LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- அருணகிரிநாதர் நூல்கள்

திருப்புகழ்-பாடல்-[76-100]

பாடல் 76 - திருச்செந்தூர்
ராகம் - பந்துவராளி ; தாளம் - அங்கதாளம் - 7 1/2 
- எடுப்பு 1/2 அக்ஷரம் தள்ளி 
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமி-2
தனதனன தான தான தந்தன
     தனதனன தான தான தந்தன
          தனதனன தான தான தந்தன ...... தந்ததான
படர்புவியின் மீது மீறி வஞ்சர்கள்
     வியனினுரை பானு வாய்வி யந்துரை
          பழுதில்பெரு சீல நூல்க ளுந்தெரி ...... சங்கபாடல் 
பனுவல்கதை காவ்ய மாமெ ணெண்கலை
     திருவளுவ தேவர் வாய்மை யென்கிற
          பழமொழியை யோதி யேயு ணர்ந்துபல் ...... சந்தமாலை 
மடல்பரணி கோவை யார்க லம்பக
     முதலுளது கோடி கோள்ப்ர பந்தமும்
          வகை வகையி லாசு சேர்பெ ருங்கவி ...... சண்டவாயு 
மதுரகவி ராஜ னானென் வெண்குடை
     விருதுகொடி தாள மேள தண்டிகை
          வரிசையொடு லாவு மால கந்தைத ...... விர்ந்திடாதோ 
அடல்பொருது பூச லேவி ளைந்திட
     எதிர்பொரவொ ணாம லேக சங்கர
          அரஹர சிவாம ஹாதெ வென்றுனி ...... அன்றுசேவித் 
தவனிவெகு கால மாய்வ ணங்கியு
     ளுருகிவெகு பாச கோச சம்ப்ரம
          அதிபெல கடோர மாச லந்தர ...... னொந்துவீழ 
உடல்தடியு மாழி தாவெ னம்புய
     மலர்கள்தச நூறு தாளி டும்பக
          லொருமலரி லாது கோவ ணிந்திடு ...... செங்கண்மாலுக் 
குதவியம கேசர் பால இந்திரன்
     மகளைமண மேவி வீறு செந்திலி
          லுரியஅடி யேனை யாள வந்தருள் ...... தம்பிரானே.
பரந்துள்ள இப்பூமியில் அளவுக்கு மிஞ்சி வஞ்சனை உள்ள லோபியர்களிடம் (பொருள் பெறுதற்கு அவர்களைச்) சிறப்பாக சூரியனே என்று பாராட்டிக் கூறியும், குற்றம் இல்லாத பெரிய ஒழுக்க நூல்களையும், தெரியவேண்டிய சங்க நூல் பாடல்களையும், வரலாற்று நூல்களையும், கதைகளையும், காப்பியங்களையும், அறுபத்து நான்கு கலை நூல்களையும், திருவள்ளுவ தேவர் அருளிய பொய்யாமொழி ஆகிய திருக்குறள் முதலிய பழமொழி நூல்களை ஓதியும் உணர்ந்தும், பலவகையான சந்த மாலைச் செய்யுட்கள், மடல், பரணி, கோவையார், கலம்பகம் முதலான கோடிக்கணக்கான பிரபந்தங்களை வகைவகையாய்ப் பாடி, பெருமைமிக்க ஆசுகவி, சண்டமாருதன், மதுரகவிராஜன் நான் என்று (புலவர்கள் தம்மைத் தாமே கூறிக்கொண்டு), வெண் குடை, வெற்றிக் கொடி, தாளம், மேளம், பல்லக்கு முதலான சிறப்புச் சின்னங்களோடு உலவி வரும் மயக்க அறிவும், அகங்காரமும் அவர்களை விட்டு நீங்காவோ? (ஜலந்தராசுரனுடன்) வலிமையுடன் போர் செய்து பெரிய ஆரவாரம் உண்டாக அவனுடன் எதிர் நின்று போர் செய்ய முடியாமல் புறந்தந்து (திருமால்) சென்று, சங்கரா, அரகர சிவா மகா தேவா என்று தியானித்து அன்று ஆராதனை புரிந்து, மண்ணுலகில் வெகு காலமாகத் தொழுது, மனம் உருகி, கொடிய பாசக் கயிறு, கவசம் முதலிய சிறப்பான ஆயுதங்களும், மிக்க வலிமையும் கொடுமையும் உள்ள பெரும் ஜலந்தரன் வருந்தி விழுமாறு அவனுடைய உடலைப் பிளக்கவல்ல சக்கரத்தைத் தந்தருள்வீர் என்று வேண்டி, தாமரை மலர்கள் ஆயிரம் கொண்டு (சிவனுடைய) திருப்பாதங்களில் பூஜித்து வந்த அந்த நாட்களில் (ஒரு நாள்), ஒரு மலர் இல்லாது குறைந்துபோக, (அதற்கு ஈடாகத் தன்) கண்ணையே எடுத்து அர்ச்சித்த சிவந்த கண்ணுடைய திருமாலுக்கு அந்தச் சக்ராயுதத்தையே உதவி அருளிய* மகா தேவருடைய குழந்தையே, இந்திரன் பெண்ணாகிய தேவயானையை திருமணம் செய்து கொண்டு, பெருமை நிறைந்த திருச்செந்தூரில் (உன்னிடம்) உரிமை பூண்ட அடியேனாகிய என்னை ஆட்கொள்ளும் பொருட்டு வந்தருளிய பெரும் தலைவனே. 
* திருவீழிமிழலைப் புராணம்:திருமால் ஆகிய தேவர்களை வென்ற பின், வலிமை வாய்ந்த ஜலந்திரன் என்னும் அசுரன் சிவ பெருமானையும் வெல்ல கயிலைக்குச் சென்றான். சிவன் ஒரு மறையவனாகத் தோன்றி, ஒரு சக்கரத்தை அமைத்து, நீ அந்த சக்கரத்தைத் தாண்டி வந்தால் கயிலைக்குப் போகலாம் என்றார். அவன் அதை எடுக்கப் போனபோது கழுத்து அறுபட்டு மாண்டான். அந்தச் சக்கரத்தை அடைய திருமால் சிவனை தினமும் ஆயிரம் மலர்களால் அர்ச்சித்துப் பூஜித்தார். ஒரு நாள் ஒரு பூ குறையவே தன் கண்ணையே மலராக இட்டுப் பூஜித்தார். பின்னர் சுதர்ஸன சக்கரத்தையும் சிவனிடமிருந்து பெற்றார்.
பாடல் 77 - திருச்செந்தூர்
ராகம் - ..........; தாளம் -
தனன தனதனந் தத்தத் தத்தத்
     தனன தனதனந் தத்தத் தத்தத்
          தனன தனதனந் தத்தத் தத்தத் ...... தனதான
பதும இருசரண் கும்பிட் டின்பக்
     கலவி நலமிகுந் துங்கக் கொங்கைப்
          பகடு புளகிதந் துன்றக் கன்றிக் ...... கயல்போலும் 
பரிய கரியகண் செம்பொற் கம்பிக்
     குழைகள் பொரமருண் டின்சொற் கொஞ்சிப்
          பதற விதமுறுங் கந்துக் கொந்துக் ...... குழல்சாயப் 
புதுமை நுதிநகம் பங்கத் தங்கத்
     தினிது வரையவெண் சந்தத் திந்துப்
          புருவ வெயர்வுடன் பொங்கக் கங்கைச் ...... சடைதாரி 
பொடிசெய் தருள்மதன் தந்த்ரப் பந்திக்
     கறிவை யிழவிடும் பண்புத் துன்பப்
          பொருளின் மகளிர்தம் மன்புப் பண்பைத் ...... தவிரேனோ 
திதிதி ததததந் திந்திந் தந்தட்
     டிடிடி டடடடண் டிண்டிட் டண்டத்
          தெனன தனதனந் தெந்தத் தந்தத் ...... தெனனானா 
திகுர்தி தகிர்ததிந் திந்தித் திந்தித்
     திரிரி தரரவென் றென்றொப் பின்றித்
          திமிலை பறையறைந் தெண்டிக் கண்டச் ...... சுவர்சோரச் 
சதியில் வருபெருஞ் சங்கத் தொங்கற்
     புயவ சுரர்வெகுண் டஞ்சிக் குஞ்சித்
          தலைகொ டடிபணிந் தெங்கட் குன்கட் ...... க்ருபைதாவென் 
சமர குமரகஞ் சஞ்சுற் றுஞ்செய்ப்
     பதியில் முருகமுன் பொங்கித் தங்கிச்
          சலதி யலைபொருஞ் செந்திற் கந்தப் ...... பெருமாளே.
தாமரை மலர் போன்ற இரண்டு பாதங்களையும் வணங்கி, இன்பம் தரும் கலவிச் சுகம் மிக்குள்ள உயர்ந்த மார்பகப் பரப்பு புளகிதம் கொள்ள, சினக் குறிப்புள்ள கயல் மீன் போன்ற பெரிய கரு நிறம் கொண்ட கண்கள் (காதிலுள்ள) செம்பொன் கம்பியில் பொருத்தப்பட்ட குண்டலங்களைத் தாக்க, மருட்சியுடன் இனிய மொழிகள் கொஞ்சி பதட்டத்துடன் வெளிவர, விதம் விதமாக பிணைக்கப்பட்ட பூங்கொத்துக் கொண்ட கூந்தல் சரிய, புதிய வகையில் நுனி நகத்தால் மிகவும் அழுத்தமாக (வந்தவரின்) உடலில் இனிதாக அடையாளங்களைச் செய்ய, மதிக்கத் தக்க அழகிய பிறை போன்ற புருவத்தில் வியர்வை மேலெழும்படி, கங்கையைச் சடையில் தரித்த சிவபெருமான் பொடியாக்கி அருளிய மன்மதனுடைய படையாகிய வஞ்சக (விலை மகளிர்) கூட்டத்துக்கு எனது அறிவைத் தொலைக்கும் மனப்பான்மையையும், துன்பம் தரும் வேசியர் மேல் அன்பு கொள்ளும் பண்பையும் தவிர்க்க மாட்டேனோ? திதிதி ததததந் திந்தித் தந்தட் டிடிடி டடடடண் டிண்டிட் டண்டத் தெனன தனதனந் தெந்தத் தந்தத் தெனனானா திகுர்தி தகிர்ததிந் திந்தித் திந்தித் திரிரி தர என்று இவ்வாறான ஒலிகளை பலமுறை ஒப்பில்லாத வகையில் எழுப்பி, திமிலை என்னும் பறையை ஒலித்து எட்டுத் திசைகளும் அண்டத்தின் சுவர்களும் சோர்ந்து போகும்படி, வஞ்சனை எண்ணத்துடன் வந்த பெரிய கூட்டமான, மாலை அணிந்த புயங்களை உடைய, அசுரர்கள் (முதலில்) கோபித்துப் (பின்பு) பயந்தும், மயிர்த் தலையுடன் உனது திருவடியில் பணிந்து, எங்களுக்கு உன் கடைக் கண் திருவருளைத் தருவாயாக என்று கேட்கும்படிக்கு போர் செய்தவனே, குமரனே, தாமரைத் தடாகங்கள் பல சூழ்ந்துள்ள வயலூர் முருகனே, எதிரே பொங்கியும் தங்கியும் கடலின் அலைகள் கரைகளில் தாக்குகின்ற திருச்செந்தூர்ப் பதியில் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே. 
பாடல் 78 - திருச்செந்தூர்
ராகம் - தேவகாந்தாரி ; தாளம் - சதுஸ்ர அட - 12 
- எடுப்பு 1/2 இடம்
தனதன தனதன தந்தத் தந்தத் ...... தனதானா
     தனதன தனதன தந்தத் தந்தத் ...... தனதானா
பரிமள களபசு கந்தச் சந்தத் ...... தனமானார்
     படையம படையென அந்திக் குங்கட் ...... கடையாலே 
வரியளி நிரைமுரல் கொங்குக் கங்குற் ...... குழலாலே
     மறுகிடு மருளனை யின்புற் றன்புற் ...... றருள்வாயே 
அரிதிரு மருகக டம்பத் தொங்கற் ...... றிருமார்பா
     அலைகுமு குமுவென வெம்பக் கண்டித் ...... தெறிவேலா 
திரிபுர தகனரும் வந்திக் குஞ்சற் ...... குருநாதா
     ஜெயஜெய ஹரஹர செந்திற் கந்தப் ...... பெருமாளே.
நறுமணம் மிக்க சந்தனக் கலவைகளின் வாசனை வீசும் அழகிய மார்பினை உடைய பெண்களின், படைகளிலேயே மிகக் கொடிய யமபடைக்கு ஒப்பாக கடைக்கண்ணால் சந்திக்கின்ற பார்வையாலும், கோடுகளை உடைய வண்டுகளின் கூட்டம் ஒலிக்கின்ற பூவாசம் மிகுந்த கரும் கூந்தலின் அழகாலும், மயங்கித் திரிகின்ற அடியேனை, இன்பத்துடனும், பிரியமாகவும் ஆட்கொண்டு அருள்வாயாக. திருமாலுக்கும் லக்ஷ்மிக்கும் மருமகனே, கடம்ப மாலையை அணிந்துள்ள திருமார்பனே, அலைகள் குமுகுமுவென கொதித்துப் பொங்குமாறு கடலினைக் கோபித்து வேலினைச் செலுத்தியவனே*, முப்புரத்தை எரித்த சிவனார் கும்பிடும் உத்தம குருநாதா, வெற்றியை உடையவனே, பாவத்தை நீக்குபவனே, திருச்செந்தூரில் எழுந்தருளிய கந்தப் பெருமாளே. 
* இறுதிப் போரில் சூரன் மாமரமாகி கடலுள் ஒளிய, முருகன் கடல் மீது கோபமாக வேலினை விட்டான்.
பாடல் 79 - திருச்செந்தூர்
ராகம் - ....; தாளம் -
தனத்தந்தத் தனத்தந்தத்
     தனத்தந்தத் தனத்தந்தத்
          தனத்தந்தத் தனத்தந்தத் ...... தனதான
பருத்தந்தத் தினைத்தந்திட்
     டிருக்குங்கச் சடர்த்துந்திப்
          பருக்கும்பொற் ப்ரபைக்குன்றத் ...... தனமானார் 
பரிக்குந்துற் சரக்கொன்றத்
     திளைத்தங்குற் பலப்பண்பைப்
          பரக்குஞ்சக் கரத்தின்சத் ...... தியைநேரும் 
துரைச்செங்கட் கடைக்கொன்றிப்
     பெருத்தன்புற் றிளைத்தங்குத்
          துணிக்கும்புத் தியைச்சங்கித் ...... தறியேனைத் 
துணைச்செம்பொற் பதத்தின்புற்
     றெனக்கென்றப் பொருட்டங்கத்
          தொடுக்குஞ்சொற் றமிழ்த்தந்திப் ...... படியாள்வாய் 
தருத்தங்கப் பொலத்தண்டத்
     தினைக்கொண்டச் சுரர்க்கஞ்சத்
          தடத்துன்பத் தினைத்தந்திட் ...... டெதிர்சூரன் 
சமர்க்கெஞ்சிப் படித்துஞ்சக்
     கதிர்த்துங்கத் தயிற்கொண்டத்
          தலத்தும்பர்ப் பதிக்கன்புற் ...... றருள்வோனே 
திருக்கஞ்சத் தனைக்கண்டித்
     துறக்கங்குட் டிவிட்டுஞ்சற்
          சிவக்கன்றப் பொருட்கொஞ்சிப் ...... பகர்வோனே 
செயத்துங்கக் கொடைத்துங்கத்
     திருத்தங்கித் தரிக்கும்பொற்
          றிருச்செந்திற் பதிக்கந்தப் ...... பெருமாளே.
பருத்த யானையின் தந்தத்தைப் போல் இருந்து, கச்சை மீறித் தள்ளி, பருத்து எழும், பொன் ஒளி கொண்ட மலை போன்ற மார்பகங்களை உடைய மாதர்களின், கொடுமையைத் தாங்கும் சரத்துக்கு (அம்புக்கு) ஒத்ததாக விளங்கி, அங்கு நீலோற்பல மலரின் அழகையும் தோற்க வைத்து, (திருமாலின்) சக்கரப் படை போலவும், (முருகனின்) சக்தி வேல் போலவும் வேகம் கொண்ட செவ்விய கடைக் கண்ணின் வலையில் வீழ்ந்து, பேரன்பு கொண்டு இளைத்து அங்கு அழிபடும் புத்தியைச் சந்தேகித்து அறியாத என்னை உனது இரண்டு செம்பொன் பாதங்களில் இன்புறச் செய்து, எனக்கு எப்போதும் அப்பெரும் பொருள் நிரம்பத் தங்கும்படி தொடுக்கப்படும் தமிழ்ச் சொற்களைத் தந்து இப்போதே ஆண்டு அருள்வாய். கற்பக மரங்கள் உள்ள அந்தப் பொன்னுலகத்தைக் கவர்ந்து, அந்தத் தேவர்கள் அஞ்சும்படி பெருந் துன்பங்களை அவர்களுக்குத் தந்து, போரில் உன்னை எதிர்த்து வந்த சூரன் போரில் தாழ்ந்து குறைவுபட்டு அழிய, ஒளியும் தூய்மையும் கொண்ட வேல் கொண்டு மடியச்செய்து, அந்த விண்ணுலக தேவர் தலைவனாகிய இந்திரனிடம் அன்புற்று அருள் புரிந்தவனே, அழகிய தாமரையில் இருக்கும் பிரமனை கண்டித்து, (ப்ரணவத்துக்கு பொருள் தெரியாததால்) அழுந்தும்படி குட்டி விட்டு, நல்ல சிவபிரானுக்கு அன்று அந்த மூலப் பொருளை அன்புடன் உபதேசித்தவனே, வெற்றித் தூய்மை, கொடைத் தூய்மை, செல்வம் ஆகியவை நிலை பெற்று விளங்கும் அழகிய திருச்செந்தூர்ப் பதியில் உள்ள கந்தப் பெருமாளே. 
பாடல் 80 - திருச்செந்தூர்
ராகம் - ....; தாளம் -
தான தானனந் தானனந் தானதன
     தான தானனந் தானனந் தானதன
          தான தானனந் தானனந் தானதன ...... தந்ததானா
பாத நூபுரம் பாடகஞ் சீர்கொள்நடை
     யோதி மோகுலம் போலசம் போகமொடு
          பாடி பாளிதங் காருகம் பாவையிடை ...... வஞ்சிபோலப் 
பாகு பால்குடம் போலிரண் டானகுவ
     டாட நீள்வடஞ் சேரலங் காரகுழல்
          பாவ மேகபொன் சாபமிந் தேபொருவ ...... ரந்தமீதே 
மாதர் கோகிலம் போல்கரும் பானமொழி
     தோகை வாகர்கண் டாரைகொண் டாடிதகை
          வாரும் வீடெயென் றோதிதம் பாயல்மிசை ...... யன்புளார்போல் 
வாச பாசகஞ் சூதுபந் தாடஇழி
     வேர்வை பாயசிந் தாகுகொஞ் சாரவிழி
          வாகு தோள்கரஞ் சேர்வைதந் தாடுமவர் ...... சந்தமாமோ 
தீத தோதகந் தீததிந் தோதிதிமி
     டூடு டூடுடுண் டூடுடுண் டூடுடுடு
          டீகு டீகுகம் போலவொண் பேரிமுர ...... சங்கள்வீறச் 
சேடன் மேருவுஞ் சூரனுந் தாருகனும்
     வீழ ஏழ்தடந் தூளிகொண் டாடமரர்
          சேசெ சேசெயென் றாடநின் றாடிவிடு ...... மங்கிவேலா 
தாதை காதிலங் கோதுசிங் காரமுக
     மாறும் வாகுவுங் கூரசந் தானசுக
          தாரி மார்பலங் காரியென் பாவைவளி ...... யெங்கள்மாதைத் 
தாரு பாளிதஞ் சோரசிந் தாமணிக
     ளாட வேபுணர்ந் தாடிவங் காரமொடு
          தாழை வானுயர்ந் தாடுசெந் தூரிலுறை ...... தம்பிரானே.
பாதச் சிலம்பு கால் அணி இவைகளுடன் சீரான நடையுடன் அன்னப் பறவைகளின் கூட்டம் நடப்பது போல விளங்கவும், சேர்க்கை இன்பம் கொண்டு மகிழவும், நன்கு நெய்யப்பட்ட பட்டாடை சூழ்ந்துள்ள அழகிய இடை வஞ்சிக் கொடி போல இப் பாவையொத்த பெண்கள் இலங்கவும், அழகிய பால் குடம் போன்ற இரண்டு மலையொத்த மார்பகங்கள் ஆடவும், நீண்ட மணி வடம் சேரவும், அலங்காரமான கூந்தல் பரந்த மேகத்தை ஒக்கவும், அழகிய வில் (புருவத்தையும்) பிறை (நெற்றியையும்) ஒப்பாகச் சொல்லும்படி இருப்பவரும், இவ்வாறான அழகைக் கொண்டு, குயில் போல இனிய குரலும், கரும்பான பேச்சையும், மயில் போன்ற அழகையும் கொண்டவரும், பார்த்தவர்களைக் கொண்டாடி மறித்து நிறுத்தி (எங்கள்) வீட்டுக்கு வாருங்கள் என்று சொல்லி இனிமையான பேச்சுக்களைப் பேசி படுக்கையின் மீது அன்புள்ளவர்கள் போல் நடித்து, மணத்தையும் பசுமையும் கொண்ட, சூதாடு கருவியை ஒத்ததான மார்பகங்கள் பந்து போல ஆடவும், வழிகின்ற வேர்வை உடலில் பாய, கடல் போன்றதும் கொஞ்சுதல் நிறைந்ததுமான கண்ணும், வாளிப்பான தோளும் கைகளும் ஒன்று பட சேரத் தந்து மகிழ்ந்து ஆடுபவர்களாகிய விலைமாதர்கள் மீது ஆசை கொள்ளுதல் தகுமோ? தீத தோதகஞ் தீததிந் தோதிதிமி டூடு டூடுடுண் டூடுடுண் டூடுடுடு டீகு டூகுகம் என்ற ஒலிகளுடன் ஒண்ணிய பேரிகைகளும் முரசங்களும் பேரொலி செய்ய, ஆதி சேஷனும், மேரு மலையும், சூரனும், தாரகாசுரனும் வீழ்ந்திட, ஏழு மலைகளும் தூள் தூள் ஆகி ஆட, தேவர்கள் ஜே ஜே ஜே ஜே என்று ஆட, விளங்கி நின்று, கூத்தாடிச் செலுத்திய நெருப்புப் போன்ற வேற் படையை உடையவனே, தந்தையாகிய சிவபெருமான் காதில் அங்கே ஓதிய சிங்காரமான ஆறு திரு முகங்களும் தோள்கள் பன்னிரண்டும் பூரிக்க, வழி வழி இன்பம் தரும் சுகத்தைக் கொண்டவளும், மார்பில் அலங்காரம் கொண்டவளும், எனது அருமைப் பதுமை போன்றவளுமாகிய வள்ளி நாயகி என்னும் எங்கள் மாதுடன், மரச் சோலைகளிடையே பட்டாடை சோர அணிந்துள்ள கோக்கப்பட்ட மணி வடங்கள் சப்தித்து ஆட சேர்க்கை இன்பம் துய்த்து, செழிப்புடன் வளர்ந்த தென்னைகள் வான் அளாவி ஓங்கும் திருச் செந்தூரில் வீற்றிருக்கும் தம்பிரானே. 
பாடல் 81 - திருச்செந்தூர்
ராகம் - ரஞ்சனி; தாளம் - ஆதி - திஸ்ர நடை - 12
தனனத் தந்தத் தனனத் தந்தத்
     தனனத் தந்தத் ...... தனதான
புகரப் புங்கப் பகரக் குன்றிற்
     புயலிற் றங்கிப் ...... பொலிவோனும் 
பொருவிற் றஞ்சச் சுருதிச் சங்கப்
     பொருளைப் பண்பிற் ...... புகல்வோனும் 
திகிரிச் செங்கட் செவியிற் றுஞ்சத்
     திகிரிச் செங்கைத் ...... திருமாலும் 
திரியப் பொங்கித் திரையற் றுண்டுட்
     டெளிதற் கொன்றைத் ...... தரவேணும் 
தகரத் தந்தச் சிகரத் தொன்றித்
     தடநற் கஞ்சத் ...... துறைவோனே 
தருணக் கொங்கைக் குறவிக் கின்பத்
     தையளித் தன்புற் ...... றருள்வோனே 
பகரப் பைம்பொற் சிகரக் குன்றைப்
     படியிற் சிந்தத் ...... தொடும்வேலா 
பவளத் துங்கப் புரிசைச் செந்திற்
     பதியிற் கந்தப் ...... பெருமாளே.
புள்ளிகளை உடையதும் தூய்மையானதும் அழகியதுமான மலையை ஒத்த ஐராவத யானையின் மேலும் மேகத்தின் மேலும் தங்கிப் பொலிகின்ற தேவேந்திரனும், இணையற்றதும், எல்லாக் கலைகளுக்கும் தஞ்சமானதும் ஆகிய வேதத் தொகுப்புகளின் பொருளை முறையாக மொழிபவராகிய பிரமதேவனும், மலை போன்றதும், செம்மைப் பண்புடையதுமான ஆதிசேஷன் மீது துயின்ற அந்தச் செங்கையில் சக்ராயுதத்தை ஏந்திய நாராயணமூர்த்தியும், தமக்கு இந்த உபதேசம் கிடைக்கவில்லையே என்று இங்கும் அங்கும் திரிந்திடவும், உவகை பொங்கி, உள்ளத்தில் எண்ண அலைகள் நீங்கி, சிவானுபவத்தை உட்கொண்டு, என் உள்ளம் தெளியுமாறு ஒரு மொழியை உபதேசித்து அருள வேண்டும். தகராகாசமாக இருந்து* அழகிய வேதசிரோமுடியாம் பேரிடத்தைப் பொருந்தி, அகன்ற நல்லிடமான இதயக் கமலத்தில் வீற்றிருப்பவனே, இளமையான மார்பகங்களை உடைய குறப்பெண் வள்ளிக்கு பேரின்பத்தை வழங்கி அவள்மீது அன்புகொண்டு அருள்பவனே, ஒளியுடைய பசும்பொற் சிகரங்களைக் கொண்ட கிரெளஞ்சமலையை இந்தப் பூமியின் கண் பொடியாகுமாறு தொடுத்தருளிய வேலாயுதனே, பவளம் போன்று சிவந்த தூய மதில்கள் சூழ்ந்த திருச்செந்தூர்த் தலத்தில் எழுந்தருளிய கந்தப் பெருமாளே. 
* ஆன்மாக்களின் இதய தாமரைக்கு நடுவே ஞானமயமாக விளங்கும் ஆகாயம் 'தகராகாசம்' எனப்படும்.
பாடல் 82 - திருச்செந்தூர்
ராகம் - .....; தாளம் -
தானன தான தந்த தானன தான தந்த
     தானன தான தந்த தானன தான தந்த
          தானன தான தந்த தானன தான தந்த ...... தனதான
பூரண வார கும்ப சீதப டீர கொங்கை
     மாதர் விகார வஞ்ச லீலையி லேயு ழன்று
          போதவ மேயி ழந்து போனது மான மென்ப ...... தறியாத 
பூரிய னாகி நெஞ்சு காவல்ப டாத பஞ்ச
     பாதக னாய றஞ்செ யாதடி யோடி றந்து
          போனவர் வாழ்வு கண்டு மாசையி லேய ழுந்து ...... மயல்தீரக் 
காரண காரி யங்க ளானதெ லாமொ ழிந்து
     யானெனு மேதை விண்டு பாவக மாயி ருந்து
          காலுட லுடி யங்கி நாசியின் மீதி ரண்டு ...... விழிபாயக் 
காயமு நாவு நெஞ்சு மோர்வழி யாக அன்பு
     காயம்வி டாம லுன்ற னீடிய தாள்நி னைந்து
          காணுதல் கூர்த வஞ்செய் யோகிக ளாய்வி ளங்க ...... அருள்வாயே 
ஆரண சார மந்த்ர வேதமெ லாம்வி ளங்க
     ஆதிரை யானை நின்று தாழ்வனெ னாவ ணங்கு
          மாதர வால்வி ளங்கு பூரண ஞான மிஞ்சு ...... முரவோனே 
ஆர்கலி யூடெ ழுந்து மாவடி வாகி நின்ற
     சூரனை மாள வென்று வானுல காளு மண்ட
          ரானவர் கூர ரந்தை தீரமு னாள்ம கிழ்ந்த ...... முருகேசா 
வாரண மூல மென்ற போதினி லாழி கொண்டு
     வாவியின் மாடி டங்கர் பாழ்பட வேயெ றிந்த
          மாமுகில் போலி ருண்ட மேனிய னாமு குந்தன் ...... மருகோனே 
வாலுக மீது வண்ட லோடிய காலில் வந்து
     சூல்நிறை வான சங்கு மாமணி யீன வுந்து
          வாரிதி நீர்ப ரந்த சீரலை வாயு கந்த ...... பெருமாளே.
நிறைந்து, கச்சு அணிந்த, கும்பம் போன்ற, குளிர்ந்த சந்தனக் கலவை அணிந்த மார்பகங்களை உடைய விலைமாதர்களுடைய அவலட்சணமான, வஞ்சகமான ஆடல் பாடல்களில் அலைப்புண்டு, பொழுதை வீணாக இழந்து, மானம் போய் விட்டது என்பதை அறியாத கீழ் மகனாகி, மனத்தால், கட்டுக்கு அடங்காத ஐம்பெரும் பாதகங்களைச் செய்தவனாக, தருமமே செய்யாமல் அடியோடு இறந்து போனவர்களுடைய வாழ்வைப் பார்த்தும், ஆசையில் அழுந்தும் (எனது) மயக்கம் ஒழியும்படி, காரணம், காரியம் ஆகிய நிகழ்ச்சிகள் எல்லாம் ஒழிந்து, நான் என வரும் ஆணவம் நீங்கி, தூயவனாக இருந்து, பிராண வாயு உடலின் பல பாகங்களுக்கு ஓடி, மூக்கின் மேல் இரண்டு விழி முனைகளும் பாய, காயம், வாக்கு, மனம் என்னும் மூன்றும் ஒரு வழிப்பட, அன்பை உடலுள்ள அளவும் விடாமல், உனது அழிவற்ற திருவடிகளை நினைந்து, காட்சியைப் பெறுவதற்கு, மிக்க தவத்தைச் செய்கின்ற யோகிகளைப் போல் நான் விளங்கும்படி அருள் புரிவாயாக. வேதசாரமான மந்திரங்களும், வேதங்கள் எல்லாமும் விளங்கும்படியாக, (தேவாரப் பாக்களால்) திருவாதிரை நாளை உகந்துள்ள சிவபெருமானை எதிர் நின்று வணங்குவேன் என்று (உலகுக்குக் காட்டி) வணங்கும் அன்பினால் மேம்பட்ட பூரணமான ஞானம் மிக்க திருஞான சம்பந்தப் பெருமானே, கடலில் எழுந்து மாமர வடிவுடன் நின்ற சூரனை, அவன் இறக்கும்படி வென்று, வானுலகை ஆளுகின்ற தேவர்களுக்கு (உண்டான) பெரிய துன்பம் ஒழிய, முன்பொரு நாள் உதவி செய்து களிப்புற்ற முருகேசனே, யானை (கஜேந்திரன்) ஆதிமூலமே என்று அழைத்த போது சக்கரத்தை எடுத்து வந்து, மடுவில் இருந்த முதலை பாழ்படும்படி எறிந்த கரிய மேகம் போல் இருண்ட திரு மேனியை உடைய திருமாலின் மருகனே, வெண் மணலின் மீது வண்டல் ஓடிய வாய்க்கால் வழியாக வந்து, கருப்பம் நிறைந்த சங்குகள் சிறந்த முத்து மணிகளைப் பெறும்படியாக அலை வீசுகின்ற கடல் நீர் பரந்துள்ள திருச்சீரலைவாயில் (திருச்செந்தூரில்) மகிழ்ந்து வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 83 - திருச்செந்தூர்
ராகம் - .....; தாளம் -
தனத்தத்தந் தனத்தத்தந்
     தனத்தத்தந் தனத்தத்தந்
          தனத்தத்தந் தனத்தத்தந் ...... தனதான
பெருக்கச்சஞ் சலித்துக்கந்
     தலுற்றுப்புந் தியற்றுப்பின்
          பிழைப்பற்றுங் குறைப்புற்றும் ...... பொதுமாதர் 
ப்ரியப்பட்டங் கழைத்துத்தங்
     கலைக்குட்டங் கிடப்பட்சம்
          பிணித்துத்தந் தனத்தைத்தந் ...... தணையாதே 
புரக்கைக்குன் பதத்தைத்தந்
     தெனக்குத்தொண் டுறப்பற்றும்
          புலத்துக்கண் செழிக்கச்செந் ...... தமிழ்பாடும் 
புலப்பட்டங் கொடுத்தற்கும்
     கருத்திற்கண் படக்கிட்டும்
          புகழ்ச்சிக்குங் க்ருபைச்சித்தம் ...... புரிவாயே 
தருக்கிக்கண் களிக்கத்தெண்
     டனிட்டுத்தண் புனத்திற்செங்
          குறத்திக்கன் புறச்சித்தந் ...... தளர்வோனே 
சலிப்புற்றங் குரத்திற்சம்
     ப்ரமித்துக்கொண் டலைத்துத்தன்
          சமர்த்திற்சங் கரிக்கத்தண் ...... டியசூரன் 
சிரத்தைச்சென் றறுத்துப்பந்
     தடித்துத்திண் குவட்டைக்கண்
          டிடித்துச்செந் திலிற்புக்கங் ...... குறைவோனே 
சிறக்கற்கஞ் செழுத்தத்தந்
     திருச்சிற்றம் பலத்தத்தன்
          செவிக்குப்பண் புறச்செப்பும் ...... பெருமாளே.
(நான்) மிகவும் மனக் கலக்கம் அடைந்து, ஒழுக்கக் கேடு உடையவனாக, நற்புத்தி இல்லாமல், பின்னர் பிழைக்கும் வழியும் இல்லாமல் குறைபாடு உற்றுப் போகும்படி, விலை மகளிர் (என்னை) அன்பு கொண்டு தங்களிடம் அழைத்து தங்களுடைய காமக் கலைக்குள் சிக்கும்படி பரிவு காட்டுவது போலப் பிணித்து, தங்களுடைய மார்பகங்களைத் தந்து தழுவாத வண்ணம், என்னைக் காப்பதற்காக உனது திருவடியைத் தந்து நான் தொண்டு செய்து உன்னைப் பற்றும்படியான ஞானக் கண் (அறிவு நிலை) செழித்தோங்கவும், செந்தமிழ் பாடும் புலவன் என்னும் பட்டத்தை (உலகோர்) கொடுப்பதற்கும், ஞானக் கண் பெறக் கிட்டும்படியான புகழைப் பெறுவதற்கும் அருள் மனம் கொண்டு உதவுவாயாக. உள்ளம் பூரித்து கண் களிக்கும்படி தண்டனிட்டு வணங்கி குளிர்ந்த (தினைப்) புனத்தில் செவ்விய குறப் பெண்ணாகிய வள்ளிக்கு அன்பு பெருக மனம் தளர்ந்தவனே, (தேவர்கள்) சோர்வு அடையச் செய்து, அங்கு வலிமையைக் காட்டி, கர்வத்துடன் எழுந்து (அத்தேவர்களைப்) பிடித்து அலைத்து, தன்னுடைய திறமையால் அவர்களை அழித்து வருத்திய சூரனுடைய தலையைப் போய் அறுத்து, பந்தடிப்பது போல் அடித்து, அந்த வலிய (கிரவுஞ்ச) மலையைக் கண்டு அதைப் பொடியாக்கி, திருச் செந்தூரில் புகுந்து அங்கு வாழ்பவனே, (அனைவரும்) மேம்பாடுற ப்ரணவமாகிய (நமசிவாய என்ற) ஐந்தெழுத்தின் பொருளை, தில்லையில் கூத்தாடும் தந்தையின் காதில் முறைப்படி உபதேசித்த பெருமாளே. 
பாடல் 84 - திருச்செந்தூர்
ராகம் - ஹம்ஸாநந்தி; தாளம் - ஆதி - திஸ்ர நடை - 12
தந்த தனன தந்த தனன
     தந்த தனன ...... தனதான
மங்கை சிறுவர் தங்கள் கிளைஞர்
     வந்து கதற ...... வுடல்தீயின் 
மண்டி யெரிய விண்டு புனலில்
     வஞ்ச மொழிய ...... விழஆவி 
வெங்கண் மறலி தன்கை மருவ
     வெம்பி யிடறு ...... மொருபாச 
விஞ்சை விளைவு மன்று னடிமை
     வென்றி யடிகள் ...... தொழவாராய் 
சிங்க முழுவை தங்கு மடவி
     சென்று மறமி ...... னுடன்வாழ்வாய் 
சிந்தை மகிழ அன்பர் புகழு
     செந்தி லுறையு ...... முருகோனே 
எங்கு மிலகு திங்கள் கமல
     மென்று புகலு ...... முகமாதர் 
இன்பம் விளைய அன்பி னணையு
     மென்று மிளைய ...... பெருமாளே.
மனைவியும், மக்களும், தங்கள் சுற்றத்தார்களும், வந்து கதறி அழுது புலம்ப, உடம்பானது மயானத்தீயில் ஜ்வாலையுடன் எரிந்துகொண்டிருக்க, உறவினர் மயானத்தை விட்டு நீங்கி, பந்தம் என்ற மாயை நீங்குமாறு, நீரில் மூழ்கிக் குளிக்க, உயிரானது கொடுங்கண்களை உடைய யமனது கரத்தில் சிக்கிக்கொள்ள, மனம் புழுங்கித் துன்பப்படும் ஒரு பற்று என்னும் மாயக்கூத்து நிகழும் அந்த நாளில் உன் அடிமையாகிய சிறியேன் வெற்றி பொருந்திய உன் திருவடி மலர்களைத் தொழும்படி வந்தருள்வாயாக. சிங்கங்களும், புலிகளும் வாழும் காட்டிலே சென்று வேடப் பெண்ணாகிய வள்ளியுடன் வாழ்கின்றவனே, உள்ள மகிழ்ச்சியுடன் உன் அன்பர்கள் துதி செய்கிற திருச்செந்தூர் நகரில் எழுந்தருளிய முருகக் கடவுளே, எங்கும் விளங்கும் சந்திரனையும், தாமரையையும் ஒத்தது என்று உவமை கூறி புலவர்கள் புகழ்கின்ற திருமுகத்தை உடைய மாதர்களாம் தேவயானையையும், வள்ளியையும், உயிர்களுக்கு இன்பம் விளையுமாறு அன்போடு அணையும் எக்காலத்தும் இளமையோடு விளங்கும் பெருமாளே. 
பாடல் 85 - திருச்செந்தூர்
ராகம் - .....; தாளம் -
தந்த தந்தன தந்தன தந்தன
     தந்த தந்தன தந்தன தந்தன
          தந்த தந்தன தந்தன தந்தன ...... தந்ததான
மஞ்செ னுங்குழ லும்பிறை யம்புரு
     வங்க ளென்சிலை யுங்கணை யங்கயல்
          வண்டு புண்டரி கங்களை யும்பழி ......சிந்துபார்வை 
மண்ட லஞ்சுழ லுஞ்செவி யங்குழை
     தங்க வெண்டர ளம்பதி யும்பலு
          மண்ட லந்திக ழுங்கமு கஞ்சிறு ...... கண்டமாதர் 
கஞ்சு கங்குர லுங்கழை யம்புய
     கொங்கை செங்கிரி யும்பவ ளம்பொறி
          கந்த சந்தன மும்பொலி யுந்துகில் ...... வஞ்சிசேருங் 
கஞ்ச மண்டுளி னின்றிர சம்புகு
     கண்ப டர்ந்திட ரம்பையெ னுந்தொடை
          கண்கை யஞ்சர ணஞ்செயல் வஞ்சரை ...... நம்புவேனோ 
சஞ்ச சஞ்சக ணஞ்சக டுண்டுடு
     டுண்டு டிண்டிமி டண்டம டுண்டுடு
          தந்த னந்தன திந்திமி சங்குகள் ...... பொங்குதாரை 
சம்பு வின்கும ரன்புல வன்பொரு
     கந்த னென்றிடு துந்துமி யுந்துவ
          சங்க ளங்கொளி ருங்குடை யுந்திசை ...... விஞ்சவேகண் 
டஞ்ச வஞ்சசு ரன்திர ளுங்குவ
     டன்ற டங்கலும் வெந்துபொ ரிந்திட
          அண்ட ரிந்திர னுஞ்சர ணம்புக ...... வென்றவேளே 
அம்பு யந்தண ரம்பைகு றிஞ்சியின்
     மங்கை யங்குடில் மங்கையொ டன்புடன்
          அண்ட ருந்தொழு செந்திலி லின்புறு ...... தம்பிரானே.
மேகம் என்னும்படியான கரிய கூந்தல், பிறை போன்ற அழகிய புருவங்கள் எனப்படும் வில், அம்பு, அழகிய கயல் மீன், வண்டு, தாமரை இவைகளைப் பழித்து, தமது சிறப்பை வெளிக்காட்ட வல்ல கண்கள், நாட்டில் உள்ளவர்கள் கலங்கும்படியான காதில் உள்ள அழகிய குண்டலங்கள், பொருந்தியுள்ள வெண்மையான முத்துக்கள் பதித்தாற் போல் பற்கள், நெருங்கிய கலப்பையால் உழுது வளர்ந்த கமுகு போன்ற சிறிய அழகிய கழுத்துடைய பெண்கள், பேரின்பம் தரும் கிளி என்னும்படியான குரலாகிய புல்லாங்குழல், தாமரை போன்ற மார்பகங்கள் ஆகிய செவ்விய மலையில் பவள மாலை, தேமல், நறு மணம் கமழும் சந்தனம், விளங்குகின்ற ஆடை, வஞ்சிக் கொடி போன்ற இடை இவை துலங்க, பொருந்திய தாமரையின் நிறைந்த, உட்புறத்திலிருந்து வெளிப்பட்ட (காம) இன்பம் புகுந்துள்ள இடம், வாழை போன்ற தொடை, கண்கள், கைகள், அழகிய பாதங்கள், செயல்களும் (கூடிய) வஞ்சகம் நிறைந்த விலைமாதர்களை நான் நம்புவேனோ? சஞ்ச சஞ்சக ணஞ்சக டுண்டுடு டுண்டு டிண்டிமி டண்டம டுண்டுடு தந்த னந்தன திந்திமி இவ்வாறு ஒலித்த சங்குகளும், தாரைகளும், தப்பட்டைகளும், சிவபெருமானின் மகன், தமிழில் புலமை படைத்தவன், சண்டை செய்ய வல்ல கந்தன் என்றெல்லாம் ஒலிக்கும் பேரிகைகளும், கொடிகளும், அவ்விடத்தில் பிரகாசிக்கும் குடைகளும், திசைகளில் எல்லாம் மிகுந்து பொலியவே, அக்காட்சியைக் கண்டு, பயப்படும்படி வஞ்சகம் உள்ள சூரனுடைய சேனைகளும், கிரவுஞ்ச மலையும் ஆக அன்று எல்லாமும் வெந்து கரியாக, தேவர்களும், இந்திரனும் அடைக்கலம் என்று உன் திருவடியில் சரணடைய வெற்றி கொண்ட முருகு வேளே, தாமரையும், குளிர்ந்த வாழையும் நிறைந்துள்ள மலை நிலத்துப் பெண்ணாகிய வள்ளி, அழகிய விண்ணுலக மங்கை (தேவயானை ஆகிய) இவர்கள் இருவரோடு அன்புடன் தேவர்களும் தொழுகின்ற திருச்செந்தூரில் இன்புறுகின்ற தம்பிரானே. 
பாடல் 86 - திருச்செந்தூர்
ராகம் - பேகடா; தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2 
தகிட-1 1/2, தகதிமி-2
தனத்தந்தந் தனத்தந்தந்
     தனத்தந்தந் தனத்தந்தந்
          தனத்தந்தந் தனத்தந்தந் ...... தனதானா
மனத்தின்பங் கெனத்தங்கைம்
     புலத்தென்றன் குணத்தஞ்சிந்
          த்ரியத்தம்பந் தனைச்சிந்தும் ...... படிகாலன் 
மலர்ச்செங்கண் கனற்பொங்குந்
     திறத்தின்தண் டெடுத்தண்டங்
          கிழித்தின்றிங் குறத்தங்கும் ...... பலவோரும் 
எனக்கென்றிங் குனக்கென்றங்
     கினத்தின்கண் கணக்கென்றென்
          றிளைத்தன்புங் கெடுத்தங்கங் ...... கழிவாமுன் 
இசைக்குஞ்செந் தமிழ்க்கொண்டங்
     கிரக்கும்புன் றொழிற்பங்கங்
          கெடத்துன்பங் கழித்தின்பந் ...... தருவாயே 
கனைக்குந்தண் கடற்சங்கங்
     கரத்தின்கண் தரித்தெங்குங்
          கலக்கஞ்சிந் திடக்கண்துஞ் ...... சிடுமாலும் 
கதித்தொண்பங் கயத்தன்பண்
     பனைத்துங்குன் றிடச்சந்தங்
          களிக்குஞ்சம் புவுக்குஞ்செம் ...... பொருளீவாய் 
தினைக்குன்றந் தனிற்றங்குஞ்
     சிறுப்பெண்குங் குமக்கும்பந்
          திருச்செம்பொன் புயத்தென்றும் ...... புனைவோனே 
செழிக்குங்குண் டகழ்ச்சங்கங்
     கொழிக்குஞ்சந் தனத்தின்பைம்
          பொழிற்றண்செந் திலிற்றங்கும் ...... பெருமாளே.
மனம் செல்வதற்கு உண்டான வேறு வேறு வாயிலாகத் தங்கியுள்ள ஐந்து புலன்களிலும் தொடர்பு கொண்டுள்ள எனது குணமும், ஐந்து இந்திரியங்களைக் கட்டியுள்ள தூணாகிய இவ்வுடம்பும், சிதறிப் போகும்படியாக யமதூதனாகிய காலன் மலர் போன்ற கண்களில் நெருப்புப் பொறி எழ வலிமையோடு தண்டாயுதத்தை எடுத்துக் கொண்டு, ஆகாயத்தைக் கிழித்துக்கொண்டு இன்று இங்கே வர, குடும்பத்தில் தங்கியுள்ள சுற்றத்தார் பலரும் இது எனக்கு என்றும், அது உனக்கு என்றும், அந்த இனத்தில் உள்ளவர்களுக்கு இன்னின்ன கணக்கு என்றும் (சொத்துக்களைப் பிரித்து), கூறி இளைத்தும், அன்பைக் கெடுத்தும், எனது உடல் அழியும் முன்பு, புகழ் வாய்ந்த செந்தமிழ் மொழியைக் கொண்டு பொருளாளர்பால் சென்று யாசிக்கும் இழிதொழிலின் கேவலம் நீங்க, துன்பத்தைத் தொலைத்து இன்பத்தைத் தந்து அருள் புரிவாயாக. ஒலி செய்யும் குளிர்ந்த கடலில் பிறந்த பாஞ்சஜன்யம் என்ற வெண்சங்கை தனது திருக்கரத்திலே ஏந்தி உலகமெங்கும் உள்ள ஆன்மாக்களின் துயரம் நீங்கும் பொருட்டு அறிதுயில் புரிகின்ற திருமாலும், அந்தத் திருமாலின் உந்திக் கமலத்தில் தோன்றிய ஒளிவீசும் பிரமனும், அவர்களுடைய பெருமை யாவும் குறைவுபடுமாறு, சந்தப் பாடலைக் கேட்டு உள்ளம் மகிழும் சிவபிரானுக்கு செம்மைப் பொருளான பிரணவ மந்திரத்தின் உட்பொருளை உபதேசித்தவனே, தினைப்பயிர் விளையும் மலையாகிய வள்ளிமலையில் வசிக்கும் இளம்பெண் வள்ளியின் குங்குமம் பூசியுள்ள மார்பினை அழகிய செம்பொன் போன்ற தோள்களால் தழுவுவோனே, செழிப்புள்ள ஆழ்ந்த கடற்சங்குகளை ஏராளமாகக் கொழிப்பதும், சந்தன மரங்களை உடைய பசும் சோலைகளால் மிகவும் குளிர்ச்சியைக் கொண்டதுமான திருச்செந்தூர்ப் பதியில் வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 87 - திருச்செந்தூர்
ராகம் - .....; தாளம் -
தனதனன தந்த தனதனன தந்த
     தனதனன தந்த ...... தனதானா
மனைகனக மைந்தர் தமதழகு பெண்டிர்
     வலிமைகுல நின்ற ...... நிலையூர்பேர் 
வளரிளமை தஞ்ச முனைபுனைவ ளங்கள்
     வரிசைதம ரென்று ...... வருமாயக் 
கனவுநிலை யின்ப மதனையென தென்று
     கருதிவிழி யின்ப ...... மடவார்தம் 
கலவிமயல் கொண்டு பலவுடல்பு ணர்ந்து
     கருவில்விழு கின்ற ...... தியல்போதான் 
நினையுநின தன்பர் பழவினைக ளைந்து
     நெடுவரைபி ளந்த ...... கதிர்வேலா 
நிலமுதல்வி ளங்கு நலமருவு செந்தில்
     நிலைபெறஇ ருந்த ...... முருகோனே 
புனைமலர்பு னைந்த புனமறம டந்தை
     புளகஇரு கொங்கை ...... புணர்மார்பா 
பொருதுடனெ திர்ந்த நிருதர்மகு டங்கள்
     பொடிபடந டந்த ...... பெருமாளே.
வீடு, பொன், மக்கள், தம்முடைய அழகிய மனைவி முதலியோர், (தமது) வலிமை, குலம், சமூகத்தில் இருக்கும் நிலை, தம்முடைய ஊர், பேர், வளர்ச்சி உறும் இளமை, (தமக்குள்ள) பற்றுக்கோடு, துணிவு, அணியும் ஆபரணம் ஆகிய செல்வங்கள், மேம்பாடு, சுற்றத்தார் என்றெல்லாம் சொல்லப்படுகின்ற மாயமான கனவில் வருவதைப் போல நிலை இல்லாத சிற்றின்பத்தை எனது என்று நினைத்து, கண்ணால் இன்பம் ஊட்டும் மாதர்களுடைய கலவி மயக்கத்தைப் பூண்டு பல உடல்களைப் புணர்ந்து, பல பிறவிகள் எடுப்பது தக்கது ஆகுமோ? நினைக்கின்ற உன் அன்பர்களுடைய பழ வினைகளை நீக்கி, நீண்ட (கிரவுஞ்ச) மலையைப் பிளந்த, ஒளி வீசும் வேலனே, பூமியில் சிறப்புடன் முதல் இடமாக விளங்குகின்ற அழகைப் பெற்ற திருச்செந்தூர் தலம் நிலை பெறுமாறு வீற்றிருந்த முருகனே, அலங்காரத்துக்குத் தக்க மலர்களை அணிந்த (வள்ளிமலையின் தினைப்) புனத்தில் இருந்த வேடப் பெண்ணாகிய வள்ளியின் புளகிதம் கொண்ட இரு மார்பகங்களையும் அணைந்த மார்பனே, சண்டை செய்து உடனே எதிர்த்து வந்த அசுரர்களுடைய மணி மகுடங்கள் பொடியாகும்படி (போருக்கு) வீர நடை நடந்த பெருமாளே. 
பாடல் 88 - திருச்செந்தூர்
ராகம் - ....; தாளம் -
தான தானன தந்தன தந்தன
     தான தானன தந்தன தந்தன
          தான தானன தந்தன தந்தன ...... தனதானா
மாய வாடைதி மிர்ந்திடு கொங்கையில்
     மூடு சீலைதி றந்தம ழுங்கிகள்
          வாசல் தோறுந டந்துசி ணுங்கிகள் ...... பழையோர்மேல் 
வால நேசநி னைந்தழு வம்பிகள்
     ஆசை நோய்கொள்ம ருந்திடு சண்டிகள்
          வாற பேர்பொருள் கண்டுவி ரும்பிக ...... ளெவரேனும் 
நேய மேகவி கொண்டுசொல் மிண்டிகள்
     காசி லாதவர் தங்களை யன்பற
          நீதி போலநெ கிழ்ந்தப றம்பிக ...... ளவர்தாய்மார் 
நீலி நாடக மும்பயில் மண்டைகள்
     பாளை யூறுக ளுண்டிடு தொண்டிகள்
          நீச ரோடுமி ணங்குக டம்பிக ...... ளுறவாமோ 
பாயு மாமத தந்திமு கம்பெறு
     மாதி பாரத மென்றபெ ருங்கதை
          பார மேருவி லன்றுவ ரைந்தவ ...... னிளையோனே 
பாவை யாள்குற மங்கைசெ ழுந்தன
     பார மீதில ணைந்துமு யங்கிய
          பாக மாகிய சந்தன குங்கும ...... மணிமார்பா 
சீய மாயுரு வங்கொடு வந்தசு
     ரேசன் மார்பையி டந்துப சுங்குடர்
          சேர வாரிய ணிந்தநெ டும்புயன் ...... மருகோனே 
தேனு லாவுக டம்பம ணிந்தகி
     ¡£ட சேகர சங்கரர் தந்தருள்
          தேவ நாயக செந்திலு கந்தருள் ...... பெருமாளே.
மாய வாசனைகள் பூசப்பட்ட மார்பகங்களை மறைக்கின்ற புடைவையைத் திறந்து காட்டும், நாணம் அற்றவர்கள். (பலர் வீட்டு) வாசல்கள் தோறும் நடந்து மூக்கால் அழுகை கொள்பவர்கள். பழைய வாடிக்கையாளர்கள் மீது வாலிபத்தில் தாம் வைத்த நேசத்தை நினைத்து அழும் வம்புக்காரிகள். ஆசை நோயைத் தரக் கூடிய மருந்தைக் கலந்து இடுகின்ற கொடியோர்கள். வருகின்ற பேர்வழிகளிடம் உள்ள பொருளைப் பார்த்து விருப்பம் கொள்ளுபவர்கள். யாராயிருந்தாலும் நேசத்தை பாடல் மூலமாகச் சொல்லுகின்ற திண்ணிய மனத்தினர். பொருள் இல்லாதவர்களை இரக்கம் இல்லாமல், நீதியுடன் பேசுவதைப் போலப் பேசி, நழுவ விட்டு விலக்கும் மோசக்காரிகள். அவர்களுடைய தாய்மார்கள் நீலி நாடகம் நடிக்கின்ற வேசைகள். தென்னம் பாளையில் ஊறும் கள்ளைக் குடிக்கும் விலைமாதர்கள். இழிந்தவர்களோடும் கூடுகின்ற கெட்டவர்கள் ஆகிய இத்தகையருடைய நட்பு நன்றாகுமோ? மிகுந்து பாய்கின்ற மதம் கொண்ட யானையின் முகத்தைக் கொண்ட முதல்வரும், பாரதம் என்ற பெரிய கதையை பாரமான மேரு மலையில் அந்நாள் (தன் ஒடிந்த தந்தத்தால்) எழுதியவருமான கணபதிக்கு தம்பியே, பதுமை போன்றவளும், குறப் பெண்ணுமாகிய வள்ளியின் செழுவிய தன பாரத்தின் மேல் அணைந்து தழுவினதால், தனது பங்காகக் கிடைத்த சந்தன குங்குமங்கள் உள்ள அழகிய மார்பனே, சிங்கத்தின் உருவத்தைப் பூண்டு வந்து, அசுரர் தலைவனாகிய இரணியனுடைய மார்பைப் பிளந்து பசிய குடலை ஒரு சேர வாரி மாலையாக அணிந்து கொண்ட நெடிய மேகம் போன்ற திருமாலின் மருகனே, தேன் ஒழுகும் கடம்ப மாலை அணிந்த கீரிடத்தை முடி மீது கொண்டவனே, சங்கரர் தந்தருளிய தேவ நாயகனே, திருச்செந்தூரில் மகிழ்ந்து வீற்றருளும் பெருமாளே. 
பாடல் 89 - திருச்செந்தூர்
ராகம் - ....; தாளம் -
தாந்தாத்தந் தான தந்தன
     தாந்தாத்தந் தான தந்தன
          தாந்தாத்தந் தான தந்தன ...... தனதான
மான்போற்கண் பார்வை பெற்றிடு
     மூஞ்சாற்பண் பாடு மக்களை
          வாய்ந்தாற்பொன் கோடு செப்பெனு ...... முலைமாதர் 
வாங்காத்திண் டாடு சித்திர
     நீங்காச்சங் கேத முக்கிய
          வாஞ்சாற்செஞ் சாறு மெய்த்திடு ...... மொழியாலே 
ஏன்காற்பங் காக நற்புறு
     பூங்காற்கொங் காரு மெத்தையில்
          ஏய்ந்தாற்பொன் சாரு பொற்பண ...... முதல்நீதா 
ஈந்தாற்கன் றோர மிப்பென
     ஆன்பாற்றென் போல செப்பிடும்
          ஈண்டாச்சம் போக மட்டிக ...... ளுறவாமோ 
கான்பாற்சந் தாடு பொற்கிரி
     தூம்பாற்பைந் தோளி கட்கடை
          காண்பாற்றுஞ் சாமல் நத்திடும் ...... அசுரேசன் 
காம்பேய்ப்பந் தாட விக்ரம
     வான்றோய்க்கெம் பீர விற்கணை
          காண்டேர்க்கொண் டேவு மச்சுதன் ...... மருகோனே 
தீம்பாற்கும் பாகு சர்க்கரை
     காம்பாற்செந் தேற லொத்துரை
          தீர்ந்தார்க்கங் காளி பெற்றருள் ...... புதல்வோனே 
தீண்பார்க்குன் போத முற்றுற
     மாண்டார்க்கொண் டோது முக்கிய
          தேன்போற்செந் தூரில் மொய்த்தருள் ...... பெருமாளே.
மானைப் போல கண் பார்வை பெற்றுள்ள முகத்தால், தரம் வாய்ந்த ஆடவர்கள் கிடைக்கப் பெற்றால், பொன் மலை (பொன்) சிமிழ் என்னும்படியான மார்பகங்களை உடைய (விலை) மாதர்கள் (அம் மக்களை வசீகரித்துப்) பிடித்து திண்டாட வைப்பதும், விசித்திரம் நீங்காததும், உள்நோக்கம் கொண்டுள்ளதும், முக்கியமானதும், ஆசை எழுப்புவதுமான, இனிமையான ரசம் நிரம்பிய, உண்மை போன்றதான பேச்சுக்களால், என்னிடத்தில் பங்கு ஆக, நன்மை (இன்பம்) தரும் பூவின் இதழ்களின் வாசனை நிறைந்த படுக்கையில் பொருந்தியவுடன் பொன்னாலாகிய அழகிய காசு முதலில் நீ கொடுப்பாயாக, அங்ஙனம் பணம் கொடுத்தவர்களுக்குத் தானே கூட்டுறவு என்று, பசும் பாலும் தேனும் கலந்தது போல் சொல்லி, அருகே நெருங்கவிடாத போக மகளிராகிய வேசிகளின் உறவு நல்லதாகுமோ? காட்டில் சந்தனம் பூசப்பட்ட அழகிய மலை போன்ற மார்பகங்களையும், மூங்கில் போன்ற பசும் தோள்களையும் உடைய சீதையின் கடைக் கண் பார்வை பெறுவதற்காக உறக்கம் இல்லாமல் ஆசை கொண்டிருந்த அரக்கர் தலைவனாகிய ராவணனின் தலைகள் பந்து எறிவது போல எறியப்பட்டு உருள, வீரமுள்ளதாய், வானிலும் தோயவல்லதாய், வீறு அமைந்ததாய் உள்ள வில்லில் இருந்து அம்பை அழகிய தேர் மீது இருந்து செலுத்திய (ராமனாம்) திருமாலின் மருகனே, இனிக்கக் காய்ச்சிய பாலையும், வெல்லப் பாகு, சர்க்கரை, மூங்கிலினின்று முற்றிய நறுந்தேன் இவைகளை ஒத்துள்ளவரும், உரைக்கு எட்டாதவருமான சிவபெருமானும் பார்வதியும் பெற்று அருளிய மகனே, திண்ணிய இப் பூமியில் உன் திருவடியின் தியான அறிவு முழுமையாக வாய்க்கப்பட்டு மேம்பட்டவர்களைக் கொண்டு பூஜிக்கப்படும் பிரமுகனே, வண்டுகள் மலரில் மொய்ப்பது போல் திருச்செந்தூரில் (அடியார் கூட்டங்களை) நெருங்க வைத்தருளும் பெருமாளே. 
பாடல் 90 - திருச்செந்தூர்
ராகம் - ....; தாளம் -
தனனாதன தனனந் தாத்த
     தனனாதன தனனந் தாத்த
           தனனாதன தனனந் தாத்த ...... தனதான
முகிலாமெனு மளகங் காட்டி
     மதிபோலுயர் நுதலுங் காட்டி
           முகிழாகிய நகையுங் காட்டி ...... அமுதூறு 
மொழியாகிய மதுரங் காட்டி
     விழியாகிய கணையுங் காட்டி
           முகமாகிய கமலங் காட்டி ...... மலைபோலே 
வகையாமிள முலையுங் காட்டி
     யிடையாகிய கொடியுங் காட்டி
           வளமானகை வளையுங் காட்டி ...... யிதமான 
மணிசேர்கடி தடமுங் காட்டி
     மிகவேதொழி லதிகங் காட்டு
           மடமாதர்கள் மயலின் சேற்றி ...... லுழல்வேனோ 
நகையால்மத னுருவந் தீத்த
     சிவனாரருள் சுதனென் றார்க்கு
           நலநேயரு ளமர்செந் தூர்க்கு ...... ளுறைவோனே 
நவமாமணி வடமும் பூத்த
     தனமாதெனு மிபமின் சேர்க்கை
           நழுவாவகை பிரியங் காட்டு ...... முருகோனே 
அகமேவிய நிருதன் போர்க்கு
     வரவேசமர் புரியுந் தோற்ற
           மறியாமலு மபயங் காட்டி ...... முறைகூறி 
அயிராவத முதுகின் தோற்றி
     யடையாமென இனிதன் பேத்து
           மமரேசனை முழுதுங் காத்த ...... பெருமாளே.
மேகம் போன்ற கூந்தலைக் காட்டி, பிறை போலச் சிறந்த நெற்றியைக் காட்டி, முல்லை அரும்பு போன்ற பற்களைக் காட்டி, அமுதம் ஊறுகின்ற பேச்சு என்னும் இனிமையைக் காட்டி, கண் என்னும் அம்பைக் காட்டி, முகம் என்னும் தாமரையைக் காட்டி, மலை போல ஒழுங்குள்ள இளமையான மார்பகத்தைக் காட்டி, இடை என்னும் கொடியைக் காட்டி, வளப்பம் பொருந்திய கை வளையல்களைக் காட்டி, இன்பம் தருவதான, அழகு வாய்ந்த பெண்குறியைக் காட்டி, (தங்கள்) தொழிலை மிக அதிகமாகக் காட்டும் அழகிய (விலை) மாதர்களின் மயக்கச் சேற்றில் அலைவேனோ? புன்சிரிப்பால் மன்மதனுடைய உருவத்தை எரித்து அழித்த சிவபெருமான் அருளிய பிள்ளை என்று விளங்கி, யாவர்க்கும் நன்மையே அருள் செய்து வீற்றிருக்கும் திருச்செந்தூரில் உறைபவனே, ஒன்பது சிறந்த மணிகளால் ஆகிய மாலை தோன்றும் மார்பகத்தை உடைய மாதாகிய, யானை மகள் மின்னலைப் போன்ற அழகுடைய தேவயானையின் சேர்க்கையை நழுவ விடாமல் அன்பு காட்டும் முருகனே, அகங்காரம் கொண்ட அசுரனாகிய சூரன் சண்டைக்கு வரவும், போர் புரியும் எண்ணம் உன் மனத்தில் உதிக்கும் முன்னே அபயம் தந்து, உன்னிடம் முறையிட்டு, ஐராவதம் ஆகிய யானையின் முதுகின் மேல் விளங்குபவனும் (நாங்கள்) அடைக்கலம் எனக் கூறி இனிமையுடனும் அன்புடனும் போற்றியவனுமாகிய தேவர்கள் தலைவனான இந்திரனை முழுமையும் காத்த பெருமாளே. 
பாடல் 91 - திருச்செந்தூர்
ராகம் - செஞ்சுருட்டி; ஡ளம் - அங்கதாளம் - 7 1/2 
தகிட-1 1/2, தகதகிட-2 1/2, தகதிமி-2, தகிட-1 1/2
தந்ததன தான தானத் தான
     தந்ததன தான தானத் தான
          தந்ததன தான தானத் தான ...... தனதானா
முந்துதமிழ் மாலை கோடிக் கோடி
     சந்தமொடு நீடு பாடிப் பாடி
          முஞ்சர்மனை வாசல் தேடித் தேடி ...... யுழலாதே 
முந்தைவினை யேவ ராமற் போக
     மங்கையர்கள் காதல் தூரத் தேக
          முந்தடிமை யேனை யாளத் தானு ...... முனைமீதே 
திந்திதிமி தோதி தீதித் தீதி
     தந்ததன தான தானத் தான
          செஞ்செணகு சேகு தாளத் தோடு ...... நடமாடுஞ் 
செஞ்சிறிய கால்வி சாலத் தோகை
     துங்கஅநு கூல பார்வைத் தீர
          செம்பொன்மயில் மீதி லேயெப் போது ...... வருவாயே 
அந்தண்மறை வேள்வி காவற் கார
     செந்தமிழ்சொல் பாவின் மாலைக் கார
          அண்டருப கார சேவற் கார ...... முடிமேலே 
அஞ்சலிசெய் வோர்கள் நேயக் கார
     குன்றுருவ ஏவும் வேலைக் கார
          அந்தம்வெகு வான ரூபக் கார ...... எழிலான 
சிந்துரமின் மேவு போகக் கார
     விந்தைகுற மாது வேளைக் கார
          செஞ்சொலடி யார்கள் வாரக் கார ...... எதிரான 
செஞ்சமரை மாயு மாயக் கார
     துங்கரண சூர சூறைக் கார
          செந்தினகர் வாழு மாண்மைக் கார ...... பெருமாளே.
மொழிகளில் முந்தியுள்ள தமிழில் பாமாலைகளை கோடிக்கணக்காக சந்தப்பா வகையில் நீண்டனவாகப் பாடிப்பாடி, அழிகின்ற மக்களின் வீட்டு வாசல்கள் எங்கே உள்ளன என்று தேடித் தேடி அலையாமல், முன்ஜென்ம வினை என்பதே என்னைத் தொடராமல் ஓடிப்போக பெண்ணாசை என்பது தூரத்தே ஓடிப்போக முந்தவேண்டும் என்ற ஆசைகொண்ட அடிமையேனை ஆண்டருளும் பொருட்டு என் முன்னிலையில், (அதே ஒலி) என்ற தாளத்திற்கு ஏற்ப நடனம் செய்யும் சிவந்த சிறிய கால்களை உடையதும், விரித்த தோகையை உடையதும், பரிசுத்தமான நன்மை நல்கும் பார்வை கொண்டதும், தீரமும், செம்பொன் நிறத்தையும் கொண்ட மயில்மீது, எப்போது தான் வரப்போகிறாயோ? அழகிய அருள்மிக்க வேத வேள்விக்கெல்லாம் காவல் புரியும் பெருமானே, செந்தமிழ்ச் சொற்களான பாடல்களை மாலைகளாக அணிந்துகொள்பவனே, தேவர்களுக்கெல்லாம் உபகாரியே, சேவலைக் கொடியாக உடையவனே, சிரத்தின்மேல் கைகூப்பித் தொழுவோரின் அன்பு பூண்டவனே, (கிரெளஞ்ச) மலையை ஊடுருவும்படி ஏவின வேற் கரத்தோனே, அழகு மிகப் பொலியும் திருவுருவம் கொண்டவனே, அழகு நிறைந்த தேவயானை விரும்பும் இன்பம் வாய்ந்தவனே, அழகிய குறப்பெண் வள்ளியுடன் பொழுதுபோக்கும் மெய்க்காவலனே, இன்சொற்களால் போற்றும் அடியார்கள் மீது அன்பு கொண்டவனே, எதிர்த்துவரும் பெரும்போரில் பகைவரை மாய்க்கும் மாயக்காரனே, பெரும் போரில் சூரனை சூறாவளிக் காற்றுப் போல் அடித்துத் தள்ளியவனே, திருச்செந்தூர் நகரில் வாழும் ஆட்சித் திறன் படைத்த பெருமாளே. 
பாடல் 92 - திருச்செந்தூர்
ராகம் - ....; தாளம் -
தனன தந்த தந்த தனன தந்த தந்த
     தனன தந்த தந்த ...... தனதான
முலைமு கந்தி மிர்ந்த கலவை யுந்து லங்கு
     முறுவ லுஞ்சி வந்த ...... கனிவாயும் 
முருக விழ்ந்து திர்ந்த மலர்க ளுஞ்ச ரிந்த
     முகிலு மின்ப சிங்கி ...... விழிவேலும் 
சிலைமு கங்க லந்த திலத முங்கு ளிர்ந்த
     திருமு கந்த தும்பு ...... குறுவேர்வும் 
தெரிய வந்து நின்ற மகளிர் பின்சு ழன்று
     செயல ழிந்து ழன்று ...... திரிவேனோ 
மலைமு கஞ்சு மந்த புலவர் செஞ்சொல் கொண்டு
     வழிதி றந்த செங்கை ...... வடிவேலா 
வளர்பு னம்ப யின்ற குறம டந்தை கொங்கை
     மணிவ டம்பு தைந்த ...... புயவேளே 
அலைமு கந்த வழ்ந்து சினைமு திர்ந்த சங்க
     மலறி வந்து கஞ்ச ...... மலர்மீதே 
அளிக லந்தி ரங்க இசையு டன்து யின்ற
     அரிய செந்தில் வந்த ...... பெருமாளே.
மார்பகத்தின் மேல் பூசப்பட்ட சந்தனக் கலவையும், விளங்கும் பற்களின் புன்னகையும், செந்நிறமான கொவ்வைக் கனி போன்ற வாயும், மணம் அவிழ்ந்து உதிர்ந்த பூக்களும், சரிந்துள்ள மேகம் போன்று கருத்த கூந்தலும், இன்பமும் நஞ்சும் ஒருங்கே கொண்ட கண்களாகிய வேலும், வில் போன்ற இடமாகிய நெற்றியில் அமைந்த பொட்டும், குளிர்ந்த அழகிய முகத்தில் அரும்பும் சிறு வியர்வைத் துளிகளும், தெரியும்படி வந்து நின்ற விலைமாதர்களின் பின்னால், என் செயல் அழிந்து, அலைந்து திரிவேனோ? மலைக் குகையில் அடைக்கப்பட்டிருந்த புலவராகிய நக்கீரரின் சிறந்த பாடலை (திருமுருகாற்றுப்படையைக்) கேட்டு, அந்தக் குகையின் வாயிலைத் திறந்து விட்ட செவ்விய கைகளை உடைய வடிவேலனே. வளர்கின்ற தினைப் புனத்தில் காவல் இருந்த குறமங்கையாகிய வள்ளியின் மார்பின் மீதிருந்த மணி மாலை புதைந்த புயம் விளங்கும் அரசே, அலைகளில் தவழ்ந்து (முத்துக்களைக் கருவில் கொண்டுள்ள) சூல் நிறைந்த சங்குகள் மிக ஒலித்து வந்து, வண்டுகள் மொய்த்து ஒலிக்கும் தாமரை மலர் மேல் தங்கி, அந்த இசையைக் கேட்டுக் கொண்டே துயில் கொள்ளும் அருமையான தலமாகிய திருச்செந்தூரில் வந்து அமர்ந்துள்ள பெருமாளே. 
பாடல் 92 - திருச்செந்தூர்
ராகம் - மாயா மாளவ கெளளை; தாளம் - ஆதி - 2 களை
தாத்தத் தத்தன தாத்தத் தத்தன
     தாத்தத் தத்தன ...... தனதான
மூப்புற் றுச்செவி கேட்பற் றுப்பெரு
     மூச்சுற் றுச்செயல் ...... தடுமாறி 
மூர்க்கச் சொற்குரல் காட்டிக் கக்கிட
     மூக்குக் குட்சளி ...... யிளையோடும் 
கோப்புக் கட்டியி னாப்பிச் செற்றிடு
     கூட்டிற் புக்குயி ...... ரலையாமுன் 
கூற்றத் தத்துவ நீக்கிப் பொற்கழல்
     கூட்டிச் சற்றருள் ...... புரிவாயே 
காப்புப் பொற்கிரி கோட்டிப் பற்றலர்
     காப்பைக் கட்டவர் ...... குருநாதா 
காட்டுக் குட்குற வாட்டிக் குப்பல
     காப்புக் குத்திர ...... மொழிவோனே 
வாய்ப்புற் றத்தமிழ் மார்க்கத் திட்பொருள்
     வாய்க்குச் சித்திர ...... முருகோனே 
வார்த்தைச் சிற்பர தீர்த்தச் சுற்றலை
     வாய்க்குட் பொற்பமர் ...... பெருமாளே.
கிழப் பருவத்தை அடைந்து, காது கேட்கும் தன்மையை இழந்து, பெருமூச்சு விட்டுக்கொண்டு, செயல்கள் தடுமாற்றம் அடைந்து, கொடிய கோபத்துடன் கூடிய சொற்களோடு குரலை வெளிப்படுத்தி, வெளிப்படும் மூக்குச்சளியும், நெஞ்சுக்கபமும் கோத்தது போல் ஒன்று சேர்ந்து துன்ப வெறியை அதிகரிக்கச் செய்து, இத்தகைய உடலில் புகுந்து என் உயிர் தவிப்பதற்கு முன்னம், யமன் வந்து என்னுயிரை எடுக்கும் தவிர்க்க முடியாத செயலை அகற்றி, உன் அழகிய திருவடியில் சேர்த்து, சிறிது அருள் புரிவாயாக. உலகின் அரணாக நிற்கும் பொன்மலை மேருவை வில்லாக வளைத்து, பகைவராகிய திரிபுரத்தாருடைய அரண்களை அழித்தவராகிய சிவபிரானின் குருநாதனே, கானகத்தில் குறப் பெண் வள்ளி தேவிக்கு என்னைக் காத்தருள் என்றெல்லாம் பல நயமொழிகள் கூறியவனே, வாய்ப்புள்ள தமிழின் அகத்துறையின் உறுதியான பொருளை உண்மை இதுவே என (ருத்திரசன்மனாக வந்து)* அழகுறத் தெளிவாக்கிய முருகப் பெருமானே, சொல்லுக்கும் சித்தத்துக்கும் அப்பாற்பட்டவனே, புண்ணிய தீர்த்தங்கள் சுற்றியுள்ள திருச்சீரலைவாயில் (திருச்செந்தூரில்) அழகாக வீற்றிருக்கும் பெருமாளே. 
* மதுரையில் சொக்கநாதர் இயற்றிய இறையனார் அகப்பொருள் என்ற நூலுக்கு நக்கீரர் எழுதிய உரையே சிறந்தது என்று சங்கப் புலவர்களிடையில் ருத்திரசன்மனாக முருகன் வந்து நிலை நாட்டினான் - திருவிளையாடல் புராணம்.
பாடல் 94 - திருச்செந்தூர்
ராகம் - சங்கரானந்தப்ரியா; தாளம் - அங்கதாளம் - 9 
தகிட-1 1/2, தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2
தானதன தான தானந்த தானந்த
     தானதன தான தானந்த தானந்த
          தானதன தான தானந்த தானந்த ...... தனதான
மூளும்வினை சேர மேல்கொண்டி டாஐந்து
     பூதவெகு வாய மாயங்கள் தானெஞ்சில்
          மூடிநெறி நீதி யேதுஞ்செ யாவஞ்சி ...... யதிபார 
மோகநினை வான போகஞ்செய் வேனண்டர்
     தேடஅரி தாய ஞேயங்க ளாய்நின்ற
          மூலபர யோக மேல்கொண் டிடாநின்ற ...... துளதாகி 
நாளுமதி வேக கால்கொண்டு தீமண்ட
     வாசியன லூடு போயொன்றி வானின்க
          ணாமமதி மீதி லூறுங்க லாஇன்ப ...... அமுதூறல் 
நாடியதன் மீது போய்நின்ற ஆநந்த
     மேலைவெளி யேறி நீயின்றி நானின்றி
          நாடியினும் வேறு தானின்றி வாழ்கின்ற ...... தொருநாளே 
காளவிட மூணி மாதங்கி வேதஞ்சொல்
     பேதைநெடு நீலி பாதங்க ளால்வந்த
          காலன்விழ மோது சாமுண்டி பாரம்பொ ...... டனல்வாயு 
காதிமுதிர் வான மேதங்கி வாழ்வஞ்சி
     ஆடல்விடை யேறி பாகங்கு லாமங்கை
          காளிநட மாடி நாளன்பர் தாம்வந்து ...... தொழுமாது 
வாளமுழு தாளு மோர்தண்டு ழாய்தங்கு
     சோதிமணி மார்ப மாலின்பி னாளின்சொல்
          வாழுமுமை மாத ராள்மைந்த னேயெந்தை ...... யிளையோனே 
மாசிலடி யார்கள் வாழ்கின்ற வூர்சென்று
     தேடிவிளை யாடி யேயங்ங னேநின்று
          வாழுமயில் வீர னேசெந்தில் வாழ்கின்ற ...... பெருமாளே.
தீயைப் போல் மூண்டு பழைய வினைகள் ஒன்று சேர, அதனால் உயர்ந்து எழும்பிய பஞ்ச பூதங்களின் பற்பலவிதமான மாயங்கள் என் நெஞ்சில் வந்து நன்கு மூடப்பெற்று, பக்திநெறிக்குரிய அறச்செயல் ஏதும் செய்யாமல், வஞ்சிக்கொடி போன்ற இடையை உடைய பெண்களின் மீதுள்ள மிகுந்த காமநினைவால் அசுத்த போகத்தை நுகர்கின்ற நான், தேவர்களும் தேடித் தெரிந்துகொள்வதற்கு அரிய பொருளாகிய, மெய்யுணர்வினால் ஆராய்ந்து அறியப்படுகின்றவையாக விளங்கும் முதன்மையான அனுபவ யோகத்திலே முனைந்து நின்று, அதனிடத்திலேயே அசைவற்று இருப்பதாகி, நாள்தோறும் வெகு வேகமாக எழும் பிராணவாயுவைக் கொண்டு, மூலக்கனல்* மண்டி எழுந்திருக்க, பிராணவாயுவானது அந்த அக்கினியில் சென்று பொருந்த, ஆகாயத்தில் புகழ்பெற்ற சந்திரனிலிருந்து பொழியும் அமிர்தகலை என்னும் இனிய அமுதப் பொழிவை நாடி, அச்சந்திர மண்டலத்தில் சென்று, நிலைத்த ஆநந்தப் பெருவெளியில் மீது ஏறி அமர்ந்து, நீ நான் என்ற பிரிவற்ற அத்வைத முக்தியை உணர்ந்து, இன்னும் பிற பொருள்களும் தோன்றாத மனம் நீங்கிய சுக வாழ்வில் வாழ்கின்ற ஒருநாள் எனக்கு உண்டாகுமோ? அவள் (பாற்கடலில் தோன்றிய) ஆலகால விஷத்தை அருந்தியவள், மதங்க முநிவருக்குப் பெண்ணாக அவதரித்தவள், வேதங்களால் புகழப் பெறுபவள், பெரும் தகைமையை உடைய துர்க்கை, (மார்க்கண்டேயனின் உயிரைப் பறிக்க) வந்த யமன் இறந்து விழுமாறு திருவடிகளால் உதைத்து வீழ்த்திய காளியம்மை, பூமி, நீர், தீ, வாயு, பேரொளி மிகுந்த வானம் ஆகிய பஞ்ச பூதங்களிலும் தங்கி அந்தர்யாமியாக விளங்கும் கொடியைப் போன்றவள், ஆநந்த நடனம் ஆடுபவரும், ரிஷப வாகனமாம் நந்திமேல் ஏறுபவருமான சிவபிரானின் இடப்பாகத்தில் இன்பமுடன் குலவி அமரும் மங்கை, பத்ரகாளியாக நின்று சிவதாண்டவத்துக்கு எதிர்த்தாண்டவம் செய்தவள், நாள்தோறும் மெய்யடியார்கள் அவளது சன்னிதிக்கு வந்து வழிபட்டு வணங்கப் பெறும் தாயார், சக்ரவாளகிரியால் சூழப்பட்ட இந்த உலகம் முழுதையும் ஆள்கின்ற, குளிர்ந்த துளசிமாலையை அணிந்த, ஒளிமயமான ரத்தின மாலையை அணிந்த மார்பினனான, திருமாலின் தங்கை, இனிமையான சொற்களை உடையவளான மாதரசி பார்வதி தேவியின் மைந்தனே, எமது பிதாவாகிய சிவபிரானின் இளைய புதல்வனே, குற்றமற்ற மெய்யடியார்கள் வாழ்கின்ற ஊர்களை நாடிச்சென்று, அவர்களைத் தேடி, பல திருவிளையாடல்களைப் புரிந்து, அத்தலங்களிலேயே நிரந்தரமாகத் தங்கும் மயில் வீரனே, திருச்செந்தூர்ப் பதியில் எழுந்தருளியுள்ள பெருமாளே. 
* இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு:நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு 'ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள், சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி, ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை, சுழுமுனை முதலியன) உள்ளன.'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம்.'சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது.'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும் ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும்.
ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம்
பாடல் 95 - திருச்செந்தூர்
ராகம் - பூர்விகல்யாணி; தாளம் - திஸ்ர த்ருபுடை - 7
தந்தந்தந் தந்தன தானன
     தந்தந்தந் தந்தன தானன
          தந்தந்தந் தந்தன தானன ...... தனதான
வஞ்சங்கொண் டுந்திட ராவண
     னும்பந்தென் திண்பரி தேர்கரி
          மஞ்சின்பண் புஞ்சரி யாமென ...... வெகுசேனை 
வந்தம்பும் பொங்கிய தாகஎ
     திர்ந்துந்தன் சம்பிர தாயமும்
          வம்புந்தும் பும்பல பேசியு ...... மெதிரேகை 
மிஞ்சென்றுஞ் சண்டைசெய் போதுகு
     ரங்குந்துஞ் சுங்கனல் போலவெ
          குண்டுங்குன் றுங்கர டார்மர ...... மதும்வீசி 
மிண்டுந்துங் கங்களி னாலெத
     கர்ந்தங்கங் கங்கர மார்பொடு
          மின்சந்துஞ் சிந்தநி சாசரர் ...... வகைசேர 
வுஞ்சண்டன் தென்றிசை நாடிவி
     ழுந்தங்குஞ் சென்றெம தூதர்க
          ளுந்துந்துந் தென்றிட வேதசை ...... நிணமூளை 
உண்டுங்கண் டுஞ்சில கூளிகள்
     டிண்டிண்டென் றுங்குதி போடவு
          யர்ந்தம்புங் கொண்டுவெல் மாதவன் ...... மருகோனே 
தஞ்சந்தஞ் சஞ்சிறி யேன்மதி
     கொஞ்சங்கொஞ் சந்துரை யேயருள்
          தந்தென்றின் பந்தரு வீடது ...... தருவாயே 
சங்கங்கஞ் சங்கயல் சூழ்தட
     மெங்கெங்கும் பொங்கம காபுநி
          தந்தங்குஞ் செந்திலில் வாழ்வுயர் ...... பெருமாளே.
வஞ்சக எண்ணம் கொண்டவனும், வலிமை வாய்ந்தவனுமான ராவணன், பந்து போல வேகமாய்ச் செல்லும் வலிய குதிரை, தேர், யானை, மற்றும் மேக வரிசைக்கு நிகராக அடுக்கிய அனேகம் காலாட்படைகளுடன், போர்க்களத்துக்கு கூட்டி வந்து, அம்புக் கூட்டங்கள் நிறைந்து எதிர்த்தாலும், தனது சாமர்த்தியப் பெருமைப் பேச்சும், வீண் பேச்சும், இழிவான வார்த்தைகளும் பலவாகப் பேசியும், எதிரில் உள்ள சேனையோடு மிகவும் இடைவிடாது போரிட்ட போது, குரங்குச் சேனைகள் நிலையான நெருப்பைப் போல கோபம் கொண்டு, மலைகளையும், கரடுமுரடான மரங்களையும் பிடுங்கி வீசி, பேர்த்து எடுக்கப்பட்ட மலைப்பாறைகளினாலே நொறுக்கி, அசுரர்களின் உடம்பு, தலை, கரம், மார்பு இவைகளுடன் ஒளிவீசும் மற்ற உடற்பகுதிகளையும் சிதற அடித்து, அசுரர்களின் இனம் முழுவதையும், யமனுடைய தெற்குத் திசையை நாடிச்சென்று விழச்செய்து, அங்கு சென்றும் யம தூதர்கள் அசுரர்களைத் தள்ளு, தள்ளு, தள்ளு என்று கூறும்படியாக மாமிசம், கொழுப்பு மூளை இவற்றை சில பேய்கள் பார்த்தும், உண்டும், டிண்டிண்டென்றும் தாளமுடன் குதித்துக் கூத்தாடவும், சிறந்த அம்புகளைக் கொண்டு வென்ற ராமனின் (திருமாலின்) மருகனே, அடைக்கலம், அடைக்கலம், சிறியேனுடைய அறிவு மிகக் கொஞ்சம், கொஞ்சம், துரையே, அருள் பாலித்து எப்போது எனக்கு இன்பம் தருகின்ற மோக்ஷ வீட்டைக் கொடுக்கப் போகிறாய்? சங்குகளும், தாமரையும், கயல் மீன்களும் உள்ள குளங்கள் பல இடங்களிலும் பொங்கி நிறைந்திருக்க, மிகுந்த பரிசுத்தம் துலங்கும் திருச்செந்தூரில் வாழ்ந்து ஓங்கும் பெருமாளே. 
பாடல் 96 - திருச்செந்தூர்
ராகம் - மனோலயம்; தாளம் - ஆதி - 2 களை
தந்தத் தனதன தந்தத் தனதன
     தந்தத் தனதன ...... தனதான
வஞ்சத் துடனொரு நெஞ்சிற் பலநினை
     வஞ்சிக் கொடியிடை ...... மடவாரும் 
வந்திப் புதல்வரும் அந்திக் கிளைஞரு
     மண்டிக் கதறிடு ...... வகைகூர 
அஞ்சக் கலைபடு பஞ்சிப் புழுவுடல்
     அங்கிக் கிரையென ...... வுடன்மேவ 
அண்டிப் பயமுற வென்றிச் சமன்வரும்
     அன்றைக் கடியிணை ...... தரவேணும் 
கஞ்சப் பிரமனை அஞ்சத் துயர்செய்து
     கன்றச் சிறையிடு ...... மயில்வீரா 
கண்டொத் தனமொழி அண்டத் திருமயில்
     கண்டத் தழகிய ...... திருமார்பா 
செஞ்சொற் புலவர்கள் சங்கத் தமிழ்தெரி
     செந்திற் பதிநக ...... ருறைவோனே 
செம்பொற் குலவட குன்றைக் கடலிடை
     சிந்தப் பொரவல ...... பெருமாளே.
வஞ்சனையுடன், நெஞ்சமாகிய ஒன்றில் பல்வேறு சிந்தனைகளை உடையவர்களும், வஞ்சிக்கொடி போன்ற இடையை உடையவர்களும் ஆகிய பெண்களும், வணங்கும் புதல்வர்களும், நெருங்கிய சுற்றத்தார்களும், ஒன்று சேர்ந்து அழுகின்ற செயல் மிகுதியாக, உடலின் பாகங்கள் யாவும் கலைபட்டுப் போய், பஞ்சு போன்ற இந்தப் புழுத்த உடம்பு நெருப்புக்கு இரையாக்கப் படுவதற்கென உடனே எடுத்துச் செல்லப்பட, அருகே வந்து அச்சுறுத்தி உயிரை வெற்றி கொண்டு செல்வதற்கு யமன் வருகின்ற அந்த நாளில் உனது இரு திருவடிகளையும் தந்தருள வேண்டும். தாமரை மலரில் அமரும் பிரமன் அஞ்சுமாறு துயரப்படுத்தி அவன் மனம் நோகச் சிறையிட்ட வேலாயுத வீரனே, கற்கண்டைப் போன்ற இனிய மொழி பேசும் தேவமாதாகிய அழகிய மயில் போன்ற தேவயானையின் கண்பார்வை பாய்கின்ற அழகிய திரு மார்பனே, செம்மை பொருந்திய சொற்களை ஆளும் புலவர்களின் கூட்டம் புகல்கின்ற தமிழைச் சூடிக்கொண்டு திருச்செந்தூர் நகரில் வீற்றிருப்பவனே, செம்பொன் நிறத்துடன் வடக்கே நின்ற கிரெளஞ்சமலையை கடலினிடையே சிதறி விழுமாறு போர் புரியவல்ல பெருமாளே. 
பாடல் 9 7 - திருச்செந்தூர்
ராகம் - சிந்து பைரவி; தாளம் - ஆதி - திஸ்ர நடை - 12
தந்த தந்த தந்த தந்த
     தந்த தந்த தந்த தந்த
          தந்த தந்த தந்த தந்த ...... தனதான
வந்து வந்து முன்த வழ்ந்து
     வெஞ்சு கந்த யங்க நின்று
          மொஞ்சி மொஞ்சி யென்ற ழுங்கு ...... ழந்தையோடு 
மண்ட லங்கு லுங்க அண்டர்
     விண்ட லம்பி ளந்தெ ழுந்த
          செம்பொன் மண்ட பங்க ளும்ப ...... யின்றவீடு 
கொந்த ளைந்த குந்த ளந்த
     ழைந்து குங்கு மந்த யங்கு
          கொங்கை வஞ்சி தஞ்ச மென்று ...... மங்குகாலம் 
கொங்க டம்பு கொங்கு பொங்கு
     பைங்க டம்பு தண்டை கொஞ்சு
          செஞ்ச தங்கை தங்கு பங்க ...... யங்கள்தாராய் 
சந்த டர்ந்தெ ழுந்த ரும்பு
     மந்த ரஞ்செ ழுங்க ரும்பு
          கந்த ரம்பை செண்ப தங்கொள் ...... செந்தில்வாழ்வே 
தண்க டங்க டந்து சென்று
     பண்க டங்க டர்ந்த இன்சொல்
          திண்பு னம்பு குந்து கண்டி ...... றைஞ்சுகோவே 
அந்த கன்க லங்க வந்த
     கந்த ரங்க லந்த சிந்து
          ரஞ்சி றந்து வந்த லம்பு ...... ரிந்தமார்பா 
அம்பு னம்பு குந்த நண்பர்
     சம்பு நன்பு ரந்த ரன்த
          ரம்ப லும்பர் கும்பர் நம்பு ...... தம்பிரானே.
மீண்டும் மீண்டும் என்முன் வந்து, தவழ்ந்து, விரும்பத்தக்க இன்பத்தை அளித்து நின்று, பால் வேண்டும் வேண்டும் என்று அழுகின்ற குழந்தையும், இந்தப் பூமியே குலுங்குமாறு பெரிதாய், வானுலகம் வரை வளர்ந்து நிற்கும் செம்பொன் மண்டபங்கள் நிறைந்த வீடும், பூங்கொத்துக்கள் தரித்த கூந்தல் தழையத் தழைய, குங்குமம் அப்பிய மார்புகளும் வஞ்சிக்கொடி போன்ற இடையும் உடைய மனைவியும், எனக்கு ஆதரவு என்று இருந்த என் அறிவு மங்கி நான் இறக்கும் சமயத்தில், கோங்குப்பூ, அடம்புப் பூ, வாசம் மிகுந்த பசும் கடப்பமலர், தண்டைக்கழல், கொஞ்சுவதுபோல ஒலிக்கும் செவ்விய சதங்கைகள் - இவை தங்கும் தாமரைபோன்ற உன் பாதங்களைத் தந்தருள்வாயாக. சந்தன மரம், அடர்த்தியாக அரும்புவிடும் மந்தாரம், செழிப்பான கரும்பு, குலை தள்ளிய வாழை - இவையெல்லாம் வானம்வரை வளர்ந்த திருச்செந்தூர் தலத்தில் வாழ்பவனே, குளிர்ந்த காட்டைக் கடந்து சென்று இசைப்பண்கள் யாவும் கூடிச்சேர்ந்தது போன்ற இனிமையான குரலுடைய வள்ளியின் செழிப்பான தினைப்புனத்தை அடைந்து அவளைக் கண்டு, பின்பு கும்பிட்ட தலைவனே, யமன் அருகே வருவதற்கு கலங்கி அஞ்சும்படியாக, (உன் அடியார்களின் இதயமாகிய) குகையில் விருப்புற்றுக்கலந்த குங்கும அழகி தேவயானை சிறப்பாக வந்து மகிழ்ச்சியோடு அணைக்கும் திருமார்பனே, அழகிய தினைப்புனத்தில் உன்பொருட்டுச் சென்ற உன் நண்பர் நாரதரும், சிவபிரான், நல்ல இந்திரன், தகுதிபெற்ற வேறு பல தேவர்கள், கும்பமுனி அகஸ்தியர் இவர்கள் யாவரும் உன்னை நம்பித் தொழும் தம்பிரானே. 
பாடல் 98 - திருச்செந்தூர்
ராகம் - காம்போதி / ஸஹானா; தாளம் - சதுஸ்ர ஜம்பை - 7
தனனா தனந்த ...... தனதான
வரியார் கருங்கண் ...... மடமாதர் 
மகவா சைதொந்த ...... மதுவாகி 
இருபோ துநைந்து ...... மெலியாதே 
இருதா ளினன்பு ...... தருவாயே 
பரிபா லனஞ்செய் ...... தருள்வோனே 
பரமே சுரன்ற ...... னருள்பாலா 
அரிகே சவன்றன் ...... மருகோனே 
அலைவா யமர்ந்த ...... பெருமாளே.
வரிகள் (ரேகைகள்) உள்ள கரிய கண்களை உடைய இளம்பெண்கள், குழந்தைகள் என்கிற ஆசையாகிய பந்தத்திலே அகப்பட்டு, பகலும் இரவும் மனம் நைந்துபோய் மெலிவு அடையாமல், உன் இரு திருவடிகளின்மீது அன்பைத் தந்தருள்வாயாக. காத்து ரட்சித்து அருள் செய்பவனே, பரமசிவன் தந்தருளிய குழந்தையே, ஹரி கேசவனாம் திருமாலின் மருமகனே, திருச்சீரலைவாயாம் திருச்செந்தூரில் அமர்ந்த பெருமாளே. 
பாடல் 99 - திருச்செந்தூர்
ராகம் - .....; தாளம் -
தனதான தந்த தனதான தந்த
     தனதான தந்த ...... தனதான
விதிபோலு முந்த விழியாலு மிந்து
     நுதலாலு மொன்றி ...... யிளைஞோர்தம் 
விரிவான சிந்தை யுருவாகி நொந்து
     விறல்வேறு சிந்தை ...... வினையாலே 
இதமாகி யின்ப மதுபோத வுண்டு
     இனிதாளு மென்று ...... மொழிமாதர் 
இருளாய துன்ப மருள்மாயை வந்து
     எனையீர்வ தென்றும் ...... ஒழியாதோ 
மதிசூடி யண்டர் பதிவாழ மண்டி
     வருமால முண்டு ...... விடையேறி 
மறவாத சிந்தை யடியார்கள் பங்கில்
     வருதேவ சம்பு ...... தருபாலா 
அதிமாய மொன்றி வருசூரர் பொன்ற
     அயில்வேல்கொ டன்று ...... பொரும்வீரா 
அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து
     அலைவாயு கந்த ...... பெருமாளே.
விதி போல முற்பட்டு வினைப்படும் அந்தக் கண்களாலும், பிறைச் சந்திரனைப் போன்ற நெற்றியாலும் ஈடுபட்ட இளைஞர்களுடைய விரிந்த சிந்தையில் உருவெளித் தோற்றமாய் நின்று நோவும்படி செய்து, அந்த இளைஞர்களின் வன்மையும் மனமும் மாறுபடச் செய்யும் செயல்களால், அன்பு பூண்டு இன்பத் தேனை நிரம்ப உண்டு எங்களை இனிது அனுபவியுங்கள் என்று சொல்லுகின்ற மாதர்களால் வரும் இருளான துன்பமும், மருட்சி தரும் மாயையும் வந்து என் நெஞ்சைப் பிளவு செய்தல் எக்காலத்தும் தொலையாதோ? பிறையைச் சூடியவரும், தேவர்கள் ஊர் வாழும்படி, நெருங்கி வந்த ஆலகால விஷத்தை உண்டு, நந்தியாகிய ரிஷப வாகனத்தில் ஏறி வருபவரும், மறவாத மனத்தை உடைய அடியார்கள் பங்கில் வருகின்றவரும் ஆகிய தேவருமான சிவ பெருமான் பெற்ற பாலனே, அதிக மாயைகளைச் செய்து வந்த சூரர் அழிய, கூரிய வேலைக் கொண்டு அன்று போர் செய்த வீரனே, அழகிய செம்பொன் மயிலின் மேல் அமர்ந்து, திருச்செந்தூரில் மகிழ்ந்து வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 100 - திருச்செந்தூர்
ராகம் - யமுனா கல்யாணி; தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2 
தகதிமி-2, தகிட-1 1/2
தந்தன தான தந்தன தான
     தந்தன தான ...... தனதான
விந்ததி னூறி வந்தது காயம்
     வெந்தது கோடி ...... யினிமேலோ 
விண்டுவி டாம லுன்பத மேவு
     விஞ்சையர் போல ...... அடியேனும் 
வந்துவி நாச முன்கலி தீர
     வண்சிவ ஞான ...... வடிவாகி 
வன்பத மேறி யென்களை யாற
     வந்தருள் பாத ...... மலர்தாராய் 
எந்தனு ளேக செஞ்சுட ராகி
     யென்கணி லாடு ...... தழல்வேணி 
எந்தையர் தேடு மன்பர்ச காய
     ரெங்கள்சு வாமி ...... யருள்பாலா 
சுந்தர ஞான மென்குற மாது
     தன்றிரு மார்பி ...... லணைவோனே 
சுந்தர மான செந்திலில் மேவு
     கந்தசு ரேசர் ...... பெருமாளே.
சுக்கிலத்திலிருந்து ஊறி வந்தது இந்த உடம்பு. நெருப்பில் வீழ்ந்து வெந்த உடம்போ கோடிக்கணக்கானவை. இனியாவது உன்னை விட்டு நீங்காதிருக்கும் பொருட்டு, உன் திருவடிகளை விரும்பும் அறிஞர்களைப் போல யானும் நன்னெறிக்கு வந்து, பேரழிவாகிய முன்வினைக் கேடு நீங்க, வளமையான சிவஞானத்தின் வடிவை அடைந்து, வலிமையான முக்திப்பதத்தைப் பெற்று, என் பிறவிக் களைப்பு தீருமாறு என் முன் வந்து அருள்மயமான உன் திருப்பதங்களெனும் மலரினைத் தருவாயாக. எனது உள்ளத்தில் ஒப்பற்ற செழும் ஜோதியாக விளங்கி, என் கண்களில் நடனம் ஆடுகின்ற, நெருப்பு நிறமான ஜடாமுடியுடைய எனது தந்தையாரும், அன்பினால் தேடும் அடியார்க்கு உதவுகின்றவரும், எங்கள் இறைவனுமாகிய சிவபெருமான் அருளிய குமரனே, அழகும், ஞான அறிவும், மென்மையும் நிறைந்த குறப்பெண் வள்ளியின் திருமார்பினைத் தழுவுபவனே, அழகு மிகுந்த திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள கந்தனே, தேவர் தலைவர்களின் பெருமாளே. 

