‘கள்’ விகுதிக்கு வலிமிகுமா மிகாதா என்று தெளிவாக விளக்கிவிடுகிறேன்.
கள்’ விகுதிக்கு வலிமிகும் மற்றும் மிகா இடங்கள்பற்றி இலக்கண விதிகள் என்று எதுவுமில்லை. ஆனால், வழியொற்றிய மரபின்படி பின்பற்றப்பட வேண்டிய விதி தெளிவாக இருக்கிறது.
1. ஒரு சொல் - ஓரெழுத்து ஒருமொழி (பூ, பா, ஈ) என்ற வகையில் தனி நெடிலாக இருந்தால் கள்’ விகுதிக்கு வலிமிகும். பூக்கள், பாக்கள், ஈக்கள்.
2. நெடில் எழுத்தில் முடியும் பெயர்ச்சொற்களோடு கள்’ விகுதி சேர்ந்தால் வலிமிகும். புறாக்கள், விழாக்கள், பலாக்கள்.
3. இரட்டைக் குறில் எழுத்துகளால் ஆகி, ஈற்றில் உகர உயிர்மெய் அமைந்த சொல்லுடன் கள்’ விகுதி சேர்ந்தால் வலிமிகும். அணுக்கள், பருக்கள், குழுக்கள்.
4. இரட்டைக் குறில் எழுத்துகளால் ஆகி, ஈற்றில் இகர உயிர்மெய் அமைந்த சொல்லுடன் கள்’ விகுதி சேர்ந்தால் வலி மிகுவதில்லை. மொழிகள், வழிகள், படிகள்.
5. மூன்று அடுத்தடுத்த குறில் எழுத்துகளால் ஆகிய சொல்லுடன் கள்’ விகுதி சேர்ந்தால் வலி மிகாது. அழகுகள், செலவுகள், உருமிகள், அரிசிகள்.
6. கு, சு, டு, து, பு, று ஆகிய எழுத்துகளில் முடியும் சொற்கள் குற்றியலுகரங்கள். இவற்றில் க்கு, ச்சு, ட்டு, த்து, ப்பு, ற்று என்று முடியும் சொற்களில் அவை வன்தொடர்க் குற்றியலுகரங்கள். ங்கு, ஞ்சு, ந்து, ம்பு என்று முடியும் சொற்களில் அவை மென் தொடர்க் குற்றியலுகரங்கள். பொதுவாக, வன்தொடர்க் குற்றியலுகரத்தை அடுத்து வலிமிகும் (படித்துச் சொல்). மென் தொடர்க் குற்றியலுகரத்தை அடுத்து வலிமிகாது (பணிந்து செல்). இந்த விதியைப் பின்பற்றுபவர்கள் வாழ்த்துக்கள் என்று எழுதுவதற்கு நியாயம் சொல்வார்கள். பரிமேலழகர் தம் உரையில் ‘எழுத்துக்கள்’ என்றே எழுதியிருக்கிறார் என்பர். இந்த இடையூறான போக்கால்தான் வாழ்த்துக்கள் என்றெழுதுவது வழக்கானது. கள் என்பது பன்மை கருதி வந்த, தனிப்பொருளற்ற விகுதி (இடைநிலை என்பாரும் உளர்) என்பதால், அதற்குச் சொற்களுக்குக் கற்பிக்கின்ற வலிமிகும் விதி பொருந்தித் தோன்றாது என்பதே ஏற்புடையதாகும். ஆகவே, வாழ்த்துகள் என்றெழுதுவதே சரி.
7. ஆட்கள், நாட்கள் என்றெழுதுகிறார்கள். ஆனால், தோள்கள் கோள்கள் என்று இன்னோரிடத்தில் புணர்த்தாமல் எழுதுகிறார்கள். தோட்கள், கோட்கள் என்றெழுதுவதே இல்லை. ஆள்கள், நாள்கள், தோள்கள், கோள்கள் என்றெழுதுவதே சரியாகும்.
8. அதே சமயம் முட்கள், புற்கள், சொற்கள் என்று முள், புல், சொல் போன்ற சொற்களில் கள்’விகுதி சேர்த்துப் புணர்த்தி எழுதுவது தொன்று தொட்டு வழக்காகியுள்ளது.
9. தனி நெடிலால் ஆகிய ஓரெழுத்து ஒருமொழியிலும், நெடிலில் முடியும் சொற்களிலும் கள்’விகுதியோடு வலிமிகும் என்று முதல் பத்தியில் படித்தீர்கள் அல்லவா, ஐகாரத்தில் முடியும் சொற்களில் (ஔகாரத்தையும் சேர்க்கலாம், அதில் சொற்கள் இல்லை) வலிமிகுவதில்லை. கைகள், பைகள், பண்டிகைகள், தேவதைகள். இலக்கணத்தில் ஐகாரக் குறுக்கங்கள் என்று சொல்வார்கள். அதுவும் குற்றியலுகரம் போன்ற ஒன்று.
10. மென்தொடர்க் குற்றியலுகரத்தை அடுத்து வலிமிகாது என்பது மொத்த விதி அல்லவா, அதிலும் விதிவிலக்காக ‘பந்துக்கள் (உறவுகள்), இந்துக்கள்’ என்றெழுதுவது ஏற்புடையதாயிருக்கிறது.
கள்’ விகுதி தொடர்பாக எழும் எல்லா ஐயங்களையும் மேலே விரிவாகத் தொகுத்துள்ளேன். கள்’ விகுதியை முன்னிட்டு எழும் வலிமிகும் வலிமிகா இடங்கள் குறித்த ஐயங்களுக்கு நடைமுறைத் தெளிவைப் பின்பற்றுங்கள். வாழ்த்துகள் !
- கவிஞர் மகுடேசுவரன்
|