LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF

குருவி குஞ்சு

குருவி குஞ்சு

    கஞ்சப்பனுக்கு பசி உயிரடுத்தது,  காலையில் விழித்து எழுந்தவனுக்கு பசி வயிற்றை கிள்ளவும், ஏதோ கத்தியபடி பாத்திரங்களை உருட்டிக்கொண்டிருந்த அம்மாக்காரியிடம் கஞ்சிக்கு போய் நின்றபோது, இவன் அப்பன்காரன் அவள் மறைத்து வைத்திருந்த அம்பது ரூபாயை ‘லவட்டி’ கொண்டு போயிருந்த கோபத்தில் இருந்தவள் அவனை அடிப்பதாக நினைத்து இவன் முதுகில் இரண்டு வைத்தாள்.

     எதற்கு அம்மா அடிக்கிறாள் என்று அறிவதற்கு முன்பே முதுகில் பட்ட அடி வலிக்க கண்களில் தானாக கண்ணீர் வர ஆரம்பித்து விட்டது.

     இதற்கு மேல் இவளிடம் என்ன கேட்பது? அழுது கொண்டே வெளியில் வந்தான். வெளியே கூச்சலிட்டபடி விளையாண்டு கொண்டிருந்த சோக்காளிகளை பார்த்தவுடன் வலி மறைந்து போக அவர்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்

   டெய் கஞ்சா ஓணா அடிக்க போலாமாடா? அருகில் சோக்காளி கேட்டான். அம்மா ‘வையுமே’ என்ற நினைப்பில் குடிசையின் உள்புறம் திரும்பி பார்த்தான்.

   அவள் கோபம் இன்னும் தீராமல் புருசனை கண்டபடி பேசிக்கொண்டே அடுப்பில் ஏதோ செய்து கொண்டிருப்பதை கண்டவன் சத்தமில்லாமல் நழுவி வெளியே வந்தான்.

   சூரியன் மெல்ல மெல்ல தன் உக்கிரத்தை காட்ட ஆரம்பிக்க கஞ்சப்பன் தன் சோக்காளிகளுடன் அந்த தோட்ட வேலியில் அப்பிராணியாய் நின்றிருந்த ஓணான் ஒன்றை விரட்டிக்கொண்டு இருந்தான்.

     பாவம் சுகமாய் தன் கண்களை உருட்டிக்கொண்டு வேலியோரம் இருந்த புதர்களில் உச்சிக்கு சென்றால் இன்னும் கொஞ்சம் ‘சூரிய வெளிச்சம்’ கிடைக்கும் என்னும் எதிர்பார்ப்பில் அந்த ஓணான் நகர்ந்து நகர்ந்து உயரமாய் நின்றிருந்த உச்சி கிளையில் நின்று கொண்டிருந்தது.

   இந்த சோக்காளிகள் கூட்டம் பாதையில் தனக்கு தெரிந்த சினிமா கதைகளை பேசிக்கொண்டே போய்க் கொண்டிருந்தவர்களின் கண்களில் இந்த உச்சாணி கொம்பில் நின்றிருந்த ‘ஓணான்’ பளிச்சென்று தெரிய, அந்த கூட்டத்தில் இருந்த ஒருவன் குனிந்து கல்லை எடுத்தான்.

   விர்ரென்ற சத்தத்துடன் தன் மூக்கருகே ஏதோ கடந்து போனதை உணரும் முன்பே அடுத்த கல் ஒன்று வாலில் பட்டு சுர்ரென்று வேதனையை கொடுக்க அந்த நேரத்தில் வரப்போகிற ஆபத்தை உணர்ந்த ஓணான், அப்படியே தன் உடலை திருப்பி அதே கிளை வழியாக புதருக்குள் ஓடிப்போக முயற்சி செய்தது.

   அதற்குள் கஞ்சப்பன் எறிந்த கல் அதன் வயிற்று புறம் தாக்க வலி தாளாமல் மல்லாந்து அந்த புதருக்குள் விழுந்தது.

   "டேய்" உள்ளாற விழுந்துடுச்சுடா, ஒருவன் கூக்குரலிட்டு அந்த புதருக்குள் கண் மண் தெரியாமல் கற்களை சரமாரியாக வீச ஆரம்பித்தனர்.

   "பொத்"பொத்" சத்தத்துடன் கற்கள் புதருக்குள் போய் விழ ஆரம்பித்தன. ஐந்து நிமிடங்கள் அமைதியாக, நான் போய் பார்க்கறேன், கஞ்சப்பன் புதருக்குள் தன்னுடைய தலையை நுழைத்தான்.

