|
|||||
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. |
|||||
கள்ளக்குறிச்சி மாவட்டம், வானவரெட்டி என்ற ஊரில், 13ம் நுாற்றாண்டைச் சேர்ந்த இரண்டு கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
கள்ளக்குறிச்சி மாவட்டம் வானவரெட்டி கிராமத்தின் ஏரிக்கரையில், பறவைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த குயிலி தன்னார்வ அமைப்பினர், கல்வெட்டுகள் இருப்பதை அறிந்து, யாக்கை மரபு அறக்கட்டளைக்கு தகவல் அளித்தனர்.
'யாக்கை'யின் சுதாகர் நல்லியப்பன், குமரவேல் ராமசாமி, அருண்ராஜா, கார்த்திக், வெங்கடேஷ் தனபால் ஆகியோர், அவற்றை மீட்டு ஆய்வு செய்தனர். அவை, ஏரிக்கரையில் உள்ள காளியம்மன், அய்யனார் கோவில்களின் கல்வெட்டுகள் என்பது தெரிய வந்தன.
தற்போதைய சேலம் மாவட்டத்தின் கிழக்கு பகுதி, பெரம்பலுார், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலுார் மாவட்டங்களின் பெரும் பகுதிகளை, 'நடுநாடு' என்ற பெயரில் வாணகோவரையர் என்ற சிற்றரச மரபினர் ஆண்டனர்.
பிற்காலச் சோழர்களின் ஆட்சி காலத்திலும், தனி தலைநகரம் அமைத்து ஆட்சி செய்யும் வகையில் நிர்வாக கட்டமைப்பை கொண்டிருந்தனர்.
இவர்களின் ஆட்சியில், பெருந்தெய்வ வழிபாடுடன், நாட்டார் தெய்வ வழிபாடும் சிறப்பாக இருந்துள்ளன. அவற்றை உறுதிப்படுத்தும் வகையில், ஏழு பிடாரி மற்றும் அய்யனார் கோவில்களுக்கு தானம் அளித்த செய்திகள் கல்வெட்டுகளில் உள்ளன.
வானவரெட்டி காளி கோவிலுக்கு வெளியில் உள்ள கல்வெட்டு, மூன்றாம் குலோத்துங்கனின் 15ம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டது. அதில், பொன்பரப்பினான் என்ற சிற்றரசன், இங்கு ஏழு பிடாரிகளுக்கு கோவில் கட்டி, பூஜைகள் செய்ய தானம் வழங்கிய செய்தி பதிவாகி உள்ளது. மேலும், இவ்வூரைப் பற்றிய குறிப்பில், 'மிலாடாகிய ஜனநாத வளநாட்டு, வடநரையூர் கூற்றத்து வாணபிராட்டி' என, கூறப்பட்டுள்ளது.
அதாவது, வாணபிராட்டி என்பதே தற்போது வானவரெட்டி என்று மருவி உள்ளது. கல்வெட்டின் கடைசி பகுதி சிதைந்துள்ளது. இதில், ஆண் ஒருவர் கைகூப்பியும், அருகில் பெண் ஒருவர் அல்லி மொட்டை ஏந்தியும் உள்ளனர்.
இவர்கள், பிடாரி கோவில்களை கட்டியவர்களாக இருக்கலாம். பொதுவாக பழங்காலத்தில் சப்த மாதர் எனும் பெயரில் வணங்கப்பட்ட பெண் தெய்வங்கள், ஏழு பிடாரிகள் என்ற பெயரில் இங்கு வணங்கப்பட்டு, பின் காளி கோவிலாக மாறி உள்ளது.
அதே ஏரிக்கரையில் அமைந்துள்ள அய்யனார் கோவிலில், 80 செ.மீ., உயரம், 110 செ.மீ., அகலம் உள்ள அய்யனார் சிற்பம் உள்ளது. அதன் வளாகத்தில், 190 செ.மீ., உயரம், 160 செ.மீ., அகலம் உள்ள யானை சிற்பமும் உள்ளது. இவை தொன்மையானவை.
அதே கோவிலுக்கு சொந்தமான கல்வெட்டில், ஒரு துண்டு மட்டும் கிடைத்துள்ளது. அது, மூன்றாம் ராஜராஜன் பெயருடன் துவங்குகிறது. மற்ற தகவல்கள் உள்ள கல்வெட்டு துண்டுகள் மண்ணுக்குள் புதைந்திருக்கலாம்.
இது குறித்து, யாக்கை குமாரவேல் ராமசாமி கூறியதாவது:
இந்த கல்வெட்டுகளை, கல்வெட்டு ஆய்வாளர் பூங்குன்றன் படித்து தகவல்களை சொன்னார். அதன்படி, ஊருக்கொரு பிடாரி, ஏரிக்கொரு அய்யனார் எனும் பழமொழிக்கு ஏற்ப இங்கு, 800 ஆண்டுகளாக அருகருகே பிடாரியும், அய்யனாரும் கோவில் கொண்டுள்ளனர்.
இது போன்ற கிராம கோவில்களின் திருப்பணிகளுக்கும் அரசன் தானம் அளித்துள்ளதை அறிய முடிகிறது.
இவ்வாறு அவர் கூறினார். |
|||||
by Kumar on 01 May 2024 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|