LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF

“பீனிக்ஸ்” பறவை

“பீனிக்ஸ்” பறவை

 

காரில் வந்து அலுவலக வாசலில் இறங்கிய ராஜா ராமன் கடைசி தடவையாக

காரை தடவி பார்த்தான். தான் ஆரம்ப காலத்தில் இருந்த பொழுது, முதன் முதலில்

வாங்கிய கார், இந்த கார் இவனுடனே பதினைந்து வருடங்களாக இருந்தது. இருந்தது என்பதை விட அவனுடனே வாழ்ந்தது. இவன் எந்த ஊருக்கு வாடிக்கயாளரை பார்க்க கிளம்பினாலும், முந்தைய நாளில் அதனுடன் நண்பனுடன் பேசுவது போல பேசிக்கொள்வான்.

       நாளைக்கு சென்னைக்கு கிளம்பறோம், இரயில்ல போலாம், உன் கூட வந்தா தான்

போன காரியம் நடக்குது, என்ன பண்ணறது? இன்னைக்கு விடிய காலையில கிளம்பறோம், காலையில பத்து மணிக்கு “பார்ட்டிய” பாக்கரோம், சாயங்காலம் வரைக்கும் உனக்கு ரெஸ்ட் அதுக்கப்புறம் இராத்திரி கிளம்புறோம்.வீடு வந்து சேர்றோம்.ரெடியா இரு சொல்லி விட்டு வீட்டிற்கு சென்று ஓய்வு எடுத்து, சொன்னது போல விடியலில் கிளம்பி விடுவான்.

அவனுடைய இராசியோ, அல்லது அவனது காரின் இராசியோ தெரியாது, போன காரியத்துக்கு கை மேல் பலன் கிடைக்கும். வாடிக்கையாளர் பல நாள் தவணையை கொடுத்து விடுவார். ஆர்டரும் அவன் எதிர்பார்க்காத அளவு கிடைத்து விடும். அவனது சந்தோசத்துக்கு அளவே இருக்காது, காரை தட்டி கொடுத்து கொஞ்சுவான்.

       ராஜா ராமன் மெக்கானிக்கல் இஞ்சினியரிங்க் முடித்து விட்டு மற்றவர்களைப்போல்

வேலை தேட நினைக்கவில்லை. அவன் படிக்கும்போதே “காம்பெஸ் இண்டர்வியூ” என்று

கணிணி வேலைக்கு நிறைய பேர் தேர்வாகினர், இவனையும் முயற்சி செய்ய சொன்னார்கள்.

இவன் இருந்த வறுமையான சூழலுக்கும் சீக்கிரம் கிடைக்கும் வேலையை பிடித்துக்கொள் என்றுதான் அவன் நண்பர்கள் வற்புறுத்தினார்கள்.இவன் மனம் ஒத்துக்கொள்ள மறுத்து விட்டது. தான் இயந்திரங்களை பற்றி படித்து விட்டு மற்றொரு துறையில் நுழைய மனசு வரவில்லை. அது மட்டுமல்ல, தான் சொந்தமாக தொழில் செய்யவேண்டும் என்று கல்லூரியில் சேரும்போதே தீர்மானித்திருந்தான்.அதை நிறைவேற்றவே அவன் மனம் நினைத்தது.

       இவர்கள் குடும்பத்தை விட்டு அப்பா மறையும்போது இவனுக்கு வயது பதினைந்துதான் இருக்கும். அப்பாவும் ஏதோ சிறிய கம்பெனியில் ஒரு “பிட்டராக”த்தான் இருந்தார். அப்பொழுதே

அப்பாவுக்கு சாப்பாடு கொண்டு போகும்போது அங்குள்ள இயந்திரங்கள் அவனுக்கு ஒரு பிரமிப்பை தோற்றுவித்திருந்தது. “லேத் மிசின்”, “டிரில்லிங்க் மிசின்” மற்றும், அங்கு வைக்கப்பட்டிருந்த இயந்திரங்கள் இவனுக்கு ஒரு கனவையே தோற்றுவித்திருந்தது.அவனுடைய துரதிர்ஷ்டம், அப்பா காலமானதும், அது வரை சமையலை தவிர எதுவும் தெரியாத அம்மா, பதினைந்து வயதில் இவன், என்ன செய்வது? என்று திகைத்தனர். முதலில் சுதாரித்தது அம்மா தான். இவனை மேற் கொண்டு படிக்க வைத்தாள். பக்கத்து வீடுகளில் பகுதி நேர சமையல்காரியாய் தனக்கு தெரிந்த சமையல் தொழிலையே பிடித்துக்கொண்டாள்..நான்கு வீடுகளில் சமையல் வேலை கிடைத்தது. கணவன் மனைவி இருவரும் வேலை செய்யும் வீடுகளில் காலை சீக்கிரம் கிளம்பி செல்லும் வீடுகளுக்கு முதலில் சென்று சமைத்து விட்டு வந்தாளென்றால் பத்து மணிக்கு கிளம்பி செல்லும் குடும்பத்துக்கு எட்டு மணிக்கு சென்று சமைத்து வைத்து விட்டு வருவாள். இப்படி கிடைக்கும் வருவாய் இவர்கள் இருவருக்கும் போதுமானதாக இருந்தது.

       அம்மாவின் உழைப்பு இவனை மனதை மேலும் நன்கு படிக்க தூண்டியது. நல்ல மதிப்பெண்களுடன் தேறியதால் அரசாங்க இட ஒதுக்கீட்டிலேயே இஞ்சினியரிங்க் படிக்க வாய்ப்பு வந்தது. இருந்தாலும் மேற்கொண்டு செலவுகளுக்கு அம்மாவின் கொஞ்சம் நஞ்சம் இருந்த நகைகள் காணாமல் போயின.

       எப்படியோ படிப்பை முடித்தவுடன், வெளி உலகை அவன் சந்தித்தபோது இவனுடைய குறிக்கோள்கள் கடுமையான சோதனைகளை சந்தித்தன.. இருந்தாலும் மனம் தளராமல் ஒவ்வொரு வங்கிகளாக ஏறி இறங்கினான். அவர்கள் கேட்ட “பாதுகாப்பு தொகை” அல்லது சொத்து என்பது இவனிடம் இல்லாததால், பல இடங்களில் ஏமாற்றங்களையே சந்தித்தான்.

       சரி இலட்சியத்தை மறந்து இனி வேலைக்காவது சேர்ந்து விடலாம், அம்மாவுக்காவது உபயோகமாய் இருக்கும் என்று முடிவு செய்து ஒரு கம்பெனியை அணுகி வேலை கேட்டான். நல்லா படிச்சு மார்க் வாங்கியிருக்கே, ஏன் இத்தனை நாளா உனக்கு வேலை யாரும் கொடுக்கலையா? என்று கம்பெனி முதலாளி அவனை கேட்டார். இவன் தன்னுடைய இலட்சியத்தை சொன்னான். அதில் தோற்று போனதால் எங்காவது ஒரு இடத்தில் வேலை பார்த்தாவது அம்மாவுக்கு உதவலாம், என்று வந்ததாக சொன்னான்.அந்த கம்பெனி முதலாளி அவனை பார்த்து தம்பி ஒரு பட்டதாரியை வச்சு வேலை வாங்கற அளவுக்கு இந்த கம்பெனி பெரிசில்லை, இருந்தாலும் நானும் அலைஞ்சு கிலைஞ்சு, இப்பத்தான் இந்த கம்பெனியை ஓரளவுக்கு கொண்டு வந்திருக்கேன்.

       நீ உன்னை பத்தி சொன்னதுனால நான் உனக்கு ஒரு வேலை தர்றேன், எனக்கு இப்ப “பத்தாயிரம் பீஸ்” ஆர்டர் இருக்கு, ஆனா எங்கிட்ட இருக்கற ஆளுகளை வச்சு என்னால செய்ய முடியாதுன்னு நினைக்கிறேன், உனக்கு ஒரு வாய்ப்பு தர்றேன், நீ அதுக்குள்ள அந்த ஒரு அஞ்சாயிரம் பீஸ் ரெடி பண்ணி கொடுத்தா, உனக்கு தொடர்ந்து வேலை கொடுப்பேன். உன் இலட்சியத்துக்கும் வேலை கொடுக்கற மாதிரி இருக்கும் என்ன சொல்றே?

       அவரின் அந்த பேச்சு, இவனின் ஆர்வத்தை தூண்டி விட்டது. அவனுடன் படித்த நண்பர்களை பார்த்து உங்களுக்கு தெரிந்த அல்லது நொடிந்து போன சின்ன கம்பெனி தற்போது “லீசுக்கு” கிடைக்குமா? என்று கேட்டு அலைந்தான். அவனுடைய அதிர்ஷ்டம், சற்று தொலைவிலேயே, நன்கு ஓடிக்கொண்டிருந்த கம்பெனியின் முதலாளி காலமாகி விட, அதனை மூடி விட உத்தேசித்திருப்பதாகவும், இவன் போனால் அதனை தொடர்ந்து நடத்த முயற்சிக்கலாம் என்று சொன்னார்கள்.அப்பொழுதே கிளம்பியவன், அந்த முதலாளியின் மனைவியை பார்த்து தான் எடுத்து செய்வதாக கூறினான். அந்த அம்மையார், வெளி நாட்டில் வசிக்கும் தன் மகன் வீட்டுக்கு தான் செல்ல இருப்பதாகவும், உன்னால் முடிந்தால் நடத்திக்கொள்ளலாம் என்று சொல்லி விட்டார்கள்.

       இதற்கு முக்கிய காரணம் அவனின் அம்மா. அதிர்ஷ்ட வசமாக அவர்கள் வீட்டிலும் சமையல் வேலை செய்து கொண்டிருந்ததால், மேற்கொண்டு அம்மாவின் நடத்தையை நம்பி கொஞ்சம் பணமும் கையில் கொடுத்தார்கள்.

       அங்கு வேலை செய்து கொண்டிருந்த ஆட்களையே வைத்து அந்த முதலாளி கேட்ட “அஞ்சாயிரம் பீசை” குறித்த காலத்தில் கொண்டு போய் கொடுத்தான். மேலும் அவரிடம் ஆர்டர்கள் வாங்கி வந்து செய்து கொடுத்தான்.

       அன்று ஆரம்பித்த அவனது வளர்ச்சி அவனை மெல்ல உயர கொண்டு செல்ல ஆரம்பித்தது.அடுத்த வருடமே அந்த காரை வாங்கி விட்டான். அதன் பின், அவன் அதிர்ஷ்டமோ, அந்த காரின் அதிர்ஷ்டமோ மேலும் மேலும் முன்னேற ஆரம்பித்தான்.

       வெளி நாடு சென்றிருந்த அம்மாள் நான்கு வருடங்கள் கழித்து வந்தபோது, இவன்

இந்த கம்பெனியை நடத்த, முதலில் அவர்கள் கொடுத்த பணத்தையும், கம்பெனியில் இருந்த  பொருட்கள் அனைத்துக்கும் வாடகைத்தொகையாகவும், கணக்கை ஒப்படைத்தான். அவனின் நேர்மையை பார்த்த அந்த அம்மையார் குறைந்த விலைக்கு அந்த கம்பெனியை விற்க சம்மதித்தாள். இவனின் தகுதிக்கு மேல் அந்த தொகை இருந்தாலும், அங்கும் இங்கும் கடனை வாங்கி, மொத்தமாக அந்த கம்பெனியை விலை பேசி முடித்தான்.இப்பொழுது இவனும் ஒரு கம்பெனிக்கு முதலாளி ஆகி விட்டான்.

         அவனின் வருமானம் நல்ல முறையில் ஓடிக்கொண்டிருந்தது, வங்கியில் இப்பொழுது அவனுக்கு கடன் தர தயாராக இருந்தனர்.கடனை பெற்றவன், இந்த கம்பெனியை வாங்குவதற்கு சுற்று முற்றும் வாங்கியிருந்த கடன்களின்  நெருக்குதலுக்கு பயந்து, கம்பெனி வளர்ச்சிக்கு பாங்கி கொடுத்த பணத்தை அந்த கடன்களுக்கு கொடுத்து அடைத்தான்.

       இப்பொழுது பாங்கியில் வாங்கிய கடனுக்கு தவணைகள் கட்ட முடியாமல், மேலும்

வேறு வங்கிகளில் கடன் வாங்க ஆரம்பித்தான்.ஒரு பக்கம் கம்பெனியின் வளர்ச்சி, மறு புறம்

அவன் வாங்கிய கடனின் வளர்ச்சி, அவனை வளர விடாமல் தடுக்க ஆரம்பித்தது.

       வருடங்கள் பதினைந்து ஓடி விட்டது, வங்கி கடனுக்காக அவனது கம்பெனியை எடுத்துக்கொள்வதாக அறிவித்து விட்டது.இன்றோ நாளையோ கம்பெனி வங்கியின் வசமாக்கப்படலாம். இன்றுடன் அவன் தன் காரை அந்த கம்பெனி அலுவலகத்தில் ஒப்படைத்து விட முடிவு செய்து கடைசி தடவையாக அவனின் அலுவலகத்துக்குள் வந்திருக்கிறான்..

       ஒரு வாரம் ஓடியிருந்தது. ராஜா ராமன் வீடு அமைதியாய் இருந்தது. அம்மா பூஜை அறையில் இருந்தார்கள். குழந்தைகள் பள்ளிக்கூடம் சென்று விட்டார்கள். மனைவி சமையலறையில் ஏதோ வேலையில் இருந்தாள். ராஜா ராமன் முன்னறையில் நாற்காலியில் அமைதியாய் உட்கார்ந்திருந்தான். அனைத்தும் போய் விட்டதே என்ற கவலை அவன் முகத்தில் இல்லாவிட்டாலும் அடுத்து என்ன செய்ய? என்ற கேள்வி அவன் மனதில் தொற்றிக்கொண்டிருந்தது.வீட்டில் மனைவிக்கும், அம்மாவுக்கும் இவன் நிலைமை தெரிந்திருந்ததால், அவனை என்ன? ஏது? என்று கேட்டு தொந்தரவு செய்யாமல் விலகியே இருந்தனர். அவனின் குணாதிசயங்களை அவர்கள் அறிவார்கள்.

       வெளியே யாரோ அழைக்கும் குரல் கேட்டு  எட்டி பார்த்த ராஜா ராமன் காம்பவுண்டு கேட் அருகில் ஒருவன் நிற்பதை பார்த்தான். “இவன் முதன் முதலில் இவனுக்கு ஆர்டர் கொடுத்த கம்பெனியில் வேலை செய்பவன் ஆயிற்றே” சிந்தனையுடன் அவனை உள்ளே அழைத்தான்.

       ஐயா உங்களை கையோட கூட்டிட்டு வர சொன்னாங்க !

அப்படியா கொஞ்சம் நில்லு. உள்ளே சென்று மனைவியிடமும், அம்மாவிடமும் சொல்லிவிட்டு

வந்தவனுடன் கிளம்பினான்.

       முதன் முதலில் வேலை கேட்டு நுழைந்தபோது எப்படி இருந்ததோ, அதே போல்

இப்பொழுதும் இருந்தது, அந்த கம்பெனி. ஆனால் கம்பெனி முதலாளி மட்டும் வயதானவராக தோற்றமளித்தார்..

       வா வா..இப்படி உட்கார், எல்லாம் கேள்விப்பட்டேன். அவர் முகத்தில் மெல்லிய புன்னகை. இவன் எனக்கு எந்த வருத்தமுமில்லீங்க? அடுத்து என்ன செய்யணுமின்னு யோசிச்சுட்டு இருந்தேன். ஏதாவது வேலைக்கு போலாமுன்னு இருக்கியா?

இல்லைங்க, அன்னைக்கு சொன்னதுதான் இப்பவும், உறுதியுடன் பேசினான்.

இப்ப எனக்கு அவசரமா “பத்தாயிரம் பீஸ்” தேவைப்படுது, எனக்கு உன் ஞாபகம் வந்தது.

அதான் வரச்சொன்னேன்.

அவரின் மறைமுக ஆதரவை உணர்ந்து கொண்டான். கண்டிப்பா செஞ்சு கொடுக்கிறேன், எத்தனை நாள் டயம் கொடுப்பீங்க?

சரியா ஒரு வாரம், இந்த இந்த அட்ரசை வெச்சுக்க, இவர் கம்பெனிய மூடிட்டு மகள் கூட இருக்கறதுக்கு ஆஸ்திரேலியா போகப்போறாரு. நான் சொல்லியிருக்கேன்.ஒரு கார்டை கையில் கொடுக்கிறார். ஒரு வாரத்துக்குள்ள நீங்க கேட்ட “பீசை”கொடுத்திடறேன்.. சொல்லி விட்டு வெளியே வந்தவனின் மனதில் மறுபடியும் வெல்ல வேண்டும் என்ற ஆர்வம் மட்டுமே மனதில் நின்று கொண்டிருந்தது.

Feeniks Bird
by Dhamotharan.S   on 30 May 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
உணர்ந்த போது உணர்ந்த போது
புளிய மரம் புளிய மரம்
விஞ்ஞானியின் காதல் விஞ்ஞானியின் காதல்
புதிதாய் பிறப்போம் புதிதாய் பிறப்போம்
கடந்த போன நூற்றாண்டுகளில் எப்படி இருந்திருக்கும் சமூக கதைகள் கடந்த போன நூற்றாண்டுகளில் எப்படி இருந்திருக்கும் சமூக கதைகள்
சண்டை சண்டை
திருடப்போனவன் திருப்பதி கிளம்பி போன கதை - கதை சொல்லி திருடப்போனவன் திருப்பதி கிளம்பி போன கதை - கதை சொல்லி
காத்திருக்கிறாள் காத்திருக்கிறாள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.