LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    ஜோதிடம் Print Friendly and PDF
- நட்சத்திர பலன்கள்

நட்சத்திர வார பலன்கள் (07 - 05 - 2017 முதல் 13 - 05 - 2017 வரை)

ஜோதிட இமயம் அபிராமி சேகர். எம். ஏ. (99948 11158)

மேஷம்
(அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்)
அஸ்வினி
இந்த வாரம் உங்கள் செயல்திறன் கூடும். பலவழிகளிலும் வெற்றி மேல் வெற்றி வரும். செல்வ நிலையும் உயரும். பிற்கால நலன்கருதி சேமிப்புக்கள், பங்குச் சந்தை ஆகியவற்றில் முதலீடு செய்வது நல்லது. பணிபுரியும் பெண்களுக்கு உயர்  அதிகாரிகளின் ஆதரவால் பணியில் முன்னேற்றங்கள் ஏற்படும். சிலருக்குப் புதுவாகன யோகம் ஏற்படும். பணிபுரியும் பெண்களுக்குத் திருமண காலம் கூடிவரும். அனைத்து வசதிகளுடன் கூடிய அழகிய தனிவீடு அமையும். வெளிநாடு செல்லும் வாய்ப்புக்கள் வரும்.
பரணி  
இந்த வாரம் உங்கள் திறமை மிக்க செயல்களால் வெற்றிகளும், பாராட்டுதல்களும் குவியும். தங்கள் வாழ்க்கையில் மனைவி மூலமாக முன்னேற்றத்துக்கான நல்ல ஆலோசனைகள் கிடைக்கும்.   வெளியூர்ப் பயணங்கள், வெற்றிகரமாகவும், இலாபகரமாகவும் அமையும்.  இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க, மங்கல காரியங்கள் ஈடேறும். குழந்தைகளின் தேர்ச்சி மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். விவசாயிகளுக்கு அரசின் கடன் மற்றும் மானிய உதவிகள் எதிர்பார்த்தபடி எளிதில் கிடைக்கும்.
கார்த்திகை  1 ஆம் பாதம்
இந்த வாரம் பக்தியில் அதிக நாட்டம் ஏற்படும். உயர்ரக ஆடை ஆபரணங்கள் மற்றும் விரும்பிய பொருட்களெல்லாம் வீடு வந்து சேரும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும். மக்கள் சேவையில் ஈடுபட்டதின் காரணமாக மக்களால் பாராட்டப்படுவீர்கள். அரசு வகையில் எதிர்பார்த்த  ஆதாயம் மற்றும் உதவிகளால்  தொழிலில் முன்னேற்றம் ஏற்படலாம். அரசுப்பணி புரிபவர்களுக்கு அனுகூலமான வாரம். அவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு இருப்பதால், எதிரிகளின் கொட்டம் அடங்கும்.

ரிஷபம்
(கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )
கார்த்திகை 2,3,4 பாதங்கள்
இந்த வாரம் தனவரவு அதிகரிக்கும். மனதிற்கினிய தகவல்கள் வந்து சேரும். நண்பர்கள் மற்றும் உறவுகளின் வருகையால் உள்ளம் மகிழும். சினிமா, டிராமா, மால் என இளைஞர்களின் கனவு மையங்களில் பொழுது இனிமையாகக் கழியும்  குழந்தைகளின் சீரான முன்னேற்றம் மனதில் மகிழ்ச்சியைத் தோற்றுவிக்கும். இரவுப் பயணங்களின் போது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வியாபாரிகள் புதிய வியாபார நுணுக்கங்களைப் புகுத்தி ஆதாயம் காண்பர். சிலருக்கு பணிநிமித்தமாக வெளிநாட்டுப் பயணங்கள் ஏற்படும்.
ரோகிணி
இந்த வாரம் அழகிய ஆடை ஆபரணங்கள் அணிவதால்  மனமகிழ்ச்சி ஏற்படும். உறவுகளுடன் சென்று மகான்களைத் தரிசனம் செய்து மகிழ்வீர்கள். தாயின் அன்பும் அரவணைப்பும் மகிழ்ச்சி தரும். பூஜா வழிபாடுகளலால்  எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். மதிப்பு மிக்க மனிதர்களின் நட்பால் அரசுப் பணியார்களின் ஆசைகள் நிறைவேறும். பெண்கள் தங்கள் செலவைக் குறைத்து சேமிப்பை உயர்த்த முற்பட வேண்டும். அரசுப் பணிபுரியும் பெண்கள் தங்களுக்கு விருப்பமான இடத்திற்கு மாற்றம் பெற முயற்சிப்பர்.
மிருகசிரீஷம் – 1 , 2 பாதங்கள்
இந்த வாரம் எதிர்பார்த்த இனங்களில் இருந்து தன வருமானம் தாராளமாக இருக்கும். குடும்ப உறவுகளின் ஒத்துழைப்பால் வீட்டில் அமைதி நிலவும். கணவன், மனைவி இடையே அன்பும் பாசமும் பெருகும். விற்பனைப் பிரதிநிதிகளின் வாக்கு வன்மையால் பொருள்களின் விற்பனை சூடுபிடிக்கும். தொழிலில் எதிர்பார்த்தபடி இலாபங்கள் பெறுவதற்கான வழிமுறைகளைக் கையாண்டு வெற்றி அடைவீர்கள். போட்டியாளர்களைக் காட்டிலும்  அரிய சாதனைகளைப் புரிவீர்கள். பெண்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.

மிதுனம்
(மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)
மிருகசிரீஷம் – 3 , 4 பாதங்கள்
இந்த வாரம் ஆக்கபூர்வமான ஆலோசனை அளித்து அன்பு நண்பர்கள் தங்கள் முன்னேற்றத்துக்கு உதவுவர். இன்பச் சுற்றுலா போன்ற, இனிய பயணங்களால் இன்பத்தில் திளைப்பீர்கள். சிலரின் கற்பனை வளம் பெருகி, கதை, கவிதை எனத் திறம்பட எழுதிப் புகழ் பெறுவர். பிராயணங்கள் மூலமாகப் புதிய முயற்சிகளில் இறங்கித் தொழில் முன்னேற்றங்காண முயல்வீர்கள். இடம் விட்டு இடம் மாறி வேறு இடத்தில் வாழ நேரலாம். இலாபம் அதிகம் பெற புதிய விற்பனை யுக்திகளைக் கையாள்வீர்கள். சுறுசுறுப்பற்ற நிலையில் காரியத் தடைகள் ஏற்படும்.
திருவாதிரை
இந்த வாரம் வாழ்க்கையில் முன்னேற்றங்களையும், சுகானுபவங்களையும் மற்றும் கௌரவத்தையும் அடைவீர்கள். தாய் மாமனுக்கும் நன்மை ஏற்படும்.  குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமையும், உயர்வும் ஏற்படும். தெய்வப் பிரார்த்தனையால், தாமதமான திருமணங்கள் தடபுடலாக நடக்கும். அரசு வகையில் எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் தாமதமின்றிக் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு, அவர்களின் திறமைக்கேற்ப நல்ல பணி கிடைக்கும். புதிய பதவிகள் கிடைத்து, அதற்கேற்ப அந்தஸ்தும் உயரும்.
புனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள்
இந்த வாரம் சீரான பொருளாதார நிலையால், மனதிற்குப் பிடித்தபடி மனை, வண்டி வாகனம் என அனைத்தும் கிடைக்கும். தொலைதூரப் பயணங்களால் நன்மை ஏற்படும். சிலருக்கு வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். கல்வியில் வெற்றி பெறக் கவனமாகப் படிக்க வேண்டும். புத்திர பாக்கியம் ஏற்படும். கௌரவப் பட்டங்கள், பதவிகள் ஆகியவை கிடைக்கும். அரசாங்கத் துறைகளின் மூலமாக எதிர்பார்த்த அனுகூலங்கள் யாவும் வந்து சேரும். மேடைப் பேச்சாளர்கள் தங்கள் பேச்சின் மூலமாக வருமானம் ஈட்டுவர்.

கடகம்

(புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)
புனர்பூசம் – 4 ஆம் பாதம்
இந்த வாரம் கையில் பணமும் மனதில் மகிழ்ச்சியும் பொங்கி வழியும். எதையும் சாதிக்கும் திறனும், நினைத்ததை நினைத்தபடியே முடிக்கும் முனைப்பும் உங்களுக்கு வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைத் தரும். எந்தவொரு காரியத்தையும் ஒத்திப் போடாமல் உடனுக்குடன் செயல்பட்டால் உன்னத நிலையை அடையலாம். மதிப்பும் மரியாதையும் கூடும். பணியில் உள்ளவர்கள் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டால், பதவி உயர்வுகள் தேடி வரும். வாழ்க்கையில் எல்லாவித முன்னேற்றங்கள் மற்றும் கௌரவத்தையும் அடைவர்.
பூசம்
இந்த வாரம் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.  சுற்றுவட்டாரத்தில் நல்ல புகழும், கௌரவமும் உண்டாகும். தந்தைவழி உறவுகளால் அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களின் அனுசரணையால், குழப்பங்கள் நீங்கி குதூகலம் உருவாகும். பணிபுரியும் பெண்களுக்கு அதிகாரிகளின் கெடுபிடி காரணமாக மன உழைச்சல் ஏற்பட்டு வேறு இடத்துக்கு அல்லது பணிக்கு மாற முற்படுவர். புதிய வீடு போன்ற அசையாச் சொத்துக்களை வாங்குவதற்கு முன், அதற்குரிய மூலப் பத்திரங்கள், ஆவணங்களை ஆராய்ந்து வாங்குவது நல்லது.                                                                                                                      
ஆயில்யம்
இந்த வாரம் உங்களுக்குத் தெய்வ சிந்தனைகளால் மனதில் அமைதி நிலவும். தொலைதூரச் செய்திகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும்.  ஆடை, ஆபரணங்கள், நல்ல உணவு, எதிர்பாராத தனவரவு ஆகியவை ஏற்படும். செல்வாக்கு மிக்க நபர்களின் உதவியால் உங்கள் பொருளாதார நிலைகள் உயர்ந்து வலுப்பெறும். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் அனுகூலத்தால் உயர் பதவிகள் கிடைக்கலாம்.  எதிரிகளின் பணமும் வந்து சேரும். சிலருக்குக் குழந்தைகளால் தொல்லையும், அவமானங்களும் ஏற்படலாம்.

சிம்மம்
(மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)
மகம்
இந்த வாரம் விருந்து, மகிழ்ச்சிக் கொண்டாட்டம், ஆரவாரம்,  என வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். சுபச் செய்திகளை எதிர்பார்க்கலாம். இந்த நாட்களில் உங்கள் திறமை மிக்க செயல்பாடுகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். கௌரவப் பட்டங்கள், பதவிகள் தேடிவரும்.  உயர் அதிகாரிகளின் ஆதரவால் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். பெண்களின்  அறிவுத்திறன் கூடும்.  பண விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.  நல்லவர்களுடன் ஏற்படும் பழக்கத்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
பூரம்
இந்த வாரம் விருந்தினர் வருகையால் மனம் மகிழ்ச்சி ஏற்படும். அவர்களுடன் சினிமா போன்ற கேளிக்கை ஈடுபாட்டால் செலவுகள் அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு தாராளமாக இருக்கும். அரசாங்கத்திடம் இருந்து அனுகூலமான செய்திகள் மற்றும் தகவல்கள் வந்து சேரும். உங்கள் தொழில் விஷயமாகத் தீட்டிய முக்கியத் திட்டங்கள் நிறைவேற எடுத்த புதிய நடவடிக்கைகள் வெற்றி பெறும். வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்கள் உடனடியாகக் கிடைக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை.
உத்திரம்- 1 பாதம்
இந்த வாரம் சிலருக்குத் திருமணப் பேச்சுக்கள் ஆரம்பமாகலாம். சந்ததி விருத்தி ஏற்படலாம்.  மனோதைரியம் அதிகரிப்பதன் காரணமாக எவரையும் எதிர்த்து வெற்றி பெறுவீர்கள். வீட்டில் சுப காரியங்கள் அனைத்தும்  சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கை, தொழில் இலாபம் ஆகியவை ஏற்படும்.  கற்பனை வளம் பெருகும். தாய் மூலமாக நன்மைகள் ஏற்படும். நீங்கள் எப்போதும் பணம் விஷயமான சிந்தனையுடன் இருப்பீர்கள்.  அரசுப் பணியாளர்களுக்குப் புதிய பதவியும், பொறுப்பும் கிடைக்கும். சிலருக்கு அரசாங்க விருதுகள் கிடைக்கும்.

கன்னி
(உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)
உத்திரம் – 2, 3, 4 – பாதங்கள்
இந்த வாரம் சுபகாரியச் செலவுகள் ஏற்படும்.  புதிய முயற்சிகளால் பண வருமானம் அதிகரிக்கும். நல்ல பல கருத்துக்களைக் கேட்பதின் மூலமாக உங்களுக்கு  ஞானத்தன்மை  அதிகரிக்கும். பக்தி மார்க்கத்தில் செல்ல மனைவியின் பூரண ஓத்துழைப்புக் கிடைக்கும். வாகன வசதியும், நற்கல்வியும் கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்தபடி பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும். தந்தை வர்க்கத்தினரால் நன்மைகள் பல ஏற்படும்  வாக்கு வன்மை ஓங்கும்.   புதிய வியாபார யுக்திகளால் அதிக இலாபம் அடைவீர்கள்.
ஹஸ்தம்
இந்த வாரம் புதுப்புது முயற்சிகளில் ஈடுபட்டு நல்ல வேலையில் சேரும் யோகம் ஏற்படும். தூர தேசங்களில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்திகள் வரும்.  சிலருக்கு வீடு, மனை ஆகியவை கிடைக்கும்.  பூரண சயன சுகம் ஏற்படும்.  பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் மேலோங்கும்.  புதிய கொள்முதல் மூலமாக தொழிலில் அதிகமான வருவாய் பெருக்கம் ஏற்படும். அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். அதிகாரிகளின் நட்பால் ஆதாயம் பெறுவீர்கள். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும்.
சித்திரை – 1,2 பாதங்கள்
இந்த வாரம் தான தருமங்கள் செய்வீர்கள். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். வியாபாரப் பயணங்கள் மூலமாக வரவேண்டிய பாக்கிகள் அனைத்தும் வசூல் செய்து விடுவீர்கள்.   உறவு மற்றும் நண்பர்களின் பூரண ஓத்துழைப்புக் கிடைக்கும்.. புதிய கொள்முதல் மூலமாக தொழிலில் அதிகமான ஆதாயம் ஏற்படும். தூர தேசங்களில் இருந்து எதிர்பார்த்த சுபகாரியச் செய்திகள் வருவதோடு செலவுகளும் அதிகரிக்கும். மேடைப் பேச்சாளர்கள் புகழ் பெறுவர். அனாவசியச் செலவுகளைக் குறைப்பது நல்லது.

துலாம்
(சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)
சித்திரை-3,4 பாதங்கள்
இந்த வாரம் சுபகாரியங்களுக்காக வீடே விழாக்கோலம் பூணும். மகான்களின் தரிசனத்தால் மனம் மகிழ்வதோடு, மனதில் அமைதியும் நிலவும். புத்திர பாக்கியம் ஏற்படும். திடீரென ஏற்படும். பயணங்களால் ஆதாயமும், மகிழ்ச்சியும் ஏற்படும். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்தபடி தலைமைப் பதவிகள் தேடி வரும். வீரம் பொங்கும். தங்கள் சேவைகள் அனைவராலும் அங்கீகரிக்கப்படும். இசை ஆர்வத்தால் சங்கீத சபாக்களுக்குச் சென்று இசை கேட்டு மகிழ்வீர்கள். நீங்கள் எதிர்பாராத விதத்தில் இடமாற்றங்கள் ஏற்படலாம்.
சுவாதி
இந்த வாரம் உங்களுக்கு இனிய வாரம். அதிகமான பணவரவு இருக்கும். மனைவி மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும். வாக்கால் வருமானம் பெருகும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிப்பீர்கள்.  சுகமும் ஆடை ஆபரண சேர்க்கை, புத்திர பாக்கியம் மற்றும் எதிர்பாராத பணவரவுகள் ஆகியவை ஏற்படும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. புதிய தொழில் முயற்சிகள் அரசு உதவியுடன் வெற்றி பெரும். கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும்.
விசாகம்- 1,2,3 பாதங்கள்
இந்த வாரம் உங்களுக்கு பல புண்ணியத் தலங்களுக்கு பயணம் செய்யும் வாய்ப்புக் கிட்டும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும். கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும். சிலருக்கு உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். பணம் சம்பாதிப்பதில் ஆக்கமும், ஊக்கமும் ஏற்படும். உடன் பிறந்தவர்களோடு அனுசரித்துச் செல்வது நல்லது. சிலருக்கு பணமுடை ஏற்படுவதோடு, தேவையற்ற அலைச்சல்களும் ஏற்படும். வீண் மனஸ்தாபங்களைத் தவிர்த்தால் வீட்டில் அமைதி நிலவும்.

விருச்சிகம்
(விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )
விசாகம்- 4 ஆம் பாதம்
இந்த வாரம் விருந்துகளில் கலந்துகொண்டு நண்பர்களுடன் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் பொழுதைக் கழிப்பீர்கள். சிறப்பான பலன்களைத் எதிர்பார்க்கலாம். உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். பிரபலமானவர்களின் ஆறுதலும், நட்பும் கிடைக்கும். புத்தக வெளியீடு போன்ற தொழில்களில் முனேற்றம் ஏற்பட்டு, ஆதாயம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளிடமும் மற்றும் அரசாங்கத்திடமும் எதிர்பார்த்த அனுகூலங்கள் அனைத்தும் தாமதமின்றிக் கிடைக்கும். தொழில் சம்பந்தமான முயற்சிகள் வெற்றித் திக்கை நோக்கிச் செல்லும்.
அனுஷம்
இந்த வாரம் புத்திர பாக்கியம், சுபகாரிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். உங்களுக்குத் திடீர்ப் பயணங்கள் மூலமாக ஆதாயங்கள் ஏற்படும். மகான்களின் ஆசியும், புதிய தொடர்புகளால் நன்மைகளும் ஏற்படும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும்.  புதிய கடன்கள் வாங்கிப் பழைய கடன்களை அடைத்துவிடுவீர்கள். புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகள் வெற்றி பெறும் காலம் கனிந்து வரும்.  அரசுப்பணியில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளின் அன்பு மற்றும் ஆதரவால் பணி உயர்வு நினைத்தபடி கிடைக்கும்.
கேட்டை
இந்த வாரம் உங்களுக்கு மிக்க அனுகூலமான வாரம். பொருளாதார நிலைகள் திருப்திகரமாக இருக்கும். எதிர்பாராத இடத்தில் இருந்து வந்த பணவரவால் மனம் மகிழும். எந்தக் காரியத்தையும் திறம்படச் செய்யும் உங்கள் செயல்திறன் கூடும். அதன் காரணமாக உங்கள் பணி இலக்கை அடைவீர்கள். சுபச் செய்திகளை எதிர்பார்க்கலாம். சிலருக்கு மற்றவர்களுக்கு ஆணையிடும் உயர் பதவி கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல காலம் பிறக்கும்.  தங்கள் சகோதரரின் நடவடிக்கைகள் உங்களுக்கு எரிச்சலூட்டும்.

தனுசு

(மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)
மூலம்
இந்த வாரம் பெண்களால் இலாபம், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுதல் ஆகியவற்றால் வரும் இன்பம் நிலைத்திருக்கும். ஆயினும், ஏமாற்றத்தைத் தவிர்க்க கூட்டாளிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மனைவியுடன் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் சமாதானமாகப் போவது பொருளாதார நிலையைப் பொறுத்தவரை சிரமமான காலம். அதன் காரணமாக சேமிப்புக்களில் இருக்கும் பணத்தில் கை வைக்கவேண்டிய நிலை ஏற்படும். பழைய பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் நல்ல வருமானத்தை அடைவார்கள்.
பூராடம்
இந்த வாரம் உடன்பிறப்புக்களிடம் இருந்து நீங்கள் எதிர்பார்க்கும் பணவுதவிகள் கிடைக்கும். புதிய வீடு, பூமி வாங்கக் கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகலாம். சிறப்பான ஆடை அணிந்து மிடுக்காக உலாவருவீர்கள். வாகனங்களில் செல்லும் போது கவனமாகச் செல்லவும். எல்லா வசதிகளும் இன்பமும் ஏற்படும் என எதிர்பார்க்க முடியாது. ஏதாவது மனக்குறை இருந்து கொண்டே இருக்கும். தலைவலி போன்ற சிறுசிறு உபாதைகள் ஏற்படலாம். நல்ல உயர்ந்த மனிதர்களின், பண்புமிக்கவர்களின் நட்பு ஏற்படும்.
உத்திராடம் –1 ஆம் பாதம்
இந்த வாரம் தனவரவு அதிகரிப்பால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். நவநாகரீக ஆடைகளை வாங்கி உடுத்தி மகிழ்வதோடு, உறவுகள் வருகையால் உள்ளம் மகிழும். உறவுகளுடன் உயர்தர உணவகங்களில் உணவருந்தி மகிழ்வீர்கள். மிகப் பெரிய சாகசங்களைப் புரிவீர்கள். அதிகாரிகளுடன் வீண் சச்சரவுகளை விலக்கினால் பணியில் எதிர்பார்த்த உயர்வுகள் இருக்கும். சம்பாதிக்கும் திறன் மேம்படும். மிகக் கடினமான வேலைகளையும் தன்னம்பிக்கை காரணமாக சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள்..

மகரம்
(உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )
உத்திராடம்- 2,3,4- பாதங்கள்
இந்த வாரம் வீட்டில் திருமண வைபவங்களை எதிர்பார்க்கலாம். குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். தம்பதிகளிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். .  நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும். புதிய தொழில் வாய்ப்புக்கள், லாட்டரி யோகங்கள், புண்ணியத்தல தரிசனங்கள் ஆகியவை ஏற்படும். அண்டை வீட்டார், நண்பர்கள் மற்றும் சகோதரரால் உங்கள் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு வரும். பண விஷயத்தைப் பொருத்தவரை திருப்திகரமான வாரமாக இருக்கும்.
திருவோணம்
இந்த வாரம் புதுத்தெம்பும், உற்சாகமும் கூடும். பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும். புத்தி தெளிவு ஏற்பட்டு அதன் காரணமாக செயல்திறன் அதிகரிக்கும். புதிய வாகன வசதிகள் மேம்படும். அந்தஸ்து, கௌரவம் ஆகியவை உயரும். தொலை தூரத்திலிருந்து நற்செய்திகள் வந்து மகிழ்ச்சி அளிக்கும். புதிய பெண்கள் தொடர்பு ஏற்படும். சிலருக்கு ஆரோக்கியக் குறைவும் ஏற்படலாம்.
அவிட்டம் 1,2 பாதங்கள்
இந்த வாரம் உறவுகளை அனுசரித்துச் சென்றால் அவர்களின் உதவிகள் கேட்காமலே கிடைக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்தால் பொருளாதாரச் சிக்கல்களில் இருந்து மீளலாம். மாணவர்கள் தங்கள் கல்வியில் முழுக்கவனம் செலுத்தினால் மட்டுமே அதிக மதிப்பெண்கள் பெற இயலும்.   வேலையில் சிரத்தையும், கடின உழைப்புமே தொழிலில் நல்ல முன்னேற்றங்களைத் தரும். அப்போதுதான் உங்கள்  கஜானாவும் பணத்தால் நிரம்பும். தட்டிக் கொடுத்து வேலை வாங்கினால் தங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்கள் வேலையில் கை கொடுப்பர்.

கும்பம்
(அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)
அவிட்டம் – 3,4 பாதங்கள்
இந்த வாரம் திருமணமாகாத பெண்களுக்கு திருமணத்துக்கான முயற்சிகள்  மேற்கொள்ளப்படும். பிள்ளைகளிடம் நல்ல உயர்வான முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். அன்னையின் அன்பும் அரவணைப்பு மற்றும் உதவிகளும் ஆதரவாய் இருக்கும். சுற்றுலாப் பயணங்களால் மனதில் மகிழ்ச்சி பொங்கும்.  சிலருக்கு அவசியமற்ற, அலைச்சல் தரும் பயணங்கள் மேற்கொள்ள நேரும். அரசு ஊழியர்களுக்குக் கட்டளைகளை இடும்படியான அதிகாரம் மிக்க உயர்பதவிகள் கிடைக்கும். வாகனங்களில் செல்கையில் எச்சரிக்கை தேவை.
சதயம்
இந்த வாரம் சுக சௌகரியங்கள் அதிகரிக்கும்.. சுபசெய்திகளால் மனம் மகிழும். வெளிநாட்டுப் பயணம் மற்றும் வாணிபத்தால்  தனலாபம் அதிகரிக்கும். வீட்டில் அமைதியும், நிம்மதியும் நிலவும். பக்தி மார்க்கத்தில்  ஈடுபாடு அதிகரிக்கும். சுபகாரிய நிகழ்வுகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வீண்செலவுகளைக் குறைத்து சேமித்து வைப்பது நல்லது. வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்கக் கடினமாக உழைத்தால் மட்டுமே ஆதாயம் கிடைக்கும்.
பூரட்டாதி-1,2,3 பாதங்கள்
இந்த வாரம் பல வழிகளிலும் இருந்தும் பணம் கூடுதலாக வரும். பூமி அல்லது வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்படாது இருக்க அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டி முன்னேற முயல்வீர்கள். உறவுகள் வருகையால் சந்தோஷம் பெருகுவது பொல், செலவுகளும் அதிகரிக்கும்.  சிறப்பான பொதுஜனத் தொடர்பு காரணமாக உபரி வருமானம் கிடைக்கும். உறவினர்களிடம் வீணான வாக்குவாதம் செய்யாதிருப்பது நல்லது.

மீனம்
(பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)
பூரட்டாதி – 4 ஆம் பாதம்
இந்த வாரம் புண்ணியத் திருத்தல யாத்திரைகள் செல்வதால் மகிழ்ச்சியும் மன அமைதியும் ஏற்படும். சீரான பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். குடும்பத்தாருக்கும் அவர்கள் ஆசைகள் நிறைவேறுவதால் குதுகலமாய் இருப்பர். அனுபவ பூர்வமான அறிவுத்திறன் கூடும், பூமி, வீடு மூலம் இலாபம் ஏற்படும். சிலருக்கு வீண் விரயங்கள் ஏற்படலாம்.  மனைவியின் பணிவிடை மகிழ்ச்சி தரும். மதிப்பு, கௌரவம் உயரும்.
உத்திரட்டாதி
இந்த வாரம் பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். நல்ல பண்பாளர்களின் நட்பும், அன்பும் கிடைக்கும். மனதில் தெய்வ பக்தி மேலிடும். மனதில் நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் அதிகரிக்கும். நல்ஆரோக்கியம் ஏற்படும். அழகான, எழில் நிறைந்த வீடும் கிடைக்கும். தாயின்  ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. சிலருக்கு குடும்ப வாழ்க்கையில் குழப்பம் வரலாம். கடன் கொடுத்தவர்கள் கண்டிப்புடன் நடந்துகொள்வர். தொழிலில் ஏற்படும் இலாபம் மூலமாக பண வருவாய் அதிகரிக்கும்.
ரேவதி
இந்த வாரம் மிகுந்த உற்சாகத்துடன் பக்தி மார்க்கத்தில் ஈடுபடுவீர்கள்.  கடின உழைப்பால் நீங்கள் பெறும் வெற்றிகளால் அனைவரின் பாராட்டினையும் பெறுவீர்கள். மங்கையரால் மன மகிழ்ச்சியும், அரசாங்கத்தால் இலாபமும் ஏற்படும்.  சம்பாதித்த பணத்தைப் புதிய முதலீட்டுத் திட்டங்கள் மூலமாக சேமிக்க முற்படுவீர்கள். நீண்ட நாட்களுக்குப் பின்னர் வந்த  பழைய உறவுகளின்  வரவு  மகிழ்வைத் தரும். பணிபுரியும் பெண்களுக்கு தற்போது இருக்கும் வேலையைக் காட்டிலும் நல்ல வேலைக்குப் போகும் வாய்ப்புகள் அமையும்.

by Swathi   on 04 May 2017  0 Comments
Tags: Rasi Palangal   27 Natchathira Palangal   Weekly Rasi Palangal   27 Natchathira Rasi Palangal   Daily Rasi Palangal   நட்சத்திர வார பலன்கள்   நட்சத்திர பலன்கள்  
 தொடர்புடையவை-Related Articles
இந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 06 – 2018 முதல் 30 - 06 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 06 – 2018 முதல் 30 - 06 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (03 - 06 - 2018 முதல் 09 - 06 - 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (03 - 06 - 2018 முதல் 09 - 06 - 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (27 – 05 – 2018 முதல் 02 – 06  – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (27 – 05 – 2018 முதல் 02 – 06 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (13 – 05 – 2018 முதல் 19 - 05 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (13 – 05 – 2018 முதல் 19 - 05 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (06 – 05 – 2018 முதல் 12 - 05 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (06 – 05 – 2018 முதல் 12 - 05 – 2018 வரை)
இந்த வார நட்சத்திர பலன்கள் (08 – 04 – 2018 முதல் 14 - 04 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (08 – 04 – 2018 முதல் 14 - 04 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (01 – 04 – 2018 முதல் 07 - 04 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (01 – 04 – 2018 முதல் 07 - 04 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (25 – 03 – 2018 முதல் 31 - 03 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (25 – 03 – 2018 முதல் 31 - 03 – 2018 வரை)
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.