LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 1106 - களவியல்

Next Kural >

உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
பொருந்து போதெல்லாம் உயிர் தளிர்க்கும் படியாகத் தீண்டுதலால் இவளுக்கு தோள்கள் அமிழ்தத்தால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இதுவும் அது.) உயிர் உறுதோறு தளிர்ப்பத் தீண்டலால்- தன்னைப் பெறாது வாடிய என்னுயிர் பெற்றுறுந்தோறும் தளிர்க்கும் வகை தீண்டுதலான்; பேதைக்குத் தோள் அமிழ்தின் இயன்றன - இப்பேதைக்குத் தோள்கள் தீண்டப்படுவதோர் அமிழ்தினால் செய்யப்பட்டன. (ஏதுவாகலான் தீண்டல் அமிழ்திற்கு எய்திற்று. வாடிய உயிரைத் தளிர்ப்பித்தல் பற்றி, 'அவை அமிழ்தின் இயன்றன' என்றான். தளிர்த்தல் - இன்பத்தால் தழைத்தல்.)
மணக்குடவர் உரை:
சாருந்தோறும் என்னுயிர் தழைப்பச் சார்தலால் பேதைக்குத் தோள்கள் அமுதினால் செய்யப்பட்டனவாக வேண்டும். சாராதகாலத்து இறந்துபடுவதான உயிரைத் தழைக்கப் பண்ணுதலான் அமுதம் போன்றதென்றவாறு. இது கூடிய தலைமகன் மகிழ்ந்து கூறியது.
தேவநேயப் பாவாணர் உரை:
உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் - நான் இவளைத் தழுவும் போதெல்லாம் என் உயிர் தழைக்குமாறு தீண்டுதலால்; பேதைக்குத் தோள் அமிழ்தின் இயன்றன - இவ்விளம் பெண்ணிற்குத் தோள்கள் அமிழ்தினால் அமைக்கப் பெற்றனவாயிருக்கின்றன. மென்மையுந் தண்மையும் இன்பமும் பற்றி 'அமிழ்தி னியன்றன' என்றான். பேதை என்னுஞ் சொல் பருவங் குறியாது இளமை குறித்து நின்றது. 'தோள்' பால்பகாவஃறிணைப் பெயர். தழைத்தல் கிளர்ச்சியும் உரமும் பெறுதல்.
கலைஞர் உரை:
இந்த இளமங்கையைத் தழுவும் போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கு இவளின் அழகிய தோள்கள் அமிழ்தத்தினால் ஆனவை என்பதுதான் காரணம் போலும்.
சாலமன் பாப்பையா உரை:
இவளை அணைக்கும்போது எல்லாம் வாடிக் கிடந்த என் உயிர் தளிர்க்கும்படி என்னைத் தொடுவதால், இவளின் தோள்கள் அமிழ்தத்தில் செய்யப்பட்டவை போலும்.
Translation
Ambrosia are the simple maiden's arms; when I attain Their touch, my withered life puts forth its buds again!.
Explanation
The shoulders of this fair one are made of ambrosia, for they revive me with pleasure every time I embrace them.
Transliteration
Urudhoru Uyirdhalirppath Theentalaal Pedhaikku Amizhdhin Iyandrana Thol

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >