LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- மற்றவை

வள்ளற் பெருமானின் ஜீவ கருணை நெறி : திரு.நித்தியானந்தம்

உலகிலுள்ள பாமர மனிதன் முதல் யாவரும் எல்லாத் துன்பங்களும் நீங்கி, எப்போதும் இன்பமாக வாழ, ‘இரக்கமே வடிவான’ வள்ளற் பெருமான் கண்ட அதி உன்னத நெறி, ‘ஜீவ கருணை நெறியாம்’ சுத்த சன்மார்க்கம்.

 இவரின் ஜீவ கருணை நெறி, அக இறை ஒளி பற்றி, அவ்வனுபவமுடன், ‘‘அனகமாக’’ அங்கிருந்து சூழ்நீர் யாவர்க்கும், ஜீவ கருணை புரிந்து இறையின் பூரண அருள் பெற்று, கடவுள் மயமாகி நித்தியமாக மரணமில்லாப் பெரு வாழ்வில் வாழவைக்கும் சத்திய நெறியாம். உலக மனித சமுதாயம் முழுமையும் நாளை இந்த மறுக்க முடியாத இயற்கை நெறிக்கு வரவுள்ளது இப்போதே வெளிப்படத் தொடங்கியுள்ளது. இதற்கு, மனிதப் பிறப்பை அடைந்த ஜீவர்கள் காலமுள்ள போதே பெறவேண்டிய ஆன்ம இன்ப லாபத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

அந்த ஆன்ம இன்ப லாபம் யாதெனில்:

 கடவுளின் பூரண இயற்கை இன்பம்.

 அதை எவ்வாறு பெறக்கூடுமெனில்:

 கடவுளின் இயற்கை விளக்கமாகிய

 ‘‘அருளைக்’’ கொண்டு பெறக்கூடும்.

 அவ்வருளை எதனால் பெறக் கூடும் எனில்:

 சீவகாருண்ய ஒழுக்கத்தினால் கடவுள் அருளைப் பெறக்கூடுமல்லது, வேறெந்த வழியிலும் ‘‘சிறிதும்’’ பெறக்கூடாது என்று உறுதியாக அறிய வேண்டும்.

அது எப்படி எனில்:

 அருள் என்பது.....) கடவுள்தயவு, கடவுளியற்கை விளக்கம்.

 சீவகாருண்யம் என்பது......) சீவர்கள் தயவு, சீவர்கள் ஆன்ம இயற்கை விளக்கம்.

 இதனால் தயவைக் கொண்டு தயவைப் பெறுதலும், விளக்கத்தைக் கொண்டு விளக்கத்தைப் பெறுதலும் கூடும்.

 சிறிய தயவாகிய ‘‘ஜீவ தயவை’’க் கொண்டு, ‘‘பெருந்தயவாகிய கடவுள் தயவைப் பெறுதலாம். அதாவது சிறிய நெருப்புப் பொறியைக் கொண்டு பெரு நெருப்பைப் போற்றுவது போலாம்.

 கடவுள் அருளை வேறொன்றினாலும் பெறக் கூடாமை அனுபவம். இதனால் இதற்கு வேறு பிரமாணம் வேண்டா மென்றறிக.

 அப்போது சீவர்கள் விசயமாக உண்டா கின்ற ‘‘ஆன்ம உருக்கத்தைக்’’ கொண்டு தெய்வ வழிபாடு செய்து வாழ்த்தலாம்.

இவ்வான்ம உருக்கம் எப்போது ஏற்படுமெனில்:

 சீவர்கள் பசி, தாகம், பிணி, இச்சை, எளிமை, பயம், கொலை, ஆபத்து இவைகளால் துக்கப்படுவதைக் கண்ட போதாயினும், கேட்ட போதாயினும் ஆன்ம உருக்கம் உண்டாகும். அவ்வான்ம உருக்கத்தால், அவர் துன்பம் தீர்த்துதிருப்தி இன்பம் உண்டு பண்ணுவதே அதன் பிரயோசனமாம்.

 இவ்வாறு சீவகாருண்யம் செய்யும் போது என்ன ஏற்படும்?

 சீவகாருண்யம் விளங்கும் போது அன்பும் அறிவும் உடனாக நின்று விளங்கும். அன்பும் அறிவும் விளங்கும் போது உபகார சக்தி விளங்கும். உபகார சக்தி விளங்கும் போது, ‘‘எல்லா நன்மைகளும்’’ தோன்றும். எனவே எல்லா நன்மையும் பெற இதுவே உண்மை வழி, எளிய வழி.

 சீவ காருண்யம் மறையும் போது, அன்பும் அறிவும் உடனாக மறையும். அதனால் உபகார சக்தி மறையும். அதனால் ‘‘எல்லா தீமைகளும்’’ தோன்றும்.

 இதனால் சீவகாருண்யம் ஒன்றே புண்ணியச் செயல் என்று சீவகாருண்ய மின்மை ஒன்றே பாவச் செயல் என்றும் தெளிவாக அறிய வேண்டும்.

இதை எவ்வாறு புரிந்து கொள்ளுவது எனில்:

 சீவகாருண்யத்தைப் புரியப் புரிய சீவகாருண்ய உண்மையும், சீவகாருண்ய நெறியும் புரியும் என்பது தலைவனின் அக வெளியீடாம்.

 அதாவது சுத்த சன்மார்க்க நெறி ‘‘பாவனா’’ மார்க்கம் அல்ல. வழிபாடே செயல்பாடாகவும் செயல்பாடே வழிபாடாகவும் கொண்டதாம்.

 செயல் பாட்டுக்கு வராத எந்த வழிபாடும் உண்மை வழிபாடாகா.

 சுத்த சன்மார்க்க நெறி, நம் அகத்தில் இருக்கும் ஆண்டவர் ஒளியை அன்பால் தொழுவதும், புறத்திலே சூழும் அவரேயான ஆண்டவர் ஒளி கொண்டு விளங்கும் எவ்வுயிர்க்கும் கருணையால் சீவகருணை புரிவதுவே வாழும், வழிபாடும் முறையாம்.

 ஆண்டவர் எங்கும் நிறைந்துள்ளார். அவரே யாவருமாய், யாவுமாய் உள்ளார் என்பதை பன்மார்க்கங்களும் ஒத்துக் கொண்டாலும், வெளியிட்டாலும் அவ்வுண்மை கொண்டு வாழ உண்மையான வழிமுறை காணவில்லை.

 கடவுள் என்னும் சொல்லும் கட&புறம் உள்&அகம் என உள்ளத்தில் புற உலகியல் வாழ்வு விசய இன்பத்தை வேண்டி வாழ்வோர் ஓர் புறமும், அக மெய்யின்ப வாழ்வை வேண்டி வாழ்வோர் ஓர் புறமும் என வாழ்ந்து புறம் சென்று மாய்ந்தார் ‘‘அக உண்மை அறியாமலே’’ எனவும், அகத்தில் சென்று மாய்ந்தார் ‘‘புற உண்மை அறியாமலே’’ என மனித இனம் வாழ்ந்ததே உண்மை.

 கடவுள், மனிதன், உலகியல் வாழ்வு என இம்மூன்றையும் முழுமையாக உணர்ந்து இறை மனிதனாக உலகிலே என்றும் வாழ வழி கண்டு, அதை சாதாரண பாமரன் தொடங்கி, யாவரும் ஏற்று வாழ்ந்து என்றும் இன்ப வாழ்வு வாழ வழி சொல்வதே வள்ளற்பெருமானின் நெறியாம்.

 எங்கும் நிறைந்த தனித் தலைமையைப் பெரும் பதியாகிய ஆண்டவர், ஒளிமயமா கவும் கருணை மயமாகவும் உள்ளதை உணர்ந்து நாமும் அவரை அகம் பற்றி புறம் வாழ வேண்டும். (அன்பே சிவம் என்பதாலும் கருணையும் சிவமே பொருள் என்பதாலும் அறிக).

 ஆண்டவர், பேரருட் பெருங் கருணையாளர். அவரை அடைய ‘‘அவரது திருவருளே’’ வேண்டுவது என்றும், அவரேயான எல்லா மனிதர்களிடத்தும், எல்லா ஜீவர்களிடத்தும் காட்டும் கருணையால், தயவால் அத்திருவருளைப் பெறலாம் என்பதை உண்மையாக அறிந்து கொண்டால், கற்பனா தத்துவ நெறிகளில் மனம் செல்லுமா?

 ‘‘அருள் பெறின் எல்லாம் ஆகும்’’ என உண்மையாக அறிந்து, அருளைப் பெற ஜீவ கருணையே எண்ணம், சொல், செயல் என வாழ இது தொடங்கி நாம் முயல வேண்டும்.

 இந்த சீவகாருண்யச் செயலிலே தலையாயது, ‘‘பசி தவிர்த்தலும், கொலை தவிர்த்தலும், ஆன்ம ஞானம் பெற அறிவு விளக்கம் செய்தலும்’’ ஆகும்.

 பரசீவகாருண்யச் செயல் இவையாம். இவற்றால் கடவுளின் பூரண அருளையும், பிணி, தாகம், இச்சை, எளிமை, பயம் என்னும் பிறவற்றால் ஏற்படும் துன்பம் தீர்த்து திருப்தி இன்பம் உண்டு பண்ணுவது, அபர சீவகாருண்யச் செயலாம். இவைகள் சிறிது உலகியல் இன்பத்தை உண்டு பண்ணும், ஏகதேச அருள் பெற்றுத்தரும்.

 சீவகாருண்யத்தால் வரும் விளக்கமே ‘‘கடவுள் விளக்கம்’’ என்றும், சீவகாருண்யத்தால் வரும் இன்பமே, ‘‘கடவுள் இன்பம்’’ என்றும் அறிய வேண்டும். இவ்விளக்கத்தையும் இன்பத்தையும் பலகால் கண்டு அனுபவித்துப் பூர்த்தியடைந்த சாத்தியர்களே, ‘‘ஜீவ முத்தர்’’ என்றும் அவர்களே ‘‘கடவுளை அறிவால் அறிந்து அம்மயமாவார்கள்’’ என்றும் சத்தியமாக அறிய வேண்டும்.

 சீவகாருண்யம் கடவுளருளைப் பெறுவதற்கு முக்கிய சாதன மென்பதுமல்லாமல் அந்த அருளின் ஏக தேச விளக்கம் என்று அறிய வேண்டும்.

 சீவகாருண்யம் ஆன்மாக்களின் இயற்கை விளக்கம் ஆகலால், அந்த இயற்கை விளக்கமில்லாத சீவர்களுக்குக் கடவுள் விளக்கம் ‘‘அகத்திலும் புறத்திலும்’’ வெளிப்படவே மாட்டாது.

 மேலும் சீவகாருண்யம் புரிவதே வழியாயிருக்க, அவ்வாறு சீவகாருண்யம் செய்யத்தக்க வசதியும், அமைப்பும் இருந்தும் செய்யாது விடுவது ‘‘நமது இன்றைய நல்வாழ்வு’’ நாளை இல்லாது போகச் செய்யும். எனவே, வஞ்சியாது சீவகாருண்யம் செய்வதே நலம் யாவும் பயக்கும்.

புருவ நடு நின்று சிரநடு விளங்கும் ‘‘அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங்கருணை’’ ஆண்டவரை தீப ஒளியாக அவ்விடம் மனத்தை நிறுத்தி, நாளும் தியானிக்கின்ற சகோதரர்கள் புலை, கொலை முற்றிலும் தவிர்த்து  ‘‘ஜீவ தேகங்களே, ஆலயங்கள் அவ்வத்தேகங்களுல் சிரநடு ஜோதியே ஆண்டவர் விளங்கு உண்மை’’ என தெளிந்த உள்ளாழ்ந்த விசாரத்தால் உணர்ந்து, சதா ஜீவ தயவோடு வாழ ‘‘இதுவரை உணராத உண்மைக் கடவுள் அனுபவம்’’ பெறலாம்.

 இறைவனை உள்ளுருகியுருகி வேண்டியும் பிரார்த்தித்தும் தோத்தரித்தும் அன்பு பொங்கிப் பெருக நெகிழ்ந்திருந்தும் அவர் உண்மையே நம்மிடம் போல் பிற ஒவ்வொரு ஜீவனிடத்தும் விளங்குவது தெள்ளத் தெளிவாக உணர விசாரம் செய்தும் ஜீவதயவு செய்தும் வர இறைவனே எல்லோருமான உண்மைத் தெளிவு பிறக்கும்.

இத்தெளிவோடு, புருவநடு உள்ளே சிரநடு தீப ஒளி நாம் என் கின்ற உணர்வு மாறாது, அவ்விடமே மனத்தை எப்போதும் நாட்டி ‘‘இந்த தேகம் நான்’’ என்கின்ற அறியாமை உணர்வு மாற உள்ளாழ்ந்திருக்க தியானமும், விசாரமும் மேற்கொண்டும், இறையருளை வேண்டியும் வர வேண்டும்.

 எல்லோரும் இந்நல்வாழ்வு பெற உதவுவதும், மனம், வாக்கு, காயம் முந்நிலையிலும் ஜீவதயவு வெளிப்படவே முயன்றிருப்பதும், வேண்டி வாழ்வதுமே, ‘‘அடுத்து எல்லா உயிர்களையும் தம் முயிரைப்போல எண்ணும் உணர்ச்சியை வருவித்துக் கொள்ள ஏதுவாம். அந்நிலை பெறுவதே மேலான அனுபவம் தரும். கடவுள் மயமாகிடவும் செய்யும்.’’

 விசாரம் செய்வதும், ஜீவகாருண்யத்தால் கிடைக்கும் ‘‘திருவருளைக்’’ கொண்டே நடக்க வேண்டியுள்ளது. திருவருள் துணை யோடு செய்யும் விசாரமே ‘‘சத் விசாரம்’’. அதாவது ‘‘சத்’’ ஆகிய பரம்பொருளைச் சார்ந்து செய்யப்படும் விசாரமாம். புருவநடு நின்று சிரநடு உள்ளளியை ஓர்மை உணர்வால் ஊன்றிச் சார்கின்ற போது திருவருள் துணையால் ‘‘அறிவும் அன்பும்’’ விளங்க ‘‘கடவுள் விளக்கம் பெற’’, முடிகிறதாம்.

  இப்படி திருவருள் துணையோடு சத்விசாரம் செய்து

1.            இந்த தேகத்தில் நாம் யார்?

2.            நம்மை இத்தேகத்தில் வருவித்தவருடைய நோக்கம் யாது? அவரது தன்மை எப்படிப்பட்டது? அவர் உண்மை யாது?

3.            இப்பிறப்பில் நாம் அறிந்து அடைய வேண்டியது யாது?

4.            பிரபஞ்ச வாழ்வின் உன்மை யாது?

என விசாரித்து உண்மை காண வேண்டும். ஆண்டவரிடத்து நெகிழ்ந்திருந்து உண்மையைக் காட்டிக் கொடுக்க உள்ளுருகி நிற்க வேண்டும்.

 சத்விசாரத்தால் பெறப்படும் உண்மைத் தெளிவும், விளக்கமும் ‘அனுபவமாக’ உதவுவதே பரோப காரச் செயலாம். பர உபகாரம் என்பது தேகத்தாலும், வாக்காலும், திரவியத்தாலும், உபகாரம் செய்வது. இறை திருவருளாலே நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள இடம், பொருள், ஏவல் கொண்டு சூழ்நர்க்கு இயன்ற வகையில் இயன்றபடி இயன்ற அளவு வஞ்சனையின்றி உபகாரம் செய்து அவர்களை வாழவைத்து வாழ்வதே முறை யாம்.

 இவ்வாழ்வு முறையே, பெருமானால் ‘‘ஆண்டவர் அனுபவம் பெற நமக்கு ‘பர உபகாரம் சத்விசாரம்’ எனும் இரண்டு துவாரங்கள் மட்டுமே உள்ளது’’ என குறிக்கப்பட்டதாம். நம் ஆன்மா, உயிராகிய ஜிவன், மனோகரணம், இந்திரியங்கள் இவைகளில் அருள்ஒளி விளங்க வேண்டும். இதற்கு சீவகாருண்யத்தை அடிப்படையாகக் கொண்ட நால்வகை ஒழுக்கங்களைக் கொடுத்துள்ளார். அவையே

 இந்திரிய ஒழுக்கம்

 கரண ஒழுக்கம்

 ஜீவ ஒழுக்கம்

 ஆன்ம ஒழுக்கம்

என நான்காம். இவற்றோடு ஜீவதயை சேர, தயா வொழுக்கமாகின்றதாம்.

 பஞ்ச இந்திரியங்களில் உள்ளும் புறமும் கருணையே நிறையவும், பொய்மை விட்டு வாய்மையோடு திகழலும், உடலை தூய்மையாய் வைத்திருப்பதும், பெரியோர் எழுந்தருளி இருக்கும் இடங்களுக்குச் சென்று பரோபகரித்தலும், அளவான சாத்வீக உணவு ஏற்பதும், மலஜலம் பாற்றற கழிப்பதும் இதன் பால அடங்கும்.

 இதுபோல கரண ஒழுக்கம், மனத்தை சிற்சபையின்கண் செலுத்தவும், எந்த அசிங்கங்களையும் பற்றாதிருக்க செய்தலும், தன்னை மதியாதிருத்தலும், பிறர் குற்றம் விசாரியாதிருத்தலும், செயற்கைக் குணங்களால் உண்டாகிய கெடுதிகளை நீக்கி இயற்கையாகிய சத்துவமயமாயிருத்தல், பிறர் மேற்கோபியாதிருத்தல், தனது சத்துருக்களாகிய தத்துவங்களைக் கோபித்தல் மேலும் அக்கிரம அதிக்கிரம புணர்ச்சி செய்யாதிருத்த லுமாம்.  ஜீவ ஒழுக்கமென்பது எந்த பேதமுமில்லாமல் எல்லா மனிதர்களையும் தம்மவர்களாகக் கொள்ளுவது.

 ஆன்ம ஒழுக்கமென்பது எல்லாச் சீவர்களினது சூச்சுமம் நம் தனித்தலைவன் ஆதலால் ‘‘அவ்வச் சீவர்களில் ஜீவான்மாகவே திருச்சபையாய் அதனுள் பரமான்மாவே பதியாய் நிற்பதால் யாதும் நீக்கமற எவ்விடத்தும் பேதமற்று எல்லாந் தானாக நிற்றல்.’’

 இவ்வாறு நின்றால் ‘‘(1) ஏமசித்தி (2) சாகாக் கல்வி (3) தத்துவ நீக்கிரகங் செய்தல் (4) கடவுளை அறிந்து அம்மயமாதல் என நான்கு சன்மார்க்கப் புருசார்த்தங்களைப் பெறலாம்.

 இவ்வளவு விரிவான வழிமுறையும் அதன் விளக்கங் களையும் புரிந்து கொள்ளவும் வாழ்ந்து பயன் கொள்ளவும் உதவுவது, முற்றிலும் புலால் மறுத்து கொலை தவிர்த்து ‘‘எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க’’ என வாழ்த்தி ஜீவகாருண்ய நெறியையே தனது விரதமாகக் கொண்டு வாழ்வதாலே கிடைக்கப் பெறுவதாக உள்ளதாம், எனும் போது ஜீவகாருண்யத்தை என்னென்பது இறையருளை என்னென்பது.

 ஆம். இறையருளையே முதன்மையாக அடிப்படையாகக் கொண்ட ஜீவகாருண்ய நெறியே உண்மை நெறி, நாளைய உலகை ஆளும் நெறி எனின் மிகையாகா தன்றோ.

 இப்படியாக வாழும் ‘‘ஜீவகா ருண்ய நெறியையே விரதமாகக் கொண்ட சமுசாரிகள்’’ சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் சாதன சகாயங்களை வேண்டாமல், எக்காலத்தும் அடையாத இன்ப வீட்டை அடைந்து அவ்வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே புகுந்து நித்திய முத்தர்களாய் வாழ்வார்கள்.

 ஜீவகாருண்யம் புரிகின்ற சமுசாரி வேறு எந்த நினைப்புமின்றி பசித்தோருக்கு ஆகாரங்கொடுக்க நினைத்தப் போது அப் புண்ணியரது மனம் வேறு பற்றுகளை விட்டுச் ‘சுத்தக் கரணமாகி’ நினைத்த படியால், அந்த புண்ணியரை யோகிகளென்று உண்மையாக அறிய வேண்டும்.

 ஆகாரங் கொடுக்க நினைத்தபடி உபசரித்துக் கொடுக்கும் போது அவருண் ணுவதை தாமுண்ணுவதாக அறிந்து களிக்கின்றபடியால் ‘‘ஞானிகளென்றே’’ உண்மையாக அறியவேண்டும்.

 ஆகாரங் கொடுக்க உண்டு, பசி தீர்ந்தவர்களுக்கு அத்தருணத்தில் ஆன்மாவின் உள்ளும் புறத்தும், கீழும் மேலும், நடுவும் பக்கமும் நிறைந்து, கரண முதலிய தத்துவங்களெல்லாம் குளிர்வித்துத் தேக முழுவதும் சில்லென்று தழைய முகத்தினிடமாகப் பூரித்து விளங்கு கின்ற, கடவுள் விளக்கத்தையும் திருப்தி இன்பமாகிய கடவுள் இன்பத்தையும் பிரத்தியட்சத்தில் ‘‘உணவு கொடுத்த புண்ணியர்’’ கண்டு அனுபவிக்கின்றதால் அந்த புண்ணியரை கடவுளைக் கண்டவரென்றும், கடவுளின்பத்தை அனுபவிக்கின்ற முத்த ரென்றும் அறிய வேண்டும்.

 பசி நீங்க உண்டு சந்தோஷித்த வர்கள் இந்தப் புண்ணியர்களைத் தெய்வமாகப் பாவிக்கின்றார் களாதலால், இவர்களே ‘‘தெய்வமு மென்று’’ அறிய வேண்டும்.

 ஜீவகாருண்யத்தை விரதமாகக் கொண்டவர் எல்லோராலும் போற்றப்படுவதோடு எல்லோராலும் வணங்கத்தக்கவர் என்று கடவுட் சாட்சியாக சத்தியஞ் செய்யப்படுகிறது.

 எல்லாப் பெரியோரும், சாதாரண மனிதனும், ஜீவகருணை யும் இரக்கமும் கொண்டவனை போற்றுவது கண்கூடு. மேலும் ஜீவகருணை செயல் கொஞ்சம் கொஞ்சமாக ஒருவனை மேலேற்றி மேலேற்றி, மேலான அன்பு கொண்டவனாக, அறிவு கொண்ட வனாக, ஒழுக்கம் கொண்டவனாக ஆக்கி, முடிவில் இறைமயமாகிடவும் செய்கின்றதாம்.

 இந்த எளிய, பரம சத்திய வழியை எல்லோரும் ஏற்று பேரின்பமுடன் வாழ ஆண்டவரும், வள்ளற்பெருமானும் நம் தயாநிதி சுவாமிகளும் உள்ளிருந்து உதவிக் கொண்டே உள்ளார்கள். யாவரும் ஏற்று பயன் கொள்வோம்.

 உலகமே இதை ஏற்று பயன் கொள்ள உள்ளது பரமசத்தியமாம். தயவுடன் வளமுடன் வாழ்க யாவரும். தயவு.

by Swathi   on 28 Jan 2016  1 Comments
Tags: Jeeva Karunyam   Vallalar   வள்ளலார்   ஜீவா காருண்யம்           
 தொடர்புடையவை-Related Articles
வட அமெரிக்காவில் வள்ளலார் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது! வட அமெரிக்காவில் வள்ளலார் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது!
வள்ளற்  பெருமானின்  ஜீவ கருணை நெறி : திரு.நித்தியானந்தம் வள்ளற் பெருமானின் ஜீவ கருணை நெறி : திரு.நித்தியானந்தம்
வள்ளலார் சிந்தனை-1 வள்ளலார் சிந்தனை-1
கருத்துகள்
20-Jun-2016 13:00:58 asda said : Report Abuse
ர்வேர்வ்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.