LOGO
  முதல் பக்கம்    சினிமா    திரைவிமர்சனம் Print Friendly and PDF

அவன் அப்படித்தான் அந்த உத்தம வில்லன்

“மனிதரை புரிவதென்பது எளிதல்ல. புரிந்தாலும் அவருக்கு தக நடப்பது அத்தனை எளிதல்ல. எப்படி நாம் நடந்தாலும் அதலாம் அவருக்கு நன்மையை பயக்க அமைவதென்பது வலிது. வாழ்க்கை நமக்கு ரம்மியமாகிப்போவது உடனுள்ளோருக்கு வலிக்காது நடக்கையில்தான். வாழ்க்கையொரு முத்தைப் போல இனிப்பது உடனுள்ளோர் நம்மால் சிரித்திருக்கையில்தான். சிரிப்பைப் போன்றதொரு முத்து கடலில் கூடக் கிடைப்பதில்லை, மன ஆழத்திலிருந்து அன்பினால் கண்டெடுக்கப்பட்ட முத்தது சிரிப்பு. அந்த முத்தினை முகத்தில் அணிந்துக்கொள்ளவும் ஒரு மனித தரம் தேவையிருக்கிறது. அந்த தரத்திற்கு உரியவர் கமல்; என்கிறதிந்த உத்தம வில்லன்.

மனிதர் நோகாது நடப்பது முள்ளில்மேல் நடப்பதற்குச் சமம், வலியைப் பொறுத்துக்கொள்ள மனதுக்குப் பிடித்தத் தோள்கள் தேவையிருக்கிறது. வலி மறப்பதற்கு சில குறுக்குச்சந்து புகுந்து நேராய் வந்ததாய் காட்டவேண்டியிருக்கிறது. நேராய் வந்ததாய்ச்சொன்ன பொய்யை செரிக்கவும், பொய்யுண்ட வாயை மறைக்கவும் நஞ்சாகத் தைக்கும் வேறுசில சந்தர்ப்பத்தை மனிதர்களை தாங்கியும் சகித்துக்கொள்ளவும் அவசியமேற்பட்டும்விடுகிறது. ஆக வாழ்க்கையொன்றும் வேறேதோ தான் காணாததொருக் காட்சியோ, புரியாததொரு புதிரெல்லாமோமெல்லாமில்லை; நாம் விதைத்து, நாம் வளர்த்த மரத்திலேறி நாமே பறித்து, நாமே சுவைக்கும் கனியும், உண்ட வலியால் துடித்துச்சாகும் நிசமுமன்றி வேறில்லை என்கிறதிந்தப் படத்தின் நீதியும்.

கமல் சரியானவரா தவறானவரா என்பதெல்லாம் அவரவர் பார்வைக்கிணங்கி வளைந்துப்போகும் ஒன்று. நல்ல மனிதம் மிக்க மனிதர் அல்லது சமூக நன்மைக்கு ஏங்கும் அக்கறைக்கொள்ளும் அருமையானப் பிள்ளை, மிக உத்தமமான மகா கலைஞன் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அப்படிப்பட்ட, அவரின் முகம் மாறாதப் பாத்திரத்தோடு துவங்கி நம் முகம் கோணாது முடிகிறதிந்த திரு. கமல்ஹாசனின் எண்ணம் வென்ற உத்தம வில்லன்.

பொதுவாக, கடவுள் என்பதற்கு உலகம் பெரிய சிறிய என பலவாயிரம் காரணங்களை விளக்கங்களைக் கொண்டு கோடான கோடி ஆண்டுகளை குடித்துவிட்டு மீண்டும் புதியதொரு குழப்பத்தோடும் விடைகளோடும் உண்மையோடும் பொய்யுனோடுமே புரண்டு புரண்டு சுழன்றுக்கொண்டுள்ளது. சத்தியத்தோடுப் பார்த்தால் நம்பிக்கையோடு ஏறியமரும் உண்மையின் நாற்காலியில்தான் கடவுளெனும் புனிதம் மிக கம்பீரமாய் அமர்ந்திருப்பதாக எனக்கு நம்பிக்கை. மனப் பீடத்தில் சுத்தமாய் அமரும் வார்த்தைகளும் எண்ணங்களுமே புனிதம் பூசிக் கொள்கின்றன. அடுத்தவருக்கு வலிக்கையில் அழுவதும், முடியாமல் துவண்டு விழுகையில் தோள்சாய மனதை தருவதும், இருப்பதில் பாதியில்லை என்றாலும் கொஞ்சத்தையேனும் இல்லாதவருக்கு கொடுத்து இருப்பதில் நிம்மதியடையும் மனக்கூட்டில்தான் தெய்வத்தின் வாசனை நிரம்பிக் கிடப்பதாய் எனக்கு நம்பிக்கை.

எனக்கில்லாவிட்டாலென்ன அவனுக்கிருக்கட்டுமே, அவனால் இயலாவிட்டாலென்ன என்னால் எதுவும் முடியுமே எனும் நம்பிக்கையில் பெருந்தன்மையில் சுயநலம் புகாதவரை, கர்வம் வந்து சேராதளவில்; கடவுள் தன்மைக்குள் வாழும் மனிதராகவே இயற்கை நமை உச்சிமுகர்ந்து ஏற்றுக்கொள்கிறது.

மரம் ஒடிக்கையில் மலர் பறிக்கையில் கூட மனசழுகிறது, உயிர் எடுக்கையில் வலி கொடுக்கையில் கூட மனிதம் நோகிறதுப்போன்றதொரு இரக்கத்தின் மானுடப் பதத்தில், மேல் கீழ் விகிதாச்சாரமகற்றி தோளோடு தோள் நிற்கும் ஒற்றுமையின் பலத்தில், அவன் அவள் அது இது ஏதும்’ எல்லாமும்’ இயற்கையெனும் ஒற்றைப் புள்ளிக்குள்ளிருந்து வெளிவந்த கோடுகளே எனும் சமப்பார்வையின் புரிதலில், அவைகள் அத்தனையும் ஒன்றிற்கு ஒன்று மாறுபட்டாலும் மூலத்தில் எல்லாமும் சமம், எல்லாம் ஒன்றே எனும் தத்துவத்தில்; சமயம் கலந்து’ சாதி பிரித்து’ இன்று அதிலும் வேறு பலவாய் திரிந்துகிடக்கும் உலகத்தீரே; சற்று அறிவுகொண்டும் பாருங்களேன் எனும் பதைபதைப்பினைத் தாங்கியே தனது நடிப்பெனும் சக்கரக் கால்களோடு படங்கள்தோறும் வளையவருகிறார் திரு. கமல்ஹாசன். இந்தப் படத்திலும் அப்படி நிறையக் காட்சிகளுண்டு.

ஒருவனைக் குற்றவாளியாகக் காட்டி, கடைசியில் அவனுக்கே நரசிம்ம வேடம் புகுத்தி, இதுவரை கேட்ட கதைக்கு மாறாக இரண்ய கசிபுவின் கையினால் நரசிம்மரைக் கொள்வதாகக் காட்டி அதற்கு பார்ப்போரை ஓ வென்றுவிட்டான் மன்னனென கைத் தட்டவும் வைத்த திறமை திரைக்கதையின் வலிமை என்றாலும், அன்றெல்லாம் திரைப்படங்களின் இத்தகைய வலிமையைக் கொண்டுதான் இன்று வணங்கும் பல கடவுள்களுக்கு நாம் அன்றே அத்தனை அழகிய முகங்களையும், கதைகளுக்கேற்ற காட்சிகளையும் தந்தோம் என்பதையும் இங்கே மறுப்பதற்கில்லை.

ஆனால் அதெல்லாம் ஒரு நன்மையை மனதில் கொண்டு, நேர்மையை புகுத்த எண்ணி, கண்ணியத்தை கற்றுத் தருவதற்காக, புண்ணியம் இதுவென்றும்’ பாவம் இதுவென்றும்’ நன்மையை பெருக்கவும்’ தீமையை அகற்றவும்’ நீதியை நிலைநிறுத்தவும்’ அநீதியை எதிர்க்கவும்’ வீரம் புகட்டவும்’ கர்வம் அழிக்கவும்’ வெறும் காற்றுவழி வந்தச் செய்தியோடு நில்லாமல், மனசு வழி கண்ட ஞானத்தையும் பாடமாக்கிய கதைகள் அவை என்பதையும் இங்கே ஏற்கவேண்டியுள்ளது.

ஒரு சாதாரண மனிதன், பணம் புகழ் வெற்றி உறவு என எல்லாவற்றிலும் நிறைவாகி போனாலும், குறையாய் மனதில் சுமந்துள்ள வலிகளும் ஏராளம் இருக்கலாம். அதிருப்பதை தெரியாமல்தான் எருதின் புண்மீது குத்தும் காக்கைகளாக நாம் நம்மோடு சுற்றியுள்ள நிறைய பேரை வலியறியாமலே அணுகிக் கொண்டிருக்கிறோம் என்பதையும் படம் உணர்த்துகிறது.

மனோரஞ்சன் சற்று பிரபலமான நாயகனாக மாறியதும் மாற்றிய பெரியவரின் மகளை மணப்பதற்காக தான் நேசித்த பெண்ணின் வாழ்வை தனையறியாது கண்ணீருக்குள் ஆழ்த்திய உண்மை தெரியவருகையில் காதலி இறந்துப் போயிருக்கிறாள். காதலியின் மகளுக்கு உண்மை தெரிகையில் மனோரஞ்சன் இறந்துப் போகிறான். ஆக, அவன் காதலித்த, அவனை காதலித்த இருவரின் மன பாரத்தையும் பகிர்ந்துக்கொள்ள மூன்றாவது ஒருத்தி தேவைபடுகிறாள். இந்த மூவரையும் காதலித்த நியாயத்தை எடுத்துச் சொல்லித்தான் உத்தமமான வில்லனாகிவிடுகிறார் மனோரஞ்சன்.

மனோரஞ்சன் பாத்திரம் மனதை வருடவும், காமத்தின் வெப்பத்தில் குழந்தைகளோடு சென்றிருப்பதால் சற்று உடல்கூசவும், காதலின் வலியில் கண்ணீர் உதிர்க்கவும், வாலிபந்தோறும் திமிரும் வாஞ்சையில் ரசனை மனதிற்குள் இனிக்கவும் செய்தாலும், உத்தமனின் பாத்திரமே திரு. கமல்ஹாசனை நடிப்பின் உச்சத்தில் கொண்டுபோய் கனகம்பீரமாய் காட்டுகிறது.

கடைசியில் நரசிம்மராக திரு. நாசரும், இரண்ய கசிபுவாக திரு. கமல்ஹாசனும் இளவரசியாக திருமதி. பூஜா குமாரும் அவர்களோடு இதர பாத்திரங்களாக நடித்த அனைவரின் நடிப்புமே அழகு அழகு அத்தனை அழகு.

ஆங்காங்கே வரும் கமலின் நையாண்டியில் சில சிலருக்கு நெருடலாம். வசீகரம் எனும் பெயரில் உள்ளே நடப்பதைகூட வெளியே திறந்துக்காட்டும் காட்சியும் வசனமும் பெண்களை ஒருசில இடத்தில் ச்ச.. சொல்லவைக்கலாம்.

ஆனாலும் இப்படி ஒருசில மறப்பின் தெரியும் அனைத்து கலைஞர்களின் உழைப்பையும், நளினமாக எல்லோர் நாக்கிலும் வளைந்தாடும் தமிழின் சுவையையும், மனதை கொள்ளைக்கொண்டு வேறொரு காலத்திற்கு நமை கொண்டுபோய்ச் சேர்த்துவிடும் பழங்காலத்துக் காட்சியமைப்பையும், திரைக்கதை ஓட்டத்தையும் மனசு மெச்சாமலில்லை.

மிக முக்கியமாக ஒரு ஆசானுக்கு ஒரு மாணவன் செய்யும் மரியாதையாக; இதுவரை காமிராவின் கண்களுள் கதாப்பாத்திரமாக சிக்காதிருந்த இயக்குனர் சிகரம் திரு. பாலச்சந்தரை படமெங்கும் நிறைத்து அவரின் நிஜமுகத்தை நமக்குக் காட்டி இறந்தப்பின்பும் அவரை கதையினூடே வாழவைதிருக்கிறார் கமல். அதிலும் ஐயா திரு. பாலச்சந்தரின் குரலைக் கேட்கையில் நாகேஷின் முகமும் குரலும் தனையறியாது நமக்கு நினைவினுள் வந்துவிடுகிறது.

