LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- அருணகிரிநாதர் நூல்கள்

திருப்புகழ்-பாடல்-[901 -950]

பாடல் 901 - வயலு¡ர்
ராகம் - : தாளம் -
தானதன தாத்த தானதன தாத்த
     தானதன தாத்த ...... தனதான
ஆரமுலை காட்டி மாரநிலை காட்டி
     யாடையணி காட்டி ...... அநுராக 
ஆலவிழி காட்டி ஓசைமொழி காட்டி
     ஆதரவு காட்டி ...... எவரோடும் 
ஈரநகை காட்டி நேரமிகை காட்டி
     யேவினைகள் காட்டி ...... யுறவாடி 
ஏதமயல் காட்டு மாதர்வலை காட்டி
     யீடழிதல் காட்ட ...... லமையாதோ 
வீரவப ராட்டு சூரர்படை காட்டில்
     வீழனலை யூட்டி ...... மயிலூர்தி 
வேலையுறை நீட்டி வேலைதனி லோட்டு
     வேலைவிளை யாட்டு ...... வயலூரா 
சேரமலை நாட்டில் வாரமுடன் வேட்ட
     சீலிகுற வாட்டி ...... மணவாளா 
தேசுபுகழ் தீட்டி யாசைவரு கோட்டி
     தேவர்சிறை மீட்ட ...... பெருமாளே.
முத்து மாலை அணிந்த மார்பகத்தைக் காட்டி, மன்மதனுடைய காமநிலைகளைக் காட்டி, ஆடை ஆபரணங்களைக் காட்டி, காம இச்சையை ஊட்டும் விஷம் கொண்ட கண்களைக் காட்டி, பண் ஒலி கொண்ட பேச்சைக் காட்டி, அன்பினைக் காட்டி, யாரோடும் குளிர்ந்த சிரிப்பைக் காட்டி, பொழுதெல்லாம் மிகுதியான உறவைக் காட்டியே, அவர்களுடைய தொழிலுக்கு உரிய செயல்களைக் காட்டி, நட்பைக் காட்டி, கேடு விளைவிக்கும் காம மயக்கத்தைக் காட்டும் விலைமாதர்கள் தமது காம வலையை விரித்து, எனது வலிமை எல்லாம் தொலைந்து போகும்படி செய்வித்தல் அடங்காதோ? வீரத்துடன் எதிர்க்கும் வல்லமை கொண்ட சூரர்களின் சேனை என்னும் காட்டில் நெருப்பு விழும்படி புகுவித்து மயில்வாகனம் ஏறுபவனே, வேலாயுதத்தை அதன் உறையிலிருந்து எடுத்து நீட்டிக் கடலில் விளையாட்டைச் செய்த வயலூரா*, வள்ளிமலை நாட்டில் உன்னுடன் இணைவதற்கு அன்புடன் விரும்பிய, நல்லொழுக்கம் நிறைந்த, குறப்பெண்ணாகிய வள்ளியின் கணவனே, உனது ஒளி வாய்ந்த புகழை விளக்கமுறச் சொல்லிய, ஆசை மிகும் கூட்டத்தாராகிய, தேவர்களைச் சிறையினின்றும் நீக்கிய பெருமாளே. 
* வயலூர் சோழ நாட்டின் ராஜகெம்பீரப் பகுதியின் தலைநகர். இங்குதான் சுவாமிகளுக்கு தினம் ஒரு திருப்புகழ் பாடும் வரத்தை முருகன் தந்தான்.வயலூர் திருச்சிராப்பள்ளிக்கு 6 மைல் தொலைவில் தென்மேற்கே உள்ளது.
பாடல் 902 - வயலு¡ர்
ராகம் - : தாளம் -
தனதனன தனதனன தத்தத்த தத்ததன
     தத்தத்த தத்ததன
தனதனன தனதனன தத்தத்த தத்ததன
     தத்தத்த தத்ததன
தனதனன தனதனன தத்தத்த தத்ததன
     தத்தத்த தத்ததன ...... தந்ததான
இகல்கடின முகபடவி சித்ரத்து திக்கைமத
     மத்தக்க ளிற்றையெதிர்
புளகதன மிளகஇனி தெட்டிக்க ழுத்தொடுகை
     கட்டிப்பி ணித்திறுகி
யிதழ்பொதியி னமுதுமுறை மெத்தப்பு சித்துருகி
     முத்தத்தை யிட்டுநக ...... தந்தமான 
இடுகுறியும் வரையையுற நெற்றித்த லத்திடையில்
     எற்றிக்க லக்கமுற
இடைதுவள வுடைகழல இட்டத்த ரைப்பையது
     தொட்டுத்தி ரித்துமிக
இரணமிடு முரணர்விழி யொக்கக்க றுத்தவிழி
     செக்கச்சி வக்கவளை ...... செங்கைசோர 
அகருவிடு ம்ருகமதம ணத்துக்க னத்தபல
     கொத்துக்கு ழற்குலைய
மயில்புறவு குயில்ஞிமிறு குக்கிற்கு ரற்பகர
     நெக்குக்க ருத்தழிய
அமளிபெரி தமளிபட வக்கிட்டு மெய்க்கரண
     வர்க்கத்தி னிற்புணரு ...... மின்பவேலை 
அலையின்விழி மணியின்வலை யிட்டுப்பொ ருட்கவர
     கட்டுப்பொ றிச்சியர்கள்
மதனகலை விதனமறு வித்துத்தி ருப்புகழை
     யுற்றுத்து திக்கும்வகை
அபரிமித சிவஅறிவு சிக்குற்று ணர்ச்சியினில்
     ரக்ஷித்த ளித்தருள்வ ...... தெந்தநாளோ 
திகுடதிகு தகுடதகு திக்குத்தி குத்திகுட
     தத்தித்த ரித்தகுட
செகணசெக சகணசக செக்கச் செகச்செகண
     சத்தச்ச கச்சகண
திகுதிகுர்தி தகுதகுர்த திக்குத்தி குத்திகுர்தி
     தக்குத்த குத்தகுர்த ...... திங்குதீதோ 
திரிரிதிரி தரிரிதரி தித்தித்தி ரித்திரிரி
     தத்தித்த ரித்தரிரி
டிகுடடகு டகுடடிகு டிட்டிட்டி குட்டிகுடி
     டட்டட்ட குட்டகுட
தெனதிமிர்த தவில்மிருக டக்கைத்தி ரட்சலிகை
     பக்கக்க ணப்பறைத ...... வண்டைபேரி 
வகைவகையின் மிகவதிர வுக்ரத்த ரக்கர்படை
     பக்கத்தி னிற்சரிய
எழுதுதுகில் முழுதுலவி பட்டப்ப கற்பருதி
     விட்டத்த மித்ததென
வருகுறளி பெருகுகுரு திக்குட்கு ளித்துழுது
     தொக்குக்கு னிப்புவிட ...... வென்றவேலா 
வயலிநகர் பயில்குமர பத்தர்க்க நுக்ரகவி
     சித்ரப்ர சித்தமுறு
அரிமருக அறுமுகவ முக்கட்க ணத்தர்துதி
     தத்வத்தி றச்சிகர
வடகுவடில் நடனமிடு மப்பர்க்கு முத்திநெறி
     தப்பற்று ரைக்கவல ...... தம்பிரானே.
வலிமையும், கடுமையும், முகத்துக்கு இடும் அலங்காரத் துணியின் பேரழகும், துதிக்கையும், இவைகளை எல்லாம் கொண்டு மத நீர், மதம் பொழியும் யானையை எதிர்க்கும் திறத்ததாய் மயிர் சிலிர்த்த மார்பகங்கள் நெகிழ, ஆசையுடன் தாவி கழுத்தைக் கைகளால் கட்டி அணைத்து அழுத்தி, வாயிதழாகிய நிறைவினின்றும் கிடைக்கும் அமுதனைய வாயூறலை காம சாஸ்திரத்தின்படி நிரம்ப அருந்தி, மனம் உருகி, முத்தமிட்டு, நகத்தைக் கொண்டும் பற்களைக் கொண்டும் இடப்பட்ட அடையாளங்கள் ரேகைகள் போலத் தெரிய, நெற்றியாகிய இடத்தில் முகத்தோடு முகம் வைத்துத் தாக்க, (வந்தவர் உள்ளம்) கலக்கம் கொள்ளும்படி இடை நெகிழவும், ஆடை கழன்று போகவும், ஆசையுடன் அரையில் உள்ள பாம்பு போன்ற பெண்குறியை தொட்டு மிகவும் அலைத்து, போர் புரியும் பகைவர்களின் கண்களைப் போல இயற்கையாகக் கறுத்து இருக்கும் கண்கள் மிகவும் சிவந்த நிறத்தை அடையவும், வளைகள் அழகிய கைகளில் நெகிழவும், அகிலும் அதனுடன் சேரும் கஸ்தூரியும் நறு மணம் வீச, அடர்த்தியுள்ள பூங்கொத்துகள் கொண்ட கூந்தல் கலைந்து விழ, மயில், புறா, குயில், வண்டு, செம்போத்து ஆகிய பறவைகளின் குரலைக் காட்டி, உள்ளம் நெகிழ்ந்து உணர்ச்சி அழிய, படுக்கையில் நிரம்ப ஆரவாரம் எழ, வதக்கப்படுவது போல சூடேற உடல் சம்பந்தப்பட்டு செய்யப்படும் கலவி வகைகளில் புணர்ச்சி இன்பத்தை அனுபவிக்கும் அந்தச் சமயத்தில், கடல் போல பெரிய கண்ணின் மணியாகிய வலையை வீசி எனது கைப் பொருளைக் கொள்ளை கொள்ள பாசம் விளைக்கும் தந்திரக்காரர்களான விலைமாதர்களின் மன்மத சாஸ்திர அறிவால் வரும் மனத்துயரத்தை அழித்துத் தொலைத்து, உனது திருப்புகழில் நாட்டம் வைத்து உன்னை வணங்கும்படி எல்லை இல்லாத சிவ ஞானம் என் அறிவில் பெறப்படும்படியாக நீ என்னைக் காப்பாற்றி காத்தளித்து என் மயக்கத்தை நீக்கி அருளுவது எந்த நாளோ? மேற்கூறிய தாள ஒலிகளை எழுப்பும் மேள வகைகள், (அரச) வேட்டைக்கு உரித்தான இடக்கை, கூட்டமான பெரும் பறை வகைகள், பக்கத்தில் வரும் தோற் கருவி வகைகள், பேருடுக்கை, முரசு முதலிய பறைகள் மிகுந்த ஒலி எழுப்ப, கோபமுடன் அசுரர்களின் சேனைகள் பக்கங்களிலே சரிந்து விழ, சித்திரம் வரைந்த விருதுக் கொடி, போர்க் களம் முழுதும் உலவி, பட்டப் பகலில் சூரியனை சக்ராயுதத்தை விடுத்து அஸ்தமிக்க வைத்தது போல இருளாக்க, வந்துள்ள பிசாசுகள் பெருகி வரும் ரத்தத்தில் குளித்துத் திளைத்து விளையாடி, உடல் வளைவை விட்டு நிமிர்ந்து எழும்படி வெற்றி பெற்ற வேலனே, வயலூரில்* எப்போதும் மகிழ்ந்து வீற்றிருக்கும் குமரனே, அடியார்களுக்கு அருள் செய்பவனே, விநோதமான புகழைக் கொண்ட திருமாலின் மருகனே, ஆறு முகங்களைக் கொண்டவனே, சிவ சாரூபக் கூட்டத்தினர் வணங்கும் அறிவுத் திறம் கொண்டவனே, சிகரங்களைக் கொண்ட, வடக்கே உள்ள, கயிலை மலையில் நடனம் செய்யும் தந்தையாகிய சிவபெருமானை அடைவதற்கு வேண்டிய முக்தி வழியைச் சம்பந்தராகத் தோன்றி தப்பு இல்லாத வகையில் சொல்ல வல்ல தம்பிரானே. 
* வயலூர் சோழ நாட்டின் ராஜகெம்பீரப் பகுதியின் தலைநகர். இங்குதான் சுவாமிகளுக்கு தினம் ஒரு திருப்புகழ் பாடும் வரத்தை முருகன் தந்தான்.வயலூர் திருச்சிராப்பள்ளிக்கு 6 மைல் தொலைவில் தென்மேற்கே உள்ளது.
பாடல் 903 - வயலு¡ர்
ராகம் - ....; தாளம் -
தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான
இலகு முலைவிலை யசடிகள் கசடிகள்
     கலைகள் பலவறி தெருளிகள் மருளிகள்
          எயிறு கடிபடு முதடிகள் பதடிகள் ...... எவரோடும் 
இனிய நயமொழி பழகிக ளழகிகள்
     மடையர் பொருள்பெற மருவிகள் சருவிகள்
          யமனு மிகையென வழிதரு முழிதரும் ...... விழிவாளால் 
உலக மிடர்செயு நடலிகள் மடலிகள்
     சிலுகு சிலரொடு புகலிக ளிகலிகள்
          உறவு சொலவல துரகிகள் விரகிகள் ...... பிறைபோலே 
உகிர்கை குறியிடு கமுகிகள் சமுகிகள்
     பகடி யிடவல கபடிகள் முகடிகள்
          உணர்வு கெடும்வகை பருவிக ளுருவிக ...... ளுறவாமோ 
அலகை புடைபட வருவன பொருவன
     கலக கணநிரை நகுவன தகுவன
          அசுரர் தசைவழி நிமிர்வன திமிர்வன ...... பொடியாடி 
அலரி குடதிசை யடைவன குடைவன
     தரும வநிதையு மகிழ்வன புகழ்வன
          அகில புவனமு மரகர கரவென ...... அமர்வேள்வி 
திலக நுதலுமை பணிவரு செயமகள்
     கலையி னடமிட வெரிவிரி முடியினர்
          திரள்ப லுயிருடல் குவடுக ளெனநட ...... மயிலேறிச் 
சிறிது பொழுதினி லயில்விடு குருபர
     அறிவு நெறியுள அறுமுக இறையவ
          த்ரிசிர கிரியயல் வயலியி லினிதுறை ...... பெருமாளே.
விளங்கும் மார்பகத்தை விலைக்கு விற்கின்ற முட்டாள்கள், குற்றம் உள்ளவர்கள். காமக் கலைகள் பலவற்றையும் அறிந்துள்ள தெளிவை உடையவர்கள், மயக்குபவர்கள். பற் குறிகளைக் கொண்ட உதட்டை உடையவர்கள். அற்பர்கள். யாரோடும் இனிமையான நயமான பேச்சுக்களைப் பேசப் பழகியவர்கள். முட்டாள்களுடைய பொருளைப் பெறுதற்கு அவர்களுடன் சேருபவர்கள். கொஞ்சிக் குலாவுபவர்கள். யமனை மிஞ்சும்படியான அழித்தல் தொழிலைச் செய்வதும், அங்கும் இங்கும் சுழலுகின்றதுமான கண் என்னும் வாள் கொண்டு உலகத்துக்கே துன்பம் செய்கின்ற செருக்கு உள்ளவர்கள். (ஆண்களை) மடல்* ஊரும்படிச் செய்பவர்கள். சண்டைப் பேச்சு சிலரோடு பேசுபவர்கள். பகைமை பூண்டவர்கள். உறவு முறையைக் கூறி அழைக்கவல்ல துரோகிகள். சாமர்த்தியசாலிகள். பிறையைப் போல் கைந் நகத்தால் (வந்தவர் உடலில்) அடையாளக் குறியை இடுபவர்கள். ரகசிய அழுத்தம் உடையவர்கள். சமூகத்துக்கு விருப்புடன் பேட்டி அளிப்பவர்கள். வெளி வேஷம் போடவல்ல வஞ்ச நெஞ்சினர். மூதேவிகள். நல்ல அறிவு கெட்டுப் போகும்படி அரிப்பவர்கள். கையில் பொருள் உருவும்படி சரசமாகப் பேசுபவர்கள் ஆகிய விலைமாதர்களின் தொடர்பு நல்லதா? பேய்கள் (போர்க்களத்தின்) பக்கங்களில் சேரும்படி வரவும், சில சண்டை செய்யவும், கலகம் செய்யும் பேய்களின் கூட்டம் சிரிக்கவும், சில மேம்பட்டு விளங்கவும், அசுரர்களின் மாமிசக் குவியல் கிடைத்த போது அதைத் தின்று நிமிரவும், விறைப்பு விடவும், போர்ப் புழுதியில் குளித்து சூரியன் மேற்குத் திசையில் சேர்ந்து மூழ்கிப் போகவும், தரும தேவதையும் மகிழ்ச்சி உற்று உனது புகழை எடுத்துக் கூறவும், எல்லா உலகங்களும் ஹரஹர ஹர என்று துதித்துப் போற்றவும், போர்க்களச் சாலையில் பொட்டணிந்த நெற்றியைக் கொண்ட உமா தேவிக்கு பணி செய்யும் துர்க்கை சாஸ்திரப்படி நடனம் செய்ய, நெருப்புப் போலச் சிவந்ததும், விரித்துள்ளதுமான தலைமயிர் முடியை உடைய அசுரர்களின் கூட்டம் பலவற்றின் உயிர் வாசம் செய்த உடல்கள் மலை போல் குவிய, நடனம் செய்யும் மயில் மீது ஏறி, கொஞ்ச நேரத்தில் வேலைச் செலுத்திய குருபரனே, ஞான மார்க்கத்தைக் கொண்டுள்ள ஆறு திருமுகங்களை உடைய இறைவனே, திரிசிராப்பள்ளிக்கு அருகில் உள்ள வயலூரில்** இன்பமுடன் வீற்றிருக்கும் பெருமாளே. 
* மடல் ஏறுதல் - காமத்தால் வாடும் தலைவன் பனங்கருக்கால் குதிரை முதலிய வடிவங்கள் செய்து அவற்றின் மேலே ஏறி ஊரைச் சுற்றி, தன் காதலை ஊரிலுள்ள பிறருக்குத் தெரிவிப்பான்.
** வயலூர் சோழ நாட்டின் ராஜகெம்பீரப் பகுதியின் தலைநகர். இங்குதான் சுவாமிகளுக்கு தினம் ஒரு திருப்புகழ் பாடும் வரத்தை முருகன் தந்தான்.வயலூர் திருச்சிராப்பள்ளிக்கு 6 மைல் தொலைவில் தென்மேற்கே உள்ளது.
பாடல் 904 - வயலு¡ர்
ராகம் - பேகடா தாளம் - ஆதி
தன்னா தனத்தன தன்னா தனத்தன
     தன்னா தனத்தன ...... தந்ததான
என்னால் பிறக்கவும் என்னா லிறக்கவும்
     என்னால் துதிக்கவும் ...... கண்களாலே 
என்னா லழைக்கவும் என்னால் நடக்கவும்
     என்னா லிருக்கவும் ...... பெண்டிர்வீடு 
என்னால் சுகிக்கவும் என்னால் முசிக்கவும்
     என்னால் சலிக்கவும் ...... தொந்தநோயை 
என்னா லெரிக்கவும் என்னால் நினைக்கவும்
     என்னால் தரிக்கவும் ...... இங்குநானார் 
கன்னா ருரித்தஎன் மன்னா எனக்குநல்
     கர்ணா மிர்தப்பதம் ...... தந்தகோவே 
கல்லார் மனத்துட னில்லா மனத்தவ
     கண்ணா டியிற்றடம் ...... கண்டவேலா 
மன்னான தக்கனை முன்னாள்மு டித்தலை
     வன்வாளி யிற்கொளும் ...... தங்கரூபன் 
மன்னா குறத்தியின் மன்னா வயற்பதி
     மன்னா முவர்க்கொரு ...... தம்பிரானே.
என் செயலால் நான் இவ்வுலகில் பிறப்பதற்கும், என் திறத்தால் நான் இறப்பதற்கும், என் எண்ணத்தால் நான் துதிப்பதற்கும், என் கண்கொண்டு மற்றவரை நான் அழைப்பதற்கும், என் செயலால் என் கால்கொண்டு நான் நடப்பதற்கும், என் திறம் கொண்டு நான் ஓரிடத்தில் இருப்பதற்கும், மாதர், வீடு இவற்றை நான் இன்புற்று சுகிப்பதற்கும், வேண்டுதல் வேண்டாமை காரணமாக நான் நலிவுற்று மெலிவதற்கும், இது போதும் என அலுப்புடன் நான் சலிப்பு அடைவதற்கும், வினையின் வசமாக வரும் நோய்களை நான் பொசுக்குவதற்கும், பல நினைவுகளையும் நான் இங்கு நினைப்பதற்கும், இன்ப துன்பங்களை நான் தாங்கிக் கொள்வதற்கும், இங்கே நான் யார்? (எனக்கு என்ன சுதந்திரம் உண்டு?) என் நெஞ்சக் கல்லிலிருந்து நார் உரிப்பது போலக் கசியச் செய்த அரசே, செவிக்கு நல்ல அமுதம் போன்ற உபதேச மொழியை எனக்கு அருளிச்செய்த அரசனே, உன்னைக் கற்றறியா¡ர் மனத்தில் தங்காத மனத்தோனே, கண்ணாடி போல் தெளிவான தடாகத்தை வேலால் கண்டவனே*, அரசனாக விளங்கிய தக்ஷப்ரஜாபதியை முன்னொருநாள் அவனது கி¡£டம் அணிந்த தலையை கொடிய அம்பால் கொய்த பொன் போன்ற மேனியுடைய சிவபிரானுக்கு குருராஜனே, குறத்தி வள்ளியின் தலைவனே, வயலூரின்** அரசனே, பிரமன், திருமால், சிவன் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் ஒப்பற்ற தலைவனே. 
* வயலூரில் முருகன் தன் சக்தி வேலை ஓரிடத்தில் பாய்ச்சி அங்கு ஒரு தடாகத்தை உண்டாக்கினான். அத்தடாகம் சக்தி தீர்த்தம் எனப்படும். அதன் நீர் பளிங்கு போன்று தெளிவானது.
** வயலூர் சோழ நாட்டின் ராஜகெம்பீரப் பகுதியின் தலைநகர். இங்குதான் சுவாமிகளுக்கு தினம் ஒரு திருப்புகழ் பாடும் வரத்தை முருகன் தந்தான்.வயலூர் திருச்சிராப்பள்ளிக்கு 6 மைல் தொலைவில் தென்மேற்கே உள்ளது.
பாடல் 905 - வயலு¡ர்
ராகம் - ....; தாளம் -
தனனாத் தனதன தனனாத் தனதன
     தனனாத் தனதன ...... தனதான
கடல்போற் கணைவிழி சிலைபோற் பிறைநுதல்
     கனிபோற் றுகிரிதழ் ...... எழிலாகும் 
கரிபோற் கிரிமுலை கொடிபோற் றுடியிடை
     கடிபோற் பணியரை ...... யெனவாகும் 
உடல்காட் டினிமையி லெழில்பாத் திரமிவ
     ளுடையாற் கெறுவித ...... நடையாலும் 
ஒருநாட் பிரிவது மரிதாய்ச் சுழல்படும்
     ஒழியாத் துயரது ...... தவிரேனோ 
குடலீர்த் தசுரர்க ளுடல்காக் கைகள்நரி
     கொளிவாய்ப் பலஅல ...... கைகள்பேய்கள் 
கொலைபோர்க் களமிசை தினமேற் றமரர்கள்
     குடியேற் றியகுக ...... வுயர்தாழை 
மடல்கீற் றினிலெழு விரைபூப் பொழில்செறி
     வயலூர்ப் பதிதனி ...... லுறைவோனே 
மலைமேற் குடியுறை கொடுவேட் டுவருடை
     மகள்மேற் ப்ரியமுள ...... பெருமாளே.
கடல் போல ஆழமாகவும், அம்பு போல கூர்மையாகவும் உள்ள கண்கள், வில்லைப் போலவும் பிறைச் சந்திரன் போலவும் வளைந்த நெற்றி, கொவ்வைப் பழம் போலவும், பவளம் போலவும் உள்ள வாயிதழ், அழகு பொருந்திய யானையைப் போலவும், மலையைப் போலவும் உள்ள மார்பகங்கள், கொடி போலவும் உடுக்கை போலவும் உள்ள இடுப்பு, காவலிடம் போலவும் பாம்பின் படம் போலவும் உள்ள பெண்குறி என்று உவமானம் சொல்லத்தக்க தேகத்தைக் காட்டும் இன்ப நிலைக்கு எடுத்துக் காட்டான கொள்கலம் இவள் (என மயங்கி), அவளது ஆடையாலும் செருக்குள்ள நடை அழகினாலும் (இவளை விட்டு) ஒரு நாள் கூட பிரிந்திருப்பது முடியாத காரியம் என்று சுழற்சியுறும் நீங்காத துன்பத்தைத் தொலைக்க மாட்டேனோ? அசுரர்களின் உடலினின்றும் குடலை இழுத்து காக்கை, நரி, கொள்ளி வாய்ப் பிசாசுகள், பேய்கள் யாவும், நிறைந்த கொல்லுதலை உடைய போர்க் களத்தில் நாள்தோறும் (குடலை) அடைந்து உண்ண, தேவர்களை விண்ணுலகில் குடி ஏற்றிய குகனே, உயர்ந்த தாழையின் மடல் கீற்றினில் உண்டாகின்ற வாசனை மிக்க (தாழம்) பூக்கள் உள்ள சோலைகள் நிறைந்த வயலூரில்* வாழ்பவனே, வள்ளிமலையில் வாழும் கொடிய வேடர்களுடைய மகள் வள்ளியின் மேல் விருப்பம் மிகக் கொண்டுள்ள பெருமாளே. 
* வயலூர் சோழ நாட்டின் ராஜகெம்பீரப் பகுதியின் தலைநகர். இங்குதான் சுவாமிகளுக்கு தினம் ஒரு திருப்புகழ் பாடும் வரத்தை முருகன் தந்தான்.வயலூர் திருச்சிராப்பள்ளிக்கு 6 மைல் தொலைவில் தென்மேற்கே உள்ளது.
பாடல் 906 - வயலு¡ர்
ராகம் - ....; தாளம் -
தனனத் தான தான தனதன
     தனனத் தான தான தனதன
          தனனத் தான தான தனதன ...... தனதான
கமலத் தேகு லாவு மரிவையை
     நிகர்பொற் கோல மாதர் மருள்தரு
          கலகக் காம நூலை முழுதுண ...... ரிளைஞோர்கள் 
கலவிக் காசை கூர வளர்பரி
     மளகற் பூர தூம கனதன
          கலகத் தாலும் வானி னசையுமி ...... னிடையாலும் 
விமலச் சோதி ரூப இமகர
     வதனத் தாலு நாத முதலிய
          விரவுற் றாறு கால்கள் சுழலிருள் ...... குழலாலும் 
வெயிலெப் போதும் வீசு மணிவளை
     அணிபொற் றோள்க ளாலும் வடுவகிர்
          விழியிற் பார்வை யாலு மினியிடர் ...... படுவேனோ 
சமரிற் பூதம் யாளி பரிபிணி
     கனகத் தேர்கள் யானை யவுணர்கள்
          தகரக் கூர்கொள் வேலை விடுதிற ...... லுருவோனே 
சமுகப் பேய்கள் வாழி யெனஎதிர்
     புகழக் கானி லாடு பரிபுர
          சரணத் தேக வீர அமைமன ...... மகிழ்வீரா 
அமரர்க் கீச னான சசிபதி
     மகள்மெய்த் தோயு நாத குறமகள்
          அணையச் சூழ நீத கரமிசை ...... யுறுவேலா 
அருளிற் சீர்பொ யாத கணபதி
     திருவக் கீசன் வாழும் வயலியின்
          அழகுக் கோயில் மீதில் மருவிய ...... பெருமாளே.
தாமரையில் விளங்கும் லக்ஷ்மிக்கு ஒப்பான அழகிய அலங்காரம் உள்ள விலைமாதர்கள் மீது மோக மயக்கத்தைத் தருகின்றதும், கலக்கம் தரும் காம சாஸ்திரத்தை முற்றும் உணர்ந்த இளைஞர்களின் புணர்ச்சி இன்பத்துக்கு ஆசை மிக்கெழும்படியாகவும், நிரம்பிய நறு மணம் உள்ள பச்சைக் கற்பூரம், அகில் புகை போன்றவைகளைக் கொண்ட மார்பகங்கள் எழுப்பும் மனச் சலனத்தாலும், ஆகாயத்தில் அசையும் மின்னல் போன்ற இடுப்பாலும், களங்கம் இல்லாத ஒளிமயமான பனிக் கிரணம் கொண்ட சந்திர பிம்பத்தை ஒத்த முகத்தாலும், பாட்டு முதலியவை கலந்து எழச் செய்யும் வண்டுகள் சூழ்ந்துச் சுழலும் இருண்ட கரிய கூந்தலாலும், எப்போதும் ஒளி வீசுகின்ற ரத்தின மாலைகளை அணியும் அழகிய தோள்களாலும், மாவடுவின் கீற்றைப் போன்ற கண்களின் பார்வையாலும், இனிமேல் நான் துன்பம் அடைவேனோ? போரில் பூதம், யாளி, குதிரை இவைகளைப் பிணித்துக் கட்டிய பொன் மயமான தேர்கள், யானைகள், அசுரர்கள் ஆகியவை பொடிபட்டு அழிய, கூர்மையான வேலாயுதத்தைச் செலுத்திய வலிமையான உருவத்தனே, கூட்டமான பேய்கள் வாழி என்று எதிரே நின்று புகழ, சுடு காட்டில் (சிவனுடன்) நடனம் செய்யும் சிலம்பணிந்த திருவடிகளை உடைய, தன்னிகரில்லாத வீரம் வாய்ந்த தாயாகிய பார்வதி மனம் மகிழும் வீரனே, தேவர்களுக்குத் தலைவனான, இந்திராணியின் கணவனாகிய இந்திரனின் மகளான தேவயானையின் உடலைத் தழுவும் நாதனே, குறப் பெண்ணாகிய வள்ளி உன்னை அணைவதற்கு வேண்டிய சூழ்ச்சிகளைச் செய்த நீதிமானே, திருக்கையில் கொண்ட வேலாயுதனே. திருவருள் பாலிப்பதற்குப் புகழ் பெற்ற, பொய்யுறாத கணபதியும்*, அழகிய அக்னீசுரர் என்னும் பெயருடைய சிவபெருமானும் வீற்றிருக்கும் வயலூரின்** அழகிய கோயிலில் அமர்ந்திருக்கும் பெருமாளே. 
* இவரே "செய்ப்பதியும் வைத்துயர் திருப்புகழ் விருப்பமொடு செப்பு" என்று அருணகிரிநாதருக்கு அருளினார். அந்தப் பாடல்தான் 'பக்கரை விசித்ரமணி' ஆகும்.
** வயலூர் சோழ நாட்டின் ராஜகெம்பீரப் பகுதியின் தலைநகர். இங்குதான் சுவாமிகளுக்கு தினம் ஒரு திருப்புகழ் பாடும் வரத்தை முருகன் தந்தான்.வயலூர் திருச்சிராப்பள்ளிக்கு 6 மைல் தொலைவில் தென்மேற்கே உள்ளது.
பாடல் 907 - வயலு¡ர்
ராகம் - ....; தாளம் -
தனத்தத தானான தனதத்த தானான
     தனதத்த தானனா ...... தந்ததான
கமையற்ற சீர்கேடர் வெகுதர்க்க கோலாலர்
     களையுற்று மாயாது ...... மந்த்ரவாதக் 
கடைகெட்ட ஆபாத முறுசித்ர கோமாளர்
     கருமத்தின் மாயாது ...... கொண்டுபூணுஞ் 
சமயத்த ராசார நியமத்தின் மாயாது
     சகளத்து ளேநாளு ...... நண்புளோர்செய் 
சரியைக்ரி யாயோக நியமத்தின் மாயாது
     சலனப்ப டாஞானம் ...... வந்துதாராய் 
அமரிற்சு ராபான திதிபுத்ர ராலோக
     மதுதுக்க மேயாக ...... மிஞ்சிடாமல் 
அடமிட்ட வேல்வீர திருவொற்றி யூர்நாதர்
     அருணச்சி காநீல ...... கண்டபார 
மமபட்ச மாதேவ ரருமைச்சு வாமீநி
     மலநிட்க ளாமாயை ...... விந்துநாதம் 
வரசத்தி மேலான பரவத்து வேமேலை
     வயலிக்குள் வாழ்தேவர் ...... தம்பிரானே.
பொறுமை இல்லாத ஒழுங்கீனர்களும், மிகுந்த தர்க்கம் பேசுகிற ஆடம்பர வாதிகளுமான மனிதர்களால் சோர்வு அடைந்து மடியாமலும், மந்திர வாதம் செய்யும் மிக இழிவு நிலையில் உள்ள தாழ்மை வாய்ந்த சித்திரப் பேச்சு பேசி கொண்டாட்டம் போடுபவர்களின் செய்கைகளில் சிக்கி மடியாமலும், தங்கள் சமய நெறியை மேற் கொண்டு ஒழுகும் வெவ்வேறு சமயங்களைச் சேர்ந்தோரின் கட்டுப்பாடுகளில் மடியாமலும், உருவ வழிபாடு செய்து நாள் தோறும் பக்தி வைத்துள்ளோர் புரியும் சரியை, கிரியை, யோகம்* எனப்படும் ஒழுக்கங்களை மேற் கொண்டு மடியாமலும், (அதனால்,) எவ்விதமான சஞ்சலங்களுக்கும் உட்படாத ஞானத்தை நீ எனக்குத் தந்தருளுக. போரில் கள் குடிக்கும் (திதியின் மக்களாகிய) அசுரர்களின் அறியாமையானது உலகத்துக்குத் துக்கத்தையே தர, அந்தத் துக்கத்தை ஒழிக்க, எப்போதும் துடித்துக் கொண்டிருக்கும் வேலினைச் செலுத்திய வீரனே, திருவொற்றியூர் நாதரும், சிவந்த ஜடை, நீல கண்டம், பெருமை ஆகியவற்றைக் கொண்டவரும், என் மீது அன்புள்ளவருமான மகாதேவர் சிவபெருமானுக்கு அருமையாக வாய்ந்த சுவாமியே, மாசில்லாதவனே, உருவம் இல்லாதவனே, மாயை, விந்து, நாதம், வரங்களைத் தரும் சக்தி இவைகளுக்கு மேம்பட்ட பரம் பொருளே**, மேலை வயலூர்*** என்னும் தலத்தில் வாழ்கின்ற, தேவர்களின் தம்பிரானே. 
* 4 பக்தி மார்க்கங்கள் பின்வருமாறு:1. சரியை: திருக்கோயிலில் அலகு இடுதல், மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம் வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல், இறைவனை வாழ்த்துதல், திருவேடம் கண்டு பணிதல். இது 'தாத மார்க்கம் - சாலோகம்'.2. கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்தியக் காரியம் செய்தல். இது 'புத்ர மார்க்கம் - சாமீபம்'.3. யோகம்: புலன்களை அடக்கிப் பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி, முழு ஜோதியை நினைத்திருத்தல். இது 'சக மார்க்கம் (தோழ நெறி) - சாரூபம்'.4. ஞானம்: புறத் தொழில் அகத் தொழில் இன்றி, அறிவு மாத்திரத்தாலே செய்யும் வழிபாடு ஞானம். இது 'சன்மார்க்கம் - சாயுஜ்யம்'. சிவஞான சித்தியார் சூத்திரம். 
** இறைவன் ஏக நாதன் என்பதைக் குறிக்கும்.அருவத் திருமேனி நான்கு = சிவம், சக்தி, நாதம், விந்து.உருவத் திருமேனி நான்கு = மகேசன், ருத்திரன், மால், அயன்.அருவுருவத் திருமேனி ஒன்று = சதாசிவம்.
*** வயலூர் சோழ நாட்டின் ராஜகெம்பீரப் பகுதியின் தலைநகர். இங்குதான் சுவாமிகளுக்கு தினம் ஒரு திருப்புகழ் பாடும் வரத்தை முருகன் தந்தான்.வயலூர் திருச்சிராப்பள்ளிக்கு 6 மைல் தொலைவில் தென்மேற்கே உள்ளது.
பாடல் 908 - வயலு¡ர்
ராகம் - கேதாரம் தாளம் - அங்கதாளம் தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான
குருதி கிருமிகள் சலமல மயிர்தசை
     மருவு முருவமு மலமல மழகொடு
          குலவு பலபணி பரிமள மறசுவை ...... மடைபாயல் 
குளிரி லறையக மிவைகளு மலமல
     மனைவி மகவனை யநுசர்கள் முறைமுறை
          குனகு கிளைஞர்க ளிவர்களு மலமல ...... மொருநாலு 
சுருதி வழிமொழி சிவகலை யலதினி
     யுலக கலைகளு மலமல மிலகிய
          தொலைவி லுனைநினை பவருற வலதினி ...... யயலார்பால் 
சுழல்வ தினிதென வசமுடன் வழிபடு
     முறவு மலமல மருளலை கடல்கழி
          துறைசெ லறிவினை யெனதுள மகிழ்வுற ...... அருள்வாயே 
விருது முரசுகள் மொகுமொகு மொகுவென
     முகுற ககபதி முகில்திகழ் முகடதில்
          விகட இறகுகள் பறையிட அலகைகள் ...... நடமாட 
விபுத ரரகர சிவசிவ சரணென
     விரவு கதிர்முதி ரிமகரன் வலம்வர
          வினைகொள் நிசிசரர் பொடிபட அடல்செயும் ...... வடிவேலா 
மருது நெறுநெறு நெறுவென முறிபட
     வுருளு முரலொடு தவழரி மருகசெ
          வனச மலர்சுனை புலிநுழை முழையுடை ...... யவிராலி 
மலையி லுறைகிற அறுமுக குருபர
     கயலு மயிலையு மகரமு முகள்செநெல்
          வயலி நகரியி லிறையவ அருள்தரு ...... பெருமாளே.
இரத்தம், புழுக்கள், நீர், மலம், மயிர், சதை ஆகிய இவை பொருந்திய உருவை உடைய இந்த உடல் எடுத்தது போதும் போதும். அழகோடு விளங்கும் பல விதமான நகைகளும், நறு மணமுள்ள வாசனைப் பொருள்களும், ஆறு சுவைகள் கூடிய உணவும், படுக்கையும், குளிர் இல்லாத அடக்கமான அறைகள் கொண்ட வீடும் - இவைகள் யாவும் போதும் போதும். மனைவி, குழந்தைகள், தாயார், உடன் பிறந்தவர்கள், உறவு முறைகளைக் கூறி குலவும் சுற்றத்தினர் இவர்களும் போதும் போதும். ஒரு நான்கு மறைகளின் வழியை எடுத்துக் கூறும் சைவ சித்தாந்த நூல்களைத் தவிர வேறு உலக சம்பந்தமான நூல்களை ஓதுவதும் போதும் போதும். விளங்கி நிற்பவனும், அழிவில்லாதவனுமாகிய உன்னை நினைப்பவர்களது நட்பைத் தவிர, இனி பிறரிடத்தே திரிவது நல்லது என்று அவர்கள் வசப்பட்டு, அவர்களை வழிபடுகின்ற நட்பும் போதும் போதும். நின் திருவருள் அலை வீசும் கடலின் சங்கமத் துறை வழியில் செல்லும் அறிவை என் மனம் மகிழும் பொருட்டு நீ அருள்வாயாக. வெற்றிச் சின்னமான பறைகள் மொகு மொகு மொகு என்று பேரொலி செய்ய, கருடன் மேகம் விளங்கும் உச்சி வானத்தில் அகன்ற இறகுகளைக் கொண்டு வட்டமிட, பேய்கள் நடனம் செய்ய, தேவர்கள் அரகர சிவசிவ உன் அடைக்கலம் என்று ஒலி செய்ய, பொருந்திய சூரியனும், குளிர்ச்சி நிறைந்த கிரணங்களை உடைய சந்திரனும் வலம் வர, தீச்செயலைக் கொண்ட அசுரர்கள் பொடிபட்டு அழிய, போர் செய்த கூர்மையான வேலாயுதனே. இரண்டு மருத மரஙகள் நெறு நெறு நெறு என்று முறிபடும்படி உருண்டு சென்று (இடுப்பில் கட்டிய) உரலுடனே தவழ்ந்திட்ட கண்ணனாம் திருமாலின் மருகனே, செந்தாமரை மலர்கின்ற சுனையும், புலி நுழையும் குகையும் கொண்ட விராலிமலையில் வீற்றிருக்கும் ஆறு முகனே, குருபரனே. கயல் மீன்களும், மயிலை என்னும் மீன்களும், மகர மீன்களும் தாவித் திரிகின்ற செந்நெல் வயல்களைக் கொண்ட வயலூர்ப் பதியில்* அமரும் இறைவனே, திருவருள் பாலிக்கும் பெருமாளே. 
* வயலூர் சோழ நாட்டின் ராஜகெம்பீரப் பகுதியின் தலைநகர். இங்குதான் சுவாமிகளுக்கு தினம் ஒரு திருப்புகழ் பாடும் வரத்தை முருகன் தந்தான்.வயலூர் திருச்சிராப்பள்ளிக்கு 6 மைல் தொலைவில் தென்மேற்கே உள்ளது.
பாடல் 909 - வயலு¡ர்
ராகம் - ....; தாளம் -
தனதானன தனதானன தனதானன தனதானன
     தனதானன தனதானன ...... தந்ததான
குயிலோமொழி அயிலோவிழி கொடியோஇடை பிடியோநடை
     குறியீர்தனி செறியீரினி ...... யென்றுபாடிக் 
குனகாவடி பிடியாவிதழ் கடியாநகம் வகிராவுடை
     குலையாவல்கு லளையாவிரு ...... கொங்கைமீதிற் 
பயிலாமன மகிழ்மோகித சுகசாகர மடமாதர்கள்
     பகையேயென நினையாதுற ...... நண்புகூரும் 
பசுபாசமு மகிலாதிக பரிபூரண புரணாகர
     பதிநேருநி னருளால்மெயு ...... ணர்ந்திடேனோ 
வெயில்வீசிய கதிராயிர வருணோதய விருணாசன
     விசையேழ்பரி ரவிசேயெனு ...... மங்கராசன் 
விசிகாகவ மயல்பேடிகை படுபோதுசன் னிதியானவன்
     விதிதேடிய திருவாளிய ...... ரன்குமாரா 
அயலூருறை மயிலாபல கலைமானுழை புலிதோல்களை
     யகிலாரம தெறிகாவிரி ...... வண்டல்மேவும் 
அதிமோகர வயலூர்மிசை திரிசேவக முருகேசுர
     அமராபதி யதில்வாழ்பவர் ...... தம்பிரானே.
பேச்சு குயிலின் குரல் தானோ, கண்கள் அம்போ, இடுப்பு கொடியோ, நடை பெண் யானை போன்றதோ, இந்த அழகைத் தெரிந்து கொள்ளுங்கள், இனிமேல் தனியாக வந்து நெருங்கிப் பழகுங்கள் என்றெல்லாம் (விலைமாதர்களைப்) புகழ்ந்து பாடி, கொஞ்சிப் பேசி அவர்களுடைய காலைப் பிடித்தும், வாயிதழைக் கடித்தும், நகத்தால் கீறியும், ஆடையைக் கலைத்தும், பெண்குறியில் திளைத்தும், இரண்டு மார்பகங்கள் மீது நெருங்கிப் பழகியும் மனம் களிப்பதற்கு இடமாயுள்ளவர்களும், காம மயக்க சுகக் கடல் போல் உள்ளவர்களுமான அழகான விலைமாதர்கள் பகைத்து விலக்கத் தக்கவர்கள் என்று நான் நினைக்காமல் இருக்கிறேனே, பசு (ஆன்மா), பாசம் (ஆணவம், கர்மம், ஆகிய தளையாகிய மும்மலக்கட்டு) ஆக எல்லாவற்றுக்கும் மேம்பட்ட, ஆதரவை மிகக் காட்டும் நிறை பொருளே, ஒளிக்கு இருப்பிடமானவனே, இறைவனாகிய உன்னிடத்தில் உள்ள திருவருளால் உண்மையான மெய்ப் பொருளை நான் உணர மாட்டேனோ? ஒளி வீசும் ஆயிரக் கணக்கான கிரணங்களை வீசுபவனும், உதய காலத்தில் இருளைப் போக்குபவனும், வேகமாகச் செல்லும் ஏழு குதிரைகளைக் கொண்டவனுமான சூரியனின் பிள்ளையாகிய அங்க நாட்டு அரசனான கர்ணன் அம்புகள் நிறைந்த போரில் தனக்குப் பகையாயிருந்த பேடி (அருச்சுனனுடைய) கை அம்பால் இறந்து படும் போது, (அந்தக் கர்ணனுக்குத்) தரிசனம் தந்தவனாகிய திருமாலும், பிரமனும் தனது முடியைத் தேடிய செல்வ நாயகனான சிவபெருமானுடைய குமாரனே, பக்கங்களில் உள்ள ஊர்கள் எல்லாவற்றிலும் வீற்றிருக்கும் மயில் வாகனனே, பல வகையான கலைமான்கள், பிற வகையான மான்கள், புலி, யானைகளையும், அகில், சந்தனம் இவைகளையும் தள்ளி வீசிக் கொண்டு வரும் காவிரி நதியின் நீர் மண்டிய பொடி மண் உள்ளதும், அதிகமாக மனதுக்கு இனிமை தருவதுமான வயலூரில் உலவும் வலியவனே, முருகனே, ஈசுவரனே, பொன்னுலகில் வாழும் தேவர்களின் தம்பிரானே. 
பாடல் 910 - வயலு¡ர்
ராகம் - ....; தாளம் -
தான தான தனத்தந் தான தான தனத்தந்
     தான தான தனத்தந் ...... தனதான
கோவை வாயி தழுக்குந் தாக போக மளிக்குங்
     கோதை மாதர் முலைக்குங் ...... குறியாலும் 
கோல மாலை வளைக்குந் தோளி னாலு மணத்தங்
     கோதி வாரி முடிக்குங் ...... குழலாலும் 
ஆவி கோடி யவிக்குஞ் சேலி னாலு மயக்குண்
     டாசை யாயி னுநித்தந் ...... தளராதே 
ஆசி லாத மறைக்குந் தேடொ ணாதொ ருவர்க்கொன்
     றாடல் தாள்க ளெனக்கின் ...... றருள்வாயே 
சேவி லேறு நிருத்தன் தோகை பாக னளிக்குந்
     த்யாக சீல குணத்தன் ...... திருமாலும் 
தேடொ ணாத பதத்தன் தீதி லாத மனத்தன்
     தேயு வான நிறத்தன் ...... புதல்வோனே 
காவி டாத திருச்செங் கோடு நாடு தனக்குங்
     காவி சூழ்வ யலிக்கும் ...... ப்ரியமானாய் 
காதி மோதி யெதிர்க்குஞ் சூர தீரர் ப்ரமிக்குங்
     கால னாடல் தவிர்க்கும் ...... பெருமாளே.
கொவ்வைக் கனி போன்ற வாயிதழுக்கும், காம தாகத்தையும், இன்பத்தையும் ஒருங்கே கொடுக்கின்ற, மாலை அணிந்துள்ள விலைமாதர்களின் மார்பகத்துக்கும் வசப்பட்டு, பெண் குறியாலும், அழகிய மாலையை வளையப் புனைந்துள்ள தோள்களாலும், வாசனை தங்குவதும் அழகாகச் சிக்கெடுத்து வாரி முடிந்துள்ளதுமான கூந்தலாலும், கோடிக் கணக்கான உயிர்களை அழிக்கின்ற சேல் மீன் போன்ற கண்களாலும் மயக்கம் கொண்டு, ஆசை பூண்டவனாய் இன்னும் தினந்தோறும் நான் மனம் தளராமல், குற்றம் இல்லாத வேதங்களாலும் தேடிக் காண முடியாத ஒருவராகிய சிவபெருமானின் மனதுக்கு உவந்த, வெற்றி பொருந்திய உனது திருவடிகளை எனக்கு இன்று தந்தருள்க. ரிஷப (நந்தி) வாகனத்தின் மேல் ஏறுகின்ற நடன மூர்த்தி, மயில் போன்ற பார்வதியை இடப் பாகத்தில் கொண்டவன், காத்து அளிக்கும் தியாக சீலம் கொண்ட தூய ஒழுக்கமான குணம் கொண்டவன், திருமாலும் தேடிக் காண முடியாத திருவடிகளை உடையவன், தீமையே இல்லாத மனத்தை உடையவன், நெருப்பின் நிறம் உடையவன் (ஆகிய சிவபெருமானின்) மகனே. சோலைகள் நிறைந்த திருச் செங்கோட்டுப் பகுதியிலும், கருங்குவளை மலரும் நீர் நிலைகளும் சூழ்ந்துள்ள வயலூரிலும் விருப்பம் கொண்டுள்ளவனே, கொன்று மோதி எதிர்த்துப் போர் செய்யும் சூர தீரர்கள் வியக்கும்படியாக, யமனுடைய கொல்லும் தொழிலை (அவனுக்கு) இல்லாமல் (நீயே) செய்த பெருமாளே. 
பாடல் 911 - வயலு¡ர்
ராகம் - தர்பாரி கானடா தாளம் - ஆதி
தானன தனத்த தானன தனத்த
     தானன தனத்த ...... தனதான
தாமரையின் மட்டு வாசமல ரொத்த
     தாளிணை நினைப்பி ...... லடியேனைத் 
தாதவிழ் கடுக்கை நாகமகிழ் கற்ப
     தாருவென மெத்தி ...... யவிராலி 
மாமலையி னிற்ப நீகருதி யுற்று
     வாவென அழைத்தென் ...... மனதாசை 
மாசினை யறுத்து ஞானமு தளித்த
     வாரமினி நித்த ...... மறவேனே 
காமனை யெரித்த தீநயன நெற்றி
     காதிய சுவர்க்க ...... நதிவேணி 
கானிலுறை புற்றி லாடுபணி யிட்ட
     காதுடைய அப்பர் ...... குருநாதா 
சோமனொ டருக்கன் மீனுலவு மிக்க
     சோலைபுடை சுற்று ...... வயலூரா 
சூடிய தடக்கை வேல்கொடு விடுத்து
     சூர்தலை துணித்த ...... பெருமாளே.
தாமரைப்பூவிலேயே நிரம்பிய மணம்வாய்ந்த மலருக்குச் சமானமான உன் இரு திருவடிகளின் நினைப்பே இல்லாத அடியேனை, மகரந்தப்பொடி விரியும் கொன்றை, சுரபுன்னை, மகிழமரம் இவையெல்லாம் கற்பக விருட்சங்கள் போல வளர்ந்து நிறைந்த விராலிப் பெருமலையில் யாம் நிற்போம்* நீ அதை மனத்தில் நினைத்து அந்தத் தலத்திற்கு வருவாயாக என்று அழைப்பு விடுத்து, என் மனத்திலுள்ள ஆசை என்னும் குற்றத்தை ஒழித்து, ஞானாமிர்தப் பிரசாதம் அளித்த அன்பை இனி என்றைக்கும் யான் மறக்கமாட்டேன். மன்மதனை எரித்த நெருப்புக்கண் உள்ள நெற்றியையும், வேகமாக வந்த ஆகாய கங்கையைத் தாங்கிய ஜடாமுடியையும், காட்டிலுள்ள புற்றில் படமெடுத்து ஆடும் பாம்பை அணிந்த காதையும் கொண்ட தந்தை சிவனாரின் குருநாதனே, சந்திரனும், சூரியனும், நக்ஷத்திரங்களும் உலவும் உயரச் சோலைகள் சுற்றியும் உள்ள வயலூரனே**, அகன்ற திருக்கை வேலினைக் கொண்டு, அதைச் செலுத்தி சூரனது சிரத்தைக் கொய்தெறிந்த பெருமாளே. 
* இச் சம்பவம் அருணகிரிநாதர் வாழ்க்கையிலே நடந்த வரலாறு - முதல் நான்கு அடிகள் விராலிமலைக்கு சுவாமிகளை முருகன் வரச் சொன்னதை குறிக்கின்றன.
** வயலூர் சோழ நாட்டின் ராஜகெம்பீரப் பகுதியின் தலைநகர். இங்குதான் சுவாமிகளுக்கு தினம் ஒரு திருப்புகழ் பாடும் வரத்தை முருகன் தந்தான்.வயலூர் திருச்சிராப்பள்ளிக்கு 6 மைல் தொலைவில் தென்மேற்கே உள்ளது.
பாடல் 912 - வயலு¡ர்
ராகம் - ....; தாளம் -
தனன தான தானான தனன தான தானான
     தனன தான தானான ...... தனதான
திருவு ரூப நேராக அழக தான மாமாய
     திமிர மோக மானார்கள் ...... கலைமூடுஞ் 
சிகரி யூடு தேமாலை யடவி யூடு போயாவி
     செருகு மால னாசார ...... வினையேனைக் 
கருவி ழாது சீரோதி யடிமை பூண லாமாறு
     கனவி லாள்சு வாமீநின் ...... மயில்வாழ்வுங் 
கருணை வாரி கூரேக முகமும் வீர மாறாத
     கழலு நீப வேல்வாகு ...... மறவேனே 
சருவ தேவ தேவாதி நமசி வாய நாமாதி
     சயில நாரி பாகாதி ...... புதல்வோனே 
சதம கீவல் போர்மேவு குலிச பாணி மால்யானை
     சகச மான சா¡£செ ...... யிளையோனே 
மருவு லோக மீரேழு மளவி டாவொ ணாவான
     வரையில் வீசு தாள்மாயன் ...... மருகோனே 
மநுநி யாய சோணாடு தலைமை யாக வேமேலை
     வயலி மீது வாழ்தேவர் ...... பெருமாளே.
லக்ஷ்மியினுடைய உருவத்துக்கு நிகரான அழகைக் கொண்டவர்களும், மகா மாய, இருளான காம இச்சையை ஊட்டும் மான் போன்ற விலைமாதர்களின் ஆடை மறைக்கும் மார்பகங்களிலும், இனிய பூ மாலை அணிந்துள்ள காடு போன்ற கூந்தலிலும் உயிரே போய்ச் சிக்கிக் கொள்ளும் காம மயக்கம் உள்ள, ஒழுக்கம் இல்லாத தொழிலனாகிய என்னை, பிறப்பில் மீண்டும் விழாத வண்ணம், உனது திருப்புகழை நான் ஓதி, உனக்கு அடிமை பூணும் வகை வரும்படி, எனது கனவில் வந்து ஆண்டருளிய சுவாமியே, மயில் மேல் வீற்றிருக்கும் உனது வாழ்வையும், கருணைக் கடல் போல மிக்க ஒளி வீசும் உனது திருமுகத்தையும்*, வீரம் என்றும் மாறுதல் இல்லாத திருவடியையும், கடம்பையும், வேல் ஏந்திய திருப்புயத்தையும் நான் என்றும் மறவேன். எல்லாத் தேவர்களுக்கும் தேவனாக விளங்குபவனும், ஆதிப்பிரானும், நமசிவாய என்னும் திருநாமத்தை உடையவனும், (இமய) மலைப் பெண்ணாகிய பார்வதியின் பாகனும், முதல்வனுமாகிய சிவபெருமானின் மகனே, நூறு யாகங்களை முடித்தவனும், வலிய போரில் ஈடுபட்டவனும், வஜ்ராயுதத்தைக் கையில் ஏந்தியவனுமாகிய இந்திரனுடைய பெரிய ஐராவதம் என்னும் யானை மீது வழக்கமான உலாவுதலைச் செய்யும் இளைஞனே, பொருந்திய பதினான்கு உலகங்களிலும் உள்ளவர்கள் அளவிட முடியாத எல்லை அளவுக்கு, தனது திருவடியை நீட்டிய திருமாலின் மருகனே, மனு நீதிச் சோழன் நீதியோடு ஆண்ட சோழ நாடு சிறந்த நிலையை அடையும் பொருட்டு, மேலை வயலூர்** என்னும் தலத்தில் வந்து வாழ்பவனும், தேவர்களின் தலைவன் ஆனவனுமான, பெருமாளே. 
* இப்பாடல் அருணகிரிநாதருக்கு முருகவேள் ஒரு முகத்துடன் வயலூரில் தரிசனம் கொடுத்ததைக் குறிக்கும்.
** வயலூர் சோழ நாட்டின் ராஜகெம்பீரப் பகுதியின் தலைநகர். இங்குதான் சுவாமிகளுக்கு தினம் ஒரு திருப்புகழ் பாடும் வரத்தை முருகன் தந்தான்.வயலூர் திருச்சிராப்பள்ளிக்கு 6 மைல் தொலைவில் தென்மேற்கே உள்ளது.
பாடல் 913 - வயலு¡ர்
ராகம் - ....; தாளம் -
தத்த தனதன தனனா தனனா
     தத்த தனதன தனனா தனனா
          தத்த தனதன தனனா தனனா ...... தனதான
நெய்த்த சுரிகுழ லறலோ முகிலோ
     பத்ம நறுநுதல் சிலையோ பிறையோ
          நெட்டை யிணைவிழி கணையோ பிணையோ ...... இனிதூறும் 
நெக்க அமுதிதழ் கனியோ துவரோ
     சுத்த மிடறது வளையோ கமுகோ
          நிற்கு மிளமுலை குடமோ மலையோ ...... அறவேதேய்ந் 
தெய்த்த இடையது கொடியோ துடியோ
     மிக்க திருவரை அரவோ ரதமோ
          இப்பொ னடியிணை மலரோ தளிரோ ...... எனமாலாய் 
இச்சை விரகுடன் மடவா ருடனே
     செப்ப மருளுட னவமே திரிவேன்
          ரத்ந பரிபுர இருகா லொருகால் ...... மறவேனே 
புத்த ரமணர்கள் மிகவே கெடவே
     தெற்கு நரபதி திருநீ றிடவே
          புக்க அனல்வய மிகஏ டுயவே ...... உமையாள்தன் 
புத்ர னெனஇசை பகர்நூல் மறைநூல்
     கற்ற தவமுனி பிரமா புரம்வாழ்
          பொற்ப கவுணியர் பெருமா னுருவாய் ...... வருவோனே 
சத்த முடையஷண் முகனே குகனே
     வெற்பி லெறிசுட ரயிலா மயிலா
          சத்தி கணபதி யிளையா யுளையா ...... யொளிகூருஞ் 
சக்ர தரஅரி மருகா முருகா
     உக்ர இறையவர் புதல்வா முதல்வா
          தட்ப முளதட வயலூ ரியலூர் ...... பெருமாளே.
எண்ணெய்ப் பசை கொண்டதும் சுருண்டதுமான கூந்தல் கரு மணலோ, மேகமோ? தாமரை மலரின் நறு மணம் வீசும் நெற்றி வில்லோ, பிறைச் சந்திரனோ? நீண்ட இரண்டு கண்களும் அம்போ, மானோ? இனிமையுடன் ஊறி நெகிழ்ந்து வரும் வாயூறலாகிய அமுதத்தைத் தரும் வாயிதழ் பழமோ, பவளமோ? பரிசுத்தமான கழுத்து சங்கோ, கமுக மரமோ? தாழாது நிற்கும் இள மார்பு குடமோ, மலையோ? அடியோடு தேய்ந்து போய் இளைத்த இடுப்பு கொடியோ, உடுக்கையோ? சிறந்த பெண்குறி பாம்போ, ரதமோ? இந்த அழகிய திருவடிகள் இரண்டும் பூவோ, தளிரோ? என்றெல்லாம் மோகம் கொண்டவனாய், காம இச்சையுடன் விலைமாதர்களுடன் பேசுதற்கு அந்த மயக்கமாகவே வீணாகத் திரிகின்ற நான், ரத்தினச் சிலம்பு அணிந்த உன் இரண்டு திருவடிகளையும் ஒரு காலும் மறக்க மாட்டேன். புத்தர்கள், சமணர்கள் மிகவும் அழிவுற, தென் பாண்டிய நாட்டு மன்னன் திரு நீறு இட, மூட்டிய நெருப்பினிடையே நல்ல வண்ணம் ஏடு (எரி படாது பச்சையாய்) ஊறு இல்லாது விளங்க, உமையம்மையின் பிள்ளை என்று சொல்லும்படி இசைத் தமிழால் இயற்றப்பட்ட நூலாகிய வேதம் அனைய தேவாரத்தை உணர்ந்து ஓதிய தவ முனியே, சீகாழியில் வாழ்ந்த புகழ்பெற்ற கவுணியர் குலத்தைச் சேர்ந்த பெருமான் திருவுருவத்துடன், திருஞான சம்பந்தராய் வந்தவனே, சக்தி வாய்ந்த அறுமுகனே, குகனே, மலைகளில் வீற்றிருக்கும் வேலனே, ஒளி வீசும் வேலாயுதனே, மயில் வாகனனே, சக்தி கணபதியின் தம்பியே, என்றும் எங்கும் உள்ளவனே, ஒளி மிக வீசும் சக்ராயுதத்தை ஏந்திய திருமாலின் மருகனே, முருகனே, சினம் மிகுந்த இறையனார் சிவபெருமானின் மகனே, குளிர்ச்சி பொருந்திய நீர் நிலைகள் உள்ள வயலூரில்* தகுதியுடன் வீற்றிருக்கும் பெருமாளே. 
* வயலூர் சோழ நாட்டின் ராஜகெம்பீரப் பகுதியின் தலைநகர். இங்குதான் சுவாமிகளுக்கு தினம் ஒரு திருப்புகழ் பாடும் வரத்தை முருகன் தந்தான். வயலூர் திருச்சிராப்பள்ளிக்கு 6 மைல் தொலைவில் தென்மேற்கே உள்ளது.
பாடல் 914 - வயலு¡ர்
ராகம் - ....; தாளம் -
தனன தத்தன தானன தானன
     தனன தத்தன தானன தானன
          தனன தத்தன தானன தானன ...... தனதான
முலைம றைக்கவும் வாசலி லேதலை
     மறைய நிற்கவும் ஆசையு ளோரென
          முகிழ்ந கைச்சிறு தூதினை யேவவு ...... முகமோடே 
முகம ழுத்தவும் ஆசைகள் கூறவு
     நகம ழுத்தவும் லீலையி லேயுற
          முறைம சக்கவும் வாசமு லாமல ...... ரணைமீதே 
கலைநெ கிழ்க்கவும் வாலிப ரானவர்
     உடல்ச ளப்பட நாள்வழி நாள்வழி
          கறைய ழிக்கவு நானென வேயணி ...... விலையீதே 
கடிய சத்திய மாமென வேசொலி
     யவர்கொ டப்பண மாறிட வீறொடு
          கடுக டுத்திடு வாரொடு கூடிய ...... தமையாதோ 
மலையை மத்தென வாசுகி யேகடை
     கயிறெ னத்திரு மாலொரு பாதியு
          மருவு மற்றது வாலியு மேலிட ...... அலையாழி 
வலய முட்டவொ ரோசைய தாயொலி
     திமிதி மித்திமெ னாவெழ வேயலை
          மறுகி டக்கடை யாவெழ மேலெழு ...... மமுதோடே 
துலைவ ருத்திரு மாமயில் வாழ்வுள
     வயலை யற்புத னேவினை யானவை
          தொடர றுத்திடு மாரிய கேவலி ...... மணவாளா 
துவள்க டிச்சிலை வேள்பகை வாதிரு
     மறுவொ ரெட்டுட னாயிர மேலொரு
          துகள றுத்தணி யாரழ காசுரர் ...... பெருமாளே.
மார்பகத்தை மறைக்கவும், ஒரு வாசற் படியருகில் தலை மறையும்படி நிற்கவும், ஆசை கொண்டுள்ளவர்கள் போல, அரும்பு போன்ற பற்களைக் காட்டிப் (புன்னகை என்னும்) ஒரு சிறிய தூதை அனுப்பவும், முகத்துடன் முகத்தை வைத்து அழுத்தவும், ஆசை மொழிகளைப் பேசவும், நகங் கொண்டு அழுத்தவும், காம லீலைகளில் பொருந்துமாறு (மாமா, அத்தான் என்ற) உறவு முறைகளைக் கூறி மயக்கவும், நறு மணம் உலாவும் மலர்ப் படுக்கையின் மேல் ஆடையை நெகிழ்ச்சியுறச் செய்தும், இளைஞர்களின் உடல் துன்பப்படவும், நாட்பட நாட்பட இரத்தத்தைச் கெடச் செய்யவும், நான் உள்ளேன் என்பது போல் சார்ந்து நெருங்கி, (எனக்குக் கொடுக்க வேண்டிய) பொருள் இதுவே, (நான் கூறுவது) கண்டிப்பான உண்மை மொழியாகும் என்றெல்லாம் சொல்லி, அவர்கள் கொடுத்து வரும் அந்தப் பணம் வருதல் இல்லாமல் மாறியவுடன், வெறுப்பும், கோபமும் கலந்த மனப்பான்மையோடு, சிடு சிடு என்று சினந்து பேசுவாரோடு ஈடுபட்டு ஒழுகியது முடிவு அடையாதோ? (மந்தர) மலையை மத்தாக நாட்டி, வாசுகி என்னும் பாம்பைக் கடைகின்ற கயிறாகக் கொண்டு, திருமால் ஒரு பாதிப் புறமும், பொருந்திய மற்றொரு பாதிப் புறத்தை வாலியுமாக முற்பட்டு, அலைகள் வீசும் கடலிலிருந்து பூவலயம் முழுமையும் ஒரே பேரொலியாய் சப்தம் திமி திமித்திம் என்று கிளம்பவும், கடல் கலங்கும்படி கடைதலை மேற்கொள்ள, (அப்போது) மேலே எழுந்த அமுதுடனே அதற்கு ஒப்பாக வந்த அழகிய மயில் போன்ற லக்ஷ்மியின் வாழ்க்கைக்கு இடமாக (செல்வச் சிறப்போடு) விளங்கும் வயலூரில் உறையும் அற்புத மூர்த்தியே, வினைகளின் தொடர்பை அறுத்து எறியும் அழகு, மேன்மை இவை கொண்ட, முக்தியைத் தரவல்ல, தேவயானையின் மணவாளனே, வளைந்துள்ள, புதுமை வாய்ந்த (கரும்பு) வில்லைக் கொண்ட காம வேளாகிய மன்மதனுக்கு எதிராய் வந்து (அவன் தரும் சிற்றின்பத்துக்கு எதிரான பேரின்பத்தைத் தரும்) செவ்வேளே, அழகிய மச்ச ரேகை ஆயிரத்து எட்டுக்கும் மேலாகக் கொண்டு, குற்றமெல்லாம் அறுத்து எறியும் ஒப்பற்ற வேலைக் கொண்ட அழகனே, தேவர்கள் பெருமாளே. 
பாடல் 915 - வயலு¡ர்
ராகம் - ....; தாளம் -
தானன தனத்தத் தாத்த, தானன தனத்தத் தாத்த
     தானன தனத்தத் தாத்த ...... தனதான
மேகலை நெகிழ்த்துக் காட்டி வார்குழல் விரித்துக் காட்டி
     வேல்விழி புரட்டிக் காட்டி ...... யழகாக 
மேனியை மினுக்கிக் காட்டி நாடக நடித்துக் காட்டி
     வீடுக ளழைத்துக் காட்டி ...... மதராசன் 
ஆகம முரைத்துக் காட்டி வாரணி தனத்தைக் காட்டி
     யாரொடு நகைத்துக் காட்டி ...... விரகாலே 
ஆதர மனத்தைக் காட்டி வேசைகள் மயக்கைக் காட்ட
     ஆசையை யவர்க்குக் காட்டி ...... யழிவேனோ 
மோகன விருப்பைக் காட்டி ஞானமு மெடுத்துக் காட்டி
     மூதமிழ் முனிக்குக் கூட்டு ...... குருநாதா 
மூவுல களித்துக் காட்டி சேவலை யுயர்த்திக் காட்டு
     மூரிவில் மதற்குக் காட்டு ...... வயலூரா 
வாகையை முடித்துக் காட்டி கானவர் சமர்த்தைக் காட்டி
     வாழ்மயில் நடத்திக் காட்டு ...... மிளையோனே 
மாமலை வெதுப்பிக் காட்டி தானவர் திறத்தைக் காட்டி
     வானவர் சிரத்தைக் காத்த ...... பெருமாளே.
மேகலை என்னும் இடை அணியை தளர்த்திக் காட்டி, நீண்ட கூந்தலை விரித்துக் காட்டி, வேல் போன்ற கண்களைச் சுழற்றிக் காட்டி, அழகு பொலியும்படி உடலை மினுக்கிக் காட்டி, கூத்துகளை நடித்துக் காட்டி, தமது வீடுகளுக்கு அழைத்துக் காட்டி, மன்மத ராஜனுடைய காம சாஸ்திர நூலை விளக்கி எடுத்துச் சொல்லி, கச்சு அணிந்த மார்பைக் காட்டி, எல்லாருடனும் சிரித்துக் காட்டி, தந்திர வகையால் அன்பு வைத்துள்ளது போல் தமது மனதைக் காட்டி, (இவ்வாறு) வேசைகள் காம இச்சையை ஊட்ட எனது ஆசையை அவர்களிடம் காட்டி நான் அழிந்து போவேனோ? அன்பு மிக்க விருப்பத்தைக் காட்டி, ஞான சாஸ்திரங்களை விரித்து எடுத்து உரைத்துக் காட்டி, பழந் தமிழ் வல்ல அகத்திய முனிவருக்கு அந்த ஞானத்தைக் கூட்டுவித்த குருநாதனே, மூவுலகங்களையும் காத்துக் காட்டி, சேவற் கொடியை உயர்த்திக் காட்டும் (வயலூரானே), வலிமை கொண்ட (கரும்பு) வில்லை மனமதனுக்குப் படையாகத் தந்து உதவிய வயலூர்* முருகனே, (வேடர்களுக்குத் தெரியாதவாறு வள்ளியைக் கவர்ந்த) வெற்றியைக் காட்டி, வேடர்களின் திறம் எவ்வளவு சிறிது என்பதைக் காட்டி, (நல் வாழ்வு பெற்ற சூரனாகிய) மயிலை உலகெலாம் செலுத்திக் காட்டிய இளைய பெருமானே, பெரிய கிரவுஞ்ச மலை வெந்து போகும்படிச் செய்து காட்டி, அசுரர்களுடைய திறமை எல்லாம் இவ்வளவு தான் என்பதைக் காட்டி, தேவர்களின் தலையைக் காத்த பெருமாளே. 
* வயலூர் சோழ நாட்டின் ராஜகெம்பீரப் பகுதியின் தலைநகர். இங்குதான் சுவாமிகளுக்கு தினம் ஒரு திருப்புகழ் பாடும் வரத்தை முருகன் தந்தான்.வயலூர் திருச்சிராப்பள்ளிக்கு 6 மைல் தொலைவில் தென்மேற்கே உள்ளது.
பாடல் 916 - வயலு¡ர்
ராகம் - ....; தாளம் -
தான தனதன தந்தன தந்தன
     தான தனதன தந்தன தந்தன
          தான தனதன தந்தன தந்தன ...... தனதான
வாளின் முனையினு நஞ்சினும் வெஞ்சம
     ராஜ நடையினு மம்பதி னும்பெரு
          வாதை வகைசெய்க ருங்கணு மெங்கணு ...... மரிதான 
வாரி யமுதுபொ சிந்துக சிந்தசெ
     வாயு நகைமுக வெண்பலு நண்புடன்
          வாரு மிருமெனு மின்சொலு மிஞ்சிய ...... பனிநீருந் 
தூளி படுநவ குங்கும முங்குளி
     ரார மகில்புழு கும்புனை சம்ப்ரம
          சோதி வளர்வன கொங்கையு மங்கையு ...... மெவரேனுந் 
தோயு மளறெனி தம்பமு முந்தியு
     மாயை குடிகொள்கு டம்பையுள் மன்பயில்
          சூளை யரையெதிர் கண்டும ருண்டிட ...... லொழிவேனோ 
காளி திரிபுரை யந்தரி சுந்தரி
     நீலி கவுரிப யங்கரி சங்கரி
          காரு ணியசிவை குண்டலி சண்டிகை ...... த்ரிபுராரி 
காதல் மனைவிப ரம்பரை யம்பிகை
     ஆதி மலைமகள் மங்கலை பிங்கலை
          கான நடனமு கந்தவள் செந்திரு ...... அயன்மாது 
வேளி னிரதிய ருந்ததி யிந்திர
     தேவி முதல்வர்வ ணங்குத்ரி யம்பகி
          மேக வடிவர்பின் வந்தவள் தந்தரு ...... ளிளையோனே 
வேலு மயிலுநி னைந்தவர் தந்துயர்
     தீர வருள்தரு கந்தநி ரந்தர
          மேலை வயலையு கந்துள நின்றருள் ...... பெருமாளே.
வாளின் நுனியைக் காட்டிலும், விஷத்தைக் காட்டிலும், கொடிய யம ராஜனுடைய தொழிலைக் காட்டிலும், அம்பைக் காட்டிலும் பெரிய வேதனை வகைகளைச் செய்கின்ற கரிய கண்ணும், எங்கும் கிட்டுதற்கு அரிய பாற்கடல் அமுது வெளிப்பட்டு வடியும் சிவந்த வாயும், சிரித்த முகமும், வெண்மையான பற்களும், நட்பைக் காட்டி வாருங்கள், அமருங்கள் எனக் கூறுகின்ற இனிமையான மொழியும், மிகுந்த பன்னீரும், பூந்தாதுடன் புதிய செஞ்சாந்தும், குளிர்ச்சி தரும் அகிலும், புனுகு சட்டமும் அணிகின்ற ஆடம்பரத்துடன் கூடிய ஒளி பெருகுவதான மார்பகங்களும், அழகிய கைகளும், யாராயிருந்த போதிலும் தோய்கின்ற சேறு என்று சொல்லக் கூடிய பெண்குறியும், கொப்பூழும், உலக மாயை குடி கொண்டுள்ள இந்த உடலில் நன்கு காலம் கழிக்கும் வேசியர்களை எதிரில் பார்த்து நான் மருட்சி அடைதலை ஒழிக்க மாட்டேனோ? காளி, மும்மூர்த்திகளுக்கும் மூத்தவள், பராகாச வடிவை உடையவள், அழகி, கரிய நிறத்தி, கெளரி, பயத்தை போக்குபவள், சங்கரி, கருணை நிறைந்த சிவாம்பிகை, சுத்த மாயையாகிய சக்தி, துர்க்கை, திரிபுரத்துப் பகைவர்களை எரித்த சிவனது ஆசை மனையாட்டி, முழு முதல் தேவியான அம்பிகை, ஆதி இமவானின் மகள், என்றும் சுமங்கலியாக இருப்பவள், பொன்னிறம் படைத்தவள், (சுடு)காட்டில் நடனமாட விருப்பம் கொண்டவள், செம்மையான லக்ஷ்மி, பிரமன் தேவி சரஸ்வதி, மன்மதன் மனைவியாகிய ரதி, (வசிட்டர் மனைவியாகிய) அருந்ததி, இந்திர(ன்) தேவி இந்திராணி முதலான தேவதைகள் வணங்கும் முக்கண்ணி, மேக நிறம் கொண்ட திருமாலின் தங்கை (ஆகிய பார்வதி) பெற்றருளிய இளையவனே, வேலையும், மயிலையும் நினைக்கின்ற அடியார்களுடைய துன்பங்கள் நீங்கும்படி அருள் பாலிக்கும் கந்தனே, முடிவே இல்லாத மேலை வயலூர் என்னும் தலத்தில் மனம் மகிழ்ந்து நின்றருளும் பெருமாளே. 
பாடல் 917 - வயலு¡ர்
ராகம் - ....; தாளம் -
தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தத்தத்த தத்ததன தத்தத்த தத்ததன
தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தத்தத்த தத்ததன தத்தத்த தத்ததன
தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தத்தத்த தத்ததன தத்தத்த தத்ததன ...... தந்ததான
விகட பரிமள ம்ருகமத இமசல
     வகிர படிரமு மளவிய களபமு
          மட்டித்தி தழ்த்தொடைமு டித்துத்தெ ருத்தலையில்
உலவி யிளைஞர்கள் பொருளுட னுயிர்கவர்
     கலவி விதவிய னரிவையர் மருள்வலை
          யிட்டுத்து வக்கியிடர் பட்டுத் தியக்கியவர்
விரவு நவமணி முகபட எதிர்பொரு
     புரண புளகித இளமுலை யுரமிசை
          தைக்கக்க ழுத்தொடுகை யொக்கப்பி ணித்திறுகி ...... யன்புகூர 
விபுத ரமுதென மதுவென அறுசுவை
     அபரி மிதமென இலவிதழ் முறைமுறை
          துய்த்துக்க ளித்துநகம் வைத்துப்ப லிற்குறியின்
வரையு முறைசெய்து முனிவரு மனவலி
     கரையு மரிசன பரிசன ப்ரியவுடை
          தொட்டுக்கு லைத்துநுதல் பொட்டுப்ப டுத்திமதர்
விழிகள் குழைபொர மதிமுகம் வெயர்வெழ
     மொழிகள் பதறிட ரதிபதி கலைவழி
          கற்றிட்ட புட்குரல்மி டற்றிற்ப யிற்றிமடு ...... வுந்திமூழ்கிப் 
புகடு வெகுவித கரணமு மருவிய
     வகையின் முகிலென இருளென வனமென
          ஒப்பித்த நெய்த்தபல புட்பக்கு ழற்சரிய
அமுத நிலைமல ரடிமுதல் முடிகடை
     குமுத பதிகலை குறைகலை நிறைகலை
          சித்தத்த ழுத்தியநு வர்க்கத்து ருக்கியொரு
பொழுதும் விடலரி தெனுமநு பவமவை
     முழுது மொழிவற மருவிய கலவியி
          தத்துப்ரி யப்படந டித்துத்து வட்சியினில் ...... நைந்துசோரப் 
புணரு மிதுசிறு சுகமென இகபரம்
     உணரு மறிவிலி ப்ரைமைதரு திரிமலம்
          அற்றுக்க ருத்தொருமை யுற்றுப்பு லத்தலையில்
மறுகு பொறிகழல் நிறுவியெ சிறிதுமெய்
     உணர்வு முணர்வுற வழுவற வொருஜக
          வித்தைக்கு ணத்ரயமும் நிர்த்தத்து வைத்துமறை
புகலு மநுபவ வடிவினை யளவறு
     அகில வெளியையு மொளியையு மறிசிவ
          தத்வப்ர சித்திதனை முத்திச்சி வக்கடலை ...... யென்றுசேர்வேன் 
திகுட திகுகுட திகுகுட திகுகுட
     தகுட தகுகுட தகுகுட தகுகுட
          திக்குத்தி குத்திகுட தக்குத்த குத்தகுட
டுமிட டுமிமிட டுமிமிட டுமிமிட
     டமட டமமட டமமட டமமட
          டுட்டுட்டு டுட்டுமிட டட்டட்ட டட்டமட
திகுர்தி திகுதிகு திகுகுர்தி திகுகுர்தி
     தகுர்தி தகுதகு தகுகுர்தி தகுகுர்தி
          திக்குத்தி குத்திகுர்தி தக்குத்த குத்தகுர்தி ...... என்றுபேரி 
திமிலை கரடிகை பதலைச லரிதவில்
     தமர முரசுகள் குடமுழ வொடுதுடி
          சத்தக்க ணப்பறைகள் மெத்தத்தொ னித்ததிர
அசுரர் குலஅரி அமரர்கள் ஜயபதி
     குசல பசுபதி குருவென விருதுகள்
          ஒத்தத்தி ரட்பலவு முற்றிக்க லிக்கஎழு
சிகர கொடுமுடி கிடுகிடு கிடுவென
     மகர சலநிதி மொகுமொகு மொகுவென
          எட்டுத்தி சைக்களிறு மட்டற்ற றப்பிளிற ...... நின்றசேடன் 
மகுட சிரதலம் நெறுநெறு நெறுவென
     அகில புவனமும் ஹரஹர ஹரவென
          நக்ஷத்ர முக்கிவிழ வக்கிட்ட துட்டகுண
நிருதர் தலையற வடிவெனு மலைசொரி
     குருதி யருவியின் முழுகிய கழுகுகள்
          பக்கப்ப ழுத்தவுடல் செக்கச்சி வத்துவிட
வயிறு சரிகுடல் நரிதின நிணமவை
     எயிறு அலகைகள் நெடுகிய குறளிகள்
          பக்ஷித்து நிர்த்தமிட ரக்ஷித்த லைப்பரவி ...... யும்பர்வாழ 
மடிய அவுணர்கள் குரகத கஜரத
     கடக முடைபட வெடிபட எழுகிரி
          அற்றுப்ப றக்கவெகு திக்குப்ப டித்துநவ
நதிகள் குழைதர இபபதி மகிழ்வுற
     அமர்செய் தயில்கையில் வெயிலெழ மயில்மிசை
          அக்குக்கு டக்கொடிசெ ருக்கப்பெ ருக்கமுடன்
வயலி நகருறை சரவண பவகுக
     இயலு மிசைகளு நடனமும் வகைவகை
          சத்யப்ப டிக்கினித கஸ்த்யர்க்கு ணர்த்தியருள் ...... தம்பிரானே.
நிரம்ப நறுமணம் வீசும் கஸ்தூரி, பன்னீர் கலந்த சந்தனமும் சேர்ந்துள்ள கலவையை பூசிக்கொண்டு, மலர் மாலையை முடித்துக் கொண்டு, தெருவின் முன் புறத்தில் உலாவி, இளைஞர்களின் பொருளுடன் அவர்கள் உயிரையும் அபகரிக்கும் புணர்ச்சி வகைகளைக் காட்டும் வியக்கத் தக்க விலைமாதர்கள். தங்கள் மயக்க வலையில் இட்டு, கட்டிப் போட்டு, வந்தவர் வேதனைப் படும்படி மயங்கச் செய்து, அவர்களுடைய பொருந்திய நவரத்தின மாலை முன் தோன்றி எதிரில் முட்டுகின்ற நிறைவு கொண்டதும், புளகாங்கிதம் கொண்டதுமான இளம் மார்பகங்கள் நெஞ்சிலே அழுந்தப் பதிய, கழுத்தில் கைகளைக் கட்டிப் பிணித்து, அன்பு மிக்கு எழ, தேவர்களின் அமுதம் எனவும், தேன் எனவும், ஆறு சுவைகளையும் அளவற்றுக் கொண்டது எனவும், இலவ மலரை ஒத்த செவ்விதழ் வாயூறலை பல முறை அனுபவித்து மகிழ்ந்து, நகக் குறிகளை பற்குறி வரையும் முறையிலே பதித்து, தவசிகளும் தமது மனத் திண்மை கரைந்து குலையுமாறு, மஞ்சள் பூசப்பட்ட இடங்களைத் தொட்டும், விருப்பத்துடன் அணிந்த ஆடையை தொட்டுக் குலைத்தும், நெற்றியில் உள்ள பொட்டை அழியச் செய்தும், செருக்கு உள்ள கண்கள் (காதில் உள்ள) குண்டலங்கள் வரையும் எட்டி முட்டி, நிலாப் போன்ற முகத்தில் வியர்வை உண்டாக, பேச்சு பதறி வர, ரதியின் கணவனாகிய மன்மதனுடைய காமசாஸ்திரத்தில் கூறியவாறு கற்றுள்ள புட்குரல்களை கண்டத்தில் பயில்வித்து, மடுவைப் போன்ற கொப்பூழில் முழுகி, புகட்டப்பட்ட பலவிதமான கலவித் தொழில்களை பொருந்திய முறைகளில் செய்து, கரு மேகம் என்றும், இருட்டு என்றும், காடு எனவும் ஒப்புமை கூறப்பட்டதும், நெய்ப் பளபளப்பு உள்ளதும், பல பூக்களை அணிந்துள்ளதுமான கூந்தல் சரிந்து விழ, அந்த இன்பகரமான நிலையை மலர் போன்ற பாதம் முதல் தலை வரையும், சந்திரனுடைய கலையில் தேய்பிறை முதல் வளர்பிறை வரை எப்போதும் மனத்தில் பதித்து, (அந்தச் சிற்றின்ப வழியையே) அனுசரித்து அதிலேயே மனம் உருகி, ஒரு பொழுதும் கூட அந்த வழியை விட்டு விலகுதல் முடியாது என்னும்படியான அனுபவமானது நீங்குதல் இல்லாத, பொருந்திய புணர்ச்சியில் இன்பகரமாய் ஆசையுடன் ஆட்டம் ஆடி, அந்தச் சோர்வினில் மனம் வாட்டம் அடைய, இந்தப் புணர்ச்சி இன்பம் அற்ப சுகம் என்று உணர்ந்து, இக பரத்தின் நன்மையையும் உணர்ந்திடும் அறிவு இல்லாத நான், மயக்கத்தைத் தரும் (ஆணவம், கன்மம், மாயை என்னும்) மும்மலங்களும் நீங்கப் பெற்று, எண்ணம் சிதறாமல் ஒருமைப் பட்டு, ஐம்புலன்களின் வாயிலில் அகப்பட்டு கலங்குகின்ற அறிவை உனது திருவடிகளில் நிலைக்கச் செய்து, சற்று உண்மை உணர்ச்சி அறிவில் ஏற்பட, குற்றமெல்லாம் ஒழிய ஒப்பற்ற இவ்வுலக வித்தைகளையும், (ஸத்வ, ராஜஸ, தாமஸ குணங்களாகிய) முக்குணங்களையும் நான் ஆட்டுவித்தபடியே ஆட வைத்து, வேதங்கள் சொல்லுகின்ற அனுபோக உருவினை அளவு கடந்த முழுப் பெரு வெளியையும் ஒளியையும் அறியக் கூடிய சிவானுபவ உண்மைக் கீர்த்திப் பொருளை, முக்தி என்னும் சிவக் கடலை நான் என்று கூடுவேன்? திகுட திகுகுட திகுகுட திகுகுட தகுட தகுகுட தகுகுட தகுகுட திக்குத்தி குத்திகுட தக்குத்த குத்தகுட டுமிட டுமிமிட டுமிமிட டுமிமிட டமட டமமட டமமட டமமட டுட்டுட்டு டுட்டுமிட டட்டட்ட டட்டமட திகுர்தி திகுதிகு திகுகுர்தி திகுகுர்தி தகுர்தி தகுதகு தகுகுர்தி தகுகுர்தி திக்குத்தி குத்திகுர்தி தக்குத்த குத்தகுர்தி என்ற தாள ஓசைக்கு ஏற்ப, முரசும், ஒரு வகையான திமிலைப் பறையும், கரடி கத்துவது போன்ற பறையும், ஒரு வகையான மத்தளமும், சல் என்னும் ஓசை செய்யும் பறையும், மேளமும், தமரம் என்னும் பறைகளும், முழவு வாத்திய வகைகளோடு உடுக்கையும், தோல் கருவிப் பறைகளும் பேரொலி செய்து அதிர்ச்சியுறச் செய்ய, அசுரர்கள் கூட்டத்துக்குப் பகைவன், தேவர்களின் வெற்றிச் சேனாபதி, நன்மையே தரும் சிவபெருமானுக்கு குருமூர்த்தி என்று வெற்றிச் சின்னங்கள் ஒரே கூட்டமாய் பலவும் நிரம்பி ஒலி செய்ய, எழுந்த பேரொலியினால் மலைகளின் உச்சிகள் எல்லாம் கிடுகிடுகிடு என்று அதிர, மகர மீன்கள் வாழும் கடல் மொகுமொகுமொகு என்று கலக்கம் அடைய, எட்டுத் திசைகளில் உள்ள யானைகள்* அளவு கடந்து கூச்சலிட, (உலகத்தைத் தாங்கி) நிற்கும் ஆதிசேஷனுடைய கி¡£டங்களைக் கொண்ட தலைமுடிகள் நெறுநெறுநெறு என்று முறிய, உலகங்கள் யாவும் அரகர ஹர என்று ஒலி செய்ய, நட்சத்திரங்கள் எல்லாம் உதிர்ந்து விழ, (பொறாமையால்) வேகுதல் போன்ற துஷ்ட குணங்களை உடைய அசுரர்களின் தலைகள் அற்று விழ, அவர்களுடைய மலை போன்ற உருவத்திலிருந்து சொரிகின்ற ரத்தமாகிய ஆற்றில் முழுகியதால் கழுகுகளின் புறமும் முதிர்ந்த உடலும் ஒரே சிவப்பு நிறமாக மாற, அசுரர்கள் வயிற்றிலிருந்து சரிந்த குடலை நரிகள் உண்ண, மாமிசத்தை பற்களை உடைய பேய்களும் நீண்ட பிசாசுகளும் உண்டு நடனம் செய்யும்படி நீ காப்பாற்றிய செயலைப் போற்றி தேவர்கள் வாழவும், அசுரர்கள் இறக்க, குதிரை, யானை, தேர், காலாட் படைகள் உடைந்து பிளவுபட, (சூரனுக்கு அரணாய் இருந்த) ஏழு மலைகளும் உருக் குலைந்து தூள் ஆக, பல திசைகளிலும் (அத்தூள்கள்) படிந்து ஒன்பது ஆறுகளும் குழைவு பெற, வெள்ளை யானையின் தலைவனாகிய இந்திரன் மகிழ்ச்சி உறவும் போர் செய்து, திருக்கையில் உள்ள வேலாயுதம் ஒளி வீச, மயிலின் மேல் விளங்கி, அந்தக் கோழிக் கொடியின் பெருமையுடன், செல்வ வளர்ச்சியுடன் வயலூரில் வீற்றிருக்கும் சரவண பவனே, குகனே, இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழையும் பிரிவு பிரிவாக உண்மையான முறையில் அகத்திய முனிவருக்கு இனிமையாகப் போதித்து அருளிய தம்பிரானே. 
* அஷ்டதிக்கஜங்கள் பின்வருமாறு: ஐராவதம், புண்டா£கம், வாமனம், குமுதம், அஞ்சனம், புஷ்பதந்தம், சார்வபெளமம், சுப்ரதீபம்.
பாடல் 918 - திருத்தவத்துறை
ராகம் - ....; தாளம் -
தானன தந்தன தத்த தத்தன
     தானன தந்தன தத்த தத்தன
          தானன தந்தன தத்த தத்தன ...... தனதான
காரணி யுங்குழ லைக்கு வித்திடு
     கோகன கங்கொடு மெத்தெ னப்பிறர்
          காணவ ருந்திமு டித்தி டக்கடு ...... விரகாலே 
காதள வுங்கய லைப்பு ரட்டிம
     னாதிகள் வஞ்சமி குத்தி டப்படி
          காமுக ரன்புகு வித்த கைப்பொரு ...... ளுறவாகிப் 
பூரண கும்பமெ னப்பு டைத்தெழு
     சீதள குங்கும மொத்த சித்திர
          பூஷித கொங்கையி லுற்று முத்தணி ...... பிறையான 
போருவை யொன்றுநெ கிழ்த்து ருக்கிமெய்
     யாரையும் நெஞ்சைவி லைப்ப டுத்திடு
          பூவையர் தங்கள்ம யக்கை விட்டிட ...... அருள்வாயே 
வீரபு யங்கிரி யுக்ர விக்ரம
     பூதக ணம்பல நிர்த்த மிட்டிட
          வேகமு டன்பறை கொட்டி டக்கழு ...... கினமாட 
வீசிய பம்பர மொப்பெ னக்களி
     வீசந டஞ்செய்வி டைத்த னித்துசர்
          வேதப ரம்பரை யுட்க ளித்திட ...... வரும்வீரா 
சீரணி யுந்திரை தத்து முத்தெறி
     காவிரி யின்கரை மொத்து மெத்திய
          சீர்புனை கின்றதி ருத்த வத்துறை ...... வரும்வாழ்வே 
சீறியெ திர்ந்தவ ரக்க ரைக்கெட
     மோதிய டர்ந்தருள் பட்ச முற்றிய
          தேவர்கள் தஞ்சிறை வெட்டி விட்டருள் ...... பெருமாளே.
மேகத்தை ஒத்த கூந்தலை ஒன்று சேர்த்து அதில் அணியும் செந்தாமரை இதழ் போன்ற தங்க அணியை பக்குவமாக பிறர் காணும்படியாக சிரமப்பட்டு முடித்திட்டு, கடிய தந்திரத்தால் காது வரைக்கும் கயல் மீன் போன்ற கண்களைச் செலுத்தி, மனம், புத்தி, சித்தம், அகங்காரம் எனப்படும் அந்தக்கரணங்கள் எல்லாம் வஞ்சனை எண்ணமே அதிகரித்து, தங்களிடம் வந்து அடிபணியும் காமம் கொண்டவர்கள் ஆசை மயக்கத்துடன் வந்து கொட்டுகின்ற கைப்பொருளினால் உறவு ஏற்பட்டு, பூரண குடம் போல பருத்து எழுகின்ற, குளிர்ந்த செஞ்சாந்து தடவப்பட்டுள்ள, அழகிய, அலங்கரிக்கப்பட்ட மார்பிலே பொருந்த முத்துக்களால் ஆன, பிறைபோன்ற ஆபரணமாகத் தரித்திருக்கும் நகை ஒன்றைத் தளர்த்தி உடலை உருக்கி, யாராயிருந்தாலும் அவருடைய மனதைத் தமக்கு விற்பனையாகும்படி செய்கின்ற பொது மகளிர் மீதுள்ள காம மயக்கத்தை விட்டு ஒழிக்கும்படி அருள் புரிவாயாக. வீரம் மிக்க தோள் மலையை உடைய வலிமை வாய்ந்தவனே, பூத கணங்கள் பல நடனம் ஆட, வேகத்துடனே பறை வாத்தியங்கள் முழங்க, கழுகுக் கூட்டங்கள் ஆட, வீசி எறியப்பட்ட பம்பரம் போல் மகிழ்ச்சி பொங்க நடனம் செய்கின்ற, சிறப்பான ரிஷபக் கொடியை உடைய, சிவபெருமானும் வேத வழக்கில் முதன்மையான பார்வதியும் உள்ளம் மகிழ அவர்கள் எதிரில் வருகின்ற வீரனே, ஒழுங்கு பொருந்திய அலைகள் புரண்டு முத்துக்களை வீசி காவிரியின் கரை மேல் மோதி நிரப்புகின்ற அழகைக் கொண்டுள்ள திருத்தவத்துறையில்* எழுந்தருளிய செல்வமே, கோபித்து எதிர்த்து வந்த அசுரர்களை கெட்டு அழியும்படி மோதி நெருக்கி, அருளும் அன்பும் நிறைந்த தேவர்களுடைய சிறையை வெட்டி நீக்கி அருளிய பெருமாளே. 
* திருத்தவத்துறையின் இன்றைய பெயர் 'லால்குடி'. திருச்சிக்கு அருகில் உள்ளது.
பாடல் 919 - திருத்தவத்துறை
ராகம் - ....; தாளம் -
தனத்த தத்தன தானன தானன
     தனத்த தத்தன தானன தானன
          தனத்த தத்தன தானன தானன ...... தனதான
நிரைத்த நித்தில நீள்மணி மாலைகள்
     பொருத்த வெற்பிணை மார்முலை மேலணி
          நெறித்த நெய்க்குழல் வாள்விழி மாமதி ...... முகமானார் 
நெளித்த சிற்றிடை மேல்கலை யாடையை
     யுடுத்தி யத்தமு ளோர்தமை யேமயல்
          நிரப்பி நித்தமும் வீதியில் நேருறு ...... நெறியாலே 
கரைத்தி தக்குயில் போல்மொழி மாதர்கள்
     வலைக்கு ளிற்சுழ லாவகை யேயுன
          கழற்று தித்திடு வாழ்வது தான்மன ...... துறமேவிக் 
கதித்த பத்தமை சாலடி யார்சபை
     மிகுத்தி ழிக்குண பாதக னேனுயர்
          கதிக்க டுத்துயர் வாகவு மேயரு ...... ளுரையாதோ 
வரைத்த நுக்கரர் மாதவ மேவின
     ரகத்தி டத்தினில் வாழ்சிவ னார்திரு
          மணிச்செ விக்குள்மெய்ஞ் ஞானம தோதிய ...... வடிவேலா 
மதித்த முத்தமி ழாய்வினர் மேலவ
     ருரைத்து ளத்திரு வாசக மானது
          மனத்து ளெத்தழ கார்புகழ் வீசிய ...... மணிமாடத் 
திரைக்க டற்பொரு காவிரி மாநதி
     பெருக்கெ டுத்துமெ பாய்வள நீர்பொலி
          செழித்த நெற்செநெல் வாரிக ளேகுவை ...... குவையாகச் 
செருக்கு செய்ப்பதி வாழ்முரு காஅறம்
     வளர்த்த நித்யகல் யாணிக்ரு பாகரி
          திருத்த வத்துறை மாநகர் தானுறை ...... பெருமாளே.
வரிசையாயுள்ள முத்து மாலைகளையும், நீண்ட ரத்தின மாலைகளையும் தாங்கியுள்ளதும் மலைக்கு ஒப்பானதுமான மார்பகங்களின் மீது விளங்கும் மேலாடை, சுருண்டதும் எண்ணெய்ப் பசை உள்ளதுமான கூந்தல், வாள் போன்ற கண்கள், அழகிய சந்திரன் போன்ற முகம் இவைகளைக் கொண்ட மாதர்கள், நெளியும் சிறிய இடையின் மேல் மேகலை பூண்ட ஆடையை உடுத்தி, பொருள் உள்ளவர்களுக்கு மிக்க காம மயக்கம் தந்து, நாள்தோறும் தெருவில் நைச்சியமான வழியில் கூப்பிட்டு அழைத்து, நன்மை தரும் குயில் போல் மொழி பேசுகின்ற விலைமாதர்களின் வலைக்குள்ளே விழுந்து நான் சுழலாதபடி, உனது திருவடியை வணங்கும் வாழ்வே மனத்தில் பொருந்தி, இயற்கையாகவே உண்டாகும் பக்தி நிலை நிரம்பியுள்ள அடியார்களின் கூட்டத்தை மிக இழிவாகப் பேசும் பாவியாகிய நான் உயர்ந்த நற்கதியை நாடி மேன்மை அடையவே உனது திருவருள் உபதேசம் செய்யக்கூடாதோ? மேரு மலையை வில்லாக ஏந்திய கரத்தை உடையவர், நல்ல தவத்தை மேற்கொண்டவர்களின் மனமாகிய இடத்துள் வாழ்கின்றவர் ஆகிய சிவபெருமானின் சிறப்பும் அழகும் கொண்ட காதில் மெய்ஞ்ஞான உபதேசத்தைச் சொன்ன வடிவேலனே, போற்றத் தக்க முத்தமிழை ஆய்ந்தவர்களாகிய மேலோர் சொல்லியுள்ள திருவாசகத்தில் உள்ள உபதேச மொழிகளை (அடியார்கள்) மனதில் போற்றுகின்றதும், அழகு நிறைந்த புகழ் விளங்கும் மணி மாடங்களை உடையதும், அலை வீசும் கடல் போன்ற காவேரியாகிய பெரிய ஆற்றில் வெள்ளம் பெருகிப் பாய்கின்ற வளப்பமுள்ள நீரால் பொலிவதும், நெற்பயிரும், செந்நெல் பயிரும் கும்பல் கும்பலாக விளைந்து பெருகிக் கிடப்பதும் ஆகிய வயலூரில் வாழ்கின்ற முருகனே, (காஞ்சியில் முப்பத்திரண்டு) அறங்களை* வளர்த்த நித்ய கல்யாணியும், அருள் நிறைந்தவளும் ஆகிய உமாதேவி உறையும் திருத்தவத்துறை** ஆகிய லால்குடியில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* பெரிய புராணத்தில் கூறிய முப்பத்திரண்டு அறங்கள் பின்வருமாறு:சாலை அமைத்தல், ஓதுவார்க்கு உணவு, அறுசமயத்தாருக்கும் உணவு, பசுவுக்குத் தீனி, சிறைச் சோறு, ஐயம், தின்பண்டம் நல்கல், அநாதைகளுக்கு உணவு, மகப்பெறுவித்தல், மகவு வளர்த்தல், சிசுக்களுக்குப் பால் நல்கல், அநாதைப் பிணம் சுடுதல், அநாதைகளுக்கு உடை, சுண்ணாம்பு பூசல், நோய்க்கு மருந்து, வண்ணார் தொழில், நாவிதத் தொழில், கண்ணாடி அணிவித்தல், காதோலை போடுதல், கண் மருந்து, தலைக்கு எண்ணெய், ஒத்தடம் தருதல், பிறர் துயர் காத்தல், தண்ணீர்ப் பந்தல், மடம் கட்டுதல், தடாகம் அமைத்தல், சோலை வளர்த்தல், தோல் பதனிடல், மிருகங்களுக்கு உணவு, ஏர் உழுதல், உயிர் காத்தல், கன்னிகாதானம்.
** திருத்தவத்துறையின் இன்றைய பெயர் 'லால்குடி'. திருச்சிக்கு அருகில் உள்ளது.
பாடல் 920 - பூவர்ளுர்
ராகம் - ...; தாளம் -
தான தாத்தன தானா தானன
     தான தாத்தன தானா தானன
          தான தாத்தன தானா தானன ...... தனதான
காலன் வேற்கணை யீர்வா ளாலமு
     நேர்க ணாற்கொலை சூழ்மா பாவிகள்
          காம சாத்திர வாய்ப்பா டேணிக ...... ளெவரேனுங் 
காத லார்க்கும்வி னாவாய் கூறிகள்
     போக பாத்திர மாமூ தேவிகள்
          காசு கேட்டிடு மாயா ரூபிக ...... ளதிமோக 
மாலை மூட்டிகள் வானூ டேநிமிர்
     ஆனை போற்பொர நேரே போர்முலை
          மார்பு காட்டிகள் நானா பேதக ...... மெனமாயா 
மாப ராக்கிக ளோடே சீரிய
     போது போக்குத லாமோ நீயினி
          வாவெ னாப்பரி வாலே யாள்வது ...... மொருநாளே 
பால றாத்திரு வாயா லோதிய
     ஏடு நீர்க்கெதிர் போயே வாதுசெய்
          பாடல் தோற்றிரு நாலா மாயிர ...... சமண்மூடர் 
பாரின் மேற்கழு மீதே யேறிட
     நீறி டாத்தமிழ் நாடீ டேறிட
          பாது காத்தரு ளாலே கூனிமி ...... ரிறையோனும் 
ஞால மேத்திய தோர்மா தேவியும்
     ஆல வாய்ப்பதி வாழ்வா மாறெணு
          ஞான பாக்கிய பாலா வேலவ ...... மயில்வீரா 
ஞான தீக்ஷித சேயே காவிரி
     யாறு தேக்கிய கால்வாய் மாமழ
          நாடு போற்றிய பூவா ளுருறை ...... பெருமாளே.
யமன், வேல், அம்பு, அறுக்கும் வாள், விஷம் இவைகளுக்கு ஒப்பான கண்களைக் கொண்டு கொலைத் தொழிலையே செய்யச் சூழ்ச்சி செய்கின்ற மகா பாவிகள், காம சாஸ்திரத்தை வாய்ப்பாடாகக் கொண்டவர்கள், ஏணியை வைத்து ஏறவிட்டு வரவழைக்கும் தன்மை கொண்டவர்கள், யாராக இருந்தாலும் பாராட்டாமல் காம இச்சை நிறைந்த சொற்களை வாயாரப் பேசுபவர்கள், காம இன்பத்துக்கு இருப்பிடமான மகா மூதேவிகள், பொருள் தா என்று கேட்கின்ற மாயச் சொரூபிகள், அதிக ஆசை மயக்கத்தை மூட்டுபவர்கள், ஆகாயத்தை நிமிர்ந்து நோக்கும் யானையைப் போலச் சண்டை செய்ய நேராகப் போருக்கு எழும் மார்பகங்களைக் காட்டுபவர்கள், இப்படி வேறுபாடுகளை உடைய மாயைகளைச் செய்ய வல்ல பெரிய பராக்குக்காரிகளாகிய வேசையருடன் என் நற்பொழுதைப் போக்குதல் தகுமோ? நீ இனி என்னை வா என்று அன்புடன் அழைத்து ஆள்வதான ஒரு நாள் என்று கிடைக்கும்? (பார்வதி தேவியின்) முலைப்பால் மணம் நீங்காத திருவாயால் நீ (திருஞானசம்பந்தராக வந்து) பாடிய பாடல் உள்ள ஏடு (வைகையாற்றின்) நீரை எதிர்த்துப் போகவும், வாது செய்த பாடலுக்குத் தோற்ற எண்ணாயிரம் சமண மூடர்கள் இப்பூமியில் கழு மேல் ஏறவும், திருநீற்றை இடாதிருந்த தமிழ் நாடு ஈடேற (திரு நீறு அனைவருக்கும் தந்து) பாதுகாத்து, உனது திருவருளால் கூன் நிமிர்ந்த பாண்டியன் நெடுமாறனும், உலகெலாம் போற்ற நின்ற ஒப்பற்ற மாதேவியான (பாண்டியன் மனைவி) மங்கையர்க்கரசியும், திருஆலவாய் என்ற மதுரையில் உள்ளவர்களும் நல் வாழ்வு அடையும்படி திருவுள்ளத்தில் நினைந்தருளிய ஞான பாக்கிய பாலனே, வேலனே, மயில் வீரனே, ஞான அறிவுரைகளைச் செய்த குழந்தையே, காவிரி ஆறு நிறைந்து வரும் கால்வாய்கள் உள்ள சிறந்த மழ நாட்டுப் பகுதியில் சிறப்புடன் உள்ள பூவாளூரில்* வீற்றிருக்கும் பெருமாளே. 
* பூவாளூர் லால்குடிக்கு அருகில் உள்ளது.
பாடல் 921 - திருப்பராய்த்துறை
ராகம் - ....; தாளம் -
தானன தந்தன தாத்த தத்தன
     தானன தந்தன தாத்த தத்தன
          தானன தந்தன தாத்த தத்தன ...... தனதான
வாசனை மங்கையர் போற்று சிற்றடி
     பூஷண கிண்கிணி யார்ப்ப ரித்திட
          மாமலை ரண்டென நாட்டு மத்தக ...... முலையானை 
வாடைம யங்கிட நூற்ற சிற்றிழை
     நூலிடை நன்கலை தேக்க இக்குவில்
          மாரன்வி டுங்கணை போற்சி வத்திடு ...... விழியார்கள் 
நேசிகள் வம்பிக ளாட்ட மிட்டவர்
     தீயர்வி ரும்புவர் போற்சு ழற்றியெ
          நீசனெ னும்படி யாக்கி விட்டொரு ...... பிணியான 
நீரின்மி குந்துழ லாக்கை யிற்றிட
     யோகமி குந்திட நீக்கி யிப்படி
          நீயக லந்தனில் வீற்றி ருப்பது ...... மொருநாளே 
தேசம டங்கலு மேத்து மைப்புய
     லாயநெ டுந்தகை வாழ்த்த வச்சிர
          தேகமி லங்கிய தீர்க்க புத்திர ...... முதல்வோனே 
தீரனெ னும்படி சாற்று விக்ரம
     சூரன டுங்கிட வாய்த்த வெற்புடல்
          தேயந டந்திடு கீர்த்தி பெற்றிடு ...... கதிர்வேலா 
மூசளி பம்பிய நூற்றி தழ்க்கம
     லாசனன் வந்துல காக்கி வைத்திடு
          வேதன கந்தையை மாற்றி முக்கண ...... ரறிவாக 
மூதறி வுந்திய தீ¨க்ஷ செப்பிய
     ஞானம்வி ளங்கிய மூர்த்தி யற்புத
          மூவரி லங்குப ராய்த்து றைப்பதி ...... பெருமாளே.
நறு மணம் கொண்ட விலைமாதர்களின் விரும்பத் தக்க சிற்றடியில் ஆபரணமாய் விளங்கும் பாத சதங்கை ஒலி செய்ய, அழகிய மலைகள் இரண்டு என்று சொல்லும்படியாக நிறுத்தப்பட்டு, மத்தகத்தைக் கொண்ட யானை போன்ற மார்பின் வாசனை கலந்து சேர, நூற்கப்பட்ட மெல்லிய இழை நூலை ஒத்த இடையில் அழகிய ஆடை நிறைந்து விளங்க, கரும்பு வில்லை ஏந்திய மன்மதன் ஏவும் தாமரைப் பூவைப் போல் சிவந்து விளங்கும் கண்களை உடையவர்கள். யாருடனும் நேசம் பாராட்டுபவர்கள். பயனிலிகள். (வந்தவரை) பலவிதமான கூத்தாட்டங்கள் ஆடும்படி ஆட்டுவிப்பவர்கள். பொல்லாதவர்கள். விரும்பி நேசிப்பவர் போல் அலைய வைத்து இழிந்தோன் என்னும்படி என்னை ஆக்கிவிட்டு ஒரு நோயாளன் என்னும்படியான நிலைமையில் விடப்பட்டு நிரம்பவும் சுழன்று வேதனைப்படும் இந்த உடலில், கலங்காத சிவ யோக நிலை மேம்பட்டு எழ, என்னை கெட்ட நெறியின்று விலக்கி, இந்தக் கணமே நீ என்னுடைய மார்பகத்தில் வீற்றிருக்கும் ஒப்பற்ற நாள் எனக்கு விடியுமா? தேசம் எல்லாம் போற்றும் கரிய மேக நிறத்தினனான பெருந்தகையாகிய திருமால் வாழ்த்த, அழியாத திருமேனி விளங்கும் பூரணனாகிய சிவபெருமானின் மகனே, முதல்வனே, வீரன் என்னும்படி பேர் பெற்றிருந்த வலிமையாளனே, சூரன் நடுங்கும்படி, வரத்தினால் கிடைத்த அவனது மலை போன்ற உடல் தேய்ந்து ஒழியும்படி, (போரை) நடத்தி புகழை அடைந்த ஒளி வீசும் வேலனே, மொய்க்கின்ற வண்டுகள் நிறைந்த நூறு இதழ்களைக் கொண்ட தாமரை மலரில் வீற்றிருப்பவனும், தோன்றி உலகங்களைப் படைத்து வைத்துள்ளவனுமாகிய, வேதம் ஓதும் பிரமனுடைய ஆணவத்தை நீக்கி, முக்கண்ணராகிய சிவ பெருமான் தெரிந்து கொள்ளும்படி பேரறிவு விளங்கிய உபதேச மொழியைச் சொன்ன ஞான ஒளி வீசும் மூர்த்தியே, அற்புதக் கடவுளராகிய (பிரமன், திருமால், சிவன் ஆகிய) திரிமூர்த்திகளும் விளங்குகின்ற திருப்பராய்த்துறை* என்னும் பதியில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* திருப்பராய்த்துறை திருச்சிக்கு அருகில் உள்ளது.
பாடல் 922 - தென்கடம்பந்துறை
ராகம் - ....; தாளம் -
தனதனன தந்தனந் தந்தனந் தந்தனந்
     தனதனன தந்தனந் தந்தனந் தந்தனந்
          தனதனன தந்தனந் தந்தனந் தந்தனந் ...... தனதான
புணரியும னங்கனம் புஞ்சுரும் புங்கருங்
     கயலினொடு கெண்டையுஞ் சண்டனுங் கஞ்சமும்
          புதுநிலவ ருந்தியுந் துஞ்சுநஞ் சும்பொருப் ...... பெறிவேலும் 
பொருவெனஇ கன்றகன் றங்குமிங் குஞ்சுழன்
     றிடைகடைசி வந்துவஞ் சம்பொதிந் திங்கிதம்
          புவியிளைஞர் முன்பயின் றம்பொனின் கம்பிதக் ...... குழைமோதிக் 
குணலையொடு மிந்த்ரியஞ் சஞ்சலங் கண்டிடும்
     படியமர்பு ரிந்தருஞ் சங்கடஞ் சந்ததங்
          கொடுமைசெய்து சங்கொடுஞ் சிங்கிதங் குங்கடைக் ...... கணினார்பால் 
குலவுபல செந்தனந் தந்துதந் தின்புறுந்
     த்ரிவிதகர ணங்களுங் கந்தநின் செம்பதங்
          குறுகும்வகை யந்தியுஞ் சந்தியுந் தொந்தமற் ...... றமைவேனோ 
துணர்விரிக டம்பமென் தொங்கலும் பம்புறும்
     புழுகுமச லம்பசுஞ் சந்தனங் குங்குமந்
          தொகுகளப முந்துதைந் தென்றுநன் கொன்றுபத் ...... திருதோளுந் 
தொலைவில்சண்மு கங்களுந் தந்த்ரமந் த்ரங்களும்
     பழநிமலை யும்பரங் குன்றமுஞ் செந்திலுந்
          துதிசெயுமெ யன்பர்தஞ் சிந்தையுஞ் சென்றுசெய்ப் ...... பதிவாழ்வாய்
கணபணபு யங்கமுங் கங்கையுந் திங்களுங்
     குரவுமறு குங்குறுந் தும்பையுங் கொன்றையுங்
          கமழ்சடில சம்புவுங் கும்பிடும் பண்புடைக் ...... குருநாதா 
கனகுடகில் நின்றகுன் றந்தருஞ் சங்கரன்
     குறுமுனிக மண்டலங் கொண்டுமுன் கண்டிடுங்
          கதிசெய்நதி வந்துறுந் தென்கடம் பந்துறைப் ...... பெருமாளே.
(முதல் 9 வரிகள் விலைமாதர் கண்களை வர்ணிக்கின்றன). கடலும், மன்மதனுடைய பாணங்களும், வண்டும், கரிய கயல் மீனும், கெண்டை மீனும், யமனும், தாமரையும், புதிய நிலவை (சந்திரிகையை) உண்ணும் (சகோரப்) பட்சியும், விஷமும், கிரவுஞ்ச மலையைத் தூளாக்கிய (உனது) வேலும் ஒப்பாகும் என்னும்படி, பகை பூண்டதாய், அகன்றதாய், பல திசைகளில் சுழல்வதாய், மத்தியிலும், ஓரத்திலும் சிவந்ததாய், வஞ்சகமான எண்ணத்தை அடக்கியதாய், பூமியில் உள்ள இளைஞர்கள் முன்பு இனிமையை (திறமையுடன்) காட்டி, அழகிய பொன்னால் ஆன, அசைகின்ற குண்டலங்கள் மீது மோதி, ஆரவார நடிப்புடன் (காண்பவரின்) ஐம்பொறிகளும் துன்பம் காணும்படி கலகப் போர் செய்து, கொடிய வேதனை உண்டாகும்படி எப்போதும் கொடுமை செய்யும் கொடி ஏந்தி உள்ளதும், விஷம் தங்குவதுமான கடைக் கண் பார்வை கொண்ட விலைமாதர்களிடத்தில், விளங்கும் பல வகையான செவ்விய பொருள்களை மீண்டும் மீண்டும் கொடுத்து மகிழ்ச்சி அடைகின்ற (மனம், வாக்கு, காயம் என்னும்) மூன்று வகையான கருவிகளும், கந்த வேளே, உனது செம்மை நிறைந்த திருவடியை அணுகுதற்கு, காலையும் மாலையும் உலகத் தொடர்பு நீங்கி ஒருமைப்பட்டு இருக்க மாட்டேனோ? பூங்கொத்துக்கள் விரிந்த கடப்ப மரத்தின் மலர்களால் ஆகிய மென்மையான மாலையும், நிறைந்துள்ள புனுகும், மலையில் விளையும் பசுமையான சந்தனமும், குங்குமமும், கூட்டப்பட்ட கலவைச் சாந்தும் ஒன்று கூடி நெருங்கிப் பொதிந்துள்ளனவும், எப்போதும் நன்மையே பாலிக்கும் பன்னிரண்டு தோள்களும், அழிவு இல்லாத உனது ஆறு முகங்களையும், உனது பூஜைக்கு உரிய நூல்களையும், மந்திரங்களையும், பழனி மலையையும், திருப்பரங்குன்றத்தையும், திருச்செந்தூரையும் துதி செய்து போற்றுகின்ற மெய் அன்பர்களுடைய மனத்தில் புகுந்தும், வயலூர் என்னும் தலத்தில் வீற்றிருப்பவனே, கூட்டமான படங்களை உடைய பாம்பும், கங்கை நதியும், சந்திரனும், குரா மலரும், அறுகம் புல்லும், சிறிய தும்பையும், கொன்றை மலரும் நறுமணம் கமழும் சடையை உடைய சிவபெருமானும் வணங்கும் பெருமையைக் கொண்டுள்ள குரு நாதனே, சிறப்பு வாய்ந்த குடகில் உள்ள மலையினின்று வரும் காவிரி, சிவபெருமானை வழிபடும் குட்டை வடிவம் கொண்ட அகத்தியர் கொண்டு வந்த கமண்டலத்திலிருந்து முன்பு தோன்றி வெளி வந்த* காவிரி நதி வந்து பொருந்தும் தென் கடம்பந்துறையில்** வீற்றிருக்கும் பெருமாளே. 
* நாரதர் சூழ்ச்சியால் விந்திய மலை மேரு மலைக்குப் போட்டியாக உயர்ந்து வழியை அடைத்தது. தேவர்கள் சிவபெருமானை வேண்ட, சிவபெருமான் காவிரியை அழைத்து ஒரு கமண்டலத்தில் அடங்கச் செய்து அகத்தியருடன் அனுப்பினார். அகத்தியர் தென் தேசத்துக்குச் சென்று காவிரியின் நீரைப் பரப்பினார்.
** திருச்சிக்கு மேற்கே உள்ள குழித்தலைக்கு வடமேற்கே 1 மைலில் உள்ளது.
பாடல் 923 - கருவூர்
ராகம் - பூர்விகல்யாணி தாளம் - கண்டசாபு - 2 1/2
தனதானத் தனதான தனதானத் ...... தனதான
மதியால்வித் தகனாகி மனதாலுத் ...... தமனாகிப் 
பதிவாகிச் சிவஞான பரயோகத் ...... தருள்வாயே 
நிதியேநித் தியமேயென் நினைவேநற் ...... பொருளாயோய் 
கதியேசொற் பரவேளே கருவூரிற் ...... பெருமாளே.
என் புத்தியைக் கொண்டு நான் ஒரு பேரறிவாளனாகி, என் மனம் நன்னெறியின் செல்ல அதனால் நான் ஒரு உத்தம மனிதனாகி, சிவ ஞானத்தில் என் சிந்தை ஊன்றுவதாகி, மேலான யோக வழியை நான் பற்றும்படியாக அருள் புரிவாயாக. என் செல்வமே, அழிவில்லாப் பொருளே, எனது தியானப் பொருளே, சிறந்த பேரின்பப் பொருளானவனே, எனக்குப் புகலிடமே, எல்லாராலும் புகழப்பெறும் மேலான செவ்வேளே, கருவூர்த்* தலத்தில் எழுந்தருளிய பெருமாளே. 
* கருவூர் திருச்சிக்கு மேற்கே 45 மைலில் உள்ள கரூர் ஆகும். சோழநாட்டின் தலைநகரான வஞ்சியும் இதுவே.
பாடல் 924 - கருவூர்
ராகம் - ....; தாளம் -
தனனத் தனத்ததன தனனத் தனத்ததன
     தனனத் தனத்ததன ...... தனதான
இளநிர்க் குவட்டுமுலை யமுதத் தடத்தைகனி
     யிரதக் குடத்தையெணு ...... மரபோடே 
இருகைக் கடைத்துஇடை துவளக் குழற்சரிய
     இதழ்சர்க் கரைப்பழமொ ...... டுறழூறல் 
முளரிப் புவொத்தமுக முகம்வைத் தருத்திநல
     முதிரத் துவற்பஅல்குல் ...... மிசைமூழ்கி 
மொழிதத் தையொப்பகடை விழிகட் சிவப்பமளி
     முழுகிச் சுகிக்கும்வினை ...... யறஆளாய் 
நளினப் பதக்கழலு மொளிர்செச் சைபொற்புயமெ
     னயனத் திலுற்றுநட ...... மிடும்வேலா 
நரனுக் கமைத்தகொடி யிரதச் சுதக்களவ
     னறைபுட் பநற்றுளவன் ...... மருகோனே 
களபத் தனத்திசுக சரசக் குறத்திமுக
     கமலப் புயத்துவளி ...... மணவாளா 
கடலைக் குவட்டவுணை யிரணப் படுத்தியுயர்
     கருவைப் பதிக்குளுறை ...... பெருமாளே.
இளநீர் போன்றதும் மலை போன்றதும் ஆகிய மார்பகமாகிய அமுதம் பெருகும் இடத்தை, கனி ரசம் அடங்கியுள்ள குடத்தை கருத்துடன் வழக்கமான முறையில் இரண்டு கைகளாலும் அடைத்து, இடை நெகிழவும், கூந்தல் கலையவும், வாயிதழினின்றும் சர்க்கரை போலவும் பழம் போலவும் ஊறும் (எச்சில்) தேனை தாமரை மலர் போன்ற முகத்தோடு முகம் வைத்து பருகி உண்டு, இன்பம் முற்றுவதாகிய அனுபவத்துடன், இழிந்த பெண்குறியிடத்தே முழுகி, பேச்சு கிளியின் பேச்சுக்கு ஒப்பாக, கடைக் கண்கள் செந்நிறம் கொள்ள படுக்கையில் முழுகி இன்பம் அனுபவிக்கும் தொழில் தொலையும்படியாக, நீ என்னை ஆண்டருளுக. தாமரை போன்ற திருவடியில் உள்ள வீரக் கழலும், விளங்குகின்ற வெட்சி மாலை அணிந்த அழகிய திரு புயங்களும் என் கண்களில் இடம் பெற்று விளங்க நடனம் செய்கின்ற வேலனே, அருச்சுனனுக்கு ஏற்பட்டிருந்த அநுமக் கொடி பறக்கும் தேரை ஓட்டுபவன், (வெண்ணெய்) திருடன், தேன் கொண்ட மலர்களையும் நல்ல துளசி மாலையையும் அணிந்த திருமாலின் மருகனே, கலவைச் சாந்து அணிந்துள்ள மார்பினை உடையவள், இன்பகரமான காமலீலைகள் செய்யும் குறமகள், தாமரையன்ன முகத்தையும் திருக்கரங்களையும் உடைய வள்ளியின் கணவனே, சமுத்திரத்தையும், கிரெளஞ்ச மலையையும் சூரனையும் புண்படுத்தி அழித்து, பேர்பெற்ற மேலான கருவூர்ப் பதிக்குள் வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 925 - கருவூர்
ராகம் - கீரவாணி தாளம் - ஆதி
தனனா தனனத் தனனா தனனத்
     தனனா தனனத் ...... தனதான
தசையா கியகற் றையினால் முடியத்
     தலைகா லளவொப் ...... பனையாயே 
தடுமா றுதல்சற் றொருநா ளுலகிற்
     றவிரா வுடலத் ...... தினைநாயேன் 
பசுபா சமும்விட் டறிவா லறியப்
     படுபூ ரணநிட் ...... களமான 
பதிபா வனையுற் றநுபூ தியிலப்
     படியே யடைவித் ...... தருள்வாயே 
அசலே சுரர்புத் திரனே குணதிக்
     கருணோ தயமுத் ...... தமிழோனே 
அகிலா கமவித் தகனே துகளற்
     றவர்வாழ் வயலித் ...... திருநாடா 
கசிவா ரிதயத் தமிர்தே மதுபக்
     கமலா லயன்மைத் ...... துனவேளே 
கருணா கரசற் குருவே குடகிற்
     கருவூ ரழகப் ...... பெருமாளே.
சதையின் திரளால் முழுமையும் தலை முதல் கால் வரை அலங்காரமாகவே அமையப்பெற்று, சஞ்சலம் என்பது கொஞ்சமேனும் ஒருநாள் கூட இந்த உலகைவிட்டு நீங்காத (எப்போதும் தடுமாறும்) உடம்பை உடைய அடி நாயேன் அகங்காரத்தையும், பந்தங்களையும் விட்டு ஞானத்தால் அறியப் பெறுகின்ற பூரணமானதும், உருவம் இல்லாததும் ஆகிய பரம்பொருளாம் கடவுள் தியானத்தை மேற்கொண்டு, அந்த அனுபவ ஞானத்தில் என் சிந்தனை மாறாத வண்ணம் அப்படியே சேர்ப்பித்து அருள் புரிவாயாக. அசைவே இல்லாத கயிலைமலைக் கடவுள் சிவனார் (அசலேசுரர்*) பெற்ற புத்திரனே, கிழக்குத் திசையில் தோன்றுகின்ற உதயசூரியனின் செம்மை ஒளி உடையவனே, இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழ்க் கடவுளே, சகல வேதாகமங்களிலும் வல்லவனே, குற்றமற்றவர்கள் வாழும் வயலூர் என்ற திருத்தலத்தில் வாழ்வோனே, உள்ளம் கசிபவர்களது மனத்தில் ஊறுகின்ற அமிர்தமே, வண்டுகள் மொய்க்கும் தாமரை மலரை ஆசனமாக உடைய பிரமனின் மைத்துனன்** முறையில் உள்ள கந்த வேளே, கருணை நிறைந்தவனே, சற்குரு மூர்த்தியே, மேற்குத் திசையில் உள்ள கருவூரில்*** வீற்றிருக்கும் அழகுப் பெருமாளே. 
* திருவாரூரில் உள்ள சிவன் கோயிலின் மூலவருக்கு அசலேசுரர் என்று பெயர் - திருவாரூர்ப் புராணம்.
** பிரமன் திருமாலின் மகன். முருகன் திருமாலின் மருமகன். எனவே பிரமனுக்கு முருகன் மைத்துனன்.
*** கருவூர் திருச்சிக்கு மேற்கே 45 மைலில் உள்ள கரூர் ஆகும்.சோழநாட்டின் தலைநகரான வஞ்சியும் இதுவே.
பாடல் 926 - கருவூர்
ராகம் - ....; தாளம் -
தத்தத் தனதன தானன தானன
     தத்தத் தனதன தானன தானன
          தத்தத் தனதன தானன தானன ...... தனதான
நித்தப் பிணிகொடு மேவிய காயமி
     தப்புப் பிருதிவி வாயுவு தேயுவு
          நிற்பொற் ககனமொ டாமிவை பூதக ...... லவைமேவி 
நிற்கப் படுமுல காளவு மாகரி
     டத்தைக் கொளவுமெ நாடிடு மோடிடு
          நெட்டுப் பணிகலை பூணிடு நானெனு ...... மடவாண்மை 
எத்தித் திரியுமி தேதுபொ யாதென
     வுற்றுத் தெளிவுண ராதுமெய் ஞானமொ
          டிச்சைப் படஅறி யாதுபொய் மாயையி ...... லுழல்வேனை 
எத்திற் கொடுநின தாரடி யாரொடு
     முய்த்திட் டுனதரு ளாலுயர் ஞானமு
          திட்டுத் திருவடி யாமுயர் வாழ்வுற ...... இனிதாள்வாய் 
தத்தத் தனதன தானன தானன
     தித்தித் திமிதிமி தீதக தோதக
          டத்தக் குடகுகு தாகுட தீகுட ...... வெனபேரிச் 
சத்தத் தொலிதிகை தாவிட வானவர்
     திக்குக் கெடவரு சூரர்கள் தூள்பட
          சர்ப்பச் சதமுடி நாணிட வேலதை ...... யெறிவோனே 
வெற்றிப் பொடியணி மேனியர் கோகுல
     சத்திக் கிடமருள் தாதகி வேணியர்
          வெற்புப் புரமது நீறெழ காணிய ...... ரருள்பாலா 
வெற்புத் தடமுலை யாள்வளி நாயகி
     சித்தத் தமர்கும ராஎமை யாள்கொள
          வெற்றிப் புகழ்கரு வூர்தனில் மேவிய ...... பெருமாளே.
நாள்தோறும் நோய்களுடன் கூடியது இவ்வுடலாகும். இது நீர், மண், காற்றுடன், நெருப்பும், உள்ளதான பொலிவுள்ள ஆகாயம் எனப்படும் ஐம்பூதங்களின் சேர்க்கையால் உண்டாகித் தோன்றி நிற்பதாகும். உலகத்தை எல்லாம் ஆளவேண்டும், விண்ணவர் இருக்கும் இடத்தையும் கொள்ளவேண்டும் என்று ஆசை கொண்டு அதற்காக எங்கும் ஓடி அலையும். செருக்குடன் அணி கலன்களையும் ஆடைகளையும் அணிந்து நான் என்கின்ற முட்டாள்தனமான அகங்காரத்துடன் ஏமாற்றித் திரியும். இது என்ன ஒருபோதும் பொய்யாகாமல் நிலைத்திருக்கும் என்று திடமாக நினைத்து, தெளிவான உண்மையை உணராமல் மெய்ஞ்ஞானத்தை விரும்ப அறியாமல் பொய்யான உலக மாயைகளில் அலைச்சல் உறுகின்ற என்னை, தந்திரமாகவாவது ஆட்கொண்டு, உன் அடியார்களுடன் என்னைக் கொண்டு சேர்ப்பித்து, உன் திருவருளால் சிறந்த ஞான அமுதத்தைத் தந்து திருவடியாகிய சிறந்த வாழ்வை நான் அடையும்படி இனிதே ஆண்டருள்வாயாக. தத்தத் தனதன தானன தானனதித்தித் திமிதிமி தீதக தோதக டத்தக் குடகுகு தாகுட தீகுட என்று ஒலிக்கும் பேரிகையின் பேரொலி திசைகளைக் கடந்து தாவிச் செல்ல, தேவர்கள் வாழும் திசைகள் கலங்கிக் கெட, வந்த அசுரர்கள் தூளாகிப் பொடிபட, (ஆதிசேஷனாகிய) பாம்பின் நூறு பணா முடிகள் அச்சம் கொள்ள, உனது வேலைச் செலுத்தியவனே, வெற்றியைத் தரும் திருநீற்றை அணிந்த திருமேனியர், ஆயர்பாடியாகிய கோகுலத்தில் வளர்ந்த கிருஷ்ணனாகிய திருமாலுக்கு தமது இடது பாகத்தைத் தந்தருளியவர் (சங்கர நாராயணர்), ஆத்தி மாலைச் சடையை உடைய சிவபெருமான் அருளிய குழந்தையே, மலை போன்ற பெரிய மார்பகங்களை உடைய வள்ளி நாயகியின் உள்ளத்தில் வீற்றிருக்கும் குமரனே, எம்மைப் போன்ற அடியார்களை ஆட்கொள்வதற்காக, வெற்றிப் புகழ் விளங்கும் கருவூரில் வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 927 - கருவூர்
ராகம் - ....; தாளம் -
தத்தன தத்த தனதன, தத்தன தத்த தனதன
     தத்தன தத்த தனதனத் ...... தனதான
முட்டம ருட்டி யிருகுழை தொட்டக டைக்க ணியலென
     மொட்பைவி ளைத்து முறையளித் ...... திடுமாதர் 
முத்தமி ரத்ந மரகதம் வைத்தவி சித்ர முகபட
     மொச்சிய பச்சை யகில்மணத் ...... தனபாரம் 
கட்டிய ணைத்து நகநுதி பட்டக ழுத்தி லிறுகிய
     கைத்தல மெய்த்து வசனமற் ...... றுயிர்சோருங் 
கட்டமு யக்கி னநுபவம் விட்டவி டற்கு நியமித
     கற்பனை பக்ஷ முடனளித் ...... தருளாதோ 
வெட்டிய கட்க முனைகொடு வட்டகு ணத்து ரணமுக
     விக்ரம வுக்ர வெகுவிதப் ...... படைவீரா 
வெற்றியை யுற்ற குறவர்கள் பெற்றகொ டிக்கு மிகமகிழ்
     வித்தக சித்த வயலியிற் ...... குமரேசா 
கிட்டிய பற்கொ டசுரர்கள் மட்டற வுட்க வடலொடு
     கித்திந டக்கு மலகைசுற் ...... றியவேலா 
கெட்டவ ருற்ற துணையென நட்டருள் சிட்ட பசுபதி
     கெர்ப்பபு ரத்தி லறுமுகப் ...... பெருமாளே.
மயக்குவதாகி இரண்டு காதின் குண்டலங்களையும் தொடுகின்ற கடைக் கண்ணின் தன்மை இதுவே என்று (காண்போர்) உள்ளத்தைக் கவர்ந்து உறவு முறையைக் கூட்டி வைக்கும் பொது மகளிர்களின், முத்து, ரத்தினம், மரகதம் இவை வைத்து ஆக்கப்பட்ட விநோதமான மேலாடை இறுக்கச் சுற்றியுள்ள, பூசிய அகிலின் நறு மணம் கொண்ட மார்புப் பாரங்களைக் கட்டிப் பிடித்துத் தழுவி, நகங்களின் நுனி பட்டுள்ள கழுத்தில் அழுத்தமாக அணைத்த கைகள் சோர்ந்து, பேச்சும் அற்றுப்போய், உயிரும் சோரும்படியான கடினமான புணர்தலின் அனுபவத்தை விட்டு ஒழித்த தூர்த்த காமுகனாகிய எனக்கு, வகைப்பட்ட ஒழுக்க நெறி ஒன்றை (உன் திருவடியை) அன்புடனே தந்து அருள்வாயாக. வெட்ட வல்ல வாளின் முனையைக் கொண்டு (பகைவர்களை) அழித்த குணம் கொண்ட வீரனே, போர்க் களத்தில் வலிமையாளனே, கோபம் கொள்பவனே, பலவிதமான படை வீரனே, வெற்றியைப் பெறுகின்ற வேடர்கள் பெற்ற கொடி போன்ற வள்ளியின் மீது மிகவும் மகிழ்ச்சி கொண்ட பேரறிஞனே, சித்த* மூர்த்தியே, வயலூரில் வீற்றிருக்கும் குமரேசனே, (அச்சத்தால்) பற்கள் ஒன்றோடொன்று பட்டு இறுகும்படி அசுரர்கள் அளவு கடந்து பயப்பட, வலிமையோடு ஒற்றைக் காலால் தாவி நடக்கும் பேய்கள் சூழ்ந்துள்ள வேலனே, (நான் என்னும் ஆணவம்) அழிந்தவர்களுக்கு உற்ற துணையாக இருந்து, அவர்களை விரும்பி திருவருள் பாலிக்கும் மேலானவனே, பசுபதீசுரர் என்னும் நாமம் படைத்த சிவபெருமானுடைய தலமாகிய கெர்ப்ப புரத்தில் (கருவூர் என்னும் ஊரில்) வீற்றிருக்கும் ஆறுமுகப் பெருமாளே. 
* சித்தன் - இது முருகன் திருநாமங்களில் ஒன்று, சித்தத்தை நிறைப்பவன்.
பாடல் 928 - கருவூர்
ராகம் - ....; தாளம் -
தந்தன தனன தனதாத்தன
     தந்தன தனன தனதாத்தன
          தந்தன தனன தனதாத்தன ...... தனதான
சஞ்சல சரித பரநாட்டர்கள்
     மந்திரி குமரர் படையாட்சிகள்
          சங்கட மகிபர் தொழஆக்கினை ...... முடிசூடித் 
தண்டிகை களிறு பரிமேற்றனி
     வெண்குடை நிழலி லுலவாக்கன
          சம்ப்ரம விபவ சவுபாக்கிய ...... முடையோராய்க் 
குஞ்சமும் விசிற இறுமாப்பொடு
     பஞ்சணை மிசையி லிசையாத்திரள்
          கொம்புகள் குழல்கள் வெகுவாத்திய ...... மியல்கீதங் 
கொங்கணி மகளிர் பெருநாட்டிய
     நன்றென மனது மகிழ்பார்த்திபர்
          கொண்டய னெழுதும் யமகோட்டியை ...... யுணராரே 
பஞ்சவர் கொடிய வினைநூற்றுவர்
     வென்றிட சகுனி கவறாற்பொருள்
          பங்குடை யவனி பதிதோற்றிட ...... அயலேபோய்ப் 
பண்டையில் விதியை நினையாப்பனி
     ரண்டுடை வருஷ முறையாப்பல
          பண்புடன் மறைவின் முறையாற்றிரு ...... வருளாலே 
வஞ்சனை நழுவி நிரைமீட்சியில்
     முந்துத முடைய மனைவாழ்க்கையின்
          வந்தபி னுரிமை யதுகேட்டிட ...... இசையாநாள் 
மண்கொள விசையன் விடுதேர்ப்பரி
     யுந்தினன் மருக வயலூர்க்குக
          வஞ்சியி லமரர் சிறைமீட்டருள் ...... பெருமாளே.
துயரமான சரித்திரத்தைக் கொண்ட பிற நாட்டவர்களும், மந்திரிகளும், இள வீரர்களைக் கொண்ட படைத் தலைவர்களும், துன்ப நிலையில் இருந்த அரசர்களும், தொழுது நிற்கும்படி கட்டளை செலுத்தவல்ல திருமுடியைச் சூடிக் கொண்டு, பல்லக்கு, யானை, குதிரை இவைகளின் மேல் ஏறி வீற்றிருந்து, ஒப்பற்ற வெண்கொற்றக் குடை நிழலில் செல்பவர்களாய், பெருமை தங்கிய, சிறப்புற்ற, செல்வ வாழ்வான மிக்க பாக்கிய நிலையைக் கொண்டவர்களாய், வெண்சாமரங்கள் வீசப்பட, செருக்குடன் பஞ்சணை மெத்தையில் வீற்றிருந்து, நிரம்பிய ஊது கொம்புகள், குழல்கள் முதலான பலவித வாத்தியங்களினின்றும் எழுகின்ற இசை ஒலி பெருக, நறு மணம் கமழும் பெண்களின் விசேஷ நாட்டியங்களை இவை நன்றாயுள்ளன என்று மனம் மகிழும் பேரரசர்கள், படைப்போனாகிய பிரமனது கணக்கில் உட்படுத்தி, யமன் அவர்களைப் படுத்தப் போகின்ற துன்பங்களை அறியவில்லையோ? தருமன் முதலாய பஞ்ச பாண்டவர்களை கெட்ட செயலைக் கொண்ட துரியோதனன் முதலிய நூற்றுவரும் வெற்றி கொள்ள, சகுனி ஆடிய சூதாட்டத்தினால் தங்கள் பொருளையும், பாகமாய் இருந்த பூமியையும், ஊர்களையும் தோற்றுப் போனதினால், வேற்றிடத்துக்குச் சென்று தமது பண்டைய விதியை நினைத்து, பன்னிரண்டு ஆண்டுகள் பல விதமான விதங்களில் இருந்து, அஞ்ஞாத வாசமாக (ஓராண்டு சென்றபின்) இறைவன் திருவருளால் சபத நாள் (13 ஆண்டுகள்) முடிவு பெற, (துரியோதனால் கவரப்பட்ட) பசுக்களை மீட்டபின், முன்பு தங்களுக்கு இருந்த இல்லற நிலையில் வந்த பிறகு, தங்களுக்கு உரிய பாகத்தைக் கேட்க, (அதற்குத் துரியோதனன்) இணங்காத நாளில், அவர்கள் பாகத்துப் பூமியைப் பெறும்படி, போரில் அர்ச்சுனன் விட்ட தேரின் குதிரையைச் சாரதியாகச் செலுத்திய திருமாலின் மருகனே, வயலூரில் உள்ள குகனே, தேவர்கள் சிறையை மீட்டருளி, வஞ்சி எனப்படும் கருவூரில் உறையும் பெருமாளே. 
இப்பாடலில் மகாபாரத கதைச் சுருக்கத்தைக் காணலாம்.
பாடல் 929 - கருவூர்
ராகம் - ....; தாளம் -
தனதன தந்தன தாத்தன தனதன தந்தன தாத்தன
     தனதன தந்தன தாத்தன ...... தனதான
முகிலள கஞ்சரி யாக்குழை யிகல்வன கண்சிவ வாச்சிவ
     முறுவல்மு கங்குறு வேர்ப்பெழ ...... வநுபோக 
முலைபுள கஞ்செய வார்த்தையு நிலையழி யும்படி கூப்பிட
     முகுளித பங்கய மாக்கர ...... நுதல்சேரத் 
துயரொழு குஞ்செல பாத்திர மெலியமி குந்துத ராக்கினி
     துவளமு யங்கிவி டாய்த்தரி ...... வையர்தோளின் 
துவயலி நின்றன வ்யாத்தமும் வயலியல் வஞ்சியில் மேற்பயில்
     சொருபமு நெஞ்சிலி ராப்பகல் ...... மறவேனே 
சகலம யம்பர மேச்சுரன் மகபதி யுய்ந்திட வாய்த்தருள்
     சரவண சம்பவ தீர்க்கஷண் ...... முகமாகிச் 
சருவுக்ர வுஞ்சசி லோச்சய முருவவெ றிந்தகை வேற்கொடு
     சமரமு கந்தனில் நாட்டிய ...... மயிலேறி 
அகிலமு மஞ்சிய வாக்ரம விகடப யங்கர ராக்கத
     அசுரர கங்கெட வார்த்திடு ...... கொடிகூவ 
அமரர டங்கலு மாட்கொள அமரர்த லங்குடி யேற்றிட
     அமரரை யுஞ்சிறை மீட்டருள் ...... பெருமாளே.
மேகம் போன்ற கரிய கூந்தல் சரிய, (காதிலுள்ள) குண்டலங்களோடு பகைத்து வருவன போன்ற கண்கள் சிவக்க, மகிழ்ச்சியைக் காட்டும் புன் சிரிப்புடன் கூடிய முகத்தில் சிறு வியர்வை தோன்ற, இன்ப நுகர்ச்சிக்கு இடமான மார்பகங்கள் புளகம் கொள்ள, பேச்சும் பதறுவது போல் எழ, குவிந்த தாமரையாக கைகள் நெற்றியில் சேர, துன்பமே பெருகுவதும், நீரோடு கூடியதுமான கொள்கலமாகிய இந்த உடல் மெலிந்து, வயிற்றில் எரி அதிகமாக, துவண்டு போகும் அளவுக்கு தழுவிப் புணர்ந்து களைப்பு அடைந்து, பெண்கள் தோள்களில் துவையல் போல் அரைக்கப் பட்ட நான் உன்னுடைய எங்கும் நிறைந்திருக்கும் தன்மையையும், வயல்கள் பொருந்திய வஞ்சி என்னும் கருவூரில் பொருந்தி விளங்கும் உனது வடிவழகையும் என் மனத்தில் இரவும் பகலும் மறக்க மாட்டேன். எங்கும் நிறைந்த பொருளாகிய பரமேசுரன், நட்சத்திரங்களுக்குத் தலைவனான இந்திரன் உய்யும் பொருட்டு தோற்றுவித்த சரவணபவனே, அறிவும், தெளிவும், வசீகரமும் காட்டும் ஆறு திருமுகங்களைக் கொண்டவனாகி, போராடிய கிரவுஞ்ச மலை ஊடுருவிச் செல்லும்படி செலுத்திய வேலாயுதத்தால் போர்க் களத்தில் நடனம் செய்யும் மயில் மேல் ஏறி, எல்லாரும் பயப்படும்படியான கர்வத்தையும், தொந்தரையையும், அச்சத்தையும் தந்த வலிய ராக்ஷத அசுரர்களின் அகங்காரம் அழியும்படி கொடியில் விளங்கிய கோழி கூவ, தேவர்கள் எல்லாரும் ஆட்கொள்ளப் படவும், தேவர்கள் தங்கள் ஊருக்குக் குடி போகவும் அவர்களைச் (சூரனின்) சிறையினின்று மீட்டு அருளிய பெருமாளே. 
பாடல் 930 - நெருவூர்
ராகம் - ....; தாளம் -
தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான
குருவு மடியவ ரடியவ ரடிமையு
     மருண மணியணி கணபண விதகர
          குடில செடிலினு நிகரென வழிபடு ...... குணசீலர் 
குழுவி லொழுகுதல் தொழுகுதல் விழுகுதல்
     அழுகு தலுமிலி நலமிலி பொறையிலி
          குசல கலையிலி தலையிலி நிலையிலி ...... விலைமாதர் 
மருவு முலையெனு மலையினி லிடறியும்
     அளக மெனவள ரடவியில் மறுகியு
          மகர மெறியிரு கடலினில் முழுகியு ...... முழலாமே 
வயலி நகரியி லருள்பெற மயில்மிசை
     யுதவு பரிமள மதுகர வெகுவித
          வனச மலரடி கனவிலு நனவிலு ...... மறவேனே 
உருவு பெருகயல் கரியதொர் முகிலெனு
     மருது நெறிபட முறைபட வரைதனில்
          உரலி னொடுதவழ் விரகுள இளமையு ...... மிகமாரி 
உமிழ நிரைகளி னிடர்கெட வடர்கிரி
     கவிகை யிடவல மதுகையு நிலைகெட
          வுலவில் நிலவறை யுருவிய வருமையு ...... மொருநூறு 
நிருப ரணமுக வரசர்கள் வலிதப
     விசயன் ரதமுதல் நடவிய வெளிமையு
          நிகில செகதல முரைசெயு மரிதிரு ...... மருகோனே 
நிலவு சொரிவளை வயல்களு நெடுகிய
     குடக தமனியு நளினமு மருவிய
          நெருவை நகருறை திருவுரு வழகிய ...... பெருமாளே.
குருவின் நிலையிலும், சீடனாக இருக்கும் போதும், அந்தச் சீடருக்கு அடிமையாக இருக்கும் நிலையிலும், சிவந்த ரத்தினங்களைக் கொண்டுள்ள, கூட்டமான படங்களை உடைய பாம்பின் தன்மையைக் கொண்ட, வளைவுள்ள குண்டலினி யோக நிலையிலும், ஒப்ப மனம் அடங்கி நின்று, உன்னையே வழிபடுகின்ற நற்குணங்களை உடைய சீலர்களுடைய கூட்டத்தைச் சேர்ந்து அவர்கள் வழி நடத்தல், போற்றுதல், விழுந்து வணங்குதல், (பக்திப் பரவசத்தால்) அழுதல் இவை ஏதும் நான் இல்லாதவன், நல்ல குணம் எதுவும் இல்லாதவன், பொறுமை இல்லாதவன், நன்மை பயக்கும் நூல்களைக் கல்லாதவன், சிந்திக்கத் தெரியாதவன், நிலைத்த புத்தி இல்லாதவன், வேசியர்களின் மலை போன்ற மார்பகங்களில் இடறி விழுந்தும், கூந்தல் என்னும் பெயரோடு வளர்கின்ற காட்டில் மனம் மயக்கமுற்றுத் திரிந்தும், மகர மீன்களைப் போல் (காது வரை நீண்டு அங்குள்ள குண்டலங்களைத்) தாக்கும் இரண்டு கண்கள் என்னும் கடலினில் முழுகியும் அலைச்சல் உறாமல், வயலூர்ப் பதியில் அடியேன் உனது திருவடியைப் பெற நீ மயில் மீது வந்து அளித்த நறுமணம் உள்ள, பலவிதமான வண்டுகள் மொய்க்கும், தாமரை மலர் போன்ற திருவடியை கனவிலும் நனவிலும் நான் மறக்க மாட்டேன். உருவம் பெரியதாய் பக்கத்தில் இருந்த கரிய மேகம் போன்ற மருதமரம் தாம் செல்லும் வழியில் முறிக்கப்பட்டு விழ, அதனால் நீதி* வெளிப்பட, (இடுப்பில் கட்டிய) மலை போன்ற உரலினுடன் தவழ்ந்து சென்ற வல்லமை கொண்ட இளமை அழகையும், வலுத்த மழை பொழிய, பசுக்களின் துயர் நீங்க, நெருங்கிய (கோவர்த்தன) மலையை குடையாகப் பிடிக்க வல்ல கருணையான வலிமையையும், நிலை தடுமாற, உலவுவதற்கு இடமில்லாத பாதாள அறையில், (தேவகி - வசுதேவருக்காக) விஸ்வ ரூபத்துடன் தோன்றி எழுந்த அருமையையும், ஒப்பற்ற நூறு (துரியோதனன் முதலிய) அரசர்களும், போர்க்களத்தில் மற்ற அரசர்களும் வலிமை கெட்டொழிய, அர்ச்சுனனுடைய தேரை முன்பு செலுத்திய (அடியார்க்கு உதவும்) எளிமையையும் பற்றி எல்லா பூமிகளும் புகழ்ந்து உரைக்கும் (கண்ணனாம்) திருமாலின் இனிய மருகனே, ஒளி வீசும் சங்குகளும் வயல்களும் வழி நெடுகப் பரந்துள்ளனவும், மேற்குத் திசையில் உள்ள வன்னி மரங்களும் தாமரையும் பொருந்தினவும் ஆகிய நெருவை** என்னும் நகரில் வீற்றிருக்கும், அழகிய திருவுருவம் கொண்ட பெருமாளே. 
* நள கூபரர் என்ற கந்தர்வர்கள் சபிக்கப்பட்டு மருதமரமாக கோகுலத்தில் வளர்ந்தனர். கண்ணன் உரலுடன் தவழ்ந்து மோதி மருத மரத்தையும் சாபத்தையும் முறியடித்தான்.
** 'நெருவை' என்னும் 'நெரூர்' (நெருவூர்) கருவூருக்கு (அதாவது கரூர்) அருகில் உள்ளது.
பாடல் 931 - திருவெஞ்சமாக்கூடல்
ராகம் - சுத்த தன்யாசி தாளம் - அங்கதாளம் - 7 1/2 தகிட-1 1/2, தக-1, தகதிமி-2, தகதிமிதக-3
தந்தனாத் தானத் ...... தனதான
வண்டுபோற் சாரத் ...... தருள்தேடி 
மந்திபோற் காலப் ...... பிணிசாடிச் 
செண்டுபோற் பாசத் ...... துடனாடிச் 
சிந்தைமாய்த் தேசித் ...... தருள்வாயே 
தொண்டராற் காணப் ...... பெறுவோனே 
துங்கவேற் கானத் ...... துறைவோனே 
மிண்டராற் காணக் ...... கிடையானே 
வெஞ்சமாக் கூடற் ...... பெருமாளே.
வண்டு எவ்வாறு மலர்களின் தேனைத் தேடிக் களிக்கிறதோ அவ்வாறு உனது அருளை நான் தேடிக் களிக்குமாறும், குரங்கு எவ்வாறு மரக்கிளைகளைத் தாண்ட வல்லதோ அவ்வாறே நானும் காலனின் பாசக் கயிற்றின் பிணிப்பைத் தாவும் வல்லமை பெறுமாறும், செண்டாயுதத்தை எறிந்தால் எவ்வாறு பகை மாய்க்கப்படுகிறதோ அவ்வாறு நான் பாசங்களுடன் போராடி வெல்லுமாறும், அலைந்து திரியும் என் மனத்தை மாய்த்து சும்மா இருக்கச் செய்து மெய்யறிவைத் தந்தருள்வாயாக. உன் அடியார்களால் காணப்பெறும் தன்மை உடையவனே, தூய்மையான தலமாம் திருவேற்காட்டில் வாழ்பவனே, ஆணவம் மிக்கவர்களால் காணக் கூடாதவனே, திருவெஞ்சமாக்கூடல்* என்ற திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* திருவெஞ்சமாக்கூடல் திருத்தலம் கரூர் ரயில் நிலையத்துக்குத் தெற்கே 12 மைலில் உள்ளது.
பாடல் 932 - திருப்பாண்டிக்கொடுமுடி
ராகம் - மாண்ட் தாளம் - மி.ரசாபு - 3 1/2 தகதிமி-2, தகிட-1 1/2
தனதனத் தனனத் ...... தனதான
இருவினைப் பிறவிக் ...... கடல்மூழ்கி
     இடர்கள்பட் டலையப் ...... புகுதாதே 
திருவருட் கருணைப் ...... ப்ரபையாலே
     திரமெனக் கதியைப் ...... பெறுவேனோ 
அரியயற் கறிதற் ...... கரியானே
     அடியவர்க் கெளியற் ...... புதநேயா 
குருவெனச் சிவனுக் ...... கருள்போதா
     கொடுமுடிக் குமரப் ...... பெருமாளே.
நல்வினை, தீவினை இரண்டின் காரணமாக ஏற்படும் பிறவி என்ற கடலில் மூழ்கி, துயரங்கள் ஏற்பட்டு அலைந்து திரியப் புகாமல், உனது திருவருளாம் கருணையென்னும் ஒளியாலே உறுதியான வகையில் நான் நற்கதியைப் பெறமாட்டேனோ? திருமாலும் பிரம்மாவும் அறிவதற்கு அரியவனே, உன் அடியவர்க்கு எளிதாகக் கிட்டும் அற்புதமான நண்பனே, குருமூர்த்தியாக சிவபிரானுக்கு அருளிய ஞானாசிரியனே, கொடுமுடித் தலத்தில்* வீற்றிருக்கும் பெருமாளே. 
* கொடுமுடி ஈரோட்டிலிருந்து தென்கிழக்கே 23 மைலில் உள்ளது.
பாடல் 933 - திருப்பாண்டிக்கொடுமுடி
ராகம் - ....; தாளம் -
தாந்தத் தனதன தாந்தத் தனதன
     தாந்தத் தனதன ...... தனதான
காந்தட் கரவளை சேந்துற் றிடமத
     காண்டத் தரிவைய ...... ருடனூசி 
காந்தத் துறவென வீழ்ந்தப் படிகுறி
     காண்டற் கநுபவ ...... விதமேவிச் 
சாந்தைத் தடவிய கூந்தற் கருமுகில்
     சாய்ந்திட் டயில்விழி ...... குழைமீதே 
தாண்டிப் பொரவுடை தீண்டித் தனகிரி
     தாங்கித் தழுவுத ...... லொழியேனோ 
மாந்தர்க் கமரர்கள் வேந்தற் கவரவர்
     வாஞ்சைப் படியருள் ...... வயலூரா 
வான்கிட் டியபெரு மூங்கிற் புனமிசை
     மான்சிற் றடிதொழு ...... மதிகாமி 
பாந்தட் சடைமுடி யேந்திக் குலவிய
     பாண்டிக் கொடுமுடி ...... யுடையாரும் 
பாங்கிற் பரகுரு வாங்கற் பனையொடு
     பாண்சொற் பரவிய ...... பெருமாளே.
காந்தள் மலரைப் போன்ற, வளையல் அணிந்துள்ள, கைகள் சிவக்க, மன்மதனுடைய வில்லுக்குத் தோதாகும் மாதர்களுடன் ஊசிக்கும் காந்தத்துக்கும் உள்ள உறவைப் போல, அக் காம மயக்கத்தில் விழுந்து, அவ்வாறே பெண் குறியைக் காண்பதற்கு அனுபவ வழிகளை நாடிப் பொருந்தி, நறுஞ்சாந்து தடவப்பட்ட கரிய மேகம் போன்ற கூந்தலின் மேல் சாய்ந்து படுத்து, வேல் போன்ற கண்கள் (காதில் உள்ள) குண்டலங்களின் மேல் தாவிச் சென்று தாக்கும்படியாக, ஆடையைத் தொட்டு மார்பகங்களாகிய மலையைப் பிடித்துத் தழுவும் செயலை ஒழிக்க மாட்டேனோ? மனிதர்களுக்கும் தேவ அரசனாகிய இந்திரனுக்கும் அவரவர்களுடைய விருப்பப்படி அருள் பாலிக்கும் வயலூரனே, ஆகாயத்தைக் கிட்டிய பெரிய மூங்கில் காடு உள்ள (வள்ளிமலைத்) தினைப்புனத்தின் மீது இருந்த மான் போன்ற வள்ளியின் சிறிய பாதங்களைத் தொழுத காதல் மிக்கவனே, பாம்பை தனது சடா முடியில் தாங்கி விளங்குபவரும் பாண்டிக் கொடுமுடி* என்னும் தலத்தை உடையவரும் ஆகிய சிவபெருமானுக்கு, உரிய முறையில் மேலான குருவான சங்கற்பத்தோடு பண் போன்ற சொற்களைக் கொண்டு (பிரணவ மந்திரத்தை) உபதேசித்தளித்த பெருமாளே. 
* கொடுமுடி ஈரோட்டிலிருந்து தென்கிழக்கே 23 மைலில் உள்ளது.
பாடல் 934 - சேலம்
ராகம் - கானடா தாளம் - ஆதி
தனதன தானத் தனதன தானத்
     தனதன தானத் ...... தனதான
பரிவுறு நாரற் றழல்மதி வீசச்
     சிலைபொரு காலுற் ...... றதனாலே 
பனிபடு சோலைக் குயிலது கூவக்
     குழல்தனி யோசைத் ...... தரலாலே 
மருவியல் மாதுக் கிருகயல் சோரத்
     தனிமிக வாடித் ...... தளராதே 
மனமுற வாழத் திருமணி மார்பத்
     தருள்முரு காவுற் ...... றணைவாயே 
கிரிதனில் வேல்விட் டிருதொளை யாகத்
     தொடுகும ராமுத் ...... தமிழோனே 
கிளரொளி நாதர்க் கொருமக னாகித்
     திருவளர் சேலத் ...... தமர்வோனே 
பொருகிரி சூரக் கிளையது மாளத்
     தனிமயி லேறித் ...... திரிவோனே 
புகர்முக வேழக் கணபதி யாருக்
     கிளையவி நோதப் ...... பெருமாளே.
இரக்கம் கலந்த அன்பு சிறிதும் இல்லாமல் நெருப்பை நிலவு வீசுவதாலும், பொதிய மலையினின்று பொருந்தவரும் தென்றல் காற்று (சூடாக) மேலே படுவதனாலும், குளிர்ச்சியுள்ள சோலையில் குயில் ஒன்று சோகமாய்க் கூவுவதாலும், புல்லாங்குழல் ஒப்பற்ற (சோக) ஓசையைத் தருவதாலும், உன்னைப் பிரிந்து தனிமையில் இருக்கும் இந்தப் பெண் தன் இரண்டு கயல் மீன் போன்ற கண்கள் சோர்வடைய, தனியே கிடந்து மிகவும் வாட்டமுற்று தளர்ச்சியுறாமல், அவளின் நொந்த மனம் ஒருநிலைப்பட்டு நிம்மதியுடன் வாழ, உன் அழகிய ரத்ன மணிமாலை அணிந்த மார்பிடத்தே, அருளே உருவான முருகனே, நீ வந்து அவளை இறுக்க அணைவாயாக. கிரெளஞ்ச மலைமீது வேலைச் செலுத்தி, அது பெருந் தொளைபட்டு அழியும்படிச் செய்த குமரனே, இயல், இசை, நாடகம் என்ற மூன்று துறைகள் உள்ள தமிழுக்குப் பெருமானே, பெரும் ஜோதி ஸ்வரூபனான சிவபிரானுக்கு ஒப்பற்ற பிள்ளையாகி, லக்ஷ்மிகரம் பொருந்திய சேலம் என்ற பதியில் வீற்றிருப்பவனே, போருக்கு எழுந்த ஏழு கிரிகளும், சூரனும், அவன் சுற்றத்தாரும் இறக்க, ஒப்பற்ற மயில் வாகனத்தில் ஏறி உலகை வலம் வந்தவனே, புள்ளியை உடைய யானையின் முகத்தவரான கணபதிப் பெருமானுக்கு இளையவனாகிய அற்புதப் பெருமாளே. 
இப்பாட்டு அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவிக்காக பாடியது.கடல், சந்திரன், தென்றல், குயில், புல்லாங்குழல், மன்மதன், மலர்க் கணைகள், ஊர்ப் பெண்களின் ஏச்சு முதலியவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.
பாடல் 935 - ரா.புரம்
ராகம் - ....; தாளம் -
தந்த தானன தத்தன, தந்த தானன தத்தன
     தந்த தானன தத்தன ...... தனதான
சங்கு வார்முடி பொற்கழல் பொங்கு சாமரை கத்திகை
     தண்டு மாகரி பெற்றவன் ...... வெகுகோடிச் 
சந்த பாஷைகள் கற்றவன் மந்த்ர வாதிச துர்க்கவி
     சண்ட மாருத மற்றுள ...... கவிராஜப் 
பங்கி பாலச ரச்வதி சங்க நூல்கள்வி தித்தப்ர
     பந்த போதமு ரைத்திடு ...... புலவோன்யான் 
பண்டை மூவெழு வர்க்கெதிர் கண்ட நீயுமெ னச்சில
     பஞ்ச பாதக ரைப்புகழ் ...... செயலாமோ 
வெங்கை யானை வனத்திடை துங்க மாமுத லைக்குவெ
     ருண்டு மூலமெ னக்கரு ...... டனிலேறி 
விண்ப ராவஅ டுக்கிய மண்ப ராவஅ தற்குவி
     தம்ப ராவஅ டுப்பவன் ...... மருகோனே 
கொங்க ணாதித ரப்பெறு கொங்கி னூடுசு கித்திடு
     கொங்கின் வீரக ணப்ரிய ...... குமராபொற் 
கொங்கு லாவுகு றக்கொடி கொங்கை யேதழு விச்செறி
     கொங்கு ராஜபு ரத்துறை ...... பெருமாளே.
சங்கு வாத்தியம் என்ன, நீண்ட கி¡£டம், பொன்னாலாகிய கழல் என்ன, மேலெழுந்து விளங்கும் சாமரங்கள் என்ன, விருதுக் கொடி என்ன, பல்லக்கு என்ன, குதிரை, யானை என்ன - இவைகளை எல்லாம் உடையவன், பல கோடிக் கணக்கான அழகிய வார்த்தைகளைக் கற்றவன், மந்திர வாதத்தில் வல்லவன், நான்கு வகைக் கவிகளிலும்(*1) வல்லவன், கொடுங் காற்றைப் போல பேச வல்லவன், மற்றும் பல பேர்கள் உள்ள கவிராஜன் என்ற பட்டத்தை உடையவன், பால சரஸ்வதி என்னும் விருதைப் பெற்றவன், சங்க நூல்களில் சொல்லப்பட்ட பிரபந்த அறிவு நூல்களை எடுத்து ஓத வல்ல புலவன் நான். பழைய இருபத்தொரு வள்ளல்களுக்கு ஒப்பானவன் எதிரே உள்ள நீயும் என்றெல்லாம் கூறி ஐம்பெரும் பாதகங்களைச்(*2) செய்பவர்களான சிலரை அங்ஙனம் புகழ்கின்ற செயல் ஆகுமோ? விரும்பத் தக்க துதிக்கையை உடைய கஜேந்திரன் என்ற யானை காட்டிடையே ஒரு பொய்கையில் வலிய முதலைக்கு மருட்சி உற்று, ஆதி மூலமே என்று கூச்சலிட்ட போது, கருடன் மேல் ஏறி, விண்ணுலகம் போற்றவும், அடுக்காயுள்ள பதினாலு உலகங்கள் போற்றவும், அந்த யானைக்கு வேண்டிய நன்மைகளைப் பெருகும்படி அடுத்து உதவும் திருமாலின் மருகனே, கொங்கண முனிவர் முதலியோரால் (பொன்) தரப்பட்ட(*3) கொங்கு நாட்டில் சுகமாக இருக்கின்ற, மணம் வீசும் மாலைகள் அணிந்த, வீரனே, பதினெண் கணங்களும் விரும்புவனே, குமரனே, கொங்கு நறு மணம் வீசும் குறப்பெண்ணாகிய வள்ளியின் அழகிய மார்பகங்களை அணைந்தவனே, செழிப்பான கொங்கு மண்டலத்தில் உள்ள ராசிபுரத்தில்(*4) வீற்றிருக்கும் பெருமாளே. 
* தமிழ்க் கவிதைகள் நான்கு வகைப்படும்:ஆசு - எதுகை மோனையுடன் கூடியது,மதுரம் - இனிமை வாய்ந்தது,சித்திரம் - கற்பனையும் அழகும் மிக்கது,வித்தாரம் - வர்ணனை மிக்கது.
(*2) ஐவகை பாதகங்கள்: கொலை, களவு, சூது, கள்ளுண்ணல், குரு நிந்தை ஆகியவை.
(*3) கொங்கு நாட்டில் இருந்த கொங்கணச் சித்தர் தாமிரம் முதலிய உலோகங்களைப் பொன் செய்து விரும்பினோர்க்குக் கொடுத்தார். எனவே இங்ஙனம் கூறப்பட்டுள்ளது.
(*4) 'ராஜபுரம்' இப்போது 'ராசிபுரம்' என வழங்கப்படுகிறது. இது சேலம் ரயில் நிலையத்திலிருந்து 20 மைலில் உள்ளது.
பாடல் 936 - வி.யமங்கலம்
ராகம் - ......; தாளம் -
தனன தந்தனத் தானான தானன
     தனன தந்தனத் தானான தானன
          தனன தந்தனத் தானான தானன ...... தனதான
கலக சம்ப்ரமத் தாலேவி லோசன
     மலர்சி வந்திடப் பூணார மானவை
          கழல வண்டெனச் சா¡£ரம் வாய்விட ...... அபிராமக் 
கனத னங்களிற் கோமாள மாகியெ
     பலந கம்படச் சீரோடு பேதக
          கரண முஞ்செய்துட் பாலூறு தேனித ...... ழமுதூறல் 
செலுவி மென்பணைத் தோளோடு தோள்பொர
     நிலைகு லைந்திளைத் தேராகு மாருயிர்
          செருகு முந்தியிற் போய்வீழு மாலுட ...... னநுராகந் 
தெரிகு மண்டையிட் டாராத சேர்வையி
     லுருகி மங்கையர்க் காளாகி யேவல்செய்
          திடினு நின்கழற் சீர்பாத நானினி ...... மறவேனே 
உலக கண்டமிட் டாகாச மேல்விரி
     சலதி கண்டிடச் சேராய மாமவ
          ருடன்ம டிந்திடக் கோபாலர் சேரியில் ...... மகவாயும் 
உணர்சி றந்தசக் ராதார நாரணன்
     மருக மந்திரக் காபாலி யாகிய
          உரக கங்கணப் பூதேசர் பாலக ...... வயலூரா 
விலைத ருங்கொலைப் போர்வேடர் கோவென
     இனையு மங்குறப் பாவாய்வி யாகுலம்
          விடுவி டென்றுகைக் கூர்வேலை யேவிய ...... இளையோனே 
விறல்சு ரும்புநற் க்¡£தேசி பாடிய
     விரைசெய் பங்கயப் பூவோடை மேவிய
          விஜய மங்கலத் தேவாதி தேவர்கள் ...... பெருமாளே.
(சேர்க்கையில் உண்டாகும்) ஊடல் கலகப் பரபரப்பால் கண்களாகிய மலர் சிவக்கவும், அணிந்த முத்து மாலைகளும் கழன்று விழவும், (புட்குரல்) வண்டு முதலியவற்றின் ஒலிகளை வெளிப்படுத்தவும், அழகிய பருத்த மார்பகங்களைக் கண்டு பெருங் களிப்புடன் குதித்து மகிழ்பவனாய், (உடலெல்லாம்) பல நகக் குறிகள் உண்டாக, சிறந்த வெவ்வேறு வகையான புணர்ச்சிகளைச் செய்து, மனத்தில் பால் போலவும் தேன் போலவும் இனிக்கின்ற வாயிதழ் அமுதம் போன்ற ஊறலைச் செலுத்தி, மெல்லிய மூங்கிலைப் போன்ற தோளோடு தோள் இணைய நிலைமை தளர்ந்து, அழகிய அரிய உயிர் சோர்வுற்று, பொருந்திய வயிற்றின் மீது போய் விழுகின்ற மயக்கும் காமப்பற்றை வெளிக்காட்டும் களிப்புக் கூத்தாடி, தணிவு பெறாத கூட்டுறவில் உள்ளம் உருகி, விலைமாதர்களுக்கு அடிமைப் பட்டு, அவர்கள் இட்ட வேலைகளைச் செய்த போதிலும், உன்னுடைய வீரக் கழல் அணிந்த சிறப்புற்ற திருவடிகளை நான் இனி மறக்க மாட்டேன். உலக்கையை* துண்டு துண்டாகப் பொடி செய்து ராவித் தூளாக்கி, ஆகாயம் மேலே விரிந்துள்ள நடுக் கடலில் (அப்பொடிகளைச்) சேரும்படி செய்தும், கூட்டமான ஆயர் அனைவரும் (சாபத்தின் காரணமாக) ஒரு சேர இறந்து பட, இடையர்கள் வாழும் சேரியில் குழந்தையாக வளர்ந்தும், ஞானம் சிறந்த சக்ராயுதத்தை ஏந்தியும் இருந்த நாராயணனின் மருகனே, (ஐந்தெழுத்து) மந்திரத்தின் மூலப் பொருள் ஆனவரும், பிரம கபாலத்தைக் கையில் ஏந்தியவரும், பாம்பைக் கையில் வளையாகக் கொண்டவரும், பூதகணங்களைக் கொண்ட தலைவருமாகிய ஈசர் சிவபெருமானின் பிள்ளையே, வயலூரில் வாழ்பவனே, கொலை செய்யும் வில்லைக் கொண்டு போர் புரியும் வேடர்கள் கோ கோ என்று பேரொலி இட்டு நெருங்க, (அதைக் கண்டு) வருந்திய வள்ளி நாயகியை நோக்கி, வருந்துகின்ற அழகிய குறப் பாவையே, நீ வருத்தத்தை விடு விடு என்று கூறி, தான் கையில் ஏந்திய கூர்மையான வேலை (வேடர்கள் மீது) செலுத்திய இளையோனே, வீரம் வாய்ந்த வண்டுகள் நல்ல முயற்சியுடன் தேசி என்னும் ராகத்தைப் பாடிடும், நறு மணம் கொண்ட தாமரைப் பூக்களைக் கொண்ட நீர் நிலைகள் உள்ள விஜயமங்கலத்தில்** வீற்றிருக்கும், தேவாதி தேவர்களின் பெருமாளே. 
* யாதவர்கள் தங்களுள் சாம்பன் என்பவனுக்கு கர்ப்பிணி வேஷமிட்டு, துர்வாச முனிவரை இவளுக்குப் பிறப்பது ஆணோ பெண்ணோ எனக் கேட்க, கோபமடைந்த துர்வாசர் ஓர் இரும்பு உலக்கை பிறக்கும், அதுவே யாதவர் குலத்தை அழிக்கும் என்று சபித்தார். இதை அறிந்த கண்ணன், பிறந்த உலக்கையைப் பொடியாக்கி நடுக்கடலில் கரைக்கச் செய்தான். பின்னர் உலக்கைப் பொடி கரையிலே வந்து கோரைப்புல்லாக முளைக்க, யாதவர் தம்முள் கலகம் மூண்டதும் அப்புல்லைப் பிடுங்கி ஒருவரை மற்றவர் குத்தி இறந்தனர். இரும்புத் துண்டு ஒன்று மீனின் வயிற்றில் வளர, அம்மீனைப் பிடித்த ஒரு வேடன் அதன் வயிற்றிலிருந்த துண்டைத் தன் அம்புநுனியில் வைத்தான். கண்ணனின் இறுதி நாளன்று தூக்கி வைத்திருந்த கண்ணனின் பாதத்தைப் பறவையென எண்ணி வேடன் அந்த அம்பை எய்தான். யாதவகுலத்தில் கடைசியாக எஞ்சிய கண்ணனும் பரமபதம் அடைந்தான்.
** விஜயமங்கலம் ஈரோட்டுக்கும் திருப்பூருக்கும் இடையே உள்ள ரயில் நிலையத்திலிருந்து 2 மைல் வடக்கில் உள்ளது.
பாடல் 937 - சிங்கை - காங்கேயம் -
ராகம் - ....; தாளம் -
தந்ததன தந்த தந்ததன தந்த
     தந்ததன தந்த ...... தனதான
சஞ்சரியு கந்து நின்றுமுரல் கின்ற
     தண்குவளை யுந்து ...... குழலாலுந் 
தண்டரள தங்க மங்கமணி கின்ற
     சண்டவித கும்ப ...... கிரியாலும் 
நஞ்சவினை யொன்றி தஞ்சமென வந்து
     நம்பிவிட நங்கை ...... யுடனாசை 
நண்புறெனை யின்று நன்றில்வினை கொன்று
     நன்றுமயில் துன்றி ...... வரவேணும் 
கஞ்சமலர் கொன்றை தும்பைமகிழ் விஞ்சி
     கந்திகமழ் கின்ற ...... கழலோனே 
கன்றிடுபி ணங்கள் தின்றிடுக ணங்கள்
     கண்டுபொரு கின்ற ...... கதிர்வேலா 
செஞ்சொல்புனை கின்ற எங்கள்குற மங்கை
     திண்குயம ணைந்த ...... திருமார்பா 
செண்பகமி லங்கு மின்பொழில்சி றந்த
     சிங்கையில மர்ந்த ...... பெருமாளே.
வண்டுகள் மகிழ்ந்து, நின்று ¡£ங்காரம் செய்யும் குளிர்ச்சி பொருந்திய குவளை மலர் விளங்கும் கூந்தல் மூலமாகவும், குளிர்ந்த முத்து மாலை, பொன் மாலை ஆகியவற்றை தம்மீது அணிந்துள்ள, வலிமை கொண்ட குடம் போன்ற மார்பகங்கள் மூலமாகவும், விஷம் கொண்ட செயலைப் பொருந்தி, (நீயே) அடைக்கலம் என்று சொல்லி வந்து நான் நம்பும்படி நடிக்கும் அத்தகைய மங்கையுடன் ஆசை கொண்டு, நட்பு வைக்கின்ற என்னைக் காத்தருள, நீ இந்த நாளே, தீய வினைகளை அழித்து, நன்மை தரும் மயிலில் பொருந்தி வந்தருள வேண்டும். தாமரை மலர், கொன்றை மலர், தும்பை மலர், மகிழம்பூ இவைகள் நிறைந்து நறுமணம் கமழும் திருவடியை உடையவனே, வாடி அழுகிய பிணங்களைத் தின்னும் (பேய், நாய், நரி, பருந்து முதலியவற்றின்) கூட்டங்கள் காணும்படி சண்டை செய்யும் ஒளி வீசும் வேலை உடையவனே. பண் நிறைந்த சொல்லை அமைந்துள்ள எங்கள் குறப்பெண்ணாகிய வள்ளியின் வலிய மார்பை அணைந்த அழகிய மார்பனே, செண்பக மலர்கள் விளங்கும் இனிய சோலைகள் சிறப்புடன் மிளிரும் சிங்கை எனப்படும் காங்கேயம்* என்ற தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* காங்கேயம் என்ற தலம், ஈரோடு - திருப்பூர் சாலையில் ஊத்துக்குளி ரயில் நிலையத்திலிருந்து 19 மைலில் உள்ளது.
பாடல் 938 - சிங்கை - காங்கேயம்
ராகம் - ....; தாளம் -
தந்ததன தான தந்ததன தான
     தந்ததன தான ...... தனதான
சந்திதொறு நாண மின்றியகம் வாடி
     உந்திபொரு ளாக ...... அலைவேனோ 
சங்கைபெற நாளு மங்கமுள மாதர்
     தங்கள்வச மாகி ...... அலையாமற் 
சுந்தரம தாக எந்தன்வினை யேக
     சிந்தைகளி கூர ...... அருள்வாயே 
தொங்குசடை மீது திங்களணி நாதர்
     மங்கைரண காளி ...... தலைசாயத் 
தொந்திதிமி தோதி தந்திதிமி தாதி
     என்றுநட மாடு ...... மவர்பாலா 
துங்கமுள வேடர் தங்கள்குல மாதை
     மங்களம தாக ...... அணைவோனே 
கந்தமுரு கேச மிண்டசுரர் மாள
     அந்தமுனை வேல்கொ ...... டெறிவோனே 
கம்பர்கயி லாசர் மைந்தவடி வேல
     சிங்கைநகர் மேவு ...... பெருமாளே.
காலையும் மாலையும் வெட்கம் இல்லாமல் உள்ளம் சோர்வுற்று வயிறே முக்கிய காரியமாக அலைச்சல் உறுவேனோ? தினந்தோறும் அச்சம் கொண்டு, உடல் அழகுள்ள விலைமாதர்களின் வசப்பட்டுத் திரியாமல், அழகு பெற, என்னுடைய வினை தொலைந்து ஒழிய, மனம் மகிழ்ச்சி அடைய, நீஅருள்வாயாக. தொங்குகின்ற சடையின் மேல் சந்திரனை அணிந்துள்ள தலைவர், மங்கையும் போர்க்களத்தை ஆள்பவளுமான காளி நாணித் தலை குனிய, தொந்தி திமிதோதி தந்த திமிதாதி என்று நடனம் ஆடிய சிவபெருமானின் குமாரனே, பெருமை வாய்ந்த வேடர்களுடைய குலத்தில் வளர்ந்த பெண்ணாகிய வள்ளியை மங்களகரமாகத் தழுவியவனே, கந்தனே, முருகேசனே, நெருங்கிப் போரிட வந்த அசுரர்கள் இறக்க, அந்த கூரிய வேல் கொண்டு எறிந்து அழித்தவனே, (கச்சி) ஏகாம்பரநாதர், கயிலாய நாதர் ஆகிய சிவபெருமானின் பிள்ளையே, கூரிய வேலாயுதத்தை உடையவனே, காங்கேய* நகரில் வாழும் பெருமாளே. 
* காங்கேயம் என்ற தலம், ஈரோடு - திருப்பூர் சாலையில் ஊத்துக்குளி ரயில் நிலையத்திலிருந்து 19 மைலில் உள்ளது.
பாடல் 939 - பட்டாலியூர்
ராகம் - ....; தாளம் -
தனதன தனனத் தான தானன
     தனதன தனனத் தான தானன
          தனதன தனனத் தான தானன ...... தனதான
இருகுழை யிடறிக் காது மோதுவ
     பரிமள நளினத் தோடு சீறுவ
          இணையறு வினையைத் தாவி மீளுவ ...... வதிசூர 
எமபடர் படைகெட் டோட நாடுவ
     அமுதுடன் விடமொத் தாளை யீருவ
          ரதிபதி கலைதப் பாது சூழுவ ...... முநிவோரும் 
உருகிட விரகிற் பார்வை மேவுவ
     பொருளது திருடற் காசை கூறுவ
          யுகமுடி விதெனப் பூச லாடுவ ...... வடிவேல்போல் 
உயிர்வதை நயனக் காதல் மாதர்கள்
     மயல்தரு கமரிற் போய்வி ழாவகை
          உனதடி நிழலிற் சேர வாழ்வது ...... மொருநாளே 
முருகவிழ் தொடையைச் சூடி நாடிய
     மரகத கிரணப் பீலி மாமயில்
          முதுரவி கிரணச் சோதி போல்வய ...... லியில்வாழ்வே 
முரண்முடி யிரணச் சூலி மாலினி
     சரணெனு மவர்பற் றான சாதகி
          முடுகிய கடினத் தாளி வாகினி ...... மதுபானம் 
பருகினர் பரமப் போக மோகினி
     அரகர வெனும்வித் தாரி யாமளி
          பரிபுர சரணக் காளி கூளிகள் ...... நடமாடும் 
பறையறை சுடலைக் கோயில் நாயகி
     இறையொடு மிடமிட் டாடு காரணி
          பயிரவி யருள்பட் டாலி யூர்வரு ...... பெருமாளே.
(இவர்களின் கண்கள்) காதிலுள்ள இரண்டு குண்டலங்களையும் மீறி காதுகளை மோதுவன. மணம் மிகுந்த தாமரை மலர்களை (எங்களுக்கு நீ உவமையா என்று) சீறிக் கோபிப்பன. (பயன் தருவதில்) நிகர் இல்லாத முந்தை வினைகளையும் தாவி மீள்வன. மிக்க சூரத்தனம் உடைய யமனுடைய தூதர்களாகிய சேனை அஞ்சிப் பின்னடைந்து ஓடும்படி வழி தேடுவன. அமுதமும் விஷமும் கலந்தன போன்று ஆளையே அறுத்துத் தள்ளுவன. ரதியின் கணவனான மன்மதனுடைய காம சாஸ்திர நூலிலிருந்து சிறிதும் பிறழாத வண்ணம் எவரையும் சூழ்வன. முனிவர்களும் காமத்தால் உருகும்படியாக, தந்திரத்துடன் கூடிய பார்வையை உடையன. பொருளைக் கவரும் பொருட்டு ஆசை மொழிகளைப் பேசுவன. யுக முடிவு தானோ என்று சொல்லும்படி சில சமயம் போர் விளைவிப்பன. வேலாயுதத்தைப் போல உயிரை வதைக்கும் இத்தகைய கண்களை உடைய ஆசை மாதர்களின் காம மயக்கம் தருகின்ற பெரும் பள்ளத்தில் போய் விழாமல் இருக்கும் பொருட்டு, உனது திருவடியின் நிழலில் பொருந்தி வாழும் வாழ்க்கை என்றொரு நாளாவது கிடைக்குமோ? நறு மணம் வீசும் மாலையை அணிந்து, உனக்கு வாகனம் ஆகும்படி விரும்பின* பச்சை ஒளி வீசும் தோகையைக் கொண்ட சிறந்த மயிலின் மேல், முற்றின ஒளி கொண்ட சூரியனுடைய ஒளியைப் போல் விளங்கி வயலூரில் வாழும் செல்வமே, வலிமை வாய்ந்த முடியை உடைய, போர்க்கு உற்ற சூலாயுதத்தை ஏந்தியவள், மாலையை அணிந்தவள், உனக்கு அடைக்கலம் என்று நிற்கும் அடியார்களுக்கு பற்றாக இருக்கும் குணத்தினள், வேகமாகச் செல்லும் கடினமான பெண்சிங்க வாகனம் உடையவள், கள்ளுணவை உண்பவர்களுக்கு மேலான போகத்தை அளிக்கும் அழகி, அரகர என்று நிரம்ப ஒலி செய்பவள், சியாமளப் பச்சை நிறத்தை உடையவள், சிலம்பு அணிந்த கால்களை உடைய காளி, பேய்கள் நடனமாடும், பறைகள் ஒலிப்பதுமான, சுடு காட்டுக் கோயிலின் தலைவி, சிவ பெருமானோடு, அவரது இடப்பாகத்தில் இருந்துகொண்டே, காரணமாக நடனம் செய்பவள், அத்தகைய பைரவியாம் பார்வதி தேவி பெற்றருளியவனும், பட்டாலியூரில்** வீற்றிருப்பவனுமான, பெருமாளே. 
இப்பாடலின் முதல் 10 வரிகள் வேசையரின் கண்களைப் பற்றிய வர்ணனை.* மயிலாகி முருகவேளுக்கு வாகனமாகத் தன் முற்பிறப்பில் சூரன் விரும்பினான்.
** இது 'பட்டாலி சிவ மலை' என்று வழங்கப்படுகிறது. ஈரோடு - திருப்பூர் சாலையில் உள்ள காங்கேயத்துக்கு அருகில் உள்ளது.
பாடல் 940 - பட்டாலியூர்
ராகம் - ....; தாளம் -
தத்தான தனன தனதன தத்தான தனன தனதன
     தத்தான தனன தனதன ...... தனதான
கத்தூரி யகரு ம்ருகமத வித்தார படிர இமசல
     கற்பூர களப மணிவன ...... மணிசேரக் 
கட்டார வடமு மடர்வன நிட்டூர கலக மிடுவன
     கச்சோடு பொருது நிமிர்வன ...... தனமாதர் 
கொத்தூரு நறவ மெனவத ரத்தூறல் பருகி யவரொடு
     கொற்சேரி யுலையில் மெழுகென ...... வுருகாமே 
கொக்காக நரைகள் வருமுன மிக்காய விளமை யுடன்முயல்
     குற்றேவல் அடிமை செயும்வகை ...... யருளாதோ 
அத்தூர புவன தரிசன நித்தார கனக நெடுமதி
     லச்சான வயலி நகரியி ...... லுறைவேலா 
அச்சோவெ னவச வுவகையி லுட்சோர்த லுடைய பரவையொ
     டக்காகி விரக பரிபவ ...... மறவேபார் 
பத்தூரர் பரவ விரைவுசெல் மெய்த்தூதர் விரவ வருடரு
     பற்றாய பரம பவுருஷ ...... குருநாதா 
பச்சோலை குலவு பனைவளர் மைச்சோலை மயில்கள் நடமிடு
     பட்டாலி மருவு மமரர்கள் ...... பெருமாளே.
கஸ்தூரி, அகில், கஸ்தூரி மஞ்சள், நிறையச் சந்தனம், பன்னீர், பச்சைக் கற்பூரம், கலவைச் சாந்து இவைகளை அணிவதாய், ரத்தினங்களுடன் சேர்க்கப்பட்டுக் கட்டப்பட்ட முத்து மாலையும் நெருங்கியதாய், கொடிய கலகங்களை விளைவிப்பதாய், ரவிக்கையுடன் முட்டி நிமிர்வதாய் உள்ள மார்பகங்களை உடைய விலைமாதர்களின் பூங்கொத்திலிருந்து வடிகின்ற தேன் என்று சொல்லும்படி உள்ள வாயிதழ் ஊறலை உண்டு, அந்த மாதர்களுடன் கொல்லன் சேரியில் உள்ள மெழுகு போல் உருகி அழியாமல், கொக்குப் போல வெண்ணிறமாக முடிகள் நரைக்கும் முன்பு, இந்த உடலில் இளம் பருவம் இருக்கும் போதே முயற்சி செய்து, உனக்குப் பணிவிடைகளை அடியேனாகிய நான் செய்யும் வழியை எனக்கு அருள் செய்யக் கூடாதோ? அந்தத் தூர பூமியிலிருந்தே தரிசனத்தை நிச்சயமாகத் தருவதான பொன் நெடு மதிலை அடையாளமாகக் கொண்ட வயலூர் என்ற திருப்பதியில் வீற்றிருக்கும் வேலனே, இது என்ன அதிசயம் என்று உலகோர் சொல்லும்படி, தன் வசம் இழந்த மகிழ்ச்சியில் விரகத்தால் உள்ளம் சோர்வு அடைந்த பரவை நாச்சியார் மீது கண்ணும் கருத்துமாய், பரவையை விட்டுப் பிரிந்திருப்பதால் ஏற்பட்ட கவலை நீங்க, இந்தப் பூமியில் அடியார்க்கு உரிய பத்து இலக்கணங்களும் பொருந்திய சுந்தரர் பரவிப் போற்ற, வேகமாகப் போய் உண்மையான தூதுவராக, உள்ளம் தழைக்க அருளைப் பொழிந்தவரும், உற்ற துணையாக இருப்பவருமான சிவபெருமானுக்கு, புருஷ தத்துவம் மிக நிறைந்த, மேலான குருவே, பசுமையான ஓலைகளைக் கொண்டு விளங்கும் பனை மரங்கள் வளர்ந்துள்ள இருண்ட சோலைகளில் மயில்கள் நடனம் புரியும் பட்டாலியூர்* என்னும் நகரில் வீற்றிருக்கும், தேவர்களின் பெருமாளே. 
* இது பட்டாலி சிவ மலை என்று வழங்கப்படுகிறது.ஈரோடு - திருப்பூர் சாலையில் உள்ள காங்கேயத்துக்கு அருகில் உள்ளது.
பாடல் 941 - பட்டாலியூர்
ராகம் - ....; தாளம் -
தந்தத்தத் தான தனதன தந்தத்தத் தான தனதன
     தந்தத்தத் தான தனதன ...... தனதான
சங்கைக்கத் தோடு சிலுகிடு சங்கிச்சட் கோல சமயிகள்
     சங்கற்பித் தோதும் வெகுவித ...... கலைஞானச் 
சண்டைக்குட் கேள்வி யலமல மண்டற்குப் பூசை யிடுமவர்
     சம்பத்துக் கேள்வி யலமல ...... மிமவானின் 
மங்கைக்குப் பாக னிருடிக ளெங்கட்குச் சாமி யெனவடி
     வந்திக்கப் பேசி யருளிய ...... சிவநூலின் 
மந்த்ரப்ரஸ்த் தார தரிசன யந்த்ரத்துக் கேள்வி யலமலம்
     வம்பிற்சுற் றாது பரகதி ...... யருள்வாயே 
வெங்கைச்சுக் ¡£பர் படையையி லங்கைக்குப் போக விடவல
     வென்றிச்சக் ரேசன் மிகமகிழ் ...... மருகோனே 
வெண்பட்டுப் பூணல் வனகமு கெண்பட்டுப் பாளை விரிபொழில்
     விஞ்சிட்டுச் சூழ வெயில்மறை ...... வயலூரா 
கொங்கைக்கொப் பாகும் வடகிரி செங்கைக்கொப் பாகு நறுமலர்
     கொண்டைக்கொப் பாகு முகிலென ...... வனமாதைக் 
கும்பிட்டுக் காதல் குனகிய இன்பச்சொற் பாடு மிளையவ
     கொங்கிற்பட் டாலி நகருறை ...... பெருமாளே.
சந்தேகக் கூச்சலோடு வாதம் செய்யக் கூடியுள்ள ஆறு வகையான சமயத்தினர்களும் தாம் உறுதி செய்து கொண்டு பேசுகின்ற பல விதமான சாஸ்திர ஞானச் சண்டைகளுக்கு வேண்டிய அறிவு போதும் போதும். கடவுளுக்குப் பூஜை செய்பவர்களுடைய செல்வமாகிய அறிவும் போதும் போதும். இமய மலை அரசனின் பெண்ணாகிய பார்வதிக்குப் பாகர் என்றும், முனிவர்கள் எல்லாம் எங்களுக்குச் சுவாமி என்றும் திருவடியைத் துதிக்க ஓதி விளக்கியுள்ள சிவ நூல்களில் கூறப்பட்ட மந்திரங்களின் கணக்குப் பிரமாண காட்சியை விளக்கும் மந்திர சக்கரங்களைப் பற்றிய ஆராய்ச்சி அறிவும் போதும் போதும். இவ்வாறு வீணான சுற்று வழிகளில் நான் திரிந்து அலையாமல் மேலான வீட்டுப் பேற்றை அருள்வாயாக. மிக்க ஆற்றலைக் கொண்ட சுக்¡£வனுடைய வானர சேனையை (கடல் கடந்து) இலங்கைக்கு போகும்படிச் செய்ய வல்லவனும், வெற்றியையே தருகின்ற சக்கரத்தை ஏந்தியவனுமாகிய திருமால் மிகவும் மனம் மகிழும் மருகனே, வெண் பட்டு அணிந்துள்ளது போல் நல்ல அழகிய பாக்கு மரங்கள் மதிக்கத் தக்க வகையில் பாளைகளை விரிக்கின்ற சோலைகள் மிக்குச் சூழ்வதால் வெயில் மறைபடுகின்ற வயலூரில் வீற்றிருப்பவனே, உனது மார்புக்கு வடக்கே உள்ள மேரு மலையே ஒப்பானது, உனது செவ்விய கைக்கு நறு மணம் வீசும் தாமரையே ஒப்பாகும், உனது கூந்தலுக்கு கரு மேகம் ஒப்பாகும் என்று காட்டில் இருந்த வள்ளியை கும்பிட்டுத் துதித்து வணங்கிய, கொஞ்சிப் பேசி இனிய சொற்களைக் கொண்டு பாடிப் பரவிய, இளையவனே, கொங்கு நாட்டில் உள்ள பட்டாலி நகரில்* வீற்றிருக்கும் பெருமாளே. 
* இது 'பட்டாலி சிவ மலை' என்று வழங்கப்படுகிறது. ஈரோடு - திருப்பூர் சாலையில் உள்ள காங்கேயத்துக்கு அருகில் உள்ளது.
பாடல் 942 - திருமுருகன்பூண்டி
ராகம் - துர்கா தாளம் - சது.ர .ம்பை
தனதனனந் தாந்தத் ...... தனதான
அவசியமுன் வேண்டிப் ...... பலகாலும் 
அறிவினுணர்ந் தாண்டுக் ...... கொருநாளில் 
தவசெபமுந் தீண்டிக் ...... கனிவாகிச் 
சரணமதும் பூண்டற் ...... கருள்வாயே 
சவதமொடுந் தாண்டித் ...... தகரூர்வாய் 
சடுசமயங் காண்டற் ...... கரியானே 
சிவகுமரன் பீண்டிற் ...... பெயரானே 
திருமுருகன் பூண்டிப் ...... பெருமாளே.
உன்னைத் தொழுவது அவசியமென அறிந்து பலமுறையும் பிரார்த்தித்து, எனது அறிவினில் உன்னை உணர்ந்து வருஷத்திற்கு ஒரு நாளாவது தவ ஒழுக்கத்தையும் ஜெபநெறியையும் மேற்கொண்டு உள்ளம் கனிந்து, உனது திருவடிகளை மனத்தே தரிப்பதற்கு நீ அருள்வாயாக. சபதம் செய்து இந்த ஆட்டை* அடக்குவேன் என்றுரைத்து, குதித்து ஆட்டின் மீது ஏறி அதனை வாகனமாகச் செலுத்துவாய். ஆறு** சமயத்தவராலும் காணுதற்கு அரியவனே, சிவகுமாரனே, உன்னை அன்பு கொண்டு நெருங்கினால் நெருங்கியவரை விட்டு ஒருநாளும் பிரியாதவனே, திருமுருகன்பூண்டி*** என்ற தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* நாரதர் செய்த யாகத்தில் தோன்றிய ஒரு முரட்டு ஆட்டுக் கிடாவை வீரபாகு மூலமாக பிடித்துவரச் செய்து, முருகன் அதனை அடக்கி வாகனமாகக் கொண்ட வரலாறு - கந்த புராணம்.
** ஆறு சமயங்கள் - காணாபத்யம், செளரம், சைவம், வைணவம், சாக்தம், கெளமாரம்.*** திருமுருகன்பூண்டி திருப்பூருக்கு வடக்கே 8 மைலில் உள்ளது.
பாடல் 943 - அவிநாசி
ராகம் - காபி ; தாளம் - கண்டசாபு - 2 1/2
தனதானத் தனதான தனதானத் ...... தனதான
இறவாமற் பிறவாமல் எனையாள்சற் ...... குருவாகிப் 
பிறவாகித் திரமான பெருவாழ்வைத் ...... தருவாயே 
குறமாதைப் புணர்வோனே குகனேசொற் ...... குமரேசா 
அறநாலைப் புகல்வோனே அவிநாசிப் ...... பெருமாளே.
இறவாத வரம் தந்தும், மீண்டும் பிறவாத வரம் தந்தும், என்னை ஆண்டருளும் நல்ல குருவாகியும், மற்ற எல்லாத் துணைகள் ஆகியும், நிலையான (ஸ்திரமான) முக்தியாம் மோக்ஷவீட்டை அருள்வாயாக. குறப்பெண் வள்ளியை மணந்தவனே, குகனே, புகழ் வாய்ந்த குமரேசனே, அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு புருஷார்த்தங்களையும் உபதேசிப்பவனே, அவிநாசியில்* வீற்றிருக்கும் பெருமாளே. 
* அவிநாசி திருப்பூர் ரயில் நிலையத்திலிருந்து வடக்கே 8 மைலில் உள்ளது.
பாடல் 944 - அவிநாசி
ராகம் - ....; தாளம் -
தந்தத்தத் தானன தானன
     தந்தத்தத் தானன தானன
          தந்தத்தத் தானன தானன ...... தனதான
பந்தப்பொற் பாரப யோதர
     முந்திச்சிற் றாடகை மேகலை
          பண்புற்றுத் தாளொடு மேவிய ...... துகிலோடே 
பண்டெச்சிற் சேரியில் வீதியில்
     கண்டிச்சிச் சாரொடு மேவியெ
          பங்குக்கைக் காசுகொள் வேசியர் ...... பனிநீர்தோய் 
கொந்துச்சிப் பூவணி கோதையர்
     சந்தச்செந் தாமரை வாயினர்
          கும்பிட்டுப் பாணியர் வீணிய ...... ரநுராகங் 
கொண்டுற்றுப் பாயலின் மூழ்கினு
     மண்டிச்செச் சேயென வானவர்
          கொஞ்சுற்றுத் தாழ்பத தாமரை ...... மறவேனே 
அந்தத்தொக் காதியு மாதியும்
     வந்திக்கத் தானவர் வாழ்வுறும்
          அண்டத்துப் பாலுற மாமணி ...... யொளிவீசி 
அங்கத்தைப் பாவைசெய் தாமென
     சங்கத்துற் றார்தமி ழோதவு
          வந்துக்கிட் டார்கழு வேறிட ...... வொருகோடிச் 
சந்தச்செக் காளநி சாசரர்
     வெந்துக்கத் தூளிப டாமெழ
          சண்டைக்கெய்த் தாரம ராபதி ...... குடியேறத் 
தங்கச்செக் கோலசை சேவக
     கொங்கிற்றொக் காரவி நாசியில்
          தண்டைச்சிக் காரயில் வேல்விடு ...... பெருமாளே.
திரண்ட, அழகிய, கனத்த மார்பகம், வயிற்றில் கட்டப்பட்டுள்ள சிறிதாக அசைந்து விளங்கும் மேகலை என்ற இடை அணி (இவை) நன்கு பொருந்தி பாதம் வரைக்கும் தொங்குகின்ற ஆடையுடன், பழமையாயிருக்கும் பரத்தையர் வசிக்கும் சேரியில் உள்ள தெருவில் (வருபவர்களைப்) பார்த்து, தம்மை இச்சித்து விரும்புவர்களுடன் கூடியே, தம்முடைய பங்குக்கு உரிய பொருளைப் பெற்றுக் கொள்ளும் விலைமாதர், பன்னீர் தோய்ந்துள்ள உச்சியில் கொத்துப் பூக்களை அணிந்த பெண்கள், அழகிய செந்தாமரை போன்ற வாயிதழை உடையவர்கள், வணக்கத்தைக் காட்டும் கைகளை உடையவர்கள், வீண் காலம் போக்குபவர்கள், காம இச்சை (நான் அவர்கள் மீது) கொண்டு, அவர்களிடமே பொருந்தி படுக்கையில் முழுகிய போதிலும், உன்னை நெருங்கி தேவர்கள் ஜே ஜே என்று வாழ்த்தி கொஞ்சுதல் செய்து வணங்கும் திருவடித் தாமரைகளை நான் மறக்க மாட்டேன். அந்த உடலைப் படைக்கும் தலைவனான பிரமனும், திருமாலும் துதிக்கவே தான், அவரவர் வாழ்கின்ற அண்டங்களாகிய இடங்களில் வாழவும், அழகிய இரத்தின மாலையின் ஒளி வீசவும், எலும்பினின்று பெண்ணைப் படைக்கின்றோம் என்று சங்க காலத்துப் புலவர்களின் (தேவாரத்) தமிழ்ப் பாடலை நீ ஓதவும் *, உனது அருமை பெருமை தெரிந்து மகிழ்ந்து உன்னைச் சேராதவர்களாகிய அமணர்கள் கழுமரத்தில் ஏறவும், ஒரு கோடிக் கணக்கான, (ரத்தம் ஒழுகுவதால்) சிவந்த நிறத்தைக் கொண்டவர்களும், விஷம் நிறைந்த குணம் உடையவர்களும் ஆகிய அசுரர்களை (தீயைக் கக்கும் பாணங்களால்) வெந்து சிதற அடிக்கவும், (போர்க்களத்தில்) தூசி போர்வை போல் கிளம்பி எழவும், போரில் இளைத்தவர்களாகிய தேவர்கள் அவர்கள் ஊராகிய அமராவதியில் குடி புகவும், தங்க மயமான செங்கோல் ஆட்சியைப் புரிந்த வலிமையாளனே, கொங்கு நாட்டில் சேர்ந்துள்ள அவிநாசி என்னும் ஊரில் வீற்றிருந்து, தண்டை அணிந்து, அழகிய, கூரிய வேலாயுதத்தைச் செலுத்திய பெருமாளே. 
* திருஞானசம்பந்தர் பானையிலிருந்த எலும்புக் கூட்டிலிருந்து பூம்பாவையை வரவழைத்த நிகழ்ச்சி குறிப்பிடப்படுகிறது.
பாடல் 945 - அவிநாசி
ராகம் - முகாரி தாளம் - ஆதி
தனத்த தந்தன தானன தானன
     தனத்த தந்தன தானன தானன
          தனத்த தந்தன தானன தானன ...... தனதான
மனத்தி ரைந்தெழு மீளையு மேலிட
     கறுத்த குஞ்சியு மேநரை யாயிட
          மலர்க்க ணண்டிரு ளாகியு மேநடை ...... தடுமாறி 
வருத்த முந்தர தாய்மனை யாள்மக
     வெறுத்தி டங்கிளை யோருடன் யாவரும்
          வசைக்கு றுஞ்சொலி னால்மிக வேதின ...... நகையாட 
எனைக்க டந்திடு பாசமு மேகொடு
     சினத்து வந்தெதிர் சூலமு மேகையி
          லெடுத்தெ றிந்தழல் வாய்விட வேபய ...... முறவேதான் 
இழுக்க வந்திடு தூதர்க ளானவர்
     பிடிக்கு முன்புன தாள்மல ராகிய
          இணைப்ப தந்தர வேமயில் மீதினில் ...... வரவேணும் 
கனத்த செந்தமி ழால்நினை யேதின
     நினைக்க வுந்தரு வாயுன தாரருள்
          கருத்தி ருந்துறை வாயென தாருயிர் ...... துணையாகக் 
கடற்ச லந்தனி லேயொளி சூரனை
     யுடற்ப குந்திரு கூறென வேயது
          கதித்தெ ழுந்தொரு சேவலு மாமயில் ...... விடும்வேலா 
அனத்த னுங்கம லாலய மீதுறை
     திருக்க லந்திடு மாலடி நேடிய
          அரற்க ரும்பொருள் தானுரை கூறிய ...... குமரேசா 
அறத்தை யுந்தரு வோர்கன பூசுரர்
     நினைத்தி னந்தொழு வாரம ராய்புரி
          யருட்செ றிந்தவி நாசியுள் மேவிய ...... பெருமாளே.
மனம் சுருங்கி வேதனைப்படும்படி எழுகின்ற கோழையும் அதிகரிக்கவும், கரு நிறமுள்ள தலை மயிர் நரை கொண்டு வெளுக்கவும், தாமரை போன்ற கண்கள் பஞ்சடைந்து பார்வை குறையவும், நடை தடுமாற்றம் அடையவும், துன்பத்தைத் தர, தாயார், மனைவி, மக்கள் ஆகியோர், வெறுப்புக் கொள்ளும் நல்ல சுற்றத்தார் அவருடன் மற்றெல்லாரும் பழிக்கும் படியான சொற்களைச் சொல்வதால், நிரம்ப நாள் தோறும் பரிகசித்துச் சிரிக்க, என்னை அடக்கி வெற்றிக் கொள்ளும் பாசக் கயிறு கொண்டு கோபத்துடன் வந்து எதிர்த்து, சூலத்தைக் கையில் எடுத்து அதை என் மேல் வீசி, நெருப்பை வாய் கக்க, பயம் கொள்ளும்படி (என்னை) இழுக்க வந்திடும் யம தூதர்கள் என்னைப் பிடிப்பதற்கு முன்பாக, உன்னுடைய தாமரையாகிய இரு திருவடிகளையும் அடியேனுக்குத் தரும் பொருட்டு மயிலின் மீது வந்தருள வேண்டும். பொருள் செறிந்த செந்தமிழால் உன்னையே தினந்தோறும் நினைக்கவும் உன்னுடைய நிறைந்த திருவருளைத் தந்தருளுக. என்னுடைய அருமையான உயிர்க்குத் துணையாக (என்) கருத்திலேயே பொருந்தி வீற்றிருந்து அருள் தருவாய். கடல் நீரில் (மாமரமாக) ஒளித்திருந்த சூரனுடைய உடலைப் பிளவு செய்ய அது இரண்டு கூறாகத் தோன்றி எழுந்து, ஒப்பற்ற சேவலும், மயிலும் ஆகும்படி செலுத்திய வேலை உடையவனே, அன்னத்தை வாகனமாக உள்ள பிரமனும் தாமரைப் பூவில் வீற்றிருக்கும் இலக்குமி சேர்ந்துள்ள திருமாலும் தேடிய சிவபெருமானுக்கு அரிய (பிரணவப்) பொருளை விளக்கி உபதேசித்த குமரேசனே, அற நெறியை ஓதுவோர்களும், பெருமை பொருந்திய அந்தணர்களும், உன்னை நாள் தோறும் தொழுபவர்களாய் அமர்ந்திருத்தலை விரும்பியுள்ள அருள் நிறையப் பாலித்து, அவிநாசி* எனும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* அவிநாசி திருப்பூர் ரயில் நிலையத்திலிருந்து வடக்கே 8 மைலில் உள்ளது.
பாடல் 946 - திருப்புக்கொளியூர்
ராகம் - தே. தாளம் - .ங்கீர்ணசாபு - 4 1/2 - எடுப்பு - 3/4 இடம் தகதிமி-2, தகதகிட-2 1/2
தத்தன தானான தத்தன தானான
     தத்தன தானான ...... தனதான
பக்குவ வாசார லட்சண சாகாதி
     பட்சண மாமோன ...... சிவயோகர் 
பத்தியி லாறாறு தத்துவ மேல்வீடு
     பற்றுநி ராதார ...... நிலையாக 
அக்கண மேமாய துர்க்குணம் வேறாக
     அப்படை யேஞான ...... வுபதேசம் 
அக்கற வாய்பேசு சற்குரு நாதாவு
     னற்புத சீர்பாத ...... மறவேனே 
உக்கிர வீராறு மெய்ப்புய னேநீல
     வுற்பல வீராசி ...... மணநாற 
ஒத்தநி லாவீசு நித்தில நீராவி
     யுற்பல ராசீவ ...... வயலூரா 
பொக்கமி லாவீர விக்ரம மாமேனி
     பொற்ப்ரபை யாகார ...... அவிநாசிப் 
பொய்க்கலி போமாறு மெய்க்கருள் சீரான
     புக்கொளி யூர்மேவு ...... பெருமாளே.
பக்குவமான ஆசார ஒழுக்க நிலையிலே நின்று, சிறப்பான பச்சிலை, மூலிகைகள் போன்ற உணவையே உண்டு, மெளனத் தவநிலையில் நிற்கும் சிவயோகிகள் தங்களது பக்தி மூலமாக முப்பத்தாறு* தத்துவங்களுக்கும் மேற்பட்டதாய் உள்ள மோக்ஷ வீட்டைப் பற்றுவதானதும், எந்தவிதமான பற்றும் இல்லாத நிலையை நான் அடைவதற்காகவும், அந்நிலையை நான் அடைந்ததுமே, மாயமாக வந்து என்னைப் பற்றியுள்ள துர்க்குணங்கள் யாவும் என்னை விட்டுப் பிரியவும், அந்த ஞான உபதேசமே என்னைக் காக்கும் ஆயுதமாக மாறி, பாசம் யாவும் அற்றுப்போகும்படி உபதேச மந்திரத்தை வாய்விட்டுக் கூறிய சற்குருநாதனே, உனது அற்புதமான அழகிய திருவடிகளை நான் என்றும் மறவேன். வலிமைமிக்க பன்னிரு தோள்களை, உண்மைக்கு எடுத்துக்காட்டான புயங்களை உடையவனே, நீலோத்பல மலர்க் கூட்டங்களின் நறுமணம் மிகவும் வீசுவதும், பொருந்திய நிலாவின் ஒளி வீசுவதும், முத்தைப் போல் தெளிவான நீருள்ள குளங்களில் குவளைகளும், தாமரைகளும் பூத்திருக்கும் வயலூரின் நாதனே, பொய்யே இல்லாத மெய்யான வீரத்தைக் கொண்டவனே, அழகிய மேனி பொன்னொளியை வீசும் தேகத்தை உடையவனே, அவிநாசி என்ற தலத்தில் இந்தக் கலியுகத்தின் பொய்மை நீங்குமாறு இறைவன் திருவருளின் புகழ் சிறக்கும்படிச் செய்த** திருப்புக்கொளியூர்*** தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* 96 தத்துவங்கள் பின்வருமாறு:36 பரதத்துவங்கள் (அகநிலை): ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து - 25 (புறநிலை): மண், தீ, நீர், காற்று, வெளி.ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை): வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4. 
** திருப்புக்கொளியூர் ஏரியில் குளிக்கச் சென்ற பாலகனை ஒரு முதலை உண்டது. பிறகு ஓராண்டு கழித்து அங்கு சென்ற சுந்தரமூர்த்தி நாயனார் வற்றிய ஏரியின் கரையில் அவினாசியின் மேல் பதிகம் பாட, ஏரி நீர் நிரம்பி, முதலை வந்து கரையில் பாலகனை ஓராண்டு வளர்ச்சியுடன் உயிரோடு உமிழ்ந்தது. இதைத்தான் 'கலியுகத்தின் அருள்' என்று குறிக்கிறார்.
*** திருப்புக்கொளியூர் அவிநாசிக்கு மிகச் சமீபத்தில் உள்ளது.
பாடல் 947 - திருப்புக்கொளியூர்
ராகம் - ....; தாளம் -
தனத்தத்தன தானன தானன
     தனத்தத்தன தானன தானன
          தனத்தத்தன தானன தானன தந்ததான
மதப்பட்டவி சாலக போலமு
     முகப்பிற்சன வாடையு மோடையு
          மருக்கற்புர லேபல லாடமு ...... மஞ்சையாரி 
வயிற்றுக்கிடு சீகர பாணியு
     மிதற்செக்கர்வி லோசன வேகமு
          மணிச்சத்தக டோரபு ரோசமு ...... மொன்றுகோல 
விதப்பட்டவெ ளானையி லேறியு
     நிறைக்கற்பக நீழலி லாறியும்
          விஷத்துர்க்கன சூளிகை மாளிகை ...... யிந்த்ரலோகம் 
விளக்கச்சுரர் சூழ்தர வாழ்தரு
     பிரப்புத்வகு மாரசொ ரூபக
          வெளிப்பட்டெனை யாள்வய லூரிலி ...... ருந்தவாழ்வே 
இதப்பட்டிட வேகம லாலய
     வொருத்திக்கிசை வானபொ னாயிர
          மியற்றப்பதி தோறுமு லாவிய ...... தொண்டர்தாள 
இசைக்கொக்கவி ராசத பாவனை
     யுளப்பெற்றொடு பாடிட வேடையி
          லிளைப்புக்கிட வார்மறை யோனென ...... வந்துகானிற் 
றிதப்பட்டெதி ரேபொதி சோறினை
     யவிழ்த்திட்டவி நாசியி லேவரு
          திசைக்குற்றச காயனு மாகிம ...... றைந்துபோமுன் 
செறிப்பித்த கராவதின் வாய்மக
     வழைப்பித்தபு ராணக்ரு பாகர
          திருப்புக்கொளி யூருடை யார்புகழ் ...... தம்பிரானே.
மதநீர் பெருகுவதற்கு இடமானதும் அகலமானதுமான தாடையும், முன் புறத்தில் நுண்ணிய முகபடாமும் நெற்றிப் படமும், வாசனை பொருந்திய பச்சைக்கற்பூரம் கூடிய கலவையைக் கொண்ட நெற்றியும் உடைய யானையின் முதுகில் அம்பாரி பொருந்த, வயிற்றில் இடுகின்ற வெகு அழகான தும்பிக்கையும், நன்கு சிவந்த கண்களும், அதிவேகமாகச் செல்லும் நடையும், மணிகளின் சப்தம் மிகப் பலமாகக் கேட்கும்படிக் கட்டப்பட்ட (கழுத்துக்) கயிறும் இவை எல்லாம் பொருந்தி, அழகு விளங்குமாறு வெள்ளை யானையாகிய ஐராவதத்தின் மேல் ஏறி பவனி வந்தும், நிறைந்து செழிப்பு உற்ற கற்பகத் தருவின் நிழலில் அமைதியாகக் களைப்பாறியும், மலைக் கோட்டை போன்றனவும், நிலா முற்றங்களை உடையனவுமாகிய அரண்மனைகளை உடைய பொன்னுலகத்தில் புகழ் கொண்ட தேவர்கள் சூழ்ந்து பணிய வாழ்கின்ற பிரபுத் தன்மை கொண்டு ஆட்சி செய்யும் இளைஞனாகிய உருவம் உடையவனே, என் முன்னே வந்து தோன்றி என்னை ஆண்டருளிய, வயலூரில் வீற்றிருந்தருளும் செல்வனே, இன்பம் அடையுமாறு திருவாரூரில் இருந்த ஒப்பற்ற காதலி பரவை நாச்சியாருக்கு ஏற்றதான ஆயிரம் பொன்னைச் சம்பாதிக்க தலங்கள்* தோறும் சென்று தரிசித்த அடியராகிய சுந்தரர் தாளத்தின் இசைக்குப் பொருந்தும்படி உறுதியான முயற்சித் தெளிவுடன் உள்ளப் பெருக்கத்துடன் தேவாரப்பதிகம் பாடி வருகையில், கோடைக் கால வெப்பத்தால் அவருக்கு ஏற்பட்ட இளைப்பு நீங்க, நேர்மையான ஒரு மறையவர் கோலத்துடன், சுந்தரர் வந்து கொண்டிருந்த காட்டில் வந்து நிலையாகவே சுந்தரரின் எதிரே தோன்றி, (தாம் கொண்டு வந்த) சோற்றுக் கட்டை அவிழ்த்துத் தந்தவரும், அவிநாசி என்னும் தலத்துக்கு வரும்போது, சுந்தரர் திசை தடுமாறிய சமயத்தில் அவருக்குத் திசையைக் காட்டி உதவி செய்து மறைந்து போனவரும், முன்பு ஏரியில் இருந்த முதலையின் வாயிலிருந்து (உள்ளிருந்த) பிள்ளையைச் (சுந்தரர் பாட்டுக்கு இரங்கி) வரச் செய்த** பழையவராகிய கருணாமூர்த்தியும், திருப்புக்கொளியூர்*** என்னும் தலத்தை உடையவருமாகிய சிவபெருமான் புகழும் தம்பிரானே. 
* சுந்தரர் இறைவனைப் பொன் வேண்டிய இடங்கள் திருப்புகலூர், திருப்பாசிலாச்சிராமம், திருமுது குன்றம் என்பன.** திருப்புக்கொளியூர் ஏரியில் குளிக்கச் சென்ற பாலகனை ஒரு முதலை உண்டது. பிறகு ஓராண்டு கழித்து அங்கு சென்ற சுந்தரமூர்த்தி நாயனார், வற்றிய ஏரியின் கரையில் அவிநாசியின் மேல் பதிகம் பாட, ஏரி நீர் நிரம்பி, முதலை வந்து கரையில் பாலகனை ஓராண்டு வளர்ச்சியுடன் உயிரோடு உமிழ்ந்தது.*** திருப்புக்கொளியூர் அவிநாசிக்கு மிகச் சமீபத்தில் உள்ளது.
பாடல் 948 - திருப்புக்கொளியூர்
ராகம் - ....; தாளம் -
தனத்தத்தன தான தான தானன
     தனத்தத்தன தான தான தானன
          தனத்தத்தன தான தான தானன ...... தந்ததான
வனப்புற்றெழு கேத மேவு கோகிலம்
     அழைக்கப்பொரு மார னேவ தாமலர்
          மருத்துப்பயில் தேரி லேறி மாமதி ...... தொங்கலாக 
மறுத்துக்கடல் பேரி மோத வேயிசை
     பெருக்கப்படை கூடி மேலெ ழாவணி
          வகுத்துக்கொடு சேம மாக மாலையில் ...... வந்துகாதிக் 
கனக்கப்பறை தாய ளாவ நீள்கன
     கருப்புச்சிலை காம ரோவில் வாளிகள்
          களித்துப்பொர வாசம் வீசு வார்குழல் ...... மங்கைமார்கள் 
கலைக்குட்படு பேத மாகி மாயும
     துனக்குப்ரிய மோக்ரு பாக ராஇது
          கடக்கப்படு நாம மான ஞானம ...... தென்றுசேர்வேன் 
புனத்திற்றினை காவ லான காரிகை
     தனப்பொற்குவ டேயு மோக சாதக
          குனித்தப்பிறை சூடும் வேணி நாயகர் ...... நன்குமாரா 
பொறைக்குப்புவி போலு நீதி மாதவர்
     சிறக்கத்தொகு பாசி சோலை மாலைகள்
          புயத்துற்றணி பாவ சூர னாருயிர் ...... கொண்டவேலா 
சினத்துக்கடி வீசி மோது மாகட
     லடைத்துப்பிசி தாச னாதி மாமுடி
          தெறிக்கக்கணை யேவு வீர மாமனும் ...... உந்திமீதே 
செனித்துச்சதுர் வேத மோது நாமனு
     மதித்துப்புகழ் சேவ காவி ழாமலி
          திருப்புக்கொளி யூரில் மேவு தேவர்கள் ...... தம்பிரானே.
அழகு கொண்டு எழுகின்றதும், சோகத்தை விளைவிப்பதுமான குயில் கூவி அழைக்க, போரிடுவதற்கு வந்த மன்மதன் தனது பாணங்களாகிய மலர் கொண்டு, தென்றற் காற்றாகிய தேரில் ஏறிக் கொண்டு, அழகிய சந்திரன் வெண் குடையாக விளங்க, (அலைகள்) மாறி மாறி வரும் கடல் முரசப் பறையாக மோத, (புல்லாங்குழலின்) இசையை பெருகச் செய்ய சேனைகளாகிய மகளிர் கூடி, மேலெழுந்து புறப்பட்டு, அணி வகுத்தது போல நன்றாக மாலை நேரத்தில் வந்து கொல்லுவது போல, மிகுதியாக பறை ஒலி விரிந்து பரவுதலாக, நீண்ட பெருமை வாய்ந்த அழகிய கரும்பு வில் ஓய்தல் இல்லாது அம்புகளை மகிழ்ச்சியுடன் வீசி (என்னுடன்) போர் செய்வதால், நறுமணம் வீசும் நீண்ட கூந்தலை உடைய மாதர்களின் ஆடையுள் அகப்பட்டு நான் இறந்து போவது உனக்கு விருப்பம் தானோ? கருணாகரனே, இந்த என் தலைவிதியைத் தாண்டிக் கடக்கக் கூடியதும், பெருமை பொருந்தியதும் ஆகிய ஞான நிலையை நான் என்று கூடுவேன்? தினைப் புனத்தில் காவல் புரிந்த பெண்ணாகிய வள்ளியின் மார்பகங்களாகிய அழகிய மலையில் பொருந்திய ஆசையைக் கொண்ட ஜாதகத்தை உடையவனே, வளைவுள்ள பிறையைச் சூடியுள்ள சடையைக் கொண்ட சிவபெருமானுடைய நல்ல புதல்வனே, பொறுமைக்கு பூமியைப் போலும் இருந்து, தர்மநெறியில் நின்ற பெரிய தவசிகள் சிறந்து வாழ, நெருங்கிய பசுமையான சோலைகளில் உள்ள மலர்களின் மாலைகளை புயத்தில் அணிந்தவனும், பாவியுமாகிய சூரனுடைய அரிய உயிரைக் கவர்ந்த வேலனே, கோபித்து வேகமாக (அலைகளை) வீசி மோதுகின்ற பெரிய கடலை அணையிட்டு அடைத்து, மாமிசம் உண்ணும் அரக்கர் முதல்வனான ராவணனுடைய சிறந்த முடிகள் அற்று விழும்படி பாணத்தை ஏவிய வீரம் பொருந்திய மாமனாகிய திருமாலும், அத்திருமாலின் கொப்பூழில் தோன்றி, நான் மறைகள் ஓதும் பெருமை பொருந்திய பிரமனும் நன் மதிப்பு வைத்துப் புகழ்கின்ற வலிமையாளனே, திருவிழாக்கள் நிறைந்து பொலியும் திருப்புக்கொளியூரில்* வீற்றிருப்பவனே, தேவர்கள் தம்பிரானே. 
* திருப்புக்கொளியூர் அவினாசிக்கு அருகே உள்ளது.
பாடல் 949 - பேருர்
ராகம் - சாருகேசி தாளம் - .ங்கீர்ணசாபு - 4 1/2 தகதிமிதக-3, தகிட-1 1/2
தானாத் தனதான தானாத் ...... தனதான
தீராப் பிணிதீர சீவாத் ...... துமஞான 
ஊராட் சியதான ஓர்வாக் ...... கருள்வாயே 
பாரோர்க் கிறைசேயே பாலாக் ...... கிரிராசே 
பேராற் பெரியோனே பேரூர்ப் ...... பெருமாளே.
முடிவே இல்லாத பிறவி நோய் முடிவு பெறவும், ஜீவனாகிய ஆத்மாவைப் பற்றிய இந்தச் சிற்றுயிர் ஞான நிலை பெறுவதற்கும், உலகெல்லாம் ஆட்சி செய்யக் கூடிய ஒப்பற்ற உபதேச மொழியொன்றை நீ எனக்கு ஓதி அருள்வாயாக. உலகத்துக்கெல்லாம் தலைவராகிய சிவபிரானின் குமாரனே, இளையோனே, குன்றுகளுக்கெல்லாம் அரசனான குமரனே, புகழால் மிகவும் பெரியவனே, பேரூர்த் தலத்தில்* எழுந்தருளியுள்ள பெருமாளே. 
* பேரூர் கோயமுத்தூர் ரயில் நிலையத்திலிருந்து 3 மைலில் உள்ளது.
பாடல் 950 - பேருர்
ராகம் - ....; தாளம் -
தத்த தானன தத்த தானன
     தானா தானா தானா தானா ...... தனதான
மைச்ச ரோருக நச்சு வாள்விழி
     மானா ரோடே நானார் நீயா ...... ரெனுமாறு 
வைத்த போதக சித்த யோகியர்
     வாணாள் கோணாள் வீணாள் காணா ...... ரதுபோலே 
நிச்ச மாகவு மிச்சை யானவை
     நேரே தீரா யூரே பேரே ...... பிறவேயென் 
நிட்க ராதிகண் முற்பு காதினி
     நீயே தாயாய் நாயேன் மாயா ...... தருள்வாயே 
மிச்ச ரோருக வச்ர பாணியன்
     வேதா வாழ்வே நாதா தீதா ...... வயலூரா 
வெற்பை யூடுரு வப்ப டாவரு
     வேலா சீலா பாலா காலா ...... யுதமாளி 
பச்சை மாமயில் மெச்ச வேறிய
     பாகா சூரா வாகா போகா ...... தெனும்வீரா 
பட்டி யாள்பவர் கொட்டி யாடினர்
     பாரூ ராசூழ் பேரூ ராள்வார் ...... பெருமாளே.
மை பூசியுள்ளதும், தாமரை, விஷம், வாள் இவற்றைப் போன்றதுமான கண்களை உடைய பெண்களுடன் நான் யார், நீ யார் என்னும் வகையில் (மாதர்கள் மயக்கால் சிறிதேனும் தாக்கப்படாதவராய்) தங்கள் மன நிலையை வைத்துள்ள ஞானத்துடன் கூடிய சித்தர்களும், யோகிகளும், தமது வாழ் நாளாலும், கிரகங்களாலும் ஒரு நாள் கூட வீணாகப் போகும்படியான நாளாகக் காணமாட்டார். அது போலவே, உறுதியாக (மண், பொன், பெண் என்னும்) மூவாசைகள் ஒரு வழியாக முடிவு பெறுவதில்லை. (ஆதலால்) எனது சொந்த ஊர் போல் இனியவனே, என் பேர் போல் இனியவனே, எனக்கு இனிய பிற பொருட்களும் ஆனவனே, என்னை நிச்சயமாகப் பீடிக்கும் மூன்றான எவையும் (முன்பு சொன்ன மூவாசைகள், மும்மலங்கள் - ஆணவம், கன்மம், மாயை, முக்குற்றங்கள் - பொய், களவு, கொலை, முக்குணங்கள் - சத்வம், ரஜஸ், தமஸ், முதலியவை) முற்பட்டு என்னைத் தாக்காமல், இனிமேல் நீயே தாய் போல் இருந்து அடியேன் இறந்து போகாமல் அருள் புரிவாயாக தாமரை போன்ற கண்கள் உடல் எல்லாம் கொண்டுள்ளவனும், வஜ்ராயுதத்தை ஏந்திய கையனுமாகிய இந்திரன், பிரமன் இவர்கள் போற்றும் செல்வமே, நாத ஒலிக்கு அப்பாற்பட்டவனே, வயலூரானே, கிரெளஞ்ச மலையை ஊடுருவித் தொளைத்துச் சென்ற வேலாயுதத்தை உடையவனே, நற்குணம் நிறைந்தவனே, பாலனே, காலை ஆயுதமாகக் கொண்ட சேவலைக் கொடியாக ஆள்பவனே, பச்சை நிறம் கொண்டதும், அழகுள்ளதுமான மயில் மீது தேவர் முதலானோர் மெச்சும்படி ஏறிய பாகனே, அடா சூரனே, ஆஹா, அப்புறம் போகாதே (நில்) என்று சொன்ன வீரனே, (பிரமனாகிய) முனிவனுக்கு அருள் செய்தவரும், கொடு கொட்டி என்னும் நடனத்தை ஆடினவரும், பூமியில் சிறந்த ஊராகத் திகழும் தலமும், (தேவலோகத்துப் பசு) காமதேனுவாக வந்த திருமால் வலம் செய்ததுமான பேரூரை** ஆண்டருள்பவருமாகிய சிவபெருமானுக்கு குருவாக வந்த பெருமாளே. 
* பிரமன் படைப்புத் தொழில் வராது வருந்திச் சிவபெருமானிடம் முறையிட, நீ பட்டி முனியாய் பேரூரில் வந்து பக்தி செய்வாயாகில் எமது நடனத்தைக் காணலாம் என்றார். திருமால் காமதேனுவாகவும், பிரமன் பட்டி முனிவராகவும் பேரூரில் வழிபட்டு, நடராஜப் பெருமானின் கொடு கொட்டி என்ற ஆடலைக் கண்டனர்.
** பேரூர் கோயமுத்தூர் ரயில் நிலையத்திலிருந்து 3 மைலில் உள்ளது.

பாடல் 901 - வயலு¡ர்
ராகம் - : தாளம் -

தானதன தாத்த தானதன தாத்த     தானதன தாத்த ...... தனதான

ஆரமுலை காட்டி மாரநிலை காட்டி     யாடையணி காட்டி ...... அநுராக 
ஆலவிழி காட்டி ஓசைமொழி காட்டி     ஆதரவு காட்டி ...... எவரோடும் 
ஈரநகை காட்டி நேரமிகை காட்டி     யேவினைகள் காட்டி ...... யுறவாடி 
ஏதமயல் காட்டு மாதர்வலை காட்டி     யீடழிதல் காட்ட ...... லமையாதோ 
வீரவப ராட்டு சூரர்படை காட்டில்     வீழனலை யூட்டி ...... மயிலூர்தி 
வேலையுறை நீட்டி வேலைதனி லோட்டு     வேலைவிளை யாட்டு ...... வயலூரா 
சேரமலை நாட்டில் வாரமுடன் வேட்ட     சீலிகுற வாட்டி ...... மணவாளா 
தேசுபுகழ் தீட்டி யாசைவரு கோட்டி     தேவர்சிறை மீட்ட ...... பெருமாளே.

முத்து மாலை அணிந்த மார்பகத்தைக் காட்டி, மன்மதனுடைய காமநிலைகளைக் காட்டி, ஆடை ஆபரணங்களைக் காட்டி, காம இச்சையை ஊட்டும் விஷம் கொண்ட கண்களைக் காட்டி, பண் ஒலி கொண்ட பேச்சைக் காட்டி, அன்பினைக் காட்டி, யாரோடும் குளிர்ந்த சிரிப்பைக் காட்டி, பொழுதெல்லாம் மிகுதியான உறவைக் காட்டியே, அவர்களுடைய தொழிலுக்கு உரிய செயல்களைக் காட்டி, நட்பைக் காட்டி, கேடு விளைவிக்கும் காம மயக்கத்தைக் காட்டும் விலைமாதர்கள் தமது காம வலையை விரித்து, எனது வலிமை எல்லாம் தொலைந்து போகும்படி செய்வித்தல் அடங்காதோ? வீரத்துடன் எதிர்க்கும் வல்லமை கொண்ட சூரர்களின் சேனை என்னும் காட்டில் நெருப்பு விழும்படி புகுவித்து மயில்வாகனம் ஏறுபவனே, வேலாயுதத்தை அதன் உறையிலிருந்து எடுத்து நீட்டிக் கடலில் விளையாட்டைச் செய்த வயலூரா*, வள்ளிமலை நாட்டில் உன்னுடன் இணைவதற்கு அன்புடன் விரும்பிய, நல்லொழுக்கம் நிறைந்த, குறப்பெண்ணாகிய வள்ளியின் கணவனே, உனது ஒளி வாய்ந்த புகழை விளக்கமுறச் சொல்லிய, ஆசை மிகும் கூட்டத்தாராகிய, தேவர்களைச் சிறையினின்றும் நீக்கிய பெருமாளே. 
* வயலூர் சோழ நாட்டின் ராஜகெம்பீரப் பகுதியின் தலைநகர். இங்குதான் சுவாமிகளுக்கு தினம் ஒரு திருப்புகழ் பாடும் வரத்தை முருகன் தந்தான்.வயலூர் திருச்சிராப்பள்ளிக்கு 6 மைல் தொலைவில் தென்மேற்கே உள்ளது.

பாடல் 902 - வயலு¡ர்
ராகம் - : தாளம் -

தனதனன தனதனன தத்தத்த தத்ததன     தத்தத்த தத்ததனதனதனன தனதனன தத்தத்த தத்ததன     தத்தத்த தத்ததனதனதனன தனதனன தத்தத்த தத்ததன     தத்தத்த தத்ததன ...... தந்ததான

இகல்கடின முகபடவி சித்ரத்து திக்கைமத     மத்தக்க ளிற்றையெதிர்புளகதன மிளகஇனி தெட்டிக்க ழுத்தொடுகை     கட்டிப்பி ணித்திறுகியிதழ்பொதியி னமுதுமுறை மெத்தப்பு சித்துருகி     முத்தத்தை யிட்டுநக ...... தந்தமான 
இடுகுறியும் வரையையுற நெற்றித்த லத்திடையில்     எற்றிக்க லக்கமுறஇடைதுவள வுடைகழல இட்டத்த ரைப்பையது     தொட்டுத்தி ரித்துமிகஇரணமிடு முரணர்விழி யொக்கக்க றுத்தவிழி     செக்கச்சி வக்கவளை ...... செங்கைசோர 
அகருவிடு ம்ருகமதம ணத்துக்க னத்தபல     கொத்துக்கு ழற்குலையமயில்புறவு குயில்ஞிமிறு குக்கிற்கு ரற்பகர     நெக்குக்க ருத்தழியஅமளிபெரி தமளிபட வக்கிட்டு மெய்க்கரண     வர்க்கத்தி னிற்புணரு ...... மின்பவேலை 
அலையின்விழி மணியின்வலை யிட்டுப்பொ ருட்கவர     கட்டுப்பொ றிச்சியர்கள்மதனகலை விதனமறு வித்துத்தி ருப்புகழை     யுற்றுத்து திக்கும்வகைஅபரிமித சிவஅறிவு சிக்குற்று ணர்ச்சியினில்     ரக்ஷித்த ளித்தருள்வ ...... தெந்தநாளோ 
திகுடதிகு தகுடதகு திக்குத்தி குத்திகுட     தத்தித்த ரித்தகுடசெகணசெக சகணசக செக்கச் செகச்செகண     சத்தச்ச கச்சகணதிகுதிகுர்தி தகுதகுர்த திக்குத்தி குத்திகுர்தி     தக்குத்த குத்தகுர்த ...... திங்குதீதோ 
திரிரிதிரி தரிரிதரி தித்தித்தி ரித்திரிரி     தத்தித்த ரித்தரிரிடிகுடடகு டகுடடிகு டிட்டிட்டி குட்டிகுடி     டட்டட்ட குட்டகுடதெனதிமிர்த தவில்மிருக டக்கைத்தி ரட்சலிகை     பக்கக்க ணப்பறைத ...... வண்டைபேரி 
வகைவகையின் மிகவதிர வுக்ரத்த ரக்கர்படை     பக்கத்தி னிற்சரியஎழுதுதுகில் முழுதுலவி பட்டப்ப கற்பருதி     விட்டத்த மித்ததெனவருகுறளி பெருகுகுரு திக்குட்கு ளித்துழுது     தொக்குக்கு னிப்புவிட ...... வென்றவேலா 
வயலிநகர் பயில்குமர பத்தர்க்க நுக்ரகவி     சித்ரப்ர சித்தமுறுஅரிமருக அறுமுகவ முக்கட்க ணத்தர்துதி     தத்வத்தி றச்சிகரவடகுவடில் நடனமிடு மப்பர்க்கு முத்திநெறி     தப்பற்று ரைக்கவல ...... தம்பிரானே.

வலிமையும், கடுமையும், முகத்துக்கு இடும் அலங்காரத் துணியின் பேரழகும், துதிக்கையும், இவைகளை எல்லாம் கொண்டு மத நீர், மதம் பொழியும் யானையை எதிர்க்கும் திறத்ததாய் மயிர் சிலிர்த்த மார்பகங்கள் நெகிழ, ஆசையுடன் தாவி கழுத்தைக் கைகளால் கட்டி அணைத்து அழுத்தி, வாயிதழாகிய நிறைவினின்றும் கிடைக்கும் அமுதனைய வாயூறலை காம சாஸ்திரத்தின்படி நிரம்ப அருந்தி, மனம் உருகி, முத்தமிட்டு, நகத்தைக் கொண்டும் பற்களைக் கொண்டும் இடப்பட்ட அடையாளங்கள் ரேகைகள் போலத் தெரிய, நெற்றியாகிய இடத்தில் முகத்தோடு முகம் வைத்துத் தாக்க, (வந்தவர் உள்ளம்) கலக்கம் கொள்ளும்படி இடை நெகிழவும், ஆடை கழன்று போகவும், ஆசையுடன் அரையில் உள்ள பாம்பு போன்ற பெண்குறியை தொட்டு மிகவும் அலைத்து, போர் புரியும் பகைவர்களின் கண்களைப் போல இயற்கையாகக் கறுத்து இருக்கும் கண்கள் மிகவும் சிவந்த நிறத்தை அடையவும், வளைகள் அழகிய கைகளில் நெகிழவும், அகிலும் அதனுடன் சேரும் கஸ்தூரியும் நறு மணம் வீச, அடர்த்தியுள்ள பூங்கொத்துகள் கொண்ட கூந்தல் கலைந்து விழ, மயில், புறா, குயில், வண்டு, செம்போத்து ஆகிய பறவைகளின் குரலைக் காட்டி, உள்ளம் நெகிழ்ந்து உணர்ச்சி அழிய, படுக்கையில் நிரம்ப ஆரவாரம் எழ, வதக்கப்படுவது போல சூடேற உடல் சம்பந்தப்பட்டு செய்யப்படும் கலவி வகைகளில் புணர்ச்சி இன்பத்தை அனுபவிக்கும் அந்தச் சமயத்தில், கடல் போல பெரிய கண்ணின் மணியாகிய வலையை வீசி எனது கைப் பொருளைக் கொள்ளை கொள்ள பாசம் விளைக்கும் தந்திரக்காரர்களான விலைமாதர்களின் மன்மத சாஸ்திர அறிவால் வரும் மனத்துயரத்தை அழித்துத் தொலைத்து, உனது திருப்புகழில் நாட்டம் வைத்து உன்னை வணங்கும்படி எல்லை இல்லாத சிவ ஞானம் என் அறிவில் பெறப்படும்படியாக நீ என்னைக் காப்பாற்றி காத்தளித்து என் மயக்கத்தை நீக்கி அருளுவது எந்த நாளோ? மேற்கூறிய தாள ஒலிகளை எழுப்பும் மேள வகைகள், (அரச) வேட்டைக்கு உரித்தான இடக்கை, கூட்டமான பெரும் பறை வகைகள், பக்கத்தில் வரும் தோற் கருவி வகைகள், பேருடுக்கை, முரசு முதலிய பறைகள் மிகுந்த ஒலி எழுப்ப, கோபமுடன் அசுரர்களின் சேனைகள் பக்கங்களிலே சரிந்து விழ, சித்திரம் வரைந்த விருதுக் கொடி, போர்க் களம் முழுதும் உலவி, பட்டப் பகலில் சூரியனை சக்ராயுதத்தை விடுத்து அஸ்தமிக்க வைத்தது போல இருளாக்க, வந்துள்ள பிசாசுகள் பெருகி வரும் ரத்தத்தில் குளித்துத் திளைத்து விளையாடி, உடல் வளைவை விட்டு நிமிர்ந்து எழும்படி வெற்றி பெற்ற வேலனே, வயலூரில்* எப்போதும் மகிழ்ந்து வீற்றிருக்கும் குமரனே, அடியார்களுக்கு அருள் செய்பவனே, விநோதமான புகழைக் கொண்ட திருமாலின் மருகனே, ஆறு முகங்களைக் கொண்டவனே, சிவ சாரூபக் கூட்டத்தினர் வணங்கும் அறிவுத் திறம் கொண்டவனே, சிகரங்களைக் கொண்ட, வடக்கே உள்ள, கயிலை மலையில் நடனம் செய்யும் தந்தையாகிய சிவபெருமானை அடைவதற்கு வேண்டிய முக்தி வழியைச் சம்பந்தராகத் தோன்றி தப்பு இல்லாத வகையில் சொல்ல வல்ல தம்பிரானே. 
* வயலூர் சோழ நாட்டின் ராஜகெம்பீரப் பகுதியின் தலைநகர். இங்குதான் சுவாமிகளுக்கு தினம் ஒரு திருப்புகழ் பாடும் வரத்தை முருகன் தந்தான்.வயலூர் திருச்சிராப்பள்ளிக்கு 6 மைல் தொலைவில் தென்மேற்கே உள்ளது.

பாடல் 903 - வயலு¡ர்
ராகம் - ....; தாளம் -

தனன தனதன தனதன தனதன     தனன தனதன தனதன தனதன          தனன தனதன தனதன தனதன ...... தனதான

இலகு முலைவிலை யசடிகள் கசடிகள்     கலைகள் பலவறி தெருளிகள் மருளிகள்          எயிறு கடிபடு முதடிகள் பதடிகள் ...... எவரோடும் 
இனிய நயமொழி பழகிக ளழகிகள்     மடையர் பொருள்பெற மருவிகள் சருவிகள்          யமனு மிகையென வழிதரு முழிதரும் ...... விழிவாளால் 
உலக மிடர்செயு நடலிகள் மடலிகள்     சிலுகு சிலரொடு புகலிக ளிகலிகள்          உறவு சொலவல துரகிகள் விரகிகள் ...... பிறைபோலே 
உகிர்கை குறியிடு கமுகிகள் சமுகிகள்     பகடி யிடவல கபடிகள் முகடிகள்          உணர்வு கெடும்வகை பருவிக ளுருவிக ...... ளுறவாமோ 
அலகை புடைபட வருவன பொருவன     கலக கணநிரை நகுவன தகுவன          அசுரர் தசைவழி நிமிர்வன திமிர்வன ...... பொடியாடி 
அலரி குடதிசை யடைவன குடைவன     தரும வநிதையு மகிழ்வன புகழ்வன          அகில புவனமு மரகர கரவென ...... அமர்வேள்வி 
திலக நுதலுமை பணிவரு செயமகள்     கலையி னடமிட வெரிவிரி முடியினர்          திரள்ப லுயிருடல் குவடுக ளெனநட ...... மயிலேறிச் 
சிறிது பொழுதினி லயில்விடு குருபர     அறிவு நெறியுள அறுமுக இறையவ          த்ரிசிர கிரியயல் வயலியி லினிதுறை ...... பெருமாளே.

விளங்கும் மார்பகத்தை விலைக்கு விற்கின்ற முட்டாள்கள், குற்றம் உள்ளவர்கள். காமக் கலைகள் பலவற்றையும் அறிந்துள்ள தெளிவை உடையவர்கள், மயக்குபவர்கள். பற் குறிகளைக் கொண்ட உதட்டை உடையவர்கள். அற்பர்கள். யாரோடும் இனிமையான நயமான பேச்சுக்களைப் பேசப் பழகியவர்கள். முட்டாள்களுடைய பொருளைப் பெறுதற்கு அவர்களுடன் சேருபவர்கள். கொஞ்சிக் குலாவுபவர்கள். யமனை மிஞ்சும்படியான அழித்தல் தொழிலைச் செய்வதும், அங்கும் இங்கும் சுழலுகின்றதுமான கண் என்னும் வாள் கொண்டு உலகத்துக்கே துன்பம் செய்கின்ற செருக்கு உள்ளவர்கள். (ஆண்களை) மடல்* ஊரும்படிச் செய்பவர்கள். சண்டைப் பேச்சு சிலரோடு பேசுபவர்கள். பகைமை பூண்டவர்கள். உறவு முறையைக் கூறி அழைக்கவல்ல துரோகிகள். சாமர்த்தியசாலிகள். பிறையைப் போல் கைந் நகத்தால் (வந்தவர் உடலில்) அடையாளக் குறியை இடுபவர்கள். ரகசிய அழுத்தம் உடையவர்கள். சமூகத்துக்கு விருப்புடன் பேட்டி அளிப்பவர்கள். வெளி வேஷம் போடவல்ல வஞ்ச நெஞ்சினர். மூதேவிகள். நல்ல அறிவு கெட்டுப் போகும்படி அரிப்பவர்கள். கையில் பொருள் உருவும்படி சரசமாகப் பேசுபவர்கள் ஆகிய விலைமாதர்களின் தொடர்பு நல்லதா? பேய்கள் (போர்க்களத்தின்) பக்கங்களில் சேரும்படி வரவும், சில சண்டை செய்யவும், கலகம் செய்யும் பேய்களின் கூட்டம் சிரிக்கவும், சில மேம்பட்டு விளங்கவும், அசுரர்களின் மாமிசக் குவியல் கிடைத்த போது அதைத் தின்று நிமிரவும், விறைப்பு விடவும், போர்ப் புழுதியில் குளித்து சூரியன் மேற்குத் திசையில் சேர்ந்து மூழ்கிப் போகவும், தரும தேவதையும் மகிழ்ச்சி உற்று உனது புகழை எடுத்துக் கூறவும், எல்லா உலகங்களும் ஹரஹர ஹர என்று துதித்துப் போற்றவும், போர்க்களச் சாலையில் பொட்டணிந்த நெற்றியைக் கொண்ட உமா தேவிக்கு பணி செய்யும் துர்க்கை சாஸ்திரப்படி நடனம் செய்ய, நெருப்புப் போலச் சிவந்ததும், விரித்துள்ளதுமான தலைமயிர் முடியை உடைய அசுரர்களின் கூட்டம் பலவற்றின் உயிர் வாசம் செய்த உடல்கள் மலை போல் குவிய, நடனம் செய்யும் மயில் மீது ஏறி, கொஞ்ச நேரத்தில் வேலைச் செலுத்திய குருபரனே, ஞான மார்க்கத்தைக் கொண்டுள்ள ஆறு திருமுகங்களை உடைய இறைவனே, திரிசிராப்பள்ளிக்கு அருகில் உள்ள வயலூரில்** இன்பமுடன் வீற்றிருக்கும் பெருமாளே. 
* மடல் ஏறுதல் - காமத்தால் வாடும் தலைவன் பனங்கருக்கால் குதிரை முதலிய வடிவங்கள் செய்து அவற்றின் மேலே ஏறி ஊரைச் சுற்றி, தன் காதலை ஊரிலுள்ள பிறருக்குத் தெரிவிப்பான்.
** வயலூர் சோழ நாட்டின் ராஜகெம்பீரப் பகுதியின் தலைநகர். இங்குதான் சுவாமிகளுக்கு தினம் ஒரு திருப்புகழ் பாடும் வரத்தை முருகன் தந்தான்.வயலூர் திருச்சிராப்பள்ளிக்கு 6 மைல் தொலைவில் தென்மேற்கே உள்ளது.

பாடல் 904 - வயலு¡ர்
ராகம் - பேகடா தாளம் - ஆதி

தன்னா தனத்தன தன்னா தனத்தன     தன்னா தனத்தன ...... தந்ததான

என்னால் பிறக்கவும் என்னா லிறக்கவும்     என்னால் துதிக்கவும் ...... கண்களாலே 
என்னா லழைக்கவும் என்னால் நடக்கவும்     என்னா லிருக்கவும் ...... பெண்டிர்வீடு 
என்னால் சுகிக்கவும் என்னால் முசிக்கவும்     என்னால் சலிக்கவும் ...... தொந்தநோயை 
என்னா லெரிக்கவும் என்னால் நினைக்கவும்     என்னால் தரிக்கவும் ...... இங்குநானார் 
கன்னா ருரித்தஎன் மன்னா எனக்குநல்     கர்ணா மிர்தப்பதம் ...... தந்தகோவே 
கல்லார் மனத்துட னில்லா மனத்தவ     கண்ணா டியிற்றடம் ...... கண்டவேலா 
மன்னான தக்கனை முன்னாள்மு டித்தலை     வன்வாளி யிற்கொளும் ...... தங்கரூபன் 
மன்னா குறத்தியின் மன்னா வயற்பதி     மன்னா முவர்க்கொரு ...... தம்பிரானே.

என் செயலால் நான் இவ்வுலகில் பிறப்பதற்கும், என் திறத்தால் நான் இறப்பதற்கும், என் எண்ணத்தால் நான் துதிப்பதற்கும், என் கண்கொண்டு மற்றவரை நான் அழைப்பதற்கும், என் செயலால் என் கால்கொண்டு நான் நடப்பதற்கும், என் திறம் கொண்டு நான் ஓரிடத்தில் இருப்பதற்கும், மாதர், வீடு இவற்றை நான் இன்புற்று சுகிப்பதற்கும், வேண்டுதல் வேண்டாமை காரணமாக நான் நலிவுற்று மெலிவதற்கும், இது போதும் என அலுப்புடன் நான் சலிப்பு அடைவதற்கும், வினையின் வசமாக வரும் நோய்களை நான் பொசுக்குவதற்கும், பல நினைவுகளையும் நான் இங்கு நினைப்பதற்கும், இன்ப துன்பங்களை நான் தாங்கிக் கொள்வதற்கும், இங்கே நான் யார்? (எனக்கு என்ன சுதந்திரம் உண்டு?) என் நெஞ்சக் கல்லிலிருந்து நார் உரிப்பது போலக் கசியச் செய்த அரசே, செவிக்கு நல்ல அமுதம் போன்ற உபதேச மொழியை எனக்கு அருளிச்செய்த அரசனே, உன்னைக் கற்றறியா¡ர் மனத்தில் தங்காத மனத்தோனே, கண்ணாடி போல் தெளிவான தடாகத்தை வேலால் கண்டவனே*, அரசனாக விளங்கிய தக்ஷப்ரஜாபதியை முன்னொருநாள் அவனது கி¡£டம் அணிந்த தலையை கொடிய அம்பால் கொய்த பொன் போன்ற மேனியுடைய சிவபிரானுக்கு குருராஜனே, குறத்தி வள்ளியின் தலைவனே, வயலூரின்** அரசனே, பிரமன், திருமால், சிவன் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் ஒப்பற்ற தலைவனே. 
* வயலூரில் முருகன் தன் சக்தி வேலை ஓரிடத்தில் பாய்ச்சி அங்கு ஒரு தடாகத்தை உண்டாக்கினான். அத்தடாகம் சக்தி தீர்த்தம் எனப்படும். அதன் நீர் பளிங்கு போன்று தெளிவானது.
** வயலூர் சோழ நாட்டின் ராஜகெம்பீரப் பகுதியின் தலைநகர். இங்குதான் சுவாமிகளுக்கு தினம் ஒரு திருப்புகழ் பாடும் வரத்தை முருகன் தந்தான்.வயலூர் திருச்சிராப்பள்ளிக்கு 6 மைல் தொலைவில் தென்மேற்கே உள்ளது.

பாடல் 905 - வயலு¡ர்
ராகம் - ....; தாளம் -

தனனாத் தனதன தனனாத் தனதன     தனனாத் தனதன ...... தனதான

கடல்போற் கணைவிழி சிலைபோற் பிறைநுதல்     கனிபோற் றுகிரிதழ் ...... எழிலாகும் 
கரிபோற் கிரிமுலை கொடிபோற் றுடியிடை     கடிபோற் பணியரை ...... யெனவாகும் 
உடல்காட் டினிமையி லெழில்பாத் திரமிவ     ளுடையாற் கெறுவித ...... நடையாலும் 
ஒருநாட் பிரிவது மரிதாய்ச் சுழல்படும்     ஒழியாத் துயரது ...... தவிரேனோ 
குடலீர்த் தசுரர்க ளுடல்காக் கைகள்நரி     கொளிவாய்ப் பலஅல ...... கைகள்பேய்கள் 
கொலைபோர்க் களமிசை தினமேற் றமரர்கள்     குடியேற் றியகுக ...... வுயர்தாழை 
மடல்கீற் றினிலெழு விரைபூப் பொழில்செறி     வயலூர்ப் பதிதனி ...... லுறைவோனே 
மலைமேற் குடியுறை கொடுவேட் டுவருடை     மகள்மேற் ப்ரியமுள ...... பெருமாளே.

கடல் போல ஆழமாகவும், அம்பு போல கூர்மையாகவும் உள்ள கண்கள், வில்லைப் போலவும் பிறைச் சந்திரன் போலவும் வளைந்த நெற்றி, கொவ்வைப் பழம் போலவும், பவளம் போலவும் உள்ள வாயிதழ், அழகு பொருந்திய யானையைப் போலவும், மலையைப் போலவும் உள்ள மார்பகங்கள், கொடி போலவும் உடுக்கை போலவும் உள்ள இடுப்பு, காவலிடம் போலவும் பாம்பின் படம் போலவும் உள்ள பெண்குறி என்று உவமானம் சொல்லத்தக்க தேகத்தைக் காட்டும் இன்ப நிலைக்கு எடுத்துக் காட்டான கொள்கலம் இவள் (என மயங்கி), அவளது ஆடையாலும் செருக்குள்ள நடை அழகினாலும் (இவளை விட்டு) ஒரு நாள் கூட பிரிந்திருப்பது முடியாத காரியம் என்று சுழற்சியுறும் நீங்காத துன்பத்தைத் தொலைக்க மாட்டேனோ? அசுரர்களின் உடலினின்றும் குடலை இழுத்து காக்கை, நரி, கொள்ளி வாய்ப் பிசாசுகள், பேய்கள் யாவும், நிறைந்த கொல்லுதலை உடைய போர்க் களத்தில் நாள்தோறும் (குடலை) அடைந்து உண்ண, தேவர்களை விண்ணுலகில் குடி ஏற்றிய குகனே, உயர்ந்த தாழையின் மடல் கீற்றினில் உண்டாகின்ற வாசனை மிக்க (தாழம்) பூக்கள் உள்ள சோலைகள் நிறைந்த வயலூரில்* வாழ்பவனே, வள்ளிமலையில் வாழும் கொடிய வேடர்களுடைய மகள் வள்ளியின் மேல் விருப்பம் மிகக் கொண்டுள்ள பெருமாளே. 
* வயலூர் சோழ நாட்டின் ராஜகெம்பீரப் பகுதியின் தலைநகர். இங்குதான் சுவாமிகளுக்கு தினம் ஒரு திருப்புகழ் பாடும் வரத்தை முருகன் தந்தான்.வயலூர் திருச்சிராப்பள்ளிக்கு 6 மைல் தொலைவில் தென்மேற்கே உள்ளது.

பாடல் 906 - வயலு¡ர்
ராகம் - ....; தாளம் -

தனனத் தான தான தனதன     தனனத் தான தான தனதன          தனனத் தான தான தனதன ...... தனதான

கமலத் தேகு லாவு மரிவையை     நிகர்பொற் கோல மாதர் மருள்தரு          கலகக் காம நூலை முழுதுண ...... ரிளைஞோர்கள் 
கலவிக் காசை கூர வளர்பரி     மளகற் பூர தூம கனதன          கலகத் தாலும் வானி னசையுமி ...... னிடையாலும் 
விமலச் சோதி ரூப இமகர     வதனத் தாலு நாத முதலிய          விரவுற் றாறு கால்கள் சுழலிருள் ...... குழலாலும் 
வெயிலெப் போதும் வீசு மணிவளை     அணிபொற் றோள்க ளாலும் வடுவகிர்          விழியிற் பார்வை யாலு மினியிடர் ...... படுவேனோ 
சமரிற் பூதம் யாளி பரிபிணி     கனகத் தேர்கள் யானை யவுணர்கள்          தகரக் கூர்கொள் வேலை விடுதிற ...... லுருவோனே 
சமுகப் பேய்கள் வாழி யெனஎதிர்     புகழக் கானி லாடு பரிபுர          சரணத் தேக வீர அமைமன ...... மகிழ்வீரா 
அமரர்க் கீச னான சசிபதி     மகள்மெய்த் தோயு நாத குறமகள்          அணையச் சூழ நீத கரமிசை ...... யுறுவேலா 
அருளிற் சீர்பொ யாத கணபதி     திருவக் கீசன் வாழும் வயலியின்          அழகுக் கோயில் மீதில் மருவிய ...... பெருமாளே.

தாமரையில் விளங்கும் லக்ஷ்மிக்கு ஒப்பான அழகிய அலங்காரம் உள்ள விலைமாதர்கள் மீது மோக மயக்கத்தைத் தருகின்றதும், கலக்கம் தரும் காம சாஸ்திரத்தை முற்றும் உணர்ந்த இளைஞர்களின் புணர்ச்சி இன்பத்துக்கு ஆசை மிக்கெழும்படியாகவும், நிரம்பிய நறு மணம் உள்ள பச்சைக் கற்பூரம், அகில் புகை போன்றவைகளைக் கொண்ட மார்பகங்கள் எழுப்பும் மனச் சலனத்தாலும், ஆகாயத்தில் அசையும் மின்னல் போன்ற இடுப்பாலும், களங்கம் இல்லாத ஒளிமயமான பனிக் கிரணம் கொண்ட சந்திர பிம்பத்தை ஒத்த முகத்தாலும், பாட்டு முதலியவை கலந்து எழச் செய்யும் வண்டுகள் சூழ்ந்துச் சுழலும் இருண்ட கரிய கூந்தலாலும், எப்போதும் ஒளி வீசுகின்ற ரத்தின மாலைகளை அணியும் அழகிய தோள்களாலும், மாவடுவின் கீற்றைப் போன்ற கண்களின் பார்வையாலும், இனிமேல் நான் துன்பம் அடைவேனோ? போரில் பூதம், யாளி, குதிரை இவைகளைப் பிணித்துக் கட்டிய பொன் மயமான தேர்கள், யானைகள், அசுரர்கள் ஆகியவை பொடிபட்டு அழிய, கூர்மையான வேலாயுதத்தைச் செலுத்திய வலிமையான உருவத்தனே, கூட்டமான பேய்கள் வாழி என்று எதிரே நின்று புகழ, சுடு காட்டில் (சிவனுடன்) நடனம் செய்யும் சிலம்பணிந்த திருவடிகளை உடைய, தன்னிகரில்லாத வீரம் வாய்ந்த தாயாகிய பார்வதி மனம் மகிழும் வீரனே, தேவர்களுக்குத் தலைவனான, இந்திராணியின் கணவனாகிய இந்திரனின் மகளான தேவயானையின் உடலைத் தழுவும் நாதனே, குறப் பெண்ணாகிய வள்ளி உன்னை அணைவதற்கு வேண்டிய சூழ்ச்சிகளைச் செய்த நீதிமானே, திருக்கையில் கொண்ட வேலாயுதனே. திருவருள் பாலிப்பதற்குப் புகழ் பெற்ற, பொய்யுறாத கணபதியும்*, அழகிய அக்னீசுரர் என்னும் பெயருடைய சிவபெருமானும் வீற்றிருக்கும் வயலூரின்** அழகிய கோயிலில் அமர்ந்திருக்கும் பெருமாளே. 
* இவரே "செய்ப்பதியும் வைத்துயர் திருப்புகழ் விருப்பமொடு செப்பு" என்று அருணகிரிநாதருக்கு அருளினார். அந்தப் பாடல்தான் 'பக்கரை விசித்ரமணி' ஆகும்.
** வயலூர் சோழ நாட்டின் ராஜகெம்பீரப் பகுதியின் தலைநகர். இங்குதான் சுவாமிகளுக்கு தினம் ஒரு திருப்புகழ் பாடும் வரத்தை முருகன் தந்தான்.வயலூர் திருச்சிராப்பள்ளிக்கு 6 மைல் தொலைவில் தென்மேற்கே உள்ளது.

பாடல் 907 - வயலு¡ர்
ராகம் - ....; தாளம் -

தனத்தத தானான தனதத்த தானான     தனதத்த தானனா ...... தந்ததான

கமையற்ற சீர்கேடர் வெகுதர்க்க கோலாலர்     களையுற்று மாயாது ...... மந்த்ரவாதக் 
கடைகெட்ட ஆபாத முறுசித்ர கோமாளர்     கருமத்தின் மாயாது ...... கொண்டுபூணுஞ் 
சமயத்த ராசார நியமத்தின் மாயாது     சகளத்து ளேநாளு ...... நண்புளோர்செய் 
சரியைக்ரி யாயோக நியமத்தின் மாயாது     சலனப்ப டாஞானம் ...... வந்துதாராய் 
அமரிற்சு ராபான திதிபுத்ர ராலோக     மதுதுக்க மேயாக ...... மிஞ்சிடாமல் 
அடமிட்ட வேல்வீர திருவொற்றி யூர்நாதர்     அருணச்சி காநீல ...... கண்டபார 
மமபட்ச மாதேவ ரருமைச்சு வாமீநி     மலநிட்க ளாமாயை ...... விந்துநாதம் 
வரசத்தி மேலான பரவத்து வேமேலை     வயலிக்குள் வாழ்தேவர் ...... தம்பிரானே.

பொறுமை இல்லாத ஒழுங்கீனர்களும், மிகுந்த தர்க்கம் பேசுகிற ஆடம்பர வாதிகளுமான மனிதர்களால் சோர்வு அடைந்து மடியாமலும், மந்திர வாதம் செய்யும் மிக இழிவு நிலையில் உள்ள தாழ்மை வாய்ந்த சித்திரப் பேச்சு பேசி கொண்டாட்டம் போடுபவர்களின் செய்கைகளில் சிக்கி மடியாமலும், தங்கள் சமய நெறியை மேற் கொண்டு ஒழுகும் வெவ்வேறு சமயங்களைச் சேர்ந்தோரின் கட்டுப்பாடுகளில் மடியாமலும், உருவ வழிபாடு செய்து நாள் தோறும் பக்தி வைத்துள்ளோர் புரியும் சரியை, கிரியை, யோகம்* எனப்படும் ஒழுக்கங்களை மேற் கொண்டு மடியாமலும், (அதனால்,) எவ்விதமான சஞ்சலங்களுக்கும் உட்படாத ஞானத்தை நீ எனக்குத் தந்தருளுக. போரில் கள் குடிக்கும் (திதியின் மக்களாகிய) அசுரர்களின் அறியாமையானது உலகத்துக்குத் துக்கத்தையே தர, அந்தத் துக்கத்தை ஒழிக்க, எப்போதும் துடித்துக் கொண்டிருக்கும் வேலினைச் செலுத்திய வீரனே, திருவொற்றியூர் நாதரும், சிவந்த ஜடை, நீல கண்டம், பெருமை ஆகியவற்றைக் கொண்டவரும், என் மீது அன்புள்ளவருமான மகாதேவர் சிவபெருமானுக்கு அருமையாக வாய்ந்த சுவாமியே, மாசில்லாதவனே, உருவம் இல்லாதவனே, மாயை, விந்து, நாதம், வரங்களைத் தரும் சக்தி இவைகளுக்கு மேம்பட்ட பரம் பொருளே**, மேலை வயலூர்*** என்னும் தலத்தில் வாழ்கின்ற, தேவர்களின் தம்பிரானே. 
* 4 பக்தி மார்க்கங்கள் பின்வருமாறு:1. சரியை: திருக்கோயிலில் அலகு இடுதல், மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம் வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல், இறைவனை வாழ்த்துதல், திருவேடம் கண்டு பணிதல். இது 'தாத மார்க்கம் - சாலோகம்'.2. கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்தியக் காரியம் செய்தல். இது 'புத்ர மார்க்கம் - சாமீபம்'.3. யோகம்: புலன்களை அடக்கிப் பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி, முழு ஜோதியை நினைத்திருத்தல். இது 'சக மார்க்கம் (தோழ நெறி) - சாரூபம்'.4. ஞானம்: புறத் தொழில் அகத் தொழில் இன்றி, அறிவு மாத்திரத்தாலே செய்யும் வழிபாடு ஞானம். இது 'சன்மார்க்கம் - சாயுஜ்யம்'. சிவஞான சித்தியார் சூத்திரம். 
** இறைவன் ஏக நாதன் என்பதைக் குறிக்கும்.அருவத் திருமேனி நான்கு = சிவம், சக்தி, நாதம், விந்து.உருவத் திருமேனி நான்கு = மகேசன், ருத்திரன், மால், அயன்.அருவுருவத் திருமேனி ஒன்று = சதாசிவம்.
*** வயலூர் சோழ நாட்டின் ராஜகெம்பீரப் பகுதியின் தலைநகர். இங்குதான் சுவாமிகளுக்கு தினம் ஒரு திருப்புகழ் பாடும் வரத்தை முருகன் தந்தான்.வயலூர் திருச்சிராப்பள்ளிக்கு 6 மைல் தொலைவில் தென்மேற்கே உள்ளது.

பாடல் 908 - வயலு¡ர்
ராகம் - கேதாரம் தாளம் - அங்கதாளம் தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2

தனன தனதன தனதன தனதன     தனன தனதன தனதன தனதன          தனன தனதன தனதன தனதன ...... தனதான

குருதி கிருமிகள் சலமல மயிர்தசை     மருவு முருவமு மலமல மழகொடு          குலவு பலபணி பரிமள மறசுவை ...... மடைபாயல் 
குளிரி லறையக மிவைகளு மலமல     மனைவி மகவனை யநுசர்கள் முறைமுறை          குனகு கிளைஞர்க ளிவர்களு மலமல ...... மொருநாலு 
சுருதி வழிமொழி சிவகலை யலதினி     யுலக கலைகளு மலமல மிலகிய          தொலைவி லுனைநினை பவருற வலதினி ...... யயலார்பால் 
சுழல்வ தினிதென வசமுடன் வழிபடு     முறவு மலமல மருளலை கடல்கழி          துறைசெ லறிவினை யெனதுள மகிழ்வுற ...... அருள்வாயே 
விருது முரசுகள் மொகுமொகு மொகுவென     முகுற ககபதி முகில்திகழ் முகடதில்          விகட இறகுகள் பறையிட அலகைகள் ...... நடமாட 
விபுத ரரகர சிவசிவ சரணென     விரவு கதிர்முதி ரிமகரன் வலம்வர          வினைகொள் நிசிசரர் பொடிபட அடல்செயும் ...... வடிவேலா 
மருது நெறுநெறு நெறுவென முறிபட     வுருளு முரலொடு தவழரி மருகசெ          வனச மலர்சுனை புலிநுழை முழையுடை ...... யவிராலி 
மலையி லுறைகிற அறுமுக குருபர     கயலு மயிலையு மகரமு முகள்செநெல்          வயலி நகரியி லிறையவ அருள்தரு ...... பெருமாளே.

இரத்தம், புழுக்கள், நீர், மலம், மயிர், சதை ஆகிய இவை பொருந்திய உருவை உடைய இந்த உடல் எடுத்தது போதும் போதும். அழகோடு விளங்கும் பல விதமான நகைகளும், நறு மணமுள்ள வாசனைப் பொருள்களும், ஆறு சுவைகள் கூடிய உணவும், படுக்கையும், குளிர் இல்லாத அடக்கமான அறைகள் கொண்ட வீடும் - இவைகள் யாவும் போதும் போதும். மனைவி, குழந்தைகள், தாயார், உடன் பிறந்தவர்கள், உறவு முறைகளைக் கூறி குலவும் சுற்றத்தினர் இவர்களும் போதும் போதும். ஒரு நான்கு மறைகளின் வழியை எடுத்துக் கூறும் சைவ சித்தாந்த நூல்களைத் தவிர வேறு உலக சம்பந்தமான நூல்களை ஓதுவதும் போதும் போதும். விளங்கி நிற்பவனும், அழிவில்லாதவனுமாகிய உன்னை நினைப்பவர்களது நட்பைத் தவிர, இனி பிறரிடத்தே திரிவது நல்லது என்று அவர்கள் வசப்பட்டு, அவர்களை வழிபடுகின்ற நட்பும் போதும் போதும். நின் திருவருள் அலை வீசும் கடலின் சங்கமத் துறை வழியில் செல்லும் அறிவை என் மனம் மகிழும் பொருட்டு நீ அருள்வாயாக. வெற்றிச் சின்னமான பறைகள் மொகு மொகு மொகு என்று பேரொலி செய்ய, கருடன் மேகம் விளங்கும் உச்சி வானத்தில் அகன்ற இறகுகளைக் கொண்டு வட்டமிட, பேய்கள் நடனம் செய்ய, தேவர்கள் அரகர சிவசிவ உன் அடைக்கலம் என்று ஒலி செய்ய, பொருந்திய சூரியனும், குளிர்ச்சி நிறைந்த கிரணங்களை உடைய சந்திரனும் வலம் வர, தீச்செயலைக் கொண்ட அசுரர்கள் பொடிபட்டு அழிய, போர் செய்த கூர்மையான வேலாயுதனே. இரண்டு மருத மரஙகள் நெறு நெறு நெறு என்று முறிபடும்படி உருண்டு சென்று (இடுப்பில் கட்டிய) உரலுடனே தவழ்ந்திட்ட கண்ணனாம் திருமாலின் மருகனே, செந்தாமரை மலர்கின்ற சுனையும், புலி நுழையும் குகையும் கொண்ட விராலிமலையில் வீற்றிருக்கும் ஆறு முகனே, குருபரனே. கயல் மீன்களும், மயிலை என்னும் மீன்களும், மகர மீன்களும் தாவித் திரிகின்ற செந்நெல் வயல்களைக் கொண்ட வயலூர்ப் பதியில்* அமரும் இறைவனே, திருவருள் பாலிக்கும் பெருமாளே. 
* வயலூர் சோழ நாட்டின் ராஜகெம்பீரப் பகுதியின் தலைநகர். இங்குதான் சுவாமிகளுக்கு தினம் ஒரு திருப்புகழ் பாடும் வரத்தை முருகன் தந்தான்.வயலூர் திருச்சிராப்பள்ளிக்கு 6 மைல் தொலைவில் தென்மேற்கே உள்ளது.

பாடல் 909 - வயலு¡ர்
ராகம் - ....; தாளம் -

தனதானன தனதானன தனதானன தனதானன     தனதானன தனதானன ...... தந்ததான

குயிலோமொழி அயிலோவிழி கொடியோஇடை பிடியோநடை     குறியீர்தனி செறியீரினி ...... யென்றுபாடிக் 
குனகாவடி பிடியாவிதழ் கடியாநகம் வகிராவுடை     குலையாவல்கு லளையாவிரு ...... கொங்கைமீதிற் 
பயிலாமன மகிழ்மோகித சுகசாகர மடமாதர்கள்     பகையேயென நினையாதுற ...... நண்புகூரும் 
பசுபாசமு மகிலாதிக பரிபூரண புரணாகர     பதிநேருநி னருளால்மெயு ...... ணர்ந்திடேனோ 
வெயில்வீசிய கதிராயிர வருணோதய விருணாசன     விசையேழ்பரி ரவிசேயெனு ...... மங்கராசன் 
விசிகாகவ மயல்பேடிகை படுபோதுசன் னிதியானவன்     விதிதேடிய திருவாளிய ...... ரன்குமாரா 
அயலூருறை மயிலாபல கலைமானுழை புலிதோல்களை     யகிலாரம தெறிகாவிரி ...... வண்டல்மேவும் 
அதிமோகர வயலூர்மிசை திரிசேவக முருகேசுர     அமராபதி யதில்வாழ்பவர் ...... தம்பிரானே.

பேச்சு குயிலின் குரல் தானோ, கண்கள் அம்போ, இடுப்பு கொடியோ, நடை பெண் யானை போன்றதோ, இந்த அழகைத் தெரிந்து கொள்ளுங்கள், இனிமேல் தனியாக வந்து நெருங்கிப் பழகுங்கள் என்றெல்லாம் (விலைமாதர்களைப்) புகழ்ந்து பாடி, கொஞ்சிப் பேசி அவர்களுடைய காலைப் பிடித்தும், வாயிதழைக் கடித்தும், நகத்தால் கீறியும், ஆடையைக் கலைத்தும், பெண்குறியில் திளைத்தும், இரண்டு மார்பகங்கள் மீது நெருங்கிப் பழகியும் மனம் களிப்பதற்கு இடமாயுள்ளவர்களும், காம மயக்க சுகக் கடல் போல் உள்ளவர்களுமான அழகான விலைமாதர்கள் பகைத்து விலக்கத் தக்கவர்கள் என்று நான் நினைக்காமல் இருக்கிறேனே, பசு (ஆன்மா), பாசம் (ஆணவம், கர்மம், ஆகிய தளையாகிய மும்மலக்கட்டு) ஆக எல்லாவற்றுக்கும் மேம்பட்ட, ஆதரவை மிகக் காட்டும் நிறை பொருளே, ஒளிக்கு இருப்பிடமானவனே, இறைவனாகிய உன்னிடத்தில் உள்ள திருவருளால் உண்மையான மெய்ப் பொருளை நான் உணர மாட்டேனோ? ஒளி வீசும் ஆயிரக் கணக்கான கிரணங்களை வீசுபவனும், உதய காலத்தில் இருளைப் போக்குபவனும், வேகமாகச் செல்லும் ஏழு குதிரைகளைக் கொண்டவனுமான சூரியனின் பிள்ளையாகிய அங்க நாட்டு அரசனான கர்ணன் அம்புகள் நிறைந்த போரில் தனக்குப் பகையாயிருந்த பேடி (அருச்சுனனுடைய) கை அம்பால் இறந்து படும் போது, (அந்தக் கர்ணனுக்குத்) தரிசனம் தந்தவனாகிய திருமாலும், பிரமனும் தனது முடியைத் தேடிய செல்வ நாயகனான சிவபெருமானுடைய குமாரனே, பக்கங்களில் உள்ள ஊர்கள் எல்லாவற்றிலும் வீற்றிருக்கும் மயில் வாகனனே, பல வகையான கலைமான்கள், பிற வகையான மான்கள், புலி, யானைகளையும், அகில், சந்தனம் இவைகளையும் தள்ளி வீசிக் கொண்டு வரும் காவிரி நதியின் நீர் மண்டிய பொடி மண் உள்ளதும், அதிகமாக மனதுக்கு இனிமை தருவதுமான வயலூரில் உலவும் வலியவனே, முருகனே, ஈசுவரனே, பொன்னுலகில் வாழும் தேவர்களின் தம்பிரானே. 

பாடல் 910 - வயலு¡ர்
ராகம் - ....; தாளம் -

தான தான தனத்தந் தான தான தனத்தந்     தான தான தனத்தந் ...... தனதான

கோவை வாயி தழுக்குந் தாக போக மளிக்குங்     கோதை மாதர் முலைக்குங் ...... குறியாலும் 
கோல மாலை வளைக்குந் தோளி னாலு மணத்தங்     கோதி வாரி முடிக்குங் ...... குழலாலும் 
ஆவி கோடி யவிக்குஞ் சேலி னாலு மயக்குண்     டாசை யாயி னுநித்தந் ...... தளராதே 
ஆசி லாத மறைக்குந் தேடொ ணாதொ ருவர்க்கொன்     றாடல் தாள்க ளெனக்கின் ...... றருள்வாயே 
சேவி லேறு நிருத்தன் தோகை பாக னளிக்குந்     த்யாக சீல குணத்தன் ...... திருமாலும் 
தேடொ ணாத பதத்தன் தீதி லாத மனத்தன்     தேயு வான நிறத்தன் ...... புதல்வோனே 
காவி டாத திருச்செங் கோடு நாடு தனக்குங்     காவி சூழ்வ யலிக்கும் ...... ப்ரியமானாய் 
காதி மோதி யெதிர்க்குஞ் சூர தீரர் ப்ரமிக்குங்     கால னாடல் தவிர்க்கும் ...... பெருமாளே.

கொவ்வைக் கனி போன்ற வாயிதழுக்கும், காம தாகத்தையும், இன்பத்தையும் ஒருங்கே கொடுக்கின்ற, மாலை அணிந்துள்ள விலைமாதர்களின் மார்பகத்துக்கும் வசப்பட்டு, பெண் குறியாலும், அழகிய மாலையை வளையப் புனைந்துள்ள தோள்களாலும், வாசனை தங்குவதும் அழகாகச் சிக்கெடுத்து வாரி முடிந்துள்ளதுமான கூந்தலாலும், கோடிக் கணக்கான உயிர்களை அழிக்கின்ற சேல் மீன் போன்ற கண்களாலும் மயக்கம் கொண்டு, ஆசை பூண்டவனாய் இன்னும் தினந்தோறும் நான் மனம் தளராமல், குற்றம் இல்லாத வேதங்களாலும் தேடிக் காண முடியாத ஒருவராகிய சிவபெருமானின் மனதுக்கு உவந்த, வெற்றி பொருந்திய உனது திருவடிகளை எனக்கு இன்று தந்தருள்க. ரிஷப (நந்தி) வாகனத்தின் மேல் ஏறுகின்ற நடன மூர்த்தி, மயில் போன்ற பார்வதியை இடப் பாகத்தில் கொண்டவன், காத்து அளிக்கும் தியாக சீலம் கொண்ட தூய ஒழுக்கமான குணம் கொண்டவன், திருமாலும் தேடிக் காண முடியாத திருவடிகளை உடையவன், தீமையே இல்லாத மனத்தை உடையவன், நெருப்பின் நிறம் உடையவன் (ஆகிய சிவபெருமானின்) மகனே. சோலைகள் நிறைந்த திருச் செங்கோட்டுப் பகுதியிலும், கருங்குவளை மலரும் நீர் நிலைகளும் சூழ்ந்துள்ள வயலூரிலும் விருப்பம் கொண்டுள்ளவனே, கொன்று மோதி எதிர்த்துப் போர் செய்யும் சூர தீரர்கள் வியக்கும்படியாக, யமனுடைய கொல்லும் தொழிலை (அவனுக்கு) இல்லாமல் (நீயே) செய்த பெருமாளே. 

பாடல் 911 - வயலு¡ர்
ராகம் - தர்பாரி கானடா தாளம் - ஆதி

தானன தனத்த தானன தனத்த     தானன தனத்த ...... தனதான

தாமரையின் மட்டு வாசமல ரொத்த     தாளிணை நினைப்பி ...... லடியேனைத் 
தாதவிழ் கடுக்கை நாகமகிழ் கற்ப     தாருவென மெத்தி ...... யவிராலி 
மாமலையி னிற்ப நீகருதி யுற்று     வாவென அழைத்தென் ...... மனதாசை 
மாசினை யறுத்து ஞானமு தளித்த     வாரமினி நித்த ...... மறவேனே 
காமனை யெரித்த தீநயன நெற்றி     காதிய சுவர்க்க ...... நதிவேணி 
கானிலுறை புற்றி லாடுபணி யிட்ட     காதுடைய அப்பர் ...... குருநாதா 
சோமனொ டருக்கன் மீனுலவு மிக்க     சோலைபுடை சுற்று ...... வயலூரா 
சூடிய தடக்கை வேல்கொடு விடுத்து     சூர்தலை துணித்த ...... பெருமாளே.

தாமரைப்பூவிலேயே நிரம்பிய மணம்வாய்ந்த மலருக்குச் சமானமான உன் இரு திருவடிகளின் நினைப்பே இல்லாத அடியேனை, மகரந்தப்பொடி விரியும் கொன்றை, சுரபுன்னை, மகிழமரம் இவையெல்லாம் கற்பக விருட்சங்கள் போல வளர்ந்து நிறைந்த விராலிப் பெருமலையில் யாம் நிற்போம்* நீ அதை மனத்தில் நினைத்து அந்தத் தலத்திற்கு வருவாயாக என்று அழைப்பு விடுத்து, என் மனத்திலுள்ள ஆசை என்னும் குற்றத்தை ஒழித்து, ஞானாமிர்தப் பிரசாதம் அளித்த அன்பை இனி என்றைக்கும் யான் மறக்கமாட்டேன். மன்மதனை எரித்த நெருப்புக்கண் உள்ள நெற்றியையும், வேகமாக வந்த ஆகாய கங்கையைத் தாங்கிய ஜடாமுடியையும், காட்டிலுள்ள புற்றில் படமெடுத்து ஆடும் பாம்பை அணிந்த காதையும் கொண்ட தந்தை சிவனாரின் குருநாதனே, சந்திரனும், சூரியனும், நக்ஷத்திரங்களும் உலவும் உயரச் சோலைகள் சுற்றியும் உள்ள வயலூரனே**, அகன்ற திருக்கை வேலினைக் கொண்டு, அதைச் செலுத்தி சூரனது சிரத்தைக் கொய்தெறிந்த பெருமாளே. 
* இச் சம்பவம் அருணகிரிநாதர் வாழ்க்கையிலே நடந்த வரலாறு - முதல் நான்கு அடிகள் விராலிமலைக்கு சுவாமிகளை முருகன் வரச் சொன்னதை குறிக்கின்றன.
** வயலூர் சோழ நாட்டின் ராஜகெம்பீரப் பகுதியின் தலைநகர். இங்குதான் சுவாமிகளுக்கு தினம் ஒரு திருப்புகழ் பாடும் வரத்தை முருகன் தந்தான்.வயலூர் திருச்சிராப்பள்ளிக்கு 6 மைல் தொலைவில் தென்மேற்கே உள்ளது.

பாடல் 912 - வயலு¡ர்
ராகம் - ....; தாளம் -

தனன தான தானான தனன தான தானான     தனன தான தானான ...... தனதான

திருவு ரூப நேராக அழக தான மாமாய     திமிர மோக மானார்கள் ...... கலைமூடுஞ் 
சிகரி யூடு தேமாலை யடவி யூடு போயாவி     செருகு மால னாசார ...... வினையேனைக் 
கருவி ழாது சீரோதி யடிமை பூண லாமாறு     கனவி லாள்சு வாமீநின் ...... மயில்வாழ்வுங் 
கருணை வாரி கூரேக முகமும் வீர மாறாத     கழலு நீப வேல்வாகு ...... மறவேனே 
சருவ தேவ தேவாதி நமசி வாய நாமாதி     சயில நாரி பாகாதி ...... புதல்வோனே 
சதம கீவல் போர்மேவு குலிச பாணி மால்யானை     சகச மான சா¡£செ ...... யிளையோனே 
மருவு லோக மீரேழு மளவி டாவொ ணாவான     வரையில் வீசு தாள்மாயன் ...... மருகோனே 
மநுநி யாய சோணாடு தலைமை யாக வேமேலை     வயலி மீது வாழ்தேவர் ...... பெருமாளே.

லக்ஷ்மியினுடைய உருவத்துக்கு நிகரான அழகைக் கொண்டவர்களும், மகா மாய, இருளான காம இச்சையை ஊட்டும் மான் போன்ற விலைமாதர்களின் ஆடை மறைக்கும் மார்பகங்களிலும், இனிய பூ மாலை அணிந்துள்ள காடு போன்ற கூந்தலிலும் உயிரே போய்ச் சிக்கிக் கொள்ளும் காம மயக்கம் உள்ள, ஒழுக்கம் இல்லாத தொழிலனாகிய என்னை, பிறப்பில் மீண்டும் விழாத வண்ணம், உனது திருப்புகழை நான் ஓதி, உனக்கு அடிமை பூணும் வகை வரும்படி, எனது கனவில் வந்து ஆண்டருளிய சுவாமியே, மயில் மேல் வீற்றிருக்கும் உனது வாழ்வையும், கருணைக் கடல் போல மிக்க ஒளி வீசும் உனது திருமுகத்தையும்*, வீரம் என்றும் மாறுதல் இல்லாத திருவடியையும், கடம்பையும், வேல் ஏந்திய திருப்புயத்தையும் நான் என்றும் மறவேன். எல்லாத் தேவர்களுக்கும் தேவனாக விளங்குபவனும், ஆதிப்பிரானும், நமசிவாய என்னும் திருநாமத்தை உடையவனும், (இமய) மலைப் பெண்ணாகிய பார்வதியின் பாகனும், முதல்வனுமாகிய சிவபெருமானின் மகனே, நூறு யாகங்களை முடித்தவனும், வலிய போரில் ஈடுபட்டவனும், வஜ்ராயுதத்தைக் கையில் ஏந்தியவனுமாகிய இந்திரனுடைய பெரிய ஐராவதம் என்னும் யானை மீது வழக்கமான உலாவுதலைச் செய்யும் இளைஞனே, பொருந்திய பதினான்கு உலகங்களிலும் உள்ளவர்கள் அளவிட முடியாத எல்லை அளவுக்கு, தனது திருவடியை நீட்டிய திருமாலின் மருகனே, மனு நீதிச் சோழன் நீதியோடு ஆண்ட சோழ நாடு சிறந்த நிலையை அடையும் பொருட்டு, மேலை வயலூர்** என்னும் தலத்தில் வந்து வாழ்பவனும், தேவர்களின் தலைவன் ஆனவனுமான, பெருமாளே. 
* இப்பாடல் அருணகிரிநாதருக்கு முருகவேள் ஒரு முகத்துடன் வயலூரில் தரிசனம் கொடுத்ததைக் குறிக்கும்.
** வயலூர் சோழ நாட்டின் ராஜகெம்பீரப் பகுதியின் தலைநகர். இங்குதான் சுவாமிகளுக்கு தினம் ஒரு திருப்புகழ் பாடும் வரத்தை முருகன் தந்தான்.வயலூர் திருச்சிராப்பள்ளிக்கு 6 மைல் தொலைவில் தென்மேற்கே உள்ளது.

பாடல் 913 - வயலு¡ர்
ராகம் - ....; தாளம் -

தத்த தனதன தனனா தனனா     தத்த தனதன தனனா தனனா          தத்த தனதன தனனா தனனா ...... தனதான

நெய்த்த சுரிகுழ லறலோ முகிலோ     பத்ம நறுநுதல் சிலையோ பிறையோ          நெட்டை யிணைவிழி கணையோ பிணையோ ...... இனிதூறும் 
நெக்க அமுதிதழ் கனியோ துவரோ     சுத்த மிடறது வளையோ கமுகோ          நிற்கு மிளமுலை குடமோ மலையோ ...... அறவேதேய்ந் 
தெய்த்த இடையது கொடியோ துடியோ     மிக்க திருவரை அரவோ ரதமோ          இப்பொ னடியிணை மலரோ தளிரோ ...... எனமாலாய் 
இச்சை விரகுடன் மடவா ருடனே     செப்ப மருளுட னவமே திரிவேன்          ரத்ந பரிபுர இருகா லொருகால் ...... மறவேனே 
புத்த ரமணர்கள் மிகவே கெடவே     தெற்கு நரபதி திருநீ றிடவே          புக்க அனல்வய மிகஏ டுயவே ...... உமையாள்தன் 
புத்ர னெனஇசை பகர்நூல் மறைநூல்     கற்ற தவமுனி பிரமா புரம்வாழ்          பொற்ப கவுணியர் பெருமா னுருவாய் ...... வருவோனே 
சத்த முடையஷண் முகனே குகனே     வெற்பி லெறிசுட ரயிலா மயிலா          சத்தி கணபதி யிளையா யுளையா ...... யொளிகூருஞ் 
சக்ர தரஅரி மருகா முருகா     உக்ர இறையவர் புதல்வா முதல்வா          தட்ப முளதட வயலூ ரியலூர் ...... பெருமாளே.

எண்ணெய்ப் பசை கொண்டதும் சுருண்டதுமான கூந்தல் கரு மணலோ, மேகமோ? தாமரை மலரின் நறு மணம் வீசும் நெற்றி வில்லோ, பிறைச் சந்திரனோ? நீண்ட இரண்டு கண்களும் அம்போ, மானோ? இனிமையுடன் ஊறி நெகிழ்ந்து வரும் வாயூறலாகிய அமுதத்தைத் தரும் வாயிதழ் பழமோ, பவளமோ? பரிசுத்தமான கழுத்து சங்கோ, கமுக மரமோ? தாழாது நிற்கும் இள மார்பு குடமோ, மலையோ? அடியோடு தேய்ந்து போய் இளைத்த இடுப்பு கொடியோ, உடுக்கையோ? சிறந்த பெண்குறி பாம்போ, ரதமோ? இந்த அழகிய திருவடிகள் இரண்டும் பூவோ, தளிரோ? என்றெல்லாம் மோகம் கொண்டவனாய், காம இச்சையுடன் விலைமாதர்களுடன் பேசுதற்கு அந்த மயக்கமாகவே வீணாகத் திரிகின்ற நான், ரத்தினச் சிலம்பு அணிந்த உன் இரண்டு திருவடிகளையும் ஒரு காலும் மறக்க மாட்டேன். புத்தர்கள், சமணர்கள் மிகவும் அழிவுற, தென் பாண்டிய நாட்டு மன்னன் திரு நீறு இட, மூட்டிய நெருப்பினிடையே நல்ல வண்ணம் ஏடு (எரி படாது பச்சையாய்) ஊறு இல்லாது விளங்க, உமையம்மையின் பிள்ளை என்று சொல்லும்படி இசைத் தமிழால் இயற்றப்பட்ட நூலாகிய வேதம் அனைய தேவாரத்தை உணர்ந்து ஓதிய தவ முனியே, சீகாழியில் வாழ்ந்த புகழ்பெற்ற கவுணியர் குலத்தைச் சேர்ந்த பெருமான் திருவுருவத்துடன், திருஞான சம்பந்தராய் வந்தவனே, சக்தி வாய்ந்த அறுமுகனே, குகனே, மலைகளில் வீற்றிருக்கும் வேலனே, ஒளி வீசும் வேலாயுதனே, மயில் வாகனனே, சக்தி கணபதியின் தம்பியே, என்றும் எங்கும் உள்ளவனே, ஒளி மிக வீசும் சக்ராயுதத்தை ஏந்திய திருமாலின் மருகனே, முருகனே, சினம் மிகுந்த இறையனார் சிவபெருமானின் மகனே, குளிர்ச்சி பொருந்திய நீர் நிலைகள் உள்ள வயலூரில்* தகுதியுடன் வீற்றிருக்கும் பெருமாளே. 
* வயலூர் சோழ நாட்டின் ராஜகெம்பீரப் பகுதியின் தலைநகர். இங்குதான் சுவாமிகளுக்கு தினம் ஒரு திருப்புகழ் பாடும் வரத்தை முருகன் தந்தான். வயலூர் திருச்சிராப்பள்ளிக்கு 6 மைல் தொலைவில் தென்மேற்கே உள்ளது.

பாடல் 914 - வயலு¡ர்
ராகம் - ....; தாளம் -

தனன தத்தன தானன தானன     தனன தத்தன தானன தானன          தனன தத்தன தானன தானன ...... தனதான

முலைம றைக்கவும் வாசலி லேதலை     மறைய நிற்கவும் ஆசையு ளோரென          முகிழ்ந கைச்சிறு தூதினை யேவவு ...... முகமோடே 
முகம ழுத்தவும் ஆசைகள் கூறவு     நகம ழுத்தவும் லீலையி லேயுற          முறைம சக்கவும் வாசமு லாமல ...... ரணைமீதே 
கலைநெ கிழ்க்கவும் வாலிப ரானவர்     உடல்ச ளப்பட நாள்வழி நாள்வழி          கறைய ழிக்கவு நானென வேயணி ...... விலையீதே 
கடிய சத்திய மாமென வேசொலி     யவர்கொ டப்பண மாறிட வீறொடு          கடுக டுத்திடு வாரொடு கூடிய ...... தமையாதோ 
மலையை மத்தென வாசுகி யேகடை     கயிறெ னத்திரு மாலொரு பாதியு          மருவு மற்றது வாலியு மேலிட ...... அலையாழி 
வலய முட்டவொ ரோசைய தாயொலி     திமிதி மித்திமெ னாவெழ வேயலை          மறுகி டக்கடை யாவெழ மேலெழு ...... மமுதோடே 
துலைவ ருத்திரு மாமயில் வாழ்வுள     வயலை யற்புத னேவினை யானவை          தொடர றுத்திடு மாரிய கேவலி ...... மணவாளா 
துவள்க டிச்சிலை வேள்பகை வாதிரு     மறுவொ ரெட்டுட னாயிர மேலொரு          துகள றுத்தணி யாரழ காசுரர் ...... பெருமாளே.

மார்பகத்தை மறைக்கவும், ஒரு வாசற் படியருகில் தலை மறையும்படி நிற்கவும், ஆசை கொண்டுள்ளவர்கள் போல, அரும்பு போன்ற பற்களைக் காட்டிப் (புன்னகை என்னும்) ஒரு சிறிய தூதை அனுப்பவும், முகத்துடன் முகத்தை வைத்து அழுத்தவும், ஆசை மொழிகளைப் பேசவும், நகங் கொண்டு அழுத்தவும், காம லீலைகளில் பொருந்துமாறு (மாமா, அத்தான் என்ற) உறவு முறைகளைக் கூறி மயக்கவும், நறு மணம் உலாவும் மலர்ப் படுக்கையின் மேல் ஆடையை நெகிழ்ச்சியுறச் செய்தும், இளைஞர்களின் உடல் துன்பப்படவும், நாட்பட நாட்பட இரத்தத்தைச் கெடச் செய்யவும், நான் உள்ளேன் என்பது போல் சார்ந்து நெருங்கி, (எனக்குக் கொடுக்க வேண்டிய) பொருள் இதுவே, (நான் கூறுவது) கண்டிப்பான உண்மை மொழியாகும் என்றெல்லாம் சொல்லி, அவர்கள் கொடுத்து வரும் அந்தப் பணம் வருதல் இல்லாமல் மாறியவுடன், வெறுப்பும், கோபமும் கலந்த மனப்பான்மையோடு, சிடு சிடு என்று சினந்து பேசுவாரோடு ஈடுபட்டு ஒழுகியது முடிவு அடையாதோ? (மந்தர) மலையை மத்தாக நாட்டி, வாசுகி என்னும் பாம்பைக் கடைகின்ற கயிறாகக் கொண்டு, திருமால் ஒரு பாதிப் புறமும், பொருந்திய மற்றொரு பாதிப் புறத்தை வாலியுமாக முற்பட்டு, அலைகள் வீசும் கடலிலிருந்து பூவலயம் முழுமையும் ஒரே பேரொலியாய் சப்தம் திமி திமித்திம் என்று கிளம்பவும், கடல் கலங்கும்படி கடைதலை மேற்கொள்ள, (அப்போது) மேலே எழுந்த அமுதுடனே அதற்கு ஒப்பாக வந்த அழகிய மயில் போன்ற லக்ஷ்மியின் வாழ்க்கைக்கு இடமாக (செல்வச் சிறப்போடு) விளங்கும் வயலூரில் உறையும் அற்புத மூர்த்தியே, வினைகளின் தொடர்பை அறுத்து எறியும் அழகு, மேன்மை இவை கொண்ட, முக்தியைத் தரவல்ல, தேவயானையின் மணவாளனே, வளைந்துள்ள, புதுமை வாய்ந்த (கரும்பு) வில்லைக் கொண்ட காம வேளாகிய மன்மதனுக்கு எதிராய் வந்து (அவன் தரும் சிற்றின்பத்துக்கு எதிரான பேரின்பத்தைத் தரும்) செவ்வேளே, அழகிய மச்ச ரேகை ஆயிரத்து எட்டுக்கும் மேலாகக் கொண்டு, குற்றமெல்லாம் அறுத்து எறியும் ஒப்பற்ற வேலைக் கொண்ட அழகனே, தேவர்கள் பெருமாளே. 

பாடல் 915 - வயலு¡ர்
ராகம் - ....; தாளம் -

தானன தனத்தத் தாத்த, தானன தனத்தத் தாத்த     தானன தனத்தத் தாத்த ...... தனதான

மேகலை நெகிழ்த்துக் காட்டி வார்குழல் விரித்துக் காட்டி     வேல்விழி புரட்டிக் காட்டி ...... யழகாக 
மேனியை மினுக்கிக் காட்டி நாடக நடித்துக் காட்டி     வீடுக ளழைத்துக் காட்டி ...... மதராசன் 
ஆகம முரைத்துக் காட்டி வாரணி தனத்தைக் காட்டி     யாரொடு நகைத்துக் காட்டி ...... விரகாலே 
ஆதர மனத்தைக் காட்டி வேசைகள் மயக்கைக் காட்ட     ஆசையை யவர்க்குக் காட்டி ...... யழிவேனோ 
மோகன விருப்பைக் காட்டி ஞானமு மெடுத்துக் காட்டி     மூதமிழ் முனிக்குக் கூட்டு ...... குருநாதா 
மூவுல களித்துக் காட்டி சேவலை யுயர்த்திக் காட்டு     மூரிவில் மதற்குக் காட்டு ...... வயலூரா 
வாகையை முடித்துக் காட்டி கானவர் சமர்த்தைக் காட்டி     வாழ்மயில் நடத்திக் காட்டு ...... மிளையோனே 
மாமலை வெதுப்பிக் காட்டி தானவர் திறத்தைக் காட்டி     வானவர் சிரத்தைக் காத்த ...... பெருமாளே.

மேகலை என்னும் இடை அணியை தளர்த்திக் காட்டி, நீண்ட கூந்தலை விரித்துக் காட்டி, வேல் போன்ற கண்களைச் சுழற்றிக் காட்டி, அழகு பொலியும்படி உடலை மினுக்கிக் காட்டி, கூத்துகளை நடித்துக் காட்டி, தமது வீடுகளுக்கு அழைத்துக் காட்டி, மன்மத ராஜனுடைய காம சாஸ்திர நூலை விளக்கி எடுத்துச் சொல்லி, கச்சு அணிந்த மார்பைக் காட்டி, எல்லாருடனும் சிரித்துக் காட்டி, தந்திர வகையால் அன்பு வைத்துள்ளது போல் தமது மனதைக் காட்டி, (இவ்வாறு) வேசைகள் காம இச்சையை ஊட்ட எனது ஆசையை அவர்களிடம் காட்டி நான் அழிந்து போவேனோ? அன்பு மிக்க விருப்பத்தைக் காட்டி, ஞான சாஸ்திரங்களை விரித்து எடுத்து உரைத்துக் காட்டி, பழந் தமிழ் வல்ல அகத்திய முனிவருக்கு அந்த ஞானத்தைக் கூட்டுவித்த குருநாதனே, மூவுலகங்களையும் காத்துக் காட்டி, சேவற் கொடியை உயர்த்திக் காட்டும் (வயலூரானே), வலிமை கொண்ட (கரும்பு) வில்லை மனமதனுக்குப் படையாகத் தந்து உதவிய வயலூர்* முருகனே, (வேடர்களுக்குத் தெரியாதவாறு வள்ளியைக் கவர்ந்த) வெற்றியைக் காட்டி, வேடர்களின் திறம் எவ்வளவு சிறிது என்பதைக் காட்டி, (நல் வாழ்வு பெற்ற சூரனாகிய) மயிலை உலகெலாம் செலுத்திக் காட்டிய இளைய பெருமானே, பெரிய கிரவுஞ்ச மலை வெந்து போகும்படிச் செய்து காட்டி, அசுரர்களுடைய திறமை எல்லாம் இவ்வளவு தான் என்பதைக் காட்டி, தேவர்களின் தலையைக் காத்த பெருமாளே. 
* வயலூர் சோழ நாட்டின் ராஜகெம்பீரப் பகுதியின் தலைநகர். இங்குதான் சுவாமிகளுக்கு தினம் ஒரு திருப்புகழ் பாடும் வரத்தை முருகன் தந்தான்.வயலூர் திருச்சிராப்பள்ளிக்கு 6 மைல் தொலைவில் தென்மேற்கே உள்ளது.

பாடல் 916 - வயலு¡ர்
ராகம் - ....; தாளம் -

தான தனதன தந்தன தந்தன     தான தனதன தந்தன தந்தன          தான தனதன தந்தன தந்தன ...... தனதான

வாளின் முனையினு நஞ்சினும் வெஞ்சம     ராஜ நடையினு மம்பதி னும்பெரு          வாதை வகைசெய்க ருங்கணு மெங்கணு ...... மரிதான 
வாரி யமுதுபொ சிந்துக சிந்தசெ     வாயு நகைமுக வெண்பலு நண்புடன்          வாரு மிருமெனு மின்சொலு மிஞ்சிய ...... பனிநீருந் 
தூளி படுநவ குங்கும முங்குளி     ரார மகில்புழு கும்புனை சம்ப்ரம          சோதி வளர்வன கொங்கையு மங்கையு ...... மெவரேனுந் 
தோயு மளறெனி தம்பமு முந்தியு     மாயை குடிகொள்கு டம்பையுள் மன்பயில்          சூளை யரையெதிர் கண்டும ருண்டிட ...... லொழிவேனோ 
காளி திரிபுரை யந்தரி சுந்தரி     நீலி கவுரிப யங்கரி சங்கரி          காரு ணியசிவை குண்டலி சண்டிகை ...... த்ரிபுராரி 
காதல் மனைவிப ரம்பரை யம்பிகை     ஆதி மலைமகள் மங்கலை பிங்கலை          கான நடனமு கந்தவள் செந்திரு ...... அயன்மாது 
வேளி னிரதிய ருந்ததி யிந்திர     தேவி முதல்வர்வ ணங்குத்ரி யம்பகி          மேக வடிவர்பின் வந்தவள் தந்தரு ...... ளிளையோனே 
வேலு மயிலுநி னைந்தவர் தந்துயர்     தீர வருள்தரு கந்தநி ரந்தர          மேலை வயலையு கந்துள நின்றருள் ...... பெருமாளே.

வாளின் நுனியைக் காட்டிலும், விஷத்தைக் காட்டிலும், கொடிய யம ராஜனுடைய தொழிலைக் காட்டிலும், அம்பைக் காட்டிலும் பெரிய வேதனை வகைகளைச் செய்கின்ற கரிய கண்ணும், எங்கும் கிட்டுதற்கு அரிய பாற்கடல் அமுது வெளிப்பட்டு வடியும் சிவந்த வாயும், சிரித்த முகமும், வெண்மையான பற்களும், நட்பைக் காட்டி வாருங்கள், அமருங்கள் எனக் கூறுகின்ற இனிமையான மொழியும், மிகுந்த பன்னீரும், பூந்தாதுடன் புதிய செஞ்சாந்தும், குளிர்ச்சி தரும் அகிலும், புனுகு சட்டமும் அணிகின்ற ஆடம்பரத்துடன் கூடிய ஒளி பெருகுவதான மார்பகங்களும், அழகிய கைகளும், யாராயிருந்த போதிலும் தோய்கின்ற சேறு என்று சொல்லக் கூடிய பெண்குறியும், கொப்பூழும், உலக மாயை குடி கொண்டுள்ள இந்த உடலில் நன்கு காலம் கழிக்கும் வேசியர்களை எதிரில் பார்த்து நான் மருட்சி அடைதலை ஒழிக்க மாட்டேனோ? காளி, மும்மூர்த்திகளுக்கும் மூத்தவள், பராகாச வடிவை உடையவள், அழகி, கரிய நிறத்தி, கெளரி, பயத்தை போக்குபவள், சங்கரி, கருணை நிறைந்த சிவாம்பிகை, சுத்த மாயையாகிய சக்தி, துர்க்கை, திரிபுரத்துப் பகைவர்களை எரித்த சிவனது ஆசை மனையாட்டி, முழு முதல் தேவியான அம்பிகை, ஆதி இமவானின் மகள், என்றும் சுமங்கலியாக இருப்பவள், பொன்னிறம் படைத்தவள், (சுடு)காட்டில் நடனமாட விருப்பம் கொண்டவள், செம்மையான லக்ஷ்மி, பிரமன் தேவி சரஸ்வதி, மன்மதன் மனைவியாகிய ரதி, (வசிட்டர் மனைவியாகிய) அருந்ததி, இந்திர(ன்) தேவி இந்திராணி முதலான தேவதைகள் வணங்கும் முக்கண்ணி, மேக நிறம் கொண்ட திருமாலின் தங்கை (ஆகிய பார்வதி) பெற்றருளிய இளையவனே, வேலையும், மயிலையும் நினைக்கின்ற அடியார்களுடைய துன்பங்கள் நீங்கும்படி அருள் பாலிக்கும் கந்தனே, முடிவே இல்லாத மேலை வயலூர் என்னும் தலத்தில் மனம் மகிழ்ந்து நின்றருளும் பெருமாளே. 

பாடல் 917 - வயலு¡ர்
ராகம் - ....; தாளம் -

தனன தனதன தனதன தனதன     தனன தனதன தனதன தனதன          தத்தத்த தத்ததன தத்தத்த தத்ததனதனன தனதன தனதன தனதன     தனன தனதன தனதன தனதன          தத்தத்த தத்ததன தத்தத்த தத்ததனதனன தனதன தனதன தனதன     தனன தனதன தனதன தனதன          தத்தத்த தத்ததன தத்தத்த தத்ததன ...... தந்ததான

விகட பரிமள ம்ருகமத இமசல     வகிர படிரமு மளவிய களபமு          மட்டித்தி தழ்த்தொடைமு டித்துத்தெ ருத்தலையில்உலவி யிளைஞர்கள் பொருளுட னுயிர்கவர்     கலவி விதவிய னரிவையர் மருள்வலை          யிட்டுத்து வக்கியிடர் பட்டுத் தியக்கியவர்விரவு நவமணி முகபட எதிர்பொரு     புரண புளகித இளமுலை யுரமிசை          தைக்கக்க ழுத்தொடுகை யொக்கப்பி ணித்திறுகி ...... யன்புகூர 
விபுத ரமுதென மதுவென அறுசுவை     அபரி மிதமென இலவிதழ் முறைமுறை          துய்த்துக்க ளித்துநகம் வைத்துப்ப லிற்குறியின்வரையு முறைசெய்து முனிவரு மனவலி     கரையு மரிசன பரிசன ப்ரியவுடை          தொட்டுக்கு லைத்துநுதல் பொட்டுப்ப டுத்திமதர்விழிகள் குழைபொர மதிமுகம் வெயர்வெழ     மொழிகள் பதறிட ரதிபதி கலைவழி          கற்றிட்ட புட்குரல்மி டற்றிற்ப யிற்றிமடு ...... வுந்திமூழ்கிப் 
புகடு வெகுவித கரணமு மருவிய     வகையின் முகிலென இருளென வனமென          ஒப்பித்த நெய்த்தபல புட்பக்கு ழற்சரியஅமுத நிலைமல ரடிமுதல் முடிகடை     குமுத பதிகலை குறைகலை நிறைகலை          சித்தத்த ழுத்தியநு வர்க்கத்து ருக்கியொருபொழுதும் விடலரி தெனுமநு பவமவை     முழுது மொழிவற மருவிய கலவியி          தத்துப்ரி யப்படந டித்துத்து வட்சியினில் ...... நைந்துசோரப் 
புணரு மிதுசிறு சுகமென இகபரம்     உணரு மறிவிலி ப்ரைமைதரு திரிமலம்          அற்றுக்க ருத்தொருமை யுற்றுப்பு லத்தலையில்மறுகு பொறிகழல் நிறுவியெ சிறிதுமெய்     உணர்வு முணர்வுற வழுவற வொருஜக          வித்தைக்கு ணத்ரயமும் நிர்த்தத்து வைத்துமறைபுகலு மநுபவ வடிவினை யளவறு     அகில வெளியையு மொளியையு மறிசிவ          தத்வப்ர சித்திதனை முத்திச்சி வக்கடலை ...... யென்றுசேர்வேன் 
திகுட திகுகுட திகுகுட திகுகுட     தகுட தகுகுட தகுகுட தகுகுட          திக்குத்தி குத்திகுட தக்குத்த குத்தகுடடுமிட டுமிமிட டுமிமிட டுமிமிட     டமட டமமட டமமட டமமட          டுட்டுட்டு டுட்டுமிட டட்டட்ட டட்டமடதிகுர்தி திகுதிகு திகுகுர்தி திகுகுர்தி     தகுர்தி தகுதகு தகுகுர்தி தகுகுர்தி          திக்குத்தி குத்திகுர்தி தக்குத்த குத்தகுர்தி ...... என்றுபேரி 
திமிலை கரடிகை பதலைச லரிதவில்     தமர முரசுகள் குடமுழ வொடுதுடி          சத்தக்க ணப்பறைகள் மெத்தத்தொ னித்ததிரஅசுரர் குலஅரி அமரர்கள் ஜயபதி     குசல பசுபதி குருவென விருதுகள்          ஒத்தத்தி ரட்பலவு முற்றிக்க லிக்கஎழுசிகர கொடுமுடி கிடுகிடு கிடுவென     மகர சலநிதி மொகுமொகு மொகுவென          எட்டுத்தி சைக்களிறு மட்டற்ற றப்பிளிற ...... நின்றசேடன் 
மகுட சிரதலம் நெறுநெறு நெறுவென     அகில புவனமும் ஹரஹர ஹரவென          நக்ஷத்ர முக்கிவிழ வக்கிட்ட துட்டகுணநிருதர் தலையற வடிவெனு மலைசொரி     குருதி யருவியின் முழுகிய கழுகுகள்          பக்கப்ப ழுத்தவுடல் செக்கச்சி வத்துவிடவயிறு சரிகுடல் நரிதின நிணமவை     எயிறு அலகைகள் நெடுகிய குறளிகள்          பக்ஷித்து நிர்த்தமிட ரக்ஷித்த லைப்பரவி ...... யும்பர்வாழ 
மடிய அவுணர்கள் குரகத கஜரத     கடக முடைபட வெடிபட எழுகிரி          அற்றுப்ப றக்கவெகு திக்குப்ப டித்துநவநதிகள் குழைதர இபபதி மகிழ்வுற     அமர்செய் தயில்கையில் வெயிலெழ மயில்மிசை          அக்குக்கு டக்கொடிசெ ருக்கப்பெ ருக்கமுடன்வயலி நகருறை சரவண பவகுக     இயலு மிசைகளு நடனமும் வகைவகை          சத்யப்ப டிக்கினித கஸ்த்யர்க்கு ணர்த்தியருள் ...... தம்பிரானே.

நிரம்ப நறுமணம் வீசும் கஸ்தூரி, பன்னீர் கலந்த சந்தனமும் சேர்ந்துள்ள கலவையை பூசிக்கொண்டு, மலர் மாலையை முடித்துக் கொண்டு, தெருவின் முன் புறத்தில் உலாவி, இளைஞர்களின் பொருளுடன் அவர்கள் உயிரையும் அபகரிக்கும் புணர்ச்சி வகைகளைக் காட்டும் வியக்கத் தக்க விலைமாதர்கள். தங்கள் மயக்க வலையில் இட்டு, கட்டிப் போட்டு, வந்தவர் வேதனைப் படும்படி மயங்கச் செய்து, அவர்களுடைய பொருந்திய நவரத்தின மாலை முன் தோன்றி எதிரில் முட்டுகின்ற நிறைவு கொண்டதும், புளகாங்கிதம் கொண்டதுமான இளம் மார்பகங்கள் நெஞ்சிலே அழுந்தப் பதிய, கழுத்தில் கைகளைக் கட்டிப் பிணித்து, அன்பு மிக்கு எழ, தேவர்களின் அமுதம் எனவும், தேன் எனவும், ஆறு சுவைகளையும் அளவற்றுக் கொண்டது எனவும், இலவ மலரை ஒத்த செவ்விதழ் வாயூறலை பல முறை அனுபவித்து மகிழ்ந்து, நகக் குறிகளை பற்குறி வரையும் முறையிலே பதித்து, தவசிகளும் தமது மனத் திண்மை கரைந்து குலையுமாறு, மஞ்சள் பூசப்பட்ட இடங்களைத் தொட்டும், விருப்பத்துடன் அணிந்த ஆடையை தொட்டுக் குலைத்தும், நெற்றியில் உள்ள பொட்டை அழியச் செய்தும், செருக்கு உள்ள கண்கள் (காதில் உள்ள) குண்டலங்கள் வரையும் எட்டி முட்டி, நிலாப் போன்ற முகத்தில் வியர்வை உண்டாக, பேச்சு பதறி வர, ரதியின் கணவனாகிய மன்மதனுடைய காமசாஸ்திரத்தில் கூறியவாறு கற்றுள்ள புட்குரல்களை கண்டத்தில் பயில்வித்து, மடுவைப் போன்ற கொப்பூழில் முழுகி, புகட்டப்பட்ட பலவிதமான கலவித் தொழில்களை பொருந்திய முறைகளில் செய்து, கரு மேகம் என்றும், இருட்டு என்றும், காடு எனவும் ஒப்புமை கூறப்பட்டதும், நெய்ப் பளபளப்பு உள்ளதும், பல பூக்களை அணிந்துள்ளதுமான கூந்தல் சரிந்து விழ, அந்த இன்பகரமான நிலையை மலர் போன்ற பாதம் முதல் தலை வரையும், சந்திரனுடைய கலையில் தேய்பிறை முதல் வளர்பிறை வரை எப்போதும் மனத்தில் பதித்து, (அந்தச் சிற்றின்ப வழியையே) அனுசரித்து அதிலேயே மனம் உருகி, ஒரு பொழுதும் கூட அந்த வழியை விட்டு விலகுதல் முடியாது என்னும்படியான அனுபவமானது நீங்குதல் இல்லாத, பொருந்திய புணர்ச்சியில் இன்பகரமாய் ஆசையுடன் ஆட்டம் ஆடி, அந்தச் சோர்வினில் மனம் வாட்டம் அடைய, இந்தப் புணர்ச்சி இன்பம் அற்ப சுகம் என்று உணர்ந்து, இக பரத்தின் நன்மையையும் உணர்ந்திடும் அறிவு இல்லாத நான், மயக்கத்தைத் தரும் (ஆணவம், கன்மம், மாயை என்னும்) மும்மலங்களும் நீங்கப் பெற்று, எண்ணம் சிதறாமல் ஒருமைப் பட்டு, ஐம்புலன்களின் வாயிலில் அகப்பட்டு கலங்குகின்ற அறிவை உனது திருவடிகளில் நிலைக்கச் செய்து, சற்று உண்மை உணர்ச்சி அறிவில் ஏற்பட, குற்றமெல்லாம் ஒழிய ஒப்பற்ற இவ்வுலக வித்தைகளையும், (ஸத்வ, ராஜஸ, தாமஸ குணங்களாகிய) முக்குணங்களையும் நான் ஆட்டுவித்தபடியே ஆட வைத்து, வேதங்கள் சொல்லுகின்ற அனுபோக உருவினை அளவு கடந்த முழுப் பெரு வெளியையும் ஒளியையும் அறியக் கூடிய சிவானுபவ உண்மைக் கீர்த்திப் பொருளை, முக்தி என்னும் சிவக் கடலை நான் என்று கூடுவேன்? திகுட திகுகுட திகுகுட திகுகுட தகுட தகுகுட தகுகுட தகுகுட திக்குத்தி குத்திகுட தக்குத்த குத்தகுட டுமிட டுமிமிட டுமிமிட டுமிமிட டமட டமமட டமமட டமமட டுட்டுட்டு டுட்டுமிட டட்டட்ட டட்டமட திகுர்தி திகுதிகு திகுகுர்தி திகுகுர்தி தகுர்தி தகுதகு தகுகுர்தி தகுகுர்தி திக்குத்தி குத்திகுர்தி தக்குத்த குத்தகுர்தி என்ற தாள ஓசைக்கு ஏற்ப, முரசும், ஒரு வகையான திமிலைப் பறையும், கரடி கத்துவது போன்ற பறையும், ஒரு வகையான மத்தளமும், சல் என்னும் ஓசை செய்யும் பறையும், மேளமும், தமரம் என்னும் பறைகளும், முழவு வாத்திய வகைகளோடு உடுக்கையும், தோல் கருவிப் பறைகளும் பேரொலி செய்து அதிர்ச்சியுறச் செய்ய, அசுரர்கள் கூட்டத்துக்குப் பகைவன், தேவர்களின் வெற்றிச் சேனாபதி, நன்மையே தரும் சிவபெருமானுக்கு குருமூர்த்தி என்று வெற்றிச் சின்னங்கள் ஒரே கூட்டமாய் பலவும் நிரம்பி ஒலி செய்ய, எழுந்த பேரொலியினால் மலைகளின் உச்சிகள் எல்லாம் கிடுகிடுகிடு என்று அதிர, மகர மீன்கள் வாழும் கடல் மொகுமொகுமொகு என்று கலக்கம் அடைய, எட்டுத் திசைகளில் உள்ள யானைகள்* அளவு கடந்து கூச்சலிட, (உலகத்தைத் தாங்கி) நிற்கும் ஆதிசேஷனுடைய கி¡£டங்களைக் கொண்ட தலைமுடிகள் நெறுநெறுநெறு என்று முறிய, உலகங்கள் யாவும் அரகர ஹர என்று ஒலி செய்ய, நட்சத்திரங்கள் எல்லாம் உதிர்ந்து விழ, (பொறாமையால்) வேகுதல் போன்ற துஷ்ட குணங்களை உடைய அசுரர்களின் தலைகள் அற்று விழ, அவர்களுடைய மலை போன்ற உருவத்திலிருந்து சொரிகின்ற ரத்தமாகிய ஆற்றில் முழுகியதால் கழுகுகளின் புறமும் முதிர்ந்த உடலும் ஒரே சிவப்பு நிறமாக மாற, அசுரர்கள் வயிற்றிலிருந்து சரிந்த குடலை நரிகள் உண்ண, மாமிசத்தை பற்களை உடைய பேய்களும் நீண்ட பிசாசுகளும் உண்டு நடனம் செய்யும்படி நீ காப்பாற்றிய செயலைப் போற்றி தேவர்கள் வாழவும், அசுரர்கள் இறக்க, குதிரை, யானை, தேர், காலாட் படைகள் உடைந்து பிளவுபட, (சூரனுக்கு அரணாய் இருந்த) ஏழு மலைகளும் உருக் குலைந்து தூள் ஆக, பல திசைகளிலும் (அத்தூள்கள்) படிந்து ஒன்பது ஆறுகளும் குழைவு பெற, வெள்ளை யானையின் தலைவனாகிய இந்திரன் மகிழ்ச்சி உறவும் போர் செய்து, திருக்கையில் உள்ள வேலாயுதம் ஒளி வீச, மயிலின் மேல் விளங்கி, அந்தக் கோழிக் கொடியின் பெருமையுடன், செல்வ வளர்ச்சியுடன் வயலூரில் வீற்றிருக்கும் சரவண பவனே, குகனே, இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழையும் பிரிவு பிரிவாக உண்மையான முறையில் அகத்திய முனிவருக்கு இனிமையாகப் போதித்து அருளிய தம்பிரானே. 
* அஷ்டதிக்கஜங்கள் பின்வருமாறு: ஐராவதம், புண்டா£கம், வாமனம், குமுதம், அஞ்சனம், புஷ்பதந்தம், சார்வபெளமம், சுப்ரதீபம்.

பாடல் 918 - திருத்தவத்துறை
ராகம் - ....; தாளம் -

தானன தந்தன தத்த தத்தன     தானன தந்தன தத்த தத்தன          தானன தந்தன தத்த தத்தன ...... தனதான

காரணி யுங்குழ லைக்கு வித்திடு     கோகன கங்கொடு மெத்தெ னப்பிறர்          காணவ ருந்திமு டித்தி டக்கடு ...... விரகாலே 
காதள வுங்கய லைப்பு ரட்டிம     னாதிகள் வஞ்சமி குத்தி டப்படி          காமுக ரன்புகு வித்த கைப்பொரு ...... ளுறவாகிப் 
பூரண கும்பமெ னப்பு டைத்தெழு     சீதள குங்கும மொத்த சித்திர          பூஷித கொங்கையி லுற்று முத்தணி ...... பிறையான 
போருவை யொன்றுநெ கிழ்த்து ருக்கிமெய்     யாரையும் நெஞ்சைவி லைப்ப டுத்திடு          பூவையர் தங்கள்ம யக்கை விட்டிட ...... அருள்வாயே 
வீரபு யங்கிரி யுக்ர விக்ரம     பூதக ணம்பல நிர்த்த மிட்டிட          வேகமு டன்பறை கொட்டி டக்கழு ...... கினமாட 
வீசிய பம்பர மொப்பெ னக்களி     வீசந டஞ்செய்வி டைத்த னித்துசர்          வேதப ரம்பரை யுட்க ளித்திட ...... வரும்வீரா 
சீரணி யுந்திரை தத்து முத்தெறி     காவிரி யின்கரை மொத்து மெத்திய          சீர்புனை கின்றதி ருத்த வத்துறை ...... வரும்வாழ்வே 
சீறியெ திர்ந்தவ ரக்க ரைக்கெட     மோதிய டர்ந்தருள் பட்ச முற்றிய          தேவர்கள் தஞ்சிறை வெட்டி விட்டருள் ...... பெருமாளே.

மேகத்தை ஒத்த கூந்தலை ஒன்று சேர்த்து அதில் அணியும் செந்தாமரை இதழ் போன்ற தங்க அணியை பக்குவமாக பிறர் காணும்படியாக சிரமப்பட்டு முடித்திட்டு, கடிய தந்திரத்தால் காது வரைக்கும் கயல் மீன் போன்ற கண்களைச் செலுத்தி, மனம், புத்தி, சித்தம், அகங்காரம் எனப்படும் அந்தக்கரணங்கள் எல்லாம் வஞ்சனை எண்ணமே அதிகரித்து, தங்களிடம் வந்து அடிபணியும் காமம் கொண்டவர்கள் ஆசை மயக்கத்துடன் வந்து கொட்டுகின்ற கைப்பொருளினால் உறவு ஏற்பட்டு, பூரண குடம் போல பருத்து எழுகின்ற, குளிர்ந்த செஞ்சாந்து தடவப்பட்டுள்ள, அழகிய, அலங்கரிக்கப்பட்ட மார்பிலே பொருந்த முத்துக்களால் ஆன, பிறைபோன்ற ஆபரணமாகத் தரித்திருக்கும் நகை ஒன்றைத் தளர்த்தி உடலை உருக்கி, யாராயிருந்தாலும் அவருடைய மனதைத் தமக்கு விற்பனையாகும்படி செய்கின்ற பொது மகளிர் மீதுள்ள காம மயக்கத்தை விட்டு ஒழிக்கும்படி அருள் புரிவாயாக. வீரம் மிக்க தோள் மலையை உடைய வலிமை வாய்ந்தவனே, பூத கணங்கள் பல நடனம் ஆட, வேகத்துடனே பறை வாத்தியங்கள் முழங்க, கழுகுக் கூட்டங்கள் ஆட, வீசி எறியப்பட்ட பம்பரம் போல் மகிழ்ச்சி பொங்க நடனம் செய்கின்ற, சிறப்பான ரிஷபக் கொடியை உடைய, சிவபெருமானும் வேத வழக்கில் முதன்மையான பார்வதியும் உள்ளம் மகிழ அவர்கள் எதிரில் வருகின்ற வீரனே, ஒழுங்கு பொருந்திய அலைகள் புரண்டு முத்துக்களை வீசி காவிரியின் கரை மேல் மோதி நிரப்புகின்ற அழகைக் கொண்டுள்ள திருத்தவத்துறையில்* எழுந்தருளிய செல்வமே, கோபித்து எதிர்த்து வந்த அசுரர்களை கெட்டு அழியும்படி மோதி நெருக்கி, அருளும் அன்பும் நிறைந்த தேவர்களுடைய சிறையை வெட்டி நீக்கி அருளிய பெருமாளே. 
* திருத்தவத்துறையின் இன்றைய பெயர் 'லால்குடி'. திருச்சிக்கு அருகில் உள்ளது.

பாடல் 919 - திருத்தவத்துறை
ராகம் - ....; தாளம் -

தனத்த தத்தன தானன தானன     தனத்த தத்தன தானன தானன          தனத்த தத்தன தானன தானன ...... தனதான

நிரைத்த நித்தில நீள்மணி மாலைகள்     பொருத்த வெற்பிணை மார்முலை மேலணி          நெறித்த நெய்க்குழல் வாள்விழி மாமதி ...... முகமானார் 
நெளித்த சிற்றிடை மேல்கலை யாடையை     யுடுத்தி யத்தமு ளோர்தமை யேமயல்          நிரப்பி நித்தமும் வீதியில் நேருறு ...... நெறியாலே 
கரைத்தி தக்குயில் போல்மொழி மாதர்கள்     வலைக்கு ளிற்சுழ லாவகை யேயுன          கழற்று தித்திடு வாழ்வது தான்மன ...... துறமேவிக் 
கதித்த பத்தமை சாலடி யார்சபை     மிகுத்தி ழிக்குண பாதக னேனுயர்          கதிக்க டுத்துயர் வாகவு மேயரு ...... ளுரையாதோ 
வரைத்த நுக்கரர் மாதவ மேவின     ரகத்தி டத்தினில் வாழ்சிவ னார்திரு          மணிச்செ விக்குள்மெய்ஞ் ஞானம தோதிய ...... வடிவேலா 
மதித்த முத்தமி ழாய்வினர் மேலவ     ருரைத்து ளத்திரு வாசக மானது          மனத்து ளெத்தழ கார்புகழ் வீசிய ...... மணிமாடத் 
திரைக்க டற்பொரு காவிரி மாநதி     பெருக்கெ டுத்துமெ பாய்வள நீர்பொலி          செழித்த நெற்செநெல் வாரிக ளேகுவை ...... குவையாகச் 
செருக்கு செய்ப்பதி வாழ்முரு காஅறம்     வளர்த்த நித்யகல் யாணிக்ரு பாகரி          திருத்த வத்துறை மாநகர் தானுறை ...... பெருமாளே.

வரிசையாயுள்ள முத்து மாலைகளையும், நீண்ட ரத்தின மாலைகளையும் தாங்கியுள்ளதும் மலைக்கு ஒப்பானதுமான மார்பகங்களின் மீது விளங்கும் மேலாடை, சுருண்டதும் எண்ணெய்ப் பசை உள்ளதுமான கூந்தல், வாள் போன்ற கண்கள், அழகிய சந்திரன் போன்ற முகம் இவைகளைக் கொண்ட மாதர்கள், நெளியும் சிறிய இடையின் மேல் மேகலை பூண்ட ஆடையை உடுத்தி, பொருள் உள்ளவர்களுக்கு மிக்க காம மயக்கம் தந்து, நாள்தோறும் தெருவில் நைச்சியமான வழியில் கூப்பிட்டு அழைத்து, நன்மை தரும் குயில் போல் மொழி பேசுகின்ற விலைமாதர்களின் வலைக்குள்ளே விழுந்து நான் சுழலாதபடி, உனது திருவடியை வணங்கும் வாழ்வே மனத்தில் பொருந்தி, இயற்கையாகவே உண்டாகும் பக்தி நிலை நிரம்பியுள்ள அடியார்களின் கூட்டத்தை மிக இழிவாகப் பேசும் பாவியாகிய நான் உயர்ந்த நற்கதியை நாடி மேன்மை அடையவே உனது திருவருள் உபதேசம் செய்யக்கூடாதோ? மேரு மலையை வில்லாக ஏந்திய கரத்தை உடையவர், நல்ல தவத்தை மேற்கொண்டவர்களின் மனமாகிய இடத்துள் வாழ்கின்றவர் ஆகிய சிவபெருமானின் சிறப்பும் அழகும் கொண்ட காதில் மெய்ஞ்ஞான உபதேசத்தைச் சொன்ன வடிவேலனே, போற்றத் தக்க முத்தமிழை ஆய்ந்தவர்களாகிய மேலோர் சொல்லியுள்ள திருவாசகத்தில் உள்ள உபதேச மொழிகளை (அடியார்கள்) மனதில் போற்றுகின்றதும், அழகு நிறைந்த புகழ் விளங்கும் மணி மாடங்களை உடையதும், அலை வீசும் கடல் போன்ற காவேரியாகிய பெரிய ஆற்றில் வெள்ளம் பெருகிப் பாய்கின்ற வளப்பமுள்ள நீரால் பொலிவதும், நெற்பயிரும், செந்நெல் பயிரும் கும்பல் கும்பலாக விளைந்து பெருகிக் கிடப்பதும் ஆகிய வயலூரில் வாழ்கின்ற முருகனே, (காஞ்சியில் முப்பத்திரண்டு) அறங்களை* வளர்த்த நித்ய கல்யாணியும், அருள் நிறைந்தவளும் ஆகிய உமாதேவி உறையும் திருத்தவத்துறை** ஆகிய லால்குடியில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* பெரிய புராணத்தில் கூறிய முப்பத்திரண்டு அறங்கள் பின்வருமாறு:சாலை அமைத்தல், ஓதுவார்க்கு உணவு, அறுசமயத்தாருக்கும் உணவு, பசுவுக்குத் தீனி, சிறைச் சோறு, ஐயம், தின்பண்டம் நல்கல், அநாதைகளுக்கு உணவு, மகப்பெறுவித்தல், மகவு வளர்த்தல், சிசுக்களுக்குப் பால் நல்கல், அநாதைப் பிணம் சுடுதல், அநாதைகளுக்கு உடை, சுண்ணாம்பு பூசல், நோய்க்கு மருந்து, வண்ணார் தொழில், நாவிதத் தொழில், கண்ணாடி அணிவித்தல், காதோலை போடுதல், கண் மருந்து, தலைக்கு எண்ணெய், ஒத்தடம் தருதல், பிறர் துயர் காத்தல், தண்ணீர்ப் பந்தல், மடம் கட்டுதல், தடாகம் அமைத்தல், சோலை வளர்த்தல், தோல் பதனிடல், மிருகங்களுக்கு உணவு, ஏர் உழுதல், உயிர் காத்தல், கன்னிகாதானம்.
** திருத்தவத்துறையின் இன்றைய பெயர் 'லால்குடி'. திருச்சிக்கு அருகில் உள்ளது.

பாடல் 920 - பூவர்ளுர்
ராகம் - ...; தாளம் -

தான தாத்தன தானா தானன     தான தாத்தன தானா தானன          தான தாத்தன தானா தானன ...... தனதான

காலன் வேற்கணை யீர்வா ளாலமு     நேர்க ணாற்கொலை சூழ்மா பாவிகள்          காம சாத்திர வாய்ப்பா டேணிக ...... ளெவரேனுங் 
காத லார்க்கும்வி னாவாய் கூறிகள்     போக பாத்திர மாமூ தேவிகள்          காசு கேட்டிடு மாயா ரூபிக ...... ளதிமோக 
மாலை மூட்டிகள் வானூ டேநிமிர்     ஆனை போற்பொர நேரே போர்முலை          மார்பு காட்டிகள் நானா பேதக ...... மெனமாயா 
மாப ராக்கிக ளோடே சீரிய     போது போக்குத லாமோ நீயினி          வாவெ னாப்பரி வாலே யாள்வது ...... மொருநாளே 
பால றாத்திரு வாயா லோதிய     ஏடு நீர்க்கெதிர் போயே வாதுசெய்          பாடல் தோற்றிரு நாலா மாயிர ...... சமண்மூடர் 
பாரின் மேற்கழு மீதே யேறிட     நீறி டாத்தமிழ் நாடீ டேறிட          பாது காத்தரு ளாலே கூனிமி ...... ரிறையோனும் 
ஞால மேத்திய தோர்மா தேவியும்     ஆல வாய்ப்பதி வாழ்வா மாறெணு          ஞான பாக்கிய பாலா வேலவ ...... மயில்வீரா 
ஞான தீக்ஷித சேயே காவிரி     யாறு தேக்கிய கால்வாய் மாமழ          நாடு போற்றிய பூவா ளுருறை ...... பெருமாளே.

யமன், வேல், அம்பு, அறுக்கும் வாள், விஷம் இவைகளுக்கு ஒப்பான கண்களைக் கொண்டு கொலைத் தொழிலையே செய்யச் சூழ்ச்சி செய்கின்ற மகா பாவிகள், காம சாஸ்திரத்தை வாய்ப்பாடாகக் கொண்டவர்கள், ஏணியை வைத்து ஏறவிட்டு வரவழைக்கும் தன்மை கொண்டவர்கள், யாராக இருந்தாலும் பாராட்டாமல் காம இச்சை நிறைந்த சொற்களை வாயாரப் பேசுபவர்கள், காம இன்பத்துக்கு இருப்பிடமான மகா மூதேவிகள், பொருள் தா என்று கேட்கின்ற மாயச் சொரூபிகள், அதிக ஆசை மயக்கத்தை மூட்டுபவர்கள், ஆகாயத்தை நிமிர்ந்து நோக்கும் யானையைப் போலச் சண்டை செய்ய நேராகப் போருக்கு எழும் மார்பகங்களைக் காட்டுபவர்கள், இப்படி வேறுபாடுகளை உடைய மாயைகளைச் செய்ய வல்ல பெரிய பராக்குக்காரிகளாகிய வேசையருடன் என் நற்பொழுதைப் போக்குதல் தகுமோ? நீ இனி என்னை வா என்று அன்புடன் அழைத்து ஆள்வதான ஒரு நாள் என்று கிடைக்கும்? (பார்வதி தேவியின்) முலைப்பால் மணம் நீங்காத திருவாயால் நீ (திருஞானசம்பந்தராக வந்து) பாடிய பாடல் உள்ள ஏடு (வைகையாற்றின்) நீரை எதிர்த்துப் போகவும், வாது செய்த பாடலுக்குத் தோற்ற எண்ணாயிரம் சமண மூடர்கள் இப்பூமியில் கழு மேல் ஏறவும், திருநீற்றை இடாதிருந்த தமிழ் நாடு ஈடேற (திரு நீறு அனைவருக்கும் தந்து) பாதுகாத்து, உனது திருவருளால் கூன் நிமிர்ந்த பாண்டியன் நெடுமாறனும், உலகெலாம் போற்ற நின்ற ஒப்பற்ற மாதேவியான (பாண்டியன் மனைவி) மங்கையர்க்கரசியும், திருஆலவாய் என்ற மதுரையில் உள்ளவர்களும் நல் வாழ்வு அடையும்படி திருவுள்ளத்தில் நினைந்தருளிய ஞான பாக்கிய பாலனே, வேலனே, மயில் வீரனே, ஞான அறிவுரைகளைச் செய்த குழந்தையே, காவிரி ஆறு நிறைந்து வரும் கால்வாய்கள் உள்ள சிறந்த மழ நாட்டுப் பகுதியில் சிறப்புடன் உள்ள பூவாளூரில்* வீற்றிருக்கும் பெருமாளே. 
* பூவாளூர் லால்குடிக்கு அருகில் உள்ளது.

பாடல் 921 - திருப்பராய்த்துறை
ராகம் - ....; தாளம் -

தானன தந்தன தாத்த தத்தன     தானன தந்தன தாத்த தத்தன          தானன தந்தன தாத்த தத்தன ...... தனதான

வாசனை மங்கையர் போற்று சிற்றடி     பூஷண கிண்கிணி யார்ப்ப ரித்திட          மாமலை ரண்டென நாட்டு மத்தக ...... முலையானை 
வாடைம யங்கிட நூற்ற சிற்றிழை     நூலிடை நன்கலை தேக்க இக்குவில்          மாரன்வி டுங்கணை போற்சி வத்திடு ...... விழியார்கள் 
நேசிகள் வம்பிக ளாட்ட மிட்டவர்     தீயர்வி ரும்புவர் போற்சு ழற்றியெ          நீசனெ னும்படி யாக்கி விட்டொரு ...... பிணியான 
நீரின்மி குந்துழ லாக்கை யிற்றிட     யோகமி குந்திட நீக்கி யிப்படி          நீயக லந்தனில் வீற்றி ருப்பது ...... மொருநாளே 
தேசம டங்கலு மேத்து மைப்புய     லாயநெ டுந்தகை வாழ்த்த வச்சிர          தேகமி லங்கிய தீர்க்க புத்திர ...... முதல்வோனே 
தீரனெ னும்படி சாற்று விக்ரம     சூரன டுங்கிட வாய்த்த வெற்புடல்          தேயந டந்திடு கீர்த்தி பெற்றிடு ...... கதிர்வேலா 
மூசளி பம்பிய நூற்றி தழ்க்கம     லாசனன் வந்துல காக்கி வைத்திடு          வேதன கந்தையை மாற்றி முக்கண ...... ரறிவாக 
மூதறி வுந்திய தீ¨க்ஷ செப்பிய     ஞானம்வி ளங்கிய மூர்த்தி யற்புத          மூவரி லங்குப ராய்த்து றைப்பதி ...... பெருமாளே.

நறு மணம் கொண்ட விலைமாதர்களின் விரும்பத் தக்க சிற்றடியில் ஆபரணமாய் விளங்கும் பாத சதங்கை ஒலி செய்ய, அழகிய மலைகள் இரண்டு என்று சொல்லும்படியாக நிறுத்தப்பட்டு, மத்தகத்தைக் கொண்ட யானை போன்ற மார்பின் வாசனை கலந்து சேர, நூற்கப்பட்ட மெல்லிய இழை நூலை ஒத்த இடையில் அழகிய ஆடை நிறைந்து விளங்க, கரும்பு வில்லை ஏந்திய மன்மதன் ஏவும் தாமரைப் பூவைப் போல் சிவந்து விளங்கும் கண்களை உடையவர்கள். யாருடனும் நேசம் பாராட்டுபவர்கள். பயனிலிகள். (வந்தவரை) பலவிதமான கூத்தாட்டங்கள் ஆடும்படி ஆட்டுவிப்பவர்கள். பொல்லாதவர்கள். விரும்பி நேசிப்பவர் போல் அலைய வைத்து இழிந்தோன் என்னும்படி என்னை ஆக்கிவிட்டு ஒரு நோயாளன் என்னும்படியான நிலைமையில் விடப்பட்டு நிரம்பவும் சுழன்று வேதனைப்படும் இந்த உடலில், கலங்காத சிவ யோக நிலை மேம்பட்டு எழ, என்னை கெட்ட நெறியின்று விலக்கி, இந்தக் கணமே நீ என்னுடைய மார்பகத்தில் வீற்றிருக்கும் ஒப்பற்ற நாள் எனக்கு விடியுமா? தேசம் எல்லாம் போற்றும் கரிய மேக நிறத்தினனான பெருந்தகையாகிய திருமால் வாழ்த்த, அழியாத திருமேனி விளங்கும் பூரணனாகிய சிவபெருமானின் மகனே, முதல்வனே, வீரன் என்னும்படி பேர் பெற்றிருந்த வலிமையாளனே, சூரன் நடுங்கும்படி, வரத்தினால் கிடைத்த அவனது மலை போன்ற உடல் தேய்ந்து ஒழியும்படி, (போரை) நடத்தி புகழை அடைந்த ஒளி வீசும் வேலனே, மொய்க்கின்ற வண்டுகள் நிறைந்த நூறு இதழ்களைக் கொண்ட தாமரை மலரில் வீற்றிருப்பவனும், தோன்றி உலகங்களைப் படைத்து வைத்துள்ளவனுமாகிய, வேதம் ஓதும் பிரமனுடைய ஆணவத்தை நீக்கி, முக்கண்ணராகிய சிவ பெருமான் தெரிந்து கொள்ளும்படி பேரறிவு விளங்கிய உபதேச மொழியைச் சொன்ன ஞான ஒளி வீசும் மூர்த்தியே, அற்புதக் கடவுளராகிய (பிரமன், திருமால், சிவன் ஆகிய) திரிமூர்த்திகளும் விளங்குகின்ற திருப்பராய்த்துறை* என்னும் பதியில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* திருப்பராய்த்துறை திருச்சிக்கு அருகில் உள்ளது.

பாடல் 922 - தென்கடம்பந்துறை
ராகம் - ....; தாளம் -

தனதனன தந்தனந் தந்தனந் தந்தனந்     தனதனன தந்தனந் தந்தனந் தந்தனந்          தனதனன தந்தனந் தந்தனந் தந்தனந் ...... தனதான

புணரியும னங்கனம் புஞ்சுரும் புங்கருங்     கயலினொடு கெண்டையுஞ் சண்டனுங் கஞ்சமும்          புதுநிலவ ருந்தியுந் துஞ்சுநஞ் சும்பொருப் ...... பெறிவேலும் 
பொருவெனஇ கன்றகன் றங்குமிங் குஞ்சுழன்     றிடைகடைசி வந்துவஞ் சம்பொதிந் திங்கிதம்          புவியிளைஞர் முன்பயின் றம்பொனின் கம்பிதக் ...... குழைமோதிக் 
குணலையொடு மிந்த்ரியஞ் சஞ்சலங் கண்டிடும்     படியமர்பு ரிந்தருஞ் சங்கடஞ் சந்ததங்          கொடுமைசெய்து சங்கொடுஞ் சிங்கிதங் குங்கடைக் ...... கணினார்பால் 
குலவுபல செந்தனந் தந்துதந் தின்புறுந்     த்ரிவிதகர ணங்களுங் கந்தநின் செம்பதங்          குறுகும்வகை யந்தியுஞ் சந்தியுந் தொந்தமற் ...... றமைவேனோ 
துணர்விரிக டம்பமென் தொங்கலும் பம்புறும்     புழுகுமச லம்பசுஞ் சந்தனங் குங்குமந்          தொகுகளப முந்துதைந் தென்றுநன் கொன்றுபத் ...... திருதோளுந் 
தொலைவில்சண்மு கங்களுந் தந்த்ரமந் த்ரங்களும்     பழநிமலை யும்பரங் குன்றமுஞ் செந்திலுந்          துதிசெயுமெ யன்பர்தஞ் சிந்தையுஞ் சென்றுசெய்ப் ...... பதிவாழ்வாய்
கணபணபு யங்கமுங் கங்கையுந் திங்களுங்     குரவுமறு குங்குறுந் தும்பையுங் கொன்றையுங்          கமழ்சடில சம்புவுங் கும்பிடும் பண்புடைக் ...... குருநாதா 
கனகுடகில் நின்றகுன் றந்தருஞ் சங்கரன்     குறுமுனிக மண்டலங் கொண்டுமுன் கண்டிடுங்          கதிசெய்நதி வந்துறுந் தென்கடம் பந்துறைப் ...... பெருமாளே.

(முதல் 9 வரிகள் விலைமாதர் கண்களை வர்ணிக்கின்றன). கடலும், மன்மதனுடைய பாணங்களும், வண்டும், கரிய கயல் மீனும், கெண்டை மீனும், யமனும், தாமரையும், புதிய நிலவை (சந்திரிகையை) உண்ணும் (சகோரப்) பட்சியும், விஷமும், கிரவுஞ்ச மலையைத் தூளாக்கிய (உனது) வேலும் ஒப்பாகும் என்னும்படி, பகை பூண்டதாய், அகன்றதாய், பல திசைகளில் சுழல்வதாய், மத்தியிலும், ஓரத்திலும் சிவந்ததாய், வஞ்சகமான எண்ணத்தை அடக்கியதாய், பூமியில் உள்ள இளைஞர்கள் முன்பு இனிமையை (திறமையுடன்) காட்டி, அழகிய பொன்னால் ஆன, அசைகின்ற குண்டலங்கள் மீது மோதி, ஆரவார நடிப்புடன் (காண்பவரின்) ஐம்பொறிகளும் துன்பம் காணும்படி கலகப் போர் செய்து, கொடிய வேதனை உண்டாகும்படி எப்போதும் கொடுமை செய்யும் கொடி ஏந்தி உள்ளதும், விஷம் தங்குவதுமான கடைக் கண் பார்வை கொண்ட விலைமாதர்களிடத்தில், விளங்கும் பல வகையான செவ்விய பொருள்களை மீண்டும் மீண்டும் கொடுத்து மகிழ்ச்சி அடைகின்ற (மனம், வாக்கு, காயம் என்னும்) மூன்று வகையான கருவிகளும், கந்த வேளே, உனது செம்மை நிறைந்த திருவடியை அணுகுதற்கு, காலையும் மாலையும் உலகத் தொடர்பு நீங்கி ஒருமைப்பட்டு இருக்க மாட்டேனோ? பூங்கொத்துக்கள் விரிந்த கடப்ப மரத்தின் மலர்களால் ஆகிய மென்மையான மாலையும், நிறைந்துள்ள புனுகும், மலையில் விளையும் பசுமையான சந்தனமும், குங்குமமும், கூட்டப்பட்ட கலவைச் சாந்தும் ஒன்று கூடி நெருங்கிப் பொதிந்துள்ளனவும், எப்போதும் நன்மையே பாலிக்கும் பன்னிரண்டு தோள்களும், அழிவு இல்லாத உனது ஆறு முகங்களையும், உனது பூஜைக்கு உரிய நூல்களையும், மந்திரங்களையும், பழனி மலையையும், திருப்பரங்குன்றத்தையும், திருச்செந்தூரையும் துதி செய்து போற்றுகின்ற மெய் அன்பர்களுடைய மனத்தில் புகுந்தும், வயலூர் என்னும் தலத்தில் வீற்றிருப்பவனே, கூட்டமான படங்களை உடைய பாம்பும், கங்கை நதியும், சந்திரனும், குரா மலரும், அறுகம் புல்லும், சிறிய தும்பையும், கொன்றை மலரும் நறுமணம் கமழும் சடையை உடைய சிவபெருமானும் வணங்கும் பெருமையைக் கொண்டுள்ள குரு நாதனே, சிறப்பு வாய்ந்த குடகில் உள்ள மலையினின்று வரும் காவிரி, சிவபெருமானை வழிபடும் குட்டை வடிவம் கொண்ட அகத்தியர் கொண்டு வந்த கமண்டலத்திலிருந்து முன்பு தோன்றி வெளி வந்த* காவிரி நதி வந்து பொருந்தும் தென் கடம்பந்துறையில்** வீற்றிருக்கும் பெருமாளே. 
* நாரதர் சூழ்ச்சியால் விந்திய மலை மேரு மலைக்குப் போட்டியாக உயர்ந்து வழியை அடைத்தது. தேவர்கள் சிவபெருமானை வேண்ட, சிவபெருமான் காவிரியை அழைத்து ஒரு கமண்டலத்தில் அடங்கச் செய்து அகத்தியருடன் அனுப்பினார். அகத்தியர் தென் தேசத்துக்குச் சென்று காவிரியின் நீரைப் பரப்பினார்.
** திருச்சிக்கு மேற்கே உள்ள குழித்தலைக்கு வடமேற்கே 1 மைலில் உள்ளது.

பாடல் 923 - கருவூர்
ராகம் - பூர்விகல்யாணி தாளம் - கண்டசாபு - 2 1/2

தனதானத் தனதான தனதானத் ...... தனதான

மதியால்வித் தகனாகி மனதாலுத் ...... தமனாகிப் 
பதிவாகிச் சிவஞான பரயோகத் ...... தருள்வாயே 
நிதியேநித் தியமேயென் நினைவேநற் ...... பொருளாயோய் 
கதியேசொற் பரவேளே கருவூரிற் ...... பெருமாளே.

என் புத்தியைக் கொண்டு நான் ஒரு பேரறிவாளனாகி, என் மனம் நன்னெறியின் செல்ல அதனால் நான் ஒரு உத்தம மனிதனாகி, சிவ ஞானத்தில் என் சிந்தை ஊன்றுவதாகி, மேலான யோக வழியை நான் பற்றும்படியாக அருள் புரிவாயாக. என் செல்வமே, அழிவில்லாப் பொருளே, எனது தியானப் பொருளே, சிறந்த பேரின்பப் பொருளானவனே, எனக்குப் புகலிடமே, எல்லாராலும் புகழப்பெறும் மேலான செவ்வேளே, கருவூர்த்* தலத்தில் எழுந்தருளிய பெருமாளே. 
* கருவூர் திருச்சிக்கு மேற்கே 45 மைலில் உள்ள கரூர் ஆகும். சோழநாட்டின் தலைநகரான வஞ்சியும் இதுவே.

பாடல் 924 - கருவூர்
ராகம் - ....; தாளம் -

தனனத் தனத்ததன தனனத் தனத்ததன     தனனத் தனத்ததன ...... தனதான

இளநிர்க் குவட்டுமுலை யமுதத் தடத்தைகனி     யிரதக் குடத்தையெணு ...... மரபோடே 
இருகைக் கடைத்துஇடை துவளக் குழற்சரிய     இதழ்சர்க் கரைப்பழமொ ...... டுறழூறல் 
முளரிப் புவொத்தமுக முகம்வைத் தருத்திநல     முதிரத் துவற்பஅல்குல் ...... மிசைமூழ்கி 
மொழிதத் தையொப்பகடை விழிகட் சிவப்பமளி     முழுகிச் சுகிக்கும்வினை ...... யறஆளாய் 
நளினப் பதக்கழலு மொளிர்செச் சைபொற்புயமெ     னயனத் திலுற்றுநட ...... மிடும்வேலா 
நரனுக் கமைத்தகொடி யிரதச் சுதக்களவ     னறைபுட் பநற்றுளவன் ...... மருகோனே 
களபத் தனத்திசுக சரசக் குறத்திமுக     கமலப் புயத்துவளி ...... மணவாளா 
கடலைக் குவட்டவுணை யிரணப் படுத்தியுயர்     கருவைப் பதிக்குளுறை ...... பெருமாளே.

இளநீர் போன்றதும் மலை போன்றதும் ஆகிய மார்பகமாகிய அமுதம் பெருகும் இடத்தை, கனி ரசம் அடங்கியுள்ள குடத்தை கருத்துடன் வழக்கமான முறையில் இரண்டு கைகளாலும் அடைத்து, இடை நெகிழவும், கூந்தல் கலையவும், வாயிதழினின்றும் சர்க்கரை போலவும் பழம் போலவும் ஊறும் (எச்சில்) தேனை தாமரை மலர் போன்ற முகத்தோடு முகம் வைத்து பருகி உண்டு, இன்பம் முற்றுவதாகிய அனுபவத்துடன், இழிந்த பெண்குறியிடத்தே முழுகி, பேச்சு கிளியின் பேச்சுக்கு ஒப்பாக, கடைக் கண்கள் செந்நிறம் கொள்ள படுக்கையில் முழுகி இன்பம் அனுபவிக்கும் தொழில் தொலையும்படியாக, நீ என்னை ஆண்டருளுக. தாமரை போன்ற திருவடியில் உள்ள வீரக் கழலும், விளங்குகின்ற வெட்சி மாலை அணிந்த அழகிய திரு புயங்களும் என் கண்களில் இடம் பெற்று விளங்க நடனம் செய்கின்ற வேலனே, அருச்சுனனுக்கு ஏற்பட்டிருந்த அநுமக் கொடி பறக்கும் தேரை ஓட்டுபவன், (வெண்ணெய்) திருடன், தேன் கொண்ட மலர்களையும் நல்ல துளசி மாலையையும் அணிந்த திருமாலின் மருகனே, கலவைச் சாந்து அணிந்துள்ள மார்பினை உடையவள், இன்பகரமான காமலீலைகள் செய்யும் குறமகள், தாமரையன்ன முகத்தையும் திருக்கரங்களையும் உடைய வள்ளியின் கணவனே, சமுத்திரத்தையும், கிரெளஞ்ச மலையையும் சூரனையும் புண்படுத்தி அழித்து, பேர்பெற்ற மேலான கருவூர்ப் பதிக்குள் வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 925 - கருவூர்
ராகம் - கீரவாணி தாளம் - ஆதி

தனனா தனனத் தனனா தனனத்     தனனா தனனத் ...... தனதான

தசையா கியகற் றையினால் முடியத்     தலைகா லளவொப் ...... பனையாயே 
தடுமா றுதல்சற் றொருநா ளுலகிற்     றவிரா வுடலத் ...... தினைநாயேன் 
பசுபா சமும்விட் டறிவா லறியப்     படுபூ ரணநிட் ...... களமான 
பதிபா வனையுற் றநுபூ தியிலப்     படியே யடைவித் ...... தருள்வாயே 
அசலே சுரர்புத் திரனே குணதிக்     கருணோ தயமுத் ...... தமிழோனே 
அகிலா கமவித் தகனே துகளற்     றவர்வாழ் வயலித் ...... திருநாடா 
கசிவா ரிதயத் தமிர்தே மதுபக்     கமலா லயன்மைத் ...... துனவேளே 
கருணா கரசற் குருவே குடகிற்     கருவூ ரழகப் ...... பெருமாளே.

சதையின் திரளால் முழுமையும் தலை முதல் கால் வரை அலங்காரமாகவே அமையப்பெற்று, சஞ்சலம் என்பது கொஞ்சமேனும் ஒருநாள் கூட இந்த உலகைவிட்டு நீங்காத (எப்போதும் தடுமாறும்) உடம்பை உடைய அடி நாயேன் அகங்காரத்தையும், பந்தங்களையும் விட்டு ஞானத்தால் அறியப் பெறுகின்ற பூரணமானதும், உருவம் இல்லாததும் ஆகிய பரம்பொருளாம் கடவுள் தியானத்தை மேற்கொண்டு, அந்த அனுபவ ஞானத்தில் என் சிந்தனை மாறாத வண்ணம் அப்படியே சேர்ப்பித்து அருள் புரிவாயாக. அசைவே இல்லாத கயிலைமலைக் கடவுள் சிவனார் (அசலேசுரர்*) பெற்ற புத்திரனே, கிழக்குத் திசையில் தோன்றுகின்ற உதயசூரியனின் செம்மை ஒளி உடையவனே, இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழ்க் கடவுளே, சகல வேதாகமங்களிலும் வல்லவனே, குற்றமற்றவர்கள் வாழும் வயலூர் என்ற திருத்தலத்தில் வாழ்வோனே, உள்ளம் கசிபவர்களது மனத்தில் ஊறுகின்ற அமிர்தமே, வண்டுகள் மொய்க்கும் தாமரை மலரை ஆசனமாக உடைய பிரமனின் மைத்துனன்** முறையில் உள்ள கந்த வேளே, கருணை நிறைந்தவனே, சற்குரு மூர்த்தியே, மேற்குத் திசையில் உள்ள கருவூரில்*** வீற்றிருக்கும் அழகுப் பெருமாளே. 
* திருவாரூரில் உள்ள சிவன் கோயிலின் மூலவருக்கு அசலேசுரர் என்று பெயர் - திருவாரூர்ப் புராணம்.
** பிரமன் திருமாலின் மகன். முருகன் திருமாலின் மருமகன். எனவே பிரமனுக்கு முருகன் மைத்துனன்.
*** கருவூர் திருச்சிக்கு மேற்கே 45 மைலில் உள்ள கரூர் ஆகும்.சோழநாட்டின் தலைநகரான வஞ்சியும் இதுவே.

பாடல் 926 - கருவூர்
ராகம் - ....; தாளம் -

தத்தத் தனதன தானன தானன     தத்தத் தனதன தானன தானன          தத்தத் தனதன தானன தானன ...... தனதான

நித்தப் பிணிகொடு மேவிய காயமி     தப்புப் பிருதிவி வாயுவு தேயுவு          நிற்பொற் ககனமொ டாமிவை பூதக ...... லவைமேவி 
நிற்கப் படுமுல காளவு மாகரி     டத்தைக் கொளவுமெ நாடிடு மோடிடு          நெட்டுப் பணிகலை பூணிடு நானெனு ...... மடவாண்மை 
எத்தித் திரியுமி தேதுபொ யாதென     வுற்றுத் தெளிவுண ராதுமெய் ஞானமொ          டிச்சைப் படஅறி யாதுபொய் மாயையி ...... லுழல்வேனை 
எத்திற் கொடுநின தாரடி யாரொடு     முய்த்திட் டுனதரு ளாலுயர் ஞானமு          திட்டுத் திருவடி யாமுயர் வாழ்வுற ...... இனிதாள்வாய் 
தத்தத் தனதன தானன தானன     தித்தித் திமிதிமி தீதக தோதக          டத்தக் குடகுகு தாகுட தீகுட ...... வெனபேரிச் 
சத்தத் தொலிதிகை தாவிட வானவர்     திக்குக் கெடவரு சூரர்கள் தூள்பட          சர்ப்பச் சதமுடி நாணிட வேலதை ...... யெறிவோனே 
வெற்றிப் பொடியணி மேனியர் கோகுல     சத்திக் கிடமருள் தாதகி வேணியர்          வெற்புப் புரமது நீறெழ காணிய ...... ரருள்பாலா 
வெற்புத் தடமுலை யாள்வளி நாயகி     சித்தத் தமர்கும ராஎமை யாள்கொள          வெற்றிப் புகழ்கரு வூர்தனில் மேவிய ...... பெருமாளே.

நாள்தோறும் நோய்களுடன் கூடியது இவ்வுடலாகும். இது நீர், மண், காற்றுடன், நெருப்பும், உள்ளதான பொலிவுள்ள ஆகாயம் எனப்படும் ஐம்பூதங்களின் சேர்க்கையால் உண்டாகித் தோன்றி நிற்பதாகும். உலகத்தை எல்லாம் ஆளவேண்டும், விண்ணவர் இருக்கும் இடத்தையும் கொள்ளவேண்டும் என்று ஆசை கொண்டு அதற்காக எங்கும் ஓடி அலையும். செருக்குடன் அணி கலன்களையும் ஆடைகளையும் அணிந்து நான் என்கின்ற முட்டாள்தனமான அகங்காரத்துடன் ஏமாற்றித் திரியும். இது என்ன ஒருபோதும் பொய்யாகாமல் நிலைத்திருக்கும் என்று திடமாக நினைத்து, தெளிவான உண்மையை உணராமல் மெய்ஞ்ஞானத்தை விரும்ப அறியாமல் பொய்யான உலக மாயைகளில் அலைச்சல் உறுகின்ற என்னை, தந்திரமாகவாவது ஆட்கொண்டு, உன் அடியார்களுடன் என்னைக் கொண்டு சேர்ப்பித்து, உன் திருவருளால் சிறந்த ஞான அமுதத்தைத் தந்து திருவடியாகிய சிறந்த வாழ்வை நான் அடையும்படி இனிதே ஆண்டருள்வாயாக. தத்தத் தனதன தானன தானனதித்தித் திமிதிமி தீதக தோதக டத்தக் குடகுகு தாகுட தீகுட என்று ஒலிக்கும் பேரிகையின் பேரொலி திசைகளைக் கடந்து தாவிச் செல்ல, தேவர்கள் வாழும் திசைகள் கலங்கிக் கெட, வந்த அசுரர்கள் தூளாகிப் பொடிபட, (ஆதிசேஷனாகிய) பாம்பின் நூறு பணா முடிகள் அச்சம் கொள்ள, உனது வேலைச் செலுத்தியவனே, வெற்றியைத் தரும் திருநீற்றை அணிந்த திருமேனியர், ஆயர்பாடியாகிய கோகுலத்தில் வளர்ந்த கிருஷ்ணனாகிய திருமாலுக்கு தமது இடது பாகத்தைத் தந்தருளியவர் (சங்கர நாராயணர்), ஆத்தி மாலைச் சடையை உடைய சிவபெருமான் அருளிய குழந்தையே, மலை போன்ற பெரிய மார்பகங்களை உடைய வள்ளி நாயகியின் உள்ளத்தில் வீற்றிருக்கும் குமரனே, எம்மைப் போன்ற அடியார்களை ஆட்கொள்வதற்காக, வெற்றிப் புகழ் விளங்கும் கருவூரில் வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 927 - கருவூர்
ராகம் - ....; தாளம் -

தத்தன தத்த தனதன, தத்தன தத்த தனதன     தத்தன தத்த தனதனத் ...... தனதான

முட்டம ருட்டி யிருகுழை தொட்டக டைக்க ணியலென     மொட்பைவி ளைத்து முறையளித் ...... திடுமாதர் 
முத்தமி ரத்ந மரகதம் வைத்தவி சித்ர முகபட     மொச்சிய பச்சை யகில்மணத் ...... தனபாரம் 
கட்டிய ணைத்து நகநுதி பட்டக ழுத்தி லிறுகிய     கைத்தல மெய்த்து வசனமற் ...... றுயிர்சோருங் 
கட்டமு யக்கி னநுபவம் விட்டவி டற்கு நியமித     கற்பனை பக்ஷ முடனளித் ...... தருளாதோ 
வெட்டிய கட்க முனைகொடு வட்டகு ணத்து ரணமுக     விக்ரம வுக்ர வெகுவிதப் ...... படைவீரா 
வெற்றியை யுற்ற குறவர்கள் பெற்றகொ டிக்கு மிகமகிழ்     வித்தக சித்த வயலியிற் ...... குமரேசா 
கிட்டிய பற்கொ டசுரர்கள் மட்டற வுட்க வடலொடு     கித்திந டக்கு மலகைசுற் ...... றியவேலா 
கெட்டவ ருற்ற துணையென நட்டருள் சிட்ட பசுபதி     கெர்ப்பபு ரத்தி லறுமுகப் ...... பெருமாளே.

மயக்குவதாகி இரண்டு காதின் குண்டலங்களையும் தொடுகின்ற கடைக் கண்ணின் தன்மை இதுவே என்று (காண்போர்) உள்ளத்தைக் கவர்ந்து உறவு முறையைக் கூட்டி வைக்கும் பொது மகளிர்களின், முத்து, ரத்தினம், மரகதம் இவை வைத்து ஆக்கப்பட்ட விநோதமான மேலாடை இறுக்கச் சுற்றியுள்ள, பூசிய அகிலின் நறு மணம் கொண்ட மார்புப் பாரங்களைக் கட்டிப் பிடித்துத் தழுவி, நகங்களின் நுனி பட்டுள்ள கழுத்தில் அழுத்தமாக அணைத்த கைகள் சோர்ந்து, பேச்சும் அற்றுப்போய், உயிரும் சோரும்படியான கடினமான புணர்தலின் அனுபவத்தை விட்டு ஒழித்த தூர்த்த காமுகனாகிய எனக்கு, வகைப்பட்ட ஒழுக்க நெறி ஒன்றை (உன் திருவடியை) அன்புடனே தந்து அருள்வாயாக. வெட்ட வல்ல வாளின் முனையைக் கொண்டு (பகைவர்களை) அழித்த குணம் கொண்ட வீரனே, போர்க் களத்தில் வலிமையாளனே, கோபம் கொள்பவனே, பலவிதமான படை வீரனே, வெற்றியைப் பெறுகின்ற வேடர்கள் பெற்ற கொடி போன்ற வள்ளியின் மீது மிகவும் மகிழ்ச்சி கொண்ட பேரறிஞனே, சித்த* மூர்த்தியே, வயலூரில் வீற்றிருக்கும் குமரேசனே, (அச்சத்தால்) பற்கள் ஒன்றோடொன்று பட்டு இறுகும்படி அசுரர்கள் அளவு கடந்து பயப்பட, வலிமையோடு ஒற்றைக் காலால் தாவி நடக்கும் பேய்கள் சூழ்ந்துள்ள வேலனே, (நான் என்னும் ஆணவம்) அழிந்தவர்களுக்கு உற்ற துணையாக இருந்து, அவர்களை விரும்பி திருவருள் பாலிக்கும் மேலானவனே, பசுபதீசுரர் என்னும் நாமம் படைத்த சிவபெருமானுடைய தலமாகிய கெர்ப்ப புரத்தில் (கருவூர் என்னும் ஊரில்) வீற்றிருக்கும் ஆறுமுகப் பெருமாளே. 
* சித்தன் - இது முருகன் திருநாமங்களில் ஒன்று, சித்தத்தை நிறைப்பவன்.

பாடல் 928 - கருவூர்
ராகம் - ....; தாளம் -

தந்தன தனன தனதாத்தன     தந்தன தனன தனதாத்தன          தந்தன தனன தனதாத்தன ...... தனதான

சஞ்சல சரித பரநாட்டர்கள்     மந்திரி குமரர் படையாட்சிகள்          சங்கட மகிபர் தொழஆக்கினை ...... முடிசூடித் 
தண்டிகை களிறு பரிமேற்றனி     வெண்குடை நிழலி லுலவாக்கன          சம்ப்ரம விபவ சவுபாக்கிய ...... முடையோராய்க் 
குஞ்சமும் விசிற இறுமாப்பொடு     பஞ்சணை மிசையி லிசையாத்திரள்          கொம்புகள் குழல்கள் வெகுவாத்திய ...... மியல்கீதங் 
கொங்கணி மகளிர் பெருநாட்டிய     நன்றென மனது மகிழ்பார்த்திபர்          கொண்டய னெழுதும் யமகோட்டியை ...... யுணராரே 
பஞ்சவர் கொடிய வினைநூற்றுவர்     வென்றிட சகுனி கவறாற்பொருள்          பங்குடை யவனி பதிதோற்றிட ...... அயலேபோய்ப் 
பண்டையில் விதியை நினையாப்பனி     ரண்டுடை வருஷ முறையாப்பல          பண்புடன் மறைவின் முறையாற்றிரு ...... வருளாலே 
வஞ்சனை நழுவி நிரைமீட்சியில்     முந்துத முடைய மனைவாழ்க்கையின்          வந்தபி னுரிமை யதுகேட்டிட ...... இசையாநாள் 
மண்கொள விசையன் விடுதேர்ப்பரி     யுந்தினன் மருக வயலூர்க்குக          வஞ்சியி லமரர் சிறைமீட்டருள் ...... பெருமாளே.

துயரமான சரித்திரத்தைக் கொண்ட பிற நாட்டவர்களும், மந்திரிகளும், இள வீரர்களைக் கொண்ட படைத் தலைவர்களும், துன்ப நிலையில் இருந்த அரசர்களும், தொழுது நிற்கும்படி கட்டளை செலுத்தவல்ல திருமுடியைச் சூடிக் கொண்டு, பல்லக்கு, யானை, குதிரை இவைகளின் மேல் ஏறி வீற்றிருந்து, ஒப்பற்ற வெண்கொற்றக் குடை நிழலில் செல்பவர்களாய், பெருமை தங்கிய, சிறப்புற்ற, செல்வ வாழ்வான மிக்க பாக்கிய நிலையைக் கொண்டவர்களாய், வெண்சாமரங்கள் வீசப்பட, செருக்குடன் பஞ்சணை மெத்தையில் வீற்றிருந்து, நிரம்பிய ஊது கொம்புகள், குழல்கள் முதலான பலவித வாத்தியங்களினின்றும் எழுகின்ற இசை ஒலி பெருக, நறு மணம் கமழும் பெண்களின் விசேஷ நாட்டியங்களை இவை நன்றாயுள்ளன என்று மனம் மகிழும் பேரரசர்கள், படைப்போனாகிய பிரமனது கணக்கில் உட்படுத்தி, யமன் அவர்களைப் படுத்தப் போகின்ற துன்பங்களை அறியவில்லையோ? தருமன் முதலாய பஞ்ச பாண்டவர்களை கெட்ட செயலைக் கொண்ட துரியோதனன் முதலிய நூற்றுவரும் வெற்றி கொள்ள, சகுனி ஆடிய சூதாட்டத்தினால் தங்கள் பொருளையும், பாகமாய் இருந்த பூமியையும், ஊர்களையும் தோற்றுப் போனதினால், வேற்றிடத்துக்குச் சென்று தமது பண்டைய விதியை நினைத்து, பன்னிரண்டு ஆண்டுகள் பல விதமான விதங்களில் இருந்து, அஞ்ஞாத வாசமாக (ஓராண்டு சென்றபின்) இறைவன் திருவருளால் சபத நாள் (13 ஆண்டுகள்) முடிவு பெற, (துரியோதனால் கவரப்பட்ட) பசுக்களை மீட்டபின், முன்பு தங்களுக்கு இருந்த இல்லற நிலையில் வந்த பிறகு, தங்களுக்கு உரிய பாகத்தைக் கேட்க, (அதற்குத் துரியோதனன்) இணங்காத நாளில், அவர்கள் பாகத்துப் பூமியைப் பெறும்படி, போரில் அர்ச்சுனன் விட்ட தேரின் குதிரையைச் சாரதியாகச் செலுத்திய திருமாலின் மருகனே, வயலூரில் உள்ள குகனே, தேவர்கள் சிறையை மீட்டருளி, வஞ்சி எனப்படும் கருவூரில் உறையும் பெருமாளே. 
இப்பாடலில் மகாபாரத கதைச் சுருக்கத்தைக் காணலாம்.

பாடல் 929 - கருவூர்
ராகம் - ....; தாளம் -

தனதன தந்தன தாத்தன தனதன தந்தன தாத்தன     தனதன தந்தன தாத்தன ...... தனதான

முகிலள கஞ்சரி யாக்குழை யிகல்வன கண்சிவ வாச்சிவ     முறுவல்மு கங்குறு வேர்ப்பெழ ...... வநுபோக 
முலைபுள கஞ்செய வார்த்தையு நிலையழி யும்படி கூப்பிட     முகுளித பங்கய மாக்கர ...... நுதல்சேரத் 
துயரொழு குஞ்செல பாத்திர மெலியமி குந்துத ராக்கினி     துவளமு யங்கிவி டாய்த்தரி ...... வையர்தோளின் 
துவயலி நின்றன வ்யாத்தமும் வயலியல் வஞ்சியில் மேற்பயில்     சொருபமு நெஞ்சிலி ராப்பகல் ...... மறவேனே 
சகலம யம்பர மேச்சுரன் மகபதி யுய்ந்திட வாய்த்தருள்     சரவண சம்பவ தீர்க்கஷண் ...... முகமாகிச் 
சருவுக்ர வுஞ்சசி லோச்சய முருவவெ றிந்தகை வேற்கொடு     சமரமு கந்தனில் நாட்டிய ...... மயிலேறி 
அகிலமு மஞ்சிய வாக்ரம விகடப யங்கர ராக்கத     அசுரர கங்கெட வார்த்திடு ...... கொடிகூவ 
அமரர டங்கலு மாட்கொள அமரர்த லங்குடி யேற்றிட     அமரரை யுஞ்சிறை மீட்டருள் ...... பெருமாளே.

மேகம் போன்ற கரிய கூந்தல் சரிய, (காதிலுள்ள) குண்டலங்களோடு பகைத்து வருவன போன்ற கண்கள் சிவக்க, மகிழ்ச்சியைக் காட்டும் புன் சிரிப்புடன் கூடிய முகத்தில் சிறு வியர்வை தோன்ற, இன்ப நுகர்ச்சிக்கு இடமான மார்பகங்கள் புளகம் கொள்ள, பேச்சும் பதறுவது போல் எழ, குவிந்த தாமரையாக கைகள் நெற்றியில் சேர, துன்பமே பெருகுவதும், நீரோடு கூடியதுமான கொள்கலமாகிய இந்த உடல் மெலிந்து, வயிற்றில் எரி அதிகமாக, துவண்டு போகும் அளவுக்கு தழுவிப் புணர்ந்து களைப்பு அடைந்து, பெண்கள் தோள்களில் துவையல் போல் அரைக்கப் பட்ட நான் உன்னுடைய எங்கும் நிறைந்திருக்கும் தன்மையையும், வயல்கள் பொருந்திய வஞ்சி என்னும் கருவூரில் பொருந்தி விளங்கும் உனது வடிவழகையும் என் மனத்தில் இரவும் பகலும் மறக்க மாட்டேன். எங்கும் நிறைந்த பொருளாகிய பரமேசுரன், நட்சத்திரங்களுக்குத் தலைவனான இந்திரன் உய்யும் பொருட்டு தோற்றுவித்த சரவணபவனே, அறிவும், தெளிவும், வசீகரமும் காட்டும் ஆறு திருமுகங்களைக் கொண்டவனாகி, போராடிய கிரவுஞ்ச மலை ஊடுருவிச் செல்லும்படி செலுத்திய வேலாயுதத்தால் போர்க் களத்தில் நடனம் செய்யும் மயில் மேல் ஏறி, எல்லாரும் பயப்படும்படியான கர்வத்தையும், தொந்தரையையும், அச்சத்தையும் தந்த வலிய ராக்ஷத அசுரர்களின் அகங்காரம் அழியும்படி கொடியில் விளங்கிய கோழி கூவ, தேவர்கள் எல்லாரும் ஆட்கொள்ளப் படவும், தேவர்கள் தங்கள் ஊருக்குக் குடி போகவும் அவர்களைச் (சூரனின்) சிறையினின்று மீட்டு அருளிய பெருமாளே. 

பாடல் 930 - நெருவூர்
ராகம் - ....; தாளம் -

தனன தனதன தனதன தனதன     தனன தனதன தனதன தனதன          தனன தனதன தனதன தனதன ...... தனதான

குருவு மடியவ ரடியவ ரடிமையு     மருண மணியணி கணபண விதகர          குடில செடிலினு நிகரென வழிபடு ...... குணசீலர் 
குழுவி லொழுகுதல் தொழுகுதல் விழுகுதல்     அழுகு தலுமிலி நலமிலி பொறையிலி          குசல கலையிலி தலையிலி நிலையிலி ...... விலைமாதர் 
மருவு முலையெனு மலையினி லிடறியும்     அளக மெனவள ரடவியில் மறுகியு          மகர மெறியிரு கடலினில் முழுகியு ...... முழலாமே 
வயலி நகரியி லருள்பெற மயில்மிசை     யுதவு பரிமள மதுகர வெகுவித          வனச மலரடி கனவிலு நனவிலு ...... மறவேனே 
உருவு பெருகயல் கரியதொர் முகிலெனு     மருது நெறிபட முறைபட வரைதனில்          உரலி னொடுதவழ் விரகுள இளமையு ...... மிகமாரி 
உமிழ நிரைகளி னிடர்கெட வடர்கிரி     கவிகை யிடவல மதுகையு நிலைகெட          வுலவில் நிலவறை யுருவிய வருமையு ...... மொருநூறு 
நிருப ரணமுக வரசர்கள் வலிதப     விசயன் ரதமுதல் நடவிய வெளிமையு          நிகில செகதல முரைசெயு மரிதிரு ...... மருகோனே 
நிலவு சொரிவளை வயல்களு நெடுகிய     குடக தமனியு நளினமு மருவிய          நெருவை நகருறை திருவுரு வழகிய ...... பெருமாளே.

குருவின் நிலையிலும், சீடனாக இருக்கும் போதும், அந்தச் சீடருக்கு அடிமையாக இருக்கும் நிலையிலும், சிவந்த ரத்தினங்களைக் கொண்டுள்ள, கூட்டமான படங்களை உடைய பாம்பின் தன்மையைக் கொண்ட, வளைவுள்ள குண்டலினி யோக நிலையிலும், ஒப்ப மனம் அடங்கி நின்று, உன்னையே வழிபடுகின்ற நற்குணங்களை உடைய சீலர்களுடைய கூட்டத்தைச் சேர்ந்து அவர்கள் வழி நடத்தல், போற்றுதல், விழுந்து வணங்குதல், (பக்திப் பரவசத்தால்) அழுதல் இவை ஏதும் நான் இல்லாதவன், நல்ல குணம் எதுவும் இல்லாதவன், பொறுமை இல்லாதவன், நன்மை பயக்கும் நூல்களைக் கல்லாதவன், சிந்திக்கத் தெரியாதவன், நிலைத்த புத்தி இல்லாதவன், வேசியர்களின் மலை போன்ற மார்பகங்களில் இடறி விழுந்தும், கூந்தல் என்னும் பெயரோடு வளர்கின்ற காட்டில் மனம் மயக்கமுற்றுத் திரிந்தும், மகர மீன்களைப் போல் (காது வரை நீண்டு அங்குள்ள குண்டலங்களைத்) தாக்கும் இரண்டு கண்கள் என்னும் கடலினில் முழுகியும் அலைச்சல் உறாமல், வயலூர்ப் பதியில் அடியேன் உனது திருவடியைப் பெற நீ மயில் மீது வந்து அளித்த நறுமணம் உள்ள, பலவிதமான வண்டுகள் மொய்க்கும், தாமரை மலர் போன்ற திருவடியை கனவிலும் நனவிலும் நான் மறக்க மாட்டேன். உருவம் பெரியதாய் பக்கத்தில் இருந்த கரிய மேகம் போன்ற மருதமரம் தாம் செல்லும் வழியில் முறிக்கப்பட்டு விழ, அதனால் நீதி* வெளிப்பட, (இடுப்பில் கட்டிய) மலை போன்ற உரலினுடன் தவழ்ந்து சென்ற வல்லமை கொண்ட இளமை அழகையும், வலுத்த மழை பொழிய, பசுக்களின் துயர் நீங்க, நெருங்கிய (கோவர்த்தன) மலையை குடையாகப் பிடிக்க வல்ல கருணையான வலிமையையும், நிலை தடுமாற, உலவுவதற்கு இடமில்லாத பாதாள அறையில், (தேவகி - வசுதேவருக்காக) விஸ்வ ரூபத்துடன் தோன்றி எழுந்த அருமையையும், ஒப்பற்ற நூறு (துரியோதனன் முதலிய) அரசர்களும், போர்க்களத்தில் மற்ற அரசர்களும் வலிமை கெட்டொழிய, அர்ச்சுனனுடைய தேரை முன்பு செலுத்திய (அடியார்க்கு உதவும்) எளிமையையும் பற்றி எல்லா பூமிகளும் புகழ்ந்து உரைக்கும் (கண்ணனாம்) திருமாலின் இனிய மருகனே, ஒளி வீசும் சங்குகளும் வயல்களும் வழி நெடுகப் பரந்துள்ளனவும், மேற்குத் திசையில் உள்ள வன்னி மரங்களும் தாமரையும் பொருந்தினவும் ஆகிய நெருவை** என்னும் நகரில் வீற்றிருக்கும், அழகிய திருவுருவம் கொண்ட பெருமாளே. 
* நள கூபரர் என்ற கந்தர்வர்கள் சபிக்கப்பட்டு மருதமரமாக கோகுலத்தில் வளர்ந்தனர். கண்ணன் உரலுடன் தவழ்ந்து மோதி மருத மரத்தையும் சாபத்தையும் முறியடித்தான்.
** 'நெருவை' என்னும் 'நெரூர்' (நெருவூர்) கருவூருக்கு (அதாவது கரூர்) அருகில் உள்ளது.

பாடல் 931 - திருவெஞ்சமாக்கூடல்
ராகம் - சுத்த தன்யாசி தாளம் - அங்கதாளம் - 7 1/2 தகிட-1 1/2, தக-1, தகதிமி-2, தகதிமிதக-3

தந்தனாத் தானத் ...... தனதான

வண்டுபோற் சாரத் ...... தருள்தேடி 
மந்திபோற் காலப் ...... பிணிசாடிச் 
செண்டுபோற் பாசத் ...... துடனாடிச் 
சிந்தைமாய்த் தேசித் ...... தருள்வாயே 
தொண்டராற் காணப் ...... பெறுவோனே 
துங்கவேற் கானத் ...... துறைவோனே 
மிண்டராற் காணக் ...... கிடையானே 
வெஞ்சமாக் கூடற் ...... பெருமாளே.

வண்டு எவ்வாறு மலர்களின் தேனைத் தேடிக் களிக்கிறதோ அவ்வாறு உனது அருளை நான் தேடிக் களிக்குமாறும், குரங்கு எவ்வாறு மரக்கிளைகளைத் தாண்ட வல்லதோ அவ்வாறே நானும் காலனின் பாசக் கயிற்றின் பிணிப்பைத் தாவும் வல்லமை பெறுமாறும், செண்டாயுதத்தை எறிந்தால் எவ்வாறு பகை மாய்க்கப்படுகிறதோ அவ்வாறு நான் பாசங்களுடன் போராடி வெல்லுமாறும், அலைந்து திரியும் என் மனத்தை மாய்த்து சும்மா இருக்கச் செய்து மெய்யறிவைத் தந்தருள்வாயாக. உன் அடியார்களால் காணப்பெறும் தன்மை உடையவனே, தூய்மையான தலமாம் திருவேற்காட்டில் வாழ்பவனே, ஆணவம் மிக்கவர்களால் காணக் கூடாதவனே, திருவெஞ்சமாக்கூடல்* என்ற திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* திருவெஞ்சமாக்கூடல் திருத்தலம் கரூர் ரயில் நிலையத்துக்குத் தெற்கே 12 மைலில் உள்ளது.

பாடல் 932 - திருப்பாண்டிக்கொடுமுடி
ராகம் - மாண்ட் தாளம் - மி.ரசாபு - 3 1/2 தகதிமி-2, தகிட-1 1/2

தனதனத் தனனத் ...... தனதான

இருவினைப் பிறவிக் ...... கடல்மூழ்கி     இடர்கள்பட் டலையப் ...... புகுதாதே 
திருவருட் கருணைப் ...... ப்ரபையாலே     திரமெனக் கதியைப் ...... பெறுவேனோ 
அரியயற் கறிதற் ...... கரியானே     அடியவர்க் கெளியற் ...... புதநேயா 
குருவெனச் சிவனுக் ...... கருள்போதா     கொடுமுடிக் குமரப் ...... பெருமாளே.

நல்வினை, தீவினை இரண்டின் காரணமாக ஏற்படும் பிறவி என்ற கடலில் மூழ்கி, துயரங்கள் ஏற்பட்டு அலைந்து திரியப் புகாமல், உனது திருவருளாம் கருணையென்னும் ஒளியாலே உறுதியான வகையில் நான் நற்கதியைப் பெறமாட்டேனோ? திருமாலும் பிரம்மாவும் அறிவதற்கு அரியவனே, உன் அடியவர்க்கு எளிதாகக் கிட்டும் அற்புதமான நண்பனே, குருமூர்த்தியாக சிவபிரானுக்கு அருளிய ஞானாசிரியனே, கொடுமுடித் தலத்தில்* வீற்றிருக்கும் பெருமாளே. 
* கொடுமுடி ஈரோட்டிலிருந்து தென்கிழக்கே 23 மைலில் உள்ளது.

பாடல் 933 - திருப்பாண்டிக்கொடுமுடி
ராகம் - ....; தாளம் -

தாந்தத் தனதன தாந்தத் தனதன     தாந்தத் தனதன ...... தனதான

காந்தட் கரவளை சேந்துற் றிடமத     காண்டத் தரிவைய ...... ருடனூசி 
காந்தத் துறவென வீழ்ந்தப் படிகுறி     காண்டற் கநுபவ ...... விதமேவிச் 
சாந்தைத் தடவிய கூந்தற் கருமுகில்     சாய்ந்திட் டயில்விழி ...... குழைமீதே 
தாண்டிப் பொரவுடை தீண்டித் தனகிரி     தாங்கித் தழுவுத ...... லொழியேனோ 
மாந்தர்க் கமரர்கள் வேந்தற் கவரவர்     வாஞ்சைப் படியருள் ...... வயலூரா 
வான்கிட் டியபெரு மூங்கிற் புனமிசை     மான்சிற் றடிதொழு ...... மதிகாமி 
பாந்தட் சடைமுடி யேந்திக் குலவிய     பாண்டிக் கொடுமுடி ...... யுடையாரும் 
பாங்கிற் பரகுரு வாங்கற் பனையொடு     பாண்சொற் பரவிய ...... பெருமாளே.

காந்தள் மலரைப் போன்ற, வளையல் அணிந்துள்ள, கைகள் சிவக்க, மன்மதனுடைய வில்லுக்குத் தோதாகும் மாதர்களுடன் ஊசிக்கும் காந்தத்துக்கும் உள்ள உறவைப் போல, அக் காம மயக்கத்தில் விழுந்து, அவ்வாறே பெண் குறியைக் காண்பதற்கு அனுபவ வழிகளை நாடிப் பொருந்தி, நறுஞ்சாந்து தடவப்பட்ட கரிய மேகம் போன்ற கூந்தலின் மேல் சாய்ந்து படுத்து, வேல் போன்ற கண்கள் (காதில் உள்ள) குண்டலங்களின் மேல் தாவிச் சென்று தாக்கும்படியாக, ஆடையைத் தொட்டு மார்பகங்களாகிய மலையைப் பிடித்துத் தழுவும் செயலை ஒழிக்க மாட்டேனோ? மனிதர்களுக்கும் தேவ அரசனாகிய இந்திரனுக்கும் அவரவர்களுடைய விருப்பப்படி அருள் பாலிக்கும் வயலூரனே, ஆகாயத்தைக் கிட்டிய பெரிய மூங்கில் காடு உள்ள (வள்ளிமலைத்) தினைப்புனத்தின் மீது இருந்த மான் போன்ற வள்ளியின் சிறிய பாதங்களைத் தொழுத காதல் மிக்கவனே, பாம்பை தனது சடா முடியில் தாங்கி விளங்குபவரும் பாண்டிக் கொடுமுடி* என்னும் தலத்தை உடையவரும் ஆகிய சிவபெருமானுக்கு, உரிய முறையில் மேலான குருவான சங்கற்பத்தோடு பண் போன்ற சொற்களைக் கொண்டு (பிரணவ மந்திரத்தை) உபதேசித்தளித்த பெருமாளே. 
* கொடுமுடி ஈரோட்டிலிருந்து தென்கிழக்கே 23 மைலில் உள்ளது.

பாடல் 934 - சேலம்
ராகம் - கானடா தாளம் - ஆதி

தனதன தானத் தனதன தானத்     தனதன தானத் ...... தனதான

பரிவுறு நாரற் றழல்மதி வீசச்     சிலைபொரு காலுற் ...... றதனாலே 
பனிபடு சோலைக் குயிலது கூவக்     குழல்தனி யோசைத் ...... தரலாலே 
மருவியல் மாதுக் கிருகயல் சோரத்     தனிமிக வாடித் ...... தளராதே 
மனமுற வாழத் திருமணி மார்பத்     தருள்முரு காவுற் ...... றணைவாயே 
கிரிதனில் வேல்விட் டிருதொளை யாகத்     தொடுகும ராமுத் ...... தமிழோனே 
கிளரொளி நாதர்க் கொருமக னாகித்     திருவளர் சேலத் ...... தமர்வோனே 
பொருகிரி சூரக் கிளையது மாளத்     தனிமயி லேறித் ...... திரிவோனே 
புகர்முக வேழக் கணபதி யாருக்     கிளையவி நோதப் ...... பெருமாளே.

இரக்கம் கலந்த அன்பு சிறிதும் இல்லாமல் நெருப்பை நிலவு வீசுவதாலும், பொதிய மலையினின்று பொருந்தவரும் தென்றல் காற்று (சூடாக) மேலே படுவதனாலும், குளிர்ச்சியுள்ள சோலையில் குயில் ஒன்று சோகமாய்க் கூவுவதாலும், புல்லாங்குழல் ஒப்பற்ற (சோக) ஓசையைத் தருவதாலும், உன்னைப் பிரிந்து தனிமையில் இருக்கும் இந்தப் பெண் தன் இரண்டு கயல் மீன் போன்ற கண்கள் சோர்வடைய, தனியே கிடந்து மிகவும் வாட்டமுற்று தளர்ச்சியுறாமல், அவளின் நொந்த மனம் ஒருநிலைப்பட்டு நிம்மதியுடன் வாழ, உன் அழகிய ரத்ன மணிமாலை அணிந்த மார்பிடத்தே, அருளே உருவான முருகனே, நீ வந்து அவளை இறுக்க அணைவாயாக. கிரெளஞ்ச மலைமீது வேலைச் செலுத்தி, அது பெருந் தொளைபட்டு அழியும்படிச் செய்த குமரனே, இயல், இசை, நாடகம் என்ற மூன்று துறைகள் உள்ள தமிழுக்குப் பெருமானே, பெரும் ஜோதி ஸ்வரூபனான சிவபிரானுக்கு ஒப்பற்ற பிள்ளையாகி, லக்ஷ்மிகரம் பொருந்திய சேலம் என்ற பதியில் வீற்றிருப்பவனே, போருக்கு எழுந்த ஏழு கிரிகளும், சூரனும், அவன் சுற்றத்தாரும் இறக்க, ஒப்பற்ற மயில் வாகனத்தில் ஏறி உலகை வலம் வந்தவனே, புள்ளியை உடைய யானையின் முகத்தவரான கணபதிப் பெருமானுக்கு இளையவனாகிய அற்புதப் பெருமாளே. 
இப்பாட்டு அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவிக்காக பாடியது.கடல், சந்திரன், தென்றல், குயில், புல்லாங்குழல், மன்மதன், மலர்க் கணைகள், ஊர்ப் பெண்களின் ஏச்சு முதலியவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.

பாடல் 935 - ரா.புரம்
ராகம் - ....; தாளம் -

தந்த தானன தத்தன, தந்த தானன தத்தன     தந்த தானன தத்தன ...... தனதான

சங்கு வார்முடி பொற்கழல் பொங்கு சாமரை கத்திகை     தண்டு மாகரி பெற்றவன் ...... வெகுகோடிச் 
சந்த பாஷைகள் கற்றவன் மந்த்ர வாதிச துர்க்கவி     சண்ட மாருத மற்றுள ...... கவிராஜப் 
பங்கி பாலச ரச்வதி சங்க நூல்கள்வி தித்தப்ர     பந்த போதமு ரைத்திடு ...... புலவோன்யான் 
பண்டை மூவெழு வர்க்கெதிர் கண்ட நீயுமெ னச்சில     பஞ்ச பாதக ரைப்புகழ் ...... செயலாமோ 
வெங்கை யானை வனத்திடை துங்க மாமுத லைக்குவெ     ருண்டு மூலமெ னக்கரு ...... டனிலேறி 
விண்ப ராவஅ டுக்கிய மண்ப ராவஅ தற்குவி     தம்ப ராவஅ டுப்பவன் ...... மருகோனே 
கொங்க ணாதித ரப்பெறு கொங்கி னூடுசு கித்திடு     கொங்கின் வீரக ணப்ரிய ...... குமராபொற் 
கொங்கு லாவுகு றக்கொடி கொங்கை யேதழு விச்செறி     கொங்கு ராஜபு ரத்துறை ...... பெருமாளே.

சங்கு வாத்தியம் என்ன, நீண்ட கி¡£டம், பொன்னாலாகிய கழல் என்ன, மேலெழுந்து விளங்கும் சாமரங்கள் என்ன, விருதுக் கொடி என்ன, பல்லக்கு என்ன, குதிரை, யானை என்ன - இவைகளை எல்லாம் உடையவன், பல கோடிக் கணக்கான அழகிய வார்த்தைகளைக் கற்றவன், மந்திர வாதத்தில் வல்லவன், நான்கு வகைக் கவிகளிலும்(*1) வல்லவன், கொடுங் காற்றைப் போல பேச வல்லவன், மற்றும் பல பேர்கள் உள்ள கவிராஜன் என்ற பட்டத்தை உடையவன், பால சரஸ்வதி என்னும் விருதைப் பெற்றவன், சங்க நூல்களில் சொல்லப்பட்ட பிரபந்த அறிவு நூல்களை எடுத்து ஓத வல்ல புலவன் நான். பழைய இருபத்தொரு வள்ளல்களுக்கு ஒப்பானவன் எதிரே உள்ள நீயும் என்றெல்லாம் கூறி ஐம்பெரும் பாதகங்களைச்(*2) செய்பவர்களான சிலரை அங்ஙனம் புகழ்கின்ற செயல் ஆகுமோ? விரும்பத் தக்க துதிக்கையை உடைய கஜேந்திரன் என்ற யானை காட்டிடையே ஒரு பொய்கையில் வலிய முதலைக்கு மருட்சி உற்று, ஆதி மூலமே என்று கூச்சலிட்ட போது, கருடன் மேல் ஏறி, விண்ணுலகம் போற்றவும், அடுக்காயுள்ள பதினாலு உலகங்கள் போற்றவும், அந்த யானைக்கு வேண்டிய நன்மைகளைப் பெருகும்படி அடுத்து உதவும் திருமாலின் மருகனே, கொங்கண முனிவர் முதலியோரால் (பொன்) தரப்பட்ட(*3) கொங்கு நாட்டில் சுகமாக இருக்கின்ற, மணம் வீசும் மாலைகள் அணிந்த, வீரனே, பதினெண் கணங்களும் விரும்புவனே, குமரனே, கொங்கு நறு மணம் வீசும் குறப்பெண்ணாகிய வள்ளியின் அழகிய மார்பகங்களை அணைந்தவனே, செழிப்பான கொங்கு மண்டலத்தில் உள்ள ராசிபுரத்தில்(*4) வீற்றிருக்கும் பெருமாளே. 
* தமிழ்க் கவிதைகள் நான்கு வகைப்படும்:ஆசு - எதுகை மோனையுடன் கூடியது,மதுரம் - இனிமை வாய்ந்தது,சித்திரம் - கற்பனையும் அழகும் மிக்கது,வித்தாரம் - வர்ணனை மிக்கது.
(*2) ஐவகை பாதகங்கள்: கொலை, களவு, சூது, கள்ளுண்ணல், குரு நிந்தை ஆகியவை.
(*3) கொங்கு நாட்டில் இருந்த கொங்கணச் சித்தர் தாமிரம் முதலிய உலோகங்களைப் பொன் செய்து விரும்பினோர்க்குக் கொடுத்தார். எனவே இங்ஙனம் கூறப்பட்டுள்ளது.
(*4) 'ராஜபுரம்' இப்போது 'ராசிபுரம்' என வழங்கப்படுகிறது. இது சேலம் ரயில் நிலையத்திலிருந்து 20 மைலில் உள்ளது.

பாடல் 936 - வி.யமங்கலம்
ராகம் - ......; தாளம் -

தனன தந்தனத் தானான தானன     தனன தந்தனத் தானான தானன          தனன தந்தனத் தானான தானன ...... தனதான

கலக சம்ப்ரமத் தாலேவி லோசன     மலர்சி வந்திடப் பூணார மானவை          கழல வண்டெனச் சா¡£ரம் வாய்விட ...... அபிராமக் 
கனத னங்களிற் கோமாள மாகியெ     பலந கம்படச் சீரோடு பேதக          கரண முஞ்செய்துட் பாலூறு தேனித ...... ழமுதூறல் 
செலுவி மென்பணைத் தோளோடு தோள்பொர     நிலைகு லைந்திளைத் தேராகு மாருயிர்          செருகு முந்தியிற் போய்வீழு மாலுட ...... னநுராகந் 
தெரிகு மண்டையிட் டாராத சேர்வையி     லுருகி மங்கையர்க் காளாகி யேவல்செய்          திடினு நின்கழற் சீர்பாத நானினி ...... மறவேனே 
உலக கண்டமிட் டாகாச மேல்விரி     சலதி கண்டிடச் சேராய மாமவ          ருடன்ம டிந்திடக் கோபாலர் சேரியில் ...... மகவாயும் 
உணர்சி றந்தசக் ராதார நாரணன்     மருக மந்திரக் காபாலி யாகிய          உரக கங்கணப் பூதேசர் பாலக ...... வயலூரா 
விலைத ருங்கொலைப் போர்வேடர் கோவென     இனையு மங்குறப் பாவாய்வி யாகுலம்          விடுவி டென்றுகைக் கூர்வேலை யேவிய ...... இளையோனே 
விறல்சு ரும்புநற் க்¡£தேசி பாடிய     விரைசெய் பங்கயப் பூவோடை மேவிய          விஜய மங்கலத் தேவாதி தேவர்கள் ...... பெருமாளே.

(சேர்க்கையில் உண்டாகும்) ஊடல் கலகப் பரபரப்பால் கண்களாகிய மலர் சிவக்கவும், அணிந்த முத்து மாலைகளும் கழன்று விழவும், (புட்குரல்) வண்டு முதலியவற்றின் ஒலிகளை வெளிப்படுத்தவும், அழகிய பருத்த மார்பகங்களைக் கண்டு பெருங் களிப்புடன் குதித்து மகிழ்பவனாய், (உடலெல்லாம்) பல நகக் குறிகள் உண்டாக, சிறந்த வெவ்வேறு வகையான புணர்ச்சிகளைச் செய்து, மனத்தில் பால் போலவும் தேன் போலவும் இனிக்கின்ற வாயிதழ் அமுதம் போன்ற ஊறலைச் செலுத்தி, மெல்லிய மூங்கிலைப் போன்ற தோளோடு தோள் இணைய நிலைமை தளர்ந்து, அழகிய அரிய உயிர் சோர்வுற்று, பொருந்திய வயிற்றின் மீது போய் விழுகின்ற மயக்கும் காமப்பற்றை வெளிக்காட்டும் களிப்புக் கூத்தாடி, தணிவு பெறாத கூட்டுறவில் உள்ளம் உருகி, விலைமாதர்களுக்கு அடிமைப் பட்டு, அவர்கள் இட்ட வேலைகளைச் செய்த போதிலும், உன்னுடைய வீரக் கழல் அணிந்த சிறப்புற்ற திருவடிகளை நான் இனி மறக்க மாட்டேன். உலக்கையை* துண்டு துண்டாகப் பொடி செய்து ராவித் தூளாக்கி, ஆகாயம் மேலே விரிந்துள்ள நடுக் கடலில் (அப்பொடிகளைச்) சேரும்படி செய்தும், கூட்டமான ஆயர் அனைவரும் (சாபத்தின் காரணமாக) ஒரு சேர இறந்து பட, இடையர்கள் வாழும் சேரியில் குழந்தையாக வளர்ந்தும், ஞானம் சிறந்த சக்ராயுதத்தை ஏந்தியும் இருந்த நாராயணனின் மருகனே, (ஐந்தெழுத்து) மந்திரத்தின் மூலப் பொருள் ஆனவரும், பிரம கபாலத்தைக் கையில் ஏந்தியவரும், பாம்பைக் கையில் வளையாகக் கொண்டவரும், பூதகணங்களைக் கொண்ட தலைவருமாகிய ஈசர் சிவபெருமானின் பிள்ளையே, வயலூரில் வாழ்பவனே, கொலை செய்யும் வில்லைக் கொண்டு போர் புரியும் வேடர்கள் கோ கோ என்று பேரொலி இட்டு நெருங்க, (அதைக் கண்டு) வருந்திய வள்ளி நாயகியை நோக்கி, வருந்துகின்ற அழகிய குறப் பாவையே, நீ வருத்தத்தை விடு விடு என்று கூறி, தான் கையில் ஏந்திய கூர்மையான வேலை (வேடர்கள் மீது) செலுத்திய இளையோனே, வீரம் வாய்ந்த வண்டுகள் நல்ல முயற்சியுடன் தேசி என்னும் ராகத்தைப் பாடிடும், நறு மணம் கொண்ட தாமரைப் பூக்களைக் கொண்ட நீர் நிலைகள் உள்ள விஜயமங்கலத்தில்** வீற்றிருக்கும், தேவாதி தேவர்களின் பெருமாளே. 
* யாதவர்கள் தங்களுள் சாம்பன் என்பவனுக்கு கர்ப்பிணி வேஷமிட்டு, துர்வாச முனிவரை இவளுக்குப் பிறப்பது ஆணோ பெண்ணோ எனக் கேட்க, கோபமடைந்த துர்வாசர் ஓர் இரும்பு உலக்கை பிறக்கும், அதுவே யாதவர் குலத்தை அழிக்கும் என்று சபித்தார். இதை அறிந்த கண்ணன், பிறந்த உலக்கையைப் பொடியாக்கி நடுக்கடலில் கரைக்கச் செய்தான். பின்னர் உலக்கைப் பொடி கரையிலே வந்து கோரைப்புல்லாக முளைக்க, யாதவர் தம்முள் கலகம் மூண்டதும் அப்புல்லைப் பிடுங்கி ஒருவரை மற்றவர் குத்தி இறந்தனர். இரும்புத் துண்டு ஒன்று மீனின் வயிற்றில் வளர, அம்மீனைப் பிடித்த ஒரு வேடன் அதன் வயிற்றிலிருந்த துண்டைத் தன் அம்புநுனியில் வைத்தான். கண்ணனின் இறுதி நாளன்று தூக்கி வைத்திருந்த கண்ணனின் பாதத்தைப் பறவையென எண்ணி வேடன் அந்த அம்பை எய்தான். யாதவகுலத்தில் கடைசியாக எஞ்சிய கண்ணனும் பரமபதம் அடைந்தான்.
** விஜயமங்கலம் ஈரோட்டுக்கும் திருப்பூருக்கும் இடையே உள்ள ரயில் நிலையத்திலிருந்து 2 மைல் வடக்கில் உள்ளது.

பாடல் 937 - சிங்கை - காங்கேயம் -
ராகம் - ....; தாளம் -

தந்ததன தந்த தந்ததன தந்த     தந்ததன தந்த ...... தனதான

சஞ்சரியு கந்து நின்றுமுரல் கின்ற     தண்குவளை யுந்து ...... குழலாலுந் 
தண்டரள தங்க மங்கமணி கின்ற     சண்டவித கும்ப ...... கிரியாலும் 
நஞ்சவினை யொன்றி தஞ்சமென வந்து     நம்பிவிட நங்கை ...... யுடனாசை 
நண்புறெனை யின்று நன்றில்வினை கொன்று     நன்றுமயில் துன்றி ...... வரவேணும் 
கஞ்சமலர் கொன்றை தும்பைமகிழ் விஞ்சி     கந்திகமழ் கின்ற ...... கழலோனே 
கன்றிடுபி ணங்கள் தின்றிடுக ணங்கள்     கண்டுபொரு கின்ற ...... கதிர்வேலா 
செஞ்சொல்புனை கின்ற எங்கள்குற மங்கை     திண்குயம ணைந்த ...... திருமார்பா 
செண்பகமி லங்கு மின்பொழில்சி றந்த     சிங்கையில மர்ந்த ...... பெருமாளே.

வண்டுகள் மகிழ்ந்து, நின்று ¡£ங்காரம் செய்யும் குளிர்ச்சி பொருந்திய குவளை மலர் விளங்கும் கூந்தல் மூலமாகவும், குளிர்ந்த முத்து மாலை, பொன் மாலை ஆகியவற்றை தம்மீது அணிந்துள்ள, வலிமை கொண்ட குடம் போன்ற மார்பகங்கள் மூலமாகவும், விஷம் கொண்ட செயலைப் பொருந்தி, (நீயே) அடைக்கலம் என்று சொல்லி வந்து நான் நம்பும்படி நடிக்கும் அத்தகைய மங்கையுடன் ஆசை கொண்டு, நட்பு வைக்கின்ற என்னைக் காத்தருள, நீ இந்த நாளே, தீய வினைகளை அழித்து, நன்மை தரும் மயிலில் பொருந்தி வந்தருள வேண்டும். தாமரை மலர், கொன்றை மலர், தும்பை மலர், மகிழம்பூ இவைகள் நிறைந்து நறுமணம் கமழும் திருவடியை உடையவனே, வாடி அழுகிய பிணங்களைத் தின்னும் (பேய், நாய், நரி, பருந்து முதலியவற்றின்) கூட்டங்கள் காணும்படி சண்டை செய்யும் ஒளி வீசும் வேலை உடையவனே. பண் நிறைந்த சொல்லை அமைந்துள்ள எங்கள் குறப்பெண்ணாகிய வள்ளியின் வலிய மார்பை அணைந்த அழகிய மார்பனே, செண்பக மலர்கள் விளங்கும் இனிய சோலைகள் சிறப்புடன் மிளிரும் சிங்கை எனப்படும் காங்கேயம்* என்ற தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* காங்கேயம் என்ற தலம், ஈரோடு - திருப்பூர் சாலையில் ஊத்துக்குளி ரயில் நிலையத்திலிருந்து 19 மைலில் உள்ளது.

பாடல் 938 - சிங்கை - காங்கேயம்
ராகம் - ....; தாளம் -

தந்ததன தான தந்ததன தான     தந்ததன தான ...... தனதான

சந்திதொறு நாண மின்றியகம் வாடி     உந்திபொரு ளாக ...... அலைவேனோ 
சங்கைபெற நாளு மங்கமுள மாதர்     தங்கள்வச மாகி ...... அலையாமற் 
சுந்தரம தாக எந்தன்வினை யேக     சிந்தைகளி கூர ...... அருள்வாயே 
தொங்குசடை மீது திங்களணி நாதர்     மங்கைரண காளி ...... தலைசாயத் 
தொந்திதிமி தோதி தந்திதிமி தாதி     என்றுநட மாடு ...... மவர்பாலா 
துங்கமுள வேடர் தங்கள்குல மாதை     மங்களம தாக ...... அணைவோனே 
கந்தமுரு கேச மிண்டசுரர் மாள     அந்தமுனை வேல்கொ ...... டெறிவோனே 
கம்பர்கயி லாசர் மைந்தவடி வேல     சிங்கைநகர் மேவு ...... பெருமாளே.

காலையும் மாலையும் வெட்கம் இல்லாமல் உள்ளம் சோர்வுற்று வயிறே முக்கிய காரியமாக அலைச்சல் உறுவேனோ? தினந்தோறும் அச்சம் கொண்டு, உடல் அழகுள்ள விலைமாதர்களின் வசப்பட்டுத் திரியாமல், அழகு பெற, என்னுடைய வினை தொலைந்து ஒழிய, மனம் மகிழ்ச்சி அடைய, நீஅருள்வாயாக. தொங்குகின்ற சடையின் மேல் சந்திரனை அணிந்துள்ள தலைவர், மங்கையும் போர்க்களத்தை ஆள்பவளுமான காளி நாணித் தலை குனிய, தொந்தி திமிதோதி தந்த திமிதாதி என்று நடனம் ஆடிய சிவபெருமானின் குமாரனே, பெருமை வாய்ந்த வேடர்களுடைய குலத்தில் வளர்ந்த பெண்ணாகிய வள்ளியை மங்களகரமாகத் தழுவியவனே, கந்தனே, முருகேசனே, நெருங்கிப் போரிட வந்த அசுரர்கள் இறக்க, அந்த கூரிய வேல் கொண்டு எறிந்து அழித்தவனே, (கச்சி) ஏகாம்பரநாதர், கயிலாய நாதர் ஆகிய சிவபெருமானின் பிள்ளையே, கூரிய வேலாயுதத்தை உடையவனே, காங்கேய* நகரில் வாழும் பெருமாளே. 
* காங்கேயம் என்ற தலம், ஈரோடு - திருப்பூர் சாலையில் ஊத்துக்குளி ரயில் நிலையத்திலிருந்து 19 மைலில் உள்ளது.

பாடல் 939 - பட்டாலியூர்
ராகம் - ....; தாளம் -

தனதன தனனத் தான தானன     தனதன தனனத் தான தானன          தனதன தனனத் தான தானன ...... தனதான

இருகுழை யிடறிக் காது மோதுவ     பரிமள நளினத் தோடு சீறுவ          இணையறு வினையைத் தாவி மீளுவ ...... வதிசூர 
எமபடர் படைகெட் டோட நாடுவ     அமுதுடன் விடமொத் தாளை யீருவ          ரதிபதி கலைதப் பாது சூழுவ ...... முநிவோரும் 
உருகிட விரகிற் பார்வை மேவுவ     பொருளது திருடற் காசை கூறுவ          யுகமுடி விதெனப் பூச லாடுவ ...... வடிவேல்போல் 
உயிர்வதை நயனக் காதல் மாதர்கள்     மயல்தரு கமரிற் போய்வி ழாவகை          உனதடி நிழலிற் சேர வாழ்வது ...... மொருநாளே 
முருகவிழ் தொடையைச் சூடி நாடிய     மரகத கிரணப் பீலி மாமயில்          முதுரவி கிரணச் சோதி போல்வய ...... லியில்வாழ்வே 
முரண்முடி யிரணச் சூலி மாலினி     சரணெனு மவர்பற் றான சாதகி          முடுகிய கடினத் தாளி வாகினி ...... மதுபானம் 
பருகினர் பரமப் போக மோகினி     அரகர வெனும்வித் தாரி யாமளி          பரிபுர சரணக் காளி கூளிகள் ...... நடமாடும் 
பறையறை சுடலைக் கோயில் நாயகி     இறையொடு மிடமிட் டாடு காரணி          பயிரவி யருள்பட் டாலி யூர்வரு ...... பெருமாளே.

(இவர்களின் கண்கள்) காதிலுள்ள இரண்டு குண்டலங்களையும் மீறி காதுகளை மோதுவன. மணம் மிகுந்த தாமரை மலர்களை (எங்களுக்கு நீ உவமையா என்று) சீறிக் கோபிப்பன. (பயன் தருவதில்) நிகர் இல்லாத முந்தை வினைகளையும் தாவி மீள்வன. மிக்க சூரத்தனம் உடைய யமனுடைய தூதர்களாகிய சேனை அஞ்சிப் பின்னடைந்து ஓடும்படி வழி தேடுவன. அமுதமும் விஷமும் கலந்தன போன்று ஆளையே அறுத்துத் தள்ளுவன. ரதியின் கணவனான மன்மதனுடைய காம சாஸ்திர நூலிலிருந்து சிறிதும் பிறழாத வண்ணம் எவரையும் சூழ்வன. முனிவர்களும் காமத்தால் உருகும்படியாக, தந்திரத்துடன் கூடிய பார்வையை உடையன. பொருளைக் கவரும் பொருட்டு ஆசை மொழிகளைப் பேசுவன. யுக முடிவு தானோ என்று சொல்லும்படி சில சமயம் போர் விளைவிப்பன. வேலாயுதத்தைப் போல உயிரை வதைக்கும் இத்தகைய கண்களை உடைய ஆசை மாதர்களின் காம மயக்கம் தருகின்ற பெரும் பள்ளத்தில் போய் விழாமல் இருக்கும் பொருட்டு, உனது திருவடியின் நிழலில் பொருந்தி வாழும் வாழ்க்கை என்றொரு நாளாவது கிடைக்குமோ? நறு மணம் வீசும் மாலையை அணிந்து, உனக்கு வாகனம் ஆகும்படி விரும்பின* பச்சை ஒளி வீசும் தோகையைக் கொண்ட சிறந்த மயிலின் மேல், முற்றின ஒளி கொண்ட சூரியனுடைய ஒளியைப் போல் விளங்கி வயலூரில் வாழும் செல்வமே, வலிமை வாய்ந்த முடியை உடைய, போர்க்கு உற்ற சூலாயுதத்தை ஏந்தியவள், மாலையை அணிந்தவள், உனக்கு அடைக்கலம் என்று நிற்கும் அடியார்களுக்கு பற்றாக இருக்கும் குணத்தினள், வேகமாகச் செல்லும் கடினமான பெண்சிங்க வாகனம் உடையவள், கள்ளுணவை உண்பவர்களுக்கு மேலான போகத்தை அளிக்கும் அழகி, அரகர என்று நிரம்ப ஒலி செய்பவள், சியாமளப் பச்சை நிறத்தை உடையவள், சிலம்பு அணிந்த கால்களை உடைய காளி, பேய்கள் நடனமாடும், பறைகள் ஒலிப்பதுமான, சுடு காட்டுக் கோயிலின் தலைவி, சிவ பெருமானோடு, அவரது இடப்பாகத்தில் இருந்துகொண்டே, காரணமாக நடனம் செய்பவள், அத்தகைய பைரவியாம் பார்வதி தேவி பெற்றருளியவனும், பட்டாலியூரில்** வீற்றிருப்பவனுமான, பெருமாளே. 
இப்பாடலின் முதல் 10 வரிகள் வேசையரின் கண்களைப் பற்றிய வர்ணனை.* மயிலாகி முருகவேளுக்கு வாகனமாகத் தன் முற்பிறப்பில் சூரன் விரும்பினான்.
** இது 'பட்டாலி சிவ மலை' என்று வழங்கப்படுகிறது. ஈரோடு - திருப்பூர் சாலையில் உள்ள காங்கேயத்துக்கு அருகில் உள்ளது.

பாடல் 940 - பட்டாலியூர்
ராகம் - ....; தாளம் -

தத்தான தனன தனதன தத்தான தனன தனதன     தத்தான தனன தனதன ...... தனதான

கத்தூரி யகரு ம்ருகமத வித்தார படிர இமசல     கற்பூர களப மணிவன ...... மணிசேரக் 
கட்டார வடமு மடர்வன நிட்டூர கலக மிடுவன     கச்சோடு பொருது நிமிர்வன ...... தனமாதர் 
கொத்தூரு நறவ மெனவத ரத்தூறல் பருகி யவரொடு     கொற்சேரி யுலையில் மெழுகென ...... வுருகாமே 
கொக்காக நரைகள் வருமுன மிக்காய விளமை யுடன்முயல்     குற்றேவல் அடிமை செயும்வகை ...... யருளாதோ 
அத்தூர புவன தரிசன நித்தார கனக நெடுமதி     லச்சான வயலி நகரியி ...... லுறைவேலா 
அச்சோவெ னவச வுவகையி லுட்சோர்த லுடைய பரவையொ     டக்காகி விரக பரிபவ ...... மறவேபார் 
பத்தூரர் பரவ விரைவுசெல் மெய்த்தூதர் விரவ வருடரு     பற்றாய பரம பவுருஷ ...... குருநாதா 
பச்சோலை குலவு பனைவளர் மைச்சோலை மயில்கள் நடமிடு     பட்டாலி மருவு மமரர்கள் ...... பெருமாளே.

கஸ்தூரி, அகில், கஸ்தூரி மஞ்சள், நிறையச் சந்தனம், பன்னீர், பச்சைக் கற்பூரம், கலவைச் சாந்து இவைகளை அணிவதாய், ரத்தினங்களுடன் சேர்க்கப்பட்டுக் கட்டப்பட்ட முத்து மாலையும் நெருங்கியதாய், கொடிய கலகங்களை விளைவிப்பதாய், ரவிக்கையுடன் முட்டி நிமிர்வதாய் உள்ள மார்பகங்களை உடைய விலைமாதர்களின் பூங்கொத்திலிருந்து வடிகின்ற தேன் என்று சொல்லும்படி உள்ள வாயிதழ் ஊறலை உண்டு, அந்த மாதர்களுடன் கொல்லன் சேரியில் உள்ள மெழுகு போல் உருகி அழியாமல், கொக்குப் போல வெண்ணிறமாக முடிகள் நரைக்கும் முன்பு, இந்த உடலில் இளம் பருவம் இருக்கும் போதே முயற்சி செய்து, உனக்குப் பணிவிடைகளை அடியேனாகிய நான் செய்யும் வழியை எனக்கு அருள் செய்யக் கூடாதோ? அந்தத் தூர பூமியிலிருந்தே தரிசனத்தை நிச்சயமாகத் தருவதான பொன் நெடு மதிலை அடையாளமாகக் கொண்ட வயலூர் என்ற திருப்பதியில் வீற்றிருக்கும் வேலனே, இது என்ன அதிசயம் என்று உலகோர் சொல்லும்படி, தன் வசம் இழந்த மகிழ்ச்சியில் விரகத்தால் உள்ளம் சோர்வு அடைந்த பரவை நாச்சியார் மீது கண்ணும் கருத்துமாய், பரவையை விட்டுப் பிரிந்திருப்பதால் ஏற்பட்ட கவலை நீங்க, இந்தப் பூமியில் அடியார்க்கு உரிய பத்து இலக்கணங்களும் பொருந்திய சுந்தரர் பரவிப் போற்ற, வேகமாகப் போய் உண்மையான தூதுவராக, உள்ளம் தழைக்க அருளைப் பொழிந்தவரும், உற்ற துணையாக இருப்பவருமான சிவபெருமானுக்கு, புருஷ தத்துவம் மிக நிறைந்த, மேலான குருவே, பசுமையான ஓலைகளைக் கொண்டு விளங்கும் பனை மரங்கள் வளர்ந்துள்ள இருண்ட சோலைகளில் மயில்கள் நடனம் புரியும் பட்டாலியூர்* என்னும் நகரில் வீற்றிருக்கும், தேவர்களின் பெருமாளே. 
* இது பட்டாலி சிவ மலை என்று வழங்கப்படுகிறது.ஈரோடு - திருப்பூர் சாலையில் உள்ள காங்கேயத்துக்கு அருகில் உள்ளது.

பாடல் 941 - பட்டாலியூர்
ராகம் - ....; தாளம் -

தந்தத்தத் தான தனதன தந்தத்தத் தான தனதன     தந்தத்தத் தான தனதன ...... தனதான

சங்கைக்கத் தோடு சிலுகிடு சங்கிச்சட் கோல சமயிகள்     சங்கற்பித் தோதும் வெகுவித ...... கலைஞானச் 
சண்டைக்குட் கேள்வி யலமல மண்டற்குப் பூசை யிடுமவர்     சம்பத்துக் கேள்வி யலமல ...... மிமவானின் 
மங்கைக்குப் பாக னிருடிக ளெங்கட்குச் சாமி யெனவடி     வந்திக்கப் பேசி யருளிய ...... சிவநூலின் 
மந்த்ரப்ரஸ்த் தார தரிசன யந்த்ரத்துக் கேள்வி யலமலம்     வம்பிற்சுற் றாது பரகதி ...... யருள்வாயே 
வெங்கைச்சுக் ¡£பர் படையையி லங்கைக்குப் போக விடவல     வென்றிச்சக் ரேசன் மிகமகிழ் ...... மருகோனே 
வெண்பட்டுப் பூணல் வனகமு கெண்பட்டுப் பாளை விரிபொழில்     விஞ்சிட்டுச் சூழ வெயில்மறை ...... வயலூரா 
கொங்கைக்கொப் பாகும் வடகிரி செங்கைக்கொப் பாகு நறுமலர்     கொண்டைக்கொப் பாகு முகிலென ...... வனமாதைக் 
கும்பிட்டுக் காதல் குனகிய இன்பச்சொற் பாடு மிளையவ     கொங்கிற்பட் டாலி நகருறை ...... பெருமாளே.

சந்தேகக் கூச்சலோடு வாதம் செய்யக் கூடியுள்ள ஆறு வகையான சமயத்தினர்களும் தாம் உறுதி செய்து கொண்டு பேசுகின்ற பல விதமான சாஸ்திர ஞானச் சண்டைகளுக்கு வேண்டிய அறிவு போதும் போதும். கடவுளுக்குப் பூஜை செய்பவர்களுடைய செல்வமாகிய அறிவும் போதும் போதும். இமய மலை அரசனின் பெண்ணாகிய பார்வதிக்குப் பாகர் என்றும், முனிவர்கள் எல்லாம் எங்களுக்குச் சுவாமி என்றும் திருவடியைத் துதிக்க ஓதி விளக்கியுள்ள சிவ நூல்களில் கூறப்பட்ட மந்திரங்களின் கணக்குப் பிரமாண காட்சியை விளக்கும் மந்திர சக்கரங்களைப் பற்றிய ஆராய்ச்சி அறிவும் போதும் போதும். இவ்வாறு வீணான சுற்று வழிகளில் நான் திரிந்து அலையாமல் மேலான வீட்டுப் பேற்றை அருள்வாயாக. மிக்க ஆற்றலைக் கொண்ட சுக்¡£வனுடைய வானர சேனையை (கடல் கடந்து) இலங்கைக்கு போகும்படிச் செய்ய வல்லவனும், வெற்றியையே தருகின்ற சக்கரத்தை ஏந்தியவனுமாகிய திருமால் மிகவும் மனம் மகிழும் மருகனே, வெண் பட்டு அணிந்துள்ளது போல் நல்ல அழகிய பாக்கு மரங்கள் மதிக்கத் தக்க வகையில் பாளைகளை விரிக்கின்ற சோலைகள் மிக்குச் சூழ்வதால் வெயில் மறைபடுகின்ற வயலூரில் வீற்றிருப்பவனே, உனது மார்புக்கு வடக்கே உள்ள மேரு மலையே ஒப்பானது, உனது செவ்விய கைக்கு நறு மணம் வீசும் தாமரையே ஒப்பாகும், உனது கூந்தலுக்கு கரு மேகம் ஒப்பாகும் என்று காட்டில் இருந்த வள்ளியை கும்பிட்டுத் துதித்து வணங்கிய, கொஞ்சிப் பேசி இனிய சொற்களைக் கொண்டு பாடிப் பரவிய, இளையவனே, கொங்கு நாட்டில் உள்ள பட்டாலி நகரில்* வீற்றிருக்கும் பெருமாளே. 
* இது 'பட்டாலி சிவ மலை' என்று வழங்கப்படுகிறது. ஈரோடு - திருப்பூர் சாலையில் உள்ள காங்கேயத்துக்கு அருகில் உள்ளது.

பாடல் 942 - திருமுருகன்பூண்டி
ராகம் - துர்கா தாளம் - சது.ர .ம்பை

தனதனனந் தாந்தத் ...... தனதான

அவசியமுன் வேண்டிப் ...... பலகாலும் 
அறிவினுணர்ந் தாண்டுக் ...... கொருநாளில் 
தவசெபமுந் தீண்டிக் ...... கனிவாகிச் 
சரணமதும் பூண்டற் ...... கருள்வாயே 
சவதமொடுந் தாண்டித் ...... தகரூர்வாய் 
சடுசமயங் காண்டற் ...... கரியானே 
சிவகுமரன் பீண்டிற் ...... பெயரானே 
திருமுருகன் பூண்டிப் ...... பெருமாளே.

உன்னைத் தொழுவது அவசியமென அறிந்து பலமுறையும் பிரார்த்தித்து, எனது அறிவினில் உன்னை உணர்ந்து வருஷத்திற்கு ஒரு நாளாவது தவ ஒழுக்கத்தையும் ஜெபநெறியையும் மேற்கொண்டு உள்ளம் கனிந்து, உனது திருவடிகளை மனத்தே தரிப்பதற்கு நீ அருள்வாயாக. சபதம் செய்து இந்த ஆட்டை* அடக்குவேன் என்றுரைத்து, குதித்து ஆட்டின் மீது ஏறி அதனை வாகனமாகச் செலுத்துவாய். ஆறு** சமயத்தவராலும் காணுதற்கு அரியவனே, சிவகுமாரனே, உன்னை அன்பு கொண்டு நெருங்கினால் நெருங்கியவரை விட்டு ஒருநாளும் பிரியாதவனே, திருமுருகன்பூண்டி*** என்ற தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* நாரதர் செய்த யாகத்தில் தோன்றிய ஒரு முரட்டு ஆட்டுக் கிடாவை வீரபாகு மூலமாக பிடித்துவரச் செய்து, முருகன் அதனை அடக்கி வாகனமாகக் கொண்ட வரலாறு - கந்த புராணம்.
** ஆறு சமயங்கள் - காணாபத்யம், செளரம், சைவம், வைணவம், சாக்தம், கெளமாரம்.*** திருமுருகன்பூண்டி திருப்பூருக்கு வடக்கே 8 மைலில் உள்ளது.

பாடல் 943 - அவிநாசி
ராகம் - காபி ; தாளம் - கண்டசாபு - 2 1/2

தனதானத் தனதான தனதானத் ...... தனதான

இறவாமற் பிறவாமல் எனையாள்சற் ...... குருவாகிப் 
பிறவாகித் திரமான பெருவாழ்வைத் ...... தருவாயே 
குறமாதைப் புணர்வோனே குகனேசொற் ...... குமரேசா 
அறநாலைப் புகல்வோனே அவிநாசிப் ...... பெருமாளே.

இறவாத வரம் தந்தும், மீண்டும் பிறவாத வரம் தந்தும், என்னை ஆண்டருளும் நல்ல குருவாகியும், மற்ற எல்லாத் துணைகள் ஆகியும், நிலையான (ஸ்திரமான) முக்தியாம் மோக்ஷவீட்டை அருள்வாயாக. குறப்பெண் வள்ளியை மணந்தவனே, குகனே, புகழ் வாய்ந்த குமரேசனே, அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு புருஷார்த்தங்களையும் உபதேசிப்பவனே, அவிநாசியில்* வீற்றிருக்கும் பெருமாளே. 
* அவிநாசி திருப்பூர் ரயில் நிலையத்திலிருந்து வடக்கே 8 மைலில் உள்ளது.

பாடல் 944 - அவிநாசி
ராகம் - ....; தாளம் -

தந்தத்தத் தானன தானன     தந்தத்தத் தானன தானன          தந்தத்தத் தானன தானன ...... தனதான

பந்தப்பொற் பாரப யோதர     முந்திச்சிற் றாடகை மேகலை          பண்புற்றுத் தாளொடு மேவிய ...... துகிலோடே 
பண்டெச்சிற் சேரியில் வீதியில்     கண்டிச்சிச் சாரொடு மேவியெ          பங்குக்கைக் காசுகொள் வேசியர் ...... பனிநீர்தோய் 
கொந்துச்சிப் பூவணி கோதையர்     சந்தச்செந் தாமரை வாயினர்          கும்பிட்டுப் பாணியர் வீணிய ...... ரநுராகங் 
கொண்டுற்றுப் பாயலின் மூழ்கினு     மண்டிச்செச் சேயென வானவர்          கொஞ்சுற்றுத் தாழ்பத தாமரை ...... மறவேனே 
அந்தத்தொக் காதியு மாதியும்     வந்திக்கத் தானவர் வாழ்வுறும்          அண்டத்துப் பாலுற மாமணி ...... யொளிவீசி 
அங்கத்தைப் பாவைசெய் தாமென     சங்கத்துற் றார்தமி ழோதவு          வந்துக்கிட் டார்கழு வேறிட ...... வொருகோடிச் 
சந்தச்செக் காளநி சாசரர்     வெந்துக்கத் தூளிப டாமெழ          சண்டைக்கெய்த் தாரம ராபதி ...... குடியேறத் 
தங்கச்செக் கோலசை சேவக     கொங்கிற்றொக் காரவி நாசியில்          தண்டைச்சிக் காரயில் வேல்விடு ...... பெருமாளே.

திரண்ட, அழகிய, கனத்த மார்பகம், வயிற்றில் கட்டப்பட்டுள்ள சிறிதாக அசைந்து விளங்கும் மேகலை என்ற இடை அணி (இவை) நன்கு பொருந்தி பாதம் வரைக்கும் தொங்குகின்ற ஆடையுடன், பழமையாயிருக்கும் பரத்தையர் வசிக்கும் சேரியில் உள்ள தெருவில் (வருபவர்களைப்) பார்த்து, தம்மை இச்சித்து விரும்புவர்களுடன் கூடியே, தம்முடைய பங்குக்கு உரிய பொருளைப் பெற்றுக் கொள்ளும் விலைமாதர், பன்னீர் தோய்ந்துள்ள உச்சியில் கொத்துப் பூக்களை அணிந்த பெண்கள், அழகிய செந்தாமரை போன்ற வாயிதழை உடையவர்கள், வணக்கத்தைக் காட்டும் கைகளை உடையவர்கள், வீண் காலம் போக்குபவர்கள், காம இச்சை (நான் அவர்கள் மீது) கொண்டு, அவர்களிடமே பொருந்தி படுக்கையில் முழுகிய போதிலும், உன்னை நெருங்கி தேவர்கள் ஜே ஜே என்று வாழ்த்தி கொஞ்சுதல் செய்து வணங்கும் திருவடித் தாமரைகளை நான் மறக்க மாட்டேன். அந்த உடலைப் படைக்கும் தலைவனான பிரமனும், திருமாலும் துதிக்கவே தான், அவரவர் வாழ்கின்ற அண்டங்களாகிய இடங்களில் வாழவும், அழகிய இரத்தின மாலையின் ஒளி வீசவும், எலும்பினின்று பெண்ணைப் படைக்கின்றோம் என்று சங்க காலத்துப் புலவர்களின் (தேவாரத்) தமிழ்ப் பாடலை நீ ஓதவும் *, உனது அருமை பெருமை தெரிந்து மகிழ்ந்து உன்னைச் சேராதவர்களாகிய அமணர்கள் கழுமரத்தில் ஏறவும், ஒரு கோடிக் கணக்கான, (ரத்தம் ஒழுகுவதால்) சிவந்த நிறத்தைக் கொண்டவர்களும், விஷம் நிறைந்த குணம் உடையவர்களும் ஆகிய அசுரர்களை (தீயைக் கக்கும் பாணங்களால்) வெந்து சிதற அடிக்கவும், (போர்க்களத்தில்) தூசி போர்வை போல் கிளம்பி எழவும், போரில் இளைத்தவர்களாகிய தேவர்கள் அவர்கள் ஊராகிய அமராவதியில் குடி புகவும், தங்க மயமான செங்கோல் ஆட்சியைப் புரிந்த வலிமையாளனே, கொங்கு நாட்டில் சேர்ந்துள்ள அவிநாசி என்னும் ஊரில் வீற்றிருந்து, தண்டை அணிந்து, அழகிய, கூரிய வேலாயுதத்தைச் செலுத்திய பெருமாளே. 
* திருஞானசம்பந்தர் பானையிலிருந்த எலும்புக் கூட்டிலிருந்து பூம்பாவையை வரவழைத்த நிகழ்ச்சி குறிப்பிடப்படுகிறது.

பாடல் 945 - அவிநாசி
ராகம் - முகாரி தாளம் - ஆதி

தனத்த தந்தன தானன தானன     தனத்த தந்தன தானன தானன          தனத்த தந்தன தானன தானன ...... தனதான

மனத்தி ரைந்தெழு மீளையு மேலிட     கறுத்த குஞ்சியு மேநரை யாயிட          மலர்க்க ணண்டிரு ளாகியு மேநடை ...... தடுமாறி 
வருத்த முந்தர தாய்மனை யாள்மக     வெறுத்தி டங்கிளை யோருடன் யாவரும்          வசைக்கு றுஞ்சொலி னால்மிக வேதின ...... நகையாட 
எனைக்க டந்திடு பாசமு மேகொடு     சினத்து வந்தெதிர் சூலமு மேகையி          லெடுத்தெ றிந்தழல் வாய்விட வேபய ...... முறவேதான் 
இழுக்க வந்திடு தூதர்க ளானவர்     பிடிக்கு முன்புன தாள்மல ராகிய          இணைப்ப தந்தர வேமயில் மீதினில் ...... வரவேணும் 
கனத்த செந்தமி ழால்நினை யேதின     நினைக்க வுந்தரு வாயுன தாரருள்          கருத்தி ருந்துறை வாயென தாருயிர் ...... துணையாகக் 
கடற்ச லந்தனி லேயொளி சூரனை     யுடற்ப குந்திரு கூறென வேயது          கதித்தெ ழுந்தொரு சேவலு மாமயில் ...... விடும்வேலா 
அனத்த னுங்கம லாலய மீதுறை     திருக்க லந்திடு மாலடி நேடிய          அரற்க ரும்பொருள் தானுரை கூறிய ...... குமரேசா 
அறத்தை யுந்தரு வோர்கன பூசுரர்     நினைத்தி னந்தொழு வாரம ராய்புரி          யருட்செ றிந்தவி நாசியுள் மேவிய ...... பெருமாளே.

மனம் சுருங்கி வேதனைப்படும்படி எழுகின்ற கோழையும் அதிகரிக்கவும், கரு நிறமுள்ள தலை மயிர் நரை கொண்டு வெளுக்கவும், தாமரை போன்ற கண்கள் பஞ்சடைந்து பார்வை குறையவும், நடை தடுமாற்றம் அடையவும், துன்பத்தைத் தர, தாயார், மனைவி, மக்கள் ஆகியோர், வெறுப்புக் கொள்ளும் நல்ல சுற்றத்தார் அவருடன் மற்றெல்லாரும் பழிக்கும் படியான சொற்களைச் சொல்வதால், நிரம்ப நாள் தோறும் பரிகசித்துச் சிரிக்க, என்னை அடக்கி வெற்றிக் கொள்ளும் பாசக் கயிறு கொண்டு கோபத்துடன் வந்து எதிர்த்து, சூலத்தைக் கையில் எடுத்து அதை என் மேல் வீசி, நெருப்பை வாய் கக்க, பயம் கொள்ளும்படி (என்னை) இழுக்க வந்திடும் யம தூதர்கள் என்னைப் பிடிப்பதற்கு முன்பாக, உன்னுடைய தாமரையாகிய இரு திருவடிகளையும் அடியேனுக்குத் தரும் பொருட்டு மயிலின் மீது வந்தருள வேண்டும். பொருள் செறிந்த செந்தமிழால் உன்னையே தினந்தோறும் நினைக்கவும் உன்னுடைய நிறைந்த திருவருளைத் தந்தருளுக. என்னுடைய அருமையான உயிர்க்குத் துணையாக (என்) கருத்திலேயே பொருந்தி வீற்றிருந்து அருள் தருவாய். கடல் நீரில் (மாமரமாக) ஒளித்திருந்த சூரனுடைய உடலைப் பிளவு செய்ய அது இரண்டு கூறாகத் தோன்றி எழுந்து, ஒப்பற்ற சேவலும், மயிலும் ஆகும்படி செலுத்திய வேலை உடையவனே, அன்னத்தை வாகனமாக உள்ள பிரமனும் தாமரைப் பூவில் வீற்றிருக்கும் இலக்குமி சேர்ந்துள்ள திருமாலும் தேடிய சிவபெருமானுக்கு அரிய (பிரணவப்) பொருளை விளக்கி உபதேசித்த குமரேசனே, அற நெறியை ஓதுவோர்களும், பெருமை பொருந்திய அந்தணர்களும், உன்னை நாள் தோறும் தொழுபவர்களாய் அமர்ந்திருத்தலை விரும்பியுள்ள அருள் நிறையப் பாலித்து, அவிநாசி* எனும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* அவிநாசி திருப்பூர் ரயில் நிலையத்திலிருந்து வடக்கே 8 மைலில் உள்ளது.

பாடல் 946 - திருப்புக்கொளியூர்
ராகம் - தே. தாளம் - .ங்கீர்ணசாபு - 4 1/2 - எடுப்பு - 3/4 இடம் தகதிமி-2, தகதகிட-2 1/2

தத்தன தானான தத்தன தானான     தத்தன தானான ...... தனதான

பக்குவ வாசார லட்சண சாகாதி     பட்சண மாமோன ...... சிவயோகர் 
பத்தியி லாறாறு தத்துவ மேல்வீடு     பற்றுநி ராதார ...... நிலையாக 
அக்கண மேமாய துர்க்குணம் வேறாக     அப்படை யேஞான ...... வுபதேசம் 
அக்கற வாய்பேசு சற்குரு நாதாவு     னற்புத சீர்பாத ...... மறவேனே 
உக்கிர வீராறு மெய்ப்புய னேநீல     வுற்பல வீராசி ...... மணநாற 
ஒத்தநி லாவீசு நித்தில நீராவி     யுற்பல ராசீவ ...... வயலூரா 
பொக்கமி லாவீர விக்ரம மாமேனி     பொற்ப்ரபை யாகார ...... அவிநாசிப் 
பொய்க்கலி போமாறு மெய்க்கருள் சீரான     புக்கொளி யூர்மேவு ...... பெருமாளே.

பக்குவமான ஆசார ஒழுக்க நிலையிலே நின்று, சிறப்பான பச்சிலை, மூலிகைகள் போன்ற உணவையே உண்டு, மெளனத் தவநிலையில் நிற்கும் சிவயோகிகள் தங்களது பக்தி மூலமாக முப்பத்தாறு* தத்துவங்களுக்கும் மேற்பட்டதாய் உள்ள மோக்ஷ வீட்டைப் பற்றுவதானதும், எந்தவிதமான பற்றும் இல்லாத நிலையை நான் அடைவதற்காகவும், அந்நிலையை நான் அடைந்ததுமே, மாயமாக வந்து என்னைப் பற்றியுள்ள துர்க்குணங்கள் யாவும் என்னை விட்டுப் பிரியவும், அந்த ஞான உபதேசமே என்னைக் காக்கும் ஆயுதமாக மாறி, பாசம் யாவும் அற்றுப்போகும்படி உபதேச மந்திரத்தை வாய்விட்டுக் கூறிய சற்குருநாதனே, உனது அற்புதமான அழகிய திருவடிகளை நான் என்றும் மறவேன். வலிமைமிக்க பன்னிரு தோள்களை, உண்மைக்கு எடுத்துக்காட்டான புயங்களை உடையவனே, நீலோத்பல மலர்க் கூட்டங்களின் நறுமணம் மிகவும் வீசுவதும், பொருந்திய நிலாவின் ஒளி வீசுவதும், முத்தைப் போல் தெளிவான நீருள்ள குளங்களில் குவளைகளும், தாமரைகளும் பூத்திருக்கும் வயலூரின் நாதனே, பொய்யே இல்லாத மெய்யான வீரத்தைக் கொண்டவனே, அழகிய மேனி பொன்னொளியை வீசும் தேகத்தை உடையவனே, அவிநாசி என்ற தலத்தில் இந்தக் கலியுகத்தின் பொய்மை நீங்குமாறு இறைவன் திருவருளின் புகழ் சிறக்கும்படிச் செய்த** திருப்புக்கொளியூர்*** தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* 96 தத்துவங்கள் பின்வருமாறு:36 பரதத்துவங்கள் (அகநிலை): ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து - 25 (புறநிலை): மண், தீ, நீர், காற்று, வெளி.ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை): வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4. 
** திருப்புக்கொளியூர் ஏரியில் குளிக்கச் சென்ற பாலகனை ஒரு முதலை உண்டது. பிறகு ஓராண்டு கழித்து அங்கு சென்ற சுந்தரமூர்த்தி நாயனார் வற்றிய ஏரியின் கரையில் அவினாசியின் மேல் பதிகம் பாட, ஏரி நீர் நிரம்பி, முதலை வந்து கரையில் பாலகனை ஓராண்டு வளர்ச்சியுடன் உயிரோடு உமிழ்ந்தது. இதைத்தான் 'கலியுகத்தின் அருள்' என்று குறிக்கிறார்.
*** திருப்புக்கொளியூர் அவிநாசிக்கு மிகச் சமீபத்தில் உள்ளது.

பாடல் 947 - திருப்புக்கொளியூர்
ராகம் - ....; தாளம் -

தனத்தத்தன தானன தானன     தனத்தத்தன தானன தானன          தனத்தத்தன தானன தானன தந்ததான

மதப்பட்டவி சாலக போலமு     முகப்பிற்சன வாடையு மோடையு          மருக்கற்புர லேபல லாடமு ...... மஞ்சையாரி 
வயிற்றுக்கிடு சீகர பாணியு     மிதற்செக்கர்வி லோசன வேகமு          மணிச்சத்தக டோரபு ரோசமு ...... மொன்றுகோல 
விதப்பட்டவெ ளானையி லேறியு     நிறைக்கற்பக நீழலி லாறியும்          விஷத்துர்க்கன சூளிகை மாளிகை ...... யிந்த்ரலோகம் 
விளக்கச்சுரர் சூழ்தர வாழ்தரு     பிரப்புத்வகு மாரசொ ரூபக          வெளிப்பட்டெனை யாள்வய லூரிலி ...... ருந்தவாழ்வே 
இதப்பட்டிட வேகம லாலய     வொருத்திக்கிசை வானபொ னாயிர          மியற்றப்பதி தோறுமு லாவிய ...... தொண்டர்தாள 
இசைக்கொக்கவி ராசத பாவனை     யுளப்பெற்றொடு பாடிட வேடையி          லிளைப்புக்கிட வார்மறை யோனென ...... வந்துகானிற் 
றிதப்பட்டெதி ரேபொதி சோறினை     யவிழ்த்திட்டவி நாசியி லேவரு          திசைக்குற்றச காயனு மாகிம ...... றைந்துபோமுன் 
செறிப்பித்த கராவதின் வாய்மக     வழைப்பித்தபு ராணக்ரு பாகர          திருப்புக்கொளி யூருடை யார்புகழ் ...... தம்பிரானே.

மதநீர் பெருகுவதற்கு இடமானதும் அகலமானதுமான தாடையும், முன் புறத்தில் நுண்ணிய முகபடாமும் நெற்றிப் படமும், வாசனை பொருந்திய பச்சைக்கற்பூரம் கூடிய கலவையைக் கொண்ட நெற்றியும் உடைய யானையின் முதுகில் அம்பாரி பொருந்த, வயிற்றில் இடுகின்ற வெகு அழகான தும்பிக்கையும், நன்கு சிவந்த கண்களும், அதிவேகமாகச் செல்லும் நடையும், மணிகளின் சப்தம் மிகப் பலமாகக் கேட்கும்படிக் கட்டப்பட்ட (கழுத்துக்) கயிறும் இவை எல்லாம் பொருந்தி, அழகு விளங்குமாறு வெள்ளை யானையாகிய ஐராவதத்தின் மேல் ஏறி பவனி வந்தும், நிறைந்து செழிப்பு உற்ற கற்பகத் தருவின் நிழலில் அமைதியாகக் களைப்பாறியும், மலைக் கோட்டை போன்றனவும், நிலா முற்றங்களை உடையனவுமாகிய அரண்மனைகளை உடைய பொன்னுலகத்தில் புகழ் கொண்ட தேவர்கள் சூழ்ந்து பணிய வாழ்கின்ற பிரபுத் தன்மை கொண்டு ஆட்சி செய்யும் இளைஞனாகிய உருவம் உடையவனே, என் முன்னே வந்து தோன்றி என்னை ஆண்டருளிய, வயலூரில் வீற்றிருந்தருளும் செல்வனே, இன்பம் அடையுமாறு திருவாரூரில் இருந்த ஒப்பற்ற காதலி பரவை நாச்சியாருக்கு ஏற்றதான ஆயிரம் பொன்னைச் சம்பாதிக்க தலங்கள்* தோறும் சென்று தரிசித்த அடியராகிய சுந்தரர் தாளத்தின் இசைக்குப் பொருந்தும்படி உறுதியான முயற்சித் தெளிவுடன் உள்ளப் பெருக்கத்துடன் தேவாரப்பதிகம் பாடி வருகையில், கோடைக் கால வெப்பத்தால் அவருக்கு ஏற்பட்ட இளைப்பு நீங்க, நேர்மையான ஒரு மறையவர் கோலத்துடன், சுந்தரர் வந்து கொண்டிருந்த காட்டில் வந்து நிலையாகவே சுந்தரரின் எதிரே தோன்றி, (தாம் கொண்டு வந்த) சோற்றுக் கட்டை அவிழ்த்துத் தந்தவரும், அவிநாசி என்னும் தலத்துக்கு வரும்போது, சுந்தரர் திசை தடுமாறிய சமயத்தில் அவருக்குத் திசையைக் காட்டி உதவி செய்து மறைந்து போனவரும், முன்பு ஏரியில் இருந்த முதலையின் வாயிலிருந்து (உள்ளிருந்த) பிள்ளையைச் (சுந்தரர் பாட்டுக்கு இரங்கி) வரச் செய்த** பழையவராகிய கருணாமூர்த்தியும், திருப்புக்கொளியூர்*** என்னும் தலத்தை உடையவருமாகிய சிவபெருமான் புகழும் தம்பிரானே. 
* சுந்தரர் இறைவனைப் பொன் வேண்டிய இடங்கள் திருப்புகலூர், திருப்பாசிலாச்சிராமம், திருமுது குன்றம் என்பன.** திருப்புக்கொளியூர் ஏரியில் குளிக்கச் சென்ற பாலகனை ஒரு முதலை உண்டது. பிறகு ஓராண்டு கழித்து அங்கு சென்ற சுந்தரமூர்த்தி நாயனார், வற்றிய ஏரியின் கரையில் அவிநாசியின் மேல் பதிகம் பாட, ஏரி நீர் நிரம்பி, முதலை வந்து கரையில் பாலகனை ஓராண்டு வளர்ச்சியுடன் உயிரோடு உமிழ்ந்தது.*** திருப்புக்கொளியூர் அவிநாசிக்கு மிகச் சமீபத்தில் உள்ளது.

பாடல் 948 - திருப்புக்கொளியூர்
ராகம் - ....; தாளம் -

தனத்தத்தன தான தான தானன     தனத்தத்தன தான தான தானன          தனத்தத்தன தான தான தானன ...... தந்ததான

வனப்புற்றெழு கேத மேவு கோகிலம்     அழைக்கப்பொரு மார னேவ தாமலர்          மருத்துப்பயில் தேரி லேறி மாமதி ...... தொங்கலாக 
மறுத்துக்கடல் பேரி மோத வேயிசை     பெருக்கப்படை கூடி மேலெ ழாவணி          வகுத்துக்கொடு சேம மாக மாலையில் ...... வந்துகாதிக் 
கனக்கப்பறை தாய ளாவ நீள்கன     கருப்புச்சிலை காம ரோவில் வாளிகள்          களித்துப்பொர வாசம் வீசு வார்குழல் ...... மங்கைமார்கள் 
கலைக்குட்படு பேத மாகி மாயும     துனக்குப்ரிய மோக்ரு பாக ராஇது          கடக்கப்படு நாம மான ஞானம ...... தென்றுசேர்வேன் 
புனத்திற்றினை காவ லான காரிகை     தனப்பொற்குவ டேயு மோக சாதக          குனித்தப்பிறை சூடும் வேணி நாயகர் ...... நன்குமாரா 
பொறைக்குப்புவி போலு நீதி மாதவர்     சிறக்கத்தொகு பாசி சோலை மாலைகள்          புயத்துற்றணி பாவ சூர னாருயிர் ...... கொண்டவேலா 
சினத்துக்கடி வீசி மோது மாகட     லடைத்துப்பிசி தாச னாதி மாமுடி          தெறிக்கக்கணை யேவு வீர மாமனும் ...... உந்திமீதே 
செனித்துச்சதுர் வேத மோது நாமனு     மதித்துப்புகழ் சேவ காவி ழாமலி          திருப்புக்கொளி யூரில் மேவு தேவர்கள் ...... தம்பிரானே.

அழகு கொண்டு எழுகின்றதும், சோகத்தை விளைவிப்பதுமான குயில் கூவி அழைக்க, போரிடுவதற்கு வந்த மன்மதன் தனது பாணங்களாகிய மலர் கொண்டு, தென்றற் காற்றாகிய தேரில் ஏறிக் கொண்டு, அழகிய சந்திரன் வெண் குடையாக விளங்க, (அலைகள்) மாறி மாறி வரும் கடல் முரசப் பறையாக மோத, (புல்லாங்குழலின்) இசையை பெருகச் செய்ய சேனைகளாகிய மகளிர் கூடி, மேலெழுந்து புறப்பட்டு, அணி வகுத்தது போல நன்றாக மாலை நேரத்தில் வந்து கொல்லுவது போல, மிகுதியாக பறை ஒலி விரிந்து பரவுதலாக, நீண்ட பெருமை வாய்ந்த அழகிய கரும்பு வில் ஓய்தல் இல்லாது அம்புகளை மகிழ்ச்சியுடன் வீசி (என்னுடன்) போர் செய்வதால், நறுமணம் வீசும் நீண்ட கூந்தலை உடைய மாதர்களின் ஆடையுள் அகப்பட்டு நான் இறந்து போவது உனக்கு விருப்பம் தானோ? கருணாகரனே, இந்த என் தலைவிதியைத் தாண்டிக் கடக்கக் கூடியதும், பெருமை பொருந்தியதும் ஆகிய ஞான நிலையை நான் என்று கூடுவேன்? தினைப் புனத்தில் காவல் புரிந்த பெண்ணாகிய வள்ளியின் மார்பகங்களாகிய அழகிய மலையில் பொருந்திய ஆசையைக் கொண்ட ஜாதகத்தை உடையவனே, வளைவுள்ள பிறையைச் சூடியுள்ள சடையைக் கொண்ட சிவபெருமானுடைய நல்ல புதல்வனே, பொறுமைக்கு பூமியைப் போலும் இருந்து, தர்மநெறியில் நின்ற பெரிய தவசிகள் சிறந்து வாழ, நெருங்கிய பசுமையான சோலைகளில் உள்ள மலர்களின் மாலைகளை புயத்தில் அணிந்தவனும், பாவியுமாகிய சூரனுடைய அரிய உயிரைக் கவர்ந்த வேலனே, கோபித்து வேகமாக (அலைகளை) வீசி மோதுகின்ற பெரிய கடலை அணையிட்டு அடைத்து, மாமிசம் உண்ணும் அரக்கர் முதல்வனான ராவணனுடைய சிறந்த முடிகள் அற்று விழும்படி பாணத்தை ஏவிய வீரம் பொருந்திய மாமனாகிய திருமாலும், அத்திருமாலின் கொப்பூழில் தோன்றி, நான் மறைகள் ஓதும் பெருமை பொருந்திய பிரமனும் நன் மதிப்பு வைத்துப் புகழ்கின்ற வலிமையாளனே, திருவிழாக்கள் நிறைந்து பொலியும் திருப்புக்கொளியூரில்* வீற்றிருப்பவனே, தேவர்கள் தம்பிரானே. 
* திருப்புக்கொளியூர் அவினாசிக்கு அருகே உள்ளது.

பாடல் 949 - பேருர்
ராகம் - சாருகேசி தாளம் - .ங்கீர்ணசாபு - 4 1/2 தகதிமிதக-3, தகிட-1 1/2

தானாத் தனதான தானாத் ...... தனதான

தீராப் பிணிதீர சீவாத் ...... துமஞான 
ஊராட் சியதான ஓர்வாக் ...... கருள்வாயே 
பாரோர்க் கிறைசேயே பாலாக் ...... கிரிராசே 
பேராற் பெரியோனே பேரூர்ப் ...... பெருமாளே.

முடிவே இல்லாத பிறவி நோய் முடிவு பெறவும், ஜீவனாகிய ஆத்மாவைப் பற்றிய இந்தச் சிற்றுயிர் ஞான நிலை பெறுவதற்கும், உலகெல்லாம் ஆட்சி செய்யக் கூடிய ஒப்பற்ற உபதேச மொழியொன்றை நீ எனக்கு ஓதி அருள்வாயாக. உலகத்துக்கெல்லாம் தலைவராகிய சிவபிரானின் குமாரனே, இளையோனே, குன்றுகளுக்கெல்லாம் அரசனான குமரனே, புகழால் மிகவும் பெரியவனே, பேரூர்த் தலத்தில்* எழுந்தருளியுள்ள பெருமாளே. 
* பேரூர் கோயமுத்தூர் ரயில் நிலையத்திலிருந்து 3 மைலில் உள்ளது.

பாடல் 950 - பேருர்
ராகம் - ....; தாளம் -

தத்த தானன தத்த தானன     தானா தானா தானா தானா ...... தனதான

மைச்ச ரோருக நச்சு வாள்விழி     மானா ரோடே நானார் நீயா ...... ரெனுமாறு 
வைத்த போதக சித்த யோகியர்     வாணாள் கோணாள் வீணாள் காணா ...... ரதுபோலே 
நிச்ச மாகவு மிச்சை யானவை     நேரே தீரா யூரே பேரே ...... பிறவேயென் 
நிட்க ராதிகண் முற்பு காதினி     நீயே தாயாய் நாயேன் மாயா ...... தருள்வாயே 
மிச்ச ரோருக வச்ர பாணியன்     வேதா வாழ்வே நாதா தீதா ...... வயலூரா 
வெற்பை யூடுரு வப்ப டாவரு     வேலா சீலா பாலா காலா ...... யுதமாளி 
பச்சை மாமயில் மெச்ச வேறிய     பாகா சூரா வாகா போகா ...... தெனும்வீரா 
பட்டி யாள்பவர் கொட்டி யாடினர்     பாரூ ராசூழ் பேரூ ராள்வார் ...... பெருமாளே.

மை பூசியுள்ளதும், தாமரை, விஷம், வாள் இவற்றைப் போன்றதுமான கண்களை உடைய பெண்களுடன் நான் யார், நீ யார் என்னும் வகையில் (மாதர்கள் மயக்கால் சிறிதேனும் தாக்கப்படாதவராய்) தங்கள் மன நிலையை வைத்துள்ள ஞானத்துடன் கூடிய சித்தர்களும், யோகிகளும், தமது வாழ் நாளாலும், கிரகங்களாலும் ஒரு நாள் கூட வீணாகப் போகும்படியான நாளாகக் காணமாட்டார். அது போலவே, உறுதியாக (மண், பொன், பெண் என்னும்) மூவாசைகள் ஒரு வழியாக முடிவு பெறுவதில்லை. (ஆதலால்) எனது சொந்த ஊர் போல் இனியவனே, என் பேர் போல் இனியவனே, எனக்கு இனிய பிற பொருட்களும் ஆனவனே, என்னை நிச்சயமாகப் பீடிக்கும் மூன்றான எவையும் (முன்பு சொன்ன மூவாசைகள், மும்மலங்கள் - ஆணவம், கன்மம், மாயை, முக்குற்றங்கள் - பொய், களவு, கொலை, முக்குணங்கள் - சத்வம், ரஜஸ், தமஸ், முதலியவை) முற்பட்டு என்னைத் தாக்காமல், இனிமேல் நீயே தாய் போல் இருந்து அடியேன் இறந்து போகாமல் அருள் புரிவாயாக தாமரை போன்ற கண்கள் உடல் எல்லாம் கொண்டுள்ளவனும், வஜ்ராயுதத்தை ஏந்திய கையனுமாகிய இந்திரன், பிரமன் இவர்கள் போற்றும் செல்வமே, நாத ஒலிக்கு அப்பாற்பட்டவனே, வயலூரானே, கிரெளஞ்ச மலையை ஊடுருவித் தொளைத்துச் சென்ற வேலாயுதத்தை உடையவனே, நற்குணம் நிறைந்தவனே, பாலனே, காலை ஆயுதமாகக் கொண்ட சேவலைக் கொடியாக ஆள்பவனே, பச்சை நிறம் கொண்டதும், அழகுள்ளதுமான மயில் மீது தேவர் முதலானோர் மெச்சும்படி ஏறிய பாகனே, அடா சூரனே, ஆஹா, அப்புறம் போகாதே (நில்) என்று சொன்ன வீரனே, (பிரமனாகிய) முனிவனுக்கு அருள் செய்தவரும், கொடு கொட்டி என்னும் நடனத்தை ஆடினவரும், பூமியில் சிறந்த ஊராகத் திகழும் தலமும், (தேவலோகத்துப் பசு) காமதேனுவாக வந்த திருமால் வலம் செய்ததுமான பேரூரை** ஆண்டருள்பவருமாகிய சிவபெருமானுக்கு குருவாக வந்த பெருமாளே. 
* பிரமன் படைப்புத் தொழில் வராது வருந்திச் சிவபெருமானிடம் முறையிட, நீ பட்டி முனியாய் பேரூரில் வந்து பக்தி செய்வாயாகில் எமது நடனத்தைக் காணலாம் என்றார். திருமால் காமதேனுவாகவும், பிரமன் பட்டி முனிவராகவும் பேரூரில் வழிபட்டு, நடராஜப் பெருமானின் கொடு கொட்டி என்ற ஆடலைக் கண்டனர்.
** பேரூர் கோயமுத்தூர் ரயில் நிலையத்திலிருந்து 3 மைலில் உள்ளது.

by Swathi   on 28 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.