|
||||||||||||||||||
ஆன் லைன் வகுப்பு |
||||||||||||||||||
ஆன் லைன் வகுப்பு
நரசிபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து கொண்டிருக்கிறான் ராஜேந்திரன் என்னும் சிறுவன். அவன் தாய் தந்தை இருவருமே விவசாய கூலி வேலைக்கு செல்பவர்கள். மிகவும் ஏழ்மையான குடும்பம். இந்த நேரத்தில் உலகம் முழுவதும் கொரோனா என்னும் வைரஸ் பரவியதால் நிறைய பேருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. இந்த வைரஸ் காற்றின் மூலம் தான் பரவுகிறது என்பதை கண்டுணர்ந்த விஞ்ஞானிகள், அந்தந்த அரசாங்கங்களில் சொல்லி மக்களை வெளி இடங்களில் கூடா வண்ணம் தடை போட்டு விட்டார்கள். தமிழ் நாட்டிலும் அரசாங்கம் தடை போட்டு விட்டது. இதனால் பள்ளி, கல்லூரி, மற்றும் அனைத்து அலுவலகங்கள்,தொழிற்சாலைகள் எல்லாம் அடைக்கப்பட்டு மக்கள் வீட்டுக்குள்ளே இருக்கும்படியான சூழ்நிலை வந்து விட்டது. ராஜேந்திரன் வீட்டிலும் அவனது பெற்றோருக்கு கூலி வேலை செய்ய போகமுடியாமல் ஓரிரு மாதங்கள் வீட்டில் இருக்க வேண்டிய சூழ்நிலை வந்து விட்டது. அதன் பின் அவர்கள் நிலைமையில் முன்னேற்றம் வந்து அவர்கள் விவசாய கூலிகளாக செல்லலாம் என அரசு அறிவித்தது. அவர்கள் இருவரும் வேலைக்கு சென்றாலும் இந்த மூன்று மாதங்கள் வீட்டில் இருந்து விட்டதால், கடன் சுமை அதிகமாகி ஏழ்மை நிலைக்கு போய் விட்டார்கள். ராஜேந்திரனுக்கோ பள்ளிகள் அடைக்கப்பட்டு “ஆன்லைன்” வகுப்புக்கள் நடைபெறும் என அறிவித்து விட்டது. இவர்கள் வீட்டில் சாப்பாட்டுக்கே சிரமமான நிலைமையில் எப்படி அவர்களால் “ஆன்லைன்” வகுப்புக்கு செல்போன் வாங்க முடியும். அதுவும் விலை உயர்ந்த செல்போனில் மட்டுமே ஆன் லைன் வகுப்புகளை கவனிக்க முடியும் என்பதால் மூன்று மாதங்களாக அவனால் எதுவும் கற்க முடியாமல் போய் விட்டது. இருந்தாலும் ராஜேந்திரன் வீட்டின் வறுமையை களையவும், அவர்களின் கடன் சுமை குறையவும் இவனும் அப்பா அம்மாவுடன் விவசாய கூலி வேலைக்கு சென்றான். இவர்கள் விவசாய கூலிகளாய் வேலை செய்யும் நிலத்துக்கு சொந்தக்கார்ர் தினமும் இவர்கள் வேலை செய்வதை பார்வையிட வருவார். ராஜேந்திர்னையும், அவனைப்போல ஒத்த வயதுடைய சிறுவர்களும் தோட்டத்தில் வேலை செய்வதை பார்த்த இவருக்கு மனம் சங்கடப்படும். என்றாலும் என்ன செய்ய முடியும்? அவர்களை வேலை செய்ய வேண்டாம் என்று வீட்டிற்கு அனுப்ப முடியுமா? அவர்கள் உழைப்பில் கிடைக்கும் ஊதியத்தை பெற்றோரிடம் கொடுத்தால்தானே, அந்த குடும்பத்தின் கஷ்டங்கள் கொஞ்சமாவது குறையும். அதனால் அவர்களை அதிகம் விரட்டாமல், மேம்போக்கான வேலைகளை தருவார். ஒரு நாள் அந்த நிலத்தின் முதலாளி ராஜேந்திரனை அழைத்து வீடு வரை போய் அங்கு வைக்கப்பட்டிருக்கும் “உர மூட்டைகளை” வீட்டில் வேலை செய்து கொண்டிருக்கும் இரண்டு ஆட்களை வைத்து அங்கு இருக்கும் மாட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டு அதிலே நீயும் வந்து சேரு என்று அனுப்பி வைத்தார். ராஜேந்திரன் சிறுவனாகையால், விவசாய காடுகளின் வழியாக ஓட்டமாக ஓடி அரை மணி நேரத்துக்குள் முதலாளியின் வீட்டை அடைந்து விட்டான்.வீட்டு காம்பவுண்ட் கேட்டை திறந்து வீட்டை அடைவதற்கு கிட்டத்தட்ட இருநூறு அடிகளுக்கு மேல் செல்ல வேண்டும். இரு பக்கங்களிலும் அடர்த்தியான செடிகள் நட்டப்பட்டிருக்கும் ராஜேந்திரன் உள்ளே நடந்து கொண்டிருந்த பொழுது, வலது புறத்தில் “டொம்” என்ற சத்தம், சன்னமாய் கேட்டது, அதன் பின் தண்ணீர் சல சலக்கும் சத்தமும் கேட்டது. வலது புறம் அவனை விட உயரமாய் இருந்த செடிகளை விலக்கி பார்த்தான். சற்று தொலைவில் குளம்போல் தண்ணீர் நின்று கொண்டிருப்பதும், அதில் தளக் தளக்கென்று கையை ஆட்டிக்கொண்டிருப்பதையும் கண்டான். அந்த செடிகளை கஷ்டப்பட்டு விலக்கி அந்த குளத்தை நோக்கி ஓடினான். அந்த குளத்தில் குழந்தை ஒன்று விழுந்து தத்தளித்தபடி இருக்க, சட்டென்று அதில் குதித்து அந்த குழந்தையை, தூக்க முடியாமல் தூக்கி கொண்டு வெளியே வந்தான். அதற்குள் குழந்தை ஏராளமாய் தண்ணீரை குடித்து மயங்கிய நிலையில் இருந்தது, இவன் யாராவது ஓடி வாங்க ஓடி வாங்க சத்தம் போட்டான். இவனின் சத்தம் கேட்டு அந்த வீட்டு பின் புற தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் முன் புறம் ஓடி வர குழந்தை மயங்கிய நிலையில் பார்க்கவும் உடனடியாக குழந்தையிடம் இருந்து தண்ணீரை வெளியேற்ற முத்லுதவிகள் செய்தனர். கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் வெளியே வர அந்த குழந்தைக்கு மூச்சு வந்தது, இருந்தாலும் பக்கத்தில் இருந்த ஹாஸ்பிடலுக்கு அந்த குழந்தையின் அம்மாவை அழைத்து கூட்டி கொண்டு போக சொன்னார்கள். ராஜேந்திரன் அதன் பின் மீண்டும் இந்த வழியாக வந்து அங்கிருந்தவர்களிடம் முதலாளி உரம் எடுத்து வர சொன்னதாக சொன்னான். மாட்டு வண்டி பிடித்து உரமூட்டைகளுடன் இவனும் ஏறி அங்கு சென்ற போது முதலாளி அவனை கோபித்து கொண்டார். ஒரு சில வார்த்தைகள் திட்டவும் செய்தார். விளையாட்டு புள்ளைங்கறது சரியா போச்சு பாரு, இப்ப இரண்டு மணி நேரம் லேட்டு, உரம் போட்டு முடியறதுக்கு பொழுது சாஞ்சிடும், எல்லாம் என்னைய் சொல்லணும், உன்னை அனுப்பிச்சேன் பாரு..