430 - திருவருணை 
ராகம் - ..........; தாளம் -

தானன தான தத்த தானன தான தத்த     தானன தான தத்த ...... தனதான

தேதென வாச முற்ற கீதவி நோத மெச்சு     தேனளி சூழ மொய்த்த ...... மலராலே 
சீறும ராவெ யிற்றி லூறிய காளம் விட்ட     சீதநி லாவெ றிக்கு ...... மனலாலே 
போதனை நீதி யற்ற வேதனை வாளி தொட்ட     போர்மத ராஜ னுக்கு ...... மழியாதே 
போகமெ லாநி றைத்து மோகவி டாய்மி குத்த     பூவையை நீய ணைக்க ...... வரவேணும் 
மாதினை வேணி வைத்த நாதனு மோது பச்சை     மாயனு மாத ரிக்கு ...... மயில்வீரா 
வானவர் சேனை முற்றும் வாழம ராப திக்குள்     வாரண மான தத்தை ...... மணவாளா 
மேதினி யோர்த ழைக்க வேயரு ணாச லத்து     வீதியின் மேவி நிற்கு ...... முருகோனே 
மேருவை நீறெ ழுப்பி நான்முக னார்ப தத்தில்     வேலடை யாள மிட்ட ...... பெருமாளே.

ஒளி உடையதாய், நறுமணம் கொண்டதாய், விநோதமான இசையை விரும்பும் தேனீக்கள் சூழ்ந்து மொய்ப்பதான பூக்களாலும், கோபித்து எழும் பாம்பின் பற்களில் ஊறிய விஷத்தைக் கக்குகின்ற குளிர்ந்த நிலா வீசும் கதிர்களின் நெருப்பாலும், தாமரைப்பூவில் வீற்றிருக்கும் நீதி* இல்லாத வேத நாயகனான பிரமனின் மீது தனது மலர் அம்புகளை ஏவிய, போரில் வல்ல மன்மத ராஜனாலும் அழிவுறாமல், பலவித இன்பங்களையும் நிறையத் தந்து, (உன் மீது) காதல் ஆசை மிக்குள்ள இந்தப் பெண்ணை நீ அணைக்க வர வேண்டும். கங்காதேவியை சடையில் தரித்த தலைவனான சிவபெருமானும், போற்றப்படுகின்ற மரகதப் பச்சை நிறம் கொண்ட திருமாலும் விரும்புகின்ற வேலாயுத வீரனே, தேவர்களுடைய சேனை எல்லாம் சூழ்கின்ற இந்திரனுடைய தலைநகர் அமராவதியில் (ஐராவதம் என்னும்) யானையால் வளர்க்கப்பட்ட கிளி போன்ற தேவயானைக்கு கணவனே, உலகத்தில் உள்ளவர்கள் செழிப்புற வாழ திருவண்ணாமலையின் தெருக்களில் விரும்பி வீற்றிருக்கும் முருகனே, மேரு மலையை பொடியாக்கி, பிரமனுடைய காலில் வேல் கொண்டு விலங்கிட்ட பெருமாளே. 
* நீதியற்ற வேதன் - தான் படைத்த திலோத்தமை மீது காதல் கொண்டு, அவளைப் பார்க்க அந்தத் திசையின் பக்கம் தனக்கு ஒரு முகத்தைப் படைத்துக் கொண்டான். ஆதலால் பிரமன் நீதி அற்றவன் ஆனான்.இப்பாட்டு அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவிக்காக பாடியது.மலர்கள், மன்மதன், மலர்க் கணைகள், சந்திரன் - இவை தலைவியின் பிரிவுத் துயரைக் கூட்டுவன.

பாடல் 431 - திருவருணை 
ராகம் - ....; தாளம் -

தான தத்த தந்த தான தத்த தந்த     தான தத்த தந்த ...... தனதான

தோத கப்பெ ரும்ப யோத ரத்தி யங்கு     தோகை யர்க்கு நெஞ்ச ...... மழியாதே 
சூலை வெப்ப டர்ந்த வாத பித்த மென்று     சூழ்பி ணிக்க ணங்க ...... ளணுகாதே 
பாத கச்ச மன்தன் மேதி யிற்பு குந்து     பாசம் விட்டெ றிந்து ...... பிடியாதே 
பாவ லற்கி ரங்கி நாவ லர்க்கி சைந்த     பாடல் மிக்க செஞ்சொல் ...... தரவேணும் 
வேத மிக்க விந்து நாத மெய்க்க டம்ப     வீர பத்ர கந்த ...... முருகோனே 
மேரு வைப்பி ளந்து சூர னைக்க டிந்து     வேலை யிற்றொ ளைந்த ...... கதிர்வேலா 
கோதை பொற்கு றிஞ்சி மாது கச்ச ணிந்த     கோம ளக்கு ரும்பை ...... புணர்வோனே 
கோல முற்றி லங்கு சோண வெற்பு யர்ந்த     கோபு ரத்த மர்ந்த ...... பெருமாளே.

மன நோயைத் தரும் பெரிய மார்பகங்களைக் கொண்டு நடமாடும் விலைமாதர்கள் பொருட்டு என் மனம் அழிவுறாமல், சூலை என்னும் கொடிய வயிற்று நோய், சுரம், மிக்க வாத நோய், பித்த நோய் என்னும் பெயருடன் சூழ்கின்ற நோய்க் கூட்டங்கள் என்னைப் பீடிக்காமல், பாதகனாகிய யமன் தன் எருமைக் கடா வாகனத்தின் மீது வந்து என்னைப் பாசக் கயிற்றை வீசி என்னுயிரைப் பிடியாமல், நக்கீரருக்கு* இரக்கம் காட்டிய தேவனே, புலவர்கள் பாராட்டும் நல்ல பாடல்களையும், செவ்விய சொற்களையும் எனக்குத் தந்து அருள வேண்டும். வேதங்களால் பாராட்டப்பட்ட விந்து, நாதம் (லிங்கம், சிவசக்திப் பீடம்) எனப்படும் மூலப் பொருளே, கடம்ப மாலை அணிந்தவனே, வீரனே, அழகனே, கந்தனே, முருகோனே, மேருவைப் போன்ற கிரெளஞ்சத்தைப்) பிளந்து, சூரனை அழித்து, கடலில் குளித்தெழுந்த ஒளி வீசும் வேலாயுதனே, அழகிய குறிஞ்சிநிலப் பெண்ணாகிய வள்ளியின் கச்சணிந்த இளம் குரும்பை போன்ற மார்பகங்களை அணைந்தவனே, அழகு நிறைந்து விளங்கும் சோணகிரி என்னும் திரு அண்ணாமலையில் உயர்ந்த கோபுரத்தின் மீது வீற்றிருக்கும் பெருமாளே. 
* நக்கீரர் சிறையிடப்பட்டு, பூதத்தால் துன்புறுத்தப்பட்டபோது, அவரது படைப்பாகிய திருமுருகாற்றுப்படையை (சங்க இலக்கியங்களுள் தலையானது) கேட்டு மகிழ்ந்து அவரை முருகன் சிறை விடுவித்தான்.

பாடல் 432 - திருவருணை 
ராகம் - ...; தாளம் -

தான தனதன தத்தம் ...... தனதான

பாண மலரது தைக்கும் ...... படியாலே 
பாவி யிளமதி கக்குங் ...... கனலாலே 
நாண மழிய வுரைக்குங் ...... குயிலாலே 
நானு மயலி லிளைக்குந் ...... தரமோதான் 
சேணி லரிவை யணைக்குந் ...... திருமார்பா 
தேவர் மகுட மணக்குங் ...... கழல்வீரா 
காண அருணையில் நிற்குங் ...... கதிர்வேலா 
காலன் முதுகை விரிக்கும் ...... பெருமாளே.

மன்மதனது மலர்ப் பாணங்கள் தைக்கும் காரணத்திலாலும், பாவி இளம் பிறை வீசுகின்ற நெருப்பாலும், (என்) மானத்தைக் கெடுக்கும் வகையில் கூவுகின்ற குயிலாலும், நானும் காம மயக்கத்தால் இளைத்துப் போதல் நியாயமோ தான்? விண்ணுலகத்தில் இருக்கும் பெண்ணைத் (தேவயானையை) அணைக்கும் அழகிய மார்பனே, தேவர்கள் அடிபணிவதால், அவர்களுடைய மகுடங்களின் நறுமணம் வீசும் திருக் கழலை உடைய வீரனே, யாவரும் காணும்படி திருவண்ணா மலையில் வீற்றிருக்கும் ஒளி வீசும் வேலனே, யமனுடைய முதுகு விரியும்படி அவனை விரட்டி விலக்கும் பெருமாளே. 
இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் அமைந்தது.நிலவு, மன்மதன், மலர் அம்பு, குயிலின் ஓசை முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.

பாடல் 433 - திருவருணை 
ராகம் - ...; தாளம் -

தானா தானா தானா தானா     தானா தானத் ...... தனதான

பாலாய் நூலாய் தேனாய் நீளாய்     பாகாய் வாய்சொற் ...... கொடியார்தாம் 
பாடா வாடா வேடா வாலே     பாடா யீடற் ...... றிடைபீறுந் 
தோலா லேகா லாலே யூனா     லேசூழ் பாசக் ...... குடில்மாசு 
தோயா மாயா வோயா நோயால்     சோர்வாய் மாளக் ...... கடவேனோ 
ஞாலா மேலா வேதா போதா     நாதா சோதிக் ...... கிரியோனே 
ஞானா சாரா வானாள் கோனே     நானா வேதப் ...... பொருளோனே 
வேலா பாலா சீலா காரா     வேளே வேடக் ...... கொடிகோவே 
வீரா தாரா ஆறா தாரா     வீரா வீரப் ...... பெருமாளே.

பால் போன்றதும், (இனிய தமிழ்) நூல் போன்றதும், தேன் போன்றதும், நீண்டு கம்பிப் பதமா¡ய் வருகின்ற காய்ச்சின வெல்லம் போன்றதுமாய் இனிக்கும் வாய்ச் சொல்லை உடைய கொடி போன்ற விலைமாதர்கள் பாடியும், ஆடியும் விருப்பத்தைத் தெரிவிக்கும் வலிமையினாலே காமநோய் உற்றவனாய் என் தகுதி தொலைந்துபோய் நின்று, வாழ்க்கையின் இடையிலேயே கிழிபட்டுப் போகும் தோலாலும், காற்றினாலும், மாமிசத்தாலும் சூழப்பட்டுள்ளதும், பற்றுகளுக்கு இடமானதுமான குடிசையாகிய இந்த உடல் குற்றங்கள் தோய்ந்தும், ஒளி மழுங்கியும், முடிவில்லாத நோயினால் தளர்ச்சி உற்றும் இறந்துபடக் கடவேனோ? பூமியில் மேம்பட்டு நிற்பவனே, பிரமனுக்கு போதித்தவனே, நாதனே, ஜோதி மலையாகிய அருணாசலப் பிரானே, ஞான மார்க்கத்தில் முதல்வனே, வானுலகை ஆள்கின்ற தலைவனே, பல வகையான வேதங்களுக்கும் உட் பொருளானவனே, வேலனே, பரமசிவ பாலனே, பரிசுத்த வடிவனே, செவ்வேளே, கொடி போன்ற வேடப் பெண் வள்ளியின் மணவாளனே, வீரத்துக்கு ஆதாரமானவனே, மூலாதாரம் முதலிய ஆறு ஆதாரங்களுக்கும் உரியவனே, வீரனே, வீரமுள்ள பெருமாளே. 
* ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம்

பாடல் 434 - திருவருணை 
ராகம் - ....; தாளம் -

தனதன தனந்த தான தனதன தனந்த தான     தனதன தனந்த தான ...... தனதான

புணர்முலை மடந்தை மாதர் வலையினி லுழன்ற நேக     பொறியுட லிறந்து போன ...... தளவேதுன் 
புகழ்மறை யறிந்து கூறு மினியென தகம்பொ னாவி     பொருளென நினைந்து நாயெ ...... னிடர்தீர 
மணமுணர் மடந்தை மாரொ டொளிர்திரு முகங்க ளாறு     மணிகிரி யிடங்கொள் பாநு ...... வெயிலாசை 
வரிபர வநந்த கோடி முநிவர்கள் புகழ்ந்து போத     மயில்மிசை மகிழ்ந்து நாடி ...... வரவேணும் 
பணைமுலை யரம்பை மார்கள் குயில்கிளி யினங்கள் போல     பரிவுகொ டுகந்து வேத ...... மதுகூறப் 
பறைமுர சநந்த பேரி முறைமுறை ததும்ப நீசர்     படைகட லிறந்து போக ...... விடும்வேலா 
அணிசுக நரம்பு வீணை குயில்புற வினங்கள் போல     அமளியில் களங்க ளோசை ...... வளர்மாது 
அரிமகள் மணங்கொ டேகி யெனதிட ரெரிந்து போக     அருணையின் விலங்கல் மேவு ...... பெருமாளே.

நெருங்கிச் சேர்ந்து அணையப்படும் மார்பகங்களை உடைய பெண்களின் வலையில் அலைபட்டு, மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து பொறிகளைக் கொண்ட உடல் மாய்ந்து போனவைகளுக்கு ஏதேனும் கணக்கு உண்டோ? உனது புகழைச் சொல்லும் வேதாகம நூல்களைக் கற்றறிந்து, இனிமேல் என்னுடைய உள்ளம், பொருள், உயிர் ஆகிய இம் மூன்றையும் ஒரு பொருட்டாகக் கருதும் அடியேனுடைய வருத்தங்கள் ஒழிய, உன்னைக் கூடுதலையே தமது உணர்ச்சியாகக் கொண்ட தேவயானை, வள்ளியுடன், விளங்குகின்ற ஆறு திரு முகங்களும், ரத்தின மணி கி¡£டங்களும் தம்முள் கொண்ட சூரிய ஒளி திக்குகளில் எல்லாம் கிரணங்களைப் பரவி வீச, கணக்கில்லாத கோடி முநிவர்கள் புகழ்ந்து வர மயிலின் மேல் மகிழ்ச்சியுடன் என்னை விரும்பி நீ வர வேண்டும். பருத்த மார்பகங்களை உடைய தேவ மாதர்கள் குயில், கிளி இவைகளின் கூட்டங்கள் போல அன்புடன் மகிழ்ந்து வேதங்களைக் கூறவும், பறையும், முரசும், கணக்கற்ற பேரிகை வகைகளும் முறைப்படி பேரொலி எழுப்பவும், இழிந்தவர்களாகிய அசுரர்களுடைய சேனைக்கடல் மடிந்து போகவும் செலுத்திய வேலாயுதனே, அழகிய கிளி, நரம்புள்ள வீணை, குயில், புறாக் கூட்டங்கள் போல படுக்கையில் கண்டத்து ஓசையை (புட்குரல் ஒலியை) எழுப்பும் மாது ஆகிய திருமாலின் மகளை (வள்ளியை) திருமணம் செய்து சென்று, என்னுடைய துன்பங்கள் எரிந்து அழிய திருஅருணை நகரில் உள்ள மலையில் (வள்ளியுடன்) வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 435 - திருவருணை 
ராகம் - ஸிந்து பைரவி ; தாளம் - அங்கதாளம் - 5 1/2 தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2

தனன தான தானான தனன தான தானான     தனன தான தானான ...... தனதான

புலைய னான மாவீனன் வினையி லேகு மாபாதன்     பொறையி லாத கோபீகன் ...... முழுமூடன் 
புகழி லாத தாமீகன் அறிவி லாத காபோதி     பொறிக ளோடி போய்வீழு ...... மதிசூதன் 
நிலையி லாத கோமாளி கொடையி லாத ஊதாரி     நெறியி லாத வேமாளி ...... குலபாதன் 
நினது தாளை நாடோறு மனதி லாசை வீடாமல்     நினையு மாறு நீமேவி ...... யருள்வாயே 
சிலையில் வாளி தானேவி யெதிரி ராவ ணார்தோள்கள்     சிதையு மாறு போராடி ...... யொருசீதை 
சிறையி லாம லேகூடி புவனி மீதி லேவீறு     திறமி யான மாமாயன் ...... மருகோனே 
அலைய மேரு மாசூரர் பொடிய தாக வேலேவி     அமர தாடி யேதோகை ...... மயிலேறி 
அதிக தேவ ரேசூழ உலக மீதி லேகூறும்     அருணை மீதி லேமேவு ...... பெருமாளே.

கீழ்மகனாக மிகவும் இழிந்தவன், தீவினைச் செயல்களிலேயே செல்லுகின்ற மகா பாதகன், பொறுமை என்பதே சிறிதும் இல்லாத கோப குணத்தினன் முழு முட்டாள், புகழில்லாத வெறும் டாம்பீகன், அறிவு என்பதே அற்ற கண்ணில்லாக் கபோதி, ஐம்பொறிகள் இழுக்கும் வழியிலே வீழும் பெரிய சூதுடையவன், ஒரு நிலையில் நிற்காத கோணங்கி, ஈகை என்பதே இல்லாத வீண் செலவுக்காரன், நல்லொழுக்கம் இல்லாத பேதை, நான் பிறந்த குலத்தையே பாவத்துக்கு ஆளாக்குபவன், இத்தகைய நான் உன் திருவடிகளையே தினமும் மனதில் ஆசை அழியாமல் நினைக்கும்வண்ணம் நீ என் உள்ளத்திலிருந்து அருள் புரிவாயாக. வில்லினின்றும் அம்பைச் செலுத்தி பகைவன் ராவணனுடைய தோள்கள் அறுபடும்படிப் போரிட்டு, ஒப்பற்ற சீதையைச் சிறையிலிருந்து விடுவித்து இவ்வுலகிலேயே மிக்க சாமர்த்தியசாலியாக விளங்கிய ராமனாக வந்த மகா மாயன் திருமாலின் மருமகனே, மேரு மலை அலைச்சலுறவும், பெருஞ் சூரர் பொடிபடும்படியாகவும் வேலினைச் செலுத்தி போர் புரிந்து, கலாப மயில் மீதில் நிரம்ப தேவர்கள் புடை சூழ, உலகில் புகழ்ந்து பேசப்படும் திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 436 - திருவருணை 
ராகம் -...; தாளம் -

தானனத் தத்ததனத் தானனத் தத்ததனத்     தானனத் தத்ததனத் ...... தத்த தனதான

போககற் பக்கடவுட் பூருகத் தைப்புயலைப்     பாரியைப் பொற்குவையுச் ...... சிப்பொ ழுதிலீயும் 
போதுடைப் புத்திரரைப் போலவொப் பிட்டுலகத்     தோரைமெச் சிப்பிரியப் ...... பட்டு மிடிபோகத் 
த்யாகமெத் தத்தருதற் காசுநற் சித்திரவித்     தாரமுட் பட்டதிருட் ...... டுக்க விகள்பாடித் 
தேடியிட் டப்படுபொற் பாவையர்க் கிட்டவர்கட்     சேல்வலைப் பட்டடிமைப் ...... பட்டு விடலாமோ 
ஆகமப் பத்தருமற் றாரணச் சுத்தருமுற்     றாதரிக் கைக்கருணைத் ...... துப்பு மதில்சூழும் 
ஆடகச் சித்ரமணிக் கோபுரத் துத்தரதிக்     காகவெற் றிக்கலபக் ...... கற்கி யமர்வோனே 
தோகையைப் பெற்றஇடப் பாகரொற் றைப்பகழித்     தூணிமுட் டச்சுவறத் ...... திக்கி லெழுபாரச் 
சோதிவெற் பெட்டுமுதிர்த் தூளிதப் பட்டமிழச்     சூரனைப் பட்டுருவத் ...... தொட்ட பெருமாளே.

விருப்பமான போகத்தை அளிக்கும் கற்பகமாகிய தெய்வ மரத்தையும், மேகத்தையும், பாரி வள்ளலையும், பொன் குவியலை உச்சி வேளையில் கொடுத்து வந்த தெய்வ மலரை வைத்திருந்த பிள்ளை (கர்ணனையும்) நிகர்ப்பாய் நீ என்று உவமை கூறி ஒப்பிட்டு, உலக மக்களை மெச்சி, அவர்கள் மீது அன்பைக் காட்டி, என் தரித்திரம் ஒழியும் பொருட்டு, கொடை பெரிதாக அவர்கள் தருவதற்காக, ஆசு கவிகள், நல்ல சித்திரக் கவிகள், வித்தாரக் கவிகள்* ஆகிய திருட்டுக் கவிதைகள் அவர்கள் மீது பாடி, அங்ஙனம் பொருள் தேடி, பிடித்தமான அழகிய மாதர்களுக்குத் தந்து, அவர்களுடைய சேல் மீன் போன்ற கண் வலையில் பட்டு நான் அடிமைப்பட்டு விடலாமோ? ஆகமங்களைக் கற்ற பக்தர்களும், வேதங்களைப் பயின்ற பரிசுத்தர்களும் ஒருங்கு கூடி விரும்பிப் பணி செய்ய, திருஅண்ணாமலையில் பொலிவுள்ள மதில்கள் சூழும் பொன் மயமான விசித்திரமான அழகிய கோபுரத்தின் வடக்குப் பக்கத்தில், வெற்றி விளங்கும் தோகைக் குதிரையாகிய மயில் மீது வீற்றிருப்பவனே, மயில் போன்ற பார்வதியை இடப் பாகத்தில் கொண்ட சிவ பெருமானுக்கு (திரிபுர சம்ஹாரத்தின் போது) ஒரு அம்பாயிருந்த திருமாலின் அம்பறாத்தூணியாகிய கடல் அடியோடு வற்றும்படியும், திசைகளில் எழுந்துள்ள கனமான, ஒளி வீசும் எட்டு மலைகளும் உதிர்ந்து தூளாகி அமிழும்படியும், சூரன் மீது பட்டு உருவும்படியும் வேலைச் செலுத்திய பெருமாளே. 
* தமிழ்க் கவிதைகள் நான்கு வகைப்படும்:ஆசு - எதுகை மோனையுடன் கூடியது,மதுரம் - இனிமை வாய்ந்தது,சித்திரம் - கற்பனையும் அழகும் மிக்கது,வித்தாரம் - வர்ணனை மிக்கது.

பாடல் 437 - திருவருணை 
ராகம் - ...; தாளம் -

தான தனத்தத் தனத்த தத்தன     தான தனத்தத் தனத்த தத்தன          தான தனத்தத் தனத்த தத்தன ...... தனதான

மானை விடத்தைத் தடத்தி னிற்கயல்     மீனை நிரப்பிக் குனித்து விட்டணை          வாளி யைவட்டச் சமுத்தி ரத்தினை ...... வடிவேலை 
வாளை வனத்துற் பலத்தி னைச்செல     மீனை விழிக்கொப் பெனப்பி டித்தவர்          மாய வலைப்பட் டிலைத்து டக்குழல் ...... மணநாறும் 
ஊன விடத்தைச் சடக்கெ னக்கொழு     வூறு முபத்தக் கருத்த டத்தினை          யூது பிணத்தைக் குணத்ர யத்தொடு ...... தடுமாறும் 
ஊச லைநித்தத் த்வமற்ற செத்தையு     பாதி யையொப்பித் துனிப்ப வத்தற          வோகை செலுத்திப் ப்ரமிக்கு மிப்ரமை ...... தெளியாதோ 
சான கிகற்புத் தனைச்சு டத்தன     சோக வனத்திற் சிறைப்ப டுத்திய          தானை யரக்கற் குலத்த ரத்தனை ...... வருமாளச் 
சாலை மரத்துப் புறத்தொ ளித்தடல்     வாலி யுரத்திற் சரத்தை விட்டொரு          தாரை தனைச்சுக் ரிவற்க ளித்தவன் ...... மருகோனே 
சோனை மிகுத்துத் திரட்பு னத்தினி     லானை மதத்துக் கிடக்கு மற்புத          சோண கிரிச்சுத் தர்பெற்ற கொற்றவ ...... மணிநீபத் 
தோள்கொ டுசக்ரப் பொருப்பி னைப்பொடி     யாக நெருக்கிச் செருக்க ளத்தெதிர்          சூர னைவெட்டித் துணித்த டக்கிய ...... பெருமாளே.

மானையும், விஷத்தையும், குளத்தினில் நிரப்பப்பட்ட கயல் மீனையும், (வில்லை) வளைத்துச் செலுத்தி அணையும்படி செய்கின்ற அம்பையும், வட்டமாக வளைந்துள்ள கடலையும், கூர்மையான வேலையும், வாளையும், நீரில் மலர்கின்ற செங்கழுநீரையும், சேல் மீனையும் நிகர் என்று (அவர்களின் கண்களுக்கு) உவமையாகச் சொல்லி, அந்த விலைமாதர்களின் மாய வலையில் வசப்பட்டு, அரசிலை போன்றதும், சூதகமாம் துர் நாற்றம் நாறும் ஈனமான இடத்தை, வேகமாகக் கொழுப்பு ஊறுகின்ற ஜன்மேந்திரியமான பெண் குறியாகிய கரு உண்டாகும் இடத்தினை ஆசைப்பட்டு, உடல் வீங்கிப் பிணமாவதை, (ஸத்வம், தாமசம், ராஜதம் என்ற) முக்குணங்களோடு தடுமாறுகின்ற, கெட்டழியும் பொருளாகிய உடலை, நிலை பேறு இல்லாத செத்தை போன்ற ஒரு வேதனையை அலங்கரித்து எப்போதும் காமத்தை நினைத்து, பிறப்பில் மிகவும் மகிழ்ச்சியைக் காட்டி மயங்குகின்ற இம்மயக்கம் தெளியாதோ? சீதையின் கற்பு தன்னைச் சுட, தனது அசோக வனத்தில் சிறையில் வைத்த சேனைகளைக் கொண்ட அரக்கனாகிய ராவணனுடைய குலத்தைச் சேர்ந்தவர்கள் அத்தனை பேரும் இறந்தொழியச் செய்தவனும், சாலையில் இருந்த மரங்களின் புறத்தில் ஒளிந்திருந்து, வன்மை வாய்ந்த வாலியினுடைய மார்பில் அம்பை எய்து, ஒப்பற்ற தாரையை சுக்கி¡£வனுக்குக் கொடுத்தவனுமான ராமபிரானின் மருகனே, விடா மழை அதிகமாகப் பொழிய, செழித்த வயல்களில் யானைகள் மயங்கிக் கிடக்கும் அற்புதமான திருவண்ணாமலையில் பரிசுத்த மூர்த்தியாக விளங்கும் அருணாசலேசுரர் அருளிய வீரனே, கடப்ப மாலை அணிந்த தோள் கொண்டு சக்ரவளாக கிரியைப் பொடியாக்கி, நெருங்கி போர்க் களத்தில் எதிர்த்து வந்த சூரனை வெட்டித் துண்டாக்கி அடக்கிய பெருமாளே. 

பாடல் 438 - திருவருணை 
ராகம் - ....; தாளம் -

தனத்த தத்தன தானா தனதன     தனத்த தத்தன தானா தனதன          தனத்த தத்தன தானா தனதன ...... தந்ததான

முகத்து லக்கிக ளாசா ரவினிகள்     விலைச்சி றுக்கிகள் நேரா வசடிகள்          முழுச்ச மர்த்திகள் காமா விரகிகள் ...... முந்துசூது 
மொழிப்ப ரத்தைகள் காசா சையில்முலை     பலர்க்கும் விற்பவர் நானா வநுபவ          முயற்று பொட்டிகள் மோகா வலமுறு ...... கின்றமூடர் 
செகத்தி லெத்திகள் சார்வாய் மயகிகள்     திருட்டு மட்டைகள் மாயா சொருபிகள்          சிரித்து ருக்கிகள் ஆகா வெனநகை ...... சிந்தைமாயத் 
திரட்பொ றிச்சிகள் மாபா விகளப     கடத்த சட்டைகள் மூதே விகளொடு          திளைத்த லற்றிரு சீர்பா தமுமினி ...... யென்றுசேர்வேன் 
தொகுத்தொ குத்தொகு தோதோ தொகுதொகு     செகுச்செ குச்செகு சேசே செககண          தொகுத்தொ குத்தொகு தோதோ தொகுதொகு ...... தொந்ததீதோ 
துடுட்டு டுட்டுடு டூடூ டுடுடுடு     திகுத்தி குத்திகு தீதோ எனவொரு          துவக்க நிர்த்தன மாடா வுறைபவர் ...... தொணடர்பேணும் 
அகத்தி யப்பனு மால்வே தனும்அறம்     வளர்த்த கற்பக மாஞா லியுமகி          ழவுற்ற நித்தபி ரானே அருணையில் ...... நின்றகோவே 
அமர்க்க ளத்தொரு சூரே சனைவிழ     முறித்து ழக்கிய வானோர் குடிபுக          அமர்த்தி விட்டசு வாமீ அடியவர் ...... தம்பிரானே.

முகத்தை மினுக்குபவர். ஆசாரத்தில் குறை உள்ளவர்கள். (உடல் நலத்தை) விலைக்கு விற்கும் சிறுக்கிகள். (அன்பு) பொருந்துதல் இல்லாத மூடர்கள். முழு சாமர்த்தியம் வாய்ந்தவர்கள். காம லீலை புரியும் தந்திரசாலிகள். சூதான எண்ணம் முற்பட்டு நிற்கும் சொற்களை உடைய பொது மகளிர். காசின் மேல் உள்ள ஆசையால் மார்பினைப் பலருக்கும் விற்பவர்கள். பலவிதமான அனுபோக நுகர்ச்சிகளில் ஊக்கம் கொண்டுள்ள வேசிகள். காம மயக்கத்தால் துன்பம் அடையும் முட்டாள்கள். இப்பூமியில் வஞ்சிப்பவர்கள். நம் பக்கம் சார்ந்த நட்பினர் போலிருந்து மயக்குபவர்கள். திருட்டுத்தனம் கொண்ட பயனிலிகள். மாயையே ஒரு வடிவம் எடுத்து வந்தது போல் இருப்பவர்கள். தங்கள் சிரிப்பினால் மனதை உருக்குபவர்கள். ஆகா என்று பெரிதாகச் சிரித்து உள்ளத்தை மாய்க்கும் முற்றிய தந்திர சாலிகள். பெரிய பாவிகள். வஞ்சகம் கொண்டு புறக்கணிப்பவர்கள். (இத்தகைய) மூதேவிகளுடன் நெருங்கிக் கலத்தலை நீக்கி (உனது) இரண்டு அழகிய திருவடிகளை இனி எப்போது அடைவேன்? தொகுத்தொ குத்தொகு தோதோ தொகுதொகு செகுச்செ குச்செகு சேசே செககண தொகுத்தொ குத்தொகு தோதோ தொகுதொகு தொந்ததீதோ துடுட்டு டுட்டுடு டூடூ டுடுடுடு திகுத்து குத்திகு தீதோ இவ்வாறான தாள ஒத்துக்களுடன் ஒப்பற்றதாய்த் தொடங்கும் ஆடலை ஆடி வீற்றிருப்பவர். அடியார்கள் விரும்பும் (அகத்தியரால் பூஜிக்கப்பட்ட) சிவபெருமானும், திருமாலும், பிரமனும், (காஞ்சியில்) அறங்களை வளர்த்த கற்பக விருட்சம் போன்றவளும் (ஆகிய காமாட்சியும்), பூமியில் சிறப்பாகப் பூஜிக்கப் பட்டவளும் (ஆகிய பார்வதியும்) மகிழும்படி இருக்கும் அழிவில்லாத பெருமாளே, திருவண்ணாமலையில் எழுந்தருளும் தலைவனே, போர்க் களத்தில ஒப்பற்ற சூரர் தலைவனாகிய சூரபத்மன் (மாமரமாக வந்தபோது) விழும்படி முறித்து, மிதித்துக் கொன்று, தேவர்கள் பொன்னுலகுக்குக் குடியேறும்படி வாழவிட்ட சுவாமியே, அடியவரின் தம்பிரானே. 
இப்பாடலின் முதல் 12 வரிகள் வேசையரின் இயல்பை வருணிக்கின்றன.

பாடல் 439 - திருவருணை 
ராகம் - ...; தாளம் -

தான தத்ததன தான தத்ததன     தான தத்ததன தான தத்ததன          தான தத்ததன தான தத்ததன ...... தனதான

மேக மொத்தகுழ லார்சி லைப்புருவ     வாளி யொத்தவிழி யார்மு கக்கமல          மீது பொட்டிடழ கார்க ளத்திலணி ...... வடமாட 
மேரு வொத்தமுலை யார்ப ளப்பளென     மார்பு துத்திபுய வார்வ ளைக்கடகம்          வீறி டத்துவளு நூலொ டொத்தஇடை ...... யுடைமாதர் 
தோகை பக்ஷிநடை யார்ப தத்திலிடு     நூபு ரக்குரல்கள் பாட கத்துகில்கள்          சோர நற்றெருவு டேந டித்துமுலை ...... விலைகூறிச் 
சூத கச்சரச மோடெ யெத்திவரு     வோரை நத்திவிழி யால்ம ருட்டிமயல்          தூள்ம ருத்திடுயி ரேப றிப்பவர்க ...... ளுறவாமோ 
சேக ணச்செகண தோதி மித்திகுட     டாடு டுட்டமட டீகு தத்தொகுர்தி          தீத கத்திமித தோவு டுக்கைமணி ...... முரசோதை 
தேச முட்கவர ஆயி ரச்சிரமு     மூளி பட்டுமக மேரு வுக்கவுணர்          தீவு கெட்டுமுறை யோவெ னக்கதற ...... விடும்வேலா 
ஆக மத்திபல கார ணத்தியெனை     யீண சத்திஅரி ஆச னத்திசிவ          னாக முற்றசிவ காமி பத்தினியின் ...... முருகோனே 
ஆர ணற்குமறை தேடி யிட்டதிரு     மால்ம கட்சிறுமி மோக சித்ரவளி          ஆசை பற்றிஅரு ணாச லத்தின்மகிழ் ...... பெருமாளே.

மேகம் போல் கரிய கூந்தல் உடையவர்கள். வில்லைப் போல வளைந்த புருவம் உடையவர்கள். அம்பு போன்ற கண்கள் உடையவர். தாமரை போன்ற முகத்தில் பொட்டு அணிந்த அழகை உடையவர். கழுத்தில் அணிகின்ற மாலை அசைந்தாட மேரு மலை போன்ற மார்பகத்தை உடையவர்கள். பளபள என்று ஒளி தரும் மார்பில் தேமலும், கையில் வரிசையாயுள்ள வளையல்களும் கங்கணமும் விளங்க, துவள்கின்ற நூல் போன்ற நுண்ணிய இடை உடைய மாதர்கள். கலாபப் பட்சியாகிய மயிலை ஒத்த நடையினர். கால்களில் அணிந்த சிலம்புகளின் ஓசைகள் ஒலிக்க, உடல் மீதுள்ள ஆடைகள் நெகிழ, நல்ல வீதியின் வழியே நடனமாடி வந்து, தம் மார்பகங்களை விலைக்கு விற்று, வஞ்சகத்தோடு காமச் சேட்டைகளைக் காட்டி (ஆடவரை) மோசம் செய்து, தேடி வருபவர்களை விரும்பி, கண்களால் மயக்கி காம மயக்கம் தரும் தூள் மருந்தை உண்ணச் செய்து உயிரைப் பறிப்பவர்களாகிய விலைமாதர்களின் உறவு எனக்கு நல்லதாகுமோ? சேகணச் செகண தோதிமித் திகுட டாடு டுட்டமட டீகு தத்தொகுர்தி தீத கத்திமித தோ இவ்வாறான ஒலிகளை எழுப்பும் உடுக்கை, மணி, முரசு இவைகளின் ஆரவாரம் ஓயாமல் ஒலிக்க, நாடெல்லாம் அஞ்ச ஆதிசேஷனுடைய ஆயிரம் தலைகளும் மூளியாகி, பெரிய மேரு மலையும் சிதறுண்டு, அசுரர்கள் வாழும் தீவுகள் அழிந்து (யாவரும்) முறையோ என்று கதறும்படி செலுத்திய வேலனே, வேத ஆகமங்களுக்கு உரியவள், பல காரணங்களுக்கு மூலப் பொருளானவள், என்னைப் பெற்றெடுத்த சக்தி, சிம்மாசனம் கொண்டவள், சிவபெருமானுடைய உடலில் இடம் கொண்டுள்ள சிவகாமி (என்னும்) பத்தினி பெற்ற முருகனே, பிரமனுக்கு வேதத்தைத் தேடித் தந்த திருமாலின்* மகளாகிய சிறுமி, (உன் மீது) மோகம் கொண்ட அழகிய வள்ளி நாயகியின் ஆசை பூண்டு திருவண்ணாமலையில் மகிழ்ந்து வீற்றிருக்கும் பெருமாளே. 
* சோமுகன் என்னும் அசுரன் பிரமனிடமிருந்து மறை நூல்களைப் பிடுங்கிக் கடலுள் மறைந்தான். திருமால் பெரிய சேல் மீனாகிக் கடலுள் புகுந்து சோமுகனைக் கொன்று நூல்களை மீட்டார்.

பாடல் 440 - திருவருணை 
ராகம் - ...:; தாளம் -

தனதன தந்ததத்த தனதன தந்ததத்த     தனதன தந்ததத்த ...... தனதான

மொழியநி றங்கறுத்து மகரவி னங்கலக்கி     முடியவ ளைந்தரற்று ...... கடலாலும் 
முதிரவி டம்பரப்பி வடவைமு கந்தழற்குள்     முழுகியெ ழுந்திருக்கு ...... நிலவாலும் 
மழையள கந்தரித்த கொடியிடை வஞ்சியுற்ற     மயல்தணி யும்படிக்கு ...... நினைவாயே 
மரகத துங்கவெற்றி விகடந டங்கொள்சித்ர     மயிலினில் வந்துமுத்தி ...... தரவேணும் 
அழகிய மென்குறத்தி புளகித சந்தனத்தி     னமுதத னம்படைத்த ...... திருமார்பா 
அமரர்பு ரந்தனக்கு மழகிய செந்திலுக்கு     மருணைவ ளம்பதிக்கு ...... மிறையோனே 
எழுபுவ னம்பிழைக்க அசுரர்சி ரந்தெறிக்க     எழுசயி லந்தொளைத்த ...... சுடர்வேலா 
இரவிக ளந்தரத்தர் அரியர பங்கயத்த     ரிவர்கள்ப யந்தவிர்த்த ...... பெருமாளே.

யாவரும் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக நிறம் கருமையடைந்து, மகர மீன்களின் கூட்டத்தால் கலக்கப்பட்டு, கிடைக்கின்ற முழு இடத்தையும் வளைத்து ஆரவாரம் செய்யும் கடலாலும், (சந்திரனின் கலைகள்) வளர்ந்து, விஷத்தை எங்கும் பரப்பி, (யுக முடிவில் தீப் பிரளயமாக வரும்) வடவா முகாக்கினியை மொண்டு கொண்டும், நெருப்பில் மூழ்கியும் எழுந்துவரும் நிலவாலும், கார்மேகம் போன்ற கூந்தலைக் கொண்ட, வஞ்சிக்கொடி போன்ற இடையை உடைய என் மகள் அடைந்த விரக தாபம் தணியும்படிக்கு நீ நினைந்து, பச்சை நிறம், தூய்மை, வெற்றி இவைகளைக் கொண்டதாகவும், அழகுள்ள நடனம் கொண்டதாகவும் உள்ள அலங்கார மயில் மீது வந்து அவளுக்கு முக்தியைத் தரவேண்டும். அழகிய மென்மை வாய்ந்த குறத்தி வள்ளியின் புளகம் கொண்டதும், சந்தனமும் அமுதமும் பொதிந்ததுமான மார்பகத்தை அணைந்துள்ள திருமார்பனே, தேவர்களின் ஊராகிய அமராவதியிலும், அழகிய திருச்செந்தூரிலும், திருவருணை என்ற வளமான தலத்திலும் தங்கும் இறைவனே, ஏழு உலகங்களும் பிழைக்க, அசுரர்களின் தலைகள் தெறிக்கும்படியாக ஏழு மலைகளையும் தொளைத்த ஒளி வேலனே, ஆதித்தர்கள் (அதிதியின் புத்திரர்கள்), விண்ணுலகத்தவர், திருமால், ருத்திரன், தாமரை மீதமர்ந்த பிரமன் இவர்களது பயத்தை ஒழித்த பெருமாளே. 
இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் நாயகியின் நற்றாய் கூறுவதுபோல அமைந்தது.கடல், நிலவு முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.

பாடல் 441 - திருவருணை 
ராகம் - கெளரி மனோஹரி ; தாளம் - கண்டசாபு - 2 1/2

தனதான தத்ததன தனதான தத்ததன     தனதான தத்ததன ...... தனதான

வலிவாத பித்தமொடு களமாலை விப்புருதி     வறல்சூலை குட்டமொடு ...... குளிர்தாகம் 
மலிநீரி ழிச்சல்பெரு வயிறீளை கக்குகளை     வருநீர டைப்பினுடன் ...... வெகுகோடி 
சிலைநோய டைத்தவுடல் புவிமீதெ டுத்துழல்கை     தெளியாவெ னக்குமினி ...... முடியாதே 
சிவமார்தி ருப்புகழை எனுநாவி னிற்புகழ     சிவஞான சித்திதனை ...... யருள்வாயே 
தொலையாத பத்தியுள திருமால்க ளிக்கவொரு     சுடர்வீசு சக்ரமதை ...... யருள்ஞான 
துவர்வேணி யப்பன்மிகு சிவகாமி கர்த்தன்மிகு     சுகவாரி சித்தனருள் ...... முருகோனே 
அலைசூரன் வெற்புமரி முகனானை வத்திரனொ     டசுராரி றக்கவிடு ...... மழல்வேலா 
அமுதாச னத்திகுற மடவாள்க ரிப்பெணொடும்     அருணா சலத்திலுறை ...... பெருமாளே.

வலிப்பு நோய், பித்த நோய், கண்டமாலை நோய், சிலந்திப்புண், உடல் இளைப்பு, வயிற்று உளைவு, குஷ்டம், குளிர், தாகம், மிக்க நீரிழிவு, மகோதரம், கபம் கட்டுதல், வாந்தி, அயர்ச்சிதரும் மூத்திரத்தடை நோய் இவைகளுடன் வெகு கோடிக்கணக்கான சீறி எழும் நோய்களை அடைத்துள்ள இந்த உடலை, பூமியின் மீது எடுத்துத் திரிதல் தெளிந்த அறிவு இல்லாத எனக்கும் இனிமேல் முடியாது. மங்கலம் நிறைந்த உனது திருப்புகழை என் நாவாறப் புகழ்வதற்கு சிவஞான சித்தியை தந்தருள்வாயாக. நீங்காத பக்தியைக் கொண்ட திருமால் மகிழ, ஒப்பற்றதாய் ஒளி வீசும் சுதர்ஸன சக்கரத்தை அவருக்கு அருளிய ஞானமயமான பவள நிறச் சடையப்பன், புகழ்மிக்க சிவகாமியின் தலைவன், மிக்க சுக சாகரம் போன்ற சித்த மூர்த்தி சிவபிரான் அருளிய முருகனே, கடல், சூரன், கிரெளஞ்சமலை, சிங்கமுகன், ஆனைமுகனான தாரகாசுரனுடன் அசுரர்கள் யாவரும் இறக்கும்படிச் செய்த நெருப்பு வேலனே, அமுதமயமான பீடத்தினள் குறமகள் ஆகிய வள்ளியுடனும், யானை ஐராவதம் வளர்த்த பெண் தேவயானையுடனும் திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 442 - திருவருணை 
ராகம் - ...; தாளம் -

தனதன தானாதன தனதன தானாதன     தனதன தானாதன ...... தனதான

விடுமத வேள்வாளியின் விசைபெறு மாலாகல     விழிகொடு வாபோவென ...... வுரையாடும் 
விரகுட னூறாயிர மனமுடை மாபாவிகள்     ம்ருகமத கோலாகல ...... முலைதோய 
அடையவு மாசாபர வசமுறு கோமாளியை     அவனியு மாகாசமும் ...... வசைபேசும் 
அசடஅ நாசாரனை அவலனை ஆபாசனை     அடியவ ரோடாள்வது ...... மொருநாளே 
வடகுல கோபாலர்த மொருபதி னாறாயிரம்     வனிதையர் தோள்தோய்தரு ...... மபிராம 
மரகத நாராயணன் மருமக சோணாசல     மகிபச தாகாலமு ...... மிளையோனே 
உடுபதி சாயாபதி சுரபதி மாயாதுற     உலகுய வாரார்கலி ...... வறிதாக 
உயரிய மாநாகமு நிருதரு நீறாய்விழ     ஒருதனி வேலேவிய ...... பெருமாளே.

செருக்கு உள்ள மன்மதன் செலுத்தும் அம்பு போல வேகம் பெற்றுள்ள, ஆலகால விஷம் போன்ற கண்களைக் கொண்டு, வா என்றும் போ என்றும் பேசுகின்ற சாமர்த்தியத்துடன் நூறாயிரக் கணக்கான மனத்தை உடைய பெரிய பாவிகளான விலைமாதரின், கஸ்தூரி அணிந்துள்ள ஆடம்பரமான மார்பகங்களை அணைந்து சேர ஆசைப் பிரமை பூண்ட கோணங்கியை, மண்ணுள்ளோரும், விண்ணுள்ளோரும் பழிப்புரை பேசும் முட்டாளான துராசாரனை, பயனற்றவனை, அசுத்தனை, உனது அடியார்களோடு ஆண்டருளுவதும் ஒரு நாள் ஆகுமோ? வடக்கே கோபாலர் குலத்தவரான இடையர்களின் ஒரு பதினாயிரம் மாதர்களது தோள்களை அணைந்த அழகிய பச்சை நிற நாராயணனுக்கு மருகனே, திருவண்ணாமலைக்கு அரசே, என்றும் இளமையாக இருப்பவனே, நட்சத்திரங்களுக்குத் தலைவனான சந்திரனும், சாயா தேவிக்குக் கணவனாகிய சூரியனும், தேவர்கள் தலைவனான இந்திரனும் இறந்து படாமல் வாழ, உலகம் பிழைக்க, நீண்ட கடல் வற்றிப் போக, சிறந்த பெரிய கிரவுஞ்ச மலையும் அசுரர்களும் தூள்பட்டு விழ, ஒப்பற்ற வேலைச் செலுத்திய பெருமாளே. 

பாடல் 443 - திருவருணை 
ராகம் - ஆஹிரி ...; தாளம் - அங்கதாளம் - 14 1/2 தகிடதகதிமி-3 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2 தக-1, தகிடதகதிமி-3 1/2, தகிடதகதிமி-3 1/2

தனன தானன தனன தானனா     தனன தானனம் ...... தனதான

விதிய தாகவெ பருவ மாதரார்     விரகி லேமனந் ...... தடுமாறி 
விவர மானதொ ரறிவு மாறியே     வினையி லேஅலைந் ...... திடுமூடன் 
முதிய மாதமி ழிசைய தாகவே     மொழிசெய் தேநினைந் ...... திடுமாறு 
முறைமை யாகநி னடிகள் மேவவே     முனிவு தீரவந் ...... தருள்வாயே 
சதிய தாகிய அசுரர் மாமுடீ     தரணி மீதுகுஞ் ...... சமராடிச் 
சகல லோகமும் வலம தாகியே     தழைய வேவருங் ...... குமரேசா 
அதிக வானவர் கவரி வீசவே     அரிய கோபுரந் ...... தனில்மேவி 
அருணை மீதிலெ மயிலி லேறியே     அழக தாய்வரும் ...... பெருமாளே.

விதி ஆட்டுவிப்பதால் இளமை வாய்ந்த பெண்களின் தந்திரச் செயல்களில் மனம் தடுமாற்றம் அடைந்து, தெளிவுள்ளதான ஓர் அறிவும் கெட்டுப்போய் வினை வசப்பட்டு அலைச்சலுறும் முட்டாள் ஆகிய நான், பழமையும் சிறப்பும் வாய்ந்த தமிழ்ப் பாக்களை இசையுடனே சாகித்யப்படுத்திப் பாட நினைந்திடும்படி, முறைமைப்படி உனது திருவடிகளை அடையுமாறு, உனது கோபம் தீர்ந்து வந்து அருள் புரிவாயாக. வஞ்சனை கூடிய அசுரர்களுடைய பெரிய முடிகள் பூமியில் சிந்தும்படி போர் செய்து, எல்லா உலகங்களும் (மயிலின் மீது) வலமாக, (அவ்வுலகங்கள்) நலமுறும்படியாக வரும் குமரேசனே, நிரம்ப தேவர்கள் வெண்சாமரம் வீச, அருமை வாய்ந்த கோபுரத்தில் வீற்றிருந்து, திருவண்ணாமலையில் மயில் மீது ஏறி அழகுடன் வரும் பெருமாளே. 

பாடல் 444 - திருவருணை 
ராகம் - ...; தாளம் -

தந்தத் தனதன தந்தத் தனதன  தந்தத் தனதன தந்தத் தனதன    தனத்த தனதன தனத்த தனதன      தனத்த தனதன தனத்த தனதனதந்தத் தனதன தந்தத் தனதன  தந்தத் தனதன தந்தத் தனதன    தனத்த தனதன தனத்த தனதன      தனத்த தனதன தனத்த தனதனதந்தத் தனதன தந்தத் தனதன  தந்தத் தனதன தந்தத் தனதன    தனத்த தனதன தனத்த தனதன      தனத்த தனதன தனத்த தனதன ...... தனதான

விந்துப் புளகித இன்புற் றுருகிட  சிந்திக் கருவினி லுண்பச் சிறுதுளி    விரித்த கமலமெல் தரித்து ளொருசுழி      யிரத்த குளிகையொ டுதித்து வளர்மதி விண்டுற் றருள்பதி கண்டுற் றருள்கொடு  மிண்டிச் செயலினி ரம்பித் துருவொடு    மெழுக்கி லுருவென வலித்து எழுமதி      கழித்து வயிர்குட முகுப்ப வொருபதில் விஞ்சைச் செயல்கொடு கஞ்சச் சலவழி  வந்துப் புவிமிசை பண்டைச் செயல்கொடு    விழுப்பொ டுடல்தலை அழுக்கு மலமொடு      கவிழ்த்து விழுதழு துகுப்ப அனைவரு ...... மருள்கூர 
மென்பற் றுருகிமு கந்திட் டனைமுலை  யுண்டித் தரகொடு வுண்கிச் சொலிவளர்    வளத்தொ டளைமல சலத்தொ டுழைகிடை      துடித்து தவழ்நடை வளர்த்தி யெனதகு வெண்டைப் பரிபுர தண்டைச் சரவட  முங்கட் டியல்முடி பண்பித் தியல்கொடு    விதித்த முறைபடி படித்து மயல்கொள      தெருக்க ளினில்வரு வியப்ப இளமுலை விந்தைக் கயல்விழி கொண்டற் குழல்மதி  துண்டக் கரவளை கொஞ்சக் குயில்மொழி    விடுப்ப துதைகலை நெகிழ்த்தி மயிலென      நடித்த வர்கள்மயல் பிடித்தி டவர்வரு ...... வழியேபோய்ச் 
சந்தித் துறவொடு பஞ்சிட் டணைமிசை  கொஞ்சிப் பலபல விஞ்சைச் சரசமொ    டணைத்து மலரிதழ் கடித்து இருகர      மடர்த்த குவிமுலை யழுத்தி யுரமிடர் சங்குத் தொனியொடு பொங்கக் குழல்மலர்  சிந்தக் கொடியிடை தங்கிச் சுழலிட    சரத்தொ டிகள்வெயி லெறிப்ப மதிநுதல்      வியர்ப்ப பரிபுர மொலிப்ப எழுமத சம்பத் திதுசெய லின்பத் திருள்கொடு  வம்பிற் பொருள்கள்வ ழங்கிற் றிதுபினை    சலித்து வெகுதுய ரிளைப்பொ டுடல்பிணி      பிடித்தி டனைவரும் நகைப்ப கருமயிர் ...... நரைமேவித் 
தன்கைத் தடிகொடு குந்திக் கவியென  உந்திக் கசனம றந்திட் டுளமிக    சலித்து வுடல்சல மிகுத்து மதிசெவி      விழிப்பு மறைபட கிடத்தி மனையவள் சம்பத் துறைமுறை யண்டைக் கொளுகையில்  சண்டக் கருநம னண்டிக் கொளுகயி    றெடுத்து விசைகொடு பிடித்து வுயிர்தனை      பதைப்ப தனிவழி யடித்து கொடுசெல சந்தித் தவரவர் பங்குக் கழுதுஇ  ரங்கப் பிணமெடு மென்றிட் டறைபறை    தடிப்ப சுடலையி லிறக்கி விறகொடு      கொளுத்தி யொருபிடி பொடிக்கு மிலையெனு ...... முடலாமோ 
திந்தித் திமிதிமி திந்தித் திமிதிமி  திந்தித் திமிதிமி திந்தித் திமிதிமி    திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி      திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி என்பத் துடிகள்த வுண்டைக் கிடுபிடி  பம்பைச் சலிகைகள் சங்கப் பறைவளை    திகுர்த்த திகுதிகு டுடுட்டு டுடுடுடு      டிடிக்கு நிகரென வுடுக்கை முரசொடு செம்பொற் குடமுழ வுந்தப் புடன்மணி  பொங்கச் சுரர்மலர் சிந்தப் பதமிசை    செழித்த மறைசிலர் துதிப்ப முநிவர்கள்      களித்து வகைமனி முழக்க அசுரர்கள் ...... களமீதே 
சிந்திக் குருதிக ளண்டச் சுவரகம்  ரம்பக் கிரியொடு பொங்கிப் பெருகியெ    சிவப்ப அதில்கரி மதர்த்த புரவிகள்      சிரத்தொ டிரதமு மிதப்ப நிணமொடு செம்புட் கழுகுக ளுண்பத் தலைகள்த  தும்பக் கருடன டங்கொட் டிடகொடி    மறைப்ப நரிகண மிகுப்ப குறளிகள்      நடிக்க இருள்மலை கொளுத்தி யலைகடல் செம்பொற் பவளமு டங்கிக் கமர்விட  வெந்திட் டிகமலை விண்டுத் துகள்பட    சிமக்கு முரகனு முழக்கி விடபட      மடைத்த சதமுடி நடுக்கி யலைபட ...... விடும்வேலா 
தொந்தத் தொகுகுட என்பக் கழலொலி  பொங்கப் பரிபுர செம்பொற் பதமணி    சுழற்றி நடமிடு நிருத்த ரயன்முடி      கரத்த ரரிகரி யுரித்த கடவுள்மெய் தொண்டர்க் கருள்பவர் வெந்தத் துகளணி  கங்கைப் பணிமதி கொன்றைச் சடையினர்    தொடுத்த மதனுரு பொடித்த விழியினர்      மிகுத்த புரமதை யெரித்த நகையினர் தும்பைத் தொடையினர் கண்டக் கறையினர்  தொந்திக் கடவுளை தந்திட் டவரிட    சுகத்தி மழுவுழை கரத்தி மரகத      நிறத்தி முயலக பதத்தி அருளிய ...... முருகோனே 
துண்டச் சசிநுதல் சம்பைக் கொடியிடை  ரம்பைக் கரசியெ னும்பற் றருமகள்    சுகிப்ப மணவறை களிக்க அணையறு      முகத்தொ டுறமயல் செழித்த திருபுய செம்பொற் கரகம லம்பத் திருதல  மம்பொற் சசியெழ சந்தப் பலபடை    செறித்த கதிர்முடி கடப்ப மலர்தொடை      சிறப்பொ டொருகுடில் மருத்து வனமகள் தொந்தப் புணர்செயல் கண்டுற் றடியெனி  டைஞ்சற் பொடிபட முன்புற் றருளயில்    தொடுத்து மிளநகை பரப்பி மயில்மிசை      நடித்து அழல்கிரி பதிக்குள் மருவிய ...... பெருமாளே.

சுக்கிலம் புளகாங்கிதத்தால் இன்ப நிலை அடைந்து, வெளி வந்து ஒழுக, கருவில் உட்கொள்ளப்பட்ட (அதன்) சிறிய துளியானது விரிந்துள்ள தாமரை போன்ற கருப்பையில் தங்கி, அங்கு உள்ள ஒரு சுழற்சியில் மாத்திரை அளவான சுரோணிதத்தோடு கலத்தலால் கரு உதித்து, மாதங்கள் ஏற ஏற, (வயிறு பெருத்து) வெளிப்பட, தந்தை இதைக் கண்டு அன்பு பூண, வலி, ஆட்டம், அசைவு நிரம்ப ஏற்பட்டு குற்றங்களுக்கு ஆளாகி, மெழுக்கில் வளர்த்த உருவம் போல உருவம் நன்கு பொருந்தி, ஏழு மாதங்கள் முற்றிய பின் வயிறு குடம் போல் வெளிக்காட்ட, ஒரு பத்தாவது மாதத்தில் மாய வித்தை போன்ற செயலால், தாமரை உருவமுள்ள சலத் துவார வழியே (குழந்தையாக) வெளி வந்து, பூமியின் மேல் பழைய வினைச் செயல்கள் உடன் தொடருதலால் அசுத்த நிலையோடு, உடல், தலை, அழுக்கு, மலம் முதலியவை மூட, கவிழ்ந்து வெளியே தள்ளப்பட்டு அழ, எல்லோரும் அது கண்டு மகிழ, ஆசை மிகக் கொள்ள, மெதுவாக பாசத்தினால் உள்ளம் உருகி தாங்கி எடுத்து, தாய் முலைப்பாலைத் தர அதனை உட்கொண்டு, மேனி பளபளத்து வளர்ந்து, வளப்பத்தோடு துழாவுகின்ற மலத்திலும், சலத்திலும் அளைந்து கிடந்து துடித்தும், தவழ்கின்ற நடையுடன் தக்கபடி வளர்கின்றது என்று சொல்லும்படி, வெண்டையம் என்னும் காலணியும், சிலம்பும், கிண்கிணியும், மணி வடமாகிய கழுத்தணியும் அணிவித்து, தக்கபடி தலைமயிரை வாரி சீர்திருத்தி, ஒழுக்கத்துடன் விதித்துள்ள முறைப்படி நூல்களைக் கற்று, (வயது ஏறுவதால்) காம மயக்கம் உண்டாக, வீதிகளில் வரும் வியக்கத் தக்க இளங் கொங்கைகள், விசித்திரமான மீன் போன்ற கண்கள், கருமேகம் போன்ற கரிய கூந்தல், சந்திரன் போன்ற முகம், கைவளையல்கள் ஒலிக்க, குயில் போன்ற சொற்கள் வெளிவர, நெருங்கிய ஆடையைத் தளர்த்தி, மயில் போல நடித்த அந்தப் பொது மகளிர் மேல் ஆசை கொண்டு, அம்மகளிர் வரும் வழியில் போய் அவர்களை நட்போடு சந்தித்து, பஞ்சிட்ட படுக்கையின் மேல் கொஞ்சி, பல விசித்திரமான காம லீலைகளுடன் அணைத்து, மலர் போல மென்மையான வாயிதழைக் கடித்து, இரண்டு கைகளால் நெருங்கிய குவிந்த தனத்தை மார்போடு அழுத்தி, கண்டத்திலிருந்து சங்குத் தொனி போலப் புட்குரல் எழும்ப, கூந்தலிலிருந்த பூக்கள் சிந்த, (வஞ்சிக் கொடி) போன்ற இடை நிதானமான சுழற்சி உற, மணி வடமும் தோள் வளையும் ஒளி வீச, பிறை போன்ற நெற்றி வியர்வு தர, காலில் சிலம்பு ஒலிக்க, உண்டாகும் காம மயக்கம் என்னும் செல்வத்தின் இந்தச் செயலால் சிற்றின்பமாகிய இருளைக் கொண்டு வீணாக பொருள்களை வாரி வழங்கிச் செலவிட்டும், இங்ஙனம் செலவழித்த பின்னர், மனம் சலித்துப் போய் மிக்க துயரமும் சோர்வும் கொண்டு, உடலும் நோய் வாய்ப்பட, எல்லோரும் பரிகசித்துச் சிரிக்க, கரிய மயிரும் நரைத்து வெளுத்து, தன்னுடைய கைத்தடியோடு குரங்கு போல் குந்தி நடந்து, வயிற்றுக்கு உணவையும் மறந்து போய், மனம் மிகவும் அலுத்து, உடலில் நீர் அதிகமாகச் சேர்ந்து, அறிவும், காதும், கண் பார்வையும் குறைவு பட்டு, படுக்கையில் கிடத்தி, மனைவியும், செல்வம் நிறைந்த சுற்றத்தார்களும் பக்கத்தில் வந்து சேரும் போது, கோபம் கொண்ட கரிய யமன் நெருங்கிவந்து (தான்) கொண்டு வந்த பாசக் கயிற்றை எடுத்து வேகத்துடன் பிடித்து இழுத்து உயிரை அது பதைக்கும்படி (திரும்பி வாராத) தனி வழியில் அடித்து கொண்டு செல்ல, (துக்கம் விசாரிக்கச்) சந்திப்பவர்கள் அவரவர் பங்குக்கு அழுதும், இரக்கம் காட்டியும், பிணத்தை எடுங்கள் என்று கூறி, ஒலிக்கின்ற பறைகள் மிக்கெழ சுடுகாட்டுக்குக் கொண்டு போய் இறக்கி, விறகு இட்டுக் கொளுத்தி, ஒரு பிடி சாம்பல் பொடி கூட இல்லை என்று சொல்லத் தக்க இந்தப் பிறவி எடுத்தல் நன்றோ? மேற்கண்ட தாளத்திற்கு ஏற்ப, உடுக்கைகள், பேருடுக்கை, வட்ட வடிவமான கிடுபிடி என்ற ஓர் வகை வாத்தியம், (முல்லை நிலங்களுக்கு உரித்தான) பம்பை என்னும் பறை, சல்லிகை என்னும் உத்தமத் தோற் கருவி, கூட்டமான பறை, சங்கு ஆகிய வாத்தியங்கள், திகுர்த்த திகுதிகு டுடுட்டு டுடுடுடு என்று இடி இடிப்பதைப் போல் ஒலிக்கும் உடுக்கை, முரசு, சிவந்த அழகிய குடமுழவு, தப்பு என்று ஒலிக்கும் பறை இவைகளோடு மணி முதலிய வாத்தியக் கருவிகள் பேரொலி எழுப்ப, தேவர்கள் திருவடி மீது பூக்களைச் சொரிய, செழிப்புள்ள மறை மொழிகளை சிலர் சொல்லித் துதிக்க, முனிவர்கள் மகிழ்ந்து முறையுடன் பொருந்தி அம்மறைகளை முழங்க, அசுரர்கள் போர்க் களத்தில் சிதறி விழுந்து, அவர்களுடைய இரத்தம் அருகிலிருந்த சுவர் அளவும் நிரம்ப மலை போலப் பொங்கி எழுந்துப் பெருகிச் சிவப்ப, அந்த இரத்த வெள்ளத்தில் யானைகளும், கொழுப்புள்ள குதிரைகளும், அறுபட்ட தலைகளும், தேர்களும் மிதக்க, நிணமொடு செம் புள் கழுகுகள் உண்பத் தலைகள் ததும்பக் கருடன் நடம் கொட்டிட கொடி மாமிசத்தைத் தின்று சிவந்த பறவைக் கூட்டமாகிய கழுகுகள் உண்ண, (உண்ட மயக்கத்தால்) அவைகளுடைய தலைகள் அசைய, கருடன்கள் நடனத்துடன் வட்டமிட, காக்கைகள் மறைந்து போய் நரிக் கூட்டங்கள் மிகச் சேர, (மாய வித்தை செய்யும்) பேய்கள் கூத்தாட, இருண்ட கிரவுஞ்ச மலையைக் கொளுத்தி அலை வீசும் கடல் (தன்னகத்தில் உள்ள) பவளங்கள் சுருங்கி பிளவு பட, வெந்து போய் இங்குள்ள மலைகள் நொறுங்கித் தூளாக, (பூமியைத்) தாங்கும் ஆதிசேஷனும் கூச்சலிட்டு, விஷமுள்ள படங்களைக் கொண்டுள்ள நூற்றுக் கணக்கான தனது முடிகள் நடுக்கம் கொண்டு அலைபடும்படியாகச் செலுத்திய வேலனே, தொந்தத் தொகுகுட என்ற ஒலிகளைச் செய்யும் கழலின் ஒலி மிக்கெழ, சிலம்பு அணிந்துள்ள செவ்விய அழகிய பாதத்தை அழகாகச் சுழற்றி நடனம் செய்யும் கூத்தப் பிரான் ஆகிய சிவ பெருமான், பிரமனது முடியைக் கையில் கொண்டவர், சிங்கத்தையும் யானையையும் தோல் உரித்த கடவுள், உண்மையான அடியார்களுக்கு அருள் புரிபவர், வெந்த நீறு அணிபவர், கங்கை, பாம்பு, சந்திரன், கொன்றை இவைகளை அணிந்த சடையைக் கொண்டவர், (மலர்ப் பாணங்களைத்) தொடுத்த மன்மதனின் உருவை எரித்த நெற்றிக் கண்ணினர், ஆணவம் மிக்கிருந்த திரிபுரங்களை எரித்த புன்னகை உடையவர், தும்பை மலர் மாலையை உடையவர், கழுத்தில் கரிய (ஆலகால விஷத்தின்) அடையாளத்தை உடையவர், தொந்திக் கணபதியைப் பெற்றவர், அத்தகைய சிவபெருமானின் இடது பாகத்தில் உறையும் சுகத்தியாகிய பார்வதி, மழுவாயுதத்தையும், மானையும் கையில் ஏந்திய பச்சை வடிவம் உடையவள், அரக்கன் முயலகனை மிதித்த திருவடியினள் ஆகிய உமை பெற்றருளிய முருகனே, பிறைத் துண்டம் போன்ற நெற்றியையும், மின்னல் கொடி போன்ற இடையையும் உடையவள், ரம்பைக்கும் அரசி என்னும்படியான, (ஐராவதம்) என்னும் யானை வளர்த்த மகளாகிய தேவயானை சுகம் பெற அவளுடைய மண அறையில் இன்பமாக அவளை அணைந்தவனும், ஆறு திருமுகங்களுடன் சேர்ந்து காதல் மிகக் கொண்ட அழகிய புயங்களை உடையவனே, செவ்விய அழகிய தாமரை போன்ற திருக்கரங்கள் பன்னிரண்டும், அழகிய ஒளி வீசும் சந்திரனைப் போல ஒளியைப் பரப்பி, அழகிய பல படைகள் (ஆயுதங்கள்) கைகளில் விளங்க, ஒளி மணிகள் பதிக்கப்பட்ட கி¡£டம், கடப்ப மலர் மாலை முதலிய சிறப்புக்களுடன், (தினைப்புனத்தில் இருந்த) ஒப்பற்ற பரணிலிருந்து மூலிகைகள் மிகுந்த செழிப்பான காட்டில் வாழும் வள்ளியுடன் சம்பந்தப்பட்டு, அவளுடன் இணைந்த செயலைப் புரிந்துகொண்டு, அடியேனுடைய துன்பங்கள் பொடியாக என் முன்னே வந்து காட்சி அளித்து, கருணைமயமான வேலைச் செலுத்தியும், புன்னகை புரிந்தும், மயில் மீது நடனம் செய்தும், நெருப்பு மலையாகிய திருவண்ணாமலை ஊருக்குள் வீற்றிருக்கும் பெருமாளே. 
திருப்புகழ்ச் சந்த அமைப்பிலேயே அதிக எண்ணிக்கை கொண்ட பாடல் இதுவாகும்.

பாடல் 445 - திருவருணை 
ராகம் - ...; தாளம் -

தானதன தானதன தானதன தானதன     தானதன தானதன ...... தனதான

வீறுபுழு கானபனி நீர்கள்மல தோயல்விடு     மேருகிரி யானகொடு ...... தனபார 
மீதுபுர ளாபரண சோதிவித மானநகை     மேகமனு காடுகட ...... லிருள்மேவி 
நாறுமலர் வாசமயிர் நூலிடைய தேதுவள     நாணமழி வார்களுட ...... னுறவாடி 
நாடியது வேகதியெ னாசுழலு மோடனைநின்     ஞானசிவ மானபத ...... மருள்வாயே 
கூறுமடி யார்கள்வினை நீறுபட வேஅரிய     கோலமயி லானபத ...... மருள்வோனே 
கூடஅர னோடுநட மாடரிய காளியருள்     கூருசிவ காமியுமை ...... யருள்பாலா 
ஆறுமுக மானநதி பாலகுற மாதுதன     மாரவிளை யாடிமண ...... மருள்வோனே 
ஆதிரகு ராமஜய மாலின்மரு காபெரிய     ஆதியரு ணாபுரியில் ...... பெருமாளே.

(மணம் வீசும்) புனுகு, பன்னீர் ஆகியவைகளை மலம் தோய்ந்துள்ள உடலின் மீது விட்டுப் பூசி, மேரு மலை போன்ற, தீமைக்கு இடமான, மார்பகப் பாரங்களின் மேல் புரள்கின்ற ஆபரணங்களின் ஒளியும், பல விதமான சிரிப்பும் கொண்டு, மேகம், பின்னும் காடு, கடல் ஆகியவைகளின் கறுப்பு நிறத்துடன் மணம் வீசும் மலர்களின் வாசனையைக் கொண்ட கூந்தலை விரித்து, நூல் போல் நுண்ணிய இடையை துவளச் செய்து, நாணம் என்பதே இல்லாது அழியும் விலைமாதர்களுடன் நட்பு பூண்டு, விரும்பி அந்த வேசையருடன் ஆடுவதே கதி என்று சுழல்கின்ற மூடனாகிய எனக்கு உனது சிவஞான மயமான திருவடியைத் தந்து அருள்வாயாக. உன்னைப் போற்றும் அடியார்களின் வினை தூளாகிப் போக, அருமையான அழகிய மயிலான பதவியை அருள்பவனே, சிவபெருமானோடு சேர்ந்து நடனம் ஆடும் அரிய காளியும் திருவருள் மிக்க சிவகாமியும் ஆன உமாதேவி அருளிய குழந்தையே, ஆறு முகங்கள் கொண்ட கங்கா நதியின் குழந்தையே, குறப் பெண் வள்ளியின் நெஞ்சம் குளிர விளையாடி அவளை மணம் புரிந்தவனே, ஆதி ரகுராமனும் வெற்றி பொருந்தியவனுமான திருமாலின் மருகனே, பெரிய திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
'கூறுமடியார்கள் வினை', 'ஆறுமுகமான', 'ஆதியருணாபுரியில்', என்ற சொற்றொடர்கள் 'ஏறுமயில் ஏறி' என்னும் பாடலை ஒத்திருப்பதைக் காணலாம்.

பாடல் 446 - திருக்காளத்தி 
ராகம் - கல்யாணி;தாளம் - அங்கதாளம் - 8 1/2 தகிடதக-2 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2

தனத்தா தத்தத் தனனா தந்தத்     தனத்தா தத்தத் தனனா தந்தத்          தனத்தா தத்தத் தனனா தந்தத் ...... தனதான

சரக்கே றித்தப் பதிவாழ் தொந்தப்     பரிக்கா யத்திற் பரிவோ டைந்துச்          சதிக்கா ரர்ப்புக் குலைமே விந்தச் ...... செயல்மேவிச் 
சலித்தே மெத்தச் சமுசா ரம்பொற்     சுகித்தே சுற்றத் தவரோ டின்பத்          தழைத்தே மெச்சத் தயவோ டிந்தக் ...... குடிபேணிக் 
குரக்கோ ணத்திற் கழுநா யுண்பக்     குழிக்கே வைத்துச் சவமாய் நந்திக்          குடிற்கே நத்திப் பழுதாய் மங்கப் ...... படுவேனைக் 
குறித்தே முத்திக் குமறா வின்பத்     தடத்தே பற்றிச் சகமா யம்பொய்க்          குலக்கால் வற்றச் சிவஞா னம்பொற் ...... கழல்தாராய் 
புரக்கா டற்றுப் பொடியாய் மங்கக்     கழைச்சா பத்தைச் சடலா னுங்கப்          புகைத்தீ பற்றப் புகலோ ரன்புற் ...... றருள்வோனே 
புடைத்தே யெட்டுத் திசையோ ரஞ்சத்     தனிக்கோ லத்துப் புகுசூர் மங்கப்          புகழ்ப்போர் சத்திக் கிரையா நந்தத் ...... தருள்வோனே 
திருக்கா னத்திற் பரிவோ டந்தக்     குறக்கோ லத்துச் செயலா ளஞ்சத்          திகழ்ச்சீ ரத்திக் கழல்வா வென்பப் ...... புணர்வோனே 
சிவப்பே றுக்குக் கடையேன் வந்துட்     புகச்சீர் வைத்துக் கொளுஞா னம்பொற்          றிருக்கா ளத்திப் பதிவாழ் கந்தப் ...... பெருமாளே.

பொருள் மிகுந்த இந்தப் பூமியில் வாழ்கின்ற சம்பந்தத்தை வகிக்கின்ற இவ்வுடலில் அன்பு பூண்டவர் போன்று உள்ள ஐந்து (பொறிகளாகிய) மோசக்காரர்கள் புகுந்து, அழிவுக்குக் காரணமான இத்தகைய தொழில்களை விரும்பி மேற்கொண்டு, சஞ்சலப்பட்டு, மிகவும் குடும்பம், செல்வம் ஆகியவற்றைச் சுகத்துடன் அனுபவித்து, சுற்றத்தாருடன் மகிழ்ச்சி மிகுந்து புகழும்படி அன்புடனே இந்த வாழ்விடத்தை விரும்பி, (இறுதியில்) பிளவுபட்ட கூர்மையான மூக்கை உடைய கழுகும், நாயும் உண்ணும்படி குழியில் வைத்துப் பிணமாய்க் கெடுகின்ற இந்தக் குடிசையாகிய உடலையே விரும்பி, பயனற்று அழிதல் உறுகின்ற என்னை, குறிக் கொண்டு, முக்திக்கு மாறுதல் இல்லாத இன்ப வழியைக் கைப்பற்றி, உலக மாயை, பொய், குலம், குடி என்கின்ற பற்றுக் கோடுகள் வற்றிப்போக, சிவ ஞானமாகிய உனது அழகிய திருவடியைத் தந்து அருளுக. திரி புரம் என்னும் காடு அழிந்து பொடியாய் மறையவும், கரும்பு வில்லை ஏந்தியவனும் அழகிய உடலை உடையவனுமான மன்மதன் அழியவும், புகை கொண்ட தீயை (நெற்றிக் கண்ணால்) பற்றச் செய்த அந்த வெற்றியாளராகிய சிவபிரானால் அன்பு கொண்டு அருளப்பட்டவனே, அடித்து வீழ்த்தியே எட்டுத் திக்குகளிலும் உள்ளோர்களும் பயப்படும்படி, தனிப்பட்ட உருவத்துடன் புகுந்த சூரன் அழியும்படி அவனை போரில் புகழ் கொண்ட சக்தி வேலாயுதத்துக்கு உணவாக மகிழ்ச்சியுடன் அருளியவனே, அழகிய வள்ளி மலைக் காட்டில் நீஅன்பு பூண்டு செல்ல, அந்தக் குறக்கோலம் பூண்டிருந்த இலக்குமி போன்ற வள்ளி (யானையைக் கண்டு) பயப்பட்டதும் விளங்கும் சீர் பெற்ற (இந்த) யானைக்கு பயந்து அழ வேண்டாம், வா என்று சொல்லி, அவளை அணைந்தவனே, சிவகதி அடையும் பேற்றுக்கு, கடையவனாகிய நான் வந்து உட்சேருவதற்கு வேண்டிய சிறப்பினைத் தந்து என்னை ஏற்றுக் கொள்வாயாக. ஞானமும் பொலிவும் அழகும் நிறைந்த திருக் காளத்தி* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே. 
* திருக்காளத்தி என்னும் 'காளஹஸ்தி' ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில் ரேணுகுண்டாவுக்கு வடகிழக்கில் 15 மைலில் உள்ளது. பஞ்சபூதத் தலங்களுள் ஒன்று.

பாடல் 447 - திருக்காளத்தி 
ராகம் - கானடா; தாளம் - சதுஸ்ர ஜம்பை - 7 - எடுப்பு - அதீதம், - விச்சில் 1/2 இடம்

தனத்தா தத்தத் ...... தனதான     தனத்தா தத்தத் ...... தனதான

சிரத்தா னத்திற் ...... பணியாதே     செகத்தோர் பற்றைக் ...... குறியாதே 
வருத்தா மற்றொப் ...... பிலதான     மலர்த்தாள் வைத்தெத் ...... தனையாள்வாய் 
நிருத்தா கர்த்தத் ...... துவநேசா     நினைத்தார் சித்தத் ...... துறைவோனே 
திருத்தாள் முத்தர்க் ...... கருள்வோனே     திருக்கா ளத்திப் ...... பெருமாளே.

தலையைக் கொண்டு உன்னைப் பணியாமல் இருக்கும் யான் உலகத்தோர்தம் பாசங்களில் நோக்கம் செலுத்தாமல் இருக்கும்படியாக என்னை வருத்தி, தமக்கு வேறு நிகர் இல்லாத மலர் போன்ற உன் திருவடிகளில் சேர்த்து, ஏமாற்றுக்காரனாகிய என்னை ஆண்டருள்வாயாக. நடனம் ஆட வல்லவனே, தலைமை ஸ்தானம் வகிக்கும் நேசனே, உன்னை நினைப்பவர்களது சித்தத்தில் வீற்றிருப்பவனே, உன் திருவடிகளை ஜீவன் முக்தர்களுக்கு* தந்தருள்பவனே, திருக்காளத்தியில் உள்ள பெருமாளே. 
* ஜீவன் முக்தர்கள் நான்கு வகைப்படுவர்:பிரம்ம வித்துக்கள் - ஞானம் அடைந்து உலகத்திற்காக உழைப்பவர்கள்,பிரம்ம வரர் - சமாதிநிலையில் இருந்து தாமே உணரும் ஞானிகள்,பிரம்ம வரியர் - சமாதியில் இருந்து பிறர் கலைக்க எழும் ஞானிகள்,பிரம்ம வரிஷ்டர் - சமாதியில் இருந்து கலைக்கப்பட முடியாத ஞானிகள்.

