LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு    கட்டுரைகள்/சிறப்பு நிகழ்ச்சிகள் Print Friendly and PDF
- கிராமப்புற வளர்ச்சி

உள்ளாட்சி உங்களாட்சி 02 : மக்களிடம் கேளுங்கள்

- திரு.நந்தகுமார் , உள்ளாட்சி ஆய்வாளர்

தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டம் பிரிவு 205 ன் படி, பஞ்சாயத்துகளின் ஆய்வாளர் என்ற முறையில் மாவட்ட ஆட்சியர் பஞ்சாயத்து தலைவரைப் பதவி நீக்கம் செய்யலாம் எனச் சென்ற கட்டுரையில் பார்த்தோம்.

பஞ்சாயத்துத் தலைவர்கள் 205 ல் பதவி நீக்கம் செய்யப்படுவது சாதாரணமான ஒரு விசயமாகிவிட்டது. ஆனால் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள யாராலும் அதை அவ்வளவு சாதாரணமாக கடந்துசென்றுவிட முடியாது. எப்படி நாம் இந்திய அரசியில் அமைப்பு சட்டம் பிரிவு 356 வை விவாதத்திற்கு உட்படுத்துகிறோமோ, அதாவது அச்சட்ட பிரிவை பயன்படுத்தி மத்திய அரசு, மாநில அரசுகளைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதை விவாதத்திற்கு உட்படுத்துகிறோமோ அதேபோல மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரை அரசின் ஊழியராக இருக்கும் ஆட்சியர் பதவி நீக்கம் செய்வதையும் விவாதத்திற்கு உட்படுத்த வேண்டும்.

ஆயிரக்கணக்கான மக்களால் ஜனநாயக முறைப்படி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் முறையாகச் செயல்படாதபோது, சட்டத்திற்குப் புறம்பாக செயல்படும் போது அவரின் பதவியை பறிக்கும் இறுதி முடிவு எடுக்க வேண்டிய பொறுப்பு யாரிடம் இருக்க வேண்டும்...? அவரைத் தேர்ந்தெடுத்த அந்த மக்களிடமா? அல்லது ஊராட்சிகளின் ஆய்வாளர் என்ற முறையில் மாவட்ட ஆட்சியரிடமா? என்னைக் கேட்டால் மக்களின் தீர்ப்பிற்கு மதிப்பளிக்கவேண்டும் என்பேன். சட்டத்திற்குப் புறம்பாக செயல்படும் ஒரு பஞ்சாயத்து தலைவர் பதவியில் தொடரலாமா? வேண்டாமா? என்ற இறுதி முடிவு எடுக்கவேண்டிய வாய்ப்பும் பொறுப்பும் மக்களிடம்தான் இருக்க வேண்டும் என்பேன். வலுவான ஆதாரத்தோடுதான் இதை நாம் சொல்லுகிறோம். ஆம். 205 மூலம் பதவி பறிக்கப்பட்டு இருந்த திரு.இளங்கோ அவர்களை மீண்டும் அதே பொறுப்பை ஏற்க வைத்தது மக்களே. பதவி நீக்கம் செய்தவர்களே அவரை மீண்டும் பதவி ஏற்க அழைத்தார்கள். எப்படித் தெரியுமா ? 205 ரூபத்தில் பஞ்சாயத்து சட்டம் அவருக்கு எதிராகப் பாய்ந்தாலும் அதே சட்டம் வேறொருபத்தில் அவரைக் காத்தது. உண்மையை உலகறியச் செய்தது. அது கிராமசபை. வெறும் வாக்காளர்களாக இருந்த மக்களுக்கு அதிகாரம் வழங்கும் கிராமசபை.

குத்தம்பாக்கத்தில் நடந்த அந்தக் கிராமசபை மிக முக்கியமானது. அதை விரிவாகப் பார்ப்போம். அதற்கு முன்பு நாம் அறிந்து கொள்ள வேண்டியது ஒன்று உள்ளது. அது, இந்த கிராமசபையின் சட்டப்படியான நிலையைப் பற்றி. வாருங்கள் வேகமாக ஒரு வரலாற்று நிகழ்வைப் பார்த்துவிட்டு வருவோம். நாம் அறிந்து கொள்ள வேண்டிய வரலாறு அது.

1951 ஆம் ஆண்டு ஜூன் மாதம் துவங்கி பலமுறை திருத்தப்பட்டாலும், நம் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 73 வது முறையாகத் திருத்தப்பட்டது ஒரு வரலாற்று நிகழ்வு. 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இத்திருத்தம் சட்டமானது. அதுதான் இப்புதிய பஞ்சாயத்துச் சட்டம். அது நாள் வரை ஊசலாடிக்கொண்டிருந்த பஞ்சாயத்து அமைப்புகள் சட்டத்தால் அங்கீகரிக்கப்படுகிறது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், பிரிவு ஒன்பதில் இடம்பிடிக்கிறது, வலுவாக நிலைநிறுத்தப்படுகிறது. ஆம், நிலைநிறுத்தப்படுகிறது. இனி மத்திய மாநில அரசுகளைப் போல் பஞ்சாயத்தும் ஒரு அரசாங்கமே என இந்திய மக்களுக்கு அறிவிக்கப்பட்டது அன்றுதான். மேலும், இப்புதிய பஞ்சாயத்து சட்டத்தின் மிக முக்கிய கூறு கிராமசபை. சுதந்திர இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் முதல்முதலாக உதயமாகிறது கிராமசபை என்ற அமைப்பு. ஒரு இளம் விஞ்ஞானியாக இருந்த திரு.இளங்கோ அவர்களை இது யோசிக்க வைத்தது. 33 வயதே ஆன அவர் தன் மக்களை உயர்த்த, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஒரு வாய்ப்பாகப் பார்த்தார் இப்புதிய பஞ்சாயத்து அரசை. "நாம் இல்லாவிட்டால் வேறு யார்?" என யோசிக்கிறார். முடிவெடுக்கிறார். மத்திய அரசு பணியைத் துறந்து தனது ஊருக்குத் திரும்புகிறார். பிறகு அவர் பஞ்சாயத்து தலைவரானதும், மேற்கொண்ட முயற்சிகளும், ஏற்படுத்திய மாற்றங்களும் நாம் அறிவோம். சென்ற கட்டுரையில் விரிவாகப் பார்த்தோம்.

சரி, குத்தம்பாக்கத்தில் நடந்த அந்தக் கிராமசபைக்கு வருவோம்.

பதவி நீக்கம் செய்யப்பட்ட திரு.இளங்கோ நியாயம் கேட்டார். ஜனநாயகத்தின் கதவுகளைத் தட்டினார். கதவு திறந்தது. பிரபலமான நாளிதழின் ஆசிரியருடன் நீண்ட நேரம் பேசுகிறார். விவரிக்கிறார். தன் நிர்வாக பணிகளை வெளிப்படையாக ஆய்வுக்கு உட்படுத்தத் தயார் என்கிறார்..."மக்களிடம் கேட்டுப்பாருங்கள்" என்கிறார்...ஊடகங்களின் உதவியை வேண்டினார். உதவிக் கிடைத்தது.

அடுத்த நாள். முதல் பக்கத்தில் பத்திரிக்கை செய்தி வருகிறது. "முன்மாதிரியாக இயங்கும் கிராமத்தில்...முன்னோடி முயற்சிகளை முடக்கலாமா...?", "அடித்தளஜனநாயகத்திலேயே ஜனநாயகம் இல்லை என்றால் எப்படி? இளம் தலைவர் இளங்கோவிற்கு நியாயம் கிடைக்குமா? என்று குத்தம்பாக்கத்தின் சூழலை விளக்கிய கட்டுரை... "ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா...?" என்ற கேள்வியுடன் முடிகிறது. இது நடந்தது 1998 ல்.

நடவடிக்கை எடுத்தார் முதல்வர். உடனடியாக நடவடிக்கை எடுத்தார். அடுத்த சில நாட்களில் மாவட்ட ஆட்சியர் குத்தம்பாக்கத்தில். சிறப்பு கிராமசபை கூட்ட முடிவெடுக்கப்படுகிறது. தேதி அறிவிக்கப்படுகிறது.

திரளான கூட்டம். ஒட்டுமொத்த கிராமமே திரண்டது போன்ற கூட்டம். அரசின் சார்பாக மாவட்ட ஆட்சியர் பங்கேற்றார். பஞ்சாயத்துத் தலைவர் மீது அரசு எழுப்பிய குற்றச்சாட்டுகளை பட்டியலிடத் துவங்கினார் மாவட்ட ஆட்சியர். ஓரிரு குற்றச்சாட்டுகளை எழுப்பினார்....அவர் துவங்கியதுதான் தாமதம். மக்கள் சற்றும் தாமதிக்கவில்லை. ஆட்சியர் வாசித்த குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்தார்கள். ஒருவர் இருவர் அல்ல....அனைவரும். ஆம் நண்பர்களே. மக்களே செய்த பணியல்லவா? தவறு நடக்கவில்லை என அவர்களுக்குத்தெரியுமே.

இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை ஆட்சியர். பணிகள் அனைத்தையும் உடனே ஆய்வு செய்ய உத்தரவிடுகிறார்...

அனைத்துப் பணிகளும் விரிவாக ஆய்வு செய்யப்டுடுகிறது. பாலங்களின் தரம் சோதிக்கப்படுகிறது.... பயனாளிகள் பட்டியல் பரிசோதிக்கப்படுகிறது.... வரவு - செலவு கணக்குகளும் முழுமையாகத் தணிக்கைக்கு உட்படுகிறது.... எதிலும் தவறில்லை...அனைத்தும் சரியாகவும் தரமாகவுமே இருக்கின்றன... சொல்லப்போனால் பணிகள் தரம் உயர்ந்ததாக இருக்கின்றன...

இவை அனைத்தும் மக்கள் முன் நடக்கிறது.... பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் மக்கள்.

இறுதியில்... சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதை உணர்கிறார் ஆட்சியர். அங்கேயே ஆட்சேபனைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது.... மீண்டும் பஞ்சாயத்து தலைவராகப் பொறுப்பேற்க அழைக்கப்படுகிறார் திரு.இளங்கோ . வென்றது மக்கள் சக்தி. சாதித்தது கிராமசபை.

ஆட்சியர் பதவி பிரமாணம் செய்துவைக்கிறார். மக்களின் ஆர்ப்பரிப்பு விண்ணை முட்டியது.

இது ஜனநாயகத்தின் ஆர்ப்பரிப்பு.

தொடர்ந்து பயணிப்போம்.


by Swathi   on 08 Feb 2018  1 Comments
Tags: உள்ளாட்சி   உங்களாட்சி   Ullatchi   Aatchi   Makkal   Panchayat   Grama Panchayat  
 தொடர்புடையவை-Related Articles
உள்ளாட்சி உங்களாட்சி 06 : சாமானியருக்கும் அதிகாரம் அளித்த தினம் உள்ளாட்சி உங்களாட்சி 06 : சாமானியருக்கும் அதிகாரம் அளித்த தினம்
உள்ளாட்சி உங்களாட்சி 05 :  தலைகீழாக இருக்கிறது முக்கோணம் ! உள்ளாட்சி உங்களாட்சி 05 : தலைகீழாக இருக்கிறது முக்கோணம் !
உள்ளாட்சி உங்களாட்சி 02 : மக்களிடம் கேளுங்கள் உள்ளாட்சி உங்களாட்சி 02 : மக்களிடம் கேளுங்கள்
உள்ளாட்சி உங்களாட்சி 01 : ஊராட்சி எனும் ஓர் குடியரசு உள்ளாட்சி உங்களாட்சி 01 : ஊராட்சி எனும் ஓர் குடியரசு
மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் மொழிபெயர்ப்பாளர் மாநில மாநாடு 2018-இல் திருச்சியில் நடைபெற உள்ளது மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் மொழிபெயர்ப்பாளர் மாநில மாநாடு 2018-இல் திருச்சியில் நடைபெற உள்ளது
ஜல்லிக்கட்டு நடைபெற கிராமசபை தோறும் தீர்மானம் கொண்டுவரலாமே !! ஜல்லிக்கட்டு நடைபெற கிராமசபை தோறும் தீர்மானம் கொண்டுவரலாமே !!
நாட்டுக்காக 4 பேர் டாஸ்மாக்கை ஊத்தி மூடும் போராட்டம்… நாட்டுக்காக 4 பேர் டாஸ்மாக்கை ஊத்தி மூடும் போராட்டம்…
தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து சட்ட பஞ்சாயத்து இயக்கம் மனு அளித்தது..!! தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து சட்ட பஞ்சாயத்து இயக்கம் மனு அளித்தது..!!
கருத்துகள்
07-Apr-2018 15:52:55 ச. சுரேஷ் பாபு said : Report Abuse
அருமை
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.