LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- அருணகிரிநாதர் நூல்கள்

திருப்புகழ்-பாடல்-[451 -500]

பாடல் 451 - சிதம்பரம் 
ராகம் - ஆரபி ; தாளம் - அங்கதாளம் - 9 
தகதகிட-2 1/2, தகிட-1 1/2 
தகதிமி-2, தகதிமிதக-3
தனதனன தனன தந்தத் ...... தனதானா
     தனதனன தனன தந்தத் ...... தனதானா
இருவினையின் மதிம யங்கித் ...... திரியாதே
     எழுநரகி லுழலு நெஞ்சுற் ...... றலையாதே 
பரமகுரு அருள்நி னைந்திட் ...... டுணர்வாலே
     பரவுதரி சனையை யென்றெற் ...... கருள்வாயே 
தெரிதமிழை யுதவு சங்கப் ...... புலவோனே
     சிவனருளு முருக செம்பொற் ...... கழலோனே 
கருணைநெறி புரியு மன்பர்க் ...... கெளியோனே
     கனகசபை மருவு கந்தப் பெருமாளே.
நல்வினை, தீவினை என்ற இரண்டு வினைகளினால் என்னறிவு மயக்கமடைந்து அலைந்து திரியாமல், ஏழு நரகங்களிலும் கலங்கக்கூடிய நெஞ்சத்தைப் படைத்து நான் அலையாமல், சிறந்த குருவாகிய உன் அருளை நினைவில் வைத்து, ஞானத் தெளிவு பெற்று, போற்றுதற்குரிய உன் தரிசனக் காட்சியை என்றைக்கு எனக்கு அருளப்போகிறாய்? யாவரும் தெரிந்து மகிழும்படி தமிழை ஆராய்ந்து உதவிய சங்கப் புலவனாக* வந்தவனே, சிவபெருமான் பெற்றருளிய முருகனே, செம்பொன்னாலான வீரக் கழலை அணிந்தவனே, அருள் நெறியை அனுஷ்டிக்கும் உன் அன்பர்க்கு எளிமையானவனே, கனகசபையில்** வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே. 
* உக்கிரபாண்டியனாக முருகன் மதுரையில் அவதரித்து, சங்கப் புலவர்களுடன் தமிழை ஆராய்ந்து உதவிய செய்தி இங்கு குறிப்பிடப்படுகிறது.
** பஞ்ச சபைகளில் ஒன்று கனகசபை (பொன்னம்பலம்) - சிதம்பரம்.மற்ற சபைகள்: ரத்னசபை - திருவாலங்காடு, ரஜதசபை (வெள்ளியம்பலம்) - மதுரை, தாமிரசபை - திருநெல்வேலி, சித்திரசபை - திருக்குற்றாலம்.
பாடல் 452 - சிதம்பரம் 
ராகம் - வஸந்தா ; தாளம் - அங்கதாளம் - 7 1/2 
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தனன தனதன தானன தந்தத்
     தனன தனதன தானன தந்தத்
          தனன தனதன தானன தந்தத் ...... தனதான
குகனெ குருபர னேயென நெஞ்சிற்
     புகழ அருள்கொடு நாவினி லின்பக்
          குமுளி சிவவமு தூறுக வுந்திப் ...... பசியாறிக் 
கொடிய இருவினை மூலமும் வஞ்சக்
     கலிகள் பிணியிவை வேரொடு சிந்திக்
          குலைய நமசிவ யோமென கொஞ்சிக் ...... களிகூரப் 
பகலு மிரவுமி லாவெளி யின்புக்
     குறுகி யிணையிலி நாடக செம்பொற்
          பரம கதியிது வாமென சிந்தித் ...... தழகாகப் 
பவள மனதிரு மேனியு டன்பொற்
     சரண அடியவ ரார்மன வம்பொற்
          றருண சரண்மயி லேறியு னம்பொற் ...... கழல்தாராய் 
தகுட தகுதகு தாதக தந்தத்
     திகுட திகுதிகு தீதக தொந்தத்
          தடுடு டுடுடுடு டாடக டிங்குட் ...... டியல்தாளம் 
தபலை திமிலைகள் பூரிகை பம்பைக்
     கரடி தமருகம் வீணைகள் பொங்கத்
          தடிய ழனவுக மாருத சண்டச் ...... சமரேறிக் 
ககன மறைபட ஆடிய செம்புட்
     பசிகள் தணிவுற சூரர்கள் மங்கக்
          கடல்க ளெறிபட நாகமு மஞ்சத் ...... தொடும்வேலா 
கயிலை மலைதனி லாடிய தந்தைக்
     குருக மனமுன நாடியெ கொஞ்சிக்
          கனக சபைதனில் மேவிய கந்தப் ...... பெருமாளே.
குகனே, மேலான குரு மூர்த்தியே, என்று மனதார நான் புகழவும், உன் திருவருளின் துணைகொண்டு எனது உள் நாவில் இன்பத்தேன் குமிழி பொங்க, சிவ அமுது ஊறுவதால் வயிற்றுப் பசி ஆறி, பொல்லாத இருவினைகளின் மூலப் பகுதியும், கொடிய கேடுகள், நோய்கள் இவை அடியோடு தொலைந்து போகவும், நமசிவய ஓம் என்ற மந்திரத்தை அன்புடன் ஓதி மகிழ்ச்சி நிரம்பவும், பகலும் இரவும் இல்லாத வெளியில் இன்பத்தை அணுகி அடைந்து, ஒப்பிலாத (இறைவனுடைய) ஆனந்த நடனம் நிகழும் செவ்விய அழகிய பரம கதி இதுவேயாகும் என்று உணர்ந்து அழகிய நிலையைப் பெறவும், பவளம் போன்ற திருவுருவத்துடன் அழகிய திருவடியை (அடைந்த) அடியார்கள் பொருந்த உடன் வர, அழகிய பொலிவுள்ள, இளமை வாய்ந்த, அடைக்கலம் தர வல்ல, மயில் மீது ஏறி, உனது அழகிய பொன் அனைய திருவடியைத் தந்து அருளுக. தகுட தகுதகு தாதக தந்தத் திகுட திகுதிகு தீதக தொந்தத் தகுட தகுதகு தாதக தந்தத் திகுட திகுதிகு தீதக தொந்தத் தடுடு டுடுடுடு டாடக டிங்கு என்று ஒலிக்கும் தாளமும், தபலை என்ற மத்தள வகை, திமிலை என்ற பறைவகை, ஊது குழல், பம்பை, கரடி கத்துவது போன்ற பறைவகை, உடுக்கை, வீணைகள் இவை எல்லாம் பேரொலி எழுப்ப, கொல்லப்பட்ட பிணங்கள் சிதறி விழ, வாயு வேகத்துடன் கொடிய போர் செய்யப் புகுந்து, ஆகாயம் வந்து பந்தரிட்டது போலக் கூத்தாடும் செவ்விய பறவைகளின் (செங்கழுகுகளின்) பசிகள் அடங்கவும், சூரர்கள் அழியவும், கடல்கள் அலைபாயவும், அஷ்ட நாகங்களும் பயப்படவும் வேலைச் செலுத்தியவனே, கயிலாய மலையில் திரு நடனம் செய்யும் தந்தையாகிய சிவபெருமானுக்கு மனம் உருகுமாறு அவர் முன்பு விருப்பத்துடன் கொஞ்சி விளையாடி, சிதம்பரத்தில் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே. 
பாடல் 453 - சிதம்பரம் 
ராகம் - ...; தாளம் -
தந்தனத் தத்தன தந்தனத் தத்தன
     தந்தனத் தத்தன தந்தனத் தத்தன
          தந்தனத் தத்தன தந்தனத் தத்தன ...... தந்ததான
வண்டையொத் துக்கயல் கண்சுழற் றுப்புரு
     வஞ்சிலைக் குத்தொடு அம்பையொத் துத்தொடை
          வண்டுசுற் றுக்குழல் கொண்டலொத் துக்கமு ...... கென்பக்¡£வம் 
மந்தரத் தைக்கட பொங்கிபத் துப்பணை
     கொம்பையொத் துத்தன முந்துகுப் பத்தெரு
          வந்துஎத் திப்பொரு மங்கையர்க் கைப்பொரு ...... ளன்பினாலே 
கொண்டழைத் துத்தழு வுங்கைதட் டிற்பொருள்
     கொண்டுதெட் டிச்சர சம்புகழ்க் குக்குன
          குங்குழற் கிப்படி நொந்துகெட் டுக்குடில் ...... மங்குறாமல் 
கொண்டுசத் திக்கட லுண்டுகுப் பத்துனி
     னன்பருக் குச்செயல் தொண்டுபட் டுக்கமழ்
          குங்குமத் திற்சர ணம்பிடித் துக்கரை ...... யென்றுசேர்வேன் 
அண்டமிட் டிக்குட டிண்டிமிட் டிக்குகு
     டந்தகொட் டத்தகு டிங்குதொக் கத்தம
          டஞ்சகட் டைக்குண கொம்புடக் கைக்கிட ...... லென்பதாளம் 
அண்டமெட் டுத்திசை யும்பல்சர்ப் பத்திரள்
     கொண்டல்பட் டுக்கிரி யும்பொடித் துப்புல
          னஞ்சவித் துத்திர ளண்டமுட் டத்துகள் ...... வந்தசூரர் 
கண்டமற் றுக்குட லென்புநெக் குத்தச
     னங்கடித் துக்குடி லஞ்சிவப் பச்செநிர்
          கண்தெறிக் கத்தலை பந்தடித் துக்கையி ...... லங்குவேலால் 
கண்களிக் கக்கக னந்துளுக் கப்புக
     ழிந்திரற் குப்பதம் வந்தளித் துக்கன
          கம்பலத் திற்குற மங்கைபக் கத்துறை ...... தம்பிரானே.
வண்டைப் போல், கயல் மீன் அனைய கண் தன் சுழற்சியால் புருவமாகிய வில்லில் தொடுக்கப்பட்ட அம்பை நிகர்க்கவும், (அணிந்துள்ள) மாலையில் வண்டு சுற்றுகின்ற கூந்தல் மேகத்தை நிகர்க்கவும், கழுத்து கமுக மரம் என்று சொல்லும்படியும், மந்திரமலையையும் மதம் பொங்குகின்ற யானையின் பருத்த தந்தங்களையும் நிகர்த்து மார்பகங்கள் மின்னிட்டுக் கூம்ப, தெருவில் வந்து வஞ்சித்து சண்டை செய்யும் விலைமாதர்கள் தமது கையில் கிடைத்த பொருளின் பொருட்டுக் காட்டும் அன்பினால், (தமது வீட்டுக்குக்) கொண்டு போய், தழுவும் கைகளால் தட்டில் பொருளைப் பெற்றவுடன் வஞ்சனை எண்ணத்துடன் காம லீலைகளைச் செய்தும், புகழ்ந்தும் கொஞ்சியும் பேசுகின்ற, அடர்ந்த குழலை உடைய பொது மகளிரின் பொருட்டு இவ்வாறு மனம் கெட்டு, உடம்பு வாட்டம் அடையாமல், (தமது) ஆற்றலைக் கொண்டு கடலைக் குடித்து உமிழ்ந்து உன்னை அடுத்த உன்னுடைய அன்பரான அகத்தியருக்கு பணி செய்து தொண்டு ஆற்றி, நறு மணம் வீசும் செஞ்சாந்துள்ள திருவடிகளைப் பற்றி (முக்திக்) கரையை என்று அடைவேன்? அண்டங்களை நெருங்கி வளைய, டிண்டிமிட்டிக்கு இவ்வாறாக ஒலிகளை குடமுழ (கட) வாத்தியம் முழக்கம் செய்ய, தகுந்த டிங்கு என்னும் ஒலி ஒன்று கூட, தம்பட்டம் என்னும் பறை, சகண்டை (துந்துபி) என்னும் முரசு, சிறந்த ஊது கொம்பு, இடக்கை ஆகியவைகளுக்கு உதவியாக தாளம் ஒலிக்க, அண்டங்களும், எட்டு திசைகளும், (எட்டு) யானைகளும், எட்டு பாம்புகளும், மேகமும் குலைபட்டு, மலைகளும் பொடியாய், ஐந்து பொறிகளையும் கெடுத்து, திரண்ட அண்டங்களில் முழுமையும் தூசி உண்டாக, எதிர்த்து வந்த அசுரர்களின் கழுத்து அறுபட்டுப் போய், குடலும், எலும்பும் தளர்ச்சி உற்று, பற்களைக் கடித்து, தலை மயிர் (ரத்தத்தால்) சிவப்பாக, ரத்தம் கண்களினின்றும் வெளிப்பட்டுச் சிதற, (அசுரர்களின்) தலைகளைப் பந்து அடிப்பது போல் அடித்து, கையில் ஏந்திய வேலாயுதத்தால் கண் குளிர்ச்சி அடைய விண்ணுலகம் (இழந்த பொலிவை மீண்டும் வரப் பெற்று) செழிப்புற, (தன்னைப்) புகழ்ந்த இந்திரனுக்கு இந்திர பதவியை அருள் செய்து, பொன்னம்பலத்தில் குற மகள் வள்ளியம்மையின் பக்கத்தில் வீற்றிருக்கும் தம்பிரானே. 
பாடல் 454 - சிதம்பரம் 
ராகம் - ...; தாளம் -
தந்த தந்தனத் தான தந்தன
     தந்த தந்தனத் தான தந்தன
          தந்த தந்தனத் தான தந்தன ...... தந்ததான
கங்கு லின்குழற் கார்மு கஞ்சசி
     மஞ்ச ளின்புயத் தார்ச ரம்பெறு
          கண்கள் கொந்தளக் காது கொஞ்சுக ...... செம்பொனாரம் 
கந்த ரந்தரித் தாடு கொங்கைக
     ளும்ப லின்குவட் டாமெ னுங்கிரி
          கந்த முஞ்சிறுத் தேம லும்பட ...... சம்பைபோல 
அங்க மைந்திடைப் பாளி தங்கொடு
     குந்தி யின்குறைக் கால்ம றைந்திட
          அண்சி லம்பொலிப் பாட கஞ்சரி ...... கொஞ்சமேவும் 
அஞ்சு கங்குயிற் பூவை யின்குரல்
     அங்கை பொன்பறிக் கார பெண்களொ
          டண்டி மண்டையர்க் கூழி யஞ்செய்வ ...... தென்றுபோமோ 
சங்கு பொன்தவிற் காள முந்துரி
     யங்கள் துந்துமிக் காட திர்ந்திட
          சந்த செந்தமிழ்ப் பாணர் கொஞ்சிட ...... அண்டகோசம் 
சந்தி ரன்பதத் தோர்வ ணங்கிட
     இந்தி ரன்குலத் தார்பொ ழிந்திட
          தந்தி ரம்புயத் தார்பு கழ்ந்திட ...... வந்தசூரைச் 
செங்கை யுஞ்சிரத் தோடு பங்கெழ
     அந்த கன்புரத் தேற வஞ்சகர்
          செஞ்ச ரந்தொடுத் தேந டம்புரி ...... கந்தவேளே 
திங்க ளொண்முகக் காமர் கொண்டவன்
     கொங்கை மென்குறப் பாவை யுங்கொடு
          செம்பொ னம்பலத் தேசி றந்தருள் ...... தம்பிரானே.
இருண்ட மேகம் போன்று கறு நிறமான கூந்தலை உடையவர்கள். சந்திரன் போன்ற முகம் உடையவர்கள். மஞ்சள் விளங்கும் கை உடையவர்கள். அம்பு போன்ற கண்களை உடையவர்கள். தலை மயிற் சுருள் காதைக் கொஞ்சும்படி அமைந்தவர்கள். செம் பொன் மாலை கழுத்தில் அணிந்து, அசைந்தாடும் மார்பகங்கள் யானை போலும் திரட்சி கொண்டதைப் போன்ற மலையாய், அகில் நறு மணமும் சிறிய தேமலும் தோன்ற, மின்னல் போல இடையானது அங்கு அமையப் பெற்று, பட்டு ஆடை கொண்டு குதிக்கால் மறையும்படி உடுத்து, அடுத்துள்ள சிலம்பும், பாடகம் என்ற காலணியும், கை வளையுடன் (ஒத்து) ஒலிக்க உள்ளவர்களாய், கிளி, குயில், நாகணவாய்ப்புள் ஆகியவற்றின் குரலை உடையவர்களாய், அழகிய கையில் பொன்னை அபகரிக்கின்ற விலைமாதருடன் நெருங்கி, அத்தகைய வேசிகளுக்கு சேவக வேலை செய்வது என்றைக்குத் தொலையுமோ? சங்குகளும், அழகிய மேளங்களும், ஊது கொம்பும், முரசப் பறைகளும், பேரிகைகளும் கூட்டமாக அதிர்ச்சி செய்து ஒலிக்க, அழகிய செந்தமிழ்ப் பாடல்களைப் பாடவல்ல பாணர்கள் அருமையாக வாசிக்க, அண்டங்கள் எல்லாவற்றிலும் உள்ள அனைவரும் சந்திர மண்டலத்தில் உள்ளவர்களும் வணங்கவும், தேவர்கள் பூமாரி பொழியவும், யாழ் ஏந்தும் கையினரான கந்தருவர் போற்றவும், எதிர்த்து வந்த சூரனின் செவ்விய கைகளையும் தலையுடன் துண்டாகும்படி யமனுலகுக்கு வஞ்சகராகிய அசுரரர்கள் போய்ச் சேரும்படியாக சிறந்த அம்புகளைச் செலுத்தி நடனமாடிய கந்தப் பெருமானே, சந்திரனை ஒத்த ஒளி வீசும் அழகும் முகமும் உடையவளும், வலிய மார்பகங்களை உடைய மென்மை வாய்ந்தவளுமாகிய குறப் பெண் வள்ளியுடன் சிறந்த சிதம்பரத்தில் மேம்பட்டு அருளும் தம்பிரானே.
பாடல் 455 - சிதம்பரம் 
ராகம் - ...; தாளம் -
தந்த தந்தன தந்த தந்தன
     தந்த தந்தன தந்த தந்தன
          தந்த தந்தன தந்த தந்தன ...... தனதான
கொந்த ளம்புழு கெந்த வண்பனி
     ரம்ப சம்ப்ரம ணிந்த மந்தர
          கொங்கை வெண்கரி கொம்பி ணங்கிய ...... மடமாதர் 
கொந்த ணங்குழ லின்ப மஞ்சள
     ணிந்து சண்பக வஞ்சி ளங்கொடி
          கொஞ்சு பைங்கிளி யன்பெ னுங்குயில் ...... மயில்போலே 
வந்து பஞ்சணை யின்ப முங்கொடு
     கொங்கை யும்புய முந்த ழும்புற
          மஞ்சு வொண்கலை யுங்கு லைந்தவ ...... மயல்மேலாய் 
வஞ்சி னங்கள்தி ரண்டு கண்செவி
     யுஞ்சு கங்கள்தி ரும்பி முன்செய்த
          வஞ்சி னங்களு டன்கி டந்துட ...... லழிவேனோ 
தந்த னந்தன தந்த னந்தன
     திந்தி மிந்திமி திந்தி மிந்திமி
          சங்கு வெண்கல கொம்பு துந்துமி ...... பலபேரி 
சஞ்ச லஞ்சல கொஞ்சு கிண்கிணி
     தங்கு டுண்டுடு டுண்டு டன்பல
          சந்தி ரம்பறை பொங்கு வஞ்சகர் ...... களமீதே 
சிந்த வெண்கழு கொங்கு பொங்கெழு
     செம்பு ளங்கரு டன்ப ருந்துகள்
          செங்க ளந்திகை யெங்கு மண்டிட ...... விடும்வேலா 
திங்க ளிந்திர னும்ப ரந்தர
     ரும்பு கழ்ந்துரு கும்ப ரன்சபை
          செம்பொ னம்பல மங்கொ ளன்பர்கள் ...... பெருமாளே.
தலை மயிரில் புனுகு சட்டமும் வாசனை உள்ள நல்ல பன்னீரும் நிரம்பச் சிறப்பாக அணிந்துள்ளவர்களும், மந்தர மலை போல் பருத்த மார்பகங்கள் என்னும் வெண்ணிறமான யானைத் தந்தங்கள் பொருந்தியுள்ள அழகிய விலைமாதர்கள். பூங்கொத்துக்கள் சேர்ந்துள்ள அழகிய கூந்தல் உடையவராய், சுகம் தரக் கூடிய மஞ்சளைப் பூசிக் கொண்டு, சண்பக மலர் சூடி, வஞ்சியின் இளமை வாய்ந்த கொடி போல் விளங்கி, கொஞ்சுகின்ற பச்சைக் கிளி போலவும் அன்பு வாய்ந்த குயில் போலவும், மயில் போலவும், வந்து, பஞ்சு மெத்தையில் இன்பத்தையும் கொடுக்கும் மார்பகமும் தோள்களும் (நகக்குறிகளால்) வடுப்பட, அழகிய நல்ல ஆடையும் கலைந்து, கேடும் காம இச்சையும் மிகுவதாய், சபத மொழிகள் நிரம்பச் சொல்லி, கண்கள், காதுகள் ஆகியவை (முன்பு கொடுத்திருந்த) சுகங்கள் மாறுபட்டு (குருடாய், செவிடாய்), முன்பு செய்திருந்த சூள்களுடன் சேர்ந்து படுக்கையிலே கிடந்து இறப்பேனோ? தந்தனந்தன தந்தனந்தன திந்திமிந்திமி திந்திமிந்திமி இவ்வாறு ஒலிக்கும் சங்கும், ஊது கொம்பும், துந்துமி பேரிகை முதலான பல முரசு வாத்தியங்களும், சஞ்சலஞ்சல என்று கொஞ்சும் கிண்கிணி, பொருந்தும் டுண்டுடு டுண்டுடன் என்னும் ஒலியுடன் பல சந்திரன் போல் வட்ட வடிவமான அழகிய பறைகள மிக்க எழ, வஞ்சகர்களாகிய அசுரர்கள் போர்க் களத்தில் மடிந்து போக, வெண்ணிறக் கழுகுகளும், ஓங்கி உயர்ந்து எழுகின்ற செம்மை நிறமான பறவையான அழகிய கருடனும், பருந்துகளும் (இரத்தத்தால்) செந்நிறம் கொண்ட போர்க் களத்தில் எல்லா திசைகளிலும் நெருங்கி அடையும்படியாகச் செலுத்திய வேலனே, சந்திரனும் இந்திரனும் தேவர்களும் வேறு விண்ணில் உறைபவர்களும் புகழ்ந்து உருகும் சிவனாரின் சபையாகிய செவ்விய பொன்னம்பலத்தை அழகாக உன் இருப்பிடமாகக் கொண்ட பெருமாளே, அன்பர்கள் பெருமாளே. 
பாடல் 456 - சிதம்பரம் 
ராகம் -.... தாளம் -
தந்தன தந்தன தான தந்தன
  தான தனந்தன தான தந்தன
    தந்தன தந்தன தான தந்தன
      தான தனந்தன தான தந்தன
        தந்தன தந்தன தான தந்தன
          தான தனந்தன தான தந்தன ...... தந்ததான
மந்தர மென்குவ டார்த னங்களி
  லார மழுந்திட வேம ணம்பெறு
    சந்தன குங்கும சேறு டன்பனி
      நீர்கள் கலந்திடு வார்மு கஞ்சசி
        மஞ்சுறை யுங்குழ லார்ச ரங்கயல்
          வாள்வி ழிசெங்கழு நீர்த தும்பிய ...... கொந்தளோலை 
வண்சுழ லுஞ்செவி யார்நு டங்கிடை
  வாட நடம்புரி வார்ம ருந்திடு
    விஞ்சையர் கொஞ்சிடு வாரி ளங்குயில்
      மோக னவஞ்சியர் போல கம்பெற
        வந்தவ ரெந்தவுர் நீர றிந்தவர்
          போல இருந்ததெ னாம யங்கிட ...... இன்சொல்கூறிச் 
சுந்தர வங்கண மாய்நெ ருங்கிநிர்
  வாரு மெனும்படி யால கங்கொடு
    பண்சர சங்கொள வேணு மென்றவர்
      சேம வளந்துறு தேன ருந்திட
        துன்றுபொ னங்கையின் மீது கண்டவ
          ரோடு விழைந்துமெ கூடி யின்புறு ...... மங்கையோரால் 
துன்பமு டங்கழி நோய்சி ரங்கொடு
  சீபு ழுவுஞ்சல மோடி றங்கிய
    புண்குட வன்கடி யோடி ளஞ்சனி
      சூலை மிகுந்திட வேப றந்துடல்
        துஞ்சிய மன்பதி யேபு குந்துய
          ராழி விடும்படி சீர்ப தம்பெறு ...... விஞ்சைதாராய் 
அந்தர துந்துமி யோடு டன்கண
  நாதர் புகழ்ந்திட வேத விஞ்சைய
    ரிந்திர சந்திரர் சூரி யன்கவி
      வாணர் தவம்புலி யோர்ப தஞ்சலி
        அம்புய னந்திரு மாலொ டிந்திரை
          வாணி யணங்கவ ளோட ருந்தவர் ...... தங்கள்மாதர் 
அம்பர ரம்பைய ரோடு டன்திகழ்
  மாவு ரகன்புவி யோர்கள் மங்கையர்
    அம்புவி மங்கைய ரோட ருந்ததி
      மாதர் புகழ்ந்திட வேந டம்புரி
        அம்புய செம்பதர் மாட கஞ்சிவ
          காம சவுந்தரி யாள்ப யந்தருள் ...... கந்தவேளே 
திந்திமி திந்திமி தோதி மிந்திமி
  தீத திதிந்தித தீதி திந்திமி
    தந்தன தந்தன னாத னந்தன
      தான தனந்தன னாவெ னும்பறை
        செந்தவில் சங்குட னேமு ழங்கசு
          ரார்கள் சிரம்பொடி யாய்வி டுஞ்செயல் ...... கண்டவேலா 
செந்தினை யின்புன மேர்கு றிஞ்சியில்
  வாழு மிளங்கொடி யாள்ப தங்களில்
    வந்துவ ணங்கிநி ணேமு கம்பெறு
      தாள ழகங்கையின் வேலு டன்புவி
        செம்பொனி னம்பல மேல கம்பிர
          கார சமந்திர மீத மர்ந்தருள் ...... தம்பிரானே.
மந்தரம் என்று சொல்லப்பட்ட மலை போன்ற மார்பகங்களில் (கழுத்தில் அணிந்துள்ள) பொன் மாலை அழுந்திக் கிடக்க, நறுமணம் கொண்ட சந்தனம், செஞ்சாந்து இவற்றின் கலவைச் சேறுடன் பன்னீர்களைக் கலந்து பூசி வைப்பவர்கள். சந்திரன் போன்ற முகத்தை உடையவர்கள். மேகம் போன்ற கூந்தலை உடையவர்கள். அம்பு, கயல் மீன், வாள் (இவைகளைப் போன்ற) கண்கள். செங்கழுநீர் மலர் நிரம்ப வைத்துள்ள கூந்தல். (காதணியாகிய) ஓலைச் சுருள் விளங்கும் நன்றாகச் சுருண்டுள்ள காதுகளை உடையவர்கள். துவள்கின்ற இடை வாடும்படி நடனம் செய்பவர்கள். (வசிய) மருந்தை இடும் மாய வித்தைக்காரர்கள். கொஞ்சுபவர். இளம் குயில் போல்பவர். காம மயக்கம் தர வல்ல வஞ்சிக் கொடி போல்பவர். தமது வீட்டை அடைந்து வந்தவர்களை நீர் எந்த ஊரைச் சேர்ந்தவர், முன்பே பழக்கம் உள்ளவர் போல் இருக்கின்றதே என்றெல்லாம் பேசி காம மயக்கம் வரும்படி இனிய சொற்களைப் பேசி அழகாக உற்ற நேசத்துடன் அருகில் வந்து வரவேற்று வீட்டுக்கு உள்ளே அழைத்து தமது இசைப் பாட்டால், காமச் சேட்டைகள் உண்டாக வேண்டும் என்ற எண்ணத்துடன் (வந்தவருடைய) செல்வம் என்கின்ற வளம் செறிந்த தேனை உண்ணும் பொருட்டு பொருளைக் கவர, கிட்டிய பொன்னை உள்ளங்கை மேல் கண்டவுடன் அவருடன் விருப்பம் காட்டிச் சேர்ந்து இன்பம் அடைகின்ற விலைமாதர்களால், துயரமும், முடக்குவாதம் முதலிய உடலை அழிக்கும் நோய்களும், சிரங்குடன் சீயும், புழுவும், நீரும் ஒழுகுகிற புண்கள், குடவுண்ணியால் ஏற்பட்ட விஷக் கடியுடன், இளமையில் வந்த ஜன்னி நோய், சூலை நோய் - இவை எல்லாம் பெருகிடவே, பறந்து போய் உடல் அழிவுற்று, யமன் ஊரில் புகும் துன்பக் கடலை நான் கடக்கும்படி, உனது சீரான திருவடியைப் பெற வல்ல மந்திரத்தைத் தந்து அருளுக. ஆகாயத்தில் ஒலிக்கும் துந்துமி என்னும் பேரிகையோடு, கண நாதர்கள் புகழ, வேதத்தில் வல்லவர்கள், இந்திரன், சந்திரன், சூரியன், புலவர்கள், தவசிகள், வியாக்ரபாதர், பதஞ்சலி, பிரமன், அழகிய திருமால் (மற்றும்) லக்ஷ்மி, சரஸ்வதி தேவியுடன் அரிய தவ முனிவர்களின் மனைவிகள், விண்ணுலகில் உள்ள ரம்பை முதலான தேவ மாதர்களுடன், விளங்கும் சிறப்புடைய நாக லோக மாதர்களும், அழகிய மண்ணுலக மாதர்களும், அருந்ததி ஆகிய மாதர்களும் புகழ்ந்திடவே, நடனம் புரிகின்ற, தாமரை ஒத்த செவ்விய திருவடியை உடைய சிவபெருமானது பக்கத்திலும் உள்ளத்திலும் உள்ள சிவகாம சுந்தரியாள் உமாதேவி பெற்ற கந்த வேளே, திந்திமி திந்திமி தோதிமிந்திமி தீததி திந்தித தீதிதிந்திமி தந்தன தந்தன னாதனந்தன தானதனந்தனன என்ற ஓசையுடன் ஒலிக்கும் பறைகளும், செவ்விய மேள வகைகளும், சங்குடன் முழங்க, அசுரர்களுடைய தலைகள் பொடியாகும்படிப் போகும் செயலைச் செய்த வேலாயுதனே, செந்தினைப் புனம் இருந்த அழகிய மலை நில ஊராகிய வள்ளி மலையில் வாழ்கின்ற இளமை வாய்ந்த கொடி போன்ற வள்ளி நாயகியின் பாதங்களில் வந்து வணங்கி நின்று, அவளது திருமுகத் தரிசனத்தைப் பெற்ற திருவடி அழகனே, அழகிய கையில் வேலாயுதத்துடன் பூமியில் (தில்லையில்) செம் பொன் அம்பலத்தில் உள்ள, பிரகாரங்களோடு கூடிய திருக் கோயிலில் வீற்றிருந்து அருளும் தம்பிரானே. 
பாடல் 457 - சிதம்பரம் 
ராகம் - தர்பார்; தாளம் - ஆதி - 4 களை - 32 
தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1
தந்த தந்தனத் தான தந்ததன
     தந்த தந்தனத் தான தந்ததன
          தந்த தந்தனத் தான தந்ததன் ...... தந்ததான
வந்து வந்துவித் தூறி யென்றனுடல்
     வெந்து வெந்துவிட் டோட நொந்துயிரும்
          வஞ்சி னங்களிற் காடு கொண்டவடி ...... வங்களாலே 
மங்கி மங்கிவிட் டேனை யுன்றனது
     சிந்தை சந்தொஷித் தாளு கொண்டருள
          வந்து சிந்துரத் தேறி யண்டரொடு ...... தொண்டர்சூழ 
எந்தன் வஞ்சனைக் காடு சிந்திவிழ
     சந்த ரண்டிசைத் தேவ ரம்பையர்க
          னிந்து பந்தடித் தாடல் கொண்டுவர ...... மந்திமேவும் 
எண்க டம்பணித் தோளு மம்பொன்முடி
     சுந்த ரந்திருப் பாத பங்கயமும்
          என்றன் முந்துறத் தோணி யுன்றனது ...... சிந்தைதாராய் 
அந்த ரந்திகைத் தோட விஞ்சையர்கள்
     சிந்தை மந்திரத் தோட கெந்தருவ
          ரம்பு யன்சலித் தோட எண்டிசையை ...... யுண்டமாயோன் 
அஞ்சி யுன்பதச் சேவை தந்திடென
     வந்த வெஞ்சினர்க் காடெ ரிந்துவிழ
          அங்கி யின்குணக் கோலை யுந்திவிடு ...... செங்கைவேலா 
சிந்து ரம்பணைக் கோடு கொங்கைகுற
     மங்கை யின்புறத் தோள ணைந்துருக
          சிந்து ரந்தனைச் சீர்ம ணம்புணர்நல் ...... கந்தவேளே 
சிந்தி முன்புரக் காடு மங்கநகை
     கொண்ட செந்தழற் கோல ரண்டர்புகழ்
          செம்பொ னம்பலத் தாடு மம்பலவர் ...... தம்பிரானே.
உலகிலே தோன்றித் தோன்றி, விந்தாகிய சுக்கிலத்தில் ஊறி ஊறி, என் உடலானது வெந்து போய் வெந்து போய், இவ்வாறு ஓடுவதனால் வாடி, உயிரும் பல பிறப்பு எடுப்பேன் என்று சபதம் செய்ததுபோல கணக்கற்ற உருவங்களை எடுத்து, அழிந்து அழிந்து போய் விட்ட என்னை, உன் திருவுள்ளம் மகிழ்ச்சியுடன் ஏற்று ஆட்கொண்டருள, நீ எழுந்தருளி, உன் யானை வாகனத்தில்* ஏறி, தேவர்களும் அடியார்களும் சூழ்ந்து வர, எனது மாயை நிறைந்த பிறவிக்காடு பட்டழிய, சந்தமுடன் இசை பாடியவராக அருகில் நெருங்கி வரும், பாட்டிலேவல்ல தேவ மங்கையர் பக்தியில் கனிவுற்று, பந்தடித்து நடனத்துடன் கூடிவர, வண்டுகள் விரும்பி மொய்க்கும் கடப்பமாலை அணிந்த தோள்களும், அழகிய பொன்முடியும், காண்போர் விரும்பும் எழிலான திருவடித் தாமரைகளும், என் முன்பே முற்புற நீ தோன்றி, உன்னையே நினைக்கும்படியான உள்ளத்தை எனக்குத் தந்தருள்வாயாக. விண்ணில் உள்ளார் பிரமித்து ஓட, வித்யாதரர்கள் மனக்கவலையுடன் ஓட, கந்தர்வர்களும், பிரமனும் மனம் சோர்வடைந்து ஓட, எட்டுத்திசையிலும் பரந்த பூமியை உண்ட மாயனாம் திருமாலும் அச்சமுற்று உன் திருவடி சேவையைத் தந்து காத்தருள்க எனக் கூற, எதிர்த்து வந்த கோபத்தினரான அசுரர்களின் காடு போன்ற பெருங் கூட்டம் எரிபட்டு விழ, நெருப்பின் தன்மையை உடைய வேலைச் செலுத்திய செங்கை வேலனே, யானைத் தந்தங்கள் அனைய மார்புடைய குறத்தி வள்ளி மகிழும்படியாக, அவளது தோள்களை அணைந்து உருகி நின்றவனே, யானை வளர்த்த தேவயானையைச் சிறப்புடன் திருமணம் செய்து கொண்ட கந்தவேளே, முன்பு, திரிபுரங்கள் என்ற காடு சிதறுண்டு அழிய, சிரிப்பாலே பெரு நெருப்பை ஏவிய செந்தழலின் நிறத்தை உடையவரும், தேவர்கள் புகழும் செம்பொற் சபையிலே திருநடனம் புரிந்தவருமான அம்பலவாணராம் சிவபெருமானின் குருநாதத் தம்பிரானே. 
* அடியார்களை ஆட்கொள்ள முருகன் பிணிமுகம் என்ற யானை வாகனத்தில் வருவதாக ஐதீகம்.
பாடல் 458 - சிதம்பரம் 
ராகம் -...; தாளம் -
தனத்தத்தம் தனத்தத்தத்
     தனத்தத்தம் தனத்தத்தத்
          தனத்தத்தம் தனத்தத்தத் ...... தனதான
கதித்துப்பொங் கலுக்கொத்துப்
     பணைத்துக்கொம் பெனத்தெற்றிக்
          கவித்துச்செம் பொனைத்துற்றுக் ...... குழலார்பின் 
கழுத்தைப்பண் புறக்கட்டிச்
     சிரித்துத்தொங் கலைப்பற்றிக்
          கலைத்துச்செங் குணத்திற்பித் ...... திடுமாதர் 
பதித்துத்தந் தனத்தொக்கப்
     பிணித்துப்பண் புறக்கட்டிப்
          பசப்பிப்பொன் தரப்பற்றிப் ...... பொருள்மாளப் 
பறித்துப்பின் துரத்துச்சொற்
     கபட்டுப்பெண் களுக்கிச்சைப்
          பலித்துப்பின் கசுத்திப்பட் ...... டுழல்வேனோ 
கதித்துக்கொண் டெதிர்த்துப்பிற்
     கொதித்துச்சங் கரித்துப்பற்
          கடித்துச்சென் றுழக்கித்துக் ...... கசுரோரைக் 
கழித்துப்பண் டமர்க்குச்செப்
     பதத்தைத்தந் தளித்துக்கைக்
          கணிக்குச்சந் தரத்தைச்சுத் ...... தொளிர்வேலா 
சிதைத்திட்டம் புரத்தைச்சொற்
     கயத்தைச்சென் றுரித்துத்தற்
          சினத்தக்கன் சிரத்தைத்தட் ...... சிவனார்தஞ் 
செவிக்குச்செம் பொருட்கற்கப்
     புகட்டிச்செம் பரத்திற்செய்த்
          திருச்சிற்றம் பலச்சொக்கப் ...... பெருமாளே.
நிறைந்து தோன்றி, மிகுந்த இருளுக்குச் சமமாகிச் செழிப்புற்று, கொம்பு போல சடையாகப் பின்னப்பட்டு, பொன்னாலாகிய சடை பில்லையைக் கவித்து, நெருக்கம் கொண்ட கூந்தலை உடைய விலைமாதர்களின் பின்சென்று, கழுத்தை நன்றாகக் கட்டியும், நகைத்தும், தொங்கும் ஆடையாகிய முந்தானையைப் பிடித்துக் கலைத்தும், நல்ல குணத்தைப் பித்து பிடிக்கும்படிச் செய்யும் விலைமாதர்களின் மீது மனத்தை அழுத்தப் பதித்து, தாம் பெற்ற பொருளுக்குத் தகுந்தவாறு வசப்படுத்தி, நன்றாகக் கட்டிப் பிடித்து இன்முகம் காட்டி ஏய்த்தும், பொன் தரப் பெற்று அடைந்து, வந்தவருடைய பொருள் வற்றிப் போகுமளவும் கைப்பற்றி, பின்னர் அவரை விரட்டித் துரத்தும் சொற்களை உடைய வஞ்சகம் கொண்ட வேசியர்களுக்கு ஆசைப்பட்டு, பின்னர் வருத்தத்தை அடைந்து திரிவேனோ? விரைந்து எழுந்து எதிர்த்து, பிறகு கோபம் கொண்டு அழித்து, பற்களைக் கடித்து சென்று சேனைக்கடலைக் கலக்கி, வேதனையடைந்த அசுரர்களை ஒழித்து, முன் ஒரு நாளில் தேவர்களுக்குச் செவ்விய பதவியைத் தந்தருளி, கையில் அலங்காரமாக அணிந்துள்ள குஞ்சம் கட்டிய, அச்சத்தைத் தரும், அழகிய, பரிசுத்தமாக ஒளி விடும் வேலை ஏந்தியவனே, அழகிய திரிபுரங்களை அழித்திட்டு, புகழ் பெற்ற கயாசுரனாய் வந்த யானையிடம் சென்று அதன் தோலை உரித்து, தான் என்னும் அகங்காரம் கொண்ட தக்ஷன் தலையை அறுத்துத் தள்ளிய சிவபெருமானுடைய திருச்செவிக்குள் பிரணவப் பொருளை அவர் கற்கும்படி புகட்டி, செவ்விய மேலான வகையில் அமைந்த திருச் சிற்றம்பலத்தில் (சிதம்பரத்தில்) எழுந்தருளியிருக்கும் அழகிய பெருமாளே. 
பாடல் 459 - சிதம்பரம் 
ராகம் -...; தாளம் -
தனத்தத் தந்தன தானன தானன
     தனத்தத் தந்தன தானன தானன
          தனத்தத் தந்தன தானன தானன ...... தனதான
சிரித்துச் சங்கொளி யாமின லாமென
     வுருக்கிக் கொங்கையி னாலுற மேல்விழு
          செணத்திற் சம்பள மேபறி காரிகள் ...... சிலபேரைச் 
சிமிட்டிக் கண்களி னாலுற வேமயல்
     புகட்டிச் செந்துகி லால்வெளி யாயிடை
          திருத்திப் பண்குழ லேய்முகி லோவிய ...... மயில்போலே 
அருக்கிப் பண்புற வேகலை யால்முலை
     மறைத்துச் செந்துவர் வாயமு தூறல்க
          ளளித்துப் பொன்குயி லாமென வேகுரல் ...... மிடறோதை 
அசைத்துக் கொந்தள வோலைக ளார்பணி
     மினுக்கிச் சந்தன வாசனை சேறுட
          னமைத்துப் பஞ்சணை மீதணை மாதர்க ...... ளுறவாமோ 
இரைத்துப் பண்டம ராவதி வானவ
     ரொளித்துக் கந்தசு வாமிப ராபர
          மெனப்பட் டெண்கிரி ஏழ்கடல் தூள்பட ...... அசுரார்கள் 
இறக்கச் சிங்கம தேர்பரி யானையொ
     டுறுப்பிற் செங்கழு கோரிகள் கூளியொ
          டிரத்தச் சங்கம தாடிட வேல்விடு ...... மயில்வீரா 
சிரித்திட் டம்புர மேமத னாருட
     லெரித்துக் கண்டக பாலியர் பாலுறை
          திகழ்ப்பொற் சுந்தரி யாள்சிவ காமிநல் ...... கியசேயே 
திருச்சித் தந்தனி லேகுற மானதை
     யிருத்திக் கண்களி கூர்திக ழாடக
          திருச்சிற் றம்பல மேவியு லாவிய ...... பெருமாளே.
சிரித்து, (பற்களின் ஒளியை) சங்கின் ஒளி எனவும், மின்னலின் ஒளி எனவும் சொல்லும்படி வெளிக் காட்டி, (அதனால் காண்போருடைய மனத்தை) உருக்கி மார்பகங்களைக் கொண்டு பொருந்த, மேலே விழுகின்ற அந்த நேரத்தில் பொருளைப் பறிப்பவர்கள். சில பேர்வழிகளை கண்களால் சிமிட்டி, அழுத்தமாகக் காமத்தை ஊட்டி, செவ்விய ஆடையால் வெளித் தோன்றவே (பகிரங்கமாக) இடையைச் சீர்படுத்தி, இசைப் பாட்டுக்களைக் குழல் போல இனிமை பொருந்தப் பாடி, மேகத்தைக் கண்ட அழகிய மயிலைப் போல தமது நடன அருமையைக் காட்டி, ஒழுங்காக ஆடையால் மார்பை மறைப்பது போல ஜாலம் காட்டி, செவ்விய பவழம் போன்ற வாயிதழின் அமுதம் போன்ற நீரூற்றைக் குடிக்கச் செய்து, அழகிய குயில் என்னும்படி குரல் எழக் கண்டத்தில் ஓசையை அசையச் செய்து, காதோலைகளையும் நிறைந்து, அணி கலன்களையும் மினுக்கி ஒளி பெறச் செய்து, சந்தன நறு மணக் கலவையுடன் அலங்கரித்து, பஞ்சு மெத்தையின் மீது சேர்கின்ற பொது மகளிரின் உறவு எனக்குத் தகுமோ? பெரும் இரைச்சலுடன் முன்பு பொன்னுலகத்தில் இருந்த தேவர்கள் (மேரு மலையில்) ஒளித்திருந்து, கந்த சுவாமியே, மேலாம் பொருளே என்று முறையிட, அஷ்ட திக்குகளிலும் உள்ள மலைகளும் பொடிபடவும், ஏழு கடல்களும் தூள்படவும், அசுரர்கள் இறந்துபடவும், சிங்கங்கள் பூட்டப்பட்ட தேர்கள், குதிரைகளும், யானைகளும் போர்க்களத்தில் உறுப்புக்கள் சிதறுண்டு வீழ, செந்நிறக் கழுகுகள், நரிகள், பேய்களோடு ரத்த வெள்ளத்தில் விளையாட வேலாயுதத்தைச் செலுத்திய மயில் வீரனே, சிரித்து அழகிய திரி புரத்தையும் மன்மதனுடைய உடலையும் எரி செய்த, கபாலத்தை ஏந்தும் சிவபெருமானுடைய பக்கத்தில் இருக்கின்ற பொலிவு நிறைந்த அழகு மிக்க சிவகாமி பெற்ற செல்வக் குழந்தையே, உனது அழகிய உள்ளத்தில் குறப் பெண்ணாகிய வள்ளியை இருத்தி கண்ணால் மகிழ்ச்சி அடைந்து, புகழ் மிக்க பொன்கூரை வேய்ந்த பொன்னம்பலத்தே விரும்பி உலவும் பெருமாளே. 
பாடல் 460 - சிதம்பரம் 
ராகம் - ....; தாளம் -
தத்தனந் தத்தனந் தானனத் தந்ததன
     தத்தனந் தத்தனந் தானனத் தந்ததன
          தத்தனந் தத்தனந் தானனத் தந்ததன ...... தந்ததான
தத்தையென் றொப்பிடுந் தோகைநட் டங்கொளுவர்
     பத்திரங் கட்கயங் காரியொப் புங்குழல்கள்
          சச்சையங் கெச்சையுந் தாளவொத் தும்பதுமை ...... யென்பநீலச் 
சக்கரம் பொற்குடம் பாலிருக் குந்தனமொ
     டொற்றிநன் சித்திரம் போலஎத் தும்பறியர்
          சக்களஞ் சக்கடஞ் சாதிதுக் கங்கொலையர் ...... சங்கமாதர் 
சுத்திடும் பித்திடும் சூதுகற் குஞ்சதியர்
     முற்பணங் கைக்கொடுந் தாருமிட் டங்கொளுவர்
          சொக்கிடும் புக்கடன் சேருமட் டுந்தனகும் ...... விஞ்சையோர்பால் 
தொக்கிடுங் கக்கலுஞ் சூலைபக் கம்பிளவை
     விக்கலுந் துக்கமுஞ் சீதபித் தங்கள்கொடு
          துப்படங் கிப்படுஞ் சோரனுக் கும்பதவி ...... யெந்தநாளோ 
குத்திரங் கற்றசண் டாளர்சத் தங்குவடு
     பொட்டெழுந் திட்டுநின் றாடஎட் டந்திகையர்
          கொற்றமுங் கட்டியம் பாடநிர்த் தம்பவுரி ...... கொண்டவேலா 
கொற்றர்பங் குற்றசிந் தாமணிச் செங்குமரி
     பத்தரன் புற்றஎந் தாயெழிற் கொஞ்சுகிளி
          கொட்புரந் தொக்கவெந் தாடவிட் டங்கிவிழி ...... மங்கைபாலா 
சித்திரம் பொற்குறம் பாவைபக் கம்புணர
     செட்டியென் றெத்திவந் தாடிநிர்த் தங்கள்புரி
          சிற்சிதம் பொற்புயஞ் சேரமுற் றும்புணரு ...... மெங்கள்கோவே 
சிற்பரன் தற்பரன் சீர்திகழ்த் தென்புலியுர்
     ருத்திரன் பத்திரஞ் சூலகர்த் தன்சபையில்
          தித்தியென் றொத்திநின் றாடுசிற் றம்பலவர் ...... தம்பிரானே.
கிளி என்று ஒப்புமை சொல்லத் தக்கவராய், மயில் போன்று நடனம் செய்பவர்கள். அம்பு போன்ற கண்ணும் நீருண்ட மேகத்தை ஒத்த கூந்தலும், சப்திக்கும் காற் சதங்கையும் தாள ஒத்துப் போல ஒலி செய்யும் பாவை எனக் கூறத் தக்கவர். நீல நிறமுள்ள சக்கரவாகப் புள், பொன்னாலாகிய குடம் இவற்றைப் போலிருந்து, பால் கொண்டதாயுள்ள மார்பினைக் கொண்டு தழுவி, நல்ல ஓவியம் போல இருந்து வஞ்சித்து, பொருளைப் பறிப்பவர்கள். முழுப் பொய்யைப் பரிகாசத்தினால் சாதிக்கின்ற, துக்கம் தரும் கொலைத் தொழிலைச் செய்பவர்கள். அழகிய விலைமாதர்கள். தம் வசத்தில் சுழலும்படியான பித்து ஏற்றுகின்ற சூதினைக் கற்ற சதிகாரிகள். முன்னதாகப் பணத்தைக் கையில் கொண்டு செலுத்தும் யார் மீதும் தமது விருப்பத்தைச் செலுத்துபவர்கள். மயங்கும்படியான அகந்தை வார்த்தைகளைச் சொல்லி பொருள் சேரும் வரையில் நட்பினைக் காட்டும் மாய வித்தைக்காரர்களிடத்தே, நெருங்கிக் கூடி வருகின்ற வாந்தியும், சூலை நோயும், விலாப் பக்கத்தில் வரும் ராஜபிளவைக் கட்டியும், விக்கலும், துக்கமும், சீத மலம், பித்தம் ஆகிய நோய்களைக் கொள்வதால், வலிமை குன்றி அழிந்து படும் இந்தக் கள்வனுக்கும் (சாலோக, சாமீப, சாரூப, சாயுஜ்ய எனப்படும்) சிவலோக இன்பப் பதவிகள்* கிடைப்பது எப்போதோ? வஞ்சகம் கற்ற சண்டாளர் ஆகிய ஏழு மலைகளும் பொடிபட்டு நின்று குலைய, எட்டுத் திக்குப் பாலகர்களும் உனது வீரத்தைப் புகழ் மாலையாகப் பாட, நடனமாகிய கூத்துக்களைக் கொண்ட வேலனே, வெற்றியாளராகிய சிவபெருமானது இடது பக்கத்தில் உள்ள சிந்தாமணி போன்றவள், செவ்விய குமரி, பக்தர்கள் அன்பு கொண்ட எமது தாய், அழகு கொஞ்சும் கிளி, சுழன்று திரியும் திரி புரங்கள் எல்லாம் வெந்து குலைய வைத்த நெருப்புக் கண்ணை உடைய பார்வதி தேவியின் புதல்வனே, விசித்திரமான அழகிய குறப் பெண்ணாகிய வள்ளி அருகில் சென்று சேர வளைச் செட்டி வடிவு எடுத்து ஏமாற்றி வந்து விளையாடல்கள் செய்து கூத்துக்கள் புரிந்து, நுண்ணிய ஞானத்தவளாகிய அந்த வள்ளி உனது அழகிய தோள்களைச் சேர, அவளை முழுதும் கலந்து சேர்ந்த எங்கள் தலைவனே, ஞானபரன், பரம் பொருள், சீர் விளங்கும் அழகிய சிதம்பரத்தில் விளங்கும் ருத்திர மூர்த்தி, இலைகளை உடைய சூலாயுதத்தைக் கொண்ட தலைவன், பொன்னம்பலத்தில் தித்தி என்னும் தாளத்துக்குத் தக்கபடி நடனம் செய்யும் நடராஜப் பெருமானது தம்பிரானே. 
* 4 பக்தி மார்க்கங்கள் பின்வருமாறு:1. சரியை: திருக்கோயிலில் அலகு இடுதல், மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம் வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல், இறைவனை வாழ்த்துதல், திருவேடம் கண்டு பணிதல். இது 'தாத மார்க்கம் - சாலோகம்'.2. கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்தியக் காரியம் செய்தல். இது 'புத்ர மார்க்கம் - சாமீபம்'.3. யோகம்: புலன்களை அடக்கிப் பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி, முழு ஜோதியை நினைத்திருத்தல். இது 'சக மார்க்கம் (தோழ நெறி) - சாரூபம்'.4. ஞானம்: புறத் தொழில் அகத் தொழில் இன்றி, அறிவு மாத்திரத்தாலே செய்யும் வழிபாடு ஞானம். இது 'சன்மார்க்கம் - சாயுஜ்யம்'. சிவஞான சித்தியார் சூத்திரம்.
பாடல் 461 - சிதம்பரம் 
ராகம் - ....; தாளம் -
தனத்தத்தந் தனத்தத்தந்
   தனத்தத்தந் தனத்தத்தந்
      தனத்தத்தந் தனத்தத்தந்
         தனத்தத்தந் தனத்தத்தந்
            தனத்தத்தந் தனத்தத்தந்
               தனத்தத்தந் தனத்தத்தந் ...... தனதான
தனத்திற்குங் குமத்தைச்சந்
   தனத்தைக்கொண் டணைத்துச்சங்
      கிலிக்கொத்தும் பிலுக்குப்பொன்
         தனிற்கொத்துந் தரித்துச்சுந்
            தரத்திற்பண் பழித்துக்கண்
               சுழற்றிச்சண் பகப்புட்பங் ...... குழல்மேவித் 
தரத்தைக்கொண் டசைத்துப்பொன்
   தகைப்பட்டுந் தரித்துப்பின்
      சிரித்துக்கொண் டழைத்துக்கொந்
         தளத்தைத்தண் குலுக்கிச்சங்
            கலப்புத்தன் கரத்துக்கொண்
               டணைத்துச்சம் ப்ரமித்துக்கொண் ...... டுறவாடிப் 
புனித்தப்பஞ் சணைக்கட்டிண்
   படுத்துச்சந் தனப்பொட்டுங்
      குலைத்துப்பின் புயத்தைக்கொண்
         டணைத்துப்பின் சுகித்திட்டின்
            புகட்டிப்பொன் சரக்கொத்துஞ்
               சிதைப்பப்பொன் தரப்பற்றும் ...... பொதுமாதர் 
புணர்ப்பித்தும் பிடித்துப்பொன்
   கொடுத்துப்பின் பிதிர்ச்சித்தன்
      திணிக்கட்டுஞ் சிதைத்துக்கண்
         சிறுப்பப்புண் பிடித்தப்புண்
            புடைத்துக்கண் பழுத்துக்கண்
               டவர்க்குக்கண் புதைப்பச்சென் ...... றுழல்வேனோ 
சினத்துக்கண் சிவப்பச்சங்
   கொலிப்பத்திண் கவட்டுச்செங்
      குவட்டைச்சென் றிடித்துச்செண்
         டரைத்துக்கம் பிடிக்கப்பண்
            சிரத்தைப்பந் தடித்துக்கொண்
               டிறைத்துத்தெண் கடற்றிட்டுங் ...... கொளைபோகச் 
செழித்துப்பொன் சுரர்ச்சுற்றங்
   களித்துக்கொண் டளிப்புட்பஞ்
      சிறக்கப்பண் சிரத்திற்கொண்
         டிறைத்துச்செம் பதத்திற்கண்
            திளைப்பத்தந் தலைத்தழ்த்தம்
               புகழ்ச்செப்புஞ் சயத்துத்திண் ...... புயவேளே 
பனித்துட்கங் கசற்குக்கண்
   பரப்பித்தன் சினத்திற்றிண்
      புரத்தைக்கண் டெரித்துப்பண்
         கயத்தைப்பண் டுரித்துப்பன்
            பகைத்தக்கன் தவத்தைச்சென்
               றழித்துக்கொன் றடற்பித்தன் ...... தருவாழ்வே 
படைத்துப்பொன் றுடைத்திட்பன்
   தனைக்குட்டும் படுத்திப்பண்
      கடிப்புட்பங் கலைச்சுற்றும்
         பதத்தப்பண் புறச்சிற்றம்
            பலத்திற்கண் களித்தப்பைம்
               புனத்திற்செங் குறத்திப்பெண் ...... பெருமாளே.
மார்பகத்தில் செஞ்சாந்தையும் சந்தனத்தையும் கொண்டு அப்பி, சங்கிலிக் கொத்தும், மினுக்கும் பொன்னாலாகிய கூட்டமான நகைகளையும் அணிந்து, தமது அழகில் ஈடுபட்டவரின் நற்குணங்களை அழித்து, கண்களைச் சுழற்றி, சண்பக மலர்களை கூந்தலில் வைத்து அலங்கரித்து, தமது உடலைக் கொண்டு மேன்மை விளங்க அசைத்து, பொற்சரிகை பொருந்திய பட்டாடையைத் தரித்து, பின்பு சிரித்து, கொண்டு வந்து அழைத்துச் சென்று கூந்தலை அன்பாக அசைத்து, வளையல்கள் சப்திக்கும் தமது கைகளால் கொண்டு போய் அணைத்து, பெருங் களிப்புடன் உறவு பூண்டு, உயர்ந்த பஞ்சணை மெத்தையில் நன்றாகப் படுத்து, (வந்தவருடைய) சந்தனப் பொட்டைக் கலைத்து, பின்பு தனது கைகளால் அவர்களது தோளைத் தழுவி, பின்னர் இன்ப சுகத்தை அனுபவித்து, பொன் கட்டிகளால் ஆன மணி வடத் திரள்களும் செலவழித்துத் தொலையும்படி பொன்னைத் தருமாறு பற்றுகின்ற விலைமாதர்களுடன் சேரும் பைத்தியமும், (அந்த மாதர்களுக்குப்) பொன்னைக் கொடுத்த பிறகு கலக்கம் அடையும் மனமுடைய நான், உடல் வலிமை சிதைத்துத் தளர்ந்து, கண்கள் சிறுத்துப் போய், உடம்பெல்லாம் புண்ணாகி, அந்தப் புண் வீங்கிச் சீழ் பிடித்து, அதைப் பார்த்தவர்கள் எல்லாம் கண்ணை மூடிக் கொண்டு செல்லும்படியாக நான் திரிவேனோ? கோபித்துக் கண் சிவக்கவும், சங்குகள் ஒலிக்கவும், வலிய கிளைகளை உடைய செவ்விய கிரெளஞ்ச மலையைப் பொடிபடுத்தி, விண்ணோரையும் மண்ணுலகில் உள்ளோரையும் துயரத்தில் ஆழ்த்திய அசுரர்களுடைய தலைகளை பந்தடிப்பது போல் அடித்து, அத் தலைகளைப் போர்க் களத்தில் எங்கும் சிதற வைத்து, தெள்ளிய கடலினை மேடாக மாறச் செய்து, செழிப்புற்று பொன்னுலகத்தில் வாழும் தேவர்களும் அவர்களின் சுற்றத்தார்களும் மகிழ்ச்சி பூண்டு, வண்டு மொய்க்கும் மலர்களை விளக்கமுற அலங்காரமாகத் தலையில் சுமந்து சென்று, உனது செவ்விய திருவடியில் இட்டுப் பூஜித்துத் தமது கண்கள் மகிழ, தலைகளைத் தாழ்த்தி அழகிய உனது திருப்புகழைச் சொல்லும் வெற்றி விளங்கும் வலிய திருப்புயங்களை உடைய தலைவனே, நடுங்கி அச்சம் கொள்ளுமாறு மன்மதன் மேல் நெற்றிக் கண்ணைச் செலுத்தி, தான் கொண்ட கோபத்தால் வலிய திரிபுரங்களை விழித்து எரித்து, முன்பு சினத்துடன் வந்த யானையின் தோலை உரித்த திறம் கொண்டவரும், பகைமை பூண்டிருந்த தக்ஷனுடைய யாகத்தைப் போய் அழித்து அவனையும் கொன்ற வலிமை வாய்ந்த பித்தருமான* சிவபெருமான் ஈன்ற செல்வமே, படைக்கின்ற ஆற்றல் ஒன்றை உடைய திறமை கொண்டவனாகிய பிரமனை தலையில் குட்டித் தண்டித்தவனே, தகுதியான வாசனை மிக்க மலர்களைக் கொண்ட திருவடிகளை உடையவனே, பரத சாஸ்திர முறைப்படி சுழன்று நடனம் செய்யும் பாதங்களை உடையவனே, அலங்காரத்துடன் திருச் சிற்றம்பலத்தில் குளிர்ச்சி உற மகிழ்பவனே, பசுமையான தினைப் புனத்தில் வாழும் செவ்விய குறப் பெண்ணாகிய வள்ளியின் பெருமாளே. 
* சுந்தரமூர்த்தி நாயனார் ஒருமுறை சிவபெருமானை பித்தா என்று அழைத்தார்.
பாடல் 462 - சிதம்பரம் 
ராகம் -...; தாளம் -
தனதன தனத்தத் தந்த தந்தன
     தனதன தனத்தத் தந்த தந்தன
          தனதன தனத்தத் தந்த தந்தன ...... தனதான
திருடிக ளிணக்கிச் சம்ப ளம்பறி
     நடுவிகள் மயக்கிச் சங்க முண்கிகள்
          சிதடிகள் முலைக்கச் சும்பல் கண்டிகள் ...... சதிகாரர் 
செவிடிகள் மதப்பட் டுங்கு குண்டிகள்
     அசடிகள் பிணக்கிட் டும்பு றம்பிகள்
          செழுமிக ளழைத்திச் சங்கொ ளுஞ்செயர் ...... வெகுமோகக் 
குருடிகள் நகைத்திட் டம்பு லம்புக
     ளுதடிகள் கணக்கிட் டும்பி ணங்கிகள்
          குசலிகள் மருத்திட் டுங்கொ டுங்குணர் ...... விழியாலே 
கொளுவிகள் மினுக்குச் சங்கி ரங்கிகள்
     நடனமு நடித்திட் டொங்கு சண்டிகள்
          குணமதில் முழுச்சுத் தசங்க்ய சங்கிக ...... ளுறவாமோ 
இருடிய ரினத்துற் றும்ப தங்கொளு
     மறையவ னிலத்தொக் குஞ்சு கம்பெறு
          மிமையவ ரினக்கட் டுங்கு லைந்திட ...... வருசூரர் 
இபமொடு வெதித்தச் சிங்க மும்பல
     இரதமொ டெதத்திக் கும்பி ளந்திட
          இவுளியி ரதத்துற் றங்க மங்கிட ...... விடும்வேலா 
அரிகரி யுரித்திட் டங்க சன்புர
     மெரிதர நகைத்துப் பங்க யன்சிர
          மளவொடு மறுத்துப் பண்ட ணிந்தவ ...... ரருள்கோனே 
அமரர்த மகட்கிட் டம்பு ரிந்துநல்
     குறவர்த மகட்பக் கஞ்சி றந்துற
          அழகிய திருச்சிற் றம்ப லம்புகு ...... பெருமாளே.
(வந்தவர்கள் பணத்தைத்) திருடுவோர். தம் விருப்பப்படி கைப்பொருளைப் பறிக்கும் நீதி பூண்டவர்கள். மயங்க வைத்துக் கலவி செய்பவர்கள். அறிவிலர். கச்சு அணிந்த மலை போன்ற மார்பகங்களைக் கொண்டவர்கள். கண்டித்துப் பேசுபவர்கள். எப்போதும் சதி செய்பவர்கள். (வேண்டுமென) காது கேளாதவர்கள் போல் நடிப்பவர்கள். அகங்காரம் கொண்டு உங்கார ஒலியை எழுப்பும் இழிந்தவர். முட்டாள்கள். ஊடல் செய்துகொண்டு ஒழுக்கத்துக்குப் புறம்பானவர்கள். செழிப்பான அழகு கொண்டவர்கள். வருபவர்களை அழைத்து தமது இச்சையை நிறைவேற்றிக் கொள்ளும் செயல் திறத்தைக் கொண்டவர்கள். மிக்க காமம் பூண்ட குருடிகள். சிரித்துக் கொண்டே தமது விருப்பத்தை வெளியிடும், கள்ளுண்ட உதட்டினர். (பெற்ற பொருளைக்) கணக்குப் பார்த்துப் பார்த்து பிணக்கம் கொள்ளுபவர்கள். தந்திரவாதிகள். (வருபவரின் உணவில்) மருந்து வைத்து மயக்கும் கொடிய குணம் படைத்தவர்கள். கண்களால் (தம் பக்கம்) இழுத்துக் கொள்ளுபவர்கள். நடனம் செய்து விளங்கும் பிடிவாத குணம் படைத்தவர்கள். குணத்தைப் பற்றிக் கூறுங்கால், முழுமையும் கணக்கற்ற பேர்களுடன் சம்பந்தம் உடையவர்கள் (ஆகிய விலைமாதர்களின்) இணக்கம் நல்லதோ? ரிஷிகள் இனத்தோர் கூட்டமும், உமது பதவியில் இருக்கும் பிரமன் படைத்த மண்ணுள்ளோர் கூட்டமும், சுகம் பெற்றிருந்த தேவர் கூட்ட மிகுதியும் நிலை குலையும்படி வந்த சூரர்கள், அவர்களுடைய யானைக் கூட்டங்களோடு, வேறுபட்ட சிங்கங்களும், பல தேர்களும் எந்தத் திக்கும் பிளவு உண்டு அழிய, குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் உள்ள உடல்கள் நாசம் அடைய வேலைச் செலுத்தியவனே, சிங்கத்தையும் யானையையும் தோலை உரித்து, மன்மதனையும் திரி புரங்களையும் எரிபட்டு அழியச் சிரித்து, பிரமனுடைய (ஐந்து) தலைகளில் ஒன்றை ஒரு கணக்காக அறுத்து முன்பு பிரம கபாலத்தை அணிந்தவராகிய சிவபெருமான் தந்தருளிய தலைவனே, தேவர்களின் மகளான தேவயானையிடம் விருப்பத்தைக் காட்டி, குறப் பெண்ணாகிய வள்ளி (உனது) வலப் புறத்தில் சிறப்புற்று வீற்றிருக்க, அழகிய சிதம்பரத்தில் புக்கு விளங்கும் பெருமாளே. 
பாடல் 463 - சிதம்பரம் 
ராகம் - ...; தாளம் -
தந்த தந்தன தந்த தந்தன
     தந்த தந்தன தந்த தந்தன
          தந்த தந்தன தந்த தந்தன ...... தந்ததான
கொந்த ரங்குழ லிந்து வண்புரு
     வங்கள் கண்கய லுஞ்ச ரங்கணை
          கொண்ட ரம்பைய ரந்த முஞ்சசி ...... துண்டமாதர் 
கொந்த ளங்கதி ரின்கு லங்களி
     னுஞ்சு ழன்றிர சம்ப லங்கனி
          கொண்ட நண்பித ழின்சு கங்குயி ...... லின்சொல்மேவுந் 
தந்த வந்தர ளஞ்சி றந்தெழு
     கந்த ரங்கமு கென்ப பைங்கழை
          தண்பு யந்தளி ரின்கு டங்கைய ...... ரம்பொனாரந் 
தந்தி யின்குவ டின்த னங்களி
     ரண்டை யுங்குலை கொண்டு விண்டவர்
          தங்க டம்படி யுங்க வண்டிய ...... சிந்தையாமோ 
மந்த ரங்கட லுஞ்சு ழன்றமிர்
     தங்க டைந்தவ னஞ்சு மங்குலி
          மந்தி ரஞ்செல்வ முஞ்சு கம்பெற ...... எந்தவாழ்வும் 
வந்த ரம்பையெ ணும்ப கிர்ந்துந
     டங்கொ ளுந்திரு மங்கை பங்கினன்
          வண்டர் லங்கையு ளன்சி ரம்பொடி ...... கண்டமாயோன் 
உந்தி யின்புவ னங்க ளெங்கும
     டங்க வுண்டகு டங்கை யன்புக
          ழொண்பு ரம்பொடி கண்ட எந்தையர் ...... பங்கின்மேவும் 
உம்ப லின்கலை மங்கை சங்கரி
     மைந்த னென்றய னும்பு கழ்ந்திட
          வொண்ப ரந்திரு வம்ப லந்திகழ் ...... தம்பிரானே.
அழகிய பூங் கொத்துக்கள் கொண்ட கூந்தல், பிறைச் சந்திரன் போன்ற வளப்பமுள்ள புருவங்கள், கயல் மீன் போலவும் அம்பு போலவும் அம்பின் அலகு போலவும் உள்ள கண்கள் ஆகியவற்றைக் கொண்ட விலைமாதர் தெய்வ மகளிர் போன்ற அழகும் சந்திரன் போன்ற முகமும் உடையவர்கள். இத்தகையோரின் கூந்தலின் ஒளி அழகுகளில் ஈடுபட்டுத் திரிந்து, சுவையுள்ள பழத்தின் சாரத்தைக் கொண்டு உகந்ததாக இருந்த வாயிதழ் ஊறலின் இன்பம், கிளி, குயில் இவைகளின் மொழி போன்ற இனிய சொல், விரும்பும்படியான அழகிய முத்துக்கள் போன்ற பற்கள், நல்ல எழுச்சியுள்ள கமுகு போன்ற கழுத்து, பசிய மூங்கில் போன்ற குளிர்ந்த புயங்கள், தளிர் போல மென்மையான உள்ளங்கையை உடையவர்கள், அழகிய பொன் மாலையை அணிந்துள்ள, யானை போலவும் மலை போலவும் பெரிதாக உள்ள இரண்டு மார்பகங்களும் நிலை கெட்டு வெளியே காட்டுபவர்கள். இத்தகைய பொது மகளிருடைய உடலில் தோய்கின்ற, கவண்கல் போல வேகமாய்ப் பாய்கின்ற கெட்ட சிந்தை எனக்கு ஆகுமோ? மந்தர மலையைக் கடலில் சுழல வைத்து அமுதத்தைக் கடைந்து எடுத்தவன், அச்சம் கொண்ட இந்திரன் இருப்பிடத்தையும் பொருளையும் சுகத்தையும் எல்லா வாழ்வையும் பெற, அந்தக் கடலில் தோன்றிய அரம்பை முதலான நடன மாதர்களையும் பங்கிட்டு அளித்து நடனம் புரிந்த லக்ஷ்மியின் நாயகன், மங்கல பாடகர் பாடி நின்ற இலங்கை வேந்தனான ராவணனுடைய பத்துத் தலைகளையும் பொடியாகும்படி வென்ற மாயவன், தனது வயிற்றில் அண்டங்கள் யாவும் அடங்க உண்ட உள்ளங்கையை உடைய திருமால் புகழ, ஒளி வீசிய திரி புரங்களை பொடி செய்த எமது தந்தையாகிய சிவபெருமானின் பாகத்தில் இருப்பவளும், எழுச்சி கொண்ட எல்லா கலைகளுக்கும் தலைவியுமாகிய மங்கை என்னும் சங்கரியின் மகனே என்று பிரமனும் புகழ, ஒள்ளிய மேலான சிதம்பரத்தின் திரு அம்பலத்தில் விளங்கும் தம்பிரானே. 
பாடல் 464 - சிதம்பரம் 
ராகம் - ...; தாளம் -
தனந்தந்தம் தனந்தந்தம்
   தனந்தந்தம் தனந்தந்தம்
      தனந்தந்தம் தனந்தந்தம் ...... தனதான
தியங்குஞ்சஞ் சலந்துன்பங்
   கடந்தொந்தஞ் செறிந்தைந்திந்
      த்ரியம்பந்தந் தருந்துன்பம் ...... படுமேழை 
திதம்பண்பொன் றிலன்பண்டன்
   தலன்குண்டன் சலன்கண்டன்
      தெளிந்துன்றன் பழந்தொண்டென் ...... றுயர்வாகப் 
புயங்கந்திங் களின்துண்டங்
   குருந்தின்கொந் தயன்றன்கம்
      பொருந்துங்கங் கலந்தஞ்செஞ் ...... சடைசூடி 
புகழ்ந்துங்கண் டுகந்துங்கும்
   பிடுஞ்செம்பொன் சிலம்பென்றும்
      புலம்பும்பங் கயந்தந்தென் ...... குறைதீராய் 
இயம்புஞ்சம் புகந்துன்றுஞ்
   சுணங்கன்செம் பருந்தங்கங்
      கிணங்குஞ்செந் தடங்கண்டுங் ...... களிகூர 
இடும்பைங்கண் சிரங்கண்டம்
   பதந்தந்தங் கரஞ்சந்தொன்
      றெலும்புஞ்சிந் திடும்பங்கஞ் ...... செயும்வேலா 
தயங்கும்பைஞ் சுரும்பெங்குந்
   தனந்தந்தந் தனந்தந்தந்
      தடந்தண்பங் கயங்கொஞ்சுஞ் ...... சிறுகூரா 
தவங்கொண்டுஞ் செபங்கொண்டுஞ்
   சிவங்கொண்டும் ப்ரியங்கொண்டுந்
      தலந்துன்றம் பலந்தங்கும் ...... பெருமாளே.
அறிவைக் குழப்பும் மனக் கவலை, துயரம் ஆகியவை கொண்ட இந்த உடலில் சம்பந்தப்பட்டு நெருங்கியுள்ள ஐந்து பொறிகளின் பாசத்தால் உண்டாகும் துன்பத்தில் வேதனைப்படும் அறிவிலி நான். நிலைத்த நற் குணம் ஒன்றும் இல்லாதவன் நான். ஆண்மை இல்லாதவன், கீழ்மையானவன், இழிந்தவன், கோபம் மிகுந்தவன் ஆகிய நான், மனத் தெளிவை அடைந்து உன்னுடைய பழைய அடியவன் என்னும் உயர் நிலையை அடையும்படி, பாம்பு, பிறைச் சந்திரன், குருந்த மலரின் கொத்து, பிரமனுடைய (தலை) கபாலம், பொருந்திய (கங்கை) நீர் இவை சேர்ந்த அழகிய செஞ்சடையரான சிவபெருமான் புகழ்ந்தும், பார்த்து மகிழ்ந்தும் (உன்னை) வணங்குகின்ற, செம்பொன்னாலாகிய சிலம்புகள் எப்போதும் ஒலி செய்கின்ற (உனது) தாமரைத் திருவடிகளைத் தந்தருளி, என்னுடைய குறைகளைத் தீர்த்து வைப்பாயாக. சொல்லப்படுகின்ற நரிகள், நெருங்கும் நாய்கள், சிவந்த கழுகுகள், ஆங்காங்கே கூடி நிற்கும் ரண களத்தைப் பார்த்து மகிழ்ச்சி மிகும்படி, அசுரர்களுக்குத் துன்பம் உண்டாக (அவர்களின்) கண், தலை, கழுத்து, கால், அவரவர்களுடைய கைகள், ஒன்றுக்கொன்று பிணைந்திருந்த எலும்புகள், இவை எல்லாம் அழிவுபடும்படி துண்டு துண்டாக்கிய வேலனே, ஒளி வீசும் பசுமையான வண்டுகள் எல்லா இடத்திலும் தனந்தந்தந் தனந்தந்தம் என்ற ஒலியுடன் குளங்களில் உள்ள குளிர்ந்த தாமரை மலர்களில் கொஞ்சுகின்ற சிறுகூர் என்னும் தலத்தில் வீற்றிருப்பவனே, தவத்தை மேற்கொண்டும், மந்திரங்களுடன் கூடிய ஜெபத்தை மேற்கொண்டும், சிவ ஞானத்தாலும் விருப்பத்துடன் நாடி (அடியவர்கள்) அடைகின்ற தலமாகிய பொன்னம்பலத்தில் (சிதம்பரத்தில்) வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 465 - சிதம்பரம் 
ராகம் - ....; தாளம் -
தனனந் தனத்த தந்த தனனந் தனத்த தந்த
     தனனந் தனத்த தந்த ...... தனதான
பருவம் பணைத்தி ரண்டு கரிகொம் பெனத்தி ரண்டு
     பவளம் பதித்த செம்பொ ...... னிறமார்பிற் 
படருங் கனத்த கொங்கை மினல்கொந் தளித்து சிந்த
     பலவிஞ் சையைப்பு லம்பி ...... யழகான 
புருவஞ் சுழற்றி யிந்த்ர தநுவந் துதித்த தென்று
     புளகஞ் செலுத்தி ரண்டு ...... கயல்மேவும் 
பொறிகண் சுழற்றி ரம்ப பரிசம் பயிற்றி மந்த்ர
     பொடிகொண் டழிக்கும் வஞ்ச ...... ருறவாமோ 
உருவந் தரித்து கந்து கரமும் பிடித்து வந்து
     உறவும் பிடித்த ணங்கை ...... வனமீதே 
ஒளிர்கொம் பினைச்ச வுந்த ரியவும் பலைக்கொ ணர்ந்து
     ஒளிர்வஞ் சியைப்பு ணர்ந்த ...... மணிமார்பா 
செருவெங் களத்தில் வந்த அவுணன் தெறித்து மங்க
     சிவமஞ் செழுத்தை முந்த ...... விடுவோனே 
தினமுங் களித்து செம்பொ னுலகந் துதித்தி றைஞ்சு
     திருவம் பலத்த மர்ந்த ...... பெருமாளே.
இளமையான, பருத்த, இரு யானைத் தந்தங்கள் என்று சொல்லும்படி திரட்சியுற்று, பவளம் பதித்தது போன்ற செவ்விய பொன்னிறமான மார்பில் பரந்துள்ள கனம் கொண்ட மார்பகங்கள் மின்னல் மின்னி எழுந்தது போல ஒளி வீச, பல மாய வித்தைப் பேச்சுக்களைப் பலமாகப் பேசி, தமது அழகான புருவங்களைச் சுழற்றி, வானவில் வந்து தோன்றியது போலப் புளகம் தருகின்ற இரண்டு கயல் மீன் போல் உள்ள உறுப்பாகிய கண்களைச் சுழற்றி, நிரம்பவும் தொட்டுப் பயின்று, சொக்குப் பொடி கொண்டு அழிக்கின்ற வஞ்சகர்களாகிய பொது மகளிருடைய உறவு நல்லதாகுமோ? மாறுவேடம் பூண்டு, ஆசையுடன் (வளைச் செட்டியாய் வள்ளியின்) கைகளைப் பற்றி மகிழ்ந்து, அவளது உறவையும் கொண்டு, வள்ளிமலைக் காட்டில் விளங்கும் கொம்பினை உடைய அழகிய (கணபதியாகிய) யானையை வரவழைத்து, விளங்கும் வஞ்சிக்கொடி போன்ற வள்ளியைக் கலந்த அழகிய மார்பனே, போர் நடந்த கொடிய போர்க்களத்தில் வந்த சூரன் பிளவுபட்டு அழிய (நமசிவாய என்ற) பஞ்சாக்ஷரத்தின் ஆற்றலைக் கொண்ட வேலை வேகமாகச் செலுத்தியவனே, நாள்தோறும் மகிழ்ச்சியுடன் செவ்விய பொன்னுலகத்தினரான தேவர்கள் துதித்து வணங்கும் திரு அம்பலத்தில் (சிதம்பரத்தில்) வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 466 - சிதம்பரம் 
ராகம் - ...; தாளம் -
தனனந் தனத்த தந்த தனனந் தனத்த தந்த
     தனனந் தனத்த தந்த ...... தனதான
மதவெங் கரிக்கி ரண்டு வலுகொம் பெனத்தி ரண்டு
     வளரும் தனத்த ணிந்த ...... மணியாரம் 
வளைசெங் கையிற்சி றந்த வொளிகண் டுநித்தி லங்கு
     வரருந் திகைத்தி ரங்க ...... வருமானார் 
விதவிங் கிதப்ரி யங்கள் நகைகொஞ் சுதற்கு ணங்கள்
     மிகைகண் டுறக்க லங்கி ...... மருளாதே 
விடுசங் கையற்று ணர்ந்து வலம்வந் துனைப்பு கழ்ந்து
     மிகவிஞ் சுபொற்ப தங்கள் ...... தருவாயே 
நதியுந் திருக்க ரந்தை மதியுஞ் சடைக்க ணிந்த
     நடநம் பருற்றி ருந்த ...... கயிலாய 
நகமங் கையிற்பி டுங்கு மசுரன் சிரத்தொ டங்கம்
     நவதுங் கரத்ந முந்து ...... திரடோளுஞ் 
சிதையும் படிக்கொ ரம்பு தனைமுன் தொடுத்த கொண்டல்
     திறல்செங் கணச்சு தன்றன் ...... மருகோனே 
தினமுங் கருத்து ணர்ந்து சுரர்வந் துறப்ப ணிந்த
     திருவம் பலத்த மர்ந்த ...... பெருமாளே.
மதம் கொண்ட கொடிய யானையின் இரண்டு வலிமையான கொம்புகள் என்று சொல்லும்படியாக, திரட்சியுற்று வளர்கின்ற மார்பகங்கள் மீது அணிந்துள்ள ரத்தின மாலை, செங்கையில் வளைகள், இவைகள் ஒளி சிறந்து விளங்குவதைப் பார்த்து எல்லாவற்றையும் துறந்தவர்களான சான்றோர்களும் திகைப்புற்று மனம் நெகிழும்படி வருகின்ற மான் போன்ற மாதர்களின் விதம் விதமான இன்பம் தரும் செயல்களையும், சிரிப்புடன் கொஞ்சிப் பேசும் குணங்களின் மேம்பாட்டையும் பார்த்து, அவை மனத்தில் அழுந்த, உள்ளம் கலங்கி மோக மயக்கம் கொள்ளாமல், ஆசை விட்டொழிந்து, சிறிதேனும் சந்தேகம் கொள்ளாமல் உன்னை உணர்ந்து, உன்னைச் சுற்றி வலம் வந்து, உன்னைப் புகழ்ந்திட, மிக மேலான, அழகிய திருவடிகளைத் தந்து அருளுக. கங்கை ஆற்றையும், அழகிய கரந்தை மலரையும், பிறைச் சந்திரனையும் சடையில் அணிந்தவரும், நடனம் ஆடுகின்றவருமான நடராஜப் பெருமான் பொருந்தி வீற்றிருந்த கயிலாய மலையை, தனது கையால் பிடுங்க முயன்ற அசுரனாகிய ராவணனுடைய தலைகளும், உடலும், உயர்ந்த நவரத்தின மாலை விளங்கும் திரண்ட தோள்களும் சிதைந்து போகும்படி ஒப்பற்ற அம்பை முன்பு செலுத்தியவரும், மேகம் போன்று கரு நிறம் கொண்டவரும், வலிமை விளங்கும் செவ்விய கண்களை உடையவருமான ராமனின் (திருமாலின்) மருகனே, நாள்தோறும் உன்னைத் தொழுவதின் பயனை உணர்ந்த தேவர்கள் உன்னைத் தாழப் பணிந்த திரு அம்பலத்தே (சிதம்பரத்தில்) அமர்ந்த பெருமாளே. 
பாடல் 467 - சிதம்பரம் 
ராகம் -...; தாளம் -
தனதந்தன தனதந்தன தனதந்தன தான
     தனதந்தன தனதந்தன தனதந்தன தான
          தனதந்தன தனதந்தன தனதந்தன தானத் ...... தனதான
முகசந்திர புருவஞ்சிலை விழியுங்கயல் நீல
     முகிலங்குழ லொளிர்தொங்கலொ டிசைவண்டுகள் பாட
          மொழியுங்கிளி யிதழ்பங்கய நகைசங்கொளி காதிற் ...... குழையாட 
முழவங்கர கமுகம்பரி மளகுங்கும வாச
     முலையின்பர சகுடங்குவ டிணைகொண்டுநல் மார்பில்
          முரணுஞ்சிறு பவளந்தர ளவடந்தொடை யாடக் ...... கொடிபோலத் 
துகிரின்கொடி யொடியும்படி நடனந்தொடை வாழை
     மறையும்படி துயல்சுந்தர சுகமங்கைய ரோடு
          துதைபஞ்சணை மிசையங்கசன் ரதியின்பம தாகச் ...... செயல்மேவித் 
தொடைசிந்திட மொழிகொஞ்சிட அளகஞ்சுழ லாட
     விழிதுஞ்சிட இடைதொய்ஞ்சிட மயல்கொண்டணை கீனும்
          சுகசந்திர முகமும்பத அழகுந்தமி யேனுக் ...... கருள்வாயே 
அகரந்திரு உயிர்பண்புற அரியென்பது மாகி
     உறையுஞ்சுட ரொளியென்கணில் வளருஞ்சிவ காமி
          அமுதம்பொழி பரையந்தரி உமைபங்கர னாருக் ...... கொருசேயே 
அசுரன்சிர மிரதம்பரி சிலையுங்கெட கோடு
     சரமும்பல படையும்பொடி கடலுங்கிரி சாய
          அமர்கொண்டயில் விடுசெங்கர வொளிசெங்கதிர் போலத் ...... திகழ்வோனே 
மகரங்கொடி நிலவின்குடை மதனன்திரு தாதை
     மருகென்றணி விருதும்பல முரசங்கலை யோத
          மறையன்றலை யுடையும்படி நடனங்கொளு மாழைக் ...... கதிர்வேலா 
வடிவிந்திரன் மகள்சுந்தர மணமுங்கொடு மோக
     சரசங்குற மகள்பங்கொடு வளர்தென்புலி யூரில்
          மகிழும்புகழ் திருவம்பல மருவுங்கும ரேசப் ...... பெருமாளே.
முகம், சந்திரன். புருவம், வில். கண், கயல் மீன். கரிய மேகம் போன்றது அழகிய கூந்தல். ஒளி வீசும் மாலையில் இருந்து இசைகளை வண்டுகள் பாட, பேச்சும் கிளி போன்றது. வாயிதழ், தாமரை. பற்கள் சங்கின் ஒளி கொண்டன. காதில் குண்டலங்கள் அசைவன. அழகிய கையிணைகள் (வளையல்களால்) ஒலி செய்ய, வாசனை உள்ள செஞ்சாந்தின் நறு மணம் கொண்ட மார்பகங்கள் என்னும் இன்பச் சாறு பொருந்திய குடத்துக்கும், மலைக்கும் ஒப்பாகி, பரந்த மார்பில் நிறத்தில் மாறுபடும் சிறிய பவள வடமும், முத்து மாலையும் அசைந்தாட, கொடி அசைவது போல, பவளக் கொடி ஒடிவது போன்ற இடை துவள, நடனம் செய்து, வாழை போன்ற தொடை மறையும்படி அசைந்தாடுகின்ற, அழகிய சுகம் தருகின்ற பெண்களோடு, நெருங்கிய பஞ்சு மெத்தையில் மன்மதன் ரதியும் போல இன்பம் தரும் லீலைகளைச் செய்து, மாலை சிதறவும், பேச்சு கொஞ்சவும், கூந்தல் சுழன்று அசையவும், கண்கள் சோர்வு அடையவும், இடை தளரவும், காம மயக்கம் கொண்டு நான் விலைமாதர்களைத் தழுவிய போதிலும், அழகிய சந்திரன் போன்ற உனது முக தரிசனத்தையும், திருவாயால் கூறும் உபதேச மொழியையும் அடியேனுக்கு அருள் செய்வாயாக. அகர எழுத்தைப் போல் தனித்தும் வேறாக இருந்தும் ஆன்மாக்கள் உய்ய வழி காட்டும் திருமால்* ஆகி, என் கண்ணில் விளங்கும் சுடர் ஒளியாம் சிவகாமியாகிய, அமுதத்தைப் பொழியும் பராசக்தி உமா தேவியின் பாகத்தில் உறையும் சிவபெருமானுக்கு ஒப்பற்ற குழந்தையே, அசுரனுடைய தலை, தேர், குதிரை, வில் இவை எல்லாம் கெட, (அவனுக்குக் காவலாயிருந்த) எழு கிரி, அம்பு முதலிய பல படைகளும் பொடிந்து தூளாக, கடலும், கிரவுஞ்ச மலையும் சாய்ந்து விழ, போரை மேற் கொண்டு வேலைச் செலுத்திய செவ்விய கரத்தினனே, ஒளி வீசும் செஞ்சுடர்ச் சூரியனைப் போல விளங்குபவனே, மகர மீனைக் கொடியாகவும் நிலவைக் குடையாகவும் உடைய மன்மதனின் அழகிய தந்தையாகிய திருமாலின் மருமகன் என்று அழகிய வெற்றிச் சின்னமும், முரசம் என்னும் பறைகளும், சாஸ்திர நூல்களும் புகழ்ந்து நிற்க, பிரமனின் தலை உடையும்படி (அவனைக் குட்டி) திருவிளையாடல் கொண்டவனும், பொன்னின் நிறத்தை உடையவனும் ஆகிய ஒளி வீசும் வேலனே, அழகு நிறைந்த இந்திரனுடைய மகளாகிய தேவயானையோடு அழகிய திருமணத்தைச் செய்து கொண்டு, (பின்பு) காம லீலைகளை குறப் பெண் வள்ளியோடு விளையாடி, திருவளரும் தென்புலியூரில் (சிதம்பரத்தில்) யாவரும் கண்டு களிக்கும் திருவம்பலத்தில் விளங்கும் குமரேசப் பெருமாளே. 
* திருமாலும் உமாதேவியும் ஒரே அம்சத்தினர்.
பாடல் 468 - சிதம்பரம் 
ராகம் - ...; தாளம் -
தந்தன தானன தான தந்தன
     தந்தன தானன தான தந்தன
          தந்தன தானன தான தந்தன ...... தந்ததான
சந்திர வோலைகு லாவ கொங்கைகள்
     மந்தர மாலந னீர்த தும்பநல்
          சண்பக மாலைகு லாவி ளங்குழல் ...... மஞ்சுபோலத் 
தண்கயல் வாளிக ணாரி ளம்பிறை
     விண்புரு வாரிதழ் கோவை யின்கனி
          தன்செய லார்நகை சோதி யின்கதிர் ...... சங்குமேவுங் 
கந்தரர் தேமலு மார்ப ரம்பநல்
     சந்தன சேறுட னார்க வின்பெறு
          கஞ்சுக மாமிட றோதை கொஞ்சிய ...... ரம்பையாரைக் 
கண்களி கூரவெ காசை கொண்டவர்
     பஞ்சணை மீதுகு லாவி னுந்திரு
          கண்களி ராறுமி ராறு திண்புய ...... முங்கொள்வேனே 
இந்திர லோகமு ளாரி தம்பெற
     சந்திர சூரியர் தேர்ந டந்திட
          எண்கிரி சூரர்கு ழாமி றந்திட ...... கண்டவேலா 
இந்திரை கேள்வர்பி தாம கன்கதி
     ரிந்துச டாதரன் வாச வன்தொழு
          தின்புற வேமனு நூல்வி ளம்பிய ...... கந்தவேளே 
சிந்துர மால்குவ டார்த னஞ்சிறு
     பெண்கள்சி காமணி மோக வஞ்சியர்
          செந்தினை வாழ்வளி நாய கொண்குக ...... அன்பரோது 
செந்தமிழ் ஞானத டாக மென்சிவ
     கங்கைய ளாவும காசி தம்பர
          திண்சபை மேவும னாச வுந்தர ...... தம்பிரானே.
சந்திரனைப் போல் குளிர்ந்த ஒளியைத் தரும் காதோலை விளங்க, மார்புகள் மந்தர மலையைப் போல் அசைய, நல்ல குளிர்ச்சி ததும்பும் அழகிய சண்பக மாலை விளங்கும் மெல்லிய கூந்தல் மேகம் போல் விளங்க, குளிர்ந்த மீன் போன்றதும் அம்பு போன்றதுமான கண்களை உடையவர்கள். விண்ணில் விளங்கும் இளம் பிறைச் சந்திரன் போன்ற புருவத்தை உடையவர்கள். கொவ்வைப் பழம் போன்ற சிவந்த வாயிதழை உடையவர்கள். பொது மகளிர்களுக்கே உரித்தான காம லீலைகளைச் செய்பவர்கள். சூரிய ஒளி போன்ற பல்வரிசையும், சங்கு போன்ற கழுத்தையும் உடையவர்கள். தேமல் மார்பில் பரவ, நல்ல சந்தனக் கலவையின் நிறைந்த அழகைப் பெற்ற மார்பின் மேல் ரவிக்கை அணிந்த, அழகிய தொண்டையினின்றும் உண்டான ஒலி கொஞ்சுகின்ற, தேவலோகத்து ரம்பை போன்ற விலைமாதர்கள் மீது, கண்கள் மகிழ மிக்க ஆசை பூண்டு, அவர்களுடன் மெத்தை மீது குலவி விளையாடினும், உனது அழகிய பன்னிரண்டு கண்களும், பன்னிரண்டு வலிய திருப்புயங்களும் என் மனதில் கொண்டு உன்னைத் தியானிப்பேன். இந்திர லோகத்தில் இருக்கும் தேவர்கள் இன்பம் பெறவும், சந்திர சூரியர்களுடைய தேர்கள் நன்கு உலாவி வரவும், எட்டு மலைகளில் இருந்த அசுரர் கூட்டங்கள் அழியும்படியாகக் கண்ட வேலனே, லக்ஷ்மியின் கணவராகிய திருமாலும், பிரமனும், ஒளி வீசும் சந்திரனைச் சடையில் தரித்த சிவபெருமானும், இந்திரனும் தொழுது இன்பம் பெறவே, தரும சாஸ்திரத்தை எடுத்து ஓதிய கந்த வேளே. செங் குங்குமம் அணிந்து பெரிய மலை போன்ற மார்பகங்களைக் கொண்ட சிறு பெண்களுக்கு எல்லாம் முதன்மையானவளாய், உன் ஆசைக்கு உகந்த வஞ்சிக் கொடி போன்றவளாய், செவ்விய தினைப் புனத்தில் வாழ்ந்த வள்ளிக்கு நாயகனே, செந்தமிழ் ஞானத் தீர்த்தமாகிய சிவகங்கை என்னும் தடாகம்* விளங்கும் சிறந்த சிதம்பரம் என்னும் தலத்தில், திண்ணிய கனக சபையில் விளங்கி நிற்கும் அரசனே, அழகிய தம்பிரானே. 
* இத் தீர்த்தத்தில் நீராடினால் செந்தமிழ் ஞானம் பெறலாம்.
பாடல் 469 - சிதம்பரம் 
ராகம் - ஹம்ஸாநந்தி ; தாளம் - அங்கதாளம் - 19 
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமி-2 
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, 
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமி-2
தான தான தான தானன தான தந்த
     தத்த தந்த தத்த தந்த ...... தந்ததான
காய மாய வீடு மீறிய கூடு நந்து
     புற்பு தந்த னிற்கு ரம்பை ...... கொண்டுநாளுங் 
காசி லாசை தேடி வாழ்வினை நாடி யிந்த்ரி
     யப்ர மந்த டித்த லைந்து ...... சிந்தைவேறாய் 
வேயி லாய தோள மாமட வார்கள் பங்க
     யத்து கொங்கை யுற்றி ணங்கி ...... நொந்திடாதே 
வேத கீத போத மோனமெய் ஞான நந்த
     முற்றி டின்ப முத்தி யொன்று ...... தந்திடாயோ 
மாய வீர தீர சூரர்கள் பாற நின்ற
     விக்ர மங்கொள் வெற்பி டந்த ...... செங்கைவேலா 
வாகை வேடர் பேதை காதல வேழ மங்கை
     யைப்பு ணர்ந்த வெற்ப கந்த ...... செந்தில்வேளே 
ஆயும் வேத கீத மேழிசை பாட வஞ்செ
     ழுத்த ழங்க முட்ட நின்று ...... துன்றுசோதீ 
ஆதி நாத ராடு நாடக சாலை யம்ப
     லச்சி தம்ப ரத்த மர்ந்த ...... தம்பிரானே.
இந்த உடல் ஒரு மாய வீடு. அது மிகுத்து எழுந்த ஒரு கூடு போன்றது. அழியும் நீர்க்குமிழியான இந்தச் சிறு குடிலை வைத்து, தினந்தோறும் காசில் ஆசை கொண்டு அதற்காகப் பல இடங்களிலும் தேடி, சுக வாழ்க்கையை விரும்பி, ஐம்பொறிகளாலான மோக மயக்கம் வலுத்து, அதனால் அலைச்சல் உற்று, மனம் சிதறிக் கலங்கி, மூங்கிலைப் போன்ற தோள்களை உடைய அழகிய மாதரின் தாமரை ஒத்த மார்பினை விரும்பி அவர்கள் வசமாகி மனம் நோகாமல், வேதம், கீதம், அறிவு, மெளனம், மெய்ஞ்ஞானம் தழைத்து வளர, பரிபூரண பேரின்ப முக்தி என்னும் ஒப்பற்ற ஒன்றை தந்தருள மாட்டாயோ? மாயத்தில் வல்ல வீர தீர சூரர்கள் (சூரன், சிங்கமுகன், தாரகன்) சிதறி அழிய, அவர்களை வெற்றி கொண்டு, கிரெளஞ்சமலையைப் பிளந்த சிவந்த கையில் வேலை உடையோனே, வெற்றியாளராம் வேடர்களின் மகள் வள்ளியைக் காதலித்தவனே, ஐராவதம் என்ற யானை வளர்த்த மங்கை தேவயானையை மணந்த மலைக் கிழவோனே, கந்தனே, திருச்செந்தூரில் வாழும் கடவுளே, ஆய்ந்து வேத கீதங்களையும் ஏழிசைகளையும் பாட, பஞ்சாட்சரமாகிய நமசிவாய மந்திரத்தை ஓதி முழங்க, அவ்வொலி முழுமையும் நின்று நெருங்கி விளங்கும் ஜோதியே, ஆதிநாதராகிய சிவபிரான் ஆடுகின்ற நாடக சாலையாகிய பொன்னம்பலமாகிய சிதம்பரத்தில் அமர்ந்து விளங்கும் தம்பிரானே. 
பாடல் 470 - சிதம்பரம் 
ராகம் - மோஹனம்; தாளம் - அங்கதாளம் - 8 1/2 
தகதிமி-2, தகதிமி-2, தகதகிட-2 1/2, தகதிமி-2 
- எடுப்பு - 1/2 இடம்
தனதன தனதன தானான தானன
     தனதன தனதன தானான தானன
          தனதன தனதன தானான தானன ...... தந்ததான
அவகுண விரகனை வேதாள ரூபனை
     அசடனை மசடனை ஆசார ஈனனை
          அகதியை மறவனை ஆதாளி வாயனை ...... அஞ்சுபூதம் 
அடைசிய சவடனை மோடாதி மோடனை
     அழிகரு வழிவரு வீணாதி வீணனை
          அழுகலை யவிசலை ஆறான வூணனை ...... அன்பிலாத 
கவடனை விகடனை நானாவி காரனை
     வெகுளியை வெகுவித மூதேவி மூடிய
          கலியனை அலியனை ஆதேச வாழ்வனை ...... வெம்பிவீழுங் 
களியனை யறிவுரை பேணாத மாநுட
     கசனியை யசனியை மாபாத னாகிய
          கதியிலி தனையடி நாயேனை யாளுவ ...... தெந்தநாளோ 
மவுலியி லழகிய பாதாள லோகனு
     மரகத முழுகிய காகோத ராஜனு
          மநுநெறி யுடன்வளர் சோணாடர் கோனுட ...... னும்பர்சேரும் 
மகபதி புகழ்புலி யூர்வாழு நாயகர்
     மடமயில் மகிழ்வுற வானாடர் கோவென
          மலைமக ளுமைதரு வாழ்வேம னோகர ...... மன்றுளாடும் 
சிவசிவ ஹரஹர தேவா நமோநம
     தெரிசன பரகதி யானாய் நமோநம
          திசையினு மிசையினும் வாழ்வே நமோநம ...... செஞ்சொல்சேருந் 
திருதரு கலவி மணாளா நமோநம
     திரிபுர மெரிசெய்த கோவே நமோநம
          ஜெயஜெய ஹரஹர தேவா சுராதிபர் ...... தம்பிரானே.
துர்க்குணம் படைத்த தந்திரசாலியான என்னை, வேதாளமே உருவெடுத்தது போன்ற உருவத்தினனான என்னை, முட்டாளும் குணம் கெட்டவனுமான என்னை, ஆசாரக் குறைவுபட்டவனான என்னை, கதியற்றவனை, மலை வேடனைப் போன்ற என்னை, வீம்பு பேசும் வாயையுடைய என்னை, ஐம்பூதங்களின் சேர்க்கையான பயனற்ற உடலை உடைய என்னை, மூடர்களுக்குள் தலைமையான மூடனாகிய என்னை, அழிந்து போகும் கருவில் வந்த வீணருள் தலையான வீணனை, அழுகிப் போனஅவிந்து போன பண்டமாகிய என்னை, அறுசுவை உணவை விரும்பி உண்ணும் என்னை, அன்பில்லாமல் கபடமே குடிகொண்ட நெஞ்சினனான என்னை, உன்மத்தம் கொண்ட என்னை, பலவித மனவிகாரங்களுள்ள என்னை, கோபியை, மிகுந்த மூதேவித்தனம் உடைய சனியனை, ஆண்மையற்றவனாகிய என்னை, நிலையற்ற வாழ்வு வாழும் என்னை, வீணாகி விழும் பெருங்குடியனாகிய என்னை, நல்ல நெறி உரைகளை விரும்பாத மனிதப்பதர் போன்ற என்னை, இடிபோன்ற குரலனை, மகா பாதகனை, கதியேதும் அற்ற என்னை, இத்தகைய நாயினும் கீழான என்னை நீ ஆண்டருளும் நாள் உண்டோ? மணிமுடிகள் அழகாக உள்ள பாதாளலோகனாகிய ஆதிசேஷனும், பச்சை நிறம் உடல் முழுதும் உள்ள சர்ப்பராஜன் பதஞ்சலியும், மநு நீதியுடன் ஆளும் சோழநாட்டரசர் தலைவன்அநபாயனுடன் தேவர்கள் புடைசூழ வரும் இந்திரனும், புகழ்கின்ற புலியூர் சிதம்பரத்தில் வாழ்கின்ற சபாநாயகர் நடராஜரும் அவர் அருகில் இளமயில் போல நிற்கின்ற சிவகாமசுந்தரியும் மகிழ்ச்சி அடைய வானில் உள்ள தேவர்களுக்கெல்லாம் தலைவனாக விளங்கும், மலைமகள் பார்வதி பெற்ற செல்வமே, மனத்துக்கு இனியவனே, பொன்னம்பலத்தில் நடனமாடும் சிவசிவ ஹரஹர தேவா*, போற்றி, போற்றி, கண்டு களிக்க வேண்டிய மேலான கதிப் பொருளானாய், போற்றி, போற்றி, எல்லாத் திசைகளிலும், இசைகளிலும் வாழ்பவனே, போற்றி, போற்றி, இனிய சொற்களையே பேசுகின்ற வள்ளிநாயகியின் இன்ப மணவாளனே, போற்றி, போற்றி, திரிபுரத்தை எரித்த தலைவனே*, போற்றி, போற்றி, ஜெயஜெய ஹரஹர தேவா, தேவர் தலைவர்களுக்குத் தம்பிரானே. 
* நடராஜனும் முருகனும் ஒருவரே என்னும் கருத்துப்பட அருணகிரிநாதர் பாடுகிறார்.
பாடல் 471 - சிதம்பரம் 
ராகம் - முகாரி; தாளம் - ஆதி 4 களை - 32 
தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1
தத்த தந்ததன தான தந்ததன
     தத்த தந்ததன தான தந்ததன
          தத்த தந்ததன தான தந்ததன ...... தனதான
கட்டி முண்டகர பாலி யங்கிதனை
     முட்டி யண்டமொடு தாவி விந்துவொலி
          கத்த மந்திரவ தான வெண்புரவி ...... மிசையேறிக் 
கற்ப கந்தெருவில் வீதி கொண்டுசுடர்
     பட்டி மண்டபமு டாடி யிந்துவொடு
          கட்டி விந்துபிச காமல் வெண்பொடிகொ ...... டசையாமற் 
கட்டு வெம்புரநி றாக விஞ்சைகொடு
     தத்து வங்கள்விழ சாடி யெண்குணவர்
          சொர்க்கம் வந்துகையு ளாக எந்தைபத ...... முறமேவித் 
துக்கம் வெந்துவிழ ஞான முண்டுகுடில்
     வச்சி ரங்களென மேனி தங்கமுற
          சுத்த கம்புகுத வேத விந்தையொடு ...... புகழ்வேனோ 
எட்டி ரண்டுமறி யாத என்செவியி
     லெட்டி ரண்டுமிது வாமி லிங்கமென
          எட்டி ரண்டும்வெளி யாமொ ழிந்தகுரு ...... முருகோனே 
எட்டி ரண்டுதிசை யோட செங்குருதி
     யெட்டி ரண்டுமுரு வாகி வஞ்சகர்மெ
          லெட்டி ரண்டுதிசை யோர்கள் பொன்றஅயில் ...... விடுவோனே 
செட்டி யென்றுசிவ காமி தன்பதியில்
     கட்டு செங்கைவளை கூறு மெந்தையிட
          சித்த முங்குளிர நாதி வண்பொருளை ...... நவில்வோனே 
செட்டி யென்றுவன மேவி யின்பரச
     சத்தி யின்செயலி னாளை யன்புருக
          தெட்டி வந்துபுலி யூரின் மன்றுள்வளர் ...... பெருமாளே.
பிராண வாயுவை (பாழில் ஓட விடாமல்) அதன் நிலையில் பிடித்துக் கட்டி (*1), மூலாதார (*2) கமலத்திலுள்ள அருள் பாலிக்கும் சிவாக்கினியை மூண்டு எழச் செய்து, அண்டமாகிய கபால பரியந்தம் (பிரமரந்திரம் வரை) தாவச் செய்து, விந்து நாதம் (சிவ - சக்தி ஐக்கியம்) தோன்றி முழங்க, சிறப்பாகக் கட்டப்பட்ட கூடத்தில் மந்திரமயமாக நிற்கும் வெண்மைக் குதிரையின் (*3) மேல் ஏறி, கற்பகத் தருவைப் போல் விரும்பியதை அளிக்க வல்ல அழகிய மேலைச் சிவ வீதியில் அந்த மாயக் குதிரையை நேராக ஓடச் செலுத்தி, எல்லா தத்துவங்களும் ஒன்றுபடும் ஒளிமயமான லலாடமண்டபத்தில் (*4) சென்றடைந்து, (தியானம், பிரத்யாகரணம், தாரணை முதலிய) யோகப் பயிற்சிகளைப் பழகி (*5), சந்திர கலை சலியாமலும், விந்து கழலாமலும் உறுதி பெறக் கட்டி, அந்த வெண்ணீற்றை அணிந்துகொண்டு அசையாமல் நின்று, திரிபுரமாகிய (ஆணவம், கன்மம், மாயை என்ற) மும்மலங்களும் வெந்து நீறாகும்படி சுட்டு, அஷ்டமாசித்து வித்தைகள் (*6) எல்லாம் கைவரப் பெற்று, தத்துவ சேஷ்டைகள் எல்லாம் வேரற்று விழும்படி அழித்து, எண்குணவராகிய (*7) சிவபெருமானுடைய பதவி கை கூடி வந்து சித்திக்க, அச்சிவபதவியில் நிலை பெற்றுப் பொருந்தி, பிறவித் துன்பம் வெந்து நீறாகி ஒழிய, ஞானாமிர்த பானம் குடித்து, தேகம் வஜ்ர காயமாகவும், நிறம் தங்கம் போலவும் மாற்றி, தூய முக்தி கூட, விசித்திரமான வேதச்சந்தத்துடன் உனது திருப்புகழைப் பாடுவேனோ? எட்டும் இரண்டும் பத்து என்பதையும் தெரியாத என் காதுகளில் இவையே சிவக் குறியாகிய இலிங்கம் (*8) என்று அந்த அகார உகார மகார (*9) இலக்கணங்களைத் தெளிவாக உபதேசித்த குருவான முருகோனே, எட்டுத் திசைகளிலும், இந்த அண்டத்தின் கீழும் மேலுமாக, பத்து திக்குகளிலும் சிவப்பு நிற இரத்தம் ஓடும்படி பதினாறு வகை (*10) உருவத் திருமேனி விளங்க (பாசறையில் இருந்து), வஞ்சகர்களாகிய அசுரர்களின் மீதும் பின்னும் பத்துத் திசை அண்டங்களில் இருந்த அசுரர்கள் மீதும் அவர்கள் அழிய வேலை விடுபவனே, வளையல் செட்டி வடிவெடுத்து, சிவகாமி அங்கயற் கண்ணியாய் வீற்றிருக்கும் மதுரையில், கைகள் சிவக்க, வளையல்களை அடுக்கி விலை கூறின எந்தை சிவபெருமானுடைய மனமும் குளிரும்படி ஆதியற்றதும், வளமையானதுமான மூலப் பிரணவப் பொருளை உபதேசித்தவனே, வளையல் செட்டியின் வேடத்துடன் நீயும் வள்ளிமலைச் சாரலில் தினை வனத்துக்குச் சென்று, அங்கே இச்சா சக்தி மயமான வள்ளி நாயகியை அன்பு கனிந்து அபகரித்து வந்து, சிதம்பரத்தில் பொன் அம்பலத்தில் விளங்கும் பெருமாளே. 
(*1) இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு:நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு 'ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள், சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி, ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை, சுழுமுனை முதலியன) உள்ளன.'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம்.'சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது.'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும் ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும்.
(*2) ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம் 
(*3) 'வெள்ளைக் குதிரை' சுழுமுனையாகிய வெள்ளை நாடியைக் குறிக்கும். 
(*4) 'லலாட மண்டபம்' புருவ மத்தியைக் குறிக்கும். இங்கு 'சுழுமுனை', 'இடைகலை', 'பிங்கலை' ஆகிய மூன்று நாடிகளும் கூடுவதால் பிரகாசமான மண்டபம் தோன்றும். 
(*5) அஷ்டாங்க யோகம் என்ற எட்டு வகை யோகங்கள் பின்வருமாறு:1. இயமம் - பொய்யாமை, கொல்லாமை, திருடாமை, காமுறாமை, பிறர் பொருள் வெ·காமையுடன் புலன் அடக்குதல்.2. நியமம் - தவம், தூய்மைத் தத்துவம் உணர்தல், புனிதம், தானம், சைவ முறைகள், சைவ சித்தாந்த ஞானம், யாகம்.3. ஆசனம் - உடலால் செய்யும் யோக முறைகள் - குறிப்பாக பத்ம, சிம்ம, பத்ர, கோமுக ஆசனங்கள்.4. ப்ராணாயாமம் - ரேசகம், கும்பகம், பூரகம் என்ற வகைகளிலே மூச்சை அடக்கி ஆளும் முறை.5. ப்ரத்யாஹாரம் - இந்திரியங்களை விஷயங்களிலிருந்து திருப்பி, இறைவனை உள்முகமாகப் பார்த்தல்.6. தாரணை - மனத்தை ஒருநிலைப் படுத்தி முதுகு நாடியிலுள்ள ஆறு சக்ர ஆதாரங்களிலும் இறைவனை பாவித்தல்.7. தியானம் - ஐம்புலன்கள், பஞ்ச பூதங்கள், மனம், சித்தம் முதலிய அந்தக்கரணங்கள் - இவற்றை அடக்கி தியானித்தல்.8. சமாதி - மனத்தைப் பரம்பொருளோடு நிறுத்தி ஸஹஸ்ராரத்தில் சிவ சக்தி ஐக்கியத்தோடு ஒன்றுபடல்.(ஆதாரம் 'திருமந்திரம்', திருமூலர் அருளியது).
(*6) அஷ்டமாசித்திகள் பின்வருமாறு:அணிமா - அணுவிலும் சிறிய உருவினன் ஆதல்.மகிமா - மேருவினும் பெரிய உருவினன் ஆதல்.கரிமா - ஆயுதங்களுக்கும், ஆகாயத்துக்கும், காலத்துக்கும் அப்பால் ஆதல்.லகிமா - ஆகாயகமனம், அந்தரத்தில் இருத்தல்.பிராப்தி - பர காயங்களில் புகுதல் (கூடுவிட்டு கூடுபாய்தல்).பிராகாமியம் - எல்லாவற்றிலும் நிறைந்திருத்தல்.ஈசத்துவம் - எல்லாவற்றுக்கும் நாதனாக இருத்தல்.வசித்துவம் - எல்லா இடங்களிலும் இருந்து யாவற்றையும் வசப்படுத்தல்.
(*7) சிவனின் எண் குணங்கள்:1. தன்வயத்தனாதல்,2. தூய உடம்பினன் ஆதல்,3. இயற்கை உணர்வினன் ஆதல்,4. முற்றும் உணர்தல்,5. இயல்பாகவே பாசங்களினின்று நீங்குதல்,6. பேரருள் உடைமை,7. முடிவிலா ஆற்றல் உடைமை,8. வரம்பிலா இன்பம் உடைமை.
(* 8) தமிழில் எட்டும் இரண்டும் சேர்ந்த தொகையாகிய பத்து, 'ய' என்று எழுதப்படும். இந்த எழுத்து 'நமசிவாய' என்ற பஞ்சாட்சரத்தின் கடைசி எழுத்து. இது குண்டலினி யோகத்தின் 'ஆக்ஞா' சக்கரத்தில் இரண்டு புருவ மத்தியில் உள்ளது. இதன் கடவுள் 'சதாசிவன்' - லிங்க உருவத்தில் உள்ளார்.
 (* 9) தமிழில் எட்டுக்கு உரிய எழுத்து 'அ'. இரண்டுக்கு உரிய எழுத்து 'உ'. இவற்றோடு 'இரண்டும்' என்ற வார்த்தையின் கடைசி எழுத்தாகிய 'ம்' என்ற எழுத்தைச் சேர்த்தால் 'அ+உ+ம்'= 'ஓம்' என்று ஆகிறது.
 (*10) குமார தந்திரம் என்ற தோத்திரத்தில் முருகக் கடவுளின் 16 திருவுருவ வகைகள் கூறப்படுகின்றன: 1. சக்திதரர் 2. ஸ்கந்தர் 3. தேவசேனாதிபதி 4. சுப்ரமணியர் 5. கஜவாகனர் 6. சரவணபவர் 7. கார்த்திகேயர் 8. குமாரர் 9. ஷண்முகர் 10. தாரகாரி 11. ஸேனானி 12. பிரம்மசாஸ்த்ரு 13. வள்ளிகல்யாணசுந்தரர் 14. பாலஸ்வாமி 15. கிரெளஞ்சபேதனர் 16. சிகிவாகனர்.
பாடல் 472 - சிதம்பரம் 
ராகம் - ஆபோகி; தாளம் - கண்டசாபு - 2 1/2
தந்தனத் தானதன தந்தனத் தானதன
     தந்தனத் தானதன ...... தந்ததான
நஞ்சினைப் போலுமன வஞ்சகக் கோளர்களை
     நம்புதற் றீதெனநி ...... னைந்துநாயேன் 
நண்புகப் பாதமதி லன்புறத் தேடியுனை
     நங்களப் பாசரண ...... மென்றுகூறல் 
உன்செவிக் கேறலைகொல் பெண்கள்மெற் பார்வையைகொல்
     உன்சொலைத் தாழ்வுசெய்து ...... மிஞ்சுவாரார் 
உன்றனக் கேபரமும் என்றனக் கார்துணைவர்
     உம்பருக் காவதினின் ...... வந்துதோணாய் 
கஞ்சனைத் தாவிமுடி முன்புகுட் டேயமிகு
     கண்களிப் பாகவிடு ...... செங்கையோனே 
கண்கயற் பாவைகுற மங்கைபொற் றோடழுவு
     கஞ்சுகப் பான்மைபுனை ...... பொன்செய்தோளாய் 
அஞ்சவெற் பேழுகடல் மங்கநிட் டூரர்குலம்
     அந்தரத் தேறவிடு ...... கந்தவேளே 
அண்டமுற் பார்புகழு மெந்தைபொற் பூர்புலிசை
     அம்பலத் தாடுமவர் ...... தம்பிரானே.
விஷம் போல மனத்தில் வஞ்சகம் கொண்டவர்களை நம்புதல் கெடுதலாகும் என்று நினைத்து அடியேன் நட்பு பெருக உன் திருவடிகளில் அன்போடு தேடி உன்னை எங்கள் அப்பனே சரணம் என்று கூவி முறையிடும் கூச்சல் உனது செவிகளில் விழவில்லையா? தேவிகள் வள்ளி தேவயானை மேல் கண்பார்வையால் கேட்கவில்லையா? உன் உபதேச மொழியைத் தாழ்ச்சி சொல்லி யார் வரம்பு மீறுவர்? என்னைக் காக்கும் பாரம் உந்தனுக்கே ஆகும். உன்னை விட்டால் எனக்கு வேறு யார் துணைவர் உள்ளனர்? தேவர்களுக்கு அருளியதுபோல் என்முன்னும் தோன்றி அருள்க. பிரமனை எட்டி அவனது முடியில் முன்பு நன்றாகக் குட்டி மிக்க களிப்புடன் வீசிய சிவந்த கையை உடையவனே, கயல் மீன் போன்ற கண்ணாள் குற வள்ளியின் அழகிய தோளை அணைக்கும் பொன் தோளாய், உடலைச் சட்டை தழுவுவது போல இறுக்க அணைத்தவனே, கிரெளஞ்ச மலைகள் ஏழும் நடுங்க, கடல் நீர் வற்றி ஒடுங்க, அசுரர் குலத்தை விண்ணிலேறும்படி கொன்ற கந்தவேளே, அண்டம் முதலிய உலகங்கள் யாவும் புகழும் எம் தந்தையார் சிவபெருமானின் அழகிய புலியூரில் (சிதம்பரத்தில்) அம்பலத்தில் ஆடும் நடராஜர் தம்பிரானே. 
பாடல் 473 - சிதம்பரம் 
ராகம் -...; தாளம் -
தந்ததன ...... தனதான
     தந்ததன ...... தனதான
செங்கலச ...... முலையார்பால்
     சிந்தைபல ...... தடுமாறி 
அங்கமிக ...... மெலியாதே
     அன்புருக ...... அருள்வாயே 
செங்கைபிடி ...... கொடியோனே
     செஞ்சொல்தெரி ...... புலவோனே 
மங்கையுமை ...... தருசேயே
     மன்றுள்வளர் ...... பெருமாளே.
செம்புக் குடம் போன்ற மார்பகங்களை உடைய விலைமாதர் மீது மையலால் மனம் பலவாகத் தடுமாறி என்னுடல் மிகவும் மெலிவு அடையாமல், உன் அன்பால் என் உள்ளம் உருகும்படி அருள் செய்வாயாக. சிவந்த கையில் பிடித்துள்ள சேவல் கொடியோனே, சிறந்த சொற்களைத் தெரிந்த புலவனே, மங்கை பார்வதி ஈன்ற குழந்தையே, தில்லைப் பொன்னம்பலத்தினுள் விளங்கும் பெருமாளே. 
பாடல் 474 - சிதம்பரம் 
ராகம் - ...; தாளம் -
தனன தான தனந்தன தானன
     தனன தான தனந்தன தானன
          தனன தான தனந்தன தானன ...... தந்ததான
கரிய மேக மெனுங்குழ லார்பிறை
     சிலைகொள் வாகு வெனும்புரு வார்விழி
          கயல்கள் வாளி யெனுஞ்செய லார்மதி ...... துண்டமாதர் 
கமுக க்¡£வர் புயங்கழை யார்தன
     மலைக ளாஇ ணையுங்குவ டார்கர
          கமல வாழை மனுந்தொடை யார்சர ...... சுங்கமாடை 
வரிய பாளி தமுந்துடை யாரிடை
     துடிகள் நூலி யலுங்கவி னாரல்குல்
          மணமு லாவி யரம்பையி னார்பொருள் ...... சங்கமாதர் 
மயில்கள் போல நடம்புரி வாரியல்
     குணமி லாத வியன்செய லார்வலை
          மசகி நாயெ னழிந்திட வோவுன ...... தன்புதாராய் 
சரியி லாத சயம்பவி யார்முகி
     லளக பார பொனின்சடை யாள்சிவை
          சருவ லோக சவுந்தரி யாளருள் ...... கந்தவேளே 
சதப ணாம குடம்பொடி யாய்விட
     அவுணர் சேனை மடிந்திட வேயொரு
          தழல்கொள் வேலை யெறிந்திடு சேவக ...... செம்பொன்வாகா 
அரிய மேனி யிலங்கையி ராவணன்
     முடிகள் வீழ சரந்தொடு மாயவன்
          அகில மீரெ ழுமுண்டவன் மாமரு ...... கண்டரோதும் 
அழகு சோபி தஅங்கொளு மானன
     விபுதை மோகி குறிஞ்சியின் வாழ்வளி
          அருள்கொ டாடி சிதம்பர மேவிய ...... தம்பிரானே.
கரு நிறம் வாய்ந்த மேகம் என்று சொல்லும்படியான கூந்தலை உடையவர். பிறை போலவும் வில் போலவும் விளங்கி அழகு கொண்ட புருவங்களை உடையவர். கயல் மீனை ஒத்த கண்கள் அம்பு போன்று செயலை ஆற்றும் தொழிலினர். சந்திரன் போன்ற முகம் உடைய விலைமாதர்கள். கமுகு போன்ற கழுத்தை உடையவர். மூங்கில் போன்ற தோள்களை உடையவர். மார்பகங்கள் மலைக்கு இணையான திரட்சி உடையவர். தாமரை போன்ற கைகள், வாழை போன்ற தொடைகளை உடையவர். கள்ளத்தனமான நடையால் கைக்கொண்ட பொன்னால் வாங்கப்பட்ட பட்டுப் புடவைகளால் முன்னிட்டு விளங்கும் உடைகளைத் தரித்தவர். இடுப்பு உடுக்கை போலவும் நூல் போலவும் உள்ள அழகியர். அழகு நிறைந்த பெண்குறி நறு மணம் வீசும் அரம்பை போன்றவர். பொருளுக்காகக் கூடுதலை உடைய பொது மாதர் மயிலைப் போன்று நடனம் செய்பவர். நல்ல தன்மையான குணம் இல்லாத வியப்பான செயல்களைக் கொண்டவர் ஆகிய விலைமாதர்களின் வலையில் மனம் கலக்குண்டு அடியேன் அழிவுறலாமோ? உன்னுடைய அன்பைத் தந்தருள்வாய். தனக்கு ஒப்பில்லாத சுயம்புவான தேவதை, மேகம் போன்ற கூந்தல் பாரத்தை உடையவள், பொன் நிறமான சடையை உடையவளாகிய சிவை, எல்லா உலகங்களுக்கும் மேம்பட்ட அழகு உடையவள் ஆகிய உமை பெற்று அருளிய கந்தவேளே. நூற்றுக் கணக்கான பருத்த மணி முடிகள் பொடியாக, அசுரர்களின் சேனை இறக்க, ஒப்பற்ற நெருப்பைக் கொண்டதுமான வேலைச் செலுத்திய வல்லவனே, செம் பொன் நிற அழகனே, அருமையான உடலைக் கொண்ட இலங்கை அரசனாகிய ராவணன் தலைகள் அற்று விழும்படி அம்பைச் செலுத்திய மாயவனும், பதினான்கு உலகங்களையும் உண்டவனுமாகிய திருமாலின் சிறந்த மருகனே, தேவர்கள் ஓதிப் புகழும் அழகு வாய்ந்த ஒளியை உடையவனே, எழில் வாய்ந்த முகத்தை உடைய தேவதையாகிய தேவயானை, உன் ஆசைக்கு உகந்தவளாகிய மலை நில ஊரில் (வள்ளிமலையில்) வாழ்கின்ற வள்ளி நாயகி ஆகிய இருவருக்கும் அருள் புரிந்து லீலைகள் செய்து, சிதம்பரத்தில் வீற்றிருக்கும் தம்பிரானே. 
பாடல் 475 - சிதம்பரம் 
ராகம் - ....; தாளம் -
தாந்த தானன தந்த தனந்தன
     தாந்த தானன தந்த தனந்தன
          தாந்த தானன தந்த தனந்தன ...... தந்ததான
கூந்த லாழவி ரிந்து சரிந்திட
     காந்து மாலைகு லைந்து பளிங்கிட
          கூர்ந்த வாள்விழி கெண்டை கலங்கிட ...... கொங்கைதானுங் 
கூண்க ளாமென பொங்கந லம்பெறு
     காந்தள் மேனிம ருங்குது வண்டிட
          கூர்ந்த ஆடைகு லைந்துபு ரண்டிர ...... சங்கள்பாயச் 
சாந்து வேர்வின ழிந்து மணந்தப
     வோங்க வாகில்க லந்து முகங்கொடு
          தான்ப லாசுளை யின்சுவை கண்டித ...... ழுண்டுமோகந் 
தாம்பு றாமயி லின்குரல் கொஞ்சிட
     வாஞ்சை மாதரு டன்புள கங்கொடு
          சார்ந்து நாயென ழிந்துவி ழுந்துடல் ...... மங்குவேனோ 
தீந்த தோதக தந்தன திந்திமி
     ஆண்ட பேரிகை துந்துமி சங்கொடு
          சேர்ந்த பூரிகை பம்பை தவண்டைகள் ...... பொங்குசூரைச் 
சேண்சு லாமகு டம்பொடி தம்பட
     வோங்க வேழ்கட லுஞ்சுவ றங்கையில்
          சேந்த வேலது கொண்டு நடம்பயில் ...... கந்தவேளே 
மாந்த ணாருவ னங்குயில் கொஞ்சிட
     தேங்கு வாழைக ரும்புகள் விஞ்சிடு
          வான்கு லாவுசி தம்பரம் வந்தமர் ...... செங்கைவேலா 
மாண்ப்ர காசத னங்கிரி சுந்தர
     மேய்ந்த நாயகி சம்பைம ருங்குபொன்
          வார்ந்த ரூபிகு றம்பெண் வணங்கிய ...... தம்பிரானே.
கூந்தல் தாழ்ந்து விரிவுற்றுச் சரிந்து விழ, ஒளி வீசும் மாலை குலைவுற்று பளிங்கு போல் விளங்க, கூரியவாள் போன்றும் கெண்டை மீன் போன்றும் உள்ள கண்கள் கலக்கம் கொள்ள, மார்பகங்களும் குன்று போல எழுச்சி கொள்ள, செழிப்புள்ள காந்தள் பூ போன்ற உடலில் இடை துவண்டு போக, அவ்விடையைச் சுற்றி வளைத்துள்ள ஆடை குலைவு உற்றுப் புரண்டு இன்ப ஊறல்கள் பாய்ந்து பெருக, (நெற்றியில் உள்ள) சாந்து வேர்வையினால் அழிந்து வாசனை கெட, மிக்கு எழும் காதலுடன் சேர்ந்து முகத்தோடு முகம் கொடுத்து, பலாச் சுளையின் சுவை கண்டது போல் வாயிதழை உண்டு, காம ஆசையால் புறா, மயில் ஆகிய புட்குரலுடன் கொஞ்ச, ஆசை வைத்த விலைமாதர்களுடன் புளகாங்கிதத்துடன் இணங்கி நாய் போல அழிந்து விழுந்து உடல் வாட்டம் அடைவேனோ? தீந்த தோதக தந்தன திந்திமி என்ற ஓசையை எழுப்புகின்ற பேரிகை, துந்துபி, சங்கு இவைகளுடன் சேர்ந்த ஊதுகுழல், பம்பை என்னும் பறை, பேருடுக்கைகள் இவைகளுடைய ஒலி மிக்கு எழ வந்த சூரனுடைய உயர்ந்து விளங்கும் கி¡£டம் பொடிபட, விளங்கும் அந்த ஏழு கடல்களும் வற்றிட, அழகிய கையில் சிவந்த வேலாயுதத்தை ஏந்தி, (துடிக்) கூத்து ஆடுகின்ற கந்தப் பெருமானே, குளிர்ச்சி நிறைந்த மாமரச் சோலையில் குயில் கொஞ்ச, தென்னை, வாழை, கரும்பு ஆகியவை மேலிட்டு எழுந்து ஆகாயத்தை அளாவும் தில்லையில் வந்து வீற்றிருக்கும் செங்கை வேலனே, பெருமையும் ஒளியும் கொண்ட மார்பக மலைகளை உடைய, அழகு வாய்ந்த நாயகி (தேவயானையும்), மின்னல் போன்ற இடையையும் பொன் உருக்கி வார்த்தது போலுள்ள உருவத்தையும் கொண்ட குறப்பெண்ணாகிய வள்ளியும் வணங்கிய பெருமாளே.
பாடல் 476 - சிதம்பரம் 
ராகம் - ...; தாளம் -
தத்த தன்ன தய்ய தத்த தன்ன தய்ய
     தத்த தன்ன தய்ய ...... தனதான
அத்த னன்னை யில்லம் வைத்த சொன்னம் வெள்ளி
     அத்தை நண்ணு செல்வ ...... ருடனாகி 
அத்து பண்ணு கல்வி சுற்ற மென்னு மல்ல
     லற்று நின்னை வல்ல ...... படிபாடி 
முத்த னென்ன வல்லை யத்த னென்ன வள்ளி
     முத்த னென்ன வுள்ள ...... முணராதே 
முட்ட வெண்மை யுள்ள பட்ட னெண்மை கொள்ளு
     முட்ட னிங்ங னைவ ...... தொழியாதோ 
தித்தி மன்னு தில்லை நிர்த்தர் கண்ணி னுள்ளு
     தித்து மன்னு பிள்ளை ...... முருகோனே 
சித்தி மன்னு செய்ய சத்தி துன்னு கைய
     சித்ர வண்ண வல்லி ...... யலர்சூடும் 
பத்த ருண்மை சொல்லு ளுற்ற செம்மல் வெள்ளி
     பத்தர் கன்னி புல்லு ...... மணிமார்பா 
பச்சை வன்னி யல்லி செச்சை சென்னி யுள்ள
     பச்சை மஞ்ஞை வல்ல ...... பெருமாளே.
தந்தை, தாய், வீடு, வைத்துள்ள பொன், வெள்ளி, தந்தையின் சகோதரி, பொருந்திய பிள்ளைகள் இவர்களுடன் கூடியவராய், செய்தொழிலால் (போதாத) வருமானம், கற்று (முடிவுறாத) கல்வி, (அல்லல் தரும்) உறவினர் என்று சொல்லப்படும் துன்பங்கள் நீங்கி, உன்னை இயன்ற வகையினால் பாடி, முக்தி தர வல்லவன் (நீ ஒருவனே) என்றும், திருவலம் என்னும் தலத்தின் பெருமான் என்றும், வள்ளியின் காதலன் என்றும் என்னுடைய உள்ளத்தில் நான் உணராமல், முழுமையான அறியாமை நிறைந்த புலவனும் எளிமை கொண்ட மூடனுமாகிய நான் இப்படி வருந்தி இரங்குவது நீங்காதோ? தித்தி என்னும் தாள ஜதி ஒலிக்கும் தில்லையில் நடனமாடும் நடராஜரின் கண்களினின்றும் தோன்றி நிலை பெற்றுள்ள மகனாகிய முருகனே, பல சித்திகளுக்கு இடமாய் விளங்கும் வேலாயுதம் விளங்கும் திருக்கரத்தோனே, அழகிய திருவுருவம் வாய்ந்த வள்ளி மலர் சூட்டிப் பணியும், பக்தர்களுடைய மெய் பொருந்திய திருவாக்கில் விளங்கும், செம்மலே, வெள்ளை யானையை (ஐராவதத்தை) உடைய இந்திரனின் பெண் (தேவயானை) தழுவும் அழகிய மார்பனே, பச்சை நிறமான வன்னி, அல்லி, வெட்சி இவைகளைத் தலையில் அணிந்தவனே, பச்சை நிறமுடைய மயிலைச் செலுத்த வல்ல பெருமாளே. 
பாடல் 477 - சிதம்பரம் 
ராகம் -...; தாளம் -
தனதாத்த தய்ய தனதாத்த தய்ய
     தனதாத்த தய்ய ...... தனதான
இருள்காட்டு செவ்வி ததிகாட்டி வில்லி
     னுதல்காட்டி வெல்லு ...... மிருபாண 
இயல்காட்டு கொல்கு வளைகாட்டி முல்லை
     நகைகாட்டு வல்லி ...... யிடைமாதர் 
மருள்காட்டி நல்கு ரவுகாட்டு மில்ல
     இடுகாட்டி னெல்லை ...... நடவாத 
வழிகாட்டி நல்ல றிவுகாட்டி மெல்ல
     வினை வாட்டி யல்லல் ...... செயலாமோ 
தெருள்காட்டு தொல்லை மறைகாட்டு மல்லல்
     மொழிகாட்டு தில்லை ...... யிளையோனே 
தினைகாட்டு கொல்லை வழிகாட்ட வல்ல
     குறவாட்டி புல்லு ...... மணிமார்பா 
அருள்காட்டு கல்வி நெறிகாட்டு செல்வ
     அடல்காட்டு வல்ல ...... சுரர்கோபா 
அடிபோற்றி யல்லி முடிசூட்ட வல்ல
     அடியார்க்கு நல்ல ...... பெருமாளே.
இருளைப் போன்ற கரிய செழிப்புற்ற நெருங்கிய கூந்தலைக் காட்டி, வில் போன்ற நெற்றிப் புருவத்தைக் காட்டி, வெல்லக் கூடிய இரு அம்புகளின் இயலைக் காட்டும், கொல்லும் தன்மையை உடைய, குவளை மலர் போன்ற கண்களைக் காட்டி, முல்லை வரிசை போன்ற பற்களைக் காட்டும், கொடி போன்ற இடையுடைய பொது மாதர் மீது காம மயக்கம் காட்டி, அதனால் வரும் வறுமையைக் காட்டுகின்ற சம்சார வாழ்க்கை என்னும் சுடுகாட்டின் முடிவை அடையாதபடி, எனக்கு நல்வழி காட்டியும், நல்ல அறிவைக் காட்டியும், மெல்ல எனது வினையை வாட்டியும் (காப்பாயா அல்லது) எனக்கு மேலும் துன்பம் செய்யலாகுமோ? ஞானவழியைக் காட்டுகின்ற பழமையான வேத மொழிகள் காட்டும் வளமையான உபதேச மொழியை எனக்குக் காட்டிய சிதம்பரத்தில் எழுந்தருளியுள்ள இளம்பூரணனே, தினை விளையும் புனத்திற்கு வழியைக் காட்டவல்ல குறமகளாம் வள்ளி தழுவுகின்ற அழகிய மார்பனே, அருள் நெறியைக் காட்டுகின்ற கல்வி வழியைக் காட்டும் செல்வனே, ஆற்றலைக் காட்டிய வலிய அசுரர்களைக் கோபித்து அழித்தவனே, நின் திருவடிகளைத் தொழுது, தாமரை மலரை நின் முடிமேல் சூட்டவல்ல அடியவர்களுக்கு நல்லவனாகத் திகழும் பெருமாளே. 
பாடல் 478 - சிதம்பரம் 
ராகம் - ...; தாளம் -
தய்யதன தானனத் தானனந் தானதன
     தய்யதன தானனத் தானனந் தானதன
          தய்யதன தானனத் தானனந் தானதன ...... தனதான
முல்லைமலர் போலுமுத் தாயுதிர்ந் தானநகை
     வள்ளைகொடி போலுநற் காதிலங் காடுகுழை
          முல்லைமலர் மாலைசுற் றாடுகொந் தாருகுழ ...... லலைபோதம் 
மொள்குசிலை வாணுதற் பார்வையம் பானகயல்
     கிள்ளைகுர லாரிதழ்ப் பூவெனும் போதுமுக
          முன்னல்கமு கார்களத் தோய்சுணங் காயமுலை ...... மலையானை 
வல்லகுவ டாலிலைப் போலுசந் தானவயி
     றுள்ளதுகில் நூலிடைக் காமபண் டாரஅல்குல்
          வழ்ழைதொடை யார்மலர்க் காலணிந் தாடுபரி ...... புரவோசை 
மல்லிசலி யாடபட் டாடைகொண் டாடமயல்
     தள்ளுநடை யோடுசற் றேமொழிந் தாசைகொடு
          வல்லவர்கள் போலபொற் சூறைகொண் டார்கள்மய ...... லுறவாமோ 
அல்லல்வினை போகசத் தாதிவிண் டோடநய
     வுள்ளமுற வாகவைத் தாளுமெந் தாதைமகி
          ழள்ளமைய ஞானவித் தோதுகந் தாகுமர ...... முருகோனே 
அன்னநடை யாள்குறப் பாவைபந் தாடுவிரல்
     என்னுடைய தாய்வெண்முத் தார்கடம் பாடுகுழல்
          அன்னைவலி சேர்தனக் கோடிரண் டானவளி ...... மணவாளா 
செல்லுமுக ஏழ்கடற் பாழிவிண் டோடதிர
     வல்லசுரர் சேனைபட் டேமடிந் தேகுருதி
          செல்லதிசை யோடுவிட் டாடுசிங் காரமுக ...... வடிவேலா 
தெள்ளுதமிழ் பாடியிட் டாசைகொண் டாடசசி
     வல்லியொடு கூடிதிக் கோர்கள்கொண் டாடஇயல்
          தில்லைநகர் கோபுரத் தேமகிழ்ந் தேகுலவு ...... பெருமாளே.
(முதல் 12 வரிகள் வேசையரின் அங்க நலத்தை வருணிப்பன). முல்லை மலர் போலவும், முத்துக்கள் உதிர்ந்தனவைகளால் அமைந்தன போலவும் உள்ள பற்களையும், வள்ளிக் கொடியைப் போல உள்ள நல்ல காதுகளில் விளங்கி அசைகின்ற குண்டலங்களையும், முல்லை மலர் மாலை சுற்றி உள்ளதும், அசைகின்ற பூங்கொத்துக்கள் நிறைந்துள்ளதும், அலை வீசுவது போலப் புரளும் அந்தக் கூந்தலையும், அழகாய் எடுக்கப்பட்ட வில்லைப் போன்ற ஒளி பொருந்திய நெற்றியையும், அம்பையும் கயல் மீனையும் போன்ற கண்களையும், கிளியின் குரல் போன்ற குரலையும் உடையவர்கள். இதழ்களையுடைய தாமரைப் பூ என்னும்படியான மலர் முகத்தையும், கமுக மரம் போன்றதும், நினைப்பதற்கு இடமானதும், தேமல் பரந்துள்ளதும், எதிர்த்து வரும் யானை போன்றதும், வன்மை வாய்ந்ததுமான குன்றைப் போன்றதுமான மார்பகங்களும், ஆலிலையைப் போன்றதும் பிள்ளைப் பேற்றுக்கு இடம் தருவதுமான வயிற்றையும், அந்த வயிற்றின் மேல் உள்ள ஆடையில் அமைந்துள்ள நூல் போல் நுண்ணிய இடையையும், காமத்துக்கு நிதி இடமாகிய பெண்குறியையும், வாழை போன்ற தொடைகளையும் உடையவர்கள். பூப் போன்ற காலில் அணியப்பட்டு அசைகின்ற சிலம்பின் ஒலி மல்லிட்டுக் கொண்டு வாதாடுவது போல் மாறுபட்டு பட்டாடை தன்மேல் படும்போதெல்லாம் அசைந்து ஒலிக்கவும், காம மயக்கத்தால் தள்ளுகின்ற நடையோடு, சிற்சில வார்த்தைகளே குழறிப் பேசி, ஆசை பூண்டு, சாமர்த்தியம் உள்ளவர்கள் போல பொற் காசுகளைத் தம்மிடம் வருவோரிடம் கொள்ளை கொள்ளும் விலைமாதர்கள் மேல் காம வெறி கொள்ளுவது நன்றோ? துன்பத்தைத் தரும் வினை தொலையவும், அசத்தான குற்றங்கள் நீங்கிடவும், இன்பமான உள்ளம் பொருந்தி அமையவும் அருள் வைத்து நம்மை ஆளுகின்ற தந்தையாகிய சிவபெருமான் மகிழ்ச்சி உற காதில் குளிர்ந்து பொருந்த, ஞானத்துக்கு விதை போன்ற மூலப்பொருளை, உபதேசம் செய்த கந்தனே, குமரனே, முருகனே, அன்னம் போன்ற நடையை உடைய குறப் பெண், பந்தாடுகின்ற விரல்களை உடைய என்னுடைய தாய், வெள்ளை முத்துக்கள் போன்ற கடப்ப மாலை விளங்கும் கூந்தலை உடைய அம்மை, வன்மை வாய்ந்த மலை போன்ற மார்பகங்கள் இரண்டினைக் கொண்டவள் (ஆகிய) வள்ளியின் கணவனே, மேகங்கள் படிவற்கு இடமான ஏழு கடல்களும் பிளவுண்டு போகுமாறு சிதறி ஒலி செய்ய, வலிய அசுரர்களின் சேனைகள் அழிவு பட்டு இறந்து அவர்களது ரத்தம் பரவி பல திக்குகளிலும் ஓடும்படிச் செய்து விளங்கும் அழகிய திருமுகத்தை உடைய சுடர் வேலனே, தெளிவான தமிழ்ப் பாடல்களால் (உன்னை) அடியார் புகழ்ந்து பாடவும், ஆடவும், இந்திராணியின் மகளான தேவயானையோடு சேர்ந்து, பல திக்குகளில் உள்ளோர்களும் புகழ்ந்து கொண்டாட, தகுதி மிக்க சிதம்பரத்துத் திருக்கோயில் கோபுரத்தே மகிழ்ச்சியுடன் வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 479 - சிதம்பரம் 
ராகம் - ...; தாளம் -
தனத்தத் தந்தனத்தத் தானன தானன
     தனத்தத் தந்தனத்தத் தானன தானன
          தனத்தத் தந்தனத்தத் தானன தானன ...... தனதான
அடப்பக் கம்பிடித்துத் தோளொடு தோள்பொர
     வளைத்துச் செங்கரத்திற் சீரொடு பாவொடு
          அணுக்கிச் செந்துணுக்கிற் கோவித ழூறல்க ...... ளதுகோதி 
அணிப்பொற் பங்கயத்துப் பூண்முலை மேகலை
     நெகிழ்த்துப் பஞ்சரித்துத் தாபண மேயென
          அருட்டிக் கண்சிமிட்டிப் பேசிய மாதர்க ...... ளுறவோடே 
படிச்சித் தங்களித்துத் தான்மிக மாயைகள்
     படித்துப் பண்பயிற்றிக் காதல்கள் மேல்கொள
          பசப்பிப் பின்பிணக்கைக் கூறிய வீணிக ...... ளவமாயப் 
பரத்தைக் குண்டுணர்த்துத் தோதக பேதைகள்
     பழிக்குட் சஞ்சரித்துப் போடிடு மூடனை
          பரத்துற் றண்பதத்துப் போதக மீதென ...... அருள்தாராய் 
தடக்கைத் தண்டெடுத்துச் சூரரை வீரரை
     நொறுக்கிப் பொன்றவிட்டுத் தூளெழ நீறெழ
          தகர்த்துப் பந்தடித்துச் சூடிய தோரண ...... கலைவீரா 
தகட்டுப் பொன்சுவட்டுப் பூவணை மேடையில்
     சமைப்பித் தங்கொருத்திக் கோதில மாமயில்
          தனிப்பொற் பைம்புனத்திற் கோகில மாவளி ...... மணவாளா 
திடத்திற் றிண்பொருப்பைத் தோள்கொடு சாடிய
     அரக்கத் திண்குலத்தைச் சூறைகொள் வீரிய
          திருப்பொற் பங்கயத்துக் கேசவர் மாயவர் ...... அறியாமல் 
திமித்தத் திந்திமித்தத் தோவென ஆடிய
     சமர்த்தர்ப் பொன்புவிக்குட் டேவர்க ணாயக
          திருச்சிற் றம்பலத்துட் கோபுர மேவிய ...... பெருமாளே.
தமது காரியத்தில் வெற்றி பெற, வந்தவரைச் சார்ந்து நன்றாகப் பிடித்து அவருடைய தோளோடு தங்களுடைய தோளை இணைத்துப் பொருந்த, தங்களுடைய செவ்விய கைகளால் அணைத்து, சீராட்டியும் பாடல் பாடியும் நன்கு நெருக்கி, சிவந்த பவளத்துண்டை ஒத்த, இந்திர கோபத்தைப் போன்ற வாய் இதழின் ஊறல்களைத் தொகுத்து அனுபவிக்கத் தந்து, அழகிய பொலிவுள்ள தாமரை மொட்டு போன்றதும், ஆபரணம் அணிந்ததுமான மார்பையும், (இடையில் அணிந்துள்ள) மேகலையையும் வேண்டுமென்றே தளர்த்தி, குதலை மொழி பேசி நச்சரித்து பொருள் கொடு என்று மயங்குவது போன்ற கண்களைச் சிமிட்டிப் பேசுகின்ற வேசிகள், தங்களோடு சம்பந்தப்பட்டவர்கள் போல் படிகின்ற தங்கள் உள்ளத்தில் மகிழ்ந்து, பல விதமான மாயாலீலைகளைக் காட்டி, இசை பாடி, காம ஆசைகள் கொள்ளும்படியாக பாசாங்குகள் செய்து, பின்னர் தங்களுடைய மாறுபாட்டை எடுத்துப் பேசும் வீணிகள், கேடு தரும் மாயம் நிறைந்த விலைமாதர்கள், தாழ்வான செய்கையை உணர்த்தும் வஞ்சகப் பேதைமார்கள், (இத்தகையோரின்) பழிக்கிடமான செயல்களில் சுழன்று திரிவதற்கே விதிக்கப்பட்ட முட்டாளாகிய எனக்கு, மேலான பொருளாகப் பொருந்தி அணுகியுள்ள உனது திருவடி ஞானம் இதுதான் என்று காட்டும் திருவருள் தாராய். பெரிய கையில் தண்டாயுதத்தை எடுத்து சூரர்கள் ஆன வீரர்களை பொடிபடுத்தி அழித்து, சின்னா பின்னமாக்கி, புழுதி எழவும், சாம்பலாகும்படியும் உடைத்து, பந்தடிப்பது போல் அடித்து, அலங்கார வெற்றி மாலையைச் சூடியவனே, சகல கலைகளிலும் வல்ல வீரனே, பூவின் புற இதழ்களால் பொன் அடையாளம் விளங்குவது போன்ற மலர் அணை மேடையின் மேல் அலங்காரமாய் அமைந்த அந்த ஒப்பற்றவள், குற்றம் இல்லாத சிறந்த மயிலனையாள், தனிமையாய் அழகிய பசுமையான தினைப் புனத்தில் குயில் போன்ற பெருமை வாய்ந்த குரலுடைய வள்ளியின் கணவனே, பலத்துடன் வலிமையான மலைகளைக் கைகளால் வீசி எறிந்த அரக்கர்களின் திண்ணிய கூட்டத்தை, சுழற் காற்று வீசுவது போல வீசி அழித்த வீரம் வாய்ந்தவனே, அழகிய தாமரை மலரில் வீற்றிருக்கும் கேசவர், மாயவர் என்று அழைக்கப்படும் திருமால் அறிய மாட்டாத வகையில், திமித்தத் திந்திமித்தத் தோவென்று பலவிதமான தாளத்துடன் சாமர்த்தியமாக சிவபெருமான் நடனம் செய்த பொன்னம்பலத்தில் வந்து குழுமிய தேவர்களின் நாயகனாக, சிதம்பரத்தின் கோபுரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 480 - சிதம்பரம் 
ராகம் - ...; தாளம் -
தத்தத் தானன தானன தானன
     தத்தத் தானன தானன தானன
          தத்தத் தானன தானன தானன ...... தனதான
அக்குப் பீளைமு ளாவிளை மூளையொ
     டுப்புக் காய்பனி நீர்மயிர் தோல்குடி
          லப்புச் சீபுழு வோடடை யார்தசை ...... யுறமேவி 
அத்திப் பால்பல நாடிகு ழாயள்வ
     ழுப்புச் சார்வல மேவிளை யூளைகொ
          ளச்சுத் தோல்குடி லாமதி லேபொறி ...... விரகாளர் 
சுக்கத் தாழ்கட லேசுக மாமென
     புக்கிட் டாசைபெ ணாசைம ணாசைகள்
          தொக்குத் தீவினை யூழ்வினை காலமொ ...... டதனாலே 
துக்கத் தேபர வாமல்ச தாசிவ
     முத்திக் கேசுக மாகப ராபர
          சொர்க்கப் பூமியி லேறிட வேபத ...... மருள்வாயே 
தக்கத் தோகிட தாகிட தீகிட
     செக்கச் சேகண தாகண தோகண
          தத்தத் தானன டீகுட டாடுடு ...... வெனதாளந் 
தத்திச் சூரர்கு ழாமொடு தேர்பரி
     கெட்டுக் கேவல மாய்கடல் மூழ்கிட
          சத்திக் கேயிரை யாமென வேவிடு ...... கதிர்வேலா 
திக்கத் தோகண தாவென வேபொரு
     சொச்சத் தாதையர் தாமென வேதிரு
          செக்கர்ப் பாதம தேபதி யாசுதி ...... யவைபாடச் 
செப்பொற் பீலியு லாமயில் மாமிசை
     பக்கத் தேகுற மாதொடு சீர்பெறு
          தெற்குக் கோபுர வாசலில் மேவிய ...... பெருமாளே.
கண்ணில் பீளை, மேலெழும் கோழை, மூளையில் தோன்றி வீங்குகின்ற புரைப் புண், அச்சம் தருகின்ற துர் நீர்கள், மயிர், தோல், வளைவான நாக்குப் பூச்சி, புழு இவற்றுடன் அடைந்து நிறைந்த ஊன் இவை பொருந்தப் பெற்ற இவ்வுடலில், எலும்பின் பக்கத்தில் பல நாடிக் குழாய்கள், அசிங்கமான காதுக் குறும்பி இவை சேர்ந்து பலமாக விளைகின்ற பத்தைகளான கசுமாலங்களைக் கொண்ட அடையாளங்கள் வாய்ந்த தோலோடு அமைந்த குடிசையாகிய இவ்வுடலில், ஐம்புலன்களாகிய தந்திரக்காரர்கள் களவுடன் ஒதுங்கியுள்ளதும், ஆழ்ந்த கடல் போன்றதும் ஆகிய வாழ்க்கையே சுகம் என நினைத்து அதில் ஈடுபட்டு, பொன்னாசை, பெண்ணாசை, மண் ஆசைகள் ஒன்று சேர்ந்து, தீ வினை ஊழ் வினை இவைகளின் காலக் கொடுமை காரணமாக, துக்கம் பெருகி வேதனைப்படாமல், எப்பொழுதும் மங்களகரமாயுள்ள முக்தி நிலையில் சுகமாக எவற்றிலும் மேம்பட்ட சொர்க்க நாட்டில் நான் கரை ஏறும்படி உன் திருவடியைத் தந்து அருளுக. தக்கத் தோகிட தாகிட தீகிட செக்கச் சேகண தாகண தோகண தத்தத் தானன டீகுட டாடுடு என்ற பல விதமான தாளங்களின் ஒலியை எழுப்பி, அசுரர்களின் கூட்டத்துடன் தேர்களும் குதிரைகளும் அழிபட்டு கீழ் நிலை அடைந்து கடலில் முழுகும்படி சக்தி வேலுக்கே உணவு ஆயின என்னும்படியாகச் செலுத்திய ஒளி வீசும் வேலனே, திக்கத் தோகண தாவென்று நடனம் செய்கின்ற நிர்மல மூர்த்தியான தந்தையாகிய நடராஜப் பெருமானே நீ என்று சொல்லும்படி, அழகிய சிவந்த திருவடிகளே பதித்து, இசை ஒலிகள் பாட, செம் பொன் நிறத் தோகை விளங்கும் மயில் மீது, பக்கத்தில் குறப் பெண்ணாகிய வள்ளியோடு சிறப்புற்று சிதம்பரத்தின் தெற்குக் கோபுர வாசலில் வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 481 - சிதம்பரம் 
ராகம் -...; தாளம் -
தானத் தானன தானன தானன
   தானத் தானன தானன தானன
      தானத் தானன தானன தானன ...... தனதான
ஆரத் தோடணி மார்பிணை யானைகள்
   போருக் காமென மாமுலை யேகொடு
      ஆயத் தூசினை மேவிய நூலிடை ...... மடமாதர் 
ஆலைக் கோதினி லீரமி லாமன
   நேசத் தோடுற வானவர் போலுவர்
      ஆருக் கேபொரு ளாமென வேநினை ...... வதனாலே 
காருக் கேநிக ராகிய வோதிய
   மாழைத் தோடணி காதொடு மோதிய
      காலத் தூதர்கை வேலெனு நீள்விழி ...... வலையாலே 
காதற் சாகர மூழ்கிய காமுகர்
   மேலிட் டேயெறி கீலிகள் நீலிகள்
      காமத் தோடுற வாகையி லாவருள் ...... புரிவாயே 
சூரர்க் கேயொரு கோளரி யாமென
   நீலத் தோகைம யூரம தேறிய
      தூளிக் கேகடல் தூரநி சாசரர் ...... களமீதே 
சோரிக் கேவெகு ரூபம தாவடு
   தானத் தானன தானன தானன
      சூழிட் டேபல சோகுக ளாடவெ ...... பொரும்வேலா 
வீரத் தால்வல ராவண னார்முடி
   போகத் தானொரு வாளியை யேவிய
      மேகத் தேநிக ராகிய மேனியன் ...... மருகோனே 
வேதத் தோன்முத லாகிய தேவர்கள்
   பூசித் தேதொழ வாழ்புலி யூரினில்
      மேலைக் கோபுர வாசலில் மேவிய ...... பெருமாளே.
முத்து மாலையோடு ஆபரணங்களைக் கொண்ட மார்பில் இணையாக உள்ள யானைகள் சண்டைக்கு எழுந்துள்ளன போன்ற பெரிய மார்பகங்களைக் கொண்டவர்களாய், தேர்ந்து எடுத்த ஆடையை அணிந்துள்ள நுண்ணிய இடையை உடைய அழகிய மாதர்கள், கரும்பாலையில் சாறு நீங்கிய சக்கை போல் கருணை இல்லாத மன அன்புடனே உறவு கொண்டவர் போன்றவர்கள், யாரோடு உறவு கொண்டால் காசு கிடைக்கும் என்ற ஒரு எண்ணத்தையே நினைவாகக் கொண்ட காரணத்தால், கருமேகத்துக்கு ஒப்பான கூந்தலை உடையவர்கள், பொன்னாலாகிய தோடு என்கின்ற ஆபரணத்தை அணிந்த காதை வந்து மோதுகின்ற, யமனுடைய தூதவரின் கையில் உள்ள வேல் போலுள்ள, நீண்ட கண்கள் என்கின்ற வலையாலே, காதல் கடலில் முழுகிய காமுகர் மீதிற்பட்டு அவர்கள் அதிரும்படி எறிகின்ற தந்திரவாதிகள், நீலி என்னும் பேய் போல் நடிக்க வல்லவர்களாகிய விலைமாதர்கள் மீது காமவசப்பட்டு உறவுகொள்ளுதல் இல்லாதபடி அருள் புரிவாயாக. சூரர்களை அழிப்பதற்கே எனத் தோன்றிய ஒரு சிங்கம் போல், நீலத் தோகையை உடைய மயிலின் மேல் ஏறியவனே, புழுதியால் கடல் நிரம்பி தூர்ந்து போக, அசுரர்கள் போர்க்களத்தில் ரத்த மயமாக விளங்கப் போர் செய்து, தானத் தானன தானன தானன என்று சூழ்ந்து கொண்டு பல பேய்க் கூட்டங்கள் கூத்தாடும்படி சண்டை செய்த வேலனே, வீரத்தில் வல்ல ராவணனுடைய தலைகள் அற்று விழ, ஒரு ஒப்பற்ற அம்பைச் செலுத்திய, மேகம் போன்று கறுத்த நிறமுடைய மேனியைக் கொண்ட, (ராமனின்) திருமாலின் மருகனே, பிரமன் முதலாகிய தேவர்கள் எப்போதும் பூஜை செய்து தொழுது வாழும் சிதம்பரத்தில், மேற்குக் கோபுர வாசலில் எழுந்தருளியிருக்கும் பெருமாளே. 
பாடல் 482 - சிதம்பரம் 
ராகம் -....; தாளம் -
தானத் தான தத்த தானத் தான தத்த
     தானத் தான தத்த ...... தனதான
காதைக் காதி மெத்த மோதிக் கேள்வி யற்ற
     காமப் பூச லிட்டு ...... மதியாதே 
காரொத் தேய்நி றத்த வோதிக் காவ னத்தி
     னீழற் கேத ருக்கி ...... விளையாடிச் 
சேதித் தேக ருத்தை நேருற் றேபெ ருத்த
     சேலொத் தேவ ருத்தும் ...... விழிமானார் 
தேமற் பார வெற்பில் மூழ்கித் தாப மிக்க
     தீமைக் காவி தப்ப ...... நெறிதாராய் 
மாதைக் காத லித்து வேடக் கான கத்து
     வாசத் தாள்சி வப்ப ...... வருவோனே 
வாரிக் கேயொ ளித்த மாயச் சூரை வெட்டி
     மாளப் போர்தொ லைத்த ...... வடிவேலா 
வீதித் தேர்ந டத்து தூளத் தால ருக்கன்
     வீரத் தேர்ம றைத்த ...... புலியூர்வாழ் 
மேலைக் கோபு ரத்து மேவிக் கேள்வி மிக்க
     வேதத் தோர்து தித்த ...... பெருமாளே.
காதை வெட்டுவது போல வேகமாக (அந்தக் காதின் மேல்) மோதி, கேட்டறியாத காமப் போரை விளைவித்து, யாரையும் மதிக்காமல், மேகத்தை ஒத்து நிகர்க்கும் கருநிறத்தை உடைய கூந்தலாகிய காட்டின் நிழலிலே களிப்புற்று விளையாடி, (தன்னைக் கண்டவர்களுடைய) கருத்தை அழித்து, ஒழுங்காக பெரிதாக விளங்கி சேல் மீன் போன்று (ஆண்களை) வருத்துகின்ற கண்களை உடைய பெண்களின் தேமல் படர்ந்துள்ள கனத்த மலை போன்ற மார்பிலே மூழ்கி, காம வேட்கை மிக்க கொடுமையினின்றும், என்னுடைய உயிர் பிழைக்கும்படியான நல்ல வழிகளைத் தந்தருளுக. (வள்ளிப்) பெண் மீது ஆசை கொண்டு, வேடர்கள் வாழும் காட்டில் நறுமணம் வீசும் திருவடிகள் சிவந்து போகச் சென்றவனே, கடலில் சென்று ஒளிந்துகொண்ட, மாயத்தில் வல்ல (மாமரமாகிய) சூரனை வெட்டி, அவன் மாளும்படி போர் செய்து முடித்த கூரிய வேலனே, வீதியில் தேர் செல்லுவதால் எழும் தூசியிலே சூரியனுடைய வீரத் தேரும் மறைபடும் புலியூர் ஆகிய சிதம்பரத்தில் இருக்கும் மேற்குக் கோபுரத்தில் வீற்றிருந்து, கேள்வி ஞானம் மிக்க மறையோர்கள் துதிக்கின்ற பெருமாளே. 
பாடல் 483 - சிதம்பரம் 
ராகம் -...; தாளம் -
தய்ய தானத் தானன தானன
   தய்ய தானத் தானன தானன
      தய்ய தானத் தானன தானன ...... தனதான
கொள்ளை யாசைக் காரிகள் பாதக
   வல்ல மாயக் காரிகள் சூறைகள்
      கொள்ளும் ஆயக் காரிகள் வீணிகள் ...... விழியாலே 
கொல்லும் லீலைக் காரிகள் யாரையும்
   வெல்லு மோகக் காரிகள் சூதுசொல்
      கொவ்வை வாய்நிட் டூரிகள் மேல்விழு ...... மவர்போலே 
உள்ள நோவைத் தேயுற வாடியர்
   அல்லை நேரொப் பாமன தோஷிகள்
      உள்வி ரோதக் காரிகள் மாயையி ...... லுழல்நாயேன் 
உய்ய வேபொற் றோள்களும் ஆறிரு
   கையு நீபத் தார்முக மாறுமுன்
      உள்ள ஞானப் போதமு நீதர ...... வருவாயே 
கள்ள மாயத் தாருகன் மாமுடி
   துள்ள நீலத் தோகையின் மீதொரு
      கையின் வேல்தொட் டேவிய சேவக ...... முருகோனே 
கல்லி லேபொற் றாள்பட வேயது
   நல்ல ரூபத் தேவர கானிடை
      கெளவை தீரப் போகுமி ராகவன் ...... மருகோனே 
தெள்ளி யேமுற் றீரமு னோதிய
   சொல்வ ழாமற் றானொரு வானுறு
      செல்வி மார்பிற் பூஷண மாயணை ...... மணவாளா 
தெள்ளு மேனற் சூழ்புன மேவிய
   வள்ளி வேளைக் காரம னோகர
      தில்லை மேலைக் கோபுர மேவிய ...... பெருமாளே.
பேராசை கொண்டவர்கள், பாபச் செயல்களைச் செய்ய வல்ல மாயக்காரிகள், சூறைக் காற்றைப் போல் கொள்ளை அடிக்கும் வேட்டைக்காரிகள், பயனற்றவர்கள், கண்களால் கொல்லுகின்ற லீலைகள் செய்பவர்கள், யாரையும் மயக்க வல்ல காமாந்தகிகள், சூதான சொற்களைப் பேசும் கொவ்வைக் கனி போன்ற வாயை உடைய பொல்லாதவர்கள், மேலே விழுபவர் போல வெளியன்பு பாராட்டி, மனத்தை நோவச் செய்து உறவாடுபவர்கள், இருட்டுக்கு ஒப்பான மனக் குற்றம் உடையவர்கள், பகைமை எண்ணம் கொண்டவர்கள், அத்தகைய பொது மாதர்களின் மாயைச் சூழலில் சுழல்கின்ற நாயை ஒத்த அடியேன் பிழைக்கும்படி, அழகிய தோள்களும், பன்னிரண்டு கைகளும், கடப்ப மாலையும், ஆறு முகங்களும் முன்னதாக நான் தியானிக்க ஞான அறிவை நீ எனக்குத் தருவதற்கு வந்தருளுக. கள்ளத்தனமும் மாயையும் நிரம்பிய தாருகாசுரனுடைய பெரிய தலை அற்று விழ, நீல மயில் மேல் விளங்கி, ஒப்பற்ற கை வேலைச் செலுத்தி அனுப்பிய வல்லமை வாய்ந்த முருகனே, கல்லின் மீது அழகிய திருவடி பட்டவுடனே அது நல்ல பெண் உருவாய் வர, காட்டில் (அகலிகைக்கு உற்ற) துன்பம் நீங்கும்படி சென்ற ராமனுடைய மருகனே, ஆய்ந்து, இன்பமுற்று, முன்பு செய்த வாக்குறுதி* தப்பாமல், விண்ணுலகில் வளர்ந்த செல்வியாகிய தேவயானையை தன் மார்பில் ஆபரணம் போல் அணைந்த மணவாளனே, நன்கு விளங்கிய தினைப் புனத்தில் இருந்த வள்ளிக்கு காவற்காரனாய் விளங்கும் மனத்துக்கு இனியோனே, தில்லை மேற்குக் கோபுரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* முற்பிறப்பில் திருமாலின் மகளாகத் தோன்றிய அமிர்தவல்லி, சுந்தரவல்லி என்ற கன்னிகைகளுக்கு மறுபிறவியில் அவர்கள் முறையே தேவயானை, வள்ளி என்று பிறந்து முருகனை மணந்து கொள்வர் என்று திருமால் வாக்களித்தார்.
பாடல் 484 - சிதம்பரம் 
ராகம் -...; தாளம் -
தான தானன தனனா தானன
     தான தானன தனனா தானன
          தான தானன தனனா தானன ...... தனதான
தாது மாமலர் முடியா லேபத
     றாத நூபுர அடியா லேகர
          தாள மாகிய நொடியா லேமடி ...... பிடியாலே 
சாடை பேசிய வகையா லேமிகு
     வாடை பூசிய நகையா லேபல
          தாறு மாறுசொல் மிகையா லேயன ...... நடையாலே 
மோதி மீறிய முலையா லேமுலை
     மீதி லேறிய கலையா லேவெகு
          மோடி நாணய விலையா லேமயல் ...... தருமானார் 
மோக வாரிதி தனிலே நாடொறு
     மூழ்கு வேனுன தடியா ராகிய
          மோன ஞானிக ளுடனே சேரவு ...... மருள்வாயே 
காத லாயருள் புரிவாய் நான்மறை
     மூல மேயென வுடனே மாகரி
          காண நேர்வரு திருமால் நாரணன் ...... மருகோனே 
காதல் மாதவர் வலமே சூழ்சபை
     நாத னார்தம திடமே வாழ்சிவ
          காம நாயகி தருபா லாபுலி ...... சையில்வாழ்வே 
வேத நூன்முறை வழுவா மேதினம்
     வேள்வி யாலெழில் புனைமூ வாயிர
          மேன்மை வேதியர் மிகவே பூசனை ...... புரிகோவே 
வீறு சேர்வரை யரசாய் மேவிய
     மேரு மால்வரை யெனநீள் கோபுர
          மேலை வாயிலின் மயில்மீ தேறிய ...... பெருமாளே.
மகரந்தப் பொடிகள் தங்கும் பூக்கள் உள்ள கூந்தலாலும், பதறாமல் நடக்கும் சிலம்புகள் அணிந்த பாதத்தாலும், கைக்கொண்டு இடுகின்ற தாள ஒலியாலும், (வருபவர்களின்) மடியைப் பிடித்துத் தம் வசப்படுத்துவதாலும், ஜாடையாகப் பேசும் வழக்க வகையாலும், மிக்க வாசனைகளைப் பூசிக் கொண்டு சிரிக்கும் சிரிப்பாலும், பல விதமான தாறுமாறான பேச்சுக்களைப் பேசும் செறுக்காலும், அன்னம் போன்ற நடையாலும், முன்னே தாக்கி மேலெழுந்த மார்பாலும், அந்த மார்பின் மீது அணிந்த ஆடையாலும், பல விதமான மயக்கும் சக்திகளை காசுக்காக வெளிக் காட்டும் கர்வத்தாலும் (வந்தவருக்கு) காம மயக்கத்தைத் தருகின்ற விலைமாதர்களின் காமக் கடலில் தினமும் முழுகுகின்ற நான் உன்னுடைய அடியவர்களாகிய மெளன ஞானிகளுடன் சேர்ந்து பழகுவதற்கு அருள் புரிவாயாக. "நான்கு வேதங்களுக்கும் மூலப் பொருளே, அன்பு வைத்து அருள் புரிவாயாக" என்று பெரிய யானை (ஆகிய கஜேந்திரன்) கூவி அழைக்க, அந்த யானை காணும் வண்ணம் அதன் முன்னே நேரே வந்து உதவிய திருமால் நாராயணனுடைய மருகனே, பக்தியும் பெரும் தவமும் உடைய பெரியோர்கள் வலம் வந்து வணங்கிச் சூழும் கனக சபையில் சிவபெருமானுடைய இடதுபாகத்தில் வாழ்கின்ற சிவகாமி நாயகி பெற்ற குழந்தையே, புலிசை என்னும் சிதம்பரத்தில் வாழும் செல்வமே, வேத நூலில் கூறப்பட்ட முறைப்படியே, தவறாமல் நாள் தோறும் யாகங்கள் செய்யும் அழகைக் கொண்ட சிறப்பான தில்லை மூவாயிரம் வேதியர்கள் மிக நன்றாகப் பூஜை செய்யும் தலைவனே*, பொலிவு பொருந்திய மலை அரசாக விளங்கும் மேரு மலை போல உயர்ந்துள்ள கோபுரத்தின் மேற்கு வாயில் புரத்தில் மயிலின் மேல் விளங்கும் பெருமாளே. 
* அருணகிரிநாதருக்கு நடராஜப் பெருமானே முருகனாகவும், முருகனே நடராஜராகவும் பேதமின்றித் தரிசனம் தரப்பட்டது என்பது இதன் கருத்து.
பாடல் 485 - சிதம்பரம் 
ராகம் - சிந்து பைரவி ; தாளம் - ஆதி - எடுப்பு - 1/2 இடம்
தனத்தத் தானன தானன தானன
     தனத்தத் தானன தானன தானன
          தனத்தத் தானன தானன தானன ...... தந்ததான
எலுப்புத் தோல்மயிர் நாடிகு ழாமிடை
     இறுக்குச் சீபுழு வோடடை மூளைகள்
          இரத்தச் சாகர நீர்மல மேவிய ...... கும்பியோடை 
இளைப்புச் சோகைகள் வாதம் விலாவலி
     உளைப்புச் சூலையொ டேவலு வாகிய
          இரைப்புக் கேவல மூலவி யாதியொ ...... டண்டவாதங் 
குலைப்புக் காய்கனல் நீரிழி வீளையொ
     டளைப்புக் காதடை கூனல்வி சூசிகை
          குருட்டுக் கால்முட மூமையு ளூடறு ...... கண்டமாலை 
குடிப்புக் கூனமி தேசத மாமென
     எடுத்துப் பாழ்வினை யாலுழல் நாயெனு
          னிடத்துத் தாள்பெற ஞானச தாசிவ ...... அன்புதாராய் 
கெலிக்கப் போர்பொரு சூரர்கு ழாமுமி
     ழிரத்தச் சேறெழ தேர்பரி யாளிகள்
          கெடுத்திட் டேகடல் சூர்கிரி தூள்பட ...... கண்டவேலா 
கிளர்ப்பொற் றோளிச ராசர மேவியெ
     யசைத்துப் பூசைகொள் ஆயிப ராபரி
          கிழப்பொற் காளைமெ லேறுமெ நாயகி ...... பங்கின்மேவும் 
வலித்துத் தோள்மலை ராவண னானவன்
     எடுத்தப் போதுடல் கீழ்விழ வேசெய்து
          மகிழ்ப்பொற் பாதசி வாயந மோஅர ...... சம்புபாலா 
மலைக்கொப் பாமுலை யாள்குற மாதினை
     அணைத்துச் சீர்புலி யூர்பர மாகிய
          வடக்குக் கோபுர வாசலில் மேவிய ...... தம்பிரானே.
எலும்பு, தோல், மயிர், நாடிக் குழாய்களின் நெருக்கம், உள் அழுந்தியுள்ள சீழ், புழு இவைகளுடன் பொருந்திய மூளைகள், இரத்தக் கடல்நீர், மலம் இவை எல்லாம் நிறைந்த சேற்றுக் குளத்தில், சோர்வு, இரத்தக் குறைவால் வரும் சோகை, வாயு மிகுதலாகிய பிணி, பக்க வாதம், வயிற்று உளைவு, சூலை என்னும் நோயோடு, பலத்த மூச்சு வாங்குதல், இழிவான மூல நோயுடன் விரைவாதம், நடுக்கு வாதம், காய்கின்ற நெருப்புப் போன்ற சுரம், நீரிழிவு, கபநோயின் காரணமாக கோழையின் கலப்பு, செவிட்டுத் தன்மை, கூன், வாந்தி பேதி, குருட்டுத் தன்மை, கால் முடமாயிருத்தல், பேச வராமை, உள் பக்கத்தே அறுத்துச் செல்லுகின்ற கழுத்தைச் சுற்றி வரும் புண், (இத்தகைய நோய்கள் எல்லாம்) குடி புகுந்த, கேடு செய்கின்ற இந்த உடலே நிலையானது என்று எடுத்துக்கொண்டு, பாழ்படுத்தும் கொடிய வினையால் திரிகின்ற நாய் போன்ற அடியேன், உனது திருவடிகளைப் பெற, ஞான மயமானதும், எப்போதும் மங்களகரமானதும் ஆகிய அன்பைத் தருவாயாக. வெற்றி பெறுவதன் பொருட்டுப் போர் செய்த அசுரர்களுடைய கூட்டம் கக்கும் இரத்தச் சேறு பெருக, தேர்கள், குதிரைகள், யாளிகள் (இப் படைகள் எல்லாம்) அழிபட்டு, கடலும் சூரனும், கிரெளஞ்ச மலையுடன் எழு மலைகளும் தூள்படும்படி செய்த வேலனே, விளங்குகின்ற அழகிய தோள்களை உடையவள், அசையும் பொருள், அசையாப்பொருள் இவை இரண்டிலும் கலந்தும் அவைகளை ஆட்டுவித்தும் பூஜை பெறுகின்ற எங்கள் அன்னை, பரம் பொருளானவள், (தனக்கு) உரிமையான அழகிய எருதின் மேலே ஏறி வருபவளும் எம்முடைய பிராட்டியும் ஆகிய பார்வதியின் பக்கத்தில் இருப்பவரும், வன்மையுடன் ஆட்டி அசைத்து, தனது தோளால் (கயிலை) மலையை இராவணன் என்பவன் எடுத்த பொழுது*, அவனுடைய உடலைக் கீழே விழச் செய்து மகிழும் அழகிய பாதங்களை உடையவரும், சிவாயநம என்னும் ஐந்தெழுத்துக்கு மூலப்பொருளானவருமான சிவசம்புவின் குமாரனே, மலை போன்ற மார்பகங்களை உடைய குறப்பெண்ணாகிய வள்ளியைத் தழுவி, பெருமை வாய்ந்த புலியூர் என்னும் சிதம்பரத்தில் மேலான பொருளாய்ச் சிறந்து விளங்கும் வடக்குக் கோபுர வாசலில் வீற்றிருக்கும் தனிப்பெரும் தலைவனே. 
* இராவணன் திக்கு விஜயம் செய்த போது, அவனுடைய புஷ்பக விமானம் கயிலை மலையைக் கடக்க முடியாது தடைபட்டது. அந்த மலையை வேரோடு பறித்து எறிய, அவன் தன் கைகளால் பெயர்த்து அசைக்க, சிவ பெருமான் தமது கட்டை விரலால் அம் மலையை அழுத்த, இராவணன் நசுக்குண்டு சாமகானம் பாடி, இறைவனை மகிழ்வித்து உய்ந்தான்.
பாடல் 486 - சிதம்பரம் 
ராகம் - ...; தாளம் -
தான தானன தான தானன
   தான தானன தான தானன
      தான தானன தான தானன ...... தனதான
நீல மாமுகில் போலும் வார்குழ
   லார்கள் மாலைகு லாவ வேல்கணை
      நீள வாள்விழி பார்வை காதிரு ...... குழையாட 
நீடு மார்பணி யாட வோடிய
   கோடு போலிணை யாட நூலிடை
      நேச பாளித சோலை மாமயி ...... லெனவேகிக் 
காலி னூபுர வோசை கோவென
   ஆடி மால்கொடு நாணி யேவியர்
      காய மோடணு பாகு பால்மொழி ...... விலைமாதர் 
காத லாயவ ரோடு பாழ்வினை
   மூழ்கி யேழ்நர காழு மூடனை
      காரிர் பாருமை யாசி வாபத ...... மருள்வாயே 
கோல மாமயி லேறி வார்குழை
   யாட வேல்கொடு வீர வார் கழல்
      கோடி கோடிடி யோசை போல்மிக ...... மெருதூளாய்க் 
கோடு கோவென ஆழி பாடுகள்
   தீவு தாடசு ரார்கு ழாமொடு
      கூள மாகவி ணோர்கள் வாழ்வுற ...... விடும்வேலா 
நாலு வேதமு டாடு வேதனை
   யீண கேசவ னார்ச கோதரி
      நாதர் பாகம்வி டாள்சி காமணி ...... உமைபாலா 
ஞான பூமிய தான பேர்புலி
   யூரில் வாழ்தெய்வ யானை மானொடு
      நாலு கோபுர வாசல் மேவிய ...... பெருமாளே.
கருமை மிக்க மேகம் போன்ற நீண்ட கூந்தலை உடையவர்கள், மாலை விளங்க, வேலையும் அம்பையும் போன்ற நீண்ட ஒளி பொருந்திய கண் பார்வைகள் சென்று வெட்டுவது போல் பாயும் இரண்டு (காதில்) குண்டலங்கள் அசைய, அகன்ற மார்பில் அணிகலன்கள் ஆட, பரந்துள்ள மலையைப் போல மார்பகங்கள் அசைய, நூலைப் போல் நுண்ணிய இடையில் தமக்கு விருப்பமான பட்டுப் புடைவையுடன், சோலையில் உலவி வரும் அழகிய மயில் போலச் சென்று, காலில் உள்ள சிலம்பின் ஓசை கோ என்று ஒலி செய்ய, நடனம் ஆடி, மோகத்துடன் வெட்கம் அடைந்து, வேர்வை கொண்ட உடலுடன், சர்க்கரையில் உருகிப் பொருந்திய பால் போன்ற சொற்களை உடைய வேசிகளுடன் ஆசை பூண்டவனாய் பாழ்படுத்தும் வினையிலே முழுகி, ஏழு நரகங்களிலும் ஆழ்ந்து விடும் முழு முட்டாளாக இருப்பினும், என்னை கண் பார்த்து அருளும் ஐயா, சிவபதம் தந்து அருள்வாயாக. அழகிய சிறந்த மயிலின் மேல் ஏறி, நீண்ட குழைகள் (காதில்) ஆட, கையில் வேல் கொண்டு, வீரம் பெரிதுள்ள கழல்கள் கோடிக் கணக்கான இடிகள் ஒலி செய்வது போல் மிக்கு ஒலிக்க, மேரு மலை பொடியாகி (அதனுடைய) சிகரங்கள் கோ என்று விழ, கடல் இடங்கள், நாடுகள், வலிமை வாய்ந்த அசுரர் கூட்டங்களோடு குப்பையாகி அழிந்தொழிய, தேவர்கள் வாழ்வு பெற்று விளங்க, வேலைச் செலுத்திய வீரனே, நான்கு வேதங்களையும் பயின்றுள்ள பிரமனைப் பெற்ற திருமாலின் சகோதரி, சிவபெருமானுடைய இடது பாகத்தை விடாதவள், சிகா ரத்தினம் போன்ற உமா தேவியின் குமாரனே, ஞானபூமி என்று பேர் பெற்ற சிதம்பரத்தில் வாழ்கின்ற தேவயானையோடும், வள்ளி நாயகியோடும், நான்கு கோபுர வாயில்களிலும் வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 487 - சிதம்பரம் 
ராகம் - கானடா; தாளம் - ஆதி 4 களை - 32 
அமைப்பு 
தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1
தான தத்ததன தான தத்ததன
     தான தத்ததன தான தத்ததன
          தான தத்ததன தான தத்ததன ...... தந்ததான
வாத பித்தமொடு சூலை விப்புருதி
     யேறு கற்படுவ னீளை பொக்கிருமல்
          மாலை புற்றெழுத லூசல் பற்சனியொ ...... டந்திமாலை 
மாச டைக்குருடு காத டைப்பு செவி
     டூமை கெட்டவலி மூல முற்றுதரு
          மாலை யுற்றதொணு றாறு தத்துவர்க ...... ளுண்டகாயம் 
வேத வித்துபரி கோல முற்றுவிளை
     யாடு வித்தகட லோட மொய்த்தபல
          வேட மிட்டுபொரு ளாசை பற்றியுழல் ...... சிங்கியாலே 
வீடு கட்டிமய லாசை பட்டுவிழ
     வோசை கெட்டுமடி யாமல் முத்திபெற
          வீட ளித்துமயி லாடு சுத்தவெளி ...... சிந்தியாதோ 
ஓத அத்திமுகி லோடு சர்ப்பமுடி
     நீறு பட்டலற சூர வெற்பவுண
          ரோடு பட்டுவிழ வேலை விட்டபுக ...... ழங்கிவேலா 
ஓந மச்சிவய சாமி சுத்தஅடி
     யார்க ளுக்குமுப காரி பச்சையுமை
          ஓர்பு றத்தருள்சி காம ணிக்கடவுள் ...... தந்தசேயே 
ஆதி கற்பகவி நாய கர்க்குபிற
     கான பொற்சரவ ணாப ரப்பிரம
          னாதி யுற்றபொருள் ஓது வித்தமைய ...... றிந்தகோவே 
ஆசை பெற்றகுற மாதை நித்தவன
     மேவி சுத்தமண மாடி நற்புலியு
          ராட கப்படிக கோபு ரத்தின்மகிழ் ...... தம்பிரானே.
வாதம் பித்தம் மிகுதியால் ஏற்படும் நோய்கள், வயிற்று உளைவு, சிலந்தி, கல் போன்ற ஒரு வகைப் புண் கட்டி, கோழை நோய், குத்திருமல், கண்ட மாலை, புற்றுநோய், (உடல், மனம்) தடுமாற்றம், பல விதமான ஜன்னி நோய் இவற்றுடன் மாலைக்கண், அழுக்கு அடைவதால் வரும் குருடு, காது அடைப்பினால் வரும் செவிட்டுத் தன்மை, ஊமை, கெட்ட வலிப்புகள், மூல நோய் (ஆகிய நோய்கள்) காய்த்து முதிர்ந்த மரம்போன்றது இந்த உடல், முறையாகப் பொருந்திய தொண்ணூற்றாறு தத்துவங்கள்* இடம்பெறுகின்ற உடல், வேதத்தின் வித்தாகிய இறைவன் பல திருக்கோலத்தைப் பூண்டு விளையாட்டாக ஆட்டுவிக்கின்ற கடலிடைத் தோணிபோல அலைப்புறும் உடல், சூழ்கின்ற பலவிதமான வேடங்களைப் பூண்டு பொருளாசை கொண்டு திரிகின்ற, விஷம் போன்ற அழி செயலாலே, வீடு கட்டி, அதனுள் காம மயக்க ஆசையில் பட்டு வீழ்ந்து, (உள்ளோசையாகிய) நாதம் அழிந்து, நான் இறந்து படாமல் முக்தியை அடையுமாறு வீட்டை அளித்து, நீ மயில் மீது நடனம் செய்கின்ற வெட்ட வெளியான பரமானந்த நிலையைப் பெற என் உள்ளம் தியானிக்காதோ? அலையோசை மிகுந்த கடல், மேகங்கள், (ஆதிசேஷனாகிய) பாம்பின் முடிகள் (இவை எல்லாம்) பொடிபட்டுக் கலங்க, சூரனும், அவனுடைய எழுகிரியும், அங்கிருந்த அசுரர்களோடு அழிந்து விழும்படி கடலில் செலுத்திய புகழ் மிக்க நெருப்புப்போன்ற வேலை உடையவனே, ஓம் நமசிவய என்னும் பிரணவத்தோடு கூடிய ஐந்தெழுத்துக்கு மூலப் பொருளாகிய கடவுள், தூய அடியார்களுக்கு உதவி செய்பவர், பச்சை நிறங் கொண்ட உமையை தமது ஒரு பாகத்தில் வைத்து அருள் சுரக்கும் சிகாமணித் தெய்வமாகிய சிவபெருமான் பெற்ற குழந்தையே, முதலில் தோன்றிய கற்பக விநாயகருக்குப் பின்னர் தோன்றிய அழகிய சரவண மூர்த்தியே, ஆதியாயுள்ள மூலமந்திரப் பொருளை ஓதுவிக்கும் தன்மை எவ்வண்ணம் என்று தெரிந்திருந்த தலைவனே, உன் காதலைப் பெற்ற குற மாதாகிய வள்ளியை நாள்தோறும் தினைப்புனத்துக்குச் சென்று பரிசுத்தமான வகையில் திருமணம் புரிந்து நல்ல புலியூர் (சிதம்பரம்) என்னும் தலத்தில் பொன்னும் பளிங்கும் போல அழகு வாய்ந்த கோபுரத்தில் மகிழ்ந்து மேவும் தம்பிரானே. 
* 96 தத்துவங்கள் பின்வருமாறு:36 பரதத்துவங்கள் (அகநிலை): ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து - 25 (புறநிலை): மண், தீ, நீர், காற்று, வெளி.ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை): வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4.
பாடல் 488 - சிதம்பரம் 
ராகம் - ...; தாளம் -
தனந்தத்த தனதான தனந்தத்த தனதான
     தனந்தத்த தனதான ...... தனதான
சுரும்புற்ற பொழில்தோறும் விரும்புற்ற குயில்கூவ
     துரந்துற்ற குளிர்வாடை ...... யதனாலுந் 
துலங்குற்ற மருவாளி விரைந்துற்ற படியால
     தொடர்ந்துற்று வருமாதர் ...... வசையாலும் 
அரும்புற்ற மலர்மேவு செழுங்கொற்ற அணையாலு
     மடைந்திட்ட விடைமேவு ...... மணியாலும் 
அழிந்துற்ற மடமானை யறிந்தற்ற மதுபேணி
     அசைந்துற்ற மதுமாலை ...... தரவேணும் 
கருங்கொற்ற மதவேழ முனிந்துற்ற கலைமேவி
     கரந்துற்ற மடமானி ...... னுடனேசார் 
கரும்புற்ற வயல்சூழ பெரும்பற்ற புலியூரில்
     களம்பற்றி நடமாடு ...... மரன்வாழ்வே 
இருந்துற்று மலர்பேணி யிடும்பத்தர் துயர்தீர
     இதம்பெற்ற மயிலேறி ...... வருகொவே 
இனந்துற்ற வருசூர னுருண்டிட்டு விழவேல்கொ
     டெறிந்திட்டு விளையாடு ...... பெருமாளே.
வண்டுகள் உள்ள சோலைகள் யாவிலும் விரும்பி அங்கே அடைந்துள்ள குயில்கள் கூவுதலாலும், வெளிப்பட்டு வீசும் குளிர்ந்த வாடைக் காற்றாலும், (மன்மதனுடைய) வாசனை பொருந்திய பாணங்களாகிய மலர்கள் வேகமாக வந்து மேலே பட்டுச் சேர்வதாலும், (இவளைப்) பின் தொடர்ந்து வருகின்ற பெண்களின் வசைப் பேச்சுக்களாலும், மலர்ந்தும் மலராத அரும்பு நிலையில் உள்ள மலர்கள் தூவப்பட்டதும், வலிமை வாய்ந்த (காமன் தன்) வீரத்தைக் காட்டும் இடமுமான படுக்கையாலும், (மேய்ந்த பின்பு) தத்தம் வீடுகளைச் சேர்ந்தடைய வரும் மாடுகளின் கழுத்தில் கட்டியுள்ள மணியின் ஓசையாலும், (மனம்) அழிந்துள்ள இள மானாகிய இப் பெண்ணின் விரக வேதனையை அறிந்து, சமயம் பார்த்து விரும்பி, உன் மார்பில் அசைந்தாடும் தேன் நிறைந்த மலர் மாலையைத் தந்தருள வேண்டும். கரிய, வீரம் வாய்ந்த (கணபதியாகிய) மத யானை கோபத்துடன் வந்து எதிர்த்த அந்த சமயத்தில், தன்னை நாடி, தன் பின் ஒளிந்து அடைக்கலம் புகுந்த இள மானாகிய வள்ளியுடன் சார்ந்தவனே, கரும்புகள் வளர்ந்த வயல்கள் சூழ்ந்த பெரும்பற்றப் புலியூராகிய சிதம்பரத்தில் மேடையாக பொன்னம்பலத்தைத் தேர்ந்தெடுத்து நடனம் செய்கின்ற சிவபெருமானுடைய செல்வமே. இருந்து பொருந்தி மலர்களை விரும்பி இட்டுப் பூஜிக்கும் அடியார்களின் துயரம் தீர, இன்பம் தரும் மயிலின் மீது ஏறி வருகின்ற அரசனே, சுற்றத்தாருடன் நெருங்கி வந்த சூரன் தரையில் உருண்டு புரண்டு விழ, வேல் கொண்டு வீசி எறிந்து விளையாடும் பெருமாளே. 
இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் அமைந்தது.குயில், வாடைக்காற்று, மன்மதன், மலர் அம்புகள், மாதர் வசைச் சொல், மலர் மஞ்சம், மாடுகளின் மணி முதலியவை தலைவனின் பிரிவுத் துயரை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.
பாடல் 489 - சிதம்பரம் 
ராகம் - ...; தாளம் -
தனந்தத் தத்தன தானன தானன
   தனந்தத் தத்தன தானன தானன
      தனந்தத் தத்தன தானன தானன ...... தனதான
இணங்கித் தட்பொடு பால்மொழி பேசிகள்
   மணந்திட் டுச்சுக மாய்விளை யாடிகள்
      இளஞ்சொற் செப்பிகள் சாதனை வீணிகள் ...... கடிதாகும் 
இடும்பைப் பற்றிய தாமென மேயினர்
   பெருஞ்சொற் பித்தளை தானும்வை யாதவர்
      இரும்பிற் பற்றிய கூர்விழி மாதர்கள் ...... எவரேனும் 
பணஞ்சுற் றிக்கொளு பாயவு தாரிகள்
   மணங்கட் டுக்குழல் வாசனை வீசிகள்
      பலஞ்செப் பித்தர மீளழை யாதவர் ...... அவரோடே 
பதந்துய்த் துக்கொடு தீமைய மாநர
   கடைந்திட் டுச்சவ மாகிவி டாதுன
      பதம்பற் றிப்புக ழானது கூறிட ...... அருள்வாயே 
வணங்கச் சித்தமி லாதஇ ராவணன்
   சிரம்பத் துக்கெட வாளிக டாவியெ
      மலங்கப் பொக்கரை யீடழி மாதவன் ...... மருகோனே 
மதம்பட் டுப்பொரு சூரபன் மாதியர்
   குலங்கொட் டத்திகல் கூறிய மோடரை
      வளைந்திட் டுக்கள மீதினி லேகொல ...... விடும்வேலா 
பிணம்பற் றிக்கழு கோடுபல் கூளிகள்
   பிடுங்கிக் கொத்திட வேயம ராடியெ
      பிளந்திட் டுப்பல மாமயி லேறிய ...... முருகோனே 
பிரிந்திட் டுப்பரி வாகிய ஞானிகள்
   சிலம்பத் தக்கழல் சேரவெ நாடிடு
      பெரும்பற் றப்புலி யூர்தனில் மேவிய ...... பெருமாளே.
மனம் ஒருமித்து குளிர்ந்த பால் போன்ற இனிய சொற்களைப் பேசுபவர்கள், கூடிய பின் சுகமாய் விளையாடுபவர்கள், தாழ்வான மொழிகளைப் பேசுபவர்கள், தாம் சொன்னதையே சாதிக்கும் பயனிலிகள், கடுமையான துன்பம் பிடித்தவர் போல இருப்பவர்கள், (வந்தவர்களிடம்) பெரிய வார்த்தைகளைப் பேசி, பித்தளை சாமான்களைக் கூட விட்டுவைக்காமல் கவர்பவர்கள், இரும்பாலான வேல் போன்ற கூரிய கண்களை உடையவர்கள், யாராயிருந்த போதிலும் அவரிடம் பணத்தைக் கவர்ந்து கொள்ளும் தந்திரம் வல்ல சிறப்பு உடையவர்கள், நறுமணம் கூடியதாய்ப் பின்னிக் கட்டியுள்ள கூந்தலினின்று வாசனை வீசச் செய்பவர்கள், பொன்னைக் கொடுக்கிறேன் என்று சொன்னால் அது தருமளவும் (தமது வீட்டுக்கு) மறுபடியும் அழையாதவர்கள், இத்தகைய பொது மகளிரொடு இன்பத்தை அனுபவித்துக் கொண்டு, கொடுமை வாய்ந்த பெரிய நரகத்தை அடைந்து பிணமாகி விடாமல், உனது திருவடியைப் பற்றி உன் திருப்புகழைக் கூற எனக்கு அருள்வாயாக. (ராமனை) வணங்குவதற்கு மனம் இல்லாத ராவணனுடைய பத்துத் தலைகளும் அற்று விழும்படி அம்பைச் செலுத்தி, மனம் கலங்க, பொய்யை உடைய அரக்கரின் வலிமையை அழித்த திருமாலின் மருகனே, ஆணவம் கொண்டு சண்டை செய்த சூரபன்மன் ஆகியோரை, குலப் பெருமை பேசி இறுமாப்புடன் பகைமைப் போர் சொல்லி வந்த மூடரை, சூழ்ந்து வளைத்து போர்க்களத்தில் இறந்து போகும்படி வேலைச் செலுத்தியவனே, பிணத்தைப் பற்றிக் கொண்டு, கழுகுகளுடன் பல பேய்கள் பிடுங்கிக் கொத்தி உண்ணும்படி போர் செய்து, பகைவர்களைப் பிளந்து அழித்து, வன்மை கொண்ட சிறந்த மயில் வாகனத்தில் ஏறிய முருகோனே, உன்னைப் பிரிந்திருந்து, உள்ளத்தில் அன்பு நிறைந்திருந்த ஞானிகள், சிலம்பையும் பொன்னால் செய்யப்பட்ட வீரக் கழலையும் அணிந்த திருவடிகளைச் சேர விரும்பி வருகின்ற, பெரும் பற்றப் புலியூர் என்ற சிதம்பரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 490 - சிதம்பரம் 
ராகம் - சங்கராபரணம்; தாளம் - அங்கதாளம் - 8 1/2 
தகிட-1 1/2, தக-1, தகதிமி-2 
தகதிமி-2, தகதிமி-2
தனந்தத் தத்தன தானன தானன
     தனந்தத் தத்தன தானன தானன
          தனந்தத் தத்தன தானன தானன ...... தனதான
விடுங்கைக் கொத்தக டாவுடை யானிட
     மடங்கிக் கைச்சிறை யானஅ நேகமும்
          விழுங்கப் பட்டற வேயற லோதியர் ...... விழியாலே 
விரும்பத் தக்கன போகமு மோகமும்
     விளம்பத் தக்கன ஞானமு மானமும்
          வெறுஞ்சுத் தச்சல மாய்வெளி யாயுயிர் ...... விடுநாளில் 
இடுங்கட் டைக்கிரை யாயடி யேனுடல்
     கிடந்திட் டுத்தம ரானவர் கோவென
          இடங்கட் டிச்சுடு காடுபு காமுன ...... மனதாலே 
இறந்திட் டுப்பெற வேகதி யாயினும்
     இருந்திட் டுப்பெற வேமதி யாயினும்
          இரண்டிற் றக்கதொ ரூதியம் நீதர ...... இசைவாயே 
கொடுங்கைப் பட்டம ராமர மேழுடன்
     நடுங்கச் சுக்ரிவ னோடம ராடிய
          குரங்கைச் செற்றும கோததி தூளெழ ...... நிருதேசன் 
குலங்கட் பட்டநி சாசரர் கோவென
     இலங்கைக் குட்டழ லோனெழ நீடிய
          குமண்டைக் குத்திர ராவண னார்முடி ...... அடியோடே 
பிடுங்கத் தொட்டச ராதிப னாரதி
     ப்ரியங் கொட் டக்கநன் மாமரு காஇயல்
          ப்ரபஞ்சத் துக்கொரு பாவல னாரென ...... விருதூதும் 
ப்ரசண்டச் சொற்சிவ வேதசி காமணி
     ப்ரபந்தத் துக்கொரு நாதச தாசிவ
          பெரும்பற் றப்புலி யூர்தனில் மேவிய ...... பெருமாளே.
செலுத்தும் சாமர்த்தியத்திற்குத் தக்க எருமைக் கடாவை வாகனமாக உடைய யமன் வசத்தில் அடங்கி, கை வசத்திலிருந்த செல்வமும் பல பொருள்களும் கருமணலைப் போல் கரு நிறம் கொண்ட கூந்தலை உடைய விலைமாதர்களின் கண்களால் முற்றிலுமாக கவரப்பட்டு, விரும்பி அடையத் தக்கனவான சுக போகங்களும், ஆசைகளும், சொல்லத் தக்கனவானஅறிவும், பெருமையும், முழுப் பொய்யாகி அகல, உடலை விட்டு ஆவி வெளிப்பட்டுப் போகின்ற அந்த நாளில், (சுடு காட்டில்) அடுக்கப்படும் விறகு கட்டைகளுக்கு உணவாகி அடியேனுடைய இவ்வுடல் கிடக்கும்போது சுற்றத்தார்கள் கோ என்று ஓலமிட்டுக் கதற, கிடக்கும் இடத்தில் (பாடையில்) கட்டப்பட்டு சுடுகாட்டுக்குப் போவதற்கு முன்னே, என் மனதால் (உன்னுடன் இரண்டறக் கலந்து) சமாதி நிலையை அடைந்திட்டு நற்கதியைப் பெறவாவது, (அல்லது) இந்த உலகில் இருக்கும்போதே நல்ல அறிவைப் பெறவாவது, மேற் சொன்ன இரண்டில் எனக்குத் தகுந்ததான பயனை நீயே தீர்மானித்து, அதைக் கொடுக்க மனம் பொருந்துவாயாக. நீண்ட கிளைகளை உடைய ஏழு மராமரங்களை அவற்றின் உடல்கள் நடுங்கும்படியாக அம்பை விட்டும், சுக்¡£வனுடன் போர் புரிந்த குரங்காகிய வாலியை அழித்தும், பெரிய கடலில் தூசி கிளம்பும்படி, அரக்கர் தலைவன் ராவணனுடைய குலத்தைச் சார்ந்த அரக்கர்கள் எல்லாம் கோவென்ற சத்தத்தோடு அலற, இலங்கை நகருள் அக்கினி பகவான் எழுந்து தீப்பற்றி எரியச் செய்ய, செல்வம் மேலீட்டால் செருக்குண்ட, வஞ்சகம் நிறைந்த இராவணனனுடைய தலைகள் பத்தும் அடியோடு அறுபட்டு விழும்படியாக செலுத்திய அம்பைக் கொண்ட நாயகனாம் இராமன் மிகுந்த அன்பு கொள்வதற்குத் தகுந்த, நன்கு சிறந்த மருகனே, இந்த உலகத்துக்கு ஒப்பற்ற கவி அரசர் என்று வெற்றிச் சின்னங்கள் முழங்குகின்ற, பெருமையுடைய சொற்களைக் கொண்ட தேவாரப் பதிகங்களை ஓதிய சிவ வேத சிகாமணியாகிய ஞான சம்பந்த மூர்த்தியே, நூல் வகைகளுக்கெல்லாம் ஒப்பற்ற தலைவனே, என்றும் மங்களகரமானவனே, பெரும்பற்றப் புலியூர் என்னும் சிதம்பரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 491 - சிதம்பரம் 
ராகம் - ...; தாளம் -
தந்தன தானன தானத்தம்
     தந்தன தானன தானத்தம்
          தந்தன தானன தானத்தம் ...... தனதான
கொந்தள வோலைக ளாடப்பண்
     சங்கொளி போல்நகை வீசித்தண்
          கொங்கைகள் மார்பினி லாடக்கொண் ...... டையென்மேகம் 
கொங்கெழு தோள்வளை யாடக்கண்
     செங்கயல் வாளிகள் போலப்பண்
          கொஞ்சிய கோகில மாகப்பொன் ...... பறிகாரர் 
தந்திர மாமென வேகிப்பொன்
     தொங்கலொ டாரமு மாடச்செந்
          தம்பல வாயொடு பேசிக்கொண் ...... டுறவாடிச் 
சம்பள மீதென வோதிப்பின்
     பஞ்சணை மேல்மய லாடச்சஞ்
          சங்கையில் மூளியர் பால்வைக்குஞ் ...... செயல்தீராய் 
அந்தக னாருயிர் போகப்பொன்
     திண்புர மோடெரி பாயப்பண்
          டங்கச னாருடல் வேகக்கண் ...... டழல்மேவி 
அண்டர்க ளோடட லார்தக்கன்
     சந்திர சூரியர் வீழச்சென்
          றம்பல மீதினி லாடத்தன் ...... குருநாதா 
சிந்துர மோடரி தேர்வர்க்கம்
     பொங்கமொ டேழ்கடல் சூர்பத்மன்
          சிந்திட வேல்விடு வாகைத்திண் ...... புயவேளே 
செங்குற மாதுமி னாளைக்கண்
     டிங்கித மாயுற வாடிப்பண்
          செந்தமிழ் மால்புலி யூர்நத்தும் ...... பெருமாளே.
தலை மயிர்ச் சுருளின் கீழுள்ள காதோலைகள் அசைய, சீரான சங்கின் ஒளியைப் போல பற்கள் ஒளியை வீசி, குளிர்ச்சியான மார்பகங்கள் நெஞ்சில் அசைய, கொண்டை என்கின்ற கறுத்த மேகமும் வாசனையை எழுப்பி வீச, தோள் வளையல்கள் ஆட, கண்கள் சிவந்த கயல் மீன் போலவும் அம்புகள் போலவும் விளங்க, இசை கொஞ்சும் குயிலென விளங்கி, பொன் காசுக்களைப் பறிப்பவர்களாகிய விலைமாதர்கள் தந்திரச் செயல்களுடன் சென்று, பொன் மாலையுடன் ஆரமும் கழுத்தில் அசைய, சிவந்த தாம்பூலக் கரையுடைய வாயுடன் பேசியிருந்து, பல உறவு முறைகளைக் கையாண்டு, (தனக்குக் கொடுக்க வேண்டிய) தொகை இவ்வளவு என்று நிச்சயித்து, அதன் பின்னர் பஞ்சு மெத்தையின் மேல் காம மயக்கப் பேச்சுக்களைப் பேசும், பயமும் வெட்கமும் இல்லாத அறிவிலிகளிடத்தே அன்பு வைக்கும் இழிச் செயலை ஒழித்தருளுக. யமனுடைய அரிய உயிர் அழிந்து போகவும், அழகிய வலிய திரி புரங்கள் எரி பாய்ந்து அழியவும், முன்பு மன்மதனுடைய உடல் வெந்து விழவும், நெற்றிக் கண்ணிலிருந்து நெருப்பைச் செலுத்தி, தேவர்களுடன் வலிமை பொருந்திய தக்கன், சந்திர சூரியர்களும் பங்கப்பட விழச் செய்தபின் போய் (சிதம்பரத்திலுள்ள) பொன் அம்பலத்தின் மீது கூத்தாடின பெருமானாகிய சிவபிரானுக்குக் குரு நாதனே, யானையுடன், குதிரை, தேர்க் கூட்டங்களின் சேனைகள் எழுச்சியுடன், ஏழு கடல்களும், சூரபத்மனும் அழிபட வேலைச் செலுத்திய வெற்றி வாய்ந்த வலிய புயங்களைக் கொண்ட தலைவனே, செவ்விய குற மாதாகிய வள்ளி என்னும் மின்னல் போன்ற அழகியைப் பார்த்து, இனிமையாய் உறவு பூண்டு, இசை நிரம்பிய செந்தமிழ் விளங்கும் புலியூராகிய சிதம்பரத்தை விரும்பும் பெருமாளே. 
பாடல் 492 - சிதம்பரம் 
ராகம் - ...; தாளம் -
தனனா தத்தன தானத்தம்
     தனனா தத்தன தானத்தம்
          தனனா தத்தன தானத்தம் ...... தனதான
நகையா லெத்திகள் வாயிற்றம்
     பலமோ டெத்திகள் நாணற்றின்
          நயனா லெத்திகள் நாறற்புண் ...... தொடைமாதர் 
நடையா லெத்திக ளாரக்கொங்
     கையினா லெத்திகள் மோகத்தின்
          நவிலா லெத்திகள் தோகைப்பைங் ...... குழல்மேகச் 
சிகையா லெத்திக ளாசைச்சங்
     கடியா லெத்திகள் பாடிப்பண்
          திறனா லெத்திகள் பாரத்திண் ...... தெருவூடே 
சிலர்கூ டிக்கொடு ஆடிக்கொண்
     டுழல்வா ருக்குழல் நாயெற்குன்
          செயலா லற்புத ஞானத்திண் ...... கழல்தாராய் 
பகையா ருட்கிட வேலைக்கொண்
     டுவரா ழிக்கிரி நாகத்தின்
          படமோ டிற்றிட சூரைச்சங் ...... கரிசூரா 
பணநா கத்திடை சேர்முத்தின்
     சிவகா மிககொரு பாகத்தன்
          பரிவால் சத்துப தேசிக்குங் ...... குரவோனே 
சுகஞா னக்கடல் மூழ்கத்தந்
     தடியே னுக்கருள் பாலிக்குஞ்
          சுடர்பா தக்குக னேமுத்தின் ...... கழல்வீரா 
சுகரே சத்தன பாரச்செங்
     குறமா தைக்கள வால்நித்தஞ்
          சுகமூழ் கிப்புலி யூர்நத்தும் ...... பெருமாளே.
சிரிப்பால் ஏமாற்றுபவர்கள். வாயில் வெற்றிலை பாக்கு உண்ட தாம்பூல எச்சிலுடன் ஏமாற்றுபவர்கள். வெட்கம் இல்லாமல் இனிமையான கண்களால் ஏமாற்றுபவர்கள். துர்க் கந்தம் கொண்ட தொடைகளை உடைய விலைமாதர்கள் தங்களுடைய நடையைக் கொண்டு ஏமாற்றுபவர்கள். நிறைந்துள்ள மார்பகங்களால் ஏமாற்றுபவர்கள். காம மயக்கம் தரக் கூடிய பேச்சால் ஏமாற்றுபவர்கள். மயிலின் தோகையைப் போல உள்ள இளம் கூந்தலாகிய மேகம் போன்ற மயிர் முடியால் ஏமாற்றுபவர்கள். ஆசையை ஊட்டும் சுகத்தைத் தரும் வாசனைகளால் ஏமாற்றுபவர்கள். பாடல்களைப் பாடித் தமது இசை ஞானத்தால் ஏமாற்றுபவர்கள். பெரிய நெருக்கமான தெருக்களில் சிலர் கூடிக் கொண்டும், ஆடிக் கொண்டும் திரிகின்றவர்களாகிய விலைமாதர்கள் வசமே திரியும் அடியேனுக்கு, உனது திருவிளையாடலால் அற்புதமயமான வலிய திருவடிகளைத் தந்து காப்பாயாக. பகைத்து நின்ற அசுரர்கள் அஞ்ச வேலாயுதத்தைக் கொண்டு, உப்புத் தன்மை நிறைந்த கடல்களும், (ஏழு) மலைகளும், ஆதி சேஷனுடைய படங்களும் குலைந்து விழ, அசுரன் சூரனை அழித்த சூரனே, பாம்பின் படம் போன்ற பதக்கம் விளங்கும் மேகலை அணிந்த அரையை உடைய முத்துப் போன்ற சிவகாமி அம்மையாரை ஒரு பாகத்தில் கொண்டவராகிய சிவபெருமானுக்கு அன்புடன் மெய்ப் பொருளை உபதேசம் செய்த சற்குருவே, சுக ஞானக் கடலில் முழுகி இன்பம் பெறத் தந்து அடியேனுக்குத் திருவருள் புரிந்த ஒளி வீசும் திருவடியை உடைய குகனே, முத்தாலாகிய வீரக் கழல்களை அணிந்த வீரனே, இன்பச் சுவை கொண்ட மார்பகங்களை உடைய குறப் பெண்ணாகிய வள்ளியுடன் களவியல் வழியில் தினந்தோறும் சுகம் அனுபவித்து, புலியூர் எனப்படும் சிதம்பரத்தில் விரும்பி வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 493 - சிதம்பரம் 
ராகம் - அடாணா; தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2 
தகதிமி-2, தகிட-1 1/2
தனதன தனன தனதன தனன
     தனதன தனன ...... தனதான
எழுகடல் மணலை அளவிடி னதிக
     மெனதிடர் பிறவி ...... அவதாரம் 
இனியுன தபய மெனதுயி ருடலு
     மினியுடல் விடுக ...... முடியாது 
கழுகொடு நரியு மெரிபுவி மறலி
     கமலனு மிகவு ...... மயர்வானார் 
கடனுன தபய மடிமையு னடிமை
     கடுகியு னடிகள் ...... தருவாயே 
விழுதிக ழழகி மரகத வடிவி
     விமலிமு னருளு ...... முருகோனே 
விரிதல மெரிய குலகிரி நெரிய
     விசைபெறு மயிலில் ...... வருவோனே 
எழுகடல் குமுற அவுணர்க ளுயிரை
     யிரைகொளும் அயிலை ...... யுடையோனே 
இமையவர் முநிவர் பரவிய புலியு
     ரினில்நட மருவு ...... பெருமாளே.
ஏழு கடல்களின் கரையிலுள்ள மணலையெல்லாம் எண்ணிப்பார்த்தால் வரும் அளவை விட அதிகம் என் துன்பம் நிறை பிறவிகள் என்ற அவதாரங்கள். இனி உனக்கே அடைக்கலமாம் என் உயிரும், உடலும். இனியும் பிறப்பெடுத்து உடலைவிட என்னால் முடியாது. கழுகும், நரியும், நெருப்பும், மண்ணும், யமனும், பிரம்மாவும், என்னுடலை பலமுறை பிரித்தும், பிறப்பித்தும் சோர்வடைந்து விட்டார்கள். என் கடமை இனி உன்னிடம் அடைக்கலம் புகுவதே ஆகும். யான் அடிமைசெய்வது உன்னிடம் அடிமை பூணுதற்கே ஆகும். நீ விரைவில் உன் திருவடிகளைத் தர வேண்டும். சிறந்து திகழும் அழகியும், பச்சை வடிவானவளும், பரிசுத்தமானவளுமான பார்வதி முன்பே ஈன்றருளிய முருகப் பெருமானே, விரிந்த பூமியானது பற்றி எரிய, கிரெளஞ்சகிரி நெரிந்து பொடிபட, வேகமாக வரவல்ல மயிலில் வருபவனே, ஏழு கடல்களும் கொந்தளிக்க அசுரர்களின் உயிரை உணவாகக் கொள்ளும் வேலினை ஆயுதமாகக் கொண்டவனே, தேவர்களும், முனிவர்களும்* வணங்கித் துதித்த புலியூர் என்னும் சிதம்பரத்தில் நடனம் செய்கின்ற பெருமாளே. 
* வணங்கிய முனிவர்கள் வியாக்கிரபாதர், பதஞ்சலி, உபமன்யு, வசிஷ்டர் ஆகியோர் ஆவர்.
பாடல் 494 - சிதம்பரம் 
ராகம் - வலஜி ; தாளம் - அங்கதாளம் - 14 
தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2, தகிட-1 1/2 
தகதிமி-2, தகதிமி-2, தக-1, திமிதக-2
தனதன தனன தனதன தனன
     தனதன தனனாத் ...... தனதான
தறுகணன் மறலி முறுகிய கயிறு
     தலைகொடு விசிறீக் ...... கொடுபோகுஞ் 
சளமது தவிர அளவிடு சுருதி
     தலைகொடு பலசாத் ...... திரமோதி 
அறுவகை சமய முறைமுறை சருவி
     யலைபடு தலைமூச் ...... சினையாகும் 
அருவரு வொழிய வடிவுள பொருளை
     அலம்வர அடியேற் ...... கருள்வாயே 
நறுமல ரிறைவி யரிதிரு மருக
     நகமுத வியபார்ப் ...... பதிவாழ்வே 
நதிமதி யிதழி பணியணி கடவுள்
     நடமிடு புலியூர்க் ...... குமரேசா 
கறுவிய நிருதர் எறிதிரை பரவு
     கடலிடை பொடியாப் ...... பொருதோனே 
கழலிணை பணியு மவருடன் முனிவு
     கனவிலு மறியாப் ...... பெருமாளே.
இரக்கமற்ற யமன் திண்ணிய பாசக்கயிற்றை அதன் நுனியைப் பிடித்து வீசி எறிந்து உயிரைக் கொண்டுபோகும் துன்பம் எனக்கு நேராமல் தவிர்க்க, நன்றாகத் தொகுக்கப்பட்ட வேதம் முதலிய பல சாஸ்திரங்களையும் ஓதி, ஆறு சமயங்களும்* ஒன்றோடொன்று மாறுபட்டு மோதித் தலை வேதனைதரப் போராடும் வெறுப்பேற்றும் செயல்கள் ஒழிந்து, பேரின்ப வடிவம் உள்ள சற்குணப் பொருளை அமைதியோடு அறியும்படி எந்தனுக்கு நீ அருள்செய்ய வேண்டும். மணமுள்ள தாமரையில் அமர்ந்த லக்ஷ்மிக்கும் திருமாலுக்கும் மருமகனே, (இமய) மலை பெற்ற பார்வதியின் செல்வக் குமரா, கங்கை, சந்திரன், கொன்றை, பாம்பு இவற்றை அணிந்த இறைவன் நடனமாடும் புலியூரின் (சிதம்பரத்தின்) குமரேசனே, கோபத்தோடு வந்த அசுரர்களை, வீசுகின்ற அலைகள் நிறைந்த கடலிடத்தில் தூளாக்கிப் போர் செய்தவனே, திருவடிகளின் வீரக் கழல்களை வணங்குவோரிடம் கோபம் காட்டுவதைக் கனவிலும் அறியாத கருணாமூர்த்திப் பெருமாளே. 
* ஆறு வகைச் சமயம்: காணாபத்யம், செளரம், கெளமாரம், சைவம், வைணவம், சாக்தம்.
பாடல் 495 - சிதம்பரம் 
ராகம் - ...; தாளம் -
தனதனா தத்ததன தனதனா தத்ததன
  தனதனா தத்ததன தானனந் தனன
    தனதனா தத்ததன தனதனா தத்ததன
      தனதனா தத்ததன தானனந் தனன
        தனதனா தத்ததன தனதனா தத்ததன
          தனதனா தத்ததன தானனந் தனன ...... தந்ததான
இரசபா கொத்தமொழி யமுர்தமா ணிக்கநகை
   யிணையிலா சத்திவிழி யார்பசும் பொனிரர்
      எழிலிநே ரொத்தஇரு ளளகபா ரச்செயல்க
         ளெழுதொணா தப்பிறையி னாரரும் புருவர்
            எழுதுதோ டிட்டசெவி பவளநீ லக்கொடிக
               ளிகலியா டப்படிக மோடடும் பொனுரு ...... திங்கள்மேவும் 
இலவுதா வித்தஇதழ் குமிழைநே ரொத்தஎழி
   லிலகுநா சிக்கமுகு மாலசங் கினொளி
      யிணைசொல்க்¡£ வத்தரள வினவொள்தா லப்பனையி
         னியல்கலா புத்தகமொ டேர்சிறந் தவடி
            யிணையிலா னைக்குவடெ னொளிநிலா துத்திபட
               ரிகலியா ரத்தொடையு மாருமின் பரச ...... தங்கமார்பின் 
வரிகள்தா பித்தமுலை யிசையஆ லிற்றளிரின்
   வயிறுநா பிக்கமல மாமெனுஞ் சுழிய
      மடுவுரோ மக்கொடியென் அளிகள்சூழ் வுற்றநிரை
         மருவுநூ லொத்தஇடை யாரசம் பையல்குல்
            மணமெலா முற்றநறை கமலபோ துத்தொடையென்
               வளமையார் புக்கதலி சேருசெம் பொனுடை ...... ரம்பைமாதர் 
மயலதா லிற்றடியெ னவர்கள்பா லுற்றுவெகு
   மதனபா ணத்தினுடன் மேவிமஞ் சமிசை
      வதனம்வேர் வுற்றவிர முலைகள்பூ ரிக்கமிடர்
         மயில்புறா தத்தைகுயில் போலிலங் கமளி
            வசனமாய் பொத்தியிடை துவளமோ கத்துளமிழ்
               வசமெலாம் விட்டுமற வேறுசிந் தனையை ...... தந்துஆள்வாய் 
முரசுபே ரித்திமிலை துடிகள்பூ ரித்தவில்கள்
   முருடுகா ளப்பறைகள் தாரைகொம் புவளை
      முகடுபேர் வுற்றவொலி யிடிகள்போ லொத்தமறை
         முதுவர்பா டிக்குமுற வேயிறந் தசுரர்
            முடிகளோ டெற்றியரி யிரதமா னைப்பிணமொ
               டிவுளிவே லைக்குருதி நீர்மிதந் துதிசை ...... யெங்குமோட 
முடுகிவேல் விட்டுவட குவடுவாய் விட்டமரர்
   முநிவரா டிப்புகழ வேதவிஞ் சையர்கள்
      முழவுவீ ணைக்கினரி யமுர்தகீ தத்தொனிகள்
         முறையதா கப்பறைய வோதிரம் பையர்கள்
            முலைகள்பா ரிக்கவுட னடனமா டிற்றுவர
               முடிபதா கைப்பொலிய வேநடங் குலவு ...... கந்தவேளே 
அரசுமா கற்பகமொ டகில்பலா இர்ப்பைமகி
   ழழகுவே யத்திகமு கோடரம் பையுடன்
      அளவிமே கத்திலொளிர் வனமொடா டக்குயில்க
         ளளிகள்தோ கைக்கிளிகள் கோவெனம் பெரிய
            அமுர்தவா விக்கழனி வயலில்வா ளைக்கயல்க
               ளடையுமே ரக்கனக நாடெனும் புலியுர் ...... சந்தவேலா 
அழகுமோ கக்குமரி விபுதையே னற்புனவி
   யளிகுலா வுற்றகுழல் சேர்கடம் புதொடை
      அரசிவே தச்சொருபி கமலபா தக்கரவி
         யரியவே டச்சிறுமி யாளணைந் தபுகழ்
            அருணரூ பப்பதமொ டிவுளிதோ கைச்செயல்கொ
               டணைதெய்வா னைத்தனமு மேமகிழ்ந் துபுணர் ...... தம்பிரானே.
சுவை நிறைந்த சர்க்கரை போன்ற சொற்கள், அமுத மாணிக்கம் போன்ற பற்கள், நிகரில்லாத வேல் போன்ற கண்களை உடையவர்கள். பசும் பொன் போன்ற தன்மை உடையவர்கள். மேகத்துக்கு ஒப்பான கருத்த கூந்தல் பாரத்தை உடைய செயலினர். எழுதற்கு முடியாத பிறை போன்ற அரிய புருவத்தினர். எழுதினது போல் அமைந்துள்ள தோடு இட்ட காது. பவளக் கொடியும் நீலக் கொடியும் ஒன்றோடு ஒன்று மாறுபட்டு ஆடுவது போல் படிகத்தை வென்ற தெளிவும், பொன்னின் உருவமும் கொண்டதுமான மதி போன்ற முகத்தில் உள்ள இலவம் பூப் போல அமைந்துள்ள வாயிதழ். குமிழம் பூவுக்கு ஒப்பான அழகு பெற்று விளங்கும் மூக்கு. கமுகு போன்றும் திருமாலின் ஒளிவீசும் சங்குக்கு இணை சொல்லக் கூடியதுமான கழுத்தில் முத்து மாலைக் கூட்டம். ஒளி வீசும் பனை ஓலையால் அமைந்துள்ள பெருமை வாய்ந்த நூல் எழுதப்பட்ட ஓலைப் புத்தகம் போல அழகிய சிறந்த பாதம். ஒப்பு இல்லாத யானை, மலை என்று சொல்லும்படியானதும், ஒளி நிலவுகின்றதும், தேமல் படர்ந்ததும், பிணைந்துள்ள முத்து மாலை அணிந்துள்ளதும், நிறைந்த இன்ப ரசத்தைக் கொண்டுள்ளதுமான தங்க வடிவான மார்பில் ரேகைகள் கொண்டதுமான மார்பகங்கள். சொல்லத்தக்க ஆலின் தளிர் இலை போன்ற வயிறு. கொப்பூழ் என்பது தாமரை மொட்டுப் போன்றது. நீர்ச்சுழி, மடு, மயிர்க் கொடி என்கின்ற வண்டுகள் சூழ்ந்த வரிசை. பொருந்திய நூல் போன்று நுண்ணியதான இடுப்பு நிறைந்த செழிப்புள்ள மின்னல். பெண்குறி நறுமணம் எல்லாம் உள்ள தேன் நிறை தாமரைப் பூ. தொடை என்பது செழிப்பு நிறைந்த வாழைத் தண்டு. இங்ஙனம் சேர்ந்துள்ள செம்பொன் ஆடை அணிந்துள்ள, தெய்வப் பெண்ணாகிய ரம்பை போன்ற விலைமாதர்களின் காம மயக்கத்தால் அடியேனாகிய நான் மனம் ஒடிந்து அவர்களிடமே பொருந்தி இருந்து, நிரம்ப மன்மதனுடைய பாணங்களால் தாக்கப்பட்டு, கட்டிலின் மேல் முகம் வேர்வை அடைந்து விளங்க, மார்பகங்கள் புளகித்துப் பூரிக்க, கழுத்தினின்றும் மயில், புறா, கிளி, குயில் முதலியனவற்றைப் போல (புட்குரல்கள்) விளங்கி ஒலிக்க, படுக்கைப் பேச்சாய் நிறைந்து, இடை துவள, அந்த மாதர்களுடைய மோகத்துள் அமிழ்கின்ற குண நிலைமை எல்லாம் விட்டு ஒழிவதற்காக, (நல்ல) சிந்தனைகளை எனக்குத் தந்து அருளுக. முரசு, பேரிகை, திமிலை முதலிய பறை வகைகள், உடுக்கைகள், ஊதுங் கருவி வகை, தவில் முதலிய மேள வகைகள், மத்தள வகைகள், எக்காளம், நீண்ட ஊது குழல், ஊதுங் கொம்பு, சங்கு ஆகியவை ஆகாச முகட்டையும் அசைக்கும்படி ஒலியாய் இடிகள் இடிப்பது போல முழங்க, வேதம் வல்ல பெரியோர்கள் பாடி ஒலி எழுப்ப, இறந்து போன அசுரர்களின் தலைகளை அடித்துத் தள்ளி, சிங்கம், தேர், யானைப் பிணங்களோடு, குதிரை ஆகியவை ரத்தக் கடலில் மிதந்து பல திக்குகளிலும் ஓட, வேகமாக வேலாயுதத்தைச் செலுத்தி வடக்கே உள்ள மேரு மலை கலங்கிக் குலுங்க, தேவர்களும் முனிவர்களும் ஆடிப் புகழ, வேதம் வல்ல புலவர்கள் குட முழா என்ற பறை, வீணை, கி(ன்)னரியாழ் (இவைகளின்) அமுத கீதம் போன்ற ஒலிகளுடன் முறை முறையாக ஒலியை எழுப்பி ஓதிட, ரம்பை முதலான தேவமாதர்களின் மார்பகங்கள் கனக்க, ஒன்று கூடி நடனம் ஆடினவராய் வர, மகுடமும் கொடியும் விளங்கவே முருகன் ஆடலான குடைக்கூத்தும் துடைக்கூத்தும் ஆடி விளங்கிய கந்த வேளே, அரச மரம், மாமரம், தென்னை இவற்றுடன் அகில், பலா மரம், இலுப்பை மரம், மகிழ மரம், அழகான மூங்கில், அத்தி மரம், கமுக மரம், இவற்றுடன் வாழை மரம் (கலந்து) மேக மண்டலம் வரை உயர்ந்த செழித்த சோலைகளில் உலவும் குயில்கள், வண்டுகள், மயில்கள், கிளிகள் கோ என்று ஒலி செய்ய, பெரிதான அமுத நீரைக் கொண்ட குளங்களிலும், கழனிகளிலும், வயல்களிலும் வாளை மீன்களுடன் கயல் மீன்களும் அடைகின்ற அழகினிலே, அந்தப் பொன்னுலகம் என்று சொல்லும்படியான சிதம்பரத்தில் வீற்றிருக்கும் அழகிய வேலனே, அழகும் ஆசையும் கொண்ட குமரி, தேவதை போன்றவள், தினைப் புனத்தில் இருப்பவள், வண்டுகள் குலவும் கூந்தலில் சேர்ந்துள்ள கடப்ப மாலையை உடைய அரசி, வேத உருவம் கொண்டவள், தாமரை போன்ற சிவந்த பாதங்களை உடைய அருமை வாய்ந்த வேடப் பெண்ணாகிய வள்ளி நாயகி அணைந்த புகழையும் கொண்டு, சிவந்த உருவம் கொண்ட பதங்களுடன், கலாபம் கொண்ட குதிரையாம் மயில் மீது ஏறின நீ அணைந்த தேவயானையின் மார்பகங்களையும் மகிழ்ந்து அவளையும் சேர்ந்த தம்பிரானே. 
* சந்தம் பற்றி நீரார் என்பது நிரர் என வந்தது.
பாடல் 496 - சிதம்பரம் 
ராகம் - வாசஸ்பதி ; தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2 
தகிடதகதிமி-3 1/2
தனன தானன தனன தானன
     தனன தானன ...... தனதான
இருளு மோர்கதி ரணுகொ ணாதபொ
     னிடம தேறியெ ...... னிருநோயும் 
எரிய வேமல மொழிய வேசுட
     ரிலகு மூலக ...... வொளிமேவி 
அருவி பாயஇ னமுத மூறவுன்
     அருளெ லாமென ...... தளவாக 
அருளி யேசிவ மகிழ வேபெற
     அருளி யேயிணை ...... யடிதாராய் 
பரம தேசிகர் குருவி லாதவர்
     பரவை வான்மதி ...... தவழ்வேணிப் 
பவள மேனியர் எனது தாதையர்
     பரம ராசியர் ...... அருள்பாலா 
மருவி நாயெனை யடிமை யாமென
     மகிழ்மெய் ஞானமு ...... மருள்வோனே 
மறைகு லாவிய புலியுர் வாழ்குற
     மகள்மெ லாசைகொள் ...... பெருமாளே.
இருட்டும் சூரிய ஒளியின் ஒரு கதிரும் புகமுடியாத தேவலோகத்தை யான் அடைந்து, என் நல்வினை, தீவினை என்ற இரு நோய்களும் எரிந்து போகவும், ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களும் ஒழிந்திடவும், ஒளி பொருந்திய மூலாதார அக்கினி பொருந்தி, அருவி பாய்வது போல இனிய தேவாமிர்தம் ஊற, உன் திருவருள் யாவும் என் வசமாகும்படியாக உதவியருளி, சிவஞானத்தை யான் மகிழ்ந்து பெறுமாறு அருள் செய்து உன் இரு திருவடிகளையும் தருவாயாக. மேலான தக்ஷிணாமூர்த்தி தேசிகரும், தமக்கு ஒரு குரு இல்லாதவரும், பரந்த கடல் போன்ற கங்கையும் வானத்துச் சந்திரனும் தவழ்கின்ற சடையரும், பவள நிற மேனியருமான எனது தந்தையாரும், பரம ரகசியமாகும் சிதம்பர ரகசியருமான சிவபிரான் அருளிய பாலனே, அடியேனிடம் வந்து கூடி, என்னை ஓர் அடிமையாக ஏற்றுக் கொண்டு, மகிழ்ந்து மெய்ஞ்ஞானத்தை அருள்வோனே, வேதங்கள் விளங்கும் புலியூர் சிதம்பரத்தில் வாழ்பவனே, குறப்பெண் வள்ளிமீது ஆசை கொண்ட பெருமாளே. 
பாடல் 497 - சிதம்பரம் 
ராகம் - மத்யமாவதி; தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2 
தகதிமி-2, தகிட-1 1/2
தான தனத்தம் தான தனத்தம்
     தான தனத்தம் ...... தனதான
காவி யுடுத்துந் தாழ்சடை வைத்துங்
     காடுகள் புக்குந் ...... தடுமாறிக் 
காய்கனி துய்த்துங் காயமொ றுத்துங்
     காசினி முற்றுந் ...... திரியாதே 
சீவ னொடுக்கம் பூத வொடுக்கம்
     தேற வுதிக்கும் ...... பரஞான 
தீப விளக்கங் காண எனக்குன்
     சீதள பத்மந் ...... தருவாயே 
பாவ நிறத்தின் தாருக வர்க்கம்
     பாழ்பட வுக்ரந் ...... தருவீரா 
பாணிகள் கொட்டும் பேய்கள் பிதற்றும்
     பாடலை மெச்சுங் ...... கதிர்வேலா 
தூவிகள் நிற்குஞ் சாலி வளைக்குஞ்
     சோலை சிறக்கும் ...... புலியூரா 
சூரர் மிகக்கொண் டாட நடிக்குந்
     தோகை நடத்தும் ...... பெருமாளே.
காவித் துணியை உடுத்திக் கொண்டும், தாழ்ந்து தொங்கும் சடையை வளர்த்து வைத்தும், காடுகளில் புகுந்து தடுமாறியும், காய், பழவகைகளைப் புசித்தும், தேகத்தை விரதங்களால் வருத்தியும், உலகம் முழுவதும் திரிந்து அலையாமல், சீவனை* (சிவமயமாக) ஒடுக்குதலும் ஐம்பூதங்களுடைய ஒடுக்குதலும் நன்றாக உண்டாகும்படி, மேலான ஞான ஒளி விளக்கத்தினையான் காணும்படி, எனக்கு உன் குளிர்ந்த தாமரை அடிகளைத் தந்தருள்க. பாவமே உருவெடுத்த தாருகாசுரன் கூட்டத்தினர் பாழ்பட்டொழிய கோபம் காட்டிய வீரனே, போர்க்களத்தில் கைகளைக் கொட்டும் பேய்கள் உளறும் பாடல்களைப் பாராட்டும் ஒளி வேலனே, அன்னங்கள் நிற்கும் வயல்கள் சூழ்ந்த சோலைகள் விளங்கும் புலியூரனே (சிதம்பரேசனே), சூரர்கள் மிகக் கொண்டாடும்படியாக நடனமாடும் மயிலினை நடத்தும் பெருமாளே. 
* சீவன் என்பதில் உள்ள (சீ) இரு மாத்திரை நெடில். அதனை ஒரு மாத்திரை குறில் எழுத்தாக (சி) ஒடுக்கினால், சீவன் சிவன் என்று ஆகிவிடும்.
பாடல் 498 - சிதம்பரம் 
ராகம் - ...; தாளம் -
தானத் தானத் தாந்தன தானன
     தானத் தானத் தாந்தன தானன
          தானத் தானத் தாந்தன தானன ...... தனதான
கோதிக் கோதிக் கூந்தலி லேமலர்
     பாவித் தாகச் சாந்தணி வார்முலை
          கோடுத் தானைத் தேன்துவர் வாய்மொழி ...... குயில்போலக் 
கூவிக் கூவிக் காண்டிசை போலவெ
     நாணிக் கூனிப் பாய்ந்திடு வார்சிலர்
          கூடித் தேறிச் சூழ்ந்திடு வார்பொருள் ...... வருமோவென் 
றோதித் தோளிற் பூந்துகி லால்முலை
     மூடிச் சூதிற் றூங்கமி லார்தெரு
          வோடித் தேடிச் சோம்பிடு வார்சில ...... விலைமாதர் 
ஓருச் சேரச் சேர்ந்திடு வார்கலி
     சூளைக் காரச் சாங்கமி லார்சில
          வோரைச் சாகத் தீம்பிடு வார்செய ...... லுறவாமோ 
வேதத் தோனைக் காந்தள்கை யால்தலை
     மேல்குட் டாடிப் பாந்தள் சதாமுடி
          வீரிட் டாடக் காய்ந்தசு ரார்கள்மெல் ...... விடும்வேலா 
வேளைச் சீறித் தூங்கலொ டேவய
     மாவைத் தோலைச் சேர்ந்தணி வாரிட
          மீதுற் றாள்பொற் சாம்பவி மாதுமை ...... தருசேயே 
நாதத் தோசைக் காண்டுணை யேசுடர்
     மூலத் தோனைத் தூண்டிட வேயுயிர்
          நாடிக் காலிற் சேர்ந்திட வேயருள் ...... சுரமானை 
ஞானப் பால்முத் தேன்சுரு பாள்வளி
     மாதைக் கானிற் சேர்ந்தணை வாய்சிவ
          ஞானப் பூமித் தேன்புலி யூர்மகிழ் ...... பெருமாளே.
ஆய்ந்து ஆய்ந்து கூந்தலில் மலர்களைப் பரப்பிச் சூட்டி, உடலில் சந்தனம் அணிந்துள்ள மார்பு என்னும் மலை போன்ற சேனையுடன், பவளம் போன்ற வாயால் தேன் போன்ற மொழியால் குயில் போலக் கூவி அழைத்து, (ஆடவர்களைக்) கண்டு இசையுடன், பேசும் பேச்சுக்குத் தக்கபடி வெட்கப்பட்டும், (ஒரு சமயம்) குனிந்தும், (மற்றொரு சமயம்) பாய்ந்தும் சில பொது மகளிர் நடிப்பர். ஒன்று கூடியும், தெளிவுற்றும் சூழ்ந்து யோசிப்பவர்களாய், பொருள் கிடைக்குமோ என்று பேசி, தோள் மீதுள்ள அழகிய புடவையால் மார்பை மூடி, வஞ்சனை எண்ணத்துடன் தூக்கம் இல்லாத கண்களுடன் தெருவில் ஓடியும் (வாடிக்கையாளரைத்) தேடியும், சில வேசிகள் சோம்பலாய்க் காலம் கழிப்பர். ஒருமிக்க தரித்திர நிலையைச் சேர்ந்தவர்களாய், வேசிகளாய், நல் ஒழுக்கம் இல்லாதவர்களாய், (தம்மிடம் வரும்) சிலரைச் சாகும் அளவுக்கு கேடு செய்பவர்களாகிய விலைமாதர்களின் தொழில்களில் உறவு கொள்ளுதல் நல்லதா? வேதம் வல்ல பிரமனை காந்தள் மலர் போன்ற கையால் தலையில் குட்டி விளையாடி, ஆதிசேஷனாகிய பாம்பின் நூற்றுக் கணக்கான முடிகள் வேதனைப்பட்டு அசையக் கோபித்து, அசுரர்களின் மேல் வேலாயுதத்தைச் செலுத்தியவனே, மன்மதனைக் கோபித்து, யானையுடன் புலியின் தோலைப் போர்வையாகவும், உடையாகவும் ஒரு சேர அணிந்தவராகிய சிவபெருமானுடைய இடப்பாகத்தில் உறையும் அழகிய சாம்பவியாகிய மாதா, உமை பெற்ற குழந்தையே, உனது திருச்சிலம்போசை முதலிய நாதங்களைக் கேட்பதற்குத் துணை புரியும் தேவனே, மூலாதாரக் கனலைத் தூண்டி எழுப்பி, பிராணவாயு சுழுமுனை* நாடி மார்க்கத்தில் சார்வதற்கு அருள் புரிவாயாக. தேவ லோகத்தில் வளர்ந்த மான் போன்ற தேவயானையையும், ஞானப் பால் போலவும் முப்பழங்களின் தேன் போலவும் இனிய சொரூபத்தை உடையவளும் ஆகிய வள்ளி நாயகியை தினைப் புனக் காட்டிலும் சேர்ந்து தழுவியவனே, சிவஞானப் பூமியாகிய அழகிய புலியூரில் (சிதம்பரத்தில்) மகிழ்ந்து விளங்கும் பெருமாளே. 
* இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு:நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு 'ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள், சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி, ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை, சுழுமுனை முதலியன) உள்ளன.'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம்.'சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது.'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும் ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும்.
பாடல் 499 - சிதம்பரம் 
ராகம் -...; தாளம் -
தனதந்தத் தனனா தனதன
     தனதந்தத் தனனா தனதன
          தனதந்தத் தனனா தனதன ...... தனதான
சகசம்பக் குடைசூழ் சிவிகைமெல்
     மதவின்பத் துடனே பலபணி
          தனிதம்பட் டுடையோ டிகல்முர ...... சொலிவீணை 
தவளந்தப் புடனே கிடுகிடு
     நடைதம்பட் டமிடோல் பலவொலி
          சதளம்பொற் றடிகா ரருமிவை ...... புடைசூழ 
வெகுகும்பத் துடனே பலபடை
     கரகஞ்சுற் றிடவே வரஇசை
          வெகுசம்பத் துடனே யழகுட ...... னிதமேவும் 
விருமஞ்சித் திரமா மிதுநொடி
     மறையும்பொய்ப் பவுஷோ டுழல்வது
          விடவும்பர்க் கரிதா மிணையடி ...... தருவாயே 
திகுதந்தித் திகுதோ திகுதிகு
     திகுதந்தித் திகுதோ திகுதிகு
          திகுர்தஞ்செச் செகசே செககண ...... எனபேரித் 
திமிர்தங்கற் குவடோ டெழுகட
     லொலிகொண்டற் றுருவோ டலறிட
          திரள்சண்டத் தவுணோர் பொடிபட ...... விடும்வேலா 
அகரம்பச் சுருவோ டொளியுறை
     படிகம்பொற் செயலா ளரனரி
          அயனண்டர்க் கரியா ளுமையருள் ...... முருகோனே 
அமுர்தம்பொற் குவடோ டிணைமுலை
     மதிதுண்டப் புகழ்மான் மகளொடும்
          அருள்செம்பொற் புலியூர் மருவிய ...... பெருமாளே.
உலகத்தோர் மெச்சும்படி விருதாகப் பிடிக்கும் குடை சூழும் பல்லக்கின் மேல் மகிழ்ச்சி மிக்க இன்பத்துடனே, பல வேறு ஆபரணங்களுடன் பட்டாடையோடு, மேக கர்ச்சனை போன்ற முரசு வாத்தியம், ஒலி செய்யும் வீணை, வெண் சங்கு, தப்பட்டைப் பறையுடன், கிடுகிடு என்னும் பறையுடன் மக்கள் ஊர்வலம் வரும் ஓசை, தம்பட்டம் என்ற ஒரு வகையான பறை, டோல் என்னும் வாத்தியம் இவை பலவற்றின் ஒலி எழ, மக்கள் கூட்டம், பொன்னாலாகிய தடியை ஏந்திய சேவகர்கள் இவை எல்லாம் பக்கங்களில் சூழ்ந்து வர, நிறைந்த பூரண கும்பங்களுடன் பலவிதமான படைகளும் கரகங்களும் சுற்றியும் வர, கீத வாத்தியங்கள், மிக்க செல்வத்துடனும் அழகுடனும் தினந்தோறும் பொருந்தி வரும் (இந்த ஆடம்பரங்கள்) வெறும் மயக்கமாகும். வெறும் கோலமாம் இது ஒரு நொடிப் பொழுதில் மறைந்து போகும். இத்தகைய பொய்யான ஆடம்பர வாழ்வுடன் அலைச்சல் படுவதை விடுவதற்கு, தேவர்களுக்கும் காண்பதற்கு அரிதான திருவடிகளைத் தந்து அருளுக. திகுதந்தித் திகுதோ திகுதிகு திகுதந்தித் திகுதோ திகுதிகு திகுர்தஞ்செச் செகசே செககண என்று பேரி வாத்தியங்கள் பேரொலி செய்ய, மலைத் திரட்சிகளும் ஏழு கடல்களும் ஒலி எழுப்பி குலைந்து போய் அச்சத்துடன் அலற, கூட்டமாய் கொடுமையுடன் வந்த அசுரர்கள் பொடிபட்டு அழிய வேலாயுதத்தைச் செலுத்தியவனே, அகர எழுத்தைப் போல் முதல்வியாய், பச்சை நிறத்தினளாய், ஒளி பொருந்திய படிகத்தையும் பொன்னையும் போன்றவளாய், (உலகை ஈன்று போகம் அளிக்கும் அருமைச்) செயலினளாய், சிவபெருமானுக்கும், திருமாலுக்கும், பிரமனுக்கும், தேவர்களுக்கும் கிட்டாத அருமை வாய்ந்தவளாயும் உள்ள பார்வதி அருளிய முருகனே, அமுதம் பொதிந்த அழகிய மலை போன்ற இரு மார்பகங்களையும், சந்திரனைப் போன்ற முகத்தையும் கொண்டவளும், புகழ் பெற்ற மான் ஈன்ற மகளுமாகிய வள்ளியுடன் அருள் பாலிக்கும் பொன் அம்பலம் உள்ள சிதம்பரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* விளக்கக் குறிப்புகள்:தனிதம் (இங்கு அன்வயப் படுத்தப்பட்டது) = மேக கர்ச்சனை, தவளம் = மக்கள் கூட்டம்,கிடுகிடு = ஒரு பறை, விருமம் = பிரமை, உரு = அச்சம், சண்டம் = கூட்டம்.
பாடல் 500 - சிதம்பரம் 
ராகம் - ...; தாளம் -
தனனதந்தம் தனனதந்தம்
     தனனதந்தம் தானந்தம்
          தனனதந்தம் தனனதந்தம்
               தனனதந்தம் தானந்தம்
                    தனனதந்தம் தனனதந்தம்
                         தனனதந்தம் தானந்தம் ...... தனதான
சகுடமுந்துங் கடலடைந்துங்
     குளமகிழ்ந்துந் தோய்சங்கங்
          கமுகடைந்தண் டமுதகண்டந்
               தரளகந்தந் தேர்கஞ்சஞ்
                    சரமெனுங்கண் குமிழதுண்டம்
                         புருவெனுஞ்செஞ் சாபம்பொன் ...... திகழ்மாதர் 
சலசகெந்தம் புழுகுடன்சண்
     பகமணங்கொண் டேய்ரண்டந்
          தனகனம்பொன் கிரிவணங்கும்
               பொறிபடுஞ்செம் பேர்வந்தண்
                    சலனசம்பொன் றிடைபணங்கின்
                         கடிதடங்கொண் டாரம்பொன் ...... தொடர்பார்வை 
புகலல்கண்டஞ் சரிகரம்பொன்
     சரணபந்தந் தோதிந்தம்
          புரமுடன்கிண் கிணிசிலம்பும்
               பொலியலம்புந் தாள்ரங்கம்
                    புணர்வணைந்தண் டுவரொடுந்தொண்
                         டிடர்கிடந்துண் டேர்கொஞ்சுங் ...... கடைநாயேன் 
புகழடைந்துன் கழல்பணிந்தொண்
     பொடியணிந்தங் காநந்தம்
          புனல்படிந்துண் டவசமிஞ்சுந்
               தவசர்சந்தம் போலுந்திண்
                    புவனிகண்டின் றடிவணங்குஞ்
                         செயல்கொளஞ்செஞ் சீர்செம்பொன் ...... கழல்தாராய் 
திகுடதிந்திந் தகுடதந்தந்
     திகுடதிந்திந் தோதிந்தம்
          டகுடடண்டண் டிகுடடிண்டிண்
               டகுடடண்டண் டோடிண்டிண்
                    டிமுடடிண்டிண் டுமுடடுண்டுண்
                         டிமுடடிண்டென் றேசங்கம் ...... பலபேரி 
செககணஞ்சஞ் சலிகைபஞ்சம்
     பறைமுழங்கும் போரண்டஞ்
          சிலையிடிந்துங் கடல்வடிந்தும்
               பொடிபறந்துண் டோர்சங்கஞ்
                    சிரமுடைந்தண் டவுணரங்கம்
                         பிணமலைந்தன் றாடுஞ்செங் ...... கதிர்வேலா 
அகிலஅண்டஞ் சுழலஎங்கும்
     பவுரிகொண்டங் காடுங்கொன்
          புகழ்விளங்குங் கவுரிபங்கன்
               குருவெனுஞ்சிங் காரங்கொண்
                    டறுமுகம்பொன் சதிதுலங்குந்
                         திருபதங்கந் தாஎன்றென் ...... றமரோர்பால் 
அலர்பொழிந்தங் கரமுகிழ்ந்தொண்
     சரணமுங்கொண் டோதந்தம்
          புனைகுறம்பெண் சிறுமியங்கம்
               புணர்செயங்கொண் டேயம்பொன்
                    அமைவிளங்கும் புலிசரம்பொன்
                         திருநடங்கொண் டார்கந்தம் ...... பெருமாளே.
நீர்ப்பாசிகள் தோன்றிப் பின்னர் மேற்பட்டுக் கிடக்கும் கடல் போன்ற வாழ்க்கையைக் கண்டு அங்கு உள்ளம் மகிழ்ந்தும், சங்கம் போலவும் கமுகு போலவும் பொருந்தி நெருங்கி, அமுதம் பொதித்த கழுத்து, முத்து மாலை அணிந்துள்ள கழுத்தின் அடிப்பாகம், மலர்ந்த தாமரை, அம்பு இவைகளுக்கு ஒப்பான கண்கள், குமிழம் பூப் போன்ற மூக்கு, புருவம் என்கின்ற செவ்விய வில் ஆகிய பொலிவு விளங்கும் விலைமாதர்கள் அழகு கொண்டவர்களாய் விளங்க, தாமரை மொட்டுப் போன்றதும், நறு மணமுள்ள புனுகு சட்டத்துடன் சண்பகம் இவற்றின் நறு மணம் கொண்டு பொருந்தி, பொன் மலையாகிய மேருவையும் கீழ்ப்படியச் செய்ய வல்லதும் தேமல் பரந்ததுமான இரண்டு கனத்த மார்பகங்கள், பல பேர்வழிகள் வந்து நெருங்கும் அசைவு கொண்டுள்ள மின்னலுக்கு ஒப்பான இடை, பாம்பின் படம் போன்ற பெண்குறி கொண்டவர்கள். அழகிய பொற்காசு (சம்பாதிப்பதிலேயே) நாட்டம் செலுத்தும் பார்வை. சொல்லுவது போல் வெளிப்படுத்த அழகிய கையில் உள்ள பொன் வளையலும், காலில் கட்டப்பட்டுள்ள தோதிந்தம் என ஒலிப்பதுமான பாதசரத்துடன் கிண்கிணியும் சிலம்பும் விளங்கி ஒலிக்கின்ற அடியுடன் நடன மேடையில் சேர்ந்து பொருந்தி நெருங்குபவராகிய பொது மகளிர்க்கு அடிமைத்தொண்டு செய்யும் வேதனையில் பட்டுக் கிடந்து, (அந்த அழகில்) ஈடுபட்டுக் கொஞ்சுகின்ற கீழ்ப்பட்ட நாய் போன்ற நான், புகழ் பெற்று, உனது திருவடியைப் பணிந்து, ஒள்ளிய திரு நீற்றை அணிந்து, அந்தச் சமயத்தில் ஆனந்தக் கண்ணீரில் படிந்து, பரவசம் மேம்படும் தவசிகளுடைய சுகம் போன்று, வலிய இப்பூமியின் நிலையாமையை அறிந்து, இப்பொழுதே உனது திருவடியை வணங்கும் பணியை மேற் கொள்ள அழகிய செவ்விய சீரான செம் பொன்னாலாகிய கழல்கள் அணிந்த திருவடியைத் தந்து அருளுக. திகுட திந்திந் தகுட தந்தந் திகுட திந்திந் தோதிந்தம் டகுட டண்டண் டிகுட டிண்டிண் டகுட டண்டண் டோடிண்டிண் டிமுட டிண்டிண் டுமுட டுண்டுண் டிமுட டிண்டு என்று ஒலிக்கும் சங்கமும் பல பேரிகைகளும், செககணம்சம் என்று ஒலித் திரளை எழுப்பும் சல்லிகை என்ற பெரும் பறையும், ஐந்து* வகையான இசைக் கருவிகளும் பறைகளும் முழங்குகின்ற போர்க் களத்தில், பூமியும் மலைகளும் பொடிபடவும், கடல் வற்றவும், தூள் பறக்கவும், அங்கு இருந்த (அசுரர்கள்) கூட்டத்தின் தலைகள் உடையவும், நெருங்கி வந்த அசுரர்களின உடல் பிணமாகும்படி எதிர்த்துப் பொருதும், அன்று போர் புரிந்த செவ்விய ஒளி வேலை ஏந்தியவனே, எல்லா உலகங்களும் சுழலும்படி எங்கும் வலம்கொண்டு அங்கு நடனம் செய்கின்ற தலைவனே, புகழ் விளங்குகின்ற உமா தேவியைப் பக்கத்தில் கொண்ட சிவபெருமானுக்கு குரு மூர்த்தி என்கின்ற அழகிய பெருமையைப் படைத்து, ஆறு முகங்களையும், தாள ஒத்துக்களை விளக்கும் அழகிய திருவடிகளையும் உடைய கந்தனே என்று தேவர்கள் உன் மீது மலர்களைச் சொரிந்து அழகிய திருக் கைகளைக் கூப்பித் தொழுது ஒள்ளிய திருவடிகளை மனத்தில் கொண்டு புகழ்ந்து நிற்க, அழகினைக் கொண்ட குறச் சிறுமியாகிய வள்ளியின் அங்கங்களை அணைந்து, வெற்றியைக் கொண்ட அழகிய பொன்னம்பலம் விளங்கும் புலீச்சுரம் என்னும் சிதம்பரத்தில் அழகிய திரு நடம் புரியும் சிவபெருமானுக்கு உரியவனும், நிறைந்து பொலிபவனுமான அழகிய கந்தப் பெருமாளே. 
* ஐந்து வகையான பறைகள்:தோல்கருவி, தொளைக்கருவி, நரப்புக் கருவி, மிடற்றுக் கருவி, கஞ்சக் கருவி.

பாடல் 451 - சிதம்பரம் 
ராகம் - ஆரபி ; தாளம் - அங்கதாளம் - 9 தகதகிட-2 1/2, தகிட-1 1/2 தகதிமி-2, தகதிமிதக-3

தனதனன தனன தந்தத் ...... தனதானா     தனதனன தனன தந்தத் ...... தனதானா

இருவினையின் மதிம யங்கித் ...... திரியாதே     எழுநரகி லுழலு நெஞ்சுற் ...... றலையாதே 
பரமகுரு அருள்நி னைந்திட் ...... டுணர்வாலே     பரவுதரி சனையை யென்றெற் ...... கருள்வாயே 
தெரிதமிழை யுதவு சங்கப் ...... புலவோனே     சிவனருளு முருக செம்பொற் ...... கழலோனே 
கருணைநெறி புரியு மன்பர்க் ...... கெளியோனே     கனகசபை மருவு கந்தப் பெருமாளே.

நல்வினை, தீவினை என்ற இரண்டு வினைகளினால் என்னறிவு மயக்கமடைந்து அலைந்து திரியாமல், ஏழு நரகங்களிலும் கலங்கக்கூடிய நெஞ்சத்தைப் படைத்து நான் அலையாமல், சிறந்த குருவாகிய உன் அருளை நினைவில் வைத்து, ஞானத் தெளிவு பெற்று, போற்றுதற்குரிய உன் தரிசனக் காட்சியை என்றைக்கு எனக்கு அருளப்போகிறாய்? யாவரும் தெரிந்து மகிழும்படி தமிழை ஆராய்ந்து உதவிய சங்கப் புலவனாக* வந்தவனே, சிவபெருமான் பெற்றருளிய முருகனே, செம்பொன்னாலான வீரக் கழலை அணிந்தவனே, அருள் நெறியை அனுஷ்டிக்கும் உன் அன்பர்க்கு எளிமையானவனே, கனகசபையில்** வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே. 
* உக்கிரபாண்டியனாக முருகன் மதுரையில் அவதரித்து, சங்கப் புலவர்களுடன் தமிழை ஆராய்ந்து உதவிய செய்தி இங்கு குறிப்பிடப்படுகிறது.
** பஞ்ச சபைகளில் ஒன்று கனகசபை (பொன்னம்பலம்) - சிதம்பரம்.மற்ற சபைகள்: ரத்னசபை - திருவாலங்காடு, ரஜதசபை (வெள்ளியம்பலம்) - மதுரை, தாமிரசபை - திருநெல்வேலி, சித்திரசபை - திருக்குற்றாலம்.

பாடல் 452 - சிதம்பரம் 
ராகம் - வஸந்தா ; தாளம் - அங்கதாளம் - 7 1/2 தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2

தனன தனதன தானன தந்தத்     தனன தனதன தானன தந்தத்          தனன தனதன தானன தந்தத் ...... தனதான

குகனெ குருபர னேயென நெஞ்சிற்     புகழ அருள்கொடு நாவினி லின்பக்          குமுளி சிவவமு தூறுக வுந்திப் ...... பசியாறிக் 
கொடிய இருவினை மூலமும் வஞ்சக்     கலிகள் பிணியிவை வேரொடு சிந்திக்          குலைய நமசிவ யோமென கொஞ்சிக் ...... களிகூரப் 
பகலு மிரவுமி லாவெளி யின்புக்     குறுகி யிணையிலி நாடக செம்பொற்          பரம கதியிது வாமென சிந்தித் ...... தழகாகப் 
பவள மனதிரு மேனியு டன்பொற்     சரண அடியவ ரார்மன வம்பொற்          றருண சரண்மயி லேறியு னம்பொற் ...... கழல்தாராய் 
தகுட தகுதகு தாதக தந்தத்     திகுட திகுதிகு தீதக தொந்தத்          தடுடு டுடுடுடு டாடக டிங்குட் ...... டியல்தாளம் 
தபலை திமிலைகள் பூரிகை பம்பைக்     கரடி தமருகம் வீணைகள் பொங்கத்          தடிய ழனவுக மாருத சண்டச் ...... சமரேறிக் 
ககன மறைபட ஆடிய செம்புட்     பசிகள் தணிவுற சூரர்கள் மங்கக்          கடல்க ளெறிபட நாகமு மஞ்சத் ...... தொடும்வேலா 
கயிலை மலைதனி லாடிய தந்தைக்     குருக மனமுன நாடியெ கொஞ்சிக்          கனக சபைதனில் மேவிய கந்தப் ...... பெருமாளே.

குகனே, மேலான குரு மூர்த்தியே, என்று மனதார நான் புகழவும், உன் திருவருளின் துணைகொண்டு எனது உள் நாவில் இன்பத்தேன் குமிழி பொங்க, சிவ அமுது ஊறுவதால் வயிற்றுப் பசி ஆறி, பொல்லாத இருவினைகளின் மூலப் பகுதியும், கொடிய கேடுகள், நோய்கள் இவை அடியோடு தொலைந்து போகவும், நமசிவய ஓம் என்ற மந்திரத்தை அன்புடன் ஓதி மகிழ்ச்சி நிரம்பவும், பகலும் இரவும் இல்லாத வெளியில் இன்பத்தை அணுகி அடைந்து, ஒப்பிலாத (இறைவனுடைய) ஆனந்த நடனம் நிகழும் செவ்விய அழகிய பரம கதி இதுவேயாகும் என்று உணர்ந்து அழகிய நிலையைப் பெறவும், பவளம் போன்ற திருவுருவத்துடன் அழகிய திருவடியை (அடைந்த) அடியார்கள் பொருந்த உடன் வர, அழகிய பொலிவுள்ள, இளமை வாய்ந்த, அடைக்கலம் தர வல்ல, மயில் மீது ஏறி, உனது அழகிய பொன் அனைய திருவடியைத் தந்து அருளுக. தகுட தகுதகு தாதக தந்தத் திகுட திகுதிகு தீதக தொந்தத் தகுட தகுதகு தாதக தந்தத் திகுட திகுதிகு தீதக தொந்தத் தடுடு டுடுடுடு டாடக டிங்கு என்று ஒலிக்கும் தாளமும், தபலை என்ற மத்தள வகை, திமிலை என்ற பறைவகை, ஊது குழல், பம்பை, கரடி கத்துவது போன்ற பறைவகை, உடுக்கை, வீணைகள் இவை எல்லாம் பேரொலி எழுப்ப, கொல்லப்பட்ட பிணங்கள் சிதறி விழ, வாயு வேகத்துடன் கொடிய போர் செய்யப் புகுந்து, ஆகாயம் வந்து பந்தரிட்டது போலக் கூத்தாடும் செவ்விய பறவைகளின் (செங்கழுகுகளின்) பசிகள் அடங்கவும், சூரர்கள் அழியவும், கடல்கள் அலைபாயவும், அஷ்ட நாகங்களும் பயப்படவும் வேலைச் செலுத்தியவனே, கயிலாய மலையில் திரு நடனம் செய்யும் தந்தையாகிய சிவபெருமானுக்கு மனம் உருகுமாறு அவர் முன்பு விருப்பத்துடன் கொஞ்சி விளையாடி, சிதம்பரத்தில் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே. 

பாடல் 453 - சிதம்பரம் 
ராகம் - ...; தாளம் -

தந்தனத் தத்தன தந்தனத் தத்தன     தந்தனத் தத்தன தந்தனத் தத்தன          தந்தனத் தத்தன தந்தனத் தத்தன ...... தந்ததான

வண்டையொத் துக்கயல் கண்சுழற் றுப்புரு     வஞ்சிலைக் குத்தொடு அம்பையொத் துத்தொடை          வண்டுசுற் றுக்குழல் கொண்டலொத் துக்கமு ...... கென்பக்¡£வம் 
மந்தரத் தைக்கட பொங்கிபத் துப்பணை     கொம்பையொத் துத்தன முந்துகுப் பத்தெரு          வந்துஎத் திப்பொரு மங்கையர்க் கைப்பொரு ...... ளன்பினாலே 
கொண்டழைத் துத்தழு வுங்கைதட் டிற்பொருள்     கொண்டுதெட் டிச்சர சம்புகழ்க் குக்குன          குங்குழற் கிப்படி நொந்துகெட் டுக்குடில் ...... மங்குறாமல் 
கொண்டுசத் திக்கட லுண்டுகுப் பத்துனி     னன்பருக் குச்செயல் தொண்டுபட் டுக்கமழ்          குங்குமத் திற்சர ணம்பிடித் துக்கரை ...... யென்றுசேர்வேன் 
அண்டமிட் டிக்குட டிண்டிமிட் டிக்குகு     டந்தகொட் டத்தகு டிங்குதொக் கத்தம          டஞ்சகட் டைக்குண கொம்புடக் கைக்கிட ...... லென்பதாளம் 
அண்டமெட் டுத்திசை யும்பல்சர்ப் பத்திரள்     கொண்டல்பட் டுக்கிரி யும்பொடித் துப்புல          னஞ்சவித் துத்திர ளண்டமுட் டத்துகள் ...... வந்தசூரர் 
கண்டமற் றுக்குட லென்புநெக் குத்தச     னங்கடித் துக்குடி லஞ்சிவப் பச்செநிர்          கண்தெறிக் கத்தலை பந்தடித் துக்கையி ...... லங்குவேலால் 
கண்களிக் கக்கக னந்துளுக் கப்புக     ழிந்திரற் குப்பதம் வந்தளித் துக்கன          கம்பலத் திற்குற மங்கைபக் கத்துறை ...... தம்பிரானே.

வண்டைப் போல், கயல் மீன் அனைய கண் தன் சுழற்சியால் புருவமாகிய வில்லில் தொடுக்கப்பட்ட அம்பை நிகர்க்கவும், (அணிந்துள்ள) மாலையில் வண்டு சுற்றுகின்ற கூந்தல் மேகத்தை நிகர்க்கவும், கழுத்து கமுக மரம் என்று சொல்லும்படியும், மந்திரமலையையும் மதம் பொங்குகின்ற யானையின் பருத்த தந்தங்களையும் நிகர்த்து மார்பகங்கள் மின்னிட்டுக் கூம்ப, தெருவில் வந்து வஞ்சித்து சண்டை செய்யும் விலைமாதர்கள் தமது கையில் கிடைத்த பொருளின் பொருட்டுக் காட்டும் அன்பினால், (தமது வீட்டுக்குக்) கொண்டு போய், தழுவும் கைகளால் தட்டில் பொருளைப் பெற்றவுடன் வஞ்சனை எண்ணத்துடன் காம லீலைகளைச் செய்தும், புகழ்ந்தும் கொஞ்சியும் பேசுகின்ற, அடர்ந்த குழலை உடைய பொது மகளிரின் பொருட்டு இவ்வாறு மனம் கெட்டு, உடம்பு வாட்டம் அடையாமல், (தமது) ஆற்றலைக் கொண்டு கடலைக் குடித்து உமிழ்ந்து உன்னை அடுத்த உன்னுடைய அன்பரான அகத்தியருக்கு பணி செய்து தொண்டு ஆற்றி, நறு மணம் வீசும் செஞ்சாந்துள்ள திருவடிகளைப் பற்றி (முக்திக்) கரையை என்று அடைவேன்? அண்டங்களை நெருங்கி வளைய, டிண்டிமிட்டிக்கு இவ்வாறாக ஒலிகளை குடமுழ (கட) வாத்தியம் முழக்கம் செய்ய, தகுந்த டிங்கு என்னும் ஒலி ஒன்று கூட, தம்பட்டம் என்னும் பறை, சகண்டை (துந்துபி) என்னும் முரசு, சிறந்த ஊது கொம்பு, இடக்கை ஆகியவைகளுக்கு உதவியாக தாளம் ஒலிக்க, அண்டங்களும், எட்டு திசைகளும், (எட்டு) யானைகளும், எட்டு பாம்புகளும், மேகமும் குலைபட்டு, மலைகளும் பொடியாய், ஐந்து பொறிகளையும் கெடுத்து, திரண்ட அண்டங்களில் முழுமையும் தூசி உண்டாக, எதிர்த்து வந்த அசுரர்களின் கழுத்து அறுபட்டுப் போய், குடலும், எலும்பும் தளர்ச்சி உற்று, பற்களைக் கடித்து, தலை மயிர் (ரத்தத்தால்) சிவப்பாக, ரத்தம் கண்களினின்றும் வெளிப்பட்டுச் சிதற, (அசுரர்களின்) தலைகளைப் பந்து அடிப்பது போல் அடித்து, கையில் ஏந்திய வேலாயுதத்தால் கண் குளிர்ச்சி அடைய விண்ணுலகம் (இழந்த பொலிவை மீண்டும் வரப் பெற்று) செழிப்புற, (தன்னைப்) புகழ்ந்த இந்திரனுக்கு இந்திர பதவியை அருள் செய்து, பொன்னம்பலத்தில் குற மகள் வள்ளியம்மையின் பக்கத்தில் வீற்றிருக்கும் தம்பிரானே. 

பாடல் 454 - சிதம்பரம் 
ராகம் - ...; தாளம் -

தந்த தந்தனத் தான தந்தன     தந்த தந்தனத் தான தந்தன          தந்த தந்தனத் தான தந்தன ...... தந்ததான

கங்கு லின்குழற் கார்மு கஞ்சசி     மஞ்ச ளின்புயத் தார்ச ரம்பெறு          கண்கள் கொந்தளக் காது கொஞ்சுக ...... செம்பொனாரம் 
கந்த ரந்தரித் தாடு கொங்கைக     ளும்ப லின்குவட் டாமெ னுங்கிரி          கந்த முஞ்சிறுத் தேம லும்பட ...... சம்பைபோல 
அங்க மைந்திடைப் பாளி தங்கொடு     குந்தி யின்குறைக் கால்ம றைந்திட          அண்சி லம்பொலிப் பாட கஞ்சரி ...... கொஞ்சமேவும் 
அஞ்சு கங்குயிற் பூவை யின்குரல்     அங்கை பொன்பறிக் கார பெண்களொ          டண்டி மண்டையர்க் கூழி யஞ்செய்வ ...... தென்றுபோமோ 
சங்கு பொன்தவிற் காள முந்துரி     யங்கள் துந்துமிக் காட திர்ந்திட          சந்த செந்தமிழ்ப் பாணர் கொஞ்சிட ...... அண்டகோசம் 
சந்தி ரன்பதத் தோர்வ ணங்கிட     இந்தி ரன்குலத் தார்பொ ழிந்திட          தந்தி ரம்புயத் தார்பு கழ்ந்திட ...... வந்தசூரைச் 
செங்கை யுஞ்சிரத் தோடு பங்கெழ     அந்த கன்புரத் தேற வஞ்சகர்          செஞ்ச ரந்தொடுத் தேந டம்புரி ...... கந்தவேளே 
திங்க ளொண்முகக் காமர் கொண்டவன்     கொங்கை மென்குறப் பாவை யுங்கொடு          செம்பொ னம்பலத் தேசி றந்தருள் ...... தம்பிரானே.

இருண்ட மேகம் போன்று கறு நிறமான கூந்தலை உடையவர்கள். சந்திரன் போன்ற முகம் உடையவர்கள். மஞ்சள் விளங்கும் கை உடையவர்கள். அம்பு போன்ற கண்களை உடையவர்கள். தலை மயிற் சுருள் காதைக் கொஞ்சும்படி அமைந்தவர்கள். செம் பொன் மாலை கழுத்தில் அணிந்து, அசைந்தாடும் மார்பகங்கள் யானை போலும் திரட்சி கொண்டதைப் போன்ற மலையாய், அகில் நறு மணமும் சிறிய தேமலும் தோன்ற, மின்னல் போல இடையானது அங்கு அமையப் பெற்று, பட்டு ஆடை கொண்டு குதிக்கால் மறையும்படி உடுத்து, அடுத்துள்ள சிலம்பும், பாடகம் என்ற காலணியும், கை வளையுடன் (ஒத்து) ஒலிக்க உள்ளவர்களாய், கிளி, குயில், நாகணவாய்ப்புள் ஆகியவற்றின் குரலை உடையவர்களாய், அழகிய கையில் பொன்னை அபகரிக்கின்ற விலைமாதருடன் நெருங்கி, அத்தகைய வேசிகளுக்கு சேவக வேலை செய்வது என்றைக்குத் தொலையுமோ? சங்குகளும், அழகிய மேளங்களும், ஊது கொம்பும், முரசப் பறைகளும், பேரிகைகளும் கூட்டமாக அதிர்ச்சி செய்து ஒலிக்க, அழகிய செந்தமிழ்ப் பாடல்களைப் பாடவல்ல பாணர்கள் அருமையாக வாசிக்க, அண்டங்கள் எல்லாவற்றிலும் உள்ள அனைவரும் சந்திர மண்டலத்தில் உள்ளவர்களும் வணங்கவும், தேவர்கள் பூமாரி பொழியவும், யாழ் ஏந்தும் கையினரான கந்தருவர் போற்றவும், எதிர்த்து வந்த சூரனின் செவ்விய கைகளையும் தலையுடன் துண்டாகும்படி யமனுலகுக்கு வஞ்சகராகிய அசுரரர்கள் போய்ச் சேரும்படியாக சிறந்த அம்புகளைச் செலுத்தி நடனமாடிய கந்தப் பெருமானே, சந்திரனை ஒத்த ஒளி வீசும் அழகும் முகமும் உடையவளும், வலிய மார்பகங்களை உடைய மென்மை வாய்ந்தவளுமாகிய குறப் பெண் வள்ளியுடன் சிறந்த சிதம்பரத்தில் மேம்பட்டு அருளும் தம்பிரானே.

பாடல் 455 - சிதம்பரம் 
ராகம் - ...; தாளம் -

தந்த தந்தன தந்த தந்தன     தந்த தந்தன தந்த தந்தன          தந்த தந்தன தந்த தந்தன ...... தனதான

கொந்த ளம்புழு கெந்த வண்பனி     ரம்ப சம்ப்ரம ணிந்த மந்தர          கொங்கை வெண்கரி கொம்பி ணங்கிய ...... மடமாதர் 
கொந்த ணங்குழ லின்ப மஞ்சள     ணிந்து சண்பக வஞ்சி ளங்கொடி          கொஞ்சு பைங்கிளி யன்பெ னுங்குயில் ...... மயில்போலே 
வந்து பஞ்சணை யின்ப முங்கொடு     கொங்கை யும்புய முந்த ழும்புற          மஞ்சு வொண்கலை யுங்கு லைந்தவ ...... மயல்மேலாய் 
வஞ்சி னங்கள்தி ரண்டு கண்செவி     யுஞ்சு கங்கள்தி ரும்பி முன்செய்த          வஞ்சி னங்களு டன்கி டந்துட ...... லழிவேனோ 
தந்த னந்தன தந்த னந்தன     திந்தி மிந்திமி திந்தி மிந்திமி          சங்கு வெண்கல கொம்பு துந்துமி ...... பலபேரி 
சஞ்ச லஞ்சல கொஞ்சு கிண்கிணி     தங்கு டுண்டுடு டுண்டு டன்பல          சந்தி ரம்பறை பொங்கு வஞ்சகர் ...... களமீதே 
சிந்த வெண்கழு கொங்கு பொங்கெழு     செம்பு ளங்கரு டன்ப ருந்துகள்          செங்க ளந்திகை யெங்கு மண்டிட ...... விடும்வேலா 
திங்க ளிந்திர னும்ப ரந்தர     ரும்பு கழ்ந்துரு கும்ப ரன்சபை          செம்பொ னம்பல மங்கொ ளன்பர்கள் ...... பெருமாளே.

தலை மயிரில் புனுகு சட்டமும் வாசனை உள்ள நல்ல பன்னீரும் நிரம்பச் சிறப்பாக அணிந்துள்ளவர்களும், மந்தர மலை போல் பருத்த மார்பகங்கள் என்னும் வெண்ணிறமான யானைத் தந்தங்கள் பொருந்தியுள்ள அழகிய விலைமாதர்கள். பூங்கொத்துக்கள் சேர்ந்துள்ள அழகிய கூந்தல் உடையவராய், சுகம் தரக் கூடிய மஞ்சளைப் பூசிக் கொண்டு, சண்பக மலர் சூடி, வஞ்சியின் இளமை வாய்ந்த கொடி போல் விளங்கி, கொஞ்சுகின்ற பச்சைக் கிளி போலவும் அன்பு வாய்ந்த குயில் போலவும், மயில் போலவும், வந்து, பஞ்சு மெத்தையில் இன்பத்தையும் கொடுக்கும் மார்பகமும் தோள்களும் (நகக்குறிகளால்) வடுப்பட, அழகிய நல்ல ஆடையும் கலைந்து, கேடும் காம இச்சையும் மிகுவதாய், சபத மொழிகள் நிரம்பச் சொல்லி, கண்கள், காதுகள் ஆகியவை (முன்பு கொடுத்திருந்த) சுகங்கள் மாறுபட்டு (குருடாய், செவிடாய்), முன்பு செய்திருந்த சூள்களுடன் சேர்ந்து படுக்கையிலே கிடந்து இறப்பேனோ? தந்தனந்தன தந்தனந்தன திந்திமிந்திமி திந்திமிந்திமி இவ்வாறு ஒலிக்கும் சங்கும், ஊது கொம்பும், துந்துமி பேரிகை முதலான பல முரசு வாத்தியங்களும், சஞ்சலஞ்சல என்று கொஞ்சும் கிண்கிணி, பொருந்தும் டுண்டுடு டுண்டுடன் என்னும் ஒலியுடன் பல சந்திரன் போல் வட்ட வடிவமான அழகிய பறைகள மிக்க எழ, வஞ்சகர்களாகிய அசுரர்கள் போர்க் களத்தில் மடிந்து போக, வெண்ணிறக் கழுகுகளும், ஓங்கி உயர்ந்து எழுகின்ற செம்மை நிறமான பறவையான அழகிய கருடனும், பருந்துகளும் (இரத்தத்தால்) செந்நிறம் கொண்ட போர்க் களத்தில் எல்லா திசைகளிலும் நெருங்கி அடையும்படியாகச் செலுத்திய வேலனே, சந்திரனும் இந்திரனும் தேவர்களும் வேறு விண்ணில் உறைபவர்களும் புகழ்ந்து உருகும் சிவனாரின் சபையாகிய செவ்விய பொன்னம்பலத்தை அழகாக உன் இருப்பிடமாகக் கொண்ட பெருமாளே, அன்பர்கள் பெருமாளே. 

பாடல் 456 - சிதம்பரம் 
ராகம் -.... தாளம் -

தந்தன தந்தன தான தந்தன  தான தனந்தன தான தந்தன    தந்தன தந்தன தான தந்தன      தான தனந்தன தான தந்தன        தந்தன தந்தன தான தந்தன          தான தனந்தன தான தந்தன ...... தந்ததான

மந்தர மென்குவ டார்த னங்களி  லார மழுந்திட வேம ணம்பெறு    சந்தன குங்கும சேறு டன்பனி      நீர்கள் கலந்திடு வார்மு கஞ்சசி        மஞ்சுறை யுங்குழ லார்ச ரங்கயல்          வாள்வி ழிசெங்கழு நீர்த தும்பிய ...... கொந்தளோலை 
வண்சுழ லுஞ்செவி யார்நு டங்கிடை  வாட நடம்புரி வார்ம ருந்திடு    விஞ்சையர் கொஞ்சிடு வாரி ளங்குயில்      மோக னவஞ்சியர் போல கம்பெற        வந்தவ ரெந்தவுர் நீர றிந்தவர்          போல இருந்ததெ னாம யங்கிட ...... இன்சொல்கூறிச் 
சுந்தர வங்கண மாய்நெ ருங்கிநிர்  வாரு மெனும்படி யால கங்கொடு    பண்சர சங்கொள வேணு மென்றவர்      சேம வளந்துறு தேன ருந்திட        துன்றுபொ னங்கையின் மீது கண்டவ          ரோடு விழைந்துமெ கூடி யின்புறு ...... மங்கையோரால் 
துன்பமு டங்கழி நோய்சி ரங்கொடு  சீபு ழுவுஞ்சல மோடி றங்கிய    புண்குட வன்கடி யோடி ளஞ்சனி      சூலை மிகுந்திட வேப றந்துடல்        துஞ்சிய மன்பதி யேபு குந்துய          ராழி விடும்படி சீர்ப தம்பெறு ...... விஞ்சைதாராய் 
அந்தர துந்துமி யோடு டன்கண  நாதர் புகழ்ந்திட வேத விஞ்சைய    ரிந்திர சந்திரர் சூரி யன்கவி      வாணர் தவம்புலி யோர்ப தஞ்சலி        அம்புய னந்திரு மாலொ டிந்திரை          வாணி யணங்கவ ளோட ருந்தவர் ...... தங்கள்மாதர் 
அம்பர ரம்பைய ரோடு டன்திகழ்  மாவு ரகன்புவி யோர்கள் மங்கையர்    அம்புவி மங்கைய ரோட ருந்ததி      மாதர் புகழ்ந்திட வேந டம்புரி        அம்புய செம்பதர் மாட கஞ்சிவ          காம சவுந்தரி யாள்ப யந்தருள் ...... கந்தவேளே 
திந்திமி திந்திமி தோதி மிந்திமி  தீத திதிந்தித தீதி திந்திமி    தந்தன தந்தன னாத னந்தன      தான தனந்தன னாவெ னும்பறை        செந்தவில் சங்குட னேமு ழங்கசு          ரார்கள் சிரம்பொடி யாய்வி டுஞ்செயல் ...... கண்டவேலா 
செந்தினை யின்புன மேர்கு றிஞ்சியில்  வாழு மிளங்கொடி யாள்ப தங்களில்    வந்துவ ணங்கிநி ணேமு கம்பெறு      தாள ழகங்கையின் வேலு டன்புவி        செம்பொனி னம்பல மேல கம்பிர          கார சமந்திர மீத மர்ந்தருள் ...... தம்பிரானே.

மந்தரம் என்று சொல்லப்பட்ட மலை போன்ற மார்பகங்களில் (கழுத்தில் அணிந்துள்ள) பொன் மாலை அழுந்திக் கிடக்க, நறுமணம் கொண்ட சந்தனம், செஞ்சாந்து இவற்றின் கலவைச் சேறுடன் பன்னீர்களைக் கலந்து பூசி வைப்பவர்கள். சந்திரன் போன்ற முகத்தை உடையவர்கள். மேகம் போன்ற கூந்தலை உடையவர்கள். அம்பு, கயல் மீன், வாள் (இவைகளைப் போன்ற) கண்கள். செங்கழுநீர் மலர் நிரம்ப வைத்துள்ள கூந்தல். (காதணியாகிய) ஓலைச் சுருள் விளங்கும் நன்றாகச் சுருண்டுள்ள காதுகளை உடையவர்கள். துவள்கின்ற இடை வாடும்படி நடனம் செய்பவர்கள். (வசிய) மருந்தை இடும் மாய வித்தைக்காரர்கள். கொஞ்சுபவர். இளம் குயில் போல்பவர். காம மயக்கம் தர வல்ல வஞ்சிக் கொடி போல்பவர். தமது வீட்டை அடைந்து வந்தவர்களை நீர் எந்த ஊரைச் சேர்ந்தவர், முன்பே பழக்கம் உள்ளவர் போல் இருக்கின்றதே என்றெல்லாம் பேசி காம மயக்கம் வரும்படி இனிய சொற்களைப் பேசி அழகாக உற்ற நேசத்துடன் அருகில் வந்து வரவேற்று வீட்டுக்கு உள்ளே அழைத்து தமது இசைப் பாட்டால், காமச் சேட்டைகள் உண்டாக வேண்டும் என்ற எண்ணத்துடன் (வந்தவருடைய) செல்வம் என்கின்ற வளம் செறிந்த தேனை உண்ணும் பொருட்டு பொருளைக் கவர, கிட்டிய பொன்னை உள்ளங்கை மேல் கண்டவுடன் அவருடன் விருப்பம் காட்டிச் சேர்ந்து இன்பம் அடைகின்ற விலைமாதர்களால், துயரமும், முடக்குவாதம் முதலிய உடலை அழிக்கும் நோய்களும், சிரங்குடன் சீயும், புழுவும், நீரும் ஒழுகுகிற புண்கள், குடவுண்ணியால் ஏற்பட்ட விஷக் கடியுடன், இளமையில் வந்த ஜன்னி நோய், சூலை நோய் - இவை எல்லாம் பெருகிடவே, பறந்து போய் உடல் அழிவுற்று, யமன் ஊரில் புகும் துன்பக் கடலை நான் கடக்கும்படி, உனது சீரான திருவடியைப் பெற வல்ல மந்திரத்தைத் தந்து அருளுக. ஆகாயத்தில் ஒலிக்கும் துந்துமி என்னும் பேரிகையோடு, கண நாதர்கள் புகழ, வேதத்தில் வல்லவர்கள், இந்திரன், சந்திரன், சூரியன், புலவர்கள், தவசிகள், வியாக்ரபாதர், பதஞ்சலி, பிரமன், அழகிய திருமால் (மற்றும்) லக்ஷ்மி, சரஸ்வதி தேவியுடன் அரிய தவ முனிவர்களின் மனைவிகள், விண்ணுலகில் உள்ள ரம்பை முதலான தேவ மாதர்களுடன், விளங்கும் சிறப்புடைய நாக லோக மாதர்களும், அழகிய மண்ணுலக மாதர்களும், அருந்ததி ஆகிய மாதர்களும் புகழ்ந்திடவே, நடனம் புரிகின்ற, தாமரை ஒத்த செவ்விய திருவடியை உடைய சிவபெருமானது பக்கத்திலும் உள்ளத்திலும் உள்ள சிவகாம சுந்தரியாள் உமாதேவி பெற்ற கந்த வேளே, திந்திமி திந்திமி தோதிமிந்திமி தீததி திந்தித தீதிதிந்திமி தந்தன தந்தன னாதனந்தன தானதனந்தனன என்ற ஓசையுடன் ஒலிக்கும் பறைகளும், செவ்விய மேள வகைகளும், சங்குடன் முழங்க, அசுரர்களுடைய தலைகள் பொடியாகும்படிப் போகும் செயலைச் செய்த வேலாயுதனே, செந்தினைப் புனம் இருந்த அழகிய மலை நில ஊராகிய வள்ளி மலையில் வாழ்கின்ற இளமை வாய்ந்த கொடி போன்ற வள்ளி நாயகியின் பாதங்களில் வந்து வணங்கி நின்று, அவளது திருமுகத் தரிசனத்தைப் பெற்ற திருவடி அழகனே, அழகிய கையில் வேலாயுதத்துடன் பூமியில் (தில்லையில்) செம் பொன் அம்பலத்தில் உள்ள, பிரகாரங்களோடு கூடிய திருக் கோயிலில் வீற்றிருந்து அருளும் தம்பிரானே. 

பாடல் 457 - சிதம்பரம் 
ராகம் - தர்பார்; தாளம் - ஆதி - 4 களை - 32 தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1

தந்த தந்தனத் தான தந்ததன     தந்த தந்தனத் தான தந்ததன          தந்த தந்தனத் தான தந்ததன் ...... தந்ததான

வந்து வந்துவித் தூறி யென்றனுடல்     வெந்து வெந்துவிட் டோட நொந்துயிரும்          வஞ்சி னங்களிற் காடு கொண்டவடி ...... வங்களாலே 
மங்கி மங்கிவிட் டேனை யுன்றனது     சிந்தை சந்தொஷித் தாளு கொண்டருள          வந்து சிந்துரத் தேறி யண்டரொடு ...... தொண்டர்சூழ 
எந்தன் வஞ்சனைக் காடு சிந்திவிழ     சந்த ரண்டிசைத் தேவ ரம்பையர்க          னிந்து பந்தடித் தாடல் கொண்டுவர ...... மந்திமேவும் 
எண்க டம்பணித் தோளு மம்பொன்முடி     சுந்த ரந்திருப் பாத பங்கயமும்          என்றன் முந்துறத் தோணி யுன்றனது ...... சிந்தைதாராய் 
அந்த ரந்திகைத் தோட விஞ்சையர்கள்     சிந்தை மந்திரத் தோட கெந்தருவ          ரம்பு யன்சலித் தோட எண்டிசையை ...... யுண்டமாயோன் 
அஞ்சி யுன்பதச் சேவை தந்திடென     வந்த வெஞ்சினர்க் காடெ ரிந்துவிழ          அங்கி யின்குணக் கோலை யுந்திவிடு ...... செங்கைவேலா 
சிந்து ரம்பணைக் கோடு கொங்கைகுற     மங்கை யின்புறத் தோள ணைந்துருக          சிந்து ரந்தனைச் சீர்ம ணம்புணர்நல் ...... கந்தவேளே 
சிந்தி முன்புரக் காடு மங்கநகை     கொண்ட செந்தழற் கோல ரண்டர்புகழ்          செம்பொ னம்பலத் தாடு மம்பலவர் ...... தம்பிரானே.

உலகிலே தோன்றித் தோன்றி, விந்தாகிய சுக்கிலத்தில் ஊறி ஊறி, என் உடலானது வெந்து போய் வெந்து போய், இவ்வாறு ஓடுவதனால் வாடி, உயிரும் பல பிறப்பு எடுப்பேன் என்று சபதம் செய்ததுபோல கணக்கற்ற உருவங்களை எடுத்து, அழிந்து அழிந்து போய் விட்ட என்னை, உன் திருவுள்ளம் மகிழ்ச்சியுடன் ஏற்று ஆட்கொண்டருள, நீ எழுந்தருளி, உன் யானை வாகனத்தில்* ஏறி, தேவர்களும் அடியார்களும் சூழ்ந்து வர, எனது மாயை நிறைந்த பிறவிக்காடு பட்டழிய, சந்தமுடன் இசை பாடியவராக அருகில் நெருங்கி வரும், பாட்டிலேவல்ல தேவ மங்கையர் பக்தியில் கனிவுற்று, பந்தடித்து நடனத்துடன் கூடிவர, வண்டுகள் விரும்பி மொய்க்கும் கடப்பமாலை அணிந்த தோள்களும், அழகிய பொன்முடியும், காண்போர் விரும்பும் எழிலான திருவடித் தாமரைகளும், என் முன்பே முற்புற நீ தோன்றி, உன்னையே நினைக்கும்படியான உள்ளத்தை எனக்குத் தந்தருள்வாயாக. விண்ணில் உள்ளார் பிரமித்து ஓட, வித்யாதரர்கள் மனக்கவலையுடன் ஓட, கந்தர்வர்களும், பிரமனும் மனம் சோர்வடைந்து ஓட, எட்டுத்திசையிலும் பரந்த பூமியை உண்ட மாயனாம் திருமாலும் அச்சமுற்று உன் திருவடி சேவையைத் தந்து காத்தருள்க எனக் கூற, எதிர்த்து வந்த கோபத்தினரான அசுரர்களின் காடு போன்ற பெருங் கூட்டம் எரிபட்டு விழ, நெருப்பின் தன்மையை உடைய வேலைச் செலுத்திய செங்கை வேலனே, யானைத் தந்தங்கள் அனைய மார்புடைய குறத்தி வள்ளி மகிழும்படியாக, அவளது தோள்களை அணைந்து உருகி நின்றவனே, யானை வளர்த்த தேவயானையைச் சிறப்புடன் திருமணம் செய்து கொண்ட கந்தவேளே, முன்பு, திரிபுரங்கள் என்ற காடு சிதறுண்டு அழிய, சிரிப்பாலே பெரு நெருப்பை ஏவிய செந்தழலின் நிறத்தை உடையவரும், தேவர்கள் புகழும் செம்பொற் சபையிலே திருநடனம் புரிந்தவருமான அம்பலவாணராம் சிவபெருமானின் குருநாதத் தம்பிரானே. 
* அடியார்களை ஆட்கொள்ள முருகன் பிணிமுகம் என்ற யானை வாகனத்தில் வருவதாக ஐதீகம்.

பாடல் 458 - சிதம்பரம் 
ராகம் -...; தாளம் -

தனத்தத்தம் தனத்தத்தத்     தனத்தத்தம் தனத்தத்தத்          தனத்தத்தம் தனத்தத்தத் ...... தனதான

கதித்துப்பொங் கலுக்கொத்துப்     பணைத்துக்கொம் பெனத்தெற்றிக்          கவித்துச்செம் பொனைத்துற்றுக் ...... குழலார்பின் 
கழுத்தைப்பண் புறக்கட்டிச்     சிரித்துத்தொங் கலைப்பற்றிக்          கலைத்துச்செங் குணத்திற்பித் ...... திடுமாதர் 
பதித்துத்தந் தனத்தொக்கப்     பிணித்துப்பண் புறக்கட்டிப்          பசப்பிப்பொன் தரப்பற்றிப் ...... பொருள்மாளப் 
பறித்துப்பின் துரத்துச்சொற்     கபட்டுப்பெண் களுக்கிச்சைப்          பலித்துப்பின் கசுத்திப்பட் ...... டுழல்வேனோ 
கதித்துக்கொண் டெதிர்த்துப்பிற்     கொதித்துச்சங் கரித்துப்பற்          கடித்துச்சென் றுழக்கித்துக் ...... கசுரோரைக் 
கழித்துப்பண் டமர்க்குச்செப்     பதத்தைத்தந் தளித்துக்கைக்          கணிக்குச்சந் தரத்தைச்சுத் ...... தொளிர்வேலா 
சிதைத்திட்டம் புரத்தைச்சொற்     கயத்தைச்சென் றுரித்துத்தற்          சினத்தக்கன் சிரத்தைத்தட் ...... சிவனார்தஞ் 
செவிக்குச்செம் பொருட்கற்கப்     புகட்டிச்செம் பரத்திற்செய்த்          திருச்சிற்றம் பலச்சொக்கப் ...... பெருமாளே.

நிறைந்து தோன்றி, மிகுந்த இருளுக்குச் சமமாகிச் செழிப்புற்று, கொம்பு போல சடையாகப் பின்னப்பட்டு, பொன்னாலாகிய சடை பில்லையைக் கவித்து, நெருக்கம் கொண்ட கூந்தலை உடைய விலைமாதர்களின் பின்சென்று, கழுத்தை நன்றாகக் கட்டியும், நகைத்தும், தொங்கும் ஆடையாகிய முந்தானையைப் பிடித்துக் கலைத்தும், நல்ல குணத்தைப் பித்து பிடிக்கும்படிச் செய்யும் விலைமாதர்களின் மீது மனத்தை அழுத்தப் பதித்து, தாம் பெற்ற பொருளுக்குத் தகுந்தவாறு வசப்படுத்தி, நன்றாகக் கட்டிப் பிடித்து இன்முகம் காட்டி ஏய்த்தும், பொன் தரப் பெற்று அடைந்து, வந்தவருடைய பொருள் வற்றிப் போகுமளவும் கைப்பற்றி, பின்னர் அவரை விரட்டித் துரத்தும் சொற்களை உடைய வஞ்சகம் கொண்ட வேசியர்களுக்கு ஆசைப்பட்டு, பின்னர் வருத்தத்தை அடைந்து திரிவேனோ? விரைந்து எழுந்து எதிர்த்து, பிறகு கோபம் கொண்டு அழித்து, பற்களைக் கடித்து சென்று சேனைக்கடலைக் கலக்கி, வேதனையடைந்த அசுரர்களை ஒழித்து, முன் ஒரு நாளில் தேவர்களுக்குச் செவ்விய பதவியைத் தந்தருளி, கையில் அலங்காரமாக அணிந்துள்ள குஞ்சம் கட்டிய, அச்சத்தைத் தரும், அழகிய, பரிசுத்தமாக ஒளி விடும் வேலை ஏந்தியவனே, அழகிய திரிபுரங்களை அழித்திட்டு, புகழ் பெற்ற கயாசுரனாய் வந்த யானையிடம் சென்று அதன் தோலை உரித்து, தான் என்னும் அகங்காரம் கொண்ட தக்ஷன் தலையை அறுத்துத் தள்ளிய சிவபெருமானுடைய திருச்செவிக்குள் பிரணவப் பொருளை அவர் கற்கும்படி புகட்டி, செவ்விய மேலான வகையில் அமைந்த திருச் சிற்றம்பலத்தில் (சிதம்பரத்தில்) எழுந்தருளியிருக்கும் அழகிய பெருமாளே. 

பாடல் 459 - சிதம்பரம் 
ராகம் -...; தாளம் -

தனத்தத் தந்தன தானன தானன     தனத்தத் தந்தன தானன தானன          தனத்தத் தந்தன தானன தானன ...... தனதான

சிரித்துச் சங்கொளி யாமின லாமென     வுருக்கிக் கொங்கையி னாலுற மேல்விழு          செணத்திற் சம்பள மேபறி காரிகள் ...... சிலபேரைச் 
சிமிட்டிக் கண்களி னாலுற வேமயல்     புகட்டிச் செந்துகி லால்வெளி யாயிடை          திருத்திப் பண்குழ லேய்முகி லோவிய ...... மயில்போலே 
அருக்கிப் பண்புற வேகலை யால்முலை     மறைத்துச் செந்துவர் வாயமு தூறல்க          ளளித்துப் பொன்குயி லாமென வேகுரல் ...... மிடறோதை 
அசைத்துக் கொந்தள வோலைக ளார்பணி     மினுக்கிச் சந்தன வாசனை சேறுட          னமைத்துப் பஞ்சணை மீதணை மாதர்க ...... ளுறவாமோ 
இரைத்துப் பண்டம ராவதி வானவ     ரொளித்துக் கந்தசு வாமிப ராபர          மெனப்பட் டெண்கிரி ஏழ்கடல் தூள்பட ...... அசுரார்கள் 
இறக்கச் சிங்கம தேர்பரி யானையொ     டுறுப்பிற் செங்கழு கோரிகள் கூளியொ          டிரத்தச் சங்கம தாடிட வேல்விடு ...... மயில்வீரா 
சிரித்திட் டம்புர மேமத னாருட     லெரித்துக் கண்டக பாலியர் பாலுறை          திகழ்ப்பொற் சுந்தரி யாள்சிவ காமிநல் ...... கியசேயே 
திருச்சித் தந்தனி லேகுற மானதை     யிருத்திக் கண்களி கூர்திக ழாடக          திருச்சிற் றம்பல மேவியு லாவிய ...... பெருமாளே.

சிரித்து, (பற்களின் ஒளியை) சங்கின் ஒளி எனவும், மின்னலின் ஒளி எனவும் சொல்லும்படி வெளிக் காட்டி, (அதனால் காண்போருடைய மனத்தை) உருக்கி மார்பகங்களைக் கொண்டு பொருந்த, மேலே விழுகின்ற அந்த நேரத்தில் பொருளைப் பறிப்பவர்கள். சில பேர்வழிகளை கண்களால் சிமிட்டி, அழுத்தமாகக் காமத்தை ஊட்டி, செவ்விய ஆடையால் வெளித் தோன்றவே (பகிரங்கமாக) இடையைச் சீர்படுத்தி, இசைப் பாட்டுக்களைக் குழல் போல இனிமை பொருந்தப் பாடி, மேகத்தைக் கண்ட அழகிய மயிலைப் போல தமது நடன அருமையைக் காட்டி, ஒழுங்காக ஆடையால் மார்பை மறைப்பது போல ஜாலம் காட்டி, செவ்விய பவழம் போன்ற வாயிதழின் அமுதம் போன்ற நீரூற்றைக் குடிக்கச் செய்து, அழகிய குயில் என்னும்படி குரல் எழக் கண்டத்தில் ஓசையை அசையச் செய்து, காதோலைகளையும் நிறைந்து, அணி கலன்களையும் மினுக்கி ஒளி பெறச் செய்து, சந்தன நறு மணக் கலவையுடன் அலங்கரித்து, பஞ்சு மெத்தையின் மீது சேர்கின்ற பொது மகளிரின் உறவு எனக்குத் தகுமோ? பெரும் இரைச்சலுடன் முன்பு பொன்னுலகத்தில் இருந்த தேவர்கள் (மேரு மலையில்) ஒளித்திருந்து, கந்த சுவாமியே, மேலாம் பொருளே என்று முறையிட, அஷ்ட திக்குகளிலும் உள்ள மலைகளும் பொடிபடவும், ஏழு கடல்களும் தூள்படவும், அசுரர்கள் இறந்துபடவும், சிங்கங்கள் பூட்டப்பட்ட தேர்கள், குதிரைகளும், யானைகளும் போர்க்களத்தில் உறுப்புக்கள் சிதறுண்டு வீழ, செந்நிறக் கழுகுகள், நரிகள், பேய்களோடு ரத்த வெள்ளத்தில் விளையாட வேலாயுதத்தைச் செலுத்திய மயில் வீரனே, சிரித்து அழகிய திரி புரத்தையும் மன்மதனுடைய உடலையும் எரி செய்த, கபாலத்தை ஏந்தும் சிவபெருமானுடைய பக்கத்தில் இருக்கின்ற பொலிவு நிறைந்த அழகு மிக்க சிவகாமி பெற்ற செல்வக் குழந்தையே, உனது அழகிய உள்ளத்தில் குறப் பெண்ணாகிய வள்ளியை இருத்தி கண்ணால் மகிழ்ச்சி அடைந்து, புகழ் மிக்க பொன்கூரை வேய்ந்த பொன்னம்பலத்தே விரும்பி உலவும் பெருமாளே. 

பாடல் 460 - சிதம்பரம் 
ராகம் - ....; தாளம் -

தத்தனந் தத்தனந் தானனத் தந்ததன     தத்தனந் தத்தனந் தானனத் தந்ததன          தத்தனந் தத்தனந் தானனத் தந்ததன ...... தந்ததான

தத்தையென் றொப்பிடுந் தோகைநட் டங்கொளுவர்     பத்திரங் கட்கயங் காரியொப் புங்குழல்கள்          சச்சையங் கெச்சையுந் தாளவொத் தும்பதுமை ...... யென்பநீலச் 
சக்கரம் பொற்குடம் பாலிருக் குந்தனமொ     டொற்றிநன் சித்திரம் போலஎத் தும்பறியர்          சக்களஞ் சக்கடஞ் சாதிதுக் கங்கொலையர் ...... சங்கமாதர் 
சுத்திடும் பித்திடும் சூதுகற் குஞ்சதியர்     முற்பணங் கைக்கொடுந் தாருமிட் டங்கொளுவர்          சொக்கிடும் புக்கடன் சேருமட் டுந்தனகும் ...... விஞ்சையோர்பால் 
தொக்கிடுங் கக்கலுஞ் சூலைபக் கம்பிளவை     விக்கலுந் துக்கமுஞ் சீதபித் தங்கள்கொடு          துப்படங் கிப்படுஞ் சோரனுக் கும்பதவி ...... யெந்தநாளோ 
குத்திரங் கற்றசண் டாளர்சத் தங்குவடு     பொட்டெழுந் திட்டுநின் றாடஎட் டந்திகையர்          கொற்றமுங் கட்டியம் பாடநிர்த் தம்பவுரி ...... கொண்டவேலா 
கொற்றர்பங் குற்றசிந் தாமணிச் செங்குமரி     பத்தரன் புற்றஎந் தாயெழிற் கொஞ்சுகிளி          கொட்புரந் தொக்கவெந் தாடவிட் டங்கிவிழி ...... மங்கைபாலா 
சித்திரம் பொற்குறம் பாவைபக் கம்புணர     செட்டியென் றெத்திவந் தாடிநிர்த் தங்கள்புரி          சிற்சிதம் பொற்புயஞ் சேரமுற் றும்புணரு ...... மெங்கள்கோவே 
சிற்பரன் தற்பரன் சீர்திகழ்த் தென்புலியுர்     ருத்திரன் பத்திரஞ் சூலகர்த் தன்சபையில்          தித்தியென் றொத்திநின் றாடுசிற் றம்பலவர் ...... தம்பிரானே.

கிளி என்று ஒப்புமை சொல்லத் தக்கவராய், மயில் போன்று நடனம் செய்பவர்கள். அம்பு போன்ற கண்ணும் நீருண்ட மேகத்தை ஒத்த கூந்தலும், சப்திக்கும் காற் சதங்கையும் தாள ஒத்துப் போல ஒலி செய்யும் பாவை எனக் கூறத் தக்கவர். நீல நிறமுள்ள சக்கரவாகப் புள், பொன்னாலாகிய குடம் இவற்றைப் போலிருந்து, பால் கொண்டதாயுள்ள மார்பினைக் கொண்டு தழுவி, நல்ல ஓவியம் போல இருந்து வஞ்சித்து, பொருளைப் பறிப்பவர்கள். முழுப் பொய்யைப் பரிகாசத்தினால் சாதிக்கின்ற, துக்கம் தரும் கொலைத் தொழிலைச் செய்பவர்கள். அழகிய விலைமாதர்கள். தம் வசத்தில் சுழலும்படியான பித்து ஏற்றுகின்ற சூதினைக் கற்ற சதிகாரிகள். முன்னதாகப் பணத்தைக் கையில் கொண்டு செலுத்தும் யார் மீதும் தமது விருப்பத்தைச் செலுத்துபவர்கள். மயங்கும்படியான அகந்தை வார்த்தைகளைச் சொல்லி பொருள் சேரும் வரையில் நட்பினைக் காட்டும் மாய வித்தைக்காரர்களிடத்தே, நெருங்கிக் கூடி வருகின்ற வாந்தியும், சூலை நோயும், விலாப் பக்கத்தில் வரும் ராஜபிளவைக் கட்டியும், விக்கலும், துக்கமும், சீத மலம், பித்தம் ஆகிய நோய்களைக் கொள்வதால், வலிமை குன்றி அழிந்து படும் இந்தக் கள்வனுக்கும் (சாலோக, சாமீப, சாரூப, சாயுஜ்ய எனப்படும்) சிவலோக இன்பப் பதவிகள்* கிடைப்பது எப்போதோ? வஞ்சகம் கற்ற சண்டாளர் ஆகிய ஏழு மலைகளும் பொடிபட்டு நின்று குலைய, எட்டுத் திக்குப் பாலகர்களும் உனது வீரத்தைப் புகழ் மாலையாகப் பாட, நடனமாகிய கூத்துக்களைக் கொண்ட வேலனே, வெற்றியாளராகிய சிவபெருமானது இடது பக்கத்தில் உள்ள சிந்தாமணி போன்றவள், செவ்விய குமரி, பக்தர்கள் அன்பு கொண்ட எமது தாய், அழகு கொஞ்சும் கிளி, சுழன்று திரியும் திரி புரங்கள் எல்லாம் வெந்து குலைய வைத்த நெருப்புக் கண்ணை உடைய பார்வதி தேவியின் புதல்வனே, விசித்திரமான அழகிய குறப் பெண்ணாகிய வள்ளி அருகில் சென்று சேர வளைச் செட்டி வடிவு எடுத்து ஏமாற்றி வந்து விளையாடல்கள் செய்து கூத்துக்கள் புரிந்து, நுண்ணிய ஞானத்தவளாகிய அந்த வள்ளி உனது அழகிய தோள்களைச் சேர, அவளை முழுதும் கலந்து சேர்ந்த எங்கள் தலைவனே, ஞானபரன், பரம் பொருள், சீர் விளங்கும் அழகிய சிதம்பரத்தில் விளங்கும் ருத்திர மூர்த்தி, இலைகளை உடைய சூலாயுதத்தைக் கொண்ட தலைவன், பொன்னம்பலத்தில் தித்தி என்னும் தாளத்துக்குத் தக்கபடி நடனம் செய்யும் நடராஜப் பெருமானது தம்பிரானே. 
* 4 பக்தி மார்க்கங்கள் பின்வருமாறு:1. சரியை: திருக்கோயிலில் அலகு இடுதல், மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம் வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல், இறைவனை வாழ்த்துதல், திருவேடம் கண்டு பணிதல். இது 'தாத மார்க்கம் - சாலோகம்'.2. கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்தியக் காரியம் செய்தல். இது 'புத்ர மார்க்கம் - சாமீபம்'.3. யோகம்: புலன்களை அடக்கிப் பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி, முழு ஜோதியை நினைத்திருத்தல். இது 'சக மார்க்கம் (தோழ நெறி) - சாரூபம்'.4. ஞானம்: புறத் தொழில் அகத் தொழில் இன்றி, அறிவு மாத்திரத்தாலே செய்யும் வழிபாடு ஞானம். இது 'சன்மார்க்கம் - சாயுஜ்யம்'. சிவஞான சித்தியார் சூத்திரம்.

பாடல் 461 - சிதம்பரம் 
ராகம் - ....; தாளம் -

தனத்தத்தந் தனத்தத்தந்   தனத்தத்தந் தனத்தத்தந்      தனத்தத்தந் தனத்தத்தந்         தனத்தத்தந் தனத்தத்தந்            தனத்தத்தந் தனத்தத்தந்               தனத்தத்தந் தனத்தத்தந் ...... தனதான

தனத்திற்குங் குமத்தைச்சந்   தனத்தைக்கொண் டணைத்துச்சங்      கிலிக்கொத்தும் பிலுக்குப்பொன்         தனிற்கொத்துந் தரித்துச்சுந்            தரத்திற்பண் பழித்துக்கண்               சுழற்றிச்சண் பகப்புட்பங் ...... குழல்மேவித் 
தரத்தைக்கொண் டசைத்துப்பொன்   தகைப்பட்டுந் தரித்துப்பின்      சிரித்துக்கொண் டழைத்துக்கொந்         தளத்தைத்தண் குலுக்கிச்சங்            கலப்புத்தன் கரத்துக்கொண்               டணைத்துச்சம் ப்ரமித்துக்கொண் ...... டுறவாடிப் 
புனித்தப்பஞ் சணைக்கட்டிண்   படுத்துச்சந் தனப்பொட்டுங்      குலைத்துப்பின் புயத்தைக்கொண்         டணைத்துப்பின் சுகித்திட்டின்            புகட்டிப்பொன் சரக்கொத்துஞ்               சிதைப்பப்பொன் தரப்பற்றும் ...... பொதுமாதர் 
புணர்ப்பித்தும் பிடித்துப்பொன்   கொடுத்துப்பின் பிதிர்ச்சித்தன்      திணிக்கட்டுஞ் சிதைத்துக்கண்         சிறுப்பப்புண் பிடித்தப்புண்            புடைத்துக்கண் பழுத்துக்கண்               டவர்க்குக்கண் புதைப்பச்சென் ...... றுழல்வேனோ 
சினத்துக்கண் சிவப்பச்சங்   கொலிப்பத்திண் கவட்டுச்செங்      குவட்டைச்சென் றிடித்துச்செண்         டரைத்துக்கம் பிடிக்கப்பண்            சிரத்தைப்பந் தடித்துக்கொண்               டிறைத்துத்தெண் கடற்றிட்டுங் ...... கொளைபோகச் 
செழித்துப்பொன் சுரர்ச்சுற்றங்   களித்துக்கொண் டளிப்புட்பஞ்      சிறக்கப்பண் சிரத்திற்கொண்         டிறைத்துச்செம் பதத்திற்கண்            திளைப்பத்தந் தலைத்தழ்த்தம்               புகழ்ச்செப்புஞ் சயத்துத்திண் ...... புயவேளே 
பனித்துட்கங் கசற்குக்கண்   பரப்பித்தன் சினத்திற்றிண்      புரத்தைக்கண் டெரித்துப்பண்         கயத்தைப்பண் டுரித்துப்பன்            பகைத்தக்கன் தவத்தைச்சென்               றழித்துக்கொன் றடற்பித்தன் ...... தருவாழ்வே 
படைத்துப்பொன் றுடைத்திட்பன்   தனைக்குட்டும் படுத்திப்பண்      கடிப்புட்பங் கலைச்சுற்றும்         பதத்தப்பண் புறச்சிற்றம்            பலத்திற்கண் களித்தப்பைம்               புனத்திற்செங் குறத்திப்பெண் ...... பெருமாளே.

மார்பகத்தில் செஞ்சாந்தையும் சந்தனத்தையும் கொண்டு அப்பி, சங்கிலிக் கொத்தும், மினுக்கும் பொன்னாலாகிய கூட்டமான நகைகளையும் அணிந்து, தமது அழகில் ஈடுபட்டவரின் நற்குணங்களை அழித்து, கண்களைச் சுழற்றி, சண்பக மலர்களை கூந்தலில் வைத்து அலங்கரித்து, தமது உடலைக் கொண்டு மேன்மை விளங்க அசைத்து, பொற்சரிகை பொருந்திய பட்டாடையைத் தரித்து, பின்பு சிரித்து, கொண்டு வந்து அழைத்துச் சென்று கூந்தலை அன்பாக அசைத்து, வளையல்கள் சப்திக்கும் தமது கைகளால் கொண்டு போய் அணைத்து, பெருங் களிப்புடன் உறவு பூண்டு, உயர்ந்த பஞ்சணை மெத்தையில் நன்றாகப் படுத்து, (வந்தவருடைய) சந்தனப் பொட்டைக் கலைத்து, பின்பு தனது கைகளால் அவர்களது தோளைத் தழுவி, பின்னர் இன்ப சுகத்தை அனுபவித்து, பொன் கட்டிகளால் ஆன மணி வடத் திரள்களும் செலவழித்துத் தொலையும்படி பொன்னைத் தருமாறு பற்றுகின்ற விலைமாதர்களுடன் சேரும் பைத்தியமும், (அந்த மாதர்களுக்குப்) பொன்னைக் கொடுத்த பிறகு கலக்கம் அடையும் மனமுடைய நான், உடல் வலிமை சிதைத்துத் தளர்ந்து, கண்கள் சிறுத்துப் போய், உடம்பெல்லாம் புண்ணாகி, அந்தப் புண் வீங்கிச் சீழ் பிடித்து, அதைப் பார்த்தவர்கள் எல்லாம் கண்ணை மூடிக் கொண்டு செல்லும்படியாக நான் திரிவேனோ? கோபித்துக் கண் சிவக்கவும், சங்குகள் ஒலிக்கவும், வலிய கிளைகளை உடைய செவ்விய கிரெளஞ்ச மலையைப் பொடிபடுத்தி, விண்ணோரையும் மண்ணுலகில் உள்ளோரையும் துயரத்தில் ஆழ்த்திய அசுரர்களுடைய தலைகளை பந்தடிப்பது போல் அடித்து, அத் தலைகளைப் போர்க் களத்தில் எங்கும் சிதற வைத்து, தெள்ளிய கடலினை மேடாக மாறச் செய்து, செழிப்புற்று பொன்னுலகத்தில் வாழும் தேவர்களும் அவர்களின் சுற்றத்தார்களும் மகிழ்ச்சி பூண்டு, வண்டு மொய்க்கும் மலர்களை விளக்கமுற அலங்காரமாகத் தலையில் சுமந்து சென்று, உனது செவ்விய திருவடியில் இட்டுப் பூஜித்துத் தமது கண்கள் மகிழ, தலைகளைத் தாழ்த்தி அழகிய உனது திருப்புகழைச் சொல்லும் வெற்றி விளங்கும் வலிய திருப்புயங்களை உடைய தலைவனே, நடுங்கி அச்சம் கொள்ளுமாறு மன்மதன் மேல் நெற்றிக் கண்ணைச் செலுத்தி, தான் கொண்ட கோபத்தால் வலிய திரிபுரங்களை விழித்து எரித்து, முன்பு சினத்துடன் வந்த யானையின் தோலை உரித்த திறம் கொண்டவரும், பகைமை பூண்டிருந்த தக்ஷனுடைய யாகத்தைப் போய் அழித்து அவனையும் கொன்ற வலிமை வாய்ந்த பித்தருமான* சிவபெருமான் ஈன்ற செல்வமே, படைக்கின்ற ஆற்றல் ஒன்றை உடைய திறமை கொண்டவனாகிய பிரமனை தலையில் குட்டித் தண்டித்தவனே, தகுதியான வாசனை மிக்க மலர்களைக் கொண்ட திருவடிகளை உடையவனே, பரத சாஸ்திர முறைப்படி சுழன்று நடனம் செய்யும் பாதங்களை உடையவனே, அலங்காரத்துடன் திருச் சிற்றம்பலத்தில் குளிர்ச்சி உற மகிழ்பவனே, பசுமையான தினைப் புனத்தில் வாழும் செவ்விய குறப் பெண்ணாகிய வள்ளியின் பெருமாளே. 
* சுந்தரமூர்த்தி நாயனார் ஒருமுறை சிவபெருமானை பித்தா என்று அழைத்தார்.

பாடல் 462 - சிதம்பரம் 

ராகம் -...; தாளம் -

தனதன தனத்தத் தந்த தந்தன     தனதன தனத்தத் தந்த தந்தன          தனதன தனத்தத் தந்த தந்தன ...... தனதான

திருடிக ளிணக்கிச் சம்ப ளம்பறி     நடுவிகள் மயக்கிச் சங்க முண்கிகள்          சிதடிகள் முலைக்கச் சும்பல் கண்டிகள் ...... சதிகாரர் 
செவிடிகள் மதப்பட் டுங்கு குண்டிகள்     அசடிகள் பிணக்கிட் டும்பு றம்பிகள்          செழுமிக ளழைத்திச் சங்கொ ளுஞ்செயர் ...... வெகுமோகக் 
குருடிகள் நகைத்திட் டம்பு லம்புக     ளுதடிகள் கணக்கிட் டும்பி ணங்கிகள்          குசலிகள் மருத்திட் டுங்கொ டுங்குணர் ...... விழியாலே 
கொளுவிகள் மினுக்குச் சங்கி ரங்கிகள்     நடனமு நடித்திட் டொங்கு சண்டிகள்          குணமதில் முழுச்சுத் தசங்க்ய சங்கிக ...... ளுறவாமோ 
இருடிய ரினத்துற் றும்ப தங்கொளு     மறையவ னிலத்தொக் குஞ்சு கம்பெறு          மிமையவ ரினக்கட் டுங்கு லைந்திட ...... வருசூரர் 
இபமொடு வெதித்தச் சிங்க மும்பல     இரதமொ டெதத்திக் கும்பி ளந்திட          இவுளியி ரதத்துற் றங்க மங்கிட ...... விடும்வேலா 
அரிகரி யுரித்திட் டங்க சன்புர     மெரிதர நகைத்துப் பங்க யன்சிர          மளவொடு மறுத்துப் பண்ட ணிந்தவ ...... ரருள்கோனே 
அமரர்த மகட்கிட் டம்பு ரிந்துநல்     குறவர்த மகட்பக் கஞ்சி றந்துற          அழகிய திருச்சிற் றம்ப லம்புகு ...... பெருமாளே.

(வந்தவர்கள் பணத்தைத்) திருடுவோர். தம் விருப்பப்படி கைப்பொருளைப் பறிக்கும் நீதி பூண்டவர்கள். மயங்க வைத்துக் கலவி செய்பவர்கள். அறிவிலர். கச்சு அணிந்த மலை போன்ற மார்பகங்களைக் கொண்டவர்கள். கண்டித்துப் பேசுபவர்கள். எப்போதும் சதி செய்பவர்கள். (வேண்டுமென) காது கேளாதவர்கள் போல் நடிப்பவர்கள். அகங்காரம் கொண்டு உங்கார ஒலியை எழுப்பும் இழிந்தவர். முட்டாள்கள். ஊடல் செய்துகொண்டு ஒழுக்கத்துக்குப் புறம்பானவர்கள். செழிப்பான அழகு கொண்டவர்கள். வருபவர்களை அழைத்து தமது இச்சையை நிறைவேற்றிக் கொள்ளும் செயல் திறத்தைக் கொண்டவர்கள். மிக்க காமம் பூண்ட குருடிகள். சிரித்துக் கொண்டே தமது விருப்பத்தை வெளியிடும், கள்ளுண்ட உதட்டினர். (பெற்ற பொருளைக்) கணக்குப் பார்த்துப் பார்த்து பிணக்கம் கொள்ளுபவர்கள். தந்திரவாதிகள். (வருபவரின் உணவில்) மருந்து வைத்து மயக்கும் கொடிய குணம் படைத்தவர்கள். கண்களால் (தம் பக்கம்) இழுத்துக் கொள்ளுபவர்கள். நடனம் செய்து விளங்கும் பிடிவாத குணம் படைத்தவர்கள். குணத்தைப் பற்றிக் கூறுங்கால், முழுமையும் கணக்கற்ற பேர்களுடன் சம்பந்தம் உடையவர்கள் (ஆகிய விலைமாதர்களின்) இணக்கம் நல்லதோ? ரிஷிகள் இனத்தோர் கூட்டமும், உமது பதவியில் இருக்கும் பிரமன் படைத்த மண்ணுள்ளோர் கூட்டமும், சுகம் பெற்றிருந்த தேவர் கூட்ட மிகுதியும் நிலை குலையும்படி வந்த சூரர்கள், அவர்களுடைய யானைக் கூட்டங்களோடு, வேறுபட்ட சிங்கங்களும், பல தேர்களும் எந்தத் திக்கும் பிளவு உண்டு அழிய, குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் உள்ள உடல்கள் நாசம் அடைய வேலைச் செலுத்தியவனே, சிங்கத்தையும் யானையையும் தோலை உரித்து, மன்மதனையும் திரி புரங்களையும் எரிபட்டு அழியச் சிரித்து, பிரமனுடைய (ஐந்து) தலைகளில் ஒன்றை ஒரு கணக்காக அறுத்து முன்பு பிரம கபாலத்தை அணிந்தவராகிய சிவபெருமான் தந்தருளிய தலைவனே, தேவர்களின் மகளான தேவயானையிடம் விருப்பத்தைக் காட்டி, குறப் பெண்ணாகிய வள்ளி (உனது) வலப் புறத்தில் சிறப்புற்று வீற்றிருக்க, அழகிய சிதம்பரத்தில் புக்கு விளங்கும் பெருமாளே. 

பாடல் 463 - சிதம்பரம் 
ராகம் - ...; தாளம் -

தந்த தந்தன தந்த தந்தன     தந்த தந்தன தந்த தந்தன          தந்த தந்தன தந்த தந்தன ...... தந்ததான

கொந்த ரங்குழ லிந்து வண்புரு     வங்கள் கண்கய லுஞ்ச ரங்கணை          கொண்ட ரம்பைய ரந்த முஞ்சசி ...... துண்டமாதர் 
கொந்த ளங்கதி ரின்கு லங்களி     னுஞ்சு ழன்றிர சம்ப லங்கனி          கொண்ட நண்பித ழின்சு கங்குயி ...... லின்சொல்மேவுந் 
தந்த வந்தர ளஞ்சி றந்தெழு     கந்த ரங்கமு கென்ப பைங்கழை          தண்பு யந்தளி ரின்கு டங்கைய ...... ரம்பொனாரந் 
தந்தி யின்குவ டின்த னங்களி     ரண்டை யுங்குலை கொண்டு விண்டவர்          தங்க டம்படி யுங்க வண்டிய ...... சிந்தையாமோ 
மந்த ரங்கட லுஞ்சு ழன்றமிர்     தங்க டைந்தவ னஞ்சு மங்குலி          மந்தி ரஞ்செல்வ முஞ்சு கம்பெற ...... எந்தவாழ்வும் 
வந்த ரம்பையெ ணும்ப கிர்ந்துந     டங்கொ ளுந்திரு மங்கை பங்கினன்          வண்டர் லங்கையு ளன்சி ரம்பொடி ...... கண்டமாயோன் 
உந்தி யின்புவ னங்க ளெங்கும     டங்க வுண்டகு டங்கை யன்புக          ழொண்பு ரம்பொடி கண்ட எந்தையர் ...... பங்கின்மேவும் 
உம்ப லின்கலை மங்கை சங்கரி     மைந்த னென்றய னும்பு கழ்ந்திட          வொண்ப ரந்திரு வம்ப லந்திகழ் ...... தம்பிரானே.

அழகிய பூங் கொத்துக்கள் கொண்ட கூந்தல், பிறைச் சந்திரன் போன்ற வளப்பமுள்ள புருவங்கள், கயல் மீன் போலவும் அம்பு போலவும் அம்பின் அலகு போலவும் உள்ள கண்கள் ஆகியவற்றைக் கொண்ட விலைமாதர் தெய்வ மகளிர் போன்ற அழகும் சந்திரன் போன்ற முகமும் உடையவர்கள். இத்தகையோரின் கூந்தலின் ஒளி அழகுகளில் ஈடுபட்டுத் திரிந்து, சுவையுள்ள பழத்தின் சாரத்தைக் கொண்டு உகந்ததாக இருந்த வாயிதழ் ஊறலின் இன்பம், கிளி, குயில் இவைகளின் மொழி போன்ற இனிய சொல், விரும்பும்படியான அழகிய முத்துக்கள் போன்ற பற்கள், நல்ல எழுச்சியுள்ள கமுகு போன்ற கழுத்து, பசிய மூங்கில் போன்ற குளிர்ந்த புயங்கள், தளிர் போல மென்மையான உள்ளங்கையை உடையவர்கள், அழகிய பொன் மாலையை அணிந்துள்ள, யானை போலவும் மலை போலவும் பெரிதாக உள்ள இரண்டு மார்பகங்களும் நிலை கெட்டு வெளியே காட்டுபவர்கள். இத்தகைய பொது மகளிருடைய உடலில் தோய்கின்ற, கவண்கல் போல வேகமாய்ப் பாய்கின்ற கெட்ட சிந்தை எனக்கு ஆகுமோ? மந்தர மலையைக் கடலில் சுழல வைத்து அமுதத்தைக் கடைந்து எடுத்தவன், அச்சம் கொண்ட இந்திரன் இருப்பிடத்தையும் பொருளையும் சுகத்தையும் எல்லா வாழ்வையும் பெற, அந்தக் கடலில் தோன்றிய அரம்பை முதலான நடன மாதர்களையும் பங்கிட்டு அளித்து நடனம் புரிந்த லக்ஷ்மியின் நாயகன், மங்கல பாடகர் பாடி நின்ற இலங்கை வேந்தனான ராவணனுடைய பத்துத் தலைகளையும் பொடியாகும்படி வென்ற மாயவன், தனது வயிற்றில் அண்டங்கள் யாவும் அடங்க உண்ட உள்ளங்கையை உடைய திருமால் புகழ, ஒளி வீசிய திரி புரங்களை பொடி செய்த எமது தந்தையாகிய சிவபெருமானின் பாகத்தில் இருப்பவளும், எழுச்சி கொண்ட எல்லா கலைகளுக்கும் தலைவியுமாகிய மங்கை என்னும் சங்கரியின் மகனே என்று பிரமனும் புகழ, ஒள்ளிய மேலான சிதம்பரத்தின் திரு அம்பலத்தில் விளங்கும் தம்பிரானே. 

பாடல் 464 - சிதம்பரம் 
ராகம் - ...; தாளம் -

தனந்தந்தம் தனந்தந்தம்   தனந்தந்தம் தனந்தந்தம்      தனந்தந்தம் தனந்தந்தம் ...... தனதான

தியங்குஞ்சஞ் சலந்துன்பங்   கடந்தொந்தஞ் செறிந்தைந்திந்      த்ரியம்பந்தந் தருந்துன்பம் ...... படுமேழை 
திதம்பண்பொன் றிலன்பண்டன்   தலன்குண்டன் சலன்கண்டன்      தெளிந்துன்றன் பழந்தொண்டென் ...... றுயர்வாகப் 
புயங்கந்திங் களின்துண்டங்   குருந்தின்கொந் தயன்றன்கம்      பொருந்துங்கங் கலந்தஞ்செஞ் ...... சடைசூடி 
புகழ்ந்துங்கண் டுகந்துங்கும்   பிடுஞ்செம்பொன் சிலம்பென்றும்      புலம்பும்பங் கயந்தந்தென் ...... குறைதீராய் 
இயம்புஞ்சம் புகந்துன்றுஞ்   சுணங்கன்செம் பருந்தங்கங்      கிணங்குஞ்செந் தடங்கண்டுங் ...... களிகூர 
இடும்பைங்கண் சிரங்கண்டம்   பதந்தந்தங் கரஞ்சந்தொன்      றெலும்புஞ்சிந் திடும்பங்கஞ் ...... செயும்வேலா 
தயங்கும்பைஞ் சுரும்பெங்குந்   தனந்தந்தந் தனந்தந்தந்      தடந்தண்பங் கயங்கொஞ்சுஞ் ...... சிறுகூரா 
தவங்கொண்டுஞ் செபங்கொண்டுஞ்   சிவங்கொண்டும் ப்ரியங்கொண்டுந்      தலந்துன்றம் பலந்தங்கும் ...... பெருமாளே.

அறிவைக் குழப்பும் மனக் கவலை, துயரம் ஆகியவை கொண்ட இந்த உடலில் சம்பந்தப்பட்டு நெருங்கியுள்ள ஐந்து பொறிகளின் பாசத்தால் உண்டாகும் துன்பத்தில் வேதனைப்படும் அறிவிலி நான். நிலைத்த நற் குணம் ஒன்றும் இல்லாதவன் நான். ஆண்மை இல்லாதவன், கீழ்மையானவன், இழிந்தவன், கோபம் மிகுந்தவன் ஆகிய நான், மனத் தெளிவை அடைந்து உன்னுடைய பழைய அடியவன் என்னும் உயர் நிலையை அடையும்படி, பாம்பு, பிறைச் சந்திரன், குருந்த மலரின் கொத்து, பிரமனுடைய (தலை) கபாலம், பொருந்திய (கங்கை) நீர் இவை சேர்ந்த அழகிய செஞ்சடையரான சிவபெருமான் புகழ்ந்தும், பார்த்து மகிழ்ந்தும் (உன்னை) வணங்குகின்ற, செம்பொன்னாலாகிய சிலம்புகள் எப்போதும் ஒலி செய்கின்ற (உனது) தாமரைத் திருவடிகளைத் தந்தருளி, என்னுடைய குறைகளைத் தீர்த்து வைப்பாயாக. சொல்லப்படுகின்ற நரிகள், நெருங்கும் நாய்கள், சிவந்த கழுகுகள், ஆங்காங்கே கூடி நிற்கும் ரண களத்தைப் பார்த்து மகிழ்ச்சி மிகும்படி, அசுரர்களுக்குத் துன்பம் உண்டாக (அவர்களின்) கண், தலை, கழுத்து, கால், அவரவர்களுடைய கைகள், ஒன்றுக்கொன்று பிணைந்திருந்த எலும்புகள், இவை எல்லாம் அழிவுபடும்படி துண்டு துண்டாக்கிய வேலனே, ஒளி வீசும் பசுமையான வண்டுகள் எல்லா இடத்திலும் தனந்தந்தந் தனந்தந்தம் என்ற ஒலியுடன் குளங்களில் உள்ள குளிர்ந்த தாமரை மலர்களில் கொஞ்சுகின்ற சிறுகூர் என்னும் தலத்தில் வீற்றிருப்பவனே, தவத்தை மேற்கொண்டும், மந்திரங்களுடன் கூடிய ஜெபத்தை மேற்கொண்டும், சிவ ஞானத்தாலும் விருப்பத்துடன் நாடி (அடியவர்கள்) அடைகின்ற தலமாகிய பொன்னம்பலத்தில் (சிதம்பரத்தில்) வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 465 - சிதம்பரம் 
ராகம் - ....; தாளம் -

தனனந் தனத்த தந்த தனனந் தனத்த தந்த     தனனந் தனத்த தந்த ...... தனதான

பருவம் பணைத்தி ரண்டு கரிகொம் பெனத்தி ரண்டு     பவளம் பதித்த செம்பொ ...... னிறமார்பிற் 
படருங் கனத்த கொங்கை மினல்கொந் தளித்து சிந்த     பலவிஞ் சையைப்பு லம்பி ...... யழகான 
புருவஞ் சுழற்றி யிந்த்ர தநுவந் துதித்த தென்று     புளகஞ் செலுத்தி ரண்டு ...... கயல்மேவும் 
பொறிகண் சுழற்றி ரம்ப பரிசம் பயிற்றி மந்த்ர     பொடிகொண் டழிக்கும் வஞ்ச ...... ருறவாமோ 
உருவந் தரித்து கந்து கரமும் பிடித்து வந்து     உறவும் பிடித்த ணங்கை ...... வனமீதே 
ஒளிர்கொம் பினைச்ச வுந்த ரியவும் பலைக்கொ ணர்ந்து     ஒளிர்வஞ் சியைப்பு ணர்ந்த ...... மணிமார்பா 
செருவெங் களத்தில் வந்த அவுணன் தெறித்து மங்க     சிவமஞ் செழுத்தை முந்த ...... விடுவோனே 
தினமுங் களித்து செம்பொ னுலகந் துதித்தி றைஞ்சு     திருவம் பலத்த மர்ந்த ...... பெருமாளே.

இளமையான, பருத்த, இரு யானைத் தந்தங்கள் என்று சொல்லும்படி திரட்சியுற்று, பவளம் பதித்தது போன்ற செவ்விய பொன்னிறமான மார்பில் பரந்துள்ள கனம் கொண்ட மார்பகங்கள் மின்னல் மின்னி எழுந்தது போல ஒளி வீச, பல மாய வித்தைப் பேச்சுக்களைப் பலமாகப் பேசி, தமது அழகான புருவங்களைச் சுழற்றி, வானவில் வந்து தோன்றியது போலப் புளகம் தருகின்ற இரண்டு கயல் மீன் போல் உள்ள உறுப்பாகிய கண்களைச் சுழற்றி, நிரம்பவும் தொட்டுப் பயின்று, சொக்குப் பொடி கொண்டு அழிக்கின்ற வஞ்சகர்களாகிய பொது மகளிருடைய உறவு நல்லதாகுமோ? மாறுவேடம் பூண்டு, ஆசையுடன் (வளைச் செட்டியாய் வள்ளியின்) கைகளைப் பற்றி மகிழ்ந்து, அவளது உறவையும் கொண்டு, வள்ளிமலைக் காட்டில் விளங்கும் கொம்பினை உடைய அழகிய (கணபதியாகிய) யானையை வரவழைத்து, விளங்கும் வஞ்சிக்கொடி போன்ற வள்ளியைக் கலந்த அழகிய மார்பனே, போர் நடந்த கொடிய போர்க்களத்தில் வந்த சூரன் பிளவுபட்டு அழிய (நமசிவாய என்ற) பஞ்சாக்ஷரத்தின் ஆற்றலைக் கொண்ட வேலை வேகமாகச் செலுத்தியவனே, நாள்தோறும் மகிழ்ச்சியுடன் செவ்விய பொன்னுலகத்தினரான தேவர்கள் துதித்து வணங்கும் திரு அம்பலத்தில் (சிதம்பரத்தில்) வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 466 - சிதம்பரம் 
ராகம் - ...; தாளம் -

தனனந் தனத்த தந்த தனனந் தனத்த தந்த     தனனந் தனத்த தந்த ...... தனதான

மதவெங் கரிக்கி ரண்டு வலுகொம் பெனத்தி ரண்டு     வளரும் தனத்த ணிந்த ...... மணியாரம் 
வளைசெங் கையிற்சி றந்த வொளிகண் டுநித்தி லங்கு     வரருந் திகைத்தி ரங்க ...... வருமானார் 
விதவிங் கிதப்ரி யங்கள் நகைகொஞ் சுதற்கு ணங்கள்     மிகைகண் டுறக்க லங்கி ...... மருளாதே 
விடுசங் கையற்று ணர்ந்து வலம்வந் துனைப்பு கழ்ந்து     மிகவிஞ் சுபொற்ப தங்கள் ...... தருவாயே 
நதியுந் திருக்க ரந்தை மதியுஞ் சடைக்க ணிந்த     நடநம் பருற்றி ருந்த ...... கயிலாய 
நகமங் கையிற்பி டுங்கு மசுரன் சிரத்தொ டங்கம்     நவதுங் கரத்ந முந்து ...... திரடோளுஞ் 
சிதையும் படிக்கொ ரம்பு தனைமுன் தொடுத்த கொண்டல்     திறல்செங் கணச்சு தன்றன் ...... மருகோனே 
தினமுங் கருத்து ணர்ந்து சுரர்வந் துறப்ப ணிந்த     திருவம் பலத்த மர்ந்த ...... பெருமாளே.

மதம் கொண்ட கொடிய யானையின் இரண்டு வலிமையான கொம்புகள் என்று சொல்லும்படியாக, திரட்சியுற்று வளர்கின்ற மார்பகங்கள் மீது அணிந்துள்ள ரத்தின மாலை, செங்கையில் வளைகள், இவைகள் ஒளி சிறந்து விளங்குவதைப் பார்த்து எல்லாவற்றையும் துறந்தவர்களான சான்றோர்களும் திகைப்புற்று மனம் நெகிழும்படி வருகின்ற மான் போன்ற மாதர்களின் விதம் விதமான இன்பம் தரும் செயல்களையும், சிரிப்புடன் கொஞ்சிப் பேசும் குணங்களின் மேம்பாட்டையும் பார்த்து, அவை மனத்தில் அழுந்த, உள்ளம் கலங்கி மோக மயக்கம் கொள்ளாமல், ஆசை விட்டொழிந்து, சிறிதேனும் சந்தேகம் கொள்ளாமல் உன்னை உணர்ந்து, உன்னைச் சுற்றி வலம் வந்து, உன்னைப் புகழ்ந்திட, மிக மேலான, அழகிய திருவடிகளைத் தந்து அருளுக. கங்கை ஆற்றையும், அழகிய கரந்தை மலரையும், பிறைச் சந்திரனையும் சடையில் அணிந்தவரும், நடனம் ஆடுகின்றவருமான நடராஜப் பெருமான் பொருந்தி வீற்றிருந்த கயிலாய மலையை, தனது கையால் பிடுங்க முயன்ற அசுரனாகிய ராவணனுடைய தலைகளும், உடலும், உயர்ந்த நவரத்தின மாலை விளங்கும் திரண்ட தோள்களும் சிதைந்து போகும்படி ஒப்பற்ற அம்பை முன்பு செலுத்தியவரும், மேகம் போன்று கரு நிறம் கொண்டவரும், வலிமை விளங்கும் செவ்விய கண்களை உடையவருமான ராமனின் (திருமாலின்) மருகனே, நாள்தோறும் உன்னைத் தொழுவதின் பயனை உணர்ந்த தேவர்கள் உன்னைத் தாழப் பணிந்த திரு அம்பலத்தே (சிதம்பரத்தில்) அமர்ந்த பெருமாளே. 

பாடல் 467 - சிதம்பரம் 
ராகம் -...; தாளம் -

தனதந்தன தனதந்தன தனதந்தன தான     தனதந்தன தனதந்தன தனதந்தன தான          தனதந்தன தனதந்தன தனதந்தன தானத் ...... தனதான

முகசந்திர புருவஞ்சிலை விழியுங்கயல் நீல     முகிலங்குழ லொளிர்தொங்கலொ டிசைவண்டுகள் பாட          மொழியுங்கிளி யிதழ்பங்கய நகைசங்கொளி காதிற் ...... குழையாட 
முழவங்கர கமுகம்பரி மளகுங்கும வாச     முலையின்பர சகுடங்குவ டிணைகொண்டுநல் மார்பில்          முரணுஞ்சிறு பவளந்தர ளவடந்தொடை யாடக் ...... கொடிபோலத் 
துகிரின்கொடி யொடியும்படி நடனந்தொடை வாழை     மறையும்படி துயல்சுந்தர சுகமங்கைய ரோடு          துதைபஞ்சணை மிசையங்கசன் ரதியின்பம தாகச் ...... செயல்மேவித் 
தொடைசிந்திட மொழிகொஞ்சிட அளகஞ்சுழ லாட     விழிதுஞ்சிட இடைதொய்ஞ்சிட மயல்கொண்டணை கீனும்          சுகசந்திர முகமும்பத அழகுந்தமி யேனுக் ...... கருள்வாயே 
அகரந்திரு உயிர்பண்புற அரியென்பது மாகி     உறையுஞ்சுட ரொளியென்கணில் வளருஞ்சிவ காமி          அமுதம்பொழி பரையந்தரி உமைபங்கர னாருக் ...... கொருசேயே 
அசுரன்சிர மிரதம்பரி சிலையுங்கெட கோடு     சரமும்பல படையும்பொடி கடலுங்கிரி சாய          அமர்கொண்டயில் விடுசெங்கர வொளிசெங்கதிர் போலத் ...... திகழ்வோனே 
மகரங்கொடி நிலவின்குடை மதனன்திரு தாதை     மருகென்றணி விருதும்பல முரசங்கலை யோத          மறையன்றலை யுடையும்படி நடனங்கொளு மாழைக் ...... கதிர்வேலா 
வடிவிந்திரன் மகள்சுந்தர மணமுங்கொடு மோக     சரசங்குற மகள்பங்கொடு வளர்தென்புலி யூரில்          மகிழும்புகழ் திருவம்பல மருவுங்கும ரேசப் ...... பெருமாளே.

முகம், சந்திரன். புருவம், வில். கண், கயல் மீன். கரிய மேகம் போன்றது அழகிய கூந்தல். ஒளி வீசும் மாலையில் இருந்து இசைகளை வண்டுகள் பாட, பேச்சும் கிளி போன்றது. வாயிதழ், தாமரை. பற்கள் சங்கின் ஒளி கொண்டன. காதில் குண்டலங்கள் அசைவன. அழகிய கையிணைகள் (வளையல்களால்) ஒலி செய்ய, வாசனை உள்ள செஞ்சாந்தின் நறு மணம் கொண்ட மார்பகங்கள் என்னும் இன்பச் சாறு பொருந்திய குடத்துக்கும், மலைக்கும் ஒப்பாகி, பரந்த மார்பில் நிறத்தில் மாறுபடும் சிறிய பவள வடமும், முத்து மாலையும் அசைந்தாட, கொடி அசைவது போல, பவளக் கொடி ஒடிவது போன்ற இடை துவள, நடனம் செய்து, வாழை போன்ற தொடை மறையும்படி அசைந்தாடுகின்ற, அழகிய சுகம் தருகின்ற பெண்களோடு, நெருங்கிய பஞ்சு மெத்தையில் மன்மதன் ரதியும் போல இன்பம் தரும் லீலைகளைச் செய்து, மாலை சிதறவும், பேச்சு கொஞ்சவும், கூந்தல் சுழன்று அசையவும், கண்கள் சோர்வு அடையவும், இடை தளரவும், காம மயக்கம் கொண்டு நான் விலைமாதர்களைத் தழுவிய போதிலும், அழகிய சந்திரன் போன்ற உனது முக தரிசனத்தையும், திருவாயால் கூறும் உபதேச மொழியையும் அடியேனுக்கு அருள் செய்வாயாக. அகர எழுத்தைப் போல் தனித்தும் வேறாக இருந்தும் ஆன்மாக்கள் உய்ய வழி காட்டும் திருமால்* ஆகி, என் கண்ணில் விளங்கும் சுடர் ஒளியாம் சிவகாமியாகிய, அமுதத்தைப் பொழியும் பராசக்தி உமா தேவியின் பாகத்தில் உறையும் சிவபெருமானுக்கு ஒப்பற்ற குழந்தையே, அசுரனுடைய தலை, தேர், குதிரை, வில் இவை எல்லாம் கெட, (அவனுக்குக் காவலாயிருந்த) எழு கிரி, அம்பு முதலிய பல படைகளும் பொடிந்து தூளாக, கடலும், கிரவுஞ்ச மலையும் சாய்ந்து விழ, போரை மேற் கொண்டு வேலைச் செலுத்திய செவ்விய கரத்தினனே, ஒளி வீசும் செஞ்சுடர்ச் சூரியனைப் போல விளங்குபவனே, மகர மீனைக் கொடியாகவும் நிலவைக் குடையாகவும் உடைய மன்மதனின் அழகிய தந்தையாகிய திருமாலின் மருமகன் என்று அழகிய வெற்றிச் சின்னமும், முரசம் என்னும் பறைகளும், சாஸ்திர நூல்களும் புகழ்ந்து நிற்க, பிரமனின் தலை உடையும்படி (அவனைக் குட்டி) திருவிளையாடல் கொண்டவனும், பொன்னின் நிறத்தை உடையவனும் ஆகிய ஒளி வீசும் வேலனே, அழகு நிறைந்த இந்திரனுடைய மகளாகிய தேவயானையோடு அழகிய திருமணத்தைச் செய்து கொண்டு, (பின்பு) காம லீலைகளை குறப் பெண் வள்ளியோடு விளையாடி, திருவளரும் தென்புலியூரில் (சிதம்பரத்தில்) யாவரும் கண்டு களிக்கும் திருவம்பலத்தில் விளங்கும் குமரேசப் பெருமாளே. 
* திருமாலும் உமாதேவியும் ஒரே அம்சத்தினர்.

பாடல் 468 - சிதம்பரம் 
ராகம் - ...; தாளம் -

தந்தன தானன தான தந்தன     தந்தன தானன தான தந்தன          தந்தன தானன தான தந்தன ...... தந்ததான

சந்திர வோலைகு லாவ கொங்கைகள்     மந்தர மாலந னீர்த தும்பநல்          சண்பக மாலைகு லாவி ளங்குழல் ...... மஞ்சுபோலத் 
தண்கயல் வாளிக ணாரி ளம்பிறை     விண்புரு வாரிதழ் கோவை யின்கனி          தன்செய லார்நகை சோதி யின்கதிர் ...... சங்குமேவுங் 
கந்தரர் தேமலு மார்ப ரம்பநல்     சந்தன சேறுட னார்க வின்பெறு          கஞ்சுக மாமிட றோதை கொஞ்சிய ...... ரம்பையாரைக் 
கண்களி கூரவெ காசை கொண்டவர்     பஞ்சணை மீதுகு லாவி னுந்திரு          கண்களி ராறுமி ராறு திண்புய ...... முங்கொள்வேனே 
இந்திர லோகமு ளாரி தம்பெற     சந்திர சூரியர் தேர்ந டந்திட          எண்கிரி சூரர்கு ழாமி றந்திட ...... கண்டவேலா 
இந்திரை கேள்வர்பி தாம கன்கதி     ரிந்துச டாதரன் வாச வன்தொழு          தின்புற வேமனு நூல்வி ளம்பிய ...... கந்தவேளே 
சிந்துர மால்குவ டார்த னஞ்சிறு     பெண்கள்சி காமணி மோக வஞ்சியர்          செந்தினை வாழ்வளி நாய கொண்குக ...... அன்பரோது 
செந்தமிழ் ஞானத டாக மென்சிவ     கங்கைய ளாவும காசி தம்பர          திண்சபை மேவும னாச வுந்தர ...... தம்பிரானே.

சந்திரனைப் போல் குளிர்ந்த ஒளியைத் தரும் காதோலை விளங்க, மார்புகள் மந்தர மலையைப் போல் அசைய, நல்ல குளிர்ச்சி ததும்பும் அழகிய சண்பக மாலை விளங்கும் மெல்லிய கூந்தல் மேகம் போல் விளங்க, குளிர்ந்த மீன் போன்றதும் அம்பு போன்றதுமான கண்களை உடையவர்கள். விண்ணில் விளங்கும் இளம் பிறைச் சந்திரன் போன்ற புருவத்தை உடையவர்கள். கொவ்வைப் பழம் போன்ற சிவந்த வாயிதழை உடையவர்கள். பொது மகளிர்களுக்கே உரித்தான காம லீலைகளைச் செய்பவர்கள். சூரிய ஒளி போன்ற பல்வரிசையும், சங்கு போன்ற கழுத்தையும் உடையவர்கள். தேமல் மார்பில் பரவ, நல்ல சந்தனக் கலவையின் நிறைந்த அழகைப் பெற்ற மார்பின் மேல் ரவிக்கை அணிந்த, அழகிய தொண்டையினின்றும் உண்டான ஒலி கொஞ்சுகின்ற, தேவலோகத்து ரம்பை போன்ற விலைமாதர்கள் மீது, கண்கள் மகிழ மிக்க ஆசை பூண்டு, அவர்களுடன் மெத்தை மீது குலவி விளையாடினும், உனது அழகிய பன்னிரண்டு கண்களும், பன்னிரண்டு வலிய திருப்புயங்களும் என் மனதில் கொண்டு உன்னைத் தியானிப்பேன். இந்திர லோகத்தில் இருக்கும் தேவர்கள் இன்பம் பெறவும், சந்திர சூரியர்களுடைய தேர்கள் நன்கு உலாவி வரவும், எட்டு மலைகளில் இருந்த அசுரர் கூட்டங்கள் அழியும்படியாகக் கண்ட வேலனே, லக்ஷ்மியின் கணவராகிய திருமாலும், பிரமனும், ஒளி வீசும் சந்திரனைச் சடையில் தரித்த சிவபெருமானும், இந்திரனும் தொழுது இன்பம் பெறவே, தரும சாஸ்திரத்தை எடுத்து ஓதிய கந்த வேளே. செங் குங்குமம் அணிந்து பெரிய மலை போன்ற மார்பகங்களைக் கொண்ட சிறு பெண்களுக்கு எல்லாம் முதன்மையானவளாய், உன் ஆசைக்கு உகந்த வஞ்சிக் கொடி போன்றவளாய், செவ்விய தினைப் புனத்தில் வாழ்ந்த வள்ளிக்கு நாயகனே, செந்தமிழ் ஞானத் தீர்த்தமாகிய சிவகங்கை என்னும் தடாகம்* விளங்கும் சிறந்த சிதம்பரம் என்னும் தலத்தில், திண்ணிய கனக சபையில் விளங்கி நிற்கும் அரசனே, அழகிய தம்பிரானே. 
* இத் தீர்த்தத்தில் நீராடினால் செந்தமிழ் ஞானம் பெறலாம்.

பாடல் 469 - சிதம்பரம் 

ராகம் - ஹம்ஸாநந்தி ; தாளம் - அங்கதாளம் - 19 தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமி-2 தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமி-2

தான தான தான தானன தான தந்த     தத்த தந்த தத்த தந்த ...... தந்ததான

காய மாய வீடு மீறிய கூடு நந்து     புற்பு தந்த னிற்கு ரம்பை ...... கொண்டுநாளுங் 
காசி லாசை தேடி வாழ்வினை நாடி யிந்த்ரி     யப்ர மந்த டித்த லைந்து ...... சிந்தைவேறாய் 
வேயி லாய தோள மாமட வார்கள் பங்க     யத்து கொங்கை யுற்றி ணங்கி ...... நொந்திடாதே 
வேத கீத போத மோனமெய் ஞான நந்த     முற்றி டின்ப முத்தி யொன்று ...... தந்திடாயோ 
மாய வீர தீர சூரர்கள் பாற நின்ற     விக்ர மங்கொள் வெற்பி டந்த ...... செங்கைவேலா 
வாகை வேடர் பேதை காதல வேழ மங்கை     யைப்பு ணர்ந்த வெற்ப கந்த ...... செந்தில்வேளே 
ஆயும் வேத கீத மேழிசை பாட வஞ்செ     ழுத்த ழங்க முட்ட நின்று ...... துன்றுசோதீ 
ஆதி நாத ராடு நாடக சாலை யம்ப     லச்சி தம்ப ரத்த மர்ந்த ...... தம்பிரானே.

இந்த உடல் ஒரு மாய வீடு. அது மிகுத்து எழுந்த ஒரு கூடு போன்றது. அழியும் நீர்க்குமிழியான இந்தச் சிறு குடிலை வைத்து, தினந்தோறும் காசில் ஆசை கொண்டு அதற்காகப் பல இடங்களிலும் தேடி, சுக வாழ்க்கையை விரும்பி, ஐம்பொறிகளாலான மோக மயக்கம் வலுத்து, அதனால் அலைச்சல் உற்று, மனம் சிதறிக் கலங்கி, மூங்கிலைப் போன்ற தோள்களை உடைய அழகிய மாதரின் தாமரை ஒத்த மார்பினை விரும்பி அவர்கள் வசமாகி மனம் நோகாமல், வேதம், கீதம், அறிவு, மெளனம், மெய்ஞ்ஞானம் தழைத்து வளர, பரிபூரண பேரின்ப முக்தி என்னும் ஒப்பற்ற ஒன்றை தந்தருள மாட்டாயோ? மாயத்தில் வல்ல வீர தீர சூரர்கள் (சூரன், சிங்கமுகன், தாரகன்) சிதறி அழிய, அவர்களை வெற்றி கொண்டு, கிரெளஞ்சமலையைப் பிளந்த சிவந்த கையில் வேலை உடையோனே, வெற்றியாளராம் வேடர்களின் மகள் வள்ளியைக் காதலித்தவனே, ஐராவதம் என்ற யானை வளர்த்த மங்கை தேவயானையை மணந்த மலைக் கிழவோனே, கந்தனே, திருச்செந்தூரில் வாழும் கடவுளே, ஆய்ந்து வேத கீதங்களையும் ஏழிசைகளையும் பாட, பஞ்சாட்சரமாகிய நமசிவாய மந்திரத்தை ஓதி முழங்க, அவ்வொலி முழுமையும் நின்று நெருங்கி விளங்கும் ஜோதியே, ஆதிநாதராகிய சிவபிரான் ஆடுகின்ற நாடக சாலையாகிய பொன்னம்பலமாகிய சிதம்பரத்தில் அமர்ந்து விளங்கும் தம்பிரானே. 

பாடல் 470 - சிதம்பரம் 
ராகம் - மோஹனம்; தாளம் - அங்கதாளம் - 8 1/2 
தகதிமி-2, தகதிமி-2, தகதகிட-2 1/2, தகதிமி-2 - எடுப்பு - 1/2 இடம்

தனதன தனதன தானான தானன     தனதன தனதன தானான தானன          தனதன தனதன தானான தானன ...... தந்ததான

அவகுண விரகனை வேதாள ரூபனை     அசடனை மசடனை ஆசார ஈனனை          அகதியை மறவனை ஆதாளி வாயனை ...... அஞ்சுபூதம் 
அடைசிய சவடனை மோடாதி மோடனை     அழிகரு வழிவரு வீணாதி வீணனை          அழுகலை யவிசலை ஆறான வூணனை ...... அன்பிலாத 
கவடனை விகடனை நானாவி காரனை     வெகுளியை வெகுவித மூதேவி மூடிய          கலியனை அலியனை ஆதேச வாழ்வனை ...... வெம்பிவீழுங் 
களியனை யறிவுரை பேணாத மாநுட     கசனியை யசனியை மாபாத னாகிய          கதியிலி தனையடி நாயேனை யாளுவ ...... தெந்தநாளோ 
மவுலியி லழகிய பாதாள லோகனு     மரகத முழுகிய காகோத ராஜனு          மநுநெறி யுடன்வளர் சோணாடர் கோனுட ...... னும்பர்சேரும் 
மகபதி புகழ்புலி யூர்வாழு நாயகர்     மடமயில் மகிழ்வுற வானாடர் கோவென          மலைமக ளுமைதரு வாழ்வேம னோகர ...... மன்றுளாடும் 
சிவசிவ ஹரஹர தேவா நமோநம     தெரிசன பரகதி யானாய் நமோநம          திசையினு மிசையினும் வாழ்வே நமோநம ...... செஞ்சொல்சேருந் 
திருதரு கலவி மணாளா நமோநம     திரிபுர மெரிசெய்த கோவே நமோநம          ஜெயஜெய ஹரஹர தேவா சுராதிபர் ...... தம்பிரானே.

துர்க்குணம் படைத்த தந்திரசாலியான என்னை, வேதாளமே உருவெடுத்தது போன்ற உருவத்தினனான என்னை, முட்டாளும் குணம் கெட்டவனுமான என்னை, ஆசாரக் குறைவுபட்டவனான என்னை, கதியற்றவனை, மலை வேடனைப் போன்ற என்னை, வீம்பு பேசும் வாயையுடைய என்னை, ஐம்பூதங்களின் சேர்க்கையான பயனற்ற உடலை உடைய என்னை, மூடர்களுக்குள் தலைமையான மூடனாகிய என்னை, அழிந்து போகும் கருவில் வந்த வீணருள் தலையான வீணனை, அழுகிப் போனஅவிந்து போன பண்டமாகிய என்னை, அறுசுவை உணவை விரும்பி உண்ணும் என்னை, அன்பில்லாமல் கபடமே குடிகொண்ட நெஞ்சினனான என்னை, உன்மத்தம் கொண்ட என்னை, பலவித மனவிகாரங்களுள்ள என்னை, கோபியை, மிகுந்த மூதேவித்தனம் உடைய சனியனை, ஆண்மையற்றவனாகிய என்னை, நிலையற்ற வாழ்வு வாழும் என்னை, வீணாகி விழும் பெருங்குடியனாகிய என்னை, நல்ல நெறி உரைகளை விரும்பாத மனிதப்பதர் போன்ற என்னை, இடிபோன்ற குரலனை, மகா பாதகனை, கதியேதும் அற்ற என்னை, இத்தகைய நாயினும் கீழான என்னை நீ ஆண்டருளும் நாள் உண்டோ? மணிமுடிகள் அழகாக உள்ள பாதாளலோகனாகிய ஆதிசேஷனும், பச்சை நிறம் உடல் முழுதும் உள்ள சர்ப்பராஜன் பதஞ்சலியும், மநு நீதியுடன் ஆளும் சோழநாட்டரசர் தலைவன்அநபாயனுடன் தேவர்கள் புடைசூழ வரும் இந்திரனும், புகழ்கின்ற புலியூர் சிதம்பரத்தில் வாழ்கின்ற சபாநாயகர் நடராஜரும் அவர் அருகில் இளமயில் போல நிற்கின்ற சிவகாமசுந்தரியும் மகிழ்ச்சி அடைய வானில் உள்ள தேவர்களுக்கெல்லாம் தலைவனாக விளங்கும், மலைமகள் பார்வதி பெற்ற செல்வமே, மனத்துக்கு இனியவனே, பொன்னம்பலத்தில் நடனமாடும் சிவசிவ ஹரஹர தேவா*, போற்றி, போற்றி, கண்டு களிக்க வேண்டிய மேலான கதிப் பொருளானாய், போற்றி, போற்றி, எல்லாத் திசைகளிலும், இசைகளிலும் வாழ்பவனே, போற்றி, போற்றி, இனிய சொற்களையே பேசுகின்ற வள்ளிநாயகியின் இன்ப மணவாளனே, போற்றி, போற்றி, திரிபுரத்தை எரித்த தலைவனே*, போற்றி, போற்றி, ஜெயஜெய ஹரஹர தேவா, தேவர் தலைவர்களுக்குத் தம்பிரானே. 
* நடராஜனும் முருகனும் ஒருவரே என்னும் கருத்துப்பட அருணகிரிநாதர் பாடுகிறார்.

பாடல் 471 - சிதம்பரம் 
ராகம் - முகாரி; தாளம் - ஆதி 4 களை - 32 தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1

தத்த தந்ததன தான தந்ததன     தத்த தந்ததன தான தந்ததன          தத்த தந்ததன தான தந்ததன ...... தனதான

கட்டி முண்டகர பாலி யங்கிதனை     முட்டி யண்டமொடு தாவி விந்துவொலி          கத்த மந்திரவ தான வெண்புரவி ...... மிசையேறிக் 
கற்ப கந்தெருவில் வீதி கொண்டுசுடர்     பட்டி மண்டபமு டாடி யிந்துவொடு          கட்டி விந்துபிச காமல் வெண்பொடிகொ ...... டசையாமற் 
கட்டு வெம்புரநி றாக விஞ்சைகொடு     தத்து வங்கள்விழ சாடி யெண்குணவர்          சொர்க்கம் வந்துகையு ளாக எந்தைபத ...... முறமேவித் 
துக்கம் வெந்துவிழ ஞான முண்டுகுடில்     வச்சி ரங்களென மேனி தங்கமுற          சுத்த கம்புகுத வேத விந்தையொடு ...... புகழ்வேனோ 
எட்டி ரண்டுமறி யாத என்செவியி     லெட்டி ரண்டுமிது வாமி லிங்கமென          எட்டி ரண்டும்வெளி யாமொ ழிந்தகுரு ...... முருகோனே 
எட்டி ரண்டுதிசை யோட செங்குருதி     யெட்டி ரண்டுமுரு வாகி வஞ்சகர்மெ          லெட்டி ரண்டுதிசை யோர்கள் பொன்றஅயில் ...... விடுவோனே 
செட்டி யென்றுசிவ காமி தன்பதியில்     கட்டு செங்கைவளை கூறு மெந்தையிட          சித்த முங்குளிர நாதி வண்பொருளை ...... நவில்வோனே 
செட்டி யென்றுவன மேவி யின்பரச     சத்தி யின்செயலி னாளை யன்புருக          தெட்டி வந்துபுலி யூரின் மன்றுள்வளர் ...... பெருமாளே.

பிராண வாயுவை (பாழில் ஓட விடாமல்) அதன் நிலையில் பிடித்துக் கட்டி (*1), மூலாதார (*2) கமலத்திலுள்ள அருள் பாலிக்கும் சிவாக்கினியை மூண்டு எழச் செய்து, அண்டமாகிய கபால பரியந்தம் (பிரமரந்திரம் வரை) தாவச் செய்து, விந்து நாதம் (சிவ - சக்தி ஐக்கியம்) தோன்றி முழங்க, சிறப்பாகக் கட்டப்பட்ட கூடத்தில் மந்திரமயமாக நிற்கும் வெண்மைக் குதிரையின் (*3) மேல் ஏறி, கற்பகத் தருவைப் போல் விரும்பியதை அளிக்க வல்ல அழகிய மேலைச் சிவ வீதியில் அந்த மாயக் குதிரையை நேராக ஓடச் செலுத்தி, எல்லா தத்துவங்களும் ஒன்றுபடும் ஒளிமயமான லலாடமண்டபத்தில் (*4) சென்றடைந்து, (தியானம், பிரத்யாகரணம், தாரணை முதலிய) யோகப் பயிற்சிகளைப் பழகி (*5), சந்திர கலை சலியாமலும், விந்து கழலாமலும் உறுதி பெறக் கட்டி, அந்த வெண்ணீற்றை அணிந்துகொண்டு அசையாமல் நின்று, திரிபுரமாகிய (ஆணவம், கன்மம், மாயை என்ற) மும்மலங்களும் வெந்து நீறாகும்படி சுட்டு, அஷ்டமாசித்து வித்தைகள் (*6) எல்லாம் கைவரப் பெற்று, தத்துவ சேஷ்டைகள் எல்லாம் வேரற்று விழும்படி அழித்து, எண்குணவராகிய (*7) சிவபெருமானுடைய பதவி கை கூடி வந்து சித்திக்க, அச்சிவபதவியில் நிலை பெற்றுப் பொருந்தி, பிறவித் துன்பம் வெந்து நீறாகி ஒழிய, ஞானாமிர்த பானம் குடித்து, தேகம் வஜ்ர காயமாகவும், நிறம் தங்கம் போலவும் மாற்றி, தூய முக்தி கூட, விசித்திரமான வேதச்சந்தத்துடன் உனது திருப்புகழைப் பாடுவேனோ? எட்டும் இரண்டும் பத்து என்பதையும் தெரியாத என் காதுகளில் இவையே சிவக் குறியாகிய இலிங்கம் (*8) என்று அந்த அகார உகார மகார (*9) இலக்கணங்களைத் தெளிவாக உபதேசித்த குருவான முருகோனே, எட்டுத் திசைகளிலும், இந்த அண்டத்தின் கீழும் மேலுமாக, பத்து திக்குகளிலும் சிவப்பு நிற இரத்தம் ஓடும்படி பதினாறு வகை (*10) உருவத் திருமேனி விளங்க (பாசறையில் இருந்து), வஞ்சகர்களாகிய அசுரர்களின் மீதும் பின்னும் பத்துத் திசை அண்டங்களில் இருந்த அசுரர்கள் மீதும் அவர்கள் அழிய வேலை விடுபவனே, வளையல் செட்டி வடிவெடுத்து, சிவகாமி அங்கயற் கண்ணியாய் வீற்றிருக்கும் மதுரையில், கைகள் சிவக்க, வளையல்களை அடுக்கி விலை கூறின எந்தை சிவபெருமானுடைய மனமும் குளிரும்படி ஆதியற்றதும், வளமையானதுமான மூலப் பிரணவப் பொருளை உபதேசித்தவனே, வளையல் செட்டியின் வேடத்துடன் நீயும் வள்ளிமலைச் சாரலில் தினை வனத்துக்குச் சென்று, அங்கே இச்சா சக்தி மயமான வள்ளி நாயகியை அன்பு கனிந்து அபகரித்து வந்து, சிதம்பரத்தில் பொன் அம்பலத்தில் விளங்கும் பெருமாளே. 
(*1) இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு:நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு 'ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள், சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி, ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை, சுழுமுனை முதலியன) உள்ளன.'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம்.'சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது.'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும் ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும்.
(*2) ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம் 
(*3) 'வெள்ளைக் குதிரை' சுழுமுனையாகிய வெள்ளை நாடியைக் குறிக்கும். 
(*4) 'லலாட மண்டபம்' புருவ மத்தியைக் குறிக்கும். இங்கு 'சுழுமுனை', 'இடைகலை', 'பிங்கலை' ஆகிய மூன்று நாடிகளும் கூடுவதால் பிரகாசமான மண்டபம் தோன்றும். 
(*5) அஷ்டாங்க யோகம் என்ற எட்டு வகை யோகங்கள் பின்வருமாறு:1. இயமம் - பொய்யாமை, கொல்லாமை, திருடாமை, காமுறாமை, பிறர் பொருள் வெ·காமையுடன் புலன் அடக்குதல்.2. நியமம் - தவம், தூய்மைத் தத்துவம் உணர்தல், புனிதம், தானம், சைவ முறைகள், சைவ சித்தாந்த ஞானம், யாகம்.3. ஆசனம் - உடலால் செய்யும் யோக முறைகள் - குறிப்பாக பத்ம, சிம்ம, பத்ர, கோமுக ஆசனங்கள்.4. ப்ராணாயாமம் - ரேசகம், கும்பகம், பூரகம் என்ற வகைகளிலே மூச்சை அடக்கி ஆளும் முறை.5. ப்ரத்யாஹாரம் - இந்திரியங்களை விஷயங்களிலிருந்து திருப்பி, இறைவனை உள்முகமாகப் பார்த்தல்.6. தாரணை - மனத்தை ஒருநிலைப் படுத்தி முதுகு நாடியிலுள்ள ஆறு சக்ர ஆதாரங்களிலும் இறைவனை பாவித்தல்.7. தியானம் - ஐம்புலன்கள், பஞ்ச பூதங்கள், மனம், சித்தம் முதலிய அந்தக்கரணங்கள் - இவற்றை அடக்கி தியானித்தல்.8. சமாதி - மனத்தைப் பரம்பொருளோடு நிறுத்தி ஸஹஸ்ராரத்தில் சிவ சக்தி ஐக்கியத்தோடு ஒன்றுபடல்.(ஆதாரம் 'திருமந்திரம்', திருமூலர் அருளியது).
(*6) அஷ்டமாசித்திகள் பின்வருமாறு:அணிமா - அணுவிலும் சிறிய உருவினன் ஆதல்.மகிமா - மேருவினும் பெரிய உருவினன் ஆதல்.கரிமா - ஆயுதங்களுக்கும், ஆகாயத்துக்கும், காலத்துக்கும் அப்பால் ஆதல்.லகிமா - ஆகாயகமனம், அந்தரத்தில் இருத்தல்.பிராப்தி - பர காயங்களில் புகுதல் (கூடுவிட்டு கூடுபாய்தல்).பிராகாமியம் - எல்லாவற்றிலும் நிறைந்திருத்தல்.ஈசத்துவம் - எல்லாவற்றுக்கும் நாதனாக இருத்தல்.வசித்துவம் - எல்லா இடங்களிலும் இருந்து யாவற்றையும் வசப்படுத்தல்.
(*7) சிவனின் எண் குணங்கள்:1. தன்வயத்தனாதல்,2. தூய உடம்பினன் ஆதல்,3. இயற்கை உணர்வினன் ஆதல்,4. முற்றும் உணர்தல்,5. இயல்பாகவே பாசங்களினின்று நீங்குதல்,6. பேரருள் உடைமை,7. முடிவிலா ஆற்றல் உடைமை,8. வரம்பிலா இன்பம் உடைமை.
(* 8) தமிழில் எட்டும் இரண்டும் சேர்ந்த தொகையாகிய பத்து, 'ய' என்று எழுதப்படும். இந்த எழுத்து 'நமசிவாய' என்ற பஞ்சாட்சரத்தின் கடைசி எழுத்து. இது குண்டலினி யோகத்தின் 'ஆக்ஞா' சக்கரத்தில் இரண்டு புருவ மத்தியில் உள்ளது. இதன் கடவுள் 'சதாசிவன்' - லிங்க உருவத்தில் உள்ளார்.
 (* 9) தமிழில் எட்டுக்கு உரிய எழுத்து 'அ'. இரண்டுக்கு உரிய எழுத்து 'உ'. இவற்றோடு 'இரண்டும்' என்ற வார்த்தையின் கடைசி எழுத்தாகிய 'ம்' என்ற எழுத்தைச் சேர்த்தால் 'அ+உ+ம்'= 'ஓம்' என்று ஆகிறது.
 (*10) குமார தந்திரம் என்ற தோத்திரத்தில் முருகக் கடவுளின் 16 திருவுருவ வகைகள் கூறப்படுகின்றன: 1. சக்திதரர் 2. ஸ்கந்தர் 3. தேவசேனாதிபதி 4. சுப்ரமணியர் 5. கஜவாகனர் 6. சரவணபவர் 7. கார்த்திகேயர் 8. குமாரர் 9. ஷண்முகர் 10. தாரகாரி 11. ஸேனானி 12. பிரம்மசாஸ்த்ரு 13. வள்ளிகல்யாணசுந்தரர் 14. பாலஸ்வாமி 15. கிரெளஞ்சபேதனர் 16. சிகிவாகனர்.

பாடல் 472 - சிதம்பரம் 
ராகம் - ஆபோகி; தாளம் - கண்டசாபு - 2 1/2

தந்தனத் தானதன தந்தனத் தானதன     தந்தனத் தானதன ...... தந்ததான

நஞ்சினைப் போலுமன வஞ்சகக் கோளர்களை     நம்புதற் றீதெனநி ...... னைந்துநாயேன் 
நண்புகப் பாதமதி லன்புறத் தேடியுனை     நங்களப் பாசரண ...... மென்றுகூறல் 
உன்செவிக் கேறலைகொல் பெண்கள்மெற் பார்வையைகொல்     உன்சொலைத் தாழ்வுசெய்து ...... மிஞ்சுவாரார் 
உன்றனக் கேபரமும் என்றனக் கார்துணைவர்     உம்பருக் காவதினின் ...... வந்துதோணாய் 
கஞ்சனைத் தாவிமுடி முன்புகுட் டேயமிகு     கண்களிப் பாகவிடு ...... செங்கையோனே 
கண்கயற் பாவைகுற மங்கைபொற் றோடழுவு     கஞ்சுகப் பான்மைபுனை ...... பொன்செய்தோளாய் 
அஞ்சவெற் பேழுகடல் மங்கநிட் டூரர்குலம்     அந்தரத் தேறவிடு ...... கந்தவேளே 
அண்டமுற் பார்புகழு மெந்தைபொற் பூர்புலிசை     அம்பலத் தாடுமவர் ...... தம்பிரானே.

விஷம் போல மனத்தில் வஞ்சகம் கொண்டவர்களை நம்புதல் கெடுதலாகும் என்று நினைத்து அடியேன் நட்பு பெருக உன் திருவடிகளில் அன்போடு தேடி உன்னை எங்கள் அப்பனே சரணம் என்று கூவி முறையிடும் கூச்சல் உனது செவிகளில் விழவில்லையா? தேவிகள் வள்ளி தேவயானை மேல் கண்பார்வையால் கேட்கவில்லையா? உன் உபதேச மொழியைத் தாழ்ச்சி சொல்லி யார் வரம்பு மீறுவர்? என்னைக் காக்கும் பாரம் உந்தனுக்கே ஆகும். உன்னை விட்டால் எனக்கு வேறு யார் துணைவர் உள்ளனர்? தேவர்களுக்கு அருளியதுபோல் என்முன்னும் தோன்றி அருள்க. பிரமனை எட்டி அவனது முடியில் முன்பு நன்றாகக் குட்டி மிக்க களிப்புடன் வீசிய சிவந்த கையை உடையவனே, கயல் மீன் போன்ற கண்ணாள் குற வள்ளியின் அழகிய தோளை அணைக்கும் பொன் தோளாய், உடலைச் சட்டை தழுவுவது போல இறுக்க அணைத்தவனே, கிரெளஞ்ச மலைகள் ஏழும் நடுங்க, கடல் நீர் வற்றி ஒடுங்க, அசுரர் குலத்தை விண்ணிலேறும்படி கொன்ற கந்தவேளே, அண்டம் முதலிய உலகங்கள் யாவும் புகழும் எம் தந்தையார் சிவபெருமானின் அழகிய புலியூரில் (சிதம்பரத்தில்) அம்பலத்தில் ஆடும் நடராஜர் தம்பிரானே. 

பாடல் 473 - சிதம்பரம் 
ராகம் -...; தாளம் -

தந்ததன ...... தனதான     தந்ததன ...... தனதான

செங்கலச ...... முலையார்பால்     சிந்தைபல ...... தடுமாறி 
அங்கமிக ...... மெலியாதே     அன்புருக ...... அருள்வாயே 
செங்கைபிடி ...... கொடியோனே     செஞ்சொல்தெரி ...... புலவோனே 
மங்கையுமை ...... தருசேயே     மன்றுள்வளர் ...... பெருமாளே.

செம்புக் குடம் போன்ற மார்பகங்களை உடைய விலைமாதர் மீது மையலால் மனம் பலவாகத் தடுமாறி என்னுடல் மிகவும் மெலிவு அடையாமல், உன் அன்பால் என் உள்ளம் உருகும்படி அருள் செய்வாயாக. சிவந்த கையில் பிடித்துள்ள சேவல் கொடியோனே, சிறந்த சொற்களைத் தெரிந்த புலவனே, மங்கை பார்வதி ஈன்ற குழந்தையே, தில்லைப் பொன்னம்பலத்தினுள் விளங்கும் பெருமாளே. 

பாடல் 474 - சிதம்பரம் 
ராகம் - ...; தாளம் -

தனன தான தனந்தன தானன     தனன தான தனந்தன தானன          தனன தான தனந்தன தானன ...... தந்ததான

கரிய மேக மெனுங்குழ லார்பிறை     சிலைகொள் வாகு வெனும்புரு வார்விழி          கயல்கள் வாளி யெனுஞ்செய லார்மதி ...... துண்டமாதர் 
கமுக க்¡£வர் புயங்கழை யார்தன     மலைக ளாஇ ணையுங்குவ டார்கர          கமல வாழை மனுந்தொடை யார்சர ...... சுங்கமாடை 
வரிய பாளி தமுந்துடை யாரிடை     துடிகள் நூலி யலுங்கவி னாரல்குல்          மணமு லாவி யரம்பையி னார்பொருள் ...... சங்கமாதர் 
மயில்கள் போல நடம்புரி வாரியல்     குணமி லாத வியன்செய லார்வலை          மசகி நாயெ னழிந்திட வோவுன ...... தன்புதாராய் 
சரியி லாத சயம்பவி யார்முகி     லளக பார பொனின்சடை யாள்சிவை          சருவ லோக சவுந்தரி யாளருள் ...... கந்தவேளே 
சதப ணாம குடம்பொடி யாய்விட     அவுணர் சேனை மடிந்திட வேயொரு          தழல்கொள் வேலை யெறிந்திடு சேவக ...... செம்பொன்வாகா 
அரிய மேனி யிலங்கையி ராவணன்     முடிகள் வீழ சரந்தொடு மாயவன்          அகில மீரெ ழுமுண்டவன் மாமரு ...... கண்டரோதும் 
அழகு சோபி தஅங்கொளு மானன     விபுதை மோகி குறிஞ்சியின் வாழ்வளி          அருள்கொ டாடி சிதம்பர மேவிய ...... தம்பிரானே.

கரு நிறம் வாய்ந்த மேகம் என்று சொல்லும்படியான கூந்தலை உடையவர். பிறை போலவும் வில் போலவும் விளங்கி அழகு கொண்ட புருவங்களை உடையவர். கயல் மீனை ஒத்த கண்கள் அம்பு போன்று செயலை ஆற்றும் தொழிலினர். சந்திரன் போன்ற முகம் உடைய விலைமாதர்கள். கமுகு போன்ற கழுத்தை உடையவர். மூங்கில் போன்ற தோள்களை உடையவர். மார்பகங்கள் மலைக்கு இணையான திரட்சி உடையவர். தாமரை போன்ற கைகள், வாழை போன்ற தொடைகளை உடையவர். கள்ளத்தனமான நடையால் கைக்கொண்ட பொன்னால் வாங்கப்பட்ட பட்டுப் புடவைகளால் முன்னிட்டு விளங்கும் உடைகளைத் தரித்தவர். இடுப்பு உடுக்கை போலவும் நூல் போலவும் உள்ள அழகியர். அழகு நிறைந்த பெண்குறி நறு மணம் வீசும் அரம்பை போன்றவர். பொருளுக்காகக் கூடுதலை உடைய பொது மாதர் மயிலைப் போன்று நடனம் செய்பவர். நல்ல தன்மையான குணம் இல்லாத வியப்பான செயல்களைக் கொண்டவர் ஆகிய விலைமாதர்களின் வலையில் மனம் கலக்குண்டு அடியேன் அழிவுறலாமோ? உன்னுடைய அன்பைத் தந்தருள்வாய். தனக்கு ஒப்பில்லாத சுயம்புவான தேவதை, மேகம் போன்ற கூந்தல் பாரத்தை உடையவள், பொன் நிறமான சடையை உடையவளாகிய சிவை, எல்லா உலகங்களுக்கும் மேம்பட்ட அழகு உடையவள் ஆகிய உமை பெற்று அருளிய கந்தவேளே. நூற்றுக் கணக்கான பருத்த மணி முடிகள் பொடியாக, அசுரர்களின் சேனை இறக்க, ஒப்பற்ற நெருப்பைக் கொண்டதுமான வேலைச் செலுத்திய வல்லவனே, செம் பொன் நிற அழகனே, அருமையான உடலைக் கொண்ட இலங்கை அரசனாகிய ராவணன் தலைகள் அற்று விழும்படி அம்பைச் செலுத்திய மாயவனும், பதினான்கு உலகங்களையும் உண்டவனுமாகிய திருமாலின் சிறந்த மருகனே, தேவர்கள் ஓதிப் புகழும் அழகு வாய்ந்த ஒளியை உடையவனே, எழில் வாய்ந்த முகத்தை உடைய தேவதையாகிய தேவயானை, உன் ஆசைக்கு உகந்தவளாகிய மலை நில ஊரில் (வள்ளிமலையில்) வாழ்கின்ற வள்ளி நாயகி ஆகிய இருவருக்கும் அருள் புரிந்து லீலைகள் செய்து, சிதம்பரத்தில் வீற்றிருக்கும் தம்பிரானே. 

