வாஷிங்டன் : நிலவில் முதலில் கால் வைத்த மனிதர் என்ற பெருமைக்குரிய அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங்(82), அமெரிக்க ஹீரோக்களில் ஒருவர் என்று அதிபர் பராக் ஒபாமா புகழாரம் சூட்டியுள்ளார். கடந்த 1969 ஆம் ஆண்டு ஜூலை 20ம் தேதி, நிலவில் முதல் முறையாக தரையிறங்கி, மனித குலத்துக்கே பெருமை சேர்த்தவர் நீல் ஆம்ஸ்ட்ராங் ஆவார். இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு இம்மாத தொடக்கத்தில், அறுவை சிகிச்சை நடந்தது. ஆனால், நேற்று முன்தினம் உடல்நிலை மோசமாகி அவர் மரணமடைந்தார். மறைந்த நீல் ஆம்ஸ்ட்ராங்குக்கு உலகம் முழுவதும் இருந்து முக்கிய தலைவர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டு வருகின்றனர். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘‘அமெரிக்க ஹீரோக்களில் ஒருவர் நீல் ஆம்ஸ்ட்ராங்". அவருடைய வாழ்நாள் காலத்தில் மட்டுமல்லாமல், எப்போதுமே அவர் ஹீரோவாகத்தான் இருப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.
|