புலம்பியபடியே இருந்தார். ராஜேந்திரனுக்கு கவலையாகி விட்டது. இவன் உண்மையை சொல்ல வந்த போதும் அதை காது கொடுத்து கேட்கவே இல்லை. இரவு ஏழு மணிக்கு மேல் ஆகி விட்டது, நிலம் முழுக்க உரம் போட்டு முடிக்க, அதன் பின் தன் ராஜேந்திரனும் அவன் பெற்றோருமே வீட்டுக்கு வந்தனர். அவர்கள் கூட இவனை திட்டிக்கொண்டே வந்தனர். இரவு எல்லோரும் சாப்பிட்டு படுத்து விட்டனர். அப்பொழுது குடிசையின் கதவு தட்டும் சத்தம், எழுந்து சென்று கதவை திறந்தார் ராஜேந்திரனின் தந்தை. வெளியே முதலாளி நின்று கொண்டிருந்தார். ராஜேந்திரன் இருக்கானா? ராஜேந்திரனின் அப்பா நடுங்கி விட்டார், ஐயா அவன் ஏதாவது தப்பு பண்ணிட்டானா? நாந்தான் தப்பு பண்ணிட்டேன், அவன் ஒரு நல்ல காரியம் பண்ணிட்டு ஒண்ணுமே சொல்லாம இருந்திருக்கான், வெளியே வந்த ராஜேந்திரனை அணைத்து கொண்டார். இன்னைக்கு ஒரு குழந்தைய காப்பாத்தி இருக்கே. உனக்கு என்ன வேணும் கேளு தோளை தட்டி கேட்டார். ஒண்ணும் வேணங்கய்யா… தலையாட்டினான், வேணாங்க, அவன் மறுக்க உனக்கு ஆன்லைன் கிளாசுக்கு ஏற்பாடு பண்ணட்டுமா? இதற்கு ராஜேந்திரன் புன்னகையுடன் சரியென்று தலையாட்டினான் அங்கிருந்து சென்ற முதலாளி, மறு நாள் அவர் தோட்டத்திற்கு கூலி வேலை செய்ய வந்த ராஜேந்திரன் வயசை ஒத்த மாணவர்களை அழைத்து உங்களுக்கு வகுப்பு எடுக்கற நேரத்துல இங்க வந்து எல்லோரும் பாடம் கேட்கறதுக்கு நான் ஒரு ஏற்பாடு பண்ணியிருக்கேன். என்று கூரை போட்டு சிமிண்ட் தளமிட்ட இடத்தை காண்பித்தார். அங்கு உயர வகையில் நிறைய பிளாஸ்டிக் நாற்காலிகளும் போடப்பட்டிருந்தது. உங்க வயசுல ராஜேந்திரன் நேத்து அருமையான காரியம் பண்ணிட்டு வந்திருக்கான். அவன் அந்த காரியம் செஞ்சுட்டு அதை பத்தி பெருமை படாம இருந்திருக்கான். அதை பாராட்டி நான் உங்களுக்கு இந்த காரியம் செஞ்சிருக்கேன். நடுவில் பெரிய மேசை மேல் ஐந்தாறு செல்போன்கள் வைக்க பட்டிருந்தது. உங்களுக்கு ஆசிரியர்கள் “ஆன் லைன் பாடம்” எடுக்கும்போது இங்க வந்து உட்கார்ந்து பாடத்தை கவனிங்க. அதுக்கப்புறம் மதியத்துக்கு மேல வேலைக்கு வாங்க. செல்போன் எல்லாத்துலயும் சார்ஜ் போட்டு இன்டர்னெட்டு கனெக்ஷனும் கொடுத்திருக்குது. அவரது தோட்டத்திலும், விவசாய நிலத்திலும் வேலை செய்து கொண்டிருந்த இராஜேந்திரனை போல பத்திருபது மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் அவர் சொன்னது மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. செல்போன் வாங்கி கொடுக்க முடியாமல் தவித்து அங்கு வேலை செய்து கொண்டிருந்த கூலி தொழிலாளிகளான பெற்றோர்களுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. |
||||||||||||||||||
Online class | ||||||||||||||||||
by Dhamotharan.S on 18 Sep 2021 0 Comments | ||||||||||||||||||
|
||||||||||||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|
|