பாடல் 475 - சிதம்பரம் 
ராகம் - ....; தாளம் -

தாந்த தானன தந்த தனந்தன     தாந்த தானன தந்த தனந்தன          தாந்த தானன தந்த தனந்தன ...... தந்ததான

கூந்த லாழவி ரிந்து சரிந்திட     காந்து மாலைகு லைந்து பளிங்கிட          கூர்ந்த வாள்விழி கெண்டை கலங்கிட ...... கொங்கைதானுங் 
கூண்க ளாமென பொங்கந லம்பெறு     காந்தள் மேனிம ருங்குது வண்டிட          கூர்ந்த ஆடைகு லைந்துபு ரண்டிர ...... சங்கள்பாயச் 
சாந்து வேர்வின ழிந்து மணந்தப     வோங்க வாகில்க லந்து முகங்கொடு          தான்ப லாசுளை யின்சுவை கண்டித ...... ழுண்டுமோகந் 
தாம்பு றாமயி லின்குரல் கொஞ்சிட     வாஞ்சை மாதரு டன்புள கங்கொடு          சார்ந்து நாயென ழிந்துவி ழுந்துடல் ...... மங்குவேனோ 
தீந்த தோதக தந்தன திந்திமி     ஆண்ட பேரிகை துந்துமி சங்கொடு          சேர்ந்த பூரிகை பம்பை தவண்டைகள் ...... பொங்குசூரைச் 
சேண்சு லாமகு டம்பொடி தம்பட     வோங்க வேழ்கட லுஞ்சுவ றங்கையில்          சேந்த வேலது கொண்டு நடம்பயில் ...... கந்தவேளே 
மாந்த ணாருவ னங்குயில் கொஞ்சிட     தேங்கு வாழைக ரும்புகள் விஞ்சிடு          வான்கு லாவுசி தம்பரம் வந்தமர் ...... செங்கைவேலா 
மாண்ப்ர காசத னங்கிரி சுந்தர     மேய்ந்த நாயகி சம்பைம ருங்குபொன்          வார்ந்த ரூபிகு றம்பெண் வணங்கிய ...... தம்பிரானே.

கூந்தல் தாழ்ந்து விரிவுற்றுச் சரிந்து விழ, ஒளி வீசும் மாலை குலைவுற்று பளிங்கு போல் விளங்க, கூரியவாள் போன்றும் கெண்டை மீன் போன்றும் உள்ள கண்கள் கலக்கம் கொள்ள, மார்பகங்களும் குன்று போல எழுச்சி கொள்ள, செழிப்புள்ள காந்தள் பூ போன்ற உடலில் இடை துவண்டு போக, அவ்விடையைச் சுற்றி வளைத்துள்ள ஆடை குலைவு உற்றுப் புரண்டு இன்ப ஊறல்கள் பாய்ந்து பெருக, (நெற்றியில் உள்ள) சாந்து வேர்வையினால் அழிந்து வாசனை கெட, மிக்கு எழும் காதலுடன் சேர்ந்து முகத்தோடு முகம் கொடுத்து, பலாச் சுளையின் சுவை கண்டது போல் வாயிதழை உண்டு, காம ஆசையால் புறா, மயில் ஆகிய புட்குரலுடன் கொஞ்ச, ஆசை வைத்த விலைமாதர்களுடன் புளகாங்கிதத்துடன் இணங்கி நாய் போல அழிந்து விழுந்து உடல் வாட்டம் அடைவேனோ? தீந்த தோதக தந்தன திந்திமி என்ற ஓசையை எழுப்புகின்ற பேரிகை, துந்துபி, சங்கு இவைகளுடன் சேர்ந்த ஊதுகுழல், பம்பை என்னும் பறை, பேருடுக்கைகள் இவைகளுடைய ஒலி மிக்கு எழ வந்த சூரனுடைய உயர்ந்து விளங்கும் கி¡£டம் பொடிபட, விளங்கும் அந்த ஏழு கடல்களும் வற்றிட, அழகிய கையில் சிவந்த வேலாயுதத்தை ஏந்தி, (துடிக்) கூத்து ஆடுகின்ற கந்தப் பெருமானே, குளிர்ச்சி நிறைந்த மாமரச் சோலையில் குயில் கொஞ்ச, தென்னை, வாழை, கரும்பு ஆகியவை மேலிட்டு எழுந்து ஆகாயத்தை அளாவும் தில்லையில் வந்து வீற்றிருக்கும் செங்கை வேலனே, பெருமையும் ஒளியும் கொண்ட மார்பக மலைகளை உடைய, அழகு வாய்ந்த நாயகி (தேவயானையும்), மின்னல் போன்ற இடையையும் பொன் உருக்கி வார்த்தது போலுள்ள உருவத்தையும் கொண்ட குறப்பெண்ணாகிய வள்ளியும் வணங்கிய பெருமாளே.

பாடல் 476 - சிதம்பரம் 
ராகம் - ...; தாளம் -

தத்த தன்ன தய்ய தத்த தன்ன தய்ய     தத்த தன்ன தய்ய ...... தனதான

அத்த னன்னை யில்லம் வைத்த சொன்னம் வெள்ளி     அத்தை நண்ணு செல்வ ...... ருடனாகி 
அத்து பண்ணு கல்வி சுற்ற மென்னு மல்ல     லற்று நின்னை வல்ல ...... படிபாடி 
முத்த னென்ன வல்லை யத்த னென்ன வள்ளி     முத்த னென்ன வுள்ள ...... முணராதே 
முட்ட வெண்மை யுள்ள பட்ட னெண்மை கொள்ளு     முட்ட னிங்ங னைவ ...... தொழியாதோ 
தித்தி மன்னு தில்லை நிர்த்தர் கண்ணி னுள்ளு     தித்து மன்னு பிள்ளை ...... முருகோனே 
சித்தி மன்னு செய்ய சத்தி துன்னு கைய     சித்ர வண்ண வல்லி ...... யலர்சூடும் 
பத்த ருண்மை சொல்லு ளுற்ற செம்மல் வெள்ளி     பத்தர் கன்னி புல்லு ...... மணிமார்பா 
பச்சை வன்னி யல்லி செச்சை சென்னி யுள்ள     பச்சை மஞ்ஞை வல்ல ...... பெருமாளே.

தந்தை, தாய், வீடு, வைத்துள்ள பொன், வெள்ளி, தந்தையின் சகோதரி, பொருந்திய பிள்ளைகள் இவர்களுடன் கூடியவராய், செய்தொழிலால் (போதாத) வருமானம், கற்று (முடிவுறாத) கல்வி, (அல்லல் தரும்) உறவினர் என்று சொல்லப்படும் துன்பங்கள் நீங்கி, உன்னை இயன்ற வகையினால் பாடி, முக்தி தர வல்லவன் (நீ ஒருவனே) என்றும், திருவலம் என்னும் தலத்தின் பெருமான் என்றும், வள்ளியின் காதலன் என்றும் என்னுடைய உள்ளத்தில் நான் உணராமல், முழுமையான அறியாமை நிறைந்த புலவனும் எளிமை கொண்ட மூடனுமாகிய நான் இப்படி வருந்தி இரங்குவது நீங்காதோ? தித்தி என்னும் தாள ஜதி ஒலிக்கும் தில்லையில் நடனமாடும் நடராஜரின் கண்களினின்றும் தோன்றி நிலை பெற்றுள்ள மகனாகிய முருகனே, பல சித்திகளுக்கு இடமாய் விளங்கும் வேலாயுதம் விளங்கும் திருக்கரத்தோனே, அழகிய திருவுருவம் வாய்ந்த வள்ளி மலர் சூட்டிப் பணியும், பக்தர்களுடைய மெய் பொருந்திய திருவாக்கில் விளங்கும், செம்மலே, வெள்ளை யானையை (ஐராவதத்தை) உடைய இந்திரனின் பெண் (தேவயானை) தழுவும் அழகிய மார்பனே, பச்சை நிறமான வன்னி, அல்லி, வெட்சி இவைகளைத் தலையில் அணிந்தவனே, பச்சை நிறமுடைய மயிலைச் செலுத்த வல்ல பெருமாளே. 

பாடல் 477 - சிதம்பரம் 
ராகம் -...; தாளம் -

தனதாத்த தய்ய தனதாத்த தய்ய     தனதாத்த தய்ய ...... தனதான

இருள்காட்டு செவ்வி ததிகாட்டி வில்லி     னுதல்காட்டி வெல்லு ...... மிருபாண 
இயல்காட்டு கொல்கு வளைகாட்டி முல்லை     நகைகாட்டு வல்லி ...... யிடைமாதர் 
மருள்காட்டி நல்கு ரவுகாட்டு மில்ல     இடுகாட்டி னெல்லை ...... நடவாத 
வழிகாட்டி நல்ல றிவுகாட்டி மெல்ல     வினை வாட்டி யல்லல் ...... செயலாமோ 
தெருள்காட்டு தொல்லை மறைகாட்டு மல்லல்     மொழிகாட்டு தில்லை ...... யிளையோனே 
தினைகாட்டு கொல்லை வழிகாட்ட வல்ல     குறவாட்டி புல்லு ...... மணிமார்பா 
அருள்காட்டு கல்வி நெறிகாட்டு செல்வ     அடல்காட்டு வல்ல ...... சுரர்கோபா 
அடிபோற்றி யல்லி முடிசூட்ட வல்ல     அடியார்க்கு நல்ல ...... பெருமாளே.

இருளைப் போன்ற கரிய செழிப்புற்ற நெருங்கிய கூந்தலைக் காட்டி, வில் போன்ற நெற்றிப் புருவத்தைக் காட்டி, வெல்லக் கூடிய இரு அம்புகளின் இயலைக் காட்டும், கொல்லும் தன்மையை உடைய, குவளை மலர் போன்ற கண்களைக் காட்டி, முல்லை வரிசை போன்ற பற்களைக் காட்டும், கொடி போன்ற இடையுடைய பொது மாதர் மீது காம மயக்கம் காட்டி, அதனால் வரும் வறுமையைக் காட்டுகின்ற சம்சார வாழ்க்கை என்னும் சுடுகாட்டின் முடிவை அடையாதபடி, எனக்கு நல்வழி காட்டியும், நல்ல அறிவைக் காட்டியும், மெல்ல எனது வினையை வாட்டியும் (காப்பாயா அல்லது) எனக்கு மேலும் துன்பம் செய்யலாகுமோ? ஞானவழியைக் காட்டுகின்ற பழமையான வேத மொழிகள் காட்டும் வளமையான உபதேச மொழியை எனக்குக் காட்டிய சிதம்பரத்தில் எழுந்தருளியுள்ள இளம்பூரணனே, தினை விளையும் புனத்திற்கு வழியைக் காட்டவல்ல குறமகளாம் வள்ளி தழுவுகின்ற அழகிய மார்பனே, அருள் நெறியைக் காட்டுகின்ற கல்வி வழியைக் காட்டும் செல்வனே, ஆற்றலைக் காட்டிய வலிய அசுரர்களைக் கோபித்து அழித்தவனே, நின் திருவடிகளைத் தொழுது, தாமரை மலரை நின் முடிமேல் சூட்டவல்ல அடியவர்களுக்கு நல்லவனாகத் திகழும் பெருமாளே. 

பாடல் 478 - சிதம்பரம் 
ராகம் - ...; தாளம் -

தய்யதன தானனத் தானனந் தானதன     தய்யதன தானனத் தானனந் தானதன          தய்யதன தானனத் தானனந் தானதன ...... தனதான

முல்லைமலர் போலுமுத் தாயுதிர்ந் தானநகை     வள்ளைகொடி போலுநற் காதிலங் காடுகுழை          முல்லைமலர் மாலைசுற் றாடுகொந் தாருகுழ ...... லலைபோதம் 
மொள்குசிலை வாணுதற் பார்வையம் பானகயல்     கிள்ளைகுர லாரிதழ்ப் பூவெனும் போதுமுக          முன்னல்கமு கார்களத் தோய்சுணங் காயமுலை ...... மலையானை 
வல்லகுவ டாலிலைப் போலுசந் தானவயி     றுள்ளதுகில் நூலிடைக் காமபண் டாரஅல்குல்          வழ்ழைதொடை யார்மலர்க் காலணிந் தாடுபரி ...... புரவோசை 
மல்லிசலி யாடபட் டாடைகொண் டாடமயல்     தள்ளுநடை யோடுசற் றேமொழிந் தாசைகொடு          வல்லவர்கள் போலபொற் சூறைகொண் டார்கள்மய ...... லுறவாமோ 
அல்லல்வினை போகசத் தாதிவிண் டோடநய     வுள்ளமுற வாகவைத் தாளுமெந் தாதைமகி          ழள்ளமைய ஞானவித் தோதுகந் தாகுமர ...... முருகோனே 
அன்னநடை யாள்குறப் பாவைபந் தாடுவிரல்     என்னுடைய தாய்வெண்முத் தார்கடம் பாடுகுழல்          அன்னைவலி சேர்தனக் கோடிரண் டானவளி ...... மணவாளா 
செல்லுமுக ஏழ்கடற் பாழிவிண் டோடதிர     வல்லசுரர் சேனைபட் டேமடிந் தேகுருதி          செல்லதிசை யோடுவிட் டாடுசிங் காரமுக ...... வடிவேலா 
தெள்ளுதமிழ் பாடியிட் டாசைகொண் டாடசசி     வல்லியொடு கூடிதிக் கோர்கள்கொண் டாடஇயல்          தில்லைநகர் கோபுரத் தேமகிழ்ந் தேகுலவு ...... பெருமாளே.

(முதல் 12 வரிகள் வேசையரின் அங்க நலத்தை வருணிப்பன). முல்லை மலர் போலவும், முத்துக்கள் உதிர்ந்தனவைகளால் அமைந்தன போலவும் உள்ள பற்களையும், வள்ளிக் கொடியைப் போல உள்ள நல்ல காதுகளில் விளங்கி அசைகின்ற குண்டலங்களையும், முல்லை மலர் மாலை சுற்றி உள்ளதும், அசைகின்ற பூங்கொத்துக்கள் நிறைந்துள்ளதும், அலை வீசுவது போலப் புரளும் அந்தக் கூந்தலையும், அழகாய் எடுக்கப்பட்ட வில்லைப் போன்ற ஒளி பொருந்திய நெற்றியையும், அம்பையும் கயல் மீனையும் போன்ற கண்களையும், கிளியின் குரல் போன்ற குரலையும் உடையவர்கள். இதழ்களையுடைய தாமரைப் பூ என்னும்படியான மலர் முகத்தையும், கமுக மரம் போன்றதும், நினைப்பதற்கு இடமானதும், தேமல் பரந்துள்ளதும், எதிர்த்து வரும் யானை போன்றதும், வன்மை வாய்ந்ததுமான குன்றைப் போன்றதுமான மார்பகங்களும், ஆலிலையைப் போன்றதும் பிள்ளைப் பேற்றுக்கு இடம் தருவதுமான வயிற்றையும், அந்த வயிற்றின் மேல் உள்ள ஆடையில் அமைந்துள்ள நூல் போல் நுண்ணிய இடையையும், காமத்துக்கு நிதி இடமாகிய பெண்குறியையும், வாழை போன்ற தொடைகளையும் உடையவர்கள். பூப் போன்ற காலில் அணியப்பட்டு அசைகின்ற சிலம்பின் ஒலி மல்லிட்டுக் கொண்டு வாதாடுவது போல் மாறுபட்டு பட்டாடை தன்மேல் படும்போதெல்லாம் அசைந்து ஒலிக்கவும், காம மயக்கத்தால் தள்ளுகின்ற நடையோடு, சிற்சில வார்த்தைகளே குழறிப் பேசி, ஆசை பூண்டு, சாமர்த்தியம் உள்ளவர்கள் போல பொற் காசுகளைத் தம்மிடம் வருவோரிடம் கொள்ளை கொள்ளும் விலைமாதர்கள் மேல் காம வெறி கொள்ளுவது நன்றோ? துன்பத்தைத் தரும் வினை தொலையவும், அசத்தான குற்றங்கள் நீங்கிடவும், இன்பமான உள்ளம் பொருந்தி அமையவும் அருள் வைத்து நம்மை ஆளுகின்ற தந்தையாகிய சிவபெருமான் மகிழ்ச்சி உற காதில் குளிர்ந்து பொருந்த, ஞானத்துக்கு விதை போன்ற மூலப்பொருளை, உபதேசம் செய்த கந்தனே, குமரனே, முருகனே, அன்னம் போன்ற நடையை உடைய குறப் பெண், பந்தாடுகின்ற விரல்களை உடைய என்னுடைய தாய், வெள்ளை முத்துக்கள் போன்ற கடப்ப மாலை விளங்கும் கூந்தலை உடைய அம்மை, வன்மை வாய்ந்த மலை போன்ற மார்பகங்கள் இரண்டினைக் கொண்டவள் (ஆகிய) வள்ளியின் கணவனே, மேகங்கள் படிவற்கு இடமான ஏழு கடல்களும் பிளவுண்டு போகுமாறு சிதறி ஒலி செய்ய, வலிய அசுரர்களின் சேனைகள் அழிவு பட்டு இறந்து அவர்களது ரத்தம் பரவி பல திக்குகளிலும் ஓடும்படிச் செய்து விளங்கும் அழகிய திருமுகத்தை உடைய சுடர் வேலனே, தெளிவான தமிழ்ப் பாடல்களால் (உன்னை) அடியார் புகழ்ந்து பாடவும், ஆடவும், இந்திராணியின் மகளான தேவயானையோடு சேர்ந்து, பல திக்குகளில் உள்ளோர்களும் புகழ்ந்து கொண்டாட, தகுதி மிக்க சிதம்பரத்துத் திருக்கோயில் கோபுரத்தே மகிழ்ச்சியுடன் வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 479 - சிதம்பரம் 
ராகம் - ...; தாளம் -

தனத்தத் தந்தனத்தத் தானன தானன     தனத்தத் தந்தனத்தத் தானன தானன          தனத்தத் தந்தனத்தத் தானன தானன ...... தனதான

அடப்பக் கம்பிடித்துத் தோளொடு தோள்பொர     வளைத்துச் செங்கரத்திற் சீரொடு பாவொடு          அணுக்கிச் செந்துணுக்கிற் கோவித ழூறல்க ...... ளதுகோதி 
அணிப்பொற் பங்கயத்துப் பூண்முலை மேகலை     நெகிழ்த்துப் பஞ்சரித்துத் தாபண மேயென          அருட்டிக் கண்சிமிட்டிப் பேசிய மாதர்க ...... ளுறவோடே 
படிச்சித் தங்களித்துத் தான்மிக மாயைகள்     படித்துப் பண்பயிற்றிக் காதல்கள் மேல்கொள          பசப்பிப் பின்பிணக்கைக் கூறிய வீணிக ...... ளவமாயப் 
பரத்தைக் குண்டுணர்த்துத் தோதக பேதைகள்     பழிக்குட் சஞ்சரித்துப் போடிடு மூடனை          பரத்துற் றண்பதத்துப் போதக மீதென ...... அருள்தாராய் 
தடக்கைத் தண்டெடுத்துச் சூரரை வீரரை     நொறுக்கிப் பொன்றவிட்டுத் தூளெழ நீறெழ          தகர்த்துப் பந்தடித்துச் சூடிய தோரண ...... கலைவீரா 
தகட்டுப் பொன்சுவட்டுப் பூவணை மேடையில்     சமைப்பித் தங்கொருத்திக் கோதில மாமயில்          தனிப்பொற் பைம்புனத்திற் கோகில மாவளி ...... மணவாளா 
திடத்திற் றிண்பொருப்பைத் தோள்கொடு சாடிய     அரக்கத் திண்குலத்தைச் சூறைகொள் வீரிய          திருப்பொற் பங்கயத்துக் கேசவர் மாயவர் ...... அறியாமல் 
திமித்தத் திந்திமித்தத் தோவென ஆடிய     சமர்த்தர்ப் பொன்புவிக்குட் டேவர்க ணாயக          திருச்சிற் றம்பலத்துட் கோபுர மேவிய ...... பெருமாளே.

தமது காரியத்தில் வெற்றி பெற, வந்தவரைச் சார்ந்து நன்றாகப் பிடித்து அவருடைய தோளோடு தங்களுடைய தோளை இணைத்துப் பொருந்த, தங்களுடைய செவ்விய கைகளால் அணைத்து, சீராட்டியும் பாடல் பாடியும் நன்கு நெருக்கி, சிவந்த பவளத்துண்டை ஒத்த, இந்திர கோபத்தைப் போன்ற வாய் இதழின் ஊறல்களைத் தொகுத்து அனுபவிக்கத் தந்து, அழகிய பொலிவுள்ள தாமரை மொட்டு போன்றதும், ஆபரணம் அணிந்ததுமான மார்பையும், (இடையில் அணிந்துள்ள) மேகலையையும் வேண்டுமென்றே தளர்த்தி, குதலை மொழி பேசி நச்சரித்து பொருள் கொடு என்று மயங்குவது போன்ற கண்களைச் சிமிட்டிப் பேசுகின்ற வேசிகள், தங்களோடு சம்பந்தப்பட்டவர்கள் போல் படிகின்ற தங்கள் உள்ளத்தில் மகிழ்ந்து, பல விதமான மாயாலீலைகளைக் காட்டி, இசை பாடி, காம ஆசைகள் கொள்ளும்படியாக பாசாங்குகள் செய்து, பின்னர் தங்களுடைய மாறுபாட்டை எடுத்துப் பேசும் வீணிகள், கேடு தரும் மாயம் நிறைந்த விலைமாதர்கள், தாழ்வான செய்கையை உணர்த்தும் வஞ்சகப் பேதைமார்கள், (இத்தகையோரின்) பழிக்கிடமான செயல்களில் சுழன்று திரிவதற்கே விதிக்கப்பட்ட முட்டாளாகிய எனக்கு, மேலான பொருளாகப் பொருந்தி அணுகியுள்ள உனது திருவடி ஞானம் இதுதான் என்று காட்டும் திருவருள் தாராய். பெரிய கையில் தண்டாயுதத்தை எடுத்து சூரர்கள் ஆன வீரர்களை பொடிபடுத்தி அழித்து, சின்னா பின்னமாக்கி, புழுதி எழவும், சாம்பலாகும்படியும் உடைத்து, பந்தடிப்பது போல் அடித்து, அலங்கார வெற்றி மாலையைச் சூடியவனே, சகல கலைகளிலும் வல்ல வீரனே, பூவின் புற இதழ்களால் பொன் அடையாளம் விளங்குவது போன்ற மலர் அணை மேடையின் மேல் அலங்காரமாய் அமைந்த அந்த ஒப்பற்றவள், குற்றம் இல்லாத சிறந்த மயிலனையாள், தனிமையாய் அழகிய பசுமையான தினைப் புனத்தில் குயில் போன்ற பெருமை வாய்ந்த குரலுடைய வள்ளியின் கணவனே, பலத்துடன் வலிமையான மலைகளைக் கைகளால் வீசி எறிந்த அரக்கர்களின் திண்ணிய கூட்டத்தை, சுழற் காற்று வீசுவது போல வீசி அழித்த வீரம் வாய்ந்தவனே, அழகிய தாமரை மலரில் வீற்றிருக்கும் கேசவர், மாயவர் என்று அழைக்கப்படும் திருமால் அறிய மாட்டாத வகையில், திமித்தத் திந்திமித்தத் தோவென்று பலவிதமான தாளத்துடன் சாமர்த்தியமாக சிவபெருமான் நடனம் செய்த பொன்னம்பலத்தில் வந்து குழுமிய தேவர்களின் நாயகனாக, சிதம்பரத்தின் கோபுரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 480 - சிதம்பரம் 
ராகம் - ...; தாளம் -

தத்தத் தானன தானன தானன     தத்தத் தானன தானன தானன          தத்தத் தானன தானன தானன ...... தனதான

அக்குப் பீளைமு ளாவிளை மூளையொ     டுப்புக் காய்பனி நீர்மயிர் தோல்குடி          லப்புச் சீபுழு வோடடை யார்தசை ...... யுறமேவி 
அத்திப் பால்பல நாடிகு ழாயள்வ     ழுப்புச் சார்வல மேவிளை யூளைகொ          ளச்சுத் தோல்குடி லாமதி லேபொறி ...... விரகாளர் 
சுக்கத் தாழ்கட லேசுக மாமென     புக்கிட் டாசைபெ ணாசைம ணாசைகள்          தொக்குத் தீவினை யூழ்வினை காலமொ ...... டதனாலே 
துக்கத் தேபர வாமல்ச தாசிவ     முத்திக் கேசுக மாகப ராபர          சொர்க்கப் பூமியி லேறிட வேபத ...... மருள்வாயே 
தக்கத் தோகிட தாகிட தீகிட     செக்கச் சேகண தாகண தோகண          தத்தத் தானன டீகுட டாடுடு ...... வெனதாளந் 
தத்திச் சூரர்கு ழாமொடு தேர்பரி     கெட்டுக் கேவல மாய்கடல் மூழ்கிட          சத்திக் கேயிரை யாமென வேவிடு ...... கதிர்வேலா 
திக்கத் தோகண தாவென வேபொரு     சொச்சத் தாதையர் தாமென வேதிரு          செக்கர்ப் பாதம தேபதி யாசுதி ...... யவைபாடச் 
செப்பொற் பீலியு லாமயில் மாமிசை     பக்கத் தேகுற மாதொடு சீர்பெறு          தெற்குக் கோபுர வாசலில் மேவிய ...... பெருமாளே.

கண்ணில் பீளை, மேலெழும் கோழை, மூளையில் தோன்றி வீங்குகின்ற புரைப் புண், அச்சம் தருகின்ற துர் நீர்கள், மயிர், தோல், வளைவான நாக்குப் பூச்சி, புழு இவற்றுடன் அடைந்து நிறைந்த ஊன் இவை பொருந்தப் பெற்ற இவ்வுடலில், எலும்பின் பக்கத்தில் பல நாடிக் குழாய்கள், அசிங்கமான காதுக் குறும்பி இவை சேர்ந்து பலமாக விளைகின்ற பத்தைகளான கசுமாலங்களைக் கொண்ட அடையாளங்கள் வாய்ந்த தோலோடு அமைந்த குடிசையாகிய இவ்வுடலில், ஐம்புலன்களாகிய தந்திரக்காரர்கள் களவுடன் ஒதுங்கியுள்ளதும், ஆழ்ந்த கடல் போன்றதும் ஆகிய வாழ்க்கையே சுகம் என நினைத்து அதில் ஈடுபட்டு, பொன்னாசை, பெண்ணாசை, மண் ஆசைகள் ஒன்று சேர்ந்து, தீ வினை ஊழ் வினை இவைகளின் காலக் கொடுமை காரணமாக, துக்கம் பெருகி வேதனைப்படாமல், எப்பொழுதும் மங்களகரமாயுள்ள முக்தி நிலையில் சுகமாக எவற்றிலும் மேம்பட்ட சொர்க்க நாட்டில் நான் கரை ஏறும்படி உன் திருவடியைத் தந்து அருளுக. தக்கத் தோகிட தாகிட தீகிட செக்கச் சேகண தாகண தோகண தத்தத் தானன டீகுட டாடுடு என்ற பல விதமான தாளங்களின் ஒலியை எழுப்பி, அசுரர்களின் கூட்டத்துடன் தேர்களும் குதிரைகளும் அழிபட்டு கீழ் நிலை அடைந்து கடலில் முழுகும்படி சக்தி வேலுக்கே உணவு ஆயின என்னும்படியாகச் செலுத்திய ஒளி வீசும் வேலனே, திக்கத் தோகண தாவென்று நடனம் செய்கின்ற நிர்மல மூர்த்தியான தந்தையாகிய நடராஜப் பெருமானே நீ என்று சொல்லும்படி, அழகிய சிவந்த திருவடிகளே பதித்து, இசை ஒலிகள் பாட, செம் பொன் நிறத் தோகை விளங்கும் மயில் மீது, பக்கத்தில் குறப் பெண்ணாகிய வள்ளியோடு சிறப்புற்று சிதம்பரத்தின் தெற்குக் கோபுர வாசலில் வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 481 - சிதம்பரம் 
ராகம் -...; தாளம் -

தானத் தானன தானன தானன   தானத் தானன தானன தானன      தானத் தானன தானன தானன ...... தனதான

ஆரத் தோடணி மார்பிணை யானைகள்   போருக் காமென மாமுலை யேகொடு      ஆயத் தூசினை மேவிய நூலிடை ...... மடமாதர் 
ஆலைக் கோதினி லீரமி லாமன   நேசத் தோடுற வானவர் போலுவர்      ஆருக் கேபொரு ளாமென வேநினை ...... வதனாலே 
காருக் கேநிக ராகிய வோதிய   மாழைத் தோடணி காதொடு மோதிய      காலத் தூதர்கை வேலெனு நீள்விழி ...... வலையாலே 
காதற் சாகர மூழ்கிய காமுகர்   மேலிட் டேயெறி கீலிகள் நீலிகள்      காமத் தோடுற வாகையி லாவருள் ...... புரிவாயே 
சூரர்க் கேயொரு கோளரி யாமென   நீலத் தோகைம யூரம தேறிய      தூளிக் கேகடல் தூரநி சாசரர் ...... களமீதே 
சோரிக் கேவெகு ரூபம தாவடு   தானத் தானன தானன தானன      சூழிட் டேபல சோகுக ளாடவெ ...... பொரும்வேலா 
வீரத் தால்வல ராவண னார்முடி   போகத் தானொரு வாளியை யேவிய      மேகத் தேநிக ராகிய மேனியன் ...... மருகோனே 
வேதத் தோன்முத லாகிய தேவர்கள்   பூசித் தேதொழ வாழ்புலி யூரினில்      மேலைக் கோபுர வாசலில் மேவிய ...... பெருமாளே.

முத்து மாலையோடு ஆபரணங்களைக் கொண்ட மார்பில் இணையாக உள்ள யானைகள் சண்டைக்கு எழுந்துள்ளன போன்ற பெரிய மார்பகங்களைக் கொண்டவர்களாய், தேர்ந்து எடுத்த ஆடையை அணிந்துள்ள நுண்ணிய இடையை உடைய அழகிய மாதர்கள், கரும்பாலையில் சாறு நீங்கிய சக்கை போல் கருணை இல்லாத மன அன்புடனே உறவு கொண்டவர் போன்றவர்கள், யாரோடு உறவு கொண்டால் காசு கிடைக்கும் என்ற ஒரு எண்ணத்தையே நினைவாகக் கொண்ட காரணத்தால், கருமேகத்துக்கு ஒப்பான கூந்தலை உடையவர்கள், பொன்னாலாகிய தோடு என்கின்ற ஆபரணத்தை அணிந்த காதை வந்து மோதுகின்ற, யமனுடைய தூதவரின் கையில் உள்ள வேல் போலுள்ள, நீண்ட கண்கள் என்கின்ற வலையாலே, காதல் கடலில் முழுகிய காமுகர் மீதிற்பட்டு அவர்கள் அதிரும்படி எறிகின்ற தந்திரவாதிகள், நீலி என்னும் பேய் போல் நடிக்க வல்லவர்களாகிய விலைமாதர்கள் மீது காமவசப்பட்டு உறவுகொள்ளுதல் இல்லாதபடி அருள் புரிவாயாக. சூரர்களை அழிப்பதற்கே எனத் தோன்றிய ஒரு சிங்கம் போல், நீலத் தோகையை உடைய மயிலின் மேல் ஏறியவனே, புழுதியால் கடல் நிரம்பி தூர்ந்து போக, அசுரர்கள் போர்க்களத்தில் ரத்த மயமாக விளங்கப் போர் செய்து, தானத் தானன தானன தானன என்று சூழ்ந்து கொண்டு பல பேய்க் கூட்டங்கள் கூத்தாடும்படி சண்டை செய்த வேலனே, வீரத்தில் வல்ல ராவணனுடைய தலைகள் அற்று விழ, ஒரு ஒப்பற்ற அம்பைச் செலுத்திய, மேகம் போன்று கறுத்த நிறமுடைய மேனியைக் கொண்ட, (ராமனின்) திருமாலின் மருகனே, பிரமன் முதலாகிய தேவர்கள் எப்போதும் பூஜை செய்து தொழுது வாழும் சிதம்பரத்தில், மேற்குக் கோபுர வாசலில் எழுந்தருளியிருக்கும் பெருமாளே. 

பாடல் 482 - சிதம்பரம் 
ராகம் -....; தாளம் -

தானத் தான தத்த தானத் தான தத்த     தானத் தான தத்த ...... தனதான

காதைக் காதி மெத்த மோதிக் கேள்வி யற்ற     காமப் பூச லிட்டு ...... மதியாதே 
காரொத் தேய்நி றத்த வோதிக் காவ னத்தி     னீழற் கேத ருக்கி ...... விளையாடிச் 
சேதித் தேக ருத்தை நேருற் றேபெ ருத்த     சேலொத் தேவ ருத்தும் ...... விழிமானார் 
தேமற் பார வெற்பில் மூழ்கித் தாப மிக்க     தீமைக் காவி தப்ப ...... நெறிதாராய் 
மாதைக் காத லித்து வேடக் கான கத்து     வாசத் தாள்சி வப்ப ...... வருவோனே 
வாரிக் கேயொ ளித்த மாயச் சூரை வெட்டி     மாளப் போர்தொ லைத்த ...... வடிவேலா 
வீதித் தேர்ந டத்து தூளத் தால ருக்கன்     வீரத் தேர்ம றைத்த ...... புலியூர்வாழ் 
மேலைக் கோபு ரத்து மேவிக் கேள்வி மிக்க     வேதத் தோர்து தித்த ...... பெருமாளே.

காதை வெட்டுவது போல வேகமாக (அந்தக் காதின் மேல்) மோதி, கேட்டறியாத காமப் போரை விளைவித்து, யாரையும் மதிக்காமல், மேகத்தை ஒத்து நிகர்க்கும் கருநிறத்தை உடைய கூந்தலாகிய காட்டின் நிழலிலே களிப்புற்று விளையாடி, (தன்னைக் கண்டவர்களுடைய) கருத்தை அழித்து, ஒழுங்காக பெரிதாக விளங்கி சேல் மீன் போன்று (ஆண்களை) வருத்துகின்ற கண்களை உடைய பெண்களின் தேமல் படர்ந்துள்ள கனத்த மலை போன்ற மார்பிலே மூழ்கி, காம வேட்கை மிக்க கொடுமையினின்றும், என்னுடைய உயிர் பிழைக்கும்படியான நல்ல வழிகளைத் தந்தருளுக. (வள்ளிப்) பெண் மீது ஆசை கொண்டு, வேடர்கள் வாழும் காட்டில் நறுமணம் வீசும் திருவடிகள் சிவந்து போகச் சென்றவனே, கடலில் சென்று ஒளிந்துகொண்ட, மாயத்தில் வல்ல (மாமரமாகிய) சூரனை வெட்டி, அவன் மாளும்படி போர் செய்து முடித்த கூரிய வேலனே, வீதியில் தேர் செல்லுவதால் எழும் தூசியிலே சூரியனுடைய வீரத் தேரும் மறைபடும் புலியூர் ஆகிய சிதம்பரத்தில் இருக்கும் மேற்குக் கோபுரத்தில் வீற்றிருந்து, கேள்வி ஞானம் மிக்க மறையோர்கள் துதிக்கின்ற பெருமாளே. 

பாடல் 483 - சிதம்பரம் 
ராகம் -...; தாளம் -

தய்ய தானத் தானன தானன   தய்ய தானத் தானன தானன      தய்ய தானத் தானன தானன ...... தனதான

கொள்ளை யாசைக் காரிகள் பாதக   வல்ல மாயக் காரிகள் சூறைகள்      கொள்ளும் ஆயக் காரிகள் வீணிகள் ...... விழியாலே 
கொல்லும் லீலைக் காரிகள் யாரையும்   வெல்லு மோகக் காரிகள் சூதுசொல்      கொவ்வை வாய்நிட் டூரிகள் மேல்விழு ...... மவர்போலே 
உள்ள நோவைத் தேயுற வாடியர்   அல்லை நேரொப் பாமன தோஷிகள்      உள்வி ரோதக் காரிகள் மாயையி ...... லுழல்நாயேன் 
உய்ய வேபொற் றோள்களும் ஆறிரு   கையு நீபத் தார்முக மாறுமுன்      உள்ள ஞானப் போதமு நீதர ...... வருவாயே 
கள்ள மாயத் தாருகன் மாமுடி   துள்ள நீலத் தோகையின் மீதொரு      கையின் வேல்தொட் டேவிய சேவக ...... முருகோனே 
கல்லி லேபொற் றாள்பட வேயது   நல்ல ரூபத் தேவர கானிடை      கெளவை தீரப் போகுமி ராகவன் ...... மருகோனே 
தெள்ளி யேமுற் றீரமு னோதிய   சொல்வ ழாமற் றானொரு வானுறு      செல்வி மார்பிற் பூஷண மாயணை ...... மணவாளா 
தெள்ளு மேனற் சூழ்புன மேவிய   வள்ளி வேளைக் காரம னோகர      தில்லை மேலைக் கோபுர மேவிய ...... பெருமாளே.

பேராசை கொண்டவர்கள், பாபச் செயல்களைச் செய்ய வல்ல மாயக்காரிகள், சூறைக் காற்றைப் போல் கொள்ளை அடிக்கும் வேட்டைக்காரிகள், பயனற்றவர்கள், கண்களால் கொல்லுகின்ற லீலைகள் செய்பவர்கள், யாரையும் மயக்க வல்ல காமாந்தகிகள், சூதான சொற்களைப் பேசும் கொவ்வைக் கனி போன்ற வாயை உடைய பொல்லாதவர்கள், மேலே விழுபவர் போல வெளியன்பு பாராட்டி, மனத்தை நோவச் செய்து உறவாடுபவர்கள், இருட்டுக்கு ஒப்பான மனக் குற்றம் உடையவர்கள், பகைமை எண்ணம் கொண்டவர்கள், அத்தகைய பொது மாதர்களின் மாயைச் சூழலில் சுழல்கின்ற நாயை ஒத்த அடியேன் பிழைக்கும்படி, அழகிய தோள்களும், பன்னிரண்டு கைகளும், கடப்ப மாலையும், ஆறு முகங்களும் முன்னதாக நான் தியானிக்க ஞான அறிவை நீ எனக்குத் தருவதற்கு வந்தருளுக. கள்ளத்தனமும் மாயையும் நிரம்பிய தாருகாசுரனுடைய பெரிய தலை அற்று விழ, நீல மயில் மேல் விளங்கி, ஒப்பற்ற கை வேலைச் செலுத்தி அனுப்பிய வல்லமை வாய்ந்த முருகனே, கல்லின் மீது அழகிய திருவடி பட்டவுடனே அது நல்ல பெண் உருவாய் வர, காட்டில் (அகலிகைக்கு உற்ற) துன்பம் நீங்கும்படி சென்ற ராமனுடைய மருகனே, ஆய்ந்து, இன்பமுற்று, முன்பு செய்த வாக்குறுதி* தப்பாமல், விண்ணுலகில் வளர்ந்த செல்வியாகிய தேவயானையை தன் மார்பில் ஆபரணம் போல் அணைந்த மணவாளனே, நன்கு விளங்கிய தினைப் புனத்தில் இருந்த வள்ளிக்கு காவற்காரனாய் விளங்கும் மனத்துக்கு இனியோனே, தில்லை மேற்குக் கோபுரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* முற்பிறப்பில் திருமாலின் மகளாகத் தோன்றிய அமிர்தவல்லி, சுந்தரவல்லி என்ற கன்னிகைகளுக்கு மறுபிறவியில் அவர்கள் முறையே தேவயானை, வள்ளி என்று பிறந்து முருகனை மணந்து கொள்வர் என்று திருமால் வாக்களித்தார்.

பாடல் 484 - சிதம்பரம் 
ராகம் -...; தாளம் -

தான தானன தனனா தானன     தான தானன தனனா தானன          தான தானன தனனா தானன ...... தனதான

தாது மாமலர் முடியா லேபத     றாத நூபுர அடியா லேகர          தாள மாகிய நொடியா லேமடி ...... பிடியாலே 
சாடை பேசிய வகையா லேமிகு     வாடை பூசிய நகையா லேபல          தாறு மாறுசொல் மிகையா லேயன ...... நடையாலே 
மோதி மீறிய முலையா லேமுலை     மீதி லேறிய கலையா லேவெகு          மோடி நாணய விலையா லேமயல் ...... தருமானார் 
மோக வாரிதி தனிலே நாடொறு     மூழ்கு வேனுன தடியா ராகிய          மோன ஞானிக ளுடனே சேரவு ...... மருள்வாயே 
காத லாயருள் புரிவாய் நான்மறை     மூல மேயென வுடனே மாகரி          காண நேர்வரு திருமால் நாரணன் ...... மருகோனே 
காதல் மாதவர் வலமே சூழ்சபை     நாத னார்தம திடமே வாழ்சிவ          காம நாயகி தருபா லாபுலி ...... சையில்வாழ்வே 
வேத நூன்முறை வழுவா மேதினம்     வேள்வி யாலெழில் புனைமூ வாயிர          மேன்மை வேதியர் மிகவே பூசனை ...... புரிகோவே 
வீறு சேர்வரை யரசாய் மேவிய     மேரு மால்வரை யெனநீள் கோபுர          மேலை வாயிலின் மயில்மீ தேறிய ...... பெருமாளே.

மகரந்தப் பொடிகள் தங்கும் பூக்கள் உள்ள கூந்தலாலும், பதறாமல் நடக்கும் சிலம்புகள் அணிந்த பாதத்தாலும், கைக்கொண்டு இடுகின்ற தாள ஒலியாலும், (வருபவர்களின்) மடியைப் பிடித்துத் தம் வசப்படுத்துவதாலும், ஜாடையாகப் பேசும் வழக்க வகையாலும், மிக்க வாசனைகளைப் பூசிக் கொண்டு சிரிக்கும் சிரிப்பாலும், பல விதமான தாறுமாறான பேச்சுக்களைப் பேசும் செறுக்காலும், அன்னம் போன்ற நடையாலும், முன்னே தாக்கி மேலெழுந்த மார்பாலும், அந்த மார்பின் மீது அணிந்த ஆடையாலும், பல விதமான மயக்கும் சக்திகளை காசுக்காக வெளிக் காட்டும் கர்வத்தாலும் (வந்தவருக்கு) காம மயக்கத்தைத் தருகின்ற விலைமாதர்களின் காமக் கடலில் தினமும் முழுகுகின்ற நான் உன்னுடைய அடியவர்களாகிய மெளன ஞானிகளுடன் சேர்ந்து பழகுவதற்கு அருள் புரிவாயாக. "நான்கு வேதங்களுக்கும் மூலப் பொருளே, அன்பு வைத்து அருள் புரிவாயாக" என்று பெரிய யானை (ஆகிய கஜேந்திரன்) கூவி அழைக்க, அந்த யானை காணும் வண்ணம் அதன் முன்னே நேரே வந்து உதவிய திருமால் நாராயணனுடைய மருகனே, பக்தியும் பெரும் தவமும் உடைய பெரியோர்கள் வலம் வந்து வணங்கிச் சூழும் கனக சபையில் சிவபெருமானுடைய இடதுபாகத்தில் வாழ்கின்ற சிவகாமி நாயகி பெற்ற குழந்தையே, புலிசை என்னும் சிதம்பரத்தில் வாழும் செல்வமே, வேத நூலில் கூறப்பட்ட முறைப்படியே, தவறாமல் நாள் தோறும் யாகங்கள் செய்யும் அழகைக் கொண்ட சிறப்பான தில்லை மூவாயிரம் வேதியர்கள் மிக நன்றாகப் பூஜை செய்யும் தலைவனே*, பொலிவு பொருந்திய மலை அரசாக விளங்கும் மேரு மலை போல உயர்ந்துள்ள கோபுரத்தின் மேற்கு வாயில் புரத்தில் மயிலின் மேல் விளங்கும் பெருமாளே. 
* அருணகிரிநாதருக்கு நடராஜப் பெருமானே முருகனாகவும், முருகனே நடராஜராகவும் பேதமின்றித் தரிசனம் தரப்பட்டது என்பது இதன் கருத்து.

பாடல் 485 - சிதம்பரம் 
ராகம் - சிந்து பைரவி ; தாளம் - ஆதி - எடுப்பு - 1/2 இடம்

தனத்தத் தானன தானன தானன     தனத்தத் தானன தானன தானன          தனத்தத் தானன தானன தானன ...... தந்ததான

எலுப்புத் தோல்மயிர் நாடிகு ழாமிடை     இறுக்குச் சீபுழு வோடடை மூளைகள்          இரத்தச் சாகர நீர்மல மேவிய ...... கும்பியோடை 
இளைப்புச் சோகைகள் வாதம் விலாவலி     உளைப்புச் சூலையொ டேவலு வாகிய          இரைப்புக் கேவல மூலவி யாதியொ ...... டண்டவாதங் 
குலைப்புக் காய்கனல் நீரிழி வீளையொ     டளைப்புக் காதடை கூனல்வி சூசிகை          குருட்டுக் கால்முட மூமையு ளூடறு ...... கண்டமாலை 
குடிப்புக் கூனமி தேசத மாமென     எடுத்துப் பாழ்வினை யாலுழல் நாயெனு          னிடத்துத் தாள்பெற ஞானச தாசிவ ...... அன்புதாராய் 
கெலிக்கப் போர்பொரு சூரர்கு ழாமுமி     ழிரத்தச் சேறெழ தேர்பரி யாளிகள்          கெடுத்திட் டேகடல் சூர்கிரி தூள்பட ...... கண்டவேலா 
கிளர்ப்பொற் றோளிச ராசர மேவியெ     யசைத்துப் பூசைகொள் ஆயிப ராபரி          கிழப்பொற் காளைமெ லேறுமெ நாயகி ...... பங்கின்மேவும் 
வலித்துத் தோள்மலை ராவண னானவன்     எடுத்தப் போதுடல் கீழ்விழ வேசெய்து          மகிழ்ப்பொற் பாதசி வாயந மோஅர ...... சம்புபாலா 
மலைக்கொப் பாமுலை யாள்குற மாதினை     அணைத்துச் சீர்புலி யூர்பர மாகிய          வடக்குக் கோபுர வாசலில் மேவிய ...... தம்பிரானே.

எலும்பு, தோல், மயிர், நாடிக் குழாய்களின் நெருக்கம், உள் அழுந்தியுள்ள சீழ், புழு இவைகளுடன் பொருந்திய மூளைகள், இரத்தக் கடல்நீர், மலம் இவை எல்லாம் நிறைந்த சேற்றுக் குளத்தில், சோர்வு, இரத்தக் குறைவால் வரும் சோகை, வாயு மிகுதலாகிய பிணி, பக்க வாதம், வயிற்று உளைவு, சூலை என்னும் நோயோடு, பலத்த மூச்சு வாங்குதல், இழிவான மூல நோயுடன் விரைவாதம், நடுக்கு வாதம், காய்கின்ற நெருப்புப் போன்ற சுரம், நீரிழிவு, கபநோயின் காரணமாக கோழையின் கலப்பு, செவிட்டுத் தன்மை, கூன், வாந்தி பேதி, குருட்டுத் தன்மை, கால் முடமாயிருத்தல், பேச வராமை, உள் பக்கத்தே அறுத்துச் செல்லுகின்ற கழுத்தைச் சுற்றி வரும் புண், (இத்தகைய நோய்கள் எல்லாம்) குடி புகுந்த, கேடு செய்கின்ற இந்த உடலே நிலையானது என்று எடுத்துக்கொண்டு, பாழ்படுத்தும் கொடிய வினையால் திரிகின்ற நாய் போன்ற அடியேன், உனது திருவடிகளைப் பெற, ஞான மயமானதும், எப்போதும் மங்களகரமானதும் ஆகிய அன்பைத் தருவாயாக. வெற்றி பெறுவதன் பொருட்டுப் போர் செய்த அசுரர்களுடைய கூட்டம் கக்கும் இரத்தச் சேறு பெருக, தேர்கள், குதிரைகள், யாளிகள் (இப் படைகள் எல்லாம்) அழிபட்டு, கடலும் சூரனும், கிரெளஞ்ச மலையுடன் எழு மலைகளும் தூள்படும்படி செய்த வேலனே, விளங்குகின்ற அழகிய தோள்களை உடையவள், அசையும் பொருள், அசையாப்பொருள் இவை இரண்டிலும் கலந்தும் அவைகளை ஆட்டுவித்தும் பூஜை பெறுகின்ற எங்கள் அன்னை, பரம் பொருளானவள், (தனக்கு) உரிமையான அழகிய எருதின் மேலே ஏறி வருபவளும் எம்முடைய பிராட்டியும் ஆகிய பார்வதியின் பக்கத்தில் இருப்பவரும், வன்மையுடன் ஆட்டி அசைத்து, தனது தோளால் (கயிலை) மலையை இராவணன் என்பவன் எடுத்த பொழுது*, அவனுடைய உடலைக் கீழே விழச் செய்து மகிழும் அழகிய பாதங்களை உடையவரும், சிவாயநம என்னும் ஐந்தெழுத்துக்கு மூலப்பொருளானவருமான சிவசம்புவின் குமாரனே, மலை போன்ற மார்பகங்களை உடைய குறப்பெண்ணாகிய வள்ளியைத் தழுவி, பெருமை வாய்ந்த புலியூர் என்னும் சிதம்பரத்தில் மேலான பொருளாய்ச் சிறந்து விளங்கும் வடக்குக் கோபுர வாசலில் வீற்றிருக்கும் தனிப்பெரும் தலைவனே. 
* இராவணன் திக்கு விஜயம் செய்த போது, அவனுடைய புஷ்பக விமானம் கயிலை மலையைக் கடக்க முடியாது தடைபட்டது. அந்த மலையை வேரோடு பறித்து எறிய, அவன் தன் கைகளால் பெயர்த்து அசைக்க, சிவ பெருமான் தமது கட்டை விரலால் அம் மலையை அழுத்த, இராவணன் நசுக்குண்டு சாமகானம் பாடி, இறைவனை மகிழ்வித்து உய்ந்தான்.

பாடல் 486 - சிதம்பரம் 
ராகம் - ...; தாளம் -

தான தானன தான தானன   தான தானன தான தானன      தான தானன தான தானன ...... தனதான

நீல மாமுகில் போலும் வார்குழ   லார்கள் மாலைகு லாவ வேல்கணை      நீள வாள்விழி பார்வை காதிரு ...... குழையாட 
நீடு மார்பணி யாட வோடிய   கோடு போலிணை யாட நூலிடை      நேச பாளித சோலை மாமயி ...... லெனவேகிக் 
காலி னூபுர வோசை கோவென   ஆடி மால்கொடு நாணி யேவியர்      காய மோடணு பாகு பால்மொழி ...... விலைமாதர் 
காத லாயவ ரோடு பாழ்வினை   மூழ்கி யேழ்நர காழு மூடனை      காரிர் பாருமை யாசி வாபத ...... மருள்வாயே 
கோல மாமயி லேறி வார்குழை   யாட வேல்கொடு வீர வார் கழல்      கோடி கோடிடி யோசை போல்மிக ...... மெருதூளாய்க் 
கோடு கோவென ஆழி பாடுகள்   தீவு தாடசு ரார்கு ழாமொடு      கூள மாகவி ணோர்கள் வாழ்வுற ...... விடும்வேலா 
நாலு வேதமு டாடு வேதனை   யீண கேசவ னார்ச கோதரி      நாதர் பாகம்வி டாள்சி காமணி ...... உமைபாலா 
ஞான பூமிய தான பேர்புலி   யூரில் வாழ்தெய்வ யானை மானொடு      நாலு கோபுர வாசல் மேவிய ...... பெருமாளே.

கருமை மிக்க மேகம் போன்ற நீண்ட கூந்தலை உடையவர்கள், மாலை விளங்க, வேலையும் அம்பையும் போன்ற நீண்ட ஒளி பொருந்திய கண் பார்வைகள் சென்று வெட்டுவது போல் பாயும் இரண்டு (காதில்) குண்டலங்கள் அசைய, அகன்ற மார்பில் அணிகலன்கள் ஆட, பரந்துள்ள மலையைப் போல மார்பகங்கள் அசைய, நூலைப் போல் நுண்ணிய இடையில் தமக்கு விருப்பமான பட்டுப் புடைவையுடன், சோலையில் உலவி வரும் அழகிய மயில் போலச் சென்று, காலில் உள்ள சிலம்பின் ஓசை கோ என்று ஒலி செய்ய, நடனம் ஆடி, மோகத்துடன் வெட்கம் அடைந்து, வேர்வை கொண்ட உடலுடன், சர்க்கரையில் உருகிப் பொருந்திய பால் போன்ற சொற்களை உடைய வேசிகளுடன் ஆசை பூண்டவனாய் பாழ்படுத்தும் வினையிலே முழுகி, ஏழு நரகங்களிலும் ஆழ்ந்து விடும் முழு முட்டாளாக இருப்பினும், என்னை கண் பார்த்து அருளும் ஐயா, சிவபதம் தந்து அருள்வாயாக. அழகிய சிறந்த மயிலின் மேல் ஏறி, நீண்ட குழைகள் (காதில்) ஆட, கையில் வேல் கொண்டு, வீரம் பெரிதுள்ள கழல்கள் கோடிக் கணக்கான இடிகள் ஒலி செய்வது போல் மிக்கு ஒலிக்க, மேரு மலை பொடியாகி (அதனுடைய) சிகரங்கள் கோ என்று விழ, கடல் இடங்கள், நாடுகள், வலிமை வாய்ந்த அசுரர் கூட்டங்களோடு குப்பையாகி அழிந்தொழிய, தேவர்கள் வாழ்வு பெற்று விளங்க, வேலைச் செலுத்திய வீரனே, நான்கு வேதங்களையும் பயின்றுள்ள பிரமனைப் பெற்ற திருமாலின் சகோதரி, சிவபெருமானுடைய இடது பாகத்தை விடாதவள், சிகா ரத்தினம் போன்ற உமா தேவியின் குமாரனே, ஞானபூமி என்று பேர் பெற்ற சிதம்பரத்தில் வாழ்கின்ற தேவயானையோடும், வள்ளி நாயகியோடும், நான்கு கோபுர வாயில்களிலும் வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 487 - சிதம்பரம் 
ராகம் - கானடா; தாளம் - ஆதி 4 களை - 32 அமைப்பு தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1

தான தத்ததன தான தத்ததன     தான தத்ததன தான தத்ததன          தான தத்ததன தான தத்ததன ...... தந்ததான

வாத பித்தமொடு சூலை விப்புருதி     யேறு கற்படுவ னீளை பொக்கிருமல்          மாலை புற்றெழுத லூசல் பற்சனியொ ...... டந்திமாலை 
மாச டைக்குருடு காத டைப்பு செவி     டூமை கெட்டவலி மூல முற்றுதரு          மாலை யுற்றதொணு றாறு தத்துவர்க ...... ளுண்டகாயம் 
வேத வித்துபரி கோல முற்றுவிளை     யாடு வித்தகட லோட மொய்த்தபல          வேட மிட்டுபொரு ளாசை பற்றியுழல் ...... சிங்கியாலே 
வீடு கட்டிமய லாசை பட்டுவிழ     வோசை கெட்டுமடி யாமல் முத்திபெற          வீட ளித்துமயி லாடு சுத்தவெளி ...... சிந்தியாதோ 
ஓத அத்திமுகி லோடு சர்ப்பமுடி     நீறு பட்டலற சூர வெற்பவுண          ரோடு பட்டுவிழ வேலை விட்டபுக ...... ழங்கிவேலா 
ஓந மச்சிவய சாமி சுத்தஅடி     யார்க ளுக்குமுப காரி பச்சையுமை          ஓர்பு றத்தருள்சி காம ணிக்கடவுள் ...... தந்தசேயே 
ஆதி கற்பகவி நாய கர்க்குபிற     கான பொற்சரவ ணாப ரப்பிரம          னாதி யுற்றபொருள் ஓது வித்தமைய ...... றிந்தகோவே 
ஆசை பெற்றகுற மாதை நித்தவன     மேவி சுத்தமண மாடி நற்புலியு          ராட கப்படிக கோபு ரத்தின்மகிழ் ...... தம்பிரானே.

வாதம் பித்தம் மிகுதியால் ஏற்படும் நோய்கள், வயிற்று உளைவு, சிலந்தி, கல் போன்ற ஒரு வகைப் புண் கட்டி, கோழை நோய், குத்திருமல், கண்ட மாலை, புற்றுநோய், (உடல், மனம்) தடுமாற்றம், பல விதமான ஜன்னி நோய் இவற்றுடன் மாலைக்கண், அழுக்கு அடைவதால் வரும் குருடு, காது அடைப்பினால் வரும் செவிட்டுத் தன்மை, ஊமை, கெட்ட வலிப்புகள், மூல நோய் (ஆகிய நோய்கள்) காய்த்து முதிர்ந்த மரம்போன்றது இந்த உடல், முறையாகப் பொருந்திய தொண்ணூற்றாறு தத்துவங்கள்* இடம்பெறுகின்ற உடல், வேதத்தின் வித்தாகிய இறைவன் பல திருக்கோலத்தைப் பூண்டு விளையாட்டாக ஆட்டுவிக்கின்ற கடலிடைத் தோணிபோல அலைப்புறும் உடல், சூழ்கின்ற பலவிதமான வேடங்களைப் பூண்டு பொருளாசை கொண்டு திரிகின்ற, விஷம் போன்ற அழி செயலாலே, வீடு கட்டி, அதனுள் காம மயக்க ஆசையில் பட்டு வீழ்ந்து, (உள்ளோசையாகிய) நாதம் அழிந்து, நான் இறந்து படாமல் முக்தியை அடையுமாறு வீட்டை அளித்து, நீ மயில் மீது நடனம் செய்கின்ற வெட்ட வெளியான பரமானந்த நிலையைப் பெற என் உள்ளம் தியானிக்காதோ? அலையோசை மிகுந்த கடல், மேகங்கள், (ஆதிசேஷனாகிய) பாம்பின் முடிகள் (இவை எல்லாம்) பொடிபட்டுக் கலங்க, சூரனும், அவனுடைய எழுகிரியும், அங்கிருந்த அசுரர்களோடு அழிந்து விழும்படி கடலில் செலுத்திய புகழ் மிக்க நெருப்புப்போன்ற வேலை உடையவனே, ஓம் நமசிவய என்னும் பிரணவத்தோடு கூடிய ஐந்தெழுத்துக்கு மூலப் பொருளாகிய கடவுள், தூய அடியார்களுக்கு உதவி செய்பவர், பச்சை நிறங் கொண்ட உமையை தமது ஒரு பாகத்தில் வைத்து அருள் சுரக்கும் சிகாமணித் தெய்வமாகிய சிவபெருமான் பெற்ற குழந்தையே, முதலில் தோன்றிய கற்பக விநாயகருக்குப் பின்னர் தோன்றிய அழகிய சரவண மூர்த்தியே, ஆதியாயுள்ள மூலமந்திரப் பொருளை ஓதுவிக்கும் தன்மை எவ்வண்ணம் என்று தெரிந்திருந்த தலைவனே, உன் காதலைப் பெற்ற குற மாதாகிய வள்ளியை நாள்தோறும் தினைப்புனத்துக்குச் சென்று பரிசுத்தமான வகையில் திருமணம் புரிந்து நல்ல புலியூர் (சிதம்பரம்) என்னும் தலத்தில் பொன்னும் பளிங்கும் போல அழகு வாய்ந்த கோபுரத்தில் மகிழ்ந்து மேவும் தம்பிரானே. 
* 96 தத்துவங்கள் பின்வருமாறு:36 பரதத்துவங்கள் (அகநிலை): ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து - 25 (புறநிலை): மண், தீ, நீர், காற்று, வெளி.ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை): வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4.

பாடல் 488 - சிதம்பரம் 
ராகம் - ...; தாளம் -

தனந்தத்த தனதான தனந்தத்த தனதான     தனந்தத்த தனதான ...... தனதான

சுரும்புற்ற பொழில்தோறும் விரும்புற்ற குயில்கூவ     துரந்துற்ற குளிர்வாடை ...... யதனாலுந் 
துலங்குற்ற மருவாளி விரைந்துற்ற படியால     தொடர்ந்துற்று வருமாதர் ...... வசையாலும் 
அரும்புற்ற மலர்மேவு செழுங்கொற்ற அணையாலு     மடைந்திட்ட விடைமேவு ...... மணியாலும் 
அழிந்துற்ற மடமானை யறிந்தற்ற மதுபேணி     அசைந்துற்ற மதுமாலை ...... தரவேணும் 
கருங்கொற்ற மதவேழ முனிந்துற்ற கலைமேவி     கரந்துற்ற மடமானி ...... னுடனேசார் 
கரும்புற்ற வயல்சூழ பெரும்பற்ற புலியூரில்     களம்பற்றி நடமாடு ...... மரன்வாழ்வே 
இருந்துற்று மலர்பேணி யிடும்பத்தர் துயர்தீர     இதம்பெற்ற மயிலேறி ...... வருகொவே 
இனந்துற்ற வருசூர னுருண்டிட்டு விழவேல்கொ     டெறிந்திட்டு விளையாடு ...... பெருமாளே.

வண்டுகள் உள்ள சோலைகள் யாவிலும் விரும்பி அங்கே அடைந்துள்ள குயில்கள் கூவுதலாலும், வெளிப்பட்டு வீசும் குளிர்ந்த வாடைக் காற்றாலும், (மன்மதனுடைய) வாசனை பொருந்திய பாணங்களாகிய மலர்கள் வேகமாக வந்து மேலே பட்டுச் சேர்வதாலும், (இவளைப்) பின் தொடர்ந்து வருகின்ற பெண்களின் வசைப் பேச்சுக்களாலும், மலர்ந்தும் மலராத அரும்பு நிலையில் உள்ள மலர்கள் தூவப்பட்டதும், வலிமை வாய்ந்த (காமன் தன்) வீரத்தைக் காட்டும் இடமுமான படுக்கையாலும், (மேய்ந்த பின்பு) தத்தம் வீடுகளைச் சேர்ந்தடைய வரும் மாடுகளின் கழுத்தில் கட்டியுள்ள மணியின் ஓசையாலும், (மனம்) அழிந்துள்ள இள மானாகிய இப் பெண்ணின் விரக வேதனையை அறிந்து, சமயம் பார்த்து விரும்பி, உன் மார்பில் அசைந்தாடும் தேன் நிறைந்த மலர் மாலையைத் தந்தருள வேண்டும். கரிய, வீரம் வாய்ந்த (கணபதியாகிய) மத யானை கோபத்துடன் வந்து எதிர்த்த அந்த சமயத்தில், தன்னை நாடி, தன் பின் ஒளிந்து அடைக்கலம் புகுந்த இள மானாகிய வள்ளியுடன் சார்ந்தவனே, கரும்புகள் வளர்ந்த வயல்கள் சூழ்ந்த பெரும்பற்றப் புலியூராகிய சிதம்பரத்தில் மேடையாக பொன்னம்பலத்தைத் தேர்ந்தெடுத்து நடனம் செய்கின்ற சிவபெருமானுடைய செல்வமே. இருந்து பொருந்தி மலர்களை விரும்பி இட்டுப் பூஜிக்கும் அடியார்களின் துயரம் தீர, இன்பம் தரும் மயிலின் மீது ஏறி வருகின்ற அரசனே, சுற்றத்தாருடன் நெருங்கி வந்த சூரன் தரையில் உருண்டு புரண்டு விழ, வேல் கொண்டு வீசி எறிந்து விளையாடும் பெருமாளே. 
இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் அமைந்தது.குயில், வாடைக்காற்று, மன்மதன், மலர் அம்புகள், மாதர் வசைச் சொல், மலர் மஞ்சம், மாடுகளின் மணி முதலியவை தலைவனின் பிரிவுத் துயரை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.

பாடல் 489 - சிதம்பரம் 
ராகம் - ...; தாளம் -

தனந்தத் தத்தன தானன தானன   தனந்தத் தத்தன தானன தானன      தனந்தத் தத்தன தானன தானன ...... தனதான

இணங்கித் தட்பொடு பால்மொழி பேசிகள்   மணந்திட் டுச்சுக மாய்விளை யாடிகள்      இளஞ்சொற் செப்பிகள் சாதனை வீணிகள் ...... கடிதாகும் 
இடும்பைப் பற்றிய தாமென மேயினர்   பெருஞ்சொற் பித்தளை தானும்வை யாதவர்      இரும்பிற் பற்றிய கூர்விழி மாதர்கள் ...... எவரேனும் 
பணஞ்சுற் றிக்கொளு பாயவு தாரிகள்   மணங்கட் டுக்குழல் வாசனை வீசிகள்      பலஞ்செப் பித்தர மீளழை யாதவர் ...... அவரோடே 
பதந்துய்த் துக்கொடு தீமைய மாநர   கடைந்திட் டுச்சவ மாகிவி டாதுன      பதம்பற் றிப்புக ழானது கூறிட ...... அருள்வாயே 
வணங்கச் சித்தமி லாதஇ ராவணன்   சிரம்பத் துக்கெட வாளிக டாவியெ      மலங்கப் பொக்கரை யீடழி மாதவன் ...... மருகோனே 
மதம்பட் டுப்பொரு சூரபன் மாதியர்   குலங்கொட் டத்திகல் கூறிய மோடரை      வளைந்திட் டுக்கள மீதினி லேகொல ...... விடும்வேலா 
பிணம்பற் றிக்கழு கோடுபல் கூளிகள்   பிடுங்கிக் கொத்திட வேயம ராடியெ      பிளந்திட் டுப்பல மாமயி லேறிய ...... முருகோனே 
பிரிந்திட் டுப்பரி வாகிய ஞானிகள்   சிலம்பத் தக்கழல் சேரவெ நாடிடு      பெரும்பற் றப்புலி யூர்தனில் மேவிய ...... பெருமாளே.

மனம் ஒருமித்து குளிர்ந்த பால் போன்ற இனிய சொற்களைப் பேசுபவர்கள், கூடிய பின் சுகமாய் விளையாடுபவர்கள், தாழ்வான மொழிகளைப் பேசுபவர்கள், தாம் சொன்னதையே சாதிக்கும் பயனிலிகள், கடுமையான துன்பம் பிடித்தவர் போல இருப்பவர்கள், (வந்தவர்களிடம்) பெரிய வார்த்தைகளைப் பேசி, பித்தளை சாமான்களைக் கூட விட்டுவைக்காமல் கவர்பவர்கள், இரும்பாலான வேல் போன்ற கூரிய கண்களை உடையவர்கள், யாராயிருந்த போதிலும் அவரிடம் பணத்தைக் கவர்ந்து கொள்ளும் தந்திரம் வல்ல சிறப்பு உடையவர்கள், நறுமணம் கூடியதாய்ப் பின்னிக் கட்டியுள்ள கூந்தலினின்று வாசனை வீசச் செய்பவர்கள், பொன்னைக் கொடுக்கிறேன் என்று சொன்னால் அது தருமளவும் (தமது வீட்டுக்கு) மறுபடியும் அழையாதவர்கள், இத்தகைய பொது மகளிரொடு இன்பத்தை அனுபவித்துக் கொண்டு, கொடுமை வாய்ந்த பெரிய நரகத்தை அடைந்து பிணமாகி விடாமல், உனது திருவடியைப் பற்றி உன் திருப்புகழைக் கூற எனக்கு அருள்வாயாக. (ராமனை) வணங்குவதற்கு மனம் இல்லாத ராவணனுடைய பத்துத் தலைகளும் அற்று விழும்படி அம்பைச் செலுத்தி, மனம் கலங்க, பொய்யை உடைய அரக்கரின் வலிமையை அழித்த திருமாலின் மருகனே, ஆணவம் கொண்டு சண்டை செய்த சூரபன்மன் ஆகியோரை, குலப் பெருமை பேசி இறுமாப்புடன் பகைமைப் போர் சொல்லி வந்த மூடரை, சூழ்ந்து வளைத்து போர்க்களத்தில் இறந்து போகும்படி வேலைச் செலுத்தியவனே, பிணத்தைப் பற்றிக் கொண்டு, கழுகுகளுடன் பல பேய்கள் பிடுங்கிக் கொத்தி உண்ணும்படி போர் செய்து, பகைவர்களைப் பிளந்து அழித்து, வன்மை கொண்ட சிறந்த மயில் வாகனத்தில் ஏறிய முருகோனே, உன்னைப் பிரிந்திருந்து, உள்ளத்தில் அன்பு நிறைந்திருந்த ஞானிகள், சிலம்பையும் பொன்னால் செய்யப்பட்ட வீரக் கழலையும் அணிந்த திருவடிகளைச் சேர விரும்பி வருகின்ற, பெரும் பற்றப் புலியூர் என்ற சிதம்பரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 490 - சிதம்பரம் 
ராகம் - சங்கராபரணம்; தாளம் - அங்கதாளம் - 8 1/2 தகிட-1 1/2, தக-1, தகதிமி-2 தகதிமி-2, தகதிமி-2

தனந்தத் தத்தன தானன தானன     தனந்தத் தத்தன தானன தானன          தனந்தத் தத்தன தானன தானன ...... தனதான

விடுங்கைக் கொத்தக டாவுடை யானிட     மடங்கிக் கைச்சிறை யானஅ நேகமும்          விழுங்கப் பட்டற வேயற லோதியர் ...... விழியாலே 
விரும்பத் தக்கன போகமு மோகமும்     விளம்பத் தக்கன ஞானமு மானமும்          வெறுஞ்சுத் தச்சல மாய்வெளி யாயுயிர் ...... விடுநாளில் 
இடுங்கட் டைக்கிரை யாயடி யேனுடல்     கிடந்திட் டுத்தம ரானவர் கோவென          இடங்கட் டிச்சுடு காடுபு காமுன ...... மனதாலே 
இறந்திட் டுப்பெற வேகதி யாயினும்     இருந்திட் டுப்பெற வேமதி யாயினும்          இரண்டிற் றக்கதொ ரூதியம் நீதர ...... இசைவாயே 
கொடுங்கைப் பட்டம ராமர மேழுடன்     நடுங்கச் சுக்ரிவ னோடம ராடிய          குரங்கைச் செற்றும கோததி தூளெழ ...... நிருதேசன் 
குலங்கட் பட்டநி சாசரர் கோவென     இலங்கைக் குட்டழ லோனெழ நீடிய          குமண்டைக் குத்திர ராவண னார்முடி ...... அடியோடே 
பிடுங்கத் தொட்டச ராதிப னாரதி     ப்ரியங் கொட் டக்கநன் மாமரு காஇயல்          ப்ரபஞ்சத் துக்கொரு பாவல னாரென ...... விருதூதும் 
ப்ரசண்டச் சொற்சிவ வேதசி காமணி     ப்ரபந்தத் துக்கொரு நாதச தாசிவ          பெரும்பற் றப்புலி யூர்தனில் மேவிய ...... பெருமாளே.

செலுத்தும் சாமர்த்தியத்திற்குத் தக்க எருமைக் கடாவை வாகனமாக உடைய யமன் வசத்தில் அடங்கி, கை வசத்திலிருந்த செல்வமும் பல பொருள்களும் கருமணலைப் போல் கரு நிறம் கொண்ட கூந்தலை உடைய விலைமாதர்களின் கண்களால் முற்றிலுமாக கவரப்பட்டு, விரும்பி அடையத் தக்கனவான சுக போகங்களும், ஆசைகளும், சொல்லத் தக்கனவானஅறிவும், பெருமையும், முழுப் பொய்யாகி அகல, உடலை விட்டு ஆவி வெளிப்பட்டுப் போகின்ற அந்த நாளில், (சுடு காட்டில்) அடுக்கப்படும் விறகு கட்டைகளுக்கு உணவாகி அடியேனுடைய இவ்வுடல் கிடக்கும்போது சுற்றத்தார்கள் கோ என்று ஓலமிட்டுக் கதற, கிடக்கும் இடத்தில் (பாடையில்) கட்டப்பட்டு சுடுகாட்டுக்குப் போவதற்கு முன்னே, என் மனதால் (உன்னுடன் இரண்டறக் கலந்து) சமாதி நிலையை அடைந்திட்டு நற்கதியைப் பெறவாவது, (அல்லது) இந்த உலகில் இருக்கும்போதே நல்ல அறிவைப் பெறவாவது, மேற் சொன்ன இரண்டில் எனக்குத் தகுந்ததான பயனை நீயே தீர்மானித்து, அதைக் கொடுக்க மனம் பொருந்துவாயாக. நீண்ட கிளைகளை உடைய ஏழு மராமரங்களை அவற்றின் உடல்கள் நடுங்கும்படியாக அம்பை விட்டும், சுக்¡£வனுடன் போர் புரிந்த குரங்காகிய வாலியை அழித்தும், பெரிய கடலில் தூசி கிளம்பும்படி, அரக்கர் தலைவன் ராவணனுடைய குலத்தைச் சார்ந்த அரக்கர்கள் எல்லாம் கோவென்ற சத்தத்தோடு அலற, இலங்கை நகருள் அக்கினி பகவான் எழுந்து தீப்பற்றி எரியச் செய்ய, செல்வம் மேலீட்டால் செருக்குண்ட, வஞ்சகம் நிறைந்த இராவணனனுடைய தலைகள் பத்தும் அடியோடு அறுபட்டு விழும்படியாக செலுத்திய அம்பைக் கொண்ட நாயகனாம் இராமன் மிகுந்த அன்பு கொள்வதற்குத் தகுந்த, நன்கு சிறந்த மருகனே, இந்த உலகத்துக்கு ஒப்பற்ற கவி அரசர் என்று வெற்றிச் சின்னங்கள் முழங்குகின்ற, பெருமையுடைய சொற்களைக் கொண்ட தேவாரப் பதிகங்களை ஓதிய சிவ வேத சிகாமணியாகிய ஞான சம்பந்த மூர்த்தியே, நூல் வகைகளுக்கெல்லாம் ஒப்பற்ற தலைவனே, என்றும் மங்களகரமானவனே, பெரும்பற்றப் புலியூர் என்னும் சிதம்பரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 491 - சிதம்பரம் 
ராகம் - ...; தாளம் -

தந்தன தானன தானத்தம்     தந்தன தானன தானத்தம்          தந்தன தானன தானத்தம் ...... தனதான

கொந்தள வோலைக ளாடப்பண்     சங்கொளி போல்நகை வீசித்தண்          கொங்கைகள் மார்பினி லாடக்கொண் ...... டையென்மேகம் 
கொங்கெழு தோள்வளை யாடக்கண்     செங்கயல் வாளிகள் போலப்பண்          கொஞ்சிய கோகில மாகப்பொன் ...... பறிகாரர் 
தந்திர மாமென வேகிப்பொன்     தொங்கலொ டாரமு மாடச்செந்          தம்பல வாயொடு பேசிக்கொண் ...... டுறவாடிச் 
சம்பள மீதென வோதிப்பின்     பஞ்சணை மேல்மய லாடச்சஞ்          சங்கையில் மூளியர் பால்வைக்குஞ் ...... செயல்தீராய் 
அந்தக னாருயிர் போகப்பொன்     திண்புர மோடெரி பாயப்பண்          டங்கச னாருடல் வேகக்கண் ...... டழல்மேவி 
அண்டர்க ளோடட லார்தக்கன்     சந்திர சூரியர் வீழச்சென்          றம்பல மீதினி லாடத்தன் ...... குருநாதா 
சிந்துர மோடரி தேர்வர்க்கம்     பொங்கமொ டேழ்கடல் சூர்பத்மன்          சிந்திட வேல்விடு வாகைத்திண் ...... புயவேளே 
செங்குற மாதுமி னாளைக்கண்     டிங்கித மாயுற வாடிப்பண்          செந்தமிழ் மால்புலி யூர்நத்தும் ...... பெருமாளே.

தலை மயிர்ச் சுருளின் கீழுள்ள காதோலைகள் அசைய, சீரான சங்கின் ஒளியைப் போல பற்கள் ஒளியை வீசி, குளிர்ச்சியான மார்பகங்கள் நெஞ்சில் அசைய, கொண்டை என்கின்ற கறுத்த மேகமும் வாசனையை எழுப்பி வீச, தோள் வளையல்கள் ஆட, கண்கள் சிவந்த கயல் மீன் போலவும் அம்புகள் போலவும் விளங்க, இசை கொஞ்சும் குயிலென விளங்கி, பொன் காசுக்களைப் பறிப்பவர்களாகிய விலைமாதர்கள் தந்திரச் செயல்களுடன் சென்று, பொன் மாலையுடன் ஆரமும் கழுத்தில் அசைய, சிவந்த தாம்பூலக் கரையுடைய வாயுடன் பேசியிருந்து, பல உறவு முறைகளைக் கையாண்டு, (தனக்குக் கொடுக்க வேண்டிய) தொகை இவ்வளவு என்று நிச்சயித்து, அதன் பின்னர் பஞ்சு மெத்தையின் மேல் காம மயக்கப் பேச்சுக்களைப் பேசும், பயமும் வெட்கமும் இல்லாத அறிவிலிகளிடத்தே அன்பு வைக்கும் இழிச் செயலை ஒழித்தருளுக. யமனுடைய அரிய உயிர் அழிந்து போகவும், அழகிய வலிய திரி புரங்கள் எரி பாய்ந்து அழியவும், முன்பு மன்மதனுடைய உடல் வெந்து விழவும், நெற்றிக் கண்ணிலிருந்து நெருப்பைச் செலுத்தி, தேவர்களுடன் வலிமை பொருந்திய தக்கன், சந்திர சூரியர்களும் பங்கப்பட விழச் செய்தபின் போய் (சிதம்பரத்திலுள்ள) பொன் அம்பலத்தின் மீது கூத்தாடின பெருமானாகிய சிவபிரானுக்குக் குரு நாதனே, யானையுடன், குதிரை, தேர்க் கூட்டங்களின் சேனைகள் எழுச்சியுடன், ஏழு கடல்களும், சூரபத்மனும் அழிபட வேலைச் செலுத்திய வெற்றி வாய்ந்த வலிய புயங்களைக் கொண்ட தலைவனே, செவ்விய குற மாதாகிய வள்ளி என்னும் மின்னல் போன்ற அழகியைப் பார்த்து, இனிமையாய் உறவு பூண்டு, இசை நிரம்பிய செந்தமிழ் விளங்கும் புலியூராகிய சிதம்பரத்தை விரும்பும் பெருமாளே. 

பாடல் 492 - சிதம்பரம் 
ராகம் - ...; தாளம் -

தனனா தத்தன தானத்தம்     தனனா தத்தன தானத்தம்          தனனா தத்தன தானத்தம் ...... தனதான

நகையா லெத்திகள் வாயிற்றம்     பலமோ டெத்திகள் நாணற்றின்          நயனா லெத்திகள் நாறற்புண் ...... தொடைமாதர் 
நடையா லெத்திக ளாரக்கொங்     கையினா லெத்திகள் மோகத்தின்          நவிலா லெத்திகள் தோகைப்பைங் ...... குழல்மேகச் 
சிகையா லெத்திக ளாசைச்சங்     கடியா லெத்திகள் பாடிப்பண்          திறனா லெத்திகள் பாரத்திண் ...... தெருவூடே 
சிலர்கூ டிக்கொடு ஆடிக்கொண்     டுழல்வா ருக்குழல் நாயெற்குன்          செயலா லற்புத ஞானத்திண் ...... கழல்தாராய் 
பகையா ருட்கிட வேலைக்கொண்     டுவரா ழிக்கிரி நாகத்தின்          படமோ டிற்றிட சூரைச்சங் ...... கரிசூரா 
பணநா கத்திடை சேர்முத்தின்     சிவகா மிககொரு பாகத்தன்          பரிவால் சத்துப தேசிக்குங் ...... குரவோனே 
சுகஞா னக்கடல் மூழ்கத்தந்     தடியே னுக்கருள் பாலிக்குஞ்          சுடர்பா தக்குக னேமுத்தின் ...... கழல்வீரா 
சுகரே சத்தன பாரச்செங்     குறமா தைக்கள வால்நித்தஞ்          சுகமூழ் கிப்புலி யூர்நத்தும் ...... பெருமாளே.

சிரிப்பால் ஏமாற்றுபவர்கள். வாயில் வெற்றிலை பாக்கு உண்ட தாம்பூல எச்சிலுடன் ஏமாற்றுபவர்கள். வெட்கம் இல்லாமல் இனிமையான கண்களால் ஏமாற்றுபவர்கள். துர்க் கந்தம் கொண்ட தொடைகளை உடைய விலைமாதர்கள் தங்களுடைய நடையைக் கொண்டு ஏமாற்றுபவர்கள். நிறைந்துள்ள மார்பகங்களால் ஏமாற்றுபவர்கள். காம மயக்கம் தரக் கூடிய பேச்சால் ஏமாற்றுபவர்கள். மயிலின் தோகையைப் போல உள்ள இளம் கூந்தலாகிய மேகம் போன்ற மயிர் முடியால் ஏமாற்றுபவர்கள். ஆசையை ஊட்டும் சுகத்தைத் தரும் வாசனைகளால் ஏமாற்றுபவர்கள். பாடல்களைப் பாடித் தமது இசை ஞானத்தால் ஏமாற்றுபவர்கள். பெரிய நெருக்கமான தெருக்களில் சிலர் கூடிக் கொண்டும், ஆடிக் கொண்டும் திரிகின்றவர்களாகிய விலைமாதர்கள் வசமே திரியும் அடியேனுக்கு, உனது திருவிளையாடலால் அற்புதமயமான வலிய திருவடிகளைத் தந்து காப்பாயாக. பகைத்து நின்ற அசுரர்கள் அஞ்ச வேலாயுதத்தைக் கொண்டு, உப்புத் தன்மை நிறைந்த கடல்களும், (ஏழு) மலைகளும், ஆதி சேஷனுடைய படங்களும் குலைந்து விழ, அசுரன் சூரனை அழித்த சூரனே, பாம்பின் படம் போன்ற பதக்கம் விளங்கும் மேகலை அணிந்த அரையை உடைய முத்துப் போன்ற சிவகாமி அம்மையாரை ஒரு பாகத்தில் கொண்டவராகிய சிவபெருமானுக்கு அன்புடன் மெய்ப் பொருளை உபதேசம் செய்த சற்குருவே, சுக ஞானக் கடலில் முழுகி இன்பம் பெறத் தந்து அடியேனுக்குத் திருவருள் புரிந்த ஒளி வீசும் திருவடியை உடைய குகனே, முத்தாலாகிய வீரக் கழல்களை அணிந்த வீரனே, இன்பச் சுவை கொண்ட மார்பகங்களை உடைய குறப் பெண்ணாகிய வள்ளியுடன் களவியல் வழியில் தினந்தோறும் சுகம் அனுபவித்து, புலியூர் எனப்படும் சிதம்பரத்தில் விரும்பி வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 493 - சிதம்பரம் 
ராகம் - அடாணா; தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2 தகதிமி-2, தகிட-1 1/2

தனதன தனன தனதன தனன     தனதன தனன ...... தனதான

எழுகடல் மணலை அளவிடி னதிக     மெனதிடர் பிறவி ...... அவதாரம் 
இனியுன தபய மெனதுயி ருடலு     மினியுடல் விடுக ...... முடியாது 
கழுகொடு நரியு மெரிபுவி மறலி     கமலனு மிகவு ...... மயர்வானார் 
கடனுன தபய மடிமையு னடிமை     கடுகியு னடிகள் ...... தருவாயே 
விழுதிக ழழகி மரகத வடிவி     விமலிமு னருளு ...... முருகோனே 
விரிதல மெரிய குலகிரி நெரிய     விசைபெறு மயிலில் ...... வருவோனே 
எழுகடல் குமுற அவுணர்க ளுயிரை     யிரைகொளும் அயிலை ...... யுடையோனே 
இமையவர் முநிவர் பரவிய புலியு     ரினில்நட மருவு ...... பெருமாளே.

ஏழு கடல்களின் கரையிலுள்ள மணலையெல்லாம் எண்ணிப்பார்த்தால் வரும் அளவை விட அதிகம் என் துன்பம் நிறை பிறவிகள் என்ற அவதாரங்கள். இனி உனக்கே அடைக்கலமாம் என் உயிரும், உடலும். இனியும் பிறப்பெடுத்து உடலைவிட என்னால் முடியாது. கழுகும், நரியும், நெருப்பும், மண்ணும், யமனும், பிரம்மாவும், என்னுடலை பலமுறை பிரித்தும், பிறப்பித்தும் சோர்வடைந்து விட்டார்கள். என் கடமை இனி உன்னிடம் அடைக்கலம் புகுவதே ஆகும். யான் அடிமைசெய்வது உன்னிடம் அடிமை பூணுதற்கே ஆகும். நீ விரைவில் உன் திருவடிகளைத் தர வேண்டும். சிறந்து திகழும் அழகியும், பச்சை வடிவானவளும், பரிசுத்தமானவளுமான பார்வதி முன்பே ஈன்றருளிய முருகப் பெருமானே, விரிந்த பூமியானது பற்றி எரிய, கிரெளஞ்சகிரி நெரிந்து பொடிபட, வேகமாக வரவல்ல மயிலில் வருபவனே, ஏழு கடல்களும் கொந்தளிக்க அசுரர்களின் உயிரை உணவாகக் கொள்ளும் வேலினை ஆயுதமாகக் கொண்டவனே, தேவர்களும், முனிவர்களும்* வணங்கித் துதித்த புலியூர் என்னும் சிதம்பரத்தில் நடனம் செய்கின்ற பெருமாளே. 
* வணங்கிய முனிவர்கள் வியாக்கிரபாதர், பதஞ்சலி, உபமன்யு, வசிஷ்டர் ஆகியோர் ஆவர்.

பாடல் 494 - சிதம்பரம் 
ராகம் - வலஜி ; தாளம் - அங்கதாளம் - 14 தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2, தகிட-1 1/2 தகதிமி-2, தகதிமி-2, தக-1, திமிதக-2

தனதன தனன தனதன தனன     தனதன தனனாத் ...... தனதான

தறுகணன் மறலி முறுகிய கயிறு     தலைகொடு விசிறீக் ...... கொடுபோகுஞ் 
சளமது தவிர அளவிடு சுருதி     தலைகொடு பலசாத் ...... திரமோதி 
அறுவகை சமய முறைமுறை சருவி     யலைபடு தலைமூச் ...... சினையாகும் 
அருவரு வொழிய வடிவுள பொருளை     அலம்வர அடியேற் ...... கருள்வாயே 
நறுமல ரிறைவி யரிதிரு மருக     நகமுத வியபார்ப் ...... பதிவாழ்வே 
நதிமதி யிதழி பணியணி கடவுள்     நடமிடு புலியூர்க் ...... குமரேசா 
கறுவிய நிருதர் எறிதிரை பரவு     கடலிடை பொடியாப் ...... பொருதோனே 
கழலிணை பணியு மவருடன் முனிவு     கனவிலு மறியாப் ...... பெருமாளே.

இரக்கமற்ற யமன் திண்ணிய பாசக்கயிற்றை அதன் நுனியைப் பிடித்து வீசி எறிந்து உயிரைக் கொண்டுபோகும் துன்பம் எனக்கு நேராமல் தவிர்க்க, நன்றாகத் தொகுக்கப்பட்ட வேதம் முதலிய பல சாஸ்திரங்களையும் ஓதி, ஆறு சமயங்களும்* ஒன்றோடொன்று மாறுபட்டு மோதித் தலை வேதனைதரப் போராடும் வெறுப்பேற்றும் செயல்கள் ஒழிந்து, பேரின்ப வடிவம் உள்ள சற்குணப் பொருளை அமைதியோடு அறியும்படி எந்தனுக்கு நீ அருள்செய்ய வேண்டும். மணமுள்ள தாமரையில் அமர்ந்த லக்ஷ்மிக்கும் திருமாலுக்கும் மருமகனே, (இமய) மலை பெற்ற பார்வதியின் செல்வக் குமரா, கங்கை, சந்திரன், கொன்றை, பாம்பு இவற்றை அணிந்த இறைவன் நடனமாடும் புலியூரின் (சிதம்பரத்தின்) குமரேசனே, கோபத்தோடு வந்த அசுரர்களை, வீசுகின்ற அலைகள் நிறைந்த கடலிடத்தில் தூளாக்கிப் போர் செய்தவனே, திருவடிகளின் வீரக் கழல்களை வணங்குவோரிடம் கோபம் காட்டுவதைக் கனவிலும் அறியாத கருணாமூர்த்திப் பெருமாளே. 
* ஆறு வகைச் சமயம்: காணாபத்யம், செளரம், கெளமாரம், சைவம், வைணவம், சாக்தம்.

பாடல் 495 - சிதம்பரம் 
ராகம் - ...; தாளம் -

தனதனா தத்ததன தனதனா தத்ததன  தனதனா தத்ததன தானனந் தனன    தனதனா தத்ததன தனதனா தத்ததன      தனதனா தத்ததன தானனந் தனன        தனதனா தத்ததன தனதனா தத்ததன          தனதனா தத்ததன தானனந் தனன ...... தந்ததான

இரசபா கொத்தமொழி யமுர்தமா ணிக்கநகை   யிணையிலா சத்திவிழி யார்பசும் பொனிரர்      எழிலிநே ரொத்தஇரு ளளகபா ரச்செயல்க         ளெழுதொணா தப்பிறையி னாரரும் புருவர்            எழுதுதோ டிட்டசெவி பவளநீ லக்கொடிக               ளிகலியா டப்படிக மோடடும் பொனுரு ...... திங்கள்மேவும் 
இலவுதா வித்தஇதழ் குமிழைநே ரொத்தஎழி   லிலகுநா சிக்கமுகு மாலசங் கினொளி      யிணைசொல்க்¡£ வத்தரள வினவொள்தா லப்பனையி         னியல்கலா புத்தகமொ டேர்சிறந் தவடி            யிணையிலா னைக்குவடெ னொளிநிலா துத்திபட               ரிகலியா ரத்தொடையு மாருமின் பரச ...... தங்கமார்பின் 
வரிகள்தா பித்தமுலை யிசையஆ லிற்றளிரின்   வயிறுநா பிக்கமல மாமெனுஞ் சுழிய      மடுவுரோ மக்கொடியென் அளிகள்சூழ் வுற்றநிரை         மருவுநூ லொத்தஇடை யாரசம் பையல்குல்            மணமெலா முற்றநறை கமலபோ துத்தொடையென்               வளமையார் புக்கதலி சேருசெம் பொனுடை ...... ரம்பைமாதர் 
மயலதா லிற்றடியெ னவர்கள்பா லுற்றுவெகு   மதனபா ணத்தினுடன் மேவிமஞ் சமிசை      வதனம்வேர் வுற்றவிர முலைகள்பூ ரிக்கமிடர்         மயில்புறா தத்தைகுயில் போலிலங் கமளி            வசனமாய் பொத்தியிடை துவளமோ கத்துளமிழ்               வசமெலாம் விட்டுமற வேறுசிந் தனையை ...... தந்துஆள்வாய் 
முரசுபே ரித்திமிலை துடிகள்பூ ரித்தவில்கள்   முருடுகா ளப்பறைகள் தாரைகொம் புவளை      முகடுபேர் வுற்றவொலி யிடிகள்போ லொத்தமறை         முதுவர்பா டிக்குமுற வேயிறந் தசுரர்            முடிகளோ டெற்றியரி யிரதமா னைப்பிணமொ               டிவுளிவே லைக்குருதி நீர்மிதந் துதிசை ...... யெங்குமோட 
முடுகிவேல் விட்டுவட குவடுவாய் விட்டமரர்   முநிவரா டிப்புகழ வேதவிஞ் சையர்கள்      முழவுவீ ணைக்கினரி யமுர்தகீ தத்தொனிகள்         முறையதா கப்பறைய வோதிரம் பையர்கள்            முலைகள்பா ரிக்கவுட னடனமா டிற்றுவர               முடிபதா கைப்பொலிய வேநடங் குலவு ...... கந்தவேளே 
அரசுமா கற்பகமொ டகில்பலா இர்ப்பைமகி   ழழகுவே யத்திகமு கோடரம் பையுடன்      அளவிமே கத்திலொளிர் வனமொடா டக்குயில்க         ளளிகள்தோ கைக்கிளிகள் கோவெனம் பெரிய            அமுர்தவா விக்கழனி வயலில்வா ளைக்கயல்க               ளடையுமே ரக்கனக நாடெனும் புலியுர் ...... சந்தவேலா 
அழகுமோ கக்குமரி விபுதையே னற்புனவி   யளிகுலா வுற்றகுழல் சேர்கடம் புதொடை      அரசிவே தச்சொருபி கமலபா தக்கரவி         யரியவே டச்சிறுமி யாளணைந் தபுகழ்            அருணரூ பப்பதமொ டிவுளிதோ கைச்செயல்கொ               டணைதெய்வா னைத்தனமு மேமகிழ்ந் துபுணர் ...... தம்பிரானே.

சுவை நிறைந்த சர்க்கரை போன்ற சொற்கள், அமுத மாணிக்கம் போன்ற பற்கள், நிகரில்லாத வேல் போன்ற கண்களை உடையவர்கள். பசும் பொன் போன்ற தன்மை உடையவர்கள். மேகத்துக்கு ஒப்பான கருத்த கூந்தல் பாரத்தை உடைய செயலினர். எழுதற்கு முடியாத பிறை போன்ற அரிய புருவத்தினர். எழுதினது போல் அமைந்துள்ள தோடு இட்ட காது. பவளக் கொடியும் நீலக் கொடியும் ஒன்றோடு ஒன்று மாறுபட்டு ஆடுவது போல் படிகத்தை வென்ற தெளிவும், பொன்னின் உருவமும் கொண்டதுமான மதி போன்ற முகத்தில் உள்ள இலவம் பூப் போல அமைந்துள்ள வாயிதழ். குமிழம் பூவுக்கு ஒப்பான அழகு பெற்று விளங்கும் மூக்கு. கமுகு போன்றும் திருமாலின் ஒளிவீசும் சங்குக்கு இணை சொல்லக் கூடியதுமான கழுத்தில் முத்து மாலைக் கூட்டம். ஒளி வீசும் பனை ஓலையால் அமைந்துள்ள பெருமை வாய்ந்த நூல் எழுதப்பட்ட ஓலைப் புத்தகம் போல அழகிய சிறந்த பாதம். ஒப்பு இல்லாத யானை, மலை என்று சொல்லும்படியானதும், ஒளி நிலவுகின்றதும், தேமல் படர்ந்ததும், பிணைந்துள்ள முத்து மாலை அணிந்துள்ளதும், நிறைந்த இன்ப ரசத்தைக் கொண்டுள்ளதுமான தங்க வடிவான மார்பில் ரேகைகள் கொண்டதுமான மார்பகங்கள். சொல்லத்தக்க ஆலின் தளிர் இலை போன்ற வயிறு. கொப்பூழ் என்பது தாமரை மொட்டுப் போன்றது. நீர்ச்சுழி, மடு, மயிர்க் கொடி என்கின்ற வண்டுகள் சூழ்ந்த வரிசை. பொருந்திய நூல் போன்று நுண்ணியதான இடுப்பு நிறைந்த செழிப்புள்ள மின்னல். பெண்குறி நறுமணம் எல்லாம் உள்ள தேன் நிறை தாமரைப் பூ. தொடை என்பது செழிப்பு நிறைந்த வாழைத் தண்டு. இங்ஙனம் சேர்ந்துள்ள செம்பொன் ஆடை அணிந்துள்ள, தெய்வப் பெண்ணாகிய ரம்பை போன்ற விலைமாதர்களின் காம மயக்கத்தால் அடியேனாகிய நான் மனம் ஒடிந்து அவர்களிடமே பொருந்தி இருந்து, நிரம்ப மன்மதனுடைய பாணங்களால் தாக்கப்பட்டு, கட்டிலின் மேல் முகம் வேர்வை அடைந்து விளங்க, மார்பகங்கள் புளகித்துப் பூரிக்க, கழுத்தினின்றும் மயில், புறா, கிளி, குயில் முதலியனவற்றைப் போல (புட்குரல்கள்) விளங்கி ஒலிக்க, படுக்கைப் பேச்சாய் நிறைந்து, இடை துவள, அந்த மாதர்களுடைய மோகத்துள் அமிழ்கின்ற குண நிலைமை எல்லாம் விட்டு ஒழிவதற்காக, (நல்ல) சிந்தனைகளை எனக்குத் தந்து அருளுக. முரசு, பேரிகை, திமிலை முதலிய பறை வகைகள், உடுக்கைகள், ஊதுங் கருவி வகை, தவில் முதலிய மேள வகைகள், மத்தள வகைகள், எக்காளம், நீண்ட ஊது குழல், ஊதுங் கொம்பு, சங்கு ஆகியவை ஆகாச முகட்டையும் அசைக்கும்படி ஒலியாய் இடிகள் இடிப்பது போல முழங்க, வேதம் வல்ல பெரியோர்கள் பாடி ஒலி எழுப்ப, இறந்து போன அசுரர்களின் தலைகளை அடித்துத் தள்ளி, சிங்கம், தேர், யானைப் பிணங்களோடு, குதிரை ஆகியவை ரத்தக் கடலில் மிதந்து பல திக்குகளிலும் ஓட, வேகமாக வேலாயுதத்தைச் செலுத்தி வடக்கே உள்ள மேரு மலை கலங்கிக் குலுங்க, தேவர்களும் முனிவர்களும் ஆடிப் புகழ, வேதம் வல்ல புலவர்கள் குட முழா என்ற பறை, வீணை, கி(ன்)னரியாழ் (இவைகளின்) அமுத கீதம் போன்ற ஒலிகளுடன் முறை முறையாக ஒலியை எழுப்பி ஓதிட, ரம்பை முதலான தேவமாதர்களின் மார்பகங்கள் கனக்க, ஒன்று கூடி நடனம் ஆடினவராய் வர, மகுடமும் கொடியும் விளங்கவே முருகன் ஆடலான குடைக்கூத்தும் துடைக்கூத்தும் ஆடி விளங்கிய கந்த வேளே, அரச மரம், மாமரம், தென்னை இவற்றுடன் அகில், பலா மரம், இலுப்பை மரம், மகிழ மரம், அழகான மூங்கில், அத்தி மரம், கமுக மரம், இவற்றுடன் வாழை மரம் (கலந்து) மேக மண்டலம் வரை உயர்ந்த செழித்த சோலைகளில் உலவும் குயில்கள், வண்டுகள், மயில்கள், கிளிகள் கோ என்று ஒலி செய்ய, பெரிதான அமுத நீரைக் கொண்ட குளங்களிலும், கழனிகளிலும், வயல்களிலும் வாளை மீன்களுடன் கயல் மீன்களும் அடைகின்ற அழகினிலே, அந்தப் பொன்னுலகம் என்று சொல்லும்படியான சிதம்பரத்தில் வீற்றிருக்கும் அழகிய வேலனே, அழகும் ஆசையும் கொண்ட குமரி, தேவதை போன்றவள், தினைப் புனத்தில் இருப்பவள், வண்டுகள் குலவும் கூந்தலில் சேர்ந்துள்ள கடப்ப மாலையை உடைய அரசி, வேத உருவம் கொண்டவள், தாமரை போன்ற சிவந்த பாதங்களை உடைய அருமை வாய்ந்த வேடப் பெண்ணாகிய வள்ளி நாயகி அணைந்த புகழையும் கொண்டு, சிவந்த உருவம் கொண்ட பதங்களுடன், கலாபம் கொண்ட குதிரையாம் மயில் மீது ஏறின நீ அணைந்த தேவயானையின் மார்பகங்களையும் மகிழ்ந்து அவளையும் சேர்ந்த தம்பிரானே. 
* சந்தம் பற்றி நீரார் என்பது நிரர் என வந்தது.

பாடல் 496 - சிதம்பரம் 
ராகம் - வாசஸ்பதி ; தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2 தகிடதகதிமி-3 1/2

தனன தானன தனன தானன     தனன தானன ...... தனதான

இருளு மோர்கதி ரணுகொ ணாதபொ     னிடம தேறியெ ...... னிருநோயும் 
எரிய வேமல மொழிய வேசுட     ரிலகு மூலக ...... வொளிமேவி 
அருவி பாயஇ னமுத மூறவுன்     அருளெ லாமென ...... தளவாக 
அருளி யேசிவ மகிழ வேபெற     அருளி யேயிணை ...... யடிதாராய் 
பரம தேசிகர் குருவி லாதவர்     பரவை வான்மதி ...... தவழ்வேணிப் 
பவள மேனியர் எனது தாதையர்     பரம ராசியர் ...... அருள்பாலா 
மருவி நாயெனை யடிமை யாமென     மகிழ்மெய் ஞானமு ...... மருள்வோனே 
மறைகு லாவிய புலியுர் வாழ்குற     மகள்மெ லாசைகொள் ...... பெருமாளே.

இருட்டும் சூரிய ஒளியின் ஒரு கதிரும் புகமுடியாத தேவலோகத்தை யான் அடைந்து, என் நல்வினை, தீவினை என்ற இரு நோய்களும் எரிந்து போகவும், ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களும் ஒழிந்திடவும், ஒளி பொருந்திய மூலாதார அக்கினி பொருந்தி, அருவி பாய்வது போல இனிய தேவாமிர்தம் ஊற, உன் திருவருள் யாவும் என் வசமாகும்படியாக உதவியருளி, சிவஞானத்தை யான் மகிழ்ந்து பெறுமாறு அருள் செய்து உன் இரு திருவடிகளையும் தருவாயாக. மேலான தக்ஷிணாமூர்த்தி தேசிகரும், தமக்கு ஒரு குரு இல்லாதவரும், பரந்த கடல் போன்ற கங்கையும் வானத்துச் சந்திரனும் தவழ்கின்ற சடையரும், பவள நிற மேனியருமான எனது தந்தையாரும், பரம ரகசியமாகும் சிதம்பர ரகசியருமான சிவபிரான் அருளிய பாலனே, அடியேனிடம் வந்து கூடி, என்னை ஓர் அடிமையாக ஏற்றுக் கொண்டு, மகிழ்ந்து மெய்ஞ்ஞானத்தை அருள்வோனே, வேதங்கள் விளங்கும் புலியூர் சிதம்பரத்தில் வாழ்பவனே, குறப்பெண் வள்ளிமீது ஆசை கொண்ட பெருமாளே. 

பாடல் 497 - சிதம்பரம் 
ராகம் - மத்யமாவதி; தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2 தகதிமி-2, தகிட-1 1/2

தான தனத்தம் தான தனத்தம்     தான தனத்தம் ...... தனதான

காவி யுடுத்துந் தாழ்சடை வைத்துங்     காடுகள் புக்குந் ...... தடுமாறிக் 
காய்கனி துய்த்துங் காயமொ றுத்துங்     காசினி முற்றுந் ...... திரியாதே 
சீவ னொடுக்கம் பூத வொடுக்கம்     தேற வுதிக்கும் ...... பரஞான 
தீப விளக்கங் காண எனக்குன்     சீதள பத்மந் ...... தருவாயே 
பாவ நிறத்தின் தாருக வர்க்கம்     பாழ்பட வுக்ரந் ...... தருவீரா 
பாணிகள் கொட்டும் பேய்கள் பிதற்றும்     பாடலை மெச்சுங் ...... கதிர்வேலா 
தூவிகள் நிற்குஞ் சாலி வளைக்குஞ்     சோலை சிறக்கும் ...... புலியூரா 
சூரர் மிகக்கொண் டாட நடிக்குந்     தோகை நடத்தும் ...... பெருமாளே.

காவித் துணியை உடுத்திக் கொண்டும், தாழ்ந்து தொங்கும் சடையை வளர்த்து வைத்தும், காடுகளில் புகுந்து தடுமாறியும், காய், பழவகைகளைப் புசித்தும், தேகத்தை விரதங்களால் வருத்தியும், உலகம் முழுவதும் திரிந்து அலையாமல், சீவனை* (சிவமயமாக) ஒடுக்குதலும் ஐம்பூதங்களுடைய ஒடுக்குதலும் நன்றாக உண்டாகும்படி, மேலான ஞான ஒளி விளக்கத்தினையான் காணும்படி, எனக்கு உன் குளிர்ந்த தாமரை அடிகளைத் தந்தருள்க. பாவமே உருவெடுத்த தாருகாசுரன் கூட்டத்தினர் பாழ்பட்டொழிய கோபம் காட்டிய வீரனே, போர்க்களத்தில் கைகளைக் கொட்டும் பேய்கள் உளறும் பாடல்களைப் பாராட்டும் ஒளி வேலனே, அன்னங்கள் நிற்கும் வயல்கள் சூழ்ந்த சோலைகள் விளங்கும் புலியூரனே (சிதம்பரேசனே), சூரர்கள் மிகக் கொண்டாடும்படியாக நடனமாடும் மயிலினை நடத்தும் பெருமாளே. 
* சீவன் என்பதில் உள்ள (சீ) இரு மாத்திரை நெடில். அதனை ஒரு மாத்திரை குறில் எழுத்தாக (சி) ஒடுக்கினால், சீவன் சிவன் என்று ஆகிவிடும்.

பாடல் 498 - சிதம்பரம் 
ராகம் - ...; தாளம் -

தானத் தானத் தாந்தன தானன     தானத் தானத் தாந்தன தானன          தானத் தானத் தாந்தன தானன ...... தனதான

கோதிக் கோதிக் கூந்தலி லேமலர்     பாவித் தாகச் சாந்தணி வார்முலை          கோடுத் தானைத் தேன்துவர் வாய்மொழி ...... குயில்போலக் 
கூவிக் கூவிக் காண்டிசை போலவெ     நாணிக் கூனிப் பாய்ந்திடு வார்சிலர்          கூடித் தேறிச் சூழ்ந்திடு வார்பொருள் ...... வருமோவென் 
றோதித் தோளிற் பூந்துகி லால்முலை     மூடிச் சூதிற் றூங்கமி லார்தெரு          வோடித் தேடிச் சோம்பிடு வார்சில ...... விலைமாதர் 
ஓருச் சேரச் சேர்ந்திடு வார்கலி     சூளைக் காரச் சாங்கமி லார்சில          வோரைச் சாகத் தீம்பிடு வார்செய ...... லுறவாமோ 
வேதத் தோனைக் காந்தள்கை யால்தலை     மேல்குட் டாடிப் பாந்தள் சதாமுடி          வீரிட் டாடக் காய்ந்தசு ரார்கள்மெல் ...... விடும்வேலா 
வேளைச் சீறித் தூங்கலொ டேவய     மாவைத் தோலைச் சேர்ந்தணி வாரிட          மீதுற் றாள்பொற் சாம்பவி மாதுமை ...... தருசேயே 
நாதத் தோசைக் காண்டுணை யேசுடர்     மூலத் தோனைத் தூண்டிட வேயுயிர்          நாடிக் காலிற் சேர்ந்திட வேயருள் ...... சுரமானை 
ஞானப் பால்முத் தேன்சுரு பாள்வளி     மாதைக் கானிற் சேர்ந்தணை வாய்சிவ          ஞானப் பூமித் தேன்புலி யூர்மகிழ் ...... பெருமாளே.

ஆய்ந்து ஆய்ந்து கூந்தலில் மலர்களைப் பரப்பிச் சூட்டி, உடலில் சந்தனம் அணிந்துள்ள மார்பு என்னும் மலை போன்ற சேனையுடன், பவளம் போன்ற வாயால் தேன் போன்ற மொழியால் குயில் போலக் கூவி அழைத்து, (ஆடவர்களைக்) கண்டு இசையுடன், பேசும் பேச்சுக்குத் தக்கபடி வெட்கப்பட்டும், (ஒரு சமயம்) குனிந்தும், (மற்றொரு சமயம்) பாய்ந்தும் சில பொது மகளிர் நடிப்பர். ஒன்று கூடியும், தெளிவுற்றும் சூழ்ந்து யோசிப்பவர்களாய், பொருள் கிடைக்குமோ என்று பேசி, தோள் மீதுள்ள அழகிய புடவையால் மார்பை மூடி, வஞ்சனை எண்ணத்துடன் தூக்கம் இல்லாத கண்களுடன் தெருவில் ஓடியும் (வாடிக்கையாளரைத்) தேடியும், சில வேசிகள் சோம்பலாய்க் காலம் கழிப்பர். ஒருமிக்க தரித்திர நிலையைச் சேர்ந்தவர்களாய், வேசிகளாய், நல் ஒழுக்கம் இல்லாதவர்களாய், (தம்மிடம் வரும்) சிலரைச் சாகும் அளவுக்கு கேடு செய்பவர்களாகிய விலைமாதர்களின் தொழில்களில் உறவு கொள்ளுதல் நல்லதா? வேதம் வல்ல பிரமனை காந்தள் மலர் போன்ற கையால் தலையில் குட்டி விளையாடி, ஆதிசேஷனாகிய பாம்பின் நூற்றுக் கணக்கான முடிகள் வேதனைப்பட்டு அசையக் கோபித்து, அசுரர்களின் மேல் வேலாயுதத்தைச் செலுத்தியவனே, மன்மதனைக் கோபித்து, யானையுடன் புலியின் தோலைப் போர்வையாகவும், உடையாகவும் ஒரு சேர அணிந்தவராகிய சிவபெருமானுடைய இடப்பாகத்தில் உறையும் அழகிய சாம்பவியாகிய மாதா, உமை பெற்ற குழந்தையே, உனது திருச்சிலம்போசை முதலிய நாதங்களைக் கேட்பதற்குத் துணை புரியும் தேவனே, மூலாதாரக் கனலைத் தூண்டி எழுப்பி, பிராணவாயு சுழுமுனை* நாடி மார்க்கத்தில் சார்வதற்கு அருள் புரிவாயாக. தேவ லோகத்தில் வளர்ந்த மான் போன்ற தேவயானையையும், ஞானப் பால் போலவும் முப்பழங்களின் தேன் போலவும் இனிய சொரூபத்தை உடையவளும் ஆகிய வள்ளி நாயகியை தினைப் புனக் காட்டிலும் சேர்ந்து தழுவியவனே, சிவஞானப் பூமியாகிய அழகிய புலியூரில் (சிதம்பரத்தில்) மகிழ்ந்து விளங்கும் பெருமாளே. 
* இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு:நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு 'ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள், சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி, ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை, சுழுமுனை முதலியன) உள்ளன.'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம்.'சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது.'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும் ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும்.

பாடல் 499 - சிதம்பரம் 
ராகம் -...; தாளம் -

தனதந்தத் தனனா தனதன     தனதந்தத் தனனா தனதன          தனதந்தத் தனனா தனதன ...... தனதான

சகசம்பக் குடைசூழ் சிவிகைமெல்     மதவின்பத் துடனே பலபணி          தனிதம்பட் டுடையோ டிகல்முர ...... சொலிவீணை 
தவளந்தப் புடனே கிடுகிடு     நடைதம்பட் டமிடோல் பலவொலி          சதளம்பொற் றடிகா ரருமிவை ...... புடைசூழ 
வெகுகும்பத் துடனே பலபடை     கரகஞ்சுற் றிடவே வரஇசை          வெகுசம்பத் துடனே யழகுட ...... னிதமேவும் 
விருமஞ்சித் திரமா மிதுநொடி     மறையும்பொய்ப் பவுஷோ டுழல்வது          விடவும்பர்க் கரிதா மிணையடி ...... தருவாயே 
திகுதந்தித் திகுதோ திகுதிகு     திகுதந்தித் திகுதோ திகுதிகு          திகுர்தஞ்செச் செகசே செககண ...... எனபேரித் 
திமிர்தங்கற் குவடோ டெழுகட     லொலிகொண்டற் றுருவோ டலறிட          திரள்சண்டத் தவுணோர் பொடிபட ...... விடும்வேலா 
அகரம்பச் சுருவோ டொளியுறை     படிகம்பொற் செயலா ளரனரி          அயனண்டர்க் கரியா ளுமையருள் ...... முருகோனே 
அமுர்தம்பொற் குவடோ டிணைமுலை     மதிதுண்டப் புகழ்மான் மகளொடும்          அருள்செம்பொற் புலியூர் மருவிய ...... பெருமாளே.

உலகத்தோர் மெச்சும்படி விருதாகப் பிடிக்கும் குடை சூழும் பல்லக்கின் மேல் மகிழ்ச்சி மிக்க இன்பத்துடனே, பல வேறு ஆபரணங்களுடன் பட்டாடையோடு, மேக கர்ச்சனை போன்ற முரசு வாத்தியம், ஒலி செய்யும் வீணை, வெண் சங்கு, தப்பட்டைப் பறையுடன், கிடுகிடு என்னும் பறையுடன் மக்கள் ஊர்வலம் வரும் ஓசை, தம்பட்டம் என்ற ஒரு வகையான பறை, டோல் என்னும் வாத்தியம் இவை பலவற்றின் ஒலி எழ, மக்கள் கூட்டம், பொன்னாலாகிய தடியை ஏந்திய சேவகர்கள் இவை எல்லாம் பக்கங்களில் சூழ்ந்து வர, நிறைந்த பூரண கும்பங்களுடன் பலவிதமான படைகளும் கரகங்களும் சுற்றியும் வர, கீத வாத்தியங்கள், மிக்க செல்வத்துடனும் அழகுடனும் தினந்தோறும் பொருந்தி வரும் (இந்த ஆடம்பரங்கள்) வெறும் மயக்கமாகும். வெறும் கோலமாம் இது ஒரு நொடிப் பொழுதில் மறைந்து போகும். இத்தகைய பொய்யான ஆடம்பர வாழ்வுடன் அலைச்சல் படுவதை விடுவதற்கு, தேவர்களுக்கும் காண்பதற்கு அரிதான திருவடிகளைத் தந்து அருளுக. திகுதந்தித் திகுதோ திகுதிகு திகுதந்தித் திகுதோ திகுதிகு திகுர்தஞ்செச் செகசே செககண என்று பேரி வாத்தியங்கள் பேரொலி செய்ய, மலைத் திரட்சிகளும் ஏழு கடல்களும் ஒலி எழுப்பி குலைந்து போய் அச்சத்துடன் அலற, கூட்டமாய் கொடுமையுடன் வந்த அசுரர்கள் பொடிபட்டு அழிய வேலாயுதத்தைச் செலுத்தியவனே, அகர எழுத்தைப் போல் முதல்வியாய், பச்சை நிறத்தினளாய், ஒளி பொருந்திய படிகத்தையும் பொன்னையும் போன்றவளாய், (உலகை ஈன்று போகம் அளிக்கும் அருமைச்) செயலினளாய், சிவபெருமானுக்கும், திருமாலுக்கும், பிரமனுக்கும், தேவர்களுக்கும் கிட்டாத அருமை வாய்ந்தவளாயும் உள்ள பார்வதி அருளிய முருகனே, அமுதம் பொதிந்த அழகிய மலை போன்ற இரு மார்பகங்களையும், சந்திரனைப் போன்ற முகத்தையும் கொண்டவளும், புகழ் பெற்ற மான் ஈன்ற மகளுமாகிய வள்ளியுடன் அருள் பாலிக்கும் பொன் அம்பலம் உள்ள சிதம்பரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* விளக்கக் குறிப்புகள்:தனிதம் (இங்கு அன்வயப் படுத்தப்பட்டது) = மேக கர்ச்சனை, தவளம் = மக்கள் கூட்டம்,கிடுகிடு = ஒரு பறை, விருமம் = பிரமை, உரு = அச்சம், சண்டம் = கூட்டம்.

பாடல் 500 - சிதம்பரம் 
ராகம் - ...; தாளம் -

தனனதந்தம் தனனதந்தம்     தனனதந்தம் தானந்தம்          தனனதந்தம் தனனதந்தம்               தனனதந்தம் தானந்தம்                    தனனதந்தம் தனனதந்தம்                         தனனதந்தம் தானந்தம் ...... தனதான

சகுடமுந்துங் கடலடைந்துங்     குளமகிழ்ந்துந் தோய்சங்கங்          கமுகடைந்தண் டமுதகண்டந்               தரளகந்தந் தேர்கஞ்சஞ்                    சரமெனுங்கண் குமிழதுண்டம்                         புருவெனுஞ்செஞ் சாபம்பொன் ...... திகழ்மாதர் 
சலசகெந்தம் புழுகுடன்சண்     பகமணங்கொண் டேய்ரண்டந்          தனகனம்பொன் கிரிவணங்கும்               பொறிபடுஞ்செம் பேர்வந்தண்                    சலனசம்பொன் றிடைபணங்கின்                         கடிதடங்கொண் டாரம்பொன் ...... தொடர்பார்வை 
புகலல்கண்டஞ் சரிகரம்பொன்     சரணபந்தந் தோதிந்தம்          புரமுடன்கிண் கிணிசிலம்பும்               பொலியலம்புந் தாள்ரங்கம்                    புணர்வணைந்தண் டுவரொடுந்தொண்                         டிடர்கிடந்துண் டேர்கொஞ்சுங் ...... கடைநாயேன் 
புகழடைந்துன் கழல்பணிந்தொண்     பொடியணிந்தங் காநந்தம்          புனல்படிந்துண் டவசமிஞ்சுந்               தவசர்சந்தம் போலுந்திண்                    புவனிகண்டின் றடிவணங்குஞ்                         செயல்கொளஞ்செஞ் சீர்செம்பொன் ...... கழல்தாராய் 
திகுடதிந்திந் தகுடதந்தந்     திகுடதிந்திந் தோதிந்தம்          டகுடடண்டண் டிகுடடிண்டிண்               டகுடடண்டண் டோடிண்டிண்                    டிமுடடிண்டிண் டுமுடடுண்டுண்                         டிமுடடிண்டென் றேசங்கம் ...... பலபேரி 
செககணஞ்சஞ் சலிகைபஞ்சம்     பறைமுழங்கும் போரண்டஞ்          சிலையிடிந்துங் கடல்வடிந்தும்               பொடிபறந்துண் டோர்சங்கஞ்                    சிரமுடைந்தண் டவுணரங்கம்                         பிணமலைந்தன் றாடுஞ்செங் ...... கதிர்வேலா 
அகிலஅண்டஞ் சுழலஎங்கும்     பவுரிகொண்டங் காடுங்கொன்          புகழ்விளங்குங் கவுரிபங்கன்               குருவெனுஞ்சிங் காரங்கொண்                    டறுமுகம்பொன் சதிதுலங்குந்                         திருபதங்கந் தாஎன்றென் ...... றமரோர்பால் 
அலர்பொழிந்தங் கரமுகிழ்ந்தொண்     சரணமுங்கொண் டோதந்தம்          புனைகுறம்பெண் சிறுமியங்கம்               புணர்செயங்கொண் டேயம்பொன்                    அமைவிளங்கும் புலிசரம்பொன்                         திருநடங்கொண் டார்கந்தம் ...... பெருமாளே.

நீர்ப்பாசிகள் தோன்றிப் பின்னர் மேற்பட்டுக் கிடக்கும் கடல் போன்ற வாழ்க்கையைக் கண்டு அங்கு உள்ளம் மகிழ்ந்தும், சங்கம் போலவும் கமுகு போலவும் பொருந்தி நெருங்கி, அமுதம் பொதித்த கழுத்து, முத்து மாலை அணிந்துள்ள கழுத்தின் அடிப்பாகம், மலர்ந்த தாமரை, அம்பு இவைகளுக்கு ஒப்பான கண்கள், குமிழம் பூப் போன்ற மூக்கு, புருவம் என்கின்ற செவ்விய வில் ஆகிய பொலிவு விளங்கும் விலைமாதர்கள் அழகு கொண்டவர்களாய் விளங்க, தாமரை மொட்டுப் போன்றதும், நறு மணமுள்ள புனுகு சட்டத்துடன் சண்பகம் இவற்றின் நறு மணம் கொண்டு பொருந்தி, பொன் மலையாகிய மேருவையும் கீழ்ப்படியச் செய்ய வல்லதும் தேமல் பரந்ததுமான இரண்டு கனத்த மார்பகங்கள், பல பேர்வழிகள் வந்து நெருங்கும் அசைவு கொண்டுள்ள மின்னலுக்கு ஒப்பான இடை, பாம்பின் படம் போன்ற பெண்குறி கொண்டவர்கள். அழகிய பொற்காசு (சம்பாதிப்பதிலேயே) நாட்டம் செலுத்தும் பார்வை. சொல்லுவது போல் வெளிப்படுத்த அழகிய கையில் உள்ள பொன் வளையலும், காலில் கட்டப்பட்டுள்ள தோதிந்தம் என ஒலிப்பதுமான பாதசரத்துடன் கிண்கிணியும் சிலம்பும் விளங்கி ஒலிக்கின்ற அடியுடன் நடன மேடையில் சேர்ந்து பொருந்தி நெருங்குபவராகிய பொது மகளிர்க்கு அடிமைத்தொண்டு செய்யும் வேதனையில் பட்டுக் கிடந்து, (அந்த அழகில்) ஈடுபட்டுக் கொஞ்சுகின்ற கீழ்ப்பட்ட நாய் போன்ற நான், புகழ் பெற்று, உனது திருவடியைப் பணிந்து, ஒள்ளிய திரு நீற்றை அணிந்து, அந்தச் சமயத்தில் ஆனந்தக் கண்ணீரில் படிந்து, பரவசம் மேம்படும் தவசிகளுடைய சுகம் போன்று, வலிய இப்பூமியின் நிலையாமையை அறிந்து, இப்பொழுதே உனது திருவடியை வணங்கும் பணியை மேற் கொள்ள அழகிய செவ்விய சீரான செம் பொன்னாலாகிய கழல்கள் அணிந்த திருவடியைத் தந்து அருளுக. திகுட திந்திந் தகுட தந்தந் திகுட திந்திந் தோதிந்தம் டகுட டண்டண் டிகுட டிண்டிண் டகுட டண்டண் டோடிண்டிண் டிமுட டிண்டிண் டுமுட டுண்டுண் டிமுட டிண்டு என்று ஒலிக்கும் சங்கமும் பல பேரிகைகளும், செககணம்சம் என்று ஒலித் திரளை எழுப்பும் சல்லிகை என்ற பெரும் பறையும், ஐந்து* வகையான இசைக் கருவிகளும் பறைகளும் முழங்குகின்ற போர்க் களத்தில், பூமியும் மலைகளும் பொடிபடவும், கடல் வற்றவும், தூள் பறக்கவும், அங்கு இருந்த (அசுரர்கள்) கூட்டத்தின் தலைகள் உடையவும், நெருங்கி வந்த அசுரர்களின உடல் பிணமாகும்படி எதிர்த்துப் பொருதும், அன்று போர் புரிந்த செவ்விய ஒளி வேலை ஏந்தியவனே, எல்லா உலகங்களும் சுழலும்படி எங்கும் வலம்கொண்டு அங்கு நடனம் செய்கின்ற தலைவனே, புகழ் விளங்குகின்ற உமா தேவியைப் பக்கத்தில் கொண்ட சிவபெருமானுக்கு குரு மூர்த்தி என்கின்ற அழகிய பெருமையைப் படைத்து, ஆறு முகங்களையும், தாள ஒத்துக்களை விளக்கும் அழகிய திருவடிகளையும் உடைய கந்தனே என்று தேவர்கள் உன் மீது மலர்களைச் சொரிந்து அழகிய திருக் கைகளைக் கூப்பித் தொழுது ஒள்ளிய திருவடிகளை மனத்தில் கொண்டு புகழ்ந்து நிற்க, அழகினைக் கொண்ட குறச் சிறுமியாகிய வள்ளியின் அங்கங்களை அணைந்து, வெற்றியைக் கொண்ட அழகிய பொன்னம்பலம் விளங்கும் புலீச்சுரம் என்னும் சிதம்பரத்தில் அழகிய திரு நடம் புரியும் சிவபெருமானுக்கு உரியவனும், நிறைந்து பொலிபவனுமான அழகிய கந்தப் பெருமாளே. * ஐந்து வகையான பறைகள்:தோல்கருவி, தொளைக்கருவி, நரப்புக் கருவி, மிடற்றுக் கருவி, கஞ்சக் கருவி.

by Swathi   on 28 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.