LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 1079 - குடியியல்

Next Kural >

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
கீழ் மகன் பிறர் உடுப்பதையும், உண்பதையும் கண்டால் அவர் மேல் பொறாமை கொண்டு, வேண்டும் என்றே குற்றம் காண வல்லவனாவான்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
உடுப்பதூஉம் உண்பதூஉம் கீழ் காணின் - பிறர் செல்வத்தால் பட்டும் துகிலும் உடுத்தலையும் பாலோடு அடிசில் உண்டலையும் கீழாயினான் காணுமாயின்; பிறர்மேல்வடுக்காண வற்றாகும் - அவற்றைப் பொறாது அவர்மாட்டு வடுவில்லையாகவும் உண்டாக்கவல்லனாம். (உடுப்பது உண்பது என்பன ஈண்டு அவ்வத்தொழில்மேல் நின்றன, அவற்றால், பூண்டல் ஊர்தல் முதலிய பிற தொழில்களும் கொள்ளப்படும். அவற்றைக் கண்ட துணையானே பொறாமை யெய்தலின் 'காணின்' என்றும், கேட்டார் இது கூடும் என்று இயையப் படைத்தல் அரிது ஆகலின் 'வற்றாகும்' என்றும் கூறினார். இதனால், பிறர் செல்வம் பொறாமை கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
பிறர் உடுப்பதனையும் உண்பதனையும் காண்பாராயின், அவர்மாட்டு உள்ள குற்றங்களை ஆராயவல்லாராவர் கயவர். இஃது அழுக்காறுடையா ரென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
உடுப்பதும் உண்பதும் கீழ் காணின் - பிறர்தம் செல்வத்தின் பயனாக ஓவியப்பூம் பட்டாடையணிதலையும் அறுசுவை நெய்யுண்டி யுண்டலையும் கீழ்மகன் காணுமாயின்; பிறர்மேல் வடுக்காண வற்று ஆகும் - அவற்றைப் பொறாது அவரிடத்துக் குற்றமில்லாதிருக்கவும் ஒரு குற்றத்தைப் படைத்துக்கூறவல்லவனாம். 'உடுப்பது' , 'உண்பது' தொழிற்பெயர்கள்.இவற்றைத் தலைமை பற்றிக் கூறியமையால், அணிதல், பூணுதல்,பருகுதல், ஊர்தல் முதலிய பிற செல்வவினைகளுங் கொள்ளப்படும். கண்டவளவிற் பொறாமை கொள்ளுதலால் 'காணின்' என்றும், பொருந்தப் பொய்த்தல் வல்லமை தோன்ற 'வற்றாகும்' என்றும், கூறினார்.வல்லது- வற்று(வல்+து), 'உடுப்பதூஉம்', 'உண்பதூஉம்' இன்னிசையளபெடைகள். 'கீழ்' ஆகுபெயர். இக்குறளால் கீழ்மகன் பிறர் செல்வங் கண்டு பொறாமைப் படுதல் கூறப்பட்டது.
கலைஞர் உரை:
ஒருவர் உடுப்பதையும் உண்பதையும் கண்டுகூட பெறாமைப்படுகிற கயவன், அவர்மீது வேண்டுமென்றே குற்றம் கூறுவதில் வல்லவனாக இருப்பான்.
சாலமன் பாப்பையா உரை:
பிறர் நன்கு உடுத்த, உண்ணக் கண்டால், அவர்மீத குற்றம் காணும் ஆற்றலை உடையவர் கயவர்.
Translation
If neighbours clothed and fed he see, the base Is mighty man some hidden fault to trace?.
Explanation
The base will bring an evil (accusation) against others, as soon as he sees them (enjoying) good food and clothing.
Transliteration
Utuppadhooum Unpadhooum Kaanin Pirarmel Vatukkaana Vatraakum Keezh

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >