(கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள்)
களத்திரகாரகனான சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட மென்மையான, பிறரைக் கவர்ந்து நினைத்த காரியங்களை நினைத்தபடி முடித்துக் கொள்ளும் ரிஷபராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு குருப் பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம். பொதுப் பலன்கள், பார்வை பலன்கள், மூர்த்தி நிர்ணயப்படி சிறப்பு பலன்கள் என அனைத்து இராசி நண்பர்களுக்கும் சீரான சிறப்பான பலன்களே அமையும்.
தங்கள் இராசிக்கு ஆயுள் மற்றும் இலாப பாவாதிபதியான குரு இதுநாள்வரை தங்களின் புத்திர, பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்து – ஆவணி 27 இல் ருண, ரோக, சத்ரு பாவத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் ஆரோக்கியக் குறைவினை ஏற்படுத்தலாம். எதிரிகளின் தொல்லைகளால் இடர் பட நேரும். தேவையற்ற கடன்கள், அதன் காரணமாக கடன் கொடுத்தவர்களின் தொல்லைகள் ஏற்படலாம். சமூகத்தில் செல்வாக்கும், சொல்வாக்கும் இழக்க நேரிடலாம். பகைவர்களின் பலம் கூடும். அதனால் உங்கள் முகம் வாடும். மனைவியால் ஆதாயம் ஏற்படும். மக்களால் விரயங்கள் ஏற்படும். அவர்களின் கல்வி செலவுக்காக்க் கடன் வாங்க நேரும். இனிய நண்பர்கள் கூட வலிய எதிரிகளாக மாறுவர். ஆரோக்கியக் குறைவினால் தொழில் துறையில் உள்ளவர்களுக்குச் சிக்கல்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் எதிர்பாராத நஷ்டங்கள் ஏற்படலாம். எனவே, எந்தவொரு புதிய முயற்சிகளிலும் ஈடுபடாதிருப்பது நல்லது. உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு பிறர் பொறாமை கொள்ள நேரலாம். எனவே, அடக்கி வாசிப்பது நல்லது. வேலை இல்லாதவர்கள் ஏதேனும் சிறுதொழில் செய்வது முன்னேற்றம் தரும். சிலருக்குக் குறிக்கோளற்ற அலைச்சல்களால் உடல் அசதி அதிகரிக்கும். உடன் பணிபுரிபவர்களின் சூழ்ச்சிகளால் அதிகாரிகளுக்கு நெருக்கடிகள் உண்டாகும். பிறருக்குக் கட்டளையிடும் அரசு உயர் பதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ஆரோக்கியக் குறைவு காரணமாக மாணவ, மாணவியருக்குக் கவனக்குறைவு ஏற்பட்டு கல்வி, விளையாட்டுப் போட்டிகளில் பின்னடைவு ஏற்படலாம். பகைவர்களின் சூழ்ச்சியால் அரசியலில் வஞ்சனைகளும், துரோகங்களும், தொல்விகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையுடன் செயல் படுவது ஏமாற்றங்களைத் தவிர்க்கும். உதாசினப்படுத்தும் உறவுகளின் செயல்பாடுகள் மனவருத்தம் அளிக்கும். வீண் பழிகளால் வேதனைப்பட நேரும். அப் பழியால் சிலர் மாமியார் வீட்டுக்குக் கூடப் போக நேரலாம்.
குரு தனது 5 ஆம் பார்வையாக 10 ஆம் பாவமான கர்மஸ்தானத்தைப் பார்வையிடுவதால் புதிய தொழில் துவங்கும் வாய்ப்புகள் ஏற்படும். தொழில் விரிவாக்கங்கள் சாத்தியப்படும். குடும்பத்தில் சந்தோஷ சூழ்நிலைகள் உருவாகும். சுபகாரியங்களுக்குக் குறைவிருக்காது. மனைவியின் செயல்படுகள் சிறந்து, காரியம் யாவினும் கை கொடுப்பார். இனிமை மிக்க இனிய செய்திகள் இல்லம் வந்து சேரும். தந்தை வழியில் தனவரவு உண்டு. மூத்த சகோதர்ர்கள் இல்ல விழாக்கள் மூலமாக இன்பம் ஏற்பட்டாலும் பொருட்செலவுகளும் ஏற்படும். நண்பர்கள் தங்கள் பகை மறந்து உதவிக் கரத்தை நீட்டுவர்.
தனது 7 ஆம் பார்வையால் விரய பாவத்தை பார்வை இடுவதால் மூத்த சகோதரர்களால் ஆதாயம் உண்டு. வெளிநாட்டு வாய்ப்புகள் கதவைத் தட்டும். வீட்டில் புத்தாடைகளுக்கான செலவுகள் செய்து மகிழ்வீர்கள். மனைவியின் சிறப்பான, ஆரோக்கியமான உடல் நிலை காரணமாக உறவுகளில் முன்னேற்ற நிலை ஏற்படும். மகிழ்ச்சியும் நிலவும். பெற்றோர்களின் நிலை சிறப்பாக இருக்கும். அவர்கள் புனித யாத்திரைகள் செல்லும் வாய்ப்புகள் ஏற்படும்.
தனது 9 ஆம் பார்வையாக தன பாவத்தைப் பார்வையிடுவதால் ஏதாவது ஒரு வழியில் குடும்பத்தினர் மூலமாக பணவரவுகள் வந்து கொண்டே இருக்கும். வீட்டில் சுபகாரியங்கள் சிறப்பாக நடக்கும். மணம் ஆகாதவர்களுக்கு திருமணம் இனிதே நடக்கும். மணம் ஆனவர்களுக்கு தம்பதிகளிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து களிப்பு எய்துவர். பெற்றோர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பீர்கள். கொடுத்த வாக்குகளை தவறாமல் காப்பாற்றிவிடுவீர்கள்.
ரிஷப இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி சுவர்ண மூர்த்தியாக முதல் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு சொர்ண ஆபரணங்கள், அணிகலன்கள் சேர்க்கை உண்டாகி நன்மை அளிக்கும்.
உத்யோகஸ்தர்களுக்கு (JOB)
வேலை என்றால் அரசு மற்றும் தனியார் துறை இருசாராரையும் குறிக்கும். வேலையில் இருப்பவர்கள் அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டி வரும். அவசரப்பட்டு வேலையை விட்டுவிடுதல் கூடாது. வேறு வேலை கிடைக்க வாய்ப்புகள் சற்று குறைவாக இருப்பதால் பார்க்கும். வேலை விடுதல் கூடாது. ஒரு சிலருக்கு உத்யோகத்தில் உயர்வும் எதிர்பார்த்த ஊதிய உயர்வும் கிட்டும். சக ஊழியர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும்.
தொழில் (BUSINESS) வியாபாரம் (TRADE)
சிறுதொழில் சுயதொழில் புரிபவர்கள் ஆரம்பத்தில் லாபம் சற்று குறைவாக இருந்தாலும் ஜனவரிக்குப்பின் ஓரளவு லாபம் அடைவர். புதிய தொழில் தொடங்க வாய்ப்புகள் தேடி வரும். பெரிய அளவில் முதலீடு செய்ய சந்தர்ப்பங்கள் வாய்க்கும். வெளிநாட்டுத் தொடர்பு லாபகரமாக அமையும். பங்குச்சந்தை சற்று லாபகரமாக இருக்கும். உற்பத்தித்துறை, சேவைத்துறை, போக்குவரத்து ஏற்றம் அடையும். ரோட்டோர வியாபாரிகள், சிறுவணிகர்கள் லாபம் அடைவர். நிதி, நீதி, வங்கித்துறை ஏற்றம் பெறும். கமிஷன், ஏஜன்சி, புரோக்கர், சேவைத்துறை ஒரளவு லாபம் அடையும். ரியல் எஸ்டேட் லாபகரமாக இருக்கும். ஆடை, ஆபரணத் தொழில், அழகு சாதனப்பொருட்கள் உற்பத்தி லாபமுடையதாக இருக்கும். சிமென்ட், இரும்பு, எஃகுத் தொழில் சற்று கவனம் தேவை.
விவசாயிகள்
விவசாயம் சற்று சுமாராக இருக்கும். விளைச்சலுக்கேற்ற விலை கிடைக்காமல் சோர்வு உண்டாகும். கடன் வாங்க வாய்ப்புகள் கூடும். புதிய விவசாயக் கருவிகள் வாங்க வாய்ப்புகள் கூடும். ஒரு சிலருக்கு விளைநிலங்களை விற்பதற்கு வாய்ப்புகள் அமையும்.
அரசியல்வாதிகள்
அரசியல் வாழ்வு ஓரளவு சுமாராகவே இருக்கும். ஏற்ற இறக்கங்களுடன் சற்று சுமார். பொது வாழ்வில் இருப்போர் சமூக சேவர்கள் நல்ல பெயர் புகழுடன் விளங்குவர். ஒரு சிலருக்கு அரசாங்கத்தால் அச்சுறுத்தல் இருந்து கொண்டேயிருக்கும்.
கலைஞர்கள்
கலைத்துறையில் இருப்பவர்கள் பெயர், புகழ் பெற்றாலும் பெரிய அளவில் பொருளாதாரத்தில் ஏற்றம் இராது. புதிய ஒப்பந்தங்கள் எதிர்பார்த்த அளவு அமைந்தாலும் பொருளாதார நிலை சற்று சுமாராகவே இருக்கும்.
மாணவர்கள்
நல்ல கல்வி ஞானம் அமையும். எதிர்பார்த்த பள்ளி கல்லூரிகள் அமைய வாய்ப்பு உண்டு. வங்கியில் எதிர்பார்த்த பணம் ஒரு சிலருக்கு கடன் கிடைக்க வாய்ப்புகள் அமையும். ஒரு சிலர் உயர் கல்விபயில வெளிநாடு செல்ல வாய்ப்பிருக்கும்.
பெண்களுக்கு
தள்ளிப்போன திருமணம் நடக்க வாய்ப்புகள் ஏற்படும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக அமையும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் அமையும் காலமிது. வேலைக்குச் செல்பவர்களுக்கு வேலையில் முன்னேற்றம் ஏற்படும். உயரதிகாரிகள் பரிவுடன் நடந்து கொள்வர். சக ஊழியர்களால் மனவருத்தங்களும் வேதனைகளும் ஏற்பட்டு விலகும். விரும்பிய வேலை அமைவதில் நடையேற்படும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. அடிக்கடி உடல்சோர்வும் மனத்தளர்ச்சியும் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் அமைந்தாலும் இனம் தெரியாத குழப்பம் இருந்து கொண்டேயிருக்கும்.
உடல் ஆரோக்யம்
உடலில் கால், கண், சிறுநீரக சம்பந்தப்பட்ட உறுப்புகளில் பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். அறுவை சிகிச்சைக்கான காலமிது. உடலில் சளித் தொல்லைகள் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது.
ரிஷபத்திற்கு – சுவர்ண மூர்த்தியாக இருப்பதால், அசுப பலன் அனைத்தும் குறைந்து நற்பலன் தரும். (6). 70%
|