LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- யுவன் சந்திரசேகர்

உள்ளோசை கேட்பவர்கள்

திருமடத்தின் தோரணவாயிலில் சற்றுத் தயங்கி நின்றேன். பூட்டாமல் சாத்திய கிராதிக் கதவின் மறுபுறம் தொடங்கிய சிமெண்ட்டுப் பாதை நேராகச் சென்று முட்டிய இடத்தில் கட்டடம் வீற்றிருந்தது. மரங்களின் அடர்த்திக்குள் ஒளிந்திருந்தது. பச்சைத் திரட்சிகளின் இடைவெளியில் விரிந்த மைதானத்தில், அகலவசமாகப் பரந்த கட்டடம். பழங்கால அரண்மனைகள்போல உயரமான வாயிற்தூண்களும் மாடங்களும் கொண்டது. வளாகத்தின் வாயிலிலிருந்து திருமடத்தின் நிலை வாயிலுக்கு நாலைந்து நிமிடம் நடந்து செல்ல வேண்டியிருந்தது. மடத்தின் விஸ்தீரணம் நாற்பது ஏக்கர் என்று படித்திருந்தேன்.

இந்த மடத்தைப் பற்றி இன்னும் ஏகப்பட்டது படித்திருந்தேன். சைவத்திரு எம்.ஏ. கயிலாய முதலியார் பி.ஏ. அவர்கள் எழுதிய சிவத் தொண்டும் தமிழ்த் தொண்டும் என்னும் நூலில் முள்ளிப்பள்ளம் மடம் பற்றித் தனி அத்தியாயமே இருக்கிறது.

சென்ற நூற்றாண்டின் ஆரம்பம்வரை கூட இந்த ஊரில் கடைகள் கிடையாதாம். எது வேண்டுமானாலும் மடத்தில் சென்று வாங்கிக்கொள்ள வேண்டியதுதான். கலாச்சாரரீதியாகவும் பொருளா தாரரீதியாகவும் அந்த வட்டாரத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த மடம் என்றும் நாயக்கர் காலத்தில் வழங்கப்பட்ட மானியங்கள் இருபத்தேழு கிராமங்களில் நஞ்சை நிலமாக விரிந்து கிடக்கின்றன என்றும் முதலியார் குறிப்பிடுகிறார்.

ஞானசம்பந்தர் ஸ்தாபித்த மடம் இது என்று ஒரு குறிப்பு. சென்ற நூற்றாண்டுக்கு முன்புவரை தென்னாட்டின் மிக முக்கியமான அதிகார பீடங்களில் ஒன்றாய் இருந்திருக்கிறது. சிறுகச் சிறுகத் தன் மகத்துவத்தை இழந்துவந்து, இன்றைக்கு வெற்றுக் கட்டடமாகவும் கீழ்மைகள் மலிந்த வெளியுலகத்தின் குறும்பிரதி போலவும் நீதிமன்றத்தில் தேங்கிய பல வழக்குகளோடும் திகழ்கிறது என்று திருவாதவூரில் ஓதுவார் ஒருவர் என்னிடம் மனம் வெதும்பிக் கூறினார்.

ஆனால் சந்நிதானத்தின் அபிப்பிராயம் வேறுமாதிரி இருந்தது. உடல் முழுவதும் அங்கங்கே மும்மூன்றாய் விபூதிக் கோடுகளும் ஒரு கையால் சுமக்க முடியாத அளவு ருத்ராட்ச மாலைகளும் அணிந்து கருங்கல் சிலைபோல அமர்ந்திருந்தது சந்நிதானம். தரையிலிருந்து சில அங்குலங்களே உயர்ந்த, சிவப்பு வெல்வெட் தைத்த, கால்களற்ற நாற்காலியில் வீற்றிருந்தது. தானாய் எழுந்து தானாய் நடக்க முடியுமா என்று ஐயம் உண்டாக்கும் பிரம்மாண்ட தொந்தி. தீனியின் அசதி மிளிரும் முகம். பேசும்போது இடது கையை நன்கு உயர்த்தி அக்குளைச் சொறிந்துகொண்டது. அக்குள் மடிப்பில் ஏகப்பட்ட பாலுண்ணிகள். ராமகிருஷ்ணன் என்னிடம் ஒப்படைத்த பணியில் ஆர்வமில்லாததால்தான் பார்க்கிற எல்லாமே விகாரமாகத் தென்படுகிறதோ என்று தோன்றியது எனக்கு... ஆனால், சந்நிதானத்தின் குரல் வளமானது. ஒலிபெருக்கி இல்லாமலே சொற்பொழிவாற்றுவதற்கு ஏற்றது.

தம்பி, வைகையாத்திலே சம்பந்தருடைய ஏடு எதிர்த்து நீந்துது. நதிங்கிறது என்னா? அதுதான் காலம். திரு வேடகத்திலே வர்ற வைகைத் தண்ணிக்கி வருசநாடு ஆண்டிப்பட்டி இறந்த காலம். மதுரை எதிர்காலம். ஓட்டத்தை எதிர்த்து நீந்துற ஏடு இன்னும் இன்னு மின்னும் பழைய காலத்துக்குத்தானே போயிருக்கணும்? அப்பிடிப் போயிப்போயி இப்போ இந்த முள்ளிப்பள்ளம் திருமடத்திலே வந்து ஒக்காந்திருக்கு பாத்தீகளா? இதுலேர்ந்து காலம் ஒரு வட்டம்ங்கிறது ருஜுவாகுதில்லே?... அப்படியாக்கொத்த சுவடிகள் இருக்கிற இடம் இது. இந்த இடத்தோட மகிமெ ஒரு நாளும் குறையாது...

இங்கு வருவதற்கு முன்பு பலரையும் சந்தித்துப் பேசியிருந்தேன். காரணம், ராமகிருஷ்ணனுக்கு எல்லாமே கச்சிதமாக இருக்க வேண்டும். அவர் அமெரிக்காவில் படித்து, அங்கேயே சம்பாதித்து, ஓய்வுக் காலத்தில் இந்தியா திரும்பியவர். புத்தகப் பதிப்புத் தொழிலில் பெரும் முதலீட்டுடன் இறங்கியிருக்கிறார். அதுபற்றி ஏகப்பட்ட கனவுகள், திட்டங்கள் வைத்திருக்கிறார்.

முள்ளிப்பள்ளம் மடத்தில் சித்த மருத்துவம் தொடர்பான நூல் ஒன்று இருப்பதாகவும் தம்முடைய இளமைக் காலத்தில் பார்த்த அந்த நூலுக்கு இதுவரை இன்னொரு பதிப்பு வெளிவந்ததாகத் தெரியவில்லை என்றும் காமாந்தக ரோகம் என்று அக்காலத்தில் வழங்கப்பட்ட நோய்க்கு அந்நூலில் வைத்தியம் இருப்பதாகவும் அந்த நோயின் அறிகுறிகளைப் படித்தால் கிட்டத்தட்ட நம் காலத்து எய்ட்ஸ் போன்றே இருக்கிறதென்றும் அச்சேற்றினால் அபாரமான விற்பனைக்கு வாய்ப்பிருப்பதாகவும் யாரோ ஒரு தமிழறிஞர் ராமகிருஷ்ணனின் காதில் ஓதியிருக்கிறார். ராமகிருஷ்ணன் உடனடியாக மதுரைக்கு ரயில் டிக்கெட் எடுத்துவிட்டார். அவருக்கல்ல, எனக்கு.

நான் பங்கு வர்த்தக நிறுவனத்தில் கைநிறையச் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தவன். விதிவசத்தால் ராமகிருஷ்ணனின் நிறுவனத்தில் சென்று மாட்டிக்கொண்டிருக்கிறேன். எனக்குள் மரபணுரீதியாக நோய்த்தொற்று எதுவோ இருந்திருக்க வேண்டும். என்னுடைய தகப்பன்வழிக் கொள்ளுத் தாத்தா கும்பகோணத்தில் உ.வே.சாவின் மாணவர். பழைய சம்பளம்போல இரண்டு மடங்கு வாங்குகிறேன் இங்கே. ஆனால் நூதனமான தொந்தரவுகள் ஜாஸ்தி. அதையெல்லாம் பிறகு விரிவாகச் சொல்கிறேன். வண்டி அதிக நாள் ஓடாது என்பது மட்டும் நிச்சயம்.

சுயமுன்னேற்ற ஆலோசனைகளையும் பணம் பெருக்கும் வழிகளையும் பத்தாயிரக்கணக்கில் அச்சடித்து விற்பனை செய்துவரும் நிறுவனம் திடீரென்று சித்த மருத்துவ நூலைப் பதிப்பித்தால் பொருத்தமாக இருக்குமா என்று ராமகிருஷ்ணனிடம் கேட்டேன். அவர் ஒரே வரியில் பதிலளித்தார்.

இதெல்லாம் ஆத்மதிருப்திக்காக.

மடத்தினுள் புத்தகசாலை தனிக் கட்டடத்தில் இருந்தது. ஒன்றரையாள் உயரத் தேக்கங் கதவைத் திறந்துவிடக் காரியஸ்தர் ஒருவர் உடன்வந்தார். எளிதில் திறக்க மறுத்தது பூட்டு.

எங்கெ தம்பீ, மருந்தடிக்கிறவன் வந்தாத்தான் திறக்கிறது. இல்லாட்டி, என்னைக்காவது சந்நிதானம் சொன்னாத் திறக்கிறது. அர்த்த சாம பூசை முடிஞ்சதுக்கப் புறந்தான் சந்நிதானத்துக்கு ஞானவெறியேறும். நாம தானே பண்டாரம், மடத்துலே வேலெ செய்யிறவனுக்குப் பொண்டு புள்ளையெல்லாம் இருக்கேங்கிற ஞானம் மட்டும் இதுவரைக்கும் சித்தியாகலே. நடுராத்திரியிலே ஏதாவது புஸ்தகத்தைச் சொல்லி எடுத்துட்டு வாங்கும். இங்கென்ன ஒளுங்கா மொறையாவா அடுக்கியிருக்கு? தேடித்தேடி ஓஞ்சு, கெடைக்கலேன்னு தாக்கல் சொல்லப்போகும்போது, சந்நிதானம் கண் அசந்திருக்கும். ராப் பிசாசு மாதிரி வீடுபோயிச் சேந்தா, பொண்டாட்டி மண்டகப்படி வைப்பா. பட்டணத்திலே உத்தியோகம் பாக்குற மூத்தவன் வந்திருந்தா இன்னும் கொண்டாட்டந்தான். இந்த க்ஷணமே மடத்திலே எளுதிக் குடுத்துட்டு எங்கூட வந்திருன்னு குதிப்பான். தலெமொரெ தலெ மொரெயா மடத்தை அண்டித்தானே இருந்திருக்கோம். ஒரு ராத்திரியிலே முடிவெடுத்து நின்னுக்கிற முடியுமா, சொல்லுங்க...

பூட்டு திறந்துவிட்டது.

பூச்சிமருந்து நெடி கமறியது. மரத்தாலான அலமாரிகள் ராட்சதர்கள்போல ஓங்கி நின்றன. வெளியில் ஊதுபத்தியும் சாம்பிராணியும் விபூதி மணமும், நூலக அறைக்குள் ரசாயன மணமும் நிரம்பி ஒரே சமயத்தில் இரண்டு காலங்களில் அந்த மடம் இருப்பதான பிரமை தட்டியது.

2

சைவத்திரு. முதலியாரின் இரண்டாம் நூல் ஒன்றை அங்கே கண்டேன். சங்கப் பாடல்கள் பலவற்றுக்கும் தம்முடைய பார்வையில் உரை எழுதியிருக்கிறார் முதலியார்.

பழம் இலக்கியங்களைப் படிப்பது வேறு ஒரு காலத்துடன் நிகழும் உரையாடலேயன்றி வேறில்லை. சீத்தலைச்சாத்தனும் ஒட்டக்கூத்தனும் ஆவியுருக்கொண்டு தரும் சூட்சுமக் காட்சியே அவர்தம் சிருட்டிகள் என்பதில் அடியேன் எள்ளளவும் ஐயம் கொள்ள வில்லை...

தேங்குபுக ழாங்கூர்ச் சிவனேயல் லாளியப்பா

நாங்கள் பசித்திருக்கை ஞாயமோ - போங்காணும்

கூறுசங்கு டோ ன்முரசு கொட்டோ சையன்றி

சோறு கண்ட மூளி யார் சொல்.

இந்தப் பாடலில் டோ ன்முரசு என்ற சொற்றொடரைச் சந்தி பிரிக்கும்போது தோல் + முரசு என்றாகும் என்பது முதலாம் படிவ மாணவர்களுக்கும் தெரியும். பதிப்பாளர் டோ ன்முரசு என்பதற்குப் பதவுரையாக 'டோ ன் - டோ ல் வாத்தியமும், முரசு - முரசொலியும்' என்று எழுதிப் போகிறார். இரட்டைப் புலவர்களின் ஆவி என்னமாய்த் துடித்திருக்கும்?... மாநகரத்துக்குக் காக்கை செய்யும் சேவையைப்போல, இது போன்ற பதிப்புகளில் பிழை களைவதையே தலையாய பணியாய்ச் செய்ய விழைகிறேன். என்றெழுதுகிறார் முதலியார்.

புறநானூறின் ஆரம்பப் பாடலிலேயே பிரச்சினை தொடங்கிவிடுகிறது. பாண்டியன் கருங்கை யொள்வாட் பெரும்பெயர் வழுதியின் பாடலில்,

உலவுமதி யுருவின் ஓங்கல் வெண்குடை

நிலவுக் கடல்...

என்பதை மதியினது வடிவுபோலும் வடிவினையுடைய உயர்ந்த வெண்கொற்றக் குடை என்று பொருள் கொள்வது தவறென்றும், ஓங்கல் என்பது பரதவர் மத்தியில் ஒரு மீனுக்கு வழங்கிவரும் பெயர் என்றும் கிட்டத்தட்ட ஆறாம் அறிவுகொண்ட பிராணியான அந்த மீனை ஆங்கிலத்தில் டால்ஃபின் என்று குறிப்பிடுகிறார்கள் என்றும் பிறைநிலவின் வடிவில் நீருக்குமேல் பாயும் ஓங்கல்களின் மீது சூரிய ஒளிபட்டு வெண்குடைபோல அவை பளபளத்தன என்று பொருள்கொள்ள வேண்டும் என்றும் முதலியார் உரைக்கிறார்.

முதலியாரின் நூலில் உள்ள பல பாடல்கள் நான் படித்தவைதாம். படித்தவற்றுக்கு இணையாகப் படிக்காத பாடல்களும் இருந்தன. உரையை விடுங்கள், தமிழில் ஓரளவாவது பரிச்சயம் இருந்தால், அரும் பதவுரையை வைத்துக்கொண்டு நமக்கான பொருளை நாம் உருவாக்கிக்கொள்ள முடியாதா? சந்நிதானத்திடம் இந்த நூலையும் வேண்ட வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டேன்.

முதலியாருடைய நூலுக்கு அடுத்ததாக இருந்த நூலின் மேல் என் கவனம் சென்றது.

திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியைச் சேர்ந்த திரு. ஆழ்வை கை. பிரமநாயகம் பிள்ளை எழுதியது. ஆவிகளின் உலகம் அல்லது பிறவிகளின் இடைவெளியில் என்று தலைப்பிட்டிருந்த நூல். முன்னுரை மட்டும் வசன நடையில் எழுதப்பட்டிருந்தது. மற்றபடி, நூல் முழுக்கப் பா வடிவில் யாக்கப்பட்டிருந்தது.

கல்லுள் தேரையும் கவிமா மணியின்

சொல்லுள் பொருளும் தீரன் கைப்படு

வில்லுள் விசையும் இசைந்தவாறே...

மூசு மூசென்று வண்டுகள் அறைதலும்

கீசு கீசென்று மஞ்ஞைகள் குழறலும்

ஆசு கவியென அருவியின் பொழிவும்...

என்று சந்தத்தின் தாலாட்டில் கிறங்கும் காவியம்.

அசைச் சொற்களும் அளபெடைகளும் இன்றி நேரடியாகப் பொங்கிப் பாய்கிறது தமிழ். ஏனோ அந்த நூலைப் படிக்க வேண்டும் எனத் தோன்றியது. மருந்து நெடியைவிட்டு வெளியில் வந்தேன். வெளிக்காற்று பெரும் ஆறுதலாய் இருந்தது. நூலகக் கட்டடத்தின் வாசலில் இருந்த வேம்பின் அடித் தண்டையொட்டி சிமிண்ட்டினால் வட்டமாகக் கட்டப்பட்டிருந்த திண்ணையில் உட்கார்ந்தேன்.

பிள்ளையின் நூலைப் புரட்டிவந்தபோது, இன்னோர் ஆச்சரியம் என்னைத் தாக்கியது. நூலைப் பதிப்பித்தவர் யாரென்று நினைக்கிறீர்கள்? சாமித்துரை என்கிற, எட்கார் லூஷிங்டன் என்ற இயற்பெயர் கொண்ட, ஆங்கிலேயர்.

3

பிரமநாயகம் பிள்ளை திருநெல்வேலியில் தமிழாசிரியராக வேலைபார்த்தவர். அவருடைய பெயருக்குப் பின்னால் ஒட்டியிருந்த பல்வேறு பட்டங்களை நான் கேள்வியேபட்டதில்லை. அவ்வளவு படித்த ஒருவர் பாசாங்கேயில்லாமல் எழுதியிருந்த முன்னுரை என்னைக் கவர்ந்தது. கிட்டத்தட்ட சுயசரிதையேதான் அது. தான் நுழைய நேர்ந்த புதிய புலம் பற்றிய திகைப்போ வியப்போ இன்றிச் சுவாதீனமான சமாச்சாரமாய் அதை விவரித்திருக்கிறார்.

சாதாரணமாகப் பள்ளிக்கூடம் சென்று வந்துகொண்டிருந்த சிறுவன் பிரமநாயகம் வேறுபக்கம் திரும்பியது தற்செயலாக அல்ல. இவருக்கு அப்போது பதினான்கு வயது. திடீரென்று ஒரு நாள் தகப்பனார் இறந்துபோகிறார். தாயார் மாரிலடித்துக்கொண்டு அழுகிறாள். துஷ்டிக்கு வந்திருந்த உறவினர்களில் ஒருவர் மறுகுகிறார்.

பொஞ்சாதி மேலயும் புள்ளையாண்டான் மேலயும் உசிரையே வச்சிருந்தயே, கைலாசம். ஒன் நெஞ்சு எப்பிடிலே வேவும்?

தந்தையின் மரணம் இடியாய் இறங்கியிருந்த பிஞ்சு மனத்தில், உடம்பெல்லாம் வெந்து நெஞ்சு மட்டும் வேகாத பட்சத்தில் அவர் என்ன ஆவார் என்று ஒரு கேள்வி வேர்பிடித்தது.

சிறுவயது முதலே மலைகளின் மீது காதல்கொண்டவர் பிள்ளை. பெற்றோருடனான பிரயாணங்களின்போதோ, தெய்வ தரிசனத்தை முன்னிட்டோ ஏதேனும் குன்றுகளின் அருகாமையில் செல்லும்போது தன்னுள் பரிபூரணமான சாந்தம் நிலவியது என்று எழுதுகிறார். வள்ளுவப் பெருந்தகையின் வாக்குப்படி உயர்வுள்ளாமல் ஒரு மலையை நீங்கள் பார்க்கவியலாது என்கிறார். மலைகளைப் பூமியின் ஆதி எச்சங்கள் என்று குறிப்பிடுகிறார்.

வாரந்தவறாமல் சனி ஞாயிறுகளில் குற்றாலத்துக்குச் சென்றுவிடுவாராம். பார்க்கப் பார்க்க அது வெறும் மலையில்லை, விசுவரூபம் எடுத்த சித்தன் ஒருத்தன் யோக சமாதியில் அமர்ந்திருக்கிறான் என்று தோன்றுமாம். விறுவிறுவென்று ஏறி, தேனருவிக்கும் அப்பால் அடர்ந்திருக்கும் வனப்பகுதிக்குள் சென்றுவிடுவார். மனிதப் பாதம் படாத இடங்களில் இயற்கையாய் அமைந்த குகையொன்றிற்குப் போய்த் தியானத்தில் அமர்வார். தாயின் கருவறைக்குள் சிசு இருக்கும் வடிவமாய் உடலொடுங்கி அமர்வேன் என்று விவரிக்கிறார். இரண்டு நாள்களும் சாப்பாடு, தண்ணீர், உறக்கம், மனிதவாசனை என்று எதுவுமில்லாமல் இருந்துவிட்டுத் திங்கள்கிழமை காலையில் ஊர் திரும்புவார்.

ஒவ்வொரு முறை திரும்பும்போதும் திருநெல்வேலி புத்தம் புதிய ஊராகத் தென்படும் என்கிறார் பிள்ளை. சாலைகளும் கட்டடங்களும் பளிங்கினாலானவை போல மினுங்குமாம். அதிகாலையின் வெளிச்சத்தில் தேவானுக்கிரகம் போன்ற ஒளிர்வு ஏறியிருக்கும். சலசலக்கும் தாமிரபரணி நீரோட்டத்தில் பளபளப்பு கூடியிருப்பதுபோலத் தோன்றும். நதியின் அகலம் சற்றுக் குறுகிவிட்டதுபோலத் தென்படும். முன் ஏதோ ஒரு பிறவியில் இங்கே வந்திருக்கிறோமே என்று நினைத்துக் கொள்வாராம் பிள்ளை.

சுலோச்சன முதலியார் பாலத்தின் பிரம்மாண்டம் சற்றுக் குறைந்துவிட்டதாகத் தென்படும். ஒவ்வொரு முறையும் பாலத்தின் ஆகிருதி குறைந்துகொண்டே வந்திருக்கிறது. யோகியின் அறிமுகம் கிடைத்த மறுவாரம் புரிந்ததாம், பாலம் குறுகவில்லை, தனக்குள் எதுவோ ஓங்கி உயர்ந்துவருகிறது என்று. இதைத்தான் ஆன்மா என்று சொல்கிறார்களோ என ஒரு ஐயமும் உதித்ததாம். அடுத்த வாரம் யோகியாரைப் பார்த்தபோது இதுபற்றி விசாரித்திருக்கிறார். யோகி குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாராம்.

அந்த முறை கைலாசபுரம் பகுதியில் உள்ள தமது தெருவுக்குள் நுழைந்ததும் இரண்டு சாரிகளிலிருந்தும் கிளம்பும் மணம் சமையல் மணமல்ல, ருசியின் மணம் என்று கண்டறிந்திருக்கிறார். அதுநாள் முதல் சாப்பாட்டில் ஆர்வம் குறைந்துவிட்டது. உணவின் அளவில் அல்ல, ருசியின் பதத்தில்தான் வியாதிகள் முளைக்கின்றன என்று அடித்துச் சொல்கிறார் பிள்ளை.

வீட்டுக்குள் நுழையும்போது மஞ்சள் மணக்க அருகில் வந்து கைப்பையை வாங்கிவைத்த சிவகாமி ஆச்சி தன்னுடைய மனைவி மட்டுமே அல்ல, தோன்றியும் மறைந்தும் பேயுருக்கொள்ளும் பிறவிச் சங்கிலியின் முந்தைய கண்ணிகளொன்றில் தன்னுடன் ஒட்டிக்கிடந்த ஜீவன் என்று அவருக்குத் தோன்றியதாம்.

முன்னுரையில் பல இடங்களில் சிவகாமி ஆச்சி வந்து செல்கிறார். பன்மையிலும் அர் விகுதியிட்டும் இவனது மனையாட்டி சிவகாமி என்றும் வெகு மரியாதையாகக் குறித்துச் சொல்கிறார் பிள்ளை.

சிவகாமி ஆச்சிக்கு மணமாகிவந்த நாள்முதலாகவே, தான் வாழ்க்கைப்பட்டது சாதாரண மனித ஜென்மத்துக்கு அல்ல, ஒருவிதமான ஞானக் கிறுக்குக்கு என்பது புரிந்துவிட்டதாம். தன்னிடமே நாட்டம் இல்லாத மனிதருக்கு, மனைவியிடம் நாட்டமில்லாததைக் குறையாக உணர வேண்டியதில்லை என்ற பரிபக்குவத்தைச் சீக்கிரமே அடைந்துவிட்டார். ரிஷி பத்தினிகளின் பரம்பரையில் வந்த பெண்ணுரு தமக்கு மனையாட்டியாய் வந்து அமைந்தது தாம் அடைந்த பெரும்பேறு என்கிறார் பிள்ளை.

இயற்கையின் உந்துதலோ மனையாளின் விழைவோ ஓங்கிய காலங்களில் உடலை அவரிடத்தில் ஒப்படைத்துவிட்டு நான் ஒதுங்கிக்கொண்டேன் என்கிறார். சம்போகத்தின் பல நிலைகளையும் பல்வேறு ஓட்ட கதிகளையும் பூமி என்னும் மாபெரும் சாவித் துவாரம் வழி வேடிக்கை பார்க்கும் வியக்தியாய் மிதந்திருந்தேன் என்கிறார். சேர்க்கையின் பயனாக உருவான கருக்கள் நாலைந்தும் காயாக உதிர்ந்ததும் தம்முடைய பேறே என்கிறார். இது சற்றுக் குரூரமான ஆறுதல் என்று சிலருக்குத் தோன்றலாம். சந்ததியின் நீட்சி வழி தம்முடைய அடையாளம் தொடராமல் போனதும் பேரிருப்பின் திருவருளே என்கிறார்.

குற்றால மலையில் ஒரு யோகி அறிமுகமானாராம். அவருடைய கண்களில் பல நூற்றாண்டுகளின் சம்பவங்கள் காட்சியாகச் சலனிப்பதைக் கண்டேன் என்கிறார் பிள்ளை. இவருடைய உணவு, உறக்கம், காமம், உத்தியோகம், அக எழுச்சிகள், அந்தரங்க விகாரங்களின் ரகசியங்கள் எனப் பல்வேறு தளங்களையும் மூடிய அறையைத் திறந்ததும் நுழையும் காற்றுப்போல உள்ளேறிக் கண்டறிந்தாராம் யோகி. அவை அனைத்தையும் பற்றி இவருக்கு விளக்கிச் சொல்லவும் செய்தாராம்.

யோகி ஓரிரு சொற்களில் அழைத்துச் சென்ற அகாத உயரங்களை வேத சாஸ்திரங்கள்கூட எடுத்துக் காட்டிவிட முடியாது என்கிறார் பிள்ளை.

குகைக்கு வெளியில் குயில் கூவியது. 'பிராணன் அழைக்கிறது' என்றார் யோகி. பெண்மானைத் தொடர்ந்து நிதானமாக நடக்கத் தொடங்கி வேகமெடுத்தது ஆண்மான். 'காமம் விரைகிறது' என்றார். இரவின் தனிமைக்குள் பாயும் அருவியின் ஒலி பல்கிப் பெருகி காது நிறைய ஒலிக்கும்.. 'உயிர்த்தாது பொழிகிறது' என்றார். அவர் உறங்கியோ உணவருந்தியோ பார்த்ததில்லை என்று சொல்கிறார் பிள்ளை. சுவாசத்தின் போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ஆயுளை நம் விருப்பம்போல நீட்டிக்க முடியும் என்றும் நரை, திரை, மூப்பு அண்டாத பெருவெளியின் கதவை உடைத்துத் திறந்துவிட முடியும் என்றும் நிரூபித்தவர் யோகி. ஹடயோகம் பயிலும்போது அவரைப் பார்க்கிறவர்கள் சவம் என்றே நம்பி விடுவார்கள். ஆயிரத்துச் சொச்சம் வயது கொண்டவரான தமது குருநாதரின் ஜீவிதத்தில் ஒரு ஈசலைப் போலத் தாமும் இடம்பெற்றது பிறவிப் பெரும்பயனன்றி வேறென்ன என்று வினவுகிறார் பிள்ளை.

ஒரு வருடம் மட்டுமே உடன் இருந்துவிட்டு வடக்கே செல்வதாகக் கூறிப் பிரிந்து செல்கிறார் யோகி. ஆண்டு 1911 சித்திரா பவுர்ணமி. நிலாக் காயும் இரவில் தன் சீடனைவிட்டு நீங்கும் முன்பாகத்தம் உடலோடு சேர்த்தணைத்துக் கொண்டாராம். அது முதல் தமது தேகத்தில் தாழம்பூ வாசனை நிரந்தரமாகச் சேர்ந்துகொண்டது என்கிறார் பிள்ளை.

அதோடு, புறவுலகின் ஓசைகளைக் கேட்கவியலாத தன்மையை அடைந்துவிட்டன பிள்ளையின் செவிகள். ஆனாலும், சகமனிதர்களின் உதட்டசைவைக்கொண்டு சரளமாக உரையாட இயன்றதாம். இதன் காரணமாகத் தம்முடைய பேச்சும் குறைந்ததாகவும் குறைவாகப் பேசுவதால் சக்தி விரயமாவது கட்டுப்பட்டதாகவும் சொல்கிறார்.

ஆறு வருடங்கள் இவ்வாறு கழிந்தன. பிரமநாயகம் பிள்ளை குற்றாலத்தில் செலவிடும் நேரமும் நாள்களும் அதிகரித்து வந்தன. 1916 வைகாசி மாதம் சுக்கிலபட்ச திரிதியையில் முதன்முதலாக ஒரு அனுபவம் சித்தித்தது.

அன்று குகைக்குள் ஏற்றிவைத்த அகலின் சுடர் ஈர்க்குச்சி போல ஸ்திரமாக நின்றது. தியானம் முடிந்து திறந்த விழிகளுக்குள் அதன் ஒளி ஈட்டிபோலப் பாய்வதாக உணர்ந்திருக்கிறார். அபூர்வமான குளுமை நிறைந்துவிட்டது பார்வையில். நிலைத்து நின்றெரியும் சுடரில் முகம் போல ஏதோ ஒரு வடிவம் உருவாவதை இவர் கவனித்த மாத்திரத்தில் செவியில் ஓர் ஒலி கேட்டது. வருடக்கணக்காக ஒலியறியாது இருந்த காதுகளில் ஓசையின் தாரை பாய்ந்தபோது, பிரமையோ என்று ஐயுற்றேன் என்கிறார் பிள்ளை.

இல்லை, அது பிரமையில்லை. தனிமையின் அழுத்தத்தில், காட்சிபோன்றே வனைவுறும் உருவெளித் தோற்றமும் இல்லை. இவருடைய பதினாலாம் வயதில் இவரையும் தாயாரையும் அனாதரவாக விட்டு இறந்துபோன தகப்பனார் கைலாசம் பிள்ளையின் குரல் அது என்று கண்டார் பிள்ளை.

பிரமநாயகம், தம்பீ பிரமநாயகம்...

என்ற தகப்பனின் குரல் தத்ரூபமாகவும் இளமையின் துடிப்போடும் இருந்ததாம். பிள்ளைக்கு மயிர்க்கூச்செறிந்தது.

4

கன்னியைத் தொட்ட கள்வனின் கதை

கண்மண் தெரியாமல் ஓடினேன். எவ்வளவோ பொருள்களைக் கவர்ந்து வந்திருக்கிறேன். கன்னம் வைத்தும் கத்தியைக் காட்டியும் நான் சம்பாதித்தவற்றைச் செலவே செய்யாமல் மீத்திருந்தால் அந்தச் சமஸ்தானத்தின் கஜானாவுக்குச் சமானமாக என்னிடம் ஆஸ்தி இருந்திருக்கும். ஆனால் என் சம்பாத்தியமோ வந்த வழி திரும்புவதில் ஆர்வமாய் இருந்தது. நானும் அதுபற்றிக் கவலையற்றிருந்தேன். மாலை உலா செல்பவன்போல நிதானமாக நடந்துசென்று களவுப் பொருள்களுடன் நிதானமாக நடந்து திரும்பிவருவேன்.

முதன்முறையாகக், கண்ணுக்குத் தெரியாத வஸ்துவைக் களவாடியிருக்கிறேன். பலன், திக்குத் தெரியாமல் ஓடுகிறேன். துரத்துவது சமஸ்தானத்தின் வீரர்கள் அல்ல, என்னோடே பிறந்து வளர்ந்து வந்திருக்கும் மரணம்.

பொக்கிஷசாலைக்கு அத்தனை அருகில் அந்தப்புரம் இருக்கும் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை. அரண்மனையின் வரைபடம் பற்றி எனக்குத் துப்புக் கொடுத்தவன் ஏதோ தவறு செய்திருக்கிறான் அல்லது, அவன் சொன்னதைப் புரிந்துகொள்வதில் நான் தவறிழைத்திருக்கிறேன். இடம் தவறி வந்து சேர்ந்தது முதல் தவறு என்றால், காலம் தவறி வந்தது அதைவிடப் பெரிய தவறு. மரணம் துரத்தும்போது உங்கள் கவனம் உங்களிடத்தில் இருப்பதில்லை.

நான் குறித்த நாள் மிகச் சரியானது. இளவரசியின் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த இரவில் சமஸ்தானத்துக்குள் நுழைய முடிவெடுத்திருந்தேன். கோலாகலங்களின் விளைவாகக் காவலர்கள் உட்பட அனைவரும் சோர்ந்திருக்கும் பின்னிரவில், சடங்குக்காக வெளியேறிய ஆபரணங்கள் மீண்டும் நிலவறைக்குள் பத்திரமாகும் முன்பாக அவற்றைக் கவர்வது எனது திட்டம். வழக்கமாகக் களவுக்குப்போகும் நாள்களில் மாதிரியே, குளிர்கால இரவுபோலச் சாந்தமாக இருந்தது என் மனம். பூனை நடக்கும் ஒலியளவுகூடச் சப்தம் எழுப்பாமல் உள்ளே நுழைந்தேன்.

நான் நுழைந்த அறை, இளவரசியின் படுக்கையறை. மத்தியில் பஞ்சணையோடு ஒரு கட்டில் இருந்தது. அதில் ஏறி நின்று இளவரசி தன்னுடைய மரணத்தைத் தேடி நகர்ந்த முகூர்த்தத்தில் உள்ளே நுழைய வேண்டி வரும் என்று நான் சற்றும் யூகிக்கவில்லை.

மெத்தை தைத்த இருக்கையின் மேல் ஏறி, உத்தரத்திலிருந்து தொங்கவிட்ட வடக்கயிற்றின் முனையில் இட்ட சுருக்குச் சரளமாக ஏறி இறங்குகிறதா என்று அவள் பரிசோதித்துக்கொண்டிருந்தாள். சாரைப் பாம்புபோலப் பம்மி உள்ளே நுழைந்தேன். திரைச் சீலையின் பின்னால் ஒளிந்து நின்று பொறுமையாகப் பார்த்தபடி நின்றிருந்தேன்.

பரிசோதனையை முடித்து முகத்தைச் சுருக்குக்குள் நுழைக்கும்பொழுதில் அவள் எதிரில் சென்று நின்றேன். அவள் முகத்தில் பீதி பரவியது. என் உதடுகளில் விரல் வைத்து எச்சரித்தேன்.

இறங்கினாள். கட்டிலில் அமர்ந்தாள். வைத்த கண் வாங்காமல் என்னை உறுத்துப் பார்த்தாள். மாடத்திலிருந்த அகல் விளக்கின் வெளிச்சம் அவள் முகத்தின் சோபையைக் கூட்டியது. அழகிதான். சந்தேகமில்லை. குறிப்பாக அந்த உதடுகள். அவற்றில்தான் என் ஆயுளை முடித்துவைக்கும் விஷம் இருக்கிறது என்று அப்போது நான் அறிந்திருக்கவில்லை.

களவுக்குப் போகும்போது விதவிதமான கோலங்களில் பெண்களைப் பார்த்திருக்கிறேன். சம்போகத்தில் இருந்த ஜோடியையும் ஒருமுறை பார்த்தது உண்டு. உள்ளூரக் கிளர்ச்சி அடைந்ததில்லை ஒரு போதும். வேறென்ன, பணத்தால் வாங்க முடியாதது அல்ல காமம் என்று ஒரு உறுதிதான். ஆனால் இவளுடைய கண்களைப் பார்த்தபோது என் உறுதி தளர்ந்தது. ஆரோக்கியத்துக்குக் கேடு என்று பெற்றவர்கள் தடுக்கும் பண்டத்தைத் தின்னத் துடிக்கும் குழந்தையின் மனோநிலைக்குள் சறுக்கினேன்.

ஆனாலும், அவளுடைய சம்மதத்தைப் பெறாமல் அவளைத் தொடுவதற்கு இஷ்டமில்லை. என் இடுப்பிலிருந்த குறுவாளும் முதுகில் தொங்கிய கோணியும் நான் யார் என்பதை அவளுக்கு விளக்கியிருக்க வேண்டும்.

"வந்த வழியே ஓடிவிடு. இல்லையேல் சத்தம்போட்டுக் காவலர்களை உசுப்புவேன்". என்று வாய்திறந்தாள். ஆஹா, அந்த உதடுகள். கொடி யிலிருந்து அப்போதுதான் பறித்த கோவைப்பழம்போல. சுவர்க்கோழியின் உரத்த பின்னணி இசையில் கிணுகிணுவென்றது அவள் குரல். நான் பதில் சொல்லவில்லை. உத்தரத்திலிருந்து தொங்கும் சுருக்குக் கயிற்றைப் பார்த்தேன். ஆள்களை அழைப்பது இருவருக்குமே உசிதமல்ல என்பதை அவள் புரிந்துகொண்டாள். கெட்டிக்காரிதான்.

"உனக்கு என்னதான் வேண்டும்?" என்று கேட்டாள். அவளை நோக்கி என் ஆள்காட்டி விரல் நீண்டது. அவள் அதிர்ந்தாள். நான் விளக்கிச் சொன்னேன். நிச்சயதார்த்த இரவில் தற்கொலைக்கு முயல்கிறாள் என்றால் திருமணத்தில் ஒப்புதலில்லை என்றுதானே அர்த்தம்? விரும்பாத மணத்தில் ஈடுபடுத்தும் சகலரையும் பழிவாங்க இது ஒரு சந்தர்ப்பம் அல்லவா. அவள் பொறுமையாகக் கேட்டுக்கொண்டாள். நான் பேசி முடித்ததும் மறுப்பாகத் தலையாட்டினாள். நேரம் நகர்ந்துகொண்டே இருந்தது.

பலவந்தமாக அவளைத் தொடுவதில் எனக்கு விருப்பமில்லை. முத்தம் பெறும் பெண்ணைவிட முத்தம் தரும் பெண்ணில்தான் எனக்கு ஆர்வம் அதிகம். எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். அவள் பிடிவாதமாக இருந்தாள். இறுதியாக ஒன்று சொன்னேன்.

எப்படியும் தூக்கில் தொங்கப்போகிறாய் பெண்ணே. நாளையோ மறுநாளோ மண் தின்னப்போகிற உடம்புதானே. எனக்குக் கொடுத்தால் என்ன குறைந்துவிடும்?

அவளுடைய உறுதி குலைவது தெரிந்தது. களவு கொடுக்கும் வீட்டின் அலமாரிச் சாவி கிடைத்துவிட்டால் போதுமே.

கனவுபோல நெருங்கினோம். கால்கள் சறுக்கிச் சறுக்கிச் சரிந்துகொண்டே போனோம். நான் அவளை எடுத்துக்கொண்டேனா அவள் என்னை எடுத்துக்கொண்டாளா என்பது அதன்பிறகு எப்போதுமே தீராத சந்தேகமாகிவிட்டது எனக்கு. ஆனால் மரணத்தின் விளிம்பிலிருந்து வாழ்வின் மையம் நோக்கி அவள் திரும்பி ஓடிவரக் காரணமாயிருந்தது அந்தச் சம்போகந்தான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

சற்றுநேரம் பஞ்சணையில் அசைவற்றுப் படுத்திருந்தவள் எழுந்து உடைகளைச் சரிசெய்துகொண்டாள். நான் என் தேட்டப் பொருள்களைச் சேகரித்துக்கொண்டு புறப்பட முனைந்தேன். நான் எதிர்பாராத தருணத்தில் அவள் என்ன செய்தாள் தெரியுமா? கூகூவென்று சத்தம் கொடுத்தாள். காவல்காரர்கள் ஓடிவந்தார்கள். அந்தப்புரத்திலிருந்து தப்பி ஓடும் திருடனைப் பிடித்துக் கொண்டுபோனார்கள்.

நான் பிடிபட்டது அதுதான் முதல் தடவை. மரணத்திடம் பிடிபட்டேன். ஒரு வாரம் கழித்து என்னைக் கழுவேற்றினார்கள். வலியின் உச்சத்தைத் தொட்ட கணத்தில், களவாடப் போனதை மாத்திரம் எடுத்துக்கொண்டு திரும்பியிருந்தால் இந்தக் கதிக்கு ஆளாகியிருக்க மாட்டேனோ என்ற ஏக்கமும் அதிர்ஷ்டம்போலக் கிடைத்த மிருதுவான இளம் முலைகளின் சித்திரமும் மாறிமாறிப் படர்ந்தன எனக்குள். நினைவு தப்பும் தறுவாயில் ஸ்கலிதத்துக்குச் சமமான உணர்வை எட்டினேன்...

5

நாளொன்றை இழந்த நாவிதன் கதை

ஜமீன்தாரிடம் அடைப்பக்காரனாக இருந்தேன். அடைப்பக்காரன் என்றால் தாம்பூலம் மடித்துக்கொடுப்பவனும் மென்று துப்பும் எச்சிலை வாங்கிக்கொள்வதற்காகப் படிக்கத்தை உயர்த்தி ஏந்துவனும் மட்டுமல்ல, அவருடைய ஆஸ்தான நாவிதனும் நான் தான். தாடியை மழித்துச் சவரக் கத்தி தொண்டைக்குழியைப் பார்த்து இறங்கும்போது அப்படியே ஒரு அழுத்து அழுத்திவிட்டால் குடிஜனங்கள் எவ்வளவோ சந்தோஷப்படுவார்களே என்று அடிக்கடி தோன்றத்தான் செய்யும்.

