LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

தமிழ்ப் படைப்புகளை ஞானபீடம் மதிக்க வேண்டும் - மலேசியாவில் கவிஞர் வைரமுத்து பேச்சு

மலேசியாவைச் சேர்ந்த டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரியம் அண்மையில் வெளிவந்த சிறந்த தமிழ்ப் படைப்புக்கான உலகப்போட்டியை அறிவித்திருந்தது. அதில் உலகெங்குமிருந்தும் கலந்துகொண்ட 198 நூல்களில் சிறந்த படைப்பாக கவிஞர் வைரமுத்து எழுதிய மூன்றாம் உலகப்போர் தேர்ந்தெடுக்கப்பட்டது. 


மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நேற்று அந்தப் பரிசளிப்பு விழா நடந்தது. பரிசுத்தொகையான 10000 அமெரிக்க டாலரை அறவாரியத்தின் தலைவர் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமாசுந்தரம் கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்கினார். அறவாரியத்தின்  செயலாளர் டத்தோ பி.சகாதேவன், மலேசியத் துணையமைச்சர் டத்தோ சரவணன், முன்னாள் மலேசிய அமைச்சர் டத்தோ குமரன் மற்றும் அறவாரியத்தின் உறுப்பினர்கள் முன்னிலையில் இந்த விருது வழங்கப்பட்டது. மலேசிய சிறந்த தமிழ்ப் படைப்புக்கான விருது எழுத்தாளர் புண்ணியவானுக்கு வழங்கப்பட்டது. ஏராளமான தமிழர்களும், படைப்பாளிகளும், எழுத்தாளர்களும் கலந்துகொண்ட இந்த விழாவில் கவிஞர் வைரமுத்து ஏற்புரை ஆற்றினார்.


அப்போது அவர் பேசியதாவது :-


”உலகத் தமிழ் படைப்புகளுக்காக டான்ஸ்ரீ சோமா மொழி இலக்கிய அறவாரியம் வழங்கும் சர்வதேச இலக்கிய விருது, ‘மூன்றாம் உலகப்போர்’ நாவலுக்கு வழங்கப்பட்டிருப்பது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.


விருது என்பது ஒரு படைப்பிற்கு அளவுகோல் அல்ல என்பதை நான் அறிவேன்; ஆனால் அது ஓர் அடையாளம் என்பதையும் மறவேன். தமிழ்ப் படைப்புக்கு இப்போது வழங்கப்படும் பெருந்தொகை விருது இதுவாகத்தான் இருக்க முடியும் என்று கருதுகிறேன்.


எனக்கு ஓர் ஆதங்கம் இருக்கிறது. இலக்கியப் படைப்புகளுக்கு இந்திய அளவில் வழங்கப்படும் உயர்ந்தபட்ச விருதாக ஞானபீடம் கருதப்படுகிறது. உலகத்தரம் வாய்ந்த படைப்பாளிகள் தமிழில் இருந்திருக்கிறார்கள்; இப்போதும் இருக்கிறார்கள். ஆனால் ஞானபீடம் தமிழ்ப் படைப்பாளிகளுக்கு உரிய உயரங்களை இன்னும் வழங்கவில்லை என்பதே என் ஆதங்கம். நமது சகோதர மொழியான கன்னடம் 8 ஞானபீட விருதுகளைப் பெற்றிருக்கிறது. இந்தி மொழியை அது ஆறு முறை அலங்கரித்திருக்கிறது. மலையாளம் 5 ஞானபீட விருதுகளைப் பெற்றிருக்கிறது. ஆனால் உலகச் செம்மொழி என்று செம்மாந்து பேசப்படும் தமிழ் மொழிக்கு இதுவரை இரண்டே இரண்டு ஞானபீடங்களே வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த ஆதங்கம் என் உள்ளத்தை அழுத்திக் கொண்டேயிருக்கிறது. இதற்கு ஆறுதலாகவோ என்னவோ டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரியம், நான் எழுதிய மூன்றாம் உலகப்போர் நாவலுக்கு விருதளித்துத் தமிழுக்கு ஒரு சர்வதேவ அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது. உரியவர்களுக்கு என் உள்ளத்து நன்றியை உரித்தாக்குகிறேன்.


மூன்றாம் உலகப்போர் படைப்பதற்கு நான் கொண்ட வலி பெரிது. உறக்கமில்லாத ராத்திரிகளின் உழைப்பு பெரிது. எந்த ஒரு பெரும்படைப்பும் கண்ணீரில் தொடங்குகிறது; தியாகத்தில் முடிகிறது. கொலைக்களத்தில் விழுந்த ’கண்ணகி’யின் கண்ணீர்தான் ’சிலப்பதிகாரம்’. அசோகவனத்தில் விழுந்த ’சீதை’யின் கண்ணீர்தான் ’இராமாயணம்’. துரியோதனன் சபையில் விழுந்த ’பாஞ்சாலி’யின் கண்ணீர்தான் ’பாரதம்’. ஆசிரமத்தில் விழுந்த ’சகுந்தலை’யின் கண்ணீர்தான் ’சகுந்தலை’. சிறைக்கூடத்தில் விழுந்த ’கார்டீலியா’வின் கண்ணீர்தான் ’கிங் லீயர்’. மணவாழ்க்கையின் மீது விழுந்த ’செல்மாகராமி’யின் கண்ணீர்தான் ’முறிந்த சிறகுகள்’. இந்த பூமி உருண்டையின் உச்சியில் விழுந்த என் ஒரு சொட்டுக்கண்ணீர் தான் ‘மூன்றாம் உலகப்போர்’. 


