LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு    கட்டுரைகள்/சிறப்பு நிகழ்ச்சிகள் Print Friendly and PDF
- கிராமப்புற வளர்ச்சி

உள்ளாட்சி உங்களாட்சி -04 : திட்டமிட்டு வெல்வோம் !

-திரு.நந்தகுமார், உள்ளாட்சி ஆய்வாளர் 

இந்திய திட்ட கமிஷன். சுதந்திர இந்தியாவின் வண்ண வண்ண கனவுகளை நினைவாக்க நிறுவப்பட்ட அமைப்பு என்று சொல்லலாம். புதிதாய்ப் பிறந்த தேசத்திற்கான திட்டமிடும் பணியைப் பிரதமர் தலைமையிலான திட்டக்குழு கையில் எடுத்தது. ரஷ்ய சோசியலிச கொள்கையால் ஈர்க்கப்பட்டதாலோ என்னவோ ஜோசப் ஸ்டாலினின் ஐந்தாண்டு திட்டம் இந்தியாவிற்கும் இறக்குமதி செய்யப்பட்டது. 1951 ஆண்டு ஏப்ரல் 1 அன்று, முதல் ஐந்தாண்டு திட்டம் வந்தபோது அதன் திட்ட மதிப்பு சுமார் 2069 கோடி. பல திட்டங்கள் போடப்பட்டுப் பல ஐந்தாண்டுகள் கடந்தன. கடைசியாக 2014 ல் திட்டக் குழு கலைக்கப்பட்ட போது 11வது ஐந்தாண்டு திட்டத்தின் திட்ட மதிப்பீடு எவ்வளவு தெரியுமா...? ரூ 15,25,639 கோடிகள். இது முதல் ஐந்தாண்டு திட்ட நிதியைவிட 73,738% அதிகம். இதுதவிர மாநில திட்டக்குழுக்களும் உண்டு. தமிழ் நாடு திட்டக்குழுவின் 11வது ஐந்தாண்டு திட்டத்தின் திட்ட மதிப்பீடு சுமார் 20464.8 கோடி ரூபாய்.

கடைசியாக ஒரு புள்ளி விவரம் சொல்லிவிடுகிறேன். நாம் அறிந்துகொள்ள வேண்டிய தகவல் அது.


தமிழகத்தில், ஒரு ஊராட்சியில் மட்டும் ஊரக வளர்ச்சிக்காக 503 திட்டங்கள் உள்ளன என்கிறது ஓர் ஆய்வு. இதற்காக சுமார் 32 வெவ்வேறு அரசுத் துறைகள் வேலை செய்கின்றன.


யாருக்காக இத்திட்டங்கள் ?!

சமீபத்தில் நாங்கள் ஒரு கால்சென்டர் எண்ணை மக்களுக்குத் தெரிவித்தோம். தேவைப்பட்டால் எங்களைத் தொடர்பு கொள்ளச்சொன்னோம். கடந்த ஆண்டு நடந்திருக்க வேண்டிய உள்ளாட்சி தேர்தல்கள் நடக்காததால் பல கிராமங்களில் மக்கள் தங்கள் பிரச்சனைகளுக்கு யாரை அணுகுவது எனத் தெரியாமல் தவிப்பதை அறிந்தோம். அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியைச் செய்யலாம் என்பதற்காகவே இந்த கால்சென்டர் முயற்சி. சமூக வலைத்தளங்கள் மூலம் தொலைப்பேசி என்னைப் பரப்பினோம். எதிர்பார்த்ததைவிட அதிகமாகவும், தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் அழைப்புகள் வந்தன. குடிநீர் பிரச்சணையாகட்டும் , சுகாதார தேவையாகட்டும் மக்களின் குறைகளை எடுத்துக்கொண்டு சம்மந்தப்பட்ட அலுவலர்களைத் தொடர்பு கொண்டபோது..... பெரும்பான்மையாக நமக்குக் கிடைத்த பதில்...."நிதி இல்லை" என்பதுதான். குடிநீர் மோட்டார் பழுதை சரிசெய்ய முடியாதலால் குடிநீர் இல்லாமலும், தெருவிளக்குகள் இல்லாமல் பல நாட்கள் இருளில் கழித்த மக்களும் நம்மிடம் பேசினார்கள்... நம்மை யோசிக்க வைத்தன அந்த கால்சென்டர் அழைப்புகள்...