ஆனால் ஜமீன் வம்சம் மாதிரிதான் அடைப்பக்கார வம்சமும். அதற்கென்று ஒரு கியாதி இருக்கத்தான் செய்தது. கிட்டத்தட்டப் பன்னிரண்டு தலைமுறைகளாகச் சமஸ்தானத்தில் அடைப்பத் தொழில் செய்துவரும் குடும்பம் எங்களது. அதன் வரலாற்றில் கரும்புள்ளி ஏற்பட நான் காரணமாகிவிடக்கூடாதே என்று அடக்கிக் கொள்வேன். கை சற்று அதிகமாகவே நடுங்கும்.

தவிர, அவரை நான் கொல்ல வேண்டும் என்பதல்ல. தம்முடைய விசேஷமான பழக்கவழக்கங்கள் காரணமாக ஜமீன்தாரே மரணத்தை நோக்கி அதிவேகமாக விரைந்துவந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். முப்பது வயதுகூட ஆகவில்லை, அதற்குள் தொந்தி சரிந்து, பற்கள் உதிரத் தொடங்கிவிட்டன. போதைவஸ்துகளும் கட்டற்ற சம்போகமும் கோழிக்கால் அடையாளங்களாக விழியோரங்களில் பதிவாகியிருந்தன. ஜமீன்தாரின் நட்பைச் சம்பாதிப்பது வெகு சுலபம். ஒரு புதியவகை போதையையோ சம்போகத்தில் ஒரு புதிய நிலையையோ அறிமுகப்படுத்தினால் போதும் அவரது ஆயுல்கால நண்பனாகிவிட முடியும். ஒரு கிராமங்கூடத் தானமாகக் கிடைத்துவிடலாம்.

பிதா மகாராஜாவிடமிருந்து ஜமீன்தாரின் ஆளுகைக்குள் வந்துசேர்ந்த ஜமீனில் எழுபத்தெட்டு குக்கிராமங்களும் ஆறு சிறு நகரங்களும் மூன்று நகரங்களும் இருந்தன. காலையில் குதிரையேறினால் மறுநாள் இரவு அடைவதற்குள் சுற்றிவந்துவிடலாம். ஆனால் தாம் இந்தப் பூமண்டலத்தின் ஏகசக்ராதிபதி என்பதாக ஒரு அபிப்பிராயம் அவருக்கு. ராஜராஜசோழனுக்கும் நெடுஞ்செழிய பாண்டியனுக்கும் சமானமான ராஜா என்று தன்னைச் சொல்லிக்கொள்வார். ஜமீன்தாருக்கு இருந்த இன்னொரு அபிப்பிராயம் முக்கியமானது - தானியமாகவும் வெள்ளிக்காசுகளாகவும் வந்த கிஸ்தியை ஜனங்களுக்காகவென்று செலவு செய்துவந்த தம் மூதாதையர்கள் மடையர்கள் என்பது.

அவருடைய தாராளமான கைகளுக்கு ஜமீன் வருவாய் போதவில்லை. ஜமீனின் விளிம்பிலுள்ள கிராமங்களையும் விளைநிலங்களையும் கிரயம் பண்ணி வருவாய் ஈட்டிவந்தார். அவர் பட்டத்துக்கு வந்தபோது எழுபத்தெட்டு கிராமங்கள் கொண்டிருந்த ஜமீன் என் கையால் ஜமீன்தார் கொலையுண்டதாகச் சொல்லப்படும் நாளில் அறுபத்திரண்டு கிராமங்களாகச் சுருங்கியிருந்தது.

ஜமீன் விசாரணை மிகவும் பிரசித்தி பெற்றது. பூனைகளுக்குக் குரங்கு அப்பம் பங்கிட்ட கதைதான். இரண்டு தரப்புக்கும் கசப்பான நீதியை வழங்குவதில் ஜமீன்தார் சமர்த்தர். அதிலும் பெண் விவகாரம் என்று வந்துவிட்டால், தவறாமல் நீதி ஜமீன்தாரின் பக்கம் இருக்கும். அதன் காரணமாக, ஜமீனின் குடிபடைகள் தங்கள் வழக்குகளை ஜமீன் எல்லைக்கு வெளியில் தாங்களே தீர்த்துக்கொண்டார்கள். அரிவாளும் வேல்கம்பும் ஜமீன்தாரைவிட நியாயமாகத் தீர்ப்புச் சொல்வதாக ஜமீன் முழுக்கப் பேச்சிருந்தது. பாதிக்கப்பட்ட குடும்பம் ஜமீனிலேயே தங்கிவிட, நீதிபெற்ற குடும்பம் ஜமீனைவிட்டு ரகசியமாக வெளியேறியது.

ஆக, பகல் முழுக்க ஜமீன்தாருக்கு வேலை என்று எதுவும் கிடையாது. குதிரையை எடுத்துக்கொண்டு கிளம்பினால் ஏதாவது ஒரு தெருவுக்குள் நுழைய வேண்டியதுதான். அப்புறம் ஏதாவதொரு வீட்டுக்குள். குதிரையை அவர் நடத்திச் சென்றாரா ஜமீன்தாருக்குள் இருந்த குதிரை அவரை வழி நடத்தியதா என்பது இன்றுவரை புலப்படவில்லை.

ஒரு நாள் என் இளம் மனைவி இறந்துபோனாள். அவள் உடலை எரித்து உயர்ந்த நெருப்பு எங்கள் குடிசையையும் சேர்த்தே கருக்கியது. அன்றைக்கு நான் வெளியூர் சென்றிருந்தேன். ஜமீன்தார் என்னை ஒரு முக்கிய வேலையாக அனுப்பியிருந்தார். ஏற்கனவே கருகிய உடலை மீண்டும் ஒருமுறை எரியூட்டினோம் மறுநாள். சுடுகாட்டிலிருந்து திரும்பும்போது ஜமீன் ஏகாலி என்னிடம் தகவல் சொன்னான்.

முந்தின நாள் காலையில் ஜமீன்தாரின் குதிரை எங்கள் தெருவுக்குள் நுழைந்ததாம். ஏகாலி இன்னொன்றும் சொன்னான். என்னைக்காவது ஒரு நாள் ஒரு குதிரை சம்பாதிச்சு அரமணைத் தெருவுக்குள் ஓட்டிச் செல்ல வேண்டுமாம். அரமணை வாசலில் குதிரையை நிறுத்திவிட்டுக் கையில் சவுக்கோடு அரமணைக்குள் நுழைய வேண்டுமாம்... இதெல்லாம் நடக்கிற கதையா என்று நிதானமாகத்தான் சொன்னேன் என்றாலும் அடிவயிறு குமுறுவதை அடக்க முடியவில்லை.

ஒருவாரம் கழித்து அதிகாலையில் ஜமீன் மாளிகைக்குப் போனேன் சவரப்பெட்டியுடன். தரையில் மணைப்பலகை போட்டு நிமிர்ந்து அமர்ந்திருந்தார் ஜமீன்தார். என் மனைவியை எரித்த ஜ்வாலை உட்கார்ந்திருக்கிற மாதிரித் தோன்றியது என் பார்வைக்கு. ஜமீன் முழுவதையும் பொசுக்க வந்த பிழம்பு.

அன்று முற்பகலில் வடக்கேயிருந்து ஒருவன் வந்தான். அவன் தன் அழுக்குப் பையிலிருந்து எடுத்துக்கொடுத்த கோலிக்காயளவு லேகியத்தைக் கன்னத்தின் உட்புறம் அதக்கிக்கொண்டார் ஜமீன்தார். வந்தவன் சுற்றியிருந்தவர்களுக்கும் பிரசாதம்போல விநியோகித்தான். எனக்கும் ஒரு உருண்டை கொடுத்தான்.

கனத்துவரும் வெயிலில் ஒரு விநோதமான ஒளிர்வு கூடியது. அருகிலிருந்த ஓசைகளெல்லாம் சிறுகச் சிறுக நகர்ந்து தொலைவுக்குச் செல்கின்றன. என் உடம்பு மெல்லக் கரைந்து தண்ணீர் மாதிரி ஆகிறது. கொள்கலம் அற்ற வெட்டவெளியில் ஸ்தம்பம்போல நின்றிருக்கும் தண்ணீர்.

கனவுபோலப் படர்ந்திருந்த காட்சியின் ஒவ்வொரு அங்கமாக மங்கிவருகிறது. கடைசியாக நினைவிருக்கும் ஞாபகத்தில் ஜமீன்தாரின் கண்ணாடிப் பிம்பம் விகாரமாகச் சிரிக்கிறது. அவருடைய உளறல் வார்த்தைகளில், நெருப்பு இரண்டுமுறை தின்ற என் மனைவியுடைய யோனித் துவாரத்தின் அந்தரங்க அசைவுகள் பகிரங்கமாகத் திறக்கின்றன. வடக்கேயிருந்து வந்த சண்டாளனுக்கும் அதெல்லாம் தெரியும்போல. அவன் சிரிப்பும் சேர்ந்து சிந்துகிறது...

அதற்கப்புறம் நடந்த எதுவுமே நினைவிலில்லை. விழிப்புத் தட்டியபோது கல் தரையில் படுத்திருந்தேன். கம்பி அழிகளுக்கு வெளியில் அதிகாலைப் பொழுது தன் இனிமையான ஓசைகளுடன் மலர்கிறது. இரண்டாள் உயரச் சுவருக்கு அப்பால் உழவுக்குப்போகும் மாடுகள் இழுத்துச்செல்லும் கலப்பைச் சத்தம். பின்னோடு ஊர்க்காலி மாடுகள் விதவிதமான மணியோசைகளுடன் தாண்டிச் செல்கின்றன. பொழுது விடிந்ததைச் சற்றுத் தாமதமாக உணர்ந்த சேவல் அவசரமாகக் கொக்கரிக்கிறது. கருவாடு விற்கும் ஒரு பெண்குரலும் கோலப் பொடி விற்கும் அயலூரான் குரலும் உரத்துக் கேட்டது. அவனுக்கும் என் வயதுதான் இருக்கும். சுற்றுச்சுவர் மேலே ஒரு மணிப்புறா தத்தித்தத்தி நடந்து போய்வந்தது கொஞ்ச நேரம். அப்புறம் களங்கமற்ற இளநீலமாக விரிந்திருந்த ஆகாயத்தில் சுதந்திரமாகக் காணாமல்போனது.

சங்கிலியால் கட்டி என்னை இழுத்துப்போனார்கள். ஜமீன்தாரின் முதல் மனைவிக்குப் பிறந்தவன் அரியாசனத்தில் உட்கார்ந்திருந்தான். என் தோளில் விளையாடிய, என் கையால் முதல் முடியிறக்கப்பட்ட சிறுவன் அவன்.

பிரதான மந்திரி என்மீதான பிராதுகளை வாசித்தார். என் தரப்பில் ஏதாவது சொல்வதற்கு இருக்கிறதா எனக் கேட்டார். இதெல்லாம் ஒரு சம்பிரதாயந்தானே.

அந்தச் செவ்வாய்க்கிழமை நடந்த எதுவுமே எனக்கு ஞாபகமில்லை, நான் பழியறியாத நிரபராதி, தண்டனை எதுவும் தருவதென்றால் அந்தச் செவ்வாய்க்கிழமைக்குத் தான் தர வேண்டும், அது சாத்தியமில்லையென்றால் அதற்கு முந்திய செவ்வாய்க்கிழமைக்குத் தரலாம் என விநயமாகச் சொன்னேன். அவை சிரித்தன. மந்திரி முறைத்தார். அப்புறம் ராஜாவின் தீர்ப்பை வாசித்தார். என்னை உயிருடன் புதைக்கப் போகிறார்களாம். அப்போதே என்மீது கூடைகூடையாக மண் விழுந்து மூடுவதை உணர்ந்தேன். மூச்சுத் திணறியது. விலங்குக்குள் என் கைகளும் கால்களும் தாமாகத் திமிறின.

ராஜா அவசரமாக எழுந்து உள்ளே போய்விட்டான்.

6

நீதிக்குப் பலியான நீதிமான் கதை

காலைப் பொழுதுகளை கால்ஃப் மைதானத்தில், மதியப் பொழுதுகளை நூலகத்தில், மாலைப் பொழுதுகளை மதுக் கூடங்களில் கழித்துக்கொண்டு நான் நிம்மதியாகக் காலங் கழித்தது என் தகப்பனாருக்குப் பிடிக்கவில்லை. பிரபுக் குலத்தில் பிறந்த காரணத்தால் ஏகப்பட்ட சொத்துக்களுக்கு அதிபதியாகியவர் அவர். அதே காரணத்தால் தம்முடைய சொத்துக்கள் என்னிடம் வந்துசேருவதை ஏன் விரும்பவில்லை எனத் தெரியவில்லை. ஒருவேளை, கையில் வந்துசேர்வதற்கு முன்னரே அவற்றைத் தீர்த்துவிடுவேன் எனப் பயந்தாரோ என்னவோ.

இந்தியாவுக்குக் கப்பல் ஏற்றி அனுப்பிவிட்டார். சரிதான், இமாலயத்தின் பனிச்சரிவுகளில் குதிரைச் சவாரி செய்யலாம், அதியற்புதமான புல்தரைகளில் போலோ விளையாடலாம், ராணுவத்தில் உயர் அதிகாரியாகிக் கைத்துப்பாக்கியுடன் அமர்த்தலாக அதிகாரம் செய்யலாம், அதிகாரத்தின் படிகளில் சிறுகச் சிறுக உயர்ந்து இந்தியாவின் வைஸ்ராயாகக்கூட ஆக முடியுமே என்றெல்லாம் கப்பலில் வரும்போது நான் கண்ட ரம்மியமான கனவுகள் தரை தொட்டதும் சோப்புக் குமிழிகள்போல உடைந்தன.

பாரதத்தின் தென்கோடியில் வருவாய்த் துறை அதிகாரியாக நியமித்து அனுப்பினார்கள். இளம் மனைவியை ஆசையாக அணைத்துக்கொள்ளக்கூட இயலாத அளவு வெயிலும் புழுக்கமும் இரவு தவறாமல் தூக்கத்தைச் சூறையாடும் கொசுக்கூட்டம், வெளிப்படையாகப் பணிவும் உள்ளூறக் கடும் குரோதமும் கொண்ட ஜனங்கள், இரவு பகல் எந்நேரமும் பங்களாவின் எந்த இடத்திலும் காட்சியளித்துப் பதறவைக்கும் விஷப் பாம்புகள் என நாளுக்குநாள் என் ரத்த அழுத்தம் உயர்ந்துகொண்டே வந்தது. இதில் சமயம் தெரியாமல் நியாயம் உரைக்கும் என் மனைவி வேறு. அவளுடைய அபிப்பிராயங்களின் வழி பார்க்கும்போது நான் அவமானகரமான குள்ளனாகத் தெரிவேன் என்னுடைய கண்களுக்கே.

இந்த நிலையில்தான் அந்த இரண்டு கிராமங்களுக்கும் நீர்த் தகராறு உருவாகியது. மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகிக் கிழக்கு நோக்கி ஓடி வங்காள விரிகுடாவில் கலக்கும் தென்னிந்திய நதிகளில் ஒன்றிலிருந்து கிளைபிரியும் கால்வாய் இந்த இரண்டு கிராமங்களின் வழி ஓடியது. பருவம் சார்ந்த கால்வாய், இரண்டு போகம் விவசாயத்துக்கு உதவுவது. வயல்களையொட்டிய கிணறுகளில் நீர்ச் சாரம் வற்றாமல் பார்த்துக்கொள்ளக் கூடியது. தான் செல்லும் வழி முழுக்கக் கிட்டத்தட்ட முப்பத்தைந்து கிராமங்களின் உயிர் ஆதாரம் அந்தக் கால்வாய்தான்.

அந்த முறை கோடை கடுமையாக இருந்தது. நீர் வரத்து இரண்டு கிராமங்களின் பாசனத்துக்குப் போதுமானதுதான். ஆனால் நியாயமாகத் தங்களுக்குரிய விகிதத்தில் பிரித்துக்கொள்வதற்கு இரண்டு தரப்புமே தயாராக இல்லை. கால்வாய் நிரம்ப ஓடும் நீர் அடுத்த மாதத்தில் முழுக்க வறண்டுவிடும் என்பதால் தங்கள் கிராமக் கண்மாய்களை இப்போதே நிரப்பிக்கொண்டுவிட வேண்டும் என்னும் ஆசையில் இரண்டு கிராமங்களும் மல்லுக்கட்டின. பெரும் தகராறு வெடித்துப் பல தலைகள் உருளும் வாய்ப்பிருக்கிறது என்பதாகக் காவல் துறையின் யூகம்.

இன்னொரு செய்தியும் என் செவிகளை எட்டியது. இரண்டு கிராம ஜனங்களும் சமரசமான தீர்வுக்குத் தயாராகத்தான் இருக்கிறார்கள், தலைவர்கள் இருவரும் தங்கள் சொந்தப் பகையைத் தீர்த்துக்கொள்ள இந்த நெருக்கடியான நிலையைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என என் நண்பரான காவல் அதிகாரி சொன்னார்.

அவர் வந்துசென்ற பிறகு வழக்கம்போலவே என் மனைவி வந்து தன்னுடைய அபிப்பிராயத்தைச் சொன்னாள். நண்பருடன் குடித்த மதுவில் கிறங்கியிருந்த உடம்புக்குள் கிறுகிறுவென்று ரத்த அழுத்தம் உயர்ந்தது. கையிலிருந்த கண்ணாடிக்கோப்பையைச் சுவரில் எறிந்து உடைத்தேன். சில்லுகள் சிதறும் ஓசை காதில் விழுந்த அதே சமயத்தில் எனக்குள் ஒரு தீர்மானம் உதித்தது. இந்தப் பயல்களுக்கு நாளை சரியான பாடம் புகட்ட வேண்டும்.

விசாரணையைக் கால்வாயை ஒட்டியிருந்த வெட்டவெளியில் நடத்தினேன். இரண்டு கிராம ஜனங்களும் கூடியிருந்தார்கள். காவல் துறை நண்பர் என் வேண்டுகோளின் பேரில் அனுப்பியிருந்த போலீஸ் பட்டாளத்தைக் கண்டோ என்னவோ கூட்டத்தில் அழுத்தமான அமைதி நிலவியது. உச்சிவெயிலின் வெளிச்சத்தில் கால்வாயில் ஓடுவது நீரல்ல, உயிர் குடிக்கும் பாதரசம் என்று விசித்திரமாகத் தோன்றியது.

தலைவர்கள் இருவரும் மாறிமாறிப் பேசினார்கள். மெல்ல மெல்லக் குரல்கள் தடித்தன. சொற்கள் தடித்தன. வீசி ஆட்டும் கைகளின் வேகம் கூடியது. சபையின் வெளி விளிம்பில் உட்கார்ந்திருப்பவர்கள் எழுந்து நிற்பதைக் கண்டேன். அவர்கள் அனைவருமே இளைஞர்கள். ஆடைகளுக்குள் ஆயுதங்களை ஒளித்துவைத்திருக்கிறார்களோ எனச் சந்தேகம் தட்டியது. கூட்டத்தில் மெலிதாக ஒரு சலசலப்பு தொடங்கியது.

நியாயமான பேச்சுவார்த்தைக்குக் கட்டுப்படாத இடத்துக்கு விவாதம் நகர்ந்து சென்றுவிட்டது என்று பட்ட நேரத்தில் கையுயர்த்தினேன். அவர்கள் பேச்சை நிறுத்தினார்கள். கடந்த பத்து நாள்களாக ஓய்ந்திருந்த கடைவாய்ப்பல்வலி சுரீரென்று என் உச்சந்தலைக்கு ஏறியது.

தனி நபர்களின் அகங்காரத்துக்காக இரண்டு கிராம ஜனங்கள் பலியாவதை நான் அனுமதிக்கமாட்டேன் என உரத்த குரலில் அறிவித்தேன். துபாஷி சரளமாக எடுத்துச் சொன்னார். ஆனால் என்னுடைய தீர்ப்பை மொழிபெயர்க்கும்போதுதான் அவருடைய குரல் நடுங்கிவிட்டது.

தலைவர்கள் இருவரும் பேசுவதைக் கேட்டால் தண்ணீரைத் தாண்டி வேறு ஏதேதோ விஷயங்கள் உள்ளூறப் புகைகிற மாதிரித்தான் இருக்கிறது. அவர்கள் பதவி விலகிக்கொண்டு வேறு நபர்களை அமர்த்தும் பட்சத்தில் சுமுகமான தீர்வு ஒன்றை எட்டிவிடலாம் எனச் சொன்னேன். தலைவர்களும் வெளி விளிம்பு இளைஞர்களும் ஆவேசமாக மறுத்தார்கள். என் பல்வலி அதிகரித்தது.

இறுதித் தீர்ப்பை வழங்கினேன். தலைவர்கள் இருவரையும் உயிர் பிரியும்வரை கால்வாய் நீருக்குள் அமிழ்த்துவது. தண்ணீரின் அருமையை அவர்களுக்கு விளங்கவைக்க வேறு மார்க்கமேயில்லை. கூட்டத்தில் ஆவேசமாகக் கிளம்பிய குரல்கள் பந்தோபஸ்துக்கு வந்திருந்த துப்பாக்கிகள் உயர்வதைக் கண்டதும் உடனடியாக அடங்கின.

மெல்லக் கிளம்பி வேகமெடுக்கும் சாரட்டின் பின்னால் மன்றாடியபடி சில குழந்தைகளும் பெண்களும் ஆண்களும் ஓடிவந்தார்கள். ஊர்த்தலைவர்களின் உறவினர்களாக இருக்கும். அவர்களுடைய இறைஞ்சல் ஒலி எனக்குள் சுருட்டுப்புகைபோல ஆனந்தமாக நிரம்பியது. சாம்ராஜ்ய நீதியின் தாமிர ருசியை அடி நாக்கில் உணர்ந்தேன். என்னையறியாமல் சிரிப்பு பொங்கியது.

ஆனால், அன்று முதல் என் மனைவியின் முகத்தில் சிரிப்பு மறைந்தது.

நாலுமாதத்துக்கு முன்னால் என் தகப்பனார் கப்பலில் அனுப்பிய புத்தம் புதிய கார் மறுவாரம் வந்து சேர்ந்தது. உள்ளூரில் ஒரு இளைஞனுக்குப் பயிற்சியளித்து ஓட்டுநராக நியமித்தேன்.

திடீரென்று ஒரு நாள் கோடை மழை உடைப் பெடுத்தது. இரண்டு உயிர்களைப் பலிகொண்ட துக்கம் தாளாததுபோலக் குமுறிக் குமுறிக் கொட்டித் தீர்த்தது வானம். கால்வாய் நிரம்ப நீர் ஓடியது. கால்வாய்க் கரைமீது காரில் செல்வோம் எனும் யோசனையை உடனடியாக நிராகரித்தாள் என் மனைவி. அப்படியானால் கட்டாயம் செல்ல வேண்டும் என்ற பிடிவாதம் எனக்குள் உயர்ந்தது.

பின்னிருக்கையில் சிடுசிடுப்பும் அச்சமும் நிரம்பிய முகத்துடன் அமர்ந்துவந்தாள். நான் சாவகாசமாகச் சுருட்டுப் பிடித்துக்கொண்டே வந்தேன். இருவருக்கும் இடையில் கற்சுவர்போல மவுனம் கிடந்தது.

கால்வாய்க் கரை சேறும் சகதியுமாக வழுக்குகிறது. நடந்து செல்வதே கடினமாயிருக்கக்கூடிய வண்டிப் பாதையில் செல்வதற்கு மிகவும் தயங்கினான் காரோட்டி. மனைவியின் முகபாவத்தினால் என்னுள் தடித்திருந்த வீம்பு இன்னமும் ஓங்கி உயர்ந்தது. நானே ஓட்டிச் செல்கிறேன் என அறிவித்தேன். அவன் பணிவாக இறங்கிக்கொண்டான்.

நான் ஸ்திரமாகவும் நேராகவுந்தான் ஓட்டிச் சென்றேன். ஆனால் புலப்படாத ஒரு காந்தப்புலம் இடப்பக்கம் நோக்கி ஈர்க்கிறது. தர்க்கத்துக்கு வெளியில் சீறிப் பீறிட்ட ஒரு கணத்தில் கால்வாய்க்குள் பாய்ந்தது கார். உடனடியாகச் சிக்கிக்கொண்ட கதவுகளுக்குள் நாங்கள் நீருக்குள் அமிழ்வது கனவின் மாயத்தன்மையுடனும் துரிதத்துடனும் நிகழ்ந்தது.

என் நுரையீரலின் சிற்றறைகளில் நீர் நிரம்பி மூச்சுத்திணறும்போதும் கேள்விகளை உயர்த்துமளவு பிரக்ஞை இருக்கத்தான் செய்தது. மனித நீதிக்கு அப்பால் வேறுவகையான நீதிகளும் இருக்கத்தான் செய்கிறதோ? சதா என் நீதிக்கு எதிர்நீதியை உரைத்துவந்த என் மனைவியும் என்னுடனே மூழ்கிச் சாவது எந்த நீதியில் சேர்த்தி?

கடைசி நேரத்தில் இறங்கிப் பிழைத்த காரோட்டியின் முகந்தான் என் நினைவின் திரையில் இறுதியாக வந்து சென்ற பிம்பம்...

7

காக்கைப் பழி சுமந்த குமாஸ்தாவின் கதை

முன்சீஃப் கோர்ட்டில் குமாஸ்தாவாக இருந்தேன். நதியின் தென்கரையில் வீடு. நான்கு குழந்தைகள். ஊர் எல்லைக்கு வெளியே இரண்டு கல் தாண்டி ஒன்றேகால் ஏக்கர் நன்செய் இருந்தது. மூன்று போகம் நெல் விளையும் பூமி. குழந்தைகளின் படிப்புக்கும் மனைவியின் பொறு மைக்கும் மேல்கோட்டுப் பையில் கைச்செலவுக்காக வைத்திருக்கும் பணத்துக்கும் சொந்த வயலில் விளைந்து இரண்டாள் உயரக் குளுமை நிறைந்து கிடக்கும் நெல்லுக்கும் என்றுமே தட்டுப்பாடு இருந்ததில்லை.

ஆனாலும், கொஞ்சநாளாக மனத்தைப் பிசைகிற விதமாக ஏதோ ஒரு சங்கடம். நெஞ்சுக் கூட்டுக்குள் சிறையிருக்கும் பட்சிக்குத் திடீரென்று ஆகாய ஞாபகம் வந்துவிட்ட மாதிரி எந்நேரமும் பதற்றமாகச் சிறகடித்துக்கொண்டிருந்தது. நயமாகவும் இனிமையாகவும் கடந்து கொண்டு வரும் நாள்களின் அடியோட்டமாக மிகப் பெரிய உற்பாதம் ஒன்றும் மிதந்துவருகிறது என்பதை உள்ளுணர்வு உரத்துக் கூவிக்கொண்டிருந்தது.

வியாழக்கிழமை. கோர்ட் வளாகத்துக்குள் நுழைந்தேன். அடர்பச்சையாகத் தலைவிரித்திருக்கும் ஆலமரத்தின் கிளைக்குள்ளிருந்து ஒரு காக்காய் வெளியேறி வந்தது. காக்காய் பறப்பதையெல்லாம் யாராவது உன்னிப்பாகக் கவனிப்பார்களா? அன்று என்னைக் கவனிக்கத் தூண்டியதும் எனது உள்ளுணர்வாகத்தான் இருக்க வேண்டும்.

நேரே என் திசையில் பறந்துவந்த காக்கை என்னைத் தாண்டுவதற்கு முன்னால் என் உச்சந்தலையில் நறுக்கென்று கொத்தியது.

தாளமுடியாதபடி கடுக்கும் வலி. வைதிகமான சூழ்நிலையில் வளர்ந்தவனானதால், உச்சந்தலை வலியைவிடவும் கடுமையான பீதி எனக்குள் உயர்ந்தது. சொர்ணத்திடம் கேட்க வேண்டும். பல்லியின் சொல்லுக்கும் சிந்தும் குங்குமத்துக்கும் நாயின் ஊளைக்கும் தடுக்கும் காலுக்கும் விதவிதமான பலன்களையும் பரிகாரங்களையும் சொல்லிவருபவள் அவள்.

அலுவலின் நெருக்கடியில் சாயந்திரம் அவளிடம் கேட்க மறந்துவிட்டேன் என்பது மறுநாள் அதே இடத்தில் காக்கை வந்து கொத்தியதுந்தான் நினைவுக்கு வந்தது. அவள் சனீஸ்வரன் சந்நிதியில் எள்ளுக் கிழி போட அழைத்துப்போனாள். அந்தத் தகவல் காக்கைக்கு வந்துசேரவில்லை போலும். மறுநாளும் கொத்தியது.

எனக்குள் உருவாகியிருந்த பீதி உயர்ந்து உயர்ந்து உச்சம் நோக்கிச் சென்றுகொண்டேயிருக்க, காக்கை கொத்துவது நாள் தவறாமல் நடந்துவந்தது. விடுமுறை நாள்களில் அது வீடு தேடி வரவில்லை என்பது மட்டுமே ஆறுதல்.

சக ஊழியனும் ஆபத்துதவியுமான நரசிம்மனிடம் ஆலோசனை கேட்டேன். அவன் முதலில் ஆச்சரியப்பட்டான்.

தெனோமும் கறுப்புக் கோட்டுப் போட்டுண்டுதானே வராய்? கறுப்புன்னா காக்காய்க்கு அலர்ஜியாச்சே?

சொர்ணம் வடகம் இடும் நாள்களில் விரித்த துணியின் மத்தியில் கிழிந்த குடையை விரித்துவைப்பதை நினைத்துக்கொண்டேன். கறுப்பை விரும்பும் காக்கைகளும் இருக்கிறதோ என்னவோ?

மறுவாரம் நரசிம்மன் ஒரு நரிக்குறவனை அழைத்து வந்தான். அவனிடம் அந்தக் காக்காயைக் கொல்ல வேண்டும் என்று வேண்டிக்கொண்டபோது, இதை சொர்ணத்துக்குத் தெரியாமல் மறைக்க வேண்டுமே என்னும் பதற்றமும் இருக்கத்தான் செய்தது. குறவன் இயல்பாகக் கேட்டான்.

அடையாளம் சொல்லுங்க சாமீ. ஒடனே போட்டுத் தள்ளிர்றேன்.

நான் திகைத்தேன். காக்காய்க்கு என்ன அடையாளம் சொல்வது? நரசிம்மன் அசந்தர்ப்பமாகச் சிரித்தான். குறவனின் கொடுவாள் மீசைக்கடியில் குறுஞ்சிரிப்பு பூத்திருக்கிறதோ என்று உறுத்துப் பார்த்தேன். இல்லை, முகம் வெகுளியாகத்தான் இருக்கிறது... அன்று சாயங்காலம் வேறொரு கேள்வி உதித்தது. ஒரே காக்காய்தான் தினந்தோறும் என் தலையில் கொத்துகிறது என்று எப்படி முடிவெடுத்தேன்? உள்ளே வேர்கொண்டிருந்த பீதி பல மடங்கு உயர்ந்தது.

மறுநாள், காக்கை கொத்திய இடத்தைத் தடவியவாறு கோர்ட் வளாகத்துக்குள் நுழைந்தேன். நரசிம்மன் எனக்காகக் காத்திருந்தான். குறவனுக்கு என்ன பதில் சொல்லட்டும் என்று கேட்டான். ஃப்ளாஸ்கிலிருந்த காபியை இருவருமாகக் குடித்துவிட்டு ஆலோசித்தோம். எடுத்திருக்க வேண்டாத ஒரு முடிவை அப்போதுதான் எடுத்தேன்.

நரசிம்மா, அந்தக் காக்காய்ன்னு இல்லே, கண்ணுக்குப் படற காக்காயையெல்லாம் கொல்லச் சொல்லு அவனெ. ஊருக்குள்ளே ஒரு காக்காய் இருக்கப்படாது.

அப்பிடி ஒரேயடியாச் செய்ய முடியாதுடா. பெரிய ஆவலாதியாயிடும்.

ஒரு நாளைக்குப் பத்துக் காக்காயாக் கொல்லச் சொல்லு... காக்காய் ஒண்ணுக்குக் காலணா.

இரண்டாம் நாள் குறவன் செத்த காக்காய்களைத் தன் தோள்பைக்குள் வைத்துக்கொண்டுவந்தபோது சந்தேகம் வந்துவிட்டது. முதல்நாள் காட்டிய காக்காய்களைத்தான் இன்றைக்கும் கொண்டுவந்திருக்கிறானோ? ஒப்பந்தத்தைத் திருத்தினேன். முழுக்காக்காயையும் கொண்டுவர வேண்டியதில்லை. அலகை மட்டும் ஒடித்துக்கொண்டுவந்தால் போதும்.

சொர்ணம் அறியாமல், வீட்டுத் தோட்டத்தின் ஒரு மூலையில், பிரம்புக்கூடையில், சாவிக்கொத்துகள் போல அலகுகள் சேகரமாகின. தினந்தோறும் குலுக்கிப் பார்ப்பேன். தக்கைகள்போல ஒலிக் கிளம்பும். விநோதமான ஒரு நிறைவு என் மனம் முழுக்க நிரம்பும்.

கிட்டத்தட்டப் பாதிக்கூடை சேர்ந்துவிட்ட பிறகும் என் தலையில் காக்கை கொத்துவது நின்றபாடில்லை. கோர்ட் வளாகத்தில் பறந்து திரியும் காக்கைகளின் எண்ணிக்கையும் குறைந்த மாதிரித் தெரியவில்லை. நரசிம்மன் நியாயமான சந்தேகம் கிளப்பினான்.

உள்ளூர்க் காக்காய் இல்லையோ என்னமோ?

அதை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. தள்ளவும் முடியவில்லை. என்னைக் கொத்துவதற்காகவென்றே ஒரு காக்காய் தினந்தோறும் வெளியூரிலிருந்து வந்து செல்கிறதென்றால், பூர்வ ஜென்ம விரோதம் எதுவும் இருக்குமோ? விஷயம் கைமீறிப் போய்விட்டதென்று தோன்றியது.

அன்று சாயங்காலம் கோர்ட்டிலிருந்து திரும்பும்போது, ஒரே நாளில் இரண்டாம் முறையாகத் தலையில் கொத்து வாங்கினேன். காக்கைகளின் உலகத்தில் பழி உணர்வின் வீரியம் அதிகரித்துவிட்டதோ? மறுநாள் தோட்டத்துக்குள் சென்ற சொர்ணம்,

இதென்ன, இங்கே ஒரு பிரம்புக்கூடை?

என்று யதேச்சையாகத் திறந்து பார்த்தாள். என்னைப் பார்த்து அலறினாள்.

என்னன்னா இது?

அவளை அருகில் உட்காரவைத்துக்கொண்டு விஸ்தாரமாகச் சொன்னேன் - கடந்த இரண்டு மாதங்களாக நான் ரகசியமாக அனுபவித்துவரும் அவஸ்தையை. அவள் தலையில் அடித்துக்கொண்டு கதறினாள்.

என்ன காரியம் செஞ்சீர் பிராமணா? தலைமுறை தலைமுறையாத் தீராத பாவத்தைச் சம்பாதிச்சுட்டீரே? நீரும் ஒம்ம எழவெடுத்த தந்திரமும்.

ஆனால் நான் செய்த பாவம் தலைமுறைகள் தாண்டித் தொற்றுவதற்கில்லை. அன்றிரவு மூச்சுத் திணறி என் மூத்த பையன் இறந்துபோனான்.

பிறவியிலிருந்தே அவனுக்கு இருந்துவந்த சுவாசக் கோளாறுதான் காரணம் என்று மருத்துவர் சொன்னார். ஆனால் சொர்ணம் காக்காய் அலகுதான் காரணம் எனத் தீர்மானமாகச் சொன்னாள். நாங்கள் தனியாக இருக்கும்போதுதான் இதைச் சொன்னாள் என்றாலும், அவள் ஏதோ மலையுச்சியிலிருந்து உரத்துக் கூவுவது மாதிரி எனக்குள் படபடப்பு உண்டாகியது.

அடுத்த மாதம் ஊர்ப் பொதுக்கிணற்றில் கால் இடறி விழுந்து என் இரண்டாம் குழந்தை இறந்துபோனாள். நாயக்கர் தோட்டத்தில் விளையாடச் சென்ற பெண் திரும்பவில்லையே என்று தேடிப் போனோம். அதற்குள் வயிறு ஊதிக் கிடந்தாள் குழந்தை.

மூன்றாம் குழந்தை லாரியில் அடிபட்டான். ரத்தப் பூ மாதிரி மண்டை சிதறிக் கிடந்த குழந்தையைப் பார்த்தபோது, என் ஜன்மவிரோதிக்குக்கூட இப்படியொரு துக்கம் நேர வேண்டாம் எனத் தோன்றியது.

கடைசிக் குழந்தையாவது மிஞ்ச வேண்டும் என்று பரிகாரம் செய்வதற்கு ஆள்களைத் தேடத் தொடங்கினோம். இந்தச் சந்தர்ப்பத்தில் என்னைக் காக்கை கொத்துவது குறைந்துவிட்டது. நான்தான் அன்றாடம் கோர்ட்டுக்குச் செல்வதை நிறுத்தியிருந்தேனே. கோர்ட்டுக்குச் செல்லும் நாள்களில் மாத்திரம் பணிவாகத் தலை சாய்த்துக் கொத்து வாங்கிக்கொள்வேன். குறவனை வெகுநாளைக்கு முன்பே நிறுத்தியாகிவிட்டது.

பரிகாரங்களுக்கு அப்பால் சென்றுவிட்டது என் குழந்தைகளின் தலைவிதி. மஹா மிருத்யுஞ்சய யாகம் செய்வதற்கு ஏற்பாடு செய்துவிட்டுத் திரும்பிய அன்று இரவில், வீட்டுத் தோட்டத்தில் நடமாடிய பாம்பு கடித்து, கடைசிக் குழந்தையும் இறந்துபோனாள். பிறந்த வரிசையில் கிரமம் மாறாமல் ஆறுமாத காலத்துக்குள் குழந்தைகள் நால்வரும் போன பிறகு வீட்டை மயான வெறுமை சூழ்ந்துவிட்டது.

வெவ்வேறு நாள்களில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு காரணங்களால் அவர்கள் இறந்தாலும், நாலு பேரின் உடல்களும் ஒரே மாதிரிக் கறுத்துப் போனதில் எனக்கு மட்டுமான ரகசிய செய்தி ஒன்று இருந்ததாகப்பட்டது. குழந்தைகளைத் தகனம் செய்து திரும்பும்போது, சிறுகச் சிறுக என் கண்களில் கருமை படர்ந்து வந்தது.

கடைக்குட்டியை எரித்துவிட்டு வந்த பிறகு, பார்க்குமிடமெல்லாம் கருமை சூழ்ந்திருந்தது. வைகையாற்றில் கருநிறமாகத் தண்ணீர் ஓடியது. கோர்ட் வளாகத்தின் ஆலமரத்தில் கறுப்பு இலைகள். கறுப்பு விழுதுகள். வீட்டுச் சுவர் கறுப்பு. உண்ண எடுத்த சோற்றுக் கவளம் கறுப்பு. உடுத்தும் உடைகள் கறுப்பு. தொட்டால் கன்றிவிடும் சிவப்பு நிறம் கொண்ட சொர்ணம் கண் மைபோலக் கறுத்திருந்தாள்.

விடிந்து இவ்வளவு நேரமாகியும் இருட்டு நீங்கவில்லையே என்று அரிக்கேன் விளக்குடன் தோட்டத்துக்குச் சென்று திரும்புகிறேன், சொர்ணம் மற்றவர்கள் உதவியுடன் என்னை ஒரு அறைக்குள் செலுத்திப் பூட்டினாள்.

பகலுக்குண்டான ஒலிகளுடன் இரவுக்குண்டான கருமையுடன் ஆறு பகல்கள் கழிந்தன. நான் உடுத்தியிருந்த கறுப்பு வேஷ்டியைக் கயிறாக முறுக்கி உத்தரத்தில் தூக்குப் போட்டுக்கொண்டேன்.

8

பருவத்தை இழந்த பயில்வான் கதை

ஊருக்குள் என் பெயரைச் சொல்லிக் கேட்டால் யாருக்கும் தெரியாது. காரியக்காரர் வீடு என்று கேட்க வேண்டும். எனக்கு முந்திய மூன்று தலைமுறைகள் கிராம நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தவை. அல்லது பயில்வான் வீடு என்று கேட்க வேண்டும். சிறு குழந்தைகூட வழிகாட்டும். ஆனால் அதெல்லாம் ரொம்ப நாளைக்கு முந்தி.

அப்பாவின் அகால மரணத்துக்குப் பின் - அவர் ராஜாத் தேள் கொட்டி இறந்துபோனார் - குடும்பப் பொறுப்பை நான் மேற்கொள்ளவேண்டியதாகிவிட்டது. திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சென்று அரி நமோத்து சிந்தம் என்று மணலில் ஆள்காட்டி விரலால் பிள்ளையார் சுழிபோட்ட அன்றே எனக்கு ஒரு உண்மை புரிந்தது. கோடுகளையும் வளைவுகளையும் புள்ளிகளையும் வைத்து ஒரு மானசீகப் பேச்சு லகத்தை என்னால் சென்று எட்ட முடியாது என்று. அப்பா நயந்து சொல்லிப்பார்த்தார். கெஞ்சிப் பார்த்தார். கண்மண் தெரியாமல் அடித்தும் பார்த்தார். எதுவும் பயன் தரவில்லை.

ஆனால் கரணைகரணையாய்த் தசைகள் சேர்த்து வைத்திருந்தேன். சிலம்பம், குஸ்தி, சுருள் கத்தி வீச்சு, திருக்கைவால் வீச்சு, மல்யுத்தம், வர்மம் என்று எல்லா விதமான போர்க்கலைகளும் கற்றுவைத்திருந்தேன். ஆசான்தான் வழிகாட்டினார் - உடம்பை மட்டுமே மூலதனமாக வைத்து விதவிதமான தொழில்கள் செய்ய முடியும் என்று. அப்படி ஒருவகைத் தொழில் செய்த பெண்மணியைத்தான் பின்னாள்களில் மனைவியாகச் சேர்த்துக்கொண்டேன் என்பது வேறு கதை.

குஸ்தி பயில்வான் ஆனேன். ஆனால் பாருங்கள், குஸ்திச் சண்டைகள் வருடம் முழுக்க நடக்காது. போட்டிகள் இல்லாத காலங்களில் நூற்று அறுபத்தாறு நாட்டுக் கோழி முட்டைகளை ஒரே மூச்சில் உடைத்துக் குடிப்பது, எண்பத்தோரு தேங்காய்களை உச்சந்தலையில் அடித்து உடைத்துக் காட்டுவது, ஆயிரக்கணக்கில் ஆணிகள் பதித்த பலகையில் நாள்கணக்காகப் படுத்துக் கிடப்பது, இரண்டு வாரங்களுக்கு ஓயாமல் சைக்கிள் ஓட்டுவது என்று உடலை வருத்தும் காட்சிக் கலைகளில் விற்பன்னனானேன்.

அந்நாள்களில் பல்வேறு ஊர்களில் கொடையின்போது காட்சிச் சாலைகளும் நடக்கும். இரண்டு தலை மனிதன் இருந்த கூடாரத்துக்கு அடுத்தபடியாக நான் இருக்கும் கூடாரத்தில்தான் கூட்டம் அலை மோதும்.

இவ்வளவு வித்தைகள் தெரிந்திருந்தும் குஸ்தியின் மீதுதான் எனக்குத் தனி அபிமானம் இருந்தது. எனக்குள் வேறு ஒரு ஆள் இருக்கிறான், உடம்போடு சம்பந்தப்பட்டும் சம்பந்தமின்றியும் அவன் தனியாக வளர்ந்து வருகிறான் என்று எனக்குத் தெரியவைத்த கலை அதுதான்.

குஸ்திக் கலைக்குச் சிந்தனை தேவையில்லை, உடம்பு வலு மட்டும் போதும் என்கிற மாதிரி ஒரு அபிப்பிராயம் பரவலாக இருப்பது எனக்குத் தெரியும். மிகமிகத் தவறான அபிப்பிராயம் அது. எதிரியின் மனவோட்டங்களை உள்ளங்கை ரேகைபோலப் படிக்கத் தெரிந்தால் மட்டுமே உங்கள் குத்துகளைச் சரியான விதத்தில் சரியான இடத்தில் இறக்க முடியும். உங்களை நோக்கி வரவிருக்கிற குத்துகளை முன்னுணராமல் எப்படி விலகித் தப்பிப்பது?

ஆனால் சத்தியபாமாவை - வடக்கு ரத வீதியில் எனக்குத் தற்செயலாகக் கிடைத்த சொர்க்கம் அது - என் வாழ்க் கையில் சேர்த்துக்கொண்ட பிறகு, மேற்சொன்ன உள்ளுணர்வின் போக்கில் சிறு ஊடுருவல் நேர்ந்துவிட்டது. அவள் வழியாக என் உடம்பையும் உயிரையும் பார்க்க நேர்ந்துவிட்டது.

முன்பெல்லாம், நான் திட்டமிடும் கணத்துக்கு ஒரு கணம் முன்பாகவே என் குத்துகள் பாயும். அவசரத்தின் விளைவை காற்றில் விரயமான குத்தாகவோ என் இடது புஜத்தில் இறங்கும் இடியாகவோ அனுபவம் கொள்வேன். முதிர ஆரம்பித்த பிறகு, நான் நினைக்கும் அதே கணத்தில் மிகச்சரியாகக் குத்துகள் மோதும். அந்தக் கணங்கள் என் வாழ்க்கையின் பொற்தருணங்கள் என்றே சொல்ல வேண்டும். கைநிறையப் பணமும் புகழும் விருதுகளும் குவிந்த காலகட்டம் அது. நாலைந்து வருடங்கள் இந்த விதமாகக் கழிந்தன.

பிற்பாடு, நான் உத்தேசிப்பதற்கு ஓரிரு கணங்கள் தள்ளிக் குத்துகள் இறங்க ஆரம்பித்தன. ஆந்திராவிலிருந்து வந்த ஒரு குஸ்தி பயில்வானிடம் முகத்தில் இரண்டு குத்துகள் வாங்கினேன். சின்னப் பையன் அவன். முன்னம் பற்கள் இரண்டு உதிர்ந்து ஊருக்குத் திரும்பினேன். ஊரே வியந்தது.

சத்தியபாமா 'இந்தப் பிழைப்பு வேண்டாம்' என்று மன்றாட ஆரம்பித்தாள். இருக்கிற காணியை உழுது பிழைக்கலாம் என்றாள்.

நான் மௌனமாகத் தலையாட்டிக்கொண்டிருந்தேன். ஆனால் உள்ளே யோசனை வேறுவிதமாக ஓடியது. அந்த ஆந்திர இளைஞனிடம் ஏன் தோற்றேன்? அவன் என்னைவிடப் பத்து வயது இளையவன் என்று சொன்னார்கள். இருந்தால் என்ன, நானும் இளைஞன் தானே? அல்லது, அப்படி இல்லையோ? ரகசியமான பாதையில் உடம்பு தன் போக்கில் நகர்ந்தவாறிருக்க, மனம் பிடிவாதமாக ஒரே இடத்தில் இருந்துகொண்டு நகர மறுக்கிற மாதிரி உணர்ந்தேன்.

நாளெல்லாம் கஸரத் செய்துகொண்டும் புரதம் நிரம்பிய உணவைச் சாப்பிட்டுக்கொண்டும் உதவியாளர்கள் எண்ணெய் தடவித் தினவடங்கும் வரை தசைகளைப் பிடித்துவிட்டும் கழிந்த வாழ்க்கை. திடீரென்று மேழி பிடிக்கச் சொன்னால் நடக்குமா?

கைகளிலும் மனத்திலும் ஒரு நடுக்கத்தை உணரவாரம்பித்தேன். நான் உழ இறங்கிய காணி உலகினளவு பரந்ததாகத் தோன்றியது. பகல் பொழுதுகள் நகரும் வேகம் குறைந்துவிட்ட மாதிரி இருந்தது. இரவைவிடப் பகல் நீளமாக வேறு இருக்கிறது.

சத்தியபாமா கூழ் நிரம்பிய கும்பாவைக் கொண்டுவந்து தருகிறாள். அவள் கையில் சுருக்கங்கள். தலை முழுக்க நரைத்துவிட்டது. ஓரணா அகலக் குங்குமமும் தலை கனக்கச் சூடிய மல்லிகைச் சரமும் விழிகளை அகலமாக்கும் கண் மையும், ஒன்றுகூட உதிராத பற்களும் தாம்பூலம் சிவந்த உதடுகளும் . . . அத்தனை பேரழகான கிழவியை நீங்கள் எங்குமே பார்க்க முடியாது. எனக்குள் ஒரு உத்வேகம் எழுந்து உயர்ந்தது. பாமாவை இறுக்கி அணைத்துக்கொள்ள வேண்டும். அவள் எலும்புகள் நொறுங்க அணைத்துக்கொள்ள வேண்டும். அவள் மூச்சுத் திணறத் திணற...

ஹு அவள் நீட்டிய கும்பா பல வருடங்கள் தாண்டி என் கைக்கு வந்து சேருகிறது. குடிப்பதற்காக உயர்த்தும் கைகள் நடுங்கியபடி வாயருகில் வந்து சேர யுகக் கணக்காக நேரம் பிடிக்கிறது. பெரும் சோர்வு படிந்தது. எனக்குள் இருக்கிறவன் வாலிபனாகவே இருக்கிறான். அவன் இப்போதுதான் தன் சுற்றுப்புறத்தைக் கவனமாகப் பார்க்க ஆரம்பித்திருக்கிறான். குரல்கள் ஒவ்வொன்றும் உயிரின் நாதமாக ஒலிப்பது புரிகிற பருவம். நிறங்களை அருந்தி மாளவில்லை அவனுக்கு. எல்லாமே புதியதாகவும் வசீகரமாகவும் மாறிவரும் பிராயத்தில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு விலகு என்றால் நியாயமா?

என் சகபாடியும் என் வயசுக்காரனும் அந்தக் காலத்தில் நான் ஆடிய ஆட்டங்களிலெல்லாம் எனக்குச் சமமாகப் பங்கேற்றவனுமான சின்னக்காளை மாரடைத்து இறந்துபோனான் எனச் செய்தி வந்தது. குளவிக்கூடு கலைந்துவிட்டது என்று உணர்ந்தேன். எப்போது வேண்டுமானாலும் எனக்கும் கொட்டு விழும்.

நடுவில் ஒருநாள் ஜோஸியரிடம் சென்று எங்கள் குடும்ப ஜாதகங்கள் அத்தனையும் காட்டிவிட்டு வந்தாள் பாமா. வெறும் கட்டங்களைப் பார்த்து வரப்போவதையெல்லாம் கச்சிதமாக எப்படித்தான் கணிக்கிறார்களோ? அவர்கள் எதிரிலிருக்கும் உடம்பை ஆள் என்று கருதுவதில்லையோ? தாளில் வரைந்த கட்டங்களில் சூட்சுமமான ஒரு ஆள் நடமாடுகிறான் போலிருக்கிறது.

மூத்தவன் ஜாதகத்தில் கர்ம பலன் நெருங்குகிறது என்று சொன்னாராம் ஜோசியர். பாமா தெம்பாகத்தான் இருக்கிறாள். என்னைத்தான் மூப்பு அழுத்துகிறது. பாமா ஆறுதலாகச் சொன்னாள்.

விடுங்க. எண்பத்திச் சொச்சம் வயசு என்ன சின்ன வயசா? அதுதான் பாக்க வேண்டியதெல்லாம் பாத்தாச்சே?

அட அசடே. பார்த்துத் தீருமா இதெல்லாம்?... நூறு நூறு வருஷங்கள் வாழ்ந்து கழித்தாலும் தீராத ஏக்கத்துடன்தான் சாவேன் என்று தோன்றியது.

9

பிள்ளையவர்களின் புத்தகத்தை வெளியுலகம் காணக் காரணமாய் இருந்தவர் எட்கார் லூஷிங்டன் துரை. பிள்ளையின் கையெழுத்துப் பிரதியைத் தேடி எடுத்ததோடு, உரியவர்களைக் கொண்டு செம்மையாக்கி, தன் கைப்பணத்தைப் போட்டுப் பிரசுரித்திருக்கிறார். தமிழ்மீது உள்ள ஆர்வமும் தமது பராமரிப்பில் இருந்த நோயாளியின்மீது கொண்ட அன்புமே இதற்குக் காரணம் என்று குறிப்பிடுகிறார்.

1906ஆம் வருடம் பம்பாயில் வந்து இறங்கிய மறுகணமே இந்த தேசத்தின்மீது விசேஷமான அபிமானம் ஏற்பட்டுவிட்டதாகக் குறிப்பிடுகிறார் துரை. தமது சக பயணிகள் போர்ப்படைகளுக்கும் வருவாய்த் துறைக்கும் ஆட்சித் துறைக்கும் நீதித் துறைக்கும் தலைவர்களாகப் பொறுப்பேற்கச் சென்றபோது, தாம் மட்டும் உளவியல் மருத்துவராகப் பணிபுரியச் சென்றதற்கு லூஷிங்டன் துரை பின்வருமாறு காரணம் சொல்கிறார்.

பல்வேறு தேசங்களைக் குடியேற்றங்களாக மாற்றிக்கொண்டேபோன ஆங்கிலேய மனங்களின் ஆழ்தளத்தில் வெளித்தெரியாத குற்றவுணர்ச்சியொன்று இருந்திருக்கக்கூடுமென்றும் அது தன்னை விளம்பிக்கொள்ளும் விதமாகவே தம்மைப் போன்றவர்கள் உருவாகியிருக்கலாமென்றும் குறிப்பிடுகிறார்.

அவர் சொல்லும் இன்னொரு காரணமும் குறிப்பிடத் தக்கது. பட்டப்படிப்பு கூடப் படித்திராத பலரும் தமது தோல்நிறத்தின் மகத்துவத்தால் உயர் பதவிகளில் சென்று அமர்வதையும் அது அவர்களின் தன்னகங்காரத்தை ஊதிஊதிப் பெருக்கவைப்பதையும் சற்றுக் கசப்புடன் குறிப்பிடுகிறார் லூஷிங்டன். அவர்களுக்குச் சமானமாக ஒரு பணியில் சென்று அமர்வது தமக்குத் தகுதிக் குறைவான விஷயம் என்கிறார். தவிர, பன்னெடுங்காலப் பாரம்பரியம் உள்ள ஒரு மண்ணில் ஆட்சியாளனாக அமரும் தகுதி உண்மையிலேயே தமக்குக் கிடையாது என்றும் பணிவோடு எழுதுகிறார்.

தம்முடைய நோயாளிகள் பற்றி துரை பேசும் மொழி குறிப்பிடத்தக்கது. அவர்கள் சம்பந்தமாகக் கேலிச் சொல்லோ புகார்த்தொனியோ தென்பட்டுவிடாத வகையில் சொல்கிறார். பிரமநாயகம் பிள்ளையைப் பற்றிக் குறிப்பிடும் சந்தர்ப்பத்தில் அவர் வகையைச் சேர்ந்தவர்கள் பற்றி எழுதுகிறார். அவர்களை உள்ளோசை கேட்பவர்கள் என்று கௌரவமாகக் குறிப்பிடுகிறார். அவருடைய நோயாளிகள் கூறிய அறிகுறிகள் விசித்திரமானவை.

கோவில் ஆலாட்ச மணியின் நாதம் பின்மண்டைக்குள் சதா கேட்டவாறிருப்பதாகச் சொன்னவர்கள்.

பாலர் பள்ளி வகுப்பின் இரைச்சல் எந்நேரமும் கேட்பதாகச் சொன்னவர்கள்.

நெல் அரைவை யந்திரம் தலைக்குள் ஓடுவதாக உணர்ந்தவர்கள்.

இறந்துபோனவர்களுடன் பேசுவதாகச் சொன்னவர்களும் உண்டு..

இந்த ஓசைகளின் அளவும் வீரியமும் அதிகரித்த சந்தர்ப்பங்களில் நிலைதவறி நடந்துகொள்கிறார்கள் என்று எழுதுகிறார். கொலைசெய்யவும் தயங்கமாட்டார்கள் என்கிறார்.

லூஷிங்டன் துரையின் மற்றொரு ஈடுபாடும் குறிப்பிடத்தக்கது.

உளவியல் துறையைத் தேர்ந்திருக்காவிட்டால் கீழைத்தேய மொழிகளில் ஆராய்ச்சி செய்யும் காரியத்தில் இறங்கியிருப்பேன் என்கிறார் அவர். தொல்காப்பியத்தையும் நிகண்டையும் நன்னூல் சூத்திரங்களையும் வெகு ஆர்வமாகப் படித்திருக்கிறார். திருமணம் செய்துகொள்ளவில்லை. தமிழ்ச் சுவடிகள் எங்குக் கிடைத்தாலும் ஊன்றிப் படித்துவிடுவதைக் கடமையாகச் செய்துவந்திருக்கிறார். நேர் அவதானத்தில் தெரிவதைவிடவும் சுவடிகளில் தெரியவரும் மனங்கள் வெகு துலக்கமாக இருந்தன என்றும், சுவடிகளின் வழியாக, எழுதியவர்களின் ஆழ்மனங்களுடன் நேரடியான உரையாடல் மேற்கொள்ள முடிந்தது என்றும் சொல்கிறார்.

தமிழில் இத்தனை ஆர்வம் உண்டானதுக்குக் காரணம் என்ன என்று பலமுறை யோசித்தும் பிடிபடாமல் இருந்திருக்கிறது. பிரமநாயகம் பிள்ளை தம்மிடம் வந்து சேர்ந்ததற்குப் பிறகு, வீரமாமுனி, போப்பையர் போன்றவர்களின் ஆவி தனக்குள் குடியமர்ந்திருக்கலாம் என்று தோன்றியதாகச் சொல்கிறார்.

பிள்ளையவர்களின் நூலுக்கு லூஷிங்டன் துரை எழுதியுள்ள பதிப்புரை நூலின் மூன்றிலொரு பங்கு அளவுக்கு நீளமானது. கிட்டத்தட்ட ஒரு கேஸ் ஸ்டடிபோலவே எழுதப்பட்டிருக்கிறது. பிள்ளைக்கு உளப் பிறழ்வு ஏற்பட்டதற்கான காரணங்களாகச் சிலவற்றை அனுமானிக்கிறார் துரை.

1. ஆவிகள் விவரித்த நிகழ்வுகளின் கால - இடக் குழப்பம். மன்னர்கள் காலம் முதல் சமகாலம் வரை வெவ்வேறு காலம் தொட்டு நிகழும் சம்பவங்களை ஆவிகள் விவரிப்பதால், ஆவிகள் உலகத்தின் கால அடுக்குமானம் புவியுலகின் கால நகர்வை விடவும் புதிரானதாக இருந்தது.

2. ஆவிகள் தங்கள் பெயரையோ தாங்கள் வசித்த ஊரின் பெயரையோ சொல்லவேயில்லை என்பது.

3. தம்மைத் தொடர்பு கொண்ட ஆவிகள் அனைத்துமே தாமாகத் தொடர்பு கொண்டவைதாமேயொழிய, பிள்ளை நினைத்து ஒரு ஆவியையும் அழைக்க முடிந்ததில்லை என்பது.

4. ஆவிகளுடனான உரையாடல் எப்போதுமே உரையாடலாக இருந்ததில்லை, தாம் பேசுவது ஆவிகளுக்குக் கேட்பதில்லை. அவர்கள் தாம் விரும்பியவற்றைக் கூறிவிட்டு விலகிவிடுகிறார்கள் என்பது.

5. பெண்களின் ஆவி எதனுடனும் தொடர்பு உருவாகாமல் போனது. குறிப்பாக, அந்தக் கள்வனைக் காட்டிக்கொடுத்த இளவரசியுடன் பேச முடிந்திருக்குமானால் அவள் தரப்பும் அதன் நியாயமும் தெரியவந்திருக்கலாம் அல்லவா?

6. இத்தனை ஆவிகளுடன் தொடர்புகொண்டும் அவர்களில் யாரும் மரணத் தறுவாய்ப் பற்றியும் மரணத்துக்குப் பின்னான வாழ்வு பற்றியும் எதுவுமே சொல்ல மறுக்கிறார்களே என்னும் ஏக்கம் பீடித்துவிட்டது பிள்ளைக்கு. லேசாகச் சொல்ல ஆரம்பித்த கழுவனும் யாரோ பலவந்தமாக மென்னியை நெரித்ததுபோல மவுனமாகிவிட்டான்.

7. ஆவிகளின் குரல் வெளியிலிருந்து கேட்கிறதா தமக்குள்ளிருந்து கேட்கிறதா என்பது தீராத சந்தேகமாக வந்து அமர்ந்துவிட்டது.

8. இதுவரை ஆவிகள் சொன்னதாகத் தாம் கேட்ட சகலமுமே தம்முடைய மனக்குறளிகள் தாமோ என்றும் பிள்ளைக்குத் தோன்றத் தொடங்கியதுதான், அவருடைய உளப்பிறழ்வைத் தொடங்கிவைக்கக் காரணமாக இருந்திருக்க வேண்டும் எனத் தான் யூகிப்பதாகச் சொல்கிறார் துரை.

மனக்குறளி என்று அவற்றைச் சுருக்கிவிட வேண்டியதில்லை என்றும் ஒருவித சிருஷ்டிகர நிலை அது என்றும் சுலபத்தில் யாருக்கும் வாய்க்கக்கூடியதில்லை அது என்றும் அந்தக் குரல்களெல்லாமே புறவுலகம் ஒருபோதும் கேட்கவியலாத பிரமநாயகம் பிள்ளையின் மாற்றுக் குரல்களாகவேகூட இருக்கலாம் என்றும் துரை பிள்ளையிடம் எடுத்துரைத்திருக்கிறார்.

தவிர, ஆவிகள் கூறும் கதைகளின் நம்பகத்தன்மை பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை நீதிமானான ஆங்கிலேயனின் கதை, மதுரை ஜில்லாவில் பணியிலிருந்த தமது தொலைதூரத்து உறவினனான வாலஸின் வாழ்க்கையை ஒத்து இருக்கிறது என்று ஆறுதல் கூறியிருக்கிறார். கதையில் வரும் முடிவு மட்டும் கொஞ்சம் நாடகத் தன்மை கொண்டதாக இருக்கிறது என்றும் வாலஸ் பெரியம்மை பீடித்து இறந்துபோனான். அவனுடைய விதவை மனைவி ஒரு வங்காளிச் சீமானை மறுமணம் செய்துகொண்டு கல்கத்தாவில் குடியமர்ந்து விட்டாள் என்றும் தெரிவித்திருக்கிறார். ஆனாலும், ஆவிகளுக்குக் குற்ற உணர்ச்சியோ நீதி உணர்ச்சியோ இருக்கக் கூடாது என்று சட்டம் எதுவும் கிடையாது, தான் எவ்விதமாக இறந்திருந்தால் உசிதம் என்று ஒரு ஆவி கருதிக் கொள்ள முழு நியாயமும் இருக்கிறது என்றும் சொன்னாராம். நடக்காத கதைகளாகவே இருந்தால்தான் என்ன, நடக்கக் கூடியவைதாமே என்றும் ஆறுதல் உரைத்திருக்கிறார்.

தினசரி காலையும் மாலையும் பிள்ளையை நடக்க அழைத்துச் செல்வாராம் துரை. எதிர்ப்படும் ஓரிருவரை ஆவிகளோ என ஐயமுற்று உறுத்துப் பார்ப்பாரே தவிர, இயல்புநிலை தவறாமலே நடந்துகொள்வார் பிள்ளை. மெல்ல மெல்லக் குணமடைந்துவரும் சமயத்தில் அவரைக் காச நோய் தொற்றியது துரதிர்ஷ்டமே என்று துரை குறிப்பிடுகிறார்.

கொஞ்சகாலம் ஒரு குளிர்வாசஸ்தலத்தில் சென்று தங்கினால் உடல் நிலை சீராக வாய்ப்பிருக்கிறது என்று அறிவுரைத்திருக்கிறார். கொடைக்கானலுக்குப் பிள்ளையை அழைத்துச் செல்ல உத்தேசித்திருந்த நாளின் அதிகாலையில்தான் அந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது. இயல்பாக இருக்கிறவர்தானே என்று மருத்துவமனை வளாகத்தில் பிள்ளையவர்களைச் சுதந்திரமாக நடமாடவிட்டது எவ்வளவு தவறு என்று வெகுதாமதமாக உணரக் கிடைத்தது என்கிறார் துரை. காலைநடைக்குப் பிறகு பிரம நாயகம் பிள்ளை கழிவறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக்கொண்டிருக்கிறார். சவரக்கத்தியால் மணிக்கட்டில் ரத்தக் குழாயைத் துண்டித்துக்கொண்டு இறந்துவிட்டார்.

பிள்ளை தம்மிடம் ஒப்படைத்துச் சென்ற குறிப்புகளை என்ன செய்வது என்னும் குழப்பத்தில் சில காலம் ஆழ்ந்திருக்கிறார் துரை. தாமிரபரணிக் கரையில் பிள்ளையின் கருமாதி முடிந்து திரும்பும்போது, தனது செவியருகில் பிள்ளையின் குரல் விளிப்பதுபோலப் பிரமை தட்டியதாம். அன்றிரவில் பிள்ளை நீண்ட சொற்பொழிவு ஆற்றியதாகவும் அதன் பகுதியாக இந்தக் குறிப்புகளைப் பிரசுரம் செய்யும்படி வேண்டுகோள் விடுத்ததாகவும் எழுதுகிறார்.

ஆவிகள் உலகம் பற்றிப் பிள்ளை உரைத்தவற்றைவிட நேரடியானதும் அழுத்தமானதும் அனுபவபூர்வமானதுமான உண்மை புரியவந்ததாகவும் ஆவிகளின் மீது பிள்ளைக்கு இருந்த அத்தனை புகார்களுக்கும் உறைவிடமாகப் பிள்ளையின் ஆவியும் திகழ்ந்ததாகவும் எழுதுகிறார் துரை.

அந்த ஒரு இரவில் மருத்துவத் தொழில்மீது இருந்த பிடிப்பு உதிர்ந்துவிட்டதாம். மறுநாள் காலையில் தென்காசியருகில் உள்ள சுரண்டைக்குச் சென்றிருக்கிறார். மதம் மாறினாலொழிய சைவத் தொண்டு செய்ய முடியாது என்று மடத்தில் கூறிவிட்டார்கள். உடனடியாக முடிவெடுத்து தீட்சை வாங்கிக்கொண்டதாகவும் அதுநாள் முதல் ஞானப்பிரகாசம் என்ற நாமம் சூடிவிட்டதாகவும் சுற்றிலுமுள்ளவர்கள் சாமித்ற என்று அழைப்பதாகவும் எட்கார் லூஷிங்டன் என்ற பூர்விக நிலை ஆவியுலகத் தொலைவில் தென்படுகிறது என்றும் கூறி முடிகிறது குறிப்பு.

10

புத்தகங்களைத் தாராளமாகப் பிரதி செய்துகொள்ளலாம், ஆனால் மடத்துக்கு வெளியில் கொண்டுபோகக் கூடாது எனக் கறாராகச் சொல்லிவிட்டது சந்நிதானம். வெளியில் கொண்டு சென்றாலும் ஜெராக்ஸ் செய்ய முடியாத அளவு நைந்திருந்த புத்தகங்கள். தொட்டால் பொடியும் தாள்கள். கையோடு கொண்டு சென்றிருந்த மடிக் கணிப்பொறியில் சித்த மருத்துவ நூலைத் தட்டச்சு செய்துகொண்டேன். கயிலாய முதலியாரின் நூலை அடுத்தமுறை பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.

சித்த மருத்துவம் அலுத்த நேரங்களில் பிரமநாயகம் பிள்ளை பி. லிட்., அவர்களின் நூலைப் பிரதி செய்துகொண்டேன்.

ஊர்திரும்பிய பின் ராமகிருஷ்ணனிடம் ஆவிகள் உலகம் நூலைப் பற்றிச் சொன்னேன். நூலின் சுருக்கத்தைத் தாளில் அச்செடுத்திருந்தேனா, அவரிடம் கொடுத்தேன். பொறுமையாகப் படித்து முடித்துவிட்டு முகத்தைச் சுளித்தார்.

எந்த நூற்றாண்டில் வாழ்கிறீர்கள்?

என்ற ஒரு கேள்வியின் மூலம் நகர்த்திப் போட்டுவிட்டு அடுத்த விஷயத்துக்கு நகர்ந்தார். ஒவ்வொரு நிமிஷத்தையும் டாலர்களில் சந்தித்தவர். நேரத்தின் அருமை தெரிந்தவர். இனி இதைப் பற்றிப் பேச்செடுக்கவே அனுமதிக்கமாட்டார்.

சாயங்காலம் வீடு திரும்பும்போது, பங்கு வர்த்தக நிறுவனத்துக்குத் திரும்பிவிட்டாலென்ன என்று தோன்றியதில் ஆச்சரியமில்லை. ராமகிருஷ்ணனிடம் வெறுப்புத் தட்டும்போதெல்லாம் இப்படித் தோன்றுவது வழக்கந்தான். மறுநாள் காலையில் விழிக்கும்போது சகலமும் மறந்திருக்கும். எப்போதும் போல அலுவலகம் கிளம்புவேன்.

ஆச்சரியம் வேறொரு சங்கதியில் இருக்கிறது. பிரமநாயகம் பிள்ளையின் நூலை நாமே பதிப்பிக்கலாமே என்று எனக்குள் ஒரு குரல் கேட்டது.

அன்று இரவு, அகவற்பாவை உரைநடைக்குப் பெயர்க்க ஆரம்பித்தேன்.

by Swathi   on 02 Apr 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.