LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 1314 - கற்பியல்

Next Kural >

யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
யாரையும் விட நாம் மிக்க காதல் கொண்டிருக்கிறோம் என்று சொன்னேனாக; ய‌ாரை விட...? யாரை விட..? என்று கேட்டு ஊடல் கொண்டாள்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இதுவும் அது.) யாரினும் காதலம் என்றேனா - காமம் நுகர்தற்குரிய இருவராயினார் யாவரினும் யாம் மிக்க காதலையுடையேம் என்பது கருதி யாரினும் காதலம் என்றேனாக; யாரினும் யாரினும் என்று ஊடினாள் - நின் தோழி அது கருதாது, என்னாற் காதலிக்கப்பட்ட மகளிர் பலருள்ளும் நின்கண் காதலுடையேன் என்றேனாகக் கருதி, அம் மகளிர் யாரினும் என்கண் காதலுடையராயினீர் என்று சொல்லிப் புலந்தாள். (தலைமகள் கருத்திற்குத் தன்மைப் பன்மை உயர்ச்சிக்கண் வந்தது. 'யான் அன்பு மிகுதியாற் சொல்லியதனைக் கருத்து வேறுபடக் கொண்டதல்லது பிறிது காரணமில்லை', என்பதாம்.)
மணக்குடவர் உரை:
ஒருவனும் ஒருத்தியுமாகி அன்பினால் புணர்ந்தார் யாவரினும் யாம் காதலுடையே மென்று சொன்னேனாக, அதனை அவ்வாறு கொள்ளாது, நீர் அன்புபட்டார் பலருள்ளும் யாரினும் அன்புடையீ ரென்று சொல்லி ஊடினாள்.
தேவநேயப் பாவாணர் உரை:
யாரினும் காதலம் என்றேனா - காமவின்பம் நுகர்தற்குரிய இருவராகிய கணவன் மனைவியர் வேறு யாரினும் நாம் மிகுந்த காதலுடையோம் என்னும் பொருளில், யாரினுங் காதலம் என்று சொன்னேனாக, யாரினும் யாரினும் என்று ஊடினாள்- உன் தலைவி அப்பொருள் கொள்ளாது, என்னாற் காதலிக்கப்பட்ட மகளிர் பலருள்ளும் உன்பால் மிகுந்த காதலுடையேன் என்று நான் கூறியதாகக் கொண்டு, "யாரைவிட" என்று வினவிப் புலந்தாள். யான் அன்பு மிகுதியால் நல்ல பொருளிற் கூறியதைத் தீய பொருளில் தவறாக உணர்ந்து கொண்டதல்லது, வேறு கரணகமில்லை யென்பதாம். தலைமகள் கொண்ட பொருட்கு 'யார்' உயர்வுப்பன்மை.
கலைஞர் உரை:
"யாரைக் காட்டிலும் உன்னிடம் நான் காதல் மிகுதியாகக் கொண்டுள்ளேன்" என்று இயல்பாகச் சொன்னதைக் கூடக் காதலி தவறாக எடுத்துக்கொண்டு "யாரைக்காட்டிலும் யாரைக் காட்டிலும்" எனக்கேட்டு ஊடல் புரியத் தொடங்கி விட்டாள்.
சாலமன் பாப்பையா உரை:
காதலர் எவரைக் காட்டிலும் நாம் மிகுந்த காதல் உடையவர்கள் என்றேன்; அதற்கு அவள் நான் பலரையும் காதலிப்பதாகவும், அவர்களுள் இவள்மீது அதிகக் காதல் உடையவன் என்று சொன்னதாகவும் எண்ணி, எவளைக் காட்டிலும் எவளைக் காட்டிலும் என் மீது காதல் உடையீர் என்று ஊடினாள்.
Translation
'I love you more than all beside,' 'T was thus I gently spoke; 'What all, what all?' she instant cried; And all her anger woke.
Explanation
When I said I loved her more than any other woman, she said "more than others, yes, more than others," and remained sulky.
Transliteration
Yaarinum Kaadhalam Endrenaa Ootinaal Yaarinum Yaarinum Endru

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >