இங்கு இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் திருப்பதி வெங்கடாஜலபதியை போன்ற கோலத்தில் இவர் காட்சி தருவது சிறப்பு. திருப்பதியில் வேண்டுதல்களை நிறைவேற்ற முடியாதவர்கள் இங்கு முடிக்காணிக்கை செலுத்தி, நேர்த்திக்கடன்களை நிவர்த்தி செய்து கொள்கிறார்கள். பெருமாள் கோயிலாக இருந்தாலும், சிவ அம்சமான தெட்சிணா மூர்த்தியும் இங்கி ருப்பது மற்றொரு சிறப்பான அம்சம்.
சுவாமியின் கருவறை விமானத்தின் தென்புறத்தில் இருக்கும் இந்த தெட்சிணாமூர்த்தி, மற்ற கோயில்களில் இருப்பது போல் அல்லாமல் இரண்டே சீடர்களுடன் இருக்கிறார். இவரது அமைப்பும் வித்தியாசமானது. மற்ற கோயில்களில் ஒரு காலை மடக்கி, ஒரு காலை தொங்கவிட்டு முயலகனை மிதித்தது போல் இருப்பார். இங்கோ, இடது கையை தரையில் ஊன்றி, ஒரு காலை ஐயப்பனுக்குரியது போல், மடக்கி வைத்து காட்சி தருகிறார்.
வலதுபக்கமாக முகம் வைத்திருக்க வேண்டிய முயலகன், இடது பக்கம் திரும்பியிருப்பது மற்றொரு சிறப்பம்சம். முன்மண்டபத்தில் பக்த ஆஞ்சநேயரும், அருகிலுள்ள ஒரு தூணில் வலது கையை மேலே தூக்கியும், இடது கையை மார்பில் வைத்தபடியுமான கோலத்தில் மற்றொரு ஆஞ்சநேயரும் உள்ளனர். இந்த இரட்டை ஆஞ்சநேயர்களை வணங்கினால், வேண்டிக் கொண்ட செயல்கள் நிறைவேறும் என்கிறார்கள். |