LOGO
  முதல் பக்கம்    மற்றவை    சிறப்புக்கட்டுரை Print Friendly and PDF

2015ல் உலகம் - முக்கிய நிகழ்வுகள் ஒரு பார்வை !!

ஜனவரி 9 : இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபட்ச தோல்வி. மைத்ரிபாலா சிறீசேனா தேர்தலில் வெற்றி பெற்று இலங்கையின் 6-ஆவது அதிபரானார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அவர் போட்டியிட்டார். மகிந்த ராஜபட்சவின் கீழ் சுகாதாரத் துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் இவர். கூட்டணியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க பிரதமரானார்.

ஜனவரி 9 : "சார்லி ஹெப்டோ' பத்திரிகை அலுவலகத் தாக்குதலில் ஈடுபட்டு, தலைமறைவாக இருந்த இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அனுதாபிகளான ஷெரீஃப் குவாஷி - சயீது குவாஷி சகோதரர்களை பிரான்ஸ் போலீஸார் சுட்டுக் கொன்றனர். யூதர்களுக்கான பல்பொருள் அங்காடியில் தாக்குதல் நிகழ்த்திய மற்றொரு பயங்கரவாதியும் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜனவரி 11 : "சார்லி ஹெப்டோ' படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கான பிரம்மாண்ட அஞ்சலி ஊர்வலத்தில் உலகத் தலைவர்கள் பங்கேற்றனர்.

ஜனவரி 11 : வங்கதேசத்தில் தலைமை நீதிபதியாக நீதிபதி எஸ்.கே. சின்ஹா நியமிக்கப்பட்டார். ஹிந்து மதத்தைச் சேர்ந்த முதல் தலைமை நீதிபதி அவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 24 : ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் பிணைக் கைதியாக இருந்த ஜப்பானியர் ஹருனா யுகாவா தலை துண்டித்துப் படுகொலை செய்யப்பட்டார்.

ஜனவரி 26 : கிரீஸ் நாட்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், அரசின் பொருளாதார சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராகப் பிரசாரம் செய்த அலெக்ஸிஸ் ஸிப்ராஸ் அமோக வெற்றி பெற்றார்.

ஜனவரி 26 : அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற போட்டியில், கொலம்பியாவின் பாலினா வேகா பிரபஞ்ச அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜனவரி 26 : இலங்கை அதிபர்களின் பதவிக் காலத்தை ஆறு ஆண்டுகளிலிருந்து ஐந்து ஆண்டுகளாகக் குறைப்பதாக அதிபர் சிறீசேனா அறிவித்தார்.

ஜனவரி 29 : 2014-ஆம் ஆண்டு மார்ச் மாதம் மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதாகவும், அதிலிருந்த 239 பேரும் உயிரிழந்ததாகவும் மலேசிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

ஜனவரி 30 : இலங்கையின் தலைமை நீதிபதியாக கனகசபாபதி ஸ்ரீபவன் பொறுப்பேற்றார். இலங்கையில் அந்தப் பதவியை ஏற்ற இரண்டாவது தமிழர் அவர்.

ஜனவரி 30 : பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திலுள்ள ஷியா பிரிவு மசூதியில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் சிறுவர்கள் உள்பட 61 பேர் கொல்லப்பட்டனர்.

பிப்ரவரி 2 : எகிப்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபர் முகமது மோர்ஸிக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தில், 13 போலீஸாரைக் கொன்ற குற்றத்துக்காக 183 பேருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை அந்த நாட்டு நீதிமன்றம் உறுதி செய்தது.

பிப்ரவரி 11 : ஆப்பிரிக்காவிலிருந்து ஐரோப்பிய நாடுகளை நோக்கிச் சென்ற அகதிகள் படகு மத்தியதரைக் கடலில் கவிழ்ந்து 300 பேர் உயிரிழந்தனர்.

பிப்ரவரி 22 : பயங்கரவாதக் குற்றச்சாட்டின்கீழ் மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் கைது செய்யப்பட்டார்.

பிப்ரவரி 25 : யேமனின் முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலே, தனது 33 ஆண்டுகால ஆட்சியில், 3,200 கோடி டாலர் முதல் (சுமார் ரூ.2 லட்சம் கோடி) 6,000 கோடி டாலர் வரை (சுமார் ரூ.4 லட்சம் கோடி) ஊழல் செய்திருப்பதாக ஐ.நா. தெரிவித்தது.

பிப்ரவரி 28 : ரஷியாவின் முன்னாள் துணைப் பிரதமரும், மக்கள் அபிமானம் பெற்ற எதிர்க்கட்சித் தலைவருமான போரிஸ் நெம்ட்ஸோவ் படுகொலை செய்யப்பட்டார்.

மார்ச் 9 : ஆப்பிள் நிறுவனத்தின் "ஸ்மார்ட்' கைக்கடிகாரங்கள் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டன.

மார்ச் 13 : பயங்கரவாதக் குற்றச்சாட்டின் கீழ், மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீதுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

மார்ச் 15 : பாகிஸ்தானின் லாகூர் நகரில் இரு கிறிஸ்தவ தேவாலயங்களில் தலிபான் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர்.

மார்ச் 18 : இஸ்ரேலில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமோக வெற்றி பெற்று, மீண்டும் அந்த நாட்டின் பிரதமரானார்.

மார்ச் 20 : யேமன் தலைநகர் சனாவிலுள்ள பல்வேறு ஷியா பிரிவு மசூதிகளில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 142 பேர் உயிரிழந்தனர்.

மார்ச் 22 : போலந்து நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியன் ஹெர்பா என்பவர் "தைபே 101' கட்டடத்தின் 3,139 படிகளையும் மிதி வண்டியை ஓட்டியபடியே ஏறி கின்னஸ் சாதனை படைத்தார்.

மார்ச் 24 : பிரான்ஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் ஜெர்மன்விங்ஸ் விமானம் விழுந்து நொறுங்கியதில், அதிலிருந்த 150 பேர் உயிரிழந்தனர். அதனை செலுத்திய விமானி, வேண்டுமென்றே விமானத்தை மலையில் மோதச் செய்தது விசாரணையில் தெரியவந்தது.

ஏப்ரல் 2 :
கென்யாவின் காரிஸா பல்கலைக்கழகத்தில் சோமாலியாவைச் சேர்ந்த அல்-ஷெபாப் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 147 மாணவர்கள் உயிரிழந்தனர்.

ஏப்ரல் 2 : ரஷியாவையொட்டிய கடல் பகுதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 56 பேர் உயிரிழந்தனர். 63 பேர் மீட்கப்பட்டனர்.

ஏப்ரல் 4 : 100 வயது ஜப்பானியப் பெண் மீகோ நாகோகா, 1,500 மீட்டர் தொலைவு நீச்சலடித்து உலக சாதனை புரிந்தார்.

ஏப்ரல் 10 : 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணமான ஜகியுர் ரஹ்மான், பாகிஸ்தானின் லாகூர் உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து சிறைக் காவலிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

ஏப்ரல் 25 :
நேபாளத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திலும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பின்னதிர்விலும் 8,349 பேர் உயிரிழந்தனர். 17,870 பேர் காயமடைந்தனர்.  ரிக்டர் அளவுகோலில் 7.9 அலகுகளாகப் பதிவான அந்த நிலநடுக்கத்துக்கு, இந்தியாவில் 62 பேர் பலியாகினர்.

மே 3  : கருத்து சுதந்திரத்தை வலியுறுத்தும் வகையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம், டல்லாஸ் நகர் அருகே கல்வெல் அரங்கில் முகமது நபியின் கேலிச் சித்திரம் வரையும் போட்டி நடத்தப்பட்டது. அப்போது அங்கு காரில் வந்த இரு மர்ம நபர்கள் துப்பாக்கி தாக்குதலில் ஈடுபட்டனர். அப்பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீஸார், அவர்கள் இருவரையும் சுற்றி வளைத்து சுட்டுக் கொன்றனர்.

மே 8 : பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் பாகிஸ்தான் ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதில், பிலிப்பின்ஸ், நார்வே மற்றும் இந்தோனேசிய நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் உள்ளிட்ட ஏழு பேர் உயிரிழந்தனர். அவர்கள் கலந்து கொள்ளச் சென்ற நிகழ்ச்சியில் பிரதமர் நவாஸ் ஷெரீஃபும் பங்கு கொள்வதாக இருந்தது. பிரதமர் நவாஸ் ஷெரீஃபைக் குறிவைத்தே அந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக தலிபான் கூறியது.

மே 8 : பிரிட்டன் பொதுத் தேர்தலில் தொங்கு நாடாளுமன்றம் அமையும் என கருத்து கணிப்புகள் தெரிவித்திருந்த நிலையில் டேவிட் கேமரூன் அறுதிப் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் ஆனார்.

மே 11 : குஜராத் வம்சாவளியைச் சேர்ந்த ப்ரீத்தி படேல் பிரிட்டன் அமைச்சராகப் பதவியேற்றார்.

மே 12 : ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாண சட்டசபைக்கு முதன் முறையாக தேர்வான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டேனியல் மூக்கே பகவத் கீதை சாட்சியாகப் பதவிப் பிரமாணம் செய்தார்.

மே 13 : ஆப்கன் தலைநகர் காபூலில் பார்க் பேலஸ் விடுதியில் தங்கியிருந்த 4 இந்தியர்கள் உள்பட 14 பேரை தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.

மே 13 : பாகிஸ்தானின் கராச்சி நகரில், பேருந்தில் பயணம் செய்த 16 பெண்கள் உள்பட 45 ஷியா பிரிவு முஸ்லிம்களை போலீஸ் சீருடையில் வந்த இஸ்லாமிய தேச பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.

மே 16 : எகிப்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு ஆதரவாளர்களுடன் இணைந்து சிறையைத் தகர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் பிரதமர் முகமது மோர்ஸி, முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியின் தலைவர் முகமது பதி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோருக்கு கெய்ரோ குற்றவியல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

மே 23 : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள அமெரிக்கன் ரிவர் கல்லூரியில் பயின்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 11 வயது தனிஷ்க் ஆபிரகாம், கணக்கு, அறிவியல், அயல் மொழி ஆகிய பிரிவுகளில் பட்டம் வென்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினான். அமெரிக்க அதிபர் ஆவதே தனது லட்சியம் எனத் தெரிவித்துள்ளான் தனிஷ்க்!

ஜூன் 2 : சீனாவின் யாங்ஸி நதியில் 456 பயணிகளைச் ஏற்றிச் சென்ற உல்லாசக் கப்பல் திடீரென மூழ்கி விபத்துக்குள்ளானதில் 396 பேர் உயிரிழந்தனர்.

ஜூன் 10 :  இலங்கையில் மைத்ரிபாலா சிறீசேனா அமைச்சரவையில் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யாவுக்குத் துணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. முந்தைய மகிந்த ராஜபட்ச அமைச்சரவையிலும் ஜெயசூர்யா துணை அமைச்சர் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூன் 26 : அதிபர் மைத்ரிபாலா சிறீசேனா இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார்.

ஜூன் 27 : ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல் முறையாக இயந்திர மனிதர்களுக்கு (ரோபோட்) திருமணம் செய்து வைக்கப்பட்டது. இத்திருமண விழாவில் கலந்து கொண்ட இளம் ஜோடிகள் முத்தமிட்டு, கேக் வெட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ஜூலை 14 : 12 ஆண்டுகள் இழுபறியாக இருந்து வந்த ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறியது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் போர்ப் பதற்றம் தணிந்ததுடன், அமெரிக்கா உள்ளிட்ட மேலைநாடுகளுடனான ஈரானின் உறவு சகஜ நிலைக்குத் திரும்பியது.

ஆகஸ்ட் 13 : சீனாவின் தியான்ஜின் நகரில் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 173 பேர் உயிரிழந்தனர்; 700-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த தீ விபத்தில், துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான கார்களும் எரிந்து நாசமாயின.

ஆகஸ்ட் 16 : பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் அமைச்சர் ஷுஜா கான்ஸாதா பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டார். தனது இல்லத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில், மேலும் 18 பேர் கொல்லப்பட்டனர்.

ஆகஸ்ட் 18 : இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான நல்லாட்சிக் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றதாக அறிவிப்பு.

ஆகஸ்ட் 21 : இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்பு.

செப்டம்பர் 3 : இலங்கையில் இன நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக, தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த ஆர். சம்பந்தன் எதிர்கட்சி தலைவராக நியமனம்.

செப்டம்பர் 3 : 3 வயது அகதிச் சிறுவனின் சடலம் துருக்கி கடற்கரைப் பகுதியில் கரை ஒதுங்கி கிடந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இந்த குழந்தையின் மரணத்திற்கு ஐரோப்பிய நாடுகள்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று துருக்கி பிரதமர் எர்டோகன் தெரிவித்தார்.

செப்டம்பர் 4 : இலங்கையில் அமைச்சர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 42 பேருக்கு, அதிபர் மைத்ரிபாலா சிறீசேனா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

செப்டம்பர் 11 : இலங்கையில் 2001 முதல் 2009 ஆண்டு வரை நடைபெற்ற போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை ஐ.நா. மனித உரிம ஆணையம், இலங்கை அரசிடம் ஒப்படைத்தது.

செப்டம்பர் 15 : மால்கம் டர்ன்புல் ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராகத் தேர்வு. உட்கட்சிப் போரில், டோனி அபோட் பிரதமர் பதவியை இழந்தார்.

செப்டம்பர் 16 : நேபாள நாடாளுமன்றத்தில் புதிய அரசியல் சாசன சட்டம் நிறைவேறியது.

செப்டம்பர் 24 : சவூதி அரேபியாவில் ஹஜ் புனித யாத்திரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 22 இந்தியர்கள் உள்பட 769 பேர் உயிரிழந்தனர்.

அக்டோபர் 12 : நேபாளத்தின் 38-ஆவது பிரதமராக கே.பி.சர்மா ஒலி (63) தேர்வு. இரு துணைப் பிரதமர்களுடன் பதவியேற்பு.

அக்டோபர் 20 : கனடா நாடாளுமன்றத் தேர்தலில் சுதந்திரக் கட்சியின் ஜஸ்டின் ட்ரூடோ அமோக வெற்றி பெற்றுப் பிரதமராகத் தேர்வு.

அக்டோபர் 31 : எகிப்தின் ஷரம் அல்-ஷேக் ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு 224 பயணிகளை ஏற்றிச் சென்ற ரஷிய விமானம் எகிப்தில் நொறுங்கி விழுந்தது. இஸ்லாமிய தேச பயங்கரவாதிகள் இதற்குப் பொறுப்பேற்றனர்.

நவம்பர் 13 : மியான்மர் நாடாளுமன்றத் தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையில் தேசிய ஜனநாயகக் கட்சி அமோக வெற்றி. ஆயினும், தற்போதைய சட்டப்படி அவர் அந்நாட்டில் பிரதமர் பதவி வகிக்க முடியாது.

நவம்பர் 13 : பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பல்வேறு இடங்களில் நிகழ்ந்த தொடர் பயங்கரவாதத் தாக்குதலில் 130 பேர் உயிரிழந்தனர். இஸ்லாமிய தேச பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த 8 பேர் இத்தாக்குதல்களை நிகழ்த்தினர்.

நவம்பர் 24 : ரஷிய போர் விமானத்தை சிரியாவையொட்டிய எல்லைப் பகுதியில் துருக்கி போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தின. தங்கள் நாட்டின் வான் எல்லைக்குள் ரஷிய போர் விமானம் அத்துமீறியதாக துருக்கி குற்றஞ்சாட்டியது.

நவம்பர் 26 : இஸ்லாமிய தேச பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் ரஷியா - பிரான்ஸ் ஒருங்கிணைந்து செயல்பட ஒப்பந்தம் ஏற்பட்டது.

டிசம்பர் 9 : ஆண்டின் சிறந்த மனிதராக ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெலைத் தேர்வு செய்தது பிரபல ஆங்கில வார இதழ் "டைம்'.

டிசம்பர் 12 : பருவநிலை மாற்றம், புவி வெப்பமாதலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக பாரீஸில் நடைபெற்ற ஐ.நா. மாநாட்டில் 196 நாடுகள் உடன்படிக்கை. புவி வெப்பமாதல் நடவடிக்கைகளில் வளரும் நாடுகளுக்கு ஏற்படும் செலவுகளை வளர்ந்த நாடுகள் ஏற்க வேண்டுமென்ற இந்திய நிலைப்பாடு ஏற்பு.

டிசம்பர் 12 : சவூதியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 20 பெண் வேட்பாளர்கள் வெற்றி. பெண்கள் கார் ஓட்டவும் தடை விதிக்கப்பட்ட அந்நாட்டில், அவர்கள் முதல் முதலாகத் தேர்தலில் வாக்களிக்கவும் வேட்பாளர்களாகப் போட்டியிடவும் அனுமதிக்கப்பட்டனர்.

டிசம்பர் 15 : இஸ்லாமிய நாடுகளில் நிகழ்ந்து வரும் பயங்கரவாதத்துக்கு எதிராகத் தாக்குதல் தொடுக்க 34 நாடுகளின் கூட்டணியை அறிவித்தது சவூதி அரேபியா.

டிசம்பர் 20 : "பிரபஞ்ச அழகி' போட்டியில் வென்றார் பிலிப்பின்ûஸச் சேர்ந்த பியா அலோன்ஸோ. முன்னதாக, கொலம்பியாவின் அரியாட்னா அரெவாலோ (இடது) வென்றதாக அறிவிக்கப்பட்டு, அவருக்கு கிரீடம் அணிவிக்கப்பட்டது. சில வினாடிகளிலேயே அது தவறு என்று அறிவிக்கப்பட்டதால் கிரீடத்தை இழந்தார்.

டிசம்பர் 21 : நேபாளத்தில் தொன்று தொட்டு வாழ்ந்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மதேசிகளுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில், நேபாள அரசியல் சாசன சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என்று அறிவிப்பு.

டிசம்பர் 25 : இந்தியா நிதிஉதவியுடன் ஆப்கன் தலைநகர் காபூலில் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

டிசம்பர் 29 : பாகிஸ்தானில் பெஷாவரில் உள்ள அரசு அலுவலகத்தில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 26 பேர் பலியானார்கள்.

by Swathi   on 01 Jan 2016  0 Comments
Tags: 2015 Major World Events   2015ல் உலகம்   உலக நிகழ்வுகள்              
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.