LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 828 - நட்பியல்

Next Kural >

தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
பகைவர் வணங்கித் தொழுத கையினுள்ளும் கொலைக்கருவி மறைந்திருக்கும், பகைவர் அழுதுசொரிந்த கண்ணீரும் அத்தன்மையானதே.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
ஒன்னார் தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் - ஒன்னார் குறிப்பை உணர வல்லார்க்கு அவர் தொழுத கையகத்தும் படைக்கலம் மறைந்திருக்கும்: அழுத கண்ணீரும் அனைத்து - அவர் அழுத கண்ணீரும் அவ்வாறே அது மறைந்திருத்தற்கு இடனாம். '(தாம் நட்பு என்பதனைத் தம் கையானும் கண்ணானும் தேற்றிப் பின் தேற்றுகின்ற பொழுதே அவற்றுள்ளே தோன்றும் என்பார். 'ஒடுங்கும்' என்றார். பகைவர் தம் மென்மை காட்டித் தொழினும், அழினும், அவர் குறிப்பையே நோக்கிக் காக்க என்பதாம். இதனான் 'அவரைச் செயலால் தெளியற்க'' என்பது கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
தொழுதகையுள்ளும் கொலைக்கருவி ஒடுங்கும்: பகைவர் அழுதகண்ணீரும் அத்தன்மையதாமென்று கொள்க. மெல்லியராகத் தொழுதுவந்து ஒத்தார்போல ஒழுகுவாரது நட்பென்றவாறு. இது கூடாநட்பினால்வருங் குற்றங் கூறிற்று. கூடா நட்பினர் வேறு காலத்தினும் அழுதகாலத்தினும் தேறப்படாரென்க.
தேவநேயப் பாவாணர் உரை:
ஒன்னார் தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் - பகைவரின் குறிப்புணர வல்லார்க்கு அவர் கும்பிட்ட கைக்குள்ளும் கொல்படைக்கலம் மறைந்திருக்கும்; அழுத கண்ணீரும் அனைத்து - அவர் அழுது வடித்த கண்ணீர்க்குள்ளும் அங்ஙனமே மறைந்திருக்கும். கொல்லுதற்குப் பின்பு எடுக்க விருக்கும் படைக்கலம் முன்பு கை குவிப்பாலும் கண்ணீர் வடிப்பாலும் மறைக்கப்படுவதால் அவற்றிற்குள் 'படையொடுங்கும்' என்றார். தம் இளக்கங்காட்டி அழுதாலும் தொழுதாலும், அவர் செயலானன்றிக் குறிப்பாலேயே அவரியல்பை யறிந்து காத்துக்கொள்க வென்பதாம்
கலைஞர் உரை:
பகைவர்கள் வணங்குகின்ற போதுகூட அவர்களின் கைக்குள்ளே கொலைக்கருவி மறைந்திருப்பது போலவே, அவர்கள், கண்ணீர் கொட்டி அழுதிடும் போதும் சதிச்செயலே அவர்களின் நெஞ்சில் நிறைந்திருக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
பகைவர் தொழும் கைக்குள்ளும் ஆயுதம் மறைந்திருக்கும்; அவர் அழுது சிந்தும் கண்ணீரும் அப்படிப்பட்டதே
Translation
In hands that worship weapon ten hidden lies; Such are the tears that fall from foeman's eyes.
Explanation
A weapon may be hid in the very hands with which (one's) foes adore (him) (and) the tears they shed are of the same nature.
Transliteration
Thozhudhakai Yullum Pataiyotungum Onnaar Azhudhakan Neerum Anaiththu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >