LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- அருணகிரிநாதர் நூல்கள்

திருப்புகழ்-பாடல்-[801 -850]

பாடல் 801 - கந்தன்குடி 
ராகம் - ஸஹானா 
தாளம் - திஸ்ர ஏகம் - 3
தந்தந்தன தந்தந்தன தந்தந்தன தந்தந்தன
     தந்தந்தன தந்தந்தன ...... தனதான
எந்தன்சட லங்கம்பல பங்கம்படு தொந்தங்களை
     யென்றுந்துயர் பொன்றும்படி ...... யொருநாளே 
இன்பந்தரு செம்பொன்கழ லுந்துங்கழல் தந்தும்பினை
     யென்றும்படி பந்தங்கெட ...... மயிலேறி 
வந்தும்பிர சண்டம்பகி ரண்டம்புவி யெங்குந்திசை
     மண்டும்படி நின்றுஞ்சுட ...... ரொளிபோலும் 
வஞ்சங்குடி கொண்டுந்திரி நெஞ்சன்துக ளென்றுங்கொளும்
     வண்டன்தமி யன்றன்பவம் ...... ஒழியாதோ 
தந்தந்தன திந்திந்திமி யென்றும்பல சஞ்சங்கொடு
     தஞ்சம்புரி கொஞ்சுஞ்சிறு ...... மணியாரம் 
சந்தந்தொனி கண்டும்புய லங்கன்சிவ னம்பன்பதி
     சம்புந்தொழ நின்றுந்தினம் ...... விளையாடும் 
கந்தன்குக னென்றன்குரு வென்றுந்தொழு மன்பன்கவி
     கண்டுய்ந்திட அன்றன்பொடு ...... வருவோனே 
கண்டின்கனி சிந்துஞ்சுவை பொங்கும்புனல் தங்குஞ்சுனை
     கந்தன்குடி யின்தங்கிய ...... பெருமாளே.
எனது உடலாகிய உறுப்பு பலவகையான துன்பங்களில் படும் தொடர்புகள், என்றும் உள்ள துயரங்கள் யாவும் ஒழியும்படியான நாள் ஒன்று உண்டோ? இன்பத்தைத் தரும் செம்பொன்னாலான வீரக்கழல்களை அணிந்த திருவடிகளைத் தந்து பின்பு எப்போதும் போல என் பாச பந்தங்கள் அழிய நீ மயில் ஏறி வந்தும், வீரத்துடன், வெளியுலக அண்டங்கள், பூவுலகம் எவ்விடத்தும் திசைகளெல்லாம் நிறையும்படி ஜோதி ஸ்வரூபமாக நின்றும், (அவ்வாறு நீ நிற்பதனால்) வஞ்சகமே குடிகொண்டு திரிகின்ற நெஞ்சினனும், குற்றத்தையே எப்போதும் செய்கின்ற தீயவனும், தனியேனுமாகிய எனது பிறப்பு நீங்காதோ? (அதே ஓசை) சஞ் சஞ்சென்ற பல ஓசைகளுடனும், அபயம் அளிக்கிறேன் என்று சொல்வது போலக் கொஞ்சும் ஒலியுள்ள சின்ன மணிமாலைகளின் சந்த ஒலியைக் கேட்டும், மேகவண்ணன் திருமால், சிவபிரான், பிரமன் மூவரும் தொழ நின்றும், அடியார்களின் உள்ளத்தில் தினந்தோறும் விளையாடுகின்ற கந்தனே, குகனே, எந்தன் குருவே என்றெல்லாம் தொழுத அன்பன் நக்கீரனது பாடலைக் கேட்டு அவன் அடைபட்ட குகையினின்றும், பூதத்தினின்றும் நக்கீரன் பிழைத்து உய்யுமாறு அன்றொருநாள் அவனது முன்னிலையில் அன்போடு வந்தவனே, கற்கண்டின் இனிப்புச் சுவையுள்ள பழங்கள் சிந்துவதால் சுவைமிக்க நீர் உள்ள சுனைகள் விளங்கும் கந்தன்குடி* என்ற தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* கந்தன்குடி காரைக்காலில் இருந்து பேரளம் செல்லும் ரயில் பாதையில் அம்பகரத்தூர் அருகே ஒரு மைலில் உள்ளது.
பாடல் 802 - திலதைப்பதி 
ராகம் - ஜனரஞ்சனி 
தாளம் - திஸ்ர ஏகம் - 3
தனனத் தனனா ...... தனதான
இறையத் தனையோ ...... அதுதானும் 
இலையிட் டுணலேய் ...... தருகாலம் 
அறையிற் பெரிதா ...... மலமாயை 
அலையப் படுமா ...... றினியாமோ 
மறையத் தனைமா ...... சிறைசாலை 
வழியுய்த் துயர்வா ...... னுறுதேவர் 
சிறையைத் தவிரா ...... விடும்வேலா 
திலதைப் பதிவாழ் ...... பெருமாளே.
மற்ற ஒருவருக்கு உணவு இட்டபின் நாம் உண்ணுதல் என்ற அறநெறி என்னிடத்தில் பொருந்தி இருந்த காலம் ஓர் அணு எவ்வளவு உள்ளதோ அந்த அளவு கூட என்னிடம் இல்லை. (அந்த நெறி எவ்வளவு இருந்தது என) சொல்வதானால் நான் அந்நெறியை விட்ட காலம்தான் மிகப் பெரியது. மும்மலங்களிலும் மாயையிலும் அலைச்சல் உறுகின்ற இந்தத் தீய நெறி இனிமேல் எனக்குக் கூடாது. வேதம் கற்ற தலைவனாகிய பிரமனை பெரிய சிறைச்சாலைக்குப் போகும்படியாகச் செய்து, உயர்ந்த வானிலுள்ள தேவர்களின் சிறையை நீக்கிவிட்ட வேலனே, திலதைப்பதி* என்னும் திருத்தலத்தில் வாழ்கின்ற பெருமாளே. 
* திலதைப்பதிக்கு தற்போதைய பெயர் கோயிற்பத்து.தஞ்சை மாவட்டத்தில் பேரளம் என்ற ஊரின் தென்மேற்கே 3 மைலில் இருக்கிறது.
பாடல் 803 - திலதைப்பதி 
ராகம் - ....; தாளம் -
தனனத் தனன தந்த தனனத் தனன தந்த
     தனனத் தனன தந்த ...... தனதான
பனகப் படமி சைந்த முழையிற் றரள நின்று
     படர்பொற் பணிபு னைந்த ...... முலைமீதிற் 
பரிவற் றெரியு நெஞ்சில் முகிலிற் கரிய கொண்டை
     படுபுட் பவன முன்றி ...... லியலாரும் 
அனமொத் திடுசி றந்த நடையிற் கிளியி னின்சொல்
     அழகிற் றனித ளர்ந்து ...... மதிமோக 
மளவிப் புளக கொங்கை குழையத் தழுவி யின்ப
     அலையிற் றிரிவ னென்று ...... மறிவேனோ 
தனனத் தனன தந்த தனனத் தனன தந்த
     தனனத் தனன தந்த ...... தனதானா 
தகிடத் தகிட தந்த திமிதத் திமித வென்று
     தனிமத் தளமு ழங்க ...... வருவோனே 
செநெனற் கழனி பொங்கி திமிலக் கமல மண்டி
     செறிநற் கழைதி ரண்டு ...... வளமேவித் 
திருநற் சிகரி துங்க வரையைப் பெருவு கின்ற
     திலதைப் பதிய மர்ந்த ...... பெருமாளே.
பாம்பின் படம் போன்ற படம் உள்ள குகை போன்ற பெண்குறியிலும், முத்து மணி நின்று அசைந்து உலவும் அழகிய ஆபரணங்களைப் பூண்டுள்ள மார்பகத்தின் மேலும், உண்மை அன்பு இல்லாமல் (பொருள் வேண்டியே) எரிச்சல் படும் (வேசியர்) உள்ளத்திலும், மேகம் போன்ற கரு நிறம் கொண்ட கூந்தலிலும், (எட்டுப் பறவைகள் செய்யும்) புட்குரல்களுக்கு இருப்பிடமான கழுத்திலும், தகுதி நிறைந்துள்ள அன்ன நடைக்கு ஒப்பான சிறந்த நடையிலும், கிளியின் இனிய மொழிக்கு ஒப்பான சொல்லிலும், நான் தனித்து நின்று சிந்தித்துத் தளர்ந்தும், காம இச்சையில் மனம் கொண்டு புளகம் கொண்ட மார்பகங்களை குழையும்படியாகத் தழுவி சிற்றின்பக் கடலில் அலைத்துச் செல்கின்றவனாகிய நான் என்றேனும், எப்போதாவது அறிந்து உய்வேனோ? தனனத் தனன தந்த தனனத் தனன தந்த தனனத் தனன தந்த தனதானா தகிடத் தகிட தந்த திமிதத் திமித என்று தனியாக மத்தளம் ஒலிக்க வருபவனே, செம்மையான நெற்பயிர் விளையும் நல்ல வயல்கள் செழிப்புற்று ஓங்கி, பெரிய மீன்களும் தாமரையும் நிறைந்து, நெருங்கிய நல்ல கரும்புகளும் திரட்சியாக வளர்ந்து வளப்பம் உற்று, அழகிய சிகரங்களை உடைய, உயர்ந்த மலைக்கு நிகராக விளங்கும் திலதைப் பதி** என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* புட் குரல்கள் = காமக் கன்னியர் கண்டத்தில் உண்டாகும் எண் வகை ஒலிகள்.மயில், புறா, அன்னம், காடை, நாரை, குயில், கோழி, வண்டு என்பன.
** திலதைப்பதிக்கு தற்போதைய பெயர் கோயிற்பத்து. தஞ்சை மாவட்டத்தில் பேரளம் என்ற ஊரின் தென்மேற்கே 3 மைலில் இருக்கிறது.
பாடல் 804 - திலதைப்பதி 
ராகம் - ....; தாளம் -
தனனத் தனத்த தந்த தனனத் தனத்த தந்த
     தனனத் தனத்த தந்த ...... தனதான
மகரக் குழைக்கு ளுந்து நயனக் கடைக்கி லங்கு
     வசியச் சரத்தி யைந்த ...... குறியாலே 
வடவெற் பதைத்து ரந்து களபக் குடத்தை வென்று
     மதர்விற் பணைத்தெ ழுந்த ...... முலைமீதே 
உகமெய்ப் பதைத்து நெஞ்சும் விரகக் கடற்பொ திந்த
     வுலைபட் டலர்ச்ச ரங்கள் ...... நலியாமல் 
உலகப் புகழ்ப்பு லம்பு கலியற் றுணர்ச்சி கொண்டு
     னுரிமைப் புகழ்ப்ப கர்ந்து ...... திரிவேனோ 
புகர்கைக் கரிப்பொ திந்த முளரிக் குளத்தி ழிந்த
     பொழுதிற் கரத்தொ டர்ந்து ...... பிடிநாளிற் 
பொருமித் திகைத்து நின்று வரதற் கடைக்க லங்கள்
     புகுதக் கணத்து வந்து ...... கையிலாருந் 
திகிரிப் படைத்து ரந்த வரதற் குடற்பி றந்த
     சிவைதற் பரைக்கி சைந்த ...... புதல்வோனே 
சிவபத் தர்முத்த ரும்பர் தவசித் தர்சித்த மொன்று
     திலதைப் பதிக்கு கந்த ...... பெருமாளே.
மீன் போல் அமைந்த குண்டலங்கள் மீது தாவிப் பாயும் கடைக்கண்களில் விளங்கும் கூர்மை வாய்ந்த அந்த அம்பால் ஏற்பட்ட வடுவாலும், மேரு மலையை வடக்கே (வெட்கப்பட்டு) ஓட வைத்து, சந்தனக் கலவை அணிந்த குடத்தை வெற்றி கொண்டு, செழிப்புடன் பெருத்து எழுந்த மார்பின் மேலும், உடல் நடுங்கிப் பதைப்புற என் மனம் காம மோகக் கடலில் ஏற்பட்ட (விரகாக்கினி) உலையில் அவதிப்பட்டு, (மன்மதனின்) மலர்ப் பாணங்கள் என்னை வேதனைப் படுத்தாமல், உலகத்தோரின் புகழ்க் கூச்சல் என்னும் செருக்கு நீங்க, ஞான உணர்ச்சி கொண்டு உனக்கு உரித்தான திருப்புகழைச் சொல்லி நான் திரிய மாட்டேனோ? புள்ளியை உடைய துதிக்கையைக் கொண்ட யானையாகிய கஜேந்திரன் தாமரை நிறைந்திருந்த குளத்தில் இறங்கிய போது முதலை தொடர்ந்து பிடித்த அந்த நாளில், துன்புற்று திகைத்து நின்று வரதராகிய திருமாலுக்கு அடைக்கல முறையீடுகள் செய்ய, ஒரு நொடிப் பொழுதில் வந்து அவருடைய திருக் கையில் விளங்கும் சக்கரப் படையை ஏவிய திருமாலுக்கு உடன் பிறந்தவளாகிய சிவை, பராசக்திக்கு இனிய மகனே, சிவனடியார்கள், முக்தி நிலை பெற்றவர்கள், தேவர்கள், தவம் நிறை சித்தர்கள் இவர்களுடைய மனம் பொருந்தி வணங்கும் திலதைப்பதி* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே. 
* திலதைப்பதிக்கு தற்போதைய பெயர் கோயிற்பத்து. தஞ்சை மாவட்டத்தில் பேரளம் என்ற ஊரின் தென்மேற்கே 3 மைலில் இருக்கிறது.
பாடல் 805 - திருவம்பர் 
ராகம் - ...; தாளம் -
தான தந்தனந் தான தந்ததன
     தான தந்தனந் தான தந்ததன
          தான தந்தனந் தான தந்ததன ...... தந்ததான
சோதி மந்திரம் போத கம்பரவு
     ஞான கம்பரந் தேயி ருந்தவெளி
          தோட லர்ந்தபொன் பூவி ருந்தஇட ...... முங்கொளாமல் 
சூது பந்தயம் பேசி யஞ்சுவகை
     சாதி விண்பறிந் தோடு கண்டர்மிகு
          தோத கம்பரிந் தாடு சிந்துபரி ...... கந்துபாயும் 
வீதி மண்டலம் பூண மர்ந்துகழி
     கோல மண்டிநின் றாடி யின்பவகை
          வேணு மென்றுகண் சோர ஐம்புலனொ ...... டுங்குபோதில் 
வேதி யன்புரிந் தேடு கண்டளவி
     லோடி வெஞ்சுடுங் காட ணைந்துசுட
          வீழ்கி வெந்துகுந் தீடு மிந்தஇட ...... ரென்றுபோமோ 
ஆதி மண்டலஞ் சேர வும்பரம
     சோம மண்டலங் கூட வும்பதும
          வாளன் மண்டலஞ் சார வுஞ்சுழிப ...... டர்ந்ததோகை 
ஆழி மண்டலந் தாவி யண்டமுத
     லான மண்டலந் தேடி யொன்றதொழு
          கான மண்டலஞ் சேட னங்கணயில் ...... கொண்டுலாவிச் 
சூதர் மண்டலந் தூளெ ழுந்துபொடி
     யாகி விண்பறந் தோட மண்டியொரு
          சூரி யன்திரண் டோட கண்டுநகை ...... கொண்டவேலா 
சோடை கொண்டுளங் கான மங்கைமய
     லாடி இந்திரன் தேவர் வந்துதொழ
          சோழ மண்டலஞ் சாரு மம்பர்வளர் ...... தம்பிரானே.
(யோகத்தால் அடையப்படும்) ஜோதி ஒளி மண்டபம், ஞான உபதேசத்தால் அடையக்கூடிய ஞானாகாசமாகிய பரந்த பெரு வெளி, இதழ் அவிழ்ந்த (கற்பகப்) பொன் மலர் மணக்கும் தேவலோகம் (இத்தகைய மேலான பதங்களை அடையும் முயற்சியைக்) கொள்ளாமல், சூதாட்டப் பந்தயங்கள் பேசி, ஐந்து வகைப்பட்ட இனத்தினரான ஐம்புலன்கள், விண்ணையும் நிலை பெயர்த்து ஓட வல்ல வீரர்கள், மிக்க வஞ்சகச் செயல்களை அன்பு காட்டுவது போல காட்டி, கடல் குதிரை முழுப் பாய்ச்சல் பாய்வது போலப் பாய்ந்து செல்லும் வீதிவட்டத்தில் சிக்கிக் கொண்டு, மிக்க அலங்காரங்கள் நிறையும்படி நின்று அனுபவித்து, இன்ப வகையே வேண்டும் என்று இருந்தும், கண் பார்வை தளர்ந்து, ஐம்புலன்களும் ஒடுங்குகின்ற சமயத்தில், பிரமன் தெரிந்து அனுப்பிய சீட்டைப் பார்த்த அளவில், உயிர் பிரிந்து ஓட, கொடிய சுடுகாட்டைச் சேர்ந்து (என் உற்றார்) உடலைச் சுட்டு எரிக்க, கழிந்து போய் சாம்பலாகிச் சிதறிப் போகின்ற இந்த துன்பம் என்று ஒழியுமோ? சூரிய மண்டலங்கள் யாவும் ஒன்று சேரவும், சிறந்த சந்திர மண்டலங்கள் அதனுடன் சேரவும், தாமரையில் வீற்றிருக்கும் பிரமனது உலகம் அங்கு கூடவும், (கண் போன்ற) பீலிகள் படர்ந்துள்ள தோகையைக் கொண்ட உனது மயில் கடல் வட்டத்தைக் கடந்து, ஆங்காங்கே உள்ள பற்பல அண்டங்களைத் தேடிப் பொருந்தியும், கீழே உள்ள பாதாள லோகத்தில் உள்ள ஆதி சேஷனை அங்கு கொத்தவும், கையில் நீ வேல் கொண்டு உலாவி, சூரியர்களின் மண்டலங்கள் தூளாகி எழுந்து பொடியாகி வானில் பறந்தோடவும், அங்ஙனம் தூசுப்புயல் நெருங்கி வருவதைக் கண்டு ஒவ்வொரு சூரியனும் (உருண்டு புரண்டு) ஓடுவதைக் கண்டு சிரித்து விளையாடிய வேலனே, உள்ளத்தில் விருப்பம் கொண்டு காட்டில் வாழும் மங்கையாகிய வள்ளியின் மீது எழுந்த மோகத்தில் அவளுடன் விளையாடி, இந்திரனும் மற்ற தேவர்களும் வந்து வணங்க, சோழ மண்டலத்தைச் சார்ந்த திருவம்பர்* என்னும் தலத்தில் வாழ்ந்து வீற்றிருக்கும் தம்பிரானே. 
* திருவம்பர் தஞ்சை மாவட்டத்தில் பேரளத்துக்கு அருகில் உள்ளது.
பாடல் 806 - திருமாகாளம் 
ராகம் - ....; தாளம் -
தானான தானதன தானதன தானதன
     தானான தானதன தானதன தானதன
          தானான தானதன தானதன தானதன ...... தனதான
காதோடு தோடிகலி யாடவிழி வாள்சுழல
     கோலாக லாரமுலை மார்புதைய பூணகல
          காரோடு கூடளக பாரமல ரோடலைய ...... அணைமீதே 
காலோடு காலிகலி யாடபரி நூபுரமொ
     டேகாச மானவுடை வீசியிடை நூல்துவள
          காவீர மானஇத ழூறல்தர நேசமென ...... மிடறோதை 
நாதான கீதகுயில் போலஅல்குல் மால்புரள
     மார்போடு தோள்கரமொ டாடிமிக நாணழிய
          நானாவி நோதமுற மாதரொடு கூடிமயல் ...... படுவேனை 
நானாரு நீயெவனெ னாமலென தாவிகவர்
     சீர்பாத மேகவலை யாயுமுன வேநிதமு
          நாதாகு மாரமுரு காஎனவு மோதஅருள் ...... புரிவாயே 
பாதாள சேடனுட லாயிரப ணாமகுட
     மாமேரொ டேழுகட லோதமலை சூரருடல்
          பாழாக தூளிவிணி லேறபுவி வாழவிடு ...... சுடர்வேலா 
பாலாழி மீதரவின் மேல்திருவொ டேயமளி
     சேர்நீல ரூபன்வலி ராவணகு ழாமிரிய
          பாரேவை யேவியமு ராரியைவர் தோழனரி ...... மருகோனே 
மாதாபு ராரிசுக வாரிபரை நாரியுமை
     ஆகாச ரூபியபி ராமிவல மேவுசிவன்
          மாடேறி யாடுமொரு நாதன்மகிழ் போதமருள் ...... குருநாதா 
வானோர்க ளீசன்மயி லோடுகுற மாதுமண
     வாளாகு காகுமர மாமயிலின் மீதுதிரு
          மாகாள மாநகரில் மாலொடடி யார்பரவு ...... பெருமாளே.
காதில் உள்ள தோடுடன் விரோதித்துப் பாயும் கண்கள் வாள் போலச் சுழல, ஆடம்பரமான முத்து மாலை அணிந்த தனங்கள் மார்பை மறைக்க, ஆபரணங்கள் அகன்று போக, மேகம் போன்ற கூந்தல் பாரம் மலர்களுடன் அலைய, படுக்கையின் மேல் காலுடன் கால் பின்னி அசைய, தரித்துள்ள சிலம்புடன் மேலே அணிந்துள்ள புடவை வீசப்பட்டு, நூல் போன்ற இடை துவண்டு போக, செவ்வலரி போலச் சிவந்த வாயிதழ் ஊறலைக் கொடுக்க, அன்பு காட்டுவது போல கண்டத்தின் ஒலி (நாதமான) இனிய கீதம் போல் ஒலிக்கும் குயில் போல் விளங்க, பெண்குறியில் பரவச மயக்கம் ஏற்பட, மார்பும், தோளும், கையும் ஒன்றோடொன்று பிணைபட்டு ஆடி மிகவும் நாணம் கெட்டொழிய, பலவித வினோதங்களை அனுபவித்து பெண்களோடு கூடி மோக மயக்கம் கொள்கின்ற என்னை, நான் யார், நீ எவன் என்று எண்ணாமல், என்னுடைய உயிரை வசீகரிக்கின்ற உனது சீரிய திருவடியின் தியானமே எனக்குள்ள கவலையாகவும், (உன்னைத்) துதிக்கவும், நாள்தோறும் நாதா, குமாரா, முருகா என்று ஓதவும் திருவருளைத் தந்து அருளுக. பாதாளத்தில் உள்ள ஆதிசேஷனுடைய உடல், ஆயிரம் படங்களாகிய மகுடங்கள், மகா மேரு இவைகளுடன், ஏழு கடல்களின் வெள்ளம், கிரெளஞ்ச மலை, சூரர்களுடைய உடல் (இவை எல்லாம்) பாழ்பட, பொடிபட்ட தூள் விண்ணிலே போய்ப் படிய, உலகை வாழச் செலுத்தின ஒளி வேலனே, திருப்பாற் கடலில் பாம்பின் மேல் லக்ஷ்மியுடன் படுக்கை கொண்ட நீல நிறத்துத் திருமால், வலிமை வாய்ந்த ராவணனும் அவன் கூட்டத்தாரும் அஞ்சி ஓடி விலக பூமியில் அம்பைச் செலுத்தின (ராமனும்), முராசுரனுடைய பகைவனும், பஞ்ச பாண்டவர் ஐவரின் தோழனுமாகிய (கண்ணனாகிய) திருமாலின் மருகோனே, அன்னை, திரிபுரத்தை எரித்தவள், சுகக் கடல், பரதேவதை, பெண்ணரசி உமா தேவி, ஆகாச சொரூபி, அழகி (ஆகிய பார்வதியின்) வலப் பால் உள்ள சிவ பெருமான், ரிஷப வாகனத்தின் மேல் நடனம் செய்யும் ஒப்பற்ற தலைவனுக்கு மகிழும்படியான ஞானப் பொருளை உபதேசித்து அருளிய குரு மூர்த்தியே, தேவேந்திரன் வளர்த்த மயில் போன்ற தேவயானையுடன் குறப் பெண் வள்ளியை மணந்த மணவாளனே, குகனே, குமரனே, சிறந்த மயிலின் மேல் திருமாகாள* மா நகரில் ஆசையுடன் அமர்ந்து, அடியார்கள் பரவி வழிபடும் பெருமாளே. 
* திருமாகாளம் தஞ்சை மாவட்டத்தில் பேரளத்துக்கு அருகில் உள்ளது.
பாடல் 807 - இஞ்சிகுடி 
ராகம் - ....; தாளம் -
தந்ததனத் தான தான தனதன
     தந்ததனத் தான தான தனதன
          தந்ததனத் தான தான தனதன ...... தனதான
குங்குமகற் பூர நாவி யிமசல
     சந்தனகத் தூரி லேப பரிமள
          கொங்கைதனைக் கோலி நீடு முகபட ...... நகரேகை 
கொண்டைதனைக் கோதி வாரி வகைவகை
     துங்கமுடித் தால கால மெனவடல்
          கொண்டவிடப் பார்வை காதி னெதிர்பொரு ...... மமுதேயாம் 
அங்குளநிட் டூர மாய விழிகொடு
     வஞ்சமனத் தாசை கூறி யெவரையு
          மன்புடைமெய்க் கோல ராக விரகினி ...... லுறவாடி 
அன்றளவுக் கான காசு பொருள்கவர்
     மங்கையர்பொய்க் காதல் மோக வலைவிழ
          லன்றியுனைப் பாடி வீடு புகுவது ...... மொருநாளே 
சங்கதசக் ¡£வ னோடு சொலவள
     மிண்டுசெயப் போன வாயு சுதனொடு
          சம்பவசுக் ¡£வ னாதி யெழுபது ...... வெளமாகச் 
சண்டகவிச் சேனை யால்மு னலைகடல்
     குன்றிலடைத் தேறி மோச நிசிசரர்
          தங்கிளைகெட் டோட ஏவு சரபதி ...... மருகோனே 
எங்குநினைப் போர்கள் நேச சரவண
     சிந்துரகர்ப் பூர ஆறு முககுக
          எந்தனுடைச் சாமி நாத வயலியி ...... லுறைவேலா 
இன்புறுபொற் கூட மாட நவமணி
     மண்டபவித் தார வீதி புடைவளர்
          இஞ்சிகுடிப் பார்வ தீச ரருளிய ...... பெருமாளே.
குங்குமம், பச்சைக் கற்பூரம், புனுகுச் சட்டம், பன்னீர், சந்தனம், கஸ்தூரி (இவைகளின்) பூசுகையால் நறுமணம் கொண்டதும், நகரேகை கொண்டவையுமான மார்பகங்கள் வளையும்படி பெரிய ரவிக்கை, மேலாடை முதலியவற்றை அணிந்து, கூந்தலைச் சீவி வாரி வித விதமாக அழகிய வகையில் முடித்து, ஆலகால விஷத்தைப்போல வலிமை கொண்ட நஞ்சை ஒத்த (கண்) காதின் எதிரில் போய் சண்டை இடும் அமுதம் போன்றதும், அங்கு உள்ள கொடுமை வாய்ந்ததுமான மாய சக்தி வாய்ந்த கண்ணைக் கொண்டு, (உள்ளே) வஞ்சக மனத்துடனும், (புறத்தே) அன்பு மொழிகளைப் பேசியும் (சந்தித்த) எத்தகையவருடனும் அன்பு காட்டி, மெய்யே உருவெடுத்ததோ என்னும்படி ஆசை கூடிய சாமர்த்தியத்துடன் மொழிகளைப் பேசிச் சல்லாபித்து, அன்றைய பொழுதுக்கான கைக்காசை அபகரிக்கும் விலைமாதர்களின பொய்யன்பாகிய காம வலையில் விழுதல் இல்லாமல், உன்னைப் பாடி மோட்ச வீட்டில் புகும்படியான ஒரு நாள் எனக்குக் கிட்டாதோ? கொத்தான பத்துத் தலைகளை உடைய ராவணனுடன் தூது செல்வதற்கு வேண்டிய சொல் வளம் முதலிய ஆற்றல் கொண்டு வீரச் செயல்கள் செய்வதற்குச் சென்ற வாயுவின் மகனான அனுமனோடு, ஜாம்பவான், சுக்¡£வன் முதலான எழுபது வெள்ளம் சேனைகளுடன் வலிமை வாய்ந்த குரங்குப் படையால் முன்பு, அலைகின்ற கடலை சிறு மலைகள் கொண்டு அணைகட்டி (அக்கரையில் உள்ள இலங்கையில்) ஏறி, மோச எண்ணமுடைய அரக்கர்களுடைய சுற்றம் அழிந்து ஓடும்படி செலுத்திய அம்பினைக் கொண்ட ராமனின் மருகனே, எங்கு வாழ்பவர்களுக்கும் நினைப்பவர்களுக்கும் நேசனே, சரவணனே, செம்பொடி பச்சைக் கற்புரம் (இவை அணிந்துள்ள) ஆறுமுகனே, குகனே, அடியேனுக்கு உரிய சாமிநாதப் பெருமானே, வயலூரில் வாழும் வேலனே, இன்பம் தரத் தக்க அழகிய கூடங்கள், மாடங்கள், புதிது புதிதான நவரத்தினங்கள், மண்டபங்கள், அகண்ட தெருக்களில் பக்கத்திலே வளர்கின்ற இஞ்சிகுடி என்னும் தலத்தில் பார்வதி பாகர் ஆகிய சிவபெருமான் பெற்றருளிய பெருமாளே. * இஞ்சிகுடி மயிலாடுதுறைக்கு 10 மைல் தெற்கேயுள்ள பேரளத்தின் அருகில் உள்ளது.
பாடல் 808 - திருநள்ளாறு 
ராகம் - யதுகுல காம்போதி 
தாளம் - அங்கதாளம் - 7 1/2 
- எடுப்பு - 3/4 தள்ளி 
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தத்த தந்தன தானன தானன
     தத்த தந்தன தானன தானன
          தத்த தந்தன தானன தானன ...... தனதான
பச்சை யொண்கிரி போலிரு மாதன
     முற்றி தம்பொறி சேர்குழல் வாளயில்
          பற்று புண்டரி காமென ஏய்கயல் ...... விழிஞான 
பத்தி வெண்டர ளாமெனும் வாணகை
     வித்ரு மஞ்சிலை போல்நுத லாரிதழ்
          பத்ம செண்பக மாமநு பூதியி ...... னழகாளென் 
றிச்சை யந்தரி பார்வதி மோகினி
     தத்தை பொன்கவி னாலிலை போல்வயி
          றிற்ப சுங்கிளி யானமி னூலிடை ...... யபிராமி 
எக்கு லங்குடி லோடுல கியாவையு
     மிற்ப திந்திரு நாழிநெ லாலற
          மெப்பொ தும்பகிர் வாள்கும ராஎன ...... வுருகேனோ 
கச்சை யுந்திரு வாளுமி ராறுடை
     பொற்பு யங்களும் வேலுமி ராறுள
          கட்சி வங்கம லாமுக மாறுள ...... முருகோனே 
கற்ப கந்திரு நாடுயர் வாழ்வுற
     சித்தர் விஞ்சையர் மாகர்ச பாசென
          கட்ட வெங்கொடு சூர்கிளை வேரற ...... விடும்வேலா 
நச்சு வெண்பட மீதணை வார்முகில்
     பச்சை வண்புய னார்கரு டாசனர்
          நற்க ரந்தநு கோல்வளை நேமியர் ...... மருகோனே 
நற்பு னந்தனில் வாழ்வளி நாயகி
     யிச்சை கொண்டொரு வாரண மாதொடு
          நத்தி வந்துந ளாறுறை தேவர்கள் ...... பெருமாளே.
பச்சையானதும், ஒளி பொருந்தியதுமான இரு பெரிய மார்பகங்கள், மொய்த்து இன்பம் துய்க்கும் வண்டுகள் முரலும் கூந்தல், ஒளிகொண்ட வேலையும், தாமரையையும் போன்ற மீனை ஒத்த கண் விழிகள், ஞான ஒளி வரிசையில் உள்ள வெண்முத்துக்களைப் போன்று ஒளிவீசும் பற்கள், வில்லைப் போன்ற நெற்றி, பவளத்தையும், தாமரையையும் செண்பகப்பூவையும் போன்ற இதழ்கள், இவையெல்லாம் கொண்ட, ஞான அநுபவத்தின் அழகியானவள், இச்சையெல்லாம் பூர்த்தி செய்யும் பராகாச வடிவினாள், பேரழகியான பார்வதி, கிளி, பொன்னின் அழகுடைய ஆலிலை போன்ற வயிற்றினள், இல்லறம் நடத்தும் பசுங்கிளி போன்றவள், மின்னலும் நூலும் போன்ற இடையை உடையவள், எல்லாக் குலத்தாருக்கும், எல்லா உடலுக்கும், எல்லா உலகங்களுக்கும், இருந்த இடத்தில் இருந்தே இரண்டு படி நெல் கொண்டு முப்பத்திரண்டு அறங்களையும்* எப்பொழுதும் பங்கிட்டு அளிப்பவளாகிய பார்வதியின் குமரனே என்று கூறி உள்ளம் உருக மாட்டேனோ? அரையில் கச்சை, அழகிய வாள், பன்னிரண்டு அழகிய தோள்கள், வேல், பன்னிரண்டு கண்கள், மங்களமான தாமரை போன்ற ஆறு திருமுகங்கள் - இவை கொண்ட முருகனே, கற்பகமரம் உள்ள செல்வம் நிறைந்த தேவர்களின் நாடு உயர்ந்த வாழ்வைப் பெறவும், சித்தர்களும், விஞ்சையர்களும், தேவர்களும் சபாஷ்** என்று மெச்சவும், துன்பம் தந்துவந்த கொடும் சூரர்களின் சுற்றத்தார் யாவரும் வேரறச் செலுத்திய வேலனே, விஷமுள்ள வெண்ணிறப் படம் உடைய ஆதிசேஷன்மீது படுக்கை கொண்டவர், கருமுகிலின், மரகதப்பச்சையின் நிறம் கொண்டு வளமார்ந்த புயத்தை உடைய கருட வாகனர், நல்ல கரத்தில் வில் (சாரங்கம்), அம்பு, சங்கு (பாஞ்சஜன்யம்), சக்கரம் (சுதர்ஸனம்) இவற்றைக் கொண்ட திருமாலின் மருகனே, நல்ல தினைப்புனத்தில் வாழ்ந்திருந்த வள்ளிநாயகியின் காதலைப் பெற்று, ஒப்பற்ற யானை ஐராவதம் வளர்த்த தேவயானையுடன் விரும்பி வந்து திருநள்ளாறு*** என்ற தலத்தில் உறைகின்றவனே, தேவர்களின் பெருமாளே. 
* பெரிய புராணத்தில் கூறிய முப்பத்திரண்டு அறங்கள் பின்வருமாறு:சாலை அமைத்தல், ஓதுவார்க்கு உணவு, அறுசமயத்தாருக்கும் உணவு, பசுவுக்குத் தீனி, சிறைச் சோறு, ஐயம், தின்பண்டம் நல்கல், அநாதைகளுக்கு உணவு, மகப்பெறுவித்தல், மகவு வளர்த்தல், சிசுக்களுக்குப் பால் நல்கல், அநாதைப் பிணம் சுடுதல், அநாதைகளுக்கு உடை, சுண்ணாம்பு பூசல், நோய்க்கு மருந்து, வண்ணார் தொழில், நாவிதத் தொழில், கண்ணாடி அணிவித்தல், காதோலை போடுதல், கண் மருந்து, தலைக்கு எண்ணெய், ஒத்தடம் தருதல், பிறர் துயர் காத்தல், தண்ணீர்ப் பந்தல், மடம் கட்டுதல், தடாகம் அமைத்தல், சோலை வளர்த்தல், தோல் பதனிடல், மிருகங்களுக்கு உணவு, ஏர் உழுதல், உயிர் காத்தல், கன்னிகாதானம்.
** சபாஷ் என்ற அரபு வார்த்தை முகலாயர் ஆட்சி அருணகிரிநாதர் காலத்தில் வந்ததைக் குறிக்கிறது.*** திருநள்ளாறு காரைக்காலுக்கு மேற்கே 3 மைலில் உள்ளது. இந்தத் தலம் நவக்கிரகங்களில் ஒன்றான சனீஸ்வரனின் க்ஷேத்திரம்.
பாடல் 809 - வழுவூர் 
ராகம் - ....; தாளம் -
தனனாதன தானன தானன
     தனனாதன தானன தானன
          தனனாதன தானன தானன ...... தனதானா
தருவூரிசை யாரமு தார்நிகர்
     குயிலார்மொழி தோதக மாதர்கள்
          தணியாமய லாழியி லாழவு ...... மமிழாதே 
தழலேபொழி கோரவி லோசன
     மெறிபாசம காமுனை சூலமுள்
          சமனார்முகில் மேனிக டாவினி ...... லணுகாதே 
கருவூறிய நாளுமு நூறெழு
     மலதேகமு மாவலு மாசைக
          படமாகிய பாதக தீதற ...... மிடிதீரக் 
கனிவீறிய போதமெய் ஞானமு
     மியலார்சிவ நேசமு மேவர
          கழல்சேரணி நூபுர தாளிணை ...... நிழல்தாராய் 
புருகூதன்மி னாளொரு பாலுற
     சிலைவேடுவர் மானொரு பாலுற
          புதுமாமயில் மீதணை யாவரு ...... மழகோனே 
புழுகார்பனிர் மூசிய வாசனை
     யுரகாலணி கோலமென் மாலைய
          புரிநூலுமு லாவுது வாதச ...... புயவீரா 
மருவூர்குளிர் வாவிகள் சோலைகள்
     செழிசாலிகு லாவிய கார்வயல்
          மகதாபத சீலமு மேபுனை ...... வளமூதூர் 
மகதேவர்பு ராரிச தாசிவர்
     சுதராகிய தேவசி காமணி
          வழுவூரில்நி லாவிய வாழ்வருள் ...... பெருமாளே.
மூங்கில் மரத்தால் (செய்த புல்லாங்குழலால்) ஏற்படுகின்ற இசையில் வல்லவர், அமுதைப் போல் இனியவர், குயிலைப் போன்ற இனிய குரலை உடையவர், வஞ்சகம் செய்யும் விலைமாதர்கள் (மீதுள்ள) குறைவுபடாத காம இச்சைக் கடலில் விழுந்து அழிந்து போகாமலும், நெருப்பைப் பொழியும் பயங்கரமான கண்கள், (உயிரைப் பறிக்க) எறிந்து வீசப்படும் பாசக் கயிறு, முள் போன்ற மிக்க கூர்மையை உடைய சூலம் ஆகியவைகளை உடையவனும், கரு மேகம் போன்ற நிறம் கொண்டவனுமாகிய யமன் தன் எருமைக் கடா வாகனத்தின் மீது ஏறி வந்து என்னை நெருங்காமலும், கரு உற்பத்தியான பின் முன்னூற்று ஏழு நாட்களும், மும்மலங்களுக்கு இடமான உடலும், மண், பெண், பொன் ஆகிய மூவாசைகளும், வஞ்சகத்தால் ஏற்படும் பாவங்களும் தீமைகளும் அற்றுப் போகவும், என் வறுமை ஒழியவும், முதிர்ந்த அறிவும், மெய்ஞ் ஞானமும், தகுதி மிக்க சிவ நேசமும் எனக்கு உண்டாக, கழல்கள் அணிந்த, சிலம்புகள் கொண்ட உனது இரு திருவடிகளின் நிழலைத் தருவாயாக. இந்திரன் மகளாகிய மின்னலை ஒத்த தேவயானை ஒரு பக்கத்தில் வீற்றிருக்க, வில் ஏந்திய வேடர்களுடைய மான் போன்ற வள்ளி மற்றொரு பக்கத்தில் வீற்றிருக்க, அதிசயிக்கத்தக்க சிறந்த மயிலின் மீது அமர்ந்து அவர்களை அணைந்தவண்ணம் ஏறிவரும் அழகனே, புனுகு சட்டம் நிறைந்த பன்னீர் இவை நெருங்கிக் கூடிய, வாசனை உள்ள மார்பில் அணிந்துள்ள மெல்லிய மாலையை உடையவனே, பூணூலும் அசைகின்ற பன்னிரண்டு தோள்களை உடைய வீரனே, வாசனை உலாவும் குளிர்ந்த குளங்களும், சோலைகளும், செழிப்பான நெல் தழைத்துள்ள அழகிய வயல்கள் சேர்ந்துள்ளதும், சிறந்த தவச் சீலர்கள் வாழ்வதுமான வளப்பம் பொருந்திய பழைய ஊராகியது இந்த வழுவூர். மகாதேவர், திரி புரங்களை அழித்தவர், சதாசிவர் ஆகிய சிவபெருமானின் மகனாகிய தேவ சிகாமணியே, வழுவூரில்* வீற்றிருந்து அடியார்களுக்கு வாழ்வு அருளும் பெருமாளே. 
* வழுவூர் மயிலாடுதுறைக்குத் தெற்கே இலந்தங்குடி ரயில் நிலையத்துக்கு மேற்கே கால் மைலில் உள்ள தலம்.
பாடல் 810 - வழுவூர் 
ராகம் - ....; தாளம் -
தனனா தத்தன தாத்த தந்தன
     தனனா தத்தன தாத்த தந்தன
          தனனா தத்தன தாத்த தந்தன ...... தனதான
தலைநா ளிற்பத மேத்தி யன்புற
     வுபதே சப்பொரு ளூட்டி மந்திர
          தவஞா னக்கட லாட்டி யென்றனை ...... யருளாலுன் 
சதுரா கத்தொடு கூட்டி யண்டர்க
     ளறியா முத்தமி ழூட்டி முண்டக
          தளிர்வே தத்துறை காட்டி மண்டலம் ...... வலமேவும் 
கலைசோ திக்கதிர் காட்டி நன்சுட
     ரொளிநா தப்பர மேற்றி முன்சுழி
          கமழ்வா சற்படி நாட்ட முங்கொள ...... விதிதாவிக் 
கமலா லைப்பதி சேர்த்து முன்பதி
     வெளியா கப்புக ஏற்றி யன்பொடு
          கதிர்தோ கைப்பரி மேற்கொ ளுஞ்செயல் ...... மறவேனே 
சிலைவீ ழக்கடல் கூட்ட முங்கெட
     அவுணோ ரைத்தலை வாட்டி யம்பர
          சிரமா லைப்புக வேற்ற வுந்தொடு ...... கதிர்வேலா 
சிவகா மிக்கொரு தூர்த்த ரெந்தையர்
     வரிநா கத்தொடை யார்க்கு கந்தொரு
          சிவஞா னப்பொரு ளூட்டு முண்டக ...... அழகோனே 
மலைமே வித்தினை காக்கு மொண்கிளி
     யமுதா கத்தன வாட்டி யிந்துள
          மலர்மா லைக்குழ லாட்ட ணங்கிதன் ...... மணவாளா 
வரிகோ ழிக்கொடி மீக்கொ ளும்படி
     நடமா டிச்சுரர் போற்று தண்பொழில்
          வழுவூர் நற்பதி வீற்றி ருந்தருள் ...... பெருமாளே.
வாழ்வின் தொடக்கத்தில் உன் திருவடியை என் தலை மேல் வைத்து, அன்புடன் உபதேசப் பொருளை எனக்குப் போதித்து, சிவ மந்திரங்களால் என்னைத் தவ ஞானக் கடலில் ஆட்டுவித்து, என்னை உனது திருவருளால் உன்னைச் சார்ந்த சாமர்த்தியம் உள்ள அடியார்களோடு கூட்டி வைத்து, தேவர்களும் அறியாத முத்தமிழ் ஞானத்தைப் புகட்டி, முண்டக உபநிஷதம் முதலிய உபநிஷத உண்மைகளையும் வேத வழிகளையும் புலப்படுத்தி, அக்கினி முதலிய மும்மண்டலங்களையும் உள்ள மேலிடத்தில், இடைகலை பிங்கலை* என்னும் நாடிகளின் மார்க்கமாக ஏற்படும் ஜோதி ஒளியைத் தரிசனம் செய்து வைத்து, ஆன்மாவை நல்ல பேரொளி உள்ள பர நாதத்தோடு (பரசிவத்தோடு) சேர்த்து வைத்து, முன்னதாக, சுழி முனை நாடி விளங்கும் வாசற்படியில் தியானம் கொள்ள, சுவாதிஷ்டான** ஆதாரத்தைக் கடந்து, மூலாதாரத் தலமான திருவாரூர் முதலில் சேர, அது முதலாக உள்ள தலங்கள் பிறவற்றைப் புலப்பட யோக ஒளியை ஏற்றி வைத்து, அன்புடன் ஒளி வீசும் தோகையை உடைய மயில் வாகனத்தின் மேல் நீ வந்து அருளிய செயலை நான் மறக்க மாட்டேன். கிரெளஞ்ச மலை வீழவும், கடல் போன்ற காலாட் படைக்கூட்டம் கெட்டு அழியவும், அசுரர்களின் தலைகளை அழித்து, ஆகாயத்தின் உச்சியில் தலைகளின் மாலையை ஏற்றி வைக்கவும் செலுத்திய ஒளிமயமான வேலனே, சிவகாம சுந்தரியின் ஒப்பற்ற காதலரும், என் தந்தையும், வரிகளை உடைய பாம்பு மாலை அணிந்தவரும் ஆகிய சிவபெருமானுக்கு, மகிழ்ச்சியுடன் ஒப்பற்ற சிவ ஞானப் பொருளை உபதேசித்த, தாமரை மலர் போன்ற முகமுடைய அழகனே, வள்ளி மலையில் இருந்த தினைப் புனத்தைக் காத்து வந்த அழகுக் கிளி, அமுதைப் போல உடலும் மார்பகங்களும் கொண்டவள், கடப்ப மலர் மாலையை கூந்தலில் விளங்க சூட்டிக் கொண்டவள் ஆகிய வள்ளி என்னும் தெய்வ மகளின் கணவனே, நீண்ட கோழிக் கொடி மேலே விளங்கும்படி நடனமாடியவனே, தேவர்கள் போற்றும் குளிர்ந்த சோலைகளை உடைய வழுவூர்*** என்னும் நல்ல ஊரில் வீற்றிருக்கும் பெருமாளே. 
இப்பாடல் அருணகிரிநாதர் திருவடி தீ¨க்ஷ, உபதேசம் முதலிய பேறுகளைப் பெற்ற வரலாற்றைக் குறிக்கும்.
* இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு:நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு 'ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள், சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி, ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை, சுழுமுனை முதலியன) உள்ளன.'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம்.'சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது.'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும் ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும்.
** ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம் 
*** வழுவூர் மயிலாடுதுறைக்குத் தெற்கே இலந்தங்குடி ரயில் நிலையத்துக்கு மேற்கே கால் மைலில் உள்ள தலம்.
பாடல் 811 - கன்னபுரம் 
ராகம் - ....; தாளம் -
தன்னதனத் தன்னதனத் தன்னதனத்
     தன்னதனத் தனாதாத்த ...... தந்ததான
அன்னமிசைச் செந்நளிநச் சென்மிகணக் கந்நியமத்
     தன்னமயப் புலால்யாக்கை ...... துஞ்சிடாதென் 
றந்நினைவுற் றன்னினைவுற் றன்னியரிற் றன்னெறிபுக்
     கன்னியசற் றுலாமூச்ச ...... டங்கயோகம் 
என்னுமருட் கின்னமுடைப் பன்னவைகற் றின்னவைவிட்
     டின்னணமெய்த் தடாமார்க்க ...... மின்புறாதென் 
றின்னதெனக் கென்னுமதப் புன்மைகெடுத் தின்னல்விடுத்
     தின்னதெனப் படாவாழ்க்கை ...... தந்திடாதோ 
கன்னல்மொழிப் பின்னளகத் தன்னநடைப் பன்னவுடைக்
     கண்ணவிரச் சுறாவீட்டு ...... கெண்டையாளைக் 
கன்னமிடப் பின்னிரவிற் றுன்னுபுரைக் கன்முழையிற்
     கன்னிலையிற் புகாவேர்த்து ...... நின்றவாழ்வே 
பொன்னசலப் பின்னசலச் சென்னியினற் கன்னபுரப்
     பொன்னிநதிக் கராநீர்ப்பு ...... யங்கனாதா 
பொன்மலையிற் பொன்னினகர்ப் புண்ணியர்பொற் பொன்மவுலிப்
     பொன்னுலகத் திராசாக்கள் ...... தம்பிரானே.
அன்னப் பறவையின் மேல் அமர்பவனும், (திருமாலின் உந்தியிலுள்ள) செந்தாமரையில் உதித்தவனுமாகிய பிரமன் விதித்த கணக்கில் உள்ள அந்தக் கெடுகாலம் வரை நியமிக்கப்பட்டு இருந்ததின்படி, சோற்றின் மயமான, மாமிசத்தோடு கூடிய இந்த உடல் அழிந்து போகாது என்ற அந்த நினைவின் காரணமாக பல மயக்க எண்ணங்களைக் கொண்டு, அயலார் மீது ஐம்புலன்களின் வழியே சென்று ஈடுபட்டு, பின்னும் சிறிது சிறிதாக உலாவுகின்ற மூச்சு அடங்கும்படி, யோகம் என்ற மயக்கத்தைத் தரும், துன்பத்தைக் கொடுக்கும், பல விதமான குற்றத்துக்கு இடமான நூல்களைக் கற்று, பின் அங்ஙனம் கற்ற இன் பிற பாடங்களையும் விடுத்து, இவ்வாறாக இளைப்புற்றுச் செல்லும் தகாத வழிகள் இன்பத்தைத் தராது என்று உணர்ந்து, இவ்வழிதான் எனக்குத் தகுந்தது என்கின்ற கொள்கையின் இழிவுத் தன்மையை ஒழித்து, துன்பங்கள் யாவையும் ஓட்டி விலக்கி, இத் தன்மையது என்று விளக்க முடியாத பேரின்ப வாழ்க்கையை உனது திருவருள் தராதோ? கற்கண்டு போன்ற பேச்சையும், பின்னப்பட்ட கூந்தலையும், அன்னம் போன்ற நடையையும், வாழை இலைகளால் ஆகிய ஆடையையும் கொண்டவளாய், அந்தச் சுறா மீனையும் அடக்க வல்ல விளக்கம் கொண்டுள்ள கெண்டை மீன் போன்ற கண்களை உடையவளாகிய வள்ளியை களவு கொண்டு போவதற்காக, பொழுது விடிவதற்கு முன், பொருத்தமான இடமாகிய கல் குகையில், கற்சிலை போல் அசைவற்ற நிலையில் புகுந்து வேர்வையுறக் காத்திருந்த செல்வனே, பொன் மலையாகிய மேருவுக்குப் பின்பு அசைவற்றதான (எதற்கும் கலங்காத) சோழ அரசனின் ஆட்சியில் உள்ள அழகிய கன்னபுரம்* என்னும் தலத்தில் வீற்றிருந்து, முதலைகள் வாழும் காவேரி நதிக்கரையில் உள்ள, பாம்பினைச் சடையில் தரித்த சிவபெருமானுக்குத் தலைவனே, கயிலாய மலையிலும், லக்ஷ்மி வாழும் திரு வைகுண்டத்திலும் உள்ள புண்ணியர்களுக்கும், அழகிய பொன் மகுடங்களை அணிந்த, விண்ணுலகத்தில் உள்ள இந்திரர்களுக்கும் தம்பிரானே. 
* கன்னபுரம் தற்போது கண்ணபுரம் என்று வழங்கப்படுகிறது. நன்னிலம் ரயில் நிலையததுக்கு அருகில் உள்ளது.
பாடல் 812 - திருவாஞ்சியம் 
ராகம் - காம்போதி 
தாளம் - அங்கதாளம் - 6 
தகதகிட-2 1/2, தகிடதகதிமி-3 1/2
தனதாந்த தத்த தனதன
     தனதாந்த தத்த தனதன
          தனதாந்த தத்த தனதன ...... தனதான
இபமாந்தர் சக்ர பதிசெறி
     படையாண்டு சக்ர வரிசைக
          ளிடவாழ்ந்து திக்கு விசயம ...... ணரசாகி 
இறுமாந்து வட்ட வணைமிசை
     விரிசார்ந்து வெற்றி மலர்தொடை
          யெழிலார்ந்த பட்டி வகைபரி ...... மளலேபந் 
தபனாங்க ரத்ந வணிகல
     னிவைசேர்ந்த விச்சு வடிவது
          தமர்சூழ்ந்து மிக்க வுயிர்நழு ...... வியபோது 
தழல்தாங்கொ ளுத்தி யிடவொரு
     பிடிசாம்பல் பட்ட தறிகிலர்
          தனவாஞ்சை மிக்கு னடிதொழ ...... நினையாரே 
உபசாந்த சித்த குருகுல
     பவபாண்ட வர்க்கு வரதன்மை
          யுருவோன்ப்ர சித்த நெடியவன் ...... ரிஷிகேசன் 
உலகீன்ற பச்சை யுமையணன்
     வடவேங்க டத்தி லுறைபவ
          னுயர்சார்ங்க சக்ர கரதலன் ...... மருகோனே 
த்ரிபுராந்த கற்கு வரசுத
     ரதிகாந்தன் மைத்து னமுருக
          திறல்பூண்ட சுப்ர மணியஷண் ......முகவேலா 
திரைபாய்ந்த பத்ம தடவய
     லியில்வேந்த முத்தி யருள்தரு
          திருவாஞ்சி யத்தி லமரர்கள் ...... பெருமாளே.
யானைப் படை, காலாட் படை முதலிய படைகளையுடைய சக்ரவர்த்தியாகி, நிறைந்துள்ள நால்வகைச் சேனைகளையும் ஆண்டுகொண்டு, ஆக்ஞாசக்கரம் தன் வேலை முறைகளை நடத்த அவ்வாறே வாழ்ந்து, திக்குவிஜயம் செய்து, இந்தப் புவிக்கு மன்னனாகி மிக்க பெருமை அடைந்து, வட்ட வடிவான திண்டுமெத்தை மேலுள்ள விரிப்பில் சாய்ந்து, வெற்றி வாகையான மலர் மாலைகளும், அழகு மிகுந்த ஆடைகளும், நறுமணக் கலவைப் பூச்சுக்களும், சூரிய ஒளியைத் தன்னிடத்தில் கொண்ட ரத்தினங்களாலான ஆபரணங்களும், இவையெல்லாம் சேர்ந்தாலும் ஒரு மனித வித்துவின் வடிவம்தான் இவ்வுடல். தம் உறவினர்கள் சூழ்ந்திருக்க, இந்த உடலினின்றும் பெருமைமிக்க உயிர் பிரிந்து போகும் தருணம், அந்த நெருப்பு உடலைக் கொளுத்திவிட, முடிவில் அவ்வுடல் ஒரு பிடி சாம்பல் என்ற நிலையை அடைவதை யாரும் அறியார். பொருளாசை மிகுந்து, உன் திருவடிகளைத் தொழ நினைப்பதில்லை. மனச்சாந்தி உடையவர்களும், குரு வம்சத்தைச் சேர்ந்தவர்களுமான பஞ்சபாண்டவர்களுக்கு வேண்டிய வரங்களைத் தந்தவனும், கருமேக நிறத்தவனும், கீர்த்திமானும், விஸ்வரூபனும், இந்திரியங்களை வென்றவனும், லோகமாதாவாகிய பச்சைநிற உமாதேவியின் அண்ணனும், வடவேங்கடம் என்னும் திருமலையில் வாழ்பவனும், உயர்ந்த சாரங்கம் என்ற வில்லையும், சுதர்சனம் என்ற சக்கரத்தையும் கரத்தில் ஏந்தும் திருமாலின் மருமகனே, திரிபுரங்களுக்கு யமனாய் இருந்த சிவனுக்கு சிரேஷ்டமான பிள்ளையே, ரதியின் கணவன் மன்மதனுக்கு மைத்துனன்* முறையான முருகனே, பராக்ரமம் வாய்ந்த சுப்பிரமணியனே, ஆறுமுகனே, வேலனே, அலைகள் பாயும் தாமரைக் குளங்கள் உள்ள வயலூரின் அரசனே, முக்தித்தலமாகிய** திருவாஞ்சியத்தில்*** வீற்றிருக்கும் தேவர்கள்தம் பெருமாளே. 
* முருகன் திருமாலின் மருமகன். மன்மதன் திருமாலின் மகன். எனவே முருகன் மன்மதனின் மைத்துனன்.
** முக்தித்தலங்கள் பின்வருமாறு:தில்லைவனம், காசி, திருவாரூர், மாயூரம், முல்லைவனம், மதுரை, திருப்பரங்குன்றம், திருநெல்வேலி, காஞ்சீபுரம், திருக்கழுக்குன்றம், வேதாரண்யம், திருவண்ணாமலை, திருக்காளத்தி, திருவாஞ்சியம். 
*** திருவாஞ்சியம் திருவாரூர் தலத்துக்கு வடமேற்கில் நன்னிலத்துக்கு மேற்கில் 7 மைலில் உள்ளது.
பாடல் 813 - திருச்செங்காட்டங்குடி 
ராகம் - ஸிந்துபைரவி 
தாளம் - சதுஸ்ரத்ருவம் - கண்டநடை - 35 
நடை - தகதகிட 
எடுப்பு - /4/4/4 0
தந்தான தானதன தானதன தானதன
     தந்தான தானதன தானதன தானதன
          தந்தான தானதன தானதன தானதன ...... தனதான
வங்கார மார்பிலணி தாரொடுயர் கோடசைய
     கொந்தார மாலைகுழ லாரமொடு தோள்புரள
          வண்காதி லோலைகதிர் போலவொளி வீசஇதழ் ...... மலர்போல 
மஞ்சாடு சாபநுதல் வாளனைய வேல்விழிகள்
     கொஞ்சார மோககிளி யாகநகை பேசியுற
          வந்தாரை வாருமிரு நீருறவெ னாசைமய ...... லிடுமாதர் 
சங்காளர் சூதுகொலை காரர்குடி கேடர்சுழல்
     சிங்கார தோளர்பண ஆசையுளர் சாதியிலர்
          சண்டாளர் சீசியவர் மாயவலை யோடடியெ ...... னுழலாமற் 
சங்கோதை நாதமொடு கூடிவெகு மாயையிருள்
     வெந்தோட மூலஅழல் வீசவுப தேசமது
          தண்காதி லோதியிரு பாதமலர் சேரஅருள் ...... புரிவாயே 
சிங்கார ரூபமயில் வாகனந மோநமென
     கந்தாகு மாரசிவ தேசிகந மோநமென
          சிந்தூர பார்வதிசு தாகரந மோநமென ...... விருதோதை 
சிந்தான சோதிகதிர் வேலவந மோநமென
     கங்காள வேணிகுரு வானவந மோநமென
          திண்சூர ராழிமலை தூள்படவை வேலைவிடு ...... முருகோனே 
இங்கீத வேதபிர மாவைவிழ மோதியொரு
     பெண்காத லோடுவன மேவிவளி நாயகியை
          யின்பான தேனிரச மார்முலைவி டாதகர ...... மணிமார்பா 
எண்டோளர் காதல்கொடு காதல்கறி யேபருகு
     செங்காடு மேவிபிர காசமயில் மேலழகொ
          டென்காதல் மாலைமுடி ஆறுமுக வாவமரர் ...... பெருமாளே.
மார்பில் அணிந்துள்ள பொன்மாலையுடன் உயர்ந்த மார்பகங்களும் அசைய, மலர்க் கொத்துக்கள் நிறைந்த மாலை அணிந்த கூந்தலும் மணிமாலையும் தோளில் புரண்டு அசைய, வளமான காதில் காதணி சூரிய ஒளி போன்ற ஒளியை வீச, உதடுகள் குமுத மலர் போல் விளங்க, மேகத்தில் தோன்றும் வானவில் போன்ற நெற்றி, வாளையும் வேலையும் போன்ற கண்கள், இவற்றுடன் கொஞ்சுதல் மிக்க ஆசைக் கிளி போன்று சிரித்துப் பேசி, நெருங்கி வந்தவர்களை வாரும், இங்கே இரும், நீர் நமக்கு உறவினர் ஆயிற்றே, என்றெல்லாம் ஆசை மயக்கத்தை ஊட்டுகின்ற பொது மாதர்கள், கூடிக் களிப்பவர்கள், சூதாடிகள், கொலையும் செய்யும் குணத்தினர், குடியைக் கெடுப்பவர்கள், திரிகின்றவர்கள், அலங்காரத் தோளினர், பண ஆசையுள்ளவர்கள், சாதிபேதம் கவனிக்காது பலருடனும் கூடுபவர், இழிகுலத்தவர், சீ, சீ, இத்தகையோரது மாயவலையில் அடியேன் சிக்கி அலையாமல், யோகவழியில் கிடைக்கும் தசநாதங்களாகிய* ஓசையை அனுபவித்து அதனோடு கலந்து, மிக்க மாயையாம் இருள் வெந்து அழிந்து போக, மூலாக்கினி வீசிட, உபதேசத்தை என் குளிர்ந்த காதில் ஓதி, உன் இரண்டு பாதமலரைச் சேரும்படியான திருவருளைத் தந்தருள்க. அலங்கார உருவத்தனே, மயில் வாகனனே, போற்றி, போற்றி, என்று கந்தனே, குமரனே, குருநாதனே, போற்றி, போற்றி, என்று குங்குமம் அணிந்த பார்வதியின் பிள்ளையாய் அமைந்தவனே போற்றி, போற்றி, என்று வெற்றிச் சின்னங்களின் ஓசைகள் கடல் போல முழங்க ஜோதி ரூபம் கொண்ட வேலாயுதனே போற்றி, போற்றி, என்று எலும்பு மாலைகளை அணிந்தவரும், ஜடாமுடி உடையவருமான சிவபிரானுக்கு குருநாதன் ஆனவனே போற்றி, போற்றி, என்று முழங்கவும், வலிமை மிக்க சூரன் முதலியவரையும், கடலையும், கிரெளஞ்ச மலையையும் பொடியாகும்படி கூரிய வேலைச் செலுத்திய முருகனே. இனிமை வாய்ந்த வேதம் பயின்ற பிரமன் விழும்படியாக மோதியும், ஒப்பற்ற பெண்ணாகிய வள்ளிமேல் காதலோடு அவள் வசித்த காட்டிற்குச் சென்று அந்த வள்ளிநாயகியின் இன்பம் நிறைந்த, தேனைப் போல் இனிமையான மார்பினைவிட்டு நீங்காத கரதலமும் அழகிய மார்பும் உடையவனே, எட்டுத் தோள்களை உடைய சிவபிரான் ஆசையுடனே பிள்ளைக்கறியை உண்ணப்புகுந்த** திருச்செங்காட்டங்குடி*** என்னும் தலத்தைச் சார்ந்து, ஒளிவீசும் மயில் மீது அழகோடு அமர்ந்து, எனது ஆசையால் எழுந்த இந்தத் தமிழ் மாலையைப் புனைந்தருளும் ஆறுமுகனே, தேவர்களின் பெருமாளே. 
* சங்கோதை நாதம் - யோகிகள் உணரும் பத்து நாதங்கள் பின்வருமாறு:கிண்கிணி, சிலம்பு, மணி, சங்கம், யாழ், தாளம், வேய்ங்குழல், பேரி, மத்தளம், முகில்).
** சிவபிரான் திருச்செங்காட்டங்குடியில் இருந்த சிறுத்தொண்டரின் சிவபக்தியைச் சோதிக்கக் கருதி, ஒரு சிவவிரதியர் போல வந்து பிள்ளைக்கறி கேட்க, தம் ஒரே மகன் சீராளனைக் கறி செய்தளித்தார். இறுதியில் சிவபிரான் தரிசனம் தந்து சீராளனை உயிர்ப்பித்து, சிறுத்தொண்டரையும் அவரது மனைவியையும், குழந்தையையும் வாழ்த்திய புராணம் இங்கு குறிப்பிடப்படுகிறது - பெரிய புராணம். 
*** திருச்செங்காட்டங்குடி நன்னிலம் ரயில் நிலையத்திலிருந்து தென்கிழக்கே 6 மைலில் உள்ளது.
பாடல் 814 - திருவிற்குடி 
ராகம் - ....; தாளம் -
தத்த தத்ததன தத்த தத்ததன
     தத்த தத்ததன தத்த தத்ததன
          தத்த தத்ததன தத்த தத்ததன ...... தந்ததான
சித்தி ரத்திலுமி குத்த பொற்பவள
     மொத்த மெத்தஅழ குற்ற குத்துமுலை
          சிற்ப சிற்பமயி ரொத்த சிற்றிடைய ...... வஞ்சிமாதர் 
சித்த மத்தனையு முற்ற ளப்பகடல்
     மொய்த்த சிற்றுமண லுக்கு மெட்டியது
          சிக்கு மைக்குழல்கள் கஸ்து ரிப்பரிம ...... ளங்கள்வீசப் 
பத்தி ரத்திலுமி குத்த கட்கயல்கள்
     வித்து ருத்தநுவ ளைத்த நெற்றிவனை
          பற்க ளைப்பளிரெ னச்சி ரித்துமயல் ...... விஞ்சைபேசிப் 
பச்சை ரத்நமயி லைப்பொ லத்தெருவி
     லத்தி யொத்தமத மொத்து நிற்பர்வலை
          பட்டு ழைத்துகுழி யுற்ற அத்தியென ...... மங்குவேனோ 
தத்த னத்தனத னத்த னத்தனன
     தித்தி மித்திமிதி மித்தி மித்திமித
          தக்கு டுக்குடுடு டுக்கு டுக்குடென ...... சங்குபேரி 
சத்த முற்றுகடல் திக்கு லக்கிரிகள்
     நெக்கு விட்டுமுகி லுக்கு சர்ப்பமுடி
          சக்கு முக்கிவிட கட்க துட்டசுர ...... ரங்கமாள 
வெற்றி யுற்றகதிர் பத்தி ரத்தையரு
     ளிச்சு ரர்க்கதிப திப்ப தத்தையுறு
          வித்த ளித்தமதி பெற்ற தத்தைமண ...... முண்டவேலா 
வெட்கி டப்பிரம னைப்பி டித்துமுடி
     யைக்கு லைத்துசிறை வைத்து முத்தர்புகழ்
          விற்கு டிப்பதியி லிச்சை யுற்றுமகிழ் ...... தம்பிரானே.
சித்திரத்தில் காணப்படுவதை விட சிறப்பை உடையதாகவும், பொன்னிறம் பவள நிறம் உடையதாகவும், மிக அழகும் திரட்சியும் உடையதுமான மார்பகங்களையும், மிக நுண்ணியதான மயிரிழை போன்று மெல்லிய சிறிய இடையையும் கொண்ட வஞ்சிக் கொடி போன்ற விலைமாதர்களுடைய உள்ளம் அத்தனையும் முழுமையும் அளந்தால், அது கடலில் மொய்த்துள்ள சிறு மணல் அளவையும் எட்டத் தக்கதாகும். அந்த மாதர்கள் சிக்குள்ள தங்கள் கரிய கூந்தல்கள் கஸ்தூரி வாசனை வீச, வாளினும் மிக்க கூரிய கண்களாகிய கயல் மீன்கள் மின்னல் போல் ஒளி விடுவதாய், வில்லை வளைத்தது போன்ற நெற்றி இவைகளுடன் உரு அமைந்த பற்களைப் பளீரென்று நகைத்துக் காட்டி, காமத்தை ஊட்டும் மாய வித்தைப் பேச்சுக்களைப் பேசி, பச்சை மரகத மயிலைப் போல, வீதியில், யானைக்கு உற்ற மதம் போன்று, மதத்துடன் நிற்பார்கள். இத்தகைய விலைமாதர்களின் வலையில் விழுந்து உழைத்து, படு குழியில் விழுந்த யானையைப் போல மனம் குலைந்து நிற்பேனோ? தத்த னத்தனத னத்த னத்தனன தித்தி மித்திமிதி மித்தி மித்திமித தக்கு டுக்குடுடு டுக்கு டுக்குடு என்று சங்கும், முரசும் ஒலி செய்து, கடலும் திக்குகளில் உள்ள சிறந்த (எட்டு) மலைகளும் நெகிழ்ந்து கட்டு விட, மேக இடியைக் கேட்டு ஆதி சேஷனது முடிகளும் கண்களும் துன்பம் அடைய, வாள் ஏந்திய துஷ்டராகிய அசுரர்களின் உடலின் அங்கங்கள் வெட்டுப்பட, வெற்றி கொண்ட ஒளி வேலாயுதத்தைச் செலுத்தி, தேவர்களின் தலைமையான நிலையை மீண்டும் அடையும்படி அருள் செய்து, யானையாகிய ஐராவதம் வளர்த்த கிளி போன்ற தேவயானையைத் திருமணம் செய்து கொண்ட வேலனே, வெட்கப்படும்படி பிரமனைப் பிடித்து, அவன் குடுமியை அலைவித்து, அவனைச் சிறையிலிட்டு, ஜீவன் முக்தர்களாகிய பெரியோர்கள் புகழ்கின்ற திருவிற்குடி* என்னும் தலத்தில் ஆசை பூண்டு மகிழ்கின்ற தம்பிரானே. 
* திருவாரூருக்கு அருகில் உள்ளது.
பாடல் 815 - விஜயபுரம் 
ராகம் - ஹம்ஸாநந்தி 
தாளம் - சதுஸ்ர ரூபகம் - 6
தனதன தந்தன தானன தனதன தந்தன தானன
     தனதன தந்தன தானன ...... தனதான
குடல்நிண மென்புபு லால்கமழ் குருதிந ரம்பிவை தோலிடை
     குளுகுளெ னும்படி மூடிய ...... மலமாசு 
குதிகொளு மொன்பது வாசலை யுடையகு ரம்பையை நீரெழு
     குமிழியி னுங்கடி தாகியெ ...... யழிமாய 
அடலையு டம்பைய வாவியெ அநவர தஞ்சில சாரமி
     லவுடத மும்பல யோகமு ...... முயலாநின் 
றலமரு சிந்தையி னாகுல மலமல மென்றினி யானுநி
     னழகிய தண்டைவி டாமல ...... ரடைவேனோ 
இடமற மண்டு நிசாசர ரடைய மடிந்தெழு பூதர
     மிடிபட இன்பம கோததி ...... வறிதாக 
இமையவ ருஞ்சிறை போயவர் பதியு ளிலங்க விடாதர
     எழில்பட மொன்று மொராயிர ...... முகமான 
விடதர கஞ்சுகி மேருவில் வளைவதன் முன்புர நீறெழ
     வெயில்நகை தந்த புராரிம ...... தனகோபர் 
விழியினில் வந்து பகீரதி மிசைவள ருஞ்சிறு வாவட
     விஜயபு ரந்தனில் மேவிய ...... பெருமாளே.
குடல், கொழுப்பு, எலும்பு, மாமிசம், பரந்துள்ள ரத்தம், நரம்பு இவைகள் தோலின் இடையே குளிர்ச்சியாக இருக்குமாறு அமையும்படி வைத்து மூடப்பட்டுள்ளதும், மலங்களும், பிற அழுக்குகளும் பொதிந்துள்ள, ஒன்பது துவாரங்களை உடைய சிறு குடிலாகிய இந்த உடலை, நீரிலே தோன்றும் குமிழியிலும் வேகமாக அழியப்போகின்ற, துன்பத்துக்கு ஈடான இவ்வுடலை விரும்பி, எப்போதும் சில பயனற்ற மருந்துகளையும், பலவித யோகப் பயிற்சிகளையும் அநுஷ்டித்துப் பார்த்து வேதனைப்படுகின்ற மனத் துன்பம் போதும், போதும். என்றைக்குத்தான் இனி நானும் அழகிய தண்டையை எப்போதும் அணிந்துள்ள உன் திருவடிமலரை அடைவேனோ, தெரியவில்லையே. இடைவெளி விடாது நெருக்கும் அசுரர்கள் எல்லாரும் இறக்கவும், (கிரெளஞ்சமலை முதலான) ஏழு குலகிரிகள் இடிபட்டுப் பொடியாகவும், காட்சிக்கு இன்பம் தரும் பெருங்கடல் வற்றிப் போகவும், தேவர்களும் சூரனின் சிறையிலிருந்து நீங்கி, அவர்களது அமராவதி என்ற ஊரில் விளங்கவும் செய்வித்த ஆதரவாளனே, அழகிய பணாமுடி பொருந்திய, ஓராயிரம் முகங்களைக் கொண்ட விஷத்தைத் தரித்துள்ள ஆதிசேஷன் மேருமலை என்ற வில்லில் நாணாகப் பூட்டப்பட்டு அந்த வில் வளைபடும் முன்னரே திரிபுரத்தை சாம்பலாகச் செய்ய ஒளிவீசும் புன்சிரிப்பை வெளியிட்ட திரிபுரப் பகைவர், மன்மதனைக் கோபித்து (கண்ணழலாலே) எரித்தவர், ஆகிய சிவபிரானது கண்களிலிருந்து பொறியாகப் பிறந்து, கங்கையின் மீது வளர்ந்த சிறுவனே, வட விஜயபுரம்* என்ற தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* விஜயபுரம் திருவாரூர் நகரின் ஒரு பகுதி.
பாடல் 816 - திருவர்ருர் 
ராகம் - ....; தாளம் -
தானா தானா தானா தானா
     தானா தானத் ...... தனதான
கூசா தேபா ரேசா தேமால்
     கூறா நூல்கற் ...... றுளம்வேறு 
கோடா தேவேல் பாடா தேமால்
     கூர்கூ தாளத் ...... தொடைதோளில் 
வீசா தேபேர் பேசா தேசீர்
     வேதா தீதக் ...... கழல்மீதே 
வீழா தேபோய் நாயேன் வாணாள்
     வீணே போகத் ...... தகுமோதான் 
நேசா வானோ ¡£சா வாமா
     நீபா கானப் ...... புனமானை 
நேர்வா யார்வாய் சூர்வாய் சார்வாய்
     நீள்கார் சூழ்கற் ...... பகசாலத் 
தேசா தீனா தீனா ¡£சா
     சீரா ரூரிற் ...... பெருவாழ்வே 
சேயே வேளே பூவே கோவே
     தேவே தேவப் ...... பெருமாளே.
நான் நாணம் கொள்ளாமல், உலகத்தோர் என்னைப் பழிக்காமல், உன் பெருமையைக் கூறாத அசட்டு நூல்களைக் கற்று என் உள்ளம் மாறுபட்டு கோணல் வழியைப் பின்பற்றாமல், உன் வேலாயுதத்தை நான் பாடாமலும், ஆசை மிகுந்து கூதாள மலர்மாலையை உன் தோள்களில் வீசாமலும், உன் புகழைப் பற்றி நான் பேசாமலும், சிறப்பான வேதங்களுக்கும் எட்டாத உன் திருவடிகளில் வீழாமலும், அலைந்து போய், நாயைவிடக் கீழோனான அடியேனுடைய வாழ்நாள் வீணாகப் போவது நீதியாகுமோ? அன்பனே, தேவர்களின் தெய்வமே, அழகனே, கடப்பமாலையை அணிந்தவனே, காட்டில் தினைப்புனத்தில் உள்ள மான்போன்ற வள்ளியைச் சந்தித்தவனே, உள்ளம் குளிர்ந்தவனே, சூரன் இருக்கும் மகேந்திரபுரியைச் சென்றடைந்து போர்செய்தவனே, பெரிய மேகங்கள் சூழ்ந்த கற்பகத் தருக்கள் நிறைந்துள்ள தேசமாகிய தேவலோகத்துக்கு உரிமையாளனே, அனாதைகளின் ரட்சகக் கடவுளே, சிறப்பு வாய்ந்த திருவாரூரில்* வீற்றிருக்கும் பெரும் செல்வமே, சிவப்பு நிறத்தோனே, முருகவேளே, மிக்க பொலிவுள்ளவனே, தலைவனே, தேவே தேவப் பெருமாளே. 
* திருவாரூர் நாகப்பட்டினத்துக்கு மேற்கே 14 மைலில் உள்ளது. மூவரின் தேவாரமும் போற்றும் முதுநகர்.
பாடல் 817 - திருவாருர் 
ராகம் - ...; தாளம் -
தானா தானா தானா தானா
     தானா தானத் ...... தனதான
கூர்வாய் நாராய் வாராய் போனார்
     கூடா ரேசற் ...... றலஆவி 
கோதா னேன்மா தாமா றானாள்
     கோளே கேள்மற் ...... றிளவாடை 
ஈர்வாள் போலே மேலே வீசா
     ஏறா வேறிட் ...... டதுதீயின் 
ஈயா வாழ்வோர் பேரே பாடா
     ஈடே றாரிற் ...... கெடலாமோ 
சூர்வா ழாதே மாறா தேவாழ்
     சூழ்வா னோர்கட் ...... கருள்கூருந் 
தோலா வேலா வீறா ரூர்வாழ்
     சோதீ பாகத் ...... துமையூடே 
சேர்வாய் நீதீ வானோர் வீரா
     சேரா ரூரைச் ...... சுடுவார்தஞ் 
சேயே வேளே பூவே கோவே
     தேவே தேவப் ...... பெருமாளே.
கூர்மையான நீண்ட வாயை உடைய நாரையே, இங்கு வருவாய். என்னை விட்டுப் பிரிந்தவர் மீண்டும் வந்து என்னைத் தழுவ மாட்டாரோ? கொஞ்சம் அல்ல, என் உயிர் பயனற்றது ஆயிற்று. என் தாயும் என்னோடு மாறுபட்டுப் பகை ஆனாள். சுற்றத்தார்கள் கோள் மூட்டுதலிலையே ஈடுபட்டு இருக்கின்றார்கள். மேலும் இள வாடைக் காற்று அறுக்கின்ற வாளைப் போல் என் மேல் வீசி, எறிகின்ற நெருப்பைப் போல் உடல் மீது படுகின்றது. ஒருவருக்கும் கொடாமல் வாழ்கின்றவர்களின் பேர்களைப் பாடி ஈடேறாது தவிப்போர் போல நானும் கெட்டுப் போகலாமோ? சூரன் வாழாத வண்ணம், தங்களது சுக நிலை மாறாமல் உள்ள வாழ்வைச் சூழும் தேவர்களுக்கு அருள் புரிந்த, தோல்வியைக் கண்டறியாத வேலனே, மேம்பட்டு விளங்கும் திருவாரூரில்* வீற்றிருக்கும் சோதி மயமான சிவபெருமானுடைய பாகத்தில் உள்ள உமா தேவி (இவர்கள்) மத்தியில் (சோமாஸ்கந்த மூர்த்தியாய் உருவில்) விளங்குவாய். நீதிப் பெருமானே, தேவர்களுக்குத் தலைமை தாங்கும் வீரனே, பகைவர்களுடைய திரிபுரங்களைச் சுட்டவராகிய சிவபெருமானுடைய குழந்தையே, அரசே, பொலிவு உள்ளவனே, தலைவனே தேவனே, தேவர்கள் பெருமாளே. 
* திருவாரூர் நாகப்பட்டினத்துக்கு மேற்கே 14 மைலில் உள்ளது. மூவரின் தேவாரமும் போற்றும் முதுநகர்.இப்பாட்டு அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவியாக புலவர் தம்மையே எண்ணிப் பாடியது.தாயாரின் கோபம், ஊர்ப் பெண்களின் ஏச்சு, வாடைக் காற்று முதலியன தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.
பாடல் 818 - திருவர்ருர் 
ராகம் - நீலாம்பரி 
தாளம் - ஆதி 2 களை
தானா தானா தானா தானா
     தானா தானத் ...... தனதான
பாலோ தேனோ பாகோ வானோர்
     பாரா வாரத் ...... தமுதேயோ 
பாரோர் சீரோ வேளேர் வாழ்வோ
     பானோ வான்முத் ...... தெனநீளத் 
தாலோ தாலே லோபா டாதே
     தாய்மார் நேசத் ...... துனுசாரந் 
தாரா தேபே ¡£யா தேபே
     சாதே யேசத் ...... தகுமோதான் 
ஆலோல் கேளா மேலோர் நாண்மா
     லானா தேனற் ...... புனமேபோய் 
ஆயாள் தாள்மேல் வீழா வாழா
     ஆளா வேளைப் ...... புகுவோனே 
சேலோ டேசே ராரால் சாலார்
     சீரா ரூரிற் ...... பெருவாழ்வே 
சேயே வேளே பூவே கோவே
     தேவே தேவப் ...... பெருமாளே.
நீ பால் தானோ, தேன்தானோ, வெல்லக்கட்டிதானோ? தேவர்கள் பாற்கடலில் இருந்து கடைந்தெடுத்த அமுதமோ? நீ இவ்வுலகிலுள்ளோரின் சிறப்புப் பொருளோ? மன்மதனுக்கு நிகரான வாழ்வோ நீ? பானுவோ (சூரியனோ) நீ? சிறந்த முத்தோ நீ? என்றெல்லாம் விரிவாகத் தாலோ தாலேலோ என்று தாய்மார் என்னைத் தாலாட்டுப் பாடாமலும், தாய்மார் அன்புடன் என்னை நினைத்து தாய்ப்பால் தராமலும், புகழ்ச்சிக்கு உரிய பெயர் ஒன்றும் எனக்குச் சூட்டாமலும், அன்புடன் என்னோடு பேசாமலும், ஏச்சுக்கு இடமாக நான் வளர்வது நீதியாகுமோ? வள்ளி ஆலோலம் என்று கூவி பறவைகளை ஓட்டும் குரலோசை கேட்டு, முன்னொரு நாளில், ஆசை குன்றாத நிலையில் அவளிருந்த தினைப்புனத்திற்குச் சென்று, அந்த வள்ளித் தாயின் பாதங்களில் விழுந்தும், அதனால் வாழ்வு பயன்பெற்றது என்று கூறி வாழ்ந்தும், அவளுக்கு ஆளாக, வேளைக்காரனாக, சமயத்தில் புகுந்து விளையாடியவனே, சேல் மீனோடு சேர்ந்து ஆரல் மீன்கள் மிக நிறைந்துள்ள சீர்பெற்ற திருவாரூர்* தலத்தின் பெருஞ் செல்வமே, இறைவன் சேயே, கந்த வேளே, மலர் போன்ற பொலிவு உள்ளவனே, அரசே, இறைவனே, தேவர்களின் பெருமாளே. 
* திருவாரூர் நாகப்பட்டினத்துக்கு மேற்கே 14 மைலில் உள்ளது. மூவரின் தேவாரமும் போற்றும் முதுநகர்.
பாடல் 819 - திருவாருர்
ராகம் - . ரஞ்சனி தாளம் - தி.ர ஏகம்
தானானத் தனதான தானானத் ...... தனதான
நீதானெத் தனையாலும் நீடூழிக் ...... க்ருபையாகி 
மாதானத் தனமாக மாஞானக் ...... கழல்தாராய் 
வேதாமைத் துனவேளே வீராசற் ...... குணசீலா 
ஆதாரத் தொளியானே ஆரூரிற் ...... பெருமாளே.
நீ ஒருவன்தான் எல்லா வகையாலும் ஊழிக்காலம் வரைக்கும் எப்போதும் அருள் நிறைந்தவனாகி சிறந்த தானப் பொருளாக மேலான ஞான பீடமாகிய உன் திருவடிகளைத் தந்தருள்வாய். பிரம்மனுக்கு மைத்துனனாகிய முருக வேளே, வீரனே, நற்குணங்கள் யாவும் நிரம்பப் பெற்றவனே, ஆறு* ஆதாரங்களிலும் ஒளிவிட்டுப் பிரகாசிப்பவனே, திருவாரூரில்** இருக்கும் பெருமாளே. 
* ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம் 
** திருவாரூர் நாகப்பட்டினத்துக்கு மேற்கே 14 மைலில் உள்ளது. மூவரின் தேவாரமும் போற்றும் முதுநகர்.
பாடல் 820 - திருவாருர்
ராகம் - ....; தாளம் -
தனதன தனன தனதன தனன
     தானான தந்த ...... தனதான
மகரம துகெட இருகுமி ழடைசி
     வாரார்ச ரங்க ...... ளெனநீளும் 
மதர்விழி வலைகொ டுலகினில் மனிதர்
     வாணாள டங்க ...... வருவார்தம் 
பகர்தரு மொழியில் ம்ருகமத களப
     பாடீர கும்ப ...... மிசைவாவிப் 
படிமன துனது பரிபுர சரண
     பாதார விந்த ...... நினையாதோ 
நகமுக சமுக நிருதரு மடிய
     நானாவி லங்கல் ...... பொடியாக 
நதிபதி கதற வொருகணை தெரியு
     நாராய ணன்றன் ...... மருகோனே 
அகனக கனக சிவதல முழுது
     மாராம பந்தி ...... யவைதோறும் 
அரியளி விததி முறைமுறை கருது
     மாரூர மர்ந்த ...... பெருமாளே.
மகர மீனும் தன் முன்னே நிலை கலங்கிட, குமிழம் பூப் போன்ற மூக்கை நெருங்கிச் சேர்ந்து, நீளம் மிக்க அம்புகள் என்று சொல்லும்படி நீண்டுள்ளதாய், துறுதுறுப்பு மிக்க இரு கண்கள் (என்னும்) வலையைக் கொண்டு, உலகில் ஆண் மக்களின் வாழ்நாள் சுருங்கும்படி எதிர் தோன்றி வரும் விலைமாதர்களின் பேசும் பேச்சிலும், கஸ்தூரி, கலவைச் சந்தனம் ஆகியவைகளை அணிந்த குடம் போன்ற மார்பகம் மீதிலும் தாவிப் படியும் என் மனம் உன்னுடைய சிலம்பு அணிந்த தாமரைத் திருவடிகளை நினைக்க மாட்டாதோ? மலை இடங்களின் முன்புள்ள அசுரர்கள் இறந்து பட, பலவிதமான மலைகளும் பொடியாக, கடல் கதற, ஒப்பற்ற அம்பைச் செலுத்திய (ராமராம்) திருமாலின் மருகனே, அகன்ற மலை இடங்களுக்கு உரியவனே, செம் பொன் வடிவினனே, சிவ தலங்கள் எல்லாவற்றிலும் அமர்ந்தவனே, சோலைகளின் வரிசைகள் தோறும் அழகிய வண்டுகளின் கூட்டம் வரிசை வரிசையாக (மலர்த் தேனை) முரலி விரும்பும் திருவாரூரில்* அமர்ந்த பெருமாளே. 
* திருவாரூர் நாகப்பட்டினத்துக்கு மேற்கே 14 மைலில் உள்ளது. மூவரின் தேவாரமும் போற்றும் முதுநகர்.
பாடல் 821 - திருவாருர்
ராகம் - ....; தாளம் -
தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான
கரமு முளரியின் மலர்முக மதிகுழல்
     கனம தெணுமொழி கனிகதிர் முலைநகை
          கலக மிடுவிழி கடலென விடமென ...... மனதூடே 
கருதி யனநடை கொடியிடை யியல்மயில்
     கமழு மகிலுட னிளகிய ம்ருகமத
          களப புளகித கிரியினு மயல்கொடு ...... திரிவேனும் 
இரவு பகலற இகலற மலமற
     இயலு மயலற விழியினி ரிழிவர
          இதய முருகியெ யொருகுள பதமுற ...... மடலூடே 
யெழுத அரியவள் குறமக ளிருதன
     கிரியில் முழுகின இளையவ னெனுமுரை
          யினிமை பெறுவது மிருபத மடைவது ...... மொருநாளே 
சுரபி மகவினை யெழு¦பொருள் வினவிட
     மனுவி னெறிமணி யசைவுற விசைமிகு
          துயரில் செவியினி லடிபட வினவுமி ...... னதிதீது 
துணிவி லிதுபிழை பெரிதென வருமநு
     உருகி யரகர சிவசிவ பெறுமதொர்
          சுரபி யலமர விழிபுனல் பெருகிட ...... நடுவாகப் 
பரவி யதனது துயர்கொடு நடவிய
     பழுதின் மதலையை யுடலிரு பிளவொடு
          படிய ரதமதை நடவிட மொழிபவ ...... னருளாரூர்ப் 
படியு லறுமுக சிவசுத கணபதி
     யிளைய குமரநி ருபபதி சரவண
          பரவை முறையிட அயில்கொடு நடவிய ...... பெருமாளே.
கைகள் தாமரையின் மலரையும், முகம் சந்திரனையும், கூந்தல் மேகத்தையும், மதிக்கத் தக்க சொற்கள் பழத்தையும், ஒளி பொருந்திய பற்கள் முல்லை மலரையும், போரை விளைவிக்கும் கண்கள் கடல் என்னும்படியும் நஞ்சையும் ஒக்கும் என்றும் மனதுக்குள்ளே எண்ணி, அன்னப் பறவையைப் போன்ற நடை, கொடி போன்ற இடை, மயில் போன்ற இயல்பு, நறு மணம் வீசும் அகிலுடன் இழைந்துள்ள கஸ்தூரிக் கலவை, மகிழ்ச்சி தரும் மலை போன்ற மார்பகம் இவற்றையுடைய விலைமகளிர் மீது மோகம் கொண்டு திரிகின்ற நானும், இரவு பகல் என்ற வித்தியாசம் இல்லாதவாறு, பகையான எண்ணம் அற, (ஆணவம், கன்மம், மாயை என்ற) மும் மலங்கள் அற, பொருந்துகின்ற ஆசைகள் அற, கண்களில் கண்ணீர் ஒழுக, உள்ளம் உருகி பாகு வெல்லம் போன்ற பதத்தை நிலையாகப் பொருந்த, எழுதுவதற்கு முடியாத குற மகளாகிய வள்ளி நாயகியின் இரண்டு மார்பகங்களாகிய மலைகளில் முழுகிய இளையவனே என்கின்ற சொல்லானது எனக்கு இன்பம் தருவதும், நான் உனது இரண்டு திருவடிகளைச் சேர்வதுமான ஒரு நாள் வருமோ? பசு இறந்த தனது கன்றை எழுப்புதற்கு வழியை ஆராய்ந்து நாடி மனு நீதிச் சோழனின் ஆராய்ச்சி மணியைச் சென்று அசைத்து ஆட்ட, அந்த மணியின் ஒலி மிக்க துயரை விளைவித்து அரசனின் காதுகளில் ஒலிக்க, மிகவும் கொடிய செயல் ஏதோ நடந்திருக்கின்றது, போய் விசாரிக்கவும் என்று அவர் சொல்ல, நிச்சயமாக இது பெரிய தவறாகும் என்று எழுந்து வந்த மன்னனாகிய மநு மனம் கசிந்து, அரகர சிவசிவ என்ற வார்த்தைகள் வரச் செய்த ஒரு பசு வேதனைப்பட்டு கண்ணீர் பெருகுதலைப் பார்த்து, நடு நிலைமையை அறிந்து இறைவனைத் தியானித்து, அந்தப் பசுவுக்கு துயரத்தைத் தரும்படியாக ரதத்தை ஓட்டிய குற்றத்துக்கு ஆளான தன் மகனை உடல் இரண்டு பிளவாகும்படி, அவன் மேல் படியுமாறு ரதத்தை நடத்தும்படி சொன்னவனாகிய மநு நீதிச் சோழன் ஆட்சி செய்த திருவாரூர்* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் ஆறு முகனே, சிவபெருமானின் மகனே, விநாயகப் பெருமானின் தம்பியே, குமரனே, அரசர்கள் தலைவனே, சரவணப் பெருமாளே, கடல் முறை இடும்படி வேல் கொண்டு செலுத்திய பெருமாளே. 
* திருவாரூர் நாகப்பட்டினத்துக்கு மேற்கே 11 மைல் தொலைவில் உள்ளது.
பாடல் 822 - திருவர்ருர்
ராகம் - குந்தல வராளி தாளம் - ஆதி - 2 களை - 16
தானா தானா தனதன தனதன
     தானா தானா தனதன தனதன
          தானா தானா தனதன தனதன ...... தனதான
பாலோ தேனோ பலவுறு சுளையது
     தானோ வானோர் அமுதுகொல் கழைரச
          பாகோ வூனோ டுருகிய மகனுண ...... வருண்ஞானப் 
பாலோ வேறோ மொழியென அடுகொடு
     வேலோ கோலோ விழியென முகமது
          பானோ வானூர் நிலவுகொ லெனமகண் ...... மகிழ்வேனை 
நாலாம் ரூபா கமலஷண் முகவொளி
     யேதோ மாதோம் எனதகம் வளரொளி
          நானோ நீயோ படிகமொ டொளிரிட ...... மதுசோதி 
நாடோ வீடோ நடுமொழி யெனநடு
     தூணேர் தோளா சுரமுக கனசபை
          நாதா தாதா எனவுரு கிடஅருள் ...... புரிவாயே 
மாலாய் வானோர் மலர்மழை பொழியவ
     தாரா சூரா எனமுநி வர்கள்புகழ்
          மாயா ரூபா அரகர சிவசிவ ...... எனவோதா 
வாதா டூரோ டவுணரொ டலைகடல்
     கோகோ கோகோ எனமலை வெடிபட
          வாளால் வேலால் மடிவுசெய் தருளிய ...... முருகோனே 
சூலாள் மாலாள் மலர்மகள் கலைமகள்
     ஓதார் சீராள் கதிர்மதி குலவிய
          தோடாள் கோடா ரிணைமுலை குமரிமுன் ...... அருள்பாலா 
தூயா ராயார் இதுசுக சிவபத
     வாழ்வா மீனே வதிவமெ னுணர்வொடு
          சூழ்சீ ராரூர் மருவிய இமையவர் ...... பெருமாளே.
பாலோ, தேனோ, பலாப் பழத்தில் உள்ள சுளைதானோ? தேவர்கள் உண்ணும் அமுதம்தானோ, கரும்பு ரச வெல்லப் பாகோ? ஊன் உருகத் தேவாரம் பாடிய மகன் திருஞான சம்பந்தர் உண்ணும்படி (உமா தேவியார்) அருளிய ஞானப் பால்தானோ? வேறு ஏதாவதோ ஒப்புரைக்கத் தக்கதோ (இந்தப் பெண்களின்) மொழி என்றும், கொல்லுதலைக் கொண்ட வேலோ, அம்பு தானோ (அம்மாதர்களின்) கண்கள் என்றும், முகம் சூரிய ஒளிதானோ, அல்லது ஆகாயத்தில் ஊர்ந்து செல்லும் சந்திர ஒளியோ என்றும், பெண்களிடம் மகிழ்ச்சி கொள்ளும் நான் பல உருவமும் கொண்ட உருவத்தனே, தாமரை போன்ற ஆறு முக ஒளியே, அல்லது வேறு எதுவோ, பெரிய குற்றம் கொண்ட என்னுடைய மனத்தில் வளர்கின்ற ஜோதியே, நானோ நீயோ பளிங்குபோல் விளங்கும் இடம் அது ஒரு ஜோதி மயமானது, அது நாடுதானோ அல்லது மோட்ச வீடோ? நடு நிலைமையான உண்மை மொழியை நிலை நிறுத்தியவனே, நடுவில் உள்ள தூணுக்குச் சமமான தோள்களை உடையவனே, தேவர்கள் முன்னிலையில் பெருமை தங்கிய சபையில் விளங்கும் நாதனே, கொடை வள்ளலே என்று மனம் உருகுமாறு மீண்டும் மீண்டும் வேண்டினவர்களுக்குத் திருவருள் புரிவோனே, காதல் பூண்டவராக தேவர்கள் பூமாரி பொழிய பூமியில் அவதாரம் செய்தவனே, சூரனே என முனிவர்கள் புகழும் மாயா ரூபனே, அரகர சிவசிவ என்று உன்னை ஓதாமல், வாதாடி நின்ற அவுணர்களும், அவர்கள் ஊரில் இருந்தவர்களும், அலை கடலும் கோகோ என்று அலறவும், (கிரவுஞ்சமும், ஏழு குலமலைகளும்) வெடிபட்டுப் பொடியாகவும், வாளாலும், வேலாலும் அவர்களை அழியச்செய்து அருளிய முருகனே, சூலம் ஏந்தியவளான துர்க்கை, திருமாலுக்கு உரியவளான பூ மகளாகிய லக்ஷ்மி, சரஸ்வதி, இவர்கள் ஓதித் துதிக்கும் சீர்படைத்தவள், கதிர் வீசும் நிலவின் ஒளிகொண்ட தோடு என்னும் அணிகலனை அணிபவள், மலை போன்ற இரண்டு மார்பகங்களை உடைய உமா தேவியார் முன்பு அருளிய குழந்தையே, பரிசுத்தமானவர்களும், உன்னைத் தியானிப்பவர்களும் இந்தத் திருவாரூர் வாழ்வே சுகமான சிவ பத வாழ்வு, இங்கேயே தங்கி வாழ்வோம், என்னும் ஞான உணர்ச்சியோடு வந்து சூழ்கின்ற, சிறப்புள்ள திருவாரூரில்* சேர்ந்துள்ள தேவர்களின் பெருமாளே. 
* திருவாரூர் நாகப்பட்டினத்துக்கு மேற்கே 14 மைலில் உள்ளது. மூவரின் தேவாரமும் போற்றும் முதுநகர்.
பாடல் 823 - பெரியமடம்
ராகம் - ...; தாளம் -
தனதனன தானதன தத்தனா தாத்த
     தனதனன தானதன தத்தனா தாத்த
          தனதனன தானதன தத்தனா தாத்த ...... தனதான
கலகவிழி மாமகளிர் கைக்குளே யாய்ப்பொய்
     களவுமத னூல்பலப டித்தவா வேட்கை
          கனதனமு மார்புமுற லிச்சையா லார்த்து ...... கழுநீரார் 
கமழ்நறைச வாதுபுழு கைத்துழாய் வார்த்து
     நிலவரசு நாடறிய கட்டில்போட் டார்ச்செய்
          கருமமறி யாதுசிறு புத்தியால் வாழ்க்கை ...... கருதாதே 
தலமடைசு சாளரமு கப்பிலே காத்து
     நிறைபவுசு வாழ்வரசு சத்யமே வாய்த்த
          தெனவுருகி யோடியொரு சற்றுளே வார்த்தை ...... தடுமாறித் 
தழுவியநு ராகமும்வி ளைத்துமா யாக்கை
     தனையுமரு நாளையும வத்திலே போக்கு
          தலையறிவி லேனைநெறி நிற்கநீ தீ¨க்ஷ ...... தரவேணும் 
அலகில்தமி ழாலுயர்ச மர்த்தனே போற்றி
     அருணைநகர் கோபுரவி ருப்பனே போற்றி
          அடல்மயில்ந டாவியப்ரி யத்தனே போற்றி ...... அவதான 
அறுமுகசு வாமியெனும் அத்தனே போற்றி
     அகிலதல மோடிவரு நிர்த்தனே போற்றி
          அருணகிரி நாதஎனும் அப்பனே போற்றி ...... அசுரேசர் 
பெலமடிய வேல்விடுக ரத்தனே போற்றி
     கரதலக பாலிகுரு வித்தனே போற்றி
          பெரியகுற மாதணைபு யத்தனே போற்றி ......பெருவாழ்வாம் 
பிரமனறி யாவிரத தக்ஷிணா மூர்த்தி
     பரசமய கோளிரித வத்தினால் வாய்த்த
          பெரியமட மேவியசு கத்தனே யோக்யர் ...... பெருமாளே.
கலகத்தை விளைவிக்கக் கூடிய கண்களை உடைய அழகிய விலைமாதர்களின் கைகளில் அகப்பட்டு, களவு, பொய், காம சாஸ்திரம் பலவும் கற்று, ஆசையுடனும், விருப்பத்துடனும் கனத்த மார்பகங்களோடு நெஞ்சாரத் தழுவி மகிழ்ந்து, செங்கழுநீர் மலர்களை நிரப்பி, மணக்கும் ஜவ்வாது, புனுகு இவைகளைக் கலந்து ஊற்றி பரிமளிக்க வைத்து, பூமியில் உள்ள அரசர் முதல் நாட்டில் உள்ள யாவரும் அறியும்படியாக, கட்டில் படுக்கை போட்டவர்களாகிய வேசியர்கள் செய்கின்ற தொழில்களின் சூதை அறியாமல், எனக்குள்ள அற்ப புத்தியால் எனது வாழ்க்கையின் அருமையை எண்ணாமல், (அந்த வேசியரின்) இடத்தை நெருங்கிச் சென்று, ஜன்னலின் வாயில்களின் முன் பக்கத்தில் காத்து நின்று, (அவர்களால் அழைக்கப்பட்டவுடன்) நிறைந்த செல்வமும் அரச வாழ்வும் சத்தியப்பேறும் கிடைத்தன போல மனம் உருகி, அவர்கள் வீட்டினுள் ஓடிச்சென்று, உள்ளே இருக்கும் கொஞ்ச நேரத்துக்குள் பேசும் பேச்சும் தடுமாறி, அவர்களைத் தழுவி காம லீலைகளைச் செய்தவனாய், சிறந்த உடலையும் அருமையான வாழ் நாளையும் வீணில் கழிக்கின்றவனும், நல்லறிவு இல்லாதவனுமாகிய என்னை, நன்னெறியில் நிற்கும்படி நீ தயை புரிந்து அறிவுரை செய்தருள வேண்டும். எல்லை இல்லாத தமிழறிவால் உயர்ந்துள்ள வல்லவனே, போற்றி, திருவண்ணாமலையின் கோபுரத்தில் வீற்றிருப்பவனே, போற்றி, வலிய மயிலை ஓட்டுதலில் விருப்பு வைத்தவனே, போற்றி, விந்தையான செயல்களைச் செய்த ஆறுமுகச் சுவாமி என்னும் தலைவனே, போற்றி, எல்லாப் பூமிகளையும் வலம் செய்து ஓடி வந்த நிருத்த மூர்த்தியே, போற்றி, அருணகிரி நாதரே என்று என்னை அழைத்த அப்பனே, போற்றி, அசுரர் தலைவர்களின் வலிமை அழிய வேலைச் செலுத்திய கரத்தினனே, போற்றி, கையில் கபாலம் ஏந்திய சிவபெருமானுக்கு ஞான உபதேச பண்டிதனாய் நின்றவனே, போற்றி, பெருமை வாய்ந்த குறப் பெண்ணாகிய வள்ளி நாயகியை அணைகின்ற திருப்புயங்களை உடையவனே, போற்றி, பெருஞ் செல்வப் பொருளானதும், பிரமனும் அறியாததுமாகிய பிரணவப் பொருளை உபதேசித்த தக்ஷிணா மூர்த்தி சொரூபனே, மற்ற (சமண, புத்த) மதங்களை அழிக்க வந்த (திருஞான சம்பந்த) சிங்கமே, தவச் செயலால் கிடைக்கும், பெரிய மடம்** என்னும் இடத்தில் வீற்றிருக்கும், சுகப் பெருமானே, தூய யோகியர்கள் போற்றும் பெருமாளே. 
* தீ¨க்ஷ என்பது குருவின் அறிவுரை. அது ஏழு வகைப்படும்: நயன (கண்களால்), ஸ்பரிச (தொடுவதால்), மானச (மன அலைகளால்), வாசக (சொல்லால்), சாஸ்திர (வேத நூல்களால்), யோக (யோகாப்பியாசத்தால்), ஔத்திரி (கேள்வி - பதில் மூலமாக) என்பனவாகும்.
** பெரிய மடம் கும்பகோணத்தில் மகாமகக் குளத்துக்கு வட கரையில் உள்ள சைவ மடம்.
பாடல் 824 - சோமநாதன்மடம்
ராகம் - செஞ்சுருட்டி தாளம் - அங்கதாளம் - 5 1/2 தகதிமி-2, தகதிமி-2, தகிட-1 1/2
தனதனன தான தான தனதனன தான தான
     தனதனன தான தான ...... தனதான
ஒருவழிப டாது மாயை யிருவினைவி டாது நாளு
     முழலுமநு ராக மோக ...... அநுபோகம் 
உடலுமுயிர் தானு மாயு னுணர்விலொரு காலி ராத
     வுளமுநெகிழ் வாகு மாறு ...... அடியேனுக் 
கிரவுபகல் போன ஞான பரமசிவ யோக தீர
     மெனமொழியும் வீசு பாச ...... கனகோப 
எமபடரை மோது மோன வுரையிலுப தேச வாளை
     யெனதுபகை தீர நீயும் ...... அருள்வாயே 
அரிவையொரு பாக மான அருணகிரி நாதர் பூசை
     அடைவுதவ றாது பேணும் ...... அறிவாளன் 
அமணர்குல கால னாகும் அரியதவ ராஜ ராஜன்
     அவனிபுகழ் சோமநாதன் ...... மடமேவும் 
முருகபொரு சூரர் சேனை முறியவட மேரு வீழ
     முகரசல ராசி வேக ...... முனிவோனே 
மொழியுமடி யார்கள் கோடி குறைகருதி னாலும் வேறு
     முனியஅறி யாத தேவர் ...... பெருமாளே.
ஒரு வழியில் நிலைத்து நிற்க முடியாமல், மாயையும், என் நல்வினை, தீவினைகளும் என்னை விடாமல், தினந்தோறும் அலைச்சல் விளைவிக்கின்ற காம லீலையாகும் மோக அனுபவத்தில் ஈடுபட்டு, என் உடலையும் என் உயிரையும் மட்டுமே எண்ணிக்கொண்டு, நீ உள்ளாய் என்னும் உணர்ச்சி ஒருகாலும் இல்லாத என் உள்ளமும் நெகிழ்ந்து கசிந்து உருகுமாறு அடியேனுக்கு, இரவும் பகலும் கடந்த ஞான பரமசிவ யோகம் தான் ¨தரியத்தைத் தர வல்லது என்று மொழிந்து காட்டுவதும், பாசக்கயிறை வீசும் மிகுந்த கோபங்கொண்ட யமதூதர்களை மோதி விரட்டியடிக்கக் கூடியதுமான, பேச்சில்லாத மெளன நிலையான ஞானோபதேசம் என்ற வாளை எனது உட்பகை, புறப்பகை யாவும் ஒழிய, நீ அன்போடு அருள்வாயாக. தேவியை ஒருபாகத்தில் கொண்ட அருணாசலேஸ்வரர் பூஜையை ஒழுங்கு தவறாமல் புரிந்து வருகின்ற அறிவாளியும், சமணர் குலத்துக்கு ஒரு யமனாகத் தோன்றியவனும், அருமையான தவங்கள் பல செய்த தவராஜனும், இந்த உலகெல்லாம் புகழ்பவனும் ஆன சோமநாதனுடைய* ஊராகிய சோமநாதன்மடத்தில் வீற்றிருக்கின்ற முருகனே, போர் செய்த சூரர்களின் சேனை முறிபட்டு அழியவும், வடக்கு திசையிலுள்ள மேரு மலை பொடிபட்டு விழவும், சங்குகளைக் கொண்ட கடல் வெந்து வற்றவும் கோபித்தவனே, உன்னைத் துதிக்கும் அடியார்கள் கோடிக்கணக்கான குறைகளைக் கருதி உன்னிடம் முறையிட்டாலும், அவர்கள் எண்ணத்துக்கு மாறாக அவர்களைக் கோபிப்பது என்பதையே அறியாத தேவர் பெருமாளே. 
* திருவண்ணாமலையாரை ஆத்மார்த்த மூர்த்தியாகக் கொண்டு புத்தூரில் வாழ்ந்த தவசீலர் ஒருவர் சோமநாதன் என்ற பெயரோடு நியமம் தவறாது பூஜை செய்து வந்தார். அவர் புத்தூரில் ஒரு மடத்தில் முருகனையும் துதித்து வந்தார். அந்த இடமே சோமநாதன்மடம் என்று வழங்கப்படுகிறது. வட ஆற்காட்டு மாவட்டத்தில் ஆரணி வட்டத்தில் புத்தூர் உள்ளது.
பாடல் 825 - த்ரியம்பகபுரம்
ராகம் - ....; தாளம் -
தனன தந்தனந் தனதன தனதன
     தனன தந்தனந் தனதன தனதன
          தனன தந்தனந் தனதன தனதன ...... தனதான
உரையொ ழிந்துநின் றவர்பொரு ளெளிதென
     வுணர்வு கண்டுபின் திரவிய இகலரு
          ளொருவர் நண்படைந் துளதிரள் கவர்கொடு ...... பொருள்தேடி 
உளம கிழ்ந்துவந் துரிமையில் நினைவுறு
     சகல இந்த்ரதந்த் ரமும்வல விலைமக
          ளுபய கொங்கையும் புளகித மெழமிக ...... வுறவாயே 
விரக வன்புடன் பரிமள மிகவுள
     முழுகி நன்றியொன் றிடமல ரமளியில்
          வெகுவி தம்புரிந் தமர்பொரு சமயம ...... துறுநாளே 
விளைத னங்கவர்ந் திடுபல மனதிய
     ரயல்த னங்களுந் தனதென நினைபவர்
          வெகுளி யின்கணின் றிழிதொழி லதுவற ...... அருள்வாயே 
செருநி னைந்திடுஞ் சினவலி யசுரர்க
     ளுகமு டிந்திடும் படியெழு பொழுதிடை
          செகம டங்கலும் பயமற மயில்மிசை ...... தனிலேறித் 
திகுதி குந்திகுந் திகுதிகு திகுதிகு
     தெனதெ னந்தெனந் தெனதென தெனதென
          திமிதி மிந்திமிந் திமிதிமி திமியென ...... வருபூதங் 
கரையி றந்திடுங் கடலென மருவிய
     வுதிர மொண்டுமுண் டிடஅமர் புரிபவ
          கலவி யன்புடன் குறமகள் தழுவிய ...... முருகோனே 
கனமு றுந்த்ரியம் பகபுர மருவிய
     கவுரி தந்தகந் தறுமுக எனஇரு
          கழல்ப ணிந்துநின் றமரர்கள் தொழவல ...... பெருமாளே.
பேசுவதற்கு முடியாமல் விழித்து நிற்கின்ற இவரிடம் பொருளை அபகரிப்பது எளிது என்று தமது உணர்ச்சியினால் அறிந்து, அதன் பிறகு செல்வ வலிமை உடையவர்களுள் ஒருவருடைய நட்பைப் பெற்று, அவரிடம் உள்ள திரண்ட பொருளைக் கவரும் எண்ணம் கொண்டு, அவருடைய பொருளைத் தேடி, உள்ளம் மகிழ்ச்சி அடைந்து களிப்புற்று, (அவரது சொத்துக்களின் மீது) தமக்குள்ள உரிமையை நிலைநாட்ட நினைத்து, எல்லாவிதமான தந்திரங்களையும் காட்டவல்ல விலைமாதரின் இரண்டு மார்பகங்களும் புளகிதம் கொள்ள நிரம்ப உறவைக் காட்டி, காமமோகத்துடன் மிகுந்த நறுமணத்தின் உள்ளேயே முழுகி, நன்றி பொருந்தியவர்கள் போல மலர்ப் படுக்கையில் பல வித காம லீலைகளைப் புரிந்து, கலவிப் போர் செய்யும் சமயம் வாய்க்கும் அந்த நாளில், (தம்மை நாடினோரின்) பெருகி உள்ள செல்வத்தை அபகரிக்கும் பலவித கெட்ட எண்ணங்களை உடைய வேசியர்கள், பிறருடைய சொத்துக்களும் தம்முடையதே என்று நினைப்பவர்கள் பேசும் கோப மொழிகளில் அகப்பட்டு நிற்கும் இழிவுள்ள என் செயல் இனி முற்றும் அற்றுப் போக அருள் செய்வாயாக. போரையே நினைந்திருக்கும் கோபமும் வலிமையும் கொண்ட அசுரர்கள் யுகம் முடியும் காலம் போல போருக்கு எழுந்த சமயத்தில், உலகம் முழுவதும் பயம் நீங்க மயிலின் மேலே ஏறி, திகுதிகுந் திகுந் திகுதிகு திகுதிகு தெனதெ னந்தெனந் தெனதென தெனதென திமித மிந்திமிந் திமிதிமி திமி என்று வந்த பூதங்கள் கரை கடந்து எழுந்த கடலைப் போல உள்ள ரத்தத்தை மொண்டு உண்ணும்படி போர் செய்தவனே, சேர்க்கை அன்புடன் குறப் பெண்ணான வள்ளியைத் தழுவிய முருகனே, பெருமை தங்கிய திரியம்பகபுரம்* என்னும் தலத்தில் வீற்றிருக்கும், உமா தேவி பெற்றெடுத்த கந்தனே, ஆறுமுகனே என்று உனது இரண்டு திருவடிகளையும் வணங்கி நின்று தேவர்கள் தொழுதற்குரிய பெருமாளே. 
* திரியம்பகபுரம் திருவாரூருக்கு அருகில் உள்ளது.
பாடல் 826 - சிக்கல்
ராகம் - ....; தாளம் -
தன்ன தத்த தனத்த தானன
     தன்ன தத்த தனத்த தானன
          தன்ன தத்த தனத்த தானன ...... தனதான
கன்ன லொத்த மொழிச்சொல் வேசியர்
     வன்ம னத்தை யுருக்கு லீலையர்
          கண்வெ ருட்டி விழித்த பார்வையர் ...... இதமாகக் 
கையி லுற்ற பொருட்கள் யாவையும்
     வையெ னக்கை விரிக்கும் வீணியர்
          கைகள் பற்றி யிழுத்து மார்முலை ...... தனில்வீழப் 
பின்னி விட்ட சடைக்கு ளேமலர்
     தன்னை வைத்து முடிப்பை நீயவி
          ழென்னு மற்ப குணத்த ராசையி ...... லுழலாமற் 
பெய்யு முத்தமி ழிற்ற யாபர
     என்ன முத்தர் துதிக்க வேமகிழ்
          பிஞ்ஞ கர்க்குரை செப்பு நாயக ...... அருள்தாராய் 
வன்னி யொத்த படைக்க லாதிய
     துன்னு கைக்கொ ளரக்கர் மாமுடி
          மண்ணி லற்று விழச்செய் மாதவன் ...... மருகோனே 
மன்னு பைப்பணி யுற்ற நீள்விட
     மென்ன விட்டு முடுக்கு சூரனை
          மல்லு டற்று முருட்டு மார்பற ...... அடைவாகச் 
சென்னி பற்றி யறுத்த கூரிய
     மின்னி ழைத்த திறத்த வேலவ
          செய்ய பொற்புன வெற்பு மானணை ...... மணிமார்பா 
செம்ம னத்தர் மிகுத்த மாதவர்
     நன்மை பெற்ற வுளத்தி லேமலர்
          செல்வ சிக்கல் நகர்க்குள் மேவிய ...... பெருமாளே.
கற்கண்டினைப் போல் இனிக்கும் பேச்சுக்களைப் பேசும் பொது மகளிர். கடினமான மனத்தையும் உருக்க வல்ல லீலைகளைச் செய்பவர்கள். கண்களைக் கொண்டு மயக்கும் விழிக்கின்ற பார்வையர். இனிய வழியில் பக்குவமாக கையில் உள்ள எல்லா பொருட்களையும் வைத்திடு என்று கூறி கையை விரித்து நீட்டுகின்ற பயனற்றவர்கள். (வருவோர்) கைகளைப் பிடித்து இழுத்து மார்பகங்களின் மீது விழும்படியும், பின்னி வைத்துள்ள கூந்தலிலே மலர்களை வைத்து பண முடிப்பை நீ அவிழ்ப்பாயாக என்று கூறுகின்ற அற்ப குணம் படைத்தவர்கள். இத்தகைய வேசியர்களின் ஆசையில் நான் அலைச்சல் உறாமல், சொல்லப்படும் இயல், இசை, நாடகம் என்று மூவகைப்பட்ட தமிழில் ஆசை கொண்டவனே என்று முக்தி நிலை அடைந்த பெரியோர்கள் போற்றி செய்ய மகிழ்கின்றவனே, சிவ பெருமானுக்கு உபதேசம் செய்த நாயகனே, அருள் தருவாயாக. அக்கினிக்கு ஒப்பான படைக்கலங்கள் முதலியன பொருந்தும் கைகளை உடைய அரக்கர்களின் பெரிய தலைகள் பூமியில் அற்று விழும்படி, வீரம் விளைவிக்கின்ற திருமாலின் மருகனே, பொருந்திய படத்தை உடைய பாம்பின் நச்சுப்பையில் உள்ள கொடிய விஷம் என்று சொல்லும்படி வேலினைச் செலுத்தி போரிட விரைவாக எதிர்வந்த சூரனை, (அவனது) மற் போர் செய்யும் கரடு முரடான மார்பு பிளக்கத் தக்க வகையில் அவனது தலையைப் பற்றி அறுத்த கூர்மை வாய்ந்த, மின் போல் ஒளிரும் ஆற்றல் படைத்த வேலாயுதத்தை உடையவனே, செம்மை வாய்ந்த அழகிய தினைப் புனம் உள்ள (வள்ளி) மலையில் இருந்த மான் போன்ற வள்ளி நாயகியை அணைந்த அழகிய மார்பனே, செம்மை வாய்ந்த மனம் உடைய பெரியோர்கள், பெருந்தவம் மிக்கவர் ஆகியவர்களின் நல்ல எண்ணம் கொண்ட உள்ளத்தில் விளங்கி நிற்கும் செல்வனே, சிக்கல் நகரில்* வீற்றிருக்கும் பெருமாளே. * சிக்கல் நாகப்பட்டினத்துக்கு மேற்கே 3 மைலில் உள்ளது. சிக்கல் முருகனின் பெயர் சிங்கார வேலவன்.
பாடல் 827 - சிக்கல்
ராகம் - பந்துவராளி தாளம் - ஆதி - எடுப்பு - 1/2 இடம்
தனதன தத்தத் தந்தான தானன
     தனதன தத்தத் தந்தான தானன
          தனதன தத்தத் தந்தான தானன ...... தனதானா
புலவரை ரக்ஷிக் குந்தாரு வேமது
     ரிதகுண வெற்பொக் கும்பூவை மார்முலை
          பொருபுய திக்கெட் டும்போயு லாவிய ...... புகழாளா 
பொருவரு நட்புப் பண்பான வாய்மையி
     லுலகிலு னக்கொப் புண்டோவெ னாநல
          பொருள்கள் நிரைத்துச் செம்பாக மாகிய ...... கவிபாடி 
விலையில்த மிழ்ச்சொற் குன்போலு தாரிகள்
     எவரென மெத்தக் கொண்டாடி வாழ்வெனும்
          வெறிகொளு லுத்தர்க் கென்பாடு கூறிடு ...... மிடிதீர 
மிகவரு மைப்பட் டுன்பாத தாமரை
     சரணமெ னப்பற் றும்பேதை யேன்மிசை
          விழியருள் வைத்துக் குன்றாத வாழ்வையு ...... மருள்வாயே 
இலகிய வெட்சிச் செந்தாம மார்புய
     சிலைநுதல் மைக்கட் சிந்தூர வாணுதல்
          இமயம கட்குச் சந்தான மாகிய ...... முருகோனே 
இளையகொ டிச்சிக் கும்பாக சாதன
     னுதவுமொ ருத்திக் குஞ்சீல நாயக
          எழிலியெ ழிற்பற் றுங்காய மாயவன் ...... மருகோனே 
அலர்தரு புட்பத் துண்டாகும் வாசனை
     திசைதொறு முப்பத் தெண்காதம் வீசிய
          அணிபொழி லுக்குச் சஞ்சார மாமளி ...... யிசையாலே 
அழகிய சிக்கற் சிங்கார வேலவ
     சமரிடை மெத்தப் பொங்கார மாய்வரும்
          அசுரரை வெட்டிச் சங்கார மாடிய ...... பெருமாளே.
புலவர்களை ஆதரித்துக் காப்பாற்றும் கற்பக விருட்சமே, இனிய குணம் கொண்ட, மலை போன்ற மார்புடைய, பெண்களைத் தழுவும் புயத்தினனே, எட்டுத் திசைகளிலும் சென்று பரவுகின்ற புகழை உடையவனே, உவமை கூற முடியாத நட்புத்தன்மை உள்ள சத்திய நிலையில் உலகில் உனக்கு ஒப்பானவர்கள் உண்டோ என்றெல்லாம் நல்ல பொருளமைந்த சொற்களை வரிசையாக வைத்து, செவ்விய முறையில் புனையப்பட்ட பாடல்களைப் பாடி, விலைமதிப்பற்ற தமிழ்ச் சொல்லை ஆதரிப்பதற்கு உன்னைப் போல் சிறந்த கொடையாளிகள் யார்தான் உள்ளார்கள் என்று நிரம்பப் புகழ்ந்து, தமது வாழ்வே பெரிது என்ற தீவிர உணர்ச்சி கொண்ட லோபிகளிடம் என் வருத்தங்களைப் போய் முறையிடும் வறுமை நிலை தீர, மிக்க முயற்சி எடுத்துக்கொண்டு, உனது தாமரைத் திருவடிகளை புகலிடம் என்று பற்றியுள்ள பேதையாகிய என்மீது நீ திருக்கண் அருள்வைத்து, குறைவில்லாத பேரின்ப வாழ்வைத் தந்தருள்க. விளங்கும் வெட்சிப்பூக்களால் ஆன சிவந்த மாலை அணிந்த மார்பும் புயங்களும் கொண்டவனே, வில்லைப் போன்ற புருவத்தையும், மையிட்ட கண்களையும், குங்குமம் அணிந்த ஒளிவீசும் நெற்றியையும் கொண்ட, இமயமலையின் மகளாகிய, பார்வதிக்கு மைந்தனாக வந்த முருகனே, இளையவளும், மலை நாட்டுப் பெண்ணாகிய வள்ளிக்கும், பாகசாதனன் எனப்படும் இந்திரன் பெற்ற ஒப்பற்ற தேவயானைக்கும் உரிய பரிசுத்தமான நாயகனே, மேகத்தின் அழகைக் கொண்ட கருந்திருமேனியை உடைய திருமாலின் மருமகனே, மலர்ந்த பூக்களிலிருந்து வரும் நறுமணம் எல்லாத் திசைகளிலும் முப்பத்தெட்டு காதம் வரை (380 மைல்) வீசுகின்ற, அழகிய நந்தவனங்களில் உலவும் வண்டுகளின் இசை ஒலிக்கும் அழகுபெற்று விளங்கும் சிக்கல்* என்ற தலத்தில் வீற்றிருக்கும் சிங்கார வேலவனே, போரிடையே மிகவும் சினத்தோடு வந்த அசுரர்களை வெட்டிச் சம்ஹாரம் செய்த பெருமாளே. 
* சிக்கல் நாகப்பட்டினத்துக்கு மேற்கே 3 மைலில் உள்ளது.சிக்கல் முருகனின் பெயர் சிங்கார வேலவன்.
பாடல் 828 - நாகப்பட்டினம்
ராகம் - §.¡ன்புரி தாளம் - ஆதி - தி.ரநடை - 12
தான தத்த தத்த தந்த தான தத்த தத்த தந்த
     தான தத்த தத்த தந்த ...... தனதான
ஓல மிட்டி ரைத்தெ ழுந்த வேலை வட்ட மிட்ட இந்த
     ஊர்மு கிற்ற ருக்க ளொன்று ...... மவராரென் 
றூம ரைப்ர சித்த ரென்று மூட ரைச்ச மர்த்த ரென்றும்
     ஊன ரைப்ர புக்க ளென்று ...... மறியாமற் 
கோல முத்த மிழ்ப்ர பந்த மால ருக்கு ரைத்த நந்த
     கோடி யிச்சை செப்பி வம்பி ...... லுழல்நாயேன் 
கோப மற்று மற்று மந்த மோக மற்று னைப்ப ணிந்து
     கூடு தற்கு முத்தி யென்று ...... தருவாயே 
வாலை துர்க்கை சக்தி யம்பி லோக கத்தர் பித்தர் பங்கில்
     மாது பெற்றெ டுத்து கந்த ...... சிறியோனே 
வாரி பொட்டெ ழக்ர வுஞ்சம் வீழ நெட்ட யிற்று ரந்த
     வாகை மற்பு யப்ர சண்ட ...... மயில்வீரா 
ஞால வட்ட முற்ற வுண்டு நாக மெத்தை யிற்று யின்ற
     நார ணற்க ருட்சு ரந்த ...... மருகோனே 
நாலு திக்கும் வெற்றி கொண்ட சூர பத்ம னைக்க ளைந்த
     நாக பட்டி னத்த மர்ந்த ...... பெருமாளே.
ஓலம் இடுவதுபோல அபயக்குரலுடன் பேரொலி செய்யும் அலைகடல் சூழ்ந்திருக்கும் இந்த ஊரில் மேகத்தைப் போல் கைம்மாறு கருதாமல் கொடுக்கும் பிரபுக்கள், கற்பக விருட்சம் போல் கேட்டதெல்லாம் தரும் பிரபுக்கள் யார் உள்ளார்கள் என்று தேடிப்போய், பேசவும் வாய் வராதவர்களை மகா கீர்த்தி வாய்ந்த பிரபுக்கள் என்றும், முட்டாள்களைச் சமர்த்தர்கள் என்றும் ஊனம் உள்ளவரைப் பிரபுக்கள் என்றும், என் அறிவின்மையால் அழகிய முத்தமிழ் நூல்களை மண்ணாசை பிடித்த மூடர்களுக்குச் சொல்லி, எண்ணிலாத கோடிக்கணக்கான என் விருப்பங்களைத் தெரிவித்து வீணே திரிகின்ற அடிநாயேன், கோபம் என்பதை ஒழித்து, மேலும், அந்த ஆசை என்பதனை நீத்து, உன்னைப் பணிந்து உன் திருவடியைக் கூடுதற்கு முக்திநிலை என்றைக்குத் தந்தருள்வாய்? வாலையும் (என்றும் இளையவள்), துர்க்கையும், சக்தியும், அம்பிகையும், உலகத்துக்கே தலைவர் ஆகிய பித்தராம் சிவபிரானது இடப்பாகத்தில் அமர்ந்தவளுமான தேவி பெற்றெடுத்து மகிழ்ந்த இளையோனே, கடல் வற்றிப் போக, கிரெளஞ்சமலை தூளாகி விழ, நீண்ட வேலைச் செலுத்திய, வெற்றி வாகை சூடிய, மற்போருக்குத் திண்ணிய புயத்தை உடைய பராக்ரமனே, மயில் வீரனே, பூமி மண்டலம் முழுமையும் உண்டு தன் வயிற்றிலே அடக்கியவரும், ஆதிசேஷன் என்னும் பாம்புப் படுக்கையிலே துயில் கொள்பவரும் ஆகிய நாராயணருக்கு அருள் பாலித்த மருமகனே, நான்கு திசைகளிலும் ஜயித்த சூரபத்மனை அகற்றியவனே, நாகப்பட்டினம் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 829 - நாகப்பட்டினம்
ராகம் - ....; தாளம் -
தான தந்ததன தந்ததன தந்ததன
     தான தந்ததன தந்ததன தந்ததன
          தான தந்ததன தந்ததன தந்ததன ...... தந்ததான
மார்பு ரம்பினளி னங்கிரியெ னுந்தனமொ
     டார மும்படித ரம்பொறியு டன்பணிகள்
          மாலை யொண்பவள மும்பரிம ளங்கலவை ...... தொங்கலாட 
வாள்ச ரங்கணிய லுங்குழைத ளம்பளக
     பார தொங்கலணி பெண்கள்வத னங்கள்மதி
          வாகை யென்பஇத ழுஞ்சலச மென்பகள ...... சங்குமோக 
சார மஞ்சள்புய முங்கிளிமு கங்களுகிர்
     பாளி தம்புனைது வண்டிடையொ டின்பரச
          தாழி யென்பஅல்கு லுந்துளிர ரம்பைதொடை ...... ரம்பைமாதர் 
தாள்ச தங்கைகொலு சுங்குலசி லம்புமணி
     யாடல் கொண்டமட மங்கையரு டன்கலவி
          தாக முண்டுழல்கி னுங்கழலு றுங்கழல்ம ...... றந்திடேனே 
வீர வெண்டையமு ழங்கவரி சங்குமுர
     சோடு பொன்பறைத தும்பவிதி யுஞ்சுரரும்
          வேத விஞ்சையரு டன்குமுற வெந்துகவ ...... டர்ந்தசூரன் 
வீற டங்கமுகி லுங்கமற நஞ்சுடைய
     ஆயி ரம்பகடு கொண்டவுர கன்குவடு
          மேகொ ளுந்தபல்சி ரந்தனையெ றிந்துநட ...... னங்கொள்வேலா 
நார சிங்கவடி வங்கொடுப்ர சண்டிரணி
     யோன டுங்கநட னஞ்செய்துஇ லங்கைவலி
          ராவ ணன்குலம டங்கசிலை கொண்டகரர் ...... தந்தமூல 
ஞான மங்கையமு தஞ்சொருபி யென்றனொரு
     தாய ணங்குகுற மங்கையைம ணந்தபுய
          நாகை யம்பதிய மர்ந்துவளர் நம்பர்புகழ் ...... தம்பிரானே.
வலிய மார்பு இடத்தில் தாமரை மொக்கு எனவும் மலை எனவும் சொல்லத் தக்க மார்பகத்தோடு, முத்து மாலையும் படிந்த, மேன்மையான தேமலுடன், அணி கலன்களும் மாலையாய் அணிந்த ஒளி வீசும் பவளமும் நறு மணச் சந்தனக் குழம்புடன் பூ மாலை அசைய, வாள் போல அசையும் கண் பொருந்திய (காதில் உள்ள) குண்டலங்களைத் தள்ளும் கூந்தல் பாரத்தில் பூமாலையை அணிந்துள்ள பெண்களின் முகங்கள் சந்திரனையும் வெற்றி கொண்டன என விளங்க, வாயிதழும் தாமரை இதழ் போல விளங்க, கழுத்து சங்கு போல் விளங்க, காதலை எழுப்பும் மஞ்சள் பூசப்பட்ட தோளும், கிளியின் நாசியைப் போன்ற நகங்களும், பட்டாடை அணிந்து துவட்சி அடைந்துள்ள இடையுடன் இன்பத்தைத் தரும் பாண்டம் என்று சொல்லும்படியான பெண்குறியும், தழைத்துள்ள வாழை என்னும்படியான தொடைகளும் உடைய ரம்பை என்னும் தெய்வப் பெண் போன்ற விலைமாதர்கள். காலில் உள்ள சதங்கை, கொலுசு சிறந்த சிலம்பு இவைகளைப் பூண்டு நடனத்தைச் செய்யும் அழகிய மாதர்கள் மீது கலவி தாகம் கொண்டு நான் திரிந்தாலும், போற்றப்படும் உன் திருவடிகளை மறக்க மாட்டேன். வீர வெண்டையம் என்னும் காலணி ஒலிக்க, இசையை எழுப்பும் சங்கும் முரசும் அழகிய பறையும் பேரொலி செய்ய, பிரமனும் தேவர்களும் வேதம் ஓத வல்லவருடன் கலந்து ஓசையை எழுப்ப, வெந்து அழிவதற்காக நெருங்கி வந்த சூரனின் கர்வம் ஒடுங்க, மேகமும் மிக ஒலிக்க, விஷத்தைக் கொண்ட ஆயிரம் யானைகளின் பலத்தை உடைய பாம்பாகிய ஆதி சேஷனுடைய மலை போன்ற பணாமுடிகள் வேக, அசுரர்களின் பல தலைகளை அறுத்தெறிந்து (குடைக்) கூத்து ஆடிய வேலனே, நரசிங்க வடிவத்தைக் கொண்டு கடுமை கொண்ட இரணியனை நடுங்க வைத்து நடனம் புரிந்து, இலங்கையில் வலிமை வாய்ந்த ராவணனின் கூட்டம் அடங்கி ஒழிய (கோதண்டம் என்னும்) வில்லை ஏந்திய கைகளை உடைய திருமால் பெற்ற ஞானம் படைத்த மங்கை, அமுத உருவினள், என்னுடைய தாய் ஆகிய குறப் பெண் வள்ளி நாயகியை மணந்த திருப்புயத்தை உடையவனே, நாகப்பட்டினம் என்னும் அழகிய தலத்தில் அமர்ந்து விளங்குபவனே, சிவபெருமான் போற்றும் தம்பிரானே. 
பாடல் 830 - நாகப்பட்டினம்
ராகம் - யமுனாகல்யாணி தாளம் - ஆதி
தனனா தனனா தனனா தனனா
     தனனா தனனா ...... தனதான
விழுதா தெனவே கருதா துடலை
     வினைசேர் வதுவே ...... புரிதாக 
விருதா வினிலே யுலகா யதமே
     லிடவே மடவார் ...... மயலாலே 
அழுதா கெடவே அவமா கிடநா
     ளடைவே கழியா ...... துனையோதி 
அலர்தா ளடியே னுறவாய் மருவோ
     ரழியா வரமே ...... தருவாயே 
தொழுதார் வினைவே ரடியோ டறவே
     துகள்தீர் பரமே ...... தருதேவா 
சுரர்பூபதியே கருணா லயனே
     சுகிர்தா வடியார் ...... பெருவாழ்வே 
எழுதா மறைமா முடிவே வடிவே
     லிறைவா எனையா ...... ளுடையோனே 
இறைவா எதுதா வதுதா தனையே
     இணைநா கையில்வாழ் ...... பெருமாளே.
(இறைவனருளால்) விழுகின்ற தாது (சுக்கிலம்)தான் இந்த உடல் என்று புரிந்து கொள்ளாமல், வினைகளை மேலும் மேலும் சேர்ப்பதையே விரும்புவதாக, வாழ்நாளை வீணாக்கி, (தேகமே ஆத்மா, போகமே மோட்சம் என்ற) உலக வழக்கில் புத்தி மேலிட, பெண்களின் மேல் ஆசை மயக்கம் மிகுந்து, அழுதும், கெட்டுப்போயும், கேவலமாகி வாழ்க்கை முழுவதும் கழிந்து போகாமல், உன்னைப் புகழ்ந்து துதித்து, மலர்ந்த தாமரை போன்ற உன் திருவடிகளே எனக்கு உறவாக பொருந்திய ஒப்பற்ற அழியாத வரம் நீ தந்தருள்வாயாக. தொழுகின்ற அடியார்கள்தம் வினையின் வேர் அடியோடு அற்றுப்போகும்படியாக குற்றமற்ற பரமபதத்தைத் தரும் தேவனே, தேவர்களுக்கு அரசனே, கருணைக்கு இருப்பிடமானவனே, புண்ணியனே, அடியார்களின் பெருவாழ்வே, எழுதப்படாத மறையாம் வேதத்தின் முடிவானவனே, கூரிய வேலை ஏந்திய இறைவனே, என்னை ஆட்கொண்டுள்ளவனே, இறைவனே, நீ எது தரவேண்டுமோ அதைத் தந்தருள். தனக்குத் தானே இணையாகும் நாகப்பட்டினத்தில் வீற்றிருக்கின்ற பெருமாளே. 
பாடல் 831 - எட்டிகுடி
ராகம் - ....; தாளம் -
தனனத் தனனத் தனனத் தனனத்
     தனனத் தனனத் ...... தனதான
உரமுற் றிருசெப் பெனவட் டமுமொத்
     திளகிப் புளகித் ...... திடமாயே 
உடைசுற் றுமிடைச் சுமையொக் கஅடுத்
     தமிதக் கெறுவத் ...... துடன்வீறு 
தரமொத் துபயக் களபத் தளமிக்
     கவனத் தருணத் ...... தனமீதே 
சருவிச் சருவித் தழுவித் தழுவித்
     தவமற் கவிடுத் ...... துழல்வேனோ 
அரிபுத் திரசித் தசஅக் கடவுட்
     கருமைத் திருமைத் ...... துனவேளே 
அடல்குக் குடநற் கொடிகட் டியனர்த்
     தசுரப் படையைப் ...... பொருவோனே 
பரிவுற் றவருக் கருள்வைத் தருள்வித்
     தகமுத் தமிழைப் ...... பகர்வோனே 
பழனத் தொளிர்முத் தணியெட் டிகுடிப்
     பதியிற் குமரப் ...... பெருமாளே.
மார்பில் பொருந்தி இரண்டு சிமிழ்கள் போல வட்ட வடிவு கொண்டு, குழைந்து புளகாங்கிதம் கொண்டு, வலிமை கொண்டு, ஆடை சுற்றி அணியப்படும் இடைக்குச் சுமையாக நன்கு பொருந்தி, அளவு கடந்த கர்வத்துடன் மேம்பட்டு விளங்கும் தன்மை கொண்ட, இரண்டு கலவைச் சாந்தும் செஞ்சாந்தும் நிரம்பிய அழகான, இளைய மார்பகங்கள் மீது, மிகப் பழகி தழுவித் தழுவி, தவ நிலையை வேரோடு விட்டுத் தள்ளி நான் திரியலாமோ? திருமாலுக்கு மகனான மன்மதன் என்னும் அந்தக் கடவுளுக்கு அருமையான, அழகிய மைத்துனனே*, செவ்வேளே, வலிமை வாய்ந்த சேவல் என்னும் நல்ல கொடியைக் கட்டி, துன்பம் விளைவித்த அசுர சேனையுடன் சண்டை செய்தவனே, அன்பு வைத்த அடியார்களுக்கு கருணை வைத்து திருவருளைப் பாலிக்கும் ஞான மூர்த்தியே, முத்தமிழில் தேவாரப் பாக்களை (திருஞானசம்பந்தராக அவதரித்து) அருளியவனே, வயல்களில் பிரகாசிக்கின்ற முத்துக்களைக் கொண்ட எட்டிகுடி** என்னும் பதியில் குமரப் பெருமாளே. 
* மன்மதன் திருமாலின் மகன். முருகன் திருமால் மகளாகிய வள்ளியை மணந்தவன். எனவே முருகன் மன்மதனின் மைத்துனன்.
** எட்டிகுடி நாகப்பட்டினத்துக்கு அருகே கீழ்வேளூர் ரயில் நிலையத்திற்குத் தெற்கே 7 மைல் தொலைவில் உள்ளது.
பாடல் 832 - எட்டிகுடி
ராகம் - ஆரபி தாளம் - அங்கதாளம் - 10 1/2 தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமிதக-3
தாந்த தந்தன தான தனத்தம் ...... தனதான
     தாந்த தந்தன தான தனத்தம் ...... தனதான
ஓங்கு மைம்புல னோட நினைத்தின் ...... பயர்வேனை
     ஓம்பெ றும்ப்ரண வாதி யுரைத்தெந் ...... தனையாள்வாய் 
வாங்கி வெங்கணை சூரர் குலக்கொம் ...... புகடாவி
     வாங்கி நின்றன ஏவி லுகைக்குங் ...... குமரேசா 
மூங்கி லம்புய வாச மணக்குஞ் ...... சரிமானு
     மூண்ட பைங்குற மாது மணக்குந் ...... திருமார்பா 
காங்கை யங்கறு பாசில் மனத்தன் ...... பர்கள்வாழ்வே
     காஞ்சி ரங்குடி ஆறு முகத்தெம் ...... பெருமாளே.
மிகுத்து வளரும் ஐந்து புலன்களும் (சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகியவை) என்னை இழுத்தோட யானும் அவ்வழியே ஓட நினைத்து, இன்பம் கொண்டு தளர்ச்சி அடைவேனை, ஓம் முதலிய ப்ரணவ மந்திரங்கள் அத்தனையும் எனக்கு உபதேசித்து, என்னை ஆண்டருள்வாயாக. வில்லை வளைத்து கொடிய அம்புகளை ஏவி சூரர் குல இளைஞர்கள் பாய்ந்துவர, வளைத்து நின்ற சூரர் சேனையை அம்பைச் செலுத்தியே வென்ற குமரேசனே, மூங்கிலைப் போன்று அழகிய புயங்களை உடைய, நறுமணமிக்க (யானைமகள்) தேவயானையும், உன்மேல் பக்தியும் காதலும் மூண்ட அழகிய குறப்பெண் வள்ளியும் மணந்த திருமார்பனே, மனக்கொதிப்பே இல்லாதவர்களும், பாசம், பந்தம் ஆகியவை நீங்கிய மனத்தவர்களுமான அன்பர்களின் செல்வமே, காஞ்சிரங்குடி (எட்டிக்குடி*) என்ற திருத்தலத்தில் ஆறுமுகத்தோடு அமர்ந்த எங்கள் பெருமாளே. 
* எட்டிகுடி நாகப்பட்டினத்துக்கு அருகே கீழ்வேளூர் ரயில் நிலையத்திற்குத் தெற்கே 7 மைல் தொலைவில் உள்ளது.
பாடல் 833 - எட்டிகுடி
ராகம் - ....; தாளம் -
தனதத்த தனதத்த தனதத்த தனதத்த
     தனதத்த தனதத்த ...... தனதானா
கடலொத்த விடமொத்த கணையொத்த பிணையொத்த
     கயலொத்த மலரொத்த ...... விழிமானார் 
கனசெப்பு நளினத்து முகைவெற்பை நிகர்செப்பு
     கதிர்முத்து முலைதைக்க ...... அகலாதே 
மிடலுற்ற கலவிக்கு ளுளநச்சி வளமற்று
     மிடிபட்டு மடிபட்டு ...... மனமாழ்கி 
மெலிவுற்ற தமியற்கு னிருபத்ம சரணத்தை
     மிகநட்பொ டருள்தற்கு ...... வருவாயே 
தடையற்ற கணைவிட்டு மணிவஜ்ர முடிபெற்ற
     தலைபத்து டையதுட்ட ...... னுயிர்போகச் 
சலசத்து மயிலுற்ற சிறைவிட்டு வருவெற்றி
     தருசக்ர தரனுக்கு ...... மருகோனே 
திடமுற்ற கனகப்பொ துவில்நட்பு டனடித்த
     சிவனுக்கு விழியொத்த ...... புதல்வோனே 
செழுநத்து மிழுமுத்து வயலுக்குள் நிறைபெற்ற
     திகழெட்டி குடியுற்ற ...... பெருமாளே.
கடல், விஷம், அம்பு, மான், கயல் மீன், தாமரை மலர் ஆகியவற்றை ஒத்ததாகிய கண்களை உடைய விலைமாதர்களின் பொன் சிமிழ், தாமரையின் மொட்டு, மலை ஆகியவைகளுக்குச் சமம் என்று சொல்லப்படுவதும், ஒளி கொண்ட முத்து மாலை அணிந்ததுமான மார்பகம் மனத்தில் அழுந்திப் பதிய, அந்த எண்ணம் மனதை விட்டு அகலாமல் வலிமை வாய்ந்த புணர்ச்சி இன்பத்தை உள்ளம் விரும்பி, செல்வம் இழந்து வறுமை அடைந்து சோம்பல் மிகுந்து, மனம் மயங்கி அழிந்து மெலிவு அடைந்த தனியனாகிய எனக்கு உன்னுடைய இரண்டு திருவடிக் கமலங்களை மிக அன்புடன் அருள்வதற்கு வருவாயாக. தடையில்லாத அம்பைச் செலுத்தி, மணி, வைரம் இவை பதிக்கப்பட்ட கி¡£டத்தைக் கொண்ட பத்து தலைகளை உடைய துஷ்டனாகிய ராவணனுடைய உயிரைப் போகச் செய்து, தாமரையில் வீற்றிருக்கும் மயில் போன்ற சீதையை அவள் இருந்த சிறையினின்றும் விடுவித்து வெற்றியைக் கொண்டவனும் (ஆகிய ராமனான) சக்ராயுதம் ஏந்திய திருமாலுக்கு மருகனே, மெய்ம்மை வாய்ந்த தில்லைக் கனக சபையில் (பதஞ்சலி, வியாக்ரபாதர் மீதுள்ள) நட்பின் காரணமாக நடனம் செய்த சிவபெருமானுக்கு கண் போன்ற இனிய மகனே, செழிப்புள்ள சங்கு ஈன்ற முத்துக்கள் வயலில் நிறைந்து விளங்கும் எட்டிகுடியில்* வீற்றிருக்கும் பெருமாளே. 
* எட்டிகுடி நாகப்பட்டினத்துக்கு அருகே கீழ்வேளூர் ரயில் நிலையத்திற்குத் தெற்கே 7 மைல் தொலைவில் உள்ளது.
பாடல் 834 - எட்டிகுடி
ராகம் - ....; தாளம் -
தத்தன தத்தன தானா தானா
     தத்தன தத்தன தானா தானா
          தத்தன தத்தன தானா தானா ...... தனதான
மைக்குழ லொத்தவை நீலோ மாலோ
     அக்கணி ணைக்கிணை சேலோ வேலோ
          மற்றவர் சொற்றெளி பாலோ பாகோ ...... வடிதேனோ 
வத்திர மெய்ச்சசி தானோ நாணா
     குத்துமு லைக்கிள நீரோ மேரோ
          வைப்பதி டைக்கிணை நூலோ மேலோ ...... வெனமாதர் 
தக்கவு றுப்பினுள் மாலே மேலாய்
     லச்சைய றப்புணர் வாதே காதே
          சைச்சையெ னத்திரி நாயே னோயா ...... தலையாதே 
தற்பொறி வைத்தருள் பாராய் தாராய்
     தற்சமை யத்தக லாவே னாதா
          தத்தும யிற்பரி மீதே நீதான் ...... வருவாயே 
முக்கணர் மெச்சிய பாலா சீலா
     சித்தசன் மைத்துன வேளே தோளார்
          மொய்த்தம ணத்தது ழாயோன் மாயோன் ...... மருகோனே 
முத்தமிழ் வித்வவி நோதா கீதா
     மற்றவ ரொப்பில ரூபா தீபா
          முத்திகொ டுத்தடி யார்மேல் மாமால் ...... முருகோனே 
இக்குநி ரைத்தவி ராலு¡ர் சேலூர்
     செய்ப்பழ நிப்பதி யூரா வாரூர்
          மிக்கவி டைக்கழி வேளூர் தாரூர் ...... வயலூரா 
எச்சுரு திக்குளு நீயே தாயே
     சுத்தவி றற்றிறல் வீரா தீரா
          எட்டிகு டிப்பதி வேலா மேலோர் ...... பெருமாளே.
கரிய கூந்தலுக்கு ஒப்பானவை கருங் குவளையோ, கருமையோ? அந்தக் கண்கள் இரண்டுக்கும் ஒப்பானவை சேல் மீன்களோ, வேலோ? பின்னர் அந்தப் பெண்களின் சொல்லுக்கு இணை தெளிந்த பாலோ, வெல்லமோ, வடித்த தேனோ? முகம் உண்மையாகவே சந்திரன் தானோ? வெட்குதல் இல்லாமல் எழுந்த குத்தும் மார்பகத்துக்கு ஒப்பானவை இளநீரோ, மேரு மலையோ? இடைக்கு இணையாகக் கூறப்படுவது (நுண்ணியதான) நூலோ, அதை விட மேலானது ஒன்றோ என்றெல்லாம் மாதர்களுடைய மனத்தைக் கவர வல்ல அவயவங்களுள் காம மயக்கம் மிக்கவனாய், கூச்சம் இல்லாமல் சேர்கின்ற போட்டிச் சண்டையில் நுழையாமல், சீச் சீ என்று (பிறர் சொல்லும்படி) திரிகின்ற நாயேன் எப்போதும் அலையாமல், உனது முத்திரையை (வேல்-மயில் அடையாளத்தை) என் மேல் பொறித்து வைத்து கண் பார்த்து அருளுக. சிவசமயத்தனே, ஒளி வேல் ஏந்தும் நாதனே, (குதிரை போலத்) தாவிச் செல்லும் மயில் வாகனத்தின் மேல் நீதான் வந்து அருள வேண்டும். மூன்று கண்களை உடைய சிவபெருமான் மெச்சிப் புகழும் பாலனே, தூயவனே, மன்மதனின் மைத்துனனான செவ்வேளே, தோள்கள் நிரம்ப மொய்த்துள்ள, நறுமணம் உள்ள, துளசி மாலை அணிந்தவனாகிய திருமாலின் மருகனே, முத்தமிழ்ப் புலமை வாய்ந்த விநோதனே, இசை ஞானியே, பிறர் எவரும் உனக்கு ஒப்பில்லாத உருவத்தனே, (ஞான) ஒளி விளக்கே, முக்தியைத் தந்தருளி அடியார்கள் மீது மிக்க ஆசை கொள்ளும் முருகனே, கரும்பு வரிசையாக உள்ள விராலியூர், சேல் மீன்கள் நீந்தி ஊடுருவும் வயல்கள் உள்ள பழனி ஊரனே, திருவாரூர், சிறப்பு வாய்ந்த திருவிடைக்கழி, புள்ளிருக்கும் வேளூர் (ஆகிய வைதீஸ்வரன் கோவில்), பூ அரும்புகள் அடர்ந்து நிறைந்துள்ள வயலூர் என்னும் தலங்களில் வீற்றிருப்பவனே, எத்தகைய வேதத்துக்குள்ளும் நீயே தாய் போல் மூலப் பொருளாய் நிற்கின்றவனே, பரிசுத்தமான வலிமையும், திறமையும் வாய்ந்த வீரனே, தீரனே, எட்டிகுடியில்* வீற்றிருக்கும் வேலனே, தேவர்களின் பெருமாளே. 
* நாகப்பட்டினத்துக்கு அருகில் உள்ளது.
பாடல் 835 - எண்கண்
ராகம் - ரஞ்சனி தாளம் - ஆதி - தி.ர நடை - 12
தந்த தந்த தந்த தந்த, தந்த தந்த தந்த தந்த
     தந்த தந்த தந்த தந்த ...... தனதான
சந்த னந்தி மிர்ந்த ணைந்து குங்கு மங்க டம்பி லங்கு
     சண்ப கஞ்செ றிந்தி லங்கு ...... திரடோளுந் 
தண்டை யஞ்சி லம்ப லம்ப வெண்டை யஞ்ச லன்ச லென்று
     சஞ்சி தஞ்ச தங்கை கொஞ்ச ...... மயிலேறித் 
திந்தி மிந்தி மிந்தி மிந்தி தந்த னந்த னந்த னென்று
     சென்ற சைந்து கந்து வந்து ...... க்ருபையோடே 
சிந்தை யங்கு லம்பு குந்து சந்த தம்பு கழ்ந்து ணர்ந்து
     செம்ப தம்ப ணிந்தி ரென்று ...... மொழிவாயே 
அந்த மந்தி கொண்டி லங்கை வெந்த ழிந்தி டும்ப கண்டன்
     அங்க முங்கு லைந்த ரங்கொள் ...... பொடியாக 
அம்ப கும்ப னுங்க லங்க வெஞ்சி னம்பு ரிந்து நின்று
     அம்பு கொண்டு வென்ற கொண்டல் ...... மருகோனே 
இந்து வுங்க ரந்தை தும்பை கொன்றை யுஞ்ச லம்பு னைந்தி
     டும்ப ரன்ற னன்பில் வந்த ...... குமரேசா 
இந்தி ரன்ப தம்பெ றண்டர் தம்ப யங்க டிந்த பின்பு
     எண்க ணங்க மர்ந்தி ருந்த ...... பெருமாளே.
சந்தனத்தை நிரம்பப் பூசிக் கலந்து, குங்குமமும், கடப்பம்பூவும், விளங்கும் சண்பக மலரும், இவையாவும் நெருங்கி மிளிரும் திரண்ட புயங்களும் துலங்க, தண்டையும், அழகிய சிலம்பும் ஒலி செய்ய, வீரக் காலணி சலன்சல் என்று ஒலிக்க உருவம் இனிதாக அமைந்த கிண்கிணியானது கொஞ்சுவதுபோல ஒலிக்க, மயில் வாகனத்தில் ஏறி (அதே ஓசை) என்ற தாளத்தில் ஆடி அசைந்து ஆனந்தத்துடன் வந்து, அருள் கூர்ந்து என் மனக் கோயிலுக்குள் புகுந்து, எப்போதும் புகழ்ந்து அறிந்து செவ்விய பதங்களை பணிந்து இருப்பாய் என்று என்னிடம் அறிவுரை கூறுவாயாக. அந்தப் புகழ் பெற்ற குரங்காம் அனுமனைக் கொண்டு இலங்கை எரியுண்டு அழியவும், கொடுஞ் செயலையே கொண்ட ராவணன் தனது உடலும் அழிபட்டு ரம்பத்தால் ராவினது போல பொடிப்பொடியாகத் தூளாகவும், அம்பு முதலிய பாணங்களைக் கொண்ட கும்பகர்ணனும் உள்ளம் கலங்குமாறு மிக்க கோபத்துடன் போர்க்களத்தில் நின்று அம்புகளை ஏவி வென்ற மேகவர்ணன் ராமனின் மருகனே, பிறையும், திருநீற்றுப் பச்சை, தும்பைப்பூ, கொன்றை, கங்கை இவற்றை அணியும் சிவபெருமான் தேவர்கள் பால்வைத்த அன்பினால் தோன்றிய குமரேசனே, தேவேந்திரன் தன் பதவியை மீண்டும் பெறும்படியாக, தேவர்களுடைய பயத்தைத் தீர்த்த பின்னர் எண்கண்* என்ற தலத்தில் வந்து வீற்றிருந்த பெருமாளே. 
* எண்கண் தலம் திருவாரூரிலிருந்து நீடாமங்கலம் செல்லும் ரயில் பாதையில் திருமதிக்குன்றம் ரயில் நிலையத்துக்கு அருகே உள்ளது.
பாடல் 836 - திருக்குடவாயில்
ராகம் - ....; தாளம் -
தனனா தத்தன தனனா தத்தன
     தனனா தத்தன ...... தனதான
அயிலார் மைக்கடு விழியார் மட்டைகள்
     அயலார் நத்திடு ...... விலைமாதர் 
அணைமீ திற்றுயில் பொழுதே தெட்டிக
     ளவரே வற்செய்து ...... தமியேனும் 
மயலா கித்திரி வதுதா னற்றிட
     மலமா யைக்குண ...... மதுமாற 
மறையால் மிக்கருள் பெறவே யற்புத
     மதுமா லைப்பத ...... மருள்வாயே 
கயிலா யப்பதி யுடையா ருக்கொரு
     பொருளே கட்டளை ...... யிடுவோனே 
கடலோ டிப்புகு முதுசூர் பொட்டெழ
     கதிர் வேல் விட்டிடு ...... திறலோனே 
குயிலா லித்திடு பொழிலே சுற்றிய
     குடவா யிற்பதி ...... யுறைவோனே 
குறமா தைப்புணர் சதுரா வித்தக
     குறையா மெய்த்தவர் ...... பெருமாளே.
வேல் போன்ற, மை பூசிய, விஷம் கொண்ட கண்களை உடையவர்கள், பயனற்றவர்கள், பக்கத்தில் வருபவர்கள் விரும்புகின்ற வேசிகள், படுக்கையில் தூங்கும் பொழுதிலேயே வஞ்சிப்பவர்கள், அவர்கள் ஏவின வேலைகளைச் செய்து தன்னந்தனியனான அடியேனும் மயக்கம் கொண்டவனாகத் திரிகின்ற செய்கை ஒழிந்து போக, ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களால் ஏற்படும் தீய குணம் ஒழிந்து போக, வேதங்களை நான் ஓதி ஓதி, நின் திருவருளைப் பெறுமாறு, அற்புதமான தேன் நிரம்பிய மாலைகள் அணியப்பட்ட திருவடியைத் தந்து அருளுக. கயிலை மலையை உடையவராகிய சிவபெருமானுக்கு ஒப்பற்ற பிரணவப் பொருளை மேல் நிலையில் நின்று உபதேசித்தவனே, கடலில் ஓடிப் புகுந்த பழைய சூரன் அழிபட, ஒளி பொருந்திய வேலை விட்ட பராக்கிரமசாலியே, குயில்கள் கூவுகின்ற சோலைகள் சூழ்ந்துள்ள குடவாயில்* என்னும் நகரில் உறைபவனே, குறப் பெண்ணாகிய வள்ளியை மணம் செய்த வல்லமை உடையவனே, ஞான மூர்த்தியே, குறைவுபடாத உண்மைத் தவ நிலையை உடையார் தம் பெருமாளே. 
* திருக்குடவாயில் திருவாரூரிலிருந்து நீடாமங்கலம் போகும் வழியில் குறடாச்சேரி ரயில் நிலையத்தின் வடக்கே 8 மைலில் உள்ளது.
பாடல் 837 - திருக்குடவாயில்
ராகம் - துர்கா தாளம் - அங்கதாளம் - 7 1/2 தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தனன தானன தானன தானன
     தனன தானன தானன தானன
          தனன தானன தானன தானன ...... தனதான
சுருதி யாயிய லாயியல் நீடிய
     தொகுதி யாய்வெகு வாய்வெகு பாஷைகொள்
          தொடர்பு மாயடி யாய்நடு வாய்மிகு ...... துணையாய்மேல் 
துறவு மாயற மாய்நெறி யாய்மிகு
     விரிவு மாய்விளை வாயருள் ஞானிகள்
          சுகமு மாய்முகி லாய்மழை யாயெழு ...... சுடர்வீசும் 
பருதி யாய்மதி யாய்நிறை தாரகை
     பலவு மாய்வெளி யாயொளி யாயெழு
          பகலி ராவிலை யாய்நிலை யாய்மிகு ...... பரமாகும் 
பரம மாயையி னேர்மையை யாவரு
     மறியொ ணாததை நீகுரு வாயிது
          பகரு மாறுசெய் தாய்முதல் நாளுறு ...... பயனோதான் 
கருது மாறிரு தோள்மயில் வேலிவை
     கருதொ ணாவகை யோரர சாய்வரு
          கவுணி யோர்குல வேதிய னாயுமை ...... கனபாரக் 
களப பூண்முலை யூறிய பாலுணு
     மதலை யாய்மிகு பாடலின் மீறிய
          கவிஞ னாய்விளை யாடிடம் வாதிகள் ...... கழுவேறக் 
குருதி யாறெழ வீதியெ லாமலர்
     நிறைவ தாய்விட நீறிட வேசெய்து
          கொடிய மாறன்மெய் கூனிமி ராமுனை ...... குலையாவான் 
குடிபு கீரென மாமது ராபுரி
     யியலை யாரண வூரென நேர்செய்து
          குடசை மாநகர் வாழ்வுற மேவிய ...... பெருமாளே.
வேதமாய், இயல் தமிழாய், அத்தகைய இயற்றமிழின் மிக்குள்ளதான பகுதியாய், பலவுமாய், பல மொழிகளில் கொள்ளப்பட்ட சம்பந்தமுமாய், அடிப்படையாய், நடுப்பாகமாய், மிக்க துணையாய், பின்னும் அனைத்தையும் துறந்த நிலையதாய், தருமமாய், நல்லொழுக்க வழியாய், மிகுந்த விரிவு உடையதாய், விளைவுப் பொருளாய், அருள் நிறைந்த ஞானிகள் அனுபவிக்கும் சுகப் பொருளாய், மேகமாய், மழையாய், ஏழு வகைச் சுடர்க் கிரணங்களை வீசும் சூரியனாய், சந்திரனாய், நிறைந்துள்ள நட்சத்திரங்கள் பலவுமாய், ஆகாய வெளியாய் ஜோதியாய், உண்டாகின்ற பகலும் இரவும் இல்லாததாய், நிலைத்துள்ளதாய், மிக்க மேலான பொருளான பெரிய மாயையின் உண்மைத் தத்துவத்தை, எவரும் அறிய முடியாததை, நீ குருவாக வந்து (அதை உலகுக்கு) எடுத்து ஓதுமாறு (எனக்குத்) திருவருள் புரிந்தாய்*. (இந்த பாக்கியம்) நான் முற் பிறப்பில் செய்த தவத்தின் பயன் தானோ? யாவராலும் கருதிப் போற்றப்படும் பன்னிரு தோள்கள், மயில், வேல் இவற்றை எவரும் கண்டு கருதாத வகையில் (மறைத்து)**, (சீகாழிப்பதியின்) அரசாக வந்த கவுணிய குல அந்தணனாகி, பார்வதியின் மிக்க பாரமான, கலவைச் சாந்து அணிந்த மார்பில் சுரந்த பாலைப் பருகிய குழந்தையாகி (திருஞானசம்பந்தனாகி), மிக்க பாடல்கள் (தேவாரம்) பாடுவதில் மேம்பட்ட கவித் திறன் பெற்றவனாய் திருவிளையாடல்கள் செய்திருந்த சமயத்தில், வீண் வாதத்துக்கு வந்த (சமணர்கள்) கழுவில் ஏறவும், அவர்களுடைய இரத்தம் ஆறாகப் பெருகவும், தெருக்களில் எல்லாம் பூ மாரி நிரம்பிடவும், திரு நீற்றை யாவரும் இடும்படிச் செய்து, முன்பு கொடியவனாக இருந்த மாறனாகிய பாண்டிய மன்னனின் கூன்பட்ட உடல் நிமிர்ந்து விளங்கவும், (சமண்) பகையை அழித்து, பொன்னுலகில் உங்கள் ஊருக்குக் குடி புகுவீர்கள் என சிறந்த மதுரையின் முன்னிருந்த சமண நிலையை மாற்றி வேதபுரி என்னும்படியாக அந்த ஊரை நேர்மையான செந்நெறியில் சேர்ப்பித்து, திருக்குடவாயில்*** என்னும் பெரிய நகரில் வாழ்வு கொண்டு வீற்றிருக்கும் பெருமாளே. 
* அருணகிரி நாதர் முருகவேளிடம் தான் பெற்ற உபதேசத்தின் பெருமையை நினைத்து வியக்கின்றார்.
** முருகவேள் தமது பன்னிரு தோள், மயில், வேல் இவைகளை மறைத்து ஞான சம்பந்தராக வந்தார் என்பது பொருள். 
*** திருக்குடவாயில் திருவாரூரிலிருந்து நீடாமங்கலம் போகும் வழியில் குறடாச்சேரி ரயில் நிலையத்தின் வடக்கே 8 மைலில் உள்ளது.
பாடல் 838 - வலிவலம்
ராகம் - ....; தாளம் -
தனத்த தானன தனதன தனதன
     தனத்த தானன தனதன தனதன
          தனத்த தானன தனதன தனதன ...... தனதான
தொடுத்த நாள்முதல் மருவிய இளைஞனும்
     இருக்க வேறொரு பெயர்தம திடமது
          துவட்சி யேபெறி லவருடன் மருவிடு ...... பொதுமாதர் 
துவக்கி லேயடி படநறு மலரயன்
     விதித்த தோதக வினையுறு தகவது
          துறக்க நீறிட அரகர வெனவுள ...... மமையாதே 
அடுத்த பேர்மனை துணைவியர் தமர்பொருள்
     பெருத்த வாழ்விது சதமென மகிழ்வுறு
          மசட்ட னாதுலன் அவமது தவிரநி ...... னடியாரோ 
டமர்த்தி மாமலர் கொடுவழி படஎனை
     யிருத்தி யேபர கதிபெற மயில்மிசை
          யரத்த மாமணி யணிகழ லிணைதொழ ...... அருள்தாராய் 
எடுத்த வேல்பிழை புகலரி தெனஎதிர்
     விடுத்து ராவணன் மணிமுடி துணிபட
          எதிர்த்து மோர்கணை விடல்தெரி கரதலன் ...... மருகோனே 
எருக்கு மாலிகை குவளையி னறுமலர்
     கடுக்கை மாலிகை பகிரதி சிறுபிறை
          யெலுப்பு மாலிகை புனைசடி லவனருள் ...... புதல்வோனே 
வடுத்த மாவென நிலைபெறு நிருதனை
     அடக்க ஏழ்கட லெழுவரை துகளெழ
          வடித்த வேல்விடு கரதல ம்ருகமத ...... புயவேளே 
வனத்தில் வாழ்குற மகள்முலை முழுகிய
     கடப்ப மாலிகை யணிபுய அமரர்கள்
          மதித்த சேவக வலிவல நகருறை ...... பெருமாளே.
முதலிலிருந்தே பழக்கப்பட்ட ஒரு இளைஞன் இருக்கவும், வேறொருவர் இடத்தில் சமயம் கிடைக்கும்போது காம ஒழுக்கத்தில் ஈடுபட்டுச் சேரும் பொது மகளிர்களின் சிக்கலில் அகப்படும்படியாக, தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமன் விதித்த துக்கம் தரும் தந்திரமான செயல்களால் நேரும் தீய ஒழுக்கத்தை ஒழிக்கவும், திரு நீற்றை இடவும், அரகர என்று கூறவும் என் உள்ளம் பொருந்தாதோ? உற்றார்களும், மனைவி, சகோதரிகளும், சுற்றத்தாரும், செல்வமும் (இவைகள் கூடிய) பெரிய வாழ்வாகிய இதனையே நிலைத்திருப்பது என்று, எனக்குள்ளேயே மகிழ்கின்ற முட்டாள், வறிஞன் (ஆகிய எனது) வீணான வாழ்க்கை ஒழிய, உனது அடியார்களுடன் ஒருவனாகச் சேர்த்து, நல்ல மலர்களைக் கொண்டு உன்னை வழிபட, என்னைத் தவ நிலையில் இருக்கச் செய்து, மேலான கதியை நான் அடைய, மயிலின் மீது ஏறி, சிவந்த இரத்தினங்கள் பொருந்திய, வீரக் கழல்கள் அணிந்த உனது திருவடிகளைத் தொழும்படியாக அருள் புரிவாயாக. நீ எடுத்துச் செலுத்திய வேலாயுதம் குறி தவறுதல் இல்லை என்பது போல, எதிரே செலுத்தி ராவணனுடைய இரத்தின முடிகள் சிதறுமாறு எதிர்த்தும், ஒப்பற்ற அம்பைச் செலுத்தவும் வல்ல திருக்கரத்தை உடைய ராமனின் (திருமாலின்) மருகனே, வெள்ளெருக்கு மாலை, கழுநீரின் வாசனை உள்ள மலர், கொன்றை மாலை, கங்கை ஆறு, இளம்பிறை, எலும்பு மாலை (இவற்றை எல்லாம்) அணிந்த சடையை உடைய சிவபெருமானின் மகனே, பிஞ்சு விட்ட மாவடு வெளியே தோன்றும்படி அமைந்த (மாமரமாக) நிலை பெற்று நின்ற சூரனை அடக்கவும், ஏழு கடல்களும் வற்ற, ஏழு மலைகளும் பொடியாக, கூரிய வேலாயுதத்தைச் செலுத்திய திருக்கரத்தை உடையவனே, கஸ்தூரி அணிந்த திருப்புயங்களை உடையவனே, காட்டில் வசிக்கின்ற குறப் பெண்ணாகிய வள்ளியின் மார்பிலே முழுகிய கடப்ப மாலையை அணிந்த திருப்புயனே, தேவர்கள் மதிக்கின்ற வலிமையுள்ளவனே, வலிவலம்* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* வலிவலம் திருவாரூருக்கு அருகில் உள்ளது.
பாடல் 839 - வேதாரணியம்
ராகம் - மோ.னம் தாளம் - சது.ர .ம்பை - 7
தானன தத்தத் தந்தன தந்தன ...... தனதான
சூழும்வி னைக்கட் டுன்பநெ டும்பிணி ...... கழிகாமஞ் 
சோரமி தற்குச் சிந்தைநி னைந்துறு ...... துணையாதே 
ஏழையெ னித்துக் கங்களு டன்தின ...... முழல்வேனோ 
ஏதம கற்றிச் செம்பத சிந்தனை ...... தருவாயே 
ஆழிய டைத்துத் தங்கையி லங்கையை ...... யெழுநாளே 
ஆண்மைசெ லுத்திக் கொண்டக ரும்புயல் ...... மருகோனே 
வேழமு கற்கு தம்பியெ னுந்திரு ...... முருகோனே 
வேதவ னத்திற் சங்கரர் தந்தருள் ...... பெருமாளே.
என்னைச் சூழ்ந்த தீவினையின் காரணமாக ஏற்படும் நீண்ட நோய், மிகுந்த காமம், களவு ஆகியவற்றையே மனத்தில் நினைவு கொண்டிருந்தால், எனக்கு வேறு உற்ற துணை யாது? ஏழையேன் ஆகிய யான் இத்தனை துக்கங்களுடன் நாள்தோறும் அலைச்சல் உறுவேனோ? இந்தக் குற்றத்தினை நீக்கி உன் செம்மையான பாதங்களை சிந்திக்கும் எண்ணத்தைத் தந்தருள்வாயாக. சமுத்திரத்தை அணைகட்டி அடைத்து ஏழு நாளிலே இலங்கையின் மீது தனது ஆண்மையைச் செலுத்தி போரிட்டு தன் கையில் வசமாக்கிய கரிய மேக வண்ணத்து அண்ணல் இராமனின் மருமகனே, யானைமுகத்துக் கணபதியின் தம்பி எனப்படும் திருமுருகனே, வேதாரணியத்தில்* அமர்ந்த சிவபிரான் தந்தருளிய பெருமாளே. 
* வேதாரணியம் திருத்துறைப்பூண்டி சந்திப்பிலிருந்து 20 மைல் தூரத்தில் உள்ளது.
பாடல் 840 - வேதாரணியம்
ராகம் - ....; தாளம் -
தான தனத்தன தந்த தான தனத்தன தந்த
     தான தனத்தன தந்த ...... தனதான
சேலை யுடுத்துந டந்து மாலை யவிழ்த்துமு டிந்து
     சீத வரிக்குழல் கிண்டி ...... யளிமூசத் 
தேனி லினிக்கமொ ழிந்து காமு கரைச்சிறை கொண்டு
     தேச மனைத்தையும் வென்ற ...... விழிமானார் 
மாலை மயக்கில்வி ழுந்து காம கலைக்குளு ளைந்து
     மாலி லகப்பட நொந்து ...... திரிவேனோ 
வால ரவிக்கிர ணங்க ளாமென வுற்றப தங்கள்
     மாயை தொலைத்திட வுன்ற ...... னருள்தாராய் 
பாலை வனத்தில்ந டந்து நீல அரக்கியை வென்று
     பார மலைக்குள கன்று ...... கணையாலேழ் 
பார மரத்திரள் மங்க வாலி யுரத்தையி டந்து
     பால்வ ருணத்தலை வன்சொல் ...... வழியாலே 
வேலை யடைத்துவ ரங்கள் சாடி யரக்கரி லங்கை
     வீட ணருக்கருள் கொண்டல் ...... மருகோனே 
மேவு திருத்தணி செந்தில் நீள்பழ நிக்குளு கந்து
     வேத வனத்தில மர்ந்த ...... பெருமாளே.
சேலையை உடுத்து ஒயிலாக நடந்தும், (கூந்தலிலுள்ள) மாலையை அவிழ்த்து முடிந்தும், குளிர்ந்த, நன்கு வாரிவிடப்பட்ட கூந்தலை நெருங்கி வண்டுகள் மொய்க்கவும், தேனைப் போல் இனிக்கும் பேச்சுக்களைப் பேசியும், காமப் பித்து உடையாரை தம் வசப் படுத்தியும், இங்ஙனம் நாடு முழுமையும் வெற்றி கொள்ளும் கண்களை உடைய வேசியர்களின் இருண்ட மயக்கத்தில் விழுந்து, காம நூல்களைப் படித்து வருந்தி மோக மயக்கத்தில் அகப்பட்டு மனம் நொந்து திரிவேனோ? இளஞ் சூரியனுடைய கிரணங்கள் என்று சொல்லும்படி விளங்கும் உனது திருவடிகள் என்னுடைய மயக்க அறிவைத் தொலைக்கும்படி உன்னுடைய திருவருளைத் தந்து அருளுக. பாலைவனத்தில் நடந்து, கரிய நிறம் கொண்ட அரக்கி தாடகையை வதைத்து வென்று, பெரிய மலையாகிய சித்ரகூட பர்வதத்தினின்று நீங்கி அப்பால் சென்று, தன் அம்பு கொண்டு ஏழு பெரிய மராமரக் கூட்டத்தை அழித்து, வாலியினுடைய மார்பைப் பிளந்து, அப்பால் சென்று வருண ராஜன் சொன்னபடியே கடலில் அணை கட்டி, (அரக்கர்கள் வாழ்ந்திருந்த) சூழல்களை அழிவு செய்து, இலங்கை அரசாட்சியை விபீஷணருக்குக் கொடுத்த மேக நிறமுடைய ராமனாகிய திருமாலின் மருகனே, விரும்பத் தக்க திருத்தணிகை, திருச்செந்தூர், பெரிய தலமாகிய பழநி ஆகிய இந்த மூன்று இடங்களிலும் பொருந்தி, வேதாரணியத்தில்* வீற்றிருக்கும் பெருமாளே. 
* வேதாரணியம் திருத்துறைப்பூண்டி ரயில் சந்திப்பிலிருந்து 20 மைல் தூரத்தில் உள்ளது.
பாடல் 841 - வேதாரணியம்
ராகம் - ....; தாளம் -
தானன தத்த தனந்த தானன தத்த தனந்த
     தானன தத்த தனந்த ...... தனதான
நூலினை யொத்த மருங்குல் தேரினை யொத்த நிதம்பம்
     நூபுர மொய்த்த பதங்கள் ...... இவையாலும் 
நூறிசை பெற்ற பதங்கொள் மேருவை யொத்த தனங்கள்
     நூல்வல்ம லர்ப்பொ ருதுண்டம் ...... அவையாலும் 
சேலினை யொத்தி டுகண்க ளாலும ழைத்தி டுபெண்கள்
     தேனிதழ் பற்று மொரின்ப ...... வலைமூழ்கிச் 
சீலம னைத்து மொழிந்து காமவி தத்தி லழுந்தி
     தேறுத வத்தை யிழந்து ...... திரிவேனோ 
வாலஇ ளப்பி றைதும்பை யாறுக டுக்கை கரந்தை
     வாசுகி யைப்பு னைநம்பர் ...... தருசேயே 
மாவலி யைச்சி றைமண்ட ஓரடி யொட்டி யளந்து
     வாளிப ரப்பி யிலங்கை ...... யரசானோன் 
மேல்முடி பத்து மரிந்து தோளிரு பத்து மரிந்து
     வீரமி குத்த முகுந்தன் ...... மருகோனே 
மேவுதி ருத்த ணிசெந்தில் நீள்பழ நிக்கு ளுகந்து
     வேதவ னத்தி லமர்ந்த ...... பெருமாளே.
நூல் போன்று நுண்ணிய இடை, தேருக்கு ஒப்பான பெண்குறித்தலம், சிலம்பு அணிந்த பாதங்கள் இவைகளாலும், நூல்களால் திசைகளில் புகழ் பெற்ற தகுதி வாய்ந்த மேரு மலையைப் போன்ற மார்பகங்கள், தாமரை ஒத்த முகம் அவைகளாலும், சேல் மீனை ஒத்திடும் கண்களாலும் (ஆடவர்களை) அழைக்கின்ற விலைமாதர்களின் தேன் போல் இனிக்கும் வாயிதழைப் பற்றி அனுபவிக்கின்ற ஒரு இன்ப வலையில் (நான்) மூழ்கி என்னுடைய ஆசாரங்கள் அனைத்தையும் ஒழியவிட்டு காம லீலைகளில் அழுந்தியவனாய், தேர்ந்து அடையத் தகும் தவ நிலையை இழந்து அலைச்சல் உறுவேனோ? பால இளம் பிறைச் சந்திரன், தும்பைப்பூ, கங்கை நதி, கொன்றை, திருநீற்றுப் பச்சை, வாசுகி என்னும் பாம்பு இவைகளைப் புனைந்த சிவபெருமான் பெற்ற குழந்தையே, மகாபலிச் சக்கரவர்த்தி சிறையில் ஒடுங்க ஓர் அடியால் பேசிய பேச்சின் படி அளவிட்டும், அம்பைச் செலுத்தி இலங்கை அரசான ராவணனின் பத்துத் தலைகளையும் அரிந்தும் இருபது தோள்களையும் அரிந்தும் வீரம் மிக்கு நின்ற திருமாலின் மருகனே, விரும்பத் தக்கத் திருத்தணி, திருச் செந்தூர், பெரிய பழனி இம்மூன்று தலங்களிலும் இன்புற்று இருந்து, வேதாரணியத்தில்* வீற்றிருக்கும் பெருமாளே. 
* வேதாரணியம் திருத்துறைப்பூண்டி ரயில் சந்திப்பிலிருந்து 20 மைல் தூரத்தில் உள்ளது.
பாடல் 842 - கோடி - குழகர் கோயில்
ராகம் - ....; தாளம் -
தானதன தானதன தானதன தானதன
     தானதன தானதன ...... தனதான
நீலமுகி லானகுழ லானமட வார்கள்தன
     நேயமதி லேதினமு ...... முழலாமல் 
நீடுபுவி யாசைபொரு ளாசைமரு ளாகியலை
     நீரிலுழல் மீனதென ...... முயலாமற் 
காலனது நாவரவ வாயிலிடு தேரையென
     காயமரு வாவிவிழ ...... அணுகாமுன் 
காதலுட னோதமுடி யார்களுட னாடியொரு
     கால்முருக வேளெனவு ...... மருள்தாராய் 
சோலைபரண் மீதுநிழ லாகதினை காவல்புரி
     தோகைகுற மாதினுட ...... னுறவாடிச் 
சோரனென நாடிவரு வார்கள்வன வேடர்விழ
     சோதிகதிர் வேலுருவு ...... மயில்வீரா 
கோலவழல் நீறுபுனை யாதிசரு வேசரொடு
     கூடிவிளை யாடுமுமை ...... தருசேயே 
கோடுமுக வானைபிற கானதுணை வாகுழகர்
     கோடிநகர் மேவிவளர் ...... பெருமாளே.
கரிய மேகம் போன்ற கூந்தலை உடைய மாதர்களின் மார்பகத்தின் மேலுள்ள ஆசையால் நாள் தோறும் அலைச்சல் உறாமல், பெரிய மண்ணாசை, பொருள்கள் மேலுள்ள ஆசை இவற்றில் மயக்கம் கொண்டு, அலை மிகுந்த கடல் நீரில் அலைச்சல் உறுகின்ற மீனைப் போல உழலும் பொருட்டு முயற்சி செய்யாமல், யமனுடைய (என்னை) விரட்டும் பேச்சு என்கின்ற பாம்பின் வாயில் அகப்பட்ட தேரை போல உடலில் பொருந்தியுள்ள உயிர் அவன் கையில் அகப்பட்டு விழும்படி, அந்தக் காலன் என்னை அணுகுவதற்கு முன்பாக, அன்புடன் உன்னை ஓதுகின்ற அடியார்களுடன் விரும்பி ஒரு முறையாவது முருக வேள் என்று நான் புகழுமாறு திருவருளைத் தந்தருளுக. (வள்ளி மலைக் காட்டிலுள்ள) சோலையின் இடையே பரண் மீது நிழலில் நின்று, தினைப் புனத்தைக் காவல் செய்யும் மயில் போல் சாயலை உடைய குறப் பெண்ணாகிய வள்ளியுடன் உறவு கொண்டாடி, கள்வன் என்று உன்னைத் தேடி வந்தவர்களான காட்டு வேடர்கள் எல்லாம் மாண்டு விழ, மிக்க ஒளி வீசும் வேலைச் செலுத்திய மயில் வீரனே, அழகுள்ளதும், வினைகளை அழிப்பதில் நெருப்புப் போன்றதும் ஆகிய திருநீற்றை அணிந்துள்ள மூலப் பொருளாகிய சிவபெருமானோடு கூடி விளையாடுகின்ற உமா தேவியார் பெற்ற குழந்தையே, தந்தத்தை முகத்தில் கொண்ட யானையாகிய கணபதிக்குப் பின்னர் தோன்றிய தம்பியே, குழகர் என்னும் திருநாமத்துடன் (சிவபெருமான்) வீற்றிருக்கும் கோடி* என்னும் தலத்தில் விரும்பி வீற்றிருக்கும் பெருமாளே. 
* கோடி என்னும் குழகர்கோவில் வேதாரணியத்துக்குத் தெற்கே 5 மைலில் உள்ளது.
பாடல் 843 - திருப்பெருந்துறை
ராகம் - ....; தாளம் -
தனத்த தந்தன தானன தந்தத்
     தனத்த தந்தன தானன தந்தத்
          தனத்த தந்தன தானன தந்தத் ...... தனதான
இரத்த முஞ்சியு மூளையெ லும்புட்
     டசைப்ப சுங்குடல் நாடிபு னைந்திட்
          டிருக்கு மண்சல வீடுபு குந்திட் ...... டதில்மேவி 
இதத்து டன்புகல் சூதுமி குந்திட்
     டகைத்தி டும்பொரு ளாசையெ னும்புட்
          டெருட்ட வுந்தெளி யாதுப றந்திட் ...... டிடமாயா 
பிரத்தம் வந்தடு வாதசு ரம்பித்
     துளைப்பு டன்பல வாயுவு மிஞ்சிப்
          பெலத்தை யுஞ்சில நாளுளொ டுங்கித் ...... தடிமேலாய்ப் 
பிடித்தி டும்பல நாள்கொடு மந்திக்
     குலத்தெ னும்படி கூனிய டங்கிப்
          பிசக்கு வந்திடு போதுபி னஞ்சிச் ...... சடமாமோ 
தரித்த னந்தன தானன தந்தத்
     திமித்தி மிந்திமி தீதக் திந்தத்
          தடுட்டு டுண்டுடு டூடுடி மிண்டிட் ...... டியல்தாளம் 
தனத்த குந்தகு தானன தந்தக்
     கொதித்து வந்திடு சூருடல் சிந்தச்
          சலத்து டன்கிரி தூள்படெ றிந்திட் ...... டிடும்வேலா 
சிரத்து டன்கர மேடுபொ ழிந்திட்
     டிரைத்து வந்தம ரோர்கள் படிந்துச்
          சிரத்தி னுங்கமழ் மாலைம ணம்பொற் ...... சரணோனே 
செகத்தி னின்குரு வாகிய தந்தைக்
     களித்தி டுங்குரு ஞானப்ர சங்கத்
          திருப்பெ ருந்துறை மேவிய கந்தப் ...... பெருமாளே.
ரத்தமும் சீழும், மூளை, எலும்பு, உள்ளே இருக்கும் மாமிசம், பசிய குடல், நரம்புகள், இவைகளைக் கொண்டு ஆக்கப்பட்டு அழுத்தமாகக் கட்டப்பட்டு மண்ணாலும், நீராலும் ஆன வீடாகிய உடலில் நுழைவு பெற்று, அதில் இருந்துகொண்டு இன்பகரமாகப் பேசும் சூதான மொழிகள் அதிகமாகி, கிளைத்து எழுகின்ற பொருளாசை என்கின்ற பறவை பிறர் தெளிவாக எடுத்துச் சொன்னாலும் தெளியாமல் மேலும் மேலும் பறப்பதாயிருக்க, உலக மாயை மிகுந்து, உண்டாகின்ற வாதம், சுரம், பித்தம் இவைகளின் வேதனைகளோடு பல வகையான வாயுக்களும் அதிகரித்து, இருக்கின்ற உடல்வலிமையும் சில தினங்களுக்குள் ஒடுங்கி, தடி மேல் கை ஊன்றுவதாகி, பல நாட்கள் செல்ல, குரங்குக் கூட்டத்தவன் என்று சொல்லும் படியாக உடல் கூனி, சத்துக்கள் அடங்கி, மரணம் வந்திடும் சமயத்தில் பின்பு பயப்படுவதான இந்த உடலால் ஏதேனும் பயன் உண்டோ? தரித்த னந்தன தானன தந்தத் திமித்தி மிந்திமி தீதக் திந்தத் தடுட்டு டுண்டுடு டூடுடி மிண்டிட்டு என்று ஒலிக்கின்ற தாளத்துடன், தனத்த குந்தகு தானன தந்த என்ற ஓசையுடன் கோபித்து எழுந்து (போருக்கு) வந்த சூரனுடைய உடல் அழியவும், கடல் வற்றிப் போவதுடன் கிரெளஞ்ச மலை பொடிபடவும் வேலாயுதத்தை எறிந்தவனே, தலை வணக்கத்துடன் கையிலுள்ள மலர்களைப் பொழிந்து போற்றி செய்யும் தேவர்கள் அவர்களது சிரத்தில் தலையில் மணக்கின்ற மாலைகளின் நறு மணத்தைப் பெற்ற அழகிய திருவடிகளை உடையவனே, உலகில் குருவாய் விளங்கும் உனது தந்தையாகிய சிவபெருமானுக்கு வேத உபதேசம் அளித்த பரமகுருவே, (உன் தந்தை) ஞானச் சொற்பொழிவு செய்த தலமாகிய திருப்பெருந்துறையில்** விரும்பி வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே. 
* நான்கு சைவக் குரவர்களில் ஒருவரான மாணிக்கவாசகர் அரசனுக்காக குதிரை வாங்கச் சென்றபோது திருப்பெருந்துறையில் சிவனே குரு மூர்த்தியாக இருந்து அடியார்களுக்கு ஞான உபதேசம் செய்வதைக் கண்டுத் தாமும் இழுக்கப்பட்டு அவ்வடியர்களுடன் உபதேசம் பெற்றார். அதனால் ஞானப்ரசங்கத் திருப்பெருந்துறை எனப்பட்டது.
** இது அறந்தாங்கி ரயில் நிலையத்தில் இருந்து 8 மைலில் உள்ளது.
பாடல் 844 - திருப்பெருந்துறை
ராகம் - ....; தாளம் -
தனத்தனந் தனதன தனத்தனந் தனதன
     தனத்தனந் தனதன ...... தனதான
வரித்தகுங் குமமணி முலைக்குரும் பையர்மன
     மகிழ்ச்சிகொண் டிடஅதி ...... விதமான 
வளைக்கரங் களினொடு வளைத்திதம் படவுடன்
     மயக்கவந் ததிலறி ...... வழியாத 
கருத்தழிந் திடஇரு கயற்கணும் புரள்தர
     களிப்புடன் களிதரு ...... மடமாதர் 
கருப்பெருங் கடலது கடக்கவுன் திருவடி
     களைத்தருந் திருவுள ...... மினியாமோ 
பொருப்பகம் பொடிபட அரக்கர்தம் பதியொடு
     புகைப்பரந் தெரியெழ ...... விடும்வேலா 
புகழ்ப்பெருங் கடவுளர் களித்திடும் படிபுவி
     பொறுத்தமந் தரகிரி ...... கடலூடே 
திரித்தகொண் டலுமொரு மறுப்பெறுஞ் சதுமுக
     திருட்டியெண் கணன்முத ...... லடிபேணத் 
திருக்குருந் தடியமர் குருத்வசங் கரரொடு
     திருப்பெருந் துறையுறை ...... பெருமாளே.
சந்தனக் கலவை பூசப்பட்டதும், குங்குமம் அணிந்ததும் ஆகி, தென்னங் குரும்பை ஒத்ததுமான மார்பை உடைய பெண்கள் உள்ளம் மகிழ்ச்சி கொள்ளுமாறு, பலவகையான வளையல் அணிந்துள்ள தமது கரங்களால் (ஆடவர்களை) வசீகரித்து இழுத்து, வந்தவர்கள் உடல் இன்பம் அடையுமாறு காம மயக்கத்தை ஊட்டும் சொற்களால் அறிவு அழிந்து போகாத என் சிந்தனைகளும் அழிவு பெற, இரண்டு கயல் மீன் போன்ற கண்களும் புரள மிக்க மகிழ்ச்சியைத் தருகின்ற இள வயதுள்ள மாதர்களால் ஏற்படுகின்ற பிறவி என்கின்ற கடலைக் கடக்க, உன் திருவடிகளைத் தருவதற்கு உன் திருவுள்ளம் இனியேனும் கூடுமோ? கிரெளஞ்ச மலையின் உள்ளிடம் பாடிபடவும், அசுரர்கள் தங்கள் ஊர்களுடன் புகை பரந்த நெருப்பில் பட்டு அழியவும் செலுத்திய வேலனே, புகழ் மிகுந்த தேவர்கள் மகிழும்படி, பூமியைத் தாங்கும் மந்தர மலையை பாற்கடலினிடையே (மத்தாகச்) சுழலச் செய்த மேக நிறத் திருமாலும், ஒரு குறையைப்* பெற்ற, (தனக்கிருந்த ஐந்து தலைகளில்) நான்கு முகங்களில் மட்டுமே பார்வையைக் கொண்ட எட்டுக் கண்களை உடைய பிரமன் முதலான தேவர்களும் உன் திருவடிகளை விரும்பிப் போற்ற, திருக் குருந்த மரத்து அடியில் வீற்றருளிய தக்ஷிணா மூர்த்தியாகிய குருபரர்** சங்கரருடன் திருப்பெருந்துறையில்*** அமர்ந்திருக்கும் பெருமாளே. 
* இறைவனிடம் பொய் பேசியதால் பிரமனின் ஐந்து தலைகளுள் ஒரு தலை கிள்ளப்பட்டுள்ள மறு.
** மாணிக்க வாசகர் அமைச்சராக இருந்த சமயம் நாட்டுக்காக குதிரை வாங்கச் சென்றபோது திருப்பெருந்துறையில் சிவபெருமான் ஞான குருமூர்த்தியாக இருந்து, குருந்த மரத்தடியில் அடியார்களுக்கு உபதேசம் செய்வதைக் கேட்டுத் தாமும் கவரப்பட்டு, அந்த அடியார்களுடன் இருந்து உபதேசம் பெற்றார்.
*** திருப்பெருந்துறை அறந்தாங்கி ரயில் நிலையத்திலிருந்து 7 மைலில் உள்ளது.
பாடல் 845 - திருப்பெருந்துறை
ராகம் - ....; தாளம் -
தனன தந்தனந் தனதன தனதன
     தனன தந்தனந் தனதன தனதன
          தனன தந்தனந் தனதன தனதன ...... தனதான
முகர வண்டெழுங் கருமுகி லலையவு
     முதிய நஞ்சுமிழ்ந் தயில்விழி குவியவு
          முகிள சந்திரன் பொருநுதல் வெயரவு ...... மமுதூறும் 
முருகு தங்குசெந் துகிரிதழ் தெரியவு
     மருவு சங்கநின் றொலிகொடு பதறவு
          முழுது மன்புதந் தமளியி னுதவிய ...... அநுராகச் 
சிகர கும்பகுங் குமபுள கிததன
     மிருபு யம்புதைந் திடநடு விடைவெளி
          தெரிய லின்றியொன் றிடவுயி ருயிருட ...... னுறமேவித் 
திமிர கங்குலின் புதவிடு மவசர
     நினைவு நெஞ்சினின் றறவவர் முகமது
          தெரிச னஞ்செயும் பரிவற இனியருள் ...... புரிவாயே 
மகர நின்றதெண் டிரைபொரு கனைகடல்
     மறுகி யஞ்சிவந் தடிதொழு திடவொரு
          வடிகொள் செஞ்சரந் தொடுபவ னிருபது ...... புயவீரன் 
மடிய வங்குசென் றவனொரு பதுமுடி
     முடிய முன்புமண் டமர்பொரு தமர்நிழல்
          மதிலி லங்கையும் பொடிபட அருளரி ...... மருகோனே 
நிகரி லண்டமெண் டிசைகளு மகிழ்வுற
     விரகு கொண்டுநின் றழகுறு மயில்மிசை
          நினைவி னுந்தியம் புவிதனை வலம்வரு ...... மிளையோனே 
நிலவ ரும்புதண் டரளமு மிளிரொளிர்
     பவள மும்பொரும் பழனமு மழகுற
          நிழல்கு ருந்தமுஞ் செறிதுறை வளர்வுறு ...... பெருமாளே.
ஒலி செய்யும் வண்டுகள் எழுந்து மொய்க்கும் கரிய மேகம் போன்ற கூந்தல் அலைச்சல் உறவும், முற்றிய விஷத்தைக் கக்கும் அம்பு போன்ற கண்கள் குவியவும், அரும்பு மலரும் பிறைச் சந்திரனை ஒத்த நெற்றியில் வியர்வை எழவும், அமுதம் ஊறுகின்ற, நறுமணம் தங்கும் செவ்விய பவளம் போன்ற வாயிதழ் தெரியவும், பொருந்திய சங்கு போன்ற கழுத்திலிருந்து வெளிப்படும் (புட்குரல்) ஒலியோடு பதறிடவும், முழு அன்பையும் தந்து படுக்கையில் காட்டிய காமப் பற்றுக்கு இடமானதும், மலை போன்றதும், குடம் போன்றதும், குங்குமம் பூசியதும், புளகிதம் கொண்டதுமான மார்பகங்கள் இரண்டு புயங்களிலும் அழுந்திடவும், மத்தியில் வெளியிடம் தெரியாத வண்ணம் ஒருவரை ஒருவர் அணைந்திட, உயிரும் உயிரும் கலந்து பொருந்தக் கூடி, இருண்ட இரவில் கலவி இன்பத்தைத் தந்து உதவிடும் சமயங்களின் ஞாபகம் மனதிலிருந்து ஒழிந்து போகவும், (அந்த விலைமாதர்களின்) முகத்தை தரிசனம் செய்ய விரும்பும் ஆசை ஒழிந்து போகவும் இனி எனக்கு அருள் புரிவாயாக. மகர மீன்கள் உள்ள, தெள்ளிய அலைகள் மோதும், ஒலிக்கும் கடல் (சமுத்திரராஜன்) கலக்கத்துடன் பயந்து வந்து திருவடியில் தொழுது வணங்கும்படி ஒரு கூர்மையான செவ்விய அம்பைச் செலுத்தியவனும், இருபது புயங்களைக் கொண்ட வீரன் (ராவணன்) இறக்க, இலங்கைக்குப் போய் அவனுடைய ஒரு பத்து தலைகளும் அழிபட முன்பு நெருங்கி போரைச் செய்த, ஒளி பொருந்திய மதில் சூழ்ந்த இலங்கைப் பட்டினம் பொடிபட அருளிய திருமாலின் மருகனே, ஒப்பில்லாத அண்டங்களிலும் எட்டுத் திசைகளிலும் உள்ளவர்கள் மகிழ்ச்சி கொள்ளவும் சாமர்த்தியத்துடன் ஏறி நின்று அழகு பொருந்திய மயிலில் மனோ வேகத்தைக் காட்டிலும் அதி வேகமாகச் செலுத்தி, அழகிய பூலோகத்தை வலம் வந்த இளையோனே, நிலவொளி போல் வெள்ளொளி வீசும் குளிர்ந்த முத்துக்களும் விளங்கி, ஒளி தரும் பவளமும் கலந்து இலங்கும் வயல்கள் அழகு தர, நிழல் தரும் குருந்த மரமும் நிறைந்த திருப் பெருந்துறையில்* விளங்கி வீற்றிருக்கும் பெருமாளே. 
* திருப் பெருந்துறை அறந்தாங்கி ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ளது. இங்குள்ள குருந்தமரத்தடியில்தான் மாணிக்கவாசகரை சிவபெருமான் தடுத்தாட்கொண்டார்.
பாடல் 846 - திருத்துருத்தி
ராகம் - ....; தாளம் -
தனத் தனத்தன தானன தானன
     தனத் தனத்தன தானன தானன
          தனத் தனத்தன தானன தானன ...... தனதான
மலைக் கனத்தென மார்பினி லேயிரு
     முலைக் கனத்துற வேயிடை நூலென
          வளைத் துகுப்பமை யார்குழல் தோளொடும் ...... அலைமோத 
மயிற் குலத்தவ ராமென நீள்கலை
     நெகிழ்த் துவித்திரு வார்விழி வேல்கொடு
          மயக் கிநத்தினர் மேல்மறு பாடும ...... விழியேவி 
விலைக் கெனத்தன மாயிர மாயிர
     முலைக் களப்பினு மாசைபொ தாதென
          வெறுப் பர்குத்திர காரியர் வேசையர் ...... மயல்மேலாய் 
வெடுக் கெடுத்தும காபிணி மேலிட
     முடக் கிவெட்கும தாமத வீணனை
          மினற் பொலிப்பத மோடுற வேயருள் ...... புரிவாயே 
அலைக் கடுத்தசு ரார்பதி கோவென
     விடப் பணச்சிர மாயிர சேடனும்
          அதிர்த் திடக்கதிர் வேல்விடு சேவக ...... மயில்வீரா 
அடைக் கலப்பொரு ளாமென நாயெனை
     அழைத் துமுத்திய தாமநு பூதியெ
          னருட் டிருப்புக ழோதுக வேல்மயி ...... லருள்வோனே 
சிலைக் கைமுப்புர நீறெழ வேதிரு
     வுளத் திலற்பமெ னாநினை தேசிகர்
          சிறக் கமுத்தமி ழாலொரு பாவக ...... மருள்பாலா 
திருக் கடப்பலர் சூடிய வார்குழல்
     குறத் திகற்புட னேவிளை யாடியொர்
          திருத் துருத்தியில் வாழ்முரு காசுரர் ...... பெருமாளே.
மலைப்பாரம் போல நெஞ்சில் இரண்டு மார்பகங்களும் சுமையைத் தருவதால் இடுப்பு நூல் போல் வளைவு பெற, கரிய நிறம் உள்ள கூந்தல் தோள்கள் மேல் அலை வீசுவது போல் புரள, மயில்களின் கூட்டத்தவர்கள் போல் நீண்ட ஆடைகளை வேண்டுமென்றே தளர்த்தி வைத்து, இரண்டு நீண்ட கண்ணாகிய வேல் கொண்டு மயக்குவித்து தம்மை விரும்பி வந்தவர் மேல் உள்ள குற்றங்களைக் கூறுவது போன்று அந்தக் விழிகளைச் செலுத்தி, கொடுக்க வேண்டிய பொருளுக்காக பொன் பல ஆயிரங்கள் அந்த மார்பகங்களுக்காக அளந்து கொடுத்தாலும் பேராசை காரணமாக போதாது என்று வெறுப்பைக் காட்டுபவர்களும், வஞ்சகச் செயலினரும் ஆகிய விலைமாதர்கள் மீது காம மயக்கம் மேலோங்கிப் பின் திடீரென்று கொடிய நோய்கள் பீடிக்க ஒடுங்கி வெட்கப்படுகின்ற, பெருத்த மதம் பிடித்த வீணனாகிய நான் மின்னல் போன்று ஒளி வீசுகின்ற உனது திருவடிகளில் பொருந்திச் சேர அருள் புரிவாயாக. கடலில் போய்ப் புகுந்த அசுரர் தலைவனாகிய சூரன் கோ என்று அஞ்சி அலற, விஷம் கொண்ட படம் உடைய தலைகள் ஆயிரங்கள் உடைய ஆதி சேஷனும் அதிர்ச்சி அடைய, ஒளிவீசும் வேலைச் செலுத்திய வலிமையாளனே, மயில் வீரனே, அடைக்கலம் வைக்கப்பட்ட பொருளை ரட்சிப்பது போல அடியேனை பொருட்படுத்தி அழைத்து, முக்தியைத் தரவல்ல திருவருள் பிரசாதமாகிய திருப்புகழை நீ ஓதுவாயாக என்று திருவாய் மலர்ந்து வேலையும் மயிலையும் பாதுகாப்பாக (என் உடலில் இலச்சினையாகப் பொறித்து) அருளியவனே, மேரு மலையாகிய வில்லைக் கையில் பிடித்தபடி இருக்க முப்புரங்களை தீயினால் பொடியாகும்படி அழிய திருவுள்ளத்தில் சிறிதளவே நினைத்த தேசிகராகிய சிவபெருமான் பெருமை அடைய முத்தமிழைக் கொண்டு, ஒப்பற்ற கருத்துக்கு உரியதான (தேவாரப்) பாக்களை (திருஞான சம்பந்தராக அவதரித்து) அருளிய குழந்தையே, அழகிய கடப்ப மலர் சூடிய நீண்ட கூந்தலை உடைய குறத்தியான வள்ளியின் கற்புக் குணங்களில் திளைத்து விளையாடி, ஒப்பற்ற திருத்துருத்தியில்* வாழும் முருகப் பெருமானே, தேவர்களின் பெருமாளே. 
* திருத்துருத்திக்கு குற்றாலம் என்று பெயர். கும்பகோணத்துக்கு வடக்கே உள்ளது.
பாடல் 847 - திருவீழிமிழலை
ராகம் - அமிர்த வர்.ணி தாளம் - ஆதி
தனனா தனனா தனனா தனனா
     தனனா தனனா ...... தனதான
எருவாய் கருவாய் தனிலே யுருவா
     யிதுவே பயிராய் ...... விளைவாகி 
இவர்போ யவரா யவர்போ யிவரா
     யிதுவே தொடர்பாய் ...... வெறிபோல 
ஒருதா யிருதாய் பலகோ டியதா
     யுடனே யவமா ...... யழியாதே 
ஒருகால் முருகா பரமா குமரா
     உயிர்கா வெனவோ ...... தருள்தாராய் 
முருகா வெனவோர் தரமோ தடியார்
     முடிமே லிணைதா ...... ளருள்வோனே 
முநிவோ ரமரோர் முறையோ வெனவே
     முதுசூ ருரமேல் ...... விடும்வேலா 
திருமால் பிரமா வறியா தவர்சீர்
     சிறுவா திருமால் ...... மருகோனே 
செழுமா மதில்சே ரழகார் பொழில்சூழ்
     திருவீ ழியில்வாழ் ...... பெருமாளே.
உற்பத்திக்கு வேண்டிய எருவாய், கர்ப்பக் கருவாய், அதனின்று உருவமாகி, இவ்வுருவமே பயிர் வளர்வதுபோல் விளைபொருளாகி இவர் இவர் என்று இன்று இருப்பவர், இறந்தபின்பு, அவர் அவர் என்று சொல்லும்படியாகி, அவர் அவர் என்று பேசப்பட்டவர், பிறந்தபின்பு இவர் இவர் என்று சொல்லும்படியாகி, இந்தச் சங்கிலியே ஒரு தொடர்ச்சியாக, வெறி பிடித்தது போல, ஒரு தாயார், இரண்டு தாயார், பல கோடி தாய்மார்களை அடைந்து வீணாக யான் அழிவுறாமல், ஒருமுறையாவது முருகனே, பரமனே, குமரனே, என்றும் என்னுயிரைக் காத்தருள் என்றும் கூவித் துதிக்க உனது திருவருளைத் தந்தருள்வாயாக. முருகனே என ஒரே முறை ஓதும் அடியார்க்கு நீ அவர்தம் தலைமேல் இருதாள்களையும் வைத்து அருள்பவனாயிற்ஆற. முனிவர்களும், தேவர்களும் முறையோ முறையோ என உன்முன் ஓலமிட, பழைய சூரனது மார்பில் செலுத்திய வேலனே, திருமாலும் பிரமனும், (அடியும் முடியும்) அறியாதவராகிய சிவபெருமானின் செல்வச் சிறுவனே, திருமாலின் மருமகனே, செழிப்புள்ள அழகிய மதில்கள் சேர்ந்த, அழகு நிறைந்த சோலைகள் சூழ்ந்த, திருவீழிமிழலையில்* வாழும் பெருமாளே. 
* திருவீழிமிழலை தஞ்சை மாவட்டம் குற்றாலம் ஊருக்கு 6 மைல் தெற்கே உள்ளது.
பாடல் 848 - திருவாவடுதுறை
ராகம் - ....; தாளம் -
தத்ததன தான தனத்தனத் தத்ததத்த
     தத்ததன தான தனத்தனத் தத்ததத்த
          தத்ததன தான தனத்தனத் தத்ததத்த ...... தனதான
சொற்பிழைவ ராம லுனைக்கனக் கத்துதித்து
     நிற்பதுவ ராத பவக்கடத் திற்சுழற்றி
          சுக்கிலவ தார வழிக்கிணக் கிக்களித்து ...... விலைமாதர் 
துப்பிறைய தான இதழ்க்கனிக் குக்கருத்தை
     வைத்துமய லாகி மனத்தைவிட் டுக்கடுத்த
          துற்சனம காத கரைப்புவிக் குட்டழைத்த ...... நிதிமேவு 
கற்பகஇ ராச னெனப்படைக் குப்பெருத்த
     அர்ச்சுனந ராதி யெனக்கவிக் குட்பதித்து
          கற்றறிவி னாவை யெடுத்தடுத் துப்படித்து ...... மிகையாகக் 
கத்திடுமெ யாக வலிக்கலிப் பைத்தொலைத்து
     கைப்பொருளி லாமை யெனைக்கலக் கப்படுத்து
          கற்பனைவி டாம லலைத்திருக் கச்சலிக்க ...... விடலாமோ 
எற்பணிய ராவை மிதித்துவெட் டித்துவைத்து
     பற்றியக ராவை யிழுத்துரக் கக்கிழித்து
          எட்கரிப டாம லிதத்தபுத் திக்கதிக்கு ...... நிலையோதி 
எத்தியப சாசின் முலைக்குடத் தைக்குடித்து
     முற்றுயிரி லாம லடக்கிவிட் டுச்சிரித்த
          யிற்கணையி ராமர் சுகித்திருக் கச்சினத்த ...... திறல்வீரா 
வெற்பெனம தாணி நிறுத்துருக் கிச்சமைத்து
     வர்க்கமணி யாக வடித்திருத் தித்தகட்டின்
          மெய்க்குலம தாக மலைக்கமுத் தைப்பதித்து ...... வெகுகோடி 
விட்கதிர தாக நிகர்த்தொளிக் கச்சிவத்த
     ரத்தினப டாக மயிற்பரிக் குத்தரித்து
          மிக்கதிரு வாவ டுநற்றுறைக் குட்செழித்த ...... பெருமாளே.
துதிக்கும் சொற்களில் பிழை ஒன்றும் வராமல் உன்னை நிரம்பத் துதி செய்து வணங்கி நிற்பது என்பதே இல்லாத பிறவியாகிய காட்டில் சுழன்று, இந்திரியம் மூலமாக பிறப்பு எடுக்கின்ற வழியில் இணங்கிப் பொருந்தி மகிழ்ச்சி பூண்டு, விலைமாதர்களின் பவளம் தங்குவது போன்ற வாயிதழின் ஊறலாகிய பழத்தின் ருசியில் என் எண்ணங்களை வைத்து, ஆசை மயக்கம் கொண்டு மனதைக் காமத்தில் முழுவதும் செலுத்தி, பொல்லாத துர்க்குணம் உடைய பெரும் கொடியவர்களை, இந்தப் பூமியில் வளப்பம் பொருந்தி செல்வம் நிறைந்த கற்பகத் தரு போன்ற அரசனே (நீ) என்றும், படையில் மிகச் சிறந்த அர்ச்சுன அரசன் (நீ) என்றும் கவிகளில் அமைத்து, கற்று அறிந்த சொற்களைப் பொறுக்கி எடுத்து அந்த மனிதர்களை நெருங்கிப் போய் அவர்கள் மீது நான் அமைத்த கவிகளைப் படித்து, அளவுக்கு மிஞ்சி கூச்சலிடும் உடலைக் கொண்டவனாய், வன்மை கொண்ட பொலிவை இழந்து, (வேசையருக்குத் தர) கையில் பொருள் இல்லாத காரணத்தால் என்னைக் கலக்கமுறச் செய்யும் கற்பனைக் கவிதைகளில் இடைவிடாமல் நான் அலைச்சல் உறும்படியும் சலிப்புறும்படியும் கை விடலாமோ? ஒளி பொருந்திய படத்தை உடைய பாம்பின் (காளிங்கனின்) தலையில் (நடனமாடி காலால்) மிதித்து வெட்டிக் கலக்கி, (கஜேந்திரனாகிய) யானையைப் பற்றி இழுத்த முதலையை வெளியே இழுத்து (தன் சக்ராயுதத்தால்) பலமாகக் கிழித்து, அவமதிப்புக்கு இடமான யானை (முதலையின் வாயில்) படாமல், இன்பம் தரக்கூடிய முக்தி நிலைக்கான உறுதிப் பொருளை அதற்குச் சொல்லி, (விஷப்பால் தரும்) வஞ்சனை எண்ணத்துடன் வந்த பூதனை என்ற ராட்சசியின் முலைக் குடத்தை உறிஞ்சிக் குடித்து முழுதும் உயிர் இல்லாத வகையில் (அந்தப் பிசாசை) அடக்கி விட்டு நகைத்த (கண்ணனாகவும்), கூரிய அம்பைக் கொண்ட ராமராகவும் வந்த திருமால் சுகமாக இருக்கும்படி (சூரன் முதலியோரைக்) கோபித்த வலிமை உடைய வீரனே, மலை என்னும்படியாக பொன் பதக்கம் ஒன்றை எடை போட்டு, அதனை உருக்கி உருவமாகச் செய்து, பல வகையான ரத்தினங்களைப் பொறுக்கி எடுத்து அமைத்து, பொன் தகட்டினுடைய சரியான கூட்டம் என்று அனைவரும் பிரமிக்கும்படிச் செய்து, அதில் முத்தைப் பதிக்கச் செய்து, பல கோடி சூரியனுடைய ஒளி கூடியது போல ஒளி வீசிச் சிவந்த ரத்தினத் திரைச் சீலை கொண்டது போன்ற உடலை உடைய குதிரை போன்ற மயில் வாகனத்தின் மீது அமர்ந்து, மிகச் சிறந்த திருவாவடுதுறை* என்னும் நல்ல பதியில் வளப்பமுற்று விளங்கும் பெருமாளே. 
வரிகள் 19 முதல் 23 வரை மயிலின் உடல் வர்ணனை கூறப்பட்டுள்ளது.
* திருவாவடுதுறை மாயூரத்துக்கு மேற்கே 13 மைலில் உள்ளது.
பாடல் 849 - மருத்துவக்குடி
ராகம் - ....; தாளம் -
தனத்த தத்தன தானா தானன
     தனத்த தத்தன தானா தானன
          தனத்த தத்தன தானா தானன ...... தனதான
கருத்தி தப்படு காமா லீலைகள்
     விதத்தை நத்திய வீணா வீணிகள்
          கவட்டு விற்பன மாயா வாதிகள் ...... பலகாலுங் 
கரைத்து ரைத்திடு மோகா மோகிகள்
     அளிக்கு லப்பதி கார்போ லோதிகள்
          கடைக்க ணிற்சுழ லாயே பாழ்படு ...... வினையேனை 
உரைத்த புத்திகள் கேளா நீசனை
     யவத்த மெத்திய ஆசா பாசனை
          யுளத்தில் மெய்ப்பொரு ளோரா மூடனை ...... யருளாகி 
உயர்ச்சி பெற்றிடு மேலா மூதுரை
     யளிக்கு நற்பொரு ளாயே மாதவ
          வுணர்ச்சி பெற்றிட வேநீ தாளிணை ...... யருள்வாயே 
செருக்கி வெட்டிய தீயோ ராமெனு
     மதத்த துட்டர்கள் மாசூ ராதிய
          சினத்தர் பட்டிட வேவே லேவிய ...... முருகோனே 
சிவத்தை யுற்றிடு தூயா தூயவர்
     கதித்த முத்தமிழ் மாலா யோதிய
          செழிப்பை நத்திய சீலா வீறிய ...... மயில்வீரா 
வரைத்த வர்க்கரர் சூலா பாணிய
     ரதிக்கு ணத்தரர் தீரா தீரர்த
          மனத்தி யற்படு ஞானா தேசிக ...... வடிவேலா 
வருக்கை யிற்கனி சாறாய் மேலிடு
     தழைத்த செய்த்தலை யூடே பாய்தரு
          மருத்து வக்குடி வாழ்வே தேவர்கள் ...... பெருமாளே.
மனத்துக்கு இனிமை வாய்க்கும்படி பல விதமான காம லீலைகளை விரும்பிய மகா வீணிகள். வஞ்சக அறிவுடையவராய், மயக்கம் ஊட்டத் தக்க பேச்சினை உடையவர்கள். பல முறையும் மனம் கரையும்படி பேச வல்ல மோகம் மிகக் கொண்டவர்கள். வண்டினக் கூட்டங்கள் வந்து படிகின்ற கரிய மேகம் போன்ற கூந்தலை உடையவர்கள் ஆகிய விலைமாதர்களின் கடைக் கண் மயக்கில் பட்டுச் சுழலுதலாகி, பாழாகப் போகின்ற வினைக்கு ஈடான என்னை, பெரியோர்கள் சொன்ன புத்திமதிகளைக் கேளாத இழிந்தோனான என்னை, பயனற்றவையே மிகுந்த ஆசைகளில் பற்று உடையவனாகிய என்னை, மனதில் உண்மைப் பொருள் இன்னது என ஆராயாத மூடனை, உன் திருவருளைப் பெற்றவனாக்கி, உயர்ச்சி பெற்ற, மேலான வேதத்தில் குறிக்கப் பெற்ற, நல்ல பிள்ளையாக்கி, சிறந்த தவ ஞானத்தைப் பெறுமாறு உனது திருவடிகளைத் தந்தருள்வாயே. கர்வம் கொண்டு, பகைவர்களை வெட்டி அழித்த, பொல்லாதவர்கள் என்று சொல்லப்பட்ட, மதம் கொண்ட துஷ்டர்களாகிய பெரிய சூரன் முதலான கோபம் கொண்ட அசுரர்கள் அழியும்படி வேலாயுதத்தைச் செலுத்திய முருகனே, சிவமங்களம் பொருந்திய பரிசுத்த மூர்த்தியே, பெரியோர்கள் அருளிய முத்தமிழ்ப் பாக்களை அன்புடன் ஓதுகின்ற வளத்தை விரும்புகின்ற சீலனே, மேம்பாடுடன் விளங்கும் மயில் வீரனே, கயிலை மலையில் வீற்றிருக்கும் தவத்தினருக்கும் இறைவனாகிய பெரியோர், சூலாயுதத்தைக் கையில் கொண்டவர், மேம்பட்ட குணத்தை உடைய தலைவர், மிகக் ¨தரியம் உள்ளவர் ஆகிய சிவபெருமானுடைய மனத்தில் பொருந்தி விளங்கும் ஞான தேசிக மூர்த்தியே, வடிவேலனே, பலாப் பழங்களின் சாறாகி மேலிட்டுத் தளைத்த வயல்களின் நடுவில் பாய்கின்ற மருத்துவக் குடியில்* வாழ்கின்ற செல்வமே, அமரர்களின் பெருமாளே. 
* மருத்துவக்குடி ஆடுதுறைக்கு அருகில் உள்ளது.
பாடல் 850 - திருப்பந்தணை நல்லு¡ர்
ராகம் - ....; தாளம் -
தனதந்தன தனதந்தன தனதந்தன தான
     தனதந்தன தனதந்தன தனதந்தன தான
          தனதந்தன தனதந்தன தனதந்தன தானத் ...... தனதான
இதசந்தன புழுகுஞ்சில மணமுந்தக வீசி
     யணையுந்தன கிரிகொண்டிணை யழகும்பொறி சோர
          இருளுங்குழல் மழையென்பந வரசங்கொளு மோகக் ...... குயில்பொலே 
இடையுங்கொடி மதனன்தளை யிடுகுந்தள பார
     இலையுஞ்சுழி தொடைரம்பையு மமுதந்தட மான
          இயலங்கடி தடமும்பொழி மதவிஞ்சைகள் பேசித் ...... தெருமீதே 
பதபங்கய மணையும்பரி புரமங்கொலி வீச
     நடைகொண்டிடு மயிலென்பன கலையுஞ்சுழ லாட
          பரிசும்பல மொழியுஞ்சில கிளிகொஞ்சுகை போலப் ...... பரிவாகிப் 
பணமுண்டென தவலம்படு நினைவுண்டிடை சோர
     இதுகண்டவர் மயல்கொண்டிட மனமுஞ்செயல் மாற
          பகலுஞ்சில இரவுந்துயில் சிலவஞ்சகர் மாயைத் ...... துயர்தீராய் 
திதிதிந்திமி தனதந்தன டுடுடுண்டுடு பேரி
     டகுடங்குகு டிகுடிங்குகு படகந்துடி வீணை
          செகணஞ்செக வெனவும்பறை திசையெங்கினு மோதக் ...... கொடுசூரர் 
சிரமுங்கர வுடலும்பரி யிரதங்கரி யாளி
     நிணமுங் குடல் தசையுங்கட லெனசெம்புன லோட
          சிலசெம்புள்கள் கழுகுஞ்சிறு நரியுங்கொடி யாடப் ...... பொரும்வேலா 
மதவெங்கய முரிகொண்டவர் மழுவுங்கலை பாணி
     யிடமன்பொடு வளருஞ்சிவை புகழ்சுந்தரி யாதி
          வளருந்தழ லொளிர்சம்பவி பரைவிண்டிள தோகைத் ...... தருசேயே 
வதனஞ்சசி யமுதம்பொழி முலைநன்குற மாதொ
     டிசையுஞ்சுரர் தருமங்கையொ டிதயங்களி கூர
          வருபந்தணை நகர்வந்துறை விமலன்குரு நாதப் ...... பெருமாளே.
இன்பம் தருவதான சந்தனம், புனுகுசட்டம் இவை போன்ற வாசனைப் பொருள்கள் தக்கபடி மணம் வீச, தழுவுகின்ற மலை போன்ற இரண்டு மார்பகங்களைக் கொண்டும், அழகிய மெய், வாய், கண், மூக்கு, செவி எனப்படும் இந்திரியங்கள் சோர்வு அடையவும், இருண்ட கூந்தல் மழை மேகம் என்னும்படி அமைய, நவரசங்களையும்* கொண்ட இனிக்கும் பேச்சுக்களால் மோகத்தை ஊட்டும் குயில் போலப் பேசி, இடுப்பும் கொடி போல் விளங்க, மன்மதன் இடும் விலங்குகள் என்னும்படியான கூந்தல் பாரத்துடன், ஆலிலை போன்ற வயிறும், கொப்பூழ்ச் சுழியும், வாழைத் தண்டு போன்ற தொடையும், காம அமுதம் பொழியும் தன்மை கொண்ட அழகிய பெண்குறியும் விளங்க, (இத்தனை அங்கங்களுடன்) மன்மத வித்தைப் பேச்சுக்களைப் பேசி, தெருவிலே, பாத தாமரைகளைத் தழுவும் சிலம்புகள் அங்கு ஒலி செய்ய நடக்கின்ற மயில்கள் என்று சொல்லும்படி, ஆடையும் சுழன்று ஆட, அவர்கள் பழகுகின்ற விதங்கள் (ஆளுக்குத் தகுந்தமாதிரி) பலவாக, சில பேச்சுக்களுடன் கிளி கொஞ்சுவது போலப் பேசி, அன்பும் பரிவும் பூண்டவர்கள் போல் இருக்க, பணம் இருக்கிறதென்று என்னுடைய வேதனைப்படும் நினைவிலே நான் எண்ணம் பூண்டிருக்க, மத்தியில் பணம் வற்றிப் போய்த் தளர்ச்சி உற, இந்நிலையைக் கண்டு அவ்விலைமாதரின் மோகம் கொண்டிருந்த அந்த மனமும் நேசச் செயலும் மாறுதல் கொள்ள, (அதனால்) சில பகலும் சில இரவுமே துயில் கொள்ள இணங்கும் சில வஞ்சக விலைமாதர்கள் மீது (எனக்குள்ள) காம மாயைத் துயரைத் தீர்த்தருள்க. திதி திந்திமி தனதந்தன டுடுடுண்டுடு டகுடங்குகு டிகுடிங்குகு என்று சிறு பறைகளும், உடுக்கையும், வீணையும் ஒலிக்க, செகணஞ்செக என்று பெரும்பறைகள் எல்லா திக்குகளிலும் சப்திக்க, கொடிய சூரர்களின் தலைகளும், கைகளும், உடல்களும், குதிரையும், தேரும், யானையும், சிங்கமும், கொழுப்பும், குடலும், தசையும் அறுபட்டதால் கடல் என்று சொல்லும்படி சிவந்த இரத்தம் ஓட, பருந்து போன்ற சில சிவந்த பறவைகளும், கழுகுகளும், சிறிய நரிகளும், காக்கைகளும் (போர்க்களத்தில் வந்து) ஆட சண்டை செய்யும் வேலனே, மதம் கொண்ட கொடிய யானையின் தோலை உரித்தவர், மழுவையும் மானையும் கையில் ஏந்தியவர் ஆகிய சிவபெருமானின் இடது பக்கத்தில் அன்புடன் இருந்து விளங்கும் உமை என்று புகழப்படும் அழகி, ஆதி பராசக்தி, வளர்ந்து ஓங்கும் நெருப்பு போலச் சிவந்து விளங்கும் சாம்பவி, பரம்பொருள், திருமாலின் இளம் தங்கையாகிய மயில் போன்றவளாகிய பார்வதி தந்த குழந்தையே, சந்திரன் போன்ற திரு முகமும் அமுதம் பொழிகின்ற மார்பகமும் கொண்ட குறப் பெண்ணாகிய வள்ளியுடனும், அன்பு பொருந்தும் தேவர்கள் வளர்த்த தேவயானையுடனும் மனம் மகிழ்ச்சி மிக, திருப்பந்தணை நல்லூரில்** வந்து வீற்றிருப்பவனே, சிவபெருமானது குரு மூர்த்திப் பெருமாளே. 
* நவரசங்கள் - சிங்காரம், ஹாஸ்யம், கருணை, ரெளத்திரம், வீரம், பயம், குற்சை (அருவருப்பு), அற்புதம், சாந்தம்.
** இத்தலம் திருவிடைமருதூர் ரயில் நிலையத்துக்கு வடகிழக்கில் 8 மைல் தொலைவில் உள்ளது.

பாடல் 801 - கந்தன்குடி 
ராகம் - ஸஹானா தாளம் - திஸ்ர ஏகம் - 3

தந்தந்தன தந்தந்தன தந்தந்தன தந்தந்தன     தந்தந்தன தந்தந்தன ...... தனதான

எந்தன்சட லங்கம்பல பங்கம்படு தொந்தங்களை     யென்றுந்துயர் பொன்றும்படி ...... யொருநாளே 
இன்பந்தரு செம்பொன்கழ லுந்துங்கழல் தந்தும்பினை     யென்றும்படி பந்தங்கெட ...... மயிலேறி 
வந்தும்பிர சண்டம்பகி ரண்டம்புவி யெங்குந்திசை     மண்டும்படி நின்றுஞ்சுட ...... ரொளிபோலும் 
வஞ்சங்குடி கொண்டுந்திரி நெஞ்சன்துக ளென்றுங்கொளும்     வண்டன்தமி யன்றன்பவம் ...... ஒழியாதோ 
தந்தந்தன திந்திந்திமி யென்றும்பல சஞ்சங்கொடு     தஞ்சம்புரி கொஞ்சுஞ்சிறு ...... மணியாரம் 
சந்தந்தொனி கண்டும்புய லங்கன்சிவ னம்பன்பதி     சம்புந்தொழ நின்றுந்தினம் ...... விளையாடும் 
கந்தன்குக னென்றன்குரு வென்றுந்தொழு மன்பன்கவி     கண்டுய்ந்திட அன்றன்பொடு ...... வருவோனே 
கண்டின்கனி சிந்துஞ்சுவை பொங்கும்புனல் தங்குஞ்சுனை     கந்தன்குடி யின்தங்கிய ...... பெருமாளே.

எனது உடலாகிய உறுப்பு பலவகையான துன்பங்களில் படும் தொடர்புகள், என்றும் உள்ள துயரங்கள் யாவும் ஒழியும்படியான நாள் ஒன்று உண்டோ? இன்பத்தைத் தரும் செம்பொன்னாலான வீரக்கழல்களை அணிந்த திருவடிகளைத் தந்து பின்பு எப்போதும் போல என் பாச பந்தங்கள் அழிய நீ மயில் ஏறி வந்தும், வீரத்துடன், வெளியுலக அண்டங்கள், பூவுலகம் எவ்விடத்தும் திசைகளெல்லாம் நிறையும்படி ஜோதி ஸ்வரூபமாக நின்றும், (அவ்வாறு நீ நிற்பதனால்) வஞ்சகமே குடிகொண்டு திரிகின்ற நெஞ்சினனும், குற்றத்தையே எப்போதும் செய்கின்ற தீயவனும், தனியேனுமாகிய எனது பிறப்பு நீங்காதோ? (அதே ஓசை) சஞ் சஞ்சென்ற பல ஓசைகளுடனும், அபயம் அளிக்கிறேன் என்று சொல்வது போலக் கொஞ்சும் ஒலியுள்ள சின்ன மணிமாலைகளின் சந்த ஒலியைக் கேட்டும், மேகவண்ணன் திருமால், சிவபிரான், பிரமன் மூவரும் தொழ நின்றும், அடியார்களின் உள்ளத்தில் தினந்தோறும் விளையாடுகின்ற கந்தனே, குகனே, எந்தன் குருவே என்றெல்லாம் தொழுத அன்பன் நக்கீரனது பாடலைக் கேட்டு அவன் அடைபட்ட குகையினின்றும், பூதத்தினின்றும் நக்கீரன் பிழைத்து உய்யுமாறு அன்றொருநாள் அவனது முன்னிலையில் அன்போடு வந்தவனே, கற்கண்டின் இனிப்புச் சுவையுள்ள பழங்கள் சிந்துவதால் சுவைமிக்க நீர் உள்ள சுனைகள் விளங்கும் கந்தன்குடி* என்ற தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* கந்தன்குடி காரைக்காலில் இருந்து பேரளம் செல்லும் ரயில் பாதையில் அம்பகரத்தூர் அருகே ஒரு மைலில் உள்ளது.

பாடல் 802 - திலதைப்பதி 
ராகம் - ஜனரஞ்சனி தாளம் - திஸ்ர ஏகம் - 3

தனனத் தனனா ...... தனதான

இறையத் தனையோ ...... அதுதானும் 
இலையிட் டுணலேய் ...... தருகாலம் 
அறையிற் பெரிதா ...... மலமாயை 
அலையப் படுமா ...... றினியாமோ 
மறையத் தனைமா ...... சிறைசாலை 
வழியுய்த் துயர்வா ...... னுறுதேவர் 
சிறையைத் தவிரா ...... விடும்வேலா 
திலதைப் பதிவாழ் ...... பெருமாளே.

மற்ற ஒருவருக்கு உணவு இட்டபின் நாம் உண்ணுதல் என்ற அறநெறி என்னிடத்தில் பொருந்தி இருந்த காலம் ஓர் அணு எவ்வளவு உள்ளதோ அந்த அளவு கூட என்னிடம் இல்லை. (அந்த நெறி எவ்வளவு இருந்தது என) சொல்வதானால் நான் அந்நெறியை விட்ட காலம்தான் மிகப் பெரியது. மும்மலங்களிலும் மாயையிலும் அலைச்சல் உறுகின்ற இந்தத் தீய நெறி இனிமேல் எனக்குக் கூடாது. வேதம் கற்ற தலைவனாகிய பிரமனை பெரிய சிறைச்சாலைக்குப் போகும்படியாகச் செய்து, உயர்ந்த வானிலுள்ள தேவர்களின் சிறையை நீக்கிவிட்ட வேலனே, திலதைப்பதி* என்னும் திருத்தலத்தில் வாழ்கின்ற பெருமாளே. 
* திலதைப்பதிக்கு தற்போதைய பெயர் கோயிற்பத்து.தஞ்சை மாவட்டத்தில் பேரளம் என்ற ஊரின் தென்மேற்கே 3 மைலில் இருக்கிறது.

பாடல் 803 - திலதைப்பதி 
ராகம் - ....; தாளம் -

தனனத் தனன தந்த தனனத் தனன தந்த     தனனத் தனன தந்த ...... தனதான

பனகப் படமி சைந்த முழையிற் றரள நின்று     படர்பொற் பணிபு னைந்த ...... முலைமீதிற் 
பரிவற் றெரியு நெஞ்சில் முகிலிற் கரிய கொண்டை     படுபுட் பவன முன்றி ...... லியலாரும் 
அனமொத் திடுசி றந்த நடையிற் கிளியி னின்சொல்     அழகிற் றனித ளர்ந்து ...... மதிமோக 
மளவிப் புளக கொங்கை குழையத் தழுவி யின்ப     அலையிற் றிரிவ னென்று ...... மறிவேனோ 
தனனத் தனன தந்த தனனத் தனன தந்த     தனனத் தனன தந்த ...... தனதானா 
தகிடத் தகிட தந்த திமிதத் திமித வென்று     தனிமத் தளமு ழங்க ...... வருவோனே 
செநெனற் கழனி பொங்கி திமிலக் கமல மண்டி     செறிநற் கழைதி ரண்டு ...... வளமேவித் 
திருநற் சிகரி துங்க வரையைப் பெருவு கின்ற     திலதைப் பதிய மர்ந்த ...... பெருமாளே.

பாம்பின் படம் போன்ற படம் உள்ள குகை போன்ற பெண்குறியிலும், முத்து மணி நின்று அசைந்து உலவும் அழகிய ஆபரணங்களைப் பூண்டுள்ள மார்பகத்தின் மேலும், உண்மை அன்பு இல்லாமல் (பொருள் வேண்டியே) எரிச்சல் படும் (வேசியர்) உள்ளத்திலும், மேகம் போன்ற கரு நிறம் கொண்ட கூந்தலிலும், (எட்டுப் பறவைகள் செய்யும்) புட்குரல்களுக்கு இருப்பிடமான கழுத்திலும், தகுதி நிறைந்துள்ள அன்ன நடைக்கு ஒப்பான சிறந்த நடையிலும், கிளியின் இனிய மொழிக்கு ஒப்பான சொல்லிலும், நான் தனித்து நின்று சிந்தித்துத் தளர்ந்தும், காம இச்சையில் மனம் கொண்டு புளகம் கொண்ட மார்பகங்களை குழையும்படியாகத் தழுவி சிற்றின்பக் கடலில் அலைத்துச் செல்கின்றவனாகிய நான் என்றேனும், எப்போதாவது அறிந்து உய்வேனோ? தனனத் தனன தந்த தனனத் தனன தந்த தனனத் தனன தந்த தனதானா தகிடத் தகிட தந்த திமிதத் திமித என்று தனியாக மத்தளம் ஒலிக்க வருபவனே, செம்மையான நெற்பயிர் விளையும் நல்ல வயல்கள் செழிப்புற்று ஓங்கி, பெரிய மீன்களும் தாமரையும் நிறைந்து, நெருங்கிய நல்ல கரும்புகளும் திரட்சியாக வளர்ந்து வளப்பம் உற்று, அழகிய சிகரங்களை உடைய, உயர்ந்த மலைக்கு நிகராக விளங்கும் திலதைப் பதி** என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* புட் குரல்கள் = காமக் கன்னியர் கண்டத்தில் உண்டாகும் எண் வகை ஒலிகள்.மயில், புறா, அன்னம், காடை, நாரை, குயில், கோழி, வண்டு என்பன.
** திலதைப்பதிக்கு தற்போதைய பெயர் கோயிற்பத்து. தஞ்சை மாவட்டத்தில் பேரளம் என்ற ஊரின் தென்மேற்கே 3 மைலில் இருக்கிறது.

பாடல் 804 - திலதைப்பதி 
ராகம் - ....; தாளம் -

தனனத் தனத்த தந்த தனனத் தனத்த தந்த     தனனத் தனத்த தந்த ...... தனதான

மகரக் குழைக்கு ளுந்து நயனக் கடைக்கி லங்கு     வசியச் சரத்தி யைந்த ...... குறியாலே 
வடவெற் பதைத்து ரந்து களபக் குடத்தை வென்று     மதர்விற் பணைத்தெ ழுந்த ...... முலைமீதே 
உகமெய்ப் பதைத்து நெஞ்சும் விரகக் கடற்பொ திந்த     வுலைபட் டலர்ச்ச ரங்கள் ...... நலியாமல் 
உலகப் புகழ்ப்பு லம்பு கலியற் றுணர்ச்சி கொண்டு     னுரிமைப் புகழ்ப்ப கர்ந்து ...... திரிவேனோ 
புகர்கைக் கரிப்பொ திந்த முளரிக் குளத்தி ழிந்த     பொழுதிற் கரத்தொ டர்ந்து ...... பிடிநாளிற் 
பொருமித் திகைத்து நின்று வரதற் கடைக்க லங்கள்     புகுதக் கணத்து வந்து ...... கையிலாருந் 
திகிரிப் படைத்து ரந்த வரதற் குடற்பி றந்த     சிவைதற் பரைக்கி சைந்த ...... புதல்வோனே 
சிவபத் தர்முத்த ரும்பர் தவசித் தர்சித்த மொன்று     திலதைப் பதிக்கு கந்த ...... பெருமாளே.

மீன் போல் அமைந்த குண்டலங்கள் மீது தாவிப் பாயும் கடைக்கண்களில் விளங்கும் கூர்மை வாய்ந்த அந்த அம்பால் ஏற்பட்ட வடுவாலும், மேரு மலையை வடக்கே (வெட்கப்பட்டு) ஓட வைத்து, சந்தனக் கலவை அணிந்த குடத்தை வெற்றி கொண்டு, செழிப்புடன் பெருத்து எழுந்த மார்பின் மேலும், உடல் நடுங்கிப் பதைப்புற என் மனம் காம மோகக் கடலில் ஏற்பட்ட (விரகாக்கினி) உலையில் அவதிப்பட்டு, (மன்மதனின்) மலர்ப் பாணங்கள் என்னை வேதனைப் படுத்தாமல், உலகத்தோரின் புகழ்க் கூச்சல் என்னும் செருக்கு நீங்க, ஞான உணர்ச்சி கொண்டு உனக்கு உரித்தான திருப்புகழைச் சொல்லி நான் திரிய மாட்டேனோ? புள்ளியை உடைய துதிக்கையைக் கொண்ட யானையாகிய கஜேந்திரன் தாமரை நிறைந்திருந்த குளத்தில் இறங்கிய போது முதலை தொடர்ந்து பிடித்த அந்த நாளில், துன்புற்று திகைத்து நின்று வரதராகிய திருமாலுக்கு அடைக்கல முறையீடுகள் செய்ய, ஒரு நொடிப் பொழுதில் வந்து அவருடைய திருக் கையில் விளங்கும் சக்கரப் படையை ஏவிய திருமாலுக்கு உடன் பிறந்தவளாகிய சிவை, பராசக்திக்கு இனிய மகனே, சிவனடியார்கள், முக்தி நிலை பெற்றவர்கள், தேவர்கள், தவம் நிறை சித்தர்கள் இவர்களுடைய மனம் பொருந்தி வணங்கும் திலதைப்பதி* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே. 
* திலதைப்பதிக்கு தற்போதைய பெயர் கோயிற்பத்து. தஞ்சை மாவட்டத்தில் பேரளம் என்ற ஊரின் தென்மேற்கே 3 மைலில் இருக்கிறது.

பாடல் 805 - திருவம்பர் 
ராகம் - ...; தாளம் -

தான தந்தனந் தான தந்ததன     தான தந்தனந் தான தந்ததன          தான தந்தனந் தான தந்ததன ...... தந்ததான

சோதி மந்திரம் போத கம்பரவு     ஞான கம்பரந் தேயி ருந்தவெளி          தோட லர்ந்தபொன் பூவி ருந்தஇட ...... முங்கொளாமல் 
சூது பந்தயம் பேசி யஞ்சுவகை     சாதி விண்பறிந் தோடு கண்டர்மிகு          தோத கம்பரிந் தாடு சிந்துபரி ...... கந்துபாயும் 
வீதி மண்டலம் பூண மர்ந்துகழி     கோல மண்டிநின் றாடி யின்பவகை          வேணு மென்றுகண் சோர ஐம்புலனொ ...... டுங்குபோதில் 
வேதி யன்புரிந் தேடு கண்டளவி     லோடி வெஞ்சுடுங் காட ணைந்துசுட          வீழ்கி வெந்துகுந் தீடு மிந்தஇட ...... ரென்றுபோமோ 
ஆதி மண்டலஞ் சேர வும்பரம     சோம மண்டலங் கூட வும்பதும          வாளன் மண்டலஞ் சார வுஞ்சுழிப ...... டர்ந்ததோகை 
ஆழி மண்டலந் தாவி யண்டமுத     லான மண்டலந் தேடி யொன்றதொழு          கான மண்டலஞ் சேட னங்கணயில் ...... கொண்டுலாவிச் 
சூதர் மண்டலந் தூளெ ழுந்துபொடி     யாகி விண்பறந் தோட மண்டியொரு          சூரி யன்திரண் டோட கண்டுநகை ...... கொண்டவேலா 
சோடை கொண்டுளங் கான மங்கைமய     லாடி இந்திரன் தேவர் வந்துதொழ          சோழ மண்டலஞ் சாரு மம்பர்வளர் ...... தம்பிரானே.

(யோகத்தால் அடையப்படும்) ஜோதி ஒளி மண்டபம், ஞான உபதேசத்தால் அடையக்கூடிய ஞானாகாசமாகிய பரந்த பெரு வெளி, இதழ் அவிழ்ந்த (கற்பகப்) பொன் மலர் மணக்கும் தேவலோகம் (இத்தகைய மேலான பதங்களை அடையும் முயற்சியைக்) கொள்ளாமல், சூதாட்டப் பந்தயங்கள் பேசி, ஐந்து வகைப்பட்ட இனத்தினரான ஐம்புலன்கள், விண்ணையும் நிலை பெயர்த்து ஓட வல்ல வீரர்கள், மிக்க வஞ்சகச் செயல்களை அன்பு காட்டுவது போல காட்டி, கடல் குதிரை முழுப் பாய்ச்சல் பாய்வது போலப் பாய்ந்து செல்லும் வீதிவட்டத்தில் சிக்கிக் கொண்டு, மிக்க அலங்காரங்கள் நிறையும்படி நின்று அனுபவித்து, இன்ப வகையே வேண்டும் என்று இருந்தும், கண் பார்வை தளர்ந்து, ஐம்புலன்களும் ஒடுங்குகின்ற சமயத்தில், பிரமன் தெரிந்து அனுப்பிய சீட்டைப் பார்த்த அளவில், உயிர் பிரிந்து ஓட, கொடிய சுடுகாட்டைச் சேர்ந்து (என் உற்றார்) உடலைச் சுட்டு எரிக்க, கழிந்து போய் சாம்பலாகிச் சிதறிப் போகின்ற இந்த துன்பம் என்று ஒழியுமோ? சூரிய மண்டலங்கள் யாவும் ஒன்று சேரவும், சிறந்த சந்திர மண்டலங்கள் அதனுடன் சேரவும், தாமரையில் வீற்றிருக்கும் பிரமனது உலகம் அங்கு கூடவும், (கண் போன்ற) பீலிகள் படர்ந்துள்ள தோகையைக் கொண்ட உனது மயில் கடல் வட்டத்தைக் கடந்து, ஆங்காங்கே உள்ள பற்பல அண்டங்களைத் தேடிப் பொருந்தியும், கீழே உள்ள பாதாள லோகத்தில் உள்ள ஆதி சேஷனை அங்கு கொத்தவும், கையில் நீ வேல் கொண்டு உலாவி, சூரியர்களின் மண்டலங்கள் தூளாகி எழுந்து பொடியாகி வானில் பறந்தோடவும், அங்ஙனம் தூசுப்புயல் நெருங்கி வருவதைக் கண்டு ஒவ்வொரு சூரியனும் (உருண்டு புரண்டு) ஓடுவதைக் கண்டு சிரித்து விளையாடிய வேலனே, உள்ளத்தில் விருப்பம் கொண்டு காட்டில் வாழும் மங்கையாகிய வள்ளியின் மீது எழுந்த மோகத்தில் அவளுடன் விளையாடி, இந்திரனும் மற்ற தேவர்களும் வந்து வணங்க, சோழ மண்டலத்தைச் சார்ந்த திருவம்பர்* என்னும் தலத்தில் வாழ்ந்து வீற்றிருக்கும் தம்பிரானே. 
* திருவம்பர் தஞ்சை மாவட்டத்தில் பேரளத்துக்கு அருகில் உள்ளது.

பாடல் 806 - திருமாகாளம் 
ராகம் - ....; தாளம் -

தானான தானதன தானதன தானதன     தானான தானதன தானதன தானதன          தானான தானதன தானதன தானதன ...... தனதான

காதோடு தோடிகலி யாடவிழி வாள்சுழல     கோலாக லாரமுலை மார்புதைய பூணகல          காரோடு கூடளக பாரமல ரோடலைய ...... அணைமீதே 
காலோடு காலிகலி யாடபரி நூபுரமொ     டேகாச மானவுடை வீசியிடை நூல்துவள          காவீர மானஇத ழூறல்தர நேசமென ...... மிடறோதை 
நாதான கீதகுயில் போலஅல்குல் மால்புரள     மார்போடு தோள்கரமொ டாடிமிக நாணழிய          நானாவி நோதமுற மாதரொடு கூடிமயல் ...... படுவேனை 
நானாரு நீயெவனெ னாமலென தாவிகவர்     சீர்பாத மேகவலை யாயுமுன வேநிதமு          நாதாகு மாரமுரு காஎனவு மோதஅருள் ...... புரிவாயே 
பாதாள சேடனுட லாயிரப ணாமகுட     மாமேரொ டேழுகட லோதமலை சூரருடல்          பாழாக தூளிவிணி லேறபுவி வாழவிடு ...... சுடர்வேலா 
பாலாழி மீதரவின் மேல்திருவொ டேயமளி     சேர்நீல ரூபன்வலி ராவணகு ழாமிரிய          பாரேவை யேவியமு ராரியைவர் தோழனரி ...... மருகோனே 
மாதாபு ராரிசுக வாரிபரை நாரியுமை     ஆகாச ரூபியபி ராமிவல மேவுசிவன்          மாடேறி யாடுமொரு நாதன்மகிழ் போதமருள் ...... குருநாதா 
வானோர்க ளீசன்மயி லோடுகுற மாதுமண     வாளாகு காகுமர மாமயிலின் மீதுதிரு          மாகாள மாநகரில் மாலொடடி யார்பரவு ...... பெருமாளே.

காதில் உள்ள தோடுடன் விரோதித்துப் பாயும் கண்கள் வாள் போலச் சுழல, ஆடம்பரமான முத்து மாலை அணிந்த தனங்கள் மார்பை மறைக்க, ஆபரணங்கள் அகன்று போக, மேகம் போன்ற கூந்தல் பாரம் மலர்களுடன் அலைய, படுக்கையின் மேல் காலுடன் கால் பின்னி அசைய, தரித்துள்ள சிலம்புடன் மேலே அணிந்துள்ள புடவை வீசப்பட்டு, நூல் போன்ற இடை துவண்டு போக, செவ்வலரி போலச் சிவந்த வாயிதழ் ஊறலைக் கொடுக்க, அன்பு காட்டுவது போல கண்டத்தின் ஒலி (நாதமான) இனிய கீதம் போல் ஒலிக்கும் குயில் போல் விளங்க, பெண்குறியில் பரவச மயக்கம் ஏற்பட, மார்பும், தோளும், கையும் ஒன்றோடொன்று பிணைபட்டு ஆடி மிகவும் நாணம் கெட்டொழிய, பலவித வினோதங்களை அனுபவித்து பெண்களோடு கூடி மோக மயக்கம் கொள்கின்ற என்னை, நான் யார், நீ எவன் என்று எண்ணாமல், என்னுடைய உயிரை வசீகரிக்கின்ற உனது சீரிய திருவடியின் தியானமே எனக்குள்ள கவலையாகவும், (உன்னைத்) துதிக்கவும், நாள்தோறும் நாதா, குமாரா, முருகா என்று ஓதவும் திருவருளைத் தந்து அருளுக. பாதாளத்தில் உள்ள ஆதிசேஷனுடைய உடல், ஆயிரம் படங்களாகிய மகுடங்கள், மகா மேரு இவைகளுடன், ஏழு கடல்களின் வெள்ளம், கிரெளஞ்ச மலை, சூரர்களுடைய உடல் (இவை எல்லாம்) பாழ்பட, பொடிபட்ட தூள் விண்ணிலே போய்ப் படிய, உலகை வாழச் செலுத்தின ஒளி வேலனே, திருப்பாற் கடலில் பாம்பின் மேல் லக்ஷ்மியுடன் படுக்கை கொண்ட நீல நிறத்துத் திருமால், வலிமை வாய்ந்த ராவணனும் அவன் கூட்டத்தாரும் அஞ்சி ஓடி விலக பூமியில் அம்பைச் செலுத்தின (ராமனும்), முராசுரனுடைய பகைவனும், பஞ்ச பாண்டவர் ஐவரின் தோழனுமாகிய (கண்ணனாகிய) திருமாலின் மருகோனே, அன்னை, திரிபுரத்தை எரித்தவள், சுகக் கடல், பரதேவதை, பெண்ணரசி உமா தேவி, ஆகாச சொரூபி, அழகி (ஆகிய பார்வதியின்) வலப் பால் உள்ள சிவ பெருமான், ரிஷப வாகனத்தின் மேல் நடனம் செய்யும் ஒப்பற்ற தலைவனுக்கு மகிழும்படியான ஞானப் பொருளை உபதேசித்து அருளிய குரு மூர்த்தியே, தேவேந்திரன் வளர்த்த மயில் போன்ற தேவயானையுடன் குறப் பெண் வள்ளியை மணந்த மணவாளனே, குகனே, குமரனே, சிறந்த மயிலின் மேல் திருமாகாள* மா நகரில் ஆசையுடன் அமர்ந்து, அடியார்கள் பரவி வழிபடும் பெருமாளே. 
* திருமாகாளம் தஞ்சை மாவட்டத்தில் பேரளத்துக்கு அருகில் உள்ளது.

பாடல் 807 - இஞ்சிகுடி 
ராகம் - ....; தாளம் -

தந்ததனத் தான தான தனதன     தந்ததனத் தான தான தனதன          தந்ததனத் தான தான தனதன ...... தனதான

குங்குமகற் பூர நாவி யிமசல     சந்தனகத் தூரி லேப பரிமள          கொங்கைதனைக் கோலி நீடு முகபட ...... நகரேகை 
கொண்டைதனைக் கோதி வாரி வகைவகை     துங்கமுடித் தால கால மெனவடல்          கொண்டவிடப் பார்வை காதி னெதிர்பொரு ...... மமுதேயாம் 
அங்குளநிட் டூர மாய விழிகொடு     வஞ்சமனத் தாசை கூறி யெவரையு          மன்புடைமெய்க் கோல ராக விரகினி ...... லுறவாடி 
அன்றளவுக் கான காசு பொருள்கவர்     மங்கையர்பொய்க் காதல் மோக வலைவிழ          லன்றியுனைப் பாடி வீடு புகுவது ...... மொருநாளே 
சங்கதசக் ¡£வ னோடு சொலவள     மிண்டுசெயப் போன வாயு சுதனொடு          சம்பவசுக் ¡£வ னாதி யெழுபது ...... வெளமாகச் 
சண்டகவிச் சேனை யால்மு னலைகடல்     குன்றிலடைத் தேறி மோச நிசிசரர்          தங்கிளைகெட் டோட ஏவு சரபதி ...... மருகோனே 
எங்குநினைப் போர்கள் நேச சரவண     சிந்துரகர்ப் பூர ஆறு முககுக          எந்தனுடைச் சாமி நாத வயலியி ...... லுறைவேலா 
இன்புறுபொற் கூட மாட நவமணி     மண்டபவித் தார வீதி புடைவளர்          இஞ்சிகுடிப் பார்வ தீச ரருளிய ...... பெருமாளே.

குங்குமம், பச்சைக் கற்பூரம், புனுகுச் சட்டம், பன்னீர், சந்தனம், கஸ்தூரி (இவைகளின்) பூசுகையால் நறுமணம் கொண்டதும், நகரேகை கொண்டவையுமான மார்பகங்கள் வளையும்படி பெரிய ரவிக்கை, மேலாடை முதலியவற்றை அணிந்து, கூந்தலைச் சீவி வாரி வித விதமாக அழகிய வகையில் முடித்து, ஆலகால விஷத்தைப்போல வலிமை கொண்ட நஞ்சை ஒத்த (கண்) காதின் எதிரில் போய் சண்டை இடும் அமுதம் போன்றதும், அங்கு உள்ள கொடுமை வாய்ந்ததுமான மாய சக்தி வாய்ந்த கண்ணைக் கொண்டு, (உள்ளே) வஞ்சக மனத்துடனும், (புறத்தே) அன்பு மொழிகளைப் பேசியும் (சந்தித்த) எத்தகையவருடனும் அன்பு காட்டி, மெய்யே உருவெடுத்ததோ என்னும்படி ஆசை கூடிய சாமர்த்தியத்துடன் மொழிகளைப் பேசிச் சல்லாபித்து, அன்றைய பொழுதுக்கான கைக்காசை அபகரிக்கும் விலைமாதர்களின பொய்யன்பாகிய காம வலையில் விழுதல் இல்லாமல், உன்னைப் பாடி மோட்ச வீட்டில் புகும்படியான ஒரு நாள் எனக்குக் கிட்டாதோ? கொத்தான பத்துத் தலைகளை உடைய ராவணனுடன் தூது செல்வதற்கு வேண்டிய சொல் வளம் முதலிய ஆற்றல் கொண்டு வீரச் செயல்கள் செய்வதற்குச் சென்ற வாயுவின் மகனான அனுமனோடு, ஜாம்பவான், சுக்¡£வன் முதலான எழுபது வெள்ளம் சேனைகளுடன் வலிமை வாய்ந்த குரங்குப் படையால் முன்பு, அலைகின்ற கடலை சிறு மலைகள் கொண்டு அணைகட்டி (அக்கரையில் உள்ள இலங்கையில்) ஏறி, மோச எண்ணமுடைய அரக்கர்களுடைய சுற்றம் அழிந்து ஓடும்படி செலுத்திய அம்பினைக் கொண்ட ராமனின் மருகனே, எங்கு வாழ்பவர்களுக்கும் நினைப்பவர்களுக்கும் நேசனே, சரவணனே, செம்பொடி பச்சைக் கற்புரம் (இவை அணிந்துள்ள) ஆறுமுகனே, குகனே, அடியேனுக்கு உரிய சாமிநாதப் பெருமானே, வயலூரில் வாழும் வேலனே, இன்பம் தரத் தக்க அழகிய கூடங்கள், மாடங்கள், புதிது புதிதான நவரத்தினங்கள், மண்டபங்கள், அகண்ட தெருக்களில் பக்கத்திலே வளர்கின்ற இஞ்சிகுடி என்னும் தலத்தில் பார்வதி பாகர் ஆகிய சிவபெருமான் பெற்றருளிய பெருமாளே. * இஞ்சிகுடி மயிலாடுதுறைக்கு 10 மைல் தெற்கேயுள்ள பேரளத்தின் அருகில் உள்ளது.

பாடல் 808 - திருநள்ளாறு 
ராகம் - யதுகுல காம்போதி தாளம் - அங்கதாளம் - 7 1/2 - எடுப்பு - 3/4 தள்ளி 
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2

தத்த தந்தன தானன தானன     தத்த தந்தன தானன தானன          தத்த தந்தன தானன தானன ...... தனதான

பச்சை யொண்கிரி போலிரு மாதன     முற்றி தம்பொறி சேர்குழல் வாளயில்          பற்று புண்டரி காமென ஏய்கயல் ...... விழிஞான 
பத்தி வெண்டர ளாமெனும் வாணகை     வித்ரு மஞ்சிலை போல்நுத லாரிதழ்          பத்ம செண்பக மாமநு பூதியி ...... னழகாளென் 
றிச்சை யந்தரி பார்வதி மோகினி     தத்தை பொன்கவி னாலிலை போல்வயி          றிற்ப சுங்கிளி யானமி னூலிடை ...... யபிராமி 
எக்கு லங்குடி லோடுல கியாவையு     மிற்ப திந்திரு நாழிநெ லாலற          மெப்பொ தும்பகிர் வாள்கும ராஎன ...... வுருகேனோ 
கச்சை யுந்திரு வாளுமி ராறுடை     பொற்பு யங்களும் வேலுமி ராறுள          கட்சி வங்கம லாமுக மாறுள ...... முருகோனே 
கற்ப கந்திரு நாடுயர் வாழ்வுற     சித்தர் விஞ்சையர் மாகர்ச பாசென          கட்ட வெங்கொடு சூர்கிளை வேரற ...... விடும்வேலா 
நச்சு வெண்பட மீதணை வார்முகில்     பச்சை வண்புய னார்கரு டாசனர்          நற்க ரந்தநு கோல்வளை நேமியர் ...... மருகோனே 
நற்பு னந்தனில் வாழ்வளி நாயகி     யிச்சை கொண்டொரு வாரண மாதொடு          நத்தி வந்துந ளாறுறை தேவர்கள் ...... பெருமாளே.

பச்சையானதும், ஒளி பொருந்தியதுமான இரு பெரிய மார்பகங்கள், மொய்த்து இன்பம் துய்க்கும் வண்டுகள் முரலும் கூந்தல், ஒளிகொண்ட வேலையும், தாமரையையும் போன்ற மீனை ஒத்த கண் விழிகள், ஞான ஒளி வரிசையில் உள்ள வெண்முத்துக்களைப் போன்று ஒளிவீசும் பற்கள், வில்லைப் போன்ற நெற்றி, பவளத்தையும், தாமரையையும் செண்பகப்பூவையும் போன்ற இதழ்கள், இவையெல்லாம் கொண்ட, ஞான அநுபவத்தின் அழகியானவள், இச்சையெல்லாம் பூர்த்தி செய்யும் பராகாச வடிவினாள், பேரழகியான பார்வதி, கிளி, பொன்னின் அழகுடைய ஆலிலை போன்ற வயிற்றினள், இல்லறம் நடத்தும் பசுங்கிளி போன்றவள், மின்னலும் நூலும் போன்ற இடையை உடையவள், எல்லாக் குலத்தாருக்கும், எல்லா உடலுக்கும், எல்லா உலகங்களுக்கும், இருந்த இடத்தில் இருந்தே இரண்டு படி நெல் கொண்டு முப்பத்திரண்டு அறங்களையும்* எப்பொழுதும் பங்கிட்டு அளிப்பவளாகிய பார்வதியின் குமரனே என்று கூறி உள்ளம் உருக மாட்டேனோ? அரையில் கச்சை, அழகிய வாள், பன்னிரண்டு அழகிய தோள்கள், வேல், பன்னிரண்டு கண்கள், மங்களமான தாமரை போன்ற ஆறு திருமுகங்கள் - இவை கொண்ட முருகனே, கற்பகமரம் உள்ள செல்வம் நிறைந்த தேவர்களின் நாடு உயர்ந்த வாழ்வைப் பெறவும், சித்தர்களும், விஞ்சையர்களும், தேவர்களும் சபாஷ்** என்று மெச்சவும், துன்பம் தந்துவந்த கொடும் சூரர்களின் சுற்றத்தார் யாவரும் வேரறச் செலுத்திய வேலனே, விஷமுள்ள வெண்ணிறப் படம் உடைய ஆதிசேஷன்மீது படுக்கை கொண்டவர், கருமுகிலின், மரகதப்பச்சையின் நிறம் கொண்டு வளமார்ந்த புயத்தை உடைய கருட வாகனர், நல்ல கரத்தில் வில் (சாரங்கம்), அம்பு, சங்கு (பாஞ்சஜன்யம்), சக்கரம் (சுதர்ஸனம்) இவற்றைக் கொண்ட திருமாலின் மருகனே, நல்ல தினைப்புனத்தில் வாழ்ந்திருந்த வள்ளிநாயகியின் காதலைப் பெற்று, ஒப்பற்ற யானை ஐராவதம் வளர்த்த தேவயானையுடன் விரும்பி வந்து திருநள்ளாறு*** என்ற தலத்தில் உறைகின்றவனே, தேவர்களின் பெருமாளே. 
* பெரிய புராணத்தில் கூறிய முப்பத்திரண்டு அறங்கள் பின்வருமாறு:சாலை அமைத்தல், ஓதுவார்க்கு உணவு, அறுசமயத்தாருக்கும் உணவு, பசுவுக்குத் தீனி, சிறைச் சோறு, ஐயம், தின்பண்டம் நல்கல், அநாதைகளுக்கு உணவு, மகப்பெறுவித்தல், மகவு வளர்த்தல், சிசுக்களுக்குப் பால் நல்கல், அநாதைப் பிணம் சுடுதல், அநாதைகளுக்கு உடை, சுண்ணாம்பு பூசல், நோய்க்கு மருந்து, வண்ணார் தொழில், நாவிதத் தொழில், கண்ணாடி அணிவித்தல், காதோலை போடுதல், கண் மருந்து, தலைக்கு எண்ணெய், ஒத்தடம் தருதல், பிறர் துயர் காத்தல், தண்ணீர்ப் பந்தல், மடம் கட்டுதல், தடாகம் அமைத்தல், சோலை வளர்த்தல், தோல் பதனிடல், மிருகங்களுக்கு உணவு, ஏர் உழுதல், உயிர் காத்தல், கன்னிகாதானம்.
** சபாஷ் என்ற அரபு வார்த்தை முகலாயர் ஆட்சி அருணகிரிநாதர் காலத்தில் வந்ததைக் குறிக்கிறது.*** திருநள்ளாறு காரைக்காலுக்கு மேற்கே 3 மைலில் உள்ளது. இந்தத் தலம் நவக்கிரகங்களில் ஒன்றான சனீஸ்வரனின் க்ஷேத்திரம்.

பாடல் 809 - வழுவூர் 
ராகம் - ....; தாளம் -

தனனாதன தானன தானன     தனனாதன தானன தானன          தனனாதன தானன தானன ...... தனதானா

தருவூரிசை யாரமு தார்நிகர்     குயிலார்மொழி தோதக மாதர்கள்          தணியாமய லாழியி லாழவு ...... மமிழாதே 
தழலேபொழி கோரவி லோசன     மெறிபாசம காமுனை சூலமுள்          சமனார்முகில் மேனிக டாவினி ...... லணுகாதே 
கருவூறிய நாளுமு நூறெழு     மலதேகமு மாவலு மாசைக          படமாகிய பாதக தீதற ...... மிடிதீரக் 
கனிவீறிய போதமெய் ஞானமு     மியலார்சிவ நேசமு மேவர          கழல்சேரணி நூபுர தாளிணை ...... நிழல்தாராய் 
புருகூதன்மி னாளொரு பாலுற     சிலைவேடுவர் மானொரு பாலுற          புதுமாமயில் மீதணை யாவரு ...... மழகோனே 
புழுகார்பனிர் மூசிய வாசனை     யுரகாலணி கோலமென் மாலைய          புரிநூலுமு லாவுது வாதச ...... புயவீரா 
மருவூர்குளிர் வாவிகள் சோலைகள்     செழிசாலிகு லாவிய கார்வயல்          மகதாபத சீலமு மேபுனை ...... வளமூதூர் 
மகதேவர்பு ராரிச தாசிவர்     சுதராகிய தேவசி காமணி          வழுவூரில்நி லாவிய வாழ்வருள் ...... பெருமாளே.

மூங்கில் மரத்தால் (செய்த புல்லாங்குழலால்) ஏற்படுகின்ற இசையில் வல்லவர், அமுதைப் போல் இனியவர், குயிலைப் போன்ற இனிய குரலை உடையவர், வஞ்சகம் செய்யும் விலைமாதர்கள் (மீதுள்ள) குறைவுபடாத காம இச்சைக் கடலில் விழுந்து அழிந்து போகாமலும், நெருப்பைப் பொழியும் பயங்கரமான கண்கள், (உயிரைப் பறிக்க) எறிந்து வீசப்படும் பாசக் கயிறு, முள் போன்ற மிக்க கூர்மையை உடைய சூலம் ஆகியவைகளை உடையவனும், கரு மேகம் போன்ற நிறம் கொண்டவனுமாகிய யமன் தன் எருமைக் கடா வாகனத்தின் மீது ஏறி வந்து என்னை நெருங்காமலும், கரு உற்பத்தியான பின் முன்னூற்று ஏழு நாட்களும், மும்மலங்களுக்கு இடமான உடலும், மண், பெண், பொன் ஆகிய மூவாசைகளும், வஞ்சகத்தால் ஏற்படும் பாவங்களும் தீமைகளும் அற்றுப் போகவும், என் வறுமை ஒழியவும், முதிர்ந்த அறிவும், மெய்ஞ் ஞானமும், தகுதி மிக்க சிவ நேசமும் எனக்கு உண்டாக, கழல்கள் அணிந்த, சிலம்புகள் கொண்ட உனது இரு திருவடிகளின் நிழலைத் தருவாயாக. இந்திரன் மகளாகிய மின்னலை ஒத்த தேவயானை ஒரு பக்கத்தில் வீற்றிருக்க, வில் ஏந்திய வேடர்களுடைய மான் போன்ற வள்ளி மற்றொரு பக்கத்தில் வீற்றிருக்க, அதிசயிக்கத்தக்க சிறந்த மயிலின் மீது அமர்ந்து அவர்களை அணைந்தவண்ணம் ஏறிவரும் அழகனே, புனுகு சட்டம் நிறைந்த பன்னீர் இவை நெருங்கிக் கூடிய, வாசனை உள்ள மார்பில் அணிந்துள்ள மெல்லிய மாலையை உடையவனே, பூணூலும் அசைகின்ற பன்னிரண்டு தோள்களை உடைய வீரனே, வாசனை உலாவும் குளிர்ந்த குளங்களும், சோலைகளும், செழிப்பான நெல் தழைத்துள்ள அழகிய வயல்கள் சேர்ந்துள்ளதும், சிறந்த தவச் சீலர்கள் வாழ்வதுமான வளப்பம் பொருந்திய பழைய ஊராகியது இந்த வழுவூர். மகாதேவர், திரி புரங்களை அழித்தவர், சதாசிவர் ஆகிய சிவபெருமானின் மகனாகிய தேவ சிகாமணியே, வழுவூரில்* வீற்றிருந்து அடியார்களுக்கு வாழ்வு அருளும் பெருமாளே. 
* வழுவூர் மயிலாடுதுறைக்குத் தெற்கே இலந்தங்குடி ரயில் நிலையத்துக்கு மேற்கே கால் மைலில் உள்ள தலம்.

பாடல் 810 - வழுவூர் 
ராகம் - ....; தாளம் -

தனனா தத்தன தாத்த தந்தன     தனனா தத்தன தாத்த தந்தன          தனனா தத்தன தாத்த தந்தன ...... தனதான

தலைநா ளிற்பத மேத்தி யன்புற     வுபதே சப்பொரு ளூட்டி மந்திர          தவஞா னக்கட லாட்டி யென்றனை ...... யருளாலுன் 
சதுரா கத்தொடு கூட்டி யண்டர்க     ளறியா முத்தமி ழூட்டி முண்டக          தளிர்வே தத்துறை காட்டி மண்டலம் ...... வலமேவும் 
கலைசோ திக்கதிர் காட்டி நன்சுட     ரொளிநா தப்பர மேற்றி முன்சுழி          கமழ்வா சற்படி நாட்ட முங்கொள ...... விதிதாவிக் 
கமலா லைப்பதி சேர்த்து முன்பதி     வெளியா கப்புக ஏற்றி யன்பொடு          கதிர்தோ கைப்பரி மேற்கொ ளுஞ்செயல் ...... மறவேனே 
சிலைவீ ழக்கடல் கூட்ட முங்கெட     அவுணோ ரைத்தலை வாட்டி யம்பர          சிரமா லைப்புக வேற்ற வுந்தொடு ...... கதிர்வேலா 
சிவகா மிக்கொரு தூர்த்த ரெந்தையர்     வரிநா கத்தொடை யார்க்கு கந்தொரு          சிவஞா னப்பொரு ளூட்டு முண்டக ...... அழகோனே 
மலைமே வித்தினை காக்கு மொண்கிளி     யமுதா கத்தன வாட்டி யிந்துள          மலர்மா லைக்குழ லாட்ட ணங்கிதன் ...... மணவாளா 
வரிகோ ழிக்கொடி மீக்கொ ளும்படி     நடமா டிச்சுரர் போற்று தண்பொழில்          வழுவூர் நற்பதி வீற்றி ருந்தருள் ...... பெருமாளே.

வாழ்வின் தொடக்கத்தில் உன் திருவடியை என் தலை மேல் வைத்து, அன்புடன் உபதேசப் பொருளை எனக்குப் போதித்து, சிவ மந்திரங்களால் என்னைத் தவ ஞானக் கடலில் ஆட்டுவித்து, என்னை உனது திருவருளால் உன்னைச் சார்ந்த சாமர்த்தியம் உள்ள அடியார்களோடு கூட்டி வைத்து, தேவர்களும் அறியாத முத்தமிழ் ஞானத்தைப் புகட்டி, முண்டக உபநிஷதம் முதலிய உபநிஷத உண்மைகளையும் வேத வழிகளையும் புலப்படுத்தி, அக்கினி முதலிய மும்மண்டலங்களையும் உள்ள மேலிடத்தில், இடைகலை பிங்கலை* என்னும் நாடிகளின் மார்க்கமாக ஏற்படும் ஜோதி ஒளியைத் தரிசனம் செய்து வைத்து, ஆன்மாவை நல்ல பேரொளி உள்ள பர நாதத்தோடு (பரசிவத்தோடு) சேர்த்து வைத்து, முன்னதாக, சுழி முனை நாடி விளங்கும் வாசற்படியில் தியானம் கொள்ள, சுவாதிஷ்டான** ஆதாரத்தைக் கடந்து, மூலாதாரத் தலமான திருவாரூர் முதலில் சேர, அது முதலாக உள்ள தலங்கள் பிறவற்றைப் புலப்பட யோக ஒளியை ஏற்றி வைத்து, அன்புடன் ஒளி வீசும் தோகையை உடைய மயில் வாகனத்தின் மேல் நீ வந்து அருளிய செயலை நான் மறக்க மாட்டேன். கிரெளஞ்ச மலை வீழவும், கடல் போன்ற காலாட் படைக்கூட்டம் கெட்டு அழியவும், அசுரர்களின் தலைகளை அழித்து, ஆகாயத்தின் உச்சியில் தலைகளின் மாலையை ஏற்றி வைக்கவும் செலுத்திய ஒளிமயமான வேலனே, சிவகாம சுந்தரியின் ஒப்பற்ற காதலரும், என் தந்தையும், வரிகளை உடைய பாம்பு மாலை அணிந்தவரும் ஆகிய சிவபெருமானுக்கு, மகிழ்ச்சியுடன் ஒப்பற்ற சிவ ஞானப் பொருளை உபதேசித்த, தாமரை மலர் போன்ற முகமுடைய அழகனே, வள்ளி மலையில் இருந்த தினைப் புனத்தைக் காத்து வந்த அழகுக் கிளி, அமுதைப் போல உடலும் மார்பகங்களும் கொண்டவள், கடப்ப மலர் மாலையை கூந்தலில் விளங்க சூட்டிக் கொண்டவள் ஆகிய வள்ளி என்னும் தெய்வ மகளின் கணவனே, நீண்ட கோழிக் கொடி மேலே விளங்கும்படி நடனமாடியவனே, தேவர்கள் போற்றும் குளிர்ந்த சோலைகளை உடைய வழுவூர்*** என்னும் நல்ல ஊரில் வீற்றிருக்கும் பெருமாளே. 
இப்பாடல் அருணகிரிநாதர் திருவடி தீ¨க்ஷ, உபதேசம் முதலிய பேறுகளைப் பெற்ற வரலாற்றைக் குறிக்கும்.
* இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு:நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு 'ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள், சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி, ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை, சுழுமுனை முதலியன) உள்ளன.'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம்.'சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது.'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும் ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும்.
** ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம் 
*** வழுவூர் மயிலாடுதுறைக்குத் தெற்கே இலந்தங்குடி ரயில் நிலையத்துக்கு மேற்கே கால் மைலில் உள்ள தலம்.

பாடல் 811 - கன்னபுரம் 
ராகம் - ....; தாளம் -

தன்னதனத் தன்னதனத் தன்னதனத்     தன்னதனத் தனாதாத்த ...... தந்ததான

அன்னமிசைச் செந்நளிநச் சென்மிகணக் கந்நியமத்     தன்னமயப் புலால்யாக்கை ...... துஞ்சிடாதென் 
றந்நினைவுற் றன்னினைவுற் றன்னியரிற் றன்னெறிபுக்     கன்னியசற் றுலாமூச்ச ...... டங்கயோகம் 
என்னுமருட் கின்னமுடைப் பன்னவைகற் றின்னவைவிட்     டின்னணமெய்த் தடாமார்க்க ...... மின்புறாதென் 
றின்னதெனக் கென்னுமதப் புன்மைகெடுத் தின்னல்விடுத்     தின்னதெனப் படாவாழ்க்கை ...... தந்திடாதோ 
கன்னல்மொழிப் பின்னளகத் தன்னநடைப் பன்னவுடைக்     கண்ணவிரச் சுறாவீட்டு ...... கெண்டையாளைக் 
கன்னமிடப் பின்னிரவிற் றுன்னுபுரைக் கன்முழையிற்     கன்னிலையிற் புகாவேர்த்து ...... நின்றவாழ்வே 
பொன்னசலப் பின்னசலச் சென்னியினற் கன்னபுரப்     பொன்னிநதிக் கராநீர்ப்பு ...... யங்கனாதா 
பொன்மலையிற் பொன்னினகர்ப் புண்ணியர்பொற் பொன்மவுலிப்     பொன்னுலகத் திராசாக்கள் ...... தம்பிரானே.

அன்னப் பறவையின் மேல் அமர்பவனும், (திருமாலின் உந்தியிலுள்ள) செந்தாமரையில் உதித்தவனுமாகிய பிரமன் விதித்த கணக்கில் உள்ள அந்தக் கெடுகாலம் வரை நியமிக்கப்பட்டு இருந்ததின்படி, சோற்றின் மயமான, மாமிசத்தோடு கூடிய இந்த உடல் அழிந்து போகாது என்ற அந்த நினைவின் காரணமாக பல மயக்க எண்ணங்களைக் கொண்டு, அயலார் மீது ஐம்புலன்களின் வழியே சென்று ஈடுபட்டு, பின்னும் சிறிது சிறிதாக உலாவுகின்ற மூச்சு அடங்கும்படி, யோகம் என்ற மயக்கத்தைத் தரும், துன்பத்தைக் கொடுக்கும், பல விதமான குற்றத்துக்கு இடமான நூல்களைக் கற்று, பின் அங்ஙனம் கற்ற இன் பிற பாடங்களையும் விடுத்து, இவ்வாறாக இளைப்புற்றுச் செல்லும் தகாத வழிகள் இன்பத்தைத் தராது என்று உணர்ந்து, இவ்வழிதான் எனக்குத் தகுந்தது என்கின்ற கொள்கையின் இழிவுத் தன்மையை ஒழித்து, துன்பங்கள் யாவையும் ஓட்டி விலக்கி, இத் தன்மையது என்று விளக்க முடியாத பேரின்ப வாழ்க்கையை உனது திருவருள் தராதோ? கற்கண்டு போன்ற பேச்சையும், பின்னப்பட்ட கூந்தலையும், அன்னம் போன்ற நடையையும், வாழை இலைகளால் ஆகிய ஆடையையும் கொண்டவளாய், அந்தச் சுறா மீனையும் அடக்க வல்ல விளக்கம் கொண்டுள்ள கெண்டை மீன் போன்ற கண்களை உடையவளாகிய வள்ளியை களவு கொண்டு போவதற்காக, பொழுது விடிவதற்கு முன், பொருத்தமான இடமாகிய கல் குகையில், கற்சிலை போல் அசைவற்ற நிலையில் புகுந்து வேர்வையுறக் காத்திருந்த செல்வனே, பொன் மலையாகிய மேருவுக்குப் பின்பு அசைவற்றதான (எதற்கும் கலங்காத) சோழ அரசனின் ஆட்சியில் உள்ள அழகிய கன்னபுரம்* என்னும் தலத்தில் வீற்றிருந்து, முதலைகள் வாழும் காவேரி நதிக்கரையில் உள்ள, பாம்பினைச் சடையில் தரித்த சிவபெருமானுக்குத் தலைவனே, கயிலாய மலையிலும், லக்ஷ்மி வாழும் திரு வைகுண்டத்திலும் உள்ள புண்ணியர்களுக்கும், அழகிய பொன் மகுடங்களை அணிந்த, விண்ணுலகத்தில் உள்ள இந்திரர்களுக்கும் தம்பிரானே. 
* கன்னபுரம் தற்போது கண்ணபுரம் என்று வழங்கப்படுகிறது. நன்னிலம் ரயில் நிலையததுக்கு அருகில் உள்ளது.

பாடல் 812 - திருவாஞ்சியம் 
ராகம் - காம்போதி தாளம் - அங்கதாளம் - 6 
தகதகிட-2 1/2, தகிடதகதிமி-3 1/2

தனதாந்த தத்த தனதன     தனதாந்த தத்த தனதன          தனதாந்த தத்த தனதன ...... தனதான

இபமாந்தர் சக்ர பதிசெறி     படையாண்டு சக்ர வரிசைக          ளிடவாழ்ந்து திக்கு விசயம ...... ணரசாகி 
இறுமாந்து வட்ட வணைமிசை     விரிசார்ந்து வெற்றி மலர்தொடை          யெழிலார்ந்த பட்டி வகைபரி ...... மளலேபந் 
தபனாங்க ரத்ந வணிகல     னிவைசேர்ந்த விச்சு வடிவது          தமர்சூழ்ந்து மிக்க வுயிர்நழு ...... வியபோது 
தழல்தாங்கொ ளுத்தி யிடவொரு     பிடிசாம்பல் பட்ட தறிகிலர்          தனவாஞ்சை மிக்கு னடிதொழ ...... நினையாரே 
உபசாந்த சித்த குருகுல     பவபாண்ட வர்க்கு வரதன்மை          யுருவோன்ப்ர சித்த நெடியவன் ...... ரிஷிகேசன் 
உலகீன்ற பச்சை யுமையணன்     வடவேங்க டத்தி லுறைபவ          னுயர்சார்ங்க சக்ர கரதலன் ...... மருகோனே 
த்ரிபுராந்த கற்கு வரசுத     ரதிகாந்தன் மைத்து னமுருக          திறல்பூண்ட சுப்ர மணியஷண் ......முகவேலா 
திரைபாய்ந்த பத்ம தடவய     லியில்வேந்த முத்தி யருள்தரு          திருவாஞ்சி யத்தி லமரர்கள் ...... பெருமாளே.

யானைப் படை, காலாட் படை முதலிய படைகளையுடைய சக்ரவர்த்தியாகி, நிறைந்துள்ள நால்வகைச் சேனைகளையும் ஆண்டுகொண்டு, ஆக்ஞாசக்கரம் தன் வேலை முறைகளை நடத்த அவ்வாறே வாழ்ந்து, திக்குவிஜயம் செய்து, இந்தப் புவிக்கு மன்னனாகி மிக்க பெருமை அடைந்து, வட்ட வடிவான திண்டுமெத்தை மேலுள்ள விரிப்பில் சாய்ந்து, வெற்றி வாகையான மலர் மாலைகளும், அழகு மிகுந்த ஆடைகளும், நறுமணக் கலவைப் பூச்சுக்களும், சூரிய ஒளியைத் தன்னிடத்தில் கொண்ட ரத்தினங்களாலான ஆபரணங்களும், இவையெல்லாம் சேர்ந்தாலும் ஒரு மனித வித்துவின் வடிவம்தான் இவ்வுடல். தம் உறவினர்கள் சூழ்ந்திருக்க, இந்த உடலினின்றும் பெருமைமிக்க உயிர் பிரிந்து போகும் தருணம், அந்த நெருப்பு உடலைக் கொளுத்திவிட, முடிவில் அவ்வுடல் ஒரு பிடி சாம்பல் என்ற நிலையை அடைவதை யாரும் அறியார். பொருளாசை மிகுந்து, உன் திருவடிகளைத் தொழ நினைப்பதில்லை. மனச்சாந்தி உடையவர்களும், குரு வம்சத்தைச் சேர்ந்தவர்களுமான பஞ்சபாண்டவர்களுக்கு வேண்டிய வரங்களைத் தந்தவனும், கருமேக நிறத்தவனும், கீர்த்திமானும், விஸ்வரூபனும், இந்திரியங்களை வென்றவனும், லோகமாதாவாகிய பச்சைநிற உமாதேவியின் அண்ணனும், வடவேங்கடம் என்னும் திருமலையில் வாழ்பவனும், உயர்ந்த சாரங்கம் என்ற வில்லையும், சுதர்சனம் என்ற சக்கரத்தையும் கரத்தில் ஏந்தும் திருமாலின் மருமகனே, திரிபுரங்களுக்கு யமனாய் இருந்த சிவனுக்கு சிரேஷ்டமான பிள்ளையே, ரதியின் கணவன் மன்மதனுக்கு மைத்துனன்* முறையான முருகனே, பராக்ரமம் வாய்ந்த சுப்பிரமணியனே, ஆறுமுகனே, வேலனே, அலைகள் பாயும் தாமரைக் குளங்கள் உள்ள வயலூரின் அரசனே, முக்தித்தலமாகிய** திருவாஞ்சியத்தில்*** வீற்றிருக்கும் தேவர்கள்தம் பெருமாளே. 
* முருகன் திருமாலின் மருமகன். மன்மதன் திருமாலின் மகன். எனவே முருகன் மன்மதனின் மைத்துனன்.
** முக்தித்தலங்கள் பின்வருமாறு:தில்லைவனம், காசி, திருவாரூர், மாயூரம், முல்லைவனம், மதுரை, திருப்பரங்குன்றம், திருநெல்வேலி, காஞ்சீபுரம், திருக்கழுக்குன்றம், வேதாரண்யம், திருவண்ணாமலை, திருக்காளத்தி, திருவாஞ்சியம். 
*** திருவாஞ்சியம் திருவாரூர் தலத்துக்கு வடமேற்கில் நன்னிலத்துக்கு மேற்கில் 7 மைலில் உள்ளது.

பாடல் 813 - திருச்செங்காட்டங்குடி 
ராகம் - ஸிந்துபைரவி தாளம் - சதுஸ்ரத்ருவம் - கண்டநடை - 35 
நடை - தகதகிட எடுப்பு - /4/4/4 0

தந்தான தானதன தானதன தானதன     தந்தான தானதன தானதன தானதன          தந்தான தானதன தானதன தானதன ...... தனதான

வங்கார மார்பிலணி தாரொடுயர் கோடசைய     கொந்தார மாலைகுழ லாரமொடு தோள்புரள          வண்காதி லோலைகதிர் போலவொளி வீசஇதழ் ...... மலர்போல 
மஞ்சாடு சாபநுதல் வாளனைய வேல்விழிகள்     கொஞ்சார மோககிளி யாகநகை பேசியுற          வந்தாரை வாருமிரு நீருறவெ னாசைமய ...... லிடுமாதர் 
சங்காளர் சூதுகொலை காரர்குடி கேடர்சுழல்     சிங்கார தோளர்பண ஆசையுளர் சாதியிலர்          சண்டாளர் சீசியவர் மாயவலை யோடடியெ ...... னுழலாமற் 
சங்கோதை நாதமொடு கூடிவெகு மாயையிருள்     வெந்தோட மூலஅழல் வீசவுப தேசமது          தண்காதி லோதியிரு பாதமலர் சேரஅருள் ...... புரிவாயே 
சிங்கார ரூபமயில் வாகனந மோநமென     கந்தாகு மாரசிவ தேசிகந மோநமென          சிந்தூர பார்வதிசு தாகரந மோநமென ...... விருதோதை 
சிந்தான சோதிகதிர் வேலவந மோநமென     கங்காள வேணிகுரு வானவந மோநமென          திண்சூர ராழிமலை தூள்படவை வேலைவிடு ...... முருகோனே 
இங்கீத வேதபிர மாவைவிழ மோதியொரு     பெண்காத லோடுவன மேவிவளி நாயகியை          யின்பான தேனிரச மார்முலைவி டாதகர ...... மணிமார்பா 
எண்டோளர் காதல்கொடு காதல்கறி யேபருகு     செங்காடு மேவிபிர காசமயில் மேலழகொ          டென்காதல் மாலைமுடி ஆறுமுக வாவமரர் ...... பெருமாளே.

மார்பில் அணிந்துள்ள பொன்மாலையுடன் உயர்ந்த மார்பகங்களும் அசைய, மலர்க் கொத்துக்கள் நிறைந்த மாலை அணிந்த கூந்தலும் மணிமாலையும் தோளில் புரண்டு அசைய, வளமான காதில் காதணி சூரிய ஒளி போன்ற ஒளியை வீச, உதடுகள் குமுத மலர் போல் விளங்க, மேகத்தில் தோன்றும் வானவில் போன்ற நெற்றி, வாளையும் வேலையும் போன்ற கண்கள், இவற்றுடன் கொஞ்சுதல் மிக்க ஆசைக் கிளி போன்று சிரித்துப் பேசி, நெருங்கி வந்தவர்களை வாரும், இங்கே இரும், நீர் நமக்கு உறவினர் ஆயிற்றே, என்றெல்லாம் ஆசை மயக்கத்தை ஊட்டுகின்ற பொது மாதர்கள், கூடிக் களிப்பவர்கள், சூதாடிகள், கொலையும் செய்யும் குணத்தினர், குடியைக் கெடுப்பவர்கள், திரிகின்றவர்கள், அலங்காரத் தோளினர், பண ஆசையுள்ளவர்கள், சாதிபேதம் கவனிக்காது பலருடனும் கூடுபவர், இழிகுலத்தவர், சீ, சீ, இத்தகையோரது மாயவலையில் அடியேன் சிக்கி அலையாமல், யோகவழியில் கிடைக்கும் தசநாதங்களாகிய* ஓசையை அனுபவித்து அதனோடு கலந்து, மிக்க மாயையாம் இருள் வெந்து அழிந்து போக, மூலாக்கினி வீசிட, உபதேசத்தை என் குளிர்ந்த காதில் ஓதி, உன் இரண்டு பாதமலரைச் சேரும்படியான திருவருளைத் தந்தருள்க. அலங்கார உருவத்தனே, மயில் வாகனனே, போற்றி, போற்றி, என்று கந்தனே, குமரனே, குருநாதனே, போற்றி, போற்றி, என்று குங்குமம் அணிந்த பார்வதியின் பிள்ளையாய் அமைந்தவனே போற்றி, போற்றி, என்று வெற்றிச் சின்னங்களின் ஓசைகள் கடல் போல முழங்க ஜோதி ரூபம் கொண்ட வேலாயுதனே போற்றி, போற்றி, என்று எலும்பு மாலைகளை அணிந்தவரும், ஜடாமுடி உடையவருமான சிவபிரானுக்கு குருநாதன் ஆனவனே போற்றி, போற்றி, என்று முழங்கவும், வலிமை மிக்க சூரன் முதலியவரையும், கடலையும், கிரெளஞ்ச மலையையும் பொடியாகும்படி கூரிய வேலைச் செலுத்திய முருகனே. இனிமை வாய்ந்த வேதம் பயின்ற பிரமன் விழும்படியாக மோதியும், ஒப்பற்ற பெண்ணாகிய வள்ளிமேல் காதலோடு அவள் வசித்த காட்டிற்குச் சென்று அந்த வள்ளிநாயகியின் இன்பம் நிறைந்த, தேனைப் போல் இனிமையான மார்பினைவிட்டு நீங்காத கரதலமும் அழகிய மார்பும் உடையவனே, எட்டுத் தோள்களை உடைய சிவபிரான் ஆசையுடனே பிள்ளைக்கறியை உண்ணப்புகுந்த** திருச்செங்காட்டங்குடி*** என்னும் தலத்தைச் சார்ந்து, ஒளிவீசும் மயில் மீது அழகோடு அமர்ந்து, எனது ஆசையால் எழுந்த இந்தத் தமிழ் மாலையைப் புனைந்தருளும் ஆறுமுகனே, தேவர்களின் பெருமாளே. 
* சங்கோதை நாதம் - யோகிகள் உணரும் பத்து நாதங்கள் பின்வருமாறு:கிண்கிணி, சிலம்பு, மணி, சங்கம், யாழ், தாளம், வேய்ங்குழல், பேரி, மத்தளம், முகில்).
** சிவபிரான் திருச்செங்காட்டங்குடியில் இருந்த சிறுத்தொண்டரின் சிவபக்தியைச் சோதிக்கக் கருதி, ஒரு சிவவிரதியர் போல வந்து பிள்ளைக்கறி கேட்க, தம் ஒரே மகன் சீராளனைக் கறி செய்தளித்தார். இறுதியில் சிவபிரான் தரிசனம் தந்து சீராளனை உயிர்ப்பித்து, சிறுத்தொண்டரையும் அவரது மனைவியையும், குழந்தையையும் வாழ்த்திய புராணம் இங்கு குறிப்பிடப்படுகிறது - பெரிய புராணம். 
*** திருச்செங்காட்டங்குடி நன்னிலம் ரயில் நிலையத்திலிருந்து தென்கிழக்கே 6 மைலில் உள்ளது.

பாடல் 814 - திருவிற்குடி 
ராகம் - ....; தாளம் -

தத்த தத்ததன தத்த தத்ததன     தத்த தத்ததன தத்த தத்ததன          தத்த தத்ததன தத்த தத்ததன ...... தந்ததான

சித்தி ரத்திலுமி குத்த பொற்பவள     மொத்த மெத்தஅழ குற்ற குத்துமுலை          சிற்ப சிற்பமயி ரொத்த சிற்றிடைய ...... வஞ்சிமாதர் 
சித்த மத்தனையு முற்ற ளப்பகடல்     மொய்த்த சிற்றுமண லுக்கு மெட்டியது          சிக்கு மைக்குழல்கள் கஸ்து ரிப்பரிம ...... ளங்கள்வீசப் 
பத்தி ரத்திலுமி குத்த கட்கயல்கள்     வித்து ருத்தநுவ ளைத்த நெற்றிவனை          பற்க ளைப்பளிரெ னச்சி ரித்துமயல் ...... விஞ்சைபேசிப் 
பச்சை ரத்நமயி லைப்பொ லத்தெருவி     லத்தி யொத்தமத மொத்து நிற்பர்வலை          பட்டு ழைத்துகுழி யுற்ற அத்தியென ...... மங்குவேனோ 
தத்த னத்தனத னத்த னத்தனன     தித்தி மித்திமிதி மித்தி மித்திமித          தக்கு டுக்குடுடு டுக்கு டுக்குடென ...... சங்குபேரி 
சத்த முற்றுகடல் திக்கு லக்கிரிகள்     நெக்கு விட்டுமுகி லுக்கு சர்ப்பமுடி          சக்கு முக்கிவிட கட்க துட்டசுர ...... ரங்கமாள 
வெற்றி யுற்றகதிர் பத்தி ரத்தையரு     ளிச்சு ரர்க்கதிப திப்ப தத்தையுறு          வித்த ளித்தமதி பெற்ற தத்தைமண ...... முண்டவேலா 
வெட்கி டப்பிரம னைப்பி டித்துமுடி     யைக்கு லைத்துசிறை வைத்து முத்தர்புகழ்          விற்கு டிப்பதியி லிச்சை யுற்றுமகிழ் ...... தம்பிரானே.

சித்திரத்தில் காணப்படுவதை விட சிறப்பை உடையதாகவும், பொன்னிறம் பவள நிறம் உடையதாகவும், மிக அழகும் திரட்சியும் உடையதுமான மார்பகங்களையும், மிக நுண்ணியதான மயிரிழை போன்று மெல்லிய சிறிய இடையையும் கொண்ட வஞ்சிக் கொடி போன்ற விலைமாதர்களுடைய உள்ளம் அத்தனையும் முழுமையும் அளந்தால், அது கடலில் மொய்த்துள்ள சிறு மணல் அளவையும் எட்டத் தக்கதாகும். அந்த மாதர்கள் சிக்குள்ள தங்கள் கரிய கூந்தல்கள் கஸ்தூரி வாசனை வீச, வாளினும் மிக்க கூரிய கண்களாகிய கயல் மீன்கள் மின்னல் போல் ஒளி விடுவதாய், வில்லை வளைத்தது போன்ற நெற்றி இவைகளுடன் உரு அமைந்த பற்களைப் பளீரென்று நகைத்துக் காட்டி, காமத்தை ஊட்டும் மாய வித்தைப் பேச்சுக்களைப் பேசி, பச்சை மரகத மயிலைப் போல, வீதியில், யானைக்கு உற்ற மதம் போன்று, மதத்துடன் நிற்பார்கள். இத்தகைய விலைமாதர்களின் வலையில் விழுந்து உழைத்து, படு குழியில் விழுந்த யானையைப் போல மனம் குலைந்து நிற்பேனோ? தத்த னத்தனத னத்த னத்தனன தித்தி மித்திமிதி மித்தி மித்திமித தக்கு டுக்குடுடு டுக்கு டுக்குடு என்று சங்கும், முரசும் ஒலி செய்து, கடலும் திக்குகளில் உள்ள சிறந்த (எட்டு) மலைகளும் நெகிழ்ந்து கட்டு விட, மேக இடியைக் கேட்டு ஆதி சேஷனது முடிகளும் கண்களும் துன்பம் அடைய, வாள் ஏந்திய துஷ்டராகிய அசுரர்களின் உடலின் அங்கங்கள் வெட்டுப்பட, வெற்றி கொண்ட ஒளி வேலாயுதத்தைச் செலுத்தி, தேவர்களின் தலைமையான நிலையை மீண்டும் அடையும்படி அருள் செய்து, யானையாகிய ஐராவதம் வளர்த்த கிளி போன்ற தேவயானையைத் திருமணம் செய்து கொண்ட வேலனே, வெட்கப்படும்படி பிரமனைப் பிடித்து, அவன் குடுமியை அலைவித்து, அவனைச் சிறையிலிட்டு, ஜீவன் முக்தர்களாகிய பெரியோர்கள் புகழ்கின்ற திருவிற்குடி* என்னும் தலத்தில் ஆசை பூண்டு மகிழ்கின்ற தம்பிரானே. 
* திருவாரூருக்கு அருகில் உள்ளது.

பாடல் 815 - விஜயபுரம் 
ராகம் - ஹம்ஸாநந்தி தாளம் - சதுஸ்ர ரூபகம் - 6

தனதன தந்தன தானன தனதன தந்தன தானன     தனதன தந்தன தானன ...... தனதான

குடல்நிண மென்புபு லால்கமழ் குருதிந ரம்பிவை தோலிடை     குளுகுளெ னும்படி மூடிய ...... மலமாசு 
குதிகொளு மொன்பது வாசலை யுடையகு ரம்பையை நீரெழு     குமிழியி னுங்கடி தாகியெ ...... யழிமாய 
அடலையு டம்பைய வாவியெ அநவர தஞ்சில சாரமி     லவுடத மும்பல யோகமு ...... முயலாநின் 
றலமரு சிந்தையி னாகுல மலமல மென்றினி யானுநி     னழகிய தண்டைவி டாமல ...... ரடைவேனோ 
இடமற மண்டு நிசாசர ரடைய மடிந்தெழு பூதர     மிடிபட இன்பம கோததி ...... வறிதாக 
இமையவ ருஞ்சிறை போயவர் பதியு ளிலங்க விடாதர     எழில்பட மொன்று மொராயிர ...... முகமான 
விடதர கஞ்சுகி மேருவில் வளைவதன் முன்புர நீறெழ     வெயில்நகை தந்த புராரிம ...... தனகோபர் 
விழியினில் வந்து பகீரதி மிசைவள ருஞ்சிறு வாவட     விஜயபு ரந்தனில் மேவிய ...... பெருமாளே.

குடல், கொழுப்பு, எலும்பு, மாமிசம், பரந்துள்ள ரத்தம், நரம்பு இவைகள் தோலின் இடையே குளிர்ச்சியாக இருக்குமாறு அமையும்படி வைத்து மூடப்பட்டுள்ளதும், மலங்களும், பிற அழுக்குகளும் பொதிந்துள்ள, ஒன்பது துவாரங்களை உடைய சிறு குடிலாகிய இந்த உடலை, நீரிலே தோன்றும் குமிழியிலும் வேகமாக அழியப்போகின்ற, துன்பத்துக்கு ஈடான இவ்வுடலை விரும்பி, எப்போதும் சில பயனற்ற மருந்துகளையும், பலவித யோகப் பயிற்சிகளையும் அநுஷ்டித்துப் பார்த்து வேதனைப்படுகின்ற மனத் துன்பம் போதும், போதும். என்றைக்குத்தான் இனி நானும் அழகிய தண்டையை எப்போதும் அணிந்துள்ள உன் திருவடிமலரை அடைவேனோ, தெரியவில்லையே. இடைவெளி விடாது நெருக்கும் அசுரர்கள் எல்லாரும் இறக்கவும், (கிரெளஞ்சமலை முதலான) ஏழு குலகிரிகள் இடிபட்டுப் பொடியாகவும், காட்சிக்கு இன்பம் தரும் பெருங்கடல் வற்றிப் போகவும், தேவர்களும் சூரனின் சிறையிலிருந்து நீங்கி, அவர்களது அமராவதி என்ற ஊரில் விளங்கவும் செய்வித்த ஆதரவாளனே, அழகிய பணாமுடி பொருந்திய, ஓராயிரம் முகங்களைக் கொண்ட விஷத்தைத் தரித்துள்ள ஆதிசேஷன் மேருமலை என்ற வில்லில் நாணாகப் பூட்டப்பட்டு அந்த வில் வளைபடும் முன்னரே திரிபுரத்தை சாம்பலாகச் செய்ய ஒளிவீசும் புன்சிரிப்பை வெளியிட்ட திரிபுரப் பகைவர், மன்மதனைக் கோபித்து (கண்ணழலாலே) எரித்தவர், ஆகிய சிவபிரானது கண்களிலிருந்து பொறியாகப் பிறந்து, கங்கையின் மீது வளர்ந்த சிறுவனே, வட விஜயபுரம்* என்ற தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* விஜயபுரம் திருவாரூர் நகரின் ஒரு பகுதி.

பாடல் 816 - திருவர்ருர் 
ராகம் - ....; தாளம் -

தானா தானா தானா தானா     தானா தானத் ...... தனதான

கூசா தேபா ரேசா தேமால்     கூறா நூல்கற் ...... றுளம்வேறு 
கோடா தேவேல் பாடா தேமால்     கூர்கூ தாளத் ...... தொடைதோளில் 
வீசா தேபேர் பேசா தேசீர்     வேதா தீதக் ...... கழல்மீதே 
வீழா தேபோய் நாயேன் வாணாள்     வீணே போகத் ...... தகுமோதான் 
நேசா வானோ ¡£சா வாமா     நீபா கானப் ...... புனமானை 
நேர்வா யார்வாய் சூர்வாய் சார்வாய்     நீள்கார் சூழ்கற் ...... பகசாலத் 
தேசா தீனா தீனா ¡£சா     சீரா ரூரிற் ...... பெருவாழ்வே 
சேயே வேளே பூவே கோவே     தேவே தேவப் ...... பெருமாளே.

நான் நாணம் கொள்ளாமல், உலகத்தோர் என்னைப் பழிக்காமல், உன் பெருமையைக் கூறாத அசட்டு நூல்களைக் கற்று என் உள்ளம் மாறுபட்டு கோணல் வழியைப் பின்பற்றாமல், உன் வேலாயுதத்தை நான் பாடாமலும், ஆசை மிகுந்து கூதாள மலர்மாலையை உன் தோள்களில் வீசாமலும், உன் புகழைப் பற்றி நான் பேசாமலும், சிறப்பான வேதங்களுக்கும் எட்டாத உன் திருவடிகளில் வீழாமலும், அலைந்து போய், நாயைவிடக் கீழோனான அடியேனுடைய வாழ்நாள் வீணாகப் போவது நீதியாகுமோ? அன்பனே, தேவர்களின் தெய்வமே, அழகனே, கடப்பமாலையை அணிந்தவனே, காட்டில் தினைப்புனத்தில் உள்ள மான்போன்ற வள்ளியைச் சந்தித்தவனே, உள்ளம் குளிர்ந்தவனே, சூரன் இருக்கும் மகேந்திரபுரியைச் சென்றடைந்து போர்செய்தவனே, பெரிய மேகங்கள் சூழ்ந்த கற்பகத் தருக்கள் நிறைந்துள்ள தேசமாகிய தேவலோகத்துக்கு உரிமையாளனே, அனாதைகளின் ரட்சகக் கடவுளே, சிறப்பு வாய்ந்த திருவாரூரில்* வீற்றிருக்கும் பெரும் செல்வமே, சிவப்பு நிறத்தோனே, முருகவேளே, மிக்க பொலிவுள்ளவனே, தலைவனே, தேவே தேவப் பெருமாளே. 
* திருவாரூர் நாகப்பட்டினத்துக்கு மேற்கே 14 மைலில் உள்ளது. மூவரின் தேவாரமும் போற்றும் முதுநகர்.

பாடல் 817 - திருவாருர் 
ராகம் - ...; தாளம் -

தானா தானா தானா தானா     தானா தானத் ...... தனதான

கூர்வாய் நாராய் வாராய் போனார்     கூடா ரேசற் ...... றலஆவி 
கோதா னேன்மா தாமா றானாள்     கோளே கேள்மற் ...... றிளவாடை 
ஈர்வாள் போலே மேலே வீசா     ஏறா வேறிட் ...... டதுதீயின் 
ஈயா வாழ்வோர் பேரே பாடா     ஈடே றாரிற் ...... கெடலாமோ 
சூர்வா ழாதே மாறா தேவாழ்     சூழ்வா னோர்கட் ...... கருள்கூருந் 
தோலா வேலா வீறா ரூர்வாழ்     சோதீ பாகத் ...... துமையூடே 
சேர்வாய் நீதீ வானோர் வீரா     சேரா ரூரைச் ...... சுடுவார்தஞ் 
சேயே வேளே பூவே கோவே     தேவே தேவப் ...... பெருமாளே.

கூர்மையான நீண்ட வாயை உடைய நாரையே, இங்கு வருவாய். என்னை விட்டுப் பிரிந்தவர் மீண்டும் வந்து என்னைத் தழுவ மாட்டாரோ? கொஞ்சம் அல்ல, என் உயிர் பயனற்றது ஆயிற்று. என் தாயும் என்னோடு மாறுபட்டுப் பகை ஆனாள். சுற்றத்தார்கள் கோள் மூட்டுதலிலையே ஈடுபட்டு இருக்கின்றார்கள். மேலும் இள வாடைக் காற்று அறுக்கின்ற வாளைப் போல் என் மேல் வீசி, எறிகின்ற நெருப்பைப் போல் உடல் மீது படுகின்றது. ஒருவருக்கும் கொடாமல் வாழ்கின்றவர்களின் பேர்களைப் பாடி ஈடேறாது தவிப்போர் போல நானும் கெட்டுப் போகலாமோ? சூரன் வாழாத வண்ணம், தங்களது சுக நிலை மாறாமல் உள்ள வாழ்வைச் சூழும் தேவர்களுக்கு அருள் புரிந்த, தோல்வியைக் கண்டறியாத வேலனே, மேம்பட்டு விளங்கும் திருவாரூரில்* வீற்றிருக்கும் சோதி மயமான சிவபெருமானுடைய பாகத்தில் உள்ள உமா தேவி (இவர்கள்) மத்தியில் (சோமாஸ்கந்த மூர்த்தியாய் உருவில்) விளங்குவாய். நீதிப் பெருமானே, தேவர்களுக்குத் தலைமை தாங்கும் வீரனே, பகைவர்களுடைய திரிபுரங்களைச் சுட்டவராகிய சிவபெருமானுடைய குழந்தையே, அரசே, பொலிவு உள்ளவனே, தலைவனே தேவனே, தேவர்கள் பெருமாளே. 
* திருவாரூர் நாகப்பட்டினத்துக்கு மேற்கே 14 மைலில் உள்ளது. மூவரின் தேவாரமும் போற்றும் முதுநகர்.இப்பாட்டு அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவியாக புலவர் தம்மையே எண்ணிப் பாடியது.தாயாரின் கோபம், ஊர்ப் பெண்களின் ஏச்சு, வாடைக் காற்று முதலியன தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.

பாடல் 818 - திருவர்ருர் 
ராகம் - நீலாம்பரி தாளம் - ஆதி 2 களை

தானா தானா தானா தானா     தானா தானத் ...... தனதான

பாலோ தேனோ பாகோ வானோர்     பாரா வாரத் ...... தமுதேயோ 
பாரோர் சீரோ வேளேர் வாழ்வோ     பானோ வான்முத் ...... தெனநீளத் 
தாலோ தாலே லோபா டாதே     தாய்மார் நேசத் ...... துனுசாரந் 
தாரா தேபே ¡£யா தேபே     சாதே யேசத் ...... தகுமோதான் 
ஆலோல் கேளா மேலோர் நாண்மா     லானா தேனற் ...... புனமேபோய் 
ஆயாள் தாள்மேல் வீழா வாழா     ஆளா வேளைப் ...... புகுவோனே 
சேலோ டேசே ராரால் சாலார்     சீரா ரூரிற் ...... பெருவாழ்வே 
சேயே வேளே பூவே கோவே     தேவே தேவப் ...... பெருமாளே.

நீ பால் தானோ, தேன்தானோ, வெல்லக்கட்டிதானோ? தேவர்கள் பாற்கடலில் இருந்து கடைந்தெடுத்த அமுதமோ? நீ இவ்வுலகிலுள்ளோரின் சிறப்புப் பொருளோ? மன்மதனுக்கு நிகரான வாழ்வோ நீ? பானுவோ (சூரியனோ) நீ? சிறந்த முத்தோ நீ? என்றெல்லாம் விரிவாகத் தாலோ தாலேலோ என்று தாய்மார் என்னைத் தாலாட்டுப் பாடாமலும், தாய்மார் அன்புடன் என்னை நினைத்து தாய்ப்பால் தராமலும், புகழ்ச்சிக்கு உரிய பெயர் ஒன்றும் எனக்குச் சூட்டாமலும், அன்புடன் என்னோடு பேசாமலும், ஏச்சுக்கு இடமாக நான் வளர்வது நீதியாகுமோ? வள்ளி ஆலோலம் என்று கூவி பறவைகளை ஓட்டும் குரலோசை கேட்டு, முன்னொரு நாளில், ஆசை குன்றாத நிலையில் அவளிருந்த தினைப்புனத்திற்குச் சென்று, அந்த வள்ளித் தாயின் பாதங்களில் விழுந்தும், அதனால் வாழ்வு பயன்பெற்றது என்று கூறி வாழ்ந்தும், அவளுக்கு ஆளாக, வேளைக்காரனாக, சமயத்தில் புகுந்து விளையாடியவனே, சேல் மீனோடு சேர்ந்து ஆரல் மீன்கள் மிக நிறைந்துள்ள சீர்பெற்ற திருவாரூர்* தலத்தின் பெருஞ் செல்வமே, இறைவன் சேயே, கந்த வேளே, மலர் போன்ற பொலிவு உள்ளவனே, அரசே, இறைவனே, தேவர்களின் பெருமாளே. 
* திருவாரூர் நாகப்பட்டினத்துக்கு மேற்கே 14 மைலில் உள்ளது. மூவரின் தேவாரமும் போற்றும் முதுநகர்.

பாடல் 819 - திருவாருர்
ராகம் - . ரஞ்சனி தாளம் - தி.ர ஏகம்

தானானத் தனதான தானானத் ...... தனதான

நீதானெத் தனையாலும் நீடூழிக் ...... க்ருபையாகி 
மாதானத் தனமாக மாஞானக் ...... கழல்தாராய் 
வேதாமைத் துனவேளே வீராசற் ...... குணசீலா 
ஆதாரத் தொளியானே ஆரூரிற் ...... பெருமாளே.

நீ ஒருவன்தான் எல்லா வகையாலும் ஊழிக்காலம் வரைக்கும் எப்போதும் அருள் நிறைந்தவனாகி சிறந்த தானப் பொருளாக மேலான ஞான பீடமாகிய உன் திருவடிகளைத் தந்தருள்வாய். பிரம்மனுக்கு மைத்துனனாகிய முருக வேளே, வீரனே, நற்குணங்கள் யாவும் நிரம்பப் பெற்றவனே, ஆறு* ஆதாரங்களிலும் ஒளிவிட்டுப் பிரகாசிப்பவனே, திருவாரூரில்** இருக்கும் பெருமாளே. 
* ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம் 
** திருவாரூர் நாகப்பட்டினத்துக்கு மேற்கே 14 மைலில் உள்ளது. மூவரின் தேவாரமும் போற்றும் முதுநகர்.

பாடல் 820 - திருவாருர்
ராகம் - ....; தாளம் -

தனதன தனன தனதன தனன     தானான தந்த ...... தனதான

மகரம துகெட இருகுமி ழடைசி     வாரார்ச ரங்க ...... ளெனநீளும் 
மதர்விழி வலைகொ டுலகினில் மனிதர்     வாணாள டங்க ...... வருவார்தம் 
பகர்தரு மொழியில் ம்ருகமத களப     பாடீர கும்ப ...... மிசைவாவிப் 
படிமன துனது பரிபுர சரண     பாதார விந்த ...... நினையாதோ 
நகமுக சமுக நிருதரு மடிய     நானாவி லங்கல் ...... பொடியாக 
நதிபதி கதற வொருகணை தெரியு     நாராய ணன்றன் ...... மருகோனே 
அகனக கனக சிவதல முழுது     மாராம பந்தி ...... யவைதோறும் 
அரியளி விததி முறைமுறை கருது     மாரூர மர்ந்த ...... பெருமாளே.

மகர மீனும் தன் முன்னே நிலை கலங்கிட, குமிழம் பூப் போன்ற மூக்கை நெருங்கிச் சேர்ந்து, நீளம் மிக்க அம்புகள் என்று சொல்லும்படி நீண்டுள்ளதாய், துறுதுறுப்பு மிக்க இரு கண்கள் (என்னும்) வலையைக் கொண்டு, உலகில் ஆண் மக்களின் வாழ்நாள் சுருங்கும்படி எதிர் தோன்றி வரும் விலைமாதர்களின் பேசும் பேச்சிலும், கஸ்தூரி, கலவைச் சந்தனம் ஆகியவைகளை அணிந்த குடம் போன்ற மார்பகம் மீதிலும் தாவிப் படியும் என் மனம் உன்னுடைய சிலம்பு அணிந்த தாமரைத் திருவடிகளை நினைக்க மாட்டாதோ? மலை இடங்களின் முன்புள்ள அசுரர்கள் இறந்து பட, பலவிதமான மலைகளும் பொடியாக, கடல் கதற, ஒப்பற்ற அம்பைச் செலுத்திய (ராமராம்) திருமாலின் மருகனே, அகன்ற மலை இடங்களுக்கு உரியவனே, செம் பொன் வடிவினனே, சிவ தலங்கள் எல்லாவற்றிலும் அமர்ந்தவனே, சோலைகளின் வரிசைகள் தோறும் அழகிய வண்டுகளின் கூட்டம் வரிசை வரிசையாக (மலர்த் தேனை) முரலி விரும்பும் திருவாரூரில்* அமர்ந்த பெருமாளே. 
* திருவாரூர் நாகப்பட்டினத்துக்கு மேற்கே 14 மைலில் உள்ளது. மூவரின் தேவாரமும் போற்றும் முதுநகர்.

பாடல் 821 - திருவாருர்
ராகம் - ....; தாளம் -

தனன தனதன தனதன தனதன     தனன தனதன தனதன தனதன          தனன தனதன தனதன தனதன ...... தனதான

கரமு முளரியின் மலர்முக மதிகுழல்     கனம தெணுமொழி கனிகதிர் முலைநகை          கலக மிடுவிழி கடலென விடமென ...... மனதூடே 
கருதி யனநடை கொடியிடை யியல்மயில்     கமழு மகிலுட னிளகிய ம்ருகமத          களப புளகித கிரியினு மயல்கொடு ...... திரிவேனும் 
இரவு பகலற இகலற மலமற     இயலு மயலற விழியினி ரிழிவர          இதய முருகியெ யொருகுள பதமுற ...... மடலூடே 
யெழுத அரியவள் குறமக ளிருதன     கிரியில் முழுகின இளையவ னெனுமுரை          யினிமை பெறுவது மிருபத மடைவது ...... மொருநாளே 
சுரபி மகவினை யெழு¦பொருள் வினவிட     மனுவி னெறிமணி யசைவுற விசைமிகு          துயரில் செவியினி லடிபட வினவுமி ...... னதிதீது 
துணிவி லிதுபிழை பெரிதென வருமநு     உருகி யரகர சிவசிவ பெறுமதொர்          சுரபி யலமர விழிபுனல் பெருகிட ...... நடுவாகப் 
பரவி யதனது துயர்கொடு நடவிய     பழுதின் மதலையை யுடலிரு பிளவொடு          படிய ரதமதை நடவிட மொழிபவ ...... னருளாரூர்ப் 
படியு லறுமுக சிவசுத கணபதி     யிளைய குமரநி ருபபதி சரவண          பரவை முறையிட அயில்கொடு நடவிய ...... பெருமாளே.

கைகள் தாமரையின் மலரையும், முகம் சந்திரனையும், கூந்தல் மேகத்தையும், மதிக்கத் தக்க சொற்கள் பழத்தையும், ஒளி பொருந்திய பற்கள் முல்லை மலரையும், போரை விளைவிக்கும் கண்கள் கடல் என்னும்படியும் நஞ்சையும் ஒக்கும் என்றும் மனதுக்குள்ளே எண்ணி, அன்னப் பறவையைப் போன்ற நடை, கொடி போன்ற இடை, மயில் போன்ற இயல்பு, நறு மணம் வீசும் அகிலுடன் இழைந்துள்ள கஸ்தூரிக் கலவை, மகிழ்ச்சி தரும் மலை போன்ற மார்பகம் இவற்றையுடைய விலைமகளிர் மீது மோகம் கொண்டு திரிகின்ற நானும், இரவு பகல் என்ற வித்தியாசம் இல்லாதவாறு, பகையான எண்ணம் அற, (ஆணவம், கன்மம், மாயை என்ற) மும் மலங்கள் அற, பொருந்துகின்ற ஆசைகள் அற, கண்களில் கண்ணீர் ஒழுக, உள்ளம் உருகி பாகு வெல்லம் போன்ற பதத்தை நிலையாகப் பொருந்த, எழுதுவதற்கு முடியாத குற மகளாகிய வள்ளி நாயகியின் இரண்டு மார்பகங்களாகிய மலைகளில் முழுகிய இளையவனே என்கின்ற சொல்லானது எனக்கு இன்பம் தருவதும், நான் உனது இரண்டு திருவடிகளைச் சேர்வதுமான ஒரு நாள் வருமோ? பசு இறந்த தனது கன்றை எழுப்புதற்கு வழியை ஆராய்ந்து நாடி மனு நீதிச் சோழனின் ஆராய்ச்சி மணியைச் சென்று அசைத்து ஆட்ட, அந்த மணியின் ஒலி மிக்க துயரை விளைவித்து அரசனின் காதுகளில் ஒலிக்க, மிகவும் கொடிய செயல் ஏதோ நடந்திருக்கின்றது, போய் விசாரிக்கவும் என்று அவர் சொல்ல, நிச்சயமாக இது பெரிய தவறாகும் என்று எழுந்து வந்த மன்னனாகிய மநு மனம் கசிந்து, அரகர சிவசிவ என்ற வார்த்தைகள் வரச் செய்த ஒரு பசு வேதனைப்பட்டு கண்ணீர் பெருகுதலைப் பார்த்து, நடு நிலைமையை அறிந்து இறைவனைத் தியானித்து, அந்தப் பசுவுக்கு துயரத்தைத் தரும்படியாக ரதத்தை ஓட்டிய குற்றத்துக்கு ஆளான தன் மகனை உடல் இரண்டு பிளவாகும்படி, அவன் மேல் படியுமாறு ரதத்தை நடத்தும்படி சொன்னவனாகிய மநு நீதிச் சோழன் ஆட்சி செய்த திருவாரூர்* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் ஆறு முகனே, சிவபெருமானின் மகனே, விநாயகப் பெருமானின் தம்பியே, குமரனே, அரசர்கள் தலைவனே, சரவணப் பெருமாளே, கடல் முறை இடும்படி வேல் கொண்டு செலுத்திய பெருமாளே. 
* திருவாரூர் நாகப்பட்டினத்துக்கு மேற்கே 11 மைல் தொலைவில் உள்ளது.

பாடல் 822 - திருவர்ருர்
ராகம் - குந்தல வராளி தாளம் - ஆதி - 2 களை - 16

தானா தானா தனதன தனதன     தானா தானா தனதன தனதன          தானா தானா தனதன தனதன ...... தனதான

பாலோ தேனோ பலவுறு சுளையது     தானோ வானோர் அமுதுகொல் கழைரச          பாகோ வூனோ டுருகிய மகனுண ...... வருண்ஞானப் 
பாலோ வேறோ மொழியென அடுகொடு     வேலோ கோலோ விழியென முகமது          பானோ வானூர் நிலவுகொ லெனமகண் ...... மகிழ்வேனை 
நாலாம் ரூபா கமலஷண் முகவொளி     யேதோ மாதோம் எனதகம் வளரொளி          நானோ நீயோ படிகமொ டொளிரிட ...... மதுசோதி 
நாடோ வீடோ நடுமொழி யெனநடு     தூணேர் தோளா சுரமுக கனசபை          நாதா தாதா எனவுரு கிடஅருள் ...... புரிவாயே 
மாலாய் வானோர் மலர்மழை பொழியவ     தாரா சூரா எனமுநி வர்கள்புகழ்          மாயா ரூபா அரகர சிவசிவ ...... எனவோதா 
வாதா டூரோ டவுணரொ டலைகடல்     கோகோ கோகோ எனமலை வெடிபட          வாளால் வேலால் மடிவுசெய் தருளிய ...... முருகோனே 
சூலாள் மாலாள் மலர்மகள் கலைமகள்     ஓதார் சீராள் கதிர்மதி குலவிய          தோடாள் கோடா ரிணைமுலை குமரிமுன் ...... அருள்பாலா 
தூயா ராயார் இதுசுக சிவபத     வாழ்வா மீனே வதிவமெ னுணர்வொடு          சூழ்சீ ராரூர் மருவிய இமையவர் ...... பெருமாளே.

பாலோ, தேனோ, பலாப் பழத்தில் உள்ள சுளைதானோ? தேவர்கள் உண்ணும் அமுதம்தானோ, கரும்பு ரச வெல்லப் பாகோ? ஊன் உருகத் தேவாரம் பாடிய மகன் திருஞான சம்பந்தர் உண்ணும்படி (உமா தேவியார்) அருளிய ஞானப் பால்தானோ? வேறு ஏதாவதோ ஒப்புரைக்கத் தக்கதோ (இந்தப் பெண்களின்) மொழி என்றும், கொல்லுதலைக் கொண்ட வேலோ, அம்பு தானோ (அம்மாதர்களின்) கண்கள் என்றும், முகம் சூரிய ஒளிதானோ, அல்லது ஆகாயத்தில் ஊர்ந்து செல்லும் சந்திர ஒளியோ என்றும், பெண்களிடம் மகிழ்ச்சி கொள்ளும் நான் பல உருவமும் கொண்ட உருவத்தனே, தாமரை போன்ற ஆறு முக ஒளியே, அல்லது வேறு எதுவோ, பெரிய குற்றம் கொண்ட என்னுடைய மனத்தில் வளர்கின்ற ஜோதியே, நானோ நீயோ பளிங்குபோல் விளங்கும் இடம் அது ஒரு ஜோதி மயமானது, அது நாடுதானோ அல்லது மோட்ச வீடோ? நடு நிலைமையான உண்மை மொழியை நிலை நிறுத்தியவனே, நடுவில் உள்ள தூணுக்குச் சமமான தோள்களை உடையவனே, தேவர்கள் முன்னிலையில் பெருமை தங்கிய சபையில் விளங்கும் நாதனே, கொடை வள்ளலே என்று மனம் உருகுமாறு மீண்டும் மீண்டும் வேண்டினவர்களுக்குத் திருவருள் புரிவோனே, காதல் பூண்டவராக தேவர்கள் பூமாரி பொழிய பூமியில் அவதாரம் செய்தவனே, சூரனே என முனிவர்கள் புகழும் மாயா ரூபனே, அரகர சிவசிவ என்று உன்னை ஓதாமல், வாதாடி நின்ற அவுணர்களும், அவர்கள் ஊரில் இருந்தவர்களும், அலை கடலும் கோகோ என்று அலறவும், (கிரவுஞ்சமும், ஏழு குலமலைகளும்) வெடிபட்டுப் பொடியாகவும், வாளாலும், வேலாலும் அவர்களை அழியச்செய்து அருளிய முருகனே, சூலம் ஏந்தியவளான துர்க்கை, திருமாலுக்கு உரியவளான பூ மகளாகிய லக்ஷ்மி, சரஸ்வதி, இவர்கள் ஓதித் துதிக்கும் சீர்படைத்தவள், கதிர் வீசும் நிலவின் ஒளிகொண்ட தோடு என்னும் அணிகலனை அணிபவள், மலை போன்ற இரண்டு மார்பகங்களை உடைய உமா தேவியார் முன்பு அருளிய குழந்தையே, பரிசுத்தமானவர்களும், உன்னைத் தியானிப்பவர்களும் இந்தத் திருவாரூர் வாழ்வே சுகமான சிவ பத வாழ்வு, இங்கேயே தங்கி வாழ்வோம், என்னும் ஞான உணர்ச்சியோடு வந்து சூழ்கின்ற, சிறப்புள்ள திருவாரூரில்* சேர்ந்துள்ள தேவர்களின் பெருமாளே. 
* திருவாரூர் நாகப்பட்டினத்துக்கு மேற்கே 14 மைலில் உள்ளது. மூவரின் தேவாரமும் போற்றும் முதுநகர்.

பாடல் 823 - பெரியமடம்
ராகம் - ...; தாளம் -

தனதனன தானதன தத்தனா தாத்த     தனதனன தானதன தத்தனா தாத்த          தனதனன தானதன தத்தனா தாத்த ...... தனதான

கலகவிழி மாமகளிர் கைக்குளே யாய்ப்பொய்     களவுமத னூல்பலப டித்தவா வேட்கை          கனதனமு மார்புமுற லிச்சையா லார்த்து ...... கழுநீரார் 
கமழ்நறைச வாதுபுழு கைத்துழாய் வார்த்து     நிலவரசு நாடறிய கட்டில்போட் டார்ச்செய்          கருமமறி யாதுசிறு புத்தியால் வாழ்க்கை ...... கருதாதே 
தலமடைசு சாளரமு கப்பிலே காத்து     நிறைபவுசு வாழ்வரசு சத்யமே வாய்த்த          தெனவுருகி யோடியொரு சற்றுளே வார்த்தை ...... தடுமாறித் 
தழுவியநு ராகமும்வி ளைத்துமா யாக்கை     தனையுமரு நாளையும வத்திலே போக்கு          தலையறிவி லேனைநெறி நிற்கநீ தீ¨க்ஷ ...... தரவேணும் 
அலகில்தமி ழாலுயர்ச மர்த்தனே போற்றி     அருணைநகர் கோபுரவி ருப்பனே போற்றி          அடல்மயில்ந டாவியப்ரி யத்தனே போற்றி ...... அவதான 
அறுமுகசு வாமியெனும் அத்தனே போற்றி     அகிலதல மோடிவரு நிர்த்தனே போற்றி          அருணகிரி நாதஎனும் அப்பனே போற்றி ...... அசுரேசர் 
பெலமடிய வேல்விடுக ரத்தனே போற்றி     கரதலக பாலிகுரு வித்தனே போற்றி          பெரியகுற மாதணைபு யத்தனே போற்றி ......பெருவாழ்வாம் 
பிரமனறி யாவிரத தக்ஷிணா மூர்த்தி     பரசமய கோளிரித வத்தினால் வாய்த்த          பெரியமட மேவியசு கத்தனே யோக்யர் ...... பெருமாளே.

கலகத்தை விளைவிக்கக் கூடிய கண்களை உடைய அழகிய விலைமாதர்களின் கைகளில் அகப்பட்டு, களவு, பொய், காம சாஸ்திரம் பலவும் கற்று, ஆசையுடனும், விருப்பத்துடனும் கனத்த மார்பகங்களோடு நெஞ்சாரத் தழுவி மகிழ்ந்து, செங்கழுநீர் மலர்களை நிரப்பி, மணக்கும் ஜவ்வாது, புனுகு இவைகளைக் கலந்து ஊற்றி பரிமளிக்க வைத்து, பூமியில் உள்ள அரசர் முதல் நாட்டில் உள்ள யாவரும் அறியும்படியாக, கட்டில் படுக்கை போட்டவர்களாகிய வேசியர்கள் செய்கின்ற தொழில்களின் சூதை அறியாமல், எனக்குள்ள அற்ப புத்தியால் எனது வாழ்க்கையின் அருமையை எண்ணாமல், (அந்த வேசியரின்) இடத்தை நெருங்கிச் சென்று, ஜன்னலின் வாயில்களின் முன் பக்கத்தில் காத்து நின்று, (அவர்களால் அழைக்கப்பட்டவுடன்) நிறைந்த செல்வமும் அரச வாழ்வும் சத்தியப்பேறும் கிடைத்தன போல மனம் உருகி, அவர்கள் வீட்டினுள் ஓடிச்சென்று, உள்ளே இருக்கும் கொஞ்ச நேரத்துக்குள் பேசும் பேச்சும் தடுமாறி, அவர்களைத் தழுவி காம லீலைகளைச் செய்தவனாய், சிறந்த உடலையும் அருமையான வாழ் நாளையும் வீணில் கழிக்கின்றவனும், நல்லறிவு இல்லாதவனுமாகிய என்னை, நன்னெறியில் நிற்கும்படி நீ தயை புரிந்து அறிவுரை செய்தருள வேண்டும். எல்லை இல்லாத தமிழறிவால் உயர்ந்துள்ள வல்லவனே, போற்றி, திருவண்ணாமலையின் கோபுரத்தில் வீற்றிருப்பவனே, போற்றி, வலிய மயிலை ஓட்டுதலில் விருப்பு வைத்தவனே, போற்றி, விந்தையான செயல்களைச் செய்த ஆறுமுகச் சுவாமி என்னும் தலைவனே, போற்றி, எல்லாப் பூமிகளையும் வலம் செய்து ஓடி வந்த நிருத்த மூர்த்தியே, போற்றி, அருணகிரி நாதரே என்று என்னை அழைத்த அப்பனே, போற்றி, அசுரர் தலைவர்களின் வலிமை அழிய வேலைச் செலுத்திய கரத்தினனே, போற்றி, கையில் கபாலம் ஏந்திய சிவபெருமானுக்கு ஞான உபதேச பண்டிதனாய் நின்றவனே, போற்றி, பெருமை வாய்ந்த குறப் பெண்ணாகிய வள்ளி நாயகியை அணைகின்ற திருப்புயங்களை உடையவனே, போற்றி, பெருஞ் செல்வப் பொருளானதும், பிரமனும் அறியாததுமாகிய பிரணவப் பொருளை உபதேசித்த தக்ஷிணா மூர்த்தி சொரூபனே, மற்ற (சமண, புத்த) மதங்களை அழிக்க வந்த (திருஞான சம்பந்த) சிங்கமே, தவச் செயலால் கிடைக்கும், பெரிய மடம்** என்னும் இடத்தில் வீற்றிருக்கும், சுகப் பெருமானே, தூய யோகியர்கள் போற்றும் பெருமாளே. 
* தீ¨க்ஷ என்பது குருவின் அறிவுரை. அது ஏழு வகைப்படும்: நயன (கண்களால்), ஸ்பரிச (தொடுவதால்), மானச (மன அலைகளால்), வாசக (சொல்லால்), சாஸ்திர (வேத நூல்களால்), யோக (யோகாப்பியாசத்தால்), ஔத்திரி (கேள்வி - பதில் மூலமாக) என்பனவாகும்.
** பெரிய மடம் கும்பகோணத்தில் மகாமகக் குளத்துக்கு வட கரையில் உள்ள சைவ மடம்.

பாடல் 824 - சோமநாதன்மடம்
ராகம் - செஞ்சுருட்டி தாளம் - அங்கதாளம் - 5 1/2 தகதிமி-2, தகதிமி-2, தகிட-1 1/2

தனதனன தான தான தனதனன தான தான     தனதனன தான தான ...... தனதான

ஒருவழிப டாது மாயை யிருவினைவி டாது நாளு     முழலுமநு ராக மோக ...... அநுபோகம் 
உடலுமுயிர் தானு மாயு னுணர்விலொரு காலி ராத     வுளமுநெகிழ் வாகு மாறு ...... அடியேனுக் 
கிரவுபகல் போன ஞான பரமசிவ யோக தீர     மெனமொழியும் வீசு பாச ...... கனகோப 
எமபடரை மோது மோன வுரையிலுப தேச வாளை     யெனதுபகை தீர நீயும் ...... அருள்வாயே 
அரிவையொரு பாக மான அருணகிரி நாதர் பூசை     அடைவுதவ றாது பேணும் ...... அறிவாளன் 
அமணர்குல கால னாகும் அரியதவ ராஜ ராஜன்     அவனிபுகழ் சோமநாதன் ...... மடமேவும் 
முருகபொரு சூரர் சேனை முறியவட மேரு வீழ     முகரசல ராசி வேக ...... முனிவோனே 
மொழியுமடி யார்கள் கோடி குறைகருதி னாலும் வேறு     முனியஅறி யாத தேவர் ...... பெருமாளே.

ஒரு வழியில் நிலைத்து நிற்க முடியாமல், மாயையும், என் நல்வினை, தீவினைகளும் என்னை விடாமல், தினந்தோறும் அலைச்சல் விளைவிக்கின்ற காம லீலையாகும் மோக அனுபவத்தில் ஈடுபட்டு, என் உடலையும் என் உயிரையும் மட்டுமே எண்ணிக்கொண்டு, நீ உள்ளாய் என்னும் உணர்ச்சி ஒருகாலும் இல்லாத என் உள்ளமும் நெகிழ்ந்து கசிந்து உருகுமாறு அடியேனுக்கு, இரவும் பகலும் கடந்த ஞான பரமசிவ யோகம் தான் ¨தரியத்தைத் தர வல்லது என்று மொழிந்து காட்டுவதும், பாசக்கயிறை வீசும் மிகுந்த கோபங்கொண்ட யமதூதர்களை மோதி விரட்டியடிக்கக் கூடியதுமான, பேச்சில்லாத மெளன நிலையான ஞானோபதேசம் என்ற வாளை எனது உட்பகை, புறப்பகை யாவும் ஒழிய, நீ அன்போடு அருள்வாயாக. தேவியை ஒருபாகத்தில் கொண்ட அருணாசலேஸ்வரர் பூஜையை ஒழுங்கு தவறாமல் புரிந்து வருகின்ற அறிவாளியும், சமணர் குலத்துக்கு ஒரு யமனாகத் தோன்றியவனும், அருமையான தவங்கள் பல செய்த தவராஜனும், இந்த உலகெல்லாம் புகழ்பவனும் ஆன சோமநாதனுடைய* ஊராகிய சோமநாதன்மடத்தில் வீற்றிருக்கின்ற முருகனே, போர் செய்த சூரர்களின் சேனை முறிபட்டு அழியவும், வடக்கு திசையிலுள்ள மேரு மலை பொடிபட்டு விழவும், சங்குகளைக் கொண்ட கடல் வெந்து வற்றவும் கோபித்தவனே, உன்னைத் துதிக்கும் அடியார்கள் கோடிக்கணக்கான குறைகளைக் கருதி உன்னிடம் முறையிட்டாலும், அவர்கள் எண்ணத்துக்கு மாறாக அவர்களைக் கோபிப்பது என்பதையே அறியாத தேவர் பெருமாளே. 
* திருவண்ணாமலையாரை ஆத்மார்த்த மூர்த்தியாகக் கொண்டு புத்தூரில் வாழ்ந்த தவசீலர் ஒருவர் சோமநாதன் என்ற பெயரோடு நியமம் தவறாது பூஜை செய்து வந்தார். அவர் புத்தூரில் ஒரு மடத்தில் முருகனையும் துதித்து வந்தார். அந்த இடமே சோமநாதன்மடம் என்று வழங்கப்படுகிறது. வட ஆற்காட்டு மாவட்டத்தில் ஆரணி வட்டத்தில் புத்தூர் உள்ளது.

பாடல் 825 - த்ரியம்பகபுரம்
ராகம் - ....; தாளம் -

தனன தந்தனந் தனதன தனதன     தனன தந்தனந் தனதன தனதன          தனன தந்தனந் தனதன தனதன ...... தனதான

உரையொ ழிந்துநின் றவர்பொரு ளெளிதென     வுணர்வு கண்டுபின் திரவிய இகலரு          ளொருவர் நண்படைந் துளதிரள் கவர்கொடு ...... பொருள்தேடி 
உளம கிழ்ந்துவந் துரிமையில் நினைவுறு     சகல இந்த்ரதந்த் ரமும்வல விலைமக          ளுபய கொங்கையும் புளகித மெழமிக ...... வுறவாயே 
விரக வன்புடன் பரிமள மிகவுள     முழுகி நன்றியொன் றிடமல ரமளியில்          வெகுவி தம்புரிந் தமர்பொரு சமயம ...... துறுநாளே 
விளைத னங்கவர்ந் திடுபல மனதிய     ரயல்த னங்களுந் தனதென நினைபவர்          வெகுளி யின்கணின் றிழிதொழி லதுவற ...... அருள்வாயே 
செருநி னைந்திடுஞ் சினவலி யசுரர்க     ளுகமு டிந்திடும் படியெழு பொழுதிடை          செகம டங்கலும் பயமற மயில்மிசை ...... தனிலேறித் 
திகுதி குந்திகுந் திகுதிகு திகுதிகு     தெனதெ னந்தெனந் தெனதென தெனதென          திமிதி மிந்திமிந் திமிதிமி திமியென ...... வருபூதங் 
கரையி றந்திடுங் கடலென மருவிய     வுதிர மொண்டுமுண் டிடஅமர் புரிபவ          கலவி யன்புடன் குறமகள் தழுவிய ...... முருகோனே 
கனமு றுந்த்ரியம் பகபுர மருவிய     கவுரி தந்தகந் தறுமுக எனஇரு          கழல்ப ணிந்துநின் றமரர்கள் தொழவல ...... பெருமாளே.

பேசுவதற்கு முடியாமல் விழித்து நிற்கின்ற இவரிடம் பொருளை அபகரிப்பது எளிது என்று தமது உணர்ச்சியினால் அறிந்து, அதன் பிறகு செல்வ வலிமை உடையவர்களுள் ஒருவருடைய நட்பைப் பெற்று, அவரிடம் உள்ள திரண்ட பொருளைக் கவரும் எண்ணம் கொண்டு, அவருடைய பொருளைத் தேடி, உள்ளம் மகிழ்ச்சி அடைந்து களிப்புற்று, (அவரது சொத்துக்களின் மீது) தமக்குள்ள உரிமையை நிலைநாட்ட நினைத்து, எல்லாவிதமான தந்திரங்களையும் காட்டவல்ல விலைமாதரின் இரண்டு மார்பகங்களும் புளகிதம் கொள்ள நிரம்ப உறவைக் காட்டி, காமமோகத்துடன் மிகுந்த நறுமணத்தின் உள்ளேயே முழுகி, நன்றி பொருந்தியவர்கள் போல மலர்ப் படுக்கையில் பல வித காம லீலைகளைப் புரிந்து, கலவிப் போர் செய்யும் சமயம் வாய்க்கும் அந்த நாளில், (தம்மை நாடினோரின்) பெருகி உள்ள செல்வத்தை அபகரிக்கும் பலவித கெட்ட எண்ணங்களை உடைய வேசியர்கள், பிறருடைய சொத்துக்களும் தம்முடையதே என்று நினைப்பவர்கள் பேசும் கோப மொழிகளில் அகப்பட்டு நிற்கும் இழிவுள்ள என் செயல் இனி முற்றும் அற்றுப் போக அருள் செய்வாயாக. போரையே நினைந்திருக்கும் கோபமும் வலிமையும் கொண்ட அசுரர்கள் யுகம் முடியும் காலம் போல போருக்கு எழுந்த சமயத்தில், உலகம் முழுவதும் பயம் நீங்க மயிலின் மேலே ஏறி, திகுதிகுந் திகுந் திகுதிகு திகுதிகு தெனதெ னந்தெனந் தெனதென தெனதென திமித மிந்திமிந் திமிதிமி திமி என்று வந்த பூதங்கள் கரை கடந்து எழுந்த கடலைப் போல உள்ள ரத்தத்தை மொண்டு உண்ணும்படி போர் செய்தவனே, சேர்க்கை அன்புடன் குறப் பெண்ணான வள்ளியைத் தழுவிய முருகனே, பெருமை தங்கிய திரியம்பகபுரம்* என்னும் தலத்தில் வீற்றிருக்கும், உமா தேவி பெற்றெடுத்த கந்தனே, ஆறுமுகனே என்று உனது இரண்டு திருவடிகளையும் வணங்கி நின்று தேவர்கள் தொழுதற்குரிய பெருமாளே. 
* திரியம்பகபுரம் திருவாரூருக்கு அருகில் உள்ளது.

பாடல் 826 - சிக்கல்
ராகம் - ....; தாளம் -

தன்ன தத்த தனத்த தானன     தன்ன தத்த தனத்த தானன          தன்ன தத்த தனத்த தானன ...... தனதான

கன்ன லொத்த மொழிச்சொல் வேசியர்     வன்ம னத்தை யுருக்கு லீலையர்          கண்வெ ருட்டி விழித்த பார்வையர் ...... இதமாகக் 
கையி லுற்ற பொருட்கள் யாவையும்     வையெ னக்கை விரிக்கும் வீணியர்          கைகள் பற்றி யிழுத்து மார்முலை ...... தனில்வீழப் 
பின்னி விட்ட சடைக்கு ளேமலர்     தன்னை வைத்து முடிப்பை நீயவி          ழென்னு மற்ப குணத்த ராசையி ...... லுழலாமற் 
பெய்யு முத்தமி ழிற்ற யாபர     என்ன முத்தர் துதிக்க வேமகிழ்          பிஞ்ஞ கர்க்குரை செப்பு நாயக ...... அருள்தாராய் 
வன்னி யொத்த படைக்க லாதிய     துன்னு கைக்கொ ளரக்கர் மாமுடி          மண்ணி லற்று விழச்செய் மாதவன் ...... மருகோனே 
மன்னு பைப்பணி யுற்ற நீள்விட     மென்ன விட்டு முடுக்கு சூரனை          மல்லு டற்று முருட்டு மார்பற ...... அடைவாகச் 
சென்னி பற்றி யறுத்த கூரிய     மின்னி ழைத்த திறத்த வேலவ          செய்ய பொற்புன வெற்பு மானணை ...... மணிமார்பா 
செம்ம னத்தர் மிகுத்த மாதவர்     நன்மை பெற்ற வுளத்தி லேமலர்          செல்வ சிக்கல் நகர்க்குள் மேவிய ...... பெருமாளே.

கற்கண்டினைப் போல் இனிக்கும் பேச்சுக்களைப் பேசும் பொது மகளிர். கடினமான மனத்தையும் உருக்க வல்ல லீலைகளைச் செய்பவர்கள். கண்களைக் கொண்டு மயக்கும் விழிக்கின்ற பார்வையர். இனிய வழியில் பக்குவமாக கையில் உள்ள எல்லா பொருட்களையும் வைத்திடு என்று கூறி கையை விரித்து நீட்டுகின்ற பயனற்றவர்கள். (வருவோர்) கைகளைப் பிடித்து இழுத்து மார்பகங்களின் மீது விழும்படியும், பின்னி வைத்துள்ள கூந்தலிலே மலர்களை வைத்து பண முடிப்பை நீ அவிழ்ப்பாயாக என்று கூறுகின்ற அற்ப குணம் படைத்தவர்கள். இத்தகைய வேசியர்களின் ஆசையில் நான் அலைச்சல் உறாமல், சொல்லப்படும் இயல், இசை, நாடகம் என்று மூவகைப்பட்ட தமிழில் ஆசை கொண்டவனே என்று முக்தி நிலை அடைந்த பெரியோர்கள் போற்றி செய்ய மகிழ்கின்றவனே, சிவ பெருமானுக்கு உபதேசம் செய்த நாயகனே, அருள் தருவாயாக. அக்கினிக்கு ஒப்பான படைக்கலங்கள் முதலியன பொருந்தும் கைகளை உடைய அரக்கர்களின் பெரிய தலைகள் பூமியில் அற்று விழும்படி, வீரம் விளைவிக்கின்ற திருமாலின் மருகனே, பொருந்திய படத்தை உடைய பாம்பின் நச்சுப்பையில் உள்ள கொடிய விஷம் என்று சொல்லும்படி வேலினைச் செலுத்தி போரிட விரைவாக எதிர்வந்த சூரனை, (அவனது) மற் போர் செய்யும் கரடு முரடான மார்பு பிளக்கத் தக்க வகையில் அவனது தலையைப் பற்றி அறுத்த கூர்மை வாய்ந்த, மின் போல் ஒளிரும் ஆற்றல் படைத்த வேலாயுதத்தை உடையவனே, செம்மை வாய்ந்த அழகிய தினைப் புனம் உள்ள (வள்ளி) மலையில் இருந்த மான் போன்ற வள்ளி நாயகியை அணைந்த அழகிய மார்பனே, செம்மை வாய்ந்த மனம் உடைய பெரியோர்கள், பெருந்தவம் மிக்கவர் ஆகியவர்களின் நல்ல எண்ணம் கொண்ட உள்ளத்தில் விளங்கி நிற்கும் செல்வனே, சிக்கல் நகரில்* வீற்றிருக்கும் பெருமாளே. * சிக்கல் நாகப்பட்டினத்துக்கு மேற்கே 3 மைலில் உள்ளது. சிக்கல் முருகனின் பெயர் சிங்கார வேலவன்.

பாடல் 827 - சிக்கல்
ராகம் - பந்துவராளி தாளம் - ஆதி - எடுப்பு - 1/2 இடம்

தனதன தத்தத் தந்தான தானன     தனதன தத்தத் தந்தான தானன          தனதன தத்தத் தந்தான தானன ...... தனதானா

புலவரை ரக்ஷிக் குந்தாரு வேமது     ரிதகுண வெற்பொக் கும்பூவை மார்முலை          பொருபுய திக்கெட் டும்போயு லாவிய ...... புகழாளா 
பொருவரு நட்புப் பண்பான வாய்மையி     லுலகிலு னக்கொப் புண்டோவெ னாநல          பொருள்கள் நிரைத்துச் செம்பாக மாகிய ...... கவிபாடி 
விலையில்த மிழ்ச்சொற் குன்போலு தாரிகள்     எவரென மெத்தக் கொண்டாடி வாழ்வெனும்          வெறிகொளு லுத்தர்க் கென்பாடு கூறிடு ...... மிடிதீர 
மிகவரு மைப்பட் டுன்பாத தாமரை     சரணமெ னப்பற் றும்பேதை யேன்மிசை          விழியருள் வைத்துக் குன்றாத வாழ்வையு ...... மருள்வாயே 
இலகிய வெட்சிச் செந்தாம மார்புய     சிலைநுதல் மைக்கட் சிந்தூர வாணுதல்          இமயம கட்குச் சந்தான மாகிய ...... முருகோனே 
இளையகொ டிச்சிக் கும்பாக சாதன     னுதவுமொ ருத்திக் குஞ்சீல நாயக          எழிலியெ ழிற்பற் றுங்காய மாயவன் ...... மருகோனே 
அலர்தரு புட்பத் துண்டாகும் வாசனை     திசைதொறு முப்பத் தெண்காதம் வீசிய          அணிபொழி லுக்குச் சஞ்சார மாமளி ...... யிசையாலே 
அழகிய சிக்கற் சிங்கார வேலவ     சமரிடை மெத்தப் பொங்கார மாய்வரும்          அசுரரை வெட்டிச் சங்கார மாடிய ...... பெருமாளே.

புலவர்களை ஆதரித்துக் காப்பாற்றும் கற்பக விருட்சமே, இனிய குணம் கொண்ட, மலை போன்ற மார்புடைய, பெண்களைத் தழுவும் புயத்தினனே, எட்டுத் திசைகளிலும் சென்று பரவுகின்ற புகழை உடையவனே, உவமை கூற முடியாத நட்புத்தன்மை உள்ள சத்திய நிலையில் உலகில் உனக்கு ஒப்பானவர்கள் உண்டோ என்றெல்லாம் நல்ல பொருளமைந்த சொற்களை வரிசையாக வைத்து, செவ்விய முறையில் புனையப்பட்ட பாடல்களைப் பாடி, விலைமதிப்பற்ற தமிழ்ச் சொல்லை ஆதரிப்பதற்கு உன்னைப் போல் சிறந்த கொடையாளிகள் யார்தான் உள்ளார்கள் என்று நிரம்பப் புகழ்ந்து, தமது வாழ்வே பெரிது என்ற தீவிர உணர்ச்சி கொண்ட லோபிகளிடம் என் வருத்தங்களைப் போய் முறையிடும் வறுமை நிலை தீர, மிக்க முயற்சி எடுத்துக்கொண்டு, உனது தாமரைத் திருவடிகளை புகலிடம் என்று பற்றியுள்ள பேதையாகிய என்மீது நீ திருக்கண் அருள்வைத்து, குறைவில்லாத பேரின்ப வாழ்வைத் தந்தருள்க. விளங்கும் வெட்சிப்பூக்களால் ஆன சிவந்த மாலை அணிந்த மார்பும் புயங்களும் கொண்டவனே, வில்லைப் போன்ற புருவத்தையும், மையிட்ட கண்களையும், குங்குமம் அணிந்த ஒளிவீசும் நெற்றியையும் கொண்ட, இமயமலையின் மகளாகிய, பார்வதிக்கு மைந்தனாக வந்த முருகனே, இளையவளும், மலை நாட்டுப் பெண்ணாகிய வள்ளிக்கும், பாகசாதனன் எனப்படும் இந்திரன் பெற்ற ஒப்பற்ற தேவயானைக்கும் உரிய பரிசுத்தமான நாயகனே, மேகத்தின் அழகைக் கொண்ட கருந்திருமேனியை உடைய திருமாலின் மருமகனே, மலர்ந்த பூக்களிலிருந்து வரும் நறுமணம் எல்லாத் திசைகளிலும் முப்பத்தெட்டு காதம் வரை (380 மைல்) வீசுகின்ற, அழகிய நந்தவனங்களில் உலவும் வண்டுகளின் இசை ஒலிக்கும் அழகுபெற்று விளங்கும் சிக்கல்* என்ற தலத்தில் வீற்றிருக்கும் சிங்கார வேலவனே, போரிடையே மிகவும் சினத்தோடு வந்த அசுரர்களை வெட்டிச் சம்ஹாரம் செய்த பெருமாளே. 
* சிக்கல் நாகப்பட்டினத்துக்கு மேற்கே 3 மைலில் உள்ளது.சிக்கல் முருகனின் பெயர் சிங்கார வேலவன்.

பாடல் 828 - நாகப்பட்டினம்
ராகம் - §.¡ன்புரி தாளம் - ஆதி - தி.ரநடை - 12

தான தத்த தத்த தந்த தான தத்த தத்த தந்த     தான தத்த தத்த தந்த ...... தனதான

ஓல மிட்டி ரைத்தெ ழுந்த வேலை வட்ட மிட்ட இந்த     ஊர்மு கிற்ற ருக்க ளொன்று ...... மவராரென் 
றூம ரைப்ர சித்த ரென்று மூட ரைச்ச மர்த்த ரென்றும்     ஊன ரைப்ர புக்க ளென்று ...... மறியாமற் 
கோல முத்த மிழ்ப்ர பந்த மால ருக்கு ரைத்த நந்த     கோடி யிச்சை செப்பி வம்பி ...... லுழல்நாயேன் 
கோப மற்று மற்று மந்த மோக மற்று னைப்ப ணிந்து     கூடு தற்கு முத்தி யென்று ...... தருவாயே 
வாலை துர்க்கை சக்தி யம்பி லோக கத்தர் பித்தர் பங்கில்     மாது பெற்றெ டுத்து கந்த ...... சிறியோனே 
வாரி பொட்டெ ழக்ர வுஞ்சம் வீழ நெட்ட யிற்று ரந்த     வாகை மற்பு யப்ர சண்ட ...... மயில்வீரா 
ஞால வட்ட முற்ற வுண்டு நாக மெத்தை யிற்று யின்ற     நார ணற்க ருட்சு ரந்த ...... மருகோனே 
நாலு திக்கும் வெற்றி கொண்ட சூர பத்ம னைக்க ளைந்த     நாக பட்டி னத்த மர்ந்த ...... பெருமாளே.

ஓலம் இடுவதுபோல அபயக்குரலுடன் பேரொலி செய்யும் அலைகடல் சூழ்ந்திருக்கும் இந்த ஊரில் மேகத்தைப் போல் கைம்மாறு கருதாமல் கொடுக்கும் பிரபுக்கள், கற்பக விருட்சம் போல் கேட்டதெல்லாம் தரும் பிரபுக்கள் யார் உள்ளார்கள் என்று தேடிப்போய், பேசவும் வாய் வராதவர்களை மகா கீர்த்தி வாய்ந்த பிரபுக்கள் என்றும், முட்டாள்களைச் சமர்த்தர்கள் என்றும் ஊனம் உள்ளவரைப் பிரபுக்கள் என்றும், என் அறிவின்மையால் அழகிய முத்தமிழ் நூல்களை மண்ணாசை பிடித்த மூடர்களுக்குச் சொல்லி, எண்ணிலாத கோடிக்கணக்கான என் விருப்பங்களைத் தெரிவித்து வீணே திரிகின்ற அடிநாயேன், கோபம் என்பதை ஒழித்து, மேலும், அந்த ஆசை என்பதனை நீத்து, உன்னைப் பணிந்து உன் திருவடியைக் கூடுதற்கு முக்திநிலை என்றைக்குத் தந்தருள்வாய்? வாலையும் (என்றும் இளையவள்), துர்க்கையும், சக்தியும், அம்பிகையும், உலகத்துக்கே தலைவர் ஆகிய பித்தராம் சிவபிரானது இடப்பாகத்தில் அமர்ந்தவளுமான தேவி பெற்றெடுத்து மகிழ்ந்த இளையோனே, கடல் வற்றிப் போக, கிரெளஞ்சமலை தூளாகி விழ, நீண்ட வேலைச் செலுத்திய, வெற்றி வாகை சூடிய, மற்போருக்குத் திண்ணிய புயத்தை உடைய பராக்ரமனே, மயில் வீரனே, பூமி மண்டலம் முழுமையும் உண்டு தன் வயிற்றிலே அடக்கியவரும், ஆதிசேஷன் என்னும் பாம்புப் படுக்கையிலே துயில் கொள்பவரும் ஆகிய நாராயணருக்கு அருள் பாலித்த மருமகனே, நான்கு திசைகளிலும் ஜயித்த சூரபத்மனை அகற்றியவனே, நாகப்பட்டினம் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 829 - நாகப்பட்டினம்
ராகம் - ....; தாளம் -

தான தந்ததன தந்ததன தந்ததன     தான தந்ததன தந்ததன தந்ததன          தான தந்ததன தந்ததன தந்ததன ...... தந்ததான

மார்பு ரம்பினளி னங்கிரியெ னுந்தனமொ     டார மும்படித ரம்பொறியு டன்பணிகள்          மாலை யொண்பவள மும்பரிம ளங்கலவை ...... தொங்கலாட 
வாள்ச ரங்கணிய லுங்குழைத ளம்பளக     பார தொங்கலணி பெண்கள்வத னங்கள்மதி          வாகை யென்பஇத ழுஞ்சலச மென்பகள ...... சங்குமோக 
சார மஞ்சள்புய முங்கிளிமு கங்களுகிர்     பாளி தம்புனைது வண்டிடையொ டின்பரச          தாழி யென்பஅல்கு லுந்துளிர ரம்பைதொடை ...... ரம்பைமாதர் 
தாள்ச தங்கைகொலு சுங்குலசி லம்புமணி     யாடல் கொண்டமட மங்கையரு டன்கலவி          தாக முண்டுழல்கி னுங்கழலு றுங்கழல்ம ...... றந்திடேனே 
வீர வெண்டையமு ழங்கவரி சங்குமுர     சோடு பொன்பறைத தும்பவிதி யுஞ்சுரரும்          வேத விஞ்சையரு டன்குமுற வெந்துகவ ...... டர்ந்தசூரன் 
வீற டங்கமுகி லுங்கமற நஞ்சுடைய     ஆயி ரம்பகடு கொண்டவுர கன்குவடு          மேகொ ளுந்தபல்சி ரந்தனையெ றிந்துநட ...... னங்கொள்வேலா 
நார சிங்கவடி வங்கொடுப்ர சண்டிரணி     யோன டுங்கநட னஞ்செய்துஇ லங்கைவலி          ராவ ணன்குலம டங்கசிலை கொண்டகரர் ...... தந்தமூல 
ஞான மங்கையமு தஞ்சொருபி யென்றனொரு     தாய ணங்குகுற மங்கையைம ணந்தபுய          நாகை யம்பதிய மர்ந்துவளர் நம்பர்புகழ் ...... தம்பிரானே.

வலிய மார்பு இடத்தில் தாமரை மொக்கு எனவும் மலை எனவும் சொல்லத் தக்க மார்பகத்தோடு, முத்து மாலையும் படிந்த, மேன்மையான தேமலுடன், அணி கலன்களும் மாலையாய் அணிந்த ஒளி வீசும் பவளமும் நறு மணச் சந்தனக் குழம்புடன் பூ மாலை அசைய, வாள் போல அசையும் கண் பொருந்திய (காதில் உள்ள) குண்டலங்களைத் தள்ளும் கூந்தல் பாரத்தில் பூமாலையை அணிந்துள்ள பெண்களின் முகங்கள் சந்திரனையும் வெற்றி கொண்டன என விளங்க, வாயிதழும் தாமரை இதழ் போல விளங்க, கழுத்து சங்கு போல் விளங்க, காதலை எழுப்பும் மஞ்சள் பூசப்பட்ட தோளும், கிளியின் நாசியைப் போன்ற நகங்களும், பட்டாடை அணிந்து துவட்சி அடைந்துள்ள இடையுடன் இன்பத்தைத் தரும் பாண்டம் என்று சொல்லும்படியான பெண்குறியும், தழைத்துள்ள வாழை என்னும்படியான தொடைகளும் உடைய ரம்பை என்னும் தெய்வப் பெண் போன்ற விலைமாதர்கள். காலில் உள்ள சதங்கை, கொலுசு சிறந்த சிலம்பு இவைகளைப் பூண்டு நடனத்தைச் செய்யும் அழகிய மாதர்கள் மீது கலவி தாகம் கொண்டு நான் திரிந்தாலும், போற்றப்படும் உன் திருவடிகளை மறக்க மாட்டேன். வீர வெண்டையம் என்னும் காலணி ஒலிக்க, இசையை எழுப்பும் சங்கும் முரசும் அழகிய பறையும் பேரொலி செய்ய, பிரமனும் தேவர்களும் வேதம் ஓத வல்லவருடன் கலந்து ஓசையை எழுப்ப, வெந்து அழிவதற்காக நெருங்கி வந்த சூரனின் கர்வம் ஒடுங்க, மேகமும் மிக ஒலிக்க, விஷத்தைக் கொண்ட ஆயிரம் யானைகளின் பலத்தை உடைய பாம்பாகிய ஆதி சேஷனுடைய மலை போன்ற பணாமுடிகள் வேக, அசுரர்களின் பல தலைகளை அறுத்தெறிந்து (குடைக்) கூத்து ஆடிய வேலனே, நரசிங்க வடிவத்தைக் கொண்டு கடுமை கொண்ட இரணியனை நடுங்க வைத்து நடனம் புரிந்து, இலங்கையில் வலிமை வாய்ந்த ராவணனின் கூட்டம் அடங்கி ஒழிய (கோதண்டம் என்னும்) வில்லை ஏந்திய கைகளை உடைய திருமால் பெற்ற ஞானம் படைத்த மங்கை, அமுத உருவினள், என்னுடைய தாய் ஆகிய குறப் பெண் வள்ளி நாயகியை மணந்த திருப்புயத்தை உடையவனே, நாகப்பட்டினம் என்னும் அழகிய தலத்தில் அமர்ந்து விளங்குபவனே, சிவபெருமான் போற்றும் தம்பிரானே. 

பாடல் 830 - நாகப்பட்டினம்
ராகம் - யமுனாகல்யாணி தாளம் - ஆதி

தனனா தனனா தனனா தனனா     தனனா தனனா ...... தனதான

விழுதா தெனவே கருதா துடலை     வினைசேர் வதுவே ...... புரிதாக 
விருதா வினிலே யுலகா யதமே     லிடவே மடவார் ...... மயலாலே 
அழுதா கெடவே அவமா கிடநா     ளடைவே கழியா ...... துனையோதி 
அலர்தா ளடியே னுறவாய் மருவோ     ரழியா வரமே ...... தருவாயே 
தொழுதார் வினைவே ரடியோ டறவே     துகள்தீர் பரமே ...... தருதேவா 
சுரர்பூபதியே கருணா லயனே     சுகிர்தா வடியார் ...... பெருவாழ்வே 
எழுதா மறைமா முடிவே வடிவே     லிறைவா எனையா ...... ளுடையோனே 
இறைவா எதுதா வதுதா தனையே     இணைநா கையில்வாழ் ...... பெருமாளே.

(இறைவனருளால்) விழுகின்ற தாது (சுக்கிலம்)தான் இந்த உடல் என்று புரிந்து கொள்ளாமல், வினைகளை மேலும் மேலும் சேர்ப்பதையே விரும்புவதாக, வாழ்நாளை வீணாக்கி, (தேகமே ஆத்மா, போகமே மோட்சம் என்ற) உலக வழக்கில் புத்தி மேலிட, பெண்களின் மேல் ஆசை மயக்கம் மிகுந்து, அழுதும், கெட்டுப்போயும், கேவலமாகி வாழ்க்கை முழுவதும் கழிந்து போகாமல், உன்னைப் புகழ்ந்து துதித்து, மலர்ந்த தாமரை போன்ற உன் திருவடிகளே எனக்கு உறவாக பொருந்திய ஒப்பற்ற அழியாத வரம் நீ தந்தருள்வாயாக. தொழுகின்ற அடியார்கள்தம் வினையின் வேர் அடியோடு அற்றுப்போகும்படியாக குற்றமற்ற பரமபதத்தைத் தரும் தேவனே, தேவர்களுக்கு அரசனே, கருணைக்கு இருப்பிடமானவனே, புண்ணியனே, அடியார்களின் பெருவாழ்வே, எழுதப்படாத மறையாம் வேதத்தின் முடிவானவனே, கூரிய வேலை ஏந்திய இறைவனே, என்னை ஆட்கொண்டுள்ளவனே, இறைவனே, நீ எது தரவேண்டுமோ அதைத் தந்தருள். தனக்குத் தானே இணையாகும் நாகப்பட்டினத்தில் வீற்றிருக்கின்ற பெருமாளே. 

பாடல் 831 - எட்டிகுடி
ராகம் - ....; தாளம் -

தனனத் தனனத் தனனத் தனனத்     தனனத் தனனத் ...... தனதான

உரமுற் றிருசெப் பெனவட் டமுமொத்     திளகிப் புளகித் ...... திடமாயே 
உடைசுற் றுமிடைச் சுமையொக் கஅடுத்     தமிதக் கெறுவத் ...... துடன்வீறு 
தரமொத் துபயக் களபத் தளமிக்     கவனத் தருணத் ...... தனமீதே 
சருவிச் சருவித் தழுவித் தழுவித்     தவமற் கவிடுத் ...... துழல்வேனோ 
அரிபுத் திரசித் தசஅக் கடவுட்     கருமைத் திருமைத் ...... துனவேளே 
அடல்குக் குடநற் கொடிகட் டியனர்த்     தசுரப் படையைப் ...... பொருவோனே 
பரிவுற் றவருக் கருள்வைத் தருள்வித்     தகமுத் தமிழைப் ...... பகர்வோனே 
பழனத் தொளிர்முத் தணியெட் டிகுடிப்     பதியிற் குமரப் ...... பெருமாளே.

மார்பில் பொருந்தி இரண்டு சிமிழ்கள் போல வட்ட வடிவு கொண்டு, குழைந்து புளகாங்கிதம் கொண்டு, வலிமை கொண்டு, ஆடை சுற்றி அணியப்படும் இடைக்குச் சுமையாக நன்கு பொருந்தி, அளவு கடந்த கர்வத்துடன் மேம்பட்டு விளங்கும் தன்மை கொண்ட, இரண்டு கலவைச் சாந்தும் செஞ்சாந்தும் நிரம்பிய அழகான, இளைய மார்பகங்கள் மீது, மிகப் பழகி தழுவித் தழுவி, தவ நிலையை வேரோடு விட்டுத் தள்ளி நான் திரியலாமோ? திருமாலுக்கு மகனான மன்மதன் என்னும் அந்தக் கடவுளுக்கு அருமையான, அழகிய மைத்துனனே*, செவ்வேளே, வலிமை வாய்ந்த சேவல் என்னும் நல்ல கொடியைக் கட்டி, துன்பம் விளைவித்த அசுர சேனையுடன் சண்டை செய்தவனே, அன்பு வைத்த அடியார்களுக்கு கருணை வைத்து திருவருளைப் பாலிக்கும் ஞான மூர்த்தியே, முத்தமிழில் தேவாரப் பாக்களை (திருஞானசம்பந்தராக அவதரித்து) அருளியவனே, வயல்களில் பிரகாசிக்கின்ற முத்துக்களைக் கொண்ட எட்டிகுடி** என்னும் பதியில் குமரப் பெருமாளே. 
* மன்மதன் திருமாலின் மகன். முருகன் திருமால் மகளாகிய வள்ளியை மணந்தவன். எனவே முருகன் மன்மதனின் மைத்துனன்.
** எட்டிகுடி நாகப்பட்டினத்துக்கு அருகே கீழ்வேளூர் ரயில் நிலையத்திற்குத் தெற்கே 7 மைல் தொலைவில் உள்ளது.

பாடல் 832 - எட்டிகுடி
ராகம் - ஆரபி தாளம் - அங்கதாளம் - 10 1/2 தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமிதக-3

தாந்த தந்தன தான தனத்தம் ...... தனதான     தாந்த தந்தன தான தனத்தம் ...... தனதான

ஓங்கு மைம்புல னோட நினைத்தின் ...... பயர்வேனை     ஓம்பெ றும்ப்ரண வாதி யுரைத்தெந் ...... தனையாள்வாய் 
வாங்கி வெங்கணை சூரர் குலக்கொம் ...... புகடாவி     வாங்கி நின்றன ஏவி லுகைக்குங் ...... குமரேசா 
மூங்கி லம்புய வாச மணக்குஞ் ...... சரிமானு     மூண்ட பைங்குற மாது மணக்குந் ...... திருமார்பா 
காங்கை யங்கறு பாசில் மனத்தன் ...... பர்கள்வாழ்வே     காஞ்சி ரங்குடி ஆறு முகத்தெம் ...... பெருமாளே.

மிகுத்து வளரும் ஐந்து புலன்களும் (சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகியவை) என்னை இழுத்தோட யானும் அவ்வழியே ஓட நினைத்து, இன்பம் கொண்டு தளர்ச்சி அடைவேனை, ஓம் முதலிய ப்ரணவ மந்திரங்கள் அத்தனையும் எனக்கு உபதேசித்து, என்னை ஆண்டருள்வாயாக. வில்லை வளைத்து கொடிய அம்புகளை ஏவி சூரர் குல இளைஞர்கள் பாய்ந்துவர, வளைத்து நின்ற சூரர் சேனையை அம்பைச் செலுத்தியே வென்ற குமரேசனே, மூங்கிலைப் போன்று அழகிய புயங்களை உடைய, நறுமணமிக்க (யானைமகள்) தேவயானையும், உன்மேல் பக்தியும் காதலும் மூண்ட அழகிய குறப்பெண் வள்ளியும் மணந்த திருமார்பனே, மனக்கொதிப்பே இல்லாதவர்களும், பாசம், பந்தம் ஆகியவை நீங்கிய மனத்தவர்களுமான அன்பர்களின் செல்வமே, காஞ்சிரங்குடி (எட்டிக்குடி*) என்ற திருத்தலத்தில் ஆறுமுகத்தோடு அமர்ந்த எங்கள் பெருமாளே. 
* எட்டிகுடி நாகப்பட்டினத்துக்கு அருகே கீழ்வேளூர் ரயில் நிலையத்திற்குத் தெற்கே 7 மைல் தொலைவில் உள்ளது.

பாடல் 833 - எட்டிகுடி
ராகம் - ....; தாளம் -

தனதத்த தனதத்த தனதத்த தனதத்த     தனதத்த தனதத்த ...... தனதானா

கடலொத்த விடமொத்த கணையொத்த பிணையொத்த     கயலொத்த மலரொத்த ...... விழிமானார் 
கனசெப்பு நளினத்து முகைவெற்பை நிகர்செப்பு     கதிர்முத்து முலைதைக்க ...... அகலாதே 
மிடலுற்ற கலவிக்கு ளுளநச்சி வளமற்று     மிடிபட்டு மடிபட்டு ...... மனமாழ்கி 
மெலிவுற்ற தமியற்கு னிருபத்ம சரணத்தை     மிகநட்பொ டருள்தற்கு ...... வருவாயே 
தடையற்ற கணைவிட்டு மணிவஜ்ர முடிபெற்ற     தலைபத்து டையதுட்ட ...... னுயிர்போகச் 
சலசத்து மயிலுற்ற சிறைவிட்டு வருவெற்றி     தருசக்ர தரனுக்கு ...... மருகோனே 
திடமுற்ற கனகப்பொ துவில்நட்பு டனடித்த     சிவனுக்கு விழியொத்த ...... புதல்வோனே 
செழுநத்து மிழுமுத்து வயலுக்குள் நிறைபெற்ற     திகழெட்டி குடியுற்ற ...... பெருமாளே.

கடல், விஷம், அம்பு, மான், கயல் மீன், தாமரை மலர் ஆகியவற்றை ஒத்ததாகிய கண்களை உடைய விலைமாதர்களின் பொன் சிமிழ், தாமரையின் மொட்டு, மலை ஆகியவைகளுக்குச் சமம் என்று சொல்லப்படுவதும், ஒளி கொண்ட முத்து மாலை அணிந்ததுமான மார்பகம் மனத்தில் அழுந்திப் பதிய, அந்த எண்ணம் மனதை விட்டு அகலாமல் வலிமை வாய்ந்த புணர்ச்சி இன்பத்தை உள்ளம் விரும்பி, செல்வம் இழந்து வறுமை அடைந்து சோம்பல் மிகுந்து, மனம் மயங்கி அழிந்து மெலிவு அடைந்த தனியனாகிய எனக்கு உன்னுடைய இரண்டு திருவடிக் கமலங்களை மிக அன்புடன் அருள்வதற்கு வருவாயாக. தடையில்லாத அம்பைச் செலுத்தி, மணி, வைரம் இவை பதிக்கப்பட்ட கி¡£டத்தைக் கொண்ட பத்து தலைகளை உடைய துஷ்டனாகிய ராவணனுடைய உயிரைப் போகச் செய்து, தாமரையில் வீற்றிருக்கும் மயில் போன்ற சீதையை அவள் இருந்த சிறையினின்றும் விடுவித்து வெற்றியைக் கொண்டவனும் (ஆகிய ராமனான) சக்ராயுதம் ஏந்திய திருமாலுக்கு மருகனே, மெய்ம்மை வாய்ந்த தில்லைக் கனக சபையில் (பதஞ்சலி, வியாக்ரபாதர் மீதுள்ள) நட்பின் காரணமாக நடனம் செய்த சிவபெருமானுக்கு கண் போன்ற இனிய மகனே, செழிப்புள்ள சங்கு ஈன்ற முத்துக்கள் வயலில் நிறைந்து விளங்கும் எட்டிகுடியில்* வீற்றிருக்கும் பெருமாளே. 
* எட்டிகுடி நாகப்பட்டினத்துக்கு அருகே கீழ்வேளூர் ரயில் நிலையத்திற்குத் தெற்கே 7 மைல் தொலைவில் உள்ளது.

பாடல் 834 - எட்டிகுடி
ராகம் - ....; தாளம் -

தத்தன தத்தன தானா தானா     தத்தன தத்தன தானா தானா          தத்தன தத்தன தானா தானா ...... தனதான

மைக்குழ லொத்தவை நீலோ மாலோ     அக்கணி ணைக்கிணை சேலோ வேலோ          மற்றவர் சொற்றெளி பாலோ பாகோ ...... வடிதேனோ 
வத்திர மெய்ச்சசி தானோ நாணா     குத்துமு லைக்கிள நீரோ மேரோ          வைப்பதி டைக்கிணை நூலோ மேலோ ...... வெனமாதர் 
தக்கவு றுப்பினுள் மாலே மேலாய்     லச்சைய றப்புணர் வாதே காதே          சைச்சையெ னத்திரி நாயே னோயா ...... தலையாதே 
தற்பொறி வைத்தருள் பாராய் தாராய்     தற்சமை யத்தக லாவே னாதா          தத்தும யிற்பரி மீதே நீதான் ...... வருவாயே 
முக்கணர் மெச்சிய பாலா சீலா     சித்தசன் மைத்துன வேளே தோளார்          மொய்த்தம ணத்தது ழாயோன் மாயோன் ...... மருகோனே 
முத்தமிழ் வித்வவி நோதா கீதா     மற்றவ ரொப்பில ரூபா தீபா          முத்திகொ டுத்தடி யார்மேல் மாமால் ...... முருகோனே 
இக்குநி ரைத்தவி ராலு¡ர் சேலூர்     செய்ப்பழ நிப்பதி யூரா வாரூர்          மிக்கவி டைக்கழி வேளூர் தாரூர் ...... வயலூரா 
எச்சுரு திக்குளு நீயே தாயே     சுத்தவி றற்றிறல் வீரா தீரா          எட்டிகு டிப்பதி வேலா மேலோர் ...... பெருமாளே.

கரிய கூந்தலுக்கு ஒப்பானவை கருங் குவளையோ, கருமையோ? அந்தக் கண்கள் இரண்டுக்கும் ஒப்பானவை சேல் மீன்களோ, வேலோ? பின்னர் அந்தப் பெண்களின் சொல்லுக்கு இணை தெளிந்த பாலோ, வெல்லமோ, வடித்த தேனோ? முகம் உண்மையாகவே சந்திரன் தானோ? வெட்குதல் இல்லாமல் எழுந்த குத்தும் மார்பகத்துக்கு ஒப்பானவை இளநீரோ, மேரு மலையோ? இடைக்கு இணையாகக் கூறப்படுவது (நுண்ணியதான) நூலோ, அதை விட மேலானது ஒன்றோ என்றெல்லாம் மாதர்களுடைய மனத்தைக் கவர வல்ல அவயவங்களுள் காம மயக்கம் மிக்கவனாய், கூச்சம் இல்லாமல் சேர்கின்ற போட்டிச் சண்டையில் நுழையாமல், சீச் சீ என்று (பிறர் சொல்லும்படி) திரிகின்ற நாயேன் எப்போதும் அலையாமல், உனது முத்திரையை (வேல்-மயில் அடையாளத்தை) என் மேல் பொறித்து வைத்து கண் பார்த்து அருளுக. சிவசமயத்தனே, ஒளி வேல் ஏந்தும் நாதனே, (குதிரை போலத்) தாவிச் செல்லும் மயில் வாகனத்தின் மேல் நீதான் வந்து அருள வேண்டும். மூன்று கண்களை உடைய சிவபெருமான் மெச்சிப் புகழும் பாலனே, தூயவனே, மன்மதனின் மைத்துனனான செவ்வேளே, தோள்கள் நிரம்ப மொய்த்துள்ள, நறுமணம் உள்ள, துளசி மாலை அணிந்தவனாகிய திருமாலின் மருகனே, முத்தமிழ்ப் புலமை வாய்ந்த விநோதனே, இசை ஞானியே, பிறர் எவரும் உனக்கு ஒப்பில்லாத உருவத்தனே, (ஞான) ஒளி விளக்கே, முக்தியைத் தந்தருளி அடியார்கள் மீது மிக்க ஆசை கொள்ளும் முருகனே, கரும்பு வரிசையாக உள்ள விராலியூர், சேல் மீன்கள் நீந்தி ஊடுருவும் வயல்கள் உள்ள பழனி ஊரனே, திருவாரூர், சிறப்பு வாய்ந்த திருவிடைக்கழி, புள்ளிருக்கும் வேளூர் (ஆகிய வைதீஸ்வரன் கோவில்), பூ அரும்புகள் அடர்ந்து நிறைந்துள்ள வயலூர் என்னும் தலங்களில் வீற்றிருப்பவனே, எத்தகைய வேதத்துக்குள்ளும் நீயே தாய் போல் மூலப் பொருளாய் நிற்கின்றவனே, பரிசுத்தமான வலிமையும், திறமையும் வாய்ந்த வீரனே, தீரனே, எட்டிகுடியில்* வீற்றிருக்கும் வேலனே, தேவர்களின் பெருமாளே. 
* நாகப்பட்டினத்துக்கு அருகில் உள்ளது.

பாடல் 835 - எண்கண்
ராகம் - ரஞ்சனி தாளம் - ஆதி - தி.ர நடை - 12

தந்த தந்த தந்த தந்த, தந்த தந்த தந்த தந்த     தந்த தந்த தந்த தந்த ...... தனதான

சந்த னந்தி மிர்ந்த ணைந்து குங்கு மங்க டம்பி லங்கு     சண்ப கஞ்செ றிந்தி லங்கு ...... திரடோளுந் 
தண்டை யஞ்சி லம்ப லம்ப வெண்டை யஞ்ச லன்ச லென்று     சஞ்சி தஞ்ச தங்கை கொஞ்ச ...... மயிலேறித் 
திந்தி மிந்தி மிந்தி மிந்தி தந்த னந்த னந்த னென்று     சென்ற சைந்து கந்து வந்து ...... க்ருபையோடே 
சிந்தை யங்கு லம்பு குந்து சந்த தம்பு கழ்ந்து ணர்ந்து     செம்ப தம்ப ணிந்தி ரென்று ...... மொழிவாயே 
அந்த மந்தி கொண்டி லங்கை வெந்த ழிந்தி டும்ப கண்டன்     அங்க முங்கு லைந்த ரங்கொள் ...... பொடியாக 
அம்ப கும்ப னுங்க லங்க வெஞ்சி னம்பு ரிந்து நின்று     அம்பு கொண்டு வென்ற கொண்டல் ...... மருகோனே 
இந்து வுங்க ரந்தை தும்பை கொன்றை யுஞ்ச லம்பு னைந்தி     டும்ப ரன்ற னன்பில் வந்த ...... குமரேசா 
இந்தி ரன்ப தம்பெ றண்டர் தம்ப யங்க டிந்த பின்பு     எண்க ணங்க மர்ந்தி ருந்த ...... பெருமாளே.

சந்தனத்தை நிரம்பப் பூசிக் கலந்து, குங்குமமும், கடப்பம்பூவும், விளங்கும் சண்பக மலரும், இவையாவும் நெருங்கி மிளிரும் திரண்ட புயங்களும் துலங்க, தண்டையும், அழகிய சிலம்பும் ஒலி செய்ய, வீரக் காலணி சலன்சல் என்று ஒலிக்க உருவம் இனிதாக அமைந்த கிண்கிணியானது கொஞ்சுவதுபோல ஒலிக்க, மயில் வாகனத்தில் ஏறி (அதே ஓசை) என்ற தாளத்தில் ஆடி அசைந்து ஆனந்தத்துடன் வந்து, அருள் கூர்ந்து என் மனக் கோயிலுக்குள் புகுந்து, எப்போதும் புகழ்ந்து அறிந்து செவ்விய பதங்களை பணிந்து இருப்பாய் என்று என்னிடம் அறிவுரை கூறுவாயாக. அந்தப் புகழ் பெற்ற குரங்காம் அனுமனைக் கொண்டு இலங்கை எரியுண்டு அழியவும், கொடுஞ் செயலையே கொண்ட ராவணன் தனது உடலும் அழிபட்டு ரம்பத்தால் ராவினது போல பொடிப்பொடியாகத் தூளாகவும், அம்பு முதலிய பாணங்களைக் கொண்ட கும்பகர்ணனும் உள்ளம் கலங்குமாறு மிக்க கோபத்துடன் போர்க்களத்தில் நின்று அம்புகளை ஏவி வென்ற மேகவர்ணன் ராமனின் மருகனே, பிறையும், திருநீற்றுப் பச்சை, தும்பைப்பூ, கொன்றை, கங்கை இவற்றை அணியும் சிவபெருமான் தேவர்கள் பால்வைத்த அன்பினால் தோன்றிய குமரேசனே, தேவேந்திரன் தன் பதவியை மீண்டும் பெறும்படியாக, தேவர்களுடைய பயத்தைத் தீர்த்த பின்னர் எண்கண்* என்ற தலத்தில் வந்து வீற்றிருந்த பெருமாளே. 
* எண்கண் தலம் திருவாரூரிலிருந்து நீடாமங்கலம் செல்லும் ரயில் பாதையில் திருமதிக்குன்றம் ரயில் நிலையத்துக்கு அருகே உள்ளது.

பாடல் 836 - திருக்குடவாயில்
ராகம் - ....; தாளம் -

தனனா தத்தன தனனா தத்தன     தனனா தத்தன ...... தனதான

அயிலார் மைக்கடு விழியார் மட்டைகள்     அயலார் நத்திடு ...... விலைமாதர் 
அணைமீ திற்றுயில் பொழுதே தெட்டிக     ளவரே வற்செய்து ...... தமியேனும் 
மயலா கித்திரி வதுதா னற்றிட     மலமா யைக்குண ...... மதுமாற 
மறையால் மிக்கருள் பெறவே யற்புத     மதுமா லைப்பத ...... மருள்வாயே 
கயிலா யப்பதி யுடையா ருக்கொரு     பொருளே கட்டளை ...... யிடுவோனே 
கடலோ டிப்புகு முதுசூர் பொட்டெழ     கதிர் வேல் விட்டிடு ...... திறலோனே 
குயிலா லித்திடு பொழிலே சுற்றிய     குடவா யிற்பதி ...... யுறைவோனே 
குறமா தைப்புணர் சதுரா வித்தக     குறையா மெய்த்தவர் ...... பெருமாளே.

வேல் போன்ற, மை பூசிய, விஷம் கொண்ட கண்களை உடையவர்கள், பயனற்றவர்கள், பக்கத்தில் வருபவர்கள் விரும்புகின்ற வேசிகள், படுக்கையில் தூங்கும் பொழுதிலேயே வஞ்சிப்பவர்கள், அவர்கள் ஏவின வேலைகளைச் செய்து தன்னந்தனியனான அடியேனும் மயக்கம் கொண்டவனாகத் திரிகின்ற செய்கை ஒழிந்து போக, ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களால் ஏற்படும் தீய குணம் ஒழிந்து போக, வேதங்களை நான் ஓதி ஓதி, நின் திருவருளைப் பெறுமாறு, அற்புதமான தேன் நிரம்பிய மாலைகள் அணியப்பட்ட திருவடியைத் தந்து அருளுக. கயிலை மலையை உடையவராகிய சிவபெருமானுக்கு ஒப்பற்ற பிரணவப் பொருளை மேல் நிலையில் நின்று உபதேசித்தவனே, கடலில் ஓடிப் புகுந்த பழைய சூரன் அழிபட, ஒளி பொருந்திய வேலை விட்ட பராக்கிரமசாலியே, குயில்கள் கூவுகின்ற சோலைகள் சூழ்ந்துள்ள குடவாயில்* என்னும் நகரில் உறைபவனே, குறப் பெண்ணாகிய வள்ளியை மணம் செய்த வல்லமை உடையவனே, ஞான மூர்த்தியே, குறைவுபடாத உண்மைத் தவ நிலையை உடையார் தம் பெருமாளே. 
* திருக்குடவாயில் திருவாரூரிலிருந்து நீடாமங்கலம் போகும் வழியில் குறடாச்சேரி ரயில் நிலையத்தின் வடக்கே 8 மைலில் உள்ளது.

பாடல் 837 - திருக்குடவாயில்
ராகம் - துர்கா தாளம் - அங்கதாளம் - 7 1/2 தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2

தனன தானன தானன தானன     தனன தானன தானன தானன          தனன தானன தானன தானன ...... தனதான

சுருதி யாயிய லாயியல் நீடிய     தொகுதி யாய்வெகு வாய்வெகு பாஷைகொள்          தொடர்பு மாயடி யாய்நடு வாய்மிகு ...... துணையாய்மேல் 
துறவு மாயற மாய்நெறி யாய்மிகு     விரிவு மாய்விளை வாயருள் ஞானிகள்          சுகமு மாய்முகி லாய்மழை யாயெழு ...... சுடர்வீசும் 
பருதி யாய்மதி யாய்நிறை தாரகை     பலவு மாய்வெளி யாயொளி யாயெழு          பகலி ராவிலை யாய்நிலை யாய்மிகு ...... பரமாகும் 
பரம மாயையி னேர்மையை யாவரு     மறியொ ணாததை நீகுரு வாயிது          பகரு மாறுசெய் தாய்முதல் நாளுறு ...... பயனோதான் 
கருது மாறிரு தோள்மயில் வேலிவை     கருதொ ணாவகை யோரர சாய்வரு          கவுணி யோர்குல வேதிய னாயுமை ...... கனபாரக் 
களப பூண்முலை யூறிய பாலுணு     மதலை யாய்மிகு பாடலின் மீறிய          கவிஞ னாய்விளை யாடிடம் வாதிகள் ...... கழுவேறக் 
குருதி யாறெழ வீதியெ லாமலர்     நிறைவ தாய்விட நீறிட வேசெய்து          கொடிய மாறன்மெய் கூனிமி ராமுனை ...... குலையாவான் 
குடிபு கீரென மாமது ராபுரி     யியலை யாரண வூரென நேர்செய்து          குடசை மாநகர் வாழ்வுற மேவிய ...... பெருமாளே.

வேதமாய், இயல் தமிழாய், அத்தகைய இயற்றமிழின் மிக்குள்ளதான பகுதியாய், பலவுமாய், பல மொழிகளில் கொள்ளப்பட்ட சம்பந்தமுமாய், அடிப்படையாய், நடுப்பாகமாய், மிக்க துணையாய், பின்னும் அனைத்தையும் துறந்த நிலையதாய், தருமமாய், நல்லொழுக்க வழியாய், மிகுந்த விரிவு உடையதாய், விளைவுப் பொருளாய், அருள் நிறைந்த ஞானிகள் அனுபவிக்கும் சுகப் பொருளாய், மேகமாய், மழையாய், ஏழு வகைச் சுடர்க் கிரணங்களை வீசும் சூரியனாய், சந்திரனாய், நிறைந்துள்ள நட்சத்திரங்கள் பலவுமாய், ஆகாய வெளியாய் ஜோதியாய், உண்டாகின்ற பகலும் இரவும் இல்லாததாய், நிலைத்துள்ளதாய், மிக்க மேலான பொருளான பெரிய மாயையின் உண்மைத் தத்துவத்தை, எவரும் அறிய முடியாததை, நீ குருவாக வந்து (அதை உலகுக்கு) எடுத்து ஓதுமாறு (எனக்குத்) திருவருள் புரிந்தாய்*. (இந்த பாக்கியம்) நான் முற் பிறப்பில் செய்த தவத்தின் பயன் தானோ? யாவராலும் கருதிப் போற்றப்படும் பன்னிரு தோள்கள், மயில், வேல் இவற்றை எவரும் கண்டு கருதாத வகையில் (மறைத்து)**, (சீகாழிப்பதியின்) அரசாக வந்த கவுணிய குல அந்தணனாகி, பார்வதியின் மிக்க பாரமான, கலவைச் சாந்து அணிந்த மார்பில் சுரந்த பாலைப் பருகிய குழந்தையாகி (திருஞானசம்பந்தனாகி), மிக்க பாடல்கள் (தேவாரம்) பாடுவதில் மேம்பட்ட கவித் திறன் பெற்றவனாய் திருவிளையாடல்கள் செய்திருந்த சமயத்தில், வீண் வாதத்துக்கு வந்த (சமணர்கள்) கழுவில் ஏறவும், அவர்களுடைய இரத்தம் ஆறாகப் பெருகவும், தெருக்களில் எல்லாம் பூ மாரி நிரம்பிடவும், திரு நீற்றை யாவரும் இடும்படிச் செய்து, முன்பு கொடியவனாக இருந்த மாறனாகிய பாண்டிய மன்னனின் கூன்பட்ட உடல் நிமிர்ந்து விளங்கவும், (சமண்) பகையை அழித்து, பொன்னுலகில் உங்கள் ஊருக்குக் குடி புகுவீர்கள் என சிறந்த மதுரையின் முன்னிருந்த சமண நிலையை மாற்றி வேதபுரி என்னும்படியாக அந்த ஊரை நேர்மையான செந்நெறியில் சேர்ப்பித்து, திருக்குடவாயில்*** என்னும் பெரிய நகரில் வாழ்வு கொண்டு வீற்றிருக்கும் பெருமாளே. 
* அருணகிரி நாதர் முருகவேளிடம் தான் பெற்ற உபதேசத்தின் பெருமையை நினைத்து வியக்கின்றார்.
** முருகவேள் தமது பன்னிரு தோள், மயில், வேல் இவைகளை மறைத்து ஞான சம்பந்தராக வந்தார் என்பது பொருள். 
*** திருக்குடவாயில் திருவாரூரிலிருந்து நீடாமங்கலம் போகும் வழியில் குறடாச்சேரி ரயில் நிலையத்தின் வடக்கே 8 மைலில் உள்ளது.

பாடல் 838 - வலிவலம்
ராகம் - ....; தாளம் -

தனத்த தானன தனதன தனதன     தனத்த தானன தனதன தனதன          தனத்த தானன தனதன தனதன ...... தனதான

தொடுத்த நாள்முதல் மருவிய இளைஞனும்     இருக்க வேறொரு பெயர்தம திடமது          துவட்சி யேபெறி லவருடன் மருவிடு ...... பொதுமாதர் 
துவக்கி லேயடி படநறு மலரயன்     விதித்த தோதக வினையுறு தகவது          துறக்க நீறிட அரகர வெனவுள ...... மமையாதே 
அடுத்த பேர்மனை துணைவியர் தமர்பொருள்     பெருத்த வாழ்விது சதமென மகிழ்வுறு          மசட்ட னாதுலன் அவமது தவிரநி ...... னடியாரோ 
டமர்த்தி மாமலர் கொடுவழி படஎனை     யிருத்தி யேபர கதிபெற மயில்மிசை          யரத்த மாமணி யணிகழ லிணைதொழ ...... அருள்தாராய் 
எடுத்த வேல்பிழை புகலரி தெனஎதிர்     விடுத்து ராவணன் மணிமுடி துணிபட          எதிர்த்து மோர்கணை விடல்தெரி கரதலன் ...... மருகோனே 
எருக்கு மாலிகை குவளையி னறுமலர்     கடுக்கை மாலிகை பகிரதி சிறுபிறை          யெலுப்பு மாலிகை புனைசடி லவனருள் ...... புதல்வோனே 
வடுத்த மாவென நிலைபெறு நிருதனை     அடக்க ஏழ்கட லெழுவரை துகளெழ          வடித்த வேல்விடு கரதல ம்ருகமத ...... புயவேளே 
வனத்தில் வாழ்குற மகள்முலை முழுகிய     கடப்ப மாலிகை யணிபுய அமரர்கள்          மதித்த சேவக வலிவல நகருறை ...... பெருமாளே.

முதலிலிருந்தே பழக்கப்பட்ட ஒரு இளைஞன் இருக்கவும், வேறொருவர் இடத்தில் சமயம் கிடைக்கும்போது காம ஒழுக்கத்தில் ஈடுபட்டுச் சேரும் பொது மகளிர்களின் சிக்கலில் அகப்படும்படியாக, தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமன் விதித்த துக்கம் தரும் தந்திரமான செயல்களால் நேரும் தீய ஒழுக்கத்தை ஒழிக்கவும், திரு நீற்றை இடவும், அரகர என்று கூறவும் என் உள்ளம் பொருந்தாதோ? உற்றார்களும், மனைவி, சகோதரிகளும், சுற்றத்தாரும், செல்வமும் (இவைகள் கூடிய) பெரிய வாழ்வாகிய இதனையே நிலைத்திருப்பது என்று, எனக்குள்ளேயே மகிழ்கின்ற முட்டாள், வறிஞன் (ஆகிய எனது) வீணான வாழ்க்கை ஒழிய, உனது அடியார்களுடன் ஒருவனாகச் சேர்த்து, நல்ல மலர்களைக் கொண்டு உன்னை வழிபட, என்னைத் தவ நிலையில் இருக்கச் செய்து, மேலான கதியை நான் அடைய, மயிலின் மீது ஏறி, சிவந்த இரத்தினங்கள் பொருந்திய, வீரக் கழல்கள் அணிந்த உனது திருவடிகளைத் தொழும்படியாக அருள் புரிவாயாக. நீ எடுத்துச் செலுத்திய வேலாயுதம் குறி தவறுதல் இல்லை என்பது போல, எதிரே செலுத்தி ராவணனுடைய இரத்தின முடிகள் சிதறுமாறு எதிர்த்தும், ஒப்பற்ற அம்பைச் செலுத்தவும் வல்ல திருக்கரத்தை உடைய ராமனின் (திருமாலின்) மருகனே, வெள்ளெருக்கு மாலை, கழுநீரின் வாசனை உள்ள மலர், கொன்றை மாலை, கங்கை ஆறு, இளம்பிறை, எலும்பு மாலை (இவற்றை எல்லாம்) அணிந்த சடையை உடைய சிவபெருமானின் மகனே, பிஞ்சு விட்ட மாவடு வெளியே தோன்றும்படி அமைந்த (மாமரமாக) நிலை பெற்று நின்ற சூரனை அடக்கவும், ஏழு கடல்களும் வற்ற, ஏழு மலைகளும் பொடியாக, கூரிய வேலாயுதத்தைச் செலுத்திய திருக்கரத்தை உடையவனே, கஸ்தூரி அணிந்த திருப்புயங்களை உடையவனே, காட்டில் வசிக்கின்ற குறப் பெண்ணாகிய வள்ளியின் மார்பிலே முழுகிய கடப்ப மாலையை அணிந்த திருப்புயனே, தேவர்கள் மதிக்கின்ற வலிமையுள்ளவனே, வலிவலம்* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* வலிவலம் திருவாரூருக்கு அருகில் உள்ளது.