மக்களின் பேரைச் சொல்லி பல கோடிகள் ஒதுக்கப்படுவது உண்மை.... விதவிதமான திட்டங்கள் இருப்பதும் உண்மை. எத்தனைத் திட்டங்கள் ​!​எத்தனை எத்தனைக் கோடிகள்​ ​​​!​​. ஆனால் தெருவிளக்கு எரியாமல்... அதை மாற்ற நிதி இல்லை எனச் சொல்லி இருளில் இருக்கும் கிராமங்கள் இந்தக் காலத்திலும் இருக்கின்றன என்ற உண்மையை நேருக்குநேர் சந்திக்கும் போது பல கேள்விகள் நம்மைத் துளைத்தெடுத்தன ...... ஏன் இந்த இடைவெளி..? உண்மையான தேவைக்கும் திட்டத்திற்கும் இவ்வளவு பெரிய இடைவெளி எப்படி சாத்தியம் ? எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு கேள்வி.... 503 திட்டங்கள் எங்கே ஒரு தெருவிளக்கு எங்கே?


தரையில் ​அமர்ந்து தயாரி​​க்கும் திட்டம்

குத்தம்பாக்கம் திரு. இளங்கோ அவர்களிடத்தில் ஒரு ஆவணம் இருக்கும். அந்த ஊராட்சியில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின், அதன் உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் சமூக பொருளாதார நிலை பற்றிய தகவல்கள் அதில் இருக்கும். குழந்தைகளின் ஆரோக்கியம் பற்றிய தகவல்கள், சிறுவர் சிறுமியர் எந்தப் பள்ளியில் என்ன வகுப்பு படிக்கிறார்கள், குடும்பத்தின் வருவாய் நிலை உள்ளிட்ட பல தகவல்கள் இருக்கும். குடும்பத்தலைவர் குடிகாரராக இருந்தால் தனி குறியீடு இருக்கும். யாரேனும் நாள்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டிருந்தால் அந்தத் தகவல்களும் இருக்கும்.... திரு. இளங்கோ அவர்களே வீடு வீடாகச் சென்று புள்ளி விவரங்களைச் சேகரித்ததை பார்த்திருக்கிறேன். தெருத்தெருவாக நடந்தும், திணையில் உட்கார்ந்தும், பாதையில் நின்றும் எடுத்த தகவல்கள் அவை....​என்னைப்பொறுத்தவரை இவை வெறும் தகவல்களோ அல்லது தேவைகளின் பட்டியலோ அல்ல. மக்களின் ​உணர்வுகளை, அவர்களின் வாழ்வை பிரதிபலிக்கும் பதிவுகள்.


பல நேரங்களில் முக்கிய முடிவுகள் எடுப்பதற்கோ, கிராமசபையில் முறையாக வளர்ச்சிப் பணிகளை ஒதுக்குவதற்கோ இத்தகவல்கள் எவ்வளவு முக்கிய பங்காற்றியிருக்கிறந்து என அறிவேன். எங்கோ இருந்து திட்டமிடுவதற்கும் நம் மக்களுக்காக நாம் திட்டமிடுவதற்கும் உள்ள வேறுபாட்டைக் கண்டுணர்ந்த தருணங்கள் அவை.


திரு.இளங்கோ அவர்களைப்போல, பல முன்மாதிரி - முன்னோடி ஊராட்சி தலைவர்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைத்தது. முதன் முதலில் ஊராட்சிக்கென காற்றாலை அமைத்த ஓடந்துறை திரு.சண்முகம் ஐயா, தனது கிராமம் முழுமைக்கும் மழைநீர் சேமிப்பு முறைகளை ஏற்படுத்தி உவர் நீராக இருந்த நிலத்தடி நீரை நன்னீராக மாற்றிய மைக்கேல்பட்டினம் திருமதி. ஜேசு மேரி, "விளைநிலங்கள் விற்பனைக்கு அல்ல" எனத் தெரிவித்து விவசாயிகளைக் காத்த அறியனேந்தல் திரு.நந்தகோபால் ஆகியோரை நேரடியாகச் சந்தித்து அவர்களின் பணிகளை பார்த்ததில்.... அவர்களுக்குள் ஒரு ஒற்றுமை இருப்பதை நன்கு உணர முடிந்தது. நிர்வாக ரீதியான ஒற்றுமை. அவர்கள் அனைவரிடமும் ஒரு திட்டம் இருந்தது. தங்கள் கிராமம் பற்றிய திட்டம்.


கிராமத்தின் இயற்கை வளங்கள், மக்களின் பொருளாதார நிலை எனப் பல விஷயங்களை உள்ளடக்கிய திட்டம் அது. மாணவர்களுக்கான சீருடை முதல் வளரிளம் பெண்களுக்கான சுகாதார வசதிகள் வரை, நிலத்தடி நீர் பாதுகாப்பு முதல் நீர் நிலைகள் மேலாண்மை வரை பல வற்றை உள்ளடக்கிய திட்டம். அந்தந்த ஊரின் ஆதாரங்களங்கள் கணக்கிட்டு அந்தந்த ஊரின் தேவைகளுக்காக அவர்களாலேயே தயாரிக்கப்பட்ட திட்டம். இதுதான் உண்மையான மக்கள் திட்டம். மக்களுக்கான வளர்ச்சி திட்டம்.


மத்திய நிதிக்குழுவின் முடிவு

கடந்த அக்டோபர் மாதம் 02 ஆம் தேதி, காந்தி ஜெயந்தி அன்று நடைபெற்ற கிராமசபையில் நண்பர்கள் பலர் கலந்துகொண்டோம். கூட்டத்தில் கிராமசபையின் அஜெண்டாவை வேகமாக வாசித்துக்கொண்டே போனார் ஊராட்சி செயலர். அஜெண்டாவில் மிக முக்கியமான ஒன்று இருந்தது. அது கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டத்திற்கு மக்களின் ஒப்புதல் பெறுவது சமந்தமானது. அதையும் சம்பிரதாயத்திற்கு படித்து வைத்தார் பஞ்சாயத்து கிளர்க்கு. விசயம் தெரிந்த இளைஞர்கள் சிலர் விடவில்லை...அது பற்றி கேள்விகளை எழுப்பினார்கள்...."வி.பி.டி.பி ஆவணங்கள் எங்கே?" என்றார்கள்.... அது பற்றிய தகவல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்த போதுதான் ஊராட்சி அளவில் திட்டம் தயாரிக்கப்படுகிறது என்பதும் அதற்கு மத்திய அரசு நிதி வருகிறது என்பதும் மக்கள் பலருக்கு தெரிய வந்தது. "14வது நிதிக்குழுவின் விதிகளின்படி, ஊராட்சி வளர்ச்சி திட்டத்தின் அடிப்படையிலேயே ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது​...​" என விளக்கினோம்.

 

ஒவ்வொரு ஊராட்சியும் ஆண்டுதோறும் வளர்ச்சி திட்டம் தயாரித்து வந்தாலும், தற்போது அந்தத் திட்டத்தின் அடிப்படையிலேயே நிதி வழங்க முடியும் என மத்திய நிதிக்குழு அறிவித்திருப்பது பல அனுபவங்களின் அடிப்படையில் எடுக்கப் பட்ட முடிவாகும். மத்திய திட்டமிடுதலின் வரம்புகளை உணர்ந்ததாலும் கேரளா போன்ற மாநிலங்களில் ஊராட்சி அளவிலான திட்டமிடல் வெற்றிகரமாக நடைபெறுவதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

 

வழிகாட்டுகிறது சட்டம்... வீறு நடைபோடுகிறது கேரளம் !

தமிழகம் உள்படப் பல மாநில பிரதிநிதிகள் கலந்துகொண்ட அரங்கு நிறைந்த கூட்டம் அது. கேரளா நிதி அமைச்சர் திரு. தாமஸ் ஐசக் பேசுகிறார்... "எங்கள் அரசு, திட்டங்களை மக்கள் மேல் திணிப்பதில்லை....நாங்கள் நிதியைத் தருகிறோம்.... திட்டங்கள் ஒவ்வொரு பஞ்சாயத்திலிருந்தும் வருகிறது....​​" என்றார். இதனை வெறும் அறிவிப்பாகப் பார்த்துவிட முடியாது... கடைக்கோடியில் இருக்கும் சாமானியனின் சொல்லும் அங்கீகரிக்கப்படுகிறது என்பதே இதன் உண்மைப் பொருள்.​ ஒவ்வொரு ஊராட்சியும் தங்களுக்கான திட்டங்களைத் தயாரிக்க வேண்டுமென இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழிகாட்டுகிறது. கேரளம் அதனை வாரி எடுத்துக்கொண்டது, தனதாக்கிக்கொண்டது என்பதே உண்மை. ​புதிய பஞ்சாயத்து சட்டம் வந்தவுடனேயே, 1996 ஆம் ஆண்டு அம்மாநிலம் முழுவதும் பஞ்சாயத்து அளவிலான திட்டமிடுதலுக்கான இயக்கமே நடத்தினார்கள். கேரள சாஸ்திர சாஹித்திய பரிஷத் என்ற அமைப்பின் முன்னெடுப்பில் நடந்த இந்த இயக்கம், இன்றைக்கு அங்கு நடக்கும் வலுவான பஞ்சாயத்து அமைப்புகளுக்கு, அதன் ஜனநாயகத்திற்கு அடித்தளமிட்டது.

 

நம்மால் முடியும் !

​இன்றைய சூழலில், நமது ஊரை மாற்றவேண்டும் என நாம் முடிவெடுத்துவிட்டால்... நாம் யாருக்காகவும் காத்திருக்கத் தேவையில்லை. ஒரு தலைவன் வந்து நமது ஊரை மாற்றுவார் என்று காத்திருக்கத்தேவையில்லை. பஞ்சாயத்து தலைவருக்காகக் கூட காத்திருக்கத்தேவையில்லை. ஆம் நண்பர்களே.... நமது ஊருக்கான திட்டத்தினை நாமே தயாரிப்போம்...அதனை நாம் தயாரிக்காமல் வேறு யார் தயாரிக்க முடியும்.. தகவல்களைத் திரட்டுவோம். நம் ஊரின் இயற்கை ஆதாரங்கள், நம் குழந்தைகளின் ஆரோக்கியம், மாணவர்களின் கல்வி நிலை, நம் ஊரில் உள்ள பள்ளியின் சூழல், அதன் தரம், பெண்களின் கல்வி மற்றும் வாழ்க்கை தரம், முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் நலன், நீர் நிலைகள் பாதுகாப்பு என ஒவ்வொன்றைப் பற்றியும் தகவல்கள் திரட்டுவோம். நம் ஊரின் முழு விவரங்களை நம் விரல் நுனிக்குக் கொண்டுவருவோம். திட்டமிட்டுச் செயல்பட்டால் நாமே மன்னர்கள்... அதுதான் உண்மையான மக்களாட்சி !


தொடர்ந்து பயணிப்போம்....

by Swathi   on 06 Mar 2018  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
கருங்காலி மரத்தின் அற்புத பயன்கள்.. கருங்காலி மரத்தின் அற்புத பயன்கள்..
ஓங்கிய வருமானத்திற்கு ஒருங்கிணைந்த பண்ணையம் ஓங்கிய வருமானத்திற்கு ஒருங்கிணைந்த பண்ணையம்
வேளாண் பகுதி - இயற்கை வேளாண்மை – உரமிடுதலில் ஒருநெருடல்: வேளாண் பகுதி - இயற்கை வேளாண்மை – உரமிடுதலில் ஒருநெருடல்:
பாரம்பரிய அரிசி வகைகளும் -பயன்களும் பாரம்பரிய அரிசி வகைகளும் -பயன்களும்
விவசாய பழமொழிகள்.. விவசாய பழமொழிகள்..
நம்பிக்கை பஞ்சாயத்துகள்  1. திரு. RVS. சிவராசு, MBA., தலைவர், பிரதாபராமபுரம் ஊராட்சி நம்பிக்கை பஞ்சாயத்துகள் 1. திரு. RVS. சிவராசு, MBA., தலைவர், பிரதாபராமபுரம் ஊராட்சி
வனத்துக்குள் தமிழ்நாடு வனத்துக்குள் தமிழ்நாடு
கொரோனாவிற்கு பின் நாம் செல்லவேண்டிய தற்சார்பு வாழ்வியல் திசை குறித்த விழிப்புணர்வு நிகழ்வு.. கொரோனாவிற்கு பின் நாம் செல்லவேண்டிய தற்சார்பு வாழ்வியல் திசை குறித்த விழிப்புணர்வு நிகழ்வு..
கருத்துகள்
07-Apr-2018 16:14:50 ச.சுரேஷ் பாபு said : Report Abuse
அருமை அருமை
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.