LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- வரலாறு

எகிப்து மண்ணில் தொல்காப்பியத் துளி - அ.வெண்ணிலா இராஜேஷ்

தொல்காப்பியம் தமிழின் இலக்கண நூலாக மட்டுமல்ல, தமிழர்களின் வரலாற்று நூலாகவும் திகழ்கிறது. தொல்காப்பியத்தின் தொடக்கத்தில் அமைந்துள்ள பனம்பாரனாரின் பாயிரம் முதற்கொண்டு, ஈற்று மரபியல் வரை ஒவ்வொரு நூற்பாவும், சங்க மக்களின் வாழ்வியல் நடப்புகளிலிருந்தே எடுத்து, வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. உலக மொழிகளின் எந்த இலக்கணமும் தொல்காப்பியம் போல் பகுத்தும், தொகுத்தும், விரித்தும் கூறியதில்லை என்பது மொழியியல் ஆய்வாளர்களின் கருத்தாகும்.


உலகில் எகிப்து, பாரசீகம், கிரேக்கம் ஆகிய நாடுகளே நாகரிகத்தில் பழமைமிக்கவை எனக் கருதிவரும் இந்நேரத்தில், தமிழ் நாகரிகத்தின் தொன்மை குறித்த செய்திகள் நாளும் நாளும் வெளிப்பட்டு, ஆய்வாளர்களை வியப்பின் விளிம்பில் நிறுத்தி வைக்கின்றன. தொல்காப்பியர் காலத்தில் (இடைச்சங்க காலத்தில்) வழக்காற்றில் பயின்றதோர் அளவைச் சொல் "க்வாசீர்-அல்-க்வாதிம்' (எகிப்து) என்ற இடத்தில் கிடைத்த பானை ஓட்டில், தமிழ்-பிராமி எழுத்தில் கடந்த ஆண்டு கிடைத்திருப்பது ஆய்வாளர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது. அந்தச் சொல்லைப் "பானை உரி' என்று ஆய்வாளர்கள் படித்துள்ளனர்.


மட்பானையின் வெளிப்புறத்தில் இரு பக்கமும் எழுதப்பட்டிருக்கும் "பானை உரி' என்ற இந்தத் தமிழ்ப் பிராமி எழுத்துக்கு விளக்கம் தருமிடத்து, ""உறியில் தொங்கவிடப் பட்டிருக்கும் வகைப் பானை'' என்று ஐராவதம் மகாதேவன் கூறியுள்ளார்.


நடன காசிநாதன் இக்கருத்தை மறுத்து, ""பேச்சு வழக்கில் உறிப்பானை என்றுதான் சொல்வார்களே தவிர, "பானை உறி' என்று சொல்லமாட்டார்கள்'' என்று மேற்சொன்ன கருத்துக்கு மறுப்புக் கூறி, அவ்வெழுத்துகளைப் "பனை ஓரி' என்று படித்து, அதற்குப் "பனந்தாரை அணிந்திருந்த ஓரி எனும் அரசன் பெயரைக் குறிக்கிறது' என்றார். ஆனால், இவை எல்லாவற்றையும்விட முனைவர் அமுதன் என்பவர் குறிப்பிடும் கருத்துப் பொருத்தமுடையதாய் உள்ளது.


அவர் கூறியுள்ளதாவது: எகிப்தில் கிடைத்த இந்த தமிழ்-பிராமி எழுத்துகளையுடைய இப்பானை ஓட்டில், உணரப்பட வேண்டியது பானையின் எதிரெதிர் இரு புறங்களிலும் "பானை உறி' என்று பொறிக்கப்பட்டிருப்பதுதான். "உரி' (அது பானையைக் குறிப்பது) என்ற சொல், தமிழில் தொல்காப்பியத்தில் "முகத்தல் அளவை'ப் பொருளில் வருகிறது.


""உரி வரு காலை, நாழிக் கிளவி

இறுதி இகரம் மெய்யொடும் கெடுமே

டகாரம் ஒற்றும் ஆவயினான''

(தொல். உயிர் மயங்கியல்: நூற்-38)


""நாழி என்பது ஒருபடியையும், உரி என்பது அரைப்படியையும் குறிக்கும். அரைப்படி பானை என்பது இப்பானை எழுத்தின் பொருளாகும். எனவே, இது அரைப்படியை அளக்கும் பானையாகும்'' என்ற இக்கருத்தே ஏற்புடையதாகத் தெரிகிறது.


மேலும், "கணன்' என்ற தமிழ் பிராமியை உடைய மட்கலமும் "சாத்தன்' என்ற பெயர் பொறித்த மட்கலமும் எகிப்தில் உள்ள "பெரினிகா' என்னும் இடத்தில் 1950-களிலேயே கண்டுபிடித்துள்ளதையும் இங்கு நினைவில்கொள்ள வேண்டியது முக்கியமானதாகும்.


உரோமானியர்களோடும் எகிப்தியர்களோடும் செங்கடல் வழியாகத் தமிழர்கள் கொண்டிருந்த வணிக உறவை சங்க இலக்கியங்களைக் கொண்டே உலகுக்குச் சொல்லிவந்த இவ்வேளையில், எகிப்து "க்வாசீர்-அல்-க்வாதிமில்' கிடைக்கப்பட்டுள்ள இப்பானை ஓடு, சில சங்க இலக்கிய வழக்குக்கு உண்மை வடிவம் கொடுத்துள்ளது. பண்டைத் தமிழர்களின் உயர்ந்த வாழ்வியல் முறைமையும் உலகோருடன் அவர்கள் கடல் கடந்து வைத்திருந்த வணிக உறவும் வரலாற்றின் முக்கியப் பக்கங்களில் எழுத மறந்திருந்தாலும் - மறைத்திருந்தாலும் சமீப காலமாக தொல்லியலாளர்களால் கண்டெடுக்கப்பட்டுவரும் மண்ணில் புதையுண்ட ஆதாரங்கள் உலகின் பல வரலாற்று ஆய்வாளர்களையும் தமிழர்கள் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


by Swathi   on 11 Apr 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஜாலங்கள் ஜாலங்கள்
நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்) நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்)
மண்ணும் மரமும் காட்டும் பண்பு மண்ணும் மரமும் காட்டும் பண்பு
இயற்கை என்னும் அற்புதம் இயற்கை என்னும் அற்புதம்
கடவுள் நம்பிக்கை கடவுள் நம்பிக்கை
சின்ன சின்ன சந்தோசங்கள் சின்ன சின்ன சந்தோசங்கள்
இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . . இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . .
பேச்சுத்தமிழின் முக்கியத்துவம் ! பேச்சுத்தமிழ் ''கொச்சைத் தமிழ் ''  இல்லை! ''பச்சைத் தமிழ்''! பேச்சுத்தமிழின் முக்கியத்துவம் ! பேச்சுத்தமிழ் ''கொச்சைத் தமிழ் '' இல்லை! ''பச்சைத் தமிழ்''!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.