LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- அருணகிரிநாதர் நூல்கள்

திருப்புகழ்-பாடல்-[551 -600]

பாடல் 551 - திருசிராப்பள்ளி 
ராகம் - ...; தாளம் -
தனதன தந்தத் தனதன தந்தத்
     தனதன தந்தத் ...... தனதான
இளையவர் நெஞ்சத் தளையமெ னுஞ்சிற்
     றிடைகொடு வஞ்சிக் ...... கொடிபோல்வார் 
இணையடி கும்பிட் டணியல்குல் பம்பித்
     திதழமு துந்துய்த் ...... தணியாரக் 
களபசு கந்தப் புளகித இன்பக்
     கனதன கும்பத் ...... திடைமூழ்குங் 
கலவியை நிந்தித் திலகிய நின்பொற்
     கழல்தொழு மன்பைத் ...... தருவாயே 
தளர்வறு மன்பர்க் குளமெனு மன்றிற்
     சதுமறை சந்தத் ...... தொடுபாடத் 
தரிகிட தந்தத் திரிகிட திந்தித்
     தகுர்தியெ னுங்கொட் ...... டுடனாடித் 
தெளிவுற வந்துற் றொளிர்சிவ னன்பிற்
     சிறுவஅ லங்கற் ...... றிருமார்பா 
செழுமறை யஞ்சொற் பரிபுர சண்டத்
     திரிசிர குன்றப் ...... பெருமாளே.
வாலிபர்களுடைய மனதுக்கு விலங்கு என்று சொல்லத் தக்க சிற்றிடையைக் கொண்ட வஞ்சிக் கொடியைப் போன்ற பொது மகளிருடைய பாதங்களை வணங்கி, அழகிய பெண்குறியைக் கிளர்ச்சியுறச் செய்து, வாய் இதழ் அமுதைப் பருகி அனுபவித்து, அணியான முத்து மாலையும் கலவைச் சாந்தின் நறு மணமும் புளகிதம் கொண்ட இன்பம் தருவதுமான கனத்த மார்பகக் குடத்தின் மத்தியில் முழுகும் புணர்ச்சி செய்வதை வெறுத்துத் தள்ளி, விளங்குகின்ற உனது அழகிய திருவடியை வணங்கும் அன்பைத் தந்தருளுக. சோர்வு இல்லாத அடியார்களுடைய மனம் என்னும் நடன சாலையில் நான்கு வேதங்களும் சந்தத்துடன் முறையாகப் பாட, தரிகிட தந்தத் திரிகிட திந்தித் தகுர்தி என்னும் கொட்டு முழக்கத்துடன் நடனம் செய்து, தெளிவு பெறும் வண்ணம் வந்து இருந்து விளங்கும் சிவபெருமானுடைய அன்புக்கு உரிய குழந்தையே, மாலை அணிந்த அழகிய மார்பனே, செழுமையான மறைகளை அழகாகச் ஒலிக்கின்ற சிலம்பை அணிந்தவனே, வலிமை வாய்ந்த திரிசிராப்பள்ளி மலையில் உறையும் பெருமாளே.
பாடல் 552 - திருசிராப்பள்ளி 
ராகம் - ...; தாளம் -
தனதன தத்தம் தனதன தத்தம்
     தனதன தத்தம் ...... தனதான
பகலவ னொக்குங் கனவிய ரத்னம்
     பவளவெண் முத்தந் ...... திரமாகப் 
பயிலமு லைக்குன் றுடையவர் சுற்றம்
     பரிவென வைக்கும் ...... பணவாசை 
அகமகிழ் துட்டன் பகிடிம ருட்கொண்
     டழியும வத்தன் ...... குணவீனன் 
அறிவிலி சற்றும் பொறையிலி பெற்றுண்
     டலைதலொ ழித்தென் ...... றருள்வாயே 
சகலரு மெச்சும் பரிமள பத்மந்
     தருணப தத்திண் ...... சுரலோகத் 
தலைவர்ம கட்குங் குறவர்ம கட்குந்
     தழுவஅ ணைக்குந் ...... திருமார்பா 
செகதல மெச்சும் புகழ்வய லிக்குந்
     திகுதிகெ னெப்பொங் ...... கியவோசை 
திமிலைத விற்றுந் துமிகள்மு ழக்குஞ்
     சிரகிரி யிற்கும் ...... பெருமாளே.
சூரியனைப் போன்று ஒளி வீசும் பெருமை வாய்ந்த ரத்தினம், பவளம் வெண்முத்து மாலைகள் நன்றாக நெருங்கி விளங்க மலை போன்ற மார்பகங்களை உடைய விலைமாதர்களின் கூட்டமே அன்புக்கு இடம் என வைக்கின்ற பண ஆசையில் உள்ளம் மகிழ்கின்ற துஷ்டன் நான். வெளி வேஷக்காரன். மோக மயக்கம் கொண்டு அழிகின்ற வீணன். இழி குணத்தோன். மூடன். கொஞ்சமும் பொறுமை இல்லாதவன். பொருள் தேடிப் பெற்றும், உண்டும் அவ்வாறு நான் அலைதலை ஒழித்து எப்போது அருள்வாய்? யாவரும் மெச்சும், நறு மணம் வீசும், தாமரை போன்ற இளமை வாய்ந்த திருவடிகளை உடையவனே, திண்ணிய தேவலோகத் தலைவரான இந்திரனுடைய மகள் தேவயானைக்கும் வேடர்கள் பெண்ணாகிய வள்ளிக்கும் தழுவ அணைக்கின்ற அழகிய மார்பை உடையவனே, பூவுலகம் போற்றுகின்ற புகழ் பெற்ற வயலூரிலும், திகுதிகு என்று பொங்கி எழும் ஒலி கொண்ட திமிலை, தவில், துந்துபிகளாகிய வாத்தியங்கள் முழங்கும் திரிசிரா மலையிலும் விளங்கும் பெருமாளே.
பாடல் 553 - திருசிராப்பள்ளி 
ராகம் -...; தாளம் -
தனதனன தந்த தனதனன தந்த
     தனதனன தந்த ...... தனதான
ஒருவரொடு கண்கள் ஒருவரொடு கொங்கை
     ஒருவரொடு செங்கை ...... யுறவாடி 
ஒருவரொடு சிந்தை ஒருவரொடு நிந்தை
     ஒருவரொடி ரண்டு ...... முரையாரை 
மருவமிக அன்பு பெருகவுள தென்று
     மனநினையு மிந்த ...... மருள்தீர 
வனசமென வண்டு தனதனன வென்று
     மருவுசர ணங்க ...... ளருளாயோ 
அரவமெதிர் கண்டு நடுநடுந டுங்க
     அடலிடுப்ர சண்ட ...... மயில்வீரா 
அமரர்முத லன்பர் முநிவர்கள்வ ணங்கி
     அடிதொழவி ளங்கு ...... வயலூரா 
திருவையொரு பங்கர் கமலமலர் வந்த
     திசைமுகன்ம கிழ்ந்த ...... பெருமானார் 
திகுதகுதி யென்று நடமிட முழங்கு
     த்ரிசிரகிரி வந்த ...... பெருமாளே.
ஒருவரோடு கண்களைக் கொண்டும், ஒருவரோடு மார்பகங்களாலும், ஒருவரோடு கைகளைக் கொண்டும் உறவாடி, ஒருவரை மனத்தில் வைத்து விரும்பியும், ஒருவரை இகழ்ந்து பேசி வெறுத்தும், ஒருவரோடு விருப்பு, வெறுப்பு இரண்டும் காட்டாமல் மெளனம் சாதித்தும் இருக்கின்ற விலைமாதரை அணைவதற்கு மிக்க காதல் பெருக உள்ளது என்று மனத்தில் நினைக்கின்ற இத்தகைய மோக மயக்கம் நீங்க, தாமரை என்று நினைத்து வண்டுகள் தனதனன என்ற ஒலியுடன் சுற்றி வருகின்ற உன்னுடைய திருவடிகளை அருளமாட்டாயா? பாம்பு தன்னை எதிரில் கண்டதும் மிகவும் நடுநடுங்கும்படி தனது வலிமையைக் காட்டும் கடுமை வாய்ந்த மயில்மீது ஏறும் வீரனே, தேவர்கள் முதல் அடியார்களும், முனிவர்களும் உன்னை வணங்கி உனது திருவடியைத் தொழ விளங்குகின்ற வயலூரில் வாழ்பவனே, லக்ஷ்மியை ஒரு பாகத்தில் உடைய திருமாலும், தாமரை மலரில் வீற்றிருக்கும் நான்முகன் பிரமனும் மகிழும்படியாக சிவபெருமான் திகுதகுதி என்று நடனமிட, முழவு வாத்தியங்கள் முழங்குகின்ற திரிசிராப்பள்ளியில் எழுந்தருளிய பெருமாளே. 
பாடல் 554 - திருசிராப்பள்ளி 
ராகம் - ...; தாளம் -
தனன தாத்தன தனன தாத்தன
     தானா தானா தானா தானா ...... தனதான
குமுத வாய்க்கனி யமுத வாக்கினர்
     கோலே வேலே சேலே போலே ...... அழகான 
குழைகள் தாக்கிய விழிக ளாற்களி
     கூரா வீறா தீரா மாலா ...... யவரோடே 
உமது தோட்களி லெமது வேட்கையை
     ஓ¡£ர் பா¡£ர் வா¡£ர் சோ£ர் ...... எனவேநின் 
றுடைதொ டாப்பண மிடைபொ றாத்தன
     மூடே வீழ்வே னீடே றாதே ...... யுழல்வேனோ 
தமர வாக்கிய அமரர் வாழ்த்திய
     தாதா வேமா ஞாதா வேதோ ...... கையிலேறீ 
சயில நாட்டிறை வயலி நாட்டிறை
     சாவா மூவா மேவா நீவா ...... இளையோனே 
திமிர ராக்கதர் சமர வேற்கர
     தீரா வீரா நேரா தோரா ...... உமைபாலா 
திரிசி ராப்பளி மலையின் மேற்றிகழ்
     தேவே கோவே வேளே வானோர் ...... பெருமாளே.
குமுத மலர் போன்ற வாயினின்றும், பழம் போலவும் அமுதம் போலவும் (இனிமை தரும்) பேச்சுக்களை உடையவர்கள். அம்பு, வேல், சேல் மீன் இவற்றைப் போல அழகான, குண்டலங்கள் தாக்குகின்ற, கண்களால், நான் மகிழ்ச்சி மிகுந்து பெருமையுடன், முடிவு இல்லாத மோகத்துடன் அந்தப் பொது மகளிரோடு உம்முடைய தோள்களில் எமக்கு உள்ள ஆசையை நீர் அறிய மாட்டீரோ, என்னைப் பார்க்க மாட்டீரோ, எம்மிடம் வரமாட்டீரோ, எம்மோடு சேர மாட்டீரோ என்றெல்லாம் கூறி நின்று, (அவர்களுடைய) ஆடையைத் தொட்டும், அவர்களுடைய பெண்குறி இடத்தும், இடை தாங்க முடியாத கனமுடைய மார்பகங்களின் இடத்தும் விழுகின்ற நான், ஈடேறும் வழியைக் காணாமல் இவ்வாறு திரிவேனோ? ஒலி செய்யும் (துதிச்) சொற்களுடனே தேவர்கள் வாழ்த்துகின்ற பெரிய வள்ளலே, சிறந்த ஞானவானே, தோகை உடைய மயில் வாகனனே, மலை நாட்டுக்குத் தலைவனே, வயலூர் நாட்டுக்குத் தலைவனே, இறப்பும் மூப்பும் இல்லாதவனே, அருள நீ வருக இளைய தேவனே, இருள் போல் கரிய அசுரர்களுடன் போர் செய்ய வல்ல வேலாயுதம் ஏந்திய கையனே, தீரனே, வீரனே, நேர்மை உள்ளவனே, தோல்வி இல்லாதவனே, உமா தேவியின் குழந்தையே, திரிசிராப்பள்ளி மலையின் மேல் விளங்கும் தேவனே, அரசே, முருகவேளே, தேவர்கள் பெருமாளே. 
பாடல் 555 - திருசிராப்பள்ளி 
ராகம் - ஆனந்த பைரவி - மத்யம ஸ்ருதி ; தாளம் - அங்கதாளம் - 7 1/2 
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தனன தானன தத்தன தந்தன
     தனன தானன தத்தன தந்தன
          தனன தானன தத்தன தந்தன ...... தனதான
குவளை பூசல்வி ளைத்திடு மங்கயல்
     கடுவ தாமெனு மைக்கண்ம டந்தையர்
          குமுத வாயமு தத்தைநு கர்ந்திசை ...... பொருகாடை 
குயில்பு றாமயில் குக்கில்சு ரும்பினம்
     வனப தாயுத மொக்குமெ னும்படி
          குரல்வி டாஇரு பொற்குட மும்புள ...... கிதமாகப் 
பவள ரேகைப டைத்தத ரங்குறி
     யுறவி யாளப டத்தைய ணைந்துகை
          பரிச தாடன மெய்க்கர ணங்களின் ...... மதனூலின் 
படியி லேசெய்து ருக்கிமு யங்கியெ
     அவச மாய்வட பத்ரநெ டுஞ்சுழி
          படியு மோகச முத்ரம ழுந்துத ...... லொழிவேனோ 
தவள ரூபச ரச்சுதி யிந்திரை
     ரதிபு லோமசை க்ருத்திகை ரம்பையர்
          சமுக சேவித துர்க்கைப யங்கரி ...... புவநேசை 
சகல காரணி சத்திப ரம்பரி
     யிமய பார்வதி ருத்ரிநி ரஞ்சனி
          சமய நாயகி நிஷ்களி குண்டலி ...... யெமதாயி 
சிவைம நோமணி சிற்சுக சுந்தரி
     கவுரி வேதவி தக்ஷணி யம்பிகை
          த்ரிபுரை யாமளை யற்பொடு தந்தருள் ...... முருகோனே 
சிகர கோபுர சித்திர மண்டப
     மகர தோரண ரத்நஅ லங்க்ருத
          திரிசி ராமலை அப்பர்வ ணங்கிய ...... பெருமாளே.
குவளை மலர் போன்றும், போர் புரியும் அழகிய கயல் மீன் போன்றும், விஷம் போன்றும் உள்ள மை தீட்டிய கண்களை உடைய (விலை) மாதர்களின் குமுதம் போன்ற வாயிதழ் அமுதத்தைப் பருகி, ஒலி பொருந்தும் காடை, குயில், புறா, மயில், செம்போத்து, வண்டு, அன்னப்பறவை, அழகிய கோழி இவைகளின் குரலை நிகர்க்கும் என்று சொல்லும்படியான தங்கள் குரலைக் காட்ட, இரண்டு அழகிய மார்பகங்களும் இன்பத்தில் சிலிர்க்க, பவள ரேகை போன்ற வாயிதழ் குறி (உடலெங்கும்) உண்டாக, பாம்பின் படம் போன்ற பெண்குறியை அணைந்து, கைகளால் தொட்டும் தட்டியும், உடலால் செய்யும் தொழிலை காம சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட முறைப்படி செய்து, உருக்கிக் கூடி தன்வசம் இழந்து, ஆலின் இலை போன்ற வயிற்றின் தொப்புள் சுழலிலே முழுகுகின்ற காமக் கடலில் அழுந்துதலைத் தவிரேனோ? வெண்ணிறம் கொண்ட சரஸ்வதி, லக்ஷ்மி, ரதி, இந்திராணி, கிருத்திகை மாதர் அறுவர், அரம்பையர்கள் ஆகியோரால் வணங்கப்படும் துர்க்கா தேவி, பயங்கரி, புவனேஸ்வரி, எல்லா காரியங்களுக்கும் காரணமாக இருப்பவள், சக்தி, முழு முதலாகிய தேவி, இமய மலை அரசனின் மகளான பார்வதி, ருத்ரி, மாசற்றவள், சமயங்களுக்குத் தலைவி, உருவம் இல்லாதவள், கிரியா சக்தியானவள், எம் தாய், சிவனின் தேவி, மனத்தை ஞான நிலைக்கு எழுப்புபவள், அறிவு ரூப ஆனந்த அழகி, கெளரி, வேதத்தில் சிறப்பாக எடுத்து ஓதப்பட்டவள், அம்பிகை, திரிபுரங்களை எரித்தவள், சியாமள நிறம் கொண்டவள் (ஆகிய பார்வதி) அன்புடன் ஈன்றருளிய முருகனே, மலை உச்சியும், அழகிய மண்டபங்களும், மகர மீனின் வடிவமைந்த அலங்காரத் தோரணங்களும், ரத்ன சிங்காரங்களும் நிரம்பிய திரிசிரா மலையில் எழுந்தருளியுள்ள தந்தை சிவபெருமான் வணங்கிய பெருமாளே. 
பாடல் 556 - திருசிராப்பள்ளி 
ராகம் - ஸிந்து பைரவி; தாளம் - அங்கதாளம் - 6 
தகிட-1 1/2, தகதிமி-2, தகிட-1 1/2, தக-1
தத்த தானா தனாதன தத்த தானா தனாதன
     தத்த தானா தனாதன ...... தந்ததான
சத்தி பாணீ நமோநம முத்தி ஞானீ நமோநம
     தத்வ வாதீ நமோநம ...... விந்துநாத 
சத்து ரூபா நமோநம ரத்ந தீபா நமோநம
     தற்ப்ர தாபா நமோநம ...... என்றுபாடும் 
பத்தி பூணா மலேயுல கத்தின் மானார் சவாதகில்
     பச்சை பாடீர பூஷித ...... கொங்கைமேல்வீழ் 
பட்டி மாடான நானுனை விட்டிரா மேயு லோகித
     பத்ம சீர்பாத நீயினி ...... வந்துதாராய் 
அத்ர தேவா யுதாசுர ருக்ர சேனா பதீசுசி
     யர்க்ய சோமாசி யாகுரு ...... சம்ப்ரதாயா 
அர்ச்ச னாவாக னாவய லிக்குள் வாழ்நாய காபுய
     அக்ஷ மாலா தராகுற ...... மங்கைகோவே 
சித்ர கோலா கலாவிர லக்ஷ்மி சாதா ரதாபல
     திக்கு பாலா சிவாகம ...... தந்த்ரபோதா 
சிட்ட நாதா சிராமலை யப்பர் ஸ்வாமீ மகாவ்ருத
     தெர்ப்பை யாசார வேதியர் ...... தம்பிரானே.
ஞான சக்தி வேலைக் கரத்தில் ஏந்தியவனே, போற்றி போற்றி, முக்தியைத் தரவல்ல ஞான பண்டிதா, போற்றி போற்றி, தத்துவங்களுக்கு முதல்வனாய் நிற்பவனே, போற்றி போற்றி, சிவதத்துவமாகிய விந்து, சக்தி தத்துவமாகிய நாதம் இரண்டிற்கும் சத்தான உண்மை உருவம் வாய்த்தவனே, போற்றி போற்றி, மணிவிளக்கைப் போல் ஒளிர்பவனே, போற்றி போற்றி, தனக்குத் தானே நிகரான கீர்த்தியை உடையவனே, போற்றி போற்றி, என்று பாடித் துதிக்கும் பக்தியை மேற்கொள்ளாமல், இவ்வுலகிலே மான் போன்ற பெண்களது ஜவ்வாது, அகிற்சாந்து, பச்சைக்கற்பூரம், சந்தனம் ஆகிய நறுமணக் கலவையைப் பூசிய மார்பிலே வீழ்ந்து கிடக்கின்ற திருட்டு மாடாகிய நான் உந்தனை விட்டுப் பிரியாமல் இருக்க, உலகிற்கெல்லாம் நலம்தரும் தாமரை போன்ற உன்சிறந்த பாதங்களை இனியாகிலும் நீ என்முன் எழுந்தருளி வந்து தந்தருள்வாயாக. அஸ்திர (ஆயுத) தேவதையாகிய வேலாயுதத்தை ஏந்தியவனே, தேவர்களுக்கு மிக உக்கிரமான சேனாதிபதியே, தூய்மையாக மந்திர நீரோடு சோமரசத்தைப் பிழிந்து செய்யப்படும் யாகத்தில் குரு மூர்த்தியாக தொன்றுதொட்டு நின்று வருபவனே, அர்ச்சனைகளிலும், மந்திரத்தால் வரவழைக்கப்படுவதிலும் வந்தருள்வோனே, வயலூரில் வாழ்கின்ற எங்கள் நாயகனே, திருப்புயங்களில் ருத்திராட்ச மாலைகளை அணிந்துள்ளவனே, குறப் பெண் வள்ளியின் கணவனே, அழகும் ஆடம்பரமும் உடையவனே, வீர லக்ஷ்மியாகிய பார்வதிக்குப் பிறந்தவனே (ஜாதா), இனிமை வாய்ந்தவனே (ரஸா), திசைகள் பலவற்றையும் காப்பவனே, சிவ தத்துவத்தை விளக்கும் ஆகம நூல்களை உபதேசிக்கும் குருவே, ஞானிகளுக்கெல்லாம் தலைவனே, திரிசிராமலையின் அப்பனாகிய தாயுமானவருக்கும் குரு ஸ்வாமியே, சிறந்த விரதங்களோடும், தர்ப்பைப் புல்லுடனும், ஆசாரத்துடனும் உள்ள அந்தணர் அனைவருக்கும் தலைவனே. 
பாடல் 557 - திருசிராப்பள்ளி 
ராகம் - மோஹனம்; தாளம் - திஸ்ர ஏகம் - 3
தனதனதனத் ...... தனதான
     தனதனதனத் ...... தனதான
பகலிரவினிற் ...... றடுமாறா
     பதிகுருவெனத் ...... தெளிபோத 
ரகசியமுரைத் ...... தநுபூதி
     ரதநிலைதனைத் ...... தருவாயே 
இகபரமதற் ...... கிறையோனே
     இயலிசையின்முத் ...... தமிழோனே 
சகசிரகிப் ...... பதிவேளே
     சரவணபவப் ...... பெருமாளே.
நினைவு, மறப்பு என்ற நிலைகளிலே தடுமாறாது, முருகனே குருநாதன் என்று தெளிகின்ற ஞானத்தின் பரம ரகசியத்தை அடியேனுக்கு உபதேசித்து, ஒன்றுபடும் ரசமான பேரின்ப நிலையினைத் தந்தருள்வாயாக. இம்மைக்கும் மறுமைக்கும் தலைவனாக விளங்குபவனே, இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழுக்கும் உரியவனே, இவ்வுலகில் மேலான திருச்சிரா மலையின் செவ்வேளே, சரவணபவப் பரம்பொருளே. 
* சிரகிரியை சென்னிமலை என்றும் கூறுவர்.சென்னிமலை ஈரோட்டிற்கு அப்பால் ஈங்கூர் ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள தலம்.
பாடல் 558 - திருசிராப்பள்ளி 
ராகம் - பெஹாக்; தாளம் - ஆதி
தனனத் தனனத் தனனத் தனனத்
     தனனத் தனனத் தனனத் தனனத்
          தனனத் தனனத் தனனத் தனனத் ...... தனதான
புவனத் தொருபொற் றொடிசிற் றுதரக்
     கருவிற் பவமுற் றுவிதிப் படியிற்
          புணர்துக் கசுகப் பயில்வுற் றுமரித் ...... திடிலாவி 
புரியட் டகமிட் டதுகட் டியிறுக்
     கடிகுத் தெனஅச் சம்விளைத் தலறப்
          புரள்வித் துவருத் திமணற் சொரிவித் ...... தனலூடே 
தவனப் படவிட் டுயிர்செக் கிலரைத்
     தணிபற் களுதிர்த் தெரிசெப் புருவைத்
          தழுவப் பணிமுட் களில்கட் டியிசித் ...... திடவாய்கண் 
சலனப் படஎற் றியிறைச் சியறுத்
     தயில்வித் துமுரித் துநெரித் துளையத்
          தளையிட் டுவருத் தும்யமப் ரகரத் ...... துயர்தீராய் 
பவனத் தையொடுக் குமனக் கவலைப்
     ப்ரமையற் றைவகைப் புலனிற் கடிதிற்
          படரிச் சையொழித் ததவச் சரியைக் ...... க்ரியையோகர் 
பரிபக் குவர்நிட் டைநிவிர்த் தியினிற்
     பரிசுத் தர்விரத் தர்கருத் ததனிற்
          பரவப் படுசெய்ப் பதியிற் பரமக் ...... குருநாதா 
சிவனுத் தமனித் தவுருத் திரன்முக்
     கணனக் கன்மழுக் கரனுக் ரரணத்
          த்ரிபுரத் தையெரித் தருள்சிற் குணனிற் ...... குணனாதி 
செகவித் தனிசப் பொருள்சிற் பரனற்
     புதனொப் பிலியுற் பவபத் மதடத்
          த்ரிசிரப் புரவெற் புறைசற் குமரப் ...... பெருமாளே.
இந்தப் பூமியில் ஓர் அழகிய பெண்ணின் சிறிய வயிற்றில் கருவிலே தோற்றம் ஏற்பட்டு, விதியின் ஆட்சிப்படியே கூடுகின்ற துக்கத்தையும் சுகத்தையும் அநுபவித்து, இறந்தபின் உயிரை புரி அஷ்டகம்* என்ற சூக்ஷ்ம தேகத்தில் புகுத்தி, (யமலோகத்தில்) அந்த தேகத்தைக் கட்டி, அடி, குத்து என்றெல்லாம் பயத்தை உண்டுபண்ணி, அலறி அழும்படி புரட்டி எடுத்து, வருத்தப்படுத்தி, சூடான மணலை உடலெல்லாம் சொரிவித்து, நெருப்புக்குள்ளே அவ்வுடலைச் சூடேறும்படியாக விட்டு, உயிரைச் செக்கில் இட்டுப் பிழிய அரைத்து, வரிசையாக உள்ள பற்களை தட்டி உதிர்த்து, எரிகின்ற செம்பாலான உருவம் ஒன்றைத் தழுவும்படிச் செய்து, முட்களில் கட்டி இழுத்திட, வாயும் கண்ணும் கலங்கி அசையும்படியாக உதைத்து, மாமிசத்தை அறுத்து உண்ணும்படியாகச் செய்து, எலும்பை ஒடித்து, நொறுக்கி, வலிக்கும்படியாக காலில் விலங்கு பூட்டி, துன்பப்படுத்தும் யம தண்டனை என்ற துயரத்தை நீக்கி அருள்வாயாக. பிராணவாயுவை ஒடுக்கும் மனக்கவலையாம் மயக்கத்தை ஒழித்து, ஐந்து புலன்களில் வேகமாகச் செல்கின்ற ஆசையை நீத்த, தவசீலர்களான சரியையாளர்கள் (*1), கிரியையாளர்கள் (*2), யோகிகள் (*3), ஞான (*4) முதிர்ச்சி கொண்டவர்கள், தியானம், துறவு மேற்கொண்ட பரிசுத்தர்கள், பற்றை நீக்கியவர்கள் இவர்களின் கருத்திலே வைத்துப் போற்றப்படும், வயலூர்ப்பதியில் வாழும் குருநாதனே, பரமனுக்கும் குருநாதனே, சிவபிரான், உத்தமன், அழிவில்லாத ருத்திரன், முக்கண்ணன், திகம்பரன் (திக்குக்களையே ஆடையாகப் புனைந்தவன்), மழு ஏந்திய கரத்தன், கடுமையான போர்க்களத்தில் திரிபுரத்தை எரித்தருளிய ஞான குணத்தவன், குணமில்லாதவன், ஆதி மூர்த்தி, உலகுக்கு வித்தான மூலப் பொருளானவன், உண்மைப் பொருளானவன், அறிவுக்கு எட்டாதவன், அற்புதன், தனக்கு உவமை இல்லாதவனாகிய சிவபெருமானிடத்தே தோன்றியவனே, தாமரைத் தடாகங்கள் உள்ள திரிசிராப்பள்ளி மலை மேல் அமரும் நல்ல குமரப் பெருமாளே. 
* புரி அஷ்டகம்: ஐம்புலன்களான சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகியவையோடு மனம், புத்தி, அகங்காரம் மூன்றும் சேர்ந்து ஆக மொத்தம் எட்டும் கூடிய தேகம். யமதூதர்கள் கொண்டு போகும் உடல் இதுதான்.
** 4 பக்தி மார்க்கங்கள் பின்வருமாறு:1. சரியை: திருக்கோயிலில் அலகு இடுதல், மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம் வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல், இறைவனை வாழ்த்துதல், திருவேடம் கண்டு பணிதல். இது 'தாத மார்க்கம் - சாலோகம்'.2. கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்தியக் காரியம் செய்தல். இது 'புத்ர மார்க்கம் - சாமீபம்'.3. யோகம்: புலன்களை அடக்கிப் பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி, முழு ஜோதியை நினைத்திருத்தல். இது 'சக மார்க்கம் (தோழ நெறி) - சாரூபம்'.4. ஞானம்: புறத் தொழில் அகத் தொழில் இன்றி, அறிவு மாத்திரத்தாலே செய்யும் வழிபாடு ஞானம். இது 'சன்மார்க்கம் - சாயுஜ்யம்'. சிவஞான சித்தியார் சூத்திரம்.
பாடல் 559 - திருசிராப்பள்ளி 
ராகம் - ...; தாளம் -
தனன தாத்தன தானா தானன
     தனன தாத்தன தானா தானன
          தனன தாத்தன தானா தானன ...... தந்ததான
பொருளின் மேற்ப்ரிய காமா காரிகள்
     பரிவு போற்புணர் க்¡£டா பீடிகள்
          புருஷர் கோட்டியில் நாணா மோடிகள் ...... கொங்கைமேலே 
புடைவை போட்டிடு மாயா ரூபிகள்
     மிடிய ராக்குபொ லாமூ தேவிகள்
          புலையர் மாட்டும றாதே கூடிகள் ...... நெஞ்சமாயம் 
கருதொ ணாப்பல கோடா கோடிகள்
     விரகி னாற்பலர் மேல்வீழ் வீணிகள்
          கலவி சாத்திர நூலே யோதிகள் ...... தங்களாசைக் 
கவிகள் கூப்பிடு மோயா மாரிகள்
     அவச மாக்கிடு பேய்நீ ரூணிகள்
          கருணை நோக்கமி லாமா பாவிக ...... ளின்பமாமோ 
குருக டாக்ஷக லாவே தாகம
     பரம வாக்கிய ஞானா சாரிய
          குறைவு தீர்த்தருள் ஸ்வாமி கார்முக ...... வன்பரான 
கொடிய வேட்டுவர் கோகோ கோவென
     மடிய நீட்டிய கூர்வே லாயுத
          குருகு க்ஷேத்ரபு ரேசா வாசுகி ...... அஞ்சமாறும் 
செருப ராக்ரம கேகே வாகன
     சரவ ணோற்பவ மாலா லாளித
          திரள்பு யாத்திரி யீரா றாகிய ...... கந்தவேளே 
சிகர தீர்க்கம காசீ கோபுர
     முகச டாக்கர சேணா டாக்ருத
          திரிசி ராப்பளி வாழ்வே தேவர்கள் ...... தம்பிரானே.
பொருளின் மேல் ஆசை கொண்ட காமமே உருவமாக ஆனவர்கள். அன்பு உடையவர்கள் போலச் சேரும் காம லீலைக்கு இருப்பிடம் ஆனவர்கள். ஆண்கள் கூட்டத்தில் வெட்கப்படாத செருக்கினர். மார்பின் மேல் புடைவையை எடுத்தெடுத்துப் போடும் மாயா உருவத்தினர். (தம்மிடம் வருவரை) வறியராக்குகின்ற பொல்லாத மூதேவிகள். கீழ் மக்களிடத்தும் மறுக்காமல் சேர்பவர்கள். (தமது) மனதில் வஞ்சனை (எண்ணங்கள்) கணக்கிட முடியாத பல கோடிக் கணக்காக உடையவர்கள். தந்திரத்தால் பலர் மேல் விழுகின்ற பயனற்றவர்கள். கலவி சாத்திர நூல்களையே படிப்பவர்கள். தங்களுக்கு ஆசையான பாடல்களைப் பாடும் கவிகளை அழைப்பதில் ஓயாத மழை போன்றவர்கள். தன் வசத்தை இழக்கச் செய்கின்ற கள்ளை உண்பவர்கள். இரக்கமுள்ள பார்வையே இல்லாத பெரிய பாவிகளாகிய விலை மகளிருடன் கூடுதல் நல்லதாகுமோ? குரு மூர்த்தியாகக் கடைக்கண் வைத்து அருள வல்லவனே, வேதம் ஆகமம் ஆகிய சிறப்பான மொழிகளை உபதேசிக்க வல்ல ஞான போதகனே, எனது குறைகள் எல்லாவற்றையும் நீக்க வல்ல ஸ்வாமியே, வில்லை ஏந்திய வலிமையாளரான பொல்லாத வேடர்கள் கோகோவென்று கூச்சலிட்டு இறக்கும்படி செலுத்திய கூர்மையான வேலாயுதனே, கோழியூர் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் ஈசனே, வாசுகி என்னும் பாம்பு பயப்படும்படி எதிர்த்து போர் செய்யும் வலிமை பொருந்திய மயிலை வாகனமாக உடையவனே, சரவணப் பொய்கையில் தோன்றியவனே, பெருமையால் அழகு பெற்ற திரண்ட புய மலைகள் பன்னிரண்டு கொண்ட கந்த வேளே, சிகரங்கள் நீண்ட பெரிய விசேஷமான கோபுர வாயிலில் வீற்றிருக்கும் (சரவணபவ என்ற) ஆறு அட்சரங்களுக்கு உரியவனே, விண்ணுலகம் போல் உயர்ந்த திரிசிராப்பள்ளியில் வீற்றிருப்பவனே, தேவர்கள் தம்பிரானே. 
* குருகு த்ரபுரம் = கோழியூர் (உறையூர்). குருகு = கோழி.இங்கு யானையைக் கோழி வென்றமையால் இப்பெயர் வந்தது.திருச்சிக்கு அருகில் உள்ளது.
** கேகயம் = மயில்.
பாடல் 560 - திருசிராப்பள்ளி 
ராகம் - ...; தாளம் -
தனதன தந்த தனதன தந்த
     தனதன தந்த ...... தனதான
பொருள்கவர் சிந்தை அரிவையர் தங்கள்
     புழுககில் சந்து ...... பனிநீர்தோய் 
புளகித கொங்கை யிளகவ டங்கள்
     புரளம ருங்கி ...... லுடைசோர 
இருள்வளர் கொண்டை சரியஇ சைந்து
     இணைதரு பங்க ...... அநுராகத் 
திரிதலொ ழிந்து மனதுக சிந்து
     னிணையடி யென்று ...... புகழ்வேனோ 
மருள்கொடு சென்று பரிவுட னன்று
     மலையில்வி ளைந்த ...... தினைகாவல் 
மயிலை மணந்த அயிலவ எங்கள்
     வயலியில் வந்த ...... முருகோனே 
தெருளுறு மன்பர் பரவ விளங்கு
     திரிசிர குன்றில் ...... முதனாளில் 
தெரிய இருந்த பெரியவர் தந்த
     சிறியவ அண்டர் ...... பெருமாளே.
பொருளை அபகரிப்பதையே மனத்தில் கொண்ட (விலை) மாதர்களுடைய, புனுகு, அகில், சந்தனம், பன்னீர் ஆகிய வாசனைப் பண்டங்கள் தோய்ந்த புளகாங்கிதம் கொண்ட மார்பகங்கள் குழைந்து அசைய, முத்து மாலைகள் புரள, இடுப்பில் ஆடை நெகிழ, இருள் நிறைந்த (கரிய) கூந்தல் அவிழ்ந்து புரள, மனம் ஒத்து இணைகின்ற குற்றத்துக்கு இடமான காமப் பற்றில் அகப்படும் கெடுதல் நீங்கி, என் மனம் நெகிழ்ந்து உருகி உனது திருவடிகளை என்று நான் புகழ்வேனோ? மோகத்துடன் சென்று அன்புடன் அன்று, (வள்ளி) மலைக் காட்டில் உள்ள தினைப் புனத்தைக் காவல் செய்த மயில் போன்ற வள்ளியை மணம் புரிந்த வேலவனே, எங்கள் வயலூரில் எழுந்தருளியுள்ள முருகனே, தெளிந்த அறிவை உடைய அன்பர்கள் போற்ற சிறப்புற்று விளங்கும் திரிசிரா மலையில், ஆதி நாள் முதலாக விளங்க வீற்றிருக்கும் சிவபெருமான் (தாயுமானவர்) அருளிய குழந்தையே, தேவர்களின் பெருமாளே. 
பாடல் 561 - திருசிராப்பள்ளி 
ராகம் - பூர்வி கல்யாணி; தாளம் - அங்கதாளம் - 6 1/2 
தகதிமிதக-3, தகிட-1 1/2, தகதிமி-2
தானத்தத் தான தானன தானத்தத் தான தானன
     தானத்தத் தான தானன ...... தந்ததான
வாசித்துக் காணொ ணாதது பூசித்துக் கூடொ ணாதது
     வாய்விட்டுப் பேசொ ணாதது ...... நெஞ்சினாலே 
மாசர்க்குத் தோணொ ணாதது நேசர்க்குப் பேரொ ணாதது
     மாயைக்குச் சூழொ ணாதது ...... விந்துநாத 
ஓசைக்குத் தூர மானது மாகத்துக் கீற தானது
     லோகத்துக் காதி யானது ...... கண்டுநாயேன் 
யோகத்தைச் சேரு மாறுமெய்ஞ் ஞானத்தைப் போதி யாயினி
     யூனத்தைப் போடி டாதும ...... யங்கலாமோ 
ஆசைப்பட் டேனல் காவல்செய் வேடிச்சிக் காக மாமய
     லாகிப்பொற் பாத மேபணி ...... கந்தவேளே 
ஆலித்துச் சேல்கள் பாய்வய லூரத்திற் காள மோடட
     ராரத்தைப் பூண்ம யூரது ...... ரங்கவீரா 
நாசிக்குட் ப்ராண வாயுவை ரேசித்தெட் டாத யோகிகள்
     நாடிற்றுக் காணொ ணாதென ...... நின்றநாதா 
நாகத்துச் சாகை போயுயர் மேகத்தைச் சேர்சி ராமலை
     நாதர்க்குச் சாமி யேசுரர் ...... தம்பிரானே.
நூல்களைக் கற்று கலையறிவால் காணமுடியாததும், பூஜை செய்து கிரியாமார்க்கத்தால் அடைதற்கு அரியதும், வாக்கினால் இத்தன்மைத்து எனப் பேசமுடியாததும், உள்ளத்தில் குற்றமுடையோருக்குத் தோன்றி விளங்காததுவும், அன்பு செய்தார் நெஞ்சினின்றும் நீங்காது நிற்பதுவும், மாயையினால் சூழமுடியாததும், விந்து (சக்தி) சுழல அதனின்று எழும் நாதம் (சிவம்) என்னும் ஓசைக்கு அப்பால் வெகு தூரத்தில் இருப்பதுவும், ஆகாயத்திற்கு முடிவிலே இருப்பதுவும், இவ்வுலகத்திற்கு ஆதியானதுவும் ஆகிய மெய்ப்பொருளை, உள்ளக் கண்களால் நாயேன் கண்டு, சிவயோகத்தை அடையுமாறு உண்மை அறிவை நீ உபதேசித்து அருள்வாய். இனி யான் இந்த உடம்பை வெறுத்து ஒதுக்காது மாயை வசப்படலாமோ? நீயே மிக விரும்பி, தினைப்புனம் காவல் செய்த வேட்டுவப் பெண் வள்ளிக்காக பெரிதும் மயங்கி, பொன் போல் ஒளிரும் அவள் பாதத்தில் வீழ்ந்து வணங்கிய கந்தக் கடவுளே. ஆரவாரித்து சேல்மீன்கள் பாய்ந்து விளையாடுகின்ற வயலூர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி, விஷம் நிறைந்த பாம்பை மாலையாகப் பூண்ட மயிலாகிய குதிரை மீது பவனிவரும் வீரனே, நாசியின் வழியாக பிராணவாயுவை வெளியேவிட்டு, மீண்டும் பூரகம் செய்து ஸஹஸ்ராரப் பெருவெளியை* எட்டமுடியாத தவயோகிகள் எத்தனை விரும்பியும் காணமுடியாதபடி (அப்பாலுக்கு அப்பாலாய்) நின்ற தலைவனே, மலையின் கிளைச் சிகரம் வளர்ந்து சென்று உயர்ந்த மேகமண்டலத்தைச் சேரும் திரிசிராமலையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்கு குருஸ்வாமியே, தேவர்களுக்குத் தலைவனே. 
* இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு:நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு 'ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள், சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி, ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை, சுழுமுனை முதலியன) உள்ளன.'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம்.'சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது.'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும் ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும்.
பாடல் 562 - திருசிராப்பள்ளி 
ராகம் - ...; தாளம் -
தனத்த தாத்தன தனதன தனதன
     தனத்த தாத்தன தனதன தனதன
          தனத்த தாத்தன தனதன தனதன ...... தனதான
வெருட்டி யாட்கொளும் விடமிகள் புடைவையை
     நெகிழ்த்த ணாப்பிகள் படிறிகள் சடுதியில்
          விருப்ப மாக்கிகள் விரவிய திரவிய ...... மிலரானால் 
வெறுத்து நோக்கிகள் கபடிகள் நடமிடு
     பதத்தர் தூர்த்திகள் ம்ருகமத பரிமள
          விசித்ர மேற்படு முலையினு நிலையினு ...... மெவரோடும் 
மருட்டி வேட்கைசொல் மொழியினும் விழியினும்
     அவிழ்த்த பூக்கமழ் குழலினு நிழலினு
          மதிக்கொ ணாத்தள ரிடையினு நடையினு ...... மவமேயான் 
மயக்க மாய்ப்பொருள் வரும்வகை க்ருஷிபணு
     தடத்து மோக்ஷம தருளிய பலமலர்
          மணத்த வார்க்கழல் கனவிலு நனவிலு ...... மறவேனே 
இருட்டி லாச்சுர ருலகினி லிலகிய
     சகஸ்ர நேத்திர முடையவன் மிடியற
          இர¨க்ஷ வாய்த்தருள் முருகப னிருகர ...... குகவீரா 
இலக்ஷ¤ மீச்சுர பசுபதி குருபர
     சமஸ்த ராச்சிய ந்ருபபுகழ் வயமியல்
          இலக்க ரேய்ப்படை முகடெழு ககபதி ...... களிகூரத் 
திருட்டு ராக்ஷதர் பொடிபட வெடிபட
     எடுத்த வேற்கொடு கடுகிய முடுகிய
          செருக்கு வேட்டுவர் திறையிட முறையிட ...... மயிலேறும் 
செருப்ப ராக்ரம நிதிசர வணபவ
     சிவத்த பாற்கர னிமகரன் வலம்வரு
          திருச்சி ராப்பளி மலைமிசை நிலைபெறு ...... பெருமாளே.
வந்தவரை விரட்டுதல் செய்து அவர்களைத் தம் வசப்படுத்த வல்ல விஷமிகள். சேலையைத் தளர்த்தி ஏமாற்றுபவர்கள். பொய்யர். வெகு வேகத்தில் தம் மீது விருப்பம் வரும்படி செய்ய வல்லவர்கள். தமக்குச் சேர வேண்டிய பொருளைக் கொடுக்க இயலாதவர்களாக இருந்தால் வெறுப்புடன் பார்ப்பவர்கள். வஞ்சகர். நடனம் செய்யும் பாதத்தை உடையவர். கொடியோர்கள் ஆகிய விலைமாதர்களின் கஸ்தூரி முதலிய நறு மணம் வீசும், பேரழகு மேம்பட்டு விளங்கும் மார்பகத்திலும், நிற்கின்ற சாயலிலும், யாரையும் மயக்குவித்து ஆசை மொழிகளைச் சொல்லும் சொற்களிலும், கண்களிலும், அவிழ்ந்து விழும் பூ மணக்கும் கூந்தலிலும், அதன் ஒளியிலும், மதிக்க முடியாத தளர்ந்த இடையிலும், நடையிலும் ஈடுபட்டு வீணாக நான் மயக்கம் கொண்டு (அப் பொதுமகளிருக்குக் கொடுப்பதற்காக) பொருள் சேகரிக்க வேண்டிய முயற்சிகளைச் செய்து கொண்டிருந்த சமயத்தில், வீட்டுப் பேற்றை அருளிய, பல மலர்களும் நறு மணம் வீசும் பெருமை வாய்ந்த உனது திருவடிகளை கனவிலும் நனவிலும் மறக்க மாட்டேன். இருளே இல்லாத தேவ லோகத்தில் விளங்கி நிற்கும் ஆயிரம் கண்களை உடைய இந்திரனின் துன்பங்கள் நீங்கவும் அவனுக்குப் பாதுகாப்பைத் தந்து அளித்த முருகனே, பன்னிரு கரத்தனே, குகனே, வீரனே, லக்ஷ்மிகரம் விளங்கும் ஈசுவரனே, பசுபதியாகிய சிவபெருமானுக்குக் குருவே, எல்லா நாடுகளுக்கும் அரசனே, புகழும் வெற்றியும் பொருந்திய இலக்கர்* ஆகியோர் உள்ள சேனைக் கூட்டத்தின் மேலே பறந்து உலவும் பட்சி அரசனாகிய கருடன் மகிழ்ச்சி மிக அடைய, திருட்டுக் குணமுடைய அரக்கர்கள் பொடியாகிச் சிதறுண்ணும்படி, திருக்கரத்தில் எடுத்த வேலாயுதத்தால் கடுமையுடன் வேகமாக வந்த அகங்காரம் கொண்ட வேடர்கள் வணங்கும்படியும் முறையிடும்படியும் செய்த மயில் ஏறும் போர் வீரனே, என் நிதியே, சரவணபவனே, சிவந்த ஒளியுள்ள கிரணங்களை உடைய சூரியனும், பனியனைய குளிர்ந்த கிரணங்களை உடைய சந்திரனும் வலம் வருகின்ற திருச்சிராப்பள்ளி மலையில் நிலை பெற்று விளங்கும் பெருமாளே. 
* தேவியின் சிலம்பின் நவமணிகளில் இருந்து நவசக்திகளின் விறல் வீரர்கள் இலக்கர் (வீரபாகு முதலியோர்) வந்துதித்தனர் - கந்த புராணம் 1.12.11.
பாடல் 563 - திருக்கற்குடி 
ராகம் - ...; தாளம் -
தனத்தத் தனத்தத் தனத்தத் தனத்தத்
     தனத்தத் தனத்தத் ...... தனதான
குடத்தைத் தகர்த்துக் களிற்றைத் துரத்திக்
     குவட்டைச் செறுத்துக் ...... ககசாலக் 
குலத்தைக் குமைத்துப் பகட்டிச் செருக்கிக்
     குருத்தத் துவத்துத் ...... தவர்சோரப் 
புடைத்துப் பணைத்துப் பெருக்கக் கதித்துப்
     புறப்பட் டகச்சுத் ...... தனமாதர் 
புணர்ச்சிச் சமுத்ரத் திளைப்பற் றிருக்கப்
     புரித்துப் பதத்தைத் ...... தருவாயே 
கடத்துப் புனத்துக் குறத்திக் குமெத்தக்
     கருத்திச் சையுற்றுப் ...... பரிவாகக் 
கனக்கப் ரியப்பட் டகப்பட் டுமைக்கட்
     கடைப்பட் டுநிற்கைக் ...... குரியோனே 
தடத்துற் பவித்துச் சுவர்க்கத் தலத்தைத்
     தழைப்பித் தகொற்றத் ...... தனிவேலா 
தமிழ்க்குக் கவிக்குப் புகழ்ச்செய்ப் பதிக்குத்
     தருக்கற் குடிக்குப் ...... பெருமாளே.
குடத்துக்கு (ஒப்பிடலாம் என்றால்) குடத்தை நொறுங்க உடையச் செய்தும், யானைக்கு (ஒப்பிடலாம் என்றால்) யானையைக் காட்டில் துரத்தியும், மலைக்கு (ஒப்பிடலாம் என்றால்) மலை குறுகி அடங்கியும், சக்ரவாகப் பட்சிகளின் கூட்டத்தின் குலத்துக்கு (ஒப்பிடலாம் என்றால்) (அந்தப் பட்சிகளை) வெட்கப்பட வைத்தும், ஆடம்பரம் காட்டி, அகந்தை பூண்டு, குருவின் நிலையிலிருந்து அறிவுரைகளை எடுத்து ஓதும் தவசிகளும் சோர்ந்து மயங்கும்படி, பருத்து, செழிப்புற்று, மிகவும் எழுச்சியுற்று வெளித் தோன்றுவதும் கச்சு அணிந்ததுமான மார்பகங்களை உடைய விலைமாதர்களின் கலவி என்னும் கடலில் ஊடாடுதல் நீங்கி இருக்க அருள் செய்து உன் திருவடியைத் தருவாயாக. காட்டில் தினைப் புனத்தில் இருந்த குறத்தி வள்ளியின் மேல் மிக்க ஆசை மனத்தில் கொண்டு, அன்புடனே மிகவும் காதல் பூண்டு, மை அணியப்பட்ட அவளுடைய கடைக் கண்ணில் வசப்பட்டு நிற்பதற்கு ஆளானவனே, (சரவண) மடுவில் தோன்றி, பொன்னுலகை வாழ்வித்த வீரம் பொருந்திய ஒப்பற்ற வேலனே, தமிழ்ப் பெருமாளே, கவி ராஜப் பெருமாளே, புகழப்படும் வயலூர் என்ற தலத்துப் பெருமாளே, மரங்கள் நிறைந்த திருக்கற்குடியில்* வீற்றிருக்கும் பெருமாளே. 
* திருக்கற்குடி திருச்சிக்கு அருகேயுள்ள வயலூரின் பக்கத்தில் உள்ளது.
பாடல் 564 - திருக்கற்குடி 
ராகம் - ...; தாளம் -
தனத்தத் தனத்தத் தத்த
     தனத்தத் தனத்தத் தத்த
          தனத்தத் தனத்தத் தத்த ...... தனதான
நெறித்துப் பொருப்புக் கொத்த
     முலைக்குத் தனத்தைக் கொட்டி
          நிறைத்துச் சுகித்துச் சிக்கி ...... வெகுநாளாய் 
நினைத்துக் கொடத்துக் கத்தை
     யவத்தைக் கடுக்கைப் பெற்று
          நிசத்திற் சுழுத்திப் பட்ட ...... அடியேனை 
இறுக்கிப் பிடித்துக் கட்டி
     யுகைத்துத் துடிக்கப் பற்றி
          யிழுத்துத் துவைத்துச் சுற்றி ...... யமதூதர் 
எனக்குக் கணக்குக் கட்டு
     விரித்துத் தொகைக்குட் பட்ட
          இலக்கப் படிக்குத் தக்க ...... படியேதான் 
முறுக்கித் திருப்பிச் சுட்டு
     மலத்திற் புகட்டித் திட்டி
          முழுக்கக் கலக்கப் பட்டு ...... அலையாமல் 
மொழிக்குத் தரத்துக் குற்ற
     தமிழ்க்குச் சரித்துச் சித்தி
          முகத்திற் களிப்புப் பெற்று ...... மயிலேறி 
உறுக்கிச் சினத்துச் சத்தி
     யயிற்குத் தரத்தைக் கைக்குள்
          உதிக்கப் பணித்துப் பக்கல் ...... வருவாயே 
உனைச்சொற் றுதிக்கத் தக்க
     கருத்தைக் கொடுப்பைச் சித்தி
     யுடைக்கற் குடிக்குட் பத்தர் ...... பெருமாளே.
காமத்தால் மனம் குழைந்து மிகவும் குனிந்து, மலை போன்றிருக்கும் மார்பகங்களுக்காகப் பொருள் எல்லாவற்றையும் கொட்டி, நிரம்ப இன்பத்தை அனுபவித்து, அதில் அகப்பட்டு, பல நாட்களாக அந்த இன்பத்தையே நினைத்துக் கொண்டு அதனால் வரும் துக்கங்களுக்கும் வேதனைகளுக்கும் ஆளாகி, உண்மையில் செயலற்று (உண்மைப் பொருளைக் காணாது) உறங்கிய அடியேனை இறுக்கமாகக் கட்டி உதைத்தும், துடிக்கும்படி பற்றியும், இழுத்தும், மிதித்துத் துவைத்தும், என்னைச் சூழ்ந்த யம தூதர்கள் என்னுடைய கணக்குக் கட்டை விரித்துக் காட்டி, (நான் இவ்வுலகில் செய்த பாபச்செயல்கள் குறிக்கப்பட்ட கணக்கில் உள்ள) எண்ணிக்கைக்குத் தகுந்தபடி, என்னை முறுக்கியும், திருப்பியும் சுட்டும், மலத்தில் புகுவித்தும், வைதும், அந்தக் கலக்கத்தில் முற்றிலுமாக அகப்பட்டு நான் அலைபடாமல், எனது மொழியையும், மேன்மை உள்ள தமிழையும் அங்கீகரித்து, வீடு பேற்றைத் தரும் திருமுகத்தில் மகிழ்ச்சியுடன், மயிலின் மீது ஏறி, தண்டிக்கும் கோபம் வாய்ந்த சக்தி வேலை, தகுதியுடன் திருக்கரத்தில் தோன்ற எடுத்து என் பக்கத்தில் வருவாயாக. உன்னைச் சொல் கொண்டு துதிப்பதற்குத் தகுந்த கருத்தை கொடுத்தருள்வாயாக. (அஷ்டமா) சித்திகளும்* பொருந்தியுள்ள திருக்கற்குடிக்குள்** உள்ள பக்தர்களின் பெருமாளே. 
* அஷ்டமாசித்திகள் பின்வருமாறு:அணிமா - அணுவிலும் சிறிய உருவினன் ஆதல்.மகிமா - மேருவினும் பெரிய உருவினன் ஆதல்.கரிமா - ஆயுதங்களுக்கும், ஆகாயத்துக்கும், காலத்துக்கும் அப்பால் ஆதல்.லகிமா - ஆகாயகமனம், அந்தரத்தில் இருத்தல்.பிராப்தி - பர காயங்களில் புகுதல் (கூடுவிட்டு கூடுபாய்தல்).பிராகாமியம் - எல்லாவற்றிலும் நிறைந்திருத்தல்.ஈசத்துவம் - எல்லாவற்றுக்கும் நாதனாக இருத்தல்.வசித்துவம் - எல்லா இடங்களிலும் இருந்து யாவற்றையும் வசப்படுத்தல்.
** திருக்கற்குடி திருச்சிக்கு அருகேயுள்ள வயலூரின் பக்கத்தில் உள்ளது.
பாடல் 565 - இரத்னகிரி 
ராகம் - ...; தாளம் -
தனனத் தனனத் தனனத் தனனத்
     தனனத் தனனத் ...... தனதான
கயலைச் சருவிப் பிணையொத் தலர்பொற்
     கமலத் தியல்மைக் ...... கணினாலே 
கடிமொய்ப் புயலைக் கருதிக் கறுவிக்
     கதிர்விட் டெழுமைக் ...... குழலாலே 
நயபொற் கலசத் தினைவெற் பினைமிக்
     குளநற் பெருசெப் ...... பிணையாலே 
நலமற் றறிவற் றுணர்வற் றனனற்
     கதியெப் படிபெற் ...... றிடுவேனோ 
புயலுற் றியல்மைக் கடலிற் புகுகொக்
     கறமுற் சரமுய்த் ...... தமிழ்வோடும் 
பொருதிட் டமரர்க் குறுதுக் கமும்விட்
     டொழியப் புகழ்பெற் ...... றிடுவோனே 
செயசித் திரமுத் தமிழுற் பவநற்
     செபமுற் பொருளுற் ...... றருள்வாழ்வே 
சிவதைப் பதிரத் தினவெற் பதனிற்
     றிகழ்மெய்க் குமரப் ...... பெருமாளே.
கயல் மீனோடு போர் செய்து, பெண் மானை ஒத்து, மலராகிய அழகிய தாமரையின் தன்மையைக் கொண்ட, மை தீட்டிய கண்களாலும், விளக்கமுற்று நெருங்கிய கருமேகத்தை நோக்கிக் கோபித்து, ஒளி வீசி எழுந்துத் திகழும் கரிய கூந்தலாலும், இனிமையும் அழகும் கொண்ட குடத்தையும், மலையையும் விட மேம்பாடு உள்ள நல்ல பெரிய இரு மார்பகங்களாலும், இன்பம், அழகு முதலிய நலன்களை இழந்து, அறிவு போய், உணர்வையும் இழந்த நான் நற் கதியை எவ்வாறு பெறுவேன்? மேகம் படியும் தன்மை வாய்ந்த கருங் கடலில் புகுந்து நின்ற மாமரமாகிய சூரன் வேரோடு சாயும்படி முன்பு வேலாயுதத்தை விட்டு அடக்கி ஆழ்த்திய ஆற்றலோடு, சண்டை செய்து தேவர்களுக்கு இருந்த துன்பத்தை விட்டு நீங்கச் செய்த புகழைப் பெற்றவனே, வெற்றியைத் தரும் அழகிய முத்தமிழ்ப் பாக்கள் மூலமாக வெளித்தோன்றும் சிறந்த தேவார மந்திரங்களையும், மேலான பொருளையும் அனுபவித்து (சம்பந்தராக வந்து) உலகுக்கு அருளிய செல்வமே, சிவாயம்* எனப்படும் ரத்தின கிரியில் விளங்கும் உண்மை வடிவாகிய குமரப் பெருமாளே. 
* ரத்னாசலம், சிவாயம், மணிக்கிரி என்பன வாட்போக்கித் தலமாகிய ரத்தினகிரியின் பிற பெயர்கள். தேவாரம் பெற்ற திருத்தலம். திருச்சி மாவட்டம் குளித்தலை ரயில் நிலையத்தில் இருந்து 8 மைல் தொலைவில் இருக்கிறது.
பாடல் 566 - இரத்னகிரி 
ராகம் - மோஹனம்; தாளம் - சதுஸ்ர த்ருவம் - கண்டநடை - 35 
- எடுப்பு /4/4/4 0 
நடை - தகிட தக
தத்ததன தானதன தானதன தானதன
     தத்ததன தானதன தானதன தானதன
          தத்ததன தானதன தானதன தானதன ...... தனதான
சுற்றகப டோடுபல சூதுவினை யானபல
     கற்றகள வோடுபழி காரர் கொலை காரர்சலி
          சுற்றவிழ லானபவி ஷோடுகடல் மூழ்கிவரு ...... துயர்மேவித் 
துக்கசமு சாரவலை மீனதென கூழில்விழு
     செத்தையென மூளுமொரு தீயில்மெழு கானவுடல்
          சுத்தமறி யாதபறி காயமதில் மேவிவரு ...... பொறியாலே 
சற்றுமதி யாதகலி காலன்வரு நேரமதில்
     தத்துஅறி யாமலொடி யாடிவரு சூதரைவர்
          சத்தபரி சானமண ரூபரச மானபொய்மை ...... விளையாடித் 
தக்கமட வார்மனையை நாடியவ ரோடுபல
     சித்துவிளை யாடுவினை சீசியிது நாறவுடல்
          தத்திமுடி வாகிவிடு வேனொமுடி யாதபத ...... மருள்வாயே 
தித்திமித தீதிமித தீதிமித தீமிதத
     தத்ததன தானதன தானனன தானனன
          திக்குடுடு டூடமட டாடமட டூடுடுடு ...... எனதாளம் 
திக்குமுகி லாடஅரி யாடஅய னாடசிவ
     னொத்துவிளை யாடபரை யாடவர ராடபல
          திக்கசுரர் வாடசுரர் பாடமறை பாடஎதிர் ...... களமீதே 
எத்திசையு நாடியம னார்நிணமொ டாடபெல
     மிக்கநரி யாடகழு தாடகொடி யாடசமர்
          எற்றிவரு பூதகண மாடவொளி யாடவிடு ...... வடிவேலா 
எத்தியொரு மானைதினை காவல்வல பூவைதனை
     சித்தமலை காமுககு காநமசி வாயனொடு
          ரத்நகிரி வாழ்முருக னேயிளைய வாவமரர் ...... பெருமாளே.
சூழ்ந்துள்ள வஞ்சனைகள் பலவும் சூது நிறைந்த தொழில்கள் பலவும் கொண்டு, கற்ற கள்ளத் தொழிலொடு பழிக்கு இடம் தருபவர்கள், கொலை செய்பவர்கள் இவர்களுடன் கூடிச் சலிப்புற்று, அலைந்து, வீணான பெருமையோடு வாழ்க்கைக் கடலில் மூழ்கி, அதில் உண்டான துன்பங்களை அடைந்து, துக்கம் தரும் சம்சாரம் என்னும் கடலில் வீசப்பட்ட வலையில் சிக்கிய மீன் போல, கூழில் விழுந்த குப்பை போலக் கிடந்து, மூண்டு எரியும் பெரிய நெருப்பில் பட்ட மெழுகுபோல் உருகும் உடல், சுத்தம் என்பதையே அறியாத பாரம் வாய்ந்த உடலில் பொருந்தி வேலை செய்யும் ஐந்து இந்திரியங்களின் காரணமாக, சிறிதேனும் இரக்கமில்லாமல் வருகின்ற, வலியும் செருக்கும் கொண்ட யமன் நெருங்கும் சமயத்தில், ஆபத்து (சாவின் உருவில்) வருகின்றதே என்பதை அறியாமல் ஓடியும் ஆடியும் வருகின்ற சூதாடிகளான ஐவர், சப்தம், தொடுகை, வாசனை, வடிவம், ரசம் எனப்படும் ஐம்புலன்களின் பொய் இன்பங்களில் திளைத்து விளையாடி, இந்த உடலுக்குத் தகுந்த மாதர்களையும், அவர்கள் வீடுகளையும் தேடிச் சென்று, அம்மாதர்களோடு பல (காம) மாய வித்தைகளை விளையாடும் தொழில், சீசீ இது என்று பலரும் வெறுப்புடன் கூறத்தக்கதாய்த் தோன்ற, (என்னுடைய) உடல் நைந்துபோய் இறுதியில் நான் இறந்து படுவேனோ? அதற்குள் உனது அழிவில்லாத திருவடியைத் தந்து அருளுக. தித்திமித தீதிமித தீதிமித தீமிதத தத்ததன தானதன தானனன தானனன (இதே ஒலியில்) தாளம் எல்லா திசைகளிலும் இடியென ஒலிக்க, திருமால் ஆட, பிரமன் ஆட, சிவனும் மகிழ்ந்து களி கூர்ந்து ஆட, தேவியும் உடன் ஆட, சிறந்த முனிவர்கள் ஆட, பல திக்குகளில் இருந்த அசுரர்கள் வாடி மயங்க, தேவர்கள் பாட, வேதங்கள் பாடித் துதிக்கப்பட, எதிர்த்து வந்த போர்க்களத்தில் எல்லாத் திசைகளையும் தேடிச் சென்று, கால தூதுவர்கள் போர்க் களத்தில் கிடந்த மாமிசக் கொழுப்பில் நடை செய்ய, பலம் மிக உள்ள நரி உணவு கிடைக்கின்றது என்று கூத்தாட, பேய்கள் ஆட, காக்கைகள் ஆட, போரில் மோதி வருகின்ற பூத கணங்கள் ஆட, ஒளியை வீசும்படி செலுத்திய கூர்மையான வேலனே, (வேலன், வேங்கை, செட்டி, விருத்தன் ஆகிய வேடங்களைக் காட்டி) ஏமாற்றி, ஒப்பற்ற மான் போன்றவளும் தினைப் புனம் காப்பதில் வல்லவளும் நாகண வாய்ப்புள் போன்றவளுமாகிய வள்ளியின் உள்ளத்தை அலைபாயச் செய்த காதலனே, குகனே, சிவபெருமானோடு ரத்தின கிரி* எனப்படும் வாட்போக்கித் தலத்தில் வாழும் முருகனே, என்றும் இளையவனே, தேவர்கள் பெருமாளே. 
* ரத்னகிரி (மணிக்கிரி) - தேவாரம் பெற்ற திருத்தலம். இதற்கு 'வாட்போக்கி' என்றும் பெயர் உண்டு.திருச்சி மாவட்டம் குளித்தலை ரயில் நிலையத்தில் இருந்து 8 மைல் தொலைவில் இருக்கிறது.
பாடல் 567 - இரத்னகிரி 
ராகம் - ஆனந்த பைரவி; தாளம் - ஆதி - எடுப்பு - 3/4 இடம்
தத்தனா தானனத் ...... தனதான
     தத்தனா தானனத் ...... தனதான
பத்தியால் யானுனைப் ...... பலகாலும்
     பற்றியே மாதிருப் ...... புகழ்பாடி 
முத்தனா மாறெனைப் ...... பெருவாழ்வின்
     முத்தியே சேர்வதற் ...... கருள்வாயே 
உத்தமா தானசற் ...... குணர்நேயா
     ஒப்பிலா மாமணிக் ...... கிரிவாசா 
வித்தகா ஞானசத் ...... திநிபாதா
     வெற்றிவே லாயுதப் ...... பெருமாளே.
அன்பினால் உன்னை உறுதியாக பல நாட்களாக விடாது பற்றிக்கொண்டு உயர்ந்த திருப்புகழைப் பாடி ஜீவன் முக்தனாகும் வழியிலே என்னை இடையறா இன்ப வாழ்வாம் சிவகதியை சேர்ந்து உய்வதற்கு திருவருள் புரிவாயாக உத்தம குணங்களைப் பற்றிக்கொண்டுள்ள நல்ல இயல்புள்ளவர்களின் நண்பனே சமானம் இல்லாத பெருமை பொருந்திய ரத்னகிரியில் வாழ்பவனே* பேரறிவாளனே திருவருள் ஞானத்தைப் பதியச் செய்பவனே வெற்றியைத் தரும் வேலை ஆயுதமாகக் கொண்ட பெருமாளே. 
* ரத்னகிரி (மணிக்கிரி) - தேவாரம் பெற்ற திருத்தலம். இதற்கு 'வாட்போக்கி' என்றும் பெயர் உண்டு.திருச்சி மாவட்டம் குளித்தலை ரயில் நிலையத்தில் இருந்து 8 மைல் தொலைவில் இருக்கிறது.
பாடல் 568 - விராலிமலை 
ராகம் - ...; தாளம் -
தானான தான தான தனதன
     தானான தான தான தனதன
          தானான தான தான தனதன ...... தனதான
சீரான கோல கால நவமணி
     மாலாபி ஷேக பார வெகுவித
          தேவாதி தேவர் சேவை செயுமுக ...... மலராறும் 
சீராடு வீர மாது மருவிய
     ஈராறு தோளு நீளும் வரியளி
          சீராக மோது நீப பரிமள ...... இருதாளும் 
ஆராத காதல் வேடர் மடமகள்
     ஜீமூத மூர்வ லாரி மடமகள்
          ஆதார பூத மாக வலமிட ...... முறைவாழ்வும் 
ஆராயு நீதி வேலு மயிலுமெய்ஞ்
     ஞானாபி ராம தாப வடிவமும்
          ஆபாத னேனு நாளு நினைவது ...... பெறவேணும் 
ஏராரு மாட கூட மதுரையில்
     மீதேறி மாறி யாடு மிறையவர்
          ஏழேழு பேர்கள் கூற வருபொரு ...... ளதிகாரம் 
ஈடாய வூமர் போல வணிகரி
     லூடாடி யால வாயில் விதிசெய்த
          லீலாவி சார தீர வரதர ...... குருநாதா 
கூராழி யால்முன் வீய நினைபவ
     னீடேறு மாறு பாநு மறைவுசெய்
          கோபால ராய னேய முளதிரு ...... மருகோனே 
கோடாம லார வார அலையெறி
     காவேரி யாறு பாயும் வயலியில்
          கோனாடு சூழ்வி ராலி மலையுறை ...... பெருமாளே.
வரிசையானதும், ஆடம்பரமுள்ள ஒன்பது மணிகள் பதிக்கப்பெற்ற பெருமை பொருந்திய கி¡£டங்களின் கனத்தை உடையதும், பல வகையான தேவாதி தேவர்களெல்லாம் வணங்குவதுமான ஆறு திரு முகங்களையும், சிறப்பு உற்று ஓங்கும் வீர லக்ஷ்மி குடிகொண்டிருக்கும் பன்னிரு தோள்களையும், நீண்ட ரேகைகள் உள்ள வண்டுகள் ஸ்ரீராகம் என்னும் ராகத்தைப் பாடி ¡£ங்காரம் செய்யும் கடப்ப மலரின் மணம் வீசும் இரண்டு திருவடிகளையும், முடிவில்லாத ஆசையை உன் மீது கொண்ட வேடர்களின் இளம் மகளான வள்ளியும், மேகத்தை வாகனமாகக் கொண்ட இந்திரனுடைய அழகிய பெண்ணாகிய தேவயானையும், பக்தர்களின் பற்றுக் கோட்டின் இருப்பாக வலது பாகத்திலும், இடது பாகத்திலும் உறைகின்ற உனது திருக்கோல வாழ்க்கையையும், நன்கு ஆராய்ந்து நீதி செலுத்தும் உனது வேலையும் மயிலையும், ஞான ஸ்வரூபியான கீர்த்தி பெற்ற உனது பேரழகுடைய திருவுருவத்தையும், மிகக் கீழ்ப்பட்டவனாக நான் இருப்பினும், நாள் தோறும் (மேற்சொன்ன அனைத்தையும்) தியானம் செய்யும்படியான பேற்றைப் பெற வேண்டுகிறேன். அழகு நிறைந்த மாட கூடங்கள் உள்ள மதுரையில், வெள்ளி அம்பலத்தில் நடன மேடையில் கால் மாறி* ஆடிய இறைவராகிய சிவ பெருமான் (இயற்றிய 'இறையனார் அகப் பொருள்' என்ற நூலுக்கு), நாற்பத்தொன்பது சங்கப் புலவர்கள் பொருள் கூறிய பொருள் அதிகாரத்தின் உண்மைப் பொருள் இதுதான் என்று கூறுவதற்காக, தகுதி உள்ள ஊமைப் பிள்ளை** போல செட்டி குலத்தில் தோன்றி விளையாடி, ஆலவாய் என்னும் மதுரையில் உண்மைப் பொருளை நிலை நிறுத்திக் காட்டிய திருவிளையாடலைப் புரிந்த தீரனே, வரங்களைக் கொடுப்பவனே, குரு நாதனே, முன்பு (பாரதப் போர் நடந்தபோது) இறந்து போவதற்கு எண்ணித் துணிந்த அர்ச்சுனன் உய்யுமாறு கூர்மையான சக்கரத்தால சூரியனை மறைத்து வைத்த கோபாலர்களுக்கு அரசனாகிய கிருஷ்ணன் அன்பு வைத்த அழகிய மருகனே, தவறுதல் இன்றி பேரொலியுடன் அலைகளை வீசி வரும் காவேரி ஆறு பாய்கின்ற வயலூரிலும், கோனாடு*** என்னும் நாட்டுப் பகுதியில் உள்ள விராலி மலையிலும் வீற்றிருக்கும் பெருமாளே. 
* ஒருமுறை பாண்டியன் ராஜசேகரன் நடராஜப் பெருமான் எப்போதும் இடது திருவடியைத் தூக்கி நடனமாடுவது அவருக்கு எவ்வளவு அயர்ச்சி தரும் என்று எண்ணி வருந்தி, இறைவனை கால் மாறி வலது பாதத்தைத் தூக்கி ஆடும்படி வேண்டினான். அதற்கு இணங்கி மதுரையில் சிவபிரான் கால் மாறி ஆடினார் - திருவிளையாடல் புராணம்.
** 49 சங்கப்புலவர்கள் இறையனார் அகப் பொருளுக்கு உரை எழுதினர். சிறந்த உரை எது என்பதில் விவாதம் ஏற்பட, மதுரை செட்டி குலத்தில் ஊமைப்பிள்ளை ருத்திரசன்மன் என்ற பெயரில் அவதரித்த முருகன் அனைவரது உரையையும் கேட்டு, நக்கீரன், கபிலன், பரணன் ஆகிய புலவர்களின் உரைகளைக் கேட்கும்போது மட்டும் வியப்பையும், கண்ணீரையும் காட்ட, இம் மூவரின் உரையே உண்மைப் பொருள் என்று புலவர்கள் உணர்ந்து கலகம் தீர்த்தனர் - திருவிளையாடல் புராணம்.
*** கோனாடு என்பது எறும்பீசர் மலைக்கு மேற்கு, மதிற்கரைக்குக் கிழக்கு, காவிரிக்குத் தெற்கு, பிரான்மலைக்கு வடக்கு என்ற எல்லைக்கு உட்பட்டது. இங்குதான் விராலிமலை, திருச்சியில் இருந்து மதுரை வழியில் 20 மைலில் மணப்பாறைக்கு அருகே உள்ளது.
பாடல் 569 - விராலிமலை 
ராகம் - ...; தாளம் -
தானான தான தான தனதன
     தானான தான தான தனதன
          தானான தான தான தனதன ...... தனதான
பாதாள மாதி லோக நிகிலமு
     மாதார மான மேரு வெனவளர்
          பாடீர பார மான முலையினை ...... விலைகூறிப் 
பாலோடு பாகு தேனெ னினியசொ
     லாலேய நேக மோக மிடுபவர்
          பாதாதி கேச மாக வகைவகை ...... கவிபாடும் 
வேதாள ஞான கீனன் விதரண
     நாதானி லாத பாவி யநிஜவன்
          வீணாள்ப டாத போத தவமிலி ...... பசுபாச 
வ்யாபார மூடன் யானு முனதிரு
     சீர்பாத தூளி யாகி நரகிடை
          வீழாம லேசு வாமி திருவருள் ...... புரிவாயே 
தூதாள ரோடு காலன் வெருவிட
     வேதாமு ராரி யோட அடுபடை
          சோராவ லாரி சேனை பொடிபட ...... மறைவேள்விச் 
சோமாசி மார்சி வாய நமவென
     மாமாய வீர கோர முடனிகல்
          சூர்மாள வேலை யேவும் வயலியி ...... லிளையோனே 
கூதாள நீப நாக மலர்மிசை
     சாதாரி தேசி நாம க்ரியைமுதல்
          கோலால நாத கீத மதுகர ...... மடர்சோலை 
கூராரல் தேரு நாரை மருவிய
     கானாறு பாயு மேரி வயல்பயில்
          கோனாடு சூழ்வி ராலி மலையுறை ...... பெருமாளே.
பாதாளம் முதலிய உலகம் எல்லாவற்றுக்கும் ஆதாரமான மேரு மலை போல் வளர்ந்துள்ள, சந்தனம் அணிந்த பருத்த மார்பகத்தை விலை பேசி, பால், சர்க்கரை, தேன் இவை போன்ற இனிப்பான சொற்களால் நிரம்ப காம மோகத்தைத் தருபவர்களாகிய விலைமாதர்களுடைய கால் முதல் கூந்தல் வரை உள்ள உறுப்புக்களை பல விதமான கவிதைகளைப் பாடும் நான் பேயன், ஞானம் குறைந்தவன், விவேகமுள்ள நாக்கே இல்லாத பாவி, உண்மை இல்லாதவன், வாழ்நாள் வீணாள் ஆகாமல் காக்கும் அறிவும் தவமும் இல்லாதவன், உயிரைப் பற்றியும், உலகைப் பற்றியும் பேசிப் பொழுது போக்கும் பதி ஞானம் இல்லாத மூடன், இத்தகைய குணங்களை உடைய நானும் உன்னுடைய இரண்டு சிறப்பு வாய்ந்த பாதங்களின் தூளியாகும் பேறு பெற்று, அதனால் நரகில் விழாமல், சுவாமியே, திருவருள் புரிவாயாக. தன்னுடைய தூதர்களோடு யமன் அஞ்சி ஓடவும், பிரமனும் திருமாலும் அஞ்சி ஓடவும், கொல்ல வல்ல படைகள் சோர்ந்து போய் இந்திரனுடைய சேனை பொடிபட்டு அழியவும், வேத வேள்விகள், சோம யாகம் செய்யும் பெரியோர்கள் பஞ்சாக்ஷரத்தை ஓதித் துதித்து நிற்கவும், பெரிய மாயங்களும் வீரமும் கோரமும் பொருந்தி போர் செய்த சூரன் இறக்கும்படி வேலாயுதத்தைச் செலுத்திய, வயலூரில் வீற்றிருக்கும் இளையோனே, கூதாளப் பூ, கடப்ப மலர், சுரபுன்னை மலர் இவைகளின் மீது சாதாரி (பந்துவராளி), தேசி (தேஷ்), நாமக்ரியை (நாதநாமக்கிரியை) முதலான ஆடம்பரமான ராக இசைகளைப் பாடும் வண்டுகள் நிறைந்த சோலைகளும், நிரம்ப ஆரல் மீன்களைக் கொத்தும் நாரைகள் பொருந்திய காட்டாறுகள் பாய்கின்றனவும், ஏரிகளும் வயல்களும் நெருங்கியுள்ள கோனாடு* என்னும் நாட்டில் உள்ள விராலி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* கோனாடு என்பது எறும்பீசர் மலைக்கு மேற்கு, மதிற்கரைக்குக் கிழக்கு, காவிரிக்குத் தெற்கு, பிரான்மலைக்கு வடக்கு என்ற எல்லைக்கு உட்பட்டது. இங்குதான் விராலிமலை, திருச்சியில் இருந்து மதுரை வழியில் 20 மைலில் மணப்பாறைக்கு அருகே உள்ளது.
பாடல் 570 - விராலிமலை 
ராகம் - மனோலயம் ; தாளம் - ஆதி - கண்டநடை - 20 
- எடுப்பு - அதீதம்
தனாதன தனாதன தனாதன தனாதன
     தனாதன தனாதனன ...... தனதான
இலாபமில் பொலாவுரை சொலாமன தபோதன
     ரியாவரு மிராவுபக ...... லடியேனை 
இராகமும் விநோதமு முலோபமு டன்மோகமு
     மிலானிவ னுமாபுருஷ ...... னெனஏய 
சலாபவ மலாகர சசீதர விதாரண
     சதாசிவ மயேசுரச ...... கலலோக 
சராசர வியாபக பராபர மநோலய
     சமாதிய நுபூதிபெற ...... நினைவாயே 
நிலாவிரி நிலாமதி நிலாதவ நிலாசன
     நியாயப ரிபாலஅர ...... நதிசூடி 
நிசாசர குலாதிப திராவண புயாரிட
     நிராமய சரோருகர ...... னருள்பாலா 
விலாசுகம் வலாரெனு முலாசவி தவாகவ
     வியாதர்கள் விநோதமகள் ...... மணவாளா 
விராவுவ யலார்புரி சிராமலை பிரான்மலை
     விராலிம லைமீதிலுறை ...... பெருமாளே.
பயனற்ற பொல்லாத மொழிகளைச் சொல்லாத மனத்தை உடைய தவ முனிவர்கள் எல்லோரும் இரவும் பகலும் என்னைக் குறித்து இவன் ஆசையும், விளையாடல்களில் இன்ப மகிழ்ச்சியும், ஈயாமைக் குணமும், காம மயக்கமும் இல்லாதவன், இவனும் ஓர் உத்தம புருஷன் எனக் கூறும் சொல் பொருந்தும்படிச் செய்து, இனிய குணத்தனே, தூய்மைக்கு இருப்பிடமானவனே, சந்திரனைத் தரித்தவனே(*1), கருணை நிறைந்தவனே, சதாசிவமாக இருப்பவனே, மஹேஸ்வரனே, எல்லா உலகங்களிலும் உள்ள இயங்குவன - நிலைத்திருப்பன அனைத்திலும் கலந்திருப்பவனே, பரம் பொருளே, மனம் ஒடுங்கிய சமாதியில் ஒன்றுபடும் நிலையை நான் பெறவேண்டும் என்று நீ நினைத்தருள்வாயாக. சந்திரிகை விரிந்து ஒளி செய்யும் பிறைமதியையும், நில்லாது அலைகின்ற காற்றைப் புசிக்கும் சர்ப்பமாகி தர்மத்தைப் காப்பவனான ஆதிசேஷனையும்(*2), கங்கைநதியையும் சூடியவரும், அரக்கர் குலத்துக்கு அதிபதியாகிய ராவணனுடைய தோள்கள் வருந்துமாறு(*3) செய்தவரும், நோயற்றவரும், தாமரையின் மீது அமர்ந்தவருமான சிவனார் அருளிய பாலனே, வில்லையும் அம்பையும் வைத்துப் போர் புரிவதில் வல்லவர்கள் தாம் என்ற மகிழ்ச்சியில் போர் செய்யும் வேடர்களின் அற்புதப் புதல்வியாகிய வள்ளியின் மணவாளனே, மேன்மைமிகு வயலூர், திரிசிராப்பள்ளி, பிரான்மலை என்னும் கொடுங்குன்றம், மற்றும் விராலிமலையிலும்(*4) வாழ்கின்ற பெருமாளே. 
(*1) முருகன் சிவனின் அம்சமாகையால் புலவர் சிவனையும் முருகனையும் வேறாகக் கருதவில்லை.
(*2) ஆதிசேஷன் சிவபிரானின் ஜடாமுடியில் ஆபரணமாக உள்ளார். அவர் சர்ப்பங்களின் அரசன். நீதியைப் பரிபாலிப்பவர். தனது நீதிவழுவாமை குறித்து கர்வம் ஏற்பட்டதால் சிவபிரான் ஆதிசேஷனை ஜடையிலிருந்து உருவி தரையில் அடிக்க பாம்பின் தலை ஆயிரம் துண்டங்களாக உடைந்தது. தன் தவறுக்கு வருந்தி சிவனைத் தொழ, ஆதிசேஷன் ஆயிரம் தலைகளுடன் தோன்றினார் - சிவபுராணம்.
(*3) ராவணன் அகந்தையினால் சிவபிரானது கயிலைமலையைப் பெயர்த்து எடுக்க முயன்றான். சிவனார் திருவடி நகத்தால் சிறிது ஊன்ற, வலி தாங்காமல் கதறி அழுதான். அதனால் அவனுக்கு ராவணன் (அழுபவன்) என்ற பெயர் ஏற்பட்டது.
(*4) கோனாடு என்பது எறும்பீசர் மலைக்கு மேற்கு, மதிற்கரைக்குக் கிழக்கு, காவிரிக்குத் தெற்கு, பிரான்மலைக்கு வடக்கு என்ற எல்லைக்கு உட்பட்டது. இங்குதான் விராலிமலை, திருச்சியில் இருந்து மதுரை வழியில் 20 மைலில் மணப்பாறைக்கு அருகே, உள்ளது.
பாடல் 571 - விராலிமலை 
ராகம் - தேஷ்; தாளம் - ஆதி - கண்டநடை - 20 
- எடுப்பு - அதீதம்
தனாதன தனாதன தனாதன தனாதன
     தனாதன தனாதனத் ...... தனதான
நிராமய புராதன பராபர வராம்ருத
     நிராகுல சிராதிகப் ...... ப்ரபையாகி 
நிராசசி வராஜத வராஜர்கள் பராவிய
     நிராயுத புராரியச் ...... சுதன்வேதா 
சுராலய தராதல சராசர பிராணிகள்
     சொரூபமி வராதியைக் ...... குறியாமே 
துரால்புகழ் பராதின கராவுள பராமுக
     துரோகரை தராசையுற் ...... றடைவேனோ 
இராகவ இராமன்முன் இராவண இராவண
     இராவண இராஜனுட் ...... குடன்மாய்வென் 
றிராகன்ம லராணிஜ புராணர்கு மராகலை
     யிராஜசொ லவாரணர்க் ...... கிளையோனே 
விராகவ சுராதிப பொராதுத விராதடு
     விராயண பராயணச் ...... செருவூரா 
விராவிய குராவகில் பராரைமு திராவளர்
     விராலிம லைராஜதப் ...... பெருமாளே.
நோய் இல்லாததும், பழமையானதும், எல்லாவற்றிற்கும் மேலானதும், வரத்தைத் தருவதும், அழிவற்றதும், கவலை அற்றதும், முதன்மையான பேரொளியாக விளங்கி, ஆசையற்றதும், சிவத்தில் மகிழும் தவசிரேஷ்டர்கள் புகழ்வதுமாகி, ஆயுதமே இல்லாமல் (புன்னகையால்) திரிபுரத்தை எரித்த சிவன், திருமால், பிரமன், தேவலோகம், மண்ணுலகம், இயங்கியும் நிலைத்தும் இருக்கும் உயிர்கள், இந்த எல்லா உருவங்களிலும் கலந்த முழு முதற் பொருளாகிய முருகனைக் குறித்து தியானிக்காமல், பயனற்ற புகழைக் கொண்ட மற்றவருக்கு அடிமைப்பட்டு, முதலை போன்ற உள்ளத்தை உடையவரும் அலட்சிய சுபாவம் கொண்டவருமான பாவிகளை மண்ணாசை கொண்டு நான் சேரலாமோ? ரகுவின் மரபிலே வந்த இராம பிரான் முன்னொருநாளில் அழுகுரலுற்றவனும், இரவின் வண்ணமாகிய கரிய நிறம் படைத்தவனும் ஆகிய இராவணன் என்ற அரசன் அச்சப்பட்டு மாயும்படியாக வெற்றி கொண்ட அன்பு நிறைந்தவனாகிய திருமாலின் கண்ணையே மலராகக் கொண்டருளிய உண்மை வரலாற்றை* உடைய சிவபெருமானின் திருக்குமரா, கலைகளுக்கு எல்லாம் தலைவனே, புகழப்படும் அந்த யானைமுகத்தோனுக்குத் தம்பியே, ஆசையே இல்லாதவனே, தேவர்களுக்கு அதிபதியே, போர் செய்யாமலேயே, தவறாமல், வெல்லவல்ல வீர வழியிலே மிக விருப்பம் உடையவனே, திருப்போரூரில் உறைபவனே, கலந்து விளங்கும் குராமரமும், அகில் மரமும் பருத்த அடிமரத்துடன் நன்கு முதிர்ந்து வளர்கின்ற விராலிமலையில்** வாழ்கின்ற, அரசகுணம் படைத்த பெருமாளே. 
* திருவீழிமிழலையில் திருமால் சிவனை நாள்தோறும் 1000 தாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபட்டு வந்தார். திருமாலின் அன்பைச் சோதிக்க, சிவன் ஒருநாள் ஒரு மலரை ஒளித்து மறைக்க, திருமால் குறைந்த மலருக்கு பதிலாக, தாமரை போன்ற தம் கண்ணையே மலராக அர்ச்சித்தபோது, சிவன் திருமாலின் அன்பை மெச்சி சக்ராயுதத்தைப் பரிசாக வழங்கினார் என்பது வரலாறு.
** கோனாடு என்பது எறும்பீசர் மலைக்கு மேற்கு, மதிற்கரைக்குக் கிழக்கு, காவிரிக்குத் தெற்கு, பிரான்மலைக்கு வடக்கு என்ற எல்லைக்கு உட்பட்டது. இங்குதான் விராலிமலை, திருச்சியில் இருந்து மதுரை வழியில் 20 மைலில் மணப்பாறைக்கு அருகே, உள்ளது.
பாடல் 572 - விராலிமலை 
ராகம் - ...; தாளம் -
தனதன தனதன தனன தனதன
     தனதன தனதன தனன தனதன
          தத்ததன தந்ததன தத்ததன தந்ததன
தனதன தனதன தனன தனதன
     தனதன தனதன தனன தனதன
          தத்ததன தந்ததன தத்ததன தந்ததன
தனதன தனதன தனன தனதன
     தனதன தனதன தனன தனதன
          தத்ததன தந்ததன தத்ததன தந்ததன ...... தனதான
இதமுறு விரைபுனல் முழுகி யகில்மண
     முதவிய புகையினி லளவி வகைவகை
          கொத்தலர்க ளின்தொடையல் வைத்துவளர் கொண்டலென
அறலென இசையளி யெனந ளிருளென
     நிறமது கருகிநெ டுகிநெ றிவுபட
          நெய்த்துமுசு வின்திரிகை யொத்தசுருள் குந்தளமும்
இலகிய பிறையென எயினர் சிலையென
     விலகிய திலதநு தலும திமுகமும்
          உற்பலமும் வண்டுவடு விற்கணைய மன்படரு ...... முனைவாளும் 
இடர்படு கவுநடு வனும்வ லடல்பொரு
     கடுவது மெனநெடி தடுவ கொடியன
          இக்குசிலை கொண்டமதன் மெய்த்தவநி றைந்தவிழி
தளவன முறுவலு மமுத குமுதமும்
     விளைநற வினியமொ ழியுமி னையதென
          ஒப்பறுந கங்கள்விரல் துப்பெனவு றைந்துகமு
கிடியொடி படவினை செயும்வின் மதகலை
     நெடியக வுடியிசை முரலு சுரிமுக
          நத்தனைய கண்டமும்வெண் முத்துவிளை விண்டனைய ...... எழில்தோளும் 
விதரண மனவித னமதை யருள்வன
     சததள மறைமுகி ழதனை நிகர்வன
          புத்தமிர்து கந்தகுடம் வெற்பெனநி ரம்புவன
இமசல ம்ருகமத களப பரிமள
     தமனிய ப்ரபைமிகு தருண புளகித
          சித்ரவர மங்கலவி சித்ரவிரு துங்ககன
விகலித மிருதுள ம்ருதுள நவமணி
     முகபட விகடின தனமு முயர்வட
          பத்திரமி ருந்தகடி லொத்தசுழி யுந்தியுள ...... மதியாத 
விபரித முடையிடை யிளைஞர் களைபட
     அபகட மதுபுரி யரவ சுடிகைய
          ரத்நபண மென்பவழ குற்றவரை யும்புதிய
நுணியத ளிரெனவு லவிய பரிபுர
     அணிநட னபதமு முடைய வடிவினர்
          பொற்கலவி யின்பமதி துக்கமென லன்றியவர்
விரகினி லெனதுறு மனம துருகிய
     பிரமையு மறவுன தருள்கை வரவுயர்
          பத்திவழி யும்பரம முத்திநெறி யுந்தெரிவ ...... தொருநாளே 
தததத தததத ததத தததத
     திதிதிதி திதிதிதி திதிதி திதிதிதி
          தத்ததத தந்ததத தித்திதிதி திந்திதிதி
டகுடகு டிகுடிகு டகுகு டிகுடிகு
     டிகுடிகு டகுடகு டிகுகு டகுடகு
          தத்ததிமி டங்குகுகு தித்திதிமி டிங்குகுகு
தமிதமி தமிதக தமித திமிதக
     திமிதிமி செககண திமித திகதிக
          தத்திமித தந்திமித தித்திமிதி திந்திமிதி ...... யெனவேதான் 
தபலைகு டமுழவு திமிலை படகம
     தபுதச லிகைதவில் முரசு கரடிகை
          மத்தளித வண்டையற வைத்தகுணி துந்துமிகள்
மொகுமொகு மொகுவென அலற விருதுகள்
     திகுதிகு திகுவென அலகை குறளிகள்
          விக்கிடநி ணம்பருக பக்கியுவ ணங்கழுகு
சதிர்பெற அதிர்தர உததி சுவறிட
     எதிர்பொரு நிருதர்கள் குருதி பெருகிட
          வப்புவின்மி தந்தெழுப தற்புதக வந்தமெழ ...... வெகுகோடி 
மதகஜ துரகர தமுமு டையபுவி
     யதலமு தல்முடிய இடிய நெடியதொர்
          மிக்கொலிமு ழங்கஇரு ளக்கணம்வி டிந்துவிட
இரவியு மதியமு நிலைமை பெறஅடி
     பரவிய அமரர்கள் தலைமை பெறஇயல்
          அத்திறல ணங்குசெய சத்திவிடு கந்ததிரு
வயலியி லடிமைய குடிமை யினலற
     மயலொடு மலமற அரிய பெரியதி
          ருப்புகழ்வி ளம்புவென்மு னற்புதமெ ழுந்தருள்கு ...... கவிராலி 
மலையுறை குரவந லிறைவ வருகலை
     பலதெரி விதரண முருக சரவண
          உற்பவக்ர வுஞ்சகிரி நிக்ரகஅ கண்டமய
நிருபவி மலசுக சொருப பரசிவ
     குருபர வெளிமுக டுருவ வுயர்தரு
          சக்ரகிரி யுங்குலைய விக்ரமந டம்புரியு
மரகத கலபமெ ரிவிடு மயில்மிசை
     மருவியெ யருமைய இளமை யுருவொடு
          சொர்க்கதல மும்புலவர் வர்க்கமும்வி ளங்கவரு ...... பெருமாளே.
இன்பத்தைத் தருகின்ற வாசனை கலந்த நீரில் மூழ்கி, அகிலின் நறு மணம் வீசும் புகையை ஊட்டி, விதவிதமான கொத்து மலர்களால் தொடுக்கப்பட்ட மாலைகளை ஒழுங்கு பெற வைத்து, வளர்கின்ற மேகம் போன்றும், கரு மணல் போன்றும், இசை பாடும் வண்டுகளின் கூட்டம் போன்றும, நள்ளிரவின் இருள் போலவும் நிறமானது கறுத்து நீளமுள்ளதாய், நெருக்கம் உள்ளதாய், வாசனைத் தயிலம் தடவியதால் பளபளப்புள்ளதாய், கருங்குரங்கின் சுருளை ஒத்த வளைவுள்ள கூந்தலும், விளங்கும் பிறைச் சந்திரன் போன்றும், வேடர்களின் வில்லைப் போன்றும், விசாலமான, திலகம் அணிந்த நெற்றியும, திங்களைப் போன்ற முகமும், நீலோற்ப மலரும், வண்டும், மாவடுவும், வில்லம்பும், யம தூதர்களும், கூரிய வாளும் என நின்று துன்பத்தை உண்டாக்கவும், யமனும், மிக்க வலிமை பொருந்திய கொடிய விஷமும் போன்று நீண்ட நேரம் வருத்துவனவாய், பொல்லாதவனவாய், கரும்பை வில்லாகக் கொண்ட மன்மதனது உண்மைத் தவவலிமை முற்றும் நிறைந்துள்ளதாய் விளங்கும் கண்களும், முல்லை அரும்பை ஒத்த பற்களும், அமுதம் போன்றதாய் குமுத மலர் ஒத்த வாயினின்று வரும் தேன் போல் இனிக்கும் சொற்களும், இதற்குத் தான் நிகர் என்று சொல்ல ஒண்ணாத நகங்களோடு கூடிய விரல்கள் பவளம் போல் விளங்கவும், கமுகு இதற்கு நிகராகாது இடி பட்டு ஒடிந்துவிழ, காதல் வினையைத் தூண்டும் கரும்பு வில் ஏந்திய மன்மத நூலுக்குப் பொருந்த அமைந்த பெரிய கெளடி என்ற பண் வகையை இசைத்து ஒலிக்கின்ற சங்குக்கு ஒப்பான கழுத்தும், வெண்மை நிற முத்துக்கள் விளைகின்ற மூங்கில் போன்ற அழகிய தோள்களும், விவேகம் உள்ள மனத்தில் வேதனைத் துயரைத் தருவனவாய், நூற்றிதழ்த் தாமரை மொட்டை ஒப்பனவாய், புதிய அமிர்த வாசனைக் குடம், மலை போல பூரித்து இருப்பவனவாய், பன்னீர், கஸ்தூரி, கலவைச் சந்தனம் இவைகளைக் கொண்டனவாய், நறு மணம் உள்ளனவாய், பொன் ஒளி மிகுந்தனவாய், இளமை கொண்டனவாய், மகிழ்ச்சி தருவனவாய, அழகு, சிறப்பு, பொலிவு, அதிசயம் இவை யாவும் கொண்டனவாய், நவ ரத்ன மாலையையும், மூடும் அலங்காரத் துணியையும் கொண்டவனவாய், திரட்சி உள்ள மார்பகங்களும், உயர்ந்த ஆலிலை போன்ற அடி வயிற்றில் பொருந்திய சுழிவுற்ற கொப்பூழும், உள்ளத்தில் ஆராயாத மாறு பாடான எண்ணத்தை உடையவராய் அத்தகைய எண்ணத்தின் இடையே அகப்பட்ட இளைஞர்கள் சோர்வு அடைய, வஞ்சகம் செய்கின்ற பாம்பின் தலை உச்சியில் உள்ள ரத்ன படம் என்று சொல்லத் தக்க அழகு வாய்ந்த பெண்குறியும், புதிய நுண்ணிய தளிர் போன்று உலவுகின்ற, சிலம்பு அணிந்த, நடனத்துக்கு உற்ற பாதங்களை உடைய உருவத்தினராகிய விலைமாதர்களுடைய அழகிய சேர்க்கை இன்பமானது அதிக துக்கத்தைத் தருவது என்று உணர்தலோடு கூட, அவ்வேசிகளின் தந்திரச் செயல்களில் என்னுடைய மனமானது உருகிடும் மயக்கமும் ஒழிய, உனது திருவருள் கைகூட உயர்ந்த பக்தி வழியும் மேலான முக்தி நெறியும் எனக்குப் புலப்படுவதாகிய ஒரு நாள் உண்டாகுமா? மேற்கூறிய தாள மெட்டுக்கு ஏற்ப தபேலா என்ற ஒரு மத்தள வகை, குடவடிவுள்ள முழவு வாத்திய வகை, திமிலை என்ற ஒருவகைப் பறை, சிறு பறை வகை, முன் இல்லாததான புது வகையான சல்லென்ற ஓசை உடைய சல்லிகை என்னும் பெரும் பறை, தவில் வகை. முரசு, கரடி கத்தினாற் போல் ஓசை உடைய பறை வகை, மத்தள வாத்திய வகை, பேருடுக்கை, நிரம்ப இருந்த தகுணிச்சம் என்ற துந்துமிகள் பேரொலி எழுப்ப, வெற்றிச் சின்னங்கள் திகு திகு என்று எங்கும் விளங்க, பேய்களும், மாய வித்தைக் குறளிப் பிசாசுகளும் விக்கல் வரும் அளவு கொழுப்பை உண்ண, பறவைகளான கருடனும், கழுகும் பேறு பெற்றோம் என்று ஆரவாரிக்க, கடல் வற்றிப் போக, சண்டை செய்யும் அசுரர்களின் இரத்தம் பெருகிட, அந்தச் செந்நீரில் மிதந்து எழுபது கணக்கான அற்புதமான தலையற்ற உடல்கள் (கவந்தங்கள்) எழ, பல கோடிக் கணக்கானமத யானைகளையும், குதிரைகளையும், தேர்களையும உடைய பூமியும், அதலம் முதலான கீழேழ் உலகமும் அதிர்ச்சி உற்று கலங்க, நீண்ட பெருத்த ஒலி முழங்கி எழ, உலகின் துயர் அந்தக் கணத்திலேயே விலகி ஒழிய, சூரியனும் சந்திரனும் பழைய நிலை பெற்று விளங்க, திருவடியைப் போற்றிய தேவர்கள் மேன்மையை அடைய, பொருந்திய அந்த வீர லட்சுமி விளங்கும் வெற்றி வேலைச் செலுத்திய கந்தனே, திரு வயலூரில் (அடியேனுடைய) குடிப் பிறப்பின் துன்பங்கள் நீங்க, மயக்கமும் மும்மலங்களும் அகல, அருமையான பெரிய திருப்புகழைச் சொன்ன என் கண்களின் முன்னே அற்புதக் காட்சியுடன் எழுந்தருளிய குகனே*, விராலி மலையில் வீற்றிருக்கும் பெரியோனே, பெருமை பொருந்திய இறைவனே, உள்ள கலைகள் பலவும் தெரிந்த கருணை வாய்ந்த முருகனே, சரவணப் பொய்கையில் தோன்றினவனே, கிரெளஞ்ச மலையை அழித்தவனே, எங்கும் பூரணமாய் நிறைந்த அரசே, மாசற்றவனே, ஆனந்த வடிவானவனே, பரமசிவனுக்கு குரு மூர்த்தியே, அண்டத்தின் புற எல்லையைத் தாண்டி உயர்ந்து செல்லும், சக்ரவாள கிரியும் நடுக்கம் உற வல்லமை பொருந்திய நடனத்தைச் செய்யும், பச்சை நிறமான தோகைகள் ஒளி வீசும் மயில் மேல் பொருந்தியவனே, அருமை வாய்ந்த இளமை உருவத்தோடு, விண்ணுலகும் புலவர்கள் கூட்டமும சுற்றிலும் விளங்க எழுந்தருளும் பெருமாளே. * 'விகட பரிமள' எனத் துவக்கும் பாடலை அருணகிரியார் வயலூரில் பாட இறைவன் உவந்து அவர் முன் அற்புதக் கோலத்தோடு எழுந்தருளி அவரது இன்னலை ஒழித்து, ஞானோபதேசம் செய்து விராலி மலைக்கு வா என்று அழைத்தார். இதை, 'விராலி மாலையில் நிற்பம், நீ கருதி உற்று வா, என அழைத்து என் மனதாசை மாசினை அறுத்து ஞானமுதளித்த வாரம் இனி நித்தம் மறவேனே' என்று வரும் (திருப்புகழ் - 'தாமரையின் மட்டு') பாடலில் காணலாம்.
பாடல் 573 - விராலிமலை 
ராகம் - ...; தாளம் -
தனதான தான தத்த தனதான தான தத்த
     தனதான தான தத்த ...... தந்ததான
உருவேற வேஜெ பித்து வொருகோடி யோம சித்தி
     யுடனாக ஆக மத்து ...... கந்துபேணி 
உணர்வாசை யாரி டத்து மருவாது வோரெ ழுத்தை
     யொழியாது வூதை விட்டி ...... ருந்துநாளும் 
தரியாத போத கத்தர் குருவாவ ரோரொ ருத்தர்
     தருவார்கள் ஞான வித்தை ...... தஞ்சமாமோ 
தழலாடி வீதி வட்ட மொளிபோத ஞான சித்தி
     தருமாகி லாகு மத்தை ...... கண்டிலேனே 
குருநாடி ராச ரிக்கர் துரியோத னாதி வர்க்க
     குடிமாள மாய விட்டு ...... குந்திபாலர் 
குலையாமல் நீதி கட்டி யெழுபாரை யாள விட்ட
     குறளாக னூறில் நெட்டை ...... கொண்டஆதி 
மருகா புராரி சித்தன் மகனே விராலி சித்ர
     மலைமே லுலாவு சித்த ...... அங்கைவேலா 
மதுரா புரேசர் மெய்க்க அரசாளு மாறன் வெப்பு
     வளைகூனை யேநி மிர்த்த ...... தம்பிரானே.
உருப்போடுகின்ற எண்ணிக்கை நிரம்ப ஆகி மனத்தில் பதியும்படி ஜெபம் செய்து, கோடிக் கணக்கான வேள்வியால் வரும் பேறுகள் கூடிவர, சிவாகமத்து விதிகளை (சிவபூஜை செய்யும் முறைகளை) மகிழ்ச்சியுடன் அனுசரித்து விரும்பி, அறிதலும் ஆசையையும் யாரிடத்திலும் பொருந்த வைக்காமல், ஓரெழுத்தாகிய பிரணவத்தை எப்போதும் ஓதி, நாள் தோறும் (பிராணாயாம முறைப்படி) சுவாசத்தை விடுத்திருந்து, நிலைத்த ஞானம் இல்லாத அறிவினர் குரு என்னும் பதவியை வகிப்பார்கள். ஒரு சிலர் ஞானோபதேசத்தையும் செய்வார்கள். அப்படிப்பட்ட ஞான உபதேசம் பற்றுக் கோடு ஆகுமோ? நெற்றியில் புருவ மத்திய ஸ்தானத்தில் தியானித்தால், பெரு ஞான சித்தியைக் கொடுக்கும் என்றால், அவ்வாறு கொடுக்கின்ற அதை நான் கண்டேன் இல்லை. குருநாட்டை அரசாட்சி செய்த துரியோதனன் முதலியவர்களின் கூட்டம் முற்றும் அழியும்படி மாய வித்தைகளைச் செய்தவனும், குந்தி தேவியின் மைந்தர்களான பாண்டவர்களை அழிந்து போகாமல் நீதி முறையை நிலைப்படுத்தி, ஏழுலகங்களை ஆளும்படி வைத்தவனும், குட்டை வடிவினனான வாமனனாகி வந்து, கெடுதல் இல்லாத நீண்ட திரிவிக்ரம நருவத்தைக் கொண்ட ஆதி மூர்த்தியாகியும் ஆகிய திருமாலின் மருகனே, திரி புரத்தை எரித்தவனும், திருவிளையாடல்களைப் புரிந்தவனும் ஆன சிவபெருமானின் மகனே, அழகிய விராலி மலை* மேல் உலவுகின்ற சித்தனே, அழகிய கையில் வேல் ஏந்தியவனே, மதுராபுரியில் வீற்றிருக்கும் சொக்க நாதரின் உண்மையை விளக்கி**, பாண்டிய மன்னனின் சுரத்தைப் போக்கி, வளைவுபட்டிருந்த அவனது கூனை நிமிர்த்திய தம்பிரானே. 
* கோனாடு என்பது எறும்பீசர் மலைக்கு மேற்கு, மதிற்கரைக்குக் கிழக்கு, காவிரிக்குத் தெற்கு, பிரான்மலைக்கு வடக்கு என்ற எல்லைக்கு உட்பட்டது. இங்குதான் விராலிமலை, திருச்சியில் இருந்து மதுரை வழியில் 20 மைலில் மணப்பாறைக்கு அருகே, உள்ளது.
** சமணரோடு செய்த வாதில் சம்பந்தர் வெற்றி பெற்று சிவபெருமானது மெய்ம்மையை உலகுக்கு விளக்கி அருளினார். முருகன் சம்பந்தராக அவதரித்ததைக் குறிக்கும்.
பாடல் 574 - விராலிமலை 
ராகம் ...; தாளம் -
தனதனனந் தான தாத்த தனதனனந் தான தாத்த
     தனதனனந் தான தாத்த ...... தனதான
எதிரெதிர்கண் டோடி யாட்கள் களவதறிந் தாசை பூட்டி
     இடறிவிழும் பாழி காட்டு ...... மடமாதர் 
இறைவைகொளுங் கூவல் மூத்த கறையொழுகுந் தாரை பார்க்கி
     லிளமைகொடுங் காத லாற்றில் ...... நிலையாத 
அதிவிகடம் பீழ லாற்ற அழுகிவிழும் பீற லூத்தை
     அடையுமிடஞ் சீலை தீற்று ...... கருவாயில் 
அருவிசலம் பாயு மோட்டை அடைவுகெடுந் தூரை பாழ்த்த
     அளறிலழுந் தாம லாட்கொ ...... டருள்வாயே 
விதுரனெடுந் த்ரோண மேற்று எதிர்பொருமம் பாதி யேற்றி
     விரகினெழுந் தோய நூற்று ...... வருமாள 
விரவுஜெயன் காளி காட்டில் வருதருமன் தூத னீற்ற
     விஜயனெடும் பாக தீர்த்தன் ...... மருகோனே 
மதியணையுஞ் சோலை யார்த்து மதிவளசந் தான கோட்டின்
     வழியருளின் பேறு காட்டி ...... யவிராலி 
மலைமருவும் பாதி யேற்றி கடிகமழ்சந் தான கோட்டில்
     வழியருளின் பேறு காட்டு ...... பெருமாளே.
எதிரில் எதிரில் வருகின்றவர்களைக் கண்டதும் ஓடிச் சென்று (வருகின்ற) ஆட்களின் நிலையைத் திருட்டுத்தனமாகத் தெரிந்து கொண்டு அவர்களுக்கு ஆசையை ஊட்டி, தடுக்கி விழும் குகை போன்ற இடத்தை காட்டுகின்ற இளம் மாதர்களுடைய பெண்குறி (காம நீரை) இறைப்பதற்கான கூடையைக் கொடுக்கின்ற கிணறு ஆகும். பழைய கழிவுப் பொருட்கள் ஒழுகும் துவாரம். ஆராய்ந்து பார்த்தால் இளம் பருவத்துக் கொடிய காதல் ஆற்றில் நிலைக்க முடியாத மிக்க பயங்கரமான துக்கம் விளைக்கும் சுழல். மிகவும் அழுகி விடுகின்ற கிழியுண்ட இடம். அழுக்கு சேரும் இடம். ஆடை மூடுகின்ற, கரு உண்டாகும் துவார வாசல். அருவி போல் நீர் பாய்கின்ற ஓட்டை. தகுதி அற்ற அடிப்பாகம் (ஆகிய) பாழ்பட்ட குழைச் சேற்றில் நான் அழுந்தாமல், (என்னை) ஆட்கொண்டு அருள்வாயே. விதுரன் பெரிய வில்லை எடுத்து, எதிரியுடன் போர் செய்ய அம்பு முதலிய பாணங்களை அதில் ஏற்றி சாமர்த்தியத்துடன் எழுந்து போர் புரிதல் ஓயுமாறு, துரியோதனன் ஆகிய நூறு பேரும் இறக்க உபாயம் செய்த வெற்றி வீரன், துர்க்கை வாழும் இடும்பை வனத்தில் வாசம் செய்த தருமருடைய தூதுவன், திருநீறு இட்டுத் தவம் செய்த அருச்சுனனுடைய பெரிய தேரின் பாகனாகிய பரிசுத்த மூர்த்தி திருமாலின் மருகனே, சந்திரன் தழுவும்படி உயர்ந்துள்ள சோலைகளோடு கூடிய, அதிக வளப்பம் உள்ள சந்தானம் என்னும் மரம் போல, தன்னை வழிபட்டோர்க்கு விரும்பியவற்றை வழங்கும் விராலி மலையில்* வீற்றிருப்பவனே, பாதி தூரம் வரை அன்பர்களை வரச் செய்து, அங்கு தெய்வ மணம் கமழும் சந்தான கோடு என்னும் இடத்தில் எழுந்தருளி இருந்து கொண்டு, அவர்கள் இச்சித்தவற்றை அருளும் பெருமாளே. 
* விராலிமலை திருச்சியில் இருந்து மதுரை வழியில் 20 மைலில் மணப்பாறைக்கு அருகே உள்ளது.
பாடல் 575 - விராலிமலை 
ராகம் - பைரவி ; தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2 
- எடுப்பு - 1/2 அக்ஷரம் தள்ளி 
தகிட-1 1/2, தகதிமி-2
தந்த தானன தான தனதன
     தந்த தானன தான தனதன
          தந்த தானன தான தனதன ...... தனதான
ஐந்து பூதமு மாறு சமயமு
     மந்த்ர வேதபு ராண கலைகளும்
          ஐம்ப தோர்வித மான லிபிகளும் ...... வெகுரூப 
அண்ட ராதிச ராச ரமுமுயர்
     புண்ட ¡£கனு மேக நிறவனும்
          அந்தி போலுரு வானு நிலவொடு ...... வெயில்காலும் 
சந்த்ர சூரியர் தாமு மசபையும்
     விந்து நாதமு மேக வடிவம
          தன்சொ ரூபம தாக வுறைவது ...... சிவயோகம் 
தங்க ளாணவ மாயை கருமம
     லங்கள் போயுப தேச குருபர
          சம்ப்ர தாயமொ டேயு நெறியது ...... பெறுவேனோ 
வந்த தானவர் சேனை கெடிபுக
     இந்த்ர லோகம்வி பூதர் குடிபுக
          மண்டு பூதப சாசு பசிகெட ...... மயிடாரி 
வன்கண் வீரிபி டாரி ஹரஹர
     சங்க ராஎன மேரு கிரிதலை
          மண்டு தூளெழ வேலை யுருவிய ...... வயலூரா 
வெந்த நீறணி வேணி யிருடிகள்
     பந்த பாசவி கார பரவச
          வென்றி யானச மாதி முறுகுகல் ...... முழைகூடும் 
விண்டு மேல்மயி லாட இனியக
     ளுண்டு காரளி பாட இதழிபொன்
          விஞ்ச வீசுவி ராலி மலையுறை ...... பெருமாளே.
மண், நீர், தீ, காற்று, வெளி ஆகிய ஐந்து பூதங்களும், சைவம், வைணவம், காணாபத்யம், கெளமாரம், சாக்தம், செளரம் என்ற ஆறு சமயங்களும், மந்திரங்களும், வேதங்களும், புராணங்களும்*, கலைகளும், ஐம்பத்தொரு விதமான எழுத்துக்களும், அனேக உருவங்களுடன் கூடிய தேவர்கள் முதல் அசைகின்ற, அசையாத உயிர்கள் யாவும், உயர்ந்த பிரமனும், கார்மேக நிறத்துத் திருமாலும், அந்தி வானம் போன்ற செம்மேனியை உடைய ருத்திரனும், நிலவோடு வெயிலை வீசுகின்ற சந்திரனும், சூரியனும், அம்ச மந்திரமும்** சுக்கில சுரோணிதமாக விளங்கும் சிவ சக்தியும், இவை அனைத்தும் கலந்து இருப்பது ஒரே வடிவமாகும். வேறு வேறாகப் பிரிக்காமல் அதன் ஸ்வரூபமாகவே அகண்டாகாரமாக இருக்கும் சிவத்தை அறிந்து அதில் நிலையாக நிற்பதுவே சிவ யோகம் ஆகும். அவரவர்களுக்கு உரிய ஆணவம், மாயை, கன்மம் என்ற மும்மலங்களும் நீங்கப் பெற்று, பரம்பரையாக குருமூர்த்தியிடம் உபதேசம் பெறுகிற வழியில் நின்று, அந்த மரபின் நியமத்துடன் உபதேச நெறியை யானும் பெறக் கடவேனோ? போருக்காக எதிர்த்து வந்த அசுரர் சேனைகள் அச்சம் அடைய, தேவர்கள் இந்திர லோகத்துக்குச் சென்று மீண்டும் குடியேற, நெருங்கி வந்த பூதங்களும் பைசாசங்களும் பசி ஆற, மகிஷாசுரனை அழித்த, கொடுமையும் வீரமும் உடையவளுமான துர்க்கை ஹரஹரா சங்கரா என்று துதி செய்ய, மேரு மலையின் உச்சிச் சிகரத்தில் மிகுந்த புழுதி உண்டாக, வேலாயுதத்தை விடுத்து அருளிய வயலூரனே, நெருப்பில் வெந்த திருநீற்றை அணியும், ஜடாமுடி உடைய ரிஷிகள் பந்தம், பாசம் என்ற கலக்கங்களை நீக்கின வெற்றி நிலையான சமாதி நிலையை திண்ணிய கற்குகையாகும் விராலிமலையில் அடைய, அந்த மலையின் மீது மயில் ஆட, இனிப்பான கள்ளை உண்டு கரிய வண்டுகள் பாட, கொன்றை மரங்கள் (பூவுக்குப் பதிலாக) பொன்னை மிகுதியாகச் சொரியும் விராலி மலையில்*** வீற்றிருக்கும் பெருமாளே. 
* புராணங்கள் 18 - சைவம், பெளஷ்யம், மார்க்கண்டேயம், லிங்கம், ஸ்காந்தம், வராகம், வாமனம், மச்சம், கூர்மம், பிரம்மாண்டம், கருடம், நாரதீயம், விஷ்ணு, பாகவதம், பிரமம், பத்மம், ஆக்னேயம், பிரமகைவர்த்தம்.
** அசபை என்ற அம்ச மந்திரம் வடமொழியில் ஸோஹம் என்பது. ஸ + அஹம், அதாவது அவனே நான் என்ற, பரமாத்மா - ஜீவாத்மா ஐக்கியத்தைக் குறிப்பிடும் மந்திரம்.
*** கோனாடு என்பது எறும்பீசர் மலைக்கு மேற்கு, மதிற்கரைக்குக் கிழக்கு, காவிரிக்குத் தெற்கு, பிரான்மலைக்கு வடக்கு என்ற எல்லைக்கு உட்பட்டது. இங்குதான் விராலிமலை, திருச்சியில் இருந்து மதுரை வழியில் 20 மைலில் மணப்பாறைக்கு அருகே, உள்ளது.
பாடல் 576 - விராலிமலை 
ராகம் - ...; தாளம் -
தனதன தந்தன தந்த தந்தன
     தனதன தந்தன தந்த தந்தன
          தனதன தந்தன தந்த தந்தன ...... தனதான
கரதல முங்குறி கொண்ட கண்டமும்
     விரவியெ ழுந்துசு ருண்டு வண்டடர்
          கனவிய கொண்டைகு லைந்த லைந்திட ...... அதிபாரக் 
களபசு கந்தமி குந்த கொங்கைக
     ளிளகமு யங்கிம யங்கி யன்புசெய்
          கனியித ழுண்டுது வண்டு பஞ்சணை ...... மிசைவீழா 
இரதம ருந்தியு றுங்க ருங்கயல்
     பொருதுசி வந்துகு விந்தி டும்படி
          யிதவிய வுந்தியெ னுந்த டந்தனி ...... லுறமூழ்கி 
இனியதொ ரின்பம்வி ளைந்த ளைந்துபொய்
     வனிதையர் தங்கள்ம ருங்கி ணங்கிய
          இளமைகி ழம்படு முன்ப தம்பெற ...... வுணர்வேனோ 
பரதசி லம்புபு லம்பு மம்பத
     வரிமுக எண்கினு டன்கு ரங்கணி
          பணிவிடை சென்றுமு யன்ற குன்றணி ...... யிடையேபோய்ப் 
பகடியி லங்கைக லங்க அம்பொனின்
     மகுடசி ரந்தச முந்து ணிந்தெழு
          படியுந டுங்கவி ழும்ப னம்பழ ...... மெனவாகும் 
மருதமு தைந்தமு குந்த னன்புறு
     மருககு விந்தும லர்ந்த பங்கய
          வயலியில் வம்பவிழ் சண்ப கம்பெரி ...... யவிராலி 
மலையில்வி ளங்கிய கந்த என்றுனை
     மகிழ்வொடு வந்திசெய் மைந்த னென்றனை
          வழிவழி யன்புசெய் தொண்டு கொண்டருள் ...... பெருமாளே.
கையும், நகக் குறி கொண்ட கழுத்தும் ஒருங்கே எழுந்தும், சுருண்டு, வண்டு நெருங்கிய பெருமை வாய்ந்த கூந்தல் குலைந்து அசையவும், அதிக கனம் வாய்ந்த, கலவை நறு மணம் மிக்க தனங்கள் நெகிழ்ந்து அசையும்படியும் இணைந்து, காம மயக்கில் மயங்கி அன்பு காட்டும் கொவ்வைக் கனி போன்ற வாயிதழ் உண்டு, சோர்வு உற்று பஞ்சு மெத்தையின் மீது வீழ்ந்து, வாயூறு நீரைப் பருகி, பொருந்திய கரிய மீன் போன்ற கண்கள் ஒன்றுபட்டுச் சிவந்து குவியுமாறு, இன்பத்தைத் தரும் கொப்பூழ் என்னும் குளத்தில் பொருந்தி முழுகி, இனிமை தரும் ஓர் இன்பம் உண்டாக அதை அனுபவித்து, பொய் நிறைந்த பொது மகளிர் வசம் ஈடுபட்ட என் இளமை முதுமையாக மாறிக்கொண்டு வரும்போதாவது உனது திருவடிகளைப் பெறும் வழியை உணர்ந்து கொள்வேனோ? பரத நாட்டியத்துக்கு அணிந்து கொள்ளும் சலங்கைகள் ஒலிக்கும் அழகிய திருவடிகளை உடையவனே, ஒளி பொருந்திய முகத்தை உடைய ஜாம்பவான் முதலான கரடிப் படையும் குரங்குப் படையும் ஏவல் புரிய போருக்குச் சென்று, முயற்சி செய்து மலை வரிசைகளின் இடையே போய், மோசக்காரனான ராவணனது இலங்கை கலங்கும்படி, அழகிய பொன்னாலாகிய கி¡£டங்களை அணிந்த பத்துத் தலைகளும் துணிக்கப்பட்டு, ஏழு உலகங்களும் நடுங்கும்படி பனம்பழம் போல் விழும்படி ஆக்கின (ராம)ரும், மருத மரங்களை ஒடிந்து விழ வைத்த (கண்ணனுமாகிய) திருமால் அன்பு வைத்துள்ள மருகனே, குவிந்து மலர்கின்ற தாமரைகள் நிறைந்த வயலூரிலும், மணம் வீசும் சண்பக மலர்கள் விளங்கும் பெருமை வாய்ந்த விராலி மலையிலும்* விளங்கிய கந்தனே, என்றும் உன்னை வாழ்த்தி மகிழ்ச்சியுடன் வந்தனை செய்கின்ற பிள்ளையாகிய அடியேனுடைய வழிவழியாக அன்பு செய்கின்ற பாடற் பணியை ஏற்றுக்கொண்டு அருளும் பெருமாளே. 
* விராலிமலை, திருச்சியில் இருந்து மதுரை வழியில் 20 மைலில், மணப்பாறைக்கு அருகே உள்ளது.
பாடல் 577 - விராலிமலை 
ராகம் - தோடி; தாளம் - அங்கதாளம் - 5 1/2 
- எடுப்பு - 1/2 தள்ளி 
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2
தனன தான தானான தனன தான தானான
     தனன தான தானான ...... தனதான
கரிபு ராரி காமாரி திரிபு ராரி தீயாடி
     கயிலை யாளி காபாலி ...... கழையோனி 
கரவு தாச னாசாரி பரசு பாணி பானாளி
     கணமொ டாடி காயோகி ...... சிவயோகி 
பரம யோகி மாயோகி பரிய ராஜ டாசூடி
     பகரொ ணாத மாஞானி ...... பசுவேறி 
பரத மாடி கானாடி பரவ யோதி காதீத
     பரம ஞான வூர்பூத ...... அருளாயோ 
சுருதி யாடி தாதாவி வெருவி யோட மூதேவி
     துரக கோப மீதோடி ...... வடமேரு 
சுழல வேலை தீமூள அழுத ளாவி வாய்பாறி
     சுரதி னோடு சூர்மாள ...... வுலகேழும் 
திகிரி மாதி ராவார திகிரி சாய வேதாள
     திரளி னோடு பாறோடு ...... கழுகாடச் 
செருவி னாடு வானீப கருணை மேரு வேபார
     திருவி ராலி யூர்மேவு ...... பெருமாளே.
யானையின் உடலை அழித்து தோலை உடுத்தியவரும், மன்மதனை எரித்தவரும், திரிபுரத்தை அழித்தவரும், சுடலை (மயான) நெருப்பில் மூழ்கி ஆடுபவரும், கயிலைமலைக்கு இறைவரும், மண்டையோட்டை (கபாலம்) கையில் ஏந்தியவரும், மூங்கிலின் கீழே தோன்றியவரும்*, கையில் நெருப்பை ஏந்திய ஆசார்ய குருநாதரும், மழு (கோடரி) ஆயுதத்தைக் கையில் கொண்டவரும், நள்ளிரவில் ஆடுதற்கு விரும்புபவரும், பூத கணங்களுடன் ஆடுபவரும், உலகங்களைக் காக்கும் யோகியும், சிவ யோகியும், பரம யோகியும், மகா கனம் பொருந்திய யோகியும், பெரிய பாம்பை ஜடாமுடியில் சூடியவரும், சொல்லுதற்கு அரிய மகா ஞானியும், பசுவை வாகனமாகக் கொண்டவரும், பரத நாட்டியம் ஆடுபவரும், காட்டிலே நடனம் செய்பவரும், மேலானவரும், மூப்பைக் கடந்தவரும் ஆகிய பரம சிவனாரின் பெரிய ஞான ஊருக்குள் (சிவஞானபீடத்தில்) யான் புகுவதற்கு நீ அருளமாட்டாயோ? வேதங்களை அத்யயனம் செய்த பிரமன் மிகவும் அஞ்சி ஓடவும், மூதேவி அகன்று ஓடவும், மிக்க கோபம் கொண்டு, வடக்கே உள்ள மேருமலை சுழலவும், கடலிலே நெருப்பு பிடித்துக்கொள்ளவும், வாய் கிழிய அழுகை கலந்த ஓசையுடன் சூரன் மாயவும், ஏழு உலகங்களுடன் வட்டமான, திசைகளை மறைக்கும், சக்ரவாளகிரியும் சாயவும், பேய்க் கூட்டங்களுடன் பருந்துகளும் கழுகுகளும் ஆடவும், போர்க்களத்தை விரும்பிச் சென்றவனே, பரிசுத்தமான கடம்பமாலையை அணிந்தவனே, கருணையின் மேருமலையே, பெருமை மிக்க அழகிய விராலிமலையில்** அமர்ந்த பெருமாளே. 
* சிவபிரான் மூங்கிலின் அடியில் சுயம்புவாகத் தோன்றியதால் வேய்முத்தர் எனப் பெயர் கொண்டார் - திருநெல்வேலி தலபுராணம்.இப்பாடலில் முதற்பகுதி சிவனையும், பிற்பகுதி முருகனது போரையும் வருணிப்பது சிறப்பானது.
** கோனாடு என்பது எறும்பீசர் மலைக்கு மேற்கு, மதிற்கரைக்குக் கிழக்கு, காவிரிக்குத் தெற்கு, பிரான்மலைக்கு வடக்கு என்ற எல்லைக்கு உட்பட்டது. இங்குதான் விராலிமலை, திருச்சியில் இருந்து மதுரை வழியில் 20 மைலில் மணப்பாறைக்கு அருகே, உள்ளது.
பாடல் 578 - விராலிமலை 
ராகம் - ...; தாளம் -
தானாத்தன தான தனதன
     தானாத்தன தான தனதன
          தானாத்தன தான தனதன ...... தனதான
காமாத்திர மாகி யிளைஞர்கள்
     வாழ்நாட்கொடு போகி யழகிய
          காதாட்டிய பார இருகுழை ...... யளவோடிக் 
கார்போற்றவ ழோதி நிழல்தனி
     லார்வாட்கடை யீடு கனகொடு
          காலேற்றுவை வேலின் முனைகடை ...... யமதூதர் 
ஏமாப்பற மோக வியல்செய்து
     நீலோற்பல ஆசில் மலருட
          னேராட்டவி நோத மிடும்விழி ...... மடவார்பால் 
ஏகாப்பழி பூணு மருளற
     நீதோற்றிமு னாளு மடிமையை
          யீடேற்றுத லாலுன் வலிமையை ...... மறவேனே 
சீமாட்டியு மாய திரிபுரை
     காலாக்கினி கோப பயிரவி
          சீலோத்தமி நீலி சுரதிரி ...... புவநேசை 
சீகார்த்திகை யாய அறுவகை
     மாதாக்கள்கு மார னெனவெகு
          சீராட்டொடு பேண வடதிசை ...... கயிலாசக் 
கோமாற்குப தேச முபநிட
     வேதார்த்தமெய்ஞ் ஞான நெறியருள்
          கோதாட்டிய ஸ்வாமி யெனவரு ...... மிளையோனே 
கோடாச்சிவ பூஜை பவுருஷ
     மாறாக்கொடை நாளு மருவிய
          கோனாட்டுவி ராலி மலையுறை ...... பெருமாளே.
(முதல் ஒன்பது வரிகள் வேசையரின் கண்களை வர்ணிக்கின்றன). மன்மதனுடைய பாணமாக இருந்து, இளைஞர்களின் உயிரைக் கவர்ந்து சென்று, அழகு வாய்ந்த காதில் ஆடுகின்ற கனத்த இரண்டு குண்டலங்கள் வரையிலும் ஓடிச் சென்று, கருமேகம் போல் தவழ்ந்து விளங்கும் கூந்தலின் நிழலில் நிறைந்து நின்று, வாள் முனை போன்று வலிமையும் பெருமையும் கொண்டதாய், கொடுங் காற்றின் தன்மை கொண்டு, கூரிய வேலின் முனை நுனி போன்ற இக்கண்களின் கொடுமை முன் (நாம் எம்மட்டு எனும்படி) யம தூதுவர்கள் இறுமாப்பை இழக்க, மோகத் தன்மையை ஊட்டி, நீலோற்பலத்தின் குற்றமில்லாத மலருக்கு ஒப்பான ஆட்டத்தையும் ஆச்சரியத்தையும் காட்டும் கண்களை உடைய வேசியர் மீது நீங்காத நிந்தையான பழிச் சொல்லைக் கொண்டிருந்த மயக்கம் (என்னை) விட்டு நீங்க, நீ எதிரில் தோன்றி முன்பு அடிமையாகிய என்னைக் கரை ஏற்றிய காரணத்தால் உன் அருளின் திறத்தை நான் மறக்க மாட்டேன். பெருமாட்டியாகிய திரிபுரை, யுகாந்த கால வடவாமுகாக்னி போன்ற கோபம் கொள்ளும் பைரவி, நல்லொழுக்கம் உள்ள உத்தமி, நீல நிறம் உடையவள், விண் முதலிய மூவுலகங்களுக்கும் ஈசுவரியாகிய பார்வதி தேவியும், ஸ்ரீ கார்த்திகையாகிய அறுவகை மாதர்களும் குமாரனே என்று மிக்க செல்லப் பாராட்டுகளுடன் உன்னைப் போற்ற, வட திசையில் உள்ள கயிலாயத்தில் வீற்றிருக்கும் தலைவாராகிய சிவபெருமானுக்கு உபதேசமாக உபநிடதம், வேதம் இவைகளுக்குப் பொருளான மெய்ஞ்ஞான மார்க்கத்தை அருள் செய்து, அறியாமை என்னும் குற்றத்தை நீக்கிய குரு மூர்த்தி என்னும் பெயர் விளங்க வாய்ந்த இளையவனே, நெறி தவறாத முறையில் சிவ பூஜையும், ஆண்மையும், இல்லை என்னாத கொடையும் தினந்தோறும் பொருந்தியுள்ள கோனாட்டைச்* சேர்ந்த விராலி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* கோனாடு என்பது எறும்பீசர் மலைக்கு மேற்கு, மதிற்கரைக்குக் கிழக்கு, காவிரிக்குத் தெற்கு, பிரான்மலைக்கு வடக்கு என்ற எல்லைக்கு உட்பட்டது. இங்குதான் விராலிமலை, திருச்சியில் இருந்து மதுரை வழியில் 20 மைலில் மணப்பாறைக்கு அருகே உள்ளது.
பாடல் 579 - விராலிமலை 
ராகம் - கரஹரப்ரியா ; தாளம் - சதுஸ்ர்ருபகம் - 6 
- எடுப்பு - வீச்சில் 1/2 இடம்
தனாதனன தான தந்த தனாதனன தான தந்த
     தனாதனன தான தந்த ...... தனதான
கொடாதவனை யேபு கழ்ந்து குபேரனென வேமொ ழிந்து
     குலாவியவ மேதி ரிந்து ...... புவிமீதே 
எடாதசுமை யேசு மந்து எணாதகலி யால்மெ லிந்து
     எலாவறுமை தீர அன்று ...... னருள்பேணேன் 
சுடாததன மான கொங்கை களாலிதய மேம யங்கி
     சுகாதரம தாயொ ழுங்கி ...... லொழுகாமல் 
கெடாததவ மேம றைந்து கிலேசமது வேமி குந்து
     கிலாதவுட லாவி நொந்து ...... மடியாமுன் 
தொடாய்மறலி யேநி யென்ற சொலாகியது னாவ ருங்கொல்
     சொலேழுலக மீனு மம்பை ...... யருள்பாலா 
நடாதசுழி மூல விந்து நளாவிவிளை ஞான நம்ப
     நபோமணி சமான துங்க ...... வடிவேலா 
படாதகுளிர் சோலை யண்ட மளாவியுயர் வாய்வ ளர்ந்து
     பசேலெனவு மேத ழைந்து ...... தினமேதான் 
விடாதுமழை மாரி சிந்த அநேகமலர் வாவி பொங்கு
     விராலிமலை மீது கந்த ...... பெருமாளே.
தர்மம் செய்யாதவனைப் புகழ்ந்து அவனைக் குபேரன் என்று கூறி, அவனுடன் கூடிக் குலாவி வீணாகத் திரிந்து, இந்தப் பூமியில் தாங்கமுடியாத குடும்பச் சுமையைத் தாங்கி, நினைக்கவும் முடியாத கொடுமை நிறைந்த கலிபுருஷனால் வாடி, எல்லாவிதமான வறுமைகளும் தீரும்பொருட்டு அந்நாளில் உனது திருவருளை விரும்பாது காலம் கழித்தேன். தீயில் சுடாத பசும்பொன் போன்ற மார்புடைய பெண்களிடம் என் மனத்தைப் பறி கொடுத்து உள்ளம் மயங்கி, சுகத்தைத் தரக்கூடிய வழியில் ஒழுக்கத்துடன் நான் நடக்காமல், கெடுதல் இல்லாத தவநெறி மறைந்து போக, துன்பமே மிகவும் பெருகி, வலிமை இல்லாத உடம்பில் உயிர் நொந்து இறந்து போவதற்கு முன் யமனே, நீ இவனுடைய உயிரைத் தொடாதே என்ற சொல்லானது உனது நாவிலிருந்து வருமோ? அதை நீ எனக்குச் சொல்லி அருள்வாயாக. ஏழு உலகங்களையும் பெற்றெடுத்த பார்வதியம்மை அருளிய குமரனே, நட்டுவைக்கப் படாத சுழிமுனை, மூலாதாரம் முதலிய ஆறு ஆதாரங்கள், விந்து இவற்றின் நடுவிலே இருக்கும் உயிர் விளங்கும் ஞான மூர்த்தியே*, சூரியனுக்குச் சமானமான ஒளியும் பரிசுத்தமும் உடைய கூரிய வேலனே, வெயில் படாத குளிர்ந்த சோலைகள் ஆகாயம் வரை ஓங்கி வளர்ந்து பச்சைப் பசேல் என்ற நிறத்துடன் தழைந்து நாள்தோறும் விடாமல் மழை பொழிவதால் பல மலர்கள் நிறைந்த தடாகங்கள் சூழ்ந்துள்ள விராலிமலை** மீது விரும்பி வாழும் பெருமாளே. 
* ஒருவராலும் நட்டுவைக்கப்படாமல் இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட சுழிமுனை, விந்து, இவற்றுடன் மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை ஆகிய ஆறு ஆதாரங்களாகிய குண்டலினி சக்கரங்களின் நடுவில் ஞானப் பிழம்பாக உயிரோடு கலந்து முருகன் இருக்கிறான்.
ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம் 
** கோனாடு என்பது எறும்பீசர் மலைக்கு மேற்கு, மதிற்கரைக்குக் கிழக்கு, காவிரிக்குத் தெற்கு, பிரான்மலைக்கு வடக்கு என்ற எல்லைக்கு உட்பட்டது. இங்குதான் விராலிமலை, திருச்சியில் இருந்து மதுரை வழியில் 20 மைலில் மணப்பாறைக்கு அருகே, உள்ளது.
பாடல் 580 - விராலிமலை 
ராகம் - ...; தாளம் -
தானா தனான தனத்த தத்தன
     தானா தனான தனத்த தத்தன
          தானா தனான தனத்த தத்தன ...... தனதான
மாயா சொரூப முழுச்ச மத்திகள்
     ஓயா வுபாய மனப்ப சப்பிகள்
          வாணா ளையீரும் விழிக்க டைச்சிகள் ...... முநிவோரும் 
மாலா கிவாட நகைத்து ருக்கிகள்
     ஏகா சமீது தனத்தி றப்பிகள்
          வா¡£ ரி¡£ரென் முழுப்பு ரட்டிகள் ...... வெகுமோகம் 
ஆயா தவாசை யெழுப்பு மெத்திகள்
     ஈயா தபோதி லறப்பி ணக்கிகள்
          ஆவே சநீருண் மதப்பொ றிச்சிகள் ...... பழிபாவம் 
ஆமா றெணாத திருட்டு மட்டைகள்
     கோமா ளமான குறிக்க ழுத்திகள்
          ஆசா ரவீன விலைத்த னத்திய ...... ருறவாமோ 
காயா தபால்நெய் தயிர்க்கு டத்தினை
     ஏயா வெணாம லெடுத்தி டைச்சிகள்
          காணா தவாறு குடிக்கு மப்பொழு ...... துரலோடே 
கார்போ லுமேனி தனைப்பி ணித்தொரு
     போர்போ லசோதை பிடித்த டித்திட
          காதோ டுகாது கையிற்பி டித்தழு ...... தினிதூதும் 
வேயா லநேக விதப்ப சுத்திரள்
     சாயா மல்மீள அழைக்கு மச்சுதன்
          வீறா னமாம னெனப்ப டைத்தருள் ...... வயலூரா 
வீணாள் கொடாத படைச்செ ருக்கினில்
     சூர்மா ளவேலை விடுக்கும் அற்புத
          வேலா விராலி மலைத்த லத்துறை ...... பெருமாளே.
மாயையே உரு எடுத்தாற் போன்ற முழுமையான சாமர்த்தியம் உள்ளவர்கள். முடிவில்லாத தந்திரம் நிறைந்த மனத்தோடு பசப்புபவர்கள். வாழ் நாட்களை அறுத்து வீணாக்கும் கடைக் கண்ணை உடையவர்கள். முனிவர்களும் காம மயக்கத்தால் வாடும்படி சிரித்து, அவர்களை உருக்க வல்லவர்கள். மேலே இட்ட ஆடையின் மீது மார்பகத்தைத் திறந்து காட்டுபவர்கள். வாருங்கள், இருங்கள் என்றெல்லாம் கூறும் முழு மோசக்காரிகள். மிக்க மோகத்தையும் ஆய்வதற்கு இடமில்லாத வகையில் காம ஆசையை எழுப்புகின்ற வஞ்சனை வாய்ந்தவர்கள். காசு கொடுக்காத போது மிகவும் மாறுபட்டு நிற்பவர்கள். கள் உண்டு மகிழ்ச்சி கொள்ளும் மனத்தினர்கள். பழி பாவம் ஆகுமோ என்று நினைக்காத திருட்டு வீணிகள். வேடிக்கையான நகக் குறிகள் உள்ள கழுத்தை உடையவர்கள். ஆசாரம் குறைவாக உள்ள மார்பகங்களை விலைக்கு அளிப்பவர்கள். இத்தகையோரின் உறவு நல்லதோ? காய்ச்சாத பால், நெய், தயிர்க் குடங்களை பொருந்திய மனத்துடன் சற்றும் யோசிக்காமல் எடுத்து இடைச்சியர்கள் பார்க்காத வண்ணம் (கண்ணன்) குடித்துக் கொண்டிருக்கும் போது, உரலுடன் அவனுடைய மேகம் போன்ற திருமேனியைக் கட்டி ஒரு போரிடுவது போல் (தாயாகிய) யசோதை பிடித்து அடிக்க, அப்போது இரண்டு காதுகளையும் கைகளால் பிடித்துக் கொண்டு அழுது, இனிமையாக ஊதும் புல்லாங்குழலால் பல விதமான பசுக் கூட்டங்களை தளராத வண்ணம் அழைத்து வரும் (கண்ணனாம்) திருமாலை சிறப்பு வாய்ந்த மாமனாகக் கொண்டருளும் வயலூரானே, ஒரு நாளும் வீணாகாதபடி என்றும் போர் இருந்த படை நம்மிடம் உண்டு என்னும் அகந்தை கொண்டிருந்த சூரன் இறந்து பட (அவன் மாமரமாய் நின்ற) கடலில் ஏவிய அற்புத வேலாயுதத்தை ஏந்தியவனே, விராலி மலை* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* விராலிமலை திருச்சியில் இருந்து மதுரை வழியில் 20 மைலில் மணப்பாறைக்கு அருகே உள்ளது.
பாடல் 581 - விராலிமலை 
ராகம் - மாண்ட்; தாளம் - ஆதி
தானான தான தானான தான
     தானான தான ...... தனதான
மாலாசை கோப மோயாதெ நாளு
     மாயா விகார ...... வழியேசெல் 
மாபாவி காளி தானேனு நாத
     மாதா பிதாவு ...... மினிநீயே 
நாலான வேத நூலாக மாதி
     நானோதி னேனு ...... மிலைவீணே 
நாள்போய் விடாம லாறாறு மீதில்
     ஞானோப தேச ...... மருள்வாயே 
பாலா கலார ஆமோத லேப
     பாடீர வாக ...... அணிமீதே 
பாதாள பூமி யாதார மீன
     பானீய மேலை ...... வயலூரா 
வேலா விராலி வாழ்வே சமூக
     வேதாள பூத ...... பதிசேயே 
வீரா கடோர சூராரி யேசெ
     வேளே சுரேசர் ...... பெருமாளே.
மயக்கம், ஆசை, கோபம் இவையெல்லாம் ஒய்ச்சல் இல்லாமல் நாள்தோறும் பிரபஞ்ச மாயாவிகார வழியிலே போகின்ற மகாபாவி, துர்க்குணம் உள்ளவன்தான் நானெனிலும், நாதனே, தாயும், தந்தையும் இனி நீதான் எனக்கு நான்கு வேத நூல்களையும், ஆகமங்கள் ஆகிய பிற நூல்களையும், நான் படித்ததும் இல்லை. வீணாக வாழ்நாள் போய் விடாமல் முப்பத்தாறு தத்துவங்களுக்கு* அப்பாற்பட்ட நிலைத்த ஞானோபதேசத்தை அருள்வாயே, பாலனே, செங்குவளை மலர்ப் பிரியனே, ஆபரணங்களின் மேல் சந்தனம் பூசிய அழகனே, பாதாளம், பூமியிரண்டுக்கும் ஆதாரமாய் உள்ளவனே, மீனினங்களும் தண்ணீரும் நிறைந்த மேற்கு வயலூரில் குடிகொண்டவனே, வேலனே, விராலிமலைச்** செல்வனே, திரளான பேய்கள், பூதகணங்கள் வணங்கும் தலைவன் (சிவன்) குமாரனே, வீரனே, கொடுமையான சூரனுக்குப் பகைவனே, செவ்வேளே, தேவர்களுக்கு ஈசனே, பெருமாளே. 
* 96 தத்துவங்கள் பின்வருமாறு:36 பரதத்துவங்கள் (அகநிலை): ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து - 25 (புறநிலை): மண், தீ, நீர், காற்று, வெளி.ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை): வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4. 
** கோனாடு என்பது எறும்பீசர் மலைக்கு மேற்கு, மதிற்கரைக்குக் கிழக்கு, காவிரிக்குத் தெற்கு, பிரான்மலைக்கு வடக்கு என்ற எல்லைக்கு உட்பட்டது. இங்குதான் விராலிமலை, திருச்சியில் இருந்து மதுரை வழியில் 20 மைலில் மணப்பாறைக்கு அருகே உள்ளது.
பாடல் 582 - விராலிமலை 
ராகம் - ...; தாளம் -
தானன தந்தன தாத்தன தானன தந்தன தாத்தன
     தானன தந்தன தாத்தன ...... தனதான
மேகமெ னுங்குழல் சாய்த்திரு கோகன கங்கொடு கோத்தணை
     மேல்விழு கின்றப ராக்கினி ...... லுடைசோர 
மேகலை யுந்தனி போய்த்தனி யேகர ணங்களு மாய்க்கயல்
     வேல்விழி யுங்குவி யாக்குரல் ...... மயில்காடை 
கோகில மென்றெழ போய்க்கனி வாயமு துண்டுரு காக்களி
     கூரவு டன்பிரி யாக்கல ...... வியின்மூழ்கிக் 
கூடிமு யங்கிவி டாய்த்திரு பாரத னங்களின் மேற்றுயில்
     கூரினு மம்புய தாட்டுணை ...... மறவேனே 
மோகர துந்துமி யார்ப்பவி ராலிவி லங்கலின் வீட்டதில்
     மூவுல குந்தொழு தேத்திட ...... வுறைவோனே 
மூதிசை முன்பொரு காற்றட மேருவை யம்பினில் வீழ்த்திய
     மோகன சங்கரி வாழ்த்திட ...... மதியாமல் 
ஆகம டிந்திட வேற்கொடு சூரனை வென்றடல் போய்த்தணி
     யாமையின் வென்றவ னாற்பிற ...... கிடுதேவர் 
ஆதி யிளந்தலை காத்தர சாள அவன்சிறை மீட்டவ
     னாளுல கங்குடி யேற்றிய ...... பெருமாளே.
மேகத்தைப் போல் கருமையான கூந்தலைப் பறக்கவிட்டு, இரண்டு தாமரை போன்ற கண்களால் கவ்வி இழுத்து, படுக்கையின் மேல் (காமுகரை) வீழ்த்துகின்ற விளையாட்டில் ஆடை நெகிழ, மேகலை என்னும் இடை அணியும் தனியாகக் கழல, ஒன்றுபட்டு இந்திரியங்களும் இயங்க, கயல் மீன், வேல் போன்ற கண்களும் குவிந்து மூட, குரலானது மயில், காடை, குயில் என்ற பறவைகளின் குரலில் ஒலிக்க, சென்று கொவ்வைக் கனி போன்ற வாயிதழ் ஊறலைப் பருகி, உருகி, மகிழ்ச்சி மிக கூடவே இருந்து, நீங்குதல் இல்லாத இணைப்பில் முழுகி, கூடித் தழுவி, களைத்துப் போய் பாரமான மார்பகங்களின் மீது துயிலுதல் மிகக் கொண்டாலும், என் உறுதுணையாகிய உனது தாமரைத் திருவடிகள் இரண்டையும் மறக்க மாட்டேன். மிக்க ஆரவாரத்துடன் பேரிகைகள் பேரொலி செய்ய விராலி மலையின்* கோயிலில் மூன்று உலகங்களும் தொழுது போற்ற உறைபவனே, வட திசையில் முன்பு ஒரு முறை மலையாகிய மேருவை (செண்டு என்ற) அம்பால் வீழ்த்திய** வசீகரனே, சங்கை ஏந்திய திருமால் உனது வலிமையை வாழ்த்திட, (சூரனைப்) பொருட்படுத்தாமல் அவனது உடல் அழியும்படி வேலாயுதத்தால் சூரனை வென்று, (திக்கு விஜயத்தில்) போருக்குச் சென்று, குறைவு இல்லாதபடி (பல அசுரரையும்) வென்று, அந்தச் சூரனால் பயந்து ஓடிய தேவர்களின் தலைவனான இந்திரனுடைய மகனாகிய ஜயந்தனைக் காத்து, அரசாட்சி புரியும்படி அவனைச் சிறையினின்றும் விடுவித்து, அவன் ஆளும் விண்ணுலகில் மீண்டும் குடியேற்றி வைத்த பெருமாளே. 
* விராலிமலை திருச்சியில் இருந்து மதுரை வழியில் 20 மைலில் மணப்பாறைக்கு அருகே உள்ளது.
** முருகன் பாண்டியன் உக்கிரவழுதியாக மதுரையில் அவதரித்தபோது கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்போது மேருவிடமிருந்து பொற்குவியலைக் கேட்க, அது தராமையால் சினந்து செண்டால் மேருவின்மீது எறிந்து பொன் பெற்றார். அச்செயல் இங்கு குறிப்பிடப்படுகிறது.
பாடல் 583 - விராலிமலை 
ராகம் -...; தாளம் -
தான தனதனன தான தனதனன
     தான தனதனன ...... தந்ததான
மோதி யிறுகிவட மேரு வெனவளரு
     மோக முலையசைய ...... வந்துகாயம் 
மோச மிடுமவர்கள் மாயை தனில்முழுகி
     மூட மெனஅறிவு ...... கொண்டதாலே 
காதி வருமியம தூதர் கயிறுகொடு
     காலி லிறுகஎனை ...... வந்திழாதே 
காவ லெனவிரைய வோடி யுனதடிமை
     காண வருவதினி ...... யெந்தநாளோ 
ஆதி மறையவனு மாலு முயர்சுடலை
     யாடு மரனுமிவ ...... ரொன்றதான 
ஆயி யமலைதிரி சூலி குமரிமக
     மாயி கவுரியுமை ...... தந்தவாழ்வே 
சோதி நிலவுகதிர் வீசு மதியின்மிசை
     தோய வளர்கிரியி ...... னுந்திநீடு 
சோலை செறிவுளவி ராலி நகரில்வளர்
     தோகை மயிலுலவு ...... தம்பிரானே.
மேல் எழுந்து, திண்ணிதாய், வடக்கில் உள்ள மேரு மலை போல் வளருவதாய், காமத்தை ஊட்டும் மார்பகங்கள் அசையும்படி அருகே வந்து, உடலைக் கொண்டு மோசம் செய்கின்ற விலைமகளிரின் மாயையில் முழுகி, மூடத்தன்மை என்னும்படி அறிவைக் கொண்ட காரணத்தால், உயிரைப் பிரிக்க வரும் யம தூதர்கள் பாசக் கயிற்றால் காலில் அழுத்தமாகக் கட்டி என்னை வந்து இழுக்காமல், எனக்குக் காவலாக இருந்து வேகமாக ஓடிவந்து, உன் அடிமையாகிய நான் காணும்படி நீ வருவது இனி எந்த நாள் ஆகுமோ? ஆதி மறையவன் ஆகிய பிரமனும், திருமாலும், பெரிய சுடுகாட்டில் ஆடும் சிவனும் (ஆகிய இம் மூன்று பேரும்) ஒன்றதான தாய், குற்றம் அற்றவள், திரி சூலம் ஏந்தியவள், குமரி, மகமாயி, கெளரி, உமா தேவி ஈன்ற செல்வமே. சோதியான ஒளிக் கிரணங்களை வீசும் சந்திரன் மேலே தோயும்படி வளர்ந்துள்ள மலையின் இடையே பாயும் ஆறும், நீண்ட சோலைகளும் நெருங்கியுள்ள விராலி நகரில்* பொலிந்து விளங்கும் தோகை மயிலின் மேல் உலவும் தம்பிரானே. 
* விராலிமலை திருச்சியில் இருந்து மதுரை வழியில் 20 மைலில் மணப்பாறைக்கு அருகே உள்ளது.
பாடல் 584 - விநாயகமலை - பிள்ளையார்பட்டி 
ராகம் - ஆனந்த பைரவி; தாளம் - அங்தாளம் - 6 1/2 
தகதிமி-2, தகதிமி-2, தகிட-1 1/2, தக-1
தனதன தானா தனாதன தனதன தானா தனாதன
     தனதன தானா தனாதன ...... தனதான
சரவண ஜாதா நமோநம கருணைய தீதா நமோநம
     சததள பாதா நமோநம ...... அபிராம 
தருணக தீரா நமோநம நிருபமர் வீரா நமோநம
     சமதள வூரா நமோநம ...... ஜகதீச 
பரம சொரூபா நமோநம சுரர்பதி பூபா நமோநம
     பரிமள நீபா நமோநம ...... உமைகாளி 
பகவதி பாலா நமோநம இகபர மூலா நமோநம
     பவுருஷ சீலா நமோநம ...... அருள்தாராய் 
இரவியு மாகாச பூமியும் விரவிய தூளேற வானவ
     ரெவர்களு மீடேற ஏழ்கடல் ...... முறையோவென் 
றிடர்பட மாமேரு பூதர மிடிபட வேதா னிசாசர
     ரிகல்கெட மாவேக நீடயில் ...... விடுவோனே 
மரகத ஆகார ஆயனு மிரணிய ஆகார வேதனும்
     வசுவெனு மாகார ஈசனு ...... மடிபேண 
மயிலுறை வாழ்வே விநாயக மலையுறை வேலா மகீதர
     வனசர ராதார மாகிய ...... பெருமாளே.
நாணல் வனம் சூழ்ந்த பொய்கையில் அவதரித்தவனே, போற்றி போற்றி, கருணை எல்லை கடந்த பொருளே, போற்றி போற்றி, நூறு இதழ்கள் கொண்ட தாமரை போன்ற திருவடி உடையவனே, போற்றி போற்றி, மிக்க பேரழகு கொண்டவனே, இளமையும் ¨தரியமும் உடையவனே, போற்றி போற்றி, தலைமைச் சேனாதிபதியாகிய போர் வீரனே, போற்றி போற்றி, போருக்குரிய சேனைகள் உள்ள ஊராகிய திருப்போரூரானே, போற்றி போற்றி, உலகங்கள் அனைத்திற்கும் இறைவனே, உயர்ந்த ஞான வடிவு கொண்டவனே, போற்றி போற்றி, தேவர்கள் தலைவனாம் இந்திரனுக்கும் அரசனே, போற்றி போற்றி, நறுமணம் வீசும் கடம்பமாலையை அணிந்தவனே, போற்றி போற்றி, உமை, காளி, பகவதி எனப்படும் பார்வதி மைந்தா, போற்றி போற்றி, இம்மைக்கும் மறுமைக்கும் மூலகாரணமாக இருப்பவனே, போற்றி போற்றி, ஆண்மையும் குணநலன்களும் உடையவனே, போற்றி போற்றி, உன் திருவருளைத் தந்தருள்வாயாக. சூரிய மண்டலமும், ஆகாயமண்டலமும், பூமியும் தூசுகள் கலந்து படிந்து மறையுமாறும், தேவர்கள் அனைவரும் உய்ந்து உயர் பதவி அடையுமாறும், ஏழு சமுத்திரங்களும் துன்புற்று இது முறையோ என்று கதறவும், பெரிய மேருமலை இடிபட்டு பொடிபடவும், இரவிலே அலையும் அசுரர்கள் தங்கள் வலிமை கெடவும், வெகு வேகமாக நீண்ட வேலாயுதத்தை விடுத்தருளியவனே, மரகதப் பச்சை நிறம்கொண்ட ஆயர்குலக் கொழுந்தாகிய திருமாலும், பொன்னிறம் கொண்ட பிரம்ம தேவனும், நெருப்பு நிறத்தை உடைய ருத்திர மூர்த்தியும் திருவடியைப் போற்ற மயில் வாகனத்தில் எழுந்தருளி வரும் இறைவனே, விநாயக மலை (பிள்ளையார்பட்டி) யில் வாழும் வேலாயுதக் கடவுளே, மலைகளில் வசிக்கும் காட்டு வேடர்களுக்கு ஆதாரமான பெருமாளே. 
பாடல் 585 - திருச்செங்கோடு 
ராகம் - ஆஹிரி ; தாளம் - ஆதி
தந்தான தந்த தந்தான தந்த
     தந்தான தந்த ...... தனதான
அன்பாக வந்து உன்றாள் பணிந்து
     ஐம்பூத மொன்ற ...... நினையாமல் 
அன்பால் மிகுந்து நஞ்சாரு கண்க
     ளம்போரு கங்கள் ...... முலைதானும் 
கொந்தே மிகுந்து வண்டாடி நின்று
     கொண்டாடு கின்ற ...... குழலாரைக் 
கொண்டே நினைந்து மன்பேது மண்டி
     குன்றா மலைந்து ...... அலைவேனோ 
மன்றாடி தந்த மைந்தா மிகுந்த
     வம்பார் கடம்பை ...... யணிவோனே 
வந்தே பணிந்து நின்றார் பவங்கள்
     வம்பே தொலைந்த ...... வடிவேலா 
சென்றே யிடங்கள் கந்தா எனும்பொ
     செஞ்சேவல் கொண்டு ...... வரவேணும் 
செஞ்சாலி கஞ்ச மொன்றாய் வளர்ந்த
     செங்கோ டமர்ந்த ...... பெருமாளே.
அன்புடன் வந்து உன் பாதங்களைப் பணிந்து, பஞ்ச பூதங்களுடனும் ஒருவழிப்பட்டு உன்னை நினையாமல், அன்பு அதிகமாய்ப் போய், விஷம் நிறைந்த கண்களும், தாமரை மொட்டுப் போன்ற மார்பகங்களும், பூங்கொத்துக்கள் நிறைந்து வண்டுகள் விளையாடி மகிழ்கின்ற கூந்தலும் உடைய பொது மகளிரை மனதில் நினைத்தே, மிக்க அறியாமை பெருகி மனம் குன்றி ஒருவழிப்படாது அலைந்து திரிவேனோ? சபையில் நடனமாடும் சிவபிரான் தந்த குமரனே, மிக்க வாசனை நிறைந்த கடப்பமாலையை அணிபவனே, வந்து பணிந்து நின்ற அடியார்களின் பிறப்புக்களை அடியோடு தொலைக்கும் கூரிய வேலை உடையவனே, பல இடங்களுக்கும் சென்று கந்தா என அழைக்கும்போது செவ்விய சேவலை ஏந்தி என்முன் வரவேண்டும். செந்நெல் பயிரும் தாமரையும் ஒன்றாக வளரும் திருச்செங்கோட்டில்* வீற்றிருக்கும் பெருமாளே. 
* திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து 6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது.மலை பாம்பின் உருவில் இருப்பதால் நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' - என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.
பாடல் 586 - திருச்செங்கோடு 
ராகம் - ...; தாளம் -
தந்தான தந்த தந்தான தந்த
     தந்தான தந்த ...... தனதான
பந்தாடி யங்கை நொந்தார் பரிந்து
     பைந்தார் புனைந்த ...... குழல்மீதே 
பண்பார் சுரும்பு பண்பாடு கின்ற
     பங்கே ருகங்கொள் ...... முகமீதே 
மந்தார மன்றல் சந்தார மொன்றி
     வன்பாத கஞ்செய் ...... தனமீதே 
மண்டாசை கொண்டு விண்டாவி நைந்து
     மங்காம லுன்ற ...... னருள்தாராய் 
கந்தா அரன்றன் மைந்தா விளங்கு
     கன்றா முகுந்தன் ...... மருகோனே 
கன்றா விலங்க லொன்றாறு கண்ட
     கண்டா வரம்பை ...... மணவாளா 
செந்தா தடர்ந்த கொந்தார் கடம்பு
     திண்டோள் நிரம்ப ...... அணிவோனே 
திண்கோ டரங்க ளெண்கோ டுறங்கு
     செங்கோட மர்ந்த ...... பெருமாளே.
பந்தாட்டம் விளையாடி அழகிய கை நொந்துள்ள பெண்கள் ஆசையோடு அணிந்த பசுமை வாய்ந்த பூ மாலையைச் சூடிய கூந்தலின் மீதும், அழகு நிறைந்த வண்டுகள் இசை பாடுகின்ற தாமரை போன்ற முகத்தின் மேலும், மந்தாரம் என்னும் செவ்வரத்தம் பூவின் வாசனையைக் கொண்ட சந்தனம், முத்து மாலை இவைகளை அணிந்தனவாய், கொடிய பாவங்களுக்கு இடமான மார்பகங்களின் மேலும், நிரம்ப ஆசை பூண்டு, ஆவி விண்டு உயிர் பிரிவது போல வருந்தி, நான் சோர்வு அடையாமல் உன்னுடைய திருவருளைத் தந்து அருள்வாய். கந்தனே, சிவபெருமானுடைய குமாரனே, விளங்குகின்ற கன்றுகளை உடைய பசுக்களுக்குப் பிரியமானவர் ஆகிய கண்ணனின் மருகனே, கோபித்து, மலையாகிய கிரெளஞ்சம் ஒன்றை வழி திறக்கச் செய்யுமாறு வேலைச் செலுத்திய வீரனே, தேவலோகப் பெண்ணான தேவயானையின் கணவனே, சிவந்த மகரந்தத் தூள் பொருந்திய பூங் கொத்துக்கள் அடர்ந்த கடப்ப மாலையை உறுதியுள்ள தோள்களில் மிகவும் விரும்பி அணிபவனே, வலிய குரங்குகள் கரடியுடன் தூங்குகின்ற திருச் செங்கோட்டில்* வீற்றிருக்கும் பெருமாளே. 
* திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து 6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது. மலை பாம்பின் உருவில் இருப்பதால் நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' - என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.
பாடல் 587 - திருச்செங்கோடு 
ராகம் - ...; தாளம் -
தந்தான தந்த தந்தான தந்த
     தந்தான தந்த ...... தனதான
வண்டார்ம தங்க ளுண்டேம யங்கி
     வந்தூரு கொண்ட ...... லதனோடும் 
வண்காம னம்பு தன்கால்ம டங்க
     வன்போர்ம லைந்த ...... விழிவேலும் 
கொண்டேவ ளைந்து கண்டார்தி யங்க
     நின்றார்கு ரும்பை ...... முலைமேவிக் 
கொந்தார ரும்பு நின்தாள்ம றந்து
     குன்றாம லுன்ற ...... னருள்தாராய் 
பண்டாழி சங்கு கொண்டாழி தங்கு
     பண்போனு கந்த ...... மருகோனே 
பண்சார நைந்து நண்போது மன்பர்
     பங்காகி நின்ற ...... குமரேசா 
செண்டாடி யண்டர் கொண்டாட மன்றில்
     நின்றாடி சிந்தை ...... மகிழ்வாழ்வே 
செஞ்சாலி மிஞ்சி மஞ்சாடு கின்ற
     செங்கோட மர்ந்த ...... பெருமாளே.
வண்டுகள் தேனை உண்டு மயக்கத்துடன் வந்து மொய்க்கின்ற, மேகம் போன்ற, கூந்தலுடன், வளப்பம் பொருந்திய மன்மதனின் (மலர்ப்) பாணங்களின் திறனைக் குறைக்கவல்ல, வலிய போரை எதிர்த்த கண்ணாகிய வேலையும் கொண்டு வளைத்துப் போட்டு, பார்த்தவர்கள் சஞ்சலம் அடைய நிற்கின்ற விலைமாதர்களின் தென்னங் குரும்பை ஒத்த மார்பினில் மனம் பொருந்தி, பூங்கொத்துக்கள் நிரம்பத் தோன்றும் உனது திருவடியை மறந்து நான் அழிவுறாமல் உனது திருவருளைத் தந்து அருளுக. பண்டை நாள் முதலாக, சக்கரம், சங்கு இவைகளுடன் பாற்கடலில் துயில் கொள்ளும் தன்மை வாய்ந்த திருமால் மகிழும் மருகனே, இசையுடன் இணைந்து உள்ளம் நெகிழ அன்பான துதிகளை ஓதும் அடியார்களின் பக்கத்தில் நிற்கும் குமரேசனே, (அசுரர்களைச்) சிதற அடித்தும், தேவர்கள் கொண்டாடவும், கனகசபையில் நின்று கூத்தாடுகின்ற சிவபெருமான் உள்ளத்தில் மகிழவும் செய்த செல்வமே, செந்நெல் மிகுந்து வளர, மேகங்கள் சஞ்சரிக்கும் திருச்செங்கோட்டில்* வீற்றிருக்கும் பெருமாளே. 
* திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து 6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது. மலை பாம்பின் உருவில் இருப்பதால் நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' - என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.
பாடல் 588 - திருச்செங்கோடு 
ராகம் - ...; தாளம் -
தனதன தனதன தனதன தனதன
     தந்தான தந்த ...... தனதான
கரையற வுருகுதல் தருகயல் விழியினர்
     கண்டான செஞ்சொல் ...... மடமாதர் 
கலவியில் முழுகிய நெறியினி லறிவுக
     லங்காம யங்கும் ...... வினையேனும் 
உரையையு மறிவையும் உயிரையு முணர்வையும்
     உன்பாத கஞ்ச ...... மலர்மீதே 
உரவொடு புனைதர நினைதரு மடியரொ
     டொன்றாக என்று ...... பெறுவேனோ 
வரையிரு துணிபட வளைபடு சுரர்குடி
     வந்தேற இந்த்ர ...... புரிவாழ 
மதவித கஜரத துரகத பததியின்
     வன்சேனை மங்க ...... முதுமீன 
திரைமலி சலநிதி முறையிட நிசிசரர்
     திண்டாட வென்ற ...... கதிர்வேலா 
ஜெகதல மிடிகெட விளைவன வயலணி
     செங்கோட மர்ந்த ...... பெருமாளே.
எல்லை கடந்து உருகும்படி செய்யும் கயல் மீன் போன்ற கண்களை உடையவரும், கற்கண்டு போன்ற இனிய பேச்சுக்களை உடையவரும் ஆகிய விலைமாதர்களின் இணைப்பிலே மூழ்கிய வழியில் அறிவு கலங்கி மயங்குகின்ற, வினைக்கு ஈடான, நானும், என் சொற்களையும், அறிவையும், உயிரையும், உணர்வையும் உனது திருவடித் தாமரையின் மேல் உறுதியுடன் சமர்ப்பிக்க வேண்டி, உன்னை எப்போதும் நினைக்கின்ற அடியார்களுடன் ஒன்றாகும்படியான பாக்கியத்தை என்று பெறுவேனோ? கிரெளஞ்ச மலை இரண்டு கூறுபடவும், சிறையில் அடைபட்டிருந்த தேவர்கள் தங்கள் ஊரில் குடியேறவும், தேவேந்திரனது பொன்னுலகம் வாழவும், மதம் கொண்ட யானை, தேர், குதிரை, காலாட்படை இவைகளைக் கொண்ட வலிமை வாய்ந்த அசுரர் சேனை அழிந்துபடவும், முதிய மீன்கள் உள்ள அலைகள் நிறைந்த கடல் அலறி முறையிடவும், அசுரர்கள் திண்டாட்டம் கொள்ளவும் வெற்றி கொண்ட வேலை உடையவனே, பூதலத்தின் வறுமை கெடும்படியான விளைச்சல்கள் உடைய வயல்கள் சூழ்ந்த திருச்செங்கோட்டில்* வீற்றிருக்கும் பெருமாளே. 
* திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து 6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது. மலை பாம்பின் உருவில் இருப்பதால் நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' - என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.
பாடல் 589 - திருச்செங்கோடு 
ராகம் -...; தாளம் -
தனந்தாத் தனந்தாத் தனந்தாத் தனந்தாத்
     தனந்தாத் தனத்தம் ...... தனதான
இடம்பார்த் திடம்பார்த் திதங்கேட் டிரந்தேற்
     றிணங்காப் பசிப்பொங் ...... கனல்மூழ்கி 
இறுங்காற் கிறுங்கார்க் கிரும்பார்க் குநெஞ்சார்க்
     கிரங்கார்க் கியற்றண் ...... டமிழ்நூலின் 
உடம்பாட் டுடன்பாட் டியம்பாத் தயங்காத்
     துளங்காத் திடப்புன் ...... கவிபாடி 
ஒதுங்காப் பொதுங்காப் பதுங்காப் புகன்றேத்
     துறும்பாற் குணக்கன் ...... புறலாமோ 
கடந்தோற் கடந்தோற் றறிந்தாட் கருந்தாட்
     கணைந்தாட் கணித்திண் ...... புயமீவாய் 
கரும்போற் கரும்போர்க் குளங்காட் டிகண்டேத்
     துசெங்கோட் டில்நிற்குங் ...... கதிர்வேலா 
அடைந்தோர்க் குணந்தோர்க் களிந்தோர்க் கமைந்தோர்க்
     கவிழ்ந்தோர்க் குணற்கொன் ...... றிலதாகி 
அலைந்தோர்க் குலைந்தோர்க் கினைந்தோர்க் கலந்தோர்க்
     கறிந்தோர்க் களிக்கும் ...... பெருமாளே.
எவரிடம் போனால் பணம் கிடைக்கும் என்று தக்க இடம் பார்த்து, இடம் பார்த்து, இதமான மொழிகளை அவர்கள் கேட்கும்படிச் சொல்லி, இரத்தல் தொழிலை மேற்கொண்டு, அத்தொழிலில் இணங்கி (மனம் பொருந்தி), பசியாகிய பொங்கி எழுகின்ற நெருப்பில் மூழ்கி, அழிந்து போகும் காலத்தில் கூட உள்ளம் நல்ல நிலை பெறாதவரிடம், இரும்பு போன்ற கடின மனத்தவரிடம், இரக்கம் இல்லாதவரிடம், தகுதி பெற்றுள்ள குளிர்ந்த தமிழ் நூல்களில் ஒருமைப்பட்ட மனத்துடன் பாட்டுக்களை அமைத்து, வாட்டமுற்று மனம் கலங்கி, ஆனாலும் திடத்துடன் புனையப்பட்ட புன்மையான பாடல்களைப் பாடி, அச்சமுற்று ஒதுங்கி, மனம் வருந்தி, பதுங்கியும் போய் தான் பாடிய பாடல்களைச் சொல்லிப் புகழும் இயல்பினைக் கொண்ட குணத்துக்கு நான் ஆசை வைக்கலாமோ? மத யானை காட்டில் எதிர்ப்பட ஆபத்தை உணர்ந்து கொண்டவளாய் உன்னுடைய மேன்மை பொருந்திய திருவடிகளை அணைந்த வள்ளிக்கு அழகிய வலிமையான திருப்புயங்களைத் தந்தவனே, கரும்பு வில்லை உடைய மன்மதனுக்கு அரிய போராக நெற்றிக் கண்ணைக் காட்டிய சிவபெருமான் கண்டு போற்றும் திருச்செங்கோட்டில்* விளங்கி நிற்கும் ஒளி வீசும் வேலனே, உன்னை அடைக்கலமாக அடைந்தவர்க்கும், உனக்காக உருகி மெலிந்தவர்களுக்கும், உன்னிடம் கருணை உள்ளம் கொண்டவர்களுக்கும், மன அமைதி கொண்டவர்களுக்கும், பக்தியால் உள்ளம் நெகிழ்ந்தவர்களுக்கும், உண்பதற்கு ஒன்றும் இல்லாதவராகி அலைகின்றவர்களுக்கும், நிலை குலைந்து நிற்பவர்களுக்கும், கவலை உற்று வருந்துபவர்களுக்கும், துன்பம் உற்றவர்களுக்கும், ஞானிகளுக்கும் திருவருள் பாலிக்கும் பெருமாளே. 
* திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து 6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது. மலை பாம்பின் உருவில் இருப்பதால் நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' - என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.
பாடல் 590 - திருச்செங்கோடு 
ராகம் - ...; தாளம் -
தனத்தந் தானன தனத்தந் தானன
     தனத்தந் தானன ...... தனதான
கலக்குங் கோதற வடிக்குஞ் சீரிய
     கருப்பஞ் சாறெனு ...... மொழியாலே 
கருத்தும் பார்வையு முருக்கும் பாவிகள்
     கடைக்கண் பார்வையி ...... லழியாதே 
விலக்கும் போதக மெனக்கென் றேபெற
     விருப்பஞ் சாலவு ...... முடையேனான் 
வினைக்கொண் டேமன நினைக்குந் தீமையை
     விடற்கஞ் சேலென ...... அருள்வாயே 
அலைக்குந் தானவர் குலத்தின் சேனையை
     அறுக்குங் கூரிய ...... வடிவேலா 
அழைத்துன் சீரிய கழற்செந் தாமரை
     யடுக்கும் போதக ...... முடையோராம் 
சிலர்க்கன் றேகதி பலிக்குந் தேசிக
     திருச்செங் கோபுர ...... வயலூரா 
திதிக்கும் பார்வயின் மதிப்புண் டாகிய
     திருச்செங் கோடுறை ...... பெருமாளே.
கலக்கத்தைத் தரும் சக்கைகள் நீங்க வடிகட்டி எடுக்கபட்ட சிறப்பான கரும்பின் சாறு என்று சொல்லும்படி (இனிக்கும்) பேச்சினால் கருத்தையும், நோக்கத்தையும் உருக்குகின்ற பாவிகளாகிய விலைமாதர்களுடைய கடைக்கண் பார்வையில் அழிந்து விடாமல், (அத்தகைய மயக்கத்தை) நீக்கவல்ல ஞான உபதேசத்தை, பிறருக்குக் கிட்டாத வகையில் நான் ஒருவனே சிறப்பாகப் பெற்று விளங்க விருப்பம் மிகவும் கொண்டுள்ள நான் ஊழ் வினையின் பயனாக மனத்தில் நினைக்கின்ற தீய குணங்களை விட்டு உய்யும் பொருட்டு அபயம் என்று நீஅருள்வாயாக. (தேவர் முதலியோரை) வருத்தி வந்த அசுரர்கள் குலத்துப் படைகளை அறுத்த கூர்மையான அழகிய வேலை ஏந்தியவனே, உன்னை அழைத்து உனது சிறப்பான திருவடிச் செந்தாமரைகளைப் பற்றியுள்ள ஞானத்தை உடையவர்களாகிய சிலருக்கு தாமதம் இன்றி அப்பொழுதே வீடு பேறு அளிக்கும் குரு மூர்த்தியே, அழகிய செவ்விய கோபுரங்களை உடைய வயலூரானே, நீ காத்து அளிக்கும் இப் பூமியிடத்தே சிறப்பு மிகுந்து விளங்கும் திருச்செங்கோட்டில்* வீற்றிருக்கும் பெருமாளே. 
* திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து 6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது. மலை பாம்பின் உருவில் இருப்பதால் நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' - என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.
பாடல் 591 - திருச்செங்கோடு 
ராகம் - ...; தாளம் -
தந்த தாத்தத் தனத்தந் தாத்தத்
     தந்த தாத்தத் தனத்தந் தாத்தத்
          தந்த தாத்தத் தனத்தந் தாத்தத் ...... தனதான
துஞ்சு கோட்டிச் சுழற்கண் காட்டிக்
     கொங்கை நோக்கப் பலர்க்குங் காட்டிக்
          கொண்ட ணாப்பித் துலக்கஞ் சீர்த்துத் ...... திரிமானார் 
தொண்டை வாய்ப்பொற் கருப்பஞ் சாற்றைத்
     தந்து சேர்த்துக் கலக்குந் தூர்த்தத்
          துன்ப வாழ்க்கைத் தொழிற்பண் டாட்டத் ...... துழலாதே 
கஞ்சம் வாய்த்திட் டவர்க்குங் கூட்டிக்
     கன்று மேய்த்திட் டவர்க்குங் கூற்றைக்
          கன்ற மாய்த்திட் டவர்க்குந் தோற்றக் ...... கிடையாநீ 
கண்டு வேட்டுப் பொருட்கொண் டாட்டத்
     தின்ப வாக்யத் தெனக்குங் கேட்கத்
          தந்து காத்துத் திருக்கண் சாத்தப் ...... பெறுவேனோ 
வஞ்ச மாய்ப்புக் கொளிக்குஞ் சூற்கைத்
     துன்று சூர்ப்பொட் டெழச்சென் றோட்டிப்
          பண்டு வாட்குட் களிக்குந் தோட்கொத் ...... துடையோனே 
வண்டு பாட்டுற் றிசைக்குந் தோட்டத்
     தண்கு ராப்பொற் புரக்கும் பேற்றித்
          தொண்டர் கூட்டத் திருக்குந் தோற்றத் ...... திளையோனே 
கொஞ்சு வார்த்தைக் கிளித்தண் சேற்கட்
     குன்ற வேட்டிச் சியைக்கண் காட்டிக்
          கொண்டு வேட்டுப் புனப்பைங் காட்டிற் ...... புணர்வோனே 
கொங்கு லாத்தித் தழைக்குங் காப்பொற்
     கொண்ட லார்த்துச் சிறக்குங் காட்சிக்
          கொங்கு நாட்டுத் திருச்செங் கோட்டுப் ...... பெருமாளே.
சோர்வு உற்றது போலக் கண்ணைச் சிமிட்டிக் காட்டி, மார்பகங்கள் தெரியும்படி பலருக்கும் காட்டி, அழைத்துக் கொண்டு போய் ஏமாற்றி, தங்கள் கீர்த்தி விளக்கமாக சிறப்புடன் ஓங்குமாறு திரிகின்ற விலைமாதர்களின் கொவ்வைக் கனி போன்ற அழகிய வாயிதழின் கரும்பு போல் இனிக்கும் ஊறலைப் பருகச் செய்து, அணைத்துச் சேர்ந்து மயக்கத்தைத் தரும் காம ஆசையால் வருகின்ற துன்ப வாழ்க்கைத் தொழிலாகிய பழைய ஆட்டங்களில் சுழன்று திரியாமல், தாமரையில் வீற்றிருக்கும் பிரமனுக்கும், கன்றுகளை ஒன்று சேர்த்து மேய்த்திட்ட கண்ணனாகிய திருமாலுக்கும், யமனை வாட்டமுற்று மாயும்படி செய்த சிவ பெருமானுக்கும் காண்பதற்குக் கிட்டாத நீ, என்னைப் பார்த்து, என் மீது விருப்பம் கொண்டு, கொண்டாடத் தக்க பொருள் அமைந்த இன்ப உபதேச வார்த்தையை அடியேனாகிய நானும் கேட்டு உணரும்படி போதித்துக் காத்து, உனது திருக் கண்ணோக்கம் அடியேன் மீது படும்படியான பாக்கியத்தைப் பெறுவேனோ? வஞ்சகமாகப் புகுந்து (கடலில்) ஒளிந்து கொண்டவனும், சூலம் ஏந்திய கையோடு நெருங்கியவனுமான சூரன் அழிந்து போகும்படி அவனைத் தேடிச் சென்று ஓட வைத்து, முன்பு, வாளாயுதத்தைச் செலுத்தி இன்புறும் பன்னிரு தோள் கொத்தை உடையவனே, வண்டுகள் பாடல் பாடி இசை எழுப்பும் தோட்டத்தில், குளிர்ந்த குரா மலர் சூடிய அழகிய மார்புடன், உன் திருப்புகழைப் போற்றும் அடியார் கூட்டத்திலிருந்து, அவர்களுக்குக் காட்சி அளிக்கும் இளையவனே, கொஞ்சும் சொற்களை உடைய கிளி போன்றவளை, குளிர்ந்த மலையில் வாழ்கின்ற சேல் மீனைப் போல் கண்கள் கொண்ட வேடப் பெண்ணாகிய வள்ளியைக் கண் கொண்டு ஜாடை காட்டி அழைத்துச் சென்று, அவளை விரும்பி, தினைப் புனத்துப் பசுஞ்சோலையில் தழுவியவனே, வாசனையை வீசி உலவச் செய்து தழைத்திருக்கும் சோலைகளில், அழகிய மேகங்கள் நிறைந்து சிறந்து நிற்கும் காட்சியைக் கொண்ட கொங்கு நாட்டில் உள்ள திருச்செங்கோட்டில்* உறையும் பெருமாளே. 
* திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து 6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது. மலை பாம்பின் உருவில் இருப்பதால் நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' - என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.
பாடல் 592 - திருச்செங்கோடு 
ராகம் - ...; தாளம் -
தானனந் தானதன தானனந் தானதன
     தானனந் தானதன தானனந் தானதன
தானனந் தானதன தானனந் தானதன
     தானனந் தானதன தானனந் தானதன
தானனந் தானதன தானனந் தானதன
     தானனந் தானதன தானனந் தானதன ...... தந்ததான
நீலமஞ் சானகுழல் மாலைவண் டோடுகதி
     நீடுபந் தாடுவிழி யார்பளிங் கானநகை
நீலபொன் சாபநுத லாசையின் தோடசையு
     நீள்முகந் தாமரையி னார்மொழிந் தாரமொழி
நேர்சுகம் போலகமு கானகந் தாரர்புய
     நேர்சுணங் காவிகிளை யேர்சிறந் தார்மலையி ...... ரண்டுபோல 
நீளிபங் கோடிளநிர் தேனிருந் தாரமுலை
     நீடலங் காரசர மோடடைந் தார்மருவி
நீள்மணஞ் சாறுபொழி யாவளம் போதிவையி
     னீலவண் டேவியநல் காமனங் காரநிறை
நேசசந் தானஅல்குல் காமபண் டாரமுதை
     நேருசம் போகரிடை நூலொளிர்ந் தாசையுயிர் ...... சம்பையாரஞ் 
சாலுபொன் தோகையமை பாளிதஞ் சூழ்சரண
     தாள்சிலம் போலமிட வேநடந் தானநடை
சாதிசந் தானெகின மார்பரந் தோகையென
     தானெழுங் கோலவிலை மாதரின் பார்கலவி
தாவுகொண் டேகலிய நோய்கள்கொண் டேபிறவி
     தானடைந் தாழுமடி யேனிடஞ் சாலும்வினை ...... யஞ்சியோடத் 
தார்கடம் பாடுகழல் பாதசெந் தாமரைகள்
     தாழ்பெரும் பாதைவழி யேபடிந் தேவருகு
தாபம்விண் டேயமுத வாரியுண் டேபசிகள்
     தாபமுந் தீரதுகிர் போனிறங் காழ்கொளுரு
சாரவுஞ் சோதிமுரு காவெனுங் காதல்கொடு
     தானிருந் தோதஇரு வோரகம் பேறுறுக ...... விஞ்சைதாராய் 
சூலியெந் தாய்கவுரி மோகசங் காரிகுழை
     தோடுகொண் டாடுசிவ காமசுந் தாரிநல
தூளணைந் தாளிநிரு வாணியங் காளிகலை
     தோகைசெந் தாமரையின் மாதுநின் றேதுதிசெய்
தூயஅம் பாகழைகொள் தோளிபங் காளக்ருபை
     தோய்பரன் சேயெனவு மேபெரும் பார்புகழும் ...... விந்தையோனே 
சூரசங் காரசுரர் லோகபங் காவறுவர்
     தோகைமைந் தாகுமர வேள்கடம் பாரதொடை
தோளகண் டாபரம தேசிகந் தாவமரர்
     தோகைபங் காஎனவே தாகமஞ் சூழ்சுருதி
தோதகம் பாடமலை யேழுதுண் டாயெழுவர்
     சோரிகொண் டாறுவர வேலெறிந் தேநடன ...... முங்கொள்வேலா 
மாலியன் பாறவொரு ஆடகன் சாகமிகு
     வாலியும் பாழிமர மோடுகும் பாகனனு
மாழியுங் கோரவலி ராவணன் பாறவிடு
     மாசுகன் கோலமுகி லோனுகந் தோதிடையர்
மாதுடன் கூடிவிளை யாடுசம் போகதிரு
     மார்பகன் காணமுடி யோனணங் கானமதி ...... யொன்றுமானை 
மார்புடன் கோடுதன பாரமுஞ் சேரஇடை
     வார்துவண் டாடமுக மோடுகந் தீரரச
வாயிதங் கோதிமணி நூபுரம் பாடமண
     வாசைகொண் டாடுமயி லாளிதுங் காகுறவி
மாதுபங் காமறைகு லாவுசெங் கோடைநகர்
     வாழவந் தாய்கரிய மாலயன் தேவர்புகழ் ...... தம்பிரானே.
கரிய மேகம் போன்ற கூந்தலில் உள்ள மாலையில் வண்டுகள் மொய்க்கின்ற நிலையும், நீளமான பந்து ஆடுவதைப் போல (அங்குமிங்கும் புரளும்) கண்களை உடையவர்கள். பளிங்கு போல் வெண்மையான பற்களும், கறுத்த அழகிய வில் போன்ற புருவமும் பொன்னாலாகிய தோடு என்னும் அணி கலன் அசைகின்ற ஒளி கொண்ட முகம் என்ற தாமரையும் விளங்குபவர்கள். பேசுகின்ற நிறைந்த பேச்சுக்கள் கிளியின் மொழியை நிகர்ப்பவர். கமுகை ஒக்கும் கழுத்தை உடையவர்கள். தோள்கள் அவற்றில் படிந்த தேமலோடு வாசனையுடன் மூங்கிலின் அழகைக் கொண்ட சிறப்பினர். இரு மலைகளைப் போல நீண்ட யானைக் கொம்பு, தேனைப் போல் இனிக்கும் இளநீர் போன்றதும், முத்து மாலை அணிந்ததுமான, மார்பகத்தார். நீண்ட அலங்காரமான கழுத்துச் சங்கிலியோடு கூடினவர்கள். பொருந்தியதும், மிக்க நறு மணச் சாற்றினைப் பொழிகின்றதுமான (கலவைச் சந்தனம் உள்ள) கிண்ணம் போன்ற மார்பகத்தார். (காம பாண) மலர்களுள் நீலோற்ப மலர்ப் பாணத்தை ஏவிய நல்ல மன்மதனுடைய இறுமாப்பு நிறைந்த அன்புக்கு இடமானதும், சந்ததியைத் தருகின்றதுமான பெண்குறி மூலமாக காம நிதியாகிய அமுதத்துக்கு நிகரான புணர்ச்சி அனுபவத்தைத் தருபவர். நுண்ணிய இடுப்பு விளங்கி, திக்குகளில் வாய்விட்டு மின்னும் மின்னல் போன்றவர்கள். அழகு நிறைந்த பொன்னாலாகிய சரிகை இட்ட பட்டுப் புடவை சூழ்ந்துள்ள கால்களின் பாதங்களில் சிலம்பு ஒலிக்க நடந்து, அவர்களுக்கான நடை உயர்ந்த வம்சத்து அன்னம் எனவும், அழகிய மார்பராய், எழில்மிகு மயில் எனவும் எழுந்து தோன்றுபவராகிய அழகிய விலைமாதர்களின் இன்பம் நிறைந்த சேர்க்கையில் பாய்தலைக் கொண்டு, துன்பத்தைத் தருவதான நோய்கள் நிறைந்த பல பிறவிகளை அடைந்து ஆழ்ந்து விழும் அடியேனிடத்தில் நிரம்பி வரும் வினை பயந்து நீங்குவதற்காக, கடப்ப மாலை அசைகின்ற கழல் அணிந்த பாதத் தாமரைகளை விரும்பி, அந்தப் பெரிய திருவடியை விரும்பும் நெறியில் ஆழ்ந்து பொருந்தி, அடுத்து வரும் தாகங்களை (ஆசைகளை) ஒழித்து, அருளமுத வெள்ளத்தைப் பருகி, பசியும் தாகமும் நீங்குவதற்காக, பவளம் போல் நிறமும் ஒளி கொண்ட உருவமும் பொருந்த ஜோதி முருகா எனக் கூறும் ஆசை ஒன்றையே கொண்டு நான் மன அமைதியுடன் இருந்து ஓத, பெருமை வாய்ந்த ஒப்பற்ற உள்ளம் பேறு பெறும்படியான ஞானத்தைத் தந்து அருளுக. திரி சூலத்தை ஏந்தியவள், எனது தாய் கெளரி, ஆசையை அகற்றுபவள், குண்டலங்களும் தோடும் பூண்டு நடனமாடும் சிவகாம சுந்தரி, நல்ல திருநீற்றைத் தரித்து ஆள்பவள், திகம்பரி, அழகிய காளி, கலை மகளும், செந்தாமரையில் வீற்றிருக்கும் லக்ஷ்மியும் நின்று துதிக்கின்ற பரிசுத்தமான தாய், மூங்கில் போன்ற தோளை உடையவள் (ஆகிய பார்வதியை) பாகத்தில் உடையவராய் திருவருள் நிறைந்தவராகிய பரமசிவனுடைய குழந்தை என்று பெரிய உலகத்தோர் புகழும் விசித்திர தேவனே, சூரனை அழித்தவனே, தேவலோகத்துக்கு வேண்டியவனே, ஆறு (கார்த்திகை) மாதர்களின் குழந்தையே, குமார வேளே, கடப்ப மலர் நிறைந்த மாலை அணிந்துள்ள வீரனே, சிவபெருமானுக்கு குருவாகிய அழகனே, தேவ மகள் (தேவயானையின்) கணவனே எனறெல்லாம் வேதங்களையும், ஆகமங்களையும் ஆய்ந்த தேவர்களின் (முறையீட்டு) ஒலி (சூரனிடம் தாங்கள் படும்) வருத்தத்தைப் பாட, எழு கிரிகளும் துண்டாகப் பொடிபட (அந்த மலைகளில்) எழுந்திருந்த அசுரர்களின் ரத்தம் பெருகி ஆறாக வர, வேலாயுதத்தைச் செலுத்தி நடனமும் கொண்ட வேலனே, (ராவணன் பாட்டனும், தலைமை அமைச்சனுமாகிய அரக்கன் - மாலியன்) இறக்கவும், ஒப்பற்ற இரணியன் சாகவும், வலிமை மிக்க வாலியும், பருத்த மராமரத்தோடு அழியவும், கும்பகர்ணனும், கடலும், பயங்கரமான வலிமை கொண்டிருந்த ராவணனும் அழியவும் எய்த அம்பைக் கொண்டவன், அழகிய மேக நிறத்தினன், மன மகிழ்ச்சியுடன் இடையர் மாதர்களுடன் கூடி காம லீலைகளை அனுபவித்தவன், லக்ஷ்மியை மார்பில் கொண்டவன், பொன் முடியோனாகிய திருமாலின் மகளான அறிவு நிறைந்த தேவயானையின் மார்பும், மலை போன்ற மார்பகப் பாரமும் பொருந்த, இடையின் நுண்மை நெகிழ்ந்து அசைய, அவளுடைய திருமுகத்தில் மகிழ்ச்சி உற்று, கருணையுடன், வாயினின்று இனிமையாக வரும் இதழ் ஊறலைச் சிறிது சிறிதாகப் பருகி, ரத்தினச் சிலம்பு ஒலிக்க அவளை மணக்கும் காதலைப் பாராட்டும் மயிலோனே, பரிசுத்தமானவனே, குற மாதாகிய வள்ளியின் கணவனே, வேத முழக்கம் கேட்கும் திருச்செங்கோட்டு* நகரில் வாழ வந்தவனே, கரிய திருமாலும், பிரமனும், அமரர்களும் புகழும் தம்பிரானே. 
இப்பாடலில் விலைமாதர்களின் தலை முதல் எல்லா அங்கங்களும் உவமைகளால் வர்ணிக்கப்பட்டுள்ளன.* திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து 6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது. மலை பாம்பின் உருவில் இருப்பதால் நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' - என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.
பாடல் 593 - திருச்செங்கோடு 
ராகம் - ...; தாளம் -
தந்த தத்தத் தந்த தத்தத்
     தந்த தத்தத் தந்த தத்தத்
          தந்த தத்தத் தந்த தத்தத் ...... தனதான
பொன்ற லைப்பொய்க் கும்பி றப்பைத்
     தும்ப றுத்திட் டின்று நிற்கப்
          புந்தி யிற்சற் றுங்கு றிக்கைக் ...... கறியாமே 
பொங்கி முக்கிச் சங்கை பற்றிச்
     சிங்கி யொத்தச் சங்க டத்துப்
          புண்ப டைத்துக் கஞ்ச மைக்கட் ...... கொடியார்மேல் 
துன்று மிச்சைப் பண்ட னுக்குப்
     பண்ப ளித்துச் சம்ப்ர மித்துத்
          தும்பி பட்சிக் கும்ப்ர சச்செய்ப் ...... பதிமீதே 
தொண்டு பட்டுத் தெண்ட னிட்டுக்
     கண்டு பற்றத் தண்டை வர்க்கத்
          துங்க ரத்தப் பங்க யத்தைத் ...... தருவாயே 
குன்றெ டுத்துப் பந்த டித்துக்
     கண்சி வத்துச் சங்க ரித்துக்
          கொண்ட லொத்திட் டிந்த்ர னுக்கிச் ...... சுரலோகா 
கொம்பு குத்திச் சம்ப ழுத்தித்
     திண்ட லத்திற் றண்டு வெற்பைக்
          கொண்ட முக்கிச் சண்டை யிட்டுப் ...... பொரும்வேழம் 
சென்று ரித்துச் சுந்த ரிக்கச்
     சந்த விர்த்துக் கண்சு கித்துச்
          சிந்தை யுட்பற் றின்றி நித்தக் ...... களிகூருஞ் 
செண்ப கத்துச் சம்பு வுக்குத்
     தொம்ப தத்துப் பண்பு ரைத்துச்
          செங்கு வட்டிற் றங்கு சொக்கப் ...... பெருமாளே.
இறத்தல் கூடியதாய், பொய்யாக முடியும் பிறப்பு என்பதை இணைக்கும் கயிற்றை அறுத்துத் தள்ளி, இன்று ஓர் ஒழுக்கத்தில் நிற்க புத்தியில் கொஞ்சமேனும் கவனித்து மேற்கொள்ள அறியாமல், காய்ந்து கொதித்தும், முயற்சிகள் செய்தும், சந்தேகம் கொண்டும், விஷம் போன்ற துன்பங்களால் மனம் புண்ணாகி, தாமரை போன்ற, மை பூசிய கண்ணைக் கொண்ட, விலைமாதர்கள் மீது, பொருந்தி நெருங்கும் ஆசைப் பாத்திரனாகிய எனக்கு நற்குணத்தைக் கொடுத்து சிறப்பு அடையச் செய்து, வண்டு உண்ணும் தேன் கொண்ட (பூந்தாதுகள் உள்ள) வயலூர் என்னும் தலத்தில் தொண்டு செய்யும் பணியை மேற்கொண்டு, நான் பார்த்துப் பற்றுவதற்கு தண்டை, சிலம்பு முதலியவற்றை அணிந்தவையும், பரிசுத்தமான செந்நிறமுள்ளவையுமான திருவடித் தாமரையை தந்து அருள்க. கிரவுஞ்ச கிரியை எடுத்து பந்தைத் தூக்கி எறிவது போல் எடுத்து எறிந்து கண் சிவக்கக் கோபித்து அழித்து, (கைம்மாறு கருதாது உதவும்) மேகம் போல் இந்திரனுக்கு ஈந்த தேவ லோகத்தவனே, கொம்பால் குத்தியும், சம்பங்கோரை போன்ற நுனியால் அழுத்தியும், திண்ணிய இப்பூமியில் கதையையும் மலையையும் சேர்த்து அடக்கிப் போர் புரிந்த (கயாசுரன் என்ற) யானையை சென்று தாக்கி தோலை உரித்து*, அழகிய பார்வதி தேவிக்கு பயத்தை நீக்கி, கண் களிப்புடன் மனதில் பற்று ஒன்றும் இல்லாமல் தினமும் மகிழ்ச்சி கொள்ளும், செண்பக மலர் அணியும் சம்புவாகிய சிவபெருமானுக்கு தத்வம் அசி என்னும் வேத வாக்கியத்தில் த்வம் என்னும் சொல்லுக்கு (குருவாக நின்று) விளக்க இயல்பை எடுத்து விளக்கி, திருச்செங்கோட்டில்** உறையும் அழகிய பெருமாளே. 
* கயாசுரன் என்பவன் பிரமனிடம் வரம் பெற்றுப் பேராற்றல் கொண்டு, மண்ணவர், விண்ணவர் யாவரையும் வருத்தினான். யானை முகம் கொண்ட அந்த அசுரனைச் சிவபெருமான் உதைத்துத் தள்ளி, உமா தேவியும் அச்சம் நீங்க, அந்த யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டார்.
** திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து 6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது. மலை பாம்பின் உருவில் இருப்பதால் நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' - என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.
பாடல் 594 - திருச்செங்கோடு 
ராகம் - ...; தாளம் -
தந்தத் தனத்தந் தாத்தன தந்தத் தனத்தந் தாத்தன
     தந்தத் தனத்தந் தாத்தன ...... தனதான
மந்தக் கடைக்கண் காட்டுவர் கந்தக் குழற்பின் காட்டுவர்
     மஞ்சட் பிணிப்பொன் காட்டுவ ...... ரநுராக 
வஞ்சத் திரக்கங் காட்டுவர் நெஞ்சிற் பொருத்தங் காட்டுவர்
     வண்பற் றிருப்புங் காட்டுவர் ...... தனபாரச் 
சந்தப் பொருப்புங் காட்டுவர் உந்திச் சுழிப்புங் காட்டுவர்
     சங்கக் கழுத்துங் காட்டுவர் ...... விரகாலே 
சண்டைப் பிணக்குங் காட்டுவர் பண்டிட் டொடுக்கங் காட்டுவர்
     தங்கட் கிரக்கங் காட்டுவ ...... தொழிவேனோ 
பந்தித் தெருக்கந் தோட்டினை யிந்துச் சடைக்கண் சூட்டுமை
     பங்கிற் றகப்பன் தாட்டொழு ...... குருநாதா 
பைம்பொற் பதக்கம் பூட்டிய அன்பற் கெதிர்க்குங் கூட்டலர்
     பங்கப் படச்சென் றோட்டிய ...... வயலூரா 
கொந்திற் புனத்தின் பாட்டிய லந்தக் குறப்பெண் டாட்டொடு
     கும்பிட் டிடக்கொண் டாட்டமொ ...... டணைவோனே 
குன்றிற் கடப்பந் தோட்டலர் மன்றற் ப்ரசித்தங் கோட்டிய
     கொங்கிற் றிருச்செங் கோட்டுறை ...... பெருமாளே.
மெதுவாக கடைக் கண்ணைக் காட்டுவர். நறு மணம் வீசும் கூந்தலை பின்னர் காட்டுவர். மஞ்சள் நிறத்திலுள்ள பொன் அணிகலன்களைக் காட்டுவர். காமப் பற்று உள்ளவர்கள் போல் வஞ்சனை செய்து தங்கள் இரக்கத்தைக் காட்டுவர். மனதில் அன்பு உள்ளவர்கள் போல் காட்டுவர். வளப்பம் மிக்க வெண்பற்களின் பாகங்களைக் காட்டுவர். மார்பாகிய பாரமுள்ள அழகிய மலையையும் காட்டுவர். கொப்பூழின் சுழியைக் காட்டுவர். சங்கு போன்ற கழுத்தைக் காட்டுவர். தந்திரமாக சண்டையிட்டு ஊடுதலையும் காட்டுவர். முதலில் காட்டிய நேசம் ஒடுங்குதலைக் காட்டுவர் ஆகிய பொது மகளிர்பால் அன்பு காட்டுவதை விட மாட்டேனோ? கட்டப்பட்ட எருக்கம் பூவை நிலவு அணிந்த சடையின் கண் சூடுபவரும், உமா தேவியைப் பாகத்தில் உடையவருமான தந்தையாகிய சிவ பெருமான் உனது திருவடியைத் தொழும் குரு நாதனே, பசும் பொன்னால் ஆய பதக்கத்தை அணிந்த அன்பர்களாகிய தேவர்களை எதிர்த்து வந்த பகைவர்களாகிய அசுரர்கள் தோல்வியுறுமாறு, சென்று அவர்களைப் புறங் காட்டி ஓடச் செய்த வயலூரனே, பூங்கொத்துக்கள் உள்ள தினைப் புனத்தில் பொருந்திய அந்தக் குற மகள் வள்ளியுடன் விளையாடல் செய்து, அவளைக் கும்பிடுதற்கு பெருங் களிப்புடன் தழுவியவனே, மலையில் கடப்ப மலர் மலரும் வாசனை பிரசித்தத்தை வளைத்துக் கொண்ட கொங்கு நாட்டுத் திருச் செங்கோடு* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து 6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது. மலை பாம்பின் உருவில் இருப்பதால் நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' - என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.
பாடல் 595 - திருச்செங்கோடு 
ராகம் - ...; தாளம் -
தத்தா தத்தா தத்தா தத்தா
     தத்தா தத்தத் ...... தனதான
மெய்ச்சார் வற்றே பொய்ச்சார் வுற்றே
     நிச்சார் துற்பப் ...... பவவேலை 
விட்டே றிப்போ கொட்டா மற்றே
     மட்டே யத்தத் ...... தையர்மேலே 
பிச்சா யுச்சா கிப்போ ரெய்த்தார்
     பத்தார் விற்பொற் ...... கழல்பேணிப் 
பிற்பால் பட்டே நற்பால் பெற்றார்
     முற்பா லைக்கற் ...... பகமேதான் 
செச்சா லிச்சா லத்தே றிச்சே
     லுற்றா ணித்துப் ...... பொழிலேறுஞ் 
செக்கோ டைக்கோ டுக்கே நிற்பாய்
     நித்தா செக்கர்க் ...... கதிரேனல் 
முச்சா லிச்சா லித்தாள் வெற்பாள்
     முத்தார் வெட்சிப் ...... புயவேளே 
முத்தா முத்தீ யத்தா சுத்தா
     முத்தா முத்திப் ...... பெருமாளே.
உண்மையான புகலிடத்தை விட்டுவிட்டு, பொய்யான துணையைப் பற்றிக்கொண்டு, நிச்சயமாக நிறைந்த துன்பமே உள்ள பிறப்பு என்னும் கடலைத் தாண்டி கரை ஏறிப் போக முடியாதபடி, தேன்கூட இவர்கள் சொல்லுக்கு இனிமை குறைந்தது என்று சொல்லத்தக்க அந்தக் கிளி போன்ற பொது மகளிரின் மீது காம வெறி முற்றிப்போய் கலவிப் போரில் இளைத்தவர்கள், பிற்பாடு, உனது பக்தர்களின் அழகிய, ஒளி பொருந்திய திருவடிகளைப் பணிந்து, அந்த நல்ல தொண்டால் தகுதியான நல்ல வழியில் நின்று நற் குணங்களைப் பெற்றவர்களாக மாறும் போது அவர்களுக்கு நீ பாலைவனத்தில் கிடைத்த தெய்வ விருட்சமாகிய கற்பகமாகத் திகழ்வாய். செம்மையான நெற்கதிர் கூட்டத்தில் ஏறிச் சேல் மீன்கள் அருகிலுள்ள சோலையில் போய்ச் சேரும் திருச்செங்கோட்டு* மலை உச்சியில் நிற்பவனே, என்றும் அழியாது இருப்பவனே, சிவந்த கதிர் கொண்ட தினைப்பயிர் மூன்று போகம் விளையும் நெல்வயலின் அடித் தண்டுகள் கொண்ட வள்ளிமலைக்கு உரியவளாகிய வள்ளியின் முத்துமாலை நிறைந்துள்ளதும், வெட்சிமாலை அணிந்ததுமான புயங்களை உடைய செவ்வேளே, முத்துப் போல அருமை வாய்ந்தவனே, மூன்று வகையான** அக்கினி வேள்விக்குத் தலைவனே, பரிசுத்தமானவனே, பற்று அற்றவனே, முக்தி அளிக்கும் பெருமாளே. 
என்று தொடங்கும் பாடல்கள்.
திருமுருகாற்றுப்படை.
பாடல் 596 - திருச்செங்கோடு 
ராகம் - ...; தாளம் -
தனத்தந் தான தானன தனத்தந் தான தானன
     தனத்தந் தான தானன ...... தனதான
வருத்தங் காண நாடிய குணத்தன் பான மாதரு
     மயக்கம் பூண மோதிய ...... துரமீதே 
மலக்கங் கூடி யேயின வுயிர்க்குஞ் சேத மாகிய
     மரிக்கும் பேர்க ளோடுற ...... வணியாதே 
பெருத்தும் பாவ நீடிய மலத்தின் தீமை கூடிய
     பிறப்புந் தீர வேயுன ...... திருதாளே 
பெறத்தந் தாள வேயுயர் சுவர்க்கஞ் சேர வேயருள்
     பெலத்தின் கூர்மை யானது ...... மொழிவாயே 
இரத்தம் பாய மேனிக ளுரத்துஞ் சாடி வேல்கொடு
     எதிர்த்துஞ் சூரர் மாளவெ ...... பொரும்வேலா 
இசைக்குந் தாள மேளமெ தனத்தந் தான தானன
     எனத்திண் கூளி கோடிகள் ...... புடைசூழத் 
திருத்தன் பாக வேயொரு மயிற்கொண் டாடி யேபுகழ்
     செழித்தன் பாக வீறிய ...... பெருவாழ்வே 
திரட்சங் கோடை வாவிகள் மிகுத்துங் காவி சூழ்தரு
     திருச்செங் கோடு மேவிய ...... பெருமாளே.
வருத்தம் உண்டாகும் வழியையே தேடும் குணத்தில் ஈடுபட்ட மாதர்களும் மயக்கம் கொள்ளும்படி அவர்களோடு உறவாடும் சுமையே இவ்வுடலாகும். துன்பங்களோடு கூடிப் பொருந்திய, உயிர்கள் (நற்கதி காணாது) கேடு அடையச் செய்யும், சாகப்போகும் மக்களுடைய உறவை நான் மேற்கொள்ளாமல், பெருத்து வளரும் பாவம் மிக்க (ஆணவம், கன்மம், மாயை என்ற) மும்மலங்களின் கொடுமை கூடிய பிறப்பு ஒழியவே, உனது திருவடிகளைப் பெறுமாறு எனக்குத் தந்து, என்னை ஆண்டருள்வாயாக. மேலான சுவர்க்கத்தை நான் சேர்வதற்காக நீ அருள் புரியும் சக்தியின் நுண் பொருளை எனக்கு மொழிந்தருளுக. இரத்தம் பெருகிப் பாய உடலிலும் மார்பிலும் தாக்கி, வேலைக் கொண்டு எதிர்த்தும் அசுரர்கள் இறந்து பட போர் புரிந்த வேலனே, ஒலிக்கின்ற தாளமும் மேளமும் தனத்தந் தான தானன என்ற ஒலியை எழுப்ப, வலிய கோடிக் கணக்கான பூத கணங்கள் பக்கங்களில் சூழ, மிகவும் அன்புடன் ஒப்பற்ற மயிலை விரும்பி, புகழ் ஓங்கி வளர்ந்து அன்பே உருவாக விளங்கும் பெருஞ் செல்வமே, திரண்ட சங்குகளும், நீர் நிலைகளும், குளங்களும் மிகுத்து, கருங் குவளை மலர்கள் சூழ்ந்து மலரும் திருச் செங்கோடு* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து 6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது. மலை பாம்பின் உருவில் இருப்பதால் நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' - என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.
பாடல் 597 - திருச்செங்கோடு 
ராகம் - ...; தாளம் -
தான தானன தத்தன தத்தன
     தான தானன தத்தன தத்தன
          தான தானன தத்தன தத்தன ...... தனதான
ஆல காலப டப்பைம டப்பியர்
     ஈர வாளற வெற்றும்வி ழிச்சியர்
          யாவ ராயினு நத்திய ழைப்பவர் ...... தெருவூடே 
ஆடி யாடிந டப்பதொர் பிச்சியர்
     பேசி யாசைகொ டுத்தும ருட்டிகள்
          ஆசை வீசிய ணைக்குமு லைச்சியர் ...... பலரூடே 
மாலை யோதிவி ரித்துமு டிப்பவர்
     சேலை தாழநெ கிழ்த்தரை சுற்றிகள்
          வாசம் வீசும ணத்தில்மி னுக்கிகள் ...... உறவாலே 
மாயை யூடுவி ழுத்திய ழுத்திகள்
     காம போகவி னைக்குளு னைப்பணி
          வாழ்வி லாமல்ம லச்சன னத்தினி ...... லுழல்வேனோ 
மேலை வானொரு ரைத்தச ரற்கொரு
     பால னாகியு தித்தொர்மு நிக்கொரு
          வேள்வி காவல்ந டத்திய கற்குரு ...... அடியாலே 
மேவி யேமிதி லைச்சிலை செற்றுமின்
     மாது தோள்தழு விப்பதி புக்கிட
          வேறு தாயட விக்குள்வி டுத்தபி ...... னவனோடே 
ஞால மாதொடு புக்கவ னத்தினில்
     வாழும் வாலிப டக்கணை தொட்டவ
          னாடி ராவண னைச்செகு வித்தவன் ...... மருகோனே 
ஞான தேசிக சற்குரு உத்தம
     வேல வாநெரு வைப்பதி வித்தக
          நாக மாமலை சொற்பெற நிற்பதொர் ...... பெருமாளே.
ஆலகால விஷத்தை உடைய பாம்பின் படம் போன்ற பெண்குறியை உடைய இளம் மாதர்கள். கொழுப்பு ஈரம் கொண்ட வாள் போல மிகவும் தாக்க வல்ல கண்களை உடையவர். யாராக இருந்தாலும் விரும்பி அழைப்பவர்கள். தெருவின் மத்தியில் ஆடி ஆடி நடக்கும் பித்துப் பிடித்தவர்கள். தங்கள் பேச்சு வன்மையால் ஆசை காட்டி மயக்குபவர்கள். ஆசை வலையை வீசி அணைக்கின்ற மார்பினர். பலர் மத்தியிலும் மாலை அணிந்த கூந்தலை அவிழ்த்து முடிப்பவர். புடவை கீழே தாழும்படி தளர்த்தி இடுப்பில் சுற்றுபவர்கள். வாசனை வீசும் நறுமணம் கொண்டு மினுக்குபவர்கள். இத்தகைய விலைமாதர்களின் தொடர்பால், மாயையின் உள்ளே விழும்படிச் செய்து அழுத்துபவர்களின் காம போகச் செயல்களில் ஈடுபட்டதாலே, உன்னைப் பணியும் நல் வாழ்வு இல்லாமல் மும்மலங்களுக்கு ஈடான பிறப்பில் அலைவேனோ? மேல் உலகத்தில் உள்ள தேவர்கள் புகழ்ந்த தசரதற்கு ஒரு குழந்தையாகப் பிறந்து, ஒப்பற்ற விசுவாமித்திர முனிவருக்கு ஒரு யாகத்தில் காவல் புரிந்து, அந்த கல்லைத் திருவடியினால் (மிதித்துப்) பழைய வடிவத்தை (அகலிகை) எய்தும் படிச் செய்து, மிதிலையில் சனகர் முன் (சிவதனுசு என்ற) வில்லை முறித்து ஒளி பொருந்திய சீதையை மணம் புரிந்து அயோத்தி நகருக்குத் திரும்பி வந்து, மாற்றாந் தாயாகிய கைகேயி காட்டுக்குள் போகும்படிச் செய்ய, தம்பியாகிய இலக்குவனுடன் பூதேவி மகளாம் சீதையோடு சென்று, அந்தக் காட்டில் வாழ்ந்த வாலி இறக்கும்படி அம்பைச் செலுத்தியவனும், தேடிச் சென்று இராவணனை அழித்தவனுமாகிய ராமனின் மருகனே, ஞான தேசிகனே, சற் குருவே, உத்தமனனாவனே, வேலவனே, நெருவூரில் வீற்றிருக்கும் ஞான மூர்த்தியே, திருச்செங்கோட்டில்** புகழ் பெற விளங்கி நிற்கும் பெருமாளே. 
* நெருவைப்பதி என்பது நெருவூர். கருவூருக்கு அருகே உள்ளது.
** திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து 6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது.மலை பாம்பின் உருவில் இருப்பதால் நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' - என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.
பாடல் 598 - திருச்செங்கோடு 
ராகம் - சங்கராபரணம் ; தாளம் - திஸ்ர ஏகம் - 3
தான தனத் ...... தனதான
காலனிடத் ...... தணுகாதே 
காசினியிற் ...... பிறவாதே 
சீலஅகத் ...... தியஞான 
தேனமுதைத் ...... தருவாயே 
மாலயனுக் ...... கரியானே 
மாதவரைப் ...... பிரியானே 
நாலுமறைப் ...... பொருளானே 
நாககிரிப் ...... பெருமாளே.
யமனுடைய ஊரை நெருங்காத வகைக்கும், இந்தப் பூமியில் மீண்டும் பிறவாத வகைக்கும், நற்குணம் வாய்ந்த அகத்திய முநிவருக்கு நீ அருளிய ஞானோபதேசம் என்ற தேன் போன்று இனிக்கும் நல்லமிர்தத்தை எனக்கும் தந்தருள்க. திருமாலுக்கும் பிரமனுக்கும் அரியவனே, சிறந்த தவசிரேஷ்டர்களை விட்டுப் பிரியாதவனே, நான்கு வேதங்களின் மறை பொருளாக உள்ளவனே, நாககிரியாகிய திருச்செங்கோட்டில்* எழுந்தருளியுள்ள பெருமாளே. 
* திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து 6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது.மலை பாம்பின் உருவில் இருப்பதால் நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' - என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.
பாடல் 599 - திருச்செங்கோடு 
ராகம் - ...; தாளம் -
தானா தானா தானா தானா
     தானா தானத் ...... தனதான
தாமா தாமா லாபா லோகா
     தாரா தாரத் ...... தரணீசா 
தானா சாரோ பாவா பாவோ
     நாசா பாசத் ...... தபராத 
யாமா யாமா தேசா ரூடா
     யாரா யாபத் ...... தெனதாவி 
யாமா காவாய் தீயே னீர்வா
     யாதே யீமத் ...... துகலாமோ 
காமா காமா தீனா நீணா
     காவாய் காளக் ...... கிரியாய்கங் 
காளா லீலா பாலா நீபா
     காமா மோதக் ...... கனமானின் 
தேமார் தேமா காமீ பாகீ
     தேசா தேசத் ...... தவரோதுஞ் 
சேயே வேளே பூவே கோவே
     தேவே தேவப் ...... பெருமாளே.
மாலையை உடையவனே, இனிமையாக உரையாடுபவனே, உலகுக்கு ஆதாரமாக உள்ளவனே, நீர், மண் முதலிய ஐந்து பூதங்களுக்கும் ஈசனே, கொடை அளிக்கும் ஒழுக்கம் உள்ளவர்களால் தியானிக்கப் படுபவனே, பாவ நாசனே, பாசங்களில் பற்று வைத்ததின் அபராதமாக தெற்கில் உள்ள யமபுரியைச் சேர்ந்தவர்களிடையே, ஆராய்ச்சி இல்லாமல் ஆபத்தான நிலையை என்னுடைய உயிர் அடைதல் ஆகுமோ? என்னைக் காத்து அருள்வாய். கெட்டவனாகிய நான் நற் குணம் வாய்க்காமல் சுடுகாட்டைத் தீயைத் தாவிச் சேர்தல் நன்றோ? அன்பனே, அடியார்கள் விரும்புவதை அளிப்பவனே, நீண்ட நாக கிரி என்னும் திருச்செங்கோட்டில்* வீற்றிருப்பவனே, எலும்பு மாலையை விளையாட்டாக அணியும் சிவனின் குழந்தையே, கடப்ப மாலை அணிந்தவனே, மிகுந்த விருப்பமுள்ள, பெருமை பொருந்திய மான் போன்ற வள்ளியின் தேன் கலந்த இனிய தினை மாவில் விருப்பம் உள்ளவனே, தகுதி வாய்ந்தவனே, ஒளி உள்ளவனே, உலகத்தோர் போற்றும் குழந்தையே, தலைவனே, பொலிவு உடையவனே, அரசனே, தேவனே, தேவர்களுடைய பெருமாளே. 
இது வேண்டுகோள் எதுவும் அற்ற ஒரு துதிப் பாடல். வட மொழிச் சொற்களும், சந்திகளும் நிறைந்தது.* திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து 6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது. மலை பாம்பின் உருவில் இருப்பதால் நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' - என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.
பாடல் 600 - திருச்செங்கோடு 
ராகம் - ...; தாளம் -
தத்த தனதனன தத்த தனதனன
     தத்த தனதனன ...... தனதான
அத்து கிரினலத ரத்து அலனவள
     கத்து வளர்செய்புள ...... கிதபூத 
ரத்தி ருகமலக ரத்தி தயமுருகி
     யத்தி யிடனுறையு ...... நெடுமாம 
ரத்து மலர்கனிய லைத்து வருமிடைத
     லத்து ரகசிகரி ...... பகராதே 
யத்தி மலவுடல்ந டத்தி யெரிகொள்நிரை
     யத்தி னிடையடிமை ...... விழலாமோ 
தத்து கவனவரி ணத்து வுபநிடவி
     தத்து முநியுதவு ...... மொழியாறுத் 
தத்தை நறவையமு தத்தை நிகர்குறவர்
     தத்தை தழுவியப ...... னிருதோளா 
தத்து ததிதுரக தத்து மிகுதிதிசர்
     தத்து மலையவுணர் ...... குலநாகந் 
தத்த மிசைமரக தத்த மனியமயில்
     தத்த விடுமமரர் ...... பெருமாளே.
(விலைமாதரின்) அந்தப் பவளம் போன்ற சிவந்த உதட்டிலும், இருள் போன்ற கூந்தலிலும், மிகுந்த மகிழ்ச்சி தரக்கூடிய மார்பகங்களிலும், இரண்டு தாமரை போன்ற கைகளிலும் மனம் உருகி, கடலிடை இருந்த பெரிய மாமரத்தினுடைய (சூரனுடைய) மலரையும் பழத்தையும் கலக்கி (அதாவது சூரனைக் கொன்று) பிறகு வந்து அமர்ந்தருளிய தலமாகிய பாம்பு மலையை (திருச்செங்கோட்டை)* ஓதித் துதியாமல், எலும்பும் மலமும் கூடிய உடலைச் சுமந்து, எரிகின்ற நரகத்தில் அடிமையாகிய நான் விழலாமோ? வேகமான நடையை உடைய பெண்மானிடத்தில் வேத ஒழுக்கம் உடைய சிவ முநிவர் தந்த வார்த்தையால் (பிறந்தவளும்), பாலையும், தேனையும், அமுதத்தையும் ஒத்த இனிய மொழியை உடையவளும், குறவர் பெண்ணாகிய கிளி போன்றவளுமான வள்ளியை அணைந்த பன்னிரண்டு தோள்களை உடையவனே, அலை வீசும் கடல் போல, குதிரைப் படையை மிக வேகமாகச் செலுத்தும் அசுரர்களும், யுத்தகளத்தில் பாய்ந்து போரிடும் அவுணர்களும், குலவரைகள் எட்டும் நடுங்க, அவர்கள் மீது பசும் பொன் மயமான மயிலைப் பாய விட்டவனே, தேவர்களின் பெருமாளே. 
* திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து 6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது.மலை பாம்பின் உருவில் இருப்பதால் நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' - என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.

பாடல் 551 - திருசிராப்பள்ளி 
ராகம் - ...; தாளம் -

தனதன தந்தத் தனதன தந்தத்     தனதன தந்தத் ...... தனதான

இளையவர் நெஞ்சத் தளையமெ னுஞ்சிற்     றிடைகொடு வஞ்சிக் ...... கொடிபோல்வார் 
இணையடி கும்பிட் டணியல்குல் பம்பித்     திதழமு துந்துய்த் ...... தணியாரக் 
களபசு கந்தப் புளகித இன்பக்     கனதன கும்பத் ...... திடைமூழ்குங் 
கலவியை நிந்தித் திலகிய நின்பொற்     கழல்தொழு மன்பைத் ...... தருவாயே 
தளர்வறு மன்பர்க் குளமெனு மன்றிற்     சதுமறை சந்தத் ...... தொடுபாடத் 
தரிகிட தந்தத் திரிகிட திந்தித்     தகுர்தியெ னுங்கொட் ...... டுடனாடித் 
தெளிவுற வந்துற் றொளிர்சிவ னன்பிற்     சிறுவஅ லங்கற் ...... றிருமார்பா 
செழுமறை யஞ்சொற் பரிபுர சண்டத்     திரிசிர குன்றப் ...... பெருமாளே.

வாலிபர்களுடைய மனதுக்கு விலங்கு என்று சொல்லத் தக்க சிற்றிடையைக் கொண்ட வஞ்சிக் கொடியைப் போன்ற பொது மகளிருடைய பாதங்களை வணங்கி, அழகிய பெண்குறியைக் கிளர்ச்சியுறச் செய்து, வாய் இதழ் அமுதைப் பருகி அனுபவித்து, அணியான முத்து மாலையும் கலவைச் சாந்தின் நறு மணமும் புளகிதம் கொண்ட இன்பம் தருவதுமான கனத்த மார்பகக் குடத்தின் மத்தியில் முழுகும் புணர்ச்சி செய்வதை வெறுத்துத் தள்ளி, விளங்குகின்ற உனது அழகிய திருவடியை வணங்கும் அன்பைத் தந்தருளுக. சோர்வு இல்லாத அடியார்களுடைய மனம் என்னும் நடன சாலையில் நான்கு வேதங்களும் சந்தத்துடன் முறையாகப் பாட, தரிகிட தந்தத் திரிகிட திந்தித் தகுர்தி என்னும் கொட்டு முழக்கத்துடன் நடனம் செய்து, தெளிவு பெறும் வண்ணம் வந்து இருந்து விளங்கும் சிவபெருமானுடைய அன்புக்கு உரிய குழந்தையே, மாலை அணிந்த அழகிய மார்பனே, செழுமையான மறைகளை அழகாகச் ஒலிக்கின்ற சிலம்பை அணிந்தவனே, வலிமை வாய்ந்த திரிசிராப்பள்ளி மலையில் உறையும் பெருமாளே.

பாடல் 552 - திருசிராப்பள்ளி 
ராகம் - ...; தாளம் -

தனதன தத்தம் தனதன தத்தம்     தனதன தத்தம் ...... தனதான

பகலவ னொக்குங் கனவிய ரத்னம்     பவளவெண் முத்தந் ...... திரமாகப் 
பயிலமு லைக்குன் றுடையவர் சுற்றம்     பரிவென வைக்கும் ...... பணவாசை 
அகமகிழ் துட்டன் பகிடிம ருட்கொண்     டழியும வத்தன் ...... குணவீனன் 
அறிவிலி சற்றும் பொறையிலி பெற்றுண்     டலைதலொ ழித்தென் ...... றருள்வாயே 
சகலரு மெச்சும் பரிமள பத்மந்     தருணப தத்திண் ...... சுரலோகத் 
தலைவர்ம கட்குங் குறவர்ம கட்குந்     தழுவஅ ணைக்குந் ...... திருமார்பா 
செகதல மெச்சும் புகழ்வய லிக்குந்     திகுதிகெ னெப்பொங் ...... கியவோசை 
திமிலைத விற்றுந் துமிகள்மு ழக்குஞ்     சிரகிரி யிற்கும் ...... பெருமாளே.

சூரியனைப் போன்று ஒளி வீசும் பெருமை வாய்ந்த ரத்தினம், பவளம் வெண்முத்து மாலைகள் நன்றாக நெருங்கி விளங்க மலை போன்ற மார்பகங்களை உடைய விலைமாதர்களின் கூட்டமே அன்புக்கு இடம் என வைக்கின்ற பண ஆசையில் உள்ளம் மகிழ்கின்ற துஷ்டன் நான். வெளி வேஷக்காரன். மோக மயக்கம் கொண்டு அழிகின்ற வீணன். இழி குணத்தோன். மூடன். கொஞ்சமும் பொறுமை இல்லாதவன். பொருள் தேடிப் பெற்றும், உண்டும் அவ்வாறு நான் அலைதலை ஒழித்து எப்போது அருள்வாய்? யாவரும் மெச்சும், நறு மணம் வீசும், தாமரை போன்ற இளமை வாய்ந்த திருவடிகளை உடையவனே, திண்ணிய தேவலோகத் தலைவரான இந்திரனுடைய மகள் தேவயானைக்கும் வேடர்கள் பெண்ணாகிய வள்ளிக்கும் தழுவ அணைக்கின்ற அழகிய மார்பை உடையவனே, பூவுலகம் போற்றுகின்ற புகழ் பெற்ற வயலூரிலும், திகுதிகு என்று பொங்கி எழும் ஒலி கொண்ட திமிலை, தவில், துந்துபிகளாகிய வாத்தியங்கள் முழங்கும் திரிசிரா மலையிலும் விளங்கும் பெருமாளே.

பாடல் 553 - திருசிராப்பள்ளி 
ராகம் -...; தாளம் -

தனதனன தந்த தனதனன தந்த     தனதனன தந்த ...... தனதான

ஒருவரொடு கண்கள் ஒருவரொடு கொங்கை     ஒருவரொடு செங்கை ...... யுறவாடி 
ஒருவரொடு சிந்தை ஒருவரொடு நிந்தை     ஒருவரொடி ரண்டு ...... முரையாரை 
மருவமிக அன்பு பெருகவுள தென்று     மனநினையு மிந்த ...... மருள்தீர 
வனசமென வண்டு தனதனன வென்று     மருவுசர ணங்க ...... ளருளாயோ 
அரவமெதிர் கண்டு நடுநடுந டுங்க     அடலிடுப்ர சண்ட ...... மயில்வீரா 
அமரர்முத லன்பர் முநிவர்கள்வ ணங்கி     அடிதொழவி ளங்கு ...... வயலூரா 
திருவையொரு பங்கர் கமலமலர் வந்த     திசைமுகன்ம கிழ்ந்த ...... பெருமானார் 
திகுதகுதி யென்று நடமிட முழங்கு     த்ரிசிரகிரி வந்த ...... பெருமாளே.

ஒருவரோடு கண்களைக் கொண்டும், ஒருவரோடு மார்பகங்களாலும், ஒருவரோடு கைகளைக் கொண்டும் உறவாடி, ஒருவரை மனத்தில் வைத்து விரும்பியும், ஒருவரை இகழ்ந்து பேசி வெறுத்தும், ஒருவரோடு விருப்பு, வெறுப்பு இரண்டும் காட்டாமல் மெளனம் சாதித்தும் இருக்கின்ற விலைமாதரை அணைவதற்கு மிக்க காதல் பெருக உள்ளது என்று மனத்தில் நினைக்கின்ற இத்தகைய மோக மயக்கம் நீங்க, தாமரை என்று நினைத்து வண்டுகள் தனதனன என்ற ஒலியுடன் சுற்றி வருகின்ற உன்னுடைய திருவடிகளை அருளமாட்டாயா? பாம்பு தன்னை எதிரில் கண்டதும் மிகவும் நடுநடுங்கும்படி தனது வலிமையைக் காட்டும் கடுமை வாய்ந்த மயில்மீது ஏறும் வீரனே, தேவர்கள் முதல் அடியார்களும், முனிவர்களும் உன்னை வணங்கி உனது திருவடியைத் தொழ விளங்குகின்ற வயலூரில் வாழ்பவனே, லக்ஷ்மியை ஒரு பாகத்தில் உடைய திருமாலும், தாமரை மலரில் வீற்றிருக்கும் நான்முகன் பிரமனும் மகிழும்படியாக சிவபெருமான் திகுதகுதி என்று நடனமிட, முழவு வாத்தியங்கள் முழங்குகின்ற திரிசிராப்பள்ளியில் எழுந்தருளிய பெருமாளே. 

பாடல் 554 - திருசிராப்பள்ளி 
ராகம் - ...; தாளம் -

தனன தாத்தன தனன தாத்தன     தானா தானா தானா தானா ...... தனதான

குமுத வாய்க்கனி யமுத வாக்கினர்     கோலே வேலே சேலே போலே ...... அழகான 
குழைகள் தாக்கிய விழிக ளாற்களி     கூரா வீறா தீரா மாலா ...... யவரோடே 
உமது தோட்களி லெமது வேட்கையை     ஓ¡£ர் பா¡£ர் வா¡£ர் சோ£ர் ...... எனவேநின் 
றுடைதொ டாப்பண மிடைபொ றாத்தன     மூடே வீழ்வே னீடே றாதே ...... யுழல்வேனோ 
தமர வாக்கிய அமரர் வாழ்த்திய     தாதா வேமா ஞாதா வேதோ ...... கையிலேறீ 
சயில நாட்டிறை வயலி நாட்டிறை     சாவா மூவா மேவா நீவா ...... இளையோனே 
திமிர ராக்கதர் சமர வேற்கர     தீரா வீரா நேரா தோரா ...... உமைபாலா 
திரிசி ராப்பளி மலையின் மேற்றிகழ்     தேவே கோவே வேளே வானோர் ...... பெருமாளே.

குமுத மலர் போன்ற வாயினின்றும், பழம் போலவும் அமுதம் போலவும் (இனிமை தரும்) பேச்சுக்களை உடையவர்கள். அம்பு, வேல், சேல் மீன் இவற்றைப் போல அழகான, குண்டலங்கள் தாக்குகின்ற, கண்களால், நான் மகிழ்ச்சி மிகுந்து பெருமையுடன், முடிவு இல்லாத மோகத்துடன் அந்தப் பொது மகளிரோடு உம்முடைய தோள்களில் எமக்கு உள்ள ஆசையை நீர் அறிய மாட்டீரோ, என்னைப் பார்க்க மாட்டீரோ, எம்மிடம் வரமாட்டீரோ, எம்மோடு சேர மாட்டீரோ என்றெல்லாம் கூறி நின்று, (அவர்களுடைய) ஆடையைத் தொட்டும், அவர்களுடைய பெண்குறி இடத்தும், இடை தாங்க முடியாத கனமுடைய மார்பகங்களின் இடத்தும் விழுகின்ற நான், ஈடேறும் வழியைக் காணாமல் இவ்வாறு திரிவேனோ? ஒலி செய்யும் (துதிச்) சொற்களுடனே தேவர்கள் வாழ்த்துகின்ற பெரிய வள்ளலே, சிறந்த ஞானவானே, தோகை உடைய மயில் வாகனனே, மலை நாட்டுக்குத் தலைவனே, வயலூர் நாட்டுக்குத் தலைவனே, இறப்பும் மூப்பும் இல்லாதவனே, அருள நீ வருக இளைய தேவனே, இருள் போல் கரிய அசுரர்களுடன் போர் செய்ய வல்ல வேலாயுதம் ஏந்திய கையனே, தீரனே, வீரனே, நேர்மை உள்ளவனே, தோல்வி இல்லாதவனே, உமா தேவியின் குழந்தையே, திரிசிராப்பள்ளி மலையின் மேல் விளங்கும் தேவனே, அரசே, முருகவேளே, தேவர்கள் பெருமாளே. 

பாடல் 555 - திருசிராப்பள்ளி 
ராகம் - ஆனந்த பைரவி - மத்யம ஸ்ருதி ; தாளம் - அங்கதாளம் - 7 1/2 தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2

தனன தானன தத்தன தந்தன     தனன தானன தத்தன தந்தன          தனன தானன தத்தன தந்தன ...... தனதான

குவளை பூசல்வி ளைத்திடு மங்கயல்     கடுவ தாமெனு மைக்கண்ம டந்தையர்          குமுத வாயமு தத்தைநு கர்ந்திசை ...... பொருகாடை 
குயில்பு றாமயில் குக்கில்சு ரும்பினம்     வனப தாயுத மொக்குமெ னும்படி          குரல்வி டாஇரு பொற்குட மும்புள ...... கிதமாகப் 
பவள ரேகைப டைத்தத ரங்குறி     யுறவி யாளப டத்தைய ணைந்துகை          பரிச தாடன மெய்க்கர ணங்களின் ...... மதனூலின் 
படியி லேசெய்து ருக்கிமு யங்கியெ     அவச மாய்வட பத்ரநெ டுஞ்சுழி          படியு மோகச முத்ரம ழுந்துத ...... லொழிவேனோ 
தவள ரூபச ரச்சுதி யிந்திரை     ரதிபு லோமசை க்ருத்திகை ரம்பையர்          சமுக சேவித துர்க்கைப யங்கரி ...... புவநேசை 
சகல காரணி சத்திப ரம்பரி     யிமய பார்வதி ருத்ரிநி ரஞ்சனி          சமய நாயகி நிஷ்களி குண்டலி ...... யெமதாயி 
சிவைம நோமணி சிற்சுக சுந்தரி     கவுரி வேதவி தக்ஷணி யம்பிகை          த்ரிபுரை யாமளை யற்பொடு தந்தருள் ...... முருகோனே 
சிகர கோபுர சித்திர மண்டப     மகர தோரண ரத்நஅ லங்க்ருத          திரிசி ராமலை அப்பர்வ ணங்கிய ...... பெருமாளே.

குவளை மலர் போன்றும், போர் புரியும் அழகிய கயல் மீன் போன்றும், விஷம் போன்றும் உள்ள மை தீட்டிய கண்களை உடைய (விலை) மாதர்களின் குமுதம் போன்ற வாயிதழ் அமுதத்தைப் பருகி, ஒலி பொருந்தும் காடை, குயில், புறா, மயில், செம்போத்து, வண்டு, அன்னப்பறவை, அழகிய கோழி இவைகளின் குரலை நிகர்க்கும் என்று சொல்லும்படியான தங்கள் குரலைக் காட்ட, இரண்டு அழகிய மார்பகங்களும் இன்பத்தில் சிலிர்க்க, பவள ரேகை போன்ற வாயிதழ் குறி (உடலெங்கும்) உண்டாக, பாம்பின் படம் போன்ற பெண்குறியை அணைந்து, கைகளால் தொட்டும் தட்டியும், உடலால் செய்யும் தொழிலை காம சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட முறைப்படி செய்து, உருக்கிக் கூடி தன்வசம் இழந்து, ஆலின் இலை போன்ற வயிற்றின் தொப்புள் சுழலிலே முழுகுகின்ற காமக் கடலில் அழுந்துதலைத் தவிரேனோ? வெண்ணிறம் கொண்ட சரஸ்வதி, லக்ஷ்மி, ரதி, இந்திராணி, கிருத்திகை மாதர் அறுவர், அரம்பையர்கள் ஆகியோரால் வணங்கப்படும் துர்க்கா தேவி, பயங்கரி, புவனேஸ்வரி, எல்லா காரியங்களுக்கும் காரணமாக இருப்பவள், சக்தி, முழு முதலாகிய தேவி, இமய மலை அரசனின் மகளான பார்வதி, ருத்ரி, மாசற்றவள், சமயங்களுக்குத் தலைவி, உருவம் இல்லாதவள், கிரியா சக்தியானவள், எம் தாய், சிவனின் தேவி, மனத்தை ஞான நிலைக்கு எழுப்புபவள், அறிவு ரூப ஆனந்த அழகி, கெளரி, வேதத்தில் சிறப்பாக எடுத்து ஓதப்பட்டவள், அம்பிகை, திரிபுரங்களை எரித்தவள், சியாமள நிறம் கொண்டவள் (ஆகிய பார்வதி) அன்புடன் ஈன்றருளிய முருகனே, மலை உச்சியும், அழகிய மண்டபங்களும், மகர மீனின் வடிவமைந்த அலங்காரத் தோரணங்களும், ரத்ன சிங்காரங்களும் நிரம்பிய திரிசிரா மலையில் எழுந்தருளியுள்ள தந்தை சிவபெருமான் வணங்கிய பெருமாளே. 

பாடல் 556 - திருசிராப்பள்ளி 
ராகம் - ஸிந்து பைரவி; தாளம் - அங்கதாளம் - 6 தகிட-1 1/2, தகதிமி-2, தகிட-1 1/2, தக-1

தத்த தானா தனாதன தத்த தானா தனாதன     தத்த தானா தனாதன ...... தந்ததான

சத்தி பாணீ நமோநம முத்தி ஞானீ நமோநம     தத்வ வாதீ நமோநம ...... விந்துநாத 
சத்து ரூபா நமோநம ரத்ந தீபா நமோநம     தற்ப்ர தாபா நமோநம ...... என்றுபாடும் 
பத்தி பூணா மலேயுல கத்தின் மானார் சவாதகில்     பச்சை பாடீர பூஷித ...... கொங்கைமேல்வீழ் 
பட்டி மாடான நானுனை விட்டிரா மேயு லோகித     பத்ம சீர்பாத நீயினி ...... வந்துதாராய் 
அத்ர தேவா யுதாசுர ருக்ர சேனா பதீசுசி     யர்க்ய சோமாசி யாகுரு ...... சம்ப்ரதாயா 
அர்ச்ச னாவாக னாவய லிக்குள் வாழ்நாய காபுய     அக்ஷ மாலா தராகுற ...... மங்கைகோவே 
சித்ர கோலா கலாவிர லக்ஷ்மி சாதா ரதாபல     திக்கு பாலா சிவாகம ...... தந்த்ரபோதா 
சிட்ட நாதா சிராமலை யப்பர் ஸ்வாமீ மகாவ்ருத     தெர்ப்பை யாசார வேதியர் ...... தம்பிரானே.

ஞான சக்தி வேலைக் கரத்தில் ஏந்தியவனே, போற்றி போற்றி, முக்தியைத் தரவல்ல ஞான பண்டிதா, போற்றி போற்றி, தத்துவங்களுக்கு முதல்வனாய் நிற்பவனே, போற்றி போற்றி, சிவதத்துவமாகிய விந்து, சக்தி தத்துவமாகிய நாதம் இரண்டிற்கும் சத்தான உண்மை உருவம் வாய்த்தவனே, போற்றி போற்றி, மணிவிளக்கைப் போல் ஒளிர்பவனே, போற்றி போற்றி, தனக்குத் தானே நிகரான கீர்த்தியை உடையவனே, போற்றி போற்றி, என்று பாடித் துதிக்கும் பக்தியை மேற்கொள்ளாமல், இவ்வுலகிலே மான் போன்ற பெண்களது ஜவ்வாது, அகிற்சாந்து, பச்சைக்கற்பூரம், சந்தனம் ஆகிய நறுமணக் கலவையைப் பூசிய மார்பிலே வீழ்ந்து கிடக்கின்ற திருட்டு மாடாகிய நான் உந்தனை விட்டுப் பிரியாமல் இருக்க, உலகிற்கெல்லாம் நலம்தரும் தாமரை போன்ற உன்சிறந்த பாதங்களை இனியாகிலும் நீ என்முன் எழுந்தருளி வந்து தந்தருள்வாயாக. அஸ்திர (ஆயுத) தேவதையாகிய வேலாயுதத்தை ஏந்தியவனே, தேவர்களுக்கு மிக உக்கிரமான சேனாதிபதியே, தூய்மையாக மந்திர நீரோடு சோமரசத்தைப் பிழிந்து செய்யப்படும் யாகத்தில் குரு மூர்த்தியாக தொன்றுதொட்டு நின்று வருபவனே, அர்ச்சனைகளிலும், மந்திரத்தால் வரவழைக்கப்படுவதிலும் வந்தருள்வோனே, வயலூரில் வாழ்கின்ற எங்கள் நாயகனே, திருப்புயங்களில் ருத்திராட்ச மாலைகளை அணிந்துள்ளவனே, குறப் பெண் வள்ளியின் கணவனே, அழகும் ஆடம்பரமும் உடையவனே, வீர லக்ஷ்மியாகிய பார்வதிக்குப் பிறந்தவனே (ஜாதா), இனிமை வாய்ந்தவனே (ரஸா), திசைகள் பலவற்றையும் காப்பவனே, சிவ தத்துவத்தை விளக்கும் ஆகம நூல்களை உபதேசிக்கும் குருவே, ஞானிகளுக்கெல்லாம் தலைவனே, திரிசிராமலையின் அப்பனாகிய தாயுமானவருக்கும் குரு ஸ்வாமியே, சிறந்த விரதங்களோடும், தர்ப்பைப் புல்லுடனும், ஆசாரத்துடனும் உள்ள அந்தணர் அனைவருக்கும் தலைவனே. 

பாடல் 557 - திருசிராப்பள்ளி 
ராகம் - மோஹனம்; தாளம் - திஸ்ர ஏகம் - 3

தனதனதனத் ...... தனதான     தனதனதனத் ...... தனதான

பகலிரவினிற் ...... றடுமாறா     பதிகுருவெனத் ...... தெளிபோத 
ரகசியமுரைத் ...... தநுபூதி     ரதநிலைதனைத் ...... தருவாயே 
இகபரமதற் ...... கிறையோனே     இயலிசையின்முத் ...... தமிழோனே 
சகசிரகிப் ...... பதிவேளே     சரவணபவப் ...... பெருமாளே.

நினைவு, மறப்பு என்ற நிலைகளிலே தடுமாறாது, முருகனே குருநாதன் என்று தெளிகின்ற ஞானத்தின் பரம ரகசியத்தை அடியேனுக்கு உபதேசித்து, ஒன்றுபடும் ரசமான பேரின்ப நிலையினைத் தந்தருள்வாயாக. இம்மைக்கும் மறுமைக்கும் தலைவனாக விளங்குபவனே, இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழுக்கும் உரியவனே, இவ்வுலகில் மேலான திருச்சிரா மலையின் செவ்வேளே, சரவணபவப் பரம்பொருளே. 
* சிரகிரியை சென்னிமலை என்றும் கூறுவர்.சென்னிமலை ஈரோட்டிற்கு அப்பால் ஈங்கூர் ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள தலம்.

பாடல் 558 - திருசிராப்பள்ளி 
ராகம் - பெஹாக்; தாளம் - ஆதி

தனனத் தனனத் தனனத் தனனத்     தனனத் தனனத் தனனத் தனனத்          தனனத் தனனத் தனனத் தனனத் ...... தனதான

புவனத் தொருபொற் றொடிசிற் றுதரக்     கருவிற் பவமுற் றுவிதிப் படியிற்          புணர்துக் கசுகப் பயில்வுற் றுமரித் ...... திடிலாவி 
புரியட் டகமிட் டதுகட் டியிறுக்     கடிகுத் தெனஅச் சம்விளைத் தலறப்          புரள்வித் துவருத் திமணற் சொரிவித் ...... தனலூடே 
தவனப் படவிட் டுயிர்செக் கிலரைத்     தணிபற் களுதிர்த் தெரிசெப் புருவைத்          தழுவப் பணிமுட் களில்கட் டியிசித் ...... திடவாய்கண் 
சலனப் படஎற் றியிறைச் சியறுத்     தயில்வித் துமுரித் துநெரித் துளையத்          தளையிட் டுவருத் தும்யமப் ரகரத் ...... துயர்தீராய் 
பவனத் தையொடுக் குமனக் கவலைப்     ப்ரமையற் றைவகைப் புலனிற் கடிதிற்          படரிச் சையொழித் ததவச் சரியைக் ...... க்ரியையோகர் 
பரிபக் குவர்நிட் டைநிவிர்த் தியினிற்     பரிசுத் தர்விரத் தர்கருத் ததனிற்          பரவப் படுசெய்ப் பதியிற் பரமக் ...... குருநாதா 
சிவனுத் தமனித் தவுருத் திரன்முக்     கணனக் கன்மழுக் கரனுக் ரரணத்          த்ரிபுரத் தையெரித் தருள்சிற் குணனிற் ...... குணனாதி 
செகவித் தனிசப் பொருள்சிற் பரனற்     புதனொப் பிலியுற் பவபத் மதடத்          த்ரிசிரப் புரவெற் புறைசற் குமரப் ...... பெருமாளே.

இந்தப் பூமியில் ஓர் அழகிய பெண்ணின் சிறிய வயிற்றில் கருவிலே தோற்றம் ஏற்பட்டு, விதியின் ஆட்சிப்படியே கூடுகின்ற துக்கத்தையும் சுகத்தையும் அநுபவித்து, இறந்தபின் உயிரை புரி அஷ்டகம்* என்ற சூக்ஷ்ம தேகத்தில் புகுத்தி, (யமலோகத்தில்) அந்த தேகத்தைக் கட்டி, அடி, குத்து என்றெல்லாம் பயத்தை உண்டுபண்ணி, அலறி அழும்படி புரட்டி எடுத்து, வருத்தப்படுத்தி, சூடான மணலை உடலெல்லாம் சொரிவித்து, நெருப்புக்குள்ளே அவ்வுடலைச் சூடேறும்படியாக விட்டு, உயிரைச் செக்கில் இட்டுப் பிழிய அரைத்து, வரிசையாக உள்ள பற்களை தட்டி உதிர்த்து, எரிகின்ற செம்பாலான உருவம் ஒன்றைத் தழுவும்படிச் செய்து, முட்களில் கட்டி இழுத்திட, வாயும் கண்ணும் கலங்கி அசையும்படியாக உதைத்து, மாமிசத்தை அறுத்து உண்ணும்படியாகச் செய்து, எலும்பை ஒடித்து, நொறுக்கி, வலிக்கும்படியாக காலில் விலங்கு பூட்டி, துன்பப்படுத்தும் யம தண்டனை என்ற துயரத்தை நீக்கி அருள்வாயாக. பிராணவாயுவை ஒடுக்கும் மனக்கவலையாம் மயக்கத்தை ஒழித்து, ஐந்து புலன்களில் வேகமாகச் செல்கின்ற ஆசையை நீத்த, தவசீலர்களான சரியையாளர்கள் (*1), கிரியையாளர்கள் (*2), யோகிகள் (*3), ஞான (*4) முதிர்ச்சி கொண்டவர்கள், தியானம், துறவு மேற்கொண்ட பரிசுத்தர்கள், பற்றை நீக்கியவர்கள் இவர்களின் கருத்திலே வைத்துப் போற்றப்படும், வயலூர்ப்பதியில் வாழும் குருநாதனே, பரமனுக்கும் குருநாதனே, சிவபிரான், உத்தமன், அழிவில்லாத ருத்திரன், முக்கண்ணன், திகம்பரன் (திக்குக்களையே ஆடையாகப் புனைந்தவன்), மழு ஏந்திய கரத்தன், கடுமையான போர்க்களத்தில் திரிபுரத்தை எரித்தருளிய ஞான குணத்தவன், குணமில்லாதவன், ஆதி மூர்த்தி, உலகுக்கு வித்தான மூலப் பொருளானவன், உண்மைப் பொருளானவன், அறிவுக்கு எட்டாதவன், அற்புதன், தனக்கு உவமை இல்லாதவனாகிய சிவபெருமானிடத்தே தோன்றியவனே, தாமரைத் தடாகங்கள் உள்ள திரிசிராப்பள்ளி மலை மேல் அமரும் நல்ல குமரப் பெருமாளே. 
* புரி அஷ்டகம்: ஐம்புலன்களான சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகியவையோடு மனம், புத்தி, அகங்காரம் மூன்றும் சேர்ந்து ஆக மொத்தம் எட்டும் கூடிய தேகம். யமதூதர்கள் கொண்டு போகும் உடல் இதுதான்.
** 4 பக்தி மார்க்கங்கள் பின்வருமாறு:1. சரியை: திருக்கோயிலில் அலகு இடுதல், மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம் வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல், இறைவனை வாழ்த்துதல், திருவேடம் கண்டு பணிதல். இது 'தாத மார்க்கம் - சாலோகம்'.2. கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்தியக் காரியம் செய்தல். இது 'புத்ர மார்க்கம் - சாமீபம்'.3. யோகம்: புலன்களை அடக்கிப் பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி, முழு ஜோதியை நினைத்திருத்தல். இது 'சக மார்க்கம் (தோழ நெறி) - சாரூபம்'.4. ஞானம்: புறத் தொழில் அகத் தொழில் இன்றி, அறிவு மாத்திரத்தாலே செய்யும் வழிபாடு ஞானம். இது 'சன்மார்க்கம் - சாயுஜ்யம்'. சிவஞான சித்தியார் சூத்திரம்.

பாடல் 559 - திருசிராப்பள்ளி 
ராகம் - ...; தாளம் -

தனன தாத்தன தானா தானன     தனன தாத்தன தானா தானன          தனன தாத்தன தானா தானன ...... தந்ததான

பொருளின் மேற்ப்ரிய காமா காரிகள்     பரிவு போற்புணர் க்¡£டா பீடிகள்          புருஷர் கோட்டியில் நாணா மோடிகள் ...... கொங்கைமேலே 
புடைவை போட்டிடு மாயா ரூபிகள்     மிடிய ராக்குபொ லாமூ தேவிகள்          புலையர் மாட்டும றாதே கூடிகள் ...... நெஞ்சமாயம் 
கருதொ ணாப்பல கோடா கோடிகள்     விரகி னாற்பலர் மேல்வீழ் வீணிகள்          கலவி சாத்திர நூலே யோதிகள் ...... தங்களாசைக் 
கவிகள் கூப்பிடு மோயா மாரிகள்     அவச மாக்கிடு பேய்நீ ரூணிகள்          கருணை நோக்கமி லாமா பாவிக ...... ளின்பமாமோ 
குருக டாக்ஷக லாவே தாகம     பரம வாக்கிய ஞானா சாரிய          குறைவு தீர்த்தருள் ஸ்வாமி கார்முக ...... வன்பரான 
கொடிய வேட்டுவர் கோகோ கோவென     மடிய நீட்டிய கூர்வே லாயுத          குருகு க்ஷேத்ரபு ரேசா வாசுகி ...... அஞ்சமாறும் 
செருப ராக்ரம கேகே வாகன     சரவ ணோற்பவ மாலா லாளித          திரள்பு யாத்திரி யீரா றாகிய ...... கந்தவேளே 
சிகர தீர்க்கம காசீ கோபுர     முகச டாக்கர சேணா டாக்ருத          திரிசி ராப்பளி வாழ்வே தேவர்கள் ...... தம்பிரானே.

பொருளின் மேல் ஆசை கொண்ட காமமே உருவமாக ஆனவர்கள். அன்பு உடையவர்கள் போலச் சேரும் காம லீலைக்கு இருப்பிடம் ஆனவர்கள். ஆண்கள் கூட்டத்தில் வெட்கப்படாத செருக்கினர். மார்பின் மேல் புடைவையை எடுத்தெடுத்துப் போடும் மாயா உருவத்தினர். (தம்மிடம் வருவரை) வறியராக்குகின்ற பொல்லாத மூதேவிகள். கீழ் மக்களிடத்தும் மறுக்காமல் சேர்பவர்கள். (தமது) மனதில் வஞ்சனை (எண்ணங்கள்) கணக்கிட முடியாத பல கோடிக் கணக்காக உடையவர்கள். தந்திரத்தால் பலர் மேல் விழுகின்ற பயனற்றவர்கள். கலவி சாத்திர நூல்களையே படிப்பவர்கள். தங்களுக்கு ஆசையான பாடல்களைப் பாடும் கவிகளை அழைப்பதில் ஓயாத மழை போன்றவர்கள். தன் வசத்தை இழக்கச் செய்கின்ற கள்ளை உண்பவர்கள். இரக்கமுள்ள பார்வையே இல்லாத பெரிய பாவிகளாகிய விலை மகளிருடன் கூடுதல் நல்லதாகுமோ? குரு மூர்த்தியாகக் கடைக்கண் வைத்து அருள வல்லவனே, வேதம் ஆகமம் ஆகிய சிறப்பான மொழிகளை உபதேசிக்க வல்ல ஞான போதகனே, எனது குறைகள் எல்லாவற்றையும் நீக்க வல்ல ஸ்வாமியே, வில்லை ஏந்திய வலிமையாளரான பொல்லாத வேடர்கள் கோகோவென்று கூச்சலிட்டு இறக்கும்படி செலுத்திய கூர்மையான வேலாயுதனே, கோழியூர் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் ஈசனே, வாசுகி என்னும் பாம்பு பயப்படும்படி எதிர்த்து போர் செய்யும் வலிமை பொருந்திய மயிலை வாகனமாக உடையவனே, சரவணப் பொய்கையில் தோன்றியவனே, பெருமையால் அழகு பெற்ற திரண்ட புய மலைகள் பன்னிரண்டு கொண்ட கந்த வேளே, சிகரங்கள் நீண்ட பெரிய விசேஷமான கோபுர வாயிலில் வீற்றிருக்கும் (சரவணபவ என்ற) ஆறு அட்சரங்களுக்கு உரியவனே, விண்ணுலகம் போல் உயர்ந்த திரிசிராப்பள்ளியில் வீற்றிருப்பவனே, தேவர்கள் தம்பிரானே. 
* குருகு த்ரபுரம் = கோழியூர் (உறையூர்). குருகு = கோழி.இங்கு யானையைக் கோழி வென்றமையால் இப்பெயர் வந்தது.திருச்சிக்கு அருகில் உள்ளது.
** கேகயம் = மயில்.

பாடல் 560 - திருசிராப்பள்ளி 
ராகம் - ...; தாளம் -

தனதன தந்த தனதன தந்த     தனதன தந்த ...... தனதான

பொருள்கவர் சிந்தை அரிவையர் தங்கள்     புழுககில் சந்து ...... பனிநீர்தோய் 
புளகித கொங்கை யிளகவ டங்கள்     புரளம ருங்கி ...... லுடைசோர 
இருள்வளர் கொண்டை சரியஇ சைந்து     இணைதரு பங்க ...... அநுராகத் 
திரிதலொ ழிந்து மனதுக சிந்து     னிணையடி யென்று ...... புகழ்வேனோ 
மருள்கொடு சென்று பரிவுட னன்று     மலையில்வி ளைந்த ...... தினைகாவல் 
மயிலை மணந்த அயிலவ எங்கள்     வயலியில் வந்த ...... முருகோனே 
தெருளுறு மன்பர் பரவ விளங்கு     திரிசிர குன்றில் ...... முதனாளில் 
தெரிய இருந்த பெரியவர் தந்த     சிறியவ அண்டர் ...... பெருமாளே.

பொருளை அபகரிப்பதையே மனத்தில் கொண்ட (விலை) மாதர்களுடைய, புனுகு, அகில், சந்தனம், பன்னீர் ஆகிய வாசனைப் பண்டங்கள் தோய்ந்த புளகாங்கிதம் கொண்ட மார்பகங்கள் குழைந்து அசைய, முத்து மாலைகள் புரள, இடுப்பில் ஆடை நெகிழ, இருள் நிறைந்த (கரிய) கூந்தல் அவிழ்ந்து புரள, மனம் ஒத்து இணைகின்ற குற்றத்துக்கு இடமான காமப் பற்றில் அகப்படும் கெடுதல் நீங்கி, என் மனம் நெகிழ்ந்து உருகி உனது திருவடிகளை என்று நான் புகழ்வேனோ? மோகத்துடன் சென்று அன்புடன் அன்று, (வள்ளி) மலைக் காட்டில் உள்ள தினைப் புனத்தைக் காவல் செய்த மயில் போன்ற வள்ளியை மணம் புரிந்த வேலவனே, எங்கள் வயலூரில் எழுந்தருளியுள்ள முருகனே, தெளிந்த அறிவை உடைய அன்பர்கள் போற்ற சிறப்புற்று விளங்கும் திரிசிரா மலையில், ஆதி நாள் முதலாக விளங்க வீற்றிருக்கும் சிவபெருமான் (தாயுமானவர்) அருளிய குழந்தையே, தேவர்களின் பெருமாளே. 

பாடல் 561 - திருசிராப்பள்ளி 
ராகம் - பூர்வி கல்யாணி; தாளம் - அங்கதாளம் - 6 1/2 தகதிமிதக-3, தகிட-1 1/2, தகதிமி-2

தானத்தத் தான தானன தானத்தத் தான தானன     தானத்தத் தான தானன ...... தந்ததான

வாசித்துக் காணொ ணாதது பூசித்துக் கூடொ ணாதது     வாய்விட்டுப் பேசொ ணாதது ...... நெஞ்சினாலே 
மாசர்க்குத் தோணொ ணாதது நேசர்க்குப் பேரொ ணாதது     மாயைக்குச் சூழொ ணாதது ...... விந்துநாத 
ஓசைக்குத் தூர மானது மாகத்துக் கீற தானது     லோகத்துக் காதி யானது ...... கண்டுநாயேன் 
யோகத்தைச் சேரு மாறுமெய்ஞ் ஞானத்தைப் போதி யாயினி     யூனத்தைப் போடி டாதும ...... யங்கலாமோ 
ஆசைப்பட் டேனல் காவல்செய் வேடிச்சிக் காக மாமய     லாகிப்பொற் பாத மேபணி ...... கந்தவேளே 
ஆலித்துச் சேல்கள் பாய்வய லூரத்திற் காள மோடட     ராரத்தைப் பூண்ம யூரது ...... ரங்கவீரா 
நாசிக்குட் ப்ராண வாயுவை ரேசித்தெட் டாத யோகிகள்     நாடிற்றுக் காணொ ணாதென ...... நின்றநாதா 
நாகத்துச் சாகை போயுயர் மேகத்தைச் சேர்சி ராமலை     நாதர்க்குச் சாமி யேசுரர் ...... தம்பிரானே.

நூல்களைக் கற்று கலையறிவால் காணமுடியாததும், பூஜை செய்து கிரியாமார்க்கத்தால் அடைதற்கு அரியதும், வாக்கினால் இத்தன்மைத்து எனப் பேசமுடியாததும், உள்ளத்தில் குற்றமுடையோருக்குத் தோன்றி விளங்காததுவும், அன்பு செய்தார் நெஞ்சினின்றும் நீங்காது நிற்பதுவும், மாயையினால் சூழமுடியாததும், விந்து (சக்தி) சுழல அதனின்று எழும் நாதம் (சிவம்) என்னும் ஓசைக்கு அப்பால் வெகு தூரத்தில் இருப்பதுவும், ஆகாயத்திற்கு முடிவிலே இருப்பதுவும், இவ்வுலகத்திற்கு ஆதியானதுவும் ஆகிய மெய்ப்பொருளை, உள்ளக் கண்களால் நாயேன் கண்டு, சிவயோகத்தை அடையுமாறு உண்மை அறிவை நீ உபதேசித்து அருள்வாய். இனி யான் இந்த உடம்பை வெறுத்து ஒதுக்காது மாயை வசப்படலாமோ? நீயே மிக விரும்பி, தினைப்புனம் காவல் செய்த வேட்டுவப் பெண் வள்ளிக்காக பெரிதும் மயங்கி, பொன் போல் ஒளிரும் அவள் பாதத்தில் வீழ்ந்து வணங்கிய கந்தக் கடவுளே. ஆரவாரித்து சேல்மீன்கள் பாய்ந்து விளையாடுகின்ற வயலூர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி, விஷம் நிறைந்த பாம்பை மாலையாகப் பூண்ட மயிலாகிய குதிரை மீது பவனிவரும் வீரனே, நாசியின் வழியாக பிராணவாயுவை வெளியேவிட்டு, மீண்டும் பூரகம் செய்து ஸஹஸ்ராரப் பெருவெளியை* எட்டமுடியாத தவயோகிகள் எத்தனை விரும்பியும் காணமுடியாதபடி (அப்பாலுக்கு அப்பாலாய்) நின்ற தலைவனே, மலையின் கிளைச் சிகரம் வளர்ந்து சென்று உயர்ந்த மேகமண்டலத்தைச் சேரும் திரிசிராமலையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்கு குருஸ்வாமியே, தேவர்களுக்குத் தலைவனே. 
* இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு:நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு 'ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள், சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி, ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை, சுழுமுனை முதலியன) உள்ளன.'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம்.'சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது.'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும் ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும்.

பாடல் 562 - திருசிராப்பள்ளி 
ராகம் - ...; தாளம் -

தனத்த தாத்தன தனதன தனதன     தனத்த தாத்தன தனதன தனதன          தனத்த தாத்தன தனதன தனதன ...... தனதான

வெருட்டி யாட்கொளும் விடமிகள் புடைவையை     நெகிழ்த்த ணாப்பிகள் படிறிகள் சடுதியில்          விருப்ப மாக்கிகள் விரவிய திரவிய ...... மிலரானால் 
வெறுத்து நோக்கிகள் கபடிகள் நடமிடு     பதத்தர் தூர்த்திகள் ம்ருகமத பரிமள          விசித்ர மேற்படு முலையினு நிலையினு ...... மெவரோடும் 
மருட்டி வேட்கைசொல் மொழியினும் விழியினும்     அவிழ்த்த பூக்கமழ் குழலினு நிழலினு          மதிக்கொ ணாத்தள ரிடையினு நடையினு ...... மவமேயான் 
மயக்க மாய்ப்பொருள் வரும்வகை க்ருஷிபணு     தடத்து மோக்ஷம தருளிய பலமலர்          மணத்த வார்க்கழல் கனவிலு நனவிலு ...... மறவேனே 
இருட்டி லாச்சுர ருலகினி லிலகிய     சகஸ்ர நேத்திர முடையவன் மிடியற          இர¨க்ஷ வாய்த்தருள் முருகப னிருகர ...... குகவீரா 
இலக்ஷ¤ மீச்சுர பசுபதி குருபர     சமஸ்த ராச்சிய ந்ருபபுகழ் வயமியல்          இலக்க ரேய்ப்படை முகடெழு ககபதி ...... களிகூரத் 
திருட்டு ராக்ஷதர் பொடிபட வெடிபட     எடுத்த வேற்கொடு கடுகிய முடுகிய          செருக்கு வேட்டுவர் திறையிட முறையிட ...... மயிலேறும் 
செருப்ப ராக்ரம நிதிசர வணபவ     சிவத்த பாற்கர னிமகரன் வலம்வரு          திருச்சி ராப்பளி மலைமிசை நிலைபெறு ...... பெருமாளே.

வந்தவரை விரட்டுதல் செய்து அவர்களைத் தம் வசப்படுத்த வல்ல விஷமிகள். சேலையைத் தளர்த்தி ஏமாற்றுபவர்கள். பொய்யர். வெகு வேகத்தில் தம் மீது விருப்பம் வரும்படி செய்ய வல்லவர்கள். தமக்குச் சேர வேண்டிய பொருளைக் கொடுக்க இயலாதவர்களாக இருந்தால் வெறுப்புடன் பார்ப்பவர்கள். வஞ்சகர். நடனம் செய்யும் பாதத்தை உடையவர். கொடியோர்கள் ஆகிய விலைமாதர்களின் கஸ்தூரி முதலிய நறு மணம் வீசும், பேரழகு மேம்பட்டு விளங்கும் மார்பகத்திலும், நிற்கின்ற சாயலிலும், யாரையும் மயக்குவித்து ஆசை மொழிகளைச் சொல்லும் சொற்களிலும், கண்களிலும், அவிழ்ந்து விழும் பூ மணக்கும் கூந்தலிலும், அதன் ஒளியிலும், மதிக்க முடியாத தளர்ந்த இடையிலும், நடையிலும் ஈடுபட்டு வீணாக நான் மயக்கம் கொண்டு (அப் பொதுமகளிருக்குக் கொடுப்பதற்காக) பொருள் சேகரிக்க வேண்டிய முயற்சிகளைச் செய்து கொண்டிருந்த சமயத்தில், வீட்டுப் பேற்றை அருளிய, பல மலர்களும் நறு மணம் வீசும் பெருமை வாய்ந்த உனது திருவடிகளை கனவிலும் நனவிலும் மறக்க மாட்டேன். இருளே இல்லாத தேவ லோகத்தில் விளங்கி நிற்கும் ஆயிரம் கண்களை உடைய இந்திரனின் துன்பங்கள் நீங்கவும் அவனுக்குப் பாதுகாப்பைத் தந்து அளித்த முருகனே, பன்னிரு கரத்தனே, குகனே, வீரனே, லக்ஷ்மிகரம் விளங்கும் ஈசுவரனே, பசுபதியாகிய சிவபெருமானுக்குக் குருவே, எல்லா நாடுகளுக்கும் அரசனே, புகழும் வெற்றியும் பொருந்திய இலக்கர்* ஆகியோர் உள்ள சேனைக் கூட்டத்தின் மேலே பறந்து உலவும் பட்சி அரசனாகிய கருடன் மகிழ்ச்சி மிக அடைய, திருட்டுக் குணமுடைய அரக்கர்கள் பொடியாகிச் சிதறுண்ணும்படி, திருக்கரத்தில் எடுத்த வேலாயுதத்தால் கடுமையுடன் வேகமாக வந்த அகங்காரம் கொண்ட வேடர்கள் வணங்கும்படியும் முறையிடும்படியும் செய்த மயில் ஏறும் போர் வீரனே, என் நிதியே, சரவணபவனே, சிவந்த ஒளியுள்ள கிரணங்களை உடைய சூரியனும், பனியனைய குளிர்ந்த கிரணங்களை உடைய சந்திரனும் வலம் வருகின்ற திருச்சிராப்பள்ளி மலையில் நிலை பெற்று விளங்கும் பெருமாளே. 
* தேவியின் சிலம்பின் நவமணிகளில் இருந்து நவசக்திகளின் விறல் வீரர்கள் இலக்கர் (வீரபாகு முதலியோர்) வந்துதித்தனர் - கந்த புராணம் 1.12.11.

பாடல் 563 - திருக்கற்குடி 
ராகம் - ...; தாளம் -

தனத்தத் தனத்தத் தனத்தத் தனத்தத்     தனத்தத் தனத்தத் ...... தனதான

குடத்தைத் தகர்த்துக் களிற்றைத் துரத்திக்     குவட்டைச் செறுத்துக் ...... ககசாலக் 
குலத்தைக் குமைத்துப் பகட்டிச் செருக்கிக்     குருத்தத் துவத்துத் ...... தவர்சோரப் 
புடைத்துப் பணைத்துப் பெருக்கக் கதித்துப்     புறப்பட் டகச்சுத் ...... தனமாதர் 
புணர்ச்சிச் சமுத்ரத் திளைப்பற் றிருக்கப்     புரித்துப் பதத்தைத் ...... தருவாயே 
கடத்துப் புனத்துக் குறத்திக் குமெத்தக்     கருத்திச் சையுற்றுப் ...... பரிவாகக் 
கனக்கப் ரியப்பட் டகப்பட் டுமைக்கட்     கடைப்பட் டுநிற்கைக் ...... குரியோனே 
தடத்துற் பவித்துச் சுவர்க்கத் தலத்தைத்     தழைப்பித் தகொற்றத் ...... தனிவேலா 
தமிழ்க்குக் கவிக்குப் புகழ்ச்செய்ப் பதிக்குத்     தருக்கற் குடிக்குப் ...... பெருமாளே.

குடத்துக்கு (ஒப்பிடலாம் என்றால்) குடத்தை நொறுங்க உடையச் செய்தும், யானைக்கு (ஒப்பிடலாம் என்றால்) யானையைக் காட்டில் துரத்தியும், மலைக்கு (ஒப்பிடலாம் என்றால்) மலை குறுகி அடங்கியும், சக்ரவாகப் பட்சிகளின் கூட்டத்தின் குலத்துக்கு (ஒப்பிடலாம் என்றால்) (அந்தப் பட்சிகளை) வெட்கப்பட வைத்தும், ஆடம்பரம் காட்டி, அகந்தை பூண்டு, குருவின் நிலையிலிருந்து அறிவுரைகளை எடுத்து ஓதும் தவசிகளும் சோர்ந்து மயங்கும்படி, பருத்து, செழிப்புற்று, மிகவும் எழுச்சியுற்று வெளித் தோன்றுவதும் கச்சு அணிந்ததுமான மார்பகங்களை உடைய விலைமாதர்களின் கலவி என்னும் கடலில் ஊடாடுதல் நீங்கி இருக்க அருள் செய்து உன் திருவடியைத் தருவாயாக. காட்டில் தினைப் புனத்தில் இருந்த குறத்தி வள்ளியின் மேல் மிக்க ஆசை மனத்தில் கொண்டு, அன்புடனே மிகவும் காதல் பூண்டு, மை அணியப்பட்ட அவளுடைய கடைக் கண்ணில் வசப்பட்டு நிற்பதற்கு ஆளானவனே, (சரவண) மடுவில் தோன்றி, பொன்னுலகை வாழ்வித்த வீரம் பொருந்திய ஒப்பற்ற வேலனே, தமிழ்ப் பெருமாளே, கவி ராஜப் பெருமாளே, புகழப்படும் வயலூர் என்ற தலத்துப் பெருமாளே, மரங்கள் நிறைந்த திருக்கற்குடியில்* வீற்றிருக்கும் பெருமாளே. 
* திருக்கற்குடி திருச்சிக்கு அருகேயுள்ள வயலூரின் பக்கத்தில் உள்ளது.

பாடல் 564 - திருக்கற்குடி 
ராகம் - ...; தாளம் -

தனத்தத் தனத்தத் தத்த     தனத்தத் தனத்தத் தத்த          தனத்தத் தனத்தத் தத்த ...... தனதான

நெறித்துப் பொருப்புக் கொத்த     முலைக்குத் தனத்தைக் கொட்டி          நிறைத்துச் சுகித்துச் சிக்கி ...... வெகுநாளாய் 
நினைத்துக் கொடத்துக் கத்தை     யவத்தைக் கடுக்கைப் பெற்று          நிசத்திற் சுழுத்திப் பட்ட ...... அடியேனை 
இறுக்கிப் பிடித்துக் கட்டி     யுகைத்துத் துடிக்கப் பற்றி          யிழுத்துத் துவைத்துச் சுற்றி ...... யமதூதர் 
எனக்குக் கணக்குக் கட்டு     விரித்துத் தொகைக்குட் பட்ட          இலக்கப் படிக்குத் தக்க ...... படியேதான் 
முறுக்கித் திருப்பிச் சுட்டு     மலத்திற் புகட்டித் திட்டி          முழுக்கக் கலக்கப் பட்டு ...... அலையாமல் 
மொழிக்குத் தரத்துக் குற்ற     தமிழ்க்குச் சரித்துச் சித்தி          முகத்திற் களிப்புப் பெற்று ...... மயிலேறி 
உறுக்கிச் சினத்துச் சத்தி     யயிற்குத் தரத்தைக் கைக்குள்          உதிக்கப் பணித்துப் பக்கல் ...... வருவாயே 
உனைச்சொற் றுதிக்கத் தக்க     கருத்தைக் கொடுப்பைச் சித்தி     யுடைக்கற் குடிக்குட் பத்தர் ...... பெருமாளே.

காமத்தால் மனம் குழைந்து மிகவும் குனிந்து, மலை போன்றிருக்கும் மார்பகங்களுக்காகப் பொருள் எல்லாவற்றையும் கொட்டி, நிரம்ப இன்பத்தை அனுபவித்து, அதில் அகப்பட்டு, பல நாட்களாக அந்த இன்பத்தையே நினைத்துக் கொண்டு அதனால் வரும் துக்கங்களுக்கும் வேதனைகளுக்கும் ஆளாகி, உண்மையில் செயலற்று (உண்மைப் பொருளைக் காணாது) உறங்கிய அடியேனை இறுக்கமாகக் கட்டி உதைத்தும், துடிக்கும்படி பற்றியும், இழுத்தும், மிதித்துத் துவைத்தும், என்னைச் சூழ்ந்த யம தூதர்கள் என்னுடைய கணக்குக் கட்டை விரித்துக் காட்டி, (நான் இவ்வுலகில் செய்த பாபச்செயல்கள் குறிக்கப்பட்ட கணக்கில் உள்ள) எண்ணிக்கைக்குத் தகுந்தபடி, என்னை முறுக்கியும், திருப்பியும் சுட்டும், மலத்தில் புகுவித்தும், வைதும், அந்தக் கலக்கத்தில் முற்றிலுமாக அகப்பட்டு நான் அலைபடாமல், எனது மொழியையும், மேன்மை உள்ள தமிழையும் அங்கீகரித்து, வீடு பேற்றைத் தரும் திருமுகத்தில் மகிழ்ச்சியுடன், மயிலின் மீது ஏறி, தண்டிக்கும் கோபம் வாய்ந்த சக்தி வேலை, தகுதியுடன் திருக்கரத்தில் தோன்ற எடுத்து என் பக்கத்தில் வருவாயாக. உன்னைச் சொல் கொண்டு துதிப்பதற்குத் தகுந்த கருத்தை கொடுத்தருள்வாயாக. (அஷ்டமா) சித்திகளும்* பொருந்தியுள்ள திருக்கற்குடிக்குள்** உள்ள பக்தர்களின் பெருமாளே. 
* அஷ்டமாசித்திகள் பின்வருமாறு:அணிமா - அணுவிலும் சிறிய உருவினன் ஆதல்.மகிமா - மேருவினும் பெரிய உருவினன் ஆதல்.கரிமா - ஆயுதங்களுக்கும், ஆகாயத்துக்கும், காலத்துக்கும் அப்பால் ஆதல்.லகிமா - ஆகாயகமனம், அந்தரத்தில் இருத்தல்.பிராப்தி - பர காயங்களில் புகுதல் (கூடுவிட்டு கூடுபாய்தல்).பிராகாமியம் - எல்லாவற்றிலும் நிறைந்திருத்தல்.ஈசத்துவம் - எல்லாவற்றுக்கும் நாதனாக இருத்தல்.வசித்துவம் - எல்லா இடங்களிலும் இருந்து யாவற்றையும் வசப்படுத்தல்.
** திருக்கற்குடி திருச்சிக்கு அருகேயுள்ள வயலூரின் பக்கத்தில் உள்ளது.

பாடல் 565 - இரத்னகிரி 
ராகம் - ...; தாளம் -

தனனத் தனனத் தனனத் தனனத்     தனனத் தனனத் ...... தனதான

கயலைச் சருவிப் பிணையொத் தலர்பொற்     கமலத் தியல்மைக் ...... கணினாலே 
கடிமொய்ப் புயலைக் கருதிக் கறுவிக்     கதிர்விட் டெழுமைக் ...... குழலாலே 
நயபொற் கலசத் தினைவெற் பினைமிக்     குளநற் பெருசெப் ...... பிணையாலே 
நலமற் றறிவற் றுணர்வற் றனனற்     கதியெப் படிபெற் ...... றிடுவேனோ 
புயலுற் றியல்மைக் கடலிற் புகுகொக்     கறமுற் சரமுய்த் ...... தமிழ்வோடும் 
பொருதிட் டமரர்க் குறுதுக் கமும்விட்     டொழியப் புகழ்பெற் ...... றிடுவோனே 
செயசித் திரமுத் தமிழுற் பவநற்     செபமுற் பொருளுற் ...... றருள்வாழ்வே 
சிவதைப் பதிரத் தினவெற் பதனிற்     றிகழ்மெய்க் குமரப் ...... பெருமாளே.

கயல் மீனோடு போர் செய்து, பெண் மானை ஒத்து, மலராகிய அழகிய தாமரையின் தன்மையைக் கொண்ட, மை தீட்டிய கண்களாலும், விளக்கமுற்று நெருங்கிய கருமேகத்தை நோக்கிக் கோபித்து, ஒளி வீசி எழுந்துத் திகழும் கரிய கூந்தலாலும், இனிமையும் அழகும் கொண்ட குடத்தையும், மலையையும் விட மேம்பாடு உள்ள நல்ல பெரிய இரு மார்பகங்களாலும், இன்பம், அழகு முதலிய நலன்களை இழந்து, அறிவு போய், உணர்வையும் இழந்த நான் நற் கதியை எவ்வாறு பெறுவேன்? மேகம் படியும் தன்மை வாய்ந்த கருங் கடலில் புகுந்து நின்ற மாமரமாகிய சூரன் வேரோடு சாயும்படி முன்பு வேலாயுதத்தை விட்டு அடக்கி ஆழ்த்திய ஆற்றலோடு, சண்டை செய்து தேவர்களுக்கு இருந்த துன்பத்தை விட்டு நீங்கச் செய்த புகழைப் பெற்றவனே, வெற்றியைத் தரும் அழகிய முத்தமிழ்ப் பாக்கள் மூலமாக வெளித்தோன்றும் சிறந்த தேவார மந்திரங்களையும், மேலான பொருளையும் அனுபவித்து (சம்பந்தராக வந்து) உலகுக்கு அருளிய செல்வமே, சிவாயம்* எனப்படும் ரத்தின கிரியில் விளங்கும் உண்மை வடிவாகிய குமரப் பெருமாளே. 
* ரத்னாசலம், சிவாயம், மணிக்கிரி என்பன வாட்போக்கித் தலமாகிய ரத்தினகிரியின் பிற பெயர்கள். தேவாரம் பெற்ற திருத்தலம். திருச்சி மாவட்டம் குளித்தலை ரயில் நிலையத்தில் இருந்து 8 மைல் தொலைவில் இருக்கிறது.

பாடல் 566 - இரத்னகிரி 
ராகம் - மோஹனம்; தாளம் - சதுஸ்ர த்ருவம் - கண்டநடை - 35 - எடுப்பு /4/4/4 0 
நடை - தகிட தக

தத்ததன தானதன தானதன தானதன     தத்ததன தானதன தானதன தானதன          தத்ததன தானதன தானதன தானதன ...... தனதான

சுற்றகப டோடுபல சூதுவினை யானபல     கற்றகள வோடுபழி காரர் கொலை காரர்சலி          சுற்றவிழ லானபவி ஷோடுகடல் மூழ்கிவரு ...... துயர்மேவித் 
துக்கசமு சாரவலை மீனதென கூழில்விழு     செத்தையென மூளுமொரு தீயில்மெழு கானவுடல்          சுத்தமறி யாதபறி காயமதில் மேவிவரு ...... பொறியாலே 
சற்றுமதி யாதகலி காலன்வரு நேரமதில்     தத்துஅறி யாமலொடி யாடிவரு சூதரைவர்          சத்தபரி சானமண ரூபரச மானபொய்மை ...... விளையாடித் 
தக்கமட வார்மனையை நாடியவ ரோடுபல     சித்துவிளை யாடுவினை சீசியிது நாறவுடல்          தத்திமுடி வாகிவிடு வேனொமுடி யாதபத ...... மருள்வாயே 
தித்திமித தீதிமித தீதிமித தீமிதத     தத்ததன தானதன தானனன தானனன          திக்குடுடு டூடமட டாடமட டூடுடுடு ...... எனதாளம் 
திக்குமுகி லாடஅரி யாடஅய னாடசிவ     னொத்துவிளை யாடபரை யாடவர ராடபல          திக்கசுரர் வாடசுரர் பாடமறை பாடஎதிர் ...... களமீதே 
எத்திசையு நாடியம னார்நிணமொ டாடபெல     மிக்கநரி யாடகழு தாடகொடி யாடசமர்          எற்றிவரு பூதகண மாடவொளி யாடவிடு ...... வடிவேலா 
எத்தியொரு மானைதினை காவல்வல பூவைதனை     சித்தமலை காமுககு காநமசி வாயனொடு          ரத்நகிரி வாழ்முருக னேயிளைய வாவமரர் ...... பெருமாளே.

சூழ்ந்துள்ள வஞ்சனைகள் பலவும் சூது நிறைந்த தொழில்கள் பலவும் கொண்டு, கற்ற கள்ளத் தொழிலொடு பழிக்கு இடம் தருபவர்கள், கொலை செய்பவர்கள் இவர்களுடன் கூடிச் சலிப்புற்று, அலைந்து, வீணான பெருமையோடு வாழ்க்கைக் கடலில் மூழ்கி, அதில் உண்டான துன்பங்களை அடைந்து, துக்கம் தரும் சம்சாரம் என்னும் கடலில் வீசப்பட்ட வலையில் சிக்கிய மீன் போல, கூழில் விழுந்த குப்பை போலக் கிடந்து, மூண்டு எரியும் பெரிய நெருப்பில் பட்ட மெழுகுபோல் உருகும் உடல், சுத்தம் என்பதையே அறியாத பாரம் வாய்ந்த உடலில் பொருந்தி வேலை செய்யும் ஐந்து இந்திரியங்களின் காரணமாக, சிறிதேனும் இரக்கமில்லாமல் வருகின்ற, வலியும் செருக்கும் கொண்ட யமன் நெருங்கும் சமயத்தில், ஆபத்து (சாவின் உருவில்) வருகின்றதே என்பதை அறியாமல் ஓடியும் ஆடியும் வருகின்ற சூதாடிகளான ஐவர், சப்தம், தொடுகை, வாசனை, வடிவம், ரசம் எனப்படும் ஐம்புலன்களின் பொய் இன்பங்களில் திளைத்து விளையாடி, இந்த உடலுக்குத் தகுந்த மாதர்களையும், அவர்கள் வீடுகளையும் தேடிச் சென்று, அம்மாதர்களோடு பல (காம) மாய வித்தைகளை விளையாடும் தொழில், சீசீ இது என்று பலரும் வெறுப்புடன் கூறத்தக்கதாய்த் தோன்ற, (என்னுடைய) உடல் நைந்துபோய் இறுதியில் நான் இறந்து படுவேனோ? அதற்குள் உனது அழிவில்லாத திருவடியைத் தந்து அருளுக. தித்திமித தீதிமித தீதிமித தீமிதத தத்ததன தானதன தானனன தானனன (இதே ஒலியில்) தாளம் எல்லா திசைகளிலும் இடியென ஒலிக்க, திருமால் ஆட, பிரமன் ஆட, சிவனும் மகிழ்ந்து களி கூர்ந்து ஆட, தேவியும் உடன் ஆட, சிறந்த முனிவர்கள் ஆட, பல திக்குகளில் இருந்த அசுரர்கள் வாடி மயங்க, தேவர்கள் பாட, வேதங்கள் பாடித் துதிக்கப்பட, எதிர்த்து வந்த போர்க்களத்தில் எல்லாத் திசைகளையும் தேடிச் சென்று, கால தூதுவர்கள் போர்க் களத்தில் கிடந்த மாமிசக் கொழுப்பில் நடை செய்ய, பலம் மிக உள்ள நரி உணவு கிடைக்கின்றது என்று கூத்தாட, பேய்கள் ஆட, காக்கைகள் ஆட, போரில் மோதி வருகின்ற பூத கணங்கள் ஆட, ஒளியை வீசும்படி செலுத்திய கூர்மையான வேலனே, (வேலன், வேங்கை, செட்டி, விருத்தன் ஆகிய வேடங்களைக் காட்டி) ஏமாற்றி, ஒப்பற்ற மான் போன்றவளும் தினைப் புனம் காப்பதில் வல்லவளும் நாகண வாய்ப்புள் போன்றவளுமாகிய வள்ளியின் உள்ளத்தை அலைபாயச் செய்த காதலனே, குகனே, சிவபெருமானோடு ரத்தின கிரி* எனப்படும் வாட்போக்கித் தலத்தில் வாழும் முருகனே, என்றும் இளையவனே, தேவர்கள் பெருமாளே. 
* ரத்னகிரி (மணிக்கிரி) - தேவாரம் பெற்ற திருத்தலம். இதற்கு 'வாட்போக்கி' என்றும் பெயர் உண்டு.திருச்சி மாவட்டம் குளித்தலை ரயில் நிலையத்தில் இருந்து 8 மைல் தொலைவில் இருக்கிறது.

பாடல் 567 - இரத்னகிரி 
ராகம் - ஆனந்த பைரவி; தாளம் - ஆதி - எடுப்பு - 3/4 இடம்

தத்தனா தானனத் ...... தனதான     தத்தனா தானனத் ...... தனதான

பத்தியால் யானுனைப் ...... பலகாலும்     பற்றியே மாதிருப் ...... புகழ்பாடி 
முத்தனா மாறெனைப் ...... பெருவாழ்வின்     முத்தியே சேர்வதற் ...... கருள்வாயே 
உத்தமா தானசற் ...... குணர்நேயா     ஒப்பிலா மாமணிக் ...... கிரிவாசா 
வித்தகா ஞானசத் ...... திநிபாதா     வெற்றிவே லாயுதப் ...... பெருமாளே.

அன்பினால் உன்னை உறுதியாக பல நாட்களாக விடாது பற்றிக்கொண்டு உயர்ந்த திருப்புகழைப் பாடி ஜீவன் முக்தனாகும் வழியிலே என்னை இடையறா இன்ப வாழ்வாம் சிவகதியை சேர்ந்து உய்வதற்கு திருவருள் புரிவாயாக உத்தம குணங்களைப் பற்றிக்கொண்டுள்ள நல்ல இயல்புள்ளவர்களின் நண்பனே சமானம் இல்லாத பெருமை பொருந்திய ரத்னகிரியில் வாழ்பவனே* பேரறிவாளனே திருவருள் ஞானத்தைப் பதியச் செய்பவனே வெற்றியைத் தரும் வேலை ஆயுதமாகக் கொண்ட பெருமாளே. 
* ரத்னகிரி (மணிக்கிரி) - தேவாரம் பெற்ற திருத்தலம். இதற்கு 'வாட்போக்கி' என்றும் பெயர் உண்டு.திருச்சி மாவட்டம் குளித்தலை ரயில் நிலையத்தில் இருந்து 8 மைல் தொலைவில் இருக்கிறது.

பாடல் 568 - விராலிமலை 
ராகம் - ...; தாளம் -

தானான தான தான தனதன     தானான தான தான தனதன          தானான தான தான தனதன ...... தனதான

சீரான கோல கால நவமணி     மாலாபி ஷேக பார வெகுவித          தேவாதி தேவர் சேவை செயுமுக ...... மலராறும் 
சீராடு வீர மாது மருவிய     ஈராறு தோளு நீளும் வரியளி          சீராக மோது நீப பரிமள ...... இருதாளும் 
ஆராத காதல் வேடர் மடமகள்     ஜீமூத மூர்வ லாரி மடமகள்          ஆதார பூத மாக வலமிட ...... முறைவாழ்வும் 
ஆராயு நீதி வேலு மயிலுமெய்ஞ்     ஞானாபி ராம தாப வடிவமும்          ஆபாத னேனு நாளு நினைவது ...... பெறவேணும் 
ஏராரு மாட கூட மதுரையில்     மீதேறி மாறி யாடு மிறையவர்          ஏழேழு பேர்கள் கூற வருபொரு ...... ளதிகாரம் 
ஈடாய வூமர் போல வணிகரி     லூடாடி யால வாயில் விதிசெய்த          லீலாவி சார தீர வரதர ...... குருநாதா 
கூராழி யால்முன் வீய நினைபவ     னீடேறு மாறு பாநு மறைவுசெய்          கோபால ராய னேய முளதிரு ...... மருகோனே 
கோடாம லார வார அலையெறி     காவேரி யாறு பாயும் வயலியில்          கோனாடு சூழ்வி ராலி மலையுறை ...... பெருமாளே.

வரிசையானதும், ஆடம்பரமுள்ள ஒன்பது மணிகள் பதிக்கப்பெற்ற பெருமை பொருந்திய கி¡£டங்களின் கனத்தை உடையதும், பல வகையான தேவாதி தேவர்களெல்லாம் வணங்குவதுமான ஆறு திரு முகங்களையும், சிறப்பு உற்று ஓங்கும் வீர லக்ஷ்மி குடிகொண்டிருக்கும் பன்னிரு தோள்களையும், நீண்ட ரேகைகள் உள்ள வண்டுகள் ஸ்ரீராகம் என்னும் ராகத்தைப் பாடி ¡£ங்காரம் செய்யும் கடப்ப மலரின் மணம் வீசும் இரண்டு திருவடிகளையும், முடிவில்லாத ஆசையை உன் மீது கொண்ட வேடர்களின் இளம் மகளான வள்ளியும், மேகத்தை வாகனமாகக் கொண்ட இந்திரனுடைய அழகிய பெண்ணாகிய தேவயானையும், பக்தர்களின் பற்றுக் கோட்டின் இருப்பாக வலது பாகத்திலும், இடது பாகத்திலும் உறைகின்ற உனது திருக்கோல வாழ்க்கையையும், நன்கு ஆராய்ந்து நீதி செலுத்தும் உனது வேலையும் மயிலையும், ஞான ஸ்வரூபியான கீர்த்தி பெற்ற உனது பேரழகுடைய திருவுருவத்தையும், மிகக் கீழ்ப்பட்டவனாக நான் இருப்பினும், நாள் தோறும் (மேற்சொன்ன அனைத்தையும்) தியானம் செய்யும்படியான பேற்றைப் பெற வேண்டுகிறேன். அழகு நிறைந்த மாட கூடங்கள் உள்ள மதுரையில், வெள்ளி அம்பலத்தில் நடன மேடையில் கால் மாறி* ஆடிய இறைவராகிய சிவ பெருமான் (இயற்றிய 'இறையனார் அகப் பொருள்' என்ற நூலுக்கு), நாற்பத்தொன்பது சங்கப் புலவர்கள் பொருள் கூறிய பொருள் அதிகாரத்தின் உண்மைப் பொருள் இதுதான் என்று கூறுவதற்காக, தகுதி உள்ள ஊமைப் பிள்ளை** போல செட்டி குலத்தில் தோன்றி விளையாடி, ஆலவாய் என்னும் மதுரையில் உண்மைப் பொருளை நிலை நிறுத்திக் காட்டிய திருவிளையாடலைப் புரிந்த தீரனே, வரங்களைக் கொடுப்பவனே, குரு நாதனே, முன்பு (பாரதப் போர் நடந்தபோது) இறந்து போவதற்கு எண்ணித் துணிந்த அர்ச்சுனன் உய்யுமாறு கூர்மையான சக்கரத்தால சூரியனை மறைத்து வைத்த கோபாலர்களுக்கு அரசனாகிய கிருஷ்ணன் அன்பு வைத்த அழகிய மருகனே, தவறுதல் இன்றி பேரொலியுடன் அலைகளை வீசி வரும் காவேரி ஆறு பாய்கின்ற வயலூரிலும், கோனாடு*** என்னும் நாட்டுப் பகுதியில் உள்ள விராலி மலையிலும் வீற்றிருக்கும் பெருமாளே. 
* ஒருமுறை பாண்டியன் ராஜசேகரன் நடராஜப் பெருமான் எப்போதும் இடது திருவடியைத் தூக்கி நடனமாடுவது அவருக்கு எவ்வளவு அயர்ச்சி தரும் என்று எண்ணி வருந்தி, இறைவனை கால் மாறி வலது பாதத்தைத் தூக்கி ஆடும்படி வேண்டினான். அதற்கு இணங்கி மதுரையில் சிவபிரான் கால் மாறி ஆடினார் - திருவிளையாடல் புராணம்.
** 49 சங்கப்புலவர்கள் இறையனார் அகப் பொருளுக்கு உரை எழுதினர். சிறந்த உரை எது என்பதில் விவாதம் ஏற்பட, மதுரை செட்டி குலத்தில் ஊமைப்பிள்ளை ருத்திரசன்மன் என்ற பெயரில் அவதரித்த முருகன் அனைவரது உரையையும் கேட்டு, நக்கீரன், கபிலன், பரணன் ஆகிய புலவர்களின் உரைகளைக் கேட்கும்போது மட்டும் வியப்பையும், கண்ணீரையும் காட்ட, இம் மூவரின் உரையே உண்மைப் பொருள் என்று புலவர்கள் உணர்ந்து கலகம் தீர்த்தனர் - திருவிளையாடல் புராணம்.
*** கோனாடு என்பது எறும்பீசர் மலைக்கு மேற்கு, மதிற்கரைக்குக் கிழக்கு, காவிரிக்குத் தெற்கு, பிரான்மலைக்கு வடக்கு என்ற எல்லைக்கு உட்பட்டது. இங்குதான் விராலிமலை, திருச்சியில் இருந்து மதுரை வழியில் 20 மைலில் மணப்பாறைக்கு அருகே உள்ளது.

பாடல் 569 - விராலிமலை 
ராகம் - ...; தாளம் -

தானான தான தான தனதன     தானான தான தான தனதன          தானான தான தான தனதன ...... தனதான

பாதாள மாதி லோக நிகிலமு     மாதார மான மேரு வெனவளர்          பாடீர பார மான முலையினை ...... விலைகூறிப் 
பாலோடு பாகு தேனெ னினியசொ     லாலேய நேக மோக மிடுபவர்          பாதாதி கேச மாக வகைவகை ...... கவிபாடும் 
வேதாள ஞான கீனன் விதரண     நாதானி லாத பாவி யநிஜவன்          வீணாள்ப டாத போத தவமிலி ...... பசுபாச 
வ்யாபார மூடன் யானு முனதிரு     சீர்பாத தூளி யாகி நரகிடை          வீழாம லேசு வாமி திருவருள் ...... புரிவாயே 
தூதாள ரோடு காலன் வெருவிட     வேதாமு ராரி யோட அடுபடை          சோராவ லாரி சேனை பொடிபட ...... மறைவேள்விச் 
சோமாசி மார்சி வாய நமவென     மாமாய வீர கோர முடனிகல்          சூர்மாள வேலை யேவும் வயலியி ...... லிளையோனே 
கூதாள நீப நாக மலர்மிசை     சாதாரி தேசி நாம க்ரியைமுதல்          கோலால நாத கீத மதுகர ...... மடர்சோலை 
கூராரல் தேரு நாரை மருவிய     கானாறு பாயு மேரி வயல்பயில்          கோனாடு சூழ்வி ராலி மலையுறை ...... பெருமாளே.

பாதாளம் முதலிய உலகம் எல்லாவற்றுக்கும் ஆதாரமான மேரு மலை போல் வளர்ந்துள்ள, சந்தனம் அணிந்த பருத்த மார்பகத்தை விலை பேசி, பால், சர்க்கரை, தேன் இவை போன்ற இனிப்பான சொற்களால் நிரம்ப காம மோகத்தைத் தருபவர்களாகிய விலைமாதர்களுடைய கால் முதல் கூந்தல் வரை உள்ள உறுப்புக்களை பல விதமான கவிதைகளைப் பாடும் நான் பேயன், ஞானம் குறைந்தவன், விவேகமுள்ள நாக்கே இல்லாத பாவி, உண்மை இல்லாதவன், வாழ்நாள் வீணாள் ஆகாமல் காக்கும் அறிவும் தவமும் இல்லாதவன், உயிரைப் பற்றியும், உலகைப் பற்றியும் பேசிப் பொழுது போக்கும் பதி ஞானம் இல்லாத மூடன், இத்தகைய குணங்களை உடைய நானும் உன்னுடைய இரண்டு சிறப்பு வாய்ந்த பாதங்களின் தூளியாகும் பேறு பெற்று, அதனால் நரகில் விழாமல், சுவாமியே, திருவருள் புரிவாயாக. தன்னுடைய தூதர்களோடு யமன் அஞ்சி ஓடவும், பிரமனும் திருமாலும் அஞ்சி ஓடவும், கொல்ல வல்ல படைகள் சோர்ந்து போய் இந்திரனுடைய சேனை பொடிபட்டு அழியவும், வேத வேள்விகள், சோம யாகம் செய்யும் பெரியோர்கள் பஞ்சாக்ஷரத்தை ஓதித் துதித்து நிற்கவும், பெரிய மாயங்களும் வீரமும் கோரமும் பொருந்தி போர் செய்த சூரன் இறக்கும்படி வேலாயுதத்தைச் செலுத்திய, வயலூரில் வீற்றிருக்கும் இளையோனே, கூதாளப் பூ, கடப்ப மலர், சுரபுன்னை மலர் இவைகளின் மீது சாதாரி (பந்துவராளி), தேசி (தேஷ்), நாமக்ரியை (நாதநாமக்கிரியை) முதலான ஆடம்பரமான ராக இசைகளைப் பாடும் வண்டுகள் நிறைந்த சோலைகளும், நிரம்ப ஆரல் மீன்களைக் கொத்தும் நாரைகள் பொருந்திய காட்டாறுகள் பாய்கின்றனவும், ஏரிகளும் வயல்களும் நெருங்கியுள்ள கோனாடு* என்னும் நாட்டில் உள்ள விராலி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* கோனாடு என்பது எறும்பீசர் மலைக்கு மேற்கு, மதிற்கரைக்குக் கிழக்கு, காவிரிக்குத் தெற்கு, பிரான்மலைக்கு வடக்கு என்ற எல்லைக்கு உட்பட்டது. இங்குதான் விராலிமலை, திருச்சியில் இருந்து மதுரை வழியில் 20 மைலில் மணப்பாறைக்கு அருகே உள்ளது.

பாடல் 570 - விராலிமலை 
ராகம் - மனோலயம் ; தாளம் - ஆதி - கண்டநடை - 20 - எடுப்பு - அதீதம்

தனாதன தனாதன தனாதன தனாதன     தனாதன தனாதனன ...... தனதான

இலாபமில் பொலாவுரை சொலாமன தபோதன     ரியாவரு மிராவுபக ...... லடியேனை 
இராகமும் விநோதமு முலோபமு டன்மோகமு     மிலானிவ னுமாபுருஷ ...... னெனஏய 
சலாபவ மலாகர சசீதர விதாரண     சதாசிவ மயேசுரச ...... கலலோக 
சராசர வியாபக பராபர மநோலய     சமாதிய நுபூதிபெற ...... நினைவாயே 
நிலாவிரி நிலாமதி நிலாதவ நிலாசன     நியாயப ரிபாலஅர ...... நதிசூடி 
நிசாசர குலாதிப திராவண புயாரிட     நிராமய சரோருகர ...... னருள்பாலா 
விலாசுகம் வலாரெனு முலாசவி தவாகவ     வியாதர்கள் விநோதமகள் ...... மணவாளா 
விராவுவ யலார்புரி சிராமலை பிரான்மலை     விராலிம லைமீதிலுறை ...... பெருமாளே.

பயனற்ற பொல்லாத மொழிகளைச் சொல்லாத மனத்தை உடைய தவ முனிவர்கள் எல்லோரும் இரவும் பகலும் என்னைக் குறித்து இவன் ஆசையும், விளையாடல்களில் இன்ப மகிழ்ச்சியும், ஈயாமைக் குணமும், காம மயக்கமும் இல்லாதவன், இவனும் ஓர் உத்தம புருஷன் எனக் கூறும் சொல் பொருந்தும்படிச் செய்து, இனிய குணத்தனே, தூய்மைக்கு இருப்பிடமானவனே, சந்திரனைத் தரித்தவனே(*1), கருணை நிறைந்தவனே, சதாசிவமாக இருப்பவனே, மஹேஸ்வரனே, எல்லா உலகங்களிலும் உள்ள இயங்குவன - நிலைத்திருப்பன அனைத்திலும் கலந்திருப்பவனே, பரம் பொருளே, மனம் ஒடுங்கிய சமாதியில் ஒன்றுபடும் நிலையை நான் பெறவேண்டும் என்று நீ நினைத்தருள்வாயாக. சந்திரிகை விரிந்து ஒளி செய்யும் பிறைமதியையும், நில்லாது அலைகின்ற காற்றைப் புசிக்கும் சர்ப்பமாகி தர்மத்தைப் காப்பவனான ஆதிசேஷனையும்(*2), கங்கைநதியையும் சூடியவரும், அரக்கர் குலத்துக்கு அதிபதியாகிய ராவணனுடைய தோள்கள் வருந்துமாறு(*3) செய்தவரும், நோயற்றவரும், தாமரையின் மீது அமர்ந்தவருமான சிவனார் அருளிய பாலனே, வில்லையும் அம்பையும் வைத்துப் போர் புரிவதில் வல்லவர்கள் தாம் என்ற மகிழ்ச்சியில் போர் செய்யும் வேடர்களின் அற்புதப் புதல்வியாகிய வள்ளியின் மணவாளனே, மேன்மைமிகு வயலூர், திரிசிராப்பள்ளி, பிரான்மலை என்னும் கொடுங்குன்றம், மற்றும் விராலிமலையிலும்(*4) வாழ்கின்ற பெருமாளே. 
(*1) முருகன் சிவனின் அம்சமாகையால் புலவர் சிவனையும் முருகனையும் வேறாகக் கருதவில்லை.
(*2) ஆதிசேஷன் சிவபிரானின் ஜடாமுடியில் ஆபரணமாக உள்ளார். அவர் சர்ப்பங்களின் அரசன். நீதியைப் பரிபாலிப்பவர். தனது நீதிவழுவாமை குறித்து கர்வம் ஏற்பட்டதால் சிவபிரான் ஆதிசேஷனை ஜடையிலிருந்து உருவி தரையில் அடிக்க பாம்பின் தலை ஆயிரம் துண்டங்களாக உடைந்தது. தன் தவறுக்கு வருந்தி சிவனைத் தொழ, ஆதிசேஷன் ஆயிரம் தலைகளுடன் தோன்றினார் - சிவபுராணம்.
(*3) ராவணன் அகந்தையினால் சிவபிரானது கயிலைமலையைப் பெயர்த்து எடுக்க முயன்றான். சிவனார் திருவடி நகத்தால் சிறிது ஊன்ற, வலி தாங்காமல் கதறி அழுதான். அதனால் அவனுக்கு ராவணன் (அழுபவன்) என்ற பெயர் ஏற்பட்டது.
(*4) கோனாடு என்பது எறும்பீசர் மலைக்கு மேற்கு, மதிற்கரைக்குக் கிழக்கு, காவிரிக்குத் தெற்கு, பிரான்மலைக்கு வடக்கு என்ற எல்லைக்கு உட்பட்டது. இங்குதான் விராலிமலை, திருச்சியில் இருந்து மதுரை வழியில் 20 மைலில் மணப்பாறைக்கு அருகே, உள்ளது.

பாடல் 571 - விராலிமலை 
ராகம் - தேஷ்; தாளம் - ஆதி - கண்டநடை - 20 - எடுப்பு - அதீதம்

தனாதன தனாதன தனாதன தனாதன     தனாதன தனாதனத் ...... தனதான

நிராமய புராதன பராபர வராம்ருத     நிராகுல சிராதிகப் ...... ப்ரபையாகி 
நிராசசி வராஜத வராஜர்கள் பராவிய     நிராயுத புராரியச் ...... சுதன்வேதா 
சுராலய தராதல சராசர பிராணிகள்     சொரூபமி வராதியைக் ...... குறியாமே 
துரால்புகழ் பராதின கராவுள பராமுக     துரோகரை தராசையுற் ...... றடைவேனோ 
இராகவ இராமன்முன் இராவண இராவண     இராவண இராஜனுட் ...... குடன்மாய்வென் 
றிராகன்ம லராணிஜ புராணர்கு மராகலை     யிராஜசொ லவாரணர்க் ...... கிளையோனே 
விராகவ சுராதிப பொராதுத விராதடு     விராயண பராயணச் ...... செருவூரா 
விராவிய குராவகில் பராரைமு திராவளர்     விராலிம லைராஜதப் ...... பெருமாளே.

நோய் இல்லாததும், பழமையானதும், எல்லாவற்றிற்கும் மேலானதும், வரத்தைத் தருவதும், அழிவற்றதும், கவலை அற்றதும், முதன்மையான பேரொளியாக விளங்கி, ஆசையற்றதும், சிவத்தில் மகிழும் தவசிரேஷ்டர்கள் புகழ்வதுமாகி, ஆயுதமே இல்லாமல் (புன்னகையால்) திரிபுரத்தை எரித்த சிவன், திருமால், பிரமன், தேவலோகம், மண்ணுலகம், இயங்கியும் நிலைத்தும் இருக்கும் உயிர்கள், இந்த எல்லா உருவங்களிலும் கலந்த முழு முதற் பொருளாகிய முருகனைக் குறித்து தியானிக்காமல், பயனற்ற புகழைக் கொண்ட மற்றவருக்கு அடிமைப்பட்டு, முதலை போன்ற உள்ளத்தை உடையவரும் அலட்சிய சுபாவம் கொண்டவருமான பாவிகளை மண்ணாசை கொண்டு நான் சேரலாமோ? ரகுவின் மரபிலே வந்த இராம பிரான் முன்னொருநாளில் அழுகுரலுற்றவனும், இரவின் வண்ணமாகிய கரிய நிறம் படைத்தவனும் ஆகிய இராவணன் என்ற அரசன் அச்சப்பட்டு மாயும்படியாக வெற்றி கொண்ட அன்பு நிறைந்தவனாகிய திருமாலின் கண்ணையே மலராகக் கொண்டருளிய உண்மை வரலாற்றை* உடைய சிவபெருமானின் திருக்குமரா, கலைகளுக்கு எல்லாம் தலைவனே, புகழப்படும் அந்த யானைமுகத்தோனுக்குத் தம்பியே, ஆசையே இல்லாதவனே, தேவர்களுக்கு அதிபதியே, போர் செய்யாமலேயே, தவறாமல், வெல்லவல்ல வீர வழியிலே மிக விருப்பம் உடையவனே, திருப்போரூரில் உறைபவனே, கலந்து விளங்கும் குராமரமும், அகில் மரமும் பருத்த அடிமரத்துடன் நன்கு முதிர்ந்து வளர்கின்ற விராலிமலையில்** வாழ்கின்ற, அரசகுணம் படைத்த பெருமாளே. 
* திருவீழிமிழலையில் திருமால் சிவனை நாள்தோறும் 1000 தாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபட்டு வந்தார். திருமாலின் அன்பைச் சோதிக்க, சிவன் ஒருநாள் ஒரு மலரை ஒளித்து மறைக்க, திருமால் குறைந்த மலருக்கு பதிலாக, தாமரை போன்ற தம் கண்ணையே மலராக அர்ச்சித்தபோது, சிவன் திருமாலின் அன்பை மெச்சி சக்ராயுதத்தைப் பரிசாக வழங்கினார் என்பது வரலாறு.
** கோனாடு என்பது எறும்பீசர் மலைக்கு மேற்கு, மதிற்கரைக்குக் கிழக்கு, காவிரிக்குத் தெற்கு, பிரான்மலைக்கு வடக்கு என்ற எல்லைக்கு உட்பட்டது. இங்குதான் விராலிமலை, திருச்சியில் இருந்து மதுரை வழியில் 20 மைலில் மணப்பாறைக்கு அருகே, உள்ளது.

பாடல் 572 - விராலிமலை 
ராகம் - ...; தாளம் -

தனதன தனதன தனன தனதன     தனதன தனதன தனன தனதன          தத்ததன தந்ததன தத்ததன தந்ததனதனதன தனதன தனன தனதன     தனதன தனதன தனன தனதன          தத்ததன தந்ததன தத்ததன தந்ததனதனதன தனதன தனன தனதன     தனதன தனதன தனன தனதன          தத்ததன தந்ததன தத்ததன தந்ததன ...... தனதான

இதமுறு விரைபுனல் முழுகி யகில்மண     முதவிய புகையினி லளவி வகைவகை          கொத்தலர்க ளின்தொடையல் வைத்துவளர் கொண்டலெனஅறலென இசையளி யெனந ளிருளென     நிறமது கருகிநெ டுகிநெ றிவுபட          நெய்த்துமுசு வின்திரிகை யொத்தசுருள் குந்தளமும்இலகிய பிறையென எயினர் சிலையென     விலகிய திலதநு தலும திமுகமும்          உற்பலமும் வண்டுவடு விற்கணைய மன்படரு ...... முனைவாளும் 
இடர்படு கவுநடு வனும்வ லடல்பொரு     கடுவது மெனநெடி தடுவ கொடியன          இக்குசிலை கொண்டமதன் மெய்த்தவநி றைந்தவிழிதளவன முறுவலு மமுத குமுதமும்     விளைநற வினியமொ ழியுமி னையதென          ஒப்பறுந கங்கள்விரல் துப்பெனவு றைந்துகமுகிடியொடி படவினை செயும்வின் மதகலை     நெடியக வுடியிசை முரலு சுரிமுக          நத்தனைய கண்டமும்வெண் முத்துவிளை விண்டனைய ...... எழில்தோளும் 
விதரண மனவித னமதை யருள்வன     சததள மறைமுகி ழதனை நிகர்வன          புத்தமிர்து கந்தகுடம் வெற்பெனநி ரம்புவனஇமசல ம்ருகமத களப பரிமள     தமனிய ப்ரபைமிகு தருண புளகித          சித்ரவர மங்கலவி சித்ரவிரு துங்ககனவிகலித மிருதுள ம்ருதுள நவமணி     முகபட விகடின தனமு முயர்வட          பத்திரமி ருந்தகடி லொத்தசுழி யுந்தியுள ...... மதியாத 
விபரித முடையிடை யிளைஞர் களைபட     அபகட மதுபுரி யரவ சுடிகைய          ரத்நபண மென்பவழ குற்றவரை யும்புதியநுணியத ளிரெனவு லவிய பரிபுர     அணிநட னபதமு முடைய வடிவினர்          பொற்கலவி யின்பமதி துக்கமென லன்றியவர்விரகினி லெனதுறு மனம துருகிய     பிரமையு மறவுன தருள்கை வரவுயர்          பத்திவழி யும்பரம முத்திநெறி யுந்தெரிவ ...... தொருநாளே 
தததத தததத ததத தததத     திதிதிதி திதிதிதி திதிதி திதிதிதி          தத்ததத தந்ததத தித்திதிதி திந்திதிதிடகுடகு டிகுடிகு டகுகு டிகுடிகு     டிகுடிகு டகுடகு டிகுகு டகுடகு          தத்ததிமி டங்குகுகு தித்திதிமி டிங்குகுகுதமிதமி தமிதக தமித திமிதக     திமிதிமி செககண திமித திகதிக          தத்திமித தந்திமித தித்திமிதி திந்திமிதி ...... யெனவேதான் 
தபலைகு டமுழவு திமிலை படகம     தபுதச லிகைதவில் முரசு கரடிகை          மத்தளித வண்டையற வைத்தகுணி துந்துமிகள்மொகுமொகு மொகுவென அலற விருதுகள்     திகுதிகு திகுவென அலகை குறளிகள்          விக்கிடநி ணம்பருக பக்கியுவ ணங்கழுகுசதிர்பெற அதிர்தர உததி சுவறிட     எதிர்பொரு நிருதர்கள் குருதி பெருகிட          வப்புவின்மி தந்தெழுப தற்புதக வந்தமெழ ...... வெகுகோடி 
மதகஜ துரகர தமுமு டையபுவி     யதலமு தல்முடிய இடிய நெடியதொர்          மிக்கொலிமு ழங்கஇரு ளக்கணம்வி டிந்துவிடஇரவியு மதியமு நிலைமை பெறஅடி     பரவிய அமரர்கள் தலைமை பெறஇயல்          அத்திறல ணங்குசெய சத்திவிடு கந்ததிருவயலியி லடிமைய குடிமை யினலற     மயலொடு மலமற அரிய பெரியதி          ருப்புகழ்வி ளம்புவென்மு னற்புதமெ ழுந்தருள்கு ...... கவிராலி 
மலையுறை குரவந லிறைவ வருகலை     பலதெரி விதரண முருக சரவண          உற்பவக்ர வுஞ்சகிரி நிக்ரகஅ கண்டமயநிருபவி மலசுக சொருப பரசிவ     குருபர வெளிமுக டுருவ வுயர்தரு          சக்ரகிரி யுங்குலைய விக்ரமந டம்புரியுமரகத கலபமெ ரிவிடு மயில்மிசை     மருவியெ யருமைய இளமை யுருவொடு          சொர்க்கதல மும்புலவர் வர்க்கமும்வி ளங்கவரு ...... பெருமாளே.

இன்பத்தைத் தருகின்ற வாசனை கலந்த நீரில் மூழ்கி, அகிலின் நறு மணம் வீசும் புகையை ஊட்டி, விதவிதமான கொத்து மலர்களால் தொடுக்கப்பட்ட மாலைகளை ஒழுங்கு பெற வைத்து, வளர்கின்ற மேகம் போன்றும், கரு மணல் போன்றும், இசை பாடும் வண்டுகளின் கூட்டம் போன்றும, நள்ளிரவின் இருள் போலவும் நிறமானது கறுத்து நீளமுள்ளதாய், நெருக்கம் உள்ளதாய், வாசனைத் தயிலம் தடவியதால் பளபளப்புள்ளதாய், கருங்குரங்கின் சுருளை ஒத்த வளைவுள்ள கூந்தலும், விளங்கும் பிறைச் சந்திரன் போன்றும், வேடர்களின் வில்லைப் போன்றும், விசாலமான, திலகம் அணிந்த நெற்றியும, திங்களைப் போன்ற முகமும், நீலோற்ப மலரும், வண்டும், மாவடுவும், வில்லம்பும், யம தூதர்களும், கூரிய வாளும் என நின்று துன்பத்தை உண்டாக்கவும், யமனும், மிக்க வலிமை பொருந்திய கொடிய விஷமும் போன்று நீண்ட நேரம் வருத்துவனவாய், பொல்லாதவனவாய், கரும்பை வில்லாகக் கொண்ட மன்மதனது உண்மைத் தவவலிமை முற்றும் நிறைந்துள்ளதாய் விளங்கும் கண்களும், முல்லை அரும்பை ஒத்த பற்களும், அமுதம் போன்றதாய் குமுத மலர் ஒத்த வாயினின்று வரும் தேன் போல் இனிக்கும் சொற்களும், இதற்குத் தான் நிகர் என்று சொல்ல ஒண்ணாத நகங்களோடு கூடிய விரல்கள் பவளம் போல் விளங்கவும், கமுகு இதற்கு நிகராகாது இடி பட்டு ஒடிந்துவிழ, காதல் வினையைத் தூண்டும் கரும்பு வில் ஏந்திய மன்மத நூலுக்குப் பொருந்த அமைந்த பெரிய கெளடி என்ற பண் வகையை இசைத்து ஒலிக்கின்ற சங்குக்கு ஒப்பான கழுத்தும், வெண்மை நிற முத்துக்கள் விளைகின்ற மூங்கில் போன்ற அழகிய தோள்களும், விவேகம் உள்ள மனத்தில் வேதனைத் துயரைத் தருவனவாய், நூற்றிதழ்த் தாமரை மொட்டை ஒப்பனவாய், புதிய அமிர்த வாசனைக் குடம், மலை போல பூரித்து இருப்பவனவாய், பன்னீர், கஸ்தூரி, கலவைச் சந்தனம் இவைகளைக் கொண்டனவாய், நறு மணம் உள்ளனவாய், பொன் ஒளி மிகுந்தனவாய், இளமை கொண்டனவாய், மகிழ்ச்சி தருவனவாய, அழகு, சிறப்பு, பொலிவு, அதிசயம் இவை யாவும் கொண்டனவாய், நவ ரத்ன மாலையையும், மூடும் அலங்காரத் துணியையும் கொண்டவனவாய், திரட்சி உள்ள மார்பகங்களும், உயர்ந்த ஆலிலை போன்ற அடி வயிற்றில் பொருந்திய சுழிவுற்ற கொப்பூழும், உள்ளத்தில் ஆராயாத மாறு பாடான எண்ணத்தை உடையவராய் அத்தகைய எண்ணத்தின் இடையே அகப்பட்ட இளைஞர்கள் சோர்வு அடைய, வஞ்சகம் செய்கின்ற பாம்பின் தலை உச்சியில் உள்ள ரத்ன படம் என்று சொல்லத் தக்க அழகு வாய்ந்த பெண்குறியும், புதிய நுண்ணிய தளிர் போன்று உலவுகின்ற, சிலம்பு அணிந்த, நடனத்துக்கு உற்ற பாதங்களை உடைய உருவத்தினராகிய விலைமாதர்களுடைய அழகிய சேர்க்கை இன்பமானது அதிக துக்கத்தைத் தருவது என்று உணர்தலோடு கூட, அவ்வேசிகளின் தந்திரச் செயல்களில் என்னுடைய மனமானது உருகிடும் மயக்கமும் ஒழிய, உனது திருவருள் கைகூட உயர்ந்த பக்தி வழியும் மேலான முக்தி நெறியும் எனக்குப் புலப்படுவதாகிய ஒரு நாள் உண்டாகுமா? மேற்கூறிய தாள மெட்டுக்கு ஏற்ப தபேலா என்ற ஒரு மத்தள வகை, குடவடிவுள்ள முழவு வாத்திய வகை, திமிலை என்ற ஒருவகைப் பறை, சிறு பறை வகை, முன் இல்லாததான புது வகையான சல்லென்ற ஓசை உடைய சல்லிகை என்னும் பெரும் பறை, தவில் வகை. முரசு, கரடி கத்தினாற் போல் ஓசை உடைய பறை வகை, மத்தள வாத்திய வகை, பேருடுக்கை, நிரம்ப இருந்த தகுணிச்சம் என்ற துந்துமிகள் பேரொலி எழுப்ப, வெற்றிச் சின்னங்கள் திகு திகு என்று எங்கும் விளங்க, பேய்களும், மாய வித்தைக் குறளிப் பிசாசுகளும் விக்கல் வரும் அளவு கொழுப்பை உண்ண, பறவைகளான கருடனும், கழுகும் பேறு பெற்றோம் என்று ஆரவாரிக்க, கடல் வற்றிப் போக, சண்டை செய்யும் அசுரர்களின் இரத்தம் பெருகிட, அந்தச் செந்நீரில் மிதந்து எழுபது கணக்கான அற்புதமான தலையற்ற உடல்கள் (கவந்தங்கள்) எழ, பல கோடிக் கணக்கானமத யானைகளையும், குதிரைகளையும், தேர்களையும உடைய பூமியும், அதலம் முதலான கீழேழ் உலகமும் அதிர்ச்சி உற்று கலங்க, நீண்ட பெருத்த ஒலி முழங்கி எழ, உலகின் துயர் அந்தக் கணத்திலேயே விலகி ஒழிய, சூரியனும் சந்திரனும் பழைய நிலை பெற்று விளங்க, திருவடியைப் போற்றிய தேவர்கள் மேன்மையை அடைய, பொருந்திய அந்த வீர லட்சுமி விளங்கும் வெற்றி வேலைச் செலுத்திய கந்தனே, திரு வயலூரில் (அடியேனுடைய) குடிப் பிறப்பின் துன்பங்கள் நீங்க, மயக்கமும் மும்மலங்களும் அகல, அருமையான பெரிய திருப்புகழைச் சொன்ன என் கண்களின் முன்னே அற்புதக் காட்சியுடன் எழுந்தருளிய குகனே*, விராலி மலையில் வீற்றிருக்கும் பெரியோனே, பெருமை பொருந்திய இறைவனே, உள்ள கலைகள் பலவும் தெரிந்த கருணை வாய்ந்த முருகனே, சரவணப் பொய்கையில் தோன்றினவனே, கிரெளஞ்ச மலையை அழித்தவனே, எங்கும் பூரணமாய் நிறைந்த அரசே, மாசற்றவனே, ஆனந்த வடிவானவனே, பரமசிவனுக்கு குரு மூர்த்தியே, அண்டத்தின் புற எல்லையைத் தாண்டி உயர்ந்து செல்லும், சக்ரவாள கிரியும் நடுக்கம் உற வல்லமை பொருந்திய நடனத்தைச் செய்யும், பச்சை நிறமான தோகைகள் ஒளி வீசும் மயில் மேல் பொருந்தியவனே, அருமை வாய்ந்த இளமை உருவத்தோடு, விண்ணுலகும் புலவர்கள் கூட்டமும சுற்றிலும் விளங்க எழுந்தருளும் பெருமாளே. * 'விகட பரிமள' எனத் துவக்கும் பாடலை அருணகிரியார் வயலூரில் பாட இறைவன் உவந்து அவர் முன் அற்புதக் கோலத்தோடு எழுந்தருளி அவரது இன்னலை ஒழித்து, ஞானோபதேசம் செய்து விராலி மலைக்கு வா என்று அழைத்தார். இதை, 'விராலி மாலையில் நிற்பம், நீ கருதி உற்று வா, என அழைத்து என் மனதாசை மாசினை அறுத்து ஞானமுதளித்த வாரம் இனி நித்தம் மறவேனே' என்று வரும் (திருப்புகழ் - 'தாமரையின் மட்டு') பாடலில் காணலாம்.

பாடல் 573 - விராலிமலை 
ராகம் - ...; தாளம் -

தனதான தான தத்த தனதான தான தத்த     தனதான தான தத்த ...... தந்ததான

உருவேற வேஜெ பித்து வொருகோடி யோம சித்தி     யுடனாக ஆக மத்து ...... கந்துபேணி 
உணர்வாசை யாரி டத்து மருவாது வோரெ ழுத்தை     யொழியாது வூதை விட்டி ...... ருந்துநாளும் 
தரியாத போத கத்தர் குருவாவ ரோரொ ருத்தர்     தருவார்கள் ஞான வித்தை ...... தஞ்சமாமோ 
தழலாடி வீதி வட்ட மொளிபோத ஞான சித்தி     தருமாகி லாகு மத்தை ...... கண்டிலேனே 
குருநாடி ராச ரிக்கர் துரியோத னாதி வர்க்க     குடிமாள மாய விட்டு ...... குந்திபாலர் 
குலையாமல் நீதி கட்டி யெழுபாரை யாள விட்ட     குறளாக னூறில் நெட்டை ...... கொண்டஆதி 
மருகா புராரி சித்தன் மகனே விராலி சித்ர     மலைமே லுலாவு சித்த ...... அங்கைவேலா 
மதுரா புரேசர் மெய்க்க அரசாளு மாறன் வெப்பு     வளைகூனை யேநி மிர்த்த ...... தம்பிரானே.

உருப்போடுகின்ற எண்ணிக்கை நிரம்ப ஆகி மனத்தில் பதியும்படி ஜெபம் செய்து, கோடிக் கணக்கான வேள்வியால் வரும் பேறுகள் கூடிவர, சிவாகமத்து விதிகளை (சிவபூஜை செய்யும் முறைகளை) மகிழ்ச்சியுடன் அனுசரித்து விரும்பி, அறிதலும் ஆசையையும் யாரிடத்திலும் பொருந்த வைக்காமல், ஓரெழுத்தாகிய பிரணவத்தை எப்போதும் ஓதி, நாள் தோறும் (பிராணாயாம முறைப்படி) சுவாசத்தை விடுத்திருந்து, நிலைத்த ஞானம் இல்லாத அறிவினர் குரு என்னும் பதவியை வகிப்பார்கள். ஒரு சிலர் ஞானோபதேசத்தையும் செய்வார்கள். அப்படிப்பட்ட ஞான உபதேசம் பற்றுக் கோடு ஆகுமோ? நெற்றியில் புருவ மத்திய ஸ்தானத்தில் தியானித்தால், பெரு ஞான சித்தியைக் கொடுக்கும் என்றால், அவ்வாறு கொடுக்கின்ற அதை நான் கண்டேன் இல்லை. குருநாட்டை அரசாட்சி செய்த துரியோதனன் முதலியவர்களின் கூட்டம் முற்றும் அழியும்படி மாய வித்தைகளைச் செய்தவனும், குந்தி தேவியின் மைந்தர்களான பாண்டவர்களை அழிந்து போகாமல் நீதி முறையை நிலைப்படுத்தி, ஏழுலகங்களை ஆளும்படி வைத்தவனும், குட்டை வடிவினனான வாமனனாகி வந்து, கெடுதல் இல்லாத நீண்ட திரிவிக்ரம நருவத்தைக் கொண்ட ஆதி மூர்த்தியாகியும் ஆகிய திருமாலின் மருகனே, திரி புரத்தை எரித்தவனும், திருவிளையாடல்களைப் புரிந்தவனும் ஆன சிவபெருமானின் மகனே, அழகிய விராலி மலை* மேல் உலவுகின்ற சித்தனே, அழகிய கையில் வேல் ஏந்தியவனே, மதுராபுரியில் வீற்றிருக்கும் சொக்க நாதரின் உண்மையை விளக்கி**, பாண்டிய மன்னனின் சுரத்தைப் போக்கி, வளைவுபட்டிருந்த அவனது கூனை நிமிர்த்திய தம்பிரானே. 
* கோனாடு என்பது எறும்பீசர் மலைக்கு மேற்கு, மதிற்கரைக்குக் கிழக்கு, காவிரிக்குத் தெற்கு, பிரான்மலைக்கு வடக்கு என்ற எல்லைக்கு உட்பட்டது. இங்குதான் விராலிமலை, திருச்சியில் இருந்து மதுரை வழியில் 20 மைலில் மணப்பாறைக்கு அருகே, உள்ளது.
** சமணரோடு செய்த வாதில் சம்பந்தர் வெற்றி பெற்று சிவபெருமானது மெய்ம்மையை உலகுக்கு விளக்கி அருளினார். முருகன் சம்பந்தராக அவதரித்ததைக் குறிக்கும்.

பாடல் 574 - விராலிமலை 
ராகம் ...; தாளம் -

தனதனனந் தான தாத்த தனதனனந் தான தாத்த     தனதனனந் தான தாத்த ...... தனதான

எதிரெதிர்கண் டோடி யாட்கள் களவதறிந் தாசை பூட்டி     இடறிவிழும் பாழி காட்டு ...... மடமாதர் 
இறைவைகொளுங் கூவல் மூத்த கறையொழுகுந் தாரை பார்க்கி     லிளமைகொடுங் காத லாற்றில் ...... நிலையாத 
அதிவிகடம் பீழ லாற்ற அழுகிவிழும் பீற லூத்தை     அடையுமிடஞ் சீலை தீற்று ...... கருவாயில் 
அருவிசலம் பாயு மோட்டை அடைவுகெடுந் தூரை பாழ்த்த     அளறிலழுந் தாம லாட்கொ ...... டருள்வாயே 
விதுரனெடுந் த்ரோண மேற்று எதிர்பொருமம் பாதி யேற்றி     விரகினெழுந் தோய நூற்று ...... வருமாள 
விரவுஜெயன் காளி காட்டில் வருதருமன் தூத னீற்ற     விஜயனெடும் பாக தீர்த்தன் ...... மருகோனே 
மதியணையுஞ் சோலை யார்த்து மதிவளசந் தான கோட்டின்     வழியருளின் பேறு காட்டி ...... யவிராலி 
மலைமருவும் பாதி யேற்றி கடிகமழ்சந் தான கோட்டில்     வழியருளின் பேறு காட்டு ...... பெருமாளே.

எதிரில் எதிரில் வருகின்றவர்களைக் கண்டதும் ஓடிச் சென்று (வருகின்ற) ஆட்களின் நிலையைத் திருட்டுத்தனமாகத் தெரிந்து கொண்டு அவர்களுக்கு ஆசையை ஊட்டி, தடுக்கி விழும் குகை போன்ற இடத்தை காட்டுகின்ற இளம் மாதர்களுடைய பெண்குறி (காம நீரை) இறைப்பதற்கான கூடையைக் கொடுக்கின்ற கிணறு ஆகும். பழைய கழிவுப் பொருட்கள் ஒழுகும் துவாரம். ஆராய்ந்து பார்த்தால் இளம் பருவத்துக் கொடிய காதல் ஆற்றில் நிலைக்க முடியாத மிக்க பயங்கரமான துக்கம் விளைக்கும் சுழல். மிகவும் அழுகி விடுகின்ற கிழியுண்ட இடம். அழுக்கு சேரும் இடம். ஆடை மூடுகின்ற, கரு உண்டாகும் துவார வாசல். அருவி போல் நீர் பாய்கின்ற ஓட்டை. தகுதி அற்ற அடிப்பாகம் (ஆகிய) பாழ்பட்ட குழைச் சேற்றில் நான் அழுந்தாமல், (என்னை) ஆட்கொண்டு அருள்வாயே. விதுரன் பெரிய வில்லை எடுத்து, எதிரியுடன் போர் செய்ய அம்பு முதலிய பாணங்களை அதில் ஏற்றி சாமர்த்தியத்துடன் எழுந்து போர் புரிதல் ஓயுமாறு, துரியோதனன் ஆகிய நூறு பேரும் இறக்க உபாயம் செய்த வெற்றி வீரன், துர்க்கை வாழும் இடும்பை வனத்தில் வாசம் செய்த தருமருடைய தூதுவன், திருநீறு இட்டுத் தவம் செய்த அருச்சுனனுடைய பெரிய தேரின் பாகனாகிய பரிசுத்த மூர்த்தி திருமாலின் மருகனே, சந்திரன் தழுவும்படி உயர்ந்துள்ள சோலைகளோடு கூடிய, அதிக வளப்பம் உள்ள சந்தானம் என்னும் மரம் போல, தன்னை வழிபட்டோர்க்கு விரும்பியவற்றை வழங்கும் விராலி மலையில்* வீற்றிருப்பவனே, பாதி தூரம் வரை அன்பர்களை வரச் செய்து, அங்கு தெய்வ மணம் கமழும் சந்தான கோடு என்னும் இடத்தில் எழுந்தருளி இருந்து கொண்டு, அவர்கள் இச்சித்தவற்றை அருளும் பெருமாளே. 
* விராலிமலை திருச்சியில் இருந்து மதுரை வழியில் 20 மைலில் மணப்பாறைக்கு அருகே உள்ளது.

பாடல் 575 - விராலிமலை 
ராகம் - பைரவி ; தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2 - எடுப்பு - 1/2 அக்ஷரம் தள்ளி தகிட-1 1/2, தகதிமி-2

தந்த தானன தான தனதன     தந்த தானன தான தனதன          தந்த தானன தான தனதன ...... தனதான

ஐந்து பூதமு மாறு சமயமு     மந்த்ர வேதபு ராண கலைகளும்          ஐம்ப தோர்வித மான லிபிகளும் ...... வெகுரூப 
அண்ட ராதிச ராச ரமுமுயர்     புண்ட ¡£கனு மேக நிறவனும்          அந்தி போலுரு வானு நிலவொடு ...... வெயில்காலும் 
சந்த்ர சூரியர் தாமு மசபையும்     விந்து நாதமு மேக வடிவம          தன்சொ ரூபம தாக வுறைவது ...... சிவயோகம் 
தங்க ளாணவ மாயை கருமம     லங்கள் போயுப தேச குருபர          சம்ப்ர தாயமொ டேயு நெறியது ...... பெறுவேனோ 
வந்த தானவர் சேனை கெடிபுக     இந்த்ர லோகம்வி பூதர் குடிபுக          மண்டு பூதப சாசு பசிகெட ...... மயிடாரி 
வன்கண் வீரிபி டாரி ஹரஹர     சங்க ராஎன மேரு கிரிதலை          மண்டு தூளெழ வேலை யுருவிய ...... வயலூரா 
வெந்த நீறணி வேணி யிருடிகள்     பந்த பாசவி கார பரவச          வென்றி யானச மாதி முறுகுகல் ...... முழைகூடும் 
விண்டு மேல்மயி லாட இனியக     ளுண்டு காரளி பாட இதழிபொன்          விஞ்ச வீசுவி ராலி மலையுறை ...... பெருமாளே.

மண், நீர், தீ, காற்று, வெளி ஆகிய ஐந்து பூதங்களும், சைவம், வைணவம், காணாபத்யம், கெளமாரம், சாக்தம், செளரம் என்ற ஆறு சமயங்களும், மந்திரங்களும், வேதங்களும், புராணங்களும்*, கலைகளும், ஐம்பத்தொரு விதமான எழுத்துக்களும், அனேக உருவங்களுடன் கூடிய தேவர்கள் முதல் அசைகின்ற, அசையாத உயிர்கள் யாவும், உயர்ந்த பிரமனும், கார்மேக நிறத்துத் திருமாலும், அந்தி வானம் போன்ற செம்மேனியை உடைய ருத்திரனும், நிலவோடு வெயிலை வீசுகின்ற சந்திரனும், சூரியனும், அம்ச மந்திரமும்** சுக்கில சுரோணிதமாக விளங்கும் சிவ சக்தியும், இவை அனைத்தும் கலந்து இருப்பது ஒரே வடிவமாகும். வேறு வேறாகப் பிரிக்காமல் அதன் ஸ்வரூபமாகவே அகண்டாகாரமாக இருக்கும் சிவத்தை அறிந்து அதில் நிலையாக நிற்பதுவே சிவ யோகம் ஆகும். அவரவர்களுக்கு உரிய ஆணவம், மாயை, கன்மம் என்ற மும்மலங்களும் நீங்கப் பெற்று, பரம்பரையாக குருமூர்த்தியிடம் உபதேசம் பெறுகிற வழியில் நின்று, அந்த மரபின் நியமத்துடன் உபதேச நெறியை யானும் பெறக் கடவேனோ? போருக்காக எதிர்த்து வந்த அசுரர் சேனைகள் அச்சம் அடைய, தேவர்கள் இந்திர லோகத்துக்குச் சென்று மீண்டும் குடியேற, நெருங்கி வந்த பூதங்களும் பைசாசங்களும் பசி ஆற, மகிஷாசுரனை அழித்த, கொடுமையும் வீரமும் உடையவளுமான துர்க்கை ஹரஹரா சங்கரா என்று துதி செய்ய, மேரு மலையின் உச்சிச் சிகரத்தில் மிகுந்த புழுதி உண்டாக, வேலாயுதத்தை விடுத்து அருளிய வயலூரனே, நெருப்பில் வெந்த திருநீற்றை அணியும், ஜடாமுடி உடைய ரிஷிகள் பந்தம், பாசம் என்ற கலக்கங்களை நீக்கின வெற்றி நிலையான சமாதி நிலையை திண்ணிய கற்குகையாகும் விராலிமலையில் அடைய, அந்த மலையின் மீது மயில் ஆட, இனிப்பான கள்ளை உண்டு கரிய வண்டுகள் பாட, கொன்றை மரங்கள் (பூவுக்குப் பதிலாக) பொன்னை மிகுதியாகச் சொரியும் விராலி மலையில்*** வீற்றிருக்கும் பெருமாளே. 
* புராணங்கள் 18 - சைவம், பெளஷ்யம், மார்க்கண்டேயம், லிங்கம், ஸ்காந்தம், வராகம், வாமனம், மச்சம், கூர்மம், பிரம்மாண்டம், கருடம், நாரதீயம், விஷ்ணு, பாகவதம், பிரமம், பத்மம், ஆக்னேயம், பிரமகைவர்த்தம்.
** அசபை என்ற அம்ச மந்திரம் வடமொழியில் ஸோஹம் என்பது. ஸ + அஹம், அதாவது அவனே நான் என்ற, பரமாத்மா - ஜீவாத்மா ஐக்கியத்தைக் குறிப்பிடும் மந்திரம்.
*** கோனாடு என்பது எறும்பீசர் மலைக்கு மேற்கு, மதிற்கரைக்குக் கிழக்கு, காவிரிக்குத் தெற்கு, பிரான்மலைக்கு வடக்கு என்ற எல்லைக்கு உட்பட்டது. இங்குதான் விராலிமலை, திருச்சியில் இருந்து மதுரை வழியில் 20 மைலில் மணப்பாறைக்கு அருகே, உள்ளது.

பாடல் 576 - விராலிமலை 
ராகம் - ...; தாளம் -

தனதன தந்தன தந்த தந்தன     தனதன தந்தன தந்த தந்தன          தனதன தந்தன தந்த தந்தன ...... தனதான

கரதல முங்குறி கொண்ட கண்டமும்     விரவியெ ழுந்துசு ருண்டு வண்டடர்          கனவிய கொண்டைகு லைந்த லைந்திட ...... அதிபாரக் 
களபசு கந்தமி குந்த கொங்கைக     ளிளகமு யங்கிம யங்கி யன்புசெய்          கனியித ழுண்டுது வண்டு பஞ்சணை ...... மிசைவீழா 
இரதம ருந்தியு றுங்க ருங்கயல்     பொருதுசி வந்துகு விந்தி டும்படி          யிதவிய வுந்தியெ னுந்த டந்தனி ...... லுறமூழ்கி 
இனியதொ ரின்பம்வி ளைந்த ளைந்துபொய்     வனிதையர் தங்கள்ம ருங்கி ணங்கிய          இளமைகி ழம்படு முன்ப தம்பெற ...... வுணர்வேனோ 
பரதசி லம்புபு லம்பு மம்பத     வரிமுக எண்கினு டன்கு ரங்கணி          பணிவிடை சென்றுமு யன்ற குன்றணி ...... யிடையேபோய்ப் 
பகடியி லங்கைக லங்க அம்பொனின்     மகுடசி ரந்தச முந்து ணிந்தெழு          படியுந டுங்கவி ழும்ப னம்பழ ...... மெனவாகும் 
மருதமு தைந்தமு குந்த னன்புறு     மருககு விந்தும லர்ந்த பங்கய          வயலியில் வம்பவிழ் சண்ப கம்பெரி ...... யவிராலி 
மலையில்வி ளங்கிய கந்த என்றுனை     மகிழ்வொடு வந்திசெய் மைந்த னென்றனை          வழிவழி யன்புசெய் தொண்டு கொண்டருள் ...... பெருமாளே.

கையும், நகக் குறி கொண்ட கழுத்தும் ஒருங்கே எழுந்தும், சுருண்டு, வண்டு நெருங்கிய பெருமை வாய்ந்த கூந்தல் குலைந்து அசையவும், அதிக கனம் வாய்ந்த, கலவை நறு மணம் மிக்க தனங்கள் நெகிழ்ந்து அசையும்படியும் இணைந்து, காம மயக்கில் மயங்கி அன்பு காட்டும் கொவ்வைக் கனி போன்ற வாயிதழ் உண்டு, சோர்வு உற்று பஞ்சு மெத்தையின் மீது வீழ்ந்து, வாயூறு நீரைப் பருகி, பொருந்திய கரிய மீன் போன்ற கண்கள் ஒன்றுபட்டுச் சிவந்து குவியுமாறு, இன்பத்தைத் தரும் கொப்பூழ் என்னும் குளத்தில் பொருந்தி முழுகி, இனிமை தரும் ஓர் இன்பம் உண்டாக அதை அனுபவித்து, பொய் நிறைந்த பொது மகளிர் வசம் ஈடுபட்ட என் இளமை முதுமையாக மாறிக்கொண்டு வரும்போதாவது உனது திருவடிகளைப் பெறும் வழியை உணர்ந்து கொள்வேனோ? பரத நாட்டியத்துக்கு அணிந்து கொள்ளும் சலங்கைகள் ஒலிக்கும் அழகிய திருவடிகளை உடையவனே, ஒளி பொருந்திய முகத்தை உடைய ஜாம்பவான் முதலான கரடிப் படையும் குரங்குப் படையும் ஏவல் புரிய போருக்குச் சென்று, முயற்சி செய்து மலை வரிசைகளின் இடையே போய், மோசக்காரனான ராவணனது இலங்கை கலங்கும்படி, அழகிய பொன்னாலாகிய கி¡£டங்களை அணிந்த பத்துத் தலைகளும் துணிக்கப்பட்டு, ஏழு உலகங்களும் நடுங்கும்படி பனம்பழம் போல் விழும்படி ஆக்கின (ராம)ரும், மருத மரங்களை ஒடிந்து விழ வைத்த (கண்ணனுமாகிய) திருமால் அன்பு வைத்துள்ள மருகனே, குவிந்து மலர்கின்ற தாமரைகள் நிறைந்த வயலூரிலும், மணம் வீசும் சண்பக மலர்கள் விளங்கும் பெருமை வாய்ந்த விராலி மலையிலும்* விளங்கிய கந்தனே, என்றும் உன்னை வாழ்த்தி மகிழ்ச்சியுடன் வந்தனை செய்கின்ற பிள்ளையாகிய அடியேனுடைய வழிவழியாக அன்பு செய்கின்ற பாடற் பணியை ஏற்றுக்கொண்டு அருளும் பெருமாளே. 
* விராலிமலை, திருச்சியில் இருந்து மதுரை வழியில் 20 மைலில், மணப்பாறைக்கு அருகே உள்ளது.

பாடல் 577 - விராலிமலை 
ராகம் - தோடி; தாளம் - அங்கதாளம் - 5 1/2 - எடுப்பு - 1/2 தள்ளி தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2

தனன தான தானான தனன தான தானான     தனன தான தானான ...... தனதான

கரிபு ராரி காமாரி திரிபு ராரி தீயாடி     கயிலை யாளி காபாலி ...... கழையோனி 
கரவு தாச னாசாரி பரசு பாணி பானாளி     கணமொ டாடி காயோகி ...... சிவயோகி 
பரம யோகி மாயோகி பரிய ராஜ டாசூடி     பகரொ ணாத மாஞானி ...... பசுவேறி 
பரத மாடி கானாடி பரவ யோதி காதீத     பரம ஞான வூர்பூத ...... அருளாயோ 
சுருதி யாடி தாதாவி வெருவி யோட மூதேவி     துரக கோப மீதோடி ...... வடமேரு 
சுழல வேலை தீமூள அழுத ளாவி வாய்பாறி     சுரதி னோடு சூர்மாள ...... வுலகேழும் 
திகிரி மாதி ராவார திகிரி சாய வேதாள     திரளி னோடு பாறோடு ...... கழுகாடச் 
செருவி னாடு வானீப கருணை மேரு வேபார     திருவி ராலி யூர்மேவு ...... பெருமாளே.

யானையின் உடலை அழித்து தோலை உடுத்தியவரும், மன்மதனை எரித்தவரும், திரிபுரத்தை அழித்தவரும், சுடலை (மயான) நெருப்பில் மூழ்கி ஆடுபவரும், கயிலைமலைக்கு இறைவரும், மண்டையோட்டை (கபாலம்) கையில் ஏந்தியவரும், மூங்கிலின் கீழே தோன்றியவரும்*, கையில் நெருப்பை ஏந்திய ஆசார்ய குருநாதரும், மழு (கோடரி) ஆயுதத்தைக் கையில் கொண்டவரும், நள்ளிரவில் ஆடுதற்கு விரும்புபவரும், பூத கணங்களுடன் ஆடுபவரும், உலகங்களைக் காக்கும் யோகியும், சிவ யோகியும், பரம யோகியும், மகா கனம் பொருந்திய யோகியும், பெரிய பாம்பை ஜடாமுடியில் சூடியவரும், சொல்லுதற்கு அரிய மகா ஞானியும், பசுவை வாகனமாகக் கொண்டவரும், பரத நாட்டியம் ஆடுபவரும், காட்டிலே நடனம் செய்பவரும், மேலானவரும், மூப்பைக் கடந்தவரும் ஆகிய பரம சிவனாரின் பெரிய ஞான ஊருக்குள் (சிவஞானபீடத்தில்) யான் புகுவதற்கு நீ அருளமாட்டாயோ? வேதங்களை அத்யயனம் செய்த பிரமன் மிகவும் அஞ்சி ஓடவும், மூதேவி அகன்று ஓடவும், மிக்க கோபம் கொண்டு, வடக்கே உள்ள மேருமலை சுழலவும், கடலிலே நெருப்பு பிடித்துக்கொள்ளவும், வாய் கிழிய அழுகை கலந்த ஓசையுடன் சூரன் மாயவும், ஏழு உலகங்களுடன் வட்டமான, திசைகளை மறைக்கும், சக்ரவாளகிரியும் சாயவும், பேய்க் கூட்டங்களுடன் பருந்துகளும் கழுகுகளும் ஆடவும், போர்க்களத்தை விரும்பிச் சென்றவனே, பரிசுத்தமான கடம்பமாலையை அணிந்தவனே, கருணையின் மேருமலையே, பெருமை மிக்க அழகிய விராலிமலையில்** அமர்ந்த பெருமாளே. 
* சிவபிரான் மூங்கிலின் அடியில் சுயம்புவாகத் தோன்றியதால் வேய்முத்தர் எனப் பெயர் கொண்டார் - திருநெல்வேலி தலபுராணம்.இப்பாடலில் முதற்பகுதி சிவனையும், பிற்பகுதி முருகனது போரையும் வருணிப்பது சிறப்பானது.
** கோனாடு என்பது எறும்பீசர் மலைக்கு மேற்கு, மதிற்கரைக்குக் கிழக்கு, காவிரிக்குத் தெற்கு, பிரான்மலைக்கு வடக்கு என்ற எல்லைக்கு உட்பட்டது. இங்குதான் விராலிமலை, திருச்சியில் இருந்து மதுரை வழியில் 20 மைலில் மணப்பாறைக்கு அருகே, உள்ளது.

பாடல் 578 - விராலிமலை 
ராகம் - ...; தாளம் -

தானாத்தன தான தனதன     தானாத்தன தான தனதன          தானாத்தன தான தனதன ...... தனதான

காமாத்திர மாகி யிளைஞர்கள்     வாழ்நாட்கொடு போகி யழகிய          காதாட்டிய பார இருகுழை ...... யளவோடிக் 
கார்போற்றவ ழோதி நிழல்தனி     லார்வாட்கடை யீடு கனகொடு          காலேற்றுவை வேலின் முனைகடை ...... யமதூதர் 
ஏமாப்பற மோக வியல்செய்து     நீலோற்பல ஆசில் மலருட          னேராட்டவி நோத மிடும்விழி ...... மடவார்பால் 
ஏகாப்பழி பூணு மருளற     நீதோற்றிமு னாளு மடிமையை          யீடேற்றுத லாலுன் வலிமையை ...... மறவேனே 
சீமாட்டியு மாய திரிபுரை     காலாக்கினி கோப பயிரவி          சீலோத்தமி நீலி சுரதிரி ...... புவநேசை 
சீகார்த்திகை யாய அறுவகை     மாதாக்கள்கு மார னெனவெகு          சீராட்டொடு பேண வடதிசை ...... கயிலாசக் 
கோமாற்குப தேச முபநிட     வேதார்த்தமெய்ஞ் ஞான நெறியருள்          கோதாட்டிய ஸ்வாமி யெனவரு ...... மிளையோனே 
கோடாச்சிவ பூஜை பவுருஷ     மாறாக்கொடை நாளு மருவிய          கோனாட்டுவி ராலி மலையுறை ...... பெருமாளே.

(முதல் ஒன்பது வரிகள் வேசையரின் கண்களை வர்ணிக்கின்றன). மன்மதனுடைய பாணமாக இருந்து, இளைஞர்களின் உயிரைக் கவர்ந்து சென்று, அழகு வாய்ந்த காதில் ஆடுகின்ற கனத்த இரண்டு குண்டலங்கள் வரையிலும் ஓடிச் சென்று, கருமேகம் போல் தவழ்ந்து விளங்கும் கூந்தலின் நிழலில் நிறைந்து நின்று, வாள் முனை போன்று வலிமையும் பெருமையும் கொண்டதாய், கொடுங் காற்றின் தன்மை கொண்டு, கூரிய வேலின் முனை நுனி போன்ற இக்கண்களின் கொடுமை முன் (நாம் எம்மட்டு எனும்படி) யம தூதுவர்கள் இறுமாப்பை இழக்க, மோகத் தன்மையை ஊட்டி, நீலோற்பலத்தின் குற்றமில்லாத மலருக்கு ஒப்பான ஆட்டத்தையும் ஆச்சரியத்தையும் காட்டும் கண்களை உடைய வேசியர் மீது நீங்காத நிந்தையான பழிச் சொல்லைக் கொண்டிருந்த மயக்கம் (என்னை) விட்டு நீங்க, நீ எதிரில் தோன்றி முன்பு அடிமையாகிய என்னைக் கரை ஏற்றிய காரணத்தால் உன் அருளின் திறத்தை நான் மறக்க மாட்டேன். பெருமாட்டியாகிய திரிபுரை, யுகாந்த கால வடவாமுகாக்னி போன்ற கோபம் கொள்ளும் பைரவி, நல்லொழுக்கம் உள்ள உத்தமி, நீல நிறம் உடையவள், விண் முதலிய மூவுலகங்களுக்கும் ஈசுவரியாகிய பார்வதி தேவியும், ஸ்ரீ கார்த்திகையாகிய அறுவகை மாதர்களும் குமாரனே என்று மிக்க செல்லப் பாராட்டுகளுடன் உன்னைப் போற்ற, வட திசையில் உள்ள கயிலாயத்தில் வீற்றிருக்கும் தலைவாராகிய சிவபெருமானுக்கு உபதேசமாக உபநிடதம், வேதம் இவைகளுக்குப் பொருளான மெய்ஞ்ஞான மார்க்கத்தை அருள் செய்து, அறியாமை என்னும் குற்றத்தை நீக்கிய குரு மூர்த்தி என்னும் பெயர் விளங்க வாய்ந்த இளையவனே, நெறி தவறாத முறையில் சிவ பூஜையும், ஆண்மையும், இல்லை என்னாத கொடையும் தினந்தோறும் பொருந்தியுள்ள கோனாட்டைச்* சேர்ந்த விராலி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* கோனாடு என்பது எறும்பீசர் மலைக்கு மேற்கு, மதிற்கரைக்குக் கிழக்கு, காவிரிக்குத் தெற்கு, பிரான்மலைக்கு வடக்கு என்ற எல்லைக்கு உட்பட்டது. இங்குதான் விராலிமலை, திருச்சியில் இருந்து மதுரை வழியில் 20 மைலில் மணப்பாறைக்கு அருகே உள்ளது.

பாடல் 579 - விராலிமலை 
ராகம் - கரஹரப்ரியா ; தாளம் - சதுஸ்ர்ருபகம் - 6 - எடுப்பு - வீச்சில் 1/2 இடம்

தனாதனன தான தந்த தனாதனன தான தந்த     தனாதனன தான தந்த ...... தனதான

கொடாதவனை யேபு கழ்ந்து குபேரனென வேமொ ழிந்து     குலாவியவ மேதி ரிந்து ...... புவிமீதே 
எடாதசுமை யேசு மந்து எணாதகலி யால்மெ லிந்து     எலாவறுமை தீர அன்று ...... னருள்பேணேன் 
சுடாததன மான கொங்கை களாலிதய மேம யங்கி     சுகாதரம தாயொ ழுங்கி ...... லொழுகாமல் 
கெடாததவ மேம றைந்து கிலேசமது வேமி குந்து     கிலாதவுட லாவி நொந்து ...... மடியாமுன் 
தொடாய்மறலி யேநி யென்ற சொலாகியது னாவ ருங்கொல்     சொலேழுலக மீனு மம்பை ...... யருள்பாலா 
நடாதசுழி மூல விந்து நளாவிவிளை ஞான நம்ப     நபோமணி சமான துங்க ...... வடிவேலா 
படாதகுளிர் சோலை யண்ட மளாவியுயர் வாய்வ ளர்ந்து     பசேலெனவு மேத ழைந்து ...... தினமேதான் 
விடாதுமழை மாரி சிந்த அநேகமலர் வாவி பொங்கு     விராலிமலை மீது கந்த ...... பெருமாளே.

தர்மம் செய்யாதவனைப் புகழ்ந்து அவனைக் குபேரன் என்று கூறி, அவனுடன் கூடிக் குலாவி வீணாகத் திரிந்து, இந்தப் பூமியில் தாங்கமுடியாத குடும்பச் சுமையைத் தாங்கி, நினைக்கவும் முடியாத கொடுமை நிறைந்த கலிபுருஷனால் வாடி, எல்லாவிதமான வறுமைகளும் தீரும்பொருட்டு அந்நாளில் உனது திருவருளை விரும்பாது காலம் கழித்தேன். தீயில் சுடாத பசும்பொன் போன்ற மார்புடைய பெண்களிடம் என் மனத்தைப் பறி கொடுத்து உள்ளம் மயங்கி, சுகத்தைத் தரக்கூடிய வழியில் ஒழுக்கத்துடன் நான் நடக்காமல், கெடுதல் இல்லாத தவநெறி மறைந்து போக, துன்பமே மிகவும் பெருகி, வலிமை இல்லாத உடம்பில் உயிர் நொந்து இறந்து போவதற்கு முன் யமனே, நீ இவனுடைய உயிரைத் தொடாதே என்ற சொல்லானது உனது நாவிலிருந்து வருமோ? அதை நீ எனக்குச் சொல்லி அருள்வாயாக. ஏழு உலகங்களையும் பெற்றெடுத்த பார்வதியம்மை அருளிய குமரனே, நட்டுவைக்கப் படாத சுழிமுனை, மூலாதாரம் முதலிய ஆறு ஆதாரங்கள், விந்து இவற்றின் நடுவிலே இருக்கும் உயிர் விளங்கும் ஞான மூர்த்தியே*, சூரியனுக்குச் சமானமான ஒளியும் பரிசுத்தமும் உடைய கூரிய வேலனே, வெயில் படாத குளிர்ந்த சோலைகள் ஆகாயம் வரை ஓங்கி வளர்ந்து பச்சைப் பசேல் என்ற நிறத்துடன் தழைந்து நாள்தோறும் விடாமல் மழை பொழிவதால் பல மலர்கள் நிறைந்த தடாகங்கள் சூழ்ந்துள்ள விராலிமலை** மீது விரும்பி வாழும் பெருமாளே. 
* ஒருவராலும் நட்டுவைக்கப்படாமல் இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட சுழிமுனை, விந்து, இவற்றுடன் மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை ஆகிய ஆறு ஆதாரங்களாகிய குண்டலினி சக்கரங்களின் நடுவில் ஞானப் பிழம்பாக உயிரோடு கலந்து முருகன் இருக்கிறான்.
ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம் 
** கோனாடு என்பது எறும்பீசர் மலைக்கு மேற்கு, மதிற்கரைக்குக் கிழக்கு, காவிரிக்குத் தெற்கு, பிரான்மலைக்கு வடக்கு என்ற எல்லைக்கு உட்பட்டது. இங்குதான் விராலிமலை, திருச்சியில் இருந்து மதுரை வழியில் 20 மைலில் மணப்பாறைக்கு அருகே, உள்ளது.

பாடல் 580 - விராலிமலை 
ராகம் - ...; தாளம் -

தானா தனான தனத்த தத்தன     தானா தனான தனத்த தத்தன          தானா தனான தனத்த தத்தன ...... தனதான

மாயா சொரூப முழுச்ச மத்திகள்     ஓயா வுபாய மனப்ப சப்பிகள்          வாணா ளையீரும் விழிக்க டைச்சிகள் ...... முநிவோரும் 
மாலா கிவாட நகைத்து ருக்கிகள்     ஏகா சமீது தனத்தி றப்பிகள்          வா¡£ ரி¡£ரென் முழுப்பு ரட்டிகள் ...... வெகுமோகம் 
ஆயா தவாசை யெழுப்பு மெத்திகள்     ஈயா தபோதி லறப்பி ணக்கிகள்          ஆவே சநீருண் மதப்பொ றிச்சிகள் ...... பழிபாவம் 
ஆமா றெணாத திருட்டு மட்டைகள்     கோமா ளமான குறிக்க ழுத்திகள்          ஆசா ரவீன விலைத்த னத்திய ...... ருறவாமோ 
காயா தபால்நெய் தயிர்க்கு டத்தினை     ஏயா வெணாம லெடுத்தி டைச்சிகள்          காணா தவாறு குடிக்கு மப்பொழு ...... துரலோடே 
கார்போ லுமேனி தனைப்பி ணித்தொரு     போர்போ லசோதை பிடித்த டித்திட          காதோ டுகாது கையிற்பி டித்தழு ...... தினிதூதும் 
வேயா லநேக விதப்ப சுத்திரள்     சாயா மல்மீள அழைக்கு மச்சுதன்          வீறா னமாம னெனப்ப டைத்தருள் ...... வயலூரா 
வீணாள் கொடாத படைச்செ ருக்கினில்     சூர்மா ளவேலை விடுக்கும் அற்புத          வேலா விராலி மலைத்த லத்துறை ...... பெருமாளே.

மாயையே உரு எடுத்தாற் போன்ற முழுமையான சாமர்த்தியம் உள்ளவர்கள். முடிவில்லாத தந்திரம் நிறைந்த மனத்தோடு பசப்புபவர்கள். வாழ் நாட்களை அறுத்து வீணாக்கும் கடைக் கண்ணை உடையவர்கள். முனிவர்களும் காம மயக்கத்தால் வாடும்படி சிரித்து, அவர்களை உருக்க வல்லவர்கள். மேலே இட்ட ஆடையின் மீது மார்பகத்தைத் திறந்து காட்டுபவர்கள். வாருங்கள், இருங்கள் என்றெல்லாம் கூறும் முழு மோசக்காரிகள். மிக்க மோகத்தையும் ஆய்வதற்கு இடமில்லாத வகையில் காம ஆசையை எழுப்புகின்ற வஞ்சனை வாய்ந்தவர்கள். காசு கொடுக்காத போது மிகவும் மாறுபட்டு நிற்பவர்கள். கள் உண்டு மகிழ்ச்சி கொள்ளும் மனத்தினர்கள். பழி பாவம் ஆகுமோ என்று நினைக்காத திருட்டு வீணிகள். வேடிக்கையான நகக் குறிகள் உள்ள கழுத்தை உடையவர்கள். ஆசாரம் குறைவாக உள்ள மார்பகங்களை விலைக்கு அளிப்பவர்கள். இத்தகையோரின் உறவு நல்லதோ? காய்ச்சாத பால், நெய், தயிர்க் குடங்களை பொருந்திய மனத்துடன் சற்றும் யோசிக்காமல் எடுத்து இடைச்சியர்கள் பார்க்காத வண்ணம் (கண்ணன்) குடித்துக் கொண்டிருக்கும் போது, உரலுடன் அவனுடைய மேகம் போன்ற திருமேனியைக் கட்டி ஒரு போரிடுவது போல் (தாயாகிய) யசோதை பிடித்து அடிக்க, அப்போது இரண்டு காதுகளையும் கைகளால் பிடித்துக் கொண்டு அழுது, இனிமையாக ஊதும் புல்லாங்குழலால் பல விதமான பசுக் கூட்டங்களை தளராத வண்ணம் அழைத்து வரும் (கண்ணனாம்) திருமாலை சிறப்பு வாய்ந்த மாமனாகக் கொண்டருளும் வயலூரானே, ஒரு நாளும் வீணாகாதபடி என்றும் போர் இருந்த படை நம்மிடம் உண்டு என்னும் அகந்தை கொண்டிருந்த சூரன் இறந்து பட (அவன் மாமரமாய் நின்ற) கடலில் ஏவிய அற்புத வேலாயுதத்தை ஏந்தியவனே, விராலி மலை* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* விராலிமலை திருச்சியில் இருந்து மதுரை வழியில் 20 மைலில் மணப்பாறைக்கு அருகே உள்ளது.

பாடல் 581 - விராலிமலை 
ராகம் - மாண்ட்; தாளம் - ஆதி

தானான தான தானான தான     தானான தான ...... தனதான

மாலாசை கோப மோயாதெ நாளு     மாயா விகார ...... வழியேசெல் 
மாபாவி காளி தானேனு நாத     மாதா பிதாவு ...... மினிநீயே 
நாலான வேத நூலாக மாதி     நானோதி னேனு ...... மிலைவீணே 
நாள்போய் விடாம லாறாறு மீதில்     ஞானோப தேச ...... மருள்வாயே 
பாலா கலார ஆமோத லேப     பாடீர வாக ...... அணிமீதே 
பாதாள பூமி யாதார மீன     பானீய மேலை ...... வயலூரா 
வேலா விராலி வாழ்வே சமூக     வேதாள பூத ...... பதிசேயே 
வீரா கடோர சூராரி யேசெ     வேளே சுரேசர் ...... பெருமாளே.

மயக்கம், ஆசை, கோபம் இவையெல்லாம் ஒய்ச்சல் இல்லாமல் நாள்தோறும் பிரபஞ்ச மாயாவிகார வழியிலே போகின்ற மகாபாவி, துர்க்குணம் உள்ளவன்தான் நானெனிலும், நாதனே, தாயும், தந்தையும் இனி நீதான் எனக்கு நான்கு வேத நூல்களையும், ஆகமங்கள் ஆகிய பிற நூல்களையும், நான் படித்ததும் இல்லை. வீணாக வாழ்நாள் போய் விடாமல் முப்பத்தாறு தத்துவங்களுக்கு* அப்பாற்பட்ட நிலைத்த ஞானோபதேசத்தை அருள்வாயே, பாலனே, செங்குவளை மலர்ப் பிரியனே, ஆபரணங்களின் மேல் சந்தனம் பூசிய அழகனே, பாதாளம், பூமியிரண்டுக்கும் ஆதாரமாய் உள்ளவனே, மீனினங்களும் தண்ணீரும் நிறைந்த மேற்கு வயலூரில் குடிகொண்டவனே, வேலனே, விராலிமலைச்** செல்வனே, திரளான பேய்கள், பூதகணங்கள் வணங்கும் தலைவன் (சிவன்) குமாரனே, வீரனே, கொடுமையான சூரனுக்குப் பகைவனே, செவ்வேளே, தேவர்களுக்கு ஈசனே, பெருமாளே. 
* 96 தத்துவங்கள் பின்வருமாறு:36 பரதத்துவங்கள் (அகநிலை): ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து - 25 (புறநிலை): மண், தீ, நீர், காற்று, வெளி.ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை): வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4. 
** கோனாடு என்பது எறும்பீசர் மலைக்கு மேற்கு, மதிற்கரைக்குக் கிழக்கு, காவிரிக்குத் தெற்கு, பிரான்மலைக்கு வடக்கு என்ற எல்லைக்கு உட்பட்டது. இங்குதான் விராலிமலை, திருச்சியில் இருந்து மதுரை வழியில் 20 மைலில் மணப்பாறைக்கு அருகே உள்ளது.

பாடல் 582 - விராலிமலை 
ராகம் - ...; தாளம் -

தானன தந்தன தாத்தன தானன தந்தன தாத்தன     தானன தந்தன தாத்தன ...... தனதான

மேகமெ னுங்குழல் சாய்த்திரு கோகன கங்கொடு கோத்தணை     மேல்விழு கின்றப ராக்கினி ...... லுடைசோர 
மேகலை யுந்தனி போய்த்தனி யேகர ணங்களு மாய்க்கயல்     வேல்விழி யுங்குவி யாக்குரல் ...... மயில்காடை 
கோகில மென்றெழ போய்க்கனி வாயமு துண்டுரு காக்களி     கூரவு டன்பிரி யாக்கல ...... வியின்மூழ்கிக் 
கூடிமு யங்கிவி டாய்த்திரு பாரத னங்களின் மேற்றுயில்     கூரினு மம்புய தாட்டுணை ...... மறவேனே 
மோகர துந்துமி யார்ப்பவி ராலிவி லங்கலின் வீட்டதில்     மூவுல குந்தொழு தேத்திட ...... வுறைவோனே 
மூதிசை முன்பொரு காற்றட மேருவை யம்பினில் வீழ்த்திய     மோகன சங்கரி வாழ்த்திட ...... மதியாமல் 
ஆகம டிந்திட வேற்கொடு சூரனை வென்றடல் போய்த்தணி     யாமையின் வென்றவ னாற்பிற ...... கிடுதேவர் 
ஆதி யிளந்தலை காத்தர சாள அவன்சிறை மீட்டவ     னாளுல கங்குடி யேற்றிய ...... பெருமாளே.

மேகத்தைப் போல் கருமையான கூந்தலைப் பறக்கவிட்டு, இரண்டு தாமரை போன்ற கண்களால் கவ்வி இழுத்து, படுக்கையின் மேல் (காமுகரை) வீழ்த்துகின்ற விளையாட்டில் ஆடை நெகிழ, மேகலை என்னும் இடை அணியும் தனியாகக் கழல, ஒன்றுபட்டு இந்திரியங்களும் இயங்க, கயல் மீன், வேல் போன்ற கண்களும் குவிந்து மூட, குரலானது மயில், காடை, குயில் என்ற பறவைகளின் குரலில் ஒலிக்க, சென்று கொவ்வைக் கனி போன்ற வாயிதழ் ஊறலைப் பருகி, உருகி, மகிழ்ச்சி மிக கூடவே இருந்து, நீங்குதல் இல்லாத இணைப்பில் முழுகி, கூடித் தழுவி, களைத்துப் போய் பாரமான மார்பகங்களின் மீது துயிலுதல் மிகக் கொண்டாலும், என் உறுதுணையாகிய உனது தாமரைத் திருவடிகள் இரண்டையும் மறக்க மாட்டேன். மிக்க ஆரவாரத்துடன் பேரிகைகள் பேரொலி செய்ய விராலி மலையின்* கோயிலில் மூன்று உலகங்களும் தொழுது போற்ற உறைபவனே, வட திசையில் முன்பு ஒரு முறை மலையாகிய மேருவை (செண்டு என்ற) அம்பால் வீழ்த்திய** வசீகரனே, சங்கை ஏந்திய திருமால் உனது வலிமையை வாழ்த்திட, (சூரனைப்) பொருட்படுத்தாமல் அவனது உடல் அழியும்படி வேலாயுதத்தால் சூரனை வென்று, (திக்கு விஜயத்தில்) போருக்குச் சென்று, குறைவு இல்லாதபடி (பல அசுரரையும்) வென்று, அந்தச் சூரனால் பயந்து ஓடிய தேவர்களின் தலைவனான இந்திரனுடைய மகனாகிய ஜயந்தனைக் காத்து, அரசாட்சி புரியும்படி அவனைச் சிறையினின்றும் விடுவித்து, அவன் ஆளும் விண்ணுலகில் மீண்டும் குடியேற்றி வைத்த பெருமாளே. 
* விராலிமலை திருச்சியில் இருந்து மதுரை வழியில் 20 மைலில் மணப்பாறைக்கு அருகே உள்ளது.
** முருகன் பாண்டியன் உக்கிரவழுதியாக மதுரையில் அவதரித்தபோது கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்போது மேருவிடமிருந்து பொற்குவியலைக் கேட்க, அது தராமையால் சினந்து செண்டால் மேருவின்மீது எறிந்து பொன் பெற்றார். அச்செயல் இங்கு குறிப்பிடப்படுகிறது.

பாடல் 583 - விராலிமலை 
ராகம் -...; தாளம் -

தான தனதனன தான தனதனன     தான தனதனன ...... தந்ததான

மோதி யிறுகிவட மேரு வெனவளரு     மோக முலையசைய ...... வந்துகாயம் 
மோச மிடுமவர்கள் மாயை தனில்முழுகி     மூட மெனஅறிவு ...... கொண்டதாலே 
காதி வருமியம தூதர் கயிறுகொடு     காலி லிறுகஎனை ...... வந்திழாதே 
காவ லெனவிரைய வோடி யுனதடிமை     காண வருவதினி ...... யெந்தநாளோ 
ஆதி மறையவனு மாலு முயர்சுடலை     யாடு மரனுமிவ ...... ரொன்றதான 
ஆயி யமலைதிரி சூலி குமரிமக     மாயி கவுரியுமை ...... தந்தவாழ்வே 
சோதி நிலவுகதிர் வீசு மதியின்மிசை     தோய வளர்கிரியி ...... னுந்திநீடு 
சோலை செறிவுளவி ராலி நகரில்வளர்     தோகை மயிலுலவு ...... தம்பிரானே.

மேல் எழுந்து, திண்ணிதாய், வடக்கில் உள்ள மேரு மலை போல் வளருவதாய், காமத்தை ஊட்டும் மார்பகங்கள் அசையும்படி அருகே வந்து, உடலைக் கொண்டு மோசம் செய்கின்ற விலைமகளிரின் மாயையில் முழுகி, மூடத்தன்மை என்னும்படி அறிவைக் கொண்ட காரணத்தால், உயிரைப் பிரிக்க வரும் யம தூதர்கள் பாசக் கயிற்றால் காலில் அழுத்தமாகக் கட்டி என்னை வந்து இழுக்காமல், எனக்குக் காவலாக இருந்து வேகமாக ஓடிவந்து, உன் அடிமையாகிய நான் காணும்படி நீ வருவது இனி எந்த நாள் ஆகுமோ? ஆதி மறையவன் ஆகிய பிரமனும், திருமாலும், பெரிய சுடுகாட்டில் ஆடும் சிவனும் (ஆகிய இம் மூன்று பேரும்) ஒன்றதான தாய், குற்றம் அற்றவள், திரி சூலம் ஏந்தியவள், குமரி, மகமாயி, கெளரி, உமா தேவி ஈன்ற செல்வமே. சோதியான ஒளிக் கிரணங்களை வீசும் சந்திரன் மேலே தோயும்படி வளர்ந்துள்ள மலையின் இடையே பாயும் ஆறும், நீண்ட சோலைகளும் நெருங்கியுள்ள விராலி நகரில்* பொலிந்து விளங்கும் தோகை மயிலின் மேல் உலவும் தம்பிரானே. 
* விராலிமலை திருச்சியில் இருந்து மதுரை வழியில் 20 மைலில் மணப்பாறைக்கு அருகே உள்ளது.

பாடல் 584 - விநாயகமலை - பிள்ளையார்பட்டி 
ராகம் - ஆனந்த பைரவி; தாளம் - அங்தாளம் - 6 1/2 தகதிமி-2, தகதிமி-2, தகிட-1 1/2, தக-1

தனதன தானா தனாதன தனதன தானா தனாதன     தனதன தானா தனாதன ...... தனதான

சரவண ஜாதா நமோநம கருணைய தீதா நமோநம     சததள பாதா நமோநம ...... அபிராம 
தருணக தீரா நமோநம நிருபமர் வீரா நமோநம     சமதள வூரா நமோநம ...... ஜகதீச 
பரம சொரூபா நமோநம சுரர்பதி பூபா நமோநம     பரிமள நீபா நமோநம ...... உமைகாளி 
பகவதி பாலா நமோநம இகபர மூலா நமோநம     பவுருஷ சீலா நமோநம ...... அருள்தாராய் 
இரவியு மாகாச பூமியும் விரவிய தூளேற வானவ     ரெவர்களு மீடேற ஏழ்கடல் ...... முறையோவென் 
றிடர்பட மாமேரு பூதர மிடிபட வேதா னிசாசர     ரிகல்கெட மாவேக நீடயில் ...... விடுவோனே 
மரகத ஆகார ஆயனு மிரணிய ஆகார வேதனும்     வசுவெனு மாகார ஈசனு ...... மடிபேண 
மயிலுறை வாழ்வே விநாயக மலையுறை வேலா மகீதர     வனசர ராதார மாகிய ...... பெருமாளே.

நாணல் வனம் சூழ்ந்த பொய்கையில் அவதரித்தவனே, போற்றி போற்றி, கருணை எல்லை கடந்த பொருளே, போற்றி போற்றி, நூறு இதழ்கள் கொண்ட தாமரை போன்ற திருவடி உடையவனே, போற்றி போற்றி, மிக்க பேரழகு கொண்டவனே, இளமையும் ¨தரியமும் உடையவனே, போற்றி போற்றி, தலைமைச் சேனாதிபதியாகிய போர் வீரனே, போற்றி போற்றி, போருக்குரிய சேனைகள் உள்ள ஊராகிய திருப்போரூரானே, போற்றி போற்றி, உலகங்கள் அனைத்திற்கும் இறைவனே, உயர்ந்த ஞான வடிவு கொண்டவனே, போற்றி போற்றி, தேவர்கள் தலைவனாம் இந்திரனுக்கும் அரசனே, போற்றி போற்றி, நறுமணம் வீசும் கடம்பமாலையை அணிந்தவனே, போற்றி போற்றி, உமை, காளி, பகவதி எனப்படும் பார்வதி மைந்தா, போற்றி போற்றி, இம்மைக்கும் மறுமைக்கும் மூலகாரணமாக இருப்பவனே, போற்றி போற்றி, ஆண்மையும் குணநலன்களும் உடையவனே, போற்றி போற்றி, உன் திருவருளைத் தந்தருள்வாயாக. சூரிய மண்டலமும், ஆகாயமண்டலமும், பூமியும் தூசுகள் கலந்து படிந்து மறையுமாறும், தேவர்கள் அனைவரும் உய்ந்து உயர் பதவி அடையுமாறும், ஏழு சமுத்திரங்களும் துன்புற்று இது முறையோ என்று கதறவும், பெரிய மேருமலை இடிபட்டு பொடிபடவும், இரவிலே அலையும் அசுரர்கள் தங்கள் வலிமை கெடவும், வெகு வேகமாக நீண்ட வேலாயுதத்தை விடுத்தருளியவனே, மரகதப் பச்சை நிறம்கொண்ட ஆயர்குலக் கொழுந்தாகிய திருமாலும், பொன்னிறம் கொண்ட பிரம்ம தேவனும், நெருப்பு நிறத்தை உடைய ருத்திர மூர்த்தியும் திருவடியைப் போற்ற மயில் வாகனத்தில் எழுந்தருளி வரும் இறைவனே, விநாயக மலை (பிள்ளையார்பட்டி) யில் வாழும் வேலாயுதக் கடவுளே, மலைகளில் வசிக்கும் காட்டு வேடர்களுக்கு ஆதாரமான பெருமாளே. 

பாடல் 585 - திருச்செங்கோடு 
ராகம் - ஆஹிரி ; தாளம் - ஆதி

தந்தான தந்த தந்தான தந்த     தந்தான தந்த ...... தனதான

அன்பாக வந்து உன்றாள் பணிந்து     ஐம்பூத மொன்ற ...... நினையாமல் 
அன்பால் மிகுந்து நஞ்சாரு கண்க     ளம்போரு கங்கள் ...... முலைதானும் 
கொந்தே மிகுந்து வண்டாடி நின்று     கொண்டாடு கின்ற ...... குழலாரைக் 
கொண்டே நினைந்து மன்பேது மண்டி     குன்றா மலைந்து ...... அலைவேனோ 
மன்றாடி தந்த மைந்தா மிகுந்த     வம்பார் கடம்பை ...... யணிவோனே 
வந்தே பணிந்து நின்றார் பவங்கள்     வம்பே தொலைந்த ...... வடிவேலா 
சென்றே யிடங்கள் கந்தா எனும்பொ     செஞ்சேவல் கொண்டு ...... வரவேணும் 
செஞ்சாலி கஞ்ச மொன்றாய் வளர்ந்த     செங்கோ டமர்ந்த ...... பெருமாளே.

அன்புடன் வந்து உன் பாதங்களைப் பணிந்து, பஞ்ச பூதங்களுடனும் ஒருவழிப்பட்டு உன்னை நினையாமல், அன்பு அதிகமாய்ப் போய், விஷம் நிறைந்த கண்களும், தாமரை மொட்டுப் போன்ற மார்பகங்களும், பூங்கொத்துக்கள் நிறைந்து வண்டுகள் விளையாடி மகிழ்கின்ற கூந்தலும் உடைய பொது மகளிரை மனதில் நினைத்தே, மிக்க அறியாமை பெருகி மனம் குன்றி ஒருவழிப்படாது அலைந்து திரிவேனோ? சபையில் நடனமாடும் சிவபிரான் தந்த குமரனே, மிக்க வாசனை நிறைந்த கடப்பமாலையை அணிபவனே, வந்து பணிந்து நின்ற அடியார்களின் பிறப்புக்களை அடியோடு தொலைக்கும் கூரிய வேலை உடையவனே, பல இடங்களுக்கும் சென்று கந்தா என அழைக்கும்போது செவ்விய சேவலை ஏந்தி என்முன் வரவேண்டும். செந்நெல் பயிரும் தாமரையும் ஒன்றாக வளரும் திருச்செங்கோட்டில்* வீற்றிருக்கும் பெருமாளே. 
* திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து 6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது.மலை பாம்பின் உருவில் இருப்பதால் நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' - என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.

பாடல் 586 - திருச்செங்கோடு 
ராகம் - ...; தாளம் -

தந்தான தந்த தந்தான தந்த     தந்தான தந்த ...... தனதான

பந்தாடி யங்கை நொந்தார் பரிந்து     பைந்தார் புனைந்த ...... குழல்மீதே 
பண்பார் சுரும்பு பண்பாடு கின்ற     பங்கே ருகங்கொள் ...... முகமீதே 
மந்தார மன்றல் சந்தார மொன்றி     வன்பாத கஞ்செய் ...... தனமீதே 
மண்டாசை கொண்டு விண்டாவி நைந்து     மங்காம லுன்ற ...... னருள்தாராய் 
கந்தா அரன்றன் மைந்தா விளங்கு     கன்றா முகுந்தன் ...... மருகோனே 
கன்றா விலங்க லொன்றாறு கண்ட     கண்டா வரம்பை ...... மணவாளா 
செந்தா தடர்ந்த கொந்தார் கடம்பு     திண்டோள் நிரம்ப ...... அணிவோனே 
திண்கோ டரங்க ளெண்கோ டுறங்கு     செங்கோட மர்ந்த ...... பெருமாளே.

பந்தாட்டம் விளையாடி அழகிய கை நொந்துள்ள பெண்கள் ஆசையோடு அணிந்த பசுமை வாய்ந்த பூ மாலையைச் சூடிய கூந்தலின் மீதும், அழகு நிறைந்த வண்டுகள் இசை பாடுகின்ற தாமரை போன்ற முகத்தின் மேலும், மந்தாரம் என்னும் செவ்வரத்தம் பூவின் வாசனையைக் கொண்ட சந்தனம், முத்து மாலை இவைகளை அணிந்தனவாய், கொடிய பாவங்களுக்கு இடமான மார்பகங்களின் மேலும், நிரம்ப ஆசை பூண்டு, ஆவி விண்டு உயிர் பிரிவது போல வருந்தி, நான் சோர்வு அடையாமல் உன்னுடைய திருவருளைத் தந்து அருள்வாய். கந்தனே, சிவபெருமானுடைய குமாரனே, விளங்குகின்ற கன்றுகளை உடைய பசுக்களுக்குப் பிரியமானவர் ஆகிய கண்ணனின் மருகனே, கோபித்து, மலையாகிய கிரெளஞ்சம் ஒன்றை வழி திறக்கச் செய்யுமாறு வேலைச் செலுத்திய வீரனே, தேவலோகப் பெண்ணான தேவயானையின் கணவனே, சிவந்த மகரந்தத் தூள் பொருந்திய பூங் கொத்துக்கள் அடர்ந்த கடப்ப மாலையை உறுதியுள்ள தோள்களில் மிகவும் விரும்பி அணிபவனே, வலிய குரங்குகள் கரடியுடன் தூங்குகின்ற திருச் செங்கோட்டில்* வீற்றிருக்கும் பெருமாளே. 
* திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து 6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது. மலை பாம்பின் உருவில் இருப்பதால் நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' - என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.

பாடல் 587 - திருச்செங்கோடு 
ராகம் - ...; தாளம் -

தந்தான தந்த தந்தான தந்த     தந்தான தந்த ...... தனதான

வண்டார்ம தங்க ளுண்டேம யங்கி     வந்தூரு கொண்ட ...... லதனோடும் 
வண்காம னம்பு தன்கால்ம டங்க     வன்போர்ம லைந்த ...... விழிவேலும் 
கொண்டேவ ளைந்து கண்டார்தி யங்க     நின்றார்கு ரும்பை ...... முலைமேவிக் 
கொந்தார ரும்பு நின்தாள்ம றந்து     குன்றாம லுன்ற ...... னருள்தாராய் 
பண்டாழி சங்கு கொண்டாழி தங்கு     பண்போனு கந்த ...... மருகோனே 
பண்சார நைந்து நண்போது மன்பர்     பங்காகி நின்ற ...... குமரேசா 
செண்டாடி யண்டர் கொண்டாட மன்றில்     நின்றாடி சிந்தை ...... மகிழ்வாழ்வே 
செஞ்சாலி மிஞ்சி மஞ்சாடு கின்ற     செங்கோட மர்ந்த ...... பெருமாளே.

வண்டுகள் தேனை உண்டு மயக்கத்துடன் வந்து மொய்க்கின்ற, மேகம் போன்ற, கூந்தலுடன், வளப்பம் பொருந்திய மன்மதனின் (மலர்ப்) பாணங்களின் திறனைக் குறைக்கவல்ல, வலிய போரை எதிர்த்த கண்ணாகிய வேலையும் கொண்டு வளைத்துப் போட்டு, பார்த்தவர்கள் சஞ்சலம் அடைய நிற்கின்ற விலைமாதர்களின் தென்னங் குரும்பை ஒத்த மார்பினில் மனம் பொருந்தி, பூங்கொத்துக்கள் நிரம்பத் தோன்றும் உனது திருவடியை மறந்து நான் அழிவுறாமல் உனது திருவருளைத் தந்து அருளுக. பண்டை நாள் முதலாக, சக்கரம், சங்கு இவைகளுடன் பாற்கடலில் துயில் கொள்ளும் தன்மை வாய்ந்த திருமால் மகிழும் மருகனே, இசையுடன் இணைந்து உள்ளம் நெகிழ அன்பான துதிகளை ஓதும் அடியார்களின் பக்கத்தில் நிற்கும் குமரேசனே, (அசுரர்களைச்) சிதற அடித்தும், தேவர்கள் கொண்டாடவும், கனகசபையில் நின்று கூத்தாடுகின்ற சிவபெருமான் உள்ளத்தில் மகிழவும் செய்த செல்வமே, செந்நெல் மிகுந்து வளர, மேகங்கள் சஞ்சரிக்கும் திருச்செங்கோட்டில்* வீற்றிருக்கும் பெருமாளே. 
* திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து 6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது. மலை பாம்பின் உருவில் இருப்பதால் நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' - என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.

பாடல் 588 - திருச்செங்கோடு 
ராகம் - ...; தாளம் -

தனதன தனதன தனதன தனதன     தந்தான தந்த ...... தனதான

கரையற வுருகுதல் தருகயல் விழியினர்     கண்டான செஞ்சொல் ...... மடமாதர் 
கலவியில் முழுகிய நெறியினி லறிவுக     லங்காம யங்கும் ...... வினையேனும் 
உரையையு மறிவையும் உயிரையு முணர்வையும்     உன்பாத கஞ்ச ...... மலர்மீதே 
உரவொடு புனைதர நினைதரு மடியரொ     டொன்றாக என்று ...... பெறுவேனோ 
வரையிரு துணிபட வளைபடு சுரர்குடி     வந்தேற இந்த்ர ...... புரிவாழ 
மதவித கஜரத துரகத பததியின்     வன்சேனை மங்க ...... முதுமீன 
திரைமலி சலநிதி முறையிட நிசிசரர்     திண்டாட வென்ற ...... கதிர்வேலா 
ஜெகதல மிடிகெட விளைவன வயலணி     செங்கோட மர்ந்த ...... பெருமாளே.

எல்லை கடந்து உருகும்படி செய்யும் கயல் மீன் போன்ற கண்களை உடையவரும், கற்கண்டு போன்ற இனிய பேச்சுக்களை உடையவரும் ஆகிய விலைமாதர்களின் இணைப்பிலே மூழ்கிய வழியில் அறிவு கலங்கி மயங்குகின்ற, வினைக்கு ஈடான, நானும், என் சொற்களையும், அறிவையும், உயிரையும், உணர்வையும் உனது திருவடித் தாமரையின் மேல் உறுதியுடன் சமர்ப்பிக்க வேண்டி, உன்னை எப்போதும் நினைக்கின்ற அடியார்களுடன் ஒன்றாகும்படியான பாக்கியத்தை என்று பெறுவேனோ? கிரெளஞ்ச மலை இரண்டு கூறுபடவும், சிறையில் அடைபட்டிருந்த தேவர்கள் தங்கள் ஊரில் குடியேறவும், தேவேந்திரனது பொன்னுலகம் வாழவும், மதம் கொண்ட யானை, தேர், குதிரை, காலாட்படை இவைகளைக் கொண்ட வலிமை வாய்ந்த அசுரர் சேனை அழிந்துபடவும், முதிய மீன்கள் உள்ள அலைகள் நிறைந்த கடல் அலறி முறையிடவும், அசுரர்கள் திண்டாட்டம் கொள்ளவும் வெற்றி கொண்ட வேலை உடையவனே, பூதலத்தின் வறுமை கெடும்படியான விளைச்சல்கள் உடைய வயல்கள் சூழ்ந்த திருச்செங்கோட்டில்* வீற்றிருக்கும் பெருமாளே. 
* திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து 6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது. மலை பாம்பின் உருவில் இருப்பதால் நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' - என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.

பாடல் 589 - திருச்செங்கோடு 
ராகம் -...; தாளம் -

தனந்தாத் தனந்தாத் தனந்தாத் தனந்தாத்     தனந்தாத் தனத்தம் ...... தனதான

இடம்பார்த் திடம்பார்த் திதங்கேட் டிரந்தேற்     றிணங்காப் பசிப்பொங் ...... கனல்மூழ்கி 
இறுங்காற் கிறுங்கார்க் கிரும்பார்க் குநெஞ்சார்க்     கிரங்கார்க் கியற்றண் ...... டமிழ்நூலின் 
உடம்பாட் டுடன்பாட் டியம்பாத் தயங்காத்     துளங்காத் திடப்புன் ...... கவிபாடி 
ஒதுங்காப் பொதுங்காப் பதுங்காப் புகன்றேத்     துறும்பாற் குணக்கன் ...... புறலாமோ 
கடந்தோற் கடந்தோற் றறிந்தாட் கருந்தாட்     கணைந்தாட் கணித்திண் ...... புயமீவாய் 
கரும்போற் கரும்போர்க் குளங்காட் டிகண்டேத்     துசெங்கோட் டில்நிற்குங் ...... கதிர்வேலா 
அடைந்தோர்க் குணந்தோர்க் களிந்தோர்க் கமைந்தோர்க்     கவிழ்ந்தோர்க் குணற்கொன் ...... றிலதாகி 
அலைந்தோர்க் குலைந்தோர்க் கினைந்தோர்க் கலந்தோர்க்     கறிந்தோர்க் களிக்கும் ...... பெருமாளே.

எவரிடம் போனால் பணம் கிடைக்கும் என்று தக்க இடம் பார்த்து, இடம் பார்த்து, இதமான மொழிகளை அவர்கள் கேட்கும்படிச் சொல்லி, இரத்தல் தொழிலை மேற்கொண்டு, அத்தொழிலில் இணங்கி (மனம் பொருந்தி), பசியாகிய பொங்கி எழுகின்ற நெருப்பில் மூழ்கி, அழிந்து போகும் காலத்தில் கூட உள்ளம் நல்ல நிலை பெறாதவரிடம், இரும்பு போன்ற கடின மனத்தவரிடம், இரக்கம் இல்லாதவரிடம், தகுதி பெற்றுள்ள குளிர்ந்த தமிழ் நூல்களில் ஒருமைப்பட்ட மனத்துடன் பாட்டுக்களை அமைத்து, வாட்டமுற்று மனம் கலங்கி, ஆனாலும் திடத்துடன் புனையப்பட்ட புன்மையான பாடல்களைப் பாடி, அச்சமுற்று ஒதுங்கி, மனம் வருந்தி, பதுங்கியும் போய் தான் பாடிய பாடல்களைச் சொல்லிப் புகழும் இயல்பினைக் கொண்ட குணத்துக்கு நான் ஆசை வைக்கலாமோ? மத யானை காட்டில் எதிர்ப்பட ஆபத்தை உணர்ந்து கொண்டவளாய் உன்னுடைய மேன்மை பொருந்திய திருவடிகளை அணைந்த வள்ளிக்கு அழகிய வலிமையான திருப்புயங்களைத் தந்தவனே, கரும்பு வில்லை உடைய மன்மதனுக்கு அரிய போராக நெற்றிக் கண்ணைக் காட்டிய சிவபெருமான் கண்டு போற்றும் திருச்செங்கோட்டில்* விளங்கி நிற்கும் ஒளி வீசும் வேலனே, உன்னை அடைக்கலமாக அடைந்தவர்க்கும், உனக்காக உருகி மெலிந்தவர்களுக்கும், உன்னிடம் கருணை உள்ளம் கொண்டவர்களுக்கும், மன அமைதி கொண்டவர்களுக்கும், பக்தியால் உள்ளம் நெகிழ்ந்தவர்களுக்கும், உண்பதற்கு ஒன்றும் இல்லாதவராகி அலைகின்றவர்களுக்கும், நிலை குலைந்து நிற்பவர்களுக்கும், கவலை உற்று வருந்துபவர்களுக்கும், துன்பம் உற்றவர்களுக்கும், ஞானிகளுக்கும் திருவருள் பாலிக்கும் பெருமாளே. 
* திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து 6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது. மலை பாம்பின் உருவில் இருப்பதால் நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' - என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.

பாடல் 590 - திருச்செங்கோடு 
ராகம் - ...; தாளம் -

தனத்தந் தானன தனத்தந் தானன     தனத்தந் தானன ...... தனதான

கலக்குங் கோதற வடிக்குஞ் சீரிய     கருப்பஞ் சாறெனு ...... மொழியாலே 
கருத்தும் பார்வையு முருக்கும் பாவிகள்     கடைக்கண் பார்வையி ...... லழியாதே 
விலக்கும் போதக மெனக்கென் றேபெற     விருப்பஞ் சாலவு ...... முடையேனான் 
வினைக்கொண் டேமன நினைக்குந் தீமையை     விடற்கஞ் சேலென ...... அருள்வாயே 
அலைக்குந் தானவர் குலத்தின் சேனையை     அறுக்குங் கூரிய ...... வடிவேலா 
அழைத்துன் சீரிய கழற்செந் தாமரை     யடுக்கும் போதக ...... முடையோராம் 
சிலர்க்கன் றேகதி பலிக்குந் தேசிக     திருச்செங் கோபுர ...... வயலூரா 
திதிக்கும் பார்வயின் மதிப்புண் டாகிய     திருச்செங் கோடுறை ...... பெருமாளே.

கலக்கத்தைத் தரும் சக்கைகள் நீங்க வடிகட்டி எடுக்கபட்ட சிறப்பான கரும்பின் சாறு என்று சொல்லும்படி (இனிக்கும்) பேச்சினால் கருத்தையும், நோக்கத்தையும் உருக்குகின்ற பாவிகளாகிய விலைமாதர்களுடைய கடைக்கண் பார்வையில் அழிந்து விடாமல், (அத்தகைய மயக்கத்தை) நீக்கவல்ல ஞான உபதேசத்தை, பிறருக்குக் கிட்டாத வகையில் நான் ஒருவனே சிறப்பாகப் பெற்று விளங்க விருப்பம் மிகவும் கொண்டுள்ள நான் ஊழ் வினையின் பயனாக மனத்தில் நினைக்கின்ற தீய குணங்களை விட்டு உய்யும் பொருட்டு அபயம் என்று நீஅருள்வாயாக. (தேவர் முதலியோரை) வருத்தி வந்த அசுரர்கள் குலத்துப் படைகளை அறுத்த கூர்மையான அழகிய வேலை ஏந்தியவனே, உன்னை அழைத்து உனது சிறப்பான திருவடிச் செந்தாமரைகளைப் பற்றியுள்ள ஞானத்தை உடையவர்களாகிய சிலருக்கு தாமதம் இன்றி அப்பொழுதே வீடு பேறு அளிக்கும் குரு மூர்த்தியே, அழகிய செவ்விய கோபுரங்களை உடைய வயலூரானே, நீ காத்து அளிக்கும் இப் பூமியிடத்தே சிறப்பு மிகுந்து விளங்கும் திருச்செங்கோட்டில்* வீற்றிருக்கும் பெருமாளே. 
* திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து 6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது. மலை பாம்பின் உருவில் இருப்பதால் நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' - என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.

பாடல் 591 - திருச்செங்கோடு 
ராகம் - ...; தாளம் -

தந்த தாத்தத் தனத்தந் தாத்தத்     தந்த தாத்தத் தனத்தந் தாத்தத்          தந்த தாத்தத் தனத்தந் தாத்தத் ...... தனதான

துஞ்சு கோட்டிச் சுழற்கண் காட்டிக்     கொங்கை நோக்கப் பலர்க்குங் காட்டிக்          கொண்ட ணாப்பித் துலக்கஞ் சீர்த்துத் ...... திரிமானார் 
தொண்டை வாய்ப்பொற் கருப்பஞ் சாற்றைத்     தந்து சேர்த்துக் கலக்குந் தூர்த்தத்          துன்ப வாழ்க்கைத் தொழிற்பண் டாட்டத் ...... துழலாதே 
கஞ்சம் வாய்த்திட் டவர்க்குங் கூட்டிக்     கன்று மேய்த்திட் டவர்க்குங் கூற்றைக்          கன்ற மாய்த்திட் டவர்க்குந் தோற்றக் ...... கிடையாநீ 
கண்டு வேட்டுப் பொருட்கொண் டாட்டத்     தின்ப வாக்யத் தெனக்குங் கேட்கத்          தந்து காத்துத் திருக்கண் சாத்தப் ...... பெறுவேனோ 
வஞ்ச மாய்ப்புக் கொளிக்குஞ் சூற்கைத்     துன்று சூர்ப்பொட் டெழச்சென் றோட்டிப்          பண்டு வாட்குட் களிக்குந் தோட்கொத் ...... துடையோனே 
வண்டு பாட்டுற் றிசைக்குந் தோட்டத்     தண்கு ராப்பொற் புரக்கும் பேற்றித்          தொண்டர் கூட்டத் திருக்குந் தோற்றத் ...... திளையோனே 
கொஞ்சு வார்த்தைக் கிளித்தண் சேற்கட்     குன்ற வேட்டிச் சியைக்கண் காட்டிக்          கொண்டு வேட்டுப் புனப்பைங் காட்டிற் ...... புணர்வோனே 
கொங்கு லாத்தித் தழைக்குங் காப்பொற்     கொண்ட லார்த்துச் சிறக்குங் காட்சிக்          கொங்கு நாட்டுத் திருச்செங் கோட்டுப் ...... பெருமாளே.

சோர்வு உற்றது போலக் கண்ணைச் சிமிட்டிக் காட்டி, மார்பகங்கள் தெரியும்படி பலருக்கும் காட்டி, அழைத்துக் கொண்டு போய் ஏமாற்றி, தங்கள் கீர்த்தி விளக்கமாக சிறப்புடன் ஓங்குமாறு திரிகின்ற விலைமாதர்களின் கொவ்வைக் கனி போன்ற அழகிய வாயிதழின் கரும்பு போல் இனிக்கும் ஊறலைப் பருகச் செய்து, அணைத்துச் சேர்ந்து மயக்கத்தைத் தரும் காம ஆசையால் வருகின்ற துன்ப வாழ்க்கைத் தொழிலாகிய பழைய ஆட்டங்களில் சுழன்று திரியாமல், தாமரையில் வீற்றிருக்கும் பிரமனுக்கும், கன்றுகளை ஒன்று சேர்த்து மேய்த்திட்ட கண்ணனாகிய திருமாலுக்கும், யமனை வாட்டமுற்று மாயும்படி செய்த சிவ பெருமானுக்கும் காண்பதற்குக் கிட்டாத நீ, என்னைப் பார்த்து, என் மீது விருப்பம் கொண்டு, கொண்டாடத் தக்க பொருள் அமைந்த இன்ப உபதேச வார்த்தையை அடியேனாகிய நானும் கேட்டு உணரும்படி போதித்துக் காத்து, உனது திருக் கண்ணோக்கம் அடியேன் மீது படும்படியான பாக்கியத்தைப் பெறுவேனோ? வஞ்சகமாகப் புகுந்து (கடலில்) ஒளிந்து கொண்டவனும், சூலம் ஏந்திய கையோடு நெருங்கியவனுமான சூரன் அழிந்து போகும்படி அவனைத் தேடிச் சென்று ஓட வைத்து, முன்பு, வாளாயுதத்தைச் செலுத்தி இன்புறும் பன்னிரு தோள் கொத்தை உடையவனே, வண்டுகள் பாடல் பாடி இசை எழுப்பும் தோட்டத்தில், குளிர்ந்த குரா மலர் சூடிய அழகிய மார்புடன், உன் திருப்புகழைப் போற்றும் அடியார் கூட்டத்திலிருந்து, அவர்களுக்குக் காட்சி அளிக்கும் இளையவனே, கொஞ்சும் சொற்களை உடைய கிளி போன்றவளை, குளிர்ந்த மலையில் வாழ்கின்ற சேல் மீனைப் போல் கண்கள் கொண்ட வேடப் பெண்ணாகிய வள்ளியைக் கண் கொண்டு ஜாடை காட்டி அழைத்துச் சென்று, அவளை விரும்பி, தினைப் புனத்துப் பசுஞ்சோலையில் தழுவியவனே, வாசனையை வீசி உலவச் செய்து தழைத்திருக்கும் சோலைகளில், அழகிய மேகங்கள் நிறைந்து சிறந்து நிற்கும் காட்சியைக் கொண்ட கொங்கு நாட்டில் உள்ள திருச்செங்கோட்டில்* உறையும் பெருமாளே. 
* திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து 6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது. மலை பாம்பின் உருவில் இருப்பதால் நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' - என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.

பாடல் 592 - திருச்செங்கோடு 
ராகம் - ...; தாளம் -

தானனந் தானதன தானனந் தானதன     தானனந் தானதன தானனந் தானதனதானனந் தானதன தானனந் தானதன     தானனந் தானதன தானனந் தானதனதானனந் தானதன தானனந் தானதன     தானனந் தானதன தானனந் தானதன ...... தந்ததான

நீலமஞ் சானகுழல் மாலைவண் டோடுகதி     நீடுபந் தாடுவிழி யார்பளிங் கானநகைநீலபொன் சாபநுத லாசையின் தோடசையு     நீள்முகந் தாமரையி னார்மொழிந் தாரமொழிநேர்சுகம் போலகமு கானகந் தாரர்புய     நேர்சுணங் காவிகிளை யேர்சிறந் தார்மலையி ...... ரண்டுபோல 
நீளிபங் கோடிளநிர் தேனிருந் தாரமுலை     நீடலங் காரசர மோடடைந் தார்மருவிநீள்மணஞ் சாறுபொழி யாவளம் போதிவையி     னீலவண் டேவியநல் காமனங் காரநிறைநேசசந் தானஅல்குல் காமபண் டாரமுதை     நேருசம் போகரிடை நூலொளிர்ந் தாசையுயிர் ...... சம்பையாரஞ் 
சாலுபொன் தோகையமை பாளிதஞ் சூழ்சரண     தாள்சிலம் போலமிட வேநடந் தானநடைசாதிசந் தானெகின மார்பரந் தோகையென     தானெழுங் கோலவிலை மாதரின் பார்கலவிதாவுகொண் டேகலிய நோய்கள்கொண் டேபிறவி     தானடைந் தாழுமடி யேனிடஞ் சாலும்வினை ...... யஞ்சியோடத் 
தார்கடம் பாடுகழல் பாதசெந் தாமரைகள்     தாழ்பெரும் பாதைவழி யேபடிந் தேவருகுதாபம்விண் டேயமுத வாரியுண் டேபசிகள்     தாபமுந் தீரதுகிர் போனிறங் காழ்கொளுருசாரவுஞ் சோதிமுரு காவெனுங் காதல்கொடு     தானிருந் தோதஇரு வோரகம் பேறுறுக ...... விஞ்சைதாராய் 
சூலியெந் தாய்கவுரி மோகசங் காரிகுழை     தோடுகொண் டாடுசிவ காமசுந் தாரிநலதூளணைந் தாளிநிரு வாணியங் காளிகலை     தோகைசெந் தாமரையின் மாதுநின் றேதுதிசெய்தூயஅம் பாகழைகொள் தோளிபங் காளக்ருபை     தோய்பரன் சேயெனவு மேபெரும் பார்புகழும் ...... விந்தையோனே 
சூரசங் காரசுரர் லோகபங் காவறுவர்     தோகைமைந் தாகுமர வேள்கடம் பாரதொடைதோளகண் டாபரம தேசிகந் தாவமரர்     தோகைபங் காஎனவே தாகமஞ் சூழ்சுருதிதோதகம் பாடமலை யேழுதுண் டாயெழுவர்     சோரிகொண் டாறுவர வேலெறிந் தேநடன ...... முங்கொள்வேலா 
மாலியன் பாறவொரு ஆடகன் சாகமிகு     வாலியும் பாழிமர மோடுகும் பாகனனுமாழியுங் கோரவலி ராவணன் பாறவிடு     மாசுகன் கோலமுகி லோனுகந் தோதிடையர்மாதுடன் கூடிவிளை யாடுசம் போகதிரு     மார்பகன் காணமுடி யோனணங் கானமதி ...... யொன்றுமானை 
மார்புடன் கோடுதன பாரமுஞ் சேரஇடை     வார்துவண் டாடமுக மோடுகந் தீரரசவாயிதங் கோதிமணி நூபுரம் பாடமண     வாசைகொண் டாடுமயி லாளிதுங் காகுறவிமாதுபங் காமறைகு லாவுசெங் கோடைநகர்     வாழவந் தாய்கரிய மாலயன் தேவர்புகழ் ...... தம்பிரானே.

கரிய மேகம் போன்ற கூந்தலில் உள்ள மாலையில் வண்டுகள் மொய்க்கின்ற நிலையும், நீளமான பந்து ஆடுவதைப் போல (அங்குமிங்கும் புரளும்) கண்களை உடையவர்கள். பளிங்கு போல் வெண்மையான பற்களும், கறுத்த அழகிய வில் போன்ற புருவமும் பொன்னாலாகிய தோடு என்னும் அணி கலன் அசைகின்ற ஒளி கொண்ட முகம் என்ற தாமரையும் விளங்குபவர்கள். பேசுகின்ற நிறைந்த பேச்சுக்கள் கிளியின் மொழியை நிகர்ப்பவர். கமுகை ஒக்கும் கழுத்தை உடையவர்கள். தோள்கள் அவற்றில் படிந்த தேமலோடு வாசனையுடன் மூங்கிலின் அழகைக் கொண்ட சிறப்பினர். இரு மலைகளைப் போல நீண்ட யானைக் கொம்பு, தேனைப் போல் இனிக்கும் இளநீர் போன்றதும், முத்து மாலை அணிந்ததுமான, மார்பகத்தார். நீண்ட அலங்காரமான கழுத்துச் சங்கிலியோடு கூடினவர்கள். பொருந்தியதும், மிக்க நறு மணச் சாற்றினைப் பொழிகின்றதுமான (கலவைச் சந்தனம் உள்ள) கிண்ணம் போன்ற மார்பகத்தார். (காம பாண) மலர்களுள் நீலோற்ப மலர்ப் பாணத்தை ஏவிய நல்ல மன்மதனுடைய இறுமாப்பு நிறைந்த அன்புக்கு இடமானதும், சந்ததியைத் தருகின்றதுமான பெண்குறி மூலமாக காம நிதியாகிய அமுதத்துக்கு நிகரான புணர்ச்சி அனுபவத்தைத் தருபவர். நுண்ணிய இடுப்பு விளங்கி, திக்குகளில் வாய்விட்டு மின்னும் மின்னல் போன்றவர்கள். அழகு நிறைந்த பொன்னாலாகிய சரிகை இட்ட பட்டுப் புடவை சூழ்ந்துள்ள கால்களின் பாதங்களில் சிலம்பு ஒலிக்க நடந்து, அவர்களுக்கான நடை உயர்ந்த வம்சத்து அன்னம் எனவும், அழகிய மார்பராய், எழில்மிகு மயில் எனவும் எழுந்து தோன்றுபவராகிய அழகிய விலைமாதர்களின் இன்பம் நிறைந்த சேர்க்கையில் பாய்தலைக் கொண்டு, துன்பத்தைத் தருவதான நோய்கள் நிறைந்த பல பிறவிகளை அடைந்து ஆழ்ந்து விழும் அடியேனிடத்தில் நிரம்பி வரும் வினை பயந்து நீங்குவதற்காக, கடப்ப மாலை அசைகின்ற கழல் அணிந்த பாதத் தாமரைகளை விரும்பி, அந்தப் பெரிய திருவடியை விரும்பும் நெறியில் ஆழ்ந்து பொருந்தி, அடுத்து வரும் தாகங்களை (ஆசைகளை) ஒழித்து, அருளமுத வெள்ளத்தைப் பருகி, பசியும் தாகமும் நீங்குவதற்காக, பவளம் போல் நிறமும் ஒளி கொண்ட உருவமும் பொருந்த ஜோதி முருகா எனக் கூறும் ஆசை ஒன்றையே கொண்டு நான் மன அமைதியுடன் இருந்து ஓத, பெருமை வாய்ந்த ஒப்பற்ற உள்ளம் பேறு பெறும்படியான ஞானத்தைத் தந்து அருளுக. திரி சூலத்தை ஏந்தியவள், எனது தாய் கெளரி, ஆசையை அகற்றுபவள், குண்டலங்களும் தோடும் பூண்டு நடனமாடும் சிவகாம சுந்தரி, நல்ல திருநீற்றைத் தரித்து ஆள்பவள், திகம்பரி, அழகிய காளி, கலை மகளும், செந்தாமரையில் வீற்றிருக்கும் லக்ஷ்மியும் நின்று துதிக்கின்ற பரிசுத்தமான தாய், மூங்கில் போன்ற தோளை உடையவள் (ஆகிய பார்வதியை) பாகத்தில் உடையவராய் திருவருள் நிறைந்தவராகிய பரமசிவனுடைய குழந்தை என்று பெரிய உலகத்தோர் புகழும் விசித்திர தேவனே, சூரனை அழித்தவனே, தேவலோகத்துக்கு வேண்டியவனே, ஆறு (கார்த்திகை) மாதர்களின் குழந்தையே, குமார வேளே, கடப்ப மலர் நிறைந்த மாலை அணிந்துள்ள வீரனே, சிவபெருமானுக்கு குருவாகிய அழகனே, தேவ மகள் (தேவயானையின்) கணவனே எனறெல்லாம் வேதங்களையும், ஆகமங்களையும் ஆய்ந்த தேவர்களின் (முறையீட்டு) ஒலி (சூரனிடம் தாங்கள் படும்) வருத்தத்தைப் பாட, எழு கிரிகளும் துண்டாகப் பொடிபட (அந்த மலைகளில்) எழுந்திருந்த அசுரர்களின் ரத்தம் பெருகி ஆறாக வர, வேலாயுதத்தைச் செலுத்தி நடனமும் கொண்ட வேலனே, (ராவணன் பாட்டனும், தலைமை அமைச்சனுமாகிய அரக்கன் - மாலியன்) இறக்கவும், ஒப்பற்ற இரணியன் சாகவும், வலிமை மிக்க வாலியும், பருத்த மராமரத்தோடு அழியவும், கும்பகர்ணனும், கடலும், பயங்கரமான வலிமை கொண்டிருந்த ராவணனும் அழியவும் எய்த அம்பைக் கொண்டவன், அழகிய மேக நிறத்தினன், மன மகிழ்ச்சியுடன் இடையர் மாதர்களுடன் கூடி காம லீலைகளை அனுபவித்தவன், லக்ஷ்மியை மார்பில் கொண்டவன், பொன் முடியோனாகிய திருமாலின் மகளான அறிவு நிறைந்த தேவயானையின் மார்பும், மலை போன்ற மார்பகப் பாரமும் பொருந்த, இடையின் நுண்மை நெகிழ்ந்து அசைய, அவளுடைய திருமுகத்தில் மகிழ்ச்சி உற்று, கருணையுடன், வாயினின்று இனிமையாக வரும் இதழ் ஊறலைச் சிறிது சிறிதாகப் பருகி, ரத்தினச் சிலம்பு ஒலிக்க அவளை மணக்கும் காதலைப் பாராட்டும் மயிலோனே, பரிசுத்தமானவனே, குற மாதாகிய வள்ளியின் கணவனே, வேத முழக்கம் கேட்கும் திருச்செங்கோட்டு* நகரில் வாழ வந்தவனே, கரிய திருமாலும், பிரமனும், அமரர்களும் புகழும் தம்பிரானே. 
இப்பாடலில் விலைமாதர்களின் தலை முதல் எல்லா அங்கங்களும் உவமைகளால் வர்ணிக்கப்பட்டுள்ளன.* திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து 6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது. மலை பாம்பின் உருவில் இருப்பதால் நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' - என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.

பாடல் 593 - திருச்செங்கோடு 
ராகம் - ...; தாளம் -

தந்த தத்தத் தந்த தத்தத்     தந்த தத்தத் தந்த தத்தத்          தந்த தத்தத் தந்த தத்தத் ...... தனதான

பொன்ற லைப்பொய்க் கும்பி றப்பைத்     தும்ப றுத்திட் டின்று நிற்கப்          புந்தி யிற்சற் றுங்கு றிக்கைக் ...... கறியாமே 
பொங்கி முக்கிச் சங்கை பற்றிச்     சிங்கி யொத்தச் சங்க டத்துப்          புண்ப டைத்துக் கஞ்ச மைக்கட் ...... கொடியார்மேல் 
துன்று மிச்சைப் பண்ட னுக்குப்     பண்ப ளித்துச் சம்ப்ர மித்துத்          தும்பி பட்சிக் கும்ப்ர சச்செய்ப் ...... பதிமீதே 
தொண்டு பட்டுத் தெண்ட னிட்டுக்     கண்டு பற்றத் தண்டை வர்க்கத்          துங்க ரத்தப் பங்க யத்தைத் ...... தருவாயே 
குன்றெ டுத்துப் பந்த டித்துக்     கண்சி வத்துச் சங்க ரித்துக்          கொண்ட லொத்திட் டிந்த்ர னுக்கிச் ...... சுரலோகா 
கொம்பு குத்திச் சம்ப ழுத்தித்     திண்ட லத்திற் றண்டு வெற்பைக்          கொண்ட முக்கிச் சண்டை யிட்டுப் ...... பொரும்வேழம் 
சென்று ரித்துச் சுந்த ரிக்கச்     சந்த விர்த்துக் கண்சு கித்துச்          சிந்தை யுட்பற் றின்றி நித்தக் ...... களிகூருஞ் 
செண்ப கத்துச் சம்பு வுக்குத்     தொம்ப தத்துப் பண்பு ரைத்துச்          செங்கு வட்டிற் றங்கு சொக்கப் ...... பெருமாளே.

இறத்தல் கூடியதாய், பொய்யாக முடியும் பிறப்பு என்பதை இணைக்கும் கயிற்றை அறுத்துத் தள்ளி, இன்று ஓர் ஒழுக்கத்தில் நிற்க புத்தியில் கொஞ்சமேனும் கவனித்து மேற்கொள்ள அறியாமல், காய்ந்து கொதித்தும், முயற்சிகள் செய்தும், சந்தேகம் கொண்டும், விஷம் போன்ற துன்பங்களால் மனம் புண்ணாகி, தாமரை போன்ற, மை பூசிய கண்ணைக் கொண்ட, விலைமாதர்கள் மீது, பொருந்தி நெருங்கும் ஆசைப் பாத்திரனாகிய எனக்கு நற்குணத்தைக் கொடுத்து சிறப்பு அடையச் செய்து, வண்டு உண்ணும் தேன் கொண்ட (பூந்தாதுகள் உள்ள) வயலூர் என்னும் தலத்தில் தொண்டு செய்யும் பணியை மேற்கொண்டு, நான் பார்த்துப் பற்றுவதற்கு தண்டை, சிலம்பு முதலியவற்றை அணிந்தவையும், பரிசுத்தமான செந்நிறமுள்ளவையுமான திருவடித் தாமரையை தந்து அருள்க. கிரவுஞ்ச கிரியை எடுத்து பந்தைத் தூக்கி எறிவது போல் எடுத்து எறிந்து கண் சிவக்கக் கோபித்து அழித்து, (கைம்மாறு கருதாது உதவும்) மேகம் போல் இந்திரனுக்கு ஈந்த தேவ லோகத்தவனே, கொம்பால் குத்தியும், சம்பங்கோரை போன்ற நுனியால் அழுத்தியும், திண்ணிய இப்பூமியில் கதையையும் மலையையும் சேர்த்து அடக்கிப் போர் புரிந்த (கயாசுரன் என்ற) யானையை சென்று தாக்கி தோலை உரித்து*, அழகிய பார்வதி தேவிக்கு பயத்தை நீக்கி, கண் களிப்புடன் மனதில் பற்று ஒன்றும் இல்லாமல் தினமும் மகிழ்ச்சி கொள்ளும், செண்பக மலர் அணியும் சம்புவாகிய சிவபெருமானுக்கு தத்வம் அசி என்னும் வேத வாக்கியத்தில் த்வம் என்னும் சொல்லுக்கு (குருவாக நின்று) விளக்க இயல்பை எடுத்து விளக்கி, திருச்செங்கோட்டில்** உறையும் அழகிய பெருமாளே. 
* கயாசுரன் என்பவன் பிரமனிடம் வரம் பெற்றுப் பேராற்றல் கொண்டு, மண்ணவர், விண்ணவர் யாவரையும் வருத்தினான். யானை முகம் கொண்ட அந்த அசுரனைச் சிவபெருமான் உதைத்துத் தள்ளி, உமா தேவியும் அச்சம் நீங்க, அந்த யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டார்.
** திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து 6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது. மலை பாம்பின் உருவில் இருப்பதால் நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' - என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.

பாடல் 594 - திருச்செங்கோடு 
ராகம் - ...; தாளம் -

தந்தத் தனத்தந் தாத்தன தந்தத் தனத்தந் தாத்தன     தந்தத் தனத்தந் தாத்தன ...... தனதான

மந்தக் கடைக்கண் காட்டுவர் கந்தக் குழற்பின் காட்டுவர்     மஞ்சட் பிணிப்பொன் காட்டுவ ...... ரநுராக 
வஞ்சத் திரக்கங் காட்டுவர் நெஞ்சிற் பொருத்தங் காட்டுவர்     வண்பற் றிருப்புங் காட்டுவர் ...... தனபாரச் 
சந்தப் பொருப்புங் காட்டுவர் உந்திச் சுழிப்புங் காட்டுவர்     சங்கக் கழுத்துங் காட்டுவர் ...... விரகாலே 
சண்டைப் பிணக்குங் காட்டுவர் பண்டிட் டொடுக்கங் காட்டுவர்     தங்கட் கிரக்கங் காட்டுவ ...... தொழிவேனோ 
பந்தித் தெருக்கந் தோட்டினை யிந்துச் சடைக்கண் சூட்டுமை     பங்கிற் றகப்பன் தாட்டொழு ...... குருநாதா 
பைம்பொற் பதக்கம் பூட்டிய அன்பற் கெதிர்க்குங் கூட்டலர்     பங்கப் படச்சென் றோட்டிய ...... வயலூரா 
கொந்திற் புனத்தின் பாட்டிய லந்தக் குறப்பெண் டாட்டொடு     கும்பிட் டிடக்கொண் டாட்டமொ ...... டணைவோனே 
குன்றிற் கடப்பந் தோட்டலர் மன்றற் ப்ரசித்தங் கோட்டிய     கொங்கிற் றிருச்செங் கோட்டுறை ...... பெருமாளே.

மெதுவாக கடைக் கண்ணைக் காட்டுவர். நறு மணம் வீசும் கூந்தலை பின்னர் காட்டுவர். மஞ்சள் நிறத்திலுள்ள பொன் அணிகலன்களைக் காட்டுவர். காமப் பற்று உள்ளவர்கள் போல் வஞ்சனை செய்து தங்கள் இரக்கத்தைக் காட்டுவர். மனதில் அன்பு உள்ளவர்கள் போல் காட்டுவர். வளப்பம் மிக்க வெண்பற்களின் பாகங்களைக் காட்டுவர். மார்பாகிய பாரமுள்ள அழகிய மலையையும் காட்டுவர். கொப்பூழின் சுழியைக் காட்டுவர். சங்கு போன்ற கழுத்தைக் காட்டுவர். தந்திரமாக சண்டையிட்டு ஊடுதலையும் காட்டுவர். முதலில் காட்டிய நேசம் ஒடுங்குதலைக் காட்டுவர் ஆகிய பொது மகளிர்பால் அன்பு காட்டுவதை விட மாட்டேனோ? கட்டப்பட்ட எருக்கம் பூவை நிலவு அணிந்த சடையின் கண் சூடுபவரும், உமா தேவியைப் பாகத்தில் உடையவருமான தந்தையாகிய சிவ பெருமான் உனது திருவடியைத் தொழும் குரு நாதனே, பசும் பொன்னால் ஆய பதக்கத்தை அணிந்த அன்பர்களாகிய தேவர்களை எதிர்த்து வந்த பகைவர்களாகிய அசுரர்கள் தோல்வியுறுமாறு, சென்று அவர்களைப் புறங் காட்டி ஓடச் செய்த வயலூரனே, பூங்கொத்துக்கள் உள்ள தினைப் புனத்தில் பொருந்திய அந்தக் குற மகள் வள்ளியுடன் விளையாடல் செய்து, அவளைக் கும்பிடுதற்கு பெருங் களிப்புடன் தழுவியவனே, மலையில் கடப்ப மலர் மலரும் வாசனை பிரசித்தத்தை வளைத்துக் கொண்ட கொங்கு நாட்டுத் திருச் செங்கோடு* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து 6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது. மலை பாம்பின் உருவில் இருப்பதால் நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' - என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.

பாடல் 595 - திருச்செங்கோடு 
ராகம் - ...; தாளம் -

தத்தா தத்தா தத்தா தத்தா     தத்தா தத்தத் ...... தனதான

மெய்ச்சார் வற்றே பொய்ச்சார் வுற்றே     நிச்சார் துற்பப் ...... பவவேலை 
விட்டே றிப்போ கொட்டா மற்றே     மட்டே யத்தத் ...... தையர்மேலே 
பிச்சா யுச்சா கிப்போ ரெய்த்தார்     பத்தார் விற்பொற் ...... கழல்பேணிப் 
பிற்பால் பட்டே நற்பால் பெற்றார்     முற்பா லைக்கற் ...... பகமேதான் 
செச்சா லிச்சா லத்தே றிச்சே     லுற்றா ணித்துப் ...... பொழிலேறுஞ் 
செக்கோ டைக்கோ டுக்கே நிற்பாய்     நித்தா செக்கர்க் ...... கதிரேனல் 
முச்சா லிச்சா லித்தாள் வெற்பாள்     முத்தார் வெட்சிப் ...... புயவேளே 
முத்தா முத்தீ யத்தா சுத்தா     முத்தா முத்திப் ...... பெருமாளே.

உண்மையான புகலிடத்தை விட்டுவிட்டு, பொய்யான துணையைப் பற்றிக்கொண்டு, நிச்சயமாக நிறைந்த துன்பமே உள்ள பிறப்பு என்னும் கடலைத் தாண்டி கரை ஏறிப் போக முடியாதபடி, தேன்கூட இவர்கள் சொல்லுக்கு இனிமை குறைந்தது என்று சொல்லத்தக்க அந்தக் கிளி போன்ற பொது மகளிரின் மீது காம வெறி முற்றிப்போய் கலவிப் போரில் இளைத்தவர்கள், பிற்பாடு, உனது பக்தர்களின் அழகிய, ஒளி பொருந்திய திருவடிகளைப் பணிந்து, அந்த நல்ல தொண்டால் தகுதியான நல்ல வழியில் நின்று நற் குணங்களைப் பெற்றவர்களாக மாறும் போது அவர்களுக்கு நீ பாலைவனத்தில் கிடைத்த தெய்வ விருட்சமாகிய கற்பகமாகத் திகழ்வாய். செம்மையான நெற்கதிர் கூட்டத்தில் ஏறிச் சேல் மீன்கள் அருகிலுள்ள சோலையில் போய்ச் சேரும் திருச்செங்கோட்டு* மலை உச்சியில் நிற்பவனே, என்றும் அழியாது இருப்பவனே, சிவந்த கதிர் கொண்ட தினைப்பயிர் மூன்று போகம் விளையும் நெல்வயலின் அடித் தண்டுகள் கொண்ட வள்ளிமலைக்கு உரியவளாகிய வள்ளியின் முத்துமாலை நிறைந்துள்ளதும், வெட்சிமாலை அணிந்ததுமான புயங்களை உடைய செவ்வேளே, முத்துப் போல அருமை வாய்ந்தவனே, மூன்று வகையான** அக்கினி வேள்விக்குத் தலைவனே, பரிசுத்தமானவனே, பற்று அற்றவனே, முக்தி அளிக்கும் பெருமாளே. 
என்று தொடங்கும் பாடல்கள்.
திருமுருகாற்றுப்படை.

பாடல் 596 - திருச்செங்கோடு 
ராகம் - ...; தாளம் -

தனத்தந் தான தானன தனத்தந் தான தானன     தனத்தந் தான தானன ...... தனதான

வருத்தங் காண நாடிய குணத்தன் பான மாதரு     மயக்கம் பூண மோதிய ...... துரமீதே 
மலக்கங் கூடி யேயின வுயிர்க்குஞ் சேத மாகிய     மரிக்கும் பேர்க ளோடுற ...... வணியாதே 
பெருத்தும் பாவ நீடிய மலத்தின் தீமை கூடிய     பிறப்புந் தீர வேயுன ...... திருதாளே 
பெறத்தந் தாள வேயுயர் சுவர்க்கஞ் சேர வேயருள்     பெலத்தின் கூர்மை யானது ...... மொழிவாயே 
இரத்தம் பாய மேனிக ளுரத்துஞ் சாடி வேல்கொடு     எதிர்த்துஞ் சூரர் மாளவெ ...... பொரும்வேலா 
இசைக்குந் தாள மேளமெ தனத்தந் தான தானன     எனத்திண் கூளி கோடிகள் ...... புடைசூழத் 
திருத்தன் பாக வேயொரு மயிற்கொண் டாடி யேபுகழ்     செழித்தன் பாக வீறிய ...... பெருவாழ்வே 
திரட்சங் கோடை வாவிகள் மிகுத்துங் காவி சூழ்தரு     திருச்செங் கோடு மேவிய ...... பெருமாளே.

வருத்தம் உண்டாகும் வழியையே தேடும் குணத்தில் ஈடுபட்ட மாதர்களும் மயக்கம் கொள்ளும்படி அவர்களோடு உறவாடும் சுமையே இவ்வுடலாகும். துன்பங்களோடு கூடிப் பொருந்திய, உயிர்கள் (நற்கதி காணாது) கேடு அடையச் செய்யும், சாகப்போகும் மக்களுடைய உறவை நான் மேற்கொள்ளாமல், பெருத்து வளரும் பாவம் மிக்க (ஆணவம், கன்மம், மாயை என்ற) மும்மலங்களின் கொடுமை கூடிய பிறப்பு ஒழியவே, உனது திருவடிகளைப் பெறுமாறு எனக்குத் தந்து, என்னை ஆண்டருள்வாயாக. மேலான சுவர்க்கத்தை நான் சேர்வதற்காக நீ அருள் புரியும் சக்தியின் நுண் பொருளை எனக்கு மொழிந்தருளுக. இரத்தம் பெருகிப் பாய உடலிலும் மார்பிலும் தாக்கி, வேலைக் கொண்டு எதிர்த்தும் அசுரர்கள் இறந்து பட போர் புரிந்த வேலனே, ஒலிக்கின்ற தாளமும் மேளமும் தனத்தந் தான தானன என்ற ஒலியை எழுப்ப, வலிய கோடிக் கணக்கான பூத கணங்கள் பக்கங்களில் சூழ, மிகவும் அன்புடன் ஒப்பற்ற மயிலை விரும்பி, புகழ் ஓங்கி வளர்ந்து அன்பே உருவாக விளங்கும் பெருஞ் செல்வமே, திரண்ட சங்குகளும், நீர் நிலைகளும், குளங்களும் மிகுத்து, கருங் குவளை மலர்கள் சூழ்ந்து மலரும் திருச் செங்கோடு* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து 6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது. மலை பாம்பின் உருவில் இருப்பதால் நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' - என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.

பாடல் 597 - திருச்செங்கோடு 
ராகம் - ...; தாளம் -

தான தானன தத்தன தத்தன     தான தானன தத்தன தத்தன          தான தானன தத்தன தத்தன ...... தனதான

ஆல காலப டப்பைம டப்பியர்     ஈர வாளற வெற்றும்வி ழிச்சியர்          யாவ ராயினு நத்திய ழைப்பவர் ...... தெருவூடே 
ஆடி யாடிந டப்பதொர் பிச்சியர்     பேசி யாசைகொ டுத்தும ருட்டிகள்          ஆசை வீசிய ணைக்குமு லைச்சியர் ...... பலரூடே 
மாலை யோதிவி ரித்துமு டிப்பவர்     சேலை தாழநெ கிழ்த்தரை சுற்றிகள்          வாசம் வீசும ணத்தில்மி னுக்கிகள் ...... உறவாலே 
மாயை யூடுவி ழுத்திய ழுத்திகள்     காம போகவி னைக்குளு னைப்பணி          வாழ்வி லாமல்ம லச்சன னத்தினி ...... லுழல்வேனோ 
மேலை வானொரு ரைத்தச ரற்கொரு     பால னாகியு தித்தொர்மு நிக்கொரு          வேள்வி காவல்ந டத்திய கற்குரு ...... அடியாலே 
மேவி யேமிதி லைச்சிலை செற்றுமின்     மாது தோள்தழு விப்பதி புக்கிட          வேறு தாயட விக்குள்வி டுத்தபி ...... னவனோடே 
ஞால மாதொடு புக்கவ னத்தினில்     வாழும் வாலிப டக்கணை தொட்டவ          னாடி ராவண னைச்செகு வித்தவன் ...... மருகோனே 
ஞான தேசிக சற்குரு உத்தம     வேல வாநெரு வைப்பதி வித்தக          நாக மாமலை சொற்பெற நிற்பதொர் ...... பெருமாளே.

ஆலகால விஷத்தை உடைய பாம்பின் படம் போன்ற பெண்குறியை உடைய இளம் மாதர்கள். கொழுப்பு ஈரம் கொண்ட வாள் போல மிகவும் தாக்க வல்ல கண்களை உடையவர். யாராக இருந்தாலும் விரும்பி அழைப்பவர்கள். தெருவின் மத்தியில் ஆடி ஆடி நடக்கும் பித்துப் பிடித்தவர்கள். தங்கள் பேச்சு வன்மையால் ஆசை காட்டி மயக்குபவர்கள். ஆசை வலையை வீசி அணைக்கின்ற மார்பினர். பலர் மத்தியிலும் மாலை அணிந்த கூந்தலை அவிழ்த்து முடிப்பவர். புடவை கீழே தாழும்படி தளர்த்தி இடுப்பில் சுற்றுபவர்கள். வாசனை வீசும் நறுமணம் கொண்டு மினுக்குபவர்கள். இத்தகைய விலைமாதர்களின் தொடர்பால், மாயையின் உள்ளே விழும்படிச் செய்து அழுத்துபவர்களின் காம போகச் செயல்களில் ஈடுபட்டதாலே, உன்னைப் பணியும் நல் வாழ்வு இல்லாமல் மும்மலங்களுக்கு ஈடான பிறப்பில் அலைவேனோ? மேல் உலகத்தில் உள்ள தேவர்கள் புகழ்ந்த தசரதற்கு ஒரு குழந்தையாகப் பிறந்து, ஒப்பற்ற விசுவாமித்திர முனிவருக்கு ஒரு யாகத்தில் காவல் புரிந்து, அந்த கல்லைத் திருவடியினால் (மிதித்துப்) பழைய வடிவத்தை (அகலிகை) எய்தும் படிச் செய்து, மிதிலையில் சனகர் முன் (சிவதனுசு என்ற) வில்லை முறித்து ஒளி பொருந்திய சீதையை மணம் புரிந்து அயோத்தி நகருக்குத் திரும்பி வந்து, மாற்றாந் தாயாகிய கைகேயி காட்டுக்குள் போகும்படிச் செய்ய, தம்பியாகிய இலக்குவனுடன் பூதேவி மகளாம் சீதையோடு சென்று, அந்தக் காட்டில் வாழ்ந்த வாலி இறக்கும்படி அம்பைச் செலுத்தியவனும், தேடிச் சென்று இராவணனை அழித்தவனுமாகிய ராமனின் மருகனே, ஞான தேசிகனே, சற் குருவே, உத்தமனனாவனே, வேலவனே, நெருவூரில் வீற்றிருக்கும் ஞான மூர்த்தியே, திருச்செங்கோட்டில்** புகழ் பெற விளங்கி நிற்கும் பெருமாளே. 
* நெருவைப்பதி என்பது நெருவூர். கருவூருக்கு அருகே உள்ளது.
** திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து 6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது.மலை பாம்பின் உருவில் இருப்பதால் நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' - என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.

பாடல் 598 - திருச்செங்கோடு 
ராகம் - சங்கராபரணம் ; தாளம் - திஸ்ர ஏகம் - 3

தான தனத் ...... தனதான

காலனிடத் ...... தணுகாதே 
காசினியிற் ...... பிறவாதே 
சீலஅகத் ...... தியஞான 
தேனமுதைத் ...... தருவாயே 
மாலயனுக் ...... கரியானே 
மாதவரைப் ...... பிரியானே 
நாலுமறைப் ...... பொருளானே 
நாககிரிப் ...... பெருமாளே.

யமனுடைய ஊரை நெருங்காத வகைக்கும், இந்தப் பூமியில் மீண்டும் பிறவாத வகைக்கும், நற்குணம் வாய்ந்த அகத்திய முநிவருக்கு நீ அருளிய ஞானோபதேசம் என்ற தேன் போன்று இனிக்கும் நல்லமிர்தத்தை எனக்கும் தந்தருள்க. திருமாலுக்கும் பிரமனுக்கும் அரியவனே, சிறந்த தவசிரேஷ்டர்களை விட்டுப் பிரியாதவனே, நான்கு வேதங்களின் மறை பொருளாக உள்ளவனே, நாககிரியாகிய திருச்செங்கோட்டில்* எழுந்தருளியுள்ள பெருமாளே. 
* திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து 6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது.மலை பாம்பின் உருவில் இருப்பதால் நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' - என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.

பாடல் 599 - திருச்செங்கோடு 
ராகம் - ...; தாளம் -

தானா தானா தானா தானா     தானா தானத் ...... தனதான

தாமா தாமா லாபா லோகா     தாரா தாரத் ...... தரணீசா 
தானா சாரோ பாவா பாவோ     நாசா பாசத் ...... தபராத 
யாமா யாமா தேசா ரூடா     யாரா யாபத் ...... தெனதாவி 
யாமா காவாய் தீயே னீர்வா     யாதே யீமத் ...... துகலாமோ 
காமா காமா தீனா நீணா     காவாய் காளக் ...... கிரியாய்கங் 
காளா லீலா பாலா நீபா     காமா மோதக் ...... கனமானின் 
தேமார் தேமா காமீ பாகீ     தேசா தேசத் ...... தவரோதுஞ் 
சேயே வேளே பூவே கோவே     தேவே தேவப் ...... பெருமாளே.

மாலையை உடையவனே, இனிமையாக உரையாடுபவனே, உலகுக்கு ஆதாரமாக உள்ளவனே, நீர், மண் முதலிய ஐந்து பூதங்களுக்கும் ஈசனே, கொடை அளிக்கும் ஒழுக்கம் உள்ளவர்களால் தியானிக்கப் படுபவனே, பாவ நாசனே, பாசங்களில் பற்று வைத்ததின் அபராதமாக தெற்கில் உள்ள யமபுரியைச் சேர்ந்தவர்களிடையே, ஆராய்ச்சி இல்லாமல் ஆபத்தான நிலையை என்னுடைய உயிர் அடைதல் ஆகுமோ? என்னைக் காத்து அருள்வாய். கெட்டவனாகிய நான் நற் குணம் வாய்க்காமல் சுடுகாட்டைத் தீயைத் தாவிச் சேர்தல் நன்றோ? அன்பனே, அடியார்கள் விரும்புவதை அளிப்பவனே, நீண்ட நாக கிரி என்னும் திருச்செங்கோட்டில்* வீற்றிருப்பவனே, எலும்பு மாலையை விளையாட்டாக அணியும் சிவனின் குழந்தையே, கடப்ப மாலை அணிந்தவனே, மிகுந்த விருப்பமுள்ள, பெருமை பொருந்திய மான் போன்ற வள்ளியின் தேன் கலந்த இனிய தினை மாவில் விருப்பம் உள்ளவனே, தகுதி வாய்ந்தவனே, ஒளி உள்ளவனே, உலகத்தோர் போற்றும் குழந்தையே, தலைவனே, பொலிவு உடையவனே, அரசனே, தேவனே, தேவர்களுடைய பெருமாளே. 
இது வேண்டுகோள் எதுவும் அற்ற ஒரு துதிப் பாடல். வட மொழிச் சொற்களும், சந்திகளும் நிறைந்தது.* திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து 6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது. மலை பாம்பின் உருவில் இருப்பதால் நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' - என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.

பாடல் 600 - திருச்செங்கோடு 
ராகம் - ...; தாளம் -

தத்த தனதனன தத்த தனதனன     தத்த தனதனன ...... தனதானஅத்து கிரினலத ரத்து அலனவள     கத்து வளர்செய்புள ...... கிதபூத 
ரத்தி ருகமலக ரத்தி தயமுருகி     யத்தி யிடனுறையு ...... நெடுமாம 
ரத்து மலர்கனிய லைத்து வருமிடைத     லத்து ரகசிகரி ...... பகராதே 
யத்தி மலவுடல்ந டத்தி யெரிகொள்நிரை     யத்தி னிடையடிமை ...... விழலாமோ 
தத்து கவனவரி ணத்து வுபநிடவி     தத்து முநியுதவு ...... மொழியாறுத் 
தத்தை நறவையமு தத்தை நிகர்குறவர்     தத்தை தழுவியப ...... னிருதோளா 
தத்து ததிதுரக தத்து மிகுதிதிசர்     தத்து மலையவுணர் ...... குலநாகந் 
தத்த மிசைமரக தத்த மனியமயில்     தத்த விடுமமரர் ...... பெருமாளே.

(விலைமாதரின்) அந்தப் பவளம் போன்ற சிவந்த உதட்டிலும், இருள் போன்ற கூந்தலிலும், மிகுந்த மகிழ்ச்சி தரக்கூடிய மார்பகங்களிலும், இரண்டு தாமரை போன்ற கைகளிலும் மனம் உருகி, கடலிடை இருந்த பெரிய மாமரத்தினுடைய (சூரனுடைய) மலரையும் பழத்தையும் கலக்கி (அதாவது சூரனைக் கொன்று) பிறகு வந்து அமர்ந்தருளிய தலமாகிய பாம்பு மலையை (திருச்செங்கோட்டை)* ஓதித் துதியாமல், எலும்பும் மலமும் கூடிய உடலைச் சுமந்து, எரிகின்ற நரகத்தில் அடிமையாகிய நான் விழலாமோ? வேகமான நடையை உடைய பெண்மானிடத்தில் வேத ஒழுக்கம் உடைய சிவ முநிவர் தந்த வார்த்தையால் (பிறந்தவளும்), பாலையும், தேனையும், அமுதத்தையும் ஒத்த இனிய மொழியை உடையவளும், குறவர் பெண்ணாகிய கிளி போன்றவளுமான வள்ளியை அணைந்த பன்னிரண்டு தோள்களை உடையவனே, அலை வீசும் கடல் போல, குதிரைப் படையை மிக வேகமாகச் செலுத்தும் அசுரர்களும், யுத்தகளத்தில் பாய்ந்து போரிடும் அவுணர்களும், குலவரைகள் எட்டும் நடுங்க, அவர்கள் மீது பசும் பொன் மயமான மயிலைப் பாய விட்டவனே, தேவர்களின் பெருமாளே. 
* திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து 6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது.மலை பாம்பின் உருவில் இருப்பதால் நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' - என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.

by Swathi   on 28 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.