பாடல் 839 - வேதாரணியம்
ராகம் - மோ.னம் தாளம் - சது.ர .ம்பை - 7

தானன தத்தத் தந்தன தந்தன ...... தனதான

சூழும்வி னைக்கட் டுன்பநெ டும்பிணி ...... கழிகாமஞ் 
சோரமி தற்குச் சிந்தைநி னைந்துறு ...... துணையாதே 
ஏழையெ னித்துக் கங்களு டன்தின ...... முழல்வேனோ 
ஏதம கற்றிச் செம்பத சிந்தனை ...... தருவாயே 
ஆழிய டைத்துத் தங்கையி லங்கையை ...... யெழுநாளே 
ஆண்மைசெ லுத்திக் கொண்டக ரும்புயல் ...... மருகோனே 
வேழமு கற்கு தம்பியெ னுந்திரு ...... முருகோனே 
வேதவ னத்திற் சங்கரர் தந்தருள் ...... பெருமாளே.

என்னைச் சூழ்ந்த தீவினையின் காரணமாக ஏற்படும் நீண்ட நோய், மிகுந்த காமம், களவு ஆகியவற்றையே மனத்தில் நினைவு கொண்டிருந்தால், எனக்கு வேறு உற்ற துணை யாது? ஏழையேன் ஆகிய யான் இத்தனை துக்கங்களுடன் நாள்தோறும் அலைச்சல் உறுவேனோ? இந்தக் குற்றத்தினை நீக்கி உன் செம்மையான பாதங்களை சிந்திக்கும் எண்ணத்தைத் தந்தருள்வாயாக. சமுத்திரத்தை அணைகட்டி அடைத்து ஏழு நாளிலே இலங்கையின் மீது தனது ஆண்மையைச் செலுத்தி போரிட்டு தன் கையில் வசமாக்கிய கரிய மேக வண்ணத்து அண்ணல் இராமனின் மருமகனே, யானைமுகத்துக் கணபதியின் தம்பி எனப்படும் திருமுருகனே, வேதாரணியத்தில்* அமர்ந்த சிவபிரான் தந்தருளிய பெருமாளே. 
* வேதாரணியம் திருத்துறைப்பூண்டி சந்திப்பிலிருந்து 20 மைல் தூரத்தில் உள்ளது.

பாடல் 840 - வேதாரணியம்
ராகம் - ....; தாளம் -

தான தனத்தன தந்த தான தனத்தன தந்த     தான தனத்தன தந்த ...... தனதான

சேலை யுடுத்துந டந்து மாலை யவிழ்த்துமு டிந்து     சீத வரிக்குழல் கிண்டி ...... யளிமூசத் 
தேனி லினிக்கமொ ழிந்து காமு கரைச்சிறை கொண்டு     தேச மனைத்தையும் வென்ற ...... விழிமானார் 
மாலை மயக்கில்வி ழுந்து காம கலைக்குளு ளைந்து     மாலி லகப்பட நொந்து ...... திரிவேனோ 
வால ரவிக்கிர ணங்க ளாமென வுற்றப தங்கள்     மாயை தொலைத்திட வுன்ற ...... னருள்தாராய் 
பாலை வனத்தில்ந டந்து நீல அரக்கியை வென்று     பார மலைக்குள கன்று ...... கணையாலேழ் 
பார மரத்திரள் மங்க வாலி யுரத்தையி டந்து     பால்வ ருணத்தலை வன்சொல் ...... வழியாலே 
வேலை யடைத்துவ ரங்கள் சாடி யரக்கரி லங்கை     வீட ணருக்கருள் கொண்டல் ...... மருகோனே 
மேவு திருத்தணி செந்தில் நீள்பழ நிக்குளு கந்து     வேத வனத்தில மர்ந்த ...... பெருமாளே.

சேலையை உடுத்து ஒயிலாக நடந்தும், (கூந்தலிலுள்ள) மாலையை அவிழ்த்து முடிந்தும், குளிர்ந்த, நன்கு வாரிவிடப்பட்ட கூந்தலை நெருங்கி வண்டுகள் மொய்க்கவும், தேனைப் போல் இனிக்கும் பேச்சுக்களைப் பேசியும், காமப் பித்து உடையாரை தம் வசப் படுத்தியும், இங்ஙனம் நாடு முழுமையும் வெற்றி கொள்ளும் கண்களை உடைய வேசியர்களின் இருண்ட மயக்கத்தில் விழுந்து, காம நூல்களைப் படித்து வருந்தி மோக மயக்கத்தில் அகப்பட்டு மனம் நொந்து திரிவேனோ? இளஞ் சூரியனுடைய கிரணங்கள் என்று சொல்லும்படி விளங்கும் உனது திருவடிகள் என்னுடைய மயக்க அறிவைத் தொலைக்கும்படி உன்னுடைய திருவருளைத் தந்து அருளுக. பாலைவனத்தில் நடந்து, கரிய நிறம் கொண்ட அரக்கி தாடகையை வதைத்து வென்று, பெரிய மலையாகிய சித்ரகூட பர்வதத்தினின்று நீங்கி அப்பால் சென்று, தன் அம்பு கொண்டு ஏழு பெரிய மராமரக் கூட்டத்தை அழித்து, வாலியினுடைய மார்பைப் பிளந்து, அப்பால் சென்று வருண ராஜன் சொன்னபடியே கடலில் அணை கட்டி, (அரக்கர்கள் வாழ்ந்திருந்த) சூழல்களை அழிவு செய்து, இலங்கை அரசாட்சியை விபீஷணருக்குக் கொடுத்த மேக நிறமுடைய ராமனாகிய திருமாலின் மருகனே, விரும்பத் தக்க திருத்தணிகை, திருச்செந்தூர், பெரிய தலமாகிய பழநி ஆகிய இந்த மூன்று இடங்களிலும் பொருந்தி, வேதாரணியத்தில்* வீற்றிருக்கும் பெருமாளே. 
* வேதாரணியம் திருத்துறைப்பூண்டி ரயில் சந்திப்பிலிருந்து 20 மைல் தூரத்தில் உள்ளது.

பாடல் 841 - வேதாரணியம்
ராகம் - ....; தாளம் -

தானன தத்த தனந்த தானன தத்த தனந்த     தானன தத்த தனந்த ...... தனதான

நூலினை யொத்த மருங்குல் தேரினை யொத்த நிதம்பம்     நூபுர மொய்த்த பதங்கள் ...... இவையாலும் 
நூறிசை பெற்ற பதங்கொள் மேருவை யொத்த தனங்கள்     நூல்வல்ம லர்ப்பொ ருதுண்டம் ...... அவையாலும் 
சேலினை யொத்தி டுகண்க ளாலும ழைத்தி டுபெண்கள்     தேனிதழ் பற்று மொரின்ப ...... வலைமூழ்கிச் 
சீலம னைத்து மொழிந்து காமவி தத்தி லழுந்தி     தேறுத வத்தை யிழந்து ...... திரிவேனோ 
வாலஇ ளப்பி றைதும்பை யாறுக டுக்கை கரந்தை     வாசுகி யைப்பு னைநம்பர் ...... தருசேயே 
மாவலி யைச்சி றைமண்ட ஓரடி யொட்டி யளந்து     வாளிப ரப்பி யிலங்கை ...... யரசானோன் 
மேல்முடி பத்து மரிந்து தோளிரு பத்து மரிந்து     வீரமி குத்த முகுந்தன் ...... மருகோனே 
மேவுதி ருத்த ணிசெந்தில் நீள்பழ நிக்கு ளுகந்து     வேதவ னத்தி லமர்ந்த ...... பெருமாளே.

நூல் போன்று நுண்ணிய இடை, தேருக்கு ஒப்பான பெண்குறித்தலம், சிலம்பு அணிந்த பாதங்கள் இவைகளாலும், நூல்களால் திசைகளில் புகழ் பெற்ற தகுதி வாய்ந்த மேரு மலையைப் போன்ற மார்பகங்கள், தாமரை ஒத்த முகம் அவைகளாலும், சேல் மீனை ஒத்திடும் கண்களாலும் (ஆடவர்களை) அழைக்கின்ற விலைமாதர்களின் தேன் போல் இனிக்கும் வாயிதழைப் பற்றி அனுபவிக்கின்ற ஒரு இன்ப வலையில் (நான்) மூழ்கி என்னுடைய ஆசாரங்கள் அனைத்தையும் ஒழியவிட்டு காம லீலைகளில் அழுந்தியவனாய், தேர்ந்து அடையத் தகும் தவ நிலையை இழந்து அலைச்சல் உறுவேனோ? பால இளம் பிறைச் சந்திரன், தும்பைப்பூ, கங்கை நதி, கொன்றை, திருநீற்றுப் பச்சை, வாசுகி என்னும் பாம்பு இவைகளைப் புனைந்த சிவபெருமான் பெற்ற குழந்தையே, மகாபலிச் சக்கரவர்த்தி சிறையில் ஒடுங்க ஓர் அடியால் பேசிய பேச்சின் படி அளவிட்டும், அம்பைச் செலுத்தி இலங்கை அரசான ராவணனின் பத்துத் தலைகளையும் அரிந்தும் இருபது தோள்களையும் அரிந்தும் வீரம் மிக்கு நின்ற திருமாலின் மருகனே, விரும்பத் தக்கத் திருத்தணி, திருச் செந்தூர், பெரிய பழனி இம்மூன்று தலங்களிலும் இன்புற்று இருந்து, வேதாரணியத்தில்* வீற்றிருக்கும் பெருமாளே. 
* வேதாரணியம் திருத்துறைப்பூண்டி ரயில் சந்திப்பிலிருந்து 20 மைல் தூரத்தில் உள்ளது.

பாடல் 842 - கோடி - குழகர் கோயில்
ராகம் - ....; தாளம் -

தானதன தானதன தானதன தானதன     தானதன தானதன ...... தனதான

நீலமுகி லானகுழ லானமட வார்கள்தன     நேயமதி லேதினமு ...... முழலாமல் 
நீடுபுவி யாசைபொரு ளாசைமரு ளாகியலை     நீரிலுழல் மீனதென ...... முயலாமற் 
காலனது நாவரவ வாயிலிடு தேரையென     காயமரு வாவிவிழ ...... அணுகாமுன் 
காதலுட னோதமுடி யார்களுட னாடியொரு     கால்முருக வேளெனவு ...... மருள்தாராய் 
சோலைபரண் மீதுநிழ லாகதினை காவல்புரி     தோகைகுற மாதினுட ...... னுறவாடிச் 
சோரனென நாடிவரு வார்கள்வன வேடர்விழ     சோதிகதிர் வேலுருவு ...... மயில்வீரா 
கோலவழல் நீறுபுனை யாதிசரு வேசரொடு     கூடிவிளை யாடுமுமை ...... தருசேயே 
கோடுமுக வானைபிற கானதுணை வாகுழகர்     கோடிநகர் மேவிவளர் ...... பெருமாளே.

கரிய மேகம் போன்ற கூந்தலை உடைய மாதர்களின் மார்பகத்தின் மேலுள்ள ஆசையால் நாள் தோறும் அலைச்சல் உறாமல், பெரிய மண்ணாசை, பொருள்கள் மேலுள்ள ஆசை இவற்றில் மயக்கம் கொண்டு, அலை மிகுந்த கடல் நீரில் அலைச்சல் உறுகின்ற மீனைப் போல உழலும் பொருட்டு முயற்சி செய்யாமல், யமனுடைய (என்னை) விரட்டும் பேச்சு என்கின்ற பாம்பின் வாயில் அகப்பட்ட தேரை போல உடலில் பொருந்தியுள்ள உயிர் அவன் கையில் அகப்பட்டு விழும்படி, அந்தக் காலன் என்னை அணுகுவதற்கு முன்பாக, அன்புடன் உன்னை ஓதுகின்ற அடியார்களுடன் விரும்பி ஒரு முறையாவது முருக வேள் என்று நான் புகழுமாறு திருவருளைத் தந்தருளுக. (வள்ளி மலைக் காட்டிலுள்ள) சோலையின் இடையே பரண் மீது நிழலில் நின்று, தினைப் புனத்தைக் காவல் செய்யும் மயில் போல் சாயலை உடைய குறப் பெண்ணாகிய வள்ளியுடன் உறவு கொண்டாடி, கள்வன் என்று உன்னைத் தேடி வந்தவர்களான காட்டு வேடர்கள் எல்லாம் மாண்டு விழ, மிக்க ஒளி வீசும் வேலைச் செலுத்திய மயில் வீரனே, அழகுள்ளதும், வினைகளை அழிப்பதில் நெருப்புப் போன்றதும் ஆகிய திருநீற்றை அணிந்துள்ள மூலப் பொருளாகிய சிவபெருமானோடு கூடி விளையாடுகின்ற உமா தேவியார் பெற்ற குழந்தையே, தந்தத்தை முகத்தில் கொண்ட யானையாகிய கணபதிக்குப் பின்னர் தோன்றிய தம்பியே, குழகர் என்னும் திருநாமத்துடன் (சிவபெருமான்) வீற்றிருக்கும் கோடி* என்னும் தலத்தில் விரும்பி வீற்றிருக்கும் பெருமாளே. 
* கோடி என்னும் குழகர்கோவில் வேதாரணியத்துக்குத் தெற்கே 5 மைலில் உள்ளது.

பாடல் 843 - திருப்பெருந்துறை
ராகம் - ....; தாளம் -

தனத்த தந்தன தானன தந்தத்     தனத்த தந்தன தானன தந்தத்          தனத்த தந்தன தானன தந்தத் ...... தனதான

இரத்த முஞ்சியு மூளையெ லும்புட்     டசைப்ப சுங்குடல் நாடிபு னைந்திட்          டிருக்கு மண்சல வீடுபு குந்திட் ...... டதில்மேவி 
இதத்து டன்புகல் சூதுமி குந்திட்     டகைத்தி டும்பொரு ளாசையெ னும்புட்          டெருட்ட வுந்தெளி யாதுப றந்திட் ...... டிடமாயா 
பிரத்தம் வந்தடு வாதசு ரம்பித்     துளைப்பு டன்பல வாயுவு மிஞ்சிப்          பெலத்தை யுஞ்சில நாளுளொ டுங்கித் ...... தடிமேலாய்ப் 
பிடித்தி டும்பல நாள்கொடு மந்திக்     குலத்தெ னும்படி கூனிய டங்கிப்          பிசக்கு வந்திடு போதுபி னஞ்சிச் ...... சடமாமோ 
தரித்த னந்தன தானன தந்தத்     திமித்தி மிந்திமி தீதக் திந்தத்          தடுட்டு டுண்டுடு டூடுடி மிண்டிட் ...... டியல்தாளம் 
தனத்த குந்தகு தானன தந்தக்     கொதித்து வந்திடு சூருடல் சிந்தச்          சலத்து டன்கிரி தூள்படெ றிந்திட் ...... டிடும்வேலா 
சிரத்து டன்கர மேடுபொ ழிந்திட்     டிரைத்து வந்தம ரோர்கள் படிந்துச்          சிரத்தி னுங்கமழ் மாலைம ணம்பொற் ...... சரணோனே 
செகத்தி னின்குரு வாகிய தந்தைக்     களித்தி டுங்குரு ஞானப்ர சங்கத்          திருப்பெ ருந்துறை மேவிய கந்தப் ...... பெருமாளே.

ரத்தமும் சீழும், மூளை, எலும்பு, உள்ளே இருக்கும் மாமிசம், பசிய குடல், நரம்புகள், இவைகளைக் கொண்டு ஆக்கப்பட்டு அழுத்தமாகக் கட்டப்பட்டு மண்ணாலும், நீராலும் ஆன வீடாகிய உடலில் நுழைவு பெற்று, அதில் இருந்துகொண்டு இன்பகரமாகப் பேசும் சூதான மொழிகள் அதிகமாகி, கிளைத்து எழுகின்ற பொருளாசை என்கின்ற பறவை பிறர் தெளிவாக எடுத்துச் சொன்னாலும் தெளியாமல் மேலும் மேலும் பறப்பதாயிருக்க, உலக மாயை மிகுந்து, உண்டாகின்ற வாதம், சுரம், பித்தம் இவைகளின் வேதனைகளோடு பல வகையான வாயுக்களும் அதிகரித்து, இருக்கின்ற உடல்வலிமையும் சில தினங்களுக்குள் ஒடுங்கி, தடி மேல் கை ஊன்றுவதாகி, பல நாட்கள் செல்ல, குரங்குக் கூட்டத்தவன் என்று சொல்லும் படியாக உடல் கூனி, சத்துக்கள் அடங்கி, மரணம் வந்திடும் சமயத்தில் பின்பு பயப்படுவதான இந்த உடலால் ஏதேனும் பயன் உண்டோ? தரித்த னந்தன தானன தந்தத் திமித்தி மிந்திமி தீதக் திந்தத் தடுட்டு டுண்டுடு டூடுடி மிண்டிட்டு என்று ஒலிக்கின்ற தாளத்துடன், தனத்த குந்தகு தானன தந்த என்ற ஓசையுடன் கோபித்து எழுந்து (போருக்கு) வந்த சூரனுடைய உடல் அழியவும், கடல் வற்றிப் போவதுடன் கிரெளஞ்ச மலை பொடிபடவும் வேலாயுதத்தை எறிந்தவனே, தலை வணக்கத்துடன் கையிலுள்ள மலர்களைப் பொழிந்து போற்றி செய்யும் தேவர்கள் அவர்களது சிரத்தில் தலையில் மணக்கின்ற மாலைகளின் நறு மணத்தைப் பெற்ற அழகிய திருவடிகளை உடையவனே, உலகில் குருவாய் விளங்கும் உனது தந்தையாகிய சிவபெருமானுக்கு வேத உபதேசம் அளித்த பரமகுருவே, (உன் தந்தை) ஞானச் சொற்பொழிவு செய்த தலமாகிய திருப்பெருந்துறையில்** விரும்பி வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே. 
* நான்கு சைவக் குரவர்களில் ஒருவரான மாணிக்கவாசகர் அரசனுக்காக குதிரை வாங்கச் சென்றபோது திருப்பெருந்துறையில் சிவனே குரு மூர்த்தியாக இருந்து அடியார்களுக்கு ஞான உபதேசம் செய்வதைக் கண்டுத் தாமும் இழுக்கப்பட்டு அவ்வடியர்களுடன் உபதேசம் பெற்றார். அதனால் ஞானப்ரசங்கத் திருப்பெருந்துறை எனப்பட்டது.
** இது அறந்தாங்கி ரயில் நிலையத்தில் இருந்து 8 மைலில் உள்ளது.

பாடல் 844 - திருப்பெருந்துறை
ராகம் - ....; தாளம் -

தனத்தனந் தனதன தனத்தனந் தனதன     தனத்தனந் தனதன ...... தனதான

வரித்தகுங் குமமணி முலைக்குரும் பையர்மன     மகிழ்ச்சிகொண் டிடஅதி ...... விதமான 
வளைக்கரங் களினொடு வளைத்திதம் படவுடன்     மயக்கவந் ததிலறி ...... வழியாத 
கருத்தழிந் திடஇரு கயற்கணும் புரள்தர     களிப்புடன் களிதரு ...... மடமாதர் 
கருப்பெருங் கடலது கடக்கவுன் திருவடி     களைத்தருந் திருவுள ...... மினியாமோ 
பொருப்பகம் பொடிபட அரக்கர்தம் பதியொடு     புகைப்பரந் தெரியெழ ...... விடும்வேலா 
புகழ்ப்பெருங் கடவுளர் களித்திடும் படிபுவி     பொறுத்தமந் தரகிரி ...... கடலூடே 
திரித்தகொண் டலுமொரு மறுப்பெறுஞ் சதுமுக     திருட்டியெண் கணன்முத ...... லடிபேணத் 
திருக்குருந் தடியமர் குருத்வசங் கரரொடு     திருப்பெருந் துறையுறை ...... பெருமாளே.

சந்தனக் கலவை பூசப்பட்டதும், குங்குமம் அணிந்ததும் ஆகி, தென்னங் குரும்பை ஒத்ததுமான மார்பை உடைய பெண்கள் உள்ளம் மகிழ்ச்சி கொள்ளுமாறு, பலவகையான வளையல் அணிந்துள்ள தமது கரங்களால் (ஆடவர்களை) வசீகரித்து இழுத்து, வந்தவர்கள் உடல் இன்பம் அடையுமாறு காம மயக்கத்தை ஊட்டும் சொற்களால் அறிவு அழிந்து போகாத என் சிந்தனைகளும் அழிவு பெற, இரண்டு கயல் மீன் போன்ற கண்களும் புரள மிக்க மகிழ்ச்சியைத் தருகின்ற இள வயதுள்ள மாதர்களால் ஏற்படுகின்ற பிறவி என்கின்ற கடலைக் கடக்க, உன் திருவடிகளைத் தருவதற்கு உன் திருவுள்ளம் இனியேனும் கூடுமோ? கிரெளஞ்ச மலையின் உள்ளிடம் பாடிபடவும், அசுரர்கள் தங்கள் ஊர்களுடன் புகை பரந்த நெருப்பில் பட்டு அழியவும் செலுத்திய வேலனே, புகழ் மிகுந்த தேவர்கள் மகிழும்படி, பூமியைத் தாங்கும் மந்தர மலையை பாற்கடலினிடையே (மத்தாகச்) சுழலச் செய்த மேக நிறத் திருமாலும், ஒரு குறையைப்* பெற்ற, (தனக்கிருந்த ஐந்து தலைகளில்) நான்கு முகங்களில் மட்டுமே பார்வையைக் கொண்ட எட்டுக் கண்களை உடைய பிரமன் முதலான தேவர்களும் உன் திருவடிகளை விரும்பிப் போற்ற, திருக் குருந்த மரத்து அடியில் வீற்றருளிய தக்ஷிணா மூர்த்தியாகிய குருபரர்** சங்கரருடன் திருப்பெருந்துறையில்*** அமர்ந்திருக்கும் பெருமாளே. 
* இறைவனிடம் பொய் பேசியதால் பிரமனின் ஐந்து தலைகளுள் ஒரு தலை கிள்ளப்பட்டுள்ள மறு.
** மாணிக்க வாசகர் அமைச்சராக இருந்த சமயம் நாட்டுக்காக குதிரை வாங்கச் சென்றபோது திருப்பெருந்துறையில் சிவபெருமான் ஞான குருமூர்த்தியாக இருந்து, குருந்த மரத்தடியில் அடியார்களுக்கு உபதேசம் செய்வதைக் கேட்டுத் தாமும் கவரப்பட்டு, அந்த அடியார்களுடன் இருந்து உபதேசம் பெற்றார்.
*** திருப்பெருந்துறை அறந்தாங்கி ரயில் நிலையத்திலிருந்து 7 மைலில் உள்ளது.

பாடல் 845 - திருப்பெருந்துறை
ராகம் - ....; தாளம் -

தனன தந்தனந் தனதன தனதன     தனன தந்தனந் தனதன தனதன          தனன தந்தனந் தனதன தனதன ...... தனதான

முகர வண்டெழுங் கருமுகி லலையவு     முதிய நஞ்சுமிழ்ந் தயில்விழி குவியவு          முகிள சந்திரன் பொருநுதல் வெயரவு ...... மமுதூறும் 
முருகு தங்குசெந் துகிரிதழ் தெரியவு     மருவு சங்கநின் றொலிகொடு பதறவு          முழுது மன்புதந் தமளியி னுதவிய ...... அநுராகச் 
சிகர கும்பகுங் குமபுள கிததன     மிருபு யம்புதைந் திடநடு விடைவெளி          தெரிய லின்றியொன் றிடவுயி ருயிருட ...... னுறமேவித் 
திமிர கங்குலின் புதவிடு மவசர     நினைவு நெஞ்சினின் றறவவர் முகமது          தெரிச னஞ்செயும் பரிவற இனியருள் ...... புரிவாயே 
மகர நின்றதெண் டிரைபொரு கனைகடல்     மறுகி யஞ்சிவந் தடிதொழு திடவொரு          வடிகொள் செஞ்சரந் தொடுபவ னிருபது ...... புயவீரன் 
மடிய வங்குசென் றவனொரு பதுமுடி     முடிய முன்புமண் டமர்பொரு தமர்நிழல்          மதிலி லங்கையும் பொடிபட அருளரி ...... மருகோனே 
நிகரி லண்டமெண் டிசைகளு மகிழ்வுற     விரகு கொண்டுநின் றழகுறு மயில்மிசை          நினைவி னுந்தியம் புவிதனை வலம்வரு ...... மிளையோனே 
நிலவ ரும்புதண் டரளமு மிளிரொளிர்     பவள மும்பொரும் பழனமு மழகுற          நிழல்கு ருந்தமுஞ் செறிதுறை வளர்வுறு ...... பெருமாளே.

ஒலி செய்யும் வண்டுகள் எழுந்து மொய்க்கும் கரிய மேகம் போன்ற கூந்தல் அலைச்சல் உறவும், முற்றிய விஷத்தைக் கக்கும் அம்பு போன்ற கண்கள் குவியவும், அரும்பு மலரும் பிறைச் சந்திரனை ஒத்த நெற்றியில் வியர்வை எழவும், அமுதம் ஊறுகின்ற, நறுமணம் தங்கும் செவ்விய பவளம் போன்ற வாயிதழ் தெரியவும், பொருந்திய சங்கு போன்ற கழுத்திலிருந்து வெளிப்படும் (புட்குரல்) ஒலியோடு பதறிடவும், முழு அன்பையும் தந்து படுக்கையில் காட்டிய காமப் பற்றுக்கு இடமானதும், மலை போன்றதும், குடம் போன்றதும், குங்குமம் பூசியதும், புளகிதம் கொண்டதுமான மார்பகங்கள் இரண்டு புயங்களிலும் அழுந்திடவும், மத்தியில் வெளியிடம் தெரியாத வண்ணம் ஒருவரை ஒருவர் அணைந்திட, உயிரும் உயிரும் கலந்து பொருந்தக் கூடி, இருண்ட இரவில் கலவி இன்பத்தைத் தந்து உதவிடும் சமயங்களின் ஞாபகம் மனதிலிருந்து ஒழிந்து போகவும், (அந்த விலைமாதர்களின்) முகத்தை தரிசனம் செய்ய விரும்பும் ஆசை ஒழிந்து போகவும் இனி எனக்கு அருள் புரிவாயாக. மகர மீன்கள் உள்ள, தெள்ளிய அலைகள் மோதும், ஒலிக்கும் கடல் (சமுத்திரராஜன்) கலக்கத்துடன் பயந்து வந்து திருவடியில் தொழுது வணங்கும்படி ஒரு கூர்மையான செவ்விய அம்பைச் செலுத்தியவனும், இருபது புயங்களைக் கொண்ட வீரன் (ராவணன்) இறக்க, இலங்கைக்குப் போய் அவனுடைய ஒரு பத்து தலைகளும் அழிபட முன்பு நெருங்கி போரைச் செய்த, ஒளி பொருந்திய மதில் சூழ்ந்த இலங்கைப் பட்டினம் பொடிபட அருளிய திருமாலின் மருகனே, ஒப்பில்லாத அண்டங்களிலும் எட்டுத் திசைகளிலும் உள்ளவர்கள் மகிழ்ச்சி கொள்ளவும் சாமர்த்தியத்துடன் ஏறி நின்று அழகு பொருந்திய மயிலில் மனோ வேகத்தைக் காட்டிலும் அதி வேகமாகச் செலுத்தி, அழகிய பூலோகத்தை வலம் வந்த இளையோனே, நிலவொளி போல் வெள்ளொளி வீசும் குளிர்ந்த முத்துக்களும் விளங்கி, ஒளி தரும் பவளமும் கலந்து இலங்கும் வயல்கள் அழகு தர, நிழல் தரும் குருந்த மரமும் நிறைந்த திருப் பெருந்துறையில்* விளங்கி வீற்றிருக்கும் பெருமாளே. 
* திருப் பெருந்துறை அறந்தாங்கி ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ளது. இங்குள்ள குருந்தமரத்தடியில்தான் மாணிக்கவாசகரை சிவபெருமான் தடுத்தாட்கொண்டார்.

பாடல் 846 - திருத்துருத்தி
ராகம் - ....; தாளம் -

தனத் தனத்தன தானன தானன     தனத் தனத்தன தானன தானன          தனத் தனத்தன தானன தானன ...... தனதான

மலைக் கனத்தென மார்பினி லேயிரு     முலைக் கனத்துற வேயிடை நூலென          வளைத் துகுப்பமை யார்குழல் தோளொடும் ...... அலைமோத 
மயிற் குலத்தவ ராமென நீள்கலை     நெகிழ்த் துவித்திரு வார்விழி வேல்கொடு          மயக் கிநத்தினர் மேல்மறு பாடும ...... விழியேவி 
விலைக் கெனத்தன மாயிர மாயிர     முலைக் களப்பினு மாசைபொ தாதென          வெறுப் பர்குத்திர காரியர் வேசையர் ...... மயல்மேலாய் 
வெடுக் கெடுத்தும காபிணி மேலிட     முடக் கிவெட்கும தாமத வீணனை          மினற் பொலிப்பத மோடுற வேயருள் ...... புரிவாயே 
அலைக் கடுத்தசு ரார்பதி கோவென     விடப் பணச்சிர மாயிர சேடனும்          அதிர்த் திடக்கதிர் வேல்விடு சேவக ...... மயில்வீரா 
அடைக் கலப்பொரு ளாமென நாயெனை     அழைத் துமுத்திய தாமநு பூதியெ          னருட் டிருப்புக ழோதுக வேல்மயி ...... லருள்வோனே 
சிலைக் கைமுப்புர நீறெழ வேதிரு     வுளத் திலற்பமெ னாநினை தேசிகர்          சிறக் கமுத்தமி ழாலொரு பாவக ...... மருள்பாலா 
திருக் கடப்பலர் சூடிய வார்குழல்     குறத் திகற்புட னேவிளை யாடியொர்          திருத் துருத்தியில் வாழ்முரு காசுரர் ...... பெருமாளே.

மலைப்பாரம் போல நெஞ்சில் இரண்டு மார்பகங்களும் சுமையைத் தருவதால் இடுப்பு நூல் போல் வளைவு பெற, கரிய நிறம் உள்ள கூந்தல் தோள்கள் மேல் அலை வீசுவது போல் புரள, மயில்களின் கூட்டத்தவர்கள் போல் நீண்ட ஆடைகளை வேண்டுமென்றே தளர்த்தி வைத்து, இரண்டு நீண்ட கண்ணாகிய வேல் கொண்டு மயக்குவித்து தம்மை விரும்பி வந்தவர் மேல் உள்ள குற்றங்களைக் கூறுவது போன்று அந்தக் விழிகளைச் செலுத்தி, கொடுக்க வேண்டிய பொருளுக்காக பொன் பல ஆயிரங்கள் அந்த மார்பகங்களுக்காக அளந்து கொடுத்தாலும் பேராசை காரணமாக போதாது என்று வெறுப்பைக் காட்டுபவர்களும், வஞ்சகச் செயலினரும் ஆகிய விலைமாதர்கள் மீது காம மயக்கம் மேலோங்கிப் பின் திடீரென்று கொடிய நோய்கள் பீடிக்க ஒடுங்கி வெட்கப்படுகின்ற, பெருத்த மதம் பிடித்த வீணனாகிய நான் மின்னல் போன்று ஒளி வீசுகின்ற உனது திருவடிகளில் பொருந்திச் சேர அருள் புரிவாயாக. கடலில் போய்ப் புகுந்த அசுரர் தலைவனாகிய சூரன் கோ என்று அஞ்சி அலற, விஷம் கொண்ட படம் உடைய தலைகள் ஆயிரங்கள் உடைய ஆதி சேஷனும் அதிர்ச்சி அடைய, ஒளிவீசும் வேலைச் செலுத்திய வலிமையாளனே, மயில் வீரனே, அடைக்கலம் வைக்கப்பட்ட பொருளை ரட்சிப்பது போல அடியேனை பொருட்படுத்தி அழைத்து, முக்தியைத் தரவல்ல திருவருள் பிரசாதமாகிய திருப்புகழை நீ ஓதுவாயாக என்று திருவாய் மலர்ந்து வேலையும் மயிலையும் பாதுகாப்பாக (என் உடலில் இலச்சினையாகப் பொறித்து) அருளியவனே, மேரு மலையாகிய வில்லைக் கையில் பிடித்தபடி இருக்க முப்புரங்களை தீயினால் பொடியாகும்படி அழிய திருவுள்ளத்தில் சிறிதளவே நினைத்த தேசிகராகிய சிவபெருமான் பெருமை அடைய முத்தமிழைக் கொண்டு, ஒப்பற்ற கருத்துக்கு உரியதான (தேவாரப்) பாக்களை (திருஞான சம்பந்தராக அவதரித்து) அருளிய குழந்தையே, அழகிய கடப்ப மலர் சூடிய நீண்ட கூந்தலை உடைய குறத்தியான வள்ளியின் கற்புக் குணங்களில் திளைத்து விளையாடி, ஒப்பற்ற திருத்துருத்தியில்* வாழும் முருகப் பெருமானே, தேவர்களின் பெருமாளே. 
* திருத்துருத்திக்கு குற்றாலம் என்று பெயர். கும்பகோணத்துக்கு வடக்கே உள்ளது.

பாடல் 847 - திருவீழிமிழலை
ராகம் - அமிர்த வர்.ணி தாளம் - ஆதி

தனனா தனனா தனனா தனனா     தனனா தனனா ...... தனதான

எருவாய் கருவாய் தனிலே யுருவா     யிதுவே பயிராய் ...... விளைவாகி 
இவர்போ யவரா யவர்போ யிவரா     யிதுவே தொடர்பாய் ...... வெறிபோல 
ஒருதா யிருதாய் பலகோ டியதா     யுடனே யவமா ...... யழியாதே 
ஒருகால் முருகா பரமா குமரா     உயிர்கா வெனவோ ...... தருள்தாராய் 
முருகா வெனவோர் தரமோ தடியார்     முடிமே லிணைதா ...... ளருள்வோனே 
முநிவோ ரமரோர் முறையோ வெனவே     முதுசூ ருரமேல் ...... விடும்வேலா 
திருமால் பிரமா வறியா தவர்சீர்     சிறுவா திருமால் ...... மருகோனே 
செழுமா மதில்சே ரழகார் பொழில்சூழ்     திருவீ ழியில்வாழ் ...... பெருமாளே.

உற்பத்திக்கு வேண்டிய எருவாய், கர்ப்பக் கருவாய், அதனின்று உருவமாகி, இவ்வுருவமே பயிர் வளர்வதுபோல் விளைபொருளாகி இவர் இவர் என்று இன்று இருப்பவர், இறந்தபின்பு, அவர் அவர் என்று சொல்லும்படியாகி, அவர் அவர் என்று பேசப்பட்டவர், பிறந்தபின்பு இவர் இவர் என்று சொல்லும்படியாகி, இந்தச் சங்கிலியே ஒரு தொடர்ச்சியாக, வெறி பிடித்தது போல, ஒரு தாயார், இரண்டு தாயார், பல கோடி தாய்மார்களை அடைந்து வீணாக யான் அழிவுறாமல், ஒருமுறையாவது முருகனே, பரமனே, குமரனே, என்றும் என்னுயிரைக் காத்தருள் என்றும் கூவித் துதிக்க உனது திருவருளைத் தந்தருள்வாயாக. முருகனே என ஒரே முறை ஓதும் அடியார்க்கு நீ அவர்தம் தலைமேல் இருதாள்களையும் வைத்து அருள்பவனாயிற்ஆற. முனிவர்களும், தேவர்களும் முறையோ முறையோ என உன்முன் ஓலமிட, பழைய சூரனது மார்பில் செலுத்திய வேலனே, திருமாலும் பிரமனும், (அடியும் முடியும்) அறியாதவராகிய சிவபெருமானின் செல்வச் சிறுவனே, திருமாலின் மருமகனே, செழிப்புள்ள அழகிய மதில்கள் சேர்ந்த, அழகு நிறைந்த சோலைகள் சூழ்ந்த, திருவீழிமிழலையில்* வாழும் பெருமாளே. 
* திருவீழிமிழலை தஞ்சை மாவட்டம் குற்றாலம் ஊருக்கு 6 மைல் தெற்கே உள்ளது.

பாடல் 848 - திருவாவடுதுறை
ராகம் - ....; தாளம் -

தத்ததன தான தனத்தனத் தத்ததத்த     தத்ததன தான தனத்தனத் தத்ததத்த          தத்ததன தான தனத்தனத் தத்ததத்த ...... தனதான

சொற்பிழைவ ராம லுனைக்கனக் கத்துதித்து     நிற்பதுவ ராத பவக்கடத் திற்சுழற்றி          சுக்கிலவ தார வழிக்கிணக் கிக்களித்து ...... விலைமாதர் 
துப்பிறைய தான இதழ்க்கனிக் குக்கருத்தை     வைத்துமய லாகி மனத்தைவிட் டுக்கடுத்த          துற்சனம காத கரைப்புவிக் குட்டழைத்த ...... நிதிமேவு 
கற்பகஇ ராச னெனப்படைக் குப்பெருத்த     அர்ச்சுனந ராதி யெனக்கவிக் குட்பதித்து          கற்றறிவி னாவை யெடுத்தடுத் துப்படித்து ...... மிகையாகக் 
கத்திடுமெ யாக வலிக்கலிப் பைத்தொலைத்து     கைப்பொருளி லாமை யெனைக்கலக் கப்படுத்து          கற்பனைவி டாம லலைத்திருக் கச்சலிக்க ...... விடலாமோ 
எற்பணிய ராவை மிதித்துவெட் டித்துவைத்து     பற்றியக ராவை யிழுத்துரக் கக்கிழித்து          எட்கரிப டாம லிதத்தபுத் திக்கதிக்கு ...... நிலையோதி 
எத்தியப சாசின் முலைக்குடத் தைக்குடித்து     முற்றுயிரி லாம லடக்கிவிட் டுச்சிரித்த          யிற்கணையி ராமர் சுகித்திருக் கச்சினத்த ...... திறல்வீரா 
வெற்பெனம தாணி நிறுத்துருக் கிச்சமைத்து     வர்க்கமணி யாக வடித்திருத் தித்தகட்டின்          மெய்க்குலம தாக மலைக்கமுத் தைப்பதித்து ...... வெகுகோடி 
விட்கதிர தாக நிகர்த்தொளிக் கச்சிவத்த     ரத்தினப டாக மயிற்பரிக் குத்தரித்து          மிக்கதிரு வாவ டுநற்றுறைக் குட்செழித்த ...... பெருமாளே.

துதிக்கும் சொற்களில் பிழை ஒன்றும் வராமல் உன்னை நிரம்பத் துதி செய்து வணங்கி நிற்பது என்பதே இல்லாத பிறவியாகிய காட்டில் சுழன்று, இந்திரியம் மூலமாக பிறப்பு எடுக்கின்ற வழியில் இணங்கிப் பொருந்தி மகிழ்ச்சி பூண்டு, விலைமாதர்களின் பவளம் தங்குவது போன்ற வாயிதழின் ஊறலாகிய பழத்தின் ருசியில் என் எண்ணங்களை வைத்து, ஆசை மயக்கம் கொண்டு மனதைக் காமத்தில் முழுவதும் செலுத்தி, பொல்லாத துர்க்குணம் உடைய பெரும் கொடியவர்களை, இந்தப் பூமியில் வளப்பம் பொருந்தி செல்வம் நிறைந்த கற்பகத் தரு போன்ற அரசனே (நீ) என்றும், படையில் மிகச் சிறந்த அர்ச்சுன அரசன் (நீ) என்றும் கவிகளில் அமைத்து, கற்று அறிந்த சொற்களைப் பொறுக்கி எடுத்து அந்த மனிதர்களை நெருங்கிப் போய் அவர்கள் மீது நான் அமைத்த கவிகளைப் படித்து, அளவுக்கு மிஞ்சி கூச்சலிடும் உடலைக் கொண்டவனாய், வன்மை கொண்ட பொலிவை இழந்து, (வேசையருக்குத் தர) கையில் பொருள் இல்லாத காரணத்தால் என்னைக் கலக்கமுறச் செய்யும் கற்பனைக் கவிதைகளில் இடைவிடாமல் நான் அலைச்சல் உறும்படியும் சலிப்புறும்படியும் கை விடலாமோ? ஒளி பொருந்திய படத்தை உடைய பாம்பின் (காளிங்கனின்) தலையில் (நடனமாடி காலால்) மிதித்து வெட்டிக் கலக்கி, (கஜேந்திரனாகிய) யானையைப் பற்றி இழுத்த முதலையை வெளியே இழுத்து (தன் சக்ராயுதத்தால்) பலமாகக் கிழித்து, அவமதிப்புக்கு இடமான யானை (முதலையின் வாயில்) படாமல், இன்பம் தரக்கூடிய முக்தி நிலைக்கான உறுதிப் பொருளை அதற்குச் சொல்லி, (விஷப்பால் தரும்) வஞ்சனை எண்ணத்துடன் வந்த பூதனை என்ற ராட்சசியின் முலைக் குடத்தை உறிஞ்சிக் குடித்து முழுதும் உயிர் இல்லாத வகையில் (அந்தப் பிசாசை) அடக்கி விட்டு நகைத்த (கண்ணனாகவும்), கூரிய அம்பைக் கொண்ட ராமராகவும் வந்த திருமால் சுகமாக இருக்கும்படி (சூரன் முதலியோரைக்) கோபித்த வலிமை உடைய வீரனே, மலை என்னும்படியாக பொன் பதக்கம் ஒன்றை எடை போட்டு, அதனை உருக்கி உருவமாகச் செய்து, பல வகையான ரத்தினங்களைப் பொறுக்கி எடுத்து அமைத்து, பொன் தகட்டினுடைய சரியான கூட்டம் என்று அனைவரும் பிரமிக்கும்படிச் செய்து, அதில் முத்தைப் பதிக்கச் செய்து, பல கோடி சூரியனுடைய ஒளி கூடியது போல ஒளி வீசிச் சிவந்த ரத்தினத் திரைச் சீலை கொண்டது போன்ற உடலை உடைய குதிரை போன்ற மயில் வாகனத்தின் மீது அமர்ந்து, மிகச் சிறந்த திருவாவடுதுறை* என்னும் நல்ல பதியில் வளப்பமுற்று விளங்கும் பெருமாளே. 
வரிகள் 19 முதல் 23 வரை மயிலின் உடல் வர்ணனை கூறப்பட்டுள்ளது.
* திருவாவடுதுறை மாயூரத்துக்கு மேற்கே 13 மைலில் உள்ளது.

பாடல் 849 - மருத்துவக்குடி
ராகம் - ....; தாளம் -

தனத்த தத்தன தானா தானன     தனத்த தத்தன தானா தானன          தனத்த தத்தன தானா தானன ...... தனதான

கருத்தி தப்படு காமா லீலைகள்     விதத்தை நத்திய வீணா வீணிகள்          கவட்டு விற்பன மாயா வாதிகள் ...... பலகாலுங் 
கரைத்து ரைத்திடு மோகா மோகிகள்     அளிக்கு லப்பதி கார்போ லோதிகள்          கடைக்க ணிற்சுழ லாயே பாழ்படு ...... வினையேனை 
உரைத்த புத்திகள் கேளா நீசனை     யவத்த மெத்திய ஆசா பாசனை          யுளத்தில் மெய்ப்பொரு ளோரா மூடனை ...... யருளாகி 
உயர்ச்சி பெற்றிடு மேலா மூதுரை     யளிக்கு நற்பொரு ளாயே மாதவ          வுணர்ச்சி பெற்றிட வேநீ தாளிணை ...... யருள்வாயே 
செருக்கி வெட்டிய தீயோ ராமெனு     மதத்த துட்டர்கள் மாசூ ராதிய          சினத்தர் பட்டிட வேவே லேவிய ...... முருகோனே 
சிவத்தை யுற்றிடு தூயா தூயவர்     கதித்த முத்தமிழ் மாலா யோதிய          செழிப்பை நத்திய சீலா வீறிய ...... மயில்வீரா 
வரைத்த வர்க்கரர் சூலா பாணிய     ரதிக்கு ணத்தரர் தீரா தீரர்த          மனத்தி யற்படு ஞானா தேசிக ...... வடிவேலா 
வருக்கை யிற்கனி சாறாய் மேலிடு     தழைத்த செய்த்தலை யூடே பாய்தரு          மருத்து வக்குடி வாழ்வே தேவர்கள் ...... பெருமாளே.

மனத்துக்கு இனிமை வாய்க்கும்படி பல விதமான காம லீலைகளை விரும்பிய மகா வீணிகள். வஞ்சக அறிவுடையவராய், மயக்கம் ஊட்டத் தக்க பேச்சினை உடையவர்கள். பல முறையும் மனம் கரையும்படி பேச வல்ல மோகம் மிகக் கொண்டவர்கள். வண்டினக் கூட்டங்கள் வந்து படிகின்ற கரிய மேகம் போன்ற கூந்தலை உடையவர்கள் ஆகிய விலைமாதர்களின் கடைக் கண் மயக்கில் பட்டுச் சுழலுதலாகி, பாழாகப் போகின்ற வினைக்கு ஈடான என்னை, பெரியோர்கள் சொன்ன புத்திமதிகளைக் கேளாத இழிந்தோனான என்னை, பயனற்றவையே மிகுந்த ஆசைகளில் பற்று உடையவனாகிய என்னை, மனதில் உண்மைப் பொருள் இன்னது என ஆராயாத மூடனை, உன் திருவருளைப் பெற்றவனாக்கி, உயர்ச்சி பெற்ற, மேலான வேதத்தில் குறிக்கப் பெற்ற, நல்ல பிள்ளையாக்கி, சிறந்த தவ ஞானத்தைப் பெறுமாறு உனது திருவடிகளைத் தந்தருள்வாயே. கர்வம் கொண்டு, பகைவர்களை வெட்டி அழித்த, பொல்லாதவர்கள் என்று சொல்லப்பட்ட, மதம் கொண்ட துஷ்டர்களாகிய பெரிய சூரன் முதலான கோபம் கொண்ட அசுரர்கள் அழியும்படி வேலாயுதத்தைச் செலுத்திய முருகனே, சிவமங்களம் பொருந்திய பரிசுத்த மூர்த்தியே, பெரியோர்கள் அருளிய முத்தமிழ்ப் பாக்களை அன்புடன் ஓதுகின்ற வளத்தை விரும்புகின்ற சீலனே, மேம்பாடுடன் விளங்கும் மயில் வீரனே, கயிலை மலையில் வீற்றிருக்கும் தவத்தினருக்கும் இறைவனாகிய பெரியோர், சூலாயுதத்தைக் கையில் கொண்டவர், மேம்பட்ட குணத்தை உடைய தலைவர், மிகக் ¨தரியம் உள்ளவர் ஆகிய சிவபெருமானுடைய மனத்தில் பொருந்தி விளங்கும் ஞான தேசிக மூர்த்தியே, வடிவேலனே, பலாப் பழங்களின் சாறாகி மேலிட்டுத் தளைத்த வயல்களின் நடுவில் பாய்கின்ற மருத்துவக் குடியில்* வாழ்கின்ற செல்வமே, அமரர்களின் பெருமாளே. 
* மருத்துவக்குடி ஆடுதுறைக்கு அருகில் உள்ளது.

பாடல் 850 - திருப்பந்தணை நல்லு¡ர்
ராகம் - ....; தாளம் -

தனதந்தன தனதந்தன தனதந்தன தான     தனதந்தன தனதந்தன தனதந்தன தான          தனதந்தன தனதந்தன தனதந்தன தானத் ...... தனதான

இதசந்தன புழுகுஞ்சில மணமுந்தக வீசி     யணையுந்தன கிரிகொண்டிணை யழகும்பொறி சோர          இருளுங்குழல் மழையென்பந வரசங்கொளு மோகக் ...... குயில்பொலே 
இடையுங்கொடி மதனன்தளை யிடுகுந்தள பார     இலையுஞ்சுழி தொடைரம்பையு மமுதந்தட மான          இயலங்கடி தடமும்பொழி மதவிஞ்சைகள் பேசித் ...... தெருமீதே 
பதபங்கய மணையும்பரி புரமங்கொலி வீச     நடைகொண்டிடு மயிலென்பன கலையுஞ்சுழ லாட          பரிசும்பல மொழியுஞ்சில கிளிகொஞ்சுகை போலப் ...... பரிவாகிப் 
பணமுண்டென தவலம்படு நினைவுண்டிடை சோர     இதுகண்டவர் மயல்கொண்டிட மனமுஞ்செயல் மாற          பகலுஞ்சில இரவுந்துயில் சிலவஞ்சகர் மாயைத் ...... துயர்தீராய் 
திதிதிந்திமி தனதந்தன டுடுடுண்டுடு பேரி     டகுடங்குகு டிகுடிங்குகு படகந்துடி வீணை          செகணஞ்செக வெனவும்பறை திசையெங்கினு மோதக் ...... கொடுசூரர் 
சிரமுங்கர வுடலும்பரி யிரதங்கரி யாளி     நிணமுங் குடல் தசையுங்கட லெனசெம்புன லோட          சிலசெம்புள்கள் கழுகுஞ்சிறு நரியுங்கொடி யாடப் ...... பொரும்வேலா 
மதவெங்கய முரிகொண்டவர் மழுவுங்கலை பாணி     யிடமன்பொடு வளருஞ்சிவை புகழ்சுந்தரி யாதி          வளருந்தழ லொளிர்சம்பவி பரைவிண்டிள தோகைத் ...... தருசேயே 
வதனஞ்சசி யமுதம்பொழி முலைநன்குற மாதொ     டிசையுஞ்சுரர் தருமங்கையொ டிதயங்களி கூர          வருபந்தணை நகர்வந்துறை விமலன்குரு நாதப் ...... பெருமாளே.

இன்பம் தருவதான சந்தனம், புனுகுசட்டம் இவை போன்ற வாசனைப் பொருள்கள் தக்கபடி மணம் வீச, தழுவுகின்ற மலை போன்ற இரண்டு மார்பகங்களைக் கொண்டும், அழகிய மெய், வாய், கண், மூக்கு, செவி எனப்படும் இந்திரியங்கள் சோர்வு அடையவும், இருண்ட கூந்தல் மழை மேகம் என்னும்படி அமைய, நவரசங்களையும்* கொண்ட இனிக்கும் பேச்சுக்களால் மோகத்தை ஊட்டும் குயில் போலப் பேசி, இடுப்பும் கொடி போல் விளங்க, மன்மதன் இடும் விலங்குகள் என்னும்படியான கூந்தல் பாரத்துடன், ஆலிலை போன்ற வயிறும், கொப்பூழ்ச் சுழியும், வாழைத் தண்டு போன்ற தொடையும், காம அமுதம் பொழியும் தன்மை கொண்ட அழகிய பெண்குறியும் விளங்க, (இத்தனை அங்கங்களுடன்) மன்மத வித்தைப் பேச்சுக்களைப் பேசி, தெருவிலே, பாத தாமரைகளைத் தழுவும் சிலம்புகள் அங்கு ஒலி செய்ய நடக்கின்ற மயில்கள் என்று சொல்லும்படி, ஆடையும் சுழன்று ஆட, அவர்கள் பழகுகின்ற விதங்கள் (ஆளுக்குத் தகுந்தமாதிரி) பலவாக, சில பேச்சுக்களுடன் கிளி கொஞ்சுவது போலப் பேசி, அன்பும் பரிவும் பூண்டவர்கள் போல் இருக்க, பணம் இருக்கிறதென்று என்னுடைய வேதனைப்படும் நினைவிலே நான் எண்ணம் பூண்டிருக்க, மத்தியில் பணம் வற்றிப் போய்த் தளர்ச்சி உற, இந்நிலையைக் கண்டு அவ்விலைமாதரின் மோகம் கொண்டிருந்த அந்த மனமும் நேசச் செயலும் மாறுதல் கொள்ள, (அதனால்) சில பகலும் சில இரவுமே துயில் கொள்ள இணங்கும் சில வஞ்சக விலைமாதர்கள் மீது (எனக்குள்ள) காம மாயைத் துயரைத் தீர்த்தருள்க. திதி திந்திமி தனதந்தன டுடுடுண்டுடு டகுடங்குகு டிகுடிங்குகு என்று சிறு பறைகளும், உடுக்கையும், வீணையும் ஒலிக்க, செகணஞ்செக என்று பெரும்பறைகள் எல்லா திக்குகளிலும் சப்திக்க, கொடிய சூரர்களின் தலைகளும், கைகளும், உடல்களும், குதிரையும், தேரும், யானையும், சிங்கமும், கொழுப்பும், குடலும், தசையும் அறுபட்டதால் கடல் என்று சொல்லும்படி சிவந்த இரத்தம் ஓட, பருந்து போன்ற சில சிவந்த பறவைகளும், கழுகுகளும், சிறிய நரிகளும், காக்கைகளும் (போர்க்களத்தில் வந்து) ஆட சண்டை செய்யும் வேலனே, மதம் கொண்ட கொடிய யானையின் தோலை உரித்தவர், மழுவையும் மானையும் கையில் ஏந்தியவர் ஆகிய சிவபெருமானின் இடது பக்கத்தில் அன்புடன் இருந்து விளங்கும் உமை என்று புகழப்படும் அழகி, ஆதி பராசக்தி, வளர்ந்து ஓங்கும் நெருப்பு போலச் சிவந்து விளங்கும் சாம்பவி, பரம்பொருள், திருமாலின் இளம் தங்கையாகிய மயில் போன்றவளாகிய பார்வதி தந்த குழந்தையே, சந்திரன் போன்ற திரு முகமும் அமுதம் பொழிகின்ற மார்பகமும் கொண்ட குறப் பெண்ணாகிய வள்ளியுடனும், அன்பு பொருந்தும் தேவர்கள் வளர்த்த தேவயானையுடனும் மனம் மகிழ்ச்சி மிக, திருப்பந்தணை நல்லூரில்** வந்து வீற்றிருப்பவனே, சிவபெருமானது குரு மூர்த்திப் பெருமாளே. 
* நவரசங்கள் - சிங்காரம், ஹாஸ்யம், கருணை, ரெளத்திரம், வீரம், பயம், குற்சை (அருவருப்பு), அற்புதம், சாந்தம்.
** இத்தலம் திருவிடைமருதூர் ரயில் நிலையத்துக்கு வடகிழக்கில் 8 மைல் தொலைவில் உள்ளது.

by Swathi   on 28 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.