பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. இத்தலத்தில் உள்ள உலகளந்த பெருமாள் வலது கால் ஊன்றி இடது கால் தூக்கிய நிலையில் இருப்பது காண்பதற்கரிய சிறப்பாகும். இக்கோயிலின் எதிரில் உள்ள ஆஞ்சநேயர் சதுர்புஜத்துடன் கையில் சங்கு, சக்கரத்துடன் அருள்பாலிக்கிறார்."கார்வானத்துள்ளாய் கள்வா' என இத்தலத்து பெருமாளின் பெயரையும் சேர்த்து திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது இத்தலம்.
உலகளந்த பெருமாள் கோயிலுக்குள் இருக்கும் திருநீரகம், திருக்காரகம் ஆகிய இரண்டிற்கும் இல்லாத தனிச்சிறப்பு பெற்றது இத்தலம். "நீரகத்தாய்", "காரகத்தாய்' என திவ்ய தேசத்தை மட்டும் மங்களாசாசனம் செய்த திருமங்கையாழ்வார், இதை மங்களாசாசனம் செய்யும் போது மட்டும் பெருமாளின் பெயரையும் சேர்த்து மங்களாசாசனம் செய்து விட்டார்.
திருங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்ய இங்கு எழுந்தருளிய போது இந்தக்கோயிலில் உள்ள திருநீரகம், திருக்காரகம் ஆகிய இந்த மூன்று தலங்களும் "திருஊரகத்துடன்' வந்து விட்டதா?. அல்லது வெவ்வேறு இடங்களில் இந்த திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்தாரா? அல்லது எந்த காலச்சூழ்நிலையில் இந்த மூன்று திவ்ய தேசங்கள் இங்கு வந்தது என்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. |