மனிதர்கள் வருகிறார்கள் போகிறார்கள். பூமி மட்டும் மிச்சமிருக்கிறது. இனி மனிதர்கள் வந்து போவதற்கு பூமி இருக்குமா என்ற கவலையில் விழுந்த கண்ணீர் தான் மூன்றாம் உலகப்போர். ‘புவி வெப்பத்தால் எல் நினோ விளைவுகளால் ஆசியாவே மழைமறைவுப் பிரதேசமாய் மாறிவிடக்கூடிய அபாயமிருக்கிறது என்று அஞ்சப்படுகிறது. வளர்ந்த நாடுகளும் வளரும் நாடுகளும் தங்கள் தலைக்குமேல் ஆடிக்கொண்டிருக்கும் இந்த ஆபத்தான அணுகுண்டை எப்படிச் செயலிழக்கச் செய்யப்போகின்றன என்பதே கேள்வி. அதுகுறித்த விவாதங்களும் தீர்வுகளும் மூன்றாம் உலகப்போரில் முன்மொழியப்பட்டுள்ளன. அறிவுலகம் இதை ஆழ்ந்து கவனிக்க வேண்டும்’ என்று வேண்டிக் கொள்கிறேன்.


’இலக்கியச் சிந்தனை’யோடு சேர்த்து இந்த நூல் இப்போது இரண்டு விருதுகளைப் பெற்றிருக்கிறது. ஆனால் வெளியீட்டு விழா மேடையிலேயே எனக்கு முதல் விருது கொடுத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் ஆவார். இந்த நூல் குறித்த விமர்சனத்தை ’வைரம் பட்டை தீட்டியது’ என்ற தலைப்பில் 48 பக்கங்கள் அச்சிட்டுக் கொண்டுவந்து அவர் வெளியீட்டு விழாவில் வினியோகித்ததே எனக்குக் கிடைத்த முதல் விருது என்று கருதுகிறேன்.


ஒரு கவிதைக்காரன் உரைநடைக்கு வந்தது ஏன் என்ற கேள்வி விமர்சன உலகத்தில் நிலவுகிறது. என்னைப் பொருத்தவைரையில் வாழ்வியலின் ஆழத்தைச் சொல்ல வேண்டுமா... கவிதைக்குப் போகிறேன். வாழ்வியலின் அகலத்தைச் சொல்ல வேண்டுமா... உரைநடைக்கு மாறுகிறேன். கவிதை என்பது வைரக்கல்லில் சிற்பம் செதுக்குவது போன்றது. உரைநடை என்பது பாறைக்கூட்டத்தில் சிற்பம் செய்வது போன்றது. எனக்கு இரண்டும் வேண்டும்.


இலக்கியவாதிகளை மேன்மைப் படுத்துவதுதான் ஓர் இனத்தின் நாகரிக உச்சம். மலேசியா அதைச் செய்திருக்கிறது. உலகமும் இனி தமிழை உற்றுப்பார்க்கும் என்று நம்புகிறேன்.

by Swathi   on 06 Sep 2014  0 Comments
Tags: Vairamuthu   Gnanapeeth Award   வைரமுத்து   ஞானபீட விருது           
 தொடர்புடையவை-Related Articles
திருக்குறள் இல்லாமல் இந்தியாவிற்கு எந்த பெருமையும் இல்லை - சென்னையில் தருண் விஜய் பேச்சு !! திருக்குறள் இல்லாமல் இந்தியாவிற்கு எந்த பெருமையும் இல்லை - சென்னையில் தருண் விஜய் பேச்சு !!
தமிழ்ப் படைப்புகளை ஞானபீடம் மதிக்க வேண்டும் - மலேசியாவில் கவிஞர் வைரமுத்து பேச்சு தமிழ்ப் படைப்புகளை ஞானபீடம் மதிக்க வேண்டும் - மலேசியாவில் கவிஞர் வைரமுத்து பேச்சு
வைரமுத்துவை சந்தித்த ரஜினி !! வைரமுத்துவை சந்தித்த ரஜினி !!
வைரமுத்துவுக்கு பாராட்டு மழை !! வைரமுத்துவுக்கு பாராட்டு மழை !!
கவிப்பேரரசு வைரமுத்துவின் பிறந்தநாள் விழாவில் அப்துல் கலாம் !! கவிப்பேரரசு வைரமுத்துவின் பிறந்தநாள் விழாவில் அப்துல் கலாம் !!
சம்பளத்தை குறைக்கும் வைரமுத்து !! சம்பளத்தை குறைக்கும் வைரமுத்து !!
எனக்கு மணிரத்னமும், புதுமுக இயக்குனரும் ஒன்றுதான் !! கவிஞர் வைரமுத்து !! எனக்கு மணிரத்னமும், புதுமுக இயக்குனரும் ஒன்றுதான் !! கவிஞர் வைரமுத்து !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.