கமலின் மீது எழும் மரியாதை இப்படித் தான் எழுகிறது; ஒரு நட்பாக, பகுத்துச் சிந்திக்கும் அறிவாக, உடனுள்ளோரையெல்லாம் சேர்த்து பெருமை செய்யும் மனதாக, பார்த்ததும் சிரிக்கவைத்திடும் புன்னகையாக, மெல்ல மெல்ல மனதினுள் புகுந்துவிடுகையில்; ச்ச சின்ன சின்ன முரண்களையெல்லாம் தூக்கிப் எறி, யாரிங்கே நேர்? எல்லாம் அகற்றி அவரை ஒரு நல்ல திரைகலைஞராக மட்டும் பாரென்று ஒரு கட்டத்தில் நம் மனது நமக்கே அவரை சிபாரிசு செய்துவிடுகிறது.

குறிப்பாக, குடிக்கையில், கள்ளத் தொடர்பு கொள்கையில், தனக்கான கண்ணியத்தை மீறி நடக்கையிலெல்லாம் அதைப் பார்க்கும் எத்தனையோ பேருக்கு ச்ச இவன் உண்மையிலேயே இப்படித்தான்போல் என்று எண்ணம் வரலாம், ஆயினும் அதற்கெல்லாம் சமரசம் செய்துக்கொள்ளாது, அந்த கதாபாத்திரமாக மட்டும் வந்து நடித்திருப்பது கமலின் தனித் தன்மைதான்.

அதிலும், ஒரு புற்று நோயாளி ஒரு நல்ல கலைஞனாக வெல்லும் காட்சிகள் ஒவ்வொன்றும் மிக அருமை. அந்த ‘இயக்குனர் சிகரம்’ காட்டும் நாடகத்தின் இறுதிக்காட்சி, அதுவாகவே மாறும் கமலின் முகபாவங்கள் அத்தனை அபாராம். நடிப்புத் திறமையின் உச்சமது. கூடவே கவிதையின் குரலில் தமிழின் அழகு கேட்கக் கேட்க மெய்சிலிர்க்க வைக்கிறது. அதற்கேற்றாற்போல் ஒலிக்கும் இசையும் ஒவ்வொரு காட்சி நகர்கையிலும் மனதுள் அதிர்வலைகளை ஏற்படுத்தி ஈரத்தோடு சென்று உணர்வினுள் அப்பட்டமாய் ஒட்டிக்கொள்கிறது.

எது எப்படியோ; இந்த உத்தம வில்லன் உண்மையில் வில்லன்தான்; ஆனாலும் உத்தமமுமானவன். உத்தமமான அனைத்துக் கலைஞர்களும் பல்லாண்டு பல்லாண்டு பெருவாழ்வு வாழ்க..

வித்யாசாகர்

by Swathi   on 03 May 2015  0 Comments
Tags: உத்தம வில்லன்   உத்தம வில்லன் திரை விமர்சனம்   உத்தம வில்லன் சினிமா விமர்சனம்   உத்தம வில்லன் விமர்சனம்   உத்தம வில்லன் திரைப்படம்   உத்தம வில்லன் கதை   Uttama Villain  
 தொடர்புடையவை-Related Articles
அவன் அப்படித்தான் அந்த உத்தம வில்லன் அவன் அப்படித்தான் அந்த உத்தம வில்லன்
மீண்டும் தள்ளிப்போகிறது உத்தம வில்லன் ரிலீஸ் !! மீண்டும் தள்ளிப்போகிறது உத்தம வில்லன் ரிலீஸ் !!
ரசிகர்கள் பாதி பணத்தை கேட்டால் திருப்பி தருவார்களா - கமல் !! ரசிகர்கள் பாதி பணத்தை கேட்டால் திருப்பி தருவார்களா - கமல் !!
உத்தம வில்லனில் 5 பாடல்களை எழுதி, 6 பாடல்களை பாடிய கமல் !! உத்தம வில்லனில் 5 பாடல்களை எழுதி, 6 பாடல்களை பாடிய கமல் !!
வித்தியாசமான முறையில் வெளியாகிறதாம் உத்தம வில்லன் இசை !! வித்தியாசமான முறையில் வெளியாகிறதாம் உத்தம வில்லன் இசை !!
உத்தம வில்லன் இசை வெளியீடு எப்போது... உத்தம வில்லன் இசை வெளியீடு எப்போது...
கோடையில் வெளியாகிறதாம் உத்தம வில்லன்.... கோடையில் வெளியாகிறதாம் உத்தம வில்லன்....
அதிக படங்கள் ரிலீசாகும் அக்டோபர் மாதம் !! அதிக படங்கள் ரிலீசாகும் அக்டோபர் மாதம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.