LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- தொல்காப்பியம்

தொல்காப்பியம் ஒரு தமிழ்ப்பண்பாட்டின் பிழிவு !

முன்னுரை

தொல்காப்பியம் ஒரு வாழ்வியல் களஞ்சியம். விலைமதிப்பில்லா தமிழ்ப் பண்பாட்டைப் பற்றிப் பொருளியல் இலக்கணத்தில் கூறுகின்றது. இத்தமிழ்ப் பண்பாட்டில் தொல்காப்பியம் எவ்வாறெல்லாம் தடம் பதித்துள்ளது என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

அகமும், புறமும்

தமிழர் வாழ்வில் அகமும், புறமும், நகமும் சதையும் போல ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து செயல்பட்டு வந்துள்ளது. இதற்குப் தொல்காப்பியம், திருக்குறள், சங்க இலக்கியங்கள் சான்று பகர்கின்றன. ஆணும், பெண்ணும் அன்போடு ஒன்றுபட்டுக் கூடிவாழும் காதல் வாழ்வே அகவாழ்வாகும். அகம்-மனம், திணை-ஒழுக்கம். ஆகவே அகத்திணை என்பது மனஒழுக்கம் ஆகும். அகத்திணை எழுவகைப்படும் என்கின்றார் தொல்காப்பியர்.


''கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்
முற்படக் கிளந்த எழுதிணை என்ப''
(தொல்.பொருள்.அகம்.1)

இவற்றில் ''கைக்கிளை'' என்பது ஒருதலைக்காதல், ஆண், பெண் இருவருள் ஒருவரிடம் மட்டும் காதல் உணர்வு தோன்றுகிறது. ''பெருந்திணை'' என்பதும் பொருந்தாக் காமம். இவ்விரு திணைகளும் தொல்காப்பியர் காலத் தமிழர்களால் அவ்வளவாகப் பாராட்டப்படவில்லை. குறிஞ்சி நிலத்தில் வாழும் ஒழுக்கத்தைப் பற்றி விளக்குவது'' குறிஞ்சித் திணை'' ஆகும். இந்நிலம் மலையும், மலைச்சாரலும் நிறைந்த இனிமையான பிரிவு ஆகும். இந்நிலத்தின் கடவுள் சேயோன் என்று சொல்லப்படுகின்ற முருகன் என்பர்.


''சேயோன் மேய மைவரை உலகமும்''
(தொல்.பொருள்.அகம்.5)

என்று தொல்காப்பியம் கூறும். மலைமீது அமைந்த இனிய இயற்கைச் சூழலில் தான் காதலி, காதலன் இருவரிடையே காதல் மலர்ந்து, ஒருமித்த கருத்து ஏற்பட்டுக் கணவன் - மனைவியாக வாழத் தொடங்குவர். இவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் காதல் வயப்படுவதைப் பற்றியும் விளக்கிக் கூறுவதே குறிஞ்சித் திணையாகும். குறிஞ்சி ஒழுக்கம் ''கணவன் - மனைவியாதல்''.

காதலன் தன் காதலியை விட்டுப் பிரிவதையும், அதற்குரிய கரணியத்தையும் பற்றிக் கூறுவது பாலைத்திணை ஆகும். காடும், காடு சார்ந்த நிலமும் முல்லை நிலமாகும். முல்லை நிலத்தின் தெய்வம் மாயோன் என்கின்ற திருமால் என்பர். இதனை ''மாயோன் மேய காடுறை உலகமும்'' (தொல்.பொருள்.அகம்.5) என்கின்றது தொல்காப்பியம்.

பிரிந்து போன காதலன் திரும்பி வரும்வரையில் காதலி, தன் கற்பின் வலிமையால் துன்பத்தைப் பொறுத்துக் கொண்டு காத்திருப்பது முல்லைத் திணை ஒழுக்கமாகும். அவள் ஆறுதலாக இருப்பதற்குரிய கரணியங்களைக் கூறுவதும் முல்லைத் திணையே. முல்லைத் திணை ஒழுக்கத்தை ''இருத்தல்'' என்று கூறுவர்.

மருதத்திணையில் நடைபெறும் ஒழுக்கம் மருதத்திணை ஆகும். நீர்வளமும், செல்வங் கொழிக்கும் நில வளமும் அமைந்த நிலப்பகுதிகளும் ஊர்களும் மருத நிலமாகும். இந்நிலத் தெய்வம் வேந்தன் ஆகும். இதனை, ''வேந்தன் மேய தீம்புனல் உலகமும்'' (தொல்.பொருள்.அகம்.5) என்று பகர்கின்றது தொல்காப்பியம். காதலன், காதலியிடையே தோன்றும் ஊடல். ஊடல் உண்டாவதற்குரிய கரணியங்கள், பாணன், கூத்தன், பாங்கன், தோழி, விறவி, பார்ப்பான் முதலியோர் தூதுவர்களாக இருந்து அவ்வூடலை நீக்கிக் கூடி வாழச் செய்யும் நிகழ்ச்சிகள் ஆகியவற்றைப் பற்றிக் தெளிவாகக் கூறுதல் மருதத்திணையாகும். மருதத்திணையின் ஒழுக்கம் ''ஊடல்'' ஆகும்.

நெய்தல் நிலத்தில் நடைபெறும் ஒழுக்கத்தைப்பற்றிக் கூறுவது நெய்தல்திணை ஆகும். கடற்கரையும், கடற்கரையைச் சார்ந்த இடங்களும் நெய்தல் நிலமாகும். நெய்தல் நிலக்கடவுள் வருணன் என்பர். ''வருணன் மேய பெருமணல் உலகமும்'' (தொல்.பொருள்.அகம்.5) என்று தொல்காப்பியம் உரைக்கின்றது.

காதலன் பிரிவைக் கண்டு காதலி மனவருத்தம் கொள்வதும், துன்பம் தாங்க முடியாமல் உள்ளக்குமுறலை வாய்விட்டு உரைப்பதும், இதற்கான கரணியங்களைக் கூறுவதும் நெய்தல் திணையாகும். நெய்தல் திணையின் ஒழுக்கம் ''இரங்கல்'' ஆகும். எழுவகையான ஒழுகலாறுகளைப் பற்றி மிகத் தெளிவாகத் தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ளது. அகப்பாடல்களுள் மூன்று பொருள்கள் அமையும். அவை முறையே முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்பனவாகும்.

''முதல்கரு உரிப்பொருள் என்ற மூன்றே
நுவலுங் காலை முறை சிறந்தனவே
பாடலுள் பயின்றவை நாடுங் காலை''
(தொல்.பொருள்.அகம்.3)

என்று தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது.

முதற்பொருள் நிலமும் பொழுதும் ஆகும். அந்நிலத்திற்குரிய தெய்வம், உணவு வகை, விலங்குகள், மரவகைகள், பறவைகள், பறை முதலாம் தோற்கருவிகள், நிலத்துக்கேற்ற தொழில் வகைகள், யாழ் முதலாம் இசைக்கருவிகள், பூக்கள் இவை போல்வன பிறவும் ஒரு நிலத்திற்குரிய கருப்பொருளாகும். புணர்தல் (உள்ளத்தாலும் உடலாலும்) (குறிஞ்சி) பிரிதல் (பாலை) இருத்தல் (முல்லை) இரங்கல் (நெய்தல்) ஊடல் (மருதம்) ஆகியவை உரிப்பொருளாகும்.

அகத்திணை சுட்டி ஒருவரது இயற்பெயரைக் கூறிப் பாடப்பெறாது தனியொருவர் வாழ்வாயினும் பொதுப்படவே பாடப்பெறும். உலக இலக்கியத்தில், சங்க இலக்கியம், திருக்குறளின் இன்பத்துப்பால் ஆகியவற்றின் தனித்தன்மை இது. இக்கருத்தமைந்த நூற்பா,

''மக்கள் நுதலிய அகன் ஐந்திணையும்
சுட்டி ஒருவர்ப் பெயர் கொளப் பெறா அர்'
' (தொல்.பொருள்.அகம்.54)

பண்டைத் தமிழர்கள் காதலையும், வீரத்தையும் இரு கண்களெனப் போற்றியவர்கள். அவர் தம் இலக்கியங்கள் இதற்குச் சான்று பகிர்கின்றன.

அகத்திணையை ஏழாக வகுத்தது போல் புறத்திணையையும் ஏழாக வகுத்துக் கூறியுள்ளார் தொல்காப்பியர். அவை வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் ஆகும். இவ்வேழுகை புறத்திணைகளும் தமிழரின் போர் முறை, போரில் காட்டிய வீரச்செயல்கள், அரசியல், கொடை, புகழ் ஆகியவற்றைக் குறிப்பிடுவதோடு, உலக நிலையாமையும், அறவுரைகளும் எடுத்துரைக்கின்றது.

வெட்சி - ஆநிரை கவரும் போர், வஞ்சி - நிலப்பகுதிகளைக் கவரவும், கவரவிடாமல் தடுக்கவும் நடக்கும் போர், உழிஞை தலைநகரைப் பிடிக்கவும், அதைத் தடுக்கவும் நடக்கும் போர், உழிஞை - தலைநகரைப் பிடிக்கவும், அதைத் தடுக்கவும் நடக்கும் போர், தும்பை-தன் வலிமை பிறரை விடச் சிறந்தது என்று காட்டிட நடக்கும் போர், வாகை - போரின் வெற்றியையும், ஒருவர் பிறரினும் மேம்படும் வாழ்க்கை வெற்றி அடைவதையும் பாடுவது, காஞ்சி போரால் வரும் அழிவையும், நிலையாமையையும் பாடுவது, பாடாண்-பொதுவாக மானுடவிழுமியம், கடவுள் வத்து, அறவுரைகள், மக்கட் குழுகாய உயர்வு பற்றிய அனைத்தும் பாடப்படுவது.

தமிழர் அகவாழ்விலும், புறவாழ்விலும் இயற்கையோடு இயைந்த வாழ்வை நடத்தினர் என்பதற்குத் தொல்காப்பியம் நிலைத்த சான்றாக, காலவெள்ளத்தினால் அழியாமல் இருந்து கொண்டிருக்கும்.

களவும் கற்பும்

களவு மணமானது பெற்றோர், உற்றார், உறவினர் அறியாமல் ஒரு ஆணும், பெண்ணும் மறைவிலே மணமக்களாக வாழ்க்கை நடத்துவது மற்றவருக்குத் தெரிந்து விட்டால், பெரியவர்கள் முன்னால் திருமணம் செய்து கொண்டு வெளிப்படையாக இல்லறம் நடத்துவர். இதற்குக் கற்புமணம் என்று பெயர். களவு மணம் புரிந்து கொண்ட தலைவன், தலைவி மணவாழ்க்கை கண்டிப்பாகக் கற்பு மணத்தில் தான் முடியும்.


''வெளிப்பட வரைதல் வரைதல் என்று
ஆயிரண் டென்ப வரைதல் ஆறே''
(தொல்.பொருள்.களவியல்.50)

மணந்து கொள்ளும் முறையை, களவுப்புணர்ச்சி, வெளிப்பட்டவுடன் மணந்து கொள்ளுதல் ஆகிய இரண்டு களவுப்புணர்ச்சி வகையென்பர். களவு மணம் நடைபெறாமல் கற்பு மணம் நடைபெறுவதில்லை என்பதற்கு இந்நூற்பா அடிப்படை.

முடிவுரை

தொல்காப்பியம் தமிழுக்குக் கிடைத்த மிகப்பழமையும் பெருமையும் வாய்ந்த நூல். கட்டுக்கோப்பாக அமைந்த சிறந்த மானுடவியல் பனுவல். வாழ்க தமிழகம்! வளர்க தமிழ்!

by Swathi   on 28 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.