இத்தலத்தில் ஒரே சிலையில் மகாவிஷ்ணு தன் பத்து அவதார காட்சிகளுடன் அருள்பாலிக்கிறார். அகரம் கிராமத்தில் மித்ரசகா என்ற நாடக கலைஞன் வாழ்ந்து வந்தான். இவன் தன் குழுவினருடன் நாடெங்கும் சென்று நல்ல கருத்துக்களை நாடகம் மூலம் பரப்பி வந்தான். ஒரு முறை காஷ்மீரில் தன் இஷ்ட தெய்வமான நாராயணனின் தசாவதாரக்கதையை நடத்தி காட்டினான்.
அதை காணவந்த காஷ்மீர் மன்னன் குங்குமாங்கனும், இளவரசி சந்திரமாலினியும் அகமகிழ்ந்தனர்.சந்திரமாலினிக்கு மித்ரசகாவின் மீது காதல் உண்டானது. பெற்றோரின் ஒப்புதலுடன் மணமுடித்து அகரம் கிராமத்திற்கு வந்தனர். அனைவரும் பாராட்டும் படி வாழந்த இத்தம்பதியினர் வயோதிக காலத்தில் ஒர் ஆசிரமம் அமைத்து இறைப்பணியில் ஈடுபட்டனர்.
நாராயணனின் சிறந்த பக்தர்களாக விளங்கினர். இவர்களது பக்திக்கு மெச்சிய நாராயணன், மாசி மாதம் வளர்பிறை துவாதசி திதியில் தசாவதாரக் காட்சி தந்து "ஓம் நமோ பகவதே வாசுதேவாய எனும் அற்புத மந்திரத்தையும் உபதேசித்தார். |