LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF

திருவள்ளுவரின் பொருளாதாரச் சிந்தனைகள் - நா.ஜானகிராமன்

திருவள்ளுவர் தம் குறள்களில் எண்ணற்ற பொருளாதாரச் செய்திகளைச் சிந்தனைகளாக வடித்துத் தந்துள்ளார். பொருள் வாழ்க்கை என்றால் மிகையாகாது. பொருளுள்ளவர்கள் சமுதாயத்தில் வலிமையுள்ளவர்களாக விளங்குகிறார்கள். பொருளற்றவர்கள் வலிமையிழந்து சமுதாயத்தில் ஏதோ ஓர் மூலையில் ஒதுக்கப்பட்டுப்பின் அடையாளமிழக்கின்றார்கள். ஒவ்வொரு தனி மனிதனையும் வலுப்படுத்தி, வழிப்படுத்தி மனத்தில் வலுவுள்ள, திடமான நம்பிக்கை கொள்ள வைப்பது பொருளே ஆகும். (The Econmic Support is a Strengthfull and Power) எனலாம். பொருளின் நிலை, அது சேர்க்கப்படும் முறை, அவை வழங்கப்படும் ஒழுகலாறு இவற்றினை வள்ளுவர் தமக்கே உரிய முறையில் உலக மக்களுக்கு எடுத்துரைத்துள்ளார்.

 

மேலுலகும் இவ்வுலகும்

 

பிறவிப் பயனும், இப்பிறவியில் நாம் செய்யவேண்டிய கடமைகள் என்ன என்பன பற்றிப் பல குறள்களில் பேசியுள்ளார். ''பொருள்தனைப் போற்றிவாழ்'' எனும் கூற்றுக்கேற்பக் ''கிடைத்த பொருளினை வைத்துக் காத்து வாழ வேண்டும்'' என்கின்றார். நேர்மையான வழிகளில் பொருள் தேடி அதனை நன்முறையில் அனுபவித்து வாழவேண்டும்.

 

அருளில்லார்க் கவ்வுலகம் இல்லை; பொருளில்லார்க்கு

 

இவ்வுலகம் இல்லாயோங்கு

 

- - - (குறள் 247)

 

என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. வள்ளுவர் முதலில் இவ்வுலகத்தைப் பேசுகின்றார். பிறகு மேலுலகத்தைப் பற்றிக் கூறுகின்றார். ஏனெனில் அவ்வுலக வாழ்வில் ஒருவன் இன்ப துன்பத்தினை முழுமையாக உணர்கின்றான். ஆகவே பொருளைப் பிறருக்குக் கொடுத்து ஒரு மனிதன் அருளைப் பெறமுடியும். ஆனால், பொருளற்ற ஒருவன் தம் வாழ்க்கையை நடத்த இயலாது எனும்போது அருள் வாழ்க்கை அவனுக்கேது? தனிமனித வாழ்விற்கும், சமுதாய நிலைப்பாட்டிற்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் அவசியத்தேவை பொருளாதாரப் பெருக்கமாகும். பாரதிதாசனும் ''பணத்தினைப் பெருக்கு'' எனக் கூறுகின்றார்.

 

ஈட்டும் முறை (To earn Money)

 

பொருளற்றவரை இச்சமுதாயம் ஒருபோதும் மதிப்பதில்லை என்பதால் பொருள் நிறைய சேர்க்க வேண்டும் எனும் எண்ணமுள்ள உலக மக்களுக்கு வள்ளுவர் சில விதிமுறைகளை/ சட்டங்களை (Restriction Law) வகுத்துத் தருகின்றார். நேர்மையான வழிகளன்றி தீயவழிகளில் ஒரு போதும் செல்வம் சேர்த்தல் ஆகாது. அதனைக் கட்டாயம் நீக்கிவிட வேண்டும். இதனை,

 

அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்

 

புல்லார் புரள விடல்

 

- - - (குறள் 755)

 

என்கிறார். அன்பின் வழியாலும், அருளின் வழியாலும் ஒரு மனிதன் சேர்த்து வைக்காத பொருளானது அம்மனிதனுக்கு, அவன் வழித்தோன்றலுக்குத் தீரா இடும்பை தருவதாகும். ஒருவேளை அப்படிச் சேர்த்த பொருளாயிருந்தால் அது தீக்கிரையாகி விடுதலும் கூடும். அவ்வாறும் இல்லையெனில் அவன் நல்லவனா, தீயவனா என்பதை அவனது மக்கள் அடையாளம் காட்டுவர். இதனையும் வள்ளுவர்

 

தக்கார் தகவிலார் என்பது அவரவர்

 

எச்சத்தாற் காணப் படும்

 

- - - (குறள் 310)

 

எனக் கூறுகின்றார். அன்பின் வழியாக உலகமக்கள் வாழவும், அன்பே உயிர்நிலையாகக் கொள்ளவும் வேண்டுமெனில் நேர்வழியில் பொருளீட்ட வேண்டும் என வள்ளுவம் உலக மக்களை அழைக்கின்றது.

 

அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து

 

தீதின்றி வந்த பொருள்

 

- - - (குறள் 754)

 

நேர்வழியில் வந்த பொருளானது அன்பினையும், அறத்தினையும் வளர்க்கின்றது. தீமையால் சேர்க்கப்பட்ட பொருள் இந்த இரண்டனையும் இழக்கச் செய்கின்றது. தீதின்றி வாராப் பொருளை வள்ளுவம் வரவேற்கிறது. பிறரின் அழிவிலும்! அழுகையிலும் பெற்ற பொருளை வெறுத்தொதுக்குகின்றது. பர்தருஹரி என்னும் இலக்கியமானது,

 

அறனின்பங்கல்வியழகு குலனாண்மை யறிவுண்டாம்

 

செல்வமுளதேல்

 

- - - (பாடல் 22)

 

என்கிறது.

 

பொருளின் தன்மையும் பெருமையும்

 

பொருளாதாரத்தின் நிலையினைத் தனிமனிதன், குடும்பம், சமுதாயம், நாடு எனப் பல நிலைகளில் வள்ளுவர் விளக்கியுள்ள விதம் சிறப்பானது. பொருளற்றவனை இச் சமுதாயம் மதிப்பதில்லை. அவனை மதிப்பிற்குள்ளாக்குவது பொருள். அறிவால் இழிந்த ஒருவனும் அவையில் பேசப்பட்ட பொருளே காரணமாகும். வாழ்வின் இருளைப் பொருள் அகற்றுகின்றது. பகை நாட்டிலிருந்து வரியாக வந்தபொருள், திறைப்பொருள் போன்றவை அரசனுக்குச் சொந்தம் என்கிறார் வள்ளுவர்.

 

உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்

 

தெறுபொருளும் வேந்தன் பொருள்

 

- - - (குறள் 756)

 

நீ, உன் வீடு! உன் சமுதாயம் இவற்றை யாராவது பார்த்து எள்ளுகின்றனரா? அப்படியென்றால் உன் பொருள் பலத்தைப் பெருக்கிக் கொள். செல்வத்தை நிறைய உன் வசம் சேர்த்துக்கொள் என்கிறார் வள்ளுவர். அரிச்சந்திர புராணத்தில் கூட மயானத்தில் பொருள்தான் முதன்மைப்பட்டுள்ளது என்பது குறிப்பிடற்பாலது. ஆகவே, ஒருவனின் பிறப்பு முதல் இறப்பு வரை செல்வம், செல்வந்தன், செல்வாக்கு எனச் சென்று கொண்டே இருக்கின்றது. ஆகவே நீ பொருளைச் செய். அதுவே உன் பகைக்கு, பகைவருக்குப் பயந்தோடச் செய்யும் ஆயுதம். அதனைக் காட்டிலும் கூரியது, வலிமைமிக்கது வேறொன்றுமில்லை என்பதை உலக மக்களுக்கு உரைக்கும் உன்னத வேதம் திருக்குறள் ஆகும்.

 

செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்

 

எஃகதனிற் கூரியது இல்

 

- - - (குறள் 759)

 

என்கிறார்.

 

பொருளின் பயன்

 

ஒருவன் வாழ்வில் ஈட்டிய பொருளை நான்காகப் பகுத்துக் கொள்ள வேண்டும். எதிர்காலத்திற்கு இரண்டு பங்கும், ஏழை எளியவர்களுக்கு ஒரு பங்கும், தன் செலவுகளுக்கு ஒரு பங்கும் என நான்கும் வகையாகப் பிரிக்க வேண்டும் என்பது ஓர் தத்துவம். யாரும் இதனை ஒரு போதும் உணர்வதில்லை. காரணம் அலட்சியப் போக்கும், சமுதாயத்தைப் பற்றிய அக்கறையும் மனிதநேயமின்மையுமே ஆகும்.

 

பயன்மரம் உள்ளூர் பழுத்தற்றால்; செல்வம்

 

நயனுட யான்கண் படின்

 

என்கிறார் வள்ளுவர். பயன் தரக்கூடிய சிறந்த மரமானது யாவருக்கும் பயனளிக்கும் வகையில் ஊரின் நடுவிலே அமையவேண்டும் என்பது வள்ளுவர் கருத்து. ஓர் அஃறிணையான மரத்திற்கு இந்நிலை. ஆறறிவு படைத்த மனிதன் இதனைப் பின்பற்ற வேண்டுமல்லவா? நாம் தேடிய செல்வத்தைப் பிறருக்கு ஈத்துவக்கவேண்டும். ஈத்துவக்கும் இன்பமே வாழ்வின் பெரும் பேரின்பமாகும் என்கிறது வள்ளுவம். மேலோர் பொருளை ஈட்டுதல் பிறர் திறத்துப் பயன் படுத்தற்பொருட்டாகும் (பர்தருஹரி - 41). அறவழியில் தேடிச் சேர்த்த பொருள், அனைவருக்கும் பரவலாக்கப்படவேண்டும். பொருள் ஓரிடத்துக்குவிதல் பலனளிப்பதில்லை. தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் (Globilization) என இவையாவும் பொருளின் பகிர்தலே ஆகும் (Share in Economy).

 

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு

 

வேளாண்மை செய்தற் பொருட்டு

 

- - - (குறள் 212)

 

என்கிறது குறள். முறையாக நாம் சேர்த்துவைத்த பொருள் யாவும் நம்மைச் சார்ந்தவர்க்கும் நம்மைச் சார்ந்த சமுதாயத்தினருக்கும் பயனளிக்கும் வகையில் இருக்க வேண்டும். இல்லையெனில் ''வீணில் விழலுக்கிறைத்த நீர்போல் ஆகிவிடும். தான் மட்டும் அனுபவிப்போம் என்று நினையினும் எதிர்மறையினதாய் முடியும். ஆதலால் காத்த பொருள் கைவிட்டுப் போகாமல் இருக்க அதனைத் தகுந்தவர்களுக்கும், இவ்வுலக மக்களுக்கும் ஈந்து மகிழவேண்டும். அத்தகைய வேளாண்மையில் உலகத்தில் பல வித்துகள் விழுந்து பல மரங்கள் விளைய வேர்விடும் என்கிறது குறள்.

 

புகழ் வாழ்வு

 

புகழொடு வாழவேண்டும் என்பது இச்சமுதாயத்தின் எதிர்பார்ப்பாகும். தோன்றின் புகழொடுதான் தோன்ற வேண்டும். இல்லையெனில் தோன்றிப் பயனில்லை எனவும் வள்ளுவம் பகர்கின்றது. பயன் வாழ்க்கை வாழவும் பிறரிடத்து இன்முகத்துடன் பொருள் ஈயவும் குறள் கூறும் முறைகள் பல உள்ளன. செல்வம், பொருள் என்பது எவரிடத்தும் நிலையில்லாதது. ''செல்வம் சகடக்கால் போல வரும்'' என்பது பழமொழி. இளமை நில்லா, யாக்கை நில்லா, வானாளாவிய வளம் பெருஞ்செல்வமும் நில்லா. ஆகவே பொருளைக் காத்து வைக்கலாமேயொழிய அவை பயனற்றுப்போகுமாறு செய்தல் ஆகாது!

 

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது

 

ஊதியம் இல்லை உயிர்க்கு

 

- - - (குறள் 231)

 

என்கிறது வள்ளுவம். தான் சேர்த்து வைத்த பொருளை பிறர்க்களித்து அதனைப் பெறுபவர்களின் முகத்தில் காணும் இன்பத்தைப் பார்த்து வாழவேண்டும். அவ்வாறு வாழும் வாழ்வே ஒருவன் புகழுக்குரிய உண்மையான வாழ்க்கை ஆகும். அவ்வாறின்றிச் சுயநலத்துடன் (Selfish) வாழும் வாழ்வென்பது பயனற்ற வாழ்க்கை ஆகிவிடும். ஒருவன் புகழ்பெற வாழ்தலுக்கு, பிறருக்குப் பொருளைக் கொடுத்தல் என்னும் உண்மையினை வள்ளுவப் பெருந்தகை உணர்த்துகின்றார். உலகிற்கு இது ஒரு வேதாந்தம். உதவுதலுக்கு இது சித்தாந்தமாகும்.

 

அளவறிதல்

 

முயன்று பொருள் தேட வேண்டும். முறையாகத் தேட வேண்டும். அவ்வாறு தேடப்பட்ட பொருள் சிக்கனமாகப் பயன்படுத்தப்படவும் வேண்டும். சிக்கனம் இழந்த குடும்பம் பொருளாதாரத்தால் நலிவடையும். நாடு தன் வலுவிழக்கும். உலகத்தால் இழிவாகப் பேசப்படும் நிலையும் வரும். இதிலிருந்து மீள வள்ளுவர் எச்சரிப்புச் செய்கின்றார்.

 

ஆற்றின் அளவறிந்து ஈக; அதுபொருள்

 

போற்றி வழங்கும் நெறி

 

- - - (குறள் 477)

 

கொடுப்பவர், பெறுபவர் இருவருடைய தன்மையையும் கருத்தில் கொண்டு பொருள் வழங்கல் வேண்டும். ''ஆற்றில் இட்டாலும் அளவோடு இடு'' என்பது பழமொழி. வள்ளுவரும் இதனை வலியுறுத்துகின்றார். அவ்வாறு கடைப்பிடிக்காதவன் வாழ்க்கை இருப்பதுபோல் இருந்து இல்லாமல் விரைவில் போய்விடும்.

 

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல

 

இல்லாகித் தோன்றாக் கெடும்

 

- - - (குறள் 479)

 

என்பது குறள்.

 

முடிவுரை

 

1. இல்லானை இல்லாள், ஈன்றெடுத்த தாய் எவரும் புறம் தள்ளுவர். அவன் சொல் (பொருளற்றவன்) சபையேறாது.

 

2. வள்ளுவர், பொருளீட்டுகின்ற முறையினையும் ஒழுங்கிணையும் வரையறை செய்துள்ளார்.

 

3. இவ்வுலக இன்பமும், வீடு பேறு சுகம் காணவும் பொருளே முக்கியமானது. அதனைச் சேமித்துப் பாதுகாக்கவும் பிறருக்கு ஈயவும் வள்ளுவர் அறங்களைப் போதித்துள்ளார்.

 

4. அளவறிந்து வாழவும், பொருளின் தன்மை, பெருமை, பொருளின் வாயிலாக அடைகின்ற பெருவாழ்வு இவையாவினையும் வள்ளுவம், உலக அளவில் பகர்கிறது.

 

5. பொருளாதாரச் சிந்தனைகளாக வள்ளுவர் வழங்கியுள்ள பொன்மொழிகள் என்றும் அழியாத் தேவையாகும்.

 

திரு.நா.ஜானகிராமன்

 

ஆய்வாளர், தமிழியல் துறை

 

பாரதிதாசன் பல்கலைக்கழகம்

 

திருச்சி - 24.

 

2004 ஆம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகமும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்திய பன்னாட்டு திருக்குறள் மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரை.

by Swathi   on 11 Apr 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
வேணுகோபால் சர்மா வரைந்த திருவள்ளுவர் படம் வேணுகோபால் சர்மா வரைந்த திருவள்ளுவர் படம்
திருக்குறளில் காதல் மொழிகள் (Love Languages in Thirukural) -முனைவர் இரெ. சந்திரமோகன் திருக்குறளில் காதல் மொழிகள் (Love Languages in Thirukural) -முனைவர் இரெ. சந்திரமோகன்
திருக்குறளில் நுண்பொருள் - ரெ.சந்திரமோகன் திருக்குறளில் நுண்பொருள் - ரெ.சந்திரமோகன்
திருக்குறள் வழி வாழ்க்கையில் வெற்றி - முனைவர் இர. பிரபாகரன் திருக்குறள் வழி வாழ்க்கையில் வெற்றி - முனைவர் இர. பிரபாகரன்
திருக்குறளில் புதுமையும் புரட்சியும் - முனைவர்.இர.பிரபாகரன் திருக்குறளில் புதுமையும் புரட்சியும் - முனைவர்.இர.பிரபாகரன்
பொதுமுறை என்பதே பொருத்தம் - ஆர்.பாலகிருஷ்ணன் பொதுமுறை என்பதே பொருத்தம் - ஆர்.பாலகிருஷ்ணன்
வள்ளுவம் படிப்போமா!! வள்ளுவம் படிப்போமா!!
அனைத்து திருக்குறளுக்கும் தமிழ்-ஆங்கில விளக்க உரை, ஓவியம், ஒலி, காணொளி கொண்ட முழு தொகுப்பு www.valaitamil.com/thirukkural.php அனைத்து திருக்குறளுக்கும் தமிழ்-ஆங்கில விளக்க உரை, ஓவியம், ஒலி, காணொளி கொண்ட முழு தொகுப்பு www.valaitamil.com/thirukkural.php
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.