LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- தொல்காப்பியம்

தொல்காப்பியத்தில் வாயில்கள்

தொல்காப்பியப் பொருளதிகாரம் அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் ஆகிய ஒன்பது இயல்களைக் கொண்டுள்ளது. இவ்ஒன்பது இயல்களின் வழியாக அக்காலத்தமிழர்தம் சமுதாய வாழ்வியல் நெறிகளை நாம் அறிந்து கொள்ள முடியும். மேற்கூறப்பட்ட இயல்களில் அகத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல் ஆகிய நான்கு இயல்களில் தமிழர்தம் அகவாழ்வினைத் தெரிந்து கொள்ளலாம். புறத்திணையியலில் தமிழர்தம் புறவாழ்வினைத் தெரிந்து கொள்ளலாம். ஏனைய இயல்களாகிய மெய்ப் பாட்டியியல் முதலான நான்கு இயல்களின் வழியாக அகப்புற வாழ்வியலுக்குத் தேவையான செய்திகளைத் தெரிந்து கொள்ளலாம். தொல்காப்பியத்தில் வாயில்கள் என்னும் தலைப்பிலான இக்கட்டுரை தமிழர்தம் அகவாழ்வுத் தொடர்பான செய்திகளை ஆராயமுற்படுகின்றது.

வாயில்கள் என்பதன் விளக்கம்

அன்பின் ஐந்திணைக்கு உரியராகி அகவொழுக்கத்தை மேற்கொள்பவர்கள் தலைவன், தலைவி ஆகிய இருவராவர். அவ்விருவருக்கும் உதவி செய்பவர்களாக இருப்பவரைத் தொல்காப்பியர் வாயில்கள் என்று குறிப்பிட்டுள்ளார். வாயில்களாகத் தோன்றுபவர்கள் இன்னார் என்பதை அவர்,

தோழி தாயே பார்ப்பான் பாங்கன்
பாணன் பாடினி இளையர் விருந்தினர்
கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர்
யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப

என்ற நூற்பாவில் கூறியுள்ளார்.

வாயில்களின் வகைப்பாடுகள்

தொல்காப்பியர் கூறியுள்ள வாயில் உறுப்பினர்களை நாம் மூன்றாகப் பிரித்துக் கொள்ளலாம். அவை,

1. உயர்ந்த வாயில் உறுப்பினர்கள்

2. ஒத்த வாயில் உறுப்பினர்கள்

3. தாழ்ந்த வாயில் உறுப்பினர்கள்

என்பனவாம்.

அறிவர், செவிலித்தாய் முதலியோரெல்லாம் உயர்ந்த வாயில்களாவர். தோழி, பாங்கன் முதலியோரெல்லாம் ஒத்து உடன்பழகும் வாயில்களாவர். இளையோர், கூத்தர், விறலியர் முதலியோரெல்லாம் தாழ்ந்த வாயில்களாவர். தாழ்ந்த வாயிலோர்களைக் குற்றேல் செய்பவர்களாகக் கொள்ளலாம். அல்லது தற்கால வழக்கப்படி வேலைக்காரர்களாகக் கருதலாம்.

வாயில்களாகத் தோன்றுபவர்களின் சிறப்பு

உயர்ந்த வாயில்களாக இருந்தாலும், ஒத்த வாயில்களாக இருந்தாலும், தாழ்ந்த வாயில்களாக இருந்தாலும் இவர்களெல்லாம் தலைவன் தலைவி என்றும் இருவரிடத்தும் அன்பு கொண்டு அவர்கள் சிறப்பாக வாழ்வதற்கு உதவுபவர்களாக விளங்கினர். இதனைத் தொல்காப்பியர்,

எல்லா வாயினும் இருவர் தேஎத்தும்
புல்லிய மகிழ்ச்சிப் பொருள என்ப

என்ற நூற்பாவில் வெளிப்படுத்தியுள்ளார்.

வாயில்களாகத் தோன்றுபவர்களின் பேச்சு

வாயில்களாகத் தோன்றுபவர்கள் பேசும்போது வெளிப்படையாகப் பேசுதல் வேண்டும். இக்கருத்தைத்தான் தொல்காப்பியர்,

வாயில் கிளவி வெளிப்படக் கிளத்தல்
தாலின்று உரிய தத்தம் கூற்றே

என்னும் நூற்பாவில் கூறியுள்ளார். இந்நூற்பாவிற்கு உரையெழுதும் இளம்பூரணர்.

தாங்கள் சொல்லவேண்டிய செய்தியைக்
குறிப்புச் சொல்லால் மறைத்துக் கூறினால்
குற்றமென்னை என்ற வினாவை எழுப்பிக்
கொண்டு, வாயில்கள் குற்றேவல்
முறைமையாரதலானும் கேட்போர்
பெரியோராதலானும் வெளிப்படக்
கூறாக்கால் பொருள் விளங்காமையானும்
அவ்வாறு கூறினால் இவர் கூற்றிற்குப்
பயன் இன்மையானும் வெளிப்படவே
கூறுவர் என்க

என்பர்.

வாயில்களாகத் தோன்றுபவர்கள் தலைவன், தலைவியிடத்து பேச வேண்டியவைகள்

வாயில்களாகத் தோன்றுபவர்கள் தலைவனிடம் சென்று தலைவியைப் பற்றி என்னென்னவெல்லாம் பேசவேண்டும் என்பதைத் தொல்காப்பியர் கூறுகின்றார். தலைவியின் கற்புநெறி, காமத்தைப் பற்றிய நல்லொழுக்கம், பொறுமை, விருந்தினரைப் பேணும்பண்பு, உறவினரைக் காக்கும் நிலை முதலான பல நல்ல குணங்களைப் பற்றிப்பேசுதல் வேண்டும். இதனை அவர்,

கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்
மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின்
விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்
பிறவும் அன்ன கிழவோன் மாண்புகள்
முகம்புகல் முறைமையின் கிழவோற்கு உரைத்தல்
அகம் புகல் மரபின் வாயில்கட்கு உரிய

என்ற நூற்பாவால் உணர்த்தியுள்ளார்.

மேற்கூறிய செய்தியைப் போன்று வாயில்களாகத் தோன்றுபவர்கள் தலைவனிடம் சென்று தலைவனைப்பற்றி என்னென்னவெல்லாம் பேச வேண்டும் என்பதையும் தொல்காப்பியர் கூறியுள்ளார். தலைவியின் முன்னால் தலைவனின் புறத்தொழுக்கம் போன்ற கொடுமைச் செய்திகளைக் கூறுதல் கூடாது. இதனை, அவர்

மனைவி தலைத்தாள் கிழவோன் கொடுமை
தம்முள வாதல் வாயில்கட்கு இல்லை

என்றவாறு கூறியுள்ளார்.

வாயில்களாகத் தோன்றுபவர்கள் தலைவன் தலைவியிடத்தேயன்றி தமக்குள் உரையாடிக் கொள்ளும் பொழுதும் அவர்களைப் பற்றிக் குறைகூறாமல் நிறை கூறுமாறு வேண்டும் என்பதையும் தொல்காப்பியர்.

வாயில் உசாவே தம்முள் உரிய

என்ற நூற்பாவில் கூறியுள்ளார்.

முடிவுரை

இதுகாறும் தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ள வாயில்கள் பற்றிய செய்திகளைத் தொகுத்தறிந்தோம். வாயில்களாகத் தோன்றுபவர்களுள் தோழிக்கும், பாங்கனுக்கும் மிகுந்த பங்குண்டு. ஆதலால் அவர்களைப் பற்றிய செய்திகளைத் தனித்து ஆராயலாம். எந்நிலையிலும் தலைவன் தலைவி உறவிற்கு வாயில்களின் பங்கு இன்றியமையாதது.

by Swathi   on 28 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.