பாடல் 448 - திருக்காளத்தி 
ராகம் - ...; தாளம் -

தந்தன தானத் தனந்த தானன     தந்தன தானத் தனந்த தானன          தந்தன தானத் தனந்த தானன தனதான

பங்கய னார்பெற் றிடுஞ்ச ராசர     அண்டம தாயுற் றிருந்த பார்மிசை          பஞ்சவர் கூடித் திரண்ட தோர்நர ...... உருவாயே 
பந்தம தாகப் பிணிந்த ஆசையில்     இங்கித மாகத் திரிந்து மாதர்கள்          பண்பொழி சூதைக் கடந்தி டாதுழல் ...... படிறாயே 
சங்கட னாகித் தளர்ந்து நோய்வினை     வந்துடல் மூடக் கலங்கி டாமதி          தந்தடி யேனைப் புரந்தி டாயுன ...... தருளாலே 
சங்கரர் வாமத் திருந்த நூபுர     சுந்தரி யாதித் தருஞ்சு தாபத          தண்டைய னேகுக் குடம்ப தாகையின் ...... முருகோனே 
திங்களு லாவப் பணிந்த வேணியர்     பொங்கர வாடப் புனைந்த மார்பினர்          திண்சிலை சூலத் தழுந்து பாணியர் ...... நெடிதாழ்வார் 
சிந்துவி லேயுற் றெழுந்த காளவி     டங்கள மீதிற் சிறந்த சோதியர்          திண்புய மீதிற் றவழ்ந்து வீறிய ...... குருநாதா 
சிங்கம தாகத் திரிந்த மால்கெரு     வம்பொடி யாகப் பறந்து சீறிய          சிம்புள தாகச் சிறந்த காவென ...... வருகோமுன் 
செங்கதி ரோனைக் கடிந்த தீவினை     துஞ்சிட வேநற் றவஞ்செய் தேறிய          தென்கயி லாயத் தமர்ந்து வாழ்வருள் ...... பெருமாளே.

தாமரை மலரில் உள்ள பிரமன் படைத்துள்ள அசைவன, அசையாதனவாய் உள்ள அண்டமாகிப் பொருந்தி இருக்கும் இந்தப் பூமி மேல் ஐம்பூதங்களும் கூடி ஒன்றாகி ஒரு மனித உருவம் அமைந்து, பாசத்தால் கட்டுண்ட ஆசையால் இன்பமுற்றுத் திரிந்து, விலைமாதரின் நற்குணம் இல்லாத வஞ்சகச் சூழ்ச்சிகளைக் கடந்திடாமல் திரிகின்ற, பொய் கலந்தவனாய் வேதனைப் படுபவனாகிச் சோர்வடைந்து, பிணியும் வினையும் வந்து உடலை மூடி, அதனால், கலக்கம் அடையாத அறிவைத் தந்து அடியேனை உன்னுடைய திருவருளைப் பாலித்துக் காப்பாற்றுவாயாக. சிவபெருமானுடைய இடது பாகத்தில் உறையும் சிலம்பணிந்த அழகி ஆதி தேவி பெற்ற குழந்தையே, தண்டைகள் அணிந்த பாதங்களை உடையவனே, கோழிக் கொடியைக் கொண்ட முருகனே, நிலவு (சடையில்) உலாவும்படியாக அருளிய சடையை உடையவர், மேலெழுந்து பாம்பு ஆடும்படி அணிந்துள்ள மார்பை உடையவர், வலிமை வாய்ந்த (பினாகம் என்னும்) வில்லும், சூலாயுதமும் பொருந்தி உள்ள திருக்கையை உடையவர், நிரம்ப ஆழமாகவும் நீண்டும் உள்ள பாற்கடலில் இருந்து தோன்றிய கரிய ஆலகால விஷத்தை தனது கண்டத்தில் விளங்கும்படி வைத்த பேரொளியினர் (நீலகண்டர்), (அத்தகைய சிவபெருமானுடைய) வலிய தோள்களில் தவழ்ந்து பொலிந்த குருநாதனே, நரசிங்கமாக திரிந்த திருமாலின் அகந்தை* பொடிபட்டு அழியும்படியாக, பறந்து கோபித்த சரபப் பட்சியாய் (உரு எடுத்து) விளங்கி ஆகா என்று சப்தித்து வந்த பெருமானாகிய வீரபத்திரர் முன்பு, சூரியனை (தக்ஷயாகத்தின்போது) தண்டித்த தீவினை தோஷம் நீங்க**, நல்ல தவத்தைச் செய்து சிறப்படைந்த தக்ஷிண கயிலாயமாகிய திருக்காளத்தியில் வீற்றிருந்து அடியார்களுக்கு அருளும் பெருமாளே. 
* இரணியன் இரத்தத்தை உறிஞ்சிய பின் வெறி ஏறி திருமால் உக்கிரம் கொண்டார். சிவபெருமான் வீரபத்திரரை ஏவ, அவர் சரபப் பட்சி உருவம் எடுத்து அந்த நரசிங்கத்தை அடக்கினார்.** வீரபத்திரர் தக்ஷயாகத்தின்போது சிவனின் அம்சமாகக் கருதப்படும் சூரியனைத் தண்டித்த தீவினை நீங்க திருக்காளத்தியில் தவம் செய்தார் - திருக்காளத்திப் புராணம்.

பாடல் 449 - சிதம்பரம் 
ராகம் - கரஹரப்ரியா ; தாளம் - ஆதி - எடுப்பு - 1/2 இடம்

தனதனன தான தனதனன தான     தனதனன தானத் ...... தனதானா

கனகசபை மேவு மெனதுகுரு நாத     கருணைமுரு கேசப் ...... பெருமாள்காண் 
கனகநிற வேத னபயமிட மோது     கரகமல சோதிப் ...... பெருமாள்காண் 
வினவுமடி யாரை மருவிவிளை யாடு     விரகுரச மோகப் ...... பெருமாள்காண் 
விதிமுநிவர் தேவ ரருணகிரி நாதர்     விமலசர சோதிப் ...... பெருமாள்காண் 
சனகிமண வாளன் மருகனென வேத     சதமகிழ்கு மாரப் ...... பெருமாள்காண் 
சரணசிவ காமி யிரணகுல காரி     தருமுருக நாமப் ...... பெருமாள்காண் 
இனிதுவன மேவு மமிர்தகுற மாதொ     டியல்பரவு காதற் ...... பெருமாள்காண் 
இணையிலிப தோகை மதியின்மக ளோடு     மியல்புலியுர் வாழ்பொற் ...... பெருமாளே.

பொன்னம்பலமாகிய சிதம்பரத்தில் நடனம் செய்யும் எனது குருநாதராகிய கருணை நிறைந்த முருகேசப் பெருமாள் நீதான். பொன்னிறத்து பிரமன் அபயம் என்று உன்னைச் சரணடைய, தலையில் குட்டிய தாமரை போன்ற கையையுடைய ஜோதிப் பெருமாள் நீதான். உன்னை ஆய்ந்து துதிக்கும் அடியார்களிடம் இணைந்து விளையாடுகின்ற ஆர்வம், இன்பம், ஆசை அத்தனையும் உள்ள பெருமாள் நீதான். பிரமன், முனிவர்கள், தேவர்கள், அருணாசல ஈஸ்வரர், மற்றும் பரிசுத்தமான என் மூச்சுக்காற்றில் உள்ள ஜோதிப் பெருமாள் எல்லாமே நீதான். ஜானகியின் மணவாளன் ஸ்ரீராமனின் மருமகன் என்று நூற்றுக்கணக்கான வேதங்கள் சொல்லி மகிழும் குமாரப் பெருமாள் நீதான். அடைக்கலம் அளிக்கும் சிவகாமி, போர் செய்யும் அசுர குலத்தைச் சங்கரித்தவள், ஈன்றருளிய முருகன் என்னும் திருநாமம் உடைய பெருமாள் நீதான். இனிய வள்ளிமலைத் தினைப்புனத்தில் இருந்த அமுதை ஒத்த குறப்பெண் வள்ளியுடன் அன்பு விரிந்த காதல் கொண்ட பெருமாள் நீதான். ஒப்பற்ற யானை வளர்த்த மயில் போன்ற (தேவயானையாம்) அறிவு நிறைந்த பெண்ணுடன் தகுதிபெற்ற புலியூரில் (சிதம்பரத்தில்) வாழும் அழகிய பெருமாளே. 

பாடல் 450 - சிதம்பரம் 
ராகம் - ஜோன்புரி; தாளம் - ஆதி

தத்ததன தான தத்ததன தான     தத்ததன தான ...... தனதான

கைத்தருண சோதி யத்திமுக வேத     கற்பகச கோத்ரப் ...... பெருமாள்காண் 
கற்புசிவ காமி நித்யகலி யாணி     கத்தர்குரு நாதப் ...... பெருமாள்காண் 
வித்துருப ராம ருக்குமரு கான     வெற்றி யயில் பாணிப் ...... பெருமாள்காண் 
வெற்புளக டாக முட்குதிர வீசு     வெற்றிமயில் வாகப் ...... பெருமாள்காண் 
சித்ரமுக மாறு முத்துமணி மார்பு     திக்கினினி லாதப் ...... பெருமாள்காண் 
தித்திமிதி தீதெ னொத்திவிளை யாடு     சித்திரகு மாரப் ...... பெருமாள்காண் 
சுத்தவிர சூரர் பட்டுவிழ வேலை     தொட்டகவி ராஜப் ...... பெருமாள்காண் 
துப்புவளி யோடு மப்புலியுர் மேவு     சுத்தசிவ ஞானப் ...... பெருமாளே.

துதிக்கை உடைய, இளமை வாய்ந்த, ஒளிமயமான, யானைமுகமுடைய, வேதப்பொருளான கற்பக* விநாயகனின் இளைய சகோதரப் பெருமான் நீதான். கற்பரசி சிவகாமசுந்தரியும், நித்திய கல்யாணியுமான பார்வதியின் தலைவரான சிவனாரின் குருநாதப் பெருமான் நீதான். மழைத்துளி பெய்யும் மேகத்து வண்ணனான இராமருக்கு மருமகனாகி வெற்றி வேலாயுதத்தைக் கரத்தில் ஏந்திய பெருமான் நீதான். மலைகள் உள்ள அண்டகோளங்கள் அஞ்சும்படி தோகையை வீசும் வெற்றி மயிலை வாகனமாகக் கொண்ட பெருமான் நீதான். அழகிய முகங்கள் ஆறும், முத்துமாலைகள் அணிந்த மார்பும், வேறு எந்தத் திசையிலும் காணமுடியாத பேரழகுப் பெருமான் நீதான். தித்திமிதி தீது என தாளமிட்டு விளையாடுகின்ற அழகிய குமாரப்பெருமான் நீதான். சுத்த வீரனே, சூரர்கள் அழியும்படி வேலைச் செலுத்தியவனும், சிறந்த கவியரசனாகியவனும் ஆன பெருமான் நீதான். தூயவளான வள்ளியுடன் அந்தப் புலியூர் (சிதம்பரம்) தலத்தில் மேவி, சுத்த சிவஞான உருவான பெருமாளே. 
* சிதம்பரத்தில் மேற்கு கோபுரத்தின் வாயிலில் வீற்றிருக்கும் கணபதிக்கு கற்பக விநாயகர் எனப் பெயர்.

by Swathi   on 28 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.