   வேலிகளுக்குள் முள் செடிகளாய் இருக்கவும் சட்டென தலையை வெளியே எடுத்து டேய் ஒரு குச்சியை எடுத்தாங்கடா, சொல்லிக்கொண்டே தலையை வெளியே எடுத்தான்.

   அந்த பச்சை புதரை தன்னிடமிருந்த குச்சிகளால் கலைத்து கீழே விழுந்து விட்ட ஓணானை தேடிய சோக்காளிகள் கூட்டம் புதரோரமாய் வயிற்றில் வாங்கிய கல்லடியில் மயங்கி கிடந்த ஓணானை கண்டு பிடித்து விட்ட சந்தோசத்தில் "ஓவென" கூச்சலிட்டவர்கள் கையில் வைத்திருந்த குச்சியால் மெல்ல மெல்ல அந்த ஓணானை நகர்த்தி புதரை விட்டு வெளியே கொண்டு வந்தனர்.

    வயிற்றில் ஏற்பட்ட காயத்தால் மயங்கி கிடந்தாலும் அந்த ஓணானின் இருதயம் துடித்து கொண்டிருப்பதை அதன் வாய்ப்புற கீழ் தாடைகள் காட்ட "டேய் உசிறு" இருக்குடா மீண்டும் ஒரு காட்டு கூச்சல் போட்டபடி அந்த ஓணானை புரட்டி போட்டுவிட்டு டேய் இது மேல..போனா பைத்தியம் பிடிச்சமாதிரி கர கரன்னு சுத்துமாமா

    சுற்றி நின்ற கூட்டம் அதன் மீது அவரவர்கள் போட்டிருந்த கிழிசல் டவுசர்களை விலக்கி அதன் மீது ஊற்ற..

    கிட்டத்தட்ட அரை மணி நேர போராட்டத்தில் ஓணானின் உயிர் போயிருந்தது. அதற்கு மேல் அதை வைத்து இவர்களால் விளையாட முடியாமல் அடுத்த இடத்தை நோக்கி இவர்கள் நடக்க முற்பட. கீச்..கீச்..கீச்...சத்தம் இவர்கள் காதில் விழ ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டவர்கள் டேய் “குரிவி குஞ்சு” சத்தம் மாதிரி கேட்குது, மீண்டும் இவர்கள் தடியால் அடித்து கலைத்திருந்த அந்த புதர் அருகே வந்தார்கள்

   சத்தம் வந்த திசையை அணுமானித்து அங்கும் இங்கும் கவனமாய் இந்தமுறை குச்சியை உபயோகப்படுத்தாமல் தேடினர்.

   அந்த புதரின் வலது ஓரத்தில் "கீச் கீச் சென்று வாயை திறந்தபடி மல்லாந்து கிடந்தது அந்த குருவிக்குஞ்சு.

    அங்க பாருடா “குரிவி குஞ்சு” கஞ்சப்பன் அந்த கூட்டத்திலிருந்து பாய்ந்து சென்று குருவி குஞ்சை கையில் எடுத்தவன் அதை சுற்றிலும் இருந்த முள் எதுவும் குத்தி விடாமல் லாவகமாய் வெளியே எடுத்து கொண்டு வந்தான்.

     ஏண்டா இது எப்படி விழுந்திருக்கும்? அப்பாவியாய் ஒருவன் கேட்டான், சற்று முன்னர் இவர்கள் இந்த புதரை தடியால் அடித்து கலைத்து போட்டிருந்ததை மறந்து விட்டு.

   மேலே எங்கியாவது கூடு தெரியுதா பாருடா ஒருவன் யோசனை சொன்னான். கஞ்சப்பன் குனிந்து அந்த புதர் செடிகளின் மேல்புறமாய் துழாவினான்.

    அங்கு ஒரு குருவி கூடு இருந்ததற்கான அடையாளங்கள் அழிக்கப்பட்டு வெறும் குச்சிகளாகவும் நசுங்கி போன புதர் செடிகளாகவும்தான் இருந்தது.

   சரி வாங்கடா போகலாம், ஒரு சோக்காளி அழைக்கவும் கஞ்சப்பனுக்கு இப்பொழுது வீட்டுக்கு போக வேண்டும் என்று தோன்றி விட்டது. காரணம் அவன் இடது கையில் அடக்கமாய் வைத்திருந்த அந்த குருவி குஞ்சு.

   அதுவரை தன் முதுகில் செடி கொடிகளின் குத்தல்களாக இருந்த நிலை மாறி மனித கைகளின் கதகதப்பில் அது தன் கத்தலை கூட மறந்து சுகமாய் உருண்டு படுத்திருந்தது.

  டேய் நான் வூட்டுக்கி போறேன், எங்க அம்மா “வையும்”, இன்னேரத்திக்கு என்னைய தேடி கிட்டிருக்கும், சோக்காளிடம் சொன்னான்.

  அவன் எதற்கு வீட்டுக்கு போக வேண்டும் என்கிறான் என்று தெரிந்ததோ என்னவோ ஒரு சோக்காளி அருகில் வந்து சரிடே, வாங்க போலாம், அனைவரையும் அழைத்தான்.

   குடிசை வாசலில் இவன் அம்மா நின்று கொண்டிருந்தவள் "எங்கடா போய் தொலைஞ்சே மூதி" மீண்டும் இரண்டு முதுகில் வைத்து கஞ்சி தட்டுல ஊத்தி வச்சிருக்கேன் எடுத்து குடி, நான் வந்துடறேன், வாசலை திறந்து வச்சுகிட்டு ஓடிப்பிடாத.. சொல்லியபடி அங்கம்மாக்கா..அங்கம்மாக்கா..பக்கத்து குடிசைக்காரியை கூப்பிட்டபடியே வெளியே  சென்றாள்.

   கஞ்சப்பனுக்கு அம்மா வெளியே போனது வசதியாய் போய்விட்டது. சத்தமில்லாமல் உள்ளே வந்தவன் ஊற்றி வைத்திருந்த கஞ்சி தட்டின் முன் உட்கார்ந்து இடது கையில் மறைத்து வைத்திருந்த குருவி குஞ்சை வெளியில் எடுத்தான்.

   குருவிக் குஞ்சுவுக்கு இவன் கையில் இருந்த கத கதப்பு போய் வேர்த்து மூச்சு திணறி கொண்டிருந்த நேரத்தில் இவன் அதனை வெளியில் விடுவித்ததும் "அப்பாடி" என்பதை உணர்த்தும் வண்ணம் "கீச் கீச்' குரலை சப்தமிட ஆரம்பித்தது.

   சப்பணமிட்டு உட்கார்ந்த கஞ்சப்பன் தட்டில் இருந்த கஞ்சிக்குள் கையை விட்டு கொஞ்சம் தண்ணீர் பதமாய் எடுத்தவன் குருவி குஞ்சை தன் மடி மீது வைத்து சொட்டு சொட்டாக அதன் வாயை திறந்து ஊற்ற ஆரம்பித்தான்.

   அவன் முன் தட்டு நிறைய கஞ்சி இருந்தும், பசி என்னமோ காணாமல் போயிருந்தது. குருவி குஞ்சுவுக்கு வயிறு நிறைந்திருக்குமா என்கிற கவலைதான் இருந்தது.

    வித்தியாசமான திரவம் ஒன்று தன் தொண்டை குழிக்குள் போவதையும், ஒரு சில சோற்று பருக்கைகள் தன் தொண்டையை அடைத்ததையும், அதனால் தொண்டையை குலுக்கி குலுக்கி அதை சரி செய்த வண்ணம் "கீச் கீச்" என்று கத்தி கொண்டுதான் இருந்தது.

   கஞ்சப்பனுக்கு அன்றைய நாள் முழுக்க அந்த குருவி குஞ்சுதான் ஞாபகத்தில் இருந்தது. அதுக்கு ஒரு கூண்டை கண்டு பிடிக்க வேண்டும், பூனை நாய் ஏதும் கடித்து விடாமல் பாதுகாக்க வேண்டும். என்ன செய்யலாம், நினைத்து நினைத்து மண்டையை பிய்த்து கொண்டான்.

   இடையில் அம்மாக்காரி அது என்னடா கையில வச்சுகிட்டு சுத்தறே ? கேட்டவள் என்ன நினைத்தாலோ அதற்கு மேல் ஒன்றும் கேட்காமல் விட்டு விட்டது இவனுக்கு  வசதியாய் போய் விட்டது.

   மாலை மங்கி இருள் வர வெளியே அப்பனின் சத்தம் இவனுக்கு கேட்டது. இன்னும் கொஞ்ச நேரத்துக்குள் வீட்டுக்குள் ஒரு சண்டை நடக்கும், காலையில் களவாண்டு போன அம்பது ரூபாய் அவன் குடலுக்குள் ஒரு குவார்ட்டராக போயிருக்கும், அதற்காக இருவரும் அடித்து கொள்வார்கள் என்பதை உணர்ந்து கொண்டானோ என்னவோ மாலை சீக்கிரமாகவே கஞ்சியை ஊற்றி தட்டில் வைத்து அவன் அம்மா பார்க்காமல் குருவி குஞ்சின் வாய்க்குள்ளும் ஊற்றி ஊற்றி அதன் வயிற்றை நிரப்பினான்.

