LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- தொல்காப்பியம்

தொல்காப்பியத்தின் அணி நலம்

அணிகளுக்கெல்லாம் தாயாக மூலமாக விளங்கும் உவமை தொல்காப்பியத்தில் தனி ஒரு இயல் மூலம் விளக்கமுறுகின்றது. ஆயினும் உவமத்தை அணி என்று தொல்காப்பியர் யாண்டும் குறிப்பிடவில்லை. பொருள் புலப்பாட்டுக்குரிய உறுப்பாகவே கொண்டு 37 நூற்பாக்களில் உவமவியலை அமைத்துள்ளார். இளம்பூரணர் முதலான உரையாசிரியர்களும் உவமையின் முதற்பயன் பொருட்புலப்பாடு, இரண்டாவது பயன் அலங்காரமாகிக் கேட்டார்க்கு இன்பம் பயத்தல் என்று கூறுவர். வேறுபடந்த உவமத்தோற்றம் என்னும் நூற்பாவுக்கு பேராசிரியர் கூறும் விளக்கம் மூலம் பல்வேறு அணிவகைள் புலனாகின்றன. பிற்காலத்தார் உவமையின் பல்வேறு வளர்ச்சி நிலைகளைத் தனித்தனி அணிகளாகப் பெயரிட்டு அணியிலக்கணத்தை வளர்த்தனர். அணியிலக்கண வளர்ச்சிக்கு வித்தாகத் தொல்காப்பியத்தில் காணப்படும் பல அணிக்கூறுகளில் சிலவற்றை இக்கட்டுரை ஆராய்கிறது.

உவமை

தலைவியின் கைபட்ட உணவும் பூவும் தேவாமிர்தம் போன்று இருந்தது எனத் தலைவன் உவமையின் மூலம் புகழ்ந்துரைப்பதை

ஏனது சுவைப்பினும் நீகை தொட்டது
வானோர் அமிழ்தம் புரையுமால் எமக்கென்ன

அடிசிலும் பூவும் தொடுதற் கண்ணும் (தொ.பொ.கற்பி.5) என்ற அடிகளால் அறியலாம். அப்பனைப்போல் பிள்ளை என்று உலகில் பெருவழக்காக உள்ள உவமையைக் கூறி புதல்வனைப் பழிப்பது போல தலைவனது புறத்தொழுக்கத்தினைத் தலைவி இடித்துரைப்பதை

தந்தையர் ஒப்பர் மகள் என்றதனான்
அந்தமில் சிறப்பின் மகப்பழித்து நெருங்கலும் தொ.பொருள்.கற்பி.6

என்ற தொடர் புலப்படுகின்றது. தலைவனது இல்லின்கண் உறைதலால் தலைவிக்கு நிகரானவளாகத் தன்னைக் கருதிக்கொள்ளும் காமக்கிழத்தியானவள் தலைவியிடம் கொண்ட காதலை மறந்த தலைவனைச் செவிலித்தாய் போல இடித்துரைத்து அவன் இல்லறம் சிறக்க உதவுகின்றாள் என்று கூறுமிடத்து மனையோள் ஒத்தலின் தாய்போல் கழறி என்ற உவமைகள் இடம் பெறுகின்றன. (தொல்.பொருள்.கற்பி.10)

எண்ணுப்பெயரணி

செய்யுளில் ஒன்று, இரண்டு, மூன்று முதலான எண்ணுப்பெயர்கள் பொருள் தொடர்புடன் அமைவதை எண்ணுவண்ணம் எனத் தொல்காப்பியம் கூறும். எண்ணுவண்ணம் எண்ணுப்பயிலும் (செய்.220) இதனை எண்ணுப்பெயரணி எனக் கூறலாம். இதற்குச் சான்றாக உயர்களின் அறுவகைப் பகுப்புகளைக் கூறும். நூற்பாவைக் குறிப்பிடலாம்.

ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே (மரபி.27)

இவ்வணி வளர்ச்சியை புறநானூறு, சிலம்பு, திருவாசகம், சிவஞான சித்தியார் முதலான நூல்களில் காணலாம். இதனைச் சந்திராலோகம் எனும் வடமொழி நூல் அரதனமாலை என்ற அணியாகக் கூறுகின்றது.

தன்மேம்பாட்டுரை

இன்னது செய்தல் பிழைத்தேனாயின் இவ்வாறாகுக என அரசன் கூறும் சிறப்பினதாகிய வஞ்சினக் காஞ்சியை
இன்னது பிழைப்பின் இதுவா கியரெனத்
துன்னருஞ் சிறப்பின் வஞ்சினத் தானும் (பொ.புற.19)
என்ற நூற்பாவும் தன்னிடமுள்ள போர்வலி முயற்சியால் மறவன் ஒருவன் வீரச்சொற்களைத் தன்னோடு பொருத்திக் கூறலாகிய நெடுமொழி கூறலை தலைத்தாள் நெடுமொழி தன்னொடு புணர்த்தல் (பொ.புற.5) என்ற நூற்பாவு விளக்குகின்றன.

சிலேடையணி

ஒரு வகையாய் நின்ற ஒரு தொடர் சொல்லுவானது ஒலி வேறுபட்டால் பல பொருள்களது தன்மை தெரிய வருவது சிலேடையாகும்.

எழுத்தோ ரன்ன பொருள்தெரி புணர்ச்சி
இசையில் திரிதல் நிலைஇய பண்பே (எழுத்.பணரியல் .39)

செம்பொன் பதின்றெடி என்ற தொடர் செம்பு ஒன்பதின் தொடி, செம்பொன் பதின் தொடி ஆகிய இரு பொருள்களையும் குன்றோமா என்ற தொடர் குன்று ஏறு ஆமா, ஏறா மா என்ற இரு பொருள்களையும் தருகின்றன.

வஞ்சப் புகழ்ச்சி/ பழிகரப்பு அங்கதம்

புகழ்வது போல ஒன்றனைப் பழிப்பது வஞ்சப் புகழ்ச்சி எனப்படும். வசையினை வெளிப்பட மொழியாமல் சொற்களுள் மறைத்து வைத்து மொழிவதை மொழிகரந்து சொல்லினது பழிகரப்பாகும் (செய்.122) எனத் தொல்காப்பியம் கூறும். இவ்வே பீலியணிந்து மாலை சூட்டி என்று தொடங்கும் புறப்பாடல் இவ்வணிக்குச் சான்றாக அமைகிறது.

வாழ்த்தணி

தெத்காப்பியத்தில் இயன்மொழி வாழ்த்து, புறநிலை வாழ்த்து, செவியறிவுறூஉ, வாயுறை வாழ்த்து என நால்வகை வாழ்த்துக்கள் இடம் பெற்றுள்ளன. அரசனை நீடுழிகாலம் வாழ வேண்டும் என வாழ்த்துவதை

அடுத்தூர்ந் தேத்திய இயன்மொழி வாழ்த்து (புறத்.29) என்பதால் அறியலாம். இஃது வாழ்த்தணியாக வளர்ந்தது. சங்கப்பாடல்களில் இதன் வளர்ச்சியைக் காணமுடிகிறது.
முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே! (புற.9.10.11)

பிறிதுரையணி

தலைமக்கள் தங்கள் காதல் உணர்வினை முன்னிலைப் புறமொழியாய் அறிவுறுத்து நரின்றி நெஞ்சையும் அஃறிணைப் பொருள்களையும் அறிவுறத்து நரின்றி நெஞ்சையும் அஃறிணைப் பொருள்களையும் விளித்துப்பேசும் மரமினைச் சங்க அகப்பாடல்கள் காமமிக்க கழிபடர்க்கிளவி என்ற துறையாகக் கூறுகின்றது. இதற்கு

நோயும் துன்பமும் இருவகை நிலையின்
காமம் கண்ணிய மரபிடை தெரிய
உறுப்புடை யதுபோல் உணர்வுடை யதுபோல்
மறுத்துரைப் பதுபோல் நெஞ்சோடு புணர்தலும்
சொல்லா மரபின் வற்றொடு கெழீஇ
செய்யா மரபின் தொழிற்படுத் தடக்கியும்
அவரவர் உறுபிணி தமபோற் சேர்த்தியும் (பொ.2)

என்று இலக்கணம் கூறுவதுடன் எந்தெந்த அஃறிணைப் பொருட்களுடன் அவ்வாறு பேசலாம் என்பதை

ஞாயிறு திங்கள் அறிவே நாணே
கடலே கானல் விலங்கே மரனே
புலம்புறு பொழுதே புள்ளே நெஞ்சே
அவையல பிறவும் நுதலிய நெறியாற்
சொல்லந போலவும் கேட்குந போலவும்
சொல்லியாங் கமையும் என்மனார் புலவர். (செய்.192)

என்ற நூற்பா விளக்கும். இவ்வாறு அஃறிணைப் பொருட்களுடன் பேசும் முறையைத் தொன்னூல் விளக்கம் என்ற நூல் பிறிதுறையணி, விடையில், வினாவணி, விடையணி, நூற்பாக்கள். 361, 362, 363 என மூன்று அணிகளாக விரித்துரைக்கின்றது.

முரணணி அல்லது விரோத அணி

சொல்லாலும் பொருளாலும் மாறுபாட்டுத்தன்மை விளைவு தோன்று உரைப்பது முரணணியாகும்.
மொழியினும் பொருளினும் முரணுதல் முரணே (மெய்.91)
எனத் தொல்காப்பியர் முரண்தொடைக்குக் கூறிய விளக்கம் விரோத அணியாக வளர்ச்சியுற்றது. இவ்வணிக்கு இன்பத்தை வெறுத்தல் துன்பத்துப் புலம்பல் (மெய்.22) இல்லது காய்தல் உள்ளது உவர்த்தல் (மெய்.24), காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலும் (கற்பி.6) எனப் பல சான்றுகள் தொல்காப்பிய நூற்பாக்களில் உள்ளன.

பின்வரு நிலையணி

தொல்காப்பியர் குறிப்பிடும் இருபது வண்ணங்களில் ஏந்தல் வண்ணம் என்பது சீரடிப்படையில் அமைந்து சொல்லடுக்கி வருவது ஆகும். இதனை,

ஏந்தல் வண்ணம்
சொல்லிய சொல்லிற் சொல்லியது சிறக்கும் (செய்.223)
என்ற நூற்பா விளக்கும். இவ்வாறு முன்வந்த சொல்லும் பொருளும் பின்னும் அடுத்தடுத்து வரும்போது பின்வருநிலை என்னும் அணியாகிச் சிறப்புறுகின்றது.

உயிரிறு சொல்முன் உயிர்வரு வழியும்
உயிரிறு சொல்முன் மெய்வரு வழியும்
மெய்யிறு சொல்முன் உயிர்வரு வழியும்
மெய்யிற சொல்முன் மெய்வரு வழியும்
இவ்வென அறியக் கிளக்குங் காலை
நிறுத்த சொல்லே குறித்து வருகிளவி (எழுத்.புணரியல்.5)

என்னும் நூற்பாவில் 4 இடங்களில் உயிர் என்ற சொல்லும் 4 இடங்களில் மெய் என்ற சொல்லும் 5 இடங்களில் சொல் என்ற சொல்லும் அடுத்தடுத்து அழகுற அமைந்து சொல்பின்வரு நிலையணியாகிறது.

பிற்கால அணியிலக்கண நூல்கள் விரித்துக் கூறுகின்ற அணிகளின் பெரும்பான்மையான கூறுகள் தொல்காப்பியத்தில் பரவலாகக் காணப்படுகின்றன. அவற்றை விரிக்கின் தனி நூலாகச் சிறக்கும். அளவு கருதி உவமை, எண்ணுப்பெயரணி, தன்மேம்பாட்டுரை, சிலேடை, வஞ்சப்புகழ்ச்சி, வாழ்த்து, பிரிதுரை, முரண், பின்வருநிலை ஆகிய அணிகள் மட்டும் ஈண்டு விளக்கம் பெற்றுள்ளன.

by Swathi   on 28 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.