பொதுவாக பெருமாள் ஒரு சங்கு, ஒரு சக்கரம் வைத்த நிலையில் அருள்பாலிப்பார். ஆனால் இத்தல பெருமாள் இரண்டு சங்கு, இரண்டு சக்கரம் வைத்து அருள்பாலிப்பது மிகவும் சிறப்பாகும். தாமிரபரணி நதியின் வடகரையில், வயல்களின் மத்தியில் இக்கோயில் அமைந்திருக்கிறது. இந்திர விமானத்தின் கீழ் எழுந்தருளியுள்ள சுவாமி, கருடாழ்வாரின் தோள் மீது அமர்ந்திருக்கிறார்.
கருடாழ் வாரின் வலதுகையில் சுவாமியின் பாதமும், இடதுகையில் உள்ள மலர் மீது தாயாரின் பாதமும் இருக்கிறது. தாயையும், தந்தையையும் பாதுகாப்பது ஒரு பிள்ளையின் கடமை என்பதற்கு உதாரணம் இது.கருடாழ்வாருக்கு கீழே தாமரை மலர் பீடம் இருக்கிறது. சுவாமி கருடாழ்வாரின் மீது காட்சி தருவதால் இவருக்கு, "நித்ய கருடசேவை பெருமாள்' என்றும் பெயர் உண்டு.
சுவாமியின் தலைக்கு மேலே, ஆதிசேஷன் ஏழு தலைகளுடன், குடை போல காட்சி தருகிறார். இத்தலத்தில் சுவாமி ஒரு தாயாருடன் காட்சி தருவதால், "புருஷோத்தமர்' என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு, "ஏகபத்தினி விரதர்' என்றும் பெயருண்டு. புதிதாக திருமணம் செய்து கொண்டவர்கள், தாயாரையும் சுவாமியையும் வணங்கினால் வாழ்க்கை முழுவதும் இணைபிரியாமல் இருப்பர் என்பது நம்பிக்கை. |