    குருவிக்குஞ்சு மிதமிஞ்சிய கஞ்சி சோற்று பருக்கை இவைகளால் வயிறு உப்பிய நிலையில் மெல்லிய குரலால் "கீச் கீச்" கத்தியபடிதான் இருந்தது.

     கஞ்சப்பனுக்கு தன் குருவிக்குஞ்சை பாதுகாக்க ஒரே வழிதான் தென் பட்டது, அம்மாவின் பழைய பெட்டி ஒன்றிருந்தது. அதன் மூடியை சப்தமில்லாமல் மெல்ல திறந்தான். அதில் அம்மாவின் பழைய சேலை ஒன்று தென்பட அதில் குருவி குஞ்சை விட்டான்.

    அப்பாடி குருவி குஞ்சை ஒரு இடத்தில் படுக்க வைத்து விட்டோம், திருப்தி வந்தாலும் மூடி வைத்தால் காத்து வராதே, இந்த சிந்தனை அவனை உலுப்ப மூடியை ஒரு குச்சியை நடுவில் வைத்து முழுவதும் மூடாதபடி மெல்லிய இடைவெளி இருக்கும்படி மூடிவிட்டு அதன் அருகிலேயே படுத்து கொண்டான்.

    இரவு முழுக்க அவன் கனவில் அவனும், அந்த குருவி குஞ்சும் பறந்து கொண்டிருக்கிறார்கள். அதனுடன் இவன் பேசி மகிழந்து கொண்டிருக்கிறான். இப்படி கனவுகளாய் ஓடி கொண்டே இருக்க..

   "திம்" என்று முதுகில் ஒரு அடி விழ சட்டென விழித்தான். "மூதி'மூதி" எதியோ ஒண்ணை கொண்டாந்து என் பெட்டிக்குள்ள வச்சு பாரு அது செத்து தொலைஞ்சு, எறும்பெல்லாம் என் பெட்டிக்குள்ள வந்திருச்சு.

    முதுகில் விழுந்த அடி எதற்கு என்று அவனுக்கு புரியவில்லை, அம்மா பெட்டியை விரித்து அதனுள் இருந்தவைகள் ஒவ்வொன்றாய் எடுத்து வெளியே வைத்து உதறிக்கொண்டிருக்க இவனுக்கு அப்பொழுதுதான் உறைத்தது ஐயோ என் "குருவிகுஞ்சு"   

     அம்மா அம்மா என் குருவி குஞ்சு சத்தமாய் கேட்க அதை வெளிய எறிஞ்சுட்டேன், வூடு பூரா எறும்பா கிடக்கு, அம்மா அவள் பாட்டுக்கு புலம்பிக்கொண்டிருந்தாள்.

     அவசரமாய் வெளியே ஓடினான், அங்கும் இங்கும் தேட நல்ல வேளை சாக்கடைக்குள் விழ போகுமுன் இவனுக்காக காத்திருந்ததோ என்னவோ கட்டையாய் விரைத்து உடல் முழுக்க எறும்புகளாய் இருந்தது.

    ஐயோ என் “குரிவி குஞ்சு” சப்தமிட்டு அழுதவனது குரல் கேட்டு அம்மா வேகமாய் வெளியே ஓடி வந்து பார்த்தாள்.

    அழுது கொண்டிருந்த கஞ்சப்பனின் கண்களுக்கு “குருவி குஞ்சு”வுக்கு பதில் நேற்று அடித்து போட்டு விளையாண்டு கொண்டிருந்த “ஓணானாக” காட்சி அளித்து கொண்டிருந்தது அந்த விரைத்து கிடந்த குருவி குஞ்சு

Sparrow kid
by Dhamotharan.S   on 02 Jun 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இரவில் வந்தவன் இரவில் வந்தவன்
சூழல், சூழல் சூழல், சூழல்
கடைசி கடிதம் கடைசி கடிதம்
அவ்வளவுதானா...! அவ்வளவுதானா...!
மனம் தேடும் ஆசை மனம் தேடும் ஆசை
பழி உணர்ச்சி பழி உணர்ச்சி
சூழல், சூழல் சூழல், சூழல்
இளம் மாங்கன்று இளம் மாங்கன்று
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.