LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- வைக்கம் முஹம்மது பஷீர்

யானை மயிர்

யானை மயிர் திருடு பற்றிய கதை. ஆட்களைக் கொல்லக்கூடிய ஒரு ஆண் யானை. மிதித்து நசுக்கியும் குத்தியும் அவன் ஒன்றிரண்டு யானைப் பாகன்களைக் கொன்றிருக்கிறான். அவனுடைய வாலிலிருந்து ஒரு மயிரைத் திருட வேண்டும். திருட வேண்டியது என்று கூறினால், அது யாருக்கும் தெரியக் கூடாது- யானைப் பாகன்களுக்கும் வாப்பாவிற்கும் உம்மாவிற்கும். அதைக் கடித்துப் பிடுங்குவதற்கு முயற்சி- ஆள் நான் தான். ஒரு யானை அல்ல. மூன்று யானைகள். இரண்டு பெண் யானையும் ஒரு ஆண் யானையும். அந்த ஆண் யானையின் வாலிலிருந்து ஒரு மயிர் வேண்டும். என்னுடைய சொந்த தேவைக்கு அல்ல. ராதாமணிக்காகத் தான். எக்சைஸ் இன்ஸ்பெக்டரின் மகள். அவள் என்னுடைய வகுப்பில் படித்தவள். புத்தகத்தில் வைப்பதற்கு அவள் எனக்கு மயிலிறகு தந்திருக்கி றாள். அப்போது எனக்கு யானை மயிர் என்ற ஒரு கிண்டல் பெயர் இருந்தது. நண்பர்கள் கேட்பார்கள்: ""யானை மயிர், எங்கே போகிறாய்?'' இல்லா விட்டால் , ""யானை மயிர், உன் கணக்கு தவறாகிவிட்டது. வட்ட பூஜ்யம்!'' யானை வாலுக்கு யானை மயிர் என்று நான் கூறியிருந்தேன். அன்று எனக்கு எட்டோ ஒன்பதோ வயதுகள் இருக்கும்.



அந்தக் காலத்தில் நாங்கள் காலையில் கண்விழிப்பதே யானைகள் மீதுதான். வாப்பா "தடி' என்று கூறப்படும் மர வியாபாரியாக இருந்தார். குடயத்தூர் மலையிலிருந்து மரங்களை வெட்டி மிதவைகளாக ஆக்கி, நதியின் வழியே கொண்டு வருவார். வீட்டிற்கு அருகில் நதியின் கரையில் இருக்கும் நிலங்களில் மரத்தடிகளை இழுத்துக் கொண்டு வந்து போடுவதற்குத்தான் யானைகள். வீட்டிற்கு அருகிலிருந்த நிலத்தில் யானைகளைக் கட்டிப் போட்டிருப்பார்கள். யானைகளுக்கு தென்னை ஓலை, பனை ஓலை ஆகியவற்றைக் கொடுப்பதற்கு நான் மேற்பார்வை யாளராக இருப்பேன். அதாவது- நான் பார்த்துக் கொண்டு நின்றிருப் பேன்- யானைகளுடைய எல்லா விஷயங்களையும் கவனித்துக் கொள்ப வன் என்பதைப்போல. கிளறி எடுக்கும் மண்கட்டியை எடுத்து யானை யின் முதுகில் எறிந்து சிதறச் செய்வது என்பது மிகவும் சுவாரசியமான ஒரு விஷயமாக இருக்கும். என்னுடைய கை அரித்துக் கொண்டிருந்தாலும், நான் அதைச் செய்ய மாட்டேன். நண்பர்களில் யாராவது யானைகளை மண் கட்டிகளை எடுத்து எறிகிறார்களா என்று பார்ப்பேன். ஒருநாள் நத்தை தாமுவிற்கு மண் கட்டியை எறிவதற்கு நான் சம்மதம் தந்தேன். அவன் ஒரு கட்டியை, ஆண் யானையின்மீது எறிந்து நொறுங்கச் செய்தான். அதற்கு அவன் எனக்கு ஒரு சிறிய மாம்பழத்தைத் தந்தான்.

யானைப் பாகன்களுக்கு ஒரு விதமான நெருங்கிய நண்பனாக நான் இருந்தேன். அவர்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து தருவேன். யானைப் பாகன்கள்தான் உலகத்திலேயே திறமைசாலிகள். அவர்கள்மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை இருந்தது. யானைப் பாகன்களை வழிபட்டேன். எதிர்காலத்தில் ஒரு யானைப் பாகனாக வேண்டும்- அதுதான் என்னுடைய ஆசை. "யானை...!' என்று சத்தம் போட்டு மூக்கின் வழியாகக் கூறுவதற்கு நான் கற்றுக் கொண்டேன். யானையின் காதில் மாட்டி இழுக்கக்கூடிய "தோட்டி'யை நான் மினுமினுப்பு பண்ணிக் கொடுப்பேன். குச்சிகளில் இருக்கும் தூசுகளை நான் துடைத்து வைப்பேன். கையில் இருந்த ஒரு பெரிய ஈட்டியை எங்களுடைய வீட்டின் வராந்தாவில் சாய்த்து வைத்திருந்தேன். அதைத் தொடுவதற்கு யாரையும் நான் சம்மதிப்பதில்லை. யானைப் பாகன்களுக் கும் எனக்குமிடையே நெருக்கமான நட்பு இருந்தது. நல்ல இளம் வெற்றிலை, பழுத்த பாக்குக்காய், ஜாப்பாணம் புகையிலை- எல்லா வற்றையும் வீட்டிலிருந்து திருடிக் கொண்டு போய் யானைப் பாகன் களுக்குக் கொடுப்பேன். யானைப் பாகன்கள் பேசுவதை நான் பக்தி யுடன் கேட்டுக் கொண்டிருப்பேன். ஒரு யானைப் பாகனாக ஆக வேண்டும்!

அப்படி இருக்கும்போது ராதாமணிக்கு ஒரு ஆசை. ரகசியமாக அவள் என்னிடம் சொன்னாள்:

""எனக்கு ஒரு யானை வால் வேணும். தர முடியுமா?''

எனக்கென்று சொந்தத்தில் யானை இருந்திருந்தால், ஒரு முழு யானையையே ராதாமணிக்குக் கொடுத்திருப்பேன். நான் அதை அவளிடம் கூறவும் செய்தேன். அப்போது ராதாமணி சொன்னாள்:

""முழு யானை வேண்டாம்... வெறும் ஒரு யானை வால் போதும்!''

""தருகிறேன்.'' நான் சொன்னேன். அப்துல்காதர், நத்தை தாமு ஆகியோருக்கு முன்னால் கொடுப்பதாகச் சொன்னேன். சாதாரணமாக வாப்பா, உம்மா ஆகியோருக்கு வேண்டியவர்களுக்கு யானை மயிர் வாங்கிக் கொடுப்பதுண்டு. விரலில் மோதிரமாக அணிவதற்கு. சிலர் கையின் மணிக்கட்டில் கட்டிக் கொள்வார்கள். யானை மயிருக்கு அற்புத சக்தி இருக்கிறது!

சிரமமே இல்லாமல் எனக்கு யானை வால் கிடைக்கும். யானைப் பாகன்கள் எல்லாரும் எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள் ஆயிற்றே! எனினும், ஒரு யானை வாலை வாங்கித் தரும்படி நான் வாப்பாவிடமும் உம்மாவிடமும் கூறினேன். இருவரும் சொன்னார்கள்:

""உனக்கு இப்போது யானை வால் வேண்டாம்!''

அதை யானைப் பாகன்கள் கேட்கிற மாதிரி கூறினார்கள். அவர்கள் வேறு எண்ணத்திற்கு மாறிய விஷயம் எனக்குத் தெரியாது. நத்தை தாமுவும் அப்துல்காதரும் அவர்களிடம் என்னைப் பற்றி என்னவோ கூறினார்கள். அது மட்டுமல்ல- ஒரு சிரட்டை நிறைய இருந்த வறுத்த முந்திரிப் பருப்பை யானைப் பாகன்களுக்குத் தந்தார்கள்.

நான் யானைப் பாகன்களிடம் சொன்னேன்:

""ஒரு யானை வால் வேணும்.''

யானைப் பாகன் கிண்டல் பண்ணுகிற குரலில் சொன்னான்:

""யானைக்கு இருப்பதே ஒரே ஒரு வால்தான். அதை அறுத்தால் யானை என்ன செய்யும்?''

நான் சொன்னேன்:

""எனக்கு முழு வாலும் வேண்டாம். ஒரு மயிர் போதும்.... யானை மயிர்.''

""யானை மயிர்.'' யானைப் பாகன்கள் சிரித்தார்கள்: ""இது என்ன கோழியா?''

""ஒரு யானை மயிர்...'' நான் கெஞ்சினேன். யானைப் பாகன்கள் தரவில்லை. நத்தை தாமுவும் ஊனக்கால் கொண்ட அப்துல்காதரும் கேட்கும்படி யானைப் பாகன்கள் கூறினார்கள். அவர்கள் எனக்குத் தருவதாக இருந்தவைதானே! வெற்றிலை, பாக்குக்காய், இளநீர், புகையிலை, பழம், அல்வா, பேரீச்சம்பழம் ஆகியவற்றை நான் யானைப் பாகன்களுக்கு கொண்டு வந்து கொடுத்திருக்கிறேன் அல்லவா? அவை போதாது என்று, வாப்பா புகைக்கும் நல்ல வாசனையைக் கொண்ட தடிமனான சுருட்டையும் நான் கொண்டு வந்து தரவில்லையா? மிகப் பெரிய மனிதர்களான யானைப் பாகன்கள் இந்த அளவிற்கு நன்றி கெட்டவர்களா? நான் கேட்டது வெறும் யானை மயிரைத்தான். தரவில்லை. சரி... இருக்கட்டும். நான் யார் என்று காட்டுகிறேன்.

ஒரு யானை மயிரை நான் திருடுவேன்.

எப்படி?

இரவும் பகலும் சிந்தனைதான். உயிர் உள்ள ஒரு ஆண் யானையின் வாலில் இருக்கும் மயிரை எப்படித் திருடுவது? கட்டிப் போடப் பட்டிருக்கும் யானையின் பின்னால் போய் நின்று கொண்டு மெதுவாக வாலைப் பிடித்து ஒரு மயிரைத் திருடலாம். ஆனால், திடீரென்று யானை திரும்பிக் குத்திவிட்டால்...? இறுதியில் ஒரு எளிய வழியைக் கண்டு பிடித்தேன். யானைகளும் நாங்களும் ஒன்றாகச் சேர்ந்துதான் ஆற்றில் குளிப்போம். யானைப் பாகன்களிடம் சேர்ந்து கொண்டு பெரிய கருங்கற்களால் நான் பல நேரங்களில் யானையின் உடலைத் தேய்த்திருக்கிறேன்.

அனைவரும் யானைகளும் குளிப்பது படகுகள் இருக்கும் படித்துறையில்தான். பெரிய நதி. கண்ணீரைப் போன்ற தண்ணீர். நதியில் கரையுடன் சேர்ந்திருக்கும் நீரில் மூன்று யானைகள் கிடக்கின்றன. நடுவில் இருப்பதுதான் ஆண் யானை. அவனுடைய வாலைத்தான் திருட வேண்டும்!

ஏராளமான பேர் குளித்துக் கொண்டிருந்தார்கள். எவ்வளவோ பேர் நீந்திக் கொண்டிருந்தார்கள். இடையில் படகிலும் மனிதர்கள் போய்க் கொண்டிருந்தார்கள். குளித்துக் கொண்டிருந்தவர்களுக்கு மத்தியில் வாப்பாவும் இருந்தார். மாமாவும் இருந்தார். சங்கரன் குட்டியும் கிருஷ்ணனும் இருந்தார்கள். பத்மநாபன் நாயரும் அவுசேப்பு மாப்பிள்ளையும் இருந்தார்கள். நானும் நத்தை தாமுவும் வேட்டிகளைக் கழற்றி விட்டு நீருக்குள் குதித்தோம். நத்தை தாமுவை அவனுடைய தந்தை தேய்த்து அழுக்கை நீக்கி குளிப்பாட்டினார். வாப்பா என்னை முழுமையாகக் குளிக்கச் செய்தார். பிறகு நான் தண்ணீருக்குள் மூழ்கிச் சென்று தூரத்தில் போய் மேலே வந்தேன். சுற்றிலும் பார்த்தேன். ஒரு குறையும் இல்லை. யாரும் என்னை கவனிக்கவில்லை. நல்ல தருணம். நான் தண்ணீருக்குள் மூழ்கியவாறு மெதுவாகச் சென்று ஆண் யானைக்குப் பின்னால் தலையை மட்டும் உயர்த்திப் பார்த்தேன். வாலைத் தேடி கண்டு பிடித்தேன். நல்ல உயரம். பற்களால் நீளமான ஒரு மயிரைக் கடித்து அறுத்தெடுக்கலாம். கடித்து அறுக்க முயற்சித்தேன். முடிய வில்லை. நான் கடித்து வாலை பலமாகப் பிடித்து விலக்கினேன். பலமாக இழுத்த நினைவு இருக்கிறது. பிறகு ஒரே ரகளைதான்...

வாலில் இருந்த பிடியை விட்டு நான் மேலே வந்தேன். யானை பயங்கரமாகப் பிளிறியவாறு எழுந்து திரும்பியது. என்னைப் பார்த்தது. நான் ஒரே மூழ்காக மூழ்கி விட்டேன். மரண பயத்துடன் தண்ணீருக்குள் மூழ்கியவாறு வேகவேகமாக மண்ணை மிதித்துத் தள்ளி மிதித்துத் தள்ளி.... பாய்ந்து... பாய்ந்து... சென்றேன். மூச்சு விட வேண்டும். தொண்டைக்குழி வெடிக்கப் போகிறது. எனினும், தண்ணீருக்கு மேலே வரவில்லை. இறுதியில் போய்... போய்... தண்ணீரில் இருட்டாக இருந்த பகுதியில் மேலே வந்தேன்.

நதியில் சாய்ந்து கிடந்த பருத்திக் காட்டில்... எக்சைஸ் ஸ்டேஷனுக்கு மிகவும் அருகில் நான் திரும்பிப் பார்த்தேன். யானை தும்பிக்கையை தூக்கி கொம்புகளை உயர்த்தி பயப்படக்கூடிய விதத்தில் பிளிறியது. வேறு இரண்டு யானைகளும் எழுந்து பிளிறின. மனிதர்கள் ஓடுவதும் ஆரவாரமும். நான் முழுமையான நிர்வாண கோலத்தில் இருந்தேன். கரையில் ஏறினேன். முட்கள், குண்டு குழிகள் ஆகியவற்றின் வழியாக ஓடிப் பாய்ந்து கொடிகள் படர்ந்திருந்த ஒரு பெரிய மரத்தில் வேகமாக ஏறினேன். இலைகளின் மறைவில் ஒரு கிளையில் உட்கார்ந்து நடுங்கிக் கொண்டிருந்தேன். கடிக்கும் எறும்பு என்னைச் சூழ்ந்து கொண்டிருந்தது. நான் அவற்றைத் தள்ளி விரட்டி விட்டு பயத்துடன் உட்கார்ந்திருந்தேன். நேரம் எவ்வளவு ஓடியது என்று தெரியவில்லை. யானைகளின் சத்தமும் மனிதர்களின் சத்தமும் நின்று விட்டிருந்தன. என்னுடைய உடம்பில் இருந்த தண்ணீர் முழுவதும் உலர்ந்து விட்டிருந்தது. கடிக்கும் எறும்பின் எரிச்சல் மட்டும் இருந்து கொண்டிருந்தது. நான் அதே இடத்தில் உட்கார்ந்திருக்க, வாப்பாவின் உரத்த அழைப்புச் சத்தம் கேட்டது. என் பெயரைக் கூறி அழைத்தார். நான் ""வாப்பா....'' என்று அழைத்தேன். பிறகு இறங்கிச் சென்றேன். வாப்பா உடம்பில் இருந்த துண்டை எடுத்து என்னை அணியச் செய்தார். தொடர்ந்து என்னுடைய தலையைத் தடவினார். உடம்பெங்கும் கடித்து ஒட்டிக்கிடந்த எறும்புகளை எடுத்துக் கீழே போட்டார்.

நாங்கள் வீட்டிற்குச் சென்றோம். நான் உம்மாவிடம் சொன்னேன்:

""உம்மா, என் வேட்டி போய் விட்டது.''

உம்மா சொன்னாள்:

""எல்லாருடைய வேட்டிகளும் போய்விட்டன.''

யானை செய்த ஆர்ப்பாட்டத்தில் ஆட்கள் துணியும் கோவணமும் இல்லாமல் தட்டுத் தடுமாறி உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடியிருக்கிறார்கள். ஆண் யானை ஒரு பெண் யானையை மெதுவாகக் குத்திவிட்டது. யானைப் பாகன்கள் மிகவும் சிரமப்பட்டு எல்லா யானைகளையும் கொண்டு சென்று கட்டிப் போட்டிருக்கிறார்கள். ஆண் யானைக்கு அந்த நிமிடமே மதம் இல்லாமல் போய் விட்டிருக்கிறது.

அது உண்மை அல்ல. எல்லா ரகளைகளுக்கும் மூல காரணம் நான்தான். இந்த உண்மையை எப்படிக் கூறுவேன்? அறிய நேர்ந்தால், வாப்பா என்னை கட்டித் தொங்க விட்டு புகையை இடச் செய்வார். நான் சொன்னேன்:

""வாப்பா, அதற்கு மதம் பிடிக்கவில்லை.''

""பிறகு?''

""கடித்து இழுத்தேன்.''

""எதைக் கடித்து இழுத்தாய்?''

""வாப்பா! நான் யானையைக் கடித்தேன்.''

""நீ ஆண் யானையைக் கடித்தாயா?''

""ஆமாம்... நான் மூழ்கிச் சென்று அதன் ஒரு மயிரைக் கடித்து இழுக்க முயற்சித்தேன்.''

உம்மா சொன்னாள்:

""கடவுளே! அதற்கு எவ்வளவு வேதனை உண்டாகியிருக்கும்!''

வாப்பா சிரித்தார். நீண்ட நேரம் சிரித்தார். பிறகு கேட்டார்:

""உனக்கு எதற்கு யானை மயிர்?''

நான் சொன்னேன்:

""வாப்பா, உங்களுக்கு மிகவும் விருப்பமான ஒரு மனிதர் இருக்கி றாரே! அந்த எக்சைஸ் இன்ஸ்பெக்டர்...! அவருடைய மகள் ராதாமணி என்னிடம் ஒரு யானை வால் வேண்டும் என்று கேட்டாள்.''

உம்மாவிற்கு அப்போதுதான் சிரிக்கத் தோன்றியது.

""தங்க மகனே....'' உம்மா சொன்னாள்: ""பெரிய ஆபத்து எதுவும் உண்டாகாமல் அல்லா காப்பாற்றினார்.'' தொடர்ந்து வாப்பாவிடம் சொன்னாள்: ""ஒரு யானை மயிரை வாங்கி இவனுக்குக் கொடுங்க. இல்லாவிட்டால் இனிமேலும் அந்த அப்பிராணி ஆண் யானையை இவன் கடிப்பான்.''

""டேய்....'' வாப்பா சொன்னார்: "" இருந்தாலும் நீ அதைக் கடித்தாய் அல்லவா?''

""கடிக்கவில்லை. ஒரு யானை மயிரைக் கடித்து அதைத் தனியாக எடுக்கப் பார்த்தேன்.''

""வா.... நீ இதை யாரிடமும் கூற வேண்டாம்.''

வாப்பா என்னை யானைகளுக்கு அருகில் அழைத்துக் கொண்டு சென்றார். ஒரு பெண் யானையின் உடம்பில் ஒரு சிறிய புண் இருந்தது. யானைப் பாகன்கள் அதில் எதையோ அரைத்துப் பூசி விட்டிருந்தார்கள். அதற்குப் பிறகும் இரத்தம் சற்று வந்து கொண்டிருந்தது. ஆண் யானையின் ஒரு வாலை யானைப் பாகனிடம் கூறி அறுக்கச் செய்து வாப்பா என்னிடம் தந்தார். ஆண் யானை கிண்டல் நிறைந்த பயங்கரத் தன்மையுடன் என்னையே பார்த்தது. வயிறைக் கொண்டு "படபடா' என்று ஓசை உண்டாக்கியது. அதற்கு அர்த்தம்: "நீதானேடா மடையா யானை மயிரைக் கடித்துப் பிடுங்க வந்திருந்த திருடன்?'

by Swathi   on 27 Mar 2013  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
15-Aug-2013 02:32:17 குருசு.சாக்ரடீஸ் said : Report Abuse
எழுத்திற்கும் வாழ்கைக்கும் இடையே வாழ்ந்தவன் பஷீர். அதனால்தானோ என்னதோ மலையாள இலக்கிய லோகம் யானைமுடியில் தான் தொங்கிக்கொண்டிருக்கிறது.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.