|
||||||||||||||||||
திரும்பி வந்த பூ செடிகள் |
||||||||||||||||||
திரும்பி வந்த பூ செடிகள்
பனி படந்த காடு ஒன்றில் ஒதுக்குப்புறமாய் நான்கைந்து வீடுகள் இருந்தன.அந்த வீடுகளில் வசிப்பவர்கள் தினமும் அந்த காட்டுக்குள் சென்று விறகுகள் பொறுக்கி எடுத்து வந்து பக்கத்தில் இருக்கும் நகரங்களுக்கு சென்று விற்று அதில் வரும் வருமானத்தில் வாழ்ந்து வந்தனர். அந்த வீடுகளில் ‘லம்பா’ என்னும் சிறு பெண் தன் தாய் தந்தையுடன் வசித்து வந்தாள். லம்பா அழகான ‘சுட்டி பெண்’ அவளுக்கு எப்பொழுதும் அவள் வீட்டை சுற்றி பூக்களை வளர்த்து அழகு பார்ப்பதில் கொள்ளை இன்பம். இதனால் அங்குள்ளவர்கள் "பூச்செடி வீடு" என்றே அடையாளம் சொல்லி அழைத்தார்கள். இல்லாவிட்டால் லம்பா வீடு என்றே அழைத்து வந்தார்கள். லம்பாவின் பெற்றோருக்கு இதனால் மிகுந்த பெருமை. எப்பொழுதும் அந்த காட்டை சுற்றி வந்து காவல் காத்து கொண்டிருக்கும் ‘வன தேவதை’ லம்பாவின் வீட்டை தாண்டி போகையில் அங்கிருந்த பூக்கள் பூத்து குலுங்குவதை பார்த்து மயங்கி எப்படியாவது அந்த பூ செடிகளை எடுத்து சென்று விடலாம் என்று இறங்கி வந்தாள். அப்பொழுது இரவு நேரமாகையால் அனைவரும் உறக்கத்தில் இருந்தனர். வன தேவதை கீழே இறங்கி வந்து வீட்டை சுற்றி இருந்த எல்லா பூ செடிகளையும் வேரோடு பறித்து எடுத்து தன் ஆட்களிடம் கொண்டு போய் தன் இடத்தில் சேர்த்து விடும்படி சொல்லி அனுப்பியது. மறு நாள் காலை எழுந்து வெளியில் வந்த லம்பா தன் வீட்டு பூச்செடிகள் அனைத்தும் வேரோடு பிடுங்கி எடுத்து சென்றிருப்பதை கண்டு அழுது கொண்டே எல்லார் வீடுகளுக்கும் சென்று விசாரித்தாள். ஒருவரும் நாங்கள் யாரும் எடுக்கவும் இல்லை, பறிக்கவும் இல்லை என்று சொல்லியது மட்டுமில்லாமல் லம்பாவுடன் சேர்ந்து தேடவும் செய்தார்கள். எங்கும் கிடைக்கவில்லை. லம்பா வீட்டில் அழுது கொண்டே இருப்பதை கண்ட அவள் பெற்றோர் கவலைப்படாதே, மறுபடியும் பூச்செடிகளை நட்டு வைத்து விடலாம் என்று ஆறுதல் சொன்னார்கள். ஆனால்,லம்பா ஒத்து கொள்ளவில்லை. இங்கு அவள் அழுது கொண்டிருக்க, அந்த பூச்செடிகளை எடுத்து சென்ற வன தேவதை அதை எல்லாம் கொண்டு போய் தன் இடத்தில் நட்டு வைத்தாள். அவைகளுக்கு தினம் தினம் தண்ணீர் ஊற்றி கவனிக்க ஆட்களையும் நியமித்தாள். ஒரு மாதம் ஆகியும், அந்த பூச்செடிகள் ஒரு பூ கூட பூக்காமல் காய்ந்த நிலையிலேயே இருந்தன. வன தேவதைக்கு ஒன்றும் புரியவில்லை. இவ்வளவு நன்றாக கவனித்தும் இவை ஏன் பூக்க மறுக்கின்றன? ஒரு நாள் அந்த செடிகளின் அருகே வந்து வருடி கொடுத்தபடி ஏன் பூக்க மறுக்கிறீர்கள்? உங்களுக்கு என்ன குறை? நன்றாகத்தானே உங்களை கவனித்து கொள்கிறேன் என்று விசாரித்தது. பூ செடிகள் வன தேவைதையை பார்த்து தேவதையே நீ வனத்துக்கு அதிபதியாய் இருந்தும் நீ செய்த காரியம் நியாயம்தானா? நாங்கள் தினமும் அந்த சுட்டி பெண்ணை மகிழ்ச்சி படுத்தியபடி நிம்மதியாகத்தானே இருந்தோம். ஆனால் நீ செய்தது என்ன? அநியாயமாய் எங்களை வேரோடு புடுங்கி கொண்டு வந்து பூ பூத்து என்னை சந்தோசப்படுத்து என்றால் எங்களால் எப்படி உன்னை சந்தோசப்படுத்த முடியும்? நீயே சொல். அப்பொழுதுதான் வன தேவதைக்கும் உரைத்தது. ஒரு வேளை நாம் செய்தது தவறோ? அன்று இரவே எல்லா பூச்செடிகளையும் வேரோடு எடுத்து வந்து லம்பாவின் வீட்டில் நட்டு வைத்து விட்டு சென்று விட்டது. மறு நாள் காலையில் லம்பா வெளியே வந்து பார்த்த பொழுது எல்லா பூச்செடிகளும் அவளை எதிர்பார்த்து தங்கள் இலைகளை குலுக்கியபடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தின. லம்பாவிற்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. என்னுடைய பூ செடிகள் என்னிடமே வந்து விட்டன. அவைகளை தொட்டு தடவி மகிழ்ந்தாள். அங்குள்ள எல்லோருக்கும் ஒரே ஆச்சர்யம். அது எப்படி ஒரு மாதம் முன்பு காணாமல் போன பூச்செடிகள் மறுபடி எப்படி வந்தன? இப்பொழுது கூட அந்த வழியாக செல்லும் வன தேவதை அந்த பூச்செடிகள் எல்லாம் மகிழ்ச்சியாய் பூத்து குலுங்கி கொண்டிருப்பதை பார்த்து எந்த பொருளும் அதனதன் இடத்தில் இருக்கும்போதுதான் அழகு என்று நினைத்தது. அது மட்டுமல்ல உழைத்து சேர்த்து வைக்கும் பொருள்கள் அவனுக்கு மட்டுமே உண்மையாக இருக்கும் என்னும் உண்மையையும் உணர்ந்தது. இவை எல்லாவற்றையும் விட இப்பொழுதெல்லாம் லம்பாவின் வீட்டை அங்குள்ளவர்கள் தொலைஞ்ச பூ செடி திரும்ப வந்த வீடு" என்றே அடையாளம் சொல்கிறார்கள். |
||||||||||||||||||
Return flower shrub | ||||||||||||||||||
by Dhamotharan.S on 21 Jul 2021 0 Comments | ||||||||||||||||||
|
||||||||||||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|
|