பாடல் 76 - திருச்செந்தூர்
ராகம் - பந்துவராளி ; தாளம் - அங்கதாளம் - 7 1/2 - எடுப்பு 1/2 அக்ஷரம் தள்ளி தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமி-2

தனதனன தான தான தந்தன     தனதனன தான தான தந்தன          தனதனன தான தான தந்தன ...... தந்ததான

படர்புவியின் மீது மீறி வஞ்சர்கள்     வியனினுரை பானு வாய்வி யந்துரை          பழுதில்பெரு சீல நூல்க ளுந்தெரி ...... சங்கபாடல் 
பனுவல்கதை காவ்ய மாமெ ணெண்கலை     திருவளுவ தேவர் வாய்மை யென்கிற          பழமொழியை யோதி யேயு ணர்ந்துபல் ...... சந்தமாலை 
மடல்பரணி கோவை யார்க லம்பக     முதலுளது கோடி கோள்ப்ர பந்தமும்          வகை வகையி லாசு சேர்பெ ருங்கவி ...... சண்டவாயு 
மதுரகவி ராஜ னானென் வெண்குடை     விருதுகொடி தாள மேள தண்டிகை          வரிசையொடு லாவு மால கந்தைத ...... விர்ந்திடாதோ 
அடல்பொருது பூச லேவி ளைந்திட     எதிர்பொரவொ ணாம லேக சங்கர          அரஹர சிவாம ஹாதெ வென்றுனி ...... அன்றுசேவித் 
தவனிவெகு கால மாய்வ ணங்கியு     ளுருகிவெகு பாச கோச சம்ப்ரம          அதிபெல கடோர மாச லந்தர ...... னொந்துவீழ 
உடல்தடியு மாழி தாவெ னம்புய     மலர்கள்தச நூறு தாளி டும்பக          லொருமலரி லாது கோவ ணிந்திடு ...... செங்கண்மாலுக் 
குதவியம கேசர் பால இந்திரன்     மகளைமண மேவி வீறு செந்திலி          லுரியஅடி யேனை யாள வந்தருள் ...... தம்பிரானே.

பரந்துள்ள இப்பூமியில் அளவுக்கு மிஞ்சி வஞ்சனை உள்ள லோபியர்களிடம் (பொருள் பெறுதற்கு அவர்களைச்) சிறப்பாக சூரியனே என்று பாராட்டிக் கூறியும், குற்றம் இல்லாத பெரிய ஒழுக்க நூல்களையும், தெரியவேண்டிய சங்க நூல் பாடல்களையும், வரலாற்று நூல்களையும், கதைகளையும், காப்பியங்களையும், அறுபத்து நான்கு கலை நூல்களையும், திருவள்ளுவ தேவர் அருளிய பொய்யாமொழி ஆகிய திருக்குறள் முதலிய பழமொழி நூல்களை ஓதியும் உணர்ந்தும், பலவகையான சந்த மாலைச் செய்யுட்கள், மடல், பரணி, கோவையார், கலம்பகம் முதலான கோடிக்கணக்கான பிரபந்தங்களை வகைவகையாய்ப் பாடி, பெருமைமிக்க ஆசுகவி, சண்டமாருதன், மதுரகவிராஜன் நான் என்று (புலவர்கள் தம்மைத் தாமே கூறிக்கொண்டு), வெண் குடை, வெற்றிக் கொடி, தாளம், மேளம், பல்லக்கு முதலான சிறப்புச் சின்னங்களோடு உலவி வரும் மயக்க அறிவும், அகங்காரமும் அவர்களை விட்டு நீங்காவோ? (ஜலந்தராசுரனுடன்) வலிமையுடன் போர் செய்து பெரிய ஆரவாரம் உண்டாக அவனுடன் எதிர் நின்று போர் செய்ய முடியாமல் புறந்தந்து (திருமால்) சென்று, சங்கரா, அரகர சிவா மகா தேவா என்று தியானித்து அன்று ஆராதனை புரிந்து, மண்ணுலகில் வெகு காலமாகத் தொழுது, மனம் உருகி, கொடிய பாசக் கயிறு, கவசம் முதலிய சிறப்பான ஆயுதங்களும், மிக்க வலிமையும் கொடுமையும் உள்ள பெரும் ஜலந்தரன் வருந்தி விழுமாறு அவனுடைய உடலைப் பிளக்கவல்ல சக்கரத்தைத் தந்தருள்வீர் என்று வேண்டி, தாமரை மலர்கள் ஆயிரம் கொண்டு (சிவனுடைய) திருப்பாதங்களில் பூஜித்து வந்த அந்த நாட்களில் (ஒரு நாள்), ஒரு மலர் இல்லாது குறைந்துபோக, (அதற்கு ஈடாகத் தன்) கண்ணையே எடுத்து அர்ச்சித்த சிவந்த கண்ணுடைய திருமாலுக்கு அந்தச் சக்ராயுதத்தையே உதவி அருளிய* மகா தேவருடைய குழந்தையே, இந்திரன் பெண்ணாகிய தேவயானையை திருமணம் செய்து கொண்டு, பெருமை நிறைந்த திருச்செந்தூரில் (உன்னிடம்) உரிமை பூண்ட அடியேனாகிய என்னை ஆட்கொள்ளும் பொருட்டு வந்தருளிய பெரும் தலைவனே. 
* திருவீழிமிழலைப் புராணம்:திருமால் ஆகிய தேவர்களை வென்ற பின், வலிமை வாய்ந்த ஜலந்திரன் என்னும் அசுரன் சிவ பெருமானையும் வெல்ல கயிலைக்குச் சென்றான். சிவன் ஒரு மறையவனாகத் தோன்றி, ஒரு சக்கரத்தை அமைத்து, நீ அந்த சக்கரத்தைத் தாண்டி வந்தால் கயிலைக்குப் போகலாம் என்றார். அவன் அதை எடுக்கப் போனபோது கழுத்து அறுபட்டு மாண்டான். அந்தச் சக்கரத்தை அடைய திருமால் சிவனை தினமும் ஆயிரம் மலர்களால் அர்ச்சித்துப் பூஜித்தார். ஒரு நாள் ஒரு பூ குறையவே தன் கண்ணையே மலராக இட்டுப் பூஜித்தார். பின்னர் சுதர்ஸன சக்கரத்தையும் சிவனிடமிருந்து பெற்றார்.

பாடல் 77 - திருச்செந்தூர்
ராகம் - ..........; தாளம் -

தனன தனதனந் தத்தத் தத்தத்     தனன தனதனந் தத்தத் தத்தத்          தனன தனதனந் தத்தத் தத்தத் ...... தனதான

பதும இருசரண் கும்பிட் டின்பக்     கலவி நலமிகுந் துங்கக் கொங்கைப்          பகடு புளகிதந் துன்றக் கன்றிக் ...... கயல்போலும் 
பரிய கரியகண் செம்பொற் கம்பிக்     குழைகள் பொரமருண் டின்சொற் கொஞ்சிப்          பதற விதமுறுங் கந்துக் கொந்துக் ...... குழல்சாயப் 
புதுமை நுதிநகம் பங்கத் தங்கத்     தினிது வரையவெண் சந்தத் திந்துப்          புருவ வெயர்வுடன் பொங்கக் கங்கைச் ...... சடைதாரி 
பொடிசெய் தருள்மதன் தந்த்ரப் பந்திக்     கறிவை யிழவிடும் பண்புத் துன்பப்          பொருளின் மகளிர்தம் மன்புப் பண்பைத் ...... தவிரேனோ 
திதிதி ததததந் திந்திந் தந்தட்     டிடிடி டடடடண் டிண்டிட் டண்டத்          தெனன தனதனந் தெந்தத் தந்தத் ...... தெனனானா 
திகுர்தி தகிர்ததிந் திந்தித் திந்தித்     திரிரி தரரவென் றென்றொப் பின்றித்          திமிலை பறையறைந் தெண்டிக் கண்டச் ...... சுவர்சோரச் 
சதியில் வருபெருஞ் சங்கத் தொங்கற்     புயவ சுரர்வெகுண் டஞ்சிக் குஞ்சித்          தலைகொ டடிபணிந் தெங்கட் குன்கட் ...... க்ருபைதாவென் 
சமர குமரகஞ் சஞ்சுற் றுஞ்செய்ப்     பதியில் முருகமுன் பொங்கித் தங்கிச்          சலதி யலைபொருஞ் செந்திற் கந்தப் ...... பெருமாளே.

தாமரை மலர் போன்ற இரண்டு பாதங்களையும் வணங்கி, இன்பம் தரும் கலவிச் சுகம் மிக்குள்ள உயர்ந்த மார்பகப் பரப்பு புளகிதம் கொள்ள, சினக் குறிப்புள்ள கயல் மீன் போன்ற பெரிய கரு நிறம் கொண்ட கண்கள் (காதிலுள்ள) செம்பொன் கம்பியில் பொருத்தப்பட்ட குண்டலங்களைத் தாக்க, மருட்சியுடன் இனிய மொழிகள் கொஞ்சி பதட்டத்துடன் வெளிவர, விதம் விதமாக பிணைக்கப்பட்ட பூங்கொத்துக் கொண்ட கூந்தல் சரிய, புதிய வகையில் நுனி நகத்தால் மிகவும் அழுத்தமாக (வந்தவரின்) உடலில் இனிதாக அடையாளங்களைச் செய்ய, மதிக்கத் தக்க அழகிய பிறை போன்ற புருவத்தில் வியர்வை மேலெழும்படி, கங்கையைச் சடையில் தரித்த சிவபெருமான் பொடியாக்கி அருளிய மன்மதனுடைய படையாகிய வஞ்சக (விலை மகளிர்) கூட்டத்துக்கு எனது அறிவைத் தொலைக்கும் மனப்பான்மையையும், துன்பம் தரும் வேசியர் மேல் அன்பு கொள்ளும் பண்பையும் தவிர்க்க மாட்டேனோ? திதிதி ததததந் திந்தித் தந்தட் டிடிடி டடடடண் டிண்டிட் டண்டத் தெனன தனதனந் தெந்தத் தந்தத் தெனனானா திகுர்தி தகிர்ததிந் திந்தித் திந்தித் திரிரி தர என்று இவ்வாறான ஒலிகளை பலமுறை ஒப்பில்லாத வகையில் எழுப்பி, திமிலை என்னும் பறையை ஒலித்து எட்டுத் திசைகளும் அண்டத்தின் சுவர்களும் சோர்ந்து போகும்படி, வஞ்சனை எண்ணத்துடன் வந்த பெரிய கூட்டமான, மாலை அணிந்த புயங்களை உடைய, அசுரர்கள் (முதலில்) கோபித்துப் (பின்பு) பயந்தும், மயிர்த் தலையுடன் உனது திருவடியில் பணிந்து, எங்களுக்கு உன் கடைக் கண் திருவருளைத் தருவாயாக என்று கேட்கும்படிக்கு போர் செய்தவனே, குமரனே, தாமரைத் தடாகங்கள் பல சூழ்ந்துள்ள வயலூர் முருகனே, எதிரே பொங்கியும் தங்கியும் கடலின் அலைகள் கரைகளில் தாக்குகின்ற திருச்செந்தூர்ப் பதியில் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே. 

பாடல் 78 - திருச்செந்தூர்
ராகம் - தேவகாந்தாரி ; தாளம் - சதுஸ்ர அட - 12 - எடுப்பு 1/2 இடம்

தனதன தனதன தந்தத் தந்தத் ...... தனதானா     தனதன தனதன தந்தத் தந்தத் ...... தனதானா

பரிமள களபசு கந்தச் சந்தத் ...... தனமானார்     படையம படையென அந்திக் குங்கட் ...... கடையாலே 
வரியளி நிரைமுரல் கொங்குக் கங்குற் ...... குழலாலே     மறுகிடு மருளனை யின்புற் றன்புற் ...... றருள்வாயே 
அரிதிரு மருகக டம்பத் தொங்கற் ...... றிருமார்பா     அலைகுமு குமுவென வெம்பக் கண்டித் ...... தெறிவேலா 
திரிபுர தகனரும் வந்திக் குஞ்சற் ...... குருநாதா     ஜெயஜெய ஹரஹர செந்திற் கந்தப் ...... பெருமாளே.

நறுமணம் மிக்க சந்தனக் கலவைகளின் வாசனை வீசும் அழகிய மார்பினை உடைய பெண்களின், படைகளிலேயே மிகக் கொடிய யமபடைக்கு ஒப்பாக கடைக்கண்ணால் சந்திக்கின்ற பார்வையாலும், கோடுகளை உடைய வண்டுகளின் கூட்டம் ஒலிக்கின்ற பூவாசம் மிகுந்த கரும் கூந்தலின் அழகாலும், மயங்கித் திரிகின்ற அடியேனை, இன்பத்துடனும், பிரியமாகவும் ஆட்கொண்டு அருள்வாயாக. திருமாலுக்கும் லக்ஷ்மிக்கும் மருமகனே, கடம்ப மாலையை அணிந்துள்ள திருமார்பனே, அலைகள் குமுகுமுவென கொதித்துப் பொங்குமாறு கடலினைக் கோபித்து வேலினைச் செலுத்தியவனே*, முப்புரத்தை எரித்த சிவனார் கும்பிடும் உத்தம குருநாதா, வெற்றியை உடையவனே, பாவத்தை நீக்குபவனே, திருச்செந்தூரில் எழுந்தருளிய கந்தப் பெருமாளே. 
* இறுதிப் போரில் சூரன் மாமரமாகி கடலுள் ஒளிய, முருகன் கடல் மீது கோபமாக வேலினை விட்டான்.

பாடல் 79 - திருச்செந்தூர்
ராகம் - ....; தாளம் -

தனத்தந்தத் தனத்தந்தத்     தனத்தந்தத் தனத்தந்தத்          தனத்தந்தத் தனத்தந்தத் ...... தனதான

பருத்தந்தத் தினைத்தந்திட்     டிருக்குங்கச் சடர்த்துந்திப்          பருக்கும்பொற் ப்ரபைக்குன்றத் ...... தனமானார் 
பரிக்குந்துற் சரக்கொன்றத்     திளைத்தங்குற் பலப்பண்பைப்          பரக்குஞ்சக் கரத்தின்சத் ...... தியைநேரும் 
துரைச்செங்கட் கடைக்கொன்றிப்     பெருத்தன்புற் றிளைத்தங்குத்          துணிக்கும்புத் தியைச்சங்கித் ...... தறியேனைத் 
துணைச்செம்பொற் பதத்தின்புற்     றெனக்கென்றப் பொருட்டங்கத்          தொடுக்குஞ்சொற் றமிழ்த்தந்திப் ...... படியாள்வாய் 
தருத்தங்கப் பொலத்தண்டத்     தினைக்கொண்டச் சுரர்க்கஞ்சத்          தடத்துன்பத் தினைத்தந்திட் ...... டெதிர்சூரன் 
சமர்க்கெஞ்சிப் படித்துஞ்சக்     கதிர்த்துங்கத் தயிற்கொண்டத்          தலத்தும்பர்ப் பதிக்கன்புற் ...... றருள்வோனே 
திருக்கஞ்சத் தனைக்கண்டித்     துறக்கங்குட் டிவிட்டுஞ்சற்          சிவக்கன்றப் பொருட்கொஞ்சிப் ...... பகர்வோனே 
செயத்துங்கக் கொடைத்துங்கத்     திருத்தங்கித் தரிக்கும்பொற்          றிருச்செந்திற் பதிக்கந்தப் ...... பெருமாளே.

பருத்த யானையின் தந்தத்தைப் போல் இருந்து, கச்சை மீறித் தள்ளி, பருத்து எழும், பொன் ஒளி கொண்ட மலை போன்ற மார்பகங்களை உடைய மாதர்களின், கொடுமையைத் தாங்கும் சரத்துக்கு (அம்புக்கு) ஒத்ததாக விளங்கி, அங்கு நீலோற்பல மலரின் அழகையும் தோற்க வைத்து, (திருமாலின்) சக்கரப் படை போலவும், (முருகனின்) சக்தி வேல் போலவும் வேகம் கொண்ட செவ்விய கடைக் கண்ணின் வலையில் வீழ்ந்து, பேரன்பு கொண்டு இளைத்து அங்கு அழிபடும் புத்தியைச் சந்தேகித்து அறியாத என்னை உனது இரண்டு செம்பொன் பாதங்களில் இன்புறச் செய்து, எனக்கு எப்போதும் அப்பெரும் பொருள் நிரம்பத் தங்கும்படி தொடுக்கப்படும் தமிழ்ச் சொற்களைத் தந்து இப்போதே ஆண்டு அருள்வாய். கற்பக மரங்கள் உள்ள அந்தப் பொன்னுலகத்தைக் கவர்ந்து, அந்தத் தேவர்கள் அஞ்சும்படி பெருந் துன்பங்களை அவர்களுக்குத் தந்து, போரில் உன்னை எதிர்த்து வந்த சூரன் போரில் தாழ்ந்து குறைவுபட்டு அழிய, ஒளியும் தூய்மையும் கொண்ட வேல் கொண்டு மடியச்செய்து, அந்த விண்ணுலக தேவர் தலைவனாகிய இந்திரனிடம் அன்புற்று அருள் புரிந்தவனே, அழகிய தாமரையில் இருக்கும் பிரமனை கண்டித்து, (ப்ரணவத்துக்கு பொருள் தெரியாததால்) அழுந்தும்படி குட்டி விட்டு, நல்ல சிவபிரானுக்கு அன்று அந்த மூலப் பொருளை அன்புடன் உபதேசித்தவனே, வெற்றித் தூய்மை, கொடைத் தூய்மை, செல்வம் ஆகியவை நிலை பெற்று விளங்கும் அழகிய திருச்செந்தூர்ப் பதியில் உள்ள கந்தப் பெருமாளே. 

பாடல் 80 - திருச்செந்தூர்
ராகம் - ....; தாளம் -

தான தானனந் தானனந் தானதன     தான தானனந் தானனந் தானதன          தான தானனந் தானனந் தானதன ...... தந்ததானா

பாத நூபுரம் பாடகஞ் சீர்கொள்நடை     யோதி மோகுலம் போலசம் போகமொடு          பாடி பாளிதங் காருகம் பாவையிடை ...... வஞ்சிபோலப் 
பாகு பால்குடம் போலிரண் டானகுவ     டாட நீள்வடஞ் சேரலங் காரகுழல்          பாவ மேகபொன் சாபமிந் தேபொருவ ...... ரந்தமீதே 
மாதர் கோகிலம் போல்கரும் பானமொழி     தோகை வாகர்கண் டாரைகொண் டாடிதகை          வாரும் வீடெயென் றோதிதம் பாயல்மிசை ...... யன்புளார்போல் 
வாச பாசகஞ் சூதுபந் தாடஇழி     வேர்வை பாயசிந் தாகுகொஞ் சாரவிழி          வாகு தோள்கரஞ் சேர்வைதந் தாடுமவர் ...... சந்தமாமோ 
தீத தோதகந் தீததிந் தோதிதிமி     டூடு டூடுடுண் டூடுடுண் டூடுடுடு          டீகு டீகுகம் போலவொண் பேரிமுர ...... சங்கள்வீறச் 
சேடன் மேருவுஞ் சூரனுந் தாருகனும்     வீழ ஏழ்தடந் தூளிகொண் டாடமரர்          சேசெ சேசெயென் றாடநின் றாடிவிடு ...... மங்கிவேலா 
தாதை காதிலங் கோதுசிங் காரமுக     மாறும் வாகுவுங் கூரசந் தானசுக          தாரி மார்பலங் காரியென் பாவைவளி ...... யெங்கள்மாதைத் 
தாரு பாளிதஞ் சோரசிந் தாமணிக     ளாட வேபுணர்ந் தாடிவங் காரமொடு          தாழை வானுயர்ந் தாடுசெந் தூரிலுறை ...... தம்பிரானே.

பாதச் சிலம்பு கால் அணி இவைகளுடன் சீரான நடையுடன் அன்னப் பறவைகளின் கூட்டம் நடப்பது போல விளங்கவும், சேர்க்கை இன்பம் கொண்டு மகிழவும், நன்கு நெய்யப்பட்ட பட்டாடை சூழ்ந்துள்ள அழகிய இடை வஞ்சிக் கொடி போல இப் பாவையொத்த பெண்கள் இலங்கவும், அழகிய பால் குடம் போன்ற இரண்டு மலையொத்த மார்பகங்கள் ஆடவும், நீண்ட மணி வடம் சேரவும், அலங்காரமான கூந்தல் பரந்த மேகத்தை ஒக்கவும், அழகிய வில் (புருவத்தையும்) பிறை (நெற்றியையும்) ஒப்பாகச் சொல்லும்படி இருப்பவரும், இவ்வாறான அழகைக் கொண்டு, குயில் போல இனிய குரலும், கரும்பான பேச்சையும், மயில் போன்ற அழகையும் கொண்டவரும், பார்த்தவர்களைக் கொண்டாடி மறித்து நிறுத்தி (எங்கள்) வீட்டுக்கு வாருங்கள் என்று சொல்லி இனிமையான பேச்சுக்களைப் பேசி படுக்கையின் மீது அன்புள்ளவர்கள் போல் நடித்து, மணத்தையும் பசுமையும் கொண்ட, சூதாடு கருவியை ஒத்ததான மார்பகங்கள் பந்து போல ஆடவும், வழிகின்ற வேர்வை உடலில் பாய, கடல் போன்றதும் கொஞ்சுதல் நிறைந்ததுமான கண்ணும், வாளிப்பான தோளும் கைகளும் ஒன்று பட சேரத் தந்து மகிழ்ந்து ஆடுபவர்களாகிய விலைமாதர்கள் மீது ஆசை கொள்ளுதல் தகுமோ? தீத தோதகஞ் தீததிந் தோதிதிமி டூடு டூடுடுண் டூடுடுண் டூடுடுடு டீகு டூகுகம் என்ற ஒலிகளுடன் ஒண்ணிய பேரிகைகளும் முரசங்களும் பேரொலி செய்ய, ஆதி சேஷனும், மேரு மலையும், சூரனும், தாரகாசுரனும் வீழ்ந்திட, ஏழு மலைகளும் தூள் தூள் ஆகி ஆட, தேவர்கள் ஜே ஜே ஜே ஜே என்று ஆட, விளங்கி நின்று, கூத்தாடிச் செலுத்திய நெருப்புப் போன்ற வேற் படையை உடையவனே, தந்தையாகிய சிவபெருமான் காதில் அங்கே ஓதிய சிங்காரமான ஆறு திரு முகங்களும் தோள்கள் பன்னிரண்டும் பூரிக்க, வழி வழி இன்பம் தரும் சுகத்தைக் கொண்டவளும், மார்பில் அலங்காரம் கொண்டவளும், எனது அருமைப் பதுமை போன்றவளுமாகிய வள்ளி நாயகி என்னும் எங்கள் மாதுடன், மரச் சோலைகளிடையே பட்டாடை சோர அணிந்துள்ள கோக்கப்பட்ட மணி வடங்கள் சப்தித்து ஆட சேர்க்கை இன்பம் துய்த்து, செழிப்புடன் வளர்ந்த தென்னைகள் வான் அளாவி ஓங்கும் திருச் செந்தூரில் வீற்றிருக்கும் தம்பிரானே. 

பாடல் 81 - திருச்செந்தூர்
ராகம் - ரஞ்சனி; தாளம் - ஆதி - திஸ்ர நடை - 12

தனனத் தந்தத் தனனத் தந்தத்     தனனத் தந்தத் ...... தனதான

புகரப் புங்கப் பகரக் குன்றிற்     புயலிற் றங்கிப் ...... பொலிவோனும் 
பொருவிற் றஞ்சச் சுருதிச் சங்கப்     பொருளைப் பண்பிற் ...... புகல்வோனும் 
திகிரிச் செங்கட் செவியிற் றுஞ்சத்     திகிரிச் செங்கைத் ...... திருமாலும் 
திரியப் பொங்கித் திரையற் றுண்டுட்     டெளிதற் கொன்றைத் ...... தரவேணும் 
தகரத் தந்தச் சிகரத் தொன்றித்     தடநற் கஞ்சத் ...... துறைவோனே 
தருணக் கொங்கைக் குறவிக் கின்பத்     தையளித் தன்புற் ...... றருள்வோனே 
பகரப் பைம்பொற் சிகரக் குன்றைப்     படியிற் சிந்தத் ...... தொடும்வேலா 
பவளத் துங்கப் புரிசைச் செந்திற்     பதியிற் கந்தப் ...... பெருமாளே.

புள்ளிகளை உடையதும் தூய்மையானதும் அழகியதுமான மலையை ஒத்த ஐராவத யானையின் மேலும் மேகத்தின் மேலும் தங்கிப் பொலிகின்ற தேவேந்திரனும், இணையற்றதும், எல்லாக் கலைகளுக்கும் தஞ்சமானதும் ஆகிய வேதத் தொகுப்புகளின் பொருளை முறையாக மொழிபவராகிய பிரமதேவனும், மலை போன்றதும், செம்மைப் பண்புடையதுமான ஆதிசேஷன் மீது துயின்ற அந்தச் செங்கையில் சக்ராயுதத்தை ஏந்திய நாராயணமூர்த்தியும், தமக்கு இந்த உபதேசம் கிடைக்கவில்லையே என்று இங்கும் அங்கும் திரிந்திடவும், உவகை பொங்கி, உள்ளத்தில் எண்ண அலைகள் நீங்கி, சிவானுபவத்தை உட்கொண்டு, என் உள்ளம் தெளியுமாறு ஒரு மொழியை உபதேசித்து அருள வேண்டும். தகராகாசமாக இருந்து* அழகிய வேதசிரோமுடியாம் பேரிடத்தைப் பொருந்தி, அகன்ற நல்லிடமான இதயக் கமலத்தில் வீற்றிருப்பவனே, இளமையான மார்பகங்களை உடைய குறப்பெண் வள்ளிக்கு பேரின்பத்தை வழங்கி அவள்மீது அன்புகொண்டு அருள்பவனே, ஒளியுடைய பசும்பொற் சிகரங்களைக் கொண்ட கிரெளஞ்சமலையை இந்தப் பூமியின் கண் பொடியாகுமாறு தொடுத்தருளிய வேலாயுதனே, பவளம் போன்று சிவந்த தூய மதில்கள் சூழ்ந்த திருச்செந்தூர்த் தலத்தில் எழுந்தருளிய கந்தப் பெருமாளே. 
* ஆன்மாக்களின் இதய தாமரைக்கு நடுவே ஞானமயமாக விளங்கும் ஆகாயம் 'தகராகாசம்' எனப்படும்.

பாடல் 82 - திருச்செந்தூர்
ராகம் - .....; தாளம் -

தானன தான தந்த தானன தான தந்த     தானன தான தந்த தானன தான தந்த          தானன தான தந்த தானன தான தந்த ...... தனதான

பூரண வார கும்ப சீதப டீர கொங்கை     மாதர் விகார வஞ்ச லீலையி லேயு ழன்று          போதவ மேயி ழந்து போனது மான மென்ப ...... தறியாத 
பூரிய னாகி நெஞ்சு காவல்ப டாத பஞ்ச     பாதக னாய றஞ்செ யாதடி யோடி றந்து          போனவர் வாழ்வு கண்டு மாசையி லேய ழுந்து ...... மயல்தீரக் 
காரண காரி யங்க ளானதெ லாமொ ழிந்து     யானெனு மேதை விண்டு பாவக மாயி ருந்து          காலுட லுடி யங்கி நாசியின் மீதி ரண்டு ...... விழிபாயக் 
காயமு நாவு நெஞ்சு மோர்வழி யாக அன்பு     காயம்வி டாம லுன்ற னீடிய தாள்நி னைந்து          காணுதல் கூர்த வஞ்செய் யோகிக ளாய்வி ளங்க ...... அருள்வாயே 
ஆரண சார மந்த்ர வேதமெ லாம்வி ளங்க     ஆதிரை யானை நின்று தாழ்வனெ னாவ ணங்கு          மாதர வால்வி ளங்கு பூரண ஞான மிஞ்சு ...... முரவோனே 
ஆர்கலி யூடெ ழுந்து மாவடி வாகி நின்ற     சூரனை மாள வென்று வானுல காளு மண்ட          ரானவர் கூர ரந்தை தீரமு னாள்ம கிழ்ந்த ...... முருகேசா 
வாரண மூல மென்ற போதினி லாழி கொண்டு     வாவியின் மாடி டங்கர் பாழ்பட வேயெ றிந்த          மாமுகில் போலி ருண்ட மேனிய னாமு குந்தன் ...... மருகோனே 
வாலுக மீது வண்ட லோடிய காலில் வந்து     சூல்நிறை வான சங்கு மாமணி யீன வுந்து          வாரிதி நீர்ப ரந்த சீரலை வாயு கந்த ...... பெருமாளே.

நிறைந்து, கச்சு அணிந்த, கும்பம் போன்ற, குளிர்ந்த சந்தனக் கலவை அணிந்த மார்பகங்களை உடைய விலைமாதர்களுடைய அவலட்சணமான, வஞ்சகமான ஆடல் பாடல்களில் அலைப்புண்டு, பொழுதை வீணாக இழந்து, மானம் போய் விட்டது என்பதை அறியாத கீழ் மகனாகி, மனத்தால், கட்டுக்கு அடங்காத ஐம்பெரும் பாதகங்களைச் செய்தவனாக, தருமமே செய்யாமல் அடியோடு இறந்து போனவர்களுடைய வாழ்வைப் பார்த்தும், ஆசையில் அழுந்தும் (எனது) மயக்கம் ஒழியும்படி, காரணம், காரியம் ஆகிய நிகழ்ச்சிகள் எல்லாம் ஒழிந்து, நான் என வரும் ஆணவம் நீங்கி, தூயவனாக இருந்து, பிராண வாயு உடலின் பல பாகங்களுக்கு ஓடி, மூக்கின் மேல் இரண்டு விழி முனைகளும் பாய, காயம், வாக்கு, மனம் என்னும் மூன்றும் ஒரு வழிப்பட, அன்பை உடலுள்ள அளவும் விடாமல், உனது அழிவற்ற திருவடிகளை நினைந்து, காட்சியைப் பெறுவதற்கு, மிக்க தவத்தைச் செய்கின்ற யோகிகளைப் போல் நான் விளங்கும்படி அருள் புரிவாயாக. வேதசாரமான மந்திரங்களும், வேதங்கள் எல்லாமும் விளங்கும்படியாக, (தேவாரப் பாக்களால்) திருவாதிரை நாளை உகந்துள்ள சிவபெருமானை எதிர் நின்று வணங்குவேன் என்று (உலகுக்குக் காட்டி) வணங்கும் அன்பினால் மேம்பட்ட பூரணமான ஞானம் மிக்க திருஞான சம்பந்தப் பெருமானே, கடலில் எழுந்து மாமர வடிவுடன் நின்ற சூரனை, அவன் இறக்கும்படி வென்று, வானுலகை ஆளுகின்ற தேவர்களுக்கு (உண்டான) பெரிய துன்பம் ஒழிய, முன்பொரு நாள் உதவி செய்து களிப்புற்ற முருகேசனே, யானை (கஜேந்திரன்) ஆதிமூலமே என்று அழைத்த போது சக்கரத்தை எடுத்து வந்து, மடுவில் இருந்த முதலை பாழ்படும்படி எறிந்த கரிய மேகம் போல் இருண்ட திரு மேனியை உடைய திருமாலின் மருகனே, வெண் மணலின் மீது வண்டல் ஓடிய வாய்க்கால் வழியாக வந்து, கருப்பம் நிறைந்த சங்குகள் சிறந்த முத்து மணிகளைப் பெறும்படியாக அலை வீசுகின்ற கடல் நீர் பரந்துள்ள திருச்சீரலைவாயில் (திருச்செந்தூரில்) மகிழ்ந்து வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 83 - திருச்செந்தூர்
ராகம் - .....; தாளம் -

தனத்தத்தந் தனத்தத்தந்     தனத்தத்தந் தனத்தத்தந்          தனத்தத்தந் தனத்தத்தந் ...... தனதான

பெருக்கச்சஞ் சலித்துக்கந்     தலுற்றுப்புந் தியற்றுப்பின்          பிழைப்பற்றுங் குறைப்புற்றும் ...... பொதுமாதர் 
ப்ரியப்பட்டங் கழைத்துத்தங்     கலைக்குட்டங் கிடப்பட்சம்          பிணித்துத்தந் தனத்தைத்தந் ...... தணையாதே 
புரக்கைக்குன் பதத்தைத்தந்     தெனக்குத்தொண் டுறப்பற்றும்          புலத்துக்கண் செழிக்கச்செந் ...... தமிழ்பாடும் 
புலப்பட்டங் கொடுத்தற்கும்     கருத்திற்கண் படக்கிட்டும்          புகழ்ச்சிக்குங் க்ருபைச்சித்தம் ...... புரிவாயே 
தருக்கிக்கண் களிக்கத்தெண்     டனிட்டுத்தண் புனத்திற்செங்          குறத்திக்கன் புறச்சித்தந் ...... தளர்வோனே 
சலிப்புற்றங் குரத்திற்சம்     ப்ரமித்துக்கொண் டலைத்துத்தன்          சமர்த்திற்சங் கரிக்கத்தண் ...... டியசூரன் 
சிரத்தைச்சென் றறுத்துப்பந்     தடித்துத்திண் குவட்டைக்கண்          டிடித்துச்செந் திலிற்புக்கங் ...... குறைவோனே 
சிறக்கற்கஞ் செழுத்தத்தந்     திருச்சிற்றம் பலத்தத்தன்          செவிக்குப்பண் புறச்செப்பும் ...... பெருமாளே.

(நான்) மிகவும் மனக் கலக்கம் அடைந்து, ஒழுக்கக் கேடு உடையவனாக, நற்புத்தி இல்லாமல், பின்னர் பிழைக்கும் வழியும் இல்லாமல் குறைபாடு உற்றுப் போகும்படி, விலை மகளிர் (என்னை) அன்பு கொண்டு தங்களிடம் அழைத்து தங்களுடைய காமக் கலைக்குள் சிக்கும்படி பரிவு காட்டுவது போலப் பிணித்து, தங்களுடைய மார்பகங்களைத் தந்து தழுவாத வண்ணம், என்னைக் காப்பதற்காக உனது திருவடியைத் தந்து நான் தொண்டு செய்து உன்னைப் பற்றும்படியான ஞானக் கண் (அறிவு நிலை) செழித்தோங்கவும், செந்தமிழ் பாடும் புலவன் என்னும் பட்டத்தை (உலகோர்) கொடுப்பதற்கும், ஞானக் கண் பெறக் கிட்டும்படியான புகழைப் பெறுவதற்கும் அருள் மனம் கொண்டு உதவுவாயாக. உள்ளம் பூரித்து கண் களிக்கும்படி தண்டனிட்டு வணங்கி குளிர்ந்த (தினைப்) புனத்தில் செவ்விய குறப் பெண்ணாகிய வள்ளிக்கு அன்பு பெருக மனம் தளர்ந்தவனே, (தேவர்கள்) சோர்வு அடையச் செய்து, அங்கு வலிமையைக் காட்டி, கர்வத்துடன் எழுந்து (அத்தேவர்களைப்) பிடித்து அலைத்து, தன்னுடைய திறமையால் அவர்களை அழித்து வருத்திய சூரனுடைய தலையைப் போய் அறுத்து, பந்தடிப்பது போல் அடித்து, அந்த வலிய (கிரவுஞ்ச) மலையைக் கண்டு அதைப் பொடியாக்கி, திருச் செந்தூரில் புகுந்து அங்கு வாழ்பவனே, (அனைவரும்) மேம்பாடுற ப்ரணவமாகிய (நமசிவாய என்ற) ஐந்தெழுத்தின் பொருளை, தில்லையில் கூத்தாடும் தந்தையின் காதில் முறைப்படி உபதேசித்த பெருமாளே. 

பாடல் 84 - திருச்செந்தூர்
ராகம் - ஹம்ஸாநந்தி; தாளம் - ஆதி - திஸ்ர நடை - 12

தந்த தனன தந்த தனன     தந்த தனன ...... தனதான

மங்கை சிறுவர் தங்கள் கிளைஞர்     வந்து கதற ...... வுடல்தீயின் 
மண்டி யெரிய விண்டு புனலில்     வஞ்ச மொழிய ...... விழஆவி 
வெங்கண் மறலி தன்கை மருவ     வெம்பி யிடறு ...... மொருபாச 
விஞ்சை விளைவு மன்று னடிமை     வென்றி யடிகள் ...... தொழவாராய் 
சிங்க முழுவை தங்கு மடவி     சென்று மறமி ...... னுடன்வாழ்வாய் 
சிந்தை மகிழ அன்பர் புகழு     செந்தி லுறையு ...... முருகோனே 
எங்கு மிலகு திங்கள் கமல     மென்று புகலு ...... முகமாதர் 
இன்பம் விளைய அன்பி னணையு     மென்று மிளைய ...... பெருமாளே.

மனைவியும், மக்களும், தங்கள் சுற்றத்தார்களும், வந்து கதறி அழுது புலம்ப, உடம்பானது மயானத்தீயில் ஜ்வாலையுடன் எரிந்துகொண்டிருக்க, உறவினர் மயானத்தை விட்டு நீங்கி, பந்தம் என்ற மாயை நீங்குமாறு, நீரில் மூழ்கிக் குளிக்க, உயிரானது கொடுங்கண்களை உடைய யமனது கரத்தில் சிக்கிக்கொள்ள, மனம் புழுங்கித் துன்பப்படும் ஒரு பற்று என்னும் மாயக்கூத்து நிகழும் அந்த நாளில் உன் அடிமையாகிய சிறியேன் வெற்றி பொருந்திய உன் திருவடி மலர்களைத் தொழும்படி வந்தருள்வாயாக. சிங்கங்களும், புலிகளும் வாழும் காட்டிலே சென்று வேடப் பெண்ணாகிய வள்ளியுடன் வாழ்கின்றவனே, உள்ள மகிழ்ச்சியுடன் உன் அன்பர்கள் துதி செய்கிற திருச்செந்தூர் நகரில் எழுந்தருளிய முருகக் கடவுளே, எங்கும் விளங்கும் சந்திரனையும், தாமரையையும் ஒத்தது என்று உவமை கூறி புலவர்கள் புகழ்கின்ற திருமுகத்தை உடைய மாதர்களாம் தேவயானையையும், வள்ளியையும், உயிர்களுக்கு இன்பம் விளையுமாறு அன்போடு அணையும் எக்காலத்தும் இளமையோடு விளங்கும் பெருமாளே. 

பாடல் 85 - திருச்செந்தூர்
ராகம் - .....; தாளம் -

தந்த தந்தன தந்தன தந்தன     தந்த தந்தன தந்தன தந்தன          தந்த தந்தன தந்தன தந்தன ...... தந்ததான

மஞ்செ னுங்குழ லும்பிறை யம்புரு     வங்க ளென்சிலை யுங்கணை யங்கயல்          வண்டு புண்டரி கங்களை யும்பழி ......சிந்துபார்வை 
மண்ட லஞ்சுழ லுஞ்செவி யங்குழை     தங்க வெண்டர ளம்பதி யும்பலு          மண்ட லந்திக ழுங்கமு கஞ்சிறு ...... கண்டமாதர் 
கஞ்சு கங்குர லுங்கழை யம்புய     கொங்கை செங்கிரி யும்பவ ளம்பொறி          கந்த சந்தன மும்பொலி யுந்துகில் ...... வஞ்சிசேருங் 
கஞ்ச மண்டுளி னின்றிர சம்புகு     கண்ப டர்ந்திட ரம்பையெ னுந்தொடை          கண்கை யஞ்சர ணஞ்செயல் வஞ்சரை ...... நம்புவேனோ 
சஞ்ச சஞ்சக ணஞ்சக டுண்டுடு     டுண்டு டிண்டிமி டண்டம டுண்டுடு          தந்த னந்தன திந்திமி சங்குகள் ...... பொங்குதாரை 
சம்பு வின்கும ரன்புல வன்பொரு     கந்த னென்றிடு துந்துமி யுந்துவ          சங்க ளங்கொளி ருங்குடை யுந்திசை ...... விஞ்சவேகண் 
டஞ்ச வஞ்சசு ரன்திர ளுங்குவ     டன்ற டங்கலும் வெந்துபொ ரிந்திட          அண்ட ரிந்திர னுஞ்சர ணம்புக ...... வென்றவேளே 
அம்பு யந்தண ரம்பைகு றிஞ்சியின்     மங்கை யங்குடில் மங்கையொ டன்புடன்          அண்ட ருந்தொழு செந்திலி லின்புறு ...... தம்பிரானே.

மேகம் என்னும்படியான கரிய கூந்தல், பிறை போன்ற அழகிய புருவங்கள் எனப்படும் வில், அம்பு, அழகிய கயல் மீன், வண்டு, தாமரை இவைகளைப் பழித்து, தமது சிறப்பை வெளிக்காட்ட வல்ல கண்கள், நாட்டில் உள்ளவர்கள் கலங்கும்படியான காதில் உள்ள அழகிய குண்டலங்கள், பொருந்தியுள்ள வெண்மையான முத்துக்கள் பதித்தாற் போல் பற்கள், நெருங்கிய கலப்பையால் உழுது வளர்ந்த கமுகு போன்ற சிறிய அழகிய கழுத்துடைய பெண்கள், பேரின்பம் தரும் கிளி என்னும்படியான குரலாகிய புல்லாங்குழல், தாமரை போன்ற மார்பகங்கள் ஆகிய செவ்விய மலையில் பவள மாலை, தேமல், நறு மணம் கமழும் சந்தனம், விளங்குகின்ற ஆடை, வஞ்சிக் கொடி போன்ற இடை இவை துலங்க, பொருந்திய தாமரையின் நிறைந்த, உட்புறத்திலிருந்து வெளிப்பட்ட (காம) இன்பம் புகுந்துள்ள இடம், வாழை போன்ற தொடை, கண்கள், கைகள், அழகிய பாதங்கள், செயல்களும் (கூடிய) வஞ்சகம் நிறைந்த விலைமாதர்களை நான் நம்புவேனோ? சஞ்ச சஞ்சக ணஞ்சக டுண்டுடு டுண்டு டிண்டிமி டண்டம டுண்டுடு தந்த னந்தன திந்திமி இவ்வாறு ஒலித்த சங்குகளும், தாரைகளும், தப்பட்டைகளும், சிவபெருமானின் மகன், தமிழில் புலமை படைத்தவன், சண்டை செய்ய வல்ல கந்தன் என்றெல்லாம் ஒலிக்கும் பேரிகைகளும், கொடிகளும், அவ்விடத்தில் பிரகாசிக்கும் குடைகளும், திசைகளில் எல்லாம் மிகுந்து பொலியவே, அக்காட்சியைக் கண்டு, பயப்படும்படி வஞ்சகம் உள்ள சூரனுடைய சேனைகளும், கிரவுஞ்ச மலையும் ஆக அன்று எல்லாமும் வெந்து கரியாக, தேவர்களும், இந்திரனும் அடைக்கலம் என்று உன் திருவடியில் சரணடைய வெற்றி கொண்ட முருகு வேளே, தாமரையும், குளிர்ந்த வாழையும் நிறைந்துள்ள மலை நிலத்துப் பெண்ணாகிய வள்ளி, அழகிய விண்ணுலக மங்கை (தேவயானை ஆகிய) இவர்கள் இருவரோடு அன்புடன் தேவர்களும் தொழுகின்ற திருச்செந்தூரில் இன்புறுகின்ற தம்பிரானே. 

பாடல் 86 - திருச்செந்தூர்
ராகம் - பேகடா; தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2 தகிட-1 1/2, தகதிமி-2

தனத்தந்தந் தனத்தந்தந்     தனத்தந்தந் தனத்தந்தந்          தனத்தந்தந் தனத்தந்தந் ...... தனதானா

மனத்தின்பங் கெனத்தங்கைம்     புலத்தென்றன் குணத்தஞ்சிந்          த்ரியத்தம்பந் தனைச்சிந்தும் ...... படிகாலன் 
மலர்ச்செங்கண் கனற்பொங்குந்     திறத்தின்தண் டெடுத்தண்டங்          கிழித்தின்றிங் குறத்தங்கும் ...... பலவோரும் 
எனக்கென்றிங் குனக்கென்றங்     கினத்தின்கண் கணக்கென்றென்          றிளைத்தன்புங் கெடுத்தங்கங் ...... கழிவாமுன் 
இசைக்குஞ்செந் தமிழ்க்கொண்டங்     கிரக்கும்புன் றொழிற்பங்கங்          கெடத்துன்பங் கழித்தின்பந் ...... தருவாயே 
கனைக்குந்தண் கடற்சங்கங்     கரத்தின்கண் தரித்தெங்குங்          கலக்கஞ்சிந் திடக்கண்துஞ் ...... சிடுமாலும் 
கதித்தொண்பங் கயத்தன்பண்     பனைத்துங்குன் றிடச்சந்தங்          களிக்குஞ்சம் புவுக்குஞ்செம் ...... பொருளீவாய் 
தினைக்குன்றந் தனிற்றங்குஞ்     சிறுப்பெண்குங் குமக்கும்பந்          திருச்செம்பொன் புயத்தென்றும் ...... புனைவோனே 
செழிக்குங்குண் டகழ்ச்சங்கங்     கொழிக்குஞ்சந் தனத்தின்பைம்          பொழிற்றண்செந் திலிற்றங்கும் ...... பெருமாளே.

மனம் செல்வதற்கு உண்டான வேறு வேறு வாயிலாகத் தங்கியுள்ள ஐந்து புலன்களிலும் தொடர்பு கொண்டுள்ள எனது குணமும், ஐந்து இந்திரியங்களைக் கட்டியுள்ள தூணாகிய இவ்வுடம்பும், சிதறிப் போகும்படியாக யமதூதனாகிய காலன் மலர் போன்ற கண்களில் நெருப்புப் பொறி எழ வலிமையோடு தண்டாயுதத்தை எடுத்துக் கொண்டு, ஆகாயத்தைக் கிழித்துக்கொண்டு இன்று இங்கே வர, குடும்பத்தில் தங்கியுள்ள சுற்றத்தார் பலரும் இது எனக்கு என்றும், அது உனக்கு என்றும், அந்த இனத்தில் உள்ளவர்களுக்கு இன்னின்ன கணக்கு என்றும் (சொத்துக்களைப் பிரித்து), கூறி இளைத்தும், அன்பைக் கெடுத்தும், எனது உடல் அழியும் முன்பு, புகழ் வாய்ந்த செந்தமிழ் மொழியைக் கொண்டு பொருளாளர்பால் சென்று யாசிக்கும் இழிதொழிலின் கேவலம் நீங்க, துன்பத்தைத் தொலைத்து இன்பத்தைத் தந்து அருள் புரிவாயாக. ஒலி செய்யும் குளிர்ந்த கடலில் பிறந்த பாஞ்சஜன்யம் என்ற வெண்சங்கை தனது திருக்கரத்திலே ஏந்தி உலகமெங்கும் உள்ள ஆன்மாக்களின் துயரம் நீங்கும் பொருட்டு அறிதுயில் புரிகின்ற திருமாலும், அந்தத் திருமாலின் உந்திக் கமலத்தில் தோன்றிய ஒளிவீசும் பிரமனும், அவர்களுடைய பெருமை யாவும் குறைவுபடுமாறு, சந்தப் பாடலைக் கேட்டு உள்ளம் மகிழும் சிவபிரானுக்கு செம்மைப் பொருளான பிரணவ மந்திரத்தின் உட்பொருளை உபதேசித்தவனே, தினைப்பயிர் விளையும் மலையாகிய வள்ளிமலையில் வசிக்கும் இளம்பெண் வள்ளியின் குங்குமம் பூசியுள்ள மார்பினை அழகிய செம்பொன் போன்ற தோள்களால் தழுவுவோனே, செழிப்புள்ள ஆழ்ந்த கடற்சங்குகளை ஏராளமாகக் கொழிப்பதும், சந்தன மரங்களை உடைய பசும் சோலைகளால் மிகவும் குளிர்ச்சியைக் கொண்டதுமான திருச்செந்தூர்ப் பதியில் வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 87 - திருச்செந்தூர்
ராகம் - .....; தாளம் -

தனதனன தந்த தனதனன தந்த     தனதனன தந்த ...... தனதானா

மனைகனக மைந்தர் தமதழகு பெண்டிர்     வலிமைகுல நின்ற ...... நிலையூர்பேர் 
வளரிளமை தஞ்ச முனைபுனைவ ளங்கள்     வரிசைதம ரென்று ...... வருமாயக் 
கனவுநிலை யின்ப மதனையென தென்று     கருதிவிழி யின்ப ...... மடவார்தம் 
கலவிமயல் கொண்டு பலவுடல்பு ணர்ந்து     கருவில்விழு கின்ற ...... தியல்போதான் 
நினையுநின தன்பர் பழவினைக ளைந்து     நெடுவரைபி ளந்த ...... கதிர்வேலா 
நிலமுதல்வி ளங்கு நலமருவு செந்தில்     நிலைபெறஇ ருந்த ...... முருகோனே 
புனைமலர்பு னைந்த புனமறம டந்தை     புளகஇரு கொங்கை ...... புணர்மார்பா 
பொருதுடனெ திர்ந்த நிருதர்மகு டங்கள்     பொடிபடந டந்த ...... பெருமாளே.

வீடு, பொன், மக்கள், தம்முடைய அழகிய மனைவி முதலியோர், (தமது) வலிமை, குலம், சமூகத்தில் இருக்கும் நிலை, தம்முடைய ஊர், பேர், வளர்ச்சி உறும் இளமை, (தமக்குள்ள) பற்றுக்கோடு, துணிவு, அணியும் ஆபரணம் ஆகிய செல்வங்கள், மேம்பாடு, சுற்றத்தார் என்றெல்லாம் சொல்லப்படுகின்ற மாயமான கனவில் வருவதைப் போல நிலை இல்லாத சிற்றின்பத்தை எனது என்று நினைத்து, கண்ணால் இன்பம் ஊட்டும் மாதர்களுடைய கலவி மயக்கத்தைப் பூண்டு பல உடல்களைப் புணர்ந்து, பல பிறவிகள் எடுப்பது தக்கது ஆகுமோ? நினைக்கின்ற உன் அன்பர்களுடைய பழ வினைகளை நீக்கி, நீண்ட (கிரவுஞ்ச) மலையைப் பிளந்த, ஒளி வீசும் வேலனே, பூமியில் சிறப்புடன் முதல் இடமாக விளங்குகின்ற அழகைப் பெற்ற திருச்செந்தூர் தலம் நிலை பெறுமாறு வீற்றிருந்த முருகனே, அலங்காரத்துக்குத் தக்க மலர்களை அணிந்த (வள்ளிமலையின் தினைப்) புனத்தில் இருந்த வேடப் பெண்ணாகிய வள்ளியின் புளகிதம் கொண்ட இரு மார்பகங்களையும் அணைந்த மார்பனே, சண்டை செய்து உடனே எதிர்த்து வந்த அசுரர்களுடைய மணி மகுடங்கள் பொடியாகும்படி (போருக்கு) வீர நடை நடந்த பெருமாளே. 

பாடல் 88 - திருச்செந்தூர்
ராகம் - ....; தாளம் -

தான தானன தந்தன தந்தன     தான தானன தந்தன தந்தன          தான தானன தந்தன தந்தன ...... தனதானா

மாய வாடைதி மிர்ந்திடு கொங்கையில்     மூடு சீலைதி றந்தம ழுங்கிகள்          வாசல் தோறுந டந்துசி ணுங்கிகள் ...... பழையோர்மேல் 
வால நேசநி னைந்தழு வம்பிகள்     ஆசை நோய்கொள்ம ருந்திடு சண்டிகள்          வாற பேர்பொருள் கண்டுவி ரும்பிக ...... ளெவரேனும் 
நேய மேகவி கொண்டுசொல் மிண்டிகள்     காசி லாதவர் தங்களை யன்பற          நீதி போலநெ கிழ்ந்தப றம்பிக ...... ளவர்தாய்மார் 
நீலி நாடக மும்பயில் மண்டைகள்     பாளை யூறுக ளுண்டிடு தொண்டிகள்          நீச ரோடுமி ணங்குக டம்பிக ...... ளுறவாமோ 
பாயு மாமத தந்திமு கம்பெறு     மாதி பாரத மென்றபெ ருங்கதை          பார மேருவி லன்றுவ ரைந்தவ ...... னிளையோனே 
பாவை யாள்குற மங்கைசெ ழுந்தன     பார மீதில ணைந்துமு யங்கிய          பாக மாகிய சந்தன குங்கும ...... மணிமார்பா 
சீய மாயுரு வங்கொடு வந்தசு     ரேசன் மார்பையி டந்துப சுங்குடர்          சேர வாரிய ணிந்தநெ டும்புயன் ...... மருகோனே 
தேனு லாவுக டம்பம ணிந்தகி     ¡£ட சேகர சங்கரர் தந்தருள்          தேவ நாயக செந்திலு கந்தருள் ...... பெருமாளே.

மாய வாசனைகள் பூசப்பட்ட மார்பகங்களை மறைக்கின்ற புடைவையைத் திறந்து காட்டும், நாணம் அற்றவர்கள். (பலர் வீட்டு) வாசல்கள் தோறும் நடந்து மூக்கால் அழுகை கொள்பவர்கள். பழைய வாடிக்கையாளர்கள் மீது வாலிபத்தில் தாம் வைத்த நேசத்தை நினைத்து அழும் வம்புக்காரிகள். ஆசை நோயைத் தரக் கூடிய மருந்தைக் கலந்து இடுகின்ற கொடியோர்கள். வருகின்ற பேர்வழிகளிடம் உள்ள பொருளைப் பார்த்து விருப்பம் கொள்ளுபவர்கள். யாராயிருந்தாலும் நேசத்தை பாடல் மூலமாகச் சொல்லுகின்ற திண்ணிய மனத்தினர். பொருள் இல்லாதவர்களை இரக்கம் இல்லாமல், நீதியுடன் பேசுவதைப் போலப் பேசி, நழுவ விட்டு விலக்கும் மோசக்காரிகள். அவர்களுடைய தாய்மார்கள் நீலி நாடகம் நடிக்கின்ற வேசைகள். தென்னம் பாளையில் ஊறும் கள்ளைக் குடிக்கும் விலைமாதர்கள். இழிந்தவர்களோடும் கூடுகின்ற கெட்டவர்கள் ஆகிய இத்தகையருடைய நட்பு நன்றாகுமோ? மிகுந்து பாய்கின்ற மதம் கொண்ட யானையின் முகத்தைக் கொண்ட முதல்வரும், பாரதம் என்ற பெரிய கதையை பாரமான மேரு மலையில் அந்நாள் (தன் ஒடிந்த தந்தத்தால்) எழுதியவருமான கணபதிக்கு தம்பியே, பதுமை போன்றவளும், குறப் பெண்ணுமாகிய வள்ளியின் செழுவிய தன பாரத்தின் மேல் அணைந்து தழுவினதால், தனது பங்காகக் கிடைத்த சந்தன குங்குமங்கள் உள்ள அழகிய மார்பனே, சிங்கத்தின் உருவத்தைப் பூண்டு வந்து, அசுரர் தலைவனாகிய இரணியனுடைய மார்பைப் பிளந்து பசிய குடலை ஒரு சேர வாரி மாலையாக அணிந்து கொண்ட நெடிய மேகம் போன்ற திருமாலின் மருகனே, தேன் ஒழுகும் கடம்ப மாலை அணிந்த கீரிடத்தை முடி மீது கொண்டவனே, சங்கரர் தந்தருளிய தேவ நாயகனே, திருச்செந்தூரில் மகிழ்ந்து வீற்றருளும் பெருமாளே. 

பாடல் 89 - திருச்செந்தூர்
ராகம் - ....; தாளம் -

தாந்தாத்தந் தான தந்தன     தாந்தாத்தந் தான தந்தன          தாந்தாத்தந் தான தந்தன ...... தனதான

மான்போற்கண் பார்வை பெற்றிடு     மூஞ்சாற்பண் பாடு மக்களை          வாய்ந்தாற்பொன் கோடு செப்பெனு ...... முலைமாதர் 
வாங்காத்திண் டாடு சித்திர     நீங்காச்சங் கேத முக்கிய          வாஞ்சாற்செஞ் சாறு மெய்த்திடு ...... மொழியாலே 
ஏன்காற்பங் காக நற்புறு     பூங்காற்கொங் காரு மெத்தையில்          ஏய்ந்தாற்பொன் சாரு பொற்பண ...... முதல்நீதா 
ஈந்தாற்கன் றோர மிப்பென     ஆன்பாற்றென் போல செப்பிடும்          ஈண்டாச்சம் போக மட்டிக ...... ளுறவாமோ 
கான்பாற்சந் தாடு பொற்கிரி     தூம்பாற்பைந் தோளி கட்கடை          காண்பாற்றுஞ் சாமல் நத்திடும் ...... அசுரேசன் 
காம்பேய்ப்பந் தாட விக்ரம     வான்றோய்க்கெம் பீர விற்கணை          காண்டேர்க்கொண் டேவு மச்சுதன் ...... மருகோனே 
தீம்பாற்கும் பாகு சர்க்கரை     காம்பாற்செந் தேற லொத்துரை          தீர்ந்தார்க்கங் காளி பெற்றருள் ...... புதல்வோனே 
தீண்பார்க்குன் போத முற்றுற     மாண்டார்க்கொண் டோது முக்கிய          தேன்போற்செந் தூரில் மொய்த்தருள் ...... பெருமாளே.

மானைப் போல கண் பார்வை பெற்றுள்ள முகத்தால், தரம் வாய்ந்த ஆடவர்கள் கிடைக்கப் பெற்றால், பொன் மலை (பொன்) சிமிழ் என்னும்படியான மார்பகங்களை உடைய (விலை) மாதர்கள் (அம் மக்களை வசீகரித்துப்) பிடித்து திண்டாட வைப்பதும், விசித்திரம் நீங்காததும், உள்நோக்கம் கொண்டுள்ளதும், முக்கியமானதும், ஆசை எழுப்புவதுமான, இனிமையான ரசம் நிரம்பிய, உண்மை போன்றதான பேச்சுக்களால், என்னிடத்தில் பங்கு ஆக, நன்மை (இன்பம்) தரும் பூவின் இதழ்களின் வாசனை நிறைந்த படுக்கையில் பொருந்தியவுடன் பொன்னாலாகிய அழகிய காசு முதலில் நீ கொடுப்பாயாக, அங்ஙனம் பணம் கொடுத்தவர்களுக்குத் தானே கூட்டுறவு என்று, பசும் பாலும் தேனும் கலந்தது போல் சொல்லி, அருகே நெருங்கவிடாத போக மகளிராகிய வேசிகளின் உறவு நல்லதாகுமோ? காட்டில் சந்தனம் பூசப்பட்ட அழகிய மலை போன்ற மார்பகங்களையும், மூங்கில் போன்ற பசும் தோள்களையும் உடைய சீதையின் கடைக் கண் பார்வை பெறுவதற்காக உறக்கம் இல்லாமல் ஆசை கொண்டிருந்த அரக்கர் தலைவனாகிய ராவணனின் தலைகள் பந்து எறிவது போல எறியப்பட்டு உருள, வீரமுள்ளதாய், வானிலும் தோயவல்லதாய், வீறு அமைந்ததாய் உள்ள வில்லில் இருந்து அம்பை அழகிய தேர் மீது இருந்து செலுத்திய (ராமனாம்) திருமாலின் மருகனே, இனிக்கக் காய்ச்சிய பாலையும், வெல்லப் பாகு, சர்க்கரை, மூங்கிலினின்று முற்றிய நறுந்தேன் இவைகளை ஒத்துள்ளவரும், உரைக்கு எட்டாதவருமான சிவபெருமானும் பார்வதியும் பெற்று அருளிய மகனே, திண்ணிய இப் பூமியில் உன் திருவடியின் தியான அறிவு முழுமையாக வாய்க்கப்பட்டு மேம்பட்டவர்களைக் கொண்டு பூஜிக்கப்படும் பிரமுகனே, வண்டுகள் மலரில் மொய்ப்பது போல் திருச்செந்தூரில் (அடியார் கூட்டங்களை) நெருங்க வைத்தருளும் பெருமாளே. 

பாடல் 90 - திருச்செந்தூர்
ராகம் - ....; தாளம் -

தனனாதன தனனந் தாத்த     தனனாதன தனனந் தாத்த           தனனாதன தனனந் தாத்த ...... தனதான

முகிலாமெனு மளகங் காட்டி     மதிபோலுயர் நுதலுங் காட்டி           முகிழாகிய நகையுங் காட்டி ...... அமுதூறு 
மொழியாகிய மதுரங் காட்டி     விழியாகிய கணையுங் காட்டி           முகமாகிய கமலங் காட்டி ...... மலைபோலே 
வகையாமிள முலையுங் காட்டி     யிடையாகிய கொடியுங் காட்டி           வளமானகை வளையுங் காட்டி ...... யிதமான 
மணிசேர்கடி தடமுங் காட்டி     மிகவேதொழி லதிகங் காட்டு           மடமாதர்கள் மயலின் சேற்றி ...... லுழல்வேனோ 
நகையால்மத னுருவந் தீத்த     சிவனாரருள் சுதனென் றார்க்கு           நலநேயரு ளமர்செந் தூர்க்கு ...... ளுறைவோனே 
நவமாமணி வடமும் பூத்த     தனமாதெனு மிபமின் சேர்க்கை           நழுவாவகை பிரியங் காட்டு ...... முருகோனே 
அகமேவிய நிருதன் போர்க்கு     வரவேசமர் புரியுந் தோற்ற           மறியாமலு மபயங் காட்டி ...... முறைகூறி 
அயிராவத முதுகின் தோற்றி     யடையாமென இனிதன் பேத்து           மமரேசனை முழுதுங் காத்த ...... பெருமாளே.

மேகம் போன்ற கூந்தலைக் காட்டி, பிறை போலச் சிறந்த நெற்றியைக் காட்டி, முல்லை அரும்பு போன்ற பற்களைக் காட்டி, அமுதம் ஊறுகின்ற பேச்சு என்னும் இனிமையைக் காட்டி, கண் என்னும் அம்பைக் காட்டி, முகம் என்னும் தாமரையைக் காட்டி, மலை போல ஒழுங்குள்ள இளமையான மார்பகத்தைக் காட்டி, இடை என்னும் கொடியைக் காட்டி, வளப்பம் பொருந்திய கை வளையல்களைக் காட்டி, இன்பம் தருவதான, அழகு வாய்ந்த பெண்குறியைக் காட்டி, (தங்கள்) தொழிலை மிக அதிகமாகக் காட்டும் அழகிய (விலை) மாதர்களின் மயக்கச் சேற்றில் அலைவேனோ? புன்சிரிப்பால் மன்மதனுடைய உருவத்தை எரித்து அழித்த சிவபெருமான் அருளிய பிள்ளை என்று விளங்கி, யாவர்க்கும் நன்மையே அருள் செய்து வீற்றிருக்கும் திருச்செந்தூரில் உறைபவனே, ஒன்பது சிறந்த மணிகளால் ஆகிய மாலை தோன்றும் மார்பகத்தை உடைய மாதாகிய, யானை மகள் மின்னலைப் போன்ற அழகுடைய தேவயானையின் சேர்க்கையை நழுவ விடாமல் அன்பு காட்டும் முருகனே, அகங்காரம் கொண்ட அசுரனாகிய சூரன் சண்டைக்கு வரவும், போர் புரியும் எண்ணம் உன் மனத்தில் உதிக்கும் முன்னே அபயம் தந்து, உன்னிடம் முறையிட்டு, ஐராவதம் ஆகிய யானையின் முதுகின் மேல் விளங்குபவனும் (நாங்கள்) அடைக்கலம் எனக் கூறி இனிமையுடனும் அன்புடனும் போற்றியவனுமாகிய தேவர்கள் தலைவனான இந்திரனை முழுமையும் காத்த பெருமாளே. 

பாடல் 91 - திருச்செந்தூர்
ராகம் - செஞ்சுருட்டி; ஡ளம் - அங்கதாளம் - 7 1/2 தகிட-1 1/2, தகதகிட-2 1/2, தகதிமி-2, தகிட-1 1/2

தந்ததன தான தானத் தான     தந்ததன தான தானத் தான          தந்ததன தான தானத் தான ...... தனதானா

முந்துதமிழ் மாலை கோடிக் கோடி     சந்தமொடு நீடு பாடிப் பாடி          முஞ்சர்மனை வாசல் தேடித் தேடி ...... யுழலாதே 
முந்தைவினை யேவ ராமற் போக     மங்கையர்கள் காதல் தூரத் தேக          முந்தடிமை யேனை யாளத் தானு ...... முனைமீதே 
திந்திதிமி தோதி தீதித் தீதி     தந்ததன தான தானத் தான          செஞ்செணகு சேகு தாளத் தோடு ...... நடமாடுஞ் 
செஞ்சிறிய கால்வி சாலத் தோகை     துங்கஅநு கூல பார்வைத் தீர          செம்பொன்மயில் மீதி லேயெப் போது ...... வருவாயே 
அந்தண்மறை வேள்வி காவற் கார     செந்தமிழ்சொல் பாவின் மாலைக் கார          அண்டருப கார சேவற் கார ...... முடிமேலே 
அஞ்சலிசெய் வோர்கள் நேயக் கார     குன்றுருவ ஏவும் வேலைக் கார          அந்தம்வெகு வான ரூபக் கார ...... எழிலான 
சிந்துரமின் மேவு போகக் கார     விந்தைகுற மாது வேளைக் கார          செஞ்சொலடி யார்கள் வாரக் கார ...... எதிரான 
செஞ்சமரை மாயு மாயக் கார     துங்கரண சூர சூறைக் கார          செந்தினகர் வாழு மாண்மைக் கார ...... பெருமாளே.

மொழிகளில் முந்தியுள்ள தமிழில் பாமாலைகளை கோடிக்கணக்காக சந்தப்பா வகையில் நீண்டனவாகப் பாடிப்பாடி, அழிகின்ற மக்களின் வீட்டு வாசல்கள் எங்கே உள்ளன என்று தேடித் தேடி அலையாமல், முன்ஜென்ம வினை என்பதே என்னைத் தொடராமல் ஓடிப்போக பெண்ணாசை என்பது தூரத்தே ஓடிப்போக முந்தவேண்டும் என்ற ஆசைகொண்ட அடிமையேனை ஆண்டருளும் பொருட்டு என் முன்னிலையில், (அதே ஒலி) என்ற தாளத்திற்கு ஏற்ப நடனம் செய்யும் சிவந்த சிறிய கால்களை உடையதும், விரித்த தோகையை உடையதும், பரிசுத்தமான நன்மை நல்கும் பார்வை கொண்டதும், தீரமும், செம்பொன் நிறத்தையும் கொண்ட மயில்மீது, எப்போது தான் வரப்போகிறாயோ? அழகிய அருள்மிக்க வேத வேள்விக்கெல்லாம் காவல் புரியும் பெருமானே, செந்தமிழ்ச் சொற்களான பாடல்களை மாலைகளாக அணிந்துகொள்பவனே, தேவர்களுக்கெல்லாம் உபகாரியே, சேவலைக் கொடியாக உடையவனே, சிரத்தின்மேல் கைகூப்பித் தொழுவோரின் அன்பு பூண்டவனே, (கிரெளஞ்ச) மலையை ஊடுருவும்படி ஏவின வேற் கரத்தோனே, அழகு மிகப் பொலியும் திருவுருவம் கொண்டவனே, அழகு நிறைந்த தேவயானை விரும்பும் இன்பம் வாய்ந்தவனே, அழகிய குறப்பெண் வள்ளியுடன் பொழுதுபோக்கும் மெய்க்காவலனே, இன்சொற்களால் போற்றும் அடியார்கள் மீது அன்பு கொண்டவனே, எதிர்த்துவரும் பெரும்போரில் பகைவரை மாய்க்கும் மாயக்காரனே, பெரும் போரில் சூரனை சூறாவளிக் காற்றுப் போல் அடித்துத் தள்ளியவனே, திருச்செந்தூர் நகரில் வாழும் ஆட்சித் திறன் படைத்த பெருமாளே. 

பாடல் 92 - திருச்செந்தூர்
ராகம் - ....; தாளம் -

தனன தந்த தந்த தனன தந்த தந்த     தனன தந்த தந்த ...... தனதான

முலைமு கந்தி மிர்ந்த கலவை யுந்து லங்கு     முறுவ லுஞ்சி வந்த ...... கனிவாயும் 
முருக விழ்ந்து திர்ந்த மலர்க ளுஞ்ச ரிந்த     முகிலு மின்ப சிங்கி ...... விழிவேலும் 
சிலைமு கங்க லந்த திலத முங்கு ளிர்ந்த     திருமு கந்த தும்பு ...... குறுவேர்வும் 
தெரிய வந்து நின்ற மகளிர் பின்சு ழன்று     செயல ழிந்து ழன்று ...... திரிவேனோ 
மலைமு கஞ்சு மந்த புலவர் செஞ்சொல் கொண்டு     வழிதி றந்த செங்கை ...... வடிவேலா 
வளர்பு னம்ப யின்ற குறம டந்தை கொங்கை     மணிவ டம்பு தைந்த ...... புயவேளே 
அலைமு கந்த வழ்ந்து சினைமு திர்ந்த சங்க     மலறி வந்து கஞ்ச ...... மலர்மீதே 
அளிக லந்தி ரங்க இசையு டன்து யின்ற     அரிய செந்தில் வந்த ...... பெருமாளே.

மார்பகத்தின் மேல் பூசப்பட்ட சந்தனக் கலவையும், விளங்கும் பற்களின் புன்னகையும், செந்நிறமான கொவ்வைக் கனி போன்ற வாயும், மணம் அவிழ்ந்து உதிர்ந்த பூக்களும், சரிந்துள்ள மேகம் போன்று கருத்த கூந்தலும், இன்பமும் நஞ்சும் ஒருங்கே கொண்ட கண்களாகிய வேலும், வில் போன்ற இடமாகிய நெற்றியில் அமைந்த பொட்டும், குளிர்ந்த அழகிய முகத்தில் அரும்பும் சிறு வியர்வைத் துளிகளும், தெரியும்படி வந்து நின்ற விலைமாதர்களின் பின்னால், என் செயல் அழிந்து, அலைந்து திரிவேனோ? மலைக் குகையில் அடைக்கப்பட்டிருந்த புலவராகிய நக்கீரரின் சிறந்த பாடலை (திருமுருகாற்றுப்படையைக்) கேட்டு, அந்தக் குகையின் வாயிலைத் திறந்து விட்ட செவ்விய கைகளை உடைய வடிவேலனே. வளர்கின்ற தினைப் புனத்தில் காவல் இருந்த குறமங்கையாகிய வள்ளியின் மார்பின் மீதிருந்த மணி மாலை புதைந்த புயம் விளங்கும் அரசே, அலைகளில் தவழ்ந்து (முத்துக்களைக் கருவில் கொண்டுள்ள) சூல் நிறைந்த சங்குகள் மிக ஒலித்து வந்து, வண்டுகள் மொய்த்து ஒலிக்கும் தாமரை மலர் மேல் தங்கி, அந்த இசையைக் கேட்டுக் கொண்டே துயில் கொள்ளும் அருமையான தலமாகிய திருச்செந்தூரில் வந்து அமர்ந்துள்ள பெருமாளே. 

பாடல் 92 - திருச்செந்தூர்
ராகம் - மாயா மாளவ கெளளை; தாளம் - ஆதி - 2 களை

தாத்தத் தத்தன தாத்தத் தத்தன     தாத்தத் தத்தன ...... தனதான

மூப்புற் றுச்செவி கேட்பற் றுப்பெரு     மூச்சுற் றுச்செயல் ...... தடுமாறி 
மூர்க்கச் சொற்குரல் காட்டிக் கக்கிட     மூக்குக் குட்சளி ...... யிளையோடும் 
கோப்புக் கட்டியி னாப்பிச் செற்றிடு     கூட்டிற் புக்குயி ...... ரலையாமுன் 
கூற்றத் தத்துவ நீக்கிப் பொற்கழல்     கூட்டிச் சற்றருள் ...... புரிவாயே 
காப்புப் பொற்கிரி கோட்டிப் பற்றலர்     காப்பைக் கட்டவர் ...... குருநாதா 
காட்டுக் குட்குற வாட்டிக் குப்பல     காப்புக் குத்திர ...... மொழிவோனே 
வாய்ப்புற் றத்தமிழ் மார்க்கத் திட்பொருள்     வாய்க்குச் சித்திர ...... முருகோனே 
வார்த்தைச் சிற்பர தீர்த்தச் சுற்றலை     வாய்க்குட் பொற்பமர் ...... பெருமாளே.

கிழப் பருவத்தை அடைந்து, காது கேட்கும் தன்மையை இழந்து, பெருமூச்சு விட்டுக்கொண்டு, செயல்கள் தடுமாற்றம் அடைந்து, கொடிய கோபத்துடன் கூடிய சொற்களோடு குரலை வெளிப்படுத்தி, வெளிப்படும் மூக்குச்சளியும், நெஞ்சுக்கபமும் கோத்தது போல் ஒன்று சேர்ந்து துன்ப வெறியை அதிகரிக்கச் செய்து, இத்தகைய உடலில் புகுந்து என் உயிர் தவிப்பதற்கு முன்னம், யமன் வந்து என்னுயிரை எடுக்கும் தவிர்க்க முடியாத செயலை அகற்றி, உன் அழகிய திருவடியில் சேர்த்து, சிறிது அருள் புரிவாயாக. உலகின் அரணாக நிற்கும் பொன்மலை மேருவை வில்லாக வளைத்து, பகைவராகிய திரிபுரத்தாருடைய அரண்களை அழித்தவராகிய சிவபிரானின் குருநாதனே, கானகத்தில் குறப் பெண் வள்ளி தேவிக்கு என்னைக் காத்தருள் என்றெல்லாம் பல நயமொழிகள் கூறியவனே, வாய்ப்புள்ள தமிழின் அகத்துறையின் உறுதியான பொருளை உண்மை இதுவே என (ருத்திரசன்மனாக வந்து)* அழகுறத் தெளிவாக்கிய முருகப் பெருமானே, சொல்லுக்கும் சித்தத்துக்கும் அப்பாற்பட்டவனே, புண்ணிய தீர்த்தங்கள் சுற்றியுள்ள திருச்சீரலைவாயில் (திருச்செந்தூரில்) அழகாக வீற்றிருக்கும் பெருமாளே. 
* மதுரையில் சொக்கநாதர் இயற்றிய இறையனார் அகப்பொருள் என்ற நூலுக்கு நக்கீரர் எழுதிய உரையே சிறந்தது என்று சங்கப் புலவர்களிடையில் ருத்திரசன்மனாக முருகன் வந்து நிலை நாட்டினான் - திருவிளையாடல் புராணம்.

பாடல் 94 - திருச்செந்தூர்
ராகம் - சங்கரானந்தப்ரியா; தாளம் - அங்கதாளம் - 9 தகிட-1 1/2, தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2

தானதன தான தானந்த தானந்த     தானதன தான தானந்த தானந்த          தானதன தான தானந்த தானந்த ...... தனதான

மூளும்வினை சேர மேல்கொண்டி டாஐந்து     பூதவெகு வாய மாயங்கள் தானெஞ்சில்          மூடிநெறி நீதி யேதுஞ்செ யாவஞ்சி ...... யதிபார 
மோகநினை வான போகஞ்செய் வேனண்டர்     தேடஅரி தாய ஞேயங்க ளாய்நின்ற          மூலபர யோக மேல்கொண் டிடாநின்ற ...... துளதாகி 
நாளுமதி வேக கால்கொண்டு தீமண்ட     வாசியன லூடு போயொன்றி வானின்க          ணாமமதி மீதி லூறுங்க லாஇன்ப ...... அமுதூறல் 
நாடியதன் மீது போய்நின்ற ஆநந்த     மேலைவெளி யேறி நீயின்றி நானின்றி          நாடியினும் வேறு தானின்றி வாழ்கின்ற ...... தொருநாளே 
காளவிட மூணி மாதங்கி வேதஞ்சொல்     பேதைநெடு நீலி பாதங்க ளால்வந்த          காலன்விழ மோது சாமுண்டி பாரம்பொ ...... டனல்வாயு 
காதிமுதிர் வான மேதங்கி வாழ்வஞ்சி     ஆடல்விடை யேறி பாகங்கு லாமங்கை          காளிநட மாடி நாளன்பர் தாம்வந்து ...... தொழுமாது 
வாளமுழு தாளு மோர்தண்டு ழாய்தங்கு     சோதிமணி மார்ப மாலின்பி னாளின்சொல்          வாழுமுமை மாத ராள்மைந்த னேயெந்தை ...... யிளையோனே 
மாசிலடி யார்கள் வாழ்கின்ற வூர்சென்று     தேடிவிளை யாடி யேயங்ங னேநின்று          வாழுமயில் வீர னேசெந்தில் வாழ்கின்ற ...... பெருமாளே.

தீயைப் போல் மூண்டு பழைய வினைகள் ஒன்று சேர, அதனால் உயர்ந்து எழும்பிய பஞ்ச பூதங்களின் பற்பலவிதமான மாயங்கள் என் நெஞ்சில் வந்து நன்கு மூடப்பெற்று, பக்திநெறிக்குரிய அறச்செயல் ஏதும் செய்யாமல், வஞ்சிக்கொடி போன்ற இடையை உடைய பெண்களின் மீதுள்ள மிகுந்த காமநினைவால் அசுத்த போகத்தை நுகர்கின்ற நான், தேவர்களும் தேடித் தெரிந்துகொள்வதற்கு அரிய பொருளாகிய, மெய்யுணர்வினால் ஆராய்ந்து அறியப்படுகின்றவையாக விளங்கும் முதன்மையான அனுபவ யோகத்திலே முனைந்து நின்று, அதனிடத்திலேயே அசைவற்று இருப்பதாகி, நாள்தோறும் வெகு வேகமாக எழும் பிராணவாயுவைக் கொண்டு, மூலக்கனல்* மண்டி எழுந்திருக்க, பிராணவாயுவானது அந்த அக்கினியில் சென்று பொருந்த, ஆகாயத்தில் புகழ்பெற்ற சந்திரனிலிருந்து பொழியும் அமிர்தகலை என்னும் இனிய அமுதப் பொழிவை நாடி, அச்சந்திர மண்டலத்தில் சென்று, நிலைத்த ஆநந்தப் பெருவெளியில் மீது ஏறி அமர்ந்து, நீ நான் என்ற பிரிவற்ற அத்வைத முக்தியை உணர்ந்து, இன்னும் பிற பொருள்களும் தோன்றாத மனம் நீங்கிய சுக வாழ்வில் வாழ்கின்ற ஒருநாள் எனக்கு உண்டாகுமோ? அவள் (பாற்கடலில் தோன்றிய) ஆலகால விஷத்தை அருந்தியவள், மதங்க முநிவருக்குப் பெண்ணாக அவதரித்தவள், வேதங்களால் புகழப் பெறுபவள், பெரும் தகைமையை உடைய துர்க்கை, (மார்க்கண்டேயனின் உயிரைப் பறிக்க) வந்த யமன் இறந்து விழுமாறு திருவடிகளால் உதைத்து வீழ்த்திய காளியம்மை, பூமி, நீர், தீ, வாயு, பேரொளி மிகுந்த வானம் ஆகிய பஞ்ச பூதங்களிலும் தங்கி அந்தர்யாமியாக விளங்கும் கொடியைப் போன்றவள், ஆநந்த நடனம் ஆடுபவரும், ரிஷப வாகனமாம் நந்திமேல் ஏறுபவருமான சிவபிரானின் இடப்பாகத்தில் இன்பமுடன் குலவி அமரும் மங்கை, பத்ரகாளியாக நின்று சிவதாண்டவத்துக்கு எதிர்த்தாண்டவம் செய்தவள், நாள்தோறும் மெய்யடியார்கள் அவளது சன்னிதிக்கு வந்து வழிபட்டு வணங்கப் பெறும் தாயார், சக்ரவாளகிரியால் சூழப்பட்ட இந்த உலகம் முழுதையும் ஆள்கின்ற, குளிர்ந்த துளசிமாலையை அணிந்த, ஒளிமயமான ரத்தின மாலையை அணிந்த மார்பினனான, திருமாலின் தங்கை, இனிமையான சொற்களை உடையவளான மாதரசி பார்வதி தேவியின் மைந்தனே, எமது பிதாவாகிய சிவபிரானின் இளைய புதல்வனே, குற்றமற்ற மெய்யடியார்கள் வாழ்கின்ற ஊர்களை நாடிச்சென்று, அவர்களைத் தேடி, பல திருவிளையாடல்களைப் புரிந்து, அத்தலங்களிலேயே நிரந்தரமாகத் தங்கும் மயில் வீரனே, திருச்செந்தூர்ப் பதியில் எழுந்தருளியுள்ள பெருமாளே. 
* இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு:நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு 'ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள், சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி, ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை, சுழுமுனை முதலியன) உள்ளன.'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம்.'சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது.'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும் ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும்.
ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம்

பாடல் 95 - திருச்செந்தூர்
ராகம் - பூர்விகல்யாணி; தாளம் - திஸ்ர த்ருபுடை - 7

தந்தந்தந் தந்தன தானன     தந்தந்தந் தந்தன தானன          தந்தந்தந் தந்தன தானன ...... தனதான

வஞ்சங்கொண் டுந்திட ராவண     னும்பந்தென் திண்பரி தேர்கரி          மஞ்சின்பண் புஞ்சரி யாமென ...... வெகுசேனை 
வந்தம்பும் பொங்கிய தாகஎ     திர்ந்துந்தன் சம்பிர தாயமும்          வம்புந்தும் பும்பல பேசியு ...... மெதிரேகை 
மிஞ்சென்றுஞ் சண்டைசெய் போதுகு     ரங்குந்துஞ் சுங்கனல் போலவெ          குண்டுங்குன் றுங்கர டார்மர ...... மதும்வீசி 
மிண்டுந்துங் கங்களி னாலெத     கர்ந்தங்கங் கங்கர மார்பொடு          மின்சந்துஞ் சிந்தநி சாசரர் ...... வகைசேர 
வுஞ்சண்டன் தென்றிசை நாடிவி     ழுந்தங்குஞ் சென்றெம தூதர்க          ளுந்துந்துந் தென்றிட வேதசை ...... நிணமூளை 
உண்டுங்கண் டுஞ்சில கூளிகள்     டிண்டிண்டென் றுங்குதி போடவு          யர்ந்தம்புங் கொண்டுவெல் மாதவன் ...... மருகோனே 
தஞ்சந்தஞ் சஞ்சிறி யேன்மதி     கொஞ்சங்கொஞ் சந்துரை யேயருள்          தந்தென்றின் பந்தரு வீடது ...... தருவாயே 
சங்கங்கஞ் சங்கயல் சூழ்தட     மெங்கெங்கும் பொங்கம காபுநி          தந்தங்குஞ் செந்திலில் வாழ்வுயர் ...... பெருமாளே.

வஞ்சக எண்ணம் கொண்டவனும், வலிமை வாய்ந்தவனுமான ராவணன், பந்து போல வேகமாய்ச் செல்லும் வலிய குதிரை, தேர், யானை, மற்றும் மேக வரிசைக்கு நிகராக அடுக்கிய அனேகம் காலாட்படைகளுடன், போர்க்களத்துக்கு கூட்டி வந்து, அம்புக் கூட்டங்கள் நிறைந்து எதிர்த்தாலும், தனது சாமர்த்தியப் பெருமைப் பேச்சும், வீண் பேச்சும், இழிவான வார்த்தைகளும் பலவாகப் பேசியும், எதிரில் உள்ள சேனையோடு மிகவும் இடைவிடாது போரிட்ட போது, குரங்குச் சேனைகள் நிலையான நெருப்பைப் போல கோபம் கொண்டு, மலைகளையும், கரடுமுரடான மரங்களையும் பிடுங்கி வீசி, பேர்த்து எடுக்கப்பட்ட மலைப்பாறைகளினாலே நொறுக்கி, அசுரர்களின் உடம்பு, தலை, கரம், மார்பு இவைகளுடன் ஒளிவீசும் மற்ற உடற்பகுதிகளையும் சிதற அடித்து, அசுரர்களின் இனம் முழுவதையும், யமனுடைய தெற்குத் திசையை நாடிச்சென்று விழச்செய்து, அங்கு சென்றும் யம தூதர்கள் அசுரர்களைத் தள்ளு, தள்ளு, தள்ளு என்று கூறும்படியாக மாமிசம், கொழுப்பு மூளை இவற்றை சில பேய்கள் பார்த்தும், உண்டும், டிண்டிண்டென்றும் தாளமுடன் குதித்துக் கூத்தாடவும், சிறந்த அம்புகளைக் கொண்டு வென்ற ராமனின் (திருமாலின்) மருகனே, அடைக்கலம், அடைக்கலம், சிறியேனுடைய அறிவு மிகக் கொஞ்சம், கொஞ்சம், துரையே, அருள் பாலித்து எப்போது எனக்கு இன்பம் தருகின்ற மோக்ஷ வீட்டைக் கொடுக்கப் போகிறாய்? சங்குகளும், தாமரையும், கயல் மீன்களும் உள்ள குளங்கள் பல இடங்களிலும் பொங்கி நிறைந்திருக்க, மிகுந்த பரிசுத்தம் துலங்கும் திருச்செந்தூரில் வாழ்ந்து ஓங்கும் பெருமாளே. 

பாடல் 96 - திருச்செந்தூர்
ராகம் - மனோலயம்; தாளம் - ஆதி - 2 களை

தந்தத் தனதன தந்தத் தனதன     தந்தத் தனதன ...... தனதான

வஞ்சத் துடனொரு நெஞ்சிற் பலநினை     வஞ்சிக் கொடியிடை ...... மடவாரும் 
வந்திப் புதல்வரும் அந்திக் கிளைஞரு     மண்டிக் கதறிடு ...... வகைகூர 
அஞ்சக் கலைபடு பஞ்சிப் புழுவுடல்     அங்கிக் கிரையென ...... வுடன்மேவ 
அண்டிப் பயமுற வென்றிச் சமன்வரும்     அன்றைக் கடியிணை ...... தரவேணும் 
கஞ்சப் பிரமனை அஞ்சத் துயர்செய்து     கன்றச் சிறையிடு ...... மயில்வீரா 
கண்டொத் தனமொழி அண்டத் திருமயில்     கண்டத் தழகிய ...... திருமார்பா 
செஞ்சொற் புலவர்கள் சங்கத் தமிழ்தெரி     செந்திற் பதிநக ...... ருறைவோனே 
செம்பொற் குலவட குன்றைக் கடலிடை     சிந்தப் பொரவல ...... பெருமாளே.

வஞ்சனையுடன், நெஞ்சமாகிய ஒன்றில் பல்வேறு சிந்தனைகளை உடையவர்களும், வஞ்சிக்கொடி போன்ற இடையை உடையவர்களும் ஆகிய பெண்களும், வணங்கும் புதல்வர்களும், நெருங்கிய சுற்றத்தார்களும், ஒன்று சேர்ந்து அழுகின்ற செயல் மிகுதியாக, உடலின் பாகங்கள் யாவும் கலைபட்டுப் போய், பஞ்சு போன்ற இந்தப் புழுத்த உடம்பு நெருப்புக்கு இரையாக்கப் படுவதற்கென உடனே எடுத்துச் செல்லப்பட, அருகே வந்து அச்சுறுத்தி உயிரை வெற்றி கொண்டு செல்வதற்கு யமன் வருகின்ற அந்த நாளில் உனது இரு திருவடிகளையும் தந்தருள வேண்டும். தாமரை மலரில் அமரும் பிரமன் அஞ்சுமாறு துயரப்படுத்தி அவன் மனம் நோகச் சிறையிட்ட வேலாயுத வீரனே, கற்கண்டைப் போன்ற இனிய மொழி பேசும் தேவமாதாகிய அழகிய மயில் போன்ற தேவயானையின் கண்பார்வை பாய்கின்ற அழகிய திரு மார்பனே, செம்மை பொருந்திய சொற்களை ஆளும் புலவர்களின் கூட்டம் புகல்கின்ற தமிழைச் சூடிக்கொண்டு திருச்செந்தூர் நகரில் வீற்றிருப்பவனே, செம்பொன் நிறத்துடன் வடக்கே நின்ற கிரெளஞ்சமலையை கடலினிடையே சிதறி விழுமாறு போர் புரியவல்ல பெருமாளே. 

பாடல் 9 7 - திருச்செந்தூர்
ராகம் - சிந்து பைரவி; தாளம் - ஆதி - திஸ்ர நடை - 12

தந்த தந்த தந்த தந்த     தந்த தந்த தந்த தந்த          தந்த தந்த தந்த தந்த ...... தனதான

வந்து வந்து முன்த வழ்ந்து     வெஞ்சு கந்த யங்க நின்று          மொஞ்சி மொஞ்சி யென்ற ழுங்கு ...... ழந்தையோடு 
மண்ட லங்கு லுங்க அண்டர்     விண்ட லம்பி ளந்தெ ழுந்த          செம்பொன் மண்ட பங்க ளும்ப ...... யின்றவீடு 
கொந்த ளைந்த குந்த ளந்த     ழைந்து குங்கு மந்த யங்கு          கொங்கை வஞ்சி தஞ்ச மென்று ...... மங்குகாலம் 
கொங்க டம்பு கொங்கு பொங்கு     பைங்க டம்பு தண்டை கொஞ்சு          செஞ்ச தங்கை தங்கு பங்க ...... யங்கள்தாராய் 
சந்த டர்ந்தெ ழுந்த ரும்பு     மந்த ரஞ்செ ழுங்க ரும்பு          கந்த ரம்பை செண்ப தங்கொள் ...... செந்தில்வாழ்வே 
தண்க டங்க டந்து சென்று     பண்க டங்க டர்ந்த இன்சொல்          திண்பு னம்பு குந்து கண்டி ...... றைஞ்சுகோவே 
அந்த கன்க லங்க வந்த     கந்த ரங்க லந்த சிந்து          ரஞ்சி றந்து வந்த லம்பு ...... ரிந்தமார்பா 
அம்பு னம்பு குந்த நண்பர்     சம்பு நன்பு ரந்த ரன்த          ரம்ப லும்பர் கும்பர் நம்பு ...... தம்பிரானே.

மீண்டும் மீண்டும் என்முன் வந்து, தவழ்ந்து, விரும்பத்தக்க இன்பத்தை அளித்து நின்று, பால் வேண்டும் வேண்டும் என்று அழுகின்ற குழந்தையும், இந்தப் பூமியே குலுங்குமாறு பெரிதாய், வானுலகம் வரை வளர்ந்து நிற்கும் செம்பொன் மண்டபங்கள் நிறைந்த வீடும், பூங்கொத்துக்கள் தரித்த கூந்தல் தழையத் தழைய, குங்குமம் அப்பிய மார்புகளும் வஞ்சிக்கொடி போன்ற இடையும் உடைய மனைவியும், எனக்கு ஆதரவு என்று இருந்த என் அறிவு மங்கி நான் இறக்கும் சமயத்தில், கோங்குப்பூ, அடம்புப் பூ, வாசம் மிகுந்த பசும் கடப்பமலர், தண்டைக்கழல், கொஞ்சுவதுபோல ஒலிக்கும் செவ்விய சதங்கைகள் - இவை தங்கும் தாமரைபோன்ற உன் பாதங்களைத் தந்தருள்வாயாக. சந்தன மரம், அடர்த்தியாக அரும்புவிடும் மந்தாரம், செழிப்பான கரும்பு, குலை தள்ளிய வாழை - இவையெல்லாம் வானம்வரை வளர்ந்த திருச்செந்தூர் தலத்தில் வாழ்பவனே, குளிர்ந்த காட்டைக் கடந்து சென்று இசைப்பண்கள் யாவும் கூடிச்சேர்ந்தது போன்ற இனிமையான குரலுடைய வள்ளியின் செழிப்பான தினைப்புனத்தை அடைந்து அவளைக் கண்டு, பின்பு கும்பிட்ட தலைவனே, யமன் அருகே வருவதற்கு கலங்கி அஞ்சும்படியாக, (உன் அடியார்களின் இதயமாகிய) குகையில் விருப்புற்றுக்கலந்த குங்கும அழகி தேவயானை சிறப்பாக வந்து மகிழ்ச்சியோடு அணைக்கும் திருமார்பனே, அழகிய தினைப்புனத்தில் உன்பொருட்டுச் சென்ற உன் நண்பர் நாரதரும், சிவபிரான், நல்ல இந்திரன், தகுதிபெற்ற வேறு பல தேவர்கள், கும்பமுனி அகஸ்தியர் இவர்கள் யாவரும் உன்னை நம்பித் தொழும் தம்பிரானே. 

பாடல் 98 - திருச்செந்தூர்
ராகம் - காம்போதி / ஸஹானா; தாளம் - சதுஸ்ர ஜம்பை - 7

தனனா தனந்த ...... தனதான

வரியார் கருங்கண் ...... மடமாதர் 
மகவா சைதொந்த ...... மதுவாகி 
இருபோ துநைந்து ...... மெலியாதே 
இருதா ளினன்பு ...... தருவாயே 
பரிபா லனஞ்செய் ...... தருள்வோனே 
பரமே சுரன்ற ...... னருள்பாலா 
அரிகே சவன்றன் ...... மருகோனே 
அலைவா யமர்ந்த ...... பெருமாளே.

வரிகள் (ரேகைகள்) உள்ள கரிய கண்களை உடைய இளம்பெண்கள், குழந்தைகள் என்கிற ஆசையாகிய பந்தத்திலே அகப்பட்டு, பகலும் இரவும் மனம் நைந்துபோய் மெலிவு அடையாமல், உன் இரு திருவடிகளின்மீது அன்பைத் தந்தருள்வாயாக. காத்து ரட்சித்து அருள் செய்பவனே, பரமசிவன் தந்தருளிய குழந்தையே, ஹரி கேசவனாம் திருமாலின் மருமகனே, திருச்சீரலைவாயாம் திருச்செந்தூரில் அமர்ந்த பெருமாளே. 

பாடல் 99 - திருச்செந்தூர்
ராகம் - .....; தாளம் -

தனதான தந்த தனதான தந்த     தனதான தந்த ...... தனதான

விதிபோலு முந்த விழியாலு மிந்து     நுதலாலு மொன்றி ...... யிளைஞோர்தம் 
விரிவான சிந்தை யுருவாகி நொந்து     விறல்வேறு சிந்தை ...... வினையாலே 
இதமாகி யின்ப மதுபோத வுண்டு     இனிதாளு மென்று ...... மொழிமாதர் 
இருளாய துன்ப மருள்மாயை வந்து     எனையீர்வ தென்றும் ...... ஒழியாதோ 
மதிசூடி யண்டர் பதிவாழ மண்டி     வருமால முண்டு ...... விடையேறி 
மறவாத சிந்தை யடியார்கள் பங்கில்     வருதேவ சம்பு ...... தருபாலா 
அதிமாய மொன்றி வருசூரர் பொன்ற     அயில்வேல்கொ டன்று ...... பொரும்வீரா 
அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து     அலைவாயு கந்த ...... பெருமாளே.

விதி போல முற்பட்டு வினைப்படும் அந்தக் கண்களாலும், பிறைச் சந்திரனைப் போன்ற நெற்றியாலும் ஈடுபட்ட இளைஞர்களுடைய விரிந்த சிந்தையில் உருவெளித் தோற்றமாய் நின்று நோவும்படி செய்து, அந்த இளைஞர்களின் வன்மையும் மனமும் மாறுபடச் செய்யும் செயல்களால், அன்பு பூண்டு இன்பத் தேனை நிரம்ப உண்டு எங்களை இனிது அனுபவியுங்கள் என்று சொல்லுகின்ற மாதர்களால் வரும் இருளான துன்பமும், மருட்சி தரும் மாயையும் வந்து என் நெஞ்சைப் பிளவு செய்தல் எக்காலத்தும் தொலையாதோ? பிறையைச் சூடியவரும், தேவர்கள் ஊர் வாழும்படி, நெருங்கி வந்த ஆலகால விஷத்தை உண்டு, நந்தியாகிய ரிஷப வாகனத்தில் ஏறி வருபவரும், மறவாத மனத்தை உடைய அடியார்கள் பங்கில் வருகின்றவரும் ஆகிய தேவருமான சிவ பெருமான் பெற்ற பாலனே, அதிக மாயைகளைச் செய்து வந்த சூரர் அழிய, கூரிய வேலைக் கொண்டு அன்று போர் செய்த வீரனே, அழகிய செம்பொன் மயிலின் மேல் அமர்ந்து, திருச்செந்தூரில் மகிழ்ந்து வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 100 - திருச்செந்தூர்
ராகம் - யமுனா கல்யாணி; தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2 தகதிமி-2, தகிட-1 1/2

தந்தன தான தந்தன தான     தந்தன தான ...... தனதான

விந்ததி னூறி வந்தது காயம்     வெந்தது கோடி ...... யினிமேலோ 
விண்டுவி டாம லுன்பத மேவு     விஞ்சையர் போல ...... அடியேனும் 
வந்துவி நாச முன்கலி தீர     வண்சிவ ஞான ...... வடிவாகி 
வன்பத மேறி யென்களை யாற     வந்தருள் பாத ...... மலர்தாராய் 
எந்தனு ளேக செஞ்சுட ராகி     யென்கணி லாடு ...... தழல்வேணி 
எந்தையர் தேடு மன்பர்ச காய     ரெங்கள்சு வாமி ...... யருள்பாலா 
சுந்தர ஞான மென்குற மாது     தன்றிரு மார்பி ...... லணைவோனே 
சுந்தர மான செந்திலில் மேவு     கந்தசு ரேசர் ...... பெருமாளே.

சுக்கிலத்திலிருந்து ஊறி வந்தது இந்த உடம்பு. நெருப்பில் வீழ்ந்து வெந்த உடம்போ கோடிக்கணக்கானவை. இனியாவது உன்னை விட்டு நீங்காதிருக்கும் பொருட்டு, உன் திருவடிகளை விரும்பும் அறிஞர்களைப் போல யானும் நன்னெறிக்கு வந்து, பேரழிவாகிய முன்வினைக் கேடு நீங்க, வளமையான சிவஞானத்தின் வடிவை அடைந்து, வலிமையான முக்திப்பதத்தைப் பெற்று, என் பிறவிக் களைப்பு தீருமாறு என் முன் வந்து அருள்மயமான உன் திருப்பதங்களெனும் மலரினைத் தருவாயாக. எனது உள்ளத்தில் ஒப்பற்ற செழும் ஜோதியாக விளங்கி, என் கண்களில் நடனம் ஆடுகின்ற, நெருப்பு நிறமான ஜடாமுடியுடைய எனது தந்தையாரும், அன்பினால் தேடும் அடியார்க்கு உதவுகின்றவரும், எங்கள் இறைவனுமாகிய சிவபெருமான் அருளிய குமரனே, அழகும், ஞான அறிவும், மென்மையும் நிறைந்த குறப்பெண் வள்ளியின் திருமார்பினைத் தழுவுபவனே, அழகு மிகுந்த திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள கந்தனே, தேவர் தலைவர்களின் பெருமாளே. 

by Swathi   on 28 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.