|
|||||
சீனாவில் உருவான புதிய வைரஸ்- அச்சமடையத் தேவையில்லை! |
|||||
சீனாவில் புதிய வகை வைரஸ் தொற்றுப் பரவல் என்ற செய்தி வந்தவுடனேயே உலக சுகாதார நிறுவனம் தொடங்கி உலக நாடுகள் வரை அனைத்தும் பரபரப்பாகித் தொற்று தொடர்பான தகவல்களைத் தேடத் தொடங்கியுள்ளன. இந்தத் தேடலும், அதன் கூடவே ஒட்டிக் கொண்ட பதற்றமும் இயல்பே என்று சொல்லும் அளவுக்குக் கடந்த 2019 டிசம்பரில் சீனாவின் வூஹான் நகரில் பதிவான கரோனா பாதிப்பு உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கோடிக் கணக்கில் உயிரிழப்புகள், சர்வதேச அளவில் பொருளாதாரப் பின்னடைவு எனப் பல்வேறு பாதிப்புகளால் உலகம் பல மாதங்கள் ஸ்தம்பித்தது. உருமாறி உருமாறி கரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய பாதிப்புகள் உண்மையில் எல்லோரும் மறக்க நினைக்கும் ஒரு கொடுங் கனவு தான். அதனாலேயே சீனாவில் 'ஹியூமன் மெடாநிமோ வைரஸ்' (Human Metapneumovirus) என்ற புதிய வகை வைரஸ் பரவுகிறது என்றவுடனேயே அது அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உலக நாடுகளும் எச்சரிக்கையுடன் அதை அணுகத் தொடங்கியுள்ளன.
'ஹியூமன் மெடாநிமோ வைரஸ்' வைரஸ் என்றால் என்ன?
இதை மிக எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் சாதாரணச் சளித் தொல்லையை ஏற்படுத்தும் ஃப்ளூ வைரஸ் போன்றது எனலாம். சுவாசப் பாதையில் பாதிப்பை ஏற்படுத்தும் மற்றுமொரு வைரஸ் இது. இந்த வகை வைரஸ் பாதிக்கப்பட்ட ஒரு நபரிடம் இருந்து இன்னொரு நபருக்குப் பரவும். வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் தொட்ட பொருட்கள், புழங்கிய இடங்களிலிருந்து இன்னொருவருக்குப் பரவும்.
தொற்று ஏற்பட்ட நபருடன் கை குலுக்கிவிட்டு கையை கண்கள், மூக்கு, வாயில் வைத்தல், அவர் தும்மும் போதோ இருமும் போதோ அருகில் இருத்தல் போன்றவற்றாலும் தொற்று பரவும்.
கொரோனாவைப் போன்றே இந்த வைரஸால் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. மூச்சுத் திணறல் ஏற்படுகிறதா என்ற தகவல் ஏதும் இல்லை. புதிய வைரஸால் சிறார் அதிக அளவில் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
சீன மருத்துவமனைகளில் காய்ச்சல், தொண்டை வலி பாதிப்புகளுக்காக மக்கள் கூட்டங்கூட்டமாகக் காத்திருக்கும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் பல்வேறு பகுதிகளில் அவசர நிலை அமல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதற்கிடையில், புதிய வைரஸ் குறித்த விவரங்களை அளிக்குமாறு சீன அரசிடம் உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால், கொரோனா போன்ற புதிய வைரஸ் பரவுவதாக எழுந்த சந்தேகங்களை மறுத்துள்ளது.
முன்னதாக, சீன அரசின் நோய்க் கட்டுப்பாட்டு முகமை இது தொடர்பாக அளித்த விளக்கத்தில், “நிமோனியா போன்ற பாதிப்பு ஏற்படுவதாக எழுந்துள்ள புகார்களைக் கண்காணித்து வருகிறோம். குளிர் காலம் என்பதால் சுவாசப் பாதை தொற்றோடு பலரும் மருத்துவமனைகளை நாடுகின்றனர். டிசம்பர் 16 முதல் 22 வரை இத்தகைய தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.” எனத் தெரிவித்திருந்தது.
தற்போது புதிய வைரஸ் குறித்து உலக சுகாதார அமைப்பு தகவல்களைக் கேட்டுள்ள நிலையில், சீனா விளக்கமளித்துள்ளது. சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறுகையில், “சீனாவில் குளிர் காலத்தில் எப்போதும் சுவாசப் பாதை தொற்று நோய்கள் அதிகரிப்பது இயல்பே. சீன அரசு குடிமக்கள், சுற்றுலாப் பயணிகளின் உடல் நலனின் எப்போதுமே அக்கறை கொண்டுள்ளது. சீனாவில் தொற்று நோய்ப் பரவல் ஏதும் இல்லை. சீனாவுக்குச் சுற்றுலாப் பயணிகள் தாராளமாக வரலாம். மருத்துவமனைகளில் கூட்டம் இருக்கலாம். ஆனால் இந்த வைரஸ் வீரியமற்றது. பரவலும் மிகமிகக் குறைவு.
சீனாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சீன தேசிய நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிர்வாகம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் படித்தாலே தேவையற்ற அச்சங்கள் தீரும்.” என்று தெரிவித்துள்ளார்.
சீனாவில் பரவும் புதிய வைரஸால் நாடு முழுவதும் பீதி ஏற்பட்டுள்ள நிலையில்,இந்தியச் சுகாதார சேவைகள் துறை இயக்குநர் ஜெனரல் மருத்துவர் அடுல் கோயல் கூறுகையில், “எச்எம்பி வைரஸ் குறித்து மக்கள் பீதியடையத் தேவையில்லை. மெடாநிமோ வைரஸ் மற்ற சுவாசப்பாதை தொற்றை ஏற்படுத்தும் வைரஸ்களைப் போல மிகச் சாதாரணமானதே.
சாதாரணச் சளி ஏற்படுத்தும் வைரஸ் போன்றதே. உள்நாட்டில் சுவாசப் பாதை தொற்றால் பாதிக்கப்பட்டோர் பற்றிய தரவுகளையும் ஆராய்ந்துவிட்டோம். டிசம்பர் 2024 தரவுகளின் படி நாட்டில் வைரஸ் தொற்று பாதிப்பு எதுவும் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரிக்கவில்லை. எச்எம்பி தொற்றுக்கு பிரத்தியேகச் சிகிச்சைக்காக எதிர்ப்பு மருந்துகள் ஏதும் தேவையில்லை.” என்று கூறியிருக்கிறார்.
வைரஸ் தொற்றுகள் குறித்த செய்திகளை நிதானமாக அணுகினால் தேவையற்ற அச்சத்தையும், பொதுமக்கள் மத்தியில் பீதியையும் ஏற்படுத்துவதைத் தவிர்க்கலாம். மேலும், கைகளைக் கழுவுதல், அதிக நெருக்கடியான, காற்று மாசு நிறைந்த பகுதிகளுக்குச் செல்லும் போது முகக்கவசம் அணிந்து கொள்ளுதல், தனிப்பட்ட சுகாதாரத்தைப் பேணுதல் போன்ற பழக்கங்களை வழக்கமாக்கிக் கொண்டுள்ள வைரஸ் தொற்று காலத்தில் மட்டுமல்லாது எப்போதுமே தற்காப்பை நல்கும்.
|
|||||
by hemavathi on 05 Jan 2025 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|