LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு    கட்டுரைகள்/சிறப்பு நிகழ்ச்சிகள் Print Friendly and PDF
- கிராமப்புற வளர்ச்சி

உள்ளாட்சி உங்களாட்சி 01 : ஊராட்சி எனும் ஓர் குடியரசு

- திரு.நந்தகுமார் , உள்ளாட்சி ஆய்வாளர் 

கிராமசபைகளை வலுப்படுத்த நாம் மேற்கொண்ட பயணத்தை குத்தம்பாக்கத்திலிருந்து துவக்கத் திட்டமிட்டோம். திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் இந்தக் கிராம பஞ்சாயத்து நமக்கு மிகவும் பரிச்சயமான ஊர். அதுமட்டும் காரணம் அல்ல. மக்களை அதிகாரப்படுத்தும் பல முயற்சிகளுக்கு அவ்வூர் துவக்கமாக இருந்திருக்கிறது. இப்பயணமும் அங்கிருந்தே துவங்க வேண்டுமென எண்ணினோம்.


ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. 16 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் ஊரக வளர்ச்சித் துறையின் அமைச்சராக இருந்தபோது, நமது இன்றைய துணை குடியரசுத் தலைவர் திரு.வெங்கையா நாயுடு அவர்கள் தன் உயர் அலுவலர்களிடம் ஒரு கோரிக்கை வைக்கிறார். "கிராம வளர்ச்சிக்குத் திட்டமிடும் பொறுப்பில் இருக்கும் நாம் இந்தியாவில் இருக்கும் முன்மாதிரி கிராமத்தை நேரில் சென்று பார்க்க வேண்டும்...." என்கிறார். அலுவலர்கள் ஆய்வு செய்து, அவர்கள் நேரில் சென்று பார்க்க வேண்டும் என இறுதியாக முடிவெடுத்த ஊர் குத்தம்பாக்கம். காரணம், அன்றைக்கே பல முன்மாதிரி முயற்சிகளில் சாதித்திருந்தது இச்சிற்றூர். அந்த ஆண்டே டில்லியிலிருந்து வெங்கையா நாயுடு அவர்கள் தலைமையில் ஒரு குழு குத்தம்பாக்கம் வந்து சென்றது. பல கிராமங்களில் முன்மாதிரி முயற்சிகள் இருக்கும் போது அவர்கள் ஏன் இங்கு வரவேண்டும்? மக்களை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் குத்தம்பாக்கம் முயற்சி எந்த விதத்தில் வேறுபடுகிறது?


பொதுவாக இது போன்ற சில கிராம முன்னேற்ற முன்னெடுப்புகளில் கிராமங்களை தத்தெடுக்கிறோம் என்ற பெயரில் மக்களைப் பயனாளிகள் பட்டியலில் சேர்த்துவிடுவார்கள். 'மக்கள் பங்கேற்பு' என்பது அடிக்கடி பயன்படுத்தப்பட்டாலும் அது வெறும் கவர்ச்சிகரமான சொல்லாடலாக மட்டுமே இருக்கும். இந்தத் திட்டம் அல்லது அந்தத் திட்டம்...எந்தத் திட்டமாக இருந்தாலும் மக்கள் என்றைக்கும் பயனாளிகளாகவே இருக்க வேண்டிய நிலை.


ஆனால், பஞ்சாயத்து என்ற அரசின் மூலமாக முனேற்றப்பணிகள் முன்னெடுக்கப்பட்டதுதான் குத்தம்பாக்கத்தின் தனித்துவம். ஊராட்சி என்பது அரசு அலுவலகம் அல்ல... அது ஒரு அரசங்கம்! என மக்களுக்கு விளக்கப்பட்டது. ஊராட்சிக்காகத் திட்டமிடுதல், பட்ஜெட் தயாரித்தல், கிராமசபைகளை முறையாக நடத்துதல், வெளிப்படையான நிர்வாகம் என ஒரு அரசுக்கான பல கூறுகள் அங்கே முறையாக நடத்திக்காட்டப்பட்டன. மக்கள் கிராமசபையில் விவாதித்து, முடிவெடுத்து, தங்கள் பங்களிப்பை கொடுத்து தங்களுக்கானதை தாங்களே உருவாக்கிக்கொண்ட உண்மை கதைகள் பல உண்டு குத்தம்பாக்கத்தில். குறிப்பாக ஒன்றைச் சொல்லலாம், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு போல.... அது குத்தம்பாக்கம் சமத்துவபுரம்.


கிராமங்கள் என்றாலே பல சமூகங்கள் தனித்தனியாக வாழ்ந்து வருவதைப் பார்க்கலாம். "நம் கிராமத்தின் அனைத்துச் சமூகத்தினரும் சமத்துவமாக ஒரே குடியிருப்பில் ஏன் வாழக்கூடாது ?...." என ஒரு லட்சிய கனவு கண்டனர் அம்மக்கள். கனவை நினைவாக்கத் தொடர் முயற்சிகள் எடுத்தனர். உண்மையான முயற்சிகள் என்றும் வீண்போனதில்லையே. மக்களின் கோரிக்கையை ஏற்றது அரசு. 'சமத்துவபுரம்' எனப் பெயரும் வைத்தது. தமிழகத்தின் முதல் சமத்துவபுரம் உதித்தது குத்தம்பாக்கத்தில். தங்கள் கனவு குடியிருப்பை தாங்களே கட்டவேண்டும் என மக்கள் முடிவெடுத்ததுதான் கூடுதல் சிறப்பு. அவர்களே படிப்படியாக தங்களுக்கான புதிய குடியிருப்பை கட்டத் துவங்கினார்கள். ஒன்றல்ல இரண்டல்ல... 100 வீடுகள், அங்கன்வாடி கட்டிடம், ரேஷன் கடை கட்டிடம், சமுதாயக்கூடம் என அனைத்தையும் கட்டி எழுப்பினார்கள். ஆம் நண்பர்களே... சமீப காலத்தில் ஒப்பந்ததாரர்கள் இல்லாமல் முழுக்கமுழுக்க மக்களால் கட்டப்பட்ட முதல் குடியிருப்பும் இதுவாகத்தான் இருக்கும். அதனால்தானோ என்னவோ பல ஆண்டுகளுக்குப் பிறகு இன்றும் அங்கு வாழும் 100 குடும்பங்களுக்கிடையில் சமத்துவம் உறுதியாக இருக்கிறது.


காற்றோட்டமும் வெளிச்சமும் இயல்பாக வந்துபோகும் அந்த விசாலமான சமுதாயக்கூடம் பலருக்கு பிடித்தமான இடம். மறைந்த பத்திரிகையாளர் ஞாநி அவர்கள் தனது கூத்துப்பட்டறை நாடகக்குழுவுடன் அங்கு ஒத்திகை பயிற்சி எடுத்துக்கொள்ள அவ்வப்போது வருவார். மின்விசிறியே தேவைப்படாத இக்கட்டிடங்கள் கட்ட எளியத் தொழில்நுட்பங்களும் கையாளப்பட்டன. சுடப்படாத களிமண் செங்கற்களைக்கொண்டே கட்டப்பட்ட குடியிருப்பு குத்தம்பாக்கம் சமத்துவபுரம். மேலே சொன்ன எல்லாக் கட்டிடங்களும் அதற்கான செங்கட்கற்களும் உள்ளூர் மக்களைக் கொண்டே உருவாக்கப்பட்டது. இதுதானே சுயாட்சிக்கான அடித்தளமாக இருக்க முடியும். இதுதானே ஊராட்சி எனும் ஓர் குடியரசின் அடையாளமாக இருக்கமுடியும். இந்த புதிய குடியிருப்பு மட்டுமல்ல, குத்தம்பாக்கத்திலேயே சுயமாக வடிவமைத்து, ஒப்பந்ததாரர்களுக்கு இடம் கொடுக்காமலே மக்களுக்கு வேலைக்கொடுத்து சொந்த மக்களாலேயே கட்டி எழுப்பப்பட்ட சிறு பாலங்கள், சாலைகள், தடுப்பணைகள் எனப் பலவும் அங்குப் பார்க்கலாம். தங்களை அறியாமலேயே படிப்படியாக முன்னேறிக்கொண்டிருந்தது அந்தச் சமூகம்.


"இப்படி நீங்களே அனைத்தையும் செய்துகொண்டால் நாங்கள் எதற்கு இருக்கிறோம்?" என இதுநாள் வரை ஆதாயம் அடைந்தவர்கள் கேட்காமல் இருப்பார்களா? கேட்டார்கள். அதற்கு மேலும் பல தடைகளைப் போட்டார்கள். அதோடு நிற்கவில்லை. பணிகள் முறையாக நடக்கவில்லை என்றார்கள்... ஊழல் நடந்துள்ளது என்றார்கள்..... தரமற்ற வேலை என்றார்கள்....


இப்படி மக்களின் ஓட்டம், தொடரமுடியாமல் பலமுறை தடை கண்டது. இருந்தும் தடைகளைத் தாண்டி தொடர்ந்து இயங்கினார்கள். ஆனால் ஒரு நாள், இந்த முன்னேற்றச் சக்கரத்தின் அச்சாணிக்கே வந்தது ஆபத்து. ஊராட்சி மன்ற தலைவர் திரு.இளங்கோ மீது பாய்ந்தது 205. ஊரக வளர்ச்சித் துறையில் மிகவும் பிரபலம் இந்த 205 - பஞ்சாயத்துச் சட்டத்தின் ஒரு பிரிவு இது. பஞ்சாயத்துத் தலைவரை பதவி நீக்கம் செய்ய பஞ்சாயத்தின் ஆய்வாளர் என்ற முறையில் மாவட்ட ஆட்சியருக்கு உள்ள அதிகாரம் இந்த 205.


தலைவர் பதிவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார் திரு. இளங்கோ. இதோடு எல்லாம் முடிந்துவிடும் என நினைத்தார்கள் சிலர். ஆனால் துவக்கமே இனிமேல்தான்.


தொடர்ந்து பயணிப்போம்...

by Swathi   on 08 Feb 2018  2 Comments
Tags: உள்ளாட்சி   ஊராட்சி   குடியரசு   உங்களாட்சி   Ullatchi   Kudiyarasu   Ooratchi  
 தொடர்புடையவை-Related Articles
உள்ளாட்சி உங்களாட்சி 06 : சாமானியருக்கும் அதிகாரம் அளித்த தினம் உள்ளாட்சி உங்களாட்சி 06 : சாமானியருக்கும் அதிகாரம் அளித்த தினம்
உள்ளாட்சி உங்களாட்சி 05 :  தலைகீழாக இருக்கிறது முக்கோணம் ! உள்ளாட்சி உங்களாட்சி 05 : தலைகீழாக இருக்கிறது முக்கோணம் !
உள்ளாட்சி உங்களாட்சி 02 : மக்களிடம் கேளுங்கள் உள்ளாட்சி உங்களாட்சி 02 : மக்களிடம் கேளுங்கள்
உள்ளாட்சி உங்களாட்சி 01 : ஊராட்சி எனும் ஓர் குடியரசு உள்ளாட்சி உங்களாட்சி 01 : ஊராட்சி எனும் ஓர் குடியரசு
ஊராட்சி மன்ற தலைவருக்கு ஊதியம் எவ்வளவு தெரியுமா? ஊராட்சி மன்ற தலைவருக்கு ஊதியம் எவ்வளவு தெரியுமா?
குறிஞ்சிக் கபிலர் தமிழ்ச் சங்கம் நடத்தும் கல்லூரி மாணாக்கர்களுக்கான மாநில அளவிலான போட்டிகள் குறிஞ்சிக் கபிலர் தமிழ்ச் சங்கம் நடத்தும் கல்லூரி மாணாக்கர்களுக்கான மாநில அளவிலான போட்டிகள்
குடியரசு தினத்தை முன்னிட்டு சினத்திரையில் ஒளிபரப்பாகும் கத்தி !! குடியரசு தினத்தை முன்னிட்டு சினத்திரையில் ஒளிபரப்பாகும் கத்தி !!
குடியரசு தினம் - சிறப்பு கண்ணோட்டம் !! குடியரசு தினம் - சிறப்பு கண்ணோட்டம் !!
கருத்துகள்
07-Apr-2018 15:45:26 ச.சுரேஷ் பாபு said : Report Abuse
குத்தம்பாக்கம் கிராமம் நான் படிக்கும்போது எப்போதோ கேட்ட நியாபகம் தற்போது தான் அதை பற்றி தெளிந்து கொண்டேன் . மிக்க நன்றி
 
08-Mar-2018 15:52:22 பத்மநாபன் T S said : Report Abuse
ஒரு கலெக்டர் பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய முடிந்தால் கிராமத்து மக்கள் பெரும்பான்மையினர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சூழ்நிலையில் கலெக்டரின் உத்தரவு செல்லாது என நீதிமன்றம் மூலம் நியாயம் கேட்க வைத்தால